அத்தியாயம் 40
தருண் கண் விழித்திருந்த நேரம் நன்றாக இருட்டியிருந்தது. எழுந்து விளக்கை போட்டவன் மணியை பார்க்க அது இரவு மணி எட்டாகி பத்து நிமிடங்களை கடந்திருந்தது.
நல்ல தூக்கம் அவனுக்கு. கடந்த தினங்களில் இல்லாத தூக்கத்தை எல்லாம் ஒரே நாளில் தூங்கி சமன் செய்துகொண்டான் போலும். அதுவே அவனுக்கு புத்துணர்வாக இருக்க குளித்து தயாராகி கீழே சென்றான்.
ஆள் அரவமற்று இருந்தது முன்னறை. சாப்பாட்டு மேசைக்கு சென்று மேசை மீது அடுக்கி வைக்க பட்டிருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தான். சமைத்த உணவுகள் எல்லாம் அப்படியே இருந்தன.
வீட்டில் யாரும் இயல்பாக இல்லை என்று புரிந்தது. இல்லையென்றால் எட்டு மணிக்கே அவர்கள் வீட்டின் சாப்பாட்டு மேசையில் அனைவரும் கூடியிருப்பார்கள். பகல் பொழுதுகளில் ஏதேதோ வேலைகளுக்காக அலைந்து திரிபவர்கள் இரவு உணவின் போது கட்டாயமாக ஒன்றாக தான் சாப்பிடுவார்கள். பெரும்பான்மையான நேரத்தில் அனைவரும் கண்டிப்பாக வந்துவிடுவார்கள். தவிர்க்கவே முடியாது என்கின்ற பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு விலக்கு வழங்கப்படும்.
இது தான் தருண் பிறந்ததிலிருந்தே அவர்கள் வீட்டில் கடைபிடித்துவரும் சம்பிரதாயம். ஆனால், இப்பொழுது மணி எட்டரை ஆகியும் யாரையும் காணவில்லை. நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளும் இயல்பான மனநிலையில் அங்கு யாரும் இல்லை என்பதும் புரிய ஒரு ஆழ்ந்த பெருமூச்சு அவனிடம்.
"சாப்பிடுறீங்களா தம்பி" என்று கேட்டு கொண்டே அங்கு வந்து நின்றார் சுந்தரம். அவர்கள் வீட்டின் சமையல்காரர். பின் நாற்பதுகளில் உள்ள மனிதர் அவர்.
"இம்ம்...நீங்க எல்லாம் எடுத்து வைங்க, நான் வரேன்" என்று விட்டு ஆர்த்தியின் அறையை நோக்கி நடந்தான்.
செல்லும் வழியில் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் கண்ணில் பட
"சித்ரா, எல்லாரையும் நான் கூப்பிட்டதா சொல்லி சாப்பிட வரச்சொல்லு" என்று சொல்லிவிட்டு சென்றான்.
ஆர்த்தியின் அறைக்குள் அவன் நுழைந்திருக்க அவரோ கட்டிலின் தலைப்பகுதியில் கண்களை மூடி சாய்ந்தமர்ந்திருந்தார்.
அவர் அருகே சென்று நின்றவன் "அம்மா..." என்றான். மெல்ல விழிகளை திறந்து பார்த்தவர் "என்னப்பா?" என்க "பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்கம்மா" என்று கேட்டான் முகத்தை பாவம் போல வைத்துக்கொண்டு.
அவனுக்கு தெரியும் நேரடியாக அவரை சாப்பிடச் சொன்னால் அவர் முரண்டு பிடிப்பார் என்று. அதோடு மீண்டும் அவன் திருமணத்தை பற்றிய விவாதம் வரும். அதை எல்லாம் தவிர்க்கவே அவரை சாப்பிட சொல்லாமல் தனக்கு பசிக்கிறது என்று சொல்லியிருந்தான் தருண். தன் பசியை பத்து நாட்கள் கூட பொறுத்துக்கொள்ள கூடிய தாயால் பிள்ளையின் பசியை அறை நொடி கூட பொறுக்க முடியாதல்லவா.
அவன் நினைத்தது சரிதான் என்பது போல "வாப்பா சாப்பிடலாம்" என்றபடி அவர் கட்டிலில் இருந்து இறங்கிக்கொள்ள அவரை தோளோடு அணைத்தபடி சாப்பாட்டு மேசைக்கு அழைத்து வந்தான் தருண்.
அவர்கள் வந்த சமயம் சாப்பாட்டு மேசையில் வருணும் தாராவும் அமர்ந்திருக்க ஆர்த்தியை ஒரு இருக்கையில் அமர வைத்து தானும் அவர் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டான். அதே சமயம் ஜோஷுவா தோமஸும் அங்கே வந்து சேர்ந்திருந்தார்.
