ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொஞ்சி தீர்க்கவா பெண்ணே _கதை திரி

Status
Not open for further replies.

Mythili MP

Well-known member
Wonderland writer
****
பகுதி 15

***

இந்திராவின் வீட்டிற்கு வந்தார் விஸ்வநாதன்..

"அவள் இன்னும் வரலையா?" என்று அவர் கேட்க... "இல்லை" என்று தலை அசைத்தார் இந்திரா.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அந்நேரம் வீட்டிற்குள் நுழைந்தாள் யசோதா... வாசலில் நின்று இருவரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் பேசவில்லை அமைதியாக அவர்களைக் கடந்து தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

யசோதாவை கண்டதும் ஒருகணம் இருவரும் அமைதியாகினர்... பின்னர் விஸ்வநாதனோ " நீ எதுக்கும் கவலைப்படாத இந்திரா அவன் தான் நம்மள அவளை பார்த்துக்க சொன்னான்.. இப்போ அவனே அவளை கூப்பிட்டு போயிட்டான் இதுல நம்ம கவலைப்பட எதுவுமே இல்ல.. அவனுக்கு சொந்தமான ஒன்னு திரும்ப அவன் கிட்டயே போயிடுச்சுன்னு அமைதியா விட்டு விட வேண்டியது தான்"

"என்ன இப்படி சொல்றீங்க? நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான் நான் இல்லைன்னு சொல்லமாட்டேன் இருந்தாலும் நம்ம யார்கிட்டயும் சொல்லாம அவன் ஏன் திடீர்னு வைஷ்ணவி அழைச்சிட்டு போகணும்? எனக்கு என்னமோ ஏதோ தப்பா இருக்கு ரொம்ப பயமா இருக்கு"

"எனக்கு உன்னுடைய பயம் புரியுது இந்திரா.. ஆனா அதுக்காக நம்ம எதுவுமே பண்ண முடியாது இதுல நம்ம கடமை முடிஞ்சதுன்னு சொல்லி அமைதியாக இருக்கிறது தவிர வேறு வழியே கிடையாது சொல்லப்போனால் அதெல்லாம் யோசிக்கக்கூட எனக்கு இப்போ நேரம் இல்லை.. எனக்கு என் பையன் வாழ்க்கையை பார்க்க வேண்டிய பொறுப்பு இருக்கு.. அப்புறம் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன் நாளைக்கு ஜீவாவுக்கு பொண்ணு பார்க்க போறோம்... ஏற்கனவே உன்கிட்ட நான் சொல்லி இருக்கேன்ல கங்காவை பத்தி, அவங்க வீட்டுக்கு தான் போறோம்" என்று இந்த கடைசி வரியை மட்டும் அறைக்குள் இருக்கும் யசோதாவின் காதில் விழுமாறு உரக்கச் சொன்னார் விஸ்வநாதன்.

அந்த வரியில் மட்டும் அவர் அழுத்தம் கொடுப்பது இந்திராவிற்கும் நன்கு புரிந்தது... நிச்சயம் தனது மகளின் மனம் இதனை கேட்டு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து ஒரு தாயாக வருத்தப்பட்டார் இந்திரா, இருந்தும் என்ன செய்ய இயலும் இவள்தான் இந்த அளவுக்கு பிடிவாதமாக இருக்கிறாளே யார் சொல்லியும் கேட்காமல் தன் போக்கில் தான் நடந்து கொள்வேன் என்று தான் தோன்றித்தனமாக தெரியும் பெண்ணிடம் என்ன கூறி தன்னிலையை உணர வைப்பது என்று அவருக்கும் புரியவில்லை... அதனால் அமைதியாக விஸ்வநாதன் சொன்னதற்கு தலையசைத்து வைத்தார்.

"சரி இந்திரா நான் கிளம்புறேன்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நீ தேவை இல்லாம வைஷ்ணவியை பத்தி யோசிச்சிட்டு இருக்காத..." என்று தன்னால் முடிந்த அளவுக்கு இந்திராவுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் விஸ்வநாதன்.

அவர் சென்ற பிறகு வைஷ்ணவியையும் யசோதாவையும் நினைத்து கவலைப்பட்டபடி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார் இந்திரா...

வெளியே இருப்பவர்கள் வைஷ்ணவி பற்றி தான் பேசுகிறார்கள் என்பது ஓரளவுக்கு யசோதாவின் காதல் விழுந்தது ஆனால் தெளிவுர எதையும் அவள் கேட்கவில்லை...

விஸ்வநாதன் சென்றதும் தனது அறையை விட்டு வெளியே வந்தாள் யசோதா...

வந்தவள் நேராக சமையலறை நோக்கி போனாள்.. காலையில் சமைத்து வைக்கப்பட்ட உணவு அப்படியே இருந்தது... அதனைப் பார்த்தவள் அப்படியே ஹாலில் கண்ணீருடன் அமர்ந்திருந்த இந்திராவையும் ஒரு கணம் திரும்பி பார்த்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ தனக்கு தேவையான உணவை மட்டும் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

எந்தவித நெருடலும் இல்லாமல் உணவை உண்டு முடித்தவள் மீண்டும் வெளியே வர இன்னும் அதே இடத்தில் தான் இந்திரா அமர்ந்திருந்தார்... யோசனையுடன் ஸ்கூட்டியின் சாவியை எடுத்தவள் வெளியே வந்தாள்.

வாகனத்தை உயிர்ப்பித்து நேராக வைஷ்ணவி எப்போதும் செல்லும் இரு கோவில்களை சுற்றி அவளை தேட ஆரம்பித்தாள். நேரம் போனதே தவிர அங்கு அவள் இருப்பதற்கான சிறு தடையமும் இல்லை... அடுத்ததாக வைஷ்ணவி அவ்வப்போது சென்று வரும் அந்த ஆஸ்ரமத்தை நோக்கி வாகனத்தை செலுத்தினாள்.

இரவு பத்து மணிக்கு மேலானதால் ஆஸ்ரமத்தின் நுழைவாயில் பூட்டப்பட்டிருந்தது... அங்கிருந்த வாட்ச்மேனிடம் வைஷ்ணவி குறித்து விசாரித்தாள்... அவரும் வைஷ்ணவி இங்கு வரவில்லை என்று கூறிவிட, ஏனோ முதல் முறை வைஷ்ணவியை எண்ணி யசோதா கவலை கொள்ள ஆரம்பித்தாள்.

எப்போதும் தன் காலை சுற்றி வரும் பூனை மீது சில நேரம் எரிச்சல் உண்டாகலாம்... அதற்காக அது எப்படியும் ஒளிந்து போகட்டும் என்று அதிகபடியானோர்களால் யோசிக்க முடியாது. அந்த அதிகப்படியானோர்களில் யசோதாவும் ஒருவள். என்னதான் வைஷ்ணவி மீது சிறு கோவம் இருந்தாலும் ஒருநாளும் அவளை அவள் வெறுத்ததும் இல்லை வீட்டிற்கு வந்ததும் அவளை தேடாமல் இருந்ததும் இல்லை.

தன்னால் முடிந்தவரை வைஷ்ணவியை தேடிப் பார்த்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் யசோதா... இன்னும் இந்திரா அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தார்.. அதனைக் கண்டு யசோதாவிற்கு கோபம் தான் வந்தது... அவரிடம் வைஷ்ணவியை பற்றி கேட்டறிந்து கொள்ள யசோதவின் பிடிவாதம் இடமளிக்கவில்லை, இருந்தும் வேறு வழி இல்லாமல் கேட்க நினைத்தாள்.

"அவள் எங்க?" யசோதா கேட்டது இந்திராவின் காதல் விழுந்தது இருந்தும் அவர் அமைதியாக இருந்தார்.

"உங்ககிட்ட தான் கேட்கிறேன் வைஷ்ணவி எங்க?"

"தெரியல" என்று கூறியவரின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வடிந்தது...

"இப்படி அழுதுட்டே இருந்தா என்ன பண்ண முடியும்? என்ன நடந்ததுன்னு சொன்னா தானே எதாவது பண்ண முடியும்" என்று அவள் கடுமையான குரலில் கேட்க, நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் இந்திரா கூறி முடித்தார். அதனை கேட்டு மேலும் ஆத்திரமடைந்தாள் யசோதா.

"உங்களுக்கு கொஞ்சமும் அறிவில்லையா? புருஷன்னு சொல்லி எவன் வந்தாலும் அவன் கூட இவளை அனுப்பி வச்சிடுவீங்களா?"

"உனக்கு என்னமா அவள் மேல திடீர்னு இவ்ளோ அக்கறை"

"எனக்கு எல்லாரும் மேலயும் அக்கறை இருக்கு... ஆனால் யாருக்கும் தான் என் மேல அக்கறை இல்லை... ச்சே உங்க கிட்ட போயி இதை எல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாருங்க... பெத்த பிள்ளையையே பாதுகாக்க முடியாத உங்க கிட்ட இதை தவிர வேற எதை எதிர்பார்க்க முடியும்" என்று முகத்தில் அடித்தபடி கூறி விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் யசோதா.

அவள் சொன்ன வார்த்தையை மீட்டெடுத்து பார்த்த இந்திராவின் உடல் மரத்து போனது...

"எனக்கு எதுவும் மறக்கல எல்லாம் ஞாபகம் இருக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு... கணவன் மனைவியா நீயும் அப்பாவும் சேர்ந்து இருந்திருந்தா இன்னிக்கு என் வாழ்க்கையும் நல்லா இருந்து இருக்கும்" என்றோ ஒருநாள் அவள் கூறிய வார்த்தைகள் இன்றும் இந்திராவின் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

***

காட்டுக்குள் வழி தெறியாமல் சுத்திய மதிவாணன் ஒருவழியாக சாலையை பிடித்து வண்டியை மேலேற்றினான்.

'இது எந்த இடம்' என்று அவனுக்கு சிறிதும் புலபடவில்லை... வழியில் யாரிடமாவது விசாரிக்கலாம் என்று எதிர்பார்த்து வாகனத்தை செலுத்த அவன் நேரத்திற்கு ஒருவரும் அவ்வழியே வரவில்லை... சிறிது நேர பயணத்துக்கு பிறகு தூரத்தில் ஒரு வெளிச்சம் அதனை கண்டதும் 'நல்ல வேளை' என்று மனதில் சந்தோசம் அடைந்து கொண்டவன் அவ்வாகணத்தை நோக்கி சென்றான்.

அங்கு ஒருவன் வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு திரும்பி நின்று யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

"அவளா? அவள் எப்படி இங்க? எல்லாம் மறத்திடுச்சா? நல்லது தான்... சரி அவளை இழுத்துட்டு போனானே அவனை பத்தி எதுவும் தகவல் கிடைச்சதா?"

"இல்லை"

"*** கிடைக்காமலா போயிடுவான்... என் கண்ணுல மாட்டட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு" என்றபடி அவர் பேசிக்கொண்டு நிற்கவும், அவர் அருகில் சென்று தனது காரை நிறுத்திய மதிவாணன்.. "சார் இது எந்த இடம்?" என்று விசாரித்தான்... அவனது அரவம் உணர்ந்து திரும்பி பார்த்த அந்த நபரை கண்டு மிரண்டு முழித்த மதிவாணன் உடனே வாகனத்தை எடுக்க முயற்சிக்க, "ஏய்" என்று கத்தியபடி அவர் நொடியில் துப்பாக்கியை எடுக்க போகவும்... அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த வாகனத்தை எடுத்து சென்றான் மதிவாணன்.

மதியின் கார் ஒரு பத்தடி தூரம் சென்று இருக்கும் அதற்குள் சரியாக, அவனது கார் டயரில் தோட்டாவை பாய்ச்சி இருந்தான் அந்த புதியவன், தோட்டா பயந்த வேகத்தில் நிலையில்லாமல் வண்டி ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது... உடனே அவ்விடம் நோக்கி ஓடிய புதியவன், காருக்குள் மதியை தேட, அவனோ மோதிய வேகத்தில் மூச்சிரைக்க காரில் அமர்ந்திருத்தான்.

"மதிவாணா..." என்று அவன் அருகில் அந்த புதியவனின் குரல் கேட்கவும், உயிர்வரை நடுக்கம் பரவியது... முகமெல்லாம் வியர்த்து வடிந்து அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்த மதியின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் அந்த புதியவன்.

மதிவாணனுக்கு பலமாக மூச்சு வாங்கியது... "துரோகம் பண்ணிட்டியே மதிவாணா... தப்பு பண்ணா தண்டனை கிடைக்கணும்... இது நீ பண்ண துரோகத்துக்கு " என்றபடி அவன் ட்ரிகரை அழுத்த, நொடியில் துப்பாக்கி ஏந்தியிருந்த அவனது கரத்தை பிடித்து தன்னை நோக்கி வளைத்து இழுத்தான் மதிவாணன், அவன் இழுத்த வேகத்தில் அந்த புதியவனின் தலை பகுதி காரில் முட்டி, நெற்றியில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது... குறி தப்பியது, உடனே உச்சபட்ச கோவத்தில் மீண்டும் மீண்டும் அந்த புதியவன் ட்ரிகரை அழுத்த அவனது துப்பாக்கியில் இருந்து வெளிவந்த இரண்டு தோட்டாக்கள் மதியின் வலது தோள் பட்டையை துளைத்தது... இதற்கு மேலும் இவனிடம் போராட முடியாது என்று தெரிந்து கொண்ட மதிவாணன் இறுதியாக அவனது கரத்தை டோர் வளைவில் வைத்து ஓங்கி ஒரே அடி, கை உடைந்தது, வலி பொருக்க முடியாமல் கத்திய அந்த புதியவன் மறு கரத்தில் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு மீண்டும் மதியினை சுட வரவும், சுதாரித்துக் கொண்ட மதி அப்படியே காட்டு பக்கமாக இறங்கி ஓட ஆரம்பித்தான்... இருளில் அங்கும் இங்கு துப்பாக்கியால் சுட்ட புதியவன், மதியை தேடி காட்டுக்குள் இறங்க தயங்கினான். அதற்கு அவனது கை வலி ஒரு காரணம் என்றால் பாம்புகள் மற்றுமோர் காரணம்.. அந்த காட்டு பகுதியில் மிகுந்த விஷம் நிறைந்த பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். காலை வரை அவன் பிழைத்திருந்தால் நாளை அவனை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் அந்த புதியவன். இந்த புதியவன் தான் ஆரியனின் விபத்துக்கும் காரணாமானவன்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer

பகுதி 16

குண்டடி பட்டு நடக்க முடியாமல் திணறியபடியே ஒரு மரத்தின் மீது சாய்ந்து அமர்ந்தான் மதிவாணன். சீராக சுவாசிக்க முடியவில்லை, நெஞ்சமெல்லாம் பாரமாக இருந்தது, மூச்சு விடவே சிரமப்பட்டான். 'அவ்வளவுதான் இனி எல்லாம் முடிந்தது' கொஞ்சம் கொஞ்சமாக அவன் உயிர் போய்க் கொண்டிருந்தது.. காதுகள் இரண்டும் கேட்கும் திறனை இழந்து விட்டது போன்ற பிரம்மை தோன்றியது.. கண்களில் இருள் சூழ்ந்தது.

அந்நேரம் காரிருள் கானகத்தின் மத்தியில் அவன் இருக்கும் இடத்தின் அருகில் சிறு சலசலப்பு ஏற்பட்டது, அந்த சத்தத்தில் மயங்கும் நிலைக்குப் போனவன் மீண்டும் கண்களை திறந்தான்.

போராட உடலில் தெம்பில்லை, ஆனாலும் என்ன செய்வது 'எப்படியாவது உயிர் வாழ வேண்டும், அவளுக்காக உயிருடன் வாழ வேண்டும்' என்ற எண்ணம் அவனை அங்கிருந்து எழுந்து கொள்ள செய்தது.

எழுந்து நின்று பார்த்தான் கானகத்தின் கருமையில் எதிரில் நிற்கும் விலங்கு எது என்று அவனால் சரியாக இனம் காண முடியவில்லை.. அதன் கண்கள் மட்டும் கோரமாக பளிச்சிட்டது!! உடனே அச்சம் கொண்டான். அவன் ஒரு அடி பின்னால் எடுத்து வைக்கவும், சட்டென அந்த விலங்கு அவனை நோக்கி பாய்ந்தது, எதிர்த்து நிற்க உடலில் பலமும் இல்லை... தப்பி செல்ல மார்க்கமும் இல்லை அதனால் அச்சம் மீதுற கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான்.

அதனை தடுத்து போராடு என்று மனம் கட்டளையிட்டாலும் எதிர்க்கும் அளவுக்கு திராணி இல்லை... அரசன் கட்டளையிட்டு என்ன பயன்? செவி சாய்த்து போர் புரிய ஜீவன் இல்லையே... ஒரு நொடி 'நாம் அந்த விலங்கு இரையாக போகிறோம்' என்று அவன் சிந்தையில் உதித்த அந்த ஒரு நொடி!! திடீரென அந்த இடமே பெரும் சத்தத்திற்கு பிறகு அமைதியானது!

அந்த காரிருளின் அமைதியை உணர்ந்து மெதுவாக மதிவாணன் கண்களை திறக்க, வேட்டை துப்பாக்கியை கையில் ஏந்திய படி 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அங்கு நின்று கொண்டிருந்தான்.

"அண்ணா உங்களுக்கு ஒன்றும் இல்லையே இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க?" என்று கேட்டபடி அந்த சிறுவன் அவன் கொண்டு வந்திருந்த டார்ச் விளக்கை மதிவாணனை நோக்கி அடிக்க, அந்த வெளிச்சத்தில் இவனது கண்கள் கூசியது விரல் கொண்டு கண்களை மறைத்தான்.

அப்போதுதான் அந்த சிறுவன் மதுவாணன் உடலில் இருந்து ரத்தம் சொட்டுவதை கவனித்தான் "என்ன ஆச்சு உங்களுக்கு யார் இப்படி பண்ணது" என்று சிறுவன் விசாரிக்கும் போதே மதிவாணன் மயங்கி சரிந்திருந்தான்.

ஒரு நாள் பொழுது சென்றது.. மதிவாணன் கண்விழித்துப் பார்க்கையில், அவன் அருகில் அந்த சிறுவன் இல்லை! சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டான்… ஒரு குடிசையில் படுத்திருந்தான். மெல்ல மெல்ல எழுந்து கொள்ள முயற்சித்தான் கைகளில் கட்டு போடப்பட்டிருந்தது... அவன் கைகளை துளைத்து இருந்த தோட்டாக்கள் அங்கு ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைக்கப்பட்டிருந்தது… பச்சிலை மருந்து கொண்டு அவனது காயத்துக்கு கட்டு போடப்பட்டிருந்தது… "யார் இதனை எல்லாம் செய்தது.." என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வேட்டை துப்பாக்கியுடன் உள்ளே வந்தான் அந்த சிறுவன்.

"என்ன அண்ணா நீங்க நலமா இருக்கீங்களா?" என்று அச்சிறுவன் நலம் விசாரிக்க.. மதிவாணன் எதுவுமே பேசவில்லை அந்த சிறுவனின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்… 'யார் இவன்? எதற்கு தனக்கு உதவ வேண்டும்? இவன் இடத்தில் நான் இருந்திருந்தால் கூட இது போன்ற ஒரு உதவியை யாருக்கும் செய்திருக்க மாட்டேன்' என்பது மட்டுமே அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

"என்ன அண்ணா ஏதோ யோசிக்கிறீங்க போல, நேற்று இரவு நடந்தது எல்லாம் மறந்துட்டீங்களா? நேத்து நான் மட்டும் இல்லேன்னா புலி உங்களை இறையாக்கி இருக்கும்" என்று அவன் சொன்ன பிறகு நேற்று நடந்த நிகழ்வுகள் இவன் கண் முன் வந்து போனது உடல் எல்லாம் ரணமாக வலித்தது உடனே மீண்டும் படுத்துக் கொண்டான்.

"இந்த கட்டு எல்லாம் நீயா போட்டு விட்ட? பார்க்க சின்ன பையனா இருக்க உனக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?" மெதுவாக பேச்சு கொடுத்தான்..

"இந்த கட்டு எல்லாம் நான் போடல அது அந்த அக்கா தான் போட்டு விட்டாங்க… இருங்க, நீங்க எழுந்துட்டதாக சொல்லி உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வர சொல்லுறேன்" என்று சொன்னவன் அங்கிருந்த தோட்டாக்களை எடுத்துக் கொண்டு அந்த இடத்தையும் சுத்தம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

'இது பாதுகாப்பான இடம் தானா?' என்ற சந்தேகமும், வைஷ்ணவியை பற்றிய எண்ணமும் மதிவாணன் மனம் முழுவதும் இருந்தது, இருந்தும் உடலோ ஓய்வுக்கு கெஞ்சியது, அதனால் அமைதியாக ஓய்வெடுத்தான்.

சிறுது நேரத்திற்கு பிறகு அவன் இருந்த குடிசை பக்கம் ஏதோ சத்தம் கேட்க... பட்டென கண்களை திறந்து கொண்டவன் அச்சத்துடன் அந்த குடிலின் வாசலை பார்த்தான்.

கையில் உணவை எடுத்துக் கொண்டு மதிவாணன் இருந்த குடிலின் உள்ளே நுழைந்திருந்தாள் மலர்கணையாள்.

***

இந்திராவுக்கு நிம்மதியே இல்லாமல் போனது தினமும் ஏதாவது ஒரு விஷயம் வைஷ்ணவியை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.

'அவள் எங்காவது ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்கிறாள் என்று அறிந்து கொண்டால் கூட போதும்' என்ற மனநிலையில் இருந்தார்.. உண்மையில் வைஷ்ணவியின் தாயை போலவே கவலைபட்டார்.

பெற்றால் மட்டும் பிள்ளை என்றாகி விடுமா?, இல்லை பெறாமல் இருப்பதனால் மகள் இடத்தில் இருக்கும் ஒருவள் மீது பாசம் அல்லாமல் போய் விடுமா?

கடமைக்கென உணவு சமைத்து வைத்தார் இந்திரா, எப்போதும் யசோதாவின் அறைக்கு வைஷ்ணவி தான் உணவை எடுத்துக்கொண்டு செல்வாள்.. இப்போது வைஷ்ணவி இல்லை வழக்கத்திற்கு மாறாக யசோதாவே சமையலறை நோக்கி வந்தாள். என்ன சமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள பாத்திரங்களை திறந்து பார்த்தாள். எதுவும் அவளுக்கு பிடித்த உணவாக இல்லை.. அதற்காக கோபப்பட்டு சண்டை போடும் அளவிற்கு இந்திராவுக்கும் அவளுக்குமான உறவின் ஆரோக்கிய நிலை இல்லையே, அதனால் அமைதியாக தனது அறைக்குள் சென்றவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வேலைக்கு கிளம்பி வெளியே வந்தாள்.

