ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

"என்னடி உன் அக்காவை இங்கையே தொலைச்சிட்டு போக போறோமா? நல்ல முடிவு" என்று அவன் சொல்ல அவன் தோளில் ஒரு அடி போட்டவள் "ஏன் மாமா எப்ப பாரு அக்காவை எதாவது சொல்லிட்டே இருக்க?" என்றாள்.​

"இம்ம் வேண்டுதல்" அவன் சலித்துக்கொண்டான்.​

தலையை இருபக்கமும் ஆட்டியபடி சிரித்துக்கொண்ட மது "சரி சரி… நீ முதல் வண்டியை எடு மாமா" அவனை அவசரப்படுத்தினாள்.​

"என்னடி நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா, நீ நிஜமாவே உன் அக்காவை விட்டுட்டு போக போறியா?" அதிர்ச்சியாக கேட்டான் அவன்.​

"அதெல்லாம் போகும் போது சொல்லுறேன். நீ முதல்ல சீக்கிரம் வண்டியை எடு மாமா"அவன் தோள்களை பிடித்து வண்டிக்கு அருகே தள்ளிக்கொண்டு போக "சரி சரி தள்ளாதடி,எடுக்குறேன்" என்றபடி அவன் மோட்டார் சைக்கிளில் ஏறியமர்ந்து அதை உயிர்ப்பிக்க அவன் பின்னால் அமர்ந்துகொண்டாள் மது.​

தானவீரன் வண்டியை இன்னும் நகர்த்தாமல் குளம்பியகத்தையே பார்த்திருக்க "வண்டியை எடு மாமா,சீக்கிரம்" என்று உந்தினாள்.​

"என்னவோ போ... அக்காவும் தங்கச்சியும் என்னை படுத்துறிங்கடி"என்று சத்தமாக முணுமுணுத்துக்கொண்டே வண்டியை கிளப்பி இருந்தான் தானவீரன்.​

தானவீரனின் பின்னால் அமர்ந்திருந்த மது தனது கையில் வைத்திருந்த குளிர்ந்த சாக்லேட் ஃபிரப்பேயை வீரின் உதட்டுக்கருகே கொண்டுச்செல்ல அதில் இருந்த ஸ்ட்ராவால் ஒரு மிடறு உறிஞ்சியவனுக்கு அந்த பாணம் வெயிலுக்கு இதமாக தொண்டைக்குள் இறங்கியது.​

"செம்மயா இருக்கு " என்று அவன் சொல்ல "ஆமா. அதுதான் அக்கா அந்த கடையை ச்சூஸ் பண்ணிருப்பா.அங்க எல்லாமே செம்ம டேஸ்ட் ஆஹ் இருக்கும்" என்றாள்.​

"அதை விடு. இப்போவாச்சும் சொல்லுடி. எதுக்கு உன் அக்காவை விட்டு வந்த. அவள் என் கூட தான் கடைக்கு வந்தா. அவளை காபி ஷாப்பில் இறக்கி விட்டுட்டு தான் உன்னை வந்து பிக் அப் பண்ணுனேன். இப்போ விட்டு வந்தாச்சு. இனி அவள் எப்படி வீட்டுக்கு போவா?" என்றான்.​

வண்டியில் சென்றுக்கொண்டிருந்தமையால் போக்குவரத்தின் இரைச்சலை தாண்டி சற்று சத்தமாகவே கேட்டான்.​

"அதெல்லாம் அவளை கூட்டி போக இந்நேரம் ஆள் போயிருக்கும்" என்று அவனை போலவே சத்தமாக பதிலுரைத்தாள் மது.​

"ஆளா…யாரு? " என்று அவன் கேட்க "எல்லாம் அவள் ஆள் தான். நீ காபி எடுக்க போன நேரம் மாமா கால் பண்ணாரு. அக்கா ரெஸ்ட்ரூம் போயிருந்தா. நான் தான் போன் அட்டென்ட் பண்ணேன். அக்கா கூட தனியா பேசணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னாரு. உனக்கு தான் நம்ம வைஷாலியை பத்தி தெரியுமே. பாவம் மாமா. அது தான் அவங்களை தனியா மீட் பண்ண வைக்க முடிவு பண்ணி அவரை அங்க வர சொல்லிட்டு உன்னை என் கூட கடத்திட்டு வந்துட்டேன்" என்றாள்.​

அவள் சொல்லி முடித்த நேரம் அவனது வண்டியும் சரியாக சிகப்பு சமிக்ஞை விளக்கில் நின்றது.​

அவள் சொல்லிய செய்தியில் பின்னால் திரும்பி அவளை பார்த்தவன் "நீ பண்ணிட்டு வந்திருக்குற வேலைக்கு பேரு என்ன தெரியுமா?" என்று கேட்க​

"நியாயமா நீ பண்ணியிருக்க வேண்டிய வேலையை தான் நான் பண்ணிட்டு வந்திருக்கேன்" மதுஷிகா வழக்கம் போல் அவனை கேலி செய்தாள்.​

"அடிங்...உன் அக்காவுக்கு மாமா வேலை பார்த்தது மட்டும் இல்லாமல் அந்த வேலையை நான் பார்த்திருக்கணும்னு வேற சொல்லுறியா" என்று அவன் உடலை அவள் புறமாக திருப்பி அவள் கன்னத்தை பிடித்து வலிக்க கில்லியிருந்தான்.​

கன்னத்தை அழுந்த தேய்த்து கொண்ட மது "வலிக்குது மாமா, உனக்கு பொறாமை… அதுதான் அக்காவை நீயே கட்டிக்கோன்னு ஐடியா கொடுத்தேன். நீதான் கேட்கல" என்றாள் மதுஷிகா.​

"யாரு எனக்கு பொறாமையா... சரிதான். உன் அக்காவை எல்லாம் மனுஷன் கட்டி வாழ முடியுமா?" என்று பதிலுக்கு கேட்க​

"அப்போ கட்டிக்குறேன்னு வந்திருக்காரே அவரை மனுஷனே இல்லைனு சொல்லுறியா. இரு கல்யாணம் முடியட்டும் அவர் கிட்ட போட்டு கொடுக்குறேன்" என்று சிரித்தாள்.​

"அதான்டி சொல்லுறேன் பாவம் அந்த மனுஷன். அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கெல்லாம் உன் அக்கா கோவில் கட்டி கும்பிடனும்" கிண்டலடித்தான் வீர்.​

"ஓவரா பேசாத மாமா, அவளை சீண்டலன்னா உனக்கு பொழுதே போகாது. சரி அக்காவை விடு, வேணும்னா என்னை கட்டிக்கறியா " என்று இரு புருவங்களை ஏற்றி இறக்கி அவள் பதிலுக்கு சீண்டி பார்க்க​

"ச்சீ...அசிங்கமா பேசாதடி" என்றான் சட்டென்று.​

"ஏதே அசிங்கமா பேசுறேன்னா. நீ எனக்கு மாமா தானே. கட்டிக்குற முறை தானே?" மதுஷிகா அவன் தோள் மீது ஒரு அடி வைத்து கேட்க அவளை திரும்பி பார்த்தவன் "உன்னை நான் அப்படி எல்லாம் பார்த்ததே இல்லடி. நான் போய் உன்னை கல்யாணம் பண்ணிக்குறதெல்லாம் யோசிக்க நாராசமா இருக்கு. நீ எனக்கு மாமன் பொண்ணா இருந்தாலும் நான் உன்னை எப்பவும் ஒரு குட்டி தங்கச்சி போல தான் பார்க்குறேன்" விளையாட்டாக மதுஷிகா பேசிக்கொண்டிருந்தாலும் தானவீரன் அவன் மனதில் அவளுக்கான இடம் என்ன என்பதை கேலி கிண்டல் அனைத்தையும் மறந்து உணர்வு பூர்வமாக சொன்னான்.​

அந்நேரம் சமிக்ஞை விளக்கும் பச்சைக்கு மாறியிருக்க வண்டியை முன்னோக்கி செலுத்தினான்.​

"ஐயோ மாமா, எதுக்கு இவளோ சீரியஸ் ஆகுற. நான் சும்மா விளையாட்டுக்கு தான் பேசுறேன்னு உனக்கு தெரியாதா? நான் எல்லாம் காதல் கல்யாணம் தான் பண்ணிப்பேன். இளமை துள்ள, பார்த்து, பேசி, ரசிச்சு, டீப்பா லவ் பண்ணி... அப்படியே ஜி. வி. எம் படத்துல வர மாதிரி... " என்று அவள் சொல்லி கொண்டே போக அவனோ பக்கென்று சிரித்து விட்டான்.​

முகத்தை சுளித்தபடி "சிரிக்காத மாமா..." என்று அவன் தோள்களை பற்றி அவள் உலுக்கினாள்.​

அவள் உலுக்கியதில் அவனோடு சேர்ந்து வண்டியும் தடுமாற "ஹேய் ஆட்டாதடி... ரெண்டு பெரும் விழுந்து வாரப்போறோம்" என்று கடிந்து கொண்டான் அவன்.​

