ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் வானிலே- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 25

ஆண்டாளுக்கும், மதுவுக்கும் கூட அவர்கள் தங்கள் காதில் கேட்டது நிஜமாக தானா என்று தோனறியது. ஒருவரையொருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டனர்.

மருதன் அமைதியாக அகரனையும், தெய்வாவையும் பார்த்தார்.

பாண்டியன், “அகரா.. என்ன சொல்ற? உனக்கெப்படி தெரியும்.”

“மாமா. அந்த ஆளும், அவளோட அம்மாவும் ஒன்னா சேர்ந்து இருக்கற ஃபோட்டோவ பார்த்தேன். அதுவும் அவ அம்மா ப்ரெக்னண்டா இருக்கறப்ப, அவங்க தோள் மேல் கைப்போட்டு அவங்களையே பாத்துட்டு இருக்கார்.இன்னும் என்ன ஆதாரம் வேணும்?”

“அது நிஜமா அவர் தானா? நல்லா பாத்தியா. ஏன் கேட்கிறேன்னா அவர் விட்டுட்டு போறப்ப நீ ரொம்ப சின்ன பையன். உனக்கு அவரை ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை.”
பாண்டியன் சொன்னதும்,

“மாமா. நேர்ல பாத்த ஞாபகம் இல்லைன்னாலும் தினமும் அந்த ஆள் ஃபோட்டோவ பாத்திட்டே தானே இருந்தேன். இதோ இந்த கையால் அவனை நேர்ல பாக்கறப்ப அடிச்சு கொல்லனும்னு காத்திட்டு இல்ல இருந்தேன். அப்புறம் எப்படி மாமா அந்த ஆளை தெரிஞ்சுக்காம இருக்க முடியும். அதுவும் அம்மா நான் வயித்துல இருக்கப்ப அவனோட எடுத்துக்கிட்ட அதே ஃபோட்டோ மாதிரி. அப்படியே நிறை மாசத்தோட அவங்க தோள்ல கை போட்டுட்டு இருக்க மாதிரி எடுத்து வச்சிருக்கான். இதுல அவ அம்மாவ பாத்து அப்படி ஒரு சிரிப்போட நிக்கிறான். பாத்துட்டு அவ்ளோ ஆத்திரமா வந்துச்சு. அதான் அப்படியே கிளம்பி வந்துட்டேன்.”

அகரன் பேச, பேச அனைவரின் முகமும் மாறியது.

அதுவும் தெய்வாக்கு அதிர்ச்சி.

அகரன் நான்கு வயது இருக்கும் போது அவர் கணவர் விட்டு சென்றதும், காரணம் தெரியாமல் இன்று வருவார், நாளை வருவார் என்று காத்திருந்து ஒரு நாள் அந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அவர் வேறொரு பெண்ணோடு சென்றதாக பாண்டியன் சொன்னதும் வீட்டில் இருந்து களவு போன பணம், நகைக்கான காரணம் புரிந்தது.

அப்போதும் கூட மனதின் ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது.

அகரன் மீதும் தெய்வாவின் மீதும் உயிரையே வைத்திருந்த ஒருவரால் எப்படி அவ்வளவு சீக்கிரம் துரோகம் செய்ய முடியும் என்று அவரால் நம்பவே முடியவில்லை.

நாட்கள் தான் கடந்ததே தவிர அவர் வரவே இல்லை.

அதன் பிறகு தான் தெய்வா கொஞ்சம் கொஞ்சமாக அவர் கணவரின் மீது இருந்த காதலை தன் மனதில் இருந்து தூக்கி எறிந்தார்.

மொத்தமாக ஒழிந்து போன ஒரு உறவு இன்று தாரிணி மூலம் எப்படி வந்து சேர்ந்திருக்கிறது? விதிக்கு கொஞ்சம் கூட கருணையில்லையா? என்று அவர் மனம் அடித்துக் கொண்டது.

அகரன் வளர வளர சந்திரனின் ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமாக தெய்வாவை விட்டுப் போனது. வாழ்க்கை முழுக்க அகரனுக்காகவே வாழ வேண்டும் என்று முடிவெடுத்தவர் சந்திரனை அதன் பின் யோசித்துக் கூட பார்க்கவில்லை.

சந்திரன் மேல் இருந்த ஆத்திரம் தாரிணி மேல் திரும்பியது.

‘எப்படி ஒரு பெண்ணால் அகரன் யாரென்று தெரிந்தும் இங்கு வந்து இப்படி நடிக்க முடியம். திட்டம் போட்டு அகரன் வண்டியில் விழுந்து இவர்கள் மூலமாகவே வீட்டுக்கு வந்து, வந்த சிறிது நாளிலேயே அகரனை அவள் பிடிக்கு கொண்டு வந்திருக்க முடியும்?’ மனம் கொந்தளித்தது.

இதுவரை கூட தாரிணி மீது எங்கோ ஒரு மூலையில் ஒரு சின்ன பரிதாபம் இருந்தது. ஆனால் இன்று அகரனின் பேச்சை கேட்டதும் தாரிணி மீதும் அவளின் அம்மா மீதும் கண்மூடித்தனமான கோபம் வந்தது.

‘தன் வாழ்க்கையை மொத்தமாக அழித்த ஒருத்தியின் மகள் தன் மகனின் வாழ்க்கையை அழிக்க வந்திருக்கிறாள்.’ நினைக்கவே முடியவில்லை.

“பாம்புக்கு நானே பால் ஊத்தி வளர்த்திருக்கேன். அவ திட்டம் போட்டு தான் வீட்டுக்குள்ள வந்திருக்கா. என் பையனை கல்யாணத்தன்னிக்கு தலை குனிய வைக்க தான் வந்திருப்பா. நல்லகாலம் கடவுள் தான் இப்போவே அவளை பத்தியும் அவ குடும்பத்தை பத்தியும் தெரிய வச்சிருக்கு.” என்றவரை அகரன் கண் இமைக்காமல் பார்த்தான்.

“மருமகனே. நீ சொல்றதை என்னால் நம்பவே முடியல. அவ எதுக்கு உன்னை பாக்க இங்க வரணும். அவங்களுக்கும் நமக்கும் எல்லாம் முடிஞ்சு போனதுன்னு தானே இத்தனை நாள் நினைச்சிட்டு இருந்தோம்.. இப்ப உன்னை வந்து ஏமாத்தி என்ன ஆகப்போகுது?”

“இதென்ன கேள்வி. அப்பன் அன்னிக்கு இருந்த பணம், நகையை ஆட்டைய போட்டுட்டு போனான். இப்ப இவ்வளோ பெரிசா வளர்ந்திருக்கே இந்த சொத்து, அதை மொத்தமா இவ ஆட்டைய போட வந்திருக்கா. ச்சீ.. அவ இவனுக்கு என்ன உறவு. எவ்ளோ கேவலமானவளா இருந்தா இப்படி வந்து இவனோட பழகியிருப்பா. இவனும் அவளை தலைக்கு மேல தூக்கி வச்சிட்டு ஆடினான். அன்னிக்கு இவன் அப்பனை வேணாம்னு சொன்னேன்‌, கேட்காம கல்யாணம் பண்ணி வச்சீங்க. அவன் துரோகம் பண்ணிட்டு போனான். இப்பவும் அவளை வேணாம்னு சொன்னேன். யாரும் கேட்கலை. கல்யாணம் ஆகியிருந்தா ஊர்ல தலை காமிச்சிருக்க முடியுமா? எவ்ளோ கேவலமா பேசியிருக்கும் இந்த உலகம்.‌ பாவம் மாமா தான் துக்கம் தாங்காம தூக்குல தொங்கனும். நல்லவேளை ஆண்டவன் காப்பாத்திட்டான். நான் சொன்னா உங்களுக்கெல்லாம் நான் என்னவோ உங்களுக்கு நல்லது நடக்க கூடாதுன்னு நினைக்கிறேன்னு தோணும். எல்லாமே மாமாக்காக தான். நான் இந்த குடும்பத்தை என் கண்ணுக்குள்ள வச்சு பார்க்கறேன்” மதுவுக்கே ஆண்டாளின் பேச்சு கொஞ்சம் அதிகமாகத்தான் பட்டது.

‘இது தான் சாக்கு என்று எப்படியெல்லாம் பேசுகிறார்.’ என்று கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் பார்த்தாள்.

அகரனுக்கோ உள்ளுக்குள் அழுகை, கோபம், பயம், அருவருப்பு என்று பல உணர்வுகள் எரிமலை போல் கொந்தளித்தன.

‘நல்லவேளை கல்யாணம் நடக்கவில்லையென இவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் மனதை தொலைத்தது மட்டுமில்லாமல் அவளை உடலால் தீண்டினேனே. தீண்டிய இந்த உடலை என்ன செய்வது..’ யோசிக்க யோசிக்க அவனை நினைக்கவே அவனுக்கு அவ்வளவு கோபம்.

‘திருமணமே வேண்டாம் என்று நினைத்த தன்னை மாற்றியவள் ஏன் ஒரு துரோகியாக இருந்திருக்க வேண்டும். அவள் நிஜமாகவே அவனின் மகளாக இல்லாமல் இருந்திருக்க கூடாதா?’ மனம் தவித்தது. அவனே அவனை உள்ளுக்குள் துப்பிக் கொண்டான். இவ்வளவு நடந்த பின்னும் அவளுக்காக இப்படி யோசிக்கிறோமே என்று.

ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லிக் கொண்டு இருந்தார்கள், அத்தனைக்கும் தாரிணி தான் பகடைக்காயாக இருந்தாள்.

மருதனோ வாயே திறக்கவில்லை.

“அப்பா.. பாத்தீங்களா? அவன் பண்ணதையே அவன் பொண்ணும் இங்க வந்து செய்ய பாத்திருக்கா. நல்லவேளை நம்ம அகரன் தப்பிச்சான்.” பாண்டியன் பேசியதும் மருதன்,

“இப்பவும் சொல்றேன். நீங்க அன்னிக்கு அவசரப்பட்ட மாதிரியே இன்னிக்கும் அவசரப்படறீங்க. அப்பவே சந்திரனை தேடி போகலாம்னு சொன்னேன். ஒரு வேளை அவன் என் பொண்ணுக்கு நிஜமாவே துரோகம் பண்ணியிருந்தா
என் கையாலேயே அவனை கொன்னுருப்பேன். ஆனா நீங்க யாரும் நான் சொன்னதை கேட்கவே இல்லை. எப்பவும் ஒரு பக்கம் மட்டுமே பாத்து முடிவெடுக்கறது ரொம்ப தப்பு. அந்த பொண்ணுட்டையும் ஒரு வார்த்தை நேரா கேட்டுட்டா நமக்கு இரண்டு பக்கத்தோட நியாயம் புரியும்”

“அவகிட்ட போய் என்ன நியாயத்தை கேட்க போறீங்க?. அவ பக்கம் அப்படி ஒன்னு இருந்தா இங்க வந்த அன்னிக்கே நான் இன்னார் பொண்ணுன்னு உண்மையை சொல்லியிருக்கனும் இல்ல. கேடு கெட்ட குடும்பம் தானே அது. அகரன் தான் எல்லாத்தையும் நேரா பாத்துட்டு வந்துட்டானே. இதுக்கு மேல விசாரிக்க என்ன இருக்கு. தலை முழுகிட்டு வேற வேலையை பாருங்க.”
ஆண்டாள் சொன்னதும், மருதனுக்கு மட்டும் தான் இதே வார்த்தைகளை அன்றும் சந்திரனை பற்றி ஆண்டாள் சொன்னது ஞாபகம் வந்தது. மற்றவர்களுக்கு கோபம் தான் தலைக்கேறி இருந்ததே தவிர யோசிக்க தோன்றவில்லை.

“பாண்டியா நீ நேர்ல போய் அந்த பொண்ணை விசாரிச்சு என்ன ஏதுன்னு கேட்டுட்டு வா. அதுக்கு அப்புறம் எல்லாத்தையும் முடிவெடுத்துக்கலாம்.”
மருதன் சொல்லியதும் அனைவரது முகம் போன போக்கை பார்த்து அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது புரிந்தது.

“தாத்தா. என் மேல் நம்பிக்கை இல்லையா. நான் பார்த்தது அந்த ஆள் ஃபோட்டோவ தான். அவனைத்தான் நல்லா பாத்து வச்சிருக்கேனே. கூட நின்னது அவ அம்மாதான். அதை அவளே தான் அவங்க தனியா இருக்க ஃபோட்டோ காமிச்சு சொன்னா. அப்ப அவன் பொண்ணு தானே இவ. நல்லகாலம் அவன் செத்து போய்ட்டான். இல்லன்னா அவன் இப்ப என்னால செத்திருப்பான். யாரும் அங்க போக வேண்டாம். அவள்ட்ட எதையும் கேட்கவும் வேணாம்”
அகரன் சொன்னதை தெய்வாவும், பாண்டியனும் தலையை ஆட்டி தங்கள் முடிவும் அதான் என்று சொன்னார்கள்.

“அகரா. எப்பவும் ஆத்திரம், கோபத்துல முடிவெடுக்க கூடாது. எப்பவும் நான் சொல்றது தான்‌. கண்ணால பாக்கறதும், காதால் கேட்கறதும் உண்மை கிடையாது. விசாரிச்சு உண்மையை தெரிஞ்சுக்க. அப்புறம் முடிவெடு. அந்த பொண்ணு பக்க நியாயம் கேளு. பாவம் அப்பா அம்மா இல்லாத பொண்ணு.. அநாதையா அங்க விட்டுட்டு வந்திருக்க” மருதன் சொல்லும் போதே ஆண்டாள் மதுவிடம் அலைபேசியில் அகரனை வீடியோவாக எடுக்க சொன்னார் யாருக்கும் தெரியாமல்.

“தாத்தா. முதல் முறையா உங்க பேச்சை மீறறதுக்கு மன்னிச்சுக்கங்க. அவள்ட்ட யாரும் போய் பேச வேண்டாம். அவ பண்ணதுக்கான தண்டனையை அவ அனுபவிச்சு தான் ஆகனும். . அவ அனாதையா நிக்கட்டும். நான் அவளோட தங்கியிருந்ததை அந்த ஊரே பாத்துச்சு. அவளை இனி யாரு கல்யாணம் பண்ணுவா. அவ அப்படியே தனி மரமா நிக்கட்டும். அப்பதான் எங்க அம்மாவோட வேதனை அவளுக்கு புரியும், எப்படி அவங்க கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு”

“ஆமா அப்பா. அந்த பொண்ணுக்கு அவன் தான் அப்பன்னா என் தங்கச்சி வடிச்ச கண்ணீரை அவ வடிக்கட்டும். நம்ப வச்சு ஏமாத்தறது அவங்களுக்கு வழக்கம் தானே. அதுக்கான தண்டனையை அனுபவிக்கட்டும்” பாண்டியன் நாடித்துடிக்க சத்தமாக சொன்னார்.