எப்போதும் தாய்க்கும் மகளுக்கும் இடையே தூதுவராக இருக்கும் வைஷ்ணவி இப்போது இல்லை உணவு அருந்தாமல் மகள் செல்வதை அறிந்து கொண்ட இந்திரா வெகு நாட்களுக்குப் பிறகு தானே வாய் விட்டு கேட்டார் "சாப்பிடலையா சாப்பிட்டு கிளம்பு" என்றார்…


அதற்கு யசோதாவோ எனக்கு சாப்பாடு பிடிக்கவில்லை. நான் வெளியே சாப்பிடுகிறேன் என்றாள்.

"நான் சமைக்கிறதெல்லாம் மேடமுக்கு பிடிக்குமா என்ன? கண்டிப்பா பிடிக்காது, நான் இந்த வீட்டில் இருக்கிறதே உனக்கு பிடிக்கல இதுல நான் சமைக்கிறது மட்டும் உனக்கு பிடிக்குமா? எல்லாம் என் விதி, எந்த நேரத்துல என் அம்மா என்னை பெத்து போட்டு போனாளோ, கட்டினவனும் சரியில்ல, பெத்ததும் சரியில்ல, கடனுக்கேன்னு கண்ட பேச்செல்லம் கேட்டுட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்… புருஷன் கிட்ட அவச்சொல் வாங்கி, பொண்ணு கிட்ட அவச்சொல் வாங்கி, இன்னும் நான் ஏன் தான் உயிரோட இருக்கேனோ தெரியல" என்று மனம் போன போக்கிற்கு புலம்பிக் கொண்டிருந்தார் இந்திரா... முதலாவது இந்த புலம்பலை எல்லாம் கேட்க வைஷ்ணவி என்ற ஒரு ஜீவன் இந்த வீட்டில் இருந்தது, இப்போது அவளும் இல்லை என்ற போது இவருக்கு மேலும் மன அழுத்தம் அதிகமானது… இதை யசோதாவும் புரிந்து கொண்டாள் போல… அமைதியாக எதுவும் பேசாமல் நேராக சமையலறைக்குள் போனவள் அவளுக்கு பிடிக்காத உணவாக இருந்தாலும் சரி என்று தட்டில் எடுத்து வைத்து உண்ண தொடங்கினாள்.

உண்டு முடித்து கைகளை கழுவி விட்டு வெளியே வந்த யசோதா "உன் பிரண்டு பையனோட நிச்சயதார்த்தத்துக்கு நீ இன்னும் கிளம்பளையா?" என்று எங்கோ பார்த்தபடி கேட்க, புரியாதது போல முகத்தை வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தார் இந்திரா.


"அது தான் அந்த விஸ்வநாதன் பையனோட நிச்சயதார்த்தத்தை பத்தி தான் பேசிட்டு இருக்கேன்.. நீங்க இரண்டு பேரும் பிரெண்டு தானே? அதாவது 'ஜஸ்ட் ப்ரெண்ட்' சோ போகலையா?" என்று இதழில் தலும்பிய கேலி நகையுடன் விசாரித்தாள் யசோதா.


இந்திரா எந்த பதிலும் சொல்லவில்லை அப்படியே உறைந்து போய் யசோதாவை பார்த்துக் கொண்டிருந்தார் 'இவள் திருந்த மாட்டாள்' என்பது போல் இருந்தது அவரது பார்வை… அந்த பார்வையின் அர்த்தம் இவளுக்கும் நன்கு புரிந்தது 'நான் சரியா தான் பேசுறேன்' என்ற மிடுக்குடன் அவரை எதிர்ப்பார்வை பார்த்தவள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்தாள்.


****


குடும்பத்தோடு கோவிலுக்கு செல்கிறோம் என்று பொய் கூறி ஜீவாவை கங்காவின் இல்லத்திற்கு பெண் பார்க்க அழைத்து வந்தார் விஸ்வநாதன் ஜீவா அங்கு வைத்து எதையும் பேச முடியவில்லை.. தன் தந்தையை விட்டுக் கொடுக்க முடியாமல் மரியாதை நிமித்தமாக அமைதியாக அமர்ந்திருந்தான்.

மீராவுக்கும், ஜீவாவின் தங்கைக்கும் இந்த ஏற்பாடுகள் எதுவும் பிடிக்கவில்லை இருந்தும் அனைவரும் விஸ்வநாதன் மீது கொண்ட மரியாதையால் எதுவும் பேச முடியாமல், வெளியில் சிரித்தபடி கட்டாயத்தின் பேரில் அமர்ந்திருந்தனர்.

நேரம் சென்றது பட்டாடை உடுத்தி அல்லி மலரென அவர்கள் முன் வந்து நின்றாள் கங்கா… சாந்தமான அழகு, பேச்சில் நிதானம், தனக்கு ஒன்று வேண்டும் என்றாலும் முடிந்த அளவிற்கு அதில் பிறரின் விருப்பம் என்ன என்று அறிந்து கொண்டு செயல்படும் எண்ணம் கொண்டவள்.

தனது வாழ்க்கை மட்டுமே முக்கியம் என்று கண்மூடித்தனமாக முடிவெடுத்து அதன் வழி செல்லும் பெண்களைப் போல அல்ல இவள். தனது வாழ்க்கையே ஆனாலும் எது சரி? எது தவறு என்று நிதானமாக யோசித்து செயல்படும் நிலைப்பாடு கொண்டவள்.

'பெண்ணை பிடித்திருக்கிறதா?' என்று மாப்பிள்ளையிடம் அங்கு யாரும் விசாரிக்கவில்லை.. காரணம் அனைத்திற்கும் ஒப்புக் கொண்டதாக கூறி தான் விஸ்வநாதன் தனது குடும்பத்தை இங்கு அழைத்து வந்திருந்தார்.
அதனால் சம்பிரதாயத்திற்கு கேள்வி கேட்க கூட அங்கு யாரும் முன்வர வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ஆனால் இதையெல்லாம் கண்டு மீராவுக்கு இருப்பு கொள்ளவில்லை, அவனிடம் ஒரு வார்த்தை கேளுங்களேன் என்பது போல விஸ்வநாதனையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரோ ஒரு கணம் கூட அவரது குடும்பத்தாரின் விருப்பத்தையும் அவர்களுடைய எண்ணத்தையும் புரிந்து கொள்ளவில்லை, புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை, 'அவன் என் மகன், என் மகனுக்கு எது சரி என்று எனக்கு மட்டுமே தெரியும்' என்ற எண்ணத்தில் அவரது செயல்பாடுகள் இருந்தது.

"அப்புறம் என்ன தாம்பூலத்தை மாத்திக்கலாமே" என்று கங்காவின் உறவினர் ஒருவர் கூற, ஜீவாவின் தரப்பினரை தவிர, அங்கிருந்த அனைவரது முகமும் மலர்ந்தது…


கங்காவின் முகத்திலும் ஆர்ப்பாட்டம் இல்லாத புன்னகை வெளிப்பட்டது..


கங்காவை பொருத்தவரை காதல் என்பது திருமணத்திற்குப் பிறகு தனக்கானவருடன் உடன்பட்டு வாழ்வதுதான்… அந்த எண்ணத்தில் தான் தனது பெற்றோர் முழு மனதுடன் தனக்கு செய்து வைக்கும் திருமணத்திற்காக காத்திருக்கிறாள்.

யார் எண்ணத்தையும் பொதுவாக நாம் குறைத்து சொல்ல முடியாது… அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையும் அவர்களது விருப்பமுமே அவர்களது இத்தகைய எண்ணத்திற்கு அடிப்படை காரணமாக இருக்கும்.

தாம்பூலத்தை மாற்றிக் கொள்ளும் நேரம் வந்தது அப்போது

"ஒரு நிமிஷம் நான் கங்கா கிட்ட பேசணும்" என்று திடீரென கூறி எழுந்து நின்றான் ஜீவா…


"இப்போ எதுக்கு?" என்று ஜீவாவின் தந்தை வெளியே சிரித்தபடியே அவனை கண்டிக்க...


"தாம்பூலத் தட்டை மாத்தின பிறகு பேசிக்கலாமே" என்றார் கங்காவின் தந்தை..


"அதுக்கு முன்னாடி கண்டிப்பா உங்க பொண்ணு கிட்ட நான் பேசணும் அங்கிள், ப்ளீஸ் ஒரு ரெண்டே நிமிஷம் பேசிக்கிறேன்" என்றதும் கங்காவின் தந்தை அவரது மனைவியை பார்க்க, அவரோ கங்காவை பார்த்தார், கங்கா 'சரி' என்று தலையசைத்ததும் இவர்களும் அவர்களை தனியே பேச அனுமதித்தனர்.


செல்லும் இருவரையும் பார்த்து விஸ்வநாதனுக்கு இருப்பு கொள்ள முடியவில்லை, ஏதேனும் பேசி இந்த நிச்சயத்தை நிறுத்தி விடுவானோ என்ற அச்சம் மேலதிகமாகவே அவருக்கு இருந்தது.


இருவரும் மொட்டை மாடிக்கு வந்தனர்... இரண்டு நிமிடம் பெரும் அமைதி, கங்காவே முதலில் பேச ஆரம்பித்தாள். "பேசணும்னு சொன்னீங்க?" என்றாள் குரலை செருமியபடியே,


"முதலில் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன், எனக்கு இந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை, நான் வேற ஒரு பொண்ணை விரும்புறேன், எட்டு வருஷ காதல், என் அப்பா அதை புரிஞ்சிக்கல, என் வலி அவருக்கு சாதாரணமா போயிடுச்சு.. என் மனசை புரிஞ்சுக்க கூடிய நிலையில அவரு இல்லை"


"இப்போ அதுக்கு நான் என்ன பண்ணனும்?" சட்டென கேட்டாள்.


"எப்படியாவது இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தனும்?"


"???" இதற்கு எப்படி எதிர்வினை புரிவது என்று கங்காவுக்கு தெரியவில்லை...


"யோசிக்கிறதுக்கு ஒன்னுமில்லை, என்னை பிடிக்கலன்னு நீங்க ஒரே ஒரு வார்த்தை சொன்னா போதும் அப்புறம் எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன்..." மீண்டும் அவளிடம் மௌனம் தான் "கேட்டுகிட்டே இருக்கேன் நீங்க பதிலே சொல்லாமல் இருக்கீங்க?"


"எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்" என்றாள்


"சூப்பர்... இதையே காரணமா சொல்லிடுங்க, இந்த கல்யாணத்தை பத்தி கொஞ்சம் யோசிகனும்னு சொல்லிடுங்க..."


"உங்க நிலைமை எனக்கு புரியுது ஜீவா, உங்க வீட்டுல உங்க முடிவுக்கு மதிப்பில்லை, ஆனால் இதுல நான் என்ன பேசி கல்யாணத்தை நிறுத்த முடியும்னு எனக்கு தெரியல, என்னால எதையும் என் பேரன்சுக்கு புரியவைக்க முடியாது.. அவங்க இந்த கல்யாணம் நடக்கணும்னு நினைக்கிறாங்க, ஆனாலும் என்னோட எதிர்காலத்துக்காக கண்டிப்பா கீழே வந்து உங்களுக்காக பேசுறேன் நீங்க போங்க" என்றபடி அவனை அங்கிருந்து அனுப்பி வைத்தாள் கங்கா...


கீழே வந்த ஜீவாவை பார்த்து "கங்கா எங்க?" என்று அங்கிருந்தவர்கள் கேட்க...


"போன் பேசிட்டு இருக்காங்க இப்போ வந்திடுவாங்க" என்றான்.

"ரெண்டு பேரும் அப்படி என்ன பேசுனீங்க?" என்று கேட்டு ஆண்டிகள் சிலர் சிரிக்க... ஜீவாவோ 'இதுங்க வேற' என்பது போல முகம் சுழித்தான்.


