ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்கவா பெண்ணே _கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
 

Mythili MP

Well-known member
Wonderland writer
45

ஹோட்டல் முதலாளி முத்துவின் கொலை நடந்த பிறகு, மதியுடன் சங்கவி ஊரை விட்டு கிளம்பி வந்த நேரம்...

காரின் பின் இருக்கையில் நடுங்கியபடியே அமர்ந்து இருந்தாள் சங்கவி. ஏதோ ஒரு வேகத்தில் கொலை செய்து விட்டு இப்போது இவனை நம்பி அங்கிருந்து வந்து விட்டாள். ஆனால் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று நினைத்தாலே உடல் எல்லாம் நடுங்கியது.


மனம் முழுக்க பயமும், பதட்டமும் மட்டுமே நிறைந்திருந்தது. எப்படி அந்த பயம் இல்லாமல் போகும்? அவள் ஒரு கொலை செய்திருக்கிறாள் அல்லவா? தன் மானத்தை காத்துக்கொள்ள தற்காப்புக்காக அவள் அதனை செய்திருந்தாலும் அவளால் ஒரு உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்து இருக்கிறது. அப்படி இருக்கும் போது அந்த எண்ணத்தில் இருந்து எப்படி அவளால் எளிதில் அதிலிருந்து மீள முடியும்?... இந்த விஷயத்தில் அவள் மீது தவறு இல்லை, இருந்தும் பெரிய இடத்தில் இருக்கும் அவர்களை எதிர்த்து சட்டப்படி இவளால் தன்னை நிரூபித்து எப்படி அந்த வழக்கிலிருந்து வெளிவர முடியும்? அதனால் தான் அவளை காத்துக் கொள்ள வேண்டி அவள் அங்கிருந்து வர வேண்டிய நிலை உருவாகிவிட்டது.


அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கதையாக எதை பார்த்தாலும் சங்கவிக்கு பயமாக தான் இருந்தது. அப்போது அவர்கள் வாகனத்தை கடந்து அந்த நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் செல்ல… அதனை போலீஸ் வாகனம் என்று எண்ணி துடித்து பிடித்து தன் உடலை குருக்கியவள்…தன் மடியில் தலைவைத்து கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவளது செயலை கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்த மதிக்கு அவனது சிறு வயது நினைவுக்கு வந்தது.


அவன் தெருவில் படுத்து கிடந்த காலத்தில் ஒவ்வொரு வண்டி அவனை கடந்து செல்லும் போதும் இப்படி தான் தன் உடலை குறுக்கிக் கொண்டு கண்ணீருடன் கடவுளை வேண்டியபடி சாலையோரம் படுத்து கிடப்பான். அந்த நினைவு மனதில் வந்து போனது. “ஒன்னுமில்லை பயப்படாத அது வெறும் ஆம்பிலன்ஸ் தான்” என்று காரை ஓட்டியபடியே மதி கூற, கொஞ்சமாக கண்ணை திறந்தாள் சங்கவி. நிமிர்ந்து அமர்ந்தவளின் தலை குனிந்தே இருந்தது. கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது.


அவள் பக்கத்தில் இருந்த அவளது பாட்டி “என்ன ஆச்சும்மா? நம்ம எதுக்கு இங்கேயிருந்து போறோம்? இப்போ எங்க போறோம்? நீ ஏன் அழுத்துகிட்டே இருக்க?” என்று தொடர் கேள்விகளை கேட்டார்.


அவருக்கு பதில் கொடுக்கும் மனநிலையில் இப்போது அவள் இல்லை. பக்கவாட்டில் திருப்பி அவள் பாட்டியின் முகத்தை பார்த்தாள். அழுது அழுது சங்கவியின் கண்கள் வீங்கி சிவந்து இருந்தது. “என்னை எதுவும் கேட்காத பாட்டி” என்றவள் அப்படியே பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு கதறினாள்.

“நான் எதுவும் கேட்கலைடா தங்கம் நீ அழாத” என்றவர் அவளின் முதுகை ஆதரவாக தட்டி கொடுத்தார்.

“எனக்கு பயமா இருக்கு பாட்டி” என்று கேவிக் கொண்டே சங்கவி உரைக்க… மதிக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது.

தான் ஒரு கொலை செய்து விட்ட காரணத்தால் தான் இப்போது இங்கிருந்து தப்பித்து செல்கிறோம் என்ற உண்மை பாட்டிக்கு தெரிந்தால் நிச்சயம் அவர் பயந்து விடுவார் என்ற எண்ணத்தில் தான் உண்மையை கூற முடியாமல் தடுமாறினாள்.

உரிய காலம் வரும் போது அனைத்தையும் அவருக்கு எடுத்துரைக்கலாம் என்று நினைத்திருந்தாள்.

மெதுமெதுவாக பொழுது விடிந்தது… பாட்டியின் மடியில் படுத்தபடியே தூங்கி இருந்தாள் சங்கவி. ஒரு இடத்தில் வாகனம் நின்றது.

பாட்டி தான் பேத்தியை எழுப்பி விட்டார்.

“அம்மா சங்கவி” என்று அவர் எழுப்ப, பட்டென கண்களை திறந்தாள் சங்கவி. திடுக்கிட்டு போனாள்.. அவளது பதட்டத்தை கண்ட மதி “ஒன்னும் பிரச்சனை இல்லை, பயப்படாமல் கீழே இறங்கு” என்றபடி கார் கதவை திறந்து விட்டான்.


ஊருக்கு ஒதுக்குபுறமாக அடியாட்களுடன் அவன் தங்கி இருக்கும் இடம் தான் அது.


பெரிய இடம் ஆளாளுக்கு ஒரு அறை என இறந்தது.


இப்போதைக்கு இவர்களை வேறு எங்கு அழைத்து செல்வது என்று மதிக்கும் தெரியவில்லை… அவனுக்கு தெரிந்த இடமும் இது மட்டும் தான். தனது தொழில் நிமித்தமாக தான் சங்கவியின் ஊரில் கொஞ்ச காலம் தங்கி இருந்தான். அந்த ஊரில் இருக்கும் ஒரு நபரை பற்றிய தகவலை அறிந்து வரவே பாண்டியன், மதியை அந்த ஊருக்கு அனுப்பி இருந்தான். அவன் வந்த வேலை முடிந்த நிலையில், இன்றோ நாளையோ அவன் அங்கிருந்து புறப்பட வேண்டியதாக தான் இருந்தது. அதற்குள் சங்கவியின் விஷயம் இடையில் வந்து விடவும் உடனே அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தான். பக்கத்து ஊரில் உள்ள தனது கூட்டாளியின் உதவியுடன் ஒரு காரை ஏற்பாடு செய்து கொண்டு இதோ சங்கவியை இப்போது தனது இடத்துக்கு அழைத்து வந்து விட்டான்.


ஆங்காங்கே மது பாட்டில், சிகெரெட் துண்டுகள்.. ஆடைகள் என அலங்கோலமாக காட்சியளித்தது. இந்த இடமே கிட்டத்தட்ட சங்கவிக்கு ஜெயில் போல தான் தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு குமட்டி கொண்டு வந்தது. அமைதியாக வாயை மூடிக்கொண்டவள் நிமிர்ந்து பார்க்காமல் மதியின் காலடியை பின் தொடர்ந்தாள்.


இரண்டு மூன்று பேர் மட்டும் தான் இப்போதைக்கு அங்கு இருந்தனர்… அவர்களும் மதியையும் அவனுக்கு பின்னே வரும் பாட்டியையும் பேத்தியையும் பார்த்து அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு “யாரு மதி இது?” என்று கேட்டனர்.


“வந்து சொல்லுறேன்” என்றவன் அவர்கள் பார்வை உணர்ந்து எதுவும் பேசாமல் சங்கவியின் கரத்தை நிதானமாக பற்றியபடி அவளை அழைத்து கொண்டு முன்னே சென்றான். அதனை கண்டு பின்னே நின்றவர்கள் இதழ் பிதுக்கி சிரித்து கொண்டனர்.


கடைசி அறைக்கு முந்திய அறை மதிவாணனின் அறையாக இருந்தது… அந்த அறையை திறந்து அவர்களை உள்ளே அழைத்து சென்றான். ஒரே ஒரு கட்டில் அதுவும் அவனது துணிகளால் நிரம்பி இருந்தது… எப்போது துவைத்தது என்றே கண்டறிய முடியாத நிலையில் இருந்தது.


அவளுக்கென யாரும் இல்லை என்பதை நேற்றே அறிந்து கொண்டான் அப்படி இருந்தும் இந்த இடம் அவர்களுக்கு போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தில் “உங்களுக்கு தெரிஞ்ச யாரவது எங்கயாவது இருந்தா சொல்லுங்க, நான் உங்களை அங்கு கொண்டு போய் விட்டுடுறேன். எனக்கு உங்களை சட்டுனு எங்க அழைச்சிட்டு போறதுன்னு தெரியல அதான். இந்த இடம் கண்டிப்பா உங்களுக்கு சரியா இருக்காதுன்னு எனக்கு தெரியும்” என்றவன் தயக்கமாக அவள் முகம் பார்க்க…


“எங்களுக்குன்னு யாரும் இல்ல… போறதுக்கு எந்த இடமும் இல்லை.. இந்த இடத்தை குறை சொல்லுற அளவுக்கு இப்போ எங்க நிலைமையும் இல்லை” என்றவளின் கண்களில் இருந்து சட்டென ஒரு துளி கண்ணீர் வழிந்தது. அதனை துடைந்துக் கொண்டபடி அவனை பார்த்தாள்.


“சீக்கிரமே நான் வேற இடம் பார்க்குறேன்… கண்டிப்பா உனக்கு எதுவும் ஆகாது நீ பயப்படாத” என்றவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.


அதனை உணர்ந்து “என்ன ஆச்சு? ஏதாவது வேணுமா? இல்லை ஏதாவது கேட்கணுமா?” என்று கேட்டான் மதி.


“ஏன் எனக்கு உதவி பண்ணுறீங்க? இதெல்லாம் எனக்கு நீங்க பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லையே” என்றவள் அவனது பதிலுக்கு ஆவலாக காத்திருத்தாள். கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்தவனின் இதழ்கள் விரக்தியாக விரிந்து கொண்டது.


“உனக்கு யாரும் இல்லன்னு சொன்னல்ல, அதே மாதிரி தான் எனக்கும் யாருமில்லை… இப்படி ஒரு நிலமையில நமக்குன்னு யாருமே இல்லாமல் எங்க போறதுன்னு வழி தெரியாமல் நானும் நின்னு இருக்கேன். அன்னைக்கு எனக்கு உதவி பண்ண யாரும் வரல… ஆனால் நான் அப்படி இருக்க விரும்பல… நேத்து நீ என் கையை பிடிச்சிட்டு எனக்கு யாருமே இல்லன்னு சொல்லும் போது… எனக்கு என்னையே உன் உருவத்தில பார்த்த மாதிரி இருந்தது. என்னை தான் என்னால அன்னைக்கு காப்பாத்திக்க முடியல தடம் மாறி போயி என் வாழ்க்கையே அழிஞ்சு போச்சு… ஆனால் உன்னை காப்பாத்தனும் நினைக்கிறேன். கண்டிப்பா உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்” என்றவன் முன்னால் அவள் சிந்திய கண்ணீர் கூட நன்றி உணர்வுடன் இருக்கும்.