தெய்வா,”அப்பா. இந்த விஷயத்தை இதோட விட்டுடலாம். எப்ப அவ அந்த ஆளுக்கு பொறந்தவன்னு தெரிஞசதோ, அவ மேல தப்பே இல்லைன்னாலும் இனி அவளை யாரும் போய் பார்க்கவோ, எதுவும் கேட்கவோ வேண்டாம். அவளை இனி நான் பார்த்தா அவ அப்பா ஞாபகம் தான் எனக்கு வரும். எல்லாத்தையும் மறந்துட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். அது அப்படியே இருக்கட்டும். எல்லாருமே இதை இதோட விட்டுடுங்க.“

“தெய்வா. அவசர முடிவு எப்பவும் சரியா வராது. பொறுமையா யோசி. உன் வாழ்க்கையை தான் உன் அண்ணன், அண்ணி பேச்சை கேட்டுட்டு முடிவெடுத்த. இது அகரன் வாழ்க்கை. அந்த பொண்ண பாத்தப்பவே அவ கள்ளம் கபடம் இல்லாதவன்னு தான் எனக்கு தோணுச்சு. அவ என்ன சொல்றான்னு கேட்டு பார்ப்போமே. இதுல அகரன் கல்யாண விஷயம் வேற இருக்கு.”

“என்ன மாமா பேசறீங்க. தெய்வா வாழ்க்கையை நாங்க என்னமோ அழிச்சிட்ட மாதிரி பேசறீங்க. இங்க பாருங்க, உங்க அப்பா பழியை போடறதை. இத்தனை சொத்தை சேத்து வச்சீங்களே. அவர் இப்போ எப்படி பழி போட்டார் பாருங்க. அகரன் கல்யாண விஷயம் பத்தி சொன்னீங்களே மாமா? அவ இவனுக்கு தங்கச்சி முறை. அவளை போய் பாத்து பேசி இவனுக்கு கல்யாணம் வேற பண்ண போறீங்களா. விளங்கிடும். ஊர் முழுக்க உங்களை அசிங்கமா பேசறதை நீங்களே சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க போறீங்க. இந்த குடும்பத்துல வாழ்க்கை பட்டு, நான் இன்னும் என்ன அசிங்கத்தையெல்லாம் பாக்கனுமோ?” ஆண்டாள் புலம்பியதை பார்த்து பாண்டியனுக்கே எரிச்சல் வந்தது.

“இவ ஒருத்தி. நேரம் காலம் தெரியாம. இப்ப அவளை கல்யாணம் பண்ணி வைக்க வா அப்பா போய் கேட்க சொன்னார். அவ ஏன் இப்படி பண்ணா, இதுக்கு பின்னாடி யார் இருக்கா? அவளுக்கு நம்ம குடும்பத்தை பத்தி யார் சொல்லியிருப்பாங்க என்ன ஏதுன்னு விசாரிக்க தான் போக சொன்னார். நாக்குல நரம்பு இல்லாம பேசாத.”

ஆண்டாள் முகம் வெளிறியது.

“குடும்ப வழக்கத்தை யார் சொல்லி வேற கொடுக்க போறாங்க. அவ தான் அகரன் இப்படி அவகிட்ட மயங்கி கிடக்கறதை பாத்து கல்யாணம் பண்ணிட்டு சொத்தை எல்லாம் எடுத்துட்டு போக வந்திருப்பா. இதை போய் விசாரிக்க வேற வேணுமா?”

“அண்ணி. அண்ணன் எங்கேயும் போக மாட்டார்‌. எல்லாரும் இதோட விடுங்க. இனி அவளை பத்தி பேச்சே வேண்டாம்.”

“அகரன் கல்யாணத்தை எந்த காரணம் சொல்லி நின்னுப் போச்சுன்னு சொல்லுவ தெய்வா?” மருதன் கேட்டார்.

“பொண்ணு ஊரை விட்டு போய்ட்டான்னு சொல்லிக்கலாம் பா. அதனால் கல்யாணம் நின்னுருச்சுன்னா யாரும் நம்மளை எந்த குறையும் சொல்ல மாட்டாங்க.” பாண்டியன் சொன்னதும் அவசரம் அவசரமாக ஆண்டாள்,

“கல்யாணத்தை நிறுத்திட்டா மாமா மரியாதை என்ன ஆகறதுங்க. எல்லாருக்கும் பத்திரிக்கை வச்சிட்டு இப்ப இபப்டி சொன்னா எல்லாரும் நம்மளை தான் கேவலமா பேசுவாங்க. ஒழுங்கா விசாரிக்காம போய் பொண்ணை நிச்சயம் பண்ணியிருக்கீங்கன்னு‌.”

“அதுக்கு என்ன பண்ண சொல்ற”

“நான் ஒரு வழி சொல்லுவேன். நீங்க என்ன தப்பா நினைக்க கூடாது. இது கூட மாமா மரியாதை கெடக்கூடாதுன்னு தான். நம்ம மதுவை அகரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம் அதே தேதில”

மதுவுக்கு மயக்கம் வராத குறைதான். பாண்டியனுக்கும் தெய்வாக்குமே அதிர்ச்சி. ஆனாலும் இருவருக்கும் அது பிடித்திருந்தது.

மருதன் முகத்தில் சலனமே இல்லை.

அகரன் ஆண்டாளையும் தெய்வாவையும் மாற்றி மாற்றி பார்த்தான்.

“என்ன சொல்ற மதுவுக்கும், அகரனுக்குமா?”

“ஆமா. நாம தானே நம்ம குடும்பத்து மானத்தை காப்பாத்தனும். இந்த குடும்பத்துக்கு நம்ம வாழ்க்கையை தியாகம் பண்றது புதுசா என்ன?”

“அம்மா.. “ மது அலறினாள்.

“நீ சும்மா இரு மதும்மா. உனக்கு அம்மா புரிய வைக்கிறேன். எல்லாரும் என்ன சொல்றீங்க. சொன்ன தேதில இந்த கல்யாணம் நடக்கும். யாருக்கும் எந்த விளக்கத்தையும் நாம சொல்லத் தேவை இல்லை”

பாண்டியனுக்கும் தெய்வாக்கும் பரம திருப்தி.

“தாத்தா. ப்ளீஸ் இந்த விஷயத்தை இத்தோட விடுங்க. எனக்கு கல்யாணமே வாழ்க்கையில் வேணாம். அதுவும் இவளை கல்யாணம் பண்ண என்னால முடியாது.”

“அகரா அம்மா சொன்னா மீற மாட்ட இல்ல. இந்த கல்யாணம் நடக்கனும். அந்த பொண்ணுக்கு தெரியனும். அவ பண்ண பிரச்சினையால என் பையன் தலை குனிஞ்சு நிக்க மாட்டான்னு.”

“அம்மா. நான் சொல்றது உங்களுக்கு புரியலம்மா. இந்த கல்யாணம் நடக்க கூடாதும்மா‌. ஏற்கனவே நான்‌ செஞ்ச கேவலமான விஷயத்தில் இருந்து நான் வெளிய வரலை. இப்போ இன்னொரு பாவத்தை பண்ண வைக்காதீங்க”

“மருமகனே. எல்லாத்தையும் காலம் மாத்ததும். நீ தெரிஞ்சு அந்த பொண்ண ஒன்னும் விரும்பல. நீயே ஏன் கில்ட்டியா ஃபீல் பண்ற. இந்த கல்யாணம் நடக்கனும். எங்களுக்காக நீ ஒத்துக்கிட்டு தான் ஆகனும்”

“தாத்தா ப்ளீஸ் இந்த விஷயத்துல நீங்க முடிவெடுங்க. எனக்காக இது வேணாம்னு சொல்லுங்க. ப்ளீஸ் தாத்தா.”

“ என்னை என்னப்பா சொல்ல சொல்ற. அதான் நான் சொல்றதை யாரும் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களே. இதுல மட்டும் நான் முடிவெடுக்கறதை கேட்கவா போறீங்க”

“அப்பா.. ப்ளீஸ். இது நம்ம எல்லார் நல்லதுக்காக தான். ப்ளீஸ் ஒத்துக்கோங்க”
தெய்வா கெஞ்சியதும்,

“ஹ்ம்ம். எனக்கு இதுல துளிக்கூட விருப்பம் இல்ல. நீங்களே முடிவெடுங்க. நான் குறுக்க நிக்க மாட்டேன். “ என்று சொல்லிவிட்டு அவர் அறைக்கு சென்றார்.

அகரன் பேச்சை கேட்பதற்கு யாருமே இல்லை.

“அம்மா.. “ என்றவனை தெய்வா,”அகரா அம்மா மேல உனக்கு நிஜமாவே மரியாதை, பாசம் இருந்தா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க”

“ஆமா மருமகனே. உனக்கு தாத்தா, அம்மா, நான் வேணும்னா இதுக்கு ஒத்துக்க. நாங்க உன் நல்லதுக்கு தான் சொல்வோம். தாத்தா மரியாதையை காப்பாத்தறது
உன்கிட்ட தான் இருக்கு.”

ஆண்டாள் முகம் புன்னகையில் ஜொலித்தது.

மது அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போனாள்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 26

“அம்மா. உனக்கென்ன பைத்தியமா? என்னை போய் அவனைக் கல்யாணம் பண்ணிக்க சொல்ற. சத்தியமா என்னால் அது முடியாது.”

“என் மக்குப் பொண்ணே. அந்த தாரிணியை வீட்டை விட்டுத் துரத்திட்டு இந்த சொத்தை நாம எடுத்துக்கனும்னு தானே காத்திட்டு இருந்தோம். அதுக்கு இப்ப கடவுளா பாத்து ஒரு வழியை காமிச்சிருக்கார்‌. அந்த தாரிணியை இவன் விட்டுட்டு வந்துட்டான். அதுவும் திரும்ப அவளை கல்யாணம் பண்ணனும்னு காலம் முழுக்க நினைக்க முடியாத மாதிரி விஷயம் நடந்திருக்கு.. இப்பதான் நாம் உஷாரா முழிச்சுக்கனும். இதை விட நல்ல சான்ஸ் நமக்கு கிடைக்கவே கிடைக்காது.”

“அதுக்காக அவனைப் போய் நான் ஏன்மா கல்யாணம் பண்ணிக்கனும்.”

“கல்யாணம் பேருக்கு தான். அவனை கல்யாணம் பண்ணதும் சொத்து முழுசா நமக்கு வந்துரும். அதுக்கு அப்புறம் அவன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கறோம் இல்ல அவன் மேல் தப்பிக்க முடியாத ஒரு பழியை போட்டு அவனை உள்ள தள்ளுவோம். அதுக்கு அப்புறம் உனக்கு புடிச்ச மாதிரி ஒரு பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைச்சிடறேன்.”

“ஏன் மா. அதுக்கு போய் என் வாழ்க்கையை பணயம் வைப்பியா. அவனை இப்பவே எதாவது கேஸ்ல உள்ள தள்ளிட்டா போச்சு.”

“அடியே அப்ப உன் தாத்தா அப்படியே சொத்தை நம்ம பேர்ல எழுதி வச்சிடப் போறார் பாரு. மருமகளா உங்க நொத்தைக்கு நீ போனாதான் அவன் பங்கும் உனக்கு வரும். எண்ணி முப்பது நாள்ல அவனை உள்ள தள்ளுவோம் விடு. அது வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்க”

“மா கேவலமா இருக்கு. சொத்துக்காக அவன் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்ற. நீயெல்லாம் ஒரு அம்மாவா.”

“ஏண்டி. அவன் உன்னை தொடுவான்னு நினைக்கிறியா. அவன் சுண்டு விரல் கூட உன் மேல் படாது. நீ அவனுக்கு ஜென்ம விரோதில்ல உன்னை போய்…?” ஆண்டாள் சிரித்ததில் மதுவுக்கு கோபம் தலைக்கேறியது.

“அவன் என்னை தொட மாட்டான்கறதுக்கு உனக்கு அவ்ளோ சிரிப்பா. அவன் கூட ஒரு மாசம் வாழ்ந்தா எவன்‌மா என்னை கல்யாணம் பண்ணிப்பான்?. செகண்ட் ஹாண்டா தான் என்னை பாப்பானுங்க. என்னால் முடியவே முடியாதும்மா”

“பணம் இருந்தா எவனை வேணா விலைக்கு வாங்கலாம். அவனையும் நம்ம வழிக்கு கொண்டு வரது பெரிய விஷயமே இல்ல. நீ நான் சொல்றதை கேளு. உன் நல்லதுக்கு தான் நான் சொல்வேன்.”

“எப்படி வெளிய தாத்தா நல்லதுக்குன்னு சொல்லியே அவரை தூக்குல தொங்க சொன்னியே அப்படியா?”

“நான் உன் அம்மாடி. உன் நல்லதை தாண்டி என் நல்லதும் இதுல இருக்கு. உதவாக்கரையான உன் அப்பாவை நம்பி பாதி சொத்தை வச்சிட்டு என்னை அல்லாட சொல்றியா? இந்த முழு சொத்தும் எனக்கு தான் வேணும்னு நான் ஆசைப்பட்டு இருபத்தஞ்சு வருஷமாச்சு. அதை இப்ப நிறைவேத்திக்க ஒரு வாய்ப்பு அதுவா அமைஞ்சிருக்கு. இதை விடறதுக்கு நான் ஒன்னும் பைத்தியம் இல்ல. நான் சொல்றதை நீ கேட்டா நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது. இல்லண்ணா உனக்கு நான் எப்படின்னு நல்லாவே தெரியும். ஒழுங்கா போய் அவனை கல்யாணம் பண்றதுக்கு உன் மனசை தயாராக்கு”

அரைமனதாய் தலையாட்டினாள் மது.

‘ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் என்னையே மிரட்டற இல்லம்மா. எனக்கு அகரனை கல்யாணம் பண்ணனும் நீ நினைச்சா மட்டும் போதுமா? நான் நினைக்கனும். கல்யாணம் வரைக்கும் போக விடமாட்டேன். அவனை ஒழிச்சா தான் என் வாழ்க்கைக்கு நல்லது.’ ஆண்டாளிடம் வெளிப்படையாக சொல்லாமல் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

*******

தாரிணி முகம் கொடுத்து சரியாக பேசாமல் அமைதியாகவே அமர்ந்து இருப்பது பார்த்து சந்திரனுக்கு சந்தேகம் வந்தது.

அவரால் வாய் திறந்து கேட்க முடியாததால் அவளை பார்த்துக் கொண்டே எப்போதாவது சைகையில் ‘அவள் நலமாகத்தான் இருக்கிறாளா’ என்று கேட்டுக் கொள்வார்.

இரண்டு நாட்களாக எந்த பதிலும் அகரனோ, தெய்வாவோ சொல்லவே இல்லை.

தாரிணியின் மனம் நிலையில்லாமல் தவித்தது.