இவன் கீழே வந்து கிட்ட தட்ட ஐந்து நிமிடம் கழித்து கீழே இறங்கி வந்தாள் கங்கா... "கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடலாம் அப்பா" என்றபடி அவள் புன்னகைக்க, அங்கிருந்த அனைவருக்கும் பெரும் நிம்மதி, ஆனால் ஜீவாவுக்கு தூக்கி வாரி போட்டது... கங்காவுக்கு பின்னால் நின்ற யசோதாவை பார்த்து.

விஸ்வநாதன் முகத்தில் மட்டுமல்ல, மீராவின் முகத்திலும் அதே அதிர்ச்சி தான்.

"இவள் எப்படி இங்கு?" என்று யோசிக்க கூட நேரம் கொடுக்காமல் கங்காவின் தந்தை தாம்பூல தட்டை எடுத்து விஸ்வநாதனை நோக்கி நீட்டவும், நிதானத்துக்கு வந்தவர் மீராவை சேர்த்துக் கொண்டு தாம்பூலத்தை மாற்றிக் கொண்டார்.

அனைத்தும் இமைக்கும் பொழுதில் நிகழ்ந்து விட்டது... இதனை எல்லாம் கிரகிக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஜீவா, ஓரத்தில் எதுவும் அறியாத சிறு பிள்ளை போல நின்ற யசோதாவை முறைத்து விட்டு வெளியே சென்றான். யசோதாவோ 'யாருக்கோ வந்த விருந்து' என்பது போல அந்நிகழ்வுக்கு சாட்சியாக நின்றாள்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer
பகுதி 17

அக்குடிசையின் வெளியே நின்று கொண்டிருந்தது வேறு யாரும் அல்ல மலர்கணையாள் தான்..

அவளை கண்டதும் இவள் யார் என்ற எந்த யோசனையும் மதிக்கு வரவில்லை… யாராக இருந்தால் என்ன? என்ற எண்ணத்தில் இருந்தபோதும் மனதின் ஓரத்தில் சிறு அச்சம் இருந்தது என்னவோ உண்மைதான்.

காயம் பட்டவனுக்கு சிறு தூசி கூட பல மடங்கு அச்சத்தை உண்டாக்கும், அதே நிலையில் தான் இப்போது மதியும் இருந்தான்.

மேலும் யாராவது தன்னை காயப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம். அது காரணம் எதிர்த்து போரிட இப்போது அவனிடம் வலிமை இல்லை அதனால் பார்ப்பவர்கள் அனைவரையும் சிறு சந்தேகத்துடனே நோக்கினான்.

"இப்போ உங்களுக்கு காயம் பரவாயில்லையா?" என்று கேட்டபடியே உணவினை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள் மலர் கணையாள்.

மதி எந்த பதிலும் சொல்லவில்லை அவள் முகத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன அமைதியா இருக்கீங்க காயம் எதுவும் மறுபடியும் வலிக்குதா? உறுத்தல் எதுவும் இருக்குதா இங்க பக்கத்துல எங்கேயும் ஆஸ்பத்திரி இல்ல அதனால தான் எனக்கு தெரிஞ்ச வரை உங்க காயத்துக்கு கட்டுப்போட்டு விட்டேன்…"

"உங்களுக்கு எப்படி இதுக்கெல்லாம் ட்ரீட்மெண்ட் பார்க்க தெரியும்?" தயங்கியபடி கேட்டான்… தவறாக வைத்தியம் பார்க்கப்பட்டு, பிறகு பின்விளைவை சந்திக்க நேரிட்டு விடுமோ என்ற பயம் தான் அக்கேள்வியை கேட்க தூண்டியது.

"நாங்களும் வேட்டை துப்பாக்கி பயன்படுத்துறவங்க தான்… இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்காம இவ்ளோ காலமா இங்க எப்படி வாழ முடியும்னு நினைக்கிறீங்க? ஆமா உங்களுக்கு எப்படி குண்டடி பட்டுச்சு? தம்பி சொன்னான் புலிகிட்ட மாட்டீங்களாமே!" ஏனோ அவள் சகஜமாக பேசுவது இவனுக்கு பெரும் நெருடலாக இருந்தது, 'எப்படி தெரியாத ஒருவருக்கு இப்படி உதவிகள் எல்லாம் செய்து எதுவுமே நடக்காதது போல சகஜமாக பேச முடிகிறது?' என்ற எண்ணம் மேலோங்கி இருக்க அவளது கேள்விகளுக்கு இவனால் பதில் அளிக்க இயலவில்லை… ஒரு வித பதட்டத்துடனே அமர்ந்திருந்தான்.


"என்ன பதிலே சொல்ல மாட்டேங்கிறீங்க சோர்வா இருக்கீங்களோ? உங்க முகத்தை பார்த்தாலே தெரியுது கண்டிப்பா சோர்வாக தான் இருக்கும்… சரி உங்களுக்காக தான் சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன் எடுத்து சாப்பிடுங்க" என்றபடி மலர் அவன் அருகில் உணவு தட்டை வைக்க அதையும் மலரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது தயக்கத்திற்கான காரணம் மலர் கணையாளுக்கு புரியவில்லை… உணவில் விருப்பமில்லாமல் தான் இப்படி யோசிக்கின்றானோ என்று நினைத்தவள் "பயப்படாதீங்க சாப்பாடு சுவையாக தான் இருக்கும் நல்லா சாப்பிட்டா தானே சீக்கிரம் உடம்பு குணமாகும்" என்றாள்.


உண்மையில் இவள் கள்ளம் கபடம் இல்லாமல் தான் தன்னிடம் இப்படி பேசுகிறாளா அல்லது தன்னை சுற்றி ஏதேனும் சதி நடக்கிறதா என்ற குழப்பத்திலேயே இருந்த மதி… "எனக்கு உதவி பண்ணனும்னு உங்களுக்கு எப்படி தோணுச்சு?" என்று கேட்டான். இப்போதுதான் அவனது தயக்கத்திற்கான காரணமே மலருக்கு புரிந்தது… அதனை உணர்ந்து மெல்ல இதழ் விரித்து சிரித்துக் கொண்டாள்.

"யோசிச்சு உதவி பண்ண நாங்க எல்லாம் உங்கள மாதிரி நகரத்தில் வாழுற ஆளுங்க கிடையாதே… எங்களை பொறுத்த வரைக்கும் எல்லாமே உயிர்தான். உணவுக்காக சில உயிர்களை அப்பப்போ வேட்டையாடினாலும் எங்க தேவைக்கு மீறி எந்த உயிரையும் நாங்கள் வதச்சது கிடையாது… கண்ணுக்கு எதிரே ஒரு உயிர் துடிச்சிட்டு கிடக்கும் போது ஒன்னு அதை காப்பாத்த முயற்சி பண்ணனும், இல்லையா வலியே இல்லாமல் மரணத்தை தழுவ அதுக்கு உதவி பண்ணனும்… அதை விட்டுட்டு ஒரு ஜீவன் போய்கிட்டு இருக்கும்போது அதை காப்பாத்த முயற்சி பண்ணா நமக்கு ஆபத்து வந்துடுமோன்னு யோசிக்கிறது, எந்த விதத்திலும் ஏற்புடைய செயலாக இருக்காது. நாங்க அப்படி இல்லை, அதனால் தான் நேத்து புலிக்கிட்ட இருந்து அந்த பையன் உங்கள காப்பாத்தினான்… 'யாருன்னே தெரியல அடிப்பட்டு கெடக்குறாங்கன்னு நேத்து வந்து என்கிட்ட சொன்னான்… நான் வந்து உங்கள பார்க்கும்போது உங்க உயிரு கொஞ்சம் கொஞ்சமா போய்கிட்டு இருந்தது.. அப்போ உங்களை காப்பாத்தணும்ங்கற எண்ணம் மட்டும் தான் எனக்குள்ள இருந்ததே தவிர நீங்க யாரு என்னன்னு எல்லாம் யோசிக்க தெரியல… நீங்க நல்லவரோ! கெட்டவரோ! உங்களை காப்பாத்த முடியும்னு தோணிச்சு, அதனால் எங்க கண்ணு முன்னாடி கஷ்டப்படுற உயிரை நாங்க காப்பாத்திட்டோம்… அந்த திருப்தி எங்களுக்கு போதும், உங்களுக்கான வினை பயன் என்னவோ அது கடவுள் உங்களுக்கு கொடுக்கட்டும்… கஷ்டப்படுறவங்கள பாத்து கடந்து போகுற குணத்தை கடவுள் எங்களுக்கு கொடுக்கல…" என்று அவள் பேசிக் கொண்டிருக்க இரண்டு நொடி அவளது கண்களில் நிலைத்தது மதியின் பார்வை… கண்களுக்கு புலப்படாத சிறு புன்னகையை அவன் இதழ்கள் வெளிப்படுத்தியது அடுத்த கனமே அமைதியாக அவள் கொண்டு வந்த உணவை உண்ணத் தொடங்கியிருந்தான்.

உண்டு முடித்தவன் சிறிது நேரம் அவ்விடத்திலேயே ஓய்வெடுத்தான்... நேரம் செல்ல செல்ல தனியாக அவ்விடத்தில் இருப்பது அவனுக்கு சலிப்பாக இருந்தது உடனே படுக்கையில் இருந்து மெல்ல கீழே இறங்கியவன், வெளியே வந்து தான் இருக்கும் இடத்தை சுற்றிப் பார்த்தான். சுற்றியும் மலைகள் மட்டுமே தூரத்தில் வயல்வெளி அதன் அருகே ஒரு வீடு ஆங்காங்கே நாற்பது, ஐம்பது மீட்டர் இடைவெளியில் ஓர் இரண்டு வீடுகள் அவ்வளவு தான்.

அவன் இருக்கும் இடத்தில் இருந்து சற்று தூரத்திலிருந்தது மலர்கணையாளின் வீடு...

சுற்றி சுற்றி பார்த்தான் தான் இருக்கும் இடத்தில் எந்த ஒரு நபரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை என்றவுடன் கால் போன போக்கில் அந்த வயல்வெளிக்குள் நடக்க ஆரம்பித்தான்...

ஒரு வழியாக நடந்து மலர் கணையாளின் வீட்டை அடைந்தான் அது அவளுடைய வீடு என்பது கூட இவனுக்கு தெரியாது யாரோ ஒருவரின் வீடு என்று நினைத்து அவ்வீட்டை அவன் கடந்து செல்ல நினைக்கையில் அவ்வீட்டின் உள்ளிருந்து சத்தம் வரத் தொடங்கியது யாரோ முனங்குவது போல இருந்தது...

இந்த நிசப்த நிலையில் திடீரென அந்த சத்தத்தை கேட்டவுடன் சற்று பயந்து போனான் மதி... சிறிது நேர இடைவெளியில் அந்த சத்தம் நின்றது, அதன் பிறகு அந்த சத்தம் வெறும் தனது பிரம்மை தான் என்று நினைத்துக் கொண்டவன் அவ்விடம் விட்டு நகர ஆரம்பித்தான் அப்போது மீண்டும் அந்த முனங்கள் சத்தம் கேட்டது...

பதறிப் போனவன் 'யாராவது இருக்கீங்களா?' என்று கேட்டான் அதற்கும் உள்ளிருந்து முனங்கல் சத்தம் மட்டுமே பதிலாக வெளி வந்தது...

