ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரமே தூரமாய்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 14

InShot_20240729_205419060.jpg


"உங்க அண்ணாத்த கம்பிக்குள்ள இருக்காரு. நாளைக்கு கோர்ட்டில் வந்து பாரு" என நின்ற நிலையில் ஒரு காலினை தூக்கி பூட்ஸில் மண்ணை தட்டியவனாக ருது சொல்லிட, ஆளாளுக்கு துள்ளி கத்தினார்கள்.

வெங்கட்டிற்கு மனதிற்குள் 'பத்த வச்சிட்டியே பரட்டை' என்று தான் தோன்றியது.

அடுத்த நொடி அமைதியாக இருந்த இடம் கலவர பூமியாக மாறியிருந்தது.

வளாகத்தினுள் நின்றிருந்த வாகனங்கள், கட்டிடத்தின் கண்ணாடி சன்னல்கள் யாவும் அடித்து நொறுக்கப்பட, இடமே புழுதிக்காடாய் காட்சியளித்தது.

ருது நின்ற இடம் விட்டு அசையவில்லை.

அதுவே தடியர்களுக்கு ஆத்திரத்தை உண்டு செய்தது.

"என்ன சார் அமைதியா நிக்கிறீங்க?"

"எஸ்.ஐ சார் ஏதும் செய்ங்களேன்!" ருது சொல்லிய தொனியே வேடிக்கை மட்டும் பார் என்பதைப் போலிருந்தது.

"பெரிய பிரச்சினை ஆகிடப்போகுது சார்." கிருஷ்ணன் முன்வர,

"ஸ்டேஷனுக்குள்ள கால் வைக்கும் வரை என்னவும் பண்ணட்டும் கிருஷ்ணன்" என்றான் ருது.

"டைம் என்ன?"

"நாலாகப் போகுது சார்."

"காபி குடிச்சா நல்லாயிருக்கும்" என்ற ருதுவை இருவருமே அதிர்ந்து ஏறிட்டனர்.

அந்நேரம் ஒருவன் ருதுவை தாக்கிட்ட உருட்டு கட்டையை வீசிட, லாவகமாக பிடித்து அவன் மீதே எறிந்திருந்தான் ருது.

"யாராண்டா கையை வச்சிக்கின... இன்னும் செத்த நேரத்துல எங்க அண்ணாத்த வெளிய வந்துக்கினுவாரு பாரு" என்று ஒருவன் அலைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்திட முயல... சடுதியில் அவன் கையில் சுட்டிருந்தான் ருத்விக்.

"சார்..." வெங்கட் அதிர,

"என்ன கிருஷ்ணன் ஆவூன்னா இவன் அதிர்ந்துட்டே இருக்கான். எதுக்குடா நீ போலீஸ் ஆன" என்று கடிந்தான்.

"சுட்டுட்டுட்டீங்களே சார்!"

"சுடுறதுக்குத்தாண்டா துப்பாக்கி கொடுத்திருக்காங்க." ருதுவிடம் தான் சரியாகத்தான் செய்கிறோம் எனும் எண்ணம்.

துப்பாக்கி சத்தத்தில் பொருட்களை எல்லாம் உடைத்துக் கொண்டிருந்த மொத்த பேரும் அமைதியாகினர். கிட்டத்தட்ட பதினைந்து பேர் இருப்பார்கள்.

ருது அனைவரையும் பார்வையால் ஆராய்ந்தான். கட்டை, சைக்கிள் செயின், அரிவாள், கத்தி, என பல தரப்பட்ட ஆயுதங்கள் அவர்களின் கையில் இடம் பிடித்திருந்தன.

"ஒரு ஃபோட்டோ எடுத்துப்போம்" என்று எடுத்துக்கொண்ட ருது...

"எல்லாரையும் கைது செய்யுங்க. எவ்வளவு தைரியமிருந்தால் அவனுங்க தலைவனை கைது செய்துட்டோமின்னு ஸ்டேஷனை அடிச்சு நொறுக்கப் பார்த்திருப்பாங்க" என்று உள் சென்ற ருதுவை எதில் சேர்ப்பதென்று தெரியாது வெங்கட் திருத்திருத்தான்.

ருது கைது செய்ய சொல்லியதும் மீண்டு கத்திக்கொண்டே காவல் நிலையத்தின் உள்ளே பாய்ந்தோட, முன் வந்த இருவரை ஒரே உதையில் சுருட்டி பறக்க செய்திருந்தான் ருது.

"மாணிக்கம்... கேட்டை இழுத்து மூடுங்க" என்றவன், அவர் அதனை செய்ததும் "அடுத்து யாருடா?" எனக் கேட்டான்.

சுருண்டு விழுந்திருந்த இருவரையும் திரும்பி பார்த்த தடியர்கள், அவர்கள் வயிற்றை பிடித்துக்கொண்டு தரையில் நீரின்றி துள்ளும் மீனாய் துடித்து அலருவதைக் கண்டு, அமைதியாக பின் வாங்கினர்.

"இப்படி உட்காருங்கடா" என்று வராண்டா போன்று அலுவலகத்தின் முன் பக்கம் நீண்டிருந்த பகுதியை ருது கைகாட்டிட, பம்மியவர்களாக சென்று தரையில் அமர்ந்தனர்.

"அக்கா கேஸ் ஃபைல் பண்ணி சைன் வாங்குங்க" என்று மல்லிகாவிடம் தெரிவித்த ருது, "எவனாவது கையெழுத்து போடமாட்டேன்னு வம்பு பண்ணீங்க" என்று தான் துப்பாக்கியால் சுட்டதால் கை விரலில் குண்டு பாய்ந்து ரத்தம் சொட்ட அமர்ந்திருந்தவனில் பார்வையை பதித்தான் ருது.

அதிலே அவனது நடவடிக்கை என்னவாக இருக்குமென்பதை புரிந்துகொண்டு தலையை உருட்டினார்கள். சரியென்பதைப்போல்.

"தட்ஸ் குட்" என்ற ருது, "அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வாங்க" என்றான் கிருஷ்ணனிடம்.

ருது உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்த மறு கணம், தொலைபேசி ஒலி எழுப்பியது. அவன் எடுக்காது விட, அலுவலகத்தில் இருக்கும் அனைத்து தொலைபேசிகளும் அதிர்ந்து ஒலித்தன.

"பாருடா... இவ்ளோ பவரா உனக்கு?" செல்லுக்குள் முடங்கியிருந்த காந்தாவிடம் நக்கலாக வினவிய ருது,

"ரிசிவர் எல்லாம் எடுத்து கீழ வையுங்க" என்றான்.

பல வாகனங்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியில் எட்டி பார்த்திட, அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சங்கர் வேக நடையுடன் உள்ளே வந்தார்.

"யாருண்ணா இவரு. வெள்ளையும் சொல்லையும் பார்த்தாக்கா அரசியல்வாதி மாதிரி தெரியுது." வந்திருப்பது யாரென்று தெரிந்தும், வேண்டுமென்றே அவருக்கு கேட்கும்படி வினவினான் ருது.

"ஹேய் போலீசு... நீயென்ன பெரிய இதா? ஃபோனு எடுக்க மாட்டியோ?" எனக் கேட்டுக்கொண்டே அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் காலிட்டு அமர்ந்தார்.

"யார் நீங்க?"

"ஏய்..."

"சவுண்ட் விடும் வேலையெல்லாம் இங்க வேண்டாம். யாருன்னு சொன்னால் மரியாதை கிடைக்கும்" என்ற ருது, அவருக்கு நேரெதிர் நாற்காலியை இழுத்துப்போட்டு தோரணையாக கால் மாற்றி அமர்ந்தான்.

"ஏய்..." என்று அவரது ஆட்கள் முன்னால் வர, அவர்களை தடுத்தவர், "யாருன்னு தெரிந்தால் கும்பிடப்போறான். விடுங்கடா. தம்பி ஊருக்கு புதுசுல" என்றார்.

"நீ ரொம்ப சீனு போடுறன்னு பயலுவ சொன்னாணுவ... நேர்ல நல்லாவே தெரியுது" என்று எம்.எல்.ஏ தான் யாரென்பதை கூறினார்.

யாரென்று தெரிந்ததும் எழுந்து பவ்யமாக நடந்துகொள்வானென அவர் நினைத்திருக்க... அப்போதுதான் இன்னும் நிமிர்ந்து அமர்ந்து...

"சொல்லுங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க? ஏதும் கம்ப்ளையண்ட் கொடுக்கணுமா?" எனக் கேட்டிருந்தான் ருது.

"ரொம்ப திமிருதான்."

"தேன்க் யூ" என்ற ருது, "வந்த விஷயம் என்னன்னு சொல்லுங்க?" என்றான்.

"உனக்கேத் தெரியுமே போலீசு. டிஜிபி நானே பேசிக்கிறேன் சொன்னார். நான் தான் என்னைவிட ஒரு ஆளு வேணுமான்னு வந்தேன்" என்றவர், "காந்தாவை வெளியில் விடு" என்றார்.

ருது யோசிக்கவே இல்லை. ஒரு நொடியும் தாமதிக்கவில்லை.

எம்.எல்.ஏ வின் சட்டை பிடித்து இழுத்து ஒரு தள்ளு தான்... செல்லுக்குள் சென்று நின்றார்.

"இழுத்து மூடி லாக் பண்ணுங்க வெங்கட்" என்றவன் மல்லிகாவின் புறம் திரும்பிட...

"கொலை குற்றவாளியை விட சொல்லி எம்.எல்.ஏ ஸ்டேஷன் வந்து மிரட்டியதற்கும், அதிகாரம் துஷ்பிரயோகம் செய்ததற்கும் கைது செய்யப்பட்டார்" என்று எழுதிக்கொண்டே மல்லிகா சொல்லிட...

"குட் மூவ்" என்று அவரிடம் புன்னகைத்தான் ருது.

"எனக்கு பயந்து வருது மல்லிகாக்கா. இந்த இன்ஸ்பெக்டர் இப்போன்னா மெடிக்கல் லீவு போட்டு ஊருக்கு போவனும்" என்று புலம்பினான் வெங்கட்.

"ருது சாரிடம் நீங்க மாட்டணுமுன்னு தான் சார்" என்று மல்லிகா மெல்ல சிரித்தார்.

"உங்களுக்கு பயமே இல்லையாக்கா?"

"ஏன் இல்லை. அதெல்லாம் இருக்கு. இன்னைக்கு மட்டும் மூணு எப்.ஐ. ஆர் எழுதியிருக்கேன். அடுத்து எவ்வளவு எழுதப்போறன்னு தெரியல. ஆனால் ரைட்டரா இன்னைக்குத்தான் சார் நல்லது எழுதிய திருப்தி கிடைச்சிருக்கு" என்ற மல்லிகா, "சர்விசில் ஒருமுறையாவது நேர்மையான அதிகாரியோடு பணி செய்தோம்ன்னு நமக்கும் பெருமை தானே சார்" என்றார்.

"இந்த பெருமைக்கு நாலு எருமை மேய்க்கலாம் க்கா. உசுரு முக்கியம் க்கா" என்றான்.

"எழுதிட்டா அந்த ஆளுகிட்ட கையெழுத்து வாங்கிடுங்க" என்ற ருது, "இவனுங்க ஏன் இங்க நின்னு முறைச்சிட்டு இருக்கானுங்க, உள்ள தூக்கிப்போடு வெங்கட்" என்று எம்.எல்.ஏ சங்கர் உடன் வந்த ஐந்தாறு கதர் சட்டையை கண் காண்பித்தான்.

"இதுக்கு மேல போனால் ஸ்டேஷனில் இடம் பத்தாது சார்" என்று
முனகிக்கொண்டே அவர்களை பிடித்து அடைத்தான் வெங்கட்.

அவ்வளவு தான் அடுத்த சில நிமிடங்களில் நகரத்தின் மொத்த ஊடகமும் ருதுவின் அலுவலக வாயிலில் நின்றிருந்தது.

நகரத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் காந்தா பேட்டையின் ஆட்கள்.

ருது ஊடகவியலாளர்கள் யாரின் கேள்விக்கும் செவி சாய்க்காது உள்ளே அமர்ந்திருந்தான். மொத்தமாக பிடித்திட வேண்டும். அதற்கே இந்த பொறுமை.

தனது ஆள் ஒருவனும் சும்மா சீண்டியதற்கே கைலாஷ் கொலை செய்வான் என்ற நிலையில், ருது அவனது மொத்த கையையும் அடைத்து சிறையில் வைத்திருக்கிறான். அவனிடமிருந்து சின்ன அழைப்புக்கூட இல்லை.

ருதுவின் இலக்கு கைலாஷ். அதற்கே மீன்களை வலைக்குள் இழுத்துக்கொண்டிருக்கிறான்.

பணி விஷயமாக சேலம் சென்றிருந்த வேங்கடம் மதியம் போல் திரும்பி வந்திருந்தார். மகனின் அதிரடி கேட்டு வியந்தாலும், முதல்வரை நினைத்து பயம் கொண்டார்.

முதல்வர் சின்னதாகக் கூட அதைப்பற்றி கேட்கவில்லை.

"அந்த கலவரத்தையாவது கட்டுக்குள் கொண்டுவர சொல்லுங்க வேங்கடம். பெரிய ஆளுங்க யார் சொல்லியும் கேட்கல போல" என்றார் முதல்வர்.

"சொல்றேன் சார்" என்று அலைபேசியை எடுத்தவாறு வேங்கடம் நகர,

"ஒரே நாளில் கைலாஷ் கூட்டத்தை அழிக்கணும் முடிவு பண்ணிட்டானா?" என்ற முதல்வர், வேங்கடம் நின்று திரும்பியதும், "ஜாக்கிரதை" என்றார்.

அரசியலுக்கே பெரும் வினையாக இருக்கும் கைலாஷ் மற்றும் நகரத்தின் குற்றங்கள் யாவற்றிற்கும் காரணியாக இருக்கும் காந்தா இருவரும் அழிந்தால் நன்மை தானே! இதுநாள் வரை இப்படி துணிச்சலாக களமிறங்க யாருமின்றி இருந்த முதல்வருக்கு ருதுவின் பணி பிடிக்கவே செய்தது. இருப்பினும் கட்சிக்கு பாதகமாக அவரின் நடவடிக்கைகள் அமைந்திடக்கூடாது. அவரது இருக்கை அத்தனை சூடானது. அதில் மக்களின் நலன் என்பது மட்டுமல்ல... பலதும் இருக்கிறது. யாவற்றையும் யோசித்து செயல்பட வேண்டும். நல்லதென செய்வது பாதகமாக அமையலாம். சரிவராது என்று ஒதுக்குவது அத்தனை நன்மை கொடுப்பதாக அமையும். அவரின் பதவி அப்படியானது. ஆதலால் மறைமுகமாக ருதுவுக்கு உதவிட நினைத்தார்.

'இந்த கைலாஷ் அமைதியா இருப்பது தான் உறுத்துது.' நினைத்த முதல்வர் மட்டுமல்ல யாருமே அறிந்திடாத ஒன்று உள்ளது. ருது மட்டுமே அறிந்த ஒன்று. கைலாஷ் யார் என்பது?

கிருஷ்ணன் மருத்துவமனையில் அமர்ந்திருந்தார். அறைக்குள் அடிபட்ட ஆளுக்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

"போலீஸ் அப்டிங்கிறதுக்காக இப்படியா சார் சுடுவீங்க. விரலையே துளைச்சிட்டு போயிருக்கு" என்று மருத்துவர் கிருஷ்ணனிடம் கடிந்துக்கொள்ள...

