அத்தியாயம் 45
அவள் அறைக்கு வெளியே ஒற்றை காலை மடக்கி சுவற்றில் ஊன்றியபடி சாய்ந்து நின்றவன் கையில் அலைபேசியை வைத்து பார்த்துக்கொண்டிருக்க உடை மாற்றி விட்டு அவன் முன்னே வந்து நின்றாள் வைஷாலி.
அவளை ஏற இறங்க பார்த்தவன் "இது பெட்டர். சத்தம் போடாமல் வா. யாரும் எழுந்துட போறாங்க" என்றபடி முன்னே நடக்க அவளும் அவனை பின் தொடர்ந்தாள்.
அந்த இருளின் அமைதியில் அவள் கொலுசின் மெல்லிய ஒலி கூட அதீத சத்தத்தை கொடுப்பது போல உணர்ந்தவன் சட்டென்று அவளை நோக்கி திரும்பி அவள் கால்களை பார்த்தான். ஒற்றை காலில் மெல்லிய வெள்ளி கொலுசு அணிந்திருந்தாள்.
அவனது பார்வையை கண்டுகொண்டவள் "என்ன மாமா, கொலுசு சத்தமா இருக்கா? கழட்டிடட்டுமா?" என்று அவள் கேட்ட நேரம் அவனே அவன் காலடியில் மண்டியிட்டமர்ந்து அவள் பாதத்தை எடுத்து அவன் தொடையின் மீது வைத்து அந்த கொலுசை கழட்டி எடுத்திருந்தான்.
அதை தனது பாண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டே எழுந்து நின்றவன் "பிறகு தரேன்" என்றபடி திரும்பி நடக்க அவளும் எதுவும் சொல்லாமல் அவனுடன் நடந்தாள்.
இருவரும் மாடிப்படியில் இறங்கி கடைசி படியை அடைந்த நேரம் அடுக்களையில் மின்விளக்கு போடப்பட்டது. சட்டென்று பல்லியை போல் சுவற்றில் மறைவாக சாய்ந்து நின்றுகொண்டவன் மெல்ல எட்டி அடுக்களையை நோட்டம் விட அவனுக்கு பின்னால் அவனை போலவே நின்றுகொண்டிருந்த வைஷாலியோ அவன் தோளை சுரண்டினாள்.
"என்னடி?" என்று அவன் ரகசிய குரலில் கேட்க "என்னாச்சு மாமா? யாராவது வந்துட்டாங்களா?" என்று கேட்டாள்.
"கிச்சனுக்குள் வேற யாரு இருக்க போறாங்க. எல்லாம் அத்தை தான். தூங்கும் போது கூட அடுப்படியை நினைச்சிட்டே தூங்குவாங்க போல" என்று அவன் சலித்துக்கொள்ள அவளோ "கிண்டலா" என்று அவன் கையில் நறுக்கென்று கிள்ளி வைத்துவிட்டாள்.
"ஸ்ஸ்ஸ்... வலிக்குதுடி" என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அவன் சமையல் கட்டு பக்கம் எட்டி பார்த்தான். உள்ளே சரோஜினிதான் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி கொண்டிருந்தார்.
"மாமா, அம்மா முழிச்சு இருக்காங்களே அப்போ நாம போக முடியாதுல. நான் போய் தூங்கட்டுமா?" என்று அவள் கேட்க மெதுவாக தலையை திருப்பி அவளை முறைத்து பார்த்தவன் "கொன்னுடுவேன்" என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு மீண்டும் சமையல் கட்டை பார்த்தான்.
சரோஜினி சமையலறை விளக்கை அணைப்பது தெரிய "அத்தை படிக்கட்டை தாண்டி தான் அவங்க ரூமுக்கு போகணும். நாம இங்கையே நின்னுட்டிருந்தா மாட்டிப்போம். பேசாமல் வா" என்று சட்டென்று அவள் கரத்தை பற்றியவன் அவளையும் இழுத்துக்கொண்டு வேகமாக ஓடிச்சென்று அங்கிருந்த சோபாவிற்கு பின்னால் மறைவாக அமர்ந்துகொண்டான்.
சோபாவின் மறைவிலிருந்து கொஞ்சமாக எட்டி சரோஜினி சென்றுவிட்டார் என்று அவன் உறுதி செய்துகொண்டிருக்க அவன் அருகே அமர்ந்திருந்த வைஷாலியோ கையால் வாயை பொத்தியபடி குலுங்கி குலுங்கி சிரித்துக்கொண்டிருந்தாள்.
அதை உணர்ந்தவன் "சிறிச்சது போதும். அத்தை போயாச்சு, வா போகலாம்" என்றபடி அவள் கையை பற்றி இழுத்துக்கொண்டே ஒருவழியாக அரவமின்றி வீட்டின் முன் கதவையும் திறந்துகொண்டு வெளியிலும் வந்துவிட்டான்.
அவன் திறந்த கதவை சத்தமின்றி மீண்டும் மூடிவிட்டு ஒரு நிம்மதி பெருமூச்சொன்றை விட்டுக்கொள்ள இப்பொழுது சத்தமாகவே சிரிக்க தொடங்கிவிட்டாள் வைஷாலி.
அவளை பொய்யாய் முறைத்தவன் "இப்போ எதுக்கு சிரிக்குற" என்றான் சலிப்பாக.
"இல்லை இப்படி பயந்து ஒளிஞ்சு போறதுக்கு பேசாமல் அவங்க கிட்ட சொல்லிட்டே போகலாம்ல" என்றாள்.
"இப்படி நைட் ரைட் எல்லாம் சொல்லிட்டு செய்யுறதுல என்ன த்ரில் இருக்கு. அதெல்லாம் திருட்டுத்தனமா பண்ணுறது தானே கிக்கு" என்று ஒன்றை கண்ணை சிமிட்டினான்.
"அதுவும் இல்லாமல் உன்னை இந்த நேரத்துல வெளிய கூட்டி போறேன்னு சொன்னதும் பர்மிஷன் கொடுத்திடுவாங்க பாரு. அப்படியே அத்தையும் மாமாவும் பர்மிஷன் கொடுத்தாலும் அதை கெடுக்குறதுக்குன்னே உள்ளே வந்து குதிப்பார் எங்கப்பா" என்று அலுத்துக்கொண்டான்.
அவன் பேச்சில் தலையை இருபுறமும் ஆட்டியபடி சிரித்துக்கொண்டவள் அவன் மோட்டார் சைக்கிளை நோக்கி நடக்க தனவீரனோ "வைஷு அங்க இல்லை, இங்க" என்றபடி அவள் சென்ற திசைக்கு அடுத்த புறம் கருப்பு நிற கவரால் மூடி வைக்க பட்டிருந்த வண்டியை காண்பித்தான்.
அதன் அருகே சென்றவன் அந்த கருப்பு நிற கவரை இழுத்து திறக்க உள்ளே மூன்று மிதிவண்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அது தானவீரன், வைஷாலி, மற்றும் மதுஷிகாவினுடையது தான். எப்பொழுதாவது மூவரும் ஒன்றாக வீட்டில் இருக்க கிடைத்தால் மிதிவண்டியில் அருகே இருக்கும் பூங்காவிற்கு சென்று நேரம் செலவிடுவது அவர்களின் வழக்கம். பிள்ளை பிராயத்தில் இருந்து தொடர்ந்த அந்த பழக்கம் அவர்கள் வளர்ந்த பின்பும் நீடித்திருந்தது. மூவருக்கும் மிக பிடித்த பொழுதுபோக்கு அது.
"சைக்கிள்லையா போக போறோம்" என்று அவள் கேட்க "ம்ம்ம்...ரொம்ப நாள் ஆச்சுல்ல...இங்க பக்கம் தான். சைக்கிள் போதும். நீ உன்னதை எடுத்துக்கோ" என்றபடி அவனும் அவனின் சைக்கிளை எடுத்து அதில் ஏறி அமர்ந்துவிட்டான்.
"ம்ம்ம்" என்றபடி அவளின் மிதிவண்டியை எடுக்க போனவளுக்கு அருகே நின்றிருந்த மதுஷிகாவின் மிதிவண்டியை பார்த்ததும் மனதில் சுருக்கென்று ஒரு வலி. தங்கையின் எண்ணம் அழையாமல் வந்து மனதில் புகுந்துகொண்டது. கண்களும் சட்டென்று கலங்கிவிட்டன.