"என்ன இது? யாரோட முனங்கள் சத்தம் இது? என்னவா இருக்கும்?" என்று வெகு நேரம் யோசித்தவன் என்னவாக இருந்தாலும் சரி என்று அந்த வீட்டின் கதவை திறக்க முயற்சி செய்தான் ஒரு நொடி ஒரே நொடி அந்த கதவை அவன் திறக்க போகவும் "யார் அது?" என்று கேட்டபடி அவ்விடம் நோக்கி வந்தாள் மலர்கணையாள்.

அந்த இடத்தில் திடீரென அவள் சத்தத்தை கேட்டதும் மிரட்சியுடன் திரும்பினான் மதிவாணன் "அது ஏதோ சத்தம்" என்று அவன் மென்று முழுங்க... கோபமாக அவனுக்கு எதிரே வந்து நின்றவள் "இப்படித்தான் அடுத்தவங்க வீட்டை திறந்து பார்ப்பீர்களா?" என்று காட்டமாக கேட்டாள்.

"அப்படி எல்லாம் இல்ல உள்ள ஏதோ முனங்கள் சத்தம் கேட்டுச்சு அதான்"

"போதும் இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க, உங்க இடத்துக்கு போங்க.. இது என்னோட வீடா இருக்க போயி பரவாயில்லை, இதுவே வேற யாரு வீடாவும் இருந்தா என்ன ஆகிறது, நீங்க பாட்டுக்கு கதவை திறந்துட்டு உள்ளே போக பார்க்குறீங்க? இந்த ஊர்ல யாரு வீட்டிலயும் பூட்டு கிடையாது, பூட்டு போட்டு பூட்டி விக்கிற அளவுக்கு இங்கே எந்த பொக்கிஷமும் இல்லை... அதனால் கதவு திறந்து தான் இருக்கும்... உள்ள இருந்து முனங்கள் சத்தம் வந்ததுன்னா அது மிருக்கத்தோட சத்தமாக இருக்கும்... வேட்டையாடி புடிச்சிட்டு வந்து போட்டதா கூட இருக்கும்..."

"எந்த உயிரையும் கஷ்டப்படுத்த மாட்டேன்னு சொல்லிட்டு இப்படி அரைகுறை உயிரோட விலங்குகளை அடைத்து வைக்கிறது சரியா?" என்று மதி கேட்க, சற்று தடுமாறினாள் மலர் கணையாள். உள்ளே இருப்பது விலங்கு அல்ல ஒரு மனித மிருகம் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும் அதனால் அமைதியாக இவனை இவ்விடம் விட்டு அகற்ற நினைத்தாள்.

"அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது, இவ்ளோ பேசுறீங்களே நீங்க பாட்டுக்கு கதவை திறந்து உள்ள போக பார்க்குறீங்க ஒருவேளை உள்ள நான் துணி மாத்திட்டு இருந்திருந்தா என்ன ஆகிறது?" அவள் அப்படி கேட்டதும் தான் மதிக்கு சற்று உரைத்தது, சிந்தித்து செயல் புரிந்து இருக்க வேண்டுமோ என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

அவன் அங்கிருந்து சென்ற பிறகு மலர்க்களையாள் தன் குடிசையின் உள்ளே சென்றாள்... அவள் சென்ற பிறகு முனங்கள் சத்தம் அதிகமாக வெளி வந்தது... அந்த சத்தத்தை வைத்து ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டான் மதி. 'நிச்சயம் இது அவள் சொன்னது போல விலங்கின் சத்தம் இல்லை இது மனிதனின் சத்தம் தான்' என்று... அவன் மனதில் சிறு சந்தேகம் முளைத்தது.

அந்த சந்தேகத்தை தெளிவு படுத்த அன்று இரவு வரை காத்திருந்தான். இரவு மலர் உணவை கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றாள். அதனை இருவரும் உண்டு முடித்து விட்டு உறங்கினர்...

மதி கட்டிலில் படுத்திருக்க, அவனுக்கு கீழே துணியை விரித்து அவனை காப்பாற்றிய அந்த சிறுவன் படுத்துக் கொண்டிருந்தான்.

மெதுவாக சத்தம் வராமல் வெளியே வந்த மதிவாணன், நிலவின் துணையோடு மலர் கனையாளின் குடிசையை நோக்கி பயணித்தான். அன்று முழு நிலவு என்பதால் வழியறிய வெளிச்சம் போதுமானதாக இருந்தது.

அவளது வீட்டை நெருங்கி செல்லவும் பெரும் அமைதி... சிறுது நேரத்தில் அந்த நிசப்தம் அழிந்து முனங்கள் சத்தம் வெளிவந்தது... கூடவே "இப்போ எதுக்கு இப்படி கத்துற" என்று வேதாசலத்தை திட்டிக் கொண்டே அவரது வாயில் ஏதோ மருந்தினை ஊற்றினாள் மலர்கணையாள்... இது அனைத்தையும் சன்னல் வழியே இருந்த ஒரு சிறு இடைவெளி வழியே பார்த்துக் கொண்டு நின்றான் மதிவாணன்.
 

Mythili MP

Well-known member
Wonderland writer



பகுதி 18

கங்காவுடன் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு ஜீவா அவனது வீட்டிற்கு செல்லவில்லை அவனது நண்பர்களுடன் தான் தங்கி இருக்கிறான்.

ஒருவர் மாற்றி ஒருவர் என வீட்டில் உள்ள அனைவரும் அவனுக்கு அழைப்பு விடுத்து பார்த்தனர், ஆனால் இவன் அவர்கள் ஒருவரது அழைப்பையும் ஏற்கவில்லை.

அந்த அளவுக்கு யசோதாவின் புறக்கணிப்பு ஜீவாவின் மனதை ஆட்கொண்டது. அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை எப்படி அவளால் எளிதாக தங்களுக்கு இடையேயான உறவினை மறந்து விட்டு கடந்து செல்ல முடிகிறது? 'அவளால் விலகி செல்ல முடியும் எனில் தன்னால் ஏன் முடியவில்லை?' நிகழும் அனைத்திற்கும் தன்னைத்தானே குற்றம் சாட்டிக் கொண்டான்.


ஒரே நொடியில் தனது எட்டு வருட காதலை சிதைந்து விட்டு சென்றாளே, கொஞ்சமும் உறுத்தல் இல்லாமல் என் விழிகளை பார்த்து கடந்து சென்றாளே, எப்படி அவளால் முடிந்தது? பதில் தெரியாமல் மனம் அல்லாடியது.


அனைத்தும் நடந்த பின்னரும் யசோதாவை அவனால் வெறுக்க முடியவில்லை, குடும்பத்திற்காக கங்காவை ஏற்கவும் முடியவில்லை..


'ஏன் இந்த காதல் அவள் மீது வந்தது' என்று உச்சபட்ச கோபத்தில் மது அருந்தியப்படியே தனது கையை சுவரில் ஓங்கி ஓங்கி குத்தினான்… அடித்த வேகத்தில் காயம் பட்ட இடத்திலிருந்து ரத்தம் கசிய தொடங்கியது.. அவனுக்கு வலித்தது.. இருந்தும் மனதில் உண்டாகியிருக்கும் வலியுடன் ஒப்பிடும்போது இது எல்லாம் பெரிதாக தோன்றவில்லை…


வெகு நேரம் சிந்தித்தான், மனம் வருந்தினான் பின்பு இறுதியாக ஒரு முடிவு எடுத்தவனாக அனைத்தையும் விடுத்து விட்டு இங்கிருந்து எங்காவது கிளம்பி சென்று விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டான்.


ஜீவா வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதாக அவனது நண்பன் மூலம் யசோதாவிற்கு தெரிய வந்தது.


'ஜீவா வெளிநாடு செல்ல இருக்கிறான்' என்ற தகவல் கேள்விப்பட்டு அவனை காண அவனது நண்பனின் இடத்துக்கு வந்து சேர்ந்தாள் யசோதா.

கங்கா ஜீவாவிற்கு நிச்சயக்கப்பட்ட பெண் மட்டுமல்ல யசோதாவின் தோழியின் தோழியும் ஆவாள்… இரண்டு மூன்று முறை தனது தோழியுடன் கங்காவை சந்தித்து இருக்கிறாள் யசோதா, சந்தித்தது சில முறை தான் எனினும் கங்காவுக்கும் யசோதாவுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது அதன் பெயரிலே கங்கா தனக்கு நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்கு யசோதாவையும் அழைத்திருந்தாள்.

பால்கனியில் அமர்ந்து சிகரெட் புகைத்து கொண்டிருந்தான் ஜீவா… அப்போது அவ்விடம் நோக்கி ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள் யசோதா… அவளைக் கண்டதும் புருவம் சுருக்கியவன் அடுத்த நொடி என்ன நினைத்தானோ அப்படியே கீழே இறங்கி சென்றான்.


உள்ளே வந்த யசோதா வெளியே நின்ற ஜீவாவின் நண்பனிடம் அவனை பற்றி கேட்டாள்.


"ஜீவா எங்கே?"


"மேல இருப்பான் நினைக்கிறேன்" என்று அவன் சொன்னதும், அவள் மேலறை நோக்கி செல்ல, படியில் இருந்து கீழே இறங்கி வந்தான் ஜீவா.


அவளிடம் பேச வேண்டும் என்று உள்ளம் உந்தினாலும் வார்த்தை வரவில்லை அதற்கு காரணம் அவள் மீது உள்ள கோபமா? என்று கேட்டால் நிச்சயமாக அவனிடம் பதில் இல்லை.. உண்மையில் அவள் மீது கோபம் கொண்டிருந்தால் இத்தனை நடந்த பிறகும் அவளை நோக்கி வந்திருக்க மாட்டான்.


எப்போதும் இவள் விஷயத்தில் நிதானத்தை மட்டுமே அவன் கையாண்டிருக்கிறான். இப்போதும் அப்படி தான்.


"ஜீவா உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்று சொன்னவள் சட்டென அவனது கரங்களைப் பிடித்து விறுவிறுவென உள்ளே இழுத்துச் செல்ல முயற்சித்தாள். ஆனால் அவனோ ஒரு அடி கூட நகரவில்லை…


'எந்த உரிமையில் இன்னும் இயல்பாக என் கரத்தை பற்றுகிறாய்' என்பது போல அவளைப் பார்த்தான். அவனது பார்வையின் அர்த்தம் இவளுக்கு புரிந்ததுவோ என்னவோ சட்டென கைகளை விளக்கிக் கொண்டவள் தயக்கம் உடைத்து அங்கேயே பேச ஆரம்பித்தாள்.


"அரவிந்த் நீங்க கொஞ்சம் வெளியே இருங்க… நான் ஜீவா கிட்ட தனியா பேசணும்" என்றதும் ஜீவாவின் நண்பன் அமைதியாக அவ்விடம் விட்டு நகர்ந்தான்.


"பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு இனி நமக்குள்ள பேசுறதுக்கு என்ன இருக்கு?" ஆக்ரோஷமாக ஜீவாவின் வார்த்தைகள் வெளிவந்தது.


"பாரு ஜீவா, பிராக்டிகலா நடந்துக்கோ தேவையில்லாம காதல்! காவியம்! ன்னு டயலாக் பேசி சிம்பதி கிரியேட் பண்ணாத… அதுக்கெல்லாம் எனக்கு இப்போ டைம் இல்ல"


"இதயமே இல்லாத ஒருத்தி கிட்ட இரக்கத்தை பத்தி பேசுற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல" அவனது வார்த்தைகள் யசோதாவின் இதயத்தை சுருக்கென்று தைத்தது.


இருந்தும் அதனை வெளி காட்டாமல் பேச்சினை தொடர்ந்தாள்.


