ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரமே தூரமாய்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 19

நேற்று தன்னை சிறு பார்வைகூட பார்த்திடாது, யாரோப்போல் விறைத்துச் சென்றவன், இன்று தன்வழியை மறித்து முன்னே நிற்பதை நம்ப முடியாது பார்த்தாள் இமையாள்.

அவளின் இமைகள் புருவம் தொட்டிருந்தது.

'இப்படி பார்த்தே சாய்த்திடுவாள்' என்று மனதில் கிறங்கிய ருது, வண்டியிலிருந்து கீழே இறங்கிட, இமையாள் தன் அதிர்வை மறைத்துக்கொண்டு முறைத்து பார்த்தாள்.

'தேறிட்டாள்.' பக்கம் சென்று நின்றான்.

மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளந்தான்.

அவன் விட்டுச்சென்ற அன்று நேர்ந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தின் தழும்பு வலது பக்க நெற்றியில் கீறலாய். தொட்டுப்பார்க்க எழுந்த கையினை சட்டென்று இறுக்கிக்கொண்டான்.

அவனது செயலில் அவளது இதழ்கள் தானாக பிரிந்தது.

நேற்று கண்ணாடி வைத்து தன் பார்வையை மறைத்தவன், இன்று அதனைக் கழட்டி பாக்கெட்டில் வைத்தவனாக அப்பட்டமாக பார்வையால் விழுங்கினான்.

அவனின் பார்வை ரசிப்பில், கோபத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியிருந்தது அவளுக்கு.

"யார் சார் நீங்க?" அவன் முன் தன்னுடைய தடுமாற்றத்தை மறைக்க கோபமாக கேள்வி தொடுத்தாள்.

'மேடம் ரிவெஞ் எடுக்குறீங்களோ?' நொடியில் யூகித்து, உள்ளுக்குள் அட்டகாசமாக சிரித்துக்கொண்டான்.

"நான் யாருன்னு தெரியாதா?"

"தெரியாது?"

"ஆஹான்..."

"தெரிய வைக்கணுமே!" என்ற ருது பக்கவாட்டக சென்று ஒரு கையை வண்டியின் முன்னும், ஒரு கையை வண்டியின் பின்னும் அவளை நடுவில் சிறைப்பிடுத்தவாறு ஊன்றி முகம் அருகே குனிய, அவளோ மிரட்சியாய், எதிர் பக்கம் உடலை சரித்தாள்.

'கிஸ் பண்ணப்போறாரோ?' என நினைத்த வெங்கட் சுற்றி யாரும் இருக்கின்றனரா என பார்வையை சுழலவிட்டான்.

அவர்களைத் தவிர்த்து சாலை வெறிச்சோடி இருந்தது. அது முக்கிய சாலையிலிருந்து இமையாள் பள்ளிக்கு செல்லும் கிளை சாலை என்பதால் நடமாட்டமின்றி இருந்தது.

'சார் செமயா லவ் பன்றாரே! நாமளும் ராதுகிட்ட இப்படி ட்ரை பண்ணனும்' என்று எண்ணிய வெங்கட், அடுத்த நொடியே, 'ஓடவிட்டு உதைப்பாள்' என சிரித்திருந்தான்.

ருது காதல் செய்து ஒன்றாக சுற்றிய நாட்களில் கூட இத்தனை நெருக்கம் காண்பித்தது இல்லை. இன்று அவனது செயல் புதியதாகத் தெரிய கோபத்தை முயன்று காண்பித்தாள்.

"ரொம்பத்தான்" என்ற ருது, "ஸ்டேண்ட் எடுத்துட்டு வண்டியை ஓட்டுடி" என தானே அதனை சரி செய்து, அவளது முன் நெற்றியில் தவழ்ந்த சிறு முடியை ஊதினான்.

அவள் மேலும் முறைக்க...

"என்னவாம்?" என்றான், மேலும் அவளை நெருங்கி. இன்னும் அவள் சரிய...

"கையெடுத்தேன் விழுந்திடுவ" என்றான்.

"யார் நீங்க? போலீஸை கூப்பிடுவேன்" என்றாள். வெங்கட் வேறு தங்களையே பார்த்திருக்க... உள்ளுக்குள் உதறலாக இருக்க என்ன சொல்வதென்று தெரியாது உளறினாள்.

அதில் அட்டகாசமாக சிரித்த ருது...

"உன் புருஷனே பெரிய போலீஸ் தான்'டி. இன்னைக்கு நியூஸ் ஏதும் பார்க்கலையோ?" எனக் கேட்டான்.

இம்முறை இமையாளுக்கு நிஜமாகவே அத்தனை கோபம் அவன் மீது எழுந்தது.

'கல்யாணம் ஆகிடுச்சுன்னு விட்டுட்டுப்போயிட்டு, இப்போ வந்து பொண்டாட்டியாம்? என்ன நினைச்சிட்டு இருக்கார்?' என்று மனதோடு பொறுமியவள், வெளியில் அப்பட்டமாக கண்கள் சிவக்கும் அளவுக்கு முறைத்து பார்த்தாள்.

"முறைக்காதடி! அந்த கண்ணுல கிஸ் பண்ணணும் தோணுது" என்றவனின் வண்டியின் முன்பக்கமிருந்த கையை தட்டிவிட்டவள், வேகமாக வண்டியை கிளப்பிக் கொண்டு, ருதுவை திரும்பித் திரும்பி பார்த்தவாறு சென்றாள்.

"நேரா பார்த்து ஓட்டுடி" என்றவனிடம் பல வருடங்களுக்குப் பின்னர் அப்படியொரு சிரிப்பு. மனம் நிறைந்த சந்தோஷமான சிரிப்பு. முகம் முழுக்க புன்னகையால் வசீகரத்தது.

துள்ளளோடு நடந்து வந்து வண்டியில் ஏறியவனின் கைகள் ஸ்டியரிங்கில் தாளமிட, வாய் ஏதோ பாடலை முணுமுணுத்தது.

"காலையில் வீட்டில் சண்டையாண்ணா? இங்க வந்து சமாதானம் படுத்துறீங்க?" ஆர்வம் தாங்காது வெங்கட் கேட்டுவிட்டான்.

"அவள் என் மாமனார் வீட்டில் இருக்காடா?" என்ற ருது லாவகமாக வண்டியை வளைத்து திருப்பி சாலையில் செலுத்தினான்.

"அவ்ளோ பெரிய சண்டையா?"

"அடேய் இன்னும் கல்யாணமே ஆகலடா?"

ருது சொல்லியதில் வெங்கட்டிடம் பேரதிர்ச்சி.

"அண்ணா... சார்!?"

"என்னடா?"

"அப்போ தேஷ்?"

"எல்லாம் இப்போவே சொல்லிட்டால் கதை முடிஞ்சிடும்டா. படிக்கிற ரீடர்ஸ்க்கு சஸ்பென்ஸ் வேணாமா?" எனக் கேட்ட ருதுவுக்கு இதில் தன்னைச் சார்ந்தவர்களை முக்கியமாக தேஷ்ஷையும், இமையாளையும் காயப்படுத்தாமல் எல்லாம் எப்படி சரி செய்வது எனும் கவலை தன்னைப்போல் எழுந்தது.

பள்ளிக்கு சென்ற பின்னரும் இமையாளால் நிலைக்கொள்ள முடியவில்லை.

'என்னவாம் இப்போ அவங்களுக்கு?' என மனதோடு கேட்டுக் கேட்டு பொறுமினாள். முகத்தில் ஒருவித சிடுசிடுப்பு தென்பட்டது.

'ரொம்ப பன்றாங்க இமயா! இவங்க வேணான்னா போவாங்க. வேணுன்னா வருவாங்க. நாம ஒன்னுமே ரியாக்ட் பண்ணக்கூடாதா? இப்போ தான் இன்னும் கோபம் கோபமா வருது' என்று புலம்பியவள், இனியனுக்கு அழைத்து தலையுமில்லாது வாலுமில்லாது ருதுவை திட்டி வைத்திட்டாள்.

'இப்போ யாரை திட்டுறாள் இவள்?' என்று குழம்பியபடி அப்போது தான் வந்து சேர்ந்தவன், காரிலிருந்து இறங்கி மருத்துவமனை கட்டிடம் நோக்கி நடக்க, எதிரே ஷிவன்யா தென்பட்டாள்.

இனியன் பார்த்தும் பார்க்காததைப்போல் கடக்க முயல...

"ஹலோ டாக்டர்" என்றழைத்து அவனிடம் ஓடி வந்தாள்.

"சொல்லுங்க?"

"தேன்க் யூ டாக்டர்."

"எதுக்கு?"

"ப்ரொஜெக்ட் முடிக்க ஹெல்ப் பண்ணதுக்கு."

"அதான் அப்போவே சொல்லிட்டிங்களே!"

"திரும்ப சொன்னால் கேட்டுக்கமாட்டிங்களா? இதை சாக்கு வச்சு பார்க்க வந்தால்... ரொம்பத்தான்." ஷிவன்யாவின் முணுமுணுப்பு அவனுக்கும் கேட்டது. எதிர்பக்கம் திரும்பி புன்னகைத்துக் கொண்டான்.

"உங்க அண்ணா தானே சிட்டி புது டிசி. மார்னிங் நியூஸ் பார்த்தேன். அவங்க ஓகே தானே?" என நண்பனின் நலம் அறிந்திட மூன்றாம் மனிதன் போல் வினவினான்.

"அதெல்லாம் அண்ணா பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுவாங்க. அவங்களுக்கு சின்ன கீறல் கூட விழாது" என்றாள்.

"ம்ம்ம்" என்ற இனியன், "எனக்கு கன்சல்டிங் டைம் ஆச்சு" என்று நகர்ந்திட, "டாக்டர்" என விளித்தவள், அவன் முன் சாக்லேட் ஒன்றை நீட்டினாள்.

"எதுக்கு?"

"உங்களுக்கு கொடுக்கணும் வாங்கிட்டு வந்துட்டேன். வாங்கிக்கமாட்டிங்களா?" அவள் முகம் சுருக்கி கேட்டிட...

"அடிக்கடி சாக்லெட் சாப்பிடுறது நல்லதில்லை" என்றான்.

"ரொம்பத்தான் டாக்டரா இருக்கீங்க" என்றவள், "ஷேர் பண்ணிக்கலாம். ஷேரிங் இஸ் அ கேரிங்" என்றிட,

"இப்போ என்ன நான் பாதி சாக்லெட் வாங்கிக்கணும். அவ்வளவுதானே? கொடு" என்றான். மறைக்கப்பட்ட மகிழ்வோடு.

ஷிவன்யா பாதி கொடுத்ததும் வாங்கி சுவைத்தவன், "ஹேப்பி?" என்றிட, அவளோ விரிந்த புன்னகையோடு "டபுள் ஹேப்பி" என்றாள்.

அந்நேரம்...

"ஷிவன்யா" என்று தியா அழைக்க...

"கரடி" என்று முனங்கியவளாக, "அப்புறம் பார்க்கலாம் டாக்டர்" என்று சென்றவள், சென்ற வேகத்திற்கு தியாவின் தலையில் ஓங்கிக் கொட்டியிருந்தாள்.

அதனை பார்த்த இனியன் இருக்குமிடம் மறந்து சத்தமிட்டு சிரித்திருந்தான்.

அவனது சிரிப்பில் ஷிவன்யா திரும்பிப் பார்த்த பின்னரே தன் சூழல் புரிந்து வேகமாக நகர்ந்திருந்தான்.

"உன் ஆளுக்கு ரொம்பத்தான்... நான் கொட்டு வாங்குனதுக்கு அப்படி சிரிக்கிறார்" என்று தியா தலையை தேய்த்தபடி புலம்பினாள்.

"விடு பேபி. என்ன இருந்தாலும் அவர் உனக்கு அண்ணா" என்று ஷிவன்யா சொல்ல...

"எதே அண்ணாவா? நான் சைட் கூட அடிக்கக் கூடாதாடி?" என்று தியா பாவம்போல் வினவ,

"கூடவே கூடாது" என்றாள் ஷிவன்யா.

"அழகா இருக்கார் பேபி. உன் லவ் அவர் கன்ஃபார்ம் பன்ற வரை என் கிரஷ் லிஸ்டில் வச்சிக்கிறனே?"

"நோ சான்ஸ் பேபி. அண்ணாவை கிரஷ் அது இதுன்னு... இதெல்லாம் நல்லாவா இருக்கு பேபி" என்று ஷிவன்யா முகத்தை சுளித்து கேட்டதில் தியா தலைக்குமேல் கரம் குவித்து கும்பிட்டே விட்டாள்.

_________________________________

ருது எத்தனைக்கு எத்தனை மகிழ்வோடு காவல் நிலையம் வந்து சேர்ந்தானோ... அந்த மகிழ்வு யாவும் வளாகத்தினுள் நின்றிருந்த வாகனத்தைக் கண்டதும் துணி கொண்டு துடைத்தார் போல் மறைந்தது.

"எப்படா விடியும்ன்னு காத்திருந்தார் போல?" என்று இறங்கிய வெங்கட், திடீரென மாறிவிட்ட ருதுவின் முகம் பார்த்து புரியாது நின்றான்.

வண்டியை நிறுத்திய பின்னரும் கீழிறங்காது ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்தபடி இருந்தான் ருது. நரம்புகள் புடைத்து கிளம்பி, கண்ணின் விழிப்படலம் செந்நிறம் பூண்டது.

"சார்... சார்..." வெங்கட் மறுபக்கம் வந்து அழைத்த அழைப்பிற்கு ருதுவிடம் பதிலில்லை.

"அண்ணா" என்று அவன் ருதுவின் கையை பிடித்து உலுக்க..

எதிலிருந்தோ மீள்பவன் போல, திடுக்கிட்டு தளர்ந்தான்.

"அண்ணா ஆர் யூ ஓகே?"

"ம்" என்று ஒலித்த ருதுவின் குரலே மாறுபட்டிருந்து.

"கைலாஷ் வந்திருக்கார் போல சார்" என்றான் வெங்கட்.

அதற்கும் ம் மட்டுமே மொழிந்த ருது வண்டியிலிருந்து இறங்கி நின்றான்.

'எப்பவா இருந்தாலும், நேருக்கு நேர்... இப்படி ஒரு சூழல் நிச்சயம் உண்டு. இன்னைக்கே ஃபேஸ் பண்ணிடு ருது' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு விறைத்து நின்றவன், முகத்தில் ஒருவித கடுமையை கொண்டு வந்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான்.

அலுவலகத்தின் மத்தியில் நடுநாயகமாக இருக்கையில் கால் மேல் காலிட்டு கைலாஷ் அமர்ந்திருக்க... மொத்த காவல்துறை பணியாளர்களும் நின்றிருந்தனர்.

