ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பேரன்பின் பிறவி நீ -கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 12


இனியன் அன்று திட்டுவிட்டு சென்றதில் இருந்து ஒரு வாரம் ஆகியும், இன்று வரையில் அவனைப் பார்க்கவே இல்லை அழகி.


இனியனிடம் இருக்கும் தன் வீடியோ உள்ள பென்ட்ரைவ்வை அவனுக்கு தெரியாமல் எடுத்தப் பிறக்கே மீண்டும் அவன் முன் சென்று அவனைத் தொல்லைச் செய்ய வேண்டும் என்று எண்ணியவள். பலவாறு முயன்றும் அந்த பென்ட்ரைவ்வை இதுவரை அவளால் எடுக்க முடியவில்லை.


நாளை தீபாவளி என்னும் நிலையில், ஊரே கொண்டாட்டங்களில் திளைத்திருக்க. அழகி மட்டும் நாளை என்ன சறுக்கு கூறிவிட்டு சென்னைக்கு போவது என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.


மூளை ஒருபக்கம் என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தாலும், வாய் பாட்டிற்கு மறுபக்கம் அன்னைச் செய்துக் கொண்டிருந்த தீபாவளி பலகாரங்களை எல்லாம் டேஸ்ட் பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அனைத்தையும் ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தது.


அந்நேரம் அழகியை நோக்கி ஓடி வந்த ஹரி, " அழகி! விஷயம் தெரியுமா?? நம்ம தங்கராசு சித்தப்பா வீட்டுகிட்ட ஒரே சண்டை... எல்லாரும் அங்கே தான் இருக்காங்க... நம்ம வேலு மாமா, மருதண்ணே, அமிழ்ந்தினியன் சார் எல்லாரும்" என்று கூற,


அழகியின் கண்கள் சிஞ்சான் கண்களைப் போல் பளபளக்க ஐடியா ஒன்று தோன்றியது அவளுக்கு. அந்த ஐடியாவை ஹரியிடம் கூறியவள், உடனடியாக அவனை அதை செயல் படுத்தவும் சொன்னாள்.


அழகி சொன்னது போலவே அச்சுப் பிசகாமல் செய்த ஹரி. தான் இவ்வளவு நேரமாகத் தேடிக் கொண்டிருக்கும் பொருள் கிடைக்காமல் போகவும், அவன் இருக்கும் இடத்திலிருந்து மூன்று வீடுகள் தள்ளி நின்றுக் கொண்டிருந்த அழகியை நோக்கி,


" ஹே அழகி! இங்க நீ சொன்ன அந்தப் பொருள் இல்லை புள்ள. நான் வேணும்னா இனியன் சார் கிட்ட எங்க இருக்குன்னு கேட்டுட்டு வரட்டா?? " என்றான் அங்கிருந்தேச் சத்தமாக.


'இவன் காரியத்தையே கெடுத்துடுவான் போல, சரியான மென்டல் பய' என்று முனுமுனுத்தவள்.



" டேய் ஹரி வேணாம்டா ! நீ இங்க வா. நாளைக்கு பார்த்துக்கலாம்.. அந்த பனைமரம் அசந்த நேரமா நானே அதை ஆட்டையைப் போட்டுடுவேன் ... நீ வா நாம கிளம்புவோம். என்கிட்டையே தில்லாலங்கடி வேலைச் செய்யுற அந்த பனைமரத்துக்கு இருக்கு " என்று கூறிக்கொண்டே திரும்பியவள், எதன் மீதோ மோதி நிற்க...
அது என்னவென்று நிமிர்ந்து பார்த்தவள் சத்தியமாக அங்கு அவனை எதிர்பார்க்கவில்லை.


" இப்போ பேசுங்க மேடம்ம்ம்ம்... பனைமரம் என்று இப்போ கூப்பிடுங்க" என்றான் இனியன் அவளைப் பார்த்துச் சிரித்தவாறு.



"இதுயெல்லாம் ரொம்ப தப்பு பனை.... ச்சே... இனியன் சார்ர்.. என்கிட்ட அந்த பென்ட்ரைவ்வை திரும்ப தந்திடுங்க..." என்றாள் எங்கோப் பார்த்தப்படி.


"ஹாஹா... அன்னைக்கு நான் சொன்ன அதே வசனம் போல இருக்கு... இதை தான் கர்மா இஸ் பூம்ராங் என்று சொல்லுவங்களோ மிஸ். மதியழகி" என்று இனியன் கூறவும்.... அழகியின் போன் 'தில்லுவாளே புச்சினேஜேயா ... ஓ .. ஓ...' என்று ஒளிக்கவும் சரியாக இருந்தது.


'இது வேற நம்ம மானத்தை கரெக்ட் டயம்ல வாங்குது' என்று முணுமுணுப்பாய் கூறியவள். மெல்ல இனியனை நோக்கி,


" என்னை நீங்க திட்டின அப்போவே நமக்குள்ள இருந்த டீலிங் எல்லாம் முடிஞ்சுப் போச்சு மிஸ்டர். அமிழ்தினியன்! அந்த பென்ட்ரைவ்ல இருக்க என் வீடியோவை டெலிட் பண்ணிட்டா நா உங்களை இனி எப்பவும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் " என்றாள்.


"நாளைக்கு உன்னை சென்னைக்கு கூட்டிகிட்டி போக உன் அப்பாகிட்ட சம்மதம் வங்கியாச்சுன்னு சொன்னாலும் என்னை டிஸ்டர்ப் பண்ணாம அப்படியே போவியா அழகி??" என்றான் இனியன் ஆழ்ந்த குரலில்.


"வாவ்!உண்மையாவா??" என்றவளின் குரலில் இருந்த மலர்ச்சியேப் போதுமானதாக இருந்தது, இனியனின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவிக்க.


"யெஸ் அழகி! நாளைக்கு மோர்னிங் 10.30க்கு பஸ். சீக்கிரம் எழும்பி ரெடியாகி இரு.." என்றான் மலர்ந்த முகத்துடன்.


"என்னால நம்பவே முடியல! தேங்க்யூ சோ மச் பனை ச்சே இனியன் சார்" என்றவள் சந்தோஷ ஆரவாரத்தில் என்ன செய்கிறோம் என்று உணராமலேயே இனியனை அணைத்துவிட்டு சென்றிருந்தாள் அழகி.


அவளின் இந்த திடீர் தாக்குதலில் உறைந்து நின்றது என்னவோ இனியன் தான்.


*************************


சென்னையில் வந்திறங்கியது முதல் மிகவும் உற்சாகமாய் காணப்பட்டாள் அழகி. புதுக்கோட்டையைத் தாண்டி இதுவரையில் எங்கும் வெளியில் சென்றிராதவள் முதல் முறை சென்னை வந்திருக்கிறாள். அதுவும் தனியாக, சொந்தப் பந்தங்களை விட்டு இனியனுடன்.


எப்போதும் பரபரப்புடன் காணப்படும் சென்னையின் சாலைகள் எல்லாம், தீபத்திருநாளான இன்று சாதாரணமாகவா காட்சியளிக்கும்?? எங்கு காணினும் புத்தாடை உடுத்தி மக்கள் மகிழ்வாக பட்டாசுகளை வெடித்து நிறைவாக இந்த தீபத் திருநாளைக் கொண்டாடிக் களித்துக் கொண்டிருந்தனர்.


அழகி இதுவரை இப்படியாப்பட்ட ஆரவாரங்களை எல்லாம் கண்டதே இல்லை. அழகூரிலும் வெடி எல்லாம் வெடிப்பார்கள் தான். இருந்தாலும் , இந்த அளவிற்கு பிரமாண்டமாக எல்லாம் இருக்காது. ஏன் திருவிழாக்களில் கூட இந்த அளவு வேட்டுச்சத்தங்களை கேட்டதே கிடையாது அழகி.


வானம் முழுவதும் வான வேடிக்கைகளாக நிறைந்திருக்க, அதை இனியனுடன் இணைந்து அவன் வீட்டு மொட்டை மாடியில் நின்றுப் பார்த்துக் கொண்டிருப்பதும் ரசனையாகத் தான் இருந்தது அவளுக்கு.


"போதும் அழகி! இதுக்கு மேல இங்கே நின்னா புகை அதிகம் ஆகிடும்.. உள்ளே போகலாம் " என்ற இனியனைத் தொடர்ந்து வீட்டினுள் சென்றாள் அழகி.


இரண்டு படுக்கை அறைகள் கொண்ட தனி வீடு அது. இனியன் அழகூரிற்கு செல்லும் முன்பு வரை இந்த வீட்டில் தான் வசித்தது.


"வீடு ரொம்ப அழகா இருக்கு இனியன் சார்!" என்றாள் வியப்பாய்.


"இன்னும் என்ன சார் மோர்ன்னு கூப்பிட்டுகிட்டு இருக்க?" என்றவனைப் பார்த்து சிரித்தவள்,


"அட! இப்போ சார் சொல்லுறது தான் ட்ரெண்ட் இனியன்... அதுவும் இப்படிக் கூப்பிடுவதும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்குல..." என்றாள்.


"அதுவும் உண்மை தான். நீ கூப்பிடுற மாடுலேஷன் நல்லா இருக்கும்" என்ற இனியன்,


"அழகி அந்த லெப்ட் சைட்ல இருக்க ரூம்ல நீ தங்கிக்கோ. இந்த ரூம்ல தான் நா இருப்பேன்… ஏதாவது வேணும்னா தயங்கமா என்னை வந்து எழுப்பு" என்றான்.


இனியன் காட்டிய அறையினுள் சென்றவள், அலுப்புத் தீரக் குளித்துவிட்டு இரவு உடையை அணிந்துக் கொண்டு ஹாலிற்கு வந்தவள் கண்டது,சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த இனியனை தான்.


அழகி அங்கு வந்ததை அப்போது தான் கவனித்த இனியன், "வா! வந்து உட்கார் அழகி" என்றான்.


அவள் அமர்ந்ததும்,"சாப்பிட என்ன ஆர்டர் பண்ணட்டும்??" என்றான் அழகியிடம்.


"எனக்கு எதுவும் வேண்டாம் இனியன் சார். வர வழியில சாப்பிட்டதே வயிறு ஃபுல்... உங்களுக்கு என்ன வேணுமோ அதை ஆர்டர் பண்ணுங்க" என்றாள்.


" எனக்கும் வயிறு ஃபுல் தான் அழகி" என்றான் சிரிப்பினுடே.


"அப்பறம்.. உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் இனியன் சார்" என்றாள் தயக்கமாக.


"என்ன??"


"அது, நாம கட்டாயம் தனித் தனி ரூம்ல தான் தூங்கனுமா??"


"பின்னே?? ஒன்னாவா தூங்க முடியும்" என்றான் சிரித்தவாறு.


