பகுதி 3
மெல்ல மெல்ல அவனது கருவிழிகள், இமை மீது அதன் அசைவை வெளிப்படுத்தியது. இருந்தும் அவனால் தனது விழிகளை திறக்க முடியவில்லை. இமைகளில் கடுமையான அழுத்தம் வெளிப்பட்டது.
"பல்லவி" என்று அவனது உதடுகள் மௌனமாக அவளது பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்க... விபத்து நடந்த அந்த நாள் அவனுக்கு நினைவு வந்தது.
*****
நடந்த விபத்தில் தூக்கி வீசப்படவன், உடல் முழுக்க காயத்துடன் கேட்போர் யாருமின்றி நடு ரோட்டையில், குறை உயிரோடு போராடிக் கொண்டிருந்தான். உயிர் மட்டும் தான் இருந்தது. உடலில் சிறு அசைவு கூட இல்லை ஆனால் சுற்றுப் புறத்தை அவனால் உணர முடிந்தது... இருந்தும் தெளிவாக எதையும் மனதில் எடுத்துக் கொள்ள திறன் இல்லை...
அப்போது காயம் பட்டு கிடந்தவனது தலையை, மடி தாங்கியது ஒரு நல்ல உள்ளம்.
"பல்லவி… பல்லவி" தலையில் காயம் பட்டு மூர்ச்சையாகும் நிலைமையிலும் அவனது மனம் உரைத்தது அவளது பெயரை தான்.
புண் பட்ட உடலும், மனமும் அந்நொடி வரை அவளை மட்டும் தான் நாடியது… ஆனால் உதவிக்கு வந்தது அவள் இல்லையே!
அவளை காண வேண்டி அவனது மனம் அலைப்பாய்ந்தது இருந்தும் விழிகளை திறக்க முடியாமல் வலியில் முனங்கிக் கொண்டிருந்தான் ஆரியன்.
"உங்களுக்கு ஒன்னும் ஆகாது… நான் இருக்கேன், உங்களை அப்படி விட்டுட மாட்டேன்" என்று ஆறுதல் சொன்னபடி அவனது கரத்தை இறுக்கிப் பிடித்த அந்த நபரின் கண்கள் கவலையோடு கண்ணீர் சிந்தியது.
அது யார்? அந்த நேரத்தில் அந்த இடத்தில் அந்த நபருக்கு அங்கு என்ன வேலை? என்று பல கேள்விகள் இருந்தாலும் மரணத்தின் விளிம்பில் நின்றவனுக்கு தன் உயிரை காக்க வந்த அந்த நபரை கடவுள் என்று தான் உணர தோன்றியது .
அந்த நபர் கொடுத்த ஆறுதல் இவனுக்கு போதுமானதாக இல்லை… சொல்ல போனால் அந்த நபர் பேசியது கூட இவனது காதுகளில் தெளிவாக விழ வில்லை... இருந்தும் என்ன நினைத்தானோ தன்னை மடி தாங்கியிருந்த அந்த நபரின் கரத்தை பதிலுக்கு பற்றியவாறே மயங்கி சரிந்தான் ஆரியன்.
நடந்த அந்த நிகழ்வு இப்போது அவனுக்கு நினைவில் வந்து போனதும்... இதுவரை இறுக்கத்தை கொடுத்த இமைகள் மெதுவாக திறந்து கொண்டது.
*****
தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேசிவிட்டு வெளியே வந்த வைஷ்ணவி... "அம்மா நான் கோவிலுக்கு போறேன்" என்று இந்திராவிடம் சொன்னாள்.
"தனியா எதுக்கு போகணும்? இருமா யசோ வந்த பிறகு நானும் வரேன் சேர்ந்தே போயிட்டு வந்திடலாம்"
"இல்லமா அப்படியே எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு அதை முடிச்சிட்டு லேட்டா தான் வருவேன்... உங்களுக்கு எதுக்கு வீண் அலைச்சல் அதான் சொல்லுறேன், நானே தனியா போயிக்கிறேன் ம்மா"
"இல்லடா, யசோ எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவா, அந்த பையன் வீட்டுல என்ன ஆச்சுன்னு என்னால எதுவும் அவள் கிட்ட கேட்க முடியாது... நீ இருந்தா என்ன ஏதுன்னு கொஞ்சம் விசாரிக்கலாமேன்னு பார்த்தேன்... சரி பரவாயில்லடா நீ கிளம்பு நான் பார்த்துகிறேன்" அரை மனதுடன் அவளை வழி அனுப்ப பார்த்தார்.
