ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 13

குளித்துவிட்டு அரைக்கால் ட்ரவுசருடன் அவனை விட ஒரு மடங்கு பெரியதாக இருக்கும் சிங்லெட் ஒன்றும் போட்டுகொண்டு வெகு இயல்பாய் மாடிப்படியில் இறங்கி வந்துக்கொண்டிருந்த தானவீரனுக்கு வெறிச்சோடி கிடந்த முன்னறை தான் கண்ணில் பட்டது.​

அவன் சாவகாசமாக குளித்து முடித்து வருவதற்குள் தருண் கிளம்பியிருக்க கிருஷ்ணகுமாரும் சேகரும் கூட இரவு உணவை முடித்துக்கொண்டு ஏதோ அலுவலக விடயங்களை கலந்துரையாட வீட்டின் கீழ் தளத்திலேயே அமைக்கப்பட்டிருந்த அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டனர்.​

ஜெயலக்ஷ்மியும் கூட ராமாயணம் அல்லது ஸ்ரீமத் பாகவதம் என்று ஏதோ ஒரு பக்தி காவியத்தை கையில் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்துவிட்டிருக்க முன்னறை காலியாக இருந்தது.​

ஜெயலக்ஷ்மி படிப்பதெல்லாம் பக்தியும் அதை சார்ந்த விடயங்களாயினும் அது பேச்சிலும் செயலிலும் பிரதிபலிக்காமல் போவது தான் ஆச்சரியம்.​

தானவீரன் அதை மேற்கோள் காட்டி அடிக்கடி அவரை கிண்டல் செய்வதும் அந்த வீட்டில் வழக்கமான ஒன்று தான். ஆனால், அவன் அந்த வீட்டின் செல்லக் கண்ணன் என்பதால் யாரும் அதை பெரியதாக எடுத்துக்கொள்வதுமில்லை.​

விசிலடித்துக்கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தவன் நேரே சமையல்கட்டிற்குள் நுழைந்திருந்தான்.​

அங்கே சரோஜினி வழக்கம் போல வேலை பார்த்துக்கொண்டிருக்க "என்ன அத்தை நீங்க மட்டும் சமையல் கட்டை விட்டு வெளியவே வரமாட்டிங்களா?" என்று பின்னிருந்து அவரின் தோள்களை பற்றி மெலிதாக அழுத்தம் கொடுத்து அவரின் தலையில் மென்மையாக முட்டியவன் பின் அவருக்கு அருகேயே சமையல்கட்டின் மீது ஏறி அமர்ந்துகொண்டான்.​

தனக்கு பிறந்தது இரண்டும் பெண் பிள்ளைகளாதலால் அவன் மீது சரோஜினிக்கு அலாதி பிரியம். பெற்ற மகனாகவே அவன் மீது அவர் பாசத்தை பொழிவார் என்றால் அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவனும் அவரிடம் அன்பு காட்டுவான். சொல்லப் போனால் அவனை ஈன்ற தாய் ஈஸ்வரியை விட அவனுக்கு சரோஜினியிடம் தான் ஒட்டுதல் அதிகம்.​

"எங்க எல்லாரும்? வீடே அமைதியா இருக்கே?" என்றான்.​

"வழக்கம் போல தான். டின்னர் சாப்பிட்டதும் எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்க்க அறைக்குள்ள நுழைஞ்சிட்டாங்க" என்றார் சரோஜினி​

"அது சரி...கோழி எல்லாம் ரூமுக்குள்ள அடைஞ்சாச்சா. இனி விடிஞ்சு சேவல் கூவின பின்னாடி தான் வெளியில் வரும்" என்று சொல்லிக்கொண்டே கையை நீட்டி சரோஜினியை தாண்டி சற்று தள்ளி வைக்கப்பட்டிருந்த எவர் சில்வர் டப்பா ஒன்றை எட்டி எடுக்க அவன் முயற்சி செய்ய அவன் சொல்லியதை கேட்டு வாய்விட்டு சிரித்த சரோஜினியே அவனின் தேவை உணர்ந்து அந்த டப்பாவை எடுத்து அவன் கையில் திணித்தார்.​

அதை திறந்து அதில் போட்டு வைக்கப்பட்டிருந்த வறுத்த நிலக்கடலையை ஒவ்வொன்றாக எடுத்து மேலே போட்டு வாயில் பிடித்தபடி அவன் அதை ரசித்து உண்டுகொண்டிருக்க சரியாக அந்நேரம் பார்த்து சமையல் கட்டிற்குள் நுழைந்தார் ஈஸ்வரி.​

தானவீரனும் சரோஜினியும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை ஒரு வித வன்மத்துடன் பார்த்துக்கொண்டே நீரை ஒரு டம்ளரில் ஊற்றி பருகிக்கொண்டிருந்தார்.​

"டேய், இதையே சாப்பிட்டு வயிற்றை நிறைக்கலாம்னு இருக்கியா. நீ இன்னும் சாப்பிடல தானே? இன்னிக்கு சப்பாத்தி தான் பண்ணேன். உனக்கு தான் பிடிக்காதே. தோசை வேணும்னா ஊத்தி கொடுக்கட்டுமா?" என்று அவனது விருப்பம் அறிந்து கேட்டார் சரோஜினி.​

"ம்கூம்...இப்போ தான் நான் சாப்பிடலைன்னு நினைவு வருதா உங்களுக்கு. அதானே புது மருமகனை பார்த்ததும் என்னை மறந்தாச்சு" என்று புருவங்களை வேக வேகமாக ஏற்றி இறக்கி இதழ்களுக்கு மறைத்த புன்னகையுடன் அவன் சரோஜினியை வம்புக்கிழுத்தான்.​

எல்லோரையும் வம்பு பண்ணி கலகலக்கும் அவனது இயல்பு தெரிந்தவராகையால் அவனது கேலியை புரிந்துக்கொண்ட அவரும் "டேய்..." என்று அவனை மிரட்டுவது போல் செய்கை செய்ய அவனும் கலகலவென சிரித்தான்.​

அதை பார்க்கப் பார்க்க ஈஸ்வரிக்கு பற்றிக்கொண்டுதான் வந்தது. அவருக்கு தருண் மற்றும் வைஷாலியின் திருமணத்தில் கொஞ்சமும் விருப்பமில்லை.​

தானவீரனுக்கு வைஷாலிதான் மனைவி என்று மிக உறுதியாக அவர் மனக்கோட்டை கட்டிவைத்திருந்தார்.​

தனக்கென்று வேலை வெட்டி என்று எதுவும் ஏற்பாடு செய்துக்கொள்ளாமல் பொறுப்பின்றி சுற்றும் தன் மகனுக்கு அண்ணனிடம் சென்று பெண் கேட்கும் அளவிற்கு தைரியமும் இல்லாமல் இருக்க அவன் ஒரு வேலையில் அமரும் வரைக்கும் கொஞ்சம் பொறுத்திருக்கவே நினைத்திருந்தார்.​

வீட்டிற்குள்ளேயே முறை பையன் என்று அவன் இருக்க, அதுவும் அவன் என்றால் குடும்பத்தில் அனைவருக்கும் கொள்ளை விருப்பம் என்பதும் சேர்ந்துக்கொள்ள அவனை விடுத்து வெளியில் மாப்பிள்ளை தேடமாட்டார்கள் என்றும் நம்பிக்கொண்டிருந்தார்.​

வைஷாலிக்கு கல்யாணம் என்ற பேச்சு வந்தால் மாப்பிள்ளை வரிசையில் முதல் தேர்வாக தானவீரன் தான் இருப்பான், அதை வைத்து வீட்டோடு மாப்பிள்ளை என்று இருக்கும் அவரின் கணவரின் அந்தஸ்து அந்த வீட்டு சம்மந்தியாக உயர்ந்துவிடும் என்று அவர் மனப்பால் குடித்துக்கொண்டிருக்க திடிரென்று வைஷாலியின் வாழ்வில் தருணின் பிரசன்னம் ஈஸ்வரியை பொறுத்தவரையில் பேரிடியாக தான் அமைந்தது.​

குடும்பத் தொழிலில் கொடிக்கட்டி பறக்கும் இளம் தொழிலதிபர் என்னும் அந்தஸ்துடையவன் கைநிறைய சம்பாத்தியதோடு வந்து நிற்க அவனை மறுத்து சுய சம்பாத்தியம் இல்லாத தன் பிள்ளைக்கு அவரும் என்னவென்று சொல்லி பெண் கேட்க முடியும்.​

இருந்தும் சேகரிடம் இதை பற்றி பேசியும் பார்த்தார்.​

"தருண் பொறுப்பான பையன். பிசினெஸ் எல்லாம் அத்துப்படி. திறமையானவன். அவன் வந்து நம்ம பொண்ணை கட்டிக்குறேன்னு கேட்கும் போது பொறுப்பே இல்லாமல் சுத்துற என் புள்ளைக்கு பொண்ணை கொடுங்கன்னு வெறும் உறவு முறையை மட்டும் வச்சிட்டு என்னால பேச முடியாது. நீயும் தேவை இல்லாமல் ஏதும் பேசி குழப்பம் பண்ணாமல் இரு. அதுதான் நமக்கு மரியாதை" என்று ஈஸ்வரியின் மனதில் ஓடிக்கொண்டிருந்ததை தான் சேகரும் வாய் வார்த்தையாக சொல்லி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.​

கணவரின் பேச்சின்படி இப்போதுவரை அமைதிக்காத்து வந்தாலும் தருண் மற்றும் வைஷாலியின் திருமண நாள் நெருங்க நெருங்க அவரால் அந்த விடயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. அதிலும் இன்று தானவீரனுடன் கிளம்பி சென்ற வைஷாலி தருணுடன் வீட்டிற்கு வந்ததை பார்க்கையில் அவருக்கு இன்னுமே ஆத்திரம் பெருகியது.​