அலைபேசியில் அகரன் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் மணிக்கொரு முறை அவனுக்கு அழைத்தும், தகவல் அனுப்பியும் பார்ப்பாள்.

அவனைப் போலவே அது எல்லாமே அவளிடம் ஒரு பதிலையும் சொல்லாது.

‘அதிகாலையில் துயில் வேளையில் ஒரு கனவை போல என்னை தீண்டி விட்டு நீ போனாய்.

துயில் நீங்கினேன்
உன்னை தேடினேன்
விழி தாண்டி தூரம் என்று
நீ ஆனாய்.

உன் கண்ணில்
என்னை காணவேண்டும்
வானத்தில் வெண்ணிலாவின் வீதி
சொல்லாதோ உன்னை காணும் தேதி..’

அவள் மனதை படித்தது போல பாடல் எங்கோ அவளுக்கு பதில் பாடியது.


கண்களில் கண்ணீர் வற்றி போகும் அளவுக்கு அவளுக்கு அழுகை வந்தது.

கனவு போல் தான் அகரனும் அவள் வாழ்வில் வந்தான்.

கனவு போல தான் அவனே காணாமல் போனான்.

எதிலும் அவள் தப்பு இல்லை. தண்டனை மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று தான் அவளுக்கு தலைவிதி எழுதப்பட்டு இருக்கிறது.


புடவையின் நுனியை சுற்றியபடி வெளியில் நின்று வானத்தைப் பார்த்தாள்.

இரவு வானம் எங்கும் நட்சத்திரங்கள்.

அதை பார்த்ததும் அவன் ஞாபகம் அதிகமாக அவளுக்கு வந்தது.

அன்று சென்னையில் வழக்கமாக அவன் கூட்டிக் கொண்டு போகும் கடற்கரையில் அவன் தோள் மீது சாய்ந்து அமர்ந்திருக்கும் போது வானத்தில் ஒவ்வொன்றாக நட்சத்திரங்கள் தெரிய ஆரம்பித்திருந்தன.

‘தாரிணி, இந்த வானத்துல இப்போதான் நட்சத்திரங்கள்லாம் வருது. பாத்தியா’

‘ம்ம் ஆமா. இருட்ட ஆரம்பிக்குது இல்ல. நம்ம கண்ணுக்கு அப்போதான் தெரிய ஆரம்பிக்கும்’

‘நைட்ல மட்டும் நட்சத்திரம் ஏன் நம்ம கண்ணுக்கு தெரியுது’

‘அதான் சொன்னேனே இருட்டறதால’

‘இருட்டு யாருக்கு பிடிக்கும்’

‘திருடனுக்கு’

‘அப்புறம்’

‘ஆந்தை, கோட்டான், வவ்வால்’

‘ஹேய்.. ஸ்டாப் இட். என்னை திட்டிறியா இதான் சாக்குன்னு’

‘ச்ச… ச்ச.. உங்களை இவ்வளோ சாஃப்டால்லாம் திட்ட மாட்டேன்’

‘ஓ.. அப்புறமா எப்படி திட்டுவியாம்’

‘அது திட்டறப்ப பாத்துக்கோங்க. இப்ப திட்ட எனக்கு மூட் இல்ல’

‘ஓ.. அப்ப என்ன மூட் இருக்கு’

‘சாப்பிடற மூட் தான்’

‘சாப்பாட்டு மூட்டை.. நான் என்ன கேட்டேன். இருட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும்’

‘நைட் வேலை பாக்கறவங்க. ஆஸ்ட்ரோ நட்ஸ். அப்புறம்.. அப்புறம் தெரியல’

‘ம்ம்.. உங்கப்பா எந்த நேரத்தில் உன்னை பெத்தார் தெரியல. நல்லா சாப்பிட்டுட்டு சாப்பாட்டு மூட்லயே இருந்துருப்பார் போல.. உனக்கும் அது தவிர எதுவும் தோணவே மாட்டேங்குது. கொஞ்சமாச்சும் இந்த கடல் காத்துல, என்னை மாதிரி அழகான, ரொமாண்டிக்கான ஒரு பையன் கூட, இருட்டும் பகலும் சேரற மாதிரி இருக்க ரொமாண்டிக் டைம்ல கேள்வியை கேட்டா அதுக்கு ரொமாண்டிக்கா பதில் சொல்லனும்னு உனக்கு தோணாதா?’

சுற்று முற்றும் பார்த்தாள்.

‘என்ன தேடற. யாராச்சும் வராங்களான்னா. யாரும் இல்ல. எதாவது சொல்லனும்னா இல்ல தரணும்னா தாராளமா தரலாம், சொல்லலாம்.’

‘இல்ல இல்ல. எதுக்கு அவசரப்படறீங்க. ஏதோ அழகான பையன் இருக்கான்னு சொன்னீங்களே அதான் பாத்தேன். அப்படி யாரும் இல்லையே..’

‘கலாய்க்கறீயா. சரி கேட்டதுக்கு பதில் சொல்லு’

‘யாருக்கு பிடிக்கும்.நீங்களே சொல்லுங்க. நான் எது சொன்னாலும் அதுக்கு எதாவது சொல்லுவீங்க’

‘நம்மளை மாதிரி லவ்வர்ஸ்.. புதுசா கல்யாணம் ஆனவங்க. அவங்களுக்கு தான் இந்த இருட்டு பிடிக்கும். அவர்களுக்காக தான் இந்த நட்சத்திரம்லாம் ஒன்னொன்னா வருது.’

‘அவங்களுக்காகவா. ஏன்?’

‘அதாவது.. ஒவ்வொரு கப்பிளும் அவங்களுக்குள்ள முத்தங்களை கொடுத்துக்கறப்ப ஒவ்வொரு நட்சத்திரமா வருமாம். இன்னிக்கு ரொம்ப குறைவா நட்சத்திரங்க இருக்கு இல்ல. நிறைய நட்சத்திரம் வந்தா தான் வானம் நல்லா இருக்கும். வா அதுக்கு நம்மளால ஆன எதையாவது பண்ணுவோம்’ என்று அவளின் முகம் நோக்கி குனிந்தான்.

அவனது உதட்டில் தன் கைகளை அழுத்தி பின்னுக்கு தள்ளி விட்டாள்,

‘இந்த கிஸ்க்கு தான் இவ்வளோ பேசினீங்களா?’

‘எப்டி. இந்த கிஸ்க்கு தானாவா? ஓ அப்ப நீ வேற எதுக்கோ தான் ப்ரிப்பேர் ஆகி வந்திருக்க. சரி.‌ எனக்கு பிரச்சினையே இல்லை. எல்லாத்துக்கும் நான் ரெடி’ என்று அவனை பார்த்து அமர்ந்து இருந்த அவளை தன்னை நோக்கி இழுத்தான்‌.

அவன் மார்பில் விழுந்தவளை தன் முகம் நோக்கி இழுத்து அவளின் இதழ்களை அவனது இதழ்களுக்குள் சிறைப்பிடித்தான்.

அவனது விரல்களும் கடல் மணலும் போட்டி போட்டுக் கொண்டு அவளது உடலில் ஒட்டின.

‘விடுங்க,இப்படித்தான் பப்ளிக்ல நடந்துப்பீங்களா?’ என்று அவன் கையை தட்டி விட்டு எழுந்தாள்.

‘பப்ளிக்ல பப்ளிக் யாராச்சும் இருந்தா தானே. யாரும் இல்லாதப்ப தானே செய்யறேன்.’

‘உங்க கண்ணுக்கு தெரியலன்னா யாரும் இல்லைன்னு நினைப்பா’

‘ரொம்ப பண்ணாத. எப்பவாச்சும் நான் உன்னை விட்டுட்டு எங்கேயாவது ஊருக்கு போனா இந்த நட்சத்திரங்களாம் இந்த நிமிஷத்தை உனக்கு ஞாபகப்படுத்தும்’

‘என்னை விட்டுட்டு போகலாம் முடியாது. எங்க போனாலும் கூடவே வருவேன்’

‘மாய மோகினி தானே நீ. ஒரு வேளை நான் போனாலும் என்னை தேடி அடுத்த நிமிஷம் வருவ. என்கூடவே இருப்ப’

அன்று நடந்ததையெல்லாம் இன்று நினைவுப்படுத்தின அந்த நட்சத்திரங்கள்.

‘நீங்க எப்படி என்னை விட்டுட்டு போவீங்க? நீங்களா பேசுவீங்கன்னு இருந்தேன். ஆனா, இதுவரைக்கும் நீங்க பேசவே இல்ல இல்ல. உங்களை தேடி நான் வருவேன். உங்க கண்ணை பாத்து நேரா கேட்பேன். என்னை ஏன் விட்டுட்டு போனீங்கன்னு?’ அவன் புகைப்படத்தை அலைபேசியில் பார்த்துக் கொண்டே சொல்லிவிட்டு அடுத்த நாள் சென்னை செல்வதற்கு விமான விவரங்களை தேட ஆரம்பித்தாள்.

“தாரிணி..” என குமுதினி குரல் கொடுத்துக் கொண்டே அருகே வரவும், அவசரமாக முகத்தில் இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“இங்க என்ன பண்ணிட்டு இருக்க தாரிணி. எதாவது தகவல் வந்ததா? உங்க அத்தை எதாவது பேசினாங்களா? எனக்கு உன்னை நினைச்சே கவலையா இருக்கு”

“எந்த தகவலும் வரலக்கா. நானும் தொடர்ந்து டிரை பண்ணிட்டே தான் இருக்கேன். அக்கா, எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? நான் சென்னைக்கு போய்ட்டு வரவா? அதுவரைக்கும் நீங்க மாமாவை பாத்துக்க முடியுமா?”

“நீயா? எப்படி தனியா போவம்மா?”

“அதெல்லாம் போகத் தெரியாதா? காலேஜ்ல படிக்கறப்ப தமிழ்நாட்டுல இருந்து மேகாலயா வரைக்கும் தனியா தான் போவேன். இப்ப மட்டும் போக முடியாதா?”

“போய்ட்டு வா தாரிணி. மாமாவை பத்தி நீ கவலைப்படாத. நான் பார்த்துக்கறேன். ஆனா அவர்ட்ட என்ன சொல்லிட்டு நீ போல.. இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சா பாவம் ரொம்ப வருத்தப்படுவார்.”

“அக்கா. நான் என் சர்ட்டிபிகேட்ஸ் வாங்க காலேஜ் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போய்ட்டு வரேன். நீங்க எதுவும் அவர்ட்ட சொல்லிடாதீங்க அக்கா. எப்படியும் அகரன் ஏதோ சின்னதா ஒரு கோபத்துல தான் போய் இருப்பார். நான் போய் பேசினா கண்டிப்பா அவர் புரிஞ்சு என்கூட வருவார்”

“எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரிதான் தாரிணி. நீங்க ரெண்டு பேரும் பழையபடி ஒன்னா சந்தோஷமா இருக்கனும். சரி எப்போ போற?”

“டிக்கெட் பாத்துட்டு இருக்கேன் அக்கா. கிடைச்சிருச்சுன்னா உடனே கிளம்ப வேண்டியது தான்” என்று அலைபேசியை பார்த்துக் கொண்டே இருக்கும்போது வாட்சப்பில் ஒரு தகவல் வந்ததற்கான ஒலி கேட்டது.

பாண்டியனின் எண்ணில் இருந்து அது வந்திருக்கவே, உடனே எடுத்து பார்த்தாள்.

அகரன் கோபமாக அவளை பற்றி பேசிய காணொளி அது.

‘இனி யார் அவளை திருமணம் செய்வார்கள்.இந்த தண்டனை அவளுக்கு தேவைதான்’ என்று கண்ணில் கோபம் கொப்பளிக்க அவன் பேசியதை பார்த்து குமுதினி வாய் மேல் கைவைத்து தாரிணியை கண் இமைக்காமல் பார்த்தார்.

தாரிணி அகரன் விட்டு விட்டு போன போது கூட இவ்வளவு உடைந்து போகவில்லை. ஆனால் அவன் தாரிணியை பற்றி பேசிய இந்த காணொளி அவளை கண்ணாடி துகள்களை போல ஆயிரம் துண்டுகளாக உடைத்துப் போட்டது.

கண்ணில் கண்ணீர் கூட வர மறுத்தது.

அப்படியே தரையில் அமர்ந்ததை பார்க்கவே குமுதினிக்கு பாவமாக இருந்தது.

மெதுவாக அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டார்.

“தாரிணி மனசை விட்டுடாத. நிஜமாவே அந்த தம்பி தான் இப்படியெல்லாம் பேசுச்சா. என்ன காரணம் உன்னை தண்டிக்க?”

“அவரை காதலிச்சதுக்கு தான் இந்த தண்டனை அக்கா..” என்று தேம்பி அழத் தொடங்கினாள்.

உள் அறையில் தண்ணீர் செம்பு தரையில் உருண்டோடியது.

சத்தம் வந்த அறையை நோக்கி தாரிணி அப்படியே பார்த்துக் கொண்டு அமர்ந்தாள்.
*******

நடு இரவில் யாரோ நடக்கும் ஓசை கேட்டது.‌ வாசல் கதவை திறந்து மெதுவாக வெளியில் நின்று பார்த்தார் மருதன்.
இருளில் யாரென்று தெரியவில்லை. அந்த உருவம் சத்தம் வராமல் கதவை திறந்துக் கொண்டு போனது.

அவர் அறையின் ஜன்னல் ஓரம் மெதுவாக போய் நின்று கீழே தெரியும் வாசலை நோக்கி பார்த்தார்.

மதுதான் வாயில் காவலாளியை கதவை திறக்கச் சொல்லி வெளியில் சென்றாள்.

உடனே காவலாளிக்கு மருதன் அழைத்தார். மது வெளியில் நின்ற காரில் ஏறி சென்றதாக அவர் தெரிவித்ததும் மருதனுக்கு யோசனையாக இருந்தது.

மது இந்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியில் போவதற்கு என்ன காரணம் என்று யோசித்தார்.

எதுவும் சரியாக இல்லை எனத் தோன்றியது. அவரின் நண்பரான ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிக்கு அவரது வாட்சப்பில் தகவல் அனுப்பி விட்டு வந்து படுத்தார்.

கண்களின் முன் தாரிணி வந்து நின்றாள். மதுவை அகரன் திருமணம் செய்வதில் அவருக்கு முன்பு இருந்த விருப்பம் தாரிணி வந்த பிறகு அடியோடு மாறியது.

அவளை பார்த்த போதே மருதனுக்கு அவள் மேல் ஒரு பரிதாப உணர்வு தோன்றியது. அகரன் அவளை காதலிக்கும் முன்பே அவனுக்கு இவள் சரியாக இருப்பாள் என்று மருதன் நினைத்தார். அதற்கு ஏற்றது போல் சம்பவங்கள் நடந்ததும் அவருக்கு மகிழ்ச்சி தான்.

