ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பனியில் உருகும் சூரியன் நானடி-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 19



அவர்களின் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்தது. அவர்களின் தொழிலும் வேகமாக வளர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் போரூரில் வாடகைக்கு இடம் எடுத்து கம்பெனி வைத்து நூறு பேர் பணி செய்யும் அளவுக்கு உயர்ந்தனர்.

பனிமலர் பிறந்த மூன்று மாதம் ஆன சமயத்தில் தான் அவர்களின் பக்கத்து இடத்தில் கோபி, மாலினி வீடு கட்ட ஆரம்பித்து இருந்தார். அவர்கள் வீடு கட்டி புதுமனை புகுவிழா வைத்த போது பனிமலர் தளிர் நடை நடந்து கொண்டு இருந்தாள்.

சித்தியின் புதிய வீட்டை பார்க்க தன் தாயுடன் வந்த ஏழு வயது ஆகாஷ் காரில் இருந்து இறங்கியதும் தன்னை நோக்கி தளிர் நடை போட்டு வந்த குழந்தையை பார்த்ததும் அவனுக்கு தோன்றியது டால் போல அழகா இருக்கு என்பது தான்.

பனிமலரின் தாய் பரிமளா அவளின் பின்னிருந்து "பாப்பு வேகமாக போகக்கூடாது" என்று சொல்லிக்கொண்டு வந்தார். தாயின் பேச்சை கேட்கமாட்டேன் என்னும் விதமாக தாய் சொன்ன பிறகு இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள் பனிமலர்.

அப்போது தான் நடை பழகி கொண்டிருந்ததால் வேகமாக நடந்த குழந்தை கால் இடறி விழப்போக "பாப்பு டால்" என்று அழைத்துக்கொண்டே வேகமாக வந்து பிடித்து இருந்தான் ஆகாஷ்.

பரிமளா பிடிக்கும் முன் ஆகாஷ் பிடித்திருந்தான்.

"பாப்பு அம்மா எத்தனை முறை சொல்லியிருக்கேன் வேகமாக நடக்காதிங்க என்று இப்ப அண்ணன் பிடிக்கலை என்றாள் என்ன ஆகியிருக்கும் கீழே விழுந்து அடிப்பட்டு இருக்கும் இல்ல" என்றதும் பால்பற்கள் தெரிய சிரித்தாள் குழந்தை.

"சிரிச்சே நீ பண்ண தப்பை மறைச்சுடுவ" என்று கூறி குழந்தையை தூக்கப்போக

" ஆன்ட்டி பாப்புவை நான் கொஞ்ச நேரம் வச்சுக்க வா?..." என்று கேட்டான் ஆகாஷ்.


" தம்பி நீ மாலினி வீட்டிற்கு வந்தியா?... " என்று கேட்டார் பரிமளா.

"ஆமாம் ஆன்ட்டி மாலினி சித்தி வீட்டுக்குத்தான் வந்து இருக்கேன்" என்றான். அதுவரை காருக்கு மறுபக்கம் நின்று பேசிக்கொண்டு இருந்த மாலினியும் அவரின் அக்காவும் இவர்கள் அருகில் வந்தனர்.

ஏற்கனவே வீடு கட்ட ஆரம்பித்ததில் இருந்து மாலினியுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்க தன் அக்காவையும் ஆகாஷையும் பரிமளாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார் மாலினி.


அதன் பிறகு ஆகாஷ் தன் சித்தி வீட்டிற்கு வரும் போது எல்லாம் ஹரியை அழைத்துக்கொண்டு பனிமலர் வீட்டுக்கு வந்து அவளுடன் விளையாடி செல்வான். ஹரி பனிமலரை விட ஒரு வயது பெரியவன்.

அவளை பாப்பு டால் என்று தான் அழைப்பான் அவளை பெயர் சொல்லி அழைத்ததே இல்லை. அவர்கள் வீட்டில் அவன் ஒரே பையன். மாலினிக்கும் ஹரி பையன் என்பதால் பெண் குழந்தையான பனிமலரை ரொம்பவே பிடித்து இருந்தது ஆகாஷ்க்கு.

எழில்நிலாக்கு அப்போது மூன்று வயது நிரம்பி இருந்தது. அகிலேஷ் அப்போது தான் பிறந்து இருந்தான்.

ஆகாஷை கண்டாள் எப்போதும் ஓடி வந்து அவனின் காலை கட்டிக்கொள்வாள் பனிமலர். பேச ஆரம்பித்த போது அவன் பெயரை ஆக்கு என்று அழைக்க ஆரம்பித்தாள் இன்று வரை அந்த பெயரில் தான் அழைக்கிறாள். அண்ணா என்று அழைக்கும்படி அனைவரும் சொல்லியும் அவள் ஆக்கு என்ற அழைப்பை மாற்றவே இல்லை.

பனிமலர் நான்கு வயது ஆகியிருக்க பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தாள். எப்போதும் துரு துரு என்று இருப்பாள் பனிமலர் அவள் பின் எப்போதும் வீட்டில் உள்ளவர்கள் யாராவது சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.


எழில்நிலா விளையாடச்சென்றால் அவள் பின்னே செல்லும் பனிமலர் திரும்பி வரும்போது மண்ணில் புரண்டு உடல் முழுவதும் அழுக்காக்கி கொண்டு தான் வருவாள் பனிமலர். அதனால் அவளை விளையாட விடும்போது கருணாகரன் தாத்தா அவளின் பின்னே சுற்றிக்கொண்டு இருப்பார்.

கேசவன், பரிமளா இருவரும் கம்பெனி செல்வதால் கருணாகரன் தாத்தா குணவதி பாட்டி இல்லை என்றால் ஊர்மிளா என்று மூவரில் ஒருவர் எழில்நிலாவையும் பனிமலரையும் பள்ளி அழைத்து சென்று திரும்ப அழைத்து வருவர்.

விடுமுறை நாட்களில் அடம்பிடித்து தாய் தந்தையுடன் கம்பெனி செல்வாள் பனிமலர். அங்கும் ஓரிடத்தில் நிற்காமல் அனைவரிடமும் அது என்ன இது என்ன விசாரிப்பாள். அனைவரிடமும் இயல்பாக பழகுவாள்.

அப்படி ஒரு விடுமுறை நாளில் தந்தையின் பைக்கில் முன் பக்கம் பனிமலர் அமர்ந்திருந்தாள் பின்னால் பரிமளா அமர்ந்து கம்பெனி சென்று கொண்டு இருந்த போது கையில் சிறு குழந்தையை பிடிக்கமுடியாமல் பிடித்துக்கொண்டு தோளில் ஒரு பையையும் சுமந்து கொண்டு ரோட்டோரமாக நடந்து சென்ற பெண்ணை கண்ட பனிமலர்

"அப்பா வண்டியை நிறுத்துங்க அந்த ஆன்ட்டி கீழே விழப்போறாங்க" என்று சொல்லவும் சில அடிகள் சென்று ஓரமாக வண்டியை கேசவன் நிறுத்தினார். பனிமலர் வேகமாக வண்டியில் இருந்து இறங்கி அந்த பெண்ணை நோக்கி ஓடினாள். அதை கண்ட பரிமளாவும் வேகமாக சென்றார்.

மயங்கி கீழே சரிந்து கொண்டு இருந்த பெண்ணின் கையில் இருந்து நழுவிய குழந்தையை கையில் ஏந்தி இருந்தாள் பனிமலர். பின் வந்த பரிமளா அந்த பெண்ணை பிடித்து இருந்தார். கேசவன் தன் உணவுப்பையில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து அந்த பெண்ணின் முகத்தில் தெளித்து விட்டு அவளின் வாயில் புகட்ட மெல்ல மயக்கத்தில் இருந்து தெளிந்த அப்பெண்.

பெண்ணின் கண்கள் முதலில் தேடியது கையில் இருந்த குழந்தையைத்தான். அதை கண்ட பனிமலர் "பாப்பா என்கிட்ட தான் இருக்கா ஆன்ட்டி" என்று கையில் இருந்த குழந்தையை அவளிடம் கொடுத்தாள் பனிமலர்.

கையில் வாங்கிய குழந்தையை இறுக்கி அணைத்து கொண்டு கண்ணீர் விட்டாள் அப்பெண்.

அவளின் கண்ணீரை துடைத்த பனிமலர் "பாப்பா கீழே விழாமல் நான் பிடித்துவிட்டேன் ஆன்ட்டி பாப்பாவுக்கு எதுவும் ஆகலை" என்றாள் பனிமலர்.

கையெடுத்து கும்பிட்டாள் அப்பெண் பனிமலரை பார்த்து அதுவரை அமைதியாக இருந்த பரிமளா அப்பெண்ணின் கையை இறக்கி விட்டு "என்னாச்சுமா உடம்பு சரியில்லையா உன் கூட யாரையாவது கூட்டி வந்து இருக்கலாம் இல்லையா?... "என்று கேட்டார்.

அதை கேட்ட அப்பெண் கண்களில் இருந்து நீர் மேலும் வழிந்து "எனக்கு யாரும் இல்லை" என்றாள்.

"குழந்தையோட அப்பா?..." என்றார் பரிமளா தயக்கத்துடன்

" தெரியலை" என்றாள் அப்பெண்.

அதுவரை அமைதியாக நின்று இருந்த கேசவன் வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தியவர். "பரி ஆட்டோவில் கூட்டிட்டு வா கம்பெனியில் போய் பேசிக்கலாம். பச்ச குழந்தையை இப்படி ரோட்டில் வச்சு இருக்க வேண்டாம்" என்றார்.

தயங்கிய அப்பெண்ணை சமாதானம் செய்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கம்பெனி வந்தார் பரிமளா.

கம்பெனியில் அவர்களுக்கு என்று இருந்த அறைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற பரிமளா முதலில் தாங்கள் எடுத்து வந்த உணவை கொஞ்சம் தட்டில் போட்டு கொடுத்து உண்ணவைத்தார். அப்பெண் உண்ட வேகத்தை பார்த்த பரிமளா மேலும் கொஞ்சம் உணவை வைத்தார்.