அந்நேரம் மிட்டாய் கடையை பார்த்த குழந்தையாக "மாமா... மாமா" என்று அவன் முதுகில் படபட என்று அவள் அடிக்க அவள் அடித்த இடத்தை தேய்த்துவிட்டு கொண்டே "அடிக்காதடி ராட்சசி… வலிக்குது… என்ன?" என்று சிறு எரிச்சலுடன் கேட்டான் அவன்.​

"அந்த கோர்னெர்ல ஒரு ஐஸ் கிரீம் பார்லர் இருக்கு. அங்க போ மாமா. எனக்கு ஐஸ் கிரீம் வேணும்" என்றாள் செல்ல குரலில்.​

"இப்போதானடி சாக்லேட் ஃபிரப்பே குடிச்ச. அதுக்குள்ள ஐஸ் கிரீம்மா?" என்று கேட்டாலும் அவன் வண்டி அந்த கடையின் முன்னே சென்றுதான் நின்றது.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 8

மதுஷிகாவை அழைத்துக் கொண்டு தானவீரனின் வண்டி குளம்பியாகத்தை விட்டு வெளியேறியிருந்த அடுத்த ஐந்தாவது நிமிடம் தருணின் கார் குளம்பியக வளாகத்திற்குள் நுழைந்திருந்தது.​

அவனது வாகனத்தை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு குளம்பியகத்திற்குள் நுழைந்திருந்தான் தருண்.​

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவனின் விழிகள் தனது மனம் கவர்ந்த மங்கையின் தரிசனம் காண குளம்பிகத்தை சுற்றி சுழன்றன.​

ஒரு சுற்று அவ்விடத்தை வட்டமடித்து வந்த அவனது விழிகள் அந்த கடையின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த மேசையில் தனியாக அமர்ந்திருந்த வைஷாலியில் படிந்தன.​

அவளை தேடி அலைபாய்ந்த அவனது விழிகள் இப்பொழுது அவளை கண்டுவிட்ட மகிழ்ச்சியில் அவள் மீது இளைப்பாறின.​

அவன் இதற்கு முன்னர் அவளை பார்த்திருந்த இரு முறைகளும் தளர பிண்ணி வைத்திருந்த கூந்தலை இன்று விரித்து விட்டிருந்தாள். அதில் ஓரிரு கூந்தல் கற்றைகள் அவள் நெற்றியில் புரண்டு கன்னம் தொட்டு காற்றில் அசைந்தாட ஒற்றை கரத்தை மேசையில் ஊன்றியபடி கன்னம் தாங்கி மறுகரத்தில் புத்தகம் ஒன்றை ஏந்தியிருந்தவளின் விழிகள் புத்தகத்தில் நிலைத்திருந்தன.​

வீருக்கும் மதுவுக்கும் காத்திருக்கும் சிறு இடைவெளியாயினும் அதை நிரப்ப நினைத்தவளின் மனம் புத்தகத்தை தான் நாடியிருந்தது.​

வாசிக்கின்றாள் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக விழிகள் இடமும் வலமுமாக ஓடிக்கொண்டே இருந்தன. திடிரென்று குட்டி புன்னகை ஒன்று அவளது செங்கனி இதழ்களில் அரும்பியது. படித்ததில் ஏதோ சிரிப்பு மூட்டியிருக்கும் போலும். அந்த சன்ன புன்னகையில் இதழ்களுக்குள் ஒளிந்திருந்த முத்து பற்கள் தெரிந்தும் தெரியாமலுமாக மின்னியதை அவன் விழிகள் தவறவிடாமல் ரசித்துக்கொண்டன. இதழ்கள் அசைத்து சிரித்ததில் காதுகளில் செல்லம் கொஞ்சி கொண்டிருந்த குட்டி ஜிமிக்கிகள் கொஞ்சமாக குலுங்கி சிணுங்கின.​

ஜிமிக்கியுடன் சேர்ந்து அவன் இதயமும் கூட தான்.​

ஓவியபாவையவளை ரசித்துக்கொண்டே அவளை நோக்கி நடந்தவனுக்கு அவளை தடையின்றி ரசிப்பதற்கு இன்னும் சில நொடிகள் வேண்டுமென தோன்றியதை அவன் நினைத்தும் தவிர்க்கவே முடியவில்லை. நேரே அவளிடம் செல்லாமல் அவள் மேசைக்கு முன்னே அவன் இடைக்கும் சற்று உயரமாக அமைக்கப்பட்டிருந்த மேசையின் மீது சாவகாசமாக சாய்ந்து நின்றபடி அவளை ரசித்து பார்த்தான்.​

கலையை ரசிக்கும் ரசிகனின் பார்வை அது. புத்தகத்தில் மூழ்கியிருந்த பதுமையவளுக்கு ஏதோ ஒன்று குறுகுறு என்று தன் மீது குத்தும் உணர்வில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.​

அடர் சிகப்பு நிற ஷர்ட்டும் அதற்கு பொருத்தமாக கருப்பு நிற கால்சராயுமாக அவளுக்கு முன்னால் இருந்த மேசையின் மீது தோரணையாக சாய்ந்து நின்றவனை பார்த்ததும் அகல விரிந்து சில முறை படபடத்து அடங்கிய மைவிழிகளும், இன்பமாக அதிர்ந்ததின் பயனாக நாசியின் வழி சுவாசிக்க மறந்திருக்க சற்றே பிரிந்து சுவாசித்துக்கொண்ட இதழ்களும், அடுத்த கணமே இதழ்கடையில் தேங்கி நின்ற வெட்க புன்னகையுமாக அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து அவன் ரசனைக்கு தீணி போட ஏற்கனவே அவள் மீது மையல் கொண்டிருந்தவனின் மனதை மொத்தமாக அவள் வசம் அடித்து சாய்த்திருந்தன.​

அவள் இதழ்களில் பூத்திருந்த வெட்க புன்னகை இப்பொழுது அவன் இதழ்களிலும். சற்றே குனிந்து இதழ்கடித்து பிடரியை வருடியபடி அதை மறைத்தவன் அவள் எதிரே சென்று அமர்ந்தான்.​

ஒருவிதமான பதற்றம் அவளிடமென்றால் அவனிடம் ஒரு தடுமாற்றம். இதுவரை இருவரும் மொத்தமாக சந்தித்துக்கொண்டதே இரண்டே முறைகள் தான். ஒன்று அவன் அவளை முதன்முதலில் பார்த்த நாள். அடுத்தது அவளை குடும்பத்துடன் சென்று பெண் பார்த்த நாள்.​

திருமணம் நிச்சயிக்க பட்ட பின் இருவரும் தனிமையில் சந்தித்து கொள்வது இதுவே முதல் தடவை என்பதால் இருவருக்கும் ஒருவித பரவச உணர்வு. அதன் வெளிப்பாடாக பதற்றமும் தடுமாற்றமும் தானாக வந்து தொற்றிக்கொண்டன.​

குரலை செருமி தன்னை சமன் செய்துகொண்டு முதலில் பேசியது தருண் தான்.​

"ஹாய்" என்றான்.​

"ஆஹ்...ஹாய்" மிக மெல்லிய குரலில் வந்தது அவளது பதில். விழிகள் இரண்டும் குளம்பியகத்தை சுற்றி மதுவையும் வீரையும் தேடின.​

அதுவே அவளின் பயத்தையும் பதட்டத்தையும் அவனுக்கு உணர்த்தியிருக்க இதழ்களுக்குள் சிரித்துக்கொண்டான்.​

இத்தனை பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டவளுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் அவனை பார்த்தாலே குழந்தையை போல வார்த்தைகள் தடுமாறுகின்றதே. அவளின் முகத்தில் அச்சமயம் தோன்றி மறைந்த பாவங்களே அவள் கன்னம் கிள்ளி கொஞ்ச வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.​

பொங்கி வந்த ஆசையை கட்டுக்குள் வைத்தபடி "சோ கியூட்" என்றான் முணுமுணுப்பாக.​

"ம்ம்.. ஏதும் சொன்னிங்களா?" பதட்ட நிலையிலிருந்து தன்னை ஒருவாரு நிலைப்படுத்திக்கொண்டு அவள் கேட்க "ம்ம்ம் சொன்னேன்… இப்படி என்னை பார்த்து பயப்படும் போது ரொம்ப கியூட்டா இருக்க" என்றான்.​

அவன் சொல்லிய விதத்தில் முகத்தில் விழுந்திருந்த கூந்தல் கற்றையை செவிக்கு பின்னால் ஒதுக்குவது போல் தலையை குனிந்து இதழ் கடித்து புன்னகையை அடக்கி கொண்டவளின் விழிகள் மீண்டும் குளம்பியகத்தை வட்டமடித்தன.​

வீரும் மதுவும் வந்துவிடமாட்டார்களா என்றிருந்தது அவளுக்கு. அவன் முன்னே தனியே அமர்ந்திருக்க ஒருவித படபடப்பு. மனதிற்குள் சிறு பூகம்ப அதிர்வுகள் உலுக்குவது போன்று குறுகுறுத்தது. நெஞ்சின் மீது கைவைத்து மெல்லிய அழுத்தம் கொடுத்து சமாளித்தாள்.​

அது பிடித்தமின்மையால் உண்டானதல்ல. அவன் மேல் முளைவிட தொடங்கியிருந்த அன்பின் வெளிப்பாட்டால் உண்டான உணர்வு.​

