அத்தியாயம் 42
இருவரும் மணலில் அமர்ந்து அந்தக் கடலை வெறித்துக்கொண்டிருந்தனர். கடலில் உருண்டு வந்து கரை தொட்டு மீண்டும் கடலுக்குள்ளேயே தஞ்சம் புகும் அலைகளை போல் வைஷாலிக்கும் வார்த்தைகள் தொண்டை வரை வந்து அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் மீண்டும் தொண்டைக்குழிக்குள்ளேயே இறங்கிவிட அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
வீசிக்கொண்டிருந்த கடல் காற்று மெல்ல மேனியை வருடிக்கொடுத்துக் கொண்டிருந்ததே மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்க மெல்ல திரும்பி தானவீரனை பார்த்தாள்.
பேச வேண்டும் என்றவளை வற்புறுத்தி வார்த்தைகளை பிடிங்கி எடுக்காமல் அவளாக வார்த்தைகளை கோர்த்து பேசட்டும் என்று இதுவரை பொறுத்திருந்தவனும் அவளின் பார்வை உணர்ந்து அவள் புறம் திரும்பி பார்த்தான்.
"மதுவை உங்களால வெறுக்க முடியல இல்ல? அவள் மேல கொஞ்சம் கூட கோபம் இல்லையா உங்களுக்கு?" என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் வைஷாலி.
வீட்டில் மதுஷிகாவின் பொருட்களை ஜெயலக்ஷ்மி தூக்கியெறிய சொன்னதில் அவன் சினம் கொண்டதை வைத்து பேசுகின்றாள் என்று அவனுக்கும் விளங்கியது.
"ஏன் நீ அவளை வெறுத்திட்டியா?" என்று அவள் கேள்விக்கு பதிலை கேள்வியாகவே தந்தான் அவன்.
ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்துக்கொண்டு அவனிடமிருந்து பார்வையை திருப்பிக்கொண்டவள் "தெரியல" என்றாள்.
"எனக்கு மது மேல கோபம் இருக்கு வைஷு. ஆனால், வெறுக்க மாட்டேன். என்னால அவளை வெறுக்கவும் முடியாது. அவள் பண்ணது தப்பா இருக்கலாம். ஆனால், அதுக்காக அவளை என்னால மொத்தமா ஒதுக்கி வைக்க முடியாது" என்றான்.
"ஏன், அவள் பண்ணது உங்களுக்கு தப்பா தெரியலையா?" என்று அடுத்த கேள்வி கேட்டாள்.
அவள் கேள்வி கேட்டாளே ஒழிய அதில் ஆதங்கமோ கோபமோ இல்லை. பொறுமையாக தான் கேட்டுக்கொண்டிருந்தாள். தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருந்திருப்பாள் போலும். இன்று அந்தக் கேள்விகளுக்கான பதிலை அவனிடம் தேடுகின்றாள் என்று உணர்ந்துகொண்டான் அவன்.
"கொஞ்ச நாள் முன்னாடி ஒரு படம் பார்த்தேன். என்ன படம்னு சரியா நினைவுக்கு வரல பட் ஒரு சீன் மட்டும் நல்லா நியாபகம் இருக்கு. ஒரு சின்ன பொண்ணு ஹீரோ கிட்ட கேட்கும். 'நமக்கு பிடிச்சவங்க ஒரு தப்பு பண்ணிட்டா அந்த தப்பு முக்கியமா இல்லை நமக்கு பிடிச்சவங்க முக்கியமா' அப்படின்னு கேட்கும் அந்த பொண்ணு. என்னை நானே இந்த கேள்வியை கேட்டுப் பார்த்தப்போ பிடிச்சவங்க தான் முக்கியமுன்னு தோணுச்சு" என்று சொல்லிக்கொண்டே அவள் முகம் பார்த்தான்.