"நீங்க இங்கேயே இருங்க நான் உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்" இவன் இங்கிருந்து செல்கிறான் என்றதும் வெளியே நின்ற அந்த தடியர்கள் முகம் இவள் கண் முன் வந்து போனது. உடனே "இல்லை வேண்டாம் எங்களுக்கு பசிக்கல" என்றவளின் பதட்டம் உணர்ந்து கொண்டானோ என்னவோ "இங்க பாரு, இங்க இருக்கவங்க ஒன்னும் அவளோ மோசம் இல்லை.. உனக்கு பயமா இருந்தா கதவை நல்லா பூட்டிக்கோ நான் ஒரு அரை மணி நேரத்தில் வந்திடுறேன்" என்றவன் அங்கிருந்து சென்றான். அவன் சென்றது தான் தாமதம் விரைந்து வந்து கதவை அடைத்து உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள். கட்டிலில் கிடந்த துணிகளை எல்லாம் ஓரமாக எடுத்து போட்டவள் தன் பாட்டியை அதில் அமர வைத்தாள். வெகு நேர பயணத்தின் காரணமாக பாட்டிக்கு இடுப்பு வலி உயிர் போகும் அளவுக்கு இருந்தது. வரும் அவசரத்தில் இடுப்பு வலி மருந்து மாத்திரைகளை எல்லாம் அங்கேயே வைத்து விட்டு வந்து விட்டனர்.

"என்ன ஆச்சு பாட்டி ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று கேட்ட சங்கவி கட்டிலின் கீழே அமர்ந்து பாட்டியின் கரத்தை பற்றிக் கொண்டாள்.

"இடுப்பு கடுக்கு, படுக்க முடியல தங்கம்" என்ற பாட்டியின் வலி அவர் முகத்தில் தெரிந்தது. அதனை கண்டு சங்கவிக்கு அழுகையே வந்து விட்டது. "என்னை மன்னிச்சிடு பாட்டி எல்லாம் என்னால தான். இப்படி எல்லாம் ஆகும்னு தெரிஞ்சி இருந்தா மானம் போனாலும் பரவாயில்லைன்னு" என்றவளுக்கு அதற்கு மேலும் வார்த்தை வர மறுத்தது. கேவி கேவி அழ ஆரம்பித்தாள். அவரிடம் உண்மையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் துடித்து போனாள்.

"எதுக்குடா அழற... வலி மெல்ல தான் இருக்கு... காருல வந்தோம்ல அதான் அப்படி இருக்கு தூங்கி எழுதா சரி ஆகிடும். என் தங்கமே பாட்டியை நினைச்சி நீ அழாத" என்று சொன்னவர் சங்கவியின் கண்களை துடைத்து விட்டார். அவரது முகத்தை பார்த்தவரே வந்த அழுகையை உதடு கடித்து அடக்கிக் கொண்டாள்.

அவளது கைகளில் அங்காங்கே ரத்த துளிகள் உறைந்து இருந்தது. அதனை பார்த்தவளுக்கு நேற்று நடந்த நிகழ்வும், இரவில் தன்னை வழி மரித்து வந்து நின்ற ஆரியனின் முகமும் கண்முன் வந்து போனது. அவனது சட்டையும் ரத்த கரையுடன் இருந்தது போல அவளது நினைவில் ஒருகணம் வந்து போனது. ஆனால் அதனை பற்றி ஆராயும் மனநிலையில் அவள் இப்போது இல்லை. கண்களை மூடிக்கொண்டு நேற்று நடந்த அனைத்தையும் மறக்க நினைத்தாள். அந்த ஊர். அவளது முதலாளி. அந்த இரவு அப்படியே ஆரியன் என அந்த ஊர் சார்ந்த அனைத்தையும் மறக்க நினைத்தாள். முடிந்தவரை அழுது தீர்த்தாள். அதன் பிறகு அறையை ஒட்டி இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டவள் தன் மீது இருந்த ரத்த துளிகளை துடைக்க ஆரம்பித்தாள்.

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவள், தான் கொண்டு வந்த உடமையில் இருந்து ஒரு தாவணியை எடுத்து அணிந்து கொண்டாள். கட்டிலில் அமைதியாக உறங்கும் தன் பாட்டியை பார்த்தபடியே நிம்மதியாக அவள் சுவரில் சாய்ந்து அமர்த்த நொடி "டப்.. டப்... டப்" என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அந்த சத்தம் கேட்டதும் இவள் இதயத்தில் இடி இடித்த உணர்வு... ஒருவாறு தன்னை நிலைபடுத்திக் கொண்டவள்... வந்தது மதியாக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கதவை திறந்தாள்.

ஆனால் அங்கு நின்றது வேறு ஒரு நபர். மது பாட்டிலை உயர்த்தி பிடித்தபடி, வாயில் சிகரெட்டுடன் கதவு நிலையில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண். அவள் நிர்மலா.

பெண் தான். ஆனால் ஆணுக்கு இணையாக அவளது உடல் மொழி இருந்தது. சிகரெட்டை ஊதியபடி சங்கவியை கடந்து அந்த அறைக்குள் வந்தாள். வந்தவள் யார்? என்ன? என்று எதுவும் புரியாமல் நின்று கொண்டு இருந்தாள் சங்கவி... அவளை எப்படி எதிர்கொள்வது என்பது கூட இவளுக்கு தெரியவில்லை. படபடப்புடன் நின்று கொண்டு இருந்தாள்.

"மதி இல்லையா... ஆமாம் யார் இந்த கிழவி?" என்று கேட்டபடி அந்த பெண் தன் வாயில் இருந்த சிகெரெட்டை எடுத்து, அதனை அறையின் ஒரு மூலையில் தூக்கி வீசினாள். அது இன்னும் புகைந்து கொண்டே இருந்தது.

பதில் சொல்ல முடியாமல் நடுங்கியபடி வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தாள் சங்கவி.

அமைதியாக தலை குனிந்து நிற்கும் சங்கவியை மேலும் கீழுமாக அந்த பெண் பார்த்தாள். அவளது பார்வையில் கூனி குறுகி நின்ற சங்கவியின் கண்களில் நீர் கோர்த்து நின்றது. தலையை குனிந்து கொண்டாள். சட்டென வழிந்த கண்ணீர் தரையில் விழுந்து சிதறியது.

"அப்பப்பா அம்சமா இருக்கியே, நீ யாரு?தொழிலுக்கு புதுசா என்ன? உன் ப்ரோக்கர் யாரு? அவனுங்க ஒரு நயிட்க்கு உனக்கு எவ்ளோ சேர் கொடுக்குறானுங்க... இங்க எப்போவும் நான் தான் வருவேன்... எனக்கு 300 அந்த புரோக்கர் கம்னாடிக்கு 700" என்றதும் தான் அவளுக்கு ஒருளவுக்கு அந்த பெண்ணை பற்றி புரிந்தது. அவள் தன்னிடம் என்ன கேட்க வருகிறாள் என்பதும் புரிந்தது. கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது.

அவளது கேள்விக்கு இவளால் எப்படி பதில் கொடுக்க முடியும்? பல்லை கடித்துக் கொண்டு நின்றாள்.

"என்ன பதிலே சொல்ல மாட்டிங்குற?" என்று கேட்டவள், விளையாட்டாக சங்கவியின் பின்பக்கம் கை வைத்து தட்ட , துடித்து போனவள் உடல் நடுங்கி அதிர்ந்து நிற்கவும்...

அந்நேரம் சரியாக வாசலில் வந்து நின்றான் மதிவாணன். அங்கே நின்றிருந்த பெண்ணையும், ஊமையாக அழுது கொண்டிருந்த சங்கவியையும் மாறி மாறி பார்த்தான். அவனது அரவம் கண்டு திரும்பிய அந்த பெண் நிர்மலா "ஏ மதி! உன்னை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு! எப்படி இருக்க?" என்றவாறு அவனை அணைத்துக் கொள்ள, அவனது பார்வை அழுது கொண்டிருந்த சங்கவியின் மீது சங்கடமாக பதிந்தது.

"நான் நல்லா இருக்கேன்..." என்றவன் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை தன்னில் இருந்து பிரித்து விலக்கி நிறுத்தினான்.

"ஆமா இந்த பொண்ணு யாரு? செமையா இருக்காளே" என்று கூறி அவள் நமட்டு சிரிப்பு சிரிக்க... அவளை முறைத்து பார்த்த மதி "நீ நினைக்கிற மாதிரி பொண்ணு இவள் இல்லை... நல்ல பொண்ணு. இது வேற விஷயம்... நீ கொஞ்சம் வெளியே போறியா?" என்றான்.

"அவள் நல்ல பொண்ணுன்னா அப்போ நாங்க மட்டும் யாரு?" என்று கேலியாக சொன்னவள் "நல்ல பொண்ணுக்கு இந்த இடத்தில் என்ன வேலை? நீ சந்தோசமா இருப்பா... நான் உன்னை இன்னிக்கு டிஸ்டார்ப் பண்ண மாட்டேன்" என்ற அந்த பெண் வேண்டுமென்றே அவனை இடித்து தள்ளிவிட்டு சிரித்தபடியே அங்கிருந்து சென்றாள்.

அவள் அங்கிருந்து சென்ற பிறகு அறைக்குள் வந்து கதவை மூடி கொண்ட மதிக்கு சங்கவியை எதிர்கொள்ள சங்கடமாக இருந்தது. அவனும் எல்லா.தவறுகளிலும் கரை கண்டவன் தான். இது போன்ற இடத்தில் சில விஷயங்களை அவர்களே விரும்பி செய்யாமல் இருந்தாலும் காலம் அவர்களை செய்ய வைத்து விடும். அப்படியான ஒரு சூழ்நிலையில் கெட்டு சீரழிந்து போன ஒரு நல்லவன் மதிவாணன்.

"சாப்பாடு வாங்கிட்டு வந்து இருக்கேன்... நீ எடுத்து சாப்பிட்டுட்டு பாட்டிக்கு கொடுத்துடு" என்றவன் அவள் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.

வெளியே வந்தவனுக்கு இருப்புக்கொள்ள முடியவில்லை யாரிடமும் தன்னை நல்லவன் என காட்டி கொள்ள விரும்பாதவன் இன்று அவள் முன்னே தன்னை நிரூபிக்க எண்ணி தடுமாறினானோ?

அரை மணி நேரம் கழித்து மீண்டும் அறைக்குள் வந்தான்... உணவு பொட்டலம் வைத்த இடத்தில் வைத்தபடி அப்படியே இருந்தது. அந்த பெண் தூக்கி வீசிய சிகெரெட் புகை அறை முழுவதும் நிரம்பி இருந்தது. அறையின் ஒரு மூலையில் தன் மடியில் தலை வைத்தபடி அமர்ந்து இருந்தாள் சங்கவி. அவள் மனவலியை அவனும் அறிந்திருக்க வேண்டும்... மெதுவாக அவள் அருகில் சென்றான். அவள் பக்கத்தில் முழங்காலிட்டு அமர்ந்தவன் தயங்கியபடியே அவள் தலையில் கை வைக்க... துடித்து பிடித்து எழுந்தவள்.... பயத்துடன் ஒரு அடி பின்னே நகர்ந்து சுவரோடு சுவராக ஒட்டிக்கொள்ள இவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. சொல்ல முடியாத ஒரு நிலையில் அவளை பார்த்தான்.