அதுவும் அவளது முகம் பார்த்து 'நீ கியூட்டா இருக்க" என்று அவன் சொல்கையில் மனமெல்லாம் ஏதோ செய்தது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. தடுமாற்றமாக இருந்தது அவளுக்கு. இந்நேரம் மதுவோ அல்லது வீரோ யாரேனும் ஒருத்தர் துணைக்கு வந்தால் கூட தனது உணர்வுகளை மறைத்துக்கொள்ள வசதியாக இருக்குமே என்று தான் நினைத்தாள்.​

கண்களுக்கு புலப்பட்ட காட்சிகள் எதிலும் வீரும் மதுவும் தென்படாமல் போக அவர்களை நம்பி பயனில்லை என்று முடிவு செய்தவள் "பயமா...அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. திடிர்னு உங்களை பார்த்ததும் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்" என்றாள்.​

முடிந்த வரை முகத்தையும் குரலையும் இயல்பாக வைத்துக்கொண்டாள்.​

"ஆஹான்...பயப்படாமல் தான் உன் கண்ணு ரெண்டும் நொடிக்கு ஒரு தரம் கடையை சுத்தி வட்டமடிக்குதா? அப்படி யாரை தேடுற?" கேள்வியின் பதிலை தெரிந்துகொண்டே கேட்டான் அவன்.​

"அது மதுவும் வீர் மாமாவும் என் கூட தான் இருந்தாங்க, இப்போ ஆளையே காணோம். அதுதான் பார்த்துட்டிருக்கேன்" என்றாள்.​

"அவங்க ரெண்டு பேரும் உன்னை விட்டுட்டு கிளம்பி குறைஞ்சது பத்து நிமிஷமாவது ஆகியிருக்கும்" என்று சொன்னவன் இருக்கையில் சாய்ந்து கால் மேல் கால் போட்டபடி இலகுவாக அமர்ந்துக்கொண்டான்.​

முதல் இருந்த தடுமாற்றம் இப்பொழுது அவனிடமிருந்து அகன்றிருந்தது. அவளை கண்டத்தில் அவன் மனமும் தண்டவாள இரயிலாக தடதடத்துக்கொண்டதில் கொஞ்சமே கொஞ்சம் தடுமாறியவன் இப்பொழுது இயல்புக்கு திரும்பியிருந்தான்.​

"என்னது கிளம்பிட்டாங்களா?" என்று மீண்டும் ஒருமுறை அவசரமாக அந்த இடத்தை வளம் வந்த அவளது விழிகள் இப்பொழுது அவன் மீது நிலைத்திருக்க "ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டாள்.​

"மது கூட பேசினேன். உனக்கு கால் பண்ணுனேன். உன் தங்கச்சி தான் அட்டென்ட் பண்ணுனா. நீ இங்க இருக்குற விஷயத்தை சொல்லி இந்த மீட் அப்புக்கு அவள் தான் ஐடியா கொடுத்தா" என்று விளக்கமளித்தவனுக்கு மதுஷிகாவுடன் பேசிய நினைவுகள் வந்து போக மெதுவாக சிரித்துக்கொண்டான்.​

"எல்லாம் அவள் வேலையை" என்று முணுமுணுப்பாக சொல்லிய வைஷாலி அவனது புன்னகையை கண்டதும் "எதுக்கு சிரிக்குறிங்க?" என்று கேட்டாள்.​

"இல்லை ஒரு வார்த்தை பேச யோசிக்குற உனக்கு மது மாதிரி பட்டாசா வெடிக்குற தங்கச்சியான்னு யோசிச்சேன்" என்று அதே புன்னகையுடன் சொன்னான்.​

"ஆமா, அவள் அப்படி தான். எப்பவும் துரு துருன்னு இருப்பா. அவள் கூட பேசிட்டிருந்தா பொழுது போகுறதே தெரியாது” தங்கையை பற்றிய பேச்சு என்றதும் உற்சாகமாக அவள் பதில் சொல்லியதிலேயே உடன் பிறந்தவள் மீது அவள் கொண்டிருந்த நேசத்தை விளங்கிக்கொண்டான் தருண்.​

மதுஷிகாவை விட ஓரிரு வயது வித்தியாசத்தில் இருக்கும் அவனது தங்கையுடனும் இவள் இப்படி தான் இணக்கமாக நடந்துகொள்வாளோ என்கின்ற எண்ணம் தானாக மனதில் தோன்றி மறைய தனக்கு நல்ல மனைவியை மட்டுமல்லாமல் தன் தம்பி தங்கையருக்கும் கூட நல்ல அண்ணியை தேடி பிடித்துவிட்டதாக சிறு கர்வம் அவனுக்குள்.​

அதன் பிரதிபலிப்பாக இதழ்களில் புன்னகையுடன் அவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.​

“உங்களை அவள் கிட்ட காட்டாமல் மறைச்சு வச்சிருக்கேன். நீங்க அவள் கிட்ட உங்களை பத்தி ஒன்னும் சொல்லிடலையே?" கேட்டவளிடம் அதற்கான காரணம் அறிந்திருந்தமையால் ஏன் எதற்கு என்று எதுவும் கேட்காமல் "இல்ல...நான் எதுவும் சொல்லல" என்றான்.​

"ஹப்பா... எங்க சொல்லியிருப்பீங்களோன்னு பயந்துட்டேன். பெண் பார்க்குற நேரம் அவள் என் கூட இல்லைல. அதுதான் அவளுக்கு பனிஷ்மென்ட்…" என்று சிரித்தவளின் முகத்தில் குறும்பு அப்பட்டமாக மின்னியது.​

அவனுக்கு தெரிந்த வரை அமைதியான பெண்ணவள் இப்பொழுதுதான் மெல்ல அவள் கூட்டிலிருந்து வெளிவந்து அவனிடம் இயல்பாக பேச தொடங்கியிருக்கிறாள் என்று யோசித்தவன் 'இவளை என் கூட இப்படி பேச வச்சதுக்கு மதுவுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்' என்று மானசீகமாக மதுஷிகாவிற்கு நன்றியும் சொல்லிக்கொண்டான்.​

மதுஷிகாவை பற்றி அவனிடம் வேறு என்னவெல்லாம் சொன்னாளோ அது அவளுக்கு தான் வெளிச்சம். அவன் கண்களுக்கு அவள் பேசுகையில் அசையும் அவள் இதழ்களும், இதழ்களை விட அதிகம் பேசும் அவள் விழிகளும் மட்டுமே புலப்பட அதை ரசித்துக்கொண்டே அமர்ந்திருந்தவனின் செவிகளுக்குள் அவள் பேசியது எதுவும் விழவில்லை என்பது தான் உண்மை.​

மெதுவாக அவனது ஒற்றை கரம் நீண்டு மேசை மீது வைத்திருந்த அவள் கரத்தை மென்மையாக பற்றிக்கொள்ள பேசுவதை சட்டென்று நிறுத்தி விட்டு விழி விரித்து அவனை பார்த்தாள்.​

அவன் எதிர்பார்த்த எதிர்வினை தான். மீசைக்கடியில் சிரிப்பை மறைத்து "எங்கேயும் வெளில போகலாமா?" என்று கேட்டான். கேட்டவனின் குரலில் அத்தனை மென்மை.​

அவளுக்கு மறுக்க தோன்றவில்லை என்றாலும் "வீட்டில் தேடுவாங்களே" என்றாள் பொறுப்புள்ள மகளாக.​

அவனுக்கு அவள் இன்னும் இன்னும் வியப்பூட்டிக் கொண்டிருந்தாள். பரவசமும் காதலும் நிறைந்து வழியும் இந்நேரத்திலும் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்காமல் 'வீட்டில் தேடுவார்களே' என்று யோசிக்கின்றாள். இத்தனைக்கும் அவள் பதின்ம வயது பெண்ணல்ல. தனக்கான முடிவை தானே எடுக்க கூடிய வயதுடையவள் தான். அப்படியிருந்தும் வீட்டை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாள். நான், என் சந்தோஷம் என்று தன்னலமாக யோசிக்க தெரியாதவள் என்று புரிந்தது.​

மென்மையாக பற்றியிருந்த அவள் கரத்தில் கொஞ்சமாக அழுத்தம் கொடுத்து விடுவித்தவன் "உன் அப்பா கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டா ஓகே தானே?" என்று கேட்டுக்கொண்டே அவன் அலைபேசியை கையில் எடுக்க அவளது தலையும் சம்மதமாக ஆடிக்கொண்டது.​

அவள் முன்னாலேயே கிரிஷ்ணகுமாருக்கு அவன் அழைப்பெடுத்திருக்க இரண்டாம் மணி அடித்து ஓய்வதற்குள் அழைப்பை ஏற்று "சொல்லுங்க மாப்பிள்ளை...எப்படியிருக்கிங்க?" என்று குரலில் உற்சாகத்துடன் கேட்டார்.​

அவருடன் அவன் அடிக்கடி அலைபேசியில் பேசியிருந்ததின் விளைவாக அவன் மீது அவருக்கும் இயல்பாக பிரியம் தோன்றியிருந்தது.​

