ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவிலே மிதக்கும் விழிகள் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 19

"டேய் என்னடா நடக்குது இங்க...இவனா,என்னால சத்தியமா நம்ப முடியலை. அன்னைக்கு பார்க்கும் போது அரைவேக்காடு மாதிரி இருந்தானே டா " என கதிர் அந்த புகைப்படத்தையே பார்க்க அதில் இருந்தது என்னவோ சந்திரனின் முகமே.

மதிக்கு இது மிக பெரிய அதிர்ச்சி...அவன் என்னவோ வெட்டியாக பிசினஸ் பண்ணுகிறேன் என்று கடன் வாங்கி அதனை திருப்பி தர முடியாமல் ஏமாற்ற நினைத்ததால் தான் அன்று இவன் மேல் கேஸ் பதிவானது . அதுவும் அந்த நேரத்தில் கல்யாணத்தை நிறுத்த ஒரு காரணம் வேண்டும் என்று அவசரமாக அவனை கைது செய்திருந்தான் மதி. அப்படியிருக்க அவன் ஒரு கடத்தல் காரனாக இருப்பான் என நினைக்கவே இல்லை.

மித்ராவின் அத்தைமகன்,அன்று திருமணம் முடிந்து கைது செய்து காவல்துறைக்கு அழைத்து வர பட்டவன், அன்று மாலையே பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு விடுதலையாகி விட்டான். ஆனால் அவ்வளவு பணம் எப்படி உடனடியாக அவனுக்கு வந்தது என்பதை பற்றி யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மகனை காப்பாற்ற எதையாவது வித்து பணம் பெற்றிருப்பார்கள் என்றே எண்ணினான்.

ஒருவேளை அன்றே அதனை பற்றி நன்றாக விசாரித்திருக்க வேண்டுமோ...சொந்தகார்கள் தான் என்பதால் அவர்கள் மீது சந்தேகம் வரவில்லையோ என இன்று வருந்தினான். அப்படி மட்டும் அன்றே அனைத்தையும் விசாரித்திருந்தால் இந்த பெண்ணுக்கு இப்படியொரு நிலை வந்திருக்காதே என நினைத்தவன்,

"ரொம்ப தேங்க்ஸ் மா... இவனை அடையாளம் காட்டியதற்கு.நீங்க கிளம்பலாம்" என்றுவிட்டு வேகமாக வெளியே வந்தான்.

இப்போது அந்த சந்திரன் எங்கு இருப்பான் என மொபைல் நெட்வொர்க் வைத்து கண்டறிந்தவர்கள்,அந்த இடத்தை நோக்கி சென்றனர்.

அங்கு தங்கள் கெஸ்ட் ஹவுஸில் பிரகாஷ் மற்றும் அவனின் நண்பர்கள் அனைவரும் மதுபானத்தை கையில் ஏந்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.

"டேய் என்னடா இன்னும் இவனை காணும்.நேர்த்தே பார்ட்டி ரெடிண்ணு சொன்னானே...இன்னுமா வரான்" என அவசரப்பட்டனர் பிரகாஷின் நண்பர்கள்.

எப்போதும் பிரகாஷ் தான் இப்படி பரபரப்பான். ஆனால் இன்று மாறாக அவனை தவிர்த்து அனைவருமே உச்சகட்ட போதையில் ஒரு பெண்ணுக்காக காத்திருந்தனர்.
பிரகாஷோ மனதில் மித்ராவை பற்றியே நினைத்து கொண்டிருந்தான்.எப்படி அவளிடம் தன் காதலை உணர்த்துவது என்று.

அதே நினைவில் உழன்று கொண்டிருந்தவனுக்கு இப்போது இதில் கொஞ்சமும் விருப்பமில்லை,
நண்பர்களுக்காக மட்டுமே உடன் இருக்கிறான். அவனுக்கு இப்போது மித்ராவை அடைவது ஒன்றே குறியா இருந்தது.மற்றையது எல்லாம் பின்னுக்கு செல்ல அவன் சிந்தை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தாள் மித்ரவர்ஷினி.

கல்லூரி முடிந்து வீட்டுக்குள் நுழைந்த மித்ராவின் காதில் முதலில் விழுந்தது மதி சென்னையில் இருந்து வந்துவிட்டான் என்ற செய்தியே.

அதை கேட்டவுடன் மனம் சிறகில்லாமல் பறக்க,மகிழ்ச்சியோடு தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.ஆனால் அவளை வரவேற்றது என்னவோ வெறுமையான அறையே….'இன்னும் என்மேல் கோபம் போகலையோ,அப்போ இனிமேலும் முன்புபோல் வீட்டுக்கு வர மாட்டானோ' என எண்ணி வருந்தியவளுக்கு 'இப்போதே அவனிடம் கத்தி எனக்கு உன்மேல் கோபமில்லை. நானும் உன்னை காதலிக்கிறேன்' என சொல்லவேண்டும் போல் மனம் துடித்தது.

இவ்வளவு நாள் பொறுமை காத்தவளுக்கு இன்று அவன் வரும்வரை காத்திருக்க முடியவில்லை.உடனடியாக அவனிடம் பேச வேண்டும் என பேதை மனம் பரபரக்க,எப்படி அவனிடம் பேசுவது என யோசித்தவளுக்கு அப்போது தான் அவன் வாங்கி கொடுத்த ஃபோன் நினைவு வந்தது.இத்தனை நாட்களாக அதை எடுத்து பார்க்காதவள் இன்று அதனை கைகளில் எடுத்தாள்.

அன்று கோபத்தில் வெறுத்த அதே பொருளை இன்று தனக்காக தன்னவன் பரிசளித்தது என்று நினைக்கும் போதே முகத்தில் தானாக ஒரு வெட்கம் வந்து குடிகொண்டது.

அந்த மொபைலை கையில் வைத்துக்கொண்டு 'இப்போ அவரோட நம்பருக்கு எங்க போறது' என எண்ணியபடி அதனை உயிர்ப்பிக்க,அவளுக்கு சிரமம் வைக்காமல் அதில் அவனின் எண் பதிவாகியிருந்தது. இத்தனை நேரம் இருந்த தைரியம் மொத்தமும் போக, இப்போது அவனுக்கு ஃபோன் பண்ணலாமா வேண்டாமா என வெகுநேரம் அப்படியே இருந்தவள்,பின்னர் ஒரு முடிவோடு அவனுக்கு அழைத்தாள்.

இவளின் கெட்ட நேரமோ அல்லது அவனின் கெட்ட நேரமோ...அப்போது தான் தனது மொபைலை சைலண்டில் போட்டிருந்தான் மதி. இது எப்போதும் கேஸ் விஷயமாக செல்லும் போது போலீஸ்காரர்கள் அனைவரும் செய்வது தான்.அதை தான் இவனும் செய்திருந்தான்.

ஒன்று இரண்டு மூன்று என தொடர்ந்து இவளும் அழைத்துகொண்டே இருக்க,அவனது மொபைல் ஊமையாக கத்திக்கொண்டிருந்தது அவனின் பாண்ட் பாக்கெட்டில்.

இவளோ 'அவன் தன்னை அந்த அளவுக்கு வெறுத்துவிட்டானா,இத்தனை முறை அழைத்தும் பதில் இல்லையே' என தவிக்க,அவனின் மொபைல் பேட்டரி இல்லாத காரணத்தால் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.

கண்கள் இரண்டும் கலங்க "இதுதான் கடைசி தடவை இப்போ மட்டும் எடுக்கலை" என சொல்லிக்கொண்டே அவனுக்கு அழைக்க இப்போது ஸ்விட்ச் ஆஃப் என வரவும்….அவன் வேண்டுமென்றே தான் அழைத்தது பிடிக்காமல் தன்னிடம் பேச விருப்பமில்லாமல் அணைத்துவிட்டான் என தப்பாக புரிந்து கொண்டாள்.

"போயேன் நீ பேசலன்னா எனக்கென்ன...இனிமேல் நீயே வந்து பேசினாலும் உன்கிட்ட நான் பேசவே மாட்டேன்" என வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய் தனிந்திருந்த கோபம் மீண்டும் உயிற்பெற அங்குள்ள அவனின் புகைப்படத்தை பார்த்து திட்டி அதன் மண்டையிலேயே ஒன்று போட்டாள்.

சந்திரனும் பிரகாஷின் நண்பன் தான். அவர்களின் அனைத்து தீய பழக்கங்களில் இவனுக்கும் பங்கு உண்டு. வீட்டுக்குள்ளும் உறவுகளுக்கு மத்தியிலும் ஒன்றும் தெரியாத அப்பாவி வேஷத்தை போட்டுக்கொண்டு திரிபவன், இவர்களோடு இணைந்தால் எந்த கேடு கெட்ட வேலையையும் செய்ய தயங்க மாட்டான்.

பிரகாஷ்க்கு கூட தெரியாது இவனின் மாமன் மகள் தான் மித்ரா என்றும் இவனோடு திருமணம் வரை சென்று நின்றது என எதுவும் தெரியாது. அவர்களுக்கு அப்போது தான் நான்காம் ஆண்டு இறுதி தேர்வு நடந்து கொண்டிருந்ததால் இவனின் திருமணத்திற்கு செல்லவில்லை.
அதுவுமில்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்தால் குடும்பத்தை பற்றி பேசவே கூடாது என்பது இவர்களுக்கு எழுதப்படாத சட்டம்.அதை சரியாக கடைப்பிடிப்பார்கள்,
அதனாலேயே மித்ரா திருமணம் ஆன செய்தியும் அவனுக்கு இதுவரை தெரியவே இல்லை.

சந்திரனின் கார் மதுரை நகரத்தை கடந்து ஒரு சிறிய ரோட்டில் பயணிக்க,மதியும் கதிரும் கிட்டத்தட்ட அவனை நெருங்கிவிட்டனர். இருவரின் காருக்கும் இடையே ஐம்பது மீட்டர் தொலைவே இருந்தது.

அதுவரை கார் ஓட்டுவதில் கவனமாக இருந்த சந்திரன், எதர்ச்சியாக ரிவர்வியூ கண்ணாடியை பார்த்து தலையை ஸ்டைலாக சிலுப்பிக்கொள்ள,அப்போது தான் ஒரு கார் தன்னை பின் தொடர்வதை உணர்ந்தான்.

அது கொஞ்சம் ஒதுக்கு புறமாக உள்ள இடம் என்பதால் அவ்வளவாக வாகனங்களோ மக்கள் நடமாட்டமோ இல்லாத இடம்,எனவே அவனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது.

சைட் கண்ணாடி வழியாக யாரு என்று உற்று பார்க்க,அங்கே அமர்ந்திருந்த இருவரை பார்த்து ஈரகுலையே நடங்கியது அவனுக்கு.

'இவனுகளா...இப்போ எப்படி தப்பிப்பேன்' என்ற யோசனையில் பிரகாஷ் எண்ணிற்கு அழைக்க, "டேய் மச்சான் போலீஸ் எப்படியோ மோப்பம் பிடிச்சு வந்துடுச்சி டா...நான் இப்போ என்ன பண்றதுன்னு தெரியலை" என சொல்ல

"என்னடா சொல்ற,உன்னை என்ன கொலையா பண்ண சொன்னேன்.ஒரு பொண்ணை தூக்கிட்டு வர சொன்னேன்.அதுக்கு கூட முடியாமல் மாட்டிக்கிட்டு" என கத்தியவன்,

"டேய் ஒழுங்கா நான் சொல்றதை கேளு.முதல்ல காரை அப்படியே வேற பக்கத்துல திருப்பு. எந்த காரணம் கொண்டும் நாங்க இருக்குற இடம் மட்டும் போலீஸ்க்கு தெரிய கூடாது.அவங்களை வேற பக்கம் திசை திருப்பு.உனக்கு எதுவும் ஆகாமல் நாங்க பார்த்துக்குறோம்" என்றுவிட்டு மொபைலை அணைத்தவன்,

"டேய் வாங்கடா முதல்ல இடத்தை காலி பண்ணுவோம்.அந்த கிறுக்கன் போலீஸ்ல மாட்டிக்கிட்டான்" என நண்பர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு கெஸ்ட் ஹவுசை விட்டு அகன்றான்.

இங்கு சந்திரனுக்கு மதியை கண்ட பீதியிலேயே கார் அவன் கையிலிருந்து தடுமாறியது. தாறுமாறாக வண்டியை ஓட்ட, எங்கே ஏதாவது ஆக்ஸிடென்ட் ஆகிவிடுமோ என்ற பயத்தில் மதியும் தனது வண்டியின் வேகத்தை கூட்டினான் எப்படியும் அந்த பெண்ணை காப்பாற்றி விடும் நோக்கத்தில்.

சாதாரண மண் சாலையில் இரு வாகனமும் ரேஸ் வேகத்தில் செல்ல, ஒரு கட்டத்தில் மதியின் கார் அவனின் வண்டியை முந்திக்கொண்டு முன்னே நின்றது.

சட்டென்று ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்திய சந்திரன்,காரில் இருந்து இறங்கி ஓட தொடங்க, ஒரே எட்டில் அவனை பிடித்த மதி… "தப்பிக்க நினைச்ச இதே இடத்தில் கொன்னு புதைச்சிடுவேன் பொறுக்கி நாயே...உன்னை ரொம்ப சாதாரணமாக எடை போட்டுட்டேன்,ஆனா இனிமேல் உன்னை அந்த கடவுளால் கூட காப்பாத்த முடியாது" என்றவன் ஓங்கி ஒரு குத்து மூக்கிலேயே குத்த,முகத்தில் இரத்தம் வடிய,

"வேண்டாம்டா என்கிட்ட வச்சுக்கிட்ட,அப்பறம் நிறைய பின்விளைவுகளை சந்திப்ப" என்ற சந்திரனை,

"டேய் நீ என்னடா அவனை பேச விட்டுட்டு வேடிக்கை பார்க்குற" என கோபத்தில் கதிரும் தன் பங்கிற்கு அடி வெளுத்து வாங்க…."விடுடா செத்துட போறான்.இவனை வச்சு செய்யணும் நீ பாட்டுக்கு போசுக்குண்ணு சாகடிச்சிடாத" என்ற மதி அவனை தர தரவென இழுத்து சென்று ஜீப்போடு சேர்த்து கைவிலங்கிட்டவன், காரை திறக்க,

அங்கே கைக்காலகள் எல்லாம் கட்டப்பட்டு,மயங்கிய நிலையில் இருந்தால் கடத்தப்பட்ட பெண்.
கதிர் உடனடியாக இந்த பொண்ணை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போ..நான் இவனை கொஞ்சம் கவனிச்சிட்டு, அப்பறம் வந்து பார்க்கிறேன் என்றவன், சந்திரனோடு கிளம்பிவிட,கதிரும் அந்த பெண்ணோடு மருத்துவமனை நோக்கி சென்றான்.

அன்று முழுவதும் காவல்நிலையத்தில் வைத்தே அவனை ஒருவழி ஆக்கியிருந்தான் மதி. "டேய் வேணாம் நீ உன்னோட சொந்த பகையை எல்லாம் காட்டி ஓவரா பண்ற,என்னை கோர்ட்டில் ஒப்படைக்கணும்...இப்படி அடிச்ச உன்னோட வேலைக்கே ஆப்பு தான்" என கொஞ்சமும் பயமின்றி சந்திரன் சொல்ல,

"ஏண்டா நாயே...இவளோ தெரிஞ்ச எனக்கு இரத்தம் காயம் ஏதும் வராமா உன்னை அடிக்க தெரியாதா?..உன் திமிர் மொத்தமும் அடங்கி என்னை விட்டுடுன்னு உன் வாயில் இருந்து வரும்வரை உன்னை இன்னைக்கு விடுறதா இல்லை" என மதியும் கோபத்தில் சிங்கம் போல் கர்ஜித்தான்.

"எதுக்குடா அந்த பொண்ணை கடத்துனா" என்ற மதியை நக்கலாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டே "அதுவா அந்த பொண்ணை நான் ஒன் சைடா காதலிக்கிறேன் அதான்,கடத்தி கல்யாணம் பண்ணிக்கலாம்னு" என சொன்னவனின் வாயில் மீண்டும் ஒரு குத்துவிட…"யாருகிட்ட உன் வேலையை காட்டுற மரியாதையா சொல்லு உன் பின்னாடி யாரு இருக்கா.கண்டிப்பா இதை நீ மட்டும் செய்ய வாய்ப்பேயில்லை,உனக்கெல்லாம் அந்த அளவுக்கு தைரியம் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்றவன்,

"உனக்கு பின்னால் யாரோ ஒரு பணம் தின்னி முதலை இருக்குனு எனக்கு நல்லாவே தெரியும். அது யாருன்னு சொல்லிட்டா உனக்கு நல்லது இல்லை அப்பறம் உன் உயிருக்கு நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது" என்க,

'அவனோ நீ எவ்ளோ அடிச்சாலும் ஒரு வார்த்தையை கூட உன்னால் வாங்க முடியாது' என்ற தெனாவட்டில் இருந்தான்.

அன்றைய நாள் முழுவதும் போலீஸ் ஸ்டேஷனிலேயே இருந்தவன்,விடியற்காலையில் வீட்டிற்கு வந்தான். இன்னும் யாரும் எழாததால் நேரே தன் அறைக்கு செல்ல,

இரவு வெகுநேரம் மதியின் நினைவில் அழுகையில் கரைந்தவள், சற்று நேரத்திற்கு முன்பே தன்னை மறந்து தூக்கத்திற்கு சென்றிருந்தாள் வர்ஷினி.

ஒருபுறமாக ஒருக்களித்து படுத்திருந்த மித்ராவின் அருகே அமர,வெகுநாட்கள் கழித்து அவளை ஆசையாக தன் பார்வையால் வருடினான்.

விடிவிளக்கின் ஒளியில் கன்னத்தில் பதிந்திருந்த கண்ணீர் தடம் அப்பட்டமாக தெரிய,அதனை புருவம் சுருக்கி பார்த்தவன்…."குட்டி சாத்தான் அடுத்தவங்களை தானே அழ வைப்பா,எதுக்கு இப்படி அழுதிருக்கா" என நினைக்கும் போதே தூக்கத்திலேயே சிறுபிள்ளை போல் தெம்ப,

மெல்ல தன் விரல் கொண்டு அவளின் கன்னம் வருட,முகத்தில் தானாக ஒரு கீற்று புன்னகை தோன்றி மறைந்தது.

தூக்கத்திலேயே அவனின் தொடுகையை உணர்ந்தவள் போல் கன்னம் வருடிய கரத்தை கெட்டியா பிடித்துக்கொள்ள,ஒருவேளை முழித்து விட்டாளோ என பயந்தவன்,அடுத்து அவள் செய்த செய்கையில் அவனின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.

அவனின் கரத்தை இழுத்து தன் கழுத்தடியில் வைத்துக்கொண்டு அவன் உள்ளங்கையில் முகம் தாங்கி தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.

அவனும் அவளிடமிருந்து தன் கரத்தை விடுவிக்க மனமின்றி அப்படியே அமர்ந்துவிட்டான் அவன் தேவைதையை ரசித்தபடி.

அவளையே பார்த்து கொண்டிருந்தவன் மெல்ல குனிந்து அவள் நெற்றியில் தன் முத்திரையை அழுத்தமாக பதிக்க,அவளோ கண்கள் சுருக்கி அதனை ரசித்தாள். அடுத்தது அவன் இதழ்கள் பதிந்தது என்னவோ அவளின் விழிகளில் தான்.அடுத்து அவளின் நுனி மூக்கில் முத்தமிட்டவாறே மெல்ல கடிக்க, கூச்சத்தில் முகத்தை திருப்ப அடுத்தது இரு கன்னங்கள் தாண்டி அவளின் இதழை நோக்கி இவனின் இதழ்கள் பயணிக்க,

நூழிலை இடைவெளியில் அவளின் வார்த்தைகள் நினைவில் வர, தீச்சுட்டார் போல் அவளை விட்டு விலகினான். ஒருமுறை தடுமாறி கொடுத்த முத்ததிற்கே அப்படி பேசியவளுக்கு இது மட்டும் தெரிந்தது அவ்வளவு தான் என எண்ணியபடி தன் கரத்தை விடுவிக்க முயல,ஆனால் அவளோ எங்கே மீண்டும் வந்தவன் சென்றுவிடுவானோ என்று நிஜத்தை கனவாய் எண்ணி கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

வெகுநேரம் அப்படியே குனிந்து அவளின் முகம் பார்த்தே இவனும் இருக்க,மெல்ல விடிய தொடங்க,ஹாலில் அனைவரின் சத்தமும் கேட்டது. இனிமேல் இப்படியே அமர்ந்திருப்பது நல்லதல்ல என எண்ணி கரத்தை இழுக்க, இப்போதும் முடியவில்லை.

அவனுக்கோ 'இப்போது மட்டும் அவள் எழுந்து இருவரும் இருக்கும் நிலையை பார்த்தாள் என செய்வாளோ' என பயத்தோடு மெல்ல தன் மற்றொரு கரம் கொண்டு அவளின் தலையை தாங்கி தலையணையில் வைத்தவன்,தன்னை பிடித்திருந்த கரத்தில் மீசை முடி குறுகுறுக்க தன் இதழ் பதிக்க,சட்டென்று அவன் கரத்தை விடுவித்தாள்.

தப்பித்தால் போதும் என்று ஒரே ஓட்டமாக ஓடி குளியலைக்குள் புகுந்து கொண்டான்.யாருக்கும் பயப்படாதவன் அஞ்சாநெஞ்சன் என பெயர்பெற்ற மதி, தன் குட்டி ராட்ச்சசிக்கு பயந்து நடுங்கினான்.

அவன் வந்ததோ,மீண்டும் டியூட்டிக்கு சென்றதோ எதுவும் தெரியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவள், மெல்ல விழி திறக்கும் போது மணி காலை எழரையை கடந்திருந்தது.அவசரமாக எழுந்து கிளம்பியவளுக்கு அவன் வந்துபோன அடையாளம் எதுவும் கருத்தில் பதியவில்லை. இரவில் அவன் பதித்த முத்தங்கள் அனைத்தும் அவளை பொறுத்தவரை கனவாகவே இருந்தது.

அன்றைய நாள் கல்லூரியில் கூட அவள் முகத்தில் சிரிப்பு என்பதின்றி இறுக்கமாகவே இருந்தது.அவளின் தோழி கூட எவ்வளவு முயன்றும் அவளை மாற்ற முடியாமல் அவள் போக்கில் விட்டுவிட்டாள்.

அன்று சந்திரனை கோர்ட்டில் ஒப்படைக்க, அவனோ நேற்று மதியிடம் சொன்னது போல் அவளை காதலித்தேன் அதான் கடத்தினேன் என்று சொன்னானே தவிர வேறு ஒரு வார்த்தையும் இவர்களால் வரவைக்க முடியவில்லை. போன கடத்தலுக்கு இவனுக்கும் தொடர்பு இருப்பதற்கு எந்த ஆதராமும் இல்லாததால் அந்த கேஸ் எதுவும் இவன் மேல் விழவில்லை.இவர்கள் எதிர்ப்பார்த்ததை விட குறைந்தபட்ச தண்டனையாக மூன்று ஆண்டு சிறை தண்டனை மட்டுமே கிடைத்தது.

அவனுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அவனிடமிருந்து வாங்க முடியவில்லை.அவன் மொபைலை வைத்து பார்த்தலிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.அந்தளவுக்கு எல்லா தடயங்களையும் அழித்திருந்தான் பிரகாஷ்.அவனுக்கும் இவனுக்கும் இடையேயான தொடர்பு கடைசிவரை மதிக்கு தெரியாமலே போனது.

அவன் உள்மனம் சொல்லும் அந்த முகம் தெரியாத ஒருவனால், தன் உயிரானவளின் உயிர் ஊஞ்சலாட போவதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
 

Anjali

Well-known member
Wonderland writer
அவனின் பின்புலம் பற்றி அறியமுடியாத கடுப்பில் வந்துகொண்டிருந்த மதி...பேருந்து நிலையத்தில் ஏதோ தகராறு நடந்துகொண்டிருக்க,அதை கடந்து செல்லும் டிரைவரிடம் வண்டியை நிறுத்த சொல்லியவன் இறங்கி கூட்டத்தை நோக்கி செல்ல,

அப்போதுதான் கல்லூரி முடிந்து பேருந்து நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த மித்ரா தன்னவனை அங்கே எதிர்பாராமல் கண்ட மகிழ்ச்சியில் காலையிலிருந்து கலையிழந்து கிடந்த முகத்தில் தானாக புன்னகை தவழ, அவனையே பார்த்திருக்க,

'இங்க என்ன பிரச்சனை" என அங்கு நின்ற பெண்ணை பார்த்து கேட்க,

அவளோ "அது இவன் என்னை லவ் பண்ண சொல்லி கட்டாயப்படுத்துறான் சார்.தினமும் இப்படி தான் நடக்குது,இன்னைக்கு ஒருபடி மேலே போய் கையை பிடிச்சு இழுத்து லவ் பண்ணலனா முகத்தில் ஆசிட் அடிச்சிடுவேன்னு மிரட்டுறான் சார்" என்க,

ஏற்கனவே கொலைவெறியில் இருந்தவனுக்கு இது இன்னும் ஆத்திரத்தை அதிகரிக்க,

"எங்க இப்போ ஆசிட் அடி பார்ப்போம்….அடிடா அடி" என கத்தியபடி அவனை நெருங்க,அவனோ பயத்தில் பின்னால் நகர்ந்தான்.

