ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரமே தூரமாய்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
20240814_214710.jpg

தூரமே தூரமாய் 24

'தூரங்கள் தான் இந்த நேசத்தை இன்னும் அழகானதாகவும், ஆழமானதாகவும் மாற்றிவிடுகிறது.'

'தூரமே தூரமாய்.'

_____________________________

கண்களை மூடி தனக்குள் உழன்றபடி இருந்தான் ருத்விக்.

ருதுவிற்கு இமையாளை தன் காதலினால் அனுபவித்த வலிகள் போதும். தன் பக்கம் வைத்து உலகின் மொத்த காதலையும் அவளுக்கு வழங்கிட பேராவல் அவனுள். ஆனால் அவளாக வரவேண்டும். தன்மீதான காதலால் வரவேண்டும். உண்மையை சொல்லாது அது சாத்தியமில்லை.

'வேறெப்படி வரவழைக்க?' மனதின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.

'என்னை கல்யாணம் பண்ணிக்கோ கேட்கலாமா?' காலில் போட்டிருப்பதாலே அடிப்பாள். உடனடியாக மறுத்து கொட்டியது அவனது உள்ளம்.

வேண்டாமென்ற காதல் அவனுக்கு காலத்துக்கும் வேண்டுமெனத் தோன்றுகிறது. கைப்பற்றிடும் மார்க்கம் தான் அவனுக்கில்லை.

'எனக்கு நீ உனக்கு நான் என்பதல்ல காதல். நீ நீயாகா, நான் நானாக இருத்தலே ஆகப்பெரும் காதல்.' அந்த காதலை அவன் மனம் வேண்டுவதாலேயே உண்மையை சொல்லாது அவள் வேண்டுமென தவிக்கிறான்.

அந்த தவிப்பினாலே அவளை காலை மாலை சென்று பார்ப்பதை தவிர்த்தவனாக அலைப்புறுதல் கொள்கிறான்.

இமை மூடியிருந்தவனின் சிந்தையை அலைப்பேசி கலைத்திட, சரியாக அந்நேரம் வெங்கட்டும் எதையோ சொல்வதற்கு உள் நுழைந்தான்.

"என்ன வெங்கட்?"

மீண்டும் அலைப்பேசி இசைத்திட, யாரென்று பார்த்தான். வீட்டு எண்ணிலிருந்து அழைப்பு. பொதுவாக அம்பிகா அழைப்பதென்றால் அவரது தனிப்பட்ட எண்ணிலிருந்து அழைப்பார். தொலைபேசி அழைப்பு என்றதும் மகனாகத்தான் இருக்குமென மென் முறுவலோடு, வெங்கட்டிடம் கண் காட்டிவிட்டு அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

"தேஷ் குட்டிக்கு என்னவாம்? அப்பா ஞாபகம்?" அத்தனை கனிவு ருதுவின் குரலில். வெங்கட் இந்த ருதுவை ஆச்சரியமாக ஏறிட்டான்.

"தேஷ் குட்டி சேடா (sad) இருக்காங்க." குழந்தை உதட்டை சுளித்துக் கூறியது.

"அடடா... ஏன்? பாட்டி குட்டிக்கு கேண்டி தரமாட்டேன் சொன்னாங்களா?" என்று மென் குரலில் வினவிய ருது, "நான் தர சொல்றேன் ஓகேவா?" என்றான்.

"கேண்டி தேஷ்க்கு வேணாம். இனியா மாமா சாப்பிடக் கூடாது சொல்லியிருக்காங்க! நான் மாமாக்கு பிராமிஸ் பண்ணியிருக்கேன்" என்றான் தேஷ்.

"வேறென்னவாம்?"

"இன்னைக்கு நான் ஸ்கூல் போனேன்." குழந்தை முறுக்கிக் கொண்டான்.

"அச்சோ" என்று சத்தமில்லாமல் நெற்றியில் தட்டிக்கொண்ட ருது,

"சாரிடாம்மா. அப்பாக்கு வொர்க் டென்சன். மறந்துட்டேன்" என்று உடனடியாக மன்னிப்பு வேண்டி, "குட்டி ஆக்டிவிட்டிஸ்லாம் நல்லா பண்ணியிருப்பீங்களே! குட்டிக்கு அட்மிஷன் கிடைச்சிருச்சா?" எனக் கேட்டான்.

குழந்தையிடம் பதிலில்லை.

"சரி பாட்டிக்கிட்ட கொடுங்க. நான் கேட்டுக்கிறேன்" என்று ருது சொல்ல, "பாட்டிக்கு நான் ஏன் சேடா இருக்கேன் தெரியாது. இது ருதுக்கும், தேஷ்க்கு மட்டும் தான் தெரியும்" என்றான் தேஷ்.

"அப்பாக்கு என்னன்னு தெரியலையே" என்ற ருது, "நீங்களே சொல்லுங்க. அப்பா அது என்னவா இருந்தாலும் சரிபன்றேன்" என்றான்.

"நிஜமா?" தேஷ் உற்சாகமாகியிருந்தான். நொடியில்.

"ஐ ஸ்வேர் பேபி."

"உண்மையாவா?"

"அப்பா சொன்னால் செய்வேன்ல?"

"தேஷ்க்கு அம்மா வேணும்."

ருதுவின் இதயம் நின்று துடித்தது. இந்த வயதிலும் அம்மா இல்லாத வலி அவனை வதைக்கும்போது பிஞ்சுவின் மனம் எத்தனை வேதனை கொள்ளுமென அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

"தேஷ் இன்னைக்கு ஸ்கூலில் அம்மா பார்த்தேன். என்னை பார்த்து சிரிச்சாங்க. ஹேண்ட் ஷேக் செய்தாங்க. வெரி ஸ்மார்ட் சொன்னாங்கப்பா. அம்மா கூடவே இருக்கணும் தோணுதுப்பா. கூட்டிட்டு வறீங்களா?"

குழந்தையின் வார்த்தையில் ருது நொறுங்கிவிட்டான். வார்த்தையின்றி தடுமாறினான்.

"பேபி..."

"நான் யாருன்னு அம்மாகிட்ட சொல்லலப்பா. நீங்க தான் பார்த்தாலும் கூப்பிடக்கூடாது சொல்லியிருக்கீங்களே" என்ற தேஷ் விம்மலை அடக்கி பேசுவது அவனது குரலில் தெரிந்தது.

இன்று தேஷ்ஷிற்கு பள்ளியில் நேர்காணல். ருதுவிற்கு காவல்நிலையத்தில் வேலை இருந்ததால், குழந்தையுடன் வேங்கடமும், அம்பிகாவும் தான் சென்றிருந்தனர்.

முதலில் விண்ணப்பம் சரி பார்த்து, அடையாள படிவங்கள், மற்ற சான்றிதழ்கள் சரி பார்த்து இரு பிரிவையும் கடந்து மூன்றாவதாக குழந்தையின் பயிற்சி திறனை பரிசோதிக்கும் பிரிவில் இமையாள் அமர்ந்திருந்தாள்.

இரண்டு பிரிவுகளையும் கடக்கும் வரையிலும் கூட தேஷ்ஷின் பார்வை இமையாள் மீது. அவளிடம் செல்வதற்குள் தேஷ்ஷின் மனதில் அதுவரை அன்னையை பற்றி இல்லாத ஏக்கம் அதீதம் கொண்டது.

ருது அன்னையாக இமையாளின் புகைப்படத்தைதான் தேஷ்ஷிடம் காண்பித்திருக்கிறான். அவனால் பெயரளவில் கூட வேறு ஒன்றை சொல்ல விருப்பமில்லை. மகனாக மாற்றம் கொண்டுள்ள உறவிடம் தங்களது அன்னையின் பெயரையோ உருவத்தையோ காண்பித்து அவனத்து பிறப்பின் ரகசியம் பேசப்பட துளியும் எண்ணமில்லாத ருது தான் அப்பா என்றால் தன்னவளே அவனுக்கு அன்னை எனும் விதத்தில் இமையாளை அன்னையாக அடையாளப்படுத்தியிருந்தான்.

சென்னை செல்கிறோம் என்றதும், தேஷ்ஷிடம் அம்மாவை நேரில் பார்த்தாலும் காட்டிக்கொள்ளக்கூடாது என்பது ருதுவின் ஆணையாக இருந்தது. அவளுக்கென ஒரு வாழ்வு அமைந்திருப்பின் அதனை தாங்கள் கெடுத்ததுப்போல் ஆகிவிடக்கூடாது எனும் எண்ணத்தில் அவ்வாறு சொல்லியிருந்தான்.

தந்தையின் சொல்லை மீறிடாத குழந்தையாகவே தேஷ் இன்று நடந்து கொண்டிருக்கிறான்.

இமையாளிடம் சென்று அமர்ந்து தேஷ், மகனாக அன்னையிடம் பாராட்டு பெற்றிட வேண்டுமென்றே, இமையாள் கொடுத்த பயிற்சிகள் அனைத்தையும் வேகமாகவும் சிறப்பாகவும் செய்து அவளிடம் கைதட்டலையும் பெற்றான். அந்நேரம் தேஷ் கொண்ட மகிழ்வு, அவன் முகம் காட்டிய ஏக்கப் புன்னகை விவரித்திட வார்த்தைகள் இல்லை.

தேஷ் தனக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டது என்றதும்,

"என் கிளாஸ்க்கு நீங்க வருவீங்களா?" எனக் கேட்டிருந்தான். அந்நொடி ஒரு சேயாக அன்னையுடன் இருக்க வேண்டுமென்ற அவனின் தவிப்பு, இந்த பிஞ்சிலே அவன் அனுபவிப்பதாய்.

குழந்தை திக்கித் திணறி ருதுவிடம் அனைத்தையும் விவரித்திட, ருது வெளியிலும் உடைந்துவிட்டான். கண்கள் பனிக்க உறைந்திருந்தான்.

வெங்கட் என்னவென்று தெரியாது பதறியவனாக அருகில் வர, வேகமாக கண்களை துடைத்து, "நத்திங்" என மெல்ல உதடசைத்தான்.

"குட்டி..."

"சாரிப்பா... கஷ்டப்படுத்திட்டேனா ருதுப்பாவை!"

எப்போதும், அன்பை காட்டும் நேரங்களில் கூட கர்ஜனையாக ஒலிக்கும் தந்தையின் குரல் இன்று அடங்கி ஒலித்திட, அந்த தளிருக்கு என்ன புரிந்ததோ தந்தையை வருத்திவிட்டோமென வருத்தம் கொண்டு வினவியது.

"இல்லைடாம்மா. இல்லை பேபி" என்ற ருது, "அப்பா வீட்டுக்கு வரேன்" என்றான்.

"ருதுக்கு வொர்க் இல்லையா?"

குழந்தையின் புரிதலில் நெஞ்சம் சிதறி கலங்கினான்.

"நவ் அம் ஓகே ருது. நீங்க வொர்க் முடிச்சிட்டு வாங்க" என்று தேஷ் வைத்ததும், இருக்கையில் பின் சாய்ந்து விட்டத்தை வெறித்தான் ருது.

ருதுவின் கண்ணின் ஓரம் ஈரம். கண்ணீர் கசிந்தது. காதுமடல் சில்லிப்பை உணர்ந்ததும், நிமிர்ந்து அமர்ந்தான்.

ஷிவன்யாவுக்கு அழைத்து தேஷ் உடன் நேரத்தை செலவழிக்குமாறு சொல்லி வைத்திட்டான்.

"என்ன விடயம் வெங்கட்?" உணர்வுகளை நொடியில் அடக்கியிருந்தான்.

"சார் நீங்க... அண்ணா ஓகே தானே நீங்க?" ருதுவை இப்படி அவன் பார்த்ததே இல்லையே. தடுமாறினான்.

"ஹேய் மேன். அம் ஓகே! என்னன்னு சொல்லுங்க" என்றான் ருது.

"ஒரு கம்ப்ளைண்ட் சார்" என்று வெங்கட் சொல்லியதில், "வாட்?" என அதிர்ந்தவனாக ருது இருக்கையை விட்டு எழுந்துவிட்டான்.

"என்னாச்சு சார்? உங்களுக்கு வேண்டியவரா?"

"மே பீ" என்ற ருது, கிருஷ்ணன் மற்றும் வெங்கட்டுடன் அங்கு விரைந்தான்.

அரசு வங்கி அது. கணக்கு வைத்திருக்கும் பல பேர் அங்கு கூடியிருந்தனர்.

காவல் துறை வண்டியை கண்டதும் ருதுவை இறங்கவிடாது சூழ்ந்துவிட்டனர்.

"அரெஸ்ட் பண்ணியே ஆகணும்" என்று ஆளாளுக்கு கத்தினர்.

"அவர் எங்கேன்னு பாருங்க!" ருது சொல்லிட கிருஷ்ணன் வங்கிக்குள் சென்று பார்த்தார்.

தலையை தொங்கப்போட்டபடி சுரேந்தர் அமர்ந்திருந்தார். ஆடை கசங்கி, தலை கலைந்து. பார்த்ததும் தோற்றத்தில் தெரிந்தது, மக்கள் அவரை அடித்திருக்கின்றனர் என்று.

"உள்ள தான் இருக்கார் சார். அடிச்சிருப்பாங்க போல" என்றி வந்தார் கிருஷ்ணன்.

"மக்களோட பணத்தை கொள்ளையடித்தால், அடிக்காமல் என்ன செய்வாங்க" என்று கத்திய கூட்டத்தினர், "கைது செய்து எங்களுக்கு என்னன்னு பதில் சொல்லுங்க சார். ஆளாளுக்கு கொஞ்சமென்றாலும் மொத்தம் பல கோடி வருதே" என்றனர்.

ருதுவிற்கு இவர்களை கடந்து சுரேந்தரிடம் நடந்ததை கேட்பதே பெரிய விடயமாகத் தோன்றியது. அரசு வங்கியில் மோசடி என்பதால், ஊடங்கங்களும் நிரம்பிவிட்டன. ருதுவிற்கு தற்போது கைது செய்வதைத்தவிர தற்போது வேறு வழியில்லை.

ருதுவிற்கு நன்கு தெரியும் சுரேந்தர் ஒருபோதும் இப்படி செய்யும் ஆளில்லை. ஆனாலும் சூழல் அவருக்கு எதிராக இருக்கிறதே! நேர்மையாக நடந்துகொள்ளவே முயற்சித்தான். சுரேந்தரிடம் பேசினால் தான் தவறு எங்கென கண்டறிந்திட முடியும். சரியான குற்றவாளியை பிடித்திட முடியும்.

சில நொடிகள் சிந்தித்தவன், இனியனுக்கு அழைத்தான். அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வர, அவன் விமானத்தில் சென்று கொண்டிருக்க கூடுமென யூகித்தவன்,

"அவரை அழைச்சிட்டு வாங்க வெங்கட்" என்று வண்டியை விட்டு இறங்கி நின்றான்.

"அவர் மேல கை வைக்கக்கூடாது" என்று வெங்கட்டிற்கு மட்டும் கேட்கும் வகையில் கூறினான்.

எதற்கு அவருக்கு இந்த கரிசனம் என்று வெங்கட்டிற்கு புரியவில்லை. உள்ளே சென்று சுரேந்தரை அழைத்துவர, மீண்டும் மக்கள் அவரை அடிக்க பாய்ந்திட, சடுதியில் நடுவில் புகுந்து தடுத்திருந்தான் ருது.

"கைது பண்ணியாச்சுல. கலைந்து போங்க. உங்களுக்கு என்ன செட்டில்மெண்ட்டோ அதை என்னன்னு பார்த்து வங்கி நிர்வாகம் செய்யும்" என்று உறுமலாய் மொழிந்தவன், அரணாக அழைத்து வந்து வண்டியில் ஏற்றியிருந்தான்.

சுரேந்தருக்கு ருது யாரென்று தெரியவில்லை. இருக்கும் சூழலில் தன்மீது கோபத்தை காட்ட வேண்டியவன் ஏன் பாதுகாக்கிறான் என்றும் புரியவில்லை.

ருது ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுக்கவிடாது தடுத்திருந்தான்.

காவல் நிலையம் அழைத்து வந்த ருது சுரேந்தரை செல்லுக்குள் விடாது, அங்கிருந்த இருக்கையில் அமர்த்தினான்.

"மல்லிக்காக்கா தண்ணி கொடுங்க" என்றான்.

மல்லிகா நீர் கொண்டு வந்து கொடுக்க அமைதியாக வாங்கி பருகினார் சுரேந்தர்.

"நடந்தது என்னன்னு சொல்லுங்க?" எனக் கேட்டான் ருது. வெங்கட்டிற்கு பதிவு செய்யுமாறு கண்காட்டினான்.

சுரேந்தர் மீது தவறு இல்லாத நிலையில் அனைத்து ஆதாரங்களும் முக்கியமானவை. அப்போது தான் அவரை முறையாக இதிலிருந்து வெளிக்கொண்டுவர முடியும். அதற்காகவே பதிவு செய்திடக் கூறினான்.

"சாருக்கு தெரிந்தவரோ?" வெங்கட் இழுத்திட...

"இருங்க கேட்டு சொல்றேன்" என்ற கிருஷ்ணனை பார்த்து முறைத்து வைத்தான் வெங்கட்.

"முறைத்தது போதும். ரெக்கார்ட் பண்றதை செய்யுங்க" என்றார் கனகா.

"எல்லாருக்கும் வாய் கூடிப்போச்சு" என்ற வெங்கட், "அவரை முதலில் பேச சொல்லுங்க" என்றான்.

"கீப் கொய்ட்." ருது பாராது சொல்லிய குரலில் அனைவரும் கப்சிப்.

சுரேந்தர் மௌனமாக இருந்திட...

"உங்க மீது தவறு இல்லையெனும் பட்சத்தில் உண்மையை சொல்ல என்ன தயக்கம்?" எனக்கேட்டு அவரை பேச வைத்தான் ருது.

சுரேந்தர் அரசு வங்கியில் மேலாளராக பணி புரிகிறார். மிகவும் நேர்மையானவர். இன்று வரை அப்படித்தான். இப்போது நடந்திருப்பதில் அவரது நேர்மையே கேள்விக்குறியாக உள்ளது.

"லோன் வாங்குற யாரும் முறையாக தவணை செலுத்துவதில்லை சார். அதனால் வருடாந்திர கணக்குகள் சரிவர முடிக்க முடியாததால் மேலிடத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலை" என்று சுரேந்தர் நிறுத்திட...

"எந்த மாதிரி லோன்?" எனக் கேட்டான் ருது.


"கல்வி, விவசாயக் கடன் அப்பப்போ அரசாங்கமே தள்ளுபடி செய்திடும் அதில் பிரச்சினை இருக்காது. மற்ற கடன்கள் தான் பிரச்சினை. அதிலும் குறிப்பா தொழில் கடன், வீட்டு கடன். தொழில், வீடு ரெண்டுமே ரொம்ப முக்கியம்ங்கிறதால , நிறைய பேர் அதைத்தான் வாங்குவாங்க. திருப்பி செலுத்த வேண்டிய நேரம் எதாவது காரணம் சொல்லுவாங்க. ஒரு அளவுக்கு மேல் நம்மளாலும் அவங்ககிட்ட கண்டிப்பை காட்ட முடியாது. இந்த சூழலில் தான், கவர்மெண்ட் கடனை வசூலிக்க தனியார் ஏஜென்ட்க்களுடன் டை அப் வைத்தது. இது கலெக்டர் பார்வையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு தான் பிரச்சினை" என்றவர் மேலும் தொடர்ந்தார்.

"அவங்க டார்கெட் இத்தனை நாட்களில் இவ்வளவு பேர் அப்படின்னு பேங்கிலிருந்து டீடெயில்ஸ் வாங்கி முதல் இரண்டு மாதங்கள் சரியாகத்தான் செய்தனர். அவர்களுக்கு சேர வேண்டிய தொகையை எடுத்துக்கொண்டு வங்கிக்கு வரவேண்டியதை சரியாக கொடுத்தனர். அடுத்து ஆறு மாதம் அவங்களிடமிருந்து எந்த வரவுமில்லை. என்னன்னு கேட்டதற்கு மொத்தமா முடித்துக் கொடுக்கிறோம் சொன்னாங்க. அப்போதும் விடாது மேலிடம் மூலமா அவர்களை தொடர்புகொள்ள, மேலிடமும் அவர்களுக்குத்தான் சப்போர்ட் செய்தது. இன்று பார்த்தால் கடன் வாங்கிய பெரும்பாலனோர் வங்கிக்கு வந்து நாங்கள் வாங்கிய கடன் தொகையெல்லாம் செலுத்தியாச்சு வங்கி கடன் கணக்கை க்ளோஸ் செய்யணும் சொல்றாங்க. ஒன்னும் புரியல. யோசித்து அனைத்தும் செக் செய்தப்போதான் தெரிந்தது, கடன் பணத்தையெல்லாம் பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம், அனைவரிடமும் ஒன்றுபோல் இன்றைய தேதியை சொல்லி, வங்கிக்கு வரவழைத்திருக்கின்றனர். வங்கியின் மேலாளர் எனும் முறையில் நான்தான் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகக் சொல்றாங்க" என்றார்.

ருதுவிற்கு உண்மை நிலவரம் புரிந்தது.

'இதனை வாய் வார்த்தையாக சொன்னால் யாரும் நம்பமாட்டங்க' என நினைத்த ருது,

"அந்த நிறுவனத்தின் ஆள் பிடிபட்டால் தான்... அதாவது உண்மையான குற்றவாளி யாருன்னு தெரிந்தால் தான் நீங்க வெளிவர முடியும்" என்றான்.

அது சுரேந்தருக்குமே தெரிந்திருந்தது.

"அந்த நிறுவனம் பற்றி முழு தகவல் வேணும் வெங்கட்" என்றான்.

வெங்கட் கிருஷ்ணனுடன் புறப்பட்டிருந்தான்.

ருது யோசனையாக நடந்து கொண்டிருக்க...

"சார் எப்.ஐ.ஆர் ரிப்போர்ட்" என்று பக்கம் வந்தார் மல்லிகா.

"நான் சொல்றேன் க்கா" என்ற ருது தற்போதைக்கு எழுத வேண்டாமென சைகை செய்தான்.

விடயமறிந்து இமையாளும், தீபாவும் அங்கு வந்தனர். தீபா வெளிப்படையாக கண்ணீர் விட, இமையாள் அழுகையை அடக்குவது அவளின் சிவந்த கண்களின் தடத்தில் தெரிந்தது.

"அப்பா."

"என்னங்க."

இருவரும் சுரேந்தரின் அருகில் செல்ல,

"நீங்க ஏன் இங்க வந்தீங்க?" என்று கடிந்துகொண்டார் சுரேந்தர்.

"வக்கீல் ப்பா" என்ற இமையாள், அங்கிருந்த காவலர்களை பார்க்க.

"சார் உள்ள இருக்காங்க" என்று பதில் கொடுத்தார் கனகா. ருது எந்தவொரு குற்றவாளிக்கும் கொடுத்திடாத சலுகையை சுரேந்திருக்கு காட்டிட, ருதுவுக்கு வேண்டியவரோ என இமையாளுக்கு பதில் அளித்திருந்தார்.

"நீங்க இருங்க. நான் பேசிட்டு வரேன்" என்று ருதுவின் அறைக்குள் அனுமதி பெற்று வக்கீல் செல்ல, அவரின் பின்னே ஆய்வாளர் தங்கய்யா எவ்வித அனுமதியின்றி உள்ளே நுழைந்தார்.

வக்கீலிடம் முறையான தகவல் கொடுத்த ருது FIR எழுதவில்லை என்பதை சொல்லவில்லை.

அவர் ஜாமீனில் எடுக்கிறோம் என்று சொல்லிட, முடியாதென மறுத்துவிட்டான் ருது.

ருது பேசிக்கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாது இடை புகுந்த தங்கய்யா,

"என் ஏரியா கேஸ் நீங்க எப்படி சார் கொண்டுவரலாம்?" எனக் கேட்டார். அத்தனை தெனாவட்டு அவரின் பேச்சிலும் பார்வையிலும்.

'சாதாரண இன்ஸ்பெக்டர் தானே இவர்' என வக்கீல் யோசித்து முடிக்குமுன்,

"சரியான நேரத்துக்கு நீங்க ஸ்பாட்டுக்கு போயிருந்தால் எனக்கு வேலையே இருந்திருக்காதே மிஸ்டர் தங்கய்யா" என்ற ருது, "நீங்களே என் கண்ட்ரோலில் தான் வறீங்க. நான் கொடுக்கும் வழக்கை நீங்க பார்த்தால் போதும்" என்றான் நிமிர்ந்து நின்று.

"சார் இந்த கேஸ் டீல் பண்ண சொல்லி கலெக்டர் ஆர்டர் சார்" என்றார் தங்கய்யா.

'ஆடு சிக்கிடுச்சு' என நினைத்த ருது,

"அச்சோ பயந்துட்டேன்" என்று போலி பவ்யம் காட்டி, "டூ வாட் ஐ செட்" என்றிருந்தான்.

"சார்..."

"மேலதிகாரியோட ஆர்டரை ஒபே பண்ணலன்னு உங்களுக்கு மெமோ கொடுக்கட்டுமா?" ருது அவ்வாறு கேட்டது தான் தங்கய்யா தானாக வெளியேறியிருந்தார்

"பெரிய இடமெல்லாம் மாட்டும் போலிருக்கே வக்கீல் சார். இப்போ இவர் உள்ளே இருப்பதுதான் பாதுகாப்பு" என்றான்.

"அவங்க வீட்டில்" என்று வக்கீல் இழுக்க...

"கவர்மெண்ட் சம்மந்தப்பட்ட கேஸ். நான் பெயிலபில் சொல்லுங்க சார்" என்றான் ருது.

ருது மற்ற அதிகாரிகள் போலில்லாது தன்மையாக பேசியதிலே அவன் சுரேந்தரை மீட்கவே நினைக்கிறான் என புரிந்து வெளியேறினார்.

"சார் அப்பா" என்று இமையாள் முன்வர,

"இப்போதைக்கு உங்கப்பா தான் குற்றவாளிம்மா. வெளியில் எடுத்து கஷ்டம்" என்று அங்கிருந்து சென்றிருந்தார்.

இமையாளும், தீபாவும் செல்லாது சுரேந்தரின் அருகிலே நின்றபடி அழுது கொண்டிருக்க, பார்க்க பார்க்க ருதுவுக்கு தவிப்பாக இருந்தது.

தன்னவள் அழுது பார்க்கிறான். நெஞ்சமெல்லாம் பாரம் ஏறும் உணர்வு.

"ம்ப்ச்... எதுக்கு இப்படி அழுகிறாள்" என நெற்றியை தேய்த்தவன், வேகமாக வந்து நின்று...

"இதென்ன உங்க வீடா? வெளியில் போங்க" என்று கடிந்தான்.

"க்ளியர் திஸ் நான்சென்ஸ்" என்று கனகாவிடம் கோபம் கொண்டான்.

ருதுவை கண்டதும் இமையாளின் அழுகை நின்று கோபம் முன் வந்திருந்தது.

"நைட் ஆகிருச்சு. இங்க நிற்கக்கூடாதும்மா வெளியில் போங்க" என்று கனகா சொல்ல, சுரேந்தரும் செல்லுமாறு கூறிட வேறு வழியின்றி இருவரும் வெளியேறினர்.


ருது தன்னை முறைத்தபடி வெளியேறும் தன்னவளின் கோபத்தை சளைக்காது ஏற்று நின்றான்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 25

'நம் வலிகளுக்கு பின்னால் நாம் நேசிப்பவர்களின் சந்தோஷம் இருக்குமாயின், சுகமாய் ஏற்போம் வலிகளையும்.'

