ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்கவா பெண்ணே _கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer





அத்தியாயம் 35

ஆரியன் சிறைக்கு சென்ற பிறகு, மாணிக்கத்தின் உதவியுடன் கந்தன் நீலகண்டனின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தான். ஆரியன் இந்த உதவியை மாணிக்கத்திடம் கேட்டிருந்தான்.

'தனக்கு உடல் நலம் சரி இல்லை தனது இடத்தில் இருந்து சிறிது காலம் இவர் வீட்டின் வேலையை பார்த்துக் கொள்வார், இவர் எனது தூரத்து உறவு முறை' என்று வேதாசலத்திடம் கூறி அவனை எப்படியோ நம்பவைத்து கந்தனை வேலைக்கு சேர்த்து விட்டார் மாணிக்கம்.

மலர்கனையாள் தன் சகோதரனை பார்த்துக் கொண்டு அந்த காட்டு பகுதியிலேயே வசித்து வந்தாள். அப்போது அவளுக்கு பதினேழு வயது தான்! இருந்தும் தன் சகோதரனின் உயிரை காப்பாற்றி கொடுத்த ஆரியனுக்காக தங்களால் முடிந்த ஏதேனும் உதவியை செய்து விட வேண்டும் என்று நினைத்தனர்.

ஒருமாத காலம் மாணிக்கத்தின் இடத்தில் இருந்து கந்தன் நீலகண்டனின் வீட்டு வேலைகளை பார்த்தார்.

பெருமளவு கடினப்பட்டு ஒவ்வொரு நாளும் வேதாசலத்தை பற்றி அறிய முயற்சி மேற்கொண்டார்.

வேதாசலம், நீலகண்டனின் அருகில் ஒருவரையும் அனுமதிப்பது இல்லை... எத்தனையோ முறை அவரிடம் பேச வேண்டும் என்று கந்தன் முயற்சி செய்தார் ஆனால் அது முடியாமல் போனது.

இப்படியே நாட்கள் சென்றது... கந்தன் அங்கு வேலைக்கு சேர்ந்து வெகுநாட்கள் ஆனது. தனக்கு ஒதுக்கப்படும் பாதி சம்பளத்தை கொண்டு மாணிக்கத்தால் தன்னை பார்த்துக் கொள்ள முடியாமல் போனது. கந்தனுக்கு வரும் வருமானத்தில் ஆளுக்கு பாதியாக எடுத்துக் கொள்ளலாம் என்று தான் பேசி வைத்திருந்தனர் ஆனால் இப்போது அந்த பாதி சம்பளத்தை வைத்து மருந்து மாத்திரை என எதையும் முழுமையாக வாங்கிக் கொள்ள முடியாமல் மாணிக்கம் கஷ்டப்பட்டார்.

அதனால் அவ்வப்போது இருவருமாக வேலைக்கு வந்தனர், அதனை கவனித்த வேதாச்சலம் "ரெண்டு பேருக்கு இங்க வேலை கிடையாது ஒன்னு நீ இந்த வேலையை பாரு இல்ல அவன் பார்க்கட்டும்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான்.

வேறு வழி இல்லாத மாணிக்கமும் இந்த மாத இறுதிவரை மட்டும் தனக்கு பதிலாக கந்தனை அங்கு வேலை செய்யச் சொன்னார். அவரது நிலமை கந்தனுக்கு நன்கு புரிந்தது, வருமானம் போதவில்லை எனும் போது என்ன செய்ய முடியும்? என்று புரிந்து கொண்டவர் இருக்கின்ற நாளைக்குள் எப்படியாவது நீலகண்டனிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்தார்.

அப்படியான ஒரு நாளில் மயக்கமடையக்கூடிய மூலிகையின் சாறை யாரும் அறியாத வண்ணம் வேதாசலம் குடிக்கும் பாலில் கலந்தான் கந்தன். அந்தப் பாலை குடித்துவிட்டு வேதாச்சலம் அவரது அறையில் மயங்கிப் போனார். அந்த நேரத்தை பயன்படுத்தி வீட்டில் உள்ள மற்ற வேலைக்காரர்கள் யார் கண்ணிலும் படாமல் நீலகண்டனின் அறைக்குள் நுழைந்தான் கந்தன்.

கை கால் அசைவின்றி மெத்தையில் கண்ணீர் வடிய தூக்கம் தொலைத்து படுத்து கொண்டிருந்தார் நீலகண்டன்.

இப்போது அவரை சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்துக்கும் காரணகர்த்தா அவர்தான் என்பதை அவரும் நன்கு அறிவார். இருந்தும் நடக்கும் எதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தது.

அன்று இவர் தம்பி செய்த தவறுக்காக இன்று இவரது குடும்பமே சின்னா பின்னமாக சிதறி கிடக்கிறது. இப்படி ஒரு நிலை வரும் என்று முன்பே இவருக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் குணாவின் தவறிற்கு தண்டனை கொடுத்து இருப்பார்.

ஆனால் காலம் கடந்த ஞானம் யாருக்கும் பயன்பட போவதில்லை.

நீலகண்டனின் அறைக்கு வந்து கதவை தாழிட்ட கந்தன் அவரிடம் பேச முயற்சித்தான்.. திடீரென இந்நேரத்தில் அவரை அங்கு கண்டதும் முதலில் நீலகண்டன் அதிர்ச்சி அடைந்தார்.. பின்னர் உடனே கந்தன் "உங்க பையன் ஆரியன் தான் என்னை இங்கு அனுப்பி வைத்தார்" என்று சொல்லவும் நீலகண்டன் சற்று ஆசுவாசமானார்.

"என்ன நடந்தது யார் அவர்?" என்று வேதாச்சலத்தை குறிப்பிட்டு கந்தன் கேட்க, நீலகண்டன் எதையோ சொல்ல முயற்சி செய்தார்! ஆனால் அவரது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை? அவர் சொல்ல வருவது கந்தனுக்கும் சரியாக விளங்கவில்லை.

நான் சொல்ல வருவது இவருக்கு புரியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட நீலகண்டன் ஒரு அலமாரியை நோக்கி தனது கரத்தை நீட்டினார்.

அவரது கரம் காட்டும் திசை பார்த்த கந்தனும் அந்த அலமாரியை திறந்து அதனுள் ஏதாவது இருக்குமா? என தேட ஆரம்பித்தார்.

அந்த அலமாரி முழுக்க துணிகளும் பைல்களும் மட்டுமே இருந்தது அவர் எதை குறிப்பிடுகிறார் என்பதை கந்தனால் புரிந்துகொள்ள முடியவில்லை...

கந்தனுக்கு தன் மனதில் உள்ளதை புரிய வைக்க முயற்சி செய்து தோற்றப் போன நீலகண்டனின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது.

அடுத்து தனது குடும்ப புகைப்படத்தை நோக்கி கரத்தினை நீட்டினார் நீலகண்டன். அதனைப் புரிந்து கந்தன் அந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அவர் அருகில் செல்ல.. அதில் குணாவை குறிப்பிட்டு எதையோ சொல்ல முனைந்தார்.

ஆனால் முழுவதுமாக அவரால் சொல்லி முடிக்க முடியவில்லை. அவர் உதடு தாண்டி வார்த்தை வர மறுத்தது... தனது இயலாமையை எண்ணி தன்னைத்தானே நொந்து கொண்டார்.

நல்ல வேளையாக கந்தன் கலைத்துப் போட்ட அலமாரியிலிருந்து விழுந்த விசிட்டிங் கார்டு ஒன்று சரியாக நீலகண்டனின் கண்ணில் பட்டது.

அதனைக் கண்டதும் கண்ணீருடன் புன்னகைத்த நீலகண்டன் "ஆஆ... து" என்று குதூகலமாகி வேகமாக அந்த விசிட்டிங் கார்டை நோக்கி கரத்தை நீட்டினார்.

அவர் கைகாட்டிய இடத்தில் நிறைய பைல்களும் இருந்தது, இதுவா? இதுவா? என்று கந்தன் ஒவ்வொன்றையும் கேட்டு கேட்டு கடைசியாக அந்த விசிட்டிக்கார்டை குறிப்பிட்டு காட்டினான்.

அதனை கையில் எடுத்ததும் நீலகண்டன் "ஆமாம்" என்று வேகமாக தலையாட்ட அதனை அவரிடம் கொண்டு வந்தான் கந்தன்.

"இங்க போ... என் தம்பி" அந்த போட்டோவில் இருக்கும் குணாவின் முகத்தையும் அந்த விசிட்டிங் கார்டையும் குறிப்பிட்டு போ போ என்று அவர் சைகை செய்ய ஆரம்பத்தில் கந்தனுக்கு அது புரியவில்லை ஆனால் இந்த இடத்திற்கு இவர் தன்னை செல்ல சொல்கிறார் என்பதை மட்டும் கந்தனால் புரிந்து கொள்ள முடிந்தது.

உடனே அனைத்து பைல்களையும் எடுத்து அலமாரியிலேயே வைத்துவிட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தியவன் அங்கிருந்து சென்றான்.

கந்தன் வேதாச்சலத்திற்கு கலந்து கொடுத்த மருந்து இயல்பான தூக்கத்தை மட்டுமே மனிதனுக்கு கொடுக்கும் அதனால் வேதாச்சலத்திற்கு பெரிய அளவுக்கு உடலில் அசதியோ அல்லது தன் நிலை எண்ணி பிறர் மீது சந்தேகமோ ஏற்படவில்லை.

அடுத்த நாளே அந்த விசிட்டிங் கார்டில் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு சென்றடைந்தான் கந்தன். செல்லும் முன் நீலகண்டன் குறிப்பிட்டு காட்டிய அந்த முகமுடையவர் யார் என்பதை மாணிக்கத்திடம் கேட்டறிந்து விட்டு தான் அங்கு சென்றான் "இவர் தான் நீலகண்டனின் தம்பி குணா" என்று மாணிக்கம் சொல்லியிருந்தார்.

அந்த விசிட்டிங் கார்டு இருக்கும் விலாசம் ஒரு மருத்துவமனையுடையது... அங்கு சென்று யாரிடம் எப்படி விசாரிப்பது என்று கந்தனுக்கு விளங்கவில்லை... காடு மலை என்று மட்டும் பார்த்து வளர்ந்தவனுக்கு அந்த இடம் சற்று மலைப்பாக இருந்தது.

அவனது நல்ல நேரமோ என்னவோ பிழைப்புத் தேடி, தங்களது காட்டுப் பகுதியில் இருந்து ஊருக்குள் வாழ வந்த ஒரு நபரை கண்டு கொண்டான்.

அங்கு அவர் துப்புரவு பணியாளராக இருந்தார். கந்தனை அவர்தான் முதலில் அடையாளம் கண்டு கொண்டார். இருவரும் சிறிது நேரம் தங்களது சொந்த விஷயங்களை பேசிவிட்டு இறுதியாக எனக்கு இப்படி ஒருவரை பற்றிய தகவல் தெரிய வேண்டும் என்று தான் வந்த விஷயத்தை பற்றி அவரிடம் கூறினார் கந்தன்.

அவரோ அங்கு தனக்குத் தெரிந்த பியூன் ஒருவருக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து குணாவை பற்றி விசாரித்தான்.

"அவரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இங்கதான் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தாரு ஆனா ஒரு நாள் ஹாஸ்பிட்டல் உள்ள புகுந்து யாரோ அவரை கடத்திட்டாங்க, இது வெளியே தெரிஞ்சா ஹாஸ்பிட்டல் பேர் கெட்டுப் போயிடும்னு சொல்லி அவர் காணாமல் போனதாக அப்படியே அந்த விஷயத்தை மறைச்சிட்டாங்க" இதனைக் கேட்ட கந்தனும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றார்.

அப்போது அந்த பியூனோ ஏதோ நினைவு வந்தவனாக... "அவருடைய அறையில் ஒரு டைரி கிடைச்சது. பார்க்குறதுக்கு நல்லா இருந்தது, அதனால தூக்கி போட மனசு இல்லாமல் நான் தான் அதை எடுத்து வச்சேன்"

என்று அவர் சொன்னதும் உடனே அதை எடுத்து வரச் சொன்னான் கந்தன்.