தன்னை கண்டு அவள் அஞ்சுகிறாள் எனும் போது அந்த செயல் அவனை மிகவும் பாதித்தது.. தன்னையும் அவளது முதலாளியை போல தவறானவனாக எண்ணி விட்டாளோ என்ற தவிப்பு அவன் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.

"நீ சாப்பிடலையான்னு கேட்க தான் வந்தேன்... வேற ஒன்னுமில்லை... அது அந்த லேடி" என்று மதி எதையோ சொல்லவர அதனை எல்லாம் கேட்கும் பக்குவத்தில் சங்கவி இல்லை... இன்னும் அரண்டு பொய் விரக்தியாக தான் அமர்ந்து இருந்தாள். அதனை கண்டு சலிப்பாக எழுந்து கொண்டவன் "சாப்பிடு" என்றபடி அவளுக்கு தனிமையை கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.

 

Mythili MP

Well-known member
Wonderland writer
46

கண்விழித்த பாட்டி ஒரு ஓரத்தில் மடங்கி அமர்ந்திருக்கும் தன் பேத்தியை பார்த்தார்.

"கவிமா" என்று அவர் அழைக்க, மெல்ல கண்களை உயர்த்தி அவர் பக்கம் பார்த்தாள். கடினபட்டு எழுதுக்கொள்ள முயற்சித்தார் பாட்டி. உடனே அவர் பக்கம் விரைந்து வந்தவள் அவருக்கு உதவி செய்தாள்.

இங்கிருக்க சங்கவிக்கு மனமில்லை ஆனால் இங்கிருந்து செல்ல வேறு வழியும் இல்லை.

மனம் முழுவதும் பரமாக இருந்தது. ரொம்ப தனித்து விடப்பட்ட உணர்வாக இருந்தது. மணி மதியம் ஒன்றாக இருந்தது. அவன் கொடுத்து சென்ற உணவு அப்படியே இருந்தது. அவளுக்கு உணவு உண்ண மனமில்லை ஆனால் அவளது பாட்டியை அப்படியே விட முடியாது அல்லவா?
மதி வாங்கி வந்த உணவை பாட்டிக்கு எடுத்து கொடுத்தாள்.

அதை வாங்கி உண்டவர் சங்கவியையும் உணவருந்த சொல்லி வற்புறுத்தினர். அவள் மறுத்துவிடவே தானே அவளுக்கு உணவை ஊட்டி விட ஆரம்பித்தார்.

பல வருடங்களுக்கு பிறகு அவள் பாட்டியின் கையால் உணவு உண்கிறாள்... கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது.

அவளது கண்ணீரை துடைத்து விட்டவர் "உனக்கு என்ன வருத்தம் இருந்தாலும் அதை பாட்டி கிட்ட சொல்லு" என்று ஆதரவாக கேட்டார்.

ஆனால் சங்கவியால் அப்போதும் தன் நிலையை அவருக்கு எடுத்து சொல்ல முடியவில்லை. தடுமாறினாள். நேற்று நடந்த அந்த நிகழ்வை நினைக்க நினைக்க குமட்டிக் கொண்டு வந்தது. அப்படியே குளியலறைக்குள் சென்றவள் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். ஒருவழியாக தன்னை நிதான படுத்திக்கொண்டு முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள். அதனை கண்டதும் பாட்டிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

"கவிமா" என்றவரால் கட்டிலில் இருந்து சட்டென்று எழுந்து கொள்ள முடியவில்லை... "தம்பி" என்று மதியை அழைக்க எண்ணி கத்தினார்.

அவன் வெளியே தான் இருந்தான்.

பாட்டியின் குரல் கேட்டதும் உடனே கதவை தட்டினான். கதவு உள் பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. எப்படியும் எழுந்து சென்று கவியின் பாட்டி தான் தாழ்ப்பாளை திறக்க வேண்டிய கட்டாயம். மிகவும் கடினப்பட்டு வந்து தாழ்ப்பாளை திறந்து விட்டார்.

"தம்பி, என் பேத்தி" என்றவருக்கு நிற்க முடியவில்லை தடுமாறி கீழே விழபோக, அவரை பிடித்து மீண்டும் கட்டிலில் அமர வைத்து விட்டு சங்கவியின் பக்கம் வந்தான்.

தரையில் விழுந்து மயங்கி கிடந்தாள் சங்கவி. அவளது கன்னத்தை தட்டி பார்த்தான். பின்னர் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து நீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான். மெல்ல அவள் இமைகளில் அசைவு தெரிந்தது. இருவரும் சற்று நிம்மதி அடைந்தனர்.

"அவளை தூக்குப்பா, கட்டில்ல படுக்கவை" என்று பாட்டி கூற, அவளை தூக்கி வந்து கட்டிலில் படுக்க வைத்தான்.

சன்னல்களை எல்லாம் திறந்து விட்டான். சங்கவியின் முகம் களைத்து போயிருந்தது. அவளது தலையை வருடி விட்டபடி அவளது பாட்டி அவள் அருகேயே அமர்ந்து இருந்தார்.

"என்னப்பா ஆச்சு இவளுக்கு? இவள் என்கிட்டயிருந்து எதை மறைகிறாள்? என் தங்கம் இப்படி ஒருநாளும் இருந்தது இல்லையே" என்ற பாட்டியின் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது.

சங்கவியை போல மதி யோசிக்கவில்லை நடந்த அனைத்தையும் அவரிடம் கூறினான். அதனை கேட்ட பாட்டிக்கு நெஞ்சம் அடைத்து விட்ட உணர்வு! பெரும் பயம்! அப்படியே தன் பேத்தியின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

"என் பேத்திக்கு ஒன்னும் ஆக கூடாது" என்று மட்டுமே அவரால நினைக்க முடிந்தது. அதற்கு மேல் இந்த விசயத்தில் என்ன செய்வது என்று அவருக்கும் தெரியவில்லை

"இவளுக்கு ஒன்னும் ஆகாதுல்லப்பா" என்று தன் தயக்கத்தை மதியிடம் கேட்டுவிட்டார்.

"என்னால முடிஞ்சவரைக்கும் உங்க பேத்திக்கு எதுவும் ஆகாமல் பார்த்துகிறேன்" என்றவனின் பார்வை இப்போது சங்கவியின் மீது இருந்தது. கலங்கமில்லாத முகம் அவளுடையது. எப்படியெல்லாமோ அழகாக வாழ வேண்டிய பெண். இந்த பதினேழு வயதில் இப்படி வந்து நிற்கிறாளே என்று அவளை பார்க்கவே அவனுக்கு பாவமாக இருந்தது.

மயக்கம் தெளிந்தவள் கண் விழிக்கவில்லை, அப்படியே உறங்கி போனாள்... அந்த நாள் இரவும் வந்தது. இரவு உணவை வாங்கி விட்டு மீண்டும் அறைக்குள் வந்தான் மதி.

சங்கவியை எழுப்பி உணவருந்த சொன்னார் பாட்டி. கண்விழித்தவள் பாட்டியிடம் கேட்டு என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டாள். மதியின் மீது அவளுக்கு எந்த நெருடலும் இப்போது இல்லை ஆனால் அவனை முழுவதுமாக நம்பி இந்த இடத்தில் இருக்கவும் சற்று பயமாக தான் இருந்தது.

ஆனால் என்ன செய்ய முடியும். போக போக்கிடம் இல்லயேனும் போது இங்கிருந்து தானே ஆக வேண்டும். பாட்டி கொடுத்த உணவை அமைதியாக வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.

பாட்டி கட்டிலில் ஒரு ஓரமாக படுத்துக்கொள்ள இவளும் இன்னொரு பக்கம் படுத்துக் கொண்டாள். அந்த இரவு நேரம் அவளுக்கு தூக்கம் வரவில்லை. நேற்று நடந்த நிகழ்வுகளில் இருந்து அவளால் வெளிவரவும் முடியவில்லை. பாட்டியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு தூங்க முயற்சித்தாள். ஆனால் தூக்கம் தொலைதூரம் போனது.

வெளிய அடியாட்களின் பேச்சு சத்தம் வேற அவளது காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது... காதுகளை இறுக்கமாக மூடிக் கொண்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.

நேரம் போனது அவர்களின் சத்தம் இன்னும் அடங்கிய பாடில்லை... அவர்களை அமைதியாக இருக்கும் படி இவளால் சொல்ல முடியாது, அதனால் தன்னைத்தானே நிலைப்படுத்திக் கொண்டு அமைதியாக கண்களை மூடி உறங்க முயற்சித்தாள்.

மெல்ல அவளது கண்கள் தூக்கத்தை தழுவிய நேரம்...

அந்த ஹோட்டல் முதலாளி அவளிடம் தவறாக நடந்து கொண்டது கனவிலும் வந்து அவளை துரத்தியது... அதன் தொடர்பாக போலீசில் அவள் மாட்டிக் கொள்வது போலவும் தொடர் நிகழ்வுகள் அவள் கனவில் வந்து போனது... துடித்து பிடித்து வியர்க்க விறுவிறுக்க எழுந்த அமர்ந்தாள்.

அடி வயிறு பயங்கரமாக வலி எடுக்க ஆரம்பித்தது... இடையில் ஈரத்தை உணர்ந்த நேரம் சட்டென கட்டிலில் இருந்து இறங்கிக்கொண்டாள்.

குளியலறைக்குள் புகுந்து கொண்டவளுக்கு இரத்தப்போக்கு ஏற்பட ஆரம்பித்தது.

தாங்க முடியாத வலி... நாப்கின் என எதுவும் இப்போது அவளது கைவசம் இல்லை... தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தவள், பாட்டியின் காட்டன் புடவை ஒன்றை கிழித்து இப்போதைக்கு பயன்படுத்திக் கொண்டாள். அவளால் நிம்மதியாக ஒரு இரண்டு நிமிடம் கூட ஒரே இடத்தில் அமர முடியவில்லை அந்த அளவிற்கு வலி அவளை போட்டு வாட்டி வதைத்தது. இந்த வலி ஒரு பக்கம் என்றால் அடியாட்களின் சத்தம் மறுபக்கம் என்று தலையைப் பிடித்துக் கொண்டாள்.

அவளால் இந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை வேறு வழி இல்லாமல் ஒருகட்டத்தில் பாட்டியை எழுப்ப முயற்சித்தாள்.

சட்டென்று அவள் எழுப்பியதும் திடுமென கண் விழித்த பாட்டி " "என்னாச்சு தங்கம்?" என்று கேட்டபடி பதறிப் போனார்.

"வயிறு ரொம்ப வலிக்குது பாட்டி" என்று கதறி அழ ஆரம்பித்தாள் சங்கவி.

ஒருவேளை அந்த முதலாளி முத்து,தன் பேத்தியிடம் அத்துமீறியதால் ஏற்பட்ட விளைவோ என்று நினைத்தார்.

"எதுவும் நடக்கவில்லை" என்று மதி கூறியிருந்தான், இருந்தும் ஒருவித பயம் அவருக்குள் வந்து போனது.

