ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 34

குடும்பத்துடன் விடுதிக்கும் வந்து சேர்ந்த தருண் தனக்கான அறைக்குள் நுழைந்துகொண்டான். அவனுக்கு தயாராகும் மனநிலையும் இருக்கவில்லை. அங்கிருந்த சோபாவில் சாய்ந்து இருந்தவன் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி இரு விரல்களால் நெற்றியை நீவிக்கொண்டே விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.​

எதிலும் தெளிவாக இருப்பவன் தான் அவன். ஆனால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவனே தடுமாறி நின்ற தருணம் தான் அது. ரவி சொன்னது போல இதை ஒரு விபத்தாக எண்ணி அவனால் சாதாரணமாக கடந்து போகவும் முடியவில்லை.​

அவன் அப்படியே அமர்ந்திருக்க அவன் அறை கதவு தட்டப்பட்டது. சலிப்பாக எழுந்து சென்று கதவை திறக்க அங்கே நின்றிருந்தார் ஆர்த்தி. "என்னப்பா இன்னும் ரெடி ஆகாமல் இருக்க" என்று கேட்க அப்பொழுதுதான் நேரத்தை பார்த்தான். அது மாலை மணி ஆறரையை நெருங்கியிருந்தது. ஏழரை மணிக்கு விருந்துபசரிப்பு தொடங்குவதாக ஏற்பாடு.​

"வரேன் மா நீங்க போங்க" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.​

ரிசெப்ஷனும் ஆரம்பமாகியிருக்க வைஷாலியும் முழு அலங்காரத்துடன் தேவைதையாக அவன் முன்னே வந்து நின்றிருந்தாள். இதுவே வேறு சமயமாக இருந்திருந்தால் அழகு பதுமையென அவன் முன்னே நின்றிருந்த பெண்ணவளின் அழகில் தெரிந்தே தொலைந்திருப்பான் தருண்.​

கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளை கண்களில் நிறைத்துக்கொள்பவனாயிற்றே அவன்.​

ஆனால், இப்பொழுது அவள் முகத்தை ஏறிட்டு பார்க்கவும் அவனால் முடியவில்லை. அவனை பார்த்து வசீகரமாக புன்னகைத்தவளுக்கு ஒரு வெற்று புன்னகையை மட்டுமே பதிலாக வழங்க முடிந்தது. அவள் விழிகளை முற்றிலுமாக தவிர்த்தான். அவளை நெருங்கி நிற்கும் உரிமை இருந்தும் விலகியே நின்றுகொண்டான்.​

அவர்களின் இந்த முக்கிய தினத்தை ஒளிப்பதிவு செய்ய வந்த ஒளிப்பதிவாளர் தான் "கூச்சப்படாமல் அவங்க பக்கத்துல நில்லுங்க சார். அப்படியே மேடம் கையை பிடிச்சிட்டு படியில் இறங்கி வாங்க. அப்போ தான் வீடியோவில் நல்லா இருக்கும்" என்று சொல்ல அவனை கடுப்பாக பார்த்த தருண் வைஷாலியை பக்கவாட்டாக ஒருமுறை திரும்பி பார்த்து விட்டு "இல்ல பரவால்ல இப்படியே எடுங்க" என்று மறுக்க "இட்ஸ் ஓகே தருண் பிடிச்சிக்கோங்க" என்று தானாக அவளின் கரத்தை அவன் முன்னே நீட்டியிருந்தாள் வைஷாலி.​

அவனால் மறுத்தும் பேச முடியவில்லை. அதே நேரம் அங்கே இருந்த புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் முன்னிலையில் காