ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவிலே மிதக்கும் விழிகள் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 4

மெத்தையில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த மதிக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது.

அதுவும் தந்தை சொன்ன திருமணம் என்ற வார்த்தையை கேட்கும் போதே... ஏன் அவள் முகம் மனதில் தோன்றியது என்ற கேள்விக்கு அவனிடமே பதிலில்லை.

அப்படியே விழி மூடி உறங்க நினைத்தவனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. மூடிய இமைக்குள் அவளின் கண்ணங்குழி சிரிப்பும்,அழகு மதிவதனமே தோன்றி, என்றுமில்லாமல் இன்று மிகவும் இம்சித்தது.

இங்கு... தர்ஷினியின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் இருவருமே தவிப்பில் இருந்தனர்.

"சின்னக்குட்டி அக்கா சொல்றேன் தானே இன்னும் அழுதுட்டே இருந்தா என்னம்மா அர்த்தம்" என எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்காமல் தன் அன்னையை இறுகி அணைத்துக்கொண்டு படுத்திருந்தாள் தர்ஷினி.

மகளை தேற்றி கொண்டிருந்தவர்,நிமிர்ந்து பார்க்க கடிகாரம் இரவு எட்டரையை கடந்திருந்தது.

"வர்ஷினி நீ இங்க சின்னக்குட்டி பக்கத்துல இரு, நான் போய் பாட்டிக்கும் அப்பாவுக்கும் சாப்பாடு பரிமாறிட்டு வரேன்" என்று எழ முயன்றார் சாந்தி.

தாயை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்ட தர்ஷினி..."அம்மா போகாத அப்பா திரும்பவும் அடிப்பாங்க" என மடியில் முகம் புதைக்க,

மகளின் தலையை அதுரமாக வருடியவர் "இல்லடா அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது.அம்மா போய்ட்டு உடனேயே வந்துடுறேன்" என்றபடி வெளியே சென்றார்.

சாந்தி அனைத்தையும் டைன்னிங் டேபிளில் எடுத்துவைக்கவும், சண்முகசுந்தரம் அறையை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.

எப்போதும் போல் அவர் அமர...அருகில் நின்று பரிமாறிய சாந்திக்கு தான் கைகள் நடுங்கியது. முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவர் அவருக்கு உணவினை எடுத்து வைத்தார்.

மனைவியை அடித்துவிட்டோமே என்ற வருத்தம் சிறிதும் இன்றி அவர் தன் உணவினை தொடர...அடி வாங்கிய சாந்தியும் எதுவும் நடவாது போல் அவரின் தட்டை பார்த்து பார்த்து பரிமாறினார்.

ஏதோ அவரை மணந்ததே இதற்காக தான் என்பது போல் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார் சாந்தி.

அவருக்கு அடுத்து மாமியார் உண்ண… பின்னர் அனைத்தையும் ஒழுங்கு படுத்தியவர் இரு மகளுக்கும் உணவை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

இருவரையும் கட்டாயப்படுத்தி இரண்டு வாய் உண்ண வைத்தவர், அதற்கு மேல் முடியாமல் எழுந்து கைகழுவி வந்தார்.

ஏனோ அவருக்கு உணவு இறங்கும் என்று தோன்றவில்லை,சாப்பிடாமல் படுத்துக் கொண்டார்.

வாழ்க்கையில் முதல் காதல், முதல் நட்பு, முதல் முத்தம் போன்றவற்றை எப்படி மறக்க முடியாதோ அதே போல் கணவனிடம் வாங்கிய முதல் அடியை கூட மறக்க முடியாது தான் போல...சாந்தியும் கணவன் அடித்ததையே நினைத்துக்கொண்டு விழித்திருந்தார்.

அனைவருக்குமே அந்த இரவு உறக்கம் இல்லாத இரவாக மாறியது. மறுநாள் காலை எப்போதும் போல் பள்ளிக்கு தயாராகி வர்ஷினி தங்கையை எழுப்ப… அவளின் உடலோ அனலாக கொதித்தது.

சட்டென்று மனதில் பதட்டம் குடிக்கொள்ள "அம்மா.. ஆ இங்க வா" என தாயை அழைக்க,
என்னவோ ஏதோ என்று செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அறைக்குள் நுழைந்தார் சாந்தி.

பெரிய மகளின் சத்தத்தில் உள்ளே வந்தவர் அப்போது தான் சின்ன மகளின் நிலையை கண்டுகொண்டார்.

நேற்றைய பயமும் அழுகையும் சேர்த்து காய்ச்சலை வரவைத்திருந்தது.

மருத்துவமனைக்கு செல்லலாம் என்றால் அதற்கும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாள் என நன்றாக அறிந்தவர்,அந்த எண்ணத்தை கைவிட்டவராக மீண்டும் சமயலறை நோக்கி விரைந்தார்.

கிண்ணத்தில் தண்ணீரும் சிறு துண்டையும் எடுத்து வந்தவர்,உடல் வெப்பம் குறையும் மட்டும் குளிர்ந்த நீரால் உடல் முழுவதும் துடைத்துவிட்டவர்...அவள் மறுக்க மறுக்க அரிசி கஞ்சியை குடிக்க வைத்துவிட்டு காய்ச்சல் மருந்தை கொடுத்தார்.

சற்று நேரத்தில் கொஞ்சம் உடல் சூடு குறைந்திருந்தது முழுமையாக சரியாகாத காரணத்தால் மகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.

வர்ஷினி தங்கையின் தலையை வருடி…"சின்னக்குட்டி அக்கா ஸ்கூலுக்கு போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்.அதுவரைக்கும் நல்லா தூங்கி ரெஸ்ட் எடு" என்றவள் கையை பிடித்துக்கொண்டாள் தர்ஷினி.

"என் கூடவே இருக்கா, பிளீஸ் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு" என அந்த உடல் சோர்வையும் வலியையும் பொறுக்க முடியாமல் அந்த சிறுபெண் கேட்க…

தங்கையின் தெளியாத முகத்தை பார்த்து அவளுக்கும் பள்ளிக்கு செல்லும் எண்ணம் சுத்தமாக விடைப்பெற்றுவிட்டது.

அன்று முழுவதும் வர்ஷினி மற்றும் சாந்தியின் கவனிப்பிலும் அன்பிலும் ஜுரம் நன்றாகவே விட்டிருந்தது.

இந்த சம்பவத்திற்கு பின்னர் தந்தையை பார்ப்பதையே தவிர்க்க தொடங்கினாள்.அவர் ஹாலில் அமர்ந்திருந்தாள் இவள் அறைக்குள் நுழைந்து கொள்வாள்.அவர் அறைக்குள் சென்றவுடன் வெளியே வருவாள்.இப்படி வீட்டுக்குள்ளேயே ஒரு கண்ணாமூச்சு ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தர்ஷினியும் அடுத்த நாளில் இருந்தே பள்ளிக்கு செல்ல தொடங்கிவிட்டாள்.

நாட்கள் செல்ல…அன்று காலை மதி அறையை விட்டு வெளியே வரும் போதே வீடு பரபரப்பாக இருந்தது.

இன்னைக்கு என்ன விசேஷம் என நாட்காட்டியை பார்க்க,அதிலும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை.

'அட என்னடா இது,இங்க நான் ஒருத்தன் இருக்குறதை கூட கண்டுக்காம அப்படி என்ன வேலை' என எண்ணியபடி ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்தான்.

"அம்மா காஃபி" என சமையலறை நோக்கி சத்தமாக கேட்டவன், அன்றைய செய்தி தாளில் மூழ்கிவிட்டான்.

சிறிது நேரங்கள் கடந்தும் அவன் கேட்டது கிடைக்காததால் மீண்டும் "அம்மா..ஆ, எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க"..? என்ன தான் நடக்குது இந்த வீட்டில்" என சத்தமாகவே கத்த,

ஆனால் யாரும் அவன் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை.அனைவருமே தங்கள் வேலையில் கவனமாக இருந்தனர்.

ஒன்றும் புரியாமல் நின்றவனை நெருங்கி "மதி இவளை கொஞ்சம் பார்த்துக்கோ, எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு" என தியாவை கையில் கொடுத்துவிட்டு செல்லும் அண்ணியை கோபமாக பிடித்து நிறுத்தினான்.

"அண்ணி இங்க என்ன நடக்குது.இப்போ சொல்ல போறீங்களா இல்லையா" என்க,

அவன் அண்ணி அனுவோ... எதுவும் சொல்லாமல் அவனை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பை உதித்தவள் "எல்லாரும் தான் நடக்குறாங்க, நீ யாரை கேட்கிற மதி" என்க,

அவனோ பல்லை கடித்துக்கொண்டு இருக்குற கடுப்புல இவங்க வேற என நினைத்தவன் "செம்ம காமெடி அப்பறம் சிரிக்கிறேன்" என்றவன்,

கோபம் அதிகரிக்க "எல்லாரும் ரொம்ப பிசியா இருக்கீங்க? என் கேள்விக்கு பதில் சொல்லவோ, என்னை கவனிக்கவோ தான் யாருமில்லையே. அப்பறம் நான் எதுக்கு இங்க வீணா.நான் டியூட்டிக்கு கிளம்புறேன்" என திரும்பவும் தியாவை அவளிடமே கொடுத்தவன் தன் அறைக்குள் நுழைந்தான்.

கோபமாக போகும் கொழுந்தனை பார்த்து சிரித்தபடி சமயலறையில் நுழைந்த அனு… "அத்தை மதி வேலைக்கு போக போறேன்னு கோபமா போறார். பாவம் என்னன்னு போய் சொல்லுங்கத்த,ஓவர் டென்ஷனில் இருக்கார்" என்றாள்.

"நீ சும்மா இரும்மா. எப்போ பார் உன் கொழுந்தனுக்கு வக்காளத்து பண்ண வந்திடுவ. நேத்து அவ்வளவு தூரம் ஃபோன் பண்ணி வீட்டுக்கு சீக்கிரம் வாடா,முக்கியமான விஷயம் பேசணும்னு படிச்சி படிச்சி சொன்னா...திருடன் மாதிரி நடுராத்திரிக்கு வரான்".

"கொஞ்ச நேரம் என்ன நடக்குதுன்னு தெரியாம மண்டையை போட்டு பிச்சிக்கிட்டும். பொறுமையா சொல்லிக்கலாம்" என தன் மகன் மேல் உள்ள கோபத்தில் பேசிய மீனாட்சி, சமையலை தொடர்ந்தார்.

சிறிது நேரத்தில் காக்கி சட்டையோடு அறையிலிருந்து வந்தவன்,யாரையும் கண்டுகொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியே வந்தான்.

வெளியே வந்தவன் தன் புல்லட்டை தேட, அதுவோ அவன் நிறுத்திய இடத்தில் இல்லாமல் சதி செய்தது.

பக்கத்தில் அவனின் அப்பாவும் சித்தப்பாவும் எதையோ தீவிரமாக பேசிக்கொண்டிருக்க…"அப்பா எங்க என் வண்டி? யார் எடுத்தது,இப்பவே எனக்கு டியூட்டிக்கு டைம் ஆகிடுச்சு" என புலம்பினான்.

அப்போதுதான் அவனை பார்த்த இருவரும், "நீ எங்க கிளம்பிட்ட,அதுவும் யூனிஃபார்ம் போட்டுகிட்டு" என்றவரை முறைக்க தொடங்கினான் மதி.

"இது என்ன கேள்விப்பா,வேலைக்கு தான்.புதுசா கேக்குறீங்க? கேள்வி மட்டும் இல்ல இன்னைக்கு இந்த வீட்ல எல்லாமே புதுசா தான் இருக்கு" என கத்தியவனை இப்போது இவர்கள் முறைக்க தொடங்கினர்.

"ஏண்டா விளையாட வேற நேரமில்லையா..? உள்ள போடா. இன்னைக்கு எங்கயும் வெளிய போக கூடாது. இன்னைக்கு வீட்ல முக்கியமான பங்ஷன் இருக்கு.அதுவும் நீயில்லாம எப்படி " என இவரும் நேரடியாக விஷயத்திற்கு வரமால் சுற்றி வளைத்து பேசியபடி உள்ளே சென்றுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து...மதியின் அறைக்குள் நுழைந்த அவனின் அன்னை,தலையில் கைவைத்து அமர்ந்திருந்த மகனை பார்த்து "டேய் சாப்பிட வாடா" என்க,அவனோ "எனக்கு எதுவும் வேண்டாம்" என சொன்னவன்,அப்படியே மெத்தையில் படுத்துக்கொண்டான்.

"நாங்க தான் உன்மேல கோபத்தில் இருக்கணும்.ஆனா இங்க எல்லாமே தலைகீழா இருக்கு" என்றவர், அவன் அவன் அருகே அமர்ந்து முகம் பார்க்க...

அவன் முகத்தில் உள்ள குழப்பத்தை கண்டு மேலும் அவனை வெறுப்பேற்ற பிடிக்காமல்,நடக்க இருக்கும் நிகழ்ச்சியை பற்றி சொன்னார்.

