ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 36


இப்படியாகத்தான் அவர்களுக்குள் நிகழ்ந்த உணர்வு போராட்டங்களுக்கிடையில் தருண் மற்றும் மதுஷிகாவின் திருமணம் நடந்தேறியிருந்தது.​

திருமணம் முடிய அவளை அழைத்துக்கொண்டு மண்டபத்திற்கு சென்று வைஷாலியின் முன்னே நின்றவன் அவன் மீது வைஷாலிக்கு மிச்சமிருக்கும் அன்பை மொத்தமாக துடைத்து எரிய என்ன எல்லாம் பேச வேண்டுமோ அவை அத்தனையையும் கனகட்சிதமாக பேசி அவளின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டான்.​

அதோடு சரோஜினி மதுஷிகாவை அடிக்க வந்த நேரம் தன் மனைவியை கை நீட்ட பெற்ற தாயாக இருந்தாலும் அவருக்கு உரிமை இல்லை என்று சொல்லியது கூட அவளின் மீது அவர்களின் வெறுப்பை அதிகப்படுத்த அவன் நடத்திய நாடகமே தவிர அவள் மீது அவனுக்கு வேறு எந்த அக்கறையும் இல்லை. அவளுக்கும் அவனது பேச்சின் அர்த்தம் புரிந்து போனதுனாலேயே அந்நொடியில் அவனை அதிர்ந்து பார்த்திருந்தாள் மதுஷிகா.​

அவள் மீது எவ்வளவு வஞ்சம் இருந்திருந்தால் இப்படி ஒட்டு மொத்தமாக அவளை குடும்பத்திடமிருந்து பிரித்து அநாதரவாக நிற்க வைத்திருப்பான். அவள் மீது இத்தனை வெறுப்புடன் இருப்பவனை இனி அவள் எப்படி சமாளிக்க போகின்றாள் என்று யோசிக்கும் போதே அவளுக்கு பதறியது.​

நடந்து முடிந்தவைகளை எல்லாம் கண்களில் கண்ணீர் வழிய நினைத்துப்பார்த்த அந்த இரு உயிர்களின் மனங்களும் ரணமாக வலிக்க அந்த வலியை ஆற்றுவார் தேற்றுவாரின்றி தனிமையில் அனுபவித்திருந்தனர்.​

இங்கே தருண் மற்றும் மதுஷிகாவின் நிலை இப்படியாக இருக்க அங்கே வைஷாலியின் கரத்தை பற்றிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்திருந்தான் தானவீரன்.​

அவள் இருந்த மனநிலையில் அவளுக்கு அமைதியும் தனிமையும் தான் தேவை என்று உணர்ந்தே இருந்தவன் வீட்டிற்குள் நுழைந்ததும் நேராக மாடியேறி அவளை அவளது அறைக்கு தான் அழைத்து சென்றிருந்தான்.​

அவளுக்காக அறை கதவை திறந்து விட்டவன் " கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு வைஷு. ரொம்ப எதையும் யோசிக்காத" என்க அவனை ஒரு வெற்று பார்வை பார்த்தவள் "தூக்கம் வருமா மாமா?" என்று கேட்டபடி அறைக்குள் நுழைந்தாள்.​

அவள் கையோடு அவன் கையும் பிணைந்திருக்க அவனும் அவளோடு அறைக்குள் நுழைந்தவன் கோர்த்திருந்த அவர்களின் கைகளில் பார்வையை பதித்தான்.​

மண்டபத்தில் அவன் கரத்தை பற்றி பிடித்தவள் தான். இன்னமும் விடாமல் பிடித்துக்கொண்டே இருக்கின்றாள். அவனிடம் ஆறுதல் தேடுகிறாள். துவண்டு போய்விட்ட அவளுக்கு தூணாய் துணையாய் அவன் நின்றிருக்க எல்லோர் முன்னாலும் உடைந்து விடாமல் அவனை பற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தாள் வைஷாலி.​

இன்னமும் அவன் கரத்தை பிடித்துக்கொண்டுதான் இருந்தாள்.​

அவளை அழைத்து சென்று மெத்தையில் அமர வைத்தவன் "கொஞ்சம் தூங்கி எழு வைஷு. நடந்ததையே யோசிச்சிட்டிருக்கணும்னா கூட உடம்புல தெம்பு வேணும்ல" என்றான்.​

அவன் குரலில் மெல்லிய கிண்டல் தொனி ஒளிந்திருந்தது. தன்னுடன் இயல்பாக பேசி தன்னையும் இயல்பாக்க முயல்கின்றான் என்பது அவளுக்கும் புரிந்தது.​

தனக்கு முன்னே நின்றிருந்தவனை அவள் அண்ணார்ந்து பார்த்து முறைக்க இதழ்களில் பூத்த மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்தவன் " ரொம்ப யோசிக்காதடி"அவள் கன்னத்தில் தட்டியபடி சொன்னான்.​

அவள் அமைதியாகவே இருக்க ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டவன் "அலங்காரங்களை எல்லாம் கலைச்சிட்டு ஃபிரெஷ் ஆகிக்கோ. அதுக்கு பிறகு கொஞ்சம் தூங்கி எழும்புனா பெட்டெர் ஆஹ் இருக்கும். நான் மதியை வர சொல்லுறேன் அவ ஹெல்ப் பண்ணுவா" என்றான்.​

"வேண்டாம் மாமா. நானே பார்த்துக்குறேன். கொஞ்சம் தனியா இருக்கணும்னு தோணுது" என்றாள்.​

தானவீரன் அவள் முகத்தையே கூர்ந்து பார்க்க மீண்டும் அவனை ஏறிட்டு பார்த்தவள் "பயப்படாதீங்க மாமா. நான் ஒன்னும் பண்ணிக்க மாட்டேன்" என்றாள்.​

"என்ன பேச்சுடி இது. பயித்தியம் மாதிரி உளறாத " என்று அதட்டினான் தானவீரன்.​

"என்னால முடியல மாமா. ஆத்திரமா இருக்கு, அழுகையா வருது" என்று தலையை தாழ்த்தி கொண்டு தரையில் பார்வையை பதித்தவளின் விழிகளில் சிந்திய கண்ணீர் தரையில் பட்டு அவன் பாதங்களில் தெறித்தது.​

அழுதழுது ஓய்ந்திருந்தவள் மீண்டும் அழுகிறாள் என்று புரிந்துக்கொண்டான். அவனுக்கு அவளை எப்படி தேற்றுவது என்றும் தெரியவில்லை.​

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டவன் அவள் தலையை மென்மையாக வருடி விட்டான்.​

"அத்தையை வர சொல்லட்டுமா" என்று அவன் தன்னால் தர இயலாத ஆறுதலை அவளின் அன்னையால் தர கூடுமோ என்கின்ற எண்ணத்தில் கேட்க அவளோ பட்டென்று "வேண்டாம் மாமா. யாரையும் பார்க்க பிடிக்கலை எனக்கு. இப்போ இருக்குற மனநிலையில் யாரை பார்த்தாலும் எல்லோரையும் காயப்படுத்திடுவேனோன்னு இருக்கு" என்றாள்.​

மண்டபத்தில் வைத்து அவளிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் தருண் இல்லை என்றால் தானவீரன் என்று அவளின் பெற்றோர்கள் இருவரும் அவர்களாகவே முடிவெடுத்திருந்தது ஏற்கனவே தருண் மற்றும் மதுஷிகா செய்த காரியத்தால் பலத்த அடி வாங்கியிருந்த அவளின் இதயத்தை மேலும் உடைத்திருக்க அவர்கள் மீதும் பெருங்கோபம் கொண்டிருந்தாள் வைஷாலி.​

அதனாலேயே அவள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறியதிலிருந்து தானவீரனுடன் மட்டும் தான் இருக்கின்றாள். வீட்டில் மற்ற யாருடனும் பேசவேயில்லை. யாரையும் தன்னை நெருங்க விடவுமில்லை. தனக்குள் ஒடுங்கிக்கொண்டவளிடம் ஓரளவுக்கேனும் நெருங்க முடிந்தது அவன் ஒருவனால் மட்டும் தான்.​

"சரி விடு" என்றபடி அவள் தலை அலங்காரங்களை ஒவ்வொன்றாக தானே அகற்ற துவங்கினான்.​

அவள் இருந்த மனநிலைக்கு அவளுக்கும் அவனை தடுக்க தோன்றவில்லை.​

கூந்தல் அலங்காரங்கள் முழுவதையும் அகற்றிவிட்டு திருமணத்திற்கென்று பிரத்தியேகமாக அவள் காது, கழுத்து, கைகள் என்று பூட்ட பட்டிருந்த ஆபரணங்கள் மொத்தத்தையும் அகற்றியவன் அனைத்தையும் அருகே இருந்த மேசையில் வைத்துவிட்டு அவள் தோள்களை பற்றி அப்படியே மெத்தையில் சாய்த்து படுக்க வைத்தான்.​

ஒரு அன்னையை போல் அவனது செய்கைகள் இருக்க கொஞ்ச நேரம் அவளின் அழுகையை மறந்து அவனையே பார்த்திருந்தாள் வைஷாலி.​

சிறு வயதிலிருந்தே அவன் இப்படி தான். அவளிடம் எவ்வளவு வம்பு வளர்த்தாலும் அவள் சோர்ந்துபோகும் நேரங்களில் எல்லாம் தோழனாக தோள் கொடுத்து தாங்கியிருக்கின்றான். இப்பொழுதும் அப்படி தான் இருக்கின்றான்.​

இத்தனை நாட்கள் அவள் பெரியதாக எடுத்துக்கொள்ளாத அவனின் இந்த பண்பு இப்பொழுது அவள் கண்களுக்கு தனியாக தெரிந்தது.​

அவளின் பார்வை அவன் மீதே நிலைத்திருப்பதை உணர்ந்த தானவீரன்​

"என்ன?" என்று கேட்க 'ஒண்ணுமில்லை' என்பது போல் தலையை இடவலமாக மெதுவாக ஆட்டிக்கொண்டாள்.​

"சரி, நான் உனக்கு இவ்வளோ பன்னேன்லே. இப்போ நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறியா?" என்று கேட்டான்.​

அவள் அவனை கேள்வியாக பார்க்க அவள் முகம் தாங்கி அவள் கன்னங்களில் வழிந்துக்கொண்டிருந்த கண்ணீர் துளிகளை தனது பெரு விரல்களால் துடைத்து விட்டவன் "கொஞ்ச நேரம் அமைதியா தூங்கு" என்றான்.​

அவளும் ஆமோதிப்பாக தலையாட்ட அருகே இருந்த நாற்காலியை இழுத்து அவளுக்கு அருகே போட்டுக்கொண்டவன் தனது அலைபேசியை பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டான்.​