"சே! நா அப்படி சொல்லல. அது வந்து எனக்கு தனியா தூங்கப் பயம்.. சோ ரெண்டுப் பேரும் இங்க ஹாலிலேயே தூங்கலாம?? ப்ளீஸ்.." என்றவளின் கோரிக்கையை மறுக்கவா செய்வான் இனியன். அவனும் சரியென்று சம்மதம் சொல்லிவிட,


"அப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு இனியன் சார். நா தனியா இருந்தா பேய் வரும்னு நினைச்சு பயப்படுவேன். இப்போ நிம்மதியா நா போய் பிளாக் காபி போடுறேன்.. உங்களுக்கு அதுப் பிடிக்குமா ?? இல்ல க்ரீன் டீ போடடுமா??" என்றவளை இமைக்காமல் பார்த்தவன்,


"பிளாக் காபி?? அதுவும் இந்த டயம்ல" என்றான் கேள்வியாக.


"எனக்கு நயிட் தூங்குறதுக்கு முன்ன பிளாக் காபி குடிச்சத்தான் தூக்கம் வரும் இனியன் சார்!" என்றவள் சமயலறைக்கு சென்று பிளாக் காபி போட ஆரம்பித்தாள்.


"அப்போ எனக்கும் அதையே போடு அழகி!" என்று கூறியவன். ஹாலில் அமர்ந்து ஒவ்வொரு டிவி சேனல்களாக மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்த இனியனின் கைகள் எதர்ச்சியாக பாட்டு சேனல் ஒன்றை வைக்க. அதில் ஓடிய பாடலைக் கண்டதும் மீண்டும் சேனலை மாற்றினான் அவன்.


சமையலறையில் நின்றிருந்த அழகியின் செவிகளிலும் அந்த பாடலின் வரிகள் விழ, தனக்கொரு காபி கப்பும் இனியனுக்கு ஒரு கப்புமாக இரு கைகளிலும் எடுத்துக்கொண்டு ஹாலிற்கு விரைந்து வந்தவள்,


"இப்போ ஒரு சாங் போச்சே … அந்த சேனல் வைங்க இனியன்!" என்றாள்.


"ஏன்??"


"வைங்களேன்" என்றவள் அவனிடம் இருந்த ரிமோட்டை வாங்கி அவளே அந்த சேனலிற்கு மாத்தியவள், இனியன் கையில் அவனுக்கான கப்பை கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்து அந்த பாடலை கேட்டு ரசித்தவள், அவளையும் அறியாமல் அந்த பாடலில் ஆழ்ந்து அதனுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தாள் அழகி.


'வாழ்க்கை என்பது என்ன…
பள்ளிபாடமுமல்ல...
கற்று கொண்டதை மெல்ல முன்னேற...

காதல் என்பது என்ன...
புள்ளி கோலமுமல்ல...
காற்றில் கலையும் போது தள்ளாட...

எங்கோ எங்க ஓர் உலகம்…
உனக்காக காத்து கிடக்கும் …
நிகழ்காலம் நதியை போல...
மெல்ல நகர்ந்து போகுதே ...
நதி காயலாம்…
நினைவில் உள்ள காட்சி காயுமா?? '


பாடும் அழகியையே இமைக்காமல் பார்த்திருந்தான் இனியன்.


பாடல் முடியவும் தான், தானும் அந்த பாடலுடன் இணைந்துப் பாடி இருக்கிறோம் என்பதை உணர்ந்த அழகி,


"இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங்… தினமும் இதைக் கேட்டால் தான் எனக்கு தூக்கமே வரும் இனியன். பர பர பட்டாம்பூச்சி சாங் .. கிட்டத்தட்ட எனக்கு ஒரு தாலாட்டு மாதிரி.." என்றுக் கூறியவளைப் பார்த்து,


"ரொம்ப அழகா பாடுற அழகி " என்றவன். அதை தாண்டி வேறேதும் கூறவில்லை அவளிடம்.


அழகி கேட்டுக் கொண்டதுப் போலவே இருவரும் சோபாவின் அருகே டிவியின் முன்பு பாயை விரித்து அதில் படுத்தப்படியே டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு எப்போது எப்படி இருவரும் உறங்கினர் என்பது அவர்களுக்கே தெரியாது.


மறுநாள் காலை விடியவும், அழகி மெரூன் வண்ணப் பட்டு புடவையிலும், இனியன் நீல நிறச் சட்டை மற்றும் வெள்ளை வேட்டியிலும் தயாராகிப் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல, அங்கே இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர் அழகியின் தோழி ரம்யாவும், அவள் காதலன் கோகுலும்.


பதிவுத் திருமணம் இனிதே நடந்து முடிய, அவர்களுக்காக வாங்கிய பசிரிப் பொருட்களைக் கொடுத்து வாழ்த்திவிட்டு விடைப் பெற்றனர் அழகியும், இனியனும்.


"இவ்வளவு தூரம் வந்துட்டோம்… அப்படியே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போய்ட்டு வரலாமா இனியன் சார்??" என்ற அழகியின் ஆசைகாக அவளை அங்கு அழைத்துச் சென்றான் இனியன்.


கோவிலில் ஒரு மூத்த தம்பதியரின் கால்களில் ஜோடி ஜோடியாக தம்பதியர்கள் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவும், அது எதற்கு என்று எதையும் விசாரிக்காமலேயே இனியனுடன் சென்று அவர்களிடம் ஆசி வாங்கினாள் அழகி.


"இப்போ என்ன விஷயம்னு தெரியாம எதுக்கு அவங்க கிட்டப் போய் ஆசிர்வாதம் வாங்குன அழகி??" என்று இனியன் கேட்கவும், அவ்வளவு நேரம் இருந்த சுமுகமான சூழல் மறைந்து கடுப்பானாள் அழகி.


"ஏன் எல்லாரும் அவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்குறாங்கன்னு உங்களுக்குத் தெரியணும்
அவ்வளவு தானே??" என்றவள்.


அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த பெண்மணியை அழைத்து, "ஆண்டி! ஏன் அந்த பெரியவங்க கால்ல விழுந்து எல்லாரும் ஆசிர்வாதம் வாங்குறாங்க?" என்றாள் கேள்வியாக.


"ஓ! அதுவா! அவங்களுக்கு இப்போ தான் சதாபிஷேகம் முடிஞ்சதும்மா…
அதான் அவங்க கிட்ட ஆசி வாங்கினா தம்பதியர் மன ஓற்றுமையோடு, நீண்டக் காலம் சேர்ந்து வாழ்வாங்கன்னு நம்பிக்கை. அதான் எல்லாரும் அவங்க கிட்ட ஆசி வாங்குறாங்க. உங்களைப் பார்த்தாலும் புதிதாக திருமணமான தம்பதி போல தான் தெரியுறீங்க. போங்க .. நீங்களும் போய் அவங்க கிட்ட ஆசி வாங்குங்க" என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.


அவர் சொன்னதைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்ற அழகியை,
"இதுக்கு தான், தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்னு சுத்தக் கூடாது அழகி" என்று அவளைக் கிண்டல் செய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தவன், அழகியுடன் பிரகாரத்தை சுற்றிவிட்டு வெளியே வந்தான்.


கோவிலின் குளத்தருக்கே சற்று நேரம் நின்றிருந்தவர்கள். வீட்டிற்கு செல்லலாம் என்று கிளம்புகையில் தான் அழகியின் கண்களில் பட்டது அந்த கடை … ரோஜாஸ் மினியேச்சர் ஷாப்.


அந்த கடையை கண்டதும், இனியனையும் அழைத்துக் கொண்டு கடையினுள் சென்றவள் தனக்கு பிடித்த குட்டிக் குட்டி கடாய், குட்டி அடுப்பு, குட்டி தோசை தவா என்று அனைத்தையும் வாங்கியவள், அந்த பைகளை எல்லாம் இனியனிடம் தந்துவிட்டு முகம்கொள்ளா புன்னகையுடன் நடந்து வந்தாள்.


"சோப்பு சாமான் விளையாடுற வயசா அழகி உனக்கு?" என்றான் இனியன் தன் கைகளில் இருக்கும் பைகளை பார்த்தப்படி.


"எதே!! சோப்பா?? இதுக்கு பேரு மினியேச்சர் குக்கிங் இனியன் சார்!! நாம ஊருக்கு போனதும் ஒரு தடவ உங்களுக்கு நானே இதுல குக் பண்ணித் தாரேன்" என்றவளை நோக்கி,


"உசுரு முக்கியம் பிகிலே!!" என்றான் இனியன்.


அவன் தோள்களில் இரண்டு அடியைப் போட்டவள், "கிண்டலாப் பண்றீங்க" என்று அவன் கைகளிலும் கிள்ளினாள்.


"கொலைகாரி.. கொல்ல பாக்குறா" என்று இனியன் போலியாக அலற. அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் அழகி.


சிரிப்பும், கிண்டலுமாக வீட்டிற்கு வந்த இனியனும் அழகியும் வந்ததும் வராததுமாக அவசர அவசரமாக தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டவர்கள், ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த புதுக்கோட்டை பஸ்சில் அமர்ந்ததும் தான் நிம்மதி பெருமூச்சையே விட்டனர்.


"உங்களை ரொம்ப தொல்லை பண்ணுறேன்ல சாரி.." என்ற அழகியைப் பார்த்து சிரித்தவன்.


"எனக்கு நிறைய அர்ஜெண்ட் வேலை இருக்கு அழகி. அதான் இவ்வளவு அவசரமா உன்னையும் கிளம்ப வச்சிட்டேன்.அதுக்கு நா தான் சாரி கேட்கணும். நிச்சயமா அடுத்த முறை நாம சென்னை வரப்போ நிதானமா உனக்கு எல்லா இடத்தையும் சுத்திக் காட்டுறேன்டா" என்றான் இனியன் சமாதானமாய்.



அதன் பிறகு, ஒரே ஹெட்செட்டை இருவரும் ஒரு ஒரு காதில் மாட்டிக் கொண்டு அழகியின் ஃபோனில் இருந்த காமெடிப் படம் ஒன்றைப் பார்த்துச் சிரித்தவாறே தங்களது பயணத்தை இனிமையாகத் தொடர்ந்தனர் இருவரும், தங்களிடம் தாங்களே அறியாமல் உருவாகி இருந்த அந்த இயல்பான நெருக்கத்தை பற்றி அறியாமல்.
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 13


' மஞ்சு! மஞ்சு! ' என்ற வேலுசாமியின் குரல் கேட்கவும், பின்கட்டுச் சமையலறையில் நின்றிருந்த மஞ்சுளா, அடுப்பை அணைத்துவிட்டு வரவேற்பறைக்கு வந்தார்.


இத்தனை வருடத் திருமண வாழ்வில்,வேலுசாமியின் குரலை வைத்தே அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து வைத்திருந்த மஞ்சுளா, தற்போதைய வேலுசாமியின் குரலை வைத்தே அவர் ஏதோ கோபத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்துக்கொண்டு, "என்னங்க! என்ன விஷயம்? ஏன் இப்படி சத்தமாக் கூப்பிடீங்க? ஏதாவது பிரச்சினையா?" என்றார் நிதானமாக.


