ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரமே தூரமாய்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 9

இலையோடும் மலரோடும் உன் விரல் ரேகை... வழியெல்லாம் வழியெல்லாம் உன் குழல் வாசம்.
நீரோடை முழுதும் உன் வேர்வைக் கயல்கள்... முட்புதரில் இடையில் உன் பார்வை முயல்கள்.
இத்தேடல் முடிந்தால் நீ அங்கே இருந்தால்... என் நெஞ்சம் உடைந்தாலும் உடையும்!
- மதன் கார்க்கி.

_____________________

மியூசிக் பிளேயர் ஒலித்துக்கொண்டிருக்க ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக் கொண்டிருந்தான் ருத்விக்.

சட்டென்று கேட்ட பாடலின் இசையும், வரிகளும் ஏதோ ஓர் வலி நிறைந்த அர்த்தத்தை மனதில் கூர் தீட்டிட, ருதுவின் விரல்கள் உறைந்தது.

அவ்வரிகளில் அவனுக்கு முன்பு அவனது இதயம் ஒன்றிப்போனது.

ஏதோ சுமக்க முடியா நினைவொன்று உள்ளுக்குள் ஆட்டுவித்தது.

அவனை அசைத்து பார்த்திட முயன்ற எண்ணத்தை முயன்று ஒதுக்கியவன், வேகமாக பாடலினை அணைத்திருந்தான்.

அவ்வளவு நேரமிருந்த இலகுத்தன்மை ருதுவிடம் இல்லை. இரும்பென விறைத்திருந்தான்.

வண்டியும் காந்தா பேட்டைக்குள் நுழைந்தது. நுழைவு வாயில் வளைவினை ருது விழியுயர்த்தி பார்த்திட, ஜீப்பின் மேல் முன் பகுதியில் வந்து விழுந்தது ரத்தம் தோய்ந்த உடல்.

சட்டென்று கண்முன் உயிரற்ற சடலம், அதுவும் சிவப்பு நிறத்தில் வந்துவிழ, ருதுவிடம் தன்னைப்போல் சிறு அதிர்வு எழுந்து அடங்கியது.

வெங்கட் "அய்யோ" என்று அலறிவிட்டான்.

"இங்க வரும்போதே தெரியும் சார். உங்களுக்கு வரவேற்பு இப்படித்தான் இருக்கும்ன்னு" என்ற கிருஷ்ணன் இதிலெல்லாம் எனக்கு அனுபவம் நிறைய எனும் விதமாக, வண்டியை இயக்கினார்.

வண்டியின் மீதிருக்கும் உடலிலிருந்து ருதுவின் கருவிழிகள் அசையவில்லை.

"உன் கண் முன்பே ஒரு கொலை செய்கிறேன். உன்னால் என்ன செய்துவிட முடியும்" என எதிராளி தனது காக்கிக்கு விடுக்கும் சவாலாகத்தான் ருதுவிற்கு தெரிந்தது.

"மொத்தம் அறுநூறு குடும்பம் இருக்கு சார். சிட்டியிலே பெரிய பேட்டை இதுதான். ஆரம்பத்தில் ஏதோ தலைவர் பேருதான் இந்த பேட்டைக்கு இருந்தது. கைலாஷ் இருந்த வரை அவன் பெயர் சொல்லி சொல்ல ஆரம்பிச்சாங்க. இப்போ முழுக்க காந்தா கண்ட்ரோல் அப்படிங்கிறதால... காந்தா பேட்டை ஆகிப்போச்சு. இப்போ இந்த பேட்டையோட உண்மையான பெயர் என்னன்னு கேட்டால் அந்த கைலாஷ்க்கே நினைவிருக்காது" என்று விவரம் சொல்லியபடி, பேட்டையின் உள்ளே இறுதியில் பெரிய மைதானத்தின் நடுவில் இருந்த வீட்டிற்கு முன்பு வண்டியை நிறுத்தியிருந்தார் கிருஷ்ணன்.

வரும் வழியில் யாவற்றையும் கூர்ந்து நோக்கியபடி தான் வந்திருந்தான் ருது. பேட்டை எனும் சொல்லுக்கே எதிராக இருந்தது அவ்விடம். சிறு குடிசை கூட அங்கில்லை. நகர்த்தில் பெரும் புள்ளிகள் வசிக்கும் பகுதிக்கு மேலாக அனைத்து வசதிகளுடன் காணப்பட்டது.

"இங்கிருக்க பசங்க எல்லாம், பெரிய பெரிய காலேஜில் படிக்கிறாங்க சார். எல்லாம் கைலாஷ் செலவு தான். செய்யுறது காந்தா. எந்தவொரு வீட்டிலும் விசேஷம் அப்படின்னா, கைலாஷ் பெயர் சொல்லி சீர் இருக்கும். இப்படி பணத் தேவைகள் செய்தே அடிமையாக்கி வச்சிருக்கான்" என்றார் கிருஷ்ணன்.

"ரொம்பத்தான் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!"

"தெரிஞ்சு வச்சு என்ன சார் பிரயோஜனம். தப்பு பண்றானுங்கன்னு தெரிஞ்சும் ஒருத்தனையும் அரேஸ்ட் பண்ண முடியலையே!" என்றார். விரக்தியாக.

"பண்ணிடலாம். கவலையை விடுங்க" என்ற ருது அந்த மைதானத்தை சுற்றி பார்வையை சுழற்ற, ஆங்காங்கே முறுக்கேறிய தேகத்தோடு ஆட்கள் நின்று உடற்பயிற்சி, கால்பந்து, ஓட்டம் என்று பயிற்சி செய்து கொண்டிருந்தனர். துப்பாக்கி சுடுதலும் இதில் அடக்கம்.

"ம்ம்ம்... நல்லாவே ட்ரெயின் பன்றாங்க." ருது மெச்சுதலாகக் கூறினான்.

"இது நல்ல விஷயத்துக்காக இருந்தால் உங்க மெச்சுதல் சரி சார். இங்கிருக்க எவனும் நல்லதுக்குன்னு சின்ன துரும்பைக்கூட அசைக்க மாட்டானுங்க" என்றான் வெங்கட்.

வண்டி அங்கு காந்தாவின் வீட்டின் முன் நின்றது முதல் மைதானத்தில் நின்றிருப்பவர்களின் பார்வை முழுவதும் அதன் மீதுதான்.

"வெட்ட வரை மாதிரியே பாக்குறானுங்க." வெங்கட் தொண்டைக்குழியை ஏற்றி இறக்கினான்.

அப்போது இடியென பெரும் சிரிப்பு.

யாரென்று பார்க்க...

கருப்பு சட்டை, பச்சை வர்ண வேட்டி அணிந்து தன்னிரு கைகளையும் அகல விரித்தபடி ஜீப்பினை நோக்கி,

"வாங்க... வாங்க..." என்ற கூவலோடு வந்தான் காந்தா.

நாற்பது வயது இருக்கும். ஆனாலும் முன் முப்பது தோற்றம்.

"எங்க பேட்டைக்கு வந்துகினதுக்கு சந்தோஷம். வரவேற்பு பார்த்தீங்கல? எம்புட்டு மாஸ் காட்டிக்கினோம்" என்று ருது அமர்ந்திருந்த பக்கம் வந்து மீசையை முறுக்கியபடி வினவினான் காந்தா.

ருது வாய் திறக்கவில்லை. காந்தாவை அவதானித்தபடி இருந்தான். ருது அணிந்திருந்த கூலர்ஸை தாண்டி காந்தாவால் ருதுவின் எண்ணவோட்டத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.

"என்ன டிசி சார். இவனை கொன்னதுக்கு கைது செய்யப் போறீங்களா?" காந்தா சிரிப்போடு வினவ...

"கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா" என்றான் ருது.

காந்தா அசராது நின்றிருக்க...

ருது வேகமாக கதவினை திறந்திட, நொடியில் சுதாரித்து பின்வாங்கியிருந்தான் காந்தா.

"ஹேய்..." அடியாட்கள் ஐந்தாறு பேர் ருதுவை தாக்கும் நோக்கில் நெருங்கிவிட்டனர். மைதானத்தில் நின்றபடி இங்கவே பார்த்திருந்தவர்களும் இவர்களை நோக்கி ஓடிவர, கை காட்டி நிறுத்தியிருந்தான் காந்தா.

"என் பேச்சைக் கேட்கலன்னா இப்படித்தான் ஏடாகூடமா ஏதும் நடக்கும்" என்ற ருது குதித்து இறங்கி, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவாறு, "ஏரியாவை பக்காவா மெயின்டெயின் பண்றீங்க. அரசாங்கம் செய்ய வேண்டியதையெல்லாம் நீங்க மக்களுக்கு செய்றீங்கன்னு கேள்விப்பட்டேன். அந்த நல்லவரை நேரில் பார்க்கணும் வந்தால்... சும்மா அதிர விட்டுடீங்க" என்று ஜீப்பின் மீது கிடந்த உடலை பார்வையால் சுட்டினான்.

காந்தா தன் ஆட்களில் ஒருவனுக்கு கண்காட்டிட, நொடியில் உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

"இந்த கொலைக்கான ஆதாரம் ஏதுமில்லைங்கிறதால தப்பீச்ச" என்று காந்தாவை நெருங்கி ஒருபக்க கூலர்ஸை இறக்கி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ருது சொல்லிட...

"ஏய்" என்று சீறினான் காந்தா.

"ஷ்ஷ்ஷ்ஷ்..." என்று வாயில் ஒற்றை விரல் வைத்து தலையை இருபக்கமும் அசைத்தவாறு விலகி நின்ற ருது...

"உனக்கு மேல ஒருத்தன் இருக்கானாமே! சொல்லி வை. மொத்தமா அழிக்கிறேன்" என்றான். காந்தாவுக்கு பின்னால் அரணாக நின்றவர்களை பார்வையால் உரசியபடி.

"என்ன அண்ணாத்தே பார்த்துக்கினு நிக்குற. அவென் எம்புட்டு தவ்லத்தா பேசிக்கினு நிக்கிறான்" என்று ஒருவன் காந்தாவை தாண்டி எகிறான்.

"கொடுக்குலாம் ரொம்ப துள்ளுதே கிருஷ்ணா அண்ணா. என்ன பண்ணலாம்?" என்று தாடையை நீவிய ருது... "தூக்கிடலாமா?" என துப்பாக்கியை எடுத்து அவனுக்கு நேராக நீட்டி, காந்தாவின் மீது குறி வைத்தான்.

"சார்..." வெங்கட் அதிர்ந்து ருதுவின் கையினை பிடிக்க... காந்தா ருதுவை முறைத்து பார்த்தான்.

"என்னா லந்து கொடுத்துக்கினு இருக்கான். சும்மா பார்த்துக்கினு இருக்கியேண்ணே. ம் ன்னு சொல்லு போட்டுடலாம்" என்று ஒருவன் மீசை முறுக்கினான்.

"நம்மக்கின வந்துக்கின போலீஸ் யார்கிட்டயாச்சும் கேட்டு தெரிஞ்சிக்கினு வந்திருக்கணும் தம்பி நீயி... உன் உதார் வுடுற வேலையெல்லாம் எங்கனான்ட வச்சிகிடாத. அப்படி வச்சிக்கின மூஞ்சு பேந்துரும்" என்று மற்றொருவன் தொடையை தட்டினான்.

"ஷ்..." என்று சலிப்பான பாவனையை காட்டிய ருது...

"இவனுங்க என்னண்ணா இன்னும் எயிட்டிஸ் வில்லன் மாதிரி டயலாக்கா பேசுறானுங்க" என்றான்.

"ச்சூ... கம்மின்னு கெடங்கடா" என்று தனது ஆட்களை அடக்கிய காந்தா...

"வேணாம் தம்பி. உசுரோட இருக்கணும்ன்னா எங்களை சீண்டிக்காம இருந்துக்க. அது முடியாதுன்னா, எந்த வூருக்கு வேணும் ட்ரான்ஸ்பரு... சொல்லிக்கினு போயிக்கிட்டே இரு" என்றான்.

"நைஸ் ஜோக் மேன்" என்று ஜீப்பின் பேனெட் மீது தாவி அமர்ந்து, தொடையில் கை ஊன்றி கூலர்ஸை கழட்டிய ருது...

"மொத்தமா நீ நிறுத்திக்கோ. முதலில் ட்ரக்ஸ் ஸப்ளை. ஸ்டூடண்ஸ் கிட்ட விற்பதை நிறுத்து" என்றான்.

"நீ என்னை ரொம்ப சீண்டுற?"

"நீ அல்ரெடி என்னை சீண்டிட்ட" என்று குதித்து இறங்கிய ருது... "நீ பில்டப் கொடுத்த அளவுக்கு இங்க ஒண்ணுமில்லை வெங்கட்" என்றான்.

அவ்வளவு தான் காந்தா உட்பட மொத்த பேரின் பார்வையும் வெங்கட்டை வெட்டவா குத்தவா எனும் ரீதியில் நிலைத்தது.

வெங்கட் மூச்சுவிடவே பயந்து நின்றான்.

"டைம் இஸ் ரன்னிங்" என்றவனாக வண்டியில் ஏறி அமர்ந்தான் ருது. அவனைத் தொடர்ந்து கிருஷ்ணன் ஓட்டுநர் இருக்கையில் ஏறிட, வெங்கட் காந்தாவை பார்த்து திருதிருவென விழித்தான்.

"சொல்லி வை சப்-இன்சு. துள்ளுறதுக்கு உடம்புல உசுரு இருக்காது" என்ற காந்தாவை கண்டு அரண்டவனாக வெங்கட் வேகமாக வண்டியிலேறினான்.

கிருஷண்ன் அமைதியாக வண்டியை திருப்பி செலுத்த, ருதுவின் விழிகள் கூர்மையாக காந்தாவின் மீது படிந்து விலகியது.

வெங்கட் உண்மையில் பயந்திருந்தான். கைலாஷ் மற்றும் காந்தாவின் வரலாறு அப்படி.

"என்ன வெங்கட் அமைதியா வறீங்க?"

ருது பேசுவதற்காகவே காத்திருந்தவன் போல் வெங்கட் புலம்பித் தள்ளினான்.

"நான் உங்களுக்கு என்ன சார் துரோகம் பண்ணேன்?

"சும்மா கிடந்த ஓணானை புடிச்சு பேண்டுக்குள்ள விட்ட மாதிரி, சும்மா இருந்தவனை சுரண்டிட்டு வந்திருக்கீங்க...

"பத்தாததுக்கு என்னையும் கோர்த்து விட்டுட்டிங்க. எனக்கு கல்யாணமாகிருச்சு சார். மனைவி கர்ப்பமா இருக்காள்" என்றான்.

"சோ, வாட்?" என்றான் ருது. சற்றும் அலட்டிக்கொள்ளாது.