அந்த டைரி முழுக்க ஆங்கிலத்தில் ஏதேதோ எழுதி இருந்தது.

அங்கிருந்த மூவருக்கும் ஆங்கிலம் படித்து புரிந்து கொள்ள தெரியாது என்பதால்... அதனை மட்டும் வாங்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான் கந்தான்.

அவன் மருத்துவமனையில் இருந்து வெளியே வருவதை தூரத்தில் காரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் வேதாச்சலம்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 36

கந்தன் எப்படியும் வீட்டிற்கு தான் வந்தாக வேண்டும் என்பதை எண்ணி வேதாசலம் அவனது வரவிற்காக காத்திருந்தார்.

ஆனால் அவர் நினைத்திருந்த நேரத்தை விட நான்கு மணி நேரம் கழித்தே கந்தன் அவ்விடம் வந்து சேர்ந்திருந்தான்.

'இவ்வளவு நேரம் இவன் எங்கு சென்றுவிட்டு வருகிறான்? அப்போதே இவனை பின் தொடர்ந்திருக்க வேண்டுமோ?' என்று எண்ணினார்.

மருந்தவமனையை விட்டு வெளியே வரும் பொழுது அவன் கையில் இருந்த டைரி இப்போது இல்லை. அதையும் கவனித்து இருந்தார். ஆனால் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை.

கந்தனை அடிப்பதோ? கொல்லுவதோ? வேதாவின் எண்ணம் இல்லை.

பிறர் தன் வாழ்க்கையையும், வழியையும் மாற்றியமைக்காதவரை, இவனும் யார் வாழ்க்கையையும், வழியையும் மாற்றியமைப்பதில்லை,

தன் வேலையை முடித்து விட்டு அமைதியாக இங்கிருந்து கிளம்பி விடலாம் என்பது தான் வேதாவின் எண்ணமாக இருந்தது. ஆனால் தேவை இல்லாமல் தானே இந்த பிரச்சனைக்குள் வந்து மாட்டிக் கொண்டார் கந்தன்.

கந்தன் அமைதியாக வீட்டிற்குள் வரவும், சோபாபில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த வேதாசலம், அவனை அழுத்தமாக பார்த்தவாரே "போன வேலை முடிஞ்சுதா?" என்று கேட்டான்.

திடீரென செவி நுழைந்த அவனது குரலில் கந்தனுக்கு தூக்கி வாரி போட்டது.

வாசலில் மட்டும் அல்ல வீடு முழுக்க ஒரு வேலையாட்கள் கூட இல்லை. உள்ளே வரும் பொழுது வாட்ச்மேன் இல்லாததை கண்டும், கருத்தில் கொள்ளாமல் சகஜமாக உள்ளே வந்த கந்தனுக்கு இப்போது அண்டம் எல்லாம் நடுங்கியது போல தோன்றியது.

"என்னங்க ஐயா" முகத்தில் தோன்றிய பதட்டத்தை மறைத்தவாறு திரும்பினான் கந்தன்.

"என்னன்னு உனக்கு தெரியாது இல்ல, நான் எதைப் பத்தி கேட்கிறேன்னு உனக்கு புரியாது இல்ல?" என்று சூட்சமமாக கேள்வி கேட்டவர், அவன் முகத்தை ஒரு கணம் தலை உயர்த்தி பார்க்க... மிடறு விழுங்கி முழித்தான் கந்தன்.

"இல்லைய்யா நீங்க என்ன கேக்குறீங்க எனக்கு உண்மையா ஒன்னும் விளங்கலங்க" என்றவர் தன் முகத்த இயல்பாக வைக்க கடும் பாடுபட்டார்.

"அப்போ நீ சொல்ல மாட்ட, சரி நானே சொல்றேன்! அந்த ஹாஸ்பிட்டல்ல உனக்கு என்ன வேலை? இன்னைக்கு நீ எதுக்காக அங்க போன?"

"எ,எ... என்ன? நான் நான் எங்க போனேன்?" என்று அவர் இப்போது வரை சமாளிக்க பார்க்க, வேதாச்சலத்திற்கு கோபம் தலைக்கு ஏறியது உடனே தனக்கு முன்னால் இருந்த டீபாயை எட்டி உதைத்தார். அந்த சத்தத்தில் கந்தனுக்கு தூக்கி வாரி போட்டது அமைதியாக தலை குனிந்து கொண்டவன் "இல்ல எனக்கு உடம்பு சரியில்ல அதனாலதான் அங்க போனேன்" அவரது கோபத்தைக் கண்டு ஏதாவது ஒரு பதிலை சொல்ல வேண்டும் என்று இப்படி ஒரு பதிலை சொன்னான்.

"இதை என்னை நம்ப சொல்றியா? ஹான்? சொல்றா? இதை நீ என்னை நம்ப சொல்றியா?" என்று கேட்டவர் கந்தனை நோக்கி வந்து நொடி பொழுதில் அவன் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்தினார். அந்த துப்பாக்கி நீலகண்டனுடையது.

அவர் கையில் துப்பாக்கியை கண்டதும் விழி பிதுங்கி அரண்டு போய் நின்றான் கந்தன்.

"சொல்லு யார் நீ? எதுக்காக இங்க வந்த? வந்த நாளிலிருந்து நானும் உன்னை கவனிச்சுட்டு தான் இருக்கேன். உன் நடவடிக்கையே சரியில்லை, எப்போ பாரு நீலகண்டனோட ரூமுக்கு போக முயற்சி பண்ணிக்கிட்டே இருக்க, எப்பவும் உன் கண்ணுல ஒரு பதட்டமும் தேடலும் இருந்துட்டேயிருக்கு சொல்லு எதுக்காக நீ இங்க வந்த? யார் சொல்லி நீ இதெல்லாம் பண்ணிட்டு இருக்க? அந்த பாண்டியன் தான் உன்னை இங்க அனுப்பினானா? சொல்லுடா?" என்றவர் துப்பாக்கியை மேலும் அவன் நெற்றி பொட்டில் வைத்து அழுத்த, கந்தனோ அவர் சொன்ன பாண்டியன் என்ற நபரை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

"சொல்லுடா? அவன் தான் உன்னை இங்க அனுப்பினானா? என்ன சொல்லி அனுப்பினான் சொல்லு?" என்று அவர் மேலும் கோபம் கொள்ள "பாண்டியன் யாரு?" என்று எதிர் கேள்வி கேட்டான் கந்தன்.

"அவன் யாரா? அப்போ உன்னை இங்க அனுப்பியது யாரு?"

"ஆரியன்... நீலகண்டன் அவரோட மகன். உங்கள பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காகவும் அவங்க அப்பாவுக்கு பாதுகாப்பா இருக்கறதுக்காகவும் தான் என்ன இங்க வேலைக்கு சேர சொன்னான்" என்று கந்தன் சொன்னதைக் கேட்டு அந்த இல்லமே அதிரும் அளவிற்கு சத்தமிட்டு சிரித்தார் வேதாச்சலம்.

"யாரு? நீ அந்த கை,கால் விளங்காதவனுக்கு பாதுகாப்பா? எங்க அவனை உன்னால காப்பாத்த முடியுமா?" என்று கந்தனை இழிவாக நினைத்து அவர் பேச, அடுத்த கணம் தரையில் விழுந்து கிடந்தார் வேதாச்சலம். அவர் கையில் இருந்த துப்பாக்கி இப்போது கந்தன் கையில் இருந்தது.

ஒரே அடி, அந்த ஒரு அடிக்கே உதட்டோரம் ரத்தம் வழிய தரையில் விழுந்து கிடந்தார் வேதாச்சலம்.

"காட்டுலையும், மேட்டுலையும் வளர்ந்தவன் ஐயா நான், இன்னும் கூட இரண்டு அடி சேர்த்து அடிச்சிருந்தா இப்போ நீங்க உயிரோடவே இருந்திருக்க மாட்டீங்க, அப்புறம் துப்பாக்கி ஒன்னும் எனக்கு புதுசில்ல" என்று கந்தன் சொன்னதும், கோபம் கொப்பளிக்க எழுந்து வந்து கந்தனை தாக்க முன்னேறினார் வேதாச்சலம், ஆனால் மீண்டும் அவர் கன்னத்தில் ஓங்கி இவன் அறைய பொத்தென்று சோபாவில் போய் விழுந்தார் அவர்.

"ஐயா நீங்க வயசுல பெரியவங்க, உங்கள அடிச்ச பாவம் எனக்கு வேண்டாம்னு தான் இவ்வளவு நேரம் அமைதியா இருந்தேன். இப்ப சொல்லுங்க, அப்படி என்ன உங்களுக்கு இந்த குடும்பத்து மேல அவ்வளவு வெறி?"

"வெறியா? எனக்கா? என்னுடையது வெறும் ஆதங்கம்... எனக்கு இருக்கிற வலி துரோகத்தோட வலி... அது சொன்னாலும் உனக்கு புரியாது, நான் ஒன்னும் யார் குடும்பத்தையும் பிரிக்கவோ சிதைக்கவோ இங்க வரல, எனக்கு இவனுங்க பண்ண பாவத்துக்கும் துரோகத்துக்கும் தான் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டிட்டு இருக்கானுங்க... அவனுங்க கஷ்டப்படுறதை நான் கண் குளிர பார்த்திட்டு இருக்கேன் அவ்ளோதான். நான் ஒன்னும் இவங்க யாரையும் கொல்லனும்னு நினைக்கல, சொல்லப்போனால் இவனுங்க எல்லாம் இப்போ உயிரோட இருக்கிறதே என்னால தான். அந்த உயிர் நான் இவனுங்களுக்கு போட்ட பிச்சை, உனக்கு இவனுங்கள பத்தி என்னடா தெரியும்? இவனுங்க எல்லாம் நல்லவனுங்கன்னு நினைக்கிறியா? போடா முட்டாள்... கட்டின பொண்டாட்டியவே சத்தமே இல்லாம கொன்னுட்டு அண்ணனும் தம்பியும் சேர்ந்து அது ஒரு விபத்துன்னு அவங்க சொந்தக்காரங்க கிட்ட ஆடுன நாடகம் எல்லாம் உனக்கு தெரியுமா? இல்ல நம்பி வீட்டுக்குள்ள விட்ட நண்பனோட மகளை பலாத்காரம் பண்ணி சிதைச்சு போட்டுட்டு வந்ததது உனக்கு தெரியுமா? இவனுங்களுக்காக நியாயம் கேட்டு நீ என் முன்னாடி நின்னுட்டு இருக்க?"

இந்த இரண்டு தப்பு மட்டும் இல்லை அண்ணனும், தம்பியும் சேர்ந்து கணக்கில வைக்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட தப்பையும் பாவத்தையும் பண்ணி இருக்கானுங்க... அண்ணனும் தம்பியும் பண்ண பாவத்துக்கு, அவங்க குடும்பம் என்ன பண்ணும்னு நீ கேட்கலாம்? அது எனக்கு புரியுது! ஆனா இவனுங்களோட இந்த வக்கிர புத்தியால பாதிக்கப்பட்டு மகளை இழந்த இன்னொரு அப்பனுக்கு புரியாது, இதோ அங்க கிடக்கிறானே கை, கால் விளங்காமல் இந்த வீட்டோட முதலாளி நீலகண்டன் அவனோட தம்பி குணசேகரனை பற்றி உனக்கு தெரியுமா? பதினைந்து வயசை தாண்டாத மூணு சின்ன பொண்ணுங்களை பலாத்காரம் பண்ணி இருக்கான். அதுல ஒன்னு என் பொண்ணு" என்று சொன்ன வேதாச்சலத்தின் கண்களில் இருந்து சட்டென ஒரு துளி கண்ணீர் விழுந்தது.

இதனைக் கேட்டதும் துப்பாக்கியை ஏந்தி இருந்த கந்தனின் கரங்கள் தளர்ந்தது.

