ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் வானிலே- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 20

இரவு முழுதும் தந்த அசதியில் காலையில் நேரம் கழித்தே தான் தாரிணி எழுந்தாள்.

அவள் மேல் கைகளை போட்டுக் கொண்டு தூங்கியிருந்தவனின் கன்னத்தில் அழுத்தமாக தன் இதழ்களை பதித்து விட்டு, மெல்ல எழுந்தாள். அவளின் அசைவில், இதழ் முத்தத்தில் கூட அவன் எழுந்திரிக்கவில்லை.

தன் உடைகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டு, வந்தவளின் கண்களில் பட்டது அவள் மாமாவின் பை.

‘இன்று ஒரு நாள் தான் இருக்கிறது, அகரனிடம் அவரைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே’ என்று தாரிணி யோசித்தாள்.

அவரின் பையை திறந்து பார்த்தாள். சில உடைகளுடன் அந்த புகைப்படம் இருந்தது.

மெதுவாக எடுத்து தன் புடவையால் அதை துடைத்து பார்த்தாள். அவளுக்கு மிகவும் விருப்பமான படம். எப்பொழுதும் ஒரு பொக்கிஷம் போல் அதை பாதுகாத்து இருக்கிறாள்.

“அம்மா… நீங்க இப்போ இல்லையேன்னு இருக்கு. என் கஷ்டங்களை, வருத்தங்களை தான் உங்க கிட்ட சொல்லியிருக்கேன். ஆனா என் வாழ்க்கைலயே நான் சந்தோஷமா இருக்கிறது இப்போதான். அன்பான புருஷன்.. என் மேல் உயிரையே வச்சு இருக்கார். உங்களை மாதிரியே அவரோட அம்மாவும். என் மேலயும் அவங்களுக்கு அவ்ளோ பாசம்.. இது எல்லாம் நீங்க இருந்து பாத்து சந்தோஷப்பட்டிருக்கனும்.”

அகரன் எழுந்ததும் அவனை முதலில் கூட்டி வந்து காண்பிக்க வேண்டும் என்பதால் அந்த படத்தை கண் பார்வையில் வைக்க இடம் தேடினாள். அலமாரி‌ எதுவும் இல்லாததால் அவர்களின் உடைகள் இருக்கும் டிராலியின் மேல் வைத்து விட்டு, குளித்து
மீண்டும் உடை மாற்ற வந்தவளை பின் இருந்து அணைத்தான் அகரன்.

அவள் கையிலிருந்த சேலை நழுவி கீழே விழுந்தது. அதை பிடித்து அப்படியே அவர்கள் உடைகள் இருந்த பெட்டியின் மீது போட்டான்.

அகரனது கைகள் அவளது இடுப்பில் மாலையானது.

“நீங்க தானா..நான் பயந்துட்டேன்”

“என்னைத் தவிர யார் உன்னை இப்படி புடவை கட்டறப்ப கட்டிப்பிடிப்பாங்க”

“ஆமா. ஆமா. வேற யார் இந்த மாதிரி எப்போ‌ பாத்தாலும் இதே வேலையா இருப்பாங்க”

“புதுசா கல்யாணம் ஆன எல்லாரும் இதே வேலையா தான் இருப்பாங்க..”

“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சா” என்று அவனின் இரு கைகளையும் விலக்கி திரும்பி, அவளது பெரிய இரு கண்களை சிமிட்டி, அவன் கண்ணை பார்த்து கேட்டாள்.

“அடிப்பாவி.. எல்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இதை கேட்காம இப்ப வந்து கேட்கிற”

“ம்ம்.. நேத்து எங்க என்னை பேச விட்டீங்க.. நான் கேட்க?”

“அப்படியே ரீவைண்ட் பண்ணி பாரு. யார் நேத்து மேல சாய்ஞ்சு அத்தனை முத்தங்களா கொடுத்தது”

“போங்க..” என்று சிணுங்கியவளை, “வாங்கன்னு சொல்லனும்” என்று அவளை அவனது உடலோடு அணைத்தான்.

“நமக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சே.. அதனால் நடந்தது எல்லாம் தப்பில்ல..”என்று எங்கோ பார்த்தபடி சொல்லியவளின், முகம் திருப்பி, தாடையை நிமிர்த்தி, “இதையே தான் நான் இத்தனை நாளும் சொன்னேன். அப்பல்லாம் இல்லன்னு சொல்லிட்டு இப்ப நீயே இப்படி சொல்றினா..” என்று நிறுத்தி அவளின் உதடுகளை பார்த்தான்‌.

“சொல்றன்னா… “

“நேத்து நான் உன்கிட்ட சரியா நடந்திருக்கேன்னு அர்த்தம்”

“சரியாவா.. தப்பு தப்பா” என்று திருத்தினாள்.

“இது தப்புன்னா. உலகமே தப்பா இருக்குன்னு அர்த்தம்..”

“அப்படியா”

“ஆமா.. நான் சரியா நடந்ததால தான் நீ இப்படி இப்போ என் முன்னாடி நிக்கற” என்று மேலிருந்து அவளை கால் வரை அவன் பார்த்ததை தாரிணி பார்த்து ஒன்றும் புரியாமல் தன்னையே முழுதுமாக பார்த்தாள்.

அவளுக்கு வெட்கம் வந்ததை அவளது கன்னங்கள் சிவந்து காட்டிக் கொடுத்தது. அவசரமாக அவனையே மீண்டும் கட்டிக் கொண்டாள்.

அவளை தூக்கி அப்படியே ஒரு சுற்று சுற்றி இறக்கி அணைத்து,கட்டிலில் படுக்க வைத்தவன், அவளது உதடுகள் தொடங்கி மீண்டும் உடல் முழுதும் முத்தத்தால் சிவக்க வைத்தான்.

இரவில் நடந்த அவர்களின் சங்கமம் மறுபடியும் அரங்கேறியது.

அகரனை அணைத்து படுத்து இருந்தவள், “உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்.”

“சொல்லு பவதா.. “ என்று அவளை அணைத்து கன்னங்களில் இதழ் பதித்து அவள் கண்களை பார்த்தான்‌.

“நாம நாளைக்கு கிளம்பனும் இல்ல. அதனால நாம இங்க ஒரு இடத்துக்கு போகனும். உங்களுக்கு ஒருத்தங்களை காமிக்கனும்” என்று சொன்னவளை புரியாமல் பார்த்தான்.

“யாரது அவ்ளோ முக்கியமானவங்க? உன் ஃப்ரெண்டா. எங்க இருக்காங்க.. அவங்க?”

“ப்ரெண்டா..ம்ஹூம். இல்ல.. அதை விட முக்கியமானவங்க. நீங்க நேர்ல பாக்கத்தானே போறீங்க.”

“அப்படியா.. நான் ஒன்னு கேட்கறேன்.. நீ சொல்லு.. உன் லைஃப்ல இனி நான் எந்த இடத்தில் இருப்பேன்”

திரும்பி அவனது மார்பில் கைகளை ஊன்றி அவன் முகத்தை பார்த்து, “நீங்க வேற நான் வேறயா என்ன.. என் லைஃப்போட மொத்தமும் நீங்கதான்” என்று அவனின் உதடுகளில் அவள் இதழ்களை ஒற்றி எடுத்தாள்.

“இப்படில்லாம் நீ பண்ணா, அப்புறமா நாம யாரையும் போய் பார்க்க முடியாது”

“ஏன்.. ஒரு கிஸ் தானே”

“அதான் எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி” என்று சொல்லி அவளை மொத்தமாக கொள்ளையிடத் துவங்கினான்.

குமுதினி வெளியில் இருந்து குரல் கொடுத்ததும் அவசரமாக எழுந்து கிடைத்த உடையை எடுத்து மாற்றி கதவை திறந்தாள் தாரிணி..

அவளது முகத்தை பார்த்ததும் குமுதினிக்கு அவள் சந்தோஷத்தை தெரிந்து கொள்ள முடிந்தது.

“நேரம் ஆகுதேன்னு கதவை தட்டினேன் தாரிணி. மழைல அந்த ஓலைக் குடிசை தட்டில்லாம் கீழ விழுந்திடுச்சு. எப்படியும் இங்க தான் இருப்பீங்கன்னு நினைச்சேன். சாப்பிட வறீங்களா.. இல்ல எடுத்துட்டு வரவா?”

“அக்கா.. உங்களுக்கு எதுக்கு சிரமம். அவர் இன்னும் ரெடியாகல. ரெடியானதும் நாங்களே கீழ வரோம்..”

“சரிம்மா.. வாங்க..” என்று குமுதினி சென்றதும், உள்ளே வந்தவள்,

“பாருங்க. அக்கா கூப்பிட்டதும் அவசரம் அவசரமா எதையோ எடுத்து டிரஸ்னு மாத்திட்டு போனேன். அவங்க என்ன நினைச்சிருப்பாங்களோ..”

“அவங்களும் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகளை பெத்து இருக்காங்க. எல்லாம் தெரியும் அவங்களுக்கு. ஒன்னும் நினைக்க மாட்டாங்க..”

“ம்ம்.. உங்களுக்கென்ன.. அவங்க என்ன தான் எதாவது நினைச்சு இருப்பாங்க… சரி குளிச்சு ரெடியாகுங்க. நாம கீழ போய் சாப்பிட்டுட்டு அப்படியே வெளியே போலாம்..நான் சொன்ன இடத்துக்கு போய் அவங்களை பாக்கலாம்”

“பவதா…ஃபார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன் .. நீங்க எங்க போனும்னும் சொல்லல.. யாரை பாக்கனும்னும் சொல்லல.”

“அதான சர்ப்பரைஸ்.. என் லைஃப்ல முக்கியமானவங்கன்னு சொன்னேன் இல்ல. இங்க வீட்டை கட்டனும்னு சொன்னேன் இல்ல. அந்த வீட்டுக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இருக்கு.. நீங்க அவங்களை பார்த்தா சந்தோஷப்படுவீங்க.”

“ஓ அவ்ளோ இம்பார்டண்ட் பர்சனா..”

“ஆமா. நேத்தே நான் அங்க போகனும்னு நினைச்சேன். வந்ததும் வீட்டை பத்தி பேசினோம்.. அப்புறம் உங்களை பத்தி பேசினோம்.. அப்புறம் உங்களுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அப்புறம்.. அப்புறம்”

“அப்புறம் என்ன.. “ ஆவலுடன் தாரிணியையே பார்த்தான்.

“அப்புறம் மழை வந்துச்சு.அவ்வளவு தான்.” உதட்டை பிதுக்கி அவனை பார்த்து சொன்னாள்.

“அந்த மழைக்கு முன்னாடியும், பின்னாடியும்… ”

“மழைக்கு முன்ன அந்த வீட்டில, மழைக்கு அப்புறம் இந்த வீட்டில இருந்தோம்.. வேறென்ன நடந்துச்சாம்.”

“ஓ.. அப்படி.. உனக்கு செலக்ட்டிவ் அம்னீஷியான்னு எனக்கு தெரியாம போச்சு. சோ, இப்ப நாம என்ன பண்றோம்னா..?”

“என்ன… “

“உனக்கு நேத்து நடந்ததெல்லாம் ஞாபகம் வர வைக்க என்னால முடிஞ்சதை பண்ணப் போறேன்.”

“நோ.. நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு தெரியுது.. கிளம்புங்க..நேரம் ஆகுது.”

“உனக்குத்தான் ஞாபகம் இல்லையே.. நினைவுப் படுத்த வேண்டியது என் கடமை இல்லையா.”

“எல்லாம் ஞாபகம் இருக்கு.. நான் சும்மா சொன்னேன்..நீங்க குளிச்சுட்டு கிளம்புங்க. நானும் அதுக்குள்ள கிளம்பறேன்” என்று அவனை தள்ளிக் கொண்டு போய் குளியலறையில் விட்டாள்.

இருவரும் தயாராகி குமுதினி வீட்டுக்கு வந்தனர்.

இருவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு, “மழை இப்படி வரும்னு நினைக்கல தாரிணி.. நீ அங்க இருக்கனும்னு ஆசைப்பட்ட.. பாவம் இருக்க முடியல இல்ல.. நீங்க அடுத்த முறை வரதுக்குள்ள அந்த வீடு ரெடியாயிரும். அப்புறம் உன் ஆசைப்படி நீ அங்க இருக்கலாம். மழையோ, வெயிலோ எதுவும் செய்யாது.” என்று சொன்னார் குமுதினி.

“இல்லக்கா.. மழை வலுக்கற வரை அங்க தான் இருந்தோம்.. இப்போவே எனக்கு திருப்தி தான்.” என்று சொல்லும் போதே தாரிணி முகம் சிவந்தாள்.

அகரன் அடக்க முடியாத சிரிப்புடன் சாப்பிட அவனுக்கு புரை ஏறியது.

“பாத்துங்க தம்பி. தண்ணி வேணா குடிங்க” என்று அவன் பக்கம் தண்ணீரை நகர்த்தினார் குமுதினி.

தாரிணி அவனை பார்த்து முறைத்துக் கொண்டு கண்ணால், “ஏன் இப்படி” என்று சொன்னாள்.

“அது அம்மா நினைக்கறாங்க போல” என தாரிணியை பார்த்து அசடு வழிந்தான்.

“உங்க அம்மாவை பத்தி நிறைய சொல்லுவா தாரிணி. இவ அம்மாவும் உங்க அம்மா போல ரொம்ப அழகு.. உன் அம்மா ஃபோட்டோ காமிச்சியா தம்பிக்கு” என அகரனை பார்த்து சொல்லி தாரிணியை பார்த்து முடித்தார்.

“இல்லக்கா. காலைல எடுத்து வச்சேன்.. அதுக்குள்ள இவர் எழுந்து ரெடியாக லேட்டாயிட்டுன்னு இங்க வந்திட்டோம் அப்படியே”

“இருங்க. ரொம்ப பழைய ஃபோட்டோ ஒன்னு இருக்கு.. தாரிணி அம்மா இங்க வந்த புதுசுல நான் பத்தாவது படிச்சிட்டு இருந்தேன். இவ அவ அம்மா வயித்தில் இருந்தா. அப்போ எடுத்த படம் அப்படியே இருக்கு என்கிட்ட..அதை காமிக்கறேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று ஒரு பழைய புகைப்படத்தை எடுத்து வந்து காண்பித்தார்.

அதில் தாரிணியை உரித்து வைத்தது போன்று ஒரு பெண் வயிறு மேடிட்டு குமுதினியோடு நின்றிருந்தார். பார்க்க மிகவும் அழகாக இருக்க, அகரன் தாரிணியையும், அவள் அம்மாவையும் மாறி மாறி பார்த்தான்.

“ஒரே மாதிரி இருக்காங்க இல்ல.. ரொம்ப அழகு” என்றான்.

“ஆமா.. தாரிணி ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கறப்ப இங்க இருந்து போனாங்க. அவ பெரிய பொண்ணா ஆனதும் எனக்கு ஃபோட்டோ அனுப்பினா.. பார்த்தா அப்படியே அவங்க அம்மாவை உரிச்சு வச்சுட்டு இருந்தா..இங்க பழைய ஆளுங்க எல்லாருக்கும் அதை காமிச்சேன்‌. எல்லாருமே அதே தான் சொன்னாங்க. பாவம் இவ வளரதை பார்க்காமலே போயிட்டாங்க”

“ஓ.. அப்போ மேகாலயா போனதும் அவங்க இறந்துட்டாங்களா.. நான் எதையுமே தாரிணிட்ட இதுவரைக்கும் கேட்டதில்ல” என்று சொன்னவனை அதிசயமாக பார்த்தார் குமுதினி.

அவனை பார்த்து விட்டு, தாரிணியை பார்த்து கண்களாலே ‘எதுவும் சொல்லவில்லையா’ என்று கேட்டார். தாரிணி இல்லையென்று தலையை ஆட்டினாள்.

“எனக்கு இந்த படம் ஒரு காப்பி வேணும். ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்” என்று அதை அவனது அலைபேசியில் எடுத்து சேமித்தான்.

“தாரிணி… எப்போ ஃப்ளைட்..நீ அங்க எப்போ போக போற..”

“அக்கா.. நாளைக்கு காலைல தான் ஃப்ளைட். அதான் இன்னிக்கே போய் பாத்துட்டு வந்திடலாம்னு இருக்கோம்..”

“அக்கா..இப்போ வரைக்கும் இவ யாரை பாக்க போறோம்னு சொல்லவே இல்ல.. நீங்களும் சர்ப்பரைஸ்னு இதுவரைக்கும் அதை அப்படியே மெயிண்டைன் பண்றீங்க பாருங்க” என்றான் அகரன்.

“அப்படி இல்ல தம்பி. இவ தான் சொல்ல வேணாம்னு சொன்னா..”

“இட்ஸ் ஓகே.. நான் சும்மா சொன்னேன்.. இவ கொடுக்கிற பில்ட்அப்க்கு அது யாருன்னு நேர்ல போய் பார்த்துக்கறேன்.”

“நேரத்தோட போய்ட்டு வரனும். சாயந்திரம் மழை ஆரம்பிச்சிடும்” என்றார்.

“மறந்தே போயிட்டேன்.. நான் கேஷ் டிராப் பண்ணிட்டு அப்படியே அந்த கான்டிராக்டரை பார்த்திட்டு வந்திடறேன். நீ ரெடியா இரு தாரிணி. நான் வந்ததும் கிளம்பிடலாம்” என்றான் அகரன்.

“எதுக்கு.. இப்போ கேஷ். நம்மட்ட இருக்கிறதே போதுமே.. அக்கா கான்டிராக்டரை பார்த்து பேசிப்பாங்க. வாங்க நாம போவோம். அங்க விசிட்டர்ஸ் ஹவர் முடிஞ்சிட போகுது.” என்றாள் தாரிணி.

“ஹேய். வீடு கட்ட அமவுண்ட் வேணும் இல்ல. அவ்ளோலாம் நான் கையில் வச்சிட்டு இல்ல. அதுவும் அந்த கான்ட்ராக்டர்ட்ட நான் கொஞ்சம் மாடிஃபிக்கேஷன் சொல்ல வேண்டியிருக்கு..நேத்து நைட் தான் தோணுச்சு.. “ என்று தாரிணியை பார்த்து கண்ணடித்தான்.

குமுதினி சிரித்துக் கொண்டே, “சரி போய்ட்டு சீக்கிரமா வாங்க தம்பி.. அதுக்குள்ள நானும் தாரிணியும் ரெடியாகறோம். நானும் உங்க கூட அங்க வரேன்.” என்று சொல்லிய வரை வினோதமாக பார்த்து விட்டு வெளியேறினான் அகரன்.

தாரிணி இதுவரை நடந்த கதைகளை குமுதினியிடம் சொல்லியும், கேட்டும் நேரத்தை கடத்தினாள். கண்கள் வாசல் பக்கமே இருந்தது. அவன் வந்ததும்
அவளின் மாமாவை மருத்துவமனையில் சென்று சந்திக்க வேண்டும் என்ற தவிப்பு அவள் முகத்தில் தெரிந்தது.

சொன்னது போலவே சிறிது நேரத்திலேயே அகரன் வந்ததும் தான் அவள் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

“அக்கா..அவர் வந்துட்டார். வாங்க போகலாம்..” என்று அவசரப்படுத்திய தாரிணியை,

“இரு பவதா. இங்க பாருங்க அக்கா.. நான் கரன்சி மாத்தியே கொண்டு வந்துட்டேன். கான்டிராக்டர்ட்ட பேசி ஃப்ளான் கொஞ்சம் மாத்தி எஸ்டிமேட்டும் வாங்கிட்டேன். எந்த காரணத்துக்காகவும் கட்டிட வேலை நிக்க கூடாது. நாங்க கூடிய சீக்கிரமே இங்க வருவோம். அடுத்த மாசத்துக்குள்ள முடிச்சிடலாம்னு அவர் சொல்லியிருக்கார். நீங்க கொஞ்சம் கிட்ட இருந்து எல்லாம் பாத்துக்கோங்க”
என்று அவரின் கையில் அத்தனை பணத்தை கட்டாக கொடுத்தான்.

தாரிணி அவனையே பார்த்தாள்.

குமுதினி,”என்ன தம்பி வேணும்னா உங்ககிட்ட கேட்க போறேன். கொஞ்சம் கொஞ்சமா அனுப்புனா கூட போதுமே.. இவ்வளோ பணத்தை நான் எப்படி வச்சு பாதுகாப்பேன்”

“நீங்க கால் பண்றப்ப நாங்க ஆயிரத்தெட்டு டென்ஷன்ல வேலைல இருப்போம் அக்கா. ஃபோன் அட்டெண்ட் பண்ண முடியாம போகலாம். அதனாலலாம் கட்டிட வேலை தடையாகிட கூடாது இல்ல.. இதுக்கு மேல தேவைப்பட்டா எனக்கு இல்லன்னா பவதாக்கு கூப்பிடுங்க“ என்று சொல்லி பணத்தை தந்தான்.

“பவதா.. நீ கிளம்பிட்ட இல்ல. நான் ஒரு அஞ்சு நிமிஷத்தில் வந்திடறேன். என் டேப் மாடில இருக்கு. நேத்து மழைல நனைஞ்சிட கூடாதுனு டிராலில வச்சேன். மறந்திட்டு வந்திட்டேன். ஒகே வா” என்று அவளை தோள் தட்டி சொல்லி விட்டு இரண்டு இரண்டு படிகளாக மாடி ஏறினான்.

அவன் சென்றதும், “தாரிணி, ஏற்கனவே அவர் அனுப்பின பணத்தில் தான் அந்த வீடு கட்ட ஆரம்பிச்சோம். அதுலயே கொஞ்சம் மிச்சம் இருக்கு. இந்த பணத்தை நீயே கொண்டு போ.. கொஞ்சம் கொஞ்சமா நான் வாங்கிக்கறேன். இவ்வளோ பணம் வச்சிட்டு..”

“அக்கா.. அவர் சொல்லிட்டா அதுக்கு மறுபேச்சு இல்லக்கா. நீங்க பேங்க்ல போட்டு வச்சுக்கோங்க. அப்பப்ப தேவைகளுக்கு எடுத்துக்கோங்க.

அம்மா இருந்த வீட்டை ஒரு ரூம் தான் போடனும்னு நினைச்சேன். இவர் ஏற்கனவே பெரிய வீடா தான் கட்ட சொல்லியிருக்கார். இப்போ இன்னும் ஆல்ட்ரேஷன் சொல்லிருக்கார்.. இவருக்கு என்ன நான் திருப்பி தர போறேன்னு தெரியல. என் வாழ்க்கை முழுக்க அவரை சந்தோஷமா வச்சுக்கனும். ”

சொல்லிய தாரிணியை தோள் மேல் தட்டிக் கொடுத்தவர், “சின்ன வயசுல இருந்து நீ தனியா இருந்தே கஷ்டப்பட்ட தாரிணி. உங்க மாமா வேலை விஷயமா வெளியூர் போறப்பலாம் குட்டி பொண்ணா இங்க தான் இருப்ப. அப்பவே இந்த பொண்ணுக்கு என்னடா விதி.. அப்பா, அம்மா இல்லாம இப்படி தனியா கஷ்டப்பட்டுதேன்னு நினைச்சுப்பேன். நல்லகாலம் உங்க மாமா உன்னை பொண்ணு மாதிரி பாத்துக்கிட்டார். ஹ்ம்ம். இப்போ இந்த தம்பியை பார்த்தா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். அதை நேர்ல பாக்கனும் தான் நான் கூட வரேன்னு சொன்னேன்.”

“ஆமா அக்கா. என் வாழ்க்கைல நான் ரெண்டு பேருக்கு கடமை பட்டிருக்கேன். மாமா, அப்புறம் இவர். மாமாவை கூட்டிட்டு போகலாம்னு தான் வந்திருக்கேன். ஆண்ட்டிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். ஆனா இவர்ட்ட இன்னும் சொல்லல. நேர்ல மாமாவை பார்த்தா அவரே கூட்டிட்டு போகலாம்னு தான் சொல்வார். எப்படியோ இனிமே மாமாவை கடைசி வரைக்கும் நான் என் கண் முன்னாடி வச்சு நல்லா பாத்துக்கணும்.”

“இப்பவே கூட்டிட்டு போகப் போறியா. இதெல்லாம் முன்னாடியே நீ தம்பிட்ட சொல்லியிருக்கனும் தாரிணி. இப்போ உங்க ரெண்டு பேருக்கு தானே ஃப்ளைட் டிக்கெட் போட்டிருப்பார். திடீர்னு அவரை கூட்டிட்டு போகனும்னு சொன்னா எப்படி டிக்கெட் அரேஞ்ச் பண்ணுவார்”

“அக்கா.. அவரை பத்தி உங்களுக்கு தெரியல. உடனே இந்த டிக்கெட்ஸ் கேன்சல் பண்ணி அடுத்த ஃப்ளைட்டுக்கு புக் பண்ணுவார். மாமாவை பத்தி அவர்ட்ட சொல்ல சந்தர்ப்பமே அமையலக்கா. கிடைச்சிருந்தா சொல்லியிருப்பேன். அதனாலதான் இப்போ சர்ப்பரைஸா கூட்டிட்டு போறேன்”

“இல்ல தாரிணி.. எனக்கு என்னமோ தப்பாவே படுது. முன்னாடியே இதெல்லாம் சொல்லித்தான் நீ கல்யாணம் பண்ணியிருக்கனும். இப்போ கூட்டிட்டு போய் சொன்னா தம்பி எப்படி எடுத்துக்கும். அவர் என்ன மூணாவது மனுஷனா.. நீ சாவகாசமா அறிமுகம் பண்ண. உன் குடும்பம் இல்லையா?” சொல்லிய குமுதினியையும், தன் கழுத்தில் இருக்கும் தாலியையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

“அக்கா. அகரன் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. அவர் நான் என்ன சொன்னாலும் கேட்டுப்பார். நம்புவார். அவ்ளோ லவ் என் மேல..” பெருமிதம் வழிய தாரிணி சொல்லிக் கொண்டு இருக்கும் போது சரியாக அங்கு
வந்து வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அகரன் கோபத்துடனும், கண்களில் வழியும் கண்ணீரை கூட துடைக்க இல்லாமல் அவன் பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு காரை நோக்கி சத்தமில்லாமல் சென்றான்.




















 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 21

குமுதினியுடன் பேசிக்கொண்டு இருந்த தாரிணி மணியை பார்த்தாள். அரை மணி நேரம் ஆகியும் அகரன் வராததால் வெளிப்புறம் திரும்பி பார்த்தாள்.

“அகரன் தம்பி வந்திடறேன்னு சொல்லிட்டு போய் இவ்வளோ நேரம் ஆகுதே தாரிணி. இன்னும் காணோம்.. “ என்று குமுதினி சொல்லியதும் தன் அலைபேசியில் அவனை அழைத்து பார்த்தாள். ஒலித்துக் கொண்டே இருந்தது தவிர அவன் எடுக்கவேயில்லை.

“அக்கா, கால் அட்டென்ட் பண்ண மாட்டேங்கிறார்க்கா. நான் போய் மாடில பாத்திட்டு வரவா?”

“நீ இரு தாரிணி‌. நான் போய் பார்த்திட்டு வரேன்”
என்று குமுதினி மாடிக்கு சென்று பார்க்க, அந்த அறையில் யாருமில்லை.

அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கீழே இறங்கிய குமுதினி, “தாரிணி மேல தம்பி இல்லையே.. எங்க போயிருக்கும். பின்னாடி வீட்டிலேயும் பாத்திட்டு வந்திட்டேன். அங்கயும் இல்லையே..”

“இல்லையா.. எங்க போயிருப்பார் அக்கா. என்கிட்ட சொல்லாம எங்கேயும் போக மாட்டாரே.”

மீண்டும் மீண்டும் அவன் அலைபேசிக்கு அவள் முயற்சித்தும் அவனின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டது என்று தான் வந்தது.

“எதாவது வேலையா பக்கத்தில் எங்கயாச்சும் போயிருக்கும் தம்பி. கொஞ்ச நேரம் பாக்கலாம் தாரிணி.”

“அக்கா. இங்க என்ன வேலை இருக்க போகுது?. அவருக்கு இங்க எந்த இடமும் தெரியாதே..அப்படியே இருந்தாலும் நாம இங்க தானே இருக்கோம். சொல்லிட்டு தானே போனும்.. எப்படி அப்படி போவார்.”

“அதெல்லாம் அவருக்கு தெரியாமலா காண்டிராக்டரை போய் பாத்துட்டு வந்தார். ஆம்பளைங்க எங்கனாலும் விசாரிச்சு போயிடுவாங்க தாரிணி.”

“மாமாவை போய் பாக்க டைம் வேற ஆகுது அக்கா. எப்போ மாமா பத்தி பேச்சு வந்தாலும் இப்படித்தான் தடங்கலா போயிடுது. அதனால்தான் அவர்ட்ட ஊர்ல கூட டீட்டெய்லா சொல்ல முடியல. நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப மாமா இங்க ட்ரீட்மெண்ட்ல இருக்கார்னு சொன்னேன். அவர் ஞாபகத்தில் வச்சுக்கல போல.. யாரை போய் பாக்க போறோம்னு கேட்டுட்டே இருந்தார்..”

“ஒரு வேளை நீ சஸ்பென்ஸு, சர்ப்பரைஸ்னு சொன்னதால, தம்பி மட்டும் அங்க போய்ட்டு உனக்கே சர்ப்ப்ரைஸ் கொடுக்க மாமாவை கூட்டிட்டு வருதோ என்னமோ..”

“அக்கா.. அப்படில்லாமா இருக்கும்..ஹாஸ்பிட்டல் எங்கன்னு கூட நான் அவர்ட்ட சொல்லலியே..”

“உனக்கு தெரியாமயே இங்க வீட்டையே கட்டிடுச்சு. என்னை யார்னே தெரியாம அவ்ளோ பணத்தை வேற அனுப்பி வச்சுச்சு. எல்லாமே உன் சந்தோஷத்துக்காக தான்...”

“அது தெரியும் அக்கா.. ஒரு வேளை நீங்க சொல்ற‌ மாதிரி அங்க போயிருப்பாரோ.. நாமளும் அப்ப அங்க போலாம் வாங்க.. “

“அப்ப தம்பி உனக்கு கொடுக்க நினைக்கிற சர்ப்ரைஸ் என்ன ஆகிறது”

“அக்கா.. எனக்கு மனசு அடிச்சுக்குது அக்கா. அவர் அங்க தான் இருக்கார்னு தெரிஞ்சுக்கிட்டா நிம்மதியா இருப்பேன். அதுக்காகவாவது போலாம் வாங்க”

“நீ ஒன்னும் கவலைப்படாத. வேற எங்கேயும் போயிருக்க மாட்டார். அங்க தான் இருப்பார்னு எனக்கு என்னமோ தோணுது..”

குமுதினியும், தாரிணியும் மருத்துவமனைக்கு சென்றனர்.

“சந்திரன், நம்பர் 16, வர்ம மருத்துவம் பிரிவு அங்க பாக்கனும்” முன் அலுவலகத்தில் பெயரை பதிந்து விட்டு உள்ளே சென்றனர்.

குமுதினியின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள் தாரிணி. அகரன் வந்த வண்டியை வெளியில் பார்க்கவில்லை. எங்கேயாவது இருந்து ‘பவதா’ என்று அழைத்து விட மாட்டானா என்று பதைபதைத்தது.

சித்த மருத்துவமனை என்பதால் பல மரங்கள், மூலிகை செடிகள் என்று ஒரு சிறிய வனம் போல இருந்தது அந்த மருத்துவமனை.

சிகிச்சை குடில்கள் ஒவ்வொரு நோய் பிரிவிற்கும் தனித்தனியாக இருந்தன.

ஒவ்வொரு பிரிவை தாண்டும் போதும் தாரிணியின் பார்வை அலைபாய்ந்தது.

“தாரிணி இங்கதான். வா.. “ என்று இடப்பக்கம் திரும்பினார் குமுதினி.

ஒரு பக்கம் அவளின் மாமாவை இத்தனை நாட்கள் கழித்து பார்க்க போகிறோமே என்ற படபடப்பு, மறுபக்கம் இதுவரை அகரனை காண முடியவில்லையே என்ற துடிதுடிப்பு.

கலவையான உணர்ச்சியில் அவளின் முகம் வெளுத்திருந்தது.

‘என்ன ஆகியிருந்தாலும் நேற்றே வந்தவுடன் முதல் வேலையாக அகரனை நானே இங்கு கூட்டி வந்திருக்க வேண்டும்.. இப்போது தேவையில்லாமல் இவ்வளவு குழப்பம்..’ இதயம் படபடவென அடித்துக் கொண்டு இருக்கும்போதே அவளின் மாமா சந்திரன் படுத்திருந்த படுக்கை கண்ணில் பட்டது.

ஒரு நொடி எல்லாம் மறந்தாள்.

தாயும் தந்தையும் ஆனவராயிற்றே. உடல் நடுங்கியது. கிட்டத்தட்ட இத்தனை மாதம் கழித்து பார்க்கிறாள்.

அவள் மாமாவுக்கு பக்கவாதம் வந்தவுடன் குமுதினி தாரிணியை அழைத்து விஷயத்தை சொன்னார்.

பணம் கிடைக்காததால் அவளால் உடனே கிளம்பி வரவும் முடியவில்லை. அங்கேயே பதறி துடித்து அழுதாள்.

வாய் திறந்து ஒரு வார்த்தை பேச முடியாவிட்டாலும் சந்திரன் குமுதினியிடம் தாரிணி பரீட்சை பாதிக்கும் என்பதால் சைகையிலேயே சொல்லி அவளை இங்கே வரவே விடவில்லை.

தாரிணிக்கு தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கஷ்டப்பட்டு பல்லைக் கடித்து கொண்டே கடைசி வருட பரீட்சைகளை முடித்தாள். வேலை தேடி அவசரமாக சென்னை சென்றதும் அதற்கு தான்.

குமுதினி தாரிணிக்கு ஆறுதல் சொல்லி தான் பார்த்துக் கொள்வதாக சொல்லியிருந்தார். இத்தனை நாட்கள் சத்திர சிகிச்சைக்கு கூட அவள் மாமா சேர்த்து வைத்திருந்த பணம் தான் செலவாகி கொண்டு இருந்தது.

“மாமா….” இத்தனை நாட்கள் பார்க்காமல் இருந்தது, இப்போது கண்முன் அவர் அப்படி படுத்துக் கிடந்ததை பார்த்ததும் அகரனை கூட மறந்து ஓடினாள்.

அவளின் குரலுக்கு சந்திரன் கண் விழித்து பார்த்தார். அவரால் அவளுக்கு கண்ணீர் மூலம் தான் பதில் சொல்ல முடிந்தது.

தலையை ஆட்டி அருகில் அழைத்தார்.

தாயை கண்ட கன்று போல் ஓடி போய் அவர் கைகளை
பிடித்துக் கொண்டாள்.

அவரின் கை ஓரளவு இயக்கத்திற்கு வருவதால், அவளின் கையை பிடித்துக் கொண்டு தலையை தடவி கொடுத்தார்.

சிறு வயதில் வாய் ஓயாது அவளிடம் அவள் அம்மாவையும் அவர்களின் பாசத்தை பற்றியும் சொல்லிக் கொண்டே இருந்தவர் இன்று ஒரு வார்த்தை கூட பேசாது இருப்பது பார்த்து அவர் கைகளின் மீது சாய்ந்துக் கொண்டு தாரை தாரையாக கண்ணீர் விட்டு அழுதாள்.

குமுதினி அருகில் அமர்ந்து தாரிணியை நிமிர்த்தி தன் தோளின் மீது சாய்த்துக் கொண்டார்.

“தாரிணி.. அழாத. மாமா மனசு கஷ்டப்படும் இல்ல. அவர்ட்ட பேசு.”

“மாமா.. எப்படி இருக்கீங்க. என்னால் இப்படி உங்களை பாக்கவே முடியல. எத்தனை வருஷம் எனக்காக ஓடியோடி வேலை பாத்தீங்க. இப்போ இப்படி..” என்று அழுதவளின் கையை பிடித்து தட்டிக் கொடுத்தார்.

“நீங்க கவலைப்படாதீங்க மாமா. இனிமே நீங்க தனியா இங்க கஷ்டப்பட வேண்டாம்.. நான் அவர்ட்ட சொல்லி. இன்னிக்கே கூட்டிட்டு போறேன்..” என்றவளை புரியாமல் பார்த்தார் சந்திரன்.

“தாரிணி அதெல்லாம் அப்புறமா சொல்லிக்கலாம். அகரன் தம்பிட்ட இன்னும் நீ எதுவுமே சொல்லல. அமைதியா இரு” என்று அவளின் முதுகில் தட்டி குமுதினி சொன்னார்.

“ம்ம்ம்.. “என்று சொல்லிக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தாள். அவன் வந்திருந்தால் மாமா அவனை பற்றி சொன்னதும் இப்படி விழித்திருக்க மாட்டார் என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறியது. அகரன் எங்கு சென்று இருப்பான் என்பது அவளுக்கு இப்போது பெரிய கேள்வியாக இருந்தது.

அவள் மாமாவுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகளை கேட்டு கொண்டவள், அந்த நேரம் வந்த மருத்துவரிடம் அவளை அறிமுகப் படுத்திக் கொண்டு அவள் மாமாவை இப்போது வீட்டிற்கு கூட்டி செல்லலாமா? என்றும் கேட்டுக் கொண்டாள்.

“தாராளமா கூட்டிட்டு போகலாம். நீங்க வெளியூர் இருக்கறீங்க, யாரும் பார்த்துக்க இல்லைன்னு சொன்னதால் தான் இங்க தங்கிக்க சொன்னோம். நீங்க கூட்டிட்டு போய்ட்டு வாரம் ஒரு முறை அழைச்சுட்டு வந்தா போதும்..நான் கொடுக்கற மருந்துகளை கொடுத்து ஆயில் நல்லா அப்ளை பண்ணா போதும். ”

“இன்னும் எவ்வளவு நாள் ஆகும் டாக்டர் சரியாக”
என்று கேட்டுக் கொண்டாள்.

“இன்னும் ஒரு ஆறு மாசம்.. ஒரு வருஷம்.. அவர் மனசை எதுவும் பாதிக்காத மாதிரி பாத்துக்கணும். மருந்தும் மனசும் அவரை கண்டிப்பா குணப்படுத்தும்.” மருத்துவர் சொன்னதும் சந்திரனை உடனே கூட்டி போக முடியாது முதலில் அகரனிடம் சொல்ல வேண்டும் என்று யோசித்தாள்.

“அக்கா.. அவர்ட்ட சொல்லாம இன்னிக்கே டிஸ்சார்ஜ் பண்ண முடியாது இல்ல. முதல்ல அவரை பார்ப்போம். ஃப்ளைட் பொறுத்து வந்து மாமாவை கூட்டிட்டு போகலாம்..”

“அதை தானே நானும் சொன்னேன். சரி மாமாட்ட சொல்லிட்டு வா.. விசிடட்ர்ஸ் ஹவர்ஸ் முடிய போகுது..” என்றார் குமுதினி.

“மாமா.. நாம எப்படி இருந்தாலும் இன்னிக்கு நைட் இல்ல நாளைக்கு நம்ம வீட்டுக்கு போகப் போறோம். உங்களுக்கு நிறைய விஷயங்களை நான் சொல்லனும். கண்டிப்பா நீங்க ரொம்ப சந்தோஷப்படுவீங்க. நான் போய்ட்டு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு வரேன். நீங்க பத்திரமா இருங்க.” என்று அவரின் கைப்பிடித்து தட்டி கொடுத்து விடைப்பெற்று குமுதினியுடன் கிளம்பினாள்.

“அக்கா.. இங்க அவர் இருப்பார்னு எவ்ளோ நம்பிக்கையோட வந்தேன் இப்போ இங்கேயும் இல்லையே.. எனக்கு கால் பண்ணல. அவர் ஃபோனும் நாட் ரீச்சபிள்னு வருது..”

“அதான் எனக்கும் புரியல தாரிணி. தம்பி இங்க வந்திருக்கும்னு நானும் நம்பிக்கையா வந்தேன். எங்க போயிருக்கும்?”

“ ஃபோன் எதாவது பிரச்சினையா.. நேத்து மழைல நனைஞ்சு எதாவது ஆகியிருக்குமோ..? ஒரு வேளை வேற எங்கயாச்சும் போய்ட்டு வீட்டுக்கு போயிருப்பாரோ..?” கேள்விகளால் தன்னையே குடைந்துக் கொண்டாள்.

“தெரியலையே தாரிணி.. இப்ப நாம என்ன பண்றது..?”

“அக்கா அவர் வீட்டுக்கு தான்‌ போயிருப்பார். என்னை காணோம்னு தவிச்சிருப்பார். வாங்க உடனே வீட்டுக்கு போகலாம்.” என்று அவசரப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வந்தாள்.

அங்கு அகரன் வந்ததற்கான தடயமே இல்லை.

அவன் சென்ற காரும் அங்கு இல்லை. அவனும் அங்கு இல்லை.

வேகமாக மாடிக்கு சென்றாள். அங்கும் அகரன் இல்லை.

சுற்றி பார்த்து கையை பிசைந்துக் கொண்டு நின்றாள். மீண்டும் அவன் அலைபேசிக்கு தொடர்பு கொள்ள அது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக சொன்னது.

தெய்வாக்கு அழைத்து விஷயம் சொல்லலாம் என நினைத்தாள். வீணாக அவர்களை கலவரம் படுத்த வேண்டாம் என்று அமைதியாக கீழே இறங்கி வந்தாள்.

அந்நேரம் சரியாக குமுதினியின் கணவர் வீடு வந்தார். குமுதினி நடந்த அனைத்தையும் சொன்னார். இருவரும் தாரிணியை பார்த்தனர். அவளை பார்க்கவே அவ்வளவு பாவமாக இருந்தது.

