ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவிலே மிதக்கும் விழிகள் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 14

இருவருமே காரில் ஏற...பின்னால் ஏற போனவளின் கரம் பிடித்து முன் இருக்கையில் அமர வைத்தவன்,தானும் அமர்ந்து,அனைவரிடமும் விடைபெற்று விட்டு காரை கிளப்பினான்.

"இப்போ எதுக்கு என்னை இங்க உட்கார வச்சிங்க,நான் பின்னாடியே இருக்கேன். முதல்ல காரை நிறுத்துங்க" என அடம்பிடிக்க…

அவனோ "ஓய் நான் என்ன உனக்கு டிரைவரா... மேடம் மட்டும் ஹாயா பின்னாடி உட்கார்ந்துட்டு வருவீங்க,நாங்க உங்களுக்கு கார் ஓட்டணுமா?..அதெல்லாம் முடியாது போடி. நான் என் பொண்டாட்டி பக்கத்தில் தான் உட்கார்ந்து வண்டி ஓட்டுவேன். உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ" என்றவன்,ஊரை கடந்து நெடுஞ்சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

அவளும் அத்தோடு விடாமல் காரின் கதவை திறக்க முயல,அதுவோ லாக் ஆகியிருந்தது. "நான் தான் சொன்னேனே உன்னால் முடிந்தால் எழுந்து பின்னாடி போகலாம்" என நக்கலான குரலில் கூறினான்.

அனைத்து முயற்சியும் தோல்வியடைந்த நிலையில்,அவனை முறைத்துவிட்டு ஜன்னலின் புறம் திரும்பி வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டாள்.

நேரம் செல்ல,மணி பத்தை நெருங்கும் போதே அவளுக்கு கண்கள் தூக்கத்தில் சொக்கியது. காரின் கதவில் சாய்ந்து உறங்க தொடங்க,காரின் வேகத்தில் அடிக்கடி தலையில் இடித்துக் கொண்டாள்.

பின்னர் தலையை தேய்த்து கொண்டே இந்த பக்கம் திரும்பி படுக்க,சிறிது நேரத்தில் அவளையும் அறியாமல் அவனின் தோளில் சாய்ந்திருந்தாள்.

தன் மேல் சாய்ந்து தூங்கும் தன்னவளை பார்த்து மெலிதாக சிரித்தவன்,சந்தோஷமாக உணர்ந்தான்.

தோளில் இருந்து அடிக்கடி சரிந்து விழுந்தவளை கண்டு காரை ஓரமாக நிறுத்தியவன்,அவளை அப்படியே தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டான். அவளும் அவனின் இடையை அணைத்துக்கொண்டு உறங்க தொடங்கினாள்.

மணி அதிகாலை நான்கு மணி அளவில் கார் சென்னையை அடைந்தது. ஒரு பெரிய ஹோட்டலுக்கு முன்பு காரை நிறுத்தியவன்,தன் மடியில் குழந்தை போல் இறங்கும் வர்ஷினியை பார்த்தபடி அவளை எழுப்ப வேண்டும் என்பதை மறந்து அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் அப்படியே இருந்தவன்,நேரம் கடப்பதை உணர்ந்து மெல்ல அவளை எழுப்பினான்.

அவளும் சிணுங்கிக்கொண்டே கண்ணை திறக்க,எதிரில் அவன் முகத்தை கண்டு குழம்பியவள் அப்போது தான் உணர்ந்தாள் அவனின் மடியில் படுத்திருப்பதை.

அவசரமாக எழுந்தவள் எதுவும் நடக்காததை போல் சாதாரணமான அவனை பார்க்க,அவனும் தன் சிரிப்பை உதட்டுக்குள்ளேயே மறைத்துக்கொண்டான்.

"இதுதான் கல்யாண மண்டபமா" என அங்கு பிரம்மாண்டமாக வீற்றிருந்த கட்டிடத்தை காட்டி கேட்க,

அவனும் "அதெல்லாம் காலையில் கிளப்பியதுக்கு அப்பறம் பாத்துக்கலாம். இப்போ இங்க தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு காலையில் கிளம்பி போகலாம்" என்றவன் தங்கள் உடமைகளை கீழே இறக்கிவிட்டு உள்ளே நுழைந்தான்.

ஆல்ரெடி ஆன்லைன் மூலமாக அறையை புக் செய்ததால் சாவியை மட்டும் வாங்கிக்கொண்டு செல்ல, வர்ஷினியோ தூங்கிவழிந்து கொண்டே அவனை பின்தொடர்ந்தாள்.

அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி அங்குள்ள மெத்தையில் விழுந்து தன் தூக்கத்தை தொடர்ந்தாள் வர்ஷினி.

அவனும் அறையை சாத்திவிட்டு மெத்தையில் படுத்தவனுக்கு பயணத்தின் களைப்பில் உடனடியாக தூக்கம் வந்து தழுவியது.

இரவு முழுவதும் தூங்கியதால் காலையில் சீக்கிரமே எழுந்தவள்,அவன் விழிக்கும் முன் கிளம்ப எண்ணி குளிக்க சென்றாள்.

கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச,முயன்று அதை விரட்டியவன் மொபைலை எடுத்து மணியை பார்க்க, அது காலை எட்டு என காட்டியது. இதற்கு மேல் தூங்கினால் சரியான நேரத்திற்கு செல்ல முடியாது என எழுந்தவன் எதிரில் கண்ட காட்சியில் கண்கள் தானாய் விரிந்தது.

அவன் எதிரில் கையில் பாதி புடவை, மீதி தரையில் என புடவையுடன் மல்லுக்கட்டி கொண்டு நின்றிருந்தாள் அவனின் மனையாள்.

அவளுக்கு புடவை கட்டி பழக்கமே இல்லை.நிச்சயம்,
கல்யாணத்திற்கு கட்டியதோடு சரி. அதுவும் அவளின் தாய் தான் கட்டிவிட்டார். அப்படியிருக்க மதி வேறு நண்பனின் திருமணம் என்றவுடன் கையில் சிக்கிய புடவையை பெரிய இவளாட்டம் கட்ட தெரிந்தது போல் எடுத்து வந்துவிட்டாள். ஆனால் அதனை உடுத்ததான் முடியவில்லை.

'அப்பப்பா காலையிலேயே கண் கொள்ளா காட்சி தான்' என மனதுக்குள் குதுகளித்தவன் வெளியே சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு "ஏய் பொண்டாட்டி என்னடி பண்ற, சேலை எத்தனை முழம்னு கணக்கு பண்ணிட்டு இருக்கியா" என குரல் கொடுக்க,

அவன் குரலில் உடல் மொத்தமும் தூக்கிவாரி போட,அவசரமாக தன்னை சேலையால் மறைத்தவள்,அவனை நிமிர்ந்து பார்க்க,

'ஆமா இப்போ மறைச்சு என்ன ஆக போகுது, நான் தான் ஆல்ரெடி பார்த்துட்டேனே' என நினைத்தவன் மீண்டும் "என்னடி பண்ற" என்க,

அவன் முன் தெரியாது என சொல்ல பிடிக்காமல் "அது...அது" என தடுமாற, அவனோ சிரித்துக்கொண்டே…"அவ்ளோ கஷ்டப்பட்டு புடவை கட்ட வேணாம். ஏதாவது சுடிதார் போட்டுட்டு கிளம்பு டைம் ஆகிடுச்சு" என்றவன், அவனும் அவசரமாக கிளம்பினான்.

'கல்யாணத்திற்கு புடவை தானே கட்டிட்டு போக சொன்னாங்க பாட்டி. இவன் என்ன சுடிதார் போட சொல்றான்' என யோசித்தாலும் புடவையில் இருந்து விடுமுறை கிடைத்த சந்தோஷத்துடன் கிளம்பினாள்

இருவருக்கும் காலை உணவை அறைக்கே வரவழைத்தவன்,
சாப்பிட்டுவிட்டு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

இதுதான் முதல் முறை சென்னை வருவதால் அனைத்தையும் ஆர்வமாக பார்த்தபடி வந்தவள்,கார் ஒரு இடத்தில் நின்றவுடன் நிமிர்ந்து பார்க்க, இப்போது அவளின் கண்கள் இரண்டும் ஆச்சிரியத்திலும் அதிர்ச்சியிலும் விரிந்தது.

சென்னை மருத்துவ கல்லூரி வளாகம்...அதில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் பெரிய பேனர் போஸ்டர் கட்டப்பட்டு இருந்தது.

விழிகளில் இருந்து என்ன முயன்றும் வழியும் கண்ணீரை மட்டும் நிறுத்த முடியவில்லை அவளால்.

அவளையே பார்த்துகொண்டிருந்த மதி அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை படித்து புன்னகைத்தான்.

இதுக்கு தானே அவனும் ஆசைப்பட்டான். தன்னவளின் லட்சியத்தை தன் லட்சியமாக கொண்டு அனைத்தையும் அவளுக்கு தெரியாமல் இன்ப அதிர்ச்சியை கொடுப்பதற்காக தான் நண்பனின் திருமணம் என சென்னை வரை வர வைத்திருந்தான்.

என்ன தான் வெளியே தன்னை இயல்பாக காட்டிக்கொண்டாலும் அவன் வேலைக்கு சென்றவுடன் தனிமையில் தனது மார்க் ஷீட்டை கையில் வைத்துக்கொண்டு அழும் அவளை எதர்ச்சியாக பார்க்க நேர்ந்ததில் இருந்து எப்படியாவது அவளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதை மட்டுமே எண்ணிக்கொண்டு இருந்தான்.

அவனுக்கு பெரிதாக எந்த சிரமமும் இல்லாமல்,அவள் ஏற்கனவே நுழைவு தேர்வு எழுதி அதிலும் பாஸ் ஆகியிருக்க, அவளை இப்போது கலந்தாய்வுக்கு அழைத்து வந்துவிட்டான்.

விழிகளில் வழியும் கண்ணீரோடு அவனை பார்க்க,அவனோ அவள் முகத்தை கைகளில் ஏந்தி "நீ சந்தோஷபடுவேன்னு நினைச்சேன், ஆனா நீ அழறதை பார்த்தா பிடிக்கலை போல...திரும்பி போய்டலாமா" என்க,

அவளோ வேகமாக தலையாட்டி மறுத்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.அவனுக்கு அவளின் செய்கை அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது.

பின்னர் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல,ஒரு பெரிய கூட்டமே இருந்தது.

அங்கு போடபட்ட சேரில் அமர்ந்தவாறே எதிரில் இருந்த திரையில் தங்களின் எண் மற்றும் அழைப்பிற்காக காத்திருந்தனர்.