உள்ளே நுழைந்த ருது தனக்கு சல்யூட் வைத்த பணியாளர்களுக்கு தலையசைப்பைக் கொடுத்து பார்வையை சுழலவிட்டான்.

ருது உள் வந்த நொடி முதல் கைலாஷின் பார்வை ருதுவின் மீதே. அப்பார்வையில் கோபமோ, வன்மமோ, பழிவாங்கலோ இல்லை. மாறாக அன்பு, கனிவு, பரிவு மிதமிஞ்சியது.

ருது வெறுப்பாக முகம் திருப்பிக் கொண்டான்.

"உங்களுக்கெல்லாம் வேலை இல்லையா? எதுக்கு இப்படி நின்னுட்டு இருக்கீங்க?" என்று தன் பணியாளர்களிடம் கடிந்து கொண்ட ருது, "மல்லிக்காக்க எப்.ஐ.ஆர் ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்து வையுங்க. கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போகணும்" என்றவன், "ஒருத்தனையும் விடாமல் வண்டியில் ஏத்துங்க" என்று கிருஷ்ணன் மற்றும் வெங்கட்டிடம் கூறினான்.

ருது தனது அறைக்கு கைலாஷ்ஷை தாண்டிக்கொண்டு தான் செல்ல வேண்டும். கைலாஷ் என்றொருவன் இருப்பதாகவே காட்டிக்கொள்ளாது ருது தன் நீண்ட எட்டுக்கள் வைத்து கடந்து சென்றான்.

அப்போதும் ருதுவை பார்க்கும் கைலாஷ்ஷின் பார்வையில் மாற்றமில்லை.

"என்ன அண்ணாத்த அவன் சீன் போட்டுக்கினு இருக்கான். நீ என்னம்மோ பார்ட்டியில் ஆட வந்த பொண்ணை பார்த்துகினு இருக்கமாறு ரசிச்சிக்கினு இருக்க" என்று செல்லுக்குள் இருந்து கத்தினான் காந்தா.

அவனுக்கு இரண்டு நாட்களாக காவல் நிலையத்தில் கம்பிகளுக்கு நடுவே இருக்கும் கடுப்பு. அத்தோடு இரவு தன்னை மீட்க வந்த கைலாஷ் எதுவுமே செய்யாது ருதுவின் சொல்லைக்கேட்டு திரும்பிச்சென்ற ஆத்திரம் வேறு.

முதல்முறை கைலாஷ்ஷின் மீது காந்தா அதிருப்தியில் இருந்தான்.

இதற்காகத்தான் ருது காய் நகர்த்துகிறானோ?

"சும்மா இரு காந்தா. டிசி சார் நல்லாவே ஆடுறார். எவ்வளவு தூரம் போகிறார் பார்ப்போம்." தன் நிலையில் மாற்றமில்லாது கைலாஷ் சொல்ல, காந்தா தன் கோபத்தை உள்ளங்கையில் காண்பித்தான். அவனால் கைலாஷ்ஷை பகைத்துக்கொள்ள முடியாது. முடிசூடா ராஜாவாக காந்தா பேட்டைக்குள் அவன் வலம் வர காரணமே கைலாஷ் தானே!

"கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டால் எல்லாம் முடிஞ்சுது அண்ணாத்த. நம்ம மேல இருக்கும் பயம் காணாமல் போயிடும்" என்றான் காந்தா.

"சும்மா என்னடா சலம்பிக்கிட்டே இருக்க. சங்கரும் உன்னை மாதிரி உள்ளதானே இருக்கான். எப்படி அமைதியா இருக்கான். கொஞ்சம் பொறுமையா இரு" என்று கைலாஷ் இருக்கையை விட்டு எழ, ருது தன்னுடைய அறையிலிருந்து தொப்பியை தலைக்கு மாட்டியவனாக வெளியில் வந்தான்.

"எல்லாரையும் வேனில் ஏத்தியாச்சா?"

"ரெண்டு வேன் சார். போதல" என்றான் வெங்கட்.

"இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?"

"காந்தா, எம்.எல்.ஏ சங்கர், அல்லக்கைங்க ஒரு நாலு சார்" என்ற வெங்கட் காந்தா முறைத்த முறைப்பில் ருதுவின் பக்கவாட்டகா தன்னை மறைத்துக் கொண்டான்.

"போட்டிருக்க காக்கிக்காவது கொஞ்சம் தைரியமா இருக்க மாதிரி காட்டிக்கலாம்" என்று வெங்கட்டிற்கு மட்டும் கேட்குமாறு கூறினான் ருது.

"இங்கிருந்து கோர்ட் எவ்வளவு தூரம்?"

"நாலு கிலோமீட்டர் சார்" என்று கிருஷ்ணன் சொல்லியதும்,

"அவ்வளவு தானா? அப்போ மீதியிருக்க ஆறு பேரையும் நடக்க வச்சு கூட்டி வாங்க" என்றான்.

"ஏய்!" காந்தா எகிறிட, அப்போதும் கைலாஷ் அமைதியாகத்தான் இருந்தார். அதில் கைலாஷ் தன்னை காப்பாற்றிடுவான் என்ற நம்பிக்கையை காந்தா இழந்திருந்தான்.

"என்ன அண்ணாத்தா இப்போவும் சும்மா பார்த்துக்கினு இருக்க?"

கட்சியே தன்னை கைவிட்ட பின்னர், சத்தமிட்டு மேலும் சிக்கிக்கொள்ளக் கூடாதென சங்கர் அமைதியாக இருந்தார். அந்த பொறுமை காந்தாவிடம் கொஞ்சமும் இல்லை. பல பேரை ஆட்டிவைத்தே பழக்கப்பட்டவனுக்கு அடங்கிப்போக முடியவில்லை.

"நான் என் வண்டியில் கூட்டிட்டு வரேன்." கைலாஷ் ருதுவிடம் வாய் திறந்தார்.

"யார் நீங்க?" என்று பார்வையில் எட்ட நிறுத்தி, அழுத்தமாக வினவிய ருது, "கம்பளையண்ட் கொடுக்க வந்தால் அந்த வேலையை மட்டும் பாருங்க" என்றதோடு, "சும்மா வரவங்க போறவங்களை உட்கார வைக்க இதென்ன சத்திரமா? என்னன்னு கேட்டு அனுப்புங்க" என்று மல்லிகாவிடம் கோபத்தைக் காட்டினான்.

"நடக்க முடியாது சொன்னால் ட்ரெஸ்ஸை கழட்டிடுங்க" என்ற ருதுவை காந்தாவால் முறைக்க மட்டுமே முடிந்தது.

"கிருஷ்ணன் அண்ணா உங்களால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா?"

"முட்டி வலி இருக்கு சார்" என்று அவர் சொல்ல, "வெங்கட், மல்லிகாக்கா ஆறு பேரையும் கூட்டிட்டு வந்திடுங்க" என்று வெளியேறினான்.

இரு வேன்களும் முன் செல்ல... அவர்களைத் தொடர்ந்து ருது ஜீப்பில் கிருஷ்ணன் உடன் பயணித்தான்.

"உங்களை அவன் ஒரு ஆளா கூட மதிக்கல!" காந்தா கைலாஷ்ஷை சீண்டிப்பார்த்தான். அதற்கும் அவர் அசரவில்லை.

ருது என்ன செய்தாலும் கைலாஷ்ஷின் பிரதிபலிப்பு மௌனமாக மட்டுமே இருக்கும். அவரே நினைத்தாலும் ருதுவை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்குள் முக்கியமான பந்தம் ஒன்றுள்ளதே. ருதுவே இல்லையென்றாலும், கைலாஷ் யாரென்றே தெரியாதென மறுத்தாலும் மாற்றிட முடியாது!

கையில் விலங்கினை மாட்டி அவர்களை நடத்தி அழைத்துச்செல்ல, மொத்த ஊடகமும் நேரலை செய்யத் துவங்கியிருந்தது.

"ஏன் மல்லிக்காக்க உண்மையாவே கிருஷ்ணன் அண்ணாக்கு முட்டி வலி இருக்குமா?" வெங்கட் தன்னுடன் நடந்து வரும் மல்லிகாவிடம் வினவினான்.

"இருக்கும் சார். வயசானவர் இல்லையா?"

"என்ன பெரிய வயசு. நாற்பத்தி அஞ்சு தானே?" என்ற வெங்கட், "இந்த காந்தாவுக்கு ஐம்பது இருக்கும். எம்.எல்.ஏ. வுக்கு இன்னும் ரெண்டு கூட இருக்கும். இவங்களுக்கெல்லாம் முட்டி வலிக்காதா?" என்ற வெங்கட்டினை முறைத்த மல்லிகா... "உங்ககிட்ட இருந்து ஓடக்கூட தெம்பில்லை சார். கொஞ்சம் அமைதியா வாங்க" என்றார்.

"யாருக்கு தண்டனைன்னே தெரியல." மல்லிகா புலம்பிட,

"ஆமா'ல" என்றான் வெங்கட்.

"ம்க்கும் இதுவே இப்போதான் புரியுதா?" மல்லிகா கேட்டதில் சங்கர் சிரித்திட, "கொஞ்சம் வேகமா நடங்க" என்று கடிந்தான் வெங்கட்.

"உன்னால இந்த நிலையிலும் எப்படிடா சிரிக்க முடியுது?" காந்தா ஆத்திரத்தின் உச்சத்தில் சங்கரிடம் கேட்டிருந்தான்.

"எப்படியிருந்தாலும் தண்டனை அனுபவிக்கப்போறோம் தெரிஞ்சுப்போச்சு. கைலாஷ் நமக்கு உதவப்போவதில்லை. சும்மா எதுக்கு சோக கீதம் வாசிக்கணும்" என்ற சங்கரின் பேச்சினை காந்தா அலசி ஆராய்ந்தான்.

சங்கர் சொல்வது உண்மை என்றே அவனுக்குத் தோன்றியது.

எப்போதும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் முதல் ஆளாக காப்பாற்ற ஓடி வரும் கைலாஷ் இம்முறை மிகுந்த பொறுமையாக இருப்பது சந்தேகமாக இருந்தது. அதுவும் கிட்டத்தட்ட பாதி பேட்டையே உள்ளிருக்கு. கைலாஷ்ஷின் செல்வ வாழ்க்கைக்கு அவர்கள் இன்றியமையாதவர்கள். அப்படியிருந்தும் கைலாஷ்ஷினை இந்த பொறுமை காந்தாவை யோசிக்க வைத்தது.

"என்ன யோசிக்கிற காந்தா?" எனக்கேட்ட சங்கர், "நீ இதுவரை கைலாஷ்ஷிற்காக செய்த தவறுக்கெல்லாம் ஆதாரம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் போலீசுக்கு வரவேற்பு கொடுக்க, ஒருத்தனை கொன்னு மாட்டினியே அதுக்கானது, போதைப்பொருள் விற்பதுக்கானதுன்னு பக்கா எவிடென்ஸ் அந்த போலீசு வச்சிருக்கான். போதா குறைக்கு எல்லா சேனலிலும் உன் ஆளுங்க பண்ண கலவரம், நைட் ஸ்டேஷனில் பண்ண ஆட்டம்ன்னு எல்லாம் வெளிவந்திருக்கு. ஜெயிலுக்கு போறது உறுதி. உனக்குத் தூக்குத் தண்டனையே கூட கிடைக்கலாம்" என்ற சங்கர், "இப்போ நமக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை எப்படி குறைக்கிறதுன்னு மட்டும் தான் யோசிக்கணும்" என்றார்.

காந்தாவுக்கு தான் தப்பித்தால் போதுமென்ற நிலை. கைலாஷ் மேலிருந்த நம்பிக்கையே போயிருந்தது.

"என்ன பண்ணனும்?"

"அப்ரூவரா மாறனும்?"

காந்தா யோசிக்க ஆரம்பித்தான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 20

அன்றைய தினம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது காந்தாவின் சிறை தண்டனை.

ருது காந்தாவை வைத்து கைலாஷிற்கு கட்டம் கட்டியிருந்தான். கைலாஷ் கண்ணை பாசம் மறைத்திட, மெத்தனமாக இருந்துவிட்டார். இப்போது சிக்கிக்கொண்டார்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு பெரும் பெரும் தொகைகள் நிதி கொடுத்து, தன் கைக்குள் அடக்கி வைத்திருந்த கைலாஷ்ஷை, அந்த நிதி தொகையின் அளவை வைத்தே ருது மடக்கியிருந்தான்.

காந்தாவை மாட்டிவிட, அவனது பேட்டையை மாற்றிட ஒரு கொலையும், ஒரு போதைப்பொருள் வழக்கும் போதுமானதாக இருந்திடலாம். ஆனால் கைலாஷ் என்பவனின் குறுகிய கால சாம்ராஜ்ஜியத்தை அழித்திட இவை போதாதே. அவர் செய்த தப்புகளின் அளவுகளில் இவை புள்ளி அளவில் கூட சேராது.

எம்.எல்.ஏ சங்கர் முதல்வரின் ஆள். காந்தாவை கைலாஷ்ஷிற்கு எதிராகத் திருப்பிட, மறைமுகமாக ருதுவிற்கு உதவி செய்திட ஏற்பாடு செய்யப்பட்ட ஆள்.

சங்கர் தன்னை கைலாஷ்ஷின் ஆள் என காட்டிக்கொள்ளவே சில அடாவடிகளை செய்தார்.

ருதுவிற்கு கைலாஷ்ஷின் சட்டத்திற்கு விரோதமான செயல்களுக்கான ஆதாரங்களை திரட்டுவது அத்தனை ஒன்றும் சிரம்மமில்லை. ருதுவை விட கைலாஷ்ஷைப் பற்றி அதிகம் தெரிந்தோர் இருந்திட முடியுமா என்ன?

பீகாரில் இருந்தாலும், தன்னை தனக்கு நெருக்கமானவர்களிடமிருந்து மறைத்துக் கொண்டாலும் கைலாஷ்ஷின் சிறு சிறு நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் ருது.

வேங்கடம் சென்னை செல்ல வேண்டுமென சொன்னதும் ருது தயங்கியது இமையாளுக்காக மட்டுமே!

சில பல யோசனைக்குப் பின்னர் ஒப்புக்கொண்டதற்கு காரணம் கைலாஷ் எனும் நச்சுப்பாம்பின் ஆட்டத்தை முடிப்பதற்கே!

ருதுவிற்கு நன்கு தெரியும்... என்றோ ஒரு நாள் கைலாஷ்ஷின் அழிவு தன் கையில் தானென்று, அதற்காக அவன் பல மாதங்களுக்கு முன்பே கைலாஷிஷிற்கு எதிராக அனைத்து காய்களையும் நகர்த்தி ஆதாரங்களையும் மறைமுகமாக சேகரித்துவிட்டான்.

கைலாஷ்ஷின் பலம் என்ன என்பதை அறிவதற்கே, அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததைப்போல், மற்றவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டான்.