“அண்ணா.. அவர் கார் லோக்கல்ல தான எடுத்திருப்பார். உங்களுக்கு அந்த டிராவல்ஸ் தெரியமா? நேத்து வண்டியை பாத்தீங்களா.. உங்களுக்கு எதாவது ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.

“இங்க அந்த டிராவல்ஸ் இல்லம்மா. ஏர்போர்ட்ல இருந்தே தானே வந்தீங்க. அங்க தான் அந்த டிராவல்ஸ் இருக்கனும். அவர் ஆன்லைன்ல புக் பண்ணியிருந்திருப்பார். பேர் தெரிஞ்சா கூட விசாரிக்கலாம். எனக்கு அவ்வளவாக ஞாபகம் இல்லை.”

“ம்ம்.. என்னண்ணா பண்றது.. ஒன்னுமே புரியலையே..” என்று யோசித்தவள் சட்டென்று ஞாபகம் வந்தவளாய், “அண்ணா ஒரு நிமிஷம் இருங்க..” என்று தன் அலைபேசியை எடுத்து அவள் எடுத்த புகைப்படங்களை பார்த்தாள்.

முதல் நாள் அவள் விமான நிலையத்திற்கு வந்தவுடன், அங்கு இருந்து வீட்டுக்கு கிளம்பும் முன் காரில் ஏறப்போகும் போது அகரனோடு அவள் எடுத்திருந்த செல்ஃபி அதில் இருந்தது.

அதில் தெளிவாக “தாய் டிராவல்ஸ்” என்று இருந்தது. கீழேயே அதன் தொடர்பு எண்ணும் இருந்தது.

உடனே அந்த எண்ணை குமுதினியின் அலைபேசியில் இருந்து அழைத்தாள்.

முதல் நாள் அவர்கள் வண்டியை எடுத்திருந்த நேரம், அகரன் பெயர் என்று சொல்லி விவரம் கேட்டு விட்டு, அவன் ‘இன்று வண்டியில் எங்கு சென்றான்’ என்று விசாரித்தாள்.

அவர்கள் சாவகாசமாக சொன்ன தகவல் தாரிணி காதில் இடி விழுந்தது போல் இருந்தது.

அப்படியே அங்கிருந்த சோஃபாவில் விழுந்தவளை பார்த்து குமுதினிக்கும், அவர் கணவருக்கும் அதிர்சசியாக இருந்தது.

தாரிணியின் கண்களோ அதிர்ச்சியில் கண்ணீரை கொட்டிக் கொண்டே இருந்தது.

“தாரிணி.. என்னம்மா டிராவல்ஸ்ல என்ன சொன்னாங்க மா. தம்பி எங்கேயாச்சும் வெளிய போயிருக்குதாமா?” என்று மெதுவாக தோளைத் தட்டி உலுக்கினார்.

“வெளிய இல்லக்கா.. மொத்தமா இந்த நாட்டை விட்டே போயிட்டார்”

கேட்ட அவர்களுக்கு அவர்களின் காதையே நம்ப முடியவில்லை.

இரண்டு நாட்களாய் அவன் தாரிணி மீது காட்டிய காதலையும், அந்த காதலுக்காய் அவன் செய்த செயல்களையும் நினைத்து அவர்களுக்கு இப்போது ஒன்றுமே புரியவில்லை.

“என்ன சொல்ற தாரிணி. நாட்டை விட்டே போய்ட்டாரா.‌ அது எப்படி உன்கிட்ட சொல்லாம, அதுவும் உன்னை விட்டுட்டு போயிருக்கார். எதுவும் சண்டை மாதிரி கூட தெரியலையே , நல்லாத்தானே காசு கொண்டு வந்து கொடுத்தார். நல்லா பேசினார்.. நீ அவங்க சொன்னதை நல்லா காதில் வாங்கினியா.. பதட்டத்தில..” குமுதினிக்கே அவ்வளவு அதிர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லையென்றால் தாரிணியின் நிலைமை.

அவருக்கு பதில் கூட சொல்லாமல் மாடிக்கு வேகமாக சென்றாள்.

கால் அழுத்த அழுத்த வலி உயிர் போனது.

தலையோ யாரோ அடிப்பது போல் விண்ணென்று வலித்தது.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் மாடிக்கு சென்றவளுக்கு மனதில் இருந்த கொஞ்ச நம்பிக்கையும் காற்றோடு அடித்துக் கொண்டு போனது.

அகரனின் பெட்டி அங்கு இல்லை. அவள் பெட்டி மட்டுமே அங்கு இருந்தது. சிறிது நேரத்திற்கு முன் வந்த போது அவசரத்தில் அவள் கவனிக்கவில்லை.

அவளின் கைப்பையும், டிராலியும் அவளை போலவே தனியாக கிடந்தது.

பின்னாடியே வந்த குமுதினிக்கும் அவள் கணவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

தாரிணி ஏன் சிலை போல் நிற்கிறாள் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்?

“தாரிணி..”மெதுவாக அவளை அணைத்துக் கொண்டு குமுதினி கூப்பிட்டார்.

“அக்கா.. அவர் பேக் எதுவுமே இங்க இல்லைக்கா.. “ என்று அவள் பேக் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டினாள்.

“ நான் மேல வந்தப்ப அகரன் தம்பியை தான் தேடினேன். அவர் பேக் இருக்கான்னு பாக்கலையே..”

தாரிணிக்கு காலடியில் பூமியே நழுவியது.

மயக்கம் வர அப்படியே குமுதினி மேல் சாய்ந்தாள். பதறி அவர்கள் அவளை பிடித்து மெதுவாக அமர வைத்தனர்.

“அய்யோ.. நேத்திக்கு இந்த பொண்ணு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. காலைல கூட ரெண்டு பேரும் அவ்ளோ அன்னியோனயமா இருந்தாங்களே.. இந்த பொண்ணுக்கு எதுக்கு இவ்வளோ கஷ்டம்.. “ குமுதினி புலம்ப,

“எதுவும் சண்டை போட்டாங்களா குமுதினி.. “

“இல்லையே. நல்லாத்தானே பேசிட்டு வீடு கட்ட பணம் தந்துட்டு, மாடிக்கு வந்து டேப் எடுத்துட்டு அஞ்சு நிமிஷத்தில் வரேன்னு சொல்லிட்டு போச்சு. நாங்க கீழ தான் இருந்தோம். எங்களை கடந்து தான வெளிய போயிருக்கனும். ஒரு வார்த்தை கூட சொல்லலியே. சத்தமும் எதுவும் கேட்கல.. கார் கிளம்பற‌ சத்தம் கேட்டிருந்தா கூட வெளிய வந்து பாத்திருப்பனே.. “

“அதுக்குள்ள என்ன ஆயிருக்கும் குமுதினி. இந்த பொண்ணு வேற மயக்கம் போட்டிருச்சு. முதல்ல இந்த பொண்ண எழுப்பு. அப்புறம் பாக்கலாம். நான் தண்ணி எடுத்துட்டு வரேன்..” என்றவர் தண்ணீர் எடுத்து வந்து தாரிணியின் முக்ததில் தெளித்து எழுப்பினார்.

குமுதினி கன்னங்களை தட்டவும் தாரிணி கண் திறந்தாள்.

அவளுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் தந்ததும், நிதானத்துக்கு வந்தவள் மீண்டும் அகரனை நினைத்து கண்ணீர் வடித்தாள்.

“அழாத தாரிணி.. அவங்க அம்மாக்கு ஃபோன் போடு. என்னன்னு கேட்போம்..”

“என்னன்னு அக்கா சொல்றது அவங்ககிட்ட. போறப்பயே அவங்க எல்லாருமே வேணாம்னு தான் சொன்னாங்க. கல்யாணத்தை.. “ சட்டென நாக்கை கடித்துக் கொண்டாள்.

இவர்கள் அகரனுக்கும் தாரிணிக்கும் திருமணம் முடிந்தது என்று தான் அவள் கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்து நினைத்து இருக்கிறார்கள்.

இப்போது வந்து திருமணம் ஆகவில்லை என்றால் அகரனையும் அவளையும் தப்பாக நினைப்பார்களோ என்று பயந்தாள்.

“என்ன தாரிணி.‌ கல்யாணமா.. யாருக்கு”

“இல்லக்கா.. கல்யாணம் முடிச்சதுமே அங்க போகனுமான்னு எல்லாருமே வேணாம்னு சொன்னாங்க. நான் தான் மாமாக்கு தெரியாம கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கையையும் எப்படி ஆரம்பிக்கறதுன்னு அவர்ட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு அவரையும் கூட்டிட்டு போகலாம்னு வந்தேன். இப்ப போய் அகரனை காணோம்னு சொன்னா? “

“அவர் காணாம எங்க போயிருக்கார். நீ தானே நாட்டை விட்டு போனார்னு சொன்ன? “

“ஆமா அக்கா. டிராவல்ஸ்ல அவரை ஏர்ப்போர்ட்ல டிராப் பண்ணிட்டு கணக்கு முடிச்சு வண்டியை எடுத்து ட்டோம்னு தான் சொன்னாங்க”

“குமுதினி. நம்ம கதிர் வீட்டுப் பொண்ணு ஏர்ப்போர்ட்ல போர்டிங்ல தானே வேலை பாக்குது. அதுகிட்ட கேட்டு பாக்கலாமா? நிஜமாவே அந்த தம்பி ஊருக்கு போயிருச்சான்னு”

அவர் சொன்னதை கேட்டதும் தாரிணிக்கு ஒரு சின்ன ஒளி கண்ணில் தெரிந்தது.

ஒரு வேளை அவளை தவிக்க வைக்க வேண்டுமென்றே அகரன் அந்த டிராவ்லஸில் இப்படி சொல்ல சொல்லியிருப்பானா என்று யோசித்தாள். வேறு காரணம் என்ன இருக்கிறது?

இரண்டு நாட்களாக உடலோடு ஆடையாக ஒட்டிக் கிடந்தவன் அவளை விட்டுப் போக வேண்டிய அவசியமென்ன?

குமுதினி அந்த பெண்ணின் எண் எடுத்து தர, அவளிடமும் அகரன் பற்றி சொல்லி அவன் பெயர் பயணிகள் அட்டவணையில் ஏதும் இருக்கிறதா? என்று பார்க்க சொன்னார்கள்.


நிமிடங்கள் தீயாக சுட்டன.

அவள் எதிர்பார்ப்பை குழி தோண்டி புதைத்ததைப் போல் அந்த பெண் அன்று கிளம்பிய விமானத்தில் அகரன் சென்றிருக்கிறான் என்று சொன்னாள்.

அதிர்ச்சியில் தாரிணி முகம் வெளுத்தது. தொப்பென கீழே அமர்ந்தாள்.




 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 22



அகரன் மட்டும் தனியே வண்டியில் இருந்து இறங்கி வருவதை மது தான் மாடியில் நின்று பார்த்திருந்தாள்.


உடனே அவள் அம்மாவிடம் ஓடிப் போய் விஷயத்தை சொல்ல இருவருக்கும் ஆச்சர்யம்.


அவர்கள் அறையை விட்டு அவசரமாக வெளியே வரவும், தெய்வாவும் அறையை விட்டு அதே நேரத்தில் வந்தார்.


“அகரா.. என்ன நாளைக்கு தானே வரேன்னு சொன்ன? அதுக்குள்ள வந்துட்ட.. தாரிணி எங்க.. அவ மாமாவை கூட்டிட்டு வராளா?” என்று அகரனுக்கு பின் ஆவலோடு பார்த்தார்.


ஒரு பதிலும் சொல்லாமல் வேகமாக அவன் அறைக்கு சென்று கதவை வேகமாக அடித்து சாத்தினான்.


தெய்வாக்கு முகத்தில் அடித்தது போல் ஆகிவிட்டது.


ஆண்டாளுக்கும், மதுவுக்கும் ஆச்சர்யம் ஒரு பக்கம், சந்தோஷம் ஒரு பக்கம்.


“என்ன இவன் பதில் கூட சொல்லாமல் போறான்.” என்று புலம்பியபடி வாசலுக்கு சென்றார் தெய்வா.. அங்கு யாரும் இல்லை. காவலாளியை கைக்காமித்து அழைத்தார்.


அவர் அகரன் மட்டுமே காரில் வந்து இறங்கியதாக கூறினார்.


தெய்வாக்கு ஒன்றுமே புரியவில்லை. தாரிணியும், அகரனும் சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டு வாழப் போகிறார்கள் என்று கனவு கொண்டிருந்தவரின் மனதில் கலக்கத்தை உண்டு பண்ணியிருந்தான் அகரன்.


ஒன்றும் புரியாமல் கையை பிசைந்துக் கொண்டு இருந்த தெய்வாவின் அருகில் பாண்டியன் வந்தார்.


“என்னம்மா தெய்வா.. இங்க இருட்டுல வந்து நின்னுட்டு இருக்க. அப்படி யாரை எதிர்பார்த்திட்டு நிக்கற..”


“அண்ணா.. ஒன்னுமே புரியல. தாரிணி வராம அகரன் மட்டும் வந்துருக்கான். எது கேட்டாலும் பதில் சொல்லாம போய் கதவை சாத்திக்கிட்டான். அவ இவனோடு வராம இருக்க காரணம் என்ன? கல்யாண நாள்‌ வேற நெருங்குதே. அப்பாக்கு என்ன சொல்றது?” பதட்டத்தில் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தார் தெய்வா.


“இரு இரு.. பதட்டப்படாத. ஒரு வேளை அந்த பொண்ணோட மாமாக்கு ஏதும் உடம்பு சரியில்லாம இருந்திருக்கும். பாத்து அடுத்த ஃப்ளைட்ல கூட்டிட்டு வர சொல்லிட்டு இவன் வந்திருப்பான்.இவனுக்கு தான் வேலையை விட எதுவும் பெரிசில்லையே”


“அப்படி இருந்தாலும் என்கிட்ட விஷயத்தை சொல்லிட்டு போய் இருக்கலாம் இல்லண்ணா. நான் கேட்டுட்டே இருக்கேன்.. பதில் சொல்லாம கதவை போய் சாத்திட்டான்.”


“விடும்மா. ரெஸ்ட் எடுத்துட்டு வெளிய வர தான் போறான். அப்புறமா கேட்டுக்கலாம்..”


“சரிண்ணா.. “ என்று சொல்லிவிட்டாரே தவிர தெய்வாக்கு மனம் தடுமாறியது. அகரன் முகமே சரியில்லை. தாரிணி உடன் வரவில்லை. ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று யோசித்தது தாய் மனம்.


உள்ளே ஆண்டாளும், மதுவும் சந்தோஷமாக தங்கள் கைகளை உயர்த்தி ‘ஹைஃபை’ செய்து கொண்டார்கள்.


“அம்மா.. என்னம்மா இவன் கதவையே இந்த சாத்து சாத்தறான். அந்த பொண்ணையும் ஆளை காணோம். என்ன தான் நடந்திருக்கும்? எனக்கு தெரியாம தலையே வெடிச்சிரும் போல.”


“தெரியலையே மது. ஒன்னா ரெண்டு பேரும் போய் தனியா இவன் மட்டும் வரான்னா பிரச்சினைன்னு தானே அர்த்தம். எப்படியோ அந்த சின்ன பிசாசு ஒழிஞ்சது இல்ல. கத்திரிக்கா முத்தற வரைக்கும் வெயிட் பண்ணுவோம்..” என்று குதூகலமாக இருவரும் குதூகலமாக பேசிக் கொண்டனர்..


தெய்வா குழப்பத்துடனே உள்ளே வந்து இரவு உணவை எடுத்து வைத்தார். ஆண்டாளும் மதுவும் தெய்வாவின் குழம்பிய மனநிலையை பார்த்து ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டனர்.


பாண்டியன் அவர்களை வினோதமாக பார்த்து விட்டு சாப்பிடத் துவங்கினார்.


மருதனுக்கு உடல் நலம் சிறிது சரியில்லை என்று அவரது அறைக்கே உணவை எடுத்து போய் கொடுத்தார்‌ தெய்வா. மருதனிடம் அகரன் வந்ததை சொல்வோமா, வேண்டாமா என்று யோசித்து, பின் எதுவாக இருந்தாலும் அகரனிடம் கேட்டு விட்டு பின் சொல்லலாம் என்று விட்டு விட்டார்.


அவரது வேலைகளை முடித்து விட்டு வந்தும் அகரன் கதவு திறக்கவே இல்லை. சாப்பிட கூப்பிட்டு கதவை தட்டியதற்கும் பதிலில்லை. இருக்க, இருக்க குழப்பம் அதிகமானது.


தாரிணிக்கு பேச அவளது அலைபேசிக்கு அழைக்க, அது அவளை போலவே சோர்ந்து தன் சக்தியை இழந்து அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.


தெய்வாக்கு தலையே வெடித்து விடும் போல் விண்விண்ணென்று தெறித்தது தலைவலி.


எல்லாம் சரியாகி அகரனே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, எல்லா ஏற்பாடும் செய்த நேரத்தில் இதென்ன புது பிரச்சினை. அவனது திருமணம் நல்லபடியாக நடந்து விடும் என்ற கனவு பலிக்காது போய்விடுமா? தெய்வாக்கு உள்ளுக்குள் பயம் வந்தது.


இரவு முழுக்க அவருக்கு தூங்காத இரவாகவே முடிந்தது.


காலையில் தெய்வா கிளம்பி வருமுன்னே அகரன் அலுவலத்திற்கு சென்று விட்டான்.


ஏதோ ஒரு தீர்வு காலையில் கிடைக்கும் என்று எண்ணியிருந்தார்.

அதுவும் இல்லையென்று தெரிந்து சோர்ந்து போய் தன் அறையில் வந்து அமர்ந்தார்.


****

தாரிணி காலையில் கண் விழித்ததே நேரம் கழித்து தான்.


முதல் நாள் அவள் ஓடியது கொஞ்சமா.. இங்குமங்கும் அலைந்தும் அகரன் கிடைக்கவில்லையே.. அவன் நினைவு வந்ததும் வேகமாக போய் அலைபேசியை எடுத்தாள்.


அது அணைந்து போய் இருந்தது.


பதறி சார்ஜ் போட்டு அலைபேசியை ஆன் செய்தாள். அகரன் எதாவது தகவல் அனுப்பியிருப்பானா.. இல்லை அழைத்து இருப்பானா? கண்கள் வேக வேகமாக வந்திருந்த தகவல்களை பார்த்தது.


தெய்வாவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்ததே தவிர அகரன் எதுவும் அவளுக்கு அழைக்கவில்லை.. தனிச் செய்தியும் அனுப்பவில்லை.


‘எதற்கு இப்படி அகரன் செய்ய வேண்டும். தன்னிடம் என்ன பிரச்சினையை கண்டான்’ என்று மனம் வேதனைப்பட்டது.


காரணம் தெரியாமல் தண்டிக்கப்படுவது தான் பெரிய துன்பம்.


எதுவாக இருந்தாலும் நேரே சொல்லாமல் இது என்ன ஓடி ஒளிவது?.


யாரிடம் கேட்பது.. தெய்வாவிடம் தான் நியாயம் கேட்க வேண்டும். ஆனது ஆகட்டும் என்று தெய்வாவிற்கு அழைக்க பார்த்தாள். பத்து சதவீதம் தான் சார்ஜ் ஏறியிருந்தது.


சிறிது நேரத்தில் அழைக்கலாம் என்று முடிவு செய்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.


மனம் இரண்டு நாட்களாய் நடந்த நிகழ்வுகளிலேயே சுற்றியது.


அவளது உடலில் அவனது விரல்கள் எத்தனை ஆசையாய் வளைய வந்தன. அவனது கண்கள் எவ்வளவு ஆசையாய் அவளை பார்த்தன. அவனது உதடுகள் எத்தனை ஆசையாய் முத்தங்களை வாரித் தந்து ‘பவதா’ என்று அழைத்தன.


நேற்று அவளை சுற்றி வந்தவன் எதனால் அவளையே வேண்டாம் என்று சென்று விட்டான்.


தான் செய்த தப்பு என்ன என்று யோசித்து யோசித்து களைத்து போனாள்.


அவளுக்கு அவள் அம்மாவை பார்க்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக எழுந்து போய் அவள் வைத்து விட்டு போன இடத்தில் அந்த புகைப்படத்தை தேடிப் பார்த்தாள். அது அவளது டிராலிக்கு கீழே விழுந்து கிடந்தது.


கண்ணாடி உடைந்து சில்லு சில்லாக கிடந்தது.

அவளது மனதை போலவே.


எப்படி விழுந்திருக்கும்? அவன் வேகமாக அவனது டிராலியை தள்ளிக் கொண்டு போகும் போது கீழே விழுந்திருக்குமா? அவன் கீழே போட்டு உடைக்க என்ன இருக்கிறது.‌..? ஒருவேளை இருக்குமா? குழம்பி தவித்தாள்.


‘நேற்று கீழே பேசிக் கொண்டிருக்கும் போது அவளும், அவள் அம்மாவும் அழகு என்றானே?. பின் எதற்காக இப்படி செய்ய வேண்டும்.? ஹ்ம்ம்.. அவர் செய்திருக்க மாட்டார்..’ அவளாக ஒரு முடிவுக்கு வந்தாள்.


அதற்குள் அவள் கவனத்தை கலைப்பது போல அலைபேசி அழைத்தது.


அவசரமாக எழுந்து சென்று அலைபேசியை எடுத்தாள். அகரன் தான் அழைத்து இருப்பான் என்று நினைத்தாள்.


ஆனால் அழைப்பு வந்ததென்னவோ தெய்வாவிடம் இருந்து தான்.


அதை காதில் எடுத்து வைக்கையிலேயே அழுகை அவளை மீறி வந்தது. ஹலோ என்று கூட சொல்லாமல் தாரிணியின் அழுகை இன்னும் அதிகமானது.


தெய்வா பயந்து பதறி விட்டார்.


“தாரிணி அழாதம்மா.... என்ன ஆச்சு? நீ எங்க இருக்க? அகரன் மட்டும் வீட்டுக்கு வந்துட்டான்?” என்று தெய்வா கேட்டதும்,


“ஆண்ட்டி நான் இன்னும் இங்கேயே தான் இருக்கேன். அவர் என்கிட்ட சொல்லாமயே கிளம்பி வந்துட்டார். அவரை காணோம்னு நான் எவ்ளோ இடத்தில் தேடினேன் தெரியுமா? அப்புறம் எப்படியோ தான் அவர் ஃப்ளைட்ல கிளம்பினதை கண்டுபிடிச்சோம்.. எனக்கு ஒன்னுமே புரியல” என்று அழ ஆரம்பித்தாள்.


தாரிணியின் நிலைமையை தெய்வாவால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அவரும் இதே சூழ்நிலையை கடந்து வந்தவர் தானே.


ஆனால் அந்த சூழ்நிலையில் இன்னொரு பெண்ணை தன் மகனே நிறுத்துவான் என்பதை அவரால் ஏற்று கொள்ள முடியவில்லை.


அகரனை குறை சொல்வதா? தாரிணியிடம் பிரச்சினையா? எதுவும் முடிவுக்கு வர அவரால் முடியவில்லை.


“தாரிணி.. தப்பா நினைக்காதம்மா. சண்டை எதுவும் போட்டுக்கிட்டீங்களா?”


“ஐயோ.. இல்ல ஆண்ட்டி..” என்று ஆரம்பித்து அவர்கள் வந்தது முதல் வீடு கட்ட சொல்லியது, அவனது கடந்த கால வாழ்க்கையை சொல்லி அவனுக்கு முடியாமல் போனது, பணம் தந்தது, பின் காணாமல் போனது என்று சொல்லி முடித்தாள்.


“எனக்கும் ஒன்னுமே புரியல மா. அவன் வந்ததும் கேட்டதுக்கு ஒன்னுமே சொல்லல. இப்பயும் காலைலயே கிளம்பி போய்ட்டான். அதான் உனக்கு கால் பண்ணேன். நேத்தும் அவன் வந்ததுமே கால் பண்ணா உன் ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்.”


“ஆண்ட்டி நேத்து அவர் இங்க காணோம்னு நான் தேடி அலைஞ்சு அவர் கிளம்பிட்டார்னு தெரிஞ்சதும் எனக்கு உடம்பும் முடியல. கால் ரொம்ப வீக்கம் வந்துருச்சு ஆண்ட்டி. பக்கத்து வீட்டு அக்காதான் மருந்து கொடுத்து தூங்க வச்சாங்க. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதை காலையில் தான் பாத்தேன். இதுவரைக்கும் அவருக்கு ஒரு ஐநூறு கால் பண்ணி பாத்துட்டேன் ஆண்ட்டி.. அதுல தான் ஃபோன் சார்ஜ் இல்லாம போயிருக்கும்..”




“புரியுது மா. அவன் கொஞ்சம் கோபக்காரன் தான். அவசரக்காரனும் தான்.. ஆனா உன்னை எதுக்காக அங்கேயே விட்டு வரணும். என்ன காரணம் ஒன்னும் புரியல. உன்‌மேல் கொஞ்ச நாள்லயே இவ்வளவு பாசம் வச்சானே. அப்படி என்ன பிரச்சின நடந்தது. உன் வீட்ல யாரும் எதுவும் சொன்னாங்களா?”


“இங்க யார் இருக்காங்க ஆண்ட்டி. பக்கத்து வீட்டு அக்காட்ட நல்லா தான் பேசினார். அஞ்சு நிமிஷத்தில் வந்திடறேன்னு மாடிக்கு போனவர் அப்படியே பேக் எடுத்துட்டு போய்ட்டு இருக்கார். மாமாவையும் போய் பாக்கல. அதுக்கு தான் கிளம்பிட்டு இருந்தோம்..”


“நான் அவன்ட்ட என்னன்னு விசாரிக்கறேன் மா. நீ பத்திரமா இரு. காலை பாத்துக்க. அழாத. அவன் அவசரத்தில் எதுவும் யோசிக்காம எதையாவது பண்ணிடுவான். நான் அவன்ட்ட பேசிட்டு கூப்பிடுறேன். எனக்கு உங்க பக்கத்து வீட்டு அக்கா நம்பர் அனுப்பி வை.. நான் திரும்ப கூப்பிடறேன்‌ தாரிணி. பாத்து பத்திரம்” என்று சொல்லி வைத்து விட்டு ஒன்றும் புரியாமல் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.


சிறிது நேரத்தில் குமுதினி எண்ணை அனுப்பி வைத்தாள் தாரிணி.


உடனே அவருக்கு அழைத்தார் தெய்வா..


“சொல்லுங்க மா. நானே உங்க கிட்ட பேசணும்னு நினைச்சேன். அந்த தம்பி ஏன் மா அங்க வந்துருச்சு.. தாரிணி பாவம். நேத்தில இருந்து சாப்பிடல, சோர்ந்து போய் இருக்கு..”


“எனக்கும் தெரியலையேம்மா. அவங்க ரெண்டு பேரும் அங்க ஏதாவது சண்டை போட்டாங்களா.”


“வந்ததுல இருந்து ஊரே கண்ணு வைக்கிற அளவுக்கு ரொம்ப அன்யோன்யமா இருந்தாங்க மா. புதுசா கல்யாணம் ஆனவங்க இல்ல. அப்படித்தான இருப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டோம். கழுத்தில் கட்டின தாலி ஈரம் காயறத்துக்கு முன்னாடி சொல்லாம, கொள்ளாம அந்த தம்பி கிளம்பினது தான் மா ரொம்ப வருத்தமா இருக்கு.”


தெய்வாக்கு படபடவென வந்தது. தாலி ஈரமா? எப்போது திருமணம் செய்தார்கள்? அன்யோன்யமாக இருந்தார்கள் என்றால் தாலி கட்டி திருமணம் செய்து தான் போனார்களா? அகரனிடம் கோபப்படுவதா? இதை சொல்லாமல் தாரிணியுப் அவனுடன் சென்றதற்காக அவள் மீது கோபப்படுவதா? தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. இப்போது எதை விசாரிப்பது, எதற்கு தீர்வு தேடுவது? ஒன்றும் அவருக்கு புரியவில்லை.


“அம்மா.. லைன்ல இருக்கீங்களா.. தம்பியை எப்படியாச்சும் வந்து கூப்பிட்டு போக சொல்லுங்க மா. “


“நான் கேட்டு சொல்றேன் மா.. “ என்று அலைபேசியை வைத்து விட்டார். யாரிடம் போய் என்ன சொல்வது.. இக்கட்டில் மாட்டி விடுபவனா அகரன்.?தாயிடமே மறைத்து வைக்க என்ன அவசியம்.? அவனுக்காக தானே இத்தனை நாள் திருமண பேச்சை எடுத்தார்கள். சொல்லாமல் எல்லாவற்றையும் செய்திருக்கிறானா அகரன்? அவன்‌மேல் வந்த கோபத்தை விட தாரிணி மேல் இன்னும் கோபம் வந்தது.











 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 23

தாரிணியின் மீதும், அகரனின் மீதும் தெய்வா வைத்திருந்த நம்பிக்கை சுக்கல் நூறாக உடைந்தது.

அவள் மேல் பரிதாபம் வருவதற்கு பதில் வருத்தமும், கோபமும் வந்தது.

அதில் மகனுக்கு சரிபாதி பங்கு இருக்கிறது என்பதை தாய் மனம் பாசத்தில் வசதியாக மறந்து விட்டது.

அவசரத்தில் காதில் விழுந்த வார்த்தைகளை அதன் அர்த்தம் முழுதும் புரியாமலே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். அது தான் பாதி பிரச்சினைகளுக்கு காரணம்.

அதே போல் தான் தெய்வாவும் இருந்தார்.

தாரிணியை தனியே எங்கோ கொண்டு போய் அப்படியே விட்டு விட்டு வந்திருக்கிறானே, அதை விசாரித்து அவளை மீண்டும் அழைக்க வேண்டும் என்ற எண்ணம் மாறி மனதளவில் வழக்கமான மாமியாராக மாறி நின்றார் தெய்வா.

‘வந்த நான்கைந்து மாதத்தில் திருமணமே வேண்டாம் என்றவனை மாற்றி காதலிக்க வைத்தது மட்டுமில்லாமல், யாருக்கும் தெரியாமல் திருமணமும் செய்து கொண்டு, அவளின் ஊருக்கு செல்வதற்கு முன்னே அவள் வீட்டை கடடுவதற்கு அகரன் அத்தனை பணமும் கொடுத்து இருக்கிறான் எனறால் அவள் எப்படிப்படட மாயக்காரியாக இருக்க வேண்டும்..’ சாத்தான் உள்ளுக்குள் இருந்து வேதம் ஓதியது.

மனதில் ஒலித்த வார்த்தைகள் வெளியில் ஒலித்து இருந்தால் மது, ஆண்டாளுக்கும் தெய்வாக்கும் ஒரு வித்தியாசமும் இருந்திருக்காது.

அதுவரை அகரனுக்கு திருமணம் ஆகவில்லையே என்று கவலைப்பட்டவருக்கு இப்போது சொல்லாமல் திருமணம் செய்து விட்டார்களே என்பது தான் பிரச்சினையாக இருந்தது.

அதிலும் கூட உண்மை என்னவென்று விசாரிக்க அவருக்கு மனமில்லை.

‘ஆக, தாரிணி மீது தப்பிருப்பதால் தான் அது தெரிந்து அகரன் அவளை அப்படியே விட்டு வந்திருக்கிறான்.
அவன் ஆசைப்பட்டான் என்பதற்காக அந்த பெண்ணை பற்றி முழுதும் தெரியாமல் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது தன் தவறும் தான்‌’ பதட்டத்தில் தப்பும் தவறுமாகத்தான் புத்தி சிந்திக்கும்.. தெய்வாக்கும் அப்படியே..

யோசித்துக் கொண்டே இருந்தவரை பாண்டியனின் குரல் திசை திருப்பியது.

“என்னம்மா அகரன் எதாவது சொன்னானா? காலையிலேயே வாக்கிங் போய்ட்டு வரப்ப அவன் ஜீப் இல்லையே. அதுக்குள்ள எங்க போய்ட்டான்?”

“காலையில சீக்கரமாவே கம்பெனிக்கு போய்ட்டு இருக்கான் அண்ணா.”

“நான் தான் சொன்னேன் இல்ல. அவன் வேலை விஷயமாதான் சீக்கிரமா வந்துட்டான்னு.. நீ போட்டு இன்னும் குழப்பிட்டு இருக்கியா.. எல்லாம் சரியாகிடும்.”

“ம்ம். என்னம்மோ நாமளும் ரொம்ப அவசரப்பட்டுட்டோம்னு தோணுதுண்ணா. அகரனுக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதோ பிரச்சினை போல.”

“என்னம்மா இப்படி சொல்ற.. அந்த பொண்ணு நல்ல பொண்ணு தானே. ஏன் அவசரப்பட்டுட்டோம்னு சொல்ற.?”

தெய்வா சொல்ல வாயெடுப்பதற்குள் அங்கு ஆண்டாள் வரவே அப்படியே அடக்கி வாசித்தார்.

இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு உணவை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டே நேரம் கடத்தினார் ஆண்டாள்.
“சரி அப்புறமா பேசலாம் மா. நானும் கம்பெனிக்கு கிளம்பறேன். ஆயிரத்தெட்டு வேலை கெடக்குது..” ஆண்டாளை ஒரு முறை முறைத்து விட்டு பாண்டியன் கிளம்பினார்.

தெய்வாவும் அந்த இடத்தை விட்டு நகர அவசரமாக மதுவை அழைத்து,

“பாத்தியா. நான் சொன்ன மாதிரி தான். ஏதோ பிரச்சினை தான். ஆத்தாளும் மகனும் ஏதோ மறைக்கிறாங்க. அதை இந்த துப்புக் கெட்ட மனுஷன் கூட சேந்து நமக்கு தெரியாம பாத்துக்கறாராம். எப்படியா இருந்தாலும் உங்க தாத்தா கேட்கறப்ப சொல்லித்தான் ஆகணும். அப்ப வச்சிக்கறேன்.”

“ஆமாமா. அகரன் காலைல கிளம்பறப்ப பாத்தேன். முன்ன இருந்ததை விட அவன் முகம் அப்படி இறுக்கமா இருந்துச்சு. எப்படில்லாம் அந்த தாரணியை தூக்கி வச்சிட்டு ஆடினான். நல்லா வேணும்..” என்று அவள் பங்குக்கு பேசினாள்.

தெய்வாவின் முக வாட்டத்தை பார்த்த மருதன் விஷயத்தை கேட்க வேறு வழியில்லாமல் நடந்ததை சொன்னார் தெய்வா..

“தெரியாம கல்யாணம் பண்ற அளவு நம்ம அகரன் கோழை இல்லம்மா. அதுவும் நாம எல்லாரும் சம்மதம் சொன்ன பிறகும் அவன் அப்படி பண்ண மாட்டான். நீ கவலைப்படாம இரு. நான் என்னன்னு விசாரிக்கறேன்”

********
“சார் இந்த போர்ட்ஃபோலியோ‌ ரெடியா இருக்கு. இதை எல்லா கிளையண்ட்ஸ்க்கும் அனுப்பிடலாமா?”

முகவாயில் கை வைத்து யோசித்து கொண்டிருந்தவனை மாலினியின் குரல் கலைத்தது.

“அக்கா.. அனுப்பிருங்க. எனக்கு இன்னிக்கு என்ன வேலை இருக்குன்னு ஒரு ரிமைண்டர் அனுப்புங்க.. அதெல்லாம் ஒன்னொன்னா முடிச்சிடலாம்.”

அதிசயமாக இருந்தது மாலினிக்கு. அவருக்கே சில சமயம் அகரன் தான் ஞாபகப்படுத்துவான். அவன் வேலைகளுக்கு யாரையும் நம்பி இருப்பவனல்ல. அந்த அலுவலகத்தில் அவனை தவிர யாருமே வரவில்லையென்றாலும் அவன் பாட்டுக்கு வேலைகளை முடிப்பவன்.

“சேம்பிள் உங்க டேபிள்ல இருக்கு. பாத்துட்டு சொன்னா அனுப்பிருவேன். அப்புறமா லினன் சேலைகளுக்கு எம்ப்ராய்டரி டிசைன்ஸ் தாரிணி மேம் நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடி கொடுத்தாங்களே. அந்த வர்க் ஸ்டார்ட் பண்ணிடலாமா?”

தாரிணி பெயரை கேட்டதும் அவனுக்கு உடல் முழுதும் நெருப்பை அள்ளி கொட்டியது போல இருந்தது.

அவனின் முக மாறுதலை பார்த்து மாலினிக்கே பயம் வந்தது. பல்லை கடித்து அவன் கோபத்தை தணிப்பது தாடை அசைவில் புரிந்தது அவருக்கு.


“புது டிசைன் பத்திலாம் இப்ப பேச வேண்டாம் அக்கா. இருக்கற வேலையை பாருங்க. நாம அப்புறமா இதை பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்.” என்றவனிடம் தலையாட்டி விடைப்பெற்று வந்தவருக்கு எதுவும் புரியவில்லை.

‘மேட் ஃபார் ஈச் அதர்’ என்று அவர்கள் இருவரை பற்றியும் ஒரு மாத காலமாகவே அலுவலகம் முழுதும் பேச்சு இருந்தது.

அதுவும் எப்போதும் இறுக்கமாக இருக்கும் அகரனின் சிரித்த முகம் அனைவருக்கும் புதியதாக இருந்தது. அதற்கான காரணம் தாரிணி என்பதும் அனைவருக்கும் சொல்லாமலே புரிந்தது.

இப்போது என்ன திருஷ்டி பட்டது போல் அகரன் பேசுவது தினுசாக இருக்கிறது.. தாரிணியுடன் ஊருக்கு போய் திரும்பி வந்து திருமணம் என்று எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்தவர் ஏன் எதையோ பறி கொடுத்தவர் போல இருக்க வேண்டும். மாலினியின் மனதில் தோன்றிய கேள்வி அகரனை காலையில் இருந்து பார்த்த காவலாளி முதல் அத்தனை பேருக்கும் மனதில் ஓடியது. ஆனால் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை.

அகரன் மாலினி வைத்து விட்டு போன போர்ட்ஃபோலியோவை எடுத்து விரித்தான்.

ஒவ்வொன்றிலும் அகரனுடன் தாரிணி சிரித்துக் கொண்டும், இழைந்துக் கொண்டும் இருக்கும் புகைப்படங்கள்.

அத்தனயையும் அப்படியே எடுத்து கொளுத்தலாம் போல இருந்தது அவனுக்கு. தூக்கி சுவற்றில் அடிக்க போனவன் அப்படியே நிறுத்தினான்.

சுய விருப்பு வெறுப்பு, சோறு போடும் தொழிலில் காட்டக்கூடாது என்ற அவனின் தாத்தா அறிவுரை மனதில் தோன்றியது.

அமைதியாக அதை டேபிளில் வைத்து விட்டு அடுத்த வேலையில் அவனது கவனத்தை திசை திருப்பினான்.

******
“தாரிணி.. எழுந்திரி. எவ்ளோ நேரம் இப்படியே இருப்ப.. சாப்பிடக்கூட இல்ல, இவ்ளோ நேரமா?” என்று குமுதினி வந்து கேட்டார்.

“அக்கா, நிஜமாவே என்ன தப்பு பண்ணேன் நான். ஏன், அவர் என்னை விட்டுட்டு போனார்?. அஞ்சு நிமிஷத்தில என்னக்கா நடந்து இருக்கும்? அது வரைக்கும் நல்லாத்தானே பேசினார்?”

“தாரிணி. எனக்கும் ஒன்னுமே புரியல மா. வெளில போனப்ப எதாவது நடந்திருந்தா கூட அவர் வந்ததும் கோபப்பட்டு போயிருக்கலாம். இங்க வந்து நல்லாத்தானே பேசுனாரு..”

“இனி நான் என்ன பண்றது அக்கா. அவங்க அம்மாகிட்டயும் அவர் ஒன்னுமே சொல்லலயாம். நான் இங்கேயே இருக்கறதா? இல்ல கிளம்பறதா?”

“தாரிணி. அவர்ட்ட பேசு. என்ன சொல்றாருன்னு பாப்போம். அதுக்கு அப்புறமா முடிவெடுக்கலாம்.”

“பேசினாத்தானே அக்கா. என் நம்பர் ப்ளாக் பண்ணியிருக்கார் போல. “

“ஆஃபிஸ் நம்பருக்கு ட்ரை பண்ணு. அங்க போயிருப்பார் இல்ல எப்படியும்.”

“அதெல்லாம் நல்லா இருக்காது அக்கா. அவரை பத்தி என்ன நினைப்பாங்க. நான் அங்கெல்லாம் ஃபோன் பண்ணா?”

“நீ ஃபீல் பண்ற அளவு அவரு நினைச்சிருந்தா அம்போன்னு தாலி கட்டின பொண்ணை விட்டுட்டு போயிருப்பாரா?”

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அக்கா. மனசறிஞ்சு நான் ஒன்னும் தப்பு பண்ணல. அப்புறம் அவர் என்னை ஏன் ப்ளாக் பண்ணாரு.? எனக்கு மட்டும் ஏன்க்கா இப்படி நடக்குது?”


“எல்லாருக்கும் இந்த கேள்வி வாழ்க்கையில் தோணும். ஆனா விளக்கம் தான் எப்பவும் நமக்கு கிடைக்கறதில்லை தாரிணி..”

“அம்மா, அப்பா, மாமா, அகரன், ஆண்ட்டின்னு யாருமே என் வாழ்க்கைல நிரந்தரமா இருக்க கூடாதுன்னு தான் கடவுள் நினைக்கிறார் போலக்கா. அதுவும் நான் சந்தோஷமா இருந்தா அவருக்கு பிடிக்கவே பிடிக்காது”

“ஏன் இப்படி பேசற தாரிணி. எல்லாமே நல்லதா நடக்கும் கவலைப்படாத. ஹாஸ்பிட்டல்ல இருந்து கால் வந்துச்சு. மாமாவை கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வந்த இல்ல. டிஸ்சார்ஜ் எப்போன்னு கேட்டாங்க”

குமுதினி சொல்லும்போதே தாரிணியின் கண்கள் கண்ணீரில் நிறைந்தது.