வேலுசாமியின் கோபத்தைச் சமாளிக்கும் வித்தை அறிந்த ஒரே ஜீவன் அவரது சரிபாதி மஞ்சுளா மட்டுமே. எப்போதும் பொறுமையின் சிகரமாய் மட்டுமே காட்சி அளிக்கும் மஞ்சுளா, தன் கணவர் வேலுசாமியின் தன்மானத்தை சீண்டும் வகையில் யாரேனும் நடந்துக் கொண்டால், தன் பொறுமைகள் அனைத்தையும் துறந்து பெண் சிங்கமாய் சீறி தன் ஆண் சிங்கத்தை காக்கவும் தயங்கியதில்லை அவர் ஒருபோதும்.


மஞ்சுளாவின் நிதானக் குரலில் தன்னை கட்டுப்படுத்தியவர், "அழகிக்கு ஃபோன் பண்ணியா மஞ்சு? இப்போ எங்கே வந்துகிட்டு இருக்காங்களாம் ?" என்றார் அவரும் அழுத்தமான குரலில், ஆனால் நிதானமாக.


"திருச்சி தாண்டி வராங்கலாம். ஆனா, பாருங்களேன் நம்ம பொண்ணுக்கும் இப்போ கொஞ்சம் பொறுப்பு வந்துடுச்சுங்க.. இன்டெர்வியூ எல்லாம் அட்டெண்ட் பண்ண சென்னை வரைக்கும் தனியாப் போய் இருக்காளே! எங்கே இவ இப்படியே சின்னப் பிள்ளை மாதிரி பொம்மை படம் பார்க்கிறதோட நின்னுடுவாளோன்னு ரொம்ப பயந்துகிட்டே இருந்தேன். இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.." என்று புன்னகையுடன் கூறும் மனைவியையே அமைதியாக பார்த்திருந்த வேலுசாமி,


"பிள்ளைங்க எல்லாம் நாம நினைப்பதை விட அதிகமாகவே வளர்ந்துடாங்க மஞ்சு. நாம தான் இன்னும் அவங்களை குழந்தையாவேப் பார்க்கிறோம்" என்றார் உணர்வற்றக் குரலில்.


வேலுசாமியின் குரலைக் கேட்டுத் திகைத்த மஞ்சு, "என்னங்க.. ஏன் இப்படி பேசறீங்க? நீங்க இன்னைக்கு ஆளே சரி இல்லை.. வாங்க வந்து முதல்ல சாப்பிடுங்க.. அப்புறம் பேசிக்கலாம் " என்றார் பதற்றமாக.


ஆனால், வேலுசாமியோ அவர் அளவிற்கெல்லாம் பதறவில்லை. நிதானமாக.. மிகவும் நிதானமாகவே தன் பையினுள் இருந்த அந்தப் புகைப்படங்களை எடுத்துச் சோபாவின் அருகிலுள்ள டீபாயின் மீது வைத்தவர், அதே நிதானத்துடன் சோபாவில் அமர்ந்து, மஞ்சுளாவின் கைகளைப் பற்றி அவரையும் சோபாவில் அமர வைத்தார்.


டீபாய் மீதிருந்த அந்த புகைப்படங்களை நடுங்கும் விரல்களால் தொட்டார் மஞ்சுளா. ஏனோ அவருக்கு அதை தொடும் போதே உதறல் எடுத்தது உள்ளுக்குள். அதே நடுக்கத்துடன் அந்தப் புகைப்படங்களைப் பார்த்தவர் அதிர்ச்சியில் எழுந்தே விட்டார்.


ஒரு புகைப்படத்தில் அழகியும், இனியனும் கையில் மாலையுடன் பதிவாளர் அலுவலகத்தின் முன்பு நின்றிருந்தனர். மறு படத்திலோ இருவரும் ஜோடியாக ஒரு வயது முதிர்ந்த தம்பதியரின் கால்களின் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் கடைக்கு சென்றது, குளத்தருகில் நின்றிருந்தது முதல் இருவரும் ஒன்றாக இனியனின் வீட்டினுள் நுழைவது வரை அனைத்தும் துல்லியமாக பலக் கோணங்களில் புகைப்படங்களாக பதிவுச் செய்யப்பட்டிருக்க, அந்த புகைப்படங்களைத் தான் இப்போது திகைத்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் மஞ்சுளா.


மஞ்சுளாவின் திகைத்த முகத்தை வைத்தே, அவர் அந்தப் புகைப்படங்களைக் கண்டு ஏதோ தவறாக அனுமானித்துள்ளார் என்பதைப் புரிந்துக்கொண்ட வேலுசாமி, "மஞ்சு! நீ நினைக்குற மாதிரி ஒன்னுமில்லை.." என்றவரை முழுவதும் கூறவிடாமல் இடைமறித்த மஞ்சுளா,



"நா நினைக்கிற மாதிரி இல்லைன்னா?? வேற எந்த மாதிரிங்க … அதான் இந்த போட்டோஸ் பார்த்தாலே நல்லா தெரியுதே! கையில மாலையோட ரெஜிஸ்டர் ஆஃபீஸ் முன்னாடி நின்னா வேற என்ன அர்த்தம் இருக்குமாம்? போதாக்குறைக்கு கோவில்ல ஆசிர்வாதம் வேற.. இவ்வளவும் பண்ணிட்டு .. எப்படிங்க அவளால அவ்வளவு இயல்பா என்கிட்ட பேச முடிஞ்சது?? பாவி… இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணமே பண்ணிட்டாளேங்க…." என்று தலையில் அடித்துக்கொண்டு மஞ்சுளா அழ, அவர் கைகளைப் பிடித்துத் தடுத்து நிறுத்திய வேலுசாமியோ, 'கண்டேன் சீதையை' என்ற ஒற்றை வரியில் சீதையைக் கண்டு விட்டேன் என்று ராமரிடம் அனுமன் கூறியதுப் போல், " நம்ம பொண்ணப் பத்தி தெரியாத மஞ்சு உனக்கு??" என்ற ஒற்றை கேள்வியில் மஞ்சுளாவிற்கு அனைத்தையும் உணர்த்தினார் வேலுசாமி.


"அப்போ இந்த போட்டோஸ் பொய்யா??"


"போட்டோஸ் உண்மை தான்! ஆனா, நீ நினைச்ச விஷயம் தப்பு மஞ்சு. அழகியோட ஃபிரென்ட்க்கு கல்யாணம் பண்ணி வைக்கத் தான் என்கிட்ட பொய்ச் சொல்லிட்டு சென்னை போய் இருக்காங்க ரெண்டு பேரும். நம்ம அழகியைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்… அதனால் தான் அவளை தனியா எங்கேயும் அனுபமாட்டேன். அப்படியே அனுப்பினாலும் நிச்சயம் ஏதாவது ஒரு வம்பு வழக்கோட தான் திரும்ப வீட்டுக்கு வருவா.. அது உனக்கே நல்லா தெரியும் மஞ்சு.


இந்த முறை இனியன் தம்பியே வந்து அழகியை இன்டெர்வியூவிற்காக சென்னைக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லவும் தான். அவர் மேல இருந்த நம்பிக்கையில் அழகியை சென்னைக்கு அனுப்பினேன். ஆனா, அவரே இப்படிப் பண்ணி இருப்பாருன்னு நா நினைக்கவே இல்ல மஞ்சு.. " என்றார் வேலுசாமி.


"அவரை இவ தான் தொல்லைப் பண்ணி இப்படி பண்ண வச்சி இருப்பாருங்க.. ஒரு விஷயம் நடக்கனும்ன்னா எவ்வளவு வேலை செய்து நம்மை சம்மதிக்க வைப்பா.. அதே மாதிரிதான் அந்த தம்பியைத் தொல்லை பண்ணி இருப்பா. இவ தொல்லைத் தாங்காமல் அவரும் இப்படி பண்ணி இருப்பாரு" என்று மஞ்சுளா வேலுசாமியை சமாதானம் செய்ய.


அப்போது, "வீட்ல யாராவது பெரிய மனுசங்க இருக்கீங்களா??" என்ற பலத்தக் குரல் வீட்டு வாசலில் இருந்து கேட்கவும் மஞ்சுளாவும் வேலுசாமியும் வெளியில் சென்றார்கள் யார் அது என்று பார்ப்பதற்காக.


அங்கே கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்த கதிரைப் பார்த்ததும், "வாங்க தம்பி ! எப்படி இருக்கீங்க… அன்னைக்கு கடை அதிகம் சேதம் ஆவதற்கு முன்னாடியே தீயை அணைச்சாச்சுன்னு அப்பா சொன்னாங்க. ஒன்னும் பிரச்சனை இல்லையே.." என்று அவனை வரவேற்றவர். அழகியை பெண் பார்க்க வந்த அன்று தீ விபத்து ஏற்பட்ட அவர்களது கடையைப் பற்றியும் விசாரித்தார் தன்மையாக.


அவனோ அவரை ஏறயிறங்கப் பார்த்து விட்டு, "அது ஒரு பிரச்சனையும் இல்லை. அழகி எங்க இருக்கா?? ஆளையே காணோம்" என்றவனது கேள்விக்கு விடையாக, "ஆமா, அழகி வெளியே போய் இருக்கா தம்பி" என்றவர்.


" நீங்க உள்ள வாங்க தம்பி" என்று வரவேற்க, அவரைத் தடுத்து நிறுத்தியவன்,


"என்ன சார் ! பொண்ணு ஊர் மேயப்போய் இருக்கான்னு அப்பா நீங்களே இவ்வளவு அலட்சியமா சொல்லுறீங்களே??" என்றவன் அந்த வாக்கியத்தைக் கூறி முடிக்கும் முன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் வேலுசாமி.


"யார் வீட்டு பொண்ணப் பத்தி.. யார் பேசுறது" அனல் பறந்தது அவர் வார்த்தைகளில்.


அதுவரையில் அலட்சியமான பாவத்துடன் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தவன். அவரது ஒற்றை அறையில் கன்னத்தில் கை வைத்தவாறே எழுந்து நின்றான் அவன்.


வேலுசாமி தன் வீட்டின் முன்பு வைத்து ஒருவனை அடிப்பதைக் கண்டு அங்கு கூடியவர்கள் , அடிவாங்கியவன் சிறிது நாட்களுக்கு முன்பு அழகிக்கு பார்த்திருந்த வரன் என்பது புரிப்படவும் அவர்களுக்குள்ளே குசுகுசுவென்று பேசிக் கொண்டனர்.


தன்னை வேலுசாமி அடித்ததை எண்ணி மிகவும் அவமானமாக உணர்ந்தவன். அவரை எப்படியேனும் பதிலுக்கு அசிங்கப்படுத்தி பழித்தீர்க்க வேண்டும் என்று எண்ணிய கதிர், தான் முதலில் அழகியைப் பற்றி தவறாக பேசியதால் தான் வேலுசாமி தன்னை அடித்தார் என்பதைப் பற்றி வாகாய் மறந்தேவிட்டான்.