"பாவம் பார்க்குமளவிற்கு இவனுங்க நல்லவங்க இல்லை டாக்டர்" என்றார் கிருஷ்ணன்.

இவர்களின் வாதத்தை தற்செயலாகக் கேட்க நேர்ந்த இனியன்,

"மருத்துவருக்கு நல்லவங்க, கெட்டவங்கன்னு இல்லை சார். எல்லாமே உயிர். அவ்வளவு தான்" என்றதோடு "கோவப்படாமல் ட்ரீட் பண்ணு அபி" என்றான்.

"உயிருன்னு போலீசுக்கு மட்டும் புரிந்தால் போதாது டாக்டர்... எனக்குத் தெரிந்து இவன் எத்தனை கொலை பண்ணியிருக்கான் தெரியுமா? ஆனால் ஜாலியா வெளியில் சுத்திட்டு இருந்தான். எல்லாத்துக்கும் மொத்தமா இன்னைக்கு ருது சாரிடம் வாங்கிக்கணும் இருந்திருக்கு இவனுக்கு" என்று கிருஷ்ணன் அவனை இழுத்துக்கொண்டு நகர,

"ருது?" என்று கேள்வியாக இழுத்தான் இனியன்.

"புது டிசி டாக்டர்" என்று கிருஷ்ணன் சொல்லியவாறு சென்றிருந்தார்.

"ஹேய்... உன் பிரண்ட் நேம் கூட ருது தானே?" அபி கேட்டிட...

"மே பீ" என்று தன்னுடைய பணிக்கான விரைந்திருந்தான் இனியன்.

_____________________

பலமுறை அழைப்பு விடுத்தும் ருது எடுக்காமல் போக, வேங்கடம் ருதுவை காண அவனது அலுவலகமே வந்துவிட்டார். பிளாக் ஸ்குவார்ட் சீருடையிலே வந்திருக்க...

முதலமைச்சரின் தலைமை பாதுகாவலர் என்பது தெரிந்து காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர்.

ருது அவரை கண்டு தன்னிலையில் மாற்றமில்லாது அமர்ந்திருக்க...

"இவருக்கு தைரியம் அதிகம் தான்" என்று முணுமுணுத்தார் ஒரு கான்ஸ்டபிள்.

"எதுக்கு இப்படி சைலண்டா இருக்க ருது. உன் கண்ட்ரோலில் இருக்கும் பகுதிகளில் தான் கலவரம் நடக்குது. எதாவது ஒரு உயிருக்கு சேதாரம் ஆனாலும், உனக்குத்தான் பிரச்சினை. விசாரணை கமிஷன் வைத்து உன் வேலைக்கே ஆப்பு ஆடிச்சிடுவாங்க" என்றவர், "பீகாரில் பண்ண அதிரடியில் இது கொஞ்சம் தான்னு எனக்குத் தெரியுது. ஆனால் இது தமிழ்நாடு டா. தாங்காது. மக்கள் எமோஷனலி வீக்" என்றார்.

"என்ன இப்போ அவனை விடனுமா? உங்க முதலமைச்சர் உங்களை வைத்து என்னை மடக்க பார்க்கிறாரா?" என்று எகிறினான்.

"என்ன சார் இவரு யாருக்கும் பயப்படமாட்டாரா?" அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து வந்த கிருஷ்ணனிடம் வெங்கட் கேட்க,

"அவங்க ருது சாரோட அப்பா சார்" என்றார் கிருஷ்ணன்.

"ஹோ..." என்று வெங்கட் காற்றில் கூவ,

"தையல் போட்டாச்சுல. அவனையும் உள்ள தள்ளுங்க" என்றான் ருது. வேங்கடத்தின் மீது காட்டிட முடியாத கோபத்தை வெங்கட்டிடம் காட்டினான்.

"சும்மா கோபப்படக் கூடாது ருது. முதல்வர் உனக்கு மறைமுகமாக உதவ தயாரா இருக்கிறார்" என்று மகனை அடக்கிய வேங்கடம், "யாரை வேணாலும் அரேஸ்ட் பண்ணிக்க சொல்லிட்டார். ஆனால் ஆதாரம் பக்காவா இருக்கணும் சொன்னார். அடிபட்டு வெளிய வந்துட்டால், இவனுங்க ஆட்டம் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையா மாறிடும் சொன்னார். சூழலை கட்டுக்கொள் கொண்டு வா" என்றதோடு, "முதலிய மீடியாவை மீட் பண்ணு" என்று ருதுவின் தோளில் தட்டிச் சென்றார்.

"நேரா வீட்டுக்கு போங்க."

"என்னை பார்த்துக்க எனக்குத் தெரியும் போடா."

ருதுவிடம் சன்னமான சிரிப்பு.

மெல்ல ருதுவின் அருகில் சென்ற வெங்கட்...

"உங்களால் பாதி சிட்டியே கொந்தளிச்சிட்டு இருக்கு சார். சிரிக்கிறதை விட்டு எதாவது செய்யுங்க சார்" என்றான்.

வெங்கட்டை மேலும் கீழும் பார்த்த ருது,

"நீங்களும் காக்கி ட்ரெஸ் தான் போட்டிருக்கீங்க. நீங்களும் ஏதும் பண்ணலாம்" என்றான்.

"ஆரம்பித்தது நீங்கதானே சார். நீங்களே வழியும் காட்டுங்க. நடக்கிறோம்" என்றான் வெங்கட்.

"நல்ல விவரம் தான். இன்னொசென்ட மாதிரி ஆக்ட் பண்ணாத" என்ற ருது, வெளியில் ஒலிவாங்கியுடன் கத்திக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் முன் சென்றான்.

"சார் நீங்க எங்களை வேண்டுமென்றே அலட்சியம் செய்றீங்க?"

ருது வந்து நின்றதும் மூத்த நிருபர் கொந்தளித்தார்.

"ஒரு வழக்கு விசாரணையில் இருந்தேன்" என்று மற்ற பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டான் ருது.

"ஊரே கலவரமா இருக்கு இப்படி மெத்தனமா பதில் சொல்றீங்களே சார்?"

"ஸ்டேஷன் வெளியிலும் கலவரம் நடந்திருக்கும் போல?"

"எதுக்கு சார் காந்தாவை அரேஸ்ட் பண்ணீங்க?"

"எம்.எல்.ஏ சங்கரை கைது பண்ணியிருக்கீங்களா?"

"உண்மை காரணம் சொல்ல முடியுமா?"

"நேரடி தாக்குதலா?"

"பொய் வழக்கா?"

"பாப்புலர் ஆக ட்ரை பண்றீங்களா?"

ஆளாளுக்கு ஒலிவாங்கியை முன்னால் நீட்டியபடி சரமாரியாக கேள்விகளை எழுப்பிட...

"இத்தனை நாளும் சட்டம் தூங்குகிறதா? நகரை ஆட்டி வைக்கும் தனியொரு தாதா! குட்டி மன்னராட்சியே நடத்துகிறாரா? போலீஸ் வேலையே செய்யாதுன்னு பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டது நீங்கள் தானே?" எனக்கேட்ட ருது, "அதே சட்டம் தன் கடமையை செய்தால் அதற்கும் உங்கள் எண்ணப்படி கதை சொல்வீங்க அப்படித்தானே?" என்றான்.

சலசலப்பு குறைந்து மௌனமாகினர்.

"நீங்க உங்க வேலையை சரியா செய்யுங்கள். எங்க வேலையை எங்களுக்கு பார்க்கத் தெரியும்" என்று ஒருவித அழுத்தத்துடன் மொழிந்த ருது, "இதையே நான் கொடுத்த ஸ்டேட்மெண்டா போட்டுக்கோங்க" என்று அங்கிருந்து சென்றிருந்தான்.

அலைப்பேசி வாயிலாகவே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களையும் தொடர்பு கொண்டு, கலவரத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் பாகுபாடின்றி கைது செய்யுமாறு உத்தரவிட்டான்.

இரண்டு மணி நேரத்தில் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். வெங்கட், கிருஷ்ணன் காந்தா பேட்டைக்கு அருகில் வன்முறையில் ஈடுபட்டிருப்பவர்களை அமைதிப்படுத்தப் போராடிக் கொண்டிருந்தனர்.

கல்லெரிப்பு, கண்ணாடி உடைத்தல், கடையடைப்பு, சாலை மறியல், என வரம்பு மீறி நடந்து கொண்டிருந்தனர் காந்தாவின் ஆட்கள்.

கட்சி மூலமாக சங்கருக்கு எந்தவொரு ஆதரவும் கொடுக்கக்கூடாதென முதல்வர் வலியுறுத்தியிருந்ததால், சங்கரின் தொண்டர்கள் கொஞ்ச நேரம் கத்திவிட்டு, கட்சியிடமிருந்து எவ்வித தகவலும் இல்லாததால் கலைந்து சென்றிருந்தனர்.

நகரையே இரண்டாக்கிக் கொண்டிருந்தது காந்தாவின் பேட்டை கைலாஷ் ஆட்கள் தான்.

கலவரம் நடந்த பகுதிகளை ருது பார்வையிட்டபடி வர,

வெங்கட் அழைத்து, "சார் இங்க சமாளிக்க முடியல. இவனுங்க ரொம்ப பண்றானுங்க. மத்த இடத்திலாவது அடிச்சி உடைச்சி அமைதி ஆகிட்டானுங்க. ஆனால் இங்க பெட்ரோல் குண்டெல்லாம் போடுறானுங்க சார்" என்று கத்தினான்.

அடுத்த பத்தாவது நிமிடம் ருது காந்தா பேட்டையை சுற்றியுள்ள பகுதியை அடைத்திருந்தான்.

கலவரத்தை அடக்க ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் பலருக்கும் அடிப்பட்டிருந்தது. காயத்தை பொருட்படுத்தாது அப்போதும் முனைப்புடன் அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


ருது வண்டியிலிருந்து இறங்கிட, எரிந்த நிலையில் டயர் ஒன்று உருண்டு வந்து விழுந்தது அவனது காலடியில்.

_______________


தொடர்ந்து விருப்பம் தெரிவித்து கருத்திட்டு ஆதரவு கொடுக்கும் வாசகர்களுக்கு நன்றி.

நிறை குறைகளை கீழுள்ள இணைப்பில் பகிர்ந்து கொள்ளுங்கள். நிறை ஊக்கப்படுத்தும். குறை திருத்திக்கொள்ள உதவும்.

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 15

எரிந்தபடி உருண்டு வந்த வண்டி சக்கர டயரினை காலால் உதைத்து தள்ளிய ருது, தனக்கு எதிராக ஓடி வந்தவனை ஒரே அறையில் சுருண்டு விழ வைத்திருந்தான்.

அவன் அலறிய அலறளில் ஆங்காங்கே அடிதடியில் ஈடுபட்டிருந்த தடியர்கள் திரும்பி பார்த்திட... தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றிருந்தான் ருத்விக்.

"வா போலீசு... உனக்காக தான் காத்தினு இருக்கோம்" என்ற ஒருவன் கண்காட்டிட, அவ்வழி வந்த பேருந்து ஒன்றை இருவர் மறித்து நின்றனர்.

அவன் சற்று தொலைவில் நின்றிருந்த ஒருவனை பார்த்து விசிலடித்து எறி என்பதைப்போல் கையால் சைகை செய்திட, அவனோ பலூன் போன்று ஒன்றை தூக்கி எறிந்தான்.

சரியாக அதனை பிடித்தவன்,

"சின்ன புள்ளைங்க விளையாடுற பலூன் இல்ல போலீசு இது... பெட்ரோல் குண்டி. அந்த பஸ்ஸில் தூக்கி அடிச்சிக்கினே வச்சிக்க. குப்புன்னு பத்திக்கும்" என்று சொல்ல... பேருந்தில் இருந்தவர்கள் கத்திக்கொண்டு இறங்கிட முட்டி மோதிட, இரு வழிகளிலும் இரண்டு தடியர்கள் நின்று அவர்களை இறங்க விடாது தடுத்தபடி பேருந்தின் உள்ளே மிரட்டி தள்ளினர்.

தப்பிக்க நினைத்து சன்னல் வழி குதித்த இருவரை உருட்டு கட்டையால் அடித்து ஓடவிட்டனர்.

"என்னன்னா வந்ததும் ஓட விடுவாருன்னு பார்த்தால் வேடிக்கை பார்த்திட்டு நிக்கிறாரு?" என்ற வெங்கட்டிடம்...

"ஏன் சார் உங்களுக்கு பொறுமையே இல்லையா? அவர் ஏதும் செய்றதுக்குள்ள கவுண்டர் கொடுத்திடுறீங்க" என்றார் கிருஷ்ணன்.

"ம்க்கும்... எப்படி இருக்கு பாருங்க இந்த இடம். இதுல பொறுமை தேவையா" என்றான்.

ருது தனக்கு பின்னால் இருசக்கர வாகனம் ஒன்று வரும் சத்தம் கேட்டு திரும்பிடாது நிறுத்துமாறு பக்கவாட்டக நிறுத்து என்பதைப்போல் இரு விரல்களை ஆட்டி கை காட்டியிருந்தான்.

ருது தன்னிரு கைகளையும் கோர்த்து பின்னால் கட்டிட...

அவனது பின் உருவத்திலே அடையாளம் கண்டுகொண்ட இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபருக்கு ருதுவின் வலது கையில் மணிக்கட்டின் முன் புறம் ஒற்றை கண்ணின் இமை மட்டும் மூடிய அமைப்பில் தீட்டப்பட்டிருந்த நவீன பச்சையில் சகலமும் உறைந்து அதிர்ந்தது.

20240731_081618.jpg

'லேஷஸ்.' காதல் மீதூறும் குரலில் ருது விளிக்கும் ஓசை, சூழ்நிலையின் பேரிரைச்சலை தாண்டி செவி தீண்டி உயிர் நடுங்க வைத்தது.

வண்டியில் வந்தது, ருது பின் திரும்பாமல் நிறுத்தக் கூறிய நபர், ருதுவின் லேஷஸ். இமையாள்.

காண தவித்த உருவம். முகம் கண்டிடவில்லை. இருப்பினும் இதயத்தில் பலதும் கிளர்ந்து எழுந்து மூச்சு முட்டியது.

ருதுவின் காதலை மட்டுமே சுவாசமாக கொண்டிருப்பவளின் இதழ்கள் விரிந்து... காற்றுக்கும் நோகுமோ எனுமளவில்,

"ருது" என உச்சரித்தது.

அவளுக்கே கேட்டிடாத அழைப்பு அவனது செவி நுழைந்ததுவோ...

கழுத்தை மட்டும் பக்கவாட்டகத் திருப்பி கடைக்கண்ணால் பார்த்தவனின் உடல்... கருவிழி உள்வாங்கிய பிம்பத்தில் தன்னைப்போல் திரும்பியது.

அவனது விழிகள் விரிய தவித்திட கட்டுப்படுத்தி நேர்கொண்டு பார்த்தான்.

தளரும் கையின் விரல்களை உள்ளங்கை குவித்து விறைத்து நின்றான்.

ருதுவை நேரில் கண்டால் கண்ணீர் மட்டும் சுரந்திடக்கூடாதென மனதோடு உருப்போட்டு வைத்திருந்ததாலோ என்னவோ கண்ணின் கலக்கத்தை உள்ளுக்குள் பொத்தி வைத்தவளாக, இதழில் மனம் நிறைந்த முறுவலை மென்மையாக படரவிட்டிருந்தாள்.

