ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யாழின் இசையாய் -கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 15(ii)

முகம் முழுவதும் பூரிப்பு நிறைந்திட அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தவளை ஓர விழிப்பார்வையால் உரசிக் கொண்டிருந்தான்,பையன்.

முன்பென்றால் அவள் புறம் அவ்வளவாய் திரும்பாத அவனின் பார்வை இப்பொதெல்லாம் அவளிருக்கும் பக்கமாய் கொஞ்சம் திரும்பிடத் தான் செய்கிறது.

முன்னைய நாட்களிலும் குழந்தையென நினைத்து அவளின் செய்கைகளையும் கிறுக்குத் தனங்களையும் அவ்வப்போது இரசிப்பவனின் மனதில் இருந்த தூய்மையில் இப்போது கொஞ்சம் மாசு சேர்ந்திருப்பது உண்மை.

மடிக்கணினியின் விசைப்பலகையை தட்டிக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தவனின் கவனமோ அடிக்கடி சிதறி பாவையவளில் நிலைப்பது புரிந்திட ராமநாதனின் இதழ்களுக்குள் புன்னகை ஒளிந்து நின்றது.

"உன் சோகம் ஒரு மேகம்..நான் சொன்னால் அது போகும்..உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்.." அவள் மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டு பையனுக்கு அருகில் எதையோ தேடி உலாத்தி விட்டு கடந்து சென்றிட ஏனோ அந்த வரிகளைக் கேட்டதும் அவன் விரல்கள் நொடி வேலா நிறுத்தம் செய்திட விழிகளோ சரேலென நிமிர்ந்து அவளின் விம்பத்தை தமக்குள் சேர்த்துக் கொண்டன.

எல்லாம் ஒரு சில நொடிகளுக்கு தான்.தலையை உலுக்கிக் கொண்டு தன்னை மீட்டவனுக்கோ தன்னிச்சையாய் அவள் உதிர்த்துச் சென்ற வார்த்தைகள் கூட இதயத்தின் ஆழம் தாக்கிற்று.

"அன்னிக்கி கண்ண பாத்தத்துல இருந்து நாம கன்ட்ரோல்ல இல்ல.." இதழ் குவித்து ஊதிய படி நினைத்துக் கொண்டவனுக்கு தன் மனதை நினைத்து ஆத்திரமாய் வந்தது.

அவனுக்குள் புதிதாய் உருவெடுத்திருக்கும் தவிப்பு புரியாதவளோ அவனின் கண்முன்னே வட்டமடித்துக் கொண்டிருக்க பையனால் நிலை கொள்ள முடியவில்லை.
இருப்பினும் எழுந்து கொள்ள மனம் வரவில்லை.

"சித்தப்பா ஏதாச்சும் நெனச்சுக்க போறாரு.." தனக்குத் தானே கூறிக் கொண்டு அமர்ந்து இருந்தவனில் வார்த்தைகளில் கொஞ்சம் பொய் கலந்து இருந்தது,உண்மை தான் போலும்.அப்படியே உண்மையென்றாலும் அவனின் விழிகள் சுழல வேண்டிய தேவை இல்லையே.

பையன் அமர்ந்திருந்த சோபாவுக்கு பின்னே உயரம் குறைந்த அலுமாரி ஒன்று நிலை கொண்டிருக்க அதன் மேல் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுக்கத் தான் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்,பாவையவள்.

அவளின் பாதச்சத்தங்கள் பையனின் செவியோரம் உரசும் போதே நிமிர்ந்து பார்த்தவனின் இதயம் என்றுமில்லாமல் தாளம் தப்பி வேகமெடுத்திட கொஞ்சம் பதட்டம்,அவனுள்ளத்தில்.

தடுமாறாமல் இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்றாலும் ஏனோ பதட்டத்தில் இதழ்களோ குவிந்து அடிக்கடி சுவாசத்தை சீர்ப்படுத்திக் கொண்டன.

இத்தனை நாள் இப்படி இல்லை.இல்லவே இல்லை.அவனுமே நினைத்திருக்க மாட்டான்,தான் இத்தனை தூரம் தடுமாறிப் போவோம் என்று.

அவளின் அருகாமையும் விழியுரசலும் அவனுக்குள் விதைத்திட்ட மாற்றத்தின் ஆழம் அப்படி.ஆழத்தின் வீச்சம் அப்படி.வீச்சத்தின் வீரியம் அப்படி.

இதற்கு மேலாய் அவனுக்கு அவள் ஒன்று முதல் காதலும் இல்லை.முதன் முதலாய் ஈர்க்கும் பெண்ணும் இல்லை.

ஈர்த்தாள் என்றே ஒத்துக் கொண்டிட அவனுக்கு காதல் மேல் நல்லபிப்ராயம் இருந்தாலும் பரவாயில்லை.ஏற்கனவே காதல் தோல்வியால் வெறுத்து துவண்டு போய் இருப்பவன்.காதலை அறவே வெறுத்து மனதை இறுக்கிக் கொண்டு ஒதுங்கி நிற்பவன்.அப்படியிருந்தும் அவள் ஏன் இத்தனை தூரம் தன்னை பாதிக்கிறாள்..?
அதுவும் இந்த சில நாட்களாய்..
புரியவேயில்லை,பையனுக்கு.

தன்னுடன் நெருங்க எந்த பெண்ணையும் அனுமதித்ததில்லையே.முதன் முதலாய் எதிர் துருவமாய் இருக்கும் அவளுடனான நெருக்கமும் பழக்கமும் தான் ஆழமாய் தாக்குகிறது போலும்.
தானே யோசித்து தனக்குள் தீர்த்துக் கொண்டது பையனின் மனம்,மடத்தனமாய்.

பாவம்,அவன் யோசித்திடவில்லை.அவன் அருகாமையில் அவள் இருந்தாலும் இருவரும் அந்நியர் போல் விலகித் தான் இருக்கிறார்கள் என்பதை.

அவள் தன்னருகே வந்து நின்றதுமே தனிச்சையாய் நகர்வது போல் ஓரடி தள்ளி அமர்ந்து கொண்டிட நல்ல வேளை அது அவளின் கண்ணில் அகப்படாமல் போனது.இல்லையென்றால் அவள் தனக்கொரு அர்த்தம் கற்பித்துக் கொண்டிருப்பாள்,அவசரக்காரி.

அவளில் இருந்து தள்ளி அமர்ந்ததும் தான் அவனுக்கு கொஞ்சமேனும் மனம் சமப்பட்டது.முன்பு நெருங்கி வந்தாலும் அவனில் தடுமாற்றம் இல்லை.ஆனால்,இப்பொது துளியும் நெருங்காமல் அவனைப் பதட்டப்படுத்திக் கொண்டிருந்தாள்,அவனின் இ(ம்)சை.

அலுமாரியின் மேல் இருந்த வைக்கப்பட்டிருந்த பொருட்குவியலில் தீவிரமாய் தேடிக் கொண்டிருந்தவளோ காகிதக் கட்டொன்றை எடுத்திட ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியின் உபயத்தால் அது சிதறடிக்கப்பட்டு எல்லா இடமும் பரவிட அவளுக்கோ ஆயாசமாய் இருந்தது.

பையனோ விழி நிமிர்த்தி அவளை ஒரு பார்த்திட மனமோ அவளுக்கு உதவச் சொல்லி கட்டளையிட்டாலும்,
ஏதோ ஒரு வீம்பு..
ஏதோ ஒரு தயக்கம்..
ஏதோ ஒரு பயம்..
அவனுக்கு அதற்கு மறுப்பு கூறிட மனதின் பேச்சை கேட்டவன் அப்படியே அமர்ந்திருக்க அதுவே இம்சையாகிடப் போவது அவனுக்கு தெரியாதே.

பறந்து சென்ற காகிதங்களை சபித்த படி குனிந்தெழுந்தவளை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்திருந்தான்,பையன்.அவள் செயல்களை மனமோ இரசித்திட விழைந்து கொண்டிருந்தது.

அவனின் பாதங்களுக்கு அருகே விழுந்திருந்த காகிதகங்களை குனிந்த வண்ணம் எடுத்துக் கொண்டிருந்தவள் நிமிரவும் பையன் காலடியில் விழுந்த பென்ட்ரைவ்வை எடுக்க குனிந்திடவும் அவளின் நெற்றியோரம் பலமாய் மோதிக் கொண்டது,பையனின் நெற்றியுடன்.

பையனின் விழிகள் எதிர்பாரா அதிர்வில் விரிய அவள் விழிகளும் அதே போல் திறந்து முட்டை விழிகளுக்குள் முட்டிக் கொண்டு நின்றது,பையனின் பார்வை.மீண்டும் உயிருக்குள் கண நேர மின்னலொன்று.

"அம்மாஆஆஆஆஆ" நெற்றியைப் பிடித்துக் கொண்டே அலறியவள் சமநிலை தவறி அப்படியே அமர்ந்து விட்டிருந்தாள்,கால்கள் மடங்கிட.

பையனுக்கோ அவள் அலறல் எல்லாம் எங்கே கருத்தில் பதிந்தது..?
விழிகள் மோதி அவன் உயிர் வீழ்ந்து கிடந்தது.

சில நொடி உறைந்து நின்றவனோ தலையை உலுக்கிக் கொண்டு மீண்டிட அவன் கண்டது என்னவோ,முகம் சுருங்கிட தரையில் அமர்ந்திருந்த பாவையவளைத் தான்.

"இசை என்னாச்சு..?" பதறிக் கொண்டு கேட்டவனின் குரலில் அக்கறை தொனித்து வழிந்தது.சத்தியமாய் அது நடிப்பில்லை என்பது பையனின் விழிகளைப் பார்த்தாலே தெரிந்திடும்.

"கால் மடங்கிடுச்சு.." முகம் சுருங்கிட கூறியவளோ கடினப்பட்டு எழுந்து நிற்க முன் அவளை நோக்கி நீண்டிருந்தது,அவன் கரம்.

அவளுக்கோ அவனின் கரத்தைப் பற்றிக் கொண்டு மீண்டும் அவனின் வார்த்தைகளை கேட்டிட விருப்பமில்லை.நீட்டிய கரத்தை பற்றிட மறுத்தவளாய் அவள் அப்படியே இருக்க அவளின் மணிக்கட்டை இறுகப் பற்றியன,பையனின் ஐ விரல்களும்.

அவளை எழுப்பி விட்டவனோ அவளுக்கு நடப்பதற்கு உதவ முன் வர மறுப்பாய் தலையசைத்து தடுத்தாள்,அவளை.

ஏன் என்று வினாத்தொடுத்த விழிகளுக்கு பதில் கொடுக்காது தனக்குள் முணுமுணுத்த படி அவள் நகர்ந்து கொள்ள அவனுக்கோ அவளின் இதழசைப்பு புரியாது போகுமா என்ன..?

"ஹெல்ப் பண்ணிட்டு எந்த பொண்ணா இருந்தாலும் ஹெல்ப் பண்ணி இருப்பேன்னு டயலாக் விட வேண்டியது..நா அதுக்கு நடந்தே போறேன்.." அவளின் ஆற்றாமை வார்த்தைகள் மூலம் வெளிப்பட இருபுறமும் தலையாட்டிக் கொண்டவனின் விழிகளோ கெந்தி கெந்தி நடப்பவளை சிறு சிரிப்புடன் உரசிட அந்த புன்னகையில் இருந்த அர்த்தம் என்ன..?

கதவை சாற்றிக் கொண்டு உறங்க வந்தவனோ கை மறைவில் கொட்டாவி படுக்கை உதறியவளோ போர்வையை இழுத்த வேகமே கூறியது,அவள் ஏதோ கோபத்தில் இருப்பதை.

ஏனென்று கேட்டிட மனம் உந்தினாலும் அவனோ அதை தவிர்த்து நிற்க அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதாய் நினைத்தவளுக்கு இன்னும் சினம் பெருகியது.

"இவ்ளோ உர்ருன்னு இருக்கேன்..என்னாச்சுன்னாலும் கேக்குதா பாரு..ரோபோ ரோபா.." திட்டியவளின் கோபத்தின் காரணம் அவன் அலுமாரியில் இருந்த அபிராமியின் சிறு வயது புகைப்படம் தான்.யாழினியுடன் சிறு வயதில் அவள் சேர்ந்து எடுத்துக் கொண்டது.

அந்த புகைப்படத்தில் இருந்தது,அபிராமி என்று அவளுக்குத் தெரிய வந்ததே யாழினியின் கிறுக்கல் கையெழுத்தால் புகைப்படத்தில் இருந்த பெயர் தான்.அந்த பெயரைக் கண்டதுமே பாவையவளுக்கு சட்டென பொறி தட்டியது.

அபிராமியின் தாய் பையனின் தாயாரின் நெருங்கிய தோழி என்பதால் இரு குடும்பங்களுக்கும் இடையே பையனின் சிறு வயது துவக்கமே நட்புறவு இருந்தது.

அதுவும் சந்திப்பதும் ஒன்று கூடுவதும் வழமையாக நடந்தேறுவது என்பதால் புகைப்படங்களுக்கு பஞ்சம் இருக்குமா என்ன..?