தன் அன்னை சொன்னதை கேட்டவன் அதிர்ச்சியில் படுக்கையை விட்டு சட்டென்று எழுந்து கொண்டான்.

"அம்மா என்ன சொல்றீங்க..? யாரை கேட்டு இப்படி திடீர்னு நிச்சயதார்த்ததுக்கு ரெடி பண்ணீங்க?" என மனம் படப்படக்க தாயை பார்த்தான்.

கல்யாணத்தை பத்தி பேசி இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில்,இப்படி தீடீரென்று,அதுவும் இவ்வளவு சீக்கிரம் அனைத்து வேலையும் தொடங்குவார்கள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அடுத்து என்ன செய்வது என புரியாமல் தன் அன்னையை பார்த்து, "இன்னும் மது காலேஜ் முடிக்கலையேம்மா அதுக்குள்ள என்ன அவசரம்" என்க..

"கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாசம் இருக்குடா,இப்போ வெறும் நிச்சயம் தான். உங்க மாமா தான் அவசரப்படுறார்.

பேசி வெச்சிட்டா அப்பறம் எப்போ வேணா கல்யாணத்தை முடிச்சிடலாம்னு சொன்னார்,அதான் போன வாரம் எல்லாரும் ஜோசியரை பார்த்து நாள் குறிச்சிட்டு வந்தோம்" என்றவர்,

"உன்கிட்ட அப்பவே சொல்லலாம்னு நினைச்சோம்,உங்க மாமா தான் இப்போ சொன்னா மாட்டேன்னு சொல்லுவான் நிச்சியத்துக்கு முந்தின நாள் சொல்லிக்கலாம்னு சொன்னார்" என்க…

இப்போது கோபம் மொத்தமும் அவனுக்கு அவன் மாமாவின் மேல் எழுந்தது.

'தனக்கு தெரியாமல் இவ்வளவு விஷயம் நடந்திருக்கு.ஆனால் நான் இது எதுவும் தெரியாமல் இருந்து இருக்கிறேனே' என நினைக்கையிலேயே "நீதான் வீடே தங்குறது இல்லையே, அப்புறம் எப்படி உங்கிட்ட சொல்றது. அப்படி என்ன வேலையோ வீட்டுக்கு கூட வர முடியாமல்" அவர் பாட்டிற்கு புலம்ப தொடங்கியவர், மகனின் முகம் பார்க்க அவனோ ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

"டேய் என்னடா பேய் அடிச்ச மாதிரி இருக்க"...? என அவன் சிந்தனையை கலைத்தார் மீனாட்சி.

"உனக்கு போட்டுக்க,வெட்டி சட்டை எடுத்து வச்சிருக்கேன்.முதல்ல வந்து சாப்பிட்டு எல்லாத்தையும் போட்டுக்க...இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வந்துடுவாங்க" என்றவர் அறையை விட்டு வெளியேறினார்.

மதி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான். மதுவை அவனுக்கு பிடிக்கும் தான்,அது வெறும் அத்தை மகள் என்ற ரீதியில் மட்டுமே. அதை தாண்டி இதுவரை அவளை வேறு நோக்கத்தில் பார்த்ததுமில்லை, நினைத்ததில்லை.

அப்படியிருக்க இப்போது அவளை மனைவியாக,அதனை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை அவனால்.

அப்படியே பெரியவர்களின் ஆசைக்காக கல்யாணம் செய்துகொண்டாலும்,
அவளுடன் சந்தோஷமான மணவாழ்க்கையை வாழ முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை.

மனைவி என்று நினைத்தவுடன் மனதில் தோன்றும் முகம் இன்றும் தோன்றியது. ஆனால் ஒரு நாளும் மதுவின் முகம் அப்படி தோன்றியதில்லையே.

ஒருவேளை ஒரே வீட்டில் வளர்ந்ததனால் தான் என்னவோ, அனைவரிடமும் பேசுவது போல தான் அவளிடமும் பேசுவான்.அவள் மேல் அத்தை பெண் மேல் தோன்றும் உரிமை கூட இதுவரை தோன்றியதில்லை.

கேலி கிண்டல் எல்லாமே, சாதாரணமாக தான். அதில் பாசம் இருக்குமே தவிர எள்ளளவும் காதல் இருந்ததில்லை.

அப்படியிருக்க, இப்போது என்ன சொல்லி இந்த திருமணத்தை நிறுத்துவது என்பதே பெரிய கேள்வியாக மண்டையை குடைந்தது.

நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் அவனுக்கே அது காதல் தானா என்பது சந்தேகமே.

அப்படியே சொன்னாலும் அவளை காதலியாக அவனால் அடையாளம் காட்ட முடியாது. இருவரும் சேரவும் முடியாது. அப்படிப்பட்ட நிலையில் அடுத்து என்ன என்பது கேள்விக்குறி தான்.

சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவன்,அழுந்த தன் தலையை கோதியவாறு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

என்ன ஆனாலும் இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் எழுந்து தயாராக தொடங்கினான்.

ஊரின் பெரிய வீட்டின் நிகழ்ச்சி என்பதால்,ஊர் மக்கள் அனைவருமே வருகை தந்திருந்தனர்.

பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக கூடத்தில் நடுநாயகமாக இருக்கையில் அமர்ந்திருந்தவன் உள்ளத்தில் மருந்துக்கும் மகிழ்ச்சி என்பது இல்லை.

வெளியே அனைவரின் பார்வைக்காக முகத்தை கஷ்டப்பட்டு சிரித்தபடி வைத்திருந்தான்.

அப்போது மதுமிதாவை அழைத்து வர,பட்டு புடவையில் மிதமான அலங்காரத்திலேயே தேவதையாக வந்தவளை அனைவருமே விழி விரித்து பார்த்தனர்.

"நம்ம மதிக்கு ஏத்த பொண்ணு தான். புடவையில் மகாலட்சுமி போல இல்ல இருக்கா" என அனைவருமே அவர்களின் ஜோடி பொருத்தத்தை புகழ்ந்து தள்ள...அவளின் அழகை ரசிக்க வேண்டிய இடத்தில் இருப்பவனோ அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

அவன் மட்டும் தான் அப்படி இருந்தான். ஆனால் மது புதிதாக முகத்தில் முளைத்த வெட்கத்தால் முகம் ரோஜா நிறத்தை தத்தெடுக்க ,யாரையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தவித்தாள்.

சிறு வயதில் இருந்து அவனை தான் மணக்க போகிறாய் என அனைவரும் சொல்வதை கேட்டு வளர்ந்ததால், அவளுமே இந்த திருமணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தாள்.

கூடியிருந்த அனைவரையும் பார்த்து வணங்கியவள்,அங்கு விரிக்கப்பட்ட கம்பளத்தில் அமர்ந்தாள்.

விழா தொடங்க...ஊர் மக்களின் முன்னிலையில் இரு குடும்பத்தினரும் நிச்சய தாம்பூலத்தை மாற்றிக் கொண்டு திருமணத்தை உறுதி செய்தனர்.

அதன் பின்னர் வந்தவர்கள் அனைவரும் இருவரையும் வாழ்த்தி ஆசிர்வாதம் செய்துவிட்டு உணவருந்த சென்றனர்.நேரம் கடக்க வந்தவர்கள் அனைவரும் விடைபெற்று சென்றுவிட...வீட்டினர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

ஏனோ அன்று காலையிலிருந்தே மிகவும் இறுக்கமாக உணர்ந்தவன்,தன் நண்பனுக்கு அழைத்தான்.

"டேய் கதிர், டியூட்டி முடிஞ்சா வீட்டுக்கு வந்துட்டு போ" என்றவன்,யாரிடமும் பேசாமல் அறைக்குள்ளேயே இருந்தான்.

மாலை கதிர் வந்தவுடன்,தன் புல்லட்டை கூட எடுக்காமல் அவன் வண்டியிலேயே கிளம்பிவிட்டான்.

"என்னடா ஒரு மாதிரி இருக்க..? ஏதாவது பிரச்சனையா..? என்ற நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் "முதல்ல கிளம்புடா அப்பறம் சொல்றேன்" என்றவன் பின் இருக்கையில் அமர்ந்தான்.

வண்டி நேராக சென்று நின்றது என்னவோ ஒரு டீ கடையில் தான். எப்போதுமே நண்பர்கள் அனைவரும் அங்குள்ள பெஞ்ச்சில் அமர்ந்து அரட்டை அடிப்பது தான் வழக்கம்.

அதனால் அங்கேயே வண்டியை நிறுத்தியவன்,இருவருக்கும் டீ சொல்லிவிட்டு அங்குள்ள பெஞ்ச்சில் அமர்ந்தான் கதிர் .

மதியும் அமர்ந்தவன், எதுவும் பேசாமல் கொண்டுவந்து கொடுத்த டீயை பருகியவன் காதில் ஒரு குரல் கேட்டது.

சட்டென்று திரும்பி பார்க்க,அங்கே தன் நண்பர்கள் படை சூழ வந்து கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி.

பார்வையை மாற்றாமல் அவளையே அழுத்தமாக பார்க்க… அவளோ "டேய் உனக்கு ரொம்ப திமிர் அதிகமாகிடுச்சு டா. இரு இரு எல்லா டீச்சர்ஸ் கிட்டயும் சொல்றேன், உங்களுக்கு இவன் பட்டப்பெயர் வாய்த்திருக்கான் அப்படின்னு" என ரமேஷின் காதை திருகியவாறு தன்னுடைய வாண்டு நண்பர்களுடன் கதையளந்து கொண்டே நடந்தவள்,டீ கடையை கடக்கும் நேரம்….

அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் "டேய் ரமேஷ் இங்க வாடா" என அழைத்தான்.

திரும்பி பார்த்த ரமேஷ் "ஹேய் மதி அண்ணா... என கூச்சலிட்ட படி, சின்னக்குட்டி இந்த சைக்கிளை மட்டும் கொஞ்சம் பிடியேன் இதோ வரேன்" என்றவன்,மதியை நோக்கி ஓடினான்.

"மதி அண்ணா" என்றபடி எதிரில் வந்து நின்றவனை பார்த்த பின்பே அவனை அழைத்தது நினைவில் எழுந்தது.

செல்லும் அவளை தடுக்கவே இவனை அழைத்திருந்தான். இப்போ என்ன சொல்வது என யோசித்தவன்,மணிக்கட்டில் உள்ள கைக்கடிகாரத்தை பார்க்க, மணி ஐந்தரையை கடந்திருந்தது.

"டேய் உங்களுக்கு ஸ்கூல் நாலு மணிக்கே முடிந்திருக்குமே, அப்பறம் எதுக்கு இன்னும் இங்கேயே சுத்திட்டு இருக்க. என்ன உங்க அப்பா கிட்ட சொல்லனுமா..? என என்ன பேசுவது என தெரியாமல் சிறுபிள்ளையை பயமுறுத்தினான்.

அவனிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் பார்வையோ ஓரக்கண்ணால் அங்கு நின்று கொண்டிருந்த மித்ராவையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தது.

அங்கு சட்டமாக அமர்ந்துகொண்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க இவளுக்கு இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது.

"டேய் ரமேஷ், அங்க என்ன வெட்டியா பேசிட்டு இருக்க.. இப்போ வர முடியுமா முடியாதா' என சத்தமாக கத்தியவள்,இப்போ நீ மட்டும் வரலைன்னா சைக்கிளை அப்படியே ரோட்ல போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்" என சொன்னவள் மறந்தும் அவன் முகத்தை பார்க்கவில்லை.

'திமிர் திமிர் உடம்பெல்லாம் திமிர்' என நினைத்தவன் "நீ போடா" என ரமேஷை அனுப்பி வைத்தான்.

"என்னடா அந்த பொண்ணு இப்படி பேசுறா? சரியான வாயாடியா இருப்பா போல" என்ற கதிரை பார்த்து "நீ முதல்ல வண்டியை எடுடா" என்றான்.

"டேய் எதுவோ பேசணும்னு வர சொன்ன,இப்போ திரும்பவும் எங்கேயோ குப்பிடுற" என்க,

"நீ வந்தா வா இல்லனா ஆளை விடு நானே போய்க்கிறேன்" என நடக்க தொடங்கிய மதியை தடுத்து அவனே வண்டியை எடுத்தான்.

"எங்கடா போகணும் வீட்டுக்கா" என்க,

அவனோ "நான் சொல்ற வழியில் போ" என அவனுக்கு மேப்பாக மாறி வழி சொன்னான்.

தன் நண்பர்கள் வீடு வந்துவிட, அவர்கள் சென்றவுடன், சைக்கிளில் தங்கையை அமரவைத்து வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி.

