ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் வானிலே- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 5


விடியலில் தெய்வாவும், அகரனும் மருத்துவமனை சென்று பவதாரிணியை அழைத்துக் கொண்டு வீடு வந்தனர்.

வெளியில் இருந்து பார்க்கும் போது, பளிங்கு அரண்மனை போல் வீடு இருந்தது. அதன் பிரம்மாண்டத்தை பார்க்கும் போதே பவதாரிணிக்கு மூச்சு அடைத்தது. இவ்வளவு பெரிய வீட்டில் எப்படி நாம் இருப்பது?, இங்கு வேறு யாரெல்லாம் இருப்பார்கள்?

நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது.

காரில் இருந்து இறங்கிய தெய்வா, “கௌரி … கௌரி” என்று அழைத்ததும், வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் வந்து நின்றார்.

“கௌரி.. இதான் பவதாரிணி. நீ தான் இந்த பொண்ணு நடக்கற வரைக்கும் பாத்துக்கணும். ஒரு கைப்பிடி. மெதுவா இறக்கி இந்த ச்சேர்ல உட்கார வைக்கலாம். பாத்து இறங்குமா.” என தெய்வா கைகளை நீட்டி அழைக்க, தாரிணியால் கீழே காலை ஊன்ற முடியவில்லை.

கௌரியும், தெய்வாவும் ஆளுக்கு ஒரு பக்கமாய் பிடித்தாலும் அவளைத் தூக்க முடியவில்லை.

“அகரா, இங்க வா. இந்த பொண்ணை இந்த பக்கம் பிடி. அப்படியே தூக்கி உட்கார வைக்கலாம்” என்று சொன்னதும், அகரன், தாரிணி இருவரும் அதிர்ந்தார்கள்.

பவதாரிணியின் உடல் முழுதும் வேர்க்கத் தொடங்கியது.

அகரன் உறைந்தது போல் நின்றான்.

“என்னப்பா வா “ என்று கூப்பிட்டாலும் அவன் காதில் விழவேயில்லை.
“இல்ல பரவால்ல ஆண்ட்டி..மேம்.. நானே காலை ஊன்றேன்”.

சொல்லிக் கொண்டே காலை கீழே வைத்தாள். அவளால் சம நிலைப்படுத்தி எழுந்திரிக்க முடியவில்லை.

“இரும்மா.. அகரா” என்று சத்தமாக கூப்பிட்டதும் அருகில் வந்து நின்றான்.

“தூக்குப்பா. நான் இந்தப் பக்கம் பிடிக்கிறேன்”

தெய்வா சொன்னதும், அவன் கை நடுங்கியது. இருந்தும் சமாளித்துக் கொண்டே அவளை முழங்கையில் பிடித்தான். அதுவே இரும்புப் பிடி போல் இருந்தது.

அவளுக்கு வலித்ததை அவள் முகம் போன போக்கில் புரிந்தவன், மெதுவாக பிடித்தான்.

“மேலே பிடி அகரா. முழங்கையில் பிடித்தால் எப்படி தூக்குவ” அம்மா சொன்னதும் தான் புரிந்தது.

மெல்ல அவளின் கையை தோள்பட்டையோடு பிடித்து தூக்கியவனின் வாசனை அவள் நுரையீரல் முழுதும் நிரம்பியது. மிக மிக அருகாமையில் அவனது உடல் அவளுக்கு முன் இருந்தது. அவனது ஸ்பரிசத்தில் அத்தனை ரோமங்களும் எழுந்து நின்றதை போல் உணர்வு. இரண்டு கண்களையும் இறுக்கி மூடிக் கொண்டாள்.

அவனுக்கோ அவளின் அருகாமை, உடலின் வெப்பம் எல்லாம் சேர்ந்து என்னவோ செய்தது. ஏதோ ஏழு ஜென்மங்களாய் பிணைந்திருந்த உணர்வு.

மெதுவாக அவளை சக்கர நாற்காலியில் உட்கார வைத்தவன், விடு விடு வென வீட்டுக்குள் சென்றான்.

கௌரியும் தெய்வாவும் அவளை அவுட் ஹவுஸிற்கு அழைத்துச் செனறனர்.

“பவதாரிணி. நீ இங்கே சௌகர்யமா இருக்கலாம். கௌரி உன்னை பாத்துப்பாங்க. ஏதாவது னா என்னை ஃபோன்ல கூப்பிடு. நல்லா சாப்பிடு. மாத்திரை கரெக்டா போட்டுக்க. உன்‌ வீட்டில் இருக்கிற மாதிரி நினைச்சுக்க.. கௌரி பாத்துக்க” என்று சொல்லிவிட்டு தெய்வா கிளம்பினார்.

அப்போது தான் பவதாரிணிக்கு நிம்மதியாக ஒரு பெருமூச்சு வந்தது.

‘அப்பாடா, அந்த முசுடுகிட்ட இருந்து தள்ளி இருக்கலாம். தினமும் அவரை பாத்துக்கிட்டே அங்கேயே இருக்கிறது எவ்ளோ பெரிய தண்டனை’ தனக்குள் சொல்லிக் கொண்டு கௌரியை பார்த்து மெதுவாக சிரித்தாள்.

“ஏதாவது சாப்பிடறீங்களா மா. குடிக்க ஜூஸ் போடவா” கௌரி கேட்டதும், சுற்று முற்றும் பார்த்தாள்.

“உங்க கண்ணுக்கு மட்டும் பக்கத்தில் யாராவது தெரியறாங்களா அக்கா?” என்று தாரிணி கேட்டதும்,

இப்போது சுற்றும் முற்றும் பார்த்து முழித்தது கௌரி.

கேள்வியாய் தாரிணியை பார்க்க, “இல்ல அம்மான்னு யாரையோ கூப்பிட்டீங்களே… அதான்” அவள் சொன்னதும் தான் கௌரிக்கு புரிந்தது.

“அட என்னம்மா நீங்க வேற. சொல்லுங்க ஜூஸ் போடவா? “
“பாத்தீங்களா … பாத்தீங்களா திரும்ப அம்மான்னு.. என்ன பார்த்தா அவ்ளோ வயசானவ மாதிரியா இருக்கு… சும்மா தாரிணின்னு கூப்பிடுங்க..”

“பரவால்ல மா.. எல்லாருமே இங்க மதும்மாவையும் அப்படித்தான் கூப்பிடுவோம். அவங்களுக்கு உங்களை விட ஒன்னு ரெண்டு வயசு தான் கூட இருக்கும்.. தெய்வாம்மா உங்களை கூப்பிட்டு வந்துருக்காங்க. அப்போ நாங்க மரியாதையா தான் கூப்பிடுவோம்”

“மதும்மாவா.. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.. கொஞ்ச நாளா என் வாழ்க்கை ஏதோ ரிப்பீட் மோட்ல போற மாதிரியே இருக்குக்கா. கேட்ட பேரையே கேட்கிறேன். பாத்தவங்களையே பார்க்கறேன்.. எதாவது லூப்ல மாட்டிக்கிட்டேன் போல” தாரிணி பேச, ஒன்றும் புரியாமல் விழித்தார் கௌரி.

அவர் விழித்ததை பார்த்து அசடு வழிந்து தாரிணி மறக்காமல் ஒரு அசட்டு சிரிப்பையும் சிரித்து வைத்தாள்.

இதற்கு மேல் அவளிடம் பேசினால் மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்து அவளுக்காக ஜூஸ் போட சென்றார் கௌரி.

தன்‌ அறைக்கு வந்தவனுக்கு நடந்தவை எல்லாமே ஆச்சர்யமாக இருந்தது. வழக்கமாக தன் தாடியை தடவிக்கொண்டே யோசிப்பவனுக்கு வேறு ஒரு வாசனை அவன் கைகளில் வீசியது போல் இருந்தது. அதை மூக்கிற்கு அருகில் கொண்டு சென்றான்.

பூக்கள் பூத்ததும் வீசும் வாசனை போல் அவன் கைகளில் நறுமணம் வீசியது. தாரிணியின் முகம் அவனுக்கு நினைவில் வந்தது.

தான் அருகே சென்றதும் இறுக்கி மூடிய அவள் கண்களும், உதடுகளும் இப்போது மிக அருகில் இருப்பதாய் அவனுக்கு தெரிந்தது.

அந்த மெல்லிய பட்டுப்போன்ற மேனியும், அவள் வாசனையும், அவளின் பயந்த குரலும், அவன் இதுவரை பார்த்த மேல்தட்டு பெண்களிடம் இருந்து எல்லாவற்றிலும் வித்தியாசப்படுத்தியது.

ஏனோ அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இது என்ன விசித்திரம் என்று நினைத்து வேகமாக சென்று சில்லென்ற தண்ணீரை முகத்தில் வாரி அடித்தான்‌.

கண்ணாடியின் முன் வந்து அவன் முகத்தை, உடலை தீர்க்கமாக பார்த்தான்.

இறுக்கி செதுக்கி வைத்ததைப் போன்ற முகம். லேசாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி, மீசை. கோபத்தில் கூர் நாசி இன்னமும் கூராக இருந்தது. கண்களில் எப்போதும் எரித்து விடுவதைப் போன்ற பார்வை. இரு புருவங்களும் அவன் பார்க்கும் திசையில் தூக்கியது.

உடற்பயிற்சியால் இறுகிய புஜங்கள். டீஷர்ட்டில் திமிரிக் கொண்டு இருக்கும் மார்புகள். சரிதான். எந்த பெண்ணுக்கும் பயம் வரவைக்க கூடிய தோற்றம் தான்.

ஒரு நொடி சிரித்து, உடலை தளர்த்தி, தலையை கலைத்து விட்டு பார்த்தான்.

‘நோ’ அவனே சொல்லிக் கொண்டு மீண்டும் பழையத் தோற்றத்திற்கு உடலை கொண்டு வந்து கண்ணாடியில் பார்த்தான்.

‘ம்ம் இப்பத்தான் கரெக்டா இருக்கு’ தனக்குள் சொல்லிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி கொண்டு அலுவலகம் போக கிளம்பி வந்தவன் எதிரில் தாத்தா நின்றிருந்தார்.

“அகரா. அந்த பொண்ணு வந்ததா அம்மா சொன்னா. அவ ஃபோன், பேக்கெல்லாம் தொலைஞ்சிருச்சுன்னு சொன்ன இல்ல.. வேணா புதுசா வாங்கி கொடுத்திரு” அவன் பதிலை எதிர்பார்க்காமல் கடந்து சென்றார்.

‘என்னங்கடா நடக்குது இங்க. காலையில அம்மா என்னடான்னா அந்த பொண்ண தொட்டு தூக்குன்னு சொல்றாங்க. இவர் என்னடான்னா அந்த பொண்ணுக்கு ஃபோன், பேக் வாங்கித் தர சொல்றார். சம்திங் ராங்.. ஒரு வேளை இதெல்லாமே இவங்க பண்ற செட்டப்போ? எனக்கு கல்யாணம் பண்ண சின்ன பொண்ண வச்சு ப்ளான் கிளான்னு.. நோ..நெவர். இந்த அகரன் வாழ்க்கையில் பெண்ணா.அதுவும் இளம்பெண்ணா… என்னடா அகரா உனக்கு வந்த சோதனை.’ புலம்பியவன் எதிரில் மது முறைத்துக் கொண்டே நின்றிருந்தாள்.

‘இவளுக்கு வாங்கியும் ஒன்னும் அடங்கல.. இருடி உன்னை சமயம் பாத்து நாலு தட்டு தட்டறேன்.. என் பக்கமே எப்பவும் வரக்கூடாது’ என நினைத்துக் கொண்டே அவளை பதிலுக்கு முறைத்து விட்டு கிளம்பினான். அவன் போகும் திசையில் அவள் கண்கள் சென்றது.

‘ஆள் பாக்க ஒன்னும் சரியில்லையே. நேத்து இருந்த மாதிரி இவன் இப்போ இல்ல.இவ்ளோ அமைதியா இவன் வாழ்க்கை போகக் கூடாதே. எதாவது பண்ணனும். ஆனா நான் தான் செஞ்சேன்னு தெரியக்கூடாது. தெரிஞ்சா…. ‘ அன்று கழுத்தை இறுக்கியது அவள் நினைவுக்கு வந்தது.


‘மை காட்’ வாயை குவித்து காற்றை ஊதிவிட்டு நடந்தாள்.


அன்றைய தினம் அவர்களின் முதல் ஏற்றுமதிக்கான ஆர்டர் அனைத்தையும் அனுப்ப வேண்டிய நாள்.

தாத்தாவிடமும், அம்மாவிடமும் ஆசி பெற்றவன், “மாமா. இன்னிக்கு நீங்க என்னோட வாங்க மாமா. முதல் ஆர்டர் உங்க கையால அனுப்பி வைங்க” என அகரன் கூப்பிட்டதும், பாண்டியனின் கண்களில் நீர் கோர்த்தது.

“மது, பாரு உனக்கு கூப்பிட தோணலை. அகரன் கூப்பிடறான் பாரு.” என அவர் சொன்னதும் மதுவிற்கு கோபம் வந்தது.

“அவனா போய் எடுத்த ஆர்டர். அதனால அவன் கூப்பிடறான். நான் சொன்ன மாதிரி டிசைன்ஸ், கலர்ல கொண்டு போய் காமிச்சு இருந்தா இப்ப நாம அனுப்பறதை போல பத்து மடங்கு அனுப்பியிருக்கலாம்.அப்ப நானும் உங்களை கூப்பிட்டு இருப்பேன். இதுல எவ்வளவு நஷ்டம்னு அக்கவுண்ட்ஸ் எடுத்துப் பார்த்தா தான் தெரியும்.”

சமயம் பார்த்து அவனை மட்டம் தட்டினாள்.

“தாத்தா, இங்க பாருங்க. இந்த டிசைன்ஸ் அவங்களை ரீச் ஆகறதுக்கு முன்னாடியே, நாம அனுப்பின சாம்பிள்ஸ் பார்த்து அடுத்த ஆர்டர் வந்திருக்கு. அவங்களே அவங்க சிஸ்டர் கன்சர்ன்ஸ்க்கு ரெஃபர் பண்ணிருக்காங்க. நாம டிசைன்ஸ் மெயில் பண்ணிட்டு சாம்பிள்ஸ் அனுப்பனும்.” அவன் மடிக்கணினியில் விவரங்களை காண்பித்து, சொன்னதும் மூன்று பேரும் அவனை பெருமையாக பார்த்தார்கள்.

மதுமிதாவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.

“அவன் சொல்ற ஆர்டர்ஸையே நீங்களும் ஒத்துக்கிட்டா நான் எப்படி என்னை நிரூபிக்க முடியும். அப்புறமா ஒரு வருஷம் முடிஞ்சதும் அகரன் தான் நல்லா கம்பெனியை பாத்துக்கிட்டான்னு அவன்கிட்ட மொத்தமா தூக்கி கொடுப்பீங்க. நான் வேடிக்கை பாக்கனும்.”

மது வெடித்தாள்.