அதில் ஓரிரண்டு தப்பி பையனின் உடைமைகளுடன் வந்து சேர்ந்திருக்க சத்தியமாய் அவன் அதை கவனித்திடவில்லை.கவனித்திருந்தால் அதை அகற்றி விட்டு தான் மறுவேலை பார்த்திருப்பான் என்பது வேறு விடயம்.

அவனின் மன எண்ணத்தை அவள் அறிந்திடும் வாய்ப்பில்லையே.அவன் அவளுடன் நடந்து கொள்வது அப்படித் தானே.

"இவ என்ன இப்போ திடீர்னு உர்ருன்னு இருக்கா..?" மனதுக்குள் நினைத்தவனோ எதுவும் பேசாது குளியலறைக்குள் சென்றிட பாவையவளுக்கோ எகிறியது.

"இந்த ரோபோவஅஅஅஅஅஅஅ" பற்களை நறநறத்துக் கொண்டவளுக்கோ அவன் மீது கோபத்தை காட்டி வேண்டும் என்கின்ற வேகம்.

மூளை கிறுக்கத் தனமாய் சிந்திக்க அவனுக்கு கோபம் வந்தாலும் பரவாயில்லை என்கின்ற எண்ணத்துடன் குளியலறைக் கதவை வெளிப்பக்கமாய் பூட்டினாலும் உள்ளுக்குள் பயந்து செத்துக் கொண்டிருந்ததும் வேறு விடயம்.

குளித்து விட்டு தலையை துவட்டிய படி கதவைத் திறக்கப் பார்த்திட்ட பையனுக்கு வெளியில் பூட்டியிருப்பது உரைத்திட தடதடவென கதவைத் தட்டியவனுக்கு சிறிது நேரம் கடந்த பின்னே புரிந்தது,பாவையவள் வேண்டுமென்றே செய்திருப்பது.

"இசை கதவத்தெற.." அவளின் கோபம் ஏன் என்றே தெரியாவிடினும் அவளின் செயலில் சிரிப்புத் தான் வந்தது,பையனுக்கு.

இருப்பினும் குரலை கடினமாய் மாற்றிக் கொண்டு மீண்டும் கத்திய படி தட்டிட பாவையவளோ பயத்தை காட்டிக் கொள்ளாது விறைப்பாய் நிற்பது போல் நின்றிருந்தாலும் பாதங்கள் ஆட்டம் கண்டு கொண்டிருந்தன.

"இசை கதவத் தெற.." மறுமுறையும் அவன் சத்தம் போட கதவைத் திறந்து விட்டவளோ அவன் வரும் முன் ஓடியிருந்தாள்,அறையில் இருந்து.

இரண்டு நாட்களாய் முகம் பார்த்திட மறுப்பவளிடம் ஏனென்று கேட்டிட மனம் சண்டித்தனம் செய்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தவனுக்கு அவளின் பாராமுகம் புரியாது போகுமா..?

அவனறிந்த இசையவளுக்கு வாய் ஓயாது.ஆனால்,இந்த இரு நாட்கள் அவள் கடைபிடித்து வரும் அமைதி அவளின் கோபத்தின் காரணம் என்று அறிந்தவனுக்கு சத்தியமாய் கோபத்தின் காரணம் துளியும் புரிந்திடவில்லை.

அன்றிரவு கதவை அடைத்து விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தவளிடம் கேள்வி கேட்டிட வேண்டும் என்றே விழித்திக் கிடந்தவனின் எண்ணத்தை பொய்யாக்காமல் உள்நுழைந்தவளோ அவனைப் பாராது கட்டிலில் படுத்துக் கொள்ள பையனுக்கு கோபமாய் வந்தது.

அவளின் பாராமுகம் அவனுக்கு பிடிக்கவேயில்லை.சத்தியமாய் பிடிக்கவேயில்லை.எல்லாம் இருந்தும் அந்த பாராமுகம் அவனுக்குள் ஏதோ ஒன்றின் இன்மையை உணர்த்திக் கொண்டல்லவா இருக்கிறது..?

"என்ன தூங்க போறியா..?"

"ம்ம்.." ஒற்றை வார்த்தையில் வந்தது,அவள் பதில்.அவனுக்கோ இன்னும் ஏறிற்று,சினம்.

"இவ்ளோ சீக்கிரமா..?"

"ம்ம்ம்ம்.." அதே பதில்.பையனின் அதே "ம்ம்".என்ன இழுவை ராகத்தில் மட்டும் சற்றே இறக்கம்.

"நம்ம ம்ம்ம நமக்கே ரிபீட் அடிக்கிறா..பாவி.." மனதுக்குள் அவளுக்கு அர்ச்சித்தவனோ இப்படி வழிய சென்று பேசும் ரகம் இல்லையே.ஏனோ அதை கவனிக்க மறந்திருந்தாள்,பாவையவள்.

"நா இன்னிக்கி பெட்ல படுக்குறேன்.." வேண்டுமென்று தான் சொன்னான்,அவள் நிச்சயம் எதிர்க்கேள்வி கேட்பாள் என்கின்ற எதிர்ப்பார்ப்புடன்.

எல்லா நேரத்தில் எதிர்ப்பார்ப்புகள் நிஜமாகுமா என்ன..?

"ம்ம்.." அவளின் பதிலில் அவனுக்கோ உச்சபட்ச கோபம்.

கடுகடுத்த முகத்துடன் எழுந்து வந்தவனோ அவளை மறித்து மார்புக்கு குறுக்கே கையை கட்டிய படி நின்றிட யாழவனின் இதயம் கொஞ்சம் வேகமெடுத்து தொலைத்தது,இசையவளின் அருகாமையில்.

"என்னாச்சு உனக்கு..? என்ன ப்ரச்சன..? எதுக்கு இப்ப உர்ருன்னு பேசாம இருக்க..?" அதட்டலான குரலில் கேட்டிட அவளுக்கோ இன்னும் ஆத்திரமாய் வந்தது.

"ஒன்னுல்ல.." வெடுக்கென வந்த பதிலில் அவன் புருவங்கள் ஏறி இறங்கிட செவியை தீண்டிய வண்ணம் இருந்தது,வேகமெடுத்திருந்த இதயத்தின் ரிதம்.

"என்னாச்சு உனக்கு..? எதுக்கு இப்டி இருக்க..?" தன்மையாய் கேட்டவனின் குரலில் இருந்த பரிவில் அவளுக்கு அழுகை வரும் போல இருந்திட தலை தாழ்த்தி நின்றவளின் விழிகளில் மெல்ல மெல்ல ஈரம் சேர்ந்திற்று.

"உன்ன தான் கேக்கறேன் இசை..‌என்னன்னு சொல்லு.." பொறுமையாய் கேட்டவன் இத்தனை தூரம் இறங்கி வருவதே பெரிது தான்.

"நீங்க இன்னும் அந்த அபி நெனச்சிகிட்டு இருக்கீங்களா..?"
அவளிடம் இருந்து எதிர்பாரா கேள்வியை கேட்டு விட அவள் கேள்வியில் திகைத்து நின்றான்,பையன்.

உயிர்த்தொடும்.

2024.09.07
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 16(i)


பாவையவளின் கேள்வியில் பையனின் விழிகளில் மெல்லிய அதிர்வலைகள் பரவிற்று.

அபிராமியின் மீது இப்பொழுது காதல் இல்லை.அதுவும் அவளை கரம் பிடிக்கும் போது பாவையவளை பையன் மனதார ஏற்றுக் கொள்ளவில்லை என்பது எந்தளவு உண்மையோ அதே போல் அபியின் நினைப்பை முற்றிலும் துறந்து விட்டுத் தான் பாவையவளின் கைத்தலம் பற்றினான்,என்பதும் உண்மை.

அவளை விலக்கி வைத்திடத் தான் அபியை நேசிப்பதாய் அவளிடம் அடிக்கடி உரைத்துக் கொண்டிருந்ததே.அதை அவன் மறுத்திடவும் இயலாது.

ஆனால்,அவள் அப்படி தன்னிடம் கேட்டதும் அவன் மனம் ஏதோ போல் ஆனது.அவள் அப்படி கேட்டிருக்கக் கூடாது கூவிக் கத்தியது,தான் அடிக்கடி ஒப்புவிக்கும் பொய் தான் என்று தெரிந்தும்.

அவனே சொல்லியிருந்தாலும் அவள் நம்பியிருக்கக் கூடாது என்று தான் அவன் எதிர்ப்பார்த்ததே.அவள் மீது அவனுக்கு காதல் இல்லை.அப்படியிருக்க மனதில் ஏன் இப்படியொரு எதிர்ப்பார்ப்பு..?

அன்று அவன் மீது பழி சுமத்தப்பட பொழுது கூட தான் சொல்லாமல் தன்னை அவனின் முன்னால் காதலியும் குடும்பத்தினரும் நம்பிக்கை வைத்திட வேண்டும் என்று தான் எதிர்ப்பார்த்தானே ஒழிய தான் தவறாய்ச் சொல்லியும் அவர்கள் நம்பிட வேண்டும் என்று எதிர்ப்பார்த்து தொலைக்கவில்லை,அவன்.

அவர்களிடம் கூட வைக்க மறுத்த எதிர்ப்பார்ப்பை தள்ளி நிற்கும் அவளிடம் ஏன் அவன் திணித்திட வேண்டும்..?
அவனே அறியாமல் யாழவனின் ஆழ்மனம் யாழின் இசையாய் இசையவளை உணரத் தொடங்கி விட்டதோ என்னவோ..?

வேறு யாரும் இதே கேள்வியை அவனிடம் கேட்டிருந்தால் கூட அவன் இப்படி குழப்பமான உணர்வலைகளில் தத்தளித்திருக்க மாட்டான்.கேட்டது அவள் ஆயிற்றே.யாழவனின் உயிர்த்துடிப்பை மெல்ல மெல்ல கலந்திடும் இசை ஆயிற்றே.

"ஏன் உனக்கு அப்டி தோணுதா..?" இயல்பான குரலில் வினவியவனோ சாதாரணமாய் காட்டிக் கொண்டு நின்றிருந்தாலும் அவள் பதலளிக்காது கடத்திக் கொண்டிருந்த வினாடிகள் அவனை வெகுவாய் பதட்டப்படுத்தின.

ஆம் என்று கூறி விட்டாளெனின் அவனின் மனநிலை மொத்தமும் தலைகீழாகிப் போகும் என உணர்ந்தவனோ அதன் காரணத்தை ஆராயவில்லை.

அவளோ பதில் சொல்ல நேரம் எடுத்து அவனைப் படுத்திக் கொண்டிருந்தாள்.யாழின் இசையவளோ இம்சையாய் மாறியிருந்தாள்,அந்த தருணத்தில்.

மார்புக்கு குறுக்கே கையை கட்டிய படி நின்றிருந்தவனோ விரல்களால் மறுகரத்தின் முழங்கையின் மேற்பகுதியை அழுத்தி விடுவிப்பதுமாகவிருக்க அதுவே போதும்,அவனுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் பதட்டத்தை எடுத்துக் காட்டிட.

"உன்ன தான் கேக்கறேன்.."

"ச்சே அப்டிலாம் இல்ல..அப்டி தோணி இருந்தா நா உங்க கூட இருந்தே இருக்க மாட்டேன்.." அசட்டையாய் பதில் மொழிந்தவளின் விழிகளில் இருந்த ஈரம் காய்ந்து போயிருந்தது,பையனின் பரிவான குரலில் வந்து விழுந்த வார்த்தைகளிலும் அவனின் கேள்வியிலும்.

அவளோ அவனிடம் இருந்து ஆமோதிக்கும் பதிலொன்றை எதிர்பார்த்திருக்க அவனின் எதிர்க்கேள்வியே அவளுக்கு ஆசுவாசப் பேரலையை உண்டு பண்ணிற்று.அந்த ஒற்றைக் கேள்வியே அவன் மனதில் இருப்பவற்றை மறைமுகமாய் உணர்த்திச் சென்றிருக்க இன்னும் ஏன் கலங்குவாள்..?

"அப்போ எதுக்கு அவ ஃபோட்டோவ உங்க கப்போர்ட்ல வச்சிருக்கீங்க..?" பையன் வினாத் தொடுக்கும் முன்னரே பாய்ந்து கொண்டு கேட்டிட அவனின் விழிகள் இடுங்கிட நெற்றிதனில் சிந்தனை முடிச்சுக்கள்.

"வாட்ட்ட்ட்ட்..?"

"அப்போ உங்களுக்கு ஃபோட்டோ இருக்குறது தெரியாதா..?" மகிழ்வுப் பெருவெள்ளத்தில் விழிகள் மிதந்திட சந்தோஷ சாரலாய் வெளிப்பட்ட குரல் அவள் இதயத்தை இன்னும் அசைத்துப் போட்டது.

"சாரே..அப்போ உங்க மனசுல அந்த பொண்ணு இல்ல தான.." ஏக்கமும் எதிர்ப்பார்ப்புமாய் கேட்டவளின் விழிகள் கட்டிப்போட்டது,பையனை.