எல்லாம் நல்லபடியாக நடக்கும் போது இப்படி தீடீரென்று அவசரகதியாக காட்சிகள் மாறிய போது அவருக்கு மனம் வருத்தப்பட்டது.

அகரனே இப்படி ஒரு அவசரக்குடுக்கையாக மாறி முடிவெடுத்து தாரிணியை விட்டு விட்டு வந்தது அவருக்கு பிடிக்கவில்லை.

எல்லாவற்றிலும் பெரிதாக தன் அறிவை உபயோகப்படுத்துபவன் இந்த சாதாரண சிறிய பெண்ணை எடைப் போடுவதில் தவறிழைப்பதாகவே அவருக்குத் தோன்றியது.
ஆனால் ஆத்திரம் அவன் கண்களை மறைத்த போது அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவன் மேல் கோபமும், பரிதாபமும் ஒரு நேரத்தில் தோன்றியது.

எதாவது செய்து அவரது பேரனின் வாழ்க்கையில் வசந்தத்தை வர வைக்க முடியாதா என்று தான் இப்போதைய அவரது கவலை.

தெய்வா விஷயத்தில் பாண்டியன் பிடி கொடுக்கவே இல்லாததால் தான் மருதன் அவராக முயற்சி செய்து பார்த்தும் சந்திரனின் இருப்
பிடம் குறித்து தெரிந்துக் கொள்ள முடியாமல் போனது.

தெய்வாவும் தனி மரமாக நின்றார்.

அதைப் போல அகரன் வாழ்க்கை ஆகிவிடக் கூடாது என்று தான் மருதன் கவலைப்பட்டார்.

அதற்கான அனைத்து முயற்சிகளையும் அவரே தனியாக எடுத்தார்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 27

திருமண ஏற்பாடுகளில் பாண்டியனும், தெய்வாவும் சந்தோஷமாக ஈடுபட, ஆண்டாள் மதுவை அழைத்துக் கொண்டு அங்கு வந்தார்.

“தெய்வா, மதுக்கு கல்யாண நகைங்க புதுசா வாங்கி போடலாம்னு இருக்கேன். நீ ஃப்ரீயா இருந்தா நகைங்களை கொண்டு வர சொல்றேன்.”

“அண்ணி. எதுக்கு புதுசா வாங்கிட்டு. பேங்க்ல இருக்க நகைங்களை எடுத்துக்கலாம். அதுவுமில்லாம இப்ப இருக்க பொண்ணுங்க தங்க நகைங்களையா விரும்பி போடறாங்க. ஏற்கனவே வாங்கி வச்சிருக்கறதே போதும்.”

“ஆமா அதே தான் நானும் நினைச்சேன். இருந்தாலும் உன் விருப்பம் இதுல முக்கியம் இல்ல. அதான் கேட்டேன்”

ஆண்டாள் சொன்னதும் மதுவும், பாண்டியனும் ஆச்சர்யமாக ஆண்டாளை பார்த்தனர்.

மதுவின் கண்களுக்கு மட்டும் தன் அம்மா, அத்தைக்கு மிகப் பெரிய ஐஸ் மலையை தூக்கி வைப்பதாக தோன்றியது.

‘சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் அம்மா செய்வார்’ என்று தான் அவள் மனதில் பட்டது.

“தெய்வா.. அப்ப நானும் மதுவும் போய் பேங்க்ல இருக்க நகைங்களை எடுத்துட்டு வந்திடட்டுமா?”

“ஏன் வீட்ல எந்த நகையும் இல்லையா? அப்படியே தினமும் ஒன்னு போடுவீங்களே அம்மாவும், பொண்ணும் அது போதாதா? கிலோ கணக்கில் நகைங்களை வச்சிட்டு பேங்க்ல இருக்கிறதை எடுக்கனம்னு என்ன அவசியம்? எதுவா இருந்தாலும் நாளைக்கு அது மதுக்கு தானே வரப்போகுது.”

“எவ்ளோ பெரிய ஆளுங்களாம் கல்யாணத்துக்கு வருவாங்க. நாம நம்ம பொண்ணுக்கு வெரைட்டி வெரைட்டியா நகைகளை போட வேண்டாமா? அதான் லாக்கர்ல இருக்கிறதை எடுத்துட்டு வரேன்னு சொன்னேன். அதான் உங்க அப்பாவே அகரன் பொண்டாட்டிக்கும் மதுக்கும் தான் நகைங்கன்னு சொன்னார் இல்ல. இப்பதான் மதுவே அகரனுக்கு பொண்டாட்டியா ஆகப் போறா இல்ல?”

“ஓ அதை இன்னிக்கே எடுத்து உன் பொண்ணுக்கு கொடுத்திடனும் இல்ல. அப்பா அது வரப்போற மருமகளுக்கும் பேரப் பசங்களுக்கும் தான் சொன்னார். பின்னாடி அகரனுக்கும் மதுவுக்குப் குழந்தைங்க பிறந்த பிறகுதான் அதெல்லாம் உன் பொண்ணு கைக்கு வரும். இப்போ நாம தான் நம்ம பொண்ணுக்கு நகை போடனுமே தவிர அப்பா சேர்த்து வச்சதை எடுத்து போடக்கூடாது. இப்போதைக்கு வேற புதுசா வாங்கிக்கலாம். லாக்கர்ல நீ ஒன்னும் கை வைக்க வேண்டாம்.” பாண்டியன் தீர்மானமாக சொன்னதும் ஆண்டாளின் முகம் மாறியது.

“அண்ணா. விடுங்க. எப்ப இருந்தாலும் அது மதுக்கு தானே சேரும். வேற எந்த பொண்ணுக்கு நாம கொடுக்க போறோம். இப்ப பேங்க்ல இருந்து எடுத்தா என்ன? அதெல்லாமே புதுசா தானே இருக்கும். அதை விட்டுட்டு இன்னும் இன்னும் புதுசா நகைங்களை ஏன் வாங்கனும்.” தெய்வா சொல்லும்போதே மருதன் அவரை அழைப்பதாக கௌரி வந்து சொன்னார்.

“அண்ணி இருங்க. அப்பாகிட்ட தான் அந்த லாக்கர் கீ இருக்கு. நான் வாங்கிட்டு வரேன். நாம போய் மதுவுக்கு தேவையானதை எடுத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவரின் அப்பா அறைக்கு சென்றார் தெய்வா.

ஆண்டாளின் முகம் மீண்டும் பல்ப் போட்டது போல் பிரகாசமாக தெரிந்தது.

“அப்பா. கூப்பிட்டீங்களா?”

“ஆமாமா. கதவை சாத்திட்டு வா” என்று சொன்னார் மருதன். ஏதோ மிக அவசரமான காரியம் என்று தெய்வாக்கு புரிந்தது.

“சொல்லுங்கப்பா” என்றதும், “உனக்கு தாரிணி மேல் என்னம்மா கோவம்?” அந்த ஒரு வாக்கியமே நிறைய கேள்விகளை சேர்த்து வைத்திருந்தது.

“என்னப்பா திடீர்னு இப்ப போய் இந்த கேள்வியை கேட்கறீங்க?அகரன், மது கல்யாண ஏற்பாடே நடக்க ஆரம்பிச்சாச்சு”

“சொல்லும்மா. நீ தானே போன வாரம் வரைக்கும் தாரிணி தான் உன் மருமகன்னு சொல்லிட்டு இருந்த. இப்போ மது தான் மருமகன்னு மனசை மாத்திக்க வேண்டிய அவசியம் என்ன?”

“அதான் அவ அவரோட பொண்ணுன்னு தெரிஞ்சும் எப்படி அவளை மருமகள்னு சொல்ல முடியும்?. அவர் பண்ணிட்டு போன துரோகத்தை அவ்ளோ சீக்கிரம் மறந்திட முடியுமாப்பா?”

“அப்ப அதான் உன் பிரச்சினையா?”

“அது.. ஆமா. வேற என்ன இருக்க போகுது?”

“அகரனுக்கு தான் எல்லாத்திலேயும் அவசர புத்தின்னா உனக்கும் அப்படி இருக்கும்னு நினைச்சு பாக்கவே இல்ல நான். சரி விடு. தாரிணி சந்திரன் பொண்ணு இல்ல. அவ அவரோட தங்கச்சி பொண்ணு”

“என்ன… என்ன சொல்றீங்கப்பா? அகரன் அவளை அவர் பொண்ணுன்னு சொன்னானே?”

“உன் பையன் சொல்றதை நம்புவ. இந்த அப்பாவை நம்ப மாட்டியா?”

“அப்பா. உங்களுக்கு எப்படி தெரியும்?. அகரன் தான் கண்ணுல பார்த்திருக்கானே!”

“எது.. ஒரு ஃபோட்டோவ பாத்து தானே.. நேர்ல பாத்தானா. விசாரிச்சானா? இல்ல நீதான் விசாரிச்சியா?”

“அப்பா.. எனக்கு ஒன்னுமே புரியல. நிஜம் தானா நீங்க சொல்றது.?”

“தாரிணி உன்கிட்ட அப்பா அம்மா இல்லன்னு சொன்னாளே.. மாமாதான் அவளை வளர்த்தார்னு சொன்னா இல்ல?”

“ஆமாப்பா. ஆனா அந்த ஃபோட்டோல அவரும் தாரிணி அம்மாவும் இருந்ததா சொன்னானே அகரன்”

“அண்ணனும் தங்கையும் ஒரு ஃபோட்டோ எடுக்க கூடாதுன்னு எதாவது இருக்காம்மா?”

“அது எடுக்கலாம் தான்*

“ம்ம். அப்படித்தான் நடந்திருக்கு. அதை அவர்ட்டயே விசாரிச்சிட்டு வந்திருக்கலாமே உன் பையன்”

“அவர் அப்ப உயிரோடு தான் இருக்கார் இல்ல”

“ஆமாம்மா. அவர் தான் அங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கார்ன்னு தாரிணி சொன்னா இல்ல”

“எங்கேயாவது இருக்கட்டும். எப்படியோ போகட்டும். அப்படியே அவ அவரோட தங்கை பொண்ணா இருந்தாலும் அவர் பண்ண துரோகத்துக்கு அவளை என்னால மருமகளா ஏத்துக்க முடியாதுப்பா”

“அந்த பொண்ணு என்னம்மா தப்பு பண்ணா? அவளா தேடி வந்து உன் பையனை பழி வாங்க தான் அவனை கல்யாணம் பண்ண நினைச்சான்னு உன் அண்ணி சொல்றதை நீயும் நம்பறியா?”

“ம்ம். அதுவும் ஒரு வகையில் உண்மை தானேப்பா. அவ எப்படி இங்க வந்து சேர்ந்தா? அவளா அகரனை கல்யாணம் வரைக்கும் கொண்டு போய் திருட்டுத் தாலி கட்டிக்கிட்டா?”

“சிரிப்பு தான்மா வருது. அப்ப இந்த ஈகோல தான் அந்த பொண்ணை வேண்டாம்னு சொல்ற. இந்த விஷயம் கேள்விப்பட்டதும் நான் நம்ம கம்பெனில தான்மா விசாரிச்சேன். அந்த ஃபோர்ட்போலியோக்கு எடுத்தாங்களே ஆட் ஷூட். அதுல தான் அகரன் தாலி கட்டியிருக்கான், அவ அதை சென்டிமெண்டா கூட கழட்டாம இருந்துருப்பா. உன்கிட்ட அதை சொல்லாம விட்டிருக்கலாம். நாம தான்
அந்த ஆல்பமை பார்த்தோமே! இந்த விஷயத்தை கூட நீயோ உன் அண்ணனோ விசாரிக்கவே இல்ல.”

“ நல்லவேளை. அது பொய் கல்யாணம் தானா. எங்க அவ தேடி வந்து அகரன் எனக்கு தான் தாலி கட்டினான்னு சொல்ல போறாளோன்னு பயந்துட்டே இருந்தேன். எது எப்படியோப்பா. அவர் சம்பந்தப்பட்ட யாரும் இங்க இருக்க வேண்டாம். இதுக்கு மேல ஏன் பேசிட்டு. அகரனும் இதான் சொல்வான். “

“இதுக்கு மேல அகரன் விஷயத்துல நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லம்மா. ஆனா சந்திரன் விஷயத்தை பத்தி கொஞ்சம் சொல்லிடறேன்.

இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்ன, சந்திரனை தேடி அவன் ஊருக்கு போனப்ப அவன் அம்மா இறந்த பிறகு அவன் வரவே இல்லன்னு சொன்னாங்க. அப்பவே அவன் தங்கையை பத்தி விசாரிச்சேன். அவ எங்க இருக்கா என்னன்னு தெரிஞ்சுக்க முடியல.. அதான் அதை அப்பிடயே விட்டுட்டேன்.

சந்திரனை தேடி நான் எங்கெல்லாமோ விசாரிச்சப்ப, அவன் ஒரு பொண்ணோட மதுரைக்கு ரயில் ஏறினான்னு தான் தெரிய வந்துச்சு.

கோவம் இருந்துச்சு தான் எனக்கு. ஆனா சந்திரனை பாத்து பேசி தான் ஒரு முடிவுக்கு வரணும்னு நினைச்சேன்.

நீயும், பாண்டியனும் தான் அவசரப்பட்டு அவரை பத்தி எதுவும்‌ பேச வேண்டாம்னு இதே போல ஒரு முடிவை எடுத்தீங்க. அப்பவே தேடி கண்டுபிடிச்சு இருந்தா அவர் பக்கம் இருக்க நியாயம் தெரிஞ்சுருக்கும்.

அதே தப்பு இப்பவும் நடக்கக் கூடாதுன்னு தான் நம்ம சந்திரசேகர்ட்ட சொல்லி தாரிணியை பத்தி விசாரிக்க சொன்னேன்‌‌. அப்பதான் இந்த விவரம் எல்லாம் தெரிஞ்சது. அதைக்கூட உன் பையன் செய்யல. ஏன்னா உங்க எல்லாருக்கும் கோபம் கண்ணை மறைக்குது. “

“அப்பா. அவர் எந்த பொண்ணு கூடவும் போகலன்னா, ஏன் நம்மளை தேடி வரல. அவரை தான் நாம் தேடி போக முடியல்ல. அவர் வந்திருக்கலாமே. நாம என்ன அவரை மாதிரி ஊரை விட்டா ஓடினோம்.”

“அவர் மேல் உனக்கு நம்பிக்கையே இல்லையேம்மா. அப்ப அவர் தேடி வந்து உண்மையை சொல்லியிருந்தா ஏத்துட்டு இருந்துருப்பியா?”