“நீ உன் சொந்த முயற்சியில் கிளையண்ட் பிடி. டிசைன்ஸ் அனுப்பு. ஆர்டர் எடு. அகரன் கொண்டு வர கிளையண்ட்ஸ்ட்ட உன் டிசைன்ஸ தான் காமிக்கனும்னு அவன் ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி நீ பண்ண அமர்க்களம் இருக்கே.. அன்னிக்கே உன்ன கம்பெனியை பார்த்துக்க வேணாம்னு சொல்லியிருக்கனும்”

பாண்டியன் சொல்ல, மதுவுக்கு அவள் அப்பாவின் மீது கோபம் அதிகமானது.

“லுக்…நீங்க மிரட்டற அளவுக்கு நான் ஒன்னுமில்லாதவ இல்ல. தாத்தா சொத்துக்கு சட்டப்படி நான் தான் வாரிசு. உங்களுக்கு கூட இல்ல..இவனுக்கு அதில பங்கு கொடுக்க நாங்க ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம். இதுல மொத்த கம்பெனி உரிமையை அவனுக்கு கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்”

அவளின் பேச்சை பார்த்து தாத்தாவுக்கு எரிச்சல் வர‌ முகத்தை சுளித்துக் கொண்டார்.

“பாண்டியா, என் ரூம்க்கு வா. அகரா நீ கிளம்பு. அவன் அப்புறமா வருவான்”

சொல்லிவிட்டு நேராக அவர்‌ அறைக்கு சென்றார்.

“அமைதியா போற குடும்பத்தில் உங்க ரெண்டு பேரால் தான் பிரச்சினையே” தலையில் அடித்துக் கொண்டு தன் அப்பாவின் அறைக்கு சென்றார் பாண்டியன்.
அம்மாவைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு தன் நிறுவனத்துக்கு கிளம்பினான் அகரன்.

வாசல் வரை வந்தவன் எட்டி பின்பக்கம் இருக்கும் அவுட் ஹவுஸை பார்த்தான். கதவு மூடியிருந்தது. ஜன்னல் அருகிலும் பவதாரிணி இல்லை.

“தம்பி …தம்பி” பின்னாடி குரல் வந்த திசையை பார்த்தான்.

கௌரி நின்றிருந்தார்.

“என்ன தம்பி பார்க்கறீங்க. இப்பத்தான் தாரிணிம்மா படுத்தாங்க. சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டாங்க”

“ஓ.. இல்ல நான் சும்மாதான் பாத்தேன்.அவங்களை இல்ல… “ என சமாளித்தான்.

“அப்படியா தம்பி. நான் நீங்க அவங்களைத்தான்‌ தேடறீங்களோனு நினைச்சேன்.. அவங்க ரொம்ப குறும்புக்காரங்க தம்பி. நல்லா தமாஷா பேசுறாங்க”

கௌரி சிரித்துக் கொண்டே செல்ல,
‘ஆமாமா.. குறும்பு தான் .. அன்னிக்கே பார்த்தேனே. முன்ன பின்ன தெரியாதவங்களை கூட கிண்டல், நக்கல் பண்ற குணம்’. உதட்டை சுளித்துக் கொண்டு அவன் வண்டியை கிளப்பினான்.

அந்த சத்தம் கேட்டு படுத்த இடத்தில் இருந்தே எட்டிப் பார்த்தாள் தாரிணி. ஜன்னல் வழியே எதுவும் தெரியவில்லை.

வண்டி வெளியில் சென்று விட்டது தேய்ந்த ஒலியில் தெரிந்தது.

அருகில் இருந்த தலையணையை எடுத்து மார்போடு அணைத்தாள்.

சட்டென்று அவனின் வாசனை அவளின் இதயத்தில் நுழைந்தது போல் இருந்தது. அவனின் இரும்பு போன்ற புஜங்கள் அவளின் நினைவில் நின்றது‌. இன்னும் கொஞ்ச நேரம் அந்த உடும்பு பிடியில் இருக்க மாட்டோமா என்று ஒரு சின்ன ஆசை சில நொடிகளுக்கு வந்தது.

‘ச்ச. என்ன இப்படி வெட்கம் கெட்டு அவரை நினைக்கிறேன்.‌ ‘ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கட்டிலில் முகம் புதைத்தாள்.

**
நிறுவனத்தில் பேக்கிங் பிரிவில் அனைவரும் அவன் வருகைக்காக காத்து இருந்தனர்.

“எல்லாம் ரெடியா.. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை செக் பண்ணிட்டீங்களா. ஹார்பருக்கு தேவையான லீகல் பேப்பர்ஸ் ரெடியா சாரதி..” கேட்டுக் கொண்டே கட்டப்பட்டு இருந்த பெட்டிகளை பார்த்துக் கொண்டே சுற்றி வந்தான்.

சில பெட்டிகளில் ‘எதுவும் ஆபத்தில்லை’ என்ற ஸ்டிக்கர்களுக்கு பதில் , ‘நனைந்தால் ஆபத்து- வெடிபொருள்’ என்று ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

அவனின் முகபாவங்களை பார்த்ததுமே அனைவர் முகத்திலும், குழப்பமும், பயமும் தோன்றியது.

அவன் சொல்லும் விஷயத்தில் ஏதேனும் சிறு தப்பு நடந்தாலே அதில் சம்பந்தப்பட்டவர்களை வறுத்தெடுத்து விடுவான்.

ஒரு வாரமாக பல்வேறு பிரச்சினைக்கு இடையில் ஒவ்வொரு பிரிவிலும் சென்று பொறுமையாக எந்த தவறும் நிகழக் கூடாது என்று படித்து படித்து சொல்லியிருந்தான்..

இப்போது என்ன நடக்குமோ என்று மேலாளர் சாரதி பயந்தார்.

அவர் எதிர்பார்த்தது போல அவர் பெயரை சத்தமாக அழைத்தான்.

“சார்.. என்ன சார் … எதுவும் பிரச்சினையா?”

“ம்ம். இல்ல.. சாவகாசமா உட்காந்து பேசத்தான் கூப்பிட்டேன்..என்ன இது…என்ன பண்றீங்க எல்லாரும்” அவன் சுட்டிக் காட்டி கேட்ட இடத்தை பார்த்தார் சாரதி.

முடியில்லாமல் விளக்கு வெளிச்சத்தில் மின்னிய அவர் தலையில் அருவியில் குளித்ததை போல வேர்வை தண்ணீராக வழிந்தது.

“சார்… இது. இது.. நேத்து நைட் நாங்க செக் பண்ணி அடுக்கி வச்சப்ப கரெக்டா தான் சார் இருந்துச்சு. எல்லா லேபிள் அன்ட் ஸ்டிக்கர்ஸ் நான் பார்த்து தான் ஓகே பண்ணேன் சார். ஒட்டறப்பவும் கூட இருந்தேன் சார்.. “

“இப்ப என்ன அதுவா கால் முளைச்சு வந்து பெட்டில ஏறி உட்காந்திருச்சா.. பொறுப்புன்னு ஒன்னு இருந்தா இப்படி கேர்லெஸ்ஸா இருப்பீங்களா? “

“சார்.. சாரி சார்.இதோ உடனே சரி‌ பண்ணிடறேன் சார்” சாரதி பயத்தில் தடுமாறி பேசினார்.

“சாரி.. உங்க சாரி‌ யாருக்கு வேணும். இந்த ப்ராடெக்ட்ஸ் கப்பல்ல ஏறற வரைக்கும் அது உங்க பொறுப்பு. ஒரு தடவைக்கு பத்து தடவை செக் பண்ணனும். நான் சுத்தி வந்து பார்த்த உடனே கண்டுபிடிச்சேன் இல்ல. உங்களுக்கு கண்ணு என்ன பின்னாடியா இருந்துச்சு.” கோபத்தில் அவனது மாந்தளிர் நிற தேகம் சிவந்தது.

மூக்கு நுனி விடைத்து அடங்கியது.

“ஸ்டிக்கர்ஸ் பேஸ்ட் பண்ணவங்க யாரு. இதை உடனே மாத்த சொல்லுங்க. அதோட எப்படி இந்த மிஸ்டேக்ஸ் நடந்ததுன்னு தெரியனும். சிசிடிவி ல பாத்துட்டு எனக்கு டீடெய்ல் ரிப்போர்ட் வேணும்.” சொல்லிக் கொண்டே மீண்டும் ஒவ்வொரு பெட்டியாக கவனிக்க ஆரம்பித்தான்.




















 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 6


“சார்.. சிசிடிவி காலைல ஆறிலிருந்து எட்டு வரைக்கும் எதுவுமே பதிவாகலை. அந்த நேரத்தில் தான் ஏதோ நடந்திருக்கனும் சார். அப்போ யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை சார். ஆனா வேனும்னே பண்ண நினைச்சவங்க யாரும் அந்த நேரத்தில் பண்ணியிருக்கலாம் சார்”

“நல்லா விளக்கம் சொல்றீங்க சாரதி. செக்யூரிட்டிட்ட கேட்க வேண்டியது தானே.. யாரும் வெளில இருந்து வரலன்னா உள்ள இருந்தவங்க தான் பண்ணியிருக்காங்க. எல்லாம் நானே சொல்லனும்னா எப்படி?”
கண்டிப்புடன் பேசினான் அகரன்.

“சார் ரெண்டு நிமிஷம் டைம் கொடுங்க.. விசாரிச்சிட்டு வந்திடறேன்”

“லேபிள், ஸ்டிக்கர்லாம் மாத்திட்டு, திரும்ப ஃபுல்லா ஒரு முறை செக் பண்ணுங்க. பெட்டி சீல் உடைஞ்சிருக்கா, வேற எதுவும் பெட்டி மாறியிருக்கா, டாக்குமெண்ட்ஸ் எல்லாம்… எல்லாமே.. கம்ப்ளீட்டா.. செக் பண்ணிட்டு வர்றீங்க”

அதற்கு மேல் பொறுமையாக நின்று பதில் சொல்ல அவர் முட்டாள் இல்லை.

தலைவலி அவனை படுத்தி எடுத்தது. என்னவென்று சொல்ல முடியாமல் எல்லாவற்றிலும் குழப்பமாக அவன் வாழ்க்கை சென்றதில்லை.

இப்போதுதான் கலைத்து போட்ட சீட்டுக் கட்டாக அவன் குழம்பி நிற்கிறான்.

தன் அறைக்கு வந்து அமர்ந்தான். அடுத்த ப்ராஜெக்ட்டுக்கான டிசைன்ஸ் அவன் மேஜையில் பரப்பி இருந்தது.

இருந்த பிரச்சினையில் அவனால் எதையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. அம்மாவை அழைக்கலாம் என்று நினைத்தான்.

ஆனால் இங்கு வந்தால் நடந்ததை நினைத்து வருத்தப்படுவார். கதவு தட்டப்பட்டு திறந்தது.

“சார்.. சாரி டூ டிஸ்டர்ப் யூ. மாடல்ஸ்க்கு ஷூட் எப்ப வச்சுக்கலாம் அண்ட் என்ன மாதிரி ஷூட் பண்றதுன்னு நமக்கு எதுவும் ஐடியா இருக்கான்னு ஆட் டைரக்டர் கேட்டார்..” அவனின் உதவியாளர் மாலினி வந்து கேட்டதும்..

“அக்கா. நீங்களே எதாவது சொல்லுங்க. இல்ல அவர் என்ன ஐடியா சொல்றார்னு கேட்டு சொல்லுங்க. அப்புறமா நான் அதில் ச்சூஸ் பண்றேன்..” என சொல்லிக் கொண்டே இருந்தவன் மேஜையில் இருந்த மஞ்சள் வண்ண துணிக்கான டிசைனைப் பார்த்ததும் அவன் மனதில் ஒரு எண்ணம் வந்தது.

“சரிங்க சார்” என மாலினி நகரப்போனதும், “ஒரு நிமிஷம் அக்கா. இங்க வாங்க.. “ என்று சொன்னவன்,

உடனே ஒரு காகிதத்தை எடுத்தவன் பென்சில் கொண்டு ஒரு மரம், மஞ்சள் வண்ணப் பூக்கள், கீழே உதிர்ந்த பூக்களுக்கு நடுவில் ஒரு பெண் மஞ்சள் நிற உடையணிந்து படுத்து ஒரு கையால் முகத்தை மூடி இருப்பது போன்று வரைந்தான். அடுத்த படம் ஒருவன் அவள் கைப்பிடித்து மேலே தூக்கி இடையை பிடித்து தன் அருகில் இழுப்பது போல, வேறு ஒரு உடை அதில் வரைந்தான். பின் மாலினியிடம் தந்து,

“அக்கா. இங்க பாருங்க. இதில வரைஞ்ச மாதிரி ஒரு பொண்ணு அந்த பூக்குவியல்ல இருந்து, அவன் கையை பிடிச்சு எழுந்து, அவன் மேல சாயறா .. அதே சீக்வன்ஸ் அவங்க காதல் டூ கல்யாணம் வரைக்கும் போகுது. நாம செலக்ட் பண்ணியிருக்க உடைகள் இதில ஒன்னொன்னா போட்டுட்டு வரா. இத எக்ஸ்பிளெய்ன் பண்ணுங்க அவர்ட்ட. என்ன சொல்றாருன்னு கேட்டுட்டு சொல்லுங்க..”

மாலினி அவனை விழி விரிய பார்த்து விட்டு அவன் கொடுத்த காகிதங்களை வாங்கி கொண்டு கிளம்பினார்.

பெருமூச்சு எடுத்து தன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவன், அப்போது தான் யோசித்தான். அவன் சொன்ன விஷயங்களில் அவன் கண்முன் அவனும், தாரிணியும் தான் இருந்தார்கள் என்பது புரிந்தது. அவர்கள் தான் அந்த பிம்பங்களாக தெரிந்தார்கள்.

ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு. காதல் முதல் கல்யாணம் வரை தாரிணியுடன் அவன் காதலுடன் நிற்பது போல் எப்படி கற்பனை செய்ய முடிந்தது? அந்த நேரத்தில் அவன் முகம் வெளிப்படுத்திய உணர்வை பார்த்து தான் மாலினி அப்படி விழி விரித்து பார்த்தார்களா? அவனுக்கு வெட்கமாகவும், அதே சமயம் குழப்பமாகவும் இருந்தது.

‘என்ன இது.. மனசுக்குள் நுழைந்தவள், காதலியாக மாறி விட்டாளா? இந்த தவிப்பிற்கு பெயர் என்ன?’ முதலும் புரியவில்லை, முடிவும் புரியவில்லை அவனுக்கு.

அம்மாவிடமும், தாத்தாவிடமும் தான் எப்படிப்பட்ட பெண்ணை பார்க்க சொன்னோம்.. இப்போது நாம் என்ன செய்கிறோம் என்று ஒருமுறை யோசித்தான். இந்த தேவையில்லாத சிந்தனை தனக்கெதற்கு என்று அவன் மேஜையில் அம்மாவின் படத்தை தனக்கு நன்றாக தெரியும்படி நகர்த்தி வைத்தான்.

ஒவ்வொரு முறை அவரை பார்க்கும் போது தனக்கு அவரைப் போல் ஒரு பெண் வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

இருந்த அத்தனை பிரச்சினைகளும் முடித்து, ஏற்றுமதிக்காக அனைத்தும் எடுத்து சென்றதும் தான் அவனால் வீடு வர முடிந்தது.