அவர் அரசியலின் இருளில் இந்தளவிற்கு ஊடுருவியிருப்பார் என்பதை கிடைத்த ஆதாரங்களை வைத்து ருது மலைத்துப்போனான்.

கைலாஷ்ஷை எதாவது ஒரு வழக்கில் மாட்ட வைத்து, அதன் மூலம் அவரது அனைத்து குற்றங்களையும் வெளி கொண்டு வந்து மொத்தமாக வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைப்பதே ருதுவின் திட்டம். அதற்கு பகடைக் காயாக உருட்டப்பட்டதே காந்தா.

தற்போது கைலாஷ்ஷின் ஆள் தான் காந்தா என்பது வெட்ட வெளிச்சமாக்கியிருந்தான் ருது. இது போதும், காந்தா செய்த கொலை தொடங்கி அனைத்துக்குமான, ஆறேழு வருடங்களுக்கு முன்பு குவாரியில் ஒன்பது பேர் இறந்த குற்றத்தில் கைலாஷ் ஜெயிலுக்கு போயிருந்தாலும், ஐந்தாறு மாதத்தில் எதன் மூலம் யாரின் உதவியால் வெளியில் வந்தார் என்பது தொடங்கி, அரசியல் கூட்டங்களுக்கு ஆட்கள் திரட்டும் பேட்டையின் முக்கிய ரவுடியுடன் தொடர்பு கொண்டு, அந்த ரவுடியை மிஞ்சி அரசியல்வாதிகளுக்கு வலது கையாக மாறி, ஒரு கட்டத்தில் அந்த ரவுடியை தனது தொழில் வளர்ச்சிக்காக கொலை செய்து, அரசியலில் பல பெரும் புள்ளிகளுக்கு நிகழ் உலக தாதாவாக மாறியது, பெரும் புள்ளிகளின் அந்தரங்க காணொளியை வைத்து அவர்களை மிரட்டி தன் செல்வ ஆதாயத்திற்கு பயன்படுத்திக்கொண்டது, அதன் பின்னணியில் பல அரசியல்வாதிகளை தன் கைக்குள் போட்டுகொண்டு, கட்சிகளுக்கு நிதி கொடுப்பது போல் அருகே நெருங்கி கட்சியின் ரகசியங்கள், முக்கிய அரசியல் பிரமுகர்களின் ரகசியங்கள் என அனைத்தும் தெரிந்து கொண்டு முக்கிய கட்சிகளை தன் கைக்குள் கொண்டு வந்து நகரத்தையே ஆட்டி வைத்தது, தன்னிடமிருக்கும் சொத்திற்கு வரிவிலக்கு கணக்கு காட்டிடவே, காந்தாவை கைக்குள் போட்டுகொண்டு பேட்டைக்கு அனைத்து வித சகல வசதிகளும் செய்து கொடுத்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என கைலாஷ்ஷின் நீண்ட பக்கத்திற்கான ஆதாரங்கள் யாவற்றையும் நீதிபதியின் முன்பு ருது சமர்பித்திருந்தான்.

ருது கைலாஷ்ஷின் புள்ளி அளவு தவறைக்கூட விட்டுவைக்கவில்லை.

ஒன்றே ஒன்றை தவிர்த்து. அது ருதுவிற்கானது மட்டுமே. அதற்கு எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் ஈடாகாது. அவனால் அதற்கான தண்டனையை கைலாஷ்ஷிற்கு கொடுத்திடவும் முடியாது. அவனை சுமந்த உயிரின் இறுதி வார்த்தையை மீறிடும் துணிவு அவனுக்கு இல்லை. ஆதலால் மட்டுமே கைலாஷ் எனும் கொடிய மிருகம் ருதுவின் கண்ணில் பட்டும் உயிரோடு இருக்கிறது. வாழ தகுதியற்ற கொடூரன் கைலாஷ். அவரின் அந்த முகம் ருது மட்டுமே அறிந்தது.

கைலாஷிஷிற்கு எதிராக அனைத்து குற்றங்களும் ருது சமர்ப்பித்த ஆவணங்களினால் உண்மையென நிரூபிக்கப்பட, ஏற்கனவே சங்கர் குழப்பியதில் பயந்திருந்த காந்தா, கைலாஷ் உடன் இணைந்து எங்கெங்கு எப்போது என்னென்ன குற்றங்கள் செய்தோம் என்பதை நீதிபதி முன்பே வாக்குமூலமாகக் கொடுத்திட, காந்தாவுடன் கைலாஷ்ஷுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

கைலாஷ்ஷின் தொழில்கள் அரசாங்கமே ஏற்று நடத்தும்படியானது. அவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது.

கைலாஷ்ஷின் குற்றங்கள் யாவும் சந்தேகத்திற்கு இடமின்று நிரூபிக்கப்பட்டிருக்க, அதில் ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் பல பெரும் புள்ளிகளின் தவறுகள் வெளியில் தெரிய வர, ருது அளித்த ஆவணங்கள் யாவும் முதல்வரின் நேரடிப்பார்வைக்கு கொண்டு சேர்க்கப்பட்டன.

முதல்வரும் இதைத்தான் எதிர்பார்த்தாரோ... தன் கட்சி ஆட்கள் என்றும் அவர் தயவு தாட்சண்யம் பாராது அனைவரையும் கட்சிகளிலிருந்து நீக்கம் செய்ததோடு, முறையான தண்டனைகள் கொடுக்குமாறு நீதிமன்றத்திற்கு மனு தாக்கல் செய்தார்.

அன்று நகரமே ருது என்ற தனிப்பட்ட ஒருவனால் சுத்தம் செய்யப்பட்டது.

"உங்க மகன்னு நீங்க பெருமையா சொல்லிக்கொள்ளலாம் வேங்கடம்" என்று முதல்வர் வேங்கடத்திடம் சொல்லிய தருணம், அவரின் முகத்தில் மிதமிஞ்சிய பெருமை. மீசையை முறுக்கியபடி நெஞ்சை நிமிர்த்தி நின்றார்.

நேர்மைக்கு கிடைக்கும் வெகுமதி அது. நேர்மையானவர்களுக்கு மட்டுமே உரித்தாகும்.

முதல்வர் மற்றும் ருது தனிப்பட்ட முறையில் சங்கருக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.

ஒரு ரவுடியை கைது செய்ததற்கே நகரத்தை கலவர பூமியாக மாற்றியிருந்தார்கள். அவனது ஆட்கள். தற்போது மொத்த ரவுடி கும்பல்களையும் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்திருக்க, நகரமே அமைதி பூங்காவாக காட்சியளித்தது.

ஒரு நாளில் மாபெரும் மாற்றம் நிகழுமென யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் ருது... ருத்விக் சாத்தியமாக்கியிருந்தான்.

அனைத்தும் முடிந்து நீதிமன்றம் விட்டு வெளியில் வரும்போது, வெங்கட் மற்றும் கிருஷ்ணன் உட்பட ருதுவின் கீழ் பணிபுரிவோர் அனைவரும் ருதுவை வானளவு உயர்ந்து பார்த்தனர்.

"ஊப்ப்ப்..." தலையை உலுக்கிய வெங்கட், "எவ்வளவு பெரிய விஷயம் சார். இவ்ளோ சிம்பிளா முடிச்சிட்டிங்க?" என்று கேட்டிட, ருதுவிடம் வெற்றிக்கொண்ட மகிழ்வின்றி கசந்த முறுவல் ஒன்று சின்னதாக வெளிப்பட்டது. அவ்வளவே!

"அந்த கைலாஷ்ஷை அரேஸ்ட் பண்ணி ஜெயிலில் போட்டுட்டு கால் பண்ணுங்க" என்ற ருது நேரத்தை பார்க்க மாலை ஆகியிருந்தது.

"இவ்வளவு நேரமாகிடுச்சா?" என்றவன், எங்கிருந்து வந்தார்கள் என்று அறியும் முன் நொடியில் தன்னை சூழ்ந்துவிட்ட ஊடகவியலாளர்களின் ஒலிவாங்கிக்கு முன் அவர்கள் கேட்ட கேள்விக்கு தகுந்த பதிலை எவ்வித அலட்டலுமின்றி வழங்கி வெளியேறியிருந்தான்.

___________________________________

இமையாள் வரும் சரியான நேரத்திற்கு அந்த கிளை சாலையின் இறக்கத்தில் அவளுக்காகக் காத்திருந்தான் ருது.

சரியான நேரத்திற்கு வந்துவிட்டான்.

வண்டியின் உள்ளே அவள் வரும் திசையை பார்த்தவாறு அமர்ந்திருந்தவன், தொலைவில் அவள் தெரியவும் இறங்கி நின்றான்.

இமையாளும் சற்று முன்னரே ருதுவை கண்டுகொண்டாள்.

பள்ளியில் இருந்தாலும் இன்றைய செய்தியை அறிந்திருந்தாள். முழுக்க ருதுவின் பேச்சாகத்தானே உள்ளது. உள்ளுக்குள் அவனை நினைத்து பெருமையாக இருந்தாலும், தன்னை ஏமாற்றியவன் என்ற நிலையில் அவன் மீது கோபம் குறையாது தானிருந்தது.

'ஊரே இவங்களிப்பற்றி பேசிட்டு இருக்கு. இவங்க இங்க நின்னுட்டு இருக்காங்க' என நினைத்தவள் ருதுவை காணாதது போல் தாண்டிச்செல்ல, சட்டென்று வண்டியை பின்னால் இழுத்து அமர்ந்திருந்தான்.

"என்ன பண்றீங்க நீங்க?"

ருது இழுத்ததில் வண்டி ஆட்டம் கண்டதில் இமையாள் பயந்துவிட்டாள்.

"என்னை பார்த்த தானே?"

"இல்லை."

"பொய்."

"இப்போ என்ன வேணும் உங்களுக்கு?" இருக்க இருக்க ருதுவின் மீது இமையாளுக்கு கோபம் அதிகரித்துக்கொண்டேச் சென்றது.

"நீதான் வேணும்." ருது அலட்டல் இல்லாது மொழிய, அவனை திரும்பி பார்க்க முடியாது கண்ணாடி வழி முறைத்து வைத்தாள்.

"எதுக்குடி எப்போ பாரு முறைச்சிட்டே இருக்க?"

"விட்டுட்டு ஏமாத்திட்டு போனவங்களை வேறெப்படி பார்ப்பாங்க?"

"சரிதான்..." என்ற ருது, "என்னை வீட்டில் டிராப் பண்ணிடு" என்றான்.

"உங்களை நான் ஏன் கூட்டிட்டுப் போகனும்?"

"எதுக்குடி இப்போ கேள்வியா கேட்டுட்டு இருக்க?" என்றவன் "அசையாம உட்காருடி. மனுஷன் நிலைமை புரியாம அவஸ்தையை கூட்டிட்டு" என்று மெல்ல முனகினான்.

"நீங்க முதலில் இறங்குங்க?"

"முடியாது. என்னை டிராப் பண்ணு."

ருதுவின் பிடிவாதமும், அழுத்தமும் அவளுக்கா தெரியாது. அவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கம் கோபமாக உருமாறிட சட்டென்று வண்டியிலிருந்து இறங்கியிருந்தாள்.

"ஹேய்..." என்றவன் சுதாரித்து வண்டியை நிலை நிறுத்தினான்.

இமையாள் நடுக்கத் தொடங்கியிருந்தாள்.

"என்னடி புருஷனை விட்டுட்டுப்போற?"

திரும்பி நின்று காலை தரையில் உதறியவள், "யாருக்கு யார் புருஷன்?" எனக் கேட்டு, "விட்டுட்டுப்போவதெல்லாம் சாருக்குத்தான் கை வந்த கலையாச்சே" என்றாள்.

"ரொம்ப சூடா இருக்கப்போல?" என்றவனின் இதழ் ஓரமாய் துடித்தது. அடக்கப்பட்ட புன்னகையில். அவளின் கோபத்தை ரசித்தவனாக.

"ஆ..." என்று பற்களை கடித்தவள் அவனை நெருங்கி, கழுத்தை நெறிப்பதைப்போல் கைகளைக் கொண்டு சென்று...

"அப்படியே கொல்லனும் போல இருக்கு" என்றாள்.

"கொன்னுக்கோ" என்று தோள்களை உயர்த்தி இறக்கியவன், "அப்புறம் நீதான் பீல் பண்ணுவ" என்று கண் சிமிட்டினான்.

"யாரோ ஒருத்தியோட புருஷன் சாவதற்கெல்லாம் நான் ஏன் சார் பீல் பண்ணனும்?" மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு மிதப்பாக அவள் கேட்ட தோரணையில் ருது மலைத்துப் பார்த்தான்.

'இவளை மலை இறக்கிறது ரொம்ப கஷ்டம் போலவேடா ருது.'

வண்டியை விட்டு இறங்கி நின்றவன்,

"போ" என்றான்.

"இனி என் முன்னாடி வந்து நிக்கிற வேலை வச்சிக்காதீங்க. உங்க பதவிக்கும் உயரத்துக்கும் அது நல்லாயில்லை. அதுவும் கல்யாணமாகி, பொண்டாட்டி, குழந்தைன்னு வீட்டில் இருக்கும்போது" என்றவள், "தள்ளுங்க" என்றாள்.

'உண்மையை சொன்னால் கூட நம்பமாட்டாள் போல' என நினைத்த ருது, "நீ பார்த்தியாக்கும்?" என்றான்.

"அதான் சொன்னீங்களே!"

ருது, 'நாசமாப்போச்சு.'

"அதை நம்பமாதானே எனக்காக இன்னும் யாரையும் கல்யாணம் செய்துக்காம காத்திருக்க?"

"ம்க்கும்... நினைப்புதான் பொழப்பை கெடுக்குமாம்" என்றவள், "அடுத்த மாதம் எனக்கு கல்யாணம். இன்விடேஷன் பிரிண்ட் பண்ணதும் கொண்டு வரேன். கல்யாணத்துக்கு வந்துடாதீங்க" என்று அதீத கோபத்தில் மொழிந்தவள் ருதுவின் ஆராயும் பார்வையை கண்டு கொள்ளாதவளாக வண்டியை உயிர்ப்பித்து மின்னலென மறைந்திருந்தாள்.

"ராஸ்கல்... எனக்காகத்தான் காத்திருக்கேன் சொன்னால் குறைஞ்சிடுவியா?" என்று இல்லாதவளிடம் கேட்டவன், "பர்ஸ்ட் என் கைக்குள்ள வாடி... உனக்கிருக்கு" என்றவனாக வண்டியில் ஏறி இயக்கியிருந்தான்.

ருதுவிடம் பேசும்போது ஒன்றுமே இல்லை எனும் விதமாக திடமாக பேசி வந்துவிட்டாள். ஆனால் இப்போது கண்கள் அருவியென சுரந்து கொண்டே இருந்தது.