"தம்பி தப்பு பண்ணுவான் அண்ணன் அதை மறைப்பான். அப்ப பாதிக்கப்பட்டவனோட நிலைமை என்ன ஆகும்? அவன் குடும்பம் என்ன ஆகும்? இதை பத்தி எல்லாம் இவனுங்களுக்கு எந்த கவலையும் இல்லை... பணம் இருந்தா மட்டும் போதும் எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்னு நினைக்கிற கேவலமான ஜென்மம் இவனுங்க, இவனுங்களுக்கு சப்போர்ட் பண்ணி நீ இங்க வந்து நிக்கிறனா நீயும் அவனுங்களை போல கேவலமானவன் தான்...

என் குடும்பத்தில் எனக்கு ஆயிரம் பிரச்சனை, ஆனால் அப்படி இருந்தும் நான் என் மனைவி என் பொண்ணுனு வாழ்க்கை அமைதியா தான் போச்சு... ஒரு நாள் நீலகண்டனோட தம்பி குணாவை நான் சந்திச்சேன். நண்பனுடைய தம்பி தானேனு வீட்டுக்குள்ள விட்டேன். அவனும் நான் தொழில் தொடங்க பண உதவி பண்றேன்னு சொன்னான், அதை எல்லாம் நான் நம்பினேன். ஏன்னா அன்னைக்கு நான் இருந்த சூழ்நிலை அப்படி, பணம் எனக்கு அவ்ளோ முக்கியமா இருந்தது. நல்லவன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டா அவன் நாகமா மாறி என் பொண்ணு மேலேயே விஷத்தைக் கக்கி விட்டான். அவனோட தப்பை மறைக்க, அவன் அண்ணன் நீலகண்டனோ, ஏதோ நானே என் பொண்ணை வேறு யாருக்கோ கூட்டி கொடுத்த மாதிரி பொய்யா என் போன்ல இருந்து மெசேஜ் அனுப்பி, என் பொண்டாட்டியை அதை நம்ப வைத்து, என் பொண்டாட்டி என்னை பிரிஞ்சு போயி என் குடும்பமே சிதைஞ்சு போச்சு... இது தான் நடந்ததுன்னு அப்ப எனக்கு தெரியாது, இவன் தான் இவ்வளவு பெரிய பாவத்தை எனக்கு பண்ணி இருக்கான்னும் எனக்கு தெரியல... என் பொண்டாட்டி, என் குழந்தையை கூட்டிட்டு எங்கேயோ போயிட்டா, அவங்களை கண்டுபிடிக்கறதுக்காகவாது உயிரோட இருக்கணுமேன்னு வேற வழி இல்லாமல் வேலை கேட்டு, உதவி கேட்டு நீலகண்டனோட வீட்டுக்கு போனேன்" தான் இந்த வீட்டிற்கு வந்த பிறகு நடந்த அனைத்தையும் கந்தனிடம் தெளிவாக எடுத்து சொல்ல ஆரம்பித்தான் வேதா.

**
அன்று ஒருநாள்...

தன் வீட்டு வாசலில் வைத்து வேதாச்சலத்தை கண்ட நீலகண்டனின் முகம் கலவரமானது.

'எதுக்கு இவன் இங்க வந்து இருக்கான்? ஒருவேளை உண்மை ஏதாவது தெரிஞ்சு இருக்குமோ?' என்று அச்சம் கொண்டு வெளியே புன்னகைத்தபடி வேதாச்சலத்தை வரவேற்றார் நீலகண்டன்.

குணாவோ அப்போதுதான் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தான். அவனுக்கு வேதாச்சலத்தை பார்த்ததும் கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது குற்றமுள்ள மனது குறுகுறுக்க ஆரம்பித்தது வேதாவின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்க முடியாமல் கடினப்பட்ட அங்கு நின்று கொண்டிருந்தான்.

அந்நொடியில் உண்மை எதுவும் அறியாத வேதாச்சலமோ தன் மகளுக்கு நடந்த அநீதியை பற்றியும் தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதைப் பற்றியும் நீலகண்டனிடம் கூறி கண்ணீர் வடித்தார்.

பாவம் செய்தவனிடமே, பரிகாரம் கேட்டு நிற்கும் இழி நிலைக்கு வேதாச்சலம் தள்ளப்பட்டிருந்தார்.

எல்லாவற்றையும் பொறுமையா பேசிக்கொள்ளலாம், பார்த்துக் கொள்ளலாம் என்று வேதாச்சலத்திற்கு ஆறுதல் கூறிய நீலகண்டன் அன்று இரவே குணாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று அவனிடம் பேசினார்.

குணாவோ "வேதாச்சலத்துக்கு பணத்தை கொடுத்து இங்கிருந்து அனுப்பி வைத்து விடலாம்" என்று சொல்ல, அதற்கு நீலகண்டனோ "அவன் நம்ம கூட தான் இருக்கணும். அவன் நம்ம கண் பார்வையிலே இருக்கிறது தான் நமக்கு நல்லது ஒருவேளை அவன் மனைவியை கண்டு பிடிச்சு அவங்க கூட சேர்ந்திட்டான் அப்படின்னா, ஏதோ ஒரு கட்டத்தில் உன் மேல அவனுக்கு சந்தேகம் வர வாய்ப்பிருக்கு"

"எப்படி சொல்லுறிங்க, கண்டிப்பா அவனுக்கு எதுவும் நியாபகம் இருக்காது, ஏன்னா அவன் நிதானமா இருக்கும் போதே நான் அந்த வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன், சோ அவனுக்கு என் மேல சந்தேகம் வர வாய்ப்பே இல்லை"

"அப்படி சொல்ல முடியாது குணா.. இவனுக்கு நியாபகம் வராமல் கூட போகலாம். ஆனால் அவன் பொண்ணுக்கு உன் முகம் ஞாபகம் வந்துசுன்னா என்ன பண்ணுறது? இந்த விஷயம் மட்டும் வெளியே தெரிஞ்சா நம்ம தொழில் பண்ண முடியாது, நம்ம யாரும் குடும்பத்தோட வாழவும் முடியாது, நீ இப்படி ஒரு தப்பு பண்ணி இருக்கன்னு உன் பொண்டாட்டிக்கு தெரிய வந்தா அவ கண்டிப்பா உன்னை விட்டுட்டு போய்டுவா, நான் உனக்கு சப்போர்ட் பண்ண விஷயம் என் பொண்டாட்டிக்கு தெரிய வந்தா, அவள் கண்டிப்பா அமைதியா இருக்க மாட்டா, வக்கிலுக்கு படிச்சவ, நீதி நியாயம்னு அவங்க பக்கம் நின்னுட்டு நம்மள ஒண்ணுமே இல்லாமல் ஆக்கிடுவா... அப்புறம் நம்ம அப்பாவை பத்தி உனக்கே நல்லா தெரியும், இதையெல்லாம் தாங்கிக்கவே மாட்டாரு... இந்த உண்மை வெளியே வந்தா ஆரியன் முகத்தில் கூட நம்மால முழிக்க முடியாது, அவன் நம்மளை அசிங்கமா நினைப்பான்"

"இப்போ என்னதான் அண்ணா பண்ண சொல்ற?"

"அவன் நம்ம கூடவே இருக்கட்டும், கூடவே இருந்து தொழிலை பார்த்துக்கட்டும்... அவன் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடு நாளைக்கு உண்மை தெரிய வந்தாலும் நம்ம கொடுத்த பணம் அவனை பேச விடாம ஊமை ஆக்கிடும்.. நம்மள எதிர்த்து நிற்க அவனுக்கு திராணி இருக்காது" என்று அண்ணனும் தம்பியும் பேசி முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

நாட்கள் அப்படியே சென்றது, நீலகண்டனின் கண் பார்வையிலேயே வேதாச்சலம் இருந்தார். குணா வாரத்திற்கு ஒரு முறை சைக்காடிஸ்ட்டிடம் ட்ரீட்மெண்ட்டுக்கு செல்வான்.

ஆனால் கடந்த சில மாதங்களாக, அவன் ட்ரீட்மென்ட் எடுக்க செல்லவில்லை... மாத்திரையும் எடுத்துகொள்ளவில்லை. மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாக ஆரம்பித்தான். அவன் அண்ணன் நீலகண்டன் வந்து 'என்னடா இது?' என்று கேட்டால் 'என்னை மன்னிச்சுடு மறுபடி அதுபோல தப்பு எதுவும் நடக்காது' என்று கூறி மண்டியிட்டு அழ ஆரம்பித்து விடுவான், உடனே அண்ணனும் மன்னித்து விட்டு செல்வான்.

இப்படியே நாட்கள் சென்றது வேதாச்சலம் நீலகண்டனின் தொழிலை நன்றாக பார்த்துக் கொண்டார், இங்கு அவர் தொடர்ந்து தொழிலில் கவனம் செலுத்தவும், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லாமல் போனது.

"எல்லாவற்றையும் உன்னை நம்பி தான் ஒப்படைக்கிறேன்" என்று நீலகண்டன் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக முழுமூச்சாக தொழிலை பார்த்துக் கொண்டார் வேதாசலம்.

இப்படியே நாட்கள் மாதங்களாக கடந்தன... அப்படியான ஒரு நாளில் குணாவின் மனைவி மீண்டும் கருத்தரித்திருந்தாள்.

இந்த சந்தோஷமான விஷயத்தை முதலில் தன் குடும்பத்திடம் சொல்லி மகிழ்ந்தவள் தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள். இரண்டு நாள் ஆனது, அவளது அண்ணன் விஸ்வநாதன் கூட வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு சென்று விட்டான் ஆனால் குணா இன்னும் வீட்டிற்கு வரவில்லை. அப்போது நீலகண்டன் தொழில் விஷயமாக வெளியூர் சென்று இருந்தார்.

கணவன் வருவான் என்று பொறுத்து பொறுத்து பார்த்த குணாவின் மனைவி, உடனே நீலகண்டனின் எண்ணிற்கு அழைத்தாள். "அவர் எங்க மாமா? ரெண்டு நாளா போனே எடுக்கல" என்று அவள் கேட்கவும், "அவன் என்கூட இல்லம்மா, கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன்னு காலையில கால் பண்ணி இருக்கும் போது சொன்னான்... என்னம்மா ஏதாவது அவசரமா?"

"ஒன்னும் இல்ல மாமா" என்று கூறி அழைப்பை துண்டித்த குணாவின் மனைவி, நேராக அவனை தேடி கெஸ்ட் ஹவுஸ்கு சென்றாள். அங்கு அவனோ முழு போதையில் நான்கு பெண்களுடன் ராசலீலை புரிந்து கொண்டிருந்தான்.

அதனை கண்டு தாலி கட்டிக்கொண்டவள் சும்மா இருப்பாளா? கொதித்து எழுந்தாள். ஆங்காரம் கொண்டு அவனிடன் நியாயம் கேட்டாள்.

நல்லவனுக்கு நியாயம், அநியாயம் புரியும்... தரம் கெட்டவனுக்கு புரியுமா என்ன?

தரம் இல்லாதவன், தரம் தப்பி வாழ்பவர்கள் முன்பு வைத்து தரம் அற்ற வார்த்தையால் தாரத்தை வசை பாடினான்.

எல்லாம் அவனுக்காக என்று கண்ணீரை மறைத்து பொறுத்து பொறுத்து வாழ்ந்து வந்தவளுக்கு அந்த வார்த்தைகளை தாங்க முடியாமல் நெஞ்சம் கனத்து போனது. அவன் கரு தாங்கிய வயிறு கலங்கி நின்றது.

குழந்தை இறந்து மூன்று நாள் முடிவதற்குள் உன் வக்கிரம் போக்க முந்தி விரித்தேனடா பாவி, உன்னோட சேர்ந்து அன்று நானும் பாவியாகி போனேனே அந்த பாவத்தை என் பிள்ளை மன்னிக்குமா? அந்த காயம் மறைவதற்குள் மீண்டும் அவனுக்கு உயிர் கொடுத்து என் கருவறையில் ஏந்தி நிற்கிறேனே நாளை இப்படி ஒருவனுக்காகவா என்னை சுமந்து நின்றாய்? என்று அந்த உயிர் கேட்டால் அவன் முகம் பார்க்க, என் மூச்சு நிற்குமே! துரோகி என்று உள்ளம் வெதும்பி கண்ணீர் பெருகி, அவன் சட்டையை கொத்தாக பிடித்து இழுத்தாள்.

