காதல் வானிலே
அத்தியாயம் 1
பறப்பது போன்ற வேகத்தில் ‘கருப்பு குதிரை’ என அவனால் அழைக்கப்படும் ‘ஜீப்’ வாகனத்தில் நெடுஞ்சாலையில வந்துக் கொண்டிருந்தான்.
வெளியில் வெயில் மாலையானாலும் சற்று அதிகமாகவே இருந்தது. நெடுஞ்சாலை கானல் நீரில் கண்ணாடி சாலையை போல் தெரிந்தது.
மருந்துக்கு கூட ஒரு மரமும் இல்லை. வண்டியின் முன் கண்ணாடியில் அறைந்த வெயில் அவனது உடலை சுட்டது.
தொடர்ந்த வேலை அலைச்சலில் இந்த வெயில் வேறு அவனது கடுப்பை இன்னும் அதிகப்படுத்தியது. ஒரே மூச்சில் கோயம்புத்தூரை சென்று அடைந்து விடலாம் போல அவனுக்கு தோன்ற,
வண்டியில் இருந்த குளிர்சாதன வசதியையும், வண்டியின் வேகத்தையும் சற்று அதிகப்படுத்தினான்.
அவனின் இரு கன்னங்களும் சில்லென்று ஆகியதும் தான் அவனது பரபரப்பு சற்றுக் குறைந்தது.
யோசனை முழுதும் அன்றைய நாளின் மதுமிதாவின் செயலிலேயே நின்றது.
“இரிட்டேடிங் டெவில்” அவளை திட்டிக் கொண்டே
ஸ்டியரிங்கை ஒரு கையால் அழுத்தி குத்தினான். ஒரு நொடி யோசனைக்கு பிறகு, ஸ்டியரிங்கை தடவி மானசீகமாக அவனது கறுப்பு குதிரையிடம் மன்னிப்புக் கேட்டான்.
அதுவும் அவனை சுமந்து செல்லும் பெருமையில், சாலையில் வழுக்கிக் கொண்டு பறந்தது.
தன்னந்தனியாக, வெறும் யோசனைகளின் துணையோடு அவன் பயணம் அமைந்தது.
இன்னும் இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் ஆகும் என்று சலித்துக் கொண்டே கூகுள் மேப்பை பார்க்க, வலது புறம் திரும்பியும், நேராக செல்வதுமாய் இரண்டு புறங்களிலும் கோயம்புத்தூரை காட்டியதில் அவனுக்கு எரிச்சல் வந்தது. வாயில் வந்த அத்தனை ஆங்கில ‘நல்ல’ வார்த்தைகளால் கூகுளை அர்ச்சித்தான்.
அம்மாவின் ஞாபகம் சட்டென்று வந்தது.
“பொறுமையா ஒரு விஷயத்தையும் யோசிக்க மாட்டியா. எல்லாத்திலேயும் ஈஸி கோயிங். உனக்கு கண் முன்னாடி எல்லாமே க்ளியரா தெரியனும். கடிவாளம் போட்ட குதிரை மாதிரி அதில் போனும். இல்ல”
“மா. தேவையில்லாம நம்ம நேரத்தை வீணாக்க கூடாது. இதான் வழின்னு முன்னாடியே தீர்மானிச்சிட்டா எந்த பிரச்சினையும் இல்ல. ஆல்டர்னேட்டிவ்ஸ் எல்லாத்திலேயும் இருந்தா
அது வெரி போர் மா. குழம்பி குழம்பி டைம் தான் வேஸ்ட் ஆகும்.”
“ ஆப்ஷன் இருந்தா தான்டா எல்லாத்திலேயும் நல்லதை தேர்ந்தெடுக்க முடியும்”
“மா போதும். அடுத்து நீங்க எங்க வந்து நிப்பீங்கன்னு தெரியும்.”
காலையில் அம்மாவுக்கும், மகனுக்கும் நடந்த உரையாடல் கண்முன் வந்தது.
ஒரு வேளை ஆப்ஷன் இருந்திருந்தால், அம்மாவின் வாழ்க்கை இப்போது ஒரு ராஜ வாழ்க்கையாக இருந்திருக்குமோ?. நினைக்கும் போதே பற்றிக் கொண்டு வந்தது. அவனது தகப்பன் மட்டும் இந்நேரம் எதிரில் இருந்தால் அவனது வண்டியில் ஏற்றி கொன்று விட்டு கடந்திருப்பான்.
ஏதேதோ யோசனையில் வலது புறம் வண்டியை திருப்பியிருந்தான்.
ஐந்து நிமிடம் கடந்த பினபு தான் அவன் வேறு பாதையில் சென்றதே புரிந்தது.
சட்டென்று மாறத் தொடங்கியிருந்தது சூழல்.
கடுமையான வெயிலின் தாக்கம் இப்போது குறைந்திருந்தது.
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வீடுகள் அங்கங்கு இருந்தன. சிறிய கிராமங்களை கடந்து சென்றது அவனது குதிரை.
கிராம வழிகள் என்றால் குண்டும் குழியுமாக இருக்கும் என்று நினைத்தவனுக்கு ஆச்சர்யம் தான்.
வழி ஓரளவு நன்றாகவே இருந்தது.
அரசுப்பேருந்துகள் அவ்வப்போது அவனை முந்தின.
இரண்டு பக்கமும் மரங்கள் அடர்ந்து இருந்ததால் மாலை மங்கியது போல் இருந்தது.
கண்ணாடியை சிறிது இறக்கியதும்,
சில்லென்ற காற்று அவனது முகத்தில் மோதியது. குளிர்சாதன வசதியை நிறுத்தினான். ஏ ஆர் ரகுமானையும், ஹாரிஸையும் மாற்றி மாற்றி, ஸ்டீரியோவில் ஒலிக்க விட்டு, இசைக்கு தகுந்த மாதிரி தலையை அசைத்துக் கொண்டு லேசாக விசிலில் பாட ஆரம்பித்தான்.
30 கி.மீ தூரத்தில் அனைத்துமே மாறி, அவனின் மனநிலையும் அமைதியாகியது.
வாழ்க்கை எப்போதும் இப்படிதான், எந்த நொடியில் எது எப்படி மாறும் என்று தெரியாது.
கிராம வழி என்பதால் வேகத்தை குறைத்திருந்தான்.
அவசரமில்லாமல் சென்றாலும் மாலைக்குள் கோயம்புத்தூரை அடைந்து விடலாம் என்று இப்போது தோன்ற ஆரம்பித்தது.
சூழல் தான் எதையும் தீர்மானிக்கிறது. சற்று முன்பு பறக்கும் வேகத்தில் தான், அங்கு சென்று அடைய முடியும் என்று தோன்றியது, இப்போது அப்படியே அது தலைகீழாக மாறியிருந்தது.
இன்றைய பிஸினஸ் மீட்டில் முக்கியமான ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு முடிக்க வேண்டும். அதன் பின் நண்பன் தரும் இரவு விருந்தில் கலந்துக் கொள்ள வேண்டும். அவனின் பள்ளி, கல்லூரி நண்பர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் பார்ட்டி அது.
மனம் வரப்போகும் இரவை நினைத்து சற்று குதூகலம் அடைந்தது. ‘அட, இத்தனை நேரம் ஏன் இந்த மகிழ்ச்சி வரவில்லை’- யோசித்தான்.
மூளை முழுதும் ஏதாவது ஆக்கிரமித்திருந்தால் மகிழ்ச்சி என்ற ஹார்மோன் எட்டிக் கூட பார்க்காது. ஆனால் அவன் வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி சுரப்பி சுரந்ததே இல்லை.
காடுகளை போல் அடர்ந்த மரங்களும், விவசாய நிலங்களும் மாறி மாறி வந்துக் கொண்டிருக்க, மாலை நேரம் என்பதால் பறவைகளின் ஒலி அவனின் ஸ்டீரியோவை மீறி கேட்டது.
சட்டென்று பாடலை நிறுத்தி விட்டு இயற்கையான பறவைகளின் ஒலியை ரசிக்க ஆரம்பித்தான்.
ஏனோ நினைவுகள் பின்னோக்கி சென்றன.
