ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்கவா பெண்ணே _கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
49


காவலர்களுடன் சேர்ந்து வேதாவும் அங்கு வந்திருந்தான். பாண்டியனின் கார் ஓட்டுநர் வேதாவின் ஆள் தான். அவன் மூலம் தகவல் அறிந்து கொண்டு வேதா அங்கு வந்திருந்தான்.


நீலகண்டனை மட்டும் பாண்டியன் கடத்தி இருந்தான் என்றால் வேதாசலம் கண்டிப்பாக அவனை காப்பாற்ற இங்கு வந்திருக்க மாட்டார். ஆனால் கயல் இந்த இடத்தில் இருக்கிறாள் என்றதும் அவனுக்கு மனம் கேட்கவில்லை. கண் முன்னே அந்த பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகப்போவதை பார்த்து சந்தோஷபடும் மனநிலையில் இப்போது அவர் இல்லை.


குணாவை சிக்க வைக்க கயலை தற்கொலை வரை அழைத்து சென்றதை நினைத்து இப்போது வரை குற்ற உணர்வில் தவித்து கொண்டிருக்கும் வேதாவுக்கு கயலை அந்த கயவர்கள் வசம் சிக்க வைக்க விருப்பமில்லை.


அவன் தந்தை செய்த தவறுக்கு பாவம் அவன் குழந்தை என்ன செய்ய முடியும்? என்ற எண்ணம் இப்போது தான் அவருக்கு வந்தது.


யசோதா விஷயத்தில் முழுமையாக குணா மற்றும் நீலகண்டனை மட்டும் குறை கூறிவிட முடியாது என்பதை அவர் என்றோ புரிந்து கொண்டார். தகப்பன் என்ற முறையில் தான் சரியாக இருந்து, மனைவியை அனுசரித்து குடும்பத்தை காத்து வழிநடத்தி இருந்தோம் என்றால் ஒருவேளை இன்று தன் மகளும் நலமுடன் வாழ்ந்து இருப்பாள் என்ற எண்ணம் இப்போதெல்லாம் அவரை தூங்கவிடாமல் செய்து கொண்டு இருந்தது. அந்த எண்ணம் ஒரு பக்கம் என்றால் தேவையில்லாமல் இவர்கள் விஷயத்தில் கயலை பலி கொடுத்து விட்டோமே என்ற எண்ணம் மறுபக்கம். என கொஞ்சம் கொஞ்சமாக வேதாவும் குற்ற உணர்வின் பிடியில் தப்பிக்க முடியாமல் தத்தளித்து கொண்டு தான் இருந்தார்.


அந்த குற்ற உணர்வை கொஞ்சமாவது போக்கி கொள்ளும் எண்ணத்தில் தான் தகவல் கிடைத்ததும் கயலை காப்பாற்ற வேண்டும் என்ற முடிவில் காவலர்களை அழைத்து கொண்டு இங்கு வந்து சேர்ந்தார்.


தன்னுடைய எதிரி, இப்போது வேறு ஒருவனுக்கும் எதிரி என்று தெரிந்த பின்பு சந்தோஷமடைந்தார் வேதாசலம்.


‘இனி இவர்களை அப்படியே விட்டுட்டு சென்று விடலாம்’ என்று கூட ஒருகணம் அவன் மனம் யோசித்தது. ஆனால் கயலை இப்படி ஒரு நிலையில் பார்த்த போது அவரது கண்களுக்கு இப்போது கயல் என்பவள் யசோதாவாக தான் தெரிந்தாள். அவரையும் அறியாமல் கண்களில் நீர் கோர்க்க ஆரம்பித்தது. முகத்தில் காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த கயலை நோக்கி ஓடினார். அவளை ஆதரவாக தொட கூட அவரது கைகள் நடுங்கியது.


பெரிய போராட்டத்திற்கு மத்தியில் பாண்டியன் கைது செய்யபட்டான். அடியாட்களும் மாட்டி கொண்டனர்.


நீலகண்டன் உட்பட அவர்கள் மூவரின் கை, கட்டுகளையும் அவிழ்த்து விட்டனர் காவலர்கள்.


விரைந்து தன் மகளிடம் வந்த சாருலதா கயலை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். அவர்களை நோக்கி நீலகண்டன் வரவும் அவரை பார்வையாளே தங்களில் இருந்து விலக்கி நிறுத்தினாள் லதா.