சங்கவியிடமே நேராக அதனை பற்றி விசாரித்தார்.

அவர் கேட்ட விதத்தில் பாட்டிக்கு உண்மை தெரிந்து விட்டது என்பதை அறிந்து கொண்டாள் சங்கவி. யார் இதனை அவரிடம் கூறியிருப்பார் என்பதையும் புரிந்து கொண்டாள்.

"அப்படி எதுவும் நடக்கல, அதுக்குள்ள நான் அவரை" என்று சொன்னவளுக்கு அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. அவள் மனம் புரிந்து, உடனே அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார் பாட்டி.

கை வைத்தியம் பார்த்து கொடுப்பதற்கு இங்கு எந்த வசதியும் இல்லை... தன் பேத்தி துடிப்பதை கண் கொண்டு பார்க்க முடியாதவர் வெளியே சென்று மதியை அழைக்க முயற்சித்தார். அவர் சட்டென எழுந்த வேகத்தில் முதுகு நன்றாக பிடித்துக் கொண்டது. அதற்கு மேலும் அவரால் எழுந்து கொள்ள முடியவில்லை.

இப்போது இவரை கவனிக்க வேண்டியதும் சங்கவியின் வேலையாகி போனது.

இப்போது இவளுக்காக இல்லை என்றாலும் பாட்டிக்காக மதியை அழைத்தாக வேண்டிய கட்டாயம் சங்கவிக்கு உண்டானது.

தயங்கியப்படியே கதவினைத் திறந்து வெளியே வந்தாள்.

வெளியே இருந்த அவனது கூட்டாளிகளுடன் பேசிக் கொண்டு நின்றிருந்தான் மதிவாணன். அதனை கண்டு அங்கு எப்படி செல்வது என்று தயக்கம் கொண்டு நின்று இருந்தாள் சங்கவி. அப்போது தூரத்தில் அவள் முகம் தெரிவதை மதி கண்டு விட்டான். என்னதான் இவர்களுடன் நின்று இவன் பேசிக்கொண்டிருந்தாலும் எப்போதும் இவனது பார்வை அவர்களது அறையில் தான் இருந்தது. தன்னை நம்பி வந்தவர்களின் பாதுகாப்பு அவன் பொறுப்பு அல்லவா?

உடனே இவர்களிடமிருந்து விலகி சங்கவியைத் நோக்கி வந்தான். சங்கவி அங்கேயே கதவின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்.

மதி இப்போது மிதமாக குடித்து இருந்தான். அவன் வேண்டாம் என்று மறுத்த போதும் அவனுடன் இருந்த கூட்டாளிகள் அவனை வற்புறுத்தி குடிக்க வைத்தனர். இருப்பினும் ஒரு அளவோடு நிறுத்திக் கொண்டான்.

குடித்துவிட்டு அவள் அருகில் நிற்பதற்கு அவனுக்குமே சற்று சங்கடமாக தான் இருந்தது. முகத்தில் வடிந்த வேர்வையை தனது சட்டையில் துடைத்துக் கொண்டவன் இரண்டடி தூரத்தில் நின்று " என்ன ஆச்சு? எதுக்கு வெளியே நிக்கிற? ஏதாவது வேணுமா? " என்று கேட்டான்.

"இல்லை" என்று தலையசைத்தவள் தடுமாறி நின்றாள்.

"நீ தூங்கலையா?" திறந்திருந்த கதவின் வழியே சங்கவியின் பாட்டியை பார்த்தான். அங்கு அவர் கைநீட்டி அவனை அழைத்தார்.

"உன் பாட்டி கூப்பிடறாங்க நினைக்கிறேன்" என்று அவன் சொல்ல, கதவனைத் திறந்து அவனுக்கு வழி விட்டாள் சங்கவி.

"என்ன பாட்டி?" என்று மதி கேட்க, "தம்பி கொஞ்சம் சுடு தண்ணி, இல்லன்னா வெந்தயம் கிடைக்குமா?" என்று பாட்டி எதையோ சொல்ல வர, இடைப் புகுந்து அவரை தடுத்த சங்கவி "பாட்டிக்கு முதுகு பிடிச்சுகிச்சு தைலம் ஏதாவது இருக்குமா" என்று கேட்டாள். கேட்டவள் வலியில் தன் வயிறை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டே இருந்தாள்.

மணி இரவு பத்து இருக்கும். "இங்க எதுவும் இருக்க வாய்ப்பில்லை... கொஞ்ச தூரத்தில மெடிக்கல் இருக்கு. நான் வாங்கிட்டு வந்திடுறேன்..." என்றவன் சற்று தயக்கமாக "உனக்கு ஏதாவது வேணுமா?" என்று சங்கவியிடம் கேட்டான்.

"இல்லை" என்று தலையாட்டியவளின் வலி அவளது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அப்போது அவள் வைத்திருந்த துணியைத் தாண்டி கால் வலி ரத்தம் வழிய, சட்டென குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அவள் செல்லும் வழி எங்கும் ரத்த துளிகள் இருப்பதை பார்த்தவனுக்கு புரிந்து விட்டது. கண்களை மூடி திறந்து கொண்டவன் அங்கிருந்து அமைதியாக வெளியே வந்தான்.

குளியலறைக்குள் வந்த சங்கவிக்கு அவமானமாக இருந்தது. தனது நிலைமையை நினைத்து தன்மீதே கோபம் கொண்டாள். இப்படி ஒரு நிலையில் ஒரு ஆணின் முன்பு தான் நிற்கக்கூடும் என்று அவள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். வேதனையாக இருந்தது. வயிறு வலியை விட இது அவளுக்கு அதிக ரணத்தை கொடுத்தது.

அழுது கொண்டே இருந்தவளுக்கு ஒரு கட்டத்தில் கண்ணீர் கூட வற்றி விட்டது. இருந்தபோதும் அவள் குளியல் அறையை விட்டு வெளியே வரவில்லை. அறைக்குள் இருந்தபடி சங்கவியை அழைத்தார் பாட்டி. தனது இயலாமையை எண்ணின் நொந்து போன சங்கவி "கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாத பாட்டி உன்னால" என்று கத்திவிட்டாள். அதன் பிறகு அவர் ஒரு வார்த்தை பேசவில்லை அமைதியாக கட்டிலில் அமர்ந்து கொண்டார்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து அங்கு வந்தான் மதி. குளியலறையை பார்த்தபடி கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்தார் பாட்டி. அவர் பக்கத்தில் வந்து, "இதுல உங்களுக்கு மாத்திரை, தையலம் எல்லாம் இருக்கு" என்றவன் தயங்கிய படியே சங்கவிக்கான நாப்கினையும் அவ்விடத்தில் எடுத்து வைத்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை.

அதனுடன் பிளாஸ்க்கில் சுடுதண்ணியும், ஒரு வெந்தைய பாக்கெட்டும் கூடவே இருந்தது. அப்போது ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தாள் சங்கவி. மதி அங்கு இருப்பான் என்பதை அவள் அறியவில்லை. கதவு எப்போதும் போல தாழிடப்பட்டு இருக்கும் என்ற எண்ணத்தில் வெளியே வந்தாள்.

மதியின் பார்வை ஒரு நொடி சங்கவியில் நிலைத்தது, அடுத்த நொடியே பார்வையை தாழ்த்திக் கொண்டவன்... "இந்த மாத்திரை உனக்கு, வலி இருந்தா போட்டுக்கோ" என்றபடி அந்த மாத்திரையை கட்டிலில் தனியே எடுத்து வைத்தான் "அப்புறம் உனக்கு ரொம்ப முடியலைன்னா ஹாஸ்பிடலுக்கு போகலாம்" என்றவன் இப்போது அவளது கண்களை பார்க்க, அவளது பார்வை அவன் மீதே தான் நிலைத்திருந்தது.

"இல்லை வேண்டாம்" என்று சங்கடமாக தலையை மட்டும் அசைத்தாள் சங்கவி.

"சரி" என்றவன் அமைதியாக அங்கிருந்து சென்றான்.

சுடு தண்ணியை குடித்து விட்டு, வெந்தயத்தையும் எடுத்துக் கொண்டவள்... குளியலறைக்குள் சென்று நாப்கினை வைத்து விட்டு வெளியே வந்தாள்.

பாட்டிக்கு தைலத்தை தேய்த்து விட்டு, மாத்திரையை எடுத்து கொடுத்தாள். அதனைப் போட்ட பிறகு அவரும் நிம்மதியாக தூங்க ஆரம்பித்தார்.

சங்கவிக்கு தான் தூக்கம் வரவில்லை அமைதியாக அந்த கட்டில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். அவளது யோசனையில் மதியும் வந்து போனோன்.

இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவன் அறையை விட்டு வெளியே நின்றான்.

அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக கதவனை திறந்து கொண்டு வெளியே வந்தாள் சங்கவி, இதனை ஒரு வித குற்ற உணர்ச்சி என்று கூறலாம்... அவனுக்கென இருந்த ஒரு இடத்தையும் தங்களுக்கு கொடுத்துவிட்டு தனிமையில் நிற்கிறானே என்ற ஒருவித கரிசனம்.

வெளியே வந்தாள் ... வாசலிலே நியூஸ் பேப்பரை விரித்து அதன் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனை பார்த்தவளுக்கு மனதில் பாரமேறி போனது. அமைதியாக உள்ளே வந்து கதவை தாழிட்டு கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

அடுத்தநாள் காலையில் எழுந்தவன் கதவை தட்டினான். சங்கவி தான் வெளியே வந்தாள். "சாப்பிட என்ன வாங்கிட்டு வரட்டும்" என்று கேட்டான்.

"எதுவா இருந்தாலும் பரவாயில்லை" என்று சொன்னாள்.

"அப்புறம் உனக்கு இப்போ பரவயில்லையா?" என்று அவன் கேட்க, ஒரு மிதமான புன்னகை அவளிடம் பதிலாக வெளிவந்தது.

அப்போது அவனிடம் பேச எண்ணி, அவனை அழைத்தபடி தூரத்தில் அவனது கூட்டாளி ஒருவன் வந்து கொண்டு இருக்க "நீ உள்ள இரு" என்று சங்கவியை அவசர அவசரமாக உள்ளே போக சொன்னான். அதற்குள் அங்கு வந்தான் அந்த கூட்டாளி.

"ஓ இது தான் அந்த பொண்ணா? எல்லாரும் சொன்னனுங்க நீ ஏதோ ஒரு பொண்ணை கூப்பிட்டு வந்து இருக்குன்னு இவள் தானா அது?" என்றவன் அவளை ஒரு மாதிரி பார்த்தான். அதனை கவனித்த மதி அவனை அங்கிருந்து அழைத்து செல்ல பார்க்க... "பொண்ணு பேர் என்னடா?" என்று கேட்டான் அவன்.

அவளது உண்மையான அடையாளத்தை இவர்களுக்கு தெரிவிக்க விரும்பாதவன் "வைஷ்ணவி" என்று சொல்ல, அவனை கேள்வியாக பார்த்தாள் சங்கவி.

 

Mythili MP

Well-known member
Wonderland writer
47

பெயர் மட்டுமல்ல அவளது கடந்த கால நிகழ்வுகள் அனைத்தையும் அவள் மனதில் இருந்து அகற்றவே நினைத்தான்.