லெஃப்ட், ரைட் என வளைந்து வளைந்து நான்கு தெருவை தாண்டி மீண்டும் அந்த டீ கடைக்கு செல்லும் பாதையில் பயணிக்க…
 

Anjali

Well-known member
Wonderland writer
"டேய் என்னடா இது.எனக்கு இந்த ஊரை சுத்திக்காட்டுன்னு உன்கிட்ட சொன்னேனா? ...அங்க சுத்தி இங்க சுத்தி திரும்பவும் ஒரே இடத்தில் வந்து நிற்கிறோம்" என திட்டியபடி வண்டியை செலுத்தினான்.

பின்னால் அமர்ந்திருந்த மதி,நண்பனின் திட்டை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் பார்வையை சாலையில் செலுத்தினான்.

என்றும் இல்லாமல் இன்று, மனம் ஏனோ மீண்டும் மீண்டும் அவளை பார்க்க தூண்டியது. அதனால் தான் அவளை பார்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால், அவளை முந்திக்கொண்டு எதிரில் வர வைத்தான்.

மெதுவாக சைக்கிளை ஓட்டியவாரே, இந்த வாய் மூடவே முடாது என்பது போல் பேசிக்கொண்டே வந்தவளை பார்த்துக்கொண்டே இருந்தான் மதி.

அக்கா தங்கை இருவரும் சைக்கிளில் அவர்களுக்கு எதிரில் வந்து கொண்டிருக்க...அப்போது "அய்யோ ! அக்கா.. அக்கா"..என கத்திய தர்ஷினியின் குரலில் தங்கைக்கு தான் என்னவோ ஆகிவிட்டதோ என பயத்திலும் பதட்டதிலும் சட்டென்று திரும்பி பார்த்தாள் மித்ரவர்ஷினி.

சட்டென்று திரும்பியதால் அதுவரை சாலையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த சைக்கிள் சாலையின் நடுவில் தடுமாறி எதிரில் வந்த வண்டியில் மோதுவது போல் சென்று கடைசி நேரத்தில் நின்றது.

தரையில் கால்களை ஊன்றி நின்றவள் அப்போதும் எதிரில் நிற்கும் வண்டியை கண்டுகொள்ளாமல் தங்கையின் புறம் திரும்பி அவள் நலனை பார்த்த பின்பே மனம் நிம்மதியடைந்ததாள்.

"எதுக்குடி அப்படி கத்துன..? என தங்கையை கேட்க, அவளோ "இல்லக்கா உன்னோட பேக் கீழே விழ போச்சா அதான் பயத்தில் கத்திட்டேன்" என்றவளை முறைத்து விட்டு திரும்ப ….

அங்கே அவளை அனலை கக்கும் பார்வையோடு முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் கதிர்.

தப்பு மொத்தமும் தன் மேல் தான் என உணர்ந்தவள் மன்னிப்பு கேட்கும் பொருட்டு நிமிர்ந்து பார்க்க,அப்போது தான் அவனுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் நெடியவனை கண்டுக்கொண்டாள்.

மன்னிப்பு கேட்கவேண்டும் என நினைத்திருந்தவள் மனம் அவனை கண்டு சட்டென்று மாறி விட ...அவன் திட்ட வாய்த்திறக்கும் முன்பே அவள் தொடங்கிவிட்டாள்.

"உங்களுக்கு கண்ணு என்ன பிடறியிலா இருக்கு...பார்த்து வர தெரியாதா..? இது என்ன உங்க அப்பா வீட்டு ரோடா..? என தன் தவறை மறைத்து அவனை கத்தினாள்.

கதிரோ "என்னடா இது நம்ம பேச வேண்டிய டயலாக் எல்லாம் இவ பேசுற" என மனதுக்குள் நினைத்தபடி அதிர்ந்து பார்க்க...அவள் அப்போதும் திட்டுவதை நிறுத்தாமல் "புல்லட் வெச்சிருந்தா பெரிய ஆளா...சைக்கிளில் போறவங்க எல்லாரையும் பார்த்தா இளக்காரமா தெரியுதா" என அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக... கேட்டுக்கொண்டிருந்த இருவருக்கும் 'ஏண்டா இவளை இடிக்காமல் விட்டோம்' என நினைக்கு அளவுக்கு வைத்துவிட்டாள் மித்ரா வர்ஷினி.

"டேய் , என்னடா ஸ்கூல் யூனிபார்ம் போட்ட ரவுடி மாதிரி பேசுறா..? இன்னும் கொஞ்சம் இங்க இருந்தோம்னு வை, இந்த சாதாரண பிரச்சனையை பெரிய தேசிய பிரச்சனையா மாத்திடுவா போலடா.

அதுக்குள்ள பணக்காரன் ஏழை வரைக்கும் வந்துட்டா" என பின்னால் அமர்ந்திருந்த நண்பனிடம் புலம்ப… பின்னால் அமர்ந்திருந்தவனோ எதும் பேசாமல் "நீ வண்டியை எடு" என்றான் அழுத்தமாக.

கதிரோ, நண்பன் உதவிக்கு வருவான் என நினைத்திருக்க..அவனோ அவளை எதுவும் கேட்காமல் தன்னை வண்டியை கிளப்ப சொல்வான் என நினைக்கவில்லை. வேறுவழி இல்லாமல் உயிர் நண்பனை மனதுக்குள் திட்டியபடி, அவள் பேச பேச கண்டுகொள்ளாமல் வண்டியை கிளப்பினான்.

போகும் போது…."ஏண்டா அவ அவ்ளோ பேசுற, நீ பாட்டுக்கு கண்டிக்காம வர" என நண்பனை திட்ட அவனோ "லூசு மாதிரி பேசாத டா' அவள் தான் வாயாடினு தெரியுமே. அப்பறம் எதுக்கு அவகிட்ட பேச்சு கொடுத்த" என்றவனை பார்த்து

"டேய் இதெல்லாம் அநியாயம் டா. நான் பேசவே இல்லடா... அதுக்குள்ள அவ பேச தொடங்கிட்டா" என தன் மனக்குறையை சொல்ல அதை கேட்க தான் தயாராக இல்லை அவன் நண்பன் மதியழகன்.

அவனுக்கு நினைவு முழுவதும் தன்னை பார்த்தவுடன் கோபமாக கத்த தொடங்கிய மித்ரவர்ஷினியின் மேலேயே இருந்தது. அவனுக்கு தெரியும் அவள் கோபத்திற்கு முழு காரணமும் தான் தான் என்று...ஆனால் அதனை சரி செய்யும் வழி தான் அவனுக்கும் தெரியவில்லை.



 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 5

மீண்டும் அதே டீ கடையில் தான் இருவரும் அமர்ந்திருந்தனர்.

"டேய் உனக்கு என்ன தான்டா ஆச்சு? ஏதோ பேசணும்னு வர சொன்ன, வந்தா என்னமோ இந்த ஊரை நான் பார்த்ததே இல்லாதது போல் சுத்தி காட்டிட்டு இருக்க…. என்னை பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி இருக்கா?.." என புலம்ப தொடங்கினான் கதிர்.

மதியோ அவன் சொல்வதை காதில் வாங்காமல் எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தான்.

தான் இவ்வளவு பேசியும் எந்த பதிலும் இல்லாமல் போக,நிமிர்ந்து தன் நண்பனை பார்த்தான் கதிர்.

எப்போதுமே கதிர் அவனை வியந்து பார்ப்பதுண்டு,செய்யும் அனைத்து செயல்களிலும் அத்தனை தெளிவும் நேர்த்தியும் இருக்கும். வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள் தான் ஆன போதிலும்,அதற்குள் மதுரை முழுவதும் அனைவருக்கும் தெரிந்த முகமாகி விட்டான்.

அவனின் வேகத்தையும் விவேகத்தையும் பார்த்த மேல் அதிகாரிகள் கூட அவனுக்கு இந்த சின்ன வயதில் இந்த பதவி கிடைத்ததில் ஆச்சரியமே இல்லை என்றே நினைத்தனர்.அவனின் அதிரடிகள் அப்படி.

அப்படிப்பட்டவன் இன்று ஏதோ குழப்பமான நிலையில் இருப்பதை பார்த்தவுடனேயே விஷயம் பெரியது என உணர்ந்தவன் நண்பனின் தோளில் கை வைத்தான்.

"டேய் மதி என்ன பிரச்சனை டா...நான் இதுவரைக்கும் உன்னை இப்படி பார்த்ததே இல்லையே" என கவலையாக கேட்க…

ஏனோ இப்போது மனம் முழுவதும் அழுத்தமாக உணர்ந்தவன்,அதனை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காலையில் இருந்து நடந்த அனைத்தையும் நண்பனிடம் சொல்லிவிட்டான்.

சொன்னவனின் மனதிலுள்ள பாரம் சற்று குறைந்துவிட கேட்டுக்கொண்டிருந்தவன் மனதில் பாரம் அதிகரித்துவிட்டது.

இருக்காதா பின்ன, இரண்டு வருடங்களாக மதுவை காதலிக்கிறான். இன்னும் அவளிடம் சொல்லவில்லை, அவனுமே நண்பனிடம் முதலில் சொல்லிவிட்டு அவன் மூலம் பெரியவர்களிடம் பேசலாம் என்று நினைத்திருந்தான்.

தீடீரென்று இப்படி நடக்கும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்போது தான் அவள் படித்துக் கொண்டிருப்பதால் முடித்தவுடன் சொல்லலாம் என நினைத்திருந்தவனின் ஆசையில் மண்ணை அள்ளி போடுவார்கள் என்று கனவா கண்டான்.

அவனுக்கு உறுதியாக தெரியும் நண்பன் மனதில் மதுவின் மேல் காதல் இல்லை என்று. எனக்கு என் தங்கை மீரா எப்படியோ அதே போல் தான் மதுவும் என பலமுறை அவனிடமே சொல்லி இருக்குகிறான். அதனால் தான் அவனுமே அவன் காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் என்ற இருமாப்பில் கனவுகளோடு சுற்றிக் கொண்டிருந்தான்.


முகத்தில் தோன்றிய கலக்கத்தையும் வேதனையையும் வெளிவராமல் இருக்க பெரும்பாடு பட்டு போனவன், முயன்று தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு, "நீ என்னடா முடிவெடுத்து இருக்க?.." என நடுங்கும் குரலில் கேட்க,

"இதுல முடிவெடுக்க என்னடா இருக்கு. நான் போய் எப்படிடா மதுவை,என்னால அதை நினைச்சு கூட பார்க்க முடியலை.காலையில் இருந்து ஒரே தலைவலியா இருக்குடா. எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்".

"எல்லா ஏற்பாடும் செய்றதுக்கு முன்னாடியே தெரிந்திருந்தால், கண்டிப்பாக நிறுத்தியிருப்பேன். ஊரையே கூட்டி வந்து நடுவீட்டில் உட்கார வைச்சிட்டு சொல்றாங்க. அப்போ என்னால என்னடா சொல்ல முடியும்".

"முடியாதுன்னு ஈஸியாக சொல்லிடலாம். ஆனா எல்லாரையும் நினைச்சா தான் கஷ்டமா இருக்கு.
அவங்க கேட்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு சத்தியமா தெரியல. ஆனா அதுக்காக சொல்லாமலும் இருக்க முடியாது. அதான் யோசிச்சி யோசிச்சி தலைவலி வந்தது தான் மிச்சம்" என மனதில் இருந்த அனைத்தையும் நண்பனிடம் கூறியவன் சற்று ஆசுவாசமாக உணர்ந்தான்.

அவன் சொன்ன பதில் அவனுக்கு அப்படி ஒரு நிம்மதியை கொடுத்தது. இருந்தாலும் மனதுக்குள் இருக்கும் பயம் முழுமையாக போகவில்லை. அவளை இழந்து விடுவோமோ என்ற தவிப்பு அப்பட்டமாக முகத்தில் அடிக்கடி வந்து போனது. அதனை நண்பனுக்கு தெரியாமல் மறைத்தவன்,

"இப்போ இதுக்கு என்னதான்டா பண்றது" என்க…

"வேற வழி இல்லடா இப்போ யாருகிட்ட பேசினாலும் எதும் பண்ணமுடியும்னு தோணலை,எல்லாருமே அவங்க முடிவுல இறுதியாக இருக்காங்க.

ஏற்கனவே முடிவெடுத்த விஷயம் தானேன்னு நான் சொல்ற காரணத்தை பெருசா எடுத்துக்க மாற்றாங்க. முதல்ல இரண்டு பேரையும் சேர்த்து பேசும் போது, மது ஸ்கூல் படிச்சிட்டு இருந்தா, அதான் சும்மா விளையாட்டுக்கு சொல்றாங்களேன்னு கண்டுக்காமல் விட்டுட்டேன்.அதான் நான் பண்ண முதல் தப்பு" என புலம்பும் நண்பனை பார்க்க அவனுக்கும் கஷ்டமாக தான் இருந்தது.

"விடுடா அதுதான் இன்னும் ஆறு மாசம் டைம் இருக்கே அதுக்குள்ள எதாவது யோசிப்போம். கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது" என்றான் உறுதியாக.

நிமிர்ந்து பார்த்த மதி, கதிரின் முகத்தில் உள்ள உறுதி கண்டு, அவனுக்கும் எதுவோ புரிந்தது போல் இருந்தது.

பின்னர் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள்,விடைபெற்று தங்கள் இல்லம் நோக்கி சென்றனர். முதலில் மதியை அவன் வீட்டில் இறக்கிவிட்டவன்,வண்டியை திருப்பியவனின் பார்வை ஒரு இடத்தில் அப்படியே சிறையெடுத்து நின்றது.

காலையில் நிச்சியத்திற்கு என அணிந்திருந்த புடவையை கூட மாற்றாமல்,காற்றில் குழல் கலைந்தாட அதை தன் விரல்களால் ஒதுக்கியவாறு மாடி முற்றத்தில் நின்றுகொண்டிருந்தாள் மது.

முதல் முறை அவளை சேலையில் பார்க்கிறான்,ஆனால் அவளை முழுமையாக ரசிக்க கூட முடியாத சூழ்நிகையில் அவன்.அவள் முகத்தில் உள்ள மகிழ்ச்சியே சொன்னது அவளுக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் என்று.

ஒவ்வொரு முறையும் அவளை தூரம் இருந்தே பார்த்து ரசிப்பவனுக்கு அவள் முகத்தில் தோன்றும் புன்னகையே போதுமானதாக இருந்தது காதல் செய்ய....ஆனால் இன்று அதே புன்னகை அவனை பிடிக்கவில்லை என்பதை சொல்லும் போது உயிர் போகும் வலியை தன்னுள் உணர்ந்தான் கதிர். சற்றுநேரம் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு பெருமூச்சை வெளியிட்டுவிட்டு ஏக்க பார்வையோடு தன் இல்லம் நோக்கி நகர்ந்தான்.

நாட்கள் வேகமாக செல்ல...பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு இன்னும் இரு நாட்களில் தொடங்க இருக்கிறது.

வர்ஷினியின் முழு கவனமும் படிப்பிலேயே இருந்தது. சாந்தியும் அவளை எந்த வேலையும் செய்ய விடாமல்,அதிகாலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து படிக்கும் மகளுக்கு குடிக்க டீ,காஃபி என போட்டுக் கொடுத்து அருகிலேயே அமர்ந்திருந்தார்.

காலையில் இன்றைக்கு பரீட்சைக்கான ஹால் டிக்கெட் கொடுப்பதால் போய் வாங்கிவிட்டு நடந்து வந்து கொண்டிருக்க…"அக்கா வா கோவிலுக்கு போய்ட்டு, நீ பாஸ்ஸாக வேண்டிக்கிட்டு வருவோம்" என அழைத்து சென்றாள் சின்னவள்.

இவளும் செல்ல...அமைதியாக கடவுளை வணங்கினாள். படிப்பை பற்றியோ பரீட்சையை பற்றியோ அவளது வேண்டுதல் இருக்கவில்லை.அவளுக்கும் கடவுளுக்கும் இடையே என்ன இருக்கிறது என்பது இருவருக்கும் மட்டுமேயான ரகசியம்.

இப்போதைக்கு அந்த தெய்வமும் யாரிடமும் வெளிப்படுத்த போவது இல்லை.அவளும் சொல்ல போவது இல்லை.(வேண்டுதலை வெளியே சொல்ல கூடாதாம்).

கோவிலை விட்டு வெளியே வந்த வர்ஷினி திரும்பி தங்கையை பார்க்க,அவளோ அங்கு வேலி ஓரமாக நின்றுக்கொண்டு ஏதோ இலையை பறித்துக் கொண்டிருந்தாள்.

"சின்னக்குட்டி இங்க என்ன பண்ற...வா வீட்டுக்கு போகலாம்" என தங்கையின் அருகே வந்தாள்.

"அக்கா இந்தா இதை பிடி என ஒரு இலையை கையில் கொடுத்தவள்,அக்கா இதுதான் பாஸா பெயிலா செடி. இதை இப்படி மடிச்சு அப்பறம் இப்படி தனியா பிரி….முட்டை வந்துச்சினா நீ பாஸ் இல்லனா பெயில்" என்க…

"அடியே உன்னை... என தலையை கொட்டுவது போல் வந்தவள், ஏண்டி இத்தனை நாள் கஷ்டப்பட்டு விழுந்து விழுந்து படிச்சா, நீ என்னமோ இவ்வளவு ஈஸியாக முட்டை வந்தா பாஸ் இல்லனா பெயிலுன்னு சொல்ற…..போ போ நானெல்லாம் இப்படி பண்ணமாட்டேன்.எனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கு" என அங்கிருந்து செல்ல முயன்றவளை,

"அக்கா அதெல்லாம் முடியாது இதை பண்ணி தான் ஆகனும்" என அடம்பிடிக்க…."படுத்துற சின்னக்குட்டி, நீயே பண்ணு எனக்கு தெரியாது" என ஒதுங்கிக்கொண்டாள்.

நான் அதை பார்க்க மாட்டேன் என கையால் முகத்தை மூடிக்கொண்டு இருந்தவள்,அவள் இலையை மடித்தவுடன் ஒருவித பதட்டத்தோடு ஓரக்கண்ணால் விரல்களுக்கு இடையே பார்த்தாள்.

"ஹேய்" என கத்தியவளை,அதிர்ந்து பார்க்க…"அக்கா நீ பாஸ் ஆகிட்ட முட்டை வந்துடுச்சு" என்க வர்ஷினிக்கு அப்போது தான் மனம் நிம்மதி அடைந்தது.

என்னதான் இது சும்மா விளையாட்டுக்கு செய்வது என தெரிந்திருந்தாலும்,உண்மை போலவே பதட்டம் வருகிறதே என எண்ணியவளுக்கு இப்போதே தேர்வு எழுதி ரிசல்ட் வந்தது போல் ஒரு உற்சாகம் பிறந்தது என்னவோ உண்மை.

மீண்டும் நடையை தொடங்க .."அக்கா அதோ அதுல கூட பாஸா பெயிலா பார்க்கலாம்" என எருக்கம் பூவை காட்ட...

"அடியே உன்னை கொலை பண்ண போறேன் வாடி வீட்டுக்கு. நம்ம இப்படி அங்கிட்டும் இங்கிட்டும் நின்னு வரதை மட்டும் யாராவது பாட்டி காதில் போட்டாங்கன்னு வை, அவ்ளோதான் நம்மளை ஒரு வழி ஆக்கிடும் அந்த ஓல்டு லேடி" என சொன்னபடி தங்கையை இழுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

முதல் நாள் பரிட்சைக்கு கிளம்பியவள்,தாயின் காலில் விழுந்து ஆர்வாதம் வாங்கிவிட்டு பள்ளிக்கு சென்றாள்.

தேர்வு அறைக்குள் செல்ல முதல் அழைப்பு மணி அடிக்கும் வரையிலும் அனைத்து மாணவர்களும் பரபரப்பாக படித்துக் கொண்டிருந்தனர்.

என்ன தான் விடிய விடிய படித்தாலும் கடைசி நிமிடம் படிப்பதை மாற்றிக்கொள்ள முடிவதில்லை மாணவர்களால். மனதை அமைதியாக வைத்துக்கொள்ளாமல் கடைசி நிமிடம் வரை ஒரு பரபரப்பிலேயே வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தால் அதுவரை மனதில் இருந்த விடை கூட விடைபெற்று சென்று விடும் என்று இன்னும் சில மாணவர்களுக்கு தெரிவதில்லை.

அதையே அனைவரும் செய்துக் கொண்டிருக்க…"பிரியா எதுக்காக இப்படி மாங்கு மாங்குன்னு படிக்கிற,கொஞ்ச நேரம் அமைதியா உட்காருடி. இந்த ஐந்து நிமிஷத்தில் படிக்கிறது தான் பரிட்சையில் வர போகுதா" என தன் தோழியை பார்த்து வர்ஷினி கேட்க…

அவளோ "உனக்கென்ன ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்குறவ,உனக்கெல்லாம் எங்களோட கஷ்டம் தெரியாது கொஞ்சம் அமைதியா இருடி..அய்யோ இதை படிக்கவே இல்லையே" என சொல்லியபடி மீண்டும் புத்தகத்தில் கவனம் செலுத்தினாள்.

மித்ராவோ உன் கிட்ட சொல்றதுக்கு சொல்லாமலே இருக்கலாம் என எண்ணியபடி அமைதியாக அமர்ந்திருந்தவள்,
அழைப்பு மணி அடிக்கவும் எழுந்து சென்றாள்.

இதோ கண் சிமிட்டும் நொடி போல் நாட்கள் செல்ல...இன்று கடைசி பரிட்ச்சையும் முடிய,அனைத்து மாணவர்களும் கூண்டைவிட்டு பறந்து செல்லும் பறவைகள் போல,சந்தோஷமாக ஒருவர் மேல் ஒருவர் இங்க் அடித்துக் கொண்டு மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

முகம் மலர உள்ளே வரும் மகளை பார்த்தவுடன் சாந்திக்கு புரிந்துவிட்டது,இந்த தேர்வையும் மகள் நன்றாகவே எழுதி இருக்கிறாள் என்று. உள்ளே நுழைந்தவள் தாயை அணைத்துக்கொண்டு அழவே தொடங்கிவிட்டாள்.

பத்தாவது வரை போதும் மேலும் படிக்கவேண்டாம் என மரகதம் பாட்டி சொல்ல...தாயின் சொல்லை கேட்டு வர்ஷினியின் தந்தையும் அவளை படிக்க வேண்டாம் என சொல்லிவிட...இரண்டு நாட்கள் உண்ணாமல் மயக்கம் போட்டு விழும் அளவுக்கு சென்றுவிட்டாள். அவளின் நிலையை பார்த்து சாந்தி தான் தன் கணவரிடம் கெஞ்சினார்.

"நம்ம என்ன வெளியூருக்கு அனுப்பியா படிக்க வைக்க போறோம். அது தான் நம்ம ஊர் பள்ளிக்கூடத்திலேயே பன்னிரண்டாவது வரைக்கும் இருக்கே…இன்னும் இரண்டு வருஷம் மட்டும் படிக்கட்டுமே" என கெஞ்சிக் கொண்டு நிற்க...அவரும் ஒரு நிமிடம் யோசித்தவர் சரி என தலையாட்டினார்.

அப்படி போராடி கிடைத்த படிப்பு என்பதாலோ என்னவோ அவளும் நன்றாகவே படித்தாள். இதோ இப்போது அதனை வெற்றிகரமாக முடித்தும் விட்டாள். இனி அடுத்த கட்டத்திற்கு போராட வேண்டும். பள்ளிக்கே இத்தனை போராட்டங்கள் எனும் போது கல்லூரிக்கு என்னென்ன காத்திருக்கோ என்ற பயம் இன்னும் அவளின் அழுகையை அதிகரித்தது.

தன்னை அணைத்துக்கொண்டு அழும் மகளை,முதுகை நீவியபடி "எதுக்குடா அழற.அதுதான் நல்லபடியா படிச்சி முடிச்சிட்டியே" என மகளின் கண்ணீரை துடைத்து நெற்றியில் முத்தமிட்டார். அவளும் சற்று நேரம் தாயின் அரவணைப்பில் இருந்தவள்,பின்னர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தங்கையை காண சென்றாள்.

வீட்டின் பின்கட்டில் பிறந்து ஒரு வாரமே ஆன கன்று குட்டியுடன் விளையாடி கொண்டிருந்தாள் தர்ஷினி.

"ஹேய் அக்கா வந்துட்டியா" என கத்தியபடி ஓடி வந்தவள், வர்ஷினியை அணைத்துக்கொண்டு…"எப்படிக்கா எக்ஸாம் எழுதுன" என்க,

அவளும் "நல்லா எழுதிருக்கேன்,அவ்ளோ தான் எல்லா பரிட்சையும் முடிஞ்சிடுச்சு" என்றாள் மகிழ்ச்சியாக.

அதனை கேட்ட தர்ஷினி "அய்யய்யோ அப்போ இனிமேல் என்னை படி படின்னு சொல்லி சாகடிப்பியே" என சோகம் போல் சொல்ல... வர்ஷினியோ "அடியே உன்னை என்ன பண்றேன் பார்" என தங்கையை துறத்த தொடங்கினாள். இதை பார்த்துக் கொண்டிருந்த சாந்திக்கு கண்கள் கலங்க...மகள்கள் இருவரும் பார்க்கும் முன்பு முத்தானையால் துடைத்துக் கொண்டார்.

அதன் பின் தினமும் தர்ஷினி யை படிக்க சொல்லி டார்ச்சர் செய்து அவளை நன்றாக படிக்க வைத்து பரிட்சையும் எழுத வைத்துவிட்டாள்.

