"என்ன துரத்துறீங்க. வர வர வீட்டு மாப்பிள்ளைக்கு மரியாதையே இல்லை..." என்று அவன் சலித்துக்கொள்ள இதழ் பிரித்து சத்தமாகவே சிரித்தவாறு "சரிங்க மாப்பிள்ளை... வந்த வேலை முடிஞ்சது தானே கிளம்புங்க" என்றார் அவரும்.
"ஆஹ் அப்படி மரியாதையா பேசி பழகுங்க" என்று அவனும் கிண்டலாகவே சொன்னவன் "கிளம்புறேன் மாமா" என்று விட்டு சேகரை பார்த்தான்.
அவரோ முகத்தை இன்னமும் இறுக்கமாகவே வைத்திருக்க "மகனை பார்க்க பெருமையை இருந்தா அதை முகத்தில காட்டலாம். நான் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன். அதை விட்டுட்டு எந்நேரமும் இப்படி வெரப்பாவே இருக்குறது" என்று நடிகர் வடிவேலுவின் தொனியில் அவன் சொல்ல மேசை மீது இருந்த பேப்பர் வெயிட்டை தூக்கியிருந்தார் சேகர்.
அதை கவனித்தவனின் விழி அகண்டு விரிய 'ஆத்தி ஓவரா போயிட்டோமோ' என்று மனதில் நினைத்துக்கொண்டவன் "இந்த வயசுல ஜெயில் சாப்பாடு எல்லாம் உங்களுக்கு ஒத்துக்காது தகப்பா" என்று அவர் கையில் இருந்த பேப்பர் வெயிட்டை பிடிங்கி மீண்டும் மேசையில் வைத்தவன் "வரட்டா" என்றபடி சட்டை பின் காலரில் மாட்டி வைத்திருந்த கருப்பு கண்ணாடியை எடுத்து தோரணையாக அணிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
அவன் சென்றதும் கிருஷ்ணகுமாரை பார்த்த சேகர் "ரொம்ப மாறிட்டான்ல" என்று கேட்க அவர் குரலோ மகனை நினைத்து பெருமையில் தழுதழுத்தது.
கிருஷ்ணகுமாரும் கூட ஆமோதிப்பாக தலையாட்டிக்கொண்டார்.
*********************
நியூயார்க் நகரில் அதி நவீன வசதிகளுடன் கூடிய தனது இல்லத்தின் சோபாவில் வந்தமர்ந்தான் தருண். சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் மணி பார்க்க இரவு மணி பதினொன்றரையை தொட்டிருந்தன கடிகார முட்கள்.
கடிகாரத்திலிருந்து விலகி தனக்கு முன்னே இருந்த மடிக்கணினியில் பதிந்தன அவன் விழிகள். வெறுமனே திரையை வெறித்துக்கொண்டிருந்தவனின் விழிகளில் சுவாரசியம் கூட இதழ்களில் மெல்லிய புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
சோபாவில் சாய்ந்தமர்ந்திருந்தவன் சற்றே முன்னே நகர்ந்து உடலை வளைத்து திரையில் தெரிந்த அந்த உருவத்தை விரல்களால் வருடினான். அது நான்கு மாத சிசுவை தாங்கியிருந்த அவனின் மனைவியின் உருவம் தான்.
இந்தியாவில் இருக்கும் அவனது பிரத்தியேக அலுவலக அறையின் சிசிடிவியின் காணொளியை தான் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். மதுஷிகா வேலைக்கு செல்ல விரும்புவதாக தாமஸ் அழைத்து கூறிய நேரம் மறுப்பேதும் சொல்லாமல் அனுமதித்தவன் அவளுக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்பதிலெல்லாம் தலையிடவில்லை. அதையெல்லாம் வருணிடமே விட்டுவிட்டவன் அவள் இருந்து வேலை செய்வதற்கு மட்டும் தனது அறையை தான் பயன்படுத்த வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லியிருந்தான்.
அதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று கர்ப்பமாக இருப்பவளுக்கு கழிப்பறையுடன் சேர்ந்திருந்த அவனது அறை வசதியாக இருக்கும் என்று நினைத்தான். மற்றொன்று அவளையும் அவன் குழந்தையையும் அடிக்கடி சிசிடிவி வாயிலாக பார்த்து அவர்களின் நலனை அறிந்துகொள்வதில் அவனுக்கு ஒரு திருப்தி.
இன்று ஏனோ மதுஷிகா மிகவும் சோர்வாக உணர்ந்தாள். காலையில் வருணுடன் வேலைக்கு வந்தவளோ காலையிலேயே முதல் வேலையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீட்டிங் ஒன்றில் கலந்துக்கொண்டு இப்பொழுதுதான் தனது அலுவலக அறைக்குள்ளேயே நுழைந்திருந்தாள்.
கணவனின் நாற்காலியில் சாய்ந்தமர்ந்தவளுக்கு அவனே அருகே ஆறுதலாக இருப்பது போன்ற உணர்வு. மெல்ல கண்களை மூடிக்கொண்டாள். நாட்கள் நகர புதிய வேலை, புதிய அலுவலகம், புதிய மனிதர்கள் என்று கடந்தகால நிகழ்வுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்திருந்தாலும் கணவனின் ஒதுக்கம் மனதை பாதிக்க தான் செய்தது.