அவளால் இந்த ருதுவை ஏற்கவே முடியவில்லை. காதலி என்ற போதும் கண்ணியம் காத்த ருதுவுக்கும், அவனளவில் திருமணம் ஆகிவிட்டது என்ற நிலையில் தன்னிடம் இப்படி அவன் நடந்துகொள்வது அவளுக்கு வலிக்கவே செய்கிறது.

தெரிந்த நபர் என்ற முறையில் அனுகியிருந்தால் நன்றாக பேசியிருப்பாளோ?

இப்போது எதை ஏற்க, எதை நம்புவதென்று புரியாது தனக்குள்ளே குழம்பினாள். குழப்பங்கள் யாவும் அவன் மீது கோபமாகவே சேர்ந்துக்கொண்டது.

'அவங்களுக்காக நான் காத்திருக்கேன் எண்ணம் வேற இருக்கா அவங்களுக்கு. அது கூடாது. வலிக்க விட்டுச் சென்றவர் தானே! இப்போ வந்து என்னவாம். அவங்க சொல்லிய கல்யாணம், கர்ப்பம் இப்போ எங்கப்போனதாம்' என்று மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு தன்போக்கில் புலம்பிக் கொண்டிருந்தாள்.

மாலை வெயில் முகத்தில் மோதிய சூட்டினை பொருட்படுத்தாது ருதுவை மனதில் காய்ச்சி எடுத்தாள்.

'அவங்களுக்காக நான் ஏன் அழணும்? அழாத இமையாள்' என்று கண்களை துடைத்தவள், அப்போதுதான் கவனித்தாள் தன்னையே பார்த்து நின்றிருக்கும் இனியனை.

"எப்போ வந்தீங்க?"

"ருதுவை பார்த்தியா?"

"நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்."

"நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே!"

"அண்ணா ப்ளீஸ்" என்றவள் வழமைப்போல் தமயனின் முன் முழுதாய் உடைந்து கதறினாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 21

திருமணத்திற்கு சம்மதமென்ற இமையாளை அழுத்தமாக பார்த்திருந்தான் இனியன்.

"ஒரு விஷியத்தை கடந்து வரனும் அப்படின்னா, இன்னொரு புது விஷியத்தில் நம்மளை புகுத்திக்கணும் நீங்க தானே சொன்னீங்க இனியாண்ணா" என்ற இமையாள்,

"எனக்கு இந்த ஸ்ட்ரெஸ், பெயின், பிரஷர் இதெல்லாம் வேணாம். முடியல" என்று மடங்கி தரையில் அமர்ந்தவள் வெடித்து கதறினாள்.

"இமயா" என்று தங்கையின் அருகில் அமர்ந்த இனியன் மெல்ல அவளின் கைகளில் தட்டிக் கொடுத்தான்.

"ஐ நீட் அ பிரேக் பார் எவ்வரித்தின்க் ண்ணா" என்றவள், "அவங்களை பார்க்கும் போதெல்லாம் இதுவரை வரவே வராத கோபம் வருது அவங்க மேல. எங்க வெறுத்திடுவனோ பயமா இருக்கு" என்றாள்.

தங்கையின் மனதில் இருப்பதெல்லாம் வெளியில் வரட்டும் என்று இனியன் மௌனமாக இருந்தான்.

"அவங்க என்னை விட்டுப்போனது விட்டுட்டுபோனதாவே இருக்கட்டும். திரும்ப வேண்டாம். அவங்க சொன்னது உண்மையோ, பொய்யோ... திரும்ப வர அவங்க எனக்கு வேண்டாம். நாங்க ஒன்னு சேர்ந்து எங்களோட காதலுக்கு தண்டனை கொடுக்க எனக்கு விருப்பமில்லை. எந்தவொரு விளக்கமும் அவங்க கொடுக்க முன் வராதப்போ, நானா புரிஞ்சிக்கிறதுக்குள்ள எங்க காதல் செத்துப்போகும். நம்பிக்கை, புரிதல் எல்லாம் இதில் அப்பாற்பட்டது" என்றாள்.

"அப்போ ருது உனக்கு வேண்டாம் ரைட்?"

"வேண்டாம்."

"அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு சொன்னதை நம்புற கரெக்ட்?"

"நேரில் பார்த்தாலும் நம்பமாட்டேன். அவங்க என் ருது" என்றாள் அழுத்தமாக.

"மனசளவில் நீ தெளிவா இல்லைன்னு உனக்கே புரியுதாடா?"

"எதுவும் புரிய வேண்டாம் ண்ணா எனக்கு. அவங்க வேண்டாம். அவ்வளவு தான். ஏதோ காரணத்துக்காக என்னை விட்டுப்போனவர் தானே! திரும்ப விட்டுபோகமாட்டாங்கன்னு எப்படி நம்புறது?" எனக் கேட்டாள்.

இமையாள் கேட்பதிலும் நியாயம் உள்ளதே!

"விட்டுப்போறதுக்கா உன் பின்னால் வரான்?"

"அப்போவும் வந்தவர் தானே! விட்டுப்போகலையா?"

"காதல் மன்னிக்கும் ஏற்கும்!"

"உலகத்தில் சிறந்த எல்லா காதலுமே கல்யாணத்தில் சேர்ந்தது இல்லைண்ணா. நாம் கதையா தெரிஞ்சிகிட்ட எல்லா காதலோட முடிவும் தோல்விதான்" என்ற இமையாள், "இவ்வளவு நாள் அவங்க சொன்னது பொய்யா, உண்மையா தெரியாமல் குழம்பி... ஏன் இப்படின்னு அவங்களுக்காக ஏங்கி, வந்திடமாட்டாங்களான்னு தவிச்சு காத்திருந்தது எல்லாம்... நேரில் பார்க்கும்போது கோபபடத்தான்னு இன்னைக்குத்தான் எனக்கு தெரிந்தது. எனக்கு இப்போ அவங்க மேல கோபம் மட்டும் தான் இருக்கு. இந்த கோபம் என் காதலை அழிச்சிடும்" என்றதோடு முகத்தை அழுந்த துடைத்து நிமிர்ந்து அமர்ந்தாள்.

"சில காதல்... காதலாவே இருக்கிறது தான் நல்லது" என்றாள், விரக்தியாக.

இதற்கு இனியன் என்ன பதில் சொல்வதாம். என்னுடைய காதல் காதலாக இருப்பது மட்டுமே தனக்கு நல்லதென அவளே சொல்லும்போது அவனால் வற்புறுத்திட முடியுமா என்ன? வற்புறுத்தி காதலை ஜெயிக்க வைத்திட முடியுமா?

இங்கு இமையாளின் காதல் ஜெயித்ததா இல்லையா என்ற விவாதம் இல்லை. அவளை பொறுத்தமட்டில், அவளது காதல் அவளின் நீண்ட காத்திருப்பில் நின்று ஜெயித்துவிட்டது. இனி தன் காதலை ஜெயிக்க வைப்பது ருதுவின் கையில் தான் உள்ளது.

"அப்போ உனக்கு இன்னொருவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?"

"அடி எடுத்து வைத்தால் தானே பாதை எப்படின்னு தெரிஞ்சிக்க முடியும்?"

"ஒரு முடிவோட இருக்க நீ?" என்ற இனியன், "எனக்கு கல்யாணம் ஆகனும் அப்டிங்கிறதுக்காக நீ ஓகே சொல்லலையே?" எனக் கேட்டான். உண்மையில் இதை வைத்து தான் அவளை கார்னர் செய்திட இருந்தான் இனியன். தற்போது அவளே சம்மதம் சொல்லும்போது நண்பனை நினைத்து அவனது மனம் கவலைக்கொள்ளவே செய்தது.

இனியனுக்கு புரிகிறது... 'ருதுவிடத்தில் நீயின்றியும் நான் நன்றாக இருக்கின்றேன் என்று காட்டிக்கொள்ள நினைக்கிறாள் என்று.' காதலில் ஈகோ அழகு தான். சில நேரங்களில் காதலில் ஈகோ பெரும் நோய். இமையாளுக்கு புரிய வைத்திட வேண்டிய தேவையில்லை அவளே புரிந்துகொள்வாள்.

"ஓகே... அப்போ அப்பாவை பையன் பார்க்க சொல்றேன்" என்று இனியன் எழுந்து கொண்டான்.

இமையாளுக்குத்தான் இதயத்தில் மெல்லிய வலி பரவியது.

அவளது ருதுவை கடக்க முயல்கிறாள்... கரை சேர்ந்திடுவாளா? அத்தனை எளிதா காதலை கடப்பது?

நெஞ்சத்தில் பொத்தி வைத்த பிம்பம்
காற்றாய் நுரையீரலில் வாசம் பிடிக்கிறதே! அவனின்றி உடலின் அணுவும் அசைந்திடுமோ? மனம் கொண்ட வலிகளெல்லாம் மருந்தாய் கேட்பது அவனையே! ஏற்றிடத்தான் நெஞ்சம் மறுப்பதென்னவோ?

அறைக்குள் வந்தவள் கதவினை அடைத்துக்கொண்டு விம்மி வெடித்து கதறிய கதறலின் சத்தத்தில் தீபா படித்துக்கொண்டிருந்த நாவலை கீழே போட்டுவிட்டு பதறிக்கொண்டு ஓடிவர, இனியன் மென்மையாக புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

"அவள் அழுகை சத்தம் கேட்குது. நீ சிரிச்சிட்டு நிக்கிற? நீயும் நார்மல் அண்ணன் ஆகிட்டியாடா?" என்று கேட்ட அன்னையை பார்த்து கண் சிமிட்டியவன், "ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க இமயாவே நல்ல ஐடியா கொடுத்திருக்காள் ம்மா" என்றான்.

"யார் ரெண்டு பேரும்?"

"உன் மாப்பிள்ளையும், பொண்ணையும்."

"புரியலடா?"

"போங்க... போய் உங்க ரைட்டர் கதை போட்டுடாங்களான்னு பார்த்து படிங்க" என்று அறைக்குள் வந்த இனியன், "நீங்களே அதிரடியா ஏதும் செய்து இமயாவே கட்டிக்க வைக்கிறேன். இன்னொருத்தனை உங்க லேஷஸ் கழுத்தில் தாலிகட்ட விட்டுடுவீங்களா டிசி சார்?" என்று தன் முன் இல்லாத ருதுவிடம் கேட்டு புன்னகைத்தான் இனியன்.

________________________________

இமையாளை சந்தித்து விட்டு வீட்டிற்கு வரும் வழியெங்கும் ருதுவினுள் இமையாள் சொல்லிச்சென்றதை நினைத்து அத்தனை கோபம்.

என்ன தான் அவள் திருமணம், குடும்பமென்று அமைந்து நன்றாக இருக்க வேண்டுமென நினைத்திருந்தாலும், அவளை நேரில் கண்ட பின்னர் அவனது லேஷஸ் வாழ்வில் அவன் மட்டுமே அனைத்துமாக இருந்திட வேண்டுமென அவன் காதல் மனம் தவிக்கிறது.

அவளை விட்டுக்கொடுத்திட முடியாதென அவனே உணர்கிறான். இந்த உணர்தல் அன்று இருந்திருந்தால் பொய் சொல்லி சென்றிருக்கமாட்டானோ? அன்றைய சூழ்நிலை வேறாயிற்றே! அன்று அவன் செல்ல வேண்டியதன் அவசியம் இருந்ததே!

மீண்டும் ருது இமையாளை கண்டபோது அவனின் எண்ணப்படி அவள் ஒரு குடும்பமாகியிருந்தால் எட்ட நின்று மகிழ்ந்திருப்பானோ என்னவோ? இன்று அந்த மனநிலை அவனுக்கு கொஞ்சமும் இல்லை. அவனது லேஷஸ் அவனுக்கு வேண்டும். அவனது அமிழ்ந்துப்போன காதலெல்லாம் வீறுகொண்டு ஆட்டி வைத்தது அவனது உள்ளத்தை.

இதில் இமையாள் தனக்கு அடுத்த மாதம் திருமணம் என்று சொல்லியது பொய் என்ற போதும் அவனால் ஏற்க முடியவில்லை.

அவள் திருமணம் என்று சொல்லிய பொய்யினையே ஏற்க முடியாதவனுக்கு, அன்று தான் தனக்கு திருமணமாகிவிட்டது என்று சொல்லியபோது அவளின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை வலிக்க புரிந்துகொண்டான்.

'நல்லாவே பழிவாங்குறடி.' சிரித்துக்கொண்டான்.

'இந்த பழிவாங்கல் எல்லாம் என் பக்கம் வந்து பண்ணுடி... எவ்வளவு வேணாலும் தாங்கிக்கிறேன்' என்றவன், தன் கையின் டாட்டூவை பார்த்து கண் சிமிட்டினான்.

எத்தனை பெரிய காரியம் செய்து வெற்றி கொண்டபோதும் தோன்றிடாத மகிழ்வு, அந்த ஒற்றை டாட்டூவில் அவனுக்கு கிடைத்திருந்தது.

அதே மகிழ்வோடு காவலர் குடியிருப்பினுள் நுழைந்திருந்தான்.

சற்று தொலைவிலே தன் வீட்டிற்கு முன் நிற்கும் வண்டியை கண்டவனின் மகிழ்வெல்லாம் எங்கோ காணாமல் சென்றிருக்க, வந்த வேகத்தில் அவ்வண்டியின் பின் இடித்து முன் தள்ளியிருந்தான்.

வண்டியிலிருந்து குதித்து இறங்கியவன், நான்கே தாவலில் வீட்டிற்குள் நுழைந்து,

"தேஷ்" என்று வீடே அதிர சிம்மமென ஓங்கி கர்ஜித்திருந்தான்.

தந்தையின் கோப குரலில் திடுக்கிட்ட குழந்தை, தான் அமர்ந்திருந்தவரின் மடியை விட்டு கீழிறங்கி தந்தையை நோக்கி ஓடி வந்தது.

"அப்பா..."

தன் மகனை அள்ளி அணைத்து தூக்கியவன், மார்போடு தலையை அழுத்தி தனக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்.

"யாரைக் கேட்டு என்வீட்டிற்குள் வந்தாய்?" எனக் கேட்டவன், அங்கு அமைதியாக நின்றிருந்த அம்பிகாவை அதே கோபத்தோடு ஏறிட்டான்.

"அவங்க நாம் வந்ததும் போக சொல்லிட்டாங்க. நான் தான் என் பையனை பார்த்திட்டு போயிடுறேன்னு..." என்று அவர் முடிக்கும் முன்,

"யாருக்கு யார் மகன்?" என்று கேட்ட ருது, அங்கு போட்டோவில் அம்பிகாவுடன் இருந்த வேங்கடத்தைக் காண்பித்து,

"அவர் தான் என் அப்பா" என்றிருந்தான்.

"ருது ப்ளீஸ்..."