இருவருக்குமே கோடை விடுமுறை ஆனால் மற்ற பிள்ளைகள் போல் அதனை நினைத்து சந்தோஷப்பட முடியவில்லை.
வீட்டுக்குள்ளேயே அடைந்து இருப்பதால்.

கோடை விடுமுறையில் அதுவும் சித்திரை மாதம் என்றாலே கிராமங்களில் திருவிழாக்கள் களைக்கட்டும். அதுவும் மதுரையில் சொல்லவா வேண்டும்.அடுக்கடுக்காக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்,தேரோட்டம்,
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் என மதுரையே விழாக்கோலமாக காட்சியளிக்கும். தமிழகம் மட்டும் இல்லாமல் உலகமே திரும்பி பார்க்கவைக்கும் விழாவாக கொண்டாடப்படும் திருவிழா.

இதோ அதன் தொடக்கமாய் இன்று கொடியேற்றம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்கு மட்டும் தவறாமல் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார் சாந்தி. ஏனோ இதுவரை சண்முகசுந்தரம் அதற்கு தடை விதித்தது இல்லை.

ஆனால் மரகதம் தான் அதற்கும் சேர்த்து வசைப்பாட தொடங்குவார். "ஆமா இப்படி கோவில் கோவிலா சுத்தி மட்டும் என்ன நடந்துச்சு,இந்த குடும்பத்துக்கு வாரிசு இல்லாம போனது தான் மிச்சம். கடைசி வரைக்கும் அந்த சாமி கூட கண்ணை திறக்கலையே" என சாமியையும் விட்டு வைக்கவில்லை மரகதம் பாட்டி.

"ஆத்தாளுக்கும் மகளுக்கும் ஊரை சுற்ற இது ஒரு சாக்கு. வருஷ வருஷம் இதுக்கு மட்டும் முந்திக்கிட்டு ஓடவேண்டியது". என தொடங்க…

தர்ஷினிக்கோ 'அய்யோ இந்த ஓல்டு லேடி நம்மளை கோவிலுக்கு போக விடாதோ,இன்னைக்கு புது பட்டு பாவாடை வேற போட்டு இருக்கேனே' என சிறுபிள்ளை மனம் வருந்த….வர்ஷினிக்கோ இந்த கிழவி தலையில கல்லை தூக்கி போடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.

போறதே வருஷத்துக்கு ஒரு தடவை தான். அதுக்கும் இதுபோல் சொன்னால் என்னதான் ஆவது என நினைத்திருக்க...திட்டுவாங்கி கொண்டிருந்த சாந்தியோ ஒருவார்த்தை கூட மாறாமல் வருடம் வருடம் வாங்குவது தானே என்பது போல் அமைதியாக நின்றார்.

திரும்பி பேசினால் பிரச்சனை பெரிதாகும் வெளியே செல்லவும் முடியாது என்று நன்றாகவே உணர்ந்தவர், மரகதம் திட்டி முடிக்கும் வரை அமைதிக் காத்தவர்,அவர் முடித்தவுடன் மகள்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

"திமிர் பிடித்தவ,திரும்பி வீட்டுக்கு தானே வரணும் அப்போ பார்த்துக்கிறேன் உங்களை" என சொன்னபடி வீட்டிலேயே இருந்துக்கொண்டார்.

அவரால் இப்போதெல்லாம் வெகு தூரம் நடக்கமுடிவதில்லை.
முன்பெல்லாம் அவரும் உடன் செல்வார்,அதை செய்யாதே இதை செய்யாதே,அங்கிட்டு போகாதே, இங்கிட்டு போகாதே என ஏகப்பட்ட தடைகளை விதித்து ஒன்றையும் சுற்றிப்பார்க்க விடாமல் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார்.

இப்போது ஒரு ஐந்து ஆண்டுகளாக தான் அவர் இல்லாமல் நிம்மதியாக சென்று வருகின்றனர். சாந்தியும் வீட்டு செலவு போக முடிந்த அளவு பணத்தை மிச்சப்படுத்தி கொண்டு வருபவர்,மகள்கள் இருவரையும் கடைதெருவிற்கு அழைத்து சென்று ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி தருவார்.

மூவரும் பேருந்து நிலையம் வந்து பஸிற்காக காத்திருக்க. தேனூரில் இருந்து மதுரைக்கு ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் பேருந்து வசதி உள்ளதால் வெகுநேரம் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் பஸ் வந்துவிட மூவரும் ஏறிக்கொண்டனர்.

எப்போதாவது செல்லும் பேருந்து பயணம் என்பதால் ஜன்னல் சீட்டிற்காக அடம்பிடித்து அமர்ந்துகொண்டாள் தர்ஷினி. அதற்கடுத்து வர்ஷினி, ஓரத்தில் சாந்தி என அந்த மூன்று இருக்கை வரிசையில் அமர்ந்துக்கொண்டனர்.

காலை நேர வெயிலும் காற்றும் சரிசமமாக முகத்தில் மோத...அந்த மகிழ்ச்சியில் சாலையில் செல்லும் அனைத்தையும் கைகாட்டி "அக்கா அங்க பாறேன், இதை பாரேன்" என படபட பட்டாசு போல பேசிக்கொண்டே வந்தாள் தர்ஷினி. இவளும் தங்கையின் அனைத்து கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டே வந்தாள்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 6

ஒரு வழியாக கடவுளை வழிப்பட்டுவிட்டு வெளியே வர...அந்த தெரு முழுவதும் விதவிதமான கடைகள்.ஒருபக்கம் பூஜைக்கு தேவையான பொருட்கள் பூ,பழம்,மாலை என்று இருக்க...ஒருபுறம் பெண்களுக்காகவே ஏகப்பட்ட கடைகள் பேன்சி ஸ்டோரில் தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்துமே திருவிழாக்காக மதுரை மட்டும் அல்லாது வெவ்வேறு ஊர் மக்கள் தற்காலிகமாக கடைகளை திறந்திருந்தனர்.

"எதாவது வேணுமாடா" என சாந்தி கேட்க...திவ்யாவோ "அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்" என்றாள். இருவருக்கும் வாங்கி கொடுத்தவள் தனக்கு வாங்கிக் கொள்ளவில்லை.

"அம்மா உனக்கு வேணாமா" என்க..

அவரோ "இல்லடா அம்மாக்கு வேணாம்" என்றவரை பார்த்து

"உனக்கு வேண்டாம்னா உன் பங்கை எனக்கு வாங்கி கொடு" என்க..அவரும் சிரித்துக்கொண்டே வாங்கி கொடுத்தார்.

பின்னர் வேறு கடைக்கு செல்லலாம் என நினைத்திருக்க... வர்ஷினி தான் "அம்மா இன்னைக்கு வேண்டாம் அப்பறம் வாங்கிக்கலாம்.அதான் திருவிழா முடியும்வரை தினமும் வருவோமே. இன்னும் இரண்டுநாள் போச்சுன்னா இன்னும் நிறைய கடை தொடங்கிடுவாங்க" என சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

தொடர்ந்த நாட்கள் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்விஜயம், அம்மன் திருக்கல்யாணம் முடிந்து இன்று தேரோட்டம் நடைபெற இருக்கிறது.

கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம்.அரசியல் கட்சிக்கு கூடும் கூட்டங்கள் எல்லாம் இந்த கூட்டத்தில் முன் நிற்க கூட முடியாது.

அந்தக் கூட்டத்தின் நடுவில் சாந்தி தன் மகள்கள் இருவருடன் நின்று கொண்டிருந்தார். ஆமையின் வேகத்தில் தேர் அசைந்து அசைந்து வந்து கொண்டிருக்க… அதனை பக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் பக்தர் கூட்டங்கள்.

தர்ஷினிக்கு அந்த கூட்டமும் மக்களின் ஆரவாரமும் சலசலப்பும் ஒருவித மகிழ்ச்சியை கொடுக்க, சந்தோஷமாகவே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் வர்ஷினி தான் நிற்க கூட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவளால் தன் கால்களை அசைக்க கூட முடியவில்லை. அதற்குள் கூட்டத்தில் இரண்டு முறை கால்களை வேறு மிதித்து விட்டனர். அவளும் பொறுத்து பொறுத்து பார்த்தவள் ஒருகட்டத்தில் வலி அதிகரிக்க…

"அம்மா நான் கொஞ்ச நேரம் ஓரமா போய் நிற்கிறேன். என்னால முடியல என சொல்ல..

அவரோ "ஏன்டி இந்த கூட்டத்தில் நான் எப்படி உன்னை கண்டு பிடிக்கிறது. அதெல்லாம் வேணாம் இன்னும் கொஞ்ச நேரம் தான், இருந்துட்டு ஒரேடியா வீட்டுக்கு போயிடலாம்" என்றார்.

"அம்மா புரிஞ்சுக்கோயேன், ஆல்ரெடி ரெண்டு மூணு தடவை கால் வேறு மிதிப்பட்டுடுச்சு. ப்ளீஸ்ம்மா ஒரு பத்து நிமிஷம் உடனே வந்துடறேன்" என்றவள்
மெல்ல கூட்டத்தை விட்டு ஒதுங்கி, கூட்டம் குறைவாக இருக்கும் இடத்தை நோக்கி சென்றாள்.

சாதாரணமாக கோயில் திருவிழா என்றாலே ஏதாவது சண்டை வர வாய்ப்பிருப்பதால் போலீஸ் கண்டிப்பாக காவலுக்கு இருப்பார்கள். அப்படியிருக்க மதுரை சித்திரைத் திருவிழாவைப் பற்றி சொல்லவா வேண்டும். ஒட்டுமொத்த காவல் துறையும் இங்கு தான் இருந்தது.

கூட்டத்தை சுற்றியும் காவல்துறையினர் இருக்க…
மதி கதிர் இருவரும் கூட அங்கு தான் இருந்தனர். ஆனால் காக்கி சட்டை இல்லாமல் சாதாரண உடை அணிந்து பாதுகாப்பு வசதிகளை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவள் வந்த சிறிது நேரத்திலேயே அவளை பார்த்து விட்டான் மதியழகன். அதன் பின் கடமையாவது மண்ணாவது என நினைத்தவன், அதுவரை காவல்காரனாக செயல்பட்டு கொண்டு இருந்தவனின் மனம், இப்போது அவளை பார்ப்பது ஒன்றே கடமை என்பதுபோல் பார்வையை அவளை விட்டு நகராமல் சண்டித்தனம் செய்தது.

இளம் பச்சை நிறத்தில் பாவாடை சட்டையில் குங்கும நிறத்தில் தாவணியும் அணிந்திருக்க, தன் நீண்ட கூந்தலை பின்னலிட்டு அதில் மல்லிகைச் சரத்தை சூடியிருந்தாள் மித்ரா.

அவள் சொல் பேச்சை கேட்காமல் கன்னத்தில் வந்து விழும் சுருள் கேசத்தை தன் தளிர் விரல் கொண்டு காதோரம் சொருகியவாறு...தன் பாதங்களை தரையில் ஊன்றி எக்கியப்படி சாமி தரிசனத்தை பார்த்து கொண்டிருக்க...அவனோ வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இதற்கு முன்பு வரை இப்படி அவளை ரசித்ததாக அவனுக்கு நினைவில்லை. இதுவரை அவளை பார்க்கவேண்டும் என்றால் அவள் பார்வைக்கு படாமல் தூரம் நின்று பார்ப்பதோடு நிறுத்தி கொள்வான். ஆனால் இன்றோ அந்த பார்வையில் அத்தனை ரசனை இருந்தது. அவள் தன்னவள் என்ற உரிமை தெரிந்தது.

தாயிடம் சொன்னதன் பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு அந்த கூட்டத்தில் அனைவரையும் இடித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தவளால் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியவில்லை. அவளின் கரம் வலுவான ஒருவனின் கரத்தினால் சிறைப்பட்டு இருந்தது.

'யாரது என் கையைப் பிடித்தது' என கோபமாக திரும்ப... எதிரில் அழுத்தமாக அவளையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தவனை கண்டு ஒரு நொடி அதிர்ச்சி அடைந்தவள், அடுத்த நொடியே முகத்தில் கோபத்தை கொண்டு வந்தாள்.

கண்களில் அனல் தெறிக்க "என் கையை விடுங்க" என சொல்லியபடி அவனிடமிருந்து தன் கரத்தை விடுவிக்க முயல, அவளால் கரத்தை அசைக்கக்கூட முடியவில்லை. அதில் இன்னும் கோபம் வர பெற்றவள் "இப்போ ஒழுங்கா என் கையை விடப் போறீங்களா... இல்லையா" என கேட்க

"அதெல்லாம் விட முடியாதுடி. இப்போ தனியா எங்க போற நீ ,ஒழுங்கா போய் உங்க அம்மாவோடு சேர்ந்து நில்லு" என பொறுமையாகவே சொல்ல

அவளோ "அதை சொல்ல நீங்க யாரு?.. உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், நீங்க சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்றவள் பிடிவாதமாக கையை விடுவித்துக் கொண்டு நகர்ந்து செல்ல முயல…

இம்முறை அவள் தாவணியின் முந்தானை அவன் கைகளில். இன்னும் சற்று முன்னே நகர்ந்தாலும், அது அவன் கையோடு சென்று விடும் அபாயம் இருப்பதால், தன் நடையை நிறுத்திக் கொண்டாள்.

