ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஏகலைவனின் ஏந்திழையாள்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 11

விஜித்திடம் பேசி விட்டு வந்த பிறகு மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர். எப்படியும் அவன் சும்மா இருக்க மாட்டான் என்று அறிந்து வைத்திருந்தவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை வரும் என்று கணிக்க முடியவில்லை.

இரவு உணவு வரை எந்த பிரச்சனையும் இன்றி அனைத்தும் சரியாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. உணவருந்தி விட்டு மான்சி தனது அறைக்குச் சென்ற பின் திலகனுக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர வெண்பாவிடம் கூறிக் கொண்டு புறப்பட்டார்.

டிரான்ஸ்போர்ட் வேலையில் திலகன் அடிக்கடி இப்படி வெளியேச் செல்வது வாடிக்கையான செயல் தான் என்பதால் அவரும் பெரிதாக பிரச்சனை வரும் என்று நினைக்கவில்லை.

திலகன் டிரான்ஸ்போர்ட் இரவு நேர ஓட்டுனர்கள் இருவர் வரவில்லை என்றதும், பொருட்களை சரியான நேரத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்று வெண்பாவிற்கு தகவல் தெரிவித்து விட்டு திலகனே வழக்கம் போல வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

இரண்டு மணி நேரம் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் தாகம் எடுக்க, வண்டியில் இருந்த தண்ணீரை பருகினார்.

தண்ணீரை குடித்த சில நிமிடத்திலேயே வண்டி அவர் கட்டுப்பாட்டை இழந்தது. பல வருட அனுபவத்தில் திலகன் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு அலுவலகத்திற்கும், வெண்பாவிற்கும் அழைத்து நிலையை கூறினார்.

கார் ட்ரைவரை அழைத்துக் கொண்டு வெண்பா திலகன் இருக்கும் இடத்திற்கு வரும் போது அவர் வண்டிக்குள் மயக்கி கிடந்தார். அவர் இருக்கும் நிலையே தவறாக தோன்ற டிரைவரிடம் வண்டியை ஒப்படைத்து விட்டு கணவரை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

நேற்றிரவு விஜித் தன் பெற்றோரிடம் பேசிய முறையை நினைத்து பார்த்துக் கொண்டிருந்த மான்சிக்கு மனதை யாரோ இறுக்கி பிடிப்பது போல இருந்தது.

பெற்றோர் மீது கொண்ட பாசத்தில் அவனிடம் கோபமாக பேசிவிட்டு வந்தாலும் அவள் காதல் மனது தவித்துக் கொண்டிருந்தது.

இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டு சரி செய்ய வேண்டும் என்று மனதுக்குள்ளே திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். ஆத்திரத்தில் பேசினாலும் அவளுக்கு விஜித்தை பிரியும் எண்ணம் துளியும் இல்லை.

அதிகாலை நான்கு மணிக்கு மான்சி வாட்ஸ்ஆப்பிற்கு காணொளி செய்தி வர, இரவு முழுவதும் தூக்கம் வராமல் விழித்திருந்தவள் உடனே எடுத்து பார்த்தாள்.

முதல் காணொளியில் திலகன் ஓட்டிச் சென்ற வண்டி ஒரு பெண்ணை இடித்து தள்ள, குடி போதையில் அவர் கீழே இறங்கி பார்ப்பது போல இருந்தது.

அடுத்ததாக வந்த காணொளியில் திலகன் கீழே விழுந்த பெண்ணை தனது வண்டிக்குள் தூக்கிச் செல்வது போல பதிவாகியிருக்க, அந்த பெண்ணின் கதறல் மட்டுமே அடுத்து வந்த நிமிடங்களில் கேட்டது.

காணொளியின் காட்சியில் மான்சி கைகள் நடுங்க ஆரம்பித்தது. தன் தந்தை அப்படிப்பட்டவர் அல்ல என்று கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தாலும், குரல் அவள் தொண்டையை விட்டு வெளி வரவில்லை.

கண்ணீர் வழிய செல்போன் திரையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, விஜித் நினைவு வர யோசிக்காமல் அழைத்து விட்டாள். அவள் அழைப்பிற்காகவே காத்திருந்தவனும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றான்.

"என் அப்பா அப்படி பட்டவர் இல்ல..." என்று பேச ஒத்துழைக்காத குரலை சரி செய்து கூற,

"சோ வாட்... சட்டத்துக்கு தேவை சாட்சி மட்டும் தான். அது என் கிட்ட இருக்கு." என்று விஜித் குரலை உயர்த்தாமல் அதிகாரமாகவே கூறினான்.

"இப்போ என் அப்பாவ காப்பாத்த நான் என்ன செய்யணும்?" என்று தன் தந்தைக்காக அவனிடம் யாசகம் கேட்க,

"ஏந்திழையாள் இப்போ என்ன சொல்ற... கல்யாணத்துக்கு தயாரா?" என்று கேட்டவனிடம் சரி என்று கூறியவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது...

"குட்... கெட் ரெடி ஃபார் அவர் மேரேஜ்." என்று கூறி வைத்து விட்டான்.

அதுவரை விஜித் மீது மான்சி வைத்திருந்த காதல், நம்பிக்கை இரண்டும் உடைய ஆரம்பித்தது.

விஜித் பேசி முடித்ததும் நீண்ட நேரமாக யோசித்தவளுக்கு தலைவலி வந்தது மட்டும் தான் மிச்சம். என்ன யோசித்தும் தந்தையை காக்கும் வழி மட்டும் தெரியவில்லை.

வீடியோ விஷயம் தெரிந்தால் தந்தை சிறைக்கு கூட செல்வாரே தவிர, விஜித்துடன் தன் திருமணம் நடைபெற சம்மதிக்க மாட்டார் என்பது உறுதியாக மான்சிக்கு தெரியும்.

விஜித்தின் நல்ல நேரம் திலகனின் நண்பர் சரவணன் பற்றி மான்சிக்கு நினைவு வரவில்லை.

தந்தைக்கு நடந்தது தெரியாமல் அவரை காக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு. மனதிற்குள் பெற்றோரிடம் பேச வேண்டியதை யோசித்துக் கொண்டே கீழே இறங்கி வந்தாள்.

அம்மா மட்டும் தனியே அமர்ந்திருப்பதை பார்த்த மான்சி அவர் அருகில் செல்ல, வெண்பாவின் முகம் யோசனையில் இருந்தது.

"அப்பா எங்க ம்மா?" என்று தந்தையை காணாமல் கேட்க,

"ரூம்ல தூங்குறார்..." என்ற வெண்பா நேற்று நடந்த அனைத்தையும் மகளிடம் கூறினார்.

"நைட் நான் அங்க போகும் போது அப்பா முழு போதை மயக்கத்தில இருந்தார். அப்பாக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது. யார் பார்த்த வேலைன்னு தெரியல." என்று உள்ளங்கையை பார்த்துக் கொண்டே சொல்ல, அதுவே அவர் சந்தேகம் கொள்வது விஜித் என்று காட்டிக் கொடுத்தது.

"ம்மா கல்யாண ஏற்பாட்டை நிறுத்த வேண்டாம். அவர் சொன்ன மாதிரி அடுத்த வாரத்திலே கல்யாணம் நடக்கட்டும்." என்று மான்சி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள்.

"அம்மா சொன்னத கேட்டு பயந்திட்டியா மான் குட்டி. பிரச்சனைக்கு பயந்து உன்ன ஆபத்தில தள்ள எங்களால முடியாது." என்று உறுதியாக வெண்பா மகள் முடிவை மறுத்தார்.

"இல்ல ம்மா... நீங்க இத சொல்லாம இருந்தா கூட நான் உங்க கிட்ட இத பத்தி பேசியிருப்பேன். எனக்கு அவர பிடிக்கும் ம்மா. எங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் கூட ஆகிட்டு. இப்போ நிரந்தரமா என்னால அவர விட்டு வர முடியும்ன்னு தோணல." என்று மனதிற்குள் உரு போட்ட வாசகங்களை பிசிறின்றி கூறி முடித்தாள்.

"நேத்து பேசும் போது இருந்த தைரியம் இப்போ உன் கிட்ட இல்ல மான் குட்டி" என்று வெண்பா மான்சியின் கண்களை பார்த்து கேட்க, அவர் பார்வையை எதிர் கொள்ள முடியாது திணறினாள்.

"அப்போ உங்க பொண்ணா என் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம தைரியமா பேசினேன். ஆனா இப்போ விஜித் ஏகலைவன் மனைவியா உங்க கிட்ட பேசும் போது தைரியம் இல்ல ம்மா. எனக்கு தெரியும் நான் செய்ய சொல்றது உங்களுக்கு பிடிக்காது. ஆனா எனக்கு அவர மட்டும் தான் பிடிச்சிருக்கு." என்று கூற, வெண்பா மகளுக்கு பின் நின்ற கணவரை பார்த்தார்.

"ஓஓ நீங்க சட்டப்படி விஜித் மனைவியாகிட்டீங்க இல்ல. நானும் உங்க அம்மாவும் அத மறந்துட்டோம் பாரு. எங்க குட்டிப் பொண்ணு வளர்ந்துட்டா. இனி பெத்தவங்க இல்லாம அவளுக்கான முடிவ அவளே எடுத்துப்பா." என்று திலகன் கூறும் போதே அவரை மான்சி அணைத்துக் கொண்டாள்.

"நீங்க இல்லாம நான் இல்ல ப்பா... அவருக்கு உங்க மேல என்ன கோபம்ன்னு தெரியாது. சீக்கிரம் அத நான் சரி பண்றேன்." என்ற மான்சிக்கு தான் கூறியது நடக்கும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.

இன்னும் சிறிது நேரம் பெற்றவர்கள் முன் நின்றாலும் அவர்களிடம் உண்மையை உளறிவிடுவோம் என்ற பயத்தில் மான்சி அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

"இப்போ என்ன பண்றதுங்க...?" என்று வெண்பா திலகனிடம் கேட்க,

"இனி நாம செய்ய எதுவும் இல்ல. எதோ கட்டாயத்தில நம்ம பொண்ணு கல்யாணம் பண்ண முடிவெடுத்திருக்கிறா. ஆனா அவ சொல்ற மாதிரி காதல் உண்மை தான். விஜித் கட்டாயப்படுத்தாம இருந்தா இப்ப கேட்டத கொஞ்ச நாள் கழிச்சு கேட்டிருப்பா. மான்சி கல்யாணம் முடிஞ்சதும் நம்ம பழைய வீட்டுக்கு போயிடலாம்." என்று கூற, வெண்பாவும் கணவன் நிலை புரிந்து அவரிடம் கேள்வி கேட்கவில்லை.

நடக்க போவது திலகன் வெண்பாவின் செல்லமகள் திருமணம். ஆனால் அதில் அவர்கள் தலையீடு துளியும் இல்லாத வகையில் விஜித் பார்த்துக் கொண்டான்.

மண்டபத்திற்கான பணத்தை மட்டுமாவது கொடுக்க திலகன் முயற்சிக்க விஜித்திடமிருந்து அழைப்பு வந்தது.