ஒரு நொடி... மழைத்துளி தரையில் பட்டுத்தெறிக்கும் கணம், சூல் வெடிக்கும் கணம், வலியில் கண்ணீர் பிறப்பெடுக்கும் கணம், இமை மூடி திறக்கும் கணம், அவ்வளவே... சட்டென்று யரோபோல் கடந்து திரும்பிக்கொண்டான்.

அவனால் அவள் காட்ட மறுத்த பூரிப்பையும், அவளது மனதின் ஆர்பரிப்பையும் உணர்ந்திட முடிந்தது.

ருதுவின் இதயம் மட்டும் தாறுமாறாக துடித்தது. ஐந்து விரல்களையும் சேர்த்து குவித்து இதயப்பகுதியில் குத்திக்கொண்டான். பின்னால் இருப்பவள் அறிந்திடாது.

"ருது..." அவனது அந்நியப் பார்வையில் கலங்கித் துடித்தாள்.

அவனது வாழ்வில் இனி அவன் அவளிடம் வரவே முடியாத சூழல் உருவாகியிருந்தாலும், பார்த்ததும் தெரிந்தவர் எனுமுறையில் சிறு பார்வை பார்த்திருந்தாலும் போதுமானதாய்... இந்த தருணம் கடந்திருக்குமோ?

அவன் ஒருவனே தன் வாழ்வின் மொத்தமும் என்று வாழ்பவளுக்கு... அந்நொடி எத்தனை வலியை உண்டாக்கியிருக்கும்.

'உனக்காக கண்ணீரை அழுத்தி, வலியை மறைத்துக்கொண்டு எனக்கு, போலியான புன்னகையோடு வலம் வருவது ஒன்றும் புதிதல்ல. உனக்காக இதையும் கடந்திட முடியும் என்னால்.' வீம்பாக நினைத்துக் கொண்டவள், முகத்தில் கடினம் காட்டி தொய்ந்த மனதின் திடத்தை உடலில் கூட்டி விறைத்து நிமிர்ந்து அமர்ந்தாள்.

இவள் நிற்பதைக்கண்டு அடுத்தடுத்து வந்த வண்டிகளும் தன்னிச்சையாக நின்றன. அந்தபக்கமும் இந்தபக்கமும் வாகனங்கள் மக்களோடு நின்றிருக்க. நடுவில் பேருந்து. அதில் பலர் உயிர் பயத்தில், ரவுடிகள் சூழ் பீதியில் கத்திக் கொண்டிருக்க, காவல்துறையினர் ரவுடிகளை அடக்க முயற்சித்துக் கொண்டிருக்க, ருது வேடிக்கை பார்க்கும் தோரணையில் கால்களை அகட்டி நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தான்.

ருதுவின் கண்களில் அடக்குமுறையை கையாலும் விதமாக யோசனை அசைந்தாட, உள்ளம் ரத்தத்தில் முக்குளித்தது.

தன் செயல் தன்னவளை எத்தனை காயப்படுத்தியிருக்கும் எனும் வேதனை பாடாய் படுத்தியது. காயம் கொடுத்தவனுக்கு குருதி கசிந்தது.

"என்னா போலீசு பயந்துக்கினியா? அங்கவே அப்படியே சிலையாட்டம் நின்னுக்கன" என்ற தடியன், "இப்பவும் ஒண்ணுமில்லை எங்க அண்ணாத்தய உட்டுடு... நாங்களும் இதையெல்லாம் நிப்பாட்டிக்கிறோம்" என்றான்.

"ஆஹான்" என்று பின்னால் இரு கைகளையும் கட்டிக்கொண்டு விறைத்து நின்ற ருது,

"எனக்கு உன் டீல் பிடிக்கல. உன்னால் முடிஞ்சா பஸ்ஸை கொளுத்துடா பார்ப்போம்" என்றான்.

ருது அவ்வாறு சொல்லியதில் சுற்றியிருந்த மக்கள் யாவரும் அதிர்ந்தனர்.

'அடப்பாவி' என நினைத்த இமையாளின் பார்வை அவனது டாட்டூவின் மீதே.

'இதற்கு என்ன அர்த்தம்? அப்போ கல்யாணம்? அழிக்க முடியாதுன்னு வச்சிருக்காரா?' தலை வெடிக்கும்போல் ஆனது. இதுவரை எழுந்திடாத கோபம் அவனை கண்டதும், அவனது உதாசீனத்தில் உண்டானது.

அவனாக வந்து... அவனாக துறந்து... மொத்த கோபமும் இக்கணம் நெஞ்சத்தில் வேர் பிடித்தது.

'கோபம் வேண்டாம் அவங்க சூழல் வேறாக இருக்கலாம்' என்ற புள்ளியளவு மனதில் எழுந்த எண்ணத்தை கோபம் கொண்டு மூடினாள்.

கிட்டத்தட்ட பதினைந்து அடி இடைவெளி ரவுடிகள் மற்றும் ருது இருவருக்குமிடையில். பேருந்துக்கும் ரவுடிக்கும் பத்துக்கும் குறைவான அடிகள், ருதுவிற்கும் பேருந்திற்கும் அதனைவிட ஓரிரு அடிகள் கூடுத்தலாகத்தான் இருக்கும்.

"இன்னா போலீசு கொளுத்தமாட்டேன்னு தைரியமா?"

"நீ தூக்கி எறிந்து தான் பாரேன்!" ருதுவின் மாஸ் மட்டும் சற்றும் குறையவில்லை.

'இந்த திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.'

இமையாளின் கோபம் அவனை கடிந்துகொள்ளவே செய்தது.

'பல உயிருக்கு முன்னால் இந்த அசட்டு துணிச்சல் வேண்டுமா?' என்று தான் நினைத்தாள்.

கோபத்தில் திட்டிக்கொண்டே அவனை ரசிக்கவும் செய்தாள்.

'இந்த காதல் மட்டும் மானங்கெட்டது' என்று தனக்குத்தானே தட்டியும் கொண்டாள்.

'உன்னை தான் பார்க்கக்கூட பிடிக்காமல் திரும்பிக்கிட்டாங்களே! அப்புறமும் ஏன் காதல்ன்னு உருகுற' என்று மானசீகமாகக் கொட்டிக்கொண்டவள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டாள்.

நகரம் கட்டுக்குள் வந்திருக்க இங்கு மட்டுமே ரவுடிகள் அடங்காது காவல்துறைக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தனர். ஊடங்கங்கள் கூடிவிட்டன.

எங்கே ரவுடிகள் கையிலிருப்பதை தங்கள் மீது வீசி விடுவார்களோ என்ற பயத்தில் அருகில் நெருங்காது, காணொளியை பதிவு சேய்தவாறு தள்ளி நின்றுகொண்டனர்.

ருது சிரித்துக்கொண்டான். 'சமூக பொறுப்பு ரொம்பத்தான் வேலை செய்யுது.' உள்ளுக்குள் கேலியாக நினைத்தான்.

சமூகப் பொறுப்பு, அக்கறை என்று பேசும் பலருக்கும், களத்தில் இறங்கி அந்த பொறுப்பையும் அக்கறையையும் காட்டிட வராது. நிதர்சனமான உண்மை. அவர்களின் அக்கறையெல்லாம் காட்சியை பதிவு செய்து, இரு வரிகளில் ஆதங்கத்தைக் கொட்டி இணையத்தில் பதிவு செய்வதோடு நின்றுவிடும்.

சமூகப் பொறுப்புள்ள உண்மையான மனிதனின் ஆதங்கம் இது.

"கடைசியா ஒரு தபா கேட்டுக்கினே... என்னா சொல்ற நீ" என்றான் அவன், கையில் குண்டினை வைத்து உருட்டியபடி.

"நீ வேலைக்கு ஆகமாட்ட. உங்களுக்கெல்லாம் உதார் விட மட்டும் தான் தெரியும்" என்ற ருது ஒரு அடி எடுத்து முன் வைத்திட, ரவுடி பெட்ரோல் குண்டினை பேருந்தை நோக்கி எறிந்திருந்தான். பட்டென்ற சத்தம் கேட்டு, நெருப்பின் அனல் மூண்டு, காற்றில் புகை பரவியது.

அவன் எறிந்த வேகத்திற்கு சுற்றி இருந்தவர்கள் பீதியில் காதுகளை பொத்திக்கொண்டு கண்களை மூடியபடி இருக்க... சுற்றுப்புறம் எங்கும் புகையின் கருமை.

கண் திறந்தவர்கள் அனைவரும் பேருந்து தான் பற்றி எரிகிறதோ என்று உறைந்திட...

தனக்கு முன்னால் நின்றிருந்த ருதுவை காணவில்லை என்றதும், இமையாளின் நெஞ்சம் படபடத்தது.

"அவங்க எங்கே?" பார்வையை சுழற்றினாள். புகையைத் தவிர ஒன்றும் கண்ணுக்கு புலப்படவில்லை.

"ருது" என வெடித்துக் கிளம்பிய கேவல், புகை விலகிய நொடி தொண்டைக்குள்ளே அமிழ்ந்தது.

புகை விலக அதனின் நடுவில் கம்பீரமாக நின்றிருந்தான் ருத்விக்.

ரவுடி குண்டினை எறிந்த நொடி மின்னலென பாய்ந்தோடிய ருது, பேருந்தில் படும் முன் ஒற்றை கையில் பிடித்திருந்தான். பிடித்த வேகத்தில், எறிந்த ரவுடியின் பாதத்திற்கு அருகில் தரையில் வீசியுமிருந்தான்.

தரையில் பட்டு வெடித்த குண்டு இடத்தை புழுதியோடு சேர்த்து புகையாக்கியிருந்தது.

"மின்னல் முரளியா இருப்பர் போல." வெங்கட் முணுமுணுத்தான்.

"அவர் எது செய்தாலும் உனக்கு கவுண்டர் கொடுக்கணும்" என்ற கிருஷ்ணனை வெங்கட் முறைத்தான்.

ருதுவின் அதிரடியில் கலவரம் செய்த ரவுடிகள் யாவரும் அரண்டு நின்றிருக்க, ருதுவின் கண் அசைவில் அவர்கள் தப்ப முடியாது காவலர்கள் சூழ்ந்திருந்தனர்.

"அரேஸ்ட் தெம்" என்று காவலர்களை பார்த்து கட்டளையிட்ட ருது, குண்டு அருகே வெடித்த அதிர்வில் மயங்கி விழுந்து கிடந்தவனை மருத்துவமனையில் சேர்ப்பிக்க உத்தரவிட்டு, தனது வண்டியை நோக்கி வர, கூலர்ஸ் அணிந்த அவனது விழிகள் மொத்தமாக உள்வாங்கிக் கொண்டிருந்தது அவனவளை.

அவளின் முகத்தில் பதட்டமும், ஆசுவாசமும் ஒருங்கே தெரிய... அவனது காதல் மனம் ரசிக்கவே செய்தது.

அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதை அவளது தோற்றம் வைத்து நொடியில் கிரகித்து இருந்தான்.

'எனக்காகவா?' அவனுள் இன்பம் தான். ஆனால் ஏனோ ஏற்க முடியவில்லை.

'எனக்கு கல்யாணம் ஆனதை நம்பவில்லையா?' அவனுக்கு வலிக்கவே செய்தது.

'தேவையில்லாத காத்திருப்பு.' அவளை நிந்தித்தான்.

நொடியில் இமையாளின் முகத்தில் கோபம் படர... உள்ளே சன்னமாக சிரித்துக்கொண்டான்.

'உன்னோட இந்த சின்ன கோபம் போதும். உன்னை என்னிடமிருந்து விலக்கி நிறுத்த' என நினைத்தவனுக்குத் தெரியவில்லை. கட்டம் கட்டி அவளை கல்யாணம் செய்து கொள்வோமென்று. மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அவனது காதலே அதனை நடத்தியிருக்கும்.

கண்ணாடிக்கு பின்னால் அவன் தன்னை பார்க்கின்றானா இல்லையா என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

காவலர்கள் தடியர்களை கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டிருக்க, ஒருவன் மட்டும் தப்பி ருதுவை அடித்திட உருட்டு கட்டையை ஓங்கியபடி ஓடி வந்தான்.

ருதுவிற்கு பின்னால் ஓடி வந்தவனை கண்டு விட்ட இமையாள்,

"ருது" என்று கத்திட, நொடியில் சுதாரித்து ருது உடலை பக்கவாட்டில் சாய்த்திட, ஓடி வந்தவனது கையின் விசை அதிக அழுத்தத்துடன் கட்டையை பின்னால் இழுத்து முன் கொண்டு வந்திருக்க, ருதுவிற்கு முன்னாலிருந்த இமையாளின் தலையில் பட'யிருந்த கணம் ருது கட்டையை பிடித்திருந்தான்.

பிடித்த கட்டையாலே அவனது மண்டையில் நச்சென்று ஒன்று வைத்திருந்தான் ருது.

வெங்கட் ஓடி வந்து அவனை இழுத்துச்செல்ல...

பயத்தில் மூச்சு வாங்க வண்டியில் அமர்ந்திருந்தவளை அழுத்தமாக ஏறிட்டு தன்னுடைய வாகனத்தில் ஏறி புறப்பட்டிருந்தான்.

"திமிரு" மெல்ல முணுமுணுத்தாள்.

அவன் பின்னால் செல்ல துடித்த மனதை கோபம் கொண்டு கட்டி வைத்தாள்.

அவன் சட்டையை பிடித்த "நீ சொன்னது பொய் தானே?" என கேட்க துடித்த அதே சமயம், அவன் உண்மை என்றுவிட்டால் என்று பயந்தே எட்ட நின்றாள்.

'எங்கே உன் குழந்தை? காட்டு' என்று கேட்டு, அவன் இல்லையென சொல்வதைக் கேட்டிட எண்ணம் கொள்கிறாள்.

அவளளவில் அவன் சொல்லியது பொய் எனும் நிலையில் அவளது காதல் மனம் அவளுக்கு சாதகமாகத்தான் அனைத்தையும் உருவகம் கொள்ள வைத்தது.

அவனது வாகனம் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்தாள்.

நொடியில் அவ்விடம் சூழலுக்கு திரும்பியிருக்க, பின்னால் ஒலித்த வாகனங்களின் சத்தத்தில் வண்டியைக் கிளப்பியிருந்தாள்.

நெஞ்சம் முழுக்க காதலும், அந்த காதல் கொடுத்த வலியோடும் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தவளுக்கு விழி நீர் காட்சியை மறைத்தது.

அவன் முன் 'நீயில்லாமல் நான் நன்றாகவே இருக்கிறேன்' என்பதை காட்டிட திடமாக இருந்துவிட்டாள். ஆனால் இப்போது இதயத்தில் அவள் உணர்வதெல்லாம் அப்பட்டமான வலி.

அழவேக் கூடாது என நினைத்தவளால் அழமால் இருந்திட முடியவில்லை. அவன் முன்பு அழவில்லை. அது மட்டுமே தற்போது அவளுக்கு பெரும் ஆறுதல்.

சிறு வயதில் நம்மோடு பழகியவர்களை பல வருடங்கள் கடந்து தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் தன்னைப்போல் தோன்றுமே மென் புன்னகை. அத்தகைய முறுவல் அவனது முகத்தில் தோன்றியிருந்தாலும் அவளின் மனம் சமன்பட்டிருக்குமோ? சாதாரண பார்வைக்கும் பஞ்சமாகியிருக்க, தன் காத்திருப்பெல்லாம் வீண் எனும் எண்ணம் அவளின் வலியை மேலும் கூட்டியது.

