ஏகலைவனின் ஏந்திழையாள்
அத்தியாயம் 1
இந்திய மக்கள் பலரும் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா துறை நட்சத்திரங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்துக் கொண்டிருந்தது.
ஒரு படம் திரையில் வெளி வந்து வெற்றி பெற பலரின் உழைப்பு தேவையானதாக இருந்தாலும் மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை முதலில் பிடிப்பது என்னவோ அப்படத்தின் கதாநாயகனும் நாயகியும் தான்.
அவர்களுக்கு அடுத்ததாக படத்தின் இசை அனைவரின் மனதையும் வயது வித்தியாசமின்றி வசியம் செய்து விடுகின்றது. முகம் தெரியவில்லை என்றாலும் குரலினால் பலரின் மனதை வெல்ல கூடிய திறமை இசைக்கு மட்டுமே உள்ளது.
இன்னும் சில வினாடிகளில் இளம் பாடகிக்கான விருது யாருக்கு என்று தொகுப்பாளர் கூறும் முன் அரங்கத்தில் இருந்த பலரும் ஒரே பெயரை உரக்க கூற, தொகுப்பாளரும் தான் கூற வந்த பெயரை கூற மறந்து புன்னகையுடன் நின்றுவிட்டார்.
"மான்சி... மான்சி..." என்று அரங்கமே அதிர ஆரம்பிக்க அதில் உணர்வு பெற்ற தொகுப்பாளர் "தி அவார்ட் கோஸ் டூ மான்சி ஏந்திழையாாள்..." என்று ஒலிவாங்கியில் (மைக்) அரங்கத்தை அதிர வைத்த பெயரையே அறிவிக்க இப்போது கை தட்டும் ஒலி காதை கிழித்தது.
இவ்வளவு ஆர்ப்பாட்டத்திலும் அப்பெயருக்கு உரியவள் முதல் முறை தேசிய அளவில் விருது வாங்குவதற்கான பதட்டம் சிறிதுமின்றி மௌன பதுமையாக எழுந்து, ரசிகர்களை நோக்கி கரம் குவித்து விட்டு மேடையை நோக்கிச் செல்ல, அவளிடம் சாதனைக்கான கர்வம் சற்றும் இல்லை.
"மான்சி ஏந்திழையாள்..." கல்லையும் கசிந்துருக செய்யும் தேன் குரலுக்கு சொந்தமானவள். வயது என்னவோ இருபத்தி மூன்று தான். ஆனால் அவளின் சாதனைகளின் எண்ணிக்கை அவள் வயதை விட பல மடங்கு அதிகம்.
பார்த்த உடன் தமிழ் நாட்டுப் பெண் என்று கூறும் படி காஞ்சிப் பட்டு அவள் மெல்லிய உடலை பாந்தமாக தழுவி இருந்தது. மீன் விழிகள் அங்கும் இங்கும் அலைபாய, அவள் விழிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு காதில் இருந்த ஜிமிக்கியும் அசைந்தாடியது.
எட்டு வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாட ஆரம்பித்த போது தொடங்கியது அவள் இசை பயணம். சில வருடங்கள் தடைகளை சந்தித்த போதும் அவளின் குரல் தடைகளை தாண்டி விண் நோக்கி அவளை சிறகடிக்க செய்தது.
பிரபல இசையமைப்பாளர் ஒருவர் விருதினை வழங்க அதை புன்னகையுடன் பெற்றுக் கொண்ட மான்சி திரும்ப, தொகுப்பாளரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.
"ஹாய் மான்சி மேம்... நீங்க பாடினா தேன் மாதிரி இனிக்கிற உங்க குரல், பேசினா எப்படி இருக்கும்ன்னு ரசிகர்களோட சேர்த்து எனக்கும் கேட்க ஆசை. சோ எங்களுக்காக இரண்டு வரி பேசணும்." என்று ஆங்கிலத்தில் கூற, அரங்கத்தின் மொத்த விளக்குகளும் மான்சியை நோக்கி திரும்ப அவளிடம் சிறு தடுமாற்றம்.
உள்ளுக்குள் தோன்றிய சிறு நடுக்கத்தை மறைத்துக் கொண்டு மான்சி புன்னகைக்க அவளிடம் ஒலிவாங்கி நீட்டப்பட்டது.
"ஹாய் எவ்ரி ஒன்... எனக்கு இந்த வெற்றி கிடைக்கிறதுக்கு ரசிகர்கள் உங்க ஆதரவு மட்டும் காரணம். தேங்க் யூ சோ மச்." என்று கூறி விட்டு தனது பேச்சை முடிக்க நினைக்க,
"மான்சி மேம் உங்களுக்கு பிடிச்ச விஷயம் எதாவது மூணு சொல்லுங்க." என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
"என் கூடவே எல்லா நேரமும் இருக்கிற என் அம்மா, அப்பா அப்புறம் பாட்டு. இதை தவிர வேற எதுவும் எனக்கு பிடிக்காது. இந்த மூணும் இல்லாம என்னால மூச்சு கூட விட முடியாதுன்னு சொல்லலாம்." என்ற பதில் அவள் மனதிலிருந்தே வந்தது.
"உங்க கல்யாணம் எப்போ?" என்று பிரபலங்களிடம் கேட்கப்படும் வழக்கமான கேள்வி வந்து விழுந்தது.
"அம்மா முடிவு பண்ணும் போது..." என்று நொடியும் தாமதிக்காமல் பதில் வந்து விழுந்தது. வினாடி தாமதித்தாலும் அடுத்த கேள்வி வந்துவிட கூடும் என்பதால் மான்சி வேகமாக தனது இருக்கையை நோக்கி நடையிட்டாள்.
மகளின் நடையில் இருந்த பதட்டத்தையும் தடுமாற்றத்தையும் கண்டுக் கொண்ட வெண்பா விரைந்துச் சென்று வாழ்த்து கூறுவது போல அணைத்துக் கொண்டார்.
"ம்மா... பயமா இருக்கு. நாம சீக்கிரம் இங்க இருந்து போயிடலாம்." என்று நடுங்கும் குரலில் கூற, மகளின் முதுகை தடவி கொடுத்த படி இருக்கைக்கு அழைத்து வந்தார்.
"மான்சி ரிலாக்ஸ். இது உனக்கான நாள் மட்டும் இல்ல எனக்கானதும் கூட. என்னோட இருபது வருச தவத்துக்கான பலன் கிடைக்கும் போது அத உன் அர்த்தமில்லாத பயத்தால தடுக்காத. அம்மா உன் கூடவே தான் இருக்கேன் எதுக்கும் பயப்படாத ஓகே. ஸ்டே ஸ்ட்ராங் மை ஏந்திழையாள்." என்று புன்னகை முகமாக கண்டித்து பின் ஆறுதல் கூற, தாயின் வார்த்தையில் மான்சி தன் மன உணர்வுகளை மறைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
விளக்கின் வெளிச்சத்தில் அமர்ந்திருந்த மான்சி விழா முடிந்து வெளியேறும் வரை கூட பயம் விலகவில்லை. தனது பயத்தை மற்றவர்களுக்கு காட்டி விட கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தவள் சுற்றி நடக்கும் எதையும் கவனிக்க தவறினாள்.
தான் ஒருவனின் கண்காணிப்பில் உள்ளோம் என்பது கூட பாவையின் கருத்தில் பதியவில்லை. வேட்டையாட தயாராக இருக்கும் வேங்கையின் கண்ணில் சிக்கிய புள்ளிமான் போலவே மான்சி அவன் கண்களுக்கு தெரிந்தாள்.
நிகழ்ச்சிக்கு மான்சி வந்தது தொடங்கி இப்போது வரை அவள் ஒவ்வொரு அசைவையும் நேரலையாக தனது கணினி திரையில் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் விஜித் ஏகலைவன்.
மகாபாரதத்தில் வரும் ஏகலைவன் குறியை தன் ஒரே அம்பால் வீழ்த்துவதில் சிறந்தவன் என்றால் இந்த விஜித் ஏகலைவனோ எதிரிகளை ஒரே வியூகத்தில் வீழ்த்துவதில் தலை சிறந்தவன்.
தன் மூதாதையர்கள் கோடிகளில் சேர்த்து வைத்த சொத்துக்களை பல மடங்கு பெருக்கி, அதன் மூலம் அவன் கால் ஊன்றாத துறையே இல்லை எனலாம். பணம் சம்பாதிக்க விஜித் தேர்ந்தெடுத்ததில் சினிமா துறையும் ஒன்று தான்.
நேரடியாக சினிமா துறையில் எதையும் செய்வதில்லை என்றாலும் பட பிடிப்பில் தொடங்கி அது வெளியீட்டு விழா வரை அவனின் அனுமதியின்றி எதுவும் அசையாது என்னும் அளவில் அத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
தான் விடும் மூச்சுக் காற்று கூட பணமாக மாற்று வித்தையை நன்கு கற்று தெரிந்தவன். ஒன்றை பத்தாக மாற்றும் இடத்தில் மட்டும் பணத்தை செலவு செய்து பழகியவன், இன்று பல கோடி செலவு செய்து இந்த விருது நிகழ்ச்சியை நடத்த ஒரே காரணம் மான்சி ஏந்திழையாள் மட்டுமே.
மான்சியை அவள் இருக்கும் இடத்திலிருந்தே தூக்கியிருக்க அவனால் முடியும். ஆனாலும் அப்படி செய்யாமல் அவளை தன் இடத்திற்கு வரவழைக்க நினைத்தான். அதற்காகவே அவளுக்காகவே இந்த விழா.
மான்சியின் முகத்தை மட்டுமே திரையில் பார்த்துக் கொண்டிருந்த விஜித் தனது கைப்பேசியை எடுத்து "அவார்ட் பங்ஷன் முடிஞ்சதும் மான்சி ஏந்திழையாள் என் சீக்ரெட் கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கணும்." என்று கூறி விட்டு வைக்க, மான்சி முகத்தை திரையில் பார்த்ததும் அவன் விழிகளில் பளபளப்பு கூடியது.
"பாவம் புள்ளி மான் குட்டி இந்த சிங்கத்தோட குகைக்குள்ள வந்து சிக்கிடிச்சே..." என்று பரிதாபப்படுபவன் போல பேசினாலும் வார்த்தையில் வன்மம் மட்டுமே கொட்டி கிடந்தது.
அவன் முகம் பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும் அதில் இருக்கும் கடினத்தின் அளவை அவனை தவிர யாரும் அறிய முடியாது. சிரித்துக் கொண்டே எதிரிகளை சிதறடிக்க கூடியவனாயிற்றே.
நிகழ்ச்சி முடிந்த பின் நட்சத்திர பிரபலங்கள் அனைவரும் சிறப்பு வழியில் வெளியேற்றப்பட, வெண்பா தனது மகளுக்காக காத்திருந்தார். நிமிடங்கள் பல கரைந்த பின்னும் மகள் வராததில் பதட்டமானார். நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் மீண்டும் செல்ல மான்சி சென்ற தடம் தெரியவில்லை.
ஏகலைவனின் ஆட்கள் மான்சியை நெருங்குவதற்கு முன்பே வேறு யாரோ அவளை கடத்தியிருந்தனர். இதை அவன் ஆட்கள் அவனிடம் தெரிவிக்க
"நம்ம வேலை மிச்சம். எங்க போறாங்கன்னு வாட்ச் பண்ணுங்க." என்று கட்டளையிட்டான்.
யாரிடம் கேட்டாலும் மான்சி பற்றிய தகவல் சரியாக கிடைக்கவில்லை. நேரம் செல்ல செல்ல பயத்தில் நடுங்க ஆரம்பித்த வெண்பா தன் கணவன் திலகனுக்கு அழைத்து விசயத்தை கூற, அடுத்ததாக அவர் கூறியதின் பாதகங்கள் புரிந்தாலும் மகளுக்காக செய்ய ஆரம்பித்தார்.
மகளின் பாதுகாப்பிற்கு முன் வரக்கூடிய பின் விளைவுகள் எதுவும் அந்த தாய் தந்தைக்கு பெரிதாக தெரியவில்லை. காவல்துறையில் புகார் அளிப்பதன் மூலம் மான்சி காணாமல் போனது வெளியே தெரிந்தால் அவதூறு செய்திகள் பரவ கூடும் என்றாலும் தற்போது மகளின் நலம் மட்டுமே அவர்களுக்கு முக்கியமானது.
திலகன் நேரத்தை கடத்த விரும்பாது தனது காவல்துறை நண்பனை அழைத்து விசயத்தை கூற அடுத்த நொடி விசாரணை ஆரம்பமானது. நடப்பதை அறிந்த விஜித் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
"அவங்க என்ன செய்யணுமோ செய்யட்டும். யாரும் அவங்கள தடுக்க வேண்டாம்." என்று மட்டும் கூறி விட்டு அலைப்பேசியை வைத்து விட்டான்.
"பரவாயில்ல மானம் மரியாதைன்னு யோசிக்காம உன் அப்பா அம்மா உன்ன பத்தி யோசிக்கிறாங்க. அவ்வளவு பாசம்." என்று இகழ்ச்சியாக கூற, இது எதையும் உணர முடியாது வகையில் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் வெண்பா திலகனின் செல்ல மகள்.
குடும்பத்தினரிடம் கூட காட்டாமல் பொத்தி பொத்தி வளர்த்த மகள் காணாமல் போனதில் கலங்கி நின்ற இருவரும் வழி தெரியா காட்டில் தனித்து நிற்பது போல தவித்து நின்றனர்.
தவம் போல் வளர்த்த மகளின் நிலையறியாது தவித்தவர்களுக்கு கவலை கொள்ள கூட நேரமில்லாது காவல்துறையும்,ஊடகங்களும் சூழ்ந்துக் கொண்டனர். அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் சமயம் மகளை தேடும் பணியும் இருக்க அதில் மனதின் கவலையை மனதோடு புதைத்துக் கொண்டனர்.
மறந்து விட்ட சொந்தங்கள் இனி தொடர்கதையாக தொடர போவதையும் அதனால் தங்கள் வாழ்க்கை மாற போவதையும் யார் அவர்களிடம் கூறுவது.
பொழுது விடிவதற்கு முன் மான்சி கடத்தப்பட்ட செய்தி காற்றை விட வேகமாக ஊடகங்கள் பரப்ப, செய்தியுடன் வதந்திகளும் சேர்ந்தே பரவியது.
"அந்த வெண்பா நம்ம கிட்ட அடங்காம ஆடுனா. அதான் கடவுள் அவ பொண்ணு மூலமா கூலி கொடுத்துட்டாரு. இந்நேரம் எவன் கூட ஓடி போயிருக்காளோ." என்று உறவுகளே மான்சியை பற்றி முழுதும் தெரியாத போது அவள் ஒழுக்கத்தை களங்கப்படுத்தி பேசிக் கொண்டிருந்தனர்.
இப்படி அனைவரின் சிந்தனையையும் நிறைத்த மான்சி சிந்திக்கும் நிலையில் இல்லாது இருட்டில் மூழ்கியிருந்த பாழடைந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாள்.
தொடரும்...