"இப்ப நீ எதுக்காக வெளியூருக்கு கிளம்பிட்டு இருக்க? உனக்கும் கங்காவுக்கும் நிச்சயதார்த்தம் ஆயிடுச்சு அதை மறந்துட்டியா?"


"நான் எதையும் மறக்கல… அந்த நிச்சயம் என் சம்பந்தமே இல்லாம நடந்த ஒரு விஷயம் அதுக்காக காலமெல்லாம் என்னால கஷ்டப்பட முடியாது அதனால நான் இங்கே இருந்து கிளம்ப தான் போறேன்."


"எதுக்காக ஜீவா இப்படி பண்ற? உன்னை நம்பி ஒரு பொண்ணு" என்று கங்காவை குறிப்பிட்டு இவள் பேச வரும்பொழுது இடை நிறுத்தியவன் "அது என்னோட தனிப்பட்ட விஷயம் இதுல கருத்து சொல்றதுக்கு நீ யாரு? உனக்கும் எனக்கும் தான் ஒன்னும் இல்லன்னு சொல்லாம சொல்லிட்டு போயிட்டியே அப்புறம் எதுக்காக நீ இங்க வந்த? நான் எங்கேயோ போறேன் என்னமோ பண்ணுறேன் அதை பத்தி உனக்கு என்ன கவலை?"

"எனக்கு உன்மேல அக்கறை இருக்கு"

"பொல்லாத அக்கறை..." எரிச்சல் பட்டான்

"புரிஞ்சுக்க ஜீவா உன்ன பத்தி கவலைப்படறதுனால மட்டும் தான் நான் உன் வாழ்க்கையை விட்டு போறதுக்கு முடிவு பண்னேன்"


"இது என்ன புது டிராமா?" என்று சலித்துக் கொண்டான்.


"நான் பண்றது பேசுறது எல்லாமே உனக்கு நடிப்பா தெரிஞ்சா அதுக்கு நான் ஒண்ணுமே பண்ண முடியாது… என்னோட மனநிலையை ஒரு நாளும் உன்னால புரிஞ்சுக்க முடியாது" என்றவளின் தோள்களை வலிக்க நெரித்து பிடித்தான்.


"வாயைத் திறந்து ஏதாவது சொன்னா தானேடி புரியும்… உனக்குள்ள என்ன பிரச்சனை இருக்கு, என்ன கஷ்டம் இருக்குன்னு உன் மனசை ஊடுருவி பார்க்கிறதுக்கு நான் ஒன்னும் ஞானி இல்லை… சாதாரண மனுஷன்!! உனக்கு அடிபட்டா வலிக்கும்னு எனக்கு புரியுமே தவிர, உன் வலியோட அளவை என்னால உணர முடியாது… உன்னோட வலி என்னன்னு நீ சொன்னா மட்டும்தான் எனக்கு தெரியும்… எதையுமே சொல்லாம எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே வச்சுட்டு கடைசில எல்லா பழியையும், பாவதையும் என்னை சுமக்க சொன்னா? அது எந்த விதத்தில் நியாயம்? பதில் சொல்லு…" கட்டுப்பாட்டை மீறி கத்தினான்… அவன் பிடியில் வலி தாங்க முடியாமல் நின்ற யசோதா, வேகமாக அவனது கரத்தை உதறி தள்ளி விட்டு நகர்ந்தாள்.


"நான் ஒரு ரேப் விக்டம், இதுக்கு மேலயும் உனக்கு ஏதாவது காரணம் சொல்லனுமா" என்று கேட்ட யசோதாவின் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது. அவள் சொன்னதன் அர்த்தம் உணர்ந்து பதில் கூற ஜீவாவுக்கு இரண்டு நொடி மட்டுமே தேவைப்பட்டது,


"சோ வாட்…" என்றவனை திகைத்து பார்த்தாள். அவனுக்கு தேவை அவளது உடல் என்றால் பதில் சொல்ல அவகாசம் கேட்டிருப்பான் ஆனால் அவள் மனம் மட்டுமே போதும் என்று நின்றவனுக்கு கடந்த காலம் ஒரு பொருட்டாக தெரியவில்லை... அதனால் அவனது பதிலில் எந்த வித தடுமாற்றமும் இல்லை.


"எனக்கு தேவை எல்லாம் உன்கூட ஒரு வாழ்க்கை, நமக்கான ஒரு வாழ்க்கை அவ்ளோதான், அது மட்டும் தான்…" என்றவனை இந்நொடியே அணைத்துக் கொள்ள அவளது கைகள் பரபரத்தாலும் மனம் தடுத்தது… மறு வார்த்தை பேச முடியவில்லை இன்னும் சிறிது நேரம் இங்கு இருந்தாலும் தனது கட்டுப்பாட்டை மீறி உணர்வுகள் வெளிபட்டு விடும் என்ற அச்சத்தில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அமைதியா அவனை பார்த்தபடியே அங்கிருந்து நகர்ந்தாள் யசோதா… அவளது இந்த கண்ணீரே ஜீவாவுக்கு போதுமானதாக இருந்தது. 'இன்னும் அவள் மனதில் நீ இருக்கிறாய்' என்பதை அந்த கண்ணீர் அவனுக்கு உணர்த்தியது. மனதில் உண்டான வலிகள் மறைந்து போன உணர்வு.

யசோதா அவ்வீட்டை விட்டு வாகனத்தில் வெளியே வரவும், ஜீவாவை தேடி விஸ்வநாதன் அவ்விடம் வரவும் நேரம் சரியாக இருந்தது… ஜீவா வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதை அவரிடமும் அரவிந்த் கூறி இருந்தான். அதனால் தனது மகனை காண அவ்விடம் வந்தார்.

வந்தவர் எதிரில் யசோதாவை கண்டது பேரதிர்ச்சியாகினார்.


கோபத்தில் இடம் பொருள் ஏவல் என எதையும் யோசிக்காதவர் வழியில் யசோதாவின் வண்டியை மறித்து நிறுத்தினார். "நீ எங்க இங்க வந்த?" என்று பல்லிடுகில் வார்த்தைகளை உதிர்த்தார்.


கண்களில் வழிந்த கண்ணீரை அவர் காணாத வண்ணம் மறைத்துக் கொண்டவள் "என்ன கேட்டீங்க அங்கிள்" அங்கிள் என்ற வார்த்தையில் அழுத்தத்தை கூட்டினாள்.


இவர்கள் இருவரும் வெளியே நுழைவாயில் அருகே பேசிக் கொண்டிருப்பதை வெளியே சற்று தொலைவில் இருந்த ஜீவாவின் நண்பன் அரவிந்த் பார்த்துக் கொண்டிருந்தான்.


"நிச்சயம் பண்ணுற மாதிரி பண்ண வச்சு, அவனை இங்க இருந்து வெளிநாட்டுக்கு போக வைக்க பிளேன் பண்ணுறியா? இது எல்லாம் உன் வேலை தான்னு எனக்கு நல்லாவே தெரியும்"


"தேவை இல்லாமல் பேசி… என்னை கோவப்பட வைக்காதீங்க" என்றவள் அவரை கடந்து செல்ல பார்க்க…


"ரொம்ப நடிக்காத… உன் லட்சணம் என்னன்னு தெரிஞ்சா என் பையனே உன்னை வேண்டாம்னு சொல்லிடுவான்…"


"என்னோட லட்சணமா? அப்படி என்ன சார் அவலட்சணத்தை என்கிட்ட கண்டுட்டீங்க?"


"என் பையனை கல்யாணம் பண்ண உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு? உன்னோட பதினைச்சு வயசுல உனக்கு என்ன நடந்ததுன்னு தெரியுமா?" என்றவனை இதழ் வளைத்து சிரித்தபடி பார்த்தாள்.


"என்கிட்ட இப்படி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு மிஸ்டர் விஸ்வநாதன்? என்னோட பதினைந்து வயசுல எனக்கு நடந்த எதுவும் மறக்கல, அன்னைக்கு அந்த இடத்தில உங்களை நான் பார்த்ததையும் மறக்கல" என்று அவள் சொன்னதும் விஸ்வநாதனின் முகம் வியர்த்து வடிய ஆரம்பித்தது…


"என்ன... என்ன சொன்ன? நானா? என்னை எங்க பார்த்த? எப்போ பார்த்த"


"ரொம்ப பதறாதீங்க அங்கிள், ஏற்கனவே உங்களுக்கு ஹார்ட் பிரோப்ளேம் இருக்கு, பதட்டத்தில ஏதாவது ஆகிட்டா, உங்க பையன் கூட நான் வாழுறத கண் குளிர பார்க்குற பாக்கியம் உங்களுக்கு கிடைக்காமல் போயிடும்"


"ஏய்…"


"ரிலேக்ஸ் அங்கிள், இவ்ளோ நாள் ஜீவாவை விட்டு விலகிடலாம்னு தான் நினைச்சேன், ஆனால் இப்போ யோசிச்சு பார்க்கும் போது தான் ஒரு விசயம் புரியுது… மத்தவங்களுக்காக நான் ஏன் என் வாழ்க்கையை சேக்ரிபைஸ் பண்ணிக்கணும்… நீங்க எல்லாரும் சந்தோஷமா வாழும் போது நான் மட்டும் ஏன் வாழ கூடாது..."


"நீ என்ன பேசுற?" விளக்க இயலாத ஒரு அச்சம் அவர் கண்களில் வெளிப்பட்டது…


"நான் பேசுறது உண்மையாவே உங்களுக்கு புரியலையா? சரி விளக்கமா சொல்லுறேன் 'குணசேகர்' யாருன்னு உங்களுக்கு நினைவு இருக்கா? எப்படி உங்களுக்கு நினைவு இல்லாமல் போகும், அவர் உங்க தங்கச்சி ஹஸ்பண்ட் ஆச்சே…" என்றதும் பதட்டமானவர் நிற்கமுடியாமல் தடுமாறி காரினை பிடித்துக் கொண்டார்.


"பார்த்து அங்கிள்… இன்னும் கொஞ்சம் காலம் நீங்க உயிரோட இருக்கணும்னு நான் ஆசைபடுறேன்… என் ஆசைக்கு ஆயுளை குறைச்சிடாதீங்க" என்று நக்கலாக சொன்னவள் நொடியில் தன் முக பாவனையை மாற்றி "எந்த குடும்பத்துக்காக எங்க குடும்பத்தை அழிச்சிங்களோ அந்த குடும்பத்தையே உங்ககிட்ட இருந்து பிரிக்கிறேன்..."


"இல்ல நான் எதுவும் பண்ணல"


"நீ என்ன பண்ணன்னு உன் மனசாட்சிக்கு தெரியும்… உன் பையனை கல்யாணம் பண்ணி உன் கண்ணு முன்னாடியே வாழுறேன்... அப்போ தானே உண்மை ஒவ்வொரு நாளும் உன்னை சுடும்... அந்த வலியில வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நீ தவிக்கிறதை நான் பார்க்கணும்" என்றதும் அவர் நெஞ்சை பிடித்துக் கொள்ள "நீ செத்தாலும் உன் கல்லறைக்கு மலர் வளையம் வைக்க உன் பையன் கூட ஜோடியா வருவேன்" என்று கூறிவிட்டு அவள் போக்கில் வாகனத்தை செலுத்தினாள்.. இங்கு விஸ்வநாதனோ நெஞ்சை பிடித்துக் கொண்டு நடு ரோட்டில் அப்படியே மயங்கி சரிந்தார்.


அங்கு நடந்த அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்த அரவிந்த், விஸ்வநாதன் மயங்கி சரியவும் அவரை நோக்கி ஓடி வந்தான்.