"கயல்"


"அவள் பேரை சொல்லாத" என்று பல்லிடுகில் வார்த்தையை கடித்து துப்பினாள் லதா..


"சாரு நான் எதுவும்" உடைந்து போய் அவரது வார்த்தைகள் வெளி வந்தது.


"நீ பண்ணியா! பண்ணலயான்னு எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். ஆனால் இனிமேல் என் பொண்ணுக்கு நீ வேண்டாம்.. எனக்கும் நீ வேண்டாம். நமக்குள்ள எல்லாம் முடிஞ்சது. நீ செத்தா கூட உன் முகத்தில முழிக்க நான் விரும்பல… ஆனால் இவனுங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன்" என்ற லதா அமைதியா தன் மகளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றாள். கயல் அவனை நிமிர்ந்து ஒரு பார்வை கூட பார்க்கவில்லை. அந்த புறக்கணிப்பு இன்னுமே அவரை அடித்து நொறுக்கியது.


பாண்டியனின் வழக்கு கோர்ட்டுக்கு வந்தது. சாருலதா தான் அந்த வழக்கை வாதாடினாள். கயலையும் முக்கிய சாட்சியாக முன் வைத்தே இந்த வழக்கை வாதாடி வெற்றி கண்டாள்.


கொலை முயற்சி, ஆள் கடத்தல். பாலியல் சீண்டல் என பல்வேறு வழக்குகளின் கீழ் பாண்டியனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அதில் அவன் கொண்ட கோவம், தீராத பகையாக மாறியது.


கயலை இந்த வழக்கில் உட்படுத்த வேண்டாம் என்று நீலகண்டன் சொல்ல, லதா ஒப்புக்கொள்ள வில்லை... பாண்டியனுக்கு தண்டனை வாங்கி கொடுத்த கையோடு தன் மகள் கயலை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு சென்று விட்டாள் சாருலதா.


சரியான நேரத்தில் கயலை காப்பாற்றியதால் வேதாவின் மீது நீலகண்டனுக்கு இருந்த நெருடல் சற்று விலகி இருந்தது. குணாவை கடத்தி தனக்கு பாதுகாப்பாக தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம் என்று நினைத்த வேதாவும் தற்காலிமாக அந்த முடிவை கைவிட்டு இருந்தான்.


இப்போது வேதாவை பற்றி சிந்திப்பதை காட்டிலும் தன் மகளை காயப்படுத்திய பாண்டியனை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி நீலகண்டனுக்கு மிக அதிகமாக இருந்தது. அதன் பொருட்டே அந்த ஆத்திரத்தின் மிகுதியில் பாண்டியனின் இரு மகன்களில் ஒருவனை ஆட்களை வைத்து அடித்து கொன்றவன் அதனை விபத்து போல சித்தரித்தான். பணத்தை கொண்டு போலீசை சரி கட்டினான்.


அதற்கு பிறகே நீலனுக்கு நிம்மதியாக உறக்கம் வந்தது. ஆனால் இந்த தகவல் கேள்விபட்டதிலிருந்து பாண்டியனின் தூக்கம் தொலைந்து போனது.


பாண்டியனின் மகனை கொன்றது மட்டுமல்லாமல் சிறைக்கே வந்து பாண்டியனை பார்த்தான் நீலகண்டன்.


"நான் தான் உன் மகனை கொன்னேன். இன்னொரு முறை என் குடும்பத்து மேல கை வைக்கணும்னு நீ நினைச்சா கூட உன் இன்னொரு பையனும் இருந்த இடம் தெரியாமல் போயிடுவான்" என்று மிரட்டி விட்டு வந்திருந்தான் நீலகண்டன். இதனை அறிந்து கொண்ட வேதா, நீலகண்டனிடன் சண்டையிட்டான்.


“நீ பண்ணிட்டு வந்த காரியத்தால உன் குழந்தைங்க தான் கஷ்டப்பட போகுது” என்று ஆத்திரமாக சொன்னான் வேதா.


“நான் உயிரோட இருக்கிறவரை என் குழந்தைகளுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்… அவன் உயிரோட இருந்தா தானே என் குழந்தைகளுக்கு நாளைக்கு பிரச்சனை வரும் ஜெயிலயே வச்சு அவனையும் கொன்னுடுறேன்”


“கொலை பண்ணுறது எல்லாம் உங்களுக்கு எவ்ளோ சாதாரணமா இருக்கு”


“அவன் உயிரோட இருக்கிறது எனக்கு பிரச்சனைங்கும்போது, அவனை கொல்லுறதுல என்ன தப்பு இருக்கு? நானும் என் குடும்பமும் நல்லா இருக்கணும் அதுக்கு யாரு செத்தாலும் எனக்கு கவலை இல்லை” என்று கண்கள் சிவக்க வெறிபிடித்து போய் நின்றான் நீலகண்டன். சந்தர்ப்பமோ சூழ்நிலையோ இவனை இவ்வாறு மாற்றவில்லை… இவனது அடிப்படை குணமே இதுதான் என்பதை இப்போதுதான் உணர்ந்து கொண்டான் வேதாசலம்.


எடுத்து சொல்லி இவர்களுக்கு புரிய வைக்க முடியாது… தவறிழைத்தவன் அதற்கான தண்டனையைப் பெற்றால் மட்டுமே திருந்துவான்.


இவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது குடும்பத்தை தேடுவதையே நிறுத்தி இருந்தார் வேதாச்சலம்… ஆனால் அதெல்லாம் தவறு என்று இப்போதுதான் உணர்ந்து கொண்டார். ஒவ்வொருவன் செய்யும் தவறுக்கும் காலமே அவனுக்கான தண்டனையை நிச்சயம் கொடுக்கும். அதை இப்போது புரிந்து கொண்டார். அதனால் அவர்களை விட்டு விலகி தன் குடும்பத்தை தேடி செல்ல நினைத்தார்.


ஆயினும் மனதில் ஒருவித தடுமாற்றம் ஒருவேளை பாண்டியனின் அடுத்த குறி ஆரியனாக இருக்குமோ என்று சந்தேகித்தார், அவனை காப்பாற்ற வேண்டும் என்றே நினைத்தார். அதனால் ஆரியனுக்கு பாதுகாப்பாக சிறையிலேயே ஒருவனை ஏற்பாடு செய்தான் வேதா.


பாண்டியனுக்கு இருந்த பழி வாங்கும் வெறி இப்போது பன்மடங்கு அதிகரித்தது. மீண்டும் தன் குடும்பத்தில் ஒரு உயிரை இழந்திருக்கிறான் அல்லவா? ஏற்கனவே நீலகண்டன் குடும்பம் இவனுக்கு செய்த பாவத்திற்கு அவர்களை ஆயிரம் துண்டுகளாக வெட்டிப் போட்டாலும் தவறாகாது. ஆனால் மேலும் மேலும் அவர்களது பாவக்கணக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது.


‘எப்படி இன்று தான் அனைத்தையும் இழந்து வாடுகிறேனோ, அதேபோல அவனும் தவிக்க வேண்டும்.. துடிக்க வேண்டும். அதுவும் சாதாரண மரணத்தை அவர்களுக்கு கொடுக்கக் கூடாது… உயிர் அவர்களது உடலை விட்டுப் பிரியும் வலியை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ரணப்பட்டு அவர்கள் சாக வேண்டும். அவனது வம்சமே அழிய வேண்டும்’ என்று ஆங்காரமாக மனதில் சொல்லிக் கொண்டவனின் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது


அதன் பிறகு சிறையில் இருந்தபடியே, ஆரியனை கொல்ல ஆட்களை ஏற்பாடு செய்து அவனிருக்கு சிறைக்கு அனுப்பி வைத்தான் பாண்டியன். அதில் ஆரியன் ஒருமுறை தப்பித்துக் கொண்டான். இரண்டாவது முறை அவனைக் கொல்ல முயற்சிக்கும்போது வேதாவின் ஆள் அவனுக்கு பக்க பலமாக இருந்து அவனைக் காத்துக் கொண்டான்.


சிறைக்குள் வைத்து தன் மகனை கொல்ல முயற்சிக்கிறான் பாண்டியன் என்பது அறிந்து கொண்ட நீலகண்டன், பாண்டியனின் இரண்டாவது மகனை தேட ஆரம்பித்தான்… அவனையும் கொன்று புதைக்கவே தேடினான். ஆனால் அவன் எங்கு இருக்கிறான் என்று எந்த தகவலும் இவனுக்கு கிடைக்கவில்லை.


தனது ஒரு மகனை இழந்த அடுத்த கனமே இன்னொரு மகனை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்திருந்தான் பாண்டியன்.


இதனை எல்லாம் அறிந்து கொண்டது வேதாவுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது… இவர்களது பிரச்சினையே வேண்டாம் இங்கிருந்து சென்றுவிடலாம் என்று புத்தி எடுத்துக் கூறினாலும் மனம் அதனை ஏற்க மறுத்தது…


“இவர்கள் செய்த பாவத்திற்கு இவர்களது வாரிசுகள் என்ன செய்ய முடியும்? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இவர்களுக்காக அவர்கள் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்ற ஒரே கேள்வி மட்டுமே இவரது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது… அந்தக் கேள்வி இவரை அங்கிருந்து நகர விடாமல் செய்தது.


அதன் பிறகு கடினமாக ஒரு முடிவை எடுத்துக் கொண்டு பாண்டியனை காண சிறைக்கு சென்றார் வேதாச்சலம்.


நடந்த உண்மை அனைத்தையும் அவனிடம் எடுத்துக் கூறினார்… குணா தான் அனைத்திற்கும் ஆரம்ப புள்ளி என்று கூறினார்… தங்கள் மகளின் வாழ்க்கை அழிய அவன் தான் காரணம் என்று கூறினான். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த பாண்டியன்…


“நீ வேணும்னா உன் பொண்ணு வாழ்க்கையை அழிச்சவனை மன்னிச்சு விடலாம்… ஆனா என்னால முடியாது… என் பொண்ணு செத்துட்டாள். பொண்ணு மட்டும் இல்ல என் மனைவி, என் மகன்னு என் குடும்பத்துல மூணு பேரை இழந்து இருக்கேன். என் வலி உனக்கு புரியாது”


“உயிருக்கு உயிர்தான் பதில்னு சொல்ற! ஆனால் அவனுடைய மகனோ, மகளோ மனைவியோ உன்னை எந்தவிதத்திலும் காயப்படுத்தலையே… அப்புறம் நீ ஏன் அவங்களை கொல்லணும்னு நினைக்கிற? நீலகண்டனையும் அவன் தம்பியையும் நீ என்ன வேணா பண்ணிக்கோ.. அவனுங்க சாக வேண்டியவனுங்க தான்… ஆனா குழந்தைகளை விட்டுடு”


“அவன் குழந்தைங்க எந்த தப்பும் பண்ணல, சரி தான் அப்படி இருக்கும் போது என் குழந்தைங்க என்ன தப்பு பண்ணுச்சு? என் பொண்டாட்டியும், பிள்ளைங்களும் வாய் பேச முடியாத அப்பாவிகள்… அவங்க என்னடா பாவம் பண்ணாங்க? அவங்க மேல காட்டப்படாத கருணையை, யார் மேலயும் காட்டுறதுக்கு நான் விரும்பல”



“அவனுங்க பண்ண அதே தப்பை நீயும் பண்ணி அவனுங்களுக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லைன்னு நிரூபிச்சிடாத” என்று கூறிய வேதாவை பார்த்து இதழ் வளைத்து சிரித்தான் பாண்டியன்.


“எனக்கும் அவனுக்கும் எந்த வித வித்தியாசமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. சரி தப்புங்கறதை தாண்டி, நீ சொல்ற விஷயத்தில் இருந்து எனக்கு ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது. இனிமேல் நான் ஜெயிலுக்குள்ள இருந்தபடியே அவனுங்களை கொல்லுறதுக்கோ இல்லை அவன் பையனை கொல்லுறதுக்கோ முயற்சி பண்ண மாட்டேன். அதனால எனக்கு என்ன நிம்மதி கிடைச்சுட போது? அவனுங்க ஒவ்வொருத்தனோட இறப்பும் என் கண்ண முன்னாடி நடக்கனும்… அதுவரை இந்த கோபத்தை எனக்குள்ளேயே வச்சு பாதுகாக்கிறேன். ஒரு நாள் நான் வெளியே வருவேன்… அன்னைக்கு அந்த குடும்பத்தையே நான் சிதைப்பேன். அதை கண்குளிர பார்த்த அப்புறம் தான் உயிர் போகும். அவனுங்க வம்சத்தை அழிக்கிறது என் குடும்பத்துக்கு நான் செலுத்துற அஞ்சலி” என்று கூறிய பாண்டியனை வெறித்துப் பார்த்தான் வேதாச்சலம்… மறு வார்த்தை பேச முடியவில்லை அவனது வலி பெரியது என்பதை இவனும் உணர்ந்து கொண்டான். இழந்தவனின் வலியை உணரக்கூடிய பக்குவத்தில் தானே இவனும் இருக்கிறான். அடுத்த வார்த்தை எதுவும் பேசாமல் மௌனமாக அவ்விடம் விட்டு வந்தான்.


