ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யாழின் இசையாய் -கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 25(ii)


அவன் ஏற்கனவே அவளுக்கு காதல் ஒன்று இருந்திருக்க மாட்டாது என்பதை ஊகித்திருந்தாலும் அது உறுதிப் படுத்திக் கொள்கையில் கோபமாய் வந்தது.

அதுவும் அவள் தன்னிடம் பொய் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை,பையனால்.அந்த பொய் அவளுக்காக சொல்லப்பட்டிருந்தால் கூட அவனுக்கு பிரச்சினை இருந்திருக்காது.

ஆனால்,அந்த பொய் முழுக்க அவனுக்காக என்பதை உணர்ந்தவனால் அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.மனதில் பல்லாயிரம் சஞ்சலங்கள்.

அதுவும் தோழனும் அவனுடன் கூட்டு என்கின்ற விடயமே பையனுக்கு ஆத்திரத்தை கிளப்பியது.ப்ரித்வியின் இருப்பிடத்தை அறியச் சொல்லியும் அதற்கு பதிலின்றிப் போனதன் காரணம் இப்போதல்லவா அறிய முடிகிறது,அவனால்.

கோபமும் ஆற்றாமையும் உள்ளத்தை பிழிந்தெடுக்க மனம் நிறைத்த வலியுடன் முகத்தில் வேதனையின் சாயல் விழ நகரப்பார்த்தவனோ ப்ரித்வி கை நீட்ட தடுக்கப் பார்த்திட அவனை முறைத்த பையனின் விழிகளில் செந்தணல்.

அறையில் அங்குமிங்கும் உலாவித் திரிந்தவளுக்கு உறக்கம் எட்டியபாடில்லை.எண்ணம் முழுக்க பையனை வட்டமிட அவளுக்கு உறக்கம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதேனும் உண்டா என்ன..?

"இந்த மனுஷன் எங்க போய் இருக்கோ..?" கடுப்படித்தவளுக்கு இன்னும் முன்னைய நிகழ்வால் அவன் மீதுண்டான கோபம் மீதமிருந்தது தான்.

அந்த யோசனையில் நொடிகளை நெட்டித் தள்ளியவளுக்கு அறைக்கதவு திறபடும் ஓசை கேட்டிட புன்னகையுடன் நிமிர்ந்தவளின் விழிகள் மொத்தமும் பயத்தில் குளித்தது,பையன் இருந்த தோரணையைக் கண்டு.

முகம் முழுவதும் கோபத்தில் சிவக்க அந்த கோபத்தின் உஷ்ணத்தினால் உண்டான செந்நிறத்தை விழிகளுகளும் விழுங்கி தனக்குள் படரவிட்டிருந்தது,முழுதாகவே.

களைந்த சிகையுடன் ஷர்ட் கையை முட்டி வரை மடித்து விட்டவாறு அவன் நின்றிருந்த விதம் அவளின் உயிர்க் கூட்டில் நடுக்கத்தை கிளப்பிட விழிகளில் புரியாத பாவம் தேங்கிட நின்றவளைக் காண காண அவனின் கோபத் தீ பலமடங்கு பெரிதானது.

மெதுவாய் அவன் கதவை அடைத்த தோரணையிலேயே அவளுக்கு முதுகுத் தண்டு வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கி பாவையவளின் கரத்தைப் பற்றி அவன் விரல்கள் தந்த அழுத்தத்தில் சத்தியமாய் அவளுக்கு வலித்திட பாவமாய் பார்த்தவளுக்கு அசைந்து கொடுக்கவில்லை,பையன்.

"என்ன சாரே.." பயத்தில் இதயம் நடுங்கித் துடிக்க இதழ்களில் திணறல் ஓடிட கேட்டவளுக்கு என்ன தான் பதிலை சொல்ல அவனும்..?

அறைக்குள் இருந்து கர்ஜித்தால் ராமநாதனுக்கு சத்தம் கேட்கும் என்று தெரிந்து விருட்டென அவளை அறையை ஒட்டியிருந்த குளியலறைக்குள் இழுத்துக் கொண்டு நடந்தவன் அவளைப் பற்றியிருந்த பிடியில் கொஞ்சம் தளர்வு,கொஞ்சமே கொஞ்சம் தான்,அவளுக்கு வலிக்காத அளவு.

அவளும் அதை உணர்ந்தாள் போலும்.இருப்பினும் கரத்தை விடுவித்துக் கொள்ள முயலவில்லை,பையனைப் பற்றி நன்றாகத் தெரிந்தவள்.

குளியலறைக்குள் அவளை இழுத்து விட்டு கதவை மூடியவனோ அருகே இருந்த ஷவரையும் நீர்த்திருகையும் திறந்து விட்டான்,வெளியே சத்தம் கேட்டிடக் கூடாது என்பதற்காக.

ஆழமான மூச்சொன்றை இழுத்து விட்டு மார்புக்கு குறுக்கே கரத்தை படரவிட்டு ஒற்றைக் பாதத்தை சுவற்றில் ஊன்றி முட்டுக் கொடுத்து நின்றவனுக்கு எதிர்ப்புறமாய் சுவற்றில் ஒட்டிக் கொண்டு தரித்திருந்தவளோ கைகளை பிசைந்து கொண்டிருந்த விதமே போதும்,அவளின் பயத்தை பறைசாற்றிட.

ஷவரின் இருந்து வளைபாதையில் வந்து விழுந்த நீர்த் திவலைகள் சுவற்றிலும் எதிர்ப்புறமாக நின்றிருந்தவனின் இலேசாகவும் பட்டு ஓய்ந்தன.நீர்த்திருகில் இருந்து வெளியடித்த நீர் தரை முட்டிய வேகத்தில் பல திக்கில் சிதறி பையனின் ஒற்றைப் பாத்தில் மென்தூறலாய் விழுந்து கொண்டிருக்க அதை பொருட்படுத்தும் நிலையில் இல்லை,பையன்.

"நா கேக்கறேன் உண்மய மட்டுந்தான் சொல்லனும்..? காட் இட்..?" வார்த்தைகளில் இல்லாத மிரட்டல்,விழிகளிலும் குரலிலும்.ஆமோதிப்பாய் தலையசைத்தவளிடம் முழுதாய் கோபத்தை கூட காட்ட முடியா தன் இயாலமையை அறவே வெறுத்தான்,பையன்.

"நாம கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி உனக்கு என்ன தெர்யுமா..?" அவளின் கேள்வியிலேய அவளுக்கு புரிந்து போனது,ஏதோ தான்ற மறைத்த விடயமொன்று அவனுக்கு தெரிந்து இருக்கிறதென்பது.

மீண்டும் பொய் சொல்லத் தோன்றவில்லை.அவள் கூறிய பொய் அவனின் ஆழத்தில் எத்தகையை வலியை உண்டு பண்ணும் என்று அறியாதவள் இல்லையே,பாவையவள்.

"ம்ம்.."

"இதுக்கு முன்னாடி உனக்கு எந்த லவ்வும் இருந்தது கெடயாது..ப்ரித்விய பத்தி சொன்னது மொத்தமும் பொய் ரைட்..?"

"ம்ம்.." விழி தாழ்த்தியவாறு அவள் சிரசசைத்திட அவளுக்கு அறையத் தான் தோன்றியது.

அவளுக்கு அறையவும் முடியாமல் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் முடியாமல் சுவற்றில் ஓங்கிக் குதித்திட திடுக்கிட்டு நிமிர்ந்தவளோ அவனைத் தடுக்க முன்னேறப் பார்த்திட அவனின் ஒற்றைப் பார்வை அவ்விடத்திலேயே அவளின் கால்களை வேரோட வைத்தது,அசைய விடாமல்.

"ஸ்டே தேர்.." கோப மிகுதியில் கர்ஜித்தவனுக்கு அவள் காதல் தரும் வதையை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லை.இல்லவே இல்லை.

"முன்னவே என்ன லவ் பண்ணிருக்கியா..? இல்ல இப்போ தானா..?"

"க..கல்யாணத்துக்கு அப்றம் தான்.." நடுக்கம் இழையோடும் வார்த்தைகளால் பதில் இயம்பியவளுக்கு செந்நிறம் கொண்ட அவள் விழிகளைக் காணத் தான் பயமாய் இருந்தது.

"ஸோ என்ன புடிச்சி இருந்ததால தான் என் கிட்ட பொய் சொல்லி கல்யாணம் பண்ணி இருக்க..அதுக்கு அரவிந்தும் கூட்டு..ரைட்..?"

"ம்ம்.."

அவளுக்கு தன்னை ஏதும் செய்து விடுவான் என்ற பயம் இல்லை.எங்கே அவனையே நோகடித்துக் கொள்ளப் போகிறானோ என்கின்ற அலைப்புறுதல் அவள் விழிகளில் பரவலாய்.

"எதுக்கு டி பொய் சொன்ன..? எதுக்கு பொய் சொன்ன..? நீ பண்றது தப்புன்னு உனக்கு தோணலயா..? ஹான்ன்ன்ன்ன்..?
சாகடிச்சிட்டு இருக்க டி நீ என்ன..கொஞ்சமா கொஞ்சமா கொன்னுட்டு இருக்க என்ன..நீ பண்றது ஒவ்வொன்னும் என்ன கொலயா கொன்னுட்டு இருக்குன்னா நீ பண்ணுன ஒவ்வொன்னும் தெரிய வரும் போதே என்ன பண்றதுன்னே எனக்கு தெரில.." வேதனையின் வேர்கள் வதனமதில் நிரம்ப அழுத்தமான குரலில் கர்ஜித்தவனை பார்த்திட அவள் விழிகளில் ஈரம்.

"யாரு டி அவ்ளோ நம்ப சொன்னாங்க என்ன..? நீயும் மத்தவங்கள மாதிரி என்ன ரேப்பிஸ்ட்னே நெனச்சிகிட்டு வெறுத்துருக்கலாம்ல.." அத்தனை ஆதங்கம் பையனின் வார்த்தைகளில்.யாரேனும் நம்பியிருக்கலாம் என்று நினைத்திருக்கிறான்,தான்.முதல் தடவை ஏன் இவள் தன்னை நம்பித் தொலைத்தாள் என்கின்ற ஆத்திரம் மனதில்.

நிலை கொள்ள முடியவில்லை,அவனால்.தன்னை நம்பாமல் தன் வாழ்வில் அவள் வராமலே இருந்திருக்கலாம் என்று எண்ணும் அளவு அவன் மனதில் குற்றவுணர்ச்சியும் அவள் காதல் தந்த வலியும்.

"எதுக்கு இல்லன்னு வாதாடி அபிஷேக்க பாத்து பேசுன..? எதுக்கு என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணி கிட்ட..? உன்ன தான் டி கேக்கறேன்..என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு...? என் லைஃப பத்தி என்ன தெர்யும் உனக்கு..? உன்ன தான் கேக்கறேன் இசை..?"

"உன்ன தான்டி கேக்கறேன்..உன்னத் தான் கேக்கறேன்..பொய் சொல்லி என்ன கல்யாணம் பண்ணி கிட்டியே உனக்கு என்ன தெரியும்..?
என்ன பத்தி என்னடி தெரியும் உனக்கு..? என்னோட மெடிகல் ஹிஸ்ட்ரி தெரியுமா..? எனக்கு என்ன வியாதி இருக்குன்னு தெரியுமா..?அட்லீஸ்ட் இன்னும் அஞ்சாறு வருஷத்துல சாகப் போறவன்னாவது தெரியுமா..?" அவன் உச்சபட்ச கோபத்தில் உடல் நடுங்கத் கத்திட அதற்கும் நெருங்கி வந்து அவளின் வாயைப் பொத்தியிருந்தவளோ மறுப்பாய் தலையசைத்திட அவள் விழியோரம் நீர் கட்டி நின்றது.வெடுக்கென அவளின் கரத்தை தட்டி விட்டான்,பையன்.

"இந்த வார்த்தய கேக்க கூட முடியல..அப்றம் எந்த தைரியத்துல டி என்ன லவ் பண்ற..?ஹான்..?உன்னத் தான் கேக்கறேன்.." தன்பாட்டில் குரல் உடைய கத்திக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் அவள் விழிகளில் எந்த அதிர்வையும் காணக் கிடைக்காதது கருத்தில் விழுந்தது.

"நீ..நீ..உனக்கு ஏற்கனவே விஷயம் தெர்யுமா..?" எச்சரித்துக் கொண்டிருந்த விரல்கள் நடுங்க கேட்டவனுக்கு பதில் தெரிந்து தான் இருந்தது.உடலில் மட்டுமல்ல உயிருக்குள்ளுமே நடுக்கம்.அவள் மறுத்திட வேண்டும் என்கின்ற பேராசை.இல்லையென்று தலையசைத்திட வேண்டும் என்பதாய் சிறு நப்பாசை.

கலங்கிய விழிகளில் ஈரத்தை உள்ளிழுத்தவாறு அவள் வந்த அழுகையை மென்று முழுங்கி மேலும் கீழும் மெதுவாய் தலையசைத்து ஆமோதிப்பை உணர்த்திட விழிகள் விரியப் பார்த்த பையனுக்கு மூச்சடைத்துப் போனது.செத்தே விட்டது,அவனின் ஆன்மா.மடிந்தே போனான்,உள்ளத்தால்.வலித்தே விட்டது,உயிரின் ஆழத்தில்.