"சரி அம்மா நான் கிளம்புறேன்..." என்றபடி வாசல் வரை போன வைஷ்ணவி திரும்பி நின்று "தப்பா எடுத்துக்காதீங்கம்மா ரொம்ப முக்கியமான வேலை" என்று தயங்கி நின்றாள்.
"புரியுதுடா நீ பார்த்து போயிட்டு வா" என்று சிறு புன்னகையுடன் அவளை வழி அனுப்பி வைத்தார் இந்திரா.
வைஷ்ணவி சென்ற அடுத்த கணமே உச்ச கட்ட கோவத்திலும், விரக்தியிலும் தனது வீட்டுக்குள் நுழைந்திருந்தாள் யசோதா.
கோவம், ஆங்காரம், ஏமாற்றம் என மாறி மாறி அவளது மனதை கூறு போட்டது... கத்தி அழ வேண்டும், இல்லையெனில் கத்தியை எடுத்து தன் துன்பத்துக்கு காரணமானவரை குத்திக் கொல்ல வேண்டும் என்ற மனநிலையில் வெறி பிடித்து நின்றாள்.
வாசலை மரித்தபடி வந்து நின்ற இந்திரா, யசோதாவின் முன்னே காபி கப்பினை நீட்டினார். ஏற்கனவே கோவத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தவளின் பார்வை இந்திராவினை சுட்டெரித்தது.
ரத்தமென சிவந்த விழிகளின் அசைவால் தனது வழியில் இருந்து அவரை விலக்கி நிறுத்தியவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை... நேராக தனது அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
கோவம், பெரும் கோவம்? ஆனால் அதனை எப்படி பிரதிபலிப்பது என்று தான் அவளுக்கு தெரியவில்லை.
மனதின் வைராக்கியம் எல்லாம் அவளது அறைக்குள் இருந்த அவளது தந்தையின் புகைப்படத்தை பார்க்கும் வரை தான் நிலைத்தது.
மனதின் திடம் எல்லாம் பொடிப் பொடியாக உதிர, இதுவரை தேக்கி வைத்திருந்த தனது மன குமுறலை எல்லாம் அவரிடம் கொட்டி தீர்க்கும் விதமாக தலையை பிடித்துக் கொண்டு "ஆஆ" என்று உச்ச பட்ச வேதனையில் கத்தி அழுதாள். தன்னை தானே தாக்கிக் கொண்டு கதறினாள். கண்ணாடியில் தெரிந்த தனது முகத்தை பார்க்க பிடிக்காமல் நகத்தால் முகத்தை பிராண்டி கொண்டு வலியில் அந்த அறை அதிர மனநலம் பாதிக்கப் பட்டவள் போல ஆக்ரோஷமாக நின்றாள்.
பெண்ணவளின் அழு குரல் கேட்டு வெளியே நின்ற தாய் உள்ளம் தவித்து போனது. ஆறுதல் சொல்ல கூட முடியாத நிலைமையில் தன்னை தானே நொந்து கொண்டார் இந்திரா...
"ஆஆ...." என்று கத்தி கதறியவள் கையில் கிடைத்த பொருளை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்தாள்.
தனது நிலையை எண்ணி சோர்ந்து போனவள் "எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்" என்றவளின் சத்தம் பெரு இடியாக வெளியே இருந்த இந்திராவின் காதுகளில் விழவும், பொறுக்க முடியாமல் மகளின் அறை கதவை தட்டினார்.
"யசோ... என்னமா ஆச்சு உனக்கு?" பல நாட்களுக்கு பிறகு தாயின் இந்த அழைப்பு... முன்பு போல அந்த ஏக்கம் இப்போது இல்லை மாறாக மனம் எல்லாம் அருவருத்து போனது. கோவத்தில் கையில் கிடைத்த பொருளை எடுத்து கதவினை நோக்கி விசிறி அடித்தாள்.
அவளது செயல் உணர்ந்து ஒரு கணம் அதிர்ந்த இந்திராவோ மறு கணமே மீண்டும் யசோதாவின் அறை கதவை துணிவுடன் தட்டினார். பெத்த மனம் பித்து அல்லவா?
"யசோ எதுவா இருந்தாலும் முதலில் வெளியே வா அம்மா கிட்ட பேசு... என்னடா தங்கம் ஆச்சு உனக்கு? அம்மா இருக்கேன்டா உனக்கு" என்று சொன்னவரின் கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தது.