உணவை உண்டு முடித்து குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்தப்பின்னே பரிமளாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் அப்பெண்.

அவளின் கையை விலக்கிவிட்டு "உன்னை பற்றி சொல்ல விருப்பம் இருந்தாள் சொல்லுமா?..." என்றதும் மடைதிறந்த வெள்ளமாக அனைத்து சொல்லினாள் அப்பெண்.

தன் பெயர் சாந்தி என்றும் பதினெட்டு வயதில் காதல் வயப்பட்டு ஊரை விட்டு ஓடுவந்து திருமணம் செய்து கொண்டு ஒரு சிறு வீடு எடுத்து இரண்டு பேரும் வேலைக்கு சென்று வாழ்ந்ததையும் குழந்தை உண்டாகிய பிறகு அவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது இவள் குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியில் இருந்த போது அவன் வேறு பெண்ணுடன் ஊரைவிட்டு சென்று விட்டான்.

ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்த பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியில் ஒரு மாதம் கழித்த போது வீட்டு ஓனர் வந்து தன்னை அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் அப்படி இல்லை என்றால் வீட்டை விட்டு சொல்லுமாறு சொல்லவும் நான் வேலைக்கு சென்று ஒழுங்கா வீட்டு வாடகை தந்துவிடுகிறேன் என்று எவ்வளவே கூறியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பயந்து அக்கம் பக்கத்தினர் இடம் உதவிக்கு வருமாறு கேட்க அவர்களை எங்கே வீட்டை காலி செய்து விடச்சொல்லி விடுவாங்களோ என்று அனைவரும் விலகிவிட்டனர்.

இரண்டு நாளாக அந்த வீட்டு ஓனர் இரவில் வீட்டுக்கு வந்து கதவை தட்டிக்கொண்டு இருந்தார். நான் கதவை திறக்கவில்லை. நேற்று காலையில் வந்து என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டுவிட்டார். எங்கு போவது என்று தெரியாமல் சுற்றிவிட்டு ராத்திரி பிளாட்பாரத்தில் படுத்து இருந்தேன் அங்கேயும் சிலர் இரவு வந்து தொந்தரவு செய்தாங்க. அங்க இருந்த ஒரு வயசான அம்மா தான் ராத்திரி அவங்க கூட படுக்க வைத்துக்கொண்டாங்க காலையில் அவங்க இங்க இருக்காதமா பொல்லாதவங்க உன்னை தூக்கிட்டு போயிடுவாங்க வேற எங்காவது போய்விடு என்று சொன்னாங்க அதன் பிறகு எங்க போறது என்று தெரியாமல் ரோட்டில் போயிட்டு இருந்த அப்ப தான் நீங்க வந்தீங்க மேடம் என்றாள் சாந்தி.

அனைத்தும் கேட்ட பரிமளாவுக்கு சாந்தியை கண்டு மனம் இரக்கம் கொண்டது பின் "உன் ஊருக்கு கூட்டிட்டு போய் விடவா?..." என்று பரிமளா கேட்கவும்.

பயத்துடன் "வேண்டாம் மேடம் நான் ஊருக்கு போகலை போனா என்னையும் என் குழந்தையையும் கொன்னுடுவாங்க மேடம். நான் இங்கயே எதாவது வேலை தேடிட்டு எங்காவது தங்கிக்கிறேன்" என்றாள் சாந்தி.

"சரி நீ எங்கேவும் போகவேண்டாம்" என்று கூறிய பரிமளா "இப்ப என்கூட வா" என்று அழைத்துக்கொண்டு அங்கிருந்த வேறு பகுதியில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்றார்.

அங்கு சில குழந்தைகள் விளையாடிக்கொண்டும் சில குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருந்தனர். இரண்டு பெண்கள் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருக்க அங்கு தான் பனிமலரும் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள்.

அங்கிருந்த உள் அறைக்கு அழைத்து சென்ற பரிமளா "இங்க கொஞ்ச நேரம் படுத்து தூங்கு சாந்தி குழந்தையை இவங்க பார்த்துப்பாங்க" என்று சொல்லி விட்டு சென்றார்.

பரிமளா கேசவனிடம் அனைத்து சொல்ல இருவரும் பேசி ஒரு முடிவை எடுத்துவிட்டு சாந்தி எழுவதற்காக காத்து இருந்தனர். சாந்தி எழுந்ததும் அங்கு வேலை செய்யும் ஒரு அம்மாவை காட்டி இவங்களுக்கு யாரும் இல்லை நீ அவங்க வீட்டில் இருந்துக்க இங்கேயே வேலை செய் என்று கூறவும் கேசவன் பரிமளா காலில் விழுந்து விட்டாள் சாந்தி.

அதன் பிறகு சாந்தி எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை நன்றாக சென்றது. தான் நன்றாக இருப்பதற்கு காரணம் பனிமலர் என்று சாந்திக்கு அவளின் மீது மிகுந்த நன்றியுணர்வும் பாசமும் இருந்தது.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 20



மேலும் சில மாதங்கள் கடந்து இருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை கேசவன் நண்பர்களை பார்த்து வருவதாக வெளியே சென்று இருந்தார். எப்போதாவது முன்பு வேலை செய்த கம்பெனியில் உடன் வேலை செய்த நண்பர்களை பார்க்க சென்று வருவது பழக்கம் தான் அன்று அப்படி சென்று வந்தவர் மிகவும் சோர்வாக வந்தார்.

குளித்து முடித்து சோபாவில் வந்து அமர்ந்தார். அங்கு ஏற்கனவே கருணாகரன் குணவதி அமர்ந்து மாலை ஸ்நாக்ஸ்சும் டீயையும் குடித்துக்கொண்டு இருந்தனர்.

கேசவனின் சேர்ந்த முகத்தை கண்ட கருணாகரன் "என்ன கேசவா முகம் சோகமாக இருக்கு எதாவது பிரச்சனையா?...." என்றார்.

"ஆமாம் மாமா என் கூட வேலை செய்த ஒருவரை பார்க்க போனால் அவர் பெண்ணை ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்காங்க என்று பக்கத்தில் இருந்தவங்க சொன்னாங்க அங்க போய் பார்த்தா அவர் பெண்ணு தற்கொலை பண்ணிக்க நினைச்சு அவங்க தாத்தா போடுற தூக்கமாத்திரையை சாப்பிட்டு இருக்கா."

" அச்சச்சே காப்பாதிட்டாங்களா?..." என்றார் குணவதி

"ம்ம்.. மாத்திரை குறைவாக இருப்பதை பார்த்த அந்த பெண்ணோட தாத்தா பையன் கிட்ட சொல்லவும் அவர் உடனே வீட்டு ஆட்களை பார்த்ததில் பெண் மட்டும் இல்லாமல் இருப்பதால் அறைக்கு போய் பார்த்தா மயக்கத்தில் இருந்து இருக்கா பெண்."

" உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றிட்டாங்க. அதன் பிறகு விசாரித்ததில் ஸ்கூல் போகும் போது கொஞ்ச நாளாக சில பையன்கள் பின்னாடி வந்து இருக்காங்க. அதில் ஒரு பையன் லவ் பண்றேன் சொல்லி இருக்கான். பத்தாவது படிக்கும் சின்ன பெண். ஏற்கனவே வீட்டில் தாத்தா பாட்டி ரொம்ப கண்டிப்பு வீட்டில் சொன்னால் வெளியே அனுப்பமாட்டாங்களோ என்று பயந்து யாருக்கிட்டையும் சொல்லலை."

" அந்த பையன் ரொம்ப கட்டாயப்படுத்தி இருக்கான். மறுநாள் வந்து பதில் சொல்லனும் இல்லை என்றால் உங்க வீட்டுக்கு வந்து நீ என்னை லவ் பண்ணுற என்று சொல்லிடுவேன் என்று பயம் செய்து இருக்கான் அதில் பயந்து போய் இப்படி செய்து இருக்கா அந்த பெண். "

" வேலை வேலை என்று நானும் என் பெண்டாட்டியும் பெண்ணை கவனிக்காமல் இருந்திட்டோம் அவள் கிட்ட உட்கார்ந்து கொஞ்ச நேரமாவது பேசியிருந்து இருக்கனும். பெரியவங்க பார்த்துப்பாங்க என்று இருந்தது இப்படி ஆகிடுச்சு. இத்தனை பேர் இருந்தும் அவள் மனசு விட்டு பேசமுடியாமல் மனசுக்குள்ளே மருகி இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கா என்று ரொம்ப வருத்தப்பட்டார்" என்றார் கேசவன்.

" நல்லவேளை அந்த குழந்தையை காப்பாற்றிட்டாங்க இல்ல, அப்புறம் அந்த பசங்களை என்ன பண்ணாங்க?..." என்றார் குணவதி.

" அவன்களை போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணி அரஸ்ட் பண்ணிட்டாங்க என்றார் கேசவன்.

அந்த நிகழ்வுக்கு பிறகு எழில்நிலா, பனிமலரை விடுமுறை நாட்களில் கராத்தே பயிற்சி, யோகா என்று சேர்த்து விட்டார். பெண்கள் பிள்ளைகளுக்கு எந்த சூழ்நிலையிலும் தங்களை காத்துக்கொள்ள தற்காப்பு கலையையும் மனதை ஒருமுகப்படுத்தி எதிரில் இருப்பவர்களை எதிர்த்து போராடும் மனதைரியமும் வேண்டும் என்று அவரே சில பயிற்சிகளை அளித்தார்.

உடல் வலிமை மனவலிமை என்று பயிற்சிகளை செய்ய வைத்தார். எழில்நிலா பனிமலர் செய்வதை கண்ட அகிலேஷ், ஹரி, விஷால் இவர்களும் பயிற்சி எடுத்தனர்.