கல்லூரி முடித்ததும், தாத்தா வலுக்கட்டாயமாக அவரது நிறுவன பொறுப்பை அவனிடமும், அவனது மாமாவின் மகளான மதுமிதாவிடமும் ஒப்படைத்திருந்தார்.
ஐந்து வருடங்கள் முடிந்த பின், இருவரின் செயல்பாடுகளுக்கு ஏற்ப நிறுவனங்கள் இரு பங்காக பிரிக்கப்படும். அதுவரை தாத்தாவின் மேற்பார்வையில் இருவரும் நிறுவனங்களை நடத்த வேண்டும் என்பது அவரின் அன்புக் கட்டளை.
நினைவுத் தெரிந்தது முதல் தாத்தாவின் கரம் தான் அவனை தாங்கிப் பிடித்தது. அவன் அம்மாவையும் தான்.
தகப்பனின் ஸ்தானத்தில் தாத்தாவும், மாமாவும் அவனருகே இரு தூண்களாய் நின்றனர்.
அம்மாவை ஒரு இளவரசியைப் போல பார்த்துக் கொண்டார்கள் என்றாலும், இள வயதில் தன்னைப் பெற்றுக் கொண்டு தனி மரமாய் நினறவருக்கு இன்னொரு வாழ்க்கையை தரவேண்டும் என்று யாருமே யோசிக்கவில்லை.
அவரது வாழ்க்கை சபிக்கப்பட்ட வரம்….
எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத சூழ்நிலை. அப்பா வீட்டில் வந்து தங்கியதால், எந்த உரிமையையும் உண்மையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே பட்டும் படாமல் அவனும் அந்த வீட்டில் வளர்ந்தான்.
அவனது உலகம் அம்மாவும், தாத்தாவும் தான். அம்மாவுக்காய் எதுவும் செய்யக் கூடியவன்.
நிறுவனம் பிரிக்கப்பட்ட உடன் தாத்தாவையும், அம்மாவையும் தனியே அழைத்துச் சென்று விடவேண்டும் என்பது தான் அவனின் ஆசை.
சொல்லப்போனால், ஒருவேளை அவரின் நிறுவன பொறுப்பை ஏற்காவிடில் இந்நேரம் ஏதாவது ஒரு வேலையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு அவர்களை தனியே அழைத்துச் சென்றிருப்பான்.
அம்மா சொல்வது போல் கடிவாளமிடப்பட்ட குதிரையை போல் தான் அவன் வாழ்க்கை.
பெருமூச்சு ஒன்று வெளிவந்தது.
அதே நேரம் கோயம்புத்தூரை அடைந்திருந்தான்.
விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் “கிராண்ட் ஸ்டே” பலகை அவனை வரவேற்றது.
மதுமிதா மட்டும் சொதப்பாமல் இருந்திருந்தால் விமானத்தில் நேற்றே சுலபமாக வந்திருக்கலாம். மீண்டும் அவளை நினைத்தால் அவனது உடலும், மனமும் எரிய ஆரம்பிக்கும். இந்நேரத்தில் அது தேவையில்லை என்று தனது அறைக்கு வந்திருந்தான்.
அவசரமாக தன் உடையை மாற்றி, ஃபார்மல் உடையணிந்து அதே வளாகத்தில் உள்ள மீட்டிங் அறையை நோக்கி சென்றான்.
ஏற்கனவே தயாரித்திருந்த அவனது நிறுவன தயாரிப்புகள் பற்றிய ‘பிரசண்டேஷன் வீடியோ’ அங்கிருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டது.
ஃப்யூஷன் உடைகள், பாரம்பரிய துணி வகைகளில் தயாரிக்கப்பட்டதே அவனது ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு காரணம். அம்மாவின் கைவண்ணத்தில் உருவான புதிய வடிவமைப்புகள், கண்களை உறுத்தாத வண்ணத்தில் இருந்ததால் அந்த வெளிநாட்டு நிறுவனம் உடனடியாக அவனை பாராட்டி ஒப்பந்தத்திற்கு தலையாட்டினார்கள்.