“அவருக்காக பல வருஷம் நான் காத்துட்டு தானே இருந்தேன். நம்பிக்கை இல்லாமலா நான் அவர் வருவார்னு இருந்தேன்”

“அதுக்கான எந்த முயற்சியும் நீ செய்யலையேம்மா. என்னையும் செய்ய விடல்லையே. அவர் ஏன் தப்பு பண்ணார்னு கேட்கனும்னு தான் நீ காத்திட்டு இருந்த தவிர. உண்மையா அவர் வந்தா அப்படியே நம்பி அவரோடு வாழ்வேன்னு நீ சொல்லலையே”

“அப்பா. அவர் எங்களை விட்டுட்டு போனது தப்பு தானேப்பா.. அதுவுமில்லாம யாரோ ஒரு பொண்ணோட போனார்னு அண்ணனே அதை கண்டுபிடிச்சு சொனனதுக்கு அப்புறம் நான் எப்படி நம்பாம இருக்க முடியும்?”

“அது ஏன் மா அவர் தங்கச்சியா இருக்க கூடாது. இப்ப தாரிணியை பத்தி தெரிஞ்சப்புறம் அது உண்மைன்னு தான் எனக்கு தோணுது. அதுவுமில்லாம கல்யாணத்துக்கு அப்புறம் அவரைத்தான் நீ நம்பியிருக்கனும். உன் அண்ணனை இல்ல. ஒரு வேளை உண்மையிலேயே அவர் தப்பு பண்ணியிருந்து நீ விலகியிருந்தா நான் ஏத்துக்கிட்டு இருந்துருப்பேன். ஆனா ஒருத்தரை அவர் பக்கம் நியாயத்தை கேட்காம நாமளே முடிவு பண்றது, அவரை தண்டிக்கிறது, விலகறதுன்னு செஞ்சா அது ரொம்ப பெரிய தப்பு. இதெல்லாம் உனக்கு நான் ஏற்கனவே சொன்னது தான்.

இந்தியா முழுக்க பத்து வருஷமா தேடின நான் பக்கத்துல இருக்க இலங்கைல தேடியிருந்தா அப்பவே உன் வாழ்க்கையை சரி பண்ணியிருப்பேன். அப்ப தோணலையே. நான் இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சிருக்கலாம். நானும் தான் உன் வாழ்க்கை நாசமா போக காரணம். இந்த கையாலாகாதவனை மன்னிச்சிரும்மா”

“அப்பா..என்ன இது. கையெல்லாம் கூப்பிக்கிட்டு. கையை இறக்குங்க” என்று அவரின் கூப்பிய கையை இறக்கி விட்டார்.

“அது என் தலையெழுத்துப்பா. அவர் என் வாழ்க்கைல முடிஞ்சு போன அத்தியாயம். அதை இப்ப புதுசா திருத்தி எழுத வேண்டாம்ப்பா. விட்டுடுங்க.”

“இப்ப அவருக்கு உடம்பு முடியாம இருந்தா, இப்படித்தான் தப்பு பண்ணாத அவரை தண்டிப்பியா?. உன்னால உன் பையனும் அதே தப்பை தாரிணிக்கு பண்றான்.”

“அப்பா. அவர் என்னை விட்டுட்டு போனதை எப்படிப்பா மன்னிக்க சொல்றீங்க? அகரன் விஷயத்தில் அவனே தான் முடிவு பண்ணான். நான் ஒன்னுமே சொல்லல. தவிக்க விட்டுட்டு போன அவரை அவனும் மன்னிக்க மாட்டான் பா. என்னாலும் முடியாது. அதான் அவரை பாத்துக்க அந்த பொண்ணு இருக்கா இல்ல.”

“அவர் தப்பு பண்ணார்னு முடிவே பண்ணிட்ட. அதான் உன்னால் இந்த நிலைமையில் அவர் இருக்கறப்பவும் மன்னிக்க முடியல. சரி விடு. ஆனா அந்த பொண்ணு மேல இன்னும் கோபமா?”

“அவளுக்காகவும், அவ அம்மாக்காகவும் தானே என்னையும் அகரனையும் விட்டுட்டு போனார். எங்க வாழ்க்கையை அவங்க வாழ்ந்துருக்காங்க. அப்புறம் எப்படி என்னாலோ, என் பையனாலோ மன்னிக்க முடியும்?”

“மதுவையும் ஆண்டாளையும் உன்னால் மன்னிக்க முடிஞ்சதேம்மா. அகரனுக்கு அவ்ளோ பெரிய துரோகம் செஞ்சும்.”

“அப்பா அது அண்ணி எங்க மேல இருந்த கோபத்துல பண்ணது. சின்ன பொண்ணு மது. அவ அம்மாவை பாத்து அவளும் பகையை வளர்த்துக் கிட்டா. அதுவும் இவர் செஞ்சுட்டு போனதும் ஒன்னா? சொல்லப்போனா நாங்க அண்ணிட்ட கஷ்டப்பட்டதுக்கு காரணமே அவர்தானே ப்பா?”

“திரும்ப திரும்ப அவர் தப்புன்னு சொல்றியே. அதை உன்னால் நிரூபிக்க முடியுமாம்மா? அதுக்காக தான் அவர்ட்ட நேர்ல பேசுன்னு சொல்றேன். நிஜமாவே தப்பு பண்ணார்னு தெரிஞ்சா நீ அவரை மன்னிக்க வேண்டாம் மா.”

“அப்பா. அவர் தப்பே செய்யாதவரா இருந்தாலும் எங்களை பத்தி அவர் இத்தனை நாள் நினைக்கல இல்ல. அப்ப அவரை பாத்து பேசி நான் என்ன செய்ய போறேன். அப்படியே பேசினாலும் இழந்த எங்க வாழ்க்கை திரும்ப போறதில்லை. அகரனுக்கும் அந்த பொண்ணோட வாழ்றது பிடிக்காம தான் வந்துருக்கான். அதனால் எங்களை கன்வின்ஸ் பண்ண டிரை பண்ணாதீங்க. உங்களுக்கு என் வாழ்க்கை இப்படியாச்சேன்னு எந்த கில்ட்டி ஃபீலும் வேணாம். நான் சந்தோஷமா என் குடும்பத்தோட இருக்கேன். இனி யாரும் புதுசா வேண்டாம். இது போதும்.”

“நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் மா. இதையே தான் அகரன்ட்டையும் சொல்லப் போறேன். அதுக்கு அப்புறம் உங்க ரெண்டு பேர் முடிவு தான்”

“அப்பா. ப்ளீஸ். அகரன்ட்ட நான் சொல்லிக்கறேன். கல்யாணத்துக்கு அப்புறமா. அது வரைக்கும் நீங்க சொல்லாதீங்க. ப்ளீஸ்ப்பா. எனக்காக..”

“இவ்வளோ சொல்லியும் இதே முடிவை எடுக்கிறியே. அந்த பொண்ணுக்கு என்னம்மா பதில்..”

“அப்பா நீங்க அவளுக்காக பாக்கறீங்க. நான் என் அண்ணனோட மரியாதைக்காக, மதுவுக்காக பார்க்கறேன். இவ்வளோ நடந்தப்புறம் மது அகரனை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா. அதுக்காகவாவது அவங்க கல்யாணம் நடக்கட்டும் பா. அவருக்காக அவ்ளோ கவலைப்பட்ட நீங்க உங்க பையனுக்காக கொஞ்சம் கூட கவலைப்படலையே. இந்த முறையும் அண்ணன் ஏமாந்து நிக்க நான் விட மாட்டேன் பா. “

“அவங்கவங்க அவங்க வாழ்க்கைக்காக தான் மா முடிவெடுக்கனும். தியாகம்லாம் கதையில் கேட்க வேணா நல்லா இருக்கும். ஆனா இருக்கற ஒரு வாழ்க்கையை நாம நமக்காக வாழனும். அதுக்கு அப்புறம் உன் முடிவு தான்மா. அகரன்ட்ட நான் எதுவும் சொல்ல மாட்டேன்”

“அப்பா. எனக்கு நீங்களாம் போதும். வேற யாரையும் நான் ஏத்துக்க தயாரா இல்ல. அது தப்பான முடிவா இருந்தாலும் பரவால்ல பா.” என்று சொல்லி விட்டு வெளியில் வந்தார்.

மனம் குழம்பி கிடந்தது. பாண்டியனிடம் எல்லாவற்றையும் சொல்லலாமா என்று யோசித்தார் தெய்வா. ஆனால் இனி திருமணம் வரை எந்த குழப்பமும் வேண்டாம் என்று முடிவெடுத்தார்.

வலுக்கட்டாயமாக முகத்தில் சிரிப்பை ஒட்டிக் கொண்டவர் அகரனை தேடி சென்றார்.

“அகரா. கிளம்பலையா இன்னும் நீ. ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க. எல்லாத்தையும் மறந்திடு. நீ மனசுல எதை நினைச்சு வேதனைப்படறன்னு எனக்கு தெரியும். அந்த கில்ட்டி உனக்கு இருக்க கூடாது. தெரிஞ்சு நாம் செய்யற தப்புக்கு தான் நாம மனசு வருந்தனும். தெரியாம செஞ்ச தப்புக்கு நாம எப்படி காரணம் ஆவோம்?. அந்த தப்பு இனி நடக்காம பாத்துக்கணும். அவ்ளோதான். நீ கிளம்பி வா.” என்று அவன் தலையை தடவிக் கொடுத்தார்.

“அம்மா. எல்லாம் சரிதான் மா. ஆனா இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம்‌ மா. மதுவை என்னால் அப்படி நினைச்சு கூட பாக்க முடியாதும்மா.”

“பாத்தியா பழையபடி அதே பிடிவாதம் பிடிக்கிற. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். மதுவை கல்யாணம் பண்ணிட்டா அவ மாறிடுவா. உனக்கு அவ மேல முழு அதிகாரம் இருக்கும்‌. அதுக்காகவே அவளும் கொஞ்சம் கொஞ்சமா தன்னை திருத்திப்பா. அண்ணியும் உன்னை மருமகனானப்புறம் எதுவும் தப்பா பேச மாட்டாங்க.”

“மை காட். அம்மா. உங்களுக்கு என் அவஸ்தை புரியலம்மா. ஒருத்தியை காதலிச்சே இவ்வளோ கஷ்டப்படறேன். எனக்கு குற்றவுணர்ச்சில இருந்து வெளியவே வர முடியல. உடனே ஒரு கல்யாணம்னா எப்படிம்மா‌‌..?”

“இப்பத்தானே சொனனேன். எதுக்கு குற்றவுணர்ச்சி. பழசை மறந்துட்டு புதுசா ஆரம்பி. மாமாக்காகவும் கொஞ்சம் பாரு அகரா. அவர் தலை குனிஞ்சு நிக்கனுமா? உனக்காக எவ்ளோ செஞ்சுருப்பார். நீ அவருக்காக இந்த ஒரு விஷயத்தை செய்ய கூடாதா?”

“அம்மா. அவர் செஞ்சதுக்காக நான் கடைசி வரைக்கும் அவருக்கு கடமைப்பட்டிருக்கேன் மா. ஆனா என் வாழ்க்கையை அவருக்காக பணயம் வைக்க முடியாதும்மா”

“ஓ அப்ப அவளுக்காக எங்க எல்லாரையும் கஷ்டப்படுத்தனும்னு முடிவு பண்ணிட்ட. சரிப்பா. உன் இஷ்டம். நான் இப்பவே மாமாட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்தறேன். அதுக்கு அப்புறம் மாமாவுக்கோ இல்ல எனக்கோ எது ஆனாலும் நீ ஒன்னும் கவலைப்படாதே. உன்னை ஏமாத்தின அந்த பொண்ணுக்காக உருகிட்டு காத்திட்டு இரு.”

“அம்மா. ஏன் மா இப்படில்லாம் பேசறீங்க?. அவளுக்கா இல்லம்மா. எனக்காக கேட்கிறேன். மதுவை கல்யாணம் பண்ணா எனக்கு எதாவது ஆகிடும் மா. அது பரவால்லையா?”

“டேய். இதையே சொல்லி என்னை மனசை மாத்தலாம்னு நினைக்கறியா. நீ கல்யாணம் பண்ணிட்டு இங்க தானே இருக்க போற. அவ ஒன்னும் உன்னை பண்ணிட மாட்டா. நாங்க இருக்கோம்”

தெய்வா அதற்கு மேல் நின்றால் அவன் மீண்டும் பிடிவாதம் பிடிப்பான் என்று உடனே அங்கிருந்து கிளம்பினார்.

வந்த ஆத்திரத்தில் தலையணை மீதும் படுக்கையின் மீதும் அவன் கைககளையே போட்டு அடித்தான்.

பைத்தியம் பிடிப்பதை போல இருந்தது அவனுக்கு
.

எழுந்து நேராக மருதனின் அறைக்கு போனான்.

“தாத்தா” என்று அவர் மடி மீது தலை வைத்து மண்டியிட்டு அமர்ந்தான்.

அவர் அவன் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தார்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 28

“அகரா, என்னப்பா இது? சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு?”

“தாத்தா, எனக்கு சுத்தமா எதுவுமே புரியல. இப்பத்தான் ஒரு விஷயத்துல இருந்து வெளிய வர முடியாம தவிக்கிறேன். இதுல புதுசா இன்னொரு தலைவலியை எனக்கு கொடுக்க பாக்கறாங்க அம்மா.”

“அம்மா நீ அதுல இருந்து வெளிய வரணும்னு முடிவெடுத்துருக்காப்பா. “

“அய்யோ அந்த முடிவால் நான் வாழ்க்கை முழுசும் கஷ்டப்படுவேன் தாத்தா”

“உனக்கு முடிவெடுக்க தெரிஞ்சா ஏனப்பா மத்தவங்க உன் வாழ்க்கைல முடிவெடுக்கப் போறாங்க”

“தாத்தா. நான் என்ன முடிவெடுக்க தெரியாம இருக்கேன். கம்பெனில கூட என் முடிவு என்னிக்காச்சும் தப்பா போயிருக்கா?”

“அட அது தப்பா போனாலும் திருத்திக்கலாம் பா. ஆனா வாழ்க்கைல நாம எடுக்கற முடிவு தப்பா போச்சுன்னா அதுக்கான தண்டனையை வாழ்க்கை முழுக்க அனுபவிக்க வேண்டியிருக்கும்.”

“அதுக்குதான் மதுவை வேணாம்னு சொல்றேன். அம்மாவும், மாமாவும் கேட்க மாட்டேங்கறாங்க”

“அப்ப அதுக்கு மாற்று தீர்வு என்ன?”

“நான் வாழ்க்கை முழுக்க கல்யாணமே பண்ணிக்காம இருக்கறது தான்”

“அப்படி இருந்தா எங்க மனசுலாம் சந்தோஷமா இருக்குமா என்ன?”

“என் மனசு ஆறதுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கனம் இல்ல தாத்தா. இந்த அவசர கல்யாணம் தேவையா?”

“நான் இதுல எதுவும் சொல்ல முடியாதுப்பா. அதுக்கு ஒரு தீர்வு வேணா இருக்கு. ஆனா அதுக்கு நீ உண்மையை தேடி ஓடணும்.”

