ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஏகலைவனின் ஏந்திழையாள்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 3 (அ)

"திலகன் நடந்ததை எல்லாம் சரியான விதத்தில யோசிச்சா மான்சிய மும்பைல வச்சு கடத்தினதும், அவள் தப்பிச்சு வந்ததும் வேற வேற ஆளா தான் இருக்கணும். விசாரணையில கிடைச்ச விபரம் எல்லாம் முதலில் அவளை கடத்தினவங்க பக்கம் மட்டும் நம்மள திசை திருப்புற மாதிரி இருக்கு. குறிப்பா மான்சிக்கு உதவி செய்தவர் பத்தி எந்த தகவலும் கிடைக்கல. எதுக்கும் நீ மான்சிகிட்ட அவரை பத்தி கேளு." என்று கூறி விட்டுச் சென்றார் திலகனின் ஏசிபி நண்பன் சரவணன்.

உறங்கும் மகளின் அறையை திலகன் எட்டி பார்க்க, அவள் அருகில் அமர்ந்திருந்த வெண்பா கணவனை பார்த்ததும் வெளியே வந்தார்.

"சரவணன் அண்ணா என்ன சொன்னாங்க?" என்று வெண்பா கேட்க, நண்பன் கூறி விட்டுச் சென்றதை மனைவியிடம் தெரிவித்தார்.

"எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு. ஆனாலும் நாம ரொம்ப இதுல இறங்கி விசாரணை செய்ய ஆரம்பிச்சா நம்ம பொண்ண பத்தியும் சொல்ல வேண்டியது வரும்." என்று கவலை கொள்ள,

"பாத்துக்கலாம் விடு. அப்புறம் அம்மா போன் பண்ணிருந்தாங்க." என்று கூறவும் வெண்பா வேகமாக எழுந்துக் கொண்டார்.

தன் மாமியார் கணவனிடம் என்ன பேசியிருக்க கூடும் என்று அனுமானிக்க முடிந்தது. நிச்சயம் மனதை கஷ்டம் கொள்ள வைக்கும் வகையில் தான் அவர் அழைப்பு இருக்கும் என்பதால் அதை கேட்டு மனதை புண்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

மனைவியில் பிடித்தமின்மையை முகத்தில் பார்த்த திலகனும் தாயை பற்றிய பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டார். எப்போது தான் அன்னை தங்களை புரிந்துக் கொள்வாரோ என்று பெருமூச்சு விட மட்டுமே அவரால் முடிந்தது.

இருபது வருடங்கள் கழிந்த பின்னும் காரணமின்றி மகள் மீதும் மனைவி மீதும் வன்மத்தை கக்குபவரை என்னவென்று சொல்ல.

அறைக்கு வந்த வெண்பாவிற்கு மாமியாரை பற்றிய பேச்சு ஆரம்பித்ததும் மகள் தனது மணி வயிற்றில் உருவான நாள் தொடங்கி அனைத்தும் நினைவு வந்தது.

தாய்மை வரமாக இருந்தாலும் அந்த பயணத்தின் பாதை சில சாபங்களை தரவும் மறப்பதில்லை. அது வெண்பா விசயத்திலும் உண்மையாகியது.

"திலகா உன் பொண்டாட்டிய அக்கா ரெண்டு பேருக்கும் போன போட்டு மாசமா இருக்கிறத சொல்ல சொல்லு." என்று மாமியார் கூற, அதையே அன்று திலகனும் வழி மொழிந்தார்.

'நான் சொன்னா தான் அது அவங்க பொண்ணுங்க காதுல விழுமோ. ஒரு நாளுக்கு பத்து தடவை மகளுக்கு பேசுற நீங்களே சொல்ல வேண்டியது தானே.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியே சொல்லும் துணிவு தான் இல்லை.

(வில்லங்கத்த விலை கொடுத்து வாங்கிட்டு அதுக்கு விளக்கம் வேற கொடுக்கணும். அதுக்கு அமைதியா இருக்கிற இடம் தெரியாம இருந்திட்டு போயிடணும்) என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

'இன்னைக்கு ஆஸ்பத்திரி போறத பெரியவளுக்கும் சின்னவளுக்கும் சொல்லிடு.
டாக்டர் என்ன சொன்னாங்கன்னு சின்னவ கேட்டா அவ கிட்ட பேசு.

பெரியவ உனக்கு ஆம்பிள பிள்ள பிறக்கணும்ன்னு டூர் போன இடத்தில ஒரு கோவில்ல வேண்டுதல் வைச்சிருக்கிறா. அவ ஆசை படி ஆம்பிளை பிள்ளைய பெத்து கொடு.
நல்லா வேலை செய்யணும்னு சின்னவ சொன்னா. அதனால எங்க துணியையும் சேர்த்து கையில துவைச்சு போடு.

பிறக்க போற பிள்ளை மேல எவ்வளவு பாசம் தெரியுமா என் மாப்பிள்ளைங்களுக்கு. பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கணும்னு இப்பவே ரெண்டு மாப்பிள்ளையும் பேசிக்கிறாங்க.'

இப்படி தான் கர்ப்பமாக இருப்பதை பற்றி ஒரு நாள் கூட சந்தோஷப்பட முடியாத அளவிற்கு வெண்பாவின் நாட்கள் நகர்ந்தது.

அதுவும் ஆண் பிள்ளை என்ற வார்த்தைகளை கேட்க கேட்க கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. எந்த பிள்ளை என்றாலும் வளர்க்க போகின்றது நான் தானே. பிறகு ஏன் மற்றவர்கள் அதை பற்றி சிந்திக்க வேண்டும்.
என் பிள்ளைக்கு பெயர் முடிவு செய்யும் உரிமையை கூட இவர்கள் தனக்கு தர மாட்டார்களா என்று ஆதங்கம் நிரம்ப இருந்தது. ஆனால் அதே ஆதங்கம் கணவனிடம் இல்லாத போது எதுவும் பேச முடியவில்லை.

எப்போது வளைகாப்பிட்டு தாய் வீட்டிற்குச் செல்வோம் என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் இருந்தது. அதற்கும் பெரிய தடை அண்ணிகளிடமிருந்து வந்தது.

"ம்மா தீபாவளியை ஒட்டி குடும்பமா நாங்க கோவிலுக்கு போவோம். அதனால பொங்கலுக்கு பிறகு வளைகாப்பை வைக்கலாம்." என்ற பணக்கார வீட்டு மருமகளாகிய மகளின் வார்த்தை அங்கு சாசனமாக எழுதப்பட்டது.

"உங்க வீட்டுல யாருக்குமே அறிவே இல்லையா. தல பிரசவம் வலி எப்போ வரும்ன்னு யாருக்கு தெரியும். தீபாவளி நவம்பர்ல வரும், பொங்கல் ஜனவரி பாதியில வரும். அதுவரை உனக்கு பிரசவ வலி வராம இருக்கணுமே.

ஒன்பதுல வளைகாப்பு நடத்துறதுல கூட பிரச்சனை இல்ல. அதுக்காக பொங்கல் முடியுற வரை காத்திருக்க முடியாது. புதுவருசத்தை ஒட்டி வைக்க சொல்லு." என்ற தாயின் புலம்பல்கள் எதுவும் யாரின் காதையும் சென்றடையவில்லை.

"பொங்கலுக்கு இங்க இருந்தா சீர் செலவு வரும்ன்னு உங்க வீட்டுல யோசிக்கிறாங்களா. நாங்க எங்க பொண்ணுங்களுக்கு எவ்வளவு செய்தோம் தெரியுமா?" என்று மாமியார் பட்டியலிட்டு கூற, ச்சீ என்ற எண்ணமே வந்தது.

ஒரு வழியாக வளைகாப்பு முடிந்து சந்தோஷமாக தாய் வீடு வந்தவளின் மகிழ்ச்சி இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது.

இரண்டு நாட்கள் அம்மா வீட்டில் விட்டதே பெரிது என்பது போல பலதும் கூறி மருமகளை அழைத்துச் செல்ல மகனை அனுப்பி விட்டார் மாமியாரும் நாத்தனார்களும்.

அவள் மனது மட்டும் 'எத்தனை வேலைக்காரங்க இருந்தாலும் உங்க அம்மாக்கு என்ன வேலை வாங்கலன்னா பொழுது விடியாதே.' என்று கூறிக் கொண்டது.

"இங்க உள்ள ஆஸ்பத்திரியில பாத்தா உங்க வீட்டுக்கு செலவு ஆகிடும்ன்னு பயமா. முடியலன்னா சொல்லு நான் மொத்த பணத்தையும் தரேன்." என்ற மாமியாரின் வார்த்தையில் அடிப்பட்ட பார்வை பார்த்தவள் ஒன்றும் கூறாமல் அமர்ந்து விட்டாள்.

டாக்டர் கூறிய இரு நாட்களுக்கு முன்பாகவே வலி எடுக்க ஆரம்பித்து விட வெண்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

ரத்த கொதிப்பு ஏகத்துக்கும் அதிகரித்திருக்க, சீ செக்ஷன் செய்தாக வேண்டிய கட்டாயம்.

அடுத்த ஒரு மணி நேரம் யுகமாக கழிய திலகன் வெண்பாவின் செல்வமகள் வீல் என்ற சத்தத்துடன் வெண்பாவின் புகுந்த வீட்டின் ஆண் குழந்தை நினைப்பை பொய்யாக்கி வெளியுலகை காண வந்தாள்.

பிள்ளை பிறந்து இரண்டு மாதம் முடியும் முன்னரே அழைத்து வர திலகன் வீட்டார் முடிவெடுத்து விட எதிர்த்து பேசாமல் வெண்பாவும் கிளம்பிவிட்டாள்.

மாமியார் வீட்டிற்கு வந்தவளுக்கு முன்பு போல பரபரப்பாக வேலை செய்ய முடியவில்லை. அறுவை சிகிச்சை செய்த உடல் அதற்கு ஒத்துழைக்கவும் இல்லை.

முடிந்த வேலைகளை மட்டும் செய்பவள் குழந்தையின் தேவைகள் எதற்கும் யாரின் உதவியையும் எதிர் பார்க்கவில்லை. குளிப்பாட்டுவது தொடங்கி அனைத்தையும் அவளே பார்த்துக் கொண்டாள்.

இடை இடையே மாமியார் குறை கூறினாலும் அதற்காக வரிந்து கட்டிக்கொண்டு எந்த வேலையையும் இழுத்து கட்டி செய்யவில்லை.
இன்னும் சிறிது நேரத்தில் பிள்ளைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு நடக்க போகின்றது என்னும் நிலையிலும் யாரும் குழந்தைக்கு வைக்க போகும் பெயரை வெண்பாவிடம் சொல்லியிருக்கவில்லை.

பெற்ற பிள்ளைக்கு வைக்க போகும் பெயர் கூட தெரியாமல் தான் என்ன தாய் என்ற கழிவிறக்கம் மனதை வதைக்க, உடை மாற்ற வந்த கணவனை பிடித்துக் கொண்டாள்.

"இப்போ நீங்க பாப்பாக்கு செலக்ட் பண்ண பெயர சொல்லல நான் வெளிய வர மாட்டேன். எப்படியும் நான் சொன்ன எந்த பெயரும் இருக்காதுன்னு தெரியும். அதனால பயப்படாம சொல்லுங்க." என்று கிட்டத்தட்ட வெளிப்படயைாகவே கணவனை மிரட்டினாள்.

"சந்தனமாரி மகாதேவி" என்று கணவன் தயங்கியபடி தங்கள் சகோதரி வீட்டார் தேர்வு செய்த மகளின் பெயரை கூறியதும் வெண்பாவிற்கு கண்கள் இருட்டிக் கொண்டு வருவது போல இருந்தது.

இந்த காலத்தில் இப்படி பெயர் வைப்பார்களா என்று தோன்ற கணவனிடமே "மனசாட்சிய தொட்டு சொல்லுங்க இந்த பெயர் நல்லா இருக்கா?" என்று கணவனின் சட்டையை பிடித்து உலுக்காத குறையாக வெண்பா கேட்டுக் கொண்டிருந்தாள்.

"அம்மா அப்பா பெயரும் சாமி பெயரும் வர மாதிரி...'' என்று திலகன் நினைக்க, பார்வையால் கணவனை பொசுக்கினாள்.