"மொத்த சொத்தையும் மகள் பெயருக்கு மாத்தி கொடுத்துட்டதா ஞாபகம். ஆனா இப்போ என் மனைவி பணத்தை கணக்கில காட்டாம எடுத்து செலவு பண்றீங்க." என்று மட்டும் கூற, பணம் மொத்தத்தையும் மகள் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு வந்து விட்டார்.

இன்னும் சற்று நேரத்தில் திருமணம். ஆனால் பூரிப்பு துளியும் மூவரின் முகத்திலும் இல்லை.
தான் கோடி கணக்கில் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஆசை மகளின் திருமணத்திற்கு ஒன்றும் செய்ய முடியாத தங்கள் நிலையை நினைத்து இருவரும் வருந்தி, விருந்தினர்களாக ஓர் இடத்தில் அமர்ந்திருந்தனர்.

மகளின் அறைக்குச் செல்ல விடாமல் விஜித் காவலுக்கு தன் ஆட்களை நிறுத்தியிருந்தானே. மகள் வெளியே வரும் நேரத்திற்காக அறை வாசலை பார்த்தபடி இருவரும் அமர்ந்திருந்தனர்.

சரியாக முகூர்த்த நேரத்திற்கு மான்சி வெளியே வர, தேவதை போல நடந்து வரும் தங்கள் மகளை பார்க்க திலகன் வெண்பாவிற்கு இரு கண்கள் போதவில்லை.

அறையில் இருந்து வெளி வந்த மான்சியின் கண்களும் பெற்றோரை தேடி அலைபாய, அவர்களை கண்டுக் கொண்ட பின்னே மேடை ஏறினாள்.

"அம்மா அப்பா மேல ரொம்ப பாசமோ?" என்று நக்கலாக விஜித் கேட்க,

"உங்கள விட அதிகம் தான்." என்று மான்சி பெற்றோரை பார்த்துக் கொண்டே பதில் கூறினாள்.

"பாசம் இல்லாத வரை அவங்க நல்லா இருப்பாங்க." என்று விஜித் கூறியதும் பார்வையை அக்னியை நோக்கி திருப்பினாள்.

குறித்த நேரத்தில் மான்சி கழுத்தில் மூன்று முடிச்சிட்டு ஏந்திழையாளை ஏகலைவனின் உடமையாக்கிக் கொண்டான்.

தாலி கட்டி முடித்ததும் மான்சியின் கரம் பற்றி எழுந்த விஜித் மேடையின் ஓரத்தில் சக்கர நாற்காலில் அமர வைக்கப்பட்டிருந்த தன் தாயின் அருகில் வந்தான்.

விஜித் தாயின் பாதம் வணங்க, அவனை தொடர்ந்து மான்சியும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டாள்.

மகன் மீதுள்ள கோபத்தை தாயிடம் காட்ட அவள் மெல்லிய மனது இடமளிக்கவில்லை. உண்மைக்கும் விஜயா மீது அவளுக்கு தான் எந்த கோபமும் இல்லையே.

விஜயா தன் கரத்தில் இருந்த அர்ச்சதையை இருவர் தலையிலும் தூவ, மான்சி வியப்புடன் அவரை பார்த்தாள்.

"இரண்டு நாளுக்கு முன்ன தான் அம்மா கிட்ட இம்ப்ரூவ்மெண்ட் தெரிய ஆரம்பிச்சது. நாம பேசினா புரியும் ஆனாலும் அவங்களால பேச முடியல பட் கை மட்டும் அசைக்கிறாங்க. நீ சொன்ன மாதிரி நம்ம கல்யாணத்துக்கு அம்மா ஆசீர்வாதம் கிடைச்சிட்டு." என்று விஜித் கூற, மான்சிக்கு அவர் குணமானதில் மகிழ்ச்சி தான்.

"நீங்க குணமானதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் அத்தை." என்றவள் அவரை அணைத்து கன்னத்தில் முத்தம் பதிக்க, விஜித் அவள் செயலில் சிரித்துக் கொண்டான்.

விஜித் தன்னை பார்த்து சிரிப்பதை கண்டு அவனை முறைத்த படி மான்சி தள்ளி நின்றாள். மான்சி தள்ளி நின்ற பின்பே விஜயாவை முழுதாக வெண்பாவினால் பார்க்க முடிந்தது.

"என்னங்க அது விஜயா அண்ணி...!" என்று வெண்பா அதிர்ச்சியுடன் கூற, திலகனுக்கு மனைவி யாரை பற்றி கூறுகின்றாள் என்று புரியவில்லை.

"யாரை சொல்ற வெண்பா?" என்று கேட்க, விஜயாவை திலகனுக்கு காட்டி

"என்னோட தாய் மாமா செல்வராஜ் பொண்ணு எனக்கு அண்ணி." என்று விளக்கம் கொடுக்க, அப்போது தான் திலகனுக்கு புரிந்தது.

மான்சியை இழுத்து தன் அருகில் நிறுத்திய விஜித் மறு கையால் விஜயாவின் தோளை பிடித்துக் கொண்டு திலகன், வெண்பாவை பார்த்தான்.

'இப்போது புரிகின்றதா?' என்று பார்வையால் அவன் கேள்வி கேட்க, புரிந்துக் கொண்ட வெண்பா கணவரை அழைத்துக் கொண்டு மகளிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.



ஹாய் டியர்.
கதை எப்படி போகுது. முக்கியமான பார்ட் எல்லாம் இனி தான். படிச்சு பார்த்து கருத்து சொல்லிடுங்க பிகிலு....

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 12

விஜித் அருகில் நின்றாலும் மான்சியின் விழிகள் தன் பெற்றோரையே தேடியது. அவர்களை காணாமல் தவித்தவளுக்கு தேடும் சந்தர்ப்பம் கூட தராமல் அடுத்தடுத்த சடங்குகள் அவளை இழுத்துக் கொண்டது.

வெண்பாவின் சொந்தங்கள் விஜயாவை பார்த்ததும் தங்களுக்குள் முணுமுணத்தபடி மண்டபத்தில் இருந்தே கிளம்பி விட்டனர். விஜயா பற்றி தங்களிடம் கூறாத கோபம் அவர்களுக்கு.

மண்டபத்தில் இருந்து விஜித் காரில் ஏறி அவன் வீட்டிற்கு புறப்பட்ட மான்சிக்கு இறுதியாக பெற்றோரை அணைத்து அழும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

மனம் முழுவதும் கோபம், ஆத்திரம், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகள் தந்த அழுத்தத்துடனே புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள்.

முதல் முறை விஜித் அழைத்து வந்த வீட்டிற்கே இப்போதும் வந்திருந்தனர். முன்பு இங்கே வந்ததும் அவனிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தது. ஆனால் இப்போது அதில் ஒன்றை கூட கேட்கும் மனநிலையில் அவள் இல்லை.

பூஜையறையில் விளக்கேற்றி முடித்த விஜித் மான்சியை தனது அறைக்கு அழைத்துக் கொண்டு வந்தான்.

வரவேற்பறை, படுக்கையறை, மினி ஜிம் என அனைத்து வசதிகளுடன் தனது தந்தையின் முழு வீட்டை விடவும் பெரிதாக விஜித் அறை இருந்த போதும் மான்சிக்கு ரசிக்க முடியவில்லை.

தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் நீட்டி படுத்து உறங்கும் சுகம் இங்கே கிடைக்காது என்பதை விட, இனி கிடைக்கவே கிடைக்காது என்பது தான் அவளை மிகவும் பாதித்தது.

மான்சியின் பின்புறம் இருந்து அணைத்த விஜித் அவள் தோளில் முகம் புதைக்க, அவளிடம் அதற்கான எதிர்வினை சிறிதும் இல்லை.

தன் தொடுகைக்கு பெண்ணிடம் எதிர்வினையை எதிர் பார்த்தவனுக்கு, அவளின் உணர்வில்லா நிலை சற்று எரிச்சலை கொடுத்தது உண்மை தான்.

"ஏந்திழையாள்..." என்று அழுத்தமாக அழைத்தவன் அவள் கன்னத்தில் தனது கன்னத்தை வைத்து தேய்க்க, அவன் தாடியின் முடிகள் உரசி எரிச்சலை கொடுத்த போதிலும் அதற்கும் அவளிடம் எதிர்ப்பில்லை.

எதிரே இருந்த கண்ணாடியில் மான்சியின் முகத்தில் வெளிப்படும் உணர்வுகளை மட்டும் தேடி விஜித் காத்திருக்க, உணர்வற்ற பார்வையுடன் அவனை எதிர் கொண்டாள்.

"உன்னோட இந்த பார்வைக்கு அர்த்தம் என்ன ஏந்திழையாள்?" என்று விஜித் எரிச்சலை மறைத்துக் கொண்டு கேட்டான்.

"முன்ன நமக்கு கல்யாணம் நடக்கல சோ உங்கள விட்டு விலகி நின்னேன். இதுக்கு அப்புறம் விலகி நிக்க கூடாது இல்லையா." என்று காலையில் விஜித் கட்டிய தாலியை கையில் எடுத்து, கண்ணாடியில் அவன் முகத்தை பார்த்துக் கொண்டே கேட்டாள்.

"எத நீ சகிக்க நினைக்கிறியோ அதையே ரசிக்க வைக்க என்னால முடியும்." என்று விஜித் புருவம் உயர்த்தி கூற,

"பெஸ்ட் ஆஃப் லக்." என்று சவாலாகவே அவனுக்கு வாழ்த்து கூறினாள்.

"பழைய படத்தில வர ஹீரோ மாதிரி பொண்டாட்டி கிட்ட விலகி நிக்கிற ஆள் நான் இல்ல ஏந்திழையாள். பெட்டர் என்ஜாய் அவர் இன்டிமேட் டைம்ஸ் இன் பெட்." என்று கண்ணடித்து கூறிய விஜித், அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்திரை பதித்து விட்டே விலகிச் சென்றான்.

விஜித் அறையை விட்டு வெளியேச் சென்ற பிறகே மான்சியால் இழுத்து வைத்திருந்த மூச்சை வெளி விட முடிந்தது.

உணர்வுகளை காட்டவில்லை என்றாலும் அவள் உடல் அவன் தொடுகையில் உருக தொடங்கியதை அவள் மட்டுமே அறிவாள். அதை காட்டக் கூடாது என்ற வைராக்கியம் அவளை இறுக செய்தது.

உடை மாற்ற எண்ணி தனது பெட்டியை திறக்க, அதன் மேல தாயின் கையெழுத்துக்களை தாங்கிய வெள்ளை காகிதம் படபடத்தது. அதை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்த மான்சிக்கு தன் கட்டுப்பாட்டை மீறி நடுங்க ஆரம்பித்த உடலை தடுக்க முடியாது கட்டிலில் தொய்ந்து அமர, அவள் காதில் தாயின் வார்த்தைகள் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

"மான் குட்டி எதுக்காக நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாலும் இந்த கல்யாணம் நிஜம். இந்த வாழ்க்கையை வாழ முயற்சி பண்ணாமலே தோல்வியை ஏத்துக்காத. மாப்பிள்ளைக்கு எங்கள மட்டும் தான் பிடிக்காது உன்ன இல்ல. இத உன் மனசில தெளிவா பதிய வைச்சுக்கோ.

இன்னொன்னு இந்த உலகத்தில இருக்கிற பெரும்பாலான புருஷங்களுக்கு பொண்டாட்டிய மட்டும் பிடிக்கும், ஆனா அவ வீட்டு ஆட்கள பிடிக்காது. உங்க அப்பாவும் இதுக்கு விதிவிலக்கில்லை.

பிறந்த வீட்ட தூக்கி பிடிக்க நினைச்சு உன் வாழ்க்கைய பாழாக்கிடாத. அதே மாதிரி உனக்கானது வேணும்னு நினைச்சா சண்டை போட கூட தயங்காத.

அப்புறம் அம்மாவுக்கு நாற்பத்தி நாலு அண்ட் அப்பாவுக்கு நாற்பத்தி ஆறு வயசு தான் ஆகுது. நாங்க செகன்ட் ஹனிமூன் போயிருக்கிறதா நினைச்சுகோ. உனக்கு எங்கள பத்தின கவலை இருக்காது. உனக்காக நாங்க எப்பவும் இருப்போம். உன் வாழ்க்கையில தனியே போராட தயாராகு மான் குட்டி.

போராட்டத்தோட முடிவுல சிங்கத்தை மான் குட்டி கால்ல வைச்சிடு போதும்." என்று வெண்பாவின் கடிதம் முடிந்திருக்க, தனக்கு எப்போதும் போல சரியான வழி காட்டிய தாயை நினைத்து மான்சிக்கு மனது லேசானது போல இருந்தது.

தாயின் கடிதத்தை துணிக்கு அடியில் பத்திரப்படுத்தியவள், குளித்து தன் வீட்டில் அணிவது போல இலகுவான உடைக்கு மாறி கீழே வந்தாள்.

வரவேற்பறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்த வேலையாளிடம் விஜயாவின் அறை எது என்று கேட்டு வர, அங்கு தான் தாயின் அருகில் விஜித் அமர்ந்திருந்தான்.

மனதில் தயக்கம் இருந்த போதும் விஜயாவை மட்டும் கருத்தில் கொண்டு அவரின் அருகில் சென்று கட்டிலின் மறுபுறம் அமர்ந்துக் கொண்டாள்.

மான்சி அறைக்குள் வந்ததும் அவளை பார்வையால் மகனிடம் காட்டி விஜயா கேள்வியாக புருவம் உயர்த்த, தாயை கண்டுக் கொள்ளாதது போல விஜித் வெளியேறினான்.

மகன் தன்னையும் தன் கேள்வியையும் கண்டுக் கொள்ளாமல் வெளியேற, அவரின் இதழ்கள் புன்னகைக்கு அடையாளமாக விரிந்துக் கொண்டது.

"இப்போ எதுக்கு என்ன பாத்து சிரிக்கிறீங்க?" என்று போலியாக மான்சி கோபம் போல கேட்க, விஜயா அவள் கையை பிடித்துக் கொண்டார்.

'உன் புருஷனுக்கு மார்டன் ட்ரெஸ் பிடிக்காது.' என்று கை செய்கையால் அவள் உடையை காட்டி பின் விஜித் சென்ற திசையை காட்டி கூறினார்.

'உங்க பையனுக்கு பிடிக்காதுன்னா இனி நான் தினமும் மார்டன் ட்ரெஸ் மட்டும் தான்.' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

"உங்களுக்கு மார்டன் ட்ரெஸ் பிடிக்குமா?" என்று மான்சி கேட்க, அவர் கபோர்டை நோக்கி கை காட்டினார்.

மான்சி எழுந்துச் சென்று கபோர்டை திறக்க முழுவதும் சுடிதார், குர்த்தா போன்ற உடைகள் தான். அனைத்தும் புதிதாக இருப்பதிலேயே சில மாதங்களுக்கு முன்பு வரை உபயோகப்படுத்தியிருப்பது புரிந்தது.

அதில் நீல வண்ண நீண்ட கவுனை எடுத்தவள் விஜயாவிற்கு போட்டு விட வர, அவர் மறுப்பாக தலையசைத்தார்.

"ஏன் மருமக முன்னாடி ட்ரெஸ் மாத்த வெட்கமா. நீங்களும் மார்டன் மாமியாரா இருந்தா தான் நானும் மார்டன் மருமகளா இருக்க முடியும்." என்று கட்டாயப்படுத்தி நர்ஸ் உதவியுடன் அணிவித்து விட்டாள்.

"ட்ரெஸ் ஓகே பட் ஹர் ஸ்டெயில் நல்லா இல்ல." என்று கூறி அவரை அமர வைத்து சிகை அலங்காரத்தையும் மாத்தி விட்டாள்.

"இப்போ பார்க்கிறதுக்கு உங்க பையனுக்கே அக்கா மாதிரி இருக்கிறீங்க." என்று அவர் கன்னம் கிள்ளி முத்தமிட்டு கூற, பழைய நினைவுகளில் விஜயா முகம் ஒரு நொடி வாடி பின் பளிச்சென்று மலர்ந்தது.

தாயின் மலர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே வந்த விஜித் "ஏந்திழையாள் உன் கிட்ட பேசணும் ரூம்க்கு வா." என்று அழைக்க, அவளும் விஜயா முன் வாதிடாமல் அவனுடன் சென்றாள்.

"எனக்கு இந்த ட்ரெஸ்..." என்று விஜித் ஆரம்பிக்கும் போதே,

"எனக்கு இந்த ட்ரெஸ் ரொம்ப பிடிக்கும்." என்று மான்சி முடித்து வைத்தாள்.

மான்சி உடலுக்கு கச்சிதமாக பொருந்திய டிஷேர்ட் மற்றும் பட்டியாலா பேண்ட் அணிந்திருக்க, அவளை மேலிருந்து கீழாக அளவிட்ட விஜித்

"எனக்கும் பார்க்கிறதுக்கு வசதியா தான் இருக்கு." என்று கூற, அதன் அர்த்தம் புரிந்தாலும் அதை மான்சி கண்டுக் கொள்ளவில்லை.

"பொண்ணு கல்யாணத்தில எதுவும் செய்ய முடியலன்னு உன் அப்பா அம்மா இத கொடுத்திருக்காங்க." என்று சில பத்திரங்களை விஜித் மான்சி கையில் கொடுத்தான்.

பத்திரங்களை பிரித்து பார்த்தவள் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை. பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள் பத்திரங்களை திரும்ப விஜித் கையில் கொடுத்தாள்.

"என் அப்பா அம்மாக்கு இது எதுவும் இல்லாம கூட வாழ முடியும்." என்று இதழ் வளைய கூறினாள்.

"சொத்து வேண்டாம் பட் நீ இல்லாம தனியா ஊர விட்டு போயி என்ன பண்ணுவாங்க?" என்று மகள் மீது அவர்கள் கொண்ட பாசத்தை காட்டி பேச, பெற்றோர் ஊரை விட்டுச் சென்றது வலித்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.

"பொண்ணு மேல பாசம் இருந்தா இடுப்பில தூக்கி வைச்சுக்கிட்டே சுத்தணுமா? அவங்க நான் இல்லாட்டியும் தனியா இருந்துப்பாங்க. ஏன் செகன்ட் ஹனி மூன் போற எல்லாரும் பிள்ளைங்கள கூடவே கூட்டிட்டா போவாங்க." என்று விஜித்திடம் கேலி பேசினாள்.

'செகன்ட் ஹனிமூன்.' என்றதும் வேப்பங்காயை கடித்தது போல விஜித் முகம் மாறியது.

கணவனின் முக மாற்றத்தை கண்டு மனதுக்குள் புன்னகைத்துக் கொண்ட மான்சி 'இப்படி வெறுப்பேத்துறது கூட நல்லா தான் இருக்கு.' என்று சாய்பல்லவி போல குத்தாட்டம் போடாத குறையாக நினைத்துக் கொண்டாள்.

"அப்பா அம்மான்னா எந்த உணர்ச்சிகளும் இல்லாத ஜடமாய்தான் இருக்கணுமா! அவங்க நமக்காக வாழுற Sentimental Slave ஆ இருக்கணும்னு நினைச்சா அது தான் சுயநலம். அவங்க எதுக்காக அவங்களுடைய காதலையும் தாம்பத்யத்தையும் எனக்காக தியாகம் செய்யணும்.

ஒருநாள் அம்மா அப்பாவின் ரூம்ம தாண்டி போகும் போது அவங்க இலேசான சிரிப்பு சத்தம் அறைக்கதவுகளையும் தாண்டி மெலிதாக வெளியே கேட்கும். அதுல அத்தனை காதல் கலந்திருக்கும். அந்த ரூம் அவர்களுக்கானது. அங்கே அவங்க என் அப்பா அம்மா இல்ல. அந்த உலகத்தில எனக்கு கூட இடமில்லை. அவங்க எனக்காக வாழ்ந்தது போதும் இனி அவங்க வாழ்க்கையை அவங்க வாழட்டும்." என்று கூற, அதில் இருக்கும் உண்மை புரிந்தாலும் ஏற்க மனதின்றி வெளியேறினான்.

ஹாய் டியர்ஸ்
இனி தினமும் அத்தியாயம் வரும். கதை எப்படி போகுது சொல்லுங்க...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 13

இரவு உணவிற்கு பின் அறைக்குச் செல்லவே மான்சிக்கு தயக்கமாக இருந்தது. புதுப் பெண்ணிற்கே உரிய தயக்கம் தடுமாற்றத்துடன் தன்னவன் மீது கொண்ட கோபமும் சேர்ந்துக் கொண்டு அவளை முன்னேற விடாமல் தடுத்தது.

மான்சியை கடந்து விஜித் மாடியேற, நேரமும் பத்தை கடந்துக் கொண்டிருந்தது. இனி தாமதிப்பதில் பிரயோஜனம் இல்லை என்று நினைத்தவள் நடப்பதை எதிர் கொள்ளும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு படி ஏற ஆரம்பித்தாள்.

தடதடக்கும் இதயத்துடன் என்ன பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டு அறைக்குள் மான்சி வர, அவளை இழுத்து கட்டிலில் தள்ளிய விஜித் அவள் மேல் படர்ந்தான். அவனிடம் இத்தகைய அதிரடியை எதிர்பாராதவளுக்கு எதிர்க்க கூட அவகாசம் கிடைக்கவில்லை.

பேச வேண்டியதும், தீர்க்க வேண்டியதும் அவள் தொண்டைக்குள்ளே புதைந்து போனது.
பெண்ணவளை முற்றுகையிட்டவன் மேலும் அவள் மேனியில் முன்னேற, அதற்கு தடையாக இருந்த அவளின் ஆடைகளுக்கு விடை கொடுத்தான். அவனை தடுக்க முடியாது தவித்தவளின் மூடியிருந்த கண்களையும் தாண்டி கண்ணீர் பெருக்கெடுத்தது.

தன்னவள் தேகத்தை தீண்டியதும் மோகம் ஊற்றெடுக்க முகத்தோடு முகம் வைத்து இழைந்துக் கொண்டிருந்தவன் கன்னம் அவள் உவர் நீரை உணர்ந்தது.

அவளிடமிருந்து தன் முகத்தை பிரித்து பெண்ணவள் முகத்தை பார்த்தான். அதில் தனது தீண்டல் அவளுக்கு சுகிக்கவில்லை என்பதை கண்டுக் கொண்டவனிடம் இருந்த சிறிது மென்மையும் காணாமல் போனது.

"ஏந்திழையாள் உன் கண்ணீர பார்த்து விலக நான் ஹீரோ இல்ல. எப்போ உனக்கு அப்பா அம்மா தான் முக்கியம்ன்னு சொன்னியோ அப்போ இருந்து உனக்கு நான் ஆன்டி ஹீரோ தான்." என்றவன் அவள் கண்ணீரை கருத்தில் கொள்ளாமல் முன்னேறினான்.

அவனின் முரட்டு இதழின் சங்கமத்தை எதிர் கொள்ள முடியாது அவள் இதழ்களில் இரத்தம் கசிய ஆரம்பித்தது. அப்போதும் இதழ்களுக்கு விடுதலை தராது அவள் இதழ் காயத்திற்கு தனது உமிழ்நீரை மருந்தாக்கினான்.

ஆடையில்லா உடலின் உணர்வுகளை தூண்டி தனது உணர்வுகளுக்கு வடிகாலாக்கிக் கொண்டான்.

அவனின் தீண்டலுக்கு உணர்ச்சியை வெளிக்காட்ட கூடாது என்று நினைத்தவளையும் மீறி அவள் உடல் அவன் கைகளில் உருகி குழைந்தது.

அவளிடம் தேடியது கிடைத்த வெற்றியில் அவளுள் புன்னகையுடன் மூழ்கி முழுவதும் கொள்ளையிட்டு விட்டே விலகினான்.

விலகி படுத்தவனுக்கு தனது நாசியில் சற்று முன் தான் உணர்ந்த பெண்ணின் மனம் இன்னும் இருப்பது போலவே இருக்க, அது அவள் வாசம் தானா என உறுதி செய்ய மீண்டும் அவளை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.

எத்தனை முறை வாசத்தை உள்ளுக்குள் நிரப்பினாலும் போதவில்லை அவனுக்கு. மீண்டும் மீண்டும் மாதுவை நாட மதுவின் போதையை விட மீள முடியாது சிக்கிக் கொண்டான்.

வேங்கையிடம் சிக்கிய புள்ளி மானாக அவள் தவிக்க, அவளின் தவிப்பு வேட்டையிடும் வேங்கைக்கு புரியவில்லையே. தனது பசி மொத்தத்தையும் இன்றோடு தீர்த்துக் கொள்ளும் வேட்கையில் அல்லவா மானை வேட்டையாடிக் கொண்டிருந்தது.

ஒருவழியாக களைப்பில் விலகி படுத்தவனுக்கு அவளின் விலகல் பிடிக்காது போக, உறக்கத்தில் கூட தனது கைக்குள் வைத்துக் கொண்டான்.

தன்னை கையணைப்பில் வைத்துக் கொண்டு உறங்குபவனை பார்த்த மான்சிக்கு தன்னால் சிறிது காலம் கூட இங்கேயே இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

தந்தை தாயிடம் அதிர்ந்து கூட பேசி கண்டிராதவளுக்கு விஜித்தின் அத்து மீறும் இந்த அணுகுமுறை பயத்தை மட்டுமே கொடுத்தது.

விஜித்தின் மற்றொரு முகத்தை பார்த்த பின் தன் காதல் தவறோ என்று இன்றோடு லட்சம் முறையாவது நினைத்திருப்பாள்.

தன் காதல் சரிதான் ஆனால் காதலுக்குரியவன் தான் சரியில்லை என்று அவள் மனம் அவளிடம் கூறிக் கொண்டது.

தன்னையும் பெற்றோரையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவள் இமை பாரமாக தானாகவே மூடிக் கொண்டது. மீண்டும் இமை திறக்கும் போது அறை பிரகாசமாக இருக்க நேரம் மதியம் பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

நேரமாகி விட்டதே என்று மான்சி பதறவில்லை. மாறாக உடல் வலி தீர வெந்நீரில் பொறுமையாகவே குளித்து வேறு உடையணிந்து கீழே வந்தாள். உணவு என்ன இருக்கின்றது என கூறி பரிமாற ஆட்கள் நிற்க வாங்கி சாப்பிட்டவளுக்கு இருக்கும் இடம் சிறைச்சாலை போல இருந்தது.

சாப்பிட்டு முடித்ததும் விஜயாவுடன் சிறிது நேரம் பேசி விட்டு மேலே வந்தவளுக்கு முந்தைய இரவை நினைத்து அறைக்குள் செல்லவே வெறுப்பாக இருந்தது.

குளிக்கும் போது நீர் பட்டு எரிச்சல் அடைந்த இடங்களை வைத்தே காயத்தின் அளவை கண்டுக் கொள்ள முடிந்தது. காதலின் காயமாக இருந்திருந்தால் மான்சி அதை ரசித்திருப்பாள்.

ஒருவனின் மோகத்திற்கு தன் உடல் வளைந்து கொடுத்ததால் உண்டான காயம் என்பதால் அவள் மேனி கூட அவளுக்கு பிடிக்காது போனது.

கணவனே என்றாலும் தன் மனதை மதிக்காதவனிடம் கட்டிலில் கேவலமாக தோற்று விட்டோம் என்ற நினைவே அவள் மனதை வாள் கொண்டு அறுத்தது.

காதல் இருந்த போதும் புனிதமாக போற்றி வைத்திருந்த கற்பு கணவன் என்னும் மிருகத்திற்கு இறையானதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கால் போன போக்கில் இலக்கின்றி நடக்க ஆரம்பித்தவள் இறுதியாக வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தாள்.

மேல இருந்து கீழே பார்த்தவளுக்கு மனதில் இருந்த பாரம் தாங்காமல் குதித்து விடலாமா என்று கூட நினைக்க தோன்றியது. ஒரு நிமிடம் பெற்றவர்கள் நினைவில் தலையை உலுக்கி அந்நினைவை விரட்டியடித்தாள்.

கணவன் தான் காதலித்தவன் என்றாலும் மிரட்டலுக்கு பயந்து வாழும் நிலையை வெறுத்தவளுக்கு தனது சிறு வயது நாட்கள் மனக்கண்ணில் தோன்றி அலைக்கழித்தது.

அன்பான குடும்பத்தில் இளவரசியாக வாழ்ந்தவளுக்கு, இங்கு கைதி போன்ற வாழ்வை நினைத்து அழுகை வந்தது.

மனதின் கவலையில் நண்பகல் வெயில் கூட அவளின் மேனிக்கு உறைக்கவில்லை. மதிய வெயிலில் மாடிக்குச் செல்ல வேண்டும் என்ற யோசனை இல்லாதவள் செருப்பு அணியாமல் வந்திருக்க, சுட்டெரிக்கும் வெயில் அவள் பாதத்தை பதம் பார்க்க ஆரம்பித்தது.

முழுதாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொதிக்கும் தரையில் நடந்தவள் தாமதமாகவே தன் கால்கள் கொப்பளித்திருப்பதை உணர்ந்தாள். அதுவரை உணர்வின்றி வெயிலில் நின்றவளுக்கு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு வலியில் உயிர் போனது.

ஒரு வழியாக அறைக்கு வந்து தன் பாதங்களை பார்க்க வெயிலின் தாக்கம் நன்கு தெரிந்தது. மருந்து எங்கே இருக்கின்றது என்று தெரியாமல் தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள் கலந்து பஞ்சில் தொட்டு பாதங்களுக்கு தடவ அதன் எரிச்சலை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இரவு நெருங்கும் நேரம் மான்சியின் வலி நிறைந்த முகத்தையும், கொப்பளங்கள் நிறைந்த பாதத்தையும் பார்த்துக் கொண்டே வந்த விஜித் ஒன்றும் சொல்லாமல் அறையோடு இணைந்திருந்த அலுவலக அறைக்குச் சென்று விட்டான்.

பெற்றோர் மீது வன்மத்தை கக்குபவன் தன்னிடம் பாசமாகவா இருப்பான் என்று மான்சி நினைக்க அவளிடம் கசந்த முறுவல் மட்டுமே. இரவு உணவு நேரம் வரை விஜித் அலுவலக அறையை விட்டு வெளியே வரவில்லை. அதே போல மான்சியும் பசி இருந்த போதும் கால் வலி அதிகமாக இருக்க கீழேச் செல்லவில்லை.

மான்சி தனக்கு வேலையாள் மூலமாகவாவது உணவு வரும் என்று நினைத்துக் கொண்டிக்க, இரவு உணவிற்காக வெளியே வந்த விஜித் அவளை தாண்டிச் செல்ல, பெண்ணுக்கு காதல் கொண்ட மனம் வலிக்கவே செய்தது. சிறிது நேரத்தில் தனது உணவை முடித்து கொண்டு வந்தவன் உறங்க ஆயத்தமானான்.

"நீ கேட்காம எதுவும் கிடைக்காது ஏந்திழையாள்..." என்று அவளை தன்னிடம் அடிபணிய வைக்கும் நோக்குடனே கேட்டவன் அவளின் முகத்தை பார்க்காமல் மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டான்.

அசைவற்று படுத்திருந்தவன் உறங்கிவிட்டான் என நினைத்துக் கொண்டவள் தனிமையில் தவிக்க ஆரம்பித்தாள்.

அதுவரை விஜித்திடம் உதவி கேட்கலாமா என்று நினைத்து கொண்டிருந்தவள், அவன் பேசிய பின் பசியுடன் அப்படியே படுத்துக் கொண்டாள். படுத்த பின் மேலும் கால் வின்னென்று வலி கொடுக்க எழுந்து அமர்ந்தவளுக்கு உறக்கம் வரவில்லை.

முன்பு ஒரு முறை தாய் கூறியது போல காலுக்கு சற்று உயரம் கொடுத்து படுக்க வலி குறைந்தார் போல இருந்தது. வலி குறைந்தாலும் தூக்கம் மட்டும் கண்ணை எட்டவில்லை.

அடுத்த நாள் காலை விஜித் எழுந்துக் கொள்ளும் வரை விழித்திருந்தவளை பார்த்தவன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. வழக்கம் போல குளித்து உடை மாற்றி அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்.

அவளின் அயர்ந்த முகத்தை பார்த்து மனதில் அவள் மீது இரக்கம் வந்தது போல. போகும் முன் மான்சியை பார்த்து 'ஏதாவது வேண்டுமா?' விழியால் கேள்வி கேட்க, அதை அலட்சியம் செய்தாள்.

"என் கிட்ட இந்த அலட்சியம் நல்லதில்ல ஏந்திழையாள்." என்ற எச்சரிப்புடன் விஜித் வெளியேற, மான்சிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

காலுக்கு பாரம் கொடுக்காமல் சுவரை பிடித்துக் கொண்டே ஓய்வறை சென்று வந்தவளுக்கு நிற்க கூட முடியவில்லை.

தன் வீடாக இருந்திருந்தால் கூப்பிடும் முன் தாய் வந்திருப்பார். ஆனால் இங்கோ தண்ணீர் வேண்டும் என்றால் கூட வீட்டிற்குள்ளே அரை கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்பதை நினைத்தவளுக்கு பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது.

நேற்று மதியம் அரைகுறையாக சாப்பிட்ட வயிறு எனக்கு எதாவது கொடு என்று கூப்பாடு போட அதை கவனிக்க தான் ஆள் இல்லை.

அழுதுக் கொண்டிருந்தவளுக்கு தாயின் வார்த்தைகள் நினைவு வர, கண்ணீரை துடைத்துக் கொண்டாள். வேகமாக தனது மொபைலில் சொமேட்டாவில் தனக்கு பிடித்த உணவுடன் நான்கு பாட்டில் தண்ணீரும் ஆடர் செய்தாள்.

ஆடர் செய்த அரை மணி நேரத்தில் உணவு வீட்டு வாயிலுக்கு வர, அது மான்சி கைக்கு கிடைக்கும் முன் தகவல் விஜித் காதிற்கு சென்றது. சரியாக அவள் சாப்பிட்டு முடிக்கும் நேரம் அவன் வீட்டில் இருந்தான்.

"ஏந்திழையாள் என்ன செய்ற நீ. உனக்கு தேவையானதை வேலைக்காரங்க கிட்ட சொன்னா அவங்க ரூம்க்கே கொண்டு வருவாங்க. அப்புறம் எதுக்கு உன் அப்பா ஐடில என் வீட்டுக்கு ஃபுட் ஆர்டர் பண்ற." என்று வீடு வந்ததும் மான்சியிடம் கோபத்தில் கத்த, அதை பெண் கண்டுக் கொள்ளவில்லை.

காலையில் அவள் தன்னை அலட்சியம் செய்த போது அவள் உடல் நிலைக்காக மன்னித்தவன், இப்போது அவளின் அலட்சிய பாவத்தில் கோபம் கரை கடக்க அலங்கார பொம்மையை தூக்கி எறிந்தான். அதுவோ அவனின் குறி தப்பாது பல லட்சம் மதிப்புள்ள டிவி திரையை உடைத்து அதுவும் உடைந்து சிதறியது.

விஜித் ஆக்ரோஷத்தில் பயந்து எழுந்த மான்சி கால் ஊன்றி நிற்க முடியாமல் தடுமாறி சுவரில் சாய்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

மான்சியின் இருபுறமும் கை ஊன்றி நின்றவனின் முகம் அவளின் முகத்திற்கு அருகே இருக்க, ஆளை துளைக்கும் பார்வையில் பெண்ணவள் நாக்கு வறண்டு மேல் அன்னத்துடன் ஒட்டிக் கொண்டது.

"உன்னோட இந்த அலட்சியத்தை என் கிட்ட காட்டாத ஏந்திழையாள். இன்னொரு தடவை எனக்கு பிடிக்காத ஒன்னு உன்னால என் வீட்டுல நடந்தா அதுக்கான விளைவையும் சந்திக்க தயாரா இரு." என்று விஜித் உடைந்த டிவியை காட்டி கூற, பயத்தில் மான்சிக்கு பேச முடியவில்லை.

விஜித் சென்று வெகு நேரமான பின்பும் அதே இடத்தில் நின்றுக் கொண்டிருந்தவளுக்கு பெற்றவர்களிடம் தஞ்சம் புகுந்திட நினைத்தவளுக்கு, தந்தையின் வீடியோ தடையாக இருந்தது.


ஹாய் டியர்ஸ்
என் கதை ஆன்டி ஹீரோ கதை இல்லன்னா சொன்ன எல்லாரும் வாங்க. இப்போ தெரியுதா விஜித் ஆன்டி ஹீரோ தான்னு.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 14

நேற்று தன்னிடம் வாய் ஓயாது பேசிய மருகளை பார்க்க முடியாத விஜயா தன் மகனிடம் மான்சி எங்கே என்று விசாரிக்க,

"மறுவீடு விருந்துக்கு போயிருக்கா." என்று அவளின் உடல் நிலை பற்றி கூறாமல் பொய்யுரைத்தான்.

மகன் கூறியதை நம்பாத விஜயா சந்தேகமாக பார்த்து 'மான்சியுடன் நீ ஏன் செல்லவில்லை?' என்று சைகையிலே கேள்வி கேட்க,

"உங்கள பார்த்திட்டு போக தான் நான் வந்தேன். மத்தபடி அவ கூட தான் நான் இருக்கேன்." என்று விஜித் கூற, நடக்க முடியாது ஒற்றை அறைக்குள் முடங்கியவருக்கு அதை நம்புவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

கால் ஓரளவு சரியான பின்னும் மான்சிக்கு கீழே வர மனதில்லை. அதே போல விஜயாவை பார்க்க நினைத்தாலும் அவளின் முக வாட்டம் அவரையும் பாதிக்கும் என மாமியாரை சந்திக்கச் செல்லவில்லை. அவ்வப்போது வேலைக்கார பெண்மணி ஏதாவது வேண்டுமா என்று விசாரித்து விட்டுச் செல்ல,

'நிம்மதி வேண்டும் தர முடியுமா?.' என்று கத்த வேண்டும் போல மான்சிக்கு இருந்தது. அவள் முக உணர்வு புரிந்தாலும் அனுபவம் வாய்ந்த வேலைக்காரி தன் நிலை எது என்று தெரிந்து அங்கே நின்றுக் கொண்டார்.

இரண்டு நாட்கள் அறைக்குள்ளே அடைந்து கிடந்தவளுக்கு தனிமையில் கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்காத குறை மட்டும் தான்.
வீட்டிற்குள்ளே இருந்தால் நிச்சயம் தான் பைத்தியமாகி விடுவோம் என்ற பயத்தில் இருந்தவள் நாட்காட்டியை பார்க்க, இன்று ### படத்திற்கான பாடலை பாடித்தர செல்ல வேண்டும் என்பது நினைவில் வந்தது.

கிளம்ப நினைத்தவளுக்கு விஜித் நினைவு வர தானாக அவள் கண்கள் புதிதாக மாட்டப்பட்டிருந்த டிவியை பார்த்தது. அனுமதி கேட்காமல் தன்னால் வெளியேச் செல்ல முடியாது என்று புரிந்துக் கொண்டவள் அவனை காண கீழே இறங்கி வந்தாள்.

மான்சி வரவேற்பறை வருவதற்கும் விஜித் விஜயா அறையில் இருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.

விஜித் வழக்கம் போல அவளை கண்டுக் கொள்ளாமல் உணவருந்த செல்ல, அவன் பின்னே மான்சியும் வந்து சேர்ந்தாள். விஜித் உணவருந்தி முடிக்கும் வரை தனது தட்டில் இருக்கும் உணவை பொறுமையாக அளந்துக் கொண்டிருந்தவள் அவன் சாப்பிட்டு முடித்ததும் பேச ஆரம்பித்தாள்.

"இன்னைக்கு ### படத்துக்கு ஒரு சாங் பாட நான் போகணும்." என்று தயக்கத்தை மீறி தைரியமாக கேட்க,

"நீ போக கூடாது." என்று கூறினான்.

"ஏன் நான் போக கூடாது?" என்று கேட்டவளுக்கு, பொறுமையாக பேச நினைத்தாலும் பொறுமை பறக்க ஆரம்பித்தது.

"என் வொய்ஃப் பாடுறது எனக்கு பிடிக்கல. அண்ட் வொன் மோர் இன்பெர்மேஷன் நீ பாடுறதுக்கு அட்வான்ஸ் கொடுத்த எல்லாருக்கும் செட்டில் பண்ணியாச்சு. நீ கடைசியா பாடுனது என் ப்ரொடக்ஷன்ல ரிலீஸ் ஆகுற மூவியா தான் இருக்கும். சோ டேக் ரெஸ்ட் அண்ட் என்ஜாய் தி லைஃப்." என்று கூறியவனிடம் பேச முடியும் என்று மான்சிக்கு தோன்றவில்லை.

தன் முன் அமைதியாக நின்றவளின் முன் வந்து நின்ற விஜித், ஒற்றை விரல் கொண்டு அவள் முகத்தை உயர்த்தி தன்னை பார்க்க செய்தான்.

"இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கிறத பார்த்தா உன் கால் வலி சரியாகிட்டு போல. இன்னைக்கு நைட் எனக்காக வெய்ட் பண்ணு. எனக்கு பிடிச்ச சேரியா இருந்தாலும் ஓகே, இல்ல உனக்கு பிடிச்ச மாடர்ன் ட்ரெஸ்ன்னாலும் ஓகே தான்." என்று விஜித் அவள் கன்னம் தட்டி கூறி விட்டுச் செல்ல, திகைத்து நின்றவளுக்கு மனது மரத்து போனது.

சொன்னது போலவே இரவில் வீடு திரும்பியவனுக்கு அவள் அணிந்திருந்த உடை எதுவென்பது பிரச்சனையாக இருக்கவில்லை. பெண்ணவள் மேனி தான் முக்கியம் என்பது போல தான் நினைத்ததை அவளிடம் சாதித்துக் கொண்டான்.

நாட்கள் செல்ல செல்ல இவனிடம் போராட முடியும் என்ற நம்பிக்கையே மான்சிக்கு இல்லாது போனது.

பகலில் வேலை என்று அவளை கண்டுக் கொள்ளாமல் கிளம்பிச் செல்கின்றவன், இரவில் நொடியும் பிரிந்திருக்க விடாமல் தன் கை அணைவிலேயே வைத்துக் கொள்கின்றான்.

விஜித் செயல் அனைத்திலும் துளி காதலை கூட தேடி கண்டுக் கொள்ள பெண்ணுக்கு முடியவில்லை. காமத்தை மட்டும் கொடுக்கும் அவனிடம் காதலை யாசித்து எதிர்பார்ப்பது முட்டாள் தனமாக தெரிய தப்பும் மார்க்கம் தேட ஆரம்பித்தாள்.

ஒரு நாள் உணவு உண்ண வந்தவள் அதில் தனக்கு ஒத்துக் கொள்ளாத உணவு இருப்பதை பார்த்து வேறு எடுத்து வரும் படி சமையல் செய்பவரிடம் கூற விஜித் வந்து விட்டான்.

தனக்கான உணவு பரிமாறப்பட்டதும் வேலையாளை போகும் படி கூறியவன் மான்சி தட்டில் இருக்கும் உணவை உண்ணாமல் இருப்பதை கண்டு அவன் கண்கள் இடுங்கியது.

"சாப்பிடு...'' என்று கட்டளை போல் கூற, அதை ஏற்க முடியாது, மறுப்பாய் அவள் தலை அசைந்தது.

"இது சாப்பிட கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க." என்று சொல்லி முடிக்கும் முன் அவள் வாயில் உணவை வைத்து அழுத்தினான்.

திலகன் வெண்பா பேச்சை எடுத்தாலே அவனிடம் சிறிதும் மென்மை இருக்காதே. வாயில் இருந்த உணவை துப்ப முடியாது தவித்த மான்சி விழுங்கிய பின்னே கையை எடுத்தான்.

"இந்த வீட்டுல உன் அம்மா பத்தி பேச்சு இனி வர கூடாது." என்று கூறியவன் கையை கழுவச் சென்று விட்டான்.

மான்சி உண்ட உணவு சில மணி நேரத்திலேயே அதன் வேலையை காட்ட ஆரம்பித்தது. மாலை விஜித் வீட்டற்கு வந்த போது மான்சி அறையில் போர்வையை மூடிக் கொண்டு படுத்திருந்தாள்.

தன்னை புறக்கணிக்க அவ்வாறு படுத்திருப்பதாக நினைத்த விஜித் போர்வையை பறித்தெறிய, பதறி திரும்பியவள் முகம் பார்த்து அதிர்ந்து நின்றான்.

பளிங்கு போல இருந்த முகம் சிகப்பு சிகப்பாக தடுத்து காணப்பட்டது. முகத்தில் மட்டுமல்லாது உடல் முழுவதும் அவ்வாறே இருக்க, மான்சியை முழுவதும் ஆராய்ந்தான்.

"எனக்கு அந்த சாப்பாடு ஒத்துக்காதுன்னு அம்மா சொல்லுவாங்க." என்று காலையில் அவன் கூறியதை மறந்து தன் தாய் பற்றி பேசிவிட்டாள்.

அதுவரை அவளை சற்று பரிதாபத்துடன் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தவன் முகம் இறுகியது. கையில் இருந்த போர்வையை அவள் மீதே எறிந்து விட்டு, தன்னை தூய்மைப்படுத்தி வந்தான்.

"இன்னைக்கு உனக்கு ஃப்ரீ தான். அண்ட் மறக்காம இந்த பெட்ட அண்ட் பில்லோவ மார்னிங் வாஷ் பண்ண சொல்லிடு." என்று கூறி விட்டு பக்கத்து அறைக்குள் புகுந்துக் கொண்டான்.

தன்னை பார்த்ததும் அதிர்ந்து நின்றவனிடம் அக்கறை எதிர் பார்த்து காத்திருந்தவள் அவன் பேசிச் சென்ற வார்த்தையில் மனமுடைந்தாள்.

தன் மீது காதல் இல்லை என்றாலும் குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இல்லாததில் மனம் வலிக்க, சத்தமில்லாது அழுது கரைந்தாள்.

விஜித்தை விட்டு விலக நினைத்தாலும் அவளின் உண்மையான காதல் பிரிந்துச் செல்ல ஒத்துக் கொள்ளவில்லை. எப்படியாவது விஜித் மனதை தன் பக்கம் திருப்ப முடியும் என்று உறுதியும் அவளிடம் குறைய ஆரம்பித்தது.

தந்தைக்காக என்றாலும் அவன் மீது கொண்ட காதலும் தான் மான்சியை துணிவுடன் விஜித்தை திருமணம் செய்ய முடிவெடுக்க வைத்தது.

பெற்றவர்கள் நினைவும் கட்டியவன் இரவை தவிர மற்ற நேரங்களில் தன்னிடம் காட்டும் அலட்சியமும் அவள் உடலையும் மனதையும் பாதிக்க ஆரம்பிக்க, அடுத்து வந்த நாட்களில் சோர்ந்து காணப்பட்டாள்.

உணவும் உறக்கமும் சரியாக இல்லாமல் மான்சி மிகவும் களைத்து காணப்பட, அதை பற்றி விஜயா விசாரித்தாலும் ஏதாவது மழுப்பலாக சொல்லிவிட்டு வந்துவிடுவாள்.

இந்த வீட்டில் தனது பேச்சை கேட்க இருக்கும் ஒரு நபரையும் கஷ்டப்படுத்த விருப்பம் இல்லாது அவரிடம் போலியாக சிரித்து பேச கற்றுக் கொண்டாள்.

மாலை நேரம் தோட்டத்தில் நடந்துக் கொண்டிருந்தவளுக்கு அடி வயிற்றில் சுருக்கென்று வலி தோன்ற, பெண்ணவள் முகத்தில் வேதனைக்கு பதில் புன்னகை தோன்றியது.

எப்போதும் இப்படி வலி வந்தால் அடுத்த சில மணி நேரத்திலேயே வீட்டிற்கு தூரமாகிவிடுவாள். இதை காரணமாக வைத்து ஐந்து நாட்கள் இரவில் விடுதலை கிடைக்கும் அல்லவா என்ற சந்தோஷத்தில் புன்னகைத்துக் கொண்டாள்.

தன்னிடம் சேனிட்டரி பேட் இல்லாததை நினைவுப் படுத்திக் கொண்டவள் வாங்கி வர வெளியேற நினைக்க, காவலாளி கேட்டை திறக்காமல் காரணம் கேட்க ஆரம்பித்தான்.

சில நிமிடத்திலேயே விஜித்திடமிருந்து "எங்க கிளம்பிட்ட?" என்று கேட்டு அழைப்பு வர
"நான் என் கைதியா? சேனிட்டரி பேட் வாங்க கூட உங்க கிட்ட பர்மிஷன் வாங்கியிருக்கணுமா?" கண் முன் தெரியாத கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.

மான்சி கத்தியது காவலாளிகளுக்கும் கேட்க அவர்கள் மெதுவாக நகர்ந்து தங்கள் இடத்திற்குச் சென்று விட்டனர். அவர்கள் சென்றது எதுவும் அவள் கருத்தில் இல்லை. இவனிடம் அனுமதிக்காக நிற்கும் தனது அவலம் மட்டுமே கருத்தில் இருந்தது.

"என்ன ப்ராண்டுன்னு மெஜேச் பண்ணு உன் ரூம்க்கே வரும்." என்று கூறி விட்டு வைக்க, கோபத்தை நடையில் காட்டியவள் அறைக்கு வந்தும், அங்கிருந்த நீரை பருகி கோபத்தை குறைக்க நினைத்தாள்.

மான்சி நினைத்தது போல கோபம் குறையவில்லை ஆனால் சூட்டினால் வந்த வயிற்று வலி நன்கு குறைந்தது.

அன்றிரவு மான்சி எதிர்பார்த்தது போலவே விஜித் அவளை நெருங்கவில்லை. அதே போல மாதந்திர தொந்தரவும் வந்து சேரவில்லை. இரண்டு நாட்கள் தள்ளி போன பின்னே பயம் வர ஆரம்பித்தது.

மூளை ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கிட, அப்படி இருக்க கூடாது என்று அனைத்து கடவுளிடமும் வேண்டுதல் வைக்க, கடவுள் அவள் வேண்டுதலை கண்டுக் கொள்ளவில்லை போல. அடுத்து வந்த மூன்று நாட்களிலும் அவளுக்கு ஏமாற்றமே.

தான் எதிர்பார்த்த மாதிரி இத்திருமணம் நடைபெற்றிருந்தால் நாள் தள்ளி போனதிற்கு சந்தோஷத்தில் குதித்திருப்பாள். ஆனால் விஜித் தன்னிடமும் தன் பெற்றோரிடமும் நடந்துக் கொண்ட முறைக்கு மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை.

அடுத்த நாட்களில் விஜித் தன்னை நெருங்கும் போது வேண்டாம் என்று தடுக்கவில்லை, அதே போல உண்மையையும் சொல்லவில்லை.

குழந்தைக்கு எதாவது ஆகி விடுமோ, என்ற பயம் இருந்த போதும் அவளிடம் மௌனம் மட்டுமே. அவளிடம் எதிர்ப்பு இல்லாமல் போனதில் அவனின் வன்மையும் சற்று குறைவாகவே இருந்தது.

தான் கூறாது போனாலும் விஜித்துக்கு ஒரு நாள் உண்மை தெரிந்து விடும் என்ற பயம் இருந்த போதும் மான்சி வாயை திறக்கவில்லை. உண்மை தெரியும் அன்று தனக்கு சேதாரம் அதிகம் இருக்கும் என புரிந்தாலும் மௌனமாகிவிட்டாள்.

அடுத்த மாதமும் அதே நாட்கள் வர, எப்படி சமாளிப்பது என்று மான்சி யோசிக்க அதற்கு அவசியமே இல்லை என்பது போல விஜித் முக்கிய வேலையாக மும்பைக்குச் சென்று விட்டான்.

விஜித் இல்லாத ஒரு வாரமும் கவலையின்றி வீட்டை சுற்றி வந்தவளுக்கு, அவன் முதல் முறை அழைத்து வந்த அறைக்கு தெரியாமல் கூட செல்ல விருப்பமில்லை.

அந்த அறையில் இருக்கும் தனது போட்டோவிற்கும், விஜித் நடவடிக்கையும் முரண்பட்டிருக்க, மான்சிக்கு மண்டை காய்ந்தது மட்டுமே மிச்சம்.

இதற்கிடையில் விஜித் தயாரிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பெரிய அளவில் ஏற்பாடாகியிருக்க, அப்படத்தின் பாடகி என்ற முறையில் அவளும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும். அதனால் அன்று மட்டும் மான்சி வெளி உலகை காண அனுமதி கிடைத்தது.

விஜித் அனுப்பியதாக வேலை செய்யும் பெண்மணி புடவை ஒன்றை கொடுத்துச் செல்ல, அது பிடிக்காத போதும் மறுத்து போராட மனதின்றி அதையே உடுத்திக் கொண்டாள்.

எளிய அலங்காரத்திலேயே பதுமையாக ஜொலித்தவள் காதில் மட்டும் பெரிதாக கம்மல் ஒன்றை அணிந்துக் கொண்டாள். அது தான் இன்றைய நாகரீகம் என்பதால் அதுவும் அழகாகத்தான் இருந்தது.

மான்சி கிளம்பும் நேரம் விஜித்தும் அவளுடன் இணைந்துக் கொள்ள இருவருக்கும் இடையே பெரிதாக என்று சொல்வதை விட சாதாரண பேச்சே இல்லை என்று சொல்லலாம்.

"நீ மேடையில எதுவும் பேச கூடாது. குறிப்பா உன் அப்பா அம்மா பத்தி." என்று திடீரென்று கேட்ட விஜித் குரலில் சிந்தனை கலைந்தவள் திரும்பி பார்த்தாள்.

"பேசினா என்ன பண்ணுவீங்க. இந்த உடம்பும் உயிரும் அவங்க கொடுத்தது. என் குரல் மூலம் கிடைச்ச பெருமை கூட அவங்க உருவாக்கினது. அதனால அவங்களை பெருமைப்படுத்தாம என்னால இருக்க முடியாது." என்று பெற்றோருக்காக மான்சி பேச,

"இப்போ என்ன எதிர்த்து பேசினதுக்கான தண்டனையை அனுபவிக்க தயாரா இரு." என்று விஜித்தின் குரலால் கிலி பரவ செய்தது.

முன்பு கலந்துக் கொண்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவை விட மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த மான்சிக்கு மனம் தாயை தேடியது.

மேடைக்காக பிரத்தியேகமாக பொருத்தப் பட்டிருந்த விளக்குகளை கண்டவளுக்கு, தன் கைப்பையை திறந்து தேட அதில் கருப்பு கண்ணாடி இல்லை என்பதில் பயம் பன்மடங்கு பெருகியது.