"நீங்க போங்க, நான் தூங்கிக்குறேன்" என்று அவள் சொல்ல " நீ தூங்கினதும் நான் போயிடுவேன்" என்றான் அவன்.​

அதற்குமேல் அவளும் எதுவும் சொல்லவில்லை. சொன்னாலும் அவன் கேட்க மாட்டான் என்றும் அவளுக்கு தெரியும். அப்படியே விட்டத்தை பார்த்துக்கொண்டே படுத்திருந்தாள்.​

அவனோ அலைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டிருப்பது போல் பாவலா செய்தாலும் அவனது விழிகள் வைஷாலியின் பாதங்களிலேயே படிந்திருந்தன. தங்க நிறத்திலான கொலுசுடன் அவன் வைத்து விட்ட மருதாணியும் நன்கு சிவந்து அவளின் தாமரை பாதங்களை மேலும் மெருகேற்றியிருந்தன.​

அதையே பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தவனுக்கு அவளை எப்படி முழுமையாக இந்த துயரிலிருந்து மீட்டெடுக்க போகின்றோமோ என்னும் எண்ணம் தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.​

மெல்ல நிமிர்ந்து அவள் முகம் பார்க்க அவளோ நன்றாக தூங்கிப்போயிருந்தாள்.​

அழுதழுதே உடலில் உள்ள சக்தியனைத்தையும் வெளியேற்றிவிட்டவளுக்கு உடலும் உள்ளமும் களைத்துப் போயிருந்தன. அதில் தானவீரனும் அங்கேயே அமர்ந்திருந்ததில் அவனில் கவனம் வைத்தவளுக்கு வேறு சிந்தனைகள் தள்ளி போயிருக்க விரைவாகவே உறக்கத்தை தழுவியிருந்தாள் பெண்ணவள்.​

சீராக ஏறி இறங்கிய அவளின் மூச்சுக்காற்றை வைத்தே அவள் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருப்பதை உறுதி படுத்திக்கொண்டவன் மெல்ல அறையிலிருந்து வெளியேறி சத்தமின்றி அறைக் கதவை மூடி விட்டு கீழிறங்கி வந்தான்.​

வீட்டு பெரியவர்களுக்கும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத குழப்ப நிலைதான். ஆளாளுக்கு அப்படியே ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர்.​

முதல் நாள் திருமண உற்சாகத்தில் சிரிப்பொலிகளால் நிறைந்திருந்த இல்லம் இப்பொழுது பல மனங்களின் உள்ள குமுறல்களை மட்டும் தாங்கி கொண்டு வெறிச்சோடி நின்றது.​

ஜெயலக்ஷ்மி மட்டும் தான் "இதுக்கு தான் அப்போவே சொன்னேன் அவளை அடக்கி வைங்க , அடக்கி வைங்கன்னு. யாராவது கேட்டா தானே. இப்போ பாரு ஒட்டு மொத்த குடும்ப மானத்தையும் வாங்கிட்டா" என்று புலம்பி கொண்டே இருந்தார்.​

"பிள்ளையை வளர்க்க தெரியாமல் வளர்த்தா இப்படி தான் ஆகும்" என்று அவரின் புலம்பலுகளுக்கிடையில் சரோஜினியை குத்தி பேசவும் மறக்கவில்லை அவர்.​

கீழே இறங்கி வந்த தானவீரனுக்கு அவரின் புலம்பல்கள் காதில் விழ சட்டென்று திரும்பி சரோஜினியை பார்த்தான். அவரும் கண்களில் நீர் வழிய அப்படியே அமர்ந்திருந்தார்.​

அவரை பரிதாபமாக பார்த்தவன் மீண்டும் ஜெயலக்ஷ்மியிடம் திரும்பி "பாட்டி போதும். ஏற்கனவே எல்லாரும் நொந்து தான் போயிருக்கோம். வெந்த புண்ணுல மறுபடியும் வேல பாய்ச்சாதீங்க" என்றான் அதட்டலாக.​

இப்படியெல்லாம் அவன் அவரிடம் அதட்டி பேசுபவன் இல்லை தான். ஆனாலும், இரு மகள்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டதில் தவித்து கொண்டிருக்கும் அந்த தாயை இந்த நேரத்திலும் குத்தி காண்பித்து பேசுவது அவனுக்கே அதிகப்படியாக தோன்ற அப்படி அதட்டியிருந்தான்​

இதை வேறு யார் சொல்லியிருந்தாலும் அவர் இன்னொரு சண்டைக்கு தயாராகியிருப்பார். ஆனால், சொன்னது அவரின் செல்ல பேரன் தானவீரனாக இருக்க "ம்...கும்” என்று சலித்துக்கொண்டதோடு அவரும் வாயை மூடிக்கொண்டார்.​

அவனின் குரல் கேட்டதும் சட்டென்று எழுந்து அவன் அருகே வந்திருந்தார் சரோஜினி.​

"என்னாச்சு வீர்...என்ன பண்ணுறா? இன்னும் அழுதுட்டே இருக்காளா?" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனவரின் விழிகள் மேல் தளத்தில் வைஷாலியின் அறை இருக்கும் பக்கமாக சென்று மீண்டன.​

மகளின் நிலை அறிந்துக்கொள்ளும் பரிதவிப்பு அவரின் குரலில் அப்பட்டமாக தெரிந்தது.​

அதை புரிந்துகொண்டவன் "தூங்கிட்டிருக்கா. அவள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். இப்போதைக்கு யாரும் அவளை தொந்தரவு பண்ண வேண்டாம்"என்றான்.​

சரோஜினியின் முகம் இன்னமும் இருண்டிருக்க "ஒண்ணுமில்லத்தை. நீங்க பதறாதீங்க. பார்த்துக்கலாம்" என்று ஆறுதலாக அவரை தோளோடு சேர்த்தனைத்து விடுவித்தவன் தானும் தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.​

***​

எவ்வளவு நேரம் தலையை பிடித்துக்கொண்டு அறை கதவில் சாய்ந்து அப்படியே அமர்ந்திருந்தான் என்று தருணுக்கே தெரியவில்லை. அவனது அலைபேசி ஒலியெழுப்பவும் தான் நிதானத்திற்கு வந்திருந்தான்.​

ஒரு ஆழ்ந்த மூச்சுடன் இருகைகளாலும் முகத்தை அழுந்த தேய்த்துவிட்டுக்கொண்டான். நிமிர்ந்து கடிகாரத்தை பார்த்தான். நேரம் மாலை நான்கு மணியை காட்டிக்கொண்டிருந்தது.​

அலைபேசியை எடுத்து பார்த்தான் ரவி தான் அழைத்துக் கொண்டிருந்தான். அழைப்பை ஏற்று காதில் வைத்த அடுத்த நொடி "எல்லாம் ஓகே தானே மச்சான்?" என்று கேட்டான் ரவி.​

அதற்கு தருண் பதிலிருக்கும் முன்னவே "மது ஓகே தானே?"என்று அவன் அடுத்த கேள்வி கேட்க " எனக்கென்ன தெரியும்" என்றான் தருண்.​

"என்னடா சொல்லுற? அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு போனியா இல்லை நடுவழியில் எங்கையாவது விட்டுட்டு போயிட்டியா?" என்று அவன் பதற​

"என்னை பார்த்தா அவ்வளவு கேவலமானவன் மாதிரி தெரியுதா உனக்கு. வீட்டுக்கு தான் அழைச்சிட்டு வந்தேன். நீ தேவையில்லாமல் கவலை படாத. நான் ஒன்னும் அவளை கொடுமை படுத்தி கொன்னுட மாட்டேன்" என்றான்.​

அதை சொல்லும் போதே 'அவளை நீ மனதால் கொன்னுட்டு தான் டா அழைச்சுட்டு வந்திருக்க' என்று அவனது மனசாட்சியே அவனுக்கு முரணாக பேசியது.​

"ப்ச்" என்று அவனுக்குள் கேட்கும் அந்த குரலை அலட்சியப்படுத்திக்கொண்டவன் "அவளை விடு. நான் சொன்னது என்னாச்சு" என்று கேட்டான்.​

"எல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டேன். வேலை முடிஞ்சதும் சொல்லுறேன்" என்றான் ரவி​

"சரி ஓகே. நான் அப்புறம் பேசுறேன் ரவி" என்றபடி அழைப்பை துண்டித்திருந்தான் தருண்.​

கையில் இருந்த அலைபேசியை மெத்தையின் மீது தூக்கி போட்டு விட்டு குளியலறைக்குள் புகுந்தவன் நீருக்கடியில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.​

குளித்து விட்டு வெளியில் வந்தவனுக்கு வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை. யாரையும் பார்க்கவோ அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லவோ மனமில்லை. அதிலும் முக்கியமாக மதுஷிகாவை பார்ப்பதில் அவனுக்கு சுத்தமாக விருப்பமே இல்லை.​

இவ்வளவுக்கு பிறகும் நெஞ்சில் அடங்காமல் கனன்று கொண்டிருந்த கோப தீ ஓரளவுக்காவது குறையும் வரையிலுமாவது அவன் தன்னை தனிமை படுத்தி கொள்வது நல்லது என்று தோன்றியது.​

மதுஷிகாவை மனதால் வதைத்துவிட்டான். இனியும் அவர்கள் ஒன்றாக இருக்கும் காலம் வரை அது தொடர்கதையாகத்தான் இருக்கும். குறைந்தபட்சம் அவளை உடலளவிலாவது வதைத்துவிட கூடாது என்று நினைத்துக்கொண்டான்.​

அதுவும் அவனுள் எதோ ஒரு மூலையில் கொஞ்சமே கொஞ்சம் மீதமிருந்த மனிதாபிமானத்தின் அடிப்படையில் தோன்றிய உணர்வு தான்.​

சாம்பல் நிற ஷர்ட் மற்றும் கருப்பு நிற பாண்ட் அணிந்து அலுவலகம் செல்ல ஆயுத்தமாகி வந்தவன் கதவை திறக்க அவளோ கதவிற்கு அருகில் முகத்தை கால் முஷ்டிகளில் புதைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.​

காலையில் அணிந்திருந்த அதே புடவையும் கலைந்த தலைமுடியுமாக அமர்ந்திருந்தவளை ஒரு வெற்று பார்வையுடன் கடந்து சென்றுவிட்டான் தருண்.​

அவளுக்கு உணவு, மாற்றுடைகள், தங்கி கொள்வதற்கு இடம் என்று அத்தியாவசிய தேவைகள் இருக்கும் என்று அவன் புத்திக்கு உரைத்தலும் அதை அவளுக்காக செய்துகொடுக்கும் அளவிற்கு அவனுக்கு மனமில்லை.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அவள் தேவைகள் அறிந்து அதை நிறைவேற்ற அவன் ஒன்றும் அவளை ஆசைப்பட்டு மணந்துக்கொள்ளவுமில்லையே. அவர்களின் திருமணமே அவர்களுக்கான தண்டனையாகத் தானே நிகழ்ந்திருந்தது. இதில் அவன் அவளை கவனிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது.​