"நல்லாயிருக்கேன் மாமா. நீங்க எப்படியிருக்கிங்க? அன்னிக்கு கவர்மெண்ட் தெண்டர் எடுக்குற விஷயமா வேலை நிறையன்னு சொல்லிட்டிருந்திங்களே? இப்போ எல்லாம் ஓகேயா மாமா?" என்று இரு தினங்களுக்கு முன் அவர் சொல்லியதை நியாபகம் வைத்து விசாரித்தான்.​

அவனின் அக்கறையில் வைஷாலியின் புருவங்கள் மெச்சுதலாக ஏறியிறங்க அவளை பார்த்தபடியே பேசிக்கொண்டிருந்தவனும் அவளை நோக்கி கண்களை சிமிட்டியபடி புன்னகைத்துக்கொண்டான்.​

அவன் கேட்டதிலேயே அவர் மனம் நிறைந்துவிட "அந்த வேலை எல்லாம் நேத்தே முடிஞ்சுது மாப்பிள்ளை. நமக்குதான் கிடைக்கும்னு நினைக்குறேன்" என்று மகிழ்ச்சியாகவே பதில் சொன்னார்.​

"நல்லது மாமா. அப்புறம் மாமா, நான் வைஷாலியை கொஞ்சம் வெளில அழைச்சுட்டு போக நினைக்குறேன். உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே?" என்று நிதானமாக கேட்டான்.​

"சந்தோஷமா போயிட்டு வாங்க மாப்பிள்ளை" என்று அவர் சொல்லியிருக்க "தேங்க்ஸ் மாமா. அப்போ நான் வச்சிடுறேன்" என்றபடி அழைப்பை துண்டித்து விட்டு அலைபேசியை மீண்டும் பாக்கெட்டில் வைத்தான்.​

"மாமா சம்மதம் சொல்லியாச்சு. இப்போ என் கூட வருவியா?" என்று கேட்டபடி தனது ஒற்றை கரத்தை அவள் முன்னால் நீட்டியிருக்க அவளும் மென்புன்னகையுடனே தனது தளிர் கரங்களை அவன் கரத்தில் சேர்த்திருந்தாள்.​

கைகளை கோர்த்தபடியே இருவரும் அவனது காரை நோக்கி நடக்க அவள் முகம் வெட்கத்தில் மலர்ந்து சிவந்திருந்தது என்றால் அவனுக்கு வானத்தில் மிதக்கும் உணர்வு தான்.​

இருவரும் காரில் ஏறி அமர்ந்த நேரம் சீட் பெல்ட்டை போட்டபடியே "எங்க போறோம்?" கேட்டாள் அவள்.​

"தெரியல... ஆனால் இப்படி உன்கூடவே எங்கையாவது போயிடனும் போல இருக்கு. திரும்ப உன்னை உன் வீட்டுக்கு அனுப்பாமல் என் கூடவே கடத்திட்டு போயிடனும் போல..." காருக்குள் இருந்த நெருக்கத்தில் அவனின் ஆழ்ந்த குரலில் காதலாய் வந்து விழுந்த வார்த்தைகள் என்னவோ செய்ய " போதும் போதும்... நான் எதுவும் கேட்கல. நீங்க வண்டியை எடுங்க" என்று அவசரமாக அவனை இடை நிறுத்தியிருந்தாள் பெண்ணவள்.​

வெட்கத்தில் அவள் முகம் செங்காந்தள் பூவென சிவக்க தன் மனநிலையை அவனிடமிருந்து மறைக்க நினைத்தவளாக காரின் கண்ணாடி புறம் முகத்தை திருப்பிக்கொண்டாள்.​

அவள் தவிப்பை உணர்த்துக்கொண்டவன் வாய்விட்டு சத்தமாக சிரித்தான். அவன் சிரிப்பு சத்தத்தில் சட்டென திரும்பி அவன் முகம் பார்த்தவளுக்கு அவன் விழியில் மின்னிய குறும்பு அப்பட்டமாக தெரிந்துவிட அவன் கையில் ஒரு அடி போட்டவள் "என்னை கிண்டல் பண்ணுறீங்க தானே?" என்று பொய்யை முறைத்தாள்.​

"பரவால்லையே கண்டுபிடிச்சிட்டியே" என்றவன் அவளை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டியபடி வண்டியை கிளப்பியிருந்தான்.​

தன்னவளுடனான தனிமையில் முதல் பயணம். இரவு நேரத்து இளையாராஜா பாடலை போல சுகமாய் உணர்ந்தான் தருண்.​


தொடரும்...​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 9

அவனின் கார் பிரபல நகைக்கடை ஒன்றின் முன்னே நிற்க அவளை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் தருண்.​

"எதுக்கு இதெல்லாம்" என்று அவள் மறுத்த போதும் அவன் விடவில்லை.​

"நான் உனக்கு கொடுக்கும் முதல் பரிசு வேண்டாம்னு சொல்லாத, ப்ளீஸ்" என்றான். கண்களில் காதலுடன் கெஞ்சலும் சேர்ந்துகொள்ள மறுக்க முடியாமல் அவனுடன் கடைக்குள் நடந்தாள்.​

அவளுக்காக முதல் காதல் பரிசு வாங்கி தரும் எண்ணம் அவனுக்கு.​

அவளுடன் உள்ளே நுழைந்தவனை கடையின் நிர்வாகியான வாசுவே வாசல் வரை வந்து வரவேற்றிருந்தான் "வாங்க சார். நீங்க வரிங்கன்னு தெரியாதே. முதலாளி இப்போ தான் வெளியில் போனார்.வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா இருந்து உங்களை பார்த்துட்டு போயிருப்பார்" என்றான்.​

வாசுவின் குரலில் மரியாதையும் நயமும் கலந்தே இருக்க தருண் அடிக்கடி வந்து போகும் அல்லது அவன் குடும்பத்திற்கு நல்ல பழக்க பட்ட கடையாக இருக்க வேண்டும் என்பதை யூகித்துக்கொண்டாள்.​

"நோ ப்ரோப்லம், வாசு. நகை பார்க்க தான் வந்தோம். இவங்க என் ஃபியான்ஸே. இவங்களுக்கு தான் பார்க்கணும்" என்று நேராக வந்த காரியத்தை சொன்னான்.​

"ஹாய் மேடம்" என்று அவளை பார்த்து புன்னகைத்தவன் "என்ன மாதிரி பார்க்குறீங்க சார்" என்று அவனிடமே கேட்டான்.​

ஏதோ சொல்ல வந்தவன் சட்டென நிறுத்தி வைஷாலியை திரும்பி பார்த்தான். அவன் என்ன சொல்ல போகின்றான் என்று அவளின் பார்வை அவன் மீது ஒரு வகை ஆராய்ச்சியுடன் நிலைத்திருந்தது.​

அவனை அளவிடுகிறாள் என்று புரிந்து கொண்டான்.​

அவளும் அவளது முடிவுகளும் அவனுக்கு எந்தளவு முக்கியம் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறாள் என்பது அவள் பார்வையிலேயே தெளிவாக விளங்கியது அவனுக்கு.​

இது போன்ற சின்ன சின்ன விடயங்கள் தானே பெண்களுக்கு தங்கள் துணையின் மீது நம்பிக்கையையும் அன்பையும் வலுபெறச் செய்கின்றன.​

"அவங்களுக்கு எது விருப்பமோ அது போல காட்டுங்க" என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை அவளிடமே கொடுத்துவிட்டான்.​

ஆராய்ச்சி பார்வை தொக்கி நின்ற அவள் விழிகளில் சின்ன சிரிப்பு. அது இதழ்களுக்கும் கடத்தப்பட்டு மென்மையாக புன்னகைத்தாள்.​

'முதல் டெஸ்ட்டுல பாசாகிட்ட போல தருண்' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டான் அவன்.​

"ரொம்ப கோடியா( gaudy) இல்லாமல் சிம்பிளா காட்டுங்க" என்று அவளும் தனக்கு பிடித்தமான விதத்தில் கேட்க அவர்களை அழைத்துக்கொண்டு எளிமையான அதிலும் நாவீன வடிவமைப்புகளை கொண்ட நகைகள் இருக்கும் பிரிவுக்கு சென்றான்.​

இந்த காலத்து பெண்களின் ரசனைக்கு ஏற்றாற்போல் வடிவமைக்க பட்ட நகைகள் கண்ணாடி பேழைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்க அனைத்தும் கண்ணை கவரும் விதமாகவே ஜொலித்துக் கொண்டிருந்தன.​

அனைத்தையும் பார்க்க வைஷாலிக்கே சற்று மலைப்பாக தான் இருந்தது. எதை பார்ப்பது எப்படி தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம். இதுவரையிலும் அவளுக்கான நகைகளை அவளின் அன்னை, அத்தை, அப்பத்தா என்று யாராவது தான் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கின்றனர். நகை கடைக்கு அவர்களுடன் செல்வாள் தான். ஆனால், தேர்ந்தெடுப்பதில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டாள். பெரியவர்கள் தேர்ந்தெடுத்து அவளிடம் காட்டுவதில் எது பிடித்தம்; பிடித்தமில்லை என்று மட்டும் முடுவு செய்து தனக்கு தேவையானதை வாங்கிக்கொள்வாள்.​