அவளின் நடவடிக்கைகளை கண்டுக்கொண்ட தானவீரன் "வைஷு, ஆர் யூ ஓகே?" என்று அவள் தோளில் கை வைக்க "ம்ம்ம்" என்றபடி அவளின் வண்டியை எடுத்தாள்.
எடுத்த பிறகு தான் அவளின் வண்டியின் சக்கரத்தில் காற்று குறைந்திருப்பதை கவனித்தவள் "அச்சோ... இங்க பாருங்க டயர்ல காத்து இல்ல" என்றாள்.
அவனும் குனிந்து அவளின் மிதிவண்டியின் சக்கரத்தை பார்த்துவிட்டு "ஆமா, ரொம்ப குறைவா தான் இருக்கு" என்றபடி தாடையை நீவியவன் "மதுவோட சைக்கிளை எடுத்துக்கலாமே?" என்றான்.
ஒரு நொடி மதுஷிகாவின் மிதிவண்டியின் மீது பார்வையை பதித்தவள் "இல்ல வேணாம் மாமா. அவளுடையது அவளுடையதாகவே இருக்கட்டும்" என்றாள்.
அவளின் பேச்சில் இருந்த இரட்டை அர்த்தம் அவனுக்கும் புரிந்தது தான். அவன் இதழ்களில் கீற்றாய் ஒரு புன்னகை மலர "அப்போ வா, என் சைக்கிள்லையே போய்டலாம்" என்று அவனுக்கு முன்னால் இருந்த கம்பியை கண்களால் காட்டினான்.
"என்னது?" என்று அவள் அதிர்ந்து பார்க்க " ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா? உன்னை எங்கையும் தள்ளி விட்டுட மாட்டேன்" என்றபடி அவள் கரத்தை பற்றி இழுத்தவன் அவளை அவன் மிதிவண்டியின் முன்பகுதியில் அமர்த்திக்கொண்டு தான் புறப்பட்டான்.
வீட்டின் முன் கேட்டிற்கு வந்ததும் இருவரும் சைக்கிளில் இருந்து இறங்கி கொண்டு பூனை போல மெதுவாக கேட்டை திறந்து வெளியில் வந்திருந்தனர்.
"நாம கேட்டை திறந்து வெளியில் போறது கூட தெரியாமல் தூங்குறான் பாரு வாட்ச்மென். நாளைக்கு முதல் வேலையா இவன் சீட்டை கிழிக்கணும்" என்று சொல்லிக்கொண்டே கேட்டை மறுபடியும் மூடி விட்டு சைக்கிளில் ஏறிக்கொள்ள வைஷாலியும் மெதுவாக சிரித்துக்கொண்டே சைக்கிளில் ஏறிக்கொண்டாள்.
அவன் கைகளுக்கு நடுவே அமர்ந்திருந்தவளுக்கு எந்த வித அசௌகரிய உணர்வுமில்லை. மாறாக பாதுகாப்பாக உணர்ந்தாள். ஏனோ அன்னையின் கருவறையில் உணரும் பாதுகாப்பை போன்ற உணர்வு. மெல்ல தலையை மட்டும் திருப்பி அவனை பார்த்தாள்.
அவளின் பார்வை உணர்ந்து அவள் விழிகளோடு விழிகள் கலக்க விட்டவன் "என்ன" என்று கேட்க "ஒண்ணுமில்லை" என்னும் தோரணையில் தலையாட்டியவள் மெதுவாக புன்னகைத்தாள்.
ஒரு மந்தகாசப்புன்னகையுடன் வீசிய காற்றில் அவள் கன்னத்தை தழுவி நின்ற கூந்தல் திரள்களை அவள் காதிற்கு பின்னால் ஒதுக்கி விட்டபடி "போலாமா?" என்று கேட்டான். இன்னும் அவன் விழிகள் அவளின் விழிகளையே தான் பார்த்திருந்தன.
"ம்ம்ம்" என்று சம்மதமாக தலையாட்டியவள் மெல்ல அவனில் இருந்து பார்வையை திருப்பிக்கொண்டாள்.
அவளின் திருமணம் நின்று ஒரு மாதம் கடந்திருந்தாலும் கூட இப்பொழுதும் அவளின் மனதில் அதன் பாதிப்பு இருந்துகொண்டுதான் இருக்கின்றது. மீண்டு வர தன்னால் இயன்றதை செய்தாலும் சில நேரங்களில் மனதை அழுத்தும் வலியில் இருந்து அவளால் விடுபடமுடிவதில்லை.
அப்படியிருக்க இந்த அமைதியான இரவில் குளிர்ந்த நிலவில் இப்படி ஒரு பயணம் அவள் மனதிற்கு இதமானதாகவே இருந்தது. அந்த இனிமையான மனநிலையில் அவள் இருக்க, தானவீரனுக்கோ மனமெல்லாம் பரவச உணர்வு.
வைஷாலியுடன் இதுபோல் தனிமையில் பயணம் செய்வது ஒன்றும் அவனுக்கு முதல் முறை அல்ல. ஆனால், இது அந்த பயணங்களிலிருந்து மாறுபட்டிருந்தது.
அவளை காதலிக்க இனி அவனுக்கு தான் தடைகள் இல்லையே. யாருக்காகவும் அவன் உணர்வுகளை கட்டு படுத்த தேவையில்லை. அவளிடம் ஒதுக்கம் காட்ட அவசியமில்லை. வலிகளை உள்ளுக்குள் மறைத்து வெளியில் சிரிக்கவும் வேண்டியதில்லை.ஒரு வித சுதந்திர உணர்வு. அந்த சந்தோஷத்தில் திளைத்திருந்தான் அவன்.
தன்னவளுடன் ஏகாந்த இரவில், தனிமையில், இப்படி ஒரு நெருக்கத்தில் பயணிப்பதில் தான் எத்தனை இன்பம். அந்த பரவசத்தில் உதட்டில் பூத்த முறுவலுடன் சைக்கிளை மிதித்தான் அவன்.
அப்பொழுதுதான் மழை பேய்ந்து ஓய்ந்திருந்த ஈர சாலையில் அவளுடனான அழகிய பயணம்.
அவர்களின் அந்த அழகான தருணத்திற்கு சாட்சியாக நின்றது அந்த கருத்த வானும் காய்ந்த நிலவும் மட்டுமல்ல தருணும் கூட தான்.
விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் முக்கியமான வேலை இருப்பதாக சொல்லிவிட்டு புறப்பட்ட தருணின் வண்டி வந்து நின்றது என்னவோ வைஷாலியின் வீட்டிற்கு சற்று தள்ளியிருந்த மாமரத்தின் அருகே தான்.
ஊரை விட்டு மொத்தமாக செல்வது என்று முடிவெடுத்தவனுக்கு தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வை பற்றிய கவலை நெஞ்சை அரித்துக்கொண்டே தான் இருந்தது. செல்வதற்கு முன் ஒருமுறை அவள் நன்றாக இருக்கின்றாள் என்று பார்த்துவிட்டால் போதும் என்று இருந்தது அவனுக்கு.
ஊரே ஓய்ந்து கிடக்கும் இந்நேரத்தில் அவளை பார்த்துவிட முடியும் என்று எந்த நம்பிக்கையில் அங்கு வந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.
அவள் வீட்டை நெருங்கிய பின்னரே அது புத்திக்கு உரைக்க அவனது காரை அவள் வீட்டிற்கு சற்று தள்ளி நிறுத்திவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டான். அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்துவிடலாமா என்றும் கூட யோசித்தான். ஆனால்,அழைத்து என்னவென்று சொல்வது. அப்படியே அமர்ந்திருந்தவனின் விழிகள் என்னவோ சாலையிலிருந்து தெரிந்த அவளின் அறை பால்கனியிலேயே படிந்திருந்தன. ஒருமுறை அவளை பார்த்துவிட்டாலும் போதும் என்ற எண்ணம் தான்.
காதலால் காத்திருக்கவில்லை அவன். அவளின் நல்வாழ்வின் மீது கொண்ட அக்கறையில் பார்த்திருந்தான்.
அந்நேரம் தான் கேட்டை திறந்து கொண்டு தானவீரனும் வைஷாலியும் வெளியில் வருவதை கண்டுக்கொண்டான். அவளை பார்த்ததும் அவளிடம் சென்று பேசிவிட சொல்லி அவன் மனம் தாயை கண்ட சேயாய் குதிக்க அவன் புத்தியோ அதன் விளைவை எடுத்துரைத்து அவனை அமைதிப்படுத்தியது.
அவர்களையே பார்த்திருந்தான். அவனை பொறுத்தவரையில் அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று தானே நினைத்திருந்தான். கட்டாயத்தின் பெயரில் நடந்த திருமணம் அது. அதுவும் அவன் தான் அதற்கு காரணகர்த்தா. அப்படியான திருமணத்தில் அவள் மகிழ்ந்திருக்கின்றாளா என்று தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது அவனுக்கு.
அவர்களையே ஆராய்ச்சியாக அவன் பார்த்திருக்க அந்நேரம் தானவீரன் அவளை உரிமையாய் பார்த்த பார்வையும் அவளின் இதழ்களில் தவழ்ந்த புன்னகையும் அவனுக்கு ஆயிரம் அர்த்தங்களை சொல்லியிருக்க ஒரு நிம்மதி பெருமூச்சுடன் "நல்லா இருக்கனும் வைஷு, நீங்க ரெண்டு பேரும்" என்று இதழ் பிரித்தே சொல்லிக்கொண்டவன் அவர்கள் புறப்படும் வரை பார்த்துக்கொண்டே இருந்தான்.
அவர்கள் சென்றதும் தனது கைபேசியை எடுத்து அதில் இருக்கும் புகைப்படங்களை திறந்து பார்த்தான். அதில் அவனும் வைஷாலியும் எடுத்துக்கொண்ட தற்படங்களையும் ரிசெப்ஷனில் எடுத்ததாக தாரா அனுப்பிவிட்ட புகைப்படங்களையும் இன்னும் வைத்திருந்தான். அழித்துவிட எத்தனையோ முறை முயன்றும் முடியவில்லை.
ஆனால், இனி அதை வைத்திருப்பதும் நியாயமில்லை என்று உணர்ந்துக்கொண்டான். ஒன்று விடாமல் அத்தனை புகைப்படங்களையும் அழித்து முடித்தவன் ஒரு ஆழ்ந்த பெருமூச்சொன்றை எடுத்துக்கொண்டே அப்படியே இருக்கையில் சாய்ந்தமர்ந்துகொண்டான்.
அவனை பொறுத்தவரை அந்த புகைப்படங்களுடன் அவன் வாழ்வில் வைஷாலியின் அத்தியாயமும் முடிந்துவிட்டது. இனி அவளை நினைப்பதும் பாவம் என்று அவனுக்கு தெரியும். அவளை மறக்க முடியுமா என்று அவனுக்கு தெரியவில்லை. ஆனால், நினைக்காமல் இருக்க பழகிக்கொள்ள தயாராகிவிட்டான்.
சில நொடிகள் எடுத்து தன்னை சமன் படுத்திக்கொண்டவன் விமான நிலையம் நோக்கி பயணப்பட்டிருந்தான்.
இங்கே வைஷாலியை அவர்கள் வீட்டிலிருந்து சில தெருக்கள் தள்ளி இருந்த குல்ஃபீ கடைக்கு அழைத்து வந்திருந்தான் தானவீரன்.
அது சாலையோரத்தில் அமைந்திருந்த ஒரு தள்ளுவண்டி கடைதான்.
ஆள் அரவமே இல்லாமல் இருந்தது அந்த இடம். அவன் மிதிவண்டியை அந்த கடைக்கு சற்று தள்ளியே நிறுத்த அவளும் இறங்கிக்கொண்டாள். மிதிவண்டியை தள்ளிக்கொண்டே அவன் அந்த கடையை நோக்கி நடந்தான்.
"குல்ஃபீ சாப்பிடவா வந்தோம்?" என்று கேட்டுக்கொண்டே அவளும் அவனுடன் நடந்தாள்.
"உனக்கு குல்ஃபீ ரொம்ப பிடிக்கும்ல. இந்த கடையில் சாப்பிட்டு பாரு செம்ம டேஸ்ட்டா இருக்கும்" என்றான்.
அவர்களும் பேசிக்கொண்டே கடையை நெருங்கிவிட மிதிவண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு கடைக்காரனிடம் சென்று" ஒரு மலாய் குல்ஃபீ, ஒரு மேங்கோ குல்ஃபீ" என்றான்.
கடைக்கார பையனோ அவன் கேட்டதை கொடுத்திருக்க "சாப்பிட்டு பிறகு மொத்தமா பணம் கொடுக்குறேன்" என்றான் தானவீரன்.