அவரும் தனக்கான இருக்கையில் அமர்ந்துவிட சுந்தரமும் அனைவருக்கும் உணவை பரிமாற தொடங்கியிருந்தார்.
எப்போதும் கலகலப்பாக இருக்கும் அந்த சாப்பாட்டு மேசை இன்று ஏதோ ஒரு பொருந்தாத அமைதியுடன் இருந்தது. அனைவரும் இயல்பாக இருக்க முயல்கின்றனர் என்று அவர்களின் முகத்தை பார்த்தே கண்டுகொண்டான் தருண். எல்லாம் அவனால் தான் என்று நினைக்கும் போதே நெஞ்சில் மெல்லிய வலி எழுவதை தவிர்க்க இயலவில்லை.
ஒருவகை இயலாமையுடன் குரலை செருமியவன் "சாப்பிடுங்கம்மா" என்று இரு சப்பாத்திகளை எடுத்து ஆர்த்தியின் தட்டில் வைத்தான்.
"உனக்கு தானே பசிக்குதுன்னு சொன்ன. நீ முதல்ல சாப்பிடு" என்று அவர் அந்த தட்டை அவன் புறம் தள்ள அவர் கரத்தை தடுத்து பிடித்தவன் "நீங்க சாப்பிடுங்க. நானும் சாப்பிடுறேன். எனக்கு தோசை வைங்கம்மா" என்று மென்மையாக சொன்னான்.
ஆர்த்தியும் அவன் தட்டில் தோசையும் சட்னியும் வைத்துவிட்டு அவரின் தட்டில் உள்ள உணவை சாப்பிட ஆரம்பித்திருக்க அவர்களை பார்த்திருந்த தோமஸின் இதழ்களில் மெல்லிய புன்னகை.
ஆர்த்திக்கு பிடிவாத குணம் கொஞ்சம் அதிகம் தான். ஒருசில சமயம் ஆர்த்தியை சமாளிக்க அவரே கஷ்டப்பட்டுதான் போவார். ஆனால், தருண் அவரை எளிதாக கையாள்வதை பார்த்து அவருக்குள் ஒரு பெருமிதம்.
என்னதான் அவனை மனதிற்குள் மெச்சிக்கொண்டாலும் கல்யாண மண்டபத்தில் அவன் நடந்துகொண்ட விதத்தில் அவருக்கு வருத்தம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அதையே நினைத்துக்கொண்டு அடுத்து என்னவென்று யோசிக்காமல் இருக்க முடியாதல்லவா. அவர் சற்று இயல்பான மனிதர். பழையதை எண்ணி வருந்துவதை விட நிதர்சனம் புரிந்து நடப்பது தான் புத்திசாலித்தனம் என்று எண்ணுபவர்.
இப்பொழுது தருணின் விடயத்திலும் அவருக்கு அதே எண்ணம் தான்.
குரலை செருமிக்கொண்டே "உன் மனைவி எங்கப்பா?" என்று கேட்டார்.
அவரின் பார்வை தருணில் நிலைத்திருக்க அவரை நிமிர்ந்து பார்த்தவன் பதில் சொல்லும் முன்னரே "அவள் எதுக்கு இப்போ?" என்று முந்திக்கொண்டு பதில் சொன்னார் ஆர்த்தி.
"உன் பையனுக்கு மட்டும் தான் வயிறு இருக்கா? அவனுக்கு மட்டும் தான் பசிக்குமா? அந்த பொண்ணுக்கு பசியெல்லாம் எடுக்காதா?" என்று கேட்டார்.
ஆர்த்தி மௌனமாகவே இருக்க "அன்னிக்கு அந்த பொண்ணு பசியில் மயக்கம் போட்டு விழுந்துட்டான்னு தாரா சொன்னா. அடுத்தவங்க வீட்டு பொண்ணை கட்டிக்கிட்டு வந்து இப்படி பட்டினி போட்டு கொடுமை படுத்துறது எல்லாம் என்ன பழக்கம்?" என்று ஆர்த்தியிடம் கேட்டாலும் அவரின் கூரிய விழிகள் தருணிலேயே படிந்திருந்தன.
மதுஷிகாவிற்காக தருண் அவரிடம் திட்டு வாங்குவது பொறுக்கமாட்டாமல் "யாரும் யாரையும் பட்டினி கிடக்க சொல்லலையே. பசிச்சா சாப்பிட வேண்டியது தானே. அவளா உண்ணாவிரதம் இருந்தா அதுக்கு யாரு என்ன பண்ண முடியும்" என்றார் ஆர்த்தி கடுப்பாக.
"ஏன் நீங்களும் தானே உண்ணாவிரதம் இருந்திங்க. உங்க மகன் வந்து கூப்பிட்டதும் தானே சாப்பிட வந்திங்க. உங்களுக்கு மகன் வந்து கூப்பிடணும்னு இருக்கும் போது அண்ணிக்கு புருஷன் வந்து கூப்பிடணும்னு இருக்காதா?" என்று கேட்டான் வருண்.
அவன் சட்டென்று அப்படி கேட்டதில் தாராவுக்கு சிரிப்பு வந்துவிட "சீரியஸான நேரத்துல சிரிக்குறதே நமக்கு பொழப்பா போச்சு" என்று வாய்க்குள் முனகிக்கொண்டே கீழ் அதரங்களை கடித்தபடி பக்கவாட்டாக திரும்பியவள் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள்.
ஆனால், அவள் மனமோ அப்போதும் அடங்காமல் 'சில நேரம் இந்த அம்மாவுக்கு வருண் அண்ணா தான் சரி. தருண் அண்ணா அம்மாகிட்ட ரொம்ப சாஃப்ட்' என்று சொல்லிக்கொண்டது.
வருணின் பேச்சில் பல்லை கடித்த ஆர்த்தி அவனை முறைக்க "வருண்..." என்று மெலிதாய் அதட்டினான் தருண். அவன் பார்வை தாராவின் பக்கமும் சென்று மீள சட்டென்று தோசையை பிய்த்து வாயில் போட்டுகொண்டு அதோடு சேர்த்து சிரிப்பையும் விழுங்கிக்கொண்டாள் அவள்.
"உன் பொண்டாட்டிய சாப்பிட கூப்பிடு தருண்" என்றார் தாமஸ்.
அவர் சொன்னதில் இத்தனை நேரம் இலகுவாக இருந்தவனின் முகம் இறுகி போக அதை அவன் அருகேயே அமர்ந்திருந்த ஆர்த்தி உணர்ந்துகொண்டார்.
அவனே இருந்திருந்து மூன்று தினகளுக்குப் பிறகு இன்று தான் வீட்டிற்கு வந்திருக்கின்றான். எங்கே இப்படியான வற்புறுத்தல்களால் அவன் மீண்டும் வீட்டை விட்டு சென்று விடுவானோ என்கின்ற பயத்தில் "அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. வேணும்னா நாம சாப்பிட்டு போன பிறகு அவள் வந்து சாப்பிடட்டும்" என்றார் வெடுக்கென்று.
அவர் பேசியது தருணுக்கே கொஞ்சம் அதிகப்படியாதான் பட்டது. ஆனால், அவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருக்க தாமஸ் தான் பேசினார்.
"ஆர்த்தி நீ பேசிட்டிருக்குறது நம்ம வீட்டு மருமகளை பத்தி. இந்த வீட்டு வேலைக்காரியை பத்தி இல்லை. நாம எல்லாம் சாப்பிட்டு போன பிறகு வந்து சப்பிடுறதுக்கு அவள் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா? வேலைக்காரியா இருந்தா கூட அப்படி நடத்த கூடாதுன்னு நினைக்குற ஆள் நான். உங்க எல்லாருக்கும் கூட அப்படி தான் சொல்லிக் கொடுத்திருக்கேன்னு நினைக்குறேன்" என்றார் அழுத்தமாக.
"ம்கூம்...பெரிய மருமகள்" என்று நொடித்துக்கொண்டவர் "எல்லா சாங்கிய சம்பிரதாயங்களையும் பார்த்து முறையா கட்டிட்டு வந்தவள் மாதிரி பேசுறிங்களே... அவளே ஒட்டிட்டு வந்தவள் தானே" என்று பேசிக்கொண்டே போக "ஆர்த்தி" என்ற அதட்டல் அவரிடமிருந்து.
தன்னை வைத்து அவர்கள் சண்டை போட்டுக்கொள்வது பொறுக்கமாட்டாமல் "அப்பா, விடுங்க ப்ளீஸ்" என்று சொன்னவன் "தாரா..." என்று தங்கையை பார்த்தான்.
தமையனின் குறிப்புணர்ந்து மெல்ல 'சரி' என்பது போல் தலையசைத்தவள் "நான் போய் கூட்டிட்டு வரேன் ப்பா" என்று சொல்லியபடி எழுந்துக்கொண்டாள்.
"தாரா, மதுவுக்கு நீயா புருஷன்" என்று தாமஸ் கேட்டதுதான் தாமதம் தண்ணீர் அருந்திக்கொண்டிருந்த வருணுக்கு அவர் சொன்னதில் சிரிப்பு வந்துவிட சட்டென்று புரையேறிக்கொண்டது. கையில் இருந்த குவளையை மேசை மீது வைத்துவிட்டு தலையில் தட்டியபடி தருணை நிமிர்ந்துப் பார்க்க அவனோ அவனை வெட்டவா குத்தவா என்பது போல தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
தாராவும் செல்வதா வேண்டாமா என்று தெரியாமல் தடுமாற "உட்காரு" என்று அழுத்தமாக சொன்னார் தாமஸ். தந்தையின் குரலில் தெரிந்த அழுத்ததில் சட்டென்று இருக்கையில் அமர்ந்துகொண்டவள் தருணை பார்த்தாள்.