இரும்பை ஈர்க்கும் காந்தம் போல் அவள் விழிகளும் அவனை மொத்தமாய் கவர்ந்திழுத்திட கங்கணம் கட்டிக் கொண்டு திரிவது போன்று அவன் மனதில் அடிக்கடி எண்ணமொன்று தோன்றி மறையும்.

"நீ தான நீயா ஒன்ன நெனச்சி கிட்டு இருக்கன்னு சொன்ன..திரும்ப எதுக்கு டவுட்..? என்ன சந்தேகப்பட்றியா..?"

"ஐயோ நீங்க வேற..என்னதான் நீங்க ஒரே டயலாக வேற வேற மாடுலேஷன்ல பேசினாலும் அந்த கண்ணுல உண்ம இருக்காது..பொய் சொல்றார்னு தோணிட்டே இருக்கும் மனசுல..ஆனா நீங்க சொல்றத பாத்தா நானே கன்ஃபியூஸ் ஆயிருவேன்..ஸோ இப்ப நீங்க வாயால சொன்னா நல்லா இருக்கும்.." அதீத மகிழ்வில் உளறிக் கொட்டியவளின் வார்த்தைகளில் அவனிதழ்களினோரம் துடித்தது.

"இன்னும் என்னோட மனசுல அபி தான் இருக்கா.." யோசியாது பையன் கூறிட தொங்கிப் போனது,அவள் முகம்.இமை தாழ்த்தி பாவமாய் பூனைக்குட்டி போல் விழித்தவளின் வதனத்தில் அத்தனை வாட்டம்.

"என்ன நா சொன்னது புரிஞ்சுதா..? தெனமும் இதயே தான சொல்லி கிட்டு இருக்கேன்..இப்போ என்ன திடீர்னு.."

"அது ஒன்னுல்ல.." வருத்தம் இழையோடச் சொன்னவளை மேலும் தவிக்க விட பையனுக்கு மனம் வரவில்லை.

"நெஜமா தான் சொல்றேன் இசை..இப்போ என்னோட மனசுல அபி இல்ல..அதுவும் அபி கல்யாணம் ஆன பொண்ணு..இன்னொருத்தரோட உரிம..ஸோ அவங்கள நெனச்சு பாக்க கூட எனக்கு ரைட்ஸ் இல்லங்குறது தான் என்னோட தாட்.." தீர்க்கமாய் கூறியவனின் வார்த்தைகளில் அவள் விழிகளில் ஆயிரம் மின்னல்.

அவன் மனதில் அபி இருப்பதாக கூறுவதை அவள் நம்பியதில்லை தான்.ஆனாலும்,அவனே உறுதிப்படுத்திக் கூறிய பின்பு அதை விட அவளுக்கு மகிழ்வை ஏதேனும் தந்திட முடியுமா..?

"இங்க பாரு..அபி என்னோட மனசுல இல்லன்னு தான் சொன்னேன்..அதுக்காக உன்ன லவ் பண்ணுவேன்னு கனவு காணாத புரியுதா..? நீ ஃப்ரெண்டா பழக டீல் போட்டதனால தான் நா இப்போ கூட உன் கூட நார்மலா பேசிகிட்டு இருக்கேன்.."

"இந்த ரோபோ வேற..ஒரு சந்தோஷத்த நிம்மதியா அனுபவிக்க விடுதா..? கல்லுளி மங்கன்..பட்டர்ஃப்ளை ஃப்ளை பண்ண முன்னாடியே செறக வெட்டி விட்றீங்களே கோபால்.."

"என்ன எப்ப நா திட்டுனாலும் குனிஞ்சு தரய பாத்துகிட்டு இருக்குறது..என்ன மைன்ட் வாய்ஸா..நல்லா புரிஞ்சிக்கோ..என் மனசுல அபி இல்ல..அதுக்காக நா உன்ன லவ் பண்ணவெல்லாம் மாட்டேன்.." ஏனோ அந்த வசனத்தை அவன் அழுத்திக் கூறியது அவளுக்காகவா..? இல்லை,அவனுக்காகவா..?

"எப்பவும் சொல்றது தான்..இந்த ஒலகம் அழிஞ்சாலும் இதுக்கப்றம் உன்ன நா லவ் பண்ண மாட்டேன்..காட் இட்.."
அவனின் பேச்சுக்கு எப்போதும் பதலடி கொடுத்து கலாய்த்து தள்ளியது,மனசாட்சி.

"போயா போ..பொறம்போக்கு நெலத்த பட்டா போட்டு ஆட்டய போட்ற பரம்பர நாங்க..சும்மா இருக்குற மனசுல டென்க் கட்டாம விடுவோமா என்ன..? போயா யோவ்.." மனதுக்குள் நினைத்தவளோ வெளியில் முழித்துக் கொண்டிருந்தாள்,அப்பாவி போல்.

"புரியுதா இசை..? இந்த ஒலகம் அழிஞ்சாலும் இதுக்கப்றம் நா உன்ன லவ் பண்ண மாட்டேன்.." விரல் நீட்டி எச்சரித்தவனை கண்டு அவள் நொந்து போனால் அது உலக அதிசயம்.

"அண்ணாத்த ப்ளீஸ் சேஞ்ச் தி டயலாக்.." உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த மனது தாறுமாறாய் அவனை வைத்து செய்ய அது எங்கே பையனுக்கு புரிந்திட போகிறது..?

நடுநிசியைத் தாண்டிய நேரம்.

தொண்டை வரண்டு போக தாகம் எழுந்ததில் விழித்துக் கொண்ட பையனின் விழிகளோ திறந்ததுமே அவளைத் தேடிட சோபாவில் இருக்கவில்லை,அவள்.

அவனைக் கேளாமல் சுழன்ற விழிகளோ பால்கனிப் பக்கம் தாவிட அவ்விடம் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சம் கூறிற்று,பாவையவளின் இருப்பை.

"இவ என்ன இன்னும் தூங்காம இருக்கா..?" மௌனமான கேள்வியோடு கொட்டாவி விட்ட படி அருகே இருந்த தண்ணீர்ப்போத்தை எடுத்து நீரைப் பருகி விட்டு அவளை நோக்கி நடந்தான்,வேகமாகவே.

பால்கனி விளக்கு மட்டும் ஒளிர்ந்து கொண்டிருக்க அறையின் மின் விளக்கை பையன் உயிர்ப்பிக்காததால் அவன் எழுந்ததை உணரவில்லை,பாவையவள்.

அவளோ தன் சிந்தனையில் லயித்து மூழ்கியிருக்கும் போது அவனின் பாதச்சத்தங்கள் அவளின் செவியை உரசிடவும் வாய்ப்பில்லையே.

கதவருகே வந்து நின்றவனின் பாதங்கள் அதற்கு மேல் நகரவில்லை.அதற்கு முயலவுமில்லை.விழிகள் முழுக்க பாவையவளின் மீது தான் நிலைத்திருந்தது.

பால்கனியின் ஹேன்ட் ட்ரில் கம்பியை இறுகப் பற்றிக் கொண்டு இதழில் உறைந்த அழகான புன்னகையுடன் வானத்தை வெறித்துக் கொண்டவளின் குதிக்கால் மட்டும் தரையை தொட்டுக் கொண்டு அங்குமிங்கும் அசைந்தவாறு அவள் மனதின் துள்ளலை வெளிப்படுத்தின.

அவளின் மகிழ்வின் காரணம் அறிந்தவனுக்கு மனம் பாரமேறியது மட்டுந்தான் மிச்சம்.

"இந்த தூக்கம் வேற வந்து தொலய மாட்டேங்குதே.." சற்று சத்தமாக தனியாய் பேசிய படி கைகளை தேய்த்து விட்டுக் கொண்டவளுக்கோ துள்ளி குதித்திடும் வேகம்.

பையன் உதிர்த்த வார்த்தைகளுக்கு அப்படியே அவனை கட்டிக் கொண்டு குதிக்கத் தான் தோன்றிற்று.என்ன தான் அதீத மகிழ்வென்றாலும் அவர்களிடையிலான இடைவெளியை அவளால் மறந்திட இயலாதே.

மனம் முழுவதும் பரவியிருந்த இனம் புரியா மகிழ்வை வெளிப்படுத்த தெரியாது தவித்தவளுக்கு தாமரை இவ்விடத்தில் இருந்தால் தேவலை என்கின்ற எண்ணம் தான்.

"தாமர இருந்தாலும் கட்டி புடிச்சி இருக்கலாம்.." சலிப்புடன் சிந்தனை ஓட யோசியாது அழைத்து விட்டிருந்தாள்,தோழியவளுக்கு.

உறக்கக் கலக்கத்தில் இருந்தவளோ தோழியின் எண் திரையில் மிளிர்ந்ததை கண்டதும் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாலும் மனதுக்கு தெரியாமல் இல்லை,ஏதோ கிறுக்குத் தனமான விடயத்துக்காக தான் தன்னை அழைக்கிறாள் என்பது.

"ஹலோ.."

"ஹலோ.."

"என்னடி தூங்கி இருந்தியா..?"

"இல்ல..டான்ஸ் ஆடிட்டு இருந்தேன்..லேட் நைட் ஃபோன் பண்ணி மனுஷன அறுக்காம என்னன்னு சொல்லுடி..எப்பவுமே பாதி தூக்கத்துல எழுப்பி விட வேண்டியது..அப்றம் பாசமா கேள்வி கேக்கற மாதிரி நடிக்க வேண்டியது..என்ன விஷயம் டி..? அர்த்த ராத்திரில ஃபோன் பண்ணி இருக்க..?"

"ரொம்ப சந்தோஷமா இருக்கு தாமர..என்ன பண்றதுன்னு புரியல..நீ பக்கத்துல இருந்தா உன்ன கட்டிகிட்டு குதிச்சி இருப்பேன்..அவ்ளோ ஹேப்பி நா..அதான் தூக்கமும் வர மாட்டேங்குது..என்ன பண்றதுன்னும் புரில.."

"நைட்டு முழுக்க பேய் மாதிரி தூங்காம முழிச்சிகிட்டு அடுத்தவன டார்ச்சர் பண்ற அளவு என்ன சந்தோஷம்..? என்ன நடந்துச்சு..?" தோழியை வாரினாலும் அவளின் குரலில் தெரிந்த அதீத உற்சாகத்தில் நெகிழ மறந்திடவில்லை,தாமரையின் மனது.

இங்கு மறைவில் நின்று அவள் பேசுவதை செவிமடுத்திருந்த பையனுக்குமே அவளின் குரலில் தெரிந்த நெகிழ்வு உயிரை வருடி விட தவறிடவில்லை.மொத்தமும் அவனுக்கான காதலின் அத்தாட்சிகள் அல்லவா..?
இன்னும் எத்தனை எத்தனை பரிமாணங்களில் காதலை கா(கொ)ட்டித் தீர்ப்பாள்,வியந்து நின்றது மனம்.

அவளால் மட்டும் தான் போலும்,நொடி தவறாமல் வார்த்தைகளின்றி
விழியசைவில்..
சிறு நெகிழ்வில்..
விழிகளின் ஈரத்தில்..
விரல்களின் நடுக்கத்தில்..
இமைகளின் அடிப்பில்..
இதயத்தின் துடிப்பில்..
குரலின் ஓசையில்..
குமிழா ஆசையில்..
பாதங்களில் தாளத்தில்..
பார்வைகளின் மேளத்தில்..
வார்த்தைகளில் இல்லா மௌனத்தில்..
புன்னகை தோய்ந்த மௌனத்தில்..
என ஒன்று விடாது அனைத்து பரிமாணங்களிலும் காதலை உணர்த்தி நிற்க.

"அது என்னன்னு எல்லாம் சொல்ல முடியாது.." மென் குரலில் மறுத்தவளிடம் மேலும் தூண்டித் துருவவில்லை,தோழியவள்.

பையனினதும் பாவையவளினதும் வாழ்க்கையைப் பற்றி முழுதாய் தெரிந்து இருந்தாலும் அதைப் பற்றி எதுவும் கேட்டதில்லை,அவளிடம்.சில நேர ஆதங்கத்தில் புலம்பினாலும் இசையவள் யாழவனை யாருக்காகவும் விட்டு கொடுத்திட மாட்டாள் என்பது தெரிந்தவளுக்கு அவர்களின் வாழ்க்கையை அலசி ஆராயவும் மனம் வரவில்லை.

அவளாக கூறுவது வேறு.தோழியாக இருந்து கொண்டு கணவன் மனைவிக்குள் நுழைவது அவளுக்கு உசிதமான விடயமாக இல்லை.

"சரி ஏதோ பெருசா ஆகியிருக்கு..அதான் வாய்ஸ்லே சந்தோஷம் தெரிது.."

"அதான்டி எனக்கும்..ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..என்ன பண்றதுன்னே புரில..அப்டியே சத்தமா கத்தனும் போல இருக்கு..கத்துனா வீட்ல முழிச்சிப்பாங்க..அப்டியே குதிக்கனும்னு இருக்கு..நைட் டைம்ல அதுவும் முடியாது..ஏதாச்சும் பண்ணனும்..ஆனா ஒன்னும் பண்ண முடில..பேசாம நடு ராத்திரின்னு பாக்காம கத்தவா..?"

"பைத்தியமே வீட்ட சுத்தி இருக்குறவங்க எல்லாரும் முழிச்சிக்க போறாங்க..வேணும்னா போய் கொஞ்சம் நேரம் ரோபோவ..சாரி சாரி அண்ணன் சார சைட்டடி..அப்போ நிம்மதியா இருக்கும்.." அலைபேசியின் சத்தம் அதிகமாய் இருக்க தாமரையின் பேசியதும் பையனின் காதில் விழாமல் இல்லை.

"அதுவும் சரி தான்..இன்னிக்கி சைட்டடிக்கிற எண்ணத்துல நா இல்ல..சந்தோஷமா இருக்கேன்..என் கிட்ட இப்டி இருக்க இசைன்னு கேளேன்.."

"சினிமா சீன் எல்லாம் இங்க இம்ப்ளிமன்ட் பண்ண ட்ரை பண்ணாத பக்கிப் பயலே..போய்த் தூங்கு..உனக்கென்ன ஹேமாக்கு அறஞ்சிட்டு நீ ஹாயா ஆஃபீஸ்ல இருக்க..நா அப்டியா ஆஃபீஸ் போனும்..ஃபோன வைடி தங்கமே..தூக்கமா வருது.."

"சின்ன வயசுல இருந்து கூட சுத்தறேன்..கொஞ்ச நேரம் எனக்காக முழிச்சு இருக்க முடியாதுல..சரி தூங்கித் தொல.." கடுப்பாய் காட்டிக் கொண்டு பாவையவள் பேசிட தாமரைக்கோ முடியவில்லை.

" காலைல எவ்ளோ நேரம் வேணுன்னாலும் பேசலாம் டி..ஃபோன வை ப்ளீஸ்..எங்க வீட்ல சும்மா சந்தேகம் வந்துரும்.."

"ஆமா இவ லவ் பண்ணலயாக்கும்.." திட்டு விட்டு அழைப்பை துண்டித்தவளுக்கு இமைகளில் உறக்கத்தின் சாயலும் இல்லை.

பையனுக்கு அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அத்தனை கனத்தை ஏற்றி விட்டிட வாழ்க்கையை எண்ணியவனுக்கு அத்தனை ஆற்றாமை.அதுவும் அவளின் வாழ்க்கையை பற்றி யோசிக்கும் போதே தலைவலிப்பது போல் இருந்தது.

பையனோ வந்து கட்டிலில் சரிந்து கொண்டு விழி மூடினாலும் உறக்கம் எட்டிடவில்லை.சிறிது நேரம் கழித்து வந்து சோபாவில் அங்குமிங்கும் அசைந்த படி துயில் கொள்ள முயன்றவள் ஒரு நிலையில் உறக்கத்திலும் விழ பையனுக்கோ ஒரு பொட்டுத் தூக்கமில்லை.

மெல்லிய வெளிச்சத்தில் குரட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தவளின் வதனத்தை வெகு நேரம் பார்த்திருந்தவனின் மனதில் ஆழமாய் ஒரு கீறல்.

உயிர்த்தொடும்.

2024.09.08
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 16(ii)


பையன் இயல்பாய் பேசத் துவங்கியிருக்க பாவையவளுக்கு அவன் மீதான பயங்கள் கொஞ்சம் குறையத் துவங்கி இருந்தன.

அதிகம் பேசுவதில்லை,
அவன்.இருப்பினும் இருவருக்குள்ளும் ஓடிக் கொண்டிருந்த நட்பின் இழை பொய்யென்றும் கூறிட முடியாது.

அதட்டுவான்..திட்டுவான்..
கத்துவான்..எல்லாம் இருந்தாலும் அவளுடன் முன்பை விட நெருங்கிப் பழக துவங்கி இருந்தான்.முன்பிருந்த தூரம் இருவருக்கும் இடையில் இல்லை என்பது உண்மை.

இசையவளுக்கு அவன் தந்திட்ட இடமே தாராளம்.பல பொழுதுகளில் அவனுடன் அமைதியாக இருந்தாலும் சில நேரங்களில் தன்னை மீறி வாயடித்து நாக்கைக் கடித்துக் கொள்வது அடிக்கடி நடந்தேறும்.

பையனுக்கோ முன்பு போல் கோபம் வராவிடினும் அவளுக்கென கோபமாய் காட்டிக் கொள்பவனுக்குத் தான் தெரியும்,அதன் முற்றிலும் பொய் என்பது.

இசையவளின் அருகாமையை அவன் இரசிக்க ஆரம்பித்து விட்டான் என்றெல்லாம் இல்லை.ஆனால்,அவளுடனான நொடிகள் அவனுக்கு மொத்தத்தையும் மறக்கடித்து இதம் தந்திடுவது என்னவோ உண்மை.

அன்று தான் ஒரு வாரத்துக்கு பிறகு வேலைக்குச் சென்று வீடு திரும்பியிருந்தாள்,பாவையவள்.

வீட்டுக்கு வந்தவளோ குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறைக்குள் நுழைந்து ஆடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்க அன்று சற்று சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்திருந்தான்,பையன்.

அவள் உடைகள் அடுக்குவதை கொண்டே அவள் நாளை வெளியூர் செல்லப் போகிறாள் என்பது புரிய வந்திட அவன் மனதில் சிறு பூவென மலர்ந்த வெறுமை பூக்காடாய் மாறி நிற்பதை அவனால் ஒத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.தெளிவாய் உணர்ந்து தொலைத்தானே பையன்..?

துவாயை எடுத்துவாறே குளியலறைக்குள் நுழைந்து ஷவரின் அடியில் நின்றவனுக்கு அவளின் முகத்தில் காணக் கிடைத்த பூரிப்பு இனம் புரியா கோபத்தை விதைத்தது.

"நமக்கு மட்டும் இப்டி எதுக்கு ஃபீல் ஆகுது..?" தனக்குத் தானே கேள்வி கேட்டு ஆராய்ந்து பார்த்துக் கொண்டவனின் மனதோ அது அவள் அருகாமையை அவன் தேடுவதற்கான சாயல் என்று உணரவே இல்லை.உணர்ந்தாலும் அவன் ஏற்றுக் கொண்டிட மாட்டான் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியதே.

தண்ணீரை நிறுத்தியதும் அவள் ஏதோ பாடலை சற்றே சத்தமாக பாடிய படி தன் வேலையில் ஈடுபடுவது புரிய அவனுக்கோ சினமாய் பீறிட்டது.

"கேட்டா தான் லவ்வு லவ்வுன்னு வசனம் பேசுவா..லவ் பண்றவன விட்டுட்டு ரெண்டு நாள் இருக்கப் போற எந்த பொண்ணாச்சும் இப்டி பாட்டு பாடிட்டு இருப்பாளா..?" கோபமாய் வெகுண்டெழுந்த மனமோ மறந்து தான் போயிருந்தது,அவளிடம் தன்னை மறக்கச் சொல்லி சொற்பொழிவாற்றியதை.

அவனுக்குள் உண்டாகியிருக்கும் தவிப்பு அவளுக்குள் உருப்பெறவில்லை என்கின்ற தகிப்பு தான் அவனை இப்படியெல்லாம் சிந்திக்க வைத்திட அதை தடுத்திடவும் இயலவில்லை,பையனால்.

அவனுக்குத் தெரியாதே அவள் மொத்தத்தையும் மறைத்திடத் தான் இத்தனை உற்சாகமாய் காட்டிக் கொள்கிறாள் என்று.

இருபுறமும் தலையாட்டி தன்னை ஈடு செய்து கொள்ள தலையசைத்த வேகத்தில் சிகையில் ஒட்டியிருந்த நீர்த்திவலகளை சிதறிப் போயின.

"கன்ட்டோர் யாழ்ழ்ழ்ழ்ழ்.." தனக்குத் தானே பதிய வைக்க முயன்றவனின் உள்ளத்தின் ஆழமோ அவளுக்கும் தானுணரும் அதே உணர்வு தோன்றியிருக்க வேண்டும் என்று முரண்டு பிடிக்க பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து கோதியவனின் முகத்தில் நீர் நில்லாமல் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

"என்ன பழக்கம் யாழ் இது..? நீ ஃபீல் பண்ற மாதிரிய அவ ஃபீல் பண்ணும்னு நெனக்கிற..நீ நெனக்கிற மாதிரி நடந்துக்க அவ என்ன செலயா..சும்மா உன் தாட்ஸ அவ மேல திணிக்காத.." தன்னைத் தி்ட்டிக் கொண்டு நிமிர்ந்தவனின் உள்மனமோ அவள் அருகாமையின்றி என்னவாகிடப் போகிறதென்று கிடுக்கிப் பிடி போட மாட்டி முழித்தது,புத்தி.

"ஆமால நா எதுக்கு சும்மா ஃபீல் பண்ணனும்..." தனக்கே கூறிக் கொண்டு தன்னை மீட்டி நின்றான் பையன்,அது கானல் என்று அறியாதவனாய்.

முக்கால் கை டீஷர்ட்டும் முக்கால் பேன்ட்டும் சிகையில் நீர் சொட்ட தலையை துவட்டிக் கொண்டு வெளியே வந்தவனின் தோரணையோ ஆளை அசத்திட நிலைக்கண்ணாடியில் தெரிந்த பையனின் விம்பத்தை அப்படியே தனக்குள் புதைத்துக் கொண்டாள்,பாவையவள்.

அவனோ தனக்குள் மூழ்கி இருந்ததால் அவள் பார்வையை உணரவில்லை,போலும்.

மனம் முழுக்க மத்தாப்புடன் அவனை இரசித்தவளோ கண்டு விட்டால் கத்தி தீர்ப்பான் என்கின்ற தவறான யோசனையுடன் பார்வையை விலக்கிக் கொண்டு மீண்டும் உடைப்பெட்டியை ஒழுங்கு படுத்தும் வேலையில் தன்னை இழுத்துக் கொள்ள பையனுக்கோ அவள் இயல்பாய் காட்டிக் கொள்வது நிஜம் போல்.ஏனோ அது கொஞ்சம் கடுகடுப்பை தந்தது.

"என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க போல.." இயல்பாய் கேட்டிட முயன்றும் ஏனோ அந்த குரல் வழியே வெளிப்ட்ட ஆதங்கத்தை தவிர்க்க இயலவில்லை.கொஞ்சம் பேதம் கலந்தது ஒலித்தது,அவன் குரல்.

அவளும் ஆழ்ந்து கவனித்திருந்தால் புரிந்து கொண்டிருப்பாள்,அவன் குரலின் மாறுபாட்டை..
அவளுக்கென உருவெடுத்த வேறுபாட்டை..

பாவையவளுக்கு பேச ஆள் வேண்டும்.அவனே பேசினால் சும்மா இருப்பாளா என்ன..?

"ஆமா இல்லாம இருக்குமா சாரே..மூனு நாள் பிக்னிக்..மொத்த ஆபீஸும் வர்ராங்க..நெறய எடத்துக்கு போக போறோம்..நல்ல வேள பிரதீப்போட கல்யாணத்த ஊர்ல வச்சாங்க..இல்லன்னா இந்த சான்ஸ மிஸ் பண்ணிருப்பேன்ல..அதுவும் அந்த ஊரும் செம்ம எடம்..மூனு நாள் நல்லா சுத்திட்டு வந்துர வேண்டியது தான்.."

"ஆமா நீ தான் அன்னிக்கி போறதில்லன்னு சொல்லிட்டு இருந்தியே..திடீர்னு எதுக்கு கெளம்பற..?" குரல் சலனமின்றி இருந்தாலும் மனமோ நீ சென்றிருக்க கூடாது என்று மௌனமாய் அரற்றிக் கொண்டல்லவா இருந்தது..?

"ஆமா நானும் அன்னிக்கி போர் அடிக்கும்னு போக வேணாம்னு தான் இருந்தேன்..அன்னிக்கி ஆஃபீஸ்ல பஸ் புக்க பண்ண பேர் கேட்டு இருக்காங்க போல..தாமர தான் என் கிட்ட காசு கட்டி பேர கொடுத்து இருக்கா..நல்ல வேள இல்லன்னா நா மட்டும் வீட்ல இருந்துருப்பேன்.." ஆசுவாசத்துடன் கூறிட பையனின் மனமோ பாவையவளின் தோழியை வைது தொலைத்தது.

"அப்போ தாமர பேர் கொடுக்கலனா உன்னால போயிருக்க முடியாதா..?"

"ஆமா அப்டி தான்..இல்லன்னா திரும்ப போய் பேர கொடுக்கறதுகு நானும் சங்கடப்பட்டு கிட்டு இருந்து இருப்பேன்..நல்ல வேள அவ அப்டி பண்ணது.." தோழியை பற்றி பேசி சிலாகித்துக் கொண்டிருந்தாள்,பையனின் மனம் பற்றி எரிவது தெரியாமல்.

"சாரே.."

"ம்ம்..என்ன..?"