"என்னப்பா வேலு! என்ன பிரச்சனை?" கூட்டத்திலிருந்து முதியவர் ஒருவர் கேட்க.


அப்போதுதான் அவசரப்பட்டு பொதுவெளியில் கதிரின் மீது கை நீட்டி விட்டதையே உணர்ந்தவர். ஆனது ஆகட்டும் என் பெண்ணைப் பற்றி தவறாக பேசினால் யாராக இருந்தும் அவர்களுக்கான என் பதில் இது தான் என்று தனக்கு தானேக் கூறிக் கொண்டு, "அது ஒன்னும் இல்ல அண்ணே! சின்ன மனஸ்தாபம் ஆகிப் போச்சு அதான் .. மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லண்ணே" என்றார் தன்மையாக.


வேலுசாமியின் பதிலை கேட்ட கதிரோ, "இது நல்ல கதையா இருக்கே! ஒரு ஊர் சுத்தி பொண்ண பெத்து... ஊர் மேய விட்டுட்டு.. இங்க எல்லார் முன்னாடியும் நல்லவன் வேஷமா போடுற நீ .. நல்லா வருவயா நீயெல்லாம்.. யோவ்! ரொம்ப நல்லா வருவ" என்றான்.


சற்றும் மரியாதையற்று ஏகவசனத்தில் பேசியவனைக் கண்டு, "ஹே!! என்னப்பா நீ .. எங்க வந்து யார் கிட்ட மரியாதை இல்லாம பேசுற.. எங்க ஊரு பொண்ணப் பத்தி தப்பா பேசுற.. இது போதாதுன்னு அவ்வளவுப் பெரிய மனுஷன்.. அவரையும் மரியாதையே இல்லாம உன் இஷ்டத்துக்கு பேசுற.. முதல்ல வாயை அடக்கு தம்பி.. இல்லனா முழுசா ஊர் போய் சேர மாட்ட" என்றார் கூட்டத்தில் இருந்த மற்றோருவர்.


அந்த நபரைத் தொடர்ந்து 'ஆமா! யாரைப் பற்றி பேசுற?? எங்க புள்ள தங்கம்', 'எங்க ஐயாவை மரியாதை இல்லாம எப்படிடா பேசுவ நீ..' என்று பலக் குரல்களும் கூட்டத்தில் சலசலக்க,


"ஹே!! அமைதியா இருங்கப்பா எல்லாரும். தம்பி ஏதோ தெரியாம பேசிட்டாரு… நாங்களே எங்களுக்குள்ளப் பேசித் தீர்த்துக்குறோம் … நீங்கலாம் கிளம்புங்க.. ரொம்ப நன்றிப்பா எல்லாருக்கும்.. எனக்காக எல்லாரும் ஒன்னாக் கூடியதற்கு … " என்று கூறிக் கூட்டத்தைக் கலைக்க நினைத்தார் வேலுசாமி.


அவருக்கு நன்றாகவே தெரியும்.. இதே கூட்டம் இங்கு மேலும் தொடர்ந்து நீடித்தால். பிரச்சனை மேலும் கூடுமே தவிர ஒருப்போதும் குறையாது என்று.


அதையே தான் கதிரும் எண்ணினான் போலும். எனவே, தன் குரலின் சத்தத்தை தன்னால் முடிந்த மட்டும் அதிகப்பட்ச டெசிபல் அளவிற்கு உயர்த்தியவன்,


" அழகூர் மக்களே! நீங்களே நா சொல்லுறதைக் முழுசாக் கேட்டுட்டு எனக்கான ஒரு நியாயத்தைச் சொல்லிட்டு போங்க ப்ளீஸ்..



இதோ நிக்கிறாரே! இந்த பெரிய மனுஷன். என்கிட்ட அவர் பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி தரதாச் சொல்லி என்னை நம்பவச்சு இருந்தாரு. அதை நம்பி நானும் என் குடும்பமும் இதோ இதே வீட்லத் தான் வந்து பெண்ப் பார்த்துட்டு போனோம்.


ஆனா, அதுக்குள்ள என் கடைல சின்ன பிரச்சினை ஆகிப்போச்சு… நா அதையெல்லாம் சரிச் செய்துட்டு கல்யாணத்தில் கவனம் செலுத்தலாம்னு இருந்தேன்.


ஆனா, இங்க இவரோட பொண்ணு அழகியோ… நமக்கு ஒருத்தனை மாப்பிளைப் பார்த்தாங்களே ! அவன் நமக்காக காத்திருப்பானே அப்படிங்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லாம … யாரோ ஊர் பேரு தெரியாதப் பையன் கூட ஊரு சுத்தப் போய் இருக்கா … அதுமட்டுமா… அவன் கூட கல்யாணம் பண்ணி குடும்பமே நடத்திக்கிட்டு இருக்கா..


இதை பற்றி இவர்கிட்டச் சொல்லி எனக்கு என்ன பதில் சொல்லப் போறீங்கன்னு நியாயம் கேட்டதுக்குத் தான்.. இந்த மனுஷன்… அதான் இந்த ஊரோட பெரிய மனுஷன்… ப்ரேஸிடெண்ட் வேலுசாமி.. பொது இடம்னு கூடப் பார்காம என்னைக் கைநீட்டி அடிச்சிட்டாரு… இந்த அக்கரமத்தை கண்டிச்சு எனக்கு நீங்களாவது.. ஒரு நியத்தை சொல்லுங்க மக்களே.. உங்க எல்லாரையும் தான் நா முழுசா நம்பியிருக்கேன்.. " என்று முதலைக் கண்ணீர் வடித்தவன்.


தனது ஃபோனில் இருந்த அழகியும், இனியனும் பதிவாளர் அலுவலகத்திற்கு முன்புக் கையில் மாலையுடன் இருந்தப் புகைப்படங்களை அனைவரிடமும் காட்டித் தனக்கு நீதி வாங்கித் தருமாறுக் கேட்டான், அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு குள்ளநரி தனமாக.
 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
அழகி வீட்டின் முன்பு ஒரே சலசலப்பாக இருப்பதை கேள்விப்பட்டு அங்கே வந்த பத்மா, அப்போது கதிர் பேசியது அனைத்தையும் கேட்டுவிட்டு,


"சார்! எங்க அழகியை பத்திப் பேச முதல்ல நீங்க யாரு?? பொண்ணு தானேப் பார்த்துட்டு போனீங்க.. நிச்சயம் எதுவும் பண்ணலையே.. நீங்க பொண்ணு பார்த்துட்டுப் போய் மாசக் கணக்குல பதில் சொல்லாம இருப்பீங்க. பொண்ணு வீட்டு சைடுல எப்போடா நீங்க ஓகே சொல்லுவீங்கன்னு காத்துக்கிட்டு இருக்கனுமா?? ஏன் நாங்க வேற வரன் பார்த்துக்க கூடாதா என்ன?? இப்போ எங்க அழகி இனியனையே லவ் பண்ணுறான்னு வச்சிக்குவோமே.. அது எங்க பிரச்சனை.. நாங்க பார்த்துக்குவோம்.. நீங்க ரொம்ப பதறித் துடிக்கவெல்லாம் வேண்டாம். அதுவுமில்லாம அவ போனது அவளோட ஃப்ரென்ட் கல்யாணத்துக்கு தான்… அவ கல்யாணம் பண்ணிக்க இல்லைன்னு எங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்... சோ, உங்க அக்கரைக்கு ரொம்ப நன்றி சார். நீங்க உங்க வேலையை மட்டும் பார்த்துகிட்டு போகலாம்" என்றவள்.


மேலும், " ஆனா, ஒன்னே ஒன்னு மட்டும் கடைசியா சொல்லிக்குறேன் மிஸ்டர்… ஒரு பெண் தனிச்சையா செயல் பட்டாலோ.. இல்ல தன் விருப்பம் போல தனக்கு பிடிச்ச இடத்துக்கு போய்ட்டு வருவதினாலோ... அவளை ஊர் சுத்தின்னு சொல்லுற உங்கள மாதிரி ஒரு குறுகிய மனப்பான்மை, சின்ன புத்திக் கொண்ட ஆள் எங்க அழகிக்கு வாழ்க்கை துணையா வரலைன்னு நா ரொம்பவே சந்தோசப்படுறேன்.


உண்மையாக் கடவுளுக்குத் தான் நன்றிச் சொல்லணும்.. இப்படி ஒரு ஆளை எங்களுக்கு அடையாளம் காட்டினத்துக்கும், அவனோட உண்மையான குணம் என்னனு எங்களைத் தெரிஞ்சிக்க வச்சதற்கும்.." என்று சரமாரியாக வார்த்தைகளைக் கொண்டு கதிரைப் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தாள் பத்மா. பின்னே, உயிர் தோழியைப் பற்றித் தவறாகப் பேசினால் அவளாலும் தான் தாங்கிக்கொள்ள முடியுமா என்ன?



பத்மா அங்கு வரும் போதே மருதுவிற்கும் இங்கு நடக்கும் பிரச்சனையைப் பற்றி குறுந்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டுத் தான் வந்திருந்தாள். அவன் வரும் வரை பொறுதிருக்கலாம் என்று எண்ணி அமைதியாக நின்றிருந்த பத்மாவையும் இப்படி சீறி எழுந்துப் பேச வைத்தது கதிரின் விஷ வார்த்தைகள் தான்.



தன் முன்னே நின்று தன்னையே இப்படி எதிர்த்துப் பேசிக் கொண்டிருக்கும் பத்மாவின் வாயை அடைப்பதற்குச் சிறந்து ஆயுதம் அழகி தான் என்பதைச் சரியாக கணித்த கதிர்,


"நான் யாருன்னா கேக்குற?? உன் ஃபிரென்ட் ஒருத்தி வருவால அவக்கிட்ட கேளு நா யாருன்னு. அழகா மினுமினுப்பா இருக்க பாம்பு தான் நம்மல கொத்தி விஷத்தை ஏத்துமாம். பாம்பு அழகா இருக்கேன்னு அது அழகுல மயங்கினா பரலோகம் தான் போகனும். அதே மாதிரி தான் உன் ஃபிரென்ட் அழகியும், பார்க்க அழகா இருக்கா.. ஆனா குணம்.. முழுசும் விஷம்.


குடும்பம் நல்ல குடும்பம் ஆச்சேன்னு நம்பி யார்கிட்டயும் பொண்ணைப் பத்தி விசாரிக்காமா சம்பந்தம் பேசினோமே. அதுக்கு ஒரே ஒரு காரணம் அவங்க மேல எங்களுக்கு இருந்த நம்பிக்கை தான்.


ஆனா, இதுக்கு முன்னாடி வந்த மூணு வரனும் எங்கள போல நல்லவங்களாவா இருப்பாங்க?? இவளை பத்தி விசாரிக்காம வந்து பொண்ணு கேட்க.