"வாட் தி ஹெல்.." தெறிவினையாய் கத்தியவனோ அதிர்ந்து திகைத்து உள்ளம் நடுங்கி உயிர் குலுங்கி மீண்டிட வந்ததே கோபம்,அந்த கோபத்திலும் அவளைக் காயப்படுத்த முடியவில்லை,கல்லுளி மங்கனால்.அத்தனை பலவீனமாக்கி வைத்திருந்தாள்,அவனையும் அவனின் உறுதிகளையும்.

இறுக்கமானவனின் ஒற்றை பலவீனம் அவள்.அவனை மொத்தமாய் கொன்று குடிக்கும் ஒற்றை பலவீனம்.

"பைத்தியா உனக்கு..? பைத்தியமா டி நீ..? எதுக்கு என் லைஃப்ல வந்த..? நானா அழுதேன் வர சொல்லி..? என்ன வந்து லவ் பண்ண சொல்லி கெஞ்சுனேனா..?இல்லல..இல்லல..அப்றம் எதுக்குடி வந்த என் லைஃப்ல..?ஹான்..?"

"நானா வந்து லவ் பண்ண சொன்னேன்..உன் லவ்வ காட்ட சொன்னேன்..எதுவும் இல்லல..நா உண்டு என் வாழ்க்க உண்டுன்னு ஒதுங்கி இருந்தப்போ எதுக்குடி பொய் சொல்லி வாழ்க்கைல வந்த..?நீ மட்டும் அன்னிக்கி வராம இருந்திருந்தா அப்டி ஒரு பொய்ய சொல்லாம இருந்துருந்தா சத்தியமா நா கல்யாணம் ஒன்னு பண்ணியிருக்க மாட்டேன்..என் மனசும் நிம்மதியா இருந்துருக்கும்..இப்போ எதுவும் இல்ல..? எதுக்கு இப்டி என்ன கொஞ்சம் கொஞ்சமா சாகடிச்சிட்டு இருக்க..?"

"உன்ன கல்யாணம் பண்ணிகிட்டதுல இருந்து கில்டி ஃபீல் என்ன கொஞ்சமா கொஞ்சமா சாகடிச்சிட்டு இருக்கு..இதுல நீ வேற..? எதுக்குடி இப்டி பண்ற..? ஷிட்ட்ட்ட்ட்ட்.." அவளின் செவிப்பறை கிழியும் அளவு உச்சஸ்தானியின் கத்தியவனோ மீண்டும் சுவற்றில் குத்திட விரல்களில் காயம் உண்டாகி உதிரம் உற்றெடுத்தது.

கோபத்தை அடக்கிட முடியவில்லை,பையனால்.எந்த காரணத்துக்காக அவளின் வாழ்க்கை பாழாக கூடாது என்று மொத்தமாய் ஒதுங்கி நின்றானோ..சுத்தமாய் விலகல் காட்டினானோ..அதே காரணத்தை பிடித்துக் கொண்டு அவனருகில் அவள் இருப்பதை அவனால் துளியும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

அதுவும் அதைக் கூட கண்டு பிடிக்க இயலாமல் அவளுன் முன் பிறழ்ந்து போன அவனின் செயலை பையனால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.மடத்தனமாய் இருந்து விட்டோமே என்று ஆயிரமாவது முறையாய் நொந்து போனது,அவன் மனம்.

விரக்தியின் வெளிப்பாடாய் இதழோரம் கசப்பான புன்னகை.அவ்வளவு ஆழமான ரணம் அவனிதயத்தில்,குற்றவுணர்ச்சியின் கூரிய முனையால்.

"தள்ளிப் போ.." வலியை விழுங்கிய குரலில் கத்தித் தீர்த்தவனோ அவளைப் பிடித்து ஓரமாய் நிறுத்தி விட அவளுக்கோ அவன் நிலை புரிய அழுகை முட்டிக் கொண்டு வந்தது,காதலின் அதிகபட்சத்தினால்.

"நா சொல்றத கொஞ்சம் கேளுங்க சாரே.." அவனின் நிலை கண்டு கிளர்ந்தெழுந்த தைரியத்துடன் முன்னேறிட பார்வையால் எச்சரித்தவனைக் கண்டு அவளுக்கு பயமாக இருந்தது.அதீத கோபத்திலும் தன்னை கொஞ்சமும் நோகடிக்கா அவனை எண்ணுகையில் அவளுக்குள்ளுமே வலி.

அவளிடம் பொய் சொல்லி அவனைத் திருமணம் செய்து கொள்ளக் காரணமே பையனின் இந்தக் குணம் தானே.

அவளைப் பொறுத்த வரையில் அப்பொழுது அவள் செய்தது தவறாகத் தோன்றவில்லை என்றாலும் இப்போது பையனின் வலியைப் பார்க்கையில் பெரும் தவறோ என்கின்ற எண்ணம்.ஆனாலும்,அப்படி செய்திருந்தால் அவனின் வாழ்க்கைக்குள் அவளால் நுழைந்திருக்கவும் இயலாதே.அவளும் என்ன தான் செய்திட..?

"என்னோட எடத்துல நீ இருந்தா என்னோட வலி என்னன்னு புரியும்..என்னோட சுய நலத்துக்காக உன் வாழ்க்கய பலி கொடுத்துடேங்குற குற்றவுணர்ச்சியே இன்னும் போகல..இப்போ நீயும் நல்லா செஞ்சிட்ட.." அவளுக்கு வலிக்கும் என்று தான் பேசினான்.அவனாலுமே ஆற்றாமையை மறைக்க இயலவில்லை.

அவள் காதல் கொல்கிறது,அவனை.தன்னிலை தெரிந்தும் அவனை விட்டு விலகிட நினைக்கா அவள் நேசம் அவனை வேரோடு சாய்த்து கொன்று புதைக்கிறதே.

அவள் பொய் சொன்னதற்கு கோபம் வந்தது நியாயம் தான்.ஆனால்,அந்த கோபம் மட்டுமல்ல,பையனின் தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியா இந்த அவதாரத்தின் காரணம்.

அவளின் காதல் தான்.ஏன் இத்தனை நேசித்துத் தொலைக்கிறாள் என்கின்ற ஆதங்கம் தான்.அவள் காதலை உணருகையில் உள்ளுக்குள் உருப்பெறும் பேரலை வலி தான்.அந்த மொத்தமும் தான் கோபமாய் வெடித்திருந்தது.

நீர்த்திரையிட்ட விழிகளால் அவனை உரசியவளுக்கு தன் மீது அளவு கடந்த கோபம்,அவன் நிலையைப் பார்க்கையில்.

அவள் செய்தது தவறென்று மனப்பூர்வமாக அவள் ஒப்புக் கொண்டாலும் பையனின் நிலையைக் காண்கையில் அவளுக்குள்ளும் குற்றவுணர்வு குத்திக் கொன்றது.

அவனுக்கு தனிமைத் தேவைப்படும் என்று அவளுக்கு தெரிந்தாலும் அவனை விட்டுச் செல்ல முடியவில்லை.பையனும் அப்படியொரு நிலையில் தான் நின்றிருந்தான்,தன்னை மறந்து.

சுவற்றில் உள்ளங்கையை ஊன்றி இடு்ப்பில் மறு கரத்தை குற்றி விழி மூடி தலை தாழ்த்தி நின்றிருந்தவனின் முகத்தில் கோபத்தால் பிரசவமான செந்நிறம் அப்படியே இருந்தது.வெகு அழுத்தமாய் கோதி அழுத்தியதால் சிகை தன்பாட்டில் கலைந்திருக்க ஏறி இறங்கிக் கொண்டிருந்த தொண்டைக்குழி போதும்,அவன் உணர்வுகளை அடக்குவதை குறித்துக் காட்ட.

"சாரே.." நலிந்த குரலில் அழைத்தவளின் சத்தம் அவனுக்கு புரியாது போகுமா என்ன..? இருப்பினும் விழி திறந்து பார்க்கவில்லை.திட்டக் கூடவில்லை,அவன்.

"சாரே.."

"கோபத்த ரொம்ப கன்ட்ரோல் பண்ணி அடக்கிட்டு இருக்கேன் இசை..தயவு செஞ்சு போயிரு..ஏற்கனவே தியாகம்னு நெனச்சு நீ பண்ணியிருக்குறதால மனுஷன் உசுரோட செத்து போயிருக்கான்.."

"நா ஒன்னும் தியாகம் பண்ணல.." அழுகுரலில் சொல்லியவளின் மனதில் பையனுக்கு அந்த நினைப்பு வரக் கூடாது என்கின்ற வேண்டுதல் தானே மனதில் முதன்மையாய்.

அவளின் வார்த்தைள் அனல் மூட்ட விழி திறந்தவனுக்கு அத்தனை ஆத்திரம்."தியாகம் இல்லாம என்னன்னு சொல்றது அத..? எனக்காக உன் வாழ்க்கைய நாசம் பண்ணிகிட்டு இருக்குறத என்னன்னு சொல்றது..?"

இத்தனை நேரம் அழுகையில் கரைந்தவளுக்கும் அவனின் பேச்சில் சத்தியமாய் கோபம் வந்தது.அவளைப் பொறுத்த வரையில் அவள் செய்தது ஒன்றும் தியாகம் அல்ல.அப்படி செய்வதற்கு அவள் தியாகச் செம்மலும் அல்ல.

"என்னடி அப்போ சொல்றது..? என்ன பாத்து பரிதாபத்துல வாழ்க்கைய தியாகம பண்ணிருக்க..?" பையன் கத்த அவளுக்கும் சுர்ரென்று எகிறியது.

"நா ஒன்னும் பரிதாபத்துல உங்கள லவ் பண்ணல..எனக்கு புடிச்சி இருந்தது..உங்கள தவிர வேற யாரயும் கல்யாணம் பண்ண முடியும்னு தோணல..நீங்க வேற வாழ்க்கயே வெறுத்த மாதிரி இருந்தீங்க..உங்க கிட்ட வந்து புடிச்சி இருக்குன்னு சொன்னா என்ன பண்ணிருப்பீங்க சாரே..?"

"எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கனும்..அப்டி நெனக்கிறது பேர் ஒன்னும் பரிதாபம் இல்ல..அதெப்டி உங்களுக்கு வியாதி இருந்து ஒருத்தர் லவ் பண்ணா அத தியாகம்னும் பரிதாபம்னும் சொல்லுவீங்க..லவ் பண்றது நா..நா சொன்னா தான உங்களுக்கு தெர்யும்.."

"நீங்களா ஒன்ன நெனச்சு முடிவெடுத்து கிட்டா அதுக்கு நா பொறுப்பாக மாட்டேன்..நா ஒன்னும் உங்களுக்காக பண்ணல எனக்காகத் தான் பண்ணுனேன் போதுமா..? என்னால உங்கள தவிர வேற யார் கூடவும் சந்தோஷமா இருக்க முடியாதுன்னு தோணுச்சு அதான் உங்களயே கல்யாணம் பண்ணுனேன்..நா பொய் சொன்னேன் தான்..அது தப்புன்னும் எனக்கு தெர்யும்..அதுக்காக பரிதாபத்துல வந்த லவ்வுன்னு நீங்களா ஒன்ன கற்பன பண்ணிகாதீங்க..பரிதாபத்துல லவ் பண்ணி வாழ்க்க கொடுக்கற அளவு நா நல்லவ இல்ல..பரிதாபத்துல லவ் பண்ற எடத்துலயும் நீங்க இல்ல" மூச்சு விடாமல் நீளமாய் பேசி முடித்தவளின் விழிகளில் இப்போது அனல்.

பையனுக்கு அவள் வார்த்தைகள் விசித்திரமாய்.அவன் அத்தனை திட்டியும் கோபப்பாடது அழுது கரைந்தவளின் காளியவதாரம் அவனுக்கும் திகைப்பு தான்.

"உனக்கு தியாகமா தோணலன்னா அது உன் தப்பு..ஆனா உன் லவ் பரிதாபத்துல வந்தது தான்.." அவளை நோகடித்து விலக்கிட வேண்டும் என அவன் தன் பிடியில் நிற்க எட்டி பையனின் சட்டைக் காலரை பற்றியிருந்தாள்,பாவையவள்.

"ஒரு தடவ சொன்னா புரியாதா உங்களுக்கு..? இது ஒன்னும் பரிதாபத்துல வந்த லவ்வும் இல்ல..யெழவும் இல்ல..எனக்கு உங்கள விட யார் மேலவும் விருப்பம் வர்ல...உங்கள தவிர யார் கூடவும் நா நானா இருக்க மாட்டேன்னு தோணுச்சு..அதான் சான்ஸ் கெடச்சதும் உங்கள கல்யாணம் பண்ணி கிட்டேன் போதுமா..? திரும்பத் திரும்ப சொல்ல வக்காதீங்க.." சீறியவளின் அருகாமையில் வேறு நேரம் என்றால் திணறிப் போயிருப்பான்,பையன்.அவனின் மாற்றங்களை முழுதாய் முழுங்கி விட்டது,ஆழ் மனதின் காயம்.

அவனுக்கோ அவள் செயலில் இன்னும் மனம் வலித்தது.அவளின் வார்த்தைகளை அவளின் காதலின் ஆழத்தை விளக்கிட உடைந்தே போனான்,பையனும்.