அவளை கண்டும் காணாததுபோல் கடந்து சென்று விட்டான். அவனை பொறுத்தவரை அந்த வீட்டில் இருக்கும் மற்ற தளவாடப்பொருட்களை போல் அவளும் ஒருத்தி என்கின்ற மனநிலை தான் அவனுக்கு.​

தருண் வீட்டிலிருந்து வெளியேறி செல்வதை பார்த்த தாராவுக்கு மனமே கேட்கவில்லை. சற்று முன்னர் மதுஷிகா செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு நின்றதும், பயந்து கொண்டே மடியேறி சென்றதும் அவள் கண் முன்னே நின்றது.​

அதிலும் தருணின் அறை முன்னே நின்று அவள் கதறியழுத ஓசை கூட அவளுக்கு கேட்டிருக்க இப்பொழுது அவளின் நலம் அறிந்துக்கொள்ளும் எண்ணம் தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.​

வைஷாலி வந்திருக்க வேண்டிய இடத்திற்கு மதுஷிகா வந்திருந்தாலும் அதற்கான காரண காரியம் என்னவென்று தெரியாமல் அவளை ஒதுக்கி வைக்கவும் அவளால் முடியவில்லை.​

மூன்று மாடி வீடு அதில் கீழ் தளத்தில் முதல் படியில் நின்று அண்ணார்ந்து மேலே பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள் தாரா.​

மேலே சென்று மதுஷிகாவை பார்ப்பதா வேண்டாமா என்கின்ற குழப்பம் அவளுக்கு.​

அவளை புருவம் இடுங்க பார்த்துக்கொண்டே அவள் அருகே வந்து நின்றிருந்தான் வருண். தருணின் ஒரே தம்பி அவன்.​

வருண் தோமஸ்.​

படிப்பை முடித்துவிட்டு தருணுக்கு வியாபாரத்தில் உதவுவதோடு அண்ணனிடமிருந்து தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டுமிருக்கின்றான்.​

அவன் வந்து நின்றது கூட தெரியாமல் மேலே செல்வதற்காக ஒரு அடி எடுத்து வைத்து ஏறுவதும் பின் இறங்குவதுமாக இருந்தவளை புரியாமல் பார்த்தவன் "ம்...கூம்" என்று குரலை செருமினான்.​

அந்த சத்தத்தில் பதறிக்கொண்டு திரும்பி பார்த்த தாரா "எருமை எருமை...நீயா?" என்று அவன் தோளில் அடி போட்டவள் "நான் கூட தருண் அண்ணான்னு பயந்துட்டேன்" என்றாள்.​

"பயந்துட்டியா? ஏன் தருண் அண்ணாவுக்கு தெரியாமல் எதையாவது திருட போறியா?" என்று நக்கலாக கேட்டான்.​

"ம்பச் நீ வேற நேரங்காலம் தெரியாமல் நக்கல் அடிக்காதண்ணா" என்றாள்.​

"பிறகு எதுக்கு மேலையே பார்த்துட்டிருக்க?" என்று அவன் கேட்க​

"பாவம் அவங்க" என்றாள்.​

"எவங்க?" என்று அவன் கேட்க​

அவனை கடுப்பாக முறைத்தவள் "அண்ணி தான். வந்தப்போவே கவனிச்சேன் அவங்க முகமே சரியில்ல. ரொம்ப பயந்து போயிருக்காங்கன்னு நினைக்குறேன். முதல்ல அழுகுற மாதிரி சத்தம் வேற கேட்டுச்சு. அவங்களுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல. ஆனாலும், அவங்களை அப்படியே விடவும் மனசு வரல. அதுதான் என்னன்னு போய் பார்க்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்" என்றாள்.​

"அம்மா எங்க? அவங்களை கேட்க வேண்டியது தானே?" என்று ஆர்த்தியை பற்றி விசாரிக்க "அவங்க முதல்ல ரூமுக்குள்ள போனவங்க தான் இன்னும் வெளிய வரவேயில்லை. கோபமா இருகாங்க" என்றாள்.​

"அண்ணா?" என்று கேட்டான்.​

"இப்போ தான் வெளில போனாங்க" என்றாள் அவள்.​

"ஓஹ்" என்று அவன் சொல்ல "நான் போய் பார்த்துட்டு வரட்டுமா?" என்று வருணிடம் கேட்டாள்.​

"இதில என்ன இருக்கு. உனக்கு பார்க்கணும்னு தோணுச்சுனா போய் பார்த்துட்டு வரதுதானே. எதுக்கு இவ்வளவு யோசிச்சிட்டிருக்க?" என்று முடித்துக்கொண்டான் அவன் .​

"அப்படியா சொல்லுற. சரி நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டு வேகமாக மேலே ஏறி ஓடியிருந்தாள் தாரா.​

மதுஷிகாவை தேடிக்கொண்டு தருணின் அறைக்கு சென்றவளுக்கு அறை வாசலில் அவள் அமர்ந்திருந்த கோலத்தை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.​

அவள் அருகே சென்றவள் மண்டியிட்டமர்ந்து "அண்ணி" என்றழைக்க மதுஷிகாவிடமிருந்து பதிலே இல்லை. மீண்டும் அழைத்து பார்த்தாள். அப்பொழுதும் அவளிடம் அசைவில்லை.​

அவள் தோளில் கையை வைத்து லேசாக உலுக்கிய சமயம் சொருகிய விழிகளுடன் மெல்ல தலையை உயர்த்தி பார்த்தவள் அப்படியே மயங்கி சரிந்திருந்தாள்.​

அவள் நிலையை பார்த்து பதறிய தாரா "அண்ணி... அண்ணி..." என்று அவள் கன்னத்தை தட்டி எழுப்ப அவள் எழுந்துகொள்ளவில்லை. அப்பொழுதுதான் அவள் நெற்றியில் காயம் பட்டு அங்கே இரத்தம் வழிந்து காய்ந்திருப்பதையும் பார்த்தவள் பதறிவிட்டாள்.​

"ஐயோ" என்று நெஞ்சில் கையை வைத்துக்கொண்டவளுக்கு திறந்திருந்த கதவினூடு தருணின் அறைக்குள் பொருட்கள் உடைந்து சிதறி அலங்கோலமாக கிடந்தது வேறு கண்ணில் பட்டு அச்சமூட்டியது.​

ஒருவேளை தருண் எதுவும் அவளை காயப்படுத்தியிருப்பானோ என்ற எண்ணம் மனதில் எழும்போதே அவளுக்கு பதறியது.​

பதற்றத்தில் வேகமாக ஓடி சென்று மாடி படியில் இருந்து எட்டி பார்த்தவள் "வருண் அண்ணா... அண்ணா இங்க வாயேன்" என்று கத்தினாள்.​

அவளின் குரல் கேட்டு வருணும் மேலே ஓடி சென்றவன் "என்னடி என்னாச்சு? எதுக்கு கத்துற?" என்று கேட்க அவள் தரையில் கிடந்த மதுஷிகாவை காட்டினாள்.​

அவன் விழிகளும் அதிர்ந்து விரிய வேகமாக அவள் அருகே சென்று பார்த்தான்.​

"அங்க பாரு" என்று தருணின் அறையையும் அவள் காட்டியிருக்க அதை பார்த்த வருணுமே ஒரு நொடி ஆடித்தான் போனான்.​

"என்னாச்சுண்ணா? எனக்கு பயமா இருக்கு. தலையில் காயம் வேற இருக்கு" என்று அவள் மேலும் பதற "இரு பார்க்கலாம். நீ வேற பயமுறுத்தாதடி" என்று பொறுமையாக அவள் நாசியில் விரல் வைத்து பார்த்தான்.​

அவள் சுவாசிப்பதை உறுதிப்படுத்திக்கொண்டவனுக்கு அப்பொழுதுதான் உயிரே வந்தது. எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடவில்லை என்று நிம்மதி கொண்டான்.​

"மயங்கிட்டாங்கன்னு நினைக்குறேன். டாக்டருக்கு கால் பண்ணு" என்றான்.​

நொடியும் தாமதிக்காமல் ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த அலைபேசியை எடுத்து மருத்துவருக்கு அழைத்து விவரம் தெரிவித்த தாரா அவரை வீட்டிற்கு வரும்படி சொல்லி விட்டு வைத்திருந்தாள்.​

"டாக்டர் வரேன்னு சொல்லியிருக்காங்க. நீ முதல்ல அண்ணியை தூக்கு. அந்த ரூம்ல படுக்க வச்சுடலாம்" என்று அதே தளத்தில் இருந்த மற்றொரு அறையை அவள் சுட்டி காட்டினாள்.​

"நானா?" என்று அவன் ஒரு நொடி தயங்கி நிற்க "பின்ன நானா?" என்று பல்லை கடித்தவள் "ஆபத்துக்கு பாவமில்லண்ணா" என்றாள்.​

வருணும் மதுஷிகாவை மெதுவாக கையில் ஏந்திக்கொண்டவன் தாராவின் உதவியோடு மற்றொரு அறையில் படுக்க வைத்துவிட்டு வெளியில் வந்தான்.​

மருத்துவருக்காக காத்திருக்கும் நேரத்தில் கீழே வந்தவன் வீட்டு பணி பெண்ணிடம் தருணின் அறையை சுத்தம் செய்துவிடும்படி பணித்துவிட்டு மதுஷிகாவிற்காக ஒரு கிளாஸ் ஆரஞ்சு பழச்சாறை எடுத்துக்கொண்டு மீண்டும் மேலே சென்றான்.​

சரியாக அந்த நேரம் மருத்துவரும் வந்துவிட அவளை பரிசோதித்து பார்த்தவர் "ரொம்ப வீக் ஆஹ் இருகாங்க. கடைசியா எப்போ சாப்பிட்டாங்க?" என்று கேட்க அவர்களுக்கு பதில் தெரிந்தால் தானே சொல்லுவதற்கு.​

"தெரியல டாக்டர்" என்றாள் தாரா.​

"ஹ்ம்ம்... பசி மயக்கம் தான். அதோட அதிகமான ஸ்ட்ரெஸ் கூட காரணமா இருக்கலாம். கண்ணெல்லாம் வீங்கியிருக்கு அழுத்திருப்பாங்கன்னு நினைக்குறேன். அவங்களுக்கு சாப்பாடு கொடுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க எல்லாம் சரியாகிடும்" என்றவர் அவள் நெற்றியில் இருந்த காயத்தை கவனித்து விட்டு "இது என்ன காயம்?" என்று கேட்டார்.​