அவனின் பார்வையும் அவளின் மீது திரும்பியிருக்க அவனுக்கு உதவ முடியாமல் போனதில் 'சாரி' என்று கண்களை சுருக்கி சத்தமின்றி இதழசைத்து மன்னிப்பு கேட்டிருந்தாள்.
அவனும் 'பரவாயில்லை' என்னும் ரீதியில் மெல்ல தலையசைத்துக்கொண்ட நேரம் "உன் வாழ்க்கையில் தலையிட எங்களுக்கு மண்டபத்தில் மட்டும் தான் உரிமையில்லையா இல்லை இப்பவும் அதே தானா" என்று கேட்டார் தாமஸ்.
அவன் மண்டபத்தில் வைத்து அவரிடம் பேசியது நினைவுக்கு வந்து போனது தருணுக்கு. அவன் கேட்ட மறுநொடி எதை பற்றியும் யோசிக்காமல் வைஷாலியை பெண் கேட்டு கிளம்பியவர் அவர். ஆனால், மண்டபத்தில் எல்லோர் முன்னிலையிலும் வைத்து அவருக்கு தன் வாழ்வில் தலையிட உரிமையில்லையென்று எப்படியான வார்த்தைகளை சொல்லிவிட்டான்.
அவர் மனம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும் என்று அவனுக்கும் தெரியுமே. மீண்டும் மீண்டும் அவரை நோகடிக்க விரும்பவில்லை அவன். அவர் கேட்டதுக்கு பதில் ஏதும் சொல்லாமல் இமைகளை மூடித்திறந்தவன் இருக்கையிலிருந்து எழுந்துக்கொண்டான்.
மதுஷிகாவை அழைத்துவரும் எண்ணம் தான். தகப்பனை மேலும் வருந்த செய்யக்கூடாது என்பதற்காக மட்டுமே அவளை அழைத்துவர நினைத்தான்.
ஒரு எட்டு எடுத்து வைத்தவனுக்கு அப்பொழுதான் அவள் எந்த அறையில் தங்கியிருக்கின்றாள் என்றும் தெரியாது என்பது நினைவுக்கு வர தாராவை பார்த்தவன் "தாரா, எந்த ரூம்" என்று கேட்டான்.
"உங்க ரூமுக்கு அடுத்த ரூம் தான் அண்ணா" என்றாள் அவள்.
"ம்ம்ம்" என்று விட்டு மாடியேறி சென்றான். அவள் அறை முன்னே சென்று நின்றவனுக்கு அவளை பார்க்கவும் விருப்பமில்லை. ஒருநொடி கதவின் முன்னே நின்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன் அறை கதவை தட்ட உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை. ஏதோ பாடல் ஒன்றின் மெல்லிய ஒலி மட்டுமே கேட்டது.
மீண்டும் தட்டினான் பதில் இல்லை.
"மறுபடியும் மயங்கிட்டாளா" என்ற யோசனையுடன் கதவு பிடியை திருகினான். அது உட்புறம் பூட்ட படாமல் இருக்க சட்டென்று திறந்துக்கொண்டது.
அறை இருளில் மூழ்கியிருந்தது. விளக்கை போட்டான். கண்கள் அறையை சுற்றி வலம் வந்தன. கட்டில் காலியாக இருந்தது. குளியலறையை பார்த்தான். அங்கே விளக்கு போடப்படாமல் இருந்ததை வைத்து அவள் அங்கேயும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். பாடல் வந்து கொண்டிருந்த திசையில் பார்த்தான். அவளின் அலைபேசியில் தான் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கிருந்த மேசை மீது வைத்திருந்தாள்.
பாடலை கேட்டதும் மெல்ல அவன் தாடை இறுகியது. அவன் பாடிய பாடல் தான் அது. அவனின் குரல் தான் அந்த அறையின் நிசப்தத்தை நிரப்பிக்கொண்டிருந்தது. வேகமாக சென்று அந்த அலைபேசியை எடுத்து பார்த்தான்.
அவன் பாடி யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்த பாடல்களின் பட்டியல் தான் அவை. அவன் குரலை தான் கேட்டுக்கொண்டிருக்கின்றாள். மதுஷிகாவிற்கு அவனின் குரலில் இருக்கும் மயக்கத்தை பற்றி வைஷாலி சொல்லி அறிவான். அதிலும் மதுவின் அழுத்தங்களுக்கு அவனின் பாடல்கள் தான் மருந்து என்று கூட ஒருமுறை பேச்சு வாக்கில் வைஷாலி சொல்லியதாக நியாபகம்.