இரவு உணவிற்கு வந்தவன், அனைவரும் உணவு மேஜையில் காத்திருப்பது தெரிந்து அங்கு வந்தான்.

அவனையே மதுவும், ஆண்டாளும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தாத்தாவிடம் சுருக்கமாக அன்று ஏற்றுமதிக்கான பெட்டிகளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதை சொல்லிவிட்டு, “மாமா. நீங்க வரலைங்கறது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. ஆனா வந்திருந்தா ரொம்ப … ரொம்ப வருத்தப்பட்டு இருப்பீங்க” என்று சொல்லிவிட்டு அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்.

“என்ன அகரா..என்ன சொல்ற” தாத்தா கேட்டதும்,

“சொல்றதை விட பாருங்க தாத்தா” என்று சொல்லிவிட்டு, அங்கு இருந்த ஒரு டம்ளர் மேல் தன் அலைபேசியை வைத்து ஒரு வீடியோவை ஓடவிட்டான்.

அதில் ஒரு காவலாளி பேச ஆரம்பித்தார். தன்னை வற்புறுத்தி, மிரட்டி மதுமிதா பெட்டிகளில் ஸ்டிக்கர்களை மாற்றம் செய்ய சொனனதை ஒப்புக் கொண்ட வீடியோ அது.

“நோ… இது பொய்.. என்ன ஆதாரம் இருக்கு இதுக்கு?. நான் இன்னிக்கு ஆஃபிஸ் போகவே இல்ல. பொய் சொல்றான் தாத்தா” மதுமிதா படபடவென்று பொரிந்தாள்.

“ஆதாரம் தானே.. உனக்கும் அவனுக்கும் நடந்த கான்வர்சேஷனை ரெக்கார்ட் பண்ணியிருக்கான். செக்யூரிட்டியா இருந்தாலும் நல்ல புத்திசாலி. அவனுக்கு பிரமோஷன் தரலாம்னு இருக்கேன்”

“அது நான் தான்னு…” அவள்‌ முடிக்கும் முன் பதிவான குரலை ஒலிக்க விட்டான்‌.

“என்ன அடுத்து உன் குரலை மிமிக்ரி பண்ணிட்டாங்கன்னு சொல்ல போறியா. உன் ஃபோன் நம்பர் ரெக்கார்டிங்ல வருது. வேணும்னா எங்க இருந்து பேசினன்னு கேட்டு சொல்றேன்.”

அவள் முகத்தில் இனம்புரியாத பயம்.

அவள் அடுத்து சொல்ல ஆரம்பிப்பதற்குள், தாத்தா கையை காட்டி அமைதியாக இருக்க சொன்னார்.

“பாண்டியா நான் சொன்னதை எல்லார்ட்டையும் சொல்ல வேண்டிய நேரம் வந்திருச்சு. இப்பவே சொல்லிடு” என்றார்.

“அப்பா முடிவெடுத்தது என்னன்னா, ஒரு வருஷம் கழிச்சு பிரிச்சு கொடுக்கறதை இப்போவே பிரிக்க சொல்லிட்டார். இப்ப திருவான்மியூர்ல இருக்க கம்பெனி, இந்த வீடு இரண்டையும் தெய்வா பேர்ல மாத்தணும். அம்பத்தூர்ல இருக்க கம்பெனியும், அண்ணாநகர் வீடும் என் பெயர்ல மாறும். இருக்கற பணம், நகை, டெபாசிட் எல்லாம், வரப்போற மருமகளுக்கும், மதுவுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் சரிசமமா பின்னாடி பிரிச்சுக்கனும்.. “ ஒரு நொடி நிறுத்தி,

“நாம தேவைன்னா இந்த வீட்டில் இருக்கலாம்.இல்லன்னா கிளம்பிட்டே இருக்கலாம்” என்று மதுவையும், ஆண்டாளையும் பார்த்தபடி
பாண்டியன் சொன்னதும் அனைவரும் அதிர்ந்தனர். தாத்தா இருகைகளையும் மேஜையில் ஊன்றி பார்த்தார்.

“நானும் என்‌ பசங்களோட ஒன்னா சந்தோஷமா இருக்கனும்னு நினைச்சேன். ஆனா இவ்வளோ பிரச்சினைகளும் இந்த சொத்தினால தான் வருது. அதான் இப்படி ஒரு முடிவு. பாண்டியா, உன் பொண்ணுக்கு இனிமே அகரனோட கம்பெனில வேலை இல்ல. நீங்க வீட்ல இருக்கறதுனா இருக்கலாம்.‌ உங்க இஷ்டம்.” சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்.

தெய்வாக்கும், அகரனுக்கும் எதிர்த்து பேசும் தைரியம் இல்லை. அவர் உணவை முடித்து அவர் அறைக்கு சென்றார்.

உணவு உண்டதும் பாண்டியனை அழைத்து தெய்வா, “அண்ணா, என்ன இது.. எனக்கு சுத்தமா பிடிக்கல இந்த முடிவு. அப்பாதான் சொல்றாருன்னா நீங்க ஏன் இதுக்கு சம்மதிச்சீங்க. இந்த சொத்தெல்லாம் இப்பவே பிரிக்கனும்னு என்ன அவசரம்? ” வருத்தமாக சொல்ல, அகரனும் தலையசைத்தான்‌.

“நினைச்சப்படி உங்க அப்பாவ முடிவெடுக்க வச்சிட்டீங்க. இப்ப வந்து நடிக்கறீங்க.
இத்தனை நாள் என் வீட்டுக்காரரும், என்‌ பொண்ணும் கஷ்டப்பட்டு உருவாக்கின கம்பெனியை லட்டு மாதிரி தூக்கி இவனுக்கு கொடுப்பாராம்.
இந்த பாரம்பரிய வீட்டை பையனுக்கு குடுக்காம, பொண்ணுக்கு தூக்கி கொடுப்பாராம். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை ஓட்டின கதைதான் இது. உங்களை மாதிரி மாய்மாலம்லாம் எங்களுக்கு பண்ணத் தெரியல” ஆண்டாள் கத்தியதில் வீடே அதிர்ந்தது.

“அண்ணி ஏன் இப்படி பேசறீங்க?. எனக்கு நிஜமாவே இது பத்தி தெரியாது. இந்த முடிவில் எனக்கு விருப்பமுமில்ல. நான் அப்பாக்கிட்ட பேசறேன். பொறுமையா இருங்க”

“கேட்டுட்டாலும். அதெப்படி அத்தனை ஆம்பளைங்களையும் கைக்குள்ள போட்டுக்கறதுன்னு இத்தனை வயசாகியும் எனக்குத் தெரியல.” ஆண்டாள் சொன்னதும்,

“அத்தை” அகரனின் சத்தம் காதைப் பிளந்தது. ஆண்டாள் ஒரு நிமிடம் அதிர்ந்தார். தெய்வா அவன் கைகளை அழுத்திப் பிடித்தார்.

“ஆண்டாள். அமைதியா இருக்க மாட்டியா. இவங்களுக்கு கொடுத்ததை விட, நமக்கு தான் அதிகம் வரும். நியாயப்படி பார்த்தா என் தங்கைக்கும், எனக்கும் சரி பங்கு தான் தரணும். இந்த வீடும் கம்பெனியும் என்னமோ அவளுக்கு குறைவு தான். என்னமோ எல்லாத்தையும் அவளுக்கே கொடுத்திட்ட மாதிரி துள்ளாத”

“ஆமாமா. இவங்களுக்கு கல்யாணம் பண்ணி அவ்ளோ நகைங்க போட்டு, சீரும் சிறப்புமா ஒரு வீட்டுக்கு அனுப்பினீங்களே.. அப்போ அதெல்லாம் என்ன கணக்காம்”

“அதான் இல்லைன்னு ஆயிடுச்சே. இப்ப இருக்கிறதை பத்தி பேசு. ஏன்‌ பழசெல்லாம் இப்ப போய் பேசிக்கிட்டு, அப்பாக்கு கேட்க போகுது.” பாண்டியன் தணிந்து பேசினார்.

“கேட்கட்டுமே. எவ்வளவு எகத்தாளம். இங்க இருக்கறதுனா இருக்கலாம்னு. யார் வீட்டில் யார் இருந்துட்டு எங்களை அனுப்ப சொல்றது”

“அண்ணி. இன்னும் எதுவும் கையெழுத்தாகல. நான் பேசறேன் அவர்ட்ட”

“தெய்வா. லாயர்ட்ட எல்லாம் ரெடி பண்ணி உயிலும் எழுதியாச்சும்மா”
பாண்டியன் சொன்னதும் ஆண்டாளின் முகம் அதி பயங்கரமானது.

“ஓ… முடிவு பண்ணி எல்லாம் ரகசியமா நடந்துட்ட அப்புறம் தான் பேசுறீங்களா.. இதுல நடிப்பு வேற.. அப்பாட்ட பேசறேன்.. ஆட்டுக்குட்டிட்ட பேசறேன்னு”

“அண்ணி போதும். எந்த சொத்தும் எங்களுக்கு வேணாம். நாங்க வேணா இப்போவே வெளிய போயிடறோம்”

“தெய்வா அவசரப்படாத. அப்பா இருக்கற வரைக்கும்
நிம்மதியா இருக்கணும்னா அது நீ இங்க இருந்தா தான் நடக்கும். நாளைக்கு காலைல நாங்க அந்த வீட்டுக்கு கிளம்பறோம்.
இவ பண்ணி வச்சிருக்கற வேலைக்கு இனி எந்த கம்பெனி பக்கமும் கால் எடுத்து வைக்கக் கூடாது”
பாண்டியன் மதுவைப் பார்த்து கத்தியதும் இருவரும் அதிர்ந்து பார்த்தனர்.

“அதெல்லாம் முடியாது. நான் இங்க இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டேன்.அதெப்படி உங்க அப்பா எங்களை‌ வெளிய அனுப்பறார்னு பாக்கறேன்”
என்று ஆண்டாள் சொல்லிவிட்டு மதுவின் கைகளை பிடித்து அழைத்துக் கொண்டு அவர்களின் அறைக்கு சென்றார்.

“தெய்வா, நீ கவலைப்படாதே . போய் தூங்கு. காலைல பேசிக்கலாம்.”

“அண்ணா. நீங்க எனக்கு சத்தியம் பண்ணனும்.வீட்டை விட்டு எங்கேயும் போகக் கூடாது நீங்க.”

“ஏம்மா. இனிமே நிம்மதியா‌ இரு. அவங்க ரெண்டு பேரும் உன்னை இனி எந்த கேள்வியும் கேட்க கூடாதுனா நான் போய் தான் ஆகனும் மா”

“இல்லண்ணா. அப்பா மனசு ரொம்ப வருத்தப்படும். நீங்க போகக்கூடாது.. இது என் மேல் சத்தியம்”

“மாமா. அம்மா சொல்றது தான் சரி. நீங்க போக வேண்டாம். இங்கேயே‌ எப்பவும் போல இருங்க”

பாண்டியன் இருவரையும் பார்த்து நெகிழ்ந்து போனார்.

அகரன் அவன் அறைக்கு வந்ததும் உடை மாற்றி ஜன்னல் அருகில் வந்தான். தோட்டம் தெரிந்ததும் அவனுக்கு பவதாரிணயை பார்க்க வேண்டும் என்பது போல் தோன்றியது. மனம் தடைப் போட்டது.

ஆனாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கீழே இறங்கி வந்து, மெதுவாக அவுட் ஹவுஸ் பக்கம் சென்றான்.

தாளிடப்பட்ட கதவுகளுக்குள் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. கதவை தட்டலாமா என்று யோசித்தவன் , நேரத்தை பார்த்து வேண்டாம் என யோசித்து ஜன்னல் அருகில் சென்றான்.

உள்பக்கம் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள் தாரிணி.

இரவு விளக்கின் ஒளியில் முழு நிலவு போல் அழகாய் இருந்தாள்.

காலையில் இருந்த சோர்வு இப்போது அவள் முகத்தில் இல்லை.

ஏனோ ஒரு நிம்மதி பரவியது அகரனின் நெஞ்சிற்குள்.

இந்த நிம்மதிக்காக எத்தனை வந்தாலும் தாங்கலாம் போலத் தோன்றியது.

‘இந்த பெண்ணின் மீது கோபத்திற்கு பதில் பாசம், அன்பு என ஏதோ ஒரு உணர்வு வருகிறதே?

கோவையில் அன்று அவளைப் பார்த்ததும் எத்தனை கோபப்பட்டோம். இன்று அவளைப் பார்க்க யாருக்கும் தெரியாமல் இப்படி வந்து நிற்கிறோம்.. என்ன ஆனது எனக்கு..’

கேள்வியை மனதிற்குள் கேட்டு அவனே பதில் சொல்லிக் கொண்டான்.

‘சின்னப்பெண் என் வண்டியில் அகப்பட்டாள் என்பது தான் காரணம். வேறு எதுவும் இல்லை’ என்று சொல்லிக் கொண்டே அவன்‌ அறைக்குத் திரும்பினான்.

கௌரி வேலைகளை முடித்துக் கொண்டு அவுட் ஹவுஸிற்கு பவதாரிணிக்கு துணையாக இருக்க வந்தார்.

“அக்கா. வாங்க. உங்களைத்தான எதிர்பார்த்து இருந்தேன்.”

“ஏன் மா. ஏதாவது வேணுமா? பால் காய்ச்சி தரேன். வேற எதுவும் வேணும்னா சொல்லுங்க”

“அதெல்லாம் இல்லக்கா. அப்போ சாப்பிட்டதே ஃபுல்லா இருக்கு. நீங்க வேலையை முடிச்சிட்டு வருவீங்கன்னு தான் இருந்தேன்”

“சொல்லுங்கம்மா. என்ன கேட்கனும் உங்களுக்கு. பெரிய வீட்டில் வந்த சத்தம் தானே” கௌரி அவள் மனம் தெரிந்து கேட்டார்.

“ஆமாக்கா.‌ இந்த ஜன்னல் பக்கம் ரொம்ப சத்தம் வந்தது. என்னால் தான் எழுந்து போய் பார்க்க முடியாதே. பயமா இருந்துச்சு. ஏதோ பெரிய சண்டை போல. ஒருவேளை நான் வந்தது அங்க இருக்கவங்களுக்கு பிடிக்கலையா. அதான் சண்டை போட்டுட்டாங்களான்னு எனக்கு சந்தேகம். அதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் உங்களுக்காக”

‘பரவால்லையே இந்த பொண்ணு. நான் கூட அங்க என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க தான் இவ்வளவு அவசரப்பட்டுச்சான்னு நினைச்சேன்‌.. ‘ மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

“சொல்லுங்க அக்கா. அப்படி எதாவதுன்னா நான் காலைல ஹாஸ்டலுக்கே போயிடறேன்.”

“அட அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. அது எப்பவும் நடக்கறதுதான். மதும்மாவும், அவங்க அம்மாவும் தான் பிரச்சினை பண்றவங்க.. இப்படிதான் எப்பவும் சத்தம் போடுவாங்க. அப்போ நாங்க யாரும் உள்ள போக மாட்டோம். நீங்களும் அதைப் பத்திலாம் யோசிக்காம படுத்து தூங்குங்க”

நாசுக்காய் எல்லாவற்றையும் மறைத்து பேசினார்.

“ஓ.. அப்ப என்னால பிரச்சினை இல்லல்ல. இது போதும்” என்று படுத்துக் கொண்டாள்.

பவதாரிணியை பார்த்து விட்டு வந்த பிறகுதான் காலையில் தாத்தா சொன்னது ஞாபகம் வந்தது அகரனுக்கு..அவளுக்கு ஒரு அலைபேசி வாங்கித் தர வேண்டும் என்பது.

இன்று இருந்த பிரச்சினையில் எதுவும் ஞாபகத்தில் இருந்திருக்காது. நாளை பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டு அவன் அலைபேசியை எடுத்து பார்த்தான். மாலினி வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தார்.

“சார்.‌ நீங்க சொன்னதை ஓகே சொல்லிட்டார் டைரக்டர். அதுக்கு ரிலேட்டட்டா நாளைக்கு ஒரு ரஃப் ஸ்க்ரிப்ட் எழுதி அனுப்பறேன்னு சொல்லியிருக்கார் சார்” - “ஓகே” என்று போட்டு அனுப்பினான்.

டிசைன் வரையும் காகிதம் கண்முன் தெரிய, மாலினியிடம் சொல்லியவற்றை ஒவ்வொன்றாக வரைய ஆரம்பித்தான்.

மனம் கற்பனையில் விரிந்தது. கற்பனைகள் அழகான ஓவியங்களாக வெளிப்பட்டன.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 7

அகரன், மேஜையின் மீதே தான் சாய்ந்து தூங்கியிருந்தான். விடியல் பறவைகளின் சத்தம் அவனை எழுப்பியது.

அவன் கண்விழித்தது ஒரு அழகான ஓவியத்தில் தான்.

அவனும், தாரணியும் மணக்கோலத்தில் நிற்கும் ஓவியம்.

கண்களை கசக்கி மீண்டும் பார்த்தான். அவனும் தாரிணியும் தான்‌.

அவசரமாக போய் முகம் கழுவி, தன்னை கண்ணாடியில் பார்த்தான்.

‘அகரா.. என்னடா உனக்கு மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் எதாவது இருக்கா. இப்படி ஏதேதோ கிறுக்குத்தனம் பண்ணி வச்சிருக்க. நிதானமா தான் இருந்தியா? இல்ல எதாவது, யாராவது, எதையாவது… கலந்துக் கொடுத்து, அதை குடிச்சு…. ச்ச ச்ச …
என்ன இது பைத்தியக்காரத்தனமான யோசனை. ‘

சுற்று முற்றும் பார்த்தவன் அவசரமாக ஓவியங்களை அள்ளி தன் வார்ட்ரோபில் மறைத்து வைத்தான்.

அலுவலகத்திற்கு கிளம்ப குளியலறைக்குள் நுழைந்தவன் அப்படியே தண்ணீரை திறந்து விட்டு கீழே நின்றான். உடலும், மனமும் குளிரத் துவங்கியது.

தெய்வாவும், பாண்டியனும் பவதாரிணியை பார்க்க அவுட் ஹவுஸிற்கு வந்தனர்.

“எப்படிம்மா இருக்க. கால் வலி கொறைஞ்சிருக்கா?”

“குறையல ஆண்ட்டி.. இல்ல மேம்.. வலி அதிகமா தான் இருக்கு. மருந்து எடுத்துக் கிட்டா கொஞ்சம் குறையுது” - பவதாரிணி பாண்டியனை பார்த்துக் கொண்டே சொன்னாள்.

“நீ ஆண்ட்டின்னே கூப்பிடலாம். இவர் என் அண்ணன். பாண்டியன். ஹாஸ்பிட்டல்ல கூட வந்திருந்தார். நீ மயக்கத்தில் இருந்த, அதான் உனக்கு தெரியல”

“வணக்கம் அங்கிள்” என்றவளை பார்த்ததுமே பாண்டியனுக்கு பிடித்து விட்டது.

“வலி போக போக குறைஞ்சிடும் மா. டிரஸிங் செய்ய நர்ஸ் அனுப்பறேன்னு டாக்டர் சொல்லியிருக்கார். பத்து நாள் கழிச்சு தான் எக்ஸ்ரே எடுக்கனும். கால் எலும்புனா அது கூடறதுக்கு எப்படியும் இரண்டு, மூணு மாசம் ஆகும் மா. அதுவரைக்கும் நீ இங்கேயே இருக்கலாம்”

“மூணு மாசமா? அச்சோ..” பதறி விட்டாள் பவதாரிணி.

“ஏன் மா.. என்ன ஆச்சு. மூனு நாலு மாசம் ஆகும் தான். அவசர வேலை எதாவது இருக்கா? “ பாண்டியன் கேட்க,

“வேலை தான் அவசரமே.. அது வரைக்கும் நான் எப்படி இங்க?” பாவமாக இருந்தது தாரிணியை பார்க்க இருவருக்கும்.

“அதெல்லாம் உடம்பு முழுக்க சரியானதும் பாத்துக்கலாம், அதுவரைக்கும் எதை பத்தியும் யோசிக்காம நீ ரெஸ்ட் எடு” தெய்வா ஆறுதலாக அவளை தோளில் தட்டி சொன்னார்.

பாண்டியன் சுற்றிலும் பார்க்கும் போது, அவள் வரைந்து வைத்த டிசைன்களை ஆச்சர்யமாக பார்த்தார்.

“அட உனக்கு டிசைன் பண்ணலாம் தெரியுமா? எங்க இருந்து இத்தனை பேப்பர் அதுக்குள்ள கிடைச்சது உனக்கு”

“அது நான் தான் அண்ணா இங்க வந்து வரையறப்ப வச்சிட்டு போனது.. அதுலதான் வரைஞ்சிருக்கா.. எங்க கொடுங்க பார்க்கலாம்..”

தெய்வா சொன்னதும்,

“ஆமா அங்கிள். சும்மா தூங்கிக்கிட்டே இருக்க முடியல. நைட் தூக்கமும் வரல. அதான் முழுக்க வரைஞ்சிட்டு இருந்தேன்”

“எவ்வளவு அழகான டிசைன்ஸ். எப்படி இது மாதிரி வரையற” - தெய்வாக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“ஆண்ட்டி நான் ஃபேஷன் டிசைனிங் தான் படிச்சேன். அதுக்கு முன்னாடி நாங்க ஊர்ல இருக்கறப்ப, மாமா கொண்டு வர துணிகளை நான் கொஞ்சம் கொஞ்சமா தைக்க கத்துக்கிட்டு டிசைன் பண்ணவும் செய்வேன்..”

“ஓ… உங்க மாமா பிஸினஸ் பண்ணாரா இல்ல டெய்லரா” பாண்டியன் கேட்டதும் அவளின் கண்களில் நீர் கோர்த்தது.

“அவர் எனக்காக நிறைய செஞ்சார். இந்த வேலைகள் தான் இல்ல. நான் பொறந்ததும் என் அம்மா, அப்பா இறந்துட்டாங்க. அப்ப நாங்க ஸ்ரீலங்கால இருந்தோம். அப்ப இருந்து மாமா தான் எல்லாமே. நிறைய துணிகள் வாங்கி அதுல டிசைன் செஞ்சு, வித விதமா கட் பண்ணி தைச்சு கொஞ்ச நேரத்தில் புது புது டிசைன்ல டிரஸ்ஸா மாத்திருவார்.

நான் 8வது படிக்கறப்ப சூழ்நிலையால் நாங்க நார்த் இண்டியாக்கு வந்தோம். மேகாலயால தான் நான் படிச்சேன். சவுத் கோரால இருந்தோம்.
டிரைப்ஸ் அதிகம் இருக்கற இடம்.


அங்க இருந்த டிரைப்ஸ் வெல்ஃபேர் ஆஃபிஸர் ஒருத்தங்க தான் எனக்கு மென்டரா
கிடைச்சாங்க.

அங்க இருந்த பெண்களுக்கு நிறைய க்ராஃப்ட் செய்ய தெரியும். அதை இன்னும் நல்லா கத்துக்கவும், கூடவே டிரஸ் டிசைனிங் டிரெய்னிங்கும் சொல்லித் தந்தாங்க. மல்பெரி சில்க், கோரா சில்க்ல அவங்க செய்யற வர்க் அவ்வளவு பிரமாதமா இருக்கும். டிசைன், எம்ப்ராய்டரி செஞ்சு அதை டிரஸ்ஸா மாத்தி ஹேண்டி கிராஃப்ட் சொசைட்டிக்கு தருவாங்க. அதைப்பார்த்து எனக்கு அதில ரொம்ப ஆர்வம் வந்திருச்சு. அதான் அங்க கொஞ்சம் கத்துக்கிட்டேன்”

“அப்பா.. இத்தனை ஊர்ல நீ இருந்திருக்க.. ஆனா எப்படி இவ்வளவு நல்லா ஒரு நேடிவ் தமிழ் மாதிரி பேசற” கேட்ட தெய்வாவை பார்த்து சிரித்துக் கொண்டாள்.

“என்னோட நேடிவ் தமிழ்நாடு தானே. அப்ப நான் பேசறதுல என்ன அதிசயம் இருக்க போகுது”

“இங்கேயா.. எப்படி .. சிலோன்ல தானே வளர்ந்ததா சொன்ன? “ பாண்டியன் சந்தேகத்துடன் கேட்க,

“என் அப்பா, அம்மா, மாமா எல்லாருமே நான் அம்மா வயித்தில் இருக்கறப்ப தான் அங்க போனாங்களாம். ஆனா வீட்ல எப்பவும் இந்த தமிழ் தான்.. “

“ இப்ப உங்க மாமா எங்க இருக்கார் மா” பாண்டியன் கேட்டதும் தெய்வாவே சொன்னார்.

“அவர் பேரலைஸ்டாம். டீரிட்மெண்ட்க்கு ஸ்ரீலங்கால இருக்காராம். “

“அங்க இருந்துதான் வந்துட்டீங்களே .. இப்ப யார் பாத்துக்கறாங்க”

“அங்கிள் அங்க எங்களுக்கு சின்னதா ஒரு சொந்த வீடு இருக்கு. சூழல் சரியா இல்லாதப்ப மாமா தான் நார்த் இண்டியா கூட்டிட்டு போனார். ஆனா அவருக்கு எங்க வீடு தான் ரொம்ப பிடிக்கும்‌. வீடு கொஞ்சம் சிதிலமடைஞ்சதால திரும்ப போகல நாங்க. நான் காலேஜ் படிக்கனம்னு சொன்னப்ப தீடிர்னு தமிழ்நாடு போலாம்னு சொன்னார். கோயம்புத்தூரில காலேஜ்ல சேர்த்து விட்டுட்டு அவர் ஸ்ரீலங்கா போறேன்னு போனார். அங்க தான் அப்படி ஆனது.. அங்க எங்க சொந்தம் போல பழகினவங்க சிலர் இருக்காங்க. அவங்க தான் அங்க ஒரு இயற்கை சிகிச்சை மையத்தில் சேர்த்து பார்த்துக்கறாங்க.

நான் இங்க ஒரு வேலையை தேடிட்டா மாமாவ இங்க கூட்டிட்டு வந்து பாத்துப்பேன்”

“பரவால்ல இவ்வளோ சின்ன வயசில் பொறுப்பா இருக்க, இப்ப நீ ரெஸ்ட் எடுத்து சரியானா தான் நாளைக்கு ஒரு வேலைக்கு போய் உங்க மாமாவை பார்க்க முடியும். நீ இன்னும் ஒரு வாரத்துக்கு நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கனும். இப்படி கண் விழிச்சு வரையக் கூடாது” கண்டிப்புடன் தெய்வா சொன்னது தாரிணிக்கு பிடித்து விட்டது.

“சரிம்மா உடம்பு பாத்துக்க. நாங்க நாளைக்கு வந்து பாக்கறோம்.” இருவரும் கிளம்பினர்.

***
“அம்மா எங்க போய்ட்டீங்க. சாப்பிட்டு நான் கிளம்பனும்.. உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அது என்ன பேப்பர்ஸ்.. “ அகரன் அதை வாங்கி பார்த்தான்.

“வாவ். டிசைன்ஸ் எல்லாமே ரொம்ப நல்லாருக்கே.. நல்லா வரைஞ்சிருக்கீங்க மா.. சம்திங் ஃப்ரெஷ்… ”

“அகரா, அது நான் வரையலப்பா. அந்த பொண்ணு பவதாரிணி வரைஞ்சது. அவளைத்தான் பாத்துட்டு வரோம்” என்று பாண்டியனை பார்த்து சிரித்தபடியே தெய்வா சொன்னார்.

“ஓ.. அவளை ரெஸ்ட் எடுக்க சொன்னா வரையறாளா. ரெண்டு நாள் தான் ஆகுது அடிப்பட்டு. அதுக்குள்ள இதெல்லாம் வரையலன்னு யார் அழுதா?”

படபடவென்று பேசுபவனை ஆச்சர்யமாக பார்த்தார்கள் இருவரும்.

“என்ன ஆச்சு அகரா.. ஏன் இப்படி பேசற”

“அம்மா.. அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லி டாக்டர் சொன்னார் இல்லம்மா.. அதான் மா..”

“பாவம் பா. சின்ன பொண்ணு இல்ல. போர் அடிச்சப்ப வரைஞ்சிருக்கா. வலியும் மறக்கும் இல்ல அவளுக்கு பிடிச்சத செஞ்சா.. வேற பொழுது போக்கும் இல்ல. இப்ப இருக்க பசங்க ஃபோன் இல்லாம இருக்க மாட்டாங்க. அதுவும் அவள்ட்ட இல்ல.. என்ன பண்ணுவா … நானும் சொல்லிட்டு தான் வந்திருக்கேன்”

“ஓ.. தாத்தாவும் அவளுக்கு ஒரு மொபைல் வாங்கித் தர சொன்னார் மா.. நான் நேத்து நடந்த பிரச்சினையில் மறந்திட்டேன். இன்னிக்கு வாங்கிட்டு வரேன்”

“மருமகனே. அதை நான் பார்த்துக்கறேன். நீ இன்னிக்கு முதல் நாள் உங்க கம்பெனிக்குள்ள நுழையற. அதை பாருங்க முதல்ல”

“என் கம்பெனியா.. அது எப்பவும் நம்மளோடது தான் மாமா”

“அப்படியில்லை மருமகனே. இன்னியில் இருந்து நீ முழு பொறுப்பு எடுத்துக்க போற. மது தொல்லை இல்லாம. உன் அம்மா பேர்ல மாறின கம்பெனிய நீ இன்னும் முயற்சி பண்ணி டாப் லெவல்ல கொண்டு வரணும்”

“நிச்சயமா மாமா. நான் தாத்தாவை பார்த்துட்டு கிளம்பறேன். அதுக்காக நீங்க அங்க வராம இருந்துடாதீங்க. உங்க அனுபவம் எப்பவும் என்னோட இருந்தாதான் நீங்க சொல்ற இடத்துக்கு நம்ம கம்பெனி போகும்”

“ஆமா அகரா. அண்ணா, நீங்க நிச்சயமா அகரனோட இருக்கனும். அகரா.. இந்த கம்பெனி ஆரம்பிச்சப்ப நாங்க டீன் ஏஜ் ல இருந்தோம். அப்ப சின்னதா ஆரம்பிச்சு இன்னிக்கு ரெண்டு கம்பெனியா வளந்திருக்கு. அதை இன்னும் பெருசா மாத்த வேண்டியது உன் பொறுப்பு” தெய்வா சொல்லிய அடுத்த நொடி,

“ஆமாமா. அவருக்குன்னு என்னிக்கும் எதுவும் கிடைச்சிர கூடாது. உங்களுக்கு உழைச்சு கொட்டியே கடைசிவரைக்கும் ஒன்னும் இல்லாம போகனும். இப்பதான் அவர் பொண்ணுக்கு தனியா இத்தனோன்டு கம்பெனியை கொடுத்திருக்காங்களே.. அதை முன்னேத்த வேண்டாமா? எங்க பொண்ணுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா?” - எரிந்து விழுந்தாள் ஆண்டாள்.

“நான் அப்படி சொல்ல அண்ணி. அகரனுக்கு வழிகாட்டியா இருக்கத்தான் சொன்னேன்”

“அதெல்லாம் வழிகாட்டியாவே இருந்த வரைக்கும் போதும். அதான் இப்படி‌ பேசி, பேசியே மொத்தமா எல்லாத்தையும் எடுத்துக்கிட்டீங்களே”

“ஏ ஆண்டாள்.. போதும்.. நிறுத்தறியா. எல்லாம் ஒழுங்கா தான் இருந்தது. நீயும் உன் பொண்ணும் சேர்ந்து தான் எல்லாத்தையும் கெடுத்திட்டீங்க. இப்பதான் எல்லாம் பிரிச்சாச்சு இல்ல. உன் பொண்ணுக்கு திறமை இருந்தா தனியா அந்த கம்பெனிய பார்த்துக்கட்டும். நான் அங்க போக மாட்டேன். “ பாண்டியன் ஆண்டாளை பார்த்து கோபத்துடன் கூறினார்.

“ம்ம் இப்படி அடிமாடா போவீங்கனா யார் தடுக்கறாங்க. என் பொண்ணுக்கு எல்லாத்தையும் பார்த்துக்கற அளவுக்கு அவளுக்கு திறமை இருக்கு.. உங்க யார் உதவியும் தேவை இல்லை”

“இந்த திமிரும் ஆணவமும் தான் உங்களை ஒன்னும் இல்லாம ஆக்க போகுது.”
பாண்டியன் குரலை உயர்த்த, மருதன் அங்கு வந்து நின்றிருந்தார்.

“தாத்தா.. ஒன்னும் இல்ல. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. மாமா மதுவை சத்தம் போட்டுட்டு இருந்தார். அவ்வளவுதான்” என்று மனம் வருந்தி நின்ற தாத்தாவை பார்த்து கூறினான்.

“பாண்டியா இனி இந்த வீட்டில் எந்த சத்தமும் வரக் கூடாது. அதுக்கு என்ன செய்யனுமோ அதை பாத்துக்க” என்றதும் அவரை அடக்க முடியாத கோபத்துடன் மதுவும், ஆண்டாளும் பார்த்தார்கள்.

****

“அக்கா.. எனக்கு கொஞ்சம் வெளிக்காத்து வேணும்னு தோணுது.. கொஞ்சம் இந்த சேர்ல உட்கார வைச்சு வெளில கூட்டிட்டு போறீங்களா. இங்கேயே தோட்டத்தில் இருந்துட்டு வந்துடலாம்”

“வாங்கம்மா .. கூட்டிட்டு போறேன்” கௌரி அவளை சக்கர நாற்காலியில் வைத்து வாசல் பக்கம் நடைபாதையுடன் இருக்க கூடிய புல்வெளிக்கு கூட்டி வந்தார்.

“அப்பா. என்னமோ அடைஞ்சு கிடந்த மாதிரி இருந்துச்சு..மூச்சே இப்பதான் வந்த மாதிரி இருக்கு” என் சொல்லி ஆழ் மூச்சை எடுத்து நிரப்பினாள் பவதாரிணி.

“இங்கேயே உட்காந்துட்டு இருங்க மா. சாம்பார் கொதிச்சிட்டு இருக்கு. அஞ்சு நிமிஷத்தில அடுப்ப ஆஃப் பண்ணிட்டு வந்திடறேன்”

“போய்ட்டு பொறுமையா உங்க வேலைகளை முடிச்சிட்டு வாங்க. நான் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கேன்” தாரிணி மகிழ்ச்சியாக சொல்லிவிட்டு அங்கு இருந்த வண்ணமயமான பூக்களையும், அதை சுற்றி பறந்த வண்ணத்து பூச்சிகளையும் ரசிக்க ஆரம்பித்தாள்.

கௌரி சென்ற சிறிது நேரத்தில் அவள் அருகில் வந்த வண்ணத்து பூச்சியை எட்டிப் பிடிக்க முயற்சி செய்தாள். அது அவளின் பின்பக்கமாக பறக்க ஆரம்பிக்க திரும்பியவளின் நாற்காலி சக்கரம் அங்கிருந்த சிறிய கல்லின் மீது இடித்து திரும்பி சாய ஆரம்பித்தது.

கீழே விழப்போனவளை தாங்கிப் பிடித்தது ஒரு கரம். அவன் கைகளில் அவளின் உடல் முழுதும் சாய்ந்திருக்க, ஒரு நொடி தடுமாறி நிமிர்ந்து பார்த்தாள். அகரன் நின்றிருந்தான்.

அவனின் கண்களில் இவளின் பார்வை படிய, தொடர்ந்து பார்க்க முடியாமல் அவன் கைகளை பிடித்து தன்னை நிமிர்த்தினாள். முடியாமல் போகவே அவனே அவள் நாற்காலியை நிமிர்த்தி விட்டான்.‌

“சாரி.. தாங்க்யூ..” தடுமாறினாள். அவன் பார்வையையும், அவன் கைகள் அவளின் தோளில் படிந்திருப்பதையும் தாங்க முடியாமல்.

அகரனும் தடுமாற்றத்தில் இருந்தான்.

பாறையின் மீது மோதியதில் பூவிற்கும் வலிக்கவில்லை. பாறை தன் மீது விழுந்த பூவின் ஸ்பரிசத்தை உணராமலும் இல்லை.

இரண்டு மனமும், உடலும் குழைந்தன.

அவள் சொல்லிய வார்த்தைகள் அவன் காதுகளில் விழவில்லை.

அவளுக்கும் மேற்கொண்டு என்ன சொல்வது என்றும் தோன்றவில்லை.

இன்னமும் அவன் கைகள் தன் தோளின் மேல் இருந்து விலகவில்லை என்று தெரிந்து, சுதாரித்து
மெல்ல அவன் கைகளை எடுத்து விட்டாள்.

அவளுக்கு வெட்கமும், பயமும் ஒரு சேர எழுந்தது.

அகரனுக்கு கைகளை அவள் தொட்டதும் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தோடியது.

ஆனால் அவள் மேல் இருந்த கண்களை மட்டும் விலக்கிக் கொள்ளவில்லை.

எச்சிலால் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு,
மெல்ல “சார்..” என அழைத்தாள். காற்று தான் வந்தது. அந்த காற்றும் வெளியில் வீசிய காற்றோடு கலந்து போனது.

நெஞ்சம் தாறுமாறாக துடிக்க, மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு…
“சார்.. எக்ஸ்க்யூஸ் மீ.” என்று கொஞ்சம் சத்தமாக அழைத்ததும் தான் அவனுக்கு நினைவே வந்தது.

“ஓ.. ஓ… சாரி.. சாரி., நீங்க கீழே விழுந்திருவீங்கன்னு பிடிச்சிட்டேன்.. “ அவனும் தடுமாறி பேசினான்‌.

“பரவால்ல. தேங்க்ஸ்.. ஆனா ரொம்ப பிடிச்சிட்டீங்க.. பிடிச்சிட்டே இருந்திட்டீங்க” என அவள் சொன்னதும் அசடு வழிந்தது அவனுக்கு.

“ஓ. அப்படியா. அப்படி பிடிக்கலன்னா நீங்க இப்படி பேச மாட்டீங்க. இந்நேரம் உங்க முகம் கீழ இருந்திருக்கும். சேறா வேற இருக்கு தரை..” என்று சொல்லியபடியே தரையையும் அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்தான்.

“ சாரிங்க…” என அவள் சொன்னதும் அவனுக்கு கோவை நினைவு வந்தது.

“ஹான்.. சாரி சொன்னதும் தான் ஞாபகம் வருது. அன்னிக்கு கோயம்புத்தூர்ல என் வண்டியை கிராக் பண்ணது ஞாபகம் இருக்கா. அன்னிக்கும் இதே போல்தான் சாரிங்க அப்படின்னு சொன்னீங்க”

“ ஓ நல்லா ஞாபகம் இருக்கே.. அன்னிக்கு நீங்க ரொம்ப கோவக்காரரா இருந்தீங்க. நான் ஒரு எமர்ஜென்சி சிட்டுவேஷன்ல இருந்தேன்.. அதான் சண்டைய வளக்க வேணாமேன்னு சாரிங்கன்னு முடிச்சிட்டேன்”

“ஓ.. மேடம் சாதாரணமா இருந்தா என்ன பண்ணியிருப்பீங்க”

“நிச்சயமா வந்த சண்டையை விட்டிருக்க மாட்டேன். ஏன்னா என் மேல தப்பே இல்ல. வண்டியை அவசரத்துல எடுத்தப்ப கீறல் விழுந்துருச்சு”

“ஓஹோ அப்ப அந்த முசுடு, ஆணழகன்னு நினைப்புன்னுலாம் பேசினது… என்னவாம்”

அவன் அதை சொன்னதும் தலையை சாய்த்து, யோசித்து பார்த்து, அதே சமயம் சுதாரித்து அவள் மேல் தப்பில்லாதது போல் “அது அதுவா.. வந்து நின்னதும் எல்லாரையும் பாத்து முறைச்சிட்டே நின்னா அப்படி தான் சொல்வாங்க. அதுவும் என் தப்பு இல்ல” என கைகளை இருபுறமும் ஆட்டி சொன்னாள்.

“நீங்க மட்டும் என்னவாம்.. அப்போ தெரியாம மோதினதுக்கு என்னலாம் திட்டினீங்க.. நானே எமர்ஜென்சி கால் ஒன்னு அட்டெண்ட் பண்ணிட்டு ஓடிட்டு இருந்தப்ப லைட்டா.. இடிச்சிட்டேன். அதுக்கு போய் நீங்க பாட்டுக்கு தாட் பூட் னு குதிச்சீங்க. வந்த கோபத்துக்கு….” என தன் சின்ன கைகளில் முஷ்டியை மடித்து காட்டினாள்.

அவனுக்கு சட்டென கோபம் வந்தது‌. அதே சமயம் அவளின் முக பாவனையையும், சிறிய கைகளையும் பார்த்ததும் சிரிப்பும் வந்தது. ஆனால் அவள் முன் காண்பிக்க வேண்டாம் என்று நினைத்து அவளை தலையில் குட்டுவதற்கு கையை தூக்கினான்.

“ஆத்தாடி..” என்று அவன் கையை தூக்கியதும், அந்த கைகளின் தன்மையை பார்த்து பயந்து கத்தி விட்டாள்.

அதற்குள் கௌரி அங்கு வர, அகரன் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தான்.

“என்னம்மா.. அகரன் தம்பி என்ன சொன்னார்?”

“ம்ம்.. ஒன்னும் இல்லக்கா. உடம்பு எப்படி இருக்குன்னு கேட்டார் அவ்வளவுதான்.”

ஆனால் அவள் மனம் முழுக்க ஏனோ அகரன் நிறைந்து நின்றான். அவனின் அருகாமை நிச்சய
ம் அவளுக்குள் ஏதோ ஒன்றை நிகழ்த்தியது.

‘அவனை பார்த்து பயந்தது எல்லாம் எப்படி அதற்குள் மாறியது? இத்தனை தைரியமாக அவனிடம் பேசி விட்டோம்’ உள்ளுக்குள் வெட்கம் வந்தது அவளின்‌ முகத்தில் தெரிந்தது.









 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 8


பாண்டியனின் ஏற்பாட்டின் படி, அன்று அலுவலகம் வந்த அகரனுக்கு அத்தனை பேரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மதுவினால் அவமானப் பட்டவர்கள் ஓரளவு அதிகமான எண்ணிக்கையில் இருந்ததால், எல்லாரையும் சமமாக மதிக்கும் அகரன் அத்தனை பேருக்கும் பிடித்தவன்.

அவன் வேலைகளில் கறாராக இருப்பது நிறுவனத்திற்கு நல்லது என்பதால் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இனி மதுமிதாவின் அராஜகத்திற்கு யாரும் பலியாக வேண்டாம் என்ற நினைப்பில் அனைவர் முகத்திலும் சந்தோஷம்.

புதிய டிசைன்களை வடிவமைத்துக் கொண்டிருந்தவர்களிடம் பவதாரிணி வரைந்த டிசைன்களை காண்பித்து அவர்களின் கருத்தை கேட்டான் அகரன்.

எல்லாரும் புதிய டிசைன்களை பாராட்டினர். அதுவுமில்லாமல் அவர்களின் புது கிளையண்டான 'கிராண்ட் சாரீஸ்' ப்ரொஜெக்டிற்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும் என ஒட்டுமொத்தமாக குழுவே சொல்ல அகரனுக்கு மனம் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

தெய்வா சொன்னது அவனுக்கு நினைவில் ஓடியது.

அவளுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யும் போது அது வலியை குறைக்கும். அதே சமயம் அவளின் பொழுதும் போகும்.

அவளுக்கு பிடித்த, தனக்கு அவளை பற்றி தெரிந்த ஒரே விஷயம் அவள் வடிவமைப்புகளை உருவாக்குவது.

தனக்குள் சிரித்துக் கொண்டவனுக்கு அலைபேசியின் சத்தம் காதில் கேட்டது.

வைபவ் தான் அழைத்திருந்தான்.

“என்னடா அந்த பொண்ணு பவதாரிணி எப்படி இருக்கா?”

“அவ இப்ப எங்க வீட்ல தாண்டா இருக்கா. பாவம் கால் தான் சரியாக கொஞ்ச நாள் ஆகும்.."

“என்னடா.. நான் காதில கேட்கறது நிஜம் தானா. அந்த பொண்ண வீட்டுக்குள்ள சேர்த்திருக்கியா.. நம்பவே முடியலடா!” அவன் குரல் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது.

“டேய் இது அம்மா முடிவுடா.. அதுவுமில்லாம அந்த பொண்ணு பாவம் டா. யாரும் இல்லாதவ. நான் தானே ஆக்ஸிட்டெண்ட் பண்ணேன். அதுக்கு இது ஒரு சின்ன உதவின்னு வச்சுக்க..”

“அடேய் நான் வச்சுக்கறதெல்லாம் இருக்கட்டும். உன் குரலே ஒரு மார்க்கமா இருக்கு.. ஒன்னும் சரியில்லையே… மச்சான்.. எதாவது காதல் கடல்ல தொபுக்குனு விழுந்திட்டியா?”

“இல்லடா.. அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் போய்.. எப்படி “ தடுமாறினான் அகரன்.