விட்டு சென்றவன் ஒரேடியாக வெறுப்பை மட்டுமே உமிழ்ந்து விட்டு சென்றிருந்தாலும் கூட பரவாயில்லை. தனக்கு விதித்தது இது தான் என்று மனதை தேற்றிக்கொண்டிருப்பாளோ என்னவோ. ஆனால், அவன் தான் அவள் தனிமைக்கு மருந்தாய் துணையாய் நின்றுவிட்டு சென்றிருந்தானே.
அன்பின் ருசி தெரிந்த பின்பு அது மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தோன்றுவது இயல்பு தானே. அதிலும் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் மனம் தானாக அவனை தான் தேடியது. எவ்வளவு தடுத்தாலும் கேட்பேனா என்று முரண்டு பிடிக்கும் மனதுடன் அவள் போராடி தோற்றது தான் மிச்சம்.
அதிலும் கடந்த இரண்டு நாட்களாக அவனை பற்றிய எந்த தகவலும் இல்லை. தினமும் தாராவுக்கு அழைப்பெடுப்பவன் இரண்டு நாட்களாக அழைக்கவுமில்லை. அப்படி தாராவுக்கு அழைப்பெடுக்காத நாட்களில் வருண், ஆர்த்தி, தாமஸ் என்று யாரிடமாவது பேசியிருப்பான். வீட்டில் அவர்களின் உரையாடலை வைத்து அவனின் நலனை தெரிந்துகொள்வாள். ஆனால், கடந்த இரண்டு நாட்களில் அவனிடமிருந்து அழைப்பு ஏதும் வரவேயில்லை. காலையில் பொறுமை இழந்து நேரடியாக வருணிடம் கூட விசாரித்து பார்த்துவிட்டாள்.
அவனும் "அண்ணா கால் பண்ணல அண்ணி. சில நேரம் இப்படி தான். ப்ராஜெக்ட் முடியுற நேரம் இல்லையா. அதுதான் பிஸியா இருப்பாரு" என்று அவளுக்கு சமாதானம் சொல்லி விட்டு சென்றான்.
அவன் சொல்லியது போல் இரண்டு நாட்களாக தலைக்கு மேல் இருந்த வேலையில் தருணுக்கும் வீட்டிற்கு அழைத்துப்பேச நேரமே இருக்கவில்லை.
அவன் அவளுக்கு நேரடியாக அழைத்து பேசியதில்லை என்றாலும் என்னவோ அவனிடமிருந்து வீட்டில் யாருக்கும் அழைப்பு வரவில்லை என்பதே அவளுக்கு சோர்வை கொடுக்க மெல்ல அவனது நாற்காலியில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
மூடியிருந்த விழிகளில் மெல்ல நீர் கசிய மெதுவாக விழிகளை திறந்தாள். மேசை மீது இருந்த புகைப்படத்தில் தெரிந்த அவனது உருவத்தில் நிலைத்தன அவளது விழிகள். ஒற்றை கையை நீட்டி அவன் புகை படத்தை வருடினாள். கண்ணீர் இன்னும் வேகமாக இமைகளை கடந்து கன்னம் நனைத்தது.
புறங்கையால் கண்களை துடைத்துக்கொண்டாள். கணவன் அங்கிருக்கும் சிசிடிவி வழியாக தன்னை கவனித்துக்கொண்டிருக்கின்றான் என்றும் தெரியாமல் தனது உணர்வுகளை தடையின்றி வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள் பேதையவள்.
அவள் செய்கைகளை அவதானித்தவனுக்கு அவளின் அழுகைக்கான காரணம் ஓரளவுக்கு புரியத்தான் செய்ததது. ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே திரையில் தெரிந்தவளை பார்த்தவன் "அழாதடி" என்றான்.
அவன் சொல்லிய அடுத்தகணம் என்ன நினைத்தாளோ சட்டென்று நிமிர்ந்து அந்த சிசிடிவியை பார்த்தாள் மதுஷிகா. அவன் பார்த்துக்கொண்டிருப்பது அவளுக்கு தெரியாது. ஆனால், அவள் உள்ளுணர்வு அவன் இருப்பை உணர்த்தியிருக்கும் போலும். சிசிடிவியில் பார்வையை பதித்திருந்தாள் பாவையவள்.
திரையில் அவளையே பார்த்திருந்தவனின் விழிகளை நேரே வந்து தாக்கியது அவளின் பார்வை. அந்த ஒற்றை பார்வையில் அவளின் ஏக்கத்தை அவனுக்கு புரிய வைத்திருந்தாள் அவனின் மனையாள்.
விழிகளை அழுந்த மூடி திறந்தவனுக்கு அதற்குமேல் அவளின் பார்வையை எதிர்கொள்ளும் தெம்பு இருக்கவில்லை. மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு அப்படியே விழிமூடி சோபாவில் சாய்ந்துகொண்டான்.
முழுதாக அவளை ஏற்கவும் முடியவில்லை மொத்தமாக விலக்கி வைக்கவும் முடியவில்லை. இந்த உறவுக்கு முடிவு தான் என்னவென்று தவித்தவனோ சோபாவில் அமர்ந்தபடியே களைப்பின் மிகுதியில் உறங்கி போயிருந்தான்.
Last edited: