ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்கவா பெண்ணே _கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 20

தோட்டா துளைத்து தன் கரத்தில் உயிர் நீத்த மாணிக்கவேலை செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தான் ஆரியன்.


" இது எப்படி ஆச்சு? யார் இவரை ஷூட் பண்ணுது?" என்று பக்கத்தில் இருந்த வேலையாட்களிடம் கத்தினான் ஆரியன்.


அவர்கள் அனைவரும் 'தெரியவில்லையே' என்று குழப்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவரின் முகத்தைப் பார்த்தபடி முழித்துக் கொண்டு நின்றனர்.


அப்போது கூட்டத்தை கலைத்துவிட்டு ஆரியனின் அருகில் வந்து நின்றான் கருணா "என்ன நடந்துச்சு யாரு இவரை இப்படி பண்ணது?" என்று அங்கு இருப்பவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராய்ந்து பார்த்தான்.


அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் அமைதியாக எழுந்து கொண்ட ஆரியனின் மனதில் "இது எப்படி நடந்து இருக்கும்?" என்ற கேள்வி மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.


அனைவரும் அமைதியாக நிற்கும் போது ஆரியனுக்கு எதிரில் நின்ற வேலையாள் ஒருவர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டாமா?" என்று கேட்டார், இருப்பினும் ஆரியனின் எதிர் பார்வையில் அப்படியே பின்னால் நகர்ந்து கொண்டார் அவர்.


சிறிது நேர யோசனைக்கு பிறகு "என்ன கருணா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவோமா?" என்று ஆரியன் கேட்க… 'உன் விருப்பம் என்பது போல' கருணா நின்றான். அப்போது "அதெல்லாம் வேண்டாம்" என்றபடி அங்கு வந்து நின்றான் ரமேஷ்.

ரமேஷ் மாணிக்கத்தின் ஒரே மகன்.

15 வயதில் கஞ்சா போதைக்கு அடிமையாகிபோய் வரும் பெண்களை தவறாக சீண்டினான், விவரம் அறிந்து 'இனி நீ என் மகன் இல்லை' என்று ஊரார் முன்பு அடித்து விரட்டினார் மாணிக்கம்...

பின்னர் தனது 19 வது வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தந்தையிடம் அழைத்து வந்தான். 'திருந்தி விட்டான்' என்று நம்பி பெற்ற பாவத்துக்கு கடமையாக பக்கத்தில் வாடகைக்கு வீடு பிடித்து அவர்களை தங்க வைத்தார்.

திருமணம் செய்து கொண்டவன் ஒருநாள் கூட ஒழுங்காக வேலைக்கு செல்ல வில்லை... அவனை நம்பி வந்த பெண்ணையும் உணவுக்காக தந்தையின் வீட்டு வாசலில் நிறுத்தினான்.

20 வது வயதில் ஒரு பிள்ளைக்கு தகப்பன் ஆனான்... தினமும் குடித்து விட்டு பிள்ளை பெற்ற பச்சை உடல் என்றும் பாராமல் மனைவியை அடித்து துன்புருத்தினான். அதனையும் பொறுத்துக் கொண்டு அவனுக்கும் சேர்ந்து சோறு போட வேலைக்கு சென்று உழைக்க ஆரம்பித்தாள் பெண்ணவள்.

வேலைக்கு சென்ற பெண்ணின் மீது சந்தேகபட்டு மிகவும் கொடுமை செய்ய ஆரம்பித்தான், அதனை தடுத்து கேள்வி கேட்ட மாணிக்கத்தையும், தன் மனைவியையுமே சேர்த்து வைத்து பேசினான். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் மாணிக்கம் தலையிடுவதே இல்லை...

உதவிக்கு யாரும் இல்லாமல் தனிமையில் உருகிய பெண்ணவள் ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கையை வெறுத்து விஷத்தை குடித்து உயிரை போக்கி கொள்ள முடிவு செய்தாள்.. நல்ல வேலை மாணிக்கம் அவளை காப்பாற்றி விட்டார்.

என்ன இருந்து என்ன? அந்த உயிருக்கு ஆயுள் குறைவு, ஒருநாள் குடி போதையில் கடமையாக உடல் ரீதியாக பெண்ணவளை வன்கொடுமை செய்தான் ராஜேஷ்.
பொறுத்து பொறுத்து பார்த்தவள் இதற்கு மேலும் இந்த வாழ்க்கை வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ஊர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இந்த வழக்கில் சிறைக்கு சென்றான் ரமேஷ்.
இப்படி பட்ட ஒருவனை மகன் என்று யார் தான் வெளியே சொல்லி கொள்வார்? எப்போதும் அவனை மூன்றாவது மனிதனாக தான் வெளியே அனைவரிடமும் காட்டிக் கொண்டார் மாணிக்கம்.


ரமேஷை ஆரியனுக்கு தெரியவில்லை. "ஆமா நீ யாரு?" என்று கேட்டான்.


"நான் இவர் பையன்" என்ற ரமேஷ் மிகுந்த போதையில் இருந்தான்.


"பையனா? ஏன் கருணா மாணிக்கத்துக்கு பையன் இருக்கா?"


"அதானே" என்பது போல கருணாகவும் குழப்பமாக நிற்க…


"சொந்த பையன் இல்லைங்க சொந்தக்கார பையன் தான்.. ரெண்டு மூணு முறை இந்த பையனை நம்ம மாணிக்கத்தோட நான் பார்த்திருக்கேன் இவன் கூடவே ஒரு குட்டி பையன் கூட இருப்பான். ஒருநாள் யாரு இவங்கன்னு மாணிக்கத்து கிட்ட கேட்டப்போ தூரத்து சொந்தம் மகன் முறைன்னு சொன்னாரு" என்று வேலையாள் ஒருவன் தான் அறிந்த உண்மையை ஆரியனிடம் கூறினார்.


"யோவ் கிழவா நான் ஒன்னும் இந்த ஆளோட சொந்தக்கார பையன் இல்ல, இவன் உங்க கிட்ட எல்லாம் அப்படி பொய் சொல்லி இருக்கான். நான்தான் இந்த கிழவனோட உண்மையான மகன்! ஒரே மகன். என்னை மகன்னு வெளியே சொன்னா இந்த ஆளோட கவுரவம் குறைஞ்சு போகும்னு இவ்ளோ நாளும் என்னை சொந்தக்கார பையன்னு எல்லார் கிட்டயும் சொல்லி வச்சிருக்கான். அதுக்காக இந்த ஆளுக்கு நான் பிள்ளை இல்லைன்னு ஆயிடுமா" என்றதும் ஆரியன் தலையைப் பிடித்துக் கொண்டான் 'என்னதான் நடக்குது இங்க? இத்தனை வருஷமா என் கூடவே இருந்து இருக்காரு ஆனால் அவர் மகன் இவன் தான்ங்குற உண்மையை ஏன் என்கிட்ட இருந்து மறைச்சாரு?' தன்னை சுற்றியும் தன்னை நெருங்கியும் இருந்த அனைத்துமே பொய் என்று அறிந்து கொண்ட ஆரியன் மேலும் உடைந்து போனான்.


யார் உண்மை? யார் பொய்? என்பதை பிரித்தறிய முடியாமல் தள்ளாடி நின்றான்.


யாரிடமும் பேச விரும்பாமல் "கருணா என்ன பண்ணணுமோ பார்த்து பண்ணிடு" என்று சொல்லிவிட்டு அமைதியாக அவ்விடத்தில் இருந்து நகர்ந்தான்.


அவன் அங்கிருந்து நகரவும் வேலையாட்களில் ஒருவன் அனைவரது கண்ணையும் மறைத்து போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டான்.


எப்போது ஆரியன் சிக்குவான் என்று காத்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனுக்கு இது சரியான தருணாமாகி போனது உடனே ஜீப்பை எடுத்துக் கொண்டு ஆரியனின் இல்லம் நோக்கி பயணமானார்.


கண் பார்த்த இடமெல்லாம் ஏமாற்றம் மற்றும் துரோகம் இதற்கு மேலும் எதற்காக இந்த வாழ்க்கை என்ற விரத்தி நிலைக்கு போனான் ஆரியன்.


வெகு நேரம் அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தவனின் சிந்தையை சட்டென சில கேள்விகள் துளைத்தது "நாடகத்தில் மாணிக்கமும் ஒருவர் எனில் அவரை கொன்றது யார்?" என்ற கேள்வியுடன் மௌனம் கலைத்து வீட்டின் சிசிடிவியில் ஏதாவது சிக்குகிறதா என்பதை அறிய தன் அறை நோக்கி சென்றான்.


அறையில் இப்போது வைஷ்ணவி இல்லை அதைக் கருத்தில் கொள்ளும் எண்ணத்தில் இல்லாத ஆரியன் சிசிடிவியின் பதிவுகளை ஆராய ஆரம்பித்தான்.


அதில் கொலை நடந்த சற்று நேரத்துக்கு முன்பு யாரிடமோ அலைபேசியில் பேசியபடியே வீட்டின் இடப்பக்கமாக இருந்த ஒரு மரத்தின் அருகே சென்று இருக்கிறார் மாணிக்கம்… அதன் பிறகு தான் குண்டு துளைக்கப்பட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு சத்தமிட்டு இருக்கிறார்… ஆனால் அந்த இடத்தில் அவரைத் தவிர வேறு யாரும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை… இந்த காட்சியை கண்டு வெகுவாக குழம்பிப் போனான் ஆரியன். சத்தம் கேட்டு அவ்விடத்தில் கூட்டம் கூடி இருக்க அதன் பிறகு நடந்த எந்த காட்சியையும் சிசி டிவியில் தெளிவாக பார்க்க முடியவில்லை.


வெளியே மாணிக்கவேலின் உடலை கேட்டு அவரது மகன் தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அப்போது போலீஸ் சைரன் சத்தம் ஆரியனின் செவியில் விழுந்தது.


காவலர்கள் வந்து அனைவரையும் விலக்கி விட்டு விசாரனையை தொடங்கினார்.


மாணிக்கம் விழுந்த இடத்தில் தடயம் என எதுவும் கிடைக்கவில்லை உடனே போஸ்ட் மாடம் செய்வதற்காக மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி அனுப்பி வைத்தனர்.


வீட்டிலிருந்த வேலையாட்கள் தொடக்கம் ஆரியன் வரை அனைவரிடமும் விசாரணை நடந்தது "வீட்டுல வேற யாரும் இருக்காங்களா?" என்று கேட்க, ஆரியன் ஏதோ ஒரு ஞாபகத்தில் "யாரும் இல்ல" என்று கூறி விட, அவன் அருகில் நின்ற வேலையாள் ஒருவன் "அந்த பொண்ணு" என்று வைஷ்ணவியை குறிப்பிட்டு சொன்னான்.


"யாரு?" என்று போலீஸ் அவரிடம் கேட்க… ஆரியன் பார்வையில் மிடறு விழுங்கி தடுமாறினார் அந்த வேலையாள்.


"அங்க என்ன பார்வை? யாருன்னு கேட்க்கறேன்ல சொல்லு" என்று இன்ஸ்பெக்டர் குரல் உயர்த்த…


"அது பல்லவி… எங்க முதலாளியோட பொண்டாட்டி" என்றதும் தலையை சரித்து பெருமூச்சு விட்டான் ஆரியன்.


"அவங்க எங்க?" என்று காவலர் கேட்க…


"ரூம்ல இருப்பா" என்று நிதானமாக பதில் கூறினான் ஆரியன்.


"போய் செக் பண்ணுங்க" என்றதும் காவலர்கள் அந்த அறையில் மட்டுமல்லாமல் வீடு முழுவதும் தேடினர். ஆனால் அங்கு வைஷ்ணவி இருப்பதற்கான ஒரு அறிகுறியும் இல்லை…


"சார் யாரும் இல்லை" என்று அவர்கள் சொன்னதும் மிதமாக அதிர்ந்தான் ஆரியன் 'எங்க போனாள்?' என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க…


"அப்போ கொலை பண்ணிட்டு கொலையாளி தப்பிச்சு போயாச்சு" என்றபடி காவலர் ஆரியனை சந்தேக கண்ணோடு பார்க்க… சிறிதும் அச்சமின்றி தைரியமாக அவரை எதிர்ப்பார்வை பார்த்தான் ஆரியன்.


"ஆதாரத்தோடு பேசுங்க" உள்ளே இருந்த சினத்தை மறைத்து கொண்டு சொன்னான்.


"ஆதாரம் தானே அது கண்டிப்பா கிடைக்கும்… ஏற்கனவே நீங்களும் ஒரு கொலை பண்ணவர் தானே? காலம் மாறி நடை உடை எல்லாம் மாறினா நடந்தது எல்லாம் மறைஞ்சிடும்னு அர்த்தம் இல்லையே… உங்களை மாதிரியே உங்க மனைவியும் ஏன் இந்த கொலையை பண்ணி இருக்க கூடாது… எனக்கும் உங்க வரலாறு தெரியும் மிஸ்டர் ஆரியன், நீங்க மறந்து இருக்கலாம் ஆனால் அன்னிக்கு உங்களை கைது பண்ண நான் அதை மறக்கல"


"ஓ அப்போ நீங்க எப்பவுமே சரியான குற்றவாளியை கைது பண்ண போறதே இல்லை"


"தண்டனை கிடைத்த பிறகும் பண்ண தப்பை ஒத்துக்க மாட்டேங்கிறீங்களே…"


"செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிச்ச நான் குற்றவாளின்னா தவறான தீர்ப்பு கொடுத்த உங்க சட்டம் தான் முதல் குற்றவாளி"


"அதே திமிரு" என்ற காவலர் ஆர்யனை எதுவும் செய்ய முடியவில்லையே என்ற எரிச்சலில் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க,


"ஆமா திமிரு தான், உங்களை விட கொஞ்சம் அதிகமாவே இருக்கு"


"இப்பவே என்னால இந்த விஷயத்தில் உன்னை கைது பண்ணிட்டு போக முடியும்"


"முடிஞ்சா பண்ணுங்க… நான் இப்போ அந்த 19 வயசு ஆரியன் இல்ல மிஸ்டர் கார்த்திகேயன், இப்போ நான் நினைச்சா ஒரே போன்ல இந்த கேஸையே இல்லாம என்னால பண்ண முடியும்… அது உங்களுக்கும் தெரியும், வந்ததுக்கு உருப்படியா உண்மை என்னன்னு கண்டுபிடிக்க பாருங்க.. அதை விட்டுட்டு கிடைச்சவரை லாபம்னு அப்பாவிகளை பலி கொடுத்து அதில குளிர் காய நினைக்காதீங்க"


'கண்டிப்பா ஒரு நாள் நீ என் கையில சிக்குவடா அப்போ உன்னை பார்த்துகிறேன்' என்று மனதில் உரைத்துக் கொண்டவர் ஆர்யனை முறைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.


*****


அந்த இரவு பொழுதில் மலர் கணையாளின் வீட்டை ஜன்னல் வழியே நோட்டமிட்டு கொண்டிருந்தான் மதிவாணன்.


உள்ளே நடப்பதை உன்னிப்பாக கவனித்தவன் வெளியே நடந்ததை கவனிக்கவில்லை… திடீரென அவனது காலில் ஏதோ ஒன்று சுருக்கென கொட்டியது போல இருந்தது, அந்த வலியில் தன்னை மறந்து "ஆஅ" என்று கத்தினான் மதி.


வெளியே அவனது சத்தம் கேட்டதும் விறுவிறுவென மலர் வெளியே வரவும், மதி அவளது பார்வையில் இருந்து மறைந்து பதுங்கிக் கொண்டான்.


ஆனால் விதி அவனை காட்டிக் கொடுத்தது, அவன் பதுங்கி இருந்த இடத்தில் தோள் மீது செடி உரசியதும், சட்டென பதட்டமானவன் தன்னிலை மறந்து அவ்விடம் விட்டு நகர்ந்தான், அந்த சலசலப்பு கேட்டு அவன் இருப்பிடத்தை கண்டு கொண்டாள் மலர்.


"யாரு… முதலில் வெளியே வா" என்றாள்.


அவனோ வியர்க்க விறுவிறுக்க ஒரு ஓரத்தில் இன்னும் நன்றாக பதுங்கிக் கொண்டான். 'கத்தியது யார்?' என்று அறியும் நோக்கில் அருகில் இருந்த தீ பந்தத்தை கொழுத்தியவள் தன்னுடைய வீட்டின் பின் பக்கம் சென்று தேட செல்லவும்…


அந்நேரம் வேட்டை துப்பாக்கியுடன் அவள் வீட்டை நோக்கி வந்தான் மதிவாணனை காத்த அந்த சிறுவன், "அக்கா" என்று அவன் மலரை அழைக்க, சட்டென அவன் பக்கம் திரும்பினாள்.


இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு "தப்பித்தோம் பிழைத்தோம்" என்று பெரு மூச்சு விட்டு சத்தமில்லாமல் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தான் மதிவாணான்.


"நீ இங்க என்ன பண்ணுற? நீ தான் அப்போ கத்தினியா?" என்று அந்த சிறுவனிடம் கேட்டாள் மலர்.


"இல்லையே அக்கா, நான் வேட்டைக்கு போகலாம்னு எழுந்த நேரம் என் வீட்டுல இருந்த அந்த அண்ணாவை காணோம் அதான் எங்க போனாருன்னு தேடி வந்தேன்… இங்க பார்த்தா நீங்க வெளியே நின்னுட்டு இருந்தீங்க அதான் என்னன்னு கேட்க வந்தேன்"


"அவரை காணோமா?" மலருக்கு சிறிது சந்தேகம் வந்தது… உடனே "சரி முதலில் வா அவரை தேடி பார்க்கலாம்" என்றவள் அச்சிறுவனுடன் சேர்ந்து அவனது குடிசை நோக்கி சென்று தேடவும், அந்நேரம் எதுவும் அறியாத சிறு பாலகன் போல அச்சிறுவனுடைய குடிசையின் பின் பக்கம் இருந்து வெளியே வந்தான் மதிவாணன்.


"அண்ணா எங்க போயிருந்தீங்க? நான் முழிச்சு பார்க்கும் போது உங்களை காணலயே" என்று மதியை பார்த்து கேட்டான் அச்சிறுவன்.


"இங்க தான் இருந்தேன்… உன்னை காணோம்னு தான் நான் இப்போ வெளியே வந்தேன்" என்று அப்படியே மாத்தி பேசினான் மதிவாணன்.


அவனது கூற்றை சந்தேகத்துடன் பார்த்தபடி மலர் நிற்கவும்… "எனக்கு தூக்கம் வருது" என்றபடி அவளை பதட்டமாக பார்த்து விட்டு தயங்கியபடியே மீண்டும் அச்சிறுவனின் குடிசைக்குள் நுழைந்து கொண்டான் மதிவாணன்.


உள்ளே வந்து உறக்கத்தை தொடர்ந்த மதிவாணனின் கண்ணில் ஒரு கணம் தூக்கமில்லை… "அவள் நம்மளை பார்த்து இருப்பளா? இல்லை இருக்காது, அப்புறம் ஏன் அப்படி சந்தேகமா பார்த்தா? அவள் குடிசையில் இருந்தது அவர் தானே? அவர் எப்படி இங்க வந்தாரு? யார் அவரை இங்க அழைச்சிட்டு வந்து இருப்பா? இவள் கிட்ட எப்படி அவர் மாட்டி இருப்பாரு, அவருக்கு என்ன பிரச்சனை? உடல் அசைவு இல்லாமல் இருந்த மாதிரி இருந்ததே, ஒருவேளை ட்ரீட்மெண்ட்காக இங்க இருக்காரோ? அப்படி இருந்தா ஏன் இப்படி ஒரு இடத்தில யாரும் இல்லாமல் அவர் இருக்கணும்? என்னமோ தப்பா இருக்கு" என்று மலர்கணையாளின் குடிசையில் வைத்துப் பார்த்த இந்திராவின் கணவர் வேதாச்சலத்தை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.

"எது எப்படியோ இருக்கட்டும்… இவருக்காக தானே இத்தனை நாடகம்! இவர் இங்கு தான் இருக்கிறார் என்று அவனுக்கு மட்டும் தெரியப்படுத்திட்டோம்னா எல்லாமே சரியாயிடும்.. அப்புறம் எனக்கும் என் வைஷ்ணவிக்கும் இடையில யாருமே வர மாட்டாங்க நானும் என் வைஷ்ணவியும் மட்டும்தான் இருப்போம். இனி எந்த பிரச்சனையும் இல்லை எல்லாம் சரியாகிடும்" என்று எண்ணி ஒரு மார்க்கமாக சிரித்தவனின் கண்கள் மகிழ்ச்சியில் மின்னியது.