இதற்கும் அவர்களுக்கு பதில் தெரிந்தால் தானே. என்ன சொல்வது என்று தாரா தடுமாற "அது மயக்கம் போட்டு விழுந்ததில் லேசா அடி பட்டுடுச்சு" என்று எதையோ சொல்லி சமாளித்தான் வருண்.​

"ஓஹ் ஐ சீ" என்றவர் அவள் காயத்தையும் சுத்தம் செய்து மருந்து வைத்து விட்டார்.​

"கொஞ்சமா தோள் கிழிஞ்சிருக்கு அவ்வளவுதான். நத்திங் டு ஒர்ரி" என்று விட்டு சில மருந்து மாத்திரைகளையும் எழுதிக்கொடுத்துவிட்டு புறப்பட்டிருந்தார் மருத்துவர்.​


 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 37


மருத்துவர் செலுத்தி விட்டுச் சென்ற ட்ரிப்ஸின் உபாயத்தால் வலுவிழந்திருந்த உடலில் கொஞ்சமாக தெம்பு வந்திருக்க கண் விழித்திருந்தாள் மதுஷிகா.​

கண்களை மெல்ல திறந்தவளுக்கு இமைகள் இன்னமும் பாரமாக இருப்பது போல் தோன்ற மெதுவாக கண்களை மூடி மீண்டும் திறந்தாள்.​

மங்கலாகத் தெரிந்த பார்வை சற்றே தெளிந்திருக்க கண்கள் அந்த அறையை சுற்றி வலம் வந்தன. தான் எங்கே இருக்கிறோம், தனக்கு என்ன நடந்தது என்பது கூட சில நொடிகளுக்கு அவளுக்கு பிடிப்படவே இல்லை.​

உடலெங்கும் ஏதோ ஒரு வலி. தலை கூட விண்ணென்று தெறித்தது. நெற்றியை நீவி விட்டுக்கொண்டால் நன்றாக இருக்கும் என்கின்ற எண்ணத்தில் கையை மெல்ல உயர்த்த அதில் சுருக்கென்ற வலி.​

என்ன என்று பார்த்தவளுக்கு கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டிருப்பது தெரிய மெதுவாக கையை இறக்கியிருந்தாள். கையை பார்த்த நொடி அவள் மார்பின் மீது கிடந்த புது தாலி கண்ணில் பட அப்பொழுதுதான் நிகழ்ந்தவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவை எட்டியது.​

கண்களின் ஓரத்தில் மெல்ல நீர் கசிந்து காதுகளை நனைக்க மெதுவாக மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். சரியாக அதே நேரம் அவளின் அறை கதவு திறக்க பட உள்ளே நுழைந்திருந்தனர் தாராவும் வருணும்.​

அறைக் கதவு திறக்கும் சத்தத்தில் மூடிய விழிகளை மீண்டும் திறந்தவள் அவர்களை பார்த்துவிட்டு மெதுவாக எழுந்தமர முயன்றாள்.​

அதை கவனித்த தாரா "எழுந்துட்டீங்களா அண்ணி" என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்து அவள் எழுந்தமர்வதற்கு உதவி செய்ய அவள் தலைக்கு வைத்திருந்த தலையணையை எடுத்து அவள் முதுகுக்கு வாகாக வைத்துக்கொடுத்தான் வருண்.​

அதில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டவளுக்கு அவர்களிடம் என்ன பேசுவது என்ன கேட்பது என்றும் தெரியவில்லை. தாரா அவளை அண்ணி என்று உரிமையுடன் அழைத்திருந்ததை கவனித்த போதிலும் அவர்களுக்கிடையில் தான் ஒரு மாதிரி பொருந்தாமல் இருப்பது போன்ற உணர்வு. தலையை தாழ்த்தியபடி மௌனமாகவே இருந்தாள்.​

தாராவுக்கும் வருணுக்குமே அவளிடம் என்ன பேசுவது எங்கிருந்து ஆரம்பிப்பது என்கின்ற தெளிவில்லாமல் இருக்க அவர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள அங்கே ஒரு சிறு அமைதி நிலவியது.​

நிலைமையை முதலில் சுதாகரித்துக்கொண்டது வருண் தான்.​

மெல்ல குரலை செருமிக்கொண்டவன் சற்று முன்னர் அவன் மதுஷிகாவிற்காக எடுத்துக்கொண்டு வந்திருந்த பழச்சாறு இன்னமும் மேசை மீது அப்படியே இருக்க அதை எடுத்து "இதை கொஞ்சம் குடிக்க கொடு தாரா தெம்பா இருக்கும்" என்றபடி தாராவிடம் நீட்டியிருந்தான்.​

அவளும் அதை வாங்கிக்கொண்டவள் "கொஞ்சம் குடிங்க அண்ணி" என்க "இல்லை வேண்டாம்" என்று மெல்லிய குரலில் மறுத்தாள் மதுஷிகா.​

சோர்ந்து ஒலித்த அவள் குரலே அவளின் சக்தியற்ற நிலையை உணர்த்த "பசியில் மயங்கிட்டிங்கன்னு டாக்டர் சொன்னார். இப்படி ஒண்ணுமே சாப்பிடாமல் பட்டினியா இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகிடும். இந்த ஜூஸை குடிங்க பெட்டெர் ஆஹ் இருக்கும்" என்று வருணும் குரலில் சின்ன வற்புறுத்தலுடன் சொல்ல அவள் குடிக்காமல் அவர்கள் விட போவதில்லை என்று புரிந்தது மதுஷிகாவிற்கு.​

அதுவுமில்லாமல் அவளுமே உடலில் தெம்பில்லாமல் இருப்பது போல் தான் உணர்ந்தாள். ஒரே நாளில் அவளை நிலைகுலைய செய்து பசியில் மயங்கிவிழும் நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறான் அவளது கணவன்.​

அடுத்து வரும் நாட்களில் அவள் இன்னும் என்னவெல்லாம் சந்திக்க வேண்டி வருமோ என்றும் தெரியாது. அதை எல்லாம் எதிர்கொள்ளும் அளவிற்கு மனதில் தெம்பில்லை என்றாலும் உடலுக்காவது சக்தி வேண்டும் தானே என்று தோன்றியதில் தாரா நீட்டிய பழச்சாறை வாங்கி அருந்தினாள்.​

அதில் சின்ன திருப்தியுடன் அவளை பார்த்தான் வருண். அவளின் முகத்திலும் உடல் மொழியிலும் இருந்த இறுக்கமே அவளுக்கு அந்த சூழல் சௌகரியமாக இல்லை என்று புரிந்தது வருணுக்கு. அதிலும் தான் அங்கே நிற்பது அவளுக்கு மேலும் அசௌகரியமாக இருக்க கூடும் என்று யோசித்தவன் "பார்த்துக்கோ தாரா. எனக்கு வெளிய போகுற வேலை இருக்கு" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.​

தாரா கொடுத்த பழச்சாறில் முயன்று பாதியை குடித்து முடித்தவள் கிளாஸை எட்டி அருகே இருந்த மேசையில் வைக்க முயல "போதுமா அண்ணி. கொடுங்க நான் வைக்குறேன்" என்றபடி மதுஷிகாவின் கையில் இருந்த கிளாஸை வாங்கி மேசையில் வைத்தாள்.​

இன்று தருணின் திருமணம் முடிந்து புது அண்ணியின் வருகையினால் எப்படி எல்லாமோ கலைக்கட்டியிருக்க வேண்டிய வீடு அது. ஆனால், அவளால் மகிழ்ச்சி என்பது துடைத்தெறியப்பட்டு வீடு எங்கிலும் சோகமே பரவி கிடப்பதை அறைக்குள் இருந்தாலும் மதுஷிகாவினால் உணர முடிந்தது.​

அப்படி இருந்தும் அந்த ஏமாற்றங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இங்கே தனக்கு முன்னால் அமர்ந்துக்கொண்டு ஒரு சின்ன முக திருப்பல் கூட இல்லாமல் அவளை கவனித்து கொண்டிருந்த தாராவை பார்க்க ஏனொ அவளுக்கு அக்காவின் நினைவை தூண்டியிருந்தது.​

வைஷாலியும் அப்படி தானே. அவளுக்கு ஒன்று என்றாள் துடித்து போவாள். சாதாரண காய்ச்சல் என்றாலும் கூட அவளை விட்டு நகராமல் தாங்கிக்கொள்வாள். தனது சுக துக்கம் அனைத்தும் தெரிந்த ஒரே ஜீவன். அழைப்பில் மட்டுமே அக்காவாக இருந்தவள் உண்மைக்கு அவளுக்கு இன்னொரு அம்மாவை போல தான்.​

இன்று அனைத்தும் ஒரே நொடியில் மாறிவிட்டிருந்தது. மண்டபத்தில் வைத்து வைஷாலி அவளை பார்த்த பார்வை ஒன்றே குற்ற உணர்ச்சியில் குன்றி குறுக அவள் ஆயுசுக்கும் காணும். அந்த நினைவில் அழுது ஓய்ந்திருந்த கண்கள் மீண்டும் கண்ணீர் சொரிந்தன.​

"என்னாச்சு... ஏன் அழறீங்க? காயம் எதுவும் வலிக்குதா? டாக்டரை வர சொல்லட்டுமா?" என்றபடி திடீரென்று அழுதவளை பார்த்து பதறிய தாரா அவளின் நெற்றி காயத்தை தொட்டு பரிசோதிக்க அது மதுஷிகாவை மேலும் நொறுக்கியிருந்தது.​

தாராவின் கரிசணையில் வைஷாலிதான் தெரிந்தாள் அவளுக்கு. தாராவின் முன்னால் அழக்கூடாது என்று நினைத்தாலும் முடியாமல் உடைந்து அழுதாள். முகத்தை மூடிக்கொண்டு விசும்பினாள்.​

அவள் அழுவது தாராவுக்கே பாவமாக இருக்க அவள் அருகே அமர்ந்திருந்தவள் இன்னும் அவளை நெருங்கி அமர்ந்து அவளை தோளோடு அணைத்துக்கொண்டாள்.​

என்ன சொல்லி மதுஷிகாவை ஆற்றுப்படுத்துவது என்று தெரியாத போதிலும் அந்த அணைப்பு அவளுக்கு தேவையாக இருக்கும் என்கின்ற எண்ணம் தாராவுக்கு. அது சரியாகத்தான் இருந்தது. மெல்ல அவள் தோள் சாய்ந்துக்கொண்டு கண்ணீர் உகுத்தாள் மதுஷிகா.​

தாளா கஷ்டங்களும் மீளா துயரங்களும் ஒருவரை சூழ்கையில் தாங்கிக்கொள்ள தோள் ஒன்று இருப்பதே வரம் தானே. அந்தளவில் வாழ்வே கருந்துளையில் விழுந்து தொலைந்துவிட்டதாக தோன்றினாலும் அவள் செய்த புண்ணியம் ஏதோ ஒன்று மீதமிருப்பதாகவே உணர்ந்தாள் மதுஷிகா.​

அவளின் அழுகை ஓரளவு ஓய்ந்திருக்க அவளை மீண்டும் படுக்க வைத்தவள் "ரொம்ப களைப்பா தெரியிறீங்க. அழுதுட்டே வேற இருக்கீங்க. இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க அண்ணி" என்றபடி எழுந்துக்கொண்டாள்.​

அறைக்குள் வரும்போதே கையோடு கொண்டு வந்திருந்த மாற்று உடையையும் அங்கே மேசை மீது வைத்துவிட்டு "உடம்புக்கு கொஞ்சம் தெம்பு வந்ததும் குளிக்கணும்னா பாத்ரூம் அங்கே இருக்கு" என்று அறைக்குள்ளேயே இருந்த குளியலறையை சுட்டி காண்பித்தவள் "மாத்திக்க டிரஸ் இங்கே வச்சிருக்கேன். புதுசு தான் யூஸ் பண்ணிக்கோங்க" என்றாள்.​

மதுஷிகா மெல்ல தலையசைக்க "ஏதும் ஹெல்ப் வேணும்னா கூப்பிடுங்க.சங்கடப்பட்டுக்கிட்டு கூப்பிடாமல் இருக்க கூடாது" என்று சின்ன கண்டிப்புடன் சொன்னவள் அறையிலிருந்து வெளியேற போனாள்.​

கதவை திறந்தவள் என்ன நினைத்தாளோ மீண்டும் திரும்பி மதுஷிகாவை பார்த்தாள்.​

மதுஷிகாவின் விழிகளும் இன்னும் அவள் மீதே படிந்திருக்க “அது...உங்க நெத்தியில் அந்த காயம்... தருண் அண்ணாவா?" எப்படி கேட்பது என்று தெரியாமல் கேட்காமலும் இருக்க முடியாமல் ஒருவாறு தயங்கிய படியே கேட்டிருந்தாள்.​

தனது சகோதரன் அப்படி செய்திருக்க மாட்டான் என்று தெரிந்திருந்தாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்து கேட்டாள்.​

"ச்சே ச்சே... அவர் எதுவும் செய்யல" என்று அவசரமாக மறுத்தாள் மதுஷிகா. எங்கே அவனுக்கு இதுவரை செய்தது போதாதென்று அவன் தங்கையிடமும் அவப்பெயர் பெற்று தந்துவிடுவோமோ என்கின்ற கலக்கத்தில்.​

அவளின் அந்த பதிலில் ஆறுதல் அடைந்த தாரா எங்கே அவள் ‘ஆமாம்’ என்று சொல்லிவிடுவாளோ என்கின்ற பயத்தில் இழுத்து பிடித்திருந்த மூச்சை மெல்ல வெளியேற்றியபடி "என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியல அண்ணி. நீங்க எதுக்கு அழறீங்கன்னும் தெரியல. ஆனால், தருண் அண்ணா எங்க எல்லாரையும் விடவும் ரொம்ப நல்லவர்" என்று விட்டு சென்றாள்.​

***​

இங்கே தோட்டத்து ஊஞ்சலில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி விழி மூடி அமர்ந்திருந்தான் தானவீரன். இரவு மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது.​

"வீர்" என்ற சரோஜினியின் அழைப்பில் மெல்ல கண்களை திறந்து பார்த்தான்.​

கையில் உணவு தட்டுடன் நின்றுகொண்டிருந்தார் அவர்.​

அவர் கையில் இருந்த உணவு தட்டை பார்த்துவிட்டு மீண்டும் அவரை பார்க்க "வைஷாலி காலையில் இருந்து எதுவுமே சாப்பிடல. ரூமுக்குள்ள இருந்து வெளியவும் வரல. நானே சாப்பாட்டை எடுத்துட்டு ரூமுக்கு போய் கதவையும் தட்டி பார்த்துட்டேன். சாப்பாடு வேணாம்னு உள்ளிருந்தே சொன்னாளே தவிர கதவை திறக்கல" என்றவரின் கண்கள் கலங்கி கண்ணீர் வழியும் நிலையில் இருந்தன.​

மெல்ல எழுந்து அவர் கையில் இருந்த தட்டை வாங்கிக்கொண்டு "நான் கொடுக்குறேன்" என்றவன் "நீங்க சாப்பிட்டீங்களா?" என்று பொறுப்பாக அவரையும் விசாரித்தான். அதில் விழிகளில் தேங்கியிருந்த கண்ணீர் வழிந்தே விட்டிருந்தது அவருக்கு.​

"ம்பச், எதுக்கு அழுகுறீங்க இப்போ. ரிலாக்ஸ். வைஷாலியை நான் சாப்பிட வைக்குறேன். நீங்களும் கவலை படாமல் போய் சாப்பிடுங்க" என்றவன் அவரை தாண்டி நடக்க "அத்தை மேல கோபம் இல்லையே?" என்று கேட்டார் சரோஜினி.​

சட்டென்று அவரை திரும்பி பார்த்தவன் "எனக்கென்ன கோவம். அதுவும் உங்க மேல?" என்றான். அவனது புருவங்கள் யோசனையில் இடுங்கின.​

"உன் கிட்ட ஒரு வார்த்தை கேட்காமல் வைஷாலிக்கு வெளியில் மாப்பிளை பார்த்தோம். அவன் விட்டு போனதும் மறுபடியும் உன்னையே மாப்பிள்ளையா நிற்க வச்சிட்டோமே. எங்க சுயநலத்துக்காக உன்னை எங்க இஷ்டத்துக்கு இழுக்கிறோமே அது போதாதா?" என்று கேட்டார்.​

"என்னை நீங்க புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா? சூழ்நிலை என்னன்னு கூட என்னால புரிஞ்சிக்க முடியாதுன்னு நினைச்சிட்டீங்களா?" என்றான்.​

அவன் பேச்சில் அவருக்கு அழுகை இன்னும் பொங்கி கொண்டு வர "சாரி டா”என்று அவன் கன்னம் வருடி “உன் மனசை புரிஞ்சிக்காமல் அடிக்கடி உன்னை காயப்படுத்துறோமோன்னு குற்ற உணர்வா இருக்கு" என்றார்.​

"இப்போவும் அதை தான் செய்யிறீங்க" என்றான் அவன் அவரை அழுத்தமாக பார்த்துக்கொண்டே.​

"அது..." என்று அவர் ஏதோ சொல்ல வர சட்டென அவரை இடைமறித்தவன்​

"சரோ, அடி பத்தல உங்களுக்கு. இருங்க போற போக்குல உங்களுக்கு ரெண்டு போடச் சொல்லி உங்க புருஷர் கிட்ட சொல்லிட்டு போறேன்" என்று அவன் பற்களை கடிக்க அவருக்கு அவன் பேச்சில் அழுகையினூடு சிரிப்பும் மெல்ல துளிர்த்தது.​

அதை கண்டுக்கொண்டவன் "இல்ல இல்ல மாமா அதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டார். என் பொண்டாட்டிக்கு வலிக்கும்னு எறும்புக்கு கூட வலிக்காத மாதிரி அடிப்பார். இதுக்கெல்லாம் உங்க மாமியார் தான் சரி. தலையில் ரெண்டு கொட்டு வச்சாங்கன்னா இப்படி லூசு மாதிரி பேசுறது எல்லாம் காணாமல் போயிடும்" என்று சொல்ல அரும்பாக துளிர்த்த புன்னகை பூவாக மலர்ந்தே விட்டது சரோஜினிக்கு.​

அவரை சிரிக்க வைக்க முயல்கிறான் என்று புரிந்ததும் அவனை ஏமாற்றால் அவரும் வாய்விட்டே சிரித்துக்கொண்டவர் "போட படவா..." என்று அவன் தோளில் ஒன்று போட "இப்படி சிரிச்சிட்டே இருங்க சரோ. எல்லாமே சீக்கிரமே சரியாகிடும். அதை விட்டுட்டு காய படுத்திட்டேன் கத்தரிக்காய் வித்துட்டேன்னு சும்மா எதையாவது பேசிட்டு. இனி இப்படி எல்லாம் சொல்லிட்டு என் கிட்ட பேச வராதீங்க" என்று விட்டு வீட்டுக்குள் நடந்தான்.​

அவள் அறை முன்னே சென்று நின்றவன் அறை கதவை தட்ட அவள் திறக்கவில்லை.​

"வைஷு" என்று குரல் கொடுத்தான்.​

அவன் குரல் கேட்டதில் எழுந்து வந்து கதவை திறந்தாள். அவனை தவிர மற்ற யாரையும் பார்க்கும் எண்ணமில்லை அவளுக்கு.​

உணவு தட்டுடன் உள்ளே நுழைந்தவன் அவளை ஏறிட்டு பார்க்க அவள் மீண்டும் கட்டிலில் அமர்ந்து கால்களை கட்டிக்கொண்டு முஷ்டியில் தலை சாய்த்து அமர்ந்துக்கொண்டாள்.​

இளஞ்சிவப்பு நிற குர்த்தியுடன் வெள்ளை நிற பட்டியாலா வகை பாண்ட் அணிந்திருந்தாள். விரித்துவிட்டிருந்த அவள் கூந்தலின் ஈரம் இப்பொழுது தான் குளித்திருக்கிறாள் என்று சொன்னது.​

அவள் அருகே சென்று நின்றவன் "சாப்பிடலையா நீ" என்று கேட்டான்.​

"பசிக்கல" என்றாள் அவள். பார்வை தரையை வெறித்திருந்தன.​

"எத்தனை நாளுக்கு பசிக்காது?" என்று அவன் கேட்க நிமிர்ந்து அவனை முறைத்து பார்த்தாள்.​

"என்னை முறைச்சிட்டே கூட சாப்பிடலாம். நான் ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன்" என்று அவன் சொல்ல அதற்கும் முறைப்பு தான்.​

மெல்ல சிரித்துக்கொண்டவன் அவள் அருகே அமர்ந்தபடி "எனக்காக சாப்பிடு" என்றான் மென்மையாக.​

அந்த வார்த்தையில் அவனை விழிகளுக்குள் பார்த்தவள் அவன் கையிலிருந்த தட்டை வாங்கிகொண்டாள். உணவு தொண்டைக்குழியை அறுத்துக்கொண்டு உள்ளிறங்குவது போல் வலித்தாலும் அவனுக்காக உணவை உண்டாள்.​