"உங்களை மாதிரி ஆளுங்களால தான்டா...பொண்ணுங்க படிக்க கூட வீட்டைவிட்டு வெளியே விட மாட்டேங்குறாங்க" என நடுரோடு என்றும் பார்க்காமல் புரட்டி எடுத்துவிட்டான்.

அங்கிருந்த போலீஸ்காரர்களால் கூட அவனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனை எல்லாம் பார்த்து பொது மக்களுக்கு போலீஸ் மேல் உள்ள மரியாதை இன்னும் கூடியது.தங்களுக்காக தட்டி கேட்கவும் ஆள் இருக்கிறது என்ற நம்பிக்கையை கொடுத்தது.

ஆனால் அனைத்திற்கும் மாறாக உறைந்திருந்தது மித்ரா தான். 'இதுவரை அவனின் மென்மையாக தன்னிடம் பாசத்தை காட்டும்,சின்ன சின்ன குறும்புத்தனம் செய்து அடிவாங்கும் மதியா இது' என்று பயந்தே போனாள்.

'இவனையா அன்னைக்கு அப்படி அடிச்சோம், ஒருவேளை இன்னைக்கு இவனுக்கு விழுந்த அடியில் ஒரே ஒரு அடி தன் மேல் விழுந்திருந்தால் கண்டிப்பாக ஒரே அடியில் உயிர் போயிருக்கும் என்று நினைத்தவளுக்கு புதிதாக பயம் என்ற ஒன்று பிறந்தது. அவன் முகத்தில் தோன்றிய ரெளத்திரத்தில் இனிமேல் அவனை நெருங்கவே கூடாது என்று முட்டாள்தனமான முடிவை எடுத்தாள். அவளுக்கு எங்கே தெரிய போகிறது அவளிடம் அவன் வெறும்... அவள் ஆட்டிப்படைக்கும் பொம்மை என்று?...அவளின் கண்ணசைவில் செயல்படுபவனுக்கு அவளின் கண்கள் கலங்கினால் அவனும் கலங்குவான் என்று?...அவனா இவளை அடித்துவிடுவான் என அஞ்சுகிறாள். இன்னும் அவனை பற்றி புரிந்து கொள்ளாமலே இருக்கிறாளே,இது இங்கு போய் முடியுமோ.

கூட்டத்தில் அவள் இருந்ததை மதி பார்க்கவில்லை. அவனுகிருந்த டென்ஷனில் யாரையும் கண்டுகொள்ளாமல் அந்த இடத்தைவிட்டு சென்றுவிட, ஏதோ பேய் அறைந்தது போல் நின்ற மித்ரா எப்படி வீடுவந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.

வீட்டுக்குள் நுழையும் போதே மதியின் குரல் தான் கம்பீரமாக ஒலித்தது. அவள் வரும் முன்பே இவன் வீட்டை அடைந்திருந்தான். அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருக்க,இவள் மட்டும் யாரையும் பார்க்காமல் அறைக்குள் ஒளிந்து கொண்டாள். இப்போது அவனை எதிர்கொள்ள கொஞ்சமும் அவளுக்கு தைரியமில்லை.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 20

தன்னை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் செல்லும் மனைவியை பார்த்து பெருமூச்சு விட்டவன்,அனைவரிடமும் பேசிவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

அவன் வரும் முன்பே குளித்துவிட்டு சாதாரண உடைக்கு மாறியவள்,ஒன்றும் நடவாதது போல் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள் படிக்கும் சாக்கில்.

உள்ளே நுழைந்தவன்,தானும் குளித்துவிட்டு வந்து அமைதியாக மெத்தையில் சாய்ந்து அமர்ந்தான்.பல மாதங்கள் கழித்து வந்ததனால் உடனடியாக வெளியே சென்றால் தங்களின் பிரச்சனை வெளியே தெரிந்துவிடும் என்றே அங்கேயே இருந்தான்.

அப்போது மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோனை பார்த்தவுடன் தான் அவள் நேற்று அழைத்தது நினைவில் வந்தது.நேற்று அவளின் அழைப்பை பார்க்காதவன் இன்று காலை ஸ்டேஷனுக்கு சென்ற பின்பே மொபைலை பார்த்தான்.அதுவும் அதில் அவன் வாங்கி வந்த எண் இருக்க,பார்த்தவுடன் அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் ஏன் இத்தனை முறை அழைத்திருக்கிறாள் என்று குழம்பியவன் அவளிடம் கேட்க நினைத்து ஃபோன் பண்ண நினைத்தவன்,அது அவள் கல்லூரியில் இருக்கும் நேரம் என்றெண்ணி விட்டுவிட்டான். அது இப்போதே அவனுக்கு நினைவிற்கு வந்தது.

அதை பற்றி கேட்க நினைத்து அவள் புறம் திரும்ப,சரியாக அதேநேரம் மதனும் தியாவும் வந்துவிட, அதற்கு மேல் அவனால் அந்த பேச்சை எடுக்க முடியவில்லை.

படிக்க வந்த தியா தன் தந்தையை கண்டவுடன் அவன் மடிக்கு தாவிட "அட என் செல்லக்குட்டி இப்போ எல்லாம் சூப்பரா படிக்கிறீங்க போல,யாரும் சொல்லாமலேயே புக் எடுத்துட்டு வந்திருக்கீங்க" என செல்லம் கொஞ்ச,

"ஆமா நான் குட் கேர்ள் ஆகிட்டேன்னாம் மித்ரா சித்தி தான் சொன்னாங்க" என அவளும் கன்னம் குழி விழ சிரிக்க..
'ஓ... எல்லாரையும் அவள் பக்கம் இழுத்திட்டா' என நினைத்து கொண்டவன் குழந்தையின் புறம் குனிந்து "என் சமத்து குட்டி , சரி படிங்க...அப்பாக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு போய்ட்டு வந்துடுறேன்" என சொல்லிவிட்டு வெளியே செல்ல முயல,

வாசல்வரை சென்றவன்,ஏதோ ஒரு ஊந்துதலில் திரும்பி பார்க்க, மித்ராவோ அவனையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வை மட்டும் போகாதயேன் என கெஞ்சியது. அதை சரியாக உணர்ந்தவனுக்கு தன்னையே நம்ப முடியவில்லை.

'ஒருவேளை நம்மதான் சரியா புரிஞ்சிக்கலையா...அவ பார்வைக்கு அர்த்தம் தான் என்ன?.. என முதன்முறை புரியாமல் நின்றான்.அவன் உணர்ந்தது உண்மையா என்று தான் அவனுக்கு சந்தேகம். ஒருவேளை நாம் ஒன்று நினைத்து கொண்டு வெளியே செல்லாமல் இருந்தால், அவள் மீண்டும் தன்னை தவறாக நினைத்து வார்த்தைகளை கொட்டிவிடுவாளோ என எண்ணியே... எதற்கு வம்பு நாம எப்போதும் போலவே இருப்போம்' என நினைத்து கொண்டு தனது நடையை தொடர்ந்தான்.

செல்லும் அவனை வேதனையோடு பார்த்தவளுக்கு அவனை தடுக்கும் மார்க்கம் சுத்தமாக புலப்படவில்லை.

நேரம் கடக்க,வீட்டில் உள்ள அனைவரும் அவனை திட்டி தீர்த்தனர். "திரும்பவும் ஆரம்பிச்சிட்டான்.இன்னைக்கு தான் வீட்டுக்கு வந்தான் அதுக்குள்ள கிளம்பிட்டான்.இந்த ஊருல இவன் மட்டும் தான் போலீஸ் மாதிரி இவனுக்கே எல்லா வேலையும் கொடுக்குறாங்க" என அவனின் மேல் அதிகாரிகள் அனைவரையும் கரித்துக்கொட்ட, இது அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த மித்ராவிற்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது.

யாரும் அவள் முகத்தை பார்க்காததால் அவளின் முகமாற்றத்தை கவனிக்கவில்லை. ஆனால் அவளையே பார்த்துக்கொண்டிருந்த சகுந்தலா "அவனை திட்டி என்ன ஆகப்போகுது... கட்டிகிட்ட புருஷன் எங்க போயிருக்கான், எதுக்கு போயிருக்கான்னு தெரியலைன்னு இவ சொல்லும் போதே உங்களுக்கு புரியலையா?..
பிரச்சனை வெளிய இல்ல, அவனுக்கு வீட்டுக்குள்ள தான்னு" என சொல்ல.

கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் அவரை ஒரு குற்றம்சாட்டும் பார்வை பார்க்க "இப்போ எதுக்கு எல்லாரும் என்னை முறைக்குறீங்க... எங்க உங்க மருமகளை இல்லைன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்" என சவாலாய் கேட்க

மித்ராவோ அனைவர் முன்பும் தலைகுனிந்து நின்றாள். அவளின் செயலே அனைவருக்கும் உண்மையை எடுத்துரைக்க,அதற்குமேல் அவர்கள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

மித்ராவிற்கு அழுகை பொங்கியது. தன் பெரியன்னை சொல்வதிலும் எந்த தவறும் இல்லையே... அதுதானே உண்மையும் கூட என எண்ணி கண்ணீர் வடித்தவள்,தன் ஈகோ அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.

அங்கு ஸ்டேஷனில் நாற்காலியில் கண்மூடி சாய்ந்திருந்த மதியின் மொபைல் அலர...அதனை எடுத்தவனுக்கு திரையில் ஒளிர்ந்த ' செல்லக்குட்டி ' என பெயரை பார்த்து இனிமையாக அதிர்ந்தான்.

ஒரு ரிங் முழுவதும் போய் கட் ஆகிவிட,மீண்டும் அதே அழைப்பு தொடர,இப்போதே இன்பமான அதிர்ச்சியில் இருந்து தெளிந்தவன்,சட்டென்று அதனை ஏற்று காதில் வைத்தான்.

இவன் மௌனத்தையே பதிலாக கொடுக்க,அவனின் மூச்சுவிடும் சத்தம் கேட்டது எதிரில் இருப்பவளுக்கு. முயன்று தன்னை ஒருநிலை படுத்தியவள் "ஹலோ" என சத்தமாக பேசினால் ஃபோன்க்கு வலிக்குமோ என்பதுபோல் மெல்ல வாயசைக்க,இவளுக்கு இப்படி அமைதியாக கூட பேச தெரியுமா என வாயடைத்து போய் நின்றான் மதி.

தன்னிடம் பேச விருப்பமில்லையோ என வருந்தியவள், ஃபோனை அணைக்க முயலும் நொடி "சொல்லுடா" என தன் மொத்த காதலையும் ஒற்றை வார்த்தையில் கோர்த்து அவனின் ஓசை காதில் விழ,

அவனின் வார்த்தையே அவளுக்குள் பல மாற்றங்களை விளைவித்தது. தன் காதலை உணர்ந்த பின் கேட்கும் அவனின் முதல் வார்த்தை. அதில் தான் எத்தனை மென்மை என யோசித்தவள் பதிலேதும் சொல்லாமல் சிலையாக நிற்க,

அவனோ மீண்டும் "சொல்லுடா என்ன இந்த நேரத்தில் ஃபோன் பண்ணிருக்க,இன்னும் தூங்கலையா?..." என சண்டையை மறந்து சாதாரணமாக கேட்க,
அவளுக்கு தான் அவன் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை.

கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் இறங்க, ஒரு மெல்லிய தேம்பலோடு "வீட்டுக்கு வாங்களேன்" என கேட்க,

அவள் வார்த்தையை விட அவளின் கண்ணீர் அவனை பலமாய் தாக்க "என்னடா எதுக்கு அழற...யாராவது ஏதாவது சொன்னாங்களா" என பதட்டமாக கேட்க,
அதற்கு பதிலாய் "நீ வீட்டுக்கு வாயேன்" என சொல்லியபடி கதறி அழும் குரல் தான் இவனுக்கு கேட்டது.

அதற்கு மேல் ஒரு நொடி கூட அவனால் அங்கு இருக்க முடியவில்லை. ஓடி சென்று அவளை தன்னோடு இறுக்கிக்கொள்ள மனம் தவிக்க,புயல் வேகத்தில் தனது புல்லட்டை செலுத்தினான்.

வீட்டினுள் நுழைந்தவுடன் எதிர்ப்பட்ட அவனின் அன்னை நடந்ததை கூற…' அப்போ அதற்காக தான் அழைத்தாளோ' என ஒரு மனம் சுணங்கினாலும் ஒரு மனமோ அவளின் அழுகையை துடைக்க அறையை நோக்கி செல்ல துடித்தது.

சட்டென்று கதவு திறக்கும் சத்தத்தில் மெத்தையில் இருந்து எழுந்து நிற்க, அவள் நிற்கும் கோலம் கண்டு அதிர்ந்தவன் எதை பற்றியும் கவலைப்படாமல் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

அவளும் தனக்கான இடம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அவன் மார்பில் முகம் புதைத்து தன் அழுகையை தொடர,

"அழாதாடா என் செல்லமில்ல" என அவளின் முதுகை வருடி அவளை ஆஸ்வாசப்படுத்த முயல,ஆனால் அவனால் அது முடியவில்லை.