"நீ நல்ல மதிப்பெண் வாங்கியிருப்பதால் உனக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது கல்லூரியை தேர்வு செய்ய,அதனால் மதுரையில் இருக்குற மெடிக்கல் காலேஜையே தேர்வு செய்" என அவன் சொல்ல..

"அதெல்லாம் வேணாம் நான் வேற ஊர்ல தான் கேட்பேன். நான் ஹாஸ்டல்ல தங்கி படிச்சுக்கிறேன்" என்றாள் வர்ஷினி.

"வேனாம்டி என் கோபத்தை கிளப்பாத… சுத்தி நிறைய பேர் இருக்காங்களேன்னு பார்க்கிறேன் இல்லனா நடக்கிறதே வேற …..இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, ஒன்னு நீ நம்ம வீட்டில் தங்கி மதுரையில் படிகிறதா இருந்தா படி…. இல்லனா படிக்கவே வேண்டாம்" என்றான்.

எதை சொன்னால் அவள் தன் முடிவை மாற்றி கொள்வாள் என்பது அவனுக்கா தெரியாது.

அவன் வார்த்தையில் உள்ள உறுதியில் அவளும் தன் முடிவை மாற்றி இருக்க...கலந்தாய்வு தொடங்கியது.

ரொம்ப நேரமெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சிறிதுநேரத்தில் அவளை அழைத்து விட….பயத்தோடு உள்ளே நுழைந்தவள், திரும்பி வரும்போது உறைந்த புன்னகையோடு வந்தாள்.

மதுரை மருத்துவ கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்க,மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியாமல் ஓடி சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.

அத்தனை பேர் அவர்களை சுற்றி இருக்க,அதை பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் இல்லை இருவருமே...அவளின் சந்தோஷம், சிரிப்பு, அணைப்பு எல்லாம் அவனுக்குள்ளும் இதமாய் இறங்கியது.

சூழ்நிலையை உணர்ந்து அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன் அவளை அழைத்துக்கொண்டு நகர்ந்தான்.

நேரம் மதியத்தை நெருங்யிருக்க,அவளை ஒரு உணவு விடுதிக்கு கூட்டி சென்றான்.

"உனக்கு சாப்பிட என்ன வேணும்" என கேட்க,அவளோ திருதிருவென முழித்தாள். இதற்கு முன்பு இதுபோல் எங்கயாவது வந்திருந்தால் தானே தெரிவதற்கு.

அவனே இருவருக்கும் ஆர்டர் கொடுக்க,சுடசுட பிரியாணியை ஒரு பிடி பிடித்தாள் வர்ஷினி. அடுத்தடுத்து அவன் பார்த்து பார்த்து அவளுக்காகவே ஆர்டர் கொடுக்க,அனைத்தையும் ரசித்து சாப்பிட்டாள்.கடைசியாக ஐஸ்கிரீம் கொண்டு வர சொல்ல,அவளோ "எனக்கு சேமியா ஐஸ் தான் ரொம்ப பிடிக்கும்,அதுவே சொல்லுங்க" என்க….

"அதெல்லாம் இங்க கிடைக்காதுடி குட்டி சாத்தான்.இதை சாப்பிட்டு பாரு நல்லா இருக்கும்" என்க,

அவளும் சேமியா ஐஸ் இல்லாத வருத்தத்தில் ஐஸ்கிரீமை வாயில் வைக்க,அதன் சுவையில் லயித்து போனவள் அவனை கண்டுகொள்ளாமல் ஐஸ்கிரீமை தின்றாள்,பாதியை சாப்பிட்ட பின்னர் தான் நிமிர்ந்து பார்த்தாள்.

"நீ ஐஸ்கிரீம் சாப்பிட மாட்டியா" என சாப்பிடாமல் அமர்ந்திருந்தவனை பார்த்து கேட்க,

"அதுதான் எனக்கும் சேர்த்து நீ சாப்பிடுறீயே அப்பறம் என்ன,எனக்கு வேணாம் நீயே சாப்பிடு" என்றவன் அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை அவளையே பார்த்துத்திருந்தான்.

இங்கு இருவருமே மகிழ்ச்சியில் இருக்க,அங்கு இவர்கள் வீட்டில் அனைவரும் பதட்டத்தில் இருந்தனர்.

மதுவின் தந்தையும்,அவளின் அண்ணனும் சேர்ந்து தங்கள் பேச்சை தொடங்கினர்.

"இங்க பாரு சகுந்தலா, நான் சொல்றதை கேளு...ஒரு பொண்ணுக்கு கல்யாணம் நின்னு போச்சுன்னா அதுக்கப்பறம் அவளுக்கு கல்யாணம் நடக்கிறதே பெரிய பிரச்சனையா இருக்கும். அதுதான் அவளுக்கு பேசிய அதே முகூர்த்தத்தில் கல்யாணத்தை நடத்தி முடிச்சிடலாம்" என்றார் மதுவின் தந்தை.

"அம்மா... அப்பா சொல்றதும் சரி தானே. நீங்க தான் அவளுக்கு எடுத்து சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்.நீங்களே வேணாம்னு சொன்னால் என்ன அர்த்தம்" என அவனும் தங்கையின் வாழ்க்கையை நினைத்து வருந்தியவனாக எடுத்து சொல்ல முயன்றான் ஆனால் சகுந்தலா ஒற்றை காலில் நின்றுக்கொண்டு அதனை தடுக்கவே பார்த்தார்.

"என்ன சொல்றீங்க இரண்டு பேரும்...அவங்க எங்க நாம எங்க,அவனுக்கு போய் என் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்றீங்க?..என் உயிரே போனாலும் நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்".

"என் மக வாழ்க்கையை வேற ஒருத்தி ராணி மாதிரி வாழ்வா...ஆனா என் பொண்ணு மட்டும் சாதாரண ஒரு குடும்பத்தில் வாக்கப்பட்டு கஷ்டபடனும்னு அவளுக்கு என்ன தலையெழுத்தா" என இருவரையும் சாடினார்.

"அம்மா... கதிருக்கு என்ன குறை சொல்லுங்க,நல்லா படிச்சிருக்கான்,அவனும் போலீஸ் தான்.இன்ஸ்பெக்டராக இருக்கான்,எனக்கும் அவன் ப்ரெண்ட் தான் எனக்கு தெரிஞ்சு எந்த கெட்ட பழக்கமும் இருந்ததில்லை.

என்ன நம்மளை ஒப்பிட்டு பார்க்கும் போது அந்த அளவுக்கு வசதியில்லை. அதுக்காக அவங்க ஒன்னும் கஷ்டப்படும் குடும்பம் இல்லையே. இந்த ஊரில் அவங்களுக்கு ஏகபட்ட நிலபுலன்கள் எல்லாமே இருக்கு" என கதிரை பற்றி எடுத்து சொன்னான்.

ஆனால் அது அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாக தான் போனது.யார் சொல்வதையும் காதில் வாங்காமல் தன்னுடைய முடிவில் இறுதியாக நின்றார்.

அனைவருமே அவர் வாயில் இருந்து சம்மதம் என்ற ஒரு வார்த்தை வந்து விடாதா என்ற நற்பாசையில் இருந்தனர்.

"யார் என்ன சொன்னாலும் இது தான் என் முடிவு.எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றவர்,இதோடு இந்த பேச்சை விட்டுடுங்க" என சொல்லி கொண்டு இருக்கும் போதே வெளியே வந்தாள் மது.

வந்தவள் அனைவரின் முகத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு தன் தந்தையின் புறம் திரும்பியவள் "அப்பா நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்" என சொல்ல,

"என்னடி சொல்ற உனக்கென்ன பைத்தியமா...எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை,நான் இதை நடக்க விடமாட்டேன்" என மகளை பார்த்து கத்தினார் சகுந்தலா.

"கல்யாணம் எனக்கு, அப்போ என்னோட சம்மதம் தான் இங்க முக்கியம்.ஒருதடவை உங்க பேச்சை கேட்டு தான் கல்யாணத்துக்கு சம்மதித்தேன் என்ன ஆச்சு?...அதுதான் சொல்றேன் இந்த தடவையாவது என்னை முடிவெடுக்க விடுங்க. அதையும் மீறி நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சித்தால் அப்பறம் கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்" என இவளும் பதிலுக்கு பேசினாள்.

முதன்முறை இவர்கள் சொன்ன அனைத்திற்கும் தலையாட்டியதற்கு பரிசாக தான் பட்டது போதும் என்றே அவளே இந்த முறை முடிவை எடுத்திருந்தாள்.

அவளுக்கும் இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை தான். ஆனால் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.ஏற்கனவே தன் அன்னை அனைவரையும் வார்த்தையால் படுத்தும் பாட்டை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். அதுவும் மித்ராவை பார்த்தாள் அவருக்கு உண்டாகும் கோபமும் கண்களில் தோன்றும் வன்மமும் நல்லதுக்கு இல்லை என்றே இந்த முடிவு.

இந்த முடிவை எடுக்க இன்னும் ஒரு காரணமும் இருந்தது.அது மித்ரவர்ஷினி தான்.தான் இங்கேயே இருந்தால் அவளும் நிம்மதியாக இந்த வீட்டில் நடமாடமுடியாது என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தாள் மது.

' ஒருவேளை தனக்கு திருமணம் முடிந்தாலாவது தாயின் கோபம் குறையாதா' என்றே இதற்கு சம்மதித்தாள்.

அவளின் சம்மதம் கேட்டு வீடே மகிழ்ச்சியில் இருந்தது.அவளின் தாயை தவிர.

அவளின் சம்மதம் கிடைத்தவுடன் அங்கு மதிக்கு அழைத்து சொல்லிவிட்டார் மதுவின் தந்தை.

அனைத்திற்கும் காரண கர்த்தா மதி தான். அவன் தான் தன் மாமா மற்றும் ரகுவிடம் கதிரை பற்றி சொன்னது.

இவர்களுக்கும் மதியின் மேல் சின்ன வருத்தம் இருந்தாலும் நடந்த அனைத்தையும் நல்ல முறையாக மாற்ற நினைக்கும் அவனின் நல்ல மனதிற்காக இவர்களும் சம்மதித்து,அனைவரின் சம்மதத்தையும் பெற்றும் விட்டனர்.

அதுவும் அவனும் வர்ஷினியும் இருக்கும் போது இந்த பேச்சை தொடங்கினாள் பெரிய பிரச்சனையில் முடியும் என்பதை நன்றாக அறிந்தவன்,இருவரும் இல்லாத பொழுது பேசுமாறு இருவரிடமும் சொல்லியிருந்தான். அவன் நினைத்தது போல் எல்லாம் நன்றாகவே முடிந்தது.

ஏற்கனவே தன்னவளுடனான தனிமை மகிழ்ச்சியைத் தந்திருக்க, இப்போது இதுவும் சேர்ந்துகொண்டது.