வைஷாலியின் புருவங்கள் லேசாக இடுங்க அவனை வெறித்து பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தத்தை அவள் சொல்லாமலேயே புரிந்துகொண்டவனாக "நீ என்ன நினைக்குறன்னு புரியுது. ஒருவேளை உங்களுக்கு பிடிச்சவங்க கொலையே பண்ணாலும் கூட அவங்க பண்ண கொலையை விட அவங்க தான் முக்கியமுன்னு சொல்லுவிங்களான்னு தானே பார்க்குற" என்று கேட்டான்.
கால் முஷ்டியை கட்டிக்கொண்டு காற்றில் அசைந்தாடி முகம் தழுவிய கூந்தல் திரள்களை செவி மடலுக்கு பின்னால் சொருகியபடியே அவனை பார்த்திருந்தவள் 'ஆம்' என்ற தோரணையில் மெல்ல தலையை மட்டும் மேலும் கீழுமாக ஆட்டினாள்.
அவளை சன்னப் புன்னகையுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் கடலின் மீது பார்வையை பதித்தவன் "ஆறு அறிவோடு பிறந்திருக்குறதுனால தானே நம்ம எல்லாம் மனுஷங்க. சரி எது, தப்பு எதுன்னு நம்மால யோசிக்க முடியும் இல்லையா" என்றான்.
பேசிக்கொண்டே பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு நாணயத்தை எடுத்தான்.
"எந்த ஒரு விஷயத்துக்கும் ரெண்டு சைடு இருக்கும் வைஷு. இந்த காய்ன் மாதிரி" என்று அந்த நாணயத்தை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டே சொன்னவன் அதை மேல் நோக்கி சுண்டிவிட அது அந்தரத்தில் சுழன்று பின் மணலில் வந்து விழுந்தது.
அந்த நாணயத்தின் மேற்பரப்பை கண்களால் காட்டி "அன்னிக்கு நடந்தது நம்ம கண்ணுக்கு தெரிஞ்ச ஒரு சைடு மட்டும் தான்" என்றவன் மணலில் கிடந்த நாணயத்தை கையில் எடுத்து அதில் ஒட்டியிருந்த மணலை இதழ் குவித்து ஊதி சுத்தம் செய்தபடி அவளின் உள்ளங்கையில் அதை வைத்தான்.
"மணல் ஒட்டியிருக்குற சைடில் என்ன இருக்குன்னு நமக்கு தெரியாதே?" என்றான் அவள் விழிகளை பார்த்துக்கொண்டே.
வைஷாலி மௌனமாக பார்வையை தாழ்த்தி அந்த நாணயத்தை பார்த்திருக்க மேலும் தொடர்ந்தவன் "அன்னிக்கு மது அழுதது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு. அவள் அப்படி கலங்கி நின்னு நான் பார்த்ததே இல்லை.தருணும் கூட அப்படி தான். அன்னிக்கு உன்னை பத்தி தப்பா பேசுன கோபத்துல அவனை அடிக்க போய்ட்டேன். பட், நிதானமா யோசிச்சு பார்த்த நேரம் புரிஞ்சுது. அவன் கண்ணுல ஒரு வலி. அது எனக்கு புரிஞ்சுது. எல்லாத்துக்கும் பின்னாடி ஏதோ காரணம் இருக்குன்னு தெரியுது. பட், என்னன்னு தான் தெரியல" என்றான்.
"உங்களை போல லொஜிக்கலா என்னால யோசிக்க முடியல மாமா. எதுவா இருந்தாலும் என் கிட்ட ஒரு வார்த்தை அவள் சொல்லியிருக்கலாமேன்னு தான் ஆத்திரமா இருக்கு" என்றவளின் விழிகளில் ஒரு துளி நீர் உருண்டு விழ அதை அவசரமாக துடைத்துக்கொண்டாள் பெண்ணவள்.
அதை கவனித்த தானவீரன் "ரிலாக்ஸ் வைஷு” என்று அவள் கரத்தின் மீது தன் கரத்தை வைத்து ஆறுதலாக அழுத்தம் கொடுத்தான்.
“நான் யோசிக்குற மாதிரி தான் நீயும் இந்த விஷயத்தை புரிஞ்சுக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. உன்னோட புரிதலும் அதுக்கு ஏத்த மாதிரி நீ ரியாக்ட் பண்ணுறதும் உனக்கான உரிமை. அதை நீ விட்டுக்கொடுக்கணும்னு நான் சொல்லவே மாட்டேன். உனக்கு அவங்க மேல கோபப் படுறதுக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. பட், கோபம் எல்லாம் குறைஞ்ச பின்னாடி யோசிச்சு பாரு, பிடிச்சவங்க முக்கியமா இல்லை அவங்க பண்ண தப்பு முக்கியமான்னு. உனக்கே ஒரு தெளிவு கிடைக்கும்" என்றான்.
அவள் பதில் ஏதும் பேசாமல் அவனையே ஆச்சரியமாக பார்த்திருக்க "என்னடி இன்னிக்கு தான் முதல் தடவை பார்க்குற மாதிரி பார்க்குற?" என்று புருவம் இடுங்க கேட்டான் தானவீரன்.
"ஆமா…இந்த வீர் ஆஹ் இன்னிக்கு தான் முதல் தடவை பார்க்கிறேன்" என்றாள் அவள்.
"ஆஹான்..." என்று அவன் கிண்டலாக சிரிக்க "நிஜமா தான் சொல்லுறேன் மாமா. மூக்குக்கு மேலயே கோபத்தை வச்சிட்டு சுத்துற தானவீரனை தான் இத்தனை நாள் பார்த்திருக்கேன். ஆனால், உங்களால இவளோ நிதானமா இருக்க முடியும்னு இப்போ தான் தெரியுது. கூடவே வளர்ந்திருந்தாலும் இத்தனை நாளா உங்களை தப்பா எடை போட்டிருக்கேன் போல" என்று சின்ன சிரிப்புடன் சொன்னவளின் பார்வை மீண்டும் கடலின் புறம் திரும்பியிருந்தது.
ஒரு பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு "உங்களை மட்டும் இல்லை, என்னை சுத்தி இருந்தவங்க எல்லாரையும் கூட தப்பா தான் எடை போட்டுட்டேன் போல" என்றவளின் பேச்சில் சிறு விரக்தியும் கலந்திருந்தது.
என்னதான் அவன் விளக்கங்கள் கொடுத்தாலும் நடந்தவைகளை அவளால் உடனே மறக்கவோ மன்னிக்கவோ முடியாது என்பது அவனுக்கும் தெரியும். அவளின் மனநிலையையும் அவன் நன்கறிந்திருந்தான் . ஆகவே, இப்போதைக்கு அவர்களின் உறவை அடுத்தகட்டதிற்கு கொண்டு செல்வதற்கு அவசரம் காட்டுவது சரியாக இருக்காது என்றே நினைத்தான்.
காயங்களுக்கு காலமே மருந்து என்னும் வகையில் அவளுக்கான நேரத்தை கொடுக்க வேண்டும் என்று மனதில் தீர்மானித்துக்கொண்டான். அவன் பேச நினைத்ததை ஆறப்போடுவது என்ற முடிவுக்கு வந்திருந்தான் தானவீரன்.
இருவரிடமும் சில நிமிடங்கள் வெறும் மௌனம் மட்டுமே ஆட்சி செய்ய அதை கலைக்கும் விதமாக தானவீரன் தான் பேசினான்.
"இன்னும் தருணை நினைச்சிட்டிருக்கியா?" என்று அவன் கேட்க அவனை அதிர்ந்து பார்த்த வைஷாலி "தங்கச்சி புருஷனை நினைக்குற அளவுக்கு நான் மோசமான பொண்ணில்லை" என்றாள் சிறு கோபத்துடன்.
"நான் எப்போ அப்படி சொன்னேன்?" என்றவனின் பார்வை அவள் கையில் அணிந்திருந்த ப்ரேஸ்லெட்டை தொட்டு மீண்டது.
அவளும் அவனது பார்வையை தொடர்ந்து தனது மணிக்கட்டில் அழகாய் பொருந்தியிருந்த ப்ரேஸ்லெட்டை அடுத்த கரத்தால் மெல்ல வருடிவிட்டுக்கொண்டே அவனை பார்த்தவள் "கழட்டணும்னு தான் நினைச்சேன். ஆனால், முடியல" என்றாள்.
அவன் அவளை கேள்வியாக பார்க்க "தப்பா நினைக்காதீங்க. இந்த பிரேஸ்லெட்டை தருணுக்காக போட்டுக்கல. உங்களுக்காக தான் போட்டிருக்கேன். இந்த ப்ரஸ்லெட்டோட தருணை விட உங்களை சம்மந்த படுத்துற நினைவுகள் தான் அதிகமா இருக்கு" என்றவளின் விரல்கள் அதில் பொறிக்கப்பட்டிருந்த 'D' எனும் இனிஷியலை வருடி விட்டு கொண்டன.
அவள் சொன்னதில் அவனுக்கும் அந்த நினைவுகள் மனக்கண்ணில் வந்துபோக தானாக அவன் இதழ்களும் புன்னகையில் மலர்ந்தன.
"இப்போ சொல்லுங்க இதை போட்டுக்கலாம் தானே" என்று கேட்டாள் அவனின் சிரிப்பை பார்த்துக்கொண்டே.
"ஒஃப் கோர்ஸ்..." என்று அவன் புருவம் உயர்த்தி சிரிக்க அவளும் சிரித்துக்கொண்டாள்.
சில நொடிகள் அப்படியே கடக்க
"மது கிட்ட பேசுனீங்களா?" என்று தீடிரென்று கேட்டாள் வைஷாலி.
"பேசட்டுமா?" என்று அவளையே கேட்டான் அவன்.
அவள் உயிரையே வைத்திருந்த தங்கையின் மீது அவளுடைய தற்போதைய நிலைப்பாடு என்னவென்று தெரிந்துகொள்ள நினைத்து கேட்டான்.
வைஷாலி என்ன பதில் சொல்வது என்றும் தெரியாமல் மௌனமாகிவிட சற்று பொறுத்துப்பார்த்தவன் "கால் பண்ணேன். பட், அவள் எடுக்கல" என்றான்.
"ம்ம்ம்" என்று மட்டும் சொல்லிக்கொண்டவள் அமைதியாகிவிட ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டவன் "இது தான் நீ பேச வந்த விஷயமா? எல்லாம் பேசியாச்சு தானே...அப்போ வா அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம்" என்றபடி அவன் எழுந்துக்கொண்டான்.
"ஐயோ மாமா, நான் பேச வந்ததே வேற. அதை இன்னும் சொல்லவே இல்லை" என்றபடி எழுந்து நின்றவனின் கரம் பற்றி அவள் மீண்டும் இழுத்து அமரச்செய்ய தடுமாறி பொத்தென்று மணலில் அமர்ந்தான் தானவீரன்.
"உட்கார சொன்னா உட்கார போறேன். எதுக்குடி இப்படி இழுத்து தள்ளி என் இடுப்பை உடைக்குற. நான் இன்னும் கல்யாணம் ஆகாத கன்னி பையன் தெரிஞ்சிக்கோ. ஏதும் ஒண்ணுன்னா என்ன பண்ணுறது. நாளைக்கு பிள்ளை குட்டி பெத்துக்க வேண்டாமா?" என்று அவன் இடுப்பு பகுதியை தேய்த்துவிட்டுக்கொண்டே சொல்ல அவன் புலம்பலை கேட்டு வாய்விட்டே சிரித்த பெண்ணவள் "ஐயோ சாரி சாரி" என்று சிரிப்பினூடே சொல்லிக்கொண்டாள்.
அவளின் சிரிப்பையே ரசனையாக பார்த்திருந்தவன் அவள் சிரிப்பு சற்றே மட்டுப்பட "சரி சொல்லு? என்ன விஷயம்" என்று கேட்டான்.
"அது வந்து மாமா...எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும்" என்றாள்.
"என்னனு சொல்லு...அதுக்கு தானே நான் இருக்கேன்" என்றான்.
"எனக்கு சிங்கப்பூர்ல ஜாப் ஆஃபேர் ஒன்னு வந்திருக்கு. என் ப்ஃரெண்ட் சுபா இருக்காளே அவளோட ஹஸ்பண்ட் ஓட கம்பெனி தான். தருணை பார்க்கறதுக்கு முன்னாடி விளையாட்டு தனமா அப்ளை பண்ணுனது. ஒன்லைன் இன்டெர்வியூ எல்லாம் அப்போவே முடிச்சிட்டேன். இப்போ ஆஃபேர் லெட்டர் வந்திருக்கு. அடுத்த மாசம் ஜாயின் பண்ணுற மாதிரி இருக்கும். வீட்டுல கேட்டா விடமாட்டாங்க. ஆனால், நீங்க சொன்னா கண்டிப்பா ஒத்துப்பாங்க. ப்ளீஸ் எனக்காக பேசுறீங்களா?" என்று சத்தமே இல்லாமல் அவன் தலையில் இடியை இறக்கியிருந்தாள் வைஷாலி.
அதில் ஒருநொடி அதிர்ந்தாலும் எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் தன்னை சமன் செய்துகொண்டவன் "எதுக்கு இந்த முடிவு?" என்று கேட்டான்.
"தெரியல மாமா, கொஞ்ச நாள் தனியா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. இப்போ கூட வீட்டுல யாரு கூடவும் முகம் கொடுத்து நான் பேசுறதில்லை. அது அவங்களை எவ்வளவு கஷ்டப்படுத்தும்னு தெரிஞ்சாலும் என்னால சகஜமா இருக்க முடியல. அதோட என்னை காரணம் காட்டி மதுவை மொத்தமா குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைக்குறதுக்கு அப்பத்தாவும் அத்தையும் பண்ணுற வேலை எல்லாம் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவள் மேல கோபம் இருக்கு தான். ஆனால், அதுக்காக அவங்க அப்படி பண்ணுறதை சகிச்சுக்கவும் முடியல. அது அம்மாவுக்கும் எவ்வளோ கஷ்டம் தெரியுமா? வெளிய காட்டிக்க முடியாமல் உள்ளுக்குள்ள அழறாங்க. எல்லாத்துக்கும் மேல இன்னொரு காரணமும் இருக்கு" என்று முடித்தாள் அவள்.
"அதையும் சொல்லிடு... கேட்டுட்டு மொத்தமா ரியாக்ட் பண்ணிடுறேன். இப்படி இன்ஸ்டால்மெண்ட்ல ஹார்ட் அட்டாக் எல்லாம் கொடுக்காதம்மா, பாடி தாங்காது" என்றான் அவன்.
அவனை பொய்யாய் முறைத்தவள் "நான் சீரியஸ் ஆஹ் பேசுறேன் மாமா" என்றாள்.
'நான் மட்டும் என்ன நீ ஜோக் அடிச்சிட்டிருக்கன்னா சொன்னேன். ஏற்கனவே கடுப்புல தாண்டி கேட்டுட்டிருக்கேன். இவளுங்களுக்கு மட்டும் எவன் தான் தேடி வந்து வேலை கொடுக்குறானோ தெரியல. அவன் மட்டும் என் கையில கிடைச்சான்...' என்று மனதிற்குள்ளேயே திட்டி தீர்த்தவன் "சரி ஓகே... அது என்ன அந்த எல்லாத்துக்கும் மேல ஒரு முக்கியமான காரணம்" என்று கேட்டான்.
"நீங்க தான்" என்றாள்.
"ஏதே" என்று அவன் விழி விரித்து பார்க்க "உங்களுக்கு அறிவுமதியை பிடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும் மாமா " என்றாள் அவள்.
'சுத்தம்' என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே அவளை அவன் பார்த்திருக்க "அன்னிக்கு நீங்களும் மதியும் தோட்டத்தில் பேசிட்டிருந்ததை நான் பார்த்தேன். அவளுக்கும் உங்க மேல விருப்பமிருக்குன்னு தெரியும்" என்றாள்.
'ஓஹோ, அன்னிக்கு பால்கனியில் இருந்து பார்த்ததை அம்மணி இப்படி புரிஞ்சிக்கிட்டாங்களா...வெளங்கிடும்' என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே அவளை எற இறங்க பார்த்தவன் "அதுக்கு..." என்று இழுக்க ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டவள்,
"நீங்க என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என் அம்மா அப்பாவுக்கு வாக்கு கொடுத்துக்காக நம்ம கல்யாணம் நடக்கும்னு எந்த கட்டாயமும் இல்லை மாமா. நான் இங்க இருந்தா ஒரு கட்டத்திற்கு மேல நம்ம கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சு வைக்க தான் பார்ப்பாங்க. உங்களுக்கும் மறுக்க முடியாமல் போய்டும். அதான் நான் கொஞ்ச நாள் வேற எங்கையாவது போய்ட்டா இந்த கல்யாண பேச்சு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிடும். அதுக்கு பிறகு எதையாவது சொல்லி இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லிடலாம்" என்றாள்.
'அடி பாதகத்தி...முதலுக்கே மோசம் பண்ணுறியேடி' என்று அவன் வாய்க்குள் முணுமுணுத்துக்கொள்ள "என்ன மாமா?" என்று புருவம் இடுங்க அவனை பார்த்தாள் அவனின் வைஷாலி.
"அங்...ஆஹ்…ஒண்ணுமில்லை. எப்படி வீட்டுல பேசுறதுன்னு யோசிக்குறேன்" என்றான் அவன்.
"ப்ளீஸ் மாமா எனக்காக இதை பண்ணுங்க. ஒரு வருஷம் காண்ட்ராக்ட் தான் சீக்கிரம் ஓடிடும். எனக்கும் கூட இடமாற்றம் இருந்தா நடந்ததுல இருந்து வெளிவர ஈஸியா இருக்கும்னு தோணுது" என்றாள்.
அவள் சொல்லியதில் எதிலும் அவனுக்கு உடன் பாடு இல்லை என்றாலும் நடந்தவைகளில் இருந்து வெளிவர முயல்கிறாள் என்பதே அவனுக்கு ஆறுதலாக இருக்க அவனும் அவளுக்கு ஆதரவாக இருப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
மெதுவாக அவளின் கரம் பற்றி தனது கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டவன் "சரி, உனக்காக வீட்டுல பேசுறேன். ஆனால், வைஷு நல்லா நியாபகம் வச்சுக்கோ. நான் சொன்னதுல எந்த மாற்றமும் இல்லை. எனக்கு கல்யாணம்னா அது உன் கூட தான்" என்றான் அவளின் விழிகளை பார்த்துக்கொண்டே.
"மாமா..." என்று அவள் மறுத்து பேச வர அவள் இதழ்களில் ஒற்றை விரலை அழுத்தி பேச வேண்டாம் என்பது போல் தலையை இடவலமாக அசைத்தவன் வழிகளை கடலின் புறம் திருப்பி "ம்ம்ம்" என்றான்.