கைகளில் வண்டி தடுமாற சாலையோரம் நின்றுவிட்டாள். மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றியவள், அடுத்த பத்து நிமிடத்தில் இனியனின் மருத்துவமனையில் இருந்தாள்.

நகரமே கலவரத்தால் பரபரப்பாக இருக்க, சுரேந்தரும், தீபாவும் இமையாளுக்கு மாற்றி மாற்றி அழைப்பு விடுத்து சோர்ந்திருந்தனர்.

இமையாள் இனியனின் அறைக்குள் நுழைந்திட... இனியன் அப்போதுதான் அறுவை சிகிச்சை முடித்து வந்து ஆசுவாசமாக இருக்கையில் அமர்ந்தான்.

"அண்ணா..."

தங்கையின் குரலில் எழுந்து நின்றவன்,

"இமயா!" என்று விளித்திட...


"ஐ நீட் அ ஹக்" என்று அண்ணனின் நெஞ்சம் சாய்ந்திருந்தாள்.

______________

கருத்து திரி
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 16

தங்கையின் கண்ணீரை பார்த்ததும் இனியன் துவண்டு போனான். அவன் சரியும் இடம் தங்கையல்லவா. அவள் மீது அவன் வைத்திருக்கும் அன்பு சில வருடங்களாக அவனது பலவீனமாகியிருந்தது.

காதலுக்காக அவள் சுமப்பது ஒற்றை வலி தான். ஆனால் இனியனுக்கு... தங்கைப் பாசம், நட்பு... இருபெரும் வலிகள்.

சில நாட்களாக தன்னை திடமாகக் காட்டிக்கொள்ளும் தங்கை இன்று உடைந்து அழுவதை அவனால் பார்க்க முடியவில்லை. உள்ளம் கசிகிறது அவனுக்கு. தங்கைக்காக அழுத்தமாக நின்றான்.

"அவனை பார்த்தியா?"

விசும்பலோடு மெல்ல தலையசைத்தவள்...

"ஈஸியா என்னை கடந்துட்டாங்கண்ணா. அவங்க லைஃப்பில் இப்போ நான் இல்லவே இல்லை" என்றவள், "எப்படி முடிந்தது அவங்களால்?" என்று கேட்க வேண்டியவனை விடுத்து அண்ணனிடம் கேட்டு குமுறினாள்.

"எப்படி சொல்ற?"

நடந்த நிகழ்வை விவரித்த இமையாள்,

"ஒரு பார்வை போதும்... அதுவே அவங்க என் மேல் வைத்திருக்கும் அன்பை கொட்டி கவிழ்த்திடும். இன்னைக்கு அவங்க என்னைப்பார்த்த பார்வையில் தேர்ட் பெர்சனை பார்க்குற ஃபீல் கூட இல்லை. ஏன் அவங்க என் முகத்தை பார்த்தங்களான்னே டவுட்டா இருக்கு" என்றவள் கண்ணீரை துடைக்க துடைக்க கன்னம் வழிந்தது அவளது உள்ளத்து வலிநீர்.

இதைப்பற்றி பேசினால் அவளுக்கு மேலும் வலியை கூட்டுமென அறிந்த இனியன், பேச்சினை மாற்றினான்.

"உனக்கு ஒன்னுமில்லையே! அங்க கலவரம் தெரிந்ததும் வேற வழி போயிருக்கலாமேடா" என்று தங்கையை தள்ளி நிறுத்தி முழுதாய் ஆராய்ந்தான்.

"எனக்கு எதுவுமில்லைண்ணா" என்ற இமையாள், "எல்லாம் அவ்வளவு தானா இனியாண்ணா?" எனக்கேட்டு, "அப்புறம் எதுக்கு அவங்களா வந்து என்னை விரும்புறேன்னு சொல்லி, என்னையும் விரும்ப வைத்து, எதுக்கு விட்டுப்போனாங்க. இப்படி என்னை அழ வைக்கவா" என்றவள் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டே, "இனி நான் அழமாட்டேன். நான் ஏன் அழணும். நீயில்லாமல் நான் நல்லாவே இருக்கன்னு இன்னைக்கு எனக்கு அவங்க காட்டிட்டாங்க. நான் மட்டும் ஏன் அவங்காயில்லாமல் வலியோடு இருக்கணும். அவங்க இல்லாமல் நானும் நல்லாயிருக்கேன்னு அவங்களுக்கு காட்டனும்" என்றாள்.

"காம் டவுன் டா பாப்பா. ஜஸ்ட் ரிலாக்ஸ் யுவர்செல்ஃப். இப்போ நீ ருது மேல் கோபமா இருக்க. எந்த முடிவும் எடுக்காதே! அமைதியா அடுத்து என்ன செய்யனும் பார்க்கலாம்" என்றான்.

"இல்லைண்ணா... நான் சந்தோஷமாதான் இருக்கேன்னு காட்டனும்" என்றவள் தலையை பிடித்துக்கொண்டு அங்கிருந்த நோயாளிக்கான நீண்ட பெஞ்சில் அமர்ந்துவிட்டாள்.

இமையாள் அதீத மன அழுத்தத்தில் இருப்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

என்ன செய்வதென்று தெரியாது தங்கையை பார்த்தவாறு நின்றிருந்த இனியன், தாமதமாகத்தான் உணர்ந்தான். இமையாளின் அலைப்பேசி தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருப்பதை.

அவளது கைப்பை அவனது மேசையில் கிடந்தது. எடுத்து யாரென்று பார்க்க... சுரேந்தர் தான் பலமுறை அழைத்திருக்கிறார்.

இமையாள் இன்னும் வீடு செல்லாததால், கலவரம் வேறு... பயந்து இருப்பார்கள் என நினைத்தவன், திருப்பி அழைத்தான்.

மகளின் அலைப்பேசியில், மகன் பேசவும் பதறிவிட்டார்.

"என்னப்பா என்னாச்சு. இமயா போன் நீ எடுக்குற?" என்றார். அவரின் அருகில் தீபாவின் குரலும் கலக்கமாக ஒலிப்பது கேட்டது.

"அப்பா... அப்பா நான் சொல்வதை முதலில் கேளுங்கள்" என்று அவர்களை அமைதிப்படுத்தியவன், "பாப்பாக்கு ஒன்னுமாகல. வீட்டுக்கு வர ரூட் ஒரே அடிதடியா இருக்குன்னு நான் தான் ஹாஸ்பிடலுக்கு வர சொன்னேன். என்னோட சேஃபா இருக்காள்" என்றவன், அவர்கள் ஆசுவாசம கொண்ட பின்னரே வைத்திட்டான்.

"இமயா."

விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் சிவந்து, என்னவோபோலிருந்தாள்.

தான் மருத்துவன், அந்த இடத்தில் தன்னுடைய மதிப்பு உயர்ந்தது என்பதையெல்லாம் மறந்தவனாக தங்கையின் கைகளை பிடித்துக்கொண்டு அவள் முன் தரையில் அமர்ந்துவிட்டான்.

"டேய் பாப்பா... இதுதான்னு ஏத்துக்க ட்ரை பண்ணுடாம்மா. வேறென்ன சொல்ல எனக்கும் தெரியலையே!" என்றவன், "ஜஸ்ட் அக்செப்ட் அண்ட் மூவ் ஆன் டா பாப்பா" என்றான்.

"முடியலையேண்ணா."

அவளது கண்கள் மீண்டும் உடைப்பெடுக்கும் போல பொங்கிட, அவளின் கன்னத்தில் கை வைத்தவன், ஒற்றை விரலால் கண்ணீரை தடுத்திருந்தான்.

"பழையதுலே தேங்கிட்டோம்ன்னா. புதுசு கண்ணுக்குத் தெரியாமல் போயிடும்டா. இதிலிருந்து நீ வெளிய வரனும்ன்னா புதுசா ஏதும் நடக்கணும். அது என்னன்னு யோசிடா" என்றான்.

அவள் அமைதியாக இருக்க...

"இன்னொருமுறை உன் கண்ணீரை பார்க்கும் தைரியம் எனக்கில்லைடாம்மா" என்றான்.

"அண்ணா..."

"இந்த அண்ணாக்கு உலகமே நீதான்னு உனக்கு தெரியும்லடா. எனக்காக கொஞ்சம் மாற ட்ரை பண்ணேன்" என்றான்.

எனக்காக என்ற சொல்லை எப்போதுமே தங்கையிடம் பயன்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவன்... இன்று அவளின் நிலை பொறுக்காது, உபயோகித்துவிட்டான்.

இனியனின் வருத்தம் தங்கையாக அவளை தாக்காதா என்ன?

நொடியில் நிமிர்ந்து அமர்ந்தவளாக,

"ஓகேண்ணா... அழல. ட்ரை பன்றேன்" என்றாள்.

"குட். தட்ஸ் மை கேர்ள்" என்று அவளின் உச்சியில் உள்ளங்கை வைத்து அழுத்தம் கொடுத்தவன், "வீட்டுக்கு போகலாமா?" என்றிட, கண்ணுக்கு எட்டாத புன்னகையில் சம்மதம் வழங்கினாள்.

இனியனுக்கு நன்கு தெரியும். இது தற்காலிக தீர்வுதான். முழுதாய் தங்கையை மீட்டெடுக்க வேண்டுமானால் அவளுக்கு நல்வாழ்வு ஒன்றை அமைத்து தர வேண்டும். இனி தினம் தினம் இல்லாவிட்டாலும் அடிக்கடி ருதுவை நேரிலோ, செய்திகள் மூலமாகவோ பார்க்க நேரிடும். அப்போதெல்லாம் இதுபோன்று நிலை தவறி அவள் வருந்த நேரிடும். அதற்காகவேணும் தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டும். திருமணம் நடந்தால் தான், 'இனி தன் வாழ்வில் ருது என்பவனுக்கு இடமே இல்லை என்பதை அவள் மனம் நம்பும்' என நினைத்தவன், தீர்மானித்துவிட்டான்.

தங்கைக்கு முன்பு இனியனுக்கு வேறெதுவும் பெரியதாக தெரியவில்லை.

இனியன் ஏதோ யோசனையிலே வருவதை கண்ட இமையாள்...

"என்னாச்சுண்ணா. உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேனா?" எனக் கேட்டாள்.

அவளை பார்த்து புன்னகைத்தவன்,

"ம்ப்ச்... இல்லைடா" என்று கண் சிமிட்டினான்.

"அப்புறம் என்ன தின்கிங்?"

"கல்யாணம் பண்ணிக்கலாம் தோணுது" என்றான்.

"வாவ் அண்ணா... குட் டெஸிஷன்." அதீத உற்சாகமானாள்.

"நான் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்னா... வன் கண்டிஷன்?" என்று அவளை ஏறிட்டான்.

"என்ன கண்டிஷன்?"

"உனக்கு ஃபர்ஸ்ட் மேரேஜ் நடக்கணும்" என்றான்.

"அண்ணா?"

"என்ன? ருது இனி கிடையாது. அவ்வளவுதான். அடுத்து என்ன? இதுதான். அக்செப்ட் பண்ணப் பழகு" என்று அப்பேச்சினை முடித்துவிட்டான்.

இதுதான் எனது முடிவென இனியன் ஸ்திரமாக காட்டும் குரல் அது. அதை மாற்றிடவே முடியாது.

கண்களை இறுக மூடி இருக்கையில் சாய்ந்துகொண்டாள்.

அவளுக்குத் தெரியும்... தன்னை வாழ்வில் தனித்து விடமாட்டார்கள் என்று. தன்னை விட்டுச்சென்ற காதலுக்காக குடும்பத்தை வதைத்திட வேண்டுமா? சிந்திக்கத் துவங்கினாள். காதல் மீளா வலியை கொடுத்தபோதும் கடந்து வருவது தானே இயல்பு.

இமையாள் ருதுவிற்கு, அவனது காதலுக்கு பழகிவிட்டாள். அவன் இல்லாத போது அதுவே அவளின் அதீத வலிக்கு காரணம். அவனை கடந்து, அந்த வலியை தாண்டி அவளால் மற்றொரு வாழ்வில் அடி வைத்திட முடியுமா?

கலங்கும் மனதை முகத்தில் காட்டாதிருக்க அவஸ்த்தைப் படுகிறாள்.

அவளின் துக்கம் அவளோடு மட்டுமே என்றால் அமைதியாகியிருப்பாளோ? அவளையே உயிராக நேசிக்கும் மூன்று உறவுகளையும் வதைத்திடும்போது இனியனின் பேச்சிற்கு அசைந்து கொடுக்கவே தோன்றுகிறது.

_____________________________

நகரத்தை ரவுடிகளின் தாக்குதலிலிருந்து கட்டுக்குள் கொண்டு வந்திடவே மாலை மங்கி இருள் சூழ்ந்திருந்தது.

தன்னவளை முழுதாக தவிர்த்தவனாக ஜீப்பில் ஏறி இயக்கியவன், அவள் தன்னையே பார்த்திருப்பதை பக்க கண்ணாடி வழி பார்த்துக்கொண்டே சென்றிருந்தான்.

அடுத்து காவல் நிலையம் சென்றவன், ஒருவனையும் விட்டு வைக்கவில்லை. எத்தனை லத்தி முறிந்ததோ? அனைவரையும் ஒரே அறைக்குள் அடைத்து ஓடக்கூட இடமில்லாது அடி வெளுத்திட்டான்.

அவனது இந்த ஆக்ரோஷத்திற்கு பின்னால் இருந்தது முழுக்க முழுக்க அவன்மீது அவனுக்கே இருக்கும் கோபம்.

அவளிடம் காதலை சொல்லிய தருணம் இன்னும் அவனுள் பசுமையாய். இதயத்தில் அத்தனை குளுமையாய். தள்ளி எங்கோ ஒரு மூலையில் இருந்தபோது அவளை நினைத்தானோ இல்லையோ... இங்கு, அருகில் வந்த பின்பு தினமும் அவளை கண்டிடமாட்டோமா என அவன் ஏங்காத நாளில்லை.

அவள் நல்லாயிருந்தால் போதுமென இருந்தவனுக்கு, தானில்லாமல் அவள் சுத்தமாக நல்லாயில்லை என்பதை பார்த்ததும் அறிந்து கொண்டிருந்தான்.

கருவிழிகள் அவளது பிம்பத்தை உள்வாங்கியதுமே, அவளை இழுத்து தன் பரந்த மார்பில் பொத்திக்கொள்ளும் வேட்கை அவனுள். எப்படி கட்டுப்படுத்தினானென்று அவனுக்கேத் தெரியாது.

மொத்தமாக அவளை உதாசீனம் செய்துவிட்டு... தனக்குள் வதைப்படுகிறான்.

எங்கோ உலகின் வெற்றிடப்புள்ளியில் தனித்து நின்று ஆவென கத்திடத் தோன்றியது.

அத்தனை அழுத்தம். மொத்தமாக பணியில் காட்டியிருந்தான். ருது அடிப்பதை நிறுத்திய பின்னரும் தடியர்கள் வலியில் கத்திக்கொண்டும், நெளிந்துகொண்டும் இருந்தனர்.

"சாருக்கு இவ்வளவு கோபம் வருமா?" வெங்கட் அரண்டு விட்டான்.

"ஒரு பஸ்ஸை கொளுத்த பார்த்தவனுங்களுக்கு இந்த அடிலாம் ரொம்பவே கம்மி சார்" என்ற கிருஷ்ணன், மல்லிகா எழுதிய குற்ற அறிக்கை பதிவேட்டில் ஒவ்வொருவனையும் அசைக்க முடியாது அசைத்து கையெழுத்து வாங்கிட ஆரம்பித்தார்.