'தூரமே தூரமாய்.'

___________________________________

கலங்கிய விழிகளோடு திரும்பி திரும்பி பார்த்துச் செல்லும் இமையாளையே இமைத்திடாது பார்த்து நின்றான் ருது.

அவளை முதல் முறை கடிந்து கொண்டிருந்தான். என்னவோ போலிருந்தது.

தான் பொறுமையாக சொல்லியிருந்தால் சிலிர்த்துக்கொண்டு அடமாக நின்றிருப்பாள் என்று அறிவான். அதற்காகவும், அவளின் அழுகையை நிறுத்தவுமே கத்தி உறுமலாய் சீறியிருந்தான்.

நேரத்தை பார்த்தவன் அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவரை அழைத்து உணவு வாங்கிவர செய்தான்.

சுரேந்தருக்கு தன்மீது தவறில்லை என்கிற நிமிர்வால் திடமாகவே அமர்ந்திருந்தார். என்ன மக்கள் கை வைத்ததில் தான் கொஞ்சம் வாட்டமாகிப்போனார்.

சுரேந்தர் முன்பு உணவையும் தண்ணியையும் வைத்த ருது, "சாப்பிடுங்க சார்" என்றான்.

அவர் தயங்கிட...

"உங்க மேல தப்பில்லைன்னு நான் ப்ரூவ் பன்றேன் சார். பட் அதுவரை நீங்க இங்கிருப்பது தான் பாதுகாப்பு" என்றான்.

ருது தன்னை கைது செய்தது முதல் அவரும் அவன் தன்னிடம் நடந்துகொள்ளும் முறையை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார். அவன் தன்னை காக்க காட்டும் முனைப்பு அவருக்கு புரிகிறது. ஏனென்கிற காரணம் தான் தெரியவில்லை.

அவரின் பார்வையின் யோசனை வைத்தே அவர் தன்னிடம் கேட்க தயங்குவதை புரிந்துகொண்ட ருது,

"இனியன் என் ஃபிரண்ட். அவனுக்காகன்னு வச்சிக்கோங்களேன்" என்றிருந்தான்.

"சரிப்பா" என்றவர் அடுத்து எதுவும் பேசாது உணவினை உண்டு முடிக்க...

"டேய் சுரேந்தரா" என்ற அழைப்போடு அங்கு வந்தார் வேங்கடம்.

"பல வருஷம் கழித்து உன்னை இப்படியாடா பார்க்கணும்" என்று அவர் சுரேந்தரின் அருகில் வர, "திரு" என்று தன்னுடைய இளமை கால நெருங்கிய நண்பனை ஆரத் தழுவியிருந்தார் சுரேந்தர்.

பார்த்ததும் இருவரும் நண்பர்கள் போல என யூகித்திருந்தான் ருது.

திருவேங்கடம் பீகாருக்கு செல்லும் முன்வரை இருவரும் நட்பாக ஒன்றாகத்தான் இருந்தனர். அன்றைய கால தொடர்பு வசதியின்மையால் பேசாமல், தொடர்பின்றி இருந்தாலும் அவர்களுக்கான பழைய நட்பு மனதில் இன்னமும் அப்படியே இருந்தது.

பார்த்ததும் யாரென்று யோசித்திடாது இயல்பாய் அணைத்துக் கொண்டதிலே அது நன்றாகத் தெரிந்தது.

செய்தியில் நண்பனை பார்த்துவிட்டே விடயமறிந்த வேகமாக வந்திருந்தார் வேங்கடம்.

"எப்படிடா இருக்க?" சுரேந்தர் வேங்கடத்தின் கன்னத்தை வருடியவராக வினவினார்.

"நான் நல்லாயிருக்கேன்" என்ற வேங்கடம், "உன்னை இப்படியா பார்க்கணும்" என்று வருத்தமாகக் கூறினார்.

"அவர் மேல் தப்பில்லைப்பா. வெளியில் வந்திடலாம்" என்ற ருது, "நீங்க இங்கிருக்கக் கூடாது வீட்டுக்கு கிளம்புங்க" என்றான்.

"முடியாது போடா" என்ற வேங்கடம் சுரேந்தருடன் அமர்ந்து என்ன நடந்ததென்று கேட்டிட...

"அப்பா" என்று அழுத்தமாக விளித்தான் ருது.

'இதற்குமேல் இங்கிருந்தால் சாமி ஆடிடுவான்' என்று நினைத்தவர், "என் பையன் தான். ரொம்பவே மரியாதை எம்மேல" என்று சுரேந்தரிடம் சொல்லி சிரித்து வைத்தார்.

"உன் மகனா?" என்று கேட்ட சுரேந்தரிடம், "எல்லாம் அவன் பார்த்துப்பான். நீ தைரியமா இரு. நான் காலையில் வரேன்" என்று மகனிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.

"ரொம்ப சந்தோஷம் ப்பா" என்று ருதுவின் கையை பற்றி விடுவித்தார் சுரேந்தர்.

அவரின் மகிழ்வுக்கான காரணம் தான் அவரது நண்பனின் மகன் என்று புரிந்தது.

அந்நேரம் வெங்கட் அழைத்து அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி குறித்த தகவல்களை சொல்லிட...

"அவனுக்கும், கலெக்டருக்கும் என்ன லிங்க் விசாரி வெங்கட். நைட்டுக்குள்ள இதுக்கு ஒரு தீர்வு வந்திருக்கணும்" என்றான் ருது.

மேலும் சிறிது நேரம் அங்கிருந்தவன் இரவு பணியாளர்களிடம் சுரேந்தரை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டான்.

ருது நேராக வந்தது வெங்கட்டின் வீட்டிற்கு. வெளியில் நின்றே ராதிகாவை அழைத்தான்.

"வாங்க சார்" என்றவளை,

"சாப்பிட்டிங்களா?" எனக் கேட்டவன், அவள் பதில் சொல்லியதும், "வெங்கட்க்கு முக்கியமான வொர்க். நைட் வரமாட்டான். நீங்க இங்க தனியா இருக்க வேண்டாம். நம்ம வீட்டுக்கு வாங்க" என்று அழைத்தான்.

ராதிகா இருக்கட்டுமென மறுக்க...

"இந்த மாதிரி நேரத்தில் தனியா" என்று அதற்கு மேல் எப்படி சொல்ல என தெரியாது, அவளின் வயிற்றில் பார்வை பதித்து தடுமாறினான்.

ராதிகா உணர்ந்தவளாக,

"போகலாம் சார்" என உள்ளே சென்று தன்னுடைய அலைப்பேசியை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டி அவனுடன் சென்றாள்.

ருதுவிற்காகக் காத்திருந்த அம்பிகாவிடம் ராதுகாவை ருது அறிமுகம் செய்து வைக்க...

"நாங்க ரெண்டு நாளுக்கு முன்னவே பார்க்கில் ஃபிரண்ட் ஆகிட்டோம் ருது" என்றார் அம்பிகா.

"அப்போ ஓகே" என்ற ருது, "அவங்க பிரெக்னென்ட் ம்மா" என்றான்.

சட்டென்று அம்பிகாவின் கண்கள் கலங்கி விட்டது.

"புரியுதுப்பா" என்றவர், மகனின் கன்னம் வருடியவராக, "சாப்பிட வாப்பா" என்றார்.

"குளிச்சிட்டு வரேன் ம்மா. அவங்களுக்கு ரூம் காட்டுங்க" என்றவனாக படியேறியவன், திரும்பி வந்து, "டேப்லெட் எல்லாம் போட்டிங்களா ராதிகா?" எனக் கேட்டான்.

அம்பிகாவின் கலங்கி நொடியில் சீரான முகத்தை கவனித்த ராதிகாவிற்கு, அவனது இந்த அக்கறைக்கான பின்னான வலியின் அளவு ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது.

"போட்டேன் சார்" என்று ராதிகா சொல்லவும், "பால் கொடுங்கம்மா. குடிச்சிட்டு படுக்கட்டும்" என்று மேலேறிச் சென்றான்.

ராதிகா மறுத்த போதும், அம்பிகா அவளை பால் குடிக்க வைத்தே விட்டார்.

"சாரோட வைஃப் பிரெக்னென்சி ரொம்பவே ஹார்ட்டா இருந்ததுங்களாம்மா? அவங்க எங்கே?" என ராதிகா கேட்டேவிட்டாள். அதற்குமேல் அவளாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"அவனோட வைஃப் அவங்க அப்பா வீட்டில் இருக்காம்மா." அத்தோடு அம்பிகா முடித்துக்கொண்டார்.

ராதிகா மேலும் ஏதோ கேட்க வர,

"டைம் ஆச்சு நீ வந்து படும்மா. ருது வந்தால் அப்புறம் கடிவான்" என்று அவளை தடுத்தவராக அழைத்துச்சென்று அறையை காண்பித்தார்.

"நீ படும்மா. எதுவாயிருந்தாலும் கூப்பிடு. வேணுன்னாலும் நான் இங்கவே படுத்துக்கிறேன்" என்றார்.

"பரவாயில்லம்மா" என்று ராதிகா படுத்ததும், கதவினை சாற்றியவராக அம்பிகா வர, ருதுவும் வந்து சேர்ந்தான்.

ருதுவிற்கு சாப்பாடு எடுத்து வைத்தவர், அவன் உண்ணும் வரை அமைதியாக இருந்து பேசினார்.

"நடந்து முடிந்ததை மாற்ற முடியாது ருது. இன்னமும் இந்த ஒரு விஷயத்தில் நீ எமோஷனல் ஆகுறது அவ்வளவு நல்லது இல்லைப்பா" என்றார்.

"புரியுதும்மா. ஆனால், என்ன பண்ணட்டும். எல்லாரும் கன்சீவ் ஆகுறாங்க... நீ மட்டும் என்ன ஸ்பெஷல்ன்னு ஆண்கள் எவ்வளவு ஈஸியா அதை கடந்து வறாங்க. ஆனால் அது ஒரு பொண்ணுக்கு எத்தனை பெரிய இடரான சூழல். தெரிந்தே உயிரை பணயம் வைக்கும் செயல்ன்னு ஏன் புரியமாட்டேங்குது. பக்கத்திலிருந்து ஒவ்வொன்னையும் பார்த்திருக்கேன் ம்மா. கடைசியில் இந்த கையில்" என்று தன்னுடைய உள்ளங்கையை பார்த்த ருது, அருகில் நின்றிருந்த அம்பிகாவின் வயிற்றில் முகம் சாய்த்தவனாக கண்ணீர் விட்டான்.

"இன்னைக்கு தேஷ் அம்மா வேணும் கேட்கிறான். அப்போ என் உயிரை யாரோ உருவுற வலி. லேஷஸை தூக்கிட்டு வந்திடுவோமான்னு தோணுது" என்றான்.

"ருது..."

"முடியலம்மா. தேஷ்க்கு மட்டுமில்ல எனக்குமே அவள் வேணும்மா" என்றான் சிறுவனாக.

"நான் பேசட்டுமாப்பா?"

"வேணாம்" என்று நிமிர்ந்தவன், "அவளே சரின்னு வரணும்" என்றான்.

"அப்போ மிரட்டி தான் கட்டிக்கணும்" என்றவர் "உண்மையை சொல்லாம கஷ்டம் ருது" என்றார்.

அம்பிகா சொன்ன முதல் வரியில் அவனிடம் மின்னல்.

'பார்ப்போம் சாதகமா அமையுதான்னு.' மனதோடு நினைத்தான்.

"ஓகேம்மா நீங்க தூங்குங்க" என்று எழுந்தவன், ஷிவன்யாவின் அறைக்கு சென்று பாதி திறந்திருந்த கதவினை தட்டிட சத்தமில்லை. அறையிலும் விடிவிளக்கு ஒளிர்ந்திட மெல்ல உள்ளே சென்றவன் ஷிவாவின் கை அணைவில் உறங்கிக்கொண்டிருந்த தேஷ்ஷின் முன்னுச்சி கேசத்தை வருடியவனாக வெளியில் வந்தான்.

சுரேந்தர் கைதாகிய சமயமே இனியனுக்கு, "ரீச் ஆனதும் கால் பண்ணு" என தகவல் அனுப்பியிருந்தான். (இந்தியாவிலிருந்து விமான வழி பிரான்ஸ் செல்ல பதிமூன்று மணி நேரத்திற்கும் மேலாகும்.)

தற்போது தகவலை பார்த்துவிட்டானா என அலைபேசியை எடுத்து பார்த்தவன், பார்க்கவில்லை என்றதும் வெங்கட்டுக்கு அழைத்து என்ன நிலவரமென அறிந்துகொண்டு வெளிக்கதவு அடைத்திருக்கிறதா என பார்க்க வர, வாயிலை கடந்து இருளில் ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது.

கதவினை நன்கு திறந்து வெளியில் வந்த ருது, "யாரு?" எனக் கேட்டு மின்விளக்கை போட்டிட, அழுது வீங்கிய முகத்தோடு இமையாள் நின்றிருந்தாள்.

"தனியா வந்தியா?" என கோபமாகக் கேட்டவன், அவளை கடந்து எட்டிப்பார்த்தான்.

கேட்டின் முன் அவளது வண்டி நின்றிருந்தது.

"யூ இடியட்" என்று கடிந்தவன், "அறிவிருக்காடி... இந்நேரத்தில் தனியா வந்திருக்க" என்று கேட்டான்.

"அப்பாவை வெளியில் விடுங்க." கண்கள் கொட்டிய கண்ணீரை புறங்கையால் துடைத்தவளாக அவனது முகம் பார்க்காது கூறினாள்.

"வக்கீல் சொன்னார் நீங்க மனசு வைத்தால் விட முடியும்ன்னு. அம்மா சாப்பிடமா அழுதுகிட்டே இருக்காங்க. அப்பா அப்படி பண்ணியிருக்கமாட்டார். வெளியில் விடுங்க" என்றாள். தேம்பலோடு.