மதி, அவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல, உள்ளே சென்று கதவினை தாழிட்டுக் கொண்டாள் சங்கவி.

அடுத்த நாள் இரவு உணவை உண்டு முடித்ததும் பாட்டி உறங்கி விட்டார். ஆனால் சங்கவிக்கு உறக்கம் வரவில்லை. அறைக்குள்ளும் இருக்க முடியவில்லை. கண்களை மூடினாலே அந்த ஊரின் ஞாபகமும், அந்த இரவின் நினைவும் கண்முன் வந்து அச்சத்தை கொடுத்தது. மூச்சு முட்டியது போல இருந்தது. இதற்கு மேலும் அறைக்குள் இருந்தால் மன அழுத்தம் அதிகமாகி பைத்தியம் பிடித்து விடும் போன்று தோன்றியது. உடனே அறைக்கதவை திறந்து கொண்டாள். மதி வெளியே தான் படுத்துக் கொண்டிருந்தான். அவனைத் தாண்டி அங்கிருந்து செல்ல நினைத்தாள். சிறிது நேரம் குளிர்ந்த காற்று முகத்தில் பட்டால், மனம் சற்று அமைதி அடையும் என்று நினைத்திருந்தாள். அவள் தன்னை கடந்து சென்றதும் சட்டென கண்களை திறந்து கொண்டான் மதி.

"எங்க போற?" என்று எழுந்து அமர்ந்து கேட்டவனை கண்டு திடுக்கிட்டு போனாள் சங்கவி.. பயத்தில் நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.

"நீங்க இன்னும் தூங்கலையா?" என்று ஒரு வித படபடப்புடன் கேட்டாள் சங்கவி.

"அதை நானும் கேட்கலாம் நீ இன்னும் தூங்கலையா?"

"இல்லை, கண்ணை மூடுனாலே அந்த ஊரும், அங்கு நடந்த விஷயமும் தான் என் கண்ணு முன்னாடி வந்து போகுது... தூங்கவே முடியல பயமா இருக்கு" என்றவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

"சரி, இப்போ எங்க போற?"

" வெளியே கொஞ்சம் காத்தாட நடந்துட்டு வந்தா, மனசு கொஞ்சம் அமைதியாகும்னு நினைச்சேன்" என்றவளை இரு நொடி அமைதியாக பார்த்தவன் எழுந்து கொண்டான்.

"நானும் வரேன்... இனிமேல் இப்படி நைட் நேரத்துல தனியா எங்கேயும் எழுந்து போகாத... அப்படியே போகணும்னு தோணுச்சுன்னா என்ன கூப்பிடு" என்றவன் அவள் அருகில் வந்து நின்று கொண்டான்.

"மன்னிச்சிடுங்க உங்க தூக்கத்தை கலைச்சிட்டேன்"

"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல... நான் நிம்மதியா தூங்கி ரொம்ப வருஷம் இருக்கும்" என்றவன் நடக்க ஆரம்பிக்க, அவனுடன் சேர்ந்து அவளும் நடக்க ஆரம்பித்தாள். பெரிய வளாகம் அது சுற்றியும் மரங்கள் இருந்தது... அந்த இடத்தை சுற்றியே இருவரும் அமைதியாக நடந்து கொண்டிருந்தனர்.

அவளது முகம் இன்னுமே வாட்டமாகத்தான் இருந்தது. அதனை கவனித்த மதி " தேவை இல்லாமல் எதை பத்தியும் யோசிச்சு மனச போட்டுக் குழப்பிக்காத" என்ற ஆறுதலாக பேச முன்வந்தான்.

"எப்படி எதையும் யோசிக்காமல் இருக்க முடியும்?... நான் ஒரு கொலை பண்ணி இருக்கேன்" என்றவளின் கண்களில் அவளையும் அறியாமல் ஒரு துளி கண்ணீர் வழிந்தது.

"அதுல நீ எந்த தப்பும் பண்ணல" என்ற அவசரமாக இடைமறித்தான் மதி.

"தப்போ?சரியோ? எல்லா விஷயத்துக்கும் தண்டனை இருக்கே... எனக்கு அந்த ஊரில என்ன நடக்குதுன்னு தெரியணும்? நான் அங்க இருந்து வந்துட்டேன்!அதுக்கப்புறம் அங்க என்ன நடந்திருக்கும்? இது மட்டும் தான் என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு... நடந்த உண்மை எல்லாம் போலீசுக்கு தெரிஞ்சு அவங்க என்னை கண்டுபிடிச்சு வந்திடுவாங்களானு ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு"

"அப்படியே வந்தாலும் உனக்கு எதுவும் ஆகாது உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன். என்னை நம்பு எந்த சூழ்நிலையிலும் உனக்கு பாதுகாப்பா நான் இருப்பேன்" என்றவன் அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தான். அவனது பார்வையில் அவளுக்கான அரவணைப்பையும், பாதுகாப்பையும் அவள் உணர்ந்து இருக்க வேண்டும்.

"இன்னொரு விஷயம் சொல்றேன்... நம்ம ஒரு தப்பு பண்ணிட்டு அங்கயிருந்து வந்துட்டோம்னா! அதுக்கப்புறம் அந்த இடத்துல என்ன நடக்கும்னு நம்ம தெரிஞ்சுக்க நினைக்கவே கூடாது... மறுபடியும் அந்த இடத்துல என்ன நடக்குதுன்னு நம்ம தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறது, நம்மளை நாமே காட்டிக் கொடுத்ததற்கு சமம். அங்க என்ன வேணாலும் நடந்திருக்கட்டும் ஆனால் அங்கு என்ன நடந்திருக்கும்னு நீ யோசிக்க மட்டும் செய்யாத... அதை தெரிஞ்சுக்கணும்னு நினைக்கவும் செய்யாதே... அதுதான் நல்லது" என்று சொன்னவனின் கூற்று அவளுக்கு புரிந்தது.

முறிந்த காலில் போடப்பட்டிருக்கும் கட்டினை ஒவ்வொரு முறையும் அவிழ்த்து பார்த்து எலும்புகள் சரியாக பொருந்தி இருக்குமா என்று சந்தேகிப்பது எந்த அளவுக்கு முட்டாள்தனமோ அதே அளவிற்கான முட்டாள்தனம் தான் இது.

தவறு செய்த இடத்தில் தவறியும் மீண்டும் நின்றுவிடக் கூடாது. அந்த தவறு நம்மை காவு கொடுக்க அங்கேயேதான் காத்துக் கொண்டிருக்கும்.

அவனிடம் பேசிவிட்டு அறைக்குள் வந்தவள் தனது பாட்டியின் கரத்தைப் பற்றிக் கொண்டு நிம்மதியாக உறங்கினாள்.

*****

அதற்கு அடுத்து வந்த நாட்கள் எப்போதும் போலவே கடந்தது... மதி எப்போதும் போல நியூஸ் பேப்பரை தரையில் விரித்து அவர்களது அறைக்கு வெளியே படுத்துக் கொண்டான். அறைக்கு உள்ளே பாட்டியின் கரத்தைப் பற்றிக்கொண்டு உறங்கினாள் சங்கவி.

ஐந்து நாட்கள் கடந்தது... கொண்டு வந்த அனைத்து ஆடைகளுக்கு அழுக்காகி போனது. அதனால் அதனை துவைக்க முடிவு செய்தாள் சங்கவி. பாத்ரூமின் உள்ளேயே வைத்து தன்னுடைய மற்றும் பாட்டியின் ஆடைகளை துவைத்து முடித்தாள். மீண்டும் அறைக்குள் வந்தவள் ஒரு மூலையில் கிடந்த மதியின் ஆடைகளை கவனித்தாள். முதலில் அதனை கடந்து செல்லவே யோசித்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ அவனுடைய துணியையும் எடுத்து துவைக்க ஆரம்பித்தாள்.

துவைத்து முடித்தவளுக்கு அதனை எங்கே காய போடுவது என்று தெரியவில்லை... உடனே வெளியே நின்ற மதியை அழைத்தாள். இப்போதெல்லாம் அவனை அழைப்பதற்கு அவள் தயங்குவதில்லை. ஒருநாளில், மூன்று நான்கு முறையாவது அவனை அழைத்து விடுவாள். அவளது தினசரி நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகப் போனது. இப்போது அவனைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உணர்ந்து தயக்கமுடைத்து பேச ஆரம்பித்திருந்தாள்.

அங்கிருப்பவர்கள் எல்லாம் அவர்களது துணியை வெறுமனமே தண்ணீரில் நனைத்து சுவரில் காயபோடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதனால் அவள் கேட்கும்போது அவனும் அதே சுவரை கை காட்ட, சங்கவியின் முகம் நொடியில் மாறியது. உடனே அதனை உணர்ந்து கொண்டவன் "என்ன ஆச்சு?" என்று கேட்டான்.

"இல்ல கயிறு மாதிரி ஏதாவது கிடைக்குமா?" என்று கேட்டாள்.

"எதுக்கு?"

"எதுக்குன்னு கேட்டா என்ன சொல்றது? துணி காயப்போட கொடி வேண்டாமா?" என்று சட்டென கேட்டாள். அது அவனது இதழில் மெல்லிய புன்னகையை அரும்ப செய்தது. தயக்கமுடைத்து பழையபடி கொஞ்சம் பேச ஆரம்பித்து இருந்தாள். அது அவனுக்கும் புரிந்தது.

உடனே கயிறினை எடுத்து வந்து அங்கிருந்த இரு மரங்களுக்கு நடுவே கொடியினை கட்டினான். அதனைப் பார்த்து கொண்டு அவர்களுக்கு பின்னால் நின்ற அவனது இரு கூட்டாளிகள் தங்களுக்குள்ளேயே பேசி சிரித்துக்கொண்டனர்.

"மதி, கடமை எல்லாம் செய்யுற போல?" கணவனின் கடமையை மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் கேலியாக பேசினர். இது சங்கவிக்கு புரியவில்லை ஆனால் மதிக்கு புரிந்து விட்டது. அவர்களை முறைத்துப் பார்த்தவன் " கொஞ்சம் அந்த பக்கம் போறீங்களா?" என்றபடி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

துணியை காய போடுவதற்கு முதற்கொண்டு அவன் தான் அவளுக்கு உதவி செய்தான். அதில் அவனது துணியும் இருப்பதை அப்போதுதான் அவன் கவனித்தான்.

அதனை கையில் எடுத்து வைத்துக் கொண்டு "இது என்னோட சட்டை மாதிரி இருக்கு?" என்று கேட்டபடி சங்கவியின் முகத்தை பார்த்தான்.

"ஆமா உங்களோடது தான்" என்றவள் அவளது வேலையை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதிக்கு இதெல்லாம் சற்று சங்கடமாக இருந்தது... உடனே "இனிமேல் இதெல்லாம் பண்ணாத" என்று முகத்தில் அடித்தார் போல சொன்னான்.

சட்டென அவனது முகத்தை திரும்பிப் பார்த்த சங்கவி 'ஏன்? எதற்கு?' என்று எதுவும் கேட்கவில்லை... அமைதியாக திரும்பியபடி "சரி" என்று மட்டும் பதில் கொடுத்தாள்.

அதன் பிறகு அவன் அங்கிருந்து செல்ல பார்க்க... சங்கவியன் குரல் அவனை தடுத்து நிறுத்தியது.

"இங்க வந்த இத்தனை நாள்ல நீங்க எனக்கு எத்தனையோ உதவி பண்ணியிருக்கீங்க? அதுக்காக இல்லனாலும் நீங்க எங்களுக்கு சாப்பாடு போட்டதுக்காகவாவது நான் ஏதாவது வேலை செய்யணும் இல்ல... சாப்பாட்டை என்னால பிச்சையா ஏத்துக்க முடியாது" என்று அவளும் அவன் சொன்ன தோரணையிலே பதில் சொல்ல, அவனுக்கு தனது சிறுவயது ஞாபகம் கண்முன் வந்து போனது. நெஞ்சில் சுறுக்கென்று ஒரு வித வலி ஊடுருவி சென்றது.

ஐம்பது யாசகர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக... பலூன் விற்றுக் கொண்டிருந்த இவனது கரத்தையும் பிடித்து இழுத்து வந்து வரிசையில் நிற்க வைத்து உணவு கொடுத்த பாண்டியனின் முகம் கண்முன் வந்து போனது.

தாய், தந்தையின்றி தெருவில் படுத்து கிடந்த சிறுவனான மதிக்கு அடைக்கலம் கொடுத்தது கால் ஊனமுற்ற ஒரு முதியவர். அவருக்காக தான் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தான் மதி.
"எந்த ஒரு நிலையிலும் உணவை மட்டும் பிச்சையாக வாங்கிவிட கூடாது" என்று அந்த முதியவர் சொன்ன வார்த்தை அந்த வயதிலேயே மதியின் மனதில் நன்றாக பதிந்து போனது... அதன் விளைவாக பாண்டியன் கொடுத்த உணவினை வாங்க மறுத்தவன், அவனிடம் அடி வாங்கியே திரும்பினான்.

அந்த நிகழ்வுகள் எல்லாம் அவன் மனதை பிசைய ஆரம்பித்தது. எதுவும் பேச முடியாத நிலையில் அமைதியாக அவ்விடம் விட்டு சென்றான்.

வாழ்க்கையில் இவன் சந்திக்காத வலிகளே கிடையாது. அடைக்கலம் கொடுத்த முதியவரும் இறந்துவிட, விதி இவனை பாண்டியனிடம் கொண்டு வந்து சேர்த்தது. 10 வயதில் இவர்களுடன் வந்து சேர்ந்தவன் இதோ இப்போது இவனுக்கு 22 வயது.

அவனது குழந்தை பருவத்தில் இருந்து வாலிப பருவம் வரை அனைத்தும் இவ்விடத்திலேயே கரைந்து கொண்டிருந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் சங்கவியும், மதியும் பேசிக்கொள்ளவே இல்லை... அவன் இவ்வாறு அமைதியாக இருக்கவே, இதற்கு மேலும் அவனிடத்தில் பாதுகாப்பிற்காக இப்படி அடைப்பட்டு கிடக்க, சங்கவிக்கு நெருடலாக இருந்தது. இங்கிருந்து எங்காவது சென்று விடலாமா என்று ஒரு உணர்வு வந்தது. ஆனால் எங்கே செல்வது என்ற கேள்வி? எப்போதும் போல தலையில் ஏறி நின்று கொண்டது.

ஒரு பெரு விழாவில் அழையா விருந்தாளியாக வந்து சபை நடுவில் நிற்பது போன்று இருந்தது அவளது மனநிலை... இப்படியான ஒரு நாளில் பாட்டிக்கு பயங்கரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி மதியிடம் வந்தாள் சங்கவி.

அவனும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்பி வந்தான். வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்படும் பாதிப்பு என்று மருத்துவர் சொன்னதை அப்படியே சங்கவியிடம் சொன்னான் மதி.

மருந்து, மாத்திரைகளை சங்கவியிடம் ஒப்படைத்தவன் அங்கிருந்து செல்ல பார்க்க... "ஒரு நிமிஷம்" என்றபடி அவனை தடுத்து நிறுத்தினாள் சங்கவி.

"எங்களுக்கு தனியா ஒரு வீடு மட்டும் ஏற்பாடு பண்ணி கொடுக்க முடியுமா? இங்கே இருக்கிறதுக்கு ஒரு மாதிரி இருக்கு" என்றவளின் கண்களில் சட்டென ஒரு துளி கண்ணீர் வடிந்தது.

"ஏன்? என்னாச்சு? இங்கே யாராவது ஏதாவது சொன்னாங்களா?" என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள்... "நாங்க இங்க இருக்கிறது உங்களுக்கு தான் கஷ்டம்.. அதனால தான் போகணும்னு சொல்றேன்" என்றாள்.

"போகணும்னா எங்க போறதா இருக்க? நீங்க இங்க இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்குன்னு நான் சொல்லவே இல்லையே"

"உங்களுக்கு கஷ்டமா தான் இருக்கு. அதனால தானே நீங்க என்கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்கிறீங்க?" என்று அவள் சொன்னதும், இதுவரை தான் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை நிதானமாக வெளியிட்டான்.

"சும்மா பேசிப்பேசி உன்னை தொல்லை பண்ண வேண்டாம்னு தான் நான் அமைதியா இருந்தேன்... அது மட்டும் இல்லாம நீ எனக்காக பண்ற சில விஷங்கள் எனக்கு ஒரு மாதிரி இருக்கு. என்ன? ஏதுன்னு சொல்ல தெரியல, தேவையில்லாத சில நினைவுகள் வருது, அது மட்டும் இல்லாமல்" என்றவன் எப்படி சொல்வது என்று தடுமாறியபடியே " இதெல்லாம் பழகிடுமோனு எனக்கு பயமா இருக்கு... எல்லாத்தையும் நான் எதிர்பார்க்க ஆரம்பிச்சுடுவேன்னோன்னு தோணுது" என்றவன் அவளது கண்களைப் பார்த்தான்.

இவன் பேசுவதன் அர்த்தம் அவளுக்கு ஒரு துளி கூட புரியவில்லை... அவளைப் பொறுத்தவரை அவள் கேட்ட கேள்விக்கான பதில் இது இல்லை.

"இருக்க சொல்லுறீங்களா? போக சொல்லுறீங்களா?" என்று நேராக கேட்டாள்.
ஆழ்ந்த மூச்செடுத்தவன் "சீக்கிரமே உங்களுக்கு வேற வீடு பார்க்கிறேன்" என்று சொன்னபடி அங்கிருந்து சென்றான்.

கொஞ்சம் கொஞ்சமாக சங்கவியை அவளது உறவாக அவன் நினைக்க ஆரம்பித்து இருந்தான். இது எப்போது நிகழ்ந்தது என்று அவனுக்கும் விளங்கவில்லை. ஆனால் தினமும் அவன் தேடும் ஒரே நபராக அவள் மட்டுமே இருந்தாள். ஆர்வமோ! ஈர்ப்போ! நட்போ! காதலோ! ஏதோ ஒன்று அவளிடத்தில் அவனை கட்டி போட்டது.

இவர்கள் இருவரையும் சுற்றி கொடூரமான சூழ்நிலைகள் உள்ளது. இருவருமே வெளியே இருந்தாலும் சிறை வாழ்க்கை வாழ்வது போல தான்... அப்படி இருந்த போதிலும் மனதில் ஒரு இதமான உணர்வு. ஏழு நொடியாயினும், ஏழு ஜென்மமாயினும் இந்த உணர்வு மரணம் வரையிலும் அவனது நினைவில் இருக்கும்.

அனைத்தையும் இழந்து விட்டு தனக்கென்று எதுவும் இல்லாத நிலையில் மரத்தடியில் அமர்ந்திருப்பவனை இதமாக தீண்டி செல்லும் தென்றல் போல தான் அவனுக்கு அவள்.

அடுத்த நொடி அவர்களது வாழ்வில் என்ன நடக்கும் என்று இருவருக்கும் தெரியாது... ஆனாலும் இந்த நொடி இதமாக இருந்தது. அதனை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவன் மனம் நினைத்தாலும்... முழுவதுமாக ஏற்க முடியவில்லை. அதனால்தான் விலகி நின்றான்.

****

அடுத்த நாள் பாண்டியனின் பிறந்த நாள்... அதனால் இவர்கள் இருக்கும் இடத்திற்கு மது, மாது என அனைத்தும் வந்து சேர்ந்தது. சங்கவியும் அவளது பாட்டியும் அறைக்குள் இருந்தனர் அறைக்கு வெளியே மதி நின்று கொண்டிருந்தான்.

ஆளாளுக்கு ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு அவரவர்கள் அறைக்குள் சென்றுவிட்டனர். இவனைத் தேடி நிர்மலா வந்தாள்.

"என்னடா நல்லவனே? இன்னிக்கும் விரதமா?" என்று நக்கலாக கேட்டாள்.

"தயவு செய்து உனக்கு வேற ஏதாவது வேலை இருந்தா பாரு இல்லன்னா இங்க இருந்து கிளம்பு" என்றபடி அவளை அங்கிருந்து அனுப்பப் பார்த்தான் மதி.

அந்த நேரம் கடைசி அறையில் இருந்து விலைமாது ஒருவள், உள்ளே இருந்தவனை திட்டியபடியே வெளியே வந்தாள்.

"என்ன ஆச்சுடி?" என்று அவளை பார்த்து நிர்மலா கேட்க,

"அசிங்கம் பிடிச்சவன்டி இவன்... நான் கிளம்புறேன் காசும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்" என்றபடி அந்த பெண் விறுவிறுவென அங்கிருந்து சென்றாள். அவளைப் பின்தொடர்ந்தபடி அறைக்குள் இருந்தவன் வெளியே வந்தான்.

"ஏய் நில்லுடி ***" என்று தகாத வார்த்தை சொல்லி அவளை திட்டியபடியே அவன், அவளின் பின்னே செல்ல... பதிலுக்கு அவளும் அவனை திட்டியபடியே அங்கிருந்து வேகமாக சென்றாள்.

"நீ போனா போடி... எனக்கு என் நிம்மி இருக்கா" என்றபடி அவன் நிர்மலாவை நோக்கி வர, கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக்கை கொண்டு அவனது தலையில் ஓங்கி அடித்தாள் நிர்மலா.

"நீ எல்லாம் எனக்கு செட்டாக மாட்ட ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிடு" என்று அவள் சொல்ல, அவர்கள் இருவருக்கும் இடையே கைகலப்பு உருவானது. அதனை மதி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.

ஆனால் இந்த சத்தம் கேட்டு அறைக்குள் இருந்த சங்கவிக்கு நெஞ்சம் படபடக்க ஆரம்பித்தது. மதி தான் யாரிடமோ விவாதம் செய்கிறான் என்ற எண்ணத்தில் கதவின் பக்கத்தில் செவியை வைத்து வெளியே நடப்பதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

நிர்மலா மறுக்கவும், அதீத போதையில் இருந்த அந்த ஆள் அருகில் இருந்த ஒரு பெரிய கம்பியை எடுத்து நிர்மலாவை தாக்க வர... இடையே வந்த மதி அதனை தடுத்து பிடித்துக் கொண்டான். நூலிழையில் உயிர் தப்பினாள் நிர்மலா.