"திரும்பவும் உங்க போலிக் கண்ணீரில் ஏமாந்துப்போக, அதே இருபத்தைந்து வயது ருது கிடையாது நான்" என்றான்.

"நீ இல்லைன்னாலும் உண்மை அதுதானே கண்ணா!"

"ச்சீ... என்னை அப்படி சொல்லாத... உனக்கு உரிமை இல்லை. என் அம்மாவே இல்லைங்கிறப்போ, நீ எப்படி என் அப்பாவாக முடியும்?" என்ற ருது,

"அம்மா இந்த ஆளை வெளியில் போகச்சொல்லுங்க. இல்லை நான் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள வேண்டியதிருக்கும்" என்றான்.

என்ன தான் ருது கோபமாகவும், ரூத்ர மூர்த்தியாகவும் நின்றிருந்தாலும், பழைய நிகழ்வுகளின் தாக்கத்தால் ருதுவின் உடலில் மெல்லிய நடுக்கம் ஓடிக்கொண்டிருந்தது.

"என் பையனை ஒருமுறை..."

"உங்க பையன்னு இங்க யாருமில்லை. வெளியில் போடா" என்றிருந்தான் ருது.

"பிளீஸ் ருது." கிட்டத்தட்ட அவர் தன் மூத்த மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். வாழ்விலே முதல் முறையாக மன்றாடினார். கெஞ்சுதல் என்பதை அறிகிறார்.

"அவள் போன பிறகு தான் உறவுகளோடு அருமை... சொந்த ரத்தத்தோட பாசம் புரியுது. ஒரே ஒருமுறை ருது கண்ணா... அப்பா கிட்ட வாயேன். அவனை என்கிட்ட கொடுடா."

"பாருடா... தி கிரேட் பிஸ்னெஸ் மேன், ரவுடிகளை கைக்குள் வச்சிக்கிட்டு நகரத்தையே ஆட்டி படைத்த கைலாஷ்ஷுக்கு கெஞ்சவும் வருதே!" என்ற ருதுவின் குரலில் அப்படியொரு நக்கல்.

"இதெல்லாம் என் தனிப்பட்ட ஆசைக்காக ருது கண்ணா. ஆனா நீயும், தேஷ்..."

"ஜஸ்ட் ஸ்டாப் இட்." மீண்டும் ஒருமுறை ருதுவின் குரல் ஓங்கி ஒலித்தது.

"தேஷ் என் மகன். அவன் பெயர் கூட உன் வாயில் வரக்கூடாது" என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

ருதுவின் உடல் நடுக்கத்தில் பயந்த தேஷ், தன் முகத்தை உயர்த்தி "அப்பா" என்று அழுதிட...

"ஒன்னுமில்லை... ஒன்னுமில்லை பேபி" என்று மீண்டும் தனக்குள் அடைக்காத்துக் கொண்டான் ருது.

"என்ன உன் சாம்ராஜ்ஜியம் அழிஞ்சிடுச்சுன்னு நல்லவன் வேஷம் போடுறியா நீ?" எனக்கேட்ட ருது, "உன்னையெல்லாம் பார்க்கவே அருவருப்பா இருக்கு. இங்கிருந்து போயிடு இல்லை சுட்டுத் தள்ளிடுவேன்" என்று பேண்ட்டின் பக்கவாட்டு உறையிலிருந்து துப்பாக்கியை எடுத்தவன் கைலாஷ் நோக்கி குறி வைத்திருந்தான்.

"ருது..." என்று அம்பிகா பதற, நிதானம் வரப்பெற்றவனாக துப்பாக்கியை கீழிறக்கியிருந்தான்.

"நான் இவ்வளவு இறங்கி வந்திருக்கேன். இப்பவும் நம்ப மாட்டியா கண்ணா?"

"உனக்கு நல்லாவே நடிக்க வருது" என்ற ருது, "பணம், ஆசைக்காக என் அம்மாவின் உயிரோடு விளையாடிய உன்னை, திருந்திட்டேன்னு நான் மன்னிக்கணுமா?" எனக் கேட்டான்.

"தப்பு தான்... தப்பு தான். புத்தி கெட்டுப்போய் தெரியாமல் பண்ணிட்டேன்" என்று கைலாஷ் புலம்பிட...

"நீ புத்தியில்லமால் பண்ண தவறா அது ? உன் ஆசைக்காக நாங்க கொடுத்த விலை ரொம்ப பெரியது. உன்னால் என் அம்மாவை திருப்பிக்கொடுக்க முடியுமா?" என்றவன், "ஒழுங்கா போயிடு" என்று வாசலை கைகாட்டினான்.

"அவனை ஒருமுறை கொடேன்?"

கைலாஷ் தேஷ்ஷினை கேட்டு கையினை நீட்டிட, தேஷ் மீதான ருதுவின் அணைப்பின் இறுக்கம் கூடியது.

"அம்மா இவனை போகச்சொல்லுங்க" என்று கத்திய ருது, "இவனை பார்க்க பார்க்க எங்கே என் அம்மா சொன்ன வார்த்தையை மீறி இந்த ஆளை கொன்னுடுவேனோன்னு பயமா இருக்கு" என்றான்.

அம்பிகா ருதுவின் அருகில் வந்து அவனின் முதுகை மெல்ல தட்டிக் கொடுத்தார்.

"யாருக்காகவோ நீ உன்னை கஷ்டப்படுத்திக்காதே ருது" என்றார்.

"ஒரு தடவை தூக்கிக்கிறேன். கொடுக்க சொல்லுங்கம்மா" என்று அம்பிகாவிடம் முறையிட்டார் கைலாஷ்.

"நான் உங்களை அப்போவே போகச்சொன்னேன்" என்றார் அம்பிகாவும்.

"உன்னை தான் என் ஆளுங்க தேடிட்டு இருக்காங்க. நீ என் வீட்டிலே வந்து டிராமா பண்ணிட்டு பதுங்கிட்டு இருக்க. இப்போ தான் உன் நாடாகத்துக்கான காரணம் புரியுது" என்ற ருது, வெங்கட்டிற்கு அழைத்து கைலாஷ் தன் வீட்டில் இருப்பதாக சொல்லி, கைது செய்ய விரைந்து வருமாறு பணித்து வைத்தான்.

"ருது பிளீஸ்... நான் பண்ண பாவங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. இப்போ ஜெயிலுக்கு போனால், சாகும்வரை அங்குதான்னு எனக்கு நன்றாகத் தெரியும். அதான் முதலும் கடைசியாவும் ஒரு தடவை என் மகன்களை பார்த்திட்டு போகலாம் வந்தேன்" என்று அவர் சொல்லி முடிக்க, அவரின் கழுத்தை ஒற்றை கையால் அழுத்திப் பிடித்திருந்தான் ருத்விக்.

"உனக்கு மகன்னு யாருமில்லை. அந்த நெனப்பை இந்த நொடியே அழிச்சிடு" என்று கைலாஷ்ஷை சுவற்றில் தூக்கி நிறுத்தியிருந்தான் ருது.

கைலாஷ் கண்கள் சொருகியது.

"ருது... என்னப்பா... விடு. அவனை கொன்னு உன் வாழ்க்கையை அழிச்சிக்காதே!" என்று அம்பிகா ருதுவை பிடித்து இழுக்க, தன் கையை தளர்த்தினான்.

தொப்பென்று தரையில் கீழே விழுந்தார் கைலாஷ்.

"அதான் என் வாழ்க்கையையே கொன்னுட்டானேம்மா இவன். இவன் உயிரோடிருந்து என்ன பிரயோஜனம்?" என்ற ருது, "இவனால் வயதான காலத்திலும் என் அம்மா பட்ட துன்பம் கொஞ்சமில்லை. அதெல்லாம் நினைக்கவே வெறுப்பா இருக்கு" என்றான்.

"என்னடா ரொம்பத்தான் துள்ளுற? நான் அப்பன் இல்லைன்னா... நீயெப்படிடா வந்த?" என அதுவரை இருந்த பொறுமை பறக்க தன் உண்மை முகத்தைக் காட்டியிருந்தான் கைலாஷ்.

"நீயில்லைன்னு சொன்னாலும் உனக்கும் சரி உன் கையிலிருக்கும் அவனுக்கும் சரி நான் தான்டா உன் அ..." என்று அவர் முடிக்கும் முன்பு அவரின் மார்பிலே பூட்ஸ் காலினை வைத்து தள்ளியிருந்தான் ருது.

ருது தள்ளிய வேகத்தில் வீட்டு வாயிலைத் தாண்டிக்கொண்டு கீழே விழுந்தார் கைலாஷ்.

"நான்தான் அப்பான்னு சொல்றதால ஒருத்தன் அப்பா ஆகிட முடியாது" என்ற ருது, "இந்த ருத்தேஷ்ஷுக்கு அப்பா இந்த ருத்விக் தான்" என்ற ருதுவை பார்த்து சிரித்துக்கொண்டே மெல்ல எழுந்த கைலாஷ்...

"அதே தான் சொல்றதலா தம்பிக்கு அண்ணன் அப்பாகிட முடியாது" என்று கைலாஷ் மிதப்பாய் பார்த்திட, அவரின் வாயிலே ருது ஓங்கி குத்தியிருந்தான்.

கைலாஷ்ஷின் வாயெல்லாம் ரத்தம்.

வெங்கட், கிருஷ்ணன் உடன் வந்து சேர்ந்தான்.

"நான் அடிச்சே சாவடிக்கிறதுக்குள் இவனை இங்கிருந்து கூட்டிட்டுப்போயிடுங்க" என்ற ருது,

"அவனுக்கு அப்பாவா மட்டுமில்லை... எல்லாமாவும் நானிருப்பேன். உன் மேல் பட்ட காத்துக்கூட என் மகன் மேல் பட விடமாட்டேன்" என்று தன் தம்பியாகிய மகனை மார்போடு புதைத்துக் கொண்டான். தாய் பறவை தனக்குள் தன் பிள்ளைகளை அடைக்காக்குமே அதற்கு இணையாய் ருதுவின் அச்செயல்.

அக்காட்சி உண்மையெல்லாம் அறிந்த அம்பிகாவுக்கு மனதை பாரமாய் அழுத்தியது.

உயிருக்குள் உறவை சுமந்து

அண்ணன் என்ற பந்தத்தில்
அனைத்துமாகி தாயுமானவனாய்!

'ருத்(விக்)(தேஷ்).'
d16db1a8cf9a053c7e2873c77913a281.jpg


தாய்மை பெண்மைக்கு மட்டுமே உரித்தானதன்றோ?

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 22

முற்றும் முழுதாய் ஓய்ந்தவனாக தளர்ந்து அமர்ந்திருந்தான் ருது. தளர்வு மனதிலும் உடலிலும் தான். தன் மார்போடு அனைத்திருக்கும் தன் மகவின் பிடியில் அப்படியொரு அழுத்தம். இறுக்கம். இறுகப்பற்றுதல், உறவுகளின் ஆழத்தை உனக்குள் ஆழ விதைத்திடும். நீயே உணர்வாய் தான் கொண்டுள்ள பந்தத்தின் பற்றுதலை.

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானோ, அம்பிகா தன் சோகம் மறைத்து முகத்தை துடைத்துக்கொண்டு ருதுவின் அருகில் சென்று அவனின் தோளில் கை வைத்தார்.

அதுவரை தந்தையாய் தன் சேயினை மடி தாங்கியவன், மகவாய் தன் அன்னையிடம் அடைக்கலம் தேடினான்.

"வலிக்குதும்மா..." மொத்தமாய் உடைந்திருந்தான்.

"எல்லாம் முடிஞ்சுது ருது. அவ்வளவுதான். இனி நீ அடக்கி வைக்க ஒண்ணுமில்லை. உனக்குள் புகைந்துக் கொண்டிருந்த நெருப்பை இன்னைக்கு நீயே அணைச்சிட்ட. அடுத்து என்னன்னு பாரு" என்று தேற்றினார்.

அந்நேரம் வேலை முடித்து வீட்டுக்கு வந்த வேங்கடம் ருதுவை பாராட்டி மகிழ்ந்தார். தான் பெரும் உயரம் சென்ற போது கொண்ட மகிழ்வைக் காட்டிலும், மகனின் செயலில் பெரும் மகிழ்வு கொண்டார்.

வேங்கடம் வந்ததுமே ருது தன்னை மீட்டிருந்தான். தன் கை வளைவில் இருந்தபடியே உறங்கியிருந்த தேஷ்ஷை அம்பிகாவின் கையில் கொடுத்தவன்,

"படுக்க வையுங்கம்மா" என்றான்.

அம்பிகா தேஷ்ஷை தூக்கிக்கொண்டு உள்ளே நகர்ந்ததும்,

"கைலாஷ் அமைதியா போகும் ஆளில்லைன்னு முதல்வர் சொன்னார் ருது. நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ" என்று அவனின் நலன் குறித்து அக்கறையாகக் கூறினார்.

"இனி அவனால் ஒண்ணுமே பண்ண முடியாதுப்பா. மொத்தமா அடக்கியாச்சு" என்ற ருதுவுக்கே, அத்தனை செல்வாக்கு உள்ள ஆள், தான் வெளியில் வர எவ்வித முயற்சியும் செய்யாது தண்டனையை ஏற்கும் விதமாக ஜெயிலில் சென்று உட்கார்ந்தது ஆச்சரியம் தான்.

இருப்பினும் செய்த குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்கிறான் என்று காவல்துறை அதிகாரியாகக் எண்ணிக்கொண்ட ருதுவுக்கும் கைலாஷ்ஷின் திருந்திய மனதின் பக்கம் தெரிந்திருக்கவில்லை.

ஆசை, பதவி, பணம், உயரம், புகழ் இவை எம்மனிதனையும் அத்தனை எளிதாக விட்டு வைக்காது. அவற்றை தாம் அடக்க ஆளும் வரை தான் நாம் மனிதர்கள். அவை நம்மை அடக்கி ஆளா ஆர்மபித்துவிட்டால் மிருகத்திலும் நம்மை சேர்த்திட முடியாது. நம்மில் முதலில் அடிவாங்குவது நமது குணம். குணம் இல்லையென்றால் அவை எல்லாம் இருந்தும் பயனில்லை. அதைத்தான் தன் செயல்களுக்குப் பின்னால், மனைவியின் உயிர் பிரிய தானே காரணமாக இருந்த தருணத்தில், பெற்ற மகனே துச்சமாக நினைத்து வெறித்து ஒதுக்கி தனியாக வாழ்ந்த நாட்களில் கைலாஷ் உணர்ந்து கொண்டது.

கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பதைப்போல், அனைத்து ரவுடிசமும் செய்த கைலாஷ் அனைத்தையும் விட்டொழிந்தால் அவரை போடவும் ஒரு கூட்டம் காத்திருக்கும். அதற்காகவே எடுத்த ஆயுதத்தை கீழே போடாது தான் என்கிற உயரத்தில் நின்று கொண்டிருந்தார்.