நிச்சயம் இப்போது அவளை பார்த்தால் யாரும் பத்தாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை என்று சொல்லமாட்டார்கள். மிட்டாய் கொடுத்தே ஆகவேண்டுமென அடம் பிடிக்கும் சிறுமியாய் அப்பாவை விட வேண்டும் எனபதையே அடமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

"வீட்டுக்குப் போ! அவர் மேல் தப்பில்லைன்னா ரெண்டு நாளில் வந்திடுவார்" என்றான்.

"இல்லை இப்போவே விடுங்க. அப்பா ஸ்டேஷனில் இருக்கவேக் கூடாது. அவர் ஒன்னும் அக்யூஸ்ட் இல்லை" என்றாள்.

"நானும் தான் தினம் ஸ்டேஷனில் இருக்கேன்" என்றவனை தற்போது நிமிர்ந்து பார்த்து முறைத்தாள். அவன் கேலி செய்வதாகத்தான் அக்கணம் அவளுக்குத் தோன்றியது.

"நீங்களும் அவரும் ஒன்னா?" எனக் கேட்டவள், "அப்பாவை இப்போவே விட முடியுமா முடியாதா?" என்றாள்.

"உன் அப்பா மாட்டியிருக்கிறது சின்ன விஷயம் இல்லை. வெளியில் விட. உண்மையான ஆள் கிடைக்கலன்னா உன் அப்பா ஜெயிலுக்கு போறது உறுதி" என்று அவளை பயம் கொள்ளச் செய்தான்.

நடக்கும் சூழலுக்கு தன் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள ஏற்ற வகையில் காய் நகர்த்தினான். மனதில் செய்வது தவறென புரிந்தாலும், சந்தர்ப்பத்தை நழுவவிட அவன் தயாராக இல்லை. இன்னமும் தேஷ் அம்மா வேணுமெனக் கேட்ட அழுகை குரல் அவனது செவியில் எதிரொலித்து இதயத்தில் மத்தளம் கொட்டிக்கொண்டே இருந்தது.

"நீங்க வேணுன்னே அப்பாவை ஜெயிலில் போட பிளான் பண்றீங்க." அவனையே குற்றம் சாட்டினாள்.

"மாட்டியிருக்கிறது அப்படிபட்ட கேஸ்" என்றான். மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, கால்களை அகட்டி நிமிர்ந்து நின்றவனாக.

"எனக்காக விடுங்க ப்ளீஸ்!" கிட்டத்தட்ட இறைஞ்சினாள். அவனுக்கு அவள் அவ்வாறு மன்றாடுவது பிடிக்கவில்லை. உள்ளுக்குள் வலி கொடுத்தது. இருந்தபோதும் மனதை இழுத்துப்பிடித்தான். பதறினால் எல்லாம் சிதறிப்போகுமே. இதுபோல் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதே!

"உனக்காக நான் ஏன் விடனும்?" அவளுக்காக என்னவும் செய்வான். தற்போது மனதை கல்லாக்கிக் கொண்டு வினவினான்.

அவனது கேள்வியில் அவள் நொறுங்கிப்போனாள். இனியன் இருந்திருந்தால் இந்த சூழல் வேறு மாதிரி இருந்திருக்குமோ? தற்போது தந்தையை மீட்க வேண்டிய கட்டாயத்தில் அவள். ருதுவிற்கு அது சாதகமாக.

ருதுவிடம் மன்றாடுவதில் அவளுக்கு ஒன்றும் இறக்கமில்லை. ஆனால் அவனுக்கும் அவளுக்குமான தூரம் அவளை தனது நிலை குறித்து வருந்த வைத்தது.

"அப்பாவை எப்படியாவது கூட்டிட்டு வந்திடு இமயா!" தீபா கணவனுக்கு ஏதும் ஆகிவிடுமோ? சிறைக்குச் சென்றிடுவாரோ என்கிற பயத்தில் மகளின் கையை பிடித்துக்கொண்டு அப்படியொரு அழுகை. தந்தையில்லாது வீட்டுக்குச் சென்றால் மீண்டும் அம்மாவும் அந்நிலையில் பார்க்க நேரிடுமோ என்று கவலை கொண்டவளாக ருதுவிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கிறாள்.

"ப்ளீஸ் ருது..." என்றவள், கன்னம் இறங்கிய கண்ணீரை துடைத்தவளாக, "நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்" என்றாள்.

ருது மனதால் அவளது வார்த்தையால் கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ந்தான்.

அம்பிகா சொல்லிய மிரட்டலை விட பணிதல் சரியானதாகத் தோன்றியது அவனுக்கு.

"அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கோ!" பட்டென்று மின்னலாய் சொல்லியிருந்தான்.

அவன் கேட்டதை நம்ப முடியாது அதிர்வை உள்வாங்கியிருந்தாள் இமையாள்.

"இல்லை முடியாது." அவளும் வேகமாக மறுத்திருந்தாள். அவன் காதலாக ஐந்து வருடங்களுக்கு முன்பு இதை கேட்டிருந்தாள் அத்தனை மகிழ்வு கொண்டிருப்பாள். தற்போது ஒரு பிடித்தமின்மை அவன் கேட்டதில்.

"அப்போ கண்டிப்பா உன் அப்பா ஜெயிலுக்கு போவார்" என்றான்.

"அப்பா மேல் தப்பில்லை. கண்டிப்பா வெளியில் வந்திடுவார். இதுக்காக நீங்க சொல்வதை கேட்க முடியாது" என்றவள், "உங்களுக்கு கல்யாணமாகி பையன் இருக்கான்ல. இப்படி கேட்க வெட்கமா இல்லையா?" எனக் கேட்டிருந்தாள்.

இரண்டு தினங்களுக்கு முன்னால் ருதுவுடன் தேஷ்ஷை வெளியில் பார்த்திருந்தாள். அப்போதும் அது அவனது பையனாக இருக்குமென்று அவள் நினைக்கவில்லை. இருக்குமோ என்கிற சந்தேகம் தான்.

இன்று பள்ளியில் தேஷ்ஷை கண்டதும் கூட தன்னவனுடன் உறவு கொண்ட பையன் என்கிற முறையிலே பார்த்ததும் சிரித்தாள். ருது அவனுக்கு யாரெனத் தெரிந்துகொள்ளவே, தந்தையின் பெயரை வினவியிருந்தாள்.

குழந்தை "ருத்விக்" என்று சொல்லியதில் இதயத்தில் எழுந்த வலியை வெளியே மறைத்திட அவள் பட்ட வதை... சொல்லில் அடங்கிடாது.

'அப்போ அவங்க சொன்னது நிஜமா?' கேட்டுக்கொண்டவளுக்கு கண் முன்னே இருக்கும் தேஷ் ஆமென்ற உண்மையாக தெரிந்தான்.

அதனை கொண்டே தற்போது ருதுவிடம் அவ்வாறு கேட்டாள்.

"இதிலென்ன வெட்கம்?" என்ற ருது, "நீ சரின்னு சொன்னால். நம்ம கல்யாணம் நடந்த அடுத்த செக் உன் அப்பா வெளியில் இருப்பார்" என்றான்.

"நீங்க என்ன பிளாக்மெயில் பன்றிங்க. உங்களுக்கு பணிய வைக்க பார்க்கிறீங்க" என்ற இமையாள், "உங்க வைப் இருக்கும்போதே இப்படி கேட்க அசிங்கமாயில்லையா?" எனக் கேட்டாள்.

"என் வைஃப் என்னோட இருக்கத்தான் கேட்கிறேன்" என்றவன், "ஓகேன்னா அடுத்து பேசு. இல்லை கிளம்பு" என்றான்.

அவன் முதலில் சொன்னது அவளுக்கு விளங்கவில்லை. ஆராய்ந்து பார்க்கும் மனநிலையும் அவளுக்கு இல்லை.

"ஏற்கனவே கல்யாணம் ஆனவருக்கு நானெப்படி சம்மதம் சொல்வேன் நினைச்சீங்க?"

"டிவோர்ஸ் ஆகிருச்சு." அசராது பொய் உரைத்தான்.

"என்ன?"

"ஆமாம். நான் ஏற்கனவே லவ் பண்ணவன்னு தெரிந்து விட்டுப்போயிட்டாள்" என்றான்.

"நிஜமாவே டிவோர்ஸ் ஆகிருச்சா?" கண்களை விரித்துக் கேட்டாள்.

"எஸ்." உள்ளுக்குள் அவனுக்கு அப்படியொரு சிரிப்பு வந்தது. அதே கணம் தான் என்ன சொன்னாலும் நம்பும் அவளின் மீது பரிதாபமும் எழுந்தது. அவள் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை இன்னமும் அப்படியே இருக்கிறது என்கிற கர்வமும் தோன்றியது.

"அதனால் தான் என் பின்னால் வந்தீங்களா?"

"அப்படியும் வச்சிக்கலாம்." சாதாரணமாக தோள் குலுக்கினான்.

"டிவோர்ஸ் ஆகலன்னா உங்களுக்கு என் நினைப்பே வந்திருக்காதுல?"

"தெரியல" என்றவன், "என் பையனுக்கு அம்மா வேணும். அதுவே என்னை லவ் பண்ற பொண்ணாக இருந்தால் பெட்டர் தோணுச்சு. நீயும் எனக்காக காத்திருந்தாயா? சோ, திரும்பவும் வந்தேன்" என்றான்.

அவனை கொல்லும் ஆத்திரம் அவளிடம்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
'அப்போது அவனுக்கு நான் என் காதல் காத்திருப்பு எதுவும் பொருட்டில்லையா?' மனதால் மரித்து உயிர் துறந்தாள்.

"பணம் கொடுத்தால் விட்டுடுவாங்களா?"

"ம்ம்ம்... ஆனால் அது நீயே உன் அப்பா குற்றவாளிங்கிற மாதிரி இருக்கும்" என்ற ருது, "மொத்தம் நாலரை கோடி. பேங்கில் ஒப்படைத்து உன் அப்பாவை வெளியில் கூப்பிட்டுக்கோ" என்றான்.

"நாலரை கோடியா?" தள்ளாடி நிலை கொண்டாள்.

அப்போது இமையாளுக்கு தீபா கால் செய்தார்.

"அப்பாவை கூட்டிட்டு வந்திடு இமயா. அவர் ஸ்டேஷனில் பார்த்த காட்சி இன்னும் பதற வைக்குது. இந்த ஜனங்க அப்பாவை எப்படி அடிச்சிருக்காங்க" என்று அழுதவர், "அப்பாவை கூட்டிட்டு வந்திடுடா" என்று அழுகையோடு வைத்திருந்தார்.

அவளால் யோசிக்கவே முடியவில்லை.

"எவ்வளவு நேரம் நின்னுட்டு இருக்கிறது? எனக்கு தூக்கம் வருது. சீக்கிரம் பதில் சொல்லு" என்று அவளை யோசிக்கவிடக் கூடாதென கிட்டத்தட்ட அவசரப்படுத்தினான்.

"இதில் பெரிய ஆளுங்க சம்மந்தப்பட்டிருக்காங்க. உன் அப்பா மீது தப்பே இல்லைன்னாலும், அவங்களை மீறி அவரை வெளியில் கொண்டுவரது நிச்சயம் முடியாத காரியம். அவங்க தப்பிக்க உன் அப்பாவை மாட்டவிட்டிருக்காங்க. கண்டிப்பா ஜெயில் தான்" என்றான்.

நிலையில்லா நிலையில் மொத்தமாக தன் சுயம் தொலைத்து, அடுத்து என்னவென்று பாதை தெரியாது பயந்து நின்றாள்.

தற்போது ருது சொல்லியதைத்தானே அவளது வக்கீலும் சொல்லியிருந்தார். அதனால் தான் ஜாமீன் கூட வழங்கவில்லை எனவும் சொல்லியிருந்தார்.

'அப்போ இவங்க சொல்வது உண்மையா? அப்பா ஜெயிலுக்கு போயிடுவாரா?' மனதில் ஊமையாய் கதறினாள்.

அப்பாவா? தன் வாழ்வா? மனதோடு போராடினாள்.

"நீங்க நினைச்சா அப்பாவை வெளியில்விட முடியும் வக்கீல் சொன்னார்!"

"ஆதாயம் இல்லாமல் நான் ஏன் உன் அப்பாக்காக ரிஸ்க் எடுக்கணும்?" மனதை கடினமாக்கி வெளியில் இலகுவாகக் காட்டிக்கொண்டு கேட்டிருந்தான்.

"ப்ளீஸ்..." கையெடுத்துக் கும்பிட்டாள்.

இரக்கமின்றிய பாவனையில் நின்றிருந்தாள். நெஞ்ச குமுறலை மறைத்தவனாக.

'அவளை இப்படி வருத்தி தன்னிடம் வரவழைக்க வேண்டுமா?' அக்கணம் தன்னையே வெறுத்தான். மனதால் அறைந்து கொண்டான்.

அதற்கு மேல் அவனிடம் கெஞ்சிட மனதால் தெம்பில்லாது கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவள்,

"சரி" என்றாள்.

"எதுக்கு இந்த சரி?"

அந்நொடி அவளுக்கு ருது 'மனிதனா நீ?' என்று தான் கேட்கத் தோன்றியது.

"கல்யாணம் பண்ணிக்க சம்மதம்."

"யாரை?"

அவனை பார்த்து பற்களைக் கடித்துக்கொண்டு,

"உங்களை" என்றாள்.

"வெல்" என்றவன், "நாளைக்கு சரியா பத்து மணிக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்திடு. இப்போ கிளம்பு" என்றான்.

அவளிடம் அவன் மீது புள்ளியளவு இருந்த பிடித்தமும் சுத்தமாக காணமல் போயிருந்தது.

"அப்பா?"