வந்த வேலை முடிந்ததும் தான் அவனது முகத்தில் ஒரு சிறு புன்னகை தோன்றியது. மணியை பார்த்ததும் மீண்டும் பரபரப்பு அவனை சூழ, அறைக்கு சென்று தளர்த்திய ‘டையை’ கழட்டி வார்ட்ரோப் ஹேங்கரில் மாட்டி, ஒரு டிசைனர் சட்டையையும், அதற்கு ஏற்றார் போல் ஒரு ஃபேன்டையும் அணிந்து, ஷேட் கிளாஸையும் கண்களுக்குஅணிந்து கிளம்பினான்.
சிறிது நேர பயணத்தில் அவனது நண்பனின் பார்ட்டி நடக்கும் அறையை அடைந்தான். நட்சத்திர விடுதியின் மேல் மாடியில் நடந்த பார்ட்டி அது.
அனைவரிடமும் ஒரு அரை இஞ்ச் அளவு புன்னகையுடன் கைகுலுக்கினான். பரஸ்பர அறிமுகங்களில் அனைவரும் ஓரளவு செட்டில் ஆகியிருந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. பெண்களில் சிலர் திருமணமானதில் அதிக ஜொலிப்பாக இருந்தார்கள். திருமணம் ஆகாதவர்களின் ஒட்டுமொத்த பார்வையும் அவனின் மேல் அடிக்கடி படிந்து விலகியது.
இரவு விருந்து களைகட்ட ஆரம்பிக்க, அவனது நண்பர்களின் குழாம் அவனை சுற்றிலும் அமர்ந்திருந்த நேரத்தில் அலைபேசி ஒலித்தது.
“க்ராண்ட் பா” என ஒளிர்ந்த திரையை பார்த்ததும், அவசரமாக வெளியில் வந்தான். வராந்தாவை ஒட்டி ரூஃப் டாப்பின் இன்னொரு பகுதி வந்தது. சிறிய மேஜைகளை சுற்றி உணவு உண்பவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
“தாத்தா, கொஞ்ச நேரம் முன்னாடி கால் பண்ணேன், நீங்களும் அம்மாவும் எடுக்கவே இல்லை. எல்லாம் சக்ஸஸ்ஃபுல்லா முடிஞ்சது தாத்தா”
“ஆமாப்பா. ஒரு வேலையா அம்மா வெளியே போயிருந்தாங்க.. நானும் உன் கால் வந்ததை அட்டெண்ட் பண்ண முடியல. அம்மா உன் வாய்ஸ் நோட் கேட்டுட்டு விஷயத்தை வந்ததும் சொன்னாங்க.. சந்தோஷம் பா. எப்ப திரும்ப வர்ற நீ”
பேச வேண்டியதை சுருக்கமாக பேசும் கலை அவரிடம் இருந்து தான், தனக்கு வந்ததை தாத்தா மீண்டும் நிரூபித்ததை நினைத்து ஒரு குறுஞ்சிரிப்பு வந்தது.
கூடவே அங்கு கலகலவென சத்தமாக பெண்கள் சிரிக்கும் சத்தம் அவனை பேச விடாமல் செய்தது.
மீண்டும் “தாத்தா” என்று அழைக்கும் போதே ஒரு வெடிச் சிரிப்பு சத்தம். அவனால் பேசமுடியவில்லை.
நகரலாம் என்று பின்பக்கம் திரும்பினால் அங்கு ஏதோ ஒரு சிறிய விருந்துக்காக ஒரு கூட்டம் அந்த இடத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
“ தாத்தா, கொஞ்ச நேரத்தில் பேசறேன் “ என்று சொல்லிக் கொண்டு அவர்களுக்கு வழிவிட்டு உள் அறைக்கு நகர்ந்தான்.
அங்கு போடப்பட்டிருந்த ஒரு மேஜையை சுற்றி ஆறு இளம்பெண்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்த காட்சி தான் அவனுக்கு தெரிந்தது.
அப்போது தான் கல்லூரி முடித்த பெண்கள் என்று பார்த்ததும் தெரிந்தது.