வெளியே நாலு பேரு கிட்ட இவளைப் பத்தி விசாரிச்சு இருப்பாங்க.. இவளோட வண்டவாளம் எல்லாம் முழுசும் தெரிஞ்சு இருக்கும்.. அதான் வந்த மூணு சம்பந்தமும் சத்தமே இல்லாம, சொல்லமா கொள்ளாம எஸ்கேப் ஆகிட்டாங்க போல.. ஏன் இப்படி பண்ணிங்கன்னு வந்து நியாயம் கேட்டா தான் அடிப்பீங்களே நீங்களாம்.. அப்புறம் எப்படி திரும்ப வருவாங்க..." என்று தன்னால் முடிந்த மட்டும் அழகியைத் தாக்கிச் சில விஷயங்களைக் கதிர் கூறவும், வெறும் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்ததுப் போல் ஆகிவிட்டது அழகூர் மக்களுக்கு.


வேலூசாமியை பிடிக்காத சிலரோ இது தான் வாய்ப்பென்று ,
"தங்கச்சிக்காரி காதல் கல்யாணம் பண்ணின அப்போவே அடிச்சி அவளை துரத்திவிட்டு இருந்தா… அதைப் பார்த்துப் பிள்ளையும் நல்லா வளர்ந்து இருக்கும்.


அதை விட்டுட்டு அந்த ஓடிபோனவளை வீட்டோட சேர்த்துப் பாசமழை பொழிஞ்சிக்கிட்டு இருந்தா… இந்த பிள்ளையும் என்ன தான் நினைக்கும் … நாமளும் இந்த மாதிரி பண்ணினா நம்ம அப்பா நம்மள ஒதிக்கி வைக்காம நம்மையும் இப்படி சேர்த்துக்குவாறுன்னு தானே நினைக்கும்.


அந்த தைரியத்தில் தான் அழகி இப்படி பண்ணிடுச்சு.. சொல்லுறதுக்கு ஒன்னுமில்லை… பேரு தான் பெரியக் குடும்பம் .. ஆனா உள்ளுக்குள்ள மொத்தமும் அழுக்கு தான் போல" என்று ஒரு சாரார் பேச… சிலர் வேலுசாமிக்கு ஆதரவாக பேசினர். மற்றவர் பிரச்சனை என்று வந்துவிட்டால் மட்டும் ஆளாளுக்கு நாட்டாமை ஆகிவிடுகிறார்கள் மக்கள்.


கத்தலும் கூச்சலுமாகக் காட்சியளித்த அவ்விடத்திற்கு குழப்பமானப் பார்வையுடன் வந்துக் கொண்டிருந்தனர் அழகியும் இனியனும்.


வீட்டின் முன் ஏன் இவ்வளவு கூட்டம்?? என்று எண்ணிக்கொண்டே குழப்பமானப் பார்வையுடன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளேச் சென்ற அழகியை கண்டதும், அவளிடம் நெருங்கி வந்த அழகியின் அன்னை மஞ்சுளா ஓங்கி அறைந்திருந்தார் அழகியின் கன்னத்தில்.


இந்த தாக்குதலைச் சற்றும் எதிர்பாராதவாள் "அம்மா!!" என்று அதிர்ந்துப் பார்க்கையிலேயே,


"என்னங்க பண்ணுறீங்க.. விடுங்க அழகியை" என்று இடைப்புகுந்த இனியன், அழகியை தனக்கு பின்னால் மறைத்துக் கொண்டான்.


"தம்பி! நீங்க அமைதியா இருங்க.. இவளை என்ன பண்ணனும்னு அவ அம்மா எனக்கு தெரியும்" என்றவர் அழகியின் கையைப் பற்றித் தன் புறமாக அவளைத் திருப்பினார்.


"மஞ்சு! என்னதிது?? விடு அவ கையை" என்று அதட்டலான குரலில் கூறிய வேலுசாமி, இனியன் புறம் திரும்பி 'நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைகவேயில்லை தம்பி!' என்று பார்வையாலே கூறியவரின் பார்வையில் ஒரு கணம் தடுமாறி போனான்.


அழகியைத் தன் புறம் திருப்பிய மஞ்சுளா, " இப்படி மானத்தை வாங்கிடியேடி ! உன் விளையாட்டு தனத்தோட விளைவை பார்தியா.. உன் அப்பா முன்னாடி வாயைக்கூட திறக்காதவங்க எல்லாம்… இப்போ நாக்கு மேல பல்ல போட்டு பேசுறாங்க.. எங்களை இப்படி ஒரு நிலைமையில நிக்க வச்சிட்டியே.." என்று அழகியை அடித்தவாறே ஆதங்கமாக பேசினார்.


அவ்வளவு நேரமும் எங்கே இருந்தார் என்றே தெரியாமல் இருந்த அழகியின் பாட்டி மரகதம். அழகியை மஞ்சுளா அடிப்பதை கண்டதும் "ஐயோ! என் பேத்தியை போட்டு இப்படி அடிக்கிறாளே… நா என்ன பண்ணுவேன்… என் பேத்தியை கொள்ளப் பாக்குறாளே.." என்று கத்தியவர், அங்கு நின்றிருந்த இனியனைப் பார்த்ததும்,


"ஐயோ!! இந்த ஊருக் காரப் பயலுவ பேசினப் பேச்சைக் கேட்டப் பிறகும்... இனி யாரு என் பேத்திய கட்டிக்க வருவாக … போச்சே! போச்சே! என் பேத்தி வாழ்க்கை மொத்தமும் போச்சே… இனி யாரு அவளை கட்டிக்க வருவாக…" என்று அழுக்குரலில் இனியனை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே கூறியவரைக் கண்ட இனியனோ, 'வேற யாரும் ஏன் வரணும் … நா இருக்கேன்னே என் அழகியை கட்டிக்க' என்று தன்னையும் அறியாமல் மனதில் எண்ணியவன், தான் எண்ணியதை அனைவரிடமும் சொல்லிவிடும் நோக்கில் "நா …" என்று அவன் கூற வருகையில்,


அவனுக்கு பின்புறம் இருந்து, " நா இருக்கேன்.. அழகியை கட்டிக்க" என்ற குரல் கேட்க, திகைத்துப் போய் பின்னால் திரும்பி பார்த்த இனியன் கண்டது எல்லாம் வேட்டியை மடித்துக் கட்டியபடி நின்றுக் கொண்டிருந்த ராஜனை தான்.



கம்பிரமாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு முன் வந்த ராஜன், " எனக்கு அழகியை ரொம்ப பிடுச்சு இருக்கு.. அவளை கட்டிக்க விரும்புறேன்… எனக்கு கட்டிக்கொடுபீங்களா சார்??" என்றான் வேலுசாமியை பார்த்து.


படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே ???

 
Last edited:

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 14

டைரியின் பக்கங்கள்:


10 ஜனவரி, 2015

ஹாய் ராஜ்... என்ன ரொம்ப ஆச்சரியமா இருக்கா. எப்படிடா நம்ம டைரி இவகிட்ட போச்சுன்னு. நான் தான் கேடியாச்சே ஆட்டையை போட்டுட்டேன் உங்க டைரியை.

ஆனா.. இதுவும் நல்லது தான். நான் உங்க டைரியை எடுத்துட்டு வந்ததால தானே உங்க மனசுல நீங்க என்னை தேவதையா நினைச்சுக்கிட்டு இருக்கிறீங்கன்ற உண்மையை நான் தெரிஞ்சிக்கிட்டேன்.

அது எப்படி ராஜ்!! என்னை பார்த்த அப்போல இருந்து... அந்த செகண்ட்ல இருந்து லவ் பண்ணியும் இதுவரை சரியா ப்ரொபோஸ் கூட பண்ணலை நீங்க.

என்னைக்கு நீங்க எனக்கு ஒழுங்கா ப்ரொபோஸ் பண்ணுறீங்களோ அன்னைக்கு தான் இந்த டைரியை நானும் உங்க கிட்டக் கொடுப்பேன்.

அப்போ நா எழுதிய இந்த எழுத்துக்களை எல்லாம் நீங்க படிக்கும் போது உங்க முக பாவனைகள் எப்படி இருக்கும்னு நான் பக்கத்தில் இருந்து பார்த்து ரசிச்சிகிட்டே இருக்கணும் ராஜ்.

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ராஜ். எவ்வளவு பிடிக்கும்னு சொல்லனும்ன்னா.. அதை குறிப்பிட்டு இந்த அளவுக்கு பிடிக்கும்னு எல்லாம் சொல்லவே முடியாது ராஜ். அந்த அளவுக்கு உங்களைப் பிடிக்கும்... இருந்தாலும் அதை உங்ககிட்ட நேரடியாச் சொல்லப் பயம்.

உங்களுக்கே தெரியும் எனக்கு அம்மா இல்லை. நான் பிறக்கும் போதே அவங்க இறந்துடாங்கன்னு. அது மட்டும் தான் உங்க கிட்ட சொல்லி இருக்கேன். ஆனா.. சொல்லாத பல விஷயம் இருக்கு ராஜ்.

உண்மைய சொல்ல போனா நா ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவ ராஜ். நா யார்மேல ரொம்ப ஆசை வைக்கிறேனோ அவங்க என்கூட இருக்கவே மாட்டாங்க ராஜ். அவங்களை பிரிஞ்சு அவங்களை நினைச்சு ஏங்கியே சாகனும்னு எனக்கு விதி போல.

பிறக்கும் போதே அம்மாவை இழந்துட்டேன். அப்புறம் வளரும் போது அப்பாவோட பாசம் அண்ணனோட அரவணைப்புன்னு எதையுமே அனுபவிக்காம ஒரு அனாதை போல ஹோஸ்டல்ல வளர்ந்தேன்.

என்கூட ஹோஸ்டல்ல படிச்ச எல்லாரும் லீவுக்கு அவங்க ஊருக்கு போகும் போது கூட. நான் மட்டும் எங்கையும் போகாம இங்கையே இருப்பேன். அப்பாவும் அண்ணனும் தான் வந்து பார்ப்பாங்க என்னை ஹாஸ்டல்ல.

அண்ணா வேலைல சேர்ந்தப் பிறகு தான் லீவுக்கு அப்பா என்னை ஊருக்கு கூட்டிக்கொண்டுப் போனார். ஆனா.. அதுக்கும் வந்தது ஆப்பு. ஒரு பையன் உருவத்தில்.

அவன் பேரு கூட தெரியாது ராஜ் எனக்கு. ஆனா எனக்கு அவன் ஃபிரென்ட்னு சொன்னா நம்ப முடியுமா?? ஆனா, இருந்தான் எனக்கு அப்படி ஒரு ஃபிரென்ட்.

இப்போ வரை எனக்கு அவன் பெயர் தெரியாது. எங்க ஊருக்கு பக்கத்து ஊரு... எங்க ஊருக்கு திருவிழா சமயம் வருவான். அப்போ , ஒரு நாள் ராத்திரி அப்பா எவ்வளவோ சொல்லியும் கேட்காம நான் மட்டும் தனியா வள்ளி திருமணம் நாடகம் பார்க்க போறேன்னு சொல்லிட்டு கோவிலுக்கு போனேன்.