“எந்த உண்மையை தாத்தா. தாரிணியை சொல்றீங்களா?”

“அப்படி குறிப்பிட்டு சொல்லல. ஆனா அவ சம்பந்தப்பட்ட உண்மை தான். அதை நீ தேடி தெரிஞ்சுக்க. உன் வாழ்க்கை சரியாகும்”

“தாத்தா அதுல இருந்து தான் நான் வெளிய வரணும்னு நினைக்கிறேன். திரும்ப அங்கேயே போக சொல்றீங்க.”

“நீ போய் பாரு. எல்லாம் உனக்கே தெரியும்.”

“இங்க இந்த கல்யாண ஏற்பாட்டை பண்ணிட்டு இருக்கிறதை முதல்ல நிறுத்துங்க தாத்தா. அப்புறமா அதை பாத்துக்கலாம். இந்த பிரச்சினை தான் எனக்கு இப்போ பெரிய தலைவலியா இருக்கு.”

“அது உங்க அம்மா, மாமாவோட வறட்டு பிடிவாதம் அகரா. நான் சொன்னாலாம் அதை கேட்க மாட்டாங்க”

“நீங்க தானே தாத்தா இந்த வீட்டில் எல்லா முடிவும் எடுப்பீங்க. எல்லாரும் அதை தானே கேட்பாங்க”

“அப்படியா. நீ கேட்டியா நான் சொன்னதை”

“அது.. அது வேற
தாத்தா. ப்ளீஸ் எனக்காக இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லுங்க”

“நான் சொல்றதுக்கு மரியாதை இங்க இல்லப்பா.அதுவும் இல்லாம இது என் பசங்க பாசத்தால எடுத்த முடிவு. அதே பாசத்தால் என் கையையும் கட்டிப் போட்டுட்டாங்க. நான் என்ன பண்றது?”

“தாத்தா நீங்களே இப்படி சொன்னா எப்படி? அப்போ என் வாழ்க்கையை அந்த மதுவோட வாழ சொல்றீங்களா?”

“உன் அம்மா, மாமாக்காக இதைக்கூட செய்ய மாட்டியா?”

“அது எப்படி எல்லாருமே இதே செண்டிமெண்ட்டை வச்சு என் வாழ்க்கையை முடிக்க பாக்குறீங்க?”

“அப்போ உன் வாழ்க்கை உன் கையில் தான் இருக்குன்னு நம்பறியா?”

“என் கையில் தான் இப்ப எதுவும் இல்லையே.?”

“நீயா தவற விட்டதை நீயே தேடி போ. எல்லா உண்மையும் உனக்கு புரியும்.”

“அதுக்கு முதல்ல இந்த கல்யாணம் நடக்க கூடாது தாத்தா”

“அப்ப போறேன்னு சொல்றே.”

“எங்க தாத்தா போறது. யாருமே இல்லாத இடத்துக்கு தான் போகணும்”

“உனக்கு தேவையானவங்க இருக்க இடத்துக்கு போ. அப்பத்தான் தீர்வு கிடைக்கும்.”

“நீங்க முதல்ல இந்த கல்யாணத்தை நிறுத்தறேன்னு சொல்லுங்க.”

“நிறுத்தினா நிச்சயமா அங்க போறேன்னு சொல்லு.”

“தாத்தா நிஜமாவே அங்க போய் நான் என்ன தீர்வை கண்டுபிடிக்க போறேன்னு தெரியல. அவளை காதலிச்சதே நான் செஞ்ச பெரும்பாவம். யாரும் செய்யக்கூடாத தப்பு. திரும்ப அவளை போய் பார்த்து நான் என்ன பண்ண போறேன்.”

“அட.. யார் உன்னை அவளை தேடிப் போக சொன்னது. அவ உன் வாழ்க்கைல வந்தது எதுக்கு? அவளோட இறந்த காலம் என்ன? இப்ப அவளோட இருக்க நிகழ்காலம் என்னன்னு தேடு. உண்மையை தெரிஞ்சுக்கோ. அப்புறமா உன் வாழ்க்கையில் ஒரு முடிவை எடு. அவ்வளவு தான் நான் சொல்வேன். ஆறப்போட்ட கோபம் தெளிவை கொடுக்கும்.”

“முதல்ல இந்த கல்யாணம் நடக்கலன்னா தான் என் மனசு கொஞ்சமாச்சும் யோசிக்கும். அப்படி நடந்தா நான் நீங்க சொன்ன மாதிரி தேடறேன் அந்த உண்மையை.”

“அப்புறம் பேச்சு மாற மாட்டியே”

“தாத்தா. ப்ராமிஸ். கல்யாணத்தை நிறுத்துங்க. ஆனா எல்லாத்துக்கும் காரணமான அந்த ஆள் என் முன்னாடி இல்லாம போய்ட்டார். இப்ப மட்டும் உயிரோட இருக்கட்டும்… ”

மருதன் பலமாக சிரித்தார்.

“தாத்தா எதுக்கு சிரிக்கறீங்க.?”

சிறிய குழந்தை போல அழுது அடம்பிடிப்பவனை பார்க்க பாவமாக இருந்தது மருதனுக்கு.

“ம்ம். சரி. இந்த கல்யாணம் நடக்காது. நீ கவலைப்படாத”

“நிஜமாவா தாத்தா. “

“ஆமா. நீ கவலைப்படாம இரு. எதையும் ஆனா வெளிய காமிச்சுக்காத.”

“தாங்க்ஸ் தாத்தா” என்று அவரை கட்டிப்பிடித்துக் கொண்டான்.
********

“அம்மா. இந்த கல்யாணம் நடந்தே ஆகணுமா? எனக்கு அவனை பார்த்தாலே அருவருப்பா இருக்கு. இதுல என்னை அவனோட போய் வாழ சொல்ற.” மது சிணுங்கி கொண்டாள்.

“உன்னை எவடி அவனோட வாழ சொல்றா. வெறும் தாலி தானே.”

“மா. தாலி மட்டும்னாலும், இவன் கட்டியா அது என் கழுத்தில் ஏறனும். எனக்குனு கனவு இருக்கும்மா. என் கல்யாணம் எப்படி நடக்கனும்னு. எத்தனை பேர் என் பின்னால அலைஞ்சும் கண்டுக்காம இருந்துருக்கேன்.இப்ப என்னடான்னா போயும் போயும் இந்த அகரனை கல்யாணம் பண்ண சொல்ற”.

“இப்ப இப்படித்தான் சொல்லுவ. உங்க தாத்தா சேர்த்து வச்சிருக்கிற நகையையும் பணத்தையும் பார்த்தா வாயை மூடிக்குவ. அதுக்கு மேலேயும் உனக்கு இன்னிக்கு நான் ஒரு சர்ப்ப்ரைஸ் வச்சிருக்கேன். பேங்க் போற வரைக்கும் அனத்தாம வா”

தெய்வா வந்ததும், மது, ஆண்டாள் மூவரும் வங்கிக்கு சென்றனர்.
மது, ஆண்டாளை ஓரக்கண்ணால் முறைத்துக் கொண்டே வந்தாள்.

தெய்வா வங்கியில் லாக்கரை திறந்து நகைகளை மதுவுக்கு காண்பித்தார்.

அவள் கண்கள் பெரிதாய் விரிந்தன.

“மது. உனக்கு என்னென்ன தேவையோ அதெல்லாம் எடுத்துக்க. அண்ணி, நீங்களும் கூட இருந்து பாருங்க. நான் பேங்க் மேனேஜர்க்கு பத்திரிக்கை வச்சிட்டு பேசிட்டு வரேன்.”

தெய்வா கிளம்பியதும்,

“பாத்தியா.. எவ்ளோ இருக்குன்னு. நீ இப்போ அவனை வேண்டாம்னு சொன்னா, வேற ஒருத்தியை பாத்து அவனுக்கு கட்டி வைப்பாங்க. இவ்ளோவையும் எவளோ ஒருத்தி வந்து அனுபவிக்கனுமா?”

“அம்மா. நம்ம வீட்லயே அவ்ளோ நகைங்க இருக்கு. இது போதாதுன்னா இங்க இவ்வளோ வச்சிருக்காங்க. நான் ஆயுசுக்கும் டெய்லி ஒன்னுன்னு போட்டாக்கூட போட முடியாது போல இருக்கே மா.”

“இப்ப புரியுதா. இதையெல்லாம் உன் அத்தை பொறுப்புல இருக்குறதால தான் என்னால் இத்தனை நாள் எடுக்க முடியல. என் மனசில் டக்குனு உனக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணா என்னன்னு தோணுச்சு. இதெல்லாம் இப்ப அப்படியே நம்ம கைக்கு வந்துடுச்சு இல்ல”

“இவ்ளோவையும் நாம இப்போவே எடுத்துட்டு போகப்போறோமா. “

“ஆசைதாண்டி. உங்க அப்பாவே போதும். அவ்ளோத்தையும் எடுத்துட்டு போனா, அவரே நாம அகரனுக்கு பட்டை நாமம் சாத்த போறோம்னு கண்டுபிடிச்சிருவார்.”

“அப்புறம் இதெல்லாம் திரும்ப அத்தைக்கிட்டயே விட்டு வைக்க போறியா?”

“இப்ப கொஞ்சம் எடுத்துப்போம். மீதியை கல்யாணம் முடிஞ்சு சாவியை மொத்தமா அவகிட்ட இருந்து வாங்கி எடுத்துக்கலாம். அப்ப யாருக்கும் எந்த சந்தேகமும் வராது.”

அவர்களுக்கு தேவையான நகைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தனர்.

“தெய்வா. இந்த நகைங்க மட்டும் போதும்னு சொல்லிட்டா. நீ இதை வீட்டுக்கு பத்திரமா எடுத்துட்டு போ. நான் வந்து வாங்கிக்கறேன். எனக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு வந்துடறேன்” என் ஆண்டாளும் மதுவும் கிளம்பினர்.

“ஏம்மா அவங்ககிட்ட கொடுத்த. “

“அப்போதான் நம்ம மேலே நம்பிக்கை வரும். வீட்டுக்கு போனதும் எப்படி வாங்கறேன்னு பாரு.”

ஆண்டாள் மற்றுமொரு வங்கிக்கு மதுவை கூட்டிச்‌ சென்றார்.

“இங்க என்னம்மா வேலை இருக்கு இன்னும். வெயில்ல வேற என் ஸ்கின் டான் ஆகிடும்.”

“ஏசி காருக்குள்ள போறவளுக்கு ஸ்கின் டான் ஆகிடுமா.. அமைதியா வா” என்று அழைத்துக் கொண்டு அந்த வங்கியின் லாக்கர் பகுதிக்கு சென்றாள்.

“இங்க என்னம்மா வச்சிருக்க. என்கிட்ட கூட இதெல்லாம் சொல்லல.”

அமைதியாக லாக்கரை திறந்து நகைப்பெட்டியை எடுத்தார் ஆண்டாள்.

முழுதும் பழைய நகைகள். மறுபடியும் மதுவின் கண்கள் விரிந்தது.

“அம்மா. இதென்ன இங்கேயும் நகைங்க இருக்கு. எவ்ளோ சவரன் மா இதெல்லாம் ?”

“ம்ம். தெரியலடி. இருபத்து அஞ்சு வருஷமா அங்கங்க மறைச்சு வச்சுட்டு இருந்தேன். புது நகையா கொஞ்சம் கொஞ்சமா மாத்தனது போக மீதி தான் இது.”

“உன் கல்யாணத்துக்கு போட்டதா இது.”

“ஆமா அப்படியே எங்க அப்பன் பணக்காரன் பாரு. இவ்வளோ போடுறதுக்கு. இதெல்லாம் உங்க அத்தைக்கு உங்க தாத்தா போட்டது.”

மது அதிர்ந்தாள்.

“அம்மா.. என்ன சொல்ற. அப்போ அகரன் அப்பா கொண்டு போனார்னு சொல்லி அகரனை எப்போ பாரு அசிங்கப்படுத்துவ. இதெல்லாம் எப்படி உன்கிட்ட வந்துச்சு.”

“அவனும் உன் அப்பன் மாதிரி பொழைக்க தெரியாதவன். அவன் எடுத்துட்டு போயிருந்தான்னா தேடி போய் அவனை வெட்ட சொல்லிருப்பேன். அவன் தான் எடுத்தான்னு சொன்னதால தான் அவன் ஊரை விட்டுப் போனதும்
எல்லாரும் அப்படியே நம்பினாங்க. நானும் இந்த நகைங்களை பாதுகாப்பா வச்சிருக்க முடிந்தது.”


“கில்லாடி தான் மா நீ. ஆனா ஏன் இதெல்லாம் முழுக்க மாத்தாம இருக்க.”

“ஒரேயடியா ஏதாவது கடைல கொடுத்து உருக்கலாம்னு இருந்தேன். ஆனா உங்க தாத்தாக்கு இந்த நகைகளை யாராச்சும் மாத்தினதா தகவல் கொடுத்தா நான் அவ்ளோதான். அதான் புதையல பூதம் காக்கிற மாதிரி காவல் காத்து கொஞ்சம் கொஞ்சமா மாத்தினேன்‌. இப்ப கல்யாணத்துக்கு பழைய நகைகளை மாத்தறப்ப இதையும் மாத்திடலாம். இது இப்போ பிரச்சினை இல்லை”

“அப்போ இதெல்லாம் தான் வீட்டுக்கு கொண்டு போகப்போறோமா.”

“ஆமாடி. இப்பவே மாத்த முடியலன்னாலும் கல்யாணத்துக்கு அப்புறமா மத்த நகைங்களோட கலந்து மாத்திடலாம்.”

“அதுக்கு அப்போ வந்து எடுத்துக்கலாம் இல்ல.”

“எடுக்கலாம் தான். ஆனா என்னம்மோ மனசுக்கு இதை வீட்டுக்கு இப்போவே கொண்டு போலாம்னு தோணுது. நாளைக்கு அகரன் உன்னை கல்யாணம் பண்ண பிறகு நாம் எங்க போறோம் ,என்ன பண்றோம்னு பாத்தான்னு வச்சுக்க நாம மாட்டிப்போம். வீட்லயே இதை பதுக்கி வைப்போம்.”

“ம்ம். இந்த நகைங்க தான் நம்ம கைக்கு வந்துருச்சே. அத்தை நான் கேட்டா சாவி கொடுப்பாங்க. அந்த நகைங்களை எடுத்துக்கிட்டு அவங்க ரெண்டு பேரையும் தொரத்திடலாமே மா. அதுக்காக போய் அவனை கல்யாணம் பண்ணனுமா?”