உரிமை கொண்டவர்களின் தேடலில் காணாமல் போன வைஷ்ணவியோ மீண்டும் ஆரம்ப இடத்திலேயே சிறைபட்டு கிடந்தாள்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 21

விஸ்வநாதனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்தான் ஜீவா.

"ஜீவா வந்துட்டியா?" என்ற மீரா அவனது கைவளைவில் சோர்வாக இருந்த விஸ்வநாதனை பார்த்து "என்னடா ஆச்சு இவருக்கு?" என்று கேட்டார்.

"மைல்டு அட்டாக்... பயப்பட ஒன்னுமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு"

"ஆர்ட் அட்டாக்கா? எப்படி திடீர்னு எதனால இப்படி ஆச்சு" என்று கண்ணீருடன் விஸ்வநாதனை பார்த்தார்.

"எனக்கு ஒன்னும் இல்ல மீரா"

"பொய் சொல்லாதீங்க உங்க முகமே சரியில்ல, எல்லாம் இவனால தான்" என்று ஜீவாவை குற்றம் சாட்டினார்.

"என்னலையா?" திகைத்தான் ஜீவா..

"ஆமா உன்னால தான்... அவர் இந்த அளவுக்கு கஷ்டபட நீ தான் காரணம்... கடைசியா உன்ன பார்க்குறதுக்காக தான் அங்க கிளம்பி வந்தாரு, கண்டிப்பா நீ இவர்கிட்ட ஏதாவது பேசி இருப்ப, அதனால் தான் இவருக்கு இப்படி எல்லாம் ஆகிடுச்சு, நீ எங்களோட இருந்து, நல்லபடியா இவர் சொல்றதை கேட்டிருந்தா இன்னிக்கு இவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது"

"அப்போ அப்பாவுக்கு இப்படியானதுக்கு நான்தான் காரணம்னு சொல்லுறீங்களா? என் விருப்பம் என்னன்னு தெரிஞ்சும் நீங்க கூட ஏம்மா இப்படி பேசுறீங்க? என்ன பிரச்சினைனாலும் ஏன் எல்லாரும் என்னை ப்லேம் பண்ணுறீங்க?"

"மீரா ப்ளீஸ்... வந்ததும் வராததுமா எதுக்கு அவன் கிட்ட ஆர்க்கியூ பண்ணிட்டு இருக்க?" விஸ்வநாதன் இடைவர, மீரா அமைதியானார்.

அதன் பிறகு அவர் அவரவர் அவர்களது வேலைகளை பார்க்க சென்றனர்.

ஜீவாவோ தனது அறையில் அவனது உடமைகளை எல்லாம் எடுத்து பெட்டியில் அடுக்கி வைத்து கொண்டிருந்தான். அதனை பார்த்த அவனின் தங்கை "என்ன விஷயம்?" என்று கேட்க, தான் வெளிநாடு செல்ல இருப்பதை அவளிடம் கூறினான் ஜீவா, அதனை கேட்டதும் நேராக தன் தாய் தந்தையிடம் வந்தாள் அவனின் தங்கை.

"அம்மா அண்ணன் லண்டன் போறேன்னு சொல்லுறான்"

"எதுக்காக? ஏன்?" பதறிவிட்டார் மீரா.

"இது எனக்கு முன்னாடியே தெரியும் மீரா, அது தெரிஞ்சு தான் அவன்கிட்ட பேச போனேன்" என்றார் விஸ்வநாதன்.

"இவன் என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்? முதலில் உங்களை சொல்லணும் அவனுக்கு பிடிக்காத கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணாதீங்கன்னு அவ்ளோ சொன்னேன் கேட்டீங்களா நீங்கள்? காலையில் நானும் வேற உங்களுக்கு இப்படி ஆகிடுச்சுன்னு கவலைல அவனை ரொம்ப பேசிட்டேன்"

"எனக்கு ஆர்ட் அட்டாக் வந்ததுக்கு காரணமே ஜீவா லவ் பண்ண அந்த பொண்ணு யசோதா தான்" என்றதும் மொத்த குடும்பமும் திகைத்தது.

"என்னபா சொல்லுற?"

"ஆமா அம்மா அந்த பொண்ணுக்கு நம்ம ஜீவாவை கல்யாணம் பண்ண சுத்தமா விருப்பம் இல்லை. இருந்தும் நம்ம பையன் வாழ்க்கைக்காக கடைசியா அந்த பொண்ணு கிட்ட போயி பேசி பார்த்தேன், ஆனால் அந்த பொண்ணோ, கொஞ்சமும் மரியாதை இல்லாமல் பேசிட்டா" என்று யசோதாவின் மீது பழி சொல்லி மொத்த குடும்பத்தையும் தன் பக்கம் கொண்டு வர முயற்சி செய்தார்.

"என்னங்க சொல்லுறீங்க?"

"ஆமா மீரா கொஞ்சமும் மரியாதை இல்லாமல் பேசுறா, இப்படிபட்ட ஒரு பொண்ணு நம்ம பையனுக்கு வேண்டாம்... கங்கா தான் அவனுக்கும் நம்ம குடும்பத்துக்கும் பொருத்தமா இருப்பாள், உடனே கங்காவுக்கும் நம்ம ஜீவாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்போ தான் நம்ம பையன் நம்ம கூட இருப்பான். என் விருப்பத்தை சொல்லிட்டேன் இனி நீ தான் முடிவு எடுக்கணும். நம்ம ஜீவா நமக்கு வேணும், அவன் நம்ம கூடவே இருக்கணும்னா நல்ல முடிவா எடுங்க" என்றார்.

மீராவும் வெகு நேரம் யோசித்தார், கங்கா வேறு நிச்சயம் முடிந்ததில் இருந்து 'அத்தை அத்தை' என்று தினமும் இவரது அலைபேசிக்கு அழைத்து பாசமழை பொழிய... மீரா அப்போதே நனைந்து விட்டார்.

"தனக்கு கங்கா மருமகளாக வந்தாள் சரியாக இருக்கும்" என்று யோசித்தவரின் கருத்தில் இருந்ததால் மகனின் விருப்பம் மறைந்தது.

உடனே மகனிடம் வந்து "எதுக்காக எங்களை விட்டு போகணும்னு நினைக்கிற? அப்பா உனக்கு நல்லது தானே பண்ணுறாரு அவர் சொல்லுறதை கேளுடா, எங்க எல்லாருக்கும் கங்காவை பிடிச்சு இருக்கு அவள் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா" என்றார் மீரா.

"உங்களையும் பேசியே மாத்திட்டாரா? ரொம்ப நல்லது, நான் இங்கேயிருந்து கிளம்புறேன்"

"கொஞ்சம் நிலைமையை புரிஞ்சு பேசு ஜீவா, கங்காவுக்கும் உனக்கு நிச்சயம் ஆகிடுச்சு, அவங்க கிட்ட நான் என்ன பதில் சொல்லுறது"

"என்கிட்ட கேட்டா பொண்ணு பார்த்துட்டு வந்தீங்க? என்கிட்ட கேட்டா நிச்சயம் பண்ணீங்க? எல்லாத்தையும் உங்க விருப்பத்துக்கு பண்ணிட்டு, கடைசில என்ன பண்ணுறதுன்னு என்கிட்ட வந்து கேட்டா நான் என்ன பண்ண முடியும்? அப்புறம் உங்க எல்லார் கிட்டயும் ஒரு விஷயத்தை சொல்லிக்கிறேன், உங்க விருப்பப்படி உங்களுக்கு பிடித்த மாதிரி நடந்துகிறதுக்கு நான் ஒன்னும் நீங்க ப்ரோக்ராம் பண்ணி வச்ச ரோபோர்ட் கிடையாது. சாதாரண மனுஷன்.. எனக்கும் தனிப்பட்ட உணர்வுகள் இருக்கு. நீங்க என்ன பெத்தவங்க தான் அதற்காக இது எனக்கு பிடிக்கும் பிடிக்காதுன்னு சொல்ற உரிமை கூடவா எனக்கு இல்லை"

"இதெல்லாம் நீ அந்த யசோதவுக்காக பண்ணுறீயா ஜீவா?"

"கண்டிப்பா இல்ல அம்மா, இதை நான் என் வாழ்க்கைக்காக பண்ணுறேன். என் காதலுக்காக பண்ணுறேன். யசோதாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு சொல்லுங்க ஆனால் அவள் இடத்துல இன்னொருத்திய வச்சு வாழுன்னு வற்புறுத்தாதீங்க... நிமிஷத்துக்கு ஒருக்கா மனசை மாத்தி, கடமைக்கு வாழ்த்து சாக நான் விரும்பலை..."

"அவளுக்காக நீ உன் வாழ்க்கையை இழக்க போற ஜீவா... ஆனால் அவள் உன்னை விட பெட்டரா இன்னொருத்தன் கிடைச்சா கண்டிப்பா அவன் பின்னாடி போயிடுவா" சினத்தில் பேசினார் விஸ்வநாதன்.

"என் யசோதாவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? ஏதோ ஒரு காரணத்தால அவள் என்னை விட்டு விலகி இருக்காள், அதுக்காக அவள் என்னை விட்டுட்டு போயிடுவான்னு அர்த்தம் இல்லை... கங்கா வீட்டுல நானே போயி பேசி இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன் நீங்க எதையும் யோசிச்சு கவலைபட வேண்டாம்... நான் கிளம்புறேன்"

"அண்ணா நீ எங்கேயும் போக வேண்டாம்... உன் விருப்பம் எனக்கு புரியுது, யார் என்ன சொன்னாலும் சரி நான் உன் கூட இருக்கேன் தயவுசெய்து என்னை விட்டு போயிடாத அண்ணா" என்ற அவனது தங்கையின் தலையை வருடி கொடுத்த ஜீவா "இல்லடா அண்ணாவுக்கு மனசு ரொம்ப பாரமா இருக்கு, கொஞ்சம் நாள் தனியா இருந்தா எல்லாம் சரியாகிடும்னு தோணுது.. நான் உங்களை விட்டுட்டு போகல, கொஞ்ச நாள் விலகி இருக்கலாமேன்னு போறேன், கண்டிப்பா சீக்கிரமே திரும்பி வந்திடுவேன்" என்றவன் தன் பயணத்தை தொடர முனைந்தான்.

கங்காவின் வீட்டுக்கு வத்தான் ஜீவா...

"வாங்க தம்பி உட்காருங்க" என்று கங்காவின் தாய் அவனை வரவேற்க, மரியாதை நிமித்தமாக மென்மையாக புன்னகைத்தபடி இருக்கையில் அமர்ந்தான்.