இதுவரை கடைபிடித்து வந்த தனது பழக்கத்தை நினைத்தவளுக்கு மதுஷிகாவின் நினைவுகளும் தவறாமல் வந்து போயின.​

அவள் வைஷாலி போல இல்லை. தனக்கு எது பிடித்தமோ அல்லது தேவையோ அதை அவளே தேர்ந்தெடுத்துக்கொள்வாள். அப்பத்தாவும் அத்தையும் ஏதும் சொன்னாலும் கூட தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அதை வாங்கி கொள்வாள். இல்லையேல் எத்தகைய பொருளாக இருந்தாலும் வேண்டாம் என்று மறுத்துவிடுவாள்.​

பெரியவர்களுக்கு அது அவளை பிடிவாதக்காரியாக காட்டினாலும் வைஷாலி மட்டும் எப்பொழுதும் அதை மதுஷிகாவின் திடமும் ஆளுமையும் நிறைந்த குணாதிசயமாக எண்ணி வியந்திருக்கிறாள்.​

தங்கையின் நினைவில் தனக்குள் மூழ்கியிருந்தவளை தருணின் பேச்சு குரல் தான் கலைத்திருந்தது.​

"நாங்க பார்த்துட்டு கூப்பிடுறோம் வாசு" என்று தருண் கடை நிர்வாகியிடம் சொல்லி அவனை அனுப்பி வைத்திருந்தான்.​

அவன் சென்ற பின் வைஷாலியிடம் திரும்பியவன் "என்னாச்சு, வைஷு? எதுவும் பிடிக்கலையா? வேற கடை எதுவும் பார்க்கலாமா? என்று மென்மையாக அவன் கேட்க "ஐயோ இல்லை. இங்கயே நல்லா இருக்கு. ஆனால், இதுவரை அம்மா, அப்பத்தான்னு யாராவது தான் நகை எல்லாம் தேர்ந்தெடுத்து கொடுப்பாங்க. சொந்தமா எடுத்துக்கிட்டதில்லை. அதுதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு" என்றாள்.​


"ஏன் உனக்கு நகை போட்டுக்க பிடிக்காதா?" என்று கேட்டான்.​

"பிடிக்காதுன்னு இல்லை. அளவா போட்டுக்க பிடிக்கும். பட் இந்த தேர்ந்தெடுக்குற வேலை எல்லாம் அவங்க கிட்ட விட்டுருவேன்" என்றாள்.​

"வீட்டுக்கு ரொம்ப செல்லம் போல" அவன் சொல்ல " கொஞ்சம் அப்படி தான்" என்று அவளும் புன்னகைத்தாள். அதில் சின்னதாய் ஒரு கர்வமும் கூட அவள் கண்களில் மின்னி மறைந்தது.​

அவளை பார்த்து முத்து பற்கள் மிளிர சிரித்தவன் "இனி எனக்கும் செல்லம் தான்" என்றபடி கண்ணடித்தான்.​

அவன் அப்படி சொல்லியதிலேயே அவள் கன்னங்கள் சூடேற அவன் கண்ணடித்ததில் இன்னமும் சொக்கி போயிருந்தாள்.​

அடிக்கடி புன்னகைத்தபடி ஒற்றை கண்ணை சிமிட்டிக்கொள்கிறான்.​

அப்படி செய்யும் போதெல்லாம் வசீகரமாக தெரிகிறான். 'கியூட்' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டாள் பெண்ணவள்.​

இதழ் கடித்து வெட்கத்தை மறைத்துக்கொள்ள முயன்றவளாக முன்னே இருந்த நகைகளின் மீது பார்வையை செலுத்தியிருந்தாள்.​

"இது நல்லா இருக்குல்ல" என்று அவள் கண்ணாடி பேழைக்குள் எதையோ சுட்டிக்காட்ட வெட்கத்தை மறைக்கிறாள் என்று புரிந்துக்கொண்டான் தருண்.​

மேற்கொண்டு அவளை சீண்டி பார்க்கும் ஆர்வம் உண்டானாலும் பெண்ணவளின் தவிப்பை புரிந்து கொண்டவனாக அதற்குமேல் எதுவும் சொல்லாமல் அவளுடன் சேர்ந்து நகைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான்.​

"எது... இதுவா?" என்று அவன் கேட்க "இல்லை… இல்லை அதுக்கு பக்கத்துல இருக்குறது" என்றாள் அவள்.​

"ம்ம்... நைஸ்" என்றபடி அவர்களுக்கு உதவி கொண்டிருந்த கடை ஊழியரிடம் "இதை எடுத்துக் கொடுங்க" என்றான். அந்த பெண் ஊழியரும் அவள் காட்டிய அந்த பிரேஸ்லெட்டை எடுத்து அவளிடம் நீட்ட வைஷாலியும் அதை சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தாள்.​

அதே நேரம் கடை ஊழியரும் " போட்டு பாருங்க மேடம்" என்று சொல்லியபடி அந்த பிரேஸ்லெட்டை அவள் கையில் போட உதவிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் தருணின் பார்வை அவனுக்கு எதிரே கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்த பிரெஸ்ட்லெட் ஒன்றின் மீது படிந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.​

மெல்லிய சங்கிலியோடு நடுவில் ட்ரெபல் க்ளெஃப்(treble clef) எனப்படும் மியூஸிக்கல் நோட் இருப்பது போன்று அமையப்பெற்றிருந்தது அது.​

இசை சம்மந்த பட்டது எதுவாகினும் அவன் கவனத்தை ஈர்க்கவில்லை என்றால் தானே அதிசயம். அந்த வகையில் அந்த பிரெஸ்ட்லெட்டும் அவன் கவனத்தை ஈர்த்திருந்தது.​

அந்த கடைக்கார பெண்ணின் உதவியுடன் கையில் பிரெஸ்லெட்டை அணிந்து கொண்ட வைஷாலி "எப்படி இருக்கு தருண்?" என்று கேட்டு கொண்டே அவன் புறம் திரும்ப அவள் கரத்தை பார்த்தவன் "ம்ம்… சூப்பரா இருக்கு. உனக்கு பிடிச்சிருக்கா?" என்று கேட்டான்.​

அதை பார்க்குறேன், இதை பார்க்கிறேன் என்று அலட்டாமல் எளிமையாக ஒன்றை எடுத்து அதில் திருப்தி அடைந்துகொண்ட அவளை வியப்பாக பார்த்தாலும் ஒருவேளை தான் வாங்கி கொடுப்பதால் சங்கடப்படுகிறாளோ என்று நினைத்து மீண்டும் அவளின் திருப்தியை உறுதி செய்துக்கொள்ள கேட்டான்.​

"பிடிச்சிருக்கு" என்றாள் அவள்.​

"அப்போ இதையே பில் போட்டுடலாமா?" அவன் கேட்க "ஓகே " என்றாள் அவள்.​

"இது போதுமா வைஷு? வேற எதுவும் பார்க்க போறியா?" என்றவனிடம் "ஐயோ, வேண்டாம் இதுவே போதும்" என்றபடி பில் போடுவதற்காக கையில் இருந்த பிரேஸ்லெட்டை அவள் கழட்ட முற்பட அவள் கரத்தை பிடித்து தடுத்தவன் "கழட்டாத கையிலேயே இருக்கட்டும்" என்றான்.​

"இதுக்கு பில் போட்டுருங்க" என்று கடைக்கார பெண்மணியிடம் சொன்னவன் "அதுக்கு முதல் இதை எடுத்து காட்டுங்க" என்று அவன் பார்த்துக்கொண்டிருந்த அந்த மியூஸிக்கல் நோட் பொறிக்க பட்டிருந்த பிரேஸ்லெட்டை காட்டினான்.​

அந்த பெண்ணும் அதை எடுத்து அவன் கையில் கொடுக்க அந்த ட்ரெபல் க்ளெஃப் சின்னத்தை பெருவிரலால் வருடியபடி "இது நல்லா இருக்குல்ல?" என்று வைஷாலியிடம் கேட்டான்.​

"நல்லா இருக்கு...ஆனால், எனக்கு தான் செலக்ட் பண்ணிட்டோமே? இது யாருக்கு?" என்று கேள்வியாக அவனை பார்த்தாள்.​

"மதுவுக்கு. இன்னிக்கு அவள் பிறந்தநாள் தானே. எனக்காக நீ அவளுக்கு கொடுத்திருக்க வேண்டிய ட்ரீட்டை எல்லாம் தியாகம் பண்ணியிருக்கா வேற. அதுக்கும் மேல உன்னோடு இந்த அழகான நேரத்தை எனக்காக அமைச்சு கொடுத்திருக்கா. அதுக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா? சோ இது அவளுக்காக என்னோட கிஃப்ட்" என்றான்.​

"வாவ், செம்ம சாய்ஸ். அவளுக்கும் மியூசிக்னா ரொம்ப இஷ்டம்" என்றாள் வைஷாலி இசையின் மீது தங்கைக்கு இருக்கும் அலாதி ஈடுபாட்டினை நினைவு கூர்ந்தவளாக.​