"அறிவு இருக்காயா உனக்கு... சாமி சாம்பிராணின்னுகிட்டு... எப்படியும் நீ எதையும் முடிவு பண்ணிருக்க மாட்ட. உன் வீட்டாளுங்க தானே இந்த பெயர முடிவு பண்ணது. இனி நான் பாத்துக்கிறேன். நீ தள்ளி நிள்ளு." என்று மரியாதையை பறக்கவிட்டு ஒருமையில் பேசும் இந்த வெண்பா புதிகாக தெரிந்தாள்.

"என்ன வெண்பா இப்படி பேசுற?" என்று ஆதங்கமாக கேட்க,

"அப்படி தான் டா பேசுவேன். என்ன பண்ணுவ? ஒழுங்கா அமைதியா என் கூட வந்து நிக்கிற. நானும் போனா போகுது கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டோமேன்னு அமைதியா இருந்தா தலை மேல ஏறி உக்கார்ந்து ஆட ஆரம்பிக்கிறீங்க." என்று ஆவேசமாக பேசும் மனைவியை இடையில் புகுந்து நிறுத்த நினைக்க, கணவனின் சட்டையை பிடித்துவிட்டாள்.

"குறுக்க பூந்து பேச நினைச்ச குறுக்கெலும்பை உடைச்சு கையில கொடுத்துடுவேன்." என்று பேச, இனி மனைவியிடம் பேச முடியாது என்று திலகன் கப்சிப்.

"வந்த மொத நாளே இந்த வெண்பா யாருன்னு உங்களுக்கு காட்டிருக்கணும். பெரியவங்களுக்கு அடங்கி போ... புருஷன அனுசரிச்சு போன்னு பெத்தவங்க சொன்னத கேட்டது என் தப்பு தான். இனி என் பிள்ளை விஷயத்தில முடிவு எடுக்கிறத நான் பாத்துக்கிறேன்.

எதாவது தேவையில்லாம பேசி வைச்சீங்க அப்புறம் குடும்பம் மொத்தமும் சந்தன மாரிக்கு பதிலா பத்திரகாளிய தான் பார்க்க வேண்டியிருக்கும்." என்று கணவனை எச்சரித்து விட்டு வெளியே வந்தாள்.

அறையை விட்டு வெளியே வந்தவள் தன் புகுந்த வீட்டாரை பார்க்க, பிள்ளை விஷயத்தில் அனைத்து முடிவுகளும் தங்களிடம் தான் என்பதில் சாதித்து விட்ட கர்வம் அப்பட்டமாக தெரிந்தது.

"என் கிட்டவே போட்டியா... இனி தானே இந்த வெண்பாவோட ஆட்டத்த பாக்க போறீங்க." என்று மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

ஐயர் வந்து பூஜை ஆரம்பிக்க தம்பதிகள் இருவரும் மனையில் அமர்ந்தனர்.

"குழந்தைய தொட்டில்ல போட்டுட்டு அரிசியில பெயர் எழுதுங்க." என்று ஐயர் கட்டளையிட, கணவனுக்கு முன்பே எழுந்துக் கொண்டவள் தன் மகளை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு அரிசியின் அருகில் வந்தாள்.

"வெண்பா..." என்று மாமியார் அழைத்ததும் காதில் கேட்காதது போல இருந்தவள், யாரின் முகத்தையும் பார்க்காமல் கீழே அமர்ந்தாள்.

"மான்சி ஏந்திழையாள்" என்று வெண்பா எழுத திலகன் வீட்டார் வெளிப்படையாகவே வெண்பாவை முறைத்து பார்த்தனர்.

விழா நல்லபடியாக முடிந்து இரு பக்க உறவினர்கள் செல்லும் வரை பொறுமையாக இருந்தவர்கள் அவர்கள் கிளம்பியதும் வெண்பாவை சுற்றி வளைத்தனர்.

"நாங்க சொன்ன பெயர ஏன் வைக்கல.
எங்க வார்த்தைக்கு இங்க மதிப்பு இல்லாம போயிட்டு.

நேத்து இந்த வீட்டுக்கு வந்தவ எங்கள கேட்காம முடிவெடுக்க பழகிட்ட இல்ல. சாமி பெயர வைக்கலன்னா தெய்வ குத்தமாகிடும்." என்று ஒவ்வொருத்தரும் மாறி மாறி பேசினர்.

"நாளைக்கு என் பொண்ணு மத்தவங்க முன்னாடி பெயர சொல்ல கஷ்டப்பட கூடாது. அப்புறம் நான் எந்த சாமி கிட்டயும் வேண்டுதல் வைக்கல. வேண்டுதல் வைச்சவங்க சாமி குத்தம்ன்னு நினைச்சா பரிகாரம் பண்ணிக்கோங்க." என்று முடித்துக் கொண்டவளுக்கு மேலும் பேசும் எண்ணமில்லை.


தொடரும்....
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 3(ஆ)

வெண்பா திலகனின் அன்பு மகள் தவழ்ந்து வீட்டையே சுற்றி வர, அவளை சுற்றி மற்றவர்களின் நாட்களும் நகர்ந்தது.

"பாப்பா எப்பவும் பகல்ல டல்லா இருக்கா. ஆனா நைட் டைம்ல குஷியா விளையாடுறா. எப்படி தான் உன்னால இவள சமாளிக்க முடியுதோ." என்று திலகன் அலுத்துக் கொள்ள, வெண்பாவிற்கு புன்னகை மட்டுமே.

நாட்கள் செல்ல செல்ல மான்சியின் செயல்கள் வெண்பாவிற்கே ஒரு வித பயத்தை கொடுக்க ஆரம்பித்தது. இருளில் இருக்கும் உற்சாகம் வெளிச்சத்தில் இருப்பதில்லை.

திலகனிடம் மெல்ல இதை கூற அவனோ "சின்ன பிள்ளைங்க நைட் நல்லா விளையாடும்ன்னு நீ தானே சொன்ன அப்புறம் என்ன ஃபீல் பண்ற." என்று சொல்ல, தாயால் அமைதி காக்க முடியவில்லை.

திலகனிடம் போராடி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள். குழந்தைக்கு சில சோதனைகள் செய்துவிட்டு முடிவிற்காக காத்திருக்க, திலகன் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.
தன் மகளுக்கு குறை இருக்கும் என்று அவன் நினைக்கவில்லை. ஆனால் வெண்பா பயந்துக் கொண்டிருந்தாள். டாக்டர் அழைத்ததும் உள்ளேச் செல்ல அவரோ அமைதியாக இருவரையும் அமர சொன்னார். அவரின் அமைதி மனதில் கலவரத்தை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது.

"சாரி மிஸ்டர் அண்ட் மிஸஸ் திலகன் உங்க பொண்ணு மான்சிக்கு கண்ணுல ரேர் டிசிஸ் இருக்கு." என்று கூற இருவரும் மொத்தமாக உடைந்து போயினர்.

அதுவரை சாதாரணமாக இருந்த திலகன் கூட மகளின் நிலை முழுதும் தெரியும் முன் நொறுங்கிவிட்டான். இருவரில் முதலில் தெளிந்தது வெண்பா தான்.

"டாக்டர் என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என்று கேட்க, அவரோ பெரும்மூச்சுடன் ரிப்போர்டை அவள் புறம் நகர்த்தி வைத்தார்.

"டே ப்ளைன்னஸ் (Day Blindness - பகல் குருடு) அண்ட் (Night vision power)" என்று கூற இருவருக்கும் புரியாத நிலை தான். பெற்றவர்கள் நிலை உணர்ந்து மருத்துவர் அதை விளக்கி கூறினார்.

"பொதுவா நம்ம பார்வை திறனை தீர்மானிக்க கூடிய குச்சி கூம்பு செல்கள் உங்க பொண்ணுக்கு அதிகமா இருக்கு. சோ மான்சிக்கு நைட் டைம்ல கண்ணு நல்லா தெரியும். இருட்டில நாம் பார்க்க முடியாததை கூட உங்க பொண்ணால பாக்க முடியும். பட் டே டைம்ல அந்தளவு பார்க்க முடியாது. அதிகபடியான வெளிச்சம் கண் நரம்புகளுக்கு கூச்சத்தை கொடுக்கிறதோட பார்வை திறனை குறைக்கும்." என்று கூறி முடித்த நொடி திலகன் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

"எதனால டாக்டர் என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை." என்று மடியில் தூங்கிக் கொண்டிருந்த மகளின் மீது பார்வையை வைத்தபடி கேட்டான்.

"பெரியவங்களுக்கு இந்த பிரச்சனை வர நிறைய காரணம் இருக்கலாம். பட் குழந்தைங்களுக்கு வரணும்னா ஜெனடிக் ஆர் டிஎன்ஏ மட்டும் தான் காரணமா இருக்கணும் உங்க வீட்டுல யாருக்காவது இப்படி ஒரு பிரச்சனை இருந்திருக்கா?" என்று மருத்துவர் கேட்டதும் இல்லை என்பது போல இருவர் தலையும் ஆடியது.

"இந்த பிரச்சனைக்கு தீர்வு இல்லையா டாக்டர்?'' என்று திலகன் கேட்க அவன் குரலில் வலி அப்பட்டமாக தெரிந்தது.

"ட்ரீட்மெண்ட் இருக்கு. பட் மான்சி ஒரு வயசு கூட ஆகாத சின்ன குழந்தை அவளுக்கு செய்றது கஷ்டம். மான்சி வளர்ந்த பிறகு தான் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க முடியும்." என்று மருத்துவர் கூற மேலும் சில தகவலை பெற்றுக் கொண்டு கனத்த மனதுடன் வெளியே வந்தனர்.

மருத்துவமனை வாசலிற்கு வரும் போது சூரிய வெளிச்சம் பிரகாசமாக மான்சி மேலே விழ, புடவை கொண்டு வெண்பா மகளை மூடினாள்.

வீட்டுற்கு வரும் வழியில் "வீட்டுல யார் கிட்டயும் இத பத்தி சொல்லாதீங்க. தேவையில்லாத பிரச்சனை வரும்." என்று புகுந்த வீட்டரை மனதில் வைத்து கூற, வண்டி சடர்ன் ப்ரேக் அடித்து நின்றது.

"என்ன பிரச்சனை வரும். என் வீட்டு ஆளுங்கள பார்த்தா பிரச்சனை பண்றவங்க மாதிரியா இருக்கு." என்று தனது மன அழுத்தம் மொத்தத்தையும் மனைவியிடம் இறக்க அதில் அவளில் அழுத்தம் கூடியது.

திலகன் வீட்டிற்குள் வந்ததும் கிளிப்பிள்ளை போல மருத்துவர் கூறிய அனைத்தையும் தாயிடம் கூறி ஆறுதல் தேட, வெண்பா நினைத்தது போல பிரச்சனை சிறிதாக அல்லாமல் பூதாகரமாக கிளம்பியது.

வெண்பா திலகன் இருவரின் வழி உறவினர்கள் மொத்தமும் கூடி இருக்க, மாமியாரின் குரல் சற்று ஓங்கி ஒலித்தது.

"ஆம்பிள பிள்ளைய பெத்து தர துப்பில்ல. இப்படி ஊனமான பிள்ளைய பெத்து எங்க குடும்பத்தையே விளங்காம பண்ணிட்டா. இவள ஒழுங்கு மரியாதையா உங்க கூட கூட்டிட்டு போங்க. நாங்க நல்ல பொண்ணா பாத்து எங்க பையனுக்கு கட்டி வைச்சிக்கிறோம்." என்று திலகனின் தாய் கூற, இரு பக்க உறவினர்களும் வாக்கு வாதத்தில் இறங்கி்னர்.

அறைக்குள் இருந்த வெண்பாவி்ன் கவனம் முழுவதும் மான்சியிடம் மட்டுமே. பசிக்கும் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தவள் காதில் அனைத்தும் விழுந்தாலும் எதுவும் பேசவில்லை.

"கண்ணு தெரியாத பிள்ளைய வைச்சு பிச்சை எடுக்கவா...'' என்று திலகனின் உறவினர் ஒருவரின் வார்த்தை கூட்டத்தின் நடுவே கேட்க, பெற்ற தாயின் மனது அவ்வார்த்தையில் கதறி அழுதது.

இருத்தரப்பும் கடும் வாக்குவாதத்தில் இருக்க திலகன் எழுந்து அறைக்குள் வந்தான். மனைவி மடியில் உறங்கிக் கொண்டிருந்த மகளின் நெற்றில் மென்மையாக இதழ் பதித்தான்.

தந்தையில் மீசை முடி உரசியதில் குழந்தை சின்னதாக சிணுங்க, அந்த அழகில் தன்னை தொலைத்தவன் அவளை மெல்ல தூக்கி மார்போடு அணைத்தான். தந்தை கதகதப்பில் கலைந்த தன் தூக்கத்தை தொடர, மகளை தொட்டிலில் கிடத்தினான்.

மகள் உறங்கி விட்டதை உறுதி செய்தவன் வெண்பாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். வெண்பாவின் கரம் பிடித்து திலகன் அழைத்து வருவதிலே அவன் முடிவை அறிந்துக் கொண்ட பெண்ணவளின் வீட்டார் அமைதியாகிவிட்டனர்.

"திலகா இவள..." என்று பேச வந்த தாயை கரம் உயர்த்தி தடுத்தவன்,

"அம்மா என் மனைவிக்கும் பொண்ணுக்கும் மரியாதை இல்லாத இடத்தில நான் இருக்க வேண்டிய அவசியம் இல்ல. நாங்க எத வேணும்னாலும் தாங்கிப்போம் ஆனா எம் பொண்ணு பத்தி பேசுனது என்னால தாங்கிக்க முடியல. வேண்டாம் ம்மா மனசு மொத்தமா விட்டு போயிருச்சு. தெரிஞ்ச இடத்தில எனக்கு ஒரு வேலை இருக்கு அதனால நான் என் குடும்பத்தை கூட்டிட்டு போறேன்." என்று கூறியவன் யார் தடுத்தும் நிற்கவில்லை.

வாடகை வண்டியில் மூவரின் உடமை தொடக்கம் அனைத்தையும் வண்டியில் ஏற்றியவன் மனவைி மகளுடன் கேரளாவை நோக்கி புறப்பட்டான்.

இங்க பாரு பாப்பா பிடிக்காம நடக்கிறா...
என் தங்க பிள்ளை இப்பவே அப்பா சொல்றத செய்யுறா...

இன்னைக்கு பாப்பா எத்தனை வார்த்தை பேசினா தெரியுமா...

இவை எல்லாம் வெண்பாவின் வாய் மொழி அல்ல திலகனின் மொழிகள். ஒரு வேகத்தில் மனைவி மகளை அழைத்து வந்தவனுக்கு வருமானம் குடும்ப செலவிற்கு போதவில்லை.

வெண்பா எவ்வளவு சிக்கனமாக இருந்த போதும் குழந்தையின் மருத்துவ தேவையும் இருக்க, பற்றாக்குறை இருந்து கொண்டே இருந்தது. வேறு வழி இல்லாமல் வெண்பாவும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.

வெண்பா பகலில் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற, திலகன் இரவில் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனத்திற்கு ட்ரைவராக சென்றுக் கொண்டிருந்தான்.

இருவரில் யாராவது ஒருவர் மகளுடன் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது தம்பதியருக்குள் எழுதப்படாத விதி.

மே மாத வெயிலிலும் கூட மிதமான பனி மூட்டம் இருக்கும் இடத்தில் வெளிச்சம் காலையில் தாமதமாக தோன்றி மாலையில் சீக்கிரம் சென்றுவிடும். அந்த ஒரு காரணத்திற்காகவே திலகன் இங்க வர சம்மதித்தான்.

மலை பகுதியில் வசிப்பதில் சில பல நடைமுறை சிக்கல் இருந்த போதும் மகளுக்காக இருவரும் அனைத்தையும் கடந்து வர பழகி கொண்டனர்.

"மான்சி..." என்று வெண்பா கோபமாக அழைக்க, மகள் திரும்பி பார்க்கும் முன் தந்தை மகளுக்கு அரணாக வந்து நின்றான்.

"இப்போ எதுக்கு பாப்பாவ கோபமா கூப்பிட்ட?" என்று மனைவியை முறைத்து பார்க்க, அவளது பார்வை கணவன் காலை கட்டிக் கொண்டு நின்ற மகளை தொட்டு பூஜை அறையை நோக்கி திரும்பியது.

மனைவியின் பார்வையை தொடர்ந்த தன் பார்வையை திலகன் செலுத்த பூஜை அறையை முழுவதும் அலங்கோலமாக இருந்தது.

"இன்னும் நல்லா நடக்க கூட வரல அதுக்கே உங்க மக பண்ற அட்டகாசம் தாங்க முடியல. சூடம் டப்பா மொத்தமா சிதற விட்டுருக்கா, பத்தி குச்சி எல்லாத்தையும் முறிச்சி போட்டுருக்கா. அது கூட பரவாயில்ல சந்தனம், குங்குமம், திருநீறு வைத்து தரைய சூப்பரா மொழுகி வச்சி இருக்கா, நல்ல வேளை சாமி போட்டோ எல்லாம் கொஞ்சம் உயரமா சுவர்ல மாட்டி இருந்ததால தப்பிருக்கு..." என்று மகள் பற்றி குற்ற பத்திரிக்கை வாசிக்க, தந்தைக்கு பொறுக்கவில்லை.

"என் தங்க புள்ளைய அவ்வளவு நேரம் தனியா விட்டுட்டு நீ எங்க போன. நீ வாடா குட்டி உங்க அம்மாக்கு வேற வேலையில்லை." என்று மனைவி செய்ததே தவறு என்பது போல கூறி விட்டு மகளுடன் சாமர்த்தியமாக வெளியேறினான்.

அங்கேயே நின்றிருந்தால் மனைவியிடம் தானும் அல்லவா திட்டு வாங்க வேண்டும். மகளுடன் செல்லும் கணவனை பார்வையால் பொசுக்கி விட்டு பூஜை அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு வந்த வெண்பா மகளுக்கு உணவு கொடுக்க வேண்டிய நேரம் என்பதால் வெளியே வர, அவள் கண்ட காட்சியில் சாந்த சொரூபி பட்டம் வாங்கும் அளவுக்கு பொறுமை காக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கே கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

தோட்டத்தில் இருந்த ஈரமான மண்ணை குழப்பி பொம்மை செய்கின்றேன் என்று அப்பா மகள் இருவரும் சகதியில் விழுந்து எழுந்தவர்கள் போல இருந்தனர்.

இதில் பொம்மை தலைக்கு பூ வைக்க வேண்டும் என்று ஆசையாக வளர்த்த செடியில் இருந்த மலர்களை எல்லாம் பறித்து மகள் கையில் கொடுத்துக் கொண்டிருந்தார் அவள் அன்பு தந்தை.

கோபத்தில் அடித்து விடலாமா என்று வேகமாக இருவரையும் நெருங்கிய வெண்பாவின் கால்கள் மகளின் சிரிப்பொலியில் அப்படியே நின்றுவிட்டது. புதிதாக முளைத்த அரிசி பற்கள் தெரிய சிரித்த மகளை பார்த்ததும் அவள் கோபம் சூரியனை கண்ட பனி போல மாயமாக மறைந்தது.

வெண்பா வருவதை பார்த்த திலகன் கையில் இருந்ததை கீழே போட்டுவிட்டு அசட்டு சிரிப்புடன் எழுந்து நிற்க, மகளும் நல்ல பிள்ளையாக தந்தையின் கால்களை பிடித்துக் கொண்டு நின்றாள்.

வெண்பா போலியாக இருவரையும் முறைக்க, மகளை கையில் தூக்கிக் கொண்ட திலகன் மின்னல் வேகத்தில் மனைவியின் கன்னத்தில் முத்திரை பதித்துவிட்டு வீட்டிற்குள் ஓடி மறைந்தான்.

திலகன் குடும்பம் இருந்த பகுதி ஓங்கி உயர்ந்த மரங்களை கொண்ட மலை பிரதேசம் என்பதால் சூரிய வெளிச்சம் என்பது சற்று குறைவாகவே இருந்தது. புதிதாக அறிமுகமான குடும்பத்திடம் இன்முகமாக பழகினாலும் யாரிடமும் மான்சியின் பார்வை குறைபாடு தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.

மாலை நேரங்களிலும் இரவின் இருட்டிலும் உற்சாகமாக விளையாடும் குழந்தையை பார்ப்பவர்கள் அனைவரும் "உங்க பொண்ணுக்கு ராத்திரி தான் விடியும் போல, என்ன உற்சாகம். அதுவும் மான்சிக்கு மத்த பிள்ளைங்களை விட கண்ணு இருட்டுல நல்லா தெரியுது." என்று புகழ்ச்சியாக கூற, பெற்றவர்களுக்கு பதறிக் கொண்டு வந்தது.

மான்சி குறையை காரணம் காட்டி திலகன் வீட்டார் விலகி நிற்க, கணவன் மனம் வருந்தாமல் இருக்கும் பொருட்டு வெண்பா தன் வீட்டாரை விலக்கிக் கொண்டாள். அதனால் தான் மான்சி பற்றி மற்றவர்களுக்கு தெரியவில்லை. தெரிவதில் இருவருக்கும் துளியும் விருப்பம் இல்லை.

திலகன் வெண்பா இருவரின் சம்பாத்தியத்தில் பெரும் பகுதி மருத்துவ தேவைக்கே செல்ல, எளிமையான வாழ்க்கையே அவர்களது என்ற நிலையில் இருந்தனர். தேவைக்கு கூட பல முறை யோசித்து எண்ணி எண்ணி செலவு செய்யும் அளவில் அவர்கள் குடும்பம் இருந்தது.

பணத்தை காரணமாக கொண்டு எவ்வளவு பிரச்சனை வந்த போதும், அது எதுவும் மகளை நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டனர். மான்சியின் புன்னகைக்காக எதையும் செய்ய இருவரும் தயாராக இருக்க கடவுளும் அவர்களை கண்டு புன்னகைத்தார்.

பிள்ளைக்காக பெற்றவர்களின் கஷ்டம் போதும் என்று கடவுள் நினைத்தாரே என்னவோ வெண்பா திருமணத்திற்கு முன் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பணி நியமன உத்தரவு வந்து சேர்ந்தது.

கூடுதல் சந்தோஷமான விஷயமாக அருகில் இருக்கும் பழங்குடியினர் பள்ளியிலேயே வேலை கிடைக்க அவர்கள் வாழ்க்கை நிலை சற்று உயர்ந்தது.

மான்சி வளர வளர அவள் பிரச்சனையை முழுவதும் மறைக்க முடியாது "வெளிச்சத்தை பார்த்தா கண்ணு கூசும்." என்று சொல்லி சமாளித்தனர்.

மருத்துவர்கள் பரிந்துரைத்த கருப்பு நிற கண்ணாடியுடன் வலம் வரும் மான்சியை முதலில் வித்தியாசமாக பார்த்தாலும் அவள் பிள்ளை மொழியும், குறும்பு சேட்டையும், விட்டு கொடுக்கும் மனதும், அறிவாளித் தனமான பேச்சும் அவளிடம் உறவாட நினைக்கும் மற்றவர்களை கவர கண்ணாடி கருத்தில் பதியாமல் போனது.

வருடங்கள் உருண்டோட மான்சியின் பிரச்சனையை ஒரளவு மட்டுமே மருத்துவர்களால் சரி செய்ய முடிந்தது.

"இங்க பாருங்க மிஸ்டர் அண்ட் மிஸஸ் திலகன் உங்க பொண்ணுக்கு எங்களால முடிஞ்ச வரை முயற்சி பண்ணிட்டோம் பட் அவங்களால ஓரளவுக்கு மேல பகல்ல வெளிச்சத்தை பார்க்க முடியாது. அண்ட் நைட் டைம்ல பார்வை திறன் அதிகமா இருக்கிறத சரி செய்ய முடியாது.

பெட்டர் நீங்க இது கடவுள் மான்சிக்கு கொடுத்த வரம்னு நினைக்க முயற்சி செய்யுங்க. நீங்க வரமா நினைச்சா உங்க பொண்ணும் அத வரமா நினைப்பா, நீங்க சாபமா நினைச்சா உங்க பொண்ணுக்கும் அது சாபம் தான்." என்று மருத்துவர் மகள் நிலையை விளக்க, இருவரும் தெளிந்தனர்.

மகளுக்கு பக்குவமாக எடுத்து கூறி அவளுக்கு இருப்பது குறை அல்ல கடவுள் கொடுத்த வரம் என்று நம்ப வைத்தனர். சமத்து குழந்தை மான்சியும் பெற்றவர்களின் வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொண்டாள்.

மகள் வளர வளர திலகனின் பொருளாதாரமும் வளர்ந்தது. வெண்பா தன் பெயரில் கடன் பெற்று திலகனுக்கு வண்டி ஒன்று வாங்கி கொடுக்க அவர்கள் நிலை உயர்ந்தது.

இரவும் பகலும் திலகன் தன் முழு உழைப்பை கொடுக்க, வண்டிகளின் எண்ணிக்கையுடன் அவர்கள் வாழ்க்கை தரமும் பெருகியது.

மான்சியின் பிரச்சனை வெளியே தெரியாத அளவிற்கு அவளின் மற்ற திறமைகளை முன்னிறுத்தினர். அதிலும் தேன் குரலில் பாடும் மகளை முறைப்படி சங்கீதம் படிக்க வைத்தனர்.

மான்சி பாட்டுக்காகவே மிகப்பெரிய நட்பு வட்டம் கிடைத்தது. மகளின் திறமையை உலகிற்கு வெளிக்காட்ட வெண்பா விரும்பினாள்.

"கண்ணு தெரியாத பிள்ளைய வைச்சு பிச்சை எடுக்கவா..." என்ற உறவினர்கள் வார்த்தை இன்று காதில் ஒலிக்க, அவர்கள் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் மகளை நிறுத்த பெற்றவள் மனம் ஆவல் கொண்டது.

எதிலும் என் மகள் சிறந்தவள் தான் என்று உலகிற்கே நிரூபித்து காட்டினார்கள் அந்த செல்லமகளின் பெற்றோர்.

எல்லாம் பெற்றோரின் விருப்பப்படி நடக்க, இதில் அவர்கள் விரும்பாமலே ஒருவனின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டனர்.

சாரி டியர்ஸ்
நேற்று போட வேண்டிய எப்பி கொஞ்சம் லேட் ஆகிட்டு. இனி சரியா பதிவு வந்து விடும். அடுத்த அத்தியாயம் திங்கள் கிழமை தான். நீங்க வெண்பா இடத்தில இருந்தா என்ன செய்திருப்பீங்கன்னு சொல்லிட்டு போங்க... நானும் பொது அறிவ வளர்த்துக்கிறேன். கருத்து முக்கியம் பிகிலு....


 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 4

மான்சி மெடிக்கல் ரிப்போர்ட் முழுவதையும் படித்து முடித்த விஜித் முகம் உணர்வுகள் எதையும் வெளிக்காட்டவில்லை. சலனமின்றி இருந்தவனின் முகத்தில் இருந்து எதையும் கண்டுக் கொள்ள முடியாது ரவி தான் குழம்பிப் போனான்.

"போலீஸ் எப்படி அங்க வந்தாங்க?" என்று விஜித் கேட்க,

"ஏ.சி.பி சரவணன் திலகன் சாரோட பெஸ்ட் ப்ரெண்ட். அவ்வளவு ப்ரொடக்ஷனையும் தாண்டி அவார்ட் ஃபங்ஷன்ல மான்சி காணாம போனதால நேரடியா உங்கள பத்தி தான் விசாரிச்சிருக்கார்." என்று ரவி கூற, விஜித் புருவங்கள் கேள்வியாக உயர்ந்தது.

"நீங்க என்ன தான் வெளிப்படையா சினி ஃபீல்ட்ல இன்வால்வ் ஆகலன்னாலும் உங்கள பத்தி அவருக்கு தெரிஞ்சிருக்கு. அண்ட் அவரு அன்அஃபீஷியலா அந்த பக்கம் மான்சிய தேட அனுப்பி வைச்ச போலீஸ் ஜீப் அது. அதுல வந்த எஸ்.ஐ அந்தளவு விவரம் இல்ல. அதனால தான் உங்கள உங்க கார் பத்தி எதுவும் விவரமா ஏ.சி.பி கிட்ட சொல்லல." என்று ரவி கூறியதும் விஜித் புலன்கள் சரவணனை நினைத்து இன்னும் கூர்மையானது.

விரைவில் அவர் தன்னை நெருங்கி விட கூடும் என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது. ஆனால் அதற்கு முன் மான்சியை அவன் நெருங்க நினைத்தான்.

"### படத்தில மெலோடி பாட்டுக்கு மான்சிய புக் பண்ணிடு." என்று விஜித் கூற,

"சார் அது கிட்டத்தட்ட ஐநூறு கோடி செலவுல எடுக்கிற ஹிஸ்டாரிக்கல் மூவி. அதுல வொர்க் பண்ற எல்லாருக்கும் எக்ஸ்பீரியன்ஸ் அதிகம் இருக்கணும்னு சொன்னதால பெஸ்ட் சிங்கர் ### புக் பண்ணிருக்கிறோம்." என்று ரவி கூற,

"சொன்னத மட்டும் செய் ரவி. மான்சி பாடினாலும் நல்லா தான் இருக்கும். அவளோட கடைசி பாட்டு என் படத்தில பாடினதா இருக்கட்டுமே." என்று வில்லத்தனமாக கூறி சிரிக்க, ரவியால் தலையாட்ட மட்டுமே முடிந்தது.

ரவி வெளியேறியதும் விஜித் கைகள் புத்தகத்தை எடுத்து அதில் "Once may smile, and smile and be a villain" என்ற சேக்ஸ்பியரின் வரிகளின் கீழ் அடிக் கோடிட்டது.

"முறைச்சு பார்த்து அடிக்கிறத விட சிரிச்சிக்கிட்டே அடிச்சா நிச்சயம் ரொம்ப வலிக்கும் ஏந்திழையாள். அன்னைக்கு அவார்ட் வாங்கும் போது என்ன சொன்ன 'என் கூடவே எல்லா நேரமும் இருக்கிற என் அம்மா, அப்பா அப்புறம் பாட்டு. இதை தவிர வேற எதுவும் எனக்கு பிடிக்காது. இந்த மூனும் இல்லாம என்னால மூச்சு கூட விட முடியாதுன்னு'
சோ முடிவு பண்ணிட்டேன் உனக்கு பிடிச்சத பறிச்சிட்டா உனக்கு மூச்சு கொடுத்தவங்களுக்கும் மூச்சு அதுவா நின்னுடும். கொஞ்சம் கொஞ்சமா நீங்க கஷ்டப்படுறத பாத்தா கூட எனக்கும் சந்தோஷமா தான் இருக்கும்." என்று கூறி சிரித்துக் கொண்டான்.
________________________________________

"அப்பா நீங்களாவது அம்மா கிட்ட சொல்லுங்க. என்னால அங்க பாட போக முடியாது." என்று மான்சி தந்தையிடம் செல்லம் கொஞ்ச, அவருக்கு மகள் பயம் புரிந்தாலும் அவள் கூறுவதை ஏற்க முடியவில்லை.

யாருக்காகவோ பயந்து தன் மகளின் திறமையை முடக்கி வைப்பதில் வெண்பா, திலகன் இருவருக்கும் விருப்பம் இல்லை.

"மான்சி நீ பாடுற அவ்வளவு தான். இதுக்கு மேல ஆர்கியூ பண்ணாத. அம்மா வேலைய ரிசைன் பண்ண போறேன். இனி நீ எங்க போனாலும் உன் கூடவே இருப்பேன். அண்ட் வெளியூர் போக வேண்டியது இருந்தா அப்பாவும் நம்ம கூட வருவாங்க. அப்புறம் சரவணன் அண்ணா உனக்கு செக்யூரிட்டி காட்ஸ் கூட அரேஞ் பண்ணிட்டாரு." என்று வெண்பா கூற, மான்சிக்கு மனதே சரியில்லை.

தாய்க்கு ஆசிரியர் பணி எவ்வளவு பிடிக்கும் என்பதை உடனிருந்து பார்த்தவள் ஆயிற்றே. தனக்காக தாயின் கனவு கலைவதை அவளால் ஏற்க முடியவில்லை. தான் நினைத்ததை மான்சி அப்படியே கூற, வெண்பா சிரித்துக் கொண்டார்.

"மான் குட்டி அம்மா இருபது வருசம் எனக்கு பிடிச்ச வேலைய மன நிறைவோட செய்திட்டேன். எனக்கு அது போதும். இனி நான் என் பொண்ணுக்கு முழு நேர டீச்சரா மாற போறேன்." என்று வெண்பா கூறும் போது அவர் முகத்தில் வலி தெரிகின்றதா என்று மகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகளின் எண்ணவோட்டத்தை புரிந்துக் கொண்டவர் "மான்சி நீ தான் என் ஒட்டு மொத்த சந்தோசம். சோ உனக்காக நான் எது வேணும்னாலும் செய்வேன்.'' என்றவர் வார்த்தையில் சிறிதும் பொய்யில்லை.

அடுத்து வந்த நாட்களில் மான்சி விஜித் நிறுவனம் முதல் முறை நேரடியாக தயாரிக்க போகும் படத்தில் பாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாள்.

சரித்திர படம் என்பதால் பாடல்களின் வார்த்தைகள் கண்ணியமாகவே இருக்க பாடுவதில் அவளுக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை. முதல் நாள் அவள் பாடும் போது தவறும் இடத்தில் கூட இசையமைப்பாளர் மிக பொறுமையுடனே சொல்லி கொடுத்தார்.

முந்தைய படங்களில் பாடியது போல் அல்லாமல் இப்படத்தில் முதல் பாடலை முழு மன நிறைவுடனே பாடி முடித்தாள். பாடி முடித்து கிளம்பும் நேரம் ஓடி வந்த ஒருவர்

"ஒரு நிமிசம் எல்லாரும் இருங்க. நம்ம படத்தோட புரோடியூசர் வரார்." என்று கூற, அனைவரும் அவர்கள் இடம் விட்டு நகரவில்லை.

தன் பாதுகாவலர்கள் நடுவே கம்பீரமாக நடந்து வந்த விஜித் ஏகலைவனை பார்த்ததும் மான்சியின் விழிகள் வியப்பில் விரிந்தது. இருளில் கண்டவனை இன்று வெளிச்சத்தில் பார்க்கும் போது வித்தியாசாமாக இருந்தாலும் அவனை விட்டு பார்வையை விலக்க முடியவில்லை.

மகள் மீது மட்டும் எப்போதும் கவனம் வைத்திருக்கு வெண்பா அசைவற்று நின்ற மகளை பற்றி உலுக்க அதில் சுய உணர்வு பெற்றவள், தாயிடம் பார்வையால் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

மகள் ஒரு ஆணை இவ்வளவு நேரம் பார்த்தது அவள் வயதுக்குரிய குணம் என்றாலும் வெண்பாவிற்கு சற்று சங்கடமாகவே இருந்தது.

"ஹாய்..." என்று அனைவரையும் பொதுவாக பார்த்து கூறியவன் நடுநாயகமாக போடப்பட்டிருந்த இருக்கையில் விஜித் அமர்ந்ததுக் கொள்ள, இசையமைப்பாளர் அவனிடம் பேச ஆரம்பித்தார்.

சிறிது நேரத்திற்கு பின் மான்சியை காட்டி அவர் ஏதோ கூற, விஜித்தின் தலை மறுப்பாக அசைந்தது. அவனை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் மறுப்பான தலையசைவு பயத்தை கொடுத்தது.

"மான்சி நீ பாடின பாட்ட திரும்ப ஒரு தடவை முழுசா பாடி காட்டு. அப்போ தான் நம்ம புரோடியூசர்க்கு உன் திறமை மேல நம்பிக்கை வரும்." என்று கூற, சரி என்று மான்சி ஏற்றுக் கொண்டு பாடுவதற்கு தயாரானாள்.

மான்சி பாட வந்து விட்டாலும் பாடல் வரிகளை நினைத்தே படபடப்பாக உணர்ந்தாள். ஏனெனில் காதல் கொண்ட பெண்ணவள் தன் மனதை கவர்ந்த தலைவனிடம் தன் காதலை மறை பொருளாக உணர்த்தும் படியாகவே பாடல் வரிகள் இருந்தது.

அவற்றையெல்லாம் விஜித் முகத்தை பார்த்துக் கொண்டு எப்படி பாடுவது என்று தயக்கம் கொள்ள, வெண்பா விஜித்திற்கு பின் வந்து நின்றார். தாயை கண்டதும் அவள் தயக்கங்கள் அனைத்தும் மறைந்து போனது.

பாடல் வரிகள் ஆரம்பிக்கும் வரை தாயின் மீது நிலைத்திருந்த கண்கள் தானாகவே தன்னை மட்டும் பார்த்திருந்தவன் மீது திரும்பியது.

மான்சியின் குரலில் காதல் ததும்பும் பாடலை கேட்டுக் கொண்டிருந்தவன் முத்தில் உணர்வுகள் எதுவும் வெளிப்படவில்லை என்றாலும் மனது செய்ய வேண்டியதை கணக்கிட்டுக் கொண்டு தான் இருந்தது.

மான்சி பாடி முடிக்கும் வரை அந்த இடமே அப்படி ஒரு அமைதியில் நிறைந்திருக்க, பாடல் முடிந்த அடுத்த நொடி அனைவரின் கரவொலி காதை நிறைத்தது.

விஜித் தன் இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டதும் அனைவரும் கை தட்டுவதை நிறுத்தி விட்டு அடுத்து அவன் என்ன சொல்வானோ என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ம்ம் ஓகே... பட் ஏந்திழையாள் பாடும் போது ஒரு இடத்தில சின்ன தடுமாற்றம் இருந்துச்சே." என்று யோசிப்பது போல விரல்களை நெற்றியில் தேய்த்துக் கொண்டு கூறினான்.

விஜித் கூறிய தடுமாற்றத்தை மான்சியும் உணர்ந்திருந்தாள். பாடிக் கொண்டுருக்கும் போது மான்சியின் விழிகள் விஜித் விழிகளுடன் கலந்த ஒரு நொடி அவளுக்கே பாடல் வரி மறந்து அவன் மட்டுமே நினைவில் நின்றான்.

மீண்டும் தாயை பார்த்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு சரியாக பாட ஆரம்பித்தாள். இவையனைத்தும் இரு நொடி தடுமாற்றம் என்றாலும் அது விஜித் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் கவனித்துக் கொண்டனர்.

"நானும் கவனிச்சேன் சார். பட் இதுவும் கூட நல்லா தான் இருக்கும். ஹீரோயின் பாடும் போது ஹீரோ கண்ணசைக்க, அதில் ஹீரோயின் வெட்கப்பட்டு தடுமாறி பின் பாடுற மாதிரி சீன் டைரக்டர் சொல்லிருந்தார். அதுக்கு இந்த டூ செக்கென்ட் கேப் பர்ஃபெக்ட்டா இருக்கும்." என்று இசையமைப்பாளர் விளக்கம் கொடுத்தார்.

"வெட்கத்தில் வர தடுமாற்றமா? அப்போ ஓகே தான்." என்று மான்சியை பார்த்து கூறி விட்டுச் செல்ல, அவளோ அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என தெரியாது நின்றாள்.

வீட்டிற்கு வந்த பின் கூட அவள் சிந்தனை முழுவதும் விஜித் ஏகலைவன் மட்டுமே. அவனிடம் தனக்கு தோன்றுவது என்ன மாதிரியான உணர்வு என்று கூட அவளால் பிரித்தறிய முடியவில்லை.

அனைத்திற்கும் தாயின் உதவியை நாடுபவளுக்கு, இதை அவரிடம் சொல்லவே தடுமாற்றமாக இருந்தது. தான் கூறுவதை தாய் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற பயம் அவள் மனதை நிறைத்திருந்தது.

"மான் குட்டி உனக்கு அம்மா கிட்ட எதாவது சொல்லணுமா?" என்று கேட்க அவளோ தடுமாறும் மனதை இழுத்து பிடிக்க வழி தெரியாது தாயை அணைத்துக் கொண்டாள்.

"நான் தப்பு பண்றேனாமா?" என்று காரணத்தை கூறாமலே கேட்க,

"என் மான் குட்டி தப்புன்னு தெரிஞ்சா அதை செய்ய மாட்டா." என்று மகள் கூறாமல் விட்டதை புரிந்துக் கொண்டு அதற்கு பதில் கூறினார்.

"மான் குட்டி அம்மா உன் கிட்ட ஒரு நல்ல தோழியா தான் நடந்துக்க நினைக்கிறேன். அதனால நீ நினைக்கிறத தயங்காம சொல்லலாம்." என்று பரிவுடன் மகளின் தலையை தடவி கொடுத்தார்.

அம்மாவின் அன்பில் முழுதாய் கரைந்தவள் அவர் தோளில் சாய்ந்துக் கொண்டு விஜித்தை சந்தித்ததை பற்றி கூறி, இன்றைய தடுமாற்றத்தையும் கூறினாள்.

"எனக்கு அவரை இன்னைக்கு பார்த்ததும் வந்த ஃப்லீங்கை எப்படி சொல்றதுன்னு தெரியல ம்மா. பட் எனக்கு அது பிடிச்சிருந்தது அதே நேரம் பயமாவும் இருந்துச்சு." என்று மனதை மறைக்காமல் கூறினாள்.

"நம்பிக்கை இருக்கிற இடத்தில பயம் வராது மான் குட்டி. நீ பயப்படுறன்னா அதுக்கான காரணத்தை முதல்ல யோசி. இத தவிர வேற எதையும் நான் சொல்ல விரும்பல. உனக்கான முடிவுகளை நீயே எடுக்குறது தான் சரி வரும்." என்று கூறிவிட்டுச் சென்றார்.

அன்னை கூறி விட்டுச் சென்ற செய்தி மான்சியின் மனதை சரியாக சென்று தாக்கியது. அவளின் பிடித்தம் அதற்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல வாய்பில்லாத போது அது தவறு என்று மூளை எடுத்து கூற அதை அவள் மனதும் ஏற்றுக் கொள்ள தயாராகியது.

காதல் என்னும் விதை மகளின் மனதில் விழும் முன்னே வெண்பா அதை தடுத்துவிட்டார். மகளின் பிடித்தம் அத்தோடு நின்றுவிடாது என்று அவருக்கு தெரியும். ஆனாலும் எட்டாத உயரத்தில் இருப்பவனை பற்றி கனவு காண்பது கூட தவறு தான் என்று மகளுக்கு உணர்த்தி விட நினைத்தார்.

நினைப்பது மட்டும் நடந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்பது இருக்காதே. இவர்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டவன் ஒருவன் இருக்கின்றானே.

தனது அறைக்கு வந்த மான்சி தன் உடமைகளுக்கு நடுவே இருந்த பொருளை மெல்ல எடுத்து சில நிமிடம் ரசித்து பார்த்தாள். விஜித் ஏகலைவன் MD Of விஜித் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் என்று எழுதியிருந்தது.

அன்று விஜித் மான்சிக்கு உதவிய போது அவனின் காரில் இருந்த விசிட்டிங் கார்டை எதற்காக என்று காரணம் அறியாமல் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டாள்.

அதில் இருந்த எண்ணிற்கு அழைத்து தனக்கு உதவியதற்கு ஒரு நன்றியாவது சொல்ல வேண்டும் என்று ஆயிரம் முறையாவது எடுத்து பார்த்து விட்டு வைத்திருப்பாள்.

இன்று தாய் கூறியதை கேட்ட பின் இனியும் இது தன்னிடம் இருக்க கூடாது என்று நினைத்தவள் கிழித்து குப்பை தொட்டியில் வீசியிருந்தாள்.

அட்டையை கிழிக்க முடிந்தவளால் அதிலிருந்த அவனது தொலைப்பேசி எண்ணை மனதிலிருந்து அழிக்க முடியவில்லை.
ஆசைக்கும் நிதர்சனத்திற்கும் இடையே போராடிக்கொண்டிருந்தவளின் சிந்தனையை அவளது அலைப்பேசியின் சப்தம் கலைத்தது.

திரையில் தெரிந்த எண்ணை பார்த்ததும் அவளது மனது பந்தய குதிரையை விட வேகமாக குதித்து ஓட தொடங்கியது. முழுவதும் அழைத்து ஓய்ந்த அலைப்பேசியை பார்த்தவளுக்கு அந்த எண்ணிற்கு மீண்டும் அழைக்கும் தைரியம் இல்லை.

நடுங்கும் கரங்களினால் அலைப்பேசி நழுவி விடாமல் இறுக பற்றியிருக்க, அது மீண்டும் அவளுக்காக இசைத்தது. இந்த முறை அழைத்தவனை காத்திருக்க செய்யாமல் உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

அழைப்பது விஜித் ஏகலைவன் என்று தெரிந்தே ஏற்றவளுக்கு அவனிடம் பேசும் தைரியம் இல்லை. அவளின் மௌனத்தில் சில வினாடி மட்டும் பொறுமை காத்தவன்
"பிஸியா?" என்று கேட்க, அவன் குரல் மனதின் அடி நாதத்தை மீட்டும் இசையாக தழுவிச் சென்றது.

"ஏந்திழையாள் பிஸியா?" என்று மீண்டும் அவனுக்கே உரிய அழுத்தமான குரலில் கேட்க,
"ம்ஹூம்" என்ற பதில் மட்டும் வந்தது.

"ஏகலைவனுக்கு ஏந்திழையாளை பார்க்கணும்." என்று கூற, காரணமின்றி அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது.

"அம்மாக்கு பிடிக்காது." என்று கூறும் முன் அவள் குரல் வளையை யாரோ நெருக்கி பிடிப்பது போல வலியை உணர்ந்தாள்.

"ஓகே." என்று கூறியவன் அழைப்பை துண்டித்துவிட்டான்.

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் அப்படி ஒரு அழுகை மான்சியிடம். நெஞ்சை பிடித்துக் கொண்டு கதறி அழுதவளின் சத்தத்தில் பெற்றவர்கள் பதறியடித்துக் கொண்டு அவள் அறைக்குள் வந்தனர்.

"மான் குட்டி என்ன ஆச்சு. எதுக்காக இப்படி அழுற? சொல்லு ம்மா" என்று வெண்பா பதற, காரணத்தை கூற முடியாது தாயை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

மகளின் கையில் இருந்த அலைப்பேசியும் அவள் கிழித்து எறிந்திருந்த அட்டையுமே அவருக்கான பதிலை தந்தது.

தொடரும்...


ஹாய் டியர்ஸ்
இன்னைக்கான எப்பி கொடுத்தாச்சு. அடுத்த எப்பி புதன் கிழமை வரும். மறக்காம கருத்து சொல்லிடுங்க. கருத்து முக்கியம் பிகிலு...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 5

அடுத்த நாள் விடியும் வரை வெண்பா திலகன் தம்பதியரிடம் பெரிதாக பேச்சு இல்லை. ஆசை மகள் இரண்டு முறை மட்டும் அதுவும் வெகு சில நிமிடங்கள் சந்தித்த ஒருவனுக்கு மனதில் இடமளித்திருக்க கூடும் என்று நம்ப முடியவில்லை.

அவளின் வேதனை எதனால் என்று தெரிந்தாலும் அவர்களால் ஒன்றுமில்லை என்று வார்த்தையால் கூட சமாதானம் சொல்ல முடியவில்லை.

"நான் வேணும்னா டாக்டர் தருண் கிட்ட பேசட்டுமா?" என்று திலகன் கேட்க

"பேசியாகணுமே... அவங்களை ரொம்ப நாள் காத்திருக்க வைக்கிறது நல்லதில்லை. வருண் நல்ல பையன், அவன பத்தி மான்சி கிட்ட அவார்ட் ஃபங்ஷனுக்கு முன்னவே பேசியிருக்கணும். நீங்க வருண் அப்பா அம்மாட்ட பேசுங்க." என்று வெண்பா பதிலளிக்க, அதை கேட்டுக் கொண்டிருந்த மான்சி அழுகையை அடக்கிக் கொண்டு தனது அறைக்கு ஓடிச் சென்றாள்.

தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தருண் குடும்பத்தை மான்சிக்கு நன்கு தெரியும். அதிலும் அவரது மகன் வருணை சில வருடங்களாக நல்ல பழக்கம் தான்.