"நம்மை பணிய வைக்க இவனுங்க என்ன வேணாலும் செய்வானுங்க சார். நேரடியா வந்து சீண்டியிருக்கீங்க. கவனமா இருங்க" என்று வெங்கட் பேச்சினை முடித்துக்கொண்டான்.

எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் ருது அவனுக்குத் தோன்றுவதைத்தான் செய்வான் என்பது முந்தைய நிகழ்விலே தெரிந்துவிட, இதற்கு மேல் ருதுவிடம் எடுத்து சொல்வது வீண் என அமைதியாகிப்போனான் வெங்கட்.

ருதுவிற்கு காந்தாவை சீண்ட வேண்டுமென்ற எண்ணமில்லை. அவனுக்கு கைலாஷை நேரில் பார்த்திட வேண்டும். அது அத்தனை எளிதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களே கைலாஷினை சந்திப்பதற்கு காத்திருக்கும் நிலையில், எங்கு தட்டினால் வெளிச்சம் வரும் என்பதை அறிந்து காந்தாவை வார்த்தையால் தட்டிவிட்டு வந்திருக்கிறான்.

இன்னும் சற்று நேரத்தில் கைலாஷ் ருதுவை தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரிலேயே சந்திக்கவும் செய்யலாம். ருது காத்திருக்கத் தொடங்கினான்.
______________________________________

ருதுவை நேரில் பார்க்க நேரிடுமென்று இனியனுக்குத் தெரியும். ஆனால் இப்படியொரு நிலையில், ஒரு பெண்ணுடன் பார்ப்போமென்று நினைக்கவில்லை.

ஷிவன்யா அவனுக்கு என்ன உறவென்று தெரியாது... தானே தனது கற்பனைக்கு தீனி போடக்கூடாதென மெல்ல மனதை ஆசுவாசப்படுத்திய பின்னரே வீட்டிற்கு கிளம்பிச் சென்றான் இனியன்.

இனியனுக்கு ருது ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்றிருந்தான் என்பதைக் காட்டிலும், ஷிவன்யா ஒரு ஆணுடன், அவனது கைவளைவில் நின்றிருந்தாள் என்பது அவனின் மனதை ஏதோ செய்தது. என்னவென்று விளங்கா நிலை அவனிடம்.

ஷிவன்யா ருதுவிடம் வீடியோ வைரல் என்று சொல்லியது நினைவு வர, அலைபேசியை எடுத்து என்னவென்று ஆராய்ந்தவகனுக்கு சில நொடிகளில் ருதுவின் வீடியோ கண்ணில் பட...

"ம்மா... ம்மா..." என்று கத்திகொண்டே தீபாவிடம் சென்றான்.

"எதுக்குடா கத்துற? ஒரு நாவல் நிம்மதியா படிக்க முடியுதா?" என்று அவனுக்கு மேல் கத்திக் கேட்டவர், மகனை பேசவிடாது, "புது கதைடா. ஐந்தாறு எபி தான் போயிருக்கு. செமயா இருக்குடா. நாலு பிரண்ட்ஸ் தூங்கி எழுந்து பியூச்சருக்கு டைம் டிராவல் ஆகிட்டாங்க. இப்போ இருக்க எல்லாமே அவங்க என்னவாக ஆசைப்பட்டாங்களோ அப்படி ஆகிடுச்சு. நமக்கும் அந்த மாதிரி நடக்குமாடா?" எனக் கேட்டார்.

"ம்ம்ம்மா..." தலையில் தட்டிக்கொண்ட இனியன், "அது கதைம்மா... கதை. கதையை கதையா மட்டும் பாரு" என்று கடிந்தான்.

"இப்போ நான் என்ன சொல்லிட்டேன். எனக்கும் அந்த மாதிரி போயிட்டால் தேவலாம் தோணுது. டாக்டர் படிக்கணும் ஆசைப்பட்டேன். அது நடக்கும்ல" என்றார்.

அன்னையென்றும் பாராது அவரின் தலையில் கொட்டுவோமா என்று ஒரு கணம் தோன்றிவிட்ட எண்ணத்தை நெற்றியில் தட்டி புறம் ஒதுக்கிய இனியன்...

"அப்படி ஏதும் நடக்கும் அப்படின்னா... உன் பொண்ணு அவள் லவ் பண்ணவனோட கல்யாணமாகி குழந்தை குடும்பமுன்னு செட்டில் ஆகிருக்கணும் நினை. நடக்குதா பார்ப்போம்" என்று முறைத்துவிட்டு, தான் அவரை எதுக்கு அழைத்தோமோ அதனை தானே செய்தான்.

வீடு முழுவதும் அலசியும் இமையாள் எங்குமில்லை.

'ஸ்கூல் விட்டு எப்பவோ வந்திருக்கணுமே' என நினைத்தவன் மொட்டை மாடி சென்று பார்த்தான்.

இருள் கவிழ இருந்த நேரம். முகத்தில் எவ்வித உணர்வுமின்றி சுற்று சுவற்றின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தவளின் கையில் அலைப்பேசி. அத்தனை இறுக்கமாக பிடித்திருந்தாள்.

திரையில் ருதுவின் காணொளி. அவனின் ஆளுமையானத் தோற்றத்தில், அவனது கம்பீரமான சிறு சிறு அசைவையும் இமை சிமிட்டாது உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

ஓடும் பேருந்தில் தோரணையாக அவன் குதித்து ஏறும் காட்சி அவளை பழைய நினைவு ஒன்றில் சுழல வைத்தது.

அவனுடன் பேசிக்கொண்டு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இமையாள், தான் ஏற வேண்டிய பேருந்து வந்தும், ருது ஏற சொல்லி பலமுறை சொல்லியும் அவனை விட்டு போக முடியாதென அடமாக நின்றிருந்தாள்.

"இந்த பஸ் விட்டால், அடுத்து வர தர்ட்டி மினிட்ஸ் ஆகும் லேஷஸ்" என்ற ருதுவின் வார்த்தையை கண்டுகொள்ளாதவள், "மீட் பண்றதே எப்போவாவது. உடனே துரத்த பாக்குறீங்க. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கனே" என்று அவனின் கரம் பற்றிட முனையை லாவகமாக தள்ளி நின்றான்.

"ரொம்ப தான் பண்றீங்கப்பா. கை கூட பிடிக்கக்கூடாதா?" என்பவளுக்கு காதலியேயானாலும் அவன் காட்டும் கண்ணியம் அத்தனை பிடிக்கும்.

"நீங்க பக்கத்திலிருந்தும் எட்ட நிற்பதற்கு... நான் வீட்டுக்கே போறேன்" என்று இமையாள் பேருந்தை நோக்கிச்செல்ல வண்டி நகர்ந்தது.

"அடுத்த பஸ்ஸில் போகலாம்" என்று ருது முடிக்கும் முன்னர், வேகமாக ஓடிச்சென்று பேருந்தில் ஏறி, இறுதி படியில் நின்று கையசைத்தவளை அவன் பார்த்த கண்டிப்பு பார்வை இன்றும் முதுகை சில்லிட வைக்கும்.

"ருது..." மெல்ல அவளது இதழ்கள் பிரிந்து உச்சரிக்க... சட்டென்று கண்ணீர் திரண்டு கன்னம் உருண்டது.

அந்நொடி தான் இனியன் அங்கு வந்தான்.

"இமயா!" தங்கையின் அருகில் அமர்ந்தவன், அவளின் கையிலிருக்கும் அலைப்பேசியில் ஓடும் காணொளியை கண்டு வேகமாக பறித்து அணைத்திருந்தான்.

"அண்ணா" என்ற கூவலோடு இனியனின் கழுத்தினை கட்டிக்கொண்டு அவனின் தோளில் முகம் புதைத்தவள், வீறிட்டு கதறினாள்.

"அடேய்... பாப்பா..." இனியனின் குரல் தழுதழுப்பாய்.

தங்கையின் வலியையே இனியன் இந்த சில நாட்களாகத்தான் ஆழமாக அறிகிறான். இமையாள் அழுத்தி வைத்த ரணத்தையெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாது இப்போதுதானே உடன் பிறந்தவனிடம் பகிறந்துகொள்கிறாள். அண்ணாக தங்கையின் வலி போக்கிட முடியாது துவண்டான்.

"அவங்க நானில்லாமல் ரொம்பவே நல்லா இருக்காங்கண்ணா!" அந்த வார்த்தைகளில் அப்படியொரு வலி.

இனியனுக்கு... ஷிவன்யாவிடம் பேசும்போது ருது முகத்தில் தெரிந்த சிரிப்பு, சந்தோஷம் யாவும் அவனின் மகிழ்வை பறைசாற்றிட பனித்த கண்ணீரை துடைத்தவனாக ஆமென்று மேலும் கீழும் தலையசைத்தான்.

"நாலு வருஷமாகுதுண்ணா... என்னால் இன்னும் அவங்களை கடக்க முடியல. ஆனால் அவங்க..." அடுத்து வார்த்தை வராது திக்கினாள்.

"இங்க யாரும் ஒருத்தரோட நினைப்பில் தேங்கிடுறது இல்லடாம்மா!" என்ற இனியனுக்கே தான் சொல்லியது அபத்தமாக இருந்தது. அவனுமே நண்பனின் எண்ணத்தில் தவித்துக் கொண்டிருப்பவன் தானே.

"நீ இப்படியே இருந்தால் எதுவும் மாறாது. மறக்க முடியாதுன்னு இருக்க உன் பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக்கலாம்" என்றான்.

இமையாளிடம் வறண்ட புன்னகை.






 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 10

'எல்லா காதலும் கல்யாணத்தில் சேரணுமில்லை. அப்படி சேராத காதலெல்லாம் பொய்யான காதலுமில்லை.

ஒவ்வொரு காதலும் வித்தியாசமானது. வேற வேற கதை.'

அப்படித்தான் ருதுவின் பக்கமிருந்து பார்க்கும்போது அவன் விட்டுச்சென்ற காதலுக்கு வலுவான கதை ஒன்று உள்ளது.

ருது நினைத்திருந்தால் கதையின் போக்கை மாற்றியிருக்க முடியும். ஆனால் அவன் பிழன்று போனது அவனது அன்னையின் கண்ணீரில்.

இப்போது மொத்தமாக தவித்து தனித்து நிற்கிறான்.

அவனது நலம் விரும்பி, அவனுக்காக மட்டுமே என்று வேங்கடம், அம்பிகா, தேஷ், ஷிவன்யா என்று ஒரு சிலர் இருப்பினும், அவன் உயிராக நேசித்த அவனது லேஷஸ் உடனில்லை எனும் வலியை ருது வாழ்நாள் முழுக்க சுமந்திடத்தான் வேண்டும்.

மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சன்னல் வழி கரிய இருள் வானை வெறித்த ருதுவின் மனம் முழுக்க வெற்றிடம். நிரப்பிடும் ஆளைத்தான் கடினப்பட்டு தள்ளி வைத்திருக்கிறான்.

ருதுவே எதிர்பாராமல் அவனது சிறு செயல் சமூக வலைதளங்களில் அதீத வரவேற்பு பெற்று பரவியிருந்தது. இன்றைய நகரத்தின் செய்தி ஊடகங்களில் கூட அந்த செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.

'வந்த முதல் நாளே அதிரடி காட்டி தன்னை ஒரு ஹீரோவாக நிரூபித்த காவல்துறை அதிகாரி' எனும் வரிகளோடு.

'பார்த்திருப்பாளா?'

வேண்டாமென நினைத்தாலும் ருதுவின் நினைவுகள் யாவும் சுழல்வது அவனவளிடம் மட்டுமே.

ஷிவன்யா வீடியோ வந்திருக்கிறது என்று சொல்லியது முதல் 'இமையாள் பார்த்திருப்பாளா?' எனும் கேள்வி தான் அவனுள்.

'பாரத்திருந்தால் என்ன? அவள் இன்னொருவருக்கு மனைவியாகியிருக்கலாம். நினைப்பதே தவறு.' அவனது மனசாட்சிக் கொட்டியது.

'இனியன் பார்த்திருப்பான். நாளை என்னைத்தேடிகூட வரலாம்' என நினைத்த நொடி, 'நான் அவனை நேரில் சந்திக்கலாமே!' என்று தோன்றிய எண்ணத்தை முழுதாய் புறம் தள்ளினான்.

ருது இமையாளைப் பற்றி அறிய உதவும் காரணிகள் யாவற்றையும் ஒதுக்கி வைத்திடவே நினைக்கிறான்.

அவன் கொடுத்த வலியின் குற்றவுணர்வின் தாக்கம். அதிலிருந்து ஓடிப்போகவே முயல்கிறான்.

"ப்பா..." தேஷ்ஷின் சிணுங்களில் தற்காலிகமாக தனது நினைவுகளிலிருந்து மீண்டவன், படுக்கைக்கு விரைந்து, தேஷினை தன் மார்பில் கிடத்தி தட்டிக்கொடுத்தபடி தானும் உறங்கிப்போனான்.

காலை விரைந்து அலுவலகம் செல்ல கிளம்பி கீழே வந்தவன் தனக்கு முன்பாக கிளம்பி பூட்ஸினை மாட்டிக் கொண்டிருக்கும் வேங்கடத்தின் முன்பு சென்று நின்றான்.

"கிளம்பியாச்சா?" கேட்டபடி அவர் எழ,

"நைட் ரொம்ப லேட்டாகிருச்சா?" எனக் கேட்டான் ருது.

"ம்ம்ம்... சிஎம் கூட சேலம் போயிட்டு வர வேண்டியிருந்தது. இன்னைக்கு கோவை. நாளைக்குத்தான் வருவேன்" என்றார் வேங்கடம்.

"என்னால் தான் உங்களுக்கு..."

"ம்ப்ச்... ஒரு ஐந்து மாதம் தானே! சமாளிச்சிக்கலாம்" என்றவர், "வந்த முதல் நாளே பெரிய தலைங்களோட மோத ஆரம்பிச்சிட்டப்போல" என்றார்.

"நியூஸ் செக்ரட்டரிரைட் ஆபீஸ் வரை வந்திருச்சா?" என்று பொய்யாய் வியப்பைக் காட்டினான் ருது.

"அங்குவரை ரீச் ஆகணும் தானே நேத்து அந்த விசிட்... அப்புறம் என்ன தெரியாத மாதிரி லுக்?" என்று புருவத்தை ஏற்றி இறக்கிய வேங்கடம், "நான் நேற்று கேள்விப்பட்டவரை சிட்டியோட கவர்மெண்ட் கண்ட்ரோல் முழுக்க கைலாஷ் அப்ப்டிங்கிறவன் கையில் தான். சிஎம் சேலம் போறதுக்குக்கூட அவன் பெர்மிஷன் கொடுக்க வேண்டியது இருக்கு" என்றார்.