"ரிஜிஸ்டர் ஆபீஸ் பத்து மணிக்குத்தான் திறப்பாங்க. இப்போ நீ சரி சொல்லிட்டன்னு உன் அப்பாவை நான் வெளியில் விட்டதும், நீ முடியாது சொல்லிட்டன்னா. சோ, நீ கையெழுத்துப்போட்ட அடுத்த நொடி உன் அப்பா வெளியில் இருப்பார்" என்றான்.

காதலித்தவனை உயிரில் சுமந்தவனை பிடித்தமே இல்லாது மணக்க சம்மதித்தாள். தன்னை குறித்தே வெட்கினாள். எல்லாம் தந்தைக்காக என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

முகத்தை துடைத்தவளாக திரும்பி செல்பவளை இழுத்து அணைக்க துடித்த கைகளை மடக்கி சுவற்றில் ஓங்கி குத்தியிருந்தான்.

'உன் லேஷஸ் டா அவள்.' உள்ளே ஓலமிட்டான்.

அவனுக்கும் வேறு வழியில்லை.

வேகமாக தன் வண்டியை உயிர்ப்பித்து அவள் வீடு வரை துணையாக சென்று வந்தான்.

இமையாளுக்கு மனமெல்லாம் மரத்து விட்டது. தன்னுடைய ருதுவா இப்படி என தனக்குள் கேட்டு கேட்டே மாய்ந்து போனாள்.

ருது துணையாக வந்ததையே அவள் உணரவில்லை.

வீட்டிற்கு திரும்பி வந்த ருது உள்ளே செல்ல,

"இது ரொம்பவே தப்பு ருது" என்றார் அம்பிகா. கண்டனப் பார்வையோடு வேங்கடமும் நின்றிருந்தார்.

வேங்கடம் தண்ணீர் கேட்டாரென எடுக்க வந்த அம்பிகா, வெளியில் பேச்சுக்குரல் கேட்டு கவனித்து நிற்க, சென்ற மனைவி இன்னும் வரவில்லையென வந்த வேங்கடமும் அனைத்தும் கேட்டிருந்தார்.

"எனக்கு வேற ஆப்ஷனே இல்லைம்மா" என்ற ருது, அப்படியே அங்கேயே தரையில் மண்டியிட்டு ஆவென கத்தினான்.

____________________________________

'காத்திருத்தல்
கடந்து போதல்
இரண்டுக்கும் நடுவிலான

வலிகளே காதல்.'
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 26

உசுரே! உசுரே!
அட நீதானடா!
கனவா? நினைவா?
இங்கு நின்னாயடா!
காயம் ஆறாதா?
நெஞ்சம் சேராதா?
காணும் நிழலிப்போ நெசமாகாதா?

வாழா வாழ்வே
அடி நீதானம்மா!
சாகா வரம்போல வந்தாயம்மா
பாவம் தீராதா?
சாபம் வீழாதா?
மூச்சு காத்தும் உன் பெயர் சொல்லாதா?

தூண்டில் மீனாய் நான் தினம் சாகுறேன்.
சாமி வேணாம் உன் நிழல் சாயுறேன்.

ஏழேழு ஜென்மம்...
இனி உன் உசுருல தினம் கலக்கணும்.

_________________________________

மகன் வெடித்து கதறும் கதறலை முதல் முறை காண்கின்றனர்.

தனது கடந்த காலத்தை சொல்லியபோது கூட ருது இப்படி அழவில்லை. தற்போது அழுகிறான். அவனது ஓலத்தில் வீடே கிடுகிடுத்தது.

தன் செயல் குறித்து அழுகிறான். தன்னவளை வதைப்பதற்கு அழுகிறான். முடியவில்லை. ஆனாலும் இச்சூழலை விட முடியாது. அவளாக வர வேண்டுமெனும் அவனது ஆசை, உண்மை தெரியாது நடந்திட வாய்ப்பில்லை. அதனால் வரவழைக்கத் துணிந்துவிட்டான். அந்த துணிதல் இந்தளவிற்கு செல்லுமென அவன் நினைக்கவில்லை.

"ருது."

தரையில் மண்டியிட்டு, கீழே கைகளை குத்தியவனாக வெடித்து கதறும் மகனை இருபக்கமும் அரணாய் தாங்கினர் வேங்கடமும், அம்பிகாவும்.

"முடியலம்மா! அவளுக்கு விருப்பமில்லாமல் தான் என்கிட்ட வரணுமா?" அப்படியொரு வலி ருதுவின் முகத்தில்.

"அப்புறம் எதுக்கு தங்கம் இப்படி?" எனக்கேட்ட அம்பிகா தன் நெஞ்சில் அவனது தலையை அழுத்திக் கொண்டார்.

"வேற வழியே இல்லையேம்மா!"

ருதுவின் அழுகை, கதறல் அந்த நிசப்தத்தில் நன்கு எதிரொலித்திட, என்னவோ ஏதோவென உறக்கம் கலைந்து வந்து நின்ற ஷிவன்யாவை மூவரும் கவனிக்கவில்லை.

மாத்திரையின் உபயத்தால் ராதிகா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

ஷிவா அதிர்வில் சிலையாகியிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். ருதுவின் கோபம், கடினம் எல்லாம் பார்த்திருக்கிறாள். ஒருபோதும் இப்படி குலைந்து அழுது பார்த்ததில்லை. நம்ப முடியா அதிர்வோடு அசையாது நின்றுவிட்டாள்.

"இவன் இப்படி அழுறதை பார்க்க முடியல அம்பிகா. இப்போவாவது என்னன்னு சொல்லுங்களேன்." உண்மையை அறிந்து மகனின் கவலையை நொடியில் தீர்த்திட வேண்டுமென தந்தையாய் வேங்கடம் பரிதவித்தார்.

அம்பிகாவினுள்ளும் பாரத்தின் அழுத்தம் சுமையாகியதோ? ருதுவின் கண்ணீரை காண முடியாது, வலியில் ஒரே மூச்சாக அனைத்தையும் கொட்டிவிட்டார்.

வேங்கடத்தின் உடல் நடுக்கம் குறையாது, தரையில் சரிந்து அமர்ந்தார்.

கேட்டவருக்கே அத்தனை வேதனை.

ஷிவன்யா சுற்றம் மறந்து கன்னத்தில் வழியும் கண்ணீரை உணராது நின்றிருந்தாள்.

"ருது..." வேங்கடம் கையை விரித்திட, வேகமாக அவருள் புதைந்திருந்தான்.

"உன் அழுத்தத்துக்கு பின்னால் இப்படியொரு வலியை நான் நெனச்சு பார்க்கலப்பா" என்றவர், "உனக்கு நாங்க இருக்கோம் கண்ணா. இனி இதை நினைத்துக்கூட நீ அழக்கூடாது" என்று மகனின் முகத்தை துடைத்தவர், "உன்னை வருத்தி, அந்தப்பொண்ணுக்கும் வலி கொடுத்து இப்படியொரு கல்யாணம் வேண்டாம்ப்பா. சுரேந்தர் கிட்ட நான் பேசுறேன். உண்மையை சொல்லுவோம்" என்றார்.

அவன் செய்யும் செயலை அவனையும் சேர்த்து வதைக்கிறதே என வேங்கடம் யோசித்து பேசினார்.

ஆனால் ருது மறுப்பாக தலையசைத்தான்.

"எளிதா சரிசெய்யக்கூடியது ருது. ரொம்பவே காம்ப்ளிகேட் பண்ணிக்கிற நீ" என்றார் வேங்கடம்.

"ஆமாம் ருது. உண்மையை சொல்லிட்டால் வலியில்லாமல் உன்கிட்ட வருவாளே" என்றார் அம்பிகா.

"முடியாதும்மா" என்று எழுந்து நிமிர்ந்து நின்ற ருது, "நீங்க என்னை மட்டுமே பார்க்கிறீங்க... எனக்காக மட்டுமே யோசிக்கிறீங்க" என்றவன், "தேஷ்... தேஷ்ஷை விட்டுட்டிங்களே!" என்றான். அதீத கனத்தோடு.

"ருது!" இருவரும் அதிர்ந்துவிட்டனர். உண்மையில் ருதுவின் வாழ்வை சரிசெய்திட வேண்டுமென நினைத்தவர்கள் அக்கணம் தேஷ்ஷை மறந்துதான் போயினார்.

"தேஷ்... தேஷ் இன்னைக்கு அம்மா வேணும் கேட்கிறான். அவன் முன்னாடி இமையாளை அம்மாவா நிறுத்த சொல்றீங்களா? இல்லை அண்ணியா நிறுத்தட்டுமா? நீங்களே சொல்லுங்க?" எனக் கேட்டான்.

இதற்கு அவர்களால் என்ன பதில் சொல்லிட முடியும் அவர்களால்.

"அவனுக்கு ஒரு அம்மா வேணும்மா. அண்ணி இல்லை. உண்மை தெரிந்தாலும் என் லேஷஸ் அவனுக்கு அம்மாவாவே வருவாள். ஆனால்," என்று இடை நிறுத்திய ருது, "உண்மை தெரிந்ததுக்கு பிறகு அவள் தேஷ்ஷை ஏத்துகிட்டா, அவன் மனசுல தேஷ் என் தம்பிங்கிற எண்ணம் தானே முதலில் இருக்கும்" என்றவன், "அவளுக்கு தேஷ் முதலில் மகனாகத்தான் மனதில் பதிய வேண்டும். அதுதான் எங்க காதலுக்கும் நியாயமா இருக்கும். எனக்கு மகன்னா, அவளுக்கும் மகனா மட்டும் தானே இருக்கணும். அது எங்க காதலால் மட்டும் தானே சாத்தியம்" என்றான்.

ருது சொல்ல வருவது இருவருக்குமே புரிந்தது.

"உன்னை விரும்புற பொண்ணு தேஷ்ஷை மகனா மட்டுமே பார்க்கணும் நினைக்கிற. தப்பில்லைப்பா. எங்களால் புரிஞ்சிக்க முடியுது" என்ற வேங்கடம், "ஆனால் கல்யாணம் செய்வதற்கு முன்பு சுரேந்தரிடம் எல்லாம் சொல்லிடுப்பா. இல்லைன்னா என் மகனுக்காக நான் பேசுகிறேன்" என்றார்.

"உன் பக்கம் நாங்க நிக்கிற மாதிரி கல்யாணம் பதிவு பண்ணும்போது அவளோட உறவும் பக்கம் இருக்கணும் ருது" என்றார் அம்பிகா.

"ம்ம்ம்" என்ற ருது, "இனியனால் வர முடியாது. அவன் பிரான்ஸ் போயிருக்கான். இப்போக்கோட டிராவலில் தான் இருக்கான். என் மெசேஜ் கூட இன்னும் அவன் பார்க்கல" என்று திரும்பிய ருது, அங்கு சிலையாக நின்றிருந்த ஷிவன்யாவை பார்த்து அதிர்வெல்லாம் இல்லை. இனி ஒவ்வொருத்தருக்கா உண்மை தெரிவது தானே சரியாக இருக்கும் என்று மட்டுமே நினைத்தான்.

அவன் பார்வை விலகாத தன்மையில் மற்ற இருவரும் என்னவென்று பார்த்து

"ஷிவா" என்று மெல்ல விளித்தார் அம்பிகா.

சுயம் திரும்பிய ஷிவா,

"அண்ணா" என்று ஓடி வந்து ருதுவை இறுகக் கட்டிக்கொண்டாள்.

"உங்களுக்கு நான் இருக்கேன் டார்லிங். தேஷ் நான் பார்த்துப்பேன்" என்று அரற்றினாள். தேம்பலோடு.

"பார்த்துக்கணுமே. அப்பாவிட அத்தை உறவு முக்கியமானதாயிற்றே" என்று சிரிக்க முடியாது இதழ் விரித்தான். அழும் தங்கையை தேற்றிட.

"அத்தை தேஷ்ஷை ரொம்பவே நல்லா பார்த்துப்பேன்" என்றாள்.

அவளின் உச்சியில் உள்ளங்கை வைத்து அழுத்தினான் ருது. அவனுக்கு எதிர்பார்பற்ற இந்த மூவரின் அன்பும் மனதில் ஒருவித நிறைவை அளித்தது.

"நாளைக்கு உங்களுக்கு கல்யாணமா?"

"ம்."

"என்கிட்ட சொல்லவே இல்லை." கண்களை துடைத்துக்கொண்டு அவனிலிருந்து பிரிந்து கோபம் போல் வினவினாள்.

"எனக்கே இப்போ தான் தெரியும்" என்றான்.

"நான் ஓகே சொல்ல வேண்டாமா?"

நொடியில் சூழலின் இறுக்கத்தை தன் கேள்விகளால் மாற்றியிருந்தாள் ஷிவன்யா.

"அவன் கல்யாணம் பண்ணிக்க நீ ஏன் ஓகே சொல்லணும்?" அம்பிகா கேட்டார்.

"நாத்தனார் நான் சம்மதிக்காமல் உங்க மருமகள் வீட்டுக்குள் வந்திட முடியுமா?" என்று ஷிவன்யா கெத்தாகக் கேட்டிட,

"வாய் உனக்கு" என்று மகளின் கன்னத்தில் மெல்ல தட்டினார் வேங்கடம்.

அச்சமயம் வெங்கட்டிடமிருந்து அழைப்பு வர, பணியின் தீவிரம் புரிந்து, அழைப்பினை ஏற்றான்.

வெங்கட் என்ன கூறினானோ?

"இதை வருகிறேன்" என வேகமாக கிளம்பினான்.

"இந்நேரத்தில் எங்கப்பா?"

"கல்யாணம் பண்ணிக்கிட்டால் உன் அப்பாவை விடுறேன்னு சொல்லியிருந்தாலும், உண்மை குற்றவாளியை பிடிக்காமல் அவரை விட முடியாதேப்பா. என் வேலைக்கு எப்பவும் என்னால் துரோகம் செய்திட முடியாது" என்றவன், "காலையில் சரியான நேரத்துக்கு கிளம்பி இருங்க. வந்திடுறேன்" என்று புறப்பட்டிருந்தான்.

வீட்டிற்கு வந்த இமையாளுக்கு இந்த ருதுவை ஜீரணிக்கவே முடியவில்லை.

எப்படியொரு சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் என்று ஆற்ற முடியாது அழுகையில் கரைந்தாள்.

"அப்பா எங்கே?" எனக் கேட்ட தீபா தேற்றி, "அப்பா காலையில் வந்திடுவார்" என சொல்லி உறங்க வைத்தவளுக்கு தூக்கம் தூரம் சென்றது.

'காதலிக்கும் காலத்தில் இருந்த ருது இவனில்லை.' குமுறினாள். நெஞ்சோடு தன் காதல் தூரம் சென்றுவிட்டதை உணர்ந்தாள்.

தற்போது அவளுக்கிருக்கும் ஆறுதல், யாரோ ஒருவரை திருமணம் செய்து கொண்டு கொள்ளும் வதைக்கு பிடிக்கவில்லை ஏற்க முடியவில்லை என்றாலும், காதலித்தவனையே திருமணம் செய்து வதை கொள்வது கொஞ்சம் ஏற்க முடிந்தது.

'தன்னால் இன்னொருவரின் வாழ்வு கெடாது' என்பதே அவளுள் சிறு நிம்மதி.

அப்போதும் ருதுவை அடைய, தன் மனதிலிருக்கும் அவன் மீதான காதல், அவன் கேட்ட சூழலை சாதகாமக்கிக் கொண்டதோ என்று தன்னை குறித்தே வெட்கினாள்.

ருது விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னது மனதில் நிம்மதியை கொடுத்ததோ? தன் காதலை அடைய வழி கிடைத்ததென்று மனம் எண்ணிவிட்டதோ?

'நீ எப்படி சரி சொன்ன?' தன்னையே அறைந்து கொண்டாள். சொல்லி அழ இனியன் கூட அருகில் இல்லாது மொத்தமாக வலி சுமந்தாள்.

"ருது." அறை முழுக்க அவளின் கத்தல் நிரம்பியது.

'நீ இப்படித்தான் எனக்கு கிடைக்கணுமா? நான் உன்னை இந்த சூழலில் தான் சேரணுமா? நம் காதல் ஒன்னுமே இல்லையா?' அழுது அழுது தன்னை அறியாது உறங்கிப்போனாள்.

காலை விடிந்ததும், தீபா எழுப்பினார்.

"விடிஞ்சதும் அப்பாவை கூட்டி வரேன் சொன்னியே இமயா? விடிஞ்சிடுச்சே" என்றார் விழிகள் தேங்கி நின்ற கண்ணீரோடு.

"இதோ கிளம்புறேன் ம்மா" என்றவள் கஷ்டப்பட்டு கிளம்பித் தயாராகினாள்.

'அவனுக்கு அழைக்க வேண்டுமா? அப்படியென்றால் எந்த எண்ணுக்கு அழைப்பது?' தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

அப்போது அவளது வக்கீலிடமிருந்து அழைப்பு வர, இருந்த கடுப்பில் எடுக்காது விட்டாள். எடுத்திருந்தால் ருது செய்த காரியம் தெரிந்திருக்குமோ. அவனால் தன் தந்தை முழுதாக தன்மீது விழுந்த பழியிலிருந்து வெளிவந்து விட்டார் என்பது அறிந்திருக்குமோ? நடக்கவிருக்கும் பிடித்தமில்லா திருமணத்தை நிறுத்த ஒரு வாய்ப்பு கிட்டியிருக்குமோ? ஓரளவு ருதுவின் மனமும் புரிந்து கொண்டிருந்திருப்பாளோ?

அடுத்து புது எண்ணிலிருந்து அழைப்பு வர, அசூசையாக ஏற்று காதில் வைத்தாள்.

"கிளம்பிட்டியா?"

கேட்ட குரலுக்கு சொந்தக்காரனை கழுத்தை நெறித்துக் கொன்றுவிடலாமா என்று அக்கணம் எண்ணினாள்.

பதில் சொல்லாது அமைதியாக இருந்தாள்.

"வரும்போது அத்தையையும் கூட்டிட்டு வந்திடு" என்றான் ருது.

"முடியாது."

"அப்போ உன் அப்பாவும் வெளியில் வர முடியாது."

சுரேந்தரை வெளியில் கொண்டு வந்துவிட்டு அவளிடம் மிரட்டிக் கொண்டிருந்தான்.

"வந்து தொலைக்கிறேன்" என்றவள் கடுப்போடு அழைப்பைத் துண்டித்து,

"தனியா போக ஒரு மாதிரி இருக்கும்மா. நீங்களும் வாங்க" என்று அழைத்துச் சென்றாள்.

இருக்கும் மனநிலையில் தீபாவுக்கு செல்லும் பாதை... வந்து சேர்ந்த இடமெல்லாம் கருத்தில் பதியவில்லை.

இருவரும் வந்தபோது இருக்க வேண்டிய அனைவரும் இருந்தனர். தேஷ்ஷை தவிர்த்து. தேஷ்ஷின் முன்னால் இமையாளை தன் மனைவியாக, அவனுக்கு அன்னையாக நிறுத்தவே விருப்பம் கொண்டான்.

வேங்கடத்துடன் நின்று பேசிக்கொண்டிருந்த சுரேந்தரை ருதுவின் மீதான கோபத்தால் கவனிக்கத் தவறினாள் இமையாள்.

"வாம்மா..." என்று அம்பிகா இமையாளின் கரம் பற்ற, நேற்று பள்ளியில் தேஷ்ஷுடன் பார்த்திருந்ததால் சிரிக்க முடியாது சிரிப்பை உதிர்திருந்தாள்.

"ஹாய் அண்ணி" என்று முன் குதித்த ஷிவன்யாவை யாரென்று தெரியாது பார்த்தாள்.

"நான் டார்லிங்கோட தங்கச்சி" என்று ஷிவன்யா ருதுவை கைகாட்டினாள்.

'தங்கச்சியா? அக்கா மட்டும் தானே?' முதல் குழப்பம் ஆரம்பமாகியிருந்தது.

காதலிக்கும் காலத்தில் ருதுவின் சொந்தங்கள் தெரியுமே தவிர்த்து யாரையும் புகைப்படத்தில் கூட அவள் பார்த்தது இல்லை. அது தற்போது ருதுவுக்கு வசதியாகிவிட்டது. இல்லையென்றால் அவளுக்கு பல சந்தேகங்கள் எப்போதே வந்திருக்குமே!

"வாம்மா" என்று அருகில் வந்த வேங்கடம், "நான் ருது அப்பா" என்று பெயர் சொல்லிட, அவளுக்கு தலைவலிக்கும் போலானாது.

பெயரும் வேறெதுவோ சொன்ன நினைவாகத் தோன்றியது.

சற்று தள்ளி நின்று மகளையேதான் பார்த்திருந்தார் சுரேந்தர்.

காலை ருது பரபரப்பாக உண்மை குற்றவாளியையும், அவனுக்கு துணையாக நின்றது அவனது மாமா மாவட்ட ஆட்சியர் என்பதையும், எப்படி பணத்தை மோசடி செய்தனர் என்பதையும் தெளிவாய் கண்டறிந்து, மேஜிஸ்ட்ரேட்டர் இல்லத்திற்க்கே சென்று தெளிவான ஆதாரங்களோடு விளக்கி இருவரையும் அவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக சேர்த்து, சுரேந்தரின் மீது எவ்வித தவறுமில்லையென நிரூபித்து வெளியில் கொண்டு வந்திருந்தான்.

மாவட்ட ஆட்சியரின் உதவியின் மூலமாக தங்கள் நிறுவனம் தான் வங்கிக்கு மக்கள் செலுத்த வேண்டிய பணத்தை மோசடி செய்தோமென குற்றவாளியே நீதிபதி முன்பு ஒப்புக்கொள்ள சுரேந்தர் எளிதாக ருதுவால் வெளியில் வந்திருந்தார்.

சுரேந்தருக்கு ருதுவை பார்க்கும்போது, ஒருநாள் இரவில் தனக்காக அவன் மேற்கொண்ட முயற்சிகள் தான் கண்ணுக்குத் தெரிந்தது. அதற்கு இனியனின் நட்பு மட்டும் காரணமில்லையென வேங்கடம் வந்து சொல்லியதில் தெரிந்து கொண்டார்.

தன் மகளின் திருமணம் இப்படி நடப்பதில் அவருக்கும் உடன்பாடில்லை. இருப்பினும் ருதுவுக்காக, அவன் அனுபவித்த வேதனைகளுக்காக, தன் மகளும் ருதுவைத் தவிர வேறு யாருடனும் மகிழ்வாக வாழ்ந்திடமாட்டாள் என்பதற்காகவும் ஒப்புக்கொண்டு வந்திருந்தார்.

அடுத்து அனைவரும் உள்ளே செல்ல ருதுவுக்கு இனியன் அழைத்திருந்தான்.

காலை வரை இனியன் தகவலை பார்க்கவில்லை என்றதும், நண்பனிடம் சொல்லாது மணம் செய்ய மனம் இடகொடுக்கவில்லை என்பதால், மொத்தமாக சுரேந்தர் கைதானது தொடங்கி, இமையாளை தனக்கு பணிய வைத்தது வரை அனைத்தையும் குரல் பதிவு செய்து அனுப்பி வைத்திருந்தான் ருது. தற்போது அதனை கேட்டுவிட்டே படபடப்போடு இனியன் அழைத்தான்.

"டூ மினிட்ஸ்" என்று அவர்களை உள்ளே செல்ல சொல்லிய ருது அழைப்பை ஏற்று தள்ளி வந்தான்.

"கல்யாணம் முடிஞ்சிடுச்சா?" இனியன் அத்தனை இறுக்கமாகக் கேட்டிருந்தான்.

"இப்போ தான் ஸ்டார்ட் ஆகுது" என்றான் ருது.

"இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கலை ருது." அத்தனை மனத்தாங்கல் இனியனிடம்.

"என் நண்பனுக்கு என்னை புரியும்." அழுத்தமாக மொழிந்தான் ருது.

"நான் இமயாவுக்கு அண்ணனும் கூட டா" என்றான் இனியன்.

"சரி உனக்கு விருப்பமில்லைன்னா நான் நிறுத்திடுறேன்." ருது பட்டென்று சொல்லியிருந்தான்.

"அப்பா!"

"வெளியில் கொண்டு வந்துட்டேன். அக்யூஸ்ட் அரேஸ்ட் பண்ணியாச்சு. பணத்தை கொடுத்திடுறேன் சொல்லியிருக்கான். இனி அது அரசாங்கம் பொறுப்பு" என்றான்.

ருது காப்பாற்றிடுவான் தெரியும். அவரை மீட்டுவிட்டான் என்றதை அவனது வாய் வார்த்தையாகக் கேட்டதும் ஒரு ஆசுவாசம் இனியனிடம். அவனும் நினைத்ததும் வரும் தொலைவில் இல்லையே.

"இமையாவுக்கு தெரியுமா?"

"இன்னும் தெரியாது."

"எதுக்கு இந்த நாடகம்?"

"உனக்கே தெரியும்."

"ஆமாம் தெரியும்" என்று முணுமுணுத்த இனியன், "இமையாவையும் இதைவிட்டால் வேறெப்பவும் சம்மதிக்க வைக்க முடியாது" என்றான்.

"இப்போ நான் என்ன தான் பண்ணட்டும்?"

"டிசி சாருக்கு கோபம் வருதோ?" என நக்கலாகக் கேட்ட இனியன், "உன்னை தப்பா ப்ரொஜெக்ட் பண்ணி பண்றது தான் ஒரு மாதிரி இருக்கு" என்றான்.

"வேற வழியில்லை."

"நானில்லாமல் நடந்தால் ஓகேவா உனக்கு?"

"உன்னை யாரு இப்போ அங்கப்போக சொன்னது. இமையா திரும்ப சரின்னு வருவாள் எனக்குத் தோணல" என்றான் ருது.

.......... இனியன் அமைதியாக இருந்தான்.

"ஷிவாவை வீடியோ எடுத்து அனுப்பி வைக்க சொல்றேன்" என்ற ருதுவின் குரலில் இனியன் மெல்ல சிரித்துவிட்டான்.

இனியனின் அந்த சிரிப்பொலி ருதுவுக்கு போதுமானதாக இருந்தது.

"முடிச்சிட்டு கால் பன்றேன்" என ருது வைத்திட்டான்.

அங்கு இனியனுள்ளும் சொல்ல முடியாத ஒரு நிறைவு.

பதிவாளர் முன்பு தலை கவிழ்ந்து இமையாள் நின்றிருக்க... ருது அருகில் சென்று நின்றான்.

"புடவை கட்டி வந்திருக்கலாம்?"

ஓரவிழியாக அவனை முறைத்தவள், அவனது காக்கி உடையை சுட்டி,

"உங்க ட்ரெஸுக்கு என்னோடது பரவாயில்லை" என்று பற்களை கடித்திருந்தாள்.

காலை அவசர வழக்கென மேஜிஸ்திரேட்டர் வீட்டிற்கு சென்று சுரேந்தரை அழைத்துக்கொண்டு நேராக இங்கு வந்திருந்தான் ருது. அது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!

அங்கு என்ன நடக்கிறதென்று அப்போது தான் நிகழ் புரிந்து தீபா புரியாது பார்க்க, மறைந்து நின்றிருந்த சுரேந்தர் தீபாவின் அருகில் வந்து கையை அழுத்தமாக பிடித்து நின்றார்.

"என்னங்க!"

சுரேந்தர் வாயில் விரல் வைத்து காண்பித்து நடப்பதை பாரென கண் காண்பித்தார்.

ஷிவாவை அருகில் அழைத்த ருது,

"வீடியோ கேப்ச்சர் பண்ணு. உன் ஆளுக்கு அனுப்பனுமாம்" என்றான். ஷிவா அவனை அதிர்ந்து பார்க்க, இரவே இனியனைப்பற்றி அவன் சொல்லியதில் ஒரு அனுமானம் அவளுக்கு இருந்திருக்க, தற்போது உண்மை என்பது புரிந்து மகிழ்வு கொண்டாள்.