"தம்பி டீயா? காபியா?"

"அதெல்லாம் வேண்டாம் ம்மா, கங்கா கிட்ட கொஞ்சம் பேசணும்"

"இருங்க வர சொல்லுறேன்... கங்கா"

"கூப்பிட வேண்டாம், எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க நானே போய் பார்க்குறேன்"

"மாப்பிள்ளையை கங்காவோட ரூமுக்கு அழைச்சிட்டு போ" என்று வேலையாளை ஏவினார்.

வேலையாளும் ஜீவாவை அழைத்து சென்று கங்காவின் அறையை காட்டினார்.

கதவை தட்டி அனுமதி கேட்டு விட்டு கங்காவின் அறைக்குள் நுழைந்தான் ஜீவா.

"வாங்க ஜீவா, திடீரென வந்து இருக்கீங்க என்ன விஷயம்?"

"நேரடியாவே சொல்லிடுறேன், அன்னைக்கு சொன்னது தான்? எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லை..."

"தெரியும் நீங்க வேற ஒரு பொண்ணை விரும்புறீங்க, இதெல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன், அந்த பொண்ணு யசோதான்னு கூட எனக்கு தெரியும், நமக்கு நிச்சயம் நடந்த அன்னைக்கு நீங்க பேசிட்டு போன அப்புறம் யசோதா வந்து என்கிட்ட பேசுனாங்க , நீங்க ரெண்டு பேரும் விரும்பினது, இப்போ பிரிஞ்சு இருக்கிறது எல்லாத்தையும் சொன்னாங்க"

'நானும் ஜீவாவும் காதலிச்சோம், அதனால நீங்க அவரை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நான் சொல்ல வரல, அது உங்க தனிபட்ட விருப்பம்.. ஆனால் உண்மை இது தான்னு உங்க கிட்ட சொல்லணும்னு தோணிச்சு அதான் வந்தேன்... நாளைக்கு வேற யாரும் சொல்லி இந்த உண்மை உங்களுக்கு தெரிய வந்தா ரொம்ப தப்பாகிடும் அதான்... நான் அவரை காதலிச்சேன், ஆனால் இப்போ அந்த காதல் இல்லை. இனி முடிவு உங்க கையில தான் இருக்கு, இது உங்க வாழ்க்கை யோசிச்சு முடிவு பண்ணுங்க' அப்படின்னு யசோதா சொன்னாங்க, நானும் யோசிச்சேன். ஏன் என்னன்னு காரணம் தெரியல முதல் பார்வையிலே உங்களை எனக்கு பிடிச்சிடுச்சு, அதான் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன்... உங்க காதலை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை"

"ஆனால் எனக்கு கவலை இருக்கு கங்கா, அவள் மேல இருக்க காதலை என்னால உனக்கு எந்த காலத்துலயும் கொடுக்க முடியாது. இல்லாத காதலை என்கிட்ட தேடுறதுலயே உன் காலம் முடிஞ்சிடும், அவள் மேல இருக்குற காதலை மறைக்கிறதுலயே என் காலம் போயிடும்... காதலே இல்லாமா கடமைக்கு ஒரு வாழ்க்கை தான் உனக்கு வேணுமா? கொஞ்சம் ப்ராக்டிகளா யோசிச்சு பாரு நான் சொல்ல வருவது உனக்கு புரியும்"

சிறிது நேரம் யோசித்த கங்கா "எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..." என்று கேட்டாள்.

"உன் முடிவு எதுவாவேணாலும் இருக்கலாம், ஆனால் இனி நான் இங்கே இருக்க போறது இல்லை. இன்னிக்கு நான் லண்டன் கிளம்புறேன். கல்யாணம் வேண்டாம்னு உன்கிட்ட சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்" என்றவன் அவளது முடிவை எதிர்பார்க்காமல் தன் முடிவை மட்டும் சொல்லி சென்றான்.

வெகு நேரம் தனியாக அமர்ந்து யோசித்த கங்கா தெளிவாக ஒரு முடிவெடுத்து ஜீவாவின் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் "மேகம் விலகியது இனி சூரிய கதிர்கள் பூமியில் பரவட்டும்" என்று அனுப்பி இருந்தாள்.

அதனை படித்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை? "என்ன?" என்று பதில் மெசேஜ் அனுப்பினான்.

"கல்யாணம் வேண்டாம்னு அப்பா கிட்ட சொல்லிட்டேன், அவரும் புரிஞ்சிக்கிட்டாரு, ஹேப்பி ஜர்னி" இதனை படித்ததும் அவன் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி.

"தேங்க்ஸ்" என்று கூறி அவர்கள் உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்தான்.

விமான நிலையத்தில் ஜீவாவை வழியனுப்பி வைக்க அவனது நண்பனை தவிர வேறு யாரும் வரவில்லை... பிறர் யாரையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை, ஆனால் அவன் கண் மறைத்து ஒரு ஜோடி கண்கள் தூரத்தில் நின்றது. அதனை கடைசிவரை கவனிக்காத ஜீவா, விமானத்தின் உள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவனது விமானமும் பயணமாகியது... அதனை நிம்மதியோடு பார்த்து விட்டு திரும்பினாள் யசோதா.

"ஏன் இப்படி பண்ண யசோதா?"என்று ஜீவாவின் நண்பன் யசோதாவின் அருகில் வந்து நின்று கேட்க...

"இப்போ அவனுக்கு இந்த தனிமை தேவை... கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்... கண்டிப்பா ஒரு நாள் என்னை தேடி வருவான்"

"உன் மனசுல இருக்க ஆசையை நீயா வெளிப்படுத்தாமல் அவனுக்கு எப்படி தெரியும்? எப்படி திரும்ப வருவான்னு நினைக்கிற?"

"எனக்கு தெரியும் அவன் என் ஜீவா, எனக்காக கண்டிப்பா வருவான். நான் சொல்லாமலே என் மனசு அவனுக்கு புரியும், நான் யாருன்னும் அவனுக்கு தெரியும்" என்றவள் அவனது வருகைக்கு காத்திருக்க ஆரம்பித்தாள்.

 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 22

'நாளை யார் கண்ணிலும் படாமல் இங்கிருந்து எப்படியாவது வழி கண்டு பிடித்து சென்று விட வேண்டும் என்று நினைத்தபடி கண் அயர்ந்தான் மதிவாணன்.

அடித்தநாள் காலையில் எப்போதும் போல மலரின் வீட்டில் இருந்து மதிவாணனுக்கு உணவு வந்தது.

உணவினை கொண்டு வந்து அவர்கள் இடத்தில் வைத்தவள், ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக தன் கடமை முடிந்தது என்பது போல நகர்ந்து சென்றாள்.

மலருக்கு நன்றி கூறிவிட்டு அவள் கொண்டு வந்து கொடுத்த உணவை உண்ண ஆரம்பித்தான் அச்சிறுவன்.

"என்ன அண்ணா பார்க்குறீங்க? சாப்பிடுங்க" என்றதும் மதியும் உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தான்.

"இந்த இடத்தில் இருந்து வெளியே போகணும்னா எப்படி போகணும்?" என்று பேச்சு வாக்கில் அச்சிறுவனிடம் மதி கேட்டான்.

"உங்க உடம்பு இன்னும் முழுசா குணமாகலையே அதுக்குள்ள போகணும்னு சொல்லுறீங்க?"

"என்னைக்கு இருந்தாலும் போய் தானே ஆகணும், அதான் சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்… சுக்தி ஒரே வயல்வெளியா இருக்கு உங்களுக்கு ஏதாவது தேவைன்னா எப்படி இங்கேயிருந்து வெளியே போவீங்க? வழி எங்க இருக்கு?"


"அதெல்லாம் வழி இருக்கு அண்ணா… அதோ அந்த மலை தெரியுதுல்ல அது வழியா ஏறி இறங்கினதும், அப்படியே காட்டுப் பகுதியில் ஒரு மைல் தூரம் போனால் குறுக்கே ஒரு ஆறு பாயும், அந்த ஆத்தை கடந்த பிறகு இன்னும் ஒரு நாலு மைல் தூரம் நடந்து போனா போதும் ஊருக்குள்ள போயிடலாம்... அந்த காட்டுக்குள்ள தான் நீங்க குண்டடிபட்டு கிடந்தீங்க அங்க இருந்து இங்க வரைக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு ஆற்றைக்கடக்க வச்சு உங்களை அழைச்சிட்டு வந்தோம்.. நல்ல வேலையா மலர் அக்கா உதவி பண்ணாங்க இல்லனா ரொம்ப கஷ்டம்... " அச்சிறுவன் சாதாரணமாக அதனை சொல்ல இதனை கேட்டுக் கொண்டிருந்த மதிவாணனுக்கு கண் விழி பிதுங்கி வெளியே வருவது போல இருந்தது.

" விளையாடாத உண்மைய சொல்லு... அந்த ஆத்தை கடந்து குண்டடி பட்டு கிடந்த என்னை எப்படி இங்க அழைச்சிட்டு வந்து இருக்க முடியும்?"


"நான் பொய் சொல்லல அண்ணா, நாங்க எப்போவும் அதே வழியில தான் போயிட்டு வருவோம்.. உங்களை இங்க அழைச்சிட்டு வரும் போது ஆத்துல இழுப்பு கொஞ்சம் கம்மியா இருந்தது.. அதனால தான் உங்களை கூப்பிட்டு வர முடிந்தது. இந்த மாதிரி விஷயம் எல்லாம் உங்களுக்கு வேணும்னா முடியாத காரியமா இருக்கலாம் ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை... இது எல்லாம் எங்களுக்கு ரொம்ப சாதாரணம், அதுவும் எந்த பாதையில் கடந்து போன ஆழம் குறைவா இருக்கும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்... நாங்க கடந்து வர பாதையில் ஆழம் முட்டிக்கு தான் இருக்கும்"


"அப்போ இங்க பஸ் எதுவும் வராதா?"


"வருமே ஆனால் அதோட தேவை எங்களுக்கு இருந்தது இல்லை"


"சரி பஸ் எங்க வரும்?"


"இதோ இந்த வயல் பக்கமா ஒரு மூணு மைல் நடந்து போனா ஒரு மண் ரோடு வரும் சரியா சூரியன் மறையும் பொழுது பஸ் அந்த வழியா கடந்து போகும்"


"பஸ் ஸ்டாப் இல்லையா?"