"இப்போ என்ன சொல்லவறீங்க நீங்க?"

"உன்னை ஒன்னும் சொல்லல. பார்த்து அடி வை. அவ்வளவு தான். கோவையில் கட்சி பொதுக்குழு கூட்டம். போயிட்டு வரேன்" என்றவர் ருதுவின் தோளில் தட்டிவிட்டு, சமயலறையில் வேலையாக இருந்த மனைவியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.

"தாத்தா" என்று ஓடிவந்த தேஷ், அவரை குனிய வைத்து கன்னத்தில் முத்தம் வைத்தான்.

இது தன் குடும்பம். எனும் நிறைவான புன்னகை அவர் முகத்தில்.

செல்லும் அவரை பார்த்தவாறு நின்றிருந்த ருதுவிற்குள் மெல்லிய படபடப்பு. எதை உணர்த்திட இந்த படபடப்பு என்று புரியவில்லை.

"ருது..." அம்பிகாவின் விளிப்பில் கலைந்து சென்றவன், "ஒரு மாதிரி இருக்கும்மா. என்னன்னு சொல்லத் தெரியல. கவனமா இருங்க" என்று சொல்லிக் கிளம்பினான்.

"சாப்பிட்டு போடா!"

"வெளியில் பார்த்துக் கொள்கிறேன்" என்றவன் வாயிலை தாண்டி வர,

"ஐயா, வண்டி ஸ்டார்ட் ஆகலன்னு உங்க வண்டியை எடுத்திட்டு போயிருக்காங்க தம்பி. வண்டி ஸ்டேஷனுக்கு அனுப்பிடுறேன் சொன்னாங்க" என்று குவார்ட்டர்ஸ்க்கு காவலுக்கு இருக்கும் காவலாளி தகவல் கூறினான்.

உடனடியாக கிருஷ்ணனுக்கு வண்டி எடுத்துவருமாறு சொல்ல அழைப்பு விடுத்தவன், சொல்லிவிட்டு மீண்டும் வீட்டிற்குள் செல்ல திரும்பியபோதுதான் தன் வண்டி நின்ற இடத்தை எதேர்ச்சையாக ஏறிட்டான். தரையில் ஆயில் சிந்தியிருந்தது.

அதன் பக்கத்தில் துண்டாக நறுக்கப்பட்ட வயர் கம்பி இருந்திட... ருதுவின் போலீஸ் மூளை விழித்துக்கொண்டது.

கிருஷ்ணனும் அதே குடியிருப்பு பகுதியில் தான் வசிக்கிறார். அதனால் ருது அழைத்த இரண்டாவது நிமிடம் அவன் முன்பு இருந்தார்.

"அண்ணா... க்விக். மூவ் ஃபாஸ்ட்" என்று வண்டியில் தாவி ஏறினான்.

"என்னாச்சு சார்? எமெர்ஜென்சியா?" எனக் கேட்டபோதும் அவரின் கையில் வண்டி அதீத வேகத்தில் பறந்தது.

கையில் நடுக்கத்துடன் அலைப்பேசியில் வேங்கடத்திற்கு விடாது அழைப்பு விடுத்தபடி இருந்தான் ருது.

"எங்க சார் போகணும்?" முக்கிய சாலை வந்ததும் கிருஷ்ணன் வினவிட,

"செக்ரட்டரிரைட்" என்ற ருது, "உங்களுக்கு அங்கு யாரும் தெரியுமாண்ணா?" எனக் கேட்டான்.

"முன்பு இன்ஸ்பெக்டரா இருந்தவர் இப்போ, ஸ்குவாட் பிரிவில் அங்கு தான் இருக்கிறார் சார்" என்றவர், ஏதோ விபரீதம் என்பது புரிந்து, தன்னுடைய அலைபேசியை எடுத்து ருதுவிடம் நீட்டியவராக, "கிஷன் இருக்கும் சார்" என்றார்.

கிஷன் எண்ணுக்கும் இருமுறை அழைத்து எடுக்கப்படாது சோர்ந்த ருது, கண்களை மூடிக்கொண்டு "ஒன்றும் நடந்திருக்கக் கூடாது என்ற வேண்டுதலோடு விழி திறந்து செல்லும் வழி எங்கும் ஏதும் விபத்து நேர்ந்துள்ளதா என ஆராய்ந்தபடி வந்தான்.

செயலகம் வந்ததும்,கிருஷ்ணன் வண்டியை நிறுத்துவதற்கு முன்பு குதித்து இறங்கிய ருது, உள் நோக்கி ஓடிட, முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் கார்ட்ஸ் ஒருவர் அவனை தடுத்து நிறுத்தியிருந்தார்.

அவர்களுக்கு முதல்வரின் பாதுகாப்புத்தானே முக்கியம். முறையான பரிசோதனை இல்லாமல் யாராக இருந்தாலும் உள்ளே அனுமதித்திட முடியாதே!

மூச்சினை இதழ் குவித்து வெளியேற்றிய ருது...

"மிஸ்டர்... உங்க ஹெட் திருவேங்கடம் அவங்களை மீட் பண்ணனும்?" என்றான்.

"அவர் இன்னும் வரலையே!" என்று அவர் சொல்லிய நொடி ருது பரிதவித்துப்போனான்.

"இன்னும் வரலையா?" எனக் கேட்டவன் அப்படியே மடங்கி படியில் அமர்ந்த கணம், அங்கே வருகை தந்தார் வேங்கடம்.

"ருது..." என்று வேங்கடத்தின் குரலில் வேகமாக நிமிர்ந்து பார்த்த ருதுவின் விழிகள் ரத்தமென சிவந்திருந்தது. அழுகையை அடக்கியதன் வெளிப்பாடு அது.

"அப்பா" என்ற கூவலோடு நான்கே எட்டில் அவரை அடைந்தவன் தாவி அணைத்திருந்தான். இறுக்கமாக.

"உங்களுக்கு... உங்களுக்கு ஒன்னுமில்லையே!" என்று அவரை தன்னிலிருந்து விலக்கி ஆராய்ந்தான்.

"ருது அம் ஓகேடா!" என்றவருக்கு அவனின் இந்நிலைக்கான காரணம் புரிந்தது.

"உனக்கு போட்ட ஸ்கெட்சில் நான் சிக்கிட்டேன் போல" என்று சிரித்தவர், "ரொம்ப வேகம் போகல. சுதாரிச்சிட்டேன். பக்கத்துலே மெக்கானிக் ஷாப் இருந்துச்சு. உடனே சரிபண்ணி கொடுத்துட்டான்" என்றார் அவர்.

"ஊப்ப்..." அப்போது தான் ருதுவிற்கு நிம்மதியாக இருந்தது.

அந்நேரம் ருதுவின் அலைப்பேசி ஒலித்திட யாரென்று எடுத்துப்பார்த்தான். தெரியாத எண்ணாக இருந்திடவே, ஏற்று கவனமாக செவி மடுத்தான்.

"என்னா போலீசு... அப்பான்னா ரொம்ப புடிக்கும் போல. நம்மகிட்ட வச்சிக்கினா இதுதான் நடக்கும். உனக்கு வச்சக்குறி. தப்பிச்சிட்ட. இது சும்மா சாம்பிள் தான் மாப்பு. அடங்கியிரு இல்லாங்காட்டி அடக்கிடுவோம்" எனக்கூறி வைத்திருந்தான் எதிராளி.

"யாருப்பா?"

"எவனோ அல்லக்கை ப்பா. அவன் பார்த்த வேலை தான் இது. நேரடியா மோத தெரியாத சில்லரைங்க" என்ற ருது, "ரொம்பவே கவனமா இருங்க" என்று சொல்லிச் சென்றான்.

நேற்று காந்தாவை நேரிலே சென்று பார்த்து, சட்டத்திற்கு புறம்பாக செய்யும் தொழில்களை நிறுத்தக்கூறி ருது சொல்லியது காந்தாவின் ஆட்களுக்கு உவப்பானதாக இல்லை.

"பெரிய பெரிய போலீஸிலிருந்து எல்லாம் நம்ம பேட்டைக்குள் வரவே தயங்கும் போது... சின்னப்பையன் இவன் நேரா வூட்டுக்கே வந்துக்கினு லந்து கொடுத்திருக்கான். அவன்கிட்ட நம்ம மவுசை காட்ட வேண்டாம்" என்று ஒருவன் மற்றவர்களை தூண்டிவிட, இரவோடு இரவாக காவலர் குடியிருப்பு பகுதிக்குள்ளாகவே நுழைந்து ருதுவின் வண்டியில் பிரேக் வயரை துண்டித்திருந்தனர்.

வேலையின் அவசரம் காரணமாக வேங்கடம் ருதுவின் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்க, வழியிலே பிரேக் இல்லை என்பது தெரிந்து லாவகமாக வண்டியின் வேகத்தை கையாண்டு மணற்பரப்பு பகுதியில் இருக்கும் மரத்தின் மீது மோதி நிறுத்தியிருந்தார்.

வேங்கடம் கவனிக்காது பயணித்திருந்தால்... நிச்சயம் உயிருக்கு அசம்பாவிதமாக ஏதும் நடந்திருக்கும் அபாயம் உண்டு.

அமைதியாக கையாள நினைத்த ருதுவிற்கு ரொம்பவே உரசிவிட்ட கோபம்.

நேராக தனது அலுவலகம் சென்றவன்...

"அந்த பேட்டை நுழைவு வாயிலுக்கு எதிரே ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தது. நிச்சயம் காமிரா வைத்திருப்பான். சரியா நம்ம வண்டி உள்ளே நுழையும்போது அந்த ஆளு வண்டி மேல விழுற மாதிரி எவனோ தானே செட் பண்ணியிருக்கணும்? இன்னும் ஒரு மணி நேரத்தில் அவன் என் கண் முன்னாடி இருக்கணும்" என்று வெங்கட்டிற்கு உத்தரவிட்டான்.

"சார்..." வெங்கட்டிடம் வெளிப்படையான தயக்கம்.

"என்ன?" ருதுவின் கோபம் எப்படியிருக்கும் என்பதற்கான சிறு ஆரம்பத்தை உணர்ந்தவர்களுக்கு சற்று அச்சமாகத்தான் இருந்தது.

நேற்று பாடல் கேட்டபடி சிரித்தவாறே கதை கேட்ட ருது இவனில்லை எனும் எண்ணம் தான். மற்ற பணியாளர்களுக்கு. பார்வையாலே அத்தனை சூட்டைக் காட்டியிருந்தான் ருது.

"கொஞ்சம் யோசித்து..." வெங்கட் தயக்கத்தோடு மொழிய,

"காக்கிச்சட்டை போட்டுக்கிட்டு வேடிக்கை பார்க்க சொல்றீங்களா எஸ்.ஐ சார். ஆரம்பத்திலே போலீஸெல்லாம் ஒழுங்கா வேலை பாரத்திருந்தால், கைலாஷ்ன்னு ஒருத்தன் அவனுக்கு அல்லக்கை காந்தான்னு ஒருத்தன் வளர்ந்து வந்திருக்கவே மாட்டாங்க" என்று சூடாகக் கூறியதோடு.

"போய் வேலையை பாருங்க சார்" என்றான்.

அலுவலகம் விட்டு வெளியில் வந்த வெங்கட் அங்கிருந்த மரத்தடியில் யோசனையோடு நின்றுவிட்டான். உண்மையில் அவனுக்கு பயந்து வந்தது.

ருது சொல்வதை செய்தால் காந்தா என்னவும் செய்வான். காந்தாவுக்கு பயந்து செய்யாமல் விட்டால் ருது என்ன செய்வானென்றே தெரியாது.

வெங்கட் அல்லாடினான். ஒரு முடிவு எடுக்க முடியாது.

"என்ன சார் போகலையா?"

ராதிகாவின் குரலில் திரும்பிய வெங்கட்...

"எப்படிப்போக...?" என்றவன், "நீங்க ஹாஸ்பிடலில் காவலுக்கு இருந்தீங்களே?" என்றான்.

"அந்தப்பொண்ணு டிஸ்சார்ஜ் ஆகிட்டாங்க சார். கழுத்தில் கூட லேசான காயம் தான். பின் மண்டையில் தான் அடி. தையல் போட்டிருக்காங்க. ஸ்கேன் பண்ணதுல பயப்படுற மாதிரி எதுவுமில்லை. டிசி சாரிடம் ரிப்போர்ட் பண்ணிட்டேன். அவர் தான் அவங்க வீட்டுக்கு போனதும் வந்திடுங்க சொல்லிட்டார்" என்று நீளமாகவே விளக்கம் கொடுத்தாள்.

"அப்போ அந்த அசோக் விஷயத்தை அவர் அப்படியே விட்டுட்டாரா? அவனை பிடித்தது, அந்தப்பொண்ணை காப்பற்றியதென வீடியோஸ் ஸ்பிரட் ஆச்சே. இதோட முடிவு என்னன்னு மீடியா சும்மா விடாதே" என்றான்.

"அதை நான் பார்த்துக்கிறேன். சொன்னதை செய்ங்க எஸ்.ஐ சார்" என்று அழுத்தமாக ஒலித்த குரலில் வெங்கட் ஓடியேப்போனான்.
________________________________

கதவு தட்டி அனுமதி கேட்கும் சத்தத்தில்... தான் செய்து கொண்டிருந்த வேலையில் கண்ணாக இருந்தவாறே...

"யா கமின்" என்றிருந்தான்.

"ஹலோ டாக்டர்!"

குரல் கேட்டதும் தலையை உயர்த்தாமலே யாரென்று கண்டுகொண்டான் இனியன்.

ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையை படித்துக் கொண்டிருந்த இனியன், மூடி வைத்தவனாக நிமிர்ந்து அமர்ந்து தனக்கெதிரே புன்னகை முகமாக நின்றிருந்த ஷிவன்யாவை அழுத்தமாக ஏறிட்டான்.

அவன் பார்வையே என்ன என்று கேள்வி கேட்பது போலிருந்தது.

"அட்டஸ்ட் சைன் வேணும். ப்ரொஜெக்ட் சப்மிஷன். போடுறீங்களா ப்ளீஸ்?" என்று கண்களை சுருக்கிக் கேட்டவள், "படிச்சு பார்த்து பண்ணுங்க. கரெக்ஷன் இருந்தாக்கூட சொல்லுங்க" என்றாள்.

அவள் படிப்பு விஷயமாக வந்திருப்பதால் இனியனால் ஒதுக்க முடியவில்லை.

"மேஜர் உங்க டிப்பார்ட் தான்." அவன் அமைதியாக இருக்கவும் மறுத்துவிடுவானோ எனக் கூறினாள்.

"வேறு பீடோயாட்ரிஷனே இல்லையா?" எனக் கேட்டிட வாய் வரை வந்துவிட்ட வார்த்தைகளை விழுங்கிக்கொண்டவன்,

"சப்மிஷன் எப்போ?"