அன்றைய நாள் முழுவதும் அவளை அழைத்து கொண்டு பீச்,சினிமா என சுற்றியவர்கள் இரவு உணவை வெளியே முடித்துவிட்டு ஹோட்டலுக்கு வந்தனர்.

மறுநாள் காலையில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பியவன், "ஓய் பொண்டாட்டி சீக்கிரம் எழுத்து கிளம்பு" என்க…

"எங்க போறோம் ஊருக்கா" என அவளும் கேட்க,

"ஏண்டி இங்க எதுக்காக வந்தோம் என் ப்ரெண்ட் கல்யாணம்னு தானே சொன்னேன்.இன்னைக்கு தான் கல்யாணம் எழுந்து கிளம்பு என்றவன், இன்னைக்கு புடவை தான் கட்டணும் அதுவும் பாட்டி கொடுத்தாங்க இல்ல அந்த புடவையை" என சொல்லியவன் எழுந்து சென்றுவிட…

நேற்றைய கதை இன்றும் தொடர்கதையாக புடவையோடு சண்டை ஒன்று தான் போடவில்லை. அப்படி ஒரு போராட்டம் புடவைக்கும் அவளுக்கும்.

அதுவரை அறையின் பால்கனியில் நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவன் அவளின் செயலை பார்த்து சத்தமாக சிரித்தான்.

அவனின் சத்தத்தைக் கேட்டு அதிர்ந்து திரும்பியவள் "ஏய் லூசு...பொறுக்கி வெளிய போடா, இப்படிதான் டிரஸ் மாத்தும் போது வருவியா... நேத்தும் இப்படிதான் பண்ண" என அவனை திட்ட,

"சரி நான் இப்போ வெளிய போய்ட்டா மட்டும் நீ கிளம்பி வந்துடுவியா" என்றவன் அவளையே அழுத்தமாக பார்க்க,

"இப்போ என்ன பண்ண சொல்ற,எனக்கு புடவையே கட்ட வரலை. பேசாம நான் சுடிதாரையே போட்டுக்குறேன்" என்றாள் வெறுப்பாக.

அவனும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சர்வ சாதாரணமாக "இங்க வா நான் கட்டி விடுறேன்" என கூப்பிட, அவளோ அவனை முறைத்து பார்த்தாள்.

"அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை.உன்கிட்ட எல்லாம் என்னால….என இழுத்தவள், முடியாது முடியாது" என அவசரமாக தலையாட்டி மறுத்தாள்.

"அப்போ இப்படியே என் கூட வர போறியா,எனக்கு ஓகே தான் என நக்கல் செய்தவன், சரி வெயிட் பண்ணு ஹோட்டல்ல இருக்குற லேடி ஒர்கர் யாராவது இருந்தால் கூப்பிடுறேன்" என கிளம்ப முயல..

'அது எப்படி யாரோ ஒருவர் முன் அப்படி நிற்பது, அது பெண்ணாகவே இருந்தாலும் அது எப்படி தன்னால் முடியும்' என யோசித்தவள் அவனை தடுத்தாள்.
 

Anjali

Well-known member
Wonderland writer
"நீயே கட்டிவிடு... என அவனின் அருகில் வந்தவள், ஆனா கண்ணை மூடிட்டு" என சொல்ல,

"இங்க பாருடி எனக்கே அரகுறையா தான் தெரியும்.கண்ணை மூடிக்கிட்டு எல்லாம் கட்டிவிட தெரியாது.ரொம்ப ஓவரா பண்ணாமா வந்து நில்லுடி இம்சை"...நான் உன் புருஷன் தானே அதுவும் இல்லாம சின்ன வயசில் உன்னை அப்படி பார்த்தே இல்லையா" என்க..

"பொறுக்கி பொறுக்கி அது சின்ன வயசு.அதுவும் இதுவும் ஒன்னா" என திட்டிக்கொண்டே அவன் முன் நின்றாள்.

அவன் அவளை சீண்டவில்லை தான் ஆனால் பார்வை மட்டும் தன்னவளை அணுஅணுவாக ரசித்தது. சீக்கிரம் என்ற அவளின் குரலில் கலைந்தவன்,அதன்பின் புடவையில் மட்டும் கவனம் செலுத்தி அதனை அவளுக்கு அழகாக உடுத்துவிட்டவன், கீழே குனிந்து மடிப்பை சரி செய்ய,

அதுவரை அவனின் சிறுசிறு தொடுகையில் நெளிந்து கண் மூடி நின்றவள்,விழி திறக்க,அவனோ கவனமாக மடிப்பை நீவிவிட்டு கொண்டு இருந்தான்.

அவனை பார்த்து "ஆமா உனக்கு எப்படி புடவை கட்ட தெரியும்" என முக்கியமான கேள்வியை கேட்க..

அவனோ சிரித்துக்கொண்டே "அதுவா எப்படியும் உனக்கு கட்ட தெரியாது, அதான் நானே கட்டிவிடலாம்னு... பிளான் போட்டு நைட்டே யூ ட்யூப்பை பார்த்து கத்துக்கிட்டேன்" என்க..

குனிந்திருந்த அவனின் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினாள்.
"பொறுக்கி பொறுக்கி... கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம ஒரு பொண்ணு புடவை கட்டுறதை பார்த்தேன்னு சொல்ற" என சரமாரியாக அவனை அடிக்க,

"ஆ...ஆ... ராட்சசி வலிக்குதுடி உனக்கு போய் கட்டிவிட்டேன் பாரு, என்னை சொல்லனும்" என்றவன்,மொபைலில் அவன் பார்த்த வீடியோவை காட்ட,

"இதை பார்த்ததுல என்னடி தப்பு. ஒரு பொம்மைக்கு தான புடவை கட்டி காட்டுறாங்க' என்றவன் தன் தலையை தடவி கொண்டே...ஒரு நாள் ஏண்டா இவனை அடிச்சோம்ன்னு வருத்தப்படுவ பாரு" என்றவன் அவளை அழைத்துக்கொண்டு கல்யாண மண்டபத்தில் சென்றான்.

இருவரும் ஒன்றாக சென்று கல்யாணத்தை பார்த்துவிட்டு அவர்களுக்கு வாங்கி வந்த பரிசை கொடுத்துவிட்டு வர,அங்கு அவனின் நண்பர்கள் பலரும் வந்திருந்தனர்.

அனைவரிடமும் பேசியவன், வர்ஷினியை புரியாமல் பார்த்தவர்களிடம் "என் மனைவி" என அறிமுகப்படுத்த,

அனைவருமே ஒன்று போல் "என்னடா சொல்ற,பார்க்க ரொம்ப சின்ன பொண்ணா தெரியிறாங்க" என்றனர்.

"சின்ன பொண்ணு தான் இப்போதான் பதினெட்டு வயசு ஆகுது. அதுதான் சொன்னேனே டா முன்னமே, மித்ரா... என் அத்தை பொண்ணு" என்க,இப்போது அனைவருக்குமே புரிந்துவிட்டது.

"ஓ….இந்த பொண்ணு தான் அந்த பொண்ணா" என்க..அவனும் சிரித்துக்கொண்டே ஆமாம் என தலையாட்டியவன்.

"அப்பறம் ரொம்ப சாரிடா. உங்க யாரையும் கல்யாணத்துக்கு கூப்பிட முடியலை.அவசரத்தில் நடந்த திருமணம்" என்க..

இப்போது அனைவருமே அவனை மகிழ்ச்சியோடு வாழ்த்தினர். "வாழ்த்துக்கள் மச்சான், மனசுல நினைச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டியே" என வாழ்த்த,இருவரும் விடைபெற்று வெளியே வந்தனர்.

இன்று அவளை அழைத்துக்கொண்டு தீ நகர் வந்திருந்தான். மக்கள் கூட்டம் அலை மோத,அத்தனை கடைகளை ஒன்றாக பார்த்து மலைத்து போய் நின்றாள் வர்ஷினி. அதுவும் கூட்டம் அதிகமாக இருக்க,அவனின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

ஒரு பெரிய ஜவுளி கடைக்குள் நுழைய...அவளும் அவனை ஓட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

பெண்கள் பிரிவிற்கு சென்று நிற்க …"காலேஜ் போறதுக்கு ஏத்த மாதிரி நல்ல சுடிதார் எடு" என சொல்ல…

அவளோ பேந்த பேந்த முழித்தவாறே…"இதுவரைக்கும் அம்மா தான் எனக்கு டிரஸ் எடுப்பாங்க. எனக்கு எடுக்கவெல்லாம் தெரியாது" என கைகளை விரிக்க...அவனே அவளுக்கு பார்த்து பார்த்து வாங்கினான்.

அவனின் இஷ்டத்திற்கு எடுத்துக்கொண்டே இருக்க, "ஆமா யாருக்கு இவளோ டிரஸ் எடுக்குறீங்க" என அவள் கேட்க,

அவனோ "ஏய் லூசு பொண்டாட்டி எல்லாம் உனக்கு தான் என்றவன்,அடுத்து புடவை பிரிவிற்கு சென்று அங்கும் சில புடவையை எடுத்தவன் அடுத்து அவளை அழைத்து சென்றது என்னவோ பெண்களின் உள்ளாடை பிரிவிற்கு.

"நீ போய் உனக்கு தேவையானதை வாங்கிட்டு வா" என்க...அவள் மீண்டும் தயங்கி நின்றாள்.

'என்ன' என இவன் கேட்க, அவளோ "நீங்களும் வர்றீங்களா தனியா போக பயமா இருக்கு" என நிற்க,

இது சரிவராது என நினைத்தவன்,அவளோடு செல்ல அங்குள்ள பெண்கள் அனைவரும் இவனை தான் பார்த்து கேலியாக சிரித்தவாறு கிசுகிசுத்து கொண்டிருந்தனர்.

அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவள் எடுத்து முடிக்கும் அவரை அவள் அருகிலேயே நின்றான்.

அப்படியே அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிவிட்டு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர்.சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு ஊரை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர்.

அன்று போல் இல்லாமல் இன்று அவளே தூக்கம் வரவும் அவன் மடியிலேயே படுத்துக் கொண்டாள்.

அவளின் மாற்றம் அவனுக்கும் நிறைவை தர கார் அவன் கையில் பறந்தது.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 15

இருவரும் உள்ளே வரும் போதே அவனின் அத்தையின் கத்தல் தான் அவர்களை வரவேற்றது.

"நான் வேணாம் வேணாம்னு சொல்றேன், சொல்ல சொல்ல கேட்காம எல்லாரும் அங்க போக தயாராகிட்டு இருக்கீங்க?.." என கதிரின் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த அனைவரையும் தடுக்க முயன்று கொண்டிருந்தார் சகுந்தலா.