மான்சியின் தடுமாற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தவன் தனது கோட் பையில் கையை விட அதில் அவளது கருப்பு கண்ணாடி இருந்தது. அதை ஒரு முறை தொட்டு பார்த்து சிரித்துக் கொண்டவன் நிகழ்ச்சியில் கவனமானான்.

இன்று பெரிதாக ஏதோ நடக்க போகின்றது என்று மான்சியின் மனம் அடித்து கூறியது. அவள் மனம் கூறியது போலவே அடுத்தடுத்த நிகழ்ச்சிகளும் நடந்தேற ஆரம்பித்தது.




ஹாய் டியர்ஸ்
எனி கெஸ் என்ன நடக்க போகுதுன்னு...
தெரிஞ்சா கமென்ட் பண்ணுங்க...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 15

மேடையில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக ஆரம்பமாக அவள் கவனம் அதில் திரும்பினாலும் மனதில் முணுமுணு என்று தோன்றும் பயத்தை மட்டும் அவளால் விலக்க முடியவில்லை.

படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் முக்கிய நடிகர்கள் என அனைவரும் மேடையேற, மான்சியும் அவர்களுடன் வந்தாள்.

விஜித் நினைத்திருந்தால் அவள் முன் இருக்கையில் இருக்கட்டும் என சொல்லியிருக்க முடியும். ஆனால் அவன் தான் வேறு திட்டத்தில் இருந்தானே.

மேடைக்கு வந்தவளுக்கு அங்கு பொருத்தப்பட்டிருந்த விளக்கின் ஔி கண்களை கூச செய்ய, சரியாக எதையும் பார்க்க முடியாது தடுமாறினாள்.

அவளின் தடுமாற்றத்தை கண்ட விஜித் சிரித்துக் கொள்ள, நேரலையில் மகளையும் அவளின் தடுமாற்றத்தையும் பார்த்துக் கொண்டிருந்த திலகனும், வெண்பாவும் தவித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் தனது தடுமாற்றத்தை மற்றவர் பார்க்காமல் சமாளிக்க நினைத்தவள் முடியாது போக, விஜித் கைகளை பிடித்துக் கொள்ள நினைத்து கையை நீட்டினாள். அவனோ மான்சியின் எண்ணம் புரிந்து விலகிக் கொண்டான்.

கணவன் அப்படி விலகுவான் என்று எதிர்பார்க்காத மான்சி லேசாக தடுமாறி கைக்கு பதிலாக விஜித் அணிந்திருந்த கோட்டை பிடித்து விட, அவள் கைகள் கோட் பையை உரசிச் சென்றது. அப்போது தான் தனது கண்ணாடி அதில் இருப்பதை கண்டுக் கொண்டாள்.

நொடியில் தனது குறை அவனுக்கு தெரியும் என்பதை யூகித்துக் கொண்டவள் கரையுடைத்து வெளி வர துடித்த கண்ணீரை கஷ்டப்பட்டு உள்ளே இழுத்துக் கொண்டாள்.

விஜித் மனைவி என்பதால் மான்சிக்கு அவனுக்கு அடுத்த இருக்கை கொடுக்கப்பட்டிருக்க, அதில் அமர்ந்தவள் மனது வேகமாக சிந்திக்க ஆரம்பித்தது.

தன்னிடம் இருந்த கண்ணாடி அவனை எதிர்த்து பேசிய பின்னே காணாமல் போயிருப்பதை கண்டுக் கொண்டவள் அவன் புறம் மெல்ல சாய்ந்து பேச ஆரம்பித்தாள்.

"என் கண்ணாடிய தாங்க..." என்று மான்சி அருகில் இருப்பவர்களுக்கு கேட்காத வண்ணம் பேச, அதை விஜித் கண்டுக் கொள்ளவில்லை.

"பழி வாங்குறீங்களா?" என்று மான்சி கேட்க,

"குட்... ஒரு வழியா புரிஞ்சிடுச்சு." என்று நக்கலாக விஜித்திடமிருந்து பதில் வந்தது.

"என்ன காயப்படுத்த நினைச்சா இன்னைக்கு காயப்பட போறது நீங்க தான்." என்று முதல் முறை எச்சரிக்கும் தொனியில் பேச விஜித் புருவம் வியப்பில் உயர்ந்தது.

"உன்னால முடியும்ன்னு நினைக்கிற?" என்று விஜித் கேட்க,

"ஏகலைவனால முடியும் போது இந்த ஏந்திழையாளுக்கும் முடியும்." என்று தன்னம்பிக்கையுடன் கூறினாள்.

"என் மூலம் அப்பா அம்மா கஷ்டப்பட்டா, அத விட அதிகமா உங்க மூலம் அத்தையும் கஷ்டப்படுவாங்க." என்று விஜயாவை மையப்படுத்தி பேச, விஜித் கண்கள் யோசனையில் இடுங்கியது.

"என்ன மீறி உன்னால விரல கூட அசைக்க முடியாது ஏந்திழையாள்." என்று கடுமையாக கூற,

"உங்களை மீறி என்னால சிலதை செய்ய முடியும் ஏகலைவன். புராண ஏகலைவன் சதியால தோற்று போனது போல, இந்த ஏகலைவன் அவரோட சரி பாதி கிட்ட தோற்க போறார்." என்று துளியும் பயமின்றி அறைகூவல் விட, விஜித் அவள் கண்ணாடியை அவளிடம் தந்தான்.

தனக்கு எதிராக இவளால் என்ன செய்து விட முடியும் என்று நினைத்தாலும் விஜயாவை வைத்து விளையாட அவன் விரும்பவில்லை.

"மான்சி ஏந்திழையாள் எப்பவும் மேடையில் அப்பா, அம்மா பற்றி பேசாம இருந்ததில்லை. இனி உங்க கணவர் தான் வெற்றியின் காரணம்ன்னு சொல்லுவீங்களா?" என்று தொகுப்பாளர் அவளிடம் நிகழ்ச்சிக்கு சம்மந்தமில்லாது கேட்ட போது விஜித் முகம் அவள் சொல்ல போகும் பதில் என்னவாக இருக்கும் என்று கணக்கிட்டது.

"கல்யாணத்துக்கு அப்புறம் என் பெயருக்கு பின்னாடி வர பெயர மட்டும் தான் மாத்த முடியும், என் வெற்றிக்கான காரணம் எப்பவும் என் அப்பா அம்மா தான். அவங்க இடத்தை யாராலும் ரீப்ளேஸ் பண்ண முடியாது." என்று கூறினாள்.

மான்சி பெற்றோரை புகழ்ந்து பேசியதில் கொதித்துக் கொண்டிருந்த விஜித் அடக்கப்பட்ட கோபத்துடனே மேடையில் இருந்தான்.

"விஜித் சார் அண்ட் மான்சி மேம் நீங்க தான் இன்னைக்கு ட்ரென்டிங் நியூ மேரிட் கப்பிள்ஸ். எங்களுக்காக ஒரு டான்ஸ்... பாட்டு கூட மான்சி மேம் பாடினது தான்." என்று தொகுப்பாளர் கேட்க, மான்சி மறுக்கும் முன் எழுந்துக் கொண்ட விஜித் அவள் முன் கையை நீட்டினான்.

நேரலையில் மறுக்க முடியாது அவன் கையை பற்றி எழுந்தவள் இசைக்கு ஏற்ப அவனுடன் இணைந்தே நடனமாட ஆரம்பித்தாள்.

வயிற்றில் குழந்தை இருப்பதால் அவளுக்கு வேகமாக நடனமாட பயமாக இருந்தது. நடனத்தின் நடுவே தலைசுற்றல் வந்தாலும் சமாளித்துக் கொண்டு அவனுக்கு ஈடு கொடுத்து ஆடி முடித்தாள்.

நிகழ்ச்சி முடிந்து வீடு வந்த அடுத்த நொடி மான்சியை இழுத்துக் கொண்டு அறைக்குள் வந்தான். எதிர்பாரா நேரத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைய நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.

ஏற்கெனவே தலைசுற்றல் வேறு இருக்க, சமாளித்துக் கொண்டு எழ முடியவில்லை.
கீழே விழுந்தவள் முன் ஒற்றை காலை மடக்கி நின்றவன், அவள் பின் கழுத்தில் கை விட்டு முடியை கொத்தாக பிடித்து இழுக்க, வலியில் கண்ணீர் அவள் கன்னத்தில் இறங்கியது.

"வலிக்குது விடுங்க..." என்று அவனிடமிருந்து விடுபட போராடினாள்.

முடியை பிடித்திருந்தவன் பிடி விலக மான்சி எழுந்துக் கொண்டாள். அவள் எழுந்ததும் குரல்வளையை கையால் பிடித்தவன் அங்கு அழுத்தம் கொடுக்க, பெண்ணவள் மூச்சு விட முடியாது திணற ஆரம்பித்தாள்.

"உனக்கு பயந்து நான் அமைதியா இருந்ததா நினைச்சா உன்ன மாதிரி பெரிய முட்டாள் யாரும் இல்ல. என்ன பத்தி இன்னும் முழுசா நீ தெரிஞ்சிக்கல ஏந்திழையாள்." என்று கூறியவன், தனது அலைப்பேசியை எடுத்தான்.

அதில் இருந்த திலகனுக்கு எதிரான காணொளியை அவளிடம் காட்ட, அவளோ அவனிடமிருந்து விலக போராடியபடி அதை பறிக்க நினைத்தாள்.

ஒற்றை கையால் அவளை தடுத்து நிறுத்தியவன் தனது உதவியாளன் ரவிக்கு அழைத்தான்.

"நாளைக்கு சூரியன் உதிக்கும் போது மொத்த தமிழ் நாட்டோட ஹாட் டாப்பிக் திலகன் நியூஸா தான் இருக்கணும்." என்று கூறி விட்டு வைத்து விட்டான்.

"நான் சும்மா உன்ன பயம் காட்ட நினைச்சா நீ என்ன எதிர்க்க நினைக்கிறியா? எனக்கு எதிரா செயல்பட ஒருத்தர் யோசிச்சா அவங்களுக்கு என்ன ஆகும்ன்னு காலையில உனக்கு தெரியும்." என்று விஜித் கூற, மான்சிக்கு அவன் கையின் அழுத்தத்தை மீறி பேச முடியவில்லை.

மான்சியை பிடித்திருந்த கையை உதற அவளோ மீண்டும் கீழே விழுந்தாள். விழுந்தவள் எழ தோன்றாமல் அப்டியே இருக்க, விஜித் கட்டளை காற்றாக பரவ ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலை சமூக வலைதளம் முழுவதும் திலகனை தூற்றி பேச, வீடியோவில் இருக்கும் பெண்ணும் திலகன் மீது புகார் கொடுக்க காவல்துறையும் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

தான் திலகனின் மிரட்டலுக்கு பயந்து ஔிந்திருந்ததாகவும், இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் பிள்ளைக்காக நியாயம் கேட்பதாகவும் கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேசிய பெண்ணுக்கு ஆதரவாக மகளீர் சங்கமும் போராட ஆரம்பித்தது.

தகவல் கேள்விப்பட்ட சரவணன் திலகனை தொடர்பு கொள்ள முடியாது மான்சியை அழைத்தார்.

