ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஏகலைவனின் ஏந்திழையாள்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 7

"ம்மா இத நான் எப்பவும் கழட்டவே மாட்டேன்." என்று தான் தாயிடம் கூறியது மான்சி நினைவில் வந்துச் சென்றது.

அன்னை தனக்கு பரிசளித்த செயினை முதல் முறை கழட்டியதில் கவலையில் இருந்த மான்சியிடம் எதையும் கூறாமல் தனது வீட்டிற்கே அழைத்து வந்தான். கார் நின்ற பிறகே வந்திருக்கும் இடத்தை உணர்ந்தவள்

"இது யார் வீடு?" என்று கேட்க,

"இப்போதைக்கு மிஸ்டர்.ஏகலைவன் வீடு. இன்னும் கொஞ்ச நாள்ல மிஸ்டர் அண்ட் மிஸஸ்.ஏகலைவன் வீடு." என்று கூற,

"இங்க எதுக்கு?" என்று தயங்கிய மான்சிக்கு காரை விட்டு இறங்க மனதில்லை.

"ஜஸ்ட் டின்னர் முடிச்சிட்டு போகலாம். அண்ட் உன் கிட்ட ஒன்னு காட்டணும்." என்று கூறி விட்டு இறங்க, அன்னை அலைப்பேசிக்கு செய்தி அனுப்பி விட்டு இறங்கினாள்.

மான்சியின் செயலை கடை கண்ணால் பார்த்துக் கொண்டவன் இதழ்கள் இகழ்ச்சியில் வளைந்தது. மான்சியை நேராக மேல் தளத்திற்கு அழைத்து வந்தவன் ஒரு அறை கதவின் முன் நின்றான்.

"இந்த ரூம் நீ கண்டிப்பா பார்க்கணும்." என்று கூறி திறந்து விட, தயங்கிக் கொண்டே அவ்வறைக்குள் அடி எடுத்து வைத்தாள்.

சட்டென்று உயிர் பெற்ற விளக்கின் ஔியில் கண்களை மூடி திறந்தவளுக்கு இமைகளை சிமிட்ட கூட தோன்றவில்லை. தான் நினைப்பது சரியா என்று தெரிந்துக் கொள்ள விஜித்தை பார்க்க, அவனோ மார்பின் குறுக்கே கையை கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்றான்.

"இது எப்போ இருந்து இங்க இருக்கு?" என்று ஏழு வயதில் தான் முதன்முதலில் பாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து கேட்டாள்.

"நீ பாடி முடிச்ச அடுத்த வாரத்தில இருந்து இங்க தான் இருக்கு." என்று சாதாரணமாக கூறினான்.

"எப்படி இங்க?" என்று கேட்க,

"நான் தான் என் கையால மாட்டினேன். இதுக்கு மேல உன் கேள்விக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் பதில் சொல்றேன்." என்று முடித்துக் கொண்டான்.

'ஏந்திழையாளை சீக்கிரம் மிஸஸ்.ஏகலைவனா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்.' என்று புகைப்படத்தின் அடியில் எழுதி அதில் தேதியும் இருந்தது.

மீண்டும் புகைப்படத்தில் இருந்த வாக்கியத்தை வருடி பார்த்தவள் மனது சந்தோஷத்தில் துள்ளியது.

தன்னவன் தன்னை பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்ற பரவச உணர்வு அவளிடம் நிறைந்திருந்தது.

"ஏகலைவனின் ஏந்திழையாள்." என்று மான்சியின் உதடுகள் முணுமுணுக்க, விஜித் தனது நடையை நிறுத்திக் கொண்டான்.

"இப்போ என்ன சொன்ன?" என்று விஜித் கேட்க, ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள்

"ஏகலைவனின் ஏந்திழையாள்." என்று அழுத்தமாக, அவன் கண்களை பார்த்துக் கொண்டே கூறினாள்.

மான்சி உச்சரித்த வார்த்தைகளை மனதில் வேறொரு குரலும் எதிரொலிக்க, தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க தனது கண்களை மூடிக்கொண்டான். வினாடி நேரத்தில் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வதில் வெற்றியும் கண்டான்.

"குட்" என்று அவள் கன்னம் தட்டி கூறியவன் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து வர, அவ்விடம் கேண்டில் லைட் டின்னர் சாப்பிட ஏற்ற வகையில் தயாராக இருந்தது.

சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. பேச முடியாமல் இருவரும் அவரவர் உணர்வில் சிக்கியிருந்தனர்.

மான்சியை விடுவதற்காக அவள் வீட்டு வாயில் வரை வந்தவன், காரை நிறுத்திவிட்டு அவளை நோக்கி திரும்பி அமர்ந்தான். மான்சியின் கைகள் அலைப்பேசியில் தட்டச்சு செய்ய, அதை அவள் எதிர்பாராத நேரம் அவள் கையிலிருந்து எடுத்திருந்தான்.

'வந்துட்டேன்.' என்று அதில் டைப் பண்ணி இருந்தது.

"உன் அம்மாட்ட எதையும் சொல்லாம இருக்க முடியாதா?" என்று ஒரு மாதிரியான குரலில் கேட்க, அவனிடமிருந்த தன் போனை பெற வேண்டிய கவனத்தில் அதை அவள் கவனிக்கவில்லை.

"எல்லாத்தையும் அம்மாட்ட சொல்லலன்னா எனக்கு தூக்கம் வராது." என்றாள்.

"ம்கும்... அப்போ இதையும் சொல்ல முடிஞ்சா சொல்லு." என்று அவள் எதிர்பாராத நேரம் அவள் இதழோடு தன் இதழ் பொறுத்தினான்.

விஜித்தின் ஒரு கை மான்சியின் பின் கழுத்தை பிடித்திருக்க, மற்றொரு கையோ அவள் இடையை வளைத்து பிடித்திருந்தது. பலம் பொருந்தியவனின் முன் பாவையின் சிறு முயற்சியும் பலனின்றி போனது.

ஒரு கட்டத்தில் அவள் எதிர்ப்புகள் குறைந்து இதழ் முத்தத்தில் பங்கு கொள்ள, விஜித் இதழ்கள் தன் வெற்றியின் மகிழ்வில் அரை நொடி விரிந்து பின் தனது இணையை இறுக பற்றிக் கொண்டது.

இது வரை உணர்ந்திராத புது வகை உணர்வை கையாள தெரியாதவள் அவன் அணிந்திருந்த சட்டை காலரை இறுக பற்றிக் கொண்டாள். சில நிமிடத்தில் காலரில் இருந்த கைகள் மெல்ல மேல் உயர்ந்து கழுத்தை கடந்து அவன் சிகையை பற்றிக் கொண்டது.

மான்சி உணர்ச்சி பெருக்கில் அவன் முடியை அழுத்தி பிடித்தது வலி கொடுத்த போதிலும், அவள் இதழை சுவைக்கும் பணியை அவன் விடவில்லை. திடீரென்று கேட்ட ஓசையில் விஜித் மான்சியின் இதழ்களுக்கு விடுதலை கொடுத்து விலகினான்.

அவன் விலகிய பின்னும் அவன் தந்த உணர்வில் இருந்து மீள முடியாது தவித்தவள், மீண்டும் கேட்ட தனது அலைப்பேசியின் இசையில் சுற்றும் முற்றும் பார்க்க ஆரம்பித்தாள்.

"உன் போன்..." என்று விஜித் கொடுக்க, அதை வாங்கும் போது அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.

திரையில் தெரிந்த தாயின் பெயரை பார்த்ததும் தவறு செய்த குழந்தையாக தவித்துவிட்டாள். சற்று முன் தித்தித்த முத்தம் இப்போது தீயாக மாறி அவள் மனதை பொசுக்க ஆரம்பித்தது.

"ஏந்திழையாள்..." என்று அழுத்தமாக அழைத்தவனின் குரலில் மான்சியின் உடல் பயத்தில் தூக்கி போட்டது.

"ஓ ஷிட். கெட் ஆவுட் ஆஃப் மை கார் இமீடியட்லி." என்று விஜித் கத்த, தன்னிடமா கூறினான் என்ற பாவனை பெண்ணிடம்.

"உன்ன தான். என்ன கோபப் பட வைக்காம கீழ இறங்கு." என்று குரலை உயர்த்தி கூற,

"நான் என்ன பண்ணேன்?" என்று விடையறியா குழந்தையின் பாவனையில் கேட்டாள்.

"உன் அம்மா போன் பண்ணதும் உன் முகம் ஏன் அப்படி மாறுது? கிஸ் பண்ணதுக்கு ஏதோ நான் உன்ன ரே**ப் பண்ண ஃபீல் கொடுக்கிற. வீ ஆர் எங்கேஜ்டு. டூ யூ ரியலி லவ் மீ ஆர் நாட்?" என்று அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் நெருப்பு கங்குகளாக வெளி வந்தது.

"நான்... அம்மா..." என்று பதிலளிக்க முடியாமல் மான்சி திணறினாள்.

"ஷட் அப் ஏந்திழையாள். அம்மா உனக்கு முக்கியமா இருக்கலாம். பட் நான் இருக்கிற வரை நான் மட்டும் தான் உன் ப்ரையாரிட்டியா இருக்கணும் காட் இட்." என்று அவன் மனதை முதல் முறை மறைக்காமல் வெளிப்படுத்தினான்.

விஜித் ஏகலைவன் வார்த்தை அதன் உண்மை வடிவத்தில் வெளி வந்தாலும், அது தன் மீது கொண்ட காதலால் ஏற்பட்ட உரிமை உணர்வு என்று மான்சி நினைத்துக் கொண்டாள்.

"சாரி..." என்று கீழே குனிந்த படி கூற,

"இட்ஸ் ஓகே. பட் இதுவே கடைசியா இருக்கட்டும்." என்று கட்டளையாகவே கூறினான்.

"ம்ம்ம்..." என்று கூறி தலையசைத்தவள்

"நான் உங்கள உண்மையா காதலிக்கிறேன். ப்ளீஸ் திரும்பவும் காதலிக்கிறியான்னு கேட்காதீங்க." என்று கூற அவள் கண்ணிலிருந்து விழி நீர் கீழே விழ தயாராக இருந்தது.

தன் இரு கரங்களினால் அவள் முகத்தை தாங்கி பிடித்தவன் கட்டை விரல் கொண்டு கண்ணீரை துடைத்தான். அவள் விழிகளுடன் தன் விழியை கலக்க விட்டவன்

"இனி உன் ஞாபகத்தில நான் மட்டும் தான் இருக்கணும்." என்று கூறிக் கொண்டே அவள் இதழ்களை கவ்விக் கொண்டான். இம்முறை சற்று வன்மையாகவே மான்சியின் இதழை சுவைத்தவன் விரைவாக விடுதலையும் அளித்தான்.

"பாய் ஏந்திழையாள்... ஸீ யூ சூன்..." என்று கூறி விடை பெற, கையை அசைத்து விடை கொடுத்தவளுக்கு மனதில் பல கேள்விகள்.

"மான்சி உள்ள வா." என்று வெண்பா அழைத்த பின்னே உள்ளே வந்தாள்.

வழக்கம் போல தாயின் கேள்விகளுக்கு பதிலளித்தாலும், அவள் கவனம் முழுவதும் கள்வனிடம் அல்லவா இருந்தது. தனது அறைக்குச் செல்ல திரும்பிய மகளின் கழுத்தை ஒரு நிமிடம் பார்த்த வெண்பா தனது கேள்வியை நிறுத்திக் கொண்டார்.

தான் அணிவித்த செயின் பல வருடங்களாக மகளின் கழுத்தில் இருந்தது. தற்போது இல்லாமல் வேறொன்று இருப்பதன் காரணம் விஜித் என்று தெரிந்தாலும், மகள் தன்னிடம் கூறாததில் கவலை கொண்டார்.

தாய் தனது கேள்விகளை நிறுத்தியதை கூட உணராமல் தனதறைக்கு வந்தவளுக்கு மூளையே மரத்து போனது போல இருந்தது.

விஜித் முத்தமிட்டது பிடித்திருக்கின்றது ஆனாலும் தாயின் வளர்ப்பு அதை ஏற்க மறுக்கின்றது. காதலிக்கின்றாள் தான் அதற்காக தாயின் கட்டுப்பாடுகளை மீற முடியவில்லை.

இன்று முழுவதும் நடந்த அனைத்தையும் ஒரு முறை மனதிற்குள் நினைத்து பார்த்தவளுக்கு விஜித் தன்னை வெறித்தனமாக காதலிப்பதாக நினைக்க தோன்றியது. துளியும் விஜித் தன்னை காதலிக்கவில்லையோ என்ற சந்தேகம் அவளுக்கு வரவில்லை.

அதிலும் அவன் வீட்டில் பார்த்த தன் சிறு வயது புகைப்படமும் ஏந்திழையாள் என்ற அழைப்பும் அவளின் அனைத்து குழப்பங்களையும் மூடி மறைத்தது. மான்சி மனதின் கேள்விகளுக்கு அவளே ஒரு பதிலை கூறிக் கொண்டாள்.

"ஏந்திழையாள் நீ ரொம்ப பண்ற. கொஞ்சம் அவர் கூட இருக்கும் போது அவர பத்தி மட்டும் யோசி." என்று கண்ணாடியில் அவன் அணிந்த செயின் டாலரை பார்த்து கூறிக் கொண்டாள்.

"இனி உன் லைப்ல இந்த ஏகலைவன் மட்டும் தான் ஏந்திழையாள்..." என்று பற்களை கடித்தபடி கூறியவன் தன் கையில் இருந்த செயினை குப்பை தொட்டியில் தூக்கி எறிந்தான்.

ஹாய் டியர்
சிலருக்கு இது ஆண்டி ஹீரோ கதையான்னு சந்தேகம் வரலாம் நிஜமா இது ஆண்டி ஹீரோ கதை தான் நம்புங்கப்பு....

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 8

அடுத்த நாள் காலையில் எழுந்துக் கொண்டவளுக்கு தன்னவனிடம் பேச வேண்டும் என்று ஆவல் மேலிட்டது. அப்போது தான் இனி நானாக உன்னை அழைக்க மாட்டேன் என்றது நினைவு வர, தானாக அவனை அழைத்தாள்.

உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தவன் மான்சி அழைக்கவும் உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

"ம்ம் சொல்லு..." என்று சாதாரணமாக கேட்க, பெண்ணவளுக்கு இருந்த உற்சாகம் மொத்தமும் வடிந்து போனது.

"ஏந்திழையாள் எதுக்கு நீ கூப்பிடுவன்னு நானே ஒவ்வொரு தடவையும் கண்டு பிடிக்க முடியாது. சீக்கிரம் சொன்னா நான் அடுத்த வேலையை பார்க்க போவேன்." என்று வார்த்தைகள் சற்று அதட்டலாகவே வந்தது.

"சும்மா பேசணும் போல இருந்துச்சு அதான் கூப்பிட்டேன். சாரி நீங்க உங்க வேலைய பாருங்க..." என்று அழைப்பை துண்டிக்கச் சென்றவளை விஜித் குரல் தடுத்தது.

"குட்... நீயா என் கிட்ட சும்மா பேச நினைச்சிருக்க. இத கண்டிப்பா செலப்ரேட் பண்ணியாகணும். நீ என்ன செய்ற கிளம்பி ரெடியா இரு. இன்னும் ஒன் ஹவர்ல நான் உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன்." என்று கூறி விட்டு மான்சியின் பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டான்.

அம்மா கிட்ட பர்மிஷன் கேட்க முடியாது என்று கூற நினைத்தவள் நேற்றைய நாளில் தன்னவன் கோபத்தை நினைத்து பேசாது அமைதியாகி விட்டாள்.

குளித்து தயாராகி கீழே வந்தவள் தாய் தந்தை இருவரும் தன்னுடன் சாப்பிட காத்திருப்பதில் தயங்கி நின்றாள். மகள் தயங்கி நிற்பதை கண்ட வெண்பா

"முக்கியமான வேலை எதுவும் இருக்கா மான் குட்டி?'' என்று கேட்க,

"ம்மா அவர் என்ன பிக்கப் பண்ண வரார்." என்று தந்தையை பார்த்துக் கொண்டே தயக்கத்துடன் கூற, என்ன என்பது போல திலகன் வெண்பாவை பார்த்தார்.

வெண்பா பார்வையால் கணவருக்கு விளக்கம் அளிக்க, திலகனுக்கு கோபம் வந்தாலும் மறுப்பு கூறி மகளின் மனதை வாட விட மனதில்லை.

"பார்த்து போயிட்டு வா..." என்று திலகன் கூறவும், விஜித் தனது வண்டியின் ஹாரனை அழுத்தவும் சரியாக இருந்தது.

பெற்றவர்களிடம் விடை பெற்று வந்தவள் காரின் முன் பக்க இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். மான்சி அமர்ந்ததும் விஜித் கார் வேகமெடுத்தது.

தங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் தங்கள் மகளை அழைத்துச் செல்வது இருவருக்கும் உறுத்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டனர்.

"எங்க போறோம்..." என்று மான்சி நேற்று போல தயங்காமல் இன்று சற்று தைரியமாக கேட்க,

"நோ ஐடியா. நீ பேசினதும் கிளம்பிட்டேன். வேற ப்ளான் எதுவும் இல்ல.'' என்றவனை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டவளுக்கு அவன் தனக்காக வந்ததில் ஒரு வித பரவசம்.

"உங்க வீட்ட இன்னைக்கு சுத்தி காட்றீங்களா?" என்று கண்கள் மின்ன கேட்டவளுக்கு நேற்று சென்ற அறையை மீண்டும் பார்க்க ஆசை நெஞ்சம் முழுவதும் இருந்தது.

"நோ..." என்று ஒற்றை வார்த்தையில் மறுப்பு விஜித்திடமிருந்து வந்தது.

"ஏன்?" என்று புரியாமல் கேட்டவளை பார்த்தவன்,

"இனி கல்யாணத்துக்கு அப்புறம் மட்டும் தான் நீ வீட்டுக்கு வர முடியும். உனக்கு ஓகேன்னா சொல்லு இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம். என்ன ஓகேவா?" என்று கேட்க, மான்சி வாய் பதில் கூற முடியாது மூடிக் கொண்டது.

விஜித் அழைத்ததும் காலையில் உணவு உண்ணாது வந்ததில் வயிறு தன் இருப்பை உணர்த்த சத்தம் எழுப்ப ஆரம்பித்தது. இரு கை கொண்டு வயிற்றை பிடித்துக் கொண்டவளுக்கு தன் பசியை கூறவும் தயக்கமாக இருந்தது.

மான்சியை ஓர விழியால் பார்த்தவனுக்கு அவள் பசி புரிந்தாலும் கண்டுக் கொள்ளாமல் இருந்து கொண்டான். மேலும் அரை மணி நேரத்திற்கு பிறகு அவனது கடற்கரை பங்களாவிற்கு அழைத்து வந்தான்.

சுற்றிலும் தென்னை மரங்களுக்கு நடுவே இருந்த அந்த பங்களா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அழகை ரசிப்பதை விட பசி அவளுக்கு அதிகமாக மனம் அதில் லயிக்கவில்லை.

விஜித் காரை நிறுத்தியதும் வேலையாள் ஓடி வந்து கதவை திறந்தான். அவனிடம் கார் சாவியை கொடுத்தவன்

"லஞ்ச் ரெடி பண்ணு... இப்போ ரெண்டு இளநீர்." என்று கூறி விட்டு நடக்க, அவனுடன் இணைந்துக் கொண்டாள்.

இருவரும் வரவேற்பறைக்கு வந்து சேர்வதற்கும் இளநீரை வேலையாள் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது. பசியால் எரிந்த வயிறுக்கு இளநீர் அருமருந்தாய் இருந்தது.

மான்சி இளநீர் முழுவதையும் குடித்து முடித்ததும், அவளுக்கு அந்த கடற்கரை பங்களா முழுவதையும் சுற்றிக் காட்டினான். இறுதியாக ஒரு அறை முன் வந்து நின்றவன்
"உள்ள வா..." என்று அழைக்க, அவளும் ஆவலுடன் வந்தாள்.

அறையின் நடுவே நடுநாயகமாக போடப்படிருந்த தேக்கு கட்டிலில் அமைதியாக ஒரு உருவம் படுத்திருந்தது. அருகில் சென்று பார்த்ததுமே விஜித் அன்னை என்று சொல்லும் அளவிற்கு அவரின் சாயல் எதுவும் இல்லை.

விஜித் குடும்பத்தை பற்றி பெரிதாக தெரிந்து வைத்திராத மான்சிக்கு யார் அவர்? அவருக்கு என்ன ஆயிற்றோ என்ற கவலை அதிகரித்தது.

"அத்தைக்கு என்னாச்சு..." என்று ஒரு யூகத்தில் விஜித் தாயாக இருக்கும் என்று இயல்பாக கேட்டுக் கொண்டே அவர் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.

அறைக்குள் வந்த பின் மான்சியின் முகத்தை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தவன் அவள் செயலில் துளியும் நடிப்பில்லை என்பதை உணர்ந்துக் கொண்டான். தான் அறிமுகப்படுத்தாமலே அத்தை என்று அழைத்து, தன் அன்னையிடம் அவள் காட்டும் பரிவு அவனுக்கு பிடித்திருந்தது.

"மை மாம் விஜயா... பாஸ்ட் செவன் மந்த்ஸா கோமால தான் இருக்கிறாங்க. வேர்ல்ட் பெஸ்ட் டாக்டர்ஸ் வர வைச்சு ட்ரீட்மெண்ட் பாத்தாச்சு பட் நோ இம்ப்ரூவ்மெண்ட்." என்று பெருமூச்சுடன் கூற, மான்சியின் மெல்லிய இதயம் அவனுக்காக வருந்தியது.

"சீக்கிரம் சரியாகிடும்..." என்று அவள் கூற,

"சரியாகணும்." என்று தீர்க்கமாக கூறியவன் அன்னை அருகில் வந்தான்.

"அத்தை உங்க ஏகலைவனின் ஏந்திழையாள் வந்தாச்சு. சீக்கிரம் எங்க கல்யாணம் நடக்க போகுது." என்று அவர் காதில் கூற, அவரிடம் மெல்லிய அதிர்வு. அவரின் அதிர்வை இருவரும் உணர்ந்தனர்.

"உங்களுக்கு தெரியுதா...!" என்று மகிழ்ச்சியாக மான்சி கேட்க,

"ம்ம் அவங்க சந்தோஷப்படுற மாதிரி ஏதாவது சொன்னா மட்டும் அம்மா ரியாக்ட் பண்ணுவாங்க." என்று அமைதியாக கூற, அதன் பின் மான்சி அவரிடம் மடை திறந்த வெள்ளமாய் பேச ஆரம்பித்து விட்டாள்.

எதிரில் இருப்பவர் தன்னிடம் பேசவில்லை என்பதெல்லாம் அவளுக்கு பொருட்டில்லை. இன்றே அவரை குணப்படுத்தி விட வேண்டும் என்ற முனைப்பு அவளிடம்.

மேலும் ஒரு மணி நேரம் வரை மான்சி பேசி முடிப்பதற்காக காத்திருந்தவன், அவள் முடிப்பதற்கான அறிகுறி தெரியாததில் பொறுமை இழந்தான்.

"ஏந்திழையாள் ஒரே நாள்ல உன்னால மாம் சரியாகிட மாட்டாங்க. சோ இன்னைக்கு இது போதும்." என்று கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வர,

"அப்போ நான் தினமும் வரட்டுமா?" என்று சிறு பிள்ளையாக அவனிடம் கேட்டாள்.

"ஆர் யூ சீரியஸ்?" என்று அவளின் கண்களை பார்த்துக் கொண்டே விஜித் கேட்க,

"எஸ்... நீங்க அத்தைக்கு என்ன பிடிக்கும்னு மட்டும் சொல்லுங்க மிச்சத்த நான் பாத்துக்குறேன்." என்று அவனிடம் சவாலிடும் குரலில் கூறினாள்.

"அம்மாக்கு என்ன மட்டும் தான் பிடிக்கும். எனக்கு அடுத்து பாட்டு ரொம்ப பிடிக்கும்." என்று விஜித் கூற, மான்சி முகம் பூவாக மலர்ந்தது.

"நீங்க வேணும்னா பாருங்க நம்ம கல்யாணத்துக்கு அத்தை என் அம்மா அப்பா கூட நின்னு அவங்க கையால அர்ச்சதை தூவி ஆசீர்வாதம் பண்ணுவாங்க." என்று உறுதியாக கூறினாள்.

"குட்... வா சாப்பிடலாம்." என்றவன் தன் அம்மாவிற்காக அவளுக்கு இரக்கம் காட்டினான்.

உணவை பார்த்ததும் மீண்டும் பசி உணர்வு அதிகரிக்க, தட்டில் இருந்த உணவுகளை வேகமாக உண்ண ஆரம்பித்தாள். மான்சியை பார்த்துக் கொண்டிருந்த விஜித் அவள் தட்டை கவனிக்கும் படி கட்டளையிட மீண்டும் அவள் தட்டில் உணவு நிரப்பப்பட்டது.

வயிறு நிறைய உணவை உண்ட மான்சி சூப்பர் என்று கையால் கூற, அவள் தொடாத உணவுகளை காட்டி "ஏன் சாப்பிடல...?" என்று கேட்க,

"இது எல்லாம் அம்மா எனக்கு ஒத்துக்காதுன்னு தந்ததில்லை." என்று கூற, விஜித் முகம் மாறியது.

"ஓ..." என்று மட்டும் கூறியவன் பார்வையாலே வேலையாட்களை வெளியேச் செல்லும் படி கட்டளையிட, அவ்விடத்தில் இருவர் மட்டுமே இருந்தனர்.

யாரும் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு கை கழுவி விட்டு அவள் அருகில் வந்தவன் தன் வாயில் இருந்த உணவை அவளுக்கு கடத்தியிருந்தான்.

மான்சி தன் வாயில் திணிக்கப்பட்ட உணவை துப்ப முடியாத வகையில் விஜித் உதடுகள் அவள் உதட்டை சிறை செய்திருக்க, மெல்ல அவள் உண்ண மறுத்த உணவு தொண்டைக்குள் இறங்க ஆரம்பித்தது.

உணவு தொண்டைக்குள் இறங்கிய பிறகும் அவள் இதழ்களுக்கு விடுதலை அளிக்க விரும்பாதவன் இரு இதழ்களையும் மாறி மாறி சுவைக்க ஆரம்பித்தான்.

மான்சிக்கு உணவு தொண்டைக்குள் இறங்கும் வரை மட்டுமே மூச்சடைப்பது போல இருந்தது. அதன் பிறகு நேற்றைய நினைவில் அவளுமே விஜித்தின் முத்தத்தினை விரும்பி ஏற்றுக் கொண்டாள்.

விஜித் தன்னை விட உயரம் குறைந்தவளை முத்தமிட வசதியாக இடுப்பை பற்றி தூக்கிக் கொள்ள, மான்சியின் கரங்களும் மாலையாக அவன் கழுத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டது.

குழந்தை போல அவளை தூக்கிக் கொண்டே தன் அறைக்கு வந்தவன் கால்களால் கதவை சாற்ற, அந்த சத்தத்தில் மான்சி பதறி விலகினாள். மோகத்தில் முக்குளித்தவனுக்கு அவளின் விலகல் கோபத்தை கொடுத்தது.

"ஏந்திழையாள்..." என்று அழுத்தமாக கூறியவன் குரலில் கோபமும் மோகமும் சரி சமமாக இருந்தது.

"வேண்டாமே..." என்று இறைஞ்சுதலாக மான்சி கூற,

"கோ..." என்று வாசலை நோக்கி கை காட்டி கூறினான்.

"இல்ல... நான்...'' என்று மான்சியின் வார்த்தைகள் தந்தியடிக்க, அவளை அசையாது பார்த்தபடி விஜித் இரு கரங்களையும் மார்புக்கு குறுக்கே கட்டியபடி நின்றிருந்தான்.

"நீங்க பார்க்கிற பார்வை நான் தப்பு பண்ற ஃபீல் கொடுக்குது." என்றவளின் முகமும் குரலும் ஏகத்திற்கும் கலங்கியிருந்தது.

"ஏந்திழையாள் நான் ஒன்னும் சாமியார் கிடையாது, கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண பக்கத்தில வைச்சிக்கிட்டு கை கட்டி சும்மா நிக்க. ஒரு வேளை நான் உன்ன ஏமாத்திடுவேன்னு நீ நினைச்சா, ஒன்ன மட்டும் நல்லா புரிஞ்சுக்கோ. பிஸ்னஸ்ல ஒரு தடவை நான் கமிட் ஆகிட்டா அத நான் ரீ கன்சிடர் பண்ணவே மாட்டேன். இனி நீ தான் என் லைப் இதுல செகென்ட் தாட்க்கு இடமில்லை." என்றவன் வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.

விஜித் வெளியேறியதும் நடந்ததை நினைத்து பார்த்து தலையை கரங்களால் தாங்கி பிடித்துக் கொண்டு அமர்ந்த மான்சிக்கு தலை வெடிப்பது போல வலித்தது.

நேற்று விஜித் தன்னை முத்தமிட்டதை கூட தன் மீது உள்ள காதலினால் உரிமை எடுத்துக் கொள்ள முயன்றதாக நினைத்துக் கொண்டவளுக்கு, சற்று முன் நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவனின் கைகள் அத்துமீறியதில் ஆடை கசங்கியிருந்ததை பார்த்தவளுக்கு தாய் கற்பித்த நல்லொழுக்கத்தை நினைத்து முகமும் கசங்கியது.

"மேரேஜ் முடியுற வரை நீ என்ன மீட் பண்ண வராதே." என்று கேட்ட குரலில் பதறி எழுந்தவள், விஜித்தின் உணர்வில்லா முகத்தை பார்த்து மனதுக்குள் பயப்பந்து உருள ஆரம்பித்தது.

"ஏன்?" என்று கேட்டவளுக்கு காரணம் தெரிந்தும் அவனை பார்க்க முடியாது இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

"ஏந்திழையாள்..." என்று அழுத்தமாக அவள் பெயரை கூற, மான்சி அவன் முகத்தை கலங்கிய விழிகளுடன் பார்த்தாள்.

அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தும் கண்டுக் கொள்ளாமல் நடக்க ஆரம்பிக்க, விஜித் பின்னே வெளியேறி கார் வரை வந்து விட்ட பின்னும் அவளுக்கு இந்த மௌனம் பிடிக்கவில்லை.

"நான்..." என்று மான்சி பேச ஆரம்பிக்க, கை உயர்த்தி அவள் பேச்சிற்கு தடை விதித்தவன்
"இங்க பாரு ஏந்திழையாள் என்ன பொறுத்த வரைக்கும் உன் கிட்ட எனக்கு எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் இருக்க கூடாது. அது உன்னால கல்யாணத்துக்கு அப்புறம் தான் தர முடியும்ன்னா அது வரை என் கிட்ட வராத." என்று கூற, பாவைக்கு பதில் கூற முடியவில்லை.

என்ன பதில் கூறி விட முடியும்?

தன் மனைவியாக போகின்றவளிடம் உரிமையாக விஜித் பேசுவது சரி போல தோன்றினாலும், தாயின் வளர்ப்பு என்ற ஒன்று அவனுடன் தன்னை ஒன்ற விடாமல் தடுக்கின்றதே.

முத்தம் கொடுத்ததையே ஏற்றுக்கொள்ள தயங்கியவளுக்கு, தன்னை மொத்தமாக கொடுக்கும் துணிவு இல்லை. அவனின் பாரா முகம் வதைத்தாலும் அவன் கூறியது போலவே திருமணம் வரை விலகியே இருக்கலாம் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

முடிவெடுத்த பின் மான்சி மன கலக்கம் தீர்ந்தாலும் முகத்தில் பழைய மலர்ச்சி சுத்தமாக இல்லை.

"நம்ம கல்யாணம்?" என்று மான்சி கேள்வியாக அவனிடம் கேட்க,

"எனக்கு வொர்க் கொஞ்சம் டைட்டா போகுது. சோ மேரேஜ் பைவ் மந்த்ஸ்க்கு அப்புறம் தான். எங்கேஜ்மென்ட் டென் டேஸ்க்கு அப்புறம் வைச்சுக்கலாம்." என்று கூறி விட்டு சாலையில் கவனத்தை பதிக்க, மான்சி அவன் நினைவுடன் மனதிற்குள் பேசிக் கொண்டே வீடு வந்தாள்.

மறுநாள் விஜித் அளித்த உணவு ஒத்துக் கொள்ளாமல் உடல் முழுவதும் தடிப்பு தடிப்பாக அலர்ஜி ஏற்பட்ட போதும் மான்சி அவனை காட்டி கொடுக்கவில்லை.

அடுத்து வந்த நாட்களில் விஜித் தனது வேலையின் காரணமாக மும்பை சென்று விட, அவனது உதவியாளர் ரவி மூலமாகவே நிச்சய வேலை அனைத்தும் நடந்தது.

விஜித் நடவடிக்கைகள் அனைத்தும் குழப்பத்தை மட்டும் கொடுக்க வெண்பாவிற்கு கணவனை சமாளிப்பதற்கு பெரும் பாடாக இருந்தது.

மான்சி மட்டுமல்ல திலகன் வெண்பா தம்பதியார் கூட விஜித்திடம் பேச முடியவில்லை. இப்படி அனைவரையும் குழப்பத்திலும் கவலையிலும் வைத்திருந்தவன் நிச்சயத்தன்று காலையில் மண்டபத்திற்கு தான் வந்து சேர்ந்தான்.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 9

நிச்சய நாட்கள் நெருங்க நெருங்க மான்சி பற்றிய உண்மையை தாங்கள் கூறியிருக்கவில்லை என்பது ஒரு நெருடலாக திலகன் தம்பதியருக்கு இருந்தது.

தற்போது மான்சியால் பகலில் பார்க்க முடியும் என்றாலும் கூட, அதிக வெளிச்சம் கண்களை கூச வைக்கும். இது பெரிய குறையாக பெற்றோர்க்கு தெரியாத போதும் கணவனாக வர போகின்றவனுக்கு குறையாக தெரிந்தால் மகளின் வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயம் இருவருக்கும்.

ஒருவேளை உண்மை தெரிந்த பிறகு திருமணம் நின்றால் கூட விஷயம் வெளியே தெரியாமல் சமாளித்துக் கொள்ளலாம் என்று பெற்றவர்கள் நினைக்க, வேண்டுமென்றே அவர்களுக்கு சிக்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டு இருந்தான்.

மான்சி விஜித்துடன் நடந்த அன்றைய நிகழ்விற்கு பின் விலகி இருக்க முடிவெடுத்தவளுக்கு, தனது பிரச்சனை பற்றி அவனிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் துளியும் நினைவில்லை.

ஒருவேளை அவள் முயன்றிருந்தால் அவனை நெருங்கியிருக்க முடிந்திருக்கலாம். அவளை அன்றி யாரும் அவனை நெருங்க விட அவன் விரும்பவில்லையே.

இப்படியே நிச்சயத்திற்கு முந்தைய நாள் வரை விஜித் சென்னை வந்து சேரவில்லை. ஆனாலும் அவனின்றி நிச்சய வேலை எவ்வித தொய்வுமில்லாமல் நடந்துக் கொண்டிருந்தது.

முன்பு மான்சி கடத்தலை பற்றி பேசிக் கொண்டிருந்த ஊடகங்கள் இப்போது விஜித்துடன் நடைபெற போகும் நிச்சயத்தை பற்றி பேச ஆரம்பித்திருந்தது. மான்சி விஜித் இருவரும் பிறந்த நாள் தொடங்கி இன்றைய நாள் வரை அவர்களை பற்றிய அனைத்தையும் அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.

தற்செயலாக விஜித் பற்றிய தகவல் அடங்கிய வீடியோ ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் வயது படிப்பை பார்த்ததும் கண்கள் வியப்பில் விரிந்தது.

வயதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவளுக்கு அவனின் வேலை பற்றி எதிர்பார்ப்பு இல்லாததில் அதிர்வை கொடுத்தது.

"ம்மா...ப்பா...'' என்று அழைத்துக் கொண்டே அவர்கள் அறைக்கு ஓடி வந்தாள்.

"மெதுவா மான் குட்டி எதுக்கு இவ்வளவு வேகமா ஓடி வர... பொறுமையா வர வேண்டியது தானே." என்று திலகன் கேட்டுக் கொண்டே மகள் முகத்தில் முத்துக்களாக பூத்திருந்த வியர்வை துளிகளை துடைத்து விட்டார்.

"ப்பா விஜித் இந்தியன் ஏர் ஃபோர்ஸ்ல வொர்க் பண்ணி இருக்கார்." என்று கூறிக் கொண்டே, தான் பார்த்த காணொளியை தந்தைக்கு காட்டினாள்.

மகள் காட்டிய காணொளியை முழுவதும் பார்த்து முடித்தவர் அருகில் இருந்த மனைவியை பார்க்க, வெண்பாவின் கண்கள் மனதின் ஏமாற்றத்தை அப்பட்டமாக காட்டியது.

"உனக்கு மாப்பிள்ளை படிப்பு, வேலை பத்தி எதுவும் தெரியாதா?" என்று வெண்பா கேட்க, மறுப்பாக அவள் தலை அசைந்தது.

"உங்களுக்கு தெரியுமா ம்மா?" என்று மான்சி கேட்க,

"எப்படி எங்களுக்கு தெரியாம இருக்கும்? எங்க மகளையே அவரு கிட்ட கொடுக்கும் போது அவர் படிப்ப கூட தெரிஞ்சுக்காம இருக்க முடியுமா?" என்று ஆதங்கமாக கேட்டவர் மகளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பினார்.

"அப்பா அம்மா கிட்ட எதாவது மறைக்கிறியா... உண்மைய சொல்லு மான்சி... மாப்பிள்ளை படிப்பு, வேலை எத பத்தியும் அடிப்படையான விஷயம் கூட உனக்கு தெரியல. பின்ன எந்த தைரியத்தில அவர கல்யாணம் பண்ணிக்க நினைச்ச? இப்போ நீ பேச பேச எனக்கு பயமா இருக்கு." என்று மகள் வாழ்க்கை குறித்த பயத்தில் கலங்க ஆரம்பித்தார்.

"ம்மா ப்ளீஸ் இப்போ எதுக்கு இவ்வளவு எமோஷ்னல் ஆகுறீங்க. நான் அவர் பிசினஸ் பண்றார் அண்ட் சினிமா ப்ரொடியூஸரா இருக்கார்ன்னு மட்டும் தான் நினைச்சேன். அவர் இண்டியன் ஏர் ஃபோர்ஸ்ல மூணு வருசம் வொர்க் பண்ணது மட்டும் தான் தெரியல. அவர் என்ன பத்தி கேட்கும் போது நான் அவர பத்தி கேட்டதே இல்ல. இனி கேட்டு தெரிஞ்சுக்கிறேன். இதுக்காக நீ ஃபீ்ல் பண்ணாத ப்ளீஸ்." என்று சமாளிக்க, பெற்றவர்களுக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

படிப்பு, வேலை பற்றி விஜித்திடம் கேட்டுக் கொள்ளவில்லை என்றாலும் கூகுளில் தேடினாலே விவிஐபியான விஜித்தை பற்றிய தகவல் கொட்டி கிடக்கின்றதே. அதை கூட தெரிந்துக் கொள்ள முயற்சிக்காது இருக்கும் மகளுக்கு எப்படி அவன் மீது காதல் வந்தது என்ற குழப்பம் மனதை அரித்தது.

மகளுக்காகவே பதினோரு வயது வித்தியாசத்தை கடினப்பட்டு ஏற்றுக் கொண்டவர்களுக்கு, மகள் இப்படி எதையும் தெரிந்துக் கொள்ளாமல் காதலித்திருக்கின்றாளே என்று கோபம் கூட வந்தது.

வெண்பா, திலகன் உறவினர்கள் கணிசமாக இன்றே வீட்டிற்கு வந்திருக்க, அவர்களை கவனிப்பதில் இருவருக்கும் மற்றதை யோசிக்க விடாமல் நேரம் வேகமாகச் சென்றது.

மான்சி பாட ஆரம்பித்த பின் திலகன் பக்க உறவுகள் உறவாட ஆரம்பிக்க, வெண்பா யாரையும் விலக்கி நிறுத்தவில்லை. மகளுக்கு கண்கள் நன்றாகவே தெரியும் என்று அவர்களிடம் காட்டவே அவர்களை நன்றாக கவனிக்க செய்தார்.

திலகனின் மற்ற உறவுகளிடம் சாதாரணமாக பேசுபவருக்கு மாமியார் வீட்டுடன் ஒட்டிக் கொள்ள முடியவில்லை. அவர்களும் திலகனுடன் மட்டுமே தங்கள் பேச்சு என்று நிறுத்திக் கொண்டனர்.

நாத்தனார் இருவரின் மொத்த குடும்பமும் வந்து சேர, பிடிக்கவில்லை என்றாலும் மகளுக்காக அவர்கள் கவனிப்பில் எந்த குறையையும் வைக்கவில்லை. அவர்கள் கண்களில் தெரியும் பொறாமையை கண்டவர் மகளுக்கு தனிமையில் சுற்றி போடவும் மறக்கவில்லை.

அதிகாலையிலேயே எழுந்துக் கொண்ட தம்பதியர்கள் உறவினர்கள் அனைவரையும் கிளப்பிக் கொண்டு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். மாலை தான் நிச்சயம் என்றாலும் நல்ல நேரம் பார்த்து காலை உணவிற்கே வந்து விட்டனர்.

"சார் கொஞ்சம் தனியா வர்றீங்களா. உங்க கிட்ட பாஸ் முக்கியமான பைல் ஒன்னு கொடுக்க சொன்னார்." என்று அழைக்க, திலகன், வெண்பா இருவரும் ரவியுடன் மணமகன் அறைக்கு வந்து சேர்ந்தனர்.

மணமகன் இன்னும் வந்து சேராததால் அந்த அறை வெறுமையாக இருந்தது. திலகன், வெண்பா இருவரும் வந்ததும் தன் கையில் வைத்திருந்த பைலை அவர்களிடம் கொடுத்தான்.

பைலை பிரித்து படித்த இருவரும் ஒருவர் மற்றவர் முகத்தை பார்த்துக் கொண்டனர். தங்கள் இருவரின் பெயரில் இருக்கும் மொத்த சொத்துக்களையும் மான்சி பெயருக்கு மாற்றி கொடுக்கும் படி பத்திரம் தயார் செய்யப்படிருந்தது.

"நீங்க ஓகே சொன்னா இப்பவே ரிஜிஸ்டர் பண்ணிடலாம். இந்த பத்திரம் ரிஜிஸ்டர் ஆனா மட்டும் தான் பாஸ் மண்டபத்துக்கு வருவார். வெளிய கார் பத்து நிமிஷம் வெய்ட் பண்ணும். யோசிச்சு சொல்லுங்க." என்று கூறிய ரவி வெளியேற, நொடியும் தாமதிக்காமல் பெற்றவர்கள் அவனை பின் தொடர்ந்தனர்.

தங்கள் சொத்துக்கள் அனைத்தும் மகளுக்கு தான் என்ற பின் அவர்களுக்கு யோசிக்க அவகாசம் தேவைப்படவில்லை. மனதின் ஓரத்தில் விஜித் எதற்காக இப்படி நடந்துக் கொள்கின்றான் என்ற கேள்வி இருந்த போதும் மகளின் முகம் அவர்களை யோசிக்க விடாமல் செய்தது.

விஜித் பணபலம் சென்ற உடனே வேலை அனைத்தையும் முடிக்க வைத்தது. மண்டபத்தில் திலகன், வெண்பா இல்லை என்று மான்சி தேடும் முன் அவர்களும் வந்து சேர்ந்தனர்.

"ம்மா இவ்வளவு நேரமா எங்க போயிருந்தீங்க. என்னால இவங்க கூட தனியா இருக்க முடியல." என்று திலகனின் தமக்கை இருவரையும் காட்டி தாயின் காதில் ரகசியம் பேசினாள்.

"எங்கள பத்தி என்ன சொல்லி வைச்சிருக்க உன் பொண்ணு கிட்ட. ஒத்த வார்த்தை பேச ஓராயிரம் முறை யோசிக்கிறா. நாங்க கூட உம் பொண்ணுக்கு கண்ணோட சேர்த்து காதும் வேலை செய்யலன்னு நினைச்சிட்டோம்." என்று நக்கல் பேச மான்சி விழிகள் கலங்கி விட்டது.

"அண்ணி பார்த்து பேசுங்க... இனி ஒரு தடவை எம் பொண்ண பத்தி பேசி பாருங்க இந்த வெண்பா யாருன்னு தெரியும்." என்று சத்தமின்றி எச்சரித்தவர் மகளை வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

"வெண்பா மாப்பிள்ளை கார் வந்துட்டு வா ஆரத்தி எடுக்கணும்." என்று அழைத்தவர் மகளின் கலங்கிய முகத்தை கண்டு,

"மான் குட்டி என்னடா ஆச்சு?" என்று கேட்க,

"ப்பா இவங்க அம்மாவையும் என்னையும் பேசுறாங்க ப்பா..." என்று அழுதுக் கொண்டே கூற, மகளின் கண்ணீரில் திலகன் பொங்கி விட்டார்.

"வெண்பா நீ ஆரத்தி எடுக்க போ இவங்கள நான் பாத்துக்கிறேன்." என்று மனைவியை வெளியே அனுப்பியவர் தன் குடுப்பத்தினரை திட்டி தீர்த்துவிட்டார்.

"இனி நீங்க யாரும் என் பொண்ணு கிட்ட பேசுறத பார்த்தேன். அவ்வளவு தான்." என்று எச்சரிக்க, அனைவரும் வெளியே வந்து விட்டனர்.

மனதுக்குள் வெண்பா மான்சியை திட்டி தீர்த்தாலும் வெளியே தம்பி முன் காட்டிக் கொள்ள முடியவில்லை. வெண்பாவிற்கு தெரியாமல் தம்பியிடம் வாங்கியிருந்த பணம் அவர்கள் வாயை கட்டி போட்டது.

வெண்பா மகளின் அறையில் இருந்து வரும் முன் விஜித் அவனுக்கான அறைக்குள் சென்று மறைந்தான். அவன் முதுகை மட்டும் பார்த்த வெண்பாவிற்கு தங்களை கவனமாக விஜித் தவிர்ப்பது புரிந்தது.

சற்று நேரத்தில் நிச்சய நிகழ்வுகள் ஆரம்பமாக, விஜித் யாரும் அழைக்கும் முன் மேடைக்கு வந்து சேர்ந்தான். வெளிர் நீல வண்ண குர்தாவில் பார்ப்பதற்கு ஆணழகன் தோரணையுடன் இருந்தாலும் அது தாங்கள் வாங்கி கொடுத்த உடை இல்லை என்பது வெண்பாவிற்கு கவலையை கொடுத்தது.

"மாப்பிள்ளை வந்து எவ்வளவு நேரம் ஆகுது. பொண்ண அழைச்சிட்டு வா வெண்பா." என்று உறவினர் ஒருவர் குரல் கொடுக்க, மகளை அழைக்க அறைக்கு வந்தார்.

விஜித் உடை நிறத்திலே வெள்ளை கற்கள் பதித்த டிசைனர் புடவையில் வைர நகைகள் பூட்டி அழகு தேவதையாக இருந்த மகளை பார்த்ததும் அவர் குழப்பம் நீங்கியது. மகள் உடை நிறத்தில் அவரும் அணிய விரும்பியிருக்கலாம் என நினைத்துக் கொண்டவர், கணவர் கேட்கும் போது அதையே பதிலாக கொடுத்தார்.

மான்சியை விஜித் அருகில் நிற்க வைத்து, இருவரின் ஜோடி பொருத்தத்தை பார்த்த திலகன் தம்பதியருக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது.

நிச்சய மோதிரத்தை வெண்பா விஜித் முன் நீட்ட, ஒரு கை நீட்டி அதை மறுத்தவன் ரவியை பார்க்க, ஒரு மோதிர பெட்டியை நீட்டினான்.

"அம்மா எனக்கு வர போற மனைவிக்காக வாங்கினது." என்று கூறிக் கொண்டே பெட்டியிலிருந்த மோதிரத்தை மான்சி விரலில் அணிவித்தான்.

"உன்னோடது போல இருக்கணும்னு ஸ்பெஷல்லா ஆர்டர் பண்ணது..." என்று இன்னொரு பெட்டியை மான்சி முன் நீட்ட, அதிலிருந்த மோதிரத்தை விஜித் விரல்களில் அணிவித்தாள்.

மான்சி மோதிரம் அணிவித்து முடித்ததும் இருவரின் மோதிர விரல்களையும் இணைத்துக் கொள்ள அனைத்தும் கேமராவில் பதிவானது.

மனைவி கையில் இருந்த மோதிரத்தை வாங்கி தனது சட்டை பையில் வைத்துக் கொண்ட திலகன் மனம் கனக்க ஆரம்பித்தது.

வந்ததிலிருந்து விஜித் முகத்தில் கோபம் இருக்கின்றதா என்று கவனித்துக் கொண்டிருந்த மான்சி, பெற்றவர்களை கவனிக்க தவறினாள்.

தாய் நீட்டிய மோதிரத்தை எடுக்காதது கூட அவளுக்கு பிரச்சனையாக தெரியவில்லை.

விஜித் தன் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த மான்சி இடையை பற்றி தன்னை நெருங்கி நிற்கும் படி செய்ய, பெண்ணவள் பதறி விலக நினைத்தாள். ஆனால் அவன் பிடியில் இருந்து ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை.

"ஏந்திழையாள் தள்ளி நிக்க நினைச்சா பப்ளிக்ன்னு பார்க்க மாட்டேன். இங்கயே லிப்லாக் தான்." என்று அவள் காதில் கூற, பெண்ணவள் விழிகள் அவன் இதழ்கள் காதில் உரச கூறிய செய்தியில் விரிந்தது.

இருவரின் நெருக்கத்தையும் பார்த்த வெண்பா, திலகன் கூட மோதிர விசயத்தை மறந்து சிரித்தபடி மற்ற வேலைகளை பார்க்கச் சென்றனர்.

"என் மேல கோபம் இல்லையே?" என்று மெல்ல மான்சி கேட்க,

"இப்படி என் கூட இருந்தா கோபம் வரவே வராது." என்று அவளை பார்த்து கூறியவனின் விரல்கள் இடையில் கோலம் போட ஆரம்பித்தது.

அனைவரும் பார்க்க மேடையில் நின்றுக் கொண்டு அவன் செய்யும் சில்மிஷத்தை தடுக்கவும் முடியாது, ஏற்கவும் முடியாது மான்சி கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தாள்.

நிச்சயத்திற்கு உறவினர்கள் மட்டும் வந்திருக்க அவர்களும் சென்ற பிறகு ஓரளவு மட்டுமே நெருங்கிய உறவுகள் இருந்தனர். வந்தவர்கள் பரிசு கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டுச் செல்ல, விஜித் கரங்களில் சிக்கிக் கொண்ட மான்சி இடைக்கு விடுதலை மட்டும் கிடைக்கவில்லை.

அவனின் அழுத்தமான பிடியில் மான்சிக்கே வலி தோன்றி விலகி நிற்க நினைத்தால் அவன் பிடியின் அழுத்தம் மேலும் கூடியது. அதனாலே வலியை தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டாள்.

வெட்கத்தில் சிவந்த முகத்தை விட விஜித் கை அழுத்தம் இடையில் உண்டாக்கிய தடத்தின் நிறம் சற்று அதிகமாகவே இருந்தது.

விருந்தினர்கள் சென்ற பின் போட்டோகிராபர் ஜோடிகள் இருவரையும் தனியாக புகைப்படம் எடுக்க அழைத்துக் கொண்டுச் செல்ல, மான்சியின் விழிகள் தாயை தேடியது.

அவளின் தேடலை உணர்ந்தவன் வெண்பா வரும் முன் விஜித் மான்சியை அழைத்துக் கொண்டு மொட்டை மாடி வந்துவிட்டான்.

ஆரம்பத்தில் சாதாரணமாக சென்ற போட்டோ ஷுட் சற்று நேரத்தில் மான்சிக்கு சங்கோஜத்தை கொடுக்க ஆரம்பித்தது. கட்டி பிடிப்பது, தூக்கி சுற்றுவது, உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் எல்லாம் இக்காலத்தில் சாதாரணம் என்றாலும் அவளுக்கு அதில் விருப்பம் இருந்ததில்லை.

"ஏந்திழையாள்..." என்று விஜித் அழுத்தமாக அவள் பெயர் சொல்லி அழைக்க, அதன் அர்த்தம் புரிந்தவளுக்கு மனதிற்குள் கிலி பரவியது.

"இப்போ வேண்டாமே." என்று கண்களால் கெஞ்ச, அன்று இருந்த நல்ல மனநிலையில் விஜித்தும் அத்துடன் விட்டுவிட்டான்.

லிப்லாக் இல்லை என்றாலும் சில நெருக்கமான புகைப்படங்கள் சங்கடத்தை கொடுத்த போதிலும் மான்சி விஜித் கோபத்தை எதிர் கொள்ள பயந்து மறுக்கவில்லை.


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம் 10

நிச்சயம் முடிந்த மறு நாள் காலையில் தனது கடற்கரை பங்களாவிற்கு வருமாறு மான்சியை விஜித் அழைத்திருந்தான்.

விஜித் பற்றி தனக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை என்று குழம்பியிருந்த மான்சியும் அவனை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அங்கு வந்து சேர்ந்தாள்.

"யாரோ கல்யாணம் வர என்ன பார்க்க கூடாதுன்னு சொல்லிருந்தாங்க. அது யாருன்னு தெரியுமா?" என்று மான்சி வந்ததும் விஜித்திடம் நக்கல் பேச,

"தெரியும் மிஸ் ஏந்திழையாள். ஒன்ன நல்லா புரிஞ்சுக்கோங்க நிச்சயம் பாதி கல்யாணம் மாதிரி தான். அண்ட் இதுல இப்போ சைன் பண்ணு." என்று அவள் முன் காகிதத்தை வைக்க, அதை கையில் எடுத்தவள்
"இது எதுக்கு?" என்று கேட்டாள்.

"எனக்கு எட்டு நாட்டோட சிட்டிசன் ஷிப் இருக்கு. சட்டப்படி நம்ம கல்யாணத்த ரிஜிஸ்டர் பண்ணா மட்டும் தான் உனக்கும் சிட்டிசன் ஷிப் ப்ரொசியூஜர் ஆரம்பிக்க முடியும். இப்போ ஸ்டார்ட் பண்ணா தான் நம்ம மேரேஜ்க்கு முன்ன எல்லாம் செய்து முடிக்க முடியும்." என்று அவளை மேலும் யோசிக்க விடாமல் பதிவு திருமணம் செய்ய கையெழுத்து வாங்கிக் கொண்டான்.

"நாம ரிஜிஸ்டர் ஆபிஸ் போக வேண்டாமா?" என்று மான்சி தன் சந்தேகத்தை கேட்க,

"பணம் இருக்கிற வரை நாம அலைய வேண்டாம்." என்று விஜித் முடித்துக் கொண்டான்.

இருவரும் விஜித் தாயின் அறைக்குச் செல்ல, வழக்கம் போல மான்சி அவருடன் பேச விஜித் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

"நான் இங்க இல்லாதப்போ நீ அம்மாவை பார்க்க வந்திருக்க போல." என்று விஜித் அறையை விட்டு வெளியே வந்ததும் ஆச்சர்யமாக வினவ,

"ஆமா அத்தைய பார்க்க வந்தேன். இனியும் வருவேன். என்ன யார் தடுக்க முடியும்." என்று மான்சி கெத்தாக பேச, அவள் கையை பற்றி சுண்டி இழுத்தான்.

விஜித் இழுத்த வேகத்தில் மான்சி அவன் மீது மோத, விலக விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டான். ஒரு கை அவள் இடையை பிடித்திருக்க, மற்றொரு கை அவள் பின்னந்தலையை பிடித்திருந்தது.

"சட்டப்படி இன்னைக்கு நமக்கு கல்யாணமாகிட்டு. சோ யூ காண்ட் கோ." என்று கூறி அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

விஜித் மீசை முடி குத்தியதில் தோன்றிய வலி இன்பமாக இருந்தாலும், அறிவு அவளை விலக சொல்லி கட்டாயப்படுத்தியது. மனதின் மயக்கத்தை அறிவு வென்றாலும், உடல் வலிமை குறைந்தவளுக்கு அவனிடமிருந்து விலக முடியவில்லை.

பெண்ணவள் தனக்கு உடன்படவில்லை என்று புரிந்ததும் விஜித் தனது முயற்சியை நிறுத்தாமல் அவள் மேனியை மொத்தமாக முற்றுகையிடும் நோக்குடன் முன்னேற ஆரம்பித்தான்.

அவள் உணர்ச்சியை தூண்டி தன் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக்க நினைக்க, பெண்ணவளோ ஆணின் தோளை அழுத்தி தனது உணர்ச்சியை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தாள்.

எங்கே அவனிடம் தான் தோற்று விடுவோமோ என்று மான்சி தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் வீட்டின் அழைப்பு மணி இசைத்தது.

உணர்ச்சியின் பிடியில் இருந்த இருவருக்கும் அந்த சத்தம் காதை எட்டவில்லை.

இடை விடாமல் கேட்ட அழைப்பு மணியுடன், கதவை தட்டும் ஓசையும் கேட்க எரிச்சலடைந்த விஜித் கோபமாக மான்சியை விட்டு விலக, நிலத்தில் கால் ஊன்றி தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

மோகம் முழுதும் விலகாமல் தடுமாறும் மான்சியின் நிலையை கண்டுக் கொள்ளாதவன் வேகமாகச் சென்று கதவை திறக்க, ரவியுடன் மான்சியின் பெற்றோர் நின்றுக் கொண்டிருந்தனர். தன் விருப்பம் நிறைவேறாததில் விஜித் ரவியை பார்த்து முறைக்க,

"பாஸ் மான்சி மேம் பேரண்ட்ஸ் உங்கள பார்த்தே தீரணும்னு ஆபிஸ்க்கு வந்துட்டாங்க. அதான் நானும் கூட்டிட்டு வந்துட்டேன்." என்று விளக்கம் கொடுத்தான்.

"எங்க மேரேஜ் சர்டிஃபிகேட் வாங்கிட்டு நீ ஆபிஸ் போ ரவி." கூறி விட்டு விஜித் உள்ளே நடக்க, அவன் தங்களை அழைக்காத போதும் மகளுக்காக உள்ளே வந்தனர்.

பதிவு திருமணம் எப்போது நடந்தது என்று தெரியாத போதும் மகள் தங்களிடம் கூறாததில் வந்த கோபத்தை திலகனும் வெண்பாவும் அடக்கிக் கொண்டனர். இருவரும் அமர்வதற்கும் மான்சி பெற்றோர் இருக்கும் இடத்திற்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

"ஏந்திழையாள் உன் அப்பா அம்மாக்கு ஜூஸ் எடுத்திட்டு வா." என்று விஜித் மான்சியை நிற்க விடாமல் அங்கிருந்து அகற்ற, அவளும் பெற்றவர்கள் முகம் பார்க்க முடியாது வேகமாக சமையலைறைக்குச் சென்றாள்.

"எதுக்கு வந்திருக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று விஜித் மான்சி சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு கேட்டான்.