இவர்களின் இந்த பயிற்சி சில ஆண்டுகளில் வீட்டில் உள்ளவர்களால் சமாளிக்க முடியாமல் போனது. காரணம் பனிமலர் எட்டு வயதிலேயே மரத்தில் ஏறுவது, மாடிக்கு படியில் ஏறாமல் பின் பக்கம் இருந்த பைப் லைனில் ஏறுவது காம்பவுண்ட் சுவர் ஏறி அடுத்த வீட்டில் குதிப்பது என்று செய்தாள்.

எழில்நிலாவும் அனைத்தும் கற்றாலும் தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து அவள் ஒதுங்கிக்கொண்டாள். பனிமலர், அகிலேஷ், ஹரி, விஷால் அப்படி இல்லை எப்போதும் விளையாட்டு பிள்ளையாகவே இருந்தனர்.

பரிமளா பனிமலரின் விளையாட்டை கண்டு பயந்து போய் அவள் பின்னே சுற்றுவார் இல்லை என்றாள் வீட்டை விட்டு வெளியே அனுப்பமாட்டார்.

அன்றும் அப்படி வீட்டில் உட்கார்ந்து இருந்த பனிமலர் சிறிது நேரத்தில் காணாமல் போய் இருந்தாள். அதை கண்ட பரிமளா அங்கு அமர்ந்து இருந்த கணவணை முறைத்தார்.

"எல்லாம் நீங்க பண்ண வேலை தான் அத்தான். பயம் இல்லாமல் தைரியமாக இருக்கனும் ஆம்பிளை மாதிரி வளர்த்து விட்டீங்க பெண் பிள்ளை மாதிரியே நடந்துக்க மாட்டுரா" என்று கூறவும்.

"ஏய் அது என்ன ஆம்பிளை மாதிரி என்று சொல்லுற ஆண் பிள்ளைகளை உதாரணம் காட்டுறதை முதலில் நிறுத்துங்க. ஆண் தான் உயர்வு உயர்வு என்று கூறியே பெண்களை கட்டுப்படுத்தி அடிமை ஆக்கி வச்சு இருக்கு இந்த சமூகம்."

" அந்த காலத்தில் பெண்கள் கட்டுப்படுத்தியது அன்பு, பாசம், குடும்பமே தவிர ஆண்களின் வீரம் இல்லை. வரலாற்றில் எத்தனை பெண்களின் திறமையை படித்து இருக்கோம்."

"சில நூற்றாண்டுகளாகத்தான் பெண்களை அடிமை ஆக்கி வைத்து இருக்கார்கள். ஆண்களை விட பெண்களுக்கே உடல் வலிமையும் மனவலிமையும் அதிகம் அதனால் தான் புதிய உயிர்களை உலகத்துக்கு கொண்டு வரும் வரத்தை கடவுள் பெண்களுக்கு கொடுத்து இருக்கார்."

" சாந்த சொரூபியாக இருக்கும் அம்மன் தான் அநியாயத்தை கண்டதும் பத்தரகாளியாக மாறி அசுரர்களை அழிக்கிறாள். பெண்களுக்கும் உடல் வலிமை மனவலிமை அதிகமாக இருக்கு அதை சரியாக பயன்படுத்தினால் ஆண்களை விட பெண்களே உயர்ந்தவர்கள்."

" பெண்பிள்ளைகளை இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்லி சொல்லி பயம் காட்டி வச்சுட்டாங்க. ஆண் பலசாலி அவன் கிட்ட பெண்கள் தேற்று விடுவாங்க என்று சொல்லி பெண்களை எளிதாக ஆண்கள் தங்களின் ஆசைக்கு இணங்க வச்சுட்டாங்க பயத்தில் பெண்களும் இணங்கி போகிடுறாங்க"

"ஆனால் சரியா நேரத்தில் சிந்தித்து செயல்பட்டால் ஆண்களை எளிதாக வீழ்த்த முடியும் அதற்கு தான் பெண்களை எப்போதும் விழிப்புடன் இருக்கனும் என்று சொல்லுவாங்க. அப்படி அவங்க மனசை ஒருமுகப்படுத்தும் போது எப்படி பட்ட சூழ்நிலையையும் கையாலும் திறமை பெண்களுக்கு இருக்கு."

" ஒரு பெண் தனித்து தன் குழந்தையை வளர்க்க முடியும் ஆனால் ஆண்களால் பிள்ளைகளை தனித்து வளர்ப்பது கடினம். பெண்கள் மூங்கில் மாதிரி தங்களை தேவைக்கு ஏற்றபடி தாயா, தந்தையா, ஆசிரியையா, தோழியா, சகோதரியா மாறி சிந்தித்து செயல்படுவாங்க" என்று பெண்களை பற்றி பேசிய கேசவனை பார்த்துக்கொண்டு இருந்த பரிமளா.

" அய்யோ போதுங்க தெரியாமல் உங்க கிட்ட கேட்டதுக்கு இப்படி பேசிட்டே போயிட்டு இருந்தா சமையல் வேலையை யார் பார்க்கிறது. நீங்க போய் உங்க பெண்ணுக்கு சொல்லி கொடுக்கவேண்டியது எதாவது மிச்சம் இருந்தா சொல்லிக்கொடுங்க" என்று கூறிவிட்டு சமையல் அறை சென்றார் பரிமளா.

அவர் பின்னே சமையல் அறை சென்ற கேசவன் தன் மனைவிக்கு சமையல் செய்ய உதவிகள் செய்து விட்டே மகளை தேடிச்சென்றார்.

இப்படியே நாட்கள் சந்தோஷமாகச்சென்றது பனிமலரருக்கு இப்போது பதினென்று வயது ஆகியிருந்தது. ஆறாம் வகுப்பு முடித்து பள்ளி விடுமுறை விட்டு இருந்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே வாடகை எடுத்து நடத்தி வந்த PMC (பனிமலர் சித்ரா) கார்மெண்ட்ஸ் இடத்தை சொந்தமாக வாங்கி இரண்டு தளங்களாக கட்டி இப்போது முந்நூறு பேர் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

இப்போது நேரடியாக ஆர்டர்கள் வாங்கி தைத்து கொடுத்துக்கொண்டு இருந்தனர். அசோகன் பெரிய அளவில் இடங்களை வாங்கி பிளாட் போட்டு விற்பனை செய்து அவரின் தொழிலும் நல்ல வளர்ச்சி அடைந்து இருந்தது.

ஒரளவுக்கு தொழில் வளர ஆரம்பித்ததில் இருந்து பள்ளி இறுதி விடுமுறையில் ஒரு வாரம் குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவர். அதன்படி இந்த ஆண்டு ஊட்டி சென்றனர். அசோகன், கேசவன் இருவரும் கார் வைத்து இருக்க அதிலேயே ஊட்டி சென்றனர்.

சந்தோஷமாக சென்ற பயணம் துக்கத்தில் முடியும் என்று அறியாமல் நன்றாக ஊட்டியில் ஒரு வாரம் கழித்தனர். மறுநாள் ஊர் திரும்ப வேண்டும் என்ற நிலையில் சுற்றி விட்டு வந்தவர்கள் தங்கியிருந்த ஓட்டல் நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்த நேரம் பரிமளா திடீரென மயங்கி சரிய அனைவரும் முன்னாள் நடந்ததால் சற்று மெதுவாக நடந்து வந்த பரிமளாவை யாரும் கவனிக்கவில்லை.

கீழே விழப்போன பரிமளாவை "ஆன்ட்டி" என்று கூறிக்கொண்டே பதினேழு வயது மதிக்கத்தக்க பையன் தாங்கி இருந்தான். அவனின் குரலில் தான் அனைவரும் திரும்பி பார்த்தனர். வேகமாக வந்த கேசவன் மனைவியை அந்த பையனிடம் இருந்து தன் கைக்கு மாற்றி தூக்கி சென்று அங்கிருந்த நீள் இருக்கையில் உட்கார்ந்து தன் மீது சாய்த்து கொண்டார்.

ஊர்மிளா தன் கையில் இருந்த தண்ணீரை முகத்தில் தெளித்து விட்டு சிறிது நீரை குடிக்க வைக்க மயக்கம் தெளிந்து எழுந்தார் பரிமளா. அனைவரும் என்ன என்ன என்று பரிமளாவிடம் விசாரிக்க தலை சுற்றுவது மாதிரி இருந்தது அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றார்.

குணவதி உடனே என்ன என்று கண்டு கொண்டவர் அங்கு சில வெளியாட்களும் இருக்கவே ரூமுக்கு போய் பேசலாம் என்று சொல்லவும் கேசவனும் மனைவியை தோளோடு அனைத்து சொல்லப்போகும் நேரம் அந்த பையன் கண்ணில் படவும் அவனின் கை பிடித்து நன்றி கூறினார் கேசவன்.

தங்கி இருந்த அறைக்கு சென்றதும் அனைவரையும் வெளியே நிற்க வைத்து விட்டு மகளிடம் தன் சந்தோகத்தை குணவதி கேட்டார். அவரின் கேள்விக்கு பிறகே பரிமளா யோசிக்க முகம் மலர்ந்தது.

"அம்மா" என்று அவரை கட்டிக்கொண்ட பரிமளா கண்கள் கலங்க புன்னகையுடன் "இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது" என்று சொன்னார்.


குணவதி கேசவனை அழைக்கவும் அதுவரை மனைவி மயக்கம் அடைந்ததில் பதட்டத்தில் இருந்த கேசவன் வேகமாக அறைக்குள் வந்து "என்ன அத்தை பரிக்கு என்னாச்சு அத்தை" என்றதும்

குணவதி புன்னகையுடன்
"ஒன்னும் இல்லை அவள் நல்லா இருக்கா நீ போய் ஓட்டல் ஆட்களிடம் பெண் டாக்டர் யாராவது இருக்காங்களா என்று கேட்டுட்டு வா" என்றார்.