"படித்த ரவுடிங்க போல..." வெங்கட்டின் உதடு கீழ் நோக்கி வளைந்தது.

தன்னிருக்கையில் சென்று அமர்ந்த ருதுவின் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவனால் தன்னை நிலைப்படுத்திடவே முடியவில்லை.

எப்போதெல்லாம் தன்னவளின் நினைவு தனக்குள் ஆதிக்கம் செலுத்திட துவங்குகிறதோ அப்போதெல்லாம் தன் மகனை கண்முன்னே கொண்டு வந்து தன்னை சமன் செய்திடுவான்.

இப்போதும் அதுவே கைகொடுக்கும் என நினைத்தவனிடம் அத்தனை தடுமாற்றம்.

'நான் உன்னை பார்த்திருக்கவே கூடாதுடி...'

'லேஷஸ்...' மனதின் ஓலம் அவனின் செவி நிறைத்து மேலும் துவளச் செய்தது.

"வெங்கட்... டோன்ட் மைண்ட். என்னை வீட்டில் விட முடியுமா?" ருது கேட்டதில் வெங்கட்டிற்கு அதிர்ச்சி.

"ஹெவி டயர்ட். வீட்டுக்கு போனால் பெட்டர் தோணுதுடா. கிருஷ்ணன் அண்ணா வேலையில் இருக்காரேன்னு உன்னை கூப்பிட்டேன். முடியாதுன்னா பரவாயில்லை" என்று ருது வாயிலை நோக்கி நகர... அவனை முந்திக்கொண்டு முன் சென்றான் வெங்கட்.

மனம் தளர்ந்து போனதால் ருதுவின் உடலும் வெகுவாக தளர்ந்திருந்தது. அவனது நடையில் அதனை கண்டுகொண்ட வெங்கட்... இந்நேரத்தில் அவனை தனித்து அனுப்பிட மனமில்லாது, அவன் கேட்டதற்காக மட்டுமில்லாது உண்மையான அக்கறையிலே சென்றான்.

மணி பதினொன்றை கடந்திருந்தது.

காவல் நிலையம் முழுக்க ரவுடிகள் நிரம்பியிருக்க... ருது அன்றைய இரவு அங்கிருக்க வேண்டிய கட்டாயம். ஆனால் அவனால் முடியவில்லை. அவனுள்ளிருந்து எதையோ விரட்டிட வேண்டும். அவன் அவனாக இல்லை. கிளம்பிவிட்டான்.

கைது செய்த அனைவரையும் பாதுகாப்பாக செல்லில் வைத்திருக்கக்கூறிய ருது, வெங்கட்டுடன் புறப்பட்டிருந்தான்.

வண்டியில் ஏறி அமர்ந்ததும் ருது இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். இமைகள் சூட்டினை உணரவே, கண்கள் கலங்கியிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டவனாக விழி திறந்து நிமிர்ந்து அமர்ந்து வெளி இருளை வெறித்தான்.

'எனக்காகவாடி காத்திருக்க?' வேண்டாமென உறுதியாக இருந்தவனின் மனம் மெல்ல மெல்ல வேண்டுமென நினைக்கிறதோ?

தலையை உலுக்கி அந்நினைப்பை விரட்டினான்.

"சார்?"

"நத்திங்... நத்திங் வெங்கட்" என்ற ருது, "சாரி ஸ்டேஷனில் டா சொல்லிட்டேன்" என்றான்.

"பரவாயில்லை சார். அண்ணா போலத்தான் நீங்க" என்ற வெங்கட்டிற்கு ருதுவிடம் மனதால் ஒரு நெருக்கம்.

"ஹாஸ்பிடல் ஒழுங்கா கூட்டிட்டுப்போறியா?"

"சார்...!"

"அண்ணா போல சொல்லிட்டு, சார் சொல்ற?"

"அது... உங்க பதவி..."

"அதெல்லாம் ஸ்டேஷனில் வச்சிக்கோ" என்ற ருது, "ராதிகாவை கேட்டேன்" என்றான்.

ருதுவிற்கு மனதை வேறெதிலாவது மாற்றி செலுத்திட வேண்டும். மனதை மாற்றிட கேட்டாலும், உறவுகளற்ற தனிமையில் இந்நேரத்தில் இருவரும் எத்தனை வேதனையை சுமப்பர் என்பதை அறிந்ததாலே உளமார தான் இருப்பதாகக் காட்டிட நினைத்தான்.

"ம்ம்ம் லாஸ்ட் வீக் கூட செக்கப் கூட்டிப்போனேன். ரெண்டு பேருமே ஆரோக்கியமா இருக்காங்க" என்றான்.

"குட்... வீடு எங்கே?"

"நம்ம குவார்ட்டர்ஸ் தான். கிரவுண்ட் பக்கத்தில்."

"ம்ம்ம்... ராதிகாவுக்கு எதுனாலும் தயங்காமல் சொல்லு. நம்ம வீட்டில் அம்மா இருக்காங்க. பார்த்துப்பாங்க" என்றான்.

வெங்கட் நெகிழ்ந்து போனான்.

"நானிருக்கிறேன்" என்ற சொல்லின் பலம் யாருமற்றவர்களுக்கே புரியும்.

"தேன்க்ஸ்... தேன்க்ஸ் ண்ணா!"

வீடும் வந்திருந்தது.

"ஸ்டேஷன் போயிட்டு கால் பண்ணுடா" என்ற ருது அவனை அனுப்பிவிட்டே வீட்டிற்குள் சென்றான்.

ருதுவிற்காக அம்பிகா கூடத்திலே காத்திருந்தார்.

"என்னப்பா ருது இவ்வளவு நேரம்? சிட்டியே பரபரப்பா இருந்துச்சுப்போல. டிவில இன்னைக்கு முழுக்க கலவரம் பத்தின நியூஸ் தான்" என்றவர், "வா சாப்பிடலாம்" என்று இருக்கையிலிருந்து எழ, சிறுவனாய், அன்னை மடி தேடும் சேயாய் அவரை இறுக்கி அணைத்திருந்தான்.

"அம்மா..."

அழுகிறான் என்பதை அவனின் தழுதழுப்பில் உணர்ந்தவர், கரம் உயர்த்தி மகனின் பின்னந்தலையில் ஆதுரமாய் தடவிக் கொடுத்தார்.

"ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்லை ருது. எதுவாயிருந்தாலும் பார்த்துக்கலாம்."

காரணம் என்னவென்று தெரியாமலே மகனை ஆறுதல் படுத்தினார்.

ருதுவின் பிடி இறுகிக்கொண்டே சென்றது.

அவனின் மனதின் வதை அவனது அழுத்தத்தில் அன்னையாய் உணர்ந்து கொண்டார்.

"ருது..."

"அவளை பார்த்தேன் ம்மா..."

"நல்லாயிருக்காள் தானே?"

அவளின் நலன் ஏதும் சரியில்லையோ? அதில் தான் மகன் இத்தனை கவலை கொள்கிறானோ என்று எண்ணி வினவினார்.

"அப்படியே இருக்காம்மா. நான் விட்டுப்போன இடத்தில் அப்படியே இருக்காள். எனக்காக வெயிட் பன்றாம்மா. முடியல" என்று கண்ணீர் விட்டு அழுதான்.

பிரிக்க முடியாது தன்னிலிருந்து பிரித்து, இருக்கையில் தன்னுடன் அமர வைத்தவர், சேலை தலைப்பினால் ருதுவின் முகம் துடைத்து, ஒற்றை கையை அவனின் கன்னம் வைத்து...

"உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நீ சொன்ன பொய்யை அவள் நம்பலன்னு உனக்கு புரியுதா ருது?" எனக் கேட்டார்.

"அம்மா...!" அவனிடம் பெரும் அதிர்வு.

"ஒரு பொண்ணு ஒருத்தனுக்காக பல வருஷமா காத்திருக்கான்னா... அவளை விட்டுச்செல்ல அவன் சொல்லிய காரணத்தை அவள் நம்பலன்னு தானே அர்த்தம்?" என்றார்.

"ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்."

"அவளை கல்யாணம் பண்ணிக்கோப்பா!"

"அம்மா... தேஷ்?"

"தேஷ்க்கு நீ அப்பான்னா... அவள் அம்மா தானே ருது?" என்றவர், "இமையாள்'ங்கிற பெயரைத்தானே தேஷ்ஷோட அம்மாங்கிற அனைத்து இடத்திலும் குறிப்பிடுற? அப்போ கல்யாணம் பண்ணிக்க என்ன தயக்கம்?" எனக்கேட்டார்.

"தேஷ் பற்றி தெரிந்தால் எப்படி எடுத்துக்குவான்னு தெரியலையேம்மா" என்ற ருது, "இப்போ அவள் என் மேல் வைத்திருக்கும் அந்த காதலோடவே, உண்மை ஏதும் தெரியாமல் என்னை ஏத்துக்கனும்மா. இல்லையென்றால் பின்னாடி ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழலில் அதுவே இருவருக்கும் இடைவெளியை உண்டாக்கிடும்" என்றான்.

"ரொம்ப கஷ்டம் ருது!"

"அம்மா...?"

"தான் உயிரே வைத்திருப்பவனாக இருந்தாலும், இன்னொரு பொண்ணோட கணவனை எந்தவொரு நல்ல பெண்ணும் திருமணம் செய்து கொள்ளமாட்டாள் ருது" என்றார்.

"எனக்குதான் கல்யாணம் ஆகலையேம்மா?"

"அவள் நீ சொன்னதை நம்பவில்லைன்னாலும், நீயே கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லியிருக்கியே ருது" என்ற அம்பிகா, "இப்போக்கூட இமையாள் காத்திருப்பது உனக்காக இல்லை. அதாவது வேறொரு பெண்ணின் கணவனான ருதுவிற்காக இல்லை. அவளை காதலித்த, அவள் விரும்பிய பழைய ருதுவிற்காக மட்டுமே இருக்கும். அந்த ருதுவை கடந்து வர முடியாததே அவளின் காத்திருப்பு இன்றளவிலும் தொடர காரணமாக இருக்கலாம்" என சரியாகக் கணித்துக் கூறினார்.

"அப்போ... நிச்சயம் நான் ஏதும் சொல்லாமலே அவள் எனக்காக வரணும் ம்மா. தேஷ்ஷை என் பையனாகவே அவள் ஏத்துக்கணும்" என்றான்.

"அது ரொம்பவே கஷ்டம்" என்றார் அம்பிகா.

"அவள் என்னோட லேஷஸ் ம்மா. என்னைப் புரிஞ்சிப்பாள்" என்றான். அவளின் காதல் மீது அத்தனை நம்பிக்கை அவனுக்கு.

அவளின் புதிய முடிவு தெரியாது மீண்டும் தன் காதலை மனதில் மீட்டத் துவங்கியிருந்தான் ருத்விக்.

அவளாக வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன், சூழ்நிலையின் பிடியில் தனக்கு சாதகமாக அவளுக்கு விருப்பமற்று மணக்கவிருக்கிறான். கனவிலும் அவன் நினைக்காத ஒன்றை நடத்தவிருக்கிறான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 17

அம்பிகாவின் பேச்சில் முழுவதும் இல்லையென்றாலும், ஓரளவிற்கு தீர்க்கமான மனநிலைக்கு ருது வந்திருந்தான்.

அம்பிகாவே மகனுக்கு உணவினை ஊட்டிவிட்டு, படுக்க அனுப்பினார்.

மெத்தையில் விழுந்தவனுக்கு இமையாளின் நினைவுகளே.

"லேஷஸ்." கையிலிருக்கும் டாட்டூவை விரலால் வருடியவனின் இதயத்தில் இதம். இதழில் முறுவல். நீண்ட நாட்களுக்குப் பின்னர் காதலின் குளுமையில் தேகம் சிலிர்த்தான்.

"உன்னோட ஆக்ஷன்ஸ் பார்க்க வெயிட்டிங்டி பொண்டாட்டி" என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டவனின் முகத்தில் வெட்கம் எட்டிபார்த்ததோ? அவனது அதரங்கள் விரிந்து முரல்கள் பளிச்சென மின்னியது.

"லவ் பண்ற வயதாடா போலீசு உனக்கு" எனக் கேட்டுக்கொண்டவன், தன் காதல் பக்கங்களை மீட்டி பார்த்தான்.

"அப்போக்கூட நீ இவ்வளவு வெட்கப்படல போலவே. இப்போ அவள் பெயரை நினைச்சாலே பிளஷ் ஆகுது" என்று தன் போல் பிதற்றிக் கொண்டிருந்தவனின் அலைப்பேசி சிணுங்கியது.

"கொஞ்ச நேரம் லவ் பீல் பண்ண விடமாட்டாங்களே!" கடுப்பாய் மொழிந்தவன் யாரென்று பார்க்க, கிருஷ்ணன்.

"சொல்லுங்கண்ணா?"

"சார் கைலாஷ் ஆளுங்களை அனுப்பி வச்சிருக்கார். ஸ்டேஷனை சுத்துப் போட்டுட்டாங்க சார்" என்றார்.

"அவனை வரவைக்கத்தான் இந்த ஆட்டமே! நேரில் வரமால் ஆட்டம் காட்டுறான்" என்று கொதித்த ருது, "வெப்பன்ஸ் வச்சிருக்கானுங்களா?" எனக் கேட்டுக்கொண்டே, ஆடை மாற்றி அணிந்தான்.

கீழே வந்தவன் ஷிவானியின் அறைக்கதவு பாதி திறந்திருக்க, மெல்ல தட்டிவிட்டு எட்டிப்பார்த்தான்.

மெத்தையில் தேஷ் உறங்கிக்கொண்டிருக்க, அவனுக்கு அருகில் புத்தகத்தோடு உட்கார்ந்திருந்தாள். அவளின் ஒரு கை தேஷ்ஷை தட்டிக் கொடுத்தபடி இருந்தது.

ருது கதவினை தட்டியதில் விழி உயர்த்தி ஏறிட்டவளிடம்,

"அர்ஜெண்ட் வொர்க் டா. ஸ்டேஷன் போகணும். அம்மா இப்போ தான் தூங்கப்போனாங்க. திரும்ப எழுப்ப முடியாது. நீ வந்து கதவு லாக் பண்ணிக்கோ" என்று அழைத்தான்.

ஷிவன்யா வர,

"தூங்கலையா?" எனக் கேட்டிருந்தான்.

"எக்ஸாம் வரப்போகுதே டார்லிங். கொஞ்சம் கொஞ்சமா பிரிப்பேர் பன்றேன்" என்றாள்.

"ம்ம்ம்" என்றவன் அவளுக்கு கையசைத்துவிட்டு பொறுமையை மறந்தவனாக காற்றில் சீறினான்.

ருதுவின் வண்டி மற்றும் கதவு திறந்து மூடும் சத்தத்தில் கண் விழித்த வேங்கடம் என்னவென்று கூடத்திற்கு வந்தார்.

"அண்ணா ப்பா. ஸ்டேஷன் போறாங்க. ஏதோ அர்ஜெண்ட் சொன்னாங்க" என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, "உங்க போன் அடிக்கிதுங்க" என்று கண்களை கசக்கியபடி கொண்டு வந்து கொடுத்தார் அம்பிகா.

முதல்வரின் காரியதரிசி அழைத்திருந்தார்.

"ஹலோ வேங்கடம்." பேசியது முதல்வர்.