குணாவோ அப்போதும் தகாத வார்த்தை சொல்லி அவளை அடித்து தள்ள, அவளோ நிலைத்தடுமாறி, மாடிப் படியில் இருந்து கீழே விழுந்தாள்.

'உன்னோட வாழ்வதை காட்டிலும்... என் கரு சுமந்த உயிரோடு வீழ்வது மகிழ்ச்சி' அந்நொடி அவள் ஜீவன் பிரிந்தது.
 

Mythili MP

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 37

அவன் தள்ளிவிட்ட வேகத்தில் கீழே விழுந்தவளை திரும்பிப் பார்க்கக் கூட மனமில்லாமல் அந்த நான்கு பெண்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் தன் படுக்கை அறைக்குள் நுழைந்தவன் சல்லாபத்தில் திளைக்க ஆரம்பித்தான். அந்தப் பெண்களும் போதையில் இருக்க, நடக்கும் எதையும் அவர்களும் கருத்தில் கொள்ள முனையவில்லை.

என்று தன் குழந்தை இறந்த மூன்றாம் நாள் இவனோடு கூடினாலோ அன்றே அவள் மறித்து விட்டாள். இது அவளுக்கு இரண்டாவது மரணம். உயிரில்லா உடலை எத்தனை தான் காயப்படுத்தினாலும் அதற்கு உணர்வு என்பது இருக்காது, அவள் அவனோடு வாழ்ந்த வாழ்க்கையும் அது போல தான்.

சில மணி நேரங்களுக்கு பிறகு ஒரு அளவுக்கு போதை தெளிந்து இறங்கி கீழே வந்த குணா அப்போதுதான் அவளது மனைவியை கவனித்தான்.

நடந்த எதுவும் அவன் நினைவில் இல்லை உடனே உள்ளம் படபடக்க அவள் அருகில் சென்றான். தலையில் வழிந்த ரத்தம் உறைந்து போய் தரையில் கிடந்தது. உடல் குளிர்ந்து காணப்பட்டது. அதனை உணர்ந்ததும் குணாவின் கண்கள் பயத்தின் மிகுதியில் விரிந்து கொண்டன.

உடனே அவளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த எண்ணியவன், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அச்சடலத்தின் அருகிலேயே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

வெகு நேரம் யோசித்தான், அவன் அழைத்து வந்த அந்த நான்கு பெண்களும் போதை மிகுதியில் இன்னும் அறையில் உறங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.

உடனே தன் மனைவியின் சடலத்தை தரதரவென்று இழுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றான் குணா.

அந்த வீட்டின் பின்புறம் தென்னந்தோப்பு இருந்தது. அதனுடன் ஆழமான கிணறும் இருந்தது.

பேசாமல் இவளது உடலை கிணத்தில் தூக்கி போட்டு விடலாமா? என்று ஆரம்பத்தில் யோசித்தவன், பின்னர் வேண்டாம் குழிதோண்டி புதைத்து விடலாம் என்று முடிவு செய்தான்.

தோட்டத்தை பராமரிக்க வைக்கப்பட்டிருந்த மண்வெட்டியையும், கடப்பாறையையும் கொண்டு, தனது மனைவிக்கு ஆரடியில் குழி வெட்டினான்.

குழியை வெட்டி முடித்துவிட்டு தன் மனைவியை தூக்கி குழியில் படுக்க வைத்தவன் மண் கொண்டு அவளை பாதியாக மூட, முகம் மட்டும் தெரிந்தது.

அப்போது அவனுக்கு பின்னால் ஏதோ சலசலப்பு ஏற்பட்டது. சருகுகளின் ஓசையை கொண்டே யாரோ வருகிறார்கள் என்பது உணர முடிந்தது... அந்த சத்தத்தை கேட்டதும் குணாவின் இதயம் ஒரு கணம் நின்று துடிக்க ஆரம்பித்தது. முகத்தில் மரண பயம் அப்பட்டமாக தெரிந்தது. மிடரி விழுங்கி மிரட்சியுடன் மெதுவாக பின்னால் திரும்பிப் பார்த்தான்.

அங்கு வந்து கொண்டிருந்தது வேதாச்சலம். இந்நேரத்தில் அவனை அங்கு கண்டதும் 'என்ன செய்வது?' என்று புரியாமல் நடுங்கிய கரத்துடன் நின்றவன் அவன் வருவதற்குள் இவளை புதைத்து விட வேண்டும் என்று வேக வேகமாக மண்ணை எடுத்து அவளது முகத்தை மூட ஆரம்பித்தான்.

"என்ன பண்ணிட்டு இருக்க? ரெண்டு நாளா நீ வீட்டுக்கே போகலையாமே? அதான் என்ன ஏதுன்னு உன் அண்ணன் பார்த்துட்டு வர சொன்னான். மதியமே வந்து இருப்பேன் ஆனால் ஆபீஸ்ல வேலை அதிகமா இருந்ததால வர முடியல நேரம் ஆகிடுச்சு" என்று சாதரணமாக சொல்லிக் கொண்டே அவன் அருகில் சென்ற வேதாசலம், அந்த குழியை பார்த்ததும் "ஆமா என்ன குழி இது? எதுக்கு?" என்று கேட்டான்.

"அது... அது... அது ஒன்னுமில்ல, சரி வா உள்ளே போய் பேசலாம்" என்றபடி குணா, வேதாவை அங்கிருந்து அழைத்துச் செல்ல பார்க்க.. வேதாவின் பார்வையோ இன்னும் அந்த குழியின் மீதே இருந்தது.

"ஒரு நிமிஷம்" என்ற வேதா குணாவின் முகத்தை நன்கு உற்றுப் பார்த்தான். "எதுக்காக நீ ரொம்ப பதட்டமா இருக்க, முகம் எல்லாம் வியர்த்து இருக்கு, என்ன ஆச்சு உனக்கு?"

"அது வேற ஒன்னுமில்ல, காவலுக்கு இருந்த நாய் திடீரென செத்திடுச்சு, அதான் அதை புதைச்சிட்டு இருக்கேன்"

"ஓ" என்று மௌனமாக தலையசைத்த வேதா, இன்னும் அந்த குழியையே பார்த்துக் கொண்டிருக்க, "வாடா இதை அப்புறம் பார்த்துக்கலாம், நம்ம முதலில் உள்ள போகலாம்" என்ற குணசேகரன், அவனின் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து செல்லப் பார்க்க, தூரத்தில் குறைத்தபடி நின்ற நாயை கண்டு நகர மறுத்த வேதா, அவனது கரத்தில் இருந்து தனது கரத்தை விடுவித்துக் கொண்டு அந்த குழியின் ஒரு ஓரத்தில் தெரிந்த குணாவின் மனைவியுடைய புடவையை எடுக்க முனையை, வளையல் அணிந்த அவளின் கரம் தெரிந்தது. அதனை கண்டதும் வேதாவுக்கு தூக்கி வரிபோட்டது.. அதிர்ச்சி மாறாமல் அப்படியே குணாவை திரும்பிப் பார்த்தான்.

"என்னடா இது? யார் இது?" என்று வேதா தொடர்ந்து கேள்விகளை கேட்க, கோபமான குணா ஒரு கட்டத்தில் வேதாவை பிடித்து தள்ளிவிட்டு "இது உனக்கு தேவையில்லாத விஷயம் முதல்ல நீ இங்கயிருந்து கிளம்பு" என்று அதிகாரமாக கூறினான்.

"வேணா குணா நீ எதோ தப்பு பண்ணி இருக்க, அதை மறைக்கிறதுக்காக மேலும் மேலும் தப்பு பண்ணிட்டு இருக்க"

"தப்போ? சரியோ? அது என்னோட விஷயம் அதுல உனக்கு எந்த பங்கும் கிடையாது. அப்புறம் உனக்கு என்ன பிரச்சனை? மரியாதையா இந்த இடத்தை விட்டு போயிடு இல்லன்னா என்னை நீ வேற மாதிரி பார்ப்ப"

"என்னடா மிரட்டுறியா?"

"இதை நீ எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி, ஆனா இப்போவே நீ இந்த இடத்தை விட்டு போகணும், இல்லன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன்" என்று இவன் பேசிக் கொண்டிருக்கும்போதே நீலகண்டனிடமிருந்து வேதாவிற்கு அழைப்பு வந்தது.

உடனே அழைப்பை ஏற்றான் வேதாச்சலம் அழைத்தது யார் என்று தெரியாமல் குணா இவனைத் தாக்க முன்னேறவும், பக்கத்தில் இருந்த மண்வெட்டியை எடுத்து ஓங்கி இருந்தான் வேதா.

அவனது இந்த செயலில் ஒரு அடி பின்னே நகர்ந்தான் குணா.

"சொல்லுடா நீ வீட்டுக்கு வந்துட்டியா?" என்று நீலகண்டனிடன் கேட்டான் வேதா.

"ஆமா, இப்போதான் வந்தேன். நீ குணாவை பார்த்துட்டு வந்துட்டியா? அவன் கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருந்தானா?"

"அவன் அங்க தான் இருந்தான்"

"சரி இப்போ நீ எங்கே இருக்க?"

"வேலை அதிகமா இருந்ததால, நான் இப்போதான் கெஸ்ட் ஹவுஸ்கு வந்தேன்"

"ஓகே"

"கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சு உடனே நீ இங்க கிளம்பி வரியா?"

"என்ன ஆச்சு வேதா? குணா பக்கத்துல இருக்கானா? போனை அவன் கிட்ட கொடு" என்றதும்... அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

வேதா கீழே விழுந்து கிடந்தான்.

"வேதா... குணா" என்று போனில் கத்திய நீலகண்டன்... அடுத்த நொடியே தங்கள் கெஸ்ட் ஹவுஸ்கு கிளம்பினான்.

போனில் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் குணா இவனை தாக்க முன்னேறினான், உடனே அவனை தடுக்கும் பொருட்டு வேதா மண்வெட்டியை முன்னால் நீட்ட, அது குணாவின் கன்னத்தை பதம் பார்த்தது.

தன்னை அடித்த ஆத்திரத்தில், கோவம் தலைக்கேறி வேதாவை ஓங்கி மிதித்து கீழே தள்ளி இருந்தான் குணா.

"யாரு மேலடா கை வைக்கிற? நாங்க போட்ட பிச்சையில உயிர் வாழற நீ என்னையே எதிர்க்கிற அளவுக்கு ஆகிட்டியா?" என்று சினம் பொங்க கத்திய குணா பக்கத்தில் கிடந்த தென்னை மட்டையை எடுத்து வேதாவை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தான்.

"சாவுடா... உன்னை எல்லாம் அப்பவே கொன்னுருக்கணும்... என்னை கேள்வி கேக்குற அளவுக்கு ஆளாகிட்டியா நீ? அப்போவே சொன்னேன், இவனை இந்த வீட்டுக்குள்ள சேர்க்காத, நமக்கு தான் இது தேவை இல்லாத பிரச்சனைன்னு, ஆனால் என் அண்ணன் கேட்கலை...உன் பொண்ணை தொட்ட அன்னைக்கே, உங்களை எல்லாம் குடும்பத்தோட கொழுத்தி போட்டு வந்திருந்தா இன்னிக்கு எனக்கு பிரச்சனையே இருந்திருக்காது. அப்படி நாங்க பண்ணியிருந்தா இன்னிக்கு நீ என் கண்ணு முன்னாடி நின்னு இப்படி எல்லாம் கேள்வி கேட்டுட்டு இருப்பியா? உனக்கு இந்த அளவுக்கு இடம் கொடுத்த என் அண்ணனை சொல்லனும்டா, சாவுடா எச்சை நாயே" என்று மூச்சு முட்ட அவனை அடித்து வீழ்த்தியவன் தென்னை மட்டையை தூக்கி எறிந்து விட்டு அதே இடத்தில் வெறி பிடித்தவன் போல் அமர்ந்து கொண்டிருந்தான்.

கோவத்தில் என்ன பேசுகிறோம் என்று கருத்தில் கொள்ளாமல் நடந்த உண்மையை எல்லாம் சொல்லாமல் சொல்லி இருந்தான் குணா.