"உங்களுக்கு எங்க மேல என்ன கோபம்?" என்று அவர்களும் மகள் அங்கில்லாத தைரியத்தில் கேட்க நினைத்ததை கேட்டனர்.

"குட்... நான் உங்க மேல கோபமா இருக்கிறத புரிஞ்சுக்கிட்டீங்க. தட்ஸ் ஓகே... இனி நீங்க ரெண்டு பேரும் மான்சி லைஃப்பை விட்டு மொத்தமா விலகிடணும்." என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு சொன்னான்.

"ஏன்?" என்று வெண்பா மனதில் வலியை மறைத்துக் கொண்டு கேட்க,

"உங்களுக்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல." என்று விஜித்திடமிருந்து அலட்சியமாக பதில் வந்தது.

"அவங்களுக்கு சொல்ல வேண்டாம், ஆனா எனக்கு காரணத்தை சொல்லுங்க." என்று மான்சி குரல் கேட்க, பெற்றவர்கள் இருவரும் இருக்கையை விட்டு பதறி எழுந்தனர்.

அவர்களுக்கு இருந்த பயம், பதட்டம் சிறிதளவு கூட விஜித் முகத்தில் இல்லை. மகள் இருக்கும் போது இதை பற்றி பேசியிருக்க கூடாது என்று பெற்றவர்கள் வருந்திக் கொண்டனர்.

"மான் குட்டி வா வீட்டுக்கு போகலாம்." என்று திலகன் மகளை அழைத்துக் கொண்டு கிளம்ப நினைக்க, மகளோ நின்ற இடத்தை விட்டு அசையாது விஜித் முகம் பார்த்து நின்றாள்.

"எதுக்காக என் அப்பா அம்மா என் லைப்பை விட்டு போகணும்னு சொல்லுங்க..." என்று விஜித் முன் வந்து நின்று கேட்க, அவனும் தனது முழு உயரத்திற்கு எழுந்து நின்றான்.

"ரவி கல்யாணத்தை தள்ளி போடுறதுல எனக்கு விருப்பம் இல்ல. சோ நெக்ஸ்ட் வீக் மண்டபத்த புக் பண்ணு. அவசர கல்யாணம் மாதிரி இல்லாம எல்லாம் பக்காவா இருக்கணும்." என்று விஜித் அலைப்பேசியில் ரவியிடம் கூற, ஆத்திரத்தில் அவன் கையில் இருந்த அலைப்பேசியை பறித்து கீழே எறிந்தாள்.

"ஏந்திழையாள் உன் இடத்தில வேற யாராவது இருந்திருந்தா நடக்கிறதே வேற. இனி என் கிட்ட குரல உயர்த்தி பேசுறது, இப்படி பொருள உடைக்கிறத வைச்சுக்காத. இதுவே லாஸ்டா இருக்கட்டும்." என்று எச்சரிக்கும் குரலில் கூற, விஜித் எச்சரிப்பை புறம் தள்ளியவள்

"எனக்கான பதில் வேணும்..." என்று கேட்க,

"சொல்ல முடியாது." என்று கூறினான்.

"அப்பா அம்மா வாங்க போகலாம்... இனி இவர் முகத்த பார்க்க கூட எனக்கு விருப்பம் இல்ல." என்று மான்சி கூறி பெற்றோருடன் வெளியேற நினைக்க,

"ஏந்திழையாள் நெக்ஸ்ட் வீக் நம்ம கல்யாணத்துக்கு ரெடியா இரு. இல்ல..." என்று விஜித் மிரட்ட,

"என்ன செய்வீங்க...?" என்று மான்சி அவன் மிரட்டலுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து நின்றே கேட்டாள்.

மான்சியின் மருண்ட பார்வையை ரசித்தவனுக்கு, அவளின் இந்த நிமிர்வு துளியும் பிடிக்கவில்லை.

"என்ன வேணும்னாலும் செய்வேன். உன்ன ஒன்னும் செய்ய மாட்டேன் ஆனா உன் அப்பா அம்மா..." என்று இழுவையாக கூறி நிறுத்தினான்.

விஜித் மிரட்டலை கண்டுக் கொள்ளாமல் மான்சி தன் பெற்றோருடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

பெற்றோருக்கு ஜூஸ் போடச் சென்றவள், வேலையாள் தான் பார்த்துக் கொள்வதாக கூற ஹாலிற்கு வர, விஜித்துடன் பெற்றோர் பேசுவதை கேட்க நேர்ந்தது.

காரணம் முழுவதும் தெரியவில்லை என்றாலும் விஜித்திற்கு தன் பெற்றோரை பிடிக்கவில்லை என்பது மட்டும் நன்கு புரிந்தது.

அன்று ஆளில்லா காட்டில் விஜித் ஏகலைவனிடம் உணர்ந்த பாதுகாப்பில் மனதை பறி கொடுத்தவள், அவனை பற்றி எதுவும் தெரியாமலே திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்தாள்.

இன்று பாசத்தை கொட்டி வளர்த்த பெற்றோரை விட்டு விட்டு அவன் பின் செல்ல வேண்டிய நிலை வரும் போது, எதை பற்றியும் யோசிக்காமல் காதலை எதிர்த்து பேசி விட்டு வந்துவிட்டாள்.

விஜித்தை மொத்தமாக விலகும் எண்ணமில்லை என்ற போதும் பெற்றோரை விட்டு விட்டு அவனை திருமணம் செய்ய விருப்பமில்லை.

விஜித் கர்வம் பற்றி முழுதாக தெரியாமல் அவனாக வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற காதல் கொடுத்த தைரியத்தில் முடிவெடுத்தாள்.

தற்காலிக பிரிவை நினைத்து மனது வலித்தாலும் பெற்றோர் பாசத்தால் அந்த வலியை சரி செய்துக் கொள்ள முடியும் என்று தன் மனதிற்கு சமாதானம் கூறிக்கொண்டாள்.

"மான் குட்டி நீ அவரசரப்பட்டிருக்க வேண்டாம்." என்று திலகன் கூற,

"ஆமாம் ப்பா காதல்ன்னு நான் அவசரப்பட்டிருக்க கூடாது. உங்க கிட்ட நிதானமா பேசியிருக்கணும். பெத்தவங்கள விட்டுட்டு வான்னு சொல்றவரை எந்த நம்பிக்கையில கல்யாணம் பண்ணிக்க முடியும். இத பத்தி இப்போ பேச வேண்டாம் ப்பா. கொஞ்ச நாள் போகட்டும் பேசிக்கலாம்." என்று கூறி விட்டுச் செல்ல திலகன் வலியுடன் மனைவியை பார்த்தார்.

"கல்யாணமாகி ஒரு வருசம் என் வீட்டாளுங்க சொல்றத கேட்டு உனக்கு நான் பண்ண கொடுமையை கடவுள் நம்ம பொண்ணு மூலமா எனக்கு ஞாபகப்படுத்துறார்." என்று திலகன் கூற, வெண்பாவால் பேச்சிற்கு கூட இல்லை என்று மறுத்து கூற முடியவில்லை.

அடித்து துன்புறுத்துவதை விட, மனதால் துன்புறும் போது யாரை நம்புகின்றோமோ அவரே நம்மை விட்டு தள்ளி நிற்பது கொடுமை அல்லவா.

மான்சி சென்றதும் அடிப்பட்ட வேங்கையாக சீறிக் கொண்டிருந்தவனுக்கு கோபம் மட்டும் குறையவில்லை.

அவள் தன்னை வேண்டாம் என்று கூறி பெற்றோருடன் சென்றது தனக்கு வலிக்காதது போல காட்டிக் கொண்டாலும், அது தன் கர்வத்திற்கு விழுந்த பெரிய அடியாகவே கருதினான்.

அவளாகவே தன்னிடம் வந்தால் மட்டுமே தனது ஈகோ நிம்மதியடையும் என்று உணர்ந்தவன் அதற்கான வேலையில் இறங்கினான்.

"சார் நீங்க கேட்டது உங்களுக்கு அனுப்பியாச்சு" என்று ரவி கூற, அடுத்த நொடி அதை மான்சிக்கு அனுப்பினான்.

"ஏந்திழையாள் இப்போ என்ன சொல்ற... கல்யாணத்துக்கு தயாரா?" என்று கேட்டவனிடம் சரி என்று கூறியவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

தன் அலைப்பேசிக்கு வந்த வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்த்தவள் விஜித் மீது கொலை வெறியில் இருந்தாலும் எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஹாய் டியர்
நேற்று போட வேண்டிய யூடி.
நெட் வொர்க் பிரச்சனை அதான் இன்று 2 யூடி கொடுத்திருக்கேன் படிச்சு பார்த்து கருத்து சொல்ல மறக்காதீங்க பிகிலு....

 
Status
Not open for further replies.
Top