"இங்க இருக்குறது மொத்தமும் பதினோரு பேர் தான்… எங்களுக்கு அந்த வண்டியோட உதவி தேவை பட்டது இல்லை" என்று கூறி உண்டு முடித்தவன் அங்கிருந்து செல்ல பார்க்க..


"சூரியன் மறையுற நேரம்னா சரியா எத்தனை மணிக்கு பஸ் வரும்"


"இன்னிக்கு சூரியன் எப்போ மறையுதுன்னு பார்த்து கணக்கு வச்சிக்கோங்க" என்று கூறி சிரித்து விட்டு அங்கிருந்து சென்றான் அச்சிறுவன்.


சூரியன் மறையும் நேரத்திற்காக காத்திருக்காமல் மதியம் மூன்று மணி போலவே யார் கண்ணிலும் படாமல் அச்சிறுவன் சொன்ன வழியில் பயணிக்க ஆரம்பித்தான் மதிவாணன்.


சிறுவன் சொன்ன மணல் ரோட்டை நெருங்கி இருந்தான் மதிவாணன் அந்தோ பரிதாபம் அவன் கண் முன்னாலே பேருந்து அவ்வழியை கடந்து சென்றது "ஸ்டாப்… ஸ்டாப்" என்று கத்தி கொண்டு ஓடியவன் கீழே விழுந்து வாரியது தான் மிச்சமாகி போனது.


"ச்சே மிஸ் பண்ணிட்டோமே" என்று நினைத்தவன் அடுத்த நாள் சரியாக நேரத்தை குறித்து வைத்து விட்டு முன்பாகவே அவ்விடத்தில் வந்து நின்றான்… இம்முறை இருள் சூழ்ந்த பிறகும் பேருந்து அவ்விடம் வரவில்லை… தன் நிலையை எண்ணி நொந்து கொண்டவன் அங்கிருந்து திரும்பி சிறிது தூரம் நடந்து வரவும், பின்னால் பேருந்தின் சத்தம் அதனை கேட்டு கொதித்து விட்டான் மதிவாணன் கோவத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து சாலையில் விசிறி அடித்தான்… இம்முறையும் பேருந்தை விட்டு விட்டான்.


அவனது செயலை எல்லாம் தூரத்தில் நின்று பார்த்து கொண்டிருந்தது ஒரு ஜோடி கண்கள்.


இதற்கு மேலும் இந்த பேருந்தை நம்பி உபயோகம் இல்லை என்று முடிவு செய்தான் மதிவாணன். உடல் நன்றாகவே இப்போது தேறி இருந்தது. அதனால் அச்சிறுவன் சொன்ன மலை வழியில் செல்ல முயற்சித்தான்.


எப்படியோ மலையை கடந்து ஆற்றையும் அடைத்து விட்டான். சரியாக அவர்கள் கடந்து செல்லும் ஆழம் குறைவான பகுதியையும் இவனால் கண்டறிய முடியவில்லை... அதனால் ஒரு அளவுக்கு மட்டுமே நீச்சல் தெரிந்த மதியினால் நதியின் பாய்ச்சலுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

ஊன்றுகோலும் அவனது கரம் விட்டு நழுவி இருக்க, நடு ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தவனை காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்தாள் மலர்கணையாள்.

அவனது செயலில் சந்தேகப்பட்டு கடந்த மூன்று நாளாக அவனை பின் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறாள்.

தன்னைக் கரைக்கு இழுத்து வந்தது மலர்கணையாள் என்பதை கவனிக்க முடியாத நிலையில் குறை மயக்கத்தில் கிடந்தான் மதி.

மெல்ல மெல்ல மயக்கம் தெளிந்ததும் "ரொம்ப நன்றி" என்றவன் அப்போது தான் மலர்கணையாளின் முகத்தையே பார்த்தான்.

அவளை கண்டு சட்டென எழுந்து கொண்டவன் "நீங்க" என்று வார்த்தையை தடுமாறி உரைத்தான்.

"நானே தான், உங்களுக்கு இங்க இருந்து போகணும்னா எங்க கிட்ட சொல்லி இருக்கலாமே, நாங்களே உங்களை கொண்டு போயி விட்டிருப்போமே, அதை விட்டுட்டு எதுக்காக எவ்ளோ போராட்டம்? எங்களுக்கு தெரியாமல் எங்க உதவி இல்லாமல் எங்க ஊருக்குள்ள இருந்து யாராலும் வெளியே போக முடியாது, அது மாதிரி உள்ளேயும் வர முடியாது"

"உங்கள் கிட்ட சொல்லாமல் வந்தது தப்பு தான்... ஆனால் என்னால இதுக்கு மேலும் இங்க இருக்க முடியாது... என்னை இந்த ஆற்றை கடந்து கொண்டு போய் விட்டுடுங்க" என்றவனுக்கு கால் எல்லாம் பயங்கரமாக எரிந்தது, பாறை கற்கள் இரு கால்களையும் நன்றாக காயமாக்கி இருந்தது.

"இதை ஒரு ரெண்டு நாளுக்கு முன்னாடி கேட்டிருந்தா கண்டிப்பா பண்ணியிருப்பேன். ஆனால் இனிமேல் உங்களால இங்க இருந்து போக முடியாது"

"ஏன்" பதட்டம், கோவம் என பல்வேறு உணர்வுகளை மதியின் முகம் வெளிபடுத்தியது.

"என் குடிசையில் இருக்க அந்த ஆளை உங்களுக்கு தெரியும் தானே?.. நான் இல்லாத நேரம் ரெண்டு மூணு முறை நீங்க அந்த ஆள் கிட்ட பேச முயற்சி பண்ணி இருக்கீங்க?" என்று அவள் வேதாசலத்தை குறிப்பிட்டு கேட்டதில் சட்டென மதியின் உடல் புல்லரித்தது.

"இல்லையே.. எனக்கு யாரையும் தெரியாது" என்று அவன் சொன்ன விதத்தில் இதழ் வளைத்தாள் மலர்.

"என் குடிசையில அப்படி யாரையும் நீங்க பார்க்கலன்னு சொல்லி இருந்தா கூட நான் நம்பி இருப்பேன்... ஆனால் இந்த பதிலை கண்டிப்பா நம்ப மாட்டேன்"

"நீங்க நம்பினாலும் நம்பலைனாலும் அதை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை. அப்படியே எனக்கு அவரை தெரிஞ்சி இருந்தாலும் உங்க கிட்ட அதை பத்தி சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை"

"அப்போ சரி உங்களை காப்பத்தி அழைச்சிட்டு போகணும்னு எனக்கும் எந்த அவசியமும் இல்லை... இன்னும் கொஞ்சம் நேரத்தில இங்க இருட்டிடும்! புலி கூட சண்டை போட தெம்பு இருந்தா வெற்றி அடைஞ்சி உங்க வீடு போயி சேருங்கள்" என்றபடி தன் போக்கில் நடந்து சென்றாள் மலர்.

"ஏய் நில்லு" என்ற மதியின் உடல் பயங்கரமாக வலித்தது. எழுந்து நிறக்கவும் முடியவில்லை.

"ஒரு நிமிஷம் நில்லு... இப்படி இங்க என்னை தனியா விட்டுவிட்டு போகாத நாளைக்கு எனக்கு ஏதாவது ஆனால் அந்த பாவம் உனக்கு தான் வந்து சேரும்"

"என்ன சாபம் விடுறீங்களா? பரவாயில்லை, ஏற்கனவே நாங்க பாவபட்ட ஜீவன் தான்"

"ஏய் அப்படி இல்லை நில்லு..." என்று கத்தியவனின் குரலை தாண்டி நடந்து சென்றாள்.

"சரி சொல்லுறேன்... அவருக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்னு சொன்னா எனக்கு இங்க இருந்து போக வழி சொல்லுவியா?"

"கண்டிப்பா இனி அது முடியாது. அவரை சார்ந்த யாரையும் நாங்க இங்க இருந்து அனுப்ப தயாரா இல்லை"

"ஏன் அப்படி? அவரை முதலில் எதுக்காக இப்படி அடைச்சு வச்சு இருக்கீங்க?"

"அது அவர் பண்ண பாவதுக்கான தண்டனை" என்ற மலர், மதியிடம் தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்ல ஆரம்பித்தாள்.

"எனக்கு ரொம்ப வேண்டபட்ட ஒருத்தர். அவருடைய குடும்பம் சிதறி போனதுக்கு என் வீட்டுல இருக்க அந்த ஆள் தான் காரணம். அவர் அப்பாவுடையா நண்பனா அவங்க வீட்டுக்குள்ள நுழைந்து.. குடும்பத்தில இருந்த எல்லாரையும் தனியா பிரிச்சு, அவர் அப்பாவை படுத்த படுக்கையாக்கி மொத்தம் குடும்பத்தையே ஒண்ணுமே இல்லாமல் பண்ணிட்டான்... இதுல ரொம்ப பாவப்பட்ட ஒரு ஜீவன் இருக்கு அந்த பொண்ணு பேர் கயல் விழி!!! இப்போ அவள் உயிரோட இருக்காளா இல்லையான்னு கூட எங்க யாருக்கும் தெரியாது. இவரால் அவங்க பட்ட கஷ்டம் எல்லாம் தெரியவந்தா நீங்க தாங்க மாட்டீங்க"

"அந்த உனக்கு வேண்டபட்ட ஒருத்தர் ஆரியானா?" என்றதும் திகைத்து திரும்பினாள் மலர்.

"உனக்கு எப்படி?"

"அவர் கதையோட ஆரம்பம் இது இல்லை... கயல் விழியை பத்தி எனக்கு தெரியாது, ஆனால் உன் ஆர்யனை பத்தி எனக்கு ஒரு அளவுக்கு தெரியும்..." என்றவனை கேள்வியாக பார்த்தாள் மலர்கனையாள்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer


பகுதி 23

சில வருடங்களுக்கு முன்பு…

"ஐயோ என் பொண்ணு வாழ்க்கையையே அழிச்சிட்டீங்களே" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய வழி இல்லாமல் அந்த வீட்டின் வேலைக்கார பெண்மணி மௌனமாக நின்று கண்ணீர் வடிக்க, "எதுக்கு இப்படி ஒப்பாரி வைக்கிற?" என்றபடி அந்த பெண்மணியின் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தார் ஆரியனின் தந்தை நீலகண்டன்.