யார் சொல்லியும் கேட்காதவனின் குரலில் இன்று ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு. நண்பனாக புரிந்தது வைபவிற்கு. அவனுக்கும் மகிழ்ச்சி தான்.

“டேய் வந்த விஷயத்தை சொல்ல மறந்திட்டேன். அந்த பொண்ணுக்கு அப்பா, அம்மா யாரும் இல்லையாமா. அவ மா…”

அவன் சொல்லி முடிப்பதற்குள், “டேய்... அம்மா எல்லாத்தையும் விசாரிச்சிட்டாங்க. நான் தான் அப்போவே சொன்னேனே.. அவளுக்கு யாருமில்லன்னு. அதான் அவளை எங்க வீட்டிலேயே தங்க வச்சிருக்கோம். ஹாஸ்டல்ல தான் இருந்திருக்காடா, அன்னிக்கு எங்க ஆபிஃஸ்க்கு வேலை கேட்டு வந்துட்டு போனதும் தான் அந்த ஆக்ஸிடென்ட்டே நடந்திருக்கு. இனிமே எதுனாலும் அவகிட்ட நானே டைரக்டா கேட்டுக்கறன்டா. நீ அலைய வேண்டாம். பாத்துக்கலாம்”

“அடப்பாவி.. இதுல மட்டும் எப்படிடா எல்லாம் கரெக்டா இருக்கீங்க. உங்க வேலை ஆனதும் கழட்டி விட்டிரீங்க.. அதுவும் பொண்ணு விஷயம்னா சொல்லவே வேணாம்”

“டேய்.. சும்மா உளறிட்டு கிடக்காத. நான் அப்புறமா கூப்டறேன்” என அலைபேசியை வைத்ததும், மாலினி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“சார்.. அந்த ஆட் சூட்க்கு டைரக்டர் ஸ்க்ரிப்ட் அனுப்பியிருக்கிறார். மாடல்ஸ் நீங்க பாத்துட்டு சொல்லிட்டீங்கன்னா அவங்களை காண்ட்டாக்ட் பண்ணிடலாம்.”

“ஓகேக்கா.. கொடுங்க நான் செலக்ட் பண்றேன்.” என்று வாங்கியவனுக்கு பார்த்த எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை. அவன்‌ மனதில் நினைத்த பவதாரிணியின் உருவத்தை போல யாருமில்லை.

“அக்கா இதுல யாரும் கரெக்டா இருப்பாங்கன்னு தோணல.. நீங்க வேற ஃபோட்டோஸ் அந்த கோஆர்டினேட்டர்ட்ட கேளுங்க.. அப்புறமா முடிவு பண்ணிக்கலாம்”

மாலினி சென்றதும் இருக்கும் வேலைகளில் ஆழ்ந்தான். இடையில் சில நிறுவனங்களுக்கு பவதாரிணி வரைந்த டிசைன்களை அனுப்பி வைத்தான்.

மாலையில் வீட்டுக்கு கிளம்பும் முன், பாண்டியன்
வாங்குவதாக சொல்லியிருந்த அலைபேசியை அவனே வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றான்.

செல்லும்போதே அவுட் ஹவுஸிற்கு சென்றவன், அங்கு பவதாரிணியின் தலையில் இருக்கும் கட்டை புதியதாக மாற்றிக் கொண்டிருந்த செவிலியை பார்த்தான்.

அமைதியாக அவர்களை தொந்தரவு செய்யாமல் ஒரு ஓரத்தில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்களை மூடி ஒரு மெழுகு சிலை போல் அமர்ந்திருந்தாள் பவதாரிணி. புதிய கட்டு தலைக்கு போடும்போது ஒரு கிரீடம் அணிந்திருந்த இளவரசி போல் அவன் கண்களுக்குத் தெரிந்தாள்.

தெய்வா வாங்கித் தந்திருந்த உடையில் கால்கள் தெரியும் அளவிற்கான ஸ்கர்ட் அணிந்திருந்தாள்.

அவளை முழுமையாக பார்த்தவனுக்கு ஒரு காலில் வெள்ளைக் கட்டும் இன்னொரு கால் வெறுமையாகவும் , அழகாகவும் இருந்ததை பார்த்ததும் குற்ற உணர்ச்சி வந்தது‌.

அழகாய், துள்ளிக் கொண்டு அன்று அவள் ஓடி வந்ததும் இன்று தன் கால்களால் நிற்க முடியாமல் இருப்பதும் பார்க்க தன் மீதே கோபம் வந்தது‌. .. அன்று மட்டும் பார்த்து வண்டியை திருப்பியிருந்தால்…


செவிலி வேலை முடிந்து அவளை கண்களை திறக்க சொல்லி விட்டு நகர்ந்தாள். பவதாரிணி கண்களை திறந்ததும் அவளுக்கு தெரிந்தது அகரன் தான்‌.


ஒரு காலை சுவரில் மடித்து ஊன்றி, ஒரு கையில் சிறிய பெட்டி, மற்றொரு கை பாக்கெட்டில் வைத்து நின்றிருந்த அவனை பார்த்ததும் அவளால் நம்ப முடியவில்லை.

கண்களை மூடித் திறந்து, தேய்த்து,விழித்துப் பார்த்தாள்.

அவன் தான். உண்மையாகவே நின்றிருந்தான் என அவளுக்கு புரிந்தது.

“நீங்க… வாங்க.. “ என சொல்லிக் கொண்டே எழுந்திருக்க முயன்றாள்.

“ஏய்.. இரு.. இரு‌. எந்திரிக்காத” என அவன் கத்தியதில் செவிலியும், கௌரியும் பதறி பார்த்தார்கள். தாரிணியும் அவனையே பார்த்தாள்.

“தம்பி” என அருகில் வந்த கௌரியை கையை காட்டி நிறுத்திவிட்டு, செவிலியிடம், “சிஸ்டர்.. இப்ப காயம் எப்படி இருக்கு” என அவன் கேட்டதும்,

“தலையில் டிரஸிங் பண்ணியிருக்கேன் சார். காயம் ஆறியிருக்கு. கால்ல ஆற லேட் ஆகும் சார்.எலும்பு கூடனும் இல்ல.. “

“எஸ்.. ஐ நோ. தாங்க்யூ சிஸ்டர். நீங்க அடிக்கடி கொஞ்சம் வந்து பாத்துக்கோங்க”.

“சரிங்க சார்” என்றவளிடம் பணத்தை தந்ததும் செவிலி கிளம்பினாள்.

தாரிணி, அவனை பற்றி ஒன்றும் தீர்மானம் செய்ய முடியாமல் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவன் கண்களும் அவளை பார்த்ததும், இருவரின் கண்களும் அப்படியே நின்றன.

கௌரி அவர்களை பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் அப்படியே வெளியே வந்தார்.

ஓரிரு நிமிடங்கள் போனதும், அகரன் ஒரு பெருமூச்சுடன், அவள் கண்முன் தன் விரலால் சொடுக்கு போட்டு அவளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான்‌.

அருகாமையில் அவன். அவனது உயரத்திற்கு அவள் கால் பங்கு அளவில் நாற்காலியில் அமர்ந்திருந்ததால், அண்ணாந்து பார்க்க வேண்டி இருந்ததால் மயக்கம் வந்தது அவளுக்கு.

அவளின் கண்கள் சொருகி பின்னால் சாயப்போனதை பார்த்தும், அவன் அவளின் நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு,

“கௌரி அக்கா.. சிஸ்டர்” என்று கத்தினான்.

அவர்கள் அங்கு இல்லை என்பதை புரிந்துக் கொள்ள ஓரிரு நொடிகள் ஆயிற்று அவனுக்கு.

அவளது கன்னத்தில் தட்டி,
“ஏய்.. எந்திரி.. பவதா.. பவதாரிணி.. எழுந்திரு” என்று உலுக்கினான்.

ஆனால் அவள் மயக்க நிலையில் இருக்கவே, அப்படியே அவளை நாற்காலியில் சாய்த்து விட்டு, தண்ணீர் பாட்டிலை எடுத்து, அவள் முகத்தில் தெளித்தான்.

லேசாக கண் திறந்து பார்க்க முயன்றவளை, மெதுவாக கீழே மண்டியிட்டு அமர்ந்து அவளுக்கு நேராக பார்த்தான். அவள் மயக்கத்தில் இருந்தாலும், அன்று பூத்த ஒரு பூ போல இருந்தாள்.

மூடிய கண்களும், லேசாக திறந்த வாயும் அவனின் இதயத்தில் சில்லென்ற காற்றை வீசத்துவக்கியது. மெல்ல அந்த இதழை வருட வந்த ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டு, அவளின் கன்னங்களை இன்னும் கொஞ்சம் வேகமாக தட்டினான். அவள் இப்போது முழுதுமாக கண்களை திறந்தாள்.

“ஹேய்.. ஆர் யூ ஆல்ரைட்.. டாக்டர்ட்ட போலாமா?. சிஸ்டர் அதுக்குள்ள கிளம்பிட்டாங்க போல. எப்படி இருக்கு இப்போ?”

அவனின் பதட்டத்தை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

“இல்ல. நிமிந்து பார்க்க முடியலை. தலை சுத்திடுச்சு. வேற ஒன்னும் இல்ல. ஐம் ஃபைன்” என்றவளிடம்..

“ஓ சாரி.. சாரி. நான் தான் யோசனை இல்லாம.. “

“இல்ல பரவால்ல.. உங்களுக்கு எப்படி எனக்கு இப்படி ஆகும்னு தெரியும்?” என்றவளுக்கு தன் குரல் அதளபாதாளத்தில் இருந்து ஒலிப்பது போல் தெரிந்தது.

எச்சிலை முழுங்கிக் கொண்டாள்.

அவனின் அருகாமையில் அவன் வாசனை அவளை முழுதுமாக ஆக்ரமித்தது. கூடவே அவளின் பயம் அவளை மூச்சடைக்கவும் வைத்தது‌. சுற்றிலும் வேகமாக பார்வையை ஓட்டினாள்.

‘அச்சோ கௌரி அக்கா ஆளை காணோமே’ இன்னும் பதட்டம் அதிகமானது.
அவனுக்கு அவளது தவிப்பு புரிந்தது.

மெல்ல எழுந்து அருகில் இருந்த ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அவள் அருகில் அமர்ந்தான்.

அவன், ”அக்கா வெளிய சிஸ்டரை அனுப்ப போயிருப்பாங்க. இந்தா.. “ என்று அவளிடம் அவன் வாங்கி வந்த அலைபேசியை நீட்டினான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன இது..” குழப்பமாக பார்த்தாள்.

“பிரிச்சு பாரு.‌ வேணா நான் பிரிக்கட்டுமா.. உனக்கு கைல ஒன்னும் அடிபடலையே” என அவளை பார்வையில் ஆராய்ந்தான்.

அவன் பார்வைகள் தன் உடலில் படிவதை பார்த்ததும், அவன் கையில் இருந்த சிறிய பெட்டியை வாங்கிக் கொண்டாள்.

அதை மெதுவாக பிரித்ததும் அது அலை பேசி என்று தெரிந்தது.

“ஃபோன்.. நான். நான்… என் ஃபோன்..” உளறினாள்.

“ஹலோ.. வெய்ட். நீ இப்படி பேசி முடிக்கறதுக்குள்ள நைட் ஆயிடும்.. உன் ஃபோன் ஆக்ஸிடென்ட் நடந்த இடத்தில் தொலைஞ்சு போச்சு. அதனால தாத்தா உனக்கு புதுசா வாங்கித் தர சொன்னாங்க. அதான் வாங்கிட்டு வந்தேன். அதுலயே சிம் போட்டு இருக்கு. உனக்கு டேட்டாஸ் மெயில்ல ரெகவர் பண்ண முடியும் இல்ல”

“ம்ம்ம்.. ஆனா இது காஸ்ட்லியா … “ யோசித்தவள், இப்போதும் தான் இழுத்தால் இவன் கோபத்தில் அடிக்க கை ஓங்கினாலும் ஓங்குவான்‌ என்று பயந்து தன்னை தைரியப்படுத்தி கொண்டு,

“இது காஸ்ட்லியான ஃபோன் மாதிரி இருக்கு. நான்.. என் ஃபோன் அவ்வளவு காஸ்ட்லி இல்ல”

“உன் ஃபோன் நான் பாக்கலையே.. பார்த்திருந்தா அதே ப்ராண்ட் வாங்கியிருப்பேன்”

“இல்ல.. நான் சரியானதும் நானே வாங்கிக்கறேன்”

“இப்ப ஃபோன் இல்லாம என்ன பண்ணுவ. பரவால்ல இதை வச்சுக்க. உனக்கு டிசைன்ஸ் பண்ண உதவியா இருக்கும்”.

அவளின் ஆர்வத்தை சிறிது தூண்டினான்.

“ஓ.. ஆமா.. டிசைன்ஸ் பண்ணலாம். ஆனா, நான் இதுக்கு காசை கொடுத்திடறேன். எனக்கு சரியானதும் வேலை தேடிட்டு.. சம்பாதிச்சு…”

“ஓகே ஓகே… நீ ஒன்னும் கில்ட்டியா ஃபீல் பண்ண வேணாம். இதுவும் உன் சம்பாத்தியம்னு வச்சுக்க.. “ என்றவனை புரியாமல் பார்த்தாள்.

“நான்.. இன்னும் வேலைக்கே போகலையே”

“வேலைக்கு நீ போல.. ஆனா உன் டிசைன்ஸ் தான் இதை சம்பாதிச்சு கொடுத்துச்சு.”

“என் டிசைன்ஸா‌. நான் எப்போ ..”

“நேத்து அம்மா தான் நீ வரைஞ்சதை கொண்டு வந்து தந்தாங்க. அதை என் கம்பெனில ஒரு ந்யூ ப்ராஜெக்ட்க்கு யூஸ் பண்ணிக்கிட்டேன். அதுக்காக தான் இந்த ஃபோன்னு நினைச்சுக்க”

அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வேலை தேடி போவது, அது கிடைத்து தன் டிசைன்கள் அவர்களுக்கு பிடிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்.. இவன் என்ன தடாலடியாக இப்படி சொல்கிறான் என்று யோசித்தாள்.

“என்ன யோசிக்கிற” அவனது அழுத்தமான குரலில் அவளுக்கு எதுவும் பேசவே தோன்றவில்லை.

அமைதியாக தலை ஆட்டினாள்.

“ஓகே.. ரெஸ்ட் எடு. நான் கௌரி அக்காவை அனுப்பறேன்” என சொல்லி விட்டு கிளம்பினான். ஆனால் அவன் மனமோ அவளிடம் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க சொல்லி வற்புறுத்தியது.

அவள் அவன் போவதை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் கதவின் அருகில் சென்றதும் அவளை திரும்பி பார்த்தான்.‌

அவளது கண்கள் ஏதோ பேச வந்ததை போல் இருந்தது. ஆனால் வாய் இறுக மூடியிருந்தது. அவனாலும் தன் நிலையை வெளிப்படையாக காண்பிக்க முடியவில்லை.

அவளுக்கும் அவன் கிளம்பினால் போதும் என்றும் இருந்தது. அதே சமயம் அவனது அருகாமையும் பிடித்து இருந்தது. இரு நிலையில் அவள் தவித்தாள்.