"நாளைக்கு டாக்டர்."

"ம்ம்... ஈவ்வினிங் உங்க கிளாசஸ் முடிந்ததும் வாங்க. இப்போ வச்சிட்டு போங்க" என்றான்.

"டாக்டர்..." என்று அவள் தயங்கிட,

"வேறென்ன?" எனக் கேட்டான்.

"இந்த ப்ரொஜெக்ட் கன்குலுஷனில் பேஷண்ட் அப்ஃசர்வ் ரிப்போர்ட் பின் பண்ணனும்... ரிலேட்டபுல் ஸ்பெசிமன் ரிப்போர்ட்ஸ் இருந்தால் தறீங்களா? டாக்டர் வீவ் என்னன்னு தெரிஞ்சிட்டு ரிட்டர்ன் பண்ணிடுறேன்" என்றாள்.

"அப்படியெல்லாம் ஒரு பேஷண்ட்டோட ரிப்போர்ட் கொடுத்திட முடியாது மிஸ்..."

"ஷிவன்யா டாக்டர்."

'அவள் பெயர் உனக்குத் தெரியாது அப்படித்தானே!' மனம் கொட்டியது. அதனை அவன் கண்டு கொள்ளவில்லை.

"வாட் எவர்... பைனல் செம், பிராப்பர் கைடென்ஸோட இதை பண்ணுவீங்க. இப்போ என்ன பண்ணிருக்கீங்களோ அதை சப்மிட் பண்ணுங்க" என்றான்.

"ப்ளீஸ் டாக்ட..."

"யூ மே கோ நவ்!" வாயிலை நோக்கி கை காட்டியிருந்தான்.

'போடா' என்று சத்தமின்று உதடு மட்டும் அசைத்தவள், உதட்டை சுளித்தவளாக வெளியேறினாள்.

தியா வேறொரு மருத்துவரிடம் சென்றிருக்க... அவளுக்காகக் அங்கேயே அப்பிரிவில் இனியனின் அரை முன்பிருக்கும் இருக்கையில் அமர்ந்து காத்திருந்தாள் ஷிவன்யா.

சில நிமிடங்களில் தியா வர,

"சைன் வாங்கிட்டியா?" என்று சுரத்தே இல்லாமல் கேட்டாள் ஷிவன்யா.

"ம்ம்ம்... படிச்சிக்கூட பார்க்கல. என்ன டாபிக்ன்னு மட்டும் தான் சொன்னேன். சைன் போட்டுட்டாங்க" என்று தியா மகிழ்வாய் சொல்ல... ஷிவன்யா இனியனுக்கு மானசீகமாக தலையில் கொட்டு வைத்தாள்.

தோழியின் முகம் வைத்தே கண்டு கொண்டவளாக,

"என்ன உன் ஆளு போடலையா?" என்று சிரிப்போடு வினவி அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தாள் தியா.

"ம்க்கும்... போடி. என்னவோ பார்த்ததும் மனசுல ஒட்டிக்கிட்டாங்க. தூக்கிப்போட முடியல. இதை சாக்கு வச்சு பார்க்கலாம் வந்தால்... அநியாயத்துக்கு டாக்டரா இருக்காங்க" என்று புலம்பினாள்.

இங்கு ஷிவன்யாவின் புலம்பலில் தியா அட்டகாசமாக சிரித்த அதே கணம், இவர்களுக்கு பின்னால் இனியனின் அறை சுவற்றில் திறந்திருந்த சன்னல் வழி அவளின் வார்த்தைகளைக் கேட்க நேர்ந்த இனியன் மென்மையாக இதழ் விரித்திருந்தான்.

அவனது புன்னகைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஷிவன்யாவின் வார்த்தையிலிருந்து ருது அவளுக்கு யாராக இருக்குமென்று அவன் பயந்த உறவு இல்லை என்பது தெரிந்தது. மற்றொன்று அவனுக்குள்ளும் அவள் மெல்லிய சலனத்தை ஏற்படுத்தியிருந்தாலே. ருதுவை காரணம் வைத்து அவள் மீது தோன்றிய ஈர்ப்பை புதைத்து வைத்திருந்தான். இனி வெளிக்கொணர்ந்திடலாமே!

"சரி போகலாம். ஈவ்வினிங் வர சொன்னாங்க" என்று எழுந்த ஷிவன்யா, சன்னல் வழி பாதி தெரிந்த இனியனின் உருவத்தை ரசித்தபடி சென்றிருந்தாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 11

ருது சொல்லிய பணியை முடிக்க முடியாது வெங்கட் அலுவலகம் வந்திருந்தான்.

"யாருன்னு தெரிஞ்சுதா சார்?" ராதிகா வேகமாக அவனருகில் வந்து கேட்டிட, அவனோ இல்லையென உதட்டை சுளித்தான்.

"போச்சு..." என்று மற்றொரு பெண் காவலர் சொல்ல...

"இப்போதான் முடிக்காத கேஸ் முடிக்க சொல்லி டைம் கொடுத்தும் ஏன் முடிக்கலன்னு... அந்த கேஸ் டீல் பண்ணவங்களுக்கெல்லாம் மெமோ கொடுத்தார்" என்றார் கிருஷ்ணன்.

"என்னது மெமோவா?"

ராதிகா ஆமென்று தலையாட்டினாள்.

"அப்போ எனக்கும் மெமோ கொடுத்திடுவாரா?" அவன் அதிர்ந்து கேட்டதில் ராதிகா சத்தமாக சிரித்திட, மற்ற இருவருக்கும் கூட சிரிப்பு வந்தது.

"நான் உன் புருஷன் டி. என்னையே கிண்டல் பண்ணி சிரிக்கிற?" என்று ராதிகாவின் தலையில் வெங்கட் கொட்டிட,

"உறவு முறையெல்லாம் வீட்டில் தான்" என்று சொல்லியிருந்தான் ருது.

'இவரை கவனிக்கலையே!' என்று வெங்கட் மெல்ல திரும்பிட, மேசை மீது ஒரு பக்கமாக சரிந்து அமர்ந்து ஒற்றை காலினை ஆட்டிக் கொண்டிருந்தான் ருது.

"வேலை முடிந்ததா எஸ்.ஐ சார்?" ருது கேட்ட தொனியே வெங்கட்டை பயம் காட்டியது.

"அந்த கடைக்காரன் புட்டேஜ் காட்ட முடியாது சொல்லிட்டான் சார். நான் எவ்வளவோ கேட்டுப்பார்த்துட்டேன். கொடுக்க முடியாது, டெலிட் ஆகிடுச்சு சொல்லிட்டான் சார்" என்றான் பாவம் போல்.

"யோவ்..." ருது மேசையிலிருந்து குதித்திருந்தான்.

அவனின் வேகம் கண்டு, அவனுக்கு சற்று அருகில் நின்றிருந்த ராதிகா பயந்து இரண்டடி பின் நகர்ந்திருக்க, அவளின் வயிறு மேசை முனையில் முட்ட பார்த்திட, சடுதியில் தன் கையை வைத்து தடுத்திருந்தான் ருது.

"சாரி... சாரி ராதிகா." ருது படபடத்தான்.

"மல்லிகா அக்கா தண்ணி கொண்டு வாங்க" என்றவன், தானே ராதிகாவின் தோளைப்பற்றி இருக்கையில் அமர வைத்து அவள் முன் ஒற்றை கால் குத்திட்டு தரையில் அமர்ந்தான்.

அவனது செயலின் ஆச்சரியத்தில் வெங்கட்க்கு மனைவியை பார்க்க வேண்டுமென்கிற சிந்தையில்லாது அப்படியே நின்றிருந்தான்.

"ஏதும் ஆகலையே! ஓகே தானே ராதிகா?" எனக் கேட்டவனின் கண்கள் அப்படியொரு பயத்தைக் காட்டிக்கொண்டிருந்தது.

"ஒன்னும் ஆகல சார். இடிக்கல. அதுக்குள்ள நீங்க கை வச்சிட்டிங்க" என்று ராதிகா சமாதானமாகக் கூறினாலும், ருதுவின் மனம் சமன்பட மறுத்தது.

"அம் சாரி... சாரி ராதிகா" என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.

அவனின் கடந்தகால வலி மேலெழும்பி அவனை நிலை குலைய வைத்தது. பேறுகாலம் ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம் என்பதை அவனைவிட அதிகமாக அறிந்தோர் யாரும் இருக்க முடியாது. அதில் இழந்தது அவன் அதிகமாயிற்றே. ஒரு பெண்ணின் பேறுகாலம் ஒரு குடும்பத்திற்கு மகிழ்வான தருணம். ருதுவிற்கு அதுவே சாபமானது.

மல்லிகா தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க, தானே வாங்கி ராதிகாவிடம் கொடுத்தான்.

"முதலில் நீங்க குடிங்க சார். நீங்க தான் ரொம்ப பயந்த மாதிரி தெரியுது" என்றாள்.

அவளின் இறுதி வார்த்தையில் சட்டென்று தன் உணர்வுகளை மறைத்தவனாக மிடுக்காய் எழுந்து நின்றான்.

ராதிகா மூன்று மாத கருவை சுமந்து கொண்டிருந்தாள். வயிறு இன்னும் தெரியவே ஆரம்பிக்கவில்லை.

'எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு சார். பொண்டாட்டி கர்ப்பமா இருக்கா?' என்று பேச்சு வழக்கில் வெங்கட் சொல்லியிருக்க, தானாக ராதிகாவின் நலன் மீது ருதுவிற்கு அக்கறை வந்திருந்தது. அதனாலே மருத்துவமனையில் வேலையாக இருந்தவளை, போதுமென்று அலுவலகம் வரவைத்து... அவளின் வேலைப்பளுவை வெகுவாக குறைத்தும் இருந்தான்.

ஒரே பணியிடம். காதல் வர, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். வெங்கட், ராதிகா. பார்த்துக்கொள்ளக்கூட ஆளில்லாமல் இருப்பதால், ராதிகா விடுப்பு எடுக்காது வேலைக்கு வருகிறாள். வேலையோடு சேர்த்து, வெங்கட்டும் மனைவியை பார்த்துக்கொள்வான்.

இதெல்லாம் கிருஷ்ணன் மூலமாக ருது அறிந்துகொண்டது. அதனால் ராதிகாவின் அக்கறையும் ருதுவிடம் அதிகமாகியிருந்தது. வெளிப்படையாகக் காட்டவில்லை என்றாலும், பணி நிமித்தமாக மறைமுகமாக நிறையவே செய்கிறான். புரிந்து கொண்ட ராதிகாவுக்கு ஏனென்று தெரியாவிட்டாலும், இன்றைய ருதுவின் செயலில், தான் கர்ப்பிணியாக இருப்பது தான் காரணமென புரிந்தது.

"நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுப்பதென்றாலும் ஓகே" என்றவன், அவள் வேண்டாமென்றதும் வெங்கட்டிடம் திரும்பினான்.

'போச்சு விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கப்போராரு' என்று அவன் உள்ளே அலற...

"கவனமா பார்த்துக்கோ" என்று அவனிடம் ராதிகாவைக் காட்டிச் சென்றான்.

_________________________

மாலை கல்லூரி வகுப்புகள் முடிந்ததும் ஷிவன்யா இனியனைத்தேடி வந்துவிட்டாள்.

அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்த செவிலியிடம்,

"டாக்டர் இருக்காங்களா சிஸ்டர்?" எனக் கேட்டாள்.

"ரவுண்ட்ஸ் போயிருக்காங்க. வந்திடுவார். கன்சல்டிங் பார்க்கணுமா?" என பதில் சொல்லி மறுகேள்வி கேட்ட செவிலி, "அவங்க சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்'ம்மா" என்றார்.

"நான் பேஷண்ட் இல்லை சிஸ்டர்" என்று வேகமாக மறுத்த ஷிவன்யா, "நான் மெடிக்கல் ஸ்டூடண்ஸ். அட்டஸ்ட் சைன் விஷயமா டாக்டர் பார்க்கணும்" என்றாள்.

"ஹோ... சாரிம்மா. நீங்க இங்க உட்காருங்க. கொஞ்ச நேரத்தில் டாக்டர் வந்திடுவாங்க" என்று அவள் அமர இருக்கையை காட்டிவிட்டு அப்பெண் நகர்ந்த சில நிமிடங்களில் சொன்னது போலவே இனியன் வந்து சேர்ந்தான்.

சில அடிகளுக்கு முன்பாகவே இனியன் அவளை கண்டுவிட்டான்.

ஏனோ அவனுக்கு அவளின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

மனதில் இருக்கும் வருத்தங்கள் யாவும் அவளின் முகம் காணும் தருணம் எங்கோ ஓடிப்போவதைப்போல் உணர்ந்தான். இதயத்தில் மெல்லிய இதத்தை அறிந்தான்.

'யூ ஆர் ட்ரைவிங் மீ.' தனக்குள் சொல்லிக்கொண்டான்.

அருகில் வந்ததும் ஷிவன்யா சிறு புன்னகையோடு எழுந்து நிற்க... அவளைக் காணாததைப்போல் உள்ளே சென்றுவிட்டான்.

"இவங்க நம்மளை பார்த்தாங்களா? இல்லையா?" வாய்விட்டு முனகியவளாக அவள் நின்றிருக்க,

"டாக்டர் வந்துட்டாங்க. நீங்க பார்க்கலையா?" என்ற செவிலி, "நீங்க போங்க... இல்லைன்னா டாக்டர் கிளம்பிடுவாங்க" என்றார்.

அவருக்கு சிறு தலையசைப்பைக் கொடுத்தவள், கதவினை தட்டிவிட்டு உள்ளே நுழைய, அவளை எதிர்பார்த்தது போல, தனக்கு முன்னிருக்கும் இருக்கையைக் காட்டினான்.

"தேன்க் யூ டாக்டர்" என்று அமர்ந்தவள் முன்பு, அவளது கோப்பினை எடுத்து வைத்தவன்,

"குட்... நல்லாவே ரிசர்ச் பண்ணியிருக்கீங்க" என்று மற்றோரு கோப்பினை எடுத்து நீட்டினான்.

"பேஷண்ட் ஸ்பெசிமன் டிடெயில் கேட்டிங்களே! இது டாக்டர்ஸ் ரெஃபரன்ஸ்க்காக எடுத்து வைப்பது. பாயிண்ட் நோட் பண்ணிட்டு கொடுங்க. பட் வெளியில் கொடுக்க முடியாது" என்று அழுத்தமாகக் கூறினான்.

'அப்புறம் எப்படி நோட்ஸ் எடுப்பது?' என்று அவள் திருதிருக்க...