"அதான் உன் இழப்புக்கு பணம் கொடுக்குறேன்னு சொல்லிட்டேன்ல அப்புறமும் ஏன் இப்படி நின்னு நீலிகண்ணீர் வடிச்சிட்டு இருக்க? சொல்லு எவ்ளோ பணம் வேணும் ஐம்பது ஆயிரம் போதுமா? இல்லை ஒரு லட்சம் வேணுமா?" என்றவரை கண்ணீருடன் ஏறிட்டு பார்த்த அந்த பெண்மணியின் வலியை வார்த்தையால் விளக்க முடியாது.


'நாளைக்கு உங்க பொண்ணுக்கும் இதே நிலைமை வந்தா இப்படி தான் விலை பேசுவீங்களா?' என்று ஆக்ரோஷமாக கேட்டு விட நாவு துடித்தது. இருந்தும் முடியவில்லை வாய் பேச முடிந்து இருந்தால் நிச்சயம் கேட்டிருப்பாள். அந்த திறன் தான் இல்லையே அதனால் ஊமையாக கண்ணீர் வடித்தாள்.


"யாரும் பார்க்கும் முன்ன முதலில் இங்க இருந்து வெளியே போ… இனிமேல் நான் உன்னை இங்க பார்க்க கூடாது" என்ற நீலகண்டன் தன் கையில் இருந்த பணத்தை அப்பெண்மணியின் கரத்தில் கொடுக்க முயற்சித்தார்.


"பணத்தை வாங்கிட்டு இங்கேயிருந்து கிளம்பு"


"வேண்டாம்" என்று அழுத்தமாக தலையசைத்த அந்த பெண்மணி

அழுது வடிந்த கண்ணோடு அவரை உக்கிரமாக பார்த்தாள்.


அந்த ஒரு பார்வை தான் இன்றளவும் ஆரியனின் குடும்பத்தை நிம்மதியாக வாழ விடாமல் விரட்டுகிறது.


ஒருவனை அழிக்க கூர்மை கொண்ட ஆயுதமோ, வலிமை விகு வார்த்தையோ தேவை இல்லை… பாவம் செய்தவனின் வீழ்ச்சிக்கு, அவனால் பதிக்கப்பட்டவனின் ஒரு துளி கண்ணீர் போதும்.


இப்போது இல்லையெனிலும் என்றாவது ஒருநாள் அல்லல்பட்டு அழிவான்.


ஆயுதங்களை காட்டிலும் ரணம் கொண்டவனின் பார்வைக்கு வீரியம் அதிகம்.


பாவத்தை போக்க எப்புண்ணியமும் ஈடாகாது என்பதை அன்று எண்ண மறந்தார் நீலகண்டன்.


அவள் பணத்தை வாங்க மறுத்ததும் பக்கத்தில் இருந்த திண்ணையில் பணத்தை வைத்துவிட்டு, கதவினை அடித்து சாத்தினார் நீலகண்டன். அவர் வைத்து விட்டு போன பணத்தையும், அவர் வீட்டு வாசலையும் வெறித்து பார்த்துக் கொண்டிருந்த அந்த பேச மடந்தை அவன் வைத்து விட்டு சென்ற பணத்தை அங்கேயே விட்டுவிட்டு கால் போன போக்கில் தன் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மல்லிகா.


உள்ளே வந்த நீலகண்டன் அடுத்து நேராக சென்றது குணசேகரனின் அறைக்கு தான்.


குணசேகரன்


நீலகண்டனின் தம்பி, ஆரியனின் சித்தப்பா, விஸ்வநாதன் தங்கயின் கணவன்.


"என்ன காரியம் டா பண்ணி வச்சிருக்க? ஹான் எதுக்கு இப்படி பண்ண? டாக்டர் கிட்ட போகலாம்னு எத்தனை தடவை சொன்னேன் கேட்டியா? கேட்டியாடா? இன்னைக்கு எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கன்னு பார்த்தியா? பாவம்டா அந்த மல்லிகா! எத்தனை வருஷம் நம்ம வீட்ல வேலை பார்த்து இருக்கா, பாவம் அந்த அப்பாவி பொண்ணுக்கு இந்த ஊர்ல நம்மள தவிர யாருமே கிடையாது… சோத்த போட்டு சங்க நெரிச்ச கதையா, அவ பொண்ணோட வாழ்க்கையையே அழிச்சிட்டியே… சின்ன பொண்ணு அவள் இந்நேரம் எப்படி இருக்களோ! என்கிட்ட நியாயம் கேட்க வந்தவளை அநியாயமா வெளியே அனுப்பிட்டு வந்து இருக்கேன். போகும்போது அவள் என்னை பார்த்த பார்வை இருக்கே, அது இன்னும் என் மனசை அறுத்துகிட்டே இருக்கு. உன் வாழ்க்கை பாழகிட கூடாதுன்னு நான் ஒவ்வொரு நொடியும் பயந்துட்டு இருக்கேன், ஆனால் உனக்கு அந்த கவலை கொஞ்சமும் இருக்கிற மாதிரி தெரியல… நல்ல வேலை இன்னிக்கு வீட்ல யாரும் இல்ல ஒருவேளை உன் பொண்டாட்டியோ இல்ல உன் அண்ணியோ வீட்ல இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? இவ்ளோ பேசுறேன் ஏதாவது வாய தொறந்து பேசுறியா? எதுக்கு இப்படி கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்க?" என்றவர் தன் தம்பியின் கன்னத்தில் ஓங்கி அறைய கண்ணீரோடு அவரது காலை பற்றி கொண்டு கதறினான் குணசேகரன்.



"அண்ணா என்னை மன்னிச்சிடுண்ணா நான் இதை எதையும் வேணும்னு பண்ணல, அந்த நேரத்துல எனக்குள்ள என்ன ஆகுதுன்னு எனக்கே தெரியல நான் பண்றது தப்புன்னு தெரியும். இருந்தாலும் என்னால என்னை கட்டுப்படுத்த முடியலை, நான் என்ன பண்ணட்டும் அண்ணா! சொல்லு நான் வேணா செத்துடவா" என்றவன் அருகில் இருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தை அறுத்துக் கொள்ள முன்னேறவும், பதறி துடித்த நீலகண்டன், குணாவின் கரத்திலிருந்து கத்தியை பிடுங்கி எறிந்தார்.


"அறிவில்லையாடா உனக்கு எதுக்கு இப்படி மடத்தனம் பண்ணுற" என்றபடி குணாவின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தவர் கண்ணீருடன் அடுத்த கணமே அவனை அனைத்துக் கொண்டார்.


"ஏன்டா இப்படி பண்ற? சாகறதுக்காகவா உன்னை இப்படி பொத்தி பொத்தி பாதுகாக்குறேன்? தப்பே பண்ணினாலும் நீ என் தம்பி டா, இந்த உலகத்துல உன்னை விட எனக்கு யாருமே முக்கியம் இல்லை, அது மனைவியா இருந்தாலும் சரி என் குழந்தைகளாய் இருந்தாலும் சரி அவங்க எல்லாருமே உனக்கு அப்புறம் தான், என் உயிரே நீ தான் டா…"


"சாரி அண்ணா இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்…" என்றவனின் கன்னத்தில் வடிந்த கண்ணீரை துடைத்து விட்ட நீலகண்டன் "சரி நடந்தது நடந்துடுச்சு இனி எதுக்கும் கவலைபடாத எல்லாத்தையும் அண்ணன் பார்த்துகிறேன்.. டாக்டர் கிட்ட மட்டும் போயிட்டு வந்திடுவோம்"


"இல்ல அண்ணா வேண்டாம்" பயந்தான்.


"ஏன் இப்படி பண்ணுற குணா? மறுபடியும் இப்படி ஏதாவது நடந்தா என்ன பண்ண முடியும்?"


"இல்ல அண்ணா இனி அப்படி எதுவும் நடக்காது.. இனி நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன், என்னை நம்புண்ணா.. எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு டாக்டர் கிட்ட சொல்ல போயி அது வேற யாருக்கும் தெரிய வந்து கடைசியா என் பொண்டாட்டி காதுக்கு இந்த விஷயம் போனா அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன். இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா அது என்னோட மட்டும் முடியாது அதனால நம்ம குடும்பத்துக்கும் அவமானம், பிறக்க போற என் பிள்ளைக்கும் அவமானம்… இது நம்ம குடும்பத்துக்கு தேவையா அண்ணா"


"நீ சொல்றது எனக்கு புரியுதுடா ஆனா ஏதாவது ஒன்னு பண்ணி தான ஆகணும்"


"கண்டிப்பா ஏதாவது பண்ணனும் தான் ஆனால் டாக்டர் கிட்ட போக வேண்டாம் அண்ணா, முடிஞ்ச அளவுக்கு நான் என்னை கட்டுப்படுத்த பார்க்கிறேன் கொஞ்ச நாள் வெளியே எங்கயாவது போயிட்டு வரேன்"


"வேற எங்கேயும் போக வேண்டாம் இன்னும் நாலு நாள்ல உன் பொண்டாட்டிக்கு வளைகாப்பு வருது அது முடிஞ்சதும் நீ அவ கூடவே அவ வீட்டுக்கு போயிடு இடம் மாறுனா உன்னை சார்ந்த சில விஷயங்களும் மாறும்" வளைகாப்பு முடிந்ததும் குணசேகரனை விஸ்வநாதனின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் நீலகண்டன்.


இந்த இடைப்பட்ட நாட்களில் இவர்களால் பாதிக்கப்பட்ட மல்லிகாவும் அவளது மகளும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது, அதனை கேள்விப்பட்டு நீலகண்டன் சிறிது மனம் வருந்தினார். ஆனால் அடுத்த நொடியே அதனை எல்லாம் மறந்து விட்டு தன் தொழிலை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.


என்னதான் வெளி உலகத்திற்கு நல்லவன் என்று முகமூடி அணிந்து மார் தட்டிக் கொண்டாலும், தன் குடும்பம் என்று வரும்போது இங்கு அனைவரும் அயோக்கியன் தான்.


தவறுகள் வெளியில் நடந்தால் அதற்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று நல்லவனாக நின்று வாதாடுவோம்… அதுவே அந்த தவறினை தன் குடும்பத்தில் உள்ளவன் செய்திருந்தால் எப்படியாவது அத்தவறை மறைத்து விட வேண்டும் என்பதற்காக மட்டுமே நாம் முன்வருவோம்.


தேவைக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல வளைந்து கொடுக்கும் சாதரண மனிதர்கள் தானே நாம்.


நமக்கு தேவை பட்டால் அது நல்லது.