கதவை சாத்திவிட்டு அவன் கிளம்பினான்.

அவன் சென்றதும் முழுதாக அலைபேசியை பார்த்தாள்..

நிச்சயம் அது தன்னால் வாங்க முடியாத அளவுக்கு அதிக பணம் கொடுத்து அவன் வாங்கியது தான். இந்த அளவா தன் டிசைன்ஸ் விலை போய் இருக்கும்? அவளுக்குள் கேள்விகள் எழுந்தது.

‘அவர் கம்பெனிக்குன்னு தானே சொன்னார். அப்போ அவங்க டெக்ஸ்ட்டைல் இண்ட்ஸ்ட்ரில இருக்காங்களா? அந்த ஆண்ட்டி கூட ஒன்னும் சொல்லலையே’ குழப்பமாக பார்த்தவள், அந்த அலைபேசியை இயக்கிப் பார்த்தாள்.

அவனின் எண் அதில் முதலாவதாக சேமிக்கப்பட்டு இருந்தது.

‘அகரன்’ - ஒவ்வொரு எழுத்தாக அவள் கண்முன் அசைந்தது போல இருந்தது.

அவளின் இதயத்துக்குள் யாரோ மெதுவாக ஒரு இசையை இசைப்பது போலவும் இருந்தது.

அவனின் கோபம், பரிதவிப்பு, கருணை என கலவையான உணர்வுகளை அவள் பார்க்கிறாள். ஆனால் அவன் எப்படிப்பட்டவன் என்பதை தான் அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

“தாரிணிம்மா. எப்படி இருக்கு இப்போ.. மயங்கிட்டீங்கன்னு தம்பி சொன்னார். “ கௌரி கேட்டுக் கொண்டே வந்தார்.

“அக்கா. எங்க என்ன தனியா விட்டுட்டு போய்ட்டீங்க?. அதுவும் அவர் இருக்கறப்ப” என அவள் கேட்டதும்,

“அட என்னம்மா.. தம்பி இருக்கறப்ப என்ன பயம்.. நான் அந்த நர்ஸ் அனுப்பிட்டு வரப்போனேன். அதுக்குள்ள நீங்க மயங்கிட்டு இருக்கீங்க.. அதான் நல்லா சாப்பிடனும்னு சொல்றது”

“அவர் இருந்ததால தான் எனக்கு அந்த மயக்கமே வந்தது”

“ஏன்.. தம்பி என்ன அப்படி பயங்கரமாவா இருக்கு..?” ஆச்சரயம் கௌரிக்கு.

“அவர் பயங்கரம் இல்ல. எனக்கு தான் பயம்”

“அவர் என்னம்மா கடிச்சா திங்கப் போறார்?”

“அய்யோ உங்களுக்கு அவர் தங்க கம்பியா இருக்கலாம். எனக்கு தான் அவரை பார்த்தாலே உதறுது”

“சொன்னாலும் சொல்லலன்னாலும் அவர் தங்க கம்பி தா மா. அப்படியே அவங்க தாத்தா மாதிரி. அம்மா மாதிரி.‌ “

“தாத்தான்னு அவரும் சொன்னார்.‌ அவங்களும் அந்த பெரிய வீட்டில தான் இருக்காங்களா?”

“ஆமாமா. தாத்தா அங்க தான் இருக்கார். தெய்வாம்மா, பாண்டியன் அய்யா அவங்க பிள்ளைங்க தான். எல்லாருமே தங்கமானவங்க”

“ஓ.. அவங்க என்ன கம்பெனி வச்சிருக்காங்க?”

“கார்மெண்ட் கம்பெனிதான். தாத்தா பேர்ல இருந்த கம்பெனிங்களை இப்போதான் தெய்வாம்மா, பாண்டியன் அய்யா இரண்டு பேர் பேர்லயும் மாத்தினாங்க. இன்னிக்கு தான் அகரன் தம்பி அவங்க அம்மா பேர்ல இருக்க கம்பெனிக்கு முதலாளியா, உரிமையா போய் இருக்கு. அந்த மதும்மா தொல்லை இல்லாம?”

“ஓ.. மது பாண்டியன் சார் பொண்ணா? “

“ஆமாம்மா. தம்பிக்கு மாமா பொண்ணு”

“ஓஹோ.. அவருக்கு அவங்க முறைப்பொண்ணு இல்ல. “

“ஆமா.. முறைப் பொண்ணு இல்ல. எப்போ பார்த்தாலும் முறைக்கிற பொண்ணு. அதை விட்டு தம்பி விலகி வந்ததே பெரிய நல்லது அந்த குடும்பத்துக்கு. நேத்து தாத்தா அதுக்கு ஒரு முடிவும் கட்டிட்டார்.”

“ம்ம்ம்.. அப்போ கல்யாணம் பேசி நின்னுருச்சா?”

“இல்லம்மா. பேச்சு ஆரம்பிக்கிற முன்னையே தம்பி அவங்களை வேணாம்னு சொல்லிருச்சு. அதுக்கு அவங்களையும், அவங்க அம்மாவையும் பிடிக்காது.. எப்படியோ ஒரு நல்ல பொண்ணா தம்பிக்கு அமையட்டும்”

“ஓ.. ஆனா பாண்டியன் சார் ரொம்ப நல்லவரா இருக்கார். அவங்களுக்கு அப்படி ஒரு ஃபேமிலியா”

“ம்க்கும்.. விதை ஒன்ன போட்டா சுரை ஒன்னா முளைக்கும்னு சொல்வாங்க. இங்க விதை நல்லது தான். ஆனா வளத்த விதம் தான் தப்பா போச்சு. நீங்களே அவங்களை பாக்கறப்ப தெரிஞ்சுப்பீங்க”

“ம்ம்.. நான் ஏன்க்கா அவங்களலாம் பாக்க போறேன். நான் கொஞ்சம் சரியானதும் கிளம்பிருவேன். “ என அவள் சொன்னதும் கௌரியின் முகம் மாறியது.

‘இந்த பொண்ணு வந்ததும் தான் தம்பி முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரியுது. பொண்ணுங்கனாலே பின்னங்கால் பிடறில அடிக்க ஓடும்.. இப்ப என்னடான்னா ஏதோ பரிசு வாங்கிட்டு இங்க வந்து கொடுக்குது. எப்படியும் இந்த பொண்ணு இங்கேயே இருந்தா ஒரு நல்ல பொண்ணு தம்பிக்கு கிடைச்சிரும்னு நினைச்சா, இப்படி சொல்லுது இந்த பொண்ணு!’ என நினைத்துக் கொண்டே பெருமூச்சுடன் நகர்ந்தார்.

—---


அகரன் தெய்வாவிடமும், பாண்டியனிடமும் அன்று அலுவலகத்தில் நடந்ததை சொன்னான்.

“மருமகனே... இன்னிக்கு அண்ணாநகர் கம்பெனிக்கு போனேன். எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டி இருந்தது. அதுவே நேரம் போச்சு…அதான் நம்ம கம்பெனி பக்கம் வரக் கூட முடியலை. “

“மாமா.‌ பரவால்ல. ஆனா எனக்கு நீங்க வந்திருந்தா நல்லா இருக்கும்னு தான் தோணுச்சு.எல்லாருமே உங்களை கேட்டாங்க. அம்மாவும் வரலையா, அதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.

அப்புறமா அந்த பொண்ணுக்கு ஒரு ஃபோன் வாங்கித் தந்தேன் மாமா” என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் பார்த்தான். அவர்கள் இருவரும் அவர்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள்.

“ஆமாம்மா… நீங்க நேத்து நைட் காமிச்ச டிசைன்ஸ் இன்னிக்கு நம்ம யூனிட்ல காமிச்சேன். எல்லாருமே டபுள் ஓகேன்னு சொல்லவே அதை நம்ம புது ப்ராஜெக்ட்க்கு அனுப்பி வெச்சேன். சோ, அந்த பொண்ணுக்கு ஒரு ஃபோன் வாங்கினேன். எப்படியும் டிசைனருக்கு பே பண்ணணும் இல்ல… “ என்றான்.

“ஓ .. நான் தான் மறந்திட்டேன் மருமகனே. அவளுக்கு ஒரு ஃபோன் வாங்கித்தர.. நல்லா தான் இருந்துச்சு அந்த டிசைன்ஸ். ஆனா நம்ம ப்ராஜெக்ட்டுக்கு உபயோகப்படுற அளவுக்கு நல்லா இருந்துச்சா”

“எஸ் மாமா. நம்ம டிசைன் யூனிட்ல எல்லார்ட்டையுமே ஒப்பீனியன் கேட்டேன். சாரிஸ்க்கு இந்த டிசைன்ஸ் ப்ரெஷ்ஷா இருக்கும். நம்ம சைட் மார்க்கெட்ல இது மாதிரி இப்ப இல்ல. “

“ஓ… அப்ப க்ளையண்ட்ஸ் ஓகேன்னு சொல்லிட்டா, இன்னும் நல்லது. “

தெய்வாக்குள் பல யோசனைகள் ஓடியது. பவதாரிணி கண்முன் வந்தாள். அவளை பற்றி எதுவுமே தெரியாத நிலையில் அகரனின் நெருக்கம் வித்தியாசமாகப் பட்டது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் ஆண்டாளும், மதுமிதாவும்.

‘ஏற்கனவே இந்த பிசாசுங்களை சமாளிச்சு, இருக்கறதும் போச்சு. இன்னும் புது பிசாசு வேற வந்திருக்கா…வந்த ரெண்டு நாள்ள அவ டிசைன்ஸ் அதுக்குள்ள கம்பெனிக்கு போயிருச்சா?’ பார்த்தே இல்லாத ஒரு பெண்ணின் மீது வன்மம் நிறைந்தது ஆண்டாளுக்கு.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 9


அலைபேசியில் அகரன் தன் அன்றைய வேலைகளை வரிசைப்படுத்திக் கொண்டு இருந்தான்.
யாருக்கோ அனுப்ப வேண்டிய விவரங்களை வாட்சப்பில் அனுப்ப முயன்ற போது, பவதாரிணியின் பெயர் முன்னே வந்து நின்றது.
அதை பார்த்ததும் அவன். உடனே பவதாரிணியின் எண்ணுக்கு ‘ஹை’ என்று அனுப்பினான்‌.

நீல நிறக் கோடுகள் வந்தும் எந்த பதிலும் இல்லை.

ஒரு கல்லூரியின் மொத்த ஆர்டருக்கு அனுப்ப வேண்டிய டிசைன்களை அவளுக்கு அனுப்பி, ‘இதை விட டஸ்ஸர் புடவைகளுக்கு வேறு என்ன டிசைன் செய்யலாம்’ என்று அவன் அனுப்பவும், பவதாரிணிக்கு அவன் அலுவல் விஷயமாக தான் பேச வந்திருக்கிறான் என்று தெரிந்தது.
அவனை ஒரு நிமிடத்தில் தப்பாக நினைத்ததற்கு அவளே ஒரு முறை தலையில் லேசாகத் தட்டிக் கொண்டு, அவனுக்கு பதிலளிக்கத் தொடங்கினாள்.
இருவரும் எவ்வித பயமோ, தயக்கமோ இல்லாமல் உரையாடலை துவக்கினார்கள்.
அலுவலக நேரம் வரும் வரையில் அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

தெய்வா வந்து கதவைத் தட்டினதும் தான் கடிகாரத்தை பார்த்தான். மணி 8.30 ஆகியிருந்தது.

“அம்மா.. கொஞ்சம் வேலைகள் இருந்தது மா. அதான் டைம் போனதே தெரியலை. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ். ரெடியாகி வந்திடறேன்” என்று உற்சாகமாக ஏதோ ஒரு பாடலை விசிலடித்துக் கொண்டே சென்றவனை பார்க்கும் போது தெய்வாவிற்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது.

அலுவலகம் வந்தவுடன் பவதாரிணியின் டிசைன்களை அந்த பெரிய நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக வந்த தகவலை தெரிவித்த மாலினி,

“சார்.. இந்த டிசைன்ஸ் தெய்வா மேம் பண்ணதா?
வித்தியாசமா அழகா இருக்கு.. அதுவும் நம்ம இந்தியன் மார்க்கெட்டுக்கு ஏத்த மாதிரி ப்ரைட் கலர்ஸ்ல இருக்கறதால தான் உடனே அக்சப்ட் செஞ்சுட்டாங்க”

அவர் சொல்ல சொல்ல இதழின் ஓரமாய் ஒரு புன்னகை வெளிப்பட்டது அகரனுக்கு.

மாலினியும் அதை கவனித்தார்.

“இல்லக்கா. இது வேற ஒருத்தங்க டிசைன்ஸ்.. புதுசா இருக்கட்டுமேன்னு டிரை பண்ணேன்”

“ஓ.. சரி எப்போ நாம ப்ரொடக்ஷன் டீம் கூட டிஸ்கஷன் வச்சுக்கலாம்னு சொன்னீங்கனா நான் ஏற்பாடு பண்ணிடறேன்”

“இன்னும் ஒரு ஒன் ஹவர்ல இருக்கும்னு சொல்லிடுங்க” என்றவன் அடுத்த வேலைகளை பார்ப்பதற்கு ஆரம்பித்தான்.

மாலினி வெளியே வரும்போது மது நின்றிருந்ததை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து அவளைக் கடந்து சென்றாள்.

மதுவுக்கு கோபம் தலைக்கேறியது. 'சடார்' என்று கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவளை பார்த்து விட்டு அவன் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் அகரன்.

“ஏய்.. திட்டம் போட்டு என்னை கம்பெனில இருந்து வெளியே போக வச்சிட்ட இல்ல. அஞ்சு வருஷம் கஷ்டப்பட்டு கடைசியில் ஒன்னும் இல்லாம ஆக்கிட்ட.. இப்போ இங்க ஒரு வேலைக்காரன் கூட என்னை மதிக்க விடாம செஞ்சுட்ட. அகரா..” காட்டுக் கத்தலாக கத்தினாள் மது.

பொறுமையாக இருக்கலாம் என்று நினைத்தவனுக்கு அவளின் சத்தமும், 'ஏய்'என்று அவனை கூப்பிட்டதும் பிடிக்கவில்லை.

“மது.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின… பேசறதுக்கு வாய் இருக்காது தெரிஞ்சுக்க.. நான் எதுவும் பண்ணலை. உன்னோட குறுக்குப் புத்தி தான் உன்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்திருக்கு.. அதுக்கு நான் காரணமில்ல. நீ நடந்துக்கிட்ட விதம் தான் வர்க்கரஸ் உனக்கு மரியாதை கொடுக்காததுக்கு காரணம். முதல்ல இங்க இருந்து வெளியே போ.. “ அவன் அழுத்தமாக அதே சமயம் கண்களில் கோபம் தெறிக்க சொன்னதும் மதுவுக்கு ஆத்திரம் வந்தது.

“யாரை வெளியே போக சொல்ற.. இது என் கம்பெனி. நீ தான் தகுதியில்லாம, உரிமையில்லாம வந்து உட்காந்துட்டு ஏதேதோ செஞ்சு என்னை வெளியே அனுப்பிட்ட”

“இங்க பாரு. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு.. உன் கூட விளையாட எனக்கு டைம் இல்ல.”
அவளை பார்க்காமல் சொல்லிக் கொண்டே அவன் வேலைகளில் கவனம் செலுத்தினான்.