“அக்கா, மாமா கிட்ட அவரை பத்தி, அப்புறம் எங்க கல்யாணத்தை பத்தி எல்லாம் சொல்லி கூட்டிட்டு போகணும்னு எவ்ளோ கனவு கண்டேன். இப்ப அவருக்கு என்ன பதில் சொல்ல போறேன் அக்கா”

“இங்க பாரு. முதல்ல அவரை போய் இங்க கூட்டிட்டு வருவோம். உங்க மாமியார் தான் அந்த தம்பிட்ட கேட்டுட்டு கூப்பிடறேன்னு சொன்னாங்க இல்ல. அவங்க ரொம்ப பதறி போய் தான் பேசினாங்க. உன்மேல் எப்படியும் அவங்களுக்கு அக்கறை இருக்கும்.”

“ஆமா. அவங்களுக்கு என் மேல் ரொம்ப பாசம். நிச்சயம் அகரன்ட்ட பேசி என்னை கூப்பிடுவாங்க. ஆனா அக்கா, அவர்ட்ட நான் பேசவே மாட்டேன்.
தப்பு அவருகிட்ட தான்.அதை உணர்ந்து அவரே என்னை கூப்பிடட்டும்.”

மருத்துவமனையில் இருந்து தாரிணி அவள் மாமாவை வீட்டிற்கு கூட்டி
வந்தாள்.

எழுந்து நிற்க முடியாத நிலையில், அவரை தூக்கி வந்தபோது அவரின் கண்கள் வீட்டை பார்த்ததும் விரிந்தன.

கண்கள் தாரை தாரையாக கண்ணீரை வடிக்க, பாழடைந்த வீடு தன் மருமகளால் எழுந்து நிற்பதை நினைத்து அவருக்கு பெருமையாக இருந்தது.

“தாரிணி, ஓலை வீட்டில் மாமாவை படுக்க வைக்க வேண்டாம். மாடிக்கு கூட்டிட்டு போய்டலாம்.”

“அக்கா.. உங்களுக்கு எவ்ளோ சிரமம். நாங்க இங்கேயே இருந்துக்கறோம்”

“பாத்தியா என்னை வேற ஆளா பாக்கற. நீ பேசாதே.”
தாரிணியை முறைத்து விட்டு,

“ஏம்பா இவரை இந்த வீட்டு மாடியில் கொண்டு போய் படுக்க வைங்க” என்று காரில் கொண்டு வந்தவர்களிடம் குமுதினி சொல்ல தாரிணிக்கு பதில் சொல்ல முடியவில்லை.

அமைதியாக வந்தவர்கள் பின் சென்றாள்.

“தாரிணி மாமாவை பாத்துக்க. மருந்தெல்லாம் டாக்டர் சொன்னபடி குடு. நான் போய் எதாவது சமைச்சு எடுத்துட்டு வரேன்”

“அக்கா. உங்களுக்கு நான் என்ன பதிலுக்கு செய்ய போறேன்னு தெரியல. என் கூட ஒரு அக்கா பிறந்து இருந்தா கூட இப்படில்லாம் செய்வாங்களான்னு தெரியாது.” என்று அவரை கட்டிக் கொண்டாள்.

“இங்க பாரு. நாங்க சின்ன வயசுல கஷ்டப்பட்டப்ப மாமாதான் எங்களுக்கும் ஒரு தாய்மாமனா நின்னு எத்தனையோ நாள் சாப்பாடு போட்டிருக்கிறார். அதுக்கு நான் தான் திருப்பி அவருக்கு செய்யனும். இதையெல்லாம் பெருசா பேசாத..”

“இருந்தாலும் ரொம்ப சிரமம் உங்களுக்கு.”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. கீழ வண்டி சத்தம் கேட்குது.. அந்த காண்டிராக்ட்டர் தான் கட்டிட வேலைக்கு வந்திருப்பார். உன் புருஷ..” அவர் சொல்லி முடிக்கும் முன் அவரின் கையை அழுத்தி பிடித்தாள் தாரிணி.

“ப்ளீஸ்” மௌனமாக கெஞ்சினாள் தாரிணி.

“சரி வா. போய் அவங்ககிட்ட பேசிட்டு வரலாம். “ என்று அவளை அழைத்துக் கொண்டு அவர்களிடம் சென்று அகரன் சொல்லிய மாற்றங்கள் என்ன என்று கேட்டு நாளையில் இருந்து வேலையை பார்க்கும் படி குமுதினி கூறினார்.

“அக்கா, அவர் என்னை இப்படி விட்டுட்டு போனதுக்கு அப்புறம் அவர் காசுல இந்த வீட்டை கட்டனுமா. எனக்கு என்னமோ சரியாவே படல”

“அப்படிலாம் சொல்லாத தாரிணி. புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் சண்டை வரும். ஆனா அதெல்லாம் பெரிசு பண்ணி நீ குடுத்ததை நான் வாங்கனுமா.. நான் கொடுத்ததை நீ வாங்கனுமான்னு ஈகோ பாக்க முடியாது. அதுவுமில்லாம மாமா இந்த வீட்டை கட்டி முடிச்சா எவ்ளோ சந்தோஷப்படுவார். அதை பாரு.”

“ம்ம் .. சரிக்கா..” என்று அவரிடம் சொல்லி விட்டு முன் பக்கம் இருந்த ஓலை வீட்டிற்குள் நுழைந்தாள்.

அங்கு அகரனின் நினைவு வராமல் போகுமா.. சில வருடங்களுக்கு முன்னோ, சில மாதங்களுக்கு முன்னோ, சில நாட்களுக்கு முன்னோ நடந்திருந்தால் கூட அவளால் சிலதை மறந்திருக்க முடியும்.

மெதுவாக அந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தாள். தரையில் இருந்த சேற்றில்
அவனின் கால்தடம் அழுத்தமாக பதிந்து இருந்தது. அதையே பார்த்தாள்.

கண்கள் கண்ணீரை சொந்தம் ஆக்கி கொண்டன.

மெதுவாக எழுந்து அந்த கால் தடத்தில் தன் காலை வைத்தாள். அவனது உயரத்திற்கு அவளை தூக்கி உதட்டை பற்றி கொள்பவனை போல அந்த கால் தடம் அவளை முழுதுமாக உள்வாங்கிக் கொண்டது.

கண்களை மூடினாள். இன்னும் அகரனின் வாசனை அந்த குடிசைக்குள் இருப்பது போல் அவளுக்கு தெரிந்தது.

அவளது இருதயம் முழுக்க அவனது வாசம்.

காதுகளில் அவனது குரல்.
கழுத்தில் அவனது சூடான உயிர் மூச்சு.

அவளது உடலில் அவனது கைகள் ஊர்வலமாக சென்றது நினைவுக்கு வர உடல் சிலிர்த்தது.

கற்பனையாக காற்றில் அவனது முகத்தில் தனது இரு கைகளை எடுத்து வைக்க கால் நுனியில் நின்று எம்பினாள்.

அவன் இதழ்கள் நடத்தும் நாடகங்களை அவள் அறிவாள்.

தன் இதழ் கொண்டு அவன் இதழில் அதே கதைகளை எழுதினாள்.

உயிரும் உயிரும் கலந்த பின் பிரிந்து போக முடியுமா? உடலால் கலந்த உறவு வேண்டுமானால் விட்டு போகலாம்.

அதே நேரத்தில் அகரனுக்கும் தாரிணியின்
நினைவுகள் சுழற்றி அடித்தன. என்னதான் அவள் மேல் கோபம் என்றாலும் அவளின் பிரிவை உடல் ஏற்றுக் கொண்டதே தவிர அவனது உயிர் அவளைத்தான் தேடியது.

அந்த அறையில் எங்கு பார்த்தாலும் அவளது நினைவு.

கையில் இருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி சுவற்றில் அடித்தான்.

இதே அறையில் அவளது கண் பார்த்து அவளது கழுத்தில் இருந்த தாலியை தொட்டு அவளை கிண்டல் செய்து இதழ்களை பற்றியது நினைவுக்கு வர அவன் மேலேயே அவனுக்கு கோபம் வந்தது.

அருவருப்பாய் உணர்ந்தான். ‘ஏன், இப்படி எதற்கு நடக்க வேண்டும். அவளை நான் ஏன் போய் இவ்வளவு பிடிவாதமாக திருமணம் செய்ய சொல்ல வேண்டும். அவளுக்கும், எனக்கும் இருக்கும் உறவு முறையை யாரும் தெரிந்துக் கொண்டால்? நினைக்க நினைக்க பதறியது. ‘திட்டம் போட்டு என்னை ஏமாற்ற அவளுக்கு வேறு
வழி தெரிந்திருக்காதா? திருமணம் என்ற உறவு தான் வேண்டுமா? ச்ச.. எப்படிப்பட்ட பெண் அவள்?’

மனமும், உடலும் நடுங்கியது. வேக வேகமாய் வெளியே வந்து கடற்கரையை நோக்கி தன் வண்டியை செலுத்தினான்..




 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 24

காற்றில் காதல் வளர்த்த தாரிணியோ நிஜத்துக்கு வந்த போது கண்ணீரை தான் கட்டித் தழுவ வேண்டியிருந்தது.

இரண்டு நாட்கள் கணவன், மனைவியாக வாழ்ந்த வாழ்க்கை வெறும் கனவாக போகும் என்று அவள் கனவில் கூட கண்டதில்லை.

அவளாக தேடிப் போகாத வாழ்வு, அவனாக விரும்பி தந்த வாழ்வு..

இப்போது அவளே வேண்டாம் என்று அவன் நினைக்க தான் எந்த வகையிலாவது காரணமாக இருந்தோமோ என்று யோசித்தவளுக்கு, ‘ஒரு வேளை திருமணத்திற்கு முந்தியே அவனிடம் தன்னை ஒப்படைத்தது தான் தவறா.. அதை தவறாக எடுத்துக் கொண்டு தான் பிரிந்து சென்றானா?

அவனின் சிறு வயதில் நிகழ்ந்த நிகழ்வுகளில் வந்தவர்களை போல தன்னையும் நினைத்து விட்டானா? தான் அப்படி எதுவும் பழி போட்டு விடுவேன் என்று நினைத்து விட்டானா?

எதுவாய் இருந்தாலும் இருவர் சம்பந்தப்படும்போது நேரே தானே கேட்க வேண்டும். ?’

அகரனை நினைத்து இத்தனை நேரம் தவித்த தவிப்பு இப்போது கோபமாக மாறத் துவங்கியது.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, மாடிக்கு சென்றாள்.

மருந்துகளின் உதவியால் வலியை மறந்து தூங்கி கொண்டிருந்த அவளின் மாமாவை பார்த்தவாறு அமர்ந்தாள்.

சிறு வயதில் இருந்து ஆண்களிடம் பத்திரமாக பழகு என்று ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு தாயை போல் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்.

வேலை விஷயமாக தனியே விட்டுச் செல்லும்போது கூட அக்கம் பக்கம் இருப்பவர்களை பாதுகாப்புக்காக இவளுடன் இருக்க சொல்லுவார். அதுவும் அவர் நம்பிக்கைக்கு உரிய பெண்களை மட்டுமே தாரிணியிடம் நெருங்க விடுவார்.

இங்கேயும், மேகாலாயாவிலும் குமுதினியையும், ரீனாவையும் அவர் தன்‌ மகள்களை போல பார்த்துக் கொண்டது கூட அவர்கள் தாரிணியை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள் என்பதற்காக தான்.

அப்படி பொத்தி பொத்தி வளர்த்தவரிடம், ‘எந்த முகத்தை வைத்துக் கொண்டு, பார்த்து சிறிது நாட்களிலேயே ஒருவனை காதல் செய்து, திருமணத்திற்கு ஒத்துக் கொண்டு, அவனுடன் தானும் ஒன்றாக கலந்து இரண்டு நாட்களில் அவன் என்னை ‌விட்டு விட்டு சென்று விட்டான், நான் இப்படி ஏமாந்தவளாக உங்கள் முன் தோற்றுப் போய் நிற்கிறேன் என்று எப்படி சொல்வது?’

அவளை நினைக்க அவளுக்கே கஷ்டமாக இருந்தது. ‘படித்து புத்தியை வளர்த்தும் முன்பின் தெரியாத ஒருவனை நம்பிய தன் முட்டாள் தனத்தை என்ன சொல்வது?’

“பணம் வைத்திருப்பவர்களுக்கு எல்லாமே ஒரு விளையாட்டு. அவர்களின் பொழுதுபோக்குக்கு மாட்டுபவர்கள் ஏழைகள் தான்” என்று சந்திரன் எப்போதும் அவளிடம் சொல்வார் .

ஆனால் அகரனை பார்த்த போது அவர் சொல்லியது எல்லாம் நினைவில் இல்லை.

அவனின் அருகாமை அவளது வயதிற்கு உடலில் ரசாயன மாற்றங்களை உண்டு பண்ணியது.

முதன் முதலில் காதலும் அவனிடம் தான் வந்தது.
முதல் காதல் எப்போதும் எல்லாருக்கும் சிறப்பானது.
அதுவும் அது திருமணம் வரை சென்றவுடன் அவளுக்கு வேறு எண்ணமே வரவில்லை.

தெய்வாவையும், மருதனையும், பாண்டியனையும் யாருமே ஒன்றும் குறை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட குடும்பத்தில் வாழப்போகிறோம் என்று தான் எல்லாவற்றுக்கும் சரியென்று சொன்னாள்.

இப்போது எல்லாவற்றையும் கேள்விக்குறியாக்கி விட்டு அவன் பாட்டுக்கு சென்று விட்டான்.

கையிலிருந்த அலைபேசியும் அவனையே ஞாபகப்படுத்த அவனின் எண்ணிற்கு அழைத்தாள்.

அவனைப்போலவே அதுவும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது.

தெய்வாவின் எண்ணை அடுத்து அழைத்தாள்.