விரல்களை விலத்தாது அவனின் விழிகளையே ஊடுருவ அத்தனை அடக்கியும் அவனின் விழிகளில் தெரிந்த மெல்லிய அலைப்புறுதல் அவளை வதைத்திட யாழவனின் முதுகின் பின்னூடு கரத்தை படரவிட்டு கட்டிக் கொண்டு தோள் வளைவில் முகம் புதைத்தாள்,இசையவள்!
யாழின் இசையானவள்!

உயிர்த்தொடும்.

2024.09.17
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 26(i)


இசையவள் அணைத்ததும் பையனுக்கு கோபம் தான் எல்லை கடந்தது.
"விடு என்ன.."திமிறியவனோ அவளை விலக்கப் பார்த்திட அதற்கு இடம் கொடுத்திடவில்லை,அவள்.

மெல்ல மெல்ல அவனின் முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகிப் போய் விட அவளின் அருகாமையில் அவளின் அணைப்புக்குள் மெல்ல மெல்ல அடங்கி நின்றான்,யாழவன்.

இசையவளின் அணைப்பில் அடங்கி நின்றிருந்தவனோ மறந்தும் கூட அவளை பதிலுக்கு அணைக்கவில்லை.அது தெரிந்தும் அவளின் அணைப்பு இன்னும் இறுகிக் கொண்டு போனது,எந்த எதிர்ப்பார்ப்புமின்றி.அவளுக்கு அவள் காதலில் எதிர்ப்பார்ப்புக்கள் ஏது..?

அது தானே அவள் இசையாகிறாள்,யாழவனின் இதயம் மீ்ட்டும்!

இதமாய் ஆறுதலாய் மௌனமாய் ஆறுதலை கடத்தும் ஒரு அணைப்பு.வார்த்தைகளின்றி அவனின் மனக்காயங்களை ஆற்றிவிடும் மெல்லிய அணைப்பு.தாய்மையை உணர்த்தி சேயாய் அவனை உணர வைக்கும் ஓர் அணைப்பு.அவனுக்கு எல்லாமுமாகி அவள் நிற்பதாய் கூறிடும் ஒரு அணைப்பு.

ஆழ் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும் அவள் அணைப்பில் ஏதோ ஒரு இதத்தை உணர்ந்தான்,பையனும்.மனதின் ஒரு மூலையில் ஆசுவாசத்தின் துளியொன்று விழுந்தது போல அமைதியை கண்டது,ஆன்மா.

அணைக்கவுமில்லை.விலக்கவுமில்லை.அவனும் அவள் அணைப்பில் தனக்கான ஆறுதலைத் தேடினானோ என்னவோ..?

விழிகளை இறுகப் பொத்தி கை முஷ்டிகளை இறுக்கிக் கொண்டு நின்றிருந்தவனுக்கு அவளை விலத்தி விடவும் முடியவில்லை.அவனின் உடல்வலு மொத்தமும் காணாமலே போய் விட்டிருந்தது,அவளின் அருகாமையில்.

இசையவளுக்குமே அவனை அணைத்திருப்பதில் சிறு சங்கடம்.ஏதோ ஒரு வேகத்தில் அணைத்து விட்டவளுக்கு பையன் இன்னும் நொந்து போவானோ என்கின்ற பயம் வேறு.

மெல்ல தன் பிடியை தளர்த்தி விலத்திட விருட்டென நகர்ந்து சென்றவனின் மீது இயலாமையுடன் படிந்தன,அவள் விழிகள்.

கட்டிலில் சரிந்திருந்து விழிகளுக்கு இமைத்திரையிட்டிருந்தாலும் உறக்கத்தின் நாமம் கூட இல்லை,பையனின் விழிகளில்.

இசையவளின் இருப்பு இல்லாத பொழுதுகளில் இப்படித் தான்.இரவுகளில் உறக்கம் இருக்காது.விடியலில் மட்டும் சில நேரம் கண்ணயர்வதுண்டு.

அதன் பின் அவளின் இருப்பை ஏதோ ஒரு வகையில் பையன் உணர்ந்து கொண்டே இருப்பதால் நிம்மதியாய் ஆழ்ந்த உறக்கத்துக்குள் அவனால் விழ முடிந்திருந்தது.

ஆனால்,இன்றோ அதன் அறிகுறி கூட இல்லை.மூடிய விழி வழியே கருமணிகள் அங்குமிங்கும் உருண்டு கொண்டிருக்க முகத்தை அவளுக்கு காட்ட விரும்பாது தலையணையால் மூடி மறுகையால் அழுத்தியிருந்தான்,கல்லுளி மங்கன்.மனம் முழுக்க இசையவளின் எண்ணங்கள்.

சோபாவில் அமர்ந்து பையனை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கும் அவனின் நிலையே தான்.யாழவனை பற்றியே எண்ணங்கள் வட்டமிட விழிகளோ அவனின் கரங்களில் இருந்த காயத்தை அடிக்கடி ஆராய்ந்தன.

அவளைப் பற்றி அவனின் எண்ணங்கள் வட்டமிடுவதும் அவளை மையமாய் கொண்டே அவனின் எண்ணங்கள் சுற்றி வருவதும் ஆழமான காதலில் தானே சாத்தியம்.

அவனை நெருங்கிடப் பயம் அவளுக்கு.இதற்கும் பரிதாபம் என்று ஏதேனும் இழுத்துக் கொண்டு பிதற்றுவானோ என்கின்ற ஆதங்கமும்.ஆனாலும்,அவனின் காயத்துக்கு மருந்திடாமல் அவளால் நொடிகளை கடக்கத் தான் இயலவில்லை.

பெருமூச்சுடன் எழுந்து கொண்டவளோ அவன் திட்டினாலும் பரவாயில்லை என தன்னை திடப்படுத்திக் கொண்டு கையில் களிம்புடன் கட்டிலின் கீழே முட்டி போட்டு அமர்ந்து அவனின் விர்லகளில் மெதுவாய் பூசி விட பையனிடம் இருந்து எதிர்வினையும் இல்லை.

அவள் பிடியில் இருந்து அவன் கரத்தை உருவிக் கொண்டிருந்தாலும் அவளுக்கு மனம் நிறைந்திருக்கும்.இப்போது காட்டும் அவனின் பாராமுகத்தை தான் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது.

விழி மூடி தன்னை சமப்படுத்திக் கொண்டு சோபாவில் படுத்தவளுக்கு விழிகளில் சிறு ஈரம் படர்வதாய்.

●●●●●●●●

"உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ப்ரச்சனன்னா தயவு செஞ்சு பேசித் தீத்துக்கடா..இப்டி உர்ருன்னு இருக்காத.." ராமநாதனின் அறிவுரைக்கு கடுப்பை மறைத்துக் கொண்டு தலையாட்டியவனுக்கு தன்னுணர்வுகளை வெளிக்காட்ட முடியாத நிலை.

"சும்மா தான் சித்தப்பா..எங்க ரெண்டு பேருக்குள்ள எந்த சண்டயும் இல்ல..அப்டி தான இசை..?" ராமநாதனுக்கு மாத்திரையை எடுத்துக் கொடுத்தவனோ தண்ணீர்க் குவளையை எடுத்து வந்தவளிடம் ஒட்ட வைத்த புன்னகையுடன் கேட்டிட அவளும் போலியான சிரிப்பொன்றை இதழ்களில் படரவிட்ட படி பதில் சொன்னாள்,பொய்யாக.

"ம்ம் அப்டின்னா நல்லது தான்.." மாத்திரைகளை வாயில் போட்டுக் கொண்டு அவர் எழுந்து சென்று மறைந்தது தான் தாமதம்,பையனின் முகம் இறுகியது.

பாவையவளுக்கும் அவனைப் பார்க்க பயம் தான்.அதற்கென்று பயந்து கொண்டே இருக்கவா முடியும் அவளாலும்..?

கடின முகத்துடன் அவளை உறுத்து விழித்தாலும் அவளுக்கு அது பிரச்சினையில்லை.அவளொருத்தி அங்கில்லாதது போல் அவன் நடந்து கொண்டது தான் மனதைக் கீறியது.

வண்டியில் வரும் போது கூட ஒரு கணம் கூட அவள் புறம் அவனின் பார்வை திரும்பவேயில்லை.அவளுக்கு வலிக்கும் என்று தெரிந்து தான் புறக்கணித்தான்.அவனுக்கு வலிப்பதை விட அந்த வலி ஒன்றும் பெரிதாய் இல்லாவிடினும் இனி அவளிடம் பாராமுகம் மட்டுமே காட்ட வேண்டும் என உறுதியாய் முடிவெடுத்துக் கொண்டவனுக்கு அது பொய்யாகிடப் போவது தெரியாதே..?

அலுவலகத்தில் அவளை இறக்கி விட்டு அவன் கிளம்பிட பாவையவளுக்கு உள்ளத்தில் மட்டுமே முழு உடலிலும் அத்தனை அசதி.

கலக்கமான முகத்துடன் தன்னிடத்துக்கு வந்தவளை வந்தவளை யோசனையுடன் பார்த்தாள்,தோழியவள்.

"என்னாச்சு இ..ச்சே சாரி சாரி அரசி இப்டி டல்லாருக்க..? நேத்தெல்லாம் நல்லா தான இருந்த..?" நக்கல் தொனியில் கேட்டவளிடம் அரவிந்த் அன்று ப்ர்திவியை சந்தித்த போது நடந்தது மொத்தத்தையும் ஒப்பிவித்திருந்தானே.

"ஒன்னுல்ல டி.." மழுப்ப முயன்றவளுக்கு பையனின் நினைவில் விழிகள் கலங்கிட முயல இமை சிமிட்டி கண்ணீரை தடுத்தவளுக்கு மனம் மட்டும் சமப்பட்டபாடில்லை.

தாமரை பலமுறை துருவித் துருவி கேட்டும் பதில் சொல்லாதவளை எண்ணுகையில் தோழிக்கும் கோபமே.

அவளின் நாள் முழுக்க கனத்துடன் கழிய வீட்டுக்கு வந்த பின்னரும் ஒரு வார்த்தை பேசவில்லை.முழுதாய் பாராமுகம் காட்டி புறக்கணிக்க இத்தனை நாட்களாய் அவனின் அக்கறையின் இதம் கண்டவளுக்கு அந்த அலட்சியத்தை ஏற்றுக் கடப்பது ஒன்றும் எளிதான காரியமாக இருக்கவில்லை.

இரவு உறங்கப் போகும் நேரம் கையை நீட்டி வழி மறித்தவளுக்கு அவனிடம் பேசியாக வேண்டும் என்பது மனதின் திண்ணமாய்.

"சாரே.." அவள் அழைக்க பதில் சொல்லவில்லை.ஏன் அலைபேசியை வேண்டுமென்று எடுத்து நோண்டினானே தவிர ஒற்றைப் பார்வையை கூட முன்னிலையில் இருப்பவளிடம் வீசவில்லை,கல்லுளி மங்கன்.

அவன் தரப்பிலும் பிழை இல்லை தான்.அவள் செய்தவற்றை மன்னித்து மறந்திடும் அளவு பையனின் மனமும் இன்னும் ஆறவில்லயே.அந்த அவசரக்குடுக்கைக்கு அது புரிந்தாலும் மனமோ அவனிடம் பேசவல்லவா முரண்டு பிடித்தது.

"சாரே..." அவள் அவன் விழி பார்த்து அழைக்க இருபுறமும் தலையாட்டி இதழ் குவித்து சலிப்புடன் ஊதிக் கொண்டவனோ அலட்சியமான முகபாவத்துடன் முன்னே அடியெடுத்து வைத்திட அவளுக்கும் ஆற்றாமையில் விழிகள் சிவந்தது.

இசையவள் கொஞ்சமும் உறங்கிடவில்லை.யாழவனுக்கும் உறக்கம் இல்லை.புரண்டு புரண்டு பார்த்தவனுக்கு அறையில் இருப்பது மனதை இன்னும் போட்டு அலைக்கழித்திட மெதுவாய் சத்தமின்றி எழுந்து மொட்டைக்கு மாடிக்கு வந்து நின்றான்,அலைக்கழித்த மனமதை அமைதிப்படுத்த.

இரவின் தண்மையை தன்னில் கரைத்துக் கொண்டு தேகம் தீண்டிய காற்றும் ஏதோ சிறு சிறு சத்தங்களை இழுத்து சேர்த்த பின்னும் இதம் தரும் அந்த நிசப்தமும் அவனின் சிந்தையில் உரைக்கவேயில்லை.

வழமை போல் நிமிர்ந்து வானத்தை பார்த்தவனுக்கு பாதி வளர்ந்த நிலவையும் ஓரிரு விண்மீன்களையும் கண்டதும் மனதுக்குள் மின்னி மறைந்தது,இசையவளின் வதனம்.

முன்பெல்லாம் இந்த வானத்தை தானே அவனி வாழ்க்கையின் வெறுமையுடன் ஒப்பிட்டு புழுங்கித் தீர்ப்பது.இதுவரை அவன் காண்கையில் நிலவிருந்தாலும் சலிப்பாய் உணர்பவனுக்கு இன்று தானாகாவே மனதுக்குள் மின்னலடித்தது,இசையவளின் முகம்.

"ச்சே..இவ ஒருத்தி.." முணகியவனுக்கு அவளின் வார்த்தைகள் தான் செவியோரம் கதை பேசிக் கொண்டிருந்தன.