***

வீட்டிற்கு வந்த வேதாசலத்திடம் பாண்டியனின் இரண்டாவது மகனின் இருப்பிடத்தை தான் கண்டு பிடித்ததாக சொன்னான் நீலகண்டன்.


“அவனையும் நான் கொல்ல போறேன்… என் கண்ணு முன்னாடியே என் பொண்ணை அவன் எவ்ளோ கஷ்டப்படுத்தினான்… போதாததுக்கு என் பையனையும் கொல்ல பார்த்து இருக்கான். இதுக்கு மேல அவனுக்குன்னு குடும்பமே இருக்க கூடாது… என்னை எதிர்த்தவன் எவனும் உயிரோட இருக்க கூடாது” என்று வெறிப்பிடித்தவன் போல நின்றான். அவனது கண்களில் அவ்வளவு ஆக்ரோஷம் வெளிப்பட்டது.

அதனை கண்டு வெறுப்பாக முகம் திரும்பிய வேதாவின் கண்களில் டேபிளின் மீதிருந்த ஒரு பார்ம் தென்பட்டது. அதனை எடுத்து பார்த்தான்.


“இது என்ன?” என்று நீலாவிடம் கேட்டான்.


“என் தம்பி குணாவை அழைச்சிட்டு வர போறேன். அதுக்கான பார்ம் தான் இது… இது கூட ஐடென்டிடிட்டி பேப்பர்ஸ் எல்லாம் சேர்த்து கொடுக்கணும் அதான் பார்மை வீட்டுக்கு எடுத்துட்டு வந்தேன்”


“குணாவை அழைச்சிட்டு வர போறியா?”


“ஆமா… கயல் விஷயத்தில வேற யாரோ தான் என் தம்பியை ட்ரேப் பண்ணி மாட்டி விட்டு இருக்காங்க… அவன் என்கூட இருக்குறது தான் இனி அவனுக்கும் பாதுகாப்பு ” என்று அவன் கூற வேதாவின் கண்கள் கோவத்தில் சிவந்தது.


“கயல் விஷயத்தை விடு ஆனால் பாண்டியன் பொண்ணோட விஷயத்தில உன் தம்பி பண்ணது தப்பு தானே?” என்று வேதா கேட்க சலிப்பாக தலையாட்டிய நீலகண்டன் “அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம்… இப்போ எனக்கு என் தம்பி என் கூட இருக்கணும் அவ்ளோதான். இனிமேல் என் வீட்டுல மூணாவது மனுஷங்களுக்கு இடமில்லை… இதுக்கு மேல உனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை… இனிமேல் நீ இங்க இருக்க வேண்டாம், நான் உன் பேர்ல எழுதி வச்ச ஷேர் எல்லாத்தையும் மறுபடியும் முறைப்படி என் பேர்ல எழுதி கொடுத்துட்டு இங்கிருந்து கிளம்பிடு… சும்மா ஒன்னும் போக வேண்டாம் நஷ்ட ஈடா எவ்வளவு பணம் வேணுமோ கேட்டு வாங்கிக்கோ” தன் குடும்பத்தை தவிர வேறு யாரும் வேண்டாம் என்ற மனநிலையில் இருந்தான்.


“நஷ்ட ஈடா எதுக்கு? என் பொண்ணு வாழ்க்கையை சீரழிச்சதுக்காடா?” என்று கேட்ட வேதா, அருகில் இருந்த நாற்காலியை எடுத்து கணநேரத்தில் நீலகண்டன் தலையில் அடித்து உடைத்தான். தலையில் ரத்தம் வடிய அரை மயக்கத்தில் வேதாவினை பார்த்தார் நீலகண்டன்.


“இதெல்லாம் எதுக்கு? அப்படியே விட்டுட்டு போயிடலாம்னு தான் நினைச்சேன் ஆனா நீங்க எல்லாம் மாற மாட்டீங்கடா? நீங்கள் இரத்தம் உறிஞ்சி சுகம் கண்ட ஆட்டைங்கள், உங்களால மாற முடியாது… நானே உங்களை மாத்திட்டுறேன்” என்ற வேதா தன்னறைக்குள் சென்று ஊசியில் ஒரு வித மருந்திணை நிரப்பிக் கொண்டு வெளியே வந்தான். அதனை நீலகண்டனுக்கும் செலுத்தினான். அவரால் அவனைத் தடுக்க முடியவில்லை… மிகவும் பலவீனமாக இருந்தார்.


