ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஏகலைவனின் ஏந்திழையாள்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 21

"என் மேல காதல் இல்லன்னாலும் உங்க பிள்ளைக்காக என்ன பொறுத்து போவீங்கன்னு தப்பா நினைச்சுட்டேன். அம்மா சொன்ன மாதிரி இன்னொரு வாய்ப்பு கொடுத்தா மனசு மாறுவீங்கன்னு நினைச்சு சும்மா உங்கள சீண்டி விளையாடுனது கூட உங்களால தாங்கிக்க முடியல. ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோங்க நீங்க மிரட்டினா பயப்படுற பழைய மான்சி நான் இல்ல." என்று கூறியவள், ஒரு கையால் வயிற்றை பிடித்துக் கொண்டு வேகமாக தொலைப்பேசி நோக்கி நடந்தாள்.

"ரிப்போர்ட்டர்ஸ் அண்ட் மீடியா எல்லாரையும் வீட்டுக்கு முன்னாடி வர சொல்லுங்க." என்று செக்யூரிட்டியிடம் கூறி விட்டு வைத்தாள்.

அவர்களை வர கூறிய இடத்திற்கு மான்சி சென்று நிற்க அவளுடன் அவளுக்கு துணையாக பெற்றவர்களும் வந்து நின்றுக் கொண்டனர்.

பின்னே திரும்பி விஜித்தை பார்த்து நக்கலாக சிரித்தவள் ஊடகத்தின் கேள்விக்கு பதில் சொல்ல தயாராகவே இருந்தாள்.

அவள் பார்வையே எனக்கு துணை என் பெற்றவர்கள் மட்டுமே என்று விஜித்திற்கு சொல்லியது. அதை புரிந்துக் கொண்டவன் நிலமையின் தீவிரத்தை எப்படி தடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

வந்தவர்கள் இடைவிடாது தங்கள் கேள்விகளை மான்சியிடம் கேட்க, ஆத்திரத்தில் விஜித் நரம்புகள் புடைத்துக் கொண்டு நின்றது.

நடந்தது இது தான்.

மான்சியின் மருத்துவ அறிக்கையின் நகல் அனைத்து ஊடகங்களுக்கும் இன்று காலை சென்றடைந்திருக்க, அவளின் பார்வை திறன் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டு நின்றனர்.

'மான்சி மேடம் உங்களுக்கு பகலிலும் வெளிச்சத்திலும் பார்வை தெரியாதுன்னு வந்த தகவல் உண்மையா..?'

'அதனால தான் நீங்க கண்ணாடி இல்லாம வெளிய வரதில்லையா..?'

'இந்த உண்மை விஜித் சாருக்கு தெரியாம மறைச்சு தான் கல்யாணம் செய்தீங்களா..?'

'உண்மை தெரிஞ்சு வந்த சண்டையால தான் நீங்க இரண்டு மாதம் அம்மா வீட்டுல இருந்தீங்களா..?' என்று கேள்வி கணை பறக்க அமைதியாக அனைத்தையும் எதிர் கொண்டாள்.

"எனக்கு டே ப்ளைன்ட்னஸ் இருந்தது உண்மை தான். பட் இப்போ எனக்கு கண் நல்லா தெரியும். இரண்டு சர்ஜெரி கண்ணுக்கு செய்திருகேன். நான் இத சொல்லாம விட்டது ஒன்னும் பெரிய கொலை குற்றம் இல்ல.
என் குறை எந்த விதத்திலையும் என் பாட்டை ரசிக்கிற ரசிகர்களை பாதிக்காது. அண்ட் என்ன பற்றி எல்லாம் தெரிஞ்சு தான் விஜித் என்ன கல்யாணம் செய்தார்." என்று மான்சி துணிவுடன் பத்திரிக்கையளர்களை எதிர் கொண்டாள்.

துணிவு கொண்டவர்களை உடைப்பது தானே கேள்வி கேட்பவர்களின் வேலை. அடுத்த சில கேள்விகள் மான்சி கண்களோடு சேர்த்து காதையும் மூடிக் கொள்ள செய்தது.

மான்சிக்கு பாடங்களில் பாட முதல் வாய்ப்பு கொடுத்த நேத்ரன் தொடங்கி அனைவரும் குறுகிய கால கட்டத்தில் எதற்காக குறையுள்ள பெண்ணான தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று சில தகாத வார்த்தைகளையும் சேர்த்து கூற விஜித் பத்திரிக்கையாளர்கள் முன் வந்தான்.

"இனஃப் இதுக்கு மேல ஒரு கேள்வி வந்தாலும் என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியிருக்கும். உங்க எல்லாருக்கும் என்ன பிரச்சனை?

மான்சி ஏந்திழையாள் மாதிரி தன் குறையோட சொந்த வாழ்க்கையிலும் வெளி உலகத்திலும் போராடி சாதித்த சாதனையாளர்கள் இந்த உலகத்தில நிறைய பேர் இருக்காங்க. அப்படிபட்ட பெண்கள் சாதிக்க தடையா இருக்கிறதே இதோ இப்போ நீங்க கேட்டீங்களே இந்த மாதிரி கேள்வி தான். பெண்களும் சாதிக்க திறமையும் கடின உழைப்பும் மட்டும் போதும்ன்னு எப்போ உங்கள மாதிரியான ஆட்கள் உணருவீங்களோ அப்போ தான் பெண்கள் நிம்மதியா வேலை செய்ய முடியும்.

ஒரு பெண்ணு சாதிச்சா அவளோட திறமையால் அடைந்த அந்த வெற்றிய விட, அவ ஒரு பொண்ணு அது மட்டும் தான் உங்களுக்கு தெரியுது ரைட்.

என் மனைவிக்கு கிடைச்ச மாதிரி ஒரு அப்பா அம்மா எல்லா பொண்ணுங்களுக்கும் கிடைக்கணும். அப்போ யாருக்கும் நீங்க கேட்ட மாதிரி கேள்வி கேட்க தோணாது." என்று பேசிய விஜித் ரவியை பார்த்து கண் ஜாடை காட்டி விட்டு மான்சியை கையணைவில் வைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தான்.

வரும் போது ரவி கையில் திணித்த காகிதத்தை பிரித்து படித்தவன் சட்டை பையில் பத்திரப்படுத்தினான்.

வீட்டிற்குள் வந்ததும் விஜித் மூவரின் முகத்தையும் பார்க்க யாரிடமும் உயிர்ப்பில்லை.

"என்ன மன்னிச்சிடுங்க மாமா, அத்தை." என்று வெண்பா, திலகன் இருவரின் காலிலும் விஜித் விழ, இதை எதிர்பாராத மூவரும் பதறினர்.

"ப்ளீஸ் எழுந்திரிங்க..." என்று திலகன் கூறிய பிறகே எழுந்தவன் அனைவரின் முகத்தையும் ஆழ்ந்து பார்த்தான்.

"நான் மட்டும் தான் சரின்னு ஒரு ஆணவம் எனக்குள்ள எப்பவும் இருக்கும். அது இன்னைக்கு மொத்தமா இல்லாம போயிட்டு. என்னோட தவறான புரிதல், அதனால நான் உங்க கிட்ட நடந்துக்கிட்டது எல்லாம தப்பு தான். அதுக்கு மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்ல.

ஏந்திழையாள் அப்பா அம்மா விட அதிகம் பாசம் கொட்டுற அப்பாவா இருக்கிறது கஷ்டம் தான். ஆனா நான் அவங்க மாதிரி இருக்க முயற்சி செய்றேன். இந்த முறை நான் தப்பு பண்ணல. இதுக்கு காரணம் உங்க அக்கா பையனும், டாக்டர் வருணோட பையன் தருணும் தான்." என்று கூற, நிலையை முழுதாக புரிந்துக் கொள்ளவே மூவருக்கும் நேரம் தேவைப்பட்டது.

பெண் தராத கோபத்தில் தருண் மற்றும் அவனது பள்ளி நண்பனான திலகனின் அக்காள் மகனும் சேர்ந்தே இதை செய்திருந்தனர்.

அலுவலகத்தில் இருந்த மான்சியின் மருத்துவ அறிக்கையை அழித்து விடும் படி விஜித் கூறியிருக்க, ரவி தவறுதலாக அதை மேசையில் வைத்து விட்டு உணவருந்தச் சென்று விட்டான்.

திலகனின் மூத்த சகோதரியின் மகன் தனது கல்லூரி தோழனான ரவியை பார்க்க வந்தவன் கண்ணில் அந்த மருத்துவ அறிக்கை விழுந்தது.

அதில் தருண் மருத்துவமனை விபரத்தை பார்த்தவன் அவனிடம் தேவையான தகவலை திரட்டி அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி விட்டான்.

நடந்ததை கேள்விப்பட்டதும் திலகன் தனது சகோதரி வீட்டிற்குச் சென்று சண்டையிட்டு, சில வருடங்களுக்கு முன் கொடுத்த தனது பணம் நாளை வர வேண்டும் என்று மிரட்டி விட்டே வந்தார்.

திலகன் வீடு வரும் வரை விஜித் அங்கே தான் இருந்தான். இரவு உணவு நேரம் யாரும் அழைக்காமல் சென்று அமர வெண்பாவும் மகளை பார்த்து விட்டு பரிமாறினார். அனைத்தையும் கேட்டு வாங்கி உண்டு பாராட்டவும் செய்ய மான்சி தான் குழம்பி போனாள்.

இன்று நடந்ததற்கு கணவன் காரணம் இல்லை என்று தெரிந்தது, தாய் தந்தையிடம் அவன் மன்னிப்பு கேட்டது என இரண்டில் கணவன் மீது இருந்த கோபம் குறைந்து விட்டது. ஆனாலும் அவளுக்கு முன்பு அவன் செய்த எல்லாவற்றையும் மறக்க சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.

இதுவரை பெற்றவர்களிடம் சாதாரணமாக பேசியிராதவனின் உரிமையான நடவடிக்கை தான் அவளை யோசிக்க வைத்தது.

"சாப்பாடு சூப்பர். மார்னிங் எனக்கு சாப்பாடு லைட்டா இருந்தா போதும். அத ஈக்குவல் பண்ண மதியம் நான்வெஜ்ல கொஞ்சம் ஹெவியா சமைச்சிடுங்க. ஃப்ரூட் சேலட் மஸ்ட். நைட் டின்னர் யோசிச்சு சொல்றேன்." என்று வெண்பாவிடம் கூறி விட்டு மான்சியை பார்க்க, அவளும் விஜித் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன?" என்று விஜித் கேட்க,

"அத நான் கேட்கணும். உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்க,

"இப்போதைக்கு மாமியார் வீட்டு விருந்து வேணும்." என்று கூறியவன் அவளை கடந்து வாசல் நோக்கிச் சென்றவனிடம் விஜித் கார் ட்ரைவர் சில பெட்டிகளை கொடுத்து விட்டுச் செல்ல, அவற்றுடன் மான்சி அறைக்குச் சென்றான்.

பெட்டியுடன் விஜித் செல்வதை பார்த்த மூவரும் அவன் இங்கு தான் இருக்க போகின்றான் என்பதில் ஒருவர் மற்றவரை பார்த்துக் கொண்டனர்.




ஹாய் டியர்ஸ்
கொஞ்சம் சொந்த வேலையில் மட்டிக்கிட்டேன். இன்னும் இரண்டு அத்தியாயம் தான் இருக்க. கருத்து சொல்லுங்க பிகிலு...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 22

விஜித்தை தொடர்ந்து வேகமாக மாடி ஏறி வந்த மான்சிக்கு மூச்சு வாங்கியது.

"ஏந்திழையாள் தண்ணி குடி... இப்படியா வேகமா மாடிக்கு வருவ. அத்தை மாமாக்கிட்ட சொல்லி கீழ இருக்கிற ரூம்க்கு ரெண்டு பேரும் ஷிஃப்ட் ஆகணும்." என்று கூறி பாட்டிலை நீட்ட அதை தட்டி விட்டாள்.

"உங்க அடுத்த திட்டம் தான் என்ன விஜித்? எதுக்காக இந்த ட்ராமா?" என்று மான்சி கோபமாக கேட்க, விஜித் முகம் மாறியது.

"லுக் அட் மீ ஏந்திழையாள்... உன் அம்மா அப்பாவ தப்பா புரிஞ்சிக்கிட்டு பழி வாங்க நினைக்கும் போது கூட நான் யார் கிட்டவும் நடிக்கல." என்று இறுக்கமாக பேச,

"அதான் கேட்கிறேன் அப்போ பாசமா இருக்கிற மாதிரி நடிக்காத நீங்க இப்போ எதுக்காக நடிக்கிறீங்க..?" என்று கேட்டாள்.

"எனக்கு எப்பவும் நடிக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை ஏந்திழையாள். அம்மா உயிருக்கு போராடும் போது மகனா அவங்கள மட்டும் யோசிச்சு செய்த தப்ப இப்போ சரி செய்ய பார்க்கிறேன்." என்று விஜித் அவள் கண்களை பார்த்துக் கொண்டே கூறினான்.

"நடந்த உண்மை உங்களுக்கு சில நாட்களுக்கு முன்னே தெரியும். ஆனா அப்போ இல்லாத மாற்றம் இன்னைக்கு ஏன் வந்திருக்கு..?" என்று மான்சி வினவ, தலையை அழுத்தமாக கோதிக் கொண்ட விஜித் திரும்பி நின்றான்.

"உண்மை தெரிஞ்சாலும் இறங்கி வர என் ஈகோ இடம் கொடுக்கல. ஒரு பிரச்சனை வரும் போதே நீ உன்ன பெத்தவங்க கிட்ட ஓடி வரன்னா அவங்க உனக்கு கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அந்த நம்பிக்கை என் மேலயும் உனக்கு வர நான் என் ஈகோல இருந்து இறங்கி வந்திட்டேன். அவ்வளவு தான்..." என்று கூறியவன் அவள் கையை பிடித்து கட்டிலில் அமர்த்தியவன் தானும் அவளை நெருங்கி அமர்ந்தான்.

விஜித் கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்டவள் விலகி அமர்ந்தாள்.

"நம்ம கதையில் லவ் அண்ட் ரொமான்ஸ் ரொம்ப கம்மியா இருக்குல்ல." என்று இருவருக்கும் இடையே உள்ள இடத்தை நிரப்பிக் கொண்டு விஜித் கூற,

"அதுக்கு நான் காரணம் இல்ல. என்னோட எதிர்பார்ப்பு எதுவும் உங்க கூட இருந்த நாட்களில் எனக்கு கிடைக்கல." என்று மான்சி பெருமூச்சுடன் கூறினாள்.

"ஐ நோ ஏந்திழையாள் நான் மட்டும் தான் காரணம். என்னால நடந்து முடிஞ்சத மாற்ற முடியாது. பட் இனி நடக்க போறது நல்லபடியா கொண்டு போகலாம்." என்று கூற, மான்சியிடம் அதற்கு பதில் இல்லை.

மனது வேறு ஒன்றை விஜித்திடம் எதிர் பார்த்தது. அதை அவனிடம் கேட்டு பெறுவதில் அவளுக்கு விருப்பம் இல்லை. அவனாக வரட்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விட்டாள்.

சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்த மான்சியின் முகத்தை தன் புறம் திருப்பிய விஜித் "நீ மனசில நினைக்கிறத சொல்லு ஏந்திழையாள்." என்று மென்மையாகவே கேட்டான்.

"மனசில இருக்கிறத எல்லாம் பேசுனா இங்க காயங்கள் மட்டும் தான் மிஞ்சும். உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க நானும் சொல்றேன்." என்று கூற அவள் என்ன சொல்லப்போகின்றாள் என்று ஓரளவு கணிப்பு இருந்தாலும் அவள் வாய் வார்த்தைக்காக காத்திருந்தான்.

"தப்பு செய்யாம கிட்டத்தட்ட ஏழு மாதம் என் குடும்பம் உங்களால கஷ்டப்பட்டிருக்கோம். இதுக்கு என்ன சமாளிப்பு சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியல.

சொந்தம் எதுவும் வேண்டாம்ன்னு விஜயா அத்தை வீட்ட விட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணும் போது இருந்த உறுதி கடைசி வரைக்கும் இருந்திருக்கணும். கொஞ்சம் கூட லாஜிக்கா யோசிக்காம முடிவெடுத்து ஓடி போனவங்களுக்கு சொந்தம் வேணும்னா அதுக்கு நானும் என்ன பெத்தவங்களும் தான் பலி ஆடா?

உண்மைய சொல்லணும்னா அவங்க சுயநலத்தோட மொத்த உருவம். உங்களுக்கு நல்ல அம்மாவா இருந்திருந்தாலும் எனக்கு அவங்க சுயநலவாதியா தான் தெரியுறாங்க. அண்ட் அவங்க சுயநலம் தெரியாம ஆடுன நீங்க ஒரு முட்டாளா மட்டும் தான் தெரியுறீங்க.
துளி காதல் கூட இல்லாத உங்க முட்டாள் தனம் தெரியாம உங்க கிட்ட சிக்கின நான் தான் பெரிய முட்டாள். என்னோட சேர்த்து என் அப்பா அம்மாவையும் கஷ்டப்படுத்திருக்கிறேன்." தனது மனதில் இருந்த மொத்த ஆதங்கத்தையும் இறக்கி வைத்த மான்சி விஜித் முகத்தை பார்க்க அதுவோ சலனமின்றி இருந்தது.

"நான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தது ஏழு வயசு குட்டிப் பொண்ணு போட்டோவை. அதை பார்த்து எனக்கு எப்படி காதல் வரும். அம்மாக்காக மட்டும் தான் உன்ன கல்யாணம் பண்ண நினைச்சேன். ஆனா எனக்காக தான் உன்ன கல்யாணம் செய்தேன். இது உண்மை மான்சி. என் மனசில இருக்கிற இருக்க போற பொண்ணு நீ மட்டும் தான்.

அன்னைக்கு பீச்ல உன் கிட்ட ஏன் சத்தியம் கேட்டேன்னு தெரியுமா? எனக்கே முதல் தடவை நான் செய்யுறத நினைச்சு ஒரு பயம். எங்க உண்மை தெரிஞ்சு நீ என்ன விட்டு போயிடுவியோன்னு.

எனக்கு பொய்யா நடிக்க தெரியல அதான் உன் கிட்ட இல்லாத காதலை சொல்லல. பட் நீ என்ன வேண்டாம்ன்னு சொல்லிட்டு போன அன்னைக்கு தான் நான் உன்ன எவ்வளவு லவ் பண்றேன்னு உணர்ந்தேன்.

அந்த பொண்ணு நான் செட் பண்ணல. அதுவும் தருண் வேலை தான். தருண் ஆட்கள் எடுத்த வீடியோவை உங்க அப்பாவ கடத்த அனுப்பின என் ஆட்கள் பிடிங்கிட்டாங்க. நடந்ததை எனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டேன்.

நீயா என்கிட்ட வரணும்னு உன் கஷ்டத்தில கூட கிட்ட வரல. உன் ப்ரையாரிட்டி உன்ன பெத்தவங்க தான்னு நீ சொன்ன கோபத்தில புத்தி மலுங்கி போய் வீடியோவ ரிலீஸ் பண்ணிட்டேன். அந்த நேர கோபத்தில எதையும் நான் யோசிக்கல. ஆத்திரத்தில அறிவ கடன் கொடுத்திட்டேன்.

நீ உங்க அப்பாக்காக உருவாக்கின ரிப்போர்ட் பொய். அத என்னால ஈஸியா நிரூபிச்சிருக்க முடியும். பட் உனக்காக மட்டும் அமைதியா இருந்தேன். பணத்தை கொடுத்து அந்த பொண்ணையும் தருண் ஆட்களையும் அடக்கினேன்." என்று கூற மான்சி எதுவும் கூறாமல் படுத்துக் கொண்டாள்.

முழு தவறும் விஜித் செய்யவில்லை என்றாலும் தந்தை கஷ்டத்திற்கு அவனும் தானே காரணம் என்று மூளை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்த கோபத்தில் வார்த்தைகளை விட மனதின்றி படுத்தவள் உறங்கி போனாள்.

மான்சி உறங்கிய பின்னும் உறக்கம் வராமல் அறைக்குள் நடை பயின்றவன் நடு இரவிற்கு பின்னே உறங்கினான்.

அடுத்த நாள் மாதாந்திர பரிசோதனைக்கு மான்சி கிளம்ப விஜித்தும் அவளுடன் தயாராகி வந்தான். அவனை பார்த்தும் மான்சி எதையும் பேசி மனநிலையை கெடுத்துக் கொள்ளாமல் அமைதியாக காரில் ஏறினாள்.

பரிசோதனை முடிந்து வெளி வரும் வரை அவளிடம் என்ன பேசினாலும் அதற்கு பதில் இல்லை.

பிரிந்திருந்த காலத்தில் விஜித் செய்த தவறை முன்னிறுத்தி அவன் நினைவை ஒதுக்க முடிந்தவளுக்கு அவன் தன்னிடம் வந்த பிறகு கோபத்தை முகத்திற்கு நேரே காட்ட முடியவில்லை. அதே போல் அவன் செய்த செயலை மன்னித்து முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை.

விருப்பத்திற்கும் வெறுப்பிற்கும் இடையே சிக்கி தவித்தவள் மனநிலை என்ன என்பதை அவளாலே உணர முடியவில்லை.

மான்சி முழுதாக தன் காதலை உணரும் முன் தன் தவறை மன்னிக்க வேண்டும் என்று நினைத்த விஜித் நேரடியாக நாடியது வெண்பா திலகனின் உதவியை தான்.

வெண்பா, திலகன் இருவருக்கும் அவன் மீது மலையளவு கோபம் இருந்த போதிலும் மகளுக்காக இறங்கி வந்தனர்.

மான்சி விருப்பங்களை கேட்டு தெரிந்துக் கொண்டான்.

ஒவ்வொரு நாளும் மான்சிக்கு பிடித்த ஏதோ ஒன்று அவளுக்கு கிடைத்தாலும் அதை ஏற்க முடியாதவள் ஒரு முறைப்புடன் அவனை கடந்து விடுவாள்.

விஜயாவின் பொறுப்பு மொத்தமும் அவரது பெற்றோர் செல்வராஜ் கனகா ஏற்றுக் கொள்ள, அவரை பற்றி கவலை இல்லாமல் மான்சியை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான்.

விதிக்கு விஜித்துடன் விளையாட பிடித்திருந்தது போல. அவனுடன் மேலும் விளையாடி பார்க்க நினைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க, மான்சியின் கோபம் மொத்தமும் கணவன் மீது திரும்பியது.



ஹாய் டியர்ஸ்
இன்னும் ப்ரீ பைனல் அண்ட் பைனல் மட்டும் தான் இருக்கு.
கதை உங்களுக்கு பிடிச்சிருக்க கருத்து சொல்லுங்க

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 23

மான்சியை சமாதானம் செய்ய விஜித் எடுத்த அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக தோல்வியை தழுவியது.

மனதின் வார்த்தைகளுக்கு ஒலி வடிவம் கொடுக்க தெரியாது தவித்தவன் அவளை எப்படி அணுக என்று யோசித்து யோசித்து முடியை பிய்த்துக் கொள்ள ஆரம்பித்தான்.

விஜித் முயற்சிகள் புரிந்த மான்சிக்கு அவன் மீதான கோபம் மட்டும் குறையவில்லை. தந்தை கைதான காட்சி மட்டும் அவளது மனக்கண்னை விட்டு அகலவில்லை.

இருவரின் கவனமும் மற்றவர்கள் மீது இருக்க வெண்பா திலகனின் பதட்டம் அவர்களுக்கு தெரியாமல் போனது. தங்களுக்குள் பேசிக் கொள்ளும் இருவரும் விஜித், மான்சி வந்து விட்டால் பேச்சை நிறுத்தி விடுவர்.

சில நேரம் விஜித் கவனித்தாலும் என்ன என்று கேட்க தயங்கி விலகியே நின்றான். அவர்களிடம் மன்னிப்பு கேட்ட பின்னும் குற்றம் செய்தவனின் மனது அவர்களிடம் உரிமையாக பேச விடாமல் தடுத்தது.

நாட்கள் மெதுவாக நகர்ந்து கிட்டத்தட்ட விஜித் மான்சி பெற்றவர்களின் வீட்டிற்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது. ஆனாலும் அவர்களின் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இடையில் ஒரு நாள் மான்சிக்கு அழைத்த விஜயா "சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுமா. விஜித்க்கு அங்க வசதி பத்தாது. ரொம்ப கஷ்டப்பட்டாலும் உனக்காகத்தான் அங்க இருக்கிறான்." என்று கூற, அருகில் இருந்த கணவனை முறைத்து பார்த்தாள்.

"எங்க அப்பாக்கு ஜெயில்ல கிடைச்ச வசதிய விட அதிகமான வசதியை தான் நாங்க கொடுத்திருக்கிறோம்." என்று ஆரம்பித்த மான்சி விஜித் செய்த செயலை பட்டியலிட ஆரம்பித்து விட்டாள்.

விஜித் விஜயாவை பேசியே சமாதானம் செய்ய, அவரும் அதற்கு பின் மான்சியை அழைப்பதில்லை.

முதல் நாளுக்கு பின் பெரிதாக பேச்சும் அவர்களிடையே இல்லாமல் போக விஜித் முதல் முறை சோர்வாக உணர்ந்தான்.

வீட்டில் ஆட்கள் இருந்தும் தன்னிடம் மட்டும் எதையும் பேசாமல் இருக்கும் போது தான் மான்சி தன் வீட்டில் எப்படி இருந்திருப்பாள் என்று உணர முடிந்தது.

நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாமல் தவிப்பது கூட கொடுமையான விசயம் தான் என்பதை இந்த ஒரு மாத காலம் அவனுக்கு நன்கு உணர்த்தியது.

சில நேரம் அதீத பசியில் வீட்டிற்கு வரும் நேரம் அவனுக்கு பிடிக்காத உணவுகள் மேஜையில் இருக்கும். வெண்பா வேண்டுமென்று அப்படி செய்திருக்க மாட்டார்.

வெண்பாவிற்கு விஜித் உணவு பழக்கம் தெரிந்திருந்தால் அதற்கு ஏற்றார் போல சமைத்திருப்பார். அதை உணர்ந்த விஜித் முடிந்த வரை உணவை வீணடிக்காமல் சாப்பிட்டு விடுவான்.

விஜித் சாப்பிடும் அளவை வைத்தே வெண்பா அந்த உணவு அவனுக்கு பிடிக்குமா இல்லையா என்பதை கண்டுக் கொண்டு அதற்கு ஏற்றார் போல சமைக்க ஆரம்பித்தார்.

முழு மனதாய் மன்னிக்காத போதே தனக்கு தேவையானதை வெண்பா செய்து கொடுக்க, உணவு விசயத்தில் தான் மான்சிக்கு செய்தது கண் முன் வந்து போக அடுத்த பிடி உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது.

"சாரி ஏந்திழையாள்..." என்று விஜித் மன்னிப்பு கேட்க, மான்சி புரியாது பார்த்தாள்.

"சாப்பாடு, பேச்சு ரெண்டும் தனி மனித சுதந்திரம் தான். அதுல கூட நான் உன்ன ரொம்ப கொடுமை பண்ணிருக்கிறேன். உண்மையிலே நான் உனக்கும் உன் அப்பா அம்மாக்கும் செய்ததை நினைச்சா எனக்கே அவமானமா இருக்கு." என்று கூறி விட்டு பால்கனியில் சென்று நின்றுக் கொண்டான்.

தவறு செய்தவரை தண்டிக்க மனசாட்சியை விட வேறு பெரிய நீதிபதி தேவையில்லை. விஜித் மனதே அவனுக்கான தண்டனையை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துக் கொண்டிருந்தது.

விஜித் உண்மையிலேயே தனது தவறை உணர்ந்து வருந்துவது மான்சிக்கு தெளிவாக தெரிந்தது. ஆனாலும் காயம் கொண்ட மனது அவனுக்கு மன்னிப்பை மட்டும் கொடுக்க கூடாது என்று தடுத்து விட்டது.

நள்ளிரவிற்கு பின் உறங்கிய இருவரும் காலையிலும் உணவு நேரத்திற்கு தான் எழுந்தனர். இருவரும் தயாராகி கீழே வரும் நேரம் செல்வராஜ் பெரியப்பா வெண்பாவிடம் கோபமாக பேசிக் கொண்டிருந்தார்.

"அங்க என் பொண்ணு தனியா கிடந்து கஷ்டப்படுறா ஆனா அத பத்தி கவலைப்படாம உன் பெண்ணையும் மாப்பிள்ளையையும் உன் கூட வைச்சி சீராட்டுற. இதுவே விஜயா அந்த பையனோட பெத்த அம்மாவா இருந்திருந்தா இப்படி தனியா விட்டுட்டு வந்திருப்பானா..?" என்று பேச, கோபத்தில் விஜித் நரம்புகள் புடைத்துக் கொண்டு வந்தது.

"என்ன இருந்தாலும் பெத்தவளுக்கு கிடைக்கிற மரியாதையும், உரிமையும் மத்தவளுக்கு கிடைக்காது." என்று செல்வராஜ் பெரியப்பா பேச, விஜித் அவர் முன் வந்து நின்றான்.

கோபத்தில் விஜித் வார்த்தைகளை விட்டுவிட கூடாது என்று அவன் கரத்தை பிடித்த மான்சி மறுப்பாக தலையசைக்க, அவள் கையை விலக்கியவனுக்கு கோபம் மட்டும் கட்டுக்குள் வர மறுத்தது.

"நான் என் அம்மாவ தனியா விட்டுட்டு வரல. அவங்க அப்பா அம்மா கிட்ட தான் விட்டுட்டு வந்திருக்கேன். அண்ட் எனக்கும் என் அம்மாவுக்குமான உறவ நீங்க க்ரிட்டிசைஸ் பண்ண வேண்டாம்." என்று கூறியவன் வேகமாக வெளியேறினான்.

விஜித் சென்ற பிறகும் செல்வராஜ் பெரியப்பாவின் வாய் ஓயவில்லை. விஜயாவை குடும்பமாக சேர்ந்து கொடுமை செய்வதாக பேசி அவருக்கே வாய் வலித்த பின் தான் சென்றார்.

அவர் சென்ற பின் வெண்பா சோர்ந்து அமர, மான்சிக்கு தாயை நினைத்து கவலை தோன்றியது.

"ம்மா நான் வேணும்னா அந்த வீட்டுக்கு போகட்டுமா..?" என்று தயங்கி கேட்க, தலையை உயர்த்தி மகளை பார்த்தார்.

"உன்னால அது என் வீடுன்னு உரிமையா சொல்ல கூட முடியல. இனி யாருக்காகவும் யோசிக்காத மான்குட்டி... முழு மனசா உன்னால உன் வீடு உன் குடும்பம்ன்னு ஏத்துக்க முடிஞ்சா மட்டும் சொல்லு." என்று முடித்துக் கொண்டவர் எழுந்து நடக்கும் போது அவர் நடை சற்று தடுமாறியது.

"வெண்பா மெதுவா எழுந்திருக்கணும். இந்த மாதிரி நேரத்தில கவனமா இரு." என்று கூறி கை தாங்கலாக மனைவியை அறைக்குள் அழைத்துச் செல்ல, மான்சி கவனம் பெற்றவர்கள் மீது திரும்பியது.

'இந்த மாதிரி நேரம்...' என்று தந்தை கூறியது மட்டும் மூளைக்குள் ஓடிக் கொண்டிருக்க, தாயின் உடல்நிலை குறித்த அச்சம் அவளை பிடித்துக் கொண்டது.

வேகமாக கதவை தட்டாமல் திறந்துக் கொண்டு பெற்றவர்களின் அறைக்குள் செல்ல, திலகனின் தோளில் சாய்ந்திருந்த வெண்பா மகளை கண்டதும் பதட்டத்துடன் விலகி அமர்ந்தார்.

"ம்மா உங்களுக்கு என்ன செய்யுது..?" என்று கேட்க, வெண்பா பதில் கூற முடியாது கணவனின் முகம் பார்த்தார்.

"ஒன்னும் இல்லடா மான் குட்டி..." என்று திலகன் சமாளிக்க பார்க்க, மான்சி அதை ஏற்பதாக இல்லை.

"நான் ஜெயில்ல இருந்த நாள்ல இருந்து அம்மாக்கு பிபி ப்ரஷர் அதிகமாகிட்டு. இன்னைக்கு அவ பெரியப்பா பேசவும் ப்ரஷர் அதிகமாகி தலை சுத்தல் வந்திருக்கு." என்று திலகன் கூற, அன்று முழுவதும் தாயை விட்டு நகரவில்லை.

வெண்பா எவ்வளவோ மறுத்தும் அவரை விட்டு நகராமல் உடன் இருந்து பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

இரவு வீடு திரும்பிய விஜித்திடம் எல்லாவற்றிற்கும் காரணம் அவன் தான் என்று சண்டையிடவும் மறக்கவில்லை.

"எங்க அம்மா எவ்வளவு சுறுசுறுப்பா இருப்பாங்க தெரியுமா? இப்போ உங்களால தான் உடம்புக்கு நோய இழுத்துக்கிட்டாங்க." என்று கூறும் போதே மான்சிக்கு இரவு உணவு ஓங்கரித்துக் கொண்டு வெளியே வந்தது.

அவளை கை தாங்கலாக ஓய்வறைக்கு அழைத்துச் சென்றவன், அவள் வாந்தி எடுத்து முடித்ததும் தண்ணீ் துண்டு என்று ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்க, அவன் கவனிப்பை பார்த்த மான்சி காலையிலிருந்து வெண்பாவை திலகன் கவனித்துக் கொண்ட நினைவுகள் வந்து போக மீண்டும் தலை சுற்றுவது போல இருந்தது.

தன்னை சமாளித்துக் கொண்டு வெளியே வந்தவள் நேராகச் சென்றது பெற்றவர்களிடம் தான்.

"ம்மா உங்களுக்கு என்ன செய்யுது? மறைக்காம உண்மைய சொல்லுங்க." என்று கேட்ட மான்சிக்கு கண் கலங்கியது.

வெண்பாவிற்கு தனது உடல் நிலையை மகளிடம் மறைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. ஆனாலும் மகள் எப்படி அதை எடுத்துக் கொள்வாள் என்ற பயத்திலேயே சொல்லாமல் இருந்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக திலகன் மீது போடப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்திருந்தாலும், தனது உடல்நிலை புதிதாக பூகம்பத்தை கிளப்பக் கூடும் என்றே அமைதியாக இருந்தார்.

இப்போது மகள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்க, தனது மருத்துவ அறிக்கையை மகளிடம் கொடுத்து விட்டார். அதில் இருந்த ஓவ்வொரு வரிகளும் மான்சிக்கு ப்ரளயத்தை உண்டாக்க போதுமானதாக இருந்தது.

"கேரளால நாங்க இருக்கும் போது தான் தெரிஞ்சுது. கேஸ் நடக்கும் போது இத பத்தி உன் கிட்ட சொல்ல தோணல. அப்புறம் யார் கிட்டவும் சொல்ல முடியல." என்று எல்லாவற்றையும் சொல்லி முடித்த வெண்பாவிற்கு மகள் முகத்தை பார்க்க முடியவில்லை.

"ம்மா இதுல உங்க தப்பு எதுவும் இல்ல. இனி நான் பார்த்துக்கிறேன்." என்று வெண்பாவிற்கு ஆறுதல் கூறி முடித்தவள் தனது அறைக்கு வந்தாள்.

"இப்போ சந்தோஷமா? இன்னும் உங்களால நாங்க எவ்வளவு அசிங்கப் பட வேண்டியது வருமோ தெரியல." என்று வெண்பாவின் மருத்துவ அறிக்கையை விஜித் மீதே விட்டெறிந்தாள்.

மான்சி செயலில் கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு மருத்துவ அறிக்கையை கையில் எடுத்தான்.

முழுவதும் படித்து முடித்தவன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.

தங்கள் வாழ்வில் இப்படி ஒரு திருப்பம் வரும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. விதி தன் விளையாட்டை சிறப்பாக ஆரம்பித்துவிட்டது.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 24 (இறுதி அத்தியாயம்)

விஜயா கணவனின் மகன் தான் விஜித் என்று தெரிந்த பின், அவன் கோபத்திற்கு காரணம் பெண் தராதது மட்டும் தான், அதுவும் காலப்போக்கில் சரியாகி விடும் என்ற எண்ணத்தில் வெண்பா திலகனும் கேரளா அருகில் இருக்கும் தங்கள் பழைய வீட்டிற்கு குடியேறினர்.

மகள் வாழ்வு நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நடுத்தர வயது தம்பதியர் தங்களுக்கான நேரத்தை செலவிட ஆரம்பித்தனர்.

இதில் வெண்பா தனக்கு நாள் தள்ளி போனதில் முதலில் பயந்து போனார். நாற்பத்தி ஐந்து வயதில் தனக்கு இன்னொரு குழந்தையா என்று யோசித்தவருக்கு கணவனிடம் சொல்ல கூட கூச்சமாக இருந்தது.

முதல் குழந்தைக்கு பின் இரண்டு வருடம் அடுத்த குழந்தை வேண்டாம் என்று தள்ளிப் போட்டவர்கள் மான்சியை வளர்ப்பதில் கவனத்தை செலுத்தினர். பின் தங்களுக்கு கடவுள் கொடுத்தது ஒரு குழந்தை தான் போல என்று மனதை தேற்றிக் கொண்டனர்.

மகளுக்கே திருமணம் முடிந்து விட்ட பின் தான் குழந்தை பெற்றால் ஊரும் உறவும் என்ன பேசும் என்று நினைத்தவருக்கு இந்த குழந்தை வேண்டாம் என்ற எண்ணம் மட்டும் வரவில்லை
அந்நேரத்தில் தான் திலகன் கைது, வழக்கு என்று நாட்கள் நகர யாரிடமும் தனது தாய்மை பற்றி மூச்சு விட முடியவில்லை. இதில் மகளும் கணவனை பிரிந்து வந்து விட திலகன், மான்சி மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தை என்று யாரை பார்ப்பது என புரியாது தவித்தார்.

திலகனை வெளியேக் கொண்டு வர சரவணன் கொடுத்த யோசனை தான் போலி குடும்பக் கட்டுப்பாடு சான்றிதழ். முதலில் அதை பற்றி வெண்பாவிற்கு கூட தெரிந்திருக்கவில்லை.

தெரிந்த போது கணவன் வெளியே வந்தால் போதும் என்று தனது கர்ப்பம் பற்றி கூறாது விட்டுவிட்டார். வழக்கு முடிந்து திலகன் இயல்பு நிலைக்கு திரும்பும் முன் வெண்பா கருவின் வளர்ச்சி இரண்டு மாதத்தை கடந்து விட்டது.

கணவன் மற்றும் மகளின் நலனை கருத்தில் கொண்டு கருவை கலைத்து விட நினைத்த போது திலகன் கண்டுக் கொண்டார்.

தனக்கு என்ன ஆனாலும் கருவை கலைப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. இதை பற்றிய வாக்குவாதம் நடந்து இருவரும் மருத்துவரை காணச் சென்ற போது வெண்பா வயிற்றில் வளரும் சிசு மூன்று மாத வளர்ச்சியை நிறைவு செய்திருந்தது.

மருத்துவ அறிக்கையை படித்த விஜித் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.

ரவிக்கு அழைத்த விஜித் செய்ய வேண்டியதை கட்டளையிட, மான்சி அவனை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து கண் சிமிட்டி விட்டு தனது உரையாடலை தொடர்ந்தான்.

விஜித் தன்னை பார்த்து கண் சிமிட்டியதும் மான்சி திரும்பி அமர்ந்துக் கொண்டாலும் அவள் கவனம் முழுவதும் அவன் பேசுவதில் தான் இருந்தது.

விஜித் கட்டளையின் படி தருண் மற்றும் திலகனின் தமக்கை மகன் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட, அவர்கள் திலகனுக்கு எதிராக தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

மேலும் விஜித் பத்திரிக்கையாளர்களை அழைத்து தான் தான் மாமனாரை விடுவிக்க போலி குடும்பக் கட்டுப்பாடு சான்றிதழ் தயாரித்ததாக கூறினான். ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் அவன் வாரி இறைத்த பணம் திலகனை அப்பாவியாகவும், அவரை காக்க விஜித் உதவியதாகவும், வருண் மற்றும் அவனது கூட்டாளிகள் தண்டனைக்குறிய குற்றவாளிகள் என பாதி உண்மை மீதி பொய்யாக செய்திகளை வெளியிட்டது.

இந்த புதிய செய்தி மக்களிடம் பரவி அடங்கும் நேரம், விஜித் தனது மனைவியின் வளைகாப்பு வைபவத்தை கோடி கணக்கில் பணத்தை வாரி இறைத்து கோலாகலமாக நடத்தினான்.

"இப்போ இவ்வளவு ஆடம்பரம் தேவையா?" என்று கேட்ட மான்சியிடம்,

"கண்டிப்பா தேவை தான். ஒன்னு மக்கள் உங்க அப்பா நியூஸ் பத்தி இனி பேச கூடாது அண்ட் எனக்கு நம்ம கல்யாணத்தில் செய்ய முடியாததை இதில் செய்யணும்." என்று கூறி அவன் விருப்பப் படி அனைத்தையும் செய்து முடித்தான்.

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், திரை உலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்று மக்களுக்கு அறிமுகமான அனைவரும் விஜித் வீட்டு நிகழ்வில் கலந்துக் கொள்ள, மக்கள் கவனம் திலகனை மறந்து வளைகாப்பு நிகழ்வில் திரும்பியது.

வளைகாப்பு நிகழ்வுகள் அனைத்தும் முடியும் முன் மான்சி மிகவும் சோர்ந்து போனாள். விஜித் அவளுக்காக வெந்நீர் தயாராக வைத்திருக்க குளித்துவிட்டு வந்தவளுக்கு தூக்கம் மட்டும் வரவில்லை.

விஜித் குறைகளை தாண்டி அவனது நிறைகள் கண் முன் நிற்க அவனுக்கான நியாயத்தை கொடுக்க அவள் மனது கூறியது.

"உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்." என்று ஆரம்பித்தவளிள் இதழில் விரல் வைத்து தடுத்தவன்

"தூங்கு ஏந்திழையாள். உன் மேல எனக்கு இருக்கிற காதலை மட்டும் நீ உணர்ந்தா போதும். எனக்கு வேற எதுவும் தேவையில்லை." என்று விஜித் கூற, மன நிறைவுடன் அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டான்.