நமக்கு தேவை இல்லையெனில் அது கெட்டது. இது தான் மனித இயல்பு.


விஸ்வநாதனின் வீட்டுக்கு குணசேகரன் வந்து மூன்று மாதங்கள் ஆனது அவனது மனைவி கவிதாவுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.


நாட்கள் முன்பு போல இல்லாமல் அமைதியாகவே அனைவருக்கும் நகர்ந்தது.


நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் சிறு திருப்பு முனையாக அமைத்தது குணசேகரின் ஹார்மோன் பிரச்சனை.


ஜீவாவின் தங்கையோ டீனேஜ் பருவத்தில் இருந்தாள்.


டீனேஜ் வயதில் இருக்கும் பெண்கள் மீது குணாவிற்கு அதீத ஈர்ப்பு வரும், அவனது ஹார்மோன் கோளாறினால் இப்படி பட்ட செயலை செய்ய சொல்லி அவனது மூளை அவனுக்கு கட்டளை விதிக்கும்.


அவ்வயது பெண்களை தன் வசப்படுத்தி கொள்ளவும், அவர்களது அலறல்களை ரசிக்கவும் பேயாக அவனது உடலும் மனமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.


இவனுடைய இந்த பிரச்சனையால் இதுவரை மூன்று சிறுமிகள் பதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் தன் அண்ணன் மூலம் பணத்தை கொடுத்து அனைவரையும் சரிகட்டி விடுவான். நீலகண்டன் கண்டித்தாலும் அழுது , கண்ணீர் வடித்து தற்கொலைக்கு முயற்சித்து அவனது மனதையும் கரைத்து விடுவான். இது தான் வாடிக்கையாக நிகழ்த்து கொண்டிருக்கிறது. அந்த மூன்று சிறுமிகளில் ஒருவள் தான் அவர்கள் வீட்டில் வேலை செய்த வாய் பேச முடியாத பெண் மல்லிகாவின் மகள் பார்கவி.


குணாவின் பார்வை ஜீவாவின் தங்கையின் மீது பதிந்த நேரம் அது. அப்போது குணாவின் குழந்தையை காண விஸ்வநாதனின் வீட்டிற்க்கு வந்திருந்தான் நீலகண்டன்.


ஜீவாவின் தங்கை மீதான குணாவின் பார்வை அங்கிருந்த அனைவருக்கும் சாதாரணமாக தெரிந்தாலும், நீலகண்டனுக்கு அது அசாதாரணமாக தெரிந்தது.


தம்பியின் மன ஓட்டத்தை சரியாக கணித்து விட்டார்.


"குணா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்ற நீலகண்டன், தன் தம்பியை தனியே அழைத்து சென்று "பளார்" என்று ஒரு அறை விட "அண்ணா எதுக்கு இப்ப அடிக்கிறீங்க?" என்று எகிறினான் குணசேகரன்.


"எதுக்காகன்னு உனக்கு தெரியாதா? உன் பார்வையே சரி இல்லை… குழந்தைடா அது, நீ இங்க இருந்தவரை போதும் உடனே என் கூட கிளம்பு"


"அண்ணா என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? என்னை அவ்ளோ கேவலமா நினைச்சிட்டியா?" என்று கண்ணீர் வடித்து குணா கேட்கவும், இரு நொடி மௌனமாக யோசித்து விட்டு பின்னர் வெளியே வந்த நீலகண்டன் "இன்னிக்கி நாங்க இங்கேயே தங்கலாம்னு இருக்கோம் உங்களுக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே" என்று விஸ்வநாதனிடம் கேட்டார்.


"அதுல என்ன இருக்கு தாராளமா தங்கிட்டு போங்க" என்றார்.


ஒரு இரவு முழுவதும் நீலகண்டன், குணாவை கவனித்தார். தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை வெளிகாட்ட எண்ணி குணா பல வேலைகள் செய்ய, அதனை வைத்தே நீலகண்டனுக்கு சந்தேகம் அதிகமானது.


அடுத்தநாள் காலையில் தங்கள் வீட்டுக்கு கிளம்பிய நீலகண்டன் "என் பொண்ணு கயல் நாளைக்கு அவள் தாத்தா, பாட்டி வீட்டுல இருந்து வர்ற, உங்க பொண்ணுக்கும் லீவ் தானே நாங்க இவளை எங்களோட வீட்டுக்கு அழைச்சிட்டு போகவா?" என்று அவர் கேட்க…


ஜீவாவின் தங்கையோ "கயல் வர்றாளா அப்போ நான் உங்க கூட வரேன்" என்று சொல்லிவிட, மறுப்பு சொல்ல முடியாமல் விஸ்வநாதனின் குடும்பம் ஜீவாவின் தங்கையை, நீலகண்டனுடன் அனுப்பி வைத்தனர்.


"கொஞ்சம் கவனமா இரு இல்லைன்னா உன் வாழ்க்கை உனக்கு இல்லை" என்று குணாவிடன் கூறி விட்டு அங்கிருந்து சென்றார் நீலகண்டன்.


அவர்கள் சென்றதும் பித்து பிடித்தது போல ஆனான் குணா, உடலும் மனமும் அவன் கட்டுபாட்டை மீறியது. தனது பிரச்னையை மறக்க மதுவை நாடினான் விலை மாதுவை தேடினான்.


எதுவும் அவனுக்கு திருப்பதியாக இல்லை…


மனம் இதை எல்லாம் மீறிய வேறு எதையோ தேடியது… மூளை சூடானது, கொஞ்சம் கொஞ்சமாக அவன் கட்டுப்பாட்டை இழந்தான் 'இதற்கு மேலும் தன்னால் எந்த வித தவறும் நடந்து விட கூடாது என்று நினைத்த குணா கடைசியாக தொடவே கூடாது என்று நினைத்து ஒதுக்கி வைத்த போதை மருந்தை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.


அந்த மாத்திரை கொடுத்த போதை இவனது தேவைக்கு ஒரு அளவுக்கு தீனி போட்டது. ஆனால் வேறு வகையில் அவனது சிந்தையை சிதைத்து
 

Mythili MP

Well-known member
Wonderland writer
****
பகுதி 24

"மூனாம் தேதி வாடகை கொடுக்கணும், பத்தாம் தேதி லோன் கட்டணும், இதோ ரெண்டு நாளில் யசோதாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்… எனக்கு உதவி பண்ண யார் இருக்கா? தனியா கிடந்து உழைச்சு உழைச்சே சாகணும்னு என் விதியிலே எழுதி இருக்கும் போல" என்று இந்திரா ஆரம்பிக்க,


பதிலுக்கு அவளது கணவர் வேதாசலம் "எங்களுக்காக உழைக்கிறதுக்கு உனக்கு அவ்ளோ கஷ்டமா இருந்தா எங்களை விட்டு நீ போயிடு, என் பொண்ணை பார்த்துக்க எனக்கு தெரியும்"


"எப்படி பார்த்துப்பீங்க சார்? நம்ம பையனை பார்த்துக்குட்டீங்களே அப்படியா? பணத்துக்காக பையனை வித்த மாதிரி இவளையும் எவனுக்காவது வித்துட்டு அந்த காசுல குதூகலமாக இருக்கலாம்னு எண்ணமோ?" என்று சொன்னவரை அடிக்க கை ஓங்கியவன், ஓங்கிய கையை மடக்கி கொண்டு அடுத்த நொடி அங்கிருந்து சென்றான்.


"உண்மையை சொன்னா கோவம் பொத்துகிட்டு வருதோ… சுமந்து பெத்த பையனை இழந்த வலி எனக்கு தான் தெரியும்" என்று கோபமாக கூறி கண்ணீர் வடித்தவள் தன் கணவன் வேதாச்சலதை வாயுக்கு வந்தபடி திட்டி விட்டு அலுவலகத்துக்கு கிளம்பி சென்றாள்.


செல்லும் வழி எங்கிலும் இழந்த தன் மகனை பற்றிய எண்ணமே இந்திராவின் நினைவில் ஓடிக்கொண்டு இருந்தது.


வேதாசலம் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்… எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது… அவர் பணியில் இருந்த வரை வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி தான்… இந்திராவும் அவரோடு நல்ல இணக்கமாக இருந்தாள். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருந்து.


இந்நிலையில் ஒருநாள் மகன் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டான், அவனை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக வேதாசலத்துக்கு தகவல் வந்தது. பதறி துடித்தவர், அலுவலகத்தின் பெயரில் கட்ட வேண்டிய பணத்தை தன்னுடன் பணிபுரியும் வேறு ஒரு நபரிடம் கொடுத்து கட்ட சொல்லிவிட்டு விரைந்து மருத்துவமனைக்கு பயணமானான்.


மகனுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்தவுடன் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தான்.


"பணத்தை பேங்க்கில கட்டிட்டியா?" என்று அந்த ஊழியரிடம் வேதா கேட்க…


"எந்த பணம் யார் கிட்ட கொடுத்த?" என்று அவன் அப்படியே மாற்றி பேசினான். அச்சத்துடன் இரண்டு முறை கேட்டு பார்த்தார்… பின்னர் கோவத்தில் அவனை போட்டு அடிக்க, பெரும் சண்டையாகி போனது.


மேனஜர் வந்து விசாரித்து "உன் கிட்ட கொடுத்த பணத்தை நீ எப்படி அவன் கிட்ட கொடுக்கலாம்" என்று கேட்டார்.


"என் பையனுக்கு அடிப்பட்டுடுச்சு சார் அதான் இவன் கிட்ட கொடுத்து கட்ட சொல்லிட்டு போனேன்"


"ஐயோ இவன் பொய் சொல்லுறான் சார்… என்கிட்ட இவன் எந்த பணமும் கொடுக்கல… யார் கிட்ட வேணாலும் கேட்டு பாருங்க" வேதா பணத்தை கொடுக்கும் போது அதனை பார்த்த சாட்சி அங்கு யாரும் இல்லை என்பதால் வேதா தான் ஏமாற்றுகிறான் என்று எண்ணி போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டனர்.


ஒருநாள் இரவு முழுக்க வேதாவை போலீஸ் அடித்து வெளுத்தது. விஷயம் கேள்விபட்டு காவல் நிலையத்துக்கு வந்தாள் இந்திரா… 'பணத்தை திருப்பி கொடுத்தால் புகாரை திரும்ப பெறுகிறோம்' என்று அந்த தனியார் நிறுவன முதலாளி கூறிவிட வேறு வழி இல்லாமல் தனது நகைகள் அனைத்தையும் வித்து பணத்தை ஒப்படைத்து விட்டு வேதாசலத்தை வெளியே அழைத்து வந்தாள்.