அந்த வார்த்தைகளின் ஆழமும் அது பொதிந்து வைத்திருந்த ஆயிரமாயிரம் அர்த்தங்களும் அவனுக்குள் கேட்ட நொடியில் இருந்து மெதுவாய் உள்ளிறங்கிக் கொண்டு தான் இருக்கின்றன,அவனையும் கேளாமல்.

"எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கனும்..அப்டி நெனக்கிறது பேர் ஒன்னும் பரிதாபம் இல்ல..அதெப்டி உங்களுக்கு வியாதி இருந்து ஒருத்தர் லவ் பண்ணா அத தியாகம்னும் பரிதாபம்னும் சொல்லுவீங்க..லவ் பண்றது நா..நா சொன்னா தான உங்களுக்கு தெர்யும்" சீறியது நிழற்படமாய் மனதில் ஓட அவனின் தேகம் சிலிர்த்தடங்கிட மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

"என்ன லவ்வுடா சாமி.." நினைக்கையில் சத்தியமாய் மூச்சு முட்டியது பையனுக்கு.இதுவரை அவள் வார்த்தைகளால் காதலை உரைக்காததற்கு காரணமும் தன் மனதில் இந்த எண்ணம் தோன்றிடும் என்று பயந்து தானோ என நினைக்காமல் இருக்க முடியவில்லை,அவனால்.

அவள் காதல் காட்டும் கோணங்களில் அவன் வியந்து நின்றாலும் இந்த கோபம் மட்டும் அடங்க மாட்டேன் என்றிருந்தது.

அவள் கூறுவதை ஏற்க முடிந்த பையனால் அது தியாகம் இல்லையென்று முற்றாய் பதிய வைத்துக் கொள்ள இயலவில்லை.அவன் அவள் காதலை இயல்பாகக் காணும் போது தானே அந்த காதல் அழகாகும்!
அது தானே நிஜமாகும்!

அதுவும் அவள் செய்தது ஒன்றும் தியாகமும் அல்ல.அவளுக்கு பிடித்த நபருடன் வாழ்க்கையில் கை கோர்த்துக் கொண்டதை எப்படி தியாகம் என்றிட..?
அதுவும் காதல் தானே..?

சுகநலமான ஒருவருடன் காதல் வருவதை இயல்பு என ஏற்றிடும் இந்த சமூகம் கொஞ்சம் முரணாய் காதல் வந்தால் அதற்கு பரிதாபத்தினால் முளைத்தது என முத்திரை குத்தவது ஏனோ..?

அதுவும் பிடித்தம் தானே..
அதுவும் ஈர்ப்பு தானே..
அதுவும் ஆழ்மன நேசம் தானே..
அதுவும் காதல் தானே..
அப்படியிருக்க அதைப் பரிதாபத்தில் உண்டாகிய காதல் என்று கூறுவது உவப்பானதல்லவே..?

நிறைகளை மட்டுமல்ல,குறைகளையும் ஏற்றிடுவது தான் காதல்.சமூகத்துக்கு அந்த குறைகள் பெரிதாகத் தெரியும் பட்சத்தில் அந்த காதலுக்கு பரிதாபம் என முத்திரை குத்துவது ஒன்றும் உசிதமல்ல.

அரை மணி நேரத்துக்கும் மேலாய் தனிமையில் நின்றிருந்தவனோ மறுபடி அறைக்குள் நுழைகையிலும் உறங்காது விழித்துத் தான் இருந்தாள்,பாவையவள்.

அதைக் கண்டும் காணாமல் அவன் படுத்துக் கொள்ள அதை எதிர்ப்பாத்திருப்பாள் போலும்.மெதுவாய் அயர்வுடன் அவள் விழிகளும் மூடிக் கொண்டன.

காலையில் வேலையாக வெளியே கிளம்பிச் சென்ற ராமநாதனை திட்ட முடியாது தவித்துக் கொண்டிருந்தாள்,பாவையவள்.

அவர் இருந்தால் பொய்யாகவாவது அவளுடன் பேசக் கூடும் அவன்.ஏற்கவனே அவள் மீதான பார்வைக்கு பஞ்சம்.இப்போது நிமிரவே மாட்டானே என பெருமூச்சு விட்டுக் கொண்டாள்,அவள்.

உணவு மேசையில் அமர்ந்து தனியாய் உண்டு கொண்டிருந்தவளுக்கு அவனை அழைத்திடவும் வழியில்லை.அழைத்தாலும் வந்து நிற்க மாட்டான் என்பதும் வேறு விடயம்.

யோசனையில் விழுந்தவளோ அவன் வருகிறானா என பார்த்த படி வேண்டுமென்றே தண்ணீர்க்குவளையை போட்டுடைக்க அது பெரும் சத்தத்துடன் சிதறியது.

அவனுக்கு கோபம் வந்து தன்னைத் திட்டித் தொலைந்தாலும் போதும் என்கின்ற நப்பாசையுடன் தான் செய்தாள்,அவள்.அவனுக்கு சத்தம் அவ்வளவாய் பிடிக்காது என்று அவளுக்குத் தெரியும் அல்லவா..?

கழுத்துப்பட்டியை சரி செய்து கொண்டிருந்த பையனுக்கு சத்தம் கேட்டாலும் அவனுக்கும் ஓரளவு ஊகிக்க முடியுமாகத் தான் இருந்தது,தன்னை கோபப்படுத்த தான் செய்திருப்பாள் என்பது.

"மாயக்காரி.." இதழ்கள் மெல்லிய அசைவை கொடுக்க வெளியே வந்தவனோ கண்டு கொள்ளாது கடந்திட பாவையவளுக்கு சப்பென்றானது.

"ச்சே..ஒரு ரியாக்ஷனும் இல்ல..அநியாயத்துக்கு நம்மளுக்கு தான் வேல.." தனக்கே வசைபாடியவாறு குனிந்து கண்ணாடித் துண்டுகளை அள்ளியவளுக்கு சட்டென ஒரு யோசனை.

"வேணாம்பா அப்றம் வெரல் வெட்டினதும் அவரு ஊட்டி விடுவாரு..நீயும் மரமண்ட மாதிரி ஒளறிக் கொட்டுவ.." மனசாட்சி காலை வாரிட சுருங்கிய முகத்துடன் குனிந்து இடம் முழுவதையும் சுத்தம் செய்து முடித்தவளுக்கு இடுப்பு வலி வந்தது தான் மிச்சம்.

அலுவலகத்துக்கு தயாராகி விட்டு பத்து நிமிடம் அறைக்குள் பேசாமல் காலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்,பையன் அப்போதாவது கத்தி அழைத்திடுவான் என்கின்ற குருட்டு எண்ணத்தில்.

பத்து நிமிடங்கள் ஓடிய பின்னர் தான் அவன் தன்னை தனியாக விட்டுச் செல்லக் கூடும் என்கின்ற யோசனையே மண்டைக்குள் வர பதபதைப்புடன் கூடத்துக்கு வர அங்கு அவன் இல்லை.

"ஐயையோ விட்டு பொய்ட்டாரு போல.." பதறிக் கொண்டு கீழே வர அங்கும் பையனின் வண்டி இல்லை.முகம் கூம்பியே விட்டது,அவளுக்கு.

இங்கு பையனோ அவளின் செயலை ஊகித்தவனாய் கருவிக் கொண்டு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்,கடுப்புடன்.

அவனையே அசைத்திடப் பார்க்கிறாளா என எக்காளமிட்டு கத்திய மனது இன்னுமே உணரவில்லை,அவளிடம் முற்றாக வீழ்ந்து கிடப்பது.இருப்பினும்,கருவிழிகளுக்குள் கட்டுண்டு கவிழ்ந்து விழுபவனுக்கு இந்த திமிர் கொஞ்சம் அதிகம் தான்.

"ஆமா பக்கத்துல போனா நிக்க கூட முடியாது..இதுல திமிரப் பாரு.." அவன் காதல் அவனை கலாய்த்து தள்ளியது அவனுக்கு எங்கே தெரியப் போகிறது..?

"எதுக்கு என்ன விட்டுட்டு போனீங்க..?" நினைத்த மாத்திரத்தில் அவளிடம் இருந்து குறுஞ்செய்தியொன்று வந்திருக்க படித்தவனோ பதில் அனுப்பவில்லை.

"ப்ச் இவ எங்க பதில் அனுப்ப போவாரு..நம்ம பாடு எல்லாம்.." அர்ச்சித்தவளுக்கு அவனின் கோபத்தின் நியாயம் புரிய அமைதியாகிப் போனது,மனது.

அடித்துப் பிடித்து பேரூந்தில் ஏறி அலுவலகத்துக்கு நுழையும் போது வியர்த்து ஊற்றியிருந்தது.சன நெரிசலில் சிக்கி ஒரு வழியாகி விட்டிருந்தாள்,அவளும்.

"என்ன அரசி இவ்ளோ டயர்ட் ஆ வர்ரீங்க..? என்ன இன்னிக்கி உங்க ஹஸ்பண்ட கொண்டு வந்து விடலயா..? இன்னிகாச்சும் உங்க ஹஸ்பண்ட பாத்துரனும்னு இருந்தேன்.."

"உங்க வீட்ல ஆல்பத்துல மனுஷன் வெறப்பா நின்னுட்டு இருக்கும்..போய் பாருங்க.."மனசாட்சி நக்கலாய் பதிலளித்திட வாய் மூடி அமைதியைப் பேணினாள்,பாவையவள்.

"ரொம்ப டயர்டா இருக்கீங்க போல..சரி உள்ள போங்க..நானும் வந்துர்ரேன்.." என்றவளுக்கு சிறு தலையசைப்புடன் விடை கொடுத்தவளோ தன்னிடத்துக்கு வந்து தொப்பென்று அமரலானாள்,இருக்கையில்.

"என்னடி ரெண்டு நாளா மூஞ்சே வாடிப் போய் கெடக்குது..? என்னாச்சு..?"

"என் மூஞ்சு பூ மொகம் தான..அதான் வாடிப் போய் கெடக்குறேன்..கடுப்ப கெளப்பாம போயிரு.." தாமரையிடம் காய்ந்தவளின் மண்டையில் ஓங்கிக் குத்தினாள்,அவள்.

"வர வர ரொம்ப வாய்டி உனக்கு..என்ன கேட்டாலும் சலிச்சுக்கற..என்ன தான் ஆச்சு உனக்கு..?" தோழியின் கத்தலை காதில் வாங்காதவளுக்கு யாழினியைக் கண்டதும் விழிகள் பளிச்சிட்டது.

"யாழினி.." அவள் உரக்க அழைத்ததில் சுற்றியிருந்தவர்களின் பார்வை அவள் மீது தான்.திடுமென கேட்ட உரப்பான சத்தத்தில் கையில் இருந்த அலைபேசியை நழுவ விடப் பார்த்து படபடப்புடன் நெஞ்சோடு அணைத்திருந்தாள்,தாமரை.

"மெண்டல் என்ன பண்ணுவான்னு யாருக்கும் தெரியாது.." கடுப்பில் கத்தியவளின் பார்வை அனலுடன் தோழியின் மீது படிந்தது.

"என்ன இசை..?"

"யாழினி அவள இசைன்னு கூப்டாதீங்க..அரசின்னு கூப்டுங்க..இசைங்குறது அவ ஹஸ்பண்டோட ஸ்பெஷல் நேம்.."

"இவ வேற ஒன்னும் புரியாம.." கடுப்பாய் நினைத்தவளுக்கு பையன் ப்ரித்வியிடம் எகிறியது தெரியாததால் இந்நிலையில் தேவையா என்கின்ற மனநிலை.

"ஓஹ் சாரி..என்ன விஷயம் அரசி..?"

"இன்னும் வர்ட் டைம்கு பதினஞ்சு நிமிஷம் இருக்கு தான..? நீங்க ஃப்ரீ தான"

"ம்ம்ம்..ஆமா ஃப்ரீ தான் இப்போ"

"எனக்கு உங்க ஃபேமிலி பத்தி சொல்லுங்க..ப்ளீஸ்.." கெஞ்சியவளின் உள் நோக்கம் யாழினிக்கு புரியவில்லை என்றாலும் தோழிக்கு நன்றாகத் தான் தெரிந்தது.

"ம்க்கும் அதான பாத்தேன்.." நெற்றியில் அறைந்து கொண்டவளுக்கு இசையவள் எப்போது எப்படி இருப்பாள் என்று கணிக்கவே முடியவில்லை.

"என் ஃபேமிலி பத்தியா..?"

"ம்ம்..ம்ம் எனக்கு தான் எதுவும் தெரியாதுல..நா உங்க கூட பெருசா பேசனதும் இல்லல..அதான் சொல்லுங்க.."அவசரப்படுத்தியவளை விசித்திரமாய் பார்த்தாலும் அவளருகே வந்து அமராமல் இல்லை.

"எங்க தாத்தாவுக்கு நாலு பசங்க..ரெண்டு ஆம்பள ரெண்டு பொண்ணுங்க..ரெண்டாவது ஆம்பள பையன் தான் எங்கப்பா.."

"எப்பவும் குடும்பத்துல இருந்து தான மேல போவாங்க..இந்த பொண்ணு என்னன்னா மேல இருந்து கீழ வருது..ஐயோ.." மனதுக்குள் முணகினாலும் வெளியில் இன்முகம் காட்டினாள்,அவசரக்காரி.