அப்போ அந்த பக்கம் இருந்த சில பசங்க குடிச்சிட்டு போற வரப் பொண்ணுங்களை எல்லாம் கிண்டல் பண்ணிச் சீண்டி ரகளைப் பண்ணிட்டு இருந்தாங்க. நானும் அந்த பக்கம் போகவும் ஒருத்தன் என் கைய பிடிச்சு வம்பு பண்ண... அவனுங்க கிட்ட இருந்த என்னை காப்பாற்றியது என் ஃபிரென்ட் தான்.

அன்னைக்கு தான் அவன் எனக்கு அறிமுகமானான். அப்போல இருந்தே நாங்க எங்கே பார்த்தாலும் நல்லா பேசுவோம். ஆனா.. அவன் பெயரை மட்டும் அவன் சொன்னதே இல்லை. நானும் ஃபிரென்ட்னு தான் கூப்பிடுவேன் அவனை.

ஒருமுறை என்கிட்ட வந்து அவன் என்னை லவ் பண்ணுறேன்னு சொன்னான் ராஜ். எனக்கு பயம் வந்துடுச்சு. இதுலாம் தப்பு நாம நல்ல நண்பர்கள்னு நான் சொன்னதும் அவனும் அதை புரிஞ்சிக்கிட்டான்.

'ஓகே மதி... நீ எனக்கு ஃபிரென்ட் தான்.. ஆனா ஒருவேளை என்மேல உனக்கு லவ் ஃபீல் எப்போதாவது வந்தா என்கிட்ட மறைக்காம அதை சொல்லணும்'னு அவன் சொல்லவும் நானும் சிரித்துக்கொண்டே 'அப்படி வந்தா கண்டிப்பா சொல்லுவேன்' என்றேன்.

நாங்க ரெண்டு பேரும் பேசுவதை பார்த்த யாரோ என் அப்பாவோட ஆட்கள் போல. எங்களை பத்தி இல்லாததும் பொல்லாததும் அவர்கிட்ட சொல்ல. அவர் எதையும் விசாரிக்காம அவனை ரொம்ப தரைக்குறைவா பேசிட்டாரு ராஜ்.

அவன் எங்களை விட வேற கேஸ்ட் போல. அதுவும் இல்லாம அவங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் சண்டை வேறயாம்.

ஆனா.. அன்னைக்கு அப்பா கொஞ்சம் அதிகமாகவே அவனை பேசிட்டாரு ராஜ். அவன் குடும்பத்தையும் ரொம்ப தரைக்குறைவா பேசிட்டாரு. அதையெல்லாம் கேட்டு அடிபட்ட பாவதோட அவன் என்னை பார்த்துட்டு போனான் பாருங்க. இன்னமும் என் மனசை உறுத்துது அது.

என்கூட ஜஸ்ட் ஃபிரென்ட்டா பழகினத்திற்கே இப்படினா. நா முழுசா உசுரையே வச்சி இருக்க உங்களையும் என் கேட்ட ராசி என்கிட்ட இருந்து பிரிச்சிடுமோன்னு பயமா இருக்கு ராஜ்.

அதுவும் அப்பா ... கேஸ்ட் அது இதுனு சொல்லி நம்மை பிரிச்சிடுவாரோனு பயமா இருக்கு. அண்ணா நல்லவன் ராஜ். ரொம்ப நல்லவன்... அதான் அவன் கிட்ட நம்ம மேட்டரை சொல்லலாம்னு இருக்கேன். அவனை ஓகே பண்ணிட்டா அவன் எப்படியும் அப்பாவை சமாதானம் பண்ணிடுவான்.

அப்படியே இல்லைனாலும் அலைபாயுதே ஸ்டைல்ல கோவில்ல ரகசியமா கல்யாணம் பண்ணிக்கலாம் ராஜ் . அதுவும் ஒரு கிக் தானே.

அன்புக்கு ரொம்பவே ஏங்கி வாழ்ந்த ஜீவன் ராஜ் நான் . என்ன வாழ்க்கைடா இது என்று நான் வாழும் போது நீங்க என் வாழ்க்கைல வந்தீங்க. அப்பப்பா இவ்வளவு சந்தோசமா கூட வாழ முடியுமான்னு நானே ஆச்சரியப் பட்ட நாட்கள் உங்க கூட நான் இருந்த நாட்கள்.

இந்த மகிழ்ச்சியும், சந்தோசமும் வாழ்நாள் முழுக்க தொடரனும்னு ஆசை படுறேன் ராஜ்.

நாம்கே நமக்குன்னு ஒரு அழகான வீடு. அந்த வீட்டை கூட நான் டிசைன் பண்ணிட்டேன். சின்ன சின்ன மாற்றங்கள் மட்டும் பண்ணிட்டா பக்கா. நம்ம கனவு இல்லம் அது.

நம்ம கல்யாணத்துக்கு பிறகு அங்க தான் இருக்கனும் நாம சரியா. நீங்க, நான், மாமா, அத்தை, தாத்தா, பாட்டி, நம்ம பசங்கன்னு ரொம்பவே அழகான வாழ்க்கையை நாம வாழப்போறோம் பேபி.

சொந்தங்கள் இருந்தும் அனாதையா வளர்ந்த நான் இனி நம்ம குடும்பத்தில் எல்லாருடனும் சேர்ந்து வாழ போறேன்னு நினைக்கும் போதே அப்படியே வானத்துல பறக்குற உணர்வு வருது ராஜ்.

உண்மையா நீங்க சொல்லுற மாதிரி நான் உங்க வாழ்க்கைல வந்த தேவதையானு எனக்கு தெரியலை ராஜ். ஆனா சத்தியம் பண்ணி சொல்லுவேன் நீங்க தான் இருட்டுல இருந்த என் வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த என் தேவதா.

எனக்கு ரொம்பவெல்லாம் பெரிய ஆசையெல்லாம் இல்லை ராஜ்… உங்களை நிறைய காதலிக்கணும்… உங்களால நிறையா காதலிக்கப் படனும். ஆழகான அறிவான உங்களை மாதிரி குழந்தைங்களை பெற்று அவங்களை நல்ல முறையில் வளர்த்துன்னு ஒரு நிறைவான வாழ்கையை உங்களோடு வாழ்ந்துட்டு அப்படியே உங்க மடியிலேயே என்னோட இறுதி மூச்சை நிறுத்திக்கணும் ராஜ்.

எனக்கு இது போதும்… வேற எதுவும் வேண்டாம். அண்ணா அடுத்த வாரம் வாரான் ராஜ். உங்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணப்போறேன் அவனை வச்சி.

நான் இன்னும் நம்ம லவ் மேட்டரை அவன் கிட்ட சொல்லவில்லை. எங்கே சொல்ல… என்ன தான் நாம லவ் பண்ணினாலும் ஒழுங்கா ஒருமுறையாவது ப்ரொபோஸ் பண்ணி இருக்கீங்களா?? இல்லவேயில்லை.

இனியும் உங்களை நம்பினா நாம தாத்தா பாட்டியா ஆகிய பிறகும் நீங்க ப்ரொபோஸ் பண்ண மாட்டிங்க. நானே பண்ணிடுறேன்… வெயிட் அண்ட் வாட்ச் மிஸ்டர். ராஜ் என் தங்க பாட்டாணி … அணைக்கு தான் உங்க இந்த டைரியும் உங்ககிட்ட வரும் என்னோட கிப்ட்டா. ஹஹா… லவ் யூ தங்க பட்டாணி….

- வித் லவ்,
உங்க தேவதை.

 

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 15


"எனக்கு அழகியை ரொம்ப பிடுச்சு இருக்கு.. அவளை கட்டிக்க விரும்புறேன்… எனக்கு கட்டிக்கொடுபீங்களா சார்??" என்று கேட்ட ராஜனின் கண்களையேச் சற்று நேரம் உற்று நோக்கிய வேலுசாமி, " எனக்கு மனப்பூர்வமானச் சம்மதம் ராஜன்” என்றார்.


ராஜன் அழகியை கல்யாணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததே அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சி என்றால், வேலுசாமியும் அதற்கு சம்மதம் சொல்லியது பேரதிர்ச்சி.


குறிப்பாக அழகிக்கும், இனியனுக்கும் இங்கு என்னத்தான் நடக்கிறது என்றே புரியாத நிலை.


'இப்போதாவது வாயைத் திறந்து ஏதாவது சொல்லுங்க இனியன்' என்று மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டவள். இனியனை பேச வைக்க வேண்டி, 'எனக்கும் சம்மதம் ப்பா!' என்றாள் இனியனை பார்த்தவாறே.


எதுவும் செய்ய முடியாத கையறு நிலை என்று சொல்வார்களே! அப்படி ஒரு நிலையில் தான் இருந்தான் இனியன். சொல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தொண்டையில் சிக்கிய வார்தைகளுடன்.


அழகி ஏன் ராஜனுக்கு சம்மதம் சொன்னாள் என்று புரியாதவனா? இனியன். தன்னை வேலுசாமியிடம் பேச வைக்க வேண்டி என் உணர்வுகளை தூண்டி விடுகிறாளாம்.


'அழகி! என்ன நடந்தாலும் சரி.. நா உன்னை யார்கிட்டையும் விட்டுத்தர மாட்டேன். அதை மட்டும் எப்பவும் மறக்காதே' என்று மனதோடு கூறிக்கொண்டான் இனியன்.


"அழகியும் சம்மதம் சொல்லிட்டா.. இன்னைக்கு வியாழக்கிழமை, வர புதன் நாள் நல்லா இருக்கு.. அன்னைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாம்.. நீங்க என்னச் சொல்லுறீங்க தம்பி … உங்களுக்கு அன்னைக்கு வசதிப்பட்டு வருமா??" என்று ராஜனிடன் கேட்டார் வேலுசாமி.


சிறிது நேரம் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்த ராஜன், முடிவெடுத்தவனாய் " எனக்கு ஓகே சார்! ஆக வேண்டிய வேலையைப் பாருங்க " என்றான்.


நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்குமாம். அது போல தான் இனியன் நிலையும். அவன் ஒரு கணக்கு போட்டு அதன்படி சென்றால்.. அதற்கு நேர் எதிர்மாறாக தான் இங்கே நடந்துக்கொண்டிருக்கிறது.


கல்யாணம் என்றால் எப்படியும் அதற்க்கான ஏற்பாடுகளைச் செய்ய குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும். அதற்குள் எதையாவதுச் செய்து இந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று இனியன் எண்ணிக்கொண்டிருக்க, வேலுசாமி அடுத்த வராமே நாள் குறிக்கவும் ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு.


புதன்கிழமை கல்யாணம்.. அதுவும் ராஜனுடன் என்று வேலுசாமி கூறவும், அங்கு நின்றிருந்தவர்கள் எல்லாம் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு மெல்ல அங்கிருந்து கலைந்துச் சென்றனர். ஓரமாக நின்றிருந்த கதிரை அருகில் வருமாறு அழைத்த ராஜன், அவன் அருகே வந்ததும் ஓங்கி அறைந்திருந்தான்.