"எதுக்கு இப்போ உர்ருன்னு இருக்கீங்க..? நியாயமா பாத்தா ரெண்டு நாள் என்னோட தொல்ல இல்லன்னு நீங்க சந்தோஷம் தான படனும்..?"

"அந்த சந்தோஷத்த தா இப்டி காட்டிட்டு இருக்கேன்.." வெடுக்கென அவன் சொல்லிட புரியாது தலை சொறிந்து நின்றாள்,அவள்.

"சந்தோஷம்னா சரி தான்..நீங்க தான் நாளக்கி காலைல நாலர மணிக்கு என்ன கொண்டு ஆஃபீஸ்ல விடனும்.."

"எதுக்கு..?" வேண்டுமென்று கேட்டு நின்றான்,பையன்.

"ஐயோ சாரே..இப்போ தான நாளக்கி பிக்னிக் போறோம்..அதுன்னு வெளக்கமா சொல்லிகிட்டு இருக்கேன்..நீங்க வேற.."

"சரி எப்போ கல்யாணம் அந்த பிரதீப்புக்கு..?"

"இன்னும் ரெண்டு நாள்ள..நாளன்னிக்கி அடுத்த நாள்.."

"சரி உனக்கு இன்விடேஷன் தந்தானா அவன்..?"

"இன்விடேஷன் தராம எப்டி சாரே போக முடியும்..?ஆஃபீஸ்ல இருக்குற எல்லாருக்கும் மொறயா இன்விடேஷன் வச்சுட்டான்..அதுவும் எனக்கு தந்த கார்ட்ல நம்ம ரெண்டு பேரயும் தான் இன்வைட் பண்ணிருக்கு.." வாய் ஓயாது பேசியவளோ ஒரு கட்டத்தில் உளறிக் கொட்ட பையனின் விழிகளில் இடுங்கல்.

எப்படியும் பாவையவள் திருமணமான பெண் என்று தெரியுமாதலால் தனியே திருமணத்துக்கு அழைப்பு விடுத்திருக்க மாட்டார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.அவர்களின் அலுவலகத்தின் பழக்கம் அப்படி.தன்னையும் அழைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளவே பையன் அப்படி கேட்டிட அவனின் எண்ணம் பொய்த்துப் போகவில்லை.

அவசரமாய் பேசி தான் உளறியது புத்தியில் உரைத்திட சட்டென பேச்சை நிறுத்தி நாக்கைக் கடித்து அசடு வழிய சிரித்திவளை கண்டும் அசரவில்லை,பையன்.

"என்ன திரும்ப சொல்லு.."

"அது ஒன்னுல்ல.."

"என்னன்னு சொல்லு திரும்ப.."

"அது ஒன்னுல்ல சாரே..ஆஃபீஸ்ல நா கல்யாணம் ஆன பொண்ணுன்னு எல்லாருக்கும் தெர்யும்ல..அதான் ஜோடியா வர சொல்லி இன்வைட் பண்ணாங்க..நா தான் உங்க கிட்ட சொல்லல.."

"நீ எதுக்கு சொல்லல.."

"பிரதீப் கல்யாண இன்விடேஷன் தர்ரப்போ நாம இப்டி பேசிக்க மாட்டோம்ல..அதான்..மத்த படி எதுவும் இல்ல.."

"அது எப்டி நீயாவே நா வர மாட்டேன்னு டிசைட் பண்ணலாம்..?" விழிகளால் கொக்கி போட்டு கேட்டவனின் வார்த்தைகள் புரிய அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டாலும் புரிந்தவுடன் அவள் வதனத்தில் பிரகாசம் ஏறியது.

"அப்போ நீங்க வர்ரேன்னு இன்டைரக்ட் சொல்றீங்களா..?" ஆர்வம் தொனிக்க கேட்டவளுக்கு ஆமென்று தலையசைத்தால் அது யாழவன் இல்லையென்று ஆகிவிடுமே.

"நா அப்டி சொல்லவே இல்லயே..நீயா வர்ரேன்னு சொன்னதா கற்பன பண்ணிக்காத.." அவளின் மகிழ்ச்சி மொத்தத்தையும் வடித்து விட்டவனை உறுத்து விழித்தாள்,அவள்.

"இந்த ரோபோவாட பேசி நாம கன்ஃபியூஸ் ஆகறது தான் மிச்சம்..கடவுளே காப்பாத்து.." தலையை உலுக்கிக் கொண்டு அவள் பிதற்ற அவளைப் பார்த்தவனின் பார்வையில் இருந்தது தான் என்ன..?

"என்ன ரொம்ப யோசிக்கற போல.."

"ச்சே அப்டிலாம் இல்ல..நாளக்கி காலைல நீங்க தான் என்ன ஆஃபீஸ்ல கொண்டு போய் விடனும்..கொண்டு விடுவீங்க தான..?"

"பாக்கலாம் டைம் இருந்தா.." அலட்டலின்றி சீண்டுவதற்கு மொழிய அவளுக்கோ ஒன்றும் புரியாத நிலை.

"என்ன திடீர்னு இப்டிலாம் பேசறீங்க..? என்னாச்சு உங்களுக்கு..? நல்லா தான இருந்தீங்க காலைல கூட.." முகத்தைச் சுருக்கி கேட்டவளுக்கோ அவனின் மனதில் ஓடிக் கொண்டிருப்பதை அறிய முடியாதே.

"எப்டி இருக்கேன்..அப்டி ஒன்னும் இல்ல..காலைல வேல ஏதாச்சும் இருந்தா கொண்டு போய் விட முடியாதுல..அதத்தான் சொன்னேன்..வேணும்னா அரவிந்த்கு ஃபோன் பண்ணி கொண்டு போய் விட சொல்லு..உன் அண்ணன் அத பண்ணுவான்.." தன்னுள் தோன்றியிருக்கும் உணர்வின் ஆழம் புரியாது அசட்டையாய் பையன் பேசி விட அலட்டிக் கொள்ளும் ரகமா யாழின் இசையவள்..?

"அட ஆமால..உங்கள விட்டா எனக்கு ஆளா இல்ல..சே நான் கூட அப்டி நெனச்சிட்டேன்..நா போய் அண்ணன் கிட்ட சொன்னா கொண்டு போய் விடுவார்ல..சரி அப்போ நா அவர் கிட்டவே போய் பேசறேன்.." சந்தடி சாக்கில் அவனை வாரி விட்டு அலைபேசியை எடுக்க ஓடியவளின் முதுகை மட்டுமே முறைத்திட முடிந்தது,பையனால்.

மூன்றரை மணிக்கே எழுந்து கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த மகராசியை உணர்ந்தும் விழி திறக்கவில்லை,பையன்.அவனுக்கோ இன்னுமே மனதின் உணர்வுக் கோலங்கள் மட்டுப்படாதது போல்.

அவளின் வெளியூர் கிளம்ப இருப்பது தெரிந்து ராமநாதனோ வயதை மீறி விடியும் முன்னமே விழித்திருக்க பையனோ அசைந்து கொடுத்தானில்லையே.

அரவிந்திடம் பேசிய பின் அவனே அழைத்துச் சென்று விடுவதாய் வாக்குக் கொடுத்திருக்க கிளம்பும் போது பையனை எழுப்பிக் கொள்ளலாம் என்று அவன் உறக்கத்தில் என நினைத்தபடியே தயாராகிக் கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தவளுக்கு மட்டும் அவனை விட்டுச் செல்வது வலிக்காதா என்ன..?

என்ன தான் இயல்பாய் அவள் காட்டிக் கொண்டாலும் மனதரோம் உண்டாகிற்ற உணர்வை உடைத்திட முடியவில்லை.அவள் அதற்கு முயலவுமில்லை.

இதழ் குவித்து ஊதிக் கொண்டு பையனைப் பார்த்தவளுக்கு இதழ்களில் எப்போதும் போல் புன்னகை சேர்ந்திற்று.

பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்.நேரம் நான்கு மணி பத்து நிமிடங்கள் எனக் காட்டிட பையனிடம் சொல்லி விட்டுக் கிளம்ப அவனை எழுப்பினாள்,பாவையவள்.

பிடிவாதக்காரனுக்கோ அழுத்தம் அதிகம் அல்வவா.முழங்கையின் மேற்பகுதியால் விழிகளை மறைத்து உறங்குவது போல் பாசாங்கு செய்தவனோ அவளின் அழைப்பு செவியில் விழுந்தும் சிறிதாய்க் கூட அசையவில்லை.

"என்ன இன்னிக்கி இப்டி தூங்கறாரு..எப்ப பாரு பொறந்த கொழந்த மாதிரி டைம்கே முழிச்சிகிட்டு இருப்பாரே..என்ன தான் ஆச்சு..?" மனசாட்சி வேறு அவளை கலாய்த்திட அவளுக்கோ செய்வதறியா நிலை.

"சாரே.." அவனின் தோற்பட்டையை பிடித்து அவள் உலுக்கிட அவளின் ஸ்பரிசம் என்றுமின்றி அத்தனை குளிர்மையைப் பரப்பியது,அவனுள்.இதயம் வேறு அவள் அருகாமையில் கொஞ்மாய் வேகமெடுக்கவும் செய்திருந்தது.

"சாரே.." மீண்டும் ஒரு உலுக்கலை பரிசளித்திட அவளின் அருகாமை தந்த இம்சை தாளாமல் விழித்தெழுந்தவனுக்கு சத்தியமாய் அவளை இன்னும் அலைக்கழிக்கும் எண்ணம் தான்.

"என்ன..?" கை மறைவில் கொட்டாவி விட்ட படி கேட்டான்,எதுவும் நினைவில் இல்லாதவன் போல்.

"என்னன்னா கேக்கறீங்க..? நா இன்னிக்கி பிக்னிக் போறேன் ஞாபகம் இருக்குல..பொய்ட்டு வர்ரேன்னு சொல்லத் தான் எழுப்புனேன்..சரி அப்போ நா பொய்ட்டு வரேன்.."

"ம்ம்.." ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

"பத்ரமா பொய்ட்டு வான்னு கூட சொல்லாம இருக்கே ரோபோ.." இதழ்களுக்குள் திட்டியவாறு நகர்ந்து சென்றவளை வழியனுப்பிட வாசலுக்கு கூட வரவில்லை,பிடிவாதக்காரன்.

"மாமா அவரு தூங்கறாரு..எழுப்ப வேணா.." ராமநாதனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியவளோ அடுத்த சில நிமிடங்களிலேயே அவனைத் தேடிக் கொண்டு மூச்சிறைக்க ஓடி வர சயனிப்பது போல் நடித்தவாறு இதழ்களில் கள்ளப் புன்னகையை கசியவிட்டான்,காரியக்காரன்.

உயிர்த்தொடும்.

2024.09.08
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 17(i)


விழிகளை இமைக்கதவுகள் கொண்டு சாற்றி இதழ்களில் புன்னகைத் துகளொன்றை ஏற்றி குமிழிட்ட சிரிப்பை கொத்தாய் அடக்கிய படி இருந்த யாழவனைக் கண்டிருந்தால் இசையவவளின் காதல் நெஞ்சம் கரைந்து வழிந்திருக்கும்.அதை உணராமல் அவளின் சத்தம் கேட்டு உள்ளுக்குள் எழுந்த மகிழ்ச்சியை அடக்கிய படி சாய்ந்திருந்தான்,கேடி.

மூச்சிறைக்க ஓடி வரும் நேரம் அவளின் கைக்கடிகாரத்தில் எத்தனை தடவை நேரத்தை பார்த்திருப்பாளோ..?
இன்னும் தன்னை அழைத்துச் செல்ல வராத அரவிந்தின் மீது சத்தியமாய் அவளுக்கு கோபம் வரவில்லை.

அரவிந்தின் குணம் பற்றி அறிந்தவளுக்கு அப்படி கோபம் கொள்ளவும் இயலாதிருக்க அவனுக்கு ஏதேனும் வேலையோ என அவனுக்காய் வாதிட்டது,பாவையவளின் மனம்.

பாவம்,அவளுக்கு எப்படித் தெரியும்..?
அவளைக் கட்டிய கேடியவன் தான்,தோழனுக்கு அவள் உறங்கிய பின் அழைத்து வர வேண்டாமென மறுத்து தான் அழைத்துச் செல்வதாய் ஒப்புக் கொண்டது.

இந்த சில நாட்களாய் கொஞ்சம் மாறித் தான் நிற்கின்றன,பையனின் நடவடிக்கைகளும் நடத்தைகளும்.இருப்பினும் யாழவனின் பிறழ்வுகள் அவனை இன்னும் இரசிக்கவல்லவா வைக்கின்றன..?

மெதுவாய் அவளறியாமல் அவன் இதழ்களுக்குள் படர்ந்திடும் புன்னகை..
சுழலும் விழிகளில் அவள் விம்பம் விழுந்தவுடன் உருப்பெறும் மினுமினுப்பு..
ஆழி விழிகள் ஆட்படுத்தும் போது ஜனித்திடும் அந்த தடுமாற்றம்..
அவள் அருகாமையில் தயங்கித் தயங்கி மெதுமாய் வேகமெடுக்கும் இதயத் துடிப்பு..
அவள் ஸ்பரிசம் உணர்கையில் உயிரின் அடி ஆழம் வரை பரவிடும் குளிர்மை..
எல்லாமே அழகு தான்.காதலின் தோன்றலுக்கான தோற்றப்பாடுகள் ஆகவிருப்பதால் அழகாகித் தெரிந்து பையனையும் வசீகரமாய் மாற்றி விடுதோ..?