அத்தனை அடிக்கும், வலிக்கும் மத்தியிலும் அவன் சொன்ன வார்த்தைகள் வேதாவின் மனதில் ஊடுருவி சென்று ரணத்தை கொடுத்தது.

தன் நண்பனின் சகோதரன் தான் தெரிந்தே திட்டமிட்டு தனது மகளுக்கு இத்தனை பெரிய அநீதியை இழைத்திருக்கிறான் என்பதை வேதாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இத்தனை நாள் யாரை உண்மையான நண்பன் என்று நம்பி இருந்தானோ அவனும் இவனோடு சேர்ந்து தனக்கு இத்தனை பெரிய துரோகத்தை செய்து விட்டானே, என்பதை அறிந்து கொண்ட வேதாவின் விழியோரம் கண்ணீர் வழிந்தோடியது.

துரோகமிழைத்தவனின் இடத்தில் தான் இத்தனை நாட்கள் வாழ்ந்தோமா? அவனது பணத்தில் தான் உணவு உண்டோமா? என்று நினைக்க நினைக்க வேதாச்சலத்தின் மனம் ரணமாக வலித்தது. இருந்தும் அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் அடிவாங்கி கொண்டிருக்கும் தன் இயலாமையை எண்ணி கண்ணீர் வடித்தவர் அடி தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் அந்த இடத்திலேயே மயக்க முற்றார்.

பத்து நிமிடத்தில் கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தார் நீலகண்டன்.

குணாவின் எண்ணிற்கும் வேதாச்சலத்தின் எண்ணிற்கும் மாறி மாறி அழைத்தார் இருவரது அழைப்பும் ஏற்கப்படவில்லை.

கெஸ்ட் ஹவுஸ் முழுக்க தேடினார், படிக்கட்டின் கீழே ரத்தம் சிந்தி கிடந்தது. அதனை புருவம் சுருக்கி பார்த்தவர் படியேறி மேல் அறைக்குச் சென்றார், ஆடைகள் அலங்கோலமாக அந்த அறையில் தான் இன்னும் அந்த நாலு பெண்களும் உறங்கிக் கொண்டிருந்தனர். அதனைக் கண்டு முகம் சுளித்த நீலகண்டன் மற்ற அறையிலும் தேடி விட்டு மீண்டும் கீழே வந்தார்.

ஆங்காங்கே இரத்தத்துளி விழுந்து கிடக்க அதனை பின்பற்றிய படியே வீட்டின் பின்புறம் வந்தவர் தூரத்தில் குணாவை கண்டதும் வேகமாக அவனிடம் ஓடினார்.

அங்கு குணாவோ கண்களில் வெறி கூடிப்போய் பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவன் அப்படி அமர்ந்திருக்க, அவனுக்கு அருகில் பேச்சு மூச்சு இல்லாமல் உடல் எங்கும் இரத்த காயத்துடன் மடங்கி கிடந்தான் வேதாச்சலம். அதனைக் கண்டதும் நீலகண்டனின் உள்ளம் நடுநடுங்கி போனது.

"இப்போ என்னடா பண்ணி தொலைஞ்ச? இவனுக்கு என்ன ஆச்சு?" என்றவன் வேதாச்சலத்தை எழுப்ப முயன்றான்.. ஆனால் அவரோ எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தார். ஆனால் சுவாசம் சீராக தான் இருந்தது அதனை பார்த்த பிறகு தான் நீலகண்டனுக்கு மூச்சே வந்தது.

"என்னடா ஆச்சு சொல்லித் தொலை எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்க?" என்று அவர் கேட்க கேட்க அப்படியே சிறிதும் அசைவில்லாமல் சிலை போல அமர்ந்திருந்தான் குணா, அதை கண்டு பொறுமை பறந்து போக, ஒருகட்டத்தில் அவனை ஓங்கி அறைந்திருந்தார் நீலகண்டன்.

அவர் அறைந்த வேகத்தில் நிதானத்திற்கு வந்த குணா தனக்கு எதிரே தன் அண்ணனை கண்டதும் "அண்ணா" என்று கதறியபடி கட்டி அணைத்து அழ ஆரம்பித்தான்.

"தப்பு பண்ணிட்டேன், பெரிய தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சுடு அண்ணா, எல்லாம் என்னால தான் நான் எல்லாம் உயிரோடவே இருக்க கூடாது. நான், சாகணும் நான் சாகணும்" என்றவன் அருகில் இருந்த கிணற்றுள் குதிக்க போக விரைந்து வந்து அவனைப் பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்ட நீலகண்டன் அவனை அணைத்துக் கொண்டு "என்னடா ஆச்சு? ஏன் இப்படி பண்ற? எனக்கு உன்னை விட்டா வேற யாருடா இருக்கா? சொல்லு என்ன நடந்ததுன்னு மட்டும் சொல்லு, எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். உனக்கு அண்ணன் நான் இருக்கேன் டா... என் உயிரே நீதானேடா" இன்று கண்ணீர் மல்க பேசியவரை தானும் அணைத்துக் கொண்டு அழுதபடியே நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான் குணசேகரன்.

"நானே என் பொண்டாட்டிய கொன்னுட்டேன் அண்ணா, எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது... ப்ளீஸ் அண்ணா நீ என்னை மன்னிச்சிடுண்ணா... அந்த வேதாச்சலத்துக்கு வேற சந்தேகம் வந்துடுச்சு அவன் போலீஸ் கிட்ட போயிடுவானோங்குற பயத்தில தான் அடிச்சேன். நான் கொலை பண்ணிட்டேன். அப்போ நான் ஜெயிலுக்கு போயிடுவேனா அண்ணா? ஜெயில் எல்லாம் வேண்டாம் அண்ணா நான் உன் கூடவே இருக்கணும் ப்ளீஸ் அண்ணா, என்னை விட்டுட்டு போயிடாத" என்று குழந்தை போல தன் மடியில் படுத்து அழுது கொண்டிருந்த குணாவின் தலையை மெதுவாக கோதிவிட்ட நீலகண்டனின் உள்ளம் கனத்துப் போனது.

பாசம் என்ற ஒன்றிற்காக செய்யக்கூடாத அத்தனை தவறுகளையும் செய்து தன் தம்பியின் பக்கம் நிழலாக நின்று, அவனது நிஜத்தை மறைத்துக் கொண்டிருந்தார்.

அதனால் தவறே செய்யாத குணவாவின் மனைவி பழியை சுமந்து மண்ணோடு மண்ணாக மக்கி போயிருந்தாள்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 38

"போதும் எழுந்திரு இனி அழுது ஒன்னும் ஆக போறது கிடையாது அடுத்து என்னனு யோசிக்கிறது தான் நமக்கு நல்லது" என்ற நீலகண்டன் தன் தம்பியை தேற்றி எழுந்து நிற்க வைத்தான்.

"என்ன அண்ணா பண்ண போறீங்க?"

"தப்பு நடந்துடுச்சு, இனி அதை மாத்த முடியாது அதனால மறைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்"

"இல்லன்னா இந்த விஷயத்தை எப்படியும் மறைக்க முடியாது. இவளுக்கு ஏதாவது ஒன்னுனா இவள் அண்ணன் சும்மா இருக்க மாட்டான். இதோ இந்த வேதா வேற பார்த்துட்டான்!! எப்படியும் நான் மாட்ட போறது உறுதி"


"அவளோட கையை தானே பார்த்தான். அவள் முகத்தை பார்க்கலல்ல அப்புறம் என்ன? அப்படியே அவன் ஏதாவது கேட்டாலும், எதையாவது சொல்லி நான் அவனை சமாளிச்சுக்கிறேன், வேற எதையும் நீ அவன் கிட்ட உளறி வைக்கலையே" என்று தன் தம்பியின் முகத்தை அவன் உற்று நோக்க... உடனே "இல்லண்ணா" என்று பதில் சொன்னான் குணா.

கோவத்திலும் குறை போதையிலும் வார்த்தையில் கவனம் இல்லாமல் தான் என்ன பேசினோம் என்பதை தானே மறந்து போயிருந்தான்.


"நம்ம இப்போ பண்ண போறது பெரிய பாவம் தான் அதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் இப்ப வேற வழி இல்ல இத நம்ம செஞ்சு தான் ஆகணும்.. இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா இவ்வளவு நாள் நீ பண்ண எல்லா விஷயமும் வெளியே வரும். அப்புறம் வாழ்க்கையில நம்ம நிமிர்ந்து நிற்கவே முடியாத அளவுக்கு ஆயிடும். ஒரு தப்ப மறைக்க இன்னொரு தப்புன்னு நம்ம வாழ்க்கையில எவ்வளவோ நடந்து போயிடுச்சு அதுல கடைசி தப்பா இதுவே இருக்கட்டும்" என்ற நீலகண்டன் குழியில் பாதி புதையுண்டு கிடந்த குணாவின் மனைவியை மேலே தூக்கச் சொன்னான்.

குணாவும் அவளது உடலை மேலே எடுத்து வந்து வைக்க அவளது மேனியெங்கும் மண் ஒட்டிக் கொண்டிருந்தது.

அதனைக் கண்ட நீலகண்டன். "முதல்ல இவள் மேல இருக்க மண்ணை அப்புறப்படுத்து" என்று சொன்னான். அப்போது திடீரென ஏதோ நினைவு வந்தவனாக, "டேய் ஒரு நிமிஷம், முதலில் உன் ரூமில இருக்க அந்த நாலு பொண்ணுங்களையும் எழுப்பி இங்கேயிருந்து அனுப்பி வச்சிட்டு வா, அதை மறந்தே போயிட்டேன் பாரு" என்றவர் அலைபேசியை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி சென்றார்.

குணாவோ அறையில் இருந்த அந்த நான்கு பெண்களின் முகத்திலும் தண்ணீரை ஊற்றி அவர்களை எழுப்பி விட்டான், அவள்களோ மீண்டும் இவன் மீது ஆசை கொண்டு குலாவ, சற்று தடுமாறினான் குணா, ஆனால் சட்டென நிதர்சனம் நெத்திப்பொட்டில் அறைவே அவள்களிடம் கோபப்பட்டு கத்தினான்.

"முதலில் இங்க இருந்து கிளம்புங்கடி" என்று ஒரு கட்டு பணத்தை அவர்கள் முகத்தில் தூக்கி எறிந்து விட்டு நுழைவாயில் வரை அவள்களை இழுத்துக் கொண்டுபோய் விட்டு வந்தவன் பெரு மூச்சு விட்டு மீண்டும் வீட்டின் பின் பக்கம் வந்தான்.

அப்போது தனது நண்பனிடம் போனில் பேசி முடித்து விட்டு திரும்பிய நீலகண்டனோ "என்னடா அதுக்குள்ள அனுப்பிட்டு வந்துட்டியா?" என்று கேட்டான்.

"ஆமா அண்ணா"

"எங்க கொண்டு போய் விட்டுட்டு வந்த"

"இங்க கேட் கிட்ட தான் விட்டுட்டு வந்தேன்" என்று சொன்னதும் தலையில் அடித்துக் கொண்ட நீலகண்டன் "அறிவில்லையாட உனக்கு, இங்க இருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு பஸ், ஆட்டோ எதுவும் கிடைக்காது... போறதுக்கு வழி இல்லாமல் அவளுங்க திரும்பி இங்க வந்தா என்ன பண்ணுவ?" என்று அவன் கேட்டு முடிக்கவும், அந்த நால்வரில் ஒருவளது எண்ணிலிருந்து குணாவுக்கு அழைப்பு வந்தது.

"யாரு?"

"அவளுங்க தான்"

"சொன்னனா? இல்லையா? போ, கூட்டிட்டு போயி ஏதாவது ஆட்டோல அனுப்பி வச்சிட்டு அவளுங்க போறாளுங்களா என்னனு நின்னு பார்த்துட்டு உடனே வா" என்று குணாவை அனுப்பி வைத்தான் நீலகண்டன்.

அந்த நான்கு பெண்களையும் தன் காரில் அழைத்துக் கொண்டு சென்ற குணா, அவர்களை ஒரு டாக்சி பிடித்து அனுப்பி வைத்து விட்டு மீண்டும் தன் கெஸ்ட் ஹவுஸ் நோக்கி வந்தான்.