"என்னையே தடுக்கிறியா நீ?" என்று அந்த ஆள் எகிறிக் கொண்டு சண்டைக்கு வந்தான்.

"மரியாதையா உள்ள போயி தூங்கு" என்ற மதி அவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல பார்க்க... இருவருக்கும் நடந்த பலத்த மோதலில் சங்கவி இருக்கும் அறையின் கதவின் மீது யாரோ சாய்வது போன்று இருந்தது. வெளிய சத்தம் அதிகமாக கேட்கவே மதிக்குத்தான் ஏதோ பிரச்சனை போல என்ற எண்ணத்தில உடனே அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் சங்கவி.

வெளியே வந்தவளை பார்த்து ஏகாத்துக்கும் கோபம் அடைந்தான் மதிவாணன்... "எதுக்கு வெளியே வந்த?" என்று கேட்டான். எத்தனையோ இடங்களில் வீடு தேடி அலைந்து விட்டான் ஆனால் ரவுடிக்கு யார் வீடு தருவார்? வேறு வழி இல்லாமல் தான் இப்படி ஒரு சூழ்நிலையில் அவளை இங்கேயே அவன் தங்க வைத்திருந்தான். இன்று இப்படி ஏதாவது ஒன்று நடக்கும் என்று தெரிந்து தான் கதவினை பூட்டி வைத்துவிட்டு வெளியவே காவலுக்கு நின்றிருந்தான்.

அதனை உணராமல் அவள் கதவை திறந்து கொண்டு வெளியே வர...
மதியின் மீதிருந்து கரத்தை எடுத்த அந்த குடிகாரன் " இந்த பொண்ணு அழகா இருக்கே, இவளை உள்ள ஒளிச்சு வச்சுட்டு தான் நிம்மிக்காக என்கிட்ட சண்டை போடுறியா?... சரி நிம்மியை நீயே வச்சுக்கோ, இவளை நான் வச்சுக்கிறேன்" என்றவன் சட்டென சங்கவியின் கருத்தை பிடித்து இழுக்க... அவனது முகத்தில் ஓங்கி குத்தி இருந்தான் மதிவாணன்.

"*** யார் மேல கை வைக்கிற?" சங்கவிய பிடித்து தன் கைவளைவுக்குள் வைத்துக் கொண்டான்.

கீழே விழுந்தவனுக்கு அது பெரும் அவமானமாக இருந்தது... அவன் விழுந்த இடத்தில் கையில் கிடந்த மது பாட்டில் ஒன்றை கையில் எடுத்தவன் நொடியில் அதனை மதியின் தலையில் அடித்து உடைத்தான்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
48


பாட்டில் பட்ட வேகத்தில் தலையில் இருந்து ரத்தம் வெளியேற ஆரம்பித்தது. அதனை கண்டதும் பதறித்துடித்த சங்கவி அப்படியே உறைந்து நின்றாள்.


ஒரு கையால் ரத்தம் வழிந்த தலையை பிடித்துக் கொண்டு எதிரில் நின்றவனின் கழுத்தை நெரித்து பிடித்தான் மதிவாணன்.


அதனை கண்டதும் உடனே நிர்மலா சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைக்க... அக்கம் பக்கத்து அறையிலிருந்து ஆட்கள் வெளி வந்தனர்.


சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை தனித்தனியே பிரித்து நிறுத்தினர்.


"அய்யோ எவ்ளோ ரத்தம் வருது... நீ வா உடனே ஹாஸ்பிட்டல் போய் பார்க்கலாம்" என்றபடி நிர்மலா, மதியை அங்கிருந்து அழைத்துச் செல்ல பார்க்க, அவளது கரத்தை தட்டி விட்டவன் " அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்" என்று சொன்னபடி இன்னும் தன்னை அடித்தவனை ஆங்காரமாக பார்த்துக் கொண்டு நின்றான்.


அவனுக்கு கோவம் அடங்கவில்லை... தன்னை இந்த அளவிற்கு அவன் காயப்படுத்தினான் என்பதை காட்டிலும் சங்கவியின் கரத்தைப் பிடித்து அவன் இழுத்ததை மதியால் மன்னிக்கவே முடியவில்லை.


தன்னைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் மீறி, அந்த குடிகாரனை நோக்கி வந்தவன், அவனது கையை அடித்து உடைத்த பிறகே ஓய்ந்தான். அந்த நபர் வலி பொறுக்க முடியாமல் அலறினான். அவனை அப்படியே அறைக்குள் இழுத்து சென்றனர் அவனுடன் இருந்த நபர்கள்.


இங்கு நடக்கும் அனைத்தையும் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றாள் சங்கவி.


ஒரு நொடியில் அனைத்தும் நிகழ்ந்து முடிந்து விட்டது. மதியின் கோபத்தை கண்டவளுக்கு இப்போது அவன் பக்கத்தில் நிற்பது கூட நடுக்கத்தை கொடுத்தது.


சத்தத்தை கேட்டு அறைக்குள் இருந்த பாட்டி வேறு "சங்கவி சங்கவி" என்று கத்திஅழைக்க... அவரை நோக்கி சென்றாள் சங்கவி.


"என்ன சத்தம் அங்க?" என்றபடி பதறிய பாட்டியை அமைதி படுத்திய சங்கவி... " அது ஒன்னும் இல்ல பாட்டி, ஒன்னும் இல்ல நான் பார்த்துக்கிறேன். நீ எதுக்கும் பயப்படாத" என்றபடி அவரை அமைதி படுத்தியவள் மீண்டும் வெளியே வர... வேகவேகமாக மதியை அங்கிருந்து அழைத்துச் சென்றாள் நிர்மலா.


'இப்போது இங்கேயே நிற்பதா? அல்லது அவனைப் பின் தொடர்ந்து செல்வதா?' என்று புரியாத மனநிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாள் சங்கவி.


பாட்டியை இவ்விடத்தில் விட்டு விட்டு செல்வதற்கும் அவளுக்கு மனம் இல்லை. மதி இல்லாத இடத்தில் இவர்களை நம்பி இங்கு இருப்பதற்கும் அவளுக்கு துணிவில்லை.


'அவளுடன் சென்று விடுவானோ தன்னைப் பற்றிய சிந்தனை இல்லாமல் அவளுடன் சென்று விடுவானோ' என்று அவளது மனம் ஒரு பக்கம் பதறிக் கொண்டிருந்தது. செல்லும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அவளின் கண்களில் நீர் நிரம்பி இருந்தது.


அவளது எண்ணம் இல்லாமல் அவனுக்கென தனி ஒரு சிந்தனை ஏது? நிர்மலாவின் கரத்தில் இருந்து தனது கரத்தை விடுவித்துக் கொண்டவன் பின்னால் திரும்பினான். அங்கு கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள் சங்கவி.


"இப்படி ஒரு நிலைமையில் அவளை இங்கு விட்டுட்டு என்னால வர முடியாது"


"எவ்ளோ ரத்தம் வருது பாரு? இப்படியே இங்க இருந்தன்னா ரத்தம் கொட்டியே செத்து போயிடுவ" என்றவளை நோக்கி திரும்பியவன் " எனக்கு ஒரு உதவி வேணும்... செய்யுறியா?" என்று நிர்மலாவிடம் கேட்டான்.


"என்னால உனக்கு அப்படி என்ன உதவி பண்ணிட முடியும்?"


"உன்னால பண்ண முடியுமானு எனக்கும் தெரியல... ஆனால் உன்னை தவிர வேற யாருகிட்ட இதை கேட்குறதுனு எனக்கு தெரியல"


"என்ன உதவின்னு சொல்லு முடிஞ்சா பண்ணுறேன்"


"எனக்கு ஒரு வீடு வேணும்"


"உனக்கா? இந்த சண்டைக்கு பயந்தா வெளியே வீடு பார்க்கணும்னு நினைக்கிற"


"இந்த சண்டை எல்லாம் எனக்கு ஒன்னும் புதுசு இல்லை... இந்த இடத்துலயே என் உயிர் போனாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... ஆனால் என்னை மட்டுமே நம்பி ஒருத்தி இருக்காள்... அவளோட பாதுகாப்பு எனக்கு ரொம்ப முக்கியம். இதுக்கு மேல இந்த இடத்துல அது கண்டிப்பா கிடைக்காது. அதனால தான் வேற ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு உங்ககிட்ட கேட்கிறேன்... முன்னாடி எல்லாம் நான் எந்த விஷயத்துக்காகவும் பயந்ததில்லை... ஆனால் இப்போ அவளுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுனு பயப்படுறேன்" என்று சங்கவியை பார்த்தபடி பேசியவனின் வார்த்தையை கேட்டு நிர்மலாவே ஒருகணம் நெகிழ்ந்து விட்டாள்.


"அந்த பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவள், எனக்காக இப்படி யாருமே இல்லையேன்னு ரொம்ப ஏக்கமா இருக்கு. பாதுகாப்பான ஒரு இடம் பார்க்கணும்னா கொஞ்சம் கஷ்டம் தான். எனக்கு தெரிஞ்ச ஒரு ஆசிரமம் இருக்கு. அங்க வேணும்னா இப்போதைக்கு அவளை தங்க வச்சுக்கலாம்" என்று நிர்மலா சொன்னதும் தூரத்தில் நின்று கொண்டிருந்த சங்கவியை பார்த்து "வா" என்பது போல் கையசைத்து அவளை அழைத்தான் மதிவாணன்.


அதனை கண்டதும் அவள் மனதில் தோன்றிய நிம்மதியை வார்த்தையால் விளக்க முடியாது. நிம்மதி பெருமூச்சு விட்டவள், ஒருகணம் கண்களை மூடி திறந்த படி அவன் அருகே விரைந்து வந்தாள்.


"உன்னோட பொருள் எல்லாம் எடுத்துக்கோ பாட்டியை அழைச்சிட்டு இங்கேயிருந்து கிளம்புறோம்" என்று சொன்னவனை பார்த்து 'எங்கு? ஏன்? எதற்கு?' என்று ஒரு வார்த்தை கூட சங்கவி கேட்கவில்லை.. கேட்க வேண்டும் என்றும் அவளுக்கு தோன்றவில்லை.


உடனே தங்கள் அறைக்குள் வந்தவள் அவர்களது உடைமைகளை எல்லாம் எடுத்து வெகவேகமாக பையுக்குள் அடக்கினாள். கை தாங்கலாக பாட்டியையும் அழைத்து வந்தாள்.


இவர்கள் நால்வரும் மதி வந்த காரில் அங்கிருந்த புறப்பட்டனர். ரத்தம் வழிய மதி தான் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு பின்னால அமர்ந்தபடி சங்கவி அவனை பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். உடனே தன் பையில் இருந்து ஒரு துப்பட்டாவை எடுத்து ரத்தம் வழியாத வண்ணம் அவனது காயத்தில் வைத்து அழுத்தினாள். அது இன்னுமே அவனுக்கு அதிக வலியை கொடுத்தது. வலியில் முகம் சுருக்கியவன் கண்ணாடி வழியே சங்கவியின் முகத்தை பார்த்தான்.