"எங்கப்பாவுக்கு ஒரு அண்ணன்..ரெண்டு தங்கச்சி..அப்போலாம் தாத்தா எல்லாரும் சொந்த ஊர்ல தான் இருந்தாங்க.." அவள் தன் குடும்பத்தை விவரிக்க ஐயோவென்றானது பாவையவளுக்கு.

உயிர்த்தொடும்.

2024.09.18
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 26(ii)

"ஆமா உங்க ஃபேமிலி கூட்டுக்குடும்பமா..? எல்லார பத்தியும் சொல்றீங்க..உங்க கூட தான் எல்லாருக்கும் இருக்காங்களா..?" பேச்சை மாற்றிடும் சாக்கில் அவள் கதையை இழுத்து விட அது சரியாக வேலை செய்தது.

"இல்ல அரசி..நாங்க இங்க தனியா தான் இருக்கோம்..மத்தவங்க எல்லாரும் ஊர்ல இருக்காங்க..வீட்ல நானும் அண்ணா ரெண்டு பேரும் அம்மாவும் அப்பாவும்.." பையன் தம்முடன் இல்லை என்கின்ற விடயத்தை மறைத்து அவள் கூறிட அவளின் விழிகளில் தெரிந்த வலியில் பாவையவளுக்கும் ஏதோ போல்.

"உங்களுக்கு ரெண்டு அண்ணனா..? அப்ப ஜாலில..?"

"ம்ம்..மூத்த அண்ணன் பேரு யாழ்வேந்தன்.." அவள் விளக்கம் கொடுக்கத் துவங்குகையிலேயே புரையேறி பருகிக் கொண்டிருந்த நீர் விசிறியடிக்க இருமி விட்டிருந்தாள்,தாமரை.

"நம்மளோட எதிரி நம்ம கூடவே தான் சுத்துது..இவள வச்சிகிட்டு.." பற்களை நறநறத்தபடி தோழியை முறைத்தவளைக் கண்டும் காணாமல் மறுபுறம் திரும்பிக் கொண்டாள்,தாமரை.

"நீங்க சொல்லுங்க யாழினி..அவளுக்கு அடிக்கடி இப்டி பொறயேரும்.." கடுப்பை ஒளித்த குரலில் மொழிந்தவளுக்கு பையனின் பால்யம் பற்றி அறிந்து கொள்ள அளவில்லா பரபரப்பு.

ராமநாதன் அடிக்கடி ஏதேனும் சொல்லும் போது வெகு ஆர்வமாய் கேட்டுக் கொண்டாலும் அது போதாது என்று மனதில் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கும்.அவளுக்கு ஏதோ ஒரு விதமான அழகான உணர்வது,அவனைப் பற்றி பிறர் சொல்ல கேட்டது.

அதுவும் இல்லாமல் பையனிடம் கேட்டிடலாம் தான்.கேட்டால் அவனும் மறு பேச்சின்றி சொல்லியிருப்பான் தான்.அவனுக்கு கடந்த காலம் நினைவில் வந்து அவன் வருந்தக் கூடாது என்கின்ற எண்ணமே அவனின் வீட்டினரைப் பற்றி எதையுமே கேட்க விடுவதில்லை.அவனுக்குள் காயங்கள் கிளறப்படுவது அவளுக்கும் பிடிக்காதல்லவா..?

காதல் எனும் நூலிழையில் பற்றிக் கொண்டு மொத்தமாய் அவனுக்காக மட்டுமே யோசித்திடும் அவள் நேசம் அழகு.

"பர்ஸ்டு ஒவ்வொருத்தரா பாப்போம்..உங்கண்ணன பத்தி சொல்லுங்க.." அவள் முகத்தில் தோன்றிய பூரிப்பை கடினப்பட்டு திரையிட்ட படி கேட்டி விழிவழியே தெரிந்த உணர்வு யாழினிக்கு புரியவில்லை.அதனால் தப்பித்தாள்,அவசரக்காரி.இல்லையென்றால் யாழினியின் சிந்தனைகள் பல திக்கில் சிதறியிருக்கும்.

"அண்ணன் பேரு யாழ் வேந்தன்..இப்போ அவருக்கு இருபத்தெட்டு வயசு..இன்னும் கல்யாணம் ஆகல.." அவள் சொல்லியது தான் தாமதம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருமியே விட்டாள்,பாவையவளின் பாவப்பட்ட தோழியவள்.

முறைப்புடன் அவளை விழிகளால் உரசி விட்டு யாழினியின் புறம் திரும்பிட அவளின் பார்வையோ தாமரையிடம் கொக்கி போட்டு தரித்திருந்தது,சிறு சந்தேகத்துடன்.

"யாழினி அவ சும்மா..நீங்க சொல்லுங்க.." யாழினியின் தோளைத் தட்டி தன் புறம் திருப்பியவளுக்கு தோழியின் மீது கொலைவெறியாய்.

"என்ன சொல்லிகிட்டு இருந்தேன்..பெரிய அண்ணன் பத்தில..அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல..இப்போ அவரு மட்டும் வேல விஷயமா வெளியூர்ல இருக்காரு..ரொம்ப டிஃபரன்டான டைப்.. ரொம்ப ஸ்ட்ரிக்ட்டும் தான்..தொட்டது புடிச்சதுக்கு எல்லாம் அவருக்கு கோபம் வராது..சிடு சிடு கேரக்டர் இல்ல..அதுக்குன்னு ஜாலி டைப்பும் இல்ல.."

"ரொம்ப பாசம் அதிகம்..கெத்தான ஆளு தான்..அதுக்குன்னு புடிச்சு யாரயும் ஹர்ட் பண்ற கேரக்டர் இல்ல..அப்டி அவர் கிட்ட யாராச்சும் திட்டு வாங்குறாங்கன்னா அதுக்கு பின்னாடி கண்டிப்பா ஒரு ரீசன் இருக்கும்..சிரிச்சு எல்லாம் பேச மாட்டாரு..அதுக்காக டெரர் பீஸுன்னும் சொல்ல முடியாது..கொஞ்சம் வித்யாசமான கேரக்டர் அவரு.."

"எப்பவுமே நிதானமா இருப்பாரு அரசி..அவரு கன்ட்ரோல எழந்து நா பாத்ததே இல்ல..கோபத்த எல்லாம் எவ்ளோ முடியுமோ அவ்ளோ கன்ட்ரோல் பண்ணிப்பாரு..ஆனா கோபம் வந்துச்சுன்னு வைங்க..ஒரு பார்வ தான் எல்லாருமே பயந்துருவோம்..அதுவும் அவரு திட்டக் கூட மாட்டாரு..ஆனா நா சின்ன அண்ணன் எல்லாரும் நடுங்கிப் போய் நிப்போம்.." என்றவளின் இதழோரம் பழைய நினைவுகளில் புன்னகை துளிர்த்திட்டது.

"எதயுமே காட்டிக்க மாட்டாரு..ஆனா பாசம் ரொம்ப அதிகம்..எனக்கே சம்டைம் கில்டியா இருக்கும் அவரோட பாசத்த பாக்கறப்போ..அவ்ளோ பாசமா இருப்பாரு..நாம என்ன எரிஞ்சு விழுந்தாலும் திட்டுனாலும் கோவப்பட்டாலும் அது அவருக்கு ஒரு பெரிய விஷயமாவே இருக்காது..சிம்பிளா எடுத்துப்பார்.."

"ஆனா அதுவே நாம அவர ரொம்பத்தான் ஒடஞ்சு போற அளவு ஹர்ட் பண்ணிட்டோம்னு வைங்க..அவரு நம்மள ஹர்ட் பண்ண மாட்டாரு..பட் ரொம்ப தூரம் வெலகிப் போய்ருவாரு..நாம திரும்ப நெனச்சாலும் புடிக்க முடியாத அளவுக்கு.." கூறும் போதே குரல் கமறிட கலங்கிய விழிகளை சிமிட்டிக் கொண்டாள்,அவள்.

பாவையவளிடம் இதையெல்லாம் ஏன் ஒப்புவிக்கிறோம் என்று அவளுக்குத் தெரியாது.மடை திறந்த வெள்ளமாய் அவளிடம் பேசத் தோன்றிடவே கதைத்திருந்தாள்,அவளும்.

பாவையவளோ பையனை சமாதானப்படுத்த ஏதேனும் வழி கிடைக்கக் கூடும் என்று தான் அவளிடம் கதைக்கத் துவங்கியதே.கதை திசை மாறி கணம் கனமாகி அவள் மனம் முழுவதும் வலி பரவிற்று.

இசையவளின் விழிகளிலும் மெல்லிய நீரேற்றம்.யாழவனைப் பற்றி நினைக்கையில் விம்மும் மனதை அடக்கும் வழி தெரியாது தோற்றுத் தான் போகிறாள்,அவளும்.ஏதோ அவனின் வலி மொத்தமும் அவளுள் இறங்கும் உணர்வு தான் அவனைப் பற்றி நினைக்கையிலேயே.

தொண்டை அடைத்துக் கொண்டு வர ஓய்வறைக்குள் நுழைந்து முகத்தை நீரால் அடித்துக் கழுவியிவளின் விழியோரம் கொஞ்சம் ஈரம்,இசையவளின் ரிதத்திற்காக.

●●●●●●●

"க்ளாஸ ஒடச்சிட்டோம்..ப்ளேட்ட ஒடச்சிட்டோம்..ப்ளவர் வாஸ ஒடச்சிட்டோம்..க்ளாஸ் ஓனமன்ட் ஒடச்சிட்டோம்..ஆனா ஆளு அசர மாட்டேங்குறாரே..? இதுக்கப்றம் என்ன தான் பண்றது..? பேசாம அவரு மண்டய ஒடச்சி நம்ம கூட பேச சொல்லலாமா..?" யோசித்த வண்ணம் இருந்தவளோ தன் எண்ணம் போகும் போக்கைக் கண்டு தலையில் தட்டிக் கொண்டு நிமிர்ந்தாள்,தன்னையே திட்டியவாறு.

எல்லா வழியிலும் பையனிடம் பேச முயற்சி செய்ததாயிற்று.ஆனால்,அவன் தான் துளியும் இறங்கி வர மாட்டேன் என்கிறானே..?

ராமநாதன் வேறு வீட்டில் இல்லை.அவர்களின் பனிப்போர் தெரியாது இன்றிரவு மட்டும் தோழரின் வீட்டில் தங்கி விட்டு வருவதாக கிளம்பிச் சென்றிருந்தார்,மனிதர்.

முணுமுணுத்த படி சமயலறையில் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தவள் பையனைப் பார்த்தவாறு கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அவன் முன்னே வந்தமர பட்டென்று எழுந்து நகர்ந்து விட்டவனை கருவித் தீர்த்தது,அவள் மனசாட்சி.

"வர வர இந்த ரோபோ ஓவரா தான் பண்ணுது..மனுஷன கெஞ்ச வெக்கிறேத இந்தாளுக்கு வேலயா போச்சு..?" கடுப்படித்தவளும் அவனை மலையிறக்க தலையைப் பிய்த்துக் கொண்டு யோசித்து விட்டாள்,தான்.இருந்தும் பயனேதும் இல்லையே.

அதே கோபத்துடன் சமயலறைக்குள் நுழைந்தவளோ உச்ச வேகத்தில் பாத்திரங்களை கழுவி ஒதுக்கிட ஆங்காங்கே சமயலறையின் தரையிலும் நீர்த்துளிகள் சிதறிற்று.

அவசர கதியில் பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் நீர் முழுவதும் தரையில் ஊற்றுப்பட துடைக்கிறேன் பேர்வழி என்று விழுந்து வைத்திட அவளின் கத்தில் பையனின் செவிகளில் நன்றாக விழுந்தது.

மடிக்கணினியை தட்டிக் கொண்டிருந்தவனின் மனமோ அவளின் கத்தலில் படபடக்க பதறிக் கொண்டு சமயலறைக்குள் ஓடி வந்தவனுக்கு முழங்கால் மடிபட தரையில் விழுந்து கிடந்தவளை கண்டதும் நெஞ்சம் பதறிட தானாய் வந்து விழுந்தன,வார்த்தைகள்.

"ஏய் பைத்தியக்காரி என்னடி ஆச்சு..?" பதட்டம் வழிந்தோடிய குரலில் கேட்டவாறு அவளருகில் குனிந்திட இசையவளுக்கு அந்த நிலையிலும் அவன் தன்னுடன் பேசியது தான் முதன்மையாய்.

"ஐயோ இப்டி நடந்தா நீங்க பேசுவீங்கன்னு தெரிஞ்சா நா நாலு தடவ வேணுன்னாலும் விழுந்து இருப்பேனே.." மனதால் எண்ணியவளின் முகத்திலும் அவன் தன்னுடன் பேசிய விகசிப்பு தென்பட அவளை ஆராய்ந்து கொண்டிருந்தவனுக்கு அது புரியும் சாத்தியமில்லை.

தான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லாது போகவுமே விழி நிமிர்த்தி அவளைப் பார்த்தவனுக்கு அவளின் எண்ணப் போக்கை கணிக்க முடியுமாய் இருக்க தலையில் அடித்துக் கொள்ளாத குறை தான்.