"என்னடா ஆளாளுக்கு அடிக்கிறீங்க!!" என்று கன்னத்தைப் பிடித்துக்கொண்டுப் பாவமாகக் கதிர் கேட்கவும்,


"மரியாதையா இவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு .. திரும்பி பார்க்காம ஒடிடு" என்று கையை பார்த்தப்படியே அழுத்தமாக கூறிய ராஜனிடன், "நா ஏன் மன்னிப்பு கேட்கணும்.. நானே பாவம்! ஒரு விக்டிம்.." என்றான் கதிர்.


"இப்போ மன்னிப்பு கேட்கலைன்னா.. அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் உன் கடை எரியும். ஆனா, அன்னைக்கு ஒரு கடை.. இன்னைக்கு மொத்த கடையும் ஜிகுஜிகு ஜொலிப்பாய் எரியும். போய் சந்தோஷமா அந்த காட்சியை நீ பார்க்க வேண்டி இருக்கும்.." கதிரின் காதோரம் குனிந்து மெல்லிய குரலில் அலட்சியமாக கூறினான் ராஜன்.


" அப்போ! நீ தான் அன்னைக்கு கடையை எரிச்சதா??" குரலே எழும்பவில்லை கதிருக்கு.


"அதில் இன்னும் சந்தேகமா உனக்கு? இப்போ மன்னிப்பு கேட்குறியா.. இல்ல உன் கடையை கரியா பார்க்க போறியா?? சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.." என்ற ராஜனின் கேள்விக்கு மறுபதில் கூறாமல், நேராக வேலுசாமியிடம் சென்ற கதிர் " சாரி சார்! என்னை மன்னிச்சிடுங்க.. சாரி அழகி" என்று கூறிவிட்டு அவர்களைத் திரும்பியும் பாராமல் சென்றவனின்.. ராஜனை மீது ஒரு நொடிப் பதிந்து மிண்டது.


'நீ சொன்ன மாதிரி பண்ணிட்டேன்.. என் கடையை ஒன்னும் செஞ்சிடாதே..' என்ற செய்தி தான் இருந்தது கதிரின் பார்வையில்.


தன்னிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு செல்லும் கதிரையேப் பார்த்திருந்த வேலுசாமி, "நன்றி தம்பி" என்றார் ராஜனிடம் உணர்வுப் பூர்வமாக.


"இதுல என்ன இருக்கு சார். நீங்க கல்யாண வேலைகளைப் பாருங்க.. என் பக்கம் என்ன செய்யணும்னு சொன்னா.. நானும் அதை சரியா பண்ணிடுவேன்… " என்றவனை பார்த்து,


"கண்டிப்பாக தம்பி! ஆனா, இன்னும் என்ன சார்னு குப்பிடுறீங்க.. மாமான்னு நல்லா குப்பிடுங்க" என்றார் வேலுசாமி எதிர்பார்புடன்.


எதிர்பார்ப்புடன் தன்னிடம் மாமாவென்று அழைக்க கேட்ட வேலுசாமியை பார்த்து மெலிதாகப் புன்னைகைத்தவன், " அது முடியாது சார்!" என்றுவிட்டு , தன் சட்டையில் இருந்து குளிர்க்கண்ணாடியை எடுத்து மாட்டியவாறே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லும் ராஜனையே பார்த்துக் கொண்டிருந்தார் வேலுசாமி.


பத்மாவின் குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டு. அப்போது தான் அங்கு வந்திருந்த மருது, நடந்த விஷயங்கள் அனைத்தையும் பத்மா கூறக் கேட்டவன், அழகியை வறுத்து எடுத்துவிட்டான். எப்படி அவள் இதற்குச் சம்மதம் சொல்லாம் என்று. பத்மாவோ அழும் நிலைக்கேச் சென்று விட்டாள். அவளுக்கு எல்லாமே சூனியம் ஆகிவிட்டது போல் வெறுமையாக இருந்தது.


இந்த விஷயம் இன்னமும் சந்தோஷிற்கும் கயல்விழிக்கும் தெரியாது. தெரிந்தால் என்ன.. என்ன.. நடக்குமோ?? அழகிக்கும் சந்தோஷை நினைத்தால் சற்றுப் பயமாகத் தான் இருந்தது.


இதுவரையில் அவனிடன் சொல்லாமல் அவள் எந்தவொருத் தனிப்பட்ட முடிவும் செய்ததில்லை.. இது தான் முதல் முறை. அதுவும் பெரிய முடிவு… அவனுக்குச் சற்றும் விருப்பமில்லாத ஒருவனைத் திருமணம் செய்யச் சம்மதித்த முடிவு.. இதற்கு சந்தோஷிடமிருந்து எதிர்வினை எப்படி இருக்குமோ என்று அழகிக்கு யூகிக்கக் கூட முடியவில்லை.


ஒருவழியாக மருதுவைச் சமாளித்தவளால் பத்மாவைச் சமாளிக்க முடியவில்லை. சரி, கயலையும் பத்மாவையும் ஒருச் சேரப் பிறகுச் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணியவள், அன்னையிடம் கோவிலுக்கு செல்வதாகக் கூறிவிட்டு குலத்தருக்கில் இருக்கும் கோவிலுக்கு சென்றாள்.


கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு எப்போதும் அவளும் ஹரியும் அமரும் இடத்தில் அமர்ந்திருந்தாள். அவளது உள்ளுணர்வு அடித்துக்கூறியது இனியன் அங்கு வருவான் என்று. அதைப் பொய்யாக்கமல் அவனும் அங்கு வந்தான்.


"ஏன் இப்படி பண்ணுனீங்க இனியன் சார்??" இயலாமையுடன் கூறியவளை வருத்தமாகப் பார்த்தவன்.


"சாரி அழகி! நீ அப்போ என்ன பார்த்த அந்த பார்வையைப் பார்த்த பிறகும் நா எதுவும் பேசாம இருந்ததுக்கு.. எக்ஸ்ட்ரிம்லி சாரி.." என்ற இனியனை 'போதும் நிறுத்து' என்று கூறும் விதமாக கை நீட்டி தடுத்த அழகி,


"அப்போ! உங்களுக்கு நா என்ன சொல்ல வந்தேன்னு புரிஞ்சும்... நீங்க அமைதியா இருந்து இருக்கீங்க இல்லையா??"


"அழகி! நா என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் புரிஞ்சிக்கோ.. என்னோட நிலைமை அப்படி.." என்றவனைத் தடுத்தவள்,


"போதும் இனியன் சார்! உங்களுக்கு நீங்க ஆயிரம் காரணம் சொல்லி விளக்கலாம்.. ஆனா, அது எல்லாம் உங்களுக்கு சார்ந்ததா தான் இருக்குமே தவிர எனக்கான பதிலா அது இருக்காது. எப்போ நா என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சும்.. நீங்க அதை கண்டுக்காம உங்க முடிவு தான் முக்கியம்னு இருந்தீங்களோ.. அப்பவே எனக்கான இடம் உங்க கிட்ட என்னன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சுப் போச்சு… நீங்க நினைச்சு இருக்க விஷயம் நினைச்ச மாதிரி நடக்க வாழ்த்துக்கள் இனியன் சார். உங்களோட பிஸியான நேரத்துல டயம் கிடைச்சா என் கல்யாணத்துக்கு வாங்க.. கிப்ட்டோட வாங்க .. அது முக்கியம்…" என்றவள், இனியன் கூற வந்த எந்த விளக்கவுரையையும் கேட்கப் பிடிக்காமல்.. விருப்பமில்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.


தன்னை விட்டு நகர்ந்துச் செல்லும் அழகியையேப் பார்த்திருந்த இனியனோ, 'உனக்கு என்னை நிச்சயம் புரிய வைப்பேன் அழகி' என்று தனக்கு தானே உறுதிக் கொண்டான்.


***************************


"என்ன தம்பி இப்படி பொசுக்குன்னு கல்யாணத்தை முடிவு பண்ணிட்டீங்க.. அதுவும் நம்ம மீட்டிங் ஏற்பாடு பண்ணி இருக்குற தேதிக்கு ரெண்டு நாள் முன்னாடி உங்களுக்கு கல்யாணம்.. இது சரி வருமா??" தலையை தடவியவாறு யோசனையுடன் கேட்டார் அருணாச்சலம்.


"எல்லாம் சரியா வரும் அங்கிள்.. இன்னும் சொல்லப் போனா.. என் கல்யாணம் நம்ம மீட்டிங்கிற்கு ஒரு பிளஸ் பாயிண்ட் தான். பிகாஸ், நம்ம ஆளுங்க எல்லாம் பெரிய ஆளுங்க.. எல்லாரும் ஒரே இடத்துல ஒன்னாக் கூடினா.. மத்தவங்க கண்ணை அது உறுத்தும்.. குறிப்பா நம்மையே கண்குத்திப் பாம்பாக கவனிச்சிகிட்டு இருக்கிற தமிழ்நாட்டு போலீக்கு. சோ, இப்போ அவங்க வந்தாங்கன்னா என்னோட கல்யாணத்திற்காக வந்திருக்காங்கன்னு சொல்லிக்கலாம்.. எந்த பிரச்னையும் இல்லை" என்றான் ராஜன் நிதமாக.


"இவன் சொல்லுறதையே வேதவாக்கா நினைச்சு ஆடுறீங்க எல்லாரும்.. ஆடுங்க.. என்ன நடக்கப் போகுதுன்னு நானும் பார்க்கத் தானேப் போறேன்" என்று வம்பாக பேசிய ஹுசேனின் கையைப் பற்றி அவனை அடக்கினார் அருணாச்சலம்.


"ஹுசேன் நீ பேசு .. உன் பேச்சை கேட்டா தான் எனக்கு நம்ம சந்திப்பு நிறைஞ்ச மாதிரி இருக்கும்.." என்று கிண்டலாகக் கூறிய ராஜனை வெறுப்புடன் பார்த்த ஹுசேன்,


" உனக்கு எங்கேயோ அதிர்ஷ்ட மச்சம் இருக்குப் போல… அதிகாரமும் இருக்கு.. இப்போ அழகான பொண்ணும் மனைவியா வரப்போறா.. நீ கொண்டாடு.. எனிவே, ஹாப்பி மேரிட் லைஃப்.." என்று வேண்டாவெறுப்பாக கைக்குலுக்கிய ஹுசேனைப் பார்த்து விரத்தியாகப் புன்னைகைத்தவன்,


"அப்படி ஒரு அதிர்ஷ்ட மச்சம் எனக்கிருந்தா.. அது போல வேற யாருக்கும் இருக்க வேண்டாம்னு வேண்டிக்கிறேன் ஹுசேன்…" என்றான் ராஜன்.


அவனது பதிலைக் கேட்டு 'எவ்வளவு ஆணவம் இவனுக்கு' என்று எண்ணிக்கொண்ட ஹுசேனிற்கு அந்த வார்த்தைகளுக்கு பின் இருந்த விரக்தி தெரியவில்லை பாவம்.