அவளுக்காக இன்று அவன் மண்டபத்தில் செய்தது மிக பெரிய விடயம். அதற்கு கைமாறாக அவளால் என்ன செய்துவிட முடியும் என்று தெரியாது. குறைந்தபட்சமாக அவனுக்காக இந்த உணவையாவது சாப்பிடலாமே என்று தான் சாப்பிட்டாள்.​

கஷ்டப்பட்டு கொறித்தவளுக்கு பாதி உணவு கூட உள்ளிறங்கவில்லை.​

"போதும்" என்றாள்.​

அவள் இருக்கும் மனநிலைக்கு அவள் இவ்வளவேனும் சாப்பிட்டதே பெரிய விடயமாக இருக்க அவனும் அவளை வற்புறுத்தவில்லை.​

"சரி, இப்போதைக்கு இது போதும். இரவெல்லாம் அழுகுறதுக்கு தெம்பிருக்கும்" என்று கிண்டல் செய்துவிட்டு அவளை பார்த்தான்.​

அவளோ எதுவும் பேசாமல் அவன் நீட்டிய நீரை பருகிவிட்டு சுருண்டு படுத்துக்கொண்டாள்.​

பழைய வைஷாலியாக இருந்திருந்தால் அவன் கிண்டல் செய்ததற்கு இந்நேரம் அவளது ஆயுதமான தலையணை அவன் முகத்திற்கு பறந்திருக்கும். ஆனால், இன்றைய நிலையில் அவனுடைய குட்டி குட்டி கிண்டல்களுக்கு எல்லாம் பதிலுக்கு சீறும் மனநிலை இல்லை அவளுக்கு.​

அதை உணர்ந்துக்கொண்டவன் ஒரு ஆழ்ந்த மூச்சுடன் 'இவளை மாத்துறதுக்கு நிறைய ஹார்ட்வர்க் பண்ணனும் போலயே வீரா' என்று உதடுகளுக்குள் முணுமுணுத்துக்கொண்டே அவள் சாப்பிட்டு வைத்த தட்டையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தவன் நேராக சரோஜினியை தேடி சமயலறைக்குள் நுழைந்தான்.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

ஈஸ்வரியும் அறிவுமதியும் கூட அங்கே தான் நின்றிருந்தனர்.​

அவன் வைஷாலி சாப்பிட்டு வைத்த எச்சில் தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைவதை பார்த்த ஈஸ்வரி அவனை முறைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியிருந்தார்.​

அது தெரிந்தாலும் அதை அவன் கண்டுகொள்ளவில்லை.​

தட்டை சிங்கில் வைத்துவிட்டு "உங்க சீமந்த புத்திரி இன்னிக்கு இவ்வளவு தான் கொறிப்பாங்களாம். நாளையில் இருந்து இன்னும் கொஞ்சம் அதிகமா கொறிக்க வச்சுடலாம்" என்று கிண்டலாகவே சொல்ல "அக்கா என்ன அணிலா கொறிக்குறதுக்கு" என்று கேட்டாள் அறிவுமதி.​

"இப்படி சாப்பிட்டா அப்படி தான் சொல்ல முடியும்” என்றான்.​

குடும்பத்தில் இருந்த ஒட்டு மொத்த மகிழ்ச்சியையும் ஒரே நாளில் இழந்துவிட்டிருந்த வீட்டை மீட்டெடுக்கும் எண்ணம் அவனுக்கு. அவனின் இயல்பான பேச்சின் மூலம் மற்றவர்களையும் இயல்பாக்க முயன்று கொண்டிருந்தான் தானவீரன்.​

சரோஜினியோ "கொஞ்சமாச்சும் சாப்பிட்டளே அதுவே போதும்" என்று அவன் வைத்த தட்டை கழுவ தொடங்கியிருந்தார்.​

"நீங்க சாப்பிட்டீங்களா?" என்று மீண்டும் சரோஜினியிடம் கேட்டான். வைஷாலி சாப்பிட்டாளா என்று தெரியாமல் அவருக்கு உணவு இறங்கியிருக்காது என்று அவனுக்கு தெரியும்.​

சரோஜினி அமைதியாகி விட அவன் விழிகள் அறிவுமதியை பார்த்தன.​

"இன்னும் இல்லை மாமா" என்று அவரை சரியாக அவனிடம் போட்டு கொடுத்தாள் அறிவுமதி.​

என்னதான் நடக்க கூடாதது எல்லாம் நடந்துவிட்டிருந்தாலும் உலகம் சுழல்வது நின்று போய்விடுவதில்லையே. வீட்டில் உள்ளவர்களையும் கவனிக்க வேண்டிய கடமை இருக்கவே யாருக்கும் சாப்பிடும் மனநிலை இல்லை என்றாலும் எப்படியோ சமாளித்து அனைவரையும் சாப்பிட வைத்திருந்த அந்த இல்லத்தரசிக்கு தன் வயிற்றுக்கு எதையும் போட்டுக்கொள்ள மனமில்லை.​

மகள்களை நினைத்து வேலைகளினூடு அவ்வப்போது வழிந்த கண்ணீரையும் துடைத்து விட்டுக் கொண்டவருக்கு தன்னை கவனிக்கும் எண்ணமிருக்கவில்லை.​

இதை எல்லாம் கவனித்திருந்த அறிவுமதி எத்தனையோ முறை அவரை சாப்பிட சொல்லியும் மறுத்திருந்தார். இப்போது தானவீரன் கேட்கவும் அவனிடம் சொன்னால் நிச்சயம் அவரை சாப்பிட வைத்து விடுவான் என்று தெரிந்தே உண்மையை சொல்லிவிட்டாள்.​

சரோஜினியை முறைத்து பார்த்தவன் ஒரு தட்டை எடுத்து அதில் இரு இட்லிகளை வைத்து சாம்பாரையும் ஊற்றி "சாப்பிடுங்க” என்று அவரிடம் நீட்டினான்.​

அவர் அவனையே பார்த்திருக்க "என்ன? ஊட்டி விடனுமா?" என்று கேட்டபடி இட்லியில் கையை வைக்க அவனை வாஞ்சையாக பார்த்தவர் "நானே சாப்பிட்டுக்குறேன் கொடு" என்று வாங்கி கொண்டார்.​

சட்டென அவன் சமையல் கட்டில் பாய்ந்தமர அவனை கேள்வியாக பார்த்தார் சரோஜினி.​

அதை புரிந்துகொண்டவன் "முதல்ல சாப்பிடுங்க பிறகு நான் போறேன்" என்றபடி அங்கேயே உட்கார்ந்துகொண்டான்.​

சாப்பிடாமல் விட மாட்டான் என்று தெரியும். அவரும் பெயருக்கு கொஞ்சமாக கொறித்துவிட்டு மிச்சத்தை குப்பையில் கொட்டிவிட "இது பெரிய அணில் போல" என்று அவரை காட்டி அறிவுமதியிடம் சொல்லிக்கொண்டே சமையல் கட்டில் இருந்து இறங்கிக்கொள்ள அவளும் மெல்ல நகைத்தாள்.​

பட்டினி கிடக்காமல் அவர் கொஞ்சமேனும் சாப்பிட்டதில் அவனுக்கும் திருப்தியாய் இருக்க அவர் தோள்களை அணைத்தபடி பற்றிகொண்டவன் "அத்தை, நிறைய யோசிக்காதிங்க. என்னென்னவோ நடந்து போச்சு. நடந்ததை மாத்தவும் முடியாது. அதுக்காக பட்டினி கிடக்கிறது, அழுதுட்டே இருக்குறது இது எல்லாம் வேண்டாம். மனசை அமைதியா வச்சிக்கோங்க. நீங்க மீண்டு வந்தாலே மொத்த வீடும் மீண்டுடும். குடும்ப தலைவிகளுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கு" என்றான்.​

"முடியலையேடா" என்று அவர் தனது பெண்களை நினைத்து மீண்டும் கண்ணீர் உகுக்க அவனிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே.​

இது எல்லாம் ஒரே நாளில் சரி பண்ண கூடிய துயர் இல்லை என்று அவனுக்கு தெரியும். காலம் தான் காயம் ஆற்றவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். சரோஜினியின் முதுகை மெல்ல வருடிவிட்டான்.​

அவரின் அழுகை மட்டு பட்டிருக்க "பார்த்துக்கலாமத்த. நான் இருக்கேன்" என்று சொல்லிவிட்டு வெளியில் நடந்தான்.​

"வீர்" என்று அவனை நிறுத்தியிருந்தார் சரோஜினி.​

"நீ சாப்பிட்டியா?" என்று அவர் கேட்க "பசிக்கல. பசிக்குற நேரம் நானே சாப்பிட்டுக்குறேன். நீங்க முதல்ல இதை எல்லாம் வச்சிட்டு போய் ரெஸ்ட் எடுங்க" என்று விட்டு சென்றான்.​

செல்லும் அவன் முதுகையே அவர் நெகிழ்ந்து பார்த்துக்கொண்டு நின்றிருக்க அறிவுமதியும் அவனை தான் பார்த்திருந்தாள்.​

சொல்லப்போனால் மண்டபத்தில் இருந்தே அவனை தான் கவனித்துக் கொண்டிருக்கின்றாள். இதுவரை அவன் மீது ஒரு ஈர்ப்பு மட்டும் தான் இருந்தது. இன்று மண்டபத்தில் அவன் நடந்துக்கொண்ட விதம் அவளுக்கு அவன் மீது ஒரு மரியாதையை உருவாக்கியிருந்தது.​

அவனை இன்னும் அதிகாமாக பிடித்தது.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 38

துரு துருவென்று பொறுப்பில்லாமல் சுற்றி திரிந்த தானவீரனை தான் அவளுக்கு தெரியும். பல முறை பொறுப்பில்லா பிள்ளை என்று சேகர் திட்டி அவள் கேட்டும் இருக்கின்றாள். ஆனால், இன்று அவன் தான் பொறுப்பாக வீட்டு மனிதர்களை மீட்டெடுக்க தன்னால் முடிந்த எல்லாம் செய்துக்கொண்டிருக்கின்றான்.​

அவன் மனதிலும் வலிகள் இருக்குமென்று அவளுக்கு தெரியும். ஆனால், அவன் எதையும் காட்டிக்கொள்ளாமல் வைஷாலியையும் குடும்பத்தினரையும் இயல்பாக்க முயன்றுகொண்டிருந்தான்.​

அவள் அப்படியே நின்றிருக்க ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்ட சரோஜினி​

"ஆரம்பத்திலேயே வீருக்கே வைஷாலியை பேசியிருந்திருக்கலாம்" என்று இயலாமையுடன் புலம்பிக்கொண்டார்.​