அதிலும் டாம் உடைய கவர் பாடல் கேட்டு விடியும் அவள் பொழுதுகளும் அவன் குரலின் மீது அவள் கொண்டிருக்கும் அபரிமிதமான பிடித்தமும் வைஷாலியின் மனக்கண்ணில் வந்து போக மெதுவாக சிரித்தும் கொண்டாள்.​

"ரியலி? எனக்கும் மியூசிக்னா ரொம்ப பிடிக்கும். அப்படினா நானும் மதுவும் சுலபமா செட் ஆகிடுவோம் போல” புன்னகை முகமாக சொன்னவனுக்கு அவளால் தான் அந்த இசையையே அவன் வெறுக்க போகின்றான் என்பது அப்பொழுது தெரிந்திருக்க நியாயமில்லை.​

“அப்போ இது ஓகே தானே? இதையே பேக் பண்ண சொல்லிடலாமா?" என்று அவளிடம் மீண்டும் ஒரு வார்த்தை கேட்டுக் கொண்டான்.​

"ம்ம்...ஓகே " என்று வைஷாலி சொல்ல இரண்டு பிரஸ்லெட்டிற்கும் பில் போட்ட பின்னர் பணம் கொடுத்து விட்டு அவளுடன் வந்து காரில் ஏறிக்கொண்டான் தருண்.​

"இதை மதுகிட்ட கொடுத்திடுறியா?" மதுவுடைய பிரெஸ்ட்லெட் பெட்டி அடங்கிய பையை வைஷாலியிடம் நீட்டியபடி கேட்டவனிடம் "நீங்களே கொடுக்கலாமே அவள் சந்தோஷ படுவா. ஆனால், இப்போ இல்லை. கல்யாணத்துல அவளை பார்க்குற நேரம் கொடுங்க" என்றாள் அவள் .​

"ம்ம்ம்… அதுவும் நல்ல யோசனைதான்" என்றபடி அந்த பையை பத்திரமாக எடுத்து வைத்துவிட்டு தங்களின் அடுத்த இலக்கை நோக்கி வண்டியை செலுத்தியிருந்தான்.​

சாலையில் தளம்பல் இல்லாமல் சீராக ஓட்டி வந்தவனின் கார் ஒரு பூங்காவை வந்தடைந்திருந்தது.​

அந்த மாலை நேரத்தில் அடர்ந்த மரங்களும் வாசனை மலர்களுமாக நிறைந்திருந்த அந்த பூங்காவில் சிலர் வாக்கிங் செல்வதும், பெற்றோர்கள் சிலர் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அங்கங்கே காதலர்கள் கைகோர்த்து உலகம் மறந்து தங்கள் உலகத்தில் சஞ்சரித்திருப்பதுமாக இதமான சூழலே நிலவிக்கொண்டிருந்தது.​

பூங்காவினுள் நுழைந்து தருணுடன் சேர்ந்து சுற்றுச்சூழலில் நிகழ்பவைகளை விழிகளால் அலசிக்கொண்டே நடந்தாலும் அவள் மனதிற்குள் சின்னதாய் ஒரு குறுகுறுப்பு.​

பக்கத்தில் வந்துக்கொண்டிருந்தவனை திரும்பி பார்த்தாள்.​

அவன் விழிகள் இரண்டும் ‘சுற்றியிருக்கும் அழகெல்லாம் எனக்கு ஒன்றுமே கிடையாது. அதை விட என் கண்களுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது உன் மதிமுகம் மட்டும் தான்’ என்னும் தோரணையில் அவள் முகத்திலேயே நிலைத்திருந்தன.​

"என்ன பார்க்குறீங்க?" என்று அவள் கேட்க "தெரியல, என்னவோ இந்த நாளோட உலகமே முடிஞ்சு போயிடும் போல உன்னை விட்டு கண்ணை விலக்கவே முடிய மாட்டெங்குது. உன்னை மறுபடி உன் வீட்டுக்கு கூட்டி போகவே மனசில்லை"என்றான்.​

என்னவோ 'அவளை விட்டு விலகாதே' என்று ஏதோ ஒன்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேயிருப்பது போன்று ஒரு உணர்வு. என்ன என்றும் அவனால் யூகிக்க முடியவில்லை.​

ஒருவேளை அவள் மீது இருக்கும் அதீத ஈர்ப்பின் காரணமாகக் கூட இருக்கலாம் என்று நினைத்து தன்னை நிலைக்கொள்ள செய்திருந்தான் தருண்.​

ஆனால், இன்று அவளை வீட்டில் விட்ட பின் பிரிய போகிறவன் மீண்டும் அவளை நெருங்க முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுவிடுவான் என்று அவனுக்கு சொன்னால் அவன் நிலை தான் என்னவாகுமோ?​

"அப்படியெல்லாம் ஈஸியா என்னை கடத்திக்கொண்டு போக முடியாது. எங்க வீட்டு ஆளுங்க தேடி பிடிச்சு என்னை கூட்டி போய்டுவாங்க" அவள் கிண்டலாக தான் சொன்னாள்.​

ஆனால், அவன் முகம் சட்டென்று கறுத்துவிட்டது.​

அதை கவனித்தவள் "தருண், கோவிச்சுக்கிட்டீங்களா? சாரி…நான் விளையாட்டுக்கு தான்..." என்று அவள் பதற தொடங்க இதழ்களை மடித்து வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு மறுபுறம் அவன் திரும்பிக்கொள்ள அவன் அவளை சீண்டுகிறான் என்று புரிந்து போயிற்று அவளுக்கு.​

"ம்பச்...மறுபடி மறுபடி என்னை சீண்டி பார்க்குறீங்க" என்றபடி அவன் கையில் ஒரு அடி போட்டாள் வைஷாலி.​

அடக்கிய சிரிப்பு வெளியில் சிந்திவிட அவள் அடித்த இடத்தை தேய்த்து விட்டுக்கொண்டே சத்தமாக சிரித்துவிட்டான் தருண்.​

வைஷாலி அவனை முறைக்க முயன்ற நேரம் " என் முகம் கொஞ்சம் சுருங்கினாலே இப்படி பதறுறியே? அதை பார்க்க ஒரு மாதிரி நல்லா இருக்கு. என்னை உனக்கு அவ்வளோ பிடிச்சிருக்கா என்ன?" சிரிப்பினூடே கலந்து வந்தது அவனது வார்த்தைகள்.​

பதில் சொல்லவில்லை அவள். தலையை குனிந்து வெட்க சிரிப்பை இதழ் கடித்து அடக்கிய படியே நடந்தாள். அவளோடு செலவிட்ட இந்த சில மணி நேரங்களிலேயே அவளை எத்தனை முறை வெட்க பட வைத்தானோ தெரியவில்லை.​

ஒவ்வொரு முறையும் அவள் இதழ் கடித்து புன்னகையை அடக்கி சமாளித்துக்கொள்வதை பார்க்க அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.​

தலையை குனிந்து நடந்தவளின் முகத்தை தானும் சற்றே குனிந்து எட்டி பார்த்தான்.​

மீண்டும் சீண்டுகிறான் என்பது புரிய "ப்ளீஸ்… ஏதும் பேசாமல் வாங்க" என்று எச்சரித்து விட்டு நடந்தாள் அவள்.​

 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

அவளின் தவிப்பும் அவஸ்தையும் அதை மறைக்க துடிக்கும் சிரிப்பும் அலைப்புறும் விழிகளுமாக அவள் படும் பாடு அவன் மனதை அப்படியே அள்ளி சென்றது என்று தான் சொல்லவேண்டும்.​


அவளுடனான இந்த தருணத்தில் எதையும் கிஞ்சித்தும் வீணாக்க விரும்பாமல் அவளின் உணர்வுகள் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு அவற்றை ரசித்தபடியே அவளுடனான நடை பயணம் அங்கே தொடர்ந்துக்கொண்டிருந்தது.​

இந்த நேரம் அவனிடம் சென்று இந்த உலகத்தில் யார் மிகவும் சந்தோஷமான மனிதன் என்று கேட்டால் நிச்சயம் 'நான் தான்' என்று யோசிக்காமல் சொல்லுமளவிற்கு பரவசமான மனநிலையில் தான் இப்பொழுது அவன் இருந்தான்.​


தொடரும்...