"அத்தை பரிக்கு ஒன்னும் இல்லை என்று சொன்னீங்க இப்ப டாக்டர் பார்க்க சொல்லுறீங்க என்ன அத்தை" என்று கேசவன் கேட்க

குணவதி மகளை பார்த்து "நீயே சொல்லு நான் போய் அசோகனை விசாரிக்க சொல்லுறேன்" என்று சொல்லி விட்டு அறை கதவை மூடிக்கொண்டு சென்றார் குணவதி.

" பரி அத்தை என்ன சொல்லுறாங்க ஒன்னும் புரியலையே?... " என்று கட்டிலில் அமர்ந்த இருந்த மனைவியின் அருகில் சென்று அமர்ந்தார் கேசவன்.

வெட்கம் கலந்த புன்னகையுடன் அவரின் கையை பிடித்து தன் வயிற்றில் வைத்து "நம்ப மலர் ரொம்ப வருஷமா கேட்டுட்டு இருந்த தம்பி தங்கச்சி பாப்பா" என்று சொன்னதும் கேசவன் முகம் மலர்ந்து.

"பரி நிஜமாகவா..." என்று சந்தோஷத்துடன் பரிமளாவை அணைத்து உச்சியில் முத்தம் வைத்து பின் குனிந்து வயிற்றில் புடவையை விலக்கி முத்தம் வைத்து "சீக்கிரம் வாங்க குட்டி உன் அக்கா ரொம்ப வருஷமா உங்களை கேட்டுட்டு இருந்தா. இப்ப நீங்க வந்தது தெரிந்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவாள்" என்று தங்களை விட தன் மகளின் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் பேசிக்கொண்டு இருந்தார் கேசவன்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 21



மருத்துவர் குழந்தை என்று சொன்ன பிறகே மகளிடம் சொல்ல பனிமலர் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தாள். அன்றைய பொழுது அனைவருக்கும் எல்லை இல்லா சந்தோஷத்தில் கழிந்து இருந்தது.

மருத்துவரிடம் மறுநாள் பணயம் செய்வதை பற்றி கூறி ஆலோசனை பெற்று புறப்பட்டனர். கேசவன் டிரைவர் இருக்கையில் இருக்க மனைவியை பின் சீட்டில் படுக்க சொல்லி விட்டு முன்புறம் கருணாகரன் அமர்ந்து கொண்டார்.

மகளை கேசவன் அழைக்க தாய் படுத்துக்கொண்டு வருவதால் தாத்தா மீது தான் அமர்ந்து வரவேண்டும் என்று தந்தையிடம் நான் டாடி காரில் வருகிறேன் அப்பா என்று சொல்லி அசோகன் காரில் ஏறிக்கொண்டாள் பனிமலர்.

மெல்லிய கோடை மழை தூறிக்கொண்டு இருந்ததால் மெல்ல காரை ஓட்டிச்சென்றனர். பாதி மலை தாண்டி வந்த போது வளைவில் எதிரே வந்த லாரி ஒன்று தன் கட்டுப்பாட்டை இழந்து திரும்பமுடியாமல் கேசவன் ஓட்டிச்சென்ற காரை இடித்து தள்ளியதும் இல்லாமல் லாரியும் பள்ளத்தில் கவிழ்ந்து இருந்தது. அதில் தீப்பற்றிக்கொள்ள அந்த தீ காரிலும் பற்றி எரிய ஆரம்பித்தது.

சில வினாடிகளில் நடந்து விட்ட இந்த விபத்தில் அனைவரும் திகைத்து போயினர். அதிலும் அசோகன் கேசவனின் காரை சற்று இடைவெளி விட்டு வந்து இருக்க நடந்ததை கண்டு தன்னையும் அறியாமல் பிரேக்கை அழுத்தி இருந்தார் இல்லை என்றால் அவர் காரும் லாரியில் இடித்து இருக்கும்.

காரை விட்டு இறங்காமல் அதிர்ந்து அப்படியே இருந்தார் அசோகன். குணவதி தான் அய்யோ அய்யோ... என்று பெருங்குரல் எடுத்து அழுது கொண்டே மாமா, பரி, கேசவா என்று காரை விட்டு இறங்க கதவை திறக்க அவரின் பதட்டத்தில் திறக்கமுடியாமல் அசோகனை உலுக்கிய பிறகே உணர்வு வந்து காரை விட்டு இறங்கி ஓடினார் அசோகன்.

ஊர்மிளாவும் சண்டை இட்டு கொண்டு வந்த பிள்ளைகளை சமாதானம் செய்து கொண்டு வந்ததால் நடந்ததை பார்க்கவில்லை. கார் வேகமாக நின்றதும் பெரும் சத்தமும் வர முன் பக்கம் பார்க்க அங்கு லாரி பள்ளத்தில் கவிழ்ந்து கொண்டு இருந்தது.

முன் சென்ற காரை காணவில்லை அம்மா அழுவதையும் கண்ட ஊர்மிளா பரி என்று அழைத்துக்கொண்டே காரை விட்டு இறங்கி ஓடினார்.

பிள்ளைகள் எதுவும் புரியாமல் கீழே இறங்க பாட்டி கதவை திறக்கமுடியாமல் அழுது கொண்டு இருப்பதை கண்ட எழில்நிலா எக்கி கதவை திறக்க குணவதி வேகமாக இறங்கி சென்றார்.

பிள்ளைகள் மூவரும் சென்று பார்க்க பள்ளத்தில் தங்கள் காரும் லாரியையும் கண்டு நடந்தது புரிந்து விட "அம்மா.... அப்பா... தாத்தா... சித்தி... சித்தப்பா... என்று அழ ஆரம்பித்தனர்.

பனிமலர் தன் தந்தையின் கார் தீப்பிடித்து எரிவதை கண்டு அழுதவள் தன் தாயையும் தந்தையையும் கண்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளத்தை நோக்கி செல்லவும் முதிய இரண்டு கரங்கள் அவளை பிடித்து இருந்தது.

" என்னை விடுங்க நான் அம்மா அப்பாவை பார்க்கனும்" என்று திமிறினாள். அவளை இடையோடு அணைத்து கொண்டார் அந்த முதிய பெண்மணி. அந்த சமயத்தில் கண் முன்னே பெற்றவர்கள் இருக்கும் கார் எரியும் போது என்ன சொல்லி ஆறுதல் கொடுக்க முடியும். இன்னொரு முதிய கரம் அவளின் தலையை வருடி கொடுத்தது. அழுது அழுது மயக்க நிலைக்கு பனிமலர் சென்றுவிட்டாள்.

அவளின் நிலையை கண்ட சிவப்பிரகாஷம், பத்மாவதி தம்பதியர் அவளை தூக்கி சென்று காரின் பின் சீட்டில் படுக்கவைத்தனர். பத்மாவதி அருகில் இருக்க சிவபிரகாஷம் அருளானந்தம் அடுத்து நடக்க வேண்டியது செய்தனர்.

சிவபிரகாஷம் பத்மாவதி குடும்பத்தினர் அனைவரும் மூன்று நாட்கள் முன் ஊட்டி வந்து இருந்தனர். அருளானந்தத்திற்கு திடீரென வேலை வந்ததால் மற்றவர்களை விட்டு விட்டு கிளம்ப சிவபிரகாஷமும் பத்மாவதியும் உடன் கிளம்பிவிட்டனர்.

அசோகன் கார் பின் தான் அவர்கள் காரும் வந்து இருந்தது. நிலைகுலைந்து நின்றவர்களை கவனித்ததோடு அடுத்து நடக்கவேண்டிய அனைத்தும் சிவபிரகாஷம் அருளானந்தம் செய்தனர்.

ஓரளவுக்கு அசோகனை சமாதானம் செய்து அவரிடம் தகவல்களை அறிந்து அவர்கள் வீடு வரும் வரை அனைத்தையும் செய்து முடித்த பிறகே அவர்கள் சென்று இருந்தனர்.

பலநாட்கள் அந்த வீட்டில் அழுகுரல் மட்டுமே கேட்டது. மாலினி கோபி மற்ற அக்கம் பக்கத்தினரே அனைத்தும் பார்த்து கொண்டனர். எப்போதும் அழும் பனிமலர் அவளை கண்டு அழும் குணவதி ஊர்மிளா மற்ற பிள்ளைகள் இப்படியே நாட்கள் செல்ல

உலகச்சுற்றுலா சென்ற ஆகாஷ் வந்தவுடன் தன் சித்திக்கு போன் செய்யவும் மாலினி நடந்ததை சொன்னவுடன் தாய் தந்தை உடன் ஓடோடி வந்தான் ஆகாஷ்.

"பாப்பு" என்று வந்தவனை அனைத்த பனிமலர் "ஆக்கு ஆக்கு எனக்கு என் அப்பா அம்மா தாத்தா வேனும்" என்று அழுதவளின் உடன் சேர்ந்து கண்ணீர் வடித்தான் ஆகாஷ்.

அன்று முதல் சித்தி வீட்டில் தங்கி பனிமலரை பார்த்துக்கொண்டு அவளுக்கு உணவு கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வந்தான் ஆகாஷ்.

இப்படியாக ஒரு மாதம் கடந்து இருக்க அசோகன் தன் தொழிலை கவனிப்பதை விட தம்பியின் தொழிலை கவனிப்பதில் திணறி போனார். தொழிலைப்பற்றி எதுவும் தெரியாமல் இருப்பவர் எப்படி அந்த தொழிலை கவனிப்பார். என்னதான் வேலை செய்பவர்கள் நல்லவர்கள் என்றாலும் அதுவரை வழி நடத்தியது கேசவன் பரிமளா தானே. இப்போது அவர்கள் இல்லாமல் அடுத்து என்ன என்று தெரியாமல் நின்றனர்.

சிலர் நன்றாக நடக்கும் தொழில் அப்டியே விற்றால் லாபம் எடுக்கமுடியும். நாட்கள் தள்ளிப்போட்டால் பொருட்கள் வீணாகும் வேலை செய்பவர்களும் வேலையில்லாமல் நிற்க நேரிடும் என்று சொன்னார்கள். அசோகனுக்கு அதுவே சரியாக பட விற்க ஏற்பாடு செய்தார்.

நன்றாக நடக்கும் கம்பெனி என்பதால் நிறைய பேர் வாங்க முன் வந்தனர் ஆனால் விலையை மிகவும் குறைத்து பேசினர்.

கோபியிடம் அசோகன் விற்பதை பற்றி பேசியதை கேட்டு விட்டு பனிமலர்

"டாடி விற்காதிங்க அது அப்பா அம்மா ஆசையா வாங்கியது" என்று அழுதாள்..

"சித்துமா டாடிக்கு அந்த வேலையெல்லாம் தெரியாது எப்படி நடத்துவது?..." என்றார் அசோகன்.

"நான் நடத்துறேன் டாடி அம்மா அப்பா வேலை செய்யும் போது நான் பார்த்து இருக்கேன் அதே மாதிரி நானும் செய்து பார்த்துக்கிறேன்" என்று அந்த அறியா குழந்தை பேசியதை கேட்டவர்களுக்கு கண்ணீர் சுரந்து.

" அது சித்துமா தைக்கறது மட்டும் பண்ணால் போதாது இப்ப இருக்கிற ஆர்டரை தைத்து முடித்து விட்டாள் புதிய ஆர்டர் வாங்கனும் அவங்க கேட்கிற டிசைனில் தைக்கனும் அதற்கான துணிகள் நூல் எல்லாம் நல்லதா பார்த்து வாங்கி தைத்து கொடுக்கனும் டா அது எல்லாம் பண்ணுறதுக்கு அனுபவம் வேண்டும்."

" நான் போய் கேட்டா நல்லா இல்லாத துணியை கொடுத்துட்டா அதில் டிரஸ் தைத்தா எப்படி வாங்குவாங்க அப்ப நம்பளுக்கு நஷ்டம் தான் வரும். அதனால் அதே தொழில் செய்யுறவங்களுக்கு வித்தா உன் அப்பா அம்மா உருவாக்கின கம்பெனி என்னைக்கும் நிலைச்சு இருக்கும்" என்று அவளுக்கு புரியும் படி கூறினார் அசோகன்.

" அப்ப நான் படிச்சு முடிச்சு பெரியவளா ஆகிட்டா அந்த கம்பெனியை நம்ப கிட்ட திரும்ப கொடுப்பாங்களா டாடி?... " என்று பனிமலர் கேட்டாள்.

" அது... அது.... சித்துமா... " என்று தயக்கமாக பேசியவரை இடைமறித்தது ஆகாஷ் குரல்

"கண்டிப்பா உன் கம்பெனியை உன் கிட்டவே கொடுத்து விடுவாங்க பாப்பு டால்" என்றான் அதுவரை நடந்த பேச்சு வார்த்தை அனைத்தையும் கேட்டிருந்தவன்.

"ஆக்கு நம்ப கம்பெனியை கொடுத்திடுவாங்களா?... "என்று புன்னகையுடன் அவன் கைப்பற்றினாள் பனிமலர்.

"கண்டிப்பாக கொடுத்திடுவாங்க பாப்பு டால்" என்றான் ஆகாஷ்.

அவள் தான் சின்ன பெண் தெரியாமல் பேசுகிறாள் என்றாள் இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரி செல்ல இருக்கும் இவன் எதற்கு இப்படி பேசுகிறான் என்று நினைத்த கோபி.

"ஆகாஷ் என்ன பேசுற என்று தெரிந்துதான் பேசுறீயா அது எப்படி வாங்குறவங்க திருப்பி கொடுப்பாங்க குழந்தை மனதில் ஆசையை வளர்க்காதே" என்றார்.

"கண்டிப்பா பாப்பு கேட்டது நடக்கும் சித்தப்பா" என்றான் உறுதியான குரலில் பதினேழு வயது நிரம்பிய ஆகாஷ்.

அவனின் உறுதியை கண்ட" கோபி எப்படி ஆகாஷ்" என்றார்.

" கம்பெனியை வேற யாராவது வாங்கினால் தானே சித்தப்பா தரமாட்டாங்க நானே வாங்கிட்டா?..." என்றான் கேள்வியாக

" ஆகாஷ் நீ எப்படி வாங்குவ அப்படியே வாங்கினாலும் எப்படி ரன் பண்ணுவ அந்த தொழில் பற்றி உனக்கும் தெரியாது உன் அப்பாக்கும் தெரியாது" என்றார் கோபி.

" சித்தப்பா ஏற்கனவே அங்க வேலை செய்யுறவங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்கும் இப்போது அங்க தேவைப்படுவது தலைமை பொறுப்பில் இருந்து வழி நடத்தத்தான். அந்த பீல்டில் நல்ல திறமை இருக்கிற சிலரை வேலைக்கு வச்சு நம்ப மேற்பார்வை பார்த்தாலே போதும் அதை அப்பாவும் நானும் பார்த்துப்போம்" என்று கூறிய ஆகாஷ் தன் போனை எடுத்து தந்தைக்கு அழைத்து உடனே சித்தி வீட்டுக்கு வாங்க என்று மட்டும் கூறி வைத்து இருந்தான்.

அவனின் பேச்சை கேட்ட அசோகன், கோபி இருவரும் அசந்து தான் போயினர். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆகாஷின் தாய் தந்தை இருவரும் வந்தனர். வந்தவர்கள் இடம் ஆகாஷ் அனைத்தையும் கூறினான்.

அதை கேட்ட ஆகாஷ் தந்தை "நீ சொல்லுறது போல ஆட்களை வைத்து செய்யலாம் ஆகாஷ் ஆனால் புதியதாக வரவங்க கிட்ட பொறுப்பை கொடுத்தா ஏமாற்ற வாய்ப்பு இருக்கு அதனால் அங்க வேலையில் இருக்கிறவங்களையே பொறுப்பில் வச்சா செய்வாங்க, கேசவன் கண்டிப்பா திறமையானவங்களைத்தான் வேலையில் வச்சு இருப்பார்" என்றார்.

அவரின் அருகில் சென்று அணைத்து" தேங்க்ஸ் டாடி" என்றான் ஆகாஷ். என்ன தான் வசதி இருந்தாலும் இப்படி பணத்தை பற்றி பேசாமல் தன் கேரிக்கையை ஏற்ற தந்தையை இன்னும் அதிகமாக பிடித்து போனது ஆகாஷ்க்கு.

அதன் பிறகு வேலைகள் வேகமாக நடந்தது. அசோகன் பணம் வேண்டாம் என்ற போது எதையும் முறையாக செய்ய வேண்டும். இப்போது பத்திரம் மாற்றி பெயர் பதிவு செய்தால் தான் எந்த முடிவையும் சட்டச்சிக்கல் இல்லாமல் செய்ய முடியும் என்று கூறி பணத்தை கொடுத்தவரிடம் பணத்தை வாங்காமல் சித்துமா பேரில் நீங்களே போட்டு வச்சிடுங்க என்று சொல்லிவிட்டார்.

அனைத்து பணத்தையும் பனிமலர் பெயரில் டெபாசிட் செய்துவிட்டார் ஆகாஷ் தந்தை. அனைத்தும் முடித்து கம்பெனி கைமாறியது பனிமலரை அழைத்து சென்றவர்கள் இது எப்போதும் பனிமலர் சித்ரா கார்மெண்ட்ஸ் தான் அவள் வளரும் வரை நாங்கள் பொறுப்பில் எடுத்து இருக்கோம் என்று கூறவும் அங்கிருந்த அனைவரும் கண்ணீர் விட்டனர்.


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 22



பள்ளி செல்ல அடம்பிடித்தவளை படித்தால் தான் உன் கம்பெனியை வாங்க முடியும் என்று சொல்லி பள்ளிக்கு அனுப்பினர். பனிமலரின் வீட்டையும் காலி செய்து பொருட்களை மாடியில் இரண்டு அறைகள் கட்டி அதில் வைத்துவிட்டு வீட்டை வாடகைக்கு விட்டனர்.

அசோகன் இருக்கும் நேரத்தில் அமைதியாக இருப்பவர்கள் அவர் சென்றதும் கேசவன், பரிமளா, கருணாகரன் மூவரை பற்றி பேசி கண்ணீர் வடிப்பார்கள் குணவதி, ஊர்மிளா. சில நேரங்களில் பனிமலரை காணும் போதே கண்கள் கலங்கி அழுவார்கள்.

இதை கண்ட மாலினி எவ்வளவு சொல்லியும் குணவதி ஊர்மிளா மாறுவதாக தெரியாததால் பனிமலரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார். அங்கு ஹரியும் விஷால் கூடவே அகிலேஷ்சும் அங்கு வந்துவிடுவான். அவர்களின் பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து பழையபடி குறும்புகள் செய்ய ஆரம்பித்தாள்.

ஆகாஷ் கல்லூரி சென்றுவிட்டு மாலையில் பனிமலரின் கம்பெனிக்கு சென்று அந்த வேலைகளை சிறிது சிறிதாக கற்றுக்கொண்டு இருந்தான். விடுமுறை நாட்களில் வந்து பனிமலர் உடன் இருப்பான்.

அவள் நன்றாக தேறிவிட்டாள் என்று நினைக்கும் போது குணவதி அவளின் தந்தை தாய் பற்றி எதையாவது பேசி அவளை அழவைத்து விடுவார் ஊர்மிளாவும் அப்படி தான்.

ஒவ்வொரு ஆண்டு அந்த நிகழ்வு நடந்த நாள் நெருங்க நெருங்க வீட்டில் உள்ளவர்களுக்கு சற்றே பயம் வந்து விடும். அந்த நாள் பள்ளி விடுமுறை நாட்களில் வருவதால் அந்த சமயங்களில் அறைக்குள் புகுந்தால் வெளியே வரமாட்டாள். சில சமயங்களில் கதவை அடைத்துவிடுவாள். அதில் அனைவருக்கும் பயமே.

அந்த நாட்களில் ஆகாஷ் வந்து விட்டாள் அவனுடனே இருப்பாள். அவன் தான் அவளை தேற்றுவான்.

"அப்பா அம்மாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அதனால் உன்னை விட்டு எங்கும் போகாமல் உன்னை பார்த்திட்டே தான் இருப்பாங்க நீ சந்தோஷமாக இருந்தால் தானே அவங்க சந்தோஷமாக இருப்பாங்க பாப்பு" என்று அவளை தேற்றுவான்.

பனிமலர் பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு சேர்க்கும் போது தன்னை ஹாஸ்டலில் சேர்க்குமாறு அசோகனிடம் வந்து நின்றாள்.

" அசோகன் சித்துமா என்னடா?..." என்று அதிர்ந்து கேட்டார்.

பதினைந்து வயது பெண்ணுக்கு இப்போது ஓரளவு உலகம் புரிந்தது. தன் தாய் தந்தை உருவாக்கிய கம்பெனியை வாங்க தன் பெயரில் உள்ள பணம் போதாது அதற்கு நிறைய பணம் தேவை என்று அறிந்து இருந்தாள் பனிமலர்.

அதற்கு தான் நன்றாக படித்து நன்றாக சம்பாரிக்க வேண்டும் என்று நினைத்தவள். இங்கு பாட்டியும் மம்மியும் எதாவது கேசவன், பரிமளா, கருணாகரன் சம்பந்தப்பட்டதை கண்டுவிட்டால் உடனே அழ ஆரம்பித்து விடுவர். அது பனிமலரை சேர்வடையச்செய்தது.

என்ன தான் வெளியில் இயல்பாக இருந்தாலும் மனதுக்குள் எப்போதும் அப்பா அம்மா நினைவுகள் ஓடிக்கொண்டு தான் இருந்தது. இனி அம்மா அப்பாவை காணமுடியாது அவர்கள் உருவாக்கிய கம்பெனியில் இருந்தாள் அவர்களுடன் இருக்கும் உணர்வில் தன் வாழ்நாளை கழிக்க வேண்டும் என்பதையே தன் மனதில் உருவேற்றிக்கொண்டு அதற்கான முதல் படியாக ஹாஸ்டல் சென்று படிக்க முடிவு செய்தாள் பனிமலர்.

அசோகனின் அதிர்வை கண்டவள் அவரின் அருகில் அமர்ந்து தோள் சாய்ந்து "டாடி நான் நல்லா படிச்சி பெரிய வேலைக்கு போனால் தான் நம்ப கம்பெனியை வாங்க முடியும். அது மட்டும் இல்லாமல் நான் நாளைக்கு ஒரு கம்பெனியை எடுத்து நடத்தும் போது அதற்கான திறமை என்கிட்ட இருக்கனும்."

"அப்ப வெளியே போனால் தானே எல்லாம் கத்துக்கமுடியும்" என்றவளை இடைமறித்த அசோகன்

" நீ வெளியில் போய் தான் கத்துக்கணும் இல்லையே சித்துமா டாடி உனக்கு கத்துத்தரேன், வெளியே உன்னை கூட்டிட்டு போய் எல்லாம் சொல்லித்தரேன்" என்றார்.

" எப்படி நான் வெளியே போகனும் என்றால் பாடிகார்ட்ஸ் போல இரண்டு பக்கமும் நீங்களும் மம்மியும் வருவீங்க இல்லை மம்மி, மாலினி ஆன்ட்டி இல்லை அந்த ஹரி, விஷால் நிலா, அகிலேஷ் என்று இரண்டு பேரை அனுப்புறிங்களே
அப்படியா?... " என்றாள்.

பனிமலரின் பேச்சில் மெல்லிய புன்னகையுடன் " உன்னோட நல்லதுக்காகத்தானே டா" என்றார் அசோகன்.

" அது தான் டாடி வேண்டாம் என்கிறேன் மத்தவங்க வழிகாட்டல் மூலமாக இந்த உலகத்தை பார்க்காமல் என் கண் மூலமா இந்த உலகத்தை பார்க்க விரும்புகிறேன். அப்பத்தான் எந்த சூழ்நிலையையும் கையாளமுடியும் என்று அப்பா சொல்லுவார் அதுபடி வாழ நினைக்கிறேன்" என்றவளின் கண்கள் கலங்கின.

" சித்துமா" என்று அவளை அணைத்து முதுகை தட்டி ஆறுதல் செய்தவர்.

" நீ இல்லாமல் இந்த டாடி எப்படிடா இருப்பேன். என் தம்பியை தான் என்னால் பாதுகாக்க முடியாமல் போச்சு உன்னை பத்திரமாக பாதுகாத்து உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்தால் தான் என் தம்பி, பரிமளா, என் மாமா ஆத்மா சாந்தி அடையும்" என்றவரின் கண்களிலும் கண்ணீர் வந்தது.

" அப்பா அம்மா தாத்தா எல்லாம் நம்பளை பார்த்திட்டு இருப்பாங்களா டாடி" என்று சிறு குழந்தையாக கேட்டாள் பனிமலர்.

" ஆமாம் சித்துமா எப்பவும் நம்பள சுத்தியே தான் அவங்க ஆத்மா இருக்கும்" என்றார்.

" அப்ப நம்ப அழறதை பார்த்தா அவங்களும் அழுவாங்க இல்லையா டாடி" என்று கேட்டவள் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அசோகனின் கண்ணீரையும் துடைத்துவிட்டவள் "டாடி இனி அழக்கூடாது அப்பாக்கு அழுதா பிடிக்காது இல்ல" என்றாள்.

அதன் பிறகு குணவதி, ஊர்மிளா, எழில்நிலா, அகிலேஷ், மாலினி, கோபி என்று அனைவரும் பேசியும் அழுதும் ஹாஸ்டல் போவதை தடுக்க முடியவில்லை கடைசியாக ஆகாஷ் வந்து அவளை தனியாக அழைத்து சென்று

"என்ன பாப்பு டால் ஹாஸ்டல் போறேன் என்று அடம்பிடிக்கிறாய் என்ன பிரச்சினை உனக்கு யாராவது எதாவது சொன்னார்களா?..." என்றான்.

"ஆக்கு யாரும் எதுவும் சொல்லலை எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று தான் ஹாஸ்டல் போறேன் சொல்லுறேன்" என்றாள்.

"அதுதான் கேட்கிறேன் மாற்றம் தேவைப்படுற அளவுக்கு என்ன நடந்தது" என்றான் ஆகாஷ்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள் கண்கள் கலங்க "எனக்கு இங்க இருந்தா அப்பா அம்மா நியாபகமாகவே இருக்கு பாட்டி மம்மி எதாவது சொல்லி அழுதா எனக்கும் அழுகை வருது நான் அழுதா அவங்க இன்னும் கஷ்டப்படுவாங்க என்று என்னை சமாதானம் செய்ய எவ்வளவு போராடிட்டு இருக்கேன். அதனால் தான் ஹாஸ்டல் போறேன் என்று சொல்லுறேன்" என்று விம்மி அழுதவளை அணைத்து ஆறுதல் செய்தான் ஆகாஷ்.

" இதை ஏன்டா இத்தனை நாள் என்கிட்ட சொல்லலை சொல்லி இருந்தால் நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு போய் இருப்பேன் இல்லையா?... " என்றான்.

" அதுக்கு தான் சொல்லலை ஆக்கு உன் வீட்டுக்கு வந்தா டாடி மம்மி பாட்டி வருத்தப்படுவாங்க அதனால் நான் ஹாஸ்டல் போனால் பிரச்சனை வராது" என்று ஆகாஷை சமாதானம் செய்து பூந்தமல்லியில் இருந்த பள்ளி ஹாஸ்டலில் சேர்ந்தாள் பனிமலர்.

அங்கும் அவளை பார்க்க அசோகன், ஊர்மிளா, பாட்டி, மாலினி, கோபி என்று யாராவது ஒருவர் அடிக்கடி வந்தனர். வார இறுதியில் அவளை அழைத்து சொல்ல அசோகன் வந்து விடுவார். வீட்டுக்கு வந்தால் முன்பை விட பாட்டியும் ஊர்மிளாவும் அவளுக்கு பிடித்ததை செய்து அவளுக்கு மாற்றி ஊட்டி விட்டு அவளை இயல்பாக இருக்கவிடாமல் செய்யவே வீட்டுக்கு வருவதையும் தவிர்த்து படிக்க வேண்டும் எழுதவேண்டும் என்று ஹாஸ்டலில் இருந்து கொண்டாள்.

ஹாஸ்டல் சேர்ந்தபோது அவளின் அறைத்தோழியாக வந்தாள் தமிழ்ச்செல்வி. இருவரும் ஒரே வகுப்பு என்பதால் நன்றாக பேசிக்கொண்டனர். இருவருக்கும் ஒரே மாதிரி குணங்கள் என்பதால் எப்போதும் ஒன்றாக இருந்தனர். அதற்கு மேலும் அவர்களை நெருக்கமாக்கியது பனிமலர் வீட்டில் எப்போதும் பாட்டி மம்மியுடன் தான் படுத்து அணைத்துக்கொண்டு உறங்குவாள்.

இங்கு ஹாஸ்டலில் தனியாக படுப்பதால் ஏதேதோ நினைவுகள் வந்து தூக்கத்தில் அலறி எழுவாள் பனிமலர்.