"இப்போவே, இங்கவே எழுதிட்டு கொடுங்க. நானும் இன்னும் சைன் பண்ணல. இதை முடித்தால் தானே சைன் பண்ண முடியும்" என்றான்.

ஷிவன்யாவின் முகம் சடுதியில் ஒளி கூடியது.

"தேன்க்ஸ் டாக்டர்" என்று பளிச்சென அவள் மொழிய, அம்முகம் இனியனின் அகம் சேர்ந்தது.

"உங்களுக்கு கன்சல்டிங் இல்லையா?"

"என் ட்யூட்டி டைம் மதியம் ரெண்டு மணிக்கு முடிஞ்சிடுச்சு. உங்க ப்ரொஜெக்ட்'க்காகத்தான் இருக்கேன்" என்றான்.

'எனக்காகவா?' ஷிவன்யாவுக்கு உள்ளுக்குள் குளிரடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

"சீக்கிரம் முடிச்சிட்டிங்கன்னா நான் கிளம்புவேன்" என்று இனியன் சொல்ல, அவள் வேகமாக குறிப்பெடுக்கத் துவங்கினாள்.

இடையிடேயே அவனிடம் புரியாதவற்றிற்கு விளக்கங்கள் கேட்டிட, அவனும் எளிமையாக புரிய வைத்திட்டான்.

குறிப்புகள் எடுத்து முடிய, அதனை அவள் எழுத ஆரம்பித்தாள்.

அவனது அறை. அவனது மேசை. அவனது பொருட்கள். உரிமையாக கையாள்கிறாள். தன்னவள். இப்படித்தான் அந்நொடி அவனது எண்ணம் இருந்தது.

ஷிவன்யா சிரத்தையாக எழுதிக் கொண்டிருக்க... இனியன் அவளை இமை வெட்டாது பார்த்திருந்தான். ரசித்திருந்தான் என்று சொல்ல வேண்டுமோ?

நான்கு வருடங்களுக்கு முன்பு, நண்பன் மற்றும் தங்கையின் காதலை உடனிருந்து பார்த்தவனுக்கு, தானும் காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசை இருந்தது. பின்னர், அதன் பின்னான நிகழ்வுகளில்... தங்கையின் காதல் வலியை உடனிருந்து பார்த்தவனுக்கு, தற்போது இந்த காதலே வேண்டாமென்கிற மனநிலை தான். ஆனால் அந்த எண்ணத்தையே ஷிவன்யா அழித்திருந்தாள்.

ஷிவன்யாவின் அலைபேசி இசைக்க, இனியன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

தியாவாக இருக்குமென்று அவள் எடுக்காது விடுக்க... மீண்டும் ஒலித்தது.

"எடுத்து பேசுங்க." இனியன் சொல்லியதும், தன்னால் அவனுக்கும் நேரமாகிறதேயென எழுதியவாறே, மற்றொரு கையால் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த அலைபேசியை எடுத்து மேசையில் வைத்தவள், யாரென்று பாராமலே அழைப்பை ஏற்று தானாக ஸ்பீக்கரை அழுத்தியதோடு...

"கேட்ச் யூ லேட்டர் பேபி" என்று சொல்லியிருந்தாள்.

அவள் பேபி என்றதில் இனியனின் விழிகள் தானாக விரிய, அன்று முதல் நாள் அவள் தியாவை பேபி என்று சொல்லியது நினைவில் வர, இயல்பாகினான். அடுத்த நொடியே கேட்ட குரலில் இறுகிப்போனான்.

"போன் வந்தால் யாரென்னன்னு பார்த்து பேசுறதில்லையா ஷிவா?"

அழுத்தமாக ஒலித்தது இனியனின் நண்பனின் குரல்.

'ருது.' இனியனின் மனம் மட்டுமே உச்சரித்தது. முகம் பாறையென இறுகியது.

"ஹேய் டார்லிங்." அழைத்தது ருது என்றதும் உற்சாகத்தில் இனியன் இருப்பதை மறந்து அவள் கூவிட, இனியனின் ஒற்றை புருவம் உச்சம் தொட்டது.

"சாரி... சாரி டாக்டர்" என்றவள், "அப்புறம் பேசுறேன்" என்று அலைபேசியிடம் குனிந்து மெல்லொலியில் மொழிந்து பட்டென்று துண்டித்திருந்தாள்.

இனியனுக்கு தவறான எண்ணம் இல்லை. ஆனாலும் ருதுவிற்கு தனக்கு தெரியாமல் இந்தப்பெண் என்ன உறவு என்று தெரிந்துகொள்ளும் வேகமிருந்தது.

ஷிவன்யா வைத்த கணம் மீண்டும் ருது அழைத்தான்.

ருது முக்கிய விஷயமென்றால் ஒழிய அழைத்திடமாட்டானென்று இனியனை சுருங்கிய கண்களோடு பார்த்தவாறே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

இனியன் தன்னையே பார்திருப்பதாலோ என்னவோ, எப்போதும் விளிக்கும் டார்லிங்கை தவிர்த்தாள்.

"நான் ப்ரொஜெக்ட் சம்மந்தமா" என்று அவள் தொடங்கியதும்,

"கிளாஸ் ஓவராகியிருக்கணுமே, இன்னும் என்ன பிஸி?" என்று இடையிட்டிருந்தான் ருது.

"அதைத்தான் சொல்ல வரே..."

"ஹாஸ்டல் வெக்கேட் பண்ணனும் நினைவிருக்கா? நீயே கால் பண்ணுவ நினைத்தேன். உன் ஹாஸ்டல் பில்டிங் முன்னாடிதான் நிக்கிறேன்" என்றான்.

அவளுக்கு அந்த நினைவே இல்லை. நெற்றியில் தட்டிக்கொண்டாள்.

"அச்சோ அண்ணா" என்று தலையில் கொட்டிக்கொண்டவள், "ஹாஸ்டல் வெக்கெட் பண்ண உங்களை வர சொன்னதை மறந்தே போயிட்டேன். ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க வந்திடுறேன்" என்றாள்.

அவளது வார்த்தைகளைக் கூர்மையாக உள்வாங்கிக்கொண்டிருந்த இனியனுக்கு அவளது அண்ணா என்கிற விளிப்பு முகத்தை யோசனையாக சுருங்கவே வைத்தது.

ருதுவிற்கு அக்கா மட்டும் தான்.

'யாரிந்த புது தங்கை. அதுவும் தனக்குத் தெரியாமல்? இத்தனை நெருக்கமாக' என நினைத்தான்.

'உனக்குத் தெரியாமல் ருதுவிடம் நிறைய இருக்கே!' உடனடியாகக் கூறியது அவனது மனம்.

இனியனிடம் பெருமூச்சு.

அதற்குள் ஷிவன்யா பேசி முடித்திருந்தாள்.

"ஏன் ஹாஸ்டல் வெக்கெட் பண்றீங்க?" அவளது பேச்சில் கவனித்ததுபோல் வினவினான்.

"இப்போ என் பேமிலி இங்கவே வந்துட்டாங்க சார். இனி ஹாஸ்டல் தேவையில்லை. வீட்டிலிருந்து ஜாலியா வருவேன்" என்று அவள் சொல்லியதிலே குடும்பத்துடன் இருக்க அவள் எத்தனை ஏங்கியிருக்கிறாள் என்பதை புரிந்துகொண்டான்.

"வீடெங்கே... டிராவல் டைம் அதிகம் அப்படின்னா... சிட்டி ட்ராஃபிக்கில் கஷ்டம்" என்றான். அவனுக்கு ருதுவைப்பற்றி ஏதும் தெரிந்துகொள்ள வேண்டும். எப்படி நேரடியாகக் கேட்பதென சுற்றி வளைத்தான்.

இதற்கிடையில் ஷிவன்யா எழுதி முடித்து அவனிடம் கையெழுத்திற்காக கோப்பினை நீட்டியிருந்தாள்.

"போலீஸ் குவார்ட்டர்ஸ் டாக்டர். இங்கிருந்து பக்கம் தானே!" என்றிருந்தாள்.

"ஹோ... உங்க அப்பா போலீஸா?" பேனாவை திறந்து கொண்டே, காகிதத்தில் விழிகள் பதித்து ஆச்சரியம் போல் வினவினான்.

"அப்பா, அண்ணா ரெண்டு பேரும்" என்றாள் பெருமையாக.

"எந்த பிரான்ச்?"

"அப்பா செக்ரட்டரிரைட் ஸ்குவார்ட் ஹெட். முன்னாடி பீகாரில் டிஜிபி. அண்ணாக்கு இங்க டிரான்ஸ்பர். அம்மா அண்ணா, தேஷ் விட்டு இருக்க முடியாது சொல்லவும் அப்பாவும் வேலையை மாத்திக்கிட்டாங்க." இனியனின் மீது கொண்ட நேசத்தால், எதையும் ஆராயாது குடும்ப சூழலை விவரித்திருந்தாள்.

ஷிவன்யா சொல்ல சொல்ல இனியனின் குழப்பம் தான் அதிகரித்தது.

ருதுவின் அப்பா பிஸ்னெஸ் மேன். இவள் என்னவென்றால் போலீஸ் சொல்கிறாள். முதலில் அவனுக்கு அக்கா தான். இவள் சொல்வதை பார்த்தால் அக்கா இருக்கிறாள் என்பதே அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

'உன்னை சுற்றி என்னதான்டா வலை பின்னி வச்சிருக்க.' மனதோடு புலம்பினான் இனியன்.

குழப்பத்தோடே கையெழுத்திட்டு அவளிடம் கொடுத்தான்.

"தேன்க்ஸ் டாக்டர்" என்று எழுந்தவள், சாக்லேட் ஒன்றினை அவன் முன்பு நீட்டினாள்.

"சைன் பண்ணதுக்கு லஞ்சமா?" அவன் முறைத்துக் கொண்டு கேட்டிட,

"அச்சோ இல்லை" என்று பதறினாள்.

"நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு... ஜஸ்ட் டோக்கன் ஆப் தேன்க்ஸ்" என்றாள்.

"ஹான்..." என்றவனும் புன்னகையோடு வாங்கிக்கொண்டான்.

முதல்முறை அவன் முகத்தில் அவள் கண்டு தோன்றிய சிரிப்பில் மொத்தமாக தன்னை தொலைத்து விழி விரித்தாள்.

ஷிவன்யா ருதுவிற்கு என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அவள் தன் நண்பனுக்கு மிகவும் நெருங்கிய உறவு என்பது மட்டும் புரிய, அவளிடம் தன் இயல்பை காட்டியிருந்தான்.

"சூப்பரா இருக்கீங்க டாக்டர்" என்று தன்னை மறந்து கூறியவள்,

"ஆஹான்" என்று அவன் சொல்லியதில் வேகமாக வெளியேயிருந்தாள்.

இனியனின் இதழ் அகம் நிறைந்த சிரிப்பை உதிர்த்தது. பல நாட்களுக்குப் பின்னர் ஒருவித துள்ளல் மனநிலை அவனிடம்.

உற்சாகமாகவே வீட்டிற்கு செல்ல கிளம்பி வெளியில் வந்தான்.

ருதுவை பார்க்க வேண்டும் போலிருந்தது. முதல் நாள் அவனை கண்டபோது இருந்த கோபம் இப்போது இனியனிடம் இல்லை. அவன் மொத்தமாகவே தன் அடையாளத்தை மாற்றியிருக்கிறான். குடும்ப சூழல் உட்பட. பெயர் மட்டுமே அவனுடையாதாக உள்ளது. இதற்கு பின்னால் வலுவான காரணங்கள் இருக்குமென்ற நம்பிக்கை ஷிவன்யாவின் பேச்சின் மூலம் உண்டாக, அவனது கோபமும் விலகியிருந்தது.

இருப்பினும் தங்கை என்று வரும்போது அண்ணனாக மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென முடிவெடுத்திருந்தான்.

இனியன் மருத்துவமனை வளாகம் விட்டு வெளியில் வர, ஷிவன்யா கேபில் ஏறிக்கொண்டிருந்தாள். ருது காக்கி உடையில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி அவளுக்கு தலையசைத்துக் கொண்டிருந்தான்.

இனியன் பார்வையால் நண்பனை தழுவிட, ருதுவின் நெஞ்சோரம் கூவல். ஏதோ உந்துதல். ருது திரும்பி பார்த்திட, இனியன் வேகமாக வண்டியின் பக்க கண்ணாடியை மேலேற்றியிருந்தான்.

பார்வையால் வட்டம் போட்டுவிட்டு ஷிவன்யா செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து ருது செல்ல... இனியனும் வண்டியை வீடு நோக்கி செலுத்தியிருந்தான்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 12

"என்னவாம்... டாக்டர் முகம் ஜொலிக்குது."

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த இனியன் தனதறைக்குள் கூட செல்லாது கூடத்து இருக்கையில் இலகுவாக அமர்ந்துவிட்டான்.

முகத்தில் அழகான புன்னகை.

அவன் முன்னிருக்கையில் பள்ளி முடிந்து வந்த இமையாள் சம்மணமிட்டு அமர்ந்தவாறு வினவினாள்.

"ஐ தின்க்... அம் இன் லவ் டா!"

அவனுக்கு தங்கையிடம் மறைக்கவேண்டிய அவசியவில்லை.

"ஆஹான்... பாருடா...! எப்போலேர்ந்து" என்று இமையாளும் உற்சாகம் காட்டினாள்.

"ஆமாம் அதென்ன நினைக்கிறீங்க. கன்ஃபார்ம் பண்ணலையா?" என்று வினவினாள்.

"பார்த்ததும் பிடிச்சுது. மனசுல ஏதோ ஒரு நெருக்கம் தானா வந்து ஒட்டிகிட்ட மாதிரி இருக்குடா. பார்த்து டென் டேஸ் தான் ஆகும். அதுக்குள்ள... தெரியலடாம்மா... டிசைட் பண்ண முடியல" என்று எழுந்து நின்றவன், ஒரு கையை இடையில் குற்றி மற்றைய கையால் நெற்றியை நீவியபடி, "அவள் பக்கமிருக்கும் போது ரிலாக்ஸ்டா... ம்ப்ச், எப்படி சொல்ல? மனசு எதையும் நினைக்காம லேசா இருக்க மாதிரி இருக்கு" என்றான்.

இமையாள் இனியனின் முகத்தில் புதிதாய் தெரிந்த ஒன்றைத்தான் அவதானித்துக் கொண்டிருந்தாள்.

"அப்போ இது லவ் தான்டா" என்றார் தீபா.

வீட்டில் அவர் இருக்கிறார் என்பதையே மறந்து இருவரும் பேசியிருந்தனர். பிள்ளைகள் வந்துவிட்டது அறிந்து அறைக்குள்ளிருந்து வெளியில் வந்த தீபா மகனின் பேச்சினை கேட்டுவிட்டார்.