தன் காதலைப்பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் என நகர்ந்து நின்று ருது சொன்னதை செய்தாள்.

ருத்விக் ❤️ இமையாள். கையெழுத்திட்டு முடிய, ருதுவுக்கு சாட்சியாக வேங்கடமும், அம்பிகாவும் கையெழுதிட்டனர்.

"பொண்ணுக்கு யார் போடுறது?" பதிவாளர் கேட்டிட,

"வாங்க மாமா, அத்தை" என்று அழைத்தான் ருது.

யாரென அப்போதுதான் இமையாள் தலையை உயர்த்தி பார்த்தாள்.

"அப்பா" என்று அருகில் வந்துவிட்ட அவரின் கையை பிடித்து "என்னை மன்னிச்சிடுங்கப்பா" என்றாள்.

மகளின் கண்ணீரை துடைத்தவர் மேற்கொண்டு எதுவும் சொல்லாது பதிவேட்டில் மனைவியுடன் கையெழுத்திட்டார்.

'அப்பா இதை ஏற்றுக்கொண்டாரா?' இமையாளினுள் அதிர்வு. அவரின் கையெழுத்து அவரது சம்மதத்தை உணர்த்திட, அவளுக்கு அதுவே அப்போதைக்கு நிம்மதியை கொடுத்தது.

ருதுவிடம் சத்தமின்றி "தேன்க்ஸ்" என்றாள்.

"சொன்னதை செய்தேன்." அவன் முடித்துக்கொண்டான். அவனது பதிலில் அவளுக்குத்தான் அவனை கடித்து வைக்க வேண்டுமெனத் தோன்றியது.

அடுத்து கோவிலுக்கு சென்று தாலி கட்டி அனைவரும் சுரேந்தரின் இல்லம் வந்திருந்தனர்.

நேசித்தவன். மனதில் வைத்து காதலித்தவன். உயிரில் சுமந்தவன். அவனுக்காக அவள் கொண்ட காத்திருப்பு, தவிப்பு, ஏக்கம் யாவும் இன்று கரை சேர்ந்தது. ஏனோ அவளிடம் நடந்த நிகழ்வில் பிடித்தமின்மை. ருதுவால் உணர முடிந்தது.

காதலித்த நாட்களில் பக்கம் பக்கம் நெருங்கி நின்ற தருணங்கள் கூட மிகக் குறைவு. அப்போது மனதால் இருந்த நெருக்கம் தற்போது கணவன் மனைவி ஆகிய பின்னரும் கொஞ்சமும் இல்லை.

பிடித்தவனாகவே இருந்தாலும் பிடிக்காமல் நடந்த இத்திருமணப் பந்தத்தில் ருதுவோடு அவனது அன்போடு பொருந்திப்போவாளா இமையாள்? இனி அனைத்தும் இருவரின் காதலின் கரங்களில்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 27

ருத்விக்...

பல வருடங்களுக்குப் பின்னர் நிதானமாக மூச்சு விடுகிறான். மனதில் இதம் உணர்கிறான். உடல் லேசாக மிதப்பதை தன் இதயத்தின் துள்ளலில் அறிகிறான்.

இனி எதுவும் வேண்டாம். தனது கைகளில் தனது உலகம் வந்துவிட்டதாக ஆர்பரிக்கிறான். ருதுவின் மகிழ்வு அவனது கண்களில் ஒளிர்ந்தது. முகம் ஒளி கூடி தெரிந்தது.

அவனுக்கு எதிர்பதமாய் அவனருகில் கடுகடுப்போடு அமர்ந்திருந்தாள் இமையாள்.

'சார்பதிவாளர் அலுவலகம் வருவதற்கு முன்பே உண்மை குற்றவாளியை கண்டறிந்திருக்கிறான். தந்தையை வெளியில் கொண்டு வந்திருக்கிறான். பின்னரும் கூட தன்னை மிரட்டி எதற்கு திருமணம்?' தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவே நினைத்து மனதில் குமைந்தாள்.

பல வருடங்களுக்கு முன்பு அவன் விட்டுச்சென்ற போதுகூட தன்னை ஏமாற்றிவிட்டான் என அவள் நினைக்கவில்லை. ஆனால் இக்கணம், இச்சூழல், அவனுக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னை பணிய வைத்து ஏமாற்றிவிட்டதாகவே கருதினாள்.

"எதுக்கு உர்ருன்னு இருக்க?" அவள் பக்கம் சரிந்து மெல்லொளியில் வினவினான்.

அவனை முறைக்கு மட்டுமே செய்தாள்.

"முறைச்சிக்கிட்டே இருக்கப்போறியா?"

"எதுக்கு உங்களை நீங்களே தப்பா காட்டிக்க ட்ரை பன்றிங்க?" என்ற அவளின் புரிதலான கேள்வியில் உள்ளுக்குள் தோன்றிய அதிர்வை வெளிக்காட்டாது அழகாய் மறைத்தான்.

"நான் இதுதான்" என்றான்.

"இப்பவும் உங்களை எனக்கு புரியும்" என்ற அவளின் காதலில் தற்போது வெளிப்படையாகவே முகத்தில் மலைப்பின் உணர்வை பிரதிபலித்தான்.

"உங்களுக்கு கல்யாணமாகிடுச்சு. பையன் இருக்கான். டிவோர்ஸ் ஆகிடுச்சு. எல்லாம் ஓகே. பட், இப்படி கார்னர் செய்து என்னை கல்யாணம் பண்ணிக்கணும் என்ன இருக்கு?" எனக் கேட்டாள்.

"என்னையே நினைச்சு எனக்காகக் காத்திருந்தியே. வாழ்க்கை கொடுப்போமேன்னு தான்" என்றவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.

"லேஷஸ் விரியும் போது இன்னும் அழகா இருக்கே என்னோட லேஷஸ்" என்றான் கண்களில் மின்னலைக் காட்டி. இமையாள் சடுதியில் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

"ம்க்கும் ரொம்பத்தான்" என்றவன், வேங்கடம் கண்காட்டிட, சுரேந்தரிடம் தனியாகப் பேச எழுந்து சென்றான்.

இருவரும் தோட்டத்திற்கு வந்திருந்தனர்.

"சாரி மாமா." எடுத்ததும் தன் மன்னிப்பை ருது கேட்டிட, அவனின் கரங்களை அழுத்தமாகப் பற்றி தட்டிக் கொடுத்தார் சுரேந்தர்.

"உங்களோட சூழல் எனக்கு புரியுது மாப்பிள்ளை. உங்க மேல எனக்கு கொஞ்சமும் வருத்தமில்லை. திரு எல்லாம் சொல்லும்போது உங்களுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாமேன்னு வருத்தமாகத்தான் இருந்தது. காதலில் உங்களோட எண்ணமும் புரியுது. உங்க காதலும்" என்றவர், "எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. இமையாளும் நீங்களும் சந்தோஷமா வாழ்ந்தால் அதுவே போதும்" எனக்கு என்று ருதுவின் தோளில் தட்டிக் கொடுத்தார்.

தன்னை முழுதாய் புரிந்துகொள்ளும் உறவுகள் அமைவது எத்தனை பெரும் பாக்கியம். ருது மனதால் நெகிழ்ந்தான்.

"தேன்க்ஸ் மாமா" என்றவனை எதிர்பாராத வகையில் அணைத்து, "நாங்க இருக்கோம் மாப்பிள்ளை. இனியாவது சந்தோஷமா இருங்க" எனசொல்லி விடுத்தார்.

இதனை சற்று தொலைவிலிருந்து பார்த்த இமையாள் ஆச்சரியம் கொண்டாள்.

'என்னைத்தவிர எல்லாருக்கும் நல்லவன் தான்' என்று முணுமுணுத்தாள்.

பேசி முடித்து சுரேந்தருடன் புன்னகை முகமாக ருது உள்ளே வர உதட்டை சுளித்து பார்வையால் வெட்டியவளாக தனத்தறைக்குள் புகுந்து கொண்டாள் இமையாள்.

'ம்ம்ம்... இனி தான் பெரிய பெரிய டாஸ்க் இருக்குடா உனக்கு.' மனதில் புலம்பியவனாக, இருக்கையில் அமர்ந்தான்.

தீபாவிற்கு மகளின் திருமணம் இப்படியொரு நிலையில் ஏன் என்று குழப்பம் இருந்தாலும், கணவரின் பார்வைக்கு கட்டுப்பட்டு முழுமனதாக ருதுவை மருமகனாக ஏற்றிருந்தார்.

சுரேந்தரும், வேங்கடமும் பேசிக்கொண்டிருக்க... அம்பிகா தீபாவைத்தேடி சமயலறைக்குச் சென்றார்.

"என்ன டார்லிங் தனியா உட்கார்ந்திருக்கீங்க. உங்க ஆளோட போய் ரொமான்ஸ் பண்ணலாமே" என்று ருதுவுக்கு சற்று தள்ளி நின்று சொல்லிய ஷிவா, ருது அடிக்க வருவதைப்போல் காட்டிய பாவனையில் அம்பிகாவிடம் ஓடிவிட்டாள்.

அம்பிகா நடந்த திருமணத்திற்கான காரணத்தை விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார். தீபாவின் முகம் கனத்து விட்டது.

"அண்ணனே உங்ககிட்ட சொல்லியிருப்பார். இருந்தாலும் நாங்களே சொல்றது தானே சரியா இருக்கும்" என்ற அம்பிகா, "இன்னைக்குத்தான் அவன் முகத்தில் உண்மையான சந்தோஷத்தை பார்க்கிறேன்" என்றார்.

பனித்த கண்களை தீபா சேலை தலைப்பால் ஒற்றிக்கொண்டவாறே,

"அவங்க ரொம்பவே நல்லாயிருப்பாங்க சம்மந்தி" என்றார் தீபா.

"இன்னைக்கு அண்ணா, அண்ணி கல்யாணம் நடந்திருக்கு. இப்படி ஆளாளுக்கு சோக கீதம் வாசிச்சிட்டு இருக்கீங்களே" என்று அவர்களிடம் கேட்டபடி வந்த ஷிவா, "விருந்து செய்யலையா அத்தை?" எனக்கேட்டாள் தீபாவிடம்.

"எப்பவும் சாப்பிடுறதுலே இரு" என்று அம்பிகா மகளை கடிய, "சோறு ரொம்பவே முக்கியம் மம்மி. சோறு தானே எல்லாம்" என்று ஷிவா சொல்லிய பாவனையில் தீபா சத்தமாக சிரித்துவிட்டார்.

அவர்களின் சிரிப்பின் ஒலி கேட்ட ருது, 'சகஜமாக்கிட்டாள்' என்று தங்கையை மெச்சிக்கொண்டான்.

ருது வீட்டை பார்வையால் அளந்து கொண்டிருக்க...

"ஒரு நிமிஷம் டா" என்று வேங்கடத்திடம் சொல்லிவிட்டு இமையளின் அறைக்கு சென்றார் சுரேந்தர்.

மெத்தையில் அமர்ந்தபடி நகத்தினை கடித்துக் கொண்டிருந்தாள் இமையாள்.

கதவினை தட்டிவிட்டு உள்ளே சென்றவர்,

"வாங்கப்பா" என்றவளின் அருகில் அமர்ந்து தலையை வருடினார்.

"நீங்க இந்த மேரேஜ்ஜை ஏத்துக்கிட்டிங்களாப்பா?" எதிர்பார்ப்பாய் கேட்டிருந்தாள்.

"நீ அவரோட மட்டும் தான் சந்தோஷமா இருப்பாய் இமயா" என்றவர், "நீங்க ரெண்டு பேரும் கையெழுத்து போடுவதற்கு முன்பே ருதுவை என் பொண்ணோட கணவனா, என்னோட மருமகனா நான் ஏத்துக்கிட்டேன்" என்றார்.

'தன்னைப்போல் தன் தந்தையையும் ஒப்புக்கொள்ள வைத்திட ஏதும் கார்னர் செய்திருப்பானோ?' என எண்ணியவள்,

"உங்களை காப்பாற்றினாருன்னு ஏத்துகிட்டிங்களாப்பா?" எனக் கேட்டிருந்தாள். முகத்திலும் வார்த்தையிலும் அத்தனை சூடு.

மெல்ல சிரித்த சுரேந்தர்,

"எந்தவொரு சூழலிலும் வார்த்தையை மட்டும் விட்டுடாதே இமயா. ருதுவோட வாழ்வில் உனக்குத் தெரியாத பக்கங்கள் நிறைய இருக்கு..." என்று இடைவிட்டவர், "இருக்கலாம்... இப்போ கோபத்தில் இருந்தாலும், ஒருநாள் நீங்க நார்மலாகி சந்தோஷமா வாழும் போது பேசிய வார்த்தைகள் இடைவெளியை உண்டாக்கும்" என்றார்.

இமையாள் புரியாது பார்த்தாள்.

"உனக்கு விருப்பமிருந்து பண்ணிக்கிட்டியோ, இல்லை பிடிக்காமல் பண்ணிக்கிட்டியோ? ஆனால், அவர் மீது வெறுப்பில்லைன்னு மட்டும் தெரியுது. அதுக்காக கல்யாணமாகிடுச்சேன்னு அவரோட சந்தோஷமா வாழுன்னு நான் சொல்லலை. உனக்கே அவர் இல்லைன்னா நீயில்லைன்னு தெரிஞ்சிருக்கு. அதான் அவர் எதையோ காரணம் காட்டி கேட்கவும் நீயும் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்ட. எம் பொண்ணை விருப்பமில்லாம எதையும் செய்ய வைக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். உன்னோட பழைய ருதுவா மட்டும் பாரு. உனக்கே எல்லாம் தெரியவரும். அவருக்கு எந்தவொரு கஷ்டத்தையும் நீ கொடுத்துடாதே" என்றார்.