"உனக்கு தான் அத்தையை பத்தி தெரியுமே… அவங்க ஏதோ சொல்லிட்டாங்கன்னு அதுக்காக இப்படியா அழறது" என கேட்டவனை முகம் நிமிர்த்தி பார்த்தவள் அவனை தன்னில் இருந்து பிரித்து தள்ளினாள்.

அவள் செயலில் அவனின் மனம் சட்டென்று காயம் பட...அவளையே அடிப்பட்ட சிறுவன் தன் தாய்யை பார்க்குமே அதே நிலையில் பார்த்தபடி இவன் இருக்க,

மித்ரா அதனை உணர்ந்தாலும்,கோபத்தோடு அவனை பார்த்து "அப்போ பெரியம்மா திட்டுனதுனால தான், நான் உனக்கு ஃபோன் பண்ணன்னு நினைச்சுட்ட இல்ல" என தேம்பி கொண்டே கேட்க,அவளின் கேள்வி அவனுள் சுகமாய் இறங்கியது .அதற்காக தன்னவள் தன்னை அழைக்கவில்லை,நிஜமாகவே அவள் தன்னை தேடியிருக்கிறாள் என நினைக்கும் போதே முகத்தில் தானாக ஒரு மர்ம புன்னகை உதித்தது.

"அப்போ எதுக்கு என்னை கூப்பிட்ட" என இதழலோர புன்னகையோடு அவளை பார்த்து கேட்க, அவளோ பதில் சொல்லாமல் தன் கழுத்தில் இருந்த செயினை எடுத்து கடிக்க,

மெல்ல அவளை நெருங்கியவன் அவள் இரு இதழ்களுக்கு இடையே சின்னாபின்னமாகி கொண்டிருக்கும் செயினை தன் விரல் கொண்டு விடுவித்தவனின் விரல்கள் அழுத்தமாக அவள் இதழை வருடியது.

அவனையே தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தவள்,அப்போது நினைவு வந்தவளாக எட்டி அவன் சட்டையின் காலரை பிடித்து இழுத்து அவனை தன் உயரத்திற்கு கொண்டு வந்தவள் "நேத்து எதுக்கு நான் அத்தனை தடவை ஃபோன் பண்ணியும் எடுக்கலை" என கேட்க,

இருவரின் நெருக்கத்தில் மயங்கிய மனதை கட்டுப்படுத்திக்கொண்டு "அது ஒரு முக்கியமான கேஸ் அதான் சைலண்ட்டில் வச்சிருந்தேன்" என விளக்கம் கொடுக்க,

அதனை தலையாட்டி மறுத்தவள் "பொய்... பொய்... நான் நம்பமாட்டேன்.அப்போ எதுக்கு ஸ்விட்ச் ஆஃப் பண்ண" என அடுத்த கேள்வியை வைக்க,

"அது சார்ஜ் இல்லாம நின்னுடுச்சுடா" என சொல்ல…"இல்ல திரும்பவும் பொய் தான் சொல்ற, என் கூட பேச பிடிக்காம தான் இப்படி பண்ண" என சொல்ல..

இப்போது அவனுக்கு கோபம் வந்துவிட்டது. "லூசாடி நீ….நீ ஒரு வார்த்தை பேச மாட்டியான்னு ஒவ்வொரு நிமிஷமும் தவிச்சவன் டி நான்.எனக்கா உன்கிட்ட பேச பிடிக்கலை.நீ தாண்டி எனக்கு எல்லாமே" என்ற கடைசி வார்த்தையை முடிக்கும் முன் அவனை அணைத்திருந்தாள் மித்ரா.

அவனும் அவளை தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை தன் அணைப்பில் காட்ட,நேரம் செல்ல செல்ல இறுக்கம் கூடிக்கொண்டே இருந்தது.

மீண்டும் அவனை தனக்கு வாகாக இழுத்தவள் அவன் கண்களை ஆழமாக பார்த்து "ஐ லவ் யூ அத்தான்" என முதன் முறை அத்தான் என்ற அழைப்போடு தனது காதலையும் சொன்னவள்...அவன் முகம் பற்றி முகம் முழுவதும் தன் முத்திரையை பதித்தாள்.

அவனோ நம்ப முடியாத நிலையில் "மித்துமா…. மித்துமா" என புலம்ப...தன் கண்கள், நெற்றி, கன்னம் தாடை என அவள் இதழ் ஒற்றிய ஈரமும் பூக்களை ஒற்றி எடுத்தது போல் தோன்றிய அழுத்தமும் நடப்பது அனைத்தும் கனவில்லை நிஜம் என்பதை உணர்த்த,

வெகுநேரம் குனிந்திருந்தவன் கழுத்து வலிக்கவே, அவளைவிட்டு நீங்க மனமின்றி அவளை தன் உயரத்திற்கு தூக்கிக்கொண்டான். அவளோ எதை பற்றியும் கவலைப்படாமல் தன் வேலையை சிவனே என்று செய்துக் கொண்டிருந்தாள்.

கரங்கள் இரண்டும் அவன் கழுத்தில் மாலையாக கோர்த்து கங்காரு குட்டி போல் அவனில் தொங்கிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் இருவரும் அப்படியே அந்த நிமிடத்தை தங்களுக்குள் முழுவதுமாய் சேகரிக்க… இப்போது தன்னைவிட்டு விலகும் மனைவியை தன் கைவளைவிலேயே வைத்துக்கொண்டு "அதுயென்ன புதுசா லவ் எல்லாம்.உனக்கு தான் என்னை பிடிக்காதே...அப்பறம் எப்படி?..." என கேட்க,

"யாரு சொன்னது உங்களை எனக்கு பிடிக்காதுன்னு?..இவளும் எதிர் கேள்வி கேட்க,

அவளை வலதுபுறமாக திருப்பியவன், அங்குள்ள ஆளுயர கண்ணாடியில் அவளையே இமைக்காமல் பார்த்தவாறே "அதோ அங்க நிற்குறாங்களே அவங்க தான்" என கண்ணாடியில் பிரதிபலித்த அவளின் பிம்பத்தை காட்ட,

அவளோ முகத்தை சுருக்கிக் கொண்டு "அது ஏதோ கோபத்தில் சொன்னேன்.அதுக்காக நீயும் உடனேயே போய்டுவீயா...அப்போ அவ்ளோ தான் உன் பாசமா " என விட்ட சட்டையை பிடித்து மீண்டும் சண்டையை தொடங்க,

"ஏய்... இதெல்லாம் நியாயமே இல்லடி, அன்னைக்கு நீ பேசின பேச்சுக்கு என்னை என்னதாண்டி பண்ண சொல்ற" என பாவமாக சொல்ல,

அவன் சட்டை பட்டனை திருகியவாறே "அது…. எனக்கும் உன்னை தான் ரொம்ப பிடிக்கும் சின்ன வயசில் இருந்தே.ஆனா அது எனக்கே நீ என்னைவிட்டு போனதும் தான் புரிஞ்சுது" என தனக்குள் நேர்ந்த மாற்றங்களை சொல்ல,

"அப்போ அந்த லேப்டாப்பை பார்க்கலைனா என்னோட காதல் உனக்கு புரிஞ்சிருக்காது
இல்ல" என்க…

அவன் மார்பில் ஓங்கி அடித்தவள் "அப்படியெல்லாம் இல்ல,அதை பார்த்ததால் உடனேயே தெரிஞ்சது,இல்லனா கொஞ்சம் லேட் ஆகிருக்குமே தவிர நீ சொல்ற மாதிரியெல்லாம் இல்லை என்றவள்,உன்னை பார்க்காம எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா" என அவனை மீண்டும் கட்டிக்கொள்ள…

"எனக்கும் தான்டி...நீ இல்லாம பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருந்தேன்" என இவனும் தன் மனதின் வலியை பகிர்ந்துகொள்ள...இருவரும் அணைத்த நிலையிலேயே என்னென்னவோ பேசிக்கொண்டு இருக்க,

"கால் வலிக்குது" என்ற மித்ராவின் குரலை கேட்ட பின்பே அவளை விடுவித்தான்.

"சரி தூங்கலாம் வா...மணி இப்போவே பன்னிரெண்டு" என்றவன் கட்டிலின் எதிர் எதிர் மூலையில் படுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்க,மித்ரா மெல்ல நகர்ந்து அவனின் மார்பில் சாய்ந்து கொள்ள…

அவளை புரியாமல் பார்த்த மதியை பார்த்து…"நான் தூங்கியே ரொம்ப நாள் ஆச்சு தெரியுமா?...வீட்ல கூட அம்மா தர்ஷினி இரண்டு பேரும் கூடவே தான் இருப்பாங்க.இங்க நீ எப்பவும் என் பக்கத்திலேயே இருந்த, நானும் நிம்மதியா தூங்கினேன். ஆனா நீ போனதில் இருந்து தனியா படுக்க பயந்து ராத்திரி ஃபுல்லா தூங்காம முழிச்சிருந்து,விடியும் போது தான் தூங்குவேன்" என சொல்ல,

அதிர்ந்தவன் "என்னடா சொல்ற...என்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்ல" என வருத்தமாக சொல்ல...அவளோ "நீயேன் என்னை விட்டு போன" என மீண்டும் மீண்டும் அதே கேள்விக்கு வர…

அவ்வளவு தான் அவளை தன்னுள் புதைத்து கொள்ளுபவன் போல் இறுக்கிக்கொண்டான். அவனின் வாய் மட்டும் ஓயாமல் "சாரிடா... சாரி... இனிமேல் என்ன நடந்தாலும் உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன்" என உறுதியளித்தது.தான் அவளை விட்டு சென்றது அவளுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டான் மதி.

இருவருக்குமே அன்றைய இரவு நிம்மதியான தூக்கம் தழுவியது. தன்னவள் தன் காதலை உணர்ந்துக்கொண்டாள் என இவனும்,தன் காதலை தானே உணர்ந்ததில் மித்ராவும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.இத்தனை நாள் தூக்கம் தொலைத்த இரவிற்கும் சேர்த்து இருவரும் உறங்க, அடுத்தநாள் கதவு தட்டும் சத்தத்தில் மெல்ல கண்விழித்தான் மதி.

முதலில் கண்விழித்த மதி கடிகாரத்தை பார்க்க அதுவோ காலை எட்டு மணியை காட்டியது. பதறியவன் திரும்பி பார்க்க மித்ராவோ அவனை கட்டிக்கொண்டு நல்ல உறக்கம்.
மெல்ல அவள் கன்னம் தட்டி "குட்டிம்மா மணி எட்டு காலேஜுக்கு டைம் ஆகிடுச்சு" என எழுப்பினான்.

"போடா... எனக்கு தூக்கமா வருது.இன்னைக்கு நான் காலேஜ் லீவ்" என்றவள் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்து "நீயும் எங்கயும் போக கூடாது" என்ற கட்டளையோடு உறக்கத்தை தொடர,

"அடிப்பாவி... நேத்து அத்தான்னு
அவ்ளோ மரியாதையா பேசுன,அதுக்குள்ள பழையபடி வாடா போடான்னு சொல்றியே டி ராட்சசி" என்க,அவளோ "எனக்கு அப்படி கூப்பிட தான் பிடிச்சிருக்கு" என தெளிவில்லாமல் தூக்கத்தில் உளறிக் கொட்டினாள்.

"எல்லா என் நேரம் என்றவன்,சரி நகர்ந்து படு கதவை தட்டுறாங்க" என விலக பார்க்க, முடியாது என்றவளை சமாதானப்படுத்தி கதவை திறந்தான்.

வெளியே நின்ற அன்னையிடம் அவள் இன்று கல்லூரிக்கு விடுமுறை என்பதை மட்டும் சொல்லிவிட்டு உள்ளே வந்தவன்,அவளை எழுப்ப...அவளோ அவனை இழுத்து அமர வைத்தவள்,அவன் மடியில் முகம் வைத்து தூக்கத்தை தொடர,

அவனும் சிரித்துக்கொண்டே தலை கோத...அந்த சுகத்தில் இன்னும் இன்னும் அவனை இடையோடு கட்டிக்கொண்டாள்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 21

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ தெரியாது,அவனின் மொபைல் சத்தத்தில் கலைந்தவன் மித்ரா முழிக்கும் முன் அதனை ஏற்று காதில் வைத்தான்.