"போச்சுடா..." இருவரும் ஒரு சேர முனகியது தீபாவிற்கு தெளிவாகவே கேட்டது.

"எனக்கு தெரியக்கூடாதுன்னு ரகசியம் பேசுனீங்களா?" எனக் கேட்டுக்கொண்டே இமையாளின் அருகில் அமர்ந்தார்.

"அப்படியில்லைம்மா" என்று இனியனும் தன்னிடத்தில் அமர,

"பொண்ணு டீடெயில் சொல்லுடா?" என்றார்.

"எதுக்கு?" ஆராய்வாக இழுத்தான்.

"எதுக்கா?" என்ற தீபா, "நம்ம வீடு வீடு மாதிரியா இருக்கு. எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரி ஆளுக்கு ஒரு மூலையில் பேருக்கு நடமாடிட்டு இருக்கோம். உன் தங்கச்சி தான் கல்யாணப் பேச்சுக்கு பெரிய ஆப்பு வச்சிட்டாள். உனக்காவது பண்ணலாம் பார்த்தால்... நீயும் பிடி கொடுக்கல. இப்போதான் உனக்கே ஒரு பொண்ணை பிடிச்சிருக்கே! நீ திரும்ப உன் தங்கச்சியை நினைத்து வருந்தி மனசு மாறுறதுக்குள்ள சட்டுப்புட்டுன்னு விசாரிச்சு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வோம். அப்போவாவது வீடு பழைய கலகலப்புக்கு வருதா பார்ப்போம்" என்று நீண்டு பேசியவர், இறுதியில் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டார்.

இனியன் அமைதியாக இருக்க...

"ஹ்ம்... பிள்ளைங்களுக்கு காலாகாலத்துல கல்யாணம் செய்து பார்க்கவும் பெத்தவங்களுக்கு ஒரு கொடுப்பினை வேண்டும்" என்றார்.

தீபா கலகலப்பாகக் காட்டிக்கொண்டாலும் பிள்ளைகளை நினைத்து உள்ளுக்குள் வருந்துவது அவரின் பேச்சில் தெரிந்தது.

"ம்மா..." என்று இனியன் சலிப்பைக் காட்டினான்.

"இன்னும் எனக்கே சரிவர விளங்கலம்மா."

"புரியாமதான் இவ்ளோ சொன்னியாண்ணா?" எனக் கேட்ட இமையாள், "நீயாவது அவங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாமே!" என்றாள்.

"நீயும் புரியாம பேசாத இமயா! அவள் இப்போ தான் தேர்ட் மெடிக்கல் முடிக்கப்போறாள். படிச்சிக்கிட்டு இருக்க பொண்ணை போயி... ம்ப்ச், சின்னு பொண்ணு மீது எப்படி இதுன்னு எனக்கு மண்டை வெடிக்குது" என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

கிட்டத்தட்ட இருவரிடமும் அதற்கு மேல் பேசி சமாளிக்க முடியாதென ஓடி மறைந்தான்.

"இவன் என்ன இப்படி சொல்லிட்டுப்போறான். இப்போ அந்தப்பொண்ணை லவ் பண்றன்னு சொல்றானா? இல்லைன்னு சொல்றானா?" தீபா குழம்பி புலம்பினார்.

"அண்ணாக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கும்மா. படிக்கிற பொண்ணுன்னு வெயிட் பண்ண நினைக்கிறாங்க" என்றாள் இமையாள். அண்ணனின் மனம் அறிந்தவளாக.

"நீயும் வெயிட் பண்ணு... அவனும் வெயிட் பண்ணட்டும். நாங்களும் நீங்க ரெண்டு பேரும் எப்போ ஓகே சொல்லுவீங்கன்னு வெயிட் பண்றோம்" என்று எழுந்த தீபா, "இன்னைக்கு அந்த ரைட்டர் எபி போட்டாங்களா தெரியல. வீட்டுல நடக்குற குழப்பம் போதாதுன்னு அந்த ரைட்டரு வேற, புரியாத அறிவியலை எழுதி என் மண்டையை காய விடுது. இருந்தாலும் நல்லா யோசிக்குது. இண்ட்ரெஸ்டிங்கா இருக்கு. நான் புண் பட்ட என் மனசை கதை படித்து ஆத்தப்போறேன். நீ போய் டீ ஆத்தி கொண்டா" என்று அறைக்குள் நுழைந்து கொண்டார்.

தீபாவின் இத்தகைய பேச்சால் மட்டுமே அவ்வீடு கொஞ்சமேனும் உயிர்ப்போடு இருக்கிறது.

இமையாளுக்கு அன்னையின் இந்தப்பேச்சு கீற்று போல் புன்னகையைத் தோற்றுவித்தது.

தீபாவிற்கு தேநீர் கலந்து கொடுத்தவள், இனியனைத் தேடி அவனது அறைக்குச் சென்றாள்.

"அண்ணா..."

முகத்தை தூவாளையால் துடைத்தபடி குளியலறைக்குள்ளிருந்து வந்தவன், "வாடா" என்று அழைத்திருந்தான்.

"என்ன கேட்கணும்?" மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு உன்னை நான் அறிவேன் எனும் தோரணையில் அவன் கேட்டதில் கேட்க வந்ததை மறந்து திருதிருத்தாள் இமையாள்.

"என்னவாம் இமயாக்கு? அண்ணாகிட்ட கேட்கவே யோசிக்கிறாங்க?" என்றவன், அவளை மெத்தையில் அமர்த்தி தானும் அமர்ந்து, கைகளை தன் கை பிடிக்குள் வைத்தவனாக,

"டூ டைம்ஸ் நேரில் பார்த்தேன். வந்த அன்னைக்கு. அப்புறம் இப்போ... வீட்டுக்கு வரும் முன்னால். நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது. நேரில் ரொம்பவே நல்லாயிருக்கான். தகவல் போதுமா?" என இறுதியில் ஆதுரமாக வினவினான்.

"பேசணும் தோணலையா உங்களுக்கு?"

"இல்லையே!"

"ஏன்? எனக்காகவா?"

"இருக்கலாம்." தோள்களை உயர்த்தி இறக்கினான்.

"என்னை வச்சு பார்க்காதண்ணா. உன் ஃபிரண்டா மட்டும் பாரு" என்றாள்.

"அவன் என்னை ஃபிரண்டா பார்க்கலையே! பார்த்திருந்தால் இங்கு வந்ததும் என்னத்தேடி வந்திருப்பான். அவனும் உன்னை வைத்து தானே என்னை பார்க்கிறான்" என்ற இனியனின் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே இமையாளுக்குத் தென்றியது.

"உனக்கு அவனை பார்க்கணுமா?"

இனியன் இப்படி கேட்பானென்று அவள் எதிர்பார்க்கவில்லை. பட்டென்று விழியுயர்த்தி இனியனின் முகம் கண்டாள்.

"என்ன சொல்லணும்?"

"உண்மையை!"

"தோணாமல் இல்லை. ஆனால் அவங்க சொன்னது உண்மையா இருக்கும் பட்சத்தில்... என்னால் ஏத்துக்க முடியுமா தெரியல" என்றாள். வற்றிவிட்ட குரலில்.

"அப்போ அடுத்து என்னன்னு சீக்கிரம் முடிவு பண்ணு. உன்னோட உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தள்ளியிருந்தால் என் தங்கையின் வாழ்வு வீணாகிவிடும் போல்" என்றான்.

"அண்ணா..." அவளிடம் இனியனின் பேச்சில் மெல்லிய அதிர்வு உண்டானது.

"கடைசி வரை தனியா இருக்கலாம் நினைப்பா. அப்படியிருந்தால் இந்நொடியே அழிச்சிடு. உன் வாழ்க்கைன்னு வரும்போது நானும் எல்லா அண்ணன்களை போலத்தான் இருப்பேன்" என்று அழுத்தமாகக் கூறியவன், "நீ குட்டியா இருக்கும்போது உன்னை என் மடியிலே தான் வச்சிருப்பேன். அப்போ நீ நல்லா கொழுகொழுன்னு வெயிட்டா இருப்ப. தூக்கவே முடியாதுன்னாலும் அடமா என் மடியிலே வச்சுக்கிட்டு சுத்துவேன். நானே அப்போ குட்டி, ஆனால் நீ என்னை பெரியவனா உணர வைத்தாய். சொல்லப்போனால் அப்போவே உன்னை என் பேபியை பார்த்திருக்கேன். இப்போ என் உயிராதான் தெரியுற. உன்னை நான் இப்படியே விட்டுடுவன்னு எப்படி நினைச்ச நீ?" எனக் கேட்டான்.

"அண்ணா..."

"காலம் எல்லாத்தையும் மாற்றும். நம்புவோம்" என்று தங்கையின் உச்சியில் உள்ளங்கை வைத்து அழுத்தினான்.

இமையாளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. தன்னை கொண்டு தான் தன் வீட்டின் சந்தோஷமென்று.

"அப்போ உங்க விருப்பத்தையும் எனக்காகத்தான் தள்ளி வைக்க நினைக்கிறீங்களா?"

"அம்மாகிட்ட என்ன பதில் சொன்னாய்? என் மனசு புரிந்து தானே சொன்ன. அப்புறம் ஏன் இந்தகேள்வி?" என்ற இனியன், "அவள் படிக்கட்டும். ரொம்ப ஆசைப்பட்டு படிக்கிறாள் போல. என்னால் அது வீணாக வேண்டாம். அவள் எனக்குத்தான் அப்படின்னா நிச்சயம் என் கைக்கு வருவாள்" என்றவனிடம் அடுத்து என்ன பேசுவதென்று அவளுக்குத் தெரியவில்லை.

இமையாளால் இனியன் சொல்வதைப்போல் ருதுவை மறந்து வேறொரு வாழ்வென்பதெல்லாம் நினைத்துக்கூட பார்த்திட முடியாத ஒன்று. எப்படியாவது இனியனை திருமண பந்தத்தில் நுழைத்திட வேண்டுமென எண்ணி, அவனாக ஒரு பெண்ணை விரும்பதாக சொல்லவும், அதைப்பற்றி பேசி ஒப்புக்கொள்ள வைத்திட நினைத்துவர, உன்னைத்தாண்டி எதுவும் பெரிதல்ல என்பதை எத்தனை அழகாய் வார்த்தைகளால் அவளுக்கு உணர்த்திவிட்டான்.

தன் வாழ்வு நேர்பெற, அவன் வாழ்வை வீண் செய்யவும் தயங்கிட மாட்டானென்று அவளுக்கு புரிந்தது.

'எனக்கு என்ன பண்ணனும் தெரியலையே ருது.' மனதோடு துவண்டு கதறினாள்.

துளிரும் கண்ணீரை மறைக்க அங்கிருந்து சென்றுவிட்டாள்.

'உன்னை மாற்ற எனக்கு வழி கிடைச்சிடுச்சு.' இனியனின் கண்களில் சிறு ஒளி.

________________________________

வெகுநாட்களுக்குப் பின்னர் ஷிவன்யா தன் குடும்பத்தை நேரில் காண்கிறாள். மனதால் மகிழ்வில் திளைத்திருந்தாள்.

வேங்கடம் ஆள் இல்லாததால் அன்னையிடம் மட்டும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள். தேஷ் அத்தையென்று அவளையே சுற்றி வர இருவரும் வீட்டிற்குள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

ருது ஷிவன்யாவை அழைத்து வரும்போதே மாலை ஆறு மணி ஆகியிருந்தது. அதனால் ஏதும் அவசரமென்றால் அலுவலகம் சென்றுகொள்ளலாமென வீட்டிலே இருந்துகொண்டான்.

"விளையாடியது போதும். உன் ரூம் அரேன்ஞ் பண்ணு ஷிவா. காலையில் காலேஜ் கிளம்பும் போது எல்லாம் தேடி அம்மாவை அலைக்கழிப்பாய்" என்ற ருதுவின் அதட்டலில் ஓட்டம் நின்று அமைதியாக அறைக்குள் நுழைந்தாள் ஷிவன்யா.

"ரொம்பத்தான் நல்லபிள்ளை" என்று சிரித்த அம்பிகா, "நீ வாடா... உனக்கு சாப்பாடு ஊட்டுறேன்" என்று தேஷ்ஷை தூக்கிக்கொண்டு நகர்ந்தார்.

ருது ஷிவன்யாவிற்கு உதவ சென்றான்.

"நீங்க வருவீங்க தெரியும். இந்தாங்க..." என்று இரண்டு மூன்று அட்டை பெட்டிகளை அவன் முன் நகர்த்தியவள், "என்னோட புக்ஸ் எல்லாம் அடுக்கிக் கொடுத்திடுங்க போதும்" என்றாள்.

"அப்போ நீ?" எனக் கேட்டாலும் அவளது புத்தகங்களை அடுக்க ஆரம்பித்திருந்தான்.

"ட்ரெஸ்லாம் இருக்குல டார்லிங்" என்றவள் இரண்டு பெரிய பெட்டிகளிலிருந்த துணிகளை வாரிசுருட்டி அள்ளி அப்படியே வார்ட்ரோப்பில் திணித்து முடினாள்.

"அவ்வளவு தான் முடிஞ்சுப்போச்சு" என்று மலையை பெயர்த்து வைத்தவள் போல் கைகளை தூசி தட்டுவதுப்போல் தட்டினாள்.

அவளை முறைத்து பார்த்த ருது...

"இதுதான் அடுக்கி வைக்கும் லட்சணமா? ஒழுங்கா எடுத்து மடித்து வை" என்று அவளின் காதினை திருகி விடுத்தான்.

"வீட்டிலும் விறைப்பாவே இருக்கணும் அவசியமில்லை டார்லிங்" என்றவள் முகத்தை சுருக்கியபடி ஒழுங்குமுறையில் உடைகளை அடுக்கத் துவங்கினாள்.

கல்லூரி நடவடிக்கைகளை ருதுவிடம் பகிர்ந்துகொண்டபடி வாய் ஓயாது ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தாள்.

"எக்ஸாம் எப்போ?"

"நெக்ஸ்ட் மன்த்" என்றவள் அப்போது தான் நினைவு வந்தவளாக, "அந்த புளூ ஃபைல் மட்டும் என் பேக் மேலே வச்சிடுங்க. நாளைக்கு சப்மிட் பண்ணனும். இந்த செம் மார்க் முழுக்க அதில் தான் இருக்கு" என்று ருதுவிற்கு அருகில் கிடந்த... இன்று இனியனிடம் கையெழுத்து வாங்கிய கோப்பினைச் சுட்டிக் கூறியிருந்தாள்.

ருது தனக்காக காத்திருக்கிறான் என்பதாலே ஒட்டு மொத்தமாக அனைத்தையும் அள்ளிப்போட்டுக் கொண்டு விடுதியிலிருந்து கிளம்பியிருந்தாள். அதனால் அக்கோப்பு பல புத்தகங்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டிருந்தது.

"இன்னைக்குதான் முழுசா அந்த ப்ரொஜெக்ட் வொர்க் முடிந்தது. சைன் போட யோசிச்ச டாக்டர்... மனசு வந்து நல்லா பண்ணியிருக்கீங்க சொன்னாரு" என்று அவள் சொல்லும்போது உதட்டில் புன்னகை. விழிகளும் மலர்ந்ததோ எனத் தோன்றியது ருதுவிற்கு.

காதலில் திளைத்து நீந்தியவனுக்கு அதற்கான ஆரம்பப்புள்ளிகள் தெரியாதா என்ன?

"டாக்டர் உனக்கு கிளாஸ் எடுக்கிறாரா?"

அவள் சொல்லிய கோப்பினை திறந்து பார்த்தவனாகக் கேட்டான்.

"ம்ம்ம் ஒருமுறை சப்ஸ்ட்டிட்யூட் கிளாஸ் எடுக்க வந்தார்" என்றவள், "அங்கே தான் பிராக்டிஸ் பண்ணார். எங்க டீன் அவரோட பேட்ச் பெஸ்ட் ஸ்டூடண்ட் அவங்கதான்னு அதுக்கடுத்த கிளாஸ் வந்தப்போ சொன்னாங்க" என்றாள்.

ஷிவன்யா சொல்வதை கேட்டுக்கொண்டே அந்த கோப்பின் இறுதி பக்கத்தில் இருந்த இனியனின் பெயரை பார்த்த ருதுவினுள் நடுக்கம். இதயத்தில் அதிர்வு. நண்பனின் பெயருக்கே இத்தனை உணர்வு வெளிப்பாடா?

இனியனின் கிறுக்கிய கையெழுத்துக்கு கீழே ஆங்கில எழுத்துக்களில் அவனது பெயர் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.

அவர்களின் பிரிவின் போது இனியன் முதுகலை கடைசி வருடம். அவன் மருத்துவத்தில் எந்த துறையில் சிறந்து விளங்க வேண்டுமென மேற்படிப்பு படித்தானென்று ருதுவிற்கு நன்கு தெரியும். அதுவும் ஷிவன்யாவின் முந்தையப் பேச்சில் படித்ததும் இதே கல்லூரி என்று யூகிக்க... இது தன்னுடைய இனியனாகத்தான் இருக்க முடியுமென உள்ளே கூக்குரல் ஒலித்து அடங்கியது.

"இனியன்." பெயரினை மெல்ல வருடியவனாக வாய்விட்டுக் கூறினான்.

"அதான் அவங்க நேம்" என்றிருந்தாள் ஷிவன்யா.

"அப்போ நான் உன்னை பிக்கப் பண்ண வந்தப்போ அவங்களோடு தான் இருந்தியா?" எனக் கேட்டான். அவனது குரலே கரகரத்து வந்தது.

"ம்ம்ம்..." என்றவள், "உங்களுக்கு அவங்களைத் தெரியுமா?" எனக் கேட்டாள்.

"மே பீ" என்றவன் வெளியேறியிருந்தான்.

'அப்போ இருமுறை அங்கு சென்றபோதும் யாரோ தன்னை பார்க்கும் உணர்வைக் கொடுத்தது இனியனோட பார்வை தானா?' எனக் கேட்டுக்கொண்டவனுக்கு ஆமென்று பதில் வழங்கியது அவனின் மனம்.

'என் முன்னால் வரணும் தோணலையா?'

'எப்படி வருவான்?'

கேள்விக்கு கேள்வியே அவனுள் எழுந்தது.

சில நாட்களாக இனியனிடமிருந்து மின்னஞ்சலும் வராமலிருக்க...

'என்னை வெறுத்துட்டியாடா?' என்று மனதோடு பேரிரைச்சலில் கத்தினான்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 13

ருதுவிற்கு பிரிவை உண்டாக்கி செல்ல வலுவான காரணம் இருந்தாலும், இமையாளை முற்றும் முழுதாய் மறந்திட முடியவில்லை.

மாட்டியிருக்கும் சிக்கலில் அவனது வாழ்வின் போக்கு எப்படி வேண்டுமானாலும் மாறும் அபாயம் உள்ளது. அதில் அவளையும் அலைக்கழிக்க அவனுக்கு விருப்பமில்லை. தன்னை நேசித்த ஒரு காரணத்திற்காக அவளும் தன் முட்பாதையில் வதைப்பட வேண்டாமென நினைத்தான். தன் பாதை தான் இப்படியாகிவிட்டது. அவளாவது நன்றாக இருக்க வேண்டுமென எண்ணியவனுக்கு அவளின் நலன் தன்னிடம் உள்ளது என்பது ஏனோ மறந்து போனது.

"எனக்கு திருமணம் ஆகிவிட்டது." ருது சொல்லியது உண்மையோ? பொய்யோ? ஆனால் அவ்வாறு சொல்லி ஒரு உயிரை துடிக்கவிட்டு வந்த பின்னர் ருது மகிழ்வாய் இருந்திடவில்லை.

அத்தனை வலிகளை சுமக்க முடியாது கடந்து வந்தான். தேஷ் எனும் பூ மலரை வாழ்வின் பிடிப்பாக பற்றிக்கொண்டு.

யாருமற்று அவனது லேஷஷின் நினைவில் அவன் வாடும்போதெல்லாம் அவனை கொஞ்சமேனும் உயிர்ப்புடன் நடமாட வைத்தது இனியனிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் தான்.

அதில் இனியன், ருது நேரில் இருந்திடும்போது எப்படியெல்லாம் பேசிடுவானோ அதற்கெல்லாம் எழுத்து வடிவம் கொடுத்திருப்பதைப்போல் சிறு சிறு நிகழ்வையும் கொட்டி அனுப்பிட, ருதுவிற்கு அதுவே போதுமானதாக இருந்தது.

அதிலும் இனியன் பொதுவாக ருதுவின் நலன் கேட்டு, தனது நிலைக் குறித்து புலம்புவானே தவிர்த்து இமையாளைப் பற்றி ஏதும் கூறிட மாட்டான்.

அவன் சொல்லியது பொய் எனும் பட்சத்தில் வேண்டாமென சென்றவன் தானாக தேடி வரட்டும். உண்மை எனும் பட்சத்தில் தொடர முடியாத உறவு எட்டவே நிற்கட்டும் எனும் எண்ணத்தால் தங்கையைப் பற்றி இனியன் எதையும் சொல்லிட மாட்டான்.

இனியனின் மின்னஞ்சல்களை எல்லாம் ஆர்வமாக... தன்னை நினைத்து தேடவும் ஒரு உயிர் உள்ளது என்கிற மகிழ்வில் படிக்கும் ருதுவுக்கு, ஒன்றிலாவது தனது லேஷஷை பற்றி சொல்லிட மாட்டானா எனும் ஏக்கம் எட்டிப்பார்க்கும்.

தனக்காக தன்னுடைய நட்பிற்காக உருகும் இனியனிடமாவது பேசலாம் எனத் தோன்றும் எண்ணத்தை அந்நொடியே அழித்திடுவான்.

ருதுவும் இனியனுடன் தொடர்பில் இருந்திருப்பான். இனியன் தனக்கு நண்பனாக மட்டுமே இருந்திருந்தால். இனியன் அவனவளுக்கு அண்ணனாகவும் இருந்துவிட்டானே!

ருதுவால் ஒரே நேரத்தில் காதல் மற்றும் நட்பின் இரு பெரும் வலிகளை சுமப்பது சற்று கடினமாகத்தான் இருக்கிறது.

'நான் உன் பக்கத்தில் இருக்கன்னு தெரிந்தும், என்னை முன்னால் வந்து பார்க்கணும் தோணலையா?'

இனியன் தன்னை பார்த்துவிட்டான் என்று தெரிந்த கணம் முதல் ஓராயிரம் முறை மானசீகமாக நண்பனிடம் கேட்டுவிட்டான். விடை என்னவோ மனதை நோகவே செய்கிறது.

உறக்கம் வராது அறைக்குள்ளே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்.

இருவரின் அலைப்பேசி எண்ணுமே அவனிடம் உள்ளது. பழைய எண்ணை தனக்காகவேணும் மாற்றியிருக்க மாட்டார்கள் என்று அதீத நம்பிக்கை. இவன் தான் அனைத்தையும் துறந்திறந்தான். அவர்கள் இவனை மட்டுமே மனதில் வைத்து நிஜமாகிய நினைவுகள் அனைத்தையும் நிழல் மாறாது வைத்திருக்கிறார்கள். ஒன்றாக இருந்த நாட்களையும் கூட.

அலைப்பேசி எண்ணை திரையில் மனனமாக தட்டச்சு செய்தவன், நொடியில் நெஞ்சத்தில் அழுத்தம் ஏற்பட, அழித்திருந்தான். மின்னஞ்சலில் செய்தியை நிரப்பியவன் அனுப்பாது ட்ராஃப்டில் சேர்பித்தான்.

காதல் வலிக்கு சற்றும் குறைந்ததல்ல நட்பின் வலி.

"இனியா!"

மெத்தையில் கவிழ்ந்தடித்து படுத்தவன் தலையணையை அழுத்திக்கொண்டு உறங்க முயற்சித்தான்.

உறக்கம் வருவேணா என போக்குக் காட்டியது.

தேஷ் ஷிவன்யாவுடன் அவளது அறையில் உறங்கிவிட்டான். இல்லையென்றால் மகனைக் கட்டிக்கொண்டாவது உறக்கத்தை தழுவியிருப்பான்.

அவனது தனிமையின் துயர் போக்கும் ஆள் அவனது மகன் மட்டுமே.

நேரத்தை பார்த்தவன் தயங்கினாலும் எழுந்து ஷிவன்யாவின் அறைக்குச் சென்று கதவினைத் தட்டினான்.

கண்களை கசக்கியபடி கதவினை திறந்தவள்,

"என்னண்ணா ட்யூட்டியா?" எனக் கேட்டபடி கை மறைவில் கொட்டாவி விட்டாள்.

"இல்லை ஷிவா" என்ற ருது, "தேஷ்ஷை தூக்கிக்கட்டுமா?" என வினவினான்.

"என்னாச்சு டார்லிங்?" என்றவளின் முகத்தில் சட்டென்று தோன்றிய பதட்டத்தில் தன் முகத்தை சீராக்கியவன்...

"நத்திங்... நத்திங் டூ ஒர்ரி. ஏதோ பேட் ட்ரீம்" என சமாளித்தான்.

"ம்ம்ம்... அவன் நல்லா தூங்குறான். நீங்க கவலைப்படமால் போய் தூங்குங்க" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே...

"அத்தை" என தேஷ் சிணுங்கிட... ஷிவா உள்ளே சென்று தட்டிக் கொடுத்திட ருது திரும்பி வந்திருந்தான்.

அதன் பின்னர் பால்கனியில் இரவு வானினை வெறித்தவனாக நடை பயின்றவன் விடிந்தும் விடியா பொழுதில் காக்கியை மாட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

பல இரவுகள் உறங்காதது அவனுக்கு பழக்கம் தான். இன்று ஏனோ மனதின் பாரம் அதிகம் கூடியிருந்தது.

ருது நேராக சென்றது காந்தா பேட்டைக்கு நேரெதிர் இருந்த பல்பொருள் அங்காடிக்குத்தான்.

ருது அங்கு சென்று சேர வானம் வெண்மை பூண்டிருந்தது.

வாயிலில் நின்றிருந்த காவலாளி, வண்டியிலிருந்து ருது இறங்கி நின்றதும் வேகமாக அவனின் அருகில் ஓடி வந்தார்.

"சார்...?"

"இந்த கடையோட ஓனர் இன்னும் இருபது நிமிஷத்தில் என் முன்னால் நிற்கணும்" என்றவனாக வண்டியின் பேனட்டின் மீது குதித்து அமர்ந்தான். தொடையில் அவனது விரல்கள் தாளம் தட்டின.

"அவனுக்கு கால் பண்றதுக்கு முன்னாடி எனக்கொரு காபி சொல்லுங்க" என்றான். நகர்ந்து முன் சென்றவரிடம்.

ருது ரசித்து காபியை சுவைத்து முடித்திட, கடையின் உரிமையாளர் மாசி வந்திருந்தார்.

அவர் காந்தா பேட்டைக்குள்ளிருந்து வருவதை ருது கவனித்திருந்தான்.

"பேட்டையில தான் நம்ம வூடு இருக்கிது சார்" என்றவன், "என்ன சார் வூட்டுக்கு சரக்கு வாங்கணுமா? சொல்லிவுட்டிருந்தா நம்ம பயலுவ கையினுல கொடுத்துவுட்டிருப்பனே" என்றான்.

"சரக்கு தான் மிஸ்டர்... ஆனால் வாங்க வரல. எடுக்க வந்திருக்கேன்" என்று வண்டியின் மீதிருந்து இறங்கிய ருது அவனது தோள் மீது கைபோட்டபடி கடையை நோக்கி நடந்தான்.

"புரியல சார்."

"புரியும் வாங்க சொல்றேன்" என்ற ருது வண்டி சத்தம் கேட்டு திரும்பிட, கிருஷ்ணனும், வெங்கட்டும் வந்திறங்கினர்.

"உங்களையும் வர சொன்னாரா?" என கிருஷ்ணனைக் கண்டு வினவிய வெங்கட், "இவனுங்களை முடிக்காம ஓயமாட்டார் போலவே" என்று முணுமுணுத்தான்.

"அதனால் தான் இந்த வயசுல இந்த உயரத்தில் இருக்கார்." கிருஷ்ணன்.

"உண்மை தான். இவர்கிட்ட நிறைய கத்துக்கணும்."

"பேசி முடிச்சாச்சுன்னா வேகமா வாங்க." ருது சொல்லியதில் இருவரும் அருகில் ஓடி வந்திருந்தனர்.

அதற்குள் மாசி கடையை திறந்திருந்தான்.

கடையின் உள்ளே நுழைந்த ருது ஒவ்வொரு பகுதியாக பார்வையிட, மளிகைப்பொருட்கள் இருக்குமிடம் வந்ததும் தன்னுடைய கால்ச்சட்டை பையிலிருந்து வெண்மை நிற பொட்டலத்தை எடுத்து சர்க்கரை பொட்டலங்களுக்கு நடுவில் வைத்தான்.

"சார்... சார் என்னா சார் வைக்கிரிங்கோ?" என்று மாசி வேகமாக ருதுவிடம் வர,

"இதுவும் சர்க்கரைதான் மாசி. ஆனால் இதை விற்றால் தண்டனை உண்டு. காலத்துக்கும் ஜெயில் சாப்பாடு தான்" என்றான் ருது.