அவர் புலம்புவது அறிவுமதியின் காதிலும் விழ "இனி எல்லாம் நல்லதே நடக்குமுன்னு நம்புவோம். நடந்ததையே நினைச்சு வருத்த படாமல் முதல்ல நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. இல்ல வீர் மாமாட்ட போட்டு கொடுத்துடுவேன்" என்றாள் மிரட்டல் போல.​

அவளை திரும்பி பார்த்த சரோஜினிக்கு அப்பொழுதுதான் அவளை தானவீரனுக்காக பெண் கேட்க நினைத்தது நினைவில் வந்தது.​

எல்லாம் அவர் நினைத்தது போல் நடந்திருந்தால் இவளும் இந்த வீட்டு மருமகளாக வந்திருக்க கூடியவள் என்ற எண்ணமும் மனதில் எழ அவள் கன்னம் வருடியவர் "உனக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்" என்று ஆசிர்வதிப்பது போல் சொன்னார்.​

அவள் அவரை புருவம் சுருக்கி கேள்வியாக பார்க்க சட்டென சுதாகரித்து கொண்டவர் காய்ச்சிய பாலை கிருஷ்ணகுமாருக்காக ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு மீதம் இருந்ததை இன்னொரு டம்ளரில் ஊற்றி "உனக்கு வேணும்னா எடுத்துக்கோ. இல்லைனா ஃபிரிஜ்ஜில் வச்சிடு மதி. நான் தூங்க போறேன்" என்று சொல்லி விட்டு சென்றார்.​

அவர் ஊற்றி கொடுத்த பாலை பார்த்தவளுக்கு தானவீரனின் நினைவுதான் வந்தது. இன்னும் சாப்பிடவில்லை என்றானே. சுற்றி இருப்பவர்களை பார்த்து பார்த்து கவனித்துக்கொள்கின்றான். ஆனால், தன்னை மறந்துவிடுகின்றான்.​

பாலை எடுத்துக்கொண்டு தானவீரனை தேடித் சென்றாள்.​

வீட்டிற்குள் தேடி பார்த்து அவன் இல்லாமல் போகவும் தோட்டத்து பக்கம் சென்றாள். மெல்லிய சாரல் மழை அப்பொழுதுதான் பெய்ய தொடங்கியிருந்தது.​

அவளின் விழிகள் அவனை தேட ஊஞ்சலில் தான் அமர்ந்திருந்தான். மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு வானில் பூத்திருந்த ஓரிரண்டு நட்சத்திரங்களின் மீது பார்வையை பதித்திருந்தான்.​

அவனை பார்த்துக்கொண்டே நடந்தவள் அவன் அருகே சென்று நின்றாள். தனதருகே நிழலாடுவது தெரிய திரும்பி பார்த்தான் அவன்.​

அறிவுமதியை பார்த்ததும் "என்ன மதி, தூங்கலையா?" என்று அவன் புருவம் உயர்த்த "நானும் உட்கார்ந்துக்கலாமா?" என்று அவன் அமர்ந்திருந்த ஊஞ்சலை காட்டினாள் அவள் .​

அவளை கேள்வியாக பார்த்தாலும் அவளுக்கு இடம் விட்டு நகர்ந்து அமர அவளும் அவன் அருகே அமர்ந்து கொண்டாள்.​

கையில் இருந்த டம்ளரை அவனிடம் நீட்டினாள். அதை பார்த்துவிட்டு அவளை பார்க்க "பால். நீங்களும் காலையில் இருந்து ஒண்ணுமே சாப்பிடலையே" என்றாள்.​

ஒரு பெருமூச்சுடன் அவளை பார்த்தவன் "நீ இதை எல்லாம் செய்யணும்னு இல்லை மதி" என்றான்.​

மெதுவாக சிரித்தவள் "தெரியும் மாமா. நான் எந்த எண்ணத்தையும் மனசுல வச்சிட்டு இதை செய்யல. வெறும் அக்கறை மட்டும் தான். அது இருக்கலாம் தானே?" என்றாள்.​

அவளை ஆழ்ந்து பார்த்தவன் அவள் கையில் இருந்து டம்ளரை வாங்கிக்கொண்டான். அதில் ஓரிரு மிடறு பருகிக்கொண்டே பார்வையை மீண்டும் வானுக்கு திருப்பியிருக்க "நான் ஒன்னு கேட்கட்டுமா மாமா?" என்றாள் அவளும் அந்த வானத்தை பார்த்தபடி.​

அவன் பாலை கொஞ்சம் கொஞ்சமாக அருந்திக்கொண்டே "ம்ம்ம்" என்றான்.​

"நீங்க வைஷு அக்காவை கல்யாணத்துக்கு முன்னாடியிருந்தே லவ் பண்ணுறீங்க தானே" என்று நேரடியாக விஷயத்தை உடைத்தே கேட்டுவிட்டாள்.​

சட்டெனெ புரையேறிவிட்டது அவனுக்கு. இருமிக்கொண்டே அவளை அதிர்ந்து பார்த்தான்.​

"பார்த்து குடிங்க மாமா" என்று அவன் தலையில் தட்டியவள் அவனது இருமல் ஓரளவுக்கு மட்டு பட்டதும் "நீங்க லவ் பண்ணுறது எனக்கு தெரியும் மாமா" என்றாள்.​

"...." அவனிடம் மௌனம்.​

அவளே தொடர்ந்தாள்.​

"உங்க கண்ணுல நான் அதை பார்த்தேன். மத்தவங்க கவனிச்சாங்களான்னு தெரியல. ஆனால், உங்களையே சைட் அடிச்சிட்டிருந்ததால என்னவோ என் கண்ணனுக்கு அது தெரிஞ்சுது. ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு உங்க கிட்ட அதை பத்தி கேட்டு இல்லாத ஒன்னை நானே கிளப்பி விட்டுட கூடாதேன்னு தான் அப்போ எதுவும் கேட்கல" என்றாள்.​

"இன்னிக்கு நீங்க மண்டபத்தில் செஞ்ச காரியத்தை வச்சுத்தான் எனக்கே உறுதியாச்சு. உங்க செயல் ஒவ்வொன்னுலையும் வைஷு அக்கா மேல பரிதாபமோ, அக்கறையோ, கடமையோ இல்லை. காதல் தான் இருந்துச்சு. ஒரு பொண்ணா அதை என்னால உணர முடிஞ்சுது. வைஷுக்கா ரொம்ப லக்கி மாமா. சீக்கிரம் அவளும் உங்களை புரிஞ்சுப்பா" என்றபடி எழுந்துகொண்டாள்.​

அவனின் காதலின் ஆழம் அவனுக்குள்ளேயே புதையுண்டு போய்விடுமோ என்று அவன் மனம் கலங்கியிருக்க அதை இவள் புரிந்துக்கொண்டிருக்கின்றாள் என்பதில் அவன் நெகிழ்ந்து தான் போனான்.​

மெல்ல அவளை பார்த்து புன்னகைத்தபடி அவனும் எழுந்துகொள்ள "நாளைக்கு காலையில் ஊருக்கு கிளம்புறோம் மாமா. அதை சொல்லிட்டு போக தான் வந்தேன்" என்றவள் சற்று நிறுத்தி "இப்படி நான் சொல்ல கூடாதுதான். ஆனால், சொல்லாமல் இருக்க முடியல. உங்களை இப்போதான் இன்னும் அதிகமா பிடிச்சிருக்கு" என்றாள்.​

"அவசரப்பட்டு எதுவும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்” அவன் புருவங்கள் இடுங்க கனிந்திருந்த அவனது பார்வை மாற்றமடைவதை கவனித்தவள் அவன் வாயை திறக்கும் முன்னரே அவன் எதுவும் பேசிவிடாமல் அவசரமாக அவனை தடுத்திருந்தாள்.​

“மண்டபத்தில் நடந்ததை வச்சு எனக்கு இன்னும் சான்ஸ் இருக்குனு நினைச்சு நான் இதை சொல்லல. தப்பான எண்ணமும் இல்லை. இந்த பிடித்தத்தை காதலுன்னு தான் சொல்லணும்னு இல்லை. மரியாதைன்னும் சொல்லலாம்" என்று சொல்லியடிப்படி அவன் கையில் இருந்த டம்ளரை வாங்கிகொண்டவள் அங்கிருந்து திரும்பி நடக்க "மதி" என்று அழைத்தான் தானவீரன்.​

நடையை நிறுத்தி அவனை திரும்பி பார்த்தவளிடம் "உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவனும் லக்கி தான்" என்றான்.​

"அது என்னவோ உண்மை தான். ஆனால், உங்களுக்கு கொடுத்து வைக்கலையே மாமா " என்று சிரித்தவள் அவனை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டியிருக்க "இவளை..." என்றபடி கீழே குனிந்து சின்னதாய் ஒரு கல்லை எடுத்திருந்தான் தானவீரன்.​

அதை கவனித்தவள் "ஆத்தி, பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் மாமோய். தேவையில்லாமல் பூமியெல்லாம் கிளறப்படாது" என்று நடிகர் வடிவேலின் பாணியில் சொல்லியவள் கலகலவென்று சிரித்துக்கொண்டே ஓடிவிட்டாள்.​

உதட்டில் அரும்பிய சின்ன சிரிப்புடன் "லூசு" என்றபடி கையில் இருந்த கல்லை கீழே போட்டுவிட்டு கைகளை தட்டிவிட்டுக்கொண்டே நிமிர்ந்தவனின் விழிகள் தன்னிச்சையாக வைஷாலியின் அறையை நோக்கின.​

அவள் அங்கே பால்கனியில் தான் நின்றுகொண்டிருந்தாள். சொல்ல போனால் அறிவுமதி வந்ததிலிருந்தே அவள் அங்கே தான் நின்றிருந்தாள். அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது அவளுக்கு கேட்கவில்லை என்றாலும் அவர்களுக்குள் ஒரு அன்யோன்யம் இருப்பதாக உணர்ந்தாள்.​

தானவீரனும் அறிவுமதியும் ஒருவரை ஒருவர் வாரிவிட்டுக்கொள்வதும் உரிமையுடன் கிண்டல் செய்து விளையாடுவதும் அவளுக்கும் தெரியும் அல்லவா. அதிலும் அறிவுமதியின் விழிகள் அவன் மீது ஆசையாய் படிவதை அவள் பலமுறை கவனித்திருக்கின்றாள்.​

ஒருவேளை அவர்களுக்குள் காதல் அரும்பியிருக்குமோ? இன்று தன்னால் அவர்கள் இருவரும் சேர முடியாத சூழ்நிலையாகிவிட்டதோ என்கின்ற எண்ணம் உள்ளுக்குள் உண்டாவதை தவிர்க்க முடியவில்லை அவளால். குற்றவுணர்வாக இருந்தது.​