ஆனாலும் வருண் விருப்பத்தில் சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்த இந்த திருமணம் பேச்சு அவளுக்கு தெரியாது. வெண்பாவும் மகளுக்கு பாடலில் இருந்து கவனம் சிதற கூடாது என்று அப்போதைக்கு தெரியப்படுத்தியிருக்கவில்லை.

அவார்ட் விழா முடிந்த அன்று இரவு உணவின் போது பேச வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் விதியோ மொத்தமாக அனைத்தையும் மாற்றி விட்டது.

எதனால் தனக்கு ஏகலைவனை பிடித்தது என்று மான்சியால் உறுதியாக கூற முடியவில்லை. பல மணி நேரம் காட்டிற்குள் தனித்து நின்றவளுக்கு அவனிடம் கிடைத்த உதவியும், அவன் கண்ணியமான நடத்தையுமே ஒருவித பாதுகாப்புணர்வை தந்தது. அதுவே அவன் பக்கம் இவள் மனம் சாய வைத்தது.

இப்போது நினைத்து பார்க்கையில் இது ஒரு காரணமா என்று தோன்றினாலும், மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவனை வெளியேற்றும் வழி தெரியவில்லை.

ஏகலைவன் தன் வாழ்வில் இல்லையென்றாலும் தன்னால் வருணை திருமணம் செய்ய முடியாது என்று பெற்றோரிடம் கூறி விட வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.

இன்னும் சற்று நேரம் அதே இடத்தில் இருந்திருந்தாலே வருண் சம்பந்தம் வேண்டாம் என்று வெண்பா கூறியிருந்தது அவளுக்கு கேட்டிருக்கும்.

விஜித் ஏகலைவனை மகள் விரும்புவது புரிந்தாலும் அது நடக்காத விஷயம் என்று உறுதியாக நம்பியவர்கள் மகள் மனம் மாற அவகாசத்தை தர நினைத்தனர்.

பெற்றோர் பேசியதை தவறாக புரிந்துக் கொண்டு அவள் மனது தவித்துக் கொண்டிருக்கும் நேரம் அலைப்பேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசை கேட்டது. எடுத்து பார்க்க செய்தி வந்தது வருண் எண்ணிலிருந்து.

"ஹாய் மான்சி ஐ அம் சோ ஹேப்பி... நாங்க இன்னைக்கு உங்க வீட்டுக்கு வரோம். வெய்ட் ஃபார் மை ப்ரெஷன்ஸ் மை ஏஞ்சல்." என்று அனுப்பியிருந்தான்.

பெற்றோர் பேசியதையும் வருண் குறுஞ்செய்தியையும் சேர்த்து குழப்பிக் கொண்டவள், பின் விளைவு எதையும் யோசிக்காமல் விஜித் எண்ணிற்கு அழைத்து விட்டாள்.

ஏந்திழையாள் மனதில் இந்த ஏகலைவன் இருப்பது அவளின் வார்த்தையின்றி புரிந்துக் கொண்டவன் இனி அவளாக தன்னிடம் வர வேண்டும் என்று உறுதி கொண்டான். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவன் எண்ணத்தின் நாயகியே அழைத்துவிட்டாள்.

இகழ்ச்சியில் வளைந்த இதழ்கள் அவனது மனதை அப்பட்டமாக காட்டியது. அழைப்பு முடியும் வேளையில் அதை ஏற்றவன் மௌனம் சாதித்தான்.

விஜித் அழைப்பை ஏற்றதும் அவளிடம் அழுகையுடன் கூடிய கேவல் மட்டுமே வந்தது.
நேற்று தான் அழைத்து சந்திக்க கேட்ட போது தாய்க்கு பிடிக்காது என்ற மான்சியின் மீது கோபத்தின் உச்சியில் இருந்தவனுக்கு அவளது அழுகையுடன் கூடிய கேவல் நிம்மதியை கொடுத்தது.

துணிந்து அழைத்தவளின் துணிச்சல் அவன் மௌனத்தில் கரைந்து போனது. நிமிடங்கள் கடந்த பின்னும் பேசாமல் இருப்பவனிடம் என்ன பேசுவது என்று விழித்தவளுக்கு அவளது குரலும் மேலே எழும்பாமல் சதி செய்தது.

"டாக்டர் அங்கிள் பேமிலி வராங்க. நான் என்ன செய்ய." என்று கூறும் முன் மனதிற்குள் நொறுங்கி விட்டாள்.

ஏகலைவனிடம் பேசும் போது தான் அவனுக்கு தன்னை பிடிக்குமா என்று கூட தெரியாது பேசும் தன் மடத்தனத்தை உணர்ந்துக் கொண்டாள்.

"சாரி... நான் தெரியாம... எனக்கு..." என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் திணறியவள் அழைப்பை துண்டித்தாள்.

மான்சி அழைப்பை துண்டித்ததும் செல்போன் திரையை பார்த்துக் கொண்டிருந்தவன் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தது. உடனே ரவிக்கு அழைத்து

"டாக்டர் அங்கிள் பேமிலி யாரு?" என்று மொட்டையாக கேட்க, அது யாரு என்று குழம்பியவன் பின் மான்சியை பற்றியதாக இருக்க கூடும் என்று எண்ணிக் கொண்டான்.

"அது மான்சி மேம்க்கு ட்ரீட்மெண்ட் பாக்குற டாக்டர் தருண் பேமிலின்னு நினைக்கிறேன்." என்று பதிலளிக்க,

"டாக்டர் தருணுக்கு பையன் இருக்கா?" என்றவனுக்கு இருக்க கூடாது என்ற எண்ணம் பிறந்தது.

"எஸ் சார். அவருக்கு வருண் அண்ட் அருண்னு ரெண்டு பசங்க. ரெண்டு பேரும் டாக்டர்ஸ்." என்று கூற, பதிலின்றி அழைப்பை துண்டித்துவிட்டான்.

குளித்து தயாராகியவன் உடன் வர தயாராக நின்ற காவலர்களையும் மறுத்துவிட்டு தனியே மான்சியின் இல்லம் நோக்கி புறப்பட்டான்.

"மான்சி சாப்பிட வா." என்று அன்னை அழைத்த பின்னே தான் செய்த செயலின் வீரியம் புரிந்தது.

தடதடக்கும் மனதுடன் வெளியே வந்தவளுக்கு பெற்றவர்களை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. தட்டில் இருந்த உணவில் கை வைத்திருந்தவளுக்கு அதை உண்ண வேண்டும் என்று கூட தோன்றவில்லை.

"மான்சி சாப்பிடு. அப்பா அம்மா உனக்கு கஷ்டம் தர எதையும் செய்ய மாட்டோம். எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம், இப்போ சாப்பிடு." என்று கூற, வருண் பற்றி பேச போவதாக நினைத்தவளுக்கு உணவு தொண்டைக்குள் செல்லாமல் சதி செய்தது.

ஒரு வழியாக பெயருக்கு சாப்பிட்டு முடித்தவர்கள் ஹாலில் அமர்ந்திருக்க, யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று அமைதியாக இருந்தனர்.

மூவரும் ஒருவர் மற்றவர் முகம் பார்த்திருக்க, யாரும் எதிர்பாரா வகையில் விஜித் ஏகலைவன் வந்து நின்றான். அவன் இப்படி வந்து நிற்பான் என்று தெரியாத இருவரும் அதிர்ந்தனர். அதில் மான்சி மட்டும் நிம்மதியடைந்தாள்.

"சார் நான் தடுத்தும் இவர் கேட்காம உள்ள வந்துட்டார்." என்று வாயிற்காவலன் கூற,

"சார் தெரிஞ்சவரு தான் ராமு. நீங்க போங்க." என்று திலகன் அனுப்பி வைத்தார்.

"வாங்க மிஸ்டர் விஜித் ஏகலைவன். உக்காருங்க..." என்று வந்தவனை சம்பிரதாயமாக வரவேற்ற திலகன் மனைவியை பார்த்து கண் காட்ட, அவரும் தேநீர் தயாரிக்க சமையலறை நோக்கி நகர அடியெடுத்து வைக்கும் முன் விஜித் குரல் தடுத்து நிறுத்தியது.

"ஒரு நிமிசம் மிஸஸ் வெண்பா, நான் கொஞ்சம் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசணும். அப்புறம் காபி, டீ..." என்று அவன் வாய் கூறினாலும் பார்வை முழுவதும் மான்சி மீது மட்டும் தான்.

"மான்சி உள்ள போ." என்று திலகன் மகளை உள்ளே அனுப்ப நினைக்க,

"நான் பேச போறதே ஏந்திழையாள் பத்தி தான் அதனால அவளும் இருக்கட்டும்." என்று கூற, என்ன வர போகின்றதோ என்ற பீதி மூவரிடமும்.

"வெல்... சுத்தி வளைக்காம நேரடியா விஷயத்துக்கு வரேன். ஐ வாண்ட் டூ மேரி ஏந்திழையாள்." என்று நேரடியாக கேட்டு விட, ஆயிரம் மத்தாப்புக்கள் பெண்ணவள் மனதில்.

"ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்ற திலகனுக்கு விஜித்தின் திடீர் வருகை சந்தேகத்தை கொடுத்தது.

பணத்தில் சமுதாய அந்தஸ்த்தில் எட்டாத உயரத்தில் இருப்பவன் தங்கள் வீட்டில் பெண் கேட்பது ஒன்று சாதாரண விஷயம் அல்லவே.

"ஏன்னு கேட்டா?" என்றவன் திலகனின் கேள்வி புரியாதது போல பாவைனை செய்ய,

"நான் என்ன கேட்கிறேன்னு உங்களுக்கு நல்லா தெரியும். திடீர்ன்னு வந்து என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க கேட்கிறது ஏன்னு நான் கேட்டேன்." என்றவருக்கு விஜித்தின் தோரணை சற்று எரிச்சலாகவே இருந்தது.

"பிடிச்சுருக்கு பொண்ணு கேட்கிறேன். இத தவிர சொல்ல எதுவும் இல்ல." என்று அசட்டையாக தோளை குலுக்கியபடி சொல்ல, திலகனுக்கு பொறுமை பறக்கும் தருணத்தில் இருந்தது.

கணவனின் கரத்தை பற்றிய வெண்பா மகளை காணும் படி பார்வையால் கெஞ்ச, அவரும் தன் கவனத்தை மகள் பக்கம் திருப்பினார். பெற்றோர் விஜித்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்ற ஏக்கம் அவள் முகத்தில் ஏகத்துக்கும் நிரம்பி வழிந்தது.

அடுத்து கேட்க தோன்றிய கேள்விகள் அனைத்தும் மகள் முகத்தில் தெரிந்த ஏக்கத்தில் தொண்டைக்குள்ளே அடக்கிக் கொண்டார்.

"சரி உங்க வீட்டுல பெரியவங்க யாராவது இருந்தா அவங்கள பார்த்து பேசணும்." என்று மறைமுகமாக திருமண பேச்சை ஆரம்பித்து வைத்தார்.

"எனக்கு அப்பா இல்ல. அம்மா மட்டும் தான். அவங்களும் ஸ்டோக் வந்ததுல நடமாட்டம் இல்லாம இருக்கிறாங்க. நீங்க எது பேசுறதுன்னாலும் என் கிட்ட தான் பேசணும். என்ன பேசணும்ன்னு யோசிக்க டைம் தேவைப்பட்டா டேக் யுவர் டைம். இது என் கார்ட்." என்று தன் கார்ட் ஒன்றை டீபாய் மீது வைத்தவன் எழுந்துக் கொண்டான்.

விஜித் எழுந்ததும் அவன் புறப்படப்போவதை உணர்ந்து மூவரும் எழுந்துக் கொள்ள "பார்க்கலாம்..." என்று பொதுவாக கூறியவன், மான்சியிடம் சிறு தலையசைப்பை கொடுத்துவிட்டு வெளியேறினான்.

"மான் குட்டி அப்பா கொஞ்சம் யோசிக்கணும். நம்ம தகுதிக்கு மீறின இடம்... பின்னாடி வருத்தப்பட கூடாது பாரு." என்று கூறி, அலைப்பேசியை எடுத்துக் கொண்டு தனதறைக்குச் சென்றார்.

"உனக்கு விரும்பம் இல்லாத எதையும் நாங்க செய்ய மாட்டோம். அதே மாதிரி எங்களுக்கு சரியில்லைன்னு தெரிய வந்தா அதையும் நீ ஏத்துக்கணும்." என்று கணவரை பின் தொடர்ந்தார்.