அவன் அவர்களையே பார்ப்பதை அந்த குழுவில் இருந்த ஒருத்தி பார்த்து அனைவரிடமும் கிசுகிசுத்தாள். அவர்களை கடுப்புடன் பார்த்திருந்த அவனுக்கு, அவர்களின் கிசுகிசுப்பு இன்னும் எரிச்சலை உண்டாக்கியது.
“ஏய் அங்க பாருங்கடி. செம ஹேண்ட்ஸம்” என ஒருத்தி சொல்ல, மற்றவர்களும் ‘வாவ்’ என்று சொல்ல, அங்கு சலசலப்பு எழுந்தது.
“ச்ச மேனர்ஸ்னா என்னன்னே தெரியாத கும்பல். இதுங்களுக்கு வேற இடமே கிடைக்கல போல” என்று தனக்குள் முனங்கி விட்டு வாசல் வழியை பார்த்தான். இன்னும் அவர்கள் வரிசையாக வந்துக் கொண்டிருந்தார்கள்.
வேறு வழியில்லாமல் அங்கேயே நிற்க வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு பெண்ணும் அவனின் உயரம், நிறம், அவனது வேலை என்னவாயிருக்கும், அங்கு இருக்கும் பெண்களில் யாருக்கு அவன் சரியாக இருப்பான் என்று ஒரு அலசலை செய்ய, அவனுக்கு நேரே போய் அவர்களை திட்ட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவனுக்கு ஏற்கனவே பெண்கள் மேல் இருக்கும் வெறுப்பில் இந்த இளம்பெண்கள் பக்கம் பார்க்கக் கூட வேண்டாம் என்பது போல் தோன்றியது. . வேறு பக்கம் தலையை திருப்பினான். இருந்தும் அந்த அரட்டையும் சத்தமும் அவர்களின் பக்கம் நோட்டமிட வைத்தது.
அவனது பெயரை ஒவ்வொருவரும் இதுவாக இருக்கும் என்று கற்பனையை சொல்ல, அவனுக்கு நேர் எதிரில் இருந்த பெண், “முசுடு” என்று முணுமுணுத்தாள். அதே நேரத்தில் அவன் அந்த பக்கம் திரும்ப, அவனுக்கு அது நன்றாகவே புரிந்தது.
சட்டென தலைக்கு கோபம் ஏறியது.
“பெரிய ஆணழகன்னு நினைப்பு, கொஞ்சமாச்சும் நகராறாரானு பாரு. இங்க வந்து சீன் போட்டுட்டு” என்று பக்கத்தில் இருந்த பெண்ணிடம் அவள் மீண்டும் முணுமுணுத்து சிரித்தது அவள் வாயசைவில் நன்றாக அவனுக்கு புரிந்தது.
ஓங்கி ஒரு குட்டு அவளின் தலையில் வைப்போமா என்று பரபரத்தது கை. ‘என்னைப் பற்றி தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் பேசுவாளா’ என்று உள்ளுக்குள் ஓடியது.
அதற்குள் கூட்டம் கிடைத்த இடங்களை ஆக்கிரமித்திருக்க, இவர்களை புறந்தள்ளி விட்டு அவன் நண்பர்கள் இருக்கும் அறையை நோக்கிச் சென்றான்.
மீண்டும் அவர்களிடம் ஐக்கியமாகி, இரவு உணவை முடித்து தன் இருப்பிடத்திற்கு திரும்ப பார்க்கிங் நோக்கி நடந்தான்.
அப்போது, “வந்துட்டேன் கா, எந்த ஹாஸ்பிட்டல், இப்ப எப்படி இருக்கு” என்றுக் கேட்டுக் கொண்டே அவன் மேல் வேகமாக வந்து மோதினாள் தாரிணி.
கோபத்தின் உச்சத்திற்கு சென்றவன், “அறிவில்ல உனக்கு, எருமை மாதிரி வந்து மோதற, ஒரு ஆம்பள கிடைச்சிறக் கூடாதே உங்களுக்கெல்லாம்” என்று அவளிடம் எகிற, அவளின் கண்கள் இன்னும் பயத்தில் விரிந்தது.
“சாரிங்க” என்று அவனிடம் சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல் அவளின் அழகான வண்ண நிறத்திலான தோளில் மாட்டியிருந்த பையைத் துழாவினாள்.