அதை நினைத்து அவள் மருகிக்கொண்டிருந்த வேளையில் தான் தானவீரன் நிமிர்ந்து அவளை பார்த்தான். இருவரின் விழிகளும் ஒரு நொடி சந்தித்துக்கொண்டன.​

அவனையே ஒருநொடி ஆழ்ந்து பாத்தவள் மெதுவாக அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.​

வாடிய அவள் முகத்தை பார்த்தவனுக்கு அவளை தனது கைகளுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்து தன் மார்பின் மீது போட்டுக்கொண்டு தாயென தாங்கிக்கொள்ள வேண்டும் என்று மனம் துடித்தது. அவள் இதழ்களில் இதழ் பதித்து அவனின்றி வேறு நினைவுகள் தீண்டாமல் செய்ய வேண்டும் போல் மனம் உந்தியது.​

ஆனால், அதை எல்லாம் செய்யும் அளவிற்கு அவனுக்கு உரிமையும் இல்லை உறவும் இல்லையே.​

தலையை இரு கைகளாலும் கோதி விட்டுக்கொண்டே இமைகள் மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவன் மீண்டும் அந்த ஊஞ்சலிலேயே அமர்ந்துவிட்டான்.​

விழியுயர்த்தி அந்த வானில் வீற்றிருந்த நிலவை பார்த்தவனின் நினைவுகள் காலையில் மண்டபத்தில் நிகழ்ந்தவற்றை மீட்டின.​

மனதிற்கு பிடித்த பெண் தான் என்றாலும் குடும்பத்தினரின் கட்டாயத்தின் பெயரிலேயே மணவறையில் அமர்ந்திருந்தவனுக்கு தான் செய்வது சரியா தவறா என்ற எண்ணமே மனம் முழுக்க வியாபித்திருந்தது.​

அதற்கிடையில் மந்திர உச்சாடனங்களின் நடுவே ஐயரும் அவன் கைகளில் தாலியை எடுத்துக்கொடுத்திருக்க அதை வைஷாலியின் கழுத்தில் சூட்ட சென்ற நொடி அவள் ஒற்றை விழியில் இருந்து உருண்டு விழுந்த கண்ணீர் துளி அவனை கொன்றே விட்டிருந்தது.​

அவள் உயிரை கொன்று, உரிமைக்கொண்டு, உறவில் கலந்து பின் உள்ளம் சேர்வதா அவனது காதல். நிச்சயமாக இல்லை. அவளின் கண்ணீர் துளியில் தொடங்குவது இல்லை அவனின் அன்பு.​

அவளை காதலிக்கின்றான். இனியும் காதலிப்பான். எப்பொழுதும் காதலித்துக்கொண்டே தான் இருப்பான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு பதிலாக அவளின் காதல் கிடைக்கவில்லை என்றாலும் கூட அவன் தாங்கி கொள்வான்.​

ஆனால், தலையெழுத்தே என்று அவள் அவனுடன் வாழும் அந்த வாழ்க்கை அவனுக்கு வேண்டாம். கணவனாகிவிட்டான் இனி அவனுக்கு தான் கொடுத்தாக வேண்டும் என்று வேறு வழியே இல்லாமல் கொடுக்கப்படும் காதலும் சர்வ நிச்சயமாக அவனுக்கு வேண்டாம். அனைத்தையும் விட அவளை வேதனை படுத்தி அவள் கண்ணீரில் அவன் காதலை கரை சேர்க்கவும் வேண்டாம் என்று தோன்றிட கையில் இருந்த தாலியை அப்படியே அவனுக்கு முன்னால் இருந்த தட்டில் போட்டு விட்டு கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி விட்டு எழுந்து நின்றான் தானவீரன்.​

வைஷாலியும் அவனை அதிர்ந்து பார்த்தபடி மணவறையிலிருந்து எழுந்து நின்றாள்.​

சுற்றியிருந்த குடும்பத்தார் அனைவருக்கும் அதிர்ச்சி. வந்திருந்தோரிடம் மீண்டும் சலசலப்பு.​

"வீர்" என்று சேகர் அதட்டியிருக்க அவரை ஒரு கணம் பார்த்துவிட்டு கிருஷ்ணகுமாரை பார்த்தவன் "மன்னிச்சிடுங்க மாமா. இந்த கல்யாணம் இப்படி நடக்க வேண்டாம்" என்றான்.​

அதில் "என்னாச்சு வீர்" என்று கலங்கி நின்றார் அந்த மகளை பெற்ற தகப்பன்.​

"வீர் நீயும் இப்படி பண்ணுனா எப்படிப்பா? வைஷாலியை பார் அவள் எப்படி அழுதுட்டு இருக்கான்னு" என்று அவனது கையை பற்றிய சரோஜினியின் கரத்தை ஆறுதலாக அழுந்த பற்றி விடுவித்தவன் "அவள் அழுகுறதை பார்க்க முடியாமல் தான் அத்தை சொல்லுறேன். அவளுக்கு ஏற்கனவே நடந்த அதிர்ச்சி போதாதுன்னு அதில் இருந்து அவள் மீண்டு வரதுக்கு கூட நேரம் கொடுக்காமல் இப்படி அவசர கல்யாணம் பண்ணி தான் ஆகணுமா?" என்று கேட்டான்.​

அவன் கேள்வியில் மொத்த குடும்பமும் வாயடைத்து தான் போனார்கள்.​

ஆனால், அவனின் அந்த பேச்சில் நெகிழ்ந்து போனது என்னவோ வைஷாலி தான். அவளின் உணர்வுகளை பெற்ற தாய் தந்தை என்று யாருமே புரிந்துக்கொள்ளாமல் நடந்துக்கொள்கையில் அவன் மட்டுமே அவள் வேதனைகளை புரிந்துக் கொண்டிருக்கின்றானே.​

சட்டென்று அவன் கரத்தை பற்றிப்பிடித்தவள் "தேங்க்ஸ் மாமா" என்றபடி அவன் தோளில் முகம் புதைத்துக்கொண்டாள். அவளின் கண்ணீர் அவன் ஷர்ட்டை தாண்டி அவன் மேனியை சுட்டது.​

அவள் பற்றிய கரத்தில் மெல்ல அழுத்தம் கொடுத்து உனக்கு நான் இருக்கிறேன் என்று அந்த கணம் அவளுக்கு புரிய வைத்தவன் மீண்டும் கிருஷ்ணகுமாரை பார்த்து "இப்போ புரியுதா மாமா. இந்த கல்யாணத்தை தடுக்கவும் முடியாமல் ஏத்துக்கவும் முடியாமல் கொஞ்ச நேரம் தான்னாலும் நெருப்புல நிக்குறதுபோல் துடிச்சிருக்கா. இப்போ இந்தக் கல்யாணம் நடந்தா என்னை தள்ளி வைக்கவும் முடியாமல் ஏத்துக்கவும் முடியாமல் வாழ்க்கை முழுக்க இதே நிலை தான் அவளுக்கு. அந்த வேதனையை அவளுக்கு என்னால தரவே முடியாது?" என்றான்.​

"அப்போ… அப்போ என் மகளோட வாழ்க்கை..." என்று கதறிய சரோஜினி "ஏன்டா ஆளாளுக்கு அவள் வாழ்க்கையோட விளையாடுறிங்க" என்று அவன் ஷர்ட்டை பிடித்து உலுக்கினார்.​

அவர் அந்த கேள்வியை அவனிடம் கேட்பது கொஞ்சமும் நியாயமே இல்லை என்று அவருக்கே தெரியும். ஆனாலும், கலங்கி நிற்கும் மகளின் வாழ்வை சீராக்கும் முனைப்பில், அது தந்த ஆத்திரத்தை எல்லாம் தானவீரனிடம் கொட்டியிருந்தார் சரோஜினி.​

அவரை நிதானமாக பார்த்தவன் "வைஷாலி தான் என் மனைவி. அதுல எந்த மாற்றமும் இல்லை. இது நான் உங்களுக்கு கொடுக்குற வாக்கு" என்றான்.​

தானவீரன் அப்படி சொல்லியதும் விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் வைஷாலி. அவன் கரத்தை பற்றியிருந்தவளின் பிடி மெல்ல தளர தொடங்கியது. அவனை விட்டு நகர முயன்றாள்.​

அதை உணர்ந்துக்கொண்டவன் அவளின் கரம் அவன் கரத்திலிருந்து மொத்தமாக பிரியும் முன்னரே அதில் அழுத்தம் கொடுத்து இறுக்கி பிடித்துக்கொண்டான்.​

அவன் விழிகள் இன்னமும் சரோஜினியிடம் தான் இருந்தன.​

"ஆனால், இந்த கல்யாணம் இப்படி நடக்க வேண்டாம். அவள் உணர்வுகளை கொன்னுட்டு அதில் என்னால உறவை வளர்க்க முடியாது அத்தை. எல்லாரும் என்னை புரிஞ்சிப்பீங்கன்னு நம்புறேன்” என்றவனின் பார்வை சரோஜினி, கிருஷ்ணகுமார், சேகர், ஈஸ்வரி, ஜெயலட்சுமி என்று சுற்றி இருப்பவர்களை தொட்டு மீள வைஷாலியை அழைத்துக்கொண்டே மண்டபத்தில் இருந்து வெளியேறியிருந்தான்.​

கிருஷ்ணகுமாருக்கும் சேகருக்கு அவர்கள் எடுத்த முடிவிற்கு அவன் இனங்காமல் போனது வருத்தத்தை கொடுத்தாலும் அவன் பேச்சில் இருந்த நியாயம் விளங்க அமைதியாகிவிட்டிருந்தனர்.​

சரோஜினியும் கூட சற்று முன்னர் தான் அவர் பக்க பிழை உணர்ந்து அவனிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார்​

இதில் தானாக கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டானே என்ற கடுப்பில் அவனை முறைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பது ஈஸ்வரி தான்.​

இத்தனைக்கும் மத்தியில் தான் எடுத்த முடிவு சரியா தவறா என்று குழம்பி தவித்தவனுக்கு வீட்டில் மற்றவர்களிடம் ஒதுக்கம் காட்டும் வைஷாலி அவனை மட்டும் ஒதுக்காமல் இருப்பதே அவனின் அந்த முடிவு சரி தான் என்ற பெரும் நிம்மதியை கொடுத்திருந்தது.​

அனைத்தையும் யோசித்து முடித்தவனுக்கு இனிதான் தன் காதலை அவளுக்கு விளங்க வைத்து அவள் காதலை வென்றெடுக்க வேண்டிய பெரும் வேலை இருப்பதாக தோன்றியது.​

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே நிதானமாக விழிகளை மூடி திறந்தவன் "நீ எனக்கானவள் வைஷு. இனி உன்னை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்" என்று தீர்க்கமாக சொல்லிக்கொண்டான்.​

 
Last edited:
Status
Not open for further replies.
Top