“இப்போ ஏதோ ஒரு டிசைன் அனுப்பி ஆர்டர் வாங்கிறியே.. அது போலத்தானே நீ கோயம்புத்தூர் மீட்க்கு போனப்ப நான் தந்தேன். அது சுத்தமா வர்க் அவுட் ஆகாதுன்னு தானே ஆர்க்யூ பண்ணி உங்கம்மா டிசைன்ஸ் எடுத்திட்டு போன‌. கடைசியில் அது என்னமோ பிரமாதமான ஐடியா மாதிரி தாத்தாக்கிட்ட சொல்லி என்னை பழிவாங்கிட்ட. இந்த தடவை மட்டும் பிரைட் கலர்ஸ் டிசைன்ஸ் வர்க் அவுட் ஆகுதா? “

“நீ என்ன படிச்சன்னு எனக்கு புரியலை. அந்த ஆர்டர் வெளிநாட்டுல இருக்க ஒரு கம்பெனிக்கு டிசைன் பண்ணது. அவங்களுக்கும் இங்க இருக்க இந்தியன் லேடிஸ்க்கு தேவையான சாரீஸ் ப்ரொடக்ஷனுக்கும் வித்தியாசம் இருக்கு. அதுவுமில்லாம நீ பண்ணதை விட இப்ப நான் ஆர்டர் வாங்கின இந்த டிசைன்ஸ் பிரஷ்ஷா இருக்கு‌ .. “

“ஓ.. அந்த அனாதை பொண்ணு வரைஞ்ச டிசைன்ஸ் தானே… “ இளக்கார சிரிப்புடன்
அவள் சொன்ன மறு நொடி அவன் முகம் மாறியது.

“ஏ… மது.. உனக்கு அறிவே இல்லையா. எதுக்கு தேவையில்லாம அவளை பத்தி பேசற.. முதல்ல கிளம்பு.” என்று சத்தமாக சொன்னான்.

“ம்ம். இவரே அந்த பொண்ண வேலைக்கு வர வேணாம்னு சொல்வாரா மா? அப்புறமா இவரே ஆக்ஸிடென்ட் பண்ணி அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வருவாராமா. அப்புறம் அவ டிசைன்ஸ் ஏதோ உலகப்புகழ் பெற்ற டிசைனர்ஸ் வரைஞ்ச மாதிரி பில்டப் கொடுப்பாராமா. என்னை ஒழிக்க நீ ப்ளான் பண்ணதுக்கு உடந்தை தானே அவ. என்னை எந்த கம்பெனிக்குள்ளேயும் விடாத அளவுக்கு பண்ண இல்ல. உன்னையும் அந்த பொண்ணையும் சும்மா விடமாட்டேன்”

நாற்காலியை பின்னால் தள்ளி விட்டு எழுந்தவன் நேராக வந்து அவள் முகத்தின் முன் அறைவது போல கைநீட்டினான்‌. கோபத்தை அடக்கி கொண்டு..

“இங்க பாரு அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நானும் உன்னை அனுப்பனும்னு நினைக்கல. இது தாத்தா எடுத்த முடிவு. நீ போய் உனக்குன்னு கொடுத்த கம்பெனியை வச்சிட்டு வேலையை பாரு. இதுக்கு மேல உன்னை இங்க பாத்தேன்.. தொலைச்சுருவேன்” என்று பல்லைக்கடித்து அவளை பார்வையால் எரித்து விடுவது போல் பார்த்து எச்சரித்தான்.

“ஓ.. என்னையே மிரட்டறியா.. ஏமாத்தி சொத்தை வாங்கின உங்களுக்கெல்லாம் இவ்ளோ ரோஷம் கோவம் இருக்குன்னா எனக்குலாம் எவ்ளோ இருக்கும். இரு உன்னை “ அவள் முடிக்கும் முன் அவளின் கழுத்தைப் பிடித்து அப்படியே தூக்கினான். அந்தரத்தில் தொங்கினாள் மது.

அவன் கையை பலமாக அடித்தாள்.

சில நொடிகள் கழித்து அவளை இறக்கி விட்டான்.

கழுத்தை தடவிக்கொண்டே வெளியே சென்றாள் மது.

நேராக வீட்டிற்கு வந்தவள் நடந்ததை அவளின் அம்மாவிடம் சொல்ல இருவரின் கோபமும் மொத்தமாக தாரிணியின் மேல் திரும்பியது.

அவுட் ஹவுஸிற்கு சென்றவர்கள் தாரிணியை கோபத்துடன் முறைத்துக் கொண்டு நின்றனர்.

அவளுக்கு இவர்கள் யாரென்று தெரியாததால் குழப்பமாக பார்த்தாள்.

“ஏய். எங்கிருந்து வந்து எங்க உயிரை வாங்கற. உனக்கு அடிப்பட்டா போய் உங்க வீட்டில் இல்ல ஹாஸ்டல்ல இருக்கனும். அதை விட்டுட்டு இங்க வந்து என் பொண்ணு வாழ்க்கையை அழிக்கப் பாக்கறியா?.” ஆவேசத்துடன் பேசிய ஆண்டாளை பார்த்து பயந்தாள் தாரிணி..

“நீங்க யாருன்னு எனக்கு தெரியாது.. நான் எப்படி.. ?”

“இந்த நடிப்பெல்லாம் வேற எங்கயாச்சும் வச்சுக்க. நீ யாரு.. எங்க வீட்டு பணத்தை எடுத்து உனக்கு செலவு பண்ணது பத்தாதுன்னு இங்கேயே கூட்டிட்டு வந்துட்டாங்க. வந்தமா, நீ வாழ்க்கைல அனுபவிச்சு கூட பாக்காத வசதி, சாப்பாடை அனுபவிச்சமான்னு போய்ட்டே இருக்கனும். அதை விட்டுட்டு டிசைன் போட்டுத்தரியா டிசைன்.. “ ஆண்டாள் அவள் முன் முறைத்துக் கொண்டு நின்றாள்.

“ம்மா .‌ அது மட்டுமா.. இவளுக்காக என்னை போய் மிரட்டுறான் மா.. அந்த அகரன்..” மது அவள் பங்குக்கு ஏற்றி விட்டாள்.

“எதை காமிச்சு டி அவனை மயக்கின. நேத்து வந்த உனக்காக என் மகளை அசிங்கப்படுத்தி அனுப்பியிருக்கிறான். எங்க கம்பெனில உக்காந்துட்டு எங்களையே வெளியே அனுப்பறான். ஏற்கனவே ஒருத்தி இப்படிதான் ஒன்னுமே தெரியாம நடிச்சே எல்லாரையும் கைக்குள்ள போட்டுக்கிட்டா. இப்ப நீ வேறயா? “

அவள் அடுக்கிக் கொண்டே போக, பவதாரணிக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

அவமானத்தில் உடல் குறுகியது.
எழுந்திரிக்க முடியாமல் தவித்தாள். கௌரி வேறு இன்னும் வரவில்லை.

தலையைக் குனிந்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்ததும் இன்னும் வசதியாக போனது இருவருக்கும்.

“இந்த நடிப்பெல்லாம் இதுங்களுக்கு எங்க இருந்து வருதோ? வந்ததும் வீட்டைப் பார்த்ததும் ஆசை வந்திருக்கும். எப்படியாவது அவனை வளைச்சு போட்டுக்கிட்டா இந்த வீட்டுக்குள்ள வந்திடலாம்னு திட்டம் போட்டுத்தான் வந்திருக்கா. அடுத்து கம்பெனிக்குள்ள போறதுக்கு தான் டிசைன் செஞ்சு குடுத்து விட்டிருக்கா.. எவ்வளவு சாமர்த்தியம் இந்த வயசுல…”

அந்த பேச்சை தாங்கிக் கொள்ள முடியாமல், “போதும்.. இதுக்கு மேல பேசாதீங்க. நானா இங்க வரலை.. அதே மாதிரி நானா அந்த டிசைன்ஸ் குடுக்கலை. அதெப்படி கம்பெனிக்கு போச்சுன்னு தெரியல. நான் இப்பவே இங்கு இருந்து கிளம்பிடறேன்” கைகூப்பி அழுகுரலோடு அவள் சொன்னதை பார்த்தும் இருவருக்கும் இரக்கம் வரவேயில்லை.

“அதான் உனக்கு நல்லது. இனிமே அகரன் கேட்டான் அவங்க தாத்தா கேட்டார்னு டிசைன்ஸ் வரைஞ்சு தந்தேன்னு வச்சிக்க, நீ எங்க இருக்கியோ அங்க வந்து அசிங்கப்படுத்துவோம் “ விரலை நீட்டி எச்சரித்தாள் மது.

இருவரையும் பார்க்கவே பிடிக்கவில்லை பவதாரிணிக்கு.

கௌரி வருவதற்காக வாசலை பார்த்து காத்திருந்தாள்.

“என்ன, அகரன் வருவான்னு வாசலை பாத்துட்டே இருக்கியா? அவன் வந்து உனக்காக எங்க கிட்ட சண்டை போடுவான்னு கற்பனை பண்ணாத.. எங்களை யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது.. “ மது அவளின் நாற்காலியின் இரு கைப்பிடிகளையும் பிடித்துக் கொண்டு அவள் முகத்தை பார்த்து கேட்டாள்.

“போதும் ப்ளீஸ்.. இதோட நிறுத்துங்க. நான் யாரையும் எதிர்ப்பாக்கல. கௌரி அக்காக்காக தான் வெயிட் பண்ணேன். நானே போயிடறேன் “ என இரு கைகளையும் கூப்பி விட்டு அவளின் நாற்காலியை உருட்டிக் கொண்டு வாசலை நோக்கி சென்றாள்.

பழக்கம் இல்லாததால் அவளால் அந்த சக்கர நாற்காலியை நகர்த்த முடியவில்லை.

தன்னால் காலை ஊன்றியும் எழுந்திரிக்க முடியாத நிலையை நினைத்து இன்னும் அவளுக்கு அழுகை வந்தது.

“என்ன இங்கேயே நாடகம் போடலாம்னு பாக்கறியா, மது இவளை வாசலுக்கு வெளியே தள்ளு” ஆண்டாள் சொல்ல, மது வேகமாக அவளின் நாற்காலியை தள்ளிக் கொண்டு போய், வீட்டின் வெளி வாசலுக்கு விட்டாள். எதிரில் சாலையில் வாகனங்கள் விரைந்துக் கொண்டிருந்தன.

பயத்தில் பவதாரிணியின் முகம் வேர்வையில் நனைந்தது. மது அவளை முறைத்து விட்டு உள்ளே சென்றாள்.

சாலையில் இருந்து எங்கு செல்வது என்று புரியாமல் விழித்தாள். வழியில் வரும் ஆட்டோ, காரை நிறுத்தலாம் என்றால் கையில் ஒரு பைசா கூட இல்லாமல் எப்படி போவது? அகரன் வாங்கித்தந்த அலைபேசியும் வீட்டிற்குள்ளேயே மாட்டிக் கொண்டது.

திரும்பி வீட்டை பார்த்தாள். அங்கிருந்த காவலாளி அவளை பரிதாபத்துடன் பார்த்தார். அவரால் என்ன செய்து விட முடியும்?

பேசாமல் நகர்ந்து வாகனங்கள் விரையும் சாலையின் நடுவே நின்று விடலாமா என்று தோன்றியது. எதாவது வாகனம் அவளை அடித்துத் தள்ளி விட்டால் எல்லாம் முடிந்து விடும்.

அடுத்த நொடியே அவளின் மாமா கண்முன் வந்தார். தான் செய்ய வேண்டிய கடமையில் இருந்து விலகி ஓட முடியாது. என்ன இது பைத்தியக்காரத்தனம்? தற்கொலை எல்லாவற்றிற்கும் தீர்வா? எது வந்தாலும் சமாளிக்க வேண்டும் என்பது தானே சிறு வயதில் இருந்து அவளின் மாமா அவளுக்கு சொல்லிக் கொடுத்த பாடம்.

'இனி எது வந்தாலும் சமாளிப்பேன்.. 'என்று உறுதியுடன் மெதுவாக தன் சக்கர நாற்காலியை சாலை ஓரமாக நகர்த்தினாள்.

அதற்குள் கௌரி அவளைத் தேடிக் கொண்டு வாசல் வர, காவலாளி நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி சாலையோரமாக மெதுவாக நாற்காலியை தள்ளிக் கொண்டு போகும் பவதாரிணியை கைக்காமித்தார்.

கௌரி பதறி ஓடி சாலைக்கு வந்து, பவதாரிணியின் சக்கர நாற்காலியை பிடித்தார்.

“என்னம்மா ஒரு வார்த்தை என்ன கூப்பிட்டு இருக்கலாம் இல்ல. அவங்க அப்பிடி போக சொன்னா, நீங்க உடனே போகிறதா? தெய்வாம்மாட்ட சொல்லியிருக்கலாம் இல்ல?” அவளை பார்த்தால் பரிதாபமாக இருந்தது கௌரிக்கு.

அவளுக்கு அப்போது இருந்த ஒரே ஆறுதல் கௌரி தான். அழுகை தாங்காமல் அவர் கையை பிடித்துக் கொண்டு அழுதாள். சாலையில் போவோர் வேடிக்கைப் பார்க்க கௌரி அவளை தட்டிக் கொடுத்து மீண்டும் அவள் நாற்காலியை திருப்பி வீட்டை நோக்கி தள்ளினார்.

“அக்கா ப்ளீஸ், அங்க என்னை கூப்பிட்டு போகாதீங்க. இனி ஒரு நிமிஷம் கூட நான் அங்க இருக்க மாட்டேன்‌.. என்னை ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு போய் விட்டிருங்கக்கா. நான் எப்படியாவது சமாளிச்சுப்பேன்” என அழுத குரலோடு அவள் சொல்ல என்ன செய்வது என்று கௌரிக்கு புரியவில்லை.

“எதுன்னாலும் தெய்வாம்மாட்ட சொல்லிட்டு போலாம் மா.. அவங்க என்ன கேப்பாங்க இல்ல.. “

“அக்கா, நீங்க எதாவது பணம் வச்சிருந்தா தாங்க.. ஆட்டோ பிடிச்சு நானே போய்க்கிறேன். அதுக்கப்புறமா நீங்க அவங்ககிட்ட சொல்லிக்கோங்க. எனக்கு அங்க வர பயமா இருக்கு.”

“அய்யோ என்னம்மா, அவங்ககிட்ட சொல்லாம நான் எப்படி….. சரி நீங்க வாட்ச்மேன் கிட்ட இருங்க. நான் போய் அம்மாட்ட சொல்லிட்டு பணம் எடுத்துட்டு வந்து தரேன்”
என்று அவளை சமாதானப்படுத்தி காவலாளி அருகில் விட்டு விட்டு உள்ளே சென்றார்.

சுற்றும் முற்றும் பயந்து பார்த்துக் கொண்டிருந்த பவதாரிணியின் அருகில் கறுப்பு ஜீப் வந்து நின்றது.
 
Status
Not open for further replies.
Top