எடுத்த எடுப்பில் "சொல்லுடா...தேவையில்லாம எதுக்கு இப்போ ஃபோன் பண்ற" என கேட்க,

எதிரில் இருந்த கதிர் "டேய் மணி என்னடா ஆகுது...இன்னும் உன்னை காணுமேன்னு ஃபோன் பண்ணா என்னையே கேள்வி கேட்குற" என்க,

"ஏண்டா….ஏன்.. இத்தனை நாள் கழிச்சு இன்னைக்கு தான் என் காதல் கைக்கு கிடைச்ச சந்தோஷத்தில் இருக்கேன்.அது உனக்கு பொறுக்கலையா.மரியாதையா ஃபோனை வைடா,இன்னைக்கு நான் லீவ்" என்றவன் மொபைலை அணைக்க,அதே நேரம் இருவரையும் சாப்பிட அழைத்தனர்.

இதுக்குமேல இவளை தூங்கவிட்டா அவ்ளோ தான் என்ற நிலையில் "மித்தும்மா எழுந்திரு" என்க,அவளும் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி எழுந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் இருவரும் இணைந்தே வீட்டின் கூடத்திற்கு வர,இருவர் முகத்திலும் திருமணம் ஆகி இத்தனை மாதங்கள் கழித்து...அதுவும் என்றும் இல்லாத திருநாளாய் சேர்ந்து வருவதை கண்டு அனைவருக்குமே மகிழ்ச்சி சகுந்தலாவை தவிர.

'இல்லையே... இரண்டு பேரும் சண்டையில் தானே இருந்தாங்க... எப்படி ஒரே நாளில் இத்தனை மாற்றம்' என சகுந்தலா எண்ணிக்கொண்டிருந்தார்.

இந்த வீட்டிலுள்ள அனைவரும் இவர்களை கவனிக்கிறார்களோ இல்லையோ ஆனால் சகுந்தலாவின் பார்வை மட்டும் எப்போதும் மித்ராவை சுற்றியே இருக்கும். இன்னும் தன் மகளின் வாழ்க்கையை தட்டி பறித்தவள் என்ற எண்ணம் மட்டும் மாறாமல் இருந்தது. அதை வெளிக்காட்டாமல் இருந்தவர்,தன் மகளின் திருமண வாழ்க்கை இன்னும் தொடங்கவே இல்லை என்பதை அறிந்த பின் இவள் மேல் இன்னும் கோபம் அதிகரித்தது.

'அது எப்படி தன் மகள் அங்கு வாழாமல் இருக்க,இவள் மட்டும் சிரித்துக்கொண்டு வரலாம்' என்ற தேவையில்லாத வன்மம்... பின்னால் எத்தனை பெரிய விபரீதத்தை ஏற்படுத்த போகிறது என்பதை அறியாமல் இருந்தார் சகுந்தலா.

நேற்று மித்ராவின் முகத்தை பார்த்து கவலையில் இருந்த அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி.அது அவர்களின் முகத்திலும் பிரதிபலித்தது.

இங்கு மித்ராவின் தாய் வீட்டில்...சண்முகசுந்தரத்தின் தங்கை மற்றும் அவரின் கணவர் இருவரும் நீலி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.

"இப்படி அநியாயமா எந்த தப்பும் செய்யாத என் பிள்ளை மேல பழியை போட்டு அவனை கைது செஞ்சிட்டானே அந்த படுபாவி" என மதியை தான் திட்டிக்கொண்டிருந்தனர்.

"உனக்கு தெரியாதா அண்ணா...அவன் நீ தூக்கி வளர்த்த பையன்,அவன் போய் ஒரு பொண்ணை" என மூக்கை உறிஞ்ச,

அமைதியாக அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த சண்முகசுந்தரத்திற்கே தலையை வலித்தது. ஏனென்றால் வந்ததில் இருந்து இதே வாக்கியத்தை ஒரே மாதிரியான ஏற்ற தாழ்வுகளுடன் இதோடு பத்து முறை சொல்லியிருப்பார்.

அதுவரை பொறுமை காத்தவரால் அதற்கு மேல் முடியாமல் போக "இப்போ அதுக்கு நான் என்ன பண்ணனும்னு நினைக்கிற" என பட்டுக்கரித்தார் போல் கேட்க,

"நீயே இப்படி கேட்டா என்ன அண்ணா அர்த்தம்.அங்க ஜெயில்ல இருக்கிறது உன் மருமகன்...அது மட்டுமில்லாம உன்னை பழிவாங்க தான் அவன்மேல் இல்லாத பழியை தூக்கி போட்டிருக்கான் அந்த மதி. அவனெல்லாம் நல்லாவே இருக்க மாட்டான். நாசமா தான் போவான்" என சாபம் விட,

அவரோ தன் கண்களை மூடி கோபத்தை கட்டுப்படுத்த போராடி கொண்டிருந்தார். சமையலையில் நின்றிருந்த சாந்திக்கு மனதில் சுருக்கென்று வலித்தது. "என்ன வார்த்தை இது. அய்யோ கடவுளே என் பொண்ணும் மருமகனும் நூறு வருஷம் நல்லா இருக்கணும்...இவங்க வார்த்தை எதுவும் பலிக்கவே கூடாது' என கடவுளுக்கு அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்தார்.

தன் அண்ணனின் கோபத்தை உணராமல் பேசிக்கொண்டிருந்த மேகலாவோ மேலும் தொடர்ந்தவராக மதியின் நன்மதிப்பை குலைக்கும் எண்ணத்தில் பேச...அது அவர்களுக்கே முடிவாக போவது தெரியாமல்,

"அந்த ஓடுகாலி மித்ரா இருக்காளே... கொஞ்சம் கூட குடும்பத்தோட மானம் மரியாதை எதை பற்றியும் கவலைபடாமல் அவன் கையை பிடிச்சுக்கிட்டு போனா இல்ல….அவளும் நல்லாவே இருக்க மாட்டாள்" என சொல்லி முடிக்கும் போதே..

எதிரில் இருந்த கண்ணாடி டீபாய் சுக்கு நூறாக உடைந்திருந்தது. "இன்னொரு வாட்டி என் பொண்ணை பத்தியோ, இல்லை என் மருமகனை பத்தியோ ஏதாவது வாயை திறந்த உயிரோடு வீடு போய் சேரமாட்ட" என முகம் சிவக்க சொன்னவர்,

"எதோ கூட பிறந்த தங்கையாச்சேன்னு கொஞ்சம் பொறுமையா இருந்தா... என் பொண்ணை ஓடுகாலி, நல்லாவே இருக்க மாட்டேன்னு சாபமா விடுற" என்க,

அவரின் கோபத்தில் உச்சபட்ச அதிர்ச்சியடைந்தாலும் சட்டென்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு "என்ன அண்ணா சொன்ன... மருமகானா இது
எப்போதிருந்து. இதுவரைக்கும் என் மகன் தான் அந்த இடத்தில் இருந்தான், இப்போ அதே இடத்தில் அவனா. நீ யாரை மருமகன்னு சொல்ற தெரியுமா?..ஊருக்கு முன்னாடி ஒரு சின்ன பையனா இருக்கும் போதே உன் சட்டை பிடிச்சு கேள்வி கேட்டு உன்னை அவமானப்படுத்தியவனை" என எள்ளலாக அவரின் தன்மானத்தை தீண்டும் வார்த்தையை வெளியேவிட,

'இந்த விஷயத்தை நியாபகப்படுத்தினாலே கொலைவெறி உண்டாகும் அண்ணன் இன்று அமைதியாக இருப்பதை கண்டு ஒருவேளை மனம் மாறிவிட்டாரோ' என்ற சிந்தனையில் இருந்தவர் தன் அன்னையிடம் கண் காட்ட,

இப்போது வாய் திறந்தார் மரகதம். "என்ன ராசா இது எவனோ ஒருத்தனுக்காக உன் தங்கச்சியை விட்டுக்கொடுத்து பேசுறியே...என் பேரன் என்னவெல்லாம் கஷ்டப்படுறானோ. நீ மனது வச்சா எப்படியும் அவனை வெளிய கொண்டு வந்துடலாம்" என தூபம் போட,

எப்போதும் மகுடிக்கு மயங்கும் பாம்பை போல் தாய் சொல்லை ஒரு போதும் மீறாத சண்முக சுந்தரம் முதன்முறை எதிர்த்து பேசினார்.

'இத்தனை நாள் கண் இருந்தும் குருடனாய் இருந்ததை எண்ணி இப்போது வருந்தினார். அந்த சந்திரன் எப்படி இவருக்கு பேரனோ அதே மாதிரி தானே என் மகளும் இவருக்கு பேத்தி. அது எப்படி அவளை இப்படி பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார்' என்று தன் அன்னையின் மேலேயே கோபம் வந்தது சண்முக சுந்தரத்திற்கு.


"ஆமாம்... அவன் சட்டை பிடிச்சு கேள்வி கேட்டவன் தான்.ஏன் கேட்டான், அவங்க அத்தைக்கு ஒன்னு என்றவுடன் மாமான்னு கூட பார்க்காம அப்படி நடந்துக்கிட்டான். அதேமாதிரி தான் உன் பையன் மாதிரி ஒரு பொறுக்கிக்கு என் பொண்ணை காட்டிக்கொடுக்க போனதுனால என்னை மீறி என் பொண்ணுக்கு தாலி கட்டி அழைச்சிட்டு போனான். அப்பவும் சரி இப்பவும் சரி அவன் நேர்மையா நல்லவனா தான் இருக்கான்"என்றவர்,

"இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ... அவன் தான் என் மருமகன்.என் சொத்து முழுசும் என் இரண்டு பொண்ணுக்கு தான்.இனி ஒரு சல்லி பைசா கூட யாருக்கும் தர முடியாது. பரம்பரை சொத்தை எப்போதோ பிரித்து கொடுத்தாச்சு.இப்போ இருக்கிறது மொத்தமும் என் சொந்த சம்பாத்தியம்" என்றார் கம்பீரமான குரலில்.

அவரின் வார்த்தை அப்படி ஒரு அதிர்ச்சியை கொடுத்தது தாய் மகள் இருவருக்கும். தன் மகனால் அனைத்து சொத்தையும் இழந்து நிற்கும் நிலையில் தான்,மித்ரா சந்திரன் கல்யாணம் மூலமாக அனைத்து சொத்தையும் பெற்றுவிடலாம் என எதிர்பார்த்திருந்தார் மேகலா. அது முடியாமல் போனதால் எப்படியும் பேசியே தன் அண்ணனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால் அவரோ இப்படி ஒரு முடிவை எடுப்பார் என கனவிலும் நினைக்கவில்லை.

"இப்போதான் புரியுது உண்மையான பாசத்துக்கும் பணத்திற்காக பாசம் இருப்பது போல் நடிக்கும் உங்களுக்குமான வித்தியாசம். இத்தனை நாள் நீங்க சொல்றதை செய்ற பொம்மை மாதிரி இருந்தை நினைச்சா எனக்கே என்னை பிடிக்கலை" என்றவரின் முகம் அவமானத்தில் கசங்கியது.

"உங்களால் என் வாழ்கையில நிறைய இழந்துட்டேன்.ஆனா அதுக்காக உங்களை மட்டும் குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.எல்லாத்துக்கும் முக்கிய காரணம் நானும் என்னோட முரட்டு பிடிவாதமும் கோபமும் தான்" என மனதை அழுத்திக் கொண்டிருந்த அனைத்தையும் கொட்டி தீர்த்தார்.

"போதும் இதுவரைக்கும் நான் பண்ணது.இனிமேலாவது என் பொண்ணுகளுக்கு நல்ல அப்பாவா... என் பொண்டாட்டிக்கு ஒரு நல்ல புருஷனா இருக்க முயற்சி பண்ணுறேன்" என்க,

"அதானே பார்த்தேன் என்னடா என் மகன் இப்படியெல்லாம் பேசுற ஆள் இல்லையே... இன்னைக்கு எல்லாம் புதுசா இருக்கேன்னு. இப்போதானே தெரியுது எல்லாம் உன் பொண்டாட்டி போட்ட மந்திரம்ன்னு.என்ன வசிய மருந்து வச்சாளோ" என அசிங்கமாக பேச,

அவர் சொல்வதை காது கொடுத்து கேட்க முடியாமல் சாந்தி முந்தானையை வாயில் வைத்து கண்ணீர் விட, மனைவியை திரும்பி பார்த்தவர் தன் தாயை எறித்துவிடுவது போல் பார்த்தார்.

"ச்சீ...உங்களுக்கு இப்படியெல்லாம் பேச அசிங்கமா இல்ல.அவளை பார்த்தா இப்படி ஒரு வார்த்தையை சொல்றீங்க?...எல்லாம் என் தப்பு தான்.பொண்டாட்டியை புருஷன் மதிச்சா தானே மத்தவங்க மதிப்பாங்க. இத்தனை நாள் நானும் அவளை ஒரு மனுஷியா கூட மதிக்கலையே அப்பறம் இப்படிப்பட்ட வார்த்தையை எல்லாம் கேட்டு தானே ஆகனும்" என மனம் வருந்தியவர்,

"அவகிட்ட நான் பேசியே பல வருஷம் ஆச்சு.அவ நினைசிருந்தா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்றதுக்கு பதில், எப்பவோ என்னைவிட்டு போயிருக்கலாம். அவளை மகாராணி மாதிரி பார்த்துக்க ஒரு குடும்பமே அங்க காத்துட்டு இருக்கு. ஆனா எப்பயோ... என்னைக்கோ அவமேல நான் காட்டின காதலுக்காக இப்பவும் என்கூடவே இருக்காளே இவளையா தப்பா பேசுறீங்க?..