"வந்துட்டியா? சரி நீ இங்க பார்த்துக்கோ, நான் இப்ப வந்துடுறேன்" என்ற நீலகண்டன், குணா வந்ததும் அங்கிருந்து செல்ல பார்க்க, விரைந்து வந்து அவனது கைகளைப் பற்றிக் கொண்ட குணசேகரன் "அண்ணா எனக்கு பயமா இருக்கு இப்ப நீ எங்க போற? என்னை விட்டுட்டு போறியா?" என்று கேட்க.. அச்சமயம் அவனை அணைத்து விடுத்த நீலகண்டன் "உன்னை விட்டுட்டு போற மாதிரி இருந்தா நீ முதல் தடவை தப்பு செய்யும் போதே உன்னை விட்டுட்டு போயிருப்பேன். கவலைப்படாதே சில ஏற்பாடுகளை பண்ணிட்டு திரும்ப வரேன்" என்று சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு வந்தான் நீலகண்டன்.

வந்தவன் குணாவின் அறைக்கு சென்று அவனது மனைவியின் உடைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அப்போது அவன் வாசல் நோக்கி வெளியே செல்லவும், அவனது மனைவி சாருலதா வீட்டிற்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது. அவளை கண்டதும் நீலகண்டனின் முகத்தில் அப்படி ஒரு பேரதிர்ச்சி. இருந்தும் அதனை வெளிக்காட்டாமல் கடினப்பட்டு இயல்பாக புன்னகைத்தார்.

"ஊர்ல இருந்து எப்ப வந்தீங்க?" என்று நலம் விசாரித்த லதாவோ காதலோடு அவனை அணைக்க முற்பட, அவளது அணைப்பிலிருந்து வியர்த்துப் போய் விலகினான் நீலகண்டன்.

"என்ன ஆச்சு உடம்பு எதுவும் சரி இல்லையா? முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு"

"அது..." தடுமாறியவன் பின்னர் "ட்ராவல் பண்ணதால முகம் அப்படி டையரடா தெரியுது... சரி நீ உள்ள போ எனக்கு ஆபீஸ்ல முக்கியமான ஒரு வேலை இருக்கு, அதை முடிச்சிட்டு உடனே திரும்பி வரேன்" என்று கூறி அவளை சமாளித்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றார்.

உடனே "ஒரு நிமிஷம்" என்று அவனை அழைத்த சாருலதா "கையில் என்ன கவர்?" என்று கேட்டாள்.

"ப்ச்... அது" என்று அவர் செய்வதறியாது நிற்கும் வேளையில் லாதாவுடைய எண்ணிற்கு அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில் அவள் கவனம் செலுத்த, "விட்டால் போதும்" என்று தலை தெறிக்க அங்கிருந்து கிளம்பினார் நீலகண்டன்.

மீண்டும் குணாவுடைய கெஸ்ட் ஹவுஸ்கு திரும்பி வந்த நீலகண்டன் அவனிடம் அந்த புடவையை கொடுத்து அவனது மனைவிக்கு உடுத்தி விடும்படி கூறினான்.

அவனும் இவன் சொன்னது போலவே அவளது உடலை சுத்தப்படுத்தி புடவையையும் மாற்றி விட்டான்.

இறந்து வெகு நேரமானதால் அவளது உடல் அதிகம் கனக்க ஆரம்பித்து விட்டது. அதனால் மூச்சு வாங்கி போய் அமர்ந்தான்.

குணா, தன் மனைவிக்கு புடவையை மாற்றிக் கொண்டிருந்த வேளையில் மண் கரை படிந்த அவளது பழைய புடவையை டீசல் ஊற்றி அந்த குழிக்குள் போட்டு கொழுத்திக் கொண்டிருந்தான் நீலகண்டன். அது முழுவதுமாக எரிந்து முடிந்ததும் தோண்டி வைத்திருந்த மண்ணை மூடி சாம்பலை மறைத்தனர்.

"அண்ணா இவளுக்கு தலையில அடி பட்டு இருக்கு எப்படியும் புடவையில் ரத்த கரை இருக்கணுமேண்ணா" என்று குணா சொன்ன பிறகு தான் அந்த நினைவு நீலகண்டனுக்கு வந்தது.

"சரி பார்த்துக்கலாம்" என்றான்.

குற்றங்களில் கரை கண்டவர்கள் போல இருவரும் அந்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்

"இவனை என்ன பண்ணலாம் அண்ணா?" மயங்கி கிடந்திருந்த வேதாச்சலத்தை குறிப்பிட்டு கேட்டான் குணா.

"சொல்லுறேன்" என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்கள் இடத்திற்குள் ஏதோ வாகனம் வரும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டதும் பதறிப் போன குணா "அண்ணா யாரோ வர்றாங்க" என்றான்.

"ஒரு நிமிஷம் அமைதியா இரு, என் பிரெண்டு ஒருத்தனை வர சொல்லி இருந்தேன், வந்தது அவனான்னு பார்த்துட்டு வரேன்... நான் சொல்லாமல் அவன் கிட்ட நீ எதையும் பேச கூடாது, அமைதியா இருக்கணும் சரியா" என்ற நீலகண்டன் முன்வாசல் நோக்கிச் செல்ல, அவன் நினைத்தது போலவே அங்கு வந்திருந்தது இவனது நண்பன் தேவன் தான்.

"என்ன ஆச்சு? எதுக்கு வர சொன்ன?" என்று தேவன் கேட்கவும்... நடந்ததை தங்களுக்கு உகந்த போல சொல்ல ஆரம்பித்திருந்தான் நீலகண்டன்.

"தம்பிக்கும் அவன் மனைவிக்கும் இடையிலே நடந்த சண்டையில, அவள் படியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்துட்டா... போதையில் இருந்ததால இவனும் அவளை உடனே கவனிக்காமல் விட்டுட்டான். அவள் இறந்து கிட்டதட்ட 6 மணி நேரம் இருக்கும், இது இயற்கையா நடந்த மாதிரி ஹாஸ்பிட்டலில் வச்சு செட் பண்ணனும்... இவளுக்கு அண்ணன் ஒருத்தன் இருக்கான். அவனுக்கு சின்னதா ஏதாவது ஒரு விஷயம் தெரிஞ்சா கூட கண்டிப்பா என் தம்பியை சும்மா விடமாட்டான் வேணும்னே இவன் தான் கொலை பண்ணான்னு சொல்லி பெரிய லெவல்ல இந்த விஷயத்தை கொண்டு போயிடுவான்"

"ஆனால் எப்படியும் இந்த லேடி இறந்தது அவங்க குடும்பத்துக்கு தெரிஞ்சி தான ஆகணும்"

"ஆமா கண்டிப்பா தெரியணும். இப்போ இவளை காணோம்னு சொன்னாலோ இல்ல எங்கேயாவது போயிட்டானு சொன்னாலோ எங்களுக்கு தான் பிரச்சனை... கண்டிப்பா அதை இவள் அண்ணன் நம்பமாட்டான். அதனாலதான் ஏதாவது பண்ண முடியுமானு உன்கிட்ட கேட்க வந்தேன்"

" நீ என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறேன்னு எனக்கு புரியல ஆனா ஒன்னு மட்டும் எனக்கு புரியுது... உன் தம்பி அவன் மனைவியை கொன்னுட்டான்"

"ஏ அப்படி இல்லை"

"ப்ச், எனக்கு புரியுது நீலா, இதை நீ என்கிட்ட இருந்து மறைக்கணும்னு எந்த அவசியமும் இல்ல.. உனக்கு இப்ப என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு, எப்படியும் இதுக்கு நீ ஒரு பிளான் வச்சிருப்ப அதுபடியே நான் பண்றேன்" என்று சொன்னான்.

"குணாவோட மனைவிக்கு உன்னோட ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மென்ட் நடக்கணும்.. அவ சீரியஸா இருக்க மாதிரி காட்டணும். அவளுக்கு சடனா ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, கவனமில்லாமல் நிலை தடுமாறி மாடி படியில் இருந்து கீழே விழுந்து அடிபட்ட மாதிரி சொல்லி வைக்க போறேன். அதுக்கு தகுந்த மாதிரி ரிப்போர்ட்ல என்ன எல்லாம் மாத்த முடியுமோ மாத்தி, போலியா ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணிடு. அப்புறம் அவள் ட்ரஸ்ல அங்க அங்க ப்ளட் உறைஞ்சி இருக்க மாதிரி பண்ணிடு..." என்றதும் தேவன், இதழ் பிரியாமல் சிரித்தான்.

"எதுக்கு சிரிக்கிற?"

"நீங்க பக்கா கிரிமினல்ஸ் தான்"

"ப்ச், நீ வேற சும்மா இருடா, நான் இப்பவே இவளோட அண்ணனுக்கு போன் மூலமா தகவல் கொடுத்திடுறேன், அவன் ஹாஸ்பிடலுக்கு வர்றதுக்கு மூணு மணி நேரம் ஆகும் கரெக்டா அவன் அங்க வரவும்... இந்த டிராமாவை முடிச்சு ஹாஸ்பிட்டலில் வச்சு இவள் இறந்து போன மாதிரி ஸீன் க்ரியேட் பண்ணனும்.. இதை உன்னால பண்ண முடியுமா?"

"ம்ம்ம் வை நாட்? பத்து கோடி கொடுத்தா கண்டிப்பா பண்ண முடியும்" என்று தேவன் சொல்ல இரண்டு நொடி அமைதியாக இருந்த நீலகண்டன் பின்னர் 'சரி' என்று தலையசைத்தான்.

இவர்கள் ஏற்பாடு செய்தபடியே குணசேகரனின் மனைவியை நீலகண்டனின் நண்பன் தேவனுடைய மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது போல அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. போலி ரிப்போர்ட்டுகளையும் தயாராக வைத்திருந்தனர். விஸ்வநாதனுக்கு தகவல் சொல்லப்பட்டு, அவரும் அங்கு வந்து சேர்ந்தார். தன் தங்கையின் இந்த நிலையை கண்டு அவர் கண்ணீர் வடித்து நிற்கும் வேளையிலேயே 'அவள் இறந்து விட்டாள்' என்ற செய்தியை மருத்துவர் வந்து சொன்னார். அதனைக் கேட்டதும் மொத்தமாக உடைந்து போய் அமர்ந்தான் விஸ்வநாதன்.

எப்போதோ இறந்தவளை இப்போது இறந்ததாக அவர்கள் சொல்ல, மீண்டும் ஒரு முறை பிறரை நம்பவைக்கும் பொருட்டு அண்ணனும் தம்பியும் அழுது கரைந்தனர்.

இங்கு மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே வேதாச்சலத்தை வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்து விட்டு தான் வந்தான் நீலகண்டன். அவனுக்கு அங்கு சிகிக்சை வழங்கப்பட்டு கொண்டிருந்தது. காவலுக்கு இரண்டு ஆட்களையும் நியமித்துவிட்டு வந்திருந்தான்.

இங்கு குணாவின் மனைவி உடலை தகணம் செய்துவிட்டு அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

உங்க வீட்டு நடிப்பு, எங்க வீட்டு நடிப்பு அல்ல உலக மகா நடிப்பு நடித்து மனைவியை இழந்த சோகத்தில் கண்ணீர் வடித்தபடியே சுற்றி அலைந்தான் குணசேகரன். அவனது அழுகையை விஸ்வநாதனும் முழுமையாக நம்பினார். அதனால் அவன் மீது அவருக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. அனைத்தும் இயல்பாகவே தெரிந்தது.

குணாவின் மனைவிக்கு மூன்றாம் நாள் காரியம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அப்போது எதர்ச்சியாக அவர்கள் வீட்டு டேபின் மீதிருந்த தனது தங்கையின் ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தான் விஸ்வநாதன். அதில் எந்த இடத்திலும் அவள் கர்ப்பமாக இருந்ததாக குறிப்பிடவில்லை. அதனைப் பார்த்ததும் விஷ்வாவிற்கு முகம் சுருங்கியது. பின்னர் அந்த ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு தனக்குத் தெரிந்த ஒரு மருத்துவரிடம் சென்று காட்டினான். இவர்கள் சொன்ன அதே விஷயத்தை தான் அந்த மருத்துவரும் சொன்னார் ஆனால் அவள் கர்ப்பமாக இருப்பதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. உடனே இதனைப் பற்றி கேட்டறிந்து கொள்ள எண்ணி நீலகண்டனை சந்தித்தான் விஸ்வநாதன்.