"பைத்தியம்..என்ன யோசிச்சு சிரிச்சுட்டு இருக்கு பாரு.." அவளுக்குப் புரியும் படி திட்டிட பையனின் வசவை உணர்ந்து தன் முகத்தை மாற்றிக் கொண்டாள்,பாவமாய்.

"என்ன ஆச்சு..? எங்க அடிபட்டுச்சு..?" விழிகளில் கனிவு போட்டி போட அக்கறை அதற்கு சமமாய் நிரம்பியோட அவனே உணராக் காதல் முற்றாய் விழிகளில் தோய்ந்து கிடக்க கேட்டவனை இரசிக்காமல் இருக்க எப்படி முடியும் அவளால்..?
காதல் கொண்ட நெஞ்சத்துக்கு கற்பாறென்றாலும் கண்ணைக் கவரும் என்றிருக்க பையனால் கவரப்பட்டு கவிழ்ந்து விழ மாட்டாளா அவள்..?

என்னவொன்று,அந்த கல்லுளி மங்கனுக்கும் சரி அவனை முழுதாய் நேசித்துத் தொலையும் அந்த மகராசிக்கும் இன்னுமே அவனின் காதல் புரியவில்லை.

"தண்ணி இருக்குறது தெரியாம கால வச்சி வழுக்கி விழுந்துட்டேன்.." தவறு செய்த குழந்தையாய் கூறியவளோ எழுந்து நிற்க முயல பையனின் கரம் தானாகவே அவளை நோக்கி நீண்டிருந்தது.

அவள் மீது கோபம் இருக்கிறது தான்.ஆற்றாமை இருக்கிறது தான்.வருத்தம் நிரம்பவே இருக்கிறது தான்.ஆனால்,அவளுக்கென்று ஒன்றாகிடும் போது அவை மொத்தமும் இருப்பிடம் தெரியாமல் மாயமாகித் தான் போகிறது.

நீட்டிய கரத்தை பற்றாமல் அவனையே ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தவளின் செயலில் பையனுக்கு கடுப்பாகியது.

"எந்திரி..எதுக்கு முழிச்சு பாத்துட்டு இருக்க..?" வார்த்தைகளில் விரவிப் பரவியிருந்தது,சூடு.

"இல்ல உங்களுக்கு என் மேல இருக்குற கோபம் போயிடுச்சா..? திடீர்னு நா விழுந்ததும் வந்து பேசறீங்க..? அப்போ கோபம் போயிருச்சு தான.."

"வழுக்கி விழுந்துருக்க அது தான் வந்து பேசறேன்..அவ்ளோ தான்..அதுவும் கோவப்படற அளவு எனக்கு உன் மேல எந்த உரிமயும் இல்ல..நீ யாரோ நா யாரோ.." அவளை காயப்படுத்தும் நோக்கில் பேசிட அதன் உள்ளர்த்தம் புரியாதவளா அவனின் சரிபாதி..?

அவனின் திமிரிலும் கோபத்திலும் பிடிவாதத்திலும் அவளுக்கும் கொஞ்சமாவது கடத்தப்பட்டிருக்கும் தானே..?

"யாரோ தெரியாத ஒருத்தர் எனக்கு கை தந்தாங்கன்னு என்னால கைய புடிக்க முடியாது.." ஓரக்கண்ணால் பையனைப் பார்த்தவாறு இதழ் சுளிப்புடன் திரும்பிக் கொண்டவளிடம் கடுகடுப்பை காட்டினாலும் மனதில் அவளின் செய்கை ஒவ்வொன்றும் இம்மியும் பிசகாமல் பதிந்து போவதை காதலென்று தானே கூற வேண்டும்.

"சும்மா சும்மா என் கிட்ட வெளயாடி கடுப்பேத்தாத..மரியாதயா கைய பிடிச்சு எழுந்து நில்லு.."

"நீங்க நா யாரோ நீ யாரோன்னு சொன்னீங்கல..அதுக்கு பதிலா ப்ரெண்டுன்னு சொல்லுங்க..நா எந்திரிச்சு நிக்கறேன்.." அவள் பிடிவாதம் பிடிக்க அவனுக்கும் எகிறியது.

"இப்டியே இரு எனக்கென்ன..?" அலட்சியம் காட்டி கூறியவனோ அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொள்ள அவளும் தோளைக்குலுக்கிக் கொண்டு அமர்ந்து விட்டாள்,வெற்றுத் தரையில்.

சில நொடிகள் கடக்க அவளுக்கும் அலுப்பாய் இருந்தது.எழுந்து கொள்ள முயன்று பார்த்தும் முடியாது போக தரையில் சம்மணமிட்டு சௌகர்யமாய் உட்கார்ந்து கொண்டவளுக்கு பையன் தன்னிடம் மீள வருவான் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கை.

அறைக்குள் நுழைந்த பையனுக்குமே இருப்புக் கொள்ளவில்லை.அவனனும் வீம்பு பிடித்தவன் தான்.அந்த வீம்பு மொத்தத்தையும் வீணாக்கி விட்டு வேடிக்கை பார்ப்பவள் அல்லவா,அவளின் மாயக்காரி.

இருபுறமும் தலையாட்டி சலிப்பாய் இதழ் குவித்து ஊதிக் கொண்டவனோ அவளை நோக்கி விரைய அவனையே படுத்தி எடுக்கும் விதமாய் பாடிக் கொண்டிருந்தாள்,பாவையவள்.

"இம்ச புடிச்சவ.." அவனிதழ்கள் திட்டிட அது அவளுக்கு புரிந்தபாடில்லை.

"கைய குடு.."

"அப்போ ஃப்ரெண்டா..?"

"கையக் குடுடி மாயக்காரி.."

"அப்போ பைத்தியக்காரி இப்போ மாயக்காரி..அடுத்து சூனியக்காரின்னு சொல்லிருவாரோ.." தீவிரமாய் ஆராய்ச்சி செய்த மனமோ அவனிடம் சொல்லி திட்டு வாங்க விரும்பவில்லை.

"யாருன்னு தெரியாத ஒருத்தர் கைய நீ்ட்டுனதும் என்னால கையக் கொடுக்க முடியாது.." அவள் தன் பிடியில் உறுதியாய் இருக்க அவள் இறங்கத் தானே வேண்டும்.அவள் முன் அவனாய் இருக்க அவன் காதல் விட்டிடுமா என்ன..?

"சரிடி உன் ஃப்ரெண்டு தான் கையக் கொடு.." வீங்கி வந்து கொண்டிருந்த அவனின் பாதங்களை பார்த்த படி சொன்னவனுக்கு இங்கு கொண்டு வந்து காயத்துக்கு மருந்து போடுவது சரியாய் படவில்லை.எப்படியும் மருந்து பூசி விட்டாலும் அவளை அறைக்குள் அழைத்துச் செல்லத் தான் வேண்டும்.அதற்கு முன்பாவே அழைத்துச் சென்றால் என்ன என்கின்ற எண்ணம் தான்.

"இசை வெளயாடாத..காலப்பாரு வீங்கிட்டே போகுது..கைய புடிச்சி எந்திரிச்சி வா.."

"நா யாரோ தான என் கால் வீங்கிப் பெரண்டா உங்களுக்கு என்ன..? உங்க வேலய பாக்கலாம் தான..போங்க போங்க உங்க வேலய பாருங்க.."

"சரிடி ஃப்ரெண்டு தான் கையக் கொடு.." அவன் பணிந்தி வந்து கரத்தை நீட்டிட விழிகள் மின்ன கரத்தைப் பற்றிக் கொண்டவளின் ஸ்பரிசம் எப்போதும் அவன் உயிர்த்தொட்டது.

எழுந்து நிற்க வைத்தவனோ அவளின் கரத்தை கெட்டியாகப் பற்றிக் கொள்ள பையனின் உதவியுடன் நடக்கப் பார்த்து சில அடிகள் வைத்தாலும் அவளால் முன்னறே முடியவில்லை.

"என்ன ரொம்ப வலிக்குதா இசை..?" பற்களை கடித்து அவள் வலியை அடக்குவதை கண்டவன் கேட்டிட இல்லையென்று தலையசைத்திருந்தாள்,பொய்யாக.

"நடக்க முடியுமா உன்னால..? வாயத் தெறந்து பேசு இசை.."

"ம்ம் ரூம் வர தான..நடந்துருவேன்.."வலியை உள்ளிழுத்துக் கொண்டவாறு அவள் கூறிட தன்னிடம் மறைத்துத் தொலைத்து தன்னை வதைத்துக் கொள்கிறாளே என்று அவள் மீது கோபம்.

"வலிச்சா சொல்ல வேண்டியது தான.." சற்று சத்தமாகவே திட்டியவன் அவளை கைகளில் அள்ளிக் கொள்ள அவளின் விழிகள் விரிந்திட்டன,பேரதிர்வினால்.

"ஃப்ரெ" அவள் ஏதோ சொல்லிட முயல " சும்மா ஃப்ரெண்டுன்னா தூக்க விட மாட்டேன்னு வம்புக்கு நிக்காத..புருஷன் தான் தூக்கியிருக்கேன் காட் இட்..?" அதட்டியவனின் வார்த்தைகளில் அவள் மனதில் மகிழ்ச்சியின் பேரலை.

அவளோ பையனின் வார்த்தைகள் தந்த மகிழ்வில் மெதுவாய் விழி மூடிக் கொள்ள அவளை கையில் ஏந்திக் கொண்டவனின் நிலை பெரும் திண்டாட்டமாய்.

தேகம் முழுவதும் வெம்மைப் பரவத் துவங்கிட மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றன.அவளுக்கென துடிக்கும் இதயம் தடதடத்து ஓடிட அதன் தாக்கத்தால் ஆழமாய் மூச்சு வாங்கியது,பையனுக்கு.ஆழ மூச்சுக்களை இழுத்து விட்டு சுவாச வாயுவின் அளவு போதுமானதாயில்லை.

முகம் முழுவதும் செந்நிறம் ஏறிக் கொள்ள காது மடலிலும் அந்த சிவப்பு பரவிற்று.உள்ளம் தளர சிவந்து போய் பேரழகாய்த தெரிந்தான்,யாழவன்!
இசையின் ரிதமானவன்!

இதழ் கடித்து அழுந்த விழி மூடி தன் தடுமாற்றத்தை கட்டுப்படுத்த முயன்றவனின் விழிகள் அவ்வளவு அலை பாய்ந்தன.கருவிழியின் கண்டிராத அளவு காதலின் தவிப்பு.அவளில் நினைத்திராதளவு கவிழ்ந்து நின்றிருந்தான்,பையன்.

அவளின் செவியை நிரப்பிய அவனின் இதயத் துடிப்பின் ஓசையில் வெகுவாய் பயந்து விட்டாள்,பாவையவளும்.அத்தனை வேகமாய் அடித்துத் தொலைத்தது,அவள் பெயர் சொல்லுமிதயம்.

"என்ன சாரே ஹார்ட்டு இப்டி துடிக்கிது..?" அவனில் செவி சாய்த்துக் கேட்டி ஆட்டம் கண்டு விட்டது,ஆறடி தேகம்.நடுங்கிப் போய் விட்டது,அவளுக்கென துடிக்கும் இதயம்.

"உங்களுக்கு ஃப்ரெஷர் ஏதாச்சும் இருக்கா..?" அவனின் நிலமை புரியாது அவனிடம் கேட்டிடே அவனெடுத்து வைத்திடும் எட்டுக்களில் வேகமும் கூடின.

"கொஞ்சம் பேசாம வாயேன்டி.." அவளிடம் சீறியவனின் கோபத்தின் காரணம் தன்னிலை புரியாது கேள்வி வேறு கேட்டு படுத்தி எடுக்கிறாளே என்பது தான்.

"ம்ம் சரி.." அவள் வாய் மூடிக் கொண்டு அவன் முகம் பார்த்திட அந்த பார்வையும் அவனை வதம் செய்தது.

முடியுமான அளவு வேகமாய் நடந்து அவளை கட்டிலில் அமர வைத்தவனோ அதே வேகத்தில் குளியலறைக்குள் நுழைய அவனின் செயல் புரியாது தலையை சொறிந்து கொண்டாள்,அவள்.

"கன்ட்டோர்ல்ல்ல்ல்ல்ல் யாழ்.." மாறாத அதே வார்த்தை..மாறாத அதே தோரணையில்.வலக்கரம் இடது நெஞ்சில் அழுந்தப் பதிந்திருக்க மறு கரத்தால் பின்காதோரமாய் விரல் நுழைத்து சிகையை கோதிக் கொண்டவனுக்கு முதல் முதலாய் இதயத்தின் அதிர்வு புரிவது போல்.

"நத்திங் நத்திங் ஒன்னுல்ல..லவ்வும் இல்ல..ஒன்னும் இல்ல.." தனக்குத் தானே கூறி ஆற்றுப் படுத்திக் கொண்டு வெளியே வர அவளோ காலை ஆட்டிய பாடலொன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்,தன்பாட்டில்.

"காலக் காட்டு.." அவளின் காலை எடுத்து மடியில் வைத்துக் கொள்ள அவன் பிடியில் இருந்து இழுத்துக் கொள்ள முயன்றவளை முறைத்துத் தள்ளினான்,அவன்.

"எதுக்கு இப்போ இழுத்துட்டு இருக்க..சும்மா இரு மருந்து போடனும்ல.." கடினமாய் மொழிந்தவனோ மெதுவாய் அவளின் காலை நீவி விட இமைக்காத அவள் விழிகள் அவனை வருடின,கருந்துளையென தன்னை இழுத்துக் கொள்ளும் காதலுடன்.