"இல்லை ரொம்ப ரத்தம் வருது அதான்" என்று அவள் சற்று பயத்துடன் கூற, மதியின் இதழ்கள் மென்மையாக விரிந்து கொண்டது. அன்று இவன் காயம்பட்டு அவளது வீட்டில் அடைக்கலம் புகுந்த நேரம் அங்கு நடந்த நிகழ்வுகளை மீட்டெடுத்தவனின் உதடுகள் லேசாக புன்னகைத்துக் கொண்டது.


“நீ அழுத்தினா அழுத்துல மேல இருந்த கண்ணாடி துண்டெல்லாம் மறுபடியும் உள்ளே போயிருக்கும்” என்று கூறி நிர்மலா சலித்துக் கொண்டாள். அதனைக் கேட்டதும் சங்கவியின் முகம் வாடிவிட்டது.


“எனக்கு தெரியல… ரத்த வந்தது அதான்” என்ற அவள் மேலும் பதறியபடி பேசவும் “ஒன்னும் பிரச்சனை இல்ல பக்கத்துல தான் ஹாஸ்பிடல் பார்த்துக்கலாம்” என்று கூறி அவளை ஆசுவாசப்படுத்தினான் மதிவாணன்.


அருகிலிருந்த கிளினிக்கிற்கு சென்று காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு விட்டு நிர்மலாவும், மதியும் திரும்பி வந்தனர்... வழக்கமாக இவர்கள் வந்து வைத்தியம் பார்க்கும் இடம் இது தான் என்பதனால் பெரிதாக எந்த கேள்விக்கும் அங்கு இடமில்லாமல் போனது. அவர்கள் திரும்பி வரும் வரை பாட்டியுடன் காரில் அமர்ந்திருந்தாள் சங்கவி.


அதிகமாக இரத்தம் வெளியேறியதன் விளைவாக மதிக்கு சற்று கிறக்கமாக இருந்தது. அவனால் அதற்கு மேல் வண்டியை இயக்க முடியவில்லை… ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தினான்.


“என்னால முடியல ரொம்ப டயர்டா இருக்கு… ஆட்டோ ஏதாவது கிடைக்குதான்னு பார்க்குறியா?” இன்று நிர்மலாவிடம் சொன்னான் மதிவாணன்.


“ஆட்டோ எதுக்கு நீ இந்த பக்கம் வா நான் வண்டி ஓட்டுறேன்”


“உனக்கு ஓட்ட தெரியுமா?”


“அதெல்லாம் ஒரு அளவுக்கு நல்லாவே ஓட்டுவேன். இந்த தொழில முடிஞ்ச அளவுக்கு நாங்க எல்லாத்தையும் கத்துக்கணும்பா… அதுதான் எங்களுக்கு பாதுகாப்பு” என்றவள் வாகனத்தை உயிர்ப்பிக்க அடுத்த அரை மணி நேரத்தில் ஆசிரமத்தின் வாசலில் வாகனம் நின்றது. நிர்மலாவின் பக்கத்தில் இருந்த மதி அப்படியே கண்களை மூடி உறங்கி இருந்தான்.


“மதி எழுந்துரு” என்று அவனை எழுப்பிய நிர்மலா, கதவை திறந்து கொண்டு வெளியே இறங்கிக்கொண்டாள்.


அவர்களைத் தொடர்ந்து சங்கவியம் காலில் இருந்து இறங்கிக் கொண்டாள்.


“இனிமே நீங்க இங்க தான் தங்க போறீங்க?” என்று மதிவாணன் சொல்லு


“நீங்க?” என்று உடனே சங்கவிடமிருந்து கேள்வி வந்தது.


“ நான் அங்க தான் இருக்கணும்.. , ஆனால் இதற்கு மேல் நீங்க அங்க என்கூட இருந்தா அது உங்களுக்கு பாதுகாப்பு இல்லை… கொஞ்ச நாள் தான், நீ இங்கயே பாதுகாப்பாய் இரு. வேறொரு பாதுகாப்பான இடம் கிடைக்கிற வரைக்கும் நீங்க இங்கே இருக்கிறது தான் உங்க ரெண்டு பேருக்குமே நல்லது… நான் தினமும் வந்து பார்த்துகிறேன்” என்றவன் சங்கவி முகத்தை பார்க்க… அவளது முகமும் சொல்ல முடியாத கலக்கத்தில் இருந்தது.


அவன் இல்லாத இடம் தனக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வில் நின்றாள். ஆனால் அவன் சொல்லை மருத்து பேசவும் முடியவில்லை. சரி என்பது போல தலையை மட்டும் ஆட்டினாள்.


தனது அலைபேசியை எடுத்து சங்கவியிடம் கொடுத்தான் மதிவானன்.


“இதை வச்சுக்கோ… ஏதாவது ஒரு பிரச்சனைனா இதுல சரவணன் ஒரு நம்பர் இருக்கும் அதுக்கு கூப்பிடு, நான் கிளம்புறேன்” என்றவன் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து புறப்பட வேண்டிய கட்டாயத்தில் நகர்ந்து சென்றான்.


தினமும் ஆசிரமத்திற்கு வந்து அவர்களை பார்த்து விட்டு செல்வான். ஒரு புது போனை சங்கவிக்கு வாங்கி கொடுத்துவிட்டு தனது போனை அவரிடம் இருந்து வாங்கிக் கொண்டான்…


இப்படியே நாட்கள் மாதங்களாக கடந்தது… அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் வெளியே இருந்து செய்து கொடுத்தான் மதிவாணன். ஆஸ்ரமத்தில் இருந்த சங்கவி அங்கிருந்த வேலைகளையும் அங்கிருந்து பெரியவர்களையும் பார்த்துக் கொண்டு நேரத்தை செலவழித்தாள். அங்கு அவளுக்கு தையல் பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்பட்டது. பழைய வாழ்க்கையிலிருந்து மீண்டு பழைய அடையாளத்தை அழித்து கொஞ்சம் கொஞ்சமாக வைஷ்ணவியாகவே வாழ ஆரம்பித்திருந்தாள் சங்கவி.


சங்கவியும் அவளது பாட்டியும் பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த இடம் மட்டுமே உகந்தது என்று அறிந்து கொண்ட மதிவாணனும் அவர்களுக்கு தனி வீடு பார்க்கும் எண்ணத்தை கைவிட்டு இருந்தான்.


இப்படியே ஒரு வருடம் கடந்தது… ஒரு நாள் அவன் தன்னைத் தேடி வரவில்லை என்றாலும் அவன் தனக்கு அழைக்கவில்லை என்றாலும் அவனைத் தேட ஆரம்பித்திருந்தாள் சங்கவி.


காரணம் தெரியவில்லை… ஆனால் அவளது பாட்டிக்கு அடுத்து அவன் மட்டும் தான் என்ற நிலையில் மதிவாணனை வைத்து பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.


மதி எப்போதும் போல அவனது அடியாள் தொழிலை செய்து கொண்டு தான் இருந்தான். இப்படியான ஒரு நாளில்தான் நீலகண்டனின் குடும்பத்தை கடத்தி வைத்திருந்தான் பாண்டியன். அவ்விடத்தில் மதியும் இருந்தான்.


அவர்கள் கயலை துன்புறுத்துவதை பார்த்து நிலை கொள்ள முடியாமல் தடுமாறியவன் வெளியே வந்து நின்று புகைத்து கொண்டு இருந்தான்.


பாண்டியன் கொடூரன் தான்! ஆனால் பெண்கள் விஷயத்தில் அவ்வாறு இல்லை என்பது மதிக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் இப்பொது ஏன் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை இவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மகளுக்கு நடந்த சோகத்துக்கு, தண்டனையை அவள் வயதை தாண்டிய இன்னொரு பெண்ணிற்கு கொடுப்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை. எப்படி இவர்கள் எல்லாம் இதனை நியாயாடுத்தூக்கிறார்கள் என்று எண்ணியவனுக்கு அங்கு நிற்கவே உடல் கூசியது.


கயலின் சத்தம் மதியின் மனதை நிலைகொள்ள முடியாமல் செய்தது. இந்த தொழிலை அவன் விரும்பி பார்க்கவில்லை, வேறு வழியில்லாமல் பார்த்து கொண்டு இருக்கிறான்.


இவ்வித தொழில் எப்போதும் ஒரு வழி பாதை கொண்டது தான்.


வரும் வழியும் விதியின் கையில்,

விலகும் வழியும் விதியின் கையில் தான்.


இப்போதுவரை மரணம் மட்டுமே இவ்விடம் விட்டு செல்ல ஒரே வழியாக இருக்கிறது. அதனை ஏற்கமுடியாமல் தான் இத்தனை பாவத்தையும் இவன் கண்கொண்டு காண வேண்டிய நிலையில் இருக்கிறான்.


அந்நேரம் அவனது எண்ணிற்கு நிர்மலாவிடமிருந்து அழைப்பு வந்தது. அழைத்தவள் சங்கவியை பற்றி தான் பேசினாள். அதனை கேட்டு உறைந்து போனான் மதி.


“உடனே கிளம்பி வா” என்று சொல்லி அவள் அழைப்பை தூண்டிக்க… சட்டென்று மீண்டும் உள்ளே வந்த மதி "அண்ணா நான் உடனே போயாகணும்" என்று பாண்டியனிடம் சொன்னான்.


கயலை நெருங்கிய அந்த நபர்களை அமைதி காக்க சொன்ன பாண்டியன், மதியின் பக்கம் திரும்பி "என்ன விஷயம்டா?" என்று கேட்டான்.


"அந்த பொண்ணை ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்காங்க நான் உடனே போகணும்... போயிட்டு வந்து என்ன ஏதுன்னு நான் உங்களுக்கு தகவல் சொல்லுறேன் அண்ணா" என்றவன் அவரது பதிலையும் எதிர்பாராமல் அங்கிருந்து வேகவேகமாக புறப்பட்டான்.


வேகவேகமாக வெளியே வந்தவனின் காதில் "அந்த ஆளோட பொண்ணு, பொண்டாட்டின்னு எல்லாரையும் கடத்தி வந்து அடிச்சு கொடுமை படுத்திட்டு இருக்காணுங்க... அந்த சின்ன பொண்னை விற்க போறதா கூட பேசிட்டு இருக்காணுங்க" என்று ஒருவன் யாரோ ஒருவருக்கு தகவல் கொடுக்க, அது மதியின் காதில் விழுந்து விட்டது. சத்தம் வந்த திசைபக்கம் இவன் சாய்ந்து பார்க்க அங்கே நின்றது பாண்டியனின் கார் ஓட்டுநர். அவரோ மதியை கண்டதும் வேறு ஏதோ ஒரு படத்தை பற்றி பேசுவது போல மாற்றி பேசியபடியே அவனை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்து கொண்டார்.


இதை எல்லாம் மனதில் எடுத்து கொள்ளும் நிலையில் இல்லாத மதி சங்கவியை காண அங்கிருந்து சென்றான். என்ன இருந்த போதிலும் எப்படியாவது கயலும் இதிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று அவன் மனம் நினைத்துக் கொண்டது. அவன் மனம் விரும்பியது போலவே அவன் அங்கிருந்து சென்ற பத்து நிமிடத்திற்குள் அந்த இடத்துக்கு போலீஸ் வந்தது.
 
Status
Not open for further replies.
Top