"என் தங்கச்சி பிரக்னண்டா இருந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? அவள் ரிப்போர்ட்ல அது மென்சன் பண்ணவே இல்லையே?" என்று அவன் நேரடியாக கேட்க, இவனுக்கு தூக்கி வாரி போட்டது இவர்களுக்குத்தான் அது எதுவுமே தெரியாதே...

"இல்லையே அப்படி ஏதாவது இருந்திருந்தா எங்க கிட்ட அவள் சொல்லி இருப்பாளே.. குணா கூட என்கிட்ட அது மாதிரி எதுவும் சொல்லையே" முகத்தில் பதட்டத்தை வெளிப்படுத்தாமல் சொன்னார்.

"ஆனால் என் தங்கச்சி என்கிட்ட சொன்னா" என்றதும் நீலாவின் முகத்தில் பயரேகை ஓடியது.

"என்ன சொல்லுறீங்க?"

"அந்த நல்ல விசயம் கேள்விப்பட்டு தான் போன வாரம் இங்க வந்து அவளை நான் பார்த்துட்டு போனேன். உங்க கிட்ட எல்லாம் அப்புறமா அவளே சொல்லிக்கிறேன்னு சொன்னாள், அதனால நானும் யார்கிட்டயும் இதை பத்தி பேசிக்கல"

"அது எப்படி? அந்த மாதிரி ஏதாவது இருந்திருந்தா ரிப்போர்ட்ல தெரிஞ்சி இருக்குமே... அவள் கர்பமா இருந்ததை ஏதாவது ஹாஸ்பிட்டாலில் செக் பண்ணி இருந்தாளா?" என்று நிதானமாக யோசித்து சரியான வழியில் நீலகண்டன் காய் நகர்த்த, விஸ்வநாதனின் முகம் யோசனையை பூசிக் கொண்டது.

"இல்ல பெரியவங்க ஒருதங்க நாடி பிடிச்சு பார்த்ததாக சொன்னாள்" என்று அவன் சொன்னதை கேட்டதும் இதுவரை பிடித்து வைத்திருந்த மூச்சை நிதானமாக வெளியே விட்டான் நீலகண்டன்.

"ப்ச் அவங்க ஏதாவது இவளோட சந்தோசத்துக்காக சொல்லி இருக்கலாம் இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு நீங்களும் வந்து பேசிட்டு இருக்கீங்க, சரி விடுங்க நடந்தது நடந்துருச்சு இப்ப அவ இருந்து இருந்தா நமக்குள்ள இந்த கேள்வியை வந்து இருக்காது. நடக்க வேண்டிய காரியத்தை பார்க்கலாம் வாங்க" என்று நீலகண்டன் செல்ல, 'எது உண்மை எது பொய்' என்று தெரியாமல் மொத்தமாக குழம்பிப்போய் கண்களில் கண்ணீர் திரையிட நின்றான் விஸ்வநாதன்.

குணாவின் மனைவிக்கு மூன்றாம் நாள் காரியம் நடந்து முடிந்தது.

விஸ்வநாதனின் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத வலியும் நெருடலும் இருந்து கொண்டே இருந்தது.

அனைத்து காரியமும் முடிந்தபிறகு அங்கிருந்து செல்ல தயாரானான். தனது மொத்த வலியையும் கண்களில் தேக்கி வைத்துக் கொண்டு தங்கையின் புகைப்படத்திற்கு கீழேயிருந்த அஸ்தி கலசத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

மெல்ல அடியெடுத்து வைத்து அப்புகைப்படத்திற்கு அருகில் வந்தவன், அவளது அஸ்தி கலசத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, மனம் உடைந்து கதறி அழுதான்.

"உனக்கு என்ன ஆச்சுடா? ஏதாவது பிரச்சனைன்னா ஆரம்பத்திலேயே அண்ணன் கிட்ட சொல்லி இருக்கலாமே, எல்லாரும் நீ சந்தோசமா இருந்தேனு தான் சொல்றாங்க ஆனா அதை என் மனசு நம்ப மாட்டேங்குது.. உனக்கு என்னமோ தப்பா நடந்திருக்குனு இப்ப வர என் மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. உன்னை நான் இப்படி விட்டிருக்க கூடாது... ஏதாவது ஒன்னுன்னா கடைசி வரைக்கும் உனக்கு நான் இருப்பேன்னு சொன்னேனே... இப்போவும் நான் இருக்கேன் ஆனால் நீ இல்லாமல் போயிட்டியே, எந்த கஷ்டம் இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்தை நீ சொல்லி இருக்கலாமேடா, இப்படி என்னை தனியா விட்டுட்டு போயிட்டியே ஏன்டா இந்த அண்ணனை விட்டுட்டு போன" என்று கதறி அழுதவரை கண்டு, அங்கிருந்த பெண்களின் கண்கள் எல்லாம் கலங்கி போனது. நீலகண்டனுக்கு குற்ற உணர்வு அதிகரித்தது. ஆனால் குணசேகரனோ "அய்யய்யா" என்று முகத்தை சுளித்துக் கொண்டு நின்றான்.

ஒரு மூச்சு அழுது முடித்து விட்டு "என் தங்கச்சி அஸ்தியை நானே கரைச்சிக்கிறேன்" என்று நீலன்கண்டனை பார்த்து சொன்னான் விஸ்வா, அவரோ "இல்லை அது எப்படி?" என்று தடுக்க முயலவும், அவரது கையை பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தாள் சாருலதா "வேண்டாம் அவர் கொண்டு போகட்டும்" என்று சொல்ல... நீலகண்டன் குணாவின் முகத்தை பார்த்தான். அவனோ அமைதியாக தலை குனியா "சரி" என்றார் நீலகண்டன்.

அவளது அஸ்தியை எடுத்துக்கொண்டு அந்த வீட்டு வாசலை தாண்டி வெளியே வந்த விஸ்வநாதன் திரும்பி நின்று "நீங்க எல்லாம் சொன்னது உண்மையோ? பொய்யோ? அதை பத்தி இனி ஆராய்ச்சி பண்ண நான் விரும்பல, அவள் மரணம் இயற்கையா இருந்தா அது விதி, ஒருவேளை அவளது மரணத்தில ஏதாவது தவறு நடந்திருந்தா தப்பு பண்ணவனோட வம்சத்துல ஒரு பிடி சாம்பல் கூட மிஞ்சாது" என்று கண்கள் சிவக்க சொல்லியவன் அந்த அஸ்தி கலசத்தை இறுக்கி பிடித்தான்.

அப்போது அங்கிருந்து சென்றவன் தான் இந்நாள் வரை அந்த வீட்டு வாசல் படியை கூட மிதிக்கவில்லை. அன்றொடு அவர்களது உறவு முறிந்து போனது.
 

Mythili MP

Well-known member
Wonderland writer


அத்தியாயம் 39

இரண்டு நாட்கள் சென்றது வேதாச்சலம் இன்னும் மருத்துவமனையில் தான் இருந்தான். டாக்டர் உட்பட ஒருவரும் அவனை அங்கிருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை காரணம் நீலகண்டன் இப்போதைக்கு அவனை வெளியே அனுப்ப வேண்டாம் உங்கள் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தான்.

டாக்டர் ஏன் தன்னை இங்கிருந்து அனுப்பவில்லை என்பதை வேதாச்சலமும் புரிந்து கொண்டான்.

அத்தனை பெரிய தவறை செய்துவிட்டு கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் தன்னிடம் சகஜமாக அவர்களால் எப்படி பேச முடிந்தது என்பது மட்டுமே வேதாச்சலத்தின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? யாருக்கும் உண்மையாக இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்? ஆனால் ஒன்று மட்டும் உண்மை! நடந்த எல்லா விஷயத்திற்கும் அவர்களை மட்டும் முழுதாக குறை கூறி விட முடியாது ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இவர் சரியாக இருந்திருந்தால் ஒருவேளை அன்று யசோதாவுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருந்திருக்கலாம்.

நம்மை சுற்றி நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் பிறரை மட்டும் குறிப்பாக குறை சொல்லி விட முடியாது நம்மை சுற்றி தவறு நடக்கிறது என்றால் அதற்கு ஏதோ ஒரு வகையில் நாமும் காரணமாகத்தான் இருப்போம். அன்று அவர் தன் குடும்பத்தின் மீது சரியாக கவனம் செலுத்தி அந்த குடும்பத்தை தன் பாதுகாப்பில் வைத்திருந்தார் என்றால் இப்படி அவனை பயன்படுத்தி எவனோ ஒருவன் வந்து அவன் மகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டுச் சென்றிருக்க முடியாது.

எங்கோ ஒருவன், ஏதோ ஒரு தவறு செய்கிறான் அது நம்மை எந்த விதத்தில் பாதிக்கப் போகிறது என்று சொல்லி நாம் கடந்து விடுகிறோம் ஆனால் எப்பிழையை நாம் கடக்க பழகி கொள்கிறோமோ அது தான் பின்னாளில் நம் வாழ்வையே கேள்விக்குறியாக்கி விடுகிறது.

மருத்துவமனையில் இருந்த ஒரு வாரமும் தன் வாழ்வில் நடந்ததை பற்றியும், நீலகண்டன் மற்றும் குணாவின் குணநலன்களைப் பற்றியும் தான் யோசித்து கொண்டு இருந்தான் வேதாசலம்.

எந்த ஒரு காரியத்திற்கும் உடனடியாக எதிர்வினை புரியும் நிலையில் இப்போது அவன் இல்லை.. அவர்களைப் போலவே நிதானமாக நின்று காய் நகர்த்த வேண்டும் என்று அமைதியாக இருந்தான்.

உண்மைதான் முந்தி செயல்படுவதால் மட்டும் வெற்றி கிடைத்து விடாது, எந்த இடத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

இத்தனை தவறுகளை செய்து மறைக்கத் தெரிந்தவனுக்கு தன்னை கொன்றுவிட்டு அதையும் மறைப்பது பெரிய காரியமாக இருக்காது என்பதை வேதாச்சலம் அறிந்திருந்தார்.

அமைதியாக இருக்கும் பட்சத்தில் பழி வாங்குவதற்கான தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கலாம் ஆனால் நாமே இல்லை எனும் போது அவர்களுக்கு தண்டனை கொடுக்க ஆளே இல்லாமல் போய்விடுமே என்று நிதானமாக இருக்க முடிவு செய்தான்.

பகைவனை உறவாடி கெடு என்பார்கள்... இவர்களது தவறுக்கு தண்டனை வழங்க அதுவே சரியான வழி என்று எண்ணினான்.

ஒரு வாரம் கழித்து, வேதாச்சலத்தை காண அந்த மருத்துவமனைக்கு வந்தான் நீலகண்டன்.

அவனைக் கண்டதும் வேதாச்சலத்தின் முகத்தில் எந்தவித உணர்வும் வெளிப்படவில்லை உணர்வுகளை எல்லாம் உள்ளுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு உணர்வின்றி அமர்ந்து கொண்டிருந்தான்.

எந்த இடத்தில் நாம் வீழ்த்தப்படுவோம் என்று தெரிகிறதோ, அந்த இடத்தில் கவனமா இருக்க வேண்டும்.

"எப்படி இருக்க வேதா?" என்று நீலகண்டன் கேட்க, வேதாவிடம் பெரிதாக எந்த பதிலும் இல்லை... அவனது அமைதியை உணர்ந்து நீலகண்டனோ மேலும் பேச ஆரம்பித்தான்.

" குணா உன்னை அடிச்சி இருக்க கூடாது அது தப்புதான் ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டான். உனக்கு தான் தெரியுமே அவன் என்னை மாதிரி கிடையாது அதிகமா கோவப்படுவான் சண்டை போடுவான் என்ன பண்றோங்கற யோசனை இல்லாம எல்லாத்தையும் செஞ்சுட்டு இருப்பான்" என்று அவன் வளமையாக பேசிக் கொண்டிருக்க, அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்த வேதாவோ "இப்ப என்ன சொல்ல வர?" என்று கேட்டான்.