"ஐயோ அங்கிள்…" பதறியவன் உடனே ஜீவாவின் எண்ணிற்கு அழைக்க, ஜீவாவும், இவனும் சேர்ந்து உடனே விஸ்வநாதனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

****

தனக்கான இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி… எதையும் சிந்திக்க தோன்றவில்லை, மாறாக எதையாவது யோசித்தால் தலை வெடித்து விடும் போல பாரமாக இருந்தது… அவளது வாழ்க்கை நதியில் அடித்துச் செல்லும் இலையை போன்றது தான்… அதற்கென தனி ஒரு வழி கிடையாது. பல நேரம் நதியின் பாய்ச்சல், சில நேரம் காற்றின் உந்துதல் அப்படியே நதியில் மிதந்து செல்லும் இலை போல அவள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.


தனக்கென்று ஒரு இலக்கையும், பாதையையும் வகுத்து கொள்ள தெரியாத பலரின் வாழ்க்கையை போல தான் வைஷ்ணவியின் வாழ்க்கையும்.


'நீ என்ன சொல்கிறாய்? சொல் கேட்கிறேன்…'


'உனக்கு என்ன செய்ய வேண்டும்? கேள் செய்கிறேன்…'


என்று பிறர் சொல்லில் பயணம் செய்தவளுக்கு தன்னாலும் ஒரு முடிவு எடுக்க முடியும் என்ற எண்ணமே வராமல் போனது… அதற்கு முழுவதும் அவளையும் குற்றம் சொல்லி விடஇயலாது, தலைவன் இல்லாத குடும்பம், ஆசான் இல்லாத பள்ளிக்கூடம் என்றாகி போனது, அவள் வாழ்க்கை வழிகாட்டி இல்லாத வாழ்க்கை அதனால் முழுவதும் பிழையாகி போனது.


வைஷ்ணவியை காண அவள் இருந்த அறைக்குள் நுழைந்தார் மாணிக்கம்… தனது அறைக்குள் யாரோ ஒருவர் நுழைந்த அரவம் தெரிந்தது, அந்தப் பக்கம் பார்வையை திருப்பினாள் வைஷ்ணவி…


"பல்லவிமா எப்படிடா இருக்க?" என்று கேட்டபடி கண்ணீருடன் உள்ளே நுழைந்தவரை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்…


"யார் நீங்க?"


"அப்பாவை தெரியலயா உனக்கு?"


"அப்பாவா? எனக்கு அப்பா இருக்காங்களா?" குழம்பினாள்.


"பல்லவி உண்மையா அப்பாவை உனக்கு நினைவு இல்லையா?"


"சத்தியமா நீங்க யாருன்னு எனக்கு தெரியல, நானே பல குழப்பத்தில் இருக்கேன் தயவு செய்து இங்கயிருந்து வெளியே போங்க…"


"பல்லவி" நலிந்து ஒலித்தது அவரது குரல்…


"ப்ளீஸ் உங்க டிராமாவ நிறுத்திட்டு கொஞ்சம் வெளியே போறீங்களா?" என்று தன்னிலை மறந்து கத்தினாள். அந்த அளவுக்கு பெரும் கோபத்தில் நின்றாள் அது இயலாமையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்.

அனைவரது தேவைக்கும் செயல் படும் நூல் பாவை ஆகிவிட்டோமோ என்ற கோவம் அது…

அவளது அந்த சீற்றத்தைக் கண்டு மறு வார்த்தை பேசாமல் அமைதியாக அவ்விடம் விட்டு வெளியேறினார் மாணிக்கவேல்.


வெளியே சென்றவர் அலைபேசியை எடுத்து யாரிடமோ பேச தொடங்கி இருந்தார்.


நேரத்திற்கு நேரம் சரியாக உணவு மட்டும் இவளது இடம் தேடி வந்துவிடும்… ஆரம்பத்தில் அவ்வுணவினை உன்ன மறுத்தவள், பின்னர் தன் நலன் கருதி உண்ண ஆரம்பித்து இருந்தாள்.


இவளை இங்கு அழைத்து வந்த ஆரியன், அந்த நாளுக்கு பிறகு ஒரு நிமிடம் கூட இவளது கண்ணில் படவில்லை. இரண்டு நாள் ஆனது… வேலை காரணமாக வேறு ஒரு ஊருக்கு சென்று இருந்தான். அது கூட வைஷ்ணவிக்கு தெரியாது, அவன் விட்டு சென்ற அந்த அறையை விட்டு அவள் வெளியவே வரவில்லை, அங்கிருந்து செல்ல அவளுக்கு மணமில்லை போல, அவள் நினைத்திருந்தால் ஆரியன் அந்த வீட்டில் இல்லாமல் இருந்த அடுத்த நொடியே இங்கிருந்து கிளம்பி இருக்கலாம் ஆனால் இவள் அப்படி செய்யவில்லை… ஏன்?

அவளுக்கு தடுப்பணை அமைக்க அவன் எந்த செயல்பாடும் மேற்கொள்ளவில்லை… சர்வ சுதந்திரத்துடன் அவளை அங்கு நடமாட வைத்திருந்தான். இருந்தும் அவள் செல்லவில்லை... 'எங்கு செல்வது?' என்ற பெரிய கேள்வியுடன் அமர்ந்திருந்தாள்.


இரவு நேரம்…


கனத்த காலடி சத்தத்துடன் வைஷ்ணவி அறைக்குள் ஒருவன் நுழைந்திருந்தான்… அவன் நுழைந்த அடுத்த ஐந்தாவது நிமிடம் "ஆரியா" என்று வைஷ்ணவியின் சத்தம்… ஆம் அவள் தான் அழைத்தாள்… அதுவும் அவனது பெயரை குறிப்பிட்டு அவள் தான் அழைத்தாள்.


அவள் ஆரியனது பெயரை அழைக்கவும், ஊரில் இருந்து வந்த ஆரியன் அவ்விட்டின் மாடிப்படி ஏறவும் நேரம் சரியாக இருந்தது.


சத்தத்தை கேட்டு புருவம் சுருக்கியவன் சத்தம் வந்த வைஷ்ணவி அறையை நோக்கி செல்ல, அவளது அறையில் இருந்து வெளியே வந்தான் கருணா.
 

Mythili MP

Well-known member
Wonderland writer


பகுதி 19


வைஷ்ணவி இருக்கும் அறையில் இருந்து வெளியே வந்த கருணாவை கேள்வியாக பார்த்தான் ஆரியன்.


"இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற?" என்ற கேள்வி கருணாவின் செவிகளை துளைக்க… இரண்டு நொடி தாமதத்திற்கு பிறகு உரிய பதிலை எடுத்துரைத்தான் கருணா


"உன்னை பார்க்க தான் இங்க வந்தேன் ஆனா உள்ள வேறு யாரோ இருக்காங்க! நீ தான் இருக்கேன்னு நெனச்சு நான் கவனிக்காம உள்ள போயிட்டேன் திடீர்னு என்னை பார்த்ததும் அவங்க பயந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்…" என்று சைகை மொழியில் பேசினான்.


"அவள் யாருன்னு உனக்கும் அடையாளம் தெரியலையா?" என்று ஆரியன் கேட்டதும், சட்டென தெளிவான பக்குவத்துடன் "இது நம்ம பல்லவி மாதிரி தான் இருக்கு ஆனால்" என்று சைகை மொழியில் யோசித்தவனை இரண்டு நொடி மேலும் கீழும் பார்த்த ஆரியன் "இவள் பல்லவி தான்" என்று அவனது யோசனைக்கு முற்று புள்ளி வைத்து விட்டு வைஷ்ணவியின் அறைக்குள் நுழைந்தான்.


உள்ளே வைஷ்ணவியோ மொழியற்ற சிலை போல ஒரு மூலையில் அதிர்ந்து நின்று கொண்டிருந்தாள்.


"என்ன ஆச்சு?" ஆரியன் கேட்க அவளிடம் பதில் இல்லை இரண்டு முறை மென்மையாக கேட்டுப் பார்த்தான் அப்போதும் அவள் அசையாமல் அப்படியே நிற்க "உன்னை தான் என்ன நடந்தது?" என்று அவன் குரலை உயர்த்தவும் அந்த சத்தத்தில் நிதானத்திற்கு வந்தவள்… இமைத்தட்டி அவனை கலக்கமாக பார்த்தாள், அவனைப் பார்த்துவிட்டு அப்படியே கர்ணாவின் மீது அவள் பார்வை திரும்ப அதனை கவனித்த ஆரியன், "கருணா நீ கொஞ்சம் வெளியே இரு" என்று கூற, அவனும் அந்த அறையை விட்டு வெளியேறினான்.


அனைவரும் வெளியே சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட ஆரியன் "என்னை பாரு.. உனக்கு என்ன பிரச்சனை? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு" முதலும் கடைசியுமாக மனம் திறந்து அவளிடம் பேச ஆரம்பித்தான்! அவளையும் பேசச் சொன்னான்!! ஆனால் அவளோ இன்னும் அரண்டு போய் நின்று கொண்டிருந்தாள்.


அவளது அமைதி மேலும் மேலும் இவனுக்கு கோபத்தை கொடுத்தது "பல்லவி"


"இல்ல.. இல்ல.. இல்ல.. நான் பல்லவி இல்ல நான் வைஷ்ணவி! வைஷ்ணவி மட்டும்தான்… தயவு செய்து இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க மறுபடியும் மறுபடியும் என்னை பல்லவின்னு கூப்பிடாதீங்க…" என்று கதறி அவள் முழங்காலிட்டு அப்படியே அவ்விடத்தில் அமர்ந்து கொண்டாள்.


அவளது கண்ணீரை கண்டு கரையும் நிலைமையில் எல்லாம் இப்போது ஆரியன் இல்லை அவனைப் பொறுத்தவரை அவனது கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும் அதை அவள் சந்தோஷமாக சொல்லி முடித்தாலும் சரி, துக்கத்துடன் சொல்லி முடித்தாலும் சரி என்பது போல அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.


இன்னும் ஆரியன் இங்கேயேதான் இருக்கிறானா என்பதை அறிய அழுது கொண்டே வைஷ்ணவி குறை கண் போட்டு அவ்விடம் பார்க்க "இங்க தான் இருக்கேன். இன்னும் போகல அழுது முடிச்சுட்டு விஷயம் என்னன்னு சொல்லு" என்றான்.


"எத பத்தி கேக்குறீங்க? அதான் நான் பல்லவி இல்லைன்னு சொல்லிட்டேன்ல, மறுபடியும் மறுபடியும் இப்படி சந்தேக கண்ணோட என்னை பார்க்காதீங்க? அந்த பார்வை என்னை என்னமோ பண்ணுது, மனசு எல்லாம் அழுத்தமாகுது, நீங்க நினைக்கிற பல்லவி நான் இல்லங்கும் போதும் உங்க கேள்விக்கு எப்படி என்னால பதில் சொல்ல முடியும்? தயவு செய்து என்னை புரிஞ்சுக்கோங்க" என்றவளின் எதிரே சாவகாசமாக ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அமர்ந்தவன் ஒரு ஆப்பிளை எடுத்து அதனை துண்டுகளாக வெட்ட ஆரம்பித்தான். அவனது செயலை புரியாமல் பார்த்தபடி கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் வைஷ்ணவி.