"சரி.. என் கல்யாணத்தை பத்தி விடுங்க.. இந்த வாரம் எக்ஸ்போர்ட் ஆக வேண்டிய சரக்கெல்லாம் கப்பல்ல ஏத்தியாச்சா?? அப்புறம் மீட்டிங்கிற்கு பாதுகாப்பு ரெண்டு மடங்கு அதிகப் படுத்தனும்… நா சொல்லுற எசென்ஸிக் கிட்டேயேப் பொறுப்பை ஒப்படைங்க அங்கிள்" என்ற ராஜனின் பேச்சைக் கேட்டதும் ஹுசேன் எதையோ கூற வர, அவனை தடுத்து நிறுத்திய ராஜன்.


"அந்த எசென்ஸியும் நா ஏற்பாடு பண்ணுற ஃப்ராடு எசென்ஸின்னு தானே சொல்லப் போற ஹுசேன்.. நா சொன்னதைக் காட்டிலும் பெட்டர் சாய்ஸ் உன்கிட்ட இருந்தாச் சொல்லு… அதையே ஏற்பாடு பண்ணலாம் " என்றான் நிதானமாக.


ஹுஸேனோ பதில் பேசாமல் அமைதியாக நிற்கவும், அவனை நோக்கி "டூ வாட் ஐ சே ஹுசேன்.. எப்பவும் குதற்கமா பேசிட்டே மட்டும் இருந்தா போதாது.. செயல்ல எதையாவது காட்டணும்.." என்றவன். அருணாச்சலத்திடம் மீட்டிங் பற்றிய சில விசயங்களைப் பேச ஆரம்பித்தான் ராஜன்.


************************


கடுங்கோபத்துடன் திருச்சி விமான நிலையத்தின் வாயிலில் நின்றுக் கொண்டிருந்தான் சந்தோஷ்.


அழகியிற்கும் ராஜனிற்கும் கல்யாணம் என்பதை கேட்ட நொடியில் இருந்தே இதே கோபத்துடன் தான் இருக்கிறான். தன்னிடம் ஒரு வார்த்தைக் கூட கேட்காமல் இவ்வளவு பெரிய முடிவை எடுத்த அழகியின் மீது கோபம் கட்டுக் கடங்காமல் வந்தது அவனிற்கு.


'இந்த மாமாவுக்கு என்ன தான் ஆச்சு.. இப்படி ஒரு லூசுத் தனமான முடிவை எடுத்திருக்காரு' என்று புலம்பிக் கொண்டிருந்தவனின் முன் அவன் புக் செய்திருந்த கார் வரவும், அதில் ஏறி அமர்ந்து கண்களை மூடியவன் அழகி வீட்டின் முன் கார் நிற்கவும் தான் கண்களை திறந்தான்.


திருச்சியில் இருந்து அழகூர் வரும் இந்த இடைவெளியில் அவன் மனம் ஆயிரம் ஆயிரம் விஷயங்களை நினைத்துக் கொண்டே வந்திருந்தது.


காரை விட்டு இறங்கியவன் நேரே அழகியின் வீட்டுக்குள் செல்ல.. அங்கு ஹாலில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த அழகி, எதுவும் சொல்லாமல் திடுதிப்பென்று வந்து நின்ற சந்தோஷைக் கண்டு ஆச்சர்யப்பட்டவள் "ஹே! என்ன சந்தோ .. எதுவும் சொல்லாம வந்து நிக்கிற.." என்றாள் ஆச்சரியக் குரலில்.


அவளின் கேள்விக்கு பதில் கூறாமல், "மேடம் பெரிய மனுஷி ஆகிட்டீங்க போல. என்கிட்ட கேட்டுக்காம நீங்களே ஒரு முடிவு எடுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டீங்க.." என்றவன். வீட்டின் உள்பக்கம் பார்த்து, 'மாமா! மாமா!' என்றழைத்தான்.


"ஏன் சந்தோ.. இப்படி ஒரு மாதிரி பேசுற … என் நிலைமையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோடா" கெஞ்சலாக கூறியவளிடம்,


"உன்கிட்ட எனக்கு பேச்சில்ல அழகி.. நீ அந்த ராஜனை கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு.. வாழ்த்துக்கள் … நா பேச வேண்டியது மாமா கிட்டத் தான்" என்றான் திட்டவட்டமாக.


"சந்தோ.. ப்ளீஸ்டா" என்று அழகி கூற, அவளைக் கண்டுக் கொள்ளாதவன், அறையினில் இருந்து வெளியே வந்த வேலுசாமியைப் பார்க்க.


அவரோ சந்தோஷை அங்கு சற்றும் எதிர்பாராதவராக, "அடடே! சந்தோஷ் எப்பப்பா வந்தே.. அதானே, அழகி கல்யாணத்துக்கு நீ இல்லாமல்லா" என்றார் மகிழ்வாக.


"ராஜன் கூட அழகிக்கு கல்யாணம் ஏற்பாடு ஆனதுல ரொம்ப சந்தோஷம் போல மாமா உங்களுக்கு.." என்றான் அழுத்தமான குரலில்.


சந்தோஷின் குரலில் இருந்த பேதத்தை உணராத வேலுசாமியோ, "ஆமா சந்தோஷ், பொண்ணுக்கு கல்யாணம்னா அப்பாவுக்கு சந்தோசமா இருக்காத பின்ன. என்னைவிட சரவணன் அண்ணனுக்கு தான் ரொம்ப சந்தோசம்.. நம்ம கயல் புள்ள தான் ஏதோ முறைச்சுக்கிட்டு இருக்கிறாளாம்" என்றார் இயல்பாய்.


"பொண்ணு கல்யாணம்னு மட்டுமா மாமா உங்களுக்கு சந்தோஷம்?? "


"ஆமா சந்தோஷ்.. அதோட மாப்பிள்ளை நம்ம ராஜன்.. அதான் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்.."


"இருக்காத பின்னே… இத்தனை வருஷமா இருந்த குற்றக் குறுகுறுப்பு போகத் தான் ஒரு வாய்ப்பு கிடைச்சிடுச்சே மாமா உங்களுக்கும் … பெரிய மாமாக்கும்.. சந்தோஷமாத் தான் இருக்கும்" என்றான் நக்கலானக் குரலில்.


அவன் குரலில் இருந்த நக்கலைப் புரிந்தக் கொண்ட வேலுசாமி, "என்ன சொல்ல வர சந்தோஷ்.. எனக்கு புரியலை" என்றார் அவனை பார்த்தவாறு.


"ராஜன் அப்பாவோட இறப்புக்கு காரணம் நீங்க தான்னு உங்களுக்கு இருந்த அந்த குற்றவுணர்ச்சி போக .. அவரோட பையனுக்கே.. அவன் எவ்வளவு ஐயோகியனா இருந்தாலும் பரவயில்லைன்னு உங்க பொண்ணை கட்டிவச்சி அவனோட பழி வெறியை இல்லாம பண்ணிட்டீங்க .. அதோட உங்க குற்றவுணர்ச்சியும் போயிடும்என்ன ஒரு மாஸ்டர் பிளான் மாமா .. வேற லெவல் போங்க நீங்க.." என்று கூறியவனை அதிர்ந்துப் போய் பார்த்தார் வேலுசாமி.


"டேய் சந்தோ! அப்பாவை பத்தி தப்பா பேசாதே" என்ற அழகியிடம்,


"நீ சும்மா இரு அழகி.. உனக்கு ஒன்னும் தெரியாது.. எங்கே இவரை சொல்லச் சொல்லு பார்ப்போம்.. ராஜன் அப்பா இறப்புக்கும் இவருக்கும் சம்மதம் இல்லைன்னு.. சொல்ல முடியாது இவரால்.. ஏனா, இவருக்கு தான் சம்பந்தம் இருக்கே அதில.. அந்த விஷயம் இந்த மொத்த ஊருக்கும் தெரியும். அவனுக்கு நம்ம மேல கொலைவெறி இருக்குறது காரமே இதான்.. இப்போ உன்னைக் கட்டிக்க விருப்பம்னு சொன்னதும் மறுபேச்சு பேசாம சம்மதம் சொல்லி, ஒரே வாரத்துல தேதிக் குறிச்சது எதுக்குன்னு நினைக்குற… அவனோட கோபத்தை... வெறியை.. அடக்கத் தான்… இது புரியாம நீயும் கல்யாணத்து சரின்னு சொல்லி இருக்க அழகி…" என்று சரவெடியாய் பேசிக்கொண்டே சென்றவனிடம் வந்த மஞ்சுளாவோ,


"நீயா சந்தோஷ் உன் மாமா மேல இப்படி அபாண்டமா பழிப் போடுற??" என்றார் தழுதலுத்த குரலில்.


"நா சொன்னது உண்மையா இல்லையான்னு உங்க புருஷன் கிட்டேயே கேளுங்க அத்தை" என்றவனை சற்றும் யோசிக்காமல் அடித்துவிட்ட மஞ்சுளா, குழந்தையாய் விழித்தவனை நோக்கி,


"என்னை போய் உன்னை அடிக்க வச்சிட்டியே சந்தோஷ்… பாவம்டா உன் மாமா ஆளாளுக்கு அவரை இப்படி பேசி கஷ்டப்படுத்தாதீங்க" என்றுக் கண்ணீர் குரலில் கூறியவரைக் கண்டதும்.


"அத்தை நீங்க எனக்கு இன்னொரு அம்மா மாதிரி .. நீங்க அடிச்சா அது என் நன்மைக்கா தான் இருக்கும்னு தெரியும்.. ஆனா, இந்த விஷயத்தில் மாமா தப்பு பண்ணுறார்… அவரோட குற்றவுணர்ச்சியைப் போக்க அழகியை பலி ஆக்கப் பார்க்கிறார்… அதற்கு நா விட மாட்டேன் அத்தை" என்றவன் அழகியை திரும்பியும் பாராது அங்கிருந்து சென்று விட்டான் சந்தோஷ்.


புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது அழகியின் இல்லம். சக்தியெல்லாம் ஓய்ந்தார் போல் பொத்தென்று சோபாவில் அமர்த்த வேலுசாமியிடம் சென்ற அழகி,


"அப்பா! அவன்கிட்ட ஒரு வார்த்தைக்கூட கேட்காம நா ஓகே சொன்னது தான் அவனுக்கு கோபம்.. அதை இப்படி லூசு மாதிரி பேசிட்டு போறான்.. நா அவனைச் சமாதானம் பண்ணிடுறேன்… நீங்க ஃபீல் பண்ணாதீங்கப்பா" என்று கூறிவிட்டு அவர் மடியில் படுத்துக்கொண்டாள்.


அழகியின் தலையை தடவிக் கொடுத்தவாறே.. கசந்தப் புன்னகையுடன் கண்மூடி சோபாவில் சாய்ந்தமர்ந்தார் அவர்.








 
Status
Not open for further replies.
Top