ஆக,காதலால் அவனுக்குள் உண்டாகியிருக்கும் பிறழ்வுகள் அவனை இன்னும் மெருகேற்றி தொலைத்திருக்க அதை அவளும், ஏன் அவனும் கூட உணர்ந்து தொலைத்த பாடில்லை.

உணராமைகளும் புரியாமைகளும் அறியாமைகளும் காதலின் பிடிக்குள் மாட்டிடும் போது மட்டும் அத்தனை அழகாய்!

படக்கென்று கதவைத் திறந்து கொண்டு பையனின் அருகே வந்தவளுக்கு திடுமென பேசக் கூட இயலவில்லை.ஆழமாய் மூச்சு வாங்கிற்று.

"சாரே.." அறையின் விளக்கை ஒளிர விட்டு விட்டு அவனருகே வந்து நின்று அவள் மூச்சிறைக்க பேசிட அவனுக்கு புரிந்து போனது,அவள் வெகுதூரம் ஓடி வந்திருப்பது.

மனதின் ஓரிடம் அவளுக்காய் பரிந்துரை செய்தாலும் மறு புறம் "இவளுக்கு தேவ தான்.." என்கின்ற கடுகடுப்போடு கொக்கரித்தது.

"அதுக்குள்ள தூங்கிட்டாரா மனுஷன்.." என்ற படி நேரத்தைப் பார்த்தவளுக்கு பதட்டம் வேறு.

"சாரே.." அவனின் தோற்பட்டையை பிடித்து உலுக்கிட எதையும் வெளிக்காட்டாமல் பாசாங்கு செய்தவனின் இதயம் தடதடத்தது.

"சாரே..எந்திரிங்க ப்ளீஸ்..அரவிந்த் அண்ணாவ காணோம்..நாலர மணிக்கு பஸ்ஸ எடுத்துருவாங்க..இப்போவே டைம் ஆயிடுச்சு..யோவ் யாழ்வேந்தன்.."

".................."

"சாரே ப்ளீஸ் சாரே..ப்ளீஸ்.." அவனை உலுக்கிய படி கன்னத்தை தட்ட முயன்றவளின் செயலில் உள்ளம் மெல்ல படபடத்திட அப்போது விழிப்பவன் போல் கண் விழித்தான்,கேடி.

"எ..என்ன..?" குரலை மாற்றிப் பேசிட அந்த உறக்க கலக்கத்தில் வரும் குரல் தான் என்று நம்பி விட்டிருந்தாள்,அந்த மகராசியும்.

"அரவிந்த் அண்ணன காணோம்.."

"அதுக்கு..?" இரு புருவங்களை ஏற்றியிறக்கி முழங்கையை தலையணையில் ஊன்றி உள்ளங்கையால் பின்னந்தலையைத் தாங்கி ஒருக்களித்து படுத்த படி கேட்டிட அவளுக்கோ அவன் வினாத் தொடுத்த தோரணையில் கோபம் தான் வந்தது.

"ஐயோ அரவிந்த் அண்ணன் வர்ல சாரே..ஃபோன் பண்ணாலும் அட்டன்ட் ப்ணண மாட்டேங்குறாரு..நாலர மணிக்கு ஆஃபீஸ் கிட்ட போகனும்..இல்லன்னா பஸ் விட்டுட்டு போயிரும்.."

"அதுக்கு..?" உட்கன்னத்தை நாவால் அதக்கிய படி கேட்டவனின் செய்கையில் விட்டால் அழுதிருப்பாள்,அவள்.

"ஐயோ பஸ்ஸு விட்டுட்டு போயிரும்..நீங்க தான் என்ன கொண்டு போய் விடனும்.."

"ஓஹ்ஹ்ஹ்ஹ் ஈஸ் இட்..?" பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து சிந்திப்பது போன்று பாவனை செய்திட அவளுக்கு வந்ததே கோபம்.வந்தது தான்,ஆனால் காட்டிக் கொள்ள முடியாதே.

"இந்த மேனரிசத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல..நேரம் கெட்ட நேரத்துல இது தேவ தான்.." மனதுக்குள் திட்டியவளோ அவனைப் பாவமாய் பார்த்திட அந்த வதனத்தின் உணர்வுகளை படிக்கத் தெரியாதவனா பையன்..?

உணர்வுகள் ஏதும் புலப்படா விழிகளுடன் அடுத்தவரின் உணர்வுகளை துல்லியமாய் படித்திடும் பிடிவாதக்காரன் அவன்.
அவனுக்கு அவளின் மனதில் ஓடும் எண்ணம் புரியாது போகாதே..?

"நேத்து யாரோ என்ன விட்டா வேற ஆளு இல்லயான்னு சொன்னதா ஞாபகம்.."

"ஐயோ..அது சும்மா தான் சொன்னேன்..சும்மா ஒரு தடவ கலாய்க்கிறதுக்கு...சாரி சாரே..முரளி சார் வேற ரொம்ப ஸ்ட்ரிக்டு..டைம்கு வர்லன்னா விட்டுட்டு போய்ருவாரு.."

"ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஈஸ் இட்..? ரைட் ரைட்.." அதே தோரணையில் இருந்த படி மொழிந்தவனின் அருகே அவள் குனிந்தமர முயல படக்கென்று எழுந்து கொண்டான்,பையன்.

விழிகளுக்குள் சிக்கி விக்கித்துப் போய் நின்றிட அவன் விரும்பவில்லை,போலும்.பின்னே,விழி விபத்தினால் சிக்கினால் அவனின் ஆன்மா ஆடிப் போயிடுதே..?

"என்ன சாரே கூட்டிட்டு போறீங்களா ப்ளீஸ்.."

"சரி இரு ஃபைவ் மினிட்ஸ்ல வர்ரேன்.." குரலில் வழிந்த கேலியுடன் அவன் சொல்லிச் சென்ற போதே அவன் சுதாரித்திருக்க வேண்டும்.பத்து நிமிடங்கள் கழித்து தான் குளியறையில் இருந்து வந்தான்,அவன்.

எப்படியும் அவளை அங்கு கொண்டு விட்டு வந்து இதர வேலைகளை செய்து கொண்டிடலாம்.கேடியவன் இருக்கும் மனநிலைக்கு அதுவெல்லாம் சாத்தியமாகுமா என்ன..?

மெதுவாய் முகம் கழுவி மெல்ல பல் துலக்கி அவன் வெளியே வந்திட அவனை முறைக்கக் கூட முடியாமல் தொங்கிப் போயிருந்துது,அவள் முகம்.

"இப்போவே நாலர மணி ஆச்சு சாரே..ப்ளீஸ் சீக்கிரம் வாங்க.." அவள் அவசரப்படுத்த தீவிரமான முகபாவத்துடன் அவன் முன்னே நடந்திட அவள் ஆசுவாசப் பெருமூச்சு விட்டது தான் தாமதம்,மீண்டும் அறைக்குள் வந்து வாசனைத்திரவியத்தை தன் மீது விசிற விட கொலைவெறியானது,பாவையவளுக்கு.

"யோவ்வ்வ்வ்வ்வ்.." அவள் பற்களை நறநறத்தவாறு முகத்தில் கொலைவறி மின்ன தன்னை விழிகளால் உரசுவது தெரிந்தும் அசரவில்லை,அவளின் ரிதம்.

"என்ன எதுவுமே பேச மாட்டேங்குற.." சீண்டிக் கேட்ட படி வண்டியோட்டியவனை தன்னால் முடிந்தளவு முறைத்தாள்,அவள்.அவளுக்கு எக்கச்சக்கமாய் கடுப்பு.

"பேசுனா ஏதாச்சும் திட்டிறப் போறேன்..அதான் பேசாம வர்ரேன்..நல்லா வந்துரப் போகுது வாய்ல.."

"ஓஹ்..ஈஸ் இட்..?என்ன திட்ற அளவுக்கு உனக்கு கொழுப்பு கூடிப் போச்சா..? அந்தளவு தைரியம் யாரு கொடுத்தா..?" முகத்தில் கடுமையை தேக்கி விழிகளில் அதட்டலைக் காட்டி இயந்திரம் போல் கேட்ட பையனின் செயலில் அவள் சற்றே பயந்து தான் போனாள்.அவளின் பயத்தைக் கண்டு இதழ்களுக்குள் புன்னகையை அடக்கிக் கொண்டான்,கேடி.

அவளுக்கு பயம் வந்தாலும் அதை உதைத்துத் தள்ளும் நிலையில் அல்லவா இருந்தது அவளின் கோபம்..? ஏனோ அந்த கோபம் அவளின் பயத்தை கொஞ்சம் மறக்கடித்தது.

"கொஞ்சம் கொழுப்பு கூடித் தான் இருக்கு..எனக்கா உங்களுக்காங்குறது தான் டவுட்.."

"நா என்ன பண்றேன்..நா பேசாம தான வர்ரேன்..தோ உனக்காக இந்த காலைல எழுந்து இந்த குளிர்ல ட்ரைவ் பண்ணி..நீ பாவமேன்னு தான் நா வண்டியோட்டிட்டு வர்ரதே.."

"வண்டிய ஓட்டிட்டு வர்ரீங்கன்னு சொன்னா நா காண்ட் ஆயிருவேன்..இருவதுல வச்சி வண்டிய உருட்டிட்டு வர்ரீங்க.." குரலை தாழ்த்தி அவள் கடுப்படிக்க அது கூட அவனுக்கு அத்தனை பிடித்திருந்தது.அவன் வேண்டுமென்றே சீண்டுவதும் அவள் அதை உணராமல் ஏட்டிக்கு போட்டியாய் கோபம் பையனுக்கு ஏனோ வெகுவாய் பிடித்தல்லவா தொலைத்திருந்தது..?

"பின்ன இத விட ஸ்பீடா எப்டி தான் வண்டியோட்றது..?"

"ஆமா இவரு அப்டியே மெதுவா தான் போவாரு..வண்டில வர்ரவனுக்கு வழி முழுக்க பயத்த காட்டி கூட்டிட்டு போற ஆளு..இவரால ஸ்பீடா போக தெரியாதாம்..எங்கப்பா அப்போவே ட்ரைவிங் கத்துக்கோன்னு..ட்ரைவிங் கத்துக்கோன்னு தலப்பாடா அடிச்சிகிட்டாரு..நா தான் வேணா வேணான்னு சொல்லிட்டு திரிஞ்சேன்..இப்போ எனக்கு நல்லா தேவ தான்.."

"இசை..நேத்து வண்டில ஏதோ அப்சட்..அது தான் இவ்ளோ மெதுவா ஓட்டிட்டு வர்ரேன்..வேணும்னா அரவிந்த்கு ஃபோன் பண்ணி கேளு.." குரலை மாற்றி அவள் நிஜம் போலோ சொல்லிட அவளின் முகத்தில் குழப்பமான பாவம்.

"நெஜமாவா சொல்றீங்க..?"

"ஏன் நா சொன்னா நம்ப மாட்டியா நீ..?" அவனின் ஆழ்குரலை நம்பிட மறுக்குமா காதல் மனம்..?

"அப்டியா...சரி நாம மெதுவா போலாம் அப்போ.." நிஜமென நம்பி சோக கீதம் வாசித்தவளை உரசிய பையனின் ஓரவிழிகளில் தெரிந்த உணர்வின் பெயர் தான் என்ன..?

நேரத்தை பார்த்திட அது நான்கு மணி நாற்பது நிமிடம் எனக் காட்டிட அவளுக்கோ தாம் குறித்த நேரத்துக்கு அலுவலக வளாகத்தை அடைந்திடுவோம் என்கின்ற நம்பிக்கையே இல்லை.

முகம் வாடி வதங்க இருக்கையில் கண்மூடி சாய்ந்தவளை அடிக்கடி அவனின் விழிகள் அனுமதியின்றி தொட்டு மீள பின் காதோரமாய் விரல் நுழைத்து சிகை கோதி விட்டவனோ இதழ் குவித்து ஊதிக் கொண்டு பார்வையை திருப்பினான்,பாதைக்கு.

பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்.இன்னும் அலுவலகம் வந்திடவில்லையா என்கின்ற ஏக்கத்துடன் இமை திறந்தவளுக்கு வந்ததே கடுப்பு.அந்த கடுப்பை மெல்ல இதழோரம் துடிக்க உரசிக் கொண்டிருந்தான்,பையன்.

"சாரே..என்ன பண்றீங்க..?"

"நா என்ன பண்ணுனேன் இசை..ட்ரைவ் தான பண்ணிட்டு இருக்கேன்..அதுல ஏதாச்சும் ப்ராப்ளமா..?" கேட்டவனின் குரல் வேறு யாரினது செவியிலும் விழுந்து இருந்தால் அப்பாவி என நினைத்திருக்கக் கூடும்.