ஆனால் அது எல்லாம் யசோவுக்கு எதையும் உணர்த்தவில்லை மாறாக மேலும் கோவமும் வெறியும் தான் அதிகரித்தது.
"யசோ அம்மா கெஞ்சி கேக்குறேன் கதவை திற" என்று சொன்னவர் அழுது கொண்டே அதே இடத்தில் மண்டியிட்டு அமர்ந்தார்.
"இங்க இருந்து போயிடு என்ன பேச வைக்காத" என்று மட்டுமே யசோவின் அறையில் இருந்து பதில் வந்தது.
"யசோ"
"பேசாத இங்க இருந்து போ ன்னு சொன்னேன்... உனக்கு அது புரியலையா? இங்க இருந்து போ என், கண்ணு முன்னாடி வராத, எங்கயாவது போ ... போ... போ என் கிட்ட வர நினைக்காத என்கிட்ட பேசாத... எனக்கு உன்னை பிடிக்கலை, உன்னை பத்தி நெனச்சாலே அருவருப்பா இருக்கு... இன்னிக்கு நீ என் வாழ்க்கையையே அழிச்சிட்ட அது உனக்கு தெரியுமா? என் கிட்ட இருந்து இன்னும் நீ எதை எதிர் பார்க்கிற? இன்னும் நான் என்ன சொல்லணும்னு நினைக்கிற? என்னை பேச வைக்காத, இனி எதுவும் மாறாது மாறவே மாறாது என் வாழ்க்கையில் இனி காதல், கல்யாணம், குழந்தை, சந்தோசம், நிம்மதி எதுவும் கிடையாது... எதுவுமே இல்லை எல்லாம் முடிஞ்சுது இதுக்கெல்லாம் யார் காரணம் தெரியுமா? நீ தான்.. நீ மட்டும் தான். நீ ஒரு சுயநலவாதி... நீ என்னை பெத்தவள் இல்லை என் வாழ்க்கையை அழிக்க வந்தவள்" என்று வாயுக்கு வந்தபடி தன் மனதில் உள்ளதை எல்லாம் தன்னிலை மறந்து கொட்டித் தீர்த்தாள் யசோதா.
அவள் சொன்னதை எல்லாம் கேட்டபடி கதவில் சாய்ந்திருந்த இந்திராவின் கண்கள் நிலை குத்தி நிற்க, விழியோரம் உயிர் கசிந்தது... நேரம் ஆக ஆக அவரிடம் எந்த அசைவும் இல்லை... அப்படியே சிலை போல அமர்ந்திருந்தார்... திடீரென அவர் நாசியில் இருந்து குருதி வெளியேற தொடங்கியது... இது எதுவும் அறியாமல் தனது அறைக்குள் அழுது கொண்டிருந்த யசோதா கணக்கு இல்லாத அளவு மாத்திரைகளை எடுத்து விழுங்கிக் கொண்டு அப்படியே மெத்தையில் விழுந்தாள்.
கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வைஷ்ணவி வாசலில் யசோதவின் செருப்பை பார்த்தபடி சிறு புன்னகையுடன் விரைந்து உள்ளே நுழைந்தாள்.
"அம்மா யசோ என்ன சொன்னாங்க எல்லாம் ஓகே தானே? பையன் வீட்டுல என்ன சொன்னாங்களாம்?" என்று கேட்டபடி இந்திராவின் அருகில் வந்தாள்.
"அம்மா எதுக்காக இங்க உட்கார்ந்து இருக்கீங்க? என்ன ஆச்சு?" என்று சற்று பதட்டத்துடன் கேட்டவள் அவரை தொட போகவும் உணர்வின்றி கிடைந்தவர் அப்படியே தரையில் சரிந்தார்.
"அய்யோ அம்மா என்ன ஆச்சு?" என்று பதறியவள், அவரது நாசியில் வடிந்திருந்த ரத்தத்தை பார்த்ததும் பயந்து போனாள்.
"யசோதா கதவை திறங்க அம்மாவுக்கு என்னமோ ஆகிடுச்சு" என்று அவளது கதவை தட்டினாள்... ஆனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.. வெகு நேரம் தட்டி பார்த்தும் அவள் திறக்க வில்லை என்றவுடன் வேறு வழி இல்லாமல் தனது அலைபேசியை எடுத்து ஒருவரின் எண்ணிற்கு அழைத்தாள்.
"சார் இந்திரா ம்மா மயங்கி விழுந்துடாங்க மூக்கில இருந்து பிளட் வருது என்ன பண்ணுறதுன்னே தெரியல, என்று அவள் சொன்னதும் பதறி துடித்த அந்த நபர் அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.