நடந்த இந்த பிரச்சனையால் வேதாசலத்துக்கு வேலை பறி போனது… வேறு எங்கும் வேலையும் கிடைக்க வில்லை… அதனால் மனம் நொந்து போனார், வேறு வழி இல்லாமல் இந்திரா தன் குடும்பத்துக்காக வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்… அந்த நாள் முதல் கணவன், மனைவி இருவருக்கும் இடையே சிறிது சிறிதாக கருத்து மோதல் உருவாக ஆரம்பித்தது.


இந்திராவின் மகனுக்கு நான்கு வயது இருக்கும் போது, யசோதா பிறந்தாள். அவள் பிறந்த அடுத்த மாதமே குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு சென்று விட்டாள் இந்திரா… குழந்தைகளை பார்த்து கொண்டார் வேதாசலம்.


ஒருநாள் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நேரம் ஏற்பட்ட விபத்தில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்தாள் இந்திரா.


தலையில் பலத்த காயம் ஆபரேசன் செய்ய லட்ச கணக்கில் பணம் தேவை என்ன செய்வது என்று கை குழந்தையோடு தவித்துக் கொண்டு நின்றான் வேதாசலம்.


யாரிடமும் உதவி கேட்டு பழக்கம் இல்லாதவன் முதல் முறை தன் மனைவிக்காக தெரிந்த ஒவ்வொருவரிடமும் கையேந்தினான்.


திக்கற்ற நேரம் ஆரியன் தந்தையின் ஞாபகம் இவனுக்கு வந்தது ஆனால் அவனை தொடர்பு கொள்ள வழி தெரியாமல் தவித்து நின்றான். இருவரும் கல்லூரி கால நண்பர்கள்.. வேதாசலத்தின் திருமணத்தை உடன் இருந்து நடத்தி கொடுத்தது நீலகண்டன் தான். ஆனால் அதன் பிறகு இருவரும் சந்திக்க ஏற்ற காலம் அமையவில்லை. குடும்பம் குழந்தைகள் என இருவரது வாழ்க்கையும் வெவ்வேறு வழியில் சென்றுவிட்டது.


நீலகண்டனை அழைக்க அவனது அலைபேசி எண் இவன் வசம் இல்லை. அவனது ஊர் வரை சென்று உதவி கேட்கவும் இப்போதும் நேரம் இல்லாததால் வேறு வழியே நாடினான்.


அதே ஊரில் வசிக்கும் இவனது இன்னொரு நண்பனை தேடி சென்றான்… இவனோடு படித்த அனைவரும் வசதி வாய்ப்புடன் செழுமையாக இருக்க, இவன் மட்டும் இன்னும் தோல்வியில் வாழ்ந்து கொண்டு இருப்பதை நினைத்து வெட்கி போனான்.


வேதாவின் நண்பன் பெரும் செல்வந்தன் ஆனால் குழந்தை செல்வம் இல்லை. இந்திராவின் மூத்த மகன் நிதிஷ்குமார் மீது அத்தம்பதிக்கு கொள்ளை பிரியம்.. அவனுக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே வேதாசலத்தின் வறுமையை பயன்படுத்தி கொண்டு நிதிஷை தத்து கேட்டான் அந்த செல்வந்தன். ஆனால் இந்திராவோ அதனை மறுத்தது மட்டும் அல்லாமல் கடுஞ்சொல் கூறி அவர்களை அனுப்பி வைத்து விட்டாள்.


இன்று மனைவியை காக்க வழி இல்லாமல் பிள்ளையை தத்து கொடுக்க அச்செல்வந்தர் குடும்பத்தை நாடினான் வேதாசலம்.


அவர்களும் இவனது நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு சந்தோஷமாக பணத்தை கொடுத்து முறைபடி நிதிஷை தத்து எடுத்து சென்றனர்.


அந்த பணத்தை வைத்து இந்திராவுக்கு சிகிக்சை நடந்து முடிந்தது.


மருத்துவனையில் இருந்த இந்திரா பதினைந்து நாட்களுக்கு பின்னர் குணமாகி வீட்டிற்கு வந்தாள். வந்தவள் முதலில் தன் மூத்த மகனை தான் தேடினாள். ஒவ்வொரு முறை மகனை பற்றி கேட்க்கும் போதும் 'அவன் வீட்டுல இருக்கான்… குழந்தையை ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு வந்தா பயந்திடுவான்' என்று கூறி இந்திராவை அமைதி படுத்தி இருந்தான் வேதாசலம்.


இன்று "மகன் எங்கே?" என்று அவள் கேட்க, மென்று முழுங்கி ஒரு வழியாக உண்மையை சொல்லி முடித்தான்.


பெற்ற அன்னை அதனை கேட்டு பித்து பிடித்தவள் போல அவனை பிராண்டி எடுத்தாள்.


"எதுக்காக இப்படி பண்ண? என் பிள்ளையை தத்து கொடுக்க நீ யாரு? நான் இப்போவே போறேன்.. என் பிள்ளையை கூப்பிட்டு வரேன்" என்று சண்டையிட்டு சென்றவளை தடுத்து நிறுத்தினான்.


"அவன் இப்போ அங்க இல்லை… முறைப்படி தான் எல்லாம் நடந்து இருக்கு இனி நம்மால எதுவும் பண்ண முடியாது"


"ஏன் பண்ண முடியாது? என் அனுமதி இல்லாமல் எப்படி நீ என் பிள்ளையை தத்து கொடுப்ப, அது எப்படி முடியும்? இப்போவே நான் போலீஸ் ஸ்டேஷன் போறேன்.. உன்னையும் சேர்த்து ஜெயிலில் வைக்கிறேன்"


"அவங்களை மீறி உன்னால ஒன்னும் பண்ண முடியாது புரிஞ்சிக்கோ" என்றவன் முறைபடி தத்து கொடுத்த பத்திரத்தை இந்திராவின் கரத்தில் கொடுத்தான்.


அதனை கண்டு அதிர்ந்து போனாள் இந்திரா.


"எப்படி இதுல என்னோட கையெழுத்து வந்தது… ஐந்து நாளைக்கு முன்னாடி ஹாஸ்பிட்டலில் வைத்து இதுக்காக தான் என்கிட்ட கையெழுத்து வாங்கினியா?" என்றவள் ஆக்ரோஷமாக அவனது சட்டையை பிடித்தாள்.


"போலீஸ் கிட்ட போனா அவங்க நம்மளை சும்மா விட மாட்டாங்க… எல்லாம் சொல்லி முடிவு பண்ணி தான் பணம் கொடுத்து இருக்காங்க… அங்க நம்ம பையன் வசதியா வாழுவான்… நான் சொல்லுறதை பொறுமையா யோசி உனக்கு எல்லாம் புரியும்"


"என்னயா புரியும்? அவங்க கிட்ட என் பிள்ளை வசதியா வாழும் சரி ஆனால் அவன் சந்தோஷமா இருப்பானா பதில் சொல்லு? அவனை வித்து என்னை காப்பாத்த சொல்லி நான் உன்கிட்ட கேட்டேனா? என்னை காப்பாத்துறேன்னு சொல்லி என் உயிரையே என்கிட்ட இருந்து பறிச்சிட்டியே…" நெஞ்சில் அடுத்துக் கொண்டு கதறி அழுதபடியே தலையை பிடித்துக்கொண்டு மயங்கி சரிந்தாள் இந்திரா.


அன்று முதல் இன்று வரை வேதாசலதுக்கும் இந்திராவுக்கு இடையேயான வாழ்க்கை இப்படி தான் தினமும் சண்டை, வாக்குவாதம் என சென்று கொண்டிருக்கிறது.


யசோதாவுக்காக மட்டுமே வேதாசலத்தை பொறுத்துக்கொண்டு வாழ்த்து வருகிறாள் இந்திரா. இப்படியே பதினைந்து வருடம் ஓடி விட்டது



இப்படியான ஒருநாளில் யசோதா ஆசைப்பட்டாள் என்று அவளை அழைத்துக் கொண்டு பூங்காவுக்கு சென்றான் வேதாசலம். யசோதாவுக்கு அவள் தந்தை மீது அதிக பாசம்… அதே போல இவனும் அவளுக்கு ஒன்று என்றால் எந்த எல்லைக்கும் செல்வான்.


பூங்காவிற்கு சென்று விட்டு யசோதாவின் விருப்பம் போல அவளை அப்படியே ஒரு ஹோட்டலுக்கும் அழைத்து சென்றான்.


"அப்பா இதுக்கெல்லாம் உன்கிட்ட காசு ஏது?" என்று யசோதா விளையாட்டாக கேட்க "உன் அம்மா கிட்ட இருந்து திருடிட்டேன்" என்று இவனும் சிரித்தபடியே பதில் கொடுத்தான்.


சந்தோஷமான இந்த தருணத்தில் விதியின் சதியாக இவர்கள் இருக்கும் அதே ஹோட்டலுக்கு குணாவும் வந்திருந்தான்.


நீலகண்டனின் தம்பி குணாவையும், வேதாவுக்கு நன்கு தெரியும்… அவனுக்கும் இவன் நன்கு பரிச்சயம் தான்.


"குணா எப்படி இருக்க? உன் அண்ணன் எப்படி இருக்கான்? என்னை நியாபகம் இருக்கா?" என்று வேதாசலம் கேட்டான்.


"எப்படி மறக்கும் வேதாண்ணா, நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க"


"ரொம்ப நல்லா இருக்கேன் இதோ இவள் என் பொண்ணு பேரு யசோதா… யசோ இவன் குணா என் ப்ரெண்ட் நீலாவோட தம்பி" என்று அறிமுக படுத்தி வைத்தான்.


"ஹாய் அங்கிள்" என்று யசோ சகஜமாக பேசி சிரிக்க… குணாவின் ஹார்மோன் பேயாட்டம் ஆட ஆரம்பித்தது.


நீலகண்டனை பற்றி வேதா விசாரித்து கொண்டே இருக்க, அவனது ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கொடுத்த குணாவின் பார்வையோ அவனுக்கு எதிரில் அமைதியாக அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த யசோதவின் மீது பதிந்து பதிந்து மீண்டது.


அந்த பார்வைக்கான பதிலடியை அவளை பெற்றவன் கொடுக்க தானே செய்வான்?
 
Status
Not open for further replies.
Top