பெற்றவர்கள் இருவரும் பேசி விட்டுச் சென்றதில் உள்ள நியாயம் புரிய, விஜித் விட்டு சென்ற கார்டை தவிப்புடன் பார்த்து விட்டு தனதறைக்கு வந்தாள்.

அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று எல்லா தெய்வங்களிடமும் வேண்டுதல் வைக்க ஆரம்பித்தாள்.

"என்ன செய்யலாம்?" என்று வெண்பா கேட்க,
"சரவணன் கிட்ட பேசியிருக்கேன். அவன் சொல்லட்டும் அதுவரை எந்த முடிவுக்கும் வர வேண்டாம்." என்று திலகன் கூற, வெண்பாவிற்கு மகள் முகமே கண் முன் வந்தது.

அன்று மாலை சரவணன் நேரில் வருவதாக தகவல் தெரிவிக்க, அவருக்காக அனைவரும் காத்திருந்தனர். சொன்ன நேரத்தில் அவரும் வந்து விட அனைவரும் அவர் சொல்ல போவதை கேட்க காத்திருந்தனர்.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல திலகன். கேரக்டர் வெய்ஸ் பார்த்தா விஜித் ரெம்ப நல்லவர் தான். இவ்வளவு சொத்து இருந்தும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. பட் அவர் வயசு... அப்புறம் பிஸினஸ்ல அவர் ஆட்டிடியூடுட் அதான் யோசிக்க வேண்டியது. தென் மான்சி விஷயத்துல அவர் மேலயும் எனக்கு சின்ன டௌட் இருக்கு." என்று சரவணன் கூற, மூவரிடம் மௌனம் மட்டுமே.

"பெட்டர் இத பத்தி நாம அவர் கிட்ட நேர்ல பேசிடலாம்." என்று கூற திலகனும் ஏற்றுக் கொண்டார்.

தொடரும்...

ஹாய் டியர்
புதன் கிழமை யூடி கரெக்டா கொடுத்திட்டேன். இனி அடுத்த யூடி வெள்ளி கிழமை தான். படிச்சிட்டு கருத்து சொல்ல மறக்காதீங்க....


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 6

விஜித் ஏகலைவன் வீட்டிற்கு வந்த திலகனும் சரவணனும் அதன் பிரம்மாண்டத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தங்கள் மொத்த வீடும் இங்கிருக்கும் ஒரு அறையின் அளவு தான் இருக்கும் என்று அவர்கள் மனது கூறிக் கொண்டது. இருவரையும் சில நிமிடம் காத்திருக்க வைத்த பின்னே விஜித் அவ்விடம் வந்து சேர்ந்தான்.

"வாங்க... என்ன முடிவு பண்ணிருக்கிறீங்க?" என்று நேரடியாக கேட்க,

"எங்க முடிவு சொல்றதுக்கு முன்ன மான்சி கடத்தல் பத்தி சில கேள்வி கேட்க வேண்டியது இருக்கு." என்று சரவணன் கூறினார்.

"ஓ ஏ.சி.பி சரவணன் சார் விசாரணையா. என்ன விசாரணை பண்ண பர்மிஷன் இருக்கா?" என்று புருவம் உயர்த்தி கேட்டவன் தோரணையே சொன்னது உன்னால் அப்படி செய்ய முடியாது என்று.

"நான் இங்க போலீஸா வரல. மான்சி வெல்விஷரா வந்திருக்கிறேன். தேவைப்பட்டா போலீஸா கூட வர தயங்க மாட்டேன்." என்று அவரும் நான் உனக்கு எந்த விதத்திலும் பயப்படவில்லை எனும் விதத்திலே பதிலளித்தார்.

சில வினாடி அவரை ஆழ்ந்து பார்த்த விஜித் "வெல் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. பட் ஏந்திழையாள்காக மட்டும் இந்த ஒரு முறை பதில் சொல்றேன்.

நீங்க எவ்வளவு தேடினாலும் மான்சிய கடத்தினது யாருன்னு உங்களால கண்டு பிடிக்க முடியாது. ஏன்னா அவங்க என் கஸ்டடில இருக்கிறாங்க. என் இடத்தில வந்து ஒருத்தன் இவ்வளவு துணிச்சலா கடத்த நினைச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்." என்று பின் கழுத்தை வருடிக் கொண்டு கூற, அது சிங்கத்தின் கர்ஜனை போல இருந்தது.

"யாரு கடத்தினா? அவங்களை என்ன பண்ணீங்க?" என்று சரவணன் கேட்க,

"அது உங்களுக்கு தேவையில்லாதது." என்று திலகன் முகத்தை பார்த்துக் கொண்டு சரவணனிடம் முகத்தில் அடித்தார் போலவே கூறினான்.

"நான் கேட்கலாமா? யார் என் பொண்ண கடத்தினாங்க?" என்று கேட்க, அதில் தன் பெண்ணை பாதுகாக்க முடியாத வருத்தம் நிரம்ப இருந்தது.

"நேத்ரன்." என்று ஒற்றை வார்த்தையில் பதில் வர, அனைத்தும் திலகனுக்கு விளங்கியது.

இதற்கு முன் நேத்ரன் தயாரித்த படத்தில் தான் மான்சி பாடல் பாட இருந்தாள். அவர் பார்வை சரியில்லை என்று வெண்பா கூற பாடல் வாய்ப்பு வேண்டாம் என்று நிராகரித்து விட்டனர்.

முதலில் தன் படத்தில் பாட வருமாறும் அழைத்தவர் பின் தனக்கு மான்சியை திருமணம் செய்து வைக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

மது, மாது என்று அனைத்து கெட்ட பழக்கங்கள் நிறைந்தவருக்கு தன் பெண்ணா என்று அவரை நிராகரித்தனர். நேத்ரன் தொந்தரவு தாங்க முடியாமலே வருணுடன் திருமண பேச்சை திலகனும் ஆதரித்தார்.

"உங்க இடத்தில நடந்ததுக்காக அந்த நேத்ரனுக்கு தண்டனையா? இல்ல மான்சிக்காகவா?" என்று திலகன் கேட்க,

"என் இடத்தில நடந்ததுக்காகன்னா போலீஸ் கிட்ட எவிடன்ஸ் கொடுத்திருப்பேன்..." என்று கூறி நிறுத்த, அதில் தான் செய்வது மான்சிக்காக மட்டுமே என்னும் செய்தி இருந்தது.

"வீட்டுல போய் பேசிட்டு கல்யாணம் எப்போ வச்சுக்கலாம்ன்னு கேட்டு சொல்றேன்." என்று கூறி விட்டு திலகன் எழுந்துக் கொள்ள, உடன் சரவணனும் எழுந்துக் கொண்டார்.

மரியாதைக்காக கூட அவர்களை வழியனுப்ப விஜித் தனது இருக்கையில் இருந்து எழுந்துக் கொள்ளவில்லை. அவன் கால் மேல் காலிட்டு அமர்ந்திருப்பதை பார்த்துக் கொண்டே சரவணன் வெளியேறினார். தன் மனதில் தோன்றியதை திலகனிடம் கூற,

"இது எனக்கு புரியாம இல்ல சரவணன். விஜித்க்கு என்னையும் வெண்பாவையும் பிடிக்கலன்னு எங்க வீட்டுக்கு வந்தப்பவே புரிஞ்சிக்கிட்டேன். அதனால தான் எங்க வீட்டுக்கு வந்தப்போ எதுவும் சாப்பிடல, இப்போ நமக்கு சாப்பிட எதுவும் தரல.

எனக்கு என் பொண்ணு முக்கியம். அவளுக்காக நான் எல்லா செய்து கொடுத்திருக்கிறேன். இப்போ அவளோட ஆசை விஜித் இதையும் நிறைவேத்துவேன். அவமானப்பட்டாலும் பரவாயில்லை.'' என்று கூற, சரவணன் மேற்கொண்டு எதையும் பேசவில்லை.

வழியிலே சரவணன் இறங்கிக் கொள்ள, திலகன் வீடு வரும் நேரம் வெண்பா ஹாலில் அமர்ந்திருந்தார். மனைவியை பார்த்து புன்னகைத்து கொண்டு மகள் எங்கே என்று கேட்க, அவள் அறை நோக்கி கை காட்டினார்.

தந்தையின் பதில் என்னவென்று தெரிந்துக் கொள்ளும் எதிர் பார்ப்பில் அறை வாசலிலே நின்றுக் கொண்டிருந்தாள்.

"வெண்பா இனி நம்மளுக்கு ரெஸ்ட் எடுக்க நேரம் கிடைக்காது. நம்ம பொண்ணு கல்யாண வேலை நிறைய இருக்கு." என்று புன்னகையுடன் கூற, அது மற்ற இருவரையும தொற்றிக் கொண்டது.

ஓடி வந்து தந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டவளுக்கு மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. மகளின் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்த திலகன், மகள் முகத்தை நிமிர்த்தி

"அப்பா மேல மான் குட்டிக்கு நம்பிக்கை இல்லையா? நீ கேட்கிறதுக்கு முன்ன செய்து கொடுக்க மாட்டேனா இந்த அப்பா?" என்று கேட்க,

"நம்பிக்கை நிறைய இருக்கு. நீங்க என் அப்பா." என்று அழுகையுடன் அவர் சட்டையிலே முகத்தை துடைத்துக் கொண்டாள்.

"போடி அந்த பக்கம். என் புருஷன் சட்டைய அழுக்காக்கிட்டு." என்று மகளை கணவனிடமிருந்து பிரித்தெடுத்த வெண்பா,

"உன் மனசு மாதிரி நீயும் சந்தோஷமா இருக்கணும்." என்று மகளை அணைத்துக் கொண்டார்.

தன் கட்டிலில் வந்து விழுந்தவளுக்கு வாழ்க்கை வண்ணமயமாக மாறி விட்ட உணர்வு. அதிகம் பார்த்து பழக்கமில்லாதவன் மீது தனக்கு காதல் வந்ததை உணரும் முன் அது கை கூடிய சந்தோஷம் அவள் மனதை நிறைத்தது.

"நாளைக்கு ஈவ்னிங் ஐந்து மணிக்கு தயாரா இரு. நான் உன்ன பிக்கப் பண்ண வரேன்." என்று குறுஞ்செய்தி ஏகலைவன் எண்ணில் இருந்து வர, அவளுக்கு என்ன பதில் அனுப்புவது என்று தெரியவில்லை.

முன்பு தாய்க்கு பிடிக்காது என்று கூறவும் முடியாது வருகின்றேன் என்று சொல்லவும் முடியாது தவித்தாள். தனது செய்தியை அவள் பார்த்து விட்ட பின்னும் பதில் வராத கோபத்திலே விஜித் அவளுக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்றதும்

"உன் மனசுல என்ன இருக்குது ஏந்திழையாள். நான் வேலை வெட்டி இல்லாதவன் இல்ல. எனக்கு உன் கிட்ட முக்கியமானது பேசணும். என்னோட மெசேஜ்க்கு ரிப்ளை அனுப்ப இவ்வளவு யோசிக்கிற நீ எப்படி என்ன..." என்று மேலும் வார்த்தைகளை கொட்டும் முன் நிறுத்திக் கொண்டான்.

"நாளைக்கு நீ வர. வர முடியாதுன்னா எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிக்கலாம். அண்ட் ஒன் மோர் திங் இது தான் நான் உனக்கு கால் அண்ட் மெசேஜ் பண்ற லாஸ்ட் டைம்." என்று மான்சி பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.

அலைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தன் மீதே கோபம் வந்தது. அவன் கூறுவதும் சரி தானே.
முதல் முறை அழைத்த போது சந்திக்க மறுத்ததை கூட நியாயப்படுத்திக் கொள்ளலாம். தான் அழைத்ததும் தன்னை காட்டிக் கொடுக்காமல் தன் வீட்டில் பேசிச் சென்றவனது குறுஞ்செய்திக்கு பதில் கூட அனுப்பாமல் இருப்பது அவனை அவமானப்படுத்தும் செயல் தானே என நினைத்தவள் அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

மீண்டும் மீண்டும் விஜித் எண்ணிற்கு மான்சி முயற்சிக்க அவனோ வேண்டுமென்றே அவளது அழைப்பை ஏற்காமல் அவளை தவிக்க விட்டான். ஒவ்வொரு முறை அவளது அழைப்பை துண்டிக்கும் போதும் அவனுள் இருக்கும் அரக்க குணம் சிரித்துக் கொண்டது.
இரவில் சரியாக உறக்கமின்றி தவித்தவள் முகம் சோர்ந்து இருந்தது. பகலில் காரணம் கேட்ட தாயிடம் வாய்க்கு வந்த பொய் காரணங்களை கூறி சமாளிக்க முயன்றாள். மாலை நெருங்கும் போதே அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.

"மான்சி என்ன பிரச்சனை?" என்று கேட்க தாயிடம் மறைக்க முடியாது நடந்ததை அப்படியே கூறி விட்டாள். சில நொடி யோசித்த வெண்பா

"பேபி பிங்க் கலர் சுடிதார் போடு அது உனக்கு ரொம்ப அழகா இருக்கும். ரொம்ப லேட் ஆக்காம சீக்கிரம் வந்துடுங்க. அண்ட் எங்க போறீங்கன்னு அம்மாக்கு மெசேஜ் பண்ணிடு." என்று சம்மதத்தை கூற,

"அம்மா உண்மையாவா?" என்ற வியப்பு மான்சியிடம்.

"உண்மை தான் அதுக்கென்ன. கல்யாணத்துக்கு முன்ன நானும் உன் அப்பாவும் யாருக்கும் தெரியாம சந்திச்சிருக்கோம். இந்த காலத்தில மீட்டிங் தப்பு கிடையாது. உன்ன எல்லாருக்கும் தெரியும் சோ கொஞ்சம் கவனமா இரு. மாஸ்க் மறக்காம எடுத்துட்டு போ. அப்புறம் இது உன் ஏடிஎம் கார்ட் எவ்வளவு செலவு பண்ணனும்னாலும் ஓகே." என்று வெண்பா கூற,

"தேங்க் யூ ம்மா." என்று அன்னையை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவள், தன்னவனுடன் புறப்பட ஆயத்தமானாள்.

துள்ளிக் குதித்து ஓடும் மகளை பார்த்த வெண்பா கணவனிடம் வருத்தத்துடன் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ள மறக்கவில்லை.

மான்சி தயாராகி வெளியே வருவதற்கும் விஜித் கார் வீட்டின் வாசலில் வந்து நிற்பதற்கும் நேரம் சரியாக இருந்தது. மான்சி நிச்சயம் வருவாள் என்று எதிர்பார்த்தவன் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.

இளம் சிகப்பு வண்ண உடையில் அவளின் அழகு மேலும் அதிரிகரித்து காட்ட, அது எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை. அவன் கவனம் முழுவதும் மகளை வழியனுப்ப நிற்கும் தாயின் மீதே இருந்தது.

மான்சி அருகில் வந்ததும் கார் கதவை திறக்க, அன்னையிடம் விடைபெற கூட அவகாசம் அளிக்காது விஜித் கரங்களில் கார் வேகமெடுத்தது.

தன் மீது இன்னும் அவன் கோபமாக இருக்கின்றானோ என நினைத்த மான்சிக்கு சாதாரணமாக பேச கூட வாய் திறக்க முடியவில்லை.

அரை மணி நேர பயணத்திற்கு பின் கடற்கரைக்கு வந்து சேர்ந்த பின்னும் இருவரின் மௌனம் தொடர்ந்தது. விஜித் காரை விட்டு இறங்க, அவனை பின் பற்றி மான்சியும் இறங்கினாள்.

மான்சிக்காக விஜித் மெதுவாக நடந்த போதிலும், கடற்கரை மணலில் குதிங்கால் உயர செருப்புடன் நடக்க முடியாமல் தடுமாறினாள்.

"ம்ச்" என்று அதிருப்தியை வெளிப்படுத்திய விஜித்

"செப்பலை கார்ல வைச்சிட்டு வா..." என்று கூற, ஆசிரியருக்கு பயந்த மாணவியாக அவன் கூறியதை செய்து விட்டு வந்தாள்.

மீண்டும் இருவரும் கடற்கரையை நோக்கி நடக்க, இருவரின் கரங்களும் எதிர்பாராமல் உரசிக் கொண்டது. அச்சிறு உரசலில் மின்சாரம் உடலில் பாய்வதை போல் உணர்ந்த மான்சி விலகி நடக்க நினைக்க அவள் வலக்கரமோ விஜித்தின் இடக்கரத்தில் சிக்கியிருந்தது.

இதை எதிர்பார்க்காத மான்சி விஜித் முகத்தை பார்க்க அவனோ எதையும் கண்டுக் கொள்ளாத பாவனையுடன் கடலை நோக்கி நடந்துக் கொண்டிருந்தான். கடல் அலையில் காலை நனைக்கும் அளவு வந்த பின்னே நடையை நிறுத்தினான்.

சூரியன் அஸ்தமிக்க போவதை உணர்த்தும் வண்ணம் வானமே வர்ணஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது. சென்னையில் குடியேறி சில வருடங்கள் ஆன பின்னும் பெரிதாக கடற்கரைக்கு வந்ததில்லை.

முதல் முறை அதுவும் மனதிற்கு பிடித்தவனுடன் கண்ணை குளிர்விக்கும் வகையில் இயற்கையை ரசிப்பதில் அவள் மனம் நிறைந்திருந்தது.

"உனக்கு மிஸஸ் ஏகலைவன் ஆக சம்மதம் தானே?" என்று அவன் கேட்கவும் திரும்பி பார்க்க, பதிலுக்காக அவள் முகம் பார்த்து நின்றிருந்தான்.

"ம்ம்." என்று புன்னகையுடன் தலையசைத்தாள்.

"எனக்கு இந்த ம்ம் போதாது. வாய திறந்து பதில் சொல்லு. இனி வர நாள்ல நீ மிஸஸ் ஏகலைவனா மட்டும் இருக்கணும். உனக்கு சம்மதமா?" என்று கேட்க, அதில் ஆயிரம் அர்த்தம் ஔிந்திருந்தது.

"மிஸ்.ஏந்திழையாளுக்கு மிஸஸ்.ஏகலைவனாக முழு சம்மதம்." என்று வெட்கத்துடன் மான்சி கூறிய நொடி அவளது தாடையை பற்றி தன் முகம் நோக்கி உயர்த்தியவன்

"குட்... இனி யார் நினைச்சாலும் ஏன் நீயே நினைச்சாலும் என்ன விட்டு போக முடியாது." என்று கூறியவன் குரலில் சிறிதும் காதல் இல்லை.

"ஏன் இப்படி பேசுறீங்க. ஏதாவது பிரச்சனையா?" என்று மான்சி கலவரமாக கேட்க,

"நத்திங்... நீ என் பக்கம் இருக்கிற வரை பிரச்சனை இல்ல." என்று விஜித் கூற,

"நான் எப்பவும் உங்க பக்கம் தான். மதர் ப்ராமிஸ்." என்று அவன் உள்ளங்கையில் தன் கையை வைத்தாள்.

"மதர் பிராமிஸ்..." என்று புருவம் உயர்த்தி கேட்டவன் சத்தமாக சிரித்துக் கொண்டான். காரணம் தெரியாத போதும் அவன் சிரிப்பில் அவளின் இதழ்களும் புன்னகைத்தது.

அவன் சிரிப்பின் காரணம் தெரியும் போது அவளின் புன்னகை மொத்தமாக அழிந்து விடும் என்று பாவைக்கு அப்போது புரிய வாய்ப்பில்லை.

"சரி எங்க போகலாம்...?" என்று விஜித் கேட்க,

"இங்கயே நல்லா தான் இருக்கு." என்றவளுக்கு சூரியன் மீதிருந்து கண்களை எடுக்க முடியவில்லை.

தன் வாழ்க்கையில் பெரும் பகுதி சூரியனை கண்டு பயந்து இருளின் துணையை நாடியவளுக்கு, இப்போது சில காலமாக தான் குறைந்த பட்ச வெளிச்சத்தை பார்க்க முடிகின்றது.

இழந்தவர்களுக்கு தானே ஒரு பொருளின் அருமை தெரியும். மான்சியை புருவம் சுருங்க பார்த்தவனுக்கு அவளை பற்றி முழுதாக தெரிந்த போதும் அதை அப்போது காட்டிக் கொள்ள அவன் நினைக்கவில்லை.

"உனக்கு பிடிச்சா இன்னொரு நாள் வரலாம். இப்போ இன்னொரு இடத்துக்கு போகணும்." என்று கூற, மனதே இன்றி புறப்பட்டாள்.

அடுத்ததாக விஜித் அவளை அழைத்து வந்தது நகரின் நடுவே இருந்த தனக்கு சொந்தமான நகை கடைக்கு தான். இன்று தான் முதல் முறை வருகின்றான். கடையின் திறப்பு விழாவிற்கு கூட அவனால் வந்திருக்க முடியவில்லை.

"கூட்டமா இருக்கு." என்று கடையை பார்த்து விட்டு மான்சி கூற,

"மாஸ்க் போட்டுக்கோ..." என்று கூறி அவளை தனது அறைக்கே அழைத்து வந்தான்.

"நான் கேட்ட மாதிரி செயின்ஸ் கொண்டு வாங்க." என்று மேனேஜரிடம் கட்டளையிட, அவரும் சிலவற்றை கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றார்.

சில நிமிடங்கள் தன் முன் இருந்தவற்றை ஆராய்ச்சியாக பார்த்த விஜித் தன் எதிர் பார்ப்பை முழுவதும் பூர்த்தி செய்யும் வகையில் இருந்த ஒன்றை கையில் எடுத்தான்.

"இது சூப்பர்..." என்று மான்சி முன் ஒன்றை உயர்த்தி காட்டினான்.

"உனக்கு தான் போட்டுக்கோ..." என்று கூற, மான்சிக்கு ஏதோ நெருடியது.

விஜித் கைகளில் இருந்த வைரக்கற்கள் பதித்த டாலருடன் கூடிய செயின் கண்ணை பறித்தாலும், அதை ஏற்பதற்கு அவள் மனம் தயங்கியது.

"மான் குட்டி உனக்கானதை நீ தான் செலக்ட் பண்ணனு ம்." என்று கூறும் தாயின் வார்த்தை செவியில் ஒலிக்க, தலையை உலுக்கிக் கொண்டாள்.

"வாட் ஹேப்பன்ட்?" என்று மான்சி மாற்றத்தில் விஜித் கேட்க,

"ஒன்னுமில்ல..." என்று அவள் வாய் கூறினாலும் மனம் விஜித்தையும் தாயையும் ஒப்பிட்டு பார்த்தது.

கழுத்தில் ஏதோ உரசுவது போன்ற உணர்வில் யோசனை கலைத்த மான்சி கைகள் தட்டி விட பார்க்க, அவள் கையை விஜித் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

"நான் தான்." என்று அழுத்தமாக கூறியவன் அவள் கழுத்தில் இருந்த செயினை கழட்ட,

"அதை எதுக்கு கழட்றீங்க?" என்று பதற
"ஏந்திழையாள் நான் செலக்ட் பண்ணது பத்தோட பதினொன்னா இருக்க கூடாது. எப்பவும் யூனிக்கா தெரியணும்." என்று கூறிக் கொண்டே தான் தேர்வு செய்ததை மாட்டி விட்டான்.

"அது அம்மா கொடுத்தது..." என்று மான்சி கூற,

"சோ வாட்... இந்தா உன் அம்மா செயின்." என்று அவள் கையில் வைத்து அழுத்தினான்.

விஜித் அழுத்தியதில் கை சற்று வலி கொடுக்க அதை அவள் முகம் பிரதிபலித்தது. அவள் வலியை உணர்ந்தாலும், சிறிதும் சலனமின்றி அவன் மெதுவாவே அவள் கையை விடுவித்தான்.


ஹாய் டியர்ஸ்
என் கதைக்கு 5 எப்பிக்க வியூவ்ஸ் 3k தண்டி போகுது.நிறைய பேர் படிக்கிறீங்கன்னு மட்டும் தெரியுது.
வெள்ளி கிழமை யூடி கொடுத்தாச்சு. படிச்சு கருத்து சொன்னா நானும் என்ன டிவலப் பண்ண உதவியா இருக்கும். அப்புறம் கருத்து முக்கியம் பிகிலு...


 
Status
Not open for further replies.
Top