அவளின் பார்வை புரிந்தும் தன் வேலையில் கவனமாய் இருந்தவனின் எண்ணம் கணிக்க முடியாததாய்.

உயிர்த்தொடும்.

2024.09.18
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 27(i)


பையனோ தன்னைப் பற்றிய சுய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்க அவளின் வார்த்தைகள் செவியில் விழுந்தாலும் பார்வை விழியில் மோதினாலும் கவனத்தில் பதியவில்லை.அவனுக்கோ மனதில் பல எண்ணங்கள்.

அன்றும் இப்படித் தான்,அவளை கைகளில் ஏந்திக் கொண்டது.அப்போதெல்லாம் அவன் இயல்பாகத் தானே இருந்தான்.அவனுக்குள் எந்த வித மாற்றமும் இருக்கவில்லை.அவள் தான் வெகுவாய் தடுமாறிப் போனது.

ஆனால்,இன்றோ முற்றிலும் தலைகீழாய் இருந்ததே இருவரின் நிலைகளும்.ஏதோ மனம் தந்த உந்துதலில் அவளை தன் கைகளில் சட்டென அள்ளிக் கொண்டாலும் அதற்கு எதிர்வினையாய் இதயம் உதைத்த உதைப்பு இன்னும் அடங்கிய பாடில்லையே.இந்தக் கணமும் அந்த துடிப்பை உணர்கிறானே,பையன்.

அவளுக்கோ எந்த விதமான தடுமாற்றமும் இல்லை போலும்.வலியின் வீரியம் அவளை மேலும் எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் செய்ததா என்றும் தெரியவில்லை.அவள் தன்னிலை மாறாது தான் இருந்தாள்,அவனில் சிறு ஏமாற்றத்தை படரவிட்டு.

அவளில் மாற்றம் இல்லாத பட்சத்தில் அவனின் ஏன் ஏமாற்றம் படர வேண்டும்..?
பையன் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறான்..?
புரியவேயில்லை,அத்தனை குழப்பமாய் இருந்தது,பையனுக்கு.

பழையதை மீட்டிப் பார்த்தவனுக்கு இதயம் தடதடவென அடித்துக் கொள்ள இருபுறமும் தலையாட்டி தன்னிலை வந்தவனோ பாவையவளை ஏறிட அவளோ பார்வையால் அவனை இழுத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள்,அளவு கடந்த காதலை விழிகளில் கசிய விட்டு.

அவளின் பார்வை புரிந்தும் தன் சிந்தனையில் உழன்று தன் வேலையில் கவனமாக இருந்தவனுக்கு அந்த பார்வையை எதிர்கொள்ளும் தைரியம் தான் இல்லை.விழி உரசலில் அது மொத்தமாய் காணாமல் போகிறதோ என்னவோ..?

அவன் திமிர் கரைந்திடுது;ஆளுமை அணைந்திடுது;கர்வம் சாய்கிந்திடுது;உறுதி குலைந்திடுது;அழுத்தம் அகன்றிடுது;இறுக்கம் நொருங்கிடுது;ஆன்மா ஆடிடுது,அவளின் ஒற்றைப் பார்வையில்.

பார்வையால் அவளை பதறிடித்திடவும் அருகாமையால் அவனை திணறிடித்தடிவும் வேண்டிய உரிமத்தை அவன் அவளுக்கு தாராளமாய் வழங்கியிருக்க பையனில் காதல் இல்லையென்றால் யார் தான் ஒப்புக் கொள்வார்கள்..?

மையிடாத விழிகளின் பார்வை மைத்துளி போல் அவனில் உயிரில் கலந்து ஒட்டிக் கொள்ள அந்த விழிகளில் தொலைந்தே போனான்,அவன்.

"நீ இன்னும் என்ன லவ் பண்றியா..?" ஏனென்று தெரியவில்லை.கேட்க வேண்டும் என்று மனதில் ஏன் தோன்றியது என்று பையனும் அறியான்.

"ஏன் டவுட்டா இருக்கா..?" அவனின் எதிர்பாரா கேள்வியில் சிறு அதிர்வென்றால் ஏனோ பையனின் மீது துளிக்காமல் இல்லை,சிறு கோபமும்.

"சரி அப்போ டைவோர்ஸ் வாங்காம என் கூட இருந்தா உனக்கு ஓகே..அப்டி தான..?"

"எனக்கு ஓகே தான்..நீங்க தான் நோ நெவர்னு சொல்லி கிட்டு இருக்கீங்க..உங்கள லவ் பண்ணவும் வேணாங்குறீங்க..அப்றம் என்ன தான் பண்றது..?"

"ம்ம்..இப்போ நீ கிச்சன்ல விழுந்த.. உன்னால எந்திரிச்சி நடக்க கூட முடியல..நீ ரூம்கு கூட நா தான் உன்ன தூக்கிட்டு வந்தேன்..இப்போ மருந்து கூட நா தான் போட்டு விட்டுட்டு இருக்கேன்.." கூறுகையிலேயே அவளின் பாதங்களை மெதுவாய் சிறு அழுத்தத்துடன் நீவி விட்டவனை விழிகளுக்குள் நிரப்பிக் கொண்டாள்,அவள்.

"ஆமா இப்போ அதான நடந்துச்சு..எதுக்கு திடீர்னு இப்டிலாம் கேக்கறீங்க..?" புரியாதவளாய் அவள் வினவிட அவனிதழ்கள் பிரியாமல் மெல்ல புன்னகைத்துக் கொண்டன,தமக்குள்.

"யோசிச்சு பாரு..இதுவே ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு அப்றம் நடந்து இருந்தா நீ என்ன பண்ணிருப்ப..? அப்போ நா உன் கூட இருப்பேனா இல்லயான்னு தெரியாது..மோஸ்ட்லி உன் பக்கத்துல இருக்க மாட்டேன்..ஏன் உன் கூடவே இருக்க மாட்டேன்..அப்போ என்ன பண்ணுவ இசை..?" தீர்க்கமாய் ஏதோ ஒன்றை மனதுக்குள் வைத்த படி கேட்டவனின் விழிகளில் மரணத்தைப் பற்றிய பயமோ கவலையோ துளியும் இல்லை.ஆனால்,பாவையவளின் விழிகள் தான் மெல்ல கலங்கிப் போயின.

"உன்னால தனியா ரெண்டு ஸ்டெப் கூட எடுத்து வக்க முடியாது..அப்போ யாரு உன் கூட இருப்பா..? யாரு உனக்கு எல்லாம் பண்ணி கொடுப்பா..? யாரு இப்டி மருந்து பூசி விடுவா..? உன் பக்கத்துல யாருமே இருக்க மாட்டாங்க..இப்டி ஒரு லைஃப் உனக்கு தேவயா இசை..?" அவன் ஆழ்ந்த குரலில் கேட்டு அவளை குழப்பி விட முனைய பையனின் எண்ணத்தை முன்னமே அவள் ஊகித்திருப்பாள்,போலும்.

கலங்கிய விழிகளின் ஈரத்தை உள்ளிழுத்துக் கொண்டு தலையணையில் சாய்ந்து அமர்ந்திட அவளின் பாதங்கள் இன்னுமே அவனின் பிடிக்குள் தான்.வலி குறையும் வரை நீவி விடலாம் என்று நினைத்திருப்பானோ..?
யாருக்குத் தெரியும்,கல்லுளி மங்கனின் எண்ணப் போக்கை பற்றி.

பையனின் மனநிலை புரிந்தாலும் அவளுக்கோ அவனின் கேள்வியில் அளவிட முடியா கோபம்.அவன் தனக்காகத் தான் யோசிக்கிறான் என்று தெரிந்தாலும் அவனின் நம்பிக்கையில்லாத பேச்சை அவளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.அவள் மனம் ஏற்கவும் செய்யாதே.

"அதுக்கு முன்னாடி நா ஒன்னு கேக்கட்டுமா சாரே..?"

"ம்ம்ம்..கேளு.."

"ஒரு நாள் நீங்க ஏதோ அவசரத்துல ஆஃபீஸ் போக ரெடியாகிட்டு இருக்கீங்க..ஏதோ பெரிய ப்ராஜெக்டுக் வேலன்னு வச்சிக்கோங்களேன்.." அவள் கூறும் தொனியே வில்லங்களை உணர்த்திட பையனோ வெறுமேன "ம்ம்" மட்டும் சொல்லி வைத்தான்,நெற்றி சுருங்க.

"ஏதோ மறதில நா வேற தண்ணிய தரைல கொட்டி வச்சிருக்கேன்..அதப்பாத்து கடுப்பாகி நீங்க என்ன திட்ட வரும் போது பை மிஸ்டேக்கா கொட்டுன தண்ணில கால வச்சு வழுக்கி விழுந்துர்ரீங்க.."

"ம்ம் அப்றம்.."

"விழுந்த வேகத்துல மண்ட போய் அடிபட்டு மண்டயே ஒடஞ்சிருச்சு..குபு குபுன்னு ரத்தம் ஓடுது..அந்த டென்ஷன்ல நீங்க மயங்கி விழுந்துட்டீங்க..அப்போ நா மட்டுந்தான் இருக்கேன்..அப்போ யாரு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவா..?"

" நீ வேணும்னே சொல்ற மாதிரி இருக்கு..‌என்ன ஏதாச்சும் ப்ளேன் பண்ணி இருக்கியா..?"

"ச்சே ச்சே ப்ளேனும் இல்ல..ஒன்னும் இல்ல.
பதில சொல்லுங்க.."

"நீ மட்டுந்தான் இருக்கன்னா நீ தான்.."

"ஓகே நா தான் ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேக்கனும்..இன்னுமொரு ரெண்டு வருஷத்துல நா இல்லன்னு வச்சிக்கோங்க..உங்கள யாரு ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேப்பா..?"

"வாட்..? பைத்தியமா உனக்கு..? ரெண்டு வருஷத்துல உனக்கு என்னவாகிடப் போகுது..? அதுவும் இப்போ எதுக்கு அதப் பத்தி பேசற..பைத்தியம்.." அவள் தன் மரணத்தை குறிப்பிட்டு பேசியது அவனுக்கு கோபத்தை தந்திருக்க அதன் தாக்கத்தால் படபடவென பொறிந்திருந்தான்,எதையும் யோசியாமல்.

"அதே தான்..அதே தான் நானும் சொல்றேன்..இன்னும் அஞ்சாறு வருஷமோ பத்து வருஷமோ உங்களுக்கு எதுவும் ஆகப் போறதில்ல..? இப்போ சும்மா எதுக்கு அத யோசிச்சுகிட்டு இருக்கீங்க..?"

"எதுக்கு இசை புரியாமப் பேசற..? உன் சிட்டுவேஷனும் என் சிட்டுவெஷனும் ஒன்னா..? நீ வாழ வேண்டிய பொண்ணு டி.."

"அப்போ நீங்க மட்டும் சாக வேண்டி பையனா..? வந்துட்டாரு பேச.."

"ஆமாடி அப்டி தான்..சாக வேண்டிய பையன் தான்..இன்னும் அஞ்சாறு வருஷத்துல அப்டியே சாகப் போற பையன் தான்.." தன் தரப்பை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே என்கின்ற இயலாமையில் அவன் வெம்பிட இசையவளோ அசரவில்லை.

"இங்க பாருங்க சாரே..உங்களுக்கு வியாதி இருக்குங்குறதுக்காக நீங்க ஒன்னும் சாகப் போற ஆளும் இல்ல..எனக்கு வியாதி எதுவும் இல்லங்குறதுக்காக நா ஒன்னும் வாழப் போற ஆளும் கெடயாது..ஒரு வேள உங்களுக்கு முன்னாடியே நா போய் சேந்துர்லாம்..எப்போ எது நடக்கும்னு உங்களுக்கு தெரியுமா சாரே..? அதுக்கப்றம் நீங்க தான் என்ன பத்தி நெனச்சி கிட்டே கடைசி வர இருக்கனும்.."பையனை தெளிய வைத்திடும் முயற்சியில் அவள் பேசிட அந்த கல்லுளி மங்கன் கேட்டுக் கொண்டால் தானே..?

"இசை புரிஞ்சிக்கோ..நீ பேசறது வேணும்னா சினிமாக்கு செட் ஆகலாம்..ஆனா ரியல் லைஃப்ல..நல்லா யோசிச்சுக்கு ப்ராக்டிகல் கு இது செட்டாகுமான்னு..நாம கல்யாணம் பண்ணிக்கறதே நம்மளுக்கு லைஃப் லாங் ஒருத்தங்க வேணும்னு தான்..பாதியிலேயே டைவோர்ஸ் பண்ணிட்டு போய்ருவேன்னு முன்னாடியே சொல்லியிருந்தா யாராச்சும் கல்யாணம் பண்ணிப்பாங்களா..? அது மாதிரி தான் இதுவும்..பாதியில உன்ன விட்டுட்டு போகத் தான் போறேன்..அப்றம் எதுக்கு என் கூடவே இருக்கனும்னு பிடிவாதம் புடிச்சிகிட்டு இருக்க..?"

"................"