ஆப்பிளின் ஒரு துண்டை வைஷ்ணவியிடம் அவன் நீட்ட முதலில் மறுத்தவள், அவனது தீ பார்வையில் மௌனமாக அதனை பெற்றுக் கொண்டாள். "சாப்பிடு"


"இல்லை வேண்டாம் எனக்கு பசிக்கல" என்றவள் அருகில் இருந்த கடிகாரத்தை பார்த்தால் மணி இரவு பதினொன்று 'இவ்வேளையில் எப்படி உண்ண?' என்பது போல அவள் பார்த்துக் கொண்டிருக்க… 'ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுறதால ஒன்னு வந்துறாது சாப்பிடு' என்ற அவனது அழுத்தமான வார்த்தைகளில் தானாக அவளது கரம் ஆப்பிளை உண்ண மேலோங்கியது.. அதனை கண்ட ஆரியனின் உதட்டில் மெல்லிய நகை இளைந்து ஓடியது.


ஆப்பிள் துண்டை அவள் ஒரு கடி கடிக்க சட்டென அவளது கரத்தை பற்றி இருந்தான் ஆரியன், 'என்ன?' என்பது போல அவள் திகைத்து முழிக்க "சிலருக்கு முகம் கூட ஒரே மாதிரியா இருக்கலாம் ஆனா பழக்க வழக்கம் ஒரே மாதிரி இருக்காது…" என்றவனது கூற்று இப்போதும் வைஷ்ணவிக்கு விளங்கவில்லை…


"பல்லவிக்கு இடது கை பழக்கம்" என்றதும் வைஷ்ணவியின் இடகரத்தில் இருந்த ஆப்பிள் துண்டு பிடிமானம் இன்றி அப்படியே கீழே விழுந்தது.


"ஒரே உருவம் உள்ள ரெண்டு பேர் இந்த உலகத்தில இருக்கலாம்!? ஆனால் அவங்களுடைய பழக்க வழக்கமும், குரலும் இன்னொருத்தங்களுக்கும் அப்படியே இருக்கும்னு சொன்னா என்னால அதை நம்ப முடியல, நான் உன்னை உருகி உருகி காதலிக்காமல் இருந்து இருக்கலாம் ஆனால் உன் குரலை கூட கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு வாழ்க்கையை நான் உன் கூட வாழல, உன் கூட இதே அறையில் எட்டு மாசம் நான் வாழ்ந்திருக்கேன் உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் பார்வைக்குமான அர்த்தம் எனக்கு தெரியும் உன்னை நான் நெருங்காமல் இருந்திருக்கலாம் ஆனா உன்னை கவனிக்காமல் இருந்ததே கிடையாது.. இங்கே இருக்க எல்லாரும் நீ பல்லவி இல்லன்னு சொல்றாங்க அவங்க என்ன சொன்னாலும் நான் அதை நம்ப போறது கிடையாது ஏன்னா நான் என்ன தவிர யாரையும் எப்போவும் நம்புனது கிடையாது.. ஆனால் உன்னை நம்பினேன்" என்ற அவனது வார்த்தையில் அண்டம் கலங்கி நின்றாள் பெண்ணவள். அவளை அறியாமல் விழியோரம் விழி நீர் கசிந்து ஓடியது.


ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து அவள் அருகே வந்து அமர்ந்தான் ஆரியன்.. உள்ளம் நடுங்க தன் அருகே அமர்ந்திருந்தவனை ஏறிட்டுப் பார்த்தாள் வைஷ்ணவி


"கடைசியாக கேட்கிறேன் எங்கிட்ட இருந்து எதையாவது மறைக்கிறியா?" என்று கேட்டவனின் குரல் நலிந்து வெளி வந்தது, அந்தக் குரலே மனதளவில் அவன் மிகுந்த துன்பத்தில் உள்ளான் என்பதை வைஷ்ணவிக்கு எடுத்துரைத்தது.


ஆரியனின் எந்த கேள்விக்கும் வைஷ்ணவியிடம் பதில் இல்லை அப்படியே உறைந்து போய் அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.


"உண்மையை சொல்லு உனக்கு நம்ம லைப் பத்தின எந்த நியாபகமும் இல்லையா?" முதல் கேள்விக்கே அவளிடத்திலிருந்து இன்னும் பதில் வரவில்லை இருந்தும் இரண்டாவது கேள்வி கேட்டான்.


சிறு தயக்கத்துடன் அனிச்சையாக அவளது தலை 'இல்லை' என்று மறுப்பாக அசைய…


"ஏன் பொய் சொல்லுற பல்லவி?" என்று கேட்டவனின் மன வலியை உணர்த்த வார்த்தைகள் இல்லை "உன் வார்த்தையிலும் பார்வையிலும் ஒரு துளி கூட உண்மை இல்லைடி, நடந்த விபத்தில எல்லா நினைவுகளும் உனக்கு அழிந்து போயிருக்கலாம் ஆனால் இப்போ உன் கண்ணுல இருக்க அந்த உணர்வு உனக்கு எதுவுமே மறக்கலன்னு எனக்கு தெரிய படுத்திட்டே இருக்கு… புரியாமல் பேசுறேன்னு மட்டும் நினைக்காத, உன்னை புரிஞ்சு தான் பேசுறேன்… எல்லா உண்மையும் தெரிஞ்சு தான் பேசுறேன், என் வலி யாருக்கும் தெரியாது எப்படி சொல்லி உனக்கு புரிய வைக்கிறதுன்னும் எனக்கு தெரியல, இந்த கண்ணு சொல்லுதுடி உனக்கு என்னை நினைவு இருக்குன்னு, ஆனால் ஏன் நீ அதை ஒத்துக்க மாட்டிங்குற? எதுக்காக என்னை விட்டு தள்ளி போற? இந்த கேள்விக்கு எல்லாம் உன்கிட்ட பதில் இருக்காதுன்னு எனக்கு தெரியும்… ஆனால் இந்த கேள்விக்கு எல்லாம் என்ன பதில்னு எனக்கு தெரியும்" என்றவன் அவளை விடுத்து எழுந்து கொண்டான்…


திடீரென அவனது இந்த விலகல் வைஷ்ணவியின் மனதில் படபடப்பை ஏற்படுத்தியது.


"செய்யாத தப்புக்கு ஏழு வருஷம் தண்டனை அனுபவிச்சு இருக்கேன். உண்மை இது தான்னு தெரிஞ்சும் யாருகிட்டயும் அதை சொல்ல முடியாம மனசுக்குள்ளயே போட்டு புழுங்கி ஒவ்வொரு நாளும் செத்து இருக்கேன். எல்லாமே ஒரு நாள் நல்லபடியா மாறும்ன்னு தன்னை தானே ஏமாத்திட்டு வெளியில தைரியமா இருக்க மாதிரி ஒரு முக மூடியை போட்டு கஷ்டத்தை மறைக்கிற பல பேரில நானும் ஒருத்தன். எனக்கும் வலிக்கும் என்னாலையும் ஏமாற்றத்தையும் இழப்பையும் தாங்கிக்க முடியாது, அந்த ஒரே காரணத்துக்காக தான் எல்லாரையும் என்ன விட்டு ஒரு அடி தள்ளி நிறுத்தினேன். என் வாழ்க்கையில் நான் சந்தித்த எல்லாரும் ஏதோ ஒரு வகையில என்னை ஏமாத்தி இருக்காங்க… கடைசில நீ கூட என்னை ஏமாத்திட்டியே பல்லவி!" என்றதும் அவளின் உடல் நடுங்கி ஒடுங்கியது.


"இன்னைக்கு நீ சொன்ன ஒரு விஷயம் மட்டும் உண்மை. நீ பல்லவி இல்ல நீ எப்பவுமே பல்லவியா இருந்ததும் இல்ல… எவ்ளோ நாடகம்! ஒரு பொண்ணால இந்த அளவுக்கு நடிக்க முடியுமா? என்னை கொல்லுற அளவுக்கு நான் உனக்கு என்ன பண்ணேன்?" என்றவன் அவனது கோட் பாக்கேட்டில் இருந்த டைரியை எடுத்து அவள் அருகே வீசினான்.


அதனை கண்டு கண்ணீருடன் அப்படியே கையெடுத்து கும்பிட்ட வைஷ்ணவி மொழியற்று சிரம் தாழ்ந்த, "தேங்க்ஸ் பார் எவரி திங்" என்றவன் வலியுடன் அந்த டைரியை பார்த்தான், வைஷ்ணவியின் டைரி அது! இந்திராவின் வீட்டிலிருந்த வைஷ்ணவியின் டைரி!!


விவேக்கின் மூலம் யசோதாவின் வீட்டை நோட்டமிட்டு, இந்திரா இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள் புகுந்து, வைஷ்ணவியை பற்றிய தகவல்களையும் அவள் சம்மந்தப்பட்ட ஏதாவது ஒரு விஷயம் கிடைக்கிறதா என்பதையும் ஆராய அடியாட்களை அனுப்பி வைத்தான்.


தேடலின் விளைவாக வைஷ்ணவியின் டைரியும் சில மெடிக்கல் டாக்குமெண்டும் விவேக்கின் அடியாட்களிடம் கிடைத்தது… அதனை வாங்குவதற்காகவும் விசாரிக்கவும் தான் ஆரியன் கடந்த இரண்டு நாட்கள் வெளியே சென்று இருந்தான்.


டைரியை படித்து வைஷ்ணவியை பற்றி அறிந்து கொண்ட ஆரியனுக்கு அவள் மீது கோவம் வரவில்லை. மாறாக மனம் மட்டும் ரணமாக வலித்தது.


நான்கு வருடம் கோமாவில் இருந்து யாருக்காக மீண்டு வந்தானோ அவளே தன் இறப்புக்கு வழி வகுத்து இருக்கிறாள் என்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.


பொய்யாக நடித்து தன்னை சுற்றி இப்படி ஒரு சூழ்ச்சி வலை பின்னி இருக்கிறாள் என்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.


எனை கொல்ல ஆயிரம் வழி இருக்க ஏன் என் மனைவியாக வேடமிட்டு என் உதிரம் பருகி சென்றாய்?


முத்தமிட்ட கணமெல்லாம் ரணமாகியது…


டைரியையும் அவனையும் மாறி மாறி பார்த்த வைஷ்ணவியின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது… குற்ற உணர்ச்சியில் முகம் கருத்து போனது.


"இல்லை அது" என்று தட்டுத்தடுமாறி வைஷ்ணவி எதையோ சொல்ல வர கரம் நீட்டி அவளை தடுத்தவனின் விழியோரம் ஒரு துளி கண்ணீர் 'என் பல்லவி இறந்து விட்டாள்' என்று அந்தக் கண்ணீர் சொல்லாமல் சொல்லியது "இதெல்லாம் உன்னை பண்ண சொன்னவன் யாருன்னு மட்டும் சொல்லிட்டு இங்கிருந்து கிளம்பிடு"


"ஆரியன் இல்லை அது என் சூழ்நிலை" தன் நிலையை விளக்கத் தடுமாறினாள்.


"உன்னை தடுக்குற உரிமையோ உன்னை பாதுகாக்கிற கடமையே இனி எனக்கு இல்ல, ஒரே ஒரு பெயர் அவன் யாரு? அதை மட்டும் சொல்லு" என்று அவன் அழுத்தமாக கேட்க…


அந்நேரம் "டப் டப்" என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் அவர்களது இல்லத்தின் வெளியில் கேட்கவும்… உடனே ஆரியன் வெளியே சென்று பார்த்தான்.


அங்கு மார்பில் தோட்டா துளைத்தபடி ரத்தம் வழிய துடித்துக் கொண்டிருந்தார் மாணிக்கம்… "என்ன ஆச்சு?" என்று கேட்டபடி ஆரியன் அவர் அருகில் செல்ல, மாணிக்கமோ காற்றில் கையை ஆட்டி ஆட்டி எதையோ சொல்ல முயற்சித்தவர் அப்படியே ஆரியனின் கரத்தில் உயிரை விட்டார்.
 
Status
Not open for further replies.
Top