அவனுக்கு எரிச்சலில் முகம் சிவந்தது.
தாரிணி சாவி கிடைத்ததில், கிட்டத்தட்ட ஓடிச் சென்று பார்க்கிங் ஓரத்தில் நிறுத்தியிருந்த வண்டியை எடுக்கச் சென்றாள்.
பின்னாலேயே “இவளை” என்று அழுத்தி உதட்டை கடித்துக் கொண்டு சென்றவனை, தோளில் தட்டி திருப்பினான் வைபவ்.
“அவசரமா கிளம்பின, இங்க என்னடா பண்ற” அவன் கேட்டதும்,
“வண்டியை எடுக்கத்தான்டா வந்தேன், அதுக்குள்ள ஒரு இடியட் என்னை இடிச்சிட்டு ஓடுது” என்று சலித்துக் கொண்டான்.
வைபவ் அவனை சமாதானப்படுத்தி பேசிக் கொண்டே அவன் கார் நின்றுக் கொண்டிருக்கும் பகுதிக்கு அழைத்து வந்தான்.
அதற்குள் அந்த பெண்களின் பேச்சுக்களை நண்பனிடம் சொல்லி திட்டிக் கொண்டே வந்தவன், “இதுங்களை சொல்லி பிரயோஜனமில்லை. இவளுங்க அப்பா, அண்ணன், மாமான்னு எவனாச்சும் ஓடாத் தேஞ்சு சம்பாதிச்சு கொடுப்பாங்க. அந்த காசை வெட்கமே இல்லாம கொண்டு வந்து ஓசியில் எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு, கொழுப்பெடுத்து திரியுதுங்க” என்று அவன் சொன்ன வார்த்தைகள் தாரிணியின் காதில் விழுந்தது.
அவளுக்கு வியர்த்துக் கொட்டி படபடப்பாக்கியது. ஏற்கனவே வந்த தகவல் அவளை அதிர்ச்சியாக்கியதில் இவனின் பேச்சும் இன்னும் அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
அவசரத்தில் அவளின் வண்டியை எடுத்தவளுக்கு அங்கு இருந்த காரின் மீது உரசியது தெரியவில்லை.
ஆனால் அவனுக்கு அந்த சத்தம் தெளிவாகவே கேட்டது. சட்டென திரும்பி அவனின் காரையும் அதில் உரசிவிட்டு வண்டியை எடுத்தவளையும் பார்த்தவனுக்கு ரத்த அழுத்தம் நாளங்களை புடைக்கும் அளவுக்கு அதிகமாகியது.
“ஏய் ஏய் அறிவில்ல. இது என்ன டூ வீலர் பார்க்கிங் கா, இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க. படிச்சவ தானே. சுத்தமா மண்டையில் எதுவுமில்லையா? உன்னை….” என்று கண்ணை விரித்து, நாக்கைத் துருத்திக் கொண்டு வந்தவனை பார்த்து பயந்து கண்ணை இறுக்கி மூடினாள்.
ஆனால் மருத்துவமனை செல்லும் அவசரத்தில் கண்களை திறந்து மீண்டும் “சாரிங்க” என சொல்லி விட்டு வண்டியை நகர்த்தினாள்.
“இவ என்னடா லூசா. நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன் . சாரி சொல்லிட்டு போறா” என மீண்டும் குரலுயர்த்தியவனை ஒரு நொடி ஆழமாக பார்த்து பெருமூச்சு விட்டு வாயை மெதுவாக அசைத்து ‘போய்யா’ என்று சொல்லிவிட்டு சென்றவளை அதிர்ச்சியுடன் அடக்கமுடியாத கோபத்துடன் பார்த்தான்.
பின்பு வேகமாக அவளின் பின் செல்ல முயன்றவனை, “டேய் அகரா” என்று அழைத்து இழுத்துப் பிடித்தான் வைபவ்.
அந்த அவசரத்திலும் அவளுக்கு அது நன்றாக காதில் விழ, ‘அகரா வா. ஒருவேளை அகராதின்னு பேர் வச்சிருப்பாங்களோ, இருக்கும் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டே வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள். .