 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 10​

கொஞ்ச நேரம் இருவரிடமும் மௌனம். அழகிய அந்த தருணத்தை ரசித்து உணர்வதற்கு அங்கே வார்த்தைகள் தேவை படவில்லை போலும். ஒருவரின் அருங்காமையே மற்றவருக்கு போதுமானதாக இருக்க அமைதியாக தொடர்ந்தது அவர்களின் நடை.​

அவர்களின் அமைதியோடு கலந்துக்கொள்ள மெல்ல காற்றில் கசிந்து வந்தது ஒரு கானம். இசையை செவிமடுத்தவனின் விழிகள் தன்னிச்சையாக அது வரும் திசையை தேடி பயணித்தன.​

கல்லூரி மாணவர்களோ அல்லது நடன குழுவோ ஏதோ ஒன்றில் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்தியது இளமை கொஞ்சிய அவர்களின் தோற்றம். சில ஆண்களும் பெண்களுமாக கலந்திருந்தனர். பாடல்களுக்கு நடனமாடுவது போன்று இருந்தது.​

கேமராவும் கையுமாக ஒருவன் சுற்றி சுற்றி அவர்களின் நடனத்தை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தான்.​

அவர்களின் ஆர்ப்பாட்டமான சிரிப்பும் பேச்சும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவதற்கான ரீல்ஸ் செய்துகொண்டிருக்கின்றனர் என்பதை உணர்த்தியது.​

இளமை துள்ள அவர்கள் செய்துகொண்டிருந்த கலாட்டாவை கவனித்து கொண்டே நடந்தனர் இருவரும்.​

தப்பும் தவறுமாக நடனமாடிவிட்டு அது சரியாக வரவில்லை என்று மீண்டும் முயற்சிக்க நினைத்தவர்களாக பாடலை மீண்டும் ஒலிக்க செய்திருந்தனர்.​

விழிகளில் அவர்களின் சேட்டைகளை பார்த்தபடியும் செவிகளில் பாடலின் வரிகளை கேட்டபடியும் கைகள் இரண்டையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டபடி நடந்துக்கொண்டிருந்தான் தருண்.​

வைஷாலியும் அப்படித்தான். அந்த இளைஞர்களின் சேட்டையில் தான் கவனத்தை பதித்திருந்தாள்.​

சீதா ராமம் திரையில் இடம்பெற்ற குருமுகில் பாடலை தான் அவர்கள் தேர்ந்திடுத்திருந்தனர். ஜோடி ஜோடியாக அந்த மெல்லிசைக்கு ஏற்றாற்போல நளினமாக அமைந்திருந்தது அவர்களின் நடனம்.​

அது தருணுக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட என்பதால் ஒரு கட்டத்தில் அந்த பாடலில் அவனுக்கு மிக பிடித்த வரிகள் ஒலிக்க தொடங்கிவிட தன்னையும் மறந்து அந்த வரிகளை உடன் சேர்ந்து பாட தொடங்கியிருந்தான் தருண்.​

கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு…

எழுதா ஓர் உவமை நீ…

வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள…

முடியா ஓவியமும் நீ…

அவனின் குரல் காதில் ஒலித்ததும் அவனுக்கு சற்று இடைவெளி விட்டு இரு அடிகள் பின்னால் நடந்து வந்த வைஷாலியின் விழிகள் சற்றே அகல விரிந்து கொண்டன. அவள் விழிகளில் சிறு ஆச்சரியம். அவன் இவ்வளவு அருமையாக பாடுவான் என்பது அவளுக்கு புது தகவலாயிற்றே.​

அவன் குரலின் இனிமை அவளையும் கவர்ந்திழுத்திருக்க அவளுக்கு முன்னால் சென்றவனை ரசித்துக்கொண்டே நடந்தாள் பாவையவள்.​

எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்…

உயிரே இல்லாத கல் கூட காமமுறும்…

உன் மீது காதல் கொண்ட மானுடன்தான் என்ன ஆகுவான்…

என்று அடுத்த வரிகளை தொடர்ந்து பாடியவன் சற்றே பக்கவாட்டாக திரும்பி அவளை பார்த்தான். அந்த பாடல் வரிகளை அவளுக்காக பாடுகிறான் என்பதை அவன் பார்வை உணர்த்தியது.​

மென்மையாக புன்னகைத்துக்கொண்டாள்.ஒரு மாதிரி சங்கடமாகவும் இருந்தது அவளுக்கு.​

அதில் இருந்து தப்பிக்க "கொஞ்ச நேரம் இங்க உட்காருவோமா?" என்று பேச்சை மாற்றும் விதமாக அருகில் இருந்த கல்லால் செய்யப்பட்ட நீண்ட இருக்கையை காட்டினாள்.​

"ஓகே…வா" என்று சொல்லிக்கொண்டே அவளுடன் அந்த இருக்கையில் அமர்ந்தான் தருண்.​

"ரொம்ப நல்லா பாடுறீங்க" அவனை மனதார பாராட்டினாள்.​

"தேங்க்ஸ். பாட்டு அவளோ பிடிக்கும். மியூசிக்… அதை தவிர வேற எதையும் காதலிக்க தெரியாது எனக்கு. உன்னை பார்க்கும் வரை" என்றான்.​

அவன் சொல்லியதில் சட்டென்று நிமிர்ந்து அவன் விழிகளை பார்த்தாள். ஒரு நொடி இருவரின் விழிகளும் சங்கமித்துக்கொண்டன.​

அதே சமயம் அந்த இளைஞர்கள் மத்தியில் ஏதோ சலசலப்பு. இதுவரை மென்மையாக ஒலித்துக்கொண்டிருந்த பாடல் முடிந்து இப்பொழுது வேறு பாடல் ஒலிக்க தொடங்கியிருந்தது.​

இருவரின் கவனமும் தங்களிடமிருந்து கலைந்து அவர்களின் மேல் படிந்தது. சற்றே காதை தீட்டி கேட்டான் தருண். 'விளம்பர இடைவெளி மாலையில்' என்ற பாடல் தான் அது. இமைக்கா நொடிகள் படத்தில் இடம்பெற்ற பாடல்.​

திடீரென அங்கே கூடியிருந்த இளைஞர் கூட்டத்தில் அனைவரும் தாங்கள் ஏற்கனவே அந்த பாடலுக்கு பயிற்சி செய்திருந்தது போல நடனமாட தொடங்கி விட ஒரே ஒரு பெண் மட்டும் அப்படியே நின்று விட்டாள். அவள் முகத்தில் குழப்பம். அவர்களுடன் தான் அவளும் இதுவரை ஆடிக்கொண்டிருந்தாள். திடீரென்று பாடல் மாற்ற பெற்று மற்றவர்கள் வேறு எதுவோ ஆடத் தொடங்கியிருக்க அவளுக்கு வியப்பு.​

அவர்களை பார்த்துக்கொண்டிருந்த தருண் "ஃபிளாஷ் மாப். யாரோ ப்ரொபோஸ் பண்ண போறாங்க போல" என்றான் வைஷாலியிடம்.​

அச்சமயம் அங்கே ஆடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவன் திடீரென்று கையில் பூங்கொத்துடன் அந்த பெண்ணின் முன்னே மண்டியிட்டமர்ந்து அவளுக்கு தனது காதலை வெளிப்படுத்த இன்பமாக அதிர்ந்தவள் இருகைகளையும் வாயில் வைத்து மூடியபடி அவள் முன்னே அமர்ந்திருந்தவனையே பார்த்த விழி மாறாமல் பார்த்திருந்தாள்.​

அது அவர்களின் சந்தோச நிமிடங்கள்.​

அந்த இளைஞர்களின் சந்தோசம் வைஷாலியையும் தொற்றிக்கொண்டிருக்கும் போல வாயெல்லாம் புன்னகையாக "சோ கியூட்ல" என்றபடி தருணை பார்த்தாள்.​

தருணம் வைஷாலியை தான் ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.​

"நானும் கியூட்டா தானே ப்ரொபோஸ் பண்ணேன்" என்றான் அவன்.​

"ஓ…அது தான் உங்க கியூட்டா ?" என்று வைஷாலி அவனை குறும்பாக கேட்க இருவரின் நினைவுகளும் அவர்களின் முதல் சந்திப்பை மீட்டி பார்க்க தொடங்கியிருந்தது.​

தருண் மற்றும் வைஷாலியின் முதல் சந்திப்பு…​

கையில் வைத்திருந்த மது கோப்பையை விரல்களால் சுற்றியபடியே தனது முன்னால் நின்று கொண்டிருந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தான் தருண்.​

என்னதான் அவருடன் பேசிக்கொண்டிருந்தாலும் அவனிடம் ஒரு அலட்சியம். அவர் சொல்வதை ஆர்வமே இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.​

காதுகளை எதிரில் நிற்பவரின் பேச்சுக்கு கொடுத்தவனின் கூரிய விழிகள் ஒருவித அசட்டையுடன் அந்த இடத்தை வலம் வந்தது.​

ஆங்காங்கே வியாபார பிரமுகர்கள் நின்று கொண்டும், வட்ட மேசையில் அமர்ந்து கொண்டும் கதைத்தபடி இருந்தார்கள். சிலர் அவனை போல கையில் மது கோப்பையுடன் தொழில் விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்க சிலர் அங்கிருந்த அழகு மங்கைகளுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தனர்.​

அது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடை பெற்றுக்கொண்டிருந்த வியாபார விருந்துபசாரிப்பு.​

இந்த சூழல் அவனுக்கு புதிதல்ல. அடிக்கடி பார்த்து பழக்கப்பட்டது தான்.​

அதுதான் அவன் விழிகள் எந்த சுவாரசியமும் இல்லாமல் அந்த இடத்தை வலம் வந்து கொண்டிருந்தன.​

எதிரில் நின்று பேசுபரின் பேச்சில் அவனுக்கு ஈடுபாடு இல்லை என்றாலும் மரியாதையை நிமித்தமாக கேட்டு கொண்டிருந்தான்.​