"என்ன மான்சி இது?" என்று கேட்க,

"இது உண்மை இல்ல அங்கிள்." என்று கண்ணீருடன் கூற மட்டும் தான் முடிந்தது.

"திலகன் பத்தி நீ எனக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. யாரு இத செய்தது." என்று கேட்க, அவரிடம் மறைக்காமல் அனைத்தையும் கூறி முடித்தாள்.

"முட்டாளா நீ... இத முன்வே சொல்லியிருக்கலாம். இப்போ மும்பைல இருந்துக்கிட்டு என்னால எப்படி சாட்சியை தேடி திலகன காப்பாத்த முடியும். நான் அங்க வரேன்." என்று கூறி வைத்து விட்டார்.

சரவணன் வந்தால் போதும், தந்தையை காப்பாற்ற முடியும் என்று நினைத்த மான்சி சற்று நிம்மதியடைந்தாள். அவள் நிம்மதி தான் ஒருவனுக்கு பிடிக்காதே. கழுகு போல அவள் நிம்மதியை கண்டுக் கொண்டான்.

"ரவி மும்பை ### மினிஸ்டர் கிட்ட பேசு. சரவணன் சாருக்கு வேற எதுவும் வேலை இல்ல போல. அதனால அவருக்கு முக்கிய பொறுப்பு இருந்தா கொடுக்க சொல்லு." என்று மான்சிக்கு கேட்கும் படியாக கூற, சரவணன் வரவு விஜித்தால் தடுக்கப்பட்டது.

திலகன் மகளை விட்டு பிரிந்திருக்க, அது தலைமறைவு என்றும் ஊடகங்கள் செய்தியை பரப்ப ஆரம்பித்தது.

இரண்டு நாட்களுக்கு பின்னே திலகன், வெண்பா இருந்த ஊரிலும் வீடியோ பரவ ஆரம்பிக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் கேரள போலீஸால் அவர் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் கைது செய்யப்பட்ட திலகன் சென்னை கொண்டு வரப்படும் முன் அவரை எதிர்த்து கோஷங்களை எழுப்பிக் கொண்டு மக்கள் காவல்நிலையத்தின் முன் கூடி இருந்தனர்.

"எதுக்காக இப்படி செய்றீங்க... உங்களுக்கு என்ன வேணும்?" என்று கண்ணீருடன் கேட்க, செய்தி தாளில் இருந்து பார்வையை உயர்த்தினான்.

"வெண்பா, திலகன் குடும்பம் நிம்மதியா இருக்க கூடாது. இப்போதைக்கு இது மட்டும் போதும். உன்ன பிரிஞ்சு கஷ்டப்படாம செகண்ட் ஹனிமூன் கொண்டாடுன்னா எப்படி? அதான் கொஞ்ச நாள் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம தனி தனியா தனி மூன் கொண்டாடட்டும்." என்று கூறியவன் செய்திதாளை மடித்து அவள் முன் வைத்தான்.

பிரபல பாடகி மான்சி ஏந்திழையாள் தந்தையின் லீலைகள் என்று பெரிதாக அச்சிடப்பட்ட வாக்கியங்களை படித்தவள் கோபத்தில் செய்தி தாளை சுக்கு நூறாக கிழித்து எறிந்தாள்.

"என் அப்பா வெளிய வந்தாகணும்." என்று வெறி பிடித்தார் போல கத்த, சுண்டு விரலால் காதை குடைந்துக் கொண்டு நகர நினைத்தான்.

தன் வேதனையை கண்டுக் கொள்ளாமல் நகர நினைத்தவன் சட்டையை பிடித்த மான்சி "நில்லு டா'' என்று மரியாதை இன்றி பேச, அவளையும் தன் சட்டையை பிடித்திருந்த கையையும் மாறி மாறி பார்த்தான்.

"நீ பார்த்தா பயந்திடுவேனா... இப்போ என் அப்பா வெளிய வரணும்." என்று கோபத்தில் கத்தியவள் சட்டென்று அமைதியானாள்.

மான்சி கத்தியதையும் அவள் அமைதியையும் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்த விஜித்தை தாண்டிக் கொண்டு விஜயா அறையை நோக்கி வேகமாக நடந்தாள் என்று சொல்வதை விட ஓடினாள் என்றே சொல்ல வேண்டும்.

அதுவரை அமைதியாக இருந்தவன் தாயின் அறைக்குள் மான்சி நுழைவதை பார்த்து பதறி அவளை தடுக்க பின் சென்றான்.

விஜித் தடுக்கும் முன் மான்சி விஜயா முன் நின்றாள். மான்சியின் நல்ல நேரம் விஜயா அப்போது தான் விழித்திருந்தார்.

மகனும் மருமகளும் இந்த நேரத்தில் தன்னை காண வந்திருப்பதை கண்டு விஜயா என்ன? என்று பார்வையால் வினவ மான்சி அவர் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

விஜயாவின் கையை எடுத்து தனது வயிற்றில் வைக்க, மருமகள் செயலில் அவள் கூற வந்ததை உணர்ந்தவர் கைகள் அவள் தலையை ஆசீர்வதிப்பது போல உயர்ந்தது.

"நல்ல... நல்லஅஅஅ..." என்று அவர் கூற வந்த வார்த்தைகள் முழு பெற முடியாது தொண்டைக்குள் தடுமாற ஆரம்பித்தது.

"அம்மா ரிலாக்ஸ்..." என்று அவர் மறுபுறம் அமர்ந்த விஜித் தாயை அமைதியாக்க நினைக்க,

"நீ நல்லா இருக்கணும் ஏந்திழையாள்." என்று முழுவதும் கூறி முடித்தார்.

நீண்ட நாட்களுக்கு பின் தாயின் குரலை கேட்டதில் விஜித் விழிகளும் மகிழ்ச்சியில் சற்று கலங்கியிருந்தது.

நீண்ட நேரம் மான்சியின் வயிற்றையும் அவள் முகத்தையும் தொட்டு தடவிக் கொண்டிருந்த விஜயா விழிகள் உறக்கத்திற்குச் செல்ல, விஜித் மான்சியை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

"எதுக்கு அம்மா கிட்ட பொய் சொன்ன. நீ சொல்ற பொய் உன் அப்பாவ காப்பாத்தும்ன்னு நினைக்கிறியா?" என்று விஜித் கர்ஜிக்க,

"நான் பொய் சொல்லல." என்று அவனுக்கு நிகராக அவளும் கர்ஜனை குரலிலே கூறினாள்.

"நீ வெளியே போக தயாராகி வாட்ச்மேன் உன்ன தடுத்ததை மறந்துட்டியா?" என்று அன்றைய சம்பவத்தை நினைவுப் படுத்த,

"ஓ நல்லா ஞாபகம் இருக்கே... ஆனா பாருங்க எனக்கு இன்னும் பீரியட்ஸ் வரல. கல்யாண நாள் லாஸ்ட் பீரியட்ஸ் டேட் எல்லாம் வைச்சு பார்த்தா கிட்டத்தட்ட நான் கர்ப்பமாகி ஒன்பது வாரம் ஆகுது." என்று மான்சி நிதானமாக கூறினாள்.

முதல் முறை வாழ்வில் என்ன எதிர்வினை கொடுப்பது என்று தெரியாது விஜித் உறைந்து நின்றான். மனம் முழுவதும் மகிழ்ச்சி இருந்தும் அதை கோபமாக நிற்கும் மனைவியின் முன் முழுமையாக வெளிக்காட்ட முடியவில்லை.

அரக்கனாக இருந்தாலும் அவனின் அணுவில் உதிர்த்த குழந்தை மீது பிறக்கும் முன்னே பாசம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. விஜித் கைகள் மான்சி வயிற்றை ஒருமுறை தொட்டு பார்க்க உயர்ந்தது.

அவன் செயலை அறிந்து மான்சி விலகி நிற்க, அடுத்த நொடி அவள் அவனின் அணைப்பில் இருந்தாள். அவன் கைகளோ இரவு உடையை தாண்டி அழுத்தமாக அவள் வயிற்றில் பதிந்தது.

"நான் நினைக்கிறது மட்டும் தான் நடக்கும் ஏந்திழையாள்." என்று அழுத்தத்துடன் கூற நினைத்தாலும் நெகிழ்வுடனே வார்த்தைகள் வெளி வந்தது.

"இந்த குழந்தை முழுசா பிறந்து உங்களுக்கும் உங்க அம்மாக்கும் சந்தோஷத்தை கொடுக்கணும்னா, என் அப்பா நிரபராதியா வெளிய வரணும்." என்று இரக்கமில்லாது கூற, விஜித் விழிகளில் அனல் கூடியது.

தான் தந்தையாகியதை நினைத்து முழுமையாக மகிழும் முன் தனது உதிரத்தை அழிப்பேன் என்று கூறியவளை ஒன்றும் செய்ய முடியாது அவள் வயிற்றில் இருக்கும் மகவு தடுத்தது.

"என்ன மிரட்டி பார்க்காத ஏந்திழையாள். என்னை மீறி உன் விரலை கூட அசைக்க முடியாது." என்று கடுமையாக விஜித் கூற,

"என்னால என்ன செய்ய முடியும்ன்னு பார்க்க தானே போறீங்க." என்றவள் நேராகச் சென்றது உணவு அருந்தும் அறைக்கு தான்.

அங்கிருந்த உணவுகளை தட்டில் அடுக்கி விஜித் முன் வந்து நின்றவள் அவன் முகத்திற்கு நேரே தட்டை உயர்த்தி பிடித்தாள்.

"இதுல எனக்கு ஒத்துக்காத ஃபுட் இருக்கு என்ன செய்யலாம்." என்று விஜித்தை பார்த்துக் கொண்டே யோசிப்பது போல பாவனை செய்ய, மான்சி கையில் இருந்த தட்டு விசிறியடிக்கப்பட்டது.

"அச்சச்சோ சாப்பாடு கொட்டிடுச்சே! பேபி அம்மாக்கு பசிக்குது, உனக்கும் பசிக்குதா? ஒரு நாள் பசியோட இரு... உனக்காக உன் அப்பா என்ன செய்வார்ன்னு பார்ப்போம்." என்று தன் வயிற்றை தடவி பேசியவள், விஜித்தை நக்கலாக பார்த்து விட்டு மேலேச் சென்றாள்.

சில நிமிடம் அசைவற்று நின்ற விஜித் மான்சியை பற்றி அறிந்தவனாக தோளை குலுக்கிக் கொண்டு அலுவலகம் புறப்பட்டான்.

எதிரியின் தாயிடமே பரிவு காட்டும் மெல்லிய மனம் கொண்டவள் தனது வயிற்றில் வளரும் சிசுவை வதைக்க நினைக்க மாட்டாள் என்ற நம்பிக்கையுடன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

அவனின் எண்ணத்தின் நாயகியோ அவன் நம்பிக்கையை பொய்யாக்கிக் கொண்டிருந்தாள்.


ஹாய் டியர்ஸ்
மான்சி பக்கம் சப்போர்ட் பண்றவங்க ஒரு லைக்க தட்டிட்டு முடிஞ்சா கமென்ட் பண்ணிட்டு போங்க...
 
Status
Not open for further replies.
Top