ஆனா உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?... ஒருவேளை அப்படி மட்டும் என்னை விட்டுட்டு அவ போயிருந்தா... அந்த நிமிஷமே நானும் இல்லாம போயிருப்பேன். என்ன நடந்தாலும் அவ என்னைவிட்டு போக மாட்டாள் என்கிற கர்வம் தான், இத்தனை நாளும் என்னை உயிரோடு நடமாடவே வச்சது" என்றவர் மனம் தளர்ந்து அப்படியே சோஃபாவில் அமர்ந்தார்.

"போதும் இனிமே யார் பேச்சையும் கேட்க தயாரா இல்லை...இனிமேலாவது கொஞ்சம் சுயமா சிந்திக்கிறேன்" என்றவர்,

தன் தாயை பார்த்து"உங்களுக்கு ஒரு மகனாய் உங்களை பார்த்துக்க வேண்டியது என் கடமை.அதுக்காக நீங்க இங்கயே இருக்கலாம். அதுவும் இனிமே என் பொண்டாட்டியை பத்தியோ என் பொண்ணை பத்தியோ ஒரு வார்த்தையும் பேசவோ அவங்களை கஷ்டப்படுத்தவோ நினைக்காமல் இருந்தால் மட்டும் தான். அதையும் மீறி ஏதாவது பண்ணிங்கனா அப்பறம் அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்" என சொல்லியபடி தங்கையை நோக்கி திரும்பியவர் "இன்னையோட அண்ணன் ஆட்டுக்குட்டின்னு சொல்லிக்கிட்டு இந்த வீட்டு பக்கம் வந்துடாதே" என்று ஒரே வரியில் உனக்கும் எனக்குமான உறவு முடிந்துவிட்டது என்பதை தங்கையை பார்த்து சொல்லியவாறு வாசலை கைகாட்ட,தங்கள் ஆசை அனைத்தும் மண்ணோடு மண்ணாய் போனதை எண்ணி சோகத்துடன் வீடு திரும்பினர் மேகலாவும் அவர் கணவனும்.

அங்கு சமையலறை சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த சாந்திக்கு கணவரின் வார்த்தையை கேட்டவுடன் என்னமாதிரி உணர்ந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. இந்த ஒரு வார்த்தைக்காக எத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறார்.அது இப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் கிடைத்ததும் அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று அவருக்கே தெரியவில்லை.

அப்படியே மடிந்து அமர்ந்து தன் அழுகையை தொடர்ந்தார்.இத்தனை நாள் சிந்திய கண்ணீரில் இருந்த வலி இப்போது இல்லை.இதில் ஒருவித மகிழ்ச்சியே இருந்தது.கண்ணீர் அதிகப் படியான துக்கத்தை மட்டுமல்ல சந்தோஷத்தையும் வெளிப்படுத்தும் ஒரு கருவி தான் போல.

சாந்திக்கு தான் நன்றாக தெரியுமே தன் மேல் அவர் கொண்டிருந்த காதலை பற்றி… தான் இல்லை என்றால் கண்டிப்பாக அவரும் நடைபினமாக ஆகிவிடுவார் என்று.அதனால் தான் இத்தனை நாளும் என்ன நடந்தும் அவரை பிரியும் முடிவை மட்டும் எடுக்கவேயில்லை.

மனைவியின் கண்ணீர் பல வருடங்கள் கழித்து அவரின் மனதை உறுத்தியது.எழுந்து சென்று கண்களை துடைத்து ஆறுதல் சொல்ல மனம் துடித்தாலும், எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை எதிர்கொள்வது என்ற குற்றவுணர்வில் தவித்தவர் அதன் கணம் தாங்காமல் வெளியே சென்றுவிட்டார்.

இன்றைய அவரின் மனமாற்றத்திற்கு காரணம் மதி தான் என்றால் அது மிகையில்லை.சந்திரனை பற்றிய முழு விவரமும் தெரிந்த பின்பே தன் மகளுக்கு எப்படிபட்ட கெடுதலை செய்ய இருந்தோம் என்பதே அவருக்கு விளங்கியது. யார்யார் பேச்சையோ கேட்டு மகளின் வாழ்க்கையையே நாசமாக்க இருந்தோமே என வருந்தினார்.

அதுவும் மகளின் படிப்பு மதியின் மேல் ஒரு நன்மதிப்பை அதிகமாக்கியது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. ஒரு தந்தையாக என்னுடைய கடமையை கூட அவனே அவளுக்காக செய்ததை நினைக்கும் போது இப்படிப்பட்ட மாப்பிள்ளை யாருக்கும் கிடைக்காது. என் மக ரொம்ப கொடுத்து வைத்தவள் என சந்தோஷப்பட்டார்.

இங்கு கதிரின் வீட்டில்...மாலை வீடுவந்த மது குளித்துவிட்டு உடை மாற்றாமல் ஒரு டவலோடு அலமாரியை ஆராய்ந்து கொண்டிருந்தாள். எடுத்துவைத்திருந்த உடைக்கு மேட்ச்சான ஸ்கர்ட்டை தேடிக்கொண்டிருக்க...அப்போது கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தான் கதிர்.

எப்போதும் உடையை மாற்றிவிட்டு குளியலறையை விட்டு வருபவள்,இன்றைக்கு பார்த்து உடையை மாற்றி எடுத்து வந்துவிட,அதனால் உடை மாற்றாமல் அறைக்குள் வந்திருந்தாள் அதனால் தான் தாழ்ப்பாள் போடாதது நினைவில்லை.

எதிர்பாராமல் அவளை அந்த கோலத்தில் கண்ட கதிரின் காதல் மனம் 'பார் உனக்கு உரியவள் தான் அதில் எந்த தப்புமில்லை என சண்டித்தனம் செய்ய, ஒரு மனமோ வேணாம் அவளுக்கு விருப்பமில்லாமல் பார்ப்பது தவறு என்று உரைக்க,நொடியில் தன்னிலை அடைந்தவன் சட்டென்று திரும்பி "சாரி தெரியாமல் வந்துட்டேன்" என சொல்ல,

அவளோ கூச்சமும் வெட்கமும் ஒருபுறம், கோபம் ஒருபுறம் என தத்தளித்தவள் "கதவை தட்டிட்டு வர தெரியாதா?..இப்படியா வருவீங்க கொஞ்சம் கூட டிசன்சி இல்லாம" என வெறுப்பாய் சொன்னவள் வேகமாக தன்னை ஒரு துணியால் மறைத்துக்கொண்டாள்.

அவளின் செய்கையும் வார்த்தையும் அவனை வெகுவாய் தாக்க,விழி மூடி திறந்தவன் மீண்டும் மன்னிப்பை வேண்ட…"யாருக்கு வேணும் உங்க மன்னிப்பு முதல்ல வெளிய போங்க,கொஞ்சம் சிரிச்சு பேசினா போதும் ரொம்ப உரிமை எடுத்துக்க வேண்டியது" என அவனை பலமாய் வார்த்தைகளால் தாக்கியவள் அவன் வெளியே சென்றவுடன் கதவை அடித்து சாத்தினாள்.

அது அவனுக்கு அவனையே அடித்தது போல் ஒரு வலியை கொடுத்தது. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியே சென்றுவிட்டான்.

படபடக்கும் மனதை சமன் செய்துவிட்டு உடை மாற்றி அமர்ந்து யோசிக்கும் போது தான் அவளின் தவறு புரிந்தது.
கதவை தாழ் போடாமல் உடை மாற்றியதும் அவனை திட்டியதையும் நினைத்து இப்போது வருந்தினாள்.

"அய்யோ…. லூசு மாதிரி பண்ணிடேனே, நான் ஏன் அப்படி பேசினேன்.அவரோட இத்தனை மாசம் ஒரே அறையில் இருந்திருக்கேன், ஒருநாள் கூட தப்பான பார்வையை கூட பார்த்ததில்லையே... எவ்ளோ கண்ணியமா நடந்துகிட்டாங்க,எப்படி பாதுகாப்பா உணர வைத்தார் அவரை போய் " என தன்னை தானே திட்டிக்கொண்டாள்.

அவரிடம் மன்னிப்பு கேட்டாலும் கொட்டிய வார்த்தையை அள்ள முடியாதே...என எண்ணிக்கொண்டு அவனுக்காக காத்திருக்க, நடு இரவில் வீட்டுக்கு வந்தவன் நிமிர்ந்து அவள் முகத்தை கூட பார்க்கவில்லை.

அவன் நடையின் தள்ளாட்டமே அவன் குடித்திருக்கிறான் என்பதை உணர்த்த, அவளுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது தன்னால் தான் இன்று அவன் குடித்திருக்கிறான் என்று.


அறைக்குள் நுழைந்தவன்,ஒரு பெட் ஷீட் மற்றும் தலையணையை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றுவிட,அவனை தடுக்கும் வழி தெரியாமல் அதிர்ந்து நின்றாள் மது.

திவ்யாதர்ஷினி எப்போதும் போல் பள்ளி முடிந்து வீட்டுக்குள் நுழைய...எப்போதும் எதையாவது பேசி கடுப்பேற்றும் மரகதம் அமைதியாய் இருப்பதை பார்த்து 'என்னாச்சு இந்த ஓல்ட் லேடிக்கு இவளோ அமைதியா இருக்கு' என புருவம் உயர்த்தி யோசித்தபடியே உள்ளே நுழைந்தாள்.

அறைக்குள் சென்று உடைமாற்றி விட்டு ஹாலுக்கு வந்தவள்,வெளியே தன் தந்தையின் காரும் புல்லட் இரண்டும் இருக்கா என எட்டி பார்க்க...கார் மட்டுமே இருக்க,தந்தை வெளியே சென்றுள்ளதை உறுதி செய்துக்கொண்டு டிவி யை ஆன் செய்தாள்.

இது எப்போதும் நடப்பது தான் என சாந்தியும் எதுவும் சொல்லாமல் பின் வாசலில் அமர்ந்துகொண்டு மதியம் நடந்ததையே அசைபோட்டு கொண்டிருக்க, அப்போது வீட்டுக்குள் வந்தார் சண்முகசுந்தரம்.

அவரின் காரின் சத்தமோ அல்லது புல்லட்டின் சத்தம் கேட்டவுடன் டிவியை அணைத்துவிட்டு நல்லபிள்ளையாக புத்தகம் கையுமாக அறைக்கு சென்றுவிடுவாள் சின்னக்குட்டி.

ஆனால் இன்று வண்டியில் ஏதோ பிரச்சனையாகி விட அதனை மெக்கானிக் சேட்டில் விட்டுவிட்டு நடந்து வந்திருந்தார். அதனால் இவளும் எப்போதும் போல் சோஃபாவில் கால்நீட்டி அமர்ந்துகொண்டு பார்த்தபடி "அம்மா... ஏதாவது சாப்பிட தாயேன் பசிக்குது" என சொல்லிக்கொண்டே திரும்ப அங்கு நின்றுகொண்டிருந்த சண்முகசுந்தரத்தை பார்த்து முகம் வெளுக்க,கைகால்கள் நடுங்க எழுந்து நின்றாள் தர்ஷினி.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 22

அவரோ அவளை அடிக்கவோ திட்டவோ ஏன் முறைக்க கூட இல்லை.எப்போதும் இல்லாமல் இன்று மகளை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டே நின்றிருந்தார். ஆனால் தர்ஷினியால் தான் அவரின் பார்வையின் அர்த்தத்தை இனம் காண முடியாமல் பயத்தில் கையில் இருந்த ரிமோட்டை கீழே போட்டுவிட,இப்போது அதற்கும் சேர்த்து பயந்து நடுங்கினாள்.

தன்னிலையில் மூழ்கியிருந்த சாந்தி அந்த சத்தத்தில் கலைந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவசரமாக மகளை நெருங்க…

அவளோ "அ...அப்…. அப்பா ஆ...சாரிப்பா தெரியாம டிவி பார்த்துட்டேன், இனிமே இப்படி பண்...பண்ண...மா... மாட்டேன்" என திக்கி திணறி சொல்லும் போதே , கண்ணீர் ஆறாய் இறங்கியது.

அவளின் அழுகையை கண்டு ஒரு அடி அவளை நோக்கி முன்னே செல்ல,அவளோ பயத்தில் பின்னால் சென்றவள் "அப்பா.. அ... அடிக்காதீங்க... இனிமே இப்படி பண்ண மாட்டேன்" என சொல்ல,

அவளின் வார்த்தையிலும் தன்னை கண்டு ஒரு அடி பின்னே செல்லும் மகளின் பயத்தை பார்க்கும் போது தன்னையே வெறுத்தார் ஒரு தந்தையாய். அந்த அளவுக்கு மிருகம் மாதிரி தானே நானும் நடந்திருக்கிறேன்.