அதேநேரம் இருவரும் உள்ளே வர மீண்டும் மித்ராவை வார்த்தையால் வதைக்க தொடங்கிவிட்டார்.

"வாடியம்மா வா...உனக்காக தான் காத்துட்டு இருக்கேன். நீ மட்டும் இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்ப,ஆனா என் பொண்ணு மட்டும் பிடிக்காத ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படனுமா" என கத்தினார்.

அவர் என்ன சொல்கிறார்,இப்போது எதற்காக கத்துகிறார் என்று ஒன்றும்புரியாமல் அவள் நிற்க,

"போதும் அத்தை...இன்னும் எத்தனை நாள் தான் இதையே சொல்லிட்டு இருப்பீங்க. அதுதான் எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சே,இப்போ நீங்க கத்துனா மட்டும் அது இல்லைன்னு மாறிட போகுதா…! இல்லை இல்ல அப்பறம் எதுக்கு அதையே சொல்லி சொல்லி அவளை கஷ்டப்படுத்துறீங்க".

"உங்ககிட்ட பல தடவை சொல்லிட்டேன் நடந்த எல்லாத்துக்கும் நான் தான் காரணம்னு. ஆனா அதையும் மீறி அவளை ரொம்ப காயப்படுத்துறீங்க.ஆனா இதுக்கு மேல அதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்.இன்னொரு முறை என் பொண்டாட்டியை பத்தி பேசுனீங்க அப்பறம் இங்க நடக்கிறதே வேற...என்னோட இன்னொரு முகத்தை காட்ட வெச்சிடாதீங்க" என்றவன் வர்ஷினியை அழைத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான்.

எப்போதும் போல் உள்ளே நுழைந்தவுடன் தன் அழுகையை தொடங்க…."உனக்கு வேற தனியா சொல்லனுமா?.. இன்னொரு வாட்டி யாராவது ஏதாவது சொன்னாங்கண்ணு அழுது பாரு உனக்கு இருக்கு".

"என்கிட்ட மட்டும் வாய்கிழிய பேச தெரியுது இல்ல,வாயை திறந்து சொல்லவேண்டியது தானே…. உங்களுக்கு இந்த வீட்டில் எவ்ளோ உரிமை இருக்கோ, அத விட அதிகமாக எனக்கும் இருக்குன்னு" என அவள் மேல் கோபத்தை காட்டியவன்,

"நான் இப்போ சொல்றது தான் திரும்பவும் உன் கண்ணில் கண்ணீரை பார்த்தேன் தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை" என்றவன்
அப்படியே படுத்து கொண்டான்.இரவில் சொகுசாக தூங்கி வந்தவள் தூங்கும் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.

இங்கு வந்த இத்தனை நாட்களில் இன்று தான் அவன் அவள் மேல் கோபத்தை காட்டியிருக்கிறான்.அதுவே அவளின் கண்களை கலங்க செய்ய,அவன் சொன்னது நினைவு வந்து அழுகையை விரட்டினாள்.

இவர்கள் இருவர் மற்றும் மது என மூவரை தவிர அனைவருமே கதிரின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.

ஏற்கனவே குறித்திருந்த முகூத்தத்தில் இவர்களின் திருமணம் என்று அனைவராலும் முடிவு செய்யப்பட்டது.

அன்றைய இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது மதி பேச்சை தொடங்கினான்.

"தாத்தா...அப்பா உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் என்றவன்,நம்ம மித்ராவுக்கு டாக்டர் படிக்க சீட் கிடைத்திருக்கு" என்றான்.

அனைவருக்குமே இது சந்தோஷம் என்றாலும் படிப்பு முடிய ஐந்து வருடங்கள் ஆகுமே என்ற யோசனையில் இருக்க…

"ரொம்ப சந்தோஷம்ப்பா ஆனா அது ரொம்ப வருஷம் படிக்கனுமே அதுவரைக்கும்" என தயங்கி நின்றார் மதியின் பாட்டி.

"நீங்களா பாட்டி இப்படி சொல்றீங்க?..அவ ரொம்ப சின்ன பொண்ணு பாட்டி,முதல்ல படிச்சு முடிக்கட்டும்.அப்பறம் மத்ததை பார்த்துக்கலாம்" என்றான்.

"அவங்க அப்பாவால முடியாதுன்னு இங்க துரத்திட்டார். இப்போ இளிச்சவாயன் நீ மாட்டிக்கிட்ட,இருக்குற சொத்தை படிச்சே கரைச்சிடுவா போல" என சகுந்தலா வாயை விட…

"நீங்க ரொம்ப கவலை படாதீங்க அத்தை.உங்க சொத்தில் எல்லாம் கையை வைக்க மாட்டோம். அவளுக்கு கவர்ன்மென்ட் காலேஜில் தான் இடம் கிடைச்சிருக்கு.அப்படியே பணம் கட்டணும் என்றாலும் என் பொண்டாட்டிக்கு நான் காட்டுவேன்.அதுவும் குடும்ப சொத்தை வச்சு இல்ல...நான் சுயமா சம்பாரிச்ச பணத்தில்" என்றான் தெனாவட்டாக.

"அவளுக்கு எவ்ளோ படிக்கணுமோ அதுவரைக்கும் படிக்க வைக்க நான் தயார்.அதைப்பத்தி நானே கவலைப்படலை உங்களுக்கு என்ன வந்தது.இதுதான் கடைசி திரும்ப திரும்ப என்னை சொல்ல வைக்காதீங்க...அவளை பேச இங்க யாருக்கும் உரிமையில்லை. அது இங்க இருக்குற எல்லாருக்கும் தான் சொல்றேன்,அவங்க அம்மாவாகவே இருந்தாலும் எனக்கு அப்பறம் தான்" என்றான் தன்னவள் மேல் கொண்ட உரிமையில் .

அவனின் பேச்சில் இப்போது சங்குந்தலா வாயடைத்து போய் அமர்ந்திருந்தார்.'இத்தனை வருஷம் கூடவே இருந்த எங்களையெல்லாம் விட அவனுக்கு அவள் தான் முக்கியம் என்றால் அந்த அளவிற்கா அவளை காதலிக்கிறான் என்பதே அவருக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.இதுவரை யாரையும் எடுத்தெறிந்து பேசிடாத மதியா இது' என்று அவருக்கே தோன்றியது.

அதன்பின் நாட்கள் செல்ல, வர்ஷினியை பற்றிய பேச்சுக்கள் சுத்தமாக குறைந்துவிட, மதுவின் கல்யாண வேலைகள் கலைக்கட்டியது. ஏற்கனவே ஊரில் உள்ள அனைவருக்கும் மதியின் திருமணம் பற்றி தெரியும் என்பதால் இப்போது யாரும் மாப்பிள்ளை மாறியதை பற்றி பேச்சை ஆரம்பிக்கவில்லை.

வர்ஷினிக்கும் மதுவின் திருமணம் முடிந்து தான் கல்லூரி திறப்பதாக இருந்தது.அதனால் அவளும் அதிகநேரம் ரூமுக்குள்ளேயே செலவழித்தாள். அடிக்கடி தாயின் ஞாபகமும் தங்கையின் முகமுமே வந்து வந்து போனது.அதுவும் இத்தனை நாட்கள் கடந்தும் சின்னக்குட்டியை அவளால் பார்க்கவே முடியவில்லை.அதே யோசனையில் சோகமாக வலம்வர,

அவள் முகத்தை வைத்தே மனதை அறியும் வித்தகனான மதிக்கு அவளின் மனம் நன்றாகவே புரிந்தது.

அன்று மாலை டியூட்டி முடிந்து வந்தவன்,சோகமே உருவாக அமர்ந்திருந்த தன்னவளை கண்டவன்,சிரித்துக்கொண்டே அவள் அருகே அமர்ந்தான்.

"ஓய் பொண்டாட்டி என்ன பயங்கரமான சிந்தனையில் இருக்கீங்க போல" என கேட்க,

அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு கோபமாக வந்தது.இங்க நான் ஒருத்தி வருத்தத்தில் இருப்பது என்ன,இவன் மட்டும் முப்பத்திரண்டு பல்லை காட்டி சிரித்து கொண்டு இருக்கிறான் என்ற கடுப்பில் "என்ன சிரிப்பு வேண்டியிருக்கு...நானே எங்க அம்மாவையும் தங்கச்சியும் பார்க்க முடியாம ஃபீலிங்ல இருக்கேன்.என்னை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா...போடா" என்றவள் முகத்தை திருப்ப,

அப்போது உள்ளே நுழைந்தாள் தர்ஷினி. "அக்கா...ஆ" என கூவலோடு அவளை நோக்கி வர,இது ஒன்றும் கனவில்லையே என கண்களை கசக்கியவள்,தன்னை நோக்கி வந்தவளை அணைத்துக்கொண்டாள்.

அவளும் தன் அக்காவை அணைத்துக்கொண்டு அழுதுவிட்டாள்."சின்னக்குட்டி இது உண்மையாலயே நீயா... என்னால நம்பவே முடியலை. எப்படிடா இருக்க" என தன்னில் இருந்து பிரித்து அருகில் அமர்த்திக்கொண்டாள். அக்கா தங்கை இருவருக்கும் தனிமை கொடுத்து விலகி சென்றான் மதி. அடுத்தடுத்து அவளின் வாண்டு நண்பர்களும் வர அவளுக்கு அவ்வளவு சந்தோஷம்.

"ஏய் எல்லாரும் எப்படி வந்தீங்க...நீ எப்படி வந்த சின்னக்குட்டி, அப்பாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகுமே"...என கேட்க,

"அதெல்லாம் மாமாவோட பிளான்.மாமா தான் என்னை அழைச்சிட்டு வந்தாங்க.அதெல்லாம் அப்பாக்கு தெரியாது,அப்பா வெளியூர் போயிருக்கார். அப்படியே தெரிந்தாலும் நான் பார்த்துக்கிறேன்ன்னு சொன்னாரு" என்றால் சந்தோஷமாக.

'ஓ...அந்த வளர்ந்து கேட்டவன் தான் அழைச்சிட்டு வந்தானா' என நினைத்தவள் அதற்கு பின் தங்கையோடு நேரத்தை செலவழித்தாள்.

தன் தாயின் நலத்தை பற்றி கேட்டு அறிந்தவள்,காலேஜ் சேர்ந்ததை பற்றியும் தங்கையோடு பகிர்ந்துகொண்டார்.

அப்போது தான் நினைவு வந்தவளாக "ஒரு நிமிஷம் கண்ணை மூடு சின்னக்குட்டி" என்றவள் எழுந்து சென்று பீரோவில் இருந்து ஒன்றை எடுத்து வந்து அவள் முன் நின்றாள்.