அப்படியென்ன அந்த தருணை விட தன் மகன் தாழ்ந்து போய்விட்டான் என்ற எண்ணம் வேறு அவர் மனதில் நஞ்சாய் பரவத்தொடங்கியிருக்க அந்த கடுப்பில் "ஆமாமா, புதுசு வந்தா பழசை மறக்கத்தானே வேணும்" என்றார் குத்தலாக.​

"அம்மா, நானும் அத்தையும் தானே பேசிட்டிருக்கோம். இப்போ எதுக்கு தேவையில்லாமல் நீங்க நடுவுல வரீங்க?” என்று கேட்டான்.​

"நான் ஒன்னும் தப்பா சொல்லலையே. உண்மைய தானேடா சொல்லுறேன். அவங்க பொண்ணுங்களுக்கு ட்ரைவர் வேலை பார்க்கறதுக்கு நீ வேணும். அவளுங்க ஷாப்பிங் போக பாடிகார்ட்டா (bodyguard) நீ வேணும். ஆனால், கல்யாணம்னு வந்தா மட்டும் நீ அவங்களுக்கு தேவைப்பட மாட்ட. நல்ல பணக்காரனா எவனாவது வந்துட்டான்னா ஒரு பேச்சுக்கு கூட முறை பையன்னு நீ ஒருத்தன் இருக்கியேன்னு அவங்க நினைவுல கூட இருக்காது. வேலை வெட்டி இல்லாதவன்னு ஒதுக்கி வச்சுடுவாங்க" என்று மனதில் இதுநாள் வரை சேர்த்து வைத்த சினத்தை எல்லாம் குரலில் காட்டி சொன்னார் ஈஸ்வரி.​

அவரின் பேச்சில் ஒரு நொடி திகைத்துப்போனார் சரோஜினி.​

"அப்படியெல்லாம் அவனை ஒதுக்கி வைக்கல ஈஸ்வரி. ஏன் இப்படி எல்லாம் பேசுற?" குரல் தழுதழுக்க சொன்னார் அவர்.​

ஈஸ்வரியின் குற்றச்சாட்டில் சரோஜினியின் விழிகள் கலங்கியே விட்டன. ஏனென்றால், நிஜமாகவே அவர்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இதுவரை உதித்ததே கிடையாதே.​

குழந்தையிலிருந்தே வைஷாலி மற்றும் மதுவுடன் சேர்ந்து தானவீரனும் ஒன்றாக வளர்ந்ததால் அவர்கள் மூவரையும் தனது குழந்தைகளாகவே பார்த்துவிட்டதாலோ என்னவோ கிருஷ்ணகுமாருக்கும் சரி சரோஜினிக்கும் சரி அப்படி ஒரு எண்ணம் வந்ததேயில்லை. அந்த கோணத்தில் அவர்களை பார்த்ததுமில்லை.​

இப்பொழுது ஈஸ்வரி வாயை திறந்த பின்னாடியே சரோஜினிக்கும் அது உறுத்தியது. ஈஸ்வரியின் ஆசையை விட தானவீரனுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்குமோ என்று யோசிக்கும் போது தான் அவருக்கு உள்ளம் பதறியது.​

அப்படி மட்டும் இருந்திருந்தால் இந்த திருமண ஏற்பாடுகள் எல்லாம் அவனுக்கு எத்தனை வேதனைகளை கொடுக்கக் கூடும். அதிலும் கிருஷ்ணகுமாரும் சேகரும் தொழிலில் பரபரப்பாக இருந்துக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பெரும்பாலான கல்யாண வேலைகளை எல்லாம் அவன் தானே பார்த்துக்கொண்டிருக்கிறான்.​

மனதில் அத்தனை ரணங்களையும் மறைத்துக்கொண்டு செய்கிறானோ என்று யோசித்தவரின் பார்வை இப்பொழுது தானவீரனில் ஆராய்ச்சியாக படிந்தது.​

அவரின் பார்வையும் கலங்கிய அவரது விழிகளும் அவனது மனதையும் கலங்கடிக்க "அம்மா..." என்று பற்களை கடித்தபடி தான் அமர்ந்திருந்த சமையல் கட்டிலிருந்து கீழே இறங்கி நின்ற தானவீரனின் உடல் மொழியே அவன் சினத்தை பறைசாற்றியது.​

ஆனால், ஈஸ்வரி அந்த விடயத்தை விடுவதாக இல்லை. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சரோஜினியை வறுத்தெடுக்க தொடங்கியிருந்தார்.​

"அப்போ இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் அண்ணி? உங்க கண் முன்ன வளர்ந்த என் பிள்ளையை விட எவனோ ஒரு பணக்காரன் தானே உங்க பொண்ணுக்கு பொருத்தமுன்னு தேர்ந்தெடுத்திருக்கிங்க?" என்று அவர் மீண்டும் சரோஜினியை குற்றவுணர்வுக்குள் தள்ளிவிட எத்தனித்தார்.​

"என்ன ஈஸ்வரி உன் பிள்ளை என் பிள்ளைன்னு பிரிச்சு பேசுற. என்னிக்காவது இந்த வீட்டுல அந்த மாதிரி பிரிவினையோட நம்ம பிள்ளைங்கள நடத்திருக்கோமா?" என்று சரோஜினி ஈஸ்வரிக்கு புரியவைக்க முயன்றார்.​

தனது தாய் தேவையே இல்லாமல் ஆரம்பித்த அந்த நாடகத்தை அதற்குமேலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தானவீரனால்.​

"கொஞ்சம் நிப்பாட்டுரிங்களா. இப்போ எதுக்கு தேவையில்லாமல் பேசிட்டிருக்கிங்க… நான் இப்போ கல்யாணம் வேணும்னு உங்க கிட்ட கேட்டேன்னா? அப்படியே கல்யாணம் பண்ணிக்கனும்னாலும் ஊருல பொண்ணுங்களா இல்லை? என்னமோ வைஷாலி ஒருத்திதான் இருக்குற போல எதுக்கு இப்படி பஞ்சாயத்தை கூட்டுறீங்க?" அதட்டலாக வந்தது அவனது வார்த்தைகள்.​

"ஆஹ்... நான் உனக்காக தானே டா பேசிட்டிருக்கேன். அதக்கூட புரிஞ்சிக்காமல் நீ என்னையே அதட்டுறியா? அவங்க பார்க்க வளர்ந்த புள்ளை நீ…அவங்களே உனக்கு பொண்ணு கொடுக்க யோசிக்கும் போது வெளில யாருக்கிட்ட போய் உனக்கு பொண்ணு கேட்பேன் நான்?" என்ற ஈஸ்வரியின் குரலும் அழுகையில் தழுதழுத்தது. அவரின் ஆசை நிராசையாய் போனதில் பெரும் வருத்தம் அவருக்கு.​

ஈஸ்வரியின் வாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல் சரோஜினி தடுமாறி நிற்க அவரது நிலையை பார்த்த தானவீரனுக்கு பொறுமை போய்விட்டது "அம்மா தண்ணி குடிக்க தானே வந்திங்க...குடிச்சிட்டீங்கல்ல... டிவியில் உங்க ஃபேவரட் சீரியல் வர டைம் ஆயிடுச்சு போங்க" என்றான்.​

"டேய் நான் உனக்காக தான் பேசிட்டிருக்கேன்..." என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க "நான் கேட்காததை எதுக்கு எனக்காகன்னு சொல்லி நீங்க கேட்குறீங்க. எனக்கு ஏதும் தேவைன்னா அதை எனக்கே கேட்டுக்க தெரியும். எனக்காக யாரும் வந்து கேட்டு வாங்கி தரணும்னு அவசியமில்லை. அதோட முக்கியமான இன்னொரு விஷயம், உங்களுக்கு அப்படியே எதுவும் நியாயம் கேட்கணும்னா அதை அன்னிக்கு தருண் வைஷாலியை கல்யாணம் பண்ணிக்க கேட்குறாருனு மாமா வந்து சொன்னாரே அப்போவே எல்லார் முன்னாடியும் கேட்டிருக்கணும். அப்போ எல்லாம் விட்டுட்டு இப்போ அத்தை கிட்ட எதுக்கு வந்து குதிக்குறிங்க. உங்களுக்கு சமமா அவங்க மல்லுக்கு நிக்க மாட்டாங்கன்னு தைரியத்துல தானே. அவளோ தைரியம் இருந்தா மாமா கிட்ட போய் நியாயம் கேட்க வேண்டியது தானே" என்று சீறினான்.​

அவன் கேட்ட கேள்விக்கு ஈஸ்வரியிடமும் பதிலில்லை. அவன் சொல்வதும் சரி தானே. அவரும் அவர் மனதில் தேக்கி வைத்திருந்த வன்மத்தை எல்லாம் கொட்டுவதற்கு இடமில்லாமல் தானே இப்பொழுது சரோஜினியிடம் பொங்கிக்கொண்டிருக்கிறார்.​

அவர் அமைதியாகவே நின்றிருக்க "இதோ பாருங்க...ஆல்ரெடி கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு. அதை விட முக்கியமா தருணுக்கும் வைஷாலிக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு. இப்போ போய் எதுவும் பேசி குட்டைய குழப்பாதீங்க. பிறகு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்றான்.​

அவனுக்காக என்று பேச வந்தவரை சரோஜினிக்காக பார்த்துக்கொண்டு அவன் அவரிடமே கோபப்பட அதை ஈஸ்வரியால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை .​

"நல்லா சிரிச்சு சிரிச்சு பேசியே எல்லாரையும் கைக்குள்ள போட்டு வச்சிருக்கீங்க அண்ணி. உங்களை ஒரு வார்த்தை சொன்னாலே எல்லாரும் வரிஞ்சு கட்டிட்டு வராங்க. பாசம் காட்டுறேன்னு சொல்லி சொல்லியே ஏமாத்திட்டிருக்கிங்க" என்று அவருக்கு பரிந்து பேசிய தானவீரனின் மீது எழுந்த சினத்தையும் சரோஜினியின் மீதே கொட்டிவிட்டு விறுவிறுவென சமையல் கட்டிலிருந்து வெளியேறியிருந்தார் ஈஸ்வரி.​

"இவங்களுக்கு வேற வேலையே இல்லை " வாய்க்குள் முணுமுணுத்தபடி செல்லும் ஈஸ்வரின் முதுகை பார்த்து தலையை இடவலமாக சலிப்பாக ஆட்டிகொண்டவன் சரோஜினியின் புறம் திரும்பினான்.​

சமையல் கட்டின் மேடையை அழுந்த பற்றியபடி விழிகள் தானவீரனில் நிலைத்திருக்க அப்படியே சமைந்து நின்றிருந்தார் சரோஜினி.​

"ம்பச்...அம்மா ஏதோ அவங்க மனசுல இருக்கறதை சொல்லிட்டு போறாங்க. அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க த்த(அத்தை)" சரோஜினியை சமாதானப்படுத்த முயன்றான்.​

அப்பொழுதும் சரோஜினியின் பார்வை மாறாமல் அப்படியே இருக்க "என்ன அத்தை...ஏன் அப்படி பார்க்குறீங்க... அவங்க சொன்னதை எல்லாம் பெருசா எடுத்துட்டு..."என்று அவன் மேலும் சமாதான முயற்சியை தொடர "நீ சொல்லு..." என்று அவன் பேச்சை தடை செய்திருந்தார் சரோஜினி.​

"என்ன அத்தை?" என்று அவன் கேள்வியாக பார்க்க "உன் அம்மாவை விடு. நீ சொல்லு வீர்... உன் மனசுல என்ன இருக்கு?" என்று கேட்டார்.​

அவன் புருவங்கள் இடுங்க அவரை புரியாமல் பார்த்தான். அவன் பார்வையில் அழுத்தம் கூடிற்று​

"வீர் உன் அம்மா பேசுற வரைக்கும் அந்த கோணத்துல நான் யோசிக்கவேயில்லை. ஆனால், இப்போ ஒருவேளை உன் மனசுல வைஷாலி இருந்திருந்தா அதை தெரிஞ்சுக்காமல் உன்னை கஷ்ட படுத்திட்டோமோன்னு மனசு பதறுதுடா. சொல்லு உனக்கு வைஷாலியை பிடிச்சிருக்கா?" என்று கேட்டார்.​

"அத்தை..." என்று அந்த 'அத்தையில்' சற்றே அதிகப்படி அழுத்தம் கொடுத்து அழைத்தான்.​

அந்த அழுத்தத்திலேயே தனது கேள்வி அவனுக்கு அதிருப்தியளிக்கின்றது என்று புரிந்தாலும் அவன் வாய்மொழியாக பதில் தெரிந்தாக வேண்டும் என்று நினைத்தார் சரோஜினி.​

"இதோ பார் வீர்...அத்தை மேல நிஜமான அன்பு இருந்தா மறைக்காமல் சொல்லுப்பா? நீ வைஷாலியை விரும்புறியா? அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்குறியா?" என்று வார்த்தைகளை மாற்றி போட்டாலும் அதே கேள்வியைத்தான் மீண்டும் கேட்டார்.​


 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 14

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு மார்புக்கு குறுக்கே கையை கட்டியபடி சமையல் கட்டின் மீது சாய்ந்து நின்ற தானவீரனின் விழிகள் சரோஜினியின் மேல் அழுத்தமாக படிந்திருந்தது.​

"என்னடா அப்படி பார்க்குற...சொல்லு டா" என்றார்.​

"அத்தை, நான் வேணும்னு நினைச்சிருந்தா என்னை தாண்டி வைஷாலியை யாரும் கட்டிக்க முடியாது. உங்க கிட்ட வந்து உங்க முகத்தை பார்த்து பொண்ணு கேட்குற அளவுக்கு எனக்கு தைரியம் இருக்கு. என்னை சின்னப் பிள்ளையிலிருந்து வளர்த்த உங்களுக்கு இது புரியலைன்னு தான் எனக்கே ஆச்சரியமா இருக்கு" என்றான்.​

அவன் வாயுள்ள பிள்ளை தான். தனக்கு வேண்டியதை தானே சாதித்துக்கொள்ள கூடிய திறமைசாலியும் கூட. அப்படியிருக்க தன் மனதை சூழ்ந்திருக்கும் கவலை தேவையற்றது என்று அவருக்கு நன்றாகவே புரிந்தது. அதன் பிறகு தான் அவருக்கு நிம்மதி மூச்சே விடமுடிந்தது.​

நெஞ்சில் கையை வைத்து அழுத்திக்கொண்டே ஒரு நிம்மதி பெருமூச்சை உள்ளிழுத்து வெளியிட்டார்.​

சரோஜினியின் உணர்வுகளை அவரின் முகத்தை வைத்தே கண்டுகொண்டவன் இதழ்களில் மெல்லிய கீற்றாய் விரிந்த புன்னகையுடன் அவர் தோளை சுற்றி கையை போட்டு தன் கைவளைவுக்குள் வைத்துக்கொண்டான்.​

"அத்தை, அம்மா ஏதோ லூசு தனமா பேசிட்டு போறாங்க. அதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காமல் நிம்மதியா கல்யாண வேலையை பாருங்க. இதுக்கப்புறம் அம்மா ஏதும் பேசாமல் நான் பார்த்துக்கறேன். அப்படியே அவங்க பேசினா கூட எதையும் காதில் வாங்கிக்காதிங்க சரியா?” என்றான்.​

சரோஜினியின் முகம் தெளிந்திருந்தாலும் முகத்தில் இன்னும் குழப்ப ரேகைகள் மீதமிருந்ததில் "இன்னும் என்ன சரோ? எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்க... சிரி பாப்போம்" என்றபடி தனது பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களை சரோஜினியின் உதடுகளின் இருமுனைகளிலும் ஒவ்வொன்றாக வைத்து சிரிப்பது போல் அவர் இதழ்களை இழுத்து விட அவரும் அவனது அந்த செல்ல சீண்டலில் மென்மையாக புன்னகைத்துக்கொண்டார்.​

"ஆஹ்..அது. எப்பவும் சிரிச்ச முகமா இருந்தா தான் அது சரோ" என்று அவர் கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்தவன் சமையலறையிலிருந்து வெளியேற போக அவன் கரத்தை பற்றி நிறுத்தியிருந்தார் சரோஜினி.​

அவன் அவரை கேள்வியாக பார்க்க அவரும் விழிகளில் தயக்கத்தை தேக்கியபடி அவனை ஏறிட்டு பார்த்தார்.​

"இன்னும் என்ன?" என்று இரு புருவங்களையும் உயர்த்தி அவன் கேட்க "நம்ம மதுவை உனக்கு..." என்று அவர் ஆரம்பித்தது தான் தாமதம் அவன் பார்த்த பார்வையில் அவரின் இதழ்கள் கப்பென்று மூடிக்கொண்டன.​

"மதுவை போய் நான் எப்படி அத்தை? அவளை நான் அப்படி பார்த்ததே இல்லை. இனிமேலும் இப்படி ஏதும் பேசிட்டு என் முன்ன வந்திங்கன்னா இருக்கு உங்களுக்கு" என்றான்.​

"சரிப்பா சரி...இனி இப்படி ஒன்னும் பேசல. சாரி" என்றார்.​

"இம்ம்ம்...பரவால்ல பரவால்ல..இந்த முறை போனா போகுதுன்னு மன்னிச்சு விடுறேன்" என்று சொல்லிக்கொண்டே அவன் சமைலறையிலிருந்து வெளியேற "வீர் நீ ஒன்னும் சாப்பிடலையே?" என்றார் சரோஜினி.​

"சாப்பாடு வேண்டாம் அத்தை...மது கூட சாப்பிட்டதே நாளைக்கு வரை காணும்... பார்க்க தான் உங்க பொண்ணு வத்தலும் தொத்தலுமா இருக்கா. ஆனால், மூனு பேர் சாப்பிடுற சாப்பாட்டை அவள் ஒருத்தியே சாப்பிடுவா போல. அவளை கட்டிக்க போறவன் அவளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தே நொடிச்சு போயிடுவான்" இன்று மது செய்த அலும்புகளை நினைத்தபடி சிரித்துக்கொண்டே சொன்னவன் வெளியேறியிருந்தான்.​

சமையலறையிலிருந்து வெளியேறி தோட்டத்து பக்கம் செல்வதற்காக வாசலை நோக்கி நடந்தவனின் விழிகளில் மாடிப்படியிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்த வைஷாலி தென்பட அவளை சீண்டி பார்க்கும் எண்ணம் சட்டென்று மனதிற்குள் வந்து புகுந்துகொண்டது அவனுக்கு.​

வாசலை நோக்கி நடந்த அவனது பாதங்கள் அப்படியே யூ-டர்ன்(u-turn) போட்டு மாடிப்படியை நோக்கி சென்றன.​

விழிகளை அலைபேசியில் பதித்தபடி வைஷாலி படி இறங்கிக்கொண்டிருக்க அவன் மாடிப்படியை ஏறத் தொடங்கியிருந்தான்.​

அவள் விழிகள் அலைபேசியில் இருக்க அவன் விழிகள் அவளில் இருந்தன.​

ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கி விட ஒருவர் வழிவிட்டால் தான் அடுத்தவர் செல்ல முடியும் என்ற நிலையில் வந்து நின்றிருந்தனர்.​

அலைபேசியை பார்த்துக்கொண்டே வந்த வைஷாலி அவளுக்கு முன்னால் யாரோ இருப்பது போல் உணர்ந்து அலைபேசியில் இருந்து பார்வையை விலக்கி நிமிர்ந்து பார்த்தாள்.​

அவனும் அவளை பார்த்துக்கொண்டே நின்றானே தவிர வழிவிடவில்லை.​

அவள் புருவங்கள் இடுங்க விழிகளாலேயே அவனை நகர்ந்து வழிவிடும்படி சைகை செய்தாள்.​

அவனும் இரு புருவங்களை உயர்த்தி 'நீ முதல்ல வழிவிடு' என்பது போல் பதிலுக்கு சைகை செய்தான்.​

அவள் அவனை முறைத்து பார்க்க அவனும் அவளை முறைத்துக்கொண்டு நின்றான்.​

அவனாக வழிவிடப்போவதில்லை என்று அவன் நின்ற தோரணையே அவளுக்கு உணர்த்தியிருக்க அதற்குமேல் அவனிடம் சண்டையிடும் எண்ணமும் அவளுக்கில்லை.​

இன்று முழுவதும் தருணுடன் செலவிட்ட நொடிகளின் இனிமையான உணர்வுகள் இன்னமும் மீதமிருக்க அதை இவனுடன் சண்டையிட்டு கெடுத்துக்கொள்ளவும் அவள் விரும்பவில்லை.​

அவளாக விலகி போய்விடுவது நல்லது என்று நினைத்தவள் அவனுக்கு வழிவிட்டு ஒரு பக்கமாக விலகி நடக்க எத்தனித்த நேரம் 'என்ன ஆள் வம்பு பண்ணுற மூட்ல இல்லை போலயே... தப்பாச்சே... நீ விலகி போனா நான் விட்டுடுவேனா' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன் அவள் இடப்பக்கமாக நகர அவனும் இடப்பக்கமாக நகர்ந்தான்.​

அவள் வலப்பக்கம் நகர அவனும் வலப்பக்கம் நகர்ந்து வழியை மறைத்துக்கொண்டு நின்றான்.​

வேண்டுமென்றே வம்பிழுக்கின்றான் என்று வைஷாலிக்கு நன்றாகவே புரிந்துப்போக நிமிர்ந்து அவனை உறுத்து விழித்தாள்.​

'ஆஹா முறைக்குறா... முறைக்குறா...ஒர்க் அவுட் ஆகுதுடா வீர்' என்று இதழ்களுக்குள் புன்னகையை மறைத்தபடி நினைத்துக்கொண்டவன் "என்ன?" என்றான்.​

"போகணும்" என்றாள் அவள்.​

"போ" என்றவனின் வார்த்தை வழிவிட்டாலும் உடல் இன்னும் நெடுமரமென படிக்கட்டின் நடுவில் தான் நின்றுகொண்டிருந்தது.​

அவனை சலிப்பாக பார்த்தவள் "இப்படி எருமை மாடு மாதிரி வழியை அடைச்சிட்டு நின்னா எப்படி போறது? வழி விடுங்க" என்று சிடுசிடுத்தாள்.​

"யாருடி எருமை... நீ தான் குட்டி எருமை..." என்றான் அவன்.​

" 'டி' போட்டு பேசின..கொன்னுடுவேன்டா உன்னை" மரியாதை விழிப்புகள் மறைந்து அவளும் ஒருமையில் திட்ட தொடங்கியிருக்க​

"இங்க பாருடா குட்டி எருமைன்னு சொன்னது பெருசா தெரியலையாம் 'டி' சொல்லி பேசினது மட்டும் குத்தமாம். உனக்கு எதுக்கு கோவப்படணும்னு கூட இன்னும் சரியா தெரியல, இதுல கல்யாணம் வேற ஆக போகுது. பாவம் அந்த மனுஷன்" என்று தருணுக்காக நிஜமாக வருந்துபவன் போல அவன் முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்.​

"எனக்காவது கல்யாணமாக போகுது...நீ பேசுற பேச்சுக்கு வாழ்க்கை முழுக்க கட்ட பிரம்மச்சாரியாதான் இருக்க போற பாரு" கடுப்பில் திட்டினாள் வைஷாலி.​

"என்னடி சாபமெல்லாம் விடுற... அய்யய்யோ நீ விட்ட சாபத்தில் எப்படி என் கை கால் எல்லாம் நடுங்குது பாரு" என்று பயத்தில் நடுங்குபவன் போல் வேண்டுமென்று தனது கைகளையும் கால்களையும் ஆட்டிக்காட்டினான் அவன்.​

அதோடு நிறுத்திக்கொள்ளாமல் மேலும் தொடர்ந்தவன் "ஆனால், சாபமெல்லாம் நல்லவங்க விட்டா தான் பலிக்குமாம். உன்னை மாதிரி பஜாரிங்க சொன்னா எல்லாம் பலிக்காது...அதிலும் குட்டி எருமை மாதிரி இருக்குற பஜாரிங்க சொன்னா சுத்தமா பலிக்காது" என்றான் உதட்டில் ஒரு ஏளன புன்னகையுடன்.​

அவளுக்கோ கோபம் சுர்ரென்று தலைக்கேற பற்களை நறநறவென கடித்தவள் "மரியாதையா விலகி போ மாமா...இல்லை நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை" எச்சரித்தாள் வைஷாலி.​

"நீ நடக்குறதுக்கு நீ தான் பொறுப்பு... பின்ன நானா பொறுப்பாக முடியும்" என்று மேலும் அவன் சீண்ட அவளுக்கு பொறுமை மொத்தமாக எங்கோ பறந்துவிட்டது.​

வந்த கோபத்தில் அவள் முன்னால் நின்றிருந்தவனின் மார்பில் இரு கைகளையும் வைத்து தள்ளிவிட்டிருந்தாள்.​

படிக்கட்டில் நின்றிருந்தவன் அவள் அப்படி செய்வாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதால் நிலை தடுமாறி கீழே விழ போக அப்பொழுதுதான் சினத்தில் தான் செய்த காரியம் மண்டைக்குள் உரைத்தது வைஷாலிக்கு.​

சட்டென்று கரங்களை நீட்டி அவன் சட்டையை அவள் பற்றியிழுக்க சமநிலை தவறி தடுமாறிக்கொண்டிருந்த வீரும் பற்றுதலுக்காக அவள் கரங்களை பிடித்திழுத்ததில் அவளும் அவனுடன் சேர்ந்து இழுபட்டு விழப்பார்த்தாள்.​

இருவருமே நிலை தடுமாறிய சமயம் விழுந்தால் இருவரும் மாடிப்படியிலிருந்து உருண்டு தான் விழவேண்டும். அப்படி விழுந்தால் சரமாரியாக காயம் ஏற்படவும் வாய்ப்பிருக்க தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒருவருக்கு அடுத்தவர் தான் பாற்றுக்கோளாக மாறியிருந்தனர்.​

சட்டென்று தன்னுடன் சேர்ந்து விழ பார்த்த வைஷாலியை தன்னுடன் சேர்த்து நெறுக்கிக்கொண்டபடி இரு எட்டுக்கள் கீழ் படிகளில் வைத்தவன் தடுமாறிய கால்களை சமாளித்துக்கொண்டு அப்படியே மாடிப்படி சுவற்றில் சாய்ந்து சமலநிலைக்கு வந்திருந்தான்.​

அவளையும் விழுந்துவிடாமல் காப்பாற்றியுமிருந்தான்.​

விழப்போகின்றோம் என்ற பயத்தில் விழிகளை மூடி அவனது ஷர்ட்டை அழுந்த பற்றிக்கொண்ட வைஷாலியும் அவன் மார்போடு ஒன்றி போயிருந்தாள்.​

விழப்பார்த்த அதிர்ச்சியில் இருவருக்குமே இதயம் தாறுமாறாக படபடத்துக்கொள்ள அதிலிருந்து மீண்டு வரவே அவர்களுக்கு சில நொடிகள் தேவைப்பட்டன.​

இருவரின் விழிகளும் மூடியிருக்க வேக மூச்சுகளுடன் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடிதான் நின்றிருந்தனர்.​

முதலில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட தானவீரன் இமைத்திறந்து பார்க்க அப்பொழுதுதான் அவர்கள் இருவரும் நின்றிருந்த கோலத்தையே அவன் உணர்ந்தான்.​

பயத்தில் தன் மார்போடு ஒன்றியிருந்தவளை குனிந்து பார்த்தான்.​

"ம்ம்க்கும்…” குரலை செறுமியப்படி “கொஞ்சம் விலகி நின்னா நல்லா இருக்கும்" என்று அவன் சொல்ல சட்டென்று விழிவிரித்து நிமிர்ந்த அவனை பார்த்தாள் வைஷாலி.​

ஒரு நொடி இருவரினது விழிகளும் சங்கமித்துக்கொண்ட அந்த நொடி உள்ளுக்குள் ஏதோ படபடப்பு அவனுக்கு. எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டான்.​

தான் அவனுடன் நெருக்கமாக நின்றிருப்பதை உணர்ந்த வைஷாலி சட்டென்று அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தபடி கீழே இறங்கி செல்ல முயற்சிக்க தருணால் பரிசளிக்கப்பட்டு புதிதாக அவள் கரத்தில் குடியேறியிருந்த பிரெஸ்ட்லெட் அவன் சட்டையின் நூலில் நன்றாக சிக்கிக் கொண்டது.​

அதை மற்றொரு கரத்தால் அவள் அவசரமாக எடுக்க முயற்சித்த சமயம் அவள் முகத்தில் சினத்தின் ரேகைகள் நன்றாகவே படர்ந்திருந்தன. அதை கவனித்தவனுக்கு அவளிடம் எல்லை மீறி விளையாடிவிட்டோமோ என்று குற்றவுணர்வாகி போனது.​

அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் குரலை செறுமியபடி "ரிலாக்ஸ் வைஷு... அப்படி எடுத்தா அறுந்துபோயிடும். விடு,நான் எடுத்து விடுறேன்" என்றான்.​

அவனை முறைத்து பார்த்தவள் அவள் முயற்சியை கை விட்டிருக்க இப்பொழுது அவன் சட்டையில் சிக்கியிருந்த பிரெஸ்ட்லெட்டை எந்த சேதாரமுமின்றி எடுத்துவிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான் தானவீரன்.​

பிரேஸ்லெட்டோடு சேர்ந்து அவன் சட்டையில் சிக்கியிருந்த அவள் கரத்தை மெதுவாக பற்றி அவன் மார்பின் மீது வைத்தான். அவன் செய்கையில் வைஷாலியின் பார்வை அவன் மீது இன்னும் கூர்மையாக படிய "கையை இப்படி ரிலாக்ஸ் ஆஹ் வச்சதான் பிரெஸ்ட்லெட் எடுக்க ஈஸியா இருக்கும். நான் ஒரு பக்கம் எடுக்க நீ ஒரு பக்கம் இழுத்து பிடிச்சா கஷ்டமா இருக்கும்ல அதுக்கு தான்" அவள் தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்கின்ற பயத்தில் அவனாகவே அவன் செய்கைக்கு விளக்கமளித்தான்.​

அவள் ஏதும் பேசாமல் நின்றிருக்க 'உனக்கு இது தேவை தான். அவள் பாட்டுக்கு சும்மா தானே போனா. அவளை வம்புக்கிழுக்கிறேன்னு இப்போ சொந்த காசுல சூனியம் வச்சிக்கிட்டியேடா வீரா' என்று மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டே அவன் பிரெஸ்ட்லெட்டை எடுத்துவிட முயற்சித்துக்கொண்டிருந்தான்.​

அந்த சமயம் பார்த்து "வீர்" என்ற அழைப்பு அதட்டலாக வர வீர் மற்றும் வைஷாலி இருவரும் அந்த குரல் வந்த திசை நோக்கி திரும்பிப்பார்த்தனர்.​

அங்கே சேகர் தான் அவனை முறைத்தபடி நின்றிருந்தார்.​

அலுவலக அறையில் கிருஷ்ணகுமாருடன் வேலை விடயங்களை பற்றி கலந்துரையாடிவிட்டு வெளியில் வந்தவருக்கு மாடிப்படியில் அவர்கள் நெருக்கமாக நின்றிருந்த காட்சி தான் கண்ணில் பட்டது.​

இன்னும் ஒரு வாரத்தில் திருமணமாக போகும் பெண்ணுடன் தனது மகன் இவ்வளவு நெருக்கத்தில் நின்றிருப்பது அவருக்கு சரியாக படவில்லை. வீர் மற்றும் வைஷாலியும் ஒன்றாக வளர்ந்தவர்கள் என்னும் உரிமையில் பழகுவது இதுநாள் வரை அவருக்கு உறுத்தியதில்லை. ஆனால், அவளுக்கு திருமணம் என்னும் நிலையில் இதுபோன்ற செய்கைகள் தேவையற்ற பிரச்சனையில் வந்து விடியும் என்று நினைத்தார்.​

அவரின் பார்வையிலேயே அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் விடயம் புரிந்து விட "தப்பா நினைக்காதீங்க மாமா. படியிறங்கி வரும்போது கால் இடறி கீழ விழ பார்த்தேன். வீர் மாமா தான் நான் விழுந்திடாமல் காப்பாத்தினார்" என்றவள் அவன் அவளிடம் வம்பு வளர்த்தது எல்லாவற்றையும் மறைத்திருந்தாள்.​

உண்மையை சொன்னால் நிச்சயம் சேகர் வீரை வறுத்தெடுத்துவிடுவார் என்று அவளுக்கு நன்றாக தெரியும். தான் அந்த சூழ்நிலையை கொஞ்சம் பொறுமையாக கையாண்டிருந்தாலும் இப்பொழுது இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற உண்மையும் புரிய அவனை மட்டும் குற்றம் சொல்வதிலும் நியாயமில்லை என்றே அப்படி மாற்றி சொல்லியிருந்தாள்.​

உண்மையை மறைத்தாலும் அவ்வளவு நெருக்கத்தில் நின்றிருக்கையில் சேகர் பார்த்ததும் ஒரு மாதிரி இருக்க அதற்குமேல் அங்கே கட்சி பொருளாக நிற்க விரும்பாதவள் சட்டென்று அவன் சட்டையில் சிக்கியிருந்த தனது கரத்தை இழுத்தெடுத்தபடி நகர்ந்து செல்ல அந்த பிரெஸ்ட்லெட் அறுபட்டு அவன் சட்டையிலேயே தொங்கிக்கொண்டிருந்தது.​

முதன் முதலில் தருண் வாங்கி கொடுத்த பரிசு ஒரு நாள் கூட முழுமையாக அவள் கரத்தில் நிலைக்காததில் மனதுக்கு ஒரு மாதிரி இருக்க அவள் விழிகள் கலங்கிவிட்டன. வீரின் மீது கோபமும் வந்தது.​

சேகர் அங்கே நின்றிருக்க அவருக்கு முன்னால் வீரிடம் தனது சினத்தையும் காட்ட முடியாமல் கலங்கிய விழிகளுடன் அவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் கீழே இறங்கி சென்றிருந்தாள்.​

அவள் கலங்கிய விழிகளை பார்த்தவனுக்கும் தான் அவளை அப்படி கிண்டல் செய்யாமலே இருந்திருக்கலாம் என்று தான் தோன்றியது.​

அவள் கலங்கிய விழிகளை வைத்தும் குளம்பியகத்தில் அவன் விட்டு வந்த நேரம் அவள் கரத்தில் இல்லாத பிரெஸ்ட்லெட் இப்பொழுது இருந்ததையும் வைத்தே அது தருண் வாங்கி கொடுத்ததாக இருக்க வேண்டுமென்று யூகித்துக்கொண்டவனுக்கு இத்தனை வருடங்களில் முதல் முறையாக தான் அவளை சீண்டியிருக்க வேண்டாமோ என்ற எண்ணம் உதித்திருந்தது.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

வைஷாலி சென்றதும் அவனை நோக்கி படியேறி வந்த சேகர் " வீர், வைஷாலிக்கு கல்யாணமாக போகுது. உனக்கு நான் சொல்லணும்னு இல்லை. உன் எல்லை தெரிஞ்சு நடந்துக்கோ" என்று விட்டு சென்றிருந்தார்.​

அவர் சொன்னதும் தான் இனி தான் வைஷாலியிடம் முன்பு போல் வம்பு வளர்ப்பதும் அதிகப்படி உரிமை எடுப்பதும் கூடாது என்றே அவனுக்கு உரைத்தது.​

"என்னடா நீ" என்று தனக்கு தானே திட்டிக்கொண்டு இதழ் குவித்து ஊதியவன் தனது சட்டையில் மாட்டியிருந்த பிரெஸ்லெட்டை அகற்றி பான்ட் பாக்கெட்டில் வைத்தபடி மாடியில் இருக்கும் தனது அறையை நோக்கி நடந்தான்.​


 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 15


அவனது பெற்றோரின் அறையை தாண்டித்தான் தனது அறைக்கு செல்ல வேண்டும் தானவீரன். அவர்களின் அறையை கடக்கும் பொழுது மெலிதாக திறந்திருந்த கதவினூடு ஈஸ்வரியின் குரல் அவன் செவிகளில் வந்து விழுந்தது.​

வைஷாலியின் திருமண விடயமாகத்தான் சேகர் அறைக்குள் வந்ததும் வராததுமாக அவரிடம் வாக்குவாதம் செய்துக்கொண்டிருந்தார்.​

“இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல வைஷாலியை நம்ம வீருக்கு கேட்டு பார்க்கலாமா? நீங்க கேட்டா நிச்சயம் அண்ணா மறுக்க மாட்டார்" தன் கணவரின் மீது தமையனுக்கு இருக்கும் நன்மதிப்பை ஈஸ்வரி நன்கு அறிந்து வைத்திருந்தமையால் அப்படி சொன்னார்.​

தன்னையும் வைஷாலியையும் பற்றிய பேச்சு என்பதால் தானவீரனின் கால்கள் அப்படியே அவர்களின் அறையின் முன்னரே வேரூன்றி நின்றுவிட்டன.​

தானவீரனே அவனுக்கு வைஷாலியின் மீது அப்படியெல்லாம் எந்த எண்ணமும் இல்லை என்று சொல்லியும் கூட ஈஸ்வரியால் வைஷாலி மற்றும் தருணின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.​

கணவனும் சரி, மகனும் சரி இருவருமே அவரது ஆசைக்கு இணங்காமல் அவர் திட்டத்தை எல்லாம் தவிடுப்பொடி ஆக்கிக் கொண்டிருப்பதில் அவருக்கு பெரும் வேதனை.​

ஏற்கனவே கணவரிடம் பேசிப் பார்த்து வேலைக்காகவில்லை என்று சற்றுமுன் சரோஜினியிடம் சண்டை பிடித்து அதற்காக தானவீரனிடம் வாங்கி கட்டிக்கொண்டு வந்திருந்தாலும் கூட இன்னமும் அவரது முயற்சியை கைவிட விரும்பாமல் அறைக்குள் வந்த கணவரிடம் அதே விடயத்திற்காக சண்டைக்கு நின்றார்.​

அவர் சொல்லியதற்கு சேகரிடமிருந்து எந்த பதிலும் வராமலிருக்க "கேட்குறேன்ல ஏதாச்சும் பதில் சொல்லுங்க" என்றார் கடுப்பாக.​

"கேட்டா நிச்சயம் மறுக்கமாட்டார் தான். அதுனால தான் நான் கேட்கல." என்று விட்டேத்தியாக வந்தது சேகரின் வார்த்தைகள்.​

“பொறுப்பில்லாத பிள்ளைக்கு உங்க பொண்ணை கொடுங்கன்னு எந்த முகத்தை வச்சிட்டு நான் கேட்குறது. உன் பிள்ளை வேலை வெட்டின்னு எதுக்காவது போறானா? இல்லை நம்ம வியாபாரத்தையாவது கவனிக்குறானா? எதுவுமில்லையே. ஊரை சுத்துறதும் வம்பு வழிச்சிட்டு வரதுமா தானே இருக்கான்" என்ற சேகரின் மனதிலும் வீருக்கு வைஷாலியை கேட்கும் எண்ணம் ஆரம்பத்தில் இல்லாமலில்லை.​

ஆனால், தனக்கென்று ஒரு உத்தியோகத்தை தேடிக்கொள்ளாமல் ஊதாரித் தனம் செய்துகொண்டிருப்பவனுக்கு எப்படி பெண் கேட்பது என்று தான் அவர் தயங்கியதும். அச்சமயம் தருண் போன்று நல்ல வரன் வைஷாலியை தேடி வரும் போது அதற்கு முட்டுக்கட்டையாய் நிற்கவும் அவர் விரும்பவில்லை.​

ஆகையால் கிருஷ்ணகுமார் குடும்பத்தாரின் கருத்துக்களை கேட்ட நேரம் அவரும் மறுபேச்சின்றி சம்மதித்தகோடு ஈஸ்வரியிடமும் மறுப்பு சொல்லவேண்டாம் என்று எச்சரித்துமிருந்தார்.​

அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த தானவீரனுக்கு கடுப்பாகத்தான் இருந்தது. அங்கே சரோஜினியிடம் சண்டை பிடித்தது போதாது என்று இங்கு சேகரிடமும் அதைப்பற்றி பேசி அவனுக்கல்லவா தேவையில்லாமல் திட்டு வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.​

‘நல்ல காலத்திலேயே அவருக்கு என்னை திட்டுறது ஒன்னு தான் வேலை. இதில் இந்த அம்மா வேற கல்யாணம் கத்திரிக்காயின்னு ஏத்தி விடுது’ என்று மனதுக்குள் நொந்துக் கொண்டான்.​

“நீங்களும் நான் சொல்றதை கேட்கவே மாட்டேங்கிறீங்க. உங்க புள்ளையும் அப்படித்தான் இருக்கான். வாழ்க்கை முழுக்க அண்ணன் குடும்பத்துக்கும் அவர் பிள்ளைகளுக்கும் சேவை செய்தே நம்ம வாழ்க்கை முடிஞ்சிடும் போல” சீற்றத்துடன் சொல்லியவரின் குரலில் சின்ன அழுகையும் கலந்திருந்தது.​

உண்மையில் சொல்லப்போனால் ஈஸ்வரி சொல்வது போல் கிருஷ்ணகுமார் தங்கையின் குடும்பம் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் சேவகம் செய்து தங்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று நிச்சயமாக நினைத்ததேயில்லை.​

அதைவிட முக்கியமாக அப்படி ஒரு எண்ணம் தனது தங்கைக்கோ அல்லது சேகருக்கோ வந்துவிடக் கூடாது என்பதற்காக சேகரிடம் வழி நடத்துவதற்காக கொடுத்திருந்த தனது டிரான்ஸ்போர்ட் கம்பெனியின் வரவுகளை கூட மொத்தமாக தங்கை குடும்பத்திற்கே கொடுத்திருந்தார்.​

அதன் கணக்கு வழக்குகளில் கூட கிருஷ்ணகுமார் தலையிடுவதில்லை. கிருஷ்ணகுமார் கேட்காமல் விட்டாலும் கூட சேகர் தான் அடிக்கடி அவரிடம் கணக்கு வழக்குகளை காட்டி விட்டு வருவார். அது அவரின் நேர்மையை பிரதிபலிப்பதாக நினைத்து பெருமிதமும் கொள்வார்.​

இவை அனைத்தும் ஈஸ்வரிக்கு தெரிந்திருந்தாலும் கூட இத்தனை வருட காலங்கள் கடந்தும் இன்னமும் தனக்கென்று ஒரு தொழில் இல்லாமல் அண்ணனின் வியாபாரத்தை தானே தனது கணவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதில் அவருக்கு சற்றே மன வருத்தம் இருக்கத்தான் செய்தது.​

இப்பொழுது தானவீரனுக்கு வைஷாலியை கொடுக்காமல் அவளை வெளியில் கொடுப்பதும் அதோடு சேர்ந்துக்கொள்ள தனது கணவரையும் மகனையும் அவர்களது சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்வதாகவே நினைக்க ஆரம்பித்திருந்தார் ஈஸ்வரி.​

அதன் வெளிப்பாடு தான் ஒருவர் மாற்றி ஒருவராக தனது ஆற்றாமையை கொட்டிக் கொண்டிருக்கிறார்.​

“ஈஸ்வரி, இத பத்தி நாம முன்னாடியே பேசிட்டோம். இனி அதைப் பத்தி பேசுறதுக்கு ஒன்னுமில்ல. நீ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத” என்று சொல்லியப்படி அணிந்திருந்த சட்டையை கழட்டி அழுக்கு கூடைக்குள் போட்டவர் சட்டைக்குள் அணிந்திருந்த வெள்ளை நிற பனியனும் வேஷ்டியுமாக சென்று அறைக்குள் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து அலைபேசியை பார்க்க தொடங்கி விட்டார்.​

அவருக்கு செய்வதற்கும் யோசிப்பதற்கும் நாளை பொழுதின் அலுவல் பணிகள் காத்திருக்க அதற்காக செய்ய வேண்டிய வேலைகளை இப்பொழுதே அலைபேசியில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.​

ஆனால், ஈஸ்வரிக்கு அப்படி இல்லையே. அவரைப் பொறுத்தவரையில் உலகம் என்பது அந்த வீடும் அவர்களது குடும்பமும் தான்.​

அதிலும் குடும்பம் என்று சொல்லும் போது அவரைப் பொறுத்தவரை அதில் மிக முக்கியமானவர்களாக இருப்பவர்கள் அவரது கணவரும் மகனும் தானே.​

வீட்டு மாப்பிள்ளை எனும் பிம்பம் மாறி வீட்டு சம்பந்தி எனும் அந்தஸ்தை கணவனுக்கு தேடித் தரவும், ஆண் வாரிசு இல்லாத தமையனின் மூத்த வாரிசான வைஷாலியை தானவீரனுக்கு கட்டி கொடுத்து அவனை அந்த வீட்டின் மரியாதைக்குரிய மூத்த மருமகனாக்கவும் தானே அவர் இவ்வளவு பேசுவதும்.​

ஆனால், அதை சம்பந்தப்பட்ட இருவருமே அலட்சியப்படுத்தும் பொழுது அவரால் தான் அதை தாங்கிக் கொள்ள முடியுமா?​

அதிலும் முக்கியமாக தனது அன்னை ஜெயலக்ஷ்மியாவது இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு சொல்லுவார் என்று பார்த்தால் அவரும் கூட கிருஷ்ணகுமார் மற்றும் சேகரின் முடிவுக்கு பெரியதாக எந்த மறுப்பும் சொல்லாமல் இருந்து விட்டார்.​

பெரிய இடத்து சம்மந்தம் என்றதும் தனது தாய்க்கு கூட மகள் வயிற்று பேரன் முறைக்கு இருக்கிறான் என்பது மறந்துவிட்டது போலும். அப்படியானால் திருமணத்திற்கு பின்னும் கணவனோடு பிறந்த வீட்டோடு இருந்து விட்டதில் தன் தாயாருமே அவர்களை இளக்காரமாக தான் எண்ணுகிறாரோ என்பதும் மனதை உறுத்த தொடங்கியிருந்தது ஈஸ்வரிக்கு.​

இப்படி தேவையற்ற எண்ணங்களும் கற்பனைகளும் மனதை ஆட்கொண்டிருக்க எல்லாமுமாய் சேர்ந்து அவரின் உள்ளம் உலைகலனாய் கொதித்துக் கொண்டிருந்தது.​

சேகர் எத்தனை சொல்லியும் அவரின் மனம் ஆரமாட்டேன் என்று முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது. குரலில் கலந்திருந்த அழுகை இப்பொழுது விழிகளில் நீராய் கரைந்து கன்னம் நனைக்க "நான் வைஷாலி தான் எனக்கு மருமகளாய் வரணும்னு எத்தனை ஆசையா இருந்தேன். இன்னிக்கு நேத்து வந்த ஆசையில்லை அண்ணனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்குன்னு தெரிஞ்சதும் மனசுல வந்த எண்ணம் இது. அதுனால தான் அடம்பிடிச்சு அவளுக்கு வைஷாலின்னு பேரு வச்சேன்" என்றார்.​

அவரின் பேச்சில் சேகரின் புருவங்கள் கேள்வியாக இடுங்கியது என்றால் வெளியில் நின்ற தானவீரனின் புருவங்களும் இடுங்கின.​

'எனக்கு பொண்டாட்டியாக்கனுமுன்னு நினைச்சதுக்கும் அவளுக்கு வைஷாலின்னு பேரு வச்சதுக்கும் என்ன சம்மந்தம்?' என்று அவன் வாய்க்குள் முணுமுணுத்துக்கொள்ள அதே கேள்வியை தான் அறைக்குள் ஈஸ்வரியிடம் சேகரும் கேட்டிருந்தார்.​

"என்ன உளறுற...அவள் பேருக்கும் உனக்கு மருமகளா வரதுக்கும் என்ன சம்மந்தம்?" என்றார்.​

"மஹாபாரதத்துல வர கர்ணனை உங்களுக்கு பிடிக்குமுன்னு தானே நம்ம புள்ளைக்கு தானவீரன்னு பேரு வச்சீங்க. அது தான் அண்ணனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்குனு தெரிஞ்சதும் அவள் தான் என மகனுக்கு துணையா வரணும்னு அந்த கர்ணனோட மனைவி வைஷாலியின் பேரையே அவளுக்கும் வச்சேன்" என்றார்.​

'சுத்தம்... நல்லா வச்சாங்க பேரு' என்று தலையில் அடித்து கொண்டான் தானவீரன்.​

"இது கூட தெரியாதா உங்களுக்கு? அதுசரி இதெல்லாம் தெரிஞ்சிருந்தாதான் இத்தனை வருஷத்துக்கு அண்ணா கம்பெனியில் உழைச்சு கொட்டுனதுக்கு பதில் சொந்த கம்பெனியே ஆரம்பிச்சிருப்பீங்களே...அந்த திறமை எல்லாம் உங்க கிட்ட எதிர்பார்க்குறதெல்லாம் என் தப்பு தான்" என்று தான் நினைத்தது போன்று மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்கின்ற ஆற்றாமையில் கணவரிடம் என்ன பேசுகின்றோம் என்றும் புரியாமல் பிதற்றிக்கொண்டிருந்தார் ஈஸ்வரி.​

"ஈஸ்வரி...என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசு" என்று நாற்காலியில் இருந்து சீறியபடி எழுந்து நின்றிருந்தார் சேகர்.​

தந்தையிடம் தரமிறங்கிக்கொண்டிருக்கும் தாயின் பேச்சில் தானவீரனுக்கே அதிருப்தியாகிவிட 'ஆஹ் கட்ட துரைக்கு கட்டம் சரியில்ல...உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குறேன்னு இந்த வயசுல அவங்களுக்கு டைவர்ஸ் வாங்கிடுவாங்க போல...பொறுத்தது போதும் குதிச்சிருடா கைப்புள்ளை...' என்று நடிகர் வடிவேலு பாணியில் சொல்லிக்கொண்டே அறையின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் தானவீரன்.​

வீரை பார்த்ததும் அவனையும் அவனது அன்னையையும் மாற்றி மாற்றி முறைத்து கொண்டு நின்ற சேகரிடம் "விடுங்கப்பா நான் பேசிக்கிறேன்" என்றான்.​

"ம்ம்ம்... என்ன பேசுவியோ தெரியாது இனி உங்கம்மா மறுபடியும் இந்த பேச்சை எடுத்துக்கிட்டு என் கிட்ட வரக்கூடாது சொல்லிட்டேன்" என்று அழுத்தமாக சொல்லியவர் தாயையும் மகனையும் அங்கேயே விட்டு விட்டு அறையிலிருந்து வெளியேறியிருந்தார்.​

அவர் சென்றதும் கட்டிலில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்த அன்னையைப் பார்த்தான் தானவீரன்.​

அவரைப் பார்க்கவும் அவனுக்கு பாவமாகத்தான் இருந்தது. அதிகமாக எதிர்பார்த்திருந்திருப்பார் போல.​

இதுவரை அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக காட்டிக்கொள்ளாமல் இருந்ததிலேயே தான் நினைத்தபடி தான் எல்லாம் நடக்க போகின்றது என்று அலாதி நம்பிக்கை கொண்டிருந்திருக்கிறார் என்று புரிந்துக்கொண்டான் அவன்.​

அந்த நம்பிக்கை உடைந்துவிட்டதில் வேதனையில் இருக்கும் தாயை தேற்றுவதும் அவனது கடமை தானே.​

மெல்ல அடி எடுத்து வைத்து ஈஸ்வரியின் அருகே சென்று அமர்ந்தான். மெதுவாக கையை எடுத்து அவர் தோளை சுற்றி போட்டவாறு அவரை அணைத்தபடி அவர் முகத்தை குனிந்து பார்த்தான்.​

சட்டென அவன் கையை உதறி விட்டார் அவர் "அட..." என்றபடி மீண்டும் அவர் தோளில் கை வைத்து தன்னுடன் சேர்த்தணைக்க ஈஸ்வரி மறுபடியும் உதறி தள்ளத்தான் பார்த்தார்.​

ஆனால், முடியவில்லை. அவன் பிடி இறுக்கமாய் இருந்தது. நிமிர்ந்து அவனை தனது ஈர விழிகளால் பார்த்து முறைக்க முயன்றார்.​

அவனோ "என்னம்மா... இப்போ என்னாச்சுன்னு அழறீங்க?" என்று மென்மையாக கேட்டபடி அவர் கன்னம் விழுந்த கண்ணீரை துடைத்துவிட்டான்.​

அவனது அந்த மென்மையில் அவருக்கு மேலும் அழுகை தான் வந்தது. அவன் சிரிப்பில் அவருக்கு அவன் மீது தொடர்ந்து கோபத்தையும் காட்ட முடியவில்லை.​

அமைதியாகவே அவன் அணைப்பிலேயே விசும்பிக்கொண்டிருந்தார்.​

"போதும்மா...இதுக்கு மேல இந்த விஷயத்தை பத்தி இனி பேச வேண்டாம். நான் தான் உங்க கிட்ட சொன்னேன்ல எனக்கு அப்படி ஒரு எண்ணம் இதுவரை இல்லைன்னு. சொல்லியும் என்ன இது மறுபடியும் மறுபடியும் அதையே பேசிகிட்டு...சின்ன புள்ளை தனமாவுல இருக்கு" என்று வடிவேலுவின் தோரணையில் அவன் சொல்ல அவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.​

மெலிதாக சிரித்தவரின் முகம் ஏந்தி "உங்களுக்கு அந்த வைஷாலியை விட இரண்டு...இல்லை இல்லை பத்து மடங்கு சூப்பரா ஒரு பொண்ணை மருமகளா கூட்டி வரேன் போதுமா?" என்று அவன் சொல்ல ஈஸ்வரியோ "அதெல்லாம் வேணாம்டா வைஷாலியையே..." என்று மீண்டும் ஆரம்பித்தார்.​

"அம்மா" என்று அழுத்தமாக அழைத்திருந்தான் வீர். குரலில் அழுத்தமிருந்தாலும் முகத்தின் மென்மை இன்னமும் மாறாமல் தான் இருந்தது.​

“நீங்க இப்படி சண்டை பிடிச்சு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்குறதை பார்த்தா என்னமோ நான் நிஜமாவே கையாலாகாதவன் போல ஃபீல் ஆகுது. நிஜமாவே நீங்களும் என்னை அப்படி தான் நினைக்குறிங்களா?" என்று எப்படி பேசினால் தாயின் வாயை அடைக்க முடியும் என்று தெரிந்தே பேசினான்.​

"டேய், என்னடா இப்படி எல்லாம் பேசுற?" என்றவரிடம் "பின்ன என்னம்மா உங்க அண்ணன் பொண்ணை விட்டா எனக்கெல்லாம் உலகத்துல பொண்ணே கிடைக்காதுங்குற மாதிரி பேசுறிங்களே" என்றான்.​

அவன் அப்படி சொல்லியதில் அவருக்கும் குற்றவுணர்வாகி போக "அதுக்கில்லை டா... நீ தானே அவளுக்கு முறைப்பையன்...." என்று அவர் ஆரம்பிக்க அவரை இடை நிறுத்தினான் தானவீரன்.​

"அம்மா, உங்க பிள்ளை பொறுப்பில்லாமல் திரிஞ்சா அவனை பொறுப்பா இருக்கச் சொல்லி கண்டீங்க. அது தான் நியாயம். அதை விட்டுட்டு உறவு முறையை காரணம் காட்டி வேலை வெட்டி இல்லாதவனுக்கு பொண்ணு கொடுக்க சொல்லி ப்ளாக் மெயில் பண்ணாதீங்க. இதே உங்க பொண்ணா இருந்தா பொறுப்பில்லாத ஒருத்தனுக்கு கட்டி கொடுக்கணும்னு நினைப்பிங்களா?" என்று ஒரே கேள்வி தான் கேட்டான்.​

"என்ன வீர் இப்படி எல்லாம் பேசுற. நீ வேலைக்கு போகலங்குறதை தவிர உன் கிட்ட வேற என்ன குறை சொல்லு?" என்று கேட்டார் ஈஸ்வரி.​

"வேலை இல்லைங்குறதே பெரிய குறை தானேம்மா" என்றான் அவன்.​

"அப்போ வேலைக்கு போய் தான் தொலையெண்டா" என்று ஈஸ்வரி கடுப்பாக சொல்ல 'ஆஹா கத்தி நம்ம பக்கமே திரும்பிடுச்சே...' என்று திரு திருவென விழித்தவன் 'சமாளிப்போம்' என்று மனதிற்குள் நினைத்தபடி "இது பாய்ண்டு... சரி முதல் ஒரு வேலையை தேடுறோம் அடுத்து ஒரு பொண்ணை தேடுறோம் ஒகேவா ?" என்று அவர் கன்னம் கிள்ளி கேட்டான் அவன்.​

அவரும் மென்மையாக சிரித்துக்கொண்டே "சரி"என்று தலையாட்ட "இனி இந்த மேட்டரை பத்தி யார் கிட்டயும் எதுவும் பேச கூடாது ப்ரோமிஸ்?" சுண்டுவிரலை அவர் முன்னே நீட்டிக்கொண்டே கேட்டான்.​

"சரி பேசல" என்று அவர் வேண்டா வெறுப்பாக சொல்ல "ப்ரோமிஸ் பண்ணுங்க" என்று நீட்டிய சுண்டுவிரலை கண்களால் காட்டினான்.​

அவரும் அவனது சுண்டுவிரலுடன் தனது சுண்டுவிரலை கோர்த்தபடி "ப்ரோமிஸ்… இனி பேசல போதுமா?" என்றார்.​

"ஸ்வீட் மம்மி" என்றபடி அவர் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்த படி எழுந்து கதவு வரை சென்று ஒரு நொடி நின்று திரும்பி பார்த்தவன் "அப்புறம் மம்மி, கர்ணன் பொண்டாட்டி பேரு வைஷாலி இல்லை விருஷாலி" என்றான்.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