மனைவியின் மரணத்திற்கு பிறகும் ஒருவன் திருந்தவில்லை என்றால் அவனெல்லாம் மிருக இனத்திலும் சேராதவன். உண்மையில் வெளித்தோற்றத்தில் கைலாஷ் அப்படித்தான் இருந்தார்.

ருதுவையும், பிறந்த மூன்று நாட்களே ஆகிய தன் இளைய மகனையும் கைலாஷ் தேடாத இடமில்லை. ருது தான் அனைத்திலிருந்தும் தன்னை மறைத்துக் கொண்டிருந்தானே! அவரின் கண்ணில் படாது தன்னை மட்டுமல்ல தேஷ்ஷையும் தற்காத்துக் கொண்டான். எல்லாம் இந்த ஒரு நாளுக்காகத்தான்.

என்று பணம், பதவிக்காக தன் மனைவியை இழந்து மகனின் கண்ணீரை கண்டாரோ அன்றே தன் குடும்பம் எனுமளவில் மனதில் மாற்றம் கொண்டிருந்தார் கைலாஷ். அந்த மாற்றமே அவரை தற்போது அதீத பலமிருந்தும் அடங்கிப்போக வைத்திருக்கிறது. இதுவே ருது இடத்தில் வேறொரு காவல்துறை அதிகாரி இருந்திருந்தால், நிச்சயம் அவனை கொன்று அடுத்த நிமிடம் கெத்தாக வெளியில் வந்து கை ஆட்டியிருப்பார் கைலாஷ்.

கொலைகாரனோ, திருடனோ வெளியில் எப்படிப்பட்டவனாக இருப்பினும் தன் குடும்பம் என்று வருகையில் நல்லவனாக இருந்திடவே முயல்கின்றனர். அதில் கைலாஷ்ஷும் பொருந்துவார்.

இதனை ருது உணர்ந்தே இருந்தான். அவனிடம் விரக்திப் புன்னகை மட்டுமே! இழக்க வேண்டியவற்றையெல்லாம் இழந்த பின்னர் திருந்தி என்ன பயன் என்பதன் பொருள் பொதிந்த புன்னகை அது.

அத்தோடு கைலாஷ் வெளியில்வர சிறு புள்ளி அளவு வாய்ப்பைக் கூட ருது விட்டு வைக்கவில்லை. அவர் சாகும்வரை நிச்சயம் சிறை வாழ்வு தான்.

தமிழக அரசியலையே ஆட்டி வைத்தவரை மொத்தமாக அழிக்கக் காத்திருந்த அரசியல்வாதிகள் இச்சமயத்தை பயன்படுத்தி கைலாஷ்ஷுக்கு எதிராக ருதுவிற்கு உதவும் வகையில் காய்களை நகர்த்தியிருக்க... கைலாஷ் என்பவரின் அத்தியாயம் முற்று பெற்றிருந்தது.

இந்த முடிவுக்காக அவர் ஆடிய ஆட்டம் கொஞ்சமில்லை. இழந்ததன் மதிப்பீடு... இழந்த பின்னரே உணர்ந்து கொண்டார். வருந்தி பயனில்லை. மகனாக அவரை மன்னித்திட ருது தயாராக இல்லை. ருது கொஞ்சம் இறங்கி வந்திருந்தால், கைலாஷ்ஷின் பாவம் கொஞ்சம் நீங்கியிருக்குமோ?

இறுதியில் இருள் உலகில் தான் செய்த அனைத்தின் நகல்களையும் தானாகவே முதல்வரிடம் ஒப்படைத்திருந்தார் கைலாஷ்.

'எதற்கு இந்த ஆட்டம்?'

'எல்லாம் அடங்குவதற்குத்தான்.'

முதல்வர் வாய் திறந்து கேட்கவில்லை. கைலாஷ்ஷும் வாய் திறந்து பதில் சொல்லவில்லை.

கைலாஷ் ஒப்படைத்தவை வெளியில் வந்தால், தமிழகத்தின் அரசியலே ஸ்தம்பிக்க வாய்ப்பிருப்பதால், முதல்வர் அவற்றை என்ன செய்ய வேண்டுமோ செய்திருந்தார்.

தனிப்பட்ட முறையில் ருதுவை பாராட்டிட...

"தன் கடமை" என்ற சொல்லோடு முடித்துக் கொண்டான்.

கைலாஷ்ஷின் அத்தியாயத்தை தங்களின் வாழ்நாளிலிருந்து ருது அழித்திடவே முனைப்பாக செயல்பட்டான். முனைப்பில் வெற்றியும் பெற்றுவிட்டான். ஆனால் அந்த வெற்றியை மனதால் ஏனோ ஏற்க முடியவில்லை. தன் கைகளால் கொன்றிருந்தால் நிறைவு கொண்டிருப்பானோ?

பிறரின் அழிவிலும், வருத்தத்திலும் நிறைவு கொள்பவன் மனிதனல்ல. ருது மனிதனாக இருந்திடவே காலமும் நினைத்ததோ அவனுக்கு அந்நிறைவை தராது ருதுவை மனிதனாகக் காட்டிவிட்டது காலம்.

ருதுவிடம் ஆழ்ந்த மூச்சு ஒன்று வெளியேறியது.

"அவ்வளவு தான்'ப்பா. எல்லாம் முடிந்தது." அறைக்குள் புகுந்துகொண்டான்.

வேங்கடத்திற்கு எதுவும் புரியவில்லை என்றாலும், மகனால் நகரத்துக்கு நல்லது நடந்திருக்கிறது. அதுவே போதுமெனும் எண்ணம்.

___________________________________

அடுத்தடுத்த நாட்களில் கைலாஷ்ஷின் பரபரப்பு நீங்கி, கைலாஷ் என்பவனையே மக்கள் மறந்திருந்தனர். கைலாஷ் என்பவனின் மாற்றம், பல சிறு சிறு ரவுடிகளின் ஆட்டத்தை அதிகரித்திருக்க... மொத்தமாக தூக்கி உள் வைத்திருந்தான் ருது.

"நமக்குன்னே எங்கிருந்து தான் வருவானுங்களோ?" வழக்கம்போல் வெங்கட் புலம்பிட,

அவனிடம் முடிக்காத வழக்கு ஒன்றை கொடுத்து திசை திருப்பியிருந்தான் ருது.

"இப்போ தான் திருட்டு, கொலை, கொள்ளைன்னு இல்லாம கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்க முடியுது." மல்லிகா கிருஷ்ணனிடம் சொல்லிட...

"எல்லாம் கைலாஷ் இல்லாம போனதால் தான். மொத்த குற்றங்களையும் அவன் ஒருத்தன் மட்டுமே குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தானே" என்றார் கிருஷ்ணன்.

"கைலாஷ் இல்லைன்னா... வேற கேஸ் இல்லையா என்ன?" என்ற ருது, "அந்த கேர்ள்ஸ் ஹாஸ்டல் பஸ் ஸ்டாப்பில் பசங்க கலாட்டா பன்றாங்க தகவல் வந்ததே! அதை போய் என்னன்னு பாருங்க" என்று அனுப்பி வைத்தான்.

ராதிகாவும் உடன் செல்ல முயல...

"பீல்ட் வொர்க் உங்களுக்கு இல்லைன்னு சொல்லியிருக்கனே" என்று உட்கார வைத்திட்டான்.

"பெண்டிங் கேஸ் ரிப்போர்ட்ஸ் தனியா எடுத்து வையுங்க" என்ற ருது, தன்னுடைய அலைப்பேசி சத்தத்தில் தள்ளிச் சென்றான்.

அம்பிகா தான் அழைத்திருந்தார்.

"சொல்லுங்கம்மா?"

"தேஷ்'க்கு காய்ச்சலா இருக்கு ருது. சூடு அதிகமா இருக்கும்போல. ரொம்பவே சோர்ந்து போயிட்டான்" என்றவர், "ஷிவன்யாவுக்கு கால் பண்ணேன், பீடியாட்ரிஷன் அப்பாயின்ட்மெண்ட் வாங்கி வைக்கிறேன் சொன்னாள். ஹாஸ்பிடல் கிளம்பிட்டேன்" என்றார்.

"நானும் கிளம்பிட்டேன் ம்மா. வரேன்" என்று அலைப்பேசியை வைத்தவன், குறுக்கும் நெடுக்கும் இரண்டு முறை நடந்தான். இடையில் கைகளை குற்றி இதழ் குவித்து காற்றினை வெளியேற்றினான்.

ஷிவன்யா மருத்துவரிடம் அனுமதி பெற்றிருப்பதாக சொல்லியதும் ருது யூகித்துவிட்டான். அது இனியனாகத்தான் இருக்க முடியுமென்று. இன்று இந்த சந்திப்பு கட்டாயம் நடந்தே ஆகும். தவிர்க்க முடியாது. கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தான்.

இமையாளை கூட அசாராது நேருக்கு நேர் ஒன்றுமே இல்லையெனும் பாவனையில் கடந்துவிட்டான்.

இனியனை... நண்பனை அப்படி முடியாதென்றே தோன்றியது.

'நிச்சயம் இனியன் விலகளை காண்பிப்பான். பொறுத்துக்கோ!' என தனக்குத்தானே வலியுறுத்திக் கொண்டவனாக, தன்னுடைய வாகனத்தில் ஏறி உயிர்பித்தான்.

இனியன் தன்னை யாரோப்போல் பார்க்கவும் வாய்ப்பு உள்ளதென்பதற்கு ருதுவின் எண்ணத்திற்கு காரணம் உள்ளது. இனியன் நிறுத்திய மின்னஞ்சல்கள். வழமைப்போல் இனியன் அனுப்பிக் கொண்டிருந்தாள், ருது இனியனை முன்னரே தானாகச் சென்றும் சந்தித்திருப்பான். இனியனின் மின்னஞ்சல்களை நிறுத்தியிருக்க, நண்பனின் கோபத்தை புரிந்துகொண்டான் ருது.

காதலியிடம் தோன்றாத நடுக்கம் நண்பனிடத்தில்.

'பேசலனா இருக்கு. முகத்திலே ஒரே குத்து. தங்கச்சி மாதிரி முகத்தை திருப்பிக்கிட்டு மட்டும் போகட்டும்? நான் யாருன்னு காட்டுறேன். எப்படி பேசாமல் இருப்பான்னு பார்க்கிறேன்' என்று மனதில் நண்பனை நினைத்தவாறு மருத்துவமனை வந்து சேர்ந்தான்.

வரவேற்பு பகுதியில் விசாரித்து குழந்தைகள் பிரிவிற்குள் வந்தவன், இனியனின் அறை எண் சரிபார்த்து செல்ல அங்கு இனியன் உட்பட யாருமில்லை.

அடுத்த கணம் ஷிவன்யாவிற்கு அழைத்து விசாரித்தான்.

"பீவர் ரொம்பவே ஹைப் ஆகியிருக்கு அண்ணா. அட்மிட் பண்ணியிருக்காங்க" என்று அனுமதிக்கப்பட்டிருக்கும் சிகிச்சை அறையின் எண்ணை கூறி வைத்திட்டாள்.

சாதாரண காய்ச்சல் என்று நினைத்து வந்திருக்க... இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்றதும் அதுவரை தேஷ் குறித்து வந்திடாத பதட்டம் ருதுவினுள்.

நீண்ட எட்டுக்கள் வைத்து ஷிவன்யா சொல்லிய அறைக்கு முன்பு ருது வர, வெளியில் யாருமில்லை என கதவினைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

"வாப்பா."

"வாங்கண்ணா!"

தேஷ்ஷின் குறிப்பேட்டில் முதுகுக்காட்டி நின்றபடி எழுதிக் கொண்டிருந்த இனியனின் கை அவர்கள் இருவரின் அழைப்பிலும் யாரென்ற கணிப்பில் நின்று தொடர்ந்தது.

எழுதும் நேரம் இனியனுக்கு போதுமானதாக இருந்தது. தன்னை சடுதியில் நிலைப்படுத்திக் கொண்டான்.

குறிப்பேட்டை மேசை மீது வைத்தவன்,

"குட்டி நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தீங்கன்னா பீவர் குறைஞ்சிடும். அப்புறம் ஐஸ்க்ரீம், சாக்லெட் எல்லாம் நிறைய சாப்பிடலாம் ஓகேவா?" எனக் கேட்டு குழந்தையின் கன்னம் தட்டி நிமிர்ந்தான்.

"பீவர் குறையும் வரை ட்ரிப்ஸ் போடுங்க. சிக்ஸ் ஹவர்ஸ் ஒன்ஸ் சிரப் கொடுங்க. நடுவில் அப்பப்போ வெட் பாத் பண்ணுங்க" என அருகிலிருந்த செவிலியிடம் உரைத்தவன், "டூ ஹவர்ஸ் ஒன்ஸ் டெம்பரேச்சர் செக் பண்ணி நோட் பண்ணுங்க" என்று திரும்பினான்.

சுவற்றில் ஒரு கால் ஊன்றி மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவனையே தான் பார்த்திருந்தான் ருத்விக்.

சாதாரணமாக நிற்பவரை பார்க்கும் பார்வையில் கடந்துவிட்டான் இனியன். உள்ளுக்குள் கண் முன்னே நிற்கும் நண்பனை ஆரத் தழுவிட பரபரத்த கைகளை கோர்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டான்.

"பயப்பட ஒன்னுமில்லைங்கம்மா! குழந்தை ரொம்பவே பயந்ததினால் காய்ச்சல் வந்திருக்கு. டெம்பரேச்சர் அதிகமாக இருக்கவே, பிட்ஸ் வர சான்ஸ் இருப்பதால் அட்மிட் பண்ண வேண்டியதாகிருச்சு. மார்னிங் கம்மியாகிட்டால் கூட வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்" என்று அம்பிகாவிடம் தெரிவித்த இனியன்,

"இந்த மெடிசன்ஸ் எல்லாம் சிஸ்டரிடம் வாங்கிக்கொடுங்க" என்று ஷிவன்யாவிடம் மருத்துவ காகிதத்தைக் கொடுத்தவனாக வெளியேறினான்.

கதவினை திறந்து மூடிய ஒரு வினாடி இனியனின் பார்வை அழுத்தமாக ருதுவின் மீது படிந்து மீண்டது.

"அப்பா..."

நண்பன் சென்ற திசையிலே பார்த்திருந்த ருது மகனின் காற்றாகிய குரலில் கலைந்து அருகில் சென்றான்.

"தேஷ் குட்டி ஸ்ட்ராங் பாய் தானே! அப்புறம் என்னதிது? ஹாஸ்பிடல் பெட்டில் வந்து படுத்துட்டாங்க. பாட்டி பயந்துட்டாங்க பாரு" என்று தேஷ்ஷின் அருகில் அமர்ந்த ருது, குழந்தையின் நெற்றியில் கை வைத்து ஆதுரமாக வருடிக் கொடுத்தான்.