அடுத்த கட்டிலில் படுத்து கொண்டு இருக்கும் தமிழ் அவளின் அலறலில் எழுந்து கொள்வாள். பனிமலரின் பயந்த முகத்தை கண்டு அவளின் அருகில் சென்றால் பனிமலர் அவளை கெட்டியாக பிடித்துக்கொள்வாள் அவளின் பயத்தை கண்ட தமிழ் அவளுக்கு ஆறுதல் அளித்து பக்கத்தில் அமர்ந்து அவளை தூங்கச்செய்வாள்.

இதுவே தினமும் தொடர்கதையாக ஒரு நாள் தமிழ் பனிமலரிடம் வற்புறுத்திய போது அனைத்தும் கூறினாள் பனிமலர்.

பனிமலரை பற்றி அறிந்த தமிழ் கண்களிலும் கண்ணீர் சுரந்தது. தான் பிறக்கும் போதே தாய் இறந்தாலும் தாய்க்கு நிகராக அத்தை இருந்ததால் அவள் எப்போதும் தாயை தேடியது இல்லை அந்த அளவுக்கு அத்தை அண்ணன்கள் அப்பா பிறகு அண்ணிகள் என்று சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.

ஆனால் பனிமலர் பதினோரு ஆண்டுகள் தாய் தந்தையின் அன்பிலும் பாதுகாப்பிலும் வளர்ந்தவள் அவர்களை இழந்தால் அவளின் மனம் எவ்வளவு வேதனைபட்டுக்கொண்டு இருக்கும் என்று அறிந்தவள் அதன் பிறகு பனிமலருடன் நெருக்கமான நட்பு ஆகிப்போனாள் தமிழ். இரண்டு கட்டிலையும் ஒன்றாக இணைத்து படுத்துக்கொண்டனர்.

தூங்குவதற்கு முன் கிண்டல் கேலி என்று எதையாவது பேசி தன்னையும் அறியாமல் பனிமலர் உறங்கும் வரை தமிழ் பனிமலரை விடமாட்டாள். இப்படியே தன் நண்பியை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தனது மருத்துவ கனவை தோழியிடம் மறைத்து நண்பியின் லட்சியத்தை அடைய அவளுடன் பயணிக்கிறாள் தமிழ்ச்செல்வி.

பனிமலரை பார்க்க வரும் ஆகாஷ்க்கு ஏனோ தமிழை கண்டதும் பிடித்து போனது அதுமட்டும் இல்லாமல் பனிமலர் உடனான தமிழின் நட்பு அவனுக்கு இன்னும் அவளை மிகவும் பிடித்து போனது.

நாட்கள் வேகமாக சென்றது பனிமலர் தமிழுக்கும். சிலர் இவர்களின் நட்பை கண்டு பொறாமை படும் அளவுக்கு இருந்தது. எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் அவர்களின் நட்பு வளர்ந்தது.

பதிரெண்டாம் வகுப்பு முடித்து ஹாஸ்டல் விட்டு இருவரும் பிரிந்து அவரவர் வீடு சென்றனர். தினமும் இருவரும் இரவில் அன்று நடந்ததை அனைத்தையும் வீடியோ காலில் பேசிவிட்டே உறங்குவார்கள் பனிமலர் தமிழ் அதனால் அவர்களின் பிரிவு அவர்களை வருத்தமில்லை.

மீண்டும் அந்த பொல்லாத நாள் வந்தது முன்தினமே நீண்ட நேரம் தமிழ் பேசிக்கொண்டு இருந்தாள். அவளின் பேச்சை கேட்டுக்கொண்டே தான் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் உறங்கி இருந்தாள் பனிமலர். ஆனாலும் ஐந்து மணிக்கே உறக்கம் கலைந்து எழுந்து சன்னல் கதவை திறந்து பின் பக்கம் இருந்த மாமரத்தை பார்த்தவளின் கண்கள் கலங்கின.

மரம் ஏற அப்பா கற்றுக்கொடுக்கும் போது தாய் பயந்ததும் அப்பா அம்மாவை சமாதானம் செய்து கற்றுக்கொடுத்ததும் மனதில் ஓடியது. நன்றாக ஏறுவதற்கு கற்றுக்கொள்ளும் வரை அப்பா அவளை விட்டு நகராமல் அங்கேயே நின்று இருப்பார். சில சமயங்களில் தவறி கீழே விழுந்த போது சித்துமா என்று பதட்டத்துடன் கையில் ஏந்தி இருக்கிறார். இருந்தும் அவளுக்கும் எழில்நிலாவுக்கும் முழுமையாக பயிற்சி கொடுத்தார்.

இப்படி தனியாக விட்டு செல்லப்போவது அறிந்துதான் எனக்கு துணிச்சலையும் மனதைரியத்தையும் கற்று கொடுத்திங்களா அப்பா என்று மனதுக்குள் பேசிக்கொண்டு இருந்தாள் பனிமலர்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
உருகும் சூரியன் 23



சிறிது நேரம் அப்படியே நின்று ஏதோ நினைவுகளில் மூழ்கி இருந்தவளை "சித்துமா" என்ற அசோகனின் குரல் கலைத்தது. கண்களில் வழிந்த கண்ணீரை வேகமாக துடைத்துக்கொண்டு அறைக்கு வெளியே நின்று இருந்த அசோகன் அருகில் சென்று அவரை அணைத்துக்கொண்டாள் பனிமலர்.

அசோகன் அவளின் முதுகை தட்டி ஆறுதல் கொடுத்து அழைத்து சென்று ஹால் சோபாவில் அமர்ந்து பனிமலரை தன் மடியில் படுக்க வைத்து தட்டிக்கொடுத்தார். அதில் தன்னையும் மறந்து மீண்டும் உறங்கி இருந்தாள் பனிமலர்.

உறக்கம் கலைந்து எழுந்த போது மணி ஏழு ஆகியிருந்தது. தன் பெரிய தந்தை மீதே படுத்து உறங்கியிருப்பதை கண்ட பனிமலர் வேகமாக எழுந்து கொள்ள அசோகனும் அப்படியே உறங்கியிருந்தவர் அவளின் அசைவில் எழுந்து "என்னடா சித்துமா" என்றார்.

"சாரி டாடி உங்களுக்கு கால் வலிச்சு இருக்கும் இல்ல அப்படியே சோபாவில் படுக்க வைத்து இருக்கலாம் இல்லையா?..." என்றாள்.

"வலி எல்லாம் இல்லைடா நானும் தான் தூங்கிட்டேன்" என்றவர்

"சரி சித்துமா இன்னைக்கு டாடி கூட ஆபிஸ் வாடா" என்றார் சாதாரணமாக

" இல்லை டாடி நான் இன்னைக்கு வெளியே ஆக்கு கூட போகலாம் என்று இருக்கேன்" என்றாள்.

" சரிடா ஆகாஷ் எப்ப வரேன் என்று சொன்னான் இல்லை என்றால் நான் கூட்டிட்டு போய் விடுறேன்" என்றார் அசோகன்.

" நான் இன்னும் ஆக்கு கிட்ட சொல்லலை டாடி நேற்று பேசும் போது இன்னைக்கு வரேன் என்று சொல்லி இருக்கான் வந்ததும் போறேன்" என்றாள் பனிமலர்.

"சரி சித்துமா" என்றவர் குளித்து முடித்து காலை டிபனை பனிமலர் உடன் அமர்ந்து அவளுக்கு ஊட்டி விட்டு தானும் உண்டு விட்டு முக்கிய வேலை இருப்பதால் மனைவி அத்தையிடம் அவளை அழவைச்சுடாதிங்க என்று எச்சரிக்கை செய்து விட்டு வெளியே சென்றார் அசோகன்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் வெளியே செல்வது போல் வந்த பனிமலரை கேள்வியாக நோக்கினர் பாட்டியும் ஊர்மிளாவும்.

" பாட்டி ஆக்கு கூட வெளியே போறேன் போரூர் கம்பெனியில் ஏதோ வேலையிருக்கு அதனால் அங்கே வந்துவிடு என்று சொன்னான் அதான் கிளம்பிட்டேன்" என்றாள்.

"தனியாகவா போகப்போற மலருமா தம்பியை கூட்டிட்டு போடா" என்றார் ஊர்மிளா.

"மம்மி என்னை பார்த்தா குழந்தை மாதிரியா தெரியுது எனக்கு அவன் துணையா ஆட்டோவில் போனால் இருபது நிமிடம் கூட ஆகாது அங்க போயிட்டா ஆக்கு பார்த்துப்பான்" என்றாள் பனிமலர்.

பேத்தி அழாமல் நன்றாக பேசுவதே நிம்மதியை தர அவளின் விருப்பப்படி சென்று வரட்டும் என்று "சரி மலரு பத்திரமாக போயிட்டு எங்களுக்கு போன் பண்ணு" என்றார் பாட்டி குணவதி.

பாட்டியை அணைத்து விடுவித்தவள் ஊர்மிளாவையும் அணைத்து விட்டு விடை பெற்று வெளியேறினாள் பனிமலர்.

அதுவரை திடமாக தன்னை காட்டிக்கொண்டவள் மனதில் மீண்டும் தாய் தந்தை நினைவு வந்தது. நினைவுகளுடனே பேருந்து நிலையம் வந்தவள் அங்கு வந்து நின்ற பேருந்து எங்கு செல்கிறது என்பது கூட தெரியாமல் ஏறி அமர்ந்தாள் பனிமலர்.

ஆம் அவள் வீட்டில் பொய் சொல்லி வெளியே வந்து இருந்தாள். அவளுக்கு ஏனோ வெளியே செல்ல வேண்டும் என்று தோன்றியது. அதை சொல்லி இருந்தால் அவளின் துணைக்கு என்று யாராவது வந்து இருப்பார்கள். அதை தவிர்க்கவே ஆகாஷ் பெயரை சொல்லி இருந்தாள் பனிமலர்.