"என்ன சார் இந்நேரத்தில். எமெர்ஜென்சி வொர்க் ஏதுமிருக்கா சார்? நான் வரணுமா?" எனக் கேட்டார் வேங்கடம்.

"என்னை பேசவிடுங்க சார்" என்ற முதல்வர், "உங்க பையன் வீட்டில் தானே இருக்காங்க?" என்று வினவினார்.

"அர்ஜெண்ட் வேலைன்னு இப்போதான் போனான் சார்."

"ஹோ..." என்ற முதல்வர், "கைலாஷ் ஃபாரின் ட்ரிப் முடித்து வந்துட்டான். பாதியில் முடித்துக்கொண்டு வந்ததே காந்தாவை வெளியில் எடுக்கத்தான். கலவரம் வேலைக்கு ஆகலன்னு அவனே நேரடியாக டீல் பண்ண நினைக்கிறான். எனக்கு கால் செய்து, ருதுவை அவசரமா இப்போவே டிஸ்மிஸ் பண்ண சொல்லி உள்துறை அமைச்சருக்கும், டிஜிபிக்கி மெசேஜ் பாஸ் பண்ண சொல்லி எனக்கே ஆர்டர் போடுறான். கட்சிக்கு அண்டர் கிரவுண்ட் வேலையெல்லாம் பார்க்கிறான்னு எனக்கு முன்ன பதவியிலிருந்த என் அப்பா விட்டு வச்சது தப்பா போயிடுச்சு" என்றவர், "இது பொறுமையா டீல் பண்ணும் விஷயம். எடுத்ததும் என்னால் அப்படி செய்திட முடியாது. நாளை நேரில் வாங்க பேசிக்கலான்னு சொல்லி கால் வச்சிட்டேன். ஆனால் அவன் இதோட விடுற ஆள் இல்லை" என்றார்.

"தேன்க் யூ சார். உங்க பதவிக்கு நீங்க இதை சொல்லணும் அவசியமில்லை. ஆனால் நீங்க கவலைப்பட வேண்டாம் சார். ருதுகிட்ட ஏன் மோதினோம்ன்னு கைலாஷ் தான் பீல் பண்ணப்போறான்" என்ற வேங்கடத்திடம்,

"என் பணியே மக்களை பாதுகாப்பது தானே வேங்கடம். என்ன சில நேரம் வேடிக்கை பார்ப்பதும் அவசியமாகி விடுகிறது" எனக்கூறி வைத்திருந்தார்.

வேங்கடம் முதல்வரிடம் தைரியமாக பேசிவிட்டார். இருப்பினும் மகனை நினைத்து பயமாக இருந்திட, வேகமாக அழைப்பு விடுத்தார்.

அங்கு ருது அழைப்பு எடுக்கும் நிலையில் எல்லாம் இல்லை. ஆக்ரோஷமாக சுழன்றடித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அடியிலும் தடியர்களுக்கு கண் முன்னே இடியை இறக்கிக் கொண்டிருந்தான்.

வீட்டிலிருந்து புறப்பட்ட ருது தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்தானா அல்லது இறக்கை கொண்ட பறவையில் வந்தானா என்பதை கண்டறிந்திடாத வேகத்தில் விரைந்து வந்திருந்தான்.

ருது வந்த நேரம் அப்பகுதியே இருளில் மூழ்கியிருந்தது. மின்சாரத்தை தடை செய்திருப்பார்கள் போலும்.

காவல் நிலையத்தின் உள்ளே மட்டும் ஜெனரேட்டர் உதவியால் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

கேட்டிற்குள் வண்டியை செலுத்திய ருது பார்வையை கூர்மையாக்கி சுற்றுப்புறத்தை அலசினான்.

ஆங்காங்கே தடியர்கள் இருளில் மறைந்து நிற்பது வரி வடிவமாக தெரிந்து. நள்ளிரவிற்கு மேலாகியதால் சுற்றுப்புறத்தில் மக்களின் அரவம் ஏதுமில்லை.

கேட்டிற்கும் அலுவலகக் கட்டிடத்திற்கும் நடுவில் உள்ள கொடி கம்பத்திற்கு முன் வண்டியை நிறுத்திய ருது, அதிலிருந்து இறங்கி கம்பத்தின் சுற்று திண்ணையில் குதித்து அமர்ந்தான்.

ருதுவின் வண்டியின் சத்தத்தில் இரவு நேரப்பணியில் உள்ளிருந்த காவலர்கள் வெளியில் வந்து நின்றனர்.

முதலில் மின்சாரம் தடைப்பட... அடுத்து இருளில் பல காலடி ஓசைகள் காவல்நிலையத்தைச் சுற்றி கேட்டிட, காந்தாவை காப்பாற்ற கைலாஷ் ஆட்களை அனுப்பி வைத்திட்டான் என்பதை யூகித்த பணியாளர்கள் பயத்தில் அப்பட்டமாக நடுங்கிக் கொண்டிருந்தனர்.

இதுபோன்று ஒருமுறை காந்தாவை உள்ளே தூக்கி வைத்த சமயம் கைலாஷே நேரடியாக வந்து காவல் நிலையத்தை தரைமட்டமாக்கி ஊடகங்களுக்கு போஸ் கொடுத்து கையாட்டியபடி காந்தாவை அழைத்துச் சென்றிருந்தான். அப்போது பணியிலிருந்த இரு காவலர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். அன்றைய பயம் அவர்களுக்கு. கைலாஷ் எதையும் செய்யக்கூடியவன்.

ஆட்கள் வந்தது தெரிந்ததுமே வெங்கட் காந்தாவை வைத்திருக்கும் செல்லுக்கு முன் சென்று நின்று கொண்டான்.

கிருஷ்ணன் தான் என்ன நடக்குமோ எனும் அச்சத்தில் ருதுவிற்கு தகவல் அளித்தார்.

வந்த ரவுடிகள் அலுவலகத்தை சுற்றி வளைத்திருந்தார்களே தவிர, எதுவும் செய்யாது அமைதியாக இருந்திட, உள்ளே இருப்பவர்களுக்கு அவர்களின் அமைதி மேலும் அச்சத்தையேக் கொடுத்தது.

"என்னண்ணா வந்தவனுங்க அமைதியா இருக்கானுங்க. இவனுங்க இப்படி அமைதியா இருக்கிற ஆளுங்க இல்லையே!" என்று வெங்கட் ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் போது தான் ருது வந்து சேர்ந்திருந்தான்.

"ருது சாருக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கானுங்க போல சார்" என்றார் கிருஷ்ணன்.

"சார் வந்தாச்சு. இனி ஆக்ஷன் தான்" என்று வெங்கட் சொல்ல... அனைவரும் வெளியில் வந்தனர்.

"எனக்காகத்தான வெயிட் பண்றீங்க. ஒளிந்து நிக்கிற எல்லா கோழையும் முன்ன வாங்க பார்ப்போம். பர்ஸ்ட் வரவங்களுக்கு அடி கம்மியா விழும்" என்று ருது முடிக்கும் முன்னமே ஒருவன் அரிவாளை உயர்த்தி பிடித்தவனாக, ஏய் என்று கத்திக்கொண்டு ஓடிவர, உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே அவனது மார்பில் கால் வைத்து சுழட்டித் தள்ளியிருந்தான் ருது.

அவனோ நான்கைந்து பல்டி அடித்து கேட்டில் இடித்து சுருண்டு விழுந்தான்.

"செம மாஸ் ண்ணா..." வெங்கட் சிலாகிக்க...

"நீங்க இப்படியெல்லாம் எப்போ சார் மாஸ் காட்டுவீங்க?" எனக் கேட்டிருந்தார் இரவு பணியிலிருந்த பெண் உதவி ஆய்வாளர் கனகா.

"ம்க்கும்... போங்கக்கா நீங்க வேற. அதுக்கெல்லாம் தனி முக அமைப்பு வேணும்" என்று வெங்கட் சொல்ல...

"அதெங்க இங்கிருக்கு" என்று முடித்தார் கிருஷ்ணன்.

வெங்கட் முறைத்திட...

"ஆக்ஷன் முடிஞ்சிடப்போகுது அங்க பாருங்க சார்" என்று அவனின் முகத்தை திருப்பினார் கிருஷ்ணன்.

ருது நடந்து கொண்டே ரவுடிகளை துவம்சம் செய்து கொண்டிருந்தான்.

எங்கிருந்து தான் அத்தனை பேர் வந்திருந்தார்களோ? ருது அடிக்க அடிக்க புற்று ஈசலாய் வந்து கொண்டே இருந்தனர்.

வந்திருந்தவர்களில் பாதி பேர் எழ முடியாது தரையில் மண்புழுவாய் துடித்து நெளிந்துக் கொண்டிருந்தனர்.

"எவனாலையும் எழ முடியாது போலிருக்கே!"

"சும்மா கவுண்டர் கொடுக்காமல் சாருக்கு ஹெல்ப் பண்ணலாமே நீங்க?"

"நீங்களும் எஸ்.ஐ தானேக்கா. போய் ஹெல்ப் பண்ணுங்களேன்" என்று ருது கனகாவை வம்பிழுக்க...

"ஒவ்வொருத்தனையும் பார்த்தீங்களா? மலைமாடு மாதிரி. லேசா மோதினாலே நான் கீழே விழுந்திடுவேன். இதுல எங்கிருந்து அடிக்கிறது" என்றவர், "இது ருது சாருக்கான சீன். நல்லா ஸ்கோர் பண்ணிக்கட்டுமே" என்று லாவகமாக கழண்டு கொண்டார் கனகா.

மீதியிருந்த ரவுடிகள் கையில் அரிவாள், கத்தியோடு ருதுவை சுற்றி வளைத்திருக்க... பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பதட்டமாகியது. அந்த பதட்டம் கொஞ்சமும் ருதுவிடம் இல்லை.

ஒற்றை ஆளாக தடியர்களுக்கு மத்தியில் இடையில் கைகளைக் குற்றி நிமிர்ந்து நின்றிருந்தான்.

அனைவரையும் சுற்றி பார்வையால் வட்டமிட்டவன்...

"இன்னும் நீங்களா அப்டேட் ஆகவே இல்லையாடா?" என்று நெற்றியை தேய்த்தான்.

"2024 ல இருக்கோம்டா. இப்போலாம் குழந்தைங்களே துப்பாக்கி வச்சு சுடுற கேம் தான் விளையாடுறாங்க. நீங்க இன்னமும் அதே அரிவாள், கட்டை, கம்பி, சைக்கிள் செயினுன்னு என் டைம் வேஸ்ட் பன்றிங்க" என பேசிக்கொண்டே ஒவ்வொருத்தனின் நிலையையும் உள்ளே அவதானித்தான்.

அவர்கள் நிற்கும் தன்மை, தன் மீது படிந்திருக்கும் கோணம், எந்த பக்கம் தன்னை தாக்கிட முடியுமென அனைத்தையும் தன் பேச்சின் மூலம் அவர்களை திசை திருப்பியவனாக மனதில் குறித்துக் கொண்டிருந்தான்.

"எங்களுக்குத்தான் புல்லட்டுக்கு கணக்கு சொல்லணும். உங்களுக்கு அப்படியில்லையே... துப்பாக்கி கொண்டு வந்திருந்தீங்கன்னா நானும் ஒன்னை பிடுங்கி... உங்க எல்லாரையும் சுட்டுத் தள்ளியிருப்பேன். ஃபைட்டும் முடிஞ்சிருக்கும். இப்போ பாரு மொக்கையா முடியுது" என்று தலையை சலிப்பாக ஆட்டினான்.

நொடியில் அனைவரும் மொத்தமாக ருதுவின் மீது பாய, அதிர்வில் காவலர்கள் அடியினை முன் வைத்திட, அவர்களின் பார்வையை மறைத்து, சடுதியில் அங்கு எழுந்த புழுதி.

அனைவரும் ஒருசேர தாக்கிய கணம், ஒற்றை காலை தரையில் அழுத்தி ஊன்றிய ருது மற்ற காலினை பக்கவாட்டாக நீட்டி நின்ற இடத்திலிருந்து சுழன்றவனாக, சுற்றியிருந்தவர்களின் வயிற்றிலே அழுத்தமாக உதைத்து கீழே விழச் செய்திருந்தான்.

புழுதி விலக ஒவ்வொருவனாக எழ முடியாமல் எழுந்து பாய்ந்து வர... தன்னை தாக்க வருபவர்களை நின்றுகொண்டே சர்வ சாதாரணமாக வீழ்த்தியிருந்தான்.

சில நிமிடங்களில் அனைத்தும் முடிந்தது.

எல்லா ரவுடிகளும் ஆங்காங்கே சுருண்டு கிடந்தனர்.

"யாருக்காகவோ நீங்க ஏன்டா உதைபடுறீங்க?" என்று இரு கைகளையும் உயர்த்தி சோம்பல் முறித்த ருது...

"அண்ணா காபி கிடைக்குமா?" என கிருஷ்ணனிடம் கேட்டான்.

"வெளியில் கடையிருக்கும் சார். வாங்கி வரேன்" என்று கிருஷ்ணன் நகர,

"நானே போய்க்கிறேன். நீங்க இவனுங்களை செல்லுக்குள்ள தூக்கி போடுங்க" என்றவன், "வெங்கட் ஹெல்ப் பண்ணுங்க. நல்லா பப்ஜி பாக்குற மாதிரி பார்த்துட்டே நிக்கிறீங்களே!" என்றான்.

ருது கலாய்த்தது அப்பட்டமாக தெரிய கனகா அக்கா சத்தமாக சிரித்துவிட்டார்.

"பொண்ணுங்க ஃபைட் பண்ணக்கூடாதுன்னு இருக்கா? நீங்களும் காளி அவதாரம் எடுக்கலாம். தப்பில்லை. எப்பவுமே மகாலட்சுமி மட்டும் அழகில்லை. சில நேரம் காளி ரூபம் தான் அழகு" என்றவன், "ரெண்டு பேருக்கும் மேல போகணும் ஆசையே இல்லையா?" எனக் கேட்டு தேநீர் கடை நோக்கிச் சென்றான்.

"நான் அப்போவே சாருக்கு ஹெல்ப் பண்ணலாம் சொன்னேன்" என்று கனகா முனக... "இந்த வழக்கில் சாருக்கு சப்போர்ட் செய்து இன்ஸ்பெக்டர் ஆகிடனும்க்கா" என்றான் வெங்கட்.

"அது ஆகலாம். இப்போ இவனுங்களை அள்ளி உள்ளப்போடலாம்" என்று கிருஷ்ணன் ஒருவனின் காலை பிடித்து இழுத்துச்செல்ல...

"வரவர உங்களுக்கு உயர் அதிகாரிங்கிற பயமே இல்லாமல் போச்சுண்ணா" என்றான் வெங்கட்.

"உயர் அதிகாரியா? யாரு கனகா அது?" என்று கிருஷ்ணன் கேட்டதில் வெங்கட்டின் முகம் போனப்போக்கில் அவனுக்கே சிரிப்பு வந்தது.

வெளியில் வந்த ருது சாலையில் நின்றபடி தேநீர் கடை எங்கிருக்கென பார்வையிட, பத்தடி தொலைவில் ஒரு கடை தெரிந்தது. அதற்கு முன் காவல் நிலையத்திற்கு நேரெதிர் இருக்கும் மரத்தை நோக்கிச் சென்றான்.

ருது அருகே சென்று தலையை உயர்த்திட... ஒருவன் காமிராவோடு கீழே குதித்தான்.