“தேஞ்சு போன ரெக்கார்டு மாதிரி ஏண்டி இதையே பேசி என் உயிரை வாங்கற. நகை மட்டும் போதுமா. அந்த கம்பெனி, வீடு, பணம் எதுவும் வேணாமா? நீ அமைதியா இரு. நான் பார்த்துக்கறேன்”

“போம்மா.. “ என்று சலித்துக் கொண்டாள் மது.

ஆண்டாள் மனம் வேக வேகமாக கணக்குப் போட்டது.

மதுவின் திருமணத்திற்கு பிறகு நடக்க வேண்டிய நாடகங்களுக்கு முன்கூட்டியே மனதுக்குள் ஒத்திகைப் பார்த்தாள்.

*”**””
“தாரிணிம்மா. சொன்னா கேளு. இங்கேயே இரு. இந்த நிலைமைல மாமாவை நீ கூட்டிட்டு போய் தான் ஆகணுமா?” குமுதினி தாரிணியை கேட்டதும்,

“அக்கா. இதுக்கு மேல நான் இங்க இருந்து என்ன பண்ண போறேன் அக்கா?. எங்கயாச்சும் கண் காணாம போய் இருக்கோம் நாங்க”

“எங்கேயோ போய் ஏன் கஷ்டப்படணும் தாரிணி. இங்கேயே இரு. நாங்க இருக்கோம் உன்னை பாத்துக்க. மாமாவுக்கும் இங்க சிகிச்சை எடுத்தா தான் சரியாகும்.”

“இங்கேயே இருக்க இப்போ இது ஒன்னும் எங்க வீடு இல்லையே அக்கா.”

“லூசு மாதிரி பேசாத தாரிணி. இது உன் வீடு தான்‌. உங்க வீட்டுக்காரர் பணம் கொடுத்ததால உன் வீடு இல்லன்னு ஆகிடுமா?”

“வேண்டாம் அக்கா. யார் பணமும் எனக்கு வேண்டாம். அவர் வீடு தான் இது. இங்க நான் இருக்க முடியாது.”

“அந்த தம்பி ஒன்னும் உன்கிட்ட பணம் கேட்கலையே. வந்து கேட்டா பாப்போம். அதுவரைக்கும் நீ இங்கேயே இரு‌”

“அவர் வந்திடக்கூடாது, அவர் முகத்தில் இனியும் விழிக்கக் கூடாதுன்னு தான் நான் போறேன்.”

“உன் சொந்த ஊரை விட்டு நீ யாருக்காக போகணும் தாரிணி. மாமாக்கு எங்க போய் நீ ட்ரீட்மெண்ட் எடுப்ப?”

“அதெல்லாம் உலகம் முழுக்க இதே போல சிகிச்சை இருக்குக்கா. அங்க எடுத்துக்கலாம்.”

“அவரை இந்த நிலைமைல எப்படி கூட்டிட்டு போவ. எழுந்து நடக்க முடியாதவரை கஷ்டப்படுத்த போறியா?”

“எப்படியும் நாங்க சென்னைக்கு கூட்டிட்டு போகலாம்னு தான் இருந்தோம். அதே போல ஒரு சக்கர நாற்காலில வச்சு கூட்டிட்டு போவேன்”

“எங்க போவ”

“எங்கேயோ அக்கா.. யாருக்கும் தெரியாத இடத்துக்கு. மாமாக்கு சரியாகற வரைக்கும், நான் சம்பாதிச்சு இந்த வீடு கட்டின காசை அவருக்கு அனுப்பிட்டு இந்த ஊருக்கு வருவேன்.”

“அதை இங்க இருந்தே செய் தாரிணி. அவர் தான் அப்படி பேசினாரே. உன்னை தேடி ஏன் இங்க வரப்போறார்?”

“அவர் வராரா இல்ல வர மாட்டாரான்னு தெரியாது அக்கா. ஆனா அவர் காசு கொடுத்து கட்டின இந்த வீட்டில நான் இருக்க மாட்டேன். அதுவுமில்லாம நான் இங்க இருந்து என்ன வேலைக்கு போறது.? வெளிய எங்கயாச்சும் போனா தான் எனக்கு வேலை கிடைக்கும். என்னையும், மாமாவையும் பாத்துக்க முடியும்.”

“நாங்க இல்லையா தாரிணி. உன்னையும், மாமாவையும் பாத்துக்க மாட்டோமா?”

“உங்களுக்கு காலம் முழுக்க நான் பாரமா இருக்க முடியாது அக்கா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க”

“நிச்சயமா நான் உன்னை தனியா அனுப்ப மாட்டேன் தாரிணி. எங்கேயும் நீ போகக்கூடாது”

“அக்கா, ஏன் இப்படி பண்றீங்க” தாரிணி எதுவும் பேச‌முடியாமல் தவித்தாள்.

குமுதினி அவளை அணைத்து ஆறுதல் படுத்தி விட்டு சென்றார்.

இரவு முழுக்க யோசித்தாள் தாரிணி.

‘எங்கே போவது?. நடக்க முடியாதவரை அழைத்துக் கொண்டு தனியாக செல்வது நடக்க கூடிய காரியமா?. சென்னைக்கு சென்றால் நிச்சயம் என்றாவது ஒரு நாள் அகரன் வீட்டில் யாராவது பார்த்து விடுவார்கள். வேறு எங்கே போவது?’
யோசித்து யோசித்துப் பார்த்தாள்.

யாரிடமும் சொல்லாமல் சந்திரனை அழைத்துக் கொண்டு போவது என்று முடிவெடுத்தாள்.

விமானப் பயணத்தில் நோயாளியை கொண்டு செல்வதற்கு சான்றிதழ் தேவை என்று அதை
எல்லாம் குமுதினிக்கு தெரியாமல் ஏற்பாடு செய்தாள்.

அடுத்த நாளில் சென்னை செல்வதற்கான விமானப் பயணம். குமுதினியிடம் சந்திரனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி மனதுக்குள் அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 29

சந்திரனால் ஏதோ ஒரு பிரச்சினை தாரிணிக்கு இருக்கிறது என்று புரிந்துக் கொள்ள முடிந்தது.

ஆனால் பாவம் சின்னப்பெண்ணுக்கு தான் வேறு ஒரு சுமையாகிறோமே, தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் அதிகமாக இருந்தது.

அதனால் அவள் கூட்டிப்போகும் இடத்துக்கு எதுவும் கேட்காமல் அவளுடன் சென்றார்.

சந்திரன் அவளுக்கென்று வாங்கி வைத்த ஒன்று இரண்டு நகையும், அவர் சேர்த்து வைத்திருந்த கொஞ்சம் பணமும் மட்டுமே தாரிணியிடம் இருந்தது.

அகரன் கொடுத்திருந்த பணத்தை அப்படியே குமுதினியிடம் கொடுத்து வைத்திருந்தாள்‌. அதை அவள் வாங்கவே இல்லை. எப்படியும் குமுதினி அந்த பணத்தில் அகரன் சொல்லியபடி அந்த வீட்டை தான் கட்டுவார் என்ற நம்பிக்கை அவளுக்கு இருக்கிறது.

‘போகும் பாதையில் எப்போதும் தனிமையில்லை.. எங்கேயும் எப்போதும் யாரோ ஒருவர் வழித்துணையாக வருவார்’ என்ற வாக்கியம் இப்போதும் பொய்யாகவில்லை.

அவளுக்கு துணை அவளின் மாமா சந்திரன். அவருக்கு துணை தாரிணி.

இருவரும் மீண்டும் மொழி தெரியாத ஒரு ஊருக்கு பயணமாகினர்.

புதிய மனிதர்கள், புதிய இடம்.

அவள் தங்குவதற்கும் அவள் பாதுகாப்பிற்கும் அவள் மேகாலயாவில் இருந்த போது பழங்குடியினர் நல வாரிய பொறுப்பில் இருந்தவர் உதவினார்.

அவரிடம் தான் நம்பிக்கையுடன் அந்த உதவியை கேட்டாள். அவர்தான் அவளுக்கும், சந்திரனுக்கும் விமானப் பயணத்தை ஏற்பாடு செய்து, அந்த கிராமத்திற்கு வருவதற்கு வாகனத்தையும் அனுப்பியிருந்தார்.

அந்த சிறிய ஊரில் அவர் ஏற்கனவே பணிபுரிந்த பழக்கத்தில் அவளுக்காக ஒரு இடத்தை பார்த்தும் கொடுத்திருந்தார்.

சுற்றிலும் எளிமையான மனிதர்கள். தன் அம்மாவை சந்திரன் மாமா எப்படி எளிமையான மனிதர்கள் இருந்த இடத்திற்கு கூட்டி வந்தாரோ அது போல இப்போது தாரிணி அவரை அழைத்து வந்திருந்தாள்.

எல்லாரும் அவளை பார்த்து ஒரு சிரிப்புடன் தான் வரவேற்றனர்.

ஒன்றும் இல்லாது நின்றவளை பார்த்து,
தங்களிடம் இருந்த உணவை அவளுடன் பகிர்ந்துக் கொண்டனர்.

சந்திரனை படுக்க வைப்பதற்கு கூட கட்டில் இல்லை. என்ன செய்வதென்று அவள் முழித்து போது, பக்கத்து வீட்டில் இருந்த பெரியவர்கள் அவர்களின் கயிற்றுக் கட்டிலை கொண்டு வந்து கொடுத்தனர்.

அவளுக்கு தெரிந்த மொழியில் அவள் அவர்களிடம் நன்றி கூறினாள். யாருமில்லாமல் எதை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற பயம் காணாமல் போனது.

ஓடியோடி அன்றே வீட்டிற்கு தேவையானதை அங்கு என்ன கிடைக்குமோ அதை வைத்து எல்லாம் செய்து கொண்டிருந்தவள் முகம் மட்டும் வாடிப் போய் இருந்தது.

சந்திரன் கொஞ்சம் பொறுமை இழந்தவராய் அவள் செய்வதை பார்த்துக் கொண்டே அவளிடம் செய்கையால் அருகே வரும்படி செய்தார்.

“என்ன மாமா. உங்களை ரொம்ப சிரமப்படுத்தறேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்க. சீக்கிரமே இதெல்லாம் சரியாகும்.”

அவர் மீண்டும் செய்கையால் என்ன பிரச்சினை அவளுக்கு என்று விசாரித்தார்.

“ஒரு பிரச்சினையும் இல்ல மாமா. எல்லாத்தையும் பாத்துக்கலாம். நீங்க கவலைப்படாதீங்க.”

அவளின் அலைபேசி ஒலித்தது. வேறு எண்ணை மாற்றி இருந்தாள். அதுவும் அந்த அதிகாரியின் ஏற்பாட்டின் படி அவள் தற்போது இருக்கும் இடத்தில் கொடுத்திருந்தார்கள்..

அவர்தான் அழைத்து இருந்தார்.

“வணக்கம் ரதீஷ் சார். உங்களுக்கு நான் எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னே தெரியல. புது ஊருக்கு மாமாவை கூட்டிட்டு வரப்போறேன். என்ன பண்ணுவோம்னு பயந்துட்டே இருந்தேன். நல்ல மனுஷங்க இருக்க இடத்தில் என்னை தங்க வச்சிருக்கீங்க. ரொம்ப தாங்க்ஸ் சார்.”

“தாரிணி. இதெல்லாம் உனக்காகவும், உன் மாமாக்காகவும் தான். நீங்க மேகாலயால இருந்தப்ப உன்னை பாத்துக்க உங்க மாமா அவ்ளோ கஷ்டப்படிருக்கார். இப்போ நீ அவருக்காக செய்யற. அதுல நானும் என் பங்கா கொஞ்சம் உதவியை செய்து இருக்கேன்.”

“தாங்க்யூ சார். இங்க இருக்கவங்கலாம் ரொம்ப நல்லவங்க. எல்லா உதவியும் நான் கேட்காமயே செய்யறாங்க.”

“அவங்ககிட்ட பணம் இல்ல தாரிணி. மனசு தான் நிறையா இருக்கு. அதான் உன்னை அவங்கள்ல ஒருத்தரா பாக்குறாங்க. அப்புறம் நான் கேட்க வந்தது, நீ எதாவது வேலை வேணும்னு கேட்ட இல்ல. இங்க நம்ம டிரைபல் வெல்ஃபேர்ல டிசைனர் ஒருத்தர் தேவைப்படறாங்க. நீ தான் நல்லா டிசைன் பண்ணுவியே. ஆனா இது ஒரு டெம்பரரி ஜாப் தான். உனக்கும், உன் மாமாக்கும் இங்க இருக்க தேவையான அளவு பணம் அதில கிடைக்கும். அப்புறம் நீ ஃப்ரீயா இருக்க டைம்ல உன் டிசைன்களை சில டெக்ஸ்டைல் கம்பெனிக்கு அனுப்பி வைக்க நான் ஹெல்ப் பண்றேன். அதுல டிசைன்க்கு ஏத்தமாதிரி பணம் கிடைக்கும் .”

“சார்.. உங்களுக்கு நான் திருப்பி திருப்பி தாங்க்ஸ் தான் சொல்ல முடியுது. இதுக்கு எல்லாம் நான் பதிலுக்கு என்ன செய்ய போறேன்னு தான் தெரியல்ல.”

“ப்ச்ச். இது என்ன தாங்க்ஸ் கிவ்விங் டேவா. நீ பேச ஆரம்பிச்சதுல இருந்து இதே சொல்ற. அப்புறம் இன்னொரு விஷயமும் சொல்லிடறேன். அதையும் நீ தாங்க்ஸ் லிஸ்ட்ல சேர்த்துக்க”

“சார் நீங்க பண்ணது எவ்ளோ பெரிய உதவி தெரியுமா? யாரும் இல்லாத இடத்துக்கு போறோம்னு எவ்ளோ பயந்துட்டு வந்தேன். என் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் செஞ்சு கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு என் வாழ்நாள் முழுசும் தாங்க்ஸ் சொல்லணும்”

“ஹான். உங்க மாமாவுக்கு நீ ட்ரீட்மெண்ட் அங்க எடுத்தேன்னு சொன்ன இல்ல. அதே மாதிரி இங்க டிரைபல் ஹெல்த் சென்டர் இருக்கு. அதே சித்தா மெடிசின் போல தான். அங்க அவரை நாளைக்கு நீ கூட்டிட்டு போய் காமி. அங்கேயே நீ தொடர்ந்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம். அப்புறம் நீ நாளைக்கு அவரை அங்க கூட்டிட்டு போக கார் அனுப்பறேன்.”

“சார் இதுக்கெல்லாம்..”

“கமான் தாரிணி. இதுக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தானே கேட்க போற. கண்டிப்பா பதிலுக்கு உன்கிட்ட உதவி கேட்பேன். அப்ப மறுக்காம செய். ஓகே வா. நாளைக்கு நீ அவரை கூட்டிட்டு போய் காமிச்சிட்டு நம்ம ஆஃபிஸ்க்கு அதே கார்ல வந்திடு. அதுவரைக்கும் பக்கத்து வீட்ல இருக்கார் இல்ல அந்த தாத்தா. அவர் உங்க மாமாவை பாத்துப்பார்.”

“தாங்க்ஸ் சார். நிச்சயமா நான் வந்திடறேன்.” என்று சொல்லி விட்டு துள்ளி குதித்து சந்திரனிடம் வந்தாள்.

“மாமா. தெரியாத இடத்தில் நமக்கு ஒரு எதிர்காலம் காத்திட்டு இருக்கு. கடவுள் இருக்கார்ன்னு இப்போ கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு மாமா.”

‘என்ன’ என்று சைகையில் கேட்டார் சந்திரன்.

நடந்ததை சொல்லியதும் அவள் கன்னத்தில் தட்டிக் கொடுத்தார்.

அடுத்த நாள் காலையில் அவள் தயாராகும் போது வெளியில் ஒரு கார் சத்தம் கேட்டது.

அவசரமாக தலையில் கிளிப்பை போட்டுக் கொண்டே வந்து கதவை திறந்தாள்.

ஆறடி உயரத்தில் அந்த பகுதிக்கு ஏற்றது போல வெண்மையான நிறத்தில், சுருள் முடியுடன், கழுத்தில் ஸ்கார்ஃப் சுற்றி, கண்களில் குளிர் கண்ணாடி அணிந்து ஒருவன் நின்றிருந்தான்.

மலையில் செல்வதற்கான தார் வாகனம் அங்கு இருந்தது.

அவனை பார்த்தால் கார் ஓட்டுநர் போல இல்லை.

வசதியாக வாழ்பவனை போல இருந்தான். கண்கள் கண்ணாடி வழி தெரியவில்லை. அவனின் ரோஜா நிற உதடுகள் தான் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

அவனை கடந்து செல்பவர்கள் அவனுக்கு வணக்கம் சொல்லி சென்றதை பார்த்த போது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘யாருடா இவன்’ என்று யோசித்தாள்.

அவள் விழித்துக் கொண்டு நிற்க, அவள் முன் சொடக்கு போட்டவன், “ஹாஸ்பிட்டல் போணும்னு சொன்னாங்க. யாரை கூட்டிட்டு போணும்” என்று ஹிந்தியில் கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் இருப்பதை பார்த்து, அவளை தாண்டி அவனாக வீட்டுக்குள் வந்தான்.

சந்திரன் இருப்பதை பார்த்து விட்டு, “வாங்க போகலாம்” என்று கூறி விட்டு அவரை அப்படியே தூக்கிக் கொண்டு நடந்தான்.

“ஹேய் பாத்து..” என்று கத்தினாள் தாரிணி.

திரும்பி அவளை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் வண்டியில் அவரை வசதியாக படுக்க வைத்தான்.

முன்பக்கம் வந்து கதவை திறந்து விட்டு அவளையே பார்த்தான்.

தாரிணிக்கு அவன்‌ யாரென்றும் புரியவில்லை, பிடிக்கவும் இல்லை.

அவசரமாக ஓடிப்போய் அவளது கைப்பையை எடுத்துக் கொண்டு ஓடிவந்து வண்டியில் ஏறினாள்.

அவன் அவளை ஒரு நொடி ஆழமாக கண் கண்ணாடியை இறக்கி பார்த்து விட்டு வண்டியை எடுத்தான். .

மலைப்பகுதி என்பதால் தாரிணி ஒவ்வொரு திருப்பம் போதும் சாய்ந்தாள்.

திரும்பி அவளை பார்த்து ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு சீட் பெல்ட் அவள் அணியவில்லை என்பதை கவனித்து அவனாக அருகில் வந்து அவளின் சீட் பெல்ட்டை எடுத்து மாட்டி விட்டான்.

பதறி போனாள் தாரிணி.

அவன் அருகாமையில் மூச்சுக் காற்று அவள் மேல் பட்டது. அகரனின் நினைப்பு அவள் நினைக்காமலே வந்தது.

அவன் அருகில் வந்த போது அது பிடித்திருந்தது.

இவன் அருகில் வந்த போது எரிச்சலாக இருக்கிறது.

அமைதியாக வெளியில் பார்த்துக் கொண்டே வந்தாள். அவன் அவளை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டே வந்தது வேறு அவளுக்கு கடுப்பாக இருந்தது.

சந்திரனை அடிக்கடி அவள் திரும்பி பார்த்துக் கொண்டாள். அவர் சாயாதபடி அவரை சுற்றிலும் ஒரு பெல்ட்டை இணைத்து இருந்தான்.

மருத்துவமனை எப்போது வரும் என்று இருந்தது அவளுக்கு. மெதுவாக ஒரு இந்தி பாடலை ஒலிக்க விட்டு அதனுடன் அவனும் விசிலால் அந்த பாட்டை பாடிக் கொண்டே வந்தான்.

ஒரு மணி நேர பயணத்தில் மருத்துவமனையை அடைந்தார்கள்.

மீண்டும் சந்திரனை தன் கையால் தூக்கியவன் அப்படியே அவளை திரும்பி பாராமல் உள்ளே சென்றான். இங்கும் அவள் அவன் பின் ஓட வேண்டியதாக இருந்தது.

மருத்துவ மூலிகைகள் மணம் அந்த இடத்தையே நிறைத்து இருந்தது.

மருத்துவரிடம் அவன் சரளமாக சந்திரனை பற்றி பேசிக் கொண்டே இருந்தான்.

தாரிணிக்கு ஆச்சர்யம். இவன் ஓட்டுநராக இருக்க வாய்ப்பே இல்லை.

அவருக்கு வழங்கி இருந்த சிகிச்சைகளை தாரிணியிடம் கேட்டு தெரிந்துக் கொண்டார் மருத்துவர்.

அங்கிருந்தவர்களில் யாரும் பெரிய படிப்பை முடித்த செவிலிகள் இல்லை. கிராமங்களில் இருந்தவர்களே உதவியாக இருந்தனர்.

ஆனால் இலங்கையில் செய்ததை போல சில சிகிச்சைகள் செய்தனர்.

சாப்பிட வேண்டிய மூலிகை மருந்துகளை தந்தனர். அது முடிந்த பின் மீண்டும் பயணம்.

அவர்கள் இடம் வரும் வரை அவன் வாயே திறக்கவில்லை. அதே போல் பாட்டை போட்டுக் கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான்.

வந்ததும் சந்திரனை படுக்க வைத்தவன் அவளுக்காக வெளியில் காத்து நின்றான். பக்கத்து வீட்டு பெரியவர் உள்ளே நுழைந்து தாரிணியிடம் அவர் சந்திரனை பார்த்துக் கொள்வதாக கூறியதும் வெளியில் நின்றவனை எட்டிப் பார்த்தாள்.

அவன் தான் அவரை அழைத்து இருப்பான் என்று அவளுக்கு புரிந்தது.

சந்திரனிடம் சொல்லி விட்டு அலுவலகத்திற்கு அவனுடன் சென்றாள்.

வரும் வழியில் அவளிடம் அவன் எதுவும் பேசவில்லை. அவளை அடிக்கடி திரும்பி பார்க்கவும் இல்லை. தாரிணிக்கு அது நிம்மதியாக இருந்தது.

மனம் பதட்டம் இல்லாமல் இருக்கவே வெளியில் தெரிந்த இயற்கை காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தன.

மேகாலயாவில் அவள் படித்த காலத்தில் இருந்த காட்சிகளை போல இங்கேயும் மலை அழகும், பச்சை பசேல் என்ற புல்வெளிகளும், ஆடுகளும், சிறிய குதிரைகளும் கம்பளி போர்த்திய மனிதர்கள் தேயிலை பறிப்பதும் அவ்வளவு அழகாக இருந்தன.

கன்னங்களில் இருபக்கமும் கைகளை வைத்துக் கொண்டு அவள் கண்கள் விரிய பார்த்துக் கொண்டே இயற்கைக்கு ரசிகையாக மாறிப் போனாள்.

அவளுக்கு தெரியாமல், முகத்தை திருப்பாமல் அவளை ஓரக்கண்ணால்
ரசனையாக அவன் பார்த்தான். .

ரோஜா வண்ண சுடிதாரில் இருந்தாள். கண்கள் துறுதுறுவென்று அலை பாய்ந்தன.

மார்போடு அவள் வரைந்த டிசைன்களின் ஃபைலை சாய்த்து அமர்ந்திருந்தாள். பாடலுக்கு ஏற்றவாறு மெதுவாக அவளது விரல்களால் அந்த ஃபைலில்
தாளம் போட்டுக் கொண்டு இருந்தாள்.

வண்டியின் ஓட்டத்திற்கு ஏற்றது போல் அவளின் காதுகளில் சின்ன ஜிமிக்கிகள் ஆடிக் கொண்டு இருந்தன. ஈர இதழ்கள் மெலிதாக நடுவில் விரிந்து இருந்தன.

வட இந்தியரின் முகவெட்டிற்கு மாறான தென் இந்திய தோற்றம்.

வெளிர் நிறமென்றாலும் மைதா மாவை குழைத்து வைத்தது போல் இல்லை.

சிறிது மஞ்சள் நிற அழகி.

கவர்ந்து இழுக்கும் உடல் வடிவம்.

அவளை முழுமையாக பார்த்து சின்னதாக சிரித்துக் கொண்டான்.

தாரிணியோ வெளியில் பார்த்துக் கொண்டு வந்ததில் அவன் அவளழகை ரசிப்பதை கவனிக்கவில்லை.

வண்டி மலைப்பாதையில் இருந்து மெதுவாக ஊருக்குள் சென்றது.

அவளது கவனமும் திரும்பியது.

அவனது கண்களும் வண்டிக்குள் இருந்து முழுமையாக சாலைக்கு திரும்பியது.

அவள் போக வேண்டிய அலுவலகம் வந்து இருந்தது. அவன் வண்டியை நிறுத்தியதும் தாரிணி இறங்கி உள்ளே நுழைந்தாள். அவனும் அவள் பின்னே வந்துக் கொண்டிருந்ததை கவனித்தாள். ஆனாலும் நேராக அலுவலரின் அறை நோக்கிச் சென்றாள்.

ரதீஷ் அவளை வரவேற்றார். பின்னாடி பார்த்து அவனையும் தலையசைப்பில் உள்ளே அழைத்தார்.

வந்தவன் லெதர் கிளவுஸ்களையும், கண் கண்ணாடியையும் கழட்டி மேஜையில் வைத்து விட்டு தாரிணி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

“தாரிணி. எப்படி இருக்கு இந்த ஊர். நான் இந்த ஸ்டேட்க்கு வந்து இரண்டு வருஷமாச்சு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு?”

“சார் பிடிக்கிறது இருக்கட்டும். முதல்ல ரொம்ப தேங்க்ஸ். மாமாவை பத்தி கூட கவலைப்படாத அளவுக்கு ஹாஸ்பிட்டல் முதல் கொண்டு பாத்து வச்சிருக்கீங்க. எனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.“

“ஹையோ.. நீ இப்படி தேங்க்ஸ் சொல்லிட்டே இருந்தா எனக்கு ரொம்ப ஷையா இருக்கு. நான் இங்க இருக்க மக்களோட வெல்ஃபேர்க்கு உதவி செய்யற ஆபிசர். சோ.. நீ கேட்டதுக்கு என் சக்திக்கு உள்பட்ட உதவிகளை செய்தேன். அதுக்கு இவ்வளோ தாங்க்ஸ் சொல்ல வேண்டாம்.”

“சார் அது என் கடமை சார். உங்களுக்கு என் சிட்டுவேஷன் தெரிஞ்சா நான் தாங்க்ஸ் சொல்றதுக்கு காரணம் புரிஞ்சுப்பீங்க.” என்று அடிக்கண்ணால் அவனை பார்த்தபடி ரதீஷிடம் சொன்னாள்.

“அதெல்லாம் மறந்திடு. இங்க வந்துட்ட இல்ல. பழையபடி பட்டாம்பூச்சி மாதிரி இருந்த தாரிணியை நான் இங்க பாக்கனும். உனக்கு வாரத்துல இரண்டு நாள் தான் இங்க வர வேலை. மீதி நாள்லாம் நீ இருக்க ஊருக்கு பக்கத்தில் இருக்க நெசவு பகுதிக்கு போய் அவங்கள்ட்ட உன் டிசைன்ஸ் எக்ஸப்ளெயின் பண்ணிட்டு வர வேண்டியது தான்.”

“நிச்சயமா சார். நீங்க சொல்ற வேலையை நான் கண்டிப்பா முடிப்பேன். எங்க போகனும்னு நீங்க சொல்லுங்க நான் விசாரிச்சிட்டு போறேன்.”

“நோ.. நோ. எங்கேயும் அலைய தேவையே இல்ல. நாளைக்கு இவர் உன்னை கூட்டிட்டு போய் அங்க காமிப்பார். அப்ப தெரிஞ்சுக்க. இங்க வரதுக்கும் இவர் கூடவே வந்திடு” ரதீஷ் சொன்னதும் சுவாரசியமில்லாமல் அவனைப் பார்த்தாள். அவனோ வைத்த கண் வாங்காமல் வாகாக அவள் பக்கம் திரும்பி உட்கார்ந்துக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

“ஹேய். ரெண்டு பேரும் அறிமுகம் ஆனீங்களா? இருக்காதுன்னு நினைக்கிறேன். இவர் அகில். என் தம்பி. பிடெக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிச்சிருக்கார். நம்ம டிரைபல் டிசைனிங் செண்டர்ல டிரைனர்.. இவர் ஒரு டெக்ஸ் டிசைனிங் கம்பெனிக்கு ஓனரும் கூட.
நம்ம டிரைபல் நெசவு யூனிட் அவர் கம்பெனில தான் இருக்கு. அங்க தான் உனக்கு வாரத்துல நாலு நாள் வேலை. அகில், இது தாரிணி. உனக்கு ஏற்கனவே எல்லாம் சொல்லியிருக்கேன். பாத்துக்க.”

ரதீஷ் சொல்ல சொல்ல தாரணிக்கு வியர்த்தது. இவனோடு தான் தனக்கு வேலையா.. கவலையில் அவள் முகம் சிறியதாக ஆனது.

“வேற எதுவும் வேணும்னா கேளு தாரிணி. சப்போஸ் உனக்கு அங்க எதாவது சப்போர்ட் வேணும்னா அகிலை எப்ப வேணா நீ கூப்பிடலாம். அங்க தான் ஒரு அகதி மாதிரி சுத்திட்டு இருப்பான்” என்று சொல்லி விட்டு சி
ரித்தார் ரதீஷ்.

‘சரிதான் ஆள் பாக்க தான் அரை மெண்டல்னு நினைச்சா, முழுசா அப்படித்தான் சுத்துவான் போல. இவனை வேற சமாளிக்கனுமா?’ மனதுக்குள் நினைத்தபடி அவனை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள்.




 
Status
Not open for further replies.
Top