'ஒரு தடவை... ஒரே ஒரு தடவையாவது அவளை தூக்கி கொஞ்சியிருக்கேனா?...ஒரு வார்த்தை பாசமா பேசியிருப்பேனா?.. எதுவுமே இல்லையே என்னை இப்படி பார்க்கவில்லை என்றால் தான் ஆச்சிரியம்' என கண்களை மூடி உறைந்து நிற்க,அதற்குள் அவள் தன் அன்னையின் பின் மறைந்து அவரை கட்டிக்கொண்டாள்.

அப்படியே சோஃபாவில் அமர்ந்தவருக்கு நெஞ்சை அடைப்பது போல் இருந்தது. 'என்ன மாதிரி தகப்பன் நான்.பெத்த பொண்ணே என்னை பார்த்து நடுங்கும் அளவுக்கு கேவலமானவன் ஆகி போனேனே ' என தன்னையே நொந்து கொண்டு அமர்ந்திருந்தார்.

தன் அன்னையின் முந்தானைக்குள் ஒளிந்திருக்கும் மகளை வெறுமையாக பார்த்தவர் 'இங்க வா' என சைகை செய்ய,அவளோ மாட்டேன் என வேகமாக தலையாட்டி "வந்தா அடிப்பீங்க" என்க

அப்படியே கன்னத்தில் பளார் என்று அறைந்தது போல் இருந்தது மகளின் வார்த்தை. அதற்கு மேல் பேச வார்த்தை எழாமல் தொண்டை அடைக்க,அதனை மறைத்துக்கொண்டு அவரும் "இல்ல டா அடிக்க மாட்டேன் வா" என்றார்.

கணவர் முகத்தில் வந்துபோன உணர்வுகளை படித்த சாந்திக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. அவரின் மாற்றம் அவருக்கு நன்றாக புரிந்திருந்தாலும் அந்த சிறு பெண்ணுக்கு எப்படி புரியும்.அவர் பாசமாய் பார்ப்பது கூட அவளுக்கு முறைப்பது போல் தான் தோன்றியது.

மகளின் புறம் குனிந்த சாந்தி "அப்பா தான் சொல்றாங்க இல்ல, அடிக்க மாட்டாங்கன்னு அப்பறம் என்ன போ" என சொல்ல,

அவளும் நடுக்கத்தோடு அவரை நெருங்கினாள். தன்னையே பார்த்திருக்கும் மகளை அடுத்த நொடி அப்படியே வாரி அணைத்துக்கொண்டார்.

அவள் கைகுழந்தையாக இருக்கும் போது உணர்ந்த மகளின் ஸ்பரிசத்தை மீண்டும் இப்போது தான் உணர்கிறார். இத்தனை நாள் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக அவர் கண்களும் கண்ணீரை சிந்தியது.

அவரின் செய்கையில் மிரண்டு விழிக்கும் மகளை பார்த்து,தன் கண்களை துடைத்தவர் "இதுக்கு முன்னாடி அப்பா உன்னை என்னைக்காவது அடிச்சிருக்கேனா" என கேட்க,அவளோ இல்லை என தலையசைத்தாள்.

"அப்பறம் எதுக்குமா அப்படி பயப்படுற?.."என்க,

"அது பாட்டி தான் சொன்னாங்க... உங்களுக்கு என்னை சுத்தமா பிடிக்காதாம், அதனால் நான் ஏதாவது பண்ணா நீங்க என்னை திட்டி அடிப்பீங்கன்னு. டிவி பார்த்தது மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா தோளை உரிச்சிடுவீங்கன்னு சொல்லுவாங்க... அதான் உங்களை பார்த்தாலே பயமா இருக்கு" என சொல்ல,

இப்போது தன் தாயை நினைககும் போதே வெறுப்பு வந்தது சண்முகத்திற்கு. சின்ன குழந்தையை எப்படியெல்லாம் பேசி பய முறுத்தியிருக்கிறார். இது கூட தெரியாமல் இத்தனை நாளும் நானும் இதே வீட்டில் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறேன் என காலம் கடந்து வருந்தினார்.

"அப்பா உன்னை எப்பவும் அடிக்கவே மாட்டேன் டா.இனிமே உனக்கு என்ன பிடிக்குமோ எல்லாத்தையும் அப்பாகிட்ட கேளு நான் வாங்கி தரேன். அதே மாதிரி உனக்கு எப்படி இருக்கனுமோ அப்படியே இரு.உன்னை யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க" என்றவர்,கீழே விழுந்திருந்த ரிமோட்டை எடுத்து மகள் கையில் கொடுத்து "உனக்கு பிடிச்சதை பாரு" என்க,

முகத்தில் புன்னகை மலர "நிஜமாவா" என கேட்க,அவரும் ஆமாம் என தலையாட்டின. மீண்டும் "ப்ராமிஸ்" என கைநீட்ட அவரும் சிரித்துக்கொண்டே அவள் கையில் கை வைத்தார்.

"அப்போ நீங்களும் மத்த அப்பா மாதிரி என்னையும் உங்க புல்லட்ல ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவீங்களா?...பொம்மை வாங்கி தருவீங்களா?..அப்பறம் கடைக்கு,சினிமாவுக்கு எல்லாம் கூட்டிட்டு போவீங்களா?... என் பிரண்ட்ஸ் எல்லாரும் சொல்லுவாங்க அவங்க அப்பா கூட்டிட்டு போவாங்களாம்" என தான் இத்தனை நாள் பார்த்து ஏங்கிய அனைத்தையும் பட்டியலிட, அவளின் சின்ன சின்ன ஆசைகள் கூட நிறைவேறாமல் எப்படி ஏங்கியிருக்கிறாள் என்ற வருத்தம் இருந்தாலும் இனிமேல் அவளை எதற்காகவும் ஏங்க விடக்கூடாது என்ற முடிவில் உறுதியாய் இருந்தவர்,மகளை தன்னுடன் அமர்த்திக் கொண்டு "கண்டிப்பா டா நீ கேட்டது எல்லாமே இனி அப்பா செய்வேன்" என்றார்.

அதில் உற்சாகமானவள்,சலுகையாக அவர் தோளில் சாய்ந்துகொண்டு டிவியை பார்த்தாள். அவள் கண்களில் அப்படி ஒரு தேஜஸ் எதையோ சாதித்த உணர்வு….அவளின் கனவு நினைவாகிவிட்டதால் உண்டான நிறைவு கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. அவளின் மிக பெரிய கனவாக இருந்ததே தந்தையோடு பேச வேண்டும் என்பதே….அது நிறைவடைந்ததில் அத்தனை நிறைவு.

சற்றுநேரம் கழித்தே தான் வந்த போது மகள் பசிக்குது என சொன்னது நினைவு வந்தது. மணியை பார்க்க மாலை ஆறு என காட்ட...மகளை நெருங்கி "பசிக்குதுன்னு சொன்னியே டா இப்போ பசிக்கலையா" என்க,

"அது அப்போ பசிச்சது, அப்பறம் நீங்க என்கிட்ட பேசின சந்தோஷத்தில் மறந்துட்டேன் ப்பா" என சொல்ல,

அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்தவர்,உனக்கு அப்பாவை அவ்ளோ பிடிக்குமா என கேட்க, "ஓ..ரொம்ப பிடிக்கும்" என்ற மகளை பார்த்து ஆச்சிரியமாக இருந்தது அவருக்கு.எப்படி தந்தையாக எதுவும் செய்யாமல் இருக்கும் போதே இப்படி ஒரு பாசம் என்று.

பின் பேச்சை மாற்றியவராக "வாடா அப்பா உன்னை வெளியே அழைச்சிட்டு போய் ஏதாவது சாப்பிட வாங்கி தரேன்" என்க,

அவ்வளவு தான் அப்படி ஒரு சந்தோஷத்தில் குதித்தால் தர்ஷினி. "அம்மா... அம்மா... அப்பா என்னை வெளிய அழைச்சிட்டு போறாங்களாம்" என துள்ள,அவளின் மகிழ்ச்சி அவரின் முகத்திலும் மகிழ்ச்சியை உண்டாக்கியது.

வெளியே செல்வதற்கு ஏற்ப மகளை ரெடி செய்தவள் இருவரையும் வழியனுப்ப...முதன்முறை தந்தையோடான பைக் பயணம், சிறிது பயம் இருந்தாலும் தந்தையை கெட்டியாக பிடித்துக்கொண்டு "சூப்பர்ப்பா ரொம்ப ஜாலியா இருக்கு" என சந்தோஷத்தில் கலகலத்துக்கொண்டே வரும் மகளை பார்க்கும் போது அவள் மட்டுமல்ல தானும் எவ்ளோ சந்தோஷத்தை இழந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தார் அவர்.

மகள் கேட்டது அனைத்தையும் வாங்கி கொடுத்தவர்,வெளியே வரும் போது மனைவிக்கு பிடித்த ஸ்வீட் மைசூர் பாகு அதையும் சேர்த்து வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

வீட்டுக்கு வந்ததும் வாரததுமாக வாங்கிவந்த அனைத்தையும் கடைப்பரப்பி வைத்த தர்ஷினி அனைத்தையும் அன்னைக்கு காட்டிக்கொண்டு இருக்க, அவரோ ஒரு ஸ்வீட் பாக்ஸை மனைவின் கையில் கொடுத்தவர் "இது உனக்கு" என சொல்லிவிட்டு அதற்குமேல் அங்கு நிற்காமல் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

பிரித்து பார்த்த சாந்திக்கு கண்கள் கலங்க,மகளின் முன் எதையும் காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தார். அவருடன் சந்தோஷமாக வாழ்ந்த நாட்களில் தினமும் அவருக்கு பிடித்ததை வாங்கி வராமல் இருக்க மாட்டார்.பல வருடங்கள் கழித்து கணவர் வாங்கி கொடுத்தது என்ற மகிழ்ச்சி தோன்றினாலும்….அவர் மீது கோபம் மட்டும் வரவில்லை அவருக்கு.

இங்கு மது அவனை நெருங்கும் தைரியமின்றி கைகளை பிசைந்துகொண்டு நின்றிருந்தாள். அவன் சாப்பிட்டான இல்லையா என தெரியாமல் அவனை எழுப்பவும் முடியாமல் நீண்ட நேரம் நிற்க, அவள் வந்ததை அறிந்த கதிரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவன்,வெகுநேரம் ஆகியும் அவள் அசையாமல் இருக்கவே,அவள் வந்ததின் நோக்கத்தை நன்றாகவே அறிந்தவன் "நான் வரும் போதே சாப்பிட்டு தான் வந்தேன்,எனக்காக யாரும் காத்திருக்க தேவையில்லை" என சொல்லிவிட்டு வானை வெறிக்க,அவளும் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

அன்றைய நாள் மிகவும் அழகாக சென்றது மதிக்கும் மித்ராவிற்கும். அன்று இரவு உறங்க செல்லும் முன் மித்ரா ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்க,அவளை கலைத்தவன் "ஓய் பொண்டாட்டி என்ன யோசனை எல்லாம் பலமா இருக்கு.என்ன விஷயம்" என கேட்க,

அவளோ "ஆமா அது எப்படி?...என் மேல இவ்ளோ பாசம் வைச்சுருக்குற நீங்க,சின்ன வயசில் அப்படி பேசுனீங்க?... எங்க அப்பாவுக்கும் பெரியவங்களுக்கும் தானே சண்டை. அதில் நானு, எங்க அம்மா, சின்னக்குட்டி எல்லாரும் என்ன பண்ணோம்...எதுக்காக எங்க கூட யாரும் பேசலை" என மனதில் வெகுநாட்களாக உறுத்திக்கொண்டிருந்த கேள்வியை கேட்க,

"உங்க அப்பாவுக்கும் இந்த வீட்டுக்கும் நடந்த பிரச்சனையை பத்தி தெரியுமா?..." என்க,அவளோ இல்லை என்று தலையாட்டினாள்.

"என்னன்னு சொல்லுங்களேன், எதுக்காக எங்களை தள்ளி வைத்தீங்க?..." என காரணம் கேட்க,அவனும் நடந்ததை சொல்ல தொடங்கினான்.

மெத்தையில் படுத்திருந்த சண்முகசுந்தரத்திற்கும் மனம் பின்னோக்கி சென்றது.தன் வாழ்க்கையை தொலைத்த காலத்தை நோக்கி…

பதினெட்டு வருடங்களுக்கு முன்பு….

அந்த பெரியவீட்டின் கடைக்குட்டி சாந்தி,அங்குள்ள அனைவரின் செல்லம்.இரு அண்ணன்கள் ஒரு அக்கா என அனைவரும் தங்கள் அன்பை வாரிவாரி வழங்க,தெவிட்டாத அன்பை அனுபவித்தார் சாந்தி.