"எப்படிப்பா? அவருக்கு இது செகண்ட் மேரேஜ். இந்த கல்யாணம் நடக்காமல் இருந்திருந்தால், அவரோட காதலாவது என் மனசில் நிலைத்து நின்னிருக்கும். இப்போ... எனக்கு ஏத்துக்கவே முடியலப்பா" என்ற மகளை வாஞ்சையாக பார்த்த சுரேந்தர்,

"உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்லடா! அந்த நம்பிக்கையோடு வாழு. டிவோர்ஸ் ஆகிருச்சு சொன்னாரா? அவருக்கு நீ வாழ்க்கை கொடுத்திருக்கிறதா நினைச்சிக்கோ" என்றதோடு, "அவர் உன்கிட்ட என்னை வைத்து டிமாண்ட் பண்ணாமல், இப்படியொரு சூழலே உருவாகாமல், அவருக்கு டிவோர்ஸ் ஆனது உனக்குத் தெரிந்திருந்தால் என்ன பண்ணியிருப்ப?" எனக் கேட்டார்.

"ப்பா..." தடுமாறினாள்.

"நிச்சயம் அவரையும், அவர் குழந்தையையும் நீயா சென்று ஏத்துக்கிட்டிருந்திருப்ப. உன்னால் ருது கஷ்டப்படுவதை பார்த்துக்கிட்டு சும்மா இருந்திருக்கமாட்ட... ரைட்?" என்றார்.

இமையாள் எந்த சூழலிலும் ருதுவின் மீதான காதலை மட்டும் விடவில்லையே! அப்படியிருக்கும்போது, அவனை தனித்து தவித்து நிற்க விட்டிருப்பாளா என்ன? ருதுவே மறுத்திருந்தாலும் அவனை ஏற்றுக்கொண்டிருப்பாளே! அவளின் அத்தகைய காதலையே சுரேந்தர் தற்போது மகளுக்கு உணர்த்திட முயன்றார். அவளும் உணர்ந்து கொண்டாளோ?

மெல்ல ஆமென்பதைப்போல் தலையசைத்தாள்.

"குட்" என்று கன்னம் தட்டியவர், "ருது உன்னை கல்யாணம் பண்ணிகிட்டது அவரோட காதலுக்காகத்தான். உன்னை சம்மதிக்க வைக்க அவருக்கும் வெறுவழி தெரியல" எனக்கூறி, "கோபத்தில் சந்தோஷத்தை தொலைச்சிடாதடா" என்றார்.

"இப்போ நான் என்ன பண்ணனும் ப்பா?"

"எப்படி வேணாலும் நடந்திருக்கலாம். ஆனால் என் பொண்ணு நீ ரொம்பவே சந்தோஷமா வாழனும் டா" என்றார்.

சுரேந்தரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

சில நிமிடங்கள் மகளின் தோளினைத் தட்டிக்கொடுத்தவர்,

"உனக்கு தேவையான தின்க்ஸ் பேக் பண்ணிக்கோடா! அதுக்கு முன்னர், ருதுவை உன் அறைக்கு கூப்பிடு" என எழுந்து சென்றார்.

சுரேந்தர் சொல்லியதில் என்ன புரிந்ததோ அவளுக்கு, "உன் காதலை மட்டும் பார்" என்று சொல்லியது விளங்கியது.

ருதுவை அவளது ருதுவாக மட்டும் பார்க்க வேண்டுமென முடிவெடுத்தாள். கடந்து சென்றவை என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நிகழ் மற்றும் வரும் காலத்தை மட்டும் பார்ப்போம் என மனதில் தீர்மானித்தவளாக, எழுந்து வந்து ருதுவின் அருகில் நின்றாள்.

அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவன் அரவம் உணர்ந்து ஏறிட,

"வாங்க" என்று சென்றாள்.

'மாமா அட்வைஸ் பண்ணியிருப்பார் போல' என நினைத்தவன், அவள் பின்னால் சென்றான்.

"இது தான் லேஷஸ் ரூம்மா?" எனக் கேட்டுக்கொண்டே உள் நுழைந்தவன் பார்வையால் சுற்றி அலசினான்.

"நாட் பேட்" என மெத்தையில் அமர்ந்தவன், "ரூம் நல்ல நீட் அண்ட் க்ளீனாவே வச்சிருக்க" என்றான்.

"சும்மா என்னை சீண்ட வேண்டாம். நானே நார்மலா இருக்கலாம் நினைக்கிறேன்" என்று வேகமாக சொல்லியவள், "அதுக்காக உங்களை இன்னும் லவ் பண்றன்னு நினைச்சிக்காதீங்க. இனி எப்பவும் ஐ ஹேட் யூ" தான் என்று திரும்பி வார்ட்ரோபினை குடைய ஆரம்பித்தாள்.

"ஆஹான்..." என்றவன், "பட், நான் எப்பவும் லவ் யூ தான்" என்றான் படு கூலாக.

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என்று முணுமுணுத்தாள். ருது சத்தமின்றி சிரித்துக் கொண்டான்

அந்நேரம் இமையாளுக்கு இனியனிடமிருந்து காணொளி அழைப்பு வந்தது. கட்டிலில் ருதுவுக்கு அருகிலிருந்த அலைப்பேசி சைலன்டில் இருந்திடவே ஒளிர மட்டுமே செய்திட, ருது ஏற்றிருந்தான்.

"ஹாய் டா மச்சான்!" உற்சாகமாகக் கூவினான்.

"என்னடா ரொம்ப சந்தோஷமா இருக்கபோல. அதுக்குள்ள இமயா மலை இறங்கிட்டாளா? அவள் மொபைல் நீ அட்டெண்ட் பன்ற?" என கேட்டு தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டான் இனியன்.

ருது மச்சான் என்று கத்தியதிலே திரும்பி பார்த்திருந்த இமையாள் இனியனின் வார்த்தைகளில் ருது பதில் சொல்லும் முன்பு, அலைபேசியை வேகமாக பறித்திருந்தாள்.

"பாப்பா..." இனியன் திருத்திருத்தான்.

"நீங்களும் என்கிட்ட மறைக்க ஆரம்பிச்சிட்டிங்களா? எப்போலேர்ந்து உங்க ஃபிரண்ட்கிட்ட பேச ஆரம்பிச்சிங்க. எல்லாம் திருட்டு கோட்டு" என்றவள், "நேரில் பார்த்தால் அறையனும் சொன்னீங்களே! அறைஞ்சீங்களா?" என இனியனிடம் கேட்டாள். ருதுவை பார்த்துக்கொண்டே!

'அய்யோ இவள் அவன்கிட்ட கோர்த்துவிட்டு எனக்கு அறை வாங்கி கொடுத்திடுவாள் போலவே' என்று இனியன் முழிக்க...

"அப்போ உங்களுக்கும் நடந்த மேரேஜ்ஜில் கூட்டிருக்குல?" என மெல்லிய விசும்பலோடு இமையாள் கேட்டிட...

"டேய் இமயா... அது" என்ன சொல்வதென்று இனியன் தடுமாறினான்.

"போனை வைடா" என்று இனியனிடம் கத்திவிட்டு, அவளிடமிருந்து பிடுங்கி அலைபேசியை அணைத்தான் ருது.

"இப்போ என்ன இனியன் என்கிட்ட பேசியதில் உனக்கு ஏதும் பிரச்சினையா?" எனக் கேட்ட ருது, "கல்யாணத்தை பொறுத்தவரை அவனுக்கு எதுவும் தெரியாது. உன் கோபத்தை அவன்கிட்ட காட்டாதே! உன்னை கார்னர் பண்ணிட்டேன்னு பழிவாங்கனும் தோணுதா? என்ன தோணுதோ என்கிட்ட மட்டும் காட்டு" என்றிருந்தான்.

'இந்த முகத்தை பார்த்து நாங்க பழிவாங்கிட்டாலும்' என்று முனகிய இமையாள், "நல்லா பழிவாங்குறேன் இருங்க" என்றவளாக தனக்குத் தேவையான உடைகளையும், பெட்டியையும் எடுத்து அவன் முன் வைத்தாள்.

அவளது முனகளில் அவன் இதயம் சில்லென்று குளிர்ந்தது. அதனை அவளுக்கு மறைத்தவனாக நின்றிருந்தவன், அவள் எடுத்து வைத்தை பார்த்து என்னவென்று புருவம் உயர்த்தினான்.

"பழிவாங்குறேன்" என்ற இமையாள், "உங்க வீட்டுக்கு கொண்டுப்போகனும்... ஒழுங்கா மடித்து அடுக்கி வையுங்க" என மெத்தையில் கால்நீட்டி பின்னால் சாய்ந்து அமர்ந்தாள்.

"எதே" என்றவன், "யூனிபார்மில் இருக்கேன் டி" என்றான்.

"அதுக்கு... பொண்டாட்டி சொல்ற வேலை செய்யக்கூடாதுன்னு ஏதும் ரூல் இருக்கா?" என்று வினவினாள் காலினை ஆட்டிக்கொண்டு.

இமையாள் பொண்டாட்டி என்பதை தன்னைப்போல் சொல்லியிருக்க, ருதுவிற்கு நெஞ்சமெல்லாம் நிறைந்துவிட்டது.

அவ்வார்த்தை இயல்பாய் வருகிறதென்றால் இன்னமும் அவன் மீதான காதல் அவளிடத்தில் குறையவில்லை என்று தானே அர்த்தம்.

உல்லாச மனதோடு உடைகளை அடுக்க ஆரம்பித்தான்.

ருதுவை முறைத்துக் கொண்டிருந்தவளின் பார்வை எப்போது ரசனையை தத்தெடுத்ததோ, அவனின் முகத்தை அணு அணுவாய் உள்வாங்கினாள்.

"மீசை கொஞ்சம் ஷார்ப் பண்ணலாம்" என்றாள்.

"பண்ணிடலாம்" என்றவன் அவளை பார்த்து ஒற்றை கண்ணடிக்க, அவளிடம் மாற்றமில்லை.

அவள் நிகழ் உலகில் இல்லை என்பது புரிந்தவன்,

"லவ் யூ டி" என்றிட, அவளும் "லவ் யூ ருது" என்றிருந்தாள்.

அடுத்த நொடியே ஒரு திடுக்கிடலுடன் நிமிர்ந்து அமர்ந்தவள்,

"என்ன சொன்னீங்க?" எனக் கேட்டாள்.

"நான் எதுவும் சொல்லலையே" என்று தோள்களை உயர்த்தி இறக்கியவன், "நீ சொன்ன வேலையை எவ்வளவு கஷ்டப்பட்டு செய்திட்டு இருக்கேன். வேணுன்னே சண்டைக்கு வர" என்று பொய்யாய் ஆதங்கப்பட்டான்.

"ஆமாம்... ஆமாம்... இது ரொம்ப கஷ்டமான வேலை தான்" என்றவள், "நீங்க ஏதோ சொன்னீங்க" என்றாள்.

"நான் சொல்லியிருந்தா உனக்கு கேட்டிருக்கணுமே. பக்கத்தில் தானே இருக்கேன்" என்றவனுள் அவளின் குழம்பிய முகம் கண்டு அவ்வளவு சிரிப்பு. இதழ் கடித்து அடக்கினான்.

"ஸ்டேஷன் போகலையா?"

"உன்னை நம்ம வீட்டில் விட்டுட்டு அவசரம்ன்னா போகணும்" என்றவன், "நான் உன் பக்கத்தில் இருப்பது கஷ்டமா இருக்கா?" எனக் கேட்டிருந்தான்.

நொடியில் அவளின் முகம் சுருங்கி விட்டது.

"நான் ஏதோ சும்மா..." என்று அவள் முடிப்பதற்குள்,

"உனக்கு பிடிக்காத கல்யாணம். சோ, என்னோட உனக்கு கஷ்டமாவே இருந்தாலும் நான் உன் முன்னாடியே தான் இருப்பேன்" என்று குறும்பாய் சிரித்தான்.

இமையாள் பற்களைக் கடித்து, அவனின் கழுத்தை நெறிப்பதுபோல் கைகளை கொண்டு செல்ல...

"இமயா" என்று அழைத்திருந்தார் தீபா.

"உங்களை அப்புறம் கவனிச்சிக்கிறேன்" என்று அவள் எழுந்து செல்ல...

"நல்லா கவனிச்சிக்கோ" என்று அவளின் முறைப்பை பரிசாக பெற்றிருந்தான்.

தீபா மறுக்க மறுக்க அம்பிகாவும், ஷிவாவும் உதவி செய்திருக்க குறுகிய நேரத்தில் விருந்தே ஏற்பாடாகியிருந்தது.

அனைவரும் ஒன்றாக உண்டு முடிக்க, நல்ல நேரத்தில் மகளை ருதுவுடன் அழைத்துச் சென்றனர் வேங்கடம் மற்றும் அம்பிகா.

வீட்டிற்கு வந்ததும் தான் இமையாள் தேஷ்ஷின் நினைவு வந்தவளாக,

"உங்க பையன் எங்கே?" என வேண்டுமென்றே கேட்டாள். அவனை வெறுபெற்றுவதற்காக மட்டுமே உணக்கி பையன் எனக் குறிப்பிட்டாள்.

அப்போதுதான் அவளை தங்களின் அறைக்கு அழைத்து வந்திருந்தான். அவள் அவ்வாறு கேட்டதும் ஒரு கணம் சினம் கொண்டு அவளை அழுத்தமாக ஏறிட்டவன்,

"நம்ம பையன்" என்றான். பார்வையில் அத்தனை கூர்மையை தேக்கி, வார்த்தையில் அடர்த்தியைக் கூட்டி.

இமையாள் வாய் திறந்து அவனுக்கு பதில் கொடுக்கவில்லை.

ஆனால் மனதில்,

'நீங்க அப்பான்னா... நான் தானே அம்மா' என சொல்லியிருந்தாள்.
 
Status
Not open for further replies.
Top