"இப்போ கண்ணை திற" என சொல்ல ...கண்களை திறந்தவள் முன் காட்சியளித்தது ஒரு பெரிய டெடி பியர். "ஹேய் பொம்மை... என அதனை தாவி வாங்கியவள் "அக்கா இது நிஜமாவே எனக்கா " என மகிழ்ச்சியில் துள்ளினாள்.

அன்று ஷாப்பிங் சென்ற போது மதி தியாவிற்காக பொம்மை வாங்க சென்றவன் தியாவிற்கு பொம்மையை பார்த்துக்கொண்டிருக்க…"இது ஓகேவா" என கேட்க திரும்பியவன் கண்ணுக்கு தெரிந்தது என்னவோ அங்கு ஒரு பொம்மையை எடுத்து பார்த்துக்கொண்டிருந்த வர்ஷினி தான்.

மகளுக்கு வாங்கி முடித்தவன்,அவள் அருகே வந்து "உனக்கு இது பிடிச்சிருந்தா எடுத்துக்கோ" என காதருகில் குனிந்து சொல்ல,

அவளோ அவசரமாக "இல்லை வேணாம்" என்றவள்,

சிறிதுநேரத்தில் மிகவும் தயங்கிய குரலில் "எனக்கு இந்த பொம்மை மட்டும் வாங்கி தரீங்களா...சின்னக்குட்டி க்கு இதுமாதிரி ரொம்ப பிடிக்கும். எப்போ டிவியில் பார்த்தாலும் இதுமாதிரி வாங்கித்தர சொல்லி கேட்டுட்டே இருப்பா" என அவன் ஏதாவது சொல்லிவிடுவானோ என்ற பயத்தோடு கேட்டாள்.

அவளின் தயக்கம் இவனுக்கு கோபத்தை கொடுக்க,அவள் தலையில் மெல்ல தட்டியவன் "அது என்னடி வாங்கி தரீங்களான்னு கேட்கிற...உரிமையா வாங்கி தாங்கன்னு சொல்ல மாட்டியா" என கடிந்தவன் அதையும் சேர்த்து பில் போட்டான்.

அதை நினைத்தவள் "இது நான் வாங்களை உங்க மாமா தான் வாங்கினார் என்றவள்,ஆமா அது என்ன அவனை புதுசா மாமான்னு எல்லாம் சொல்ற,யாரு அப்படி சொல்ல சொன்னா" என்க…

"அம்மா தான் சொன்னாங்க என்றவள்,நான் இதுக்கு முன்னாடியும் இந்த வீட்டுக்கு இந்த ரூமுக்கு எல்லாம் வந்திருக்கேனே" என்க...அதை கேட்டு அதிர்ந்தாள் வர்ஷினி.

இவளுக்கு இவங்க எல்லாம் யாருன்னு முன்னமே தெரியுமா என்ற கேள்வியோடு தங்கையை பார்க்க…"உன் கல்யாணத்தை நிறுத்த என்ன செய்றதுன்னு தெரியலையா?.. அப்போதான் ரமேஷ் இங்க அழைச்சிட்டு வந்தான்" என அன்று நடந்தது மொத்ததையும் சொல்ல,அவளை அப்படியே இழுத்து அணைத்து கொண்டாள் வர்ஷினி.

'தனக்காக இந்த வயதில் கூட இத்தனை விஷயங்களை செய்திருக்காளே' என நினைக்கையில் இன்னும் அவள்மேல் பாசம் அதிகரித்தது.

அறைக்குள் நுழைந்த மதி,இரண்டு பேரும் பேசியது போதும் என்றவன் தர்ஷினியை அழைத்துக்கொண்டு ஹாலிற்கு செல்ல,அவளுக்காகவே காத்திருந்தது போல அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர்.

முதலில் தாத்தா பாட்டி,மாமா அத்தை என அனைவரும் மாறிமாறி அவளை அணைத்து முத்தம் என ஒரு வழி ஆக்கினர்.அதில் சற்று மிரண்டு தான் போனால் சின்னவள்.

"என் ராசாத்தி, நான் உன் அம்மாச்சிடா... இது உன் தாத்தா,இது மாமா அத்தை என வரிசையாக அனைவரையும் அறிமுகப்படுத்த,அவளோ திரும்பி தன் அக்காவை பார்த்தாள்.

அவளின் "ஆம்" என தலையசைப்பிற்கு பின்பே அவளும் அனைவரையும் பார்த்து சிரித்தாள்.

அதற்குள் அவளுக்கு சாப்பிட என ஒரு தட்டு நிறைய திண்பண்டங்கள் கொண்டு வர...அவளோ தயக்கத்தோடு வேண்டாம் என்று சொன்னவளை கண்டுகொள்ளாமல் அவளுக்கு ஊட்டிவிட தொடங்கி விட்டனர்.

நடக்கும் அனைத்தையும் பார்த்திருந்த வர்ஷினிக்கு கண்கள் கலங்கியது. அவளுக்காவது இந்த பாசம் எல்லாம் சிறுவயதில் கிடைத்திருந்தது.ஆனால் தர்ஷினிக்கோ பிறந்தது முதல் அவளின் அன்னையும் வர்ஷினியும் தவிர யாருமே அவளை தூக்கியது கூட இல்லை.

தர்ஷினிக்குமே மனம் குதுகளித்தது அனைவரின் அன்பை கண்டு.

ஆனாலும் சிறிதுநேரத்தில் "போதும் சின்னக்குட்டி நீ வீட்டுக்கு கிளம்பு.யாராவது பார்த்து பாட்டிக்கு சொன்னால் பிரச்சனை ஆகும்" என்றவள் பிடிவாதமாக அவளை அவளின் நண்பர்களோடு அனுப்பி வைத்தாள்.

'அனைவருமே இன்னும் கொஞ்சநேரம் இருந்துட்டு போகட்டுமே' என்றதை எல்லாம் கொஞ்சமும் அவள் காதில் வாங்கவில்லை.தங்கையை அனுப்பிவிட்டே மறுவேலை பார்த்தாள்.

"உனக்கென்ன டி பிரச்சனை...அவளை இருக்கவிடாமல் அவசரமா அனுப்புற,எவ்வளவு சந்தோஷமா இருந்தா" என கேட்க..

அவளோ அனைவரையும் ஒரு அழுத்தமான பார்வையை செலுத்தியவள் "நீங்க எல்லாரும் தான் காரணம்" என்றாள்.

"இதேமாதிரி தான் எனக்கும் நடந்தது,ஆனா ஒரு பிரச்சனைன்னு வந்த பிறகு இந்த வீட்டில் உள்ள யாருமே என்னை கொஞ்சமும் கண்டுக்கலையே...நானாவது எல்லாத்தையும் தாங்கிப்பேன் ஆனா சின்னக்குட்டி ஏங்க ஆரம்பிச்சிடுவா".

"நீங்க பாட்டுக்கு இப்போ பாசத்தை காட்டிட்டு எங்க அப்பாவை பார்த்தவுடன் திரும்பவும் முகத்தை திருப்பினால் என்னை மாதிரி அவளால் தாங்கிக்க முடியாது" என்றவள் சென்றுவிட்டாள்.

ஆனால் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த குடும்பத்தினருக்கு அவளின் வலி நன்றாக புரிந்தது. அவள் எவ்ளோ கஷ்டப்பட்டு இருந்தால் இப்படியெல்லாம் பேசுவாள் என்று எண்ணியே அன்றைய நாள் கழிந்தது.
அதன்பின் மதியும் அவளை எதுவும் கேட்காமல் அவள் போக்கில் விட்டுவிட்டான்.

வீட்டுக்கு அருகில் வந்த தர்ஷினி எப்படி இந்த பொம்மையை இந்த பாட்டிக்கு தெரியாம எடுத்துட்டு போறது என்று நினைத்தபடி எட்டிப்பார்க்க மரகதம் திண்ணையில் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவர் எழுந்து செல்வாரா என காத்திருந்து பார்த்தவள் இப்போதைக்கு அவர் இடத்தைவிட்டு அசைவது போல் தெரியாததால்,திரும்பி நடந்தாள்.சிறிது தூரம் சென்று ஒரு சந்தில் திரும்பியவள், வீட்டின் கொல்லைபுறமாக உள்ளே நுழைந்தாள்.

பொம்மையை கொண்டு அறைக்குள் வைத்தவள்,தாயை தேடி சென்று கையோடு அறைக்குள் அழைத்து வந்து அனைத்தையும் சொல்ல...அவருக்கும் மகளின் வாழ்க்கை நல்ல முறையாக இருப்பதாக கேட்டவுடன் அதுவரை மனதை அரித்துக்கொண்டிருந்த ஏதோ ஒன்று காணாமல் போய் மகிழ்ச்சி குடிவந்தது.

அன்றைய நாள் கதிருக்கும் மதுவுக்கும் திருமணம்.மதியின் வீடே விழாக்கோலம் போல் காட்சியளித்தது. அனைத்து சொந்தங்களும் ஊர் மக்களும் கூடியிருக்க…

மதுவோ முகத்தில் மருந்துக்கும் சிரிப்பு என்பது இல்லாமல் கடமையே என சொல்லும் அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள்.

அங்கு கதிரோ எங்கு தன் காதல் தோல்வியில் முடிந்துவிடுமோ என்று அவளுக்கு நிச்சியம் முடிந்த நாள் முதல் ஒவ்வொரு நொடியும் மனதுக்குள் செத்து கொண்டிருந்தவன்...இப்போதும் இதெல்லாம் கனவாக போய்விட கூடாதே என்ற எண்ணமே நிறைந்து இருந்தது.

அத்தனை மகிழ்ச்சியில் இருந்தான் கதிர்.அருகில் நின்றிருந்த மதியின் கரத்தில் கரம் கோர்த்து "ரொம்ப தேங்க்ஸ் டா...நீ மட்டும் இல்லனா நிஜமா இந்த கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லை" என்று சொல்ல,

"டேய் போதும் நிறுத்துடா...நான் என்னமோ பெரிய தியாகம் பண்ண மாதிரி பேசுற, என்னோட எல்லா செயலுக்கு பின்னாலும் ஒரு சுயநலம் இருக்கு. அது என் காதல் ஜெயிக்கணும் என்பது தானே தவிர வேற ஒன்னுமில்லை" என்றான் உண்மையாக.

அதன்பின் அனைத்தும் வேகமாக நடக்க...மணமகனாக கொஞ்சமும் கம்பீரம் குறையாமல் கதிர் மனையில் அமர்ந்திருக்க, அப்போது பதுமையென நடந்து வந்த மது அவனின் அருகில் அமர்ந்தாள்.