ஆகாஷ் இன்று வரமுடியாது என்று நேற்றே இவளிடம் கூறியிருந்தான். புதிய ஆர்டர் ஒன்றிற்காக அவனும் தந்தையும் செல்வதால் முன்தினமே அவளுக்கு அறிவுரைகள் கூறியிருந்தான். அவன் வரமாட்டான் என்ற தைரியத்தில் அவன் பெயர் சொல்லி வெளியே வந்துவிட்டாள். பஸ் கடைசியில் எங்கு நிற்கும் என்று கேட்டு அந்த இடத்திற்கு டிக்கெட் வாங்கியிருந்தாள்.

பஸ்சில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இலக்கின்றி பார்த்துக்கொண்டு வந்தவளின் கண்ணில் பட்டது குளமும் கோயில் கோபுரமும் அதை கண்ட பனிமலர் பேருந்து நின்றதும் இறங்கி கோயில் நோக்கி நடந்தாள்.

அந்த குளத்தையும் கோபுரத்தையும் கண்டவளுக்கு தன் பதினொன்றாம் பிறந்தநாளுக்கு தாய் தந்தையுடன் இந்த கபாலீஸ்வரர் கோயில் வந்த போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். அது தான் அவள் தாய் தந்தையுடன் கொண்டாடிய கடைசி பிறந்த நாள் அதன் பிறகு அவள் பிறந்தநாளை ஆகாஷ், தமிழ் குடும்பத்தினர் வற்புறுத்தலால் மட்டுமே கொண்டாடினாள்.

கோயில் உள் செல்லாமல் சற்று தள்ளியே குளத்தின் பக்கமாக நின்று சுற்றி போவோர் வருபவர்களை பார்த்துக்கொண்டு இருந்தாள். அதுவும் குடும்பமாக குழந்தைகளுடன் செல்பவர்களை கண்கலங்க பார்த்தாள். அப்போது அவளின் கண்களில் அந்த இரண்டு வயது குழந்தை பட்டது. சற்று தூரத்தில் தாய் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு சுற்றி உள்ள கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது அந்த குழந்தை. துரு துரு என்று அங்கும் இங்கும் பார்த்து கொண்டு இருந்த குழந்தையை பார்த்தவளுக்கு

இப்படி தானே அவளும் எப்போதும் துரு துரு என்று இருப்பாள். அந்த குழந்தை அவளின் சிறு வயதை அவளுக்கு நினைவு கூர்ந்தது. தாய் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் ஏமாற்றி வெளியேறி விடுவாளே மனதில் பழைய நினைவுகள் ஓடினாலும் பார்வை குழந்தை மீது தான் இருந்தது. அந்த குழந்தையை பார்த்து கொண்டு இருந்தவளின் முகம் மாறியது. தாய் தந்தை இருவரும் வேறு இருவருடன் பேசிக்கொண்டு இருந்தனர். பெற்றவர்களின் கை பிடித்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த குழந்தை அந்த வழியாக பலூன்கள் விற்றுக்கொண்டு சென்றவரை கண்டதும் அதுவரை பற்றி இருந்த கையை விட்டு விட்டு அந்த பலூன் விற்பனை செய்பவர் பின் ஓடினாள் குழந்தை.

பேச்சு சுவாரஸ்யத்தில் குழந்தை ஓடியதை கூட பார்க்காமல் இருந்தனர் பெற்றவர்கள். அதை கண்ட பனிமலர் அந்த குழந்தையை பிடிக்க சற்று தூரத்தில் இருந்து வேகமாக வரும்போதே எதிரில் ஒரு காரும் வந்து கொண்டு இருக்க அதை கண்டவளின் மனம் பதைபதைத்தது.

குழந்தைக்கும் அவளுக்கும் நான்கடி இருக்கும் போது ஒரு கரம் அந்த குழந்தையை தூக்கி இருந்தது. சட்டென்று நின்றவள் குழந்தையை தூக்கியது யார் என்று பார்க்க நெடுநெடு என்று உயரத்தில் நல்ல சிவந்த நிறத்தில் இருந்தவன் வெள்ளை வேட்டியும் மெரூன் கலர் முழுக்கை சட்டையும் அணிந்து இருந்தான்.

ஏற்கனவே பதட்டத்தில் ஓடிவந்ததால் வேகமாக துடித்த இதயம் இப்போது அவனை பார்த்ததும் இன்னும் வேகமாக துடித்தது. குழந்தையை தூக்கியவன் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு குழந்தையின் பெற்றவர்களின் அருகில் சென்றான். அந்த பார்வையில் மகுடிக்கு கட்டுப்பட்டவள் போல் அவன் பின் பனிமலரும் சென்றாள்.

அதுவரையும் குழந்தை சென்றதை அறியாமல் பேசிக்கொண்டு இருந்த அந்த குழந்தையின் பெற்றவர்கள் முன் குழந்தையுடன் சென்று நின்றான். அந்த குழந்தையின் பெற்றோர்கள் தன் முன் தங்கள் குழந்தையுடன் வந்து ஒருவன் நிற்பதை கண்டவர்கள் தங்கள் குழந்தை எப்படி இவனிடம் என்று கணவன் மனைவி இருவரும் ஒருவரையருவர் பார்த்து விட்டு குழந்தையை வாங்க கை நீட்டினான் குழந்தையின் தந்தை.

அவனிடம் குழந்தையை கொடுக்காமல் ஓங்கி அறைந்தான் அந்த நெடியவன். அதுவரை தன்னை மறந்து பார்த்துக்கொண்டு இருந்தவளின் உதடுகள் "அப்பா" என்று தன் தந்தையை நினைத்தது.

தாய் தந்தையுடன் இங்கு வந்த போது இதே போல அன்று ஒரு குழந்தை தந்தையின் கையை உதறிவிட்டு ஒடி வந்த போது கேசவன் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று இதே போல அந்த குழந்தையின் தந்தையை அடித்து இனி குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

அன்று தான் தந்தையின் கோபமுகத்தை கண்டு இருந்தாள். அதே நிகழ்வு அதே இடத்தில் நடக்கவும் அவளுக்கு அவனின் உருவம் தந்தையாக தெரிந்தது. கண்களில் கண்ணீர் கசிந்தது. தன் தந்தையே திரும்ப வந்தது போல மனம் லேசாகியது. இவ்வளவு நாள் இழந்த உறவு திரும்ப கிடைத்தது போல் அவள் மனம் நிம்மதி அடைந்தது.

மனமோ இதுக்கு தான் என்னை வெளியே வர வச்சிங்களா அப்பா அம்மா என்று பெற்றவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தது. கண்கள் அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தன.

அந்த குழந்தையின் பெற்றவர்களிடம் கோபமாக பேசிக்கொண்டு இருந்தவன் முகம் சட்டென்று புன்னகை முகமாக அந்த குழந்தையிடம் பேசினான். அந்த குழந்தை தன் கையை பலூன் இருக்கும் இடம் காட்ட அங்கு சென்று சில பலூன்களை வாங்கி கொடுத்தவன் அந்த குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு பெற்றோர்களிடம் கொடுத்தான்.

அந்த பெற்றோர்களும் தங்கள் மீது தவறு இருப்பதால் நன்றி சொல்லி குழந்தையை வாங்கி சென்றனர்.

மீண்டும் அவனின் பார்வை அவள் மீது பட்டு விலக அவளின் உடலும் உள்ளமும் சிலிர்த்தது. அவன் அர்ச்சனை தட்டு வாங்கி கோயில் நோக்கி செல்ல பனிமலரும் அவன் பின் சென்றாள்.

தாய் தந்தையை இழந்ததில் இருந்து கோயில் சொல்லாதவள் இன்று அவன் பின் சென்று கொண்டு இருந்தாள். உள் பிரகாரம் சென்றவன் அர்ச்சனை செய்ய ஐயர் இடம் கொடுத்து விட்டு நின்றவனின் அருகில் சற்று இடைவெளி விட்டு நின்று கொண்டாள் பனிமலர். அதிக கூட்டம் இல்லாமல் சிலர் மட்டுமே இருந்தனர்.

பனிமலர் கண்கள் சாமியை தரிசனம் செய்யாமல் ஆசாமியை தரிசனம் செய்து கொண்டு இருந்தது. அவன் திரும்பி பார்க்கும் போது மட்டும் அவளின் பார்வை சாமியிடம் இருந்தது.

அர்ச்சனை முடித்து ஐயர் தீபாராதனை காட்டிவிட்டு பிரசாதம் கொடுத்ததும் வாங்கிக் கொண்டு பிரகாரம் சுற்றும் போதும் அவன் பின்னே சென்றாள். அவன் சில சமயம் திரும்பி பார்த்து விட்டு எதுவும் பேசாமல் சென்று கொண்டு இருந்தான்.

கோயில் விட்டு வெளியே வரும் வரை அவன் பின் வந்தவள் அவன் காரில் ஏறும் போது இவளை ஒரு பார்வை பார்த்து விட்டே ஏறிச்சென்றான்.

அதுவரை ஏதே விசைக்கு கட்டுப்பட்டு அவன் பின் சுற்றியவளுக்கு அவன் சென்ற பின் அந்த விசையில் இருந்து விடுபட்டவள் இதுவரை அவள் செய்தது நினைவில் வந்தது.

அடியேய் மலர் உனக்கு பைத்தியம் பிடித்து போச்சா இப்படியா அவன் பின் சுற்றுவது அவன் திருப்பி திரும்பி பார்த்துட்டு போனான் மனதில் என்ன நினைச்சானோ என்று தன்னையே திட்டிக்கொண்டாலும் மனதில் இதுவரை இருந்த பாரம் நீங்கி புத்துணர்ச்சியாக இருந்தது.

இரண்டு பொறி பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்று குளத்தின் கரையில் அமர்ந்து மீன்களுக்கு சிறிது சிறிதாக போட்டுக்கொண்டு இருந்தவளின் மனம் அவனைத்தான் நினைத்துக்கொண்டு இருந்தது.

 
Status
Not open for further replies.
Top