“இந்த மருந்து உன் உடம்புக்குள்ள போன 10 நிமிஷத்துல அதோட வேலை ஆரம்பிச்சுடும்… உடம்பு முழுக்க மரத்துப்போயிடும்… பக்கவாதம் போல தான். ஆனால் குணப்படுத்தவே முடியாது… இப்படியே கிடந்தது கொஞ்ச கொஞ்சமா ரணபட்டு சாகு” என்றவன் அடுத்து நேராக சென்றது குணாவை பார்க்கத்தான்… ஆனால் அந்த மருத்துவமனைக்குள் இவனை அனுமதிக்கவில்லை… நீலகண்டன் தவிர அங்கு யாருக்கும் அனுமதி இல்லை. அதனை அறிந்து கொண்ட வேதா தகுந்த நேரம் பார்த்து ஆட்களை ஏற்பாடு செய்து இரவோடு இரவாக குணாவை அவ்விடத்திலிருந்து கடத்தியிருந்தான்.


இதற்கு இடையில் தான், ஆரியனின் தாத்தா இறந்தது, நீலகண்டனின் நிலை உணர்ந்து ஆரியன் சிறைக்கு செல்லும் வழியில் இருந்து தப்பித்தது. மலர்கணையாள் மற்றும் கந்தனை சந்தித்தது… கந்தனின் உதவியை ஆரியன் நாடியது, ஆரியனுக்காக வேதாச்சலத்தை பற்றிய உண்மை அறிய கந்தன் முற்பட்டது. அதன் விளைவாக கந்தன் வெளிமாநிலத்திற்கு வேதாவால் ஊர் கடத்தப்பட்டது என அணைத்து நிழந்து முடிந்து இருந்தது.


***


பாண்டியன் கைது செய்யப்பட்ட நிலையில் சங்கவியை காண மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து இருந்தான் மதிவாணன்.


அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சங்கவி அனுமதிக்கப்பட்டிருந்தாள்… “அவளுக்கு என்ன ஆச்சு?” என்று நிர்மலாவிடம் கேட்ட மதிக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.


எங்கு அவளை தான் இழந்து விடுவோமோ என்ற பயம். அவனது இதயத்தை பலவீனமாக்கியது.


“ஆசிரமத்தில பிள்ளைங்களுக்கு சமைச்சு முடிச்சு அடுப்பை அணைக்க போற நேரம், மேல் கூரை இடிஞ்சு விழுந்து இருக்கு… அதுல கவனம் இல்லாமல் தடுமாறினவள் எறிஞ்சிட்டு இருந்த அடுப்பு தணல் மேலவே விழுந்து இருக்கா… அவள் கெட்ட நேரம் முகம் முழுக்க வெந்து போயிடுச்சு… உடம்புல வேற எங்கேயும் தீ காயம் இல்லை… ஆனால் முகத்தை பார்க்க முடியல… கை, காலில் சின்ன சின்ன அடி தான். அவள் கூட இருந்த ரெண்டு பேருக்கு பெருசா எந்த காயமும் இல்லை” இதனை கேட்டவனுக்கு இதற்கு எப்படி எதிவினை புரிவது என்று தெரியவில்லை.


“அவள் உயிருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே” என்று தான் கேட்டான்.


“இல்லை” என்று நிர்மலா சொன்ன பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டான்.


சிகிச்சைக்கு பிறகு கண்விழித்தாள் சங்கவி… அவளை காண அறைக்குள் சென்றான் மதி… நிர்மலா அறைக்குள் செல்ல தயங்கினாள் வெளியவே நின்று கொண்டாள். இப்படியான நிலையில் சங்கவியை பார்க்க இவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அந்த இடமே அவளுக்கு அருவருக்க தக்கதாக தான் இருந்தது.


உள்ளே வந்த மதியின் முகத்தில் எந்த வித சலனமும் இல்லை ஒரு சிறு முக சுழிப்பும் இல்லை… “வலிக்குதா?” என்றபடி அவளது கரத்தை பற்றியவனின் கண்களை போலவே அவளது கண்களிலும் நீர் கோர்த்து நின்றது.
 
Status
Not open for further replies.
Top