ஐயர் சொல்லும் மத்திரங்கள் அனைத்தையும் ஒரு இயந்திரம் போல் சொல்ல,கெட்டிமேளம் முழங்க தன் காதல் மொத்தத்தையும் விழிகளில் தேக்கி தன்னவளை பார்த்துக்கொண்டே கதிர் தாலியை கட்ட,அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

அனைவரின் ஆசீர்வாதத்துடன் கதிர் மதுவின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

வர்ஷினியும் பட்டுபுடவையில் வலம்வர,மதியின் பார்வை அங்கும் இங்கும் அசையாமல் தன்னவளையே பார்த்துக்கொண்டிருந்தது.
பெண்ணவளும் அங்கு ஒருத்தன் தன்னை சைட் அடிப்பதை அறியாமல் மேடையின் நின்றிருந்தாள்.

மீனாட்சி தான் தன் மருமகள் ஒதுக்கி நிற்பது பிடிக்காமல் தன் கூடவே வைத்துக்கொண்டார்.

அதன்பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பிவிட...மிக நெருங்கிய உறவுகள் மட்டுமே இருந்தனர்.
முறைப்படி அனைத்து நடந்து முடிந்திருக்க...மது கதிரின் வீட்டுக்கு செல்ல வேண்டிய நேரமும் வந்தது.

மனம் வலிக்க அனைவரையும் பிரிந்து சென்றாள் மது. கதிரின் வீட்டுக்கு சென்று விளக்கேற்றி அனைத்து சம்பிரதாயங்களும் முடிய,போய் ரெஸ்ட் எடு என்று சொன்னவுடன் விட்டாள் போதும் என்று அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

பிடித்த திருமணம் என்றால் ஒவ்வொன்றையும் ரசித்து செய்திருப்பாள். ஆனால் இதுவோ தன் வீட்டிலிருந்து சென்றாள் போதும் என்பதற்காக நடந்த திருமணம் தானே அவளை பொறுத்தவரை.

இரவும் நெருங்க, அவளை அலங்காரம் பண்ணும் போது தான் அவளுக்கு பக்கென்று இருந்தது. 'அய்யய்யோ!... இதை எப்படி மறந்தேன்.இப்போ என்ன செய்வது' என யோசிக்க..ஒரு முடிவுடன் கதிரின் அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக அங்குள்ள மேஜையில் கொண்டுவந்த பாலை வைத்தவள் "நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்" என நின்றுகொண்டே சொல்ல…

அவனோ "எதுவா இருந்தாலும் உட்கார்ந்து சொல்லு நான் கேட்க தாயார் என்றவன்,
இப்போ என்ன உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை. வீட்டில் சொன்னதுக்காக தான் கல்யாணத்துக்கு சம்மதிச்ச,அதனால் நம்மகுள்ள எதுவும் நடக்க கூடாது….இதை தானே சொல்ல வந்தாய்" என்க,

தான் நினைத்ததை ஒரு வார்த்தை கூட மாறாமல் சொல்லும் கதிரை நிமிர்ந்து பார்த்தவள்... 'ஆமாம்' என தலையாட்டிவிட்டு கீழே படுக்க முயல,

"என்னை நம்பலாம் உன் விருப்பம் இல்லாமல் என்னோட விரல் கூட உன்மேல் படாது என்றவன், இது பெரிய கட்டில் தான் அதனால இங்கேயே படுக்கலாம்" என்றான்.

"ஒருவேளை என்மேல் நம்பிக்கை இல்லனா சொல்லிடு" என்க,அவளோ எதுவும் சொல்லாமல் மெத்தையின் ஒரு ஓரத்தில் சென்று படுத்துக்கொண்டாள்.

அவளின் அந்த நம்பிக்கையே சீக்கிரம் தன் காதலை அவளுக்கு உணர்த்திவிட முடியும் என்ற நம்பிக்கையை தந்தது.
 

Anjali

Well-known member
Wonderland writer

இன்று தான் முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் தினம் என்பதால் காலையில் சீக்கிரமே எழுந்து கிளம்பிவிட்டாள்.அதுவும் அவன் வாங்கிக்கொடுத்த சுடிதாரில்,அது அவளுக்கு அத்தனை பாந்தமாக பொருந்தியது. தன் நீண்ட கூந்தலை பிண்ணலிட்டு,நெற்றியில் சின்ன போட்டு, வகிட்டில் சிறிதாக குங்குமம் என அழகாக தயாராகி நின்றிருந்தாள்.


மனதுக்கு சந்தோஷமாக இருந்த போதும் இன்றாவது தாயை பார்த்து ஒரு ஆசிர்வாதம் வாங்க மாட்டோமா என மனம் ஏங்கியது.

அவனே அழைத்து செல்வதாக சொல்லவும் அவனுக்காக காத்திருந்தாள். அப்போதுதான் குளித்துவிட்டு வந்தவன், அவளின் அழகில் மெய்மறந்து நிற்க,அவளோ "சீக்கிரம் கிளம்புங்க அதவிட்டுட்டு வெட்டியா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க" என்க,

அவனோ தன்னையே நொந்து கொண்டான். "அடிப்பாவி உன்னை சைட் அடிச்சிட்டு இருந்த என்னை பார்த்து வேடிக்கை பார்க்குறேன்னு சொல்றியே" என மனதோடு பேசியபடி தயாராகினான்.

அனைவரிடமும் விடைபெற்று விட்டு அவனின் பைக்கில் செல்ல,அதுவோ அவர்கள் ஊரிலுள்ள சிவன் கோவிலில் நின்றது.

"முதல்நாள் அதான் கடவுளை வணங்கிவிட்டு தொடங்கலாம்" என்று இறங்கியவன் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

இருவரும் கண்மூடி கடவுளை வேண்டிக்கொள்ள, முதலில் கண் விழித்து பார்த்த வர்ஷினிக்கு எதிரில் அவள் தாய் நின்றுகொண்டிருந்தார்.

தாயை பார்த்த மகிழ்ச்சியில் அவளுக்கு தலைக்கால் புரியவில்லை."அம்மா..ஆ" என ஓடி சென்று அணைத்துக்கொண்டாள்.
இத்தனை நாள் பிரிந்திருந்த வலி மொத்தமும் அந்த நிமிடம் ஓடிவிட்டது.

அவள் ஆசைப்பட்டது போல் தாயிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு தங்கையிடமும் சொல்லிவிட்டு அவனுடன் கிளம்பினாள்.

போகும் வழியில் முன்புற கண்ணாடியில் தெரிந்த மதியின் முகத்தையே தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் வர்ஷினி.

'அது எப்படி இவனுக்கு மட்டும் நான் மனதில் நினைப்பது தெரியுது. நான் வாய் திறந்து சொல்லாமலேயே என்னோட எல்லா ஆசையையும் நிறைவேற்ற முடிகிறது' என அவனையே அதிசயமாக பார்த்தாள்.

'ஒருவேளை மனிதனின் மனதை படிக்கும் வித்தையை அறிந்து வைத்திருக்கிறானோ என எண்ணியவள்,அதனால் தான் எல்லாரையும் மயக்கி வைத்திருக்கான்' என அவனை செல்லமாக திட்டிக்கொண்டே வந்தாள்.

அவனும் தன்னவள் பார்வையை உணர்ந்தது போல்,கம்பியை பிடித்திருந்த அவளின் கையை எடுத்து தன் இடையை சுற்றி போட்டவன், "என்னடி என்னை சைட் அடிக்கிறியா" என்க…

"ரொம்ப ஆசை தான்,பெரிய மன்மதன்னு மனசுல நினைப்பு" என்க,

"இல்லையா பின்ன என்னை எத்தனை பொண்ணுங்க சைட் அடிக்கிறாங்க தெரியுமா?.. அத்தானோட பவரை பற்றி தெரியாம பேசுற" என அவனும் சொல்ல,

"ஆமா சொல்லிகிட்டாங்க,ஓவரா சீன் போடாம ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க" என்றாள் நக்கல் குரலில்.

இருவரும் பேசிக்கொண்டே கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர்.

"ஓய் ராட்சசி...பயப்படாம போ,ராகிங் ஏதாவது இருந்தா பயப்படாத தைரியமா எதிர்கொள். அதேநேரத்தில் யாராவது உன்னிடத்தில் வம்பு பண்ணா,முதல்ல என்கிட்ட சொல்லு நான் பார்த்துக்கிறேன் சரியா.

நல்லா படிக்கணும், சாய்ந்திரம் நானே வந்து கூட்டிட்டு போறேன். இதோ இங்க பக்கத்திலேயே பஸ் ஸ்டான்ட் இருக்கு அங்க வெயிட் பண்ணு.. பாய்" என்க,

"ம்ம்" என சொல்லிவிட்டு திரும்பி செல்ல முயன்றவளின் கரம் பிடித்து "ஆல் தி பெஸ்ட் செல்லக்குட்டி" என கன்னம் தட்டி விடைபெற்றான்.

அவளும் தயக்கம்,பயம்,மகிழ்ச்சி போன்ற கலவையான மனநிலையோடு உள்ளே நுழைந்தாள். தனக்கு பின்னால் வந்துகொண்டிருந்த பிரச்சனையை பற்றி அறியாமல்…

நிறைய போராட்டம் அழுகை எல்லாத்தையும் கடந்து படிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்தவளுக்கு...இன்னும் உனக்கான போராட்டங்கள் முடியவில்லை. இனிமேல் தான் உனக்கு பிரச்சனையே தொடங்க போகிறது என்ற கடவுளின் வார்த்தை அவளின் காதுக்கு கேட்காமல் தான் போய்விட்டது.

நடந்து கொண்டிருந்தவள் செவிகளில் காரின் ஹாரன் ஒலி கேட்க,அதிர்ந்து திரும்பியவள்...தனக்கு மிக அருகில் வந்துகொண்டிருந்த காரை கண்டு அதிர்ந்தவள்,படப்படக்கும் மனதை அடக்கிக்கொண்டு சாரி என்றுவிட்டு,தள்ளி நின்றாள்.

அந்த காரில் இருப்பவனால் தன் வாழ்வில் நிகழ போகும் அசம்பாவிதம் அறியாதவளாக தன் வகுப்பை நோக்கி சென்றாள்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 16

அந்த உயரக காரில் அதிக சத்தத்தில் இங்கிலீஷ் பாடலை கேட்டுக்கொண்டே வந்து கொண்டிருந்தவன்,தனக்கு முன் காரின் பாதையை மறைத்தது போல் அன்னநடை போட்டு நடந்து கொண்டிருக்கும் பெண்ணை கண்டு கடுப்பில் "இடியட் வழியை மறித்து நிற்பதும் இல்லாமல் வேடிக்கை பார்த்துட்டு இருக்குது பார்" என அலுத்துக்கொண்டவன் ஹாரனை ஒலிக்கவிட,

அவளும் தள்ளி நின்றிருந்தாள்.அதுவரை கடுப்பில் திட்டுவதற்கு தாயாராக இருந்தவன்,திரும்பி 'சாரி' என சொன்னவளின் முகத்தை பார்த்து அப்படியே விழி விரித்து நின்றான்.