அவரும் மௌனம் சாதிப்பதற்காக அவளது எண்ணை ப்ளாக் செய்து இருந்தார். அவளுக்கு அதுதான் அதிர்ச்சியாக இருந்தது.

எப்படி இருந்தாலும் தெய்வா அகரனிடம் பேசி சமாதானப் படுத்தியிருப்பார் என்று நம்பிக்கை வைத்திருந்தவளின் எண்ணத்தில் பெரிய பாறாங்கல்லாய் விழுந்திருந்தது.

அதிர்ச்சியில் மூச்சு கூட போய் வருகிறதா என்று தெரியவில்லை. நெஞ்சை அடைக்கும் துக்கம் என்பார்களே அது போன்ற நிலைமை.

உண்மையிலேயே அகரன் அவளுக்கு துரோகம் இழைத்து தனிமையில் விட்டுச் சென்று விட்டானோ என இப்போது தான் சந்தேகம் வந்தது. அதற்கு எப்படி தெய்வா உடந்தையாக இருப்பார் என்று மண்டையை உடைத்துக் கொண்டாள்.

வெளி உலகம் இதுதானா? யாரும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை என்பது தான் உண்மையா?

சந்திரனை பார்த்தாள். கதறி அவரது காலில் விழுந்து அழ வேண்டும் போல இருந்தது.

‘நல்லவேளை திருமணம் செய்யவில்லை’ என்று ஒரு நொடி நினைப்பு வந்ததும் அவளுக்கே விரக்தியில் சிரிப்பு வந்தது.

பெயருக்கு தாலியை கட்டிக் கொண்டு தன்னை இழந்தது தான் மிச்சம்.

இதில் நிஜமாகவே திருமணம் ஆகவில்லை என்ற சமாதானம் வேறு.

உலகம் எவ்வளவு அழகாக பொய்யை, துரோகத்தை மறைத்து வைக்கிறது. ஒருவரை பார்த்தவுடன் அவர் எப்படி பட்டவர் என்று கண்டுபிடிக்க முடிந்து விட்டால் எத்தனை அபலை பெண்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

காலம் கடந்து புலம்பி என்ன பயன் என்று தோன்றியது அவளுக்கு. ஆனாலும் உள்ளுக்குள் மனம் அடித்துக் கொண்டது. காரணமே சொல்லாமல் ஒருவரை ஒதுக்கி வைப்பது எப்படி நியாயம் ஆகும்.

இருக்கும் தலைவலியில் அவளுக்கு இந்த ஒரு கேள்விக்கு பதில் தெரிந்தால் போதும் என்று தோன்றியது.

யார் பதில் சொல்லப்போகிறார்கள்?

‘காலம் சொல்லும்’ என்று அவளின் அம்மா உயிரோடு இருந்திருந்தால் ஆறுதல் சொலலியிருப்பார்.

யோசித்துக் கொண்டே தாலியை தடவிக் கொண்டு இருந்தவள் அதை அவளது மாமா பார்க்கும் முன் கழட்ட நினைத்தாள்.

சரியாக அவள் கழட்டும் போது குமுதினி, “தாரிணி.. என்ன பண்ற” என்று சத்தமாக அழைக்க பதறிப்போய் தாலியிலிருந்து கையை எடுத்தாள்.

“அக்கா..” என்ன சொல்வது என்று புரியாமல் அவரை பார்த்தாள்.

“ஏன் தாலியை கழட்டற. அதுக்குள்ள உனக்கும் அந்த தம்பிக்கும் உறவே முடிஞ்சிருச்சுன்னு நினைச்சிட்டியா?”

“அக்கா.. என்னை என்ன செய்ய சொல்றீங்க? அவரும் ப்ளாக் பண்ணிட்டார். ஆண்ட்டியாவது எனக்கு உதவுவாங்கன்னு நினைச்சா அவங்களும் ப்ளாக் பண்ணிட்டாங்க.. அப்ப நான் தான் ஏமாந்து நிக்கறேன்னு தானே அர்த்தம்.”

“என்னது உன் மாமியாரும் ப்ளாக் பண்ணிட்டாங்களா? அவங்களுக்கு என்ன வந்துச்சு தாரிணி. ஏன் இப்படி பண்றாங்க. அவங்களை நல்லவங்கன்னு இல்ல நான் நினைச்சேன்?”

“எல்லாருக்கும் அவங்க நல்லவங்க தான் அக்கா. ஆனா எனக்கு தான் நல்லவங்களா இல்ல.”

“இரு நான் என் நம்பர்ல இருந்து கால் பண்றேன். இரண்டு பேரையும் உண்டு இல்லைன்னு பண்ணிடறேன் பாரு.. உனக்கு யாருமில்லைன்னு நினைச்சிட்டு இருக்காங்களா?” குமுதினி கோபத்தோடு இருவருக்கும் அழைத்தாள்.

தாரிணியின் எண்ணை போலவே குமுதினியின் எண்ணையும் அவர்கள் ப்ளாக் செய்து இருந்தார்கள்.

அவரின் முகத்தை பார்த்ததுமே தாரிணி புரிந்துக் கொண்டாள்.

“என்னக்கா நான் ஏமாந்து தான் நிக்கறேன்னு இப்பவாவது புரிஞ்சுச்சா? இப்போ நான் தாலியை கழட்டிறவா. மாமா எழுந்து என்னை பாத்தா நான் என்ன பதில் சொல்வேன் . நான் அவரோட பழைய தாரிணியாவே இருந்துக்கறேன்.”

“லூசு மாதிரி பேசாத தாரிணி. உன்னை ஏமாத்த தான் இங்க உனக்கே தெரியாம அவ்ளோ பணம் கொடுத்து அந்த தம்பி வீடு கட்டுச்சா. அங்க இருந்து உன்னை இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனுமா என்ன? சென்னையிலேயே வெளிய போன்னு சொல்ல எவ்ளோ நேரம் ஆகப்போகுது. மாமா எந்திரிக்கட்டும், அவர் கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன். உனக்குன்னு இருக்க ஒரே சாட்சி இந்த தாலி தான். அதை கழட்டாத..”

“என்னக்கா இதை போய் சாட்சின்னு சொல்றீங்க.?”

“உனக்கு தாலி கட்டினதை யாராவது பாத்திருப்பாங்க இல்ல. சட்டப்படி அவர் பொண்டாட்டி நீ தான்னு அதுல ஒருத்தர் கூடவா சொல்ல மாட்டாங்க?”

குமுதினி சொன்னதை கேட்டு அழுவதா சிரிப்பதா என்று அவளுக்கு தெரியவில்லை.

‘பொம்மை கல்யாணம் போல தான். ஆனால் அவனது நிறுவனத்தில் எல்லாரும் பார்த்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் சாட்சி என்று சொல்வதா?

இல்லை நானாகத்தான் ஒரு பொய் கல்யாணத்தை மெய் கல்யாணம் என்று சொல்லி என்னை இழந்தேன் என்று சொல்வதா?’

எதை சொன்னாலும் அகரனுக்கும் அவளுக்கும் திருமணம் ஆகாமலேயே இங்கு வந்து ஒன்றாக இருந்தார்கள் என்று சொன்னால் குமுதினி என்ன நினைப்பார் என்று யோசித்தாள்.

தெய்வாக்கு தெரியாமல் தாலியை ஆடைக்குள் மறைத்து வைத்திருந்ததை போல் இப்போது மாமாவுக்கு தெரியாமல் தாலியை மறைத்து வைத்துக் கொள்வது என்று முடிவெடுத்தாள்.

‘திருமணம் பற்றி வாயே திறக்க கூடாது.. அவருக்கு அது தெரியாமலே போகட்டும்’ என்று நினைத்தாள்.

ஆனால் விதி எப்போதும் வலியது அல்லவா!

*******
அகரன் கடல் காற்றை முடிந்த அளவு அனுபவித்து அவன் பாரத்தையெல்லாம் கடலிலேயே விட்டு விட்டு வீட்டுக்கு வந்தான்.

அத்தனை பேரும் அவனது வருகைக்கு காத்திருந்தார்கள். கடலில் போட்ட பாரம் மீண்டும் எழுந்து வந்து அவன் நெஞ்சில் அமர்ந்து கொண்டது.

நேற்று போல் இன்று நிச்சயமாய் யாரையும் ஏமாற்றி விட்டு அறைக்குள்
போக முடியாது என்பது புரிந்தது.

மருதன், “அகரா என்னப்பா ஊர்ல இருந்து வந்து என்னை வந்து பாக்காம கம்பெனிக்கு போய்ட்ட?”

“தாத்தா.. அது வேலை நிறைய இருந்துச்சு தாத்தா. அதான். “

“ஓ.. அப்படியா.. சரி விடு. தாரிணி உன்கூட வரலையாப்பா?”

“தாத்தா” என்றவனுக்கு அதற்கு மேல் பொய் சொல்ல வரவில்லை.

“ம்ம்ம். சொல்லு. ஏன் அவளை கூட்டிட்டு வரலை “

“அவ அங்கேயே இருக்கட்டும் தாத்தா. அப்புறமா பாக்கலாம்.”

“இந்த மாசம் கல்யாணத்தை வச்சிட்டு அவ அங்கேயே இருக்கட்டும்னு சொன்னா எப்படிப்பா?”

“கல்யாணத்தை தள்ளி வச்சுக்கலாம் தாத்தா. கம்பெனில நிறைய வேலை இருக்கு. அதெல்லாம் பாக்கலாம் முதல்ல. “

“காரணம் கேட்டா அதுக்கு பதில் சொல்லாம சுத்தி வளைக்கிறன்னா அப்ப ஏதோ என்கிட்ட மறைக்கறன்னு அர்த்தம். எதுவா இருந்தாலும் சொல்லு அகரா!”

“தாத்தா.. அது.. இப்போதைக்கு என்ன எதுவும் கேட்காதீங்க. ப்ளீஸ். என்னால் எதையும் சொல்ல முடியாது”

“மருமகனே.. எங்க கிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்ல போற. எதுவா இருந்தாலும் சொல்லு. நாங்க இருக்கோம் உனக்கு” பாண்டியன் அவனை பார்த்து ஆறுதலாக சொன்னார்.

“அகரா. அந்த பொண்ணு மேல என்ன தப்பு இருக்குன்னு நீ அவளை அங்கேயே விட்டுட்டு வந்த?” தெய்வா கேட்டார்.

“அகரா.. அவ தான் இந்த வீட்டு மருமகன்னு நான் சொன்னதுக்கு அப்புறம் பத்திரிக்கை அடிச்சு எல்லாருக்கும் கொடுத்த பிறகும் எதுவும் சொல்ல மாட்டேன்னு நீ சொன்னா என்ன அர்த்தம்.?” மருதன் அவர் பிடியை இறுக்கினார்.

“மறைக்குறதை பார்த்தா அந்த பொண்ணுக்கிட்ட ஏதோ தப்பு இருக்குன்னு தானே அர்த்தம். இதுக்குதான் முன்ன பின்ன தெரியாதவளலாம் வீட்டுக்குள்ள சேர்க்காதீங்கன்னு சொன்னேன். யார் கேட்டா.. எங்க இருந்து வந்தாளோ. எப்படிப்பட்டவளோ.. ஒருவேளை எவனோடவாவது போய்ட்டாளா.. இரண்டே நாள்ல.. “ இளக்காரமாக அகரன் பார்த்துக் கொண்டே சொன்னார் ஆண்டாள்.

அகரனுக்கு தலை சூடேறியது.

“அகரா. பத்து நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு இப்படி பேசினா என்ன அர்த்தம். எல்லாருக்கும் என்ன பதில் சொல்றது. அவளை எதுக்கு விட்டுட்ட வந்த. அப்படியென்ன தப்பு பண்ணா அவ?” தாரிணி மேல் தான் தப்பு என்று முடிவு கட்டியது போல தெய்வா பேசினார்.

ஆண்டாளுக்கும் மதுவுக்கு மே தெய்வா பேசியதை பார்த்து ஆச்சர்யம்.

நாலா பக்கம் இருந்தும் கேள்விகள் அம்புகளாய் துளைத்தன.

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தான் அகரன்.

“கல்யாணம் வேண்டாம். அதுக்கு மேல என்னால சொல்ல முடியாது.ப்ளீஸ் இதை இப்படியே விட்டுடுங்க”

“ஓ அப்ப கல்யாணம் பண்ண கூடாதுன்னு தான் இப்படி ஒரு டிராமா? ரெண்டு மாசத்துல ஒரு பொண்ணை பிடிச்சு அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி, கல்யாணம் நடக்கறப்ப அவளை கொண்டு போய் விட்டுட்டு வந்து, என்னை எதுவும் கேட்காதீங்கன்னு சொல்லிடலாம். ஹ்ம்ம். கடைசியில நடிக்க வந்தவதானா அவ?”
ஆண்டாள் நக்கலாய் கேட்க,

“டிராமா பண்ணனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. சொன்னா அம்மா தாத்தாலாம் தாங்க மாட்டாங்க. அதான்.”

“அப்படியென்ன விஷயம் மருமகனே. நீ இதுக்கு மேல விஷயத்தை சொல்லலனா தான் தாத்தாவும், அம்மாவும் மனசு நொந்து போவாங்க. இவங்களும் வாய்க்கு வந்ததை பேசுவாங்க” பாண்டியன் சொன்னதும்,

“வாழ்க்கையில எவ்ளோ கஷ்டங்களை தாண்டி வந்தாச்சு. இதுவும் அதுல ஒன்னா எடுத்துக் வேண்டியது தான். சொல்லு நீ.” மருதன் சொன்னதும், வேறு வழியில்லாமல் அகரன்
மனதுக்குள் நொந்துக் கொண்டே,

“அவ வேற யாரும் இல்ல தாத்தா. அந்த ஓடிப்போன ஆளோட மக”

தெய்வாவுக்கு தன் காதுகளை நம்ப முடியவில்
லை. நெஞ்சில் கைவைத்து அகரனையே பார்த்தார்.

வேறு எதுவும் பிரச்சினையாக இருக்குமென்று தான் நினைத்தார்‌.

தன் தலையில் இடியை தூக்கி போடுவான் என்று நினைக்கவில்லை.














 
Status
Not open for further replies.
Top