"எல்லா எடத்துலயும் நம்ம லைஃப்ல ஒருத்தர் தேவப்படுவாங்க இசை..என்ன தான் இல்லன்னு சொன்னாலும் அது நெஜந்தான்..உன் லைஃப்ல இருந்து நா பாதில போகத் தான் போறேன்..அத யாராலயும் மாத்த முடியாது..உன்னால என்னால யாரலயும் மாத்த முடியாது.."

"கடவுளால மாத்த முடியும் தான சாரே.."

"இசை நா என்ன சொல்ல வர்ரேன்னு புரிஞ்சிக்காம பேசாத..நாளக்கி உனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு..அதுல எப்டி நீ தனியா இருப்ப..?"

"சரி உங்க பாய்ண்டுக்கே வர்ரேன்..நீங்க சொல்றது சரி தான்..கண்டிப்பா தனியா இருக்க முடியாதுன்னு தான சொல்றீங்க...?"

"ஆமா.."

"சரி இப்போ நா உங்கள டைவோர்ஸ் பண்ணிட்டேன்..என்னயவே வெரட்டு வெரட்டுன்னு வெரட்டிட்டு இருக்குற ஆளு நீங்க..நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்கன்னு கன்ஃபார்ம்..நா வேற கல்யாணம் பண்ணி கிட்டா நீங்க தனியா தான இருப்பீங்க..? நா தனியா இருக்கக் கூடாதுன்னு நீங்க யோசிச்சா நியாயம்..? நா யோசிச்சா அது அநியாயமா..? உங்களுக்கு ரத்தம் எனக்குன்னா தக்காளி சட்னியா...?" பையனின் பேச்சை அவனுக்கே திருப்பி விட அயர்ந்து போனான்,பையனும்.

"அடியேய்...நா இருக்கப் போறது கொஞ்ச காலம் தான்..அதுக்கப்றம் எனக்கு அந்த ப்ரச்சனயே இல்ல.."

"நீங்க என்ன எம தர்ம ராஜாவா..? உங்க ஆயுசு எவ்ளோன்னு தெரிஞ்சுருக்க..சரி சரி மொறக்காதீங்க..நீங்க சொன்னதுக்கே வர்லாம்..நா உங்கள தனியா விட்டுட்டு போனா நீங்க தனியா இருக்குறது கொஞ்ச நாள் தான்..ஒரு அஞ்சு வருஷமோ ஆறு வருஷமோன்னு தான சொல்றீங்க..ஆனா நீங்க என்ன விட்டுட்டு போனப்றம் நா வாழ்க்க முழுக்க தனியா இருக்கனும்..தனியா இருந்து கஷ்டப்படனும் அதத் தான சொல்றீங்க..?"

"ம்ம் புரியுது தான.."

"வெயிட் வெயிட்..நா இன்னும் பேசி முடிக்கவே இல்ல..நீங்க என்ன விட்டுட்டு போனா நா ரொம்ப நாள் கஷ்டப்படனும்னு யார் சொன்னா..? அது எப்டி உங்களுக்கு தெரியும்..? நீங்க போய் அடுத்த நாளே நானும் உங்க கூட வந்துட்டா...ஒரு ரெண்டு நாள்ள வந்துட்டா..ஒரு ரெண்டு வருஷத்துல வந்துட்டா..உங்களால அஞ்சு வருஷம் தனியா இருக்க முடியும்னா என்னால ஒரு ரெண்டு வருஷம் தனியா இருக்க முடியாதா..?" புருவத்தால் கொக்கி போட்டு அவள் கேட்டிட பையனுக்கோ வார்த்தைகள் இல்லை.

"உனக்கு அப்டி எதுவும் ஆகாது இசை.." அவளுக்கென்று நினைக்கும் போதே இதயம் பதற பையனின் குரல் நலிந்து ஒலித்தது.

"எனக்கு எதுவும் ஆகாதுன்னும் உங்களுக்கு ஆகித் தான் தீரும்னும் நீங்க எப்டி சொல்லலாம்..? உங்க கிட்ட கடவுள் கனவுல ஏதாச்சும் சொல்லிட்டு போனாரா என்ன..?"

"பைத்தியமாடி நீ..பைத்தியமா..? நா சொல்றத புரிஞ்சுக்காம இருக்க..தெரிஞ்சு தான் பண்றியா இதெல்லாம்..?நாளக்கி ஒன்ன மாதிரியே ஒரு பயந்தாங்கொல்லியா ஒரு பொண்ணு பொறந்தா என்ன செய்றது..? அப்பா இல்லாம வளத்துக்கு முடியுமா உன்னால..?" அவன் கடுப்பில் அவளிடம் காய்ந்து விழ அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை,யாழின் இ(ம்)சை.

"ஓ..என்ன மாதிரி பொண்ணு பொறந்தா தான கஷ்டம்..உங்கள மாதிரி பையன் பொறந்தா நோ ப்ராப்ளம்..நாம பையனே பெத்துக்கலாம்.." அவள் அதற்கும் தீர்வு சொல்ல சத்தியமாய் பையனுக்கு சினத்தின் உச்சம் தான்.

"அறஞ்சிரப் போறேன்டி போய்ரு..வந்துட்டா எனக்குன்னு.."

"அப்போ நா உங்களுக்குன்னு பொறந்தவ தான்னு நீங்க ஒத்துக்கறீங்களா சாரே..?" கட்டிலில் அமர்ந்து காலாட்டியவாறே நமுட்டுச்சிரிப்புடன் அவனின் கடுப்பை ஏற்றி அவனின் இரத்த அழுத்தத்தை எகிற விட உறுத்து விழித்தான்,பையன்.

ஏனோ பையனை சீண்டிப் பார்க்கத் தோன்றிற்று அவளுக்கு.எந்நேரமும் நிதானமாய் இருப்பவனின் இந்த அவதாரம் அவளை சாய்த்துப் போட்டதே.

தான் ஏதோ உணர்த்தப் போய் பேச்சு எங்கோ வந்து நிற்பதை எண்ணிய அயர்வும் ஆற்றாமையும் பையனின் விழிகளில்,நிறைவாகவே.

"மூடிட்டு படு.." கடுப்பில் அவன் எறிந்து விழ நாக்கைத் துருத்தி விட்டு விழி மூடிக் கொண்டவளுக்கு சோபாவில் தனக்கு முதுகு காட்டி படுத்தவனை பார்க்க சிரிப்பாய் வந்தது.

"வர வர ரொம்ப மாறிட்டு வர்ராரு இந்த ஆளு..ஆனா அழகா இருக்காரே.." அவனின் முதுகை பார்வையால் துளைத்தவாறே யோசித்திட அவளின் பார்வை தன் மீது படிவதை அவன் மனம் உணர்ந்து தொலைத்திட உறக்கும் வர மாட்டேன் என்றதே.

அவளின் பார்வை தனக்குள் மூட்டிய குறுகுறுப்பு அவனை ஏதோ செய்வது போல்.அடி நெஞ்சில் புரண்டெழுந்த உணர்வு மனதை நிறைத்தது.

"எதுக்குடி என்னயே பாத்துட்டு இருக்க..? கண்ண மூடிட்டு படு.."

"அத இந்த பக்கம் திரும்பி சொன்னா தான் என்னவாம்.." அவளுக்கு முதுகு காட்டி இருப்பவனை அவள் திட்டிட அவனுக்குமே அவளை ஒரு முறையேறும் திரும்பிப் பார்த்திட வேண்டும் என்ற எண்ணம்.

"கன்ட்டோர்ல் யாழ்ழ்ழ்ழ்ழ்.." தனக்குள் கூறிக் கொண்டவனுக்கு அவள் பாடுவது செவியை உரசிட கவனம் பாடலில் பதிந்தது.

"உன் வார்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால்.."அவள் அடுத்த வரியை பாடும் முன்னே எழுந்து விட்டான்,அவன்.

"நைட் நிம்மதியா தூங்க விட மாட்டியா இம்ச புடிச்சவ..பேசாம வாய மூடிட்டு தூங்கு.." என்ற படி அருகே இருந்த தலையணையை அவளை நோக்கி எறிய அது சரியாய் அவளுக்கு பக்கத்தில் சென்று வீழ்ந்ததிட பாவமாய் பார்த்தாள்,பாவையவள்.

"பாட்டு பாடறது ஒரு குத்தமா கோபால்.." அவனிடமே முகம் சுருங்கக் கேட்டவள் விழி மூடி சாய ஆயாசப் பெருமூச்சுடன் இருபுறமும் தலையாட்டிக் கொண்டான்,யாழ் வேந்தன்.

●●●●●●●

"உன் வார்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால்..உன் மடியில் எந்த கண்ணீர் வழியுமடி.." கோப்பொன்றை சரிபார்த்த படி சுழல் நாற்காலியில் இலேசான அசைவுடன் இருந்த அரவிந்தின் முன்னே நிழல் விழ நிமிர்ந்து பார்த்தவனுக்கு தன் முன்னே தீயென விழித்துக் கொண்டு நின்ற பையனைக் கண்டதும் முதலில் எதுவும் புரியவில்லை.

இரண்டு நாட்களாய் அவளிடம் மட்டுமல்ல,அவனிடமும் பாராமுகம் காட்டிக் கொண்டு இருப்பவனின் செயலில் முதலில் தோழனுக்கு எதுவும் புரியாது போகவிடினும் பாவையவள் சற்றே விடயத்தை எத்தி வைத்திடவும் தான் பையனின் கோபத்துக்கான காரணம் புரிந்தது.

அவனுமே பையனிடம் பலமுறை பேசி புரிய வைக்க முயன்று விட்டான்,இந்த இரு நாட்களில்.அவன் இடம் கொடுக்க மாட்டேன் என்றிருக்க விடயம் கொஞ்சம் ஆறட்டும் என விட்டு விட்டவனுக்கு திடுமென தன் முன்னே நின்றவனின் செயலில் திகைப்பு.

"என்ன மச்சான்..?"

"என்ன மச்சான்..? எதுக்கு இப்போ நீயும் இந்த பாட்ட பாடிட்டு இருக்க..வாய மூடிட்டு வேல பாக்க முடியாதா உன்னால.. பாட்ட பாரு பாட்ட..இனிமே வாய தொறந்த இருக்கு உனக்கு.." காய்ந்து விழுந்தவனோ முறைப்புடன் நகர தலையை சொறிந்து கொண்டான்,அரவிந்த்.

"நல்ல பாட்டு தான இது..இதுக்கு ஏன் இவ்ளோ கோவமா திட்டிட்டு போறான்.." தனக்குள் சிந்தித்துக் கொண்டவனுக்கு தெரியாதே அவனுக்கு அந்த பாடல் வரிகளை கேட்க நேரிடுகையில் இதயத்தில் இசையின் பூகம்பம் வெடிப்பது.

"நா வேற அவள பத்தி நெனக்க கூடாதுன்னு இருக்கேன்..இந்த படுபாவி ஞாபகப்படுத்திட்டான்.." தோழனை மனதுக்குள் அர்ச்சித்தவனின் மனசாட்சிக்கு வாய் இருந்தால் ஏதோ அவளை நினைப்பதே இல்லை போன்று அவன் காட்டிக் கொள்வதைக் கண்டு சத்தியமாய் அது அழுது புலம்பியிருக்கும்.

வேலையில் மூழ்டியவனின் கவனம் அடிக்கடி சிதறியது,இசையவளின் வார்த்தைகள் செவிகளில் ஒலித்ததில்."இவ ஒருத்தி" மனதால் முணகிக் கொண்டு விழி மூடி தன்னை சமப்படுத்திக் கொண்ட சமயங்கள் ஏராளம்.

அரவிந்தின் விழிகள் பையனைத் தான் அடிக்கடி உரசிக் கொண்டிருந்தன.அவனே உணரா அவனின் மாற்றங்கள் தோழனுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது.இருப்பினும் சிறு சந்தேகம்,தோழனை சோதித்துப் பார்க்க மனம் உந்தியது.

வேண்டுமென்று பாவையவளுக்கு அழைப்பு எடுத்தவனோ காதில் வைத்துக் கொண்டு பேசினான்,சற்று சத்தமாகவே.

"ஆ இருக்கேன் மா..சும்மா தான் ஃபோன் பண்ணேன்..சரி அப்டியா அப்டியா சரி சரி இரு நா பத்து நிமிஷத்துல வர்ரேன்..ஆஃபிஸ்கு தான..பிக்கப் பண்றது பெரிய விஷயமா வர்ரேன் மா.." அவன் தன்பாட்டில் பேச மறுமுனையில் இருந்தவளுக்கு மொத்தமும் சூன்யம் தான்.

"என்ன பேசறாரு அண்ணன்.." யோசித்த படி அவளிருக்க அழைப்பு துண்டிக்கப்பட்டிட மீள அழைக்கவும் முடியவில்லை.அலைபேசியில் நிலுவை இல்லை.

"மச்சான் தங்கச்சிய வீட்டுக்கு கூட்டிட்டு வர போறேன்..பத்து நிமிஷத்துல வர்ரேன் டா.." தோழனிடம் பொய்யை அடித்து விட யாழவனின் கரங்கள் அந்தரத்தில் நின்றன.

உயிர்த்தொடும்.

2024.09.19

இன்னிக்கி ஒரு எபி தான் பா..ப்ளீஸ் அட்ஜஸ்ட் கரோ..முடியும்னா போட்றேன்
 
Status
Not open for further replies.
Top