வீட்டுக்கு செல்லப்பிள்ளை படிக்கமாட்டேன் என சொன்னவுடன் யாரும் அவரை கட்டயாப்படுத்தாமல் இருந்துவிட அதன் பின் அண்ணன் அண்ணி அவர்களின் பிள்ளைகள் என சுற்றி வந்து கொண்டிருக்க,அவரின் இருபதாவது வயதில் பெரியவர்கள் பார்த்து சண்முக சுந்தரத்துடன் திருமணம் செய்து வைத்தனர்.

சண்முகசுந்தரமும் சாந்தியின் பிறந்த வீட்டை மிஞ்சும் அளவுக்கு அன்பையும் காதலையும் வழங்க,புகுந்த வீட்டிலும் ஒரு ராணி போல் தான் வலம் வந்தார் சாந்தி.அதுவும் மரகதம் மருமகளை அப்படி தாங்கினார்.அவளை எந்த வேலையும் செய்ய அனுமதிக்க மாட்டார். சாந்தி கனவிலும் நினைக்கவில்லை இப்படி அன்புக்காட்டும் மாமியார் தேளாய் கொட்டும் நாளும் வரும் என்று.

சண்முகம் சாந்தி இருவரின் காதலில் ஜனித்தவள் தான் மித்ரா. திருமணமான ஒரே வருடத்தில் அந்த வீட்டின் இளவரசியை பெற்றெடுக்க,மொத்த குடும்பத்திற்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி மரகததை தவிர….

முதல் குழந்தையே ஆண் வாரிசாக இருக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்தவருக்கு இது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தாலும்,அடுத்த பிள்ளையாவது ஆண் சிங்கமாக இருக்கவேண்டும் என வேண்டிக்கொண்டார். என்னதான் வருத்தம் இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ள வில்லை அடுத்த வாரிசிற்காக காத்திருந்தார்.

மதியை தான் யாராலும் கையில் பிடிக்க முடியவில்லை.அப்போது அவன் ஏழு வயது சிறுவன்,பிறந்தது முதல் அவனை தூக்கி வளர்த்தது அவனின் அத்தை தான்.அவனுக்கு நல்ல விளையாட்டு தோழியாக,பாடம் சொல்லி கொடுக்கும் குருவாக,பாசத்தில் அன்னையாக அனைத்து பரிமாணங்களையும் அவன் கண்டது அவனின் அத்தையிடமே….அதனால் அவனுக்கு எப்பவும் சாந்தி தான் முதன்மை.

என்ன தான் திருமணம் ஆகி வேறு வீடு சென்றுவிட்டாலும்...ஒரே ஊர் என்பதாலும் இரு விதிகள் மட்டுமே நடுவில் இருக்க,அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது. பாதி நேரம் அத்தையின் வீட்டில் தான் இருப்பான்.தன் வீட்டில் பிடிக்கும் ஓட்டத்தை சாந்தியின் வீட்டிற்கு வந்தே நிறுத்துவான்.

அப்படிபட்டவனுக்கு இப்போது ஒரு பூ புதையலாக அத்தை மகள் தெரிய...அவளை மடியில் வைக்க சொல்லி அடம்பிடித்து வாங்கி கொள்பவன்,அவன் இருக்கும் வரை யாரையும் அருகில் சேர்க்கவோ, அவளை தொடவோ அனுமதிக்க மாட்டான்.

"டேய் போதும்டா... சின்ன குழந்தையை ரொம்ப நேரம் கையில் வைச்சிருக்க கூடாது,அது குழந்தைக்கு ஆகாது" என்று சொன்னபடி குழந்தையை தொட்டிலில் போட வாங்கினார் மரகதம்.

அவன் கையை விட்டு வேறு கரத்திற்கு மாறிய அடுத்த நொடி பெருங்குரலெடுத்து கத்த தொடங்கிவிட்டாள் மித்ரா. அனைவரும் ஆச்சிரியமாக பார்க்க, அவனோ அனைவரையும் கெத்தாக ஒரு பார்வை பார்த்துவிட்டு "நான் தான் சொன்னேனே அவ என்கிட்ட தான் சமத்தா இருப்பா" என பாட்டியின் கையிலிருந்த மித்ராவை வாங்க, அவன் கரத்திற்கு வந்தவுடன் அழுகை மறந்து தன் ரோஜா பூ இதழ்களை திறந்து சிரிக்க தொடங்கினாள் மித்ரா.

சுத்தி இருந்த அனைவரும் பிரமிப்பாக பார்க்க சண்முகமோ "அடேய் மருமகனே... இப்போவே என் பொண்ணை என்கிட்ட இருந்து பிரிக்கிறீயே இதெல்லாம் நியாயமா. பொறுமையா இருடா,எப்படியும் அவ உனக்கு தான்" என விளையாட்டு போல் சொல்ல,அவர் சொல்லும் வார்த்தைக்கு அர்த்தம் எல்லாம் அவனுக்கு புரியவில்லை.ஆனால் அவள் தன் உடைமை என்பது மட்டும் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்டது.

அவள் வளர வளர,பள்ளி முடிந்ததும்,பள்ளி சீருடை கூட மாற்றாமல் நேராக மித்ராவை காண வந்து விடுவான்.அவளுக்கு விளையாட்டு காட்டி அவள் தூங்கும் வரை அங்கேயே இருப்பவன் இரவு உறங்க மட்டுமே தன் வீட்டிற்க்கு செல்லுவான்.

மரகதத்தின் மகள் மேகலாவின் குடும்பமும் அடிக்கடி அங்கு வரும்.ஆனால் அவர்கள் யாரிடமும் மித்ரா செல்லவே மாட்டாள்,அதுவும் ஒருநொடி கூட சந்திரன் கையில் இருக்கமாட்டாள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாள். அவனும் நிறைய பொம்மை சாக்லேட் என வாங்கி வந்தாலும் அவன் கரங்களுக்கு செல்லாமல் அழுகையை தொடங்குபவள், அவர்கள் எதிரிலேயே மதியிடம் தத்தி தத்தி விளையாடும் அவளை பார்க்கும் போது அந்த வயதிலேயே சந்திரனுக்கு மதியை பிடிக்காமல் போய்விட,வேண்டுமென்றே அவனை வம்பிழுப்பான் சந்திரன். ஆனால் மதியோ அப்போதே அதிபுத்திசாலி, எதிரியை எளிதாக சமாளிக்கும் திறன் கொண்டவன் முன் சந்திரன் எப்போதும் தோற்று போய்விடுவான்.

மித்ரா பேச தொடங்கிய போதும் சொன்ன முதல் வார்த்தை மாமா தான். "ஹய்யா...உங்க யாரையும் கூப்பிடல பாத்தீங்களா... என்ன தான் ஃபர்ஸ்ட் கூப்பிட்டு இருக்கா" என பெருமை பொங்க சொன்னான்.அவளுக்கு பெயர் கூட அவன் தான் வைத்தான்,அனைவரும் வெறும் வர்ஷினி என மட்டுமே வைக்க நினைக்க,அவன் தன் பெயரின் முதல் எழுத்தில் தான் அவளின் பெயரும் வைக்கணும் என அடம்பிடித்து மித்ரா என சொல்ல,அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டி மித்ரவர்ஷினி என பெயரிட்டனர்.

அன்றையில் இருந்தே அவளின் அனைத்து முடிவுகளும் அவனால் தான் எடுக்கப்பட்டது. நாட்கள் செல்ல அவளின் நான்கு வயது வரை அவள் தான் இரு வீட்டிற்கும் இளவரசி,அவளை தரையில் விடாமல் ஆளாளுக்கு மாற்றி மாற்றி தூக்கி வைத்துக்கொண்டே சுற்றுவார்கள். அந்த நிலையில் தான் மீண்டும் தாய்மையடைந்தார் சாந்தி. அது மீண்டும் இரு வீட்டிற்கும் ஆனந்தத்தை அதிகரிக்க, மரகதம் இது ஆண் குழந்தையாக தான் இருக்க வேண்டும் என்று உறுதியில் இருந்தார்.

சந்தோஷமாக நாட்கள் செல்ல,சாந்திக்கு ஸ்கேன் எடுக்கும் டாக்டரிடமே "இது என்ன குழந்தைன்னு சொல்ல முடியுமா?.. டாக்டரம்மா" என மரகதம் கேட்க, டாக்டர் "அதெல்லாம் சொல்ல கூடாதும்மா...எந்த குழந்தையா இருந்தா என்ன எதுவா இருந்தாலும் உங்க குழந்தை தானே" என்க,

அவரோ "அது எப்படி எதுவா இருந்தாலும் ஒன்னாகிடும். என் வீட்டு வம்சத்தை வளர்க்க ஆண் வாரிசு வேணாமா ?..."என தன் நிலையிலேயே நிற்க, முதன்முறை பயம் கொண்டார் சாந்தி.

'ஒருவேளை இதுவும் பெண் பிள்ளையாய் இருந்தால் மாமியார் என்ன சொல்வாரோ' என்ற எண்ணமே அவரை மிகவும் பலவீனமாக்கியது. அதன் பின் எப்போதும் அதே யோசனையில் இருந்தார்.

தன்னை சுற்றி உள்ள உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் மாறிமாறி பிறக்க போறது பையனா தான் இருக்கும் என சொல்ல சொல்ல... சண்முகசுந்தரத்திற்கும் அதே ஆசை இருக்க அவரும் தனக்கான வாரிசை எதிர்நோக்கி காத்திருந்தார். மனைவியை அன்பாய் பார்த்து கொண்டாலும் அவளின் மனதில் உள்ள சஞ்சலங்களை புரிந்து கொள்ளாமல் போய் விட்டார்.

ஆனால் சாந்தியின் பிறந்த வீட்டை பொறுத்தவரை எந்த குழந்தையாய் இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் மீண்டும் ஒரு குழந்தை செல்வத்திற்காக காத்திருக்க அந்த நாளும் வந்தது.

அனைவரும் தாய் சேய் இருவரும் நல்லபடியாக வரவேண்டும் என வேண்டுதலில் இருக்க, மரகதம் எப்போதும் போல் ஆண் குழந்தை வேண்டும் என்ற பிராத்தனையில் இருந்தார்.ஆனால் அவரின் எந்த வேண்டுதலும் பலனளிக்காமல் போக மீண்டும் ஒரு இளவரசி பிறக்க,

வெளியே வந்த செவிலியர் சொன்ன செய்தியில் அனைவரின் முகமும் மலர,மரகததின் முகம் இருண்டது. சண்முகசுந்தரத்திற்கு ஏமாற்றம் இருந்தாலும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

சாந்தியோ பெண் குழந்தை என்று டாக்டர் சொன்னதும் சந்தோஷம் இருந்தாலும் தன் மாமியாரை நினைத்து, மனம் ஒரு நிலையில் இல்லாமல் படபடக்க, இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் அதிகரித்தது. பிரசவம் முடிந்து உடனடியாக இரத்த அழுத்தம் அதிகரிப்பது
தாய்க்கு நல்லதல்ல….அப்படியிருக்க உயர் அழுத்தத்தின் காரணமாக இரத்த போக்கும் அதிகரிக்க,உடல்நிலை மோசமாக மாற டாக்டர்கள் போராடி அவரின் உயிரை காப்பாற்றினார்கள்.

அனைவரும் சாந்தியை எண்ணி கவலையில் இருக்க,டாக்டர் இனி உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னவுடன் தான் நிம்மதியாக இருந்தது. ஆனால் டாக்டர் மீண்டும் எதையோ சொல்ல தயங்கி மேலும் தொடர்ந்தவர் அவங்களோட கர்ப்பப்பை ரொம்ப பலவீனமா இருக்குறதுனால அவங்களால் திரும்பவும் ஒரு குழந்தையை சுமப்பது கஷ்டம் என்றும்,மீறி ஏதாவது நடந்தால் அவங்க உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என சொன்னதும் அனைவரின் பார்வையும் மரகதத்தை தான் பார்த்தது. அவரோ அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவர் மனதில் ஒரு முடிவுடன் அனைவரையும் நிமிர்ந்து பார்த்தார்.

அவரின் பார்வையே ஏதோ பெரிய பிரச்சனை வர போகிறது என்பதை உரைத்தாலும் இப்போது அதனை ஒதுக்கி வைத்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி கோர, அதன்பின்னரே அனைவரும் தாய் சேய் இருவரையும் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.அனைவரும் குழந்தையை தூக்கி கொஞ்ச,மரகதம் அறைக்குள் கூட நுழையவில்லை.அப்படியே வீட்டிற்கு சென்றுவிட,மாமியாரின் இந்த பரிணாமத்தில் சாந்தியின் கொஞ்ச நஞ்ச தைரியமும் காணாமல் போய்விட்டது.

 
Status
Not open for further replies.
Top