"ஏதே...அப்போ அது வைஷாலி இல்லையா?" என்று வாயில் கையை வைத்துக்கொண்டவரை பார்த்து இதழ் பிரித்து சிரித்தவன் " நீங்க பேரை தப்பா வச்சுட்டு இதுல அப்பாவுக்கு இது கூட தெரியலையான்னு கேள்வி வேற" என்றபடி அறையிலிருந்து வெளியேறியவனின் சிரிப்பொலி அவருக்கு தெளிவாக கேட்டது.​

"ஐயோ என்ன இப்படி சொல்லிட்டு போறான். நான் வேற பெரிய புத்திசாலி மாதிரி இந்த மனுஷனை கண்டமேனிக்கு பேசி வச்சிருக்கேனே... போன மனுஷன் திரும்பி வந்து வச்சு செய்ய போறார். ரெடியா இருந்துக்கோடி ஈஸ்வரி" என்றபடி தனக்கு தானே புலம்பிக்கொண்டே படுத்துவிட்டார்.​

அதே சமயம் இங்கே கிருஷ்ணகுமாரின் அறைக்குள்ளும் அதே விடயத்தை பற்றிய பேச்சு தான் போய்க்கொண்டிருந்தது.​

"ஈஸ்வரிக்கு வீருக்கு நம்ம வைஷாலியை கேட்குற எண்ணம் இருந்திருக்கும் போல. இன்னிக்கு அவள் என் கிட்ட அதை பத்தி பேசினப்போ எனக்கே ஒரு மாதிரி போச்சுங்க" என்றார்.​

"ரொம்ப கோவமா பேசிட்டாளா?" என்று கிருஷ்ணகுமார் தங்கையின் கோபத்தால் மனைவியின் உள்ளம் காயப் பட்டிருக்குமோ என்ற அக்கறையில் விசாரித்தார்.​

"சேச்சே அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க. அவள் பேசியதும் சரிதானே. முறைப்பையன் வீர் இருக்கும் போது அவனை பத்தி நாம கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையே" என்று நிஜமான வருத்தத்துடன் சொன்னார்.​

மனைவியின் அருகே வந்து படுத்தபடி அவரின் கரத்தை பற்றி தனது மார்பின் மீது வைத்துக்கொண்டார்.​

விழிகள் மூடி படுத்திருந்தவர் "இதுவரை நாம அவங்களை அந்த கோணத்துல பார்த்ததே இல்லையே. ஈஸ்வரிக்கு அப்படி ஒரு எண்ணமிருந்திருந்தா முன்னாடியே சொல்லிருக்கலாம்ல" சொன்னவரின் விழிகள் சட்டென்று விரிந்துக்கொண்டன.​

"ஏன் சரோ, ஒருவேளை வீருக்கும் அப்படி ஏதும் எண்ணமிருந்திருக்குமோ?" என்றவரின் குரலில் மெல்லிய பதற்றம் எட்டி பார்த்தது.​

அதை உணர்ந்துக்கொண்ட சரோஜினி அவர் பற்றியிருந்த தனது கரத்தால் அவரின் கரத்தில் மெல்ல அழுத்தம் கொடுத்தபடி " எனக்கும் இப்படி தான் பதறுச்சு. வீர் கிட்ட நேரடியாவே பேசி பார்த்துட்டேன். அப்படியெல்லாம் எதுவுமே இல்லைனு சொன்னான்" என்றார்.​

"வேணும்னா நம்ம மதுவை அவனுக்கு பேசுவோமா?" என்று சரோஜினி நினைத்ததையே கிருஷ்ணகுமாரும் கேட்டதில் மெல்ல சிரித்துக்கொண்டு "அதையும் அவன் கிட்ட கேட்டு பார்த்தேன். அவனுக்கு கோபம் வந்துடுச்சு. மதுவை அப்படி பார்த்ததேயில்லைனு சொல்லிட்டான்" என்றவரின் முகம் இன்னமும் ஏதோ யோசனையிலேயே இருந்தது.​

"இம்ம்...அதுதான் அவனே சொல்லிட்டானே. இன்னும் என்ன யோசிச்சிட்டிருக்க?" என்று கேட்டார் மனைவியின் முகத்தில் இருக்கும் கலக்கத்தை உணர்ந்தவராக.​

"இல்லங்க... ஏதோ குற்றவுணர்வாவே இருக்கு" என்று மங்கி ஒலித்த சரோஜினியின் குரல் "ஏங்க நம்ம வைஷாலி கல்யாணம் முடிஞ்சதும் வீருக்கு பொண்ணு பார்க்குற வேலையை ஆரம்பிச்சிடலாமா?" என்ற யோசனையை முன்வைத்தபோது மீண்டும் உற்சாகம் பூண்டிருந்தது.​

"அப்படியே ஆகட்டும் மகாராணி" என்று கிருஷ்ணகுமார் மனைவிக்கு பதிலளிக்க சரோஜினியும் மெல்ல சிரித்துக்கொண்டார்.​

இவர்களின் பேச்சு இப்படியாக இருக்க தனது அறையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு மெத்தையில் மல்லாந்து படுத்தபடி அறுந்துபோன வைஷாலியின் பிரெஸ்லெட்டை கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தான் தானவீரன்.​

சற்றுமுன்னர் மாடிப்படியில் மிக நெருக்கத்தில் இருவரின் விழிகளும் சந்தித்துக்கொண்ட நேரம் அவன் இதயம் ஒரு நொடி வழமைக்கு மாறாக படபடத்துக்கொண்டதும், கலங்கிய அவள் விழிகளும், உன் எல்லையில் நின்றுகொள் என்ற சேகரின் வார்த்தைகளுமே அவன் மூளைக்குள் வட்டமடித்துக்கொண்டிருந்தன.​

அந்த சிந்தனைகள் தந்த களைப்பிலேயே தானவீரன் நித்ராதேவியின் அணைப்பிற்குள் புகுந்திருந்தான்.​

தருணின் அன்பு பரிசான பிரெஸ்லெட் அறுந்து போனதில் வருத்தமிருந்தாலும் அதை தற்சமயத்திற்கு ஒத்திப்போட்டுவிட்டு அன்றைய நாள் தந்த அசதியில் உறக்கத்தை தழுவியிருந்தாள் வைஷாலி.​

இங்கே தருணும் அலுவலக வேலை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்பிய நேரம் அவனின் வீடே ஓய்ந்து உறக்கத்திற்கு சென்றிருந்தது.​

அவனின் அன்னை ஆர்த்தியை தவிர.​

ஆம்,தருணின் தந்தை கிறிஸ்துவ மதத்தையும் தாய் இந்து மதத்தையும் சார்ந்தவர்கள். அவர்களின் திருமணமும் காதல் திருமணமே. கலப்பு திருமணம் என்பதில் பல பிரச்சனைகளை சந்தித்த பிறகே அவர்களின் காதல் கைக்கூடியிருந்தது. அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை எல்லாம் கேட்டே வளர்ந்ததினாலோ என்னவோ தருணுக்கு காதலின் மீது அவ்வளவு பிடித்தமிருந்ததில்லை வைஷாலியை பார்க்கும் வரையில்.​

வீட்டிற்குள் நுழைந்த மகனின் முகத்தில் அன்றைய நாளின் களைப்பையும் மீறி தெரிந்த உற்சாகத்தில் மகிழ்ந்தவர் "என்னப்பா இன்னிக்கு முகமெல்லாம் பிரகாசமா இருக்கே?" என்று கிண்டல் தொனியில் கேட்டார் ஆர்த்தி.​

மெலிதாய் வெட்க புன்னகை சிந்தியபடி "எப்பவும் போல தானே இருக்கேன்" என்று மழுப்பலாக பதில் சொல்லிக்கொண்டே மாடிப்படியில் ஏறிய தருண் "எனக்கு வெயிட் பண்ணாதிங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன். சாப்பிட்டீங்களா?" என்று கேட்டான்.​

“சாப்பிட்டேன் ப்பா" என்றார் அவர்.​

“சரி நீங்க போய் தூங்குங்க. குட் நைட் ம்மா " என்றபடி தனது அறைக்குள் நுழைந்தான்.​

மகனின் பூரிப்பும் மகிழ்ச்சியும் தன்னையும் தொற்றிக்கொள்ள அவரும் மனநிறைவுடன் உறங்க சென்றுவிட்டார்.​

அறைக்குள் நுழைந்து முதல் வேலையாக தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு மெத்தையில் விழுந்த தருணுக்கு வைஷாலியின் நினைவுகள் தான்.​

அலைபேசியை எடுத்து அவளுக்கு ஒரு குட் நைட் செய்தியை தட்டி விட்டு விட்டு அலைபேசியை மார்பின் மீதே வைத்துக்கொண்டு அவளின் பதிலுக்காக காத்திருந்தான்.​

பத்து நிமிடங்கள் கடந்தும் பதிலில்லாமல் போக 'உறங்கியிருப்பாள் போல' என்று நினைத்தப்படி தனது அலைபேசியை எடுத்து அருகே இருந்த மேசையின் மீது வைத்து விட்டு மீண்டும் மெத்தையில் படுத்தவனின் எண்ணம் முழுக்க இன்றைய நாளில் அவளுடனான நொடிகளின் இனிமைகள் தான் நிறைந்திருந்தன.​

அது தந்த இதமான உணர்வில் மிதந்தப்படியே உறங்கி போயிருந்தான் தருண்.​

இப்படியாக அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் உறங்கிக்கொண்டிருக்க அவை அனைத்தையும் புரட்டி போட போவதே தான் தான் என்று கொஞ்சமும் துணுக்கற்று தனது ஹாஸ்டல் அறைக்குள் பாடங்களை மீள்பார்வை செய்துக்கொண்டு விழித்திருந்தாள் மதுஷிகா.​


 
Last edited:
Status
Not open for further replies.
Top