"சாரிப்பா..." என்று தேஷ் மொழிய, விட்டுச்சென்ற தன்னுடைய ஸ்டெத்தை எடுக்க கதவினைத் தட்டிவிட்டு உள்ளே வந்த இனியனுள் மெல்லிய வலி. லாவகமாக மறைத்துக் கொண்டு வெளியேறிவிட்டான்.

ருது கண்களை இறுக மூடி திறந்தான்.

ஷிவன்யா தனது அண்ணனின் மகன் என்று சொல்லியதுமே தேஷ் தனது ருதுவின் மகன் என்று இனியன் புரிந்து கொண்டான்.

இருப்பினும் அவனால் சிலதை ஏற்று கடக்க முடியவில்லை. தனது அறைக்கு வந்தவன் இருக்கையில் அமர்ந்து மேசையில் தலை கவிழ்ந்து படுத்துவிட்டான்.

ஏதோ ஒரு புள்ளியில் தனது தங்கையின் நம்பிக்கை உண்மையென்று இருந்திடாதா என்கிற இனியனின் எண்ணம் பொய்த்துப்போனது.

கண் முன்னே காணும் காட்சியை நம்பிட மனம் அழுத்திய போதும், இனியனால் ஏனோ நண்பனை விட்டுக்கொடுக்க முடியவில்லை.

'இமயா...' தங்கை குறித்து அவனது கவலை அதிகமாகியது.

'ருதுவின் மனைவி எங்கே?' தோன்றிய கணமே, 'அவனே வேணாங்கிற போது அந்தப்பொண்ணை பற்றி தனக்கெதற்கு?' என ஒதுக்கி வைத்தான்.

ஷிவன்யா மருந்துகள் வாங்கிட செல்ல... தேஷ்ஷும் தந்தையின் கரத்தை அழுத்தமாகப் பற்றியவனாக உறங்கிப்போனான்.

"இந்த தம்பி தான் இனியனா?" அம்பிகா கேட்டிட, எப்படிம்மா எனும் கேள்வி பொதிந்த பார்வை மட்டுமே ருதுவிடம்.

"நீ அவரை பார்த்திட்டே இருந்த பார்வையில் ஒரு யூகம்" என்ற அம்பிகா, "போய் பேசலாமே ருது" என்றார்.

"செம கோபத்தில் இருக்கான் போலம்மா!"

"அப்படியே நீ பயந்தவன் தான் போ" என்ற அம்பிகா, "இறங்கிப்போகும் இடத்தில் நீதான் இருக்க ருது. உண்மை தெரியும் வரை தான் அவங்க கோபமெல்லாம். நீ முன்ன ஒரு அடி வைப்பதில் தப்பில்லை" என்றார்.

விடயமறிந்து வேங்கடமும் வந்துவிட்டார். அவர்களது பேச்சு நின்றுபோனது.

"குழந்தைக்கு இப்படின்னா உடனே சொல்லமாட்டிங்களா?" என்று கடிந்தவர், "எழுந்திருடா" என்று ருதுவை கிளப்பிவிட்டு தேஷ் அருகில் தான் அமர்ந்துகொண்டார்.

வேங்கடத்திற்கு தேஷ் என்றால் கொள்ளைப்பிரியம். அதனை சின்ன சின்ன செயலிலும் தன்னைப்போல் காண்பித்திடுவார்.

மருந்துகள் வாங்கிக்கொண்டு சிவன்யாவும் வர, நால்வரும் தேஷ்ஷின் உடல் சூடு குறைவதற்காகக் காத்திருந்தனர்.

இரவு யாராவது ஒருவர் தான் உடனிருக்க வேண்டுமென செவிலி சொல்ல, ருது தானிருப்பதாக சொல்லி மற்ற மூவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்திட்டான்.

மதியம் அங்கு வந்தது முதல் காக்கி உடையிலே தான் இருக்கின்றான்.

இரவு ஒன்பது மணியளவில் பார்வையிடலுக்கு இனியன் வர, தேஷ்ஷிடமிருந்து தள்ளி நின்றுகொண்டான் ருது.

குழந்தையை பரிசோதித்த இனியன்,

"என்ன சாப்பிட்டான்?" எனக் கேட்டான்.

ருது தன்னையா என்பதைப்போல் அவ்வறையை சுற்றிப் பார்த்திட, அதுவரை அங்கிருந்த செவிலியும் அப்போதுதான் வெளியில் சென்றிருப்பார் போலும்,

"என்கிட்டவா கேட்கிறீங்க?" என இதழுக்குள் மறைத்த புன்னகையோடு ருது கேட்டிருந்தான்.

"இங்க நீங்க தானே இருக்கீங்க?" என்று கட்டுப்பாடு கேட்ட இனியன், "பேபி ஓகே. டெம்பரேச்சர் குறைய ஆரம்பிக்கிது" என்று குறிப்பேட்டை பார்வையிட்டுக்கொண்டே சொல்லிய இனியன், "பாதி நேரத்துக்கு பீவர் இருந்தால் சிரப் கொடுங்க. மார்னிங் வந்து பார்க்கிறேன்" என்று வெளியேற முயல ருது இனியனின் கையினை பற்றி பிடித்திருந்தான்.

"இனியா!"

"வேணாம்... சப்புன்னு அறைஞ்சிடுவேன்" என்ற இனியன், "வேணாம் போனவங்க அப்படியே இருங்க" என்று ருதுவின் பிடியிலிருந்து தன் கையை உருவிக் கொண்டான்.

"நீ சொல்லிட்டுப்போனது பொய்யாதான் இருக்கும்ன்னு இத்தனை வருடம் நம்பிட்டு இருந்த எங்களை மொத்தமா முட்டாளாக்கிட்டல?" என வலியோடுக் கேட்டிருந்தான் இனியன்.

"இல்லைடா" என்று பேச முனைந்த ருதுவை வாயில் விரல் வைத்து பேசாதே என்று தலையாட்டிய இனியன்,

"ஏதோவொரு விளக்கம்... கடந்து போன வாழ்வை திருப்பிக் கொடுத்திடும்மா? நீ சொன்னதை நம்பாமல் பைத்தியக்காரி மாதிரி உன்னை மட்டுமே நினைச்சு வாழ்ந்திட்டு இருக்கவளோட வலி தான் ஒன்னுமே இல்லைன்னு ஆகிடுமா?" எனக் கேட்டிருந்தான்.

சொல்வதற்கு ஆயிரமாயிரம் பதில்கள் இருந்தும் மௌனமாக நின்றிருந்தான் ருத்விக்.

"இப்படியே யாரோ மாதிரியே கடந்திடுவோம். இனியாவது நான் என் தங்கச்சி வாழ்வை பார்க்கணும்" என்று நண்பனுக்கு வார்த்தையால் வலிக்க வலி கொடுத்து நகர்ந்த இனியன்,

"முடியலடா" என்று தழுதழுப்பாக மொழிந்து ருதுவை தாவி அணைத்திருந்தான். ருதுவின் அணைப்பும் கண்ணீரோடு இறுகியது.

நட்பு...
விந்தையான பந்தம்.
சொல்லில் அடங்கிடாத சொந்தம்.
மூன்றெழுத்தில் உலகத்தை நிரப்பிடும்.

பல உறவுகளை மிக எளிதாக தன்னகத்தில் அடக்கிவிடும்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 23

தங்களின் வலி, சோகம்...

பிரிவின் துயரை ஒற்றை அணைப்பில் ஈடு செய்திட நினைத்தனரோ?

ருத்விக் - இனியன்

பெரும் வருத்தத்திலிருந்து மீட்டெடுக்க சிறு அணைப்பு போதுமா? அவர்களுக்கு போதுமானதாகவே இருந்தது.

"மச்சான்..."

ருதுவின் தழுதழுப்பில் அணிப்பிலிருந்து விலகிய இனியன், நண்பனின் கன்னத்தில் பளாரென்று ஒன்று வைத்தான்.

கன்னம் வலித்த போதும் ருதுவின் இதழ்கள் நீண்டது. கண்களில் ஏக்கத்தின் சுவடு மினுமினுப்பாய்.

இனியனால் ருதுவின் அம்முகத்தை வருத்தத் தோன்றவில்லை. இருப்பினும் தன் கோபம் தீர மற்றொரு கன்னத்திலும் அடித்தவன், மீண்டும் இழுத்து அணைத்திருந்தான்.

"சாரி கேட்கணுமா?"

"கொன்னுடுவேன்."

"கோபம் போயிடுச்சா?"

"இந்த முகத்தை பார்த்த அப்புறமும் இருக்குமா?"

"பேசலாமா?"

"பெர்மிஷனெல்லாம் கேட்குறீங்க டிசி சார்."

இனியனுக்கு நிறைய கேட்க வேண்டும். ருதுவிற்கு நிறைய சொல்ல வேண்டும். இரண்டுமே அங்கு நிகழவில்லை. இருப்பினும் எவ்வித முன் நிகழ்வின் சுவடுமின்றி நட்பினை மட்டுமே பற்றாய் கொண்டு இயல்பாகியிருந்தனர்.

ஒரு உறவு போதும். பல வருடங்கள் சென்றும் மீண்டும் ஒருநாள் சந்தித்திடும்போது முன்கதை எதுவுமின்றி பற்றிக்கொள்ளும் ஓர் உறவு போதும். உன் வாழ்வை அழகாக்கிட. உன் தனிமையை அர்த்தமாக்கிட.

இங்கு ருதுவிற்கு அப்படியொரு உறவு இனியன்.

எதையுமே கேட்டிடாது தன் மீது இந்நொடியும் நம்பிக்கை வைத்துள்ள இனியனின் இந்த ஆத்மார்த்த நட்பு போதுமானதாக இருந்தது. இனி எதையும் இனியனிடம் மறைக்கக்கூடாது என ருது எண்ணுவதற்கு.

கைலாஷ் தண்டனையை ஏற்ற நொடி முதல் மனதில் அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தை இறக்கி வைத்திட நினைக்கிறான். அத்தனை எளிதாக ஏதோ ஓரிடத்தில் இறக்கிட முடியாதே! நண்பனிடம் கொட்டி கவிழ்த்திட முயன்றுவிட்டான்.

ருது திரும்பி தேஷ்ஷை பார்த்திட...

"நல்லா தூங்குவான். மார்னிங் தான் எழுவான்" என்று சொல்லிய இனியன், செவிலியை அழைத்து தேஷ்ஷுடன் இருக்க பணித்தான்.

"சாப்பிட்டியா?"

கேட்ட நண்பனின் அக்கறையில் ருதுவின் கண்கள் பனிக்கும் போலானாது. சிரித்து மறைத்தான். எத்தனை நாளாயிற்று இவ்வார்த்தையை அக்கறையாக, உரிமையாகக் கேட்டு.

"கேன்டின் போகலாம்" என்ற இனியன், தன்னறைக்குச் சென்று கோர்ட் மற்றும் ஸ்டெத்தை கழட்டி வைத்துவிட்டு வந்தான்.

"யூனிஃபார்ம் சேன்ஜ் பண்ணியிருக்கலாம்." ருதுவின் காக்கி உடையை பார்த்து இனியன் சொல்ல...

"பழகிப்போச்சு" என்ற ருதுவிடம் மனதில் பல யோசனை. எங்கு ஆரம்பித்து எதில் தொடர்ந்து எங்கு முடிப்பதென.

கேன்டின் வந்ததோ, அமர்ந்ததோ, இனியன் சென்று இருவருக்கும் உணவு வாங்கி வந்து முன் வைத்ததோ ருதுவின் சிந்தையில் பதியவில்லை.

"என்ன தின்கிங் ருது? எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம். பர்ஸ்ட் சாப்பிடு" என்றான் இனியன்.

ருது கை கழுவி வர எழும்பிட, இனியன் உணவடங்கிய தன் கரத்தை ருதுவின் முன்பு நீட்டியிருந்தான்.

"இனியா!" இம்முறை ருதுவின் கண்ணில் நீர் திரண்டு உருண்டது. துளியாய்.

"என்னடா? சாப்பிடு" என்ற இனியன், "நான் கொடுத்ததே இல்லையா என்ன?" எனக் கேட்டான்.

ருதுவும் நெகிழ்வாய் வாய் திறந்து வாங்கிக்கொண்டான். இனியன் முழு உணவையும் ஊட்டி முடித்தே விட்டான்.

இனியனால் ஓரளவுக்கு நண்பனின் மனதில் சுமக்க முடியா பாரம் உள்ளதென்று புரிந்துகொள்ள முடிந்தது. அது என்னவாக இருந்தாலும், அவன் சொல்லி முடிக்கும் தருணம் தான் பக்கபலமாக நிற்க வேண்டுமென நினைத்தான்.

என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், உனக்கு நான் இருக்கிறேன். எப்போதும் நான் உன் இனியன் தான் என்பதை உணர்த்துவதற்கே இனியன் எவ்வித தயக்கத்தையோ, தடுமாற்றத்தையோ இத்தனை வருடங்கள் பிரிந்து இருந்தோம் என்ற ஒத்துக்கத்தையோ காண்பிக்காது முன்பு போல் இயல்பாய் நடந்து கொள்கிறான்.

சிறிய செயலில் உனக்கு நானிருக்கிறேன் என்பதை காட்டிவிட்டான்.

எவ்வித எதிர்பார்ப்புமின்றிய ஒற்றை அன்பு போதும்... இப்புவியில் உன்னை சுகவாசியாக ஜீவிக்க வைத்திடும்.

இருவரும் மருத்துவமனைக்கு முன் பகுதியிலிருக்கும் பூங்காவிற்குள் நுழைந்து அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர்.

ருது மௌனத்திருக்க... இனியனின் அலைப்பேசி அழைத்தது.

"சாப்பிட்டேன். வர லேட்டாகும் டா."

இனியன் பதில் சொல்லியதிலே இமையாள் என கண்டுகொண்டான் ருது.

"ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல?"

அலைபேசியை பாக்கெட்டில் வைத்த இனியன், ருது கேட்டதற்கு மெல்ல புன்னகைத்தான்.

"இல்லைன்னு சொல்லமாட்டேன்" என்றான்.

அடுத்து ருதுவிற்கு என்ன எப்படி பேசவென்று தெரியவில்லை. இனியனிடம் இத்தகைய புரிதலை ருது எதிர்பார்க்கவில்லை. திட்டுவான், கத்துவான், இனி பேசவே பேசாதே என்று விலகி செல்வானென்று தான் ருது நினைத்திருந்தான்.

நண்பனை நினைக்கையில் தான் கொண்ட நட்பில் கர்வமாக உணர்ந்தான் ருது.

"சொல்லணும் அவசியமில்லை ருது. உன்னை வருத்தி அதை தெரிஞ்சிக்கணும் இல்லை. இமையாள் விஷயத்தில் நீ துரோகம் செய்திருப்பன்னு நான் நம்பமாட்டேன். உன் காதலை பக்கமிருந்து பார்த்திருக்கேன். ஏதோ மீள முடியா சுழலில் மாட்டிக்கிட்ட... உன்னோடு சேர்ந்து இமையாவும் அதை சுமக்க வேண்டான்னு விலகி போயிட்ட... இதைக்கூட என்னால் புரிஞ்சிக்க முடியாதா? நீ கஷ்ட்டப்பட்டு எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்" என்ற இனியனின் கரத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டான் ருது.

"நான் சொல்லணும் இனியா! மூச்சு முட்டுது. இறக்கி வைக்க முடியாத பாரம். ஆனாலும் உன்கிட்ட கொட்டனும் தோணுதே" என்ற ருது,

முதல் வரியிலே இனியனுக்கு பெரும் அதிர்வை கொடுத்திருந்தான்.

"ருது!?"

"எஸ்... கைலாஷ் தான் என்னை பெத்தவர்."

அப்போதும் அவரை அப்பா என்று சொல்ல ருதுவின் மனம் இடம் கொடுக்கவில்லை.

பிடித்த கரத்தை விடாது ருது அனைத்தும் சொல்லி முடித்தான். பல இடங்களில் இனியனின் நெஞ்சம் நண்பனுக்காக விம்மியது. முகம் கண்டிடாத அவனது தாய்க்காக துடித்து அடங்கினான். இதில் தவறிழைக்காத பிஞ்சுக்காக பரிதாபாப்பட்டான்.

தற்போது இனியனின் பிடி அழுத்தத்தில் இறுகி இருந்தது.

இங்கு தாங்கள் ருது விட்டுச்சென்றதில் அவன் மீது கோபம் கொண்டு இருந்த தருணம், அவன் எத்தகைய பெரும் துயரை கடந்து வந்திருக்கிறான் என்று நினைக்கையிலே இனியனுக்கு அத்தனை வலியாக இருந்தது.

இதற்கு என்ன ஆறுதல் சொல்ல வேண்டுமென்று இனியனுக்குத் தெரியவில்லை.

ருதுவை ஆதுரமாக தன் அணைப்பிற்குள் பொத்திக் கொண்டான்.

ஏங்கிய அரவணைப்பு நண்பனிடம் கிட்டிட, அவனது மார்பில் நெற்றி முட்டி அடக்கி வைத்திருக்கும் பாரத்தை கண்ணீரால் கரை சேர்த்தான் ருது.

"எல்லாத்தையும் நீயே முடிவுக்கு கொண்டு வந்துட்ட ருது. அப்புறமும் எதுக்கு இந்த தவிப்பு" என்ற இனியனின் கரம் தன் மார்பில் அழுந்தியிருக்கும் நண்பனின் பின்னந்தலையை வருடிக் கொண்டிருந்தது.

"இதை நீ அப்பவே சொல்லியிருக்கலாம் ருது." இனியனிடம் பெரும் ஆதங்கம்.

"அப்போ நானிருந்த மனநிலை..."

"புரியுது. கொஞ்சம் கோடிட்டு காட்டியிருந்தாலும் உன்னை தனியா விட்டிருக்கமாட்டேன்" என்ற இனியன், "ஷிவன்யா பேமிலிக்கு நிறையவே தேன்க்ஸ் சொல்லணும்" என்றான்.

"ம்ம்ம்... அம்பிகா அம்மா மட்டும் இல்லைன்னா இந்த தெளிவுக்கூட எனக்கு இருந்திருக்காது" என்றான் ருது.

இப்படி நடந்து முடிந்ததையே பேசி ருதுவை மேலும் கவலைக்கொள்ள வைத்திட விரும்பாத இனியன் லாவகமாக பேச்சை மாற்றி ருதுவையும் சில நிமிடங்களில் இயல்பாக்கியிருந்தான்.

"இமையாளிடம் எப்போ சொல்லப்போற?"

"அவளிடம் சொல்ற மாதிரியே இல்லை" என்ற ருது, "இப்போ நீ வந்த மாதிரியே, எதுவுமே என்னைப்பற்றி தெரியாமல் என் காதல் மட்டுமே போதும்ன்னு அவ வரணும்" என்றான்.

இனியன் ருதுவை வெட்டவா குத்தவா என்கிற ரீதியில் பார்த்திட...

"பின்னாடி எங்க காதலில் இதுவொரு கருப்பு புள்ளியா இருந்திடக்கூடாதே மச்சான்" என்றான் ருது.

"திஸ் இஸ் டூ மச் டா. அவள் கோபத்தில் இருக்காள். எப்படி வருவாள். அதுவும் தேஷ் இருக்கும் போது?" இம்முறை தங்கைக்காக கோபம் கொண்டான் இனியன்.

"நீ வந்த தானே! எதுவும் தெரியாமல் ஏத்துக்கிட்ட தானே! நான் இப்போ சொல்லாமல் இருந்திருந்தாலும் என்கிட்ட நார்மலாகியிருப்பதானே!" என்ற ருதுவின் புஜத்தில் குத்திய இனியன்,

"ரொம்ப பண்றடா" என்றான்.

சிரித்த ருது, "சீக்கிரம் கல்யாணம் பண்ணி கூடவே வச்சிக்கணும் டா" என்றான்.

"அப்போ அவள் விருப்பமில்லாமல் தான் நீ தாலி கட்டணும்" என்றான்.

"ம்ம்ம்... பார்ப்போம். எப்படி நடக்குமோ அப்படித்தானே நடக்கும்" என்ற ருதுவை முறைத்துக்கொண்டே, "அவளை திரும்ப ஏதும் கஷ்டப்படுத்த நினைச்ச... நான் உன்கிட்ட அவளோட அண்ணனா மட்டும் தான் நடந்துப்பேன்" என்று இனியன் விரல் நீட்டி எச்சரித்தான்.

"உண்மையெல்லாம் தெரியாமல்... இன்னொருத்தரோட புருஷனை அவள் தேடிவர சான்ஸே இல்லை" என்ற இனியனிடம்,

"அதுக்கும் ஏதும் நடக்கும் டா" என்ற ருது, "சாதகமாக நடப்பதை யூஸ் பண்ணிப்பேன். என் பக்கமிருந்து என்னை என்ன வேணாலும் பண்ணிக்கட்டும்" என்றான்.

இனியன் ஆயசாமாக தலையை உலுக்கினான்.

"உன் லாஜிக்கே புரியல."

"ஷிவாவே வந்து லவ் சொல்லணும் நினைக்கிறல நீ?" என்ற ருதுவின் கேள்வியில் இனியன் அப்பட்டமாக அதிர்வைக் காட்டினான்.

"இதுவும் அப்படித்தான். நம்மை விரும்புறவங்க, நாம் எப்படியோ அப்படியே நம்மளை ஏத்துக்கணும்" என்றான்.

"இங்கு நான் மட்டுமே அப்படின்னா, இமையளை பார்த்த நொடி எல்லாம் சொல்லி என் பக்கம் வரவழைத்திருப்பேன். எங்க ரெண்டு பேரோட வாழ்வில் தான் தேஷ் வாழ்வு அடங்கியிருக்கு. இமையாளை பொறுத்தவரை தேஷ் அவளோட மகனா அவள் மனதில் பதியனும். அவள் ஏத்துக்கணும். அப்போ தான் என் பக்கம் அவளால் புரிஞ்சிக்க முடியும். எவ்வித வருத்தமோ கோபமோ இல்லாமல் என்னோட அவளால் வாழ முடியும்" என்று ருது விளக்கிட, அதிலுள்ள நியாயம் இனியனுக்கு புரிந்த போதிலும்,

"இமையாளாக வருவது சாத்தியமற்றது" என்றே கூறினான்.

ருதுவிடம் மென் முறுவல்.

இமையாளிடம் எதையும் சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டான்.

ருது இதனை சொல்லாமல் இருந்திருந்தாலும் கூட இனியன் தங்கையிடம் சொல்லிட மாட்டான். ருதுவாக அவனது பக்கங்களை விளக்குவது வேறு, பார்வையாளராக தான் சொல்வது வேறென்று இனியனுக்குத் தெரிந்ததால் ஒப்புக்கொண்டான்.

_________________________________

தினமும் காலை மாலையென முன்னால் வந்து நிற்கும் ருது மூன்று தினங்களாக வரவில்லை என்றதும் இமையாள் சோர்ந்து போனாள்.

அவளை பொறுத்தமட்டில் ருது வேறொரு பெண்ணின் கணவன். குழந்தை உள்ளது. இருப்பினும் இன்னொரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி அவனை அவளால் பார்க்க முடியவில்லை.

முன்னால் வந்தால் கோபத்தைக் காட்டுபவள், அவனை மனதால் தேடவும் செய்கிறாள்.

'இமயா என்னாச்சு உனக்கு? இது சரியில்லை' என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவள் அவசரமாக பள்ளிக்கு கிளம்பிச் சென்றாள்.

"லீவெல்லாம் விட்டாச்சு சொன்னாள். இப்போ அரக்க பறக்க கிளம்பிப் போகிறாள்" என்று தீபா புலம்ப,

"அட்மிஷன் வொர்க் இருக்கும்மா. வன் வீக். அப்புறம் வீட்டில் இருப்பாள்" என்றான் இனியன்.

"அவளை ஒன்னும் சொல்லிடக் கூடாதே" என்ற தீபா, "கொஞ்ச நாளா ரொம்ப சந்தோஷமா இருக்கியே என்ன காரணம்?" எனக் கேட்டார்.

"கிடைக்க வேண்டியவங்க கிடைச்சிட்டாங்க. அதனாலவா இருக்கும்" என்றவனை தீபா குறுகுறுவென பார்த்து வைத்தார்.

"என்னம்மா?"

"பொண்ணு ஓகே சொல்லிட்டாளா டா?"

"அய்யோ அம்மா... அப்பா இருக்கார் வீட்டில்" என்று இனியன், சுரேந்தரின் அறையை பார்த்தவாறு சொல்ல, அவரே அலுவலகம் செல்ல கிளம்பித் தயாராகி வந்தார்.

"இமயா பையன் பார்க்க சொல்லியிருந்தாள். இதுல நாலு போட்டோ இருக்கு. என்னன்னு பாரு" என்று கவர் ஒன்றை வைத்தவர் மகனின் அதிர்வை பார்க்காது சென்றுவிட்டார்.

ருதுவை நேரில் பார்த்தது முதல் இமையாளால் நிலையாக இருக்க முடியவில்லை. அதுவும் ருது எதுவும் நடவாததைப்போல் முன்னால் வந்து சீண்டிட, மீண்டும் தன் மனம் அவன்பால் ஈர்க்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சியே சுரேந்தரிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள்.

இமையாளை பொறுத்தமட்டில் தன் காதலால் ருதுவின் வாழ்வை கெடுத்திடக் கூடாது என்கிற பயம். அதற்காக மட்டுமே இந்த சம்மதம்.

அவளாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று, குழந்தை இருக்கும்போதே ருது ஏன் தன்னைத் தேடி வர வேண்டும் என்பது தான்.

'காதல் தான் இல்லை. நட்பாவது வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறானா?' என நினைத்தாளே தவிர அப்போதும் ருதுவை அவள் தவறாக நினைக்கவில்லை.

ஆனால் அவள் முடிவெடுத்துவிட்டாள். இனி அவளது வாழ்வில் ருது இல்லை.

'நட்புக்கு பின்னால் காதல் அமையலாம். ஆனால் காதலுக்கு பின்னால் நட்பு அமையாது.'

இதனை இமையாள் ஆணித்தரமாக நம்பினாள். தன் காதலால் ருதுவின் வாழ்வில் சிக்கல் வந்துவிடக் கூடாதென மனதின் காதலை புதைத்துவிட்டு வலியோடு மற்றொரு வாழ்வை ஏற்கும் முடிவுக்கு வந்துவிட்டாள்.

ருது அவளை யாரோபோல் கடந்து அவள் பக்கம் திரும்பாமலே இருந்திருந்தால் கூட இமையாள் தன் காதலோடு மட்டும் வாழ்ந்திருப்பாளோ? அவன் பக்கம் வர, தூரம் செல்வதே சரியென சொல்கிறது அவளது மனம்.

'தூரமே தூரமாய்' அவளது காதலை தள்ளி வைத்திட முடிவு செய்திட்டாள்.

இனியன், சுரேந்தர் வைத்துச்சென்ற உரையை கையால் கூட எடுக்கவில்லை.

"பார்க்கலையாடா?"

"டூ ஹவர்ஸில் பிளைட் ம்மா. அரேஞ் பண்ணனும். வந்து பார்த்துக்கிறேன்" என்று எழுந்து சென்ற இனியன், ருதுவிற்கு அழைத்து பொறிந்து தள்ளினான்.

"இப்போ சந்தோஷமா உனக்கு? நீயே ஆப்பு வசிக்க உனக்கு" என்று காட்டமாகியிருந்தான்.

"என்னன்னு சொல்லாமல் ஏன்டா கத்துற?" என்ற ருது, "நீ மெடிக்கல் கான்பிரன்ஸுக்கு பிரான்ஸ் போறன்னு சொன்ன. பிளைட் எப்போ?" எனக் கேட்டான்.

"இது ரொம்ப முக்கியம்" என்று கடிந்துகொண்ட இனியன், "இமையாளுக்கு அப்பா பையன் பார்த்திருக்கிறார் டா. இமையாள் என்கிட்ட கூட சொல்லல. அப்பாவிடமே சம்மதம் சொல்லியிருக்காள்" என்றான்.

"இண்ட்ரெஸ்டிங்" என்ற ருது, "நீ பார்த்து போயிட்டு வாடா. இதை பார்த்துக்கலாம்" என்று வைத்துவிட்டான்.

மனதில் ஓர் அலைப்புறுதல். மீண்டும் தன்னவளை இழந்திடுவோமோ என்கிற பயம் மனதை கவ்வியது.

'பேசாமல் உண்மையை சொல்லிடலாம். அடுத்த நொடி அவளே என்கிட்ட வந்திடுவாள்.' நினைத்த நொடி வேண்டாமென நினைத்தான்.

'அப்படி வந்தால் அங்கு உன் காதல் காணமல் போயிடும். தேஷ்'க்கான உறவுமுறை கேள்விக்குறியாகிடும்' என உழன்று கொண்டிருந்தவனின் சிந்தையை சில மணிகளுக்கு பின் கலைத்திருந்தான் வெங்கட்.

வெங்கட் சொல்லிய நிகழ்வு இமையாளே ருதுவை தேடி வரவழைத்திருந்தது. அந்த சந்தர்ப்பத்தை ருது தனக்கு சாதகமாக்கிக் கொண்டிருந்தான்.

 
Status
Not open for further replies.
Top