"எல்லாம் ஷூட் பண்ணிட்டிங்களா?"

"சார்... சார்... அது" என்று இழுத்த நபர், "இது என்னோட ஜாப் சார்" என்றான்.

"நான் உங்களை ஒன்னுமே சொல்லலையே மிஸ்டர்" என்ற ருது, "எவ்வளவு நேரமா எடுத்திட்டு இருக்கீங்க?" எனக்கேட்டான்.

"ரவுடிங்க சுத்துப்போட்டதுல இருந்து சார்" என்றான் அவன்.

"ஹ்ம்ம்... அப்போ அவனுங்க இங்க வரயிருந்தது உங்களுக்கு முன்னவே தெரிந்திருக்கு அப்படித்தானே?" எனக் கேட்ட ருது, அவனின் தோளில் கைபோட்டபடி தேநீர் கடை நோக்கி அழைத்துச் சென்றான்.

அங்கு சென்று முன்னிருந்த பெஞ்சில் தளர்வாக அமர்ந்த ருது தன்னருகில் அமருமாறு கண் காண்பித்தான். கடைக்காரரிடம் இரண்டு என்று விரல் காண்பித்தான்.

"கைலாஷ் பி.ஏ என் ஃபிரண்ட் சார். இண்ட்ரெஸ்டிங்கா நியூஸ் கிடைக்குமேன்னு வந்துட்டேன் சார்" என்ற நிருபர்... "ஆனால் நீங்க செம போலீஸ் சார். காமிராவில் ஆக்ஷன் படம் பார்க்குற மாதிரியே இருந்தது" என்றான்.

"ஹ்ம்ம்... உங்க பெயர்?"

"மனிஷ் சார்" என்றவன், "இந்த ஃபைட் நான் டிஸ்பிளே பண்ணிக்கட்டுமா சார்?" எனக்கேட்டான்.

"நான் உங்களை பார்க்காமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீங்க மனிஷ்?"

"அது..."

"சொல்லுங்க?"

"இந்நேரம் சேனலில் டெலிகாஸ்ட் செய்திருப்பேன் சார்?" என்றான் மனிஷ்.

"ஹ்ம்ம்..." என்ற ருது, "உங்களுக்கு கைலாஷ் பார்த்து பயமில்லையா?" எனக் கேட்டான்.

"கெட்டது செய்றவனுங்களே பயப்படுறது இல்லையே சார்" என்றான்.

அவனை மெச்சுதலாக பார்த்த ருது...

"இதில் கைலாஷின் பெயரை உன்னால் தைரியமா சொல்ல முடியுமா?" என்று புருவம் உயர்த்தினான்.

"கண்டிப்பா சார்" என்றவன், தங்களை கடந்து சாலையில் சென்ற வாகனத்தை தனது காமிராவில்... அது காவல் நிலையத்தின் உள்ளே செல்லும் வரை காணொளியாக பதிவு செய்தான்.

இதற்கிடையில் குளம்பி நீர் குடித்து முடித்திருந்தனர்.

"யார் கார் அது?"

"கைலாஷ் சார். ஃபாரின் ட்ரிப் போயிருந்தார். காந்தாவுக்காகவே பாதியில் திரும்பி வந்திருக்கார். அநேகமாக அவரோட ஆட்களை நீங்க அடித்து போட்டது அவருக்கு தெரிந்திருக்கும். அதான் உங்களை பார்க்க இந்நேரத்தில் நேராகவே வந்துட்டார் போல" என்றான்.

"குட்..." என்ற ருது, "அம் ஈகர்லி வெயிட்டிங் ஃபார் திஸ் மொமெண்ட்" என்று உற்சாகமாக எழுந்து, குளம்பிக்கான தொகையை செலுத்திவிட்டு துள்ளல் நடையோடு காவல் நிலையம் நோக்கிச் சென்றான்.

செல்லும் ருதுவை வியப்போடு, அத்தனை உயரமாகத்தான் பார்த்திருந்தான் மனிஷ்.

கைலாஷ்ஷை நேரில் சந்திப்பதற்காக ருது கொண்ட ஆர்வம் அதீதம். அதற்கு பெரும் காரணம் ஒன்று உள்ளது.

என்றோ பட்ட துன்பத்திற்கும், வலிக்கும் பதில் கொடுக்கப்போகும் முனைப்பாக இருக்கலாம்.

தன் வாழ்வின் பாதையை மீண்டும் நேர்கொண்டு அமைத்திடும் வேகமாக இருக்கலாம்.

இல்லை... பழிவாங்குதலாகவும் இருக்கலாம்.

அன்னை என்ற உயிரை பிரிந்ததான் ரணமாக இருக்கலாம்.

மொத்தத்தில் கைலாஷ் என்றொருவனை விட்டு வைத்தது போதுமென்று நினைத்துவிட்டானோ?

ருத்விக்... கைலாஷ்...

கொடுப்பது யாரோ? பெறுவது யாரோ?

வித்திட்ட விதையே விருட்சமாய் தாக்கிடும்போது உரமிட்டவன் பக்கவினை என்னவோ?

வினைத்த வினையெல்லாம் அறுக்கும் கால தேவனாக ருதுவின் ஆட்டத்தில் நிலைகுலைய இருப்பது அவனது ரத்தமல்லாவா!

விட்டுவிடுவானா? விடை கொடுத்திடுவானா?

பார்ப்போம்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
தூரமே தூரமாய் 18

புயல் போல் கேட்டினை முட்டி திறந்து அசுர வேகத்தில் உள் நுழைந்து வட்டமடித்து நின்ற வாகனத்தை பார்த்ததும் காவல்துறை பணியாளர்களுக்கு கிலி பிடித்தது.

"இவரு ஊருல இல்லைன்னு சொன்னாங்களே அண்ணா?" வெங்கட் கேள்வியாய் கிருஷ்ணனை ஏறிட்டான்.

"அவன் சாம்ராஜ்ஜியம் சரியும் போது ஜாலியா ஊர் சுத்திக்கிட்டா இருப்பான்" என்ற கிருஷ்ணன், கனகாவிற்கு கண்காட்டிட அவர் உள்ளே சென்றார்.

"இவருக்கு பொண்ணுங்க வீக்னெஸ்ஸோ?"

"ஏன் ஏன் சார்?" என்ற கிருஷ்ணன், "அவனுக்கு பொண்ணுங்கன்னா பிடிக்காது, அவன் சம்சாரத்தை அவனே கொன்னுட்டதா ஒரு பேச்சிருக்கு" என்றார்.

"ம்க்கும் செய்யுறது முழுக்க கா*லி தனம். இதுல பொண்ணுங்களை பிடிக்காதாம்மா இந்தாளுக்கு" என்ற வெங்கட், "இவனே நேரில் வந்திருக்கான்னா... ருது சாரை ஏதும் பண்ணிடுவானோ?" என்றான்.

காரிலிருந்து அதிரடியாக இறங்கிய கைலாஷிற்கு அறுபது, அறுபத்தைந்து வயது இருக்கலாம். ஆனால் ஐம்பது வயதுத் தோற்றத்தில் கட்டுக்கோப்பான உடலோடு பார்த்ததும் எதிராளியை நடுங்க வைத்திடும் பார்வையோடு திடகாத்திரமாகவேத் தெரிந்தார்.

வண்டியின் பெனெட்டின் மீது குதித்து அமர்ந்த கைலாஷ்,

"எங்கடா உங்க டிசி" என்று உச்சக் குரலில் கேட்டிட,

'ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்.
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்.
என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்.
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்.

எனக்கு ராஜாவா நான்...
எனக்கு ராஜாவா நான்...'

அவருக்கு பின்னால் பாடல் ஒலித்தது.

"ஆரம்பிச்சிட்டாரு" என்று கைலாஷை கடந்து எட்டிபார்த்த வெங்கட், ருதுவின் நடையிலிருந்த தெனாவெட்டு பாவனையில் அடக்கமாக சிரித்துக்கொண்டான்.

"ம்ப்ச் சும்மா இருங்க சார்" என்று கிருஷ்ணன் வெங்கட்டை மறைத்தவாறு முன் வந்து நின்றார்.

யாரென்று இறங்கி பார்க்க கைலாஷிற்கு அவரின் திமிர் இடமளிக்கவில்லை.

கைலாஷிற்கு அருகில் பக்கவாட்டில் நின்றிருந்த அவனது ஆள்,

"இவன் தான் புது டிசி ண்ணே" என்றான்.

"ம்ம்ம்... என் முன்னால் வந்துதானே ஆகணும்" என்று கைலாஷ் சொல்ல...

"என்ன வெங்கட் இந்த சிட்டுவேஷனுக்கு பாட்டு செட் ஆகலையா?" என உரக்கக் கேட்டு அலைபேசியில் வேறு பாடலை மாற்றினான் ருது.

ருதுவின் குரல் கேட்ட கைலாஷினுள் பெரும் அதிர்வு.

தொப்பென்று கீழிறங்கிய கைலாஷ், தன் ஆளை தள்ளிவிட்டு யாரென்று பார்க்க...

'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே... ஓய்!
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே... ஓய்...!'

என்ற பாடலின் ஒலிக்கேற்ப நடந்து வந்தான் ருத்விக்.

'இப்போ இவரு எதுக்கு நம்மள கோர்த்துவிடப் பார்க்கிறாரு?' என்று மனதிற்குள் அலறிய வெங்கட்,

"ரெண்டு பாட்டும் ஒரே உள்ளர்த்தம் தானே அண்ணா" எனக் கேட்டான்.

"இது இப்போ ரொம்ப முக்கியமா சார்" என்ற கிருஷ்ணனின் கடுப்பில் வெங்கட் கப்சிப் ஆகினான்.

தான் ஒரு வண்டியை கடந்து வந்ததையோ... தன்னை ஒருவர் அதீத அதிர்வோடு பார்த்து நிற்பதையோ கண்டுகொள்ளாது வெங்கட் மற்றும் கிருஷ்ணனின் அருகில் வந்த ருது...

"ஏன் இங்கு மரத்தில் கட்டிப்போட்டிருக்கீங்க?" என வினவினான்.

"செல்லில் இடமில்லை சார். அதான் இங்கவே மரத்தில் கட்டிப்போட்டாச்சு" என்ற வெங்கட், "எப்படியும் விடிந்ததும் கோர்ட்டில் ஹேண்ட் ஓவர் செய்திட்டா அவங்க பார்த்துப்பாங்க" என்றான்.

"ம்ம்ம்" என்ற ருது உள்ளே செல்ல...

"சார்... கைலாஷ்" என்றார் கிருஷ்ணன்.

"யாரா இருந்தால் என்ன கிருஷ்ணன். இந்த நேரத்தில் யாரையும் பார்க்க முடியாது" என்று கைலாஷிற்கு கேட்குமாறு கத்தி சொல்லிய ருது, "எதுவாயிருந்தாலும் விடிந்ததும் வர சொல்லுங்க" என்று உள்ளே சென்றான்.

கைலாஷ் உடன் வந்த ஆட்கள் இருவர்,

"ஏய்... யாராண்டா சீன் போட்டுக்கின?" என்று முன் செல்ல...

கைலாஷ் அவர்களை தடுத்திருந்தார்.

"என்னண்ணே உங்களாண்ட லந்து காமிக்கிறான். நீங்க யாரு என்னான்னு தெரியாதா?" என்று குதித்தான் ஒருவன்.

"இளரத்தம். சூடா தான் இருக்கும். காலையில் வருவோம்" என்று கைலாஷ் சொல்லியதை அவரது ஆட்களே அதிர்ச்சியாகத்தான் எறிட்டனர்.

"அண்ணே... காந்தா அண்ணே உள்ளயிருக்கு." ரவுடிகள் பதறினர்.

"ஒருநாள் உள்ள இருந்தால் ஒன்னுமாகிடமாட்டான்" என்ற கைலாஷ் வண்டியில் ஏறி அமர்ந்தான்.

சன்னல் வழி அவரை பார்த்த ருதுவின் கண்கள் தீஜூவாலையாய் தகித்தது.

"ஐந்து வருடத்தில் உன்கிட்ட இந்த வளர்ச்சியை எதிர்பார்க்கல... நினைத்ததை சாதிச்சிட்டோம் எண்ணம்மா! மொத்தமா கருவறுக்கிறேன்" என்று சூளுரைத்த ருதுவினுள் ஆறாத ரணம் மேலும் ரணப்பட்டது.

"என்னண்ணா இது? முதல்முறை கைலாஷ் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியா போவதை பார்க்கிறேன்" என்ற வெங்கட், "நம்ம ருது சார் தோற்றம் அந்தளவுக்கா பார்க்க கொடூரமா இருக்கு?" எனக் கேட்டு ருதுவை எட்டிப்பார்த்தான்.

"டேய் யாருகிட்ட மோதுறோம் பீல் பண்ணுவீங்கடா" என்று காந்தா கத்திக்கொண்டிருந்தான்.

"இவன் விடாமல் கத்துறான்" என்று காதினை விரல் விட்டு ஆட்டிய வெங்கட்,

"உங்க பெரிய தலை வந்தே ஒன்னும் பண்ணமுடியாதுன்னு போயாச்சு. சும்மா கத்திக்கிட்டு இருக்காதா" என்றான்.

"ஏய்..." காந்தா சீற,

"அடங்குங்கடா... ரவுடினாலே இப்படி கத்தனுமா?" என்ன என்றான்.

"என்ன எஸ்.ஐ சார்... பயம் போயிருச்சு போலவே" என்று வந்த ருது, அவனின் முதுகில் தட்டினான்.

"நீங்க இருக்கீங்கன்னு தான் சார்" என்று அசடு வழிந்தான்.

"ரெண்டு நாளா வீட்டுக்கு போகாமல் இங்கவே இருக்கீங்க. ரெண்டு பேரும் போயிட்டு விடிந்ததும் வாங்க. நானிருக்கேன்" என்றான்.

"இத்தனை ரவுடிகள் இருக்கும்போது எப்படி சார்?" என்று கிருஷ்ணன் தயங்கிட,

"நான் மட்டுமா இருக்கேன். நைட் டூயூட்டி வந்தவங்க இருக்காங்க தானே!" என்ற ருதுவின் பேச்சுக்கு நடுவில்,

"ஒத்தையா சுழட்டி எடுத்தவருக்கு நீங்கள் காவலா? போயிட்டு வாங்க" என்றார் கனகா.

"இந்த அக்கா இன்னைக்கு ரொம்பத்தான் டேமேஜ் பன்றாங்க" என்று வெங்கட் முணுமுணுக்க, ருது சிறு சிரிப்போடு தன்னிருக்கைக்குச் சென்று அமர்ந்து மேசை மீது கால்களை வைத்து கண் மூடிக்கொண்டான்.

உறங்கவில்லை... மனதில் பலதும் ஓடிக்கொண்டிருந்தது.

அவன் அனுபவித்த வலி, ரணம், யாவும் கண்முன்னே விரிந்தது.

யாவற்றிற்கும் ஒரே காரணம் கைலாஷின் மண்டையில் ஏறியிருந்த பணம், பதவி, செல்வாக்கு என்ற உயிரற்ற காரணிகள் மட்டுமே.

உயிரற்றவற்றிற்காக உயிருள்ள மனிதனின் உணர்வுகளை புதைப்பது தானே மனிதனின் இயல்பு.

இங்கு கைலாஷ் தன் ஆசைக்காக பலி கொடுத்தது அவனது ________?

வண்டியில் சென்று கொண்டிருந்த கைலாஷிடம் அப்படியொரு அமைதி.