நீண்ட நாட்களுக்கு பின் மனைவியிடம் கிடைத்த நெருக்கத்தை கண் மூடி அனுபவிக்க, அவன் மார்பிலே பெண்ணவள் துயில் கொண்டாள்.

மெல்ல அவளை தலையணையில் படுக்க வைத்தவன், அவள் நெற்றியல் இதழ் பதித்தான்.

"பொறுமையா உண்ணை காதலித்து கல்யாணம் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்கும் ஏந்திழையாள். நம்ம கதை கூட காதல் கதையா இருந்திருக்கும்" என்று கூறியவன் அவள் முகம் பார்த்துக் கொண்டே உறக்கத்தை தழுவினான்.

அடுத்து வந்த நாட்கள் அனைத்தும் மான்சிக்கு மகிழ்ச்சியுடன் கழிந்தது. திலகன், வெண்பா எவ்வளவோ மறுத்தும் அவர்களையும் அழைத்துக் கொண்டு விஜித் தங்கள் வீட்டிற்கு வந்து விட்டான்.

குறைந்த பட்சம் குழந்தை பிறந்து வளர்க்க கற்றுக் கொள்ளும் வரை உடன் இருக்க வேண்டும் என்று மான்சி கேட்டுக் கொண்ட பின்னே இருவரும் அங்கு வர சம்மதித்தனர்.

திலகன், மான்சி பிறக்கும் போது வெண்பா இழந்ததை திருப்பி கொடுக்கும் முனைப்புடன் வெண்பாவை கவனித்துக் கொண்டார்.

மாமனாரின் செயலை பார்க்கும் போது சில சமயம் விஜித் கடுப்பாவதுண்டு.

"சும்மா ஒரு பேச்சுக்கு உங்க அப்பா, அம்மா செகன்ட் ஹனிமூன் போயிருக்கிறதா சொன்ன. அத உன் அப்பா உண்மையாக்கிட்டார். இதுல அவர் பண்ற பர்ஃபாமென்ஸ பார்த்து நான் அவர் கிட்ட மனைவியை கவனிப்பது எப்படின்னு க்ளாஸ்க்கு போகணும் போல." என்று விஜித் மான்சியிடம் போலியாக குறை படிப்பதும் அதற்கு அவள் முறைப்பதும் வாடிக்கையானது.

மருத்துவர் குறித்து கொடுத்த நாளுக்கு இரு தினம் முன்னே வலி எடுத்து மான்சி பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

விஜித் சொன்னது போலவே தனது மகள் விஜிதா ஏழிசையாளை கைகளில் வைத்து தாங்க ஆரம்பித்தான். மகள் என்று வரும் போதும் மனைவி கூட அவனுக்கு இரண்டாம்பட்சமாக மாறி விடுவதுண்டு. அந்த நேரங்களில் மான்சியின் செல்ல கோபங்களும் அதற்கு மகள் உறங்கிய பின் விஜித் சமாதானங்கள் என்று நாட்கள் நகர்ந்தது.

வெண்பாவிற்கு வயது அதிகம் என்பதால் அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்தது.

சொந்தங்களில் சிலர் இந்த வயதில் பேத்தி பிறந்த பிறகு பிள்ளையா என்று கேலியாகவும், சிலர் வெண்பாவின் மீது அக்கறை கொண்டும் பார்த்து விட்டுச் சென்றனர்.

விஜித் மகளை எப்படி பார்த்துக் கொண்டானோ அதை போலவே தனது குட்டி மச்சான் மானவ் ஏரமுதனனையும் பார்த்துக் கொண்டான்.

வெண்பாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு முழு ஓய்வு கொடுக்க விரும்பி அவர்களை கவனித்துக் கொள்ள தனி வேலையாட்களையும் நியமித்தான்.

விஜயாவும் ஓரளவு எழுந்து நடமாட ஆரம்பித்ததும் பிள்ளைகளை பார்த்துக் கொண்டே நேரத்தை கடத்த ஆரம்பித்தார்.

ஏரமுதன் முதல் பிறந்த நாள் வரை திலகன், வெண்பா தம்பதியர் விஜித் வீட்டில் தான் இருந்தனர்.

பல பல சமாதான பேச்சுக்களுக்கு பின்னே அவர்கள் தனியேச் செல்ல மான்சியும் விஜித்தும் அனுமதி கொடுத்தனர்.

"ஏரமுதன் இல்லாம வீடு ரொம்ப வெறுமையா இருக்கு." என்று விஜித் கூற மான்சி தம்பியின் நினைவில் புன்னகைத்துக் கொண்டாள்.

விஜிதா வெண்பாவை போல அமைதியான குணம் கொண்டவள். பெரிதாக சேட்டை அவளிடம் இருக்காது. ஆனால் அவளுக்கும் சேர்த்து மானவ் சுட்டித்தனத்தால் வீடு எப்பொழுதும் கலகல என்று இருக்கும்.

நடக்க ஆரம்பித்த உடனே அவனது சேட்டைகளும் ஆரம்பித்து விட்டது. உன்னை மாதிரி உன் தம்பியும் என்று சிறு வயது மான்சி செய்த சேட்டைகளை வெண்பா, திலகன் கதையாக கூற விஜித் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருப்பான்.

"நாம வேணும்னா மானவ் மாதிரி இன்னொரு சேட்டைக்கார பையன பெத்துக்கலாமா..?" என்று மான்சி கேட்க, விஜித் வேகமாக அவள் புறம் திரும்பினான்.

"நீ கேட்டு இல்லன்னு சொல்ல முடியுமா?" என்று கூறிக் கொண்டு மனைவியை நெருங்க, மகள் காலை அசைத்து கொலுசொலிழுப்பினாள்.

மகள் விழித்துக் கொண்டாளோ என்று பார்க்க விஜித் திரும்ப, தலையில் அடித்துக் கொண்ட மான்சி கணவனையும் மகளையும் பார்த்துக் கொண்டே கண்ணயர்ந்தாள்.

முற்றும்.



ஹாய் டியர்ஸ்
சொன்ன மாதிரி கதைய முடிச்சிட்டேன். எகலைவனின் ஏந்திழையாள் உங்களுக்கு எவ்வளவு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுங்க டியர்ஸ். சீக்கிரம் என் பெயருடன் அடுத்த கதையில் சந்திக்கலாம்.


 
Status
Not open for further replies.
Top