அவர் இல்லை என்றாலும் அவன் தனியே இருப்பதை பார்த்தால் யாரேனும் வந்து அவனிடம் பேச தான் போகிறார்கள். அவனுடைய அப்பாயின்மென்ட் எப்போது கிடைக்கும் என்று காத்திருக்கும் கூட்டம் அல்லவா அது.​

அவன் இருக்கும் பரபரப்பில் வேலை நேரத்தில் அப்பாயின்மென்ட் போட்டு அவனை சந்திப்பதென்பது குதிரை கொம்புதான் என்பதால் இதுபோன்ற விருந்து நிகழ்ச்சிகளில் அவனை நெருங்க நினைப்பவர்கள் ஏராளம்.​

அதிலும் அங்கே கலந்துக்கொள்ளும் இளம் பெண்கள் கூட்டத்தை சொல்லவே வேண்டாம்? அவனை தனிமையில் பார்த்தால் நிச்சயம் அவனை சுற்றி கொள்வார்கள்.​

அவர்களை எல்லாம் தவிர்க்கவே அவனுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு தொழிலதிபருடன் பேசிக்கொண்டிருந்தான்.​

அவ்விடத்தை அளந்து கொண்டிருந்த தருணின் கண்களில் சடாரென்று மின்னல் வெட்டியது போன்ற ஒரு உணர்வில் விழிவிரித்து பார்க்க அந்த இடத்திற்கு கொஞ்சமும் பொருத்தமில்லா அலங்காரத்துடன் இளம் பெண் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.​

நவநாகரீகமாக உடை அணிந்து, ஸ்டைலாக நுனி நாக்கில் ஆங்கிலம் கலந்த தமிழில் உரையாடிக்கொண்டிருந்த இளமங்கைகளுக்கு மத்தியில் இளமஞ்சள் நிற புடவையில், தலையில் பூச்சூடியிருக்க அந்த குண்டுமல்லி சரத்தின் ஒரு பகுதி அவள் தோளில் படர்ந்து அவள் நடைக்கு ஏற்றாற்போல் அசைந்தாட, மாநிற மங்கையவள் ஒயிலென வந்துக்கொண்டிருந்தாள்.​

அவள் தோளில் புரண்ட குண்டுமல்லி சரம் அசைந்தாடியதில் அவன் மனமும் அசைந்தாடியதோ என்னவோ சுவாரசியமின்றி வெறித்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் இப்பொழுது ஆர்வம் கூடியிருந்தது.​

புடவைக்கு ஏற்றாற்போல் அதே நிறத்தில் அவள் காதுகளை அலங்கரித்த ஜிமிக்கியும் அவள் தலை அசைவுக்கேற்றபடி குலுங்க அவன் பார்வை அவளை விட்டு விலகாது அவள் மீதே நிலைத்திருந்தது.​

அவளது வளைக்கரங்கள் ஏதோ கோப்புகளை ஏந்தியிருக்க அவள் கால் கொலுசின் சிணுங்கல் அவ்விடத்தில் இரைச்சலாய் கேட்டுக்கொண்டிருந்த அத்தனை ஒலிகளையும் தாண்டி வந்து அவன் காதுகளை நிறைத்திருந்தது.​

கூட்டத்தில் நின்ற மானிடர்களுக்கிடையே புகுந்து அவர்களின் மீது உரசிவிடாமல் நிலைமைக்கேற்றவாறு உடலை குறுக்கி வளைந்து ஒதுங்கி வந்தவளின் மையிட்ட கருவிழிகளோ யாரையோ தேடிக்கொண்டிருந்தன.​

அந்த விழிகள் தேடுவது தானாக இருக்க கூடாதா என்ற எண்ணம் எங்கிருந்தோ மனதில் வந்து ஒட்டிக்கொண்டது அவனுக்கு.​

காதல் என்றால் முட்டாள் தனம்...அதுவும் கண்டதும் காதல் என்றால் அது பைத்தியக்காரத்தனம் என்று வசனம் பேசுபவன் இன்று அவளை கண்ட நொடியில் அவள் மீது காதல் கொண்டானோ...​

அவன் மனம் போகும் போக்கு புரிந்து தன்னை சுதாரித்து கொண்டு அவளிடம் இருந்து கஷ்டப்பட்டு தன் பார்வையை திருப்பி கொள்ளும் முன்பே அவள் இதழ்களில் புன்னகை.​

அவன் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி தான் புன்னகைத்தாள். எதற்கு அந்தப் புன்னகை என்று அவன் புருவங்கள் இடுங்கின.​

அவள் விழிகள் தேடியதை கண்டுகொண்டுவிட்டது போலும். அதே புன்னகையுடன் அவனை நோக்கி அவள் நடந்து வர அவனுக்கு தான் இப்போது இருதயம் தருமாறாக துடித்தது.​

அவள் தன்னை தேடியிருக்க கூடாதா என்று யோசித்தவனுக்கு அவள் தன்னை நோக்கி வரவும் மனதிற்குள் இனம் புரியா படபடப்பு.​

இதுவரை அவன் அனுபவித்திராத புது உணர்வு அது.​

ஒரு பெண்ணை பார்த்து இதயம் படபடக்கும் என்று இதுநாள் வரை அவன் நினைத்ததில்லையே.​

அவள் தன்னை நெருங்கிய தருணம் சிதறிக்கிடந்த தனது உணர்வுகளை எல்லாம் திரட்டி எடுத்து சுதாகரித்து கொண்டவன் அவளிடம் பேசுவதற்காக குரலை செருமிக்கொண்டு "ஹா....ய்" என்று சொல்ல இதழை பிரித்த நேரம் அவளோ "அப்பா" என்று அழைத்து கொண்டே அவனை கடந்து அவனுக்கு சற்று பின்னால் நின்றிருந்த கிருஷ்ணகுமாரின் முன்னே சென்று நின்றாள்.​

அவள் புன்னகைத்தது தன்னை பார்த்து அல்ல தனக்கு பின்னால் நின்றிருந்த அவளின் தந்தையை பார்த்து தான் என்று புரிந்து விட "ச்சே... யாருன்னே தெரியாத பொண்ணு என்னைத்தான் பார்த்து சிரிக்குறான்னு எப்படி நினைச்சேன்" என்று வாய்க்குள் முணுமுணுத்தப்படி பின்னந்தலையை வருடிக்கொண்டே ஒருகணம் கண்களை மூடித் திறந்தான்.​

"வாம்மா வைஷாலி " என்று கிருஷ்ணகுமார் அவள் பெயரை சொல்லி அழைக்க அது அவன் காதுகளையும் எட்டியிருந்தது.​

அதன் மூலம் அவள் பெயரை அறிந்து கொண்ட தருண் "வைஷாலி" என்று அவள் பெயரை இதழ் பிரித்து உச்சரித்து பார்த்துக்கொள்ள அவன் இதழ் கடையில் மெல்லிய கீற்றாய் ஒரு புன்னகை.​

தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவரிடம் திரும்பிய கிருஷ்ணகுமார் "மாதவன் சார், இவளை தெரியும் தானே.என் மூத்த பொண்ணு வைஷாலி. என் பிஸ்னஸ் எல்லாம் பார்த்துக்க இப்போ இவதான் எனக்கு ஹெல்ப் பண்ணுறா" என்று அறிமுகம் செய்து வைத்தார்.​

"வைஷாலி, மீட் மிஸ்டர் மாதவன். இவர் கூட தான் அடுத்த பார்ட்னெர்ஷிப் வச்சுக்க யோசிச்சிருக்கேன்" என்று சொல்ல​

அவளும் மரியாதை நிமித்தம் ஒரு சிறு தலையசைப்புடன் மாதவனுக்கு "ஹாய்" என்று சொல்லி புன்னகைத்தாள்.​

அதன் பிறகு கிருஷ்ணகுமாரிடம் திரும்பி "இந்தங்கப்பா நீங்க கேட்ட ஃபைல்ஸ்" என்று கையில் வைத்திருந்த கோப்புகளை அவரிடம் நீட்டியவள் "அப்போ நான் கிளம்புறேன் ப்பா" என்றாள்.​

"இரும்மா, அதுக்குள்ள என்ன அவசரம். பிசினஸ் பார்த்துக்குறதுனா ஆஃபிஸ்ல வேலை பார்க்குறது மட்டும் இல்லம்மா. இது போல விருந்துபசாரிப்புலையும் கலந்துக்கணும். அப்போதான் குட் நெட்வொர்க்கிங் பில்ட் பண்ண முடியும்" என்று அவளுக்கு பாடமெடுத்தார் அவளின் தந்தை.​

"அப்பா, இதெல்லாம் எனக்கு செட் ஆகாது. ஆஃபீஸ் வேலையை நான் பார்த்துக்குறேன். இது போல நெட்வொர்க்கிங் பில்ட் பண்ணுற வேலை எல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க. என்னை ஆளை விடுங்க. மது கார்ல வெயிட் பண்ணிட்டிருக்கா. கோவிலுக்கு போறோம். கோவில்ல இருந்து அவளை அப்படியே ஹாஸ்டலில் விட்டுட்டு போகணும். லேட் ஆகிடும் ப்பா" என்று சொன்னவள் மாதவனிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டிருந்தாள்.​

 
Last edited:
Status
Not open for further replies.
Top