"இந்நேரத்துக்கு அவனை ஓடவிட்டிருக்கணும் அண்ணே! இப்படி சப்புன்னு அமைதியா வந்துட்டிங்களே?" என்று ஆதங்கப்பட்டான் அவனது ஆள்.

"அவன் நம்ம பேட்டைக்குள்ள வந்துக்கின அன்னைக்கே வச்சு செஞ்சு விட்டிருக்கணும் தலைவா! எத்தனை போலீசை ஓடவிட்டிருப்போம். இவன் என்ன சுண்டக்கா!" என்றான் மற்றொருவன்.

யாருக்கும் கைலாஷ் பதில் சொல்லவில்லை.

முதல் முறை தோற்று விடுவோமோ என்கிற பயம் கைலாஷின் மனதில் மெல்ல பரவியது.

இந்த ஐந்தாறு வருடத்தில் அவன் கொண்ட வளர்ச்சி அதீதம். அதற்காக அவன் செய்த பலதும் அத்தனை கொடுமையானவை. அரசியலையே ஆட்டி வைக்கும் பலம்... அதற்காக அவன் செய்தது கொஞ்சமல்ல. அவை யாவையும் ஒழித்திட ருது வந்து நிற்பான் என்று அவர் நினைத்து பார்த்ததே கிடையாது.

எதையும் யோசிக்காது மனைவியின் உயிரோடு விளையாடிவருக்கு முதல்முறை தன்னால் ருதுவுக்கு எதுவும் ஆகிடக் கூடாதென நினைத்தாரோ?

ருதுவின் மீது மட்டும் அப்படியென்ன கரிசனமோ அந்த அரக்கனுக்கு?

கைலாஷ்ஷை வீழ்த்தும் வியூகத்தில் மூழ்கியிருந்த ருது கனகாவின் விளிப்பில் மெல்ல இமை திறந்தான்.

"விடிஞ்சிருச்சா?" எனக் கேட்டுக்கொண்டே அவன் எழுந்து சோம்பல் முறித்திட...

அவனது அலைபேசி சிணுங்கியது.

அம்பிகா தான் அழைத்திருந்தார். திரையில் பெயரை பார்த்தவன், கனகாவிடம் என்னவென்று கேட்டான்.

கனகா தன்னுடைய அலைப்பேசியை அவன் முன் காட்டினாள். இரவு அங்கு நடந்த காட்சிகளை சிறு தொகுப்பாக்கி செய்தி ஊடகங்களில் ஓடிக்கொண்டிருந்தது.

'காந்தாவை காப்பாற்ற கைலாஷ்ஷே அந்த நள்ளிரவில் காவல்நிலையம் வருகை. காந்தாவுக்கு பின்னால் கைலாஷ் இருப்பது உண்மை என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ.' என்ற வரிகள் காணொளிக்கு கீழ் சீராக ஓடியது.

'நகரத்தை காக்க முழு முனைப்போடு புதிய துணை ஆணையர் திரு.ருத்விக் ஐபிஎஸ்' என்ற வரியும் மிளிர்ந்தது.

காந்தா பேட்டையின் நுழைவு வாயிலில் ஒருவரை தொங்கவிட்டதில் ஆரம்பித்து, இரவு கைலாஷ் வந்தது வரை விரிவான செய்தியாக வெளி வந்திருந்தது.

'மனிஷ் பக்காவா வேலை பார்த்திருக்கிறான்' என உள்ளுக்குள் தோன்றிய சிறு மகிழ்வை தனக்குள்ளே மறைத்துக்கொண்டான் ருது.

செய்தியை பார்த்துவிட்டு தான் அம்பிகா அழைக்கிறார் என்பதை புரிந்துகொண்ட ருது, நிற்கும் தருவாயிலிருந்த அழைப்பை ஏற்று...

"வீட்டுக்குதான் அம்மா கிளம்பிட்டு இருக்கேன்" என்று சொல்லி வைத்திட்டான்

"வெங்கட் வந்தாச்சா?" என ருது கேட்கும்போதே உள்ளே வந்தான். உடன் ராதிகாவுடன்.

ராதிகாவை கண்டதும் ருதுவினுள் சிறு நடுக்கம்.

"கைலாஷ் கேஸ் முடியும் வரை நீங்க எமர்ஜென்சி லீவ் எடுத்துக்கோங்களேன் ராதிகா" என்றான்.

ராதிகாவும், வெங்கட்டும் ஒருவரையொருவர் குழப்பமாக ஏறிட்டனர்.

"ஸ்டேஷன் முழுக்க ரவுடிகளா இருக்காங்க. எப்பவும் இதே மாதிரி அமைதியா இருப்பானுங்களா தெரியாது. பேபிக்கு ஏதும்... இப்போ இருக்கும் சூழல் செட்டாகாதே!" என்று தயங்கி தயங்கி சிறு தடுமாற்றத்தோடு மொழிந்தான்.

"இப்போ லீவ் எடுத்தால் டெலிவரி அப்போ கஷ்டம் சார்" என்றாள் அவள்.

"ஹோ" என்று தாடையை நீவியவன், "நான் உங்களுக்கு லீவ் சேங்க்ஷன் பன்றேன்" என்றான்.

தன்னுடைய பதவியின் அதிகாரத்தை தனிப்பட்ட காரியத்திற்கு இதுவரை அவன் உபயோகித்ததே இல்லை. இன்று முதல்முறை ராதிகாவிற்காக, அவளின் தற்போதைய நிலைக்காக தன் பணியின் கட்டுப்பாட்டை தளர்த்தினான்.

ராதிகா யோசித்திட...

"பத்து நாள் லீவில் என்னாகப்போகுது?" என்றான்.

அவனது பயம் அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லையே. கர்ப்பிணியை பார்த்தால் தானாக அனுதாபம் கொள்வது இயல்பு. ஆனால் ருதுவிற்கு? அவன் வாழ்வே மாறிய இடம் அது. அதனால் அவன் கொண்ட வலிகள்.

நெஞ்சம் முட்டிய நினைவுகளை விரட்டியவன்...

"வாங்க நானே கூட்டிட்டுப்போறேன். குவார்ட்டர்ஸ் தான் போறேன்" என்று அவளுக்கு மறுக்க வாய்ப்பே அளிக்காது முன் சென்றான்.

"சார் வைஃப் ரொம்ப கொடுத்துவச்சவங்க" கனகா சொல்ல...

"அவங்க வைஃப் சார் கூட இருக்கிற மாதிரி தெரியலையே" என்றான் வெங்கட்.

ராதிகா நின்றுகொண்டே இருக்க...

"போ ராது. சாருக்கு உன்மேல் ஏதோ சாஃப்ட் கார்னர். அவரை சங்கடப்படுத்த வேண்டாம். போ" என்று வெங்கட் அனுப்பி வைத்தான்.

___________________________________

இமையாள் பள்ளிக்கு புறப்பட்டுக் கீழே வர, தீபா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

"சாப்பாடு வேண்டாம்மா... டைம் ஆச்சு. கேன்டினில் பார்த்துக்கிறேன்" என்று சொல்லியவளை தடுத்து நிறுத்தியவர்...

"இன்னைக்கும் கலவரமாகும் போல இமயா! அந்த போலீஸ் முழுசா கைலாஷ் ஆட்டத்தை முடிக்க முடிவெடுத்துட்டார் போல. நீ ஸ்கூல் போக வேண்டாம்" என தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியை காண்பித்தார்.

அந்நேரம் சரியாக ரவுடிகள் ருதுவை சுற்றி பாய்ந்த காட்சி ஓடிட...

"ருது" என்று தன்னை மறந்து கத்திவிட்டாள் இமையாள்.

"ருதுவா?" என்ற தீபா, "இந்த தம்பி உனக்குத் தெரிந்த ஆளா?" எனக் கேட்டார்.

"மே பீ" என்றவள், "அவங்க வேலையை அவங்க செய்யும்போது, நம்ம வேலையை நாம் செய்ய வேண்டாமா?" எனக் கேட்டவள், தீபா சொல்ல சொல்லக் கேட்காது கிளம்பியிருந்தாள்.

மருத்துவமனை செல்லத் தயாராகி வந்த இனியன் இருவருக்குமிடையேயான பேச்சினைக் கவனித்திருக்க...

இமையாள் சொல்லிய 'மே பீ'ல் யோசனைக்குச் சென்றான்.

'கோபமா இருக்காளா? இல்லை மறக்க முடிவெடுத்திட்டாளா?' பதிலை அவளிடமே கேட்டுக்கொள்ளலாமென தன் பணி காண விரைந்தான்.

"யாரும் சொல்றதை கேட்பதே இல்லை" என்ற தீபா, சுரேந்தர் அதட்டிய பின்னரே அமைதியாகினார்.

"உங்களையும் வேலைக்கு போகவேணாம் சொல்லிடுவேன்னு முந்திக்கிட்டிங்களா?" என்ற தீபா, "இதுக்குத்தான் நான் கதை மட்டும் படிக்கிறது. உங்ககிட்டலாம் பேசுவதே இல்லை" என்றதோடு, "ரெண்டு பேரும் லவ் சொல்லிக்கிறதுக்குள்ள பிரிச்சு வைக்கிற வேலையை பார்க்குது அந்த ரைட்டர் பொண்ணு. ஹீரோ வேற என்ன புரிஞ்சிக்கிட்டான் தெரியல. தன் பாஸ்க்கு விட்டுக்கொடுத்திடுவானோ என்னவோ? நான் கதை போட்டுட்டாங்களான்னு பார்க்கிறேன்" என அலைப்பேசியை கையிலெடுத்துக்கொண்டு தீபா அமர்ந்திட, சுரேந்தர் அவர் பேசுவது புரியாது இருபக்கமும் சலிப்பாக தலையை ஆட்டிக்கொண்டு அலுவலகம் புறப்பட்டிருந்தார்.

இமையாள் யோசனையோடே வண்டியை சாலையில் செலுத்திக் கொண்டிருந்தாள். அவளின் யோசனைக்கு காரணமானவன் ருதுவைத் தவிர்த்து வேறு யாராக இருந்திட முடியும்.

அவனே அவள் கண் முன் காட்சியளித்தான்.

நேற்று கலவரத்தின் போது அவளை கண்ட பகுதியிலிருக்கும் போக்குவரத்து சமிக்கை அருகே ஜீப்பில் சாய்ந்தபடி அவள் வரும் திசை நோக்கி நின்றிருந்தான்.

வீட்டிற்கு சென்றதும் தன் நலன் குறித்து அம்பிகா, வேங்கடத்திடம் தெரிவித்துவிட்டு, உடனடியாக புறப்பட்டு வந்திருந்தான். தன்னவளை பார்ப்பதற்காக. நேற்று அம்பிகாவிடம் பேசிய பின்னர் அவனுள் ஒரு தெளிவு.

தனக்காக பல வருடங்களாகக் காத்திருப்பவள் தன் பக்கத்தை புரிந்துகொள்வாள் என்று அன்று தோன்றாதது இன்று தோன்றியது.

அன்று ஏனோ அவனுக்காக அவள் என்னவும் செய்திடுவாள் என்பதை மறந்திவிட்டான். அவன் இருந்த நிலை அப்படி. எதையும் யோசிக்க முடியாத சூழல். தன் தந்தையின் சூழ்ச்சியில் சிக்கியிருந்தான். இன்று அவனுக்கு தடையென்று யாருமில்லை. எல்லாம் தெரிந்தால் இமையாள் நிச்சயம் தேஷ்ஷை ஏற்றுக்கொள்வாள் என்று நம்பினான்.

புதைத்த காதலை மீட்டிட அடி எடுத்து வைத்துவிட்டான்.

இமையாள் அருகில் வர சரியாக அந்நேரம் சிவப்பு நிறம் ஒளிர, ருதுவிற்கு பக்கவாட்டாக அவள் நிற்க வேண்டிய நிலை.

இமையாள் தன்னை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தவனுக்கு அவளின் சிந்தனை நிகழ் இல்லை என்பதும் புரிந்தது.

"சார் போகலாமா?" அவனோடு நின்றிருந்த வெங்கட் இதோடு பலமுறை அழைத்துவிட்டான். நகரமே பரபரப்பாக அவனைப்பற்றி பேசிக் கொண்டிருக்கையில், அவனோ சாதாரணமாக இங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

தற்போது காவல் நிலையம், ரவுடிகள் நிலையமாக உள்ள நிலையில் இங்கு இப்படி நிற்கத்தான் வேண்டுமா என்கிற கடுப்பு வெங்கட்டிடம்.

நேற்றே ருதுவினுள் ஒரு கணிப்பு. அந்நேரத்தில் இமையாள் அவள் வீடிருக்கும் பகுதி நோக்கி செல்கிறாள் என்றாள், வேலை முடித்து வருகிறாளென்று. அப்போ காலை இதே வழியாக மீண்டும் வேலைக்கு செல்ல வரவேண்டும் என யூகித்தவன் ஏழு முப்பதிலிருந்து அங்கு தன்னவளுக்காகக் காத்திருக்கிறான்.

இதில் தனியாக நிற்க பிடிக்காது,

"நேற்று மாதிரி இன்னைக்கும் எவனாவது கலவரம்ன்னு இறங்கிடப் போறானுங்க வெங்கட். நேற்று அதிகமா கலவரம் நடந்த இடத்தை ஒரு ரவுண்ட்ஸ் பார்ப்போம் வாங்க" என்று போன் செய்து வரவழைத்திருந்தான்.

"காந்தா பேட்டை மொத்த ரவுடிகளும் நம்ம ஸ்டேஷனில் தான் சார் இருக்காங்க... அடிதடி நடக்க வாய்ப்பே இல்லை. கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போகணும். போகலாமா சார்?" என்று இம்முறை சற்று அழுத்தமாகவேக் கேட்டான் வெங்கட்.

"என்ன அவசரம் வெங்கட்" என்ற ருதுவின் பார்வை இமையளின் மீதே!

ருதுவின் பார்வையை வைத்து, "இது சரியில்லை சார்" என்றான் வெங்கட்.

"எது?"

"நீங்க இப்படி ஒரு பொண்ணை..." அதற்கு மேல் வார்த்தை கோர்க்க முடியாது வெங்கட் நிறுத்த...

"எப்படி... சைட் அடிப்பதா இல்லை பொ*** தனம் மாதிரியா?" எனக் கேட்ட ருது, "லவ் பன்றேன் வெங்கட்" என்று அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தான்.

"சார்... உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு!"

பச்சை நிறம் ஒளிர்ந்தது. இமையாள் வண்டியை இயக்கியிருந்தாள்.

"ஆஹான்" என்ற ருது அப்போதுதான் கவனித்தவனாக ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து அதனை முடுக்கிட, வெங்கட் வேகமாக மறுபக்கம் ஏறியிருந்தான்.

ருது இமையாளை பின் தொடர்ந்தான்.

"சார் இது ஏதோ..."

"சொல்லுங்க வெங்கட்."

"ஒரு பொண்ணை பாலோவ் பண்றதெல்லாம் ரோ* மாதிரி இருக்கு" என்றான்.

"விட்டால் என்னை பொ*** பொ***'ன்னு முத்திரையே குத்திடுவப்போல" என்று சிரித்த ருது,

"அவள் என் பொண்டாட்டிடா!" என்று சொல்லிக்கொண்டே இமையாளுக்கு முன் சென்று மறித்தபடி வண்டியை நிறுத்தியிருந்தான்.
 
Status
Not open for further replies.
Top