இது எதுவும் தெரியாமல் தூக்க மாத்திரையை உட்கொண்டு தனது அறையில் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தாள் யசோதா.
*****
மருத்துவமனையில்...
"அவளுக்கு எதுவும் ஆக கூடாது" என்று கண்கள் கலங்கி போயி இந்திராவை பார்த்தபடி நின்றார் ஒரு ஐம்பத்தி ஐந்து வயது நிரம்பிய நபர்.
"கவலைப்பாடாதீங்க அவங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்று வைஷ்ணவி அவருக்கு தைரியம் கொடுத்தாள்.
"யசோதா எங்க?" என்று இப்போது தான் அவளது நினைவு வந்தவராக இவளிடம் கேட்டார் அந்த நபர்.
"வீட்டுக்குள்ள தான் இருந்தாங்கன்னு நினைக்கிறேன்... ஆனால் ரூம் லாக் பண்ணி இருந்தது. அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை போல, சண்டை போட்டு இருப்பாங்கன்னு தோணுது அதனால தான் அம்மாவுக்கு இப்படி ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்"
"அந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கா? இவள் வாழுறதே அவளுக்காக தான் அது ஏன் அந்த பொண்ணுக்கு புரிய மாட்டிங்குது"
"இதுல எனக்கு யாரை தப்பு சொல்லுறதுன்னு தெரியல சார்... எனக்கு சில விஷயம் தெரியும், அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க நியாயம்... உங்களை நான் தப்பு சொல்ல மாட்டேன், உங்களுடைய உணர்வுகள் எனக்கும் புரியும். அதே போல யசோதாவையும் நான் தப்பு சொல்ல மாட்டேன். அவளுடைய உணர்வும் எனக்கும் புரியும். அம்மாவை பார்த்துக்கோங்க சார் நான் ஒரு போன் பண்ணிட்டு வந்திடுறேன்" என்றபடி வெளியே வந்தாள் வைஷ்ணவி.
எத்தனையோ முறை யசோதாவுக்கு அழைத்து பார்த்தான் ஜீவா ஆனால் அவள் அழைப்பை ஏற்கவில்லை. உடனே அவளது வீடு நோக்கி கிளம்பினான். யசோதா ஜீவாவை தனது வீட்டுக்கு இதுநாள் வரை அழைத்து வந்தது கிடையாது... அவனும் வர நினைத்தது கிடையாது.
ஆனால் இன்று அவள் தனது அழைப்பை ஏற்கவில்லை, மேலும் தனது வீட்டுக்கு வந்ததும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டாள். ஏன் அப்படி செய்தாள்? என்று நேரடியாக கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், என்ன ஆனாலும் சரி என்று யசோவின் வீட்டிற்கு வந்தான் ஜீவா.
வாசல் கதவு தாழிடப் படவில்லை என்றவுடன் உள்ளே வந்தவன் யசோதாவின் அலைபேசிக்கு அழைத்தான். சத்தம் அவளது அறைக்குள் இருந்து வந்தது உடனே அறைக் கதவை தட்டினான்.
அவள் திறக்கவில்லை என்றவுடன் அச்சம் கொண்டவன் கதவை இடித்து தள்ளினான். பிளாஸ்டிக் கதவு என்பதால் உடனே உடைக்க முடிந்தது.
அங்கு மயக்கத்தில் கிடந்தவளையும் அவளுக்கு அருகில் கிடந்த தூக்க மாத்திரை பாட்டிலையும் பார்த்தவன் பதறி துடித்துக் கொண்டு அவளை தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்தான்.
இந்திரா சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் அதே மருத்துவமனையில் தான் யசோதாவையும் சிகிசைக்கு அழைத்து வந்து சேர்த்தான் ஜீவா.
ஒரே தளத்தில் தான் இருவரும் அட்மிட் செய்யப்பட்டிருந்தனர். இந்திரா மருத்துவமனையில் இருப்பது ஜீவாவுக்கு தெரியாது. ஆனால் அந்த அறைக்கு வெளியே நிற்பது தனக்கு வெகுவாக பரிச்சயபட்ட ஒருவர் தான் என்பதை அறிந்து கொண்ட ஜீவா... நின்ற இடத்தில் இருந்தபடியே "டேட்" என்று சந்தேகமாக அழைத்து பார்க்க, அவனது குரலுக்கு உடனே திரும்பினார் அவர்.