பயத்தில் ஓரிடத்தில் நிற்காமல் சுழலும் கருவிழிகள், படப்படக்கும் உதடுகளும்,கைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டு நிற்கும் மெழுகு சிலை போல் நின்ற பெண்ணை கண்டு ஒரே பார்வையிலேயே தலை குப்புற விழுந்தான் பிரகாஷ்.

பிரகாஷ் இந்த கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவன்.பெரிய தொழிலதிபரின் மகன்.அவன் தந்தையின் பெயரை சொன்னால் போதும் மதுரையில் மட்டும் அல்ல தமிழ்நாடு முழுவதும் தெரியாத ஆளில்லை. அந்த அளவுக்கு செல்வாக்கு வாய்ந்த குடும்பம் என்பது மட்டும் மட்டுமில்லாமல் வீட்டிற்கு ஒரே மகன் என்றாதாலும் இதுவரை அவன் ஆசைப்பட்டு கேட்டது எதுவும் இதுவரை அவனுக்கு கிடைக்காமல் இருந்தது இல்லை.

அதனாலேயே அவனிடம் திமிரும் ஆணவமும் அளவுக்கு அதிகமாக காணப்படும். கல்லூரியின் கடைநிலை ஊழியனில் தொடங்கி அந்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைமை செயலாளர் வரை அனைவருமே அவனிடம் கொஞ்சம் பணிந்து தான் பேசுவார்கள்.

அப்படிப்பட்டவனின் பார்வையில் கல்லூரியின் முதல்நாளிலேயே விழுந்துவிட்டாள் வர்ஷினி.

மருத்துவ கல்லூரி என்பதால் மட்டும் இல்லை அது எந்த படிப்பாக இருந்தாலும், இயல்பாகவே அனைவருக்கும் முதல்நாள் கல்லூரிக்கு செல்வது என்பது சற்று பதட்டத்தையும் பயத்தையும் கொடுக்கும்.

அதே மனநிலையோடு சென்றுகொண்டிருந்த மித்ராவை நிறுத்தினர் சீனியர் மாணவர்கள். "ஏய் பிங்க் சுடிதார் உன்னை தான் இங்க வா" என கூப்பிட,

என்னதான் மெடிகல் காலேஜாக இருந்தாலும் இங்கும் ராகிங் இல்லாமல் இருக்காதே… தன்னவனின் 'எதையும் தைரியமா ஃபேஸ் பண்ணனும்' என்ற வார்த்தை காதுக்குள்ளே கேட்டுக்கொண்டே இருக்க,அவளும் எழும் பயத்தை முகத்தில் காட்டாமல் அவர்கள் அருகே சென்றாள்.

"உன் பேர் என்ன?...எந்த ஊர்?...எந்த டிபார்ட்மெண்ட் மெடிசின்னனா இல்ல பெராமெடிக்கலா?..." என அடுத்தடுத்து கேள்விகளை கேட்க,

அவளும் தன் பெயரையும் ஊரையும் சொன்னவள் "எம்.பி.பி.எஸ் ஃபர்ஸ்ட் இயர்" என்று சொல்ல…

"ஓ….ஒரே டிபார்ட்மெண்ட் தான்,சரி பெருசா எதும் செய்ய வேண்டாம், எங்க எல்லாருக்கும் ஒரு வணக்கத்தை போட்டுட்டு ஒரு பாட்டு மட்டும் பாடிட்டு நீ கிளம்பிக்கிட்டே இருக்கலாம்" என்றனர்.

அவளோ திருதிருவென்று முழித்தாள்.அவளுக்கு அதிகமாக சினிமா பாடல் கேட்டு பழக்கமில்லை, இதுவரை பாத் ரூம் சிங்கராக கூட பாடிடாதவள் கைகளை பிசைந்து கொண்டிருக்க, அப்போது தான் தனது காரை பார்க் செய்துவிட்டு வந்து கொண்டிருந்தான் பிரகாஷ்.

கேட் அருகில் பார்த்த பெண் இங்கு நிற்பதையும் அருகில் இருக்கும் தன் ஜூனியர் மாணவர்களையும் பார்த்தவன் என்ன நடந்திருக்கும் என்று அறிந்தவனாய் அவர்களை நோக்கி சென்றான்.

அதுவரை அவளை கலாய்த்து கொண்டிருந்த அனைவரும் பிரகாஷை பார்த்தும் எழுந்து நின்றனர்.

"என்ன நடக்குது இங்க?.." என அவனும் கைகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சற்று திமிராக கேட்க,

அனைவரும் பயத்துடன் "அது சும்மா ஃபர்ஸ்ட் இயர்…அதான் பெயர் என்னன்னு கேட்டுட்டு இருந்தோம் சீனியர்" என்க,

அவனோ அவளை பார்த்து "உன் பேர் என்ன" என்றான்.

'எத்தனை தடவை தான் இதே கேள்வியே கேட்பாங்க' என்ற கடுப்புடன் அவன் முகத்தை கூட பார்க்காமல் மித்ரவர்ஷினி என்றாள்.

அவள் பெயரை ஒருமுறை தனக்குள் சொல்லி பார்த்துக்கொண்டவன், அவளையே முழுங்குவது போல் பார்க்க,சுற்றி இருந்தவர்களுக்கு வர்ஷினியை நினைத்து பாவமாக இருந்தது.

அவர்கள் என்னவோ அனைவரையும் போல் சீனியர் கெத்தை காட்டவேண்டும் என்ற எண்ணத்தில் அவளை நிற்கவைத்து கேள்வி கேட்க நினைத்தனரே தவிர வேற எந்த எண்ணமும் இருக்கவில்லை. ஆனால் இப்போது அவர்களுக்கு குற்றவுணர்வாக இருந்தது.ஒருவேளை தாங்கள் அந்த பெண்ணை நிறுத்தவில்லை என்றால் அவள் பாட்டிற்கு சென்றிருப்பாள், இப்படி முதல் நாளே இந்த பாழாப் போனவன் கண்களில் பட்டிருக்கமாட்டாளே" என உள்ளுக்கும் கவலையை மறைத்து அவனை பார்க்க…

அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை...இதற்கு முன்பே அவன் அவளிடம் மனதை பறிகொடுத்து விட்டான் என்று.

அவனோ அவளை விட்டு பார்வையை திருப்பாமல் "நீ உன் க்ளாஸ்க்கு கிளம்பு இனி யாரும் உன்னை எந்த தொந்தரவும் செய்யமாட்டாங்க" என்றான்.

"அது எல்லாத்துக்கும் சேர்த்து தான், இனி நீ அந்த பொண்ணை டார்ச்சர் பண்ணுவியே டா படுபாவி" என்ற புலம்பல்கள் நல்லவேளையாக அவன் காதில் விழவில்லை.

"ரொம்ப தேங்க்ஸ்" என பிரகாஷை பார்த்து சொல்லிவிட்டு அவள் நகர்ந்துவிட,

இப்போது பார்வையை இவர்களிடம் திருப்பிய பிரகாஷ் "இது தான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங்,இனிமேல் நீங்க மட்டுமில்ல இந்த காலேஜில் யாரும் அவகிட்ட பேசுறதை பார்த்தாலும் நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்" என்க,

'இப்போ மட்டும் மனுஷன் மாதிரியா நடந்துக்குற' என மனத்துக்குள் நினைத்துக்கொண்டே வெளியே தலையாட்டி பொம்மை போல் "சரி சீனியர்,ஓகே சீனியர்" என பணிவுடன் சொன்னவர்கள் அவனிடமிருந்து விலகி சென்றனர்.

"டேய் பாவம்டா அந்த பொண்ணு பார்க்க ரொம்ப நல்ல பொண்ணா தெரியுறா, ஆனா இனிமேல் என்ன ஆகுமோ" என ஒரு பெண்ணாய் வருத்தத்துடன் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண் சொல்ல,

"பார்க்கலாம் இன்னும் எத்தனை காலம் தான் இவனும் ஆடுவான்,எல்லாத்துக்கும் ஒரு விடிவுகாலம் இருப்பது போல் இவனுக்கும் அழிவுக்காலம் நெருங்கிட்டு இருக்குற மாதிரி ஒரு ஃபீல் டா…எல்லாருமே இவனுக்கு பயந்துக்கிட்டே இருப்பாங்களா?..இவனை எதிர்க்கவும் ஒருத்தன் சீக்கிரம் வருவான் பார்" என ஒருவன் சொன்னான்.

"என்னடா நேத்து ஏதாவது படம் பார்த்தியா டியலாக் எல்லாம் பயங்கரமா இருக்கு" என்றபடி அனைவரும் தங்கள் வகுப்பை நோக்கி சென்றனர்.

மித்ராவின் மனம் முழுவதும் எதையோ சாதித்த உணர்வு.கண்ட கனவு நிறைவேறிய மகிழ்வுடன் ஒரு இருக்கையை பார்த்து அமர்ந்தாள்.அருகில் ஆல்ரெடி ஒரு பெண் அமர்ந்திருக்க…

"ஹாய் நான் பவித்ரா, நீங்க?..." என அந்த பெண் கைநீட்ட,அவளும் சிரித்துக்கொண்டே தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு முதல் சந்திப்பிலேயே நண்பர்கள் ஆகிவிட்டனர்.

லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் மட்டுமில்லை பிரெண்ட்ஸ் அட் ஃபர்ஸ்ட் சைட்டும் ரொம்ப அழகானது தான்.அவர்களின் நட்பும் அங்கு அழகாய் மலர்ந்தது.

அதன்பின் அன்று முழுவது அறிமுக படலம் தான். கல்லூரி,மருத்துவமனை என அனைத்தையும் சுற்றிக்காட்டி அடுத்த ஐந்து ஆண்டுகள் என்னென்ன பாடங்கள் இருக்கிறது என்பதில் தொடங்கி அவர்களின் படிப்பு முடியும்வரை நடக்க இருக்கும் அனைத்தையும் விவரிக்க,அதுக்கே அவளுக்கு தலை சுற்றியது.

படிப்பது அவளுக்கு ஒன்றும் கஷ்டமில்லை என்றாலும்,இன்னும் பாடங்கள் தொடங்காத நிலையில் சாதாரணமாக பேசியதை புரிந்துகொள்ளவே பெரும்பாடு பட்டு போனாள்.

அது இவள் மட்டுமல்ல தமிழ் வழி கல்வி பயின்ற பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனை தான்.பள்ளி வரை ஒரே பாடமாக மட்டும் பயின்ற ஆங்கிலம்,கல்லூரிக்கு சென்றவுடன் மொத்தமும் அதுவே என்று நினைக்கும் போது தோன்றும் இயல்பான பயம் தான்.