தங்களைச் சுற்றி அத்தனை கூட்டம் இருக்க, அவர்களுக்கு முன் அவன் இப்படி நடப்பது அவளுக்கு பெரும் ஆத்திரத்தை வரவைத்தது. அதுவும் இது மட்டும் தன் தந்தை காதுக்கு சென்றால் என்ன ஆவது என பயந்தவள்,அது மொத்தத்தையும் அவனிடம் காட்டினாள்.

"மரியாதையா கையை எடுங்க இல்லன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என சொல்லும் போதே…

அப்போதுதான் கதிர் தன் அருகில் இருந்த நண்பனை காணாமல் திரும்பி பார்க்க, அவனோ ஒரு பெண்ணின் தாவணியை பிடித்து இழுப்பது தெரிந்தது.

அவனுக்கே இது மிகப்பெரிய அதிர்ச்சி தான். மதியா இது என்ற சந்தேகத்துடன் அருகில் வர, "டேய் என்னடா பண்ற?.. முதல்ல கைய எடு டா.என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரிஞ்சி தான் பண்றியா?... உன் கிட்ட இருந்து சத்தியமா இப்படி ஒரு நடவடிக்கையை நான் எதிர்பார்க்கவே இல்லை" என வருத்தமாக சொல்ல.. அதையெல்லாம் கொஞ்சமும் காதில் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் மதி.

"ஓஹோ! மேடமுக்கு நான் யாருன்னு கூட தெரியாது இல்ல, சரி பரவாயில்லை அப்படியே இருக்கட்டும் ஆனால் இப்போ எங்கேயும் போகக்கூடாது அவ்வளவுதான்" என்றவன்,தன் பிடியை மட்டும் தளர்த்தவே இல்லை.

அவனின் இறுக்கமான பிடி வேறு அவளுக்கு வலியை கொடுக்க,இருந்தாலும் முகத்தில் அதனை காட்டாமல் முறைப்பாகவே இருந்தாள் மித்ரவர்ஷினி.

"அங்க பாரு எல்லாம் பொறுக்கி பசங்க, கூட்டத்தில் எப்போது யாரை இடிக்கலாம் என காத்துட்டு இருக்காங்க. சாமி கும்பிட வராங்களோ இல்லையோ இதுக்காகவே வராங்க. இப்போ நீ வெளிய போகணும்னா அவங்களை கடந்து தான் போகணும்.
அதான் சொல்றேன்,ஒழுங்கா சொல் பேச்சை கேட்டு நடந்துக்க அதை விட்டுட்டு வீம்புக்கு நீ ஏதாவது ட்ரை பண்ண... அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" எனக் குரலை உயர்த்த…

'இவரு சத்தம் போட்டா... நாங்க பயந்துடுவோமா' என்பது போல் தெனாவட்டாக பார்த்தவள், "அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை. அது ஏன் பிரச்சனை, உங்க வேலையை நீங்க பாருங்க. அத விட்டுட்டு இப்படியே பண்ணிங்க, சுத்தி பாருங்க எத்தனை போலீஸ் இருக்காங்கன்னு. அவங்க கிட்ட ஒரு வார்த்தை சொன்னால் போதும் அப்புறம் கம்பி எண்ண வேண்டியது தான்" என உதட்டை சுழித்தாள்.

அதுவரை இவர்களுக்குள் நடந்துகொண்டிருந்த சண்டை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கதிருக்கு...அவள் "போலீஸ் கிட்ட சொல்லுவேன்" என்று சொன்னவுடன் தன்னையும் அறியாமல் சிரித்து விட்டான்.

அவனை திரும்பி பார்த்து முறைக்க...அவனோ சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்க முயன்றான்.

அதில் கோபம் அதிகரிக்க...அங்கு தள்ளி நின்ற இரு போலீஸாரை பார்த்து "அங்கிள்... அங்கிள்...போலீஸ் அங்கிள், உங்களை தான் இங்க கொஞ்சம் வாங்களேன்" என்க…

அவர்களும் ஏதோ பிரச்சனையாக இருக்குமோ என எண்ணியபடி அவள் அருகில் வந்தனர்.

அவள் போலீஸ்காரர்களை 'அங்கிள் அங்கிள்' என சொல்வதை கேட்ட இருவரும் இன்னும் சத்தமாக சிரிக்க... அதற்குள் அந்த இரு கான்ஸ்டபிள்களும் அவளை நெருங்கி இருந்தனர்.

"என்னம்மா எதுக்கு எங்களை கூப்பிட்ட, எதாவது பிரச்சனையா?.. என இருவரும் கேட்க…

அவளோ "ஆமாம் அங்கிள் என சொன்னபடி திரும்பி மதியை அழுத்தமாக பார்த்தவள், இவங்க ரெண்டு பேரும்தான் என்கிட்ட வம்பு பண்றாங்க" என இருவரையும் கண்காட்ட…

அவள் கை காட்டிய திசையில் பார்த்த போலீசார்கள் அங்கு மதி, கதிர் என இருவரையும் பார்த்துவிட்டு சட்டென்று அட்டென்ஷனில் சல்யூட் அடிக்க...அவளோ அவர்களை புரியாமல் பார்த்தவாறே "அங்கிள் என்ன பண்ணுறீங்க..?இவங்கள பார்த்து எதுக்கு சல்யூட் அடிக்கிறிங்க"..? என கேட்க,

"ஏன்மா உனக்கு நாங்க என்ன பாவம் பண்ணோம், இப்படி எங்களை மாற்றிவிட பாக்குறியே என புலம்பியவாறு... மதியை காட்டி இவர்தான் எங்க டி.எஸ்.பி சார், இவர் எங்க இன்ஸ்பெக்டர் என கதிரையும் காட்டி சொல்ல"... அவள் சட்டென்று நிமிர்ந்து மதியை தான் அழுத்தமாக பார்த்தாள்.

சற்று நேரம் அப்படியே நின்றவள், இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என நினைத்தபடி... "நீங்க போலீஸ்ன்னு சொன்னதும் பயந்து நடுங்கனுமா...போலீஸா இருந்தா என்ன வேணா பண்ணலாம்னு சட்டம் எதுவும் இருக்கா?... நீங்க யாரா இருந்தாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை" என வீராப்பாக பேசிக்கொண்டு இருக்க...இன்னும் அவளின் தாவணி அவன் கையில் தான் இருந்தது.

மீண்டும் அவனை பார்வையால் எரிக்க தொடங்கியவள் "இப்போ விட முடியுமா முடியாதா" என்க...அதற்குள் 'அக்கா' என்ற குரல் தூரத்தில் இருந்து கேட்டுவிட்டது.

"கடவுளே! இனி நான் எங்கேயும் போகலை போதுமா,இப்போவாவது விடுங்க" என்க...அதன் பின்னரே அடக்கப்பட்ட சிரிப்புடன் தாவணியை விடுவித்தான்.

அவனிடம் சண்டை போட்டே நேரம் கடந்திருக்க... அவனை மனதுக்குள் திட்டிக்கொண்டே தாயோடு சென்று நின்று கொண்டாள்.

அதன் பின்பும் அவனின் பார்வை அவளையே சுற்றிக் கொண்டிருக்க.. அவளும் அதை உணர்ந்தே இருந்தாள்.

"டேய்! இங்க என்னடா நடக்குது. உன் பார்வையே சரியில்லையே... எனக்கு என்னவோ நீ அந்த பொண்ணை" என இழுத்த நண்பனை பார்த்து

"ஏன் நிறுத்திட்ட முழுசா சொல்லுடா"...என அவனை திரும்பி கூட பார்க்காமல் பார்வையை தன்னவள் மேலேயே பதித்திருக்க…

கதிரோ "டேய் அந்த பொண்ணு இப்போதான்டா ஸ்கூல் படிக்குது. நீ என்னனா லவ் லுக் விட்டுட்டு இருக்க.அப்பறம் நானே உன்னை குழந்தை திருமண சட்டத்தில் உள்ள தள்ளிடுவேன் பார்த்துக்கோ" என ஆதங்கமாக சொன்னவனை பார்த்து,

"அட ! நீ வேற ஏண்டா காமெடி பண்ணிக்கிட்டு, நான் என்ன ஆசைப்பட்டாலும் அவளும் நானும் சேர்வது என்பது முடியாத காரியம். அதுவும் அவளுக்கு என்னை பார்த்தாலே பிடிக்காது. இதில் காதல், கல்யாணம் எல்லாம் வெறும் கனவில் மட்டும் தான்" என விரக்தியாக சிரித்தான்.

"என்னடா சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியலையே" என திருத்திருத்தவனை பார்த்து "அதெல்லாம் உனக்கு புரியாமல் இருப்பதே நல்லது" என்றவன் இடத்தை விட்டு அகன்றான்.

நாட்கள் செல்ல இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவர இருப்பதால், பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் அவர்கள் குடும்பத்திற்கே அன்றைய விடியல் பதட்டத்துடனே இருந்தது.

"டேய் கதிர் இன்னைக்கு ரிசல்ட், அதனால் நம்ம ஆளுங்க கிட்ட கொஞ்சம் உஷாரா இருக்க சொல்லு. போன வருஷம் மாதிரி இந்த வருஷம் எந்த பசங்களும் தற்கொலை என்ற முடிவை எடுக்க கூடாது" என பேசிக்கொண்டு இருந்தனர்.

ஏனென்றால் சென்ற ஆண்டு தான் அந்த ஊர் மாணவன் ஒருவன் பரிச்சையில் பாஸ் ஆகாததால் தற்கொலை செய்து கொண்டான்.

அப்படியெல்லாம் இந்த வருஷம் நடக்க வாய்ப்பே இல்லடா..எல்லாம் பக்காவா இருக்கு என்ற இருவரும் பள்ளிக்கு அருகில் உள்ள டீ கடையில் அமர்ந்துக்கொண்டனர்.

இன்னும் தேர்வு முடிவுகள் வெளிவர அரைமணிநேரம் இருக்க...அதற்குள் நிறைய மாணவர்கள் வந்து காத்திருந்தனர்.என்னதான் இன்டர்நெட்டில் ரிசல்ட் வந்தாலும் பள்ளியிலேயே நோட்டீஸ் போர்டில் ஒட்டுவதால் பெரும்பாலும் மாணவர்கள் அதிலேயேயே பார்த்துக்கொள்வார்கள்.

அப்போது தான் மித்ராவும் தன் தங்கையோடு வந்தவள், அங்கு அமர்ந்திருந்த மதியை பார்த்து உதட்டை சுழித்துவிட்டு செல்ல… அவனோ 'ஒரு நாள் இப்படி சுழிக்கிற உதட்டை என்ன பண்றேன் பாருடி ராட்சசி' என நினைத்தபடி இருந்தான்.

சிறிது நேரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வந்து நோட்டீஸ் ஒட்ட...ஒரு கூட்டமே சென்று தங்கள் எண் இருக்கிறதா என பார்த்துக்கொண்டிருந்தனர்.

"டேய் நீ போய் பசங்க ரிசல்ட் லிஸ்ட் ஸ்கூலில் இருந்து வாங்கிட்டு வாடா" என கதிரை அனுப்ப...அவனும் சென்று வாங்கிவந்தான்.

"மதி... மொத்தம் மூனு பேர் பெயில் டா..அவங்களை மட்டும் கொஞ்சம் கிளோஸா வாட்ச் பண்ணா போதும் டா" என்க…

"அவங்க லிஸ்ட் யாருக்குடா வேணும்.எனக்கு தெரிஞ்சு பெயில் ஆகுற பசங்க கூட தெளிவா இருக்காங்க டா. அவங்க அதை ஈஸியாக கடந்து அடுத்த கட்டத்துக்கு வந்துடுவாங்க,அந்த அளவுக்கு தைரியமான பசங்கடா.

ஆனா நிறைய மார்க் எடுக்குற பசங்களால் தான் தோல்வியை ஏத்துக்க முடியாது. எதிர்ப்பார்த்ததை விட கம்மியா மார்க் வாங்குற பசங்க, நினைச்ச படிப்பை படிக்க முடியாமல் போற பிள்ளைங்க தான் அதிகமாக தற்கொலைக்கு முயல்வது" என்க...கதிரும் அந்த கூற்றை ஏற்றுக்கொண்டான்.

"டேய் அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் டா….யாரு ஸ்கூல் ஃபர்ஸ்ட் தெரியுமா..?" என்க,

"யாரு அந்த வாயாடி தானே.அதெல்லாம் முன்னமே தெரியும் டா அவதான் எடுப்பாண்ணு" என சாதாரணமாக சொன்னான் மதி.

"என்னடா இவளோ அசால்டா சொல்ற" என்ற கதிரை பார்த்து,

"இதுல ஆச்சிரியப்பட என்னடா இருக்கு. அங்க பாரு அவளை... நம்ம மட்டும் இந்நேரம் ஃபர்ஸ்ட் வந்திருந்தால் நடக்கிற சீனே வேற….சும்மா தெருவே அல்லோல பட்டு
இருக்கும்...ஆனா அவ என்னமோ அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் போறதை".

"முகத்தில் ஏதாவது மாற்றம் இருக்கா பாரு.ஒரு சின்ன சிரிப்பு கூட அதில் இல்லை. அப்பறம் நான் மட்டும் ஆச்சரியப்பட்டோ இல்ல சந்தோஷப்பட்டோ என்ன ஆக போகுது" என சொன்னவன் போகும் அவளையே பார்த்திருந்தான்.

அவள் முகத்தில் உள்ள இறுக்கம் அவனுக்கு அப்படி ஒரு வலியை கொடுத்தது.இதுக்கு கூட சந்தோஷப்பட கூடிய நிலையில் அவள் இல்லை என்பது அவள் சொல்லாமலேயே அவனுக்கு தெரிந்துதான் இருந்தது.ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லையே...இப்படி தள்ளி நின்று தவிக்கும் தவிப்புக்கு என்றுதான் விடை கிடைக்குமோ?.

"அவளோட சந்தோஷமான சிரிப்பை பார்த்தே பல வருஷம் ஆகுது டா. இன்னும் சொல்ல போனால் அவ இந்த நிலைமையில் இருக்க நானும் ஒரு காரணம் தான்" என இத்தனை நாள் மனதுக்குள் அழுத்திக் கொண்டிருந்த எண்ணங்கள் வார்த்தைகளாக வடிவம் எடுக்க…

அருகில் இருந்த கதிருக்கு தலையும் புரியலை வாலும் புரியலை.'இவன் எப்படி அதுக்கு காரணமாக முடியும்' என்ற சிந்தனையோடு அவன் வார்த்தைகளை கவனிக்க தொடங்கினான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 7

கதிர் நண்பனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க… அவனோ எதுவும் சொல்லாமல் அமைதியாக ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

"டேய் என்னமோ சொல்ல வந்த,இப்போ அமைதியாகிட்ட...நீ எப்படி எல்லாத்துக்கும் காரணம் ஆக முடியும்" என கேட்க,

அவனோ "நான் என்ன கதையாய் சொல்றேன்.எழுந்து வேலையை பாருடா...வேலையை தவிர எல்லாத்துக்கும் முன்னாடி வர வேண்டியது" என்றவன் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டான்.

'அடப்பாவி நான் பாட்டுக்கு சேவனேன்னு இருந்தேன்.எதையோ பெரிய பிளாஷ்பேக் சொல்ற மாதிரி பில்டப் கொடுத்து ஆர்வத்தை தூண்டிவிட்டுட்டு இப்படி சொல்லிட்டு போறானே ' என தலையிலேயே அடித்துக்கொண்டு இடத்தைவிட்டு சென்றான்.

அங்கு அக்கா தங்கை இருவரும் வீட்டுக்குள் நுழைய...அன்று போல் இன்றும் தாயை அணைத்துக்கொண்டாள் ஆனால் அழவில்லை.

சாந்திக்கு அப்படி ஒரு சந்தோஷம்...மகளின் மதிப்பெண் அதுவும் ஸ்கூல் ஃபர்ஸ்ட் என்றால் எந்த தாய் தான் மகிழ்ச்சி அடையாமல் இருப்பார்.

தனக்கு கிடைக்காத...கிடைக்காத என்பதை விட வராத படிப்பை என்பது தான் சரியாக இருக்கும்.அப்படியிருக்க மகளின் இந்த திறமை அவருக்கு அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது.

பின்னர் மகளை பிரிந்து சமையலறை நோக்கி சென்றவர்,ஒரு கிண்ணத்தில் கேசரியோடு வந்து நின்றார்.தன் கையாலேயே மகளுக்கு ஊட்டிவிட…

"அம்மா அப்போ எனக்கு" என சின்னக்குட்டி கேட்க,அவளுக்கும் ஊட்டி விட்டவர்… "எப்படியும் உனக்கு பாஸ் போட்டு அடுத்த கிளாஸ்க்கு போட்டுடுவாங்கன்னு தைரியம்" என சிரித்தபடி சொல்லிக்கொண்டே ஊட்ட தொடங்கினார்.

இரவு டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்த சண்முகசுந்தரத்திற்கு பரிமாறி கொண்டே பேச்சை தொடங்கினார் சாந்தி.

"என்னங்க….அது...இன்னைக்கு என தயங்கியபடி,இன்னைக்கு நம்ம வர்ஷினிக்கு ரிசல்ட் வந்துடுச்சு.அவ தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்" என சொல்ல,

கணவனின் முகத்தில் தோன்ற போகும் சந்தோஷத்தையும் பெருமையையும் காண அவர் முகத்தையே பார்த்திருந்த சாந்திக்கு ஏமாற்றமே கிடைத்தது.

அவர் சொன்னதற்கு ஒரு சின்ன தலையசைப்பு கூட அவரிடம் இருந்து வெளிவராதது, சாந்திக்கு அத்தனை வருத்தத்தை கொடுத்தது.

தன் தாய் தந்தையிடம் சொல்லும் போது வர்ஷினி கூட தன் அறை வாசலில் நின்று... ஒரு ஆர்வத்தோடு தந்தையின் முகத்தையே பார்த்தாள்,ஆனால் தந்தையின் அந்த உணர்ச்சியில்லாத முகத்தை பார்த்து விரக்தியாக சிரித்துக் கொண்டாள்.

இதே தான் பத்தாம் வகுப்பிலும் நடந்தது… ஒருமுறை பட்டும் திருந்தாமல் மீண்டும் அவரிடம் இதனை எதிர்பார்ப்பது தன்னுடைய தப்புதான் என உணர்ந்தவள்,அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

இதே வேறு ஒரு வீட்டில் நடந்து இருந்தால் மகளை தூக்கி வைத்து கொண்டாடி.... காதில் இருந்து இரத்தம் வரும்வரை அனைவரிடமும் மகளின் பெருமையை பேசியே ஓய்ந்து போயிருப்பார்கள். ஆனால் இங்கு எல்லாமே அதற்கு நேரெதிராக நடக்கிறது.

"ஆமா...பெரிய உலக சாதனையை படைச்சிட்டா உன் பொண்ணு, அதுக்கு நாங்க தலையில தூக்கி வைச்சு கொண்டாடனுமா…. போற வீட்டில் இதுவா சோறு போடப் போகுது,ஒழுங்கா வீட்டுவேலை சமையல் எல்லாம் சொல்லிக் கொடுக்குற வழியை பாரு" என இத்தனை நாள் அவள் கஷ்டபட்டு வாங்கிய மதிப்பெண் ஒன்றுக்கும் உதவாது என்பதை சொல்லிவிட்டு சாப்பிட அமர்ந்தார் மரகதம்.

மனம் கணக்க அவருக்கும் பரிமாறிவிட்டு அனைத்தையும் ஒதுங்க வைத்தார்.

மறுநாளில் இருந்தே மரகதம் அவளை அதை செய் இதை செய் என விரட்ட தொடங்கிவிட்டார். "அதுயென்ன பொம்பளை பிள்ளை சூரியன் கிழக்கே வர வரைக்கும் தூக்கம் வேண்டி கிடக்கு. வெள்ளனே எழுந்து வாசலை கூட்டி கோலம் போடுவோம்,அடுத்த வேலையை பார்ப்போம்னு இல்ல...என்னதான் உன் ஆத்தா சொல்லி கொடுத்தாளோ" என புலம்பியபடி வீட்டில் இருக்கும் நேரம் மொத்தமும் ஏதாவது சொல்லி கொண்டே இருந்தார்.

இரவு…" அம்மா நான் சொன்னேனே, எங்க சார் மெடிகல் என்ரன்ஸ் எக்சாம்க்கு முதலேயே எனக்காக அப்ளே பண்ணிருக்காருன்னு. இன்னும் இரண்டு நாள்ல மதுரையில எக்ஸாம்" என சொல்ல….

"இதெல்லாம் நடக்கும்னு நினைக்கிறியா மா...எனக்கென்னவோ காலேஜ்க்கு எல்லாம் போக சம்மதிக்க மட்டாங்கன்னு தோணுது. அதனால நீயும் தேவையில்லாம மனதுல ஆசையை வளர்த்துக்காத டா" என வருத்தமாக சொல்ல…

"இல்லம்மா அவங்க ஒத்துக்குறாங்களோ இல்லையோ நான் கண்டிப்பா படிப்பேன் அதை யாராலும் தடுக்க முடியாது. என்னை அடிச்சா கூட வாங்க தயாரா தான் இருக்கேன்" என தைரியமாக சொல்லும் மகளை நினைத்து சாந்திக்கு கவலை அதிகரித்தது.

"பிளீஸ்மா இந்த எக்ஸாம் மட்டும் எழுதி...கௌன்சிலிங்கில் ஃப்ரீ சீட் கிடைச்சிட்டா, அப்பறம் அப்பா காலில் விழுந்து கெஞ்சியாவது படிக்க ஒத்துக்க வச்சிடுவேன்" என சொல்ல...

அவரும் முயன்று தன் கவலையை மறைத்தவர் "சரிடா எப்படியாவது உன்னை அழைச்சிட்டு போறேன்" என்றார்.

அன்று காலையிலேயே சாந்தியும் வர்ஷினி மதுரைக்கு கிளம்பிக் கொண்டிருக்க...அம்மா நானும் வரனே பிளீஸ் என தர்ஷினி கெஞ்ச,அவளும் கிளம்பினாள்.

காலையிலேயே கணவனிடம் சொல்லிவிட்டார் "இன்னைக்கு கோவிலுக்கு போகலாம்னு இருக்கேன் ஒரு சின்ன வேண்டுதல்" என்க...அவர் எந்த பதிலும் சொல்லவில்லை,அதிலேயே அனுமதி கிடைத்துவிட்டது என புரிந்துகொண்டார்.

எப்போதும் போல் மரகதத்தின் வசவுகளை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்.

அனைத்து பரிசோதனைகளுக்கு பிறகு பரிட்ச்சை அறைக்கு அனுமதிக்க...அவளும் நன்றாகவே எழுதி முடித்தவள்,தாயுடன் வீடு வந்து சேர்ந்தாள்.

அடுத்த ஒருவாரம் எந்த ஆரவாரமும் இல்லாமல் செல்ல...அன்றைக்கு என்றும் இல்லாமல் மதியத்திற்கே வீட்டுக்கு வந்த சண்முகசுந்தரம் அறைக்கு சென்று எதையோ தேடி எடுத்துக்கொண்டு மீண்டும் கிளம்பிவிட்டார்.

எதற்கு வந்தார்,என்ன தேடினார் என எதுவும் புரியாமல் நின்ற சாந்தி "சாப்பிட்டு போங்க" என்ற வார்த்தை காற்றில் அவரை அடைந்தாலும் நடையை நிறுத்தாமல் சென்றுவிட்டார்.

மரகதத்திடம் மட்டும் சிறிதுநேரம் பேசிவிட்டு சென்றிருக்க...அவர் பேசிவிட்டு சென்றவுடன் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தார் மரகதம். ஏதோ தன்னுள்ளேயே பேசியபடி சுற்றிக்கொண்டு இருந்தவர்,வீட்டினுள் நுழைந்தார்.

சாந்தியை பார்த்து " கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வா" என பணிய…. அவர் கொண்டு வரவே அதனை வாங்கி குடித்தவர்,

"அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் என்றவர், நீ முதல்ல சீக்கிரம் கிளம்பி சந்தைக்கு போய்ட்டு வா...நாளைக்கு நிறைய விருந்தாளிகள் வீட்டுக்கு வராங்க.அப்படியே நாளைக்கு ஒரு நாளைக்கு மட்டும் வீட்டு வேலைக்கும் சமையலுக்கும் அந்த பால்காரன் மாரிமுத்தோட பொண்டாட்டியை கூப்டுக்கோ" என்க..

"என்ன விசேஷம் அத்த...யாரு வீட்டுக்கு வரா" என சாந்தி கேட்க…

"ஏன் மகாராணி யாரு வராங்கன்னு தெரிஞ்சா தான் சொன்ன வேலையை செய்வியோ என கத்தியவர்….என் பொண்ணு தான் வரா,அதுவும் சும்மா இல்ல, அவங்க குடும்பத்தோட நம்ம வர்ஷினிக்கும் சந்திரனுக்கும் பேசி பரிசம் போட வராங்கா" என்க…

கேட்டுக்கொண்டிருந்த சாந்தி அதிர்ச்சியில் தன் கையில் உள்ள செம்பை கீழே போட்டுவிட்டார்.

"ஏண்டி உனக்கு ஒரு வேலையை உருப்படியா பண்ண தெரியாதா...போ போய் இந்த இடத்தை சுத்தம் பண்ணிட்டு நாளைக்கு விசேஷத்துக்கு தேவையான பொருளை வாங்க கிளம்பு" என்றவர் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

சாந்திக்கு என்ன செய்வது என சுத்தமாக புரியவில்லை. தன்னிடம் ஒரு வார்த்தை கூட கணவன் சொல்லவில்லையே என வருந்தியவர் இப்போது மகளை நினைத்து வருந்த தொடங்கினார்.

இந்த விஷயம் மட்டும் அவளுக்கு தெரிந்தால் என்ன பண்ணுவாள் என எண்ணியபடி மாமியார் சொன்ன அனைத்து வேலையும் செய்ய தொடங்கினார்.

இது அனைத்தும் நடந்த போது அக்கா தங்கை இருவருமே தோட்டத்தில் இருக்க...அவர்கள் வீட்டுக்குள் வரும் போதே சாந்தியின் பரபரப்பான ஓட்டம் எதையோ உணர்த்த…

"என்னமா எதுக்கு இவளோ வேகம்" என தடுத்த மகளை பார்க்காமல் "நான் சந்தைக்கு போய்ட்டு வந்து உன்கிட்ட எல்லாத்தையும் சொல்றேன்" என்றுவிட்டு வெளியே வர…

பேருந்தில் செல்லலாம் என நினைத்து வந்தவர் முன் காரை நிறுத்திய சண்முக சுந்தரம் "சீக்கிரம் வண்டில ஏறு நிறைய வேலை இருக்கு நேரமில்லை" என யாரிடமோ சொல்வது போல் சொல்ல...அவரும் காரினும் ஏறினார்.

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இருவரும் வீடு வரவே ஏழு மணியை கடந்திருந்தது.

வந்தவுடன் உடல் களைப்பை மறந்து, சட்டென்று சமையல் அறையில் நுழைய,சிறிது நேரத்திலேயே இரவு உணவையும் தயார் செய்து முடித்துவிட்டார்.

இன்னும் தந்தை சாப்பிட வராமல் இருக்க...மெல்ல தன் அன்னையின் அருகே வந்த வர்ஷினி "அம்மா என்னம்மா நடக்குது வீட்ல யாரு வர போறாங்க" என கேட்டாள்.

மகள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தடுமாறியவர் பின்னர் எப்படியும் அவளுக்கு தெரியதான் போகிறது என எண்ணியபடி…"அது நாளைக்கு உங்க அத்தை வீட்டில் இருந்து வரங்கா" என்க

" ஓ...அவங்களா, அதுக்கா இத்தனை பில்டப்" என சொல்லிவிட்டு செல்ல முயன்ற மகளின் கரத்தை பிடித்த சாந்தி…

அவங்க உனக்கும் சந்திரனுக்கும் கல்யாணம் பேசி முடிக்க வருவதாக சொல்ல….அதை கேட்டு அப்படியே அதிர்ச்சி உறைந்து நின்றுவிட்டாள் வர்ஷினி.

"அம்மா என்னம்மா சொல்ற,நீ எப்படிம்மா அதுக்கு ஒத்துக்கிட்ட" என கேட்க..

"என்கிட்ட யாருமே சொல்லலையே டா,எனக்கே இன்னைக்கு மதியம் தான் தெரியும்.இதைப்பத்தி உங்க அப்பாகிட்ட பேசலாம்னா அதுக்கு நேரமே கிடைக்கலை. எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு கடைசியாக நமக்கு சொல்லும் போது நாமளும் என்னதான் பண்றது" என தன் மன வருத்தத்தை மகளிடம் பகிர்ந்துக்கொள்ள…

தாயின் நிலையை அறிந்தவள்,இந்த விஷயத்தில் அம்மாவின் பேச்சு கூட எடுபடாது என உணர்ந்து….'நமக்கு ஒன்னு வேணும்னா அதுக்கு நாம தான் போராடனும். அதனால இதற்கு நான் தான் பேசவேண்டும்' என்ற முடிவுடன் தந்தையின் வருகைக்காக காத்திருந்தாள்.

சற்று நேரத்தில் அறையைவிட்டு வெளியே வந்து சாப்பிட அமர்ந்தவர்,சாப்பாட்டில் கைவைக்கும் நேரம் "எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லை" என பட்டென்று சொல்லியே விட்டாள்.

சாப்பிட அமர்ந்திருந்தவர் சாப்பிடாமல் நிமிர்ந்து மகளை பார்க்க...அவளோ கொஞ்சமும் பயம் என்பதின்றி அவரையே நேருக்கு நேராக பார்த்துக்கொண்டு இருந்தாள்.

"இப்போ என்ன சொன்ன திரும்பி சொல்லு" என சொல்லியபடி எழுந்து அவள் அருகே வர, அவளோ உள்ளே எழுந்த நடுக்கத்தை மறைத்துக்கொண்டு…

"எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை.யாரை கேட்டு நீங்களே முடிவெடுத்தீங்க" என எதிர்த்து கேள்வி கேட்க…

"யாரை கேட்கணும், நான் உன் அப்பா உனக்கு எப்போ என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.ஒழுங்கா நாளைக்கு நடக்கப்போற நிச்சயதார்த்ததிற்கு தயார் ஆகுற வழியை பார்" என திரும்ப…

"எனக்கு இந்த கல்யாணம் வேணாம்... வேணாம்... வேணாம், என கோபத்தில் கத்திய வர்ஷினி, இப்போது கண்ணீரோடு எனக்கு படிக்கணும், டாக்டர் ஆகனும் பா" என தன் ஆசையை சொல்ல…

சண்முகசுந்தரம் வாய்திறக்கும் முன் முந்திக்கொண்ட மரகதம்
"ஆமா இப்போ நீ படிச்சி சம்பாதிச்சு தான் இந்த குடும்பம் விடிய போகுது பாரு. இதுவரைக்கும் படிக்க வெச்சதுக்கே மரியாதை இல்லாம இவ்வளவு பேசுறவ...இன்னும் படிச்சா என்னவெல்லாம் பண்ணுவியோ" மகனுக்கு ஏத்திவிட,

"இங்க பாரு பாட்டி...இப்போ மட்டும் நீ வாயை மூடல அப்பறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது. எல்லாத்துக்கும் நீ தான் காரணம், சாதாரண பிரச்சனையை அப்பாகிட்ட ஏத்திவிட்டு ஏத்திவிட்டு பெரிய சண்டையா மாத்துறதையே வேலையாய் வெச்சிருக்க" என கத்த…

அதுவரை அவளை பேசவிட்டு அமைதியாக நின்றிருந்த சண்முகசுந்தரம் விட்டார் ஒரு அறை,அப்படியே சுருண்டு விழுந்துவிட்டடாள் வர்ஷினி.

அவளோ கீழே விழுந்த வலியும் தந்தை அடித்தது என எதையும் கண்டுகொள்ளாமல் மீண்டும் அவரை பார்த்து "நீங்க என்ன எவ்ளோ அடிச்சாலும் இந்த கல்யாணம் நடக்காது. அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்" என பிடிவாதம் பிடிப்பவளை பார்த்து…

"அதே தான் நானும் சொல்றேன். இந்த கல்யாணம் நடக்கும் நான் நடத்திக் காட்டுவேன்" என உறுதியாக சொல்ல...அதில் கொஞ்சம் நடுக்கம் காணும் மனதை தட்டி அடக்கியவள்,

"அது நடக்காது பா ...நான் என்ட்ரன்ஸ் எக்ஸாம் கூட எழுதி முடிச்சிட்டேன்.கண்டிப்பா அதுலயும் பாஸ் ஆகிடுவேன்,நீங்க எனக்கு படிக்க ஒத்த ருபாய் கூட செலவு பண்ண வேண்டாம்.எனக்கு ஃப்ரீ சீட்டே கிடைக்கும்,என்ன படிக்க மட்டும் அனுமதிங்கப்பா பிளீஸ்" என கெஞ்ச,

அவரோ தனக்கு தெரியாமல் இவ்வளவு விஷயம் நடந்து இருக்கா என கோபம் அதிகரிக்க திரும்பி மனைவியை பார்க்க….அவரோ கணவனின் முகம் பார்க்க முடியாமல் தலைகுனிந்து நின்றார்.

அதிலேயே மனைவிக்கு தெரிந்து தான் அனைத்தும் நடந்திருக்கு என நினைத்தவர்,மனம் உலையாய் கொதித்தது.

'அனைத்தையும் செய்துவிட்டு கடைசியாக படிக்க மட்டும் அனுமதி கேட்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்...வேற வழியில்லாம கடைசி நேரத்தில் நான் ஒத்து கொள்வேன் என்ற தைரியம் தானே' என நினைத்தவர் மனதுக்குள் என்ன ஆனாலும் இந்த கல்யாணத்தை நடத்தி காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் பிறந்தது.

அதன்பின் அனைவரும் தங்கள் அறைக்குள் நுழைந்து விட...அன்று போல் இன்றும் தர்ஷினி அழ தொடங்கிவிட்டாள்.

இங்கு இவர்கள் இப்படி இருக்க...அங்கு தன் காவல் நிலையத்தில் ஒருவனை போட்டு புரட்டி எடுத்துக்கொண்டிருந்தான் மதியழகன்.

"ஏண்டா எவ்வளவு திமிரு இருந்தா ஸ்கூல் பொண்ணு மேல கை வைப்ப" என சொல்லிக்கொண்டே அடிக்க… ஒரு கேஸ் விஷயமாக வெளியே அலைந்துவிட்டு உள்ளே நுழைந்த கதிரை பார்த்ததும் அடிப்பவனை விட்டுவிட்டு நண்பன் எதிரே அமர்ந்தான்.

"என்னடா இன்னும் வீட்டுக்கு போகாமல் அவனை போட்டு அடிக்கிற...என்ன கேஸ்" என கேட்க

"அந்த பொறுக்கி நாய் ஸ்கூல் போற பொண்ணோட கையை பிடித்து இழுத்து வம்பு பண்ணிருக்கான்" என்க…

இதை கேட்ட கதிர் தன் நண்பனை பார்த்து…."டேய் அவனாவது ஸ்கூல் படிக்கிற பொண்ணோட கையை தான் பிடிச்சான், ஆனா நீ தாவணியையே பிடிச்சி இழுத்துருக்க,அப்போ உன்னை நாங்க என்ன பண்றது" என நக்கலாக கேட்க…

மதியோ அவனை முறைத்துக்கொண்டே "ஏண்டா என்னை பார்த்தா பொறுக்கி மாதிரி இருக்கா. அவளை தவிர வேற யாருகிட்டயாவது நான் அப்படி நடந்து நீ பார்த்துருக்கியா" என நண்பனை சாட...அவனாலும் அந்த கூற்றை ஏற்றுக்கொள்ளவே முடிந்தது.

'நண்பனை பற்றி தான் அவனுக்கு தெரியுமே...மிஸ்டர் பர்ஃபெக்ட் என சொல்லும் அளவுக்கு எல்லாவற்றிலும் சரியாக இருப்பவன்...அந்த பெண்ணிடம் மட்டுமே அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக்கொண்டான். அதுவும் அன்று மட்டுமே...அப்படியிருக்க அவனால் எப்படி நண்பனை பொறுக்கி என சொல்ல முடியும்' என நினைத்தவன் சிரித்துக்கொண்டே "உன்ன போய் நான் எப்படி டா அதுவும் என் வாயால அப்படி சொல்லுவேன்" என சொல்ல…

அவன் நக்கலில் மதியும் சிரித்துவிட்டான்."டேய் போதும்டா ஓவரா சீன் போடாம வா வீட்டுக்கு போகலாம்" என எழுந்தவர்கள் தங்கள் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டனர்.

போகும் வழியில் "என்னடா என்னவோ ஒரு மாதிரி இருக்க..ஏதாவது பிரச்சனையா என மதியை பார்த்து கதிர் கேட்க…

அவனோ "அதெல்லாம் ஒன்னுமில்ல டா...ஏதோ கொஞ்ச நேரமாவே ஏதோ மனசே சரியில்லாத மாதிரி இருக்கு. ஆனா என்ன காரணம்னு தெரியலை" என சொன்னவன்,தொடர்ந்தவனாக

"என்னவோ மனசுக்கு பிடிக்காத விஷயம் எதுவோ நடக்க போறது போல மனது படப்படக்குது" என தன் மனதை அழுத்திக்கொண்டு இருந்த விஷயத்தை சொல்ல...அதற்கு என்ன சொல்வது என கதிருக்கு தெரியவில்லை.

நாளை அவளுக்கு நிச்சயதார்த்தம் என்பது மதிக்கு தெரிய வந்தால் அவனின் நடவடிக்கை என்னாவாக இருக்கும்..?
 
Last edited:
Status
Not open for further replies.
Top