"இல்லைடா அவன் தப்பு பண்ணிட்டான் உண்மைதான், அதை நான் நியாயப்படுத்த வரல"

"சரி அதை நான் மறந்திடுறேன்... எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு" என்று கேட்ட வேதாவை, யோசனையாக பார்த்த நீலாவோ 'ம்ம்ம் கேளு' என்று தலையசைத்தான்.

"அந்த குழிக்குள்ள இருந்தது யாரு? உன் தம்பி யாரை கொன்னு புதைச்சுட்டு இருந்தான்?" என்று சட்டென அவன் கேட்க, மிடறு விளங்கி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சில நொடி யோசித்தவன்,

"அது தப்பான தொழில் செய்ற ஒரு பொண்ணு அவங்களுக்குள்ள ஏதோ தகராறு ஏற்பட்டிருக்கு அந்த பொண்ணு தவறி விழுந்து இறந்துட்டா, இவன் பயத்துல என்ன பண்றதுன்னு தெரியாம அப்படி ஒரு விஷயத்தை பண்ணிட்டான், அந்த விஷயத்துல அவன் மேல எந்த தப்பும் இல்லடா அது ஒரு விபத்து இப்போ நான் அந்த பிரச்சனையை எல்லாம் சரி பண்ணிட்டேன்" என்றவன் மெதுவாக வேதாச்சலத்தின் கரத்தை தனது கைக்குள் வைத்துக் கொண்டு "அப்படி பார்க்காத வேதா, என்ன இருந்தாலும் அது யாரா இருந்தாலும் அவன் அப்படி பண்ணது தப்புதான். எதை சொல்லியும் சமாளிக்கிறதுக்காக நான் இங்க வரல... அவன் என் தம்பி வேதா, என்னால எப்படி அவனை விட்டுக் கொடுக்க முடியும்?சரியோ தப்போ கடைசி வரைக்கும் நான் அவன் கூட இருப்பேன்னு வாக்கு கொடுத்து இருக்கேன்.. என்னால அதை மீற முடியாது. சின்ன வயசுல இருந்து எல்லாமே அவனுக்காகன்னு சொல்லி வாழ்ந்துட்டேன்.. என்னோட மகன் ஆரியன். ஆனால் அவனை விட எனக்கு என் தம்பி தான் பெருசு. ஏன்னா என்னுடைய முதல் மகனே என் தம்பி தான். அவன் ஒரு குழந்தை. குழந்தை தப்பு பண்ணிடுச்சுங்குறதுக்காக பெத்தவங்க அதை அப்படியே விட்டுட முடியாது இல்லை.. என் வலி என்னுடைய எண்ணம் உனக்கு புரியும்னு நினைக்கிறேன் ஆனா நான் இங்க எதையும் நியாயப்படுத்தனும்னு விரும்பல, சில விஷயம் நமக்கு தப்புன்னு தெரிஞ்சாலும் அதை செய்யாம இருக்க முடியாது.. காரணம் நம்ம கூட இருக்கவங்க அந்த நியாயம் தர்மத்தையும் விட நமக்கு மேலாக தெரியுவாங்க" என்று சொன்னவன் ஆழ்ந்த மூச்சு எடுத்து "நடந்தது எல்லாம் போகட்டும் தேவையில்லாம நீ எதைப் பற்றியும் யோசிக்காத, நடந்த எல்லாத்தையும் இந்த இடத்திலேயே மறந்துட்டு பழையபடி நீ என் வீட்டுக்கு வா இல்ல நம்ம வீட்டுக்கு வா, நடந்த விஷயத்தை பத்தி நீயும் பேசாத, அவனும் பேச மாட்டான் ஓகே" என்ற நீலகண்டன் அங்கிருந்து சென்றான். செல்லும் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்த வேதாச்சலத்தின் கண்கள் அனலென தகித்தது.

தவறு செய்து விட்டு 'ஆம் நான் தவறு செய்து விட்டேன் ஆனால் அதற்கு காரணம் நான் அல்ல என் சூழ்நிலை' என்று சொல்லும் இவனையும் அந்தத் தவறை நியாயப்படுத்தும் அவனது தம்பியையும் எளிதில் திருத்த முடியாது அவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதை புரிந்து கொண்டான். அதற்காக தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

வேதாச்சலம் மீண்டும் நீலகண்டன் வீட்டிற்கு வந்தான். அங்கு அவனை காணவே குணாவிற்கு பிடிக்கவில்லை இருந்தும் நீலகண்டன் தான் "அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்லுறேன்.. இவன் நம்ம கண் முன்னாடி இருக்கிறது தான் நமக்கு நல்லது... இவன் மட்டும் விஸ்வநாதன் கிட்ட போயி இந்த மாதிரி குணா ஒரு பொண்ணை அவன் கெஸ்ட் ஹவுஸ்ல வச்சு புதைக்க பார்த்தான்னு சொன்னான்னு வை அவன் என்ன ஏதுன்னு விஷயத்தை தோண்ட ஆரம்பிச்சிடுவான் அப்புறம் நீயும் காலி நானும் காலி"

"அதுக்கு தான் அண்ணா சொல்றேன் பேசாம இவனை கொன்னுடலாம்"

"என்ன பேச்சு பேசிட்டு இருக்க நீ? உன் மனைவி விஷயத்தில இருந்தே என்னால இன்னும் வெளியே வர முடியல, தினம் தினம் குற்ற உணர்ச்சியில் செத்துட்டு இருக்கேன்.. இந்த வீட்டை விட்டு போகும் போது அவள் அண்ணன் என்ன சொல்லிட்டு போனான்னு கேட்டியா? போதும் குணா ஏற்கனவே நிறையா தப்பு பண்ணிட்டோம் மேலும் எதுவும் பண்ண வேண்டாம்"

"ஆனால் அவன் இங்க இருக்கிறது எனக்கு என்னமோ சரியப்படல அண்ணா"

"கொஞ்ச நாள் போகட்டும் வேற ஏதாவது வழி இருக்கான்னு யோசிக்கலாம்... இப்போதைக்கு அவன் உன் வழிக்கு வர மாட்டான். நான் முடிச்ச அளவுக்கு அவன்கிட்ட பேசிட்டேன்... அவன் ஒரு எமோசனால் ப்பூல் யாராவது ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு பேசினா அதை எல்லாம் உண்மைன்னு நம்பிடுவான். கண்டிப்பா அவன் என்னை மீறி உன் விஷயத்தில் இனிமேல் தலையிட மாட்டான்"

"இல்லண்ணா எனக்கு என்னமோ அவன் வேற ஏதோ பிளானோட இந்த வீட்டுக்குள்ள வந்த மாதிரி தோணுது... அட்லீஸ்ட் அவனை இந்த வீட்டுல இருந்தாவது அனுப்பி வச்சிடலாம்"

"தேவை இல்லாமல் கண்டதையும் யோசிச்சி மனசை போட்டு குளம்பிகாத குணா... அவனுக்கு அந்த அளவுக்கு எல்லாம் சாமர்த்தியம் கிடையாது. அவன் ஒரு பிள்ளைபூச்சுடா அவனுக்காக எல்லாம் பயந்துட்டு இருக்காத"

"எனக்கு பயம் எல்லாம் இல்லை"

"அப்புறம் என்ன? அந்த பிரச்சனையை விடு, அவனை நான் பார்த்துகிறேன்" என்று சொல்லி அங்கிருந்து சென்றான் நீலகண்டன்.

கிட்டத்தட்ட மூன்று மாத காலம் வேதாச்சலத்தால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. அவர்கள் யாருக்கும் வேதாச்சலத்தின் மீது சந்தேகமும் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு அவன் நடந்து கொண்டான் ஒரு கட்டத்தில் குணாவே அவன் இயல்பாக தான் இருக்கிறான் என்பதை நம்பி விட்டான்.

அப்படியே நாட்கள் சென்றது அப்போதுதான் கொலை வழக்கில் ஆரியன் கைதான விஷயம் நீலகண்டனின் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது.

ஆரியனின் தாய் லதாவும் வக்கீல் தானே, உடனே தன் கணவனை அழைத்துக் கொண்டு அந்த ஊர் காவல் நிலையத்திற்கு சென்றாள். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பாகவே தான் தான் அந்த கொலையை செய்தேன் என்று ஆரியன் வாக்குமூலம் கொடுத்திருந்தான் அதனால் இவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது.

அதையும் மீறி தன் மகன் உண்மையிலேயே ஒருவரை கொலை செய்து விட்டான் என்பதை சாருலதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் கோபத்திலும், விரக்தியிலும் அங்கிருந்து மீண்டும் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

இனிமேல் இவளை நம்பி இருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்ற நீலகண்டன் தனக்கு தெரிந்த இடத்தில் பெரிய பெரிய வக்கீல்களை பிடித்து அடுத்து என்ன செய்யலாம் என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டான்.

நீலகண்டனின் குடும்பம், ஆரியனின் எதிர்கால வாழ்க்கையை எண்ணி கலங்கி போய் தடுமாறி நின்று கொண்டிருக்க அதனை கண்குளிர பார்த்து, உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்தான் வேதாச்சலம்.

நம்மை காயப்படுத்திய ஒருவன் சூழ்நிலை காரணமாக காயப்பட்டு துடிக்கும் போது தான் இங்கு பலருக்கு கடவுள் நம்பிக்கை நிலைக்கிறது.

நீதிமன்றத்துக்கு வந்த ஆரியன் அங்கும் "தான் தான் கொலை செய்தேன்" என்று ஒப்புக்கொள்ள, தண்டனை வழங்கப்பட்டது... அவனைக் காப்பாற்ற நீலகண்டன் தரப்பிற்கு வாய்ப்பே இல்லாமல் போனது.

குடும்பத்திற்கே ஒற்றை வாரிசான ஆரியனை சிறைக்கு அனுப்பி விட்டு... மனம் நொந்து போய் வீடு வந்து சேர்ந்தான் நீலகண்டன்.

மனமெல்லாம் வலி சொல்ல முடியாத ரணம் அத்தனை தவறுகளிலிருந்தும் தன் தம்பியை காப்பாற்றியவனால் தன் மகனை காப்பாற்ற முடியாமல் போனது. அதனை எண்ணி எண்ணி கொஞ்சம் கொஞ்சமாக மனதளவில் மடிந்து கொண்டிருந்தார் நீலகண்டன்.

ஹாலில் பெரும்போதையில் அமர்ந்திருந்த நீலகண்டன் "நான் யாருக்கு என்ன துரோகம் பண்னேன்? இந்த கடவுள் ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் கஷ்டத்தை கொடுக்கிறான்?" என்று அவன் சத்தமிட்டு அழுது புலம்ப, அதனை ஓரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த வேதாசலத்தின் இதழில் எள்ளல் சிரிப்பு வெளிப்பட்டது.

பொதுவாக தன் பக்கம் தவறுகளை கொண்டவன் தான் இறைவனிடம் அதிகம் கோபம் கொள்வான்.

காரணம் அவனை பொறுத்த வரை அவன் எந்த தவறும் செய்யவில்லை, ஏனெனில் ஒவ்வொரு தவறுக்கும் ஏதாவது ஒரு காரணத்தை சூழ்நிலையின் மீது அவன் சுமத்தி இருப்பானே அதன் பிறகு எப்படி அவனது பிழைகள் "தவறுகளாக" அவன் கண்களுக்கு தெரியும்?

அடுத்தடுத்த நாட்கள் வலியுடன் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் நீலகண்டனின் மனதை பிரள வைக்க முடியும் என்றறிந்து கொண்ட வேதாசலம் வெகுநாட்களாக மனதில் தீட்டி வைத்திருந்த திட்டத்தை அழகாக செயல் படுத்தினான்.

புலிகளுக்காக அவன் விரித்த வலையில் பாவம் ஒரு புள்ளி மான் பலியாகி போனது.
 
Status
Not open for further replies.
Top