சிறிது நாட்களில் அது பழகிவிடும் என்றாலும்,பயம் வருவதை தடுக்க முடியவில்லை அதேநேரம் அவள் நம்பிக்கையையும் இழக்கவில்லை.

அன்றைய தினம் அப்படியே செல்ல, மதி சொன்னது போல் அவனுக்காக பஸ் ஸ்டான்டில் காத்திருக்க தொடங்கினாள்.

பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு அவளை பார்வையிட்டு கொண்டிருந்த பிரகாஷ்...இன்று எப்படியும் அவளை பற்றி அனைத்தையும் அறிந்துகொள்ளும் எண்ணத்தில் இருந்தான்.

அப்படி ஒருவன் தன்னை காலையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல், அவளோ தன்னவனை திட்டிக்கொண்டிருந்தாள்.

'பொறுக்கி… பொறுக்கி,பெரிய இவனாட்டம் வெயிட் பண்ணு வந்திடுறேன்' என்று சொல்லிவிட்டு இன்னும் வராமல் அவள் கோபத்தை ஏற்றி கொண்டிருந்தான் மதியழகன்.

அவளை சுற்றி நிறைய பேர் இருந்தனர்,அதில் சிலர் இவளின் வகுப்பு மாணவர்களும் அடங்கும்.ஆனால் அனைவரோடும் பேசி பழகிடாத காரணத்தால் மெல்லிய சிரிப்போடு சாலையில் பாதையை பதித்தாள்.

பவித்ரா ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவி என்பதால் அவள் சென்றுவிட,இவள் தனியாக தான் இருந்தாள்.

அவள் பொறுமையை நன்றாக சோதித்துவிட்டு வந்து சேர்ந்தான் மதி. அவனை கண்டவுடன் எழுந்த கோபத்தை இருக்குமிடம் உணர்ந்து அடக்கிக்கொண்டவள்,அவனை நெருங்கி "இதுதான் வர நேரமா" என கடிந்து கொள்ள,

"சாரி செல்லக்குட்டி... கொஞ்சம் வேலை அதிகமாகிடுச்சு அதான் லேட், இனிமே அத்தான் டைம்க்கு ஆஜர் ஆகிடுறேன்" என அவளை சமாதானப்படுத்த அவளும் போனால் போகிறது என்று அவனை மன்னித்து வண்டியில் ஏறினாள்.

இதையெல்லாம் தனது காரில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷ் முதலில் முகத்தை 'சுருக்கி யாரு இவன் என்று யோசித்தவன்,ஒருவேளை அவளோட அண்ணனா இருப்பான்' என்று நினைத்துக்கொண்டான்.

அண்ணன் போலீஸா இருந்தா மட்டும் என்ன?..மொத்த மதுரை காவல்துறையும் நம்ம கையில் தானே என்று எண்ணியபடி அவளை பின்தொடர்ந்தான். அவன் நினைத்தால் உட்கார்ந்த இடத்தில் இருந்த அவளை பற்றி அறிந்திருக்க முடியும்,ஆனால் அவனோ அவளை பார்த்துக்கொண்டு இருப்பதற்காகவே அவளை பின்தொடர்ந்தான்.

"அப்பறம் செல்லக்குட்டி… ஃபர்ஸ்ட் டே காலேஜ் எல்லாம் எப்படி போச்சு" என பைக்கை ஓட்டிக்கொண்டே கேட்க,

"நீ போலீஸ் தான,வண்டியில் போகும் போது பேசக்கூடாதுன்னு தெரியாதா?..ரோட்டை பார்த்து ஓட்டு" என சிடுசிடுக்க…

அவனோ "இதுக்கு தான் மக்கு பொண்ணா பார்த்து கட்டியிருக்கணும் என்கிறது.இப்படி ஓவர் படிப்பாளியை கட்டிட்டு அவள் ரூல்ஸ் பேசுறதை எல்லாம் கேட்க வேண்டி இருக்கே" என தன்னை தானே நொந்தபடி ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தினான்.

"இப்போ எதுக்கு இங்க வண்டியை நிறுத்துறீங்க?.." என வர்ஷினி கேட்க,

அவன் "ஏதாவது ஜூஸ் குடிச்சிட்டு போகலாம் வா" என்று அழைத்தான்.

"அதெல்லாம் வேணாம் வீட்டுக்கே போகலாம்" என்றவளை பார்த்து…

"உனக்கு உங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும் தானே" என்க,

"இப்போ எதுக்கு லூசு மாதிரி இந்த கேள்வியை கேட்கிற,வா போகலாம்" என்றாள் அவள்.

அவனோ கைகளை கட்டிக்கொண்டு "இல்ல இன்னைக்கு ஒரு தடவை கூட உங்க அப்பாவை பார்க்கணும்னு உனக்கு தோணலை.இல்லைன்னா சொல்லு இப்பவே போகலாம்" என்றான்.

அவன் தன் மனதை சரியாக உணர்ந்திருப்பதை கண்டு அவனை பார்க்காமல் முகம் கவிழ்ந்தவள் ஆமாம் என்பதாய் தலையை மட்டும் ஆட்டினாள்.

அவருக்கு தான் யாரையும் பிடிக்காதே தவிர,இவளுக்கு தந்தை என்றால் உயிர். சிறு வயதில் கொஞ்சம் கூட தரையில் விடாமல் தோளில் தூக்கி வளர்த்த தந்தை ஆயிற்றே...என்ன தான் அவர் செய்திருந்த போதிலும் தந்தை இல்லையென்று ஆகிவிடாதே.

அனைத்தும் ஒரு நொடியில் மண்ணோடு மண்ணாக போனது அந்த பிரச்சனைக்கு பின். இன்றும் என்ன பிரச்சனை இரு குடும்பத்திற்கும் என்பது அவளுக்கு முழுதாக தெரியாது. ஆனால் மீண்டும் தந்தை தன்னை தூக்கி கொஞ்ச மாட்டாரா,தன்னை முன்னாள் அமர்த்தி அவரின் வண்டியில் ஊரை சுற்றி காண்பிக்க மாட்டாரா என்ற ஏக்கம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது அதற்கு பின் வந்து போன காலங்கள் முழுவதும்.

அவளின் தலையசைப்பை பார்த்து விரக்தியில் சிரித்தவன், "உள்ள வா மித்துமா...எனக்கு பிடிக்குதோ
இல்லையோ என் செல்லக்குட்டி யோட ஆசையை நிறைவேற்றுவது என் கடமை" என்றவன் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

அங்கு ஏற்கனவே தொழில் ரீதியாக ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார் வர்ஷினியின் தந்தை. அவர் இவர்களை பார்க்காது உடன் அமர்ந்திருந்தவரிடம் பேசிக்கொண்டு இருக்க,

அவளின் கரம் பிடித்து அழைத்து வந்தவன் நேராக சென்று அவருக்கு எதிரில் இருந்த ஒரு இருக்கையில் அமர செய்து அவனும் அமர்ந்துகொண்டான்.

யாரது என்று நிமிர்ந்து பார்த்தவர் முன் தன் மகளும் மருமகனும் அமர்ந்திருக்க,கோபத்தில் இருவரையும் முறைக்க தொடங்கினார்.

வர்ஷினி தந்தையின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் தலையை கவிழ்த்துக்கொள்ள, அவனோ அவருக்கு குறையாத ஒரு பார்வையை அவரை நோக்கி செலுத்தினான்.

"உனக்கு என்ன வேணும்" என வர்ஷினியை பார்த்து கேட்க,

அவளோ "நீங்களே சொல்லுங்க" என்பதாய் அவனின் முகம் பார்த்தாள். அவளுக்கு தன் தந்தையின் முன் வார்த்தையே வரவில்லை,பயத்தில் நடுங்கினாள்.

மகள் கையில் இருக்கும் வெள்ளை நிற கோர்ட்டும் புத்தகமும் அவள் கல்லூரிக்கு அதுவும் மருத்துவ படிப்பு படிப்பதை உணர்த்த,ஒரே ஒரு நொடி கண்களில் கணிவு தோன்றி உடனடியாக மறைந்தது.

அதனை அவள் உணரவில்லை என்றாலும் அவரையே பார்த்துக்கொண்டிருந்த மதிக்கு நன்றாக புரிந்தது.

'இதுக்கு மட்டும் ஒரு குறைச்சல் இல்லை.ஏதோ ஒரு மூலையில் பொண்ணு மேல இன்னும் பாசம் இருக்கு, ஆனா அதை வெளிப்படுத்த கூடாதுன்னு விராப்புல சுத்திட்டு இருக்கிறது' என மனதுக்குள்ளேயே தன் மாமனாரோடு சண்டை போட்டுக்கொண்டவன் தன் மனைவியின் புறம் திரும்ப,அவளோ ஏதோ பேயை கண்டது போல் பயத்துடன் அமர்ந்திருப்பது தெரிந்தது.

மீண்டும் அவரை குற்றம் சாட்டும் விழிகளுடன் பார்த்த மதியை இப்போது அவரால் எதிர்கொள்ள முடியவில்லை போல,சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவர் தன்னுடன் வந்தவரையும் "வாங்க போகலாம் இந்த விஷயத்தை பற்றி இன்னொரு நாள் பேசிக்கலாம்" என்று சொல்லிவிட்டு இந்த கடையைவிட்டு வெளியேறினார்.

யாரோ அந்நியரை கண்டு அஞ்சும் மனநிலையில் தன்னை பார்க்கும் மகளை பார்க்க அவரால் முடியவில்லை. இத்தனை நாளும் தானும் அப்படிதான் அவளிடம் நடந்துகொண்டு இருந்திருக்கிறோம் என்பதை மறந்துவிட்டார்.

போகும் அவரின் முதுகையே வெறித்துக்கொண்டிருந்த மனைவியை தன்னை நோக்கி திருப்பியவன், அழ தயாராக இருக்கும் கண்களை பார்த்தவாறு "இப்போ மட்டும் அழுது பாரு கண்ணு இரண்டையும் நோண்டிடுறேன்" என்றான் மதி.

"இல்ல தெரியாம தான் கேட்கிறேன் இத்தனை நாளும் உன்கிட்ட அப்படியே சிரிச்சி பேசிட்டு இருந்தவரா இப்படி போறாரு...ஒரே வீட்டில் இருந்தாலும் இதே நிலைமை தானே. அப்பறம் எதுக்கு சும்மா இந்த கண்ணீர்" என்றவன் ஜூஸை ஆர்டர் கொடுத்தான்.

இருவரும் குடித்துவிட்டு கிளம்பிவிட, அதன்பின் அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மறைந்து இறுக்கம் வந்து குடிகொண்டது.
 
Status
Not open for further replies.
Top