"சார் வேணாம் சார்."

மாசியின் கத்தலை எல்லாம் ருது பொருட்படுத்தவே இல்லை.

"வீடியோ ஆன் பண்ணுங்க வெங்கட்" என்ற ருது, சில நிமிடங்கள் எதையோ தேடுவதைப்போல், தான் வைத்த பொட்டலத்தை கிருஷ்ணன் தேடி எடுப்பதைப்போல் பதிவு செய்தான்.

"பக்கா எவிடன்ஸ். இவனை அரேஸ்ட் பண்ணுங்க எஸ்.ஐ சார்" என்றான்.

"வேணாம் சார். என்னாண்ட வச்சிக்கினாத. நான் கைலாஷ் ஆளு" என்று எகிறினான் மாசி.

"ஹோ அப்போ அந்த கைலாஷ் வேற மாதிரியா. உன்னையெல்லாம் ஆளா வச்சிருக்கான்" என்று கேலியாக சிரித்தான் ருது.

ருது சொல்லிய அர்த்தத்தில் மற்ற இருவரும் சிரித்திட,

"உனக்கு என்னாதான் வேணும் சார்?" என்று பற்களைக் கடித்தான் மாசி.

"ஹான்... அப்போ நேத்து இவங்க உன்கிட்ட கேட்ட புட்டேஜ் கொடு. உன்னை விடுறேன்" என்றான் ருது.

"அது அழிஞ்சிப்போச்சு சார்."

"இது வேலைக்கு ஆகாது கிருஷ்ணன். இவன் உள்ள இருந்தால் தான்" என்று ருது முடிக்கும் முன்பு அவன் கேட்ட காணொளி காட்சி அடங்கிய தட்டினை ருதுவிடம் கொடுத்திருந்தான் மாசி.

"ஜெயிச்சிட்டோம், உனக்கு பயந்துக்கினே நினைச்சிடாத சார். உன்னால ஒன்னும் புடு** முடியாது. அந்த தைரியத்தில் தான் கொடுத்துக்கினேன்" என்றான்.

"ஆஹான்" என்று கூலர்ஸை கீழிறக்கிய ருது, "பயமில்லைன்னா நேத்தே கொடுத்திருப்படா" என்று வெளியேறினான்.

ருது வண்டியில் ஏறப்போக,

"சார் இதை என்ன பன்றது?" என எடுத்த பொட்டலத்தை காண்பித்துக் கேட்டான் வெங்கட்.

"ராதிகாகிட்ட கொடுத்து சமோசா செய்து சாப்பிடுங்க" என்றான்.

"சார்..." வெங்கட் அதிர்வாய் பார்க்க...

"இவ்ளோ மருந்து ஏது சார். அசோக்கிடமிருந்து எடுத்தது கிராம் கணக்கில் தானே இருந்தது" என்றார் கிருஷ்ணன்.

"அச்சோ அண்ணா அது மைதா மாவு. அம்மாக்குத் தெரியாமல் எடுத்து வந்தேன். கொண்டு போய் எடுத்த இடத்தில் வைக்கணும். இல்லைன்னா ஓடவிட்டு உதைப்பாங்க" என்றவனை வினோதமாக பார்த்தனர் இருவரும்.

"இவரு அவங்க அம்மாவுக்கு பயப்படுவாங்க போலண்ணா!"

வெங்கட் சொல்லியதும் கிருஷ்ணனிடம் மென் புன்னகை.

ருது காந்தா பேட்டைக்குள் நுழைய, இருவரின் விழிகளும் அதிர்ச்சியில் விரிந்தது.

"போச்சு காலையிலே வம்பை விலைக்கு வாங்க ஆரம்பிச்சிட்டார்" என்று இருவரும் தத்தம் வந்த இருசக்கர வண்டிகளில் ருதுவை பின் தொடர்ந்தனர்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் கண்காணிப்பு காணொளியில் பதிவாகியிருந்த முகங்களை கைது செய்திருந்தான் ருது.

காலை நேரம் என்பதால் பேட்டை மக்களுக்கு தகவல் பரவுவதற்குள் அந்த நால்வரையும் இழுத்துக்கொண்டு காவல் நிலையம் வந்திருந்தான் ருது.

________________________________

பள்ளியின் வலைதள பக்கங்களில் வந்திருக்கும் சேர்க்கை படிவங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தவர்களில் இமையாளும் ஒருத்தி.

இமையாளுக்கு அருகில் அமர்ந்திருந்த ஆசிரியர் ஒரு விண்ணப்பத்தை சரிபார்த்தவாறே...

"இந்த பேபி அம்மா நேம் கூட இமையாள்" என்றிட, இமையாளிடம் இதழ் விரியா புன்னகை.

"கொஞ்சம் நல்லா தான் சிரித்தால் என்னவாம். உன் வயசுக்கு இவ்வளவு அமைதிலாம் கூடாது இமையாள்" என்றார்.

அதற்கும் அவளிடம் புன்னகையே.

"வாய் மட்டும் திறந்திடாத" என்று அவள் சொல்ல...

"எப்போ இன்டர்வியூ மேம்?" எனக் கேட்டாள் இமையாள்.

"எக்ஸாம்ஸ் எல்லாம் முடிந்ததும்" என்றார் அவர்.

"இன்னும் டூ வீக்ஸ் தான் இருக்குல மேம்?"

"ம்ம்ம்... எவ்வளவு வேகமா போகுது இந்த இயர்" என்றவர், "செலக்டட் அப்ளிகேஷன்ஸ் ஸ்டோர் பண்ணி வை. நாளைக்கு இன்டர்வியூ மெயில் ரிப்ளை பண்ணிக்கலாம்" என்று அவர் சொல்ல, அவளும் சரியென்றாள்.

அவர்கள் வேலை முடித்து கிளம்பிட, இனியனிடமிருந்து அழைப்பு வந்தது.

"கிளம்பிட்டேண்ணா!"

"ஓகேடா" என்ற இனியன், "நைட் எனக்கொரு சர்ஜரி இருக்குடா. எமெர்ஜென்சி. வர லேட் ஆகும்" என்று சொல்லி வைத்திட்டான்.

இமையாள் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்ல... வழியெங்கும் கலவரம். தடியர்கள் கடைகளை அடித்து நொறுக்கியபடி, சாலைகளில் வரும் வாகனங்களை மறித்து கலவரம் செய்து கொண்டிருந்தனர்.

அப்பகுதி காந்தா பேட்டை சுற்றியுள்ள பகுதி.

ருது தன்னுடைய ஆட்களை கைது செய்துவிட்டான் என்று தெரிந்த நொடி காந்தா ருதுவின் காவல் நிலைய அலுவலகம் முன்பு தனது ஆட்களுடன் கூடிவிட்டான்.

ருது அந்நேரம் முடிக்காத கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய குற்றவாளியை விசாரித்துக் கொண்டிருந்தான்.

காந்தா உள்ளே நுழைய, பயம் இருந்த போதிலும்,

"வேற ஒரு கேஸ் விசாரணையில் இருக்காங்க. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று காந்தாவை தடுத்திருந்தான் வெங்கட்.

வெங்கட்டின் மறுப்பில் மேலும் கோபம் வரபெற்ற காந்தா, அவனை தள்ளிவிட்டு, தனது ஆட்களை வெளியில் நிற்குமாறு கண்காட்டி, விசாரணை அறைக்குள் நுழைந்த வேகத்தில் ருதுவின் சட்டையில் கை வைத்திட முயன்றான்.

நொடிப்பொழுதில் இருக்கையிலிருந்து சுழன்று எழுந்த ருது, காந்தாவின் மார்பில் தன் பூட்ஸ் காலினை வைத்து தள்ளியிருந்தான்.

தள்ளிய வேகத்திற்கு காந்தா சுவற்றில் மோதி தரையில் சரிந்து அமர,

"இவனை தூக்கி செல்லில் போடுங்க கிருஷ்ணன்" என்று கர்ஜித்தான்.

"யார் மேல கை வைக்க வர?" என்ற ருது, சுட்டு விரல் ஆட்டி, பற்களால் கீழ் உதட்டை கடித்தான்.

"மல்லிகாக்கா" என்று அழைத்தவன்,

"ஒரு ஆளை கொன்னு பேட்டை வாயிலில் கட்டிப்போட்ட வழக்கில் முதல் குற்றவாளி மற்றும் காவல்துறை அதிகாரி மேல் காவல் நிலையம் புகுந்து கை வைக்க பார்த்ததாகவும் சேர்த்து எப்.ஐ.ஆர் பைல் பண்ணுங்க" என்றான்.

காந்தா மற்றும் கைலாஷ் நினைத்து பயந்த போதிலும், தனக்கு மேலதிகாரி சொல்வதை செய்தாக வேண்டிய கடமை அவர்களுக்கு. ஆதலால், கிருஷ்ணன் காந்தாவை இழுத்து கம்பிகளுக்கு பின்னால் அடைத்து பூட்டினை பூட்டிட, ருது சொல்லியதை வார்த்தை மாற்றாது குற்றப்படிவத்தில் குறிப்பிட்டு ருதுவிடம் கையெழுத்து வாங்கியிருந்தார் மல்லிகா.

விசாரணை அறையிலிருந்து வெளியில் வந்த ருது...

"ராதிகா இன்னைக்கு லீவ் எடுத்துக்கோங்க" என்றவனாக, "வீட்டில் ட்ராப் பண்ணிட்டு வாங்க வெங்கட்" என்றிருந்தான்.

ருதுவிற்கு தெரிந்துதான் இருந்தது. எத்தனை பெரிய ரவுடியை செல்லுக்குள் அடைத்திருக்கிறோம் என்று. இன்னும் சில நிமிடங்களில்... ஏன் நொடிகளில் பெரிய பெரிய ஆட்களிடமிருந்து அவனுக்கு அழைப்பு வரலாம். அதற்கெல்லாம் ருது செவி சாய்க்கப்போவதில்லை. ஆதலால் காந்தாவின் ஆட்கள் கலவரத்தில் ஈடுபடலாம். நகரமே இன்றைய பொழுது ஸ்தம்பிக்க உள்ளது என்பதை நன்கு அறிவான்.

அனைத்தும் கைலாஷின் தலைமையில் இனிதே துவங்கும். இந்த அலுவலகம் கூட அவர்களின் கலவரங்களில் தரைமட்டமாக்கப்படும். அதில் ராதிகாவுக்கோ, அவளின் வயிற்றில் வளரும் குழந்தைக்கோ எவ்வித ஆபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ராதிகாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

அவனிடம் ஒரு பெண், குழந்தையை பெற்றெடுக்கும் காட்சியை நேரில் கண்ட ரணம். மனதோடு இன்றும் தேங்கியுள்ளது. கணவனாக பார்க்க வேண்டிய காட்சி... அவன் பார்த்த தருணம்? விளங்கிக்கொள்ள முடியா ஒன்று.

ராதிகாவும், வெங்கட்டும் வெளியில் வர, காந்தாவின் ஆட்கள் அடிதடி ஆயுதங்களோடு விறைத்துக் கொண்டு நின்றனர்.

"எங்க அண்ணாத்த எங்கடா?" ஒருவன் நீண்ட பட்டா கத்தியை தோளில் வைத்து பிடித்தபடி முன் வந்து கேட்டிட...

ராதிகாவை தன் கை வளைவில் கொண்டு வந்தவனாக,

"டிசி சாரிடம் பேசிட்டு இருக்காங்க" என்று சொல்லி நகர்ந்தான்.

"சார் அதிரடியா கோபமான ஆளா இருந்தாலும், ரொம்ப அக்கறையான ஆள் இல்லையா வெங்கட்?"

"ம்ம்ம்... அவருக்கு ஒரு குழந்தை இருக்கே. இதை கடந்து வந்தவர். அதனால் அனுபவம், உன்மேல் அக்கறை காட்டுறார்" என்றான் வெங்கட்.

ருதுவின் இந்த அக்கறைக்கு பின்னான நிகழ்வு எத்தனை கொடுமையானது என்பது அவன் மட்டுமே அறிந்தது.

ராதிகாவை விட்டுவிட்டு வெங்கட் காவல் நிலையம் திரும்பி வந்தபோது, அடியாட்கள் யாவரும், காவல் நிலைய வெளி வளாகத்தில் அதீத முறைப்போடு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர்.

"என்னா சப்-இன்சு எம்புட்டு நேரமா பேச்சு வார்த்தையை போட்டுக்கினு இருக்காங்க உன் சாரு. எங்க அண்ணாத்த இம்பா பொறுமையா போயிக்கிற ஆளே இல்லை. ஒழுங்கா அண்ணாத்த பேச்சினை கேட்டுக்கின்னு எங்க ஆளுவளை வெளிய வுட சொல்லு" என்று ஆளாளுக்குக் கத்தினர்.

அப்போதே மதியத்திற்கு மேலாகியிருந்தது.

அதையெல்லாம் கண்டு கொள்ளாது உள்ளே வந்த வெங்கட்...

"அவனுங்களுக்கு இன்னும் உண்மை தெரியல போலிருக்கு சார். பேசாமல் மொத்தமா எல்லாரையும் உள்ள பிடிச்சுப் போட்டுடலாம் சார். ஸ்டேஷன் முன்னாடி கலவரம் செய்தாங்கன்னு" என்றான்.

"நீ சொல்றதும் கரெக்ட் தான்... ஆனால் பாரு அவனுங்க கலவரம் செய்யலையே எஸ்.ஐ சார். எவ்ளோ அமைதியா மரத்தடியில் உட்கார்ந்திருக்கணுங்க" என்று வெங்கட்டிடம் சொல்லிக்கொண்டே வெளியில் வந்த ருது,

வாயில் படியின் மத்தியில் நிமிர்ந்து நின்றான்.

ருதுவை கண்டதும் தடியர்கள் பெரும் சத்தத்தோடு அவன் முன் வந்து நின்றனர்.

"என்னா போலீசு ரொம்பத்தான் மாஸ் காட்டிக்கினு சுத்துற. எங்க காந்தா அண்ணாத்த வந்து பேசனுமா உனக்கு?" என்று ஒருவன் கேட்டிட,

"அண்ணாத்த எங்கன்னு கேளுடா" என்றான் மற்றொருவன்.

"உங்க அண்ணாத்த கம்பிக்குள்ள இருக்காரு. நாளைக்கு கோர்ட்டில் வந்து பாரு" என நின்ற நிலையில் ஒரு காலினை தூக்கி பூட்ஸில் மண்ணை தட்டியவனாக ருது சொல்லிட, ஆளாளுக்கு துள்ளி கத்தினார்கள்.

வெங்கட்டிற்கு மனதிற்குள் 'பத்த வச்சிட்டியே பரட்டை' என்று தான் தோன்றியது.











 
Status
Not open for further replies.
Top