"ஐயோ இது எங்க ஆஃபீஸ் போற ரூட்டே இல்ல..நீங்க வேற ரூட்ல போய்ட்டு இருக்கீங்க.."

"நா மட்டுல்ல நீயும் தான்.."

"ஐயோ..இப்போ க்ரெமர் மிஸ்டேக் கரெக்ட் பண்றதா முக்கியம்..ப்ளீஸ் தயவு செஞ்சி வண்டிய திருப்புங்க..ஏற்கவனவே பதினஞ்சு நிமிஷம் லேட்.." அவள் பதற அவனோ அலட்டிக் கொள்ளாது இருந்ததன் காரணம் தான் என்ன..?

"இல்ல இசை..இது தான உன் ஆஃபீஸ்கு போற ரூட்..நா முன்ன பின்ன உன் ஆஃபீஸ்கு வந்தது கெடயாது..கூகுள்ல சரியா தான லொகேஷன் காட்டுது.."

"ஐயோ சாரே இந்த ரூட் இல்ல..நீங்க வந்தது இல்லன்னா என எழுப்பி கேட்டருக்கலாம்ல..நா கண்ண மூடி தூங்காம சாஞ்சிகிட்டு தான இருந்தேன்.." பதபதைத்தவளுக்கு அவன் தன்னுடம் விளையாடிப் பார்க்கிறான் என்கின்ற எண்ணம் வரவே இல்லை.அந்தளவு பதட்டத்தில் குளித்திருந்தாள்,அவள்.

"நீ வேற கண்ண மூடிட்டே சாஞ்சு இருந்தியா..நா வேற தூங்கி இருந்ததா நெனச்சுட்டேன்.." இதழ் பிதுக்கி கூறியவனை நம்பித் தானே ஆக வேண்டும் அவள்..? அவளைப் பொறுத்த வளை அவன் உண்மை விளம்பி அல்வவா..?

பாவையவளுக்கோ அழுகை வரும் போல இருந்தது.இந்த பயணம் செல்ல அனைவரையும் விட ஆர்வத்துடன் தாயாராகியது அவளாகத்தான் இருக்கும்.

முகத்தில் வருத்தம் தேக்கி அமர்ந்திருந்தவளைக் கண்டும் இன்னும் இறங்கி வரவில்லை,அந்த பிடிவாதக்காரன்.எப்படி அவள் தன்னை விடுத்து அரவிந்திடம் உதவி கேட்டிடலாம் என்கின்ற பிடிவாதம் தான் அவனின் இத்தனை செயலுக்குமான அடித்தளம் என்று அவளுக்கு யார் தான் புரிய வைத்திட..?

பிடிவாதம்,அவனின் நினைப்பு அப்படித் தான்.ஆனால் அவனின் நினைப்பு பொய் போலும்.அது ஒன்றும் பிடிவாதம் போல் தோன்றவில்லை.அவள் மீதான உரிமையுணர்வாய் அல்லவா தோன்றித் தொலைக்கிறது..?

ஏற்கனவோ நொந்து போயிருப்பவளை இன்னும் சோதிக்கும் விதமாய் அவனை வண்டியை நிறுத்த விழுக்கென நிமிர்ந்து விழி திறந்து பார்த்தவளுக்கு இதழ் பிதுங்க மறுப்பாய் சிரசை இடம் வலமாய் அசைத்தான்,பையன்.

"வண்டி ஸ்டார்ட் ஆகல..ரிப்பேர் ஆயிருச்சுன்னு தோணுது.." அவளின் பதிலுக்கு கூட காத்திராமல் வெளியே இறங்கி வந்து பழுது பார்ப்பது போல் சைகை காட்டிட பாவையவளுக்கு சத்தியமாய் அத்தனை கோபம்.அந்த கோபம் கண்ணீராய் உருமாறி விழிகளில் ஈரமாய் சேர்ந்து நின்றது.

சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு மெல்லிய வெளிச்சம் பரவியிருந்தாலும் இருட்டு வேறு கோபத்தை தந்தது.

"வண்டி ஸ்டார்ட் ஆகும்னு தோணல இசை..இப்போ என்ன பண்றது..?" முகத்தில் வருத்தத்தை காட்டி அவன் கேட்டி அதை நிஜமென நினைத்தவளும் பரவாயில்லை என்று சைகை செய்திட ஏனோ பாவையவளை இன்னும் பிடிக்கத் தான் செய்கிறது.

எந்த நிலையில் அவனைக் காயப்படுத்தா அவள் நேசம் அவனை முழுதாய் நெகிழ வைத்திடாமல் இருந்தால் அந்த நேசத்தின் அர்த்தம் தான் என்ன..?
ஆழம் தான் என்ன..?

"வா இன்னும் பத்து நிமிஷம் ஏதாச்சும் வண்டி வருதான்னு பாக்கலாம்..அப்டி இல்லன்னா ஏதாச்சும் பண்ணலாம்.." என்றவனோ காரில் சாய்ந்து நின்றிட இருள் தந்த பயத்தில் அவனருகே வந்து நின்றாள்,அவள்.

"என்ன என் மேல கோவமா இருக்கியா..? அமைதியா இருக்க..?"

"உங்க மேல எதுக்கு கோவப்பட போறேன் சாரே..வண்டி நின்னது என்ன நீங்க வேணும்னா பண்ணுனீங்க..என்ன அவங்க கூட போக முடியாதுன்னு வருத்தமா இருக்கு..அதான் இப்டி இருக்கேன்.." தளர்ந்த குரலில் கூறியவளோ தலை தாழ்த்தி இருக்க திடுமென செவியில் விழுந்த ஓசையில் நிமிர்ந்து பார்த்தாள்,அவள்.

பெரும் ஆர்ப்பரிப்புடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது,அவர்கள் சுற்றுலா செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரூந்து.

உயிர்த்தொடும்.

2024.09.09
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 17(ii)


தம்மை நோக்கி வருவது அவர்களின் பேரூந்து தான் எனப் புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது,பையனுக்கு.

சத்தம் கேட்டு தலை உயர்த்தி பார்த்தவளின் விழிகளில் அதிர்வும் குழப்பமும் தோன்றியிருக்க சரேலென திரும்பி பையனை ஏறிட்டவளை கவனியாது தோளைக் குலுக்கினான்,அவன்.

"இது நாங்க போறாதா இருந்த பஸ்ஸு தான..ஆமா அப்டி தான் தோணுது..அது எதுக்கு இந்த ரூட்ல வருது.." அவள் குழம்பிப் போய் கேட்டிட இரு இதழ்களையும் அழுந்த ஒட்ட வைத்து இலேசாக இருபுறமும் தலையசைத்து மறுப்பை தெரிவித்து விட்டு காரில் பையன் ஏறிக் கொண்டு வண்டியை இயக்கிட அப்போது தான் கொஞ்சமாய் அவளின் மண்டைக்கு உரைத்தது.

"அப்போ கார் நிக்கலயா.."

"ம்ஹும்.."

"வேணும்னே தான் மெதுவா வந்தீங்களா.."

"இல்லன்னு சொல்ல முடியாது..பஸ்ஸு பக்கத்துல வந்துருச்சு..போ போய் ஏறு.." விரட்டியவனுக்கு தான் அவளின் கணவன் என்று வேறு யாருக்கும் தெரிந்து விடுமோ என்கின்ற பயமும் சிறிதளவு.

"அப்போ வேணும்னு தான் என்ன வம்புக்கு இழுத்தீங்களா..?"

"ஆமான்னே வச்சிக்கோயேன்..பத்ரமா பொய்ட்டு வா...எத பத்தியும் யோசிக்காம என்ஜாய் பண்ணிட்டு வா..எங்க இருக்கன்னு அடிக்கடி மெஸேஜ் போட்டுட்டே இரு..போ இசை பஸ்ஸு பக்கத்துல வந்திருச்சு.."

அவன் தன்னுடன் இயல்பாய் நீண்டே நேரம் உரையாற்ற அவளுக்கோ அதுவே பெரும் அதிர்வு.பேயறைந்தது போல் பார்த்திருந்தவளுக்கு இன்னுமே அவனின் வார்த்தைகள் நம்ப முடியவில்லை.

"இசை.."

"ஹான்..எதுக்கு வேணும்னே வம்பிழுத்தீங்க..?" சிந்தை கலைந்தவளோ முறுக்கிக் கொள்ள யாழவனின் விழிகள் சுருங்கின.

பின் காதோரமாய் சிகைக்குள் விரவ் நுழைத்து கலைத்த படி "சும்மா.." என காற்றில் கலக்காத ஓசையுடன் ஒற்றைக் கண் அடித்து அவனிதழ்கள் உச்சரித்திட பாவையவளின் இதயம் அப்படியே மண்டியிட்டு தொலைத்தது,என்றும் கண்டிடா யாழவனிடம்.

பாவையவள் பேரூந்தில் ஏறிக் கொள்ள முன்னமே வண்டியைக் யாரும் காணாது கிளப்பிக் கொண்டு வீட்டுக்கு வந்தவன் கட்டிலில் சரிய தானாக மூடிக் கொண்டன,விழிகள்.

காலையில் விழித்த பின் பையன் உறங்குவது மிகவும் அரிது.சிறு வயது முதலே அவன் பழகிய பழக்கம் அது.

ஆனால்,ஏனோ உறக்கத்தில் விழுந்திருந்தான்,தன்னை மீறி.மனதின் சோர்வு உடலையும் அசதியாக்கி விட்டதோ..?
யாரறிவர்..?

வழமைக்கு மாறாய் விழிப்புத் தட்டியது என்னவோ பத்து நிமிடங்கள் கடந்து தான்.நேரத்தை பார்த்து சலிப்புடன் எழுந்து கொண்டவனுக்கு ஏனோ கோபம்.

"எங்க பொய்ட்டா இவ..காலைல லேட்டான்ன எழுப்பி விட்றது தான.." பாவையவளுக்கு திட்டித் தீர்த்த பின்னர் தான் அவள் வீட்டில் இல்லை என்கின்ற நிஜம் உரைத்திட இதழ் குவித்து ஊதிக் கொண்டான்,பையன்.

"ஊஃப்ப்ப்ப்ப்ப்ப்ப்" பெருமூச்சு விட்டவனுக்கு தன்னையே புரிந்து கொள்ள முடியாத நிலை.

மனம் முழுவதும் பரவிய வெறுமையுடன் குளித்து தாயாராகி வந்தவனோ நிலைக் கண்ணாடியின் முன்னே நின்று தன் விம்பம் ஆராய்ந்திட எப்போதும் இருக்கும் இறுக்கம் இருந்தாலும் ஏனோ முகத்தில் சிறு சோர்வு.

வெகுவாய் பிரயத்தனப்பட்டு தன்னை மீட்டுக் கொண்டவனின் செயலை கவனித்த ராமநாதனுக்கு சிரிப்பு தாளவில்லை.

மகனின் குணம் அறிந்தவருக்கு அவனின் மாற்றங்கள் தெள்ளத் தெளிவாய் விளங்கியதே.

மனதுக்குள் சிந்தனை சுழன்றடிக்க ஏதொ பெயருக்கென உண்டு முடித்தவனோ தடதடவென தன் அறைக் கதவை தட்டிட அவன் தட்டிய சத்தத்தில் கூடத்தில் இருந்த ராமநாதனுமே எட்டிப் பார்த்திட்டார்.

"எதுக்கு இப்ப இவன் கதவ தட்டறான்..?" அவர் யோசித்திட அது புரிந்தவன் போல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் பையன்,தனியாக.

"இசை இன்னும் என்ன பண்ற..? ஏற்கனவே லேட்டாயிடுச்சு வா.." அவசரமும் சிறு கோபமும் கலந்த குரலில் அவன் கத்திக் கொண்டிருக்க கட்டுப்படுத்த முடியாமல் குபீரென சிரித்து விட்டார்,மனிதர்.

அவரின் சிரிப்பு சத்ததில் கலைந்தவனுக்கு சத்தியமாய் அவள் வீட்டில் இல்லை என்பது மறந்து தான் போயிருந்தது.

இது வரை யாருடனும் இத்தனை இணக்கமாய் நடந்து கொண்டிராதவன் முதலில் நெருங்கிப் பழகத் துவங்கியது,அவளுடன் தான்.

தானறியாது மனிதரை ஏமாற்றிட அவன் பழகிக் கொண்ட பழக்கம் தன்னாலே அவனுடன் ஒட்டிக் கொண்டிருந்தது கொஞ்சம் வியப்புக்குரிய விடயம் தான்.

காலையில் அவன் எழுவதுடன் அவளை எழுப்பி விடுவதும்..
தனக்கு காஃபி கலக்குகையில் அவளுக்கும் கொடுப்பதும்..
அவசர கதியில் தாயாராகுபவளுக்கு பகலுணவை கட்டிக் கொடுப்பதும்..
கடமைக்காக என்றாலும் அவளுடன் சேர்ந்து காலையுணவை எடுத்துக் கொள்வதும்..
தளர்ந்த நடையுடன் தயாராகி வருபவளை கடுப்புடன் கை பிடித்து இழுத்துச் செல்வதும்..
வண்டியில் அவளுடன் செல்கையில் அவள் மௌனமாய் இருப்பினும் அவள் இருப்பை உணர்ந்து கொள்வதும்..
அவனுக்கு பழகிப் போயிருப்பதை அவனே உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

"எதுக்கு சித்தப்பா சிரிக்கிறீங்க..?" தானாய் ஒன்றை யோசித்து கடுப்பில் இருந்தவனுக்கோ அவரின் சிரிப்பு இன்னும் கோபத்தை தந்திருக்க வேண்டும்.

"முத்திடுச்சு.." என இதழுக்குள் மொழிந்து கொண்டவர் அவனுக்கு பதில் தர சில நொடிகள் எடுத்தது,பையனை இன்னும் சோதிப்பது போல்.

"ஒன்னுல்ல வேந்தா யாரும் இல்லாத ரூம் கதவ எதுக்கு தட்டிகிட்டு இருக்க..அதான் யோசிச்சிகிட்டு இருக்கேன்.." இயல்பான தொனியில் அவனை கலாய்த்திட தன் எண்ணத்தை நினைத்து தன்னையே நொந்து கொண்டான்,பையன்.

"என்னாச்சு யாழ் உனக்கு..?" பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து கோதிக் கொண்டவனோ தலையை குனிந்தவாறே அவரை கடந்து வெளியேற பையனின் மனசாட்சியும் அவனை வாரி சிரித்தது.

அலுலவகத்துக்குள் நுழைந்ததாயிற்று.தினந்தோனும் வேக நடையுடன் கடந்து செல்லும் முதலாளியை எதிர்ப்பார்த்தவர்களுக்கு அது பொய்யாகவில்லை என்றாலும் அவனின் நடையில் இருந்த சிறு தொய்வு பையனுக்கு மட்டுமே தெரிவதாய்.

"என்னடா மொகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு..ஒடம்பு ஏதும் சரியில்லயா என்ன..?" அக்கறையுடன் விசாரித்த தோழனுக்கு வார்த்தைகளின்றி தலையசைப்பை பதிலாய்க் கொடுத்தவனை புருவம் சுருங்கிடப் பார்த்தான்,தோழன்.

மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தாலும் இடையிடையே கவனத்தை சிதற விட்ட விழிகளும் மேசையில் இருந்த பேபர் வெயிட்டை தான்தோன்றித்தனமாய் உருட்டிக் கொண்டிருந்த விரல்களும் சலப்பின் சாயலை தனக்குள் தோய்த்துக் கொண்டு மாறி மாறி ஏறியிறங்கிய புருவங்களும் சுழல் நாற்காலியில் தயவில் தரையில் ஓரிடத்தில் இராமல் ஆங்காங்கே தொட்டு மீண்ட பாதங்களும் அவனுள் தோன்றியிருக்கும் மாற்றத்தை கொஞ்சமாய் பிரதிபலித்து நின்றது என்னவோ உண்மை.

நேரம் பகல் பத்து மணியை தாண்டியதாயிற்று.அடிக்கடி அலைபேசியை எடுப்பதும் மீள வைப்பதுமாக இருந்தவனின் முகத்தில் கோபத்துடன் பதட்டம் கொஞ்சமாய்.

"என்ன பண்றா இவ..? ஒரு மெஸேஜயும் காணோம்.." மனதுக்குள் அர்ச்சிதவன் தான் முன்பிருந்த யாழவன் என்றால் சத்தியமாய் யாராலும் நம்பிட இயலாது.

யோசித்து யோசித்து பார்த்தவனோ பொறுமையின்றி பாவையவளுக்கு அழைப்பு விடுக்க அவனை மேலும் கோபமேற்றுவது போல் அவளோ அழைப்பை ஏற்றிடவில்லை.

மூன்று முறை அழைத்து பார்த்தவனுக்கோ பொறுமை பறிபோக அழைத்திருந்தான்,முரளியின் எண்ணுக்கு.

அதீத சத்தத்தில் ஒலித்த இசையில் தலை வலிக்கத் துவங்கிட ஓரமாய் ஒதுங்கி அமர்ந்திருந்த முரளியோ திரையில் மின்னிய புதிய எண்ணைக் கண்டதும் யோசனை ரேகை படர்ந்திட ஏற்றிட மறுமுனையில் பையனின் குரலைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது,அவனுக்கு.

"சார்ர்ர்ர்ர்.."

"ஆமா நா வேந்தன் பேசறேன்..எங்க இருக்கீங்க..?"

"நாங்க டூர் போறோம் சார்..பஸ்ல இருக்கேன்.."

"பச்ச்..எந்த எடத்துல இருக்கீங்க..?" அவன் சலிப்பாய் கேட்டிட இடத்தைச் சொன்னதும் தான் பையனின் மனமும் சமப்பட்டது.

"ம்ம் ஓகே..இசை எங்க இருக்காங்க..?" தயக்கம் களைந்து கேட்டவனுக்கு பதில் சொல்லிட அவனுக்கு யாரைச் சொல்கிறான் என்று பிடிபட வேண்டுமே.

"சார் யார சொல்றீங்க..?"

"அரசி..மை வைஃப்.." அழுத்தமான குரலில் பேசியவனின் "மை வைஃப்" என்கின்ற வார்த்தைகளில் மட்டும் அழுத்தம் சற்றே அதிகமாய்.

"ஒரு நிமிஷம் சார்.." படக்கென்று எழுந்து கொண்டு பாவையவளை தேடிட பின்னிருக்கையில் அமர்ந்து உறங்கியிருந்தாள்,அவள்.

"சார் அரசி மேடம் தூங்கறாங்க..என்ன பண்ணட்டும்..? எழுப்பி ஃபோன கொடுக்கவா.." அமைதியான குரலில் கேட்டிட பையன் வார்த்தைகளால் மறுப்புச் சொல்ல அவனின் சிரசும் அதற்கு ஒத்து ஊதியது.

"ம்ஹும் வேணா..ஐ கால் ஹர் லேட்டர்..முரளி நீங்க எங்க இருக்கீங்கன்னு அடிக்கடி அப்டேட் பண்ணிட்டே இருங்க காட் இட்ட்ட்ட்..?"

"ஓகே சார்..ஷ்யூர்.."

"கார்த்திக் சார் உங்க கூட வந்து இருக்காரா..?"

"இப்போ இல்ல சார்..பட் லன்ச்கு அப்றம் ஒரு மூணு மாதிரி எங்க கூட வந்து பஸ்ல ஜாய்ன் பண்ணிக்கறதா சொன்னாரு சார்.."

"ஓகேஏஏஏஏஏ" அவ்வளவு தான் அவனின் உரையாடல்.அத்தோடு அழைப்பை துண்டித்திருக்க முரளியின் இதழ்களில் சிறு முறுவல்.

பையனுக்கு ஏக கடுப்பு.வேலையில் மூழ்கினாலும் அவனின் ஆழ்மனமோ அவளின் குறுஞ்செய்திக்காக காத்துக் கிடக்க அது எதுவும் புரியாது உறங்குகிறாள் என்று புரிந்ததும் முறுக்கிக் கொண்டது,மனசாட்சி.

அவளும் ஏன் தன்னைப் போலவே தவிக்க வேண்டும் என மனம் வாதிடுவதன் காரணத்தை ஆராயவில்லை,பையன்.ஆராய்ந்து இருந்தால் அது நேசம் துளிர்ப்பதன் துவக்கம் என்று அறிந்திருக்கக் கூடும்.

இங்கோ,
பாவையவளின் அலைபேசியை கையில் வைத்திருந்த தாமரைக்குத் தான் பையனிடம் இருந்து வந்த அழைப்பினால் மீள முடியா அதிர்வு.

சமீப நாட்களாய் தோழியிடம் தெரிந்திடும் துள்ளலை உணர்ந்து இருந்தாலும் பையனுடன் இருப்பது தான் அதன் காரணம் என்று ஊகித்திருந்தாள்,தானாகவும் தவறாகவும்.

அவளைப் பொறுத்த வரை இசையவளின் நேசத்துக்கு யாழவன் சற்றும் பொருத்தமானவன் இல்லை என்கின்ற எண்ணம்.அவளின் நேசத்தை புரிந்து கொள்ள மறுப்பவனின் மீது மலையளவு கோபமும் வரும்,சில சமயங்களில்.

அதுவும் அரவிந்த் தம் காதல் விடயத்தை இன்னும் பகிரங்கப்படுத்தாது பையனுக்கு பயந்து மறைவாக வைத்திருப்பதும் அந்த கோபத்திற்கு ஒரு காரணம் என்றால் பொய்யல்ல.

பாவையவளை பையன் புறக்கணிப்பதை மட்டுமே கண்டவளின் எண்ணத்தில் பிழை சொல்லவும் இயலாது தான்.இன்னுமே பையன் அவளை அலட்சியப்படுத்துவதாகவே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு இந்த அழைப்பு பேரதிர்வாகத் தானே இருக்கும்.

ஓயாது இரு முறை அடித்தோய்ந்த அலைபேசியின் சத்தமும் அதனைத் தொடர்ந்து வந்து விழுந்த குறுஞ்செய்திகளும் அவளுக்கு மயக்கத்தை தராவிடின் தான் அதிசயம்.

"நாம தான் இதுங்க ரெண்டு பேரும் ஒட்டாம இருக்குறாங்கன்னு நெனச்சிகிட்டு மெண்டல் மாதிரி யோசிக்கிறோமோ..ஆனா இப்போ அப்டி இல்ல போல இருக்கே.." அவள் தனக்குள் உழன்று கொண்டிருக்கும் போதே விழிப்புத் தட்டியது,பாவையவளுக்கு.

கை மறைவில் கொட்டாவி விட்ட படி சோம்பல் முறித்தவளின் வதனத்தின் முன்னே அவள் அலைபேசியை பிடித்துக் காட்ட அவள் விழிகளில் அதிர்வு பரவியது.

"ஐயோ ரோபோ வேற ஃபோன் பண்ணி இருக்கே.." தோழியின் கரத்தில் இருந்து அலைபேசியை வெடுக்கென பிடுங்கியவளோ பையனுக்கு அழைத்திட அத்தனை எளிதில் அழைப்பை ஏற்று பதில் சொல்லிடுவானா பிடிவாதக்காரன்..?

தொடுதிரையில் மிளிர்ந்த அவளின் பெயரை விழியெடுக்காது பார்த்திருந்தானே ஒழிய விரல்கள் கூட அழைப்பை ஏற்றிட நீளவில்லை.

முழுதாய் ஒரு முறை அழைப்பு சென்றும் அவன் ஏற்காதிருக்க அவன் ஏதோ வேலையில் இருப்பதாய் நினைத்து அவள் மீண்டும் அழைத்துப் பார்த்திடும் எண்ணத்தை கைவிட பையனின் மனமோ ஆறவில்லை.

"ஒரு தடவ தானா மேடம் எடுப்பீங்க..?" கடுப்படித்துக் கொண்டவனுக்கு அவளிடம் மீள மீள அழைப்பெடுத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என கட்டளையிட்டிருந்தது தான் தான் என்பது நினைவிலேயே இல்லை.

"ச்சே ரோபோ ஃபோன் பண்றப்போவே எடுத்து இருக்கலாம்.." மருகியவளுக்கு தோழியின் சந்தேகப் பார்வை கவனத்தை இழுத்தெடுத்தது.

"என்ன டி இப்டி பேய பாக்கற மாதிரி பாத்துட்டு இருக்க..?"

"இல்ல சத்தியமா எனக்கு ஒன்னு புரியல..நீ தான் ரோ..அண்ணன லவ் பண்ணுன..ஆனா அது லவ்வுன்னு உனக்கு புரிஞ்சதே உங்க கல்யாணத்தன்னிக்கி தான்.."

"ஆமா அதுக்கென்னடி இப்போ..?"

"அப்றமும் அவர் கிட்ட நீ லவ் பண்றத சொல்லவே இல்ல..அவரா புரிஞ்சிக்கனும்னு எதிர்பாத்த..அவரு உன் மேல எரிஞ்சு விழுந்தாலும் கண்டுக்காம இருந்த.."

"ஆமா எதுக்கு இப்போ நீ இதயெல்லாம் சொல்லிட்டு இருக்க..?"

"இல்ல பின்ன நா கேக்கறேன்..இவ்ளோ நாள் உன் கிட்ட கோவமா காச் மூச்னு கத்திகிட்டு இருந்த மனுஷன் என்ன திடீர்னு இவ்ளோ நல்லவரா மாறிட்டாரு..? ஃபோன் பண்றதும் மெஸேஜ் போட்றதும்..சத்தியமா எனக்கு புரில..நீ தான அவர லவ் பண்ற..அவரு அதுக்காக தான உன் கிட்ட ரகட்டாவே நடந்துக்குறது..இப்போ என்னன்னா திடீர்னு எல்லாமே தலகீழா நடக்குது..?" நிஜமான வியப்புடன் கேட்டிட மெல்ல இதழ் பிரித்து சிரித்தாள்,யாழின் இசையவள்!

உயிர்த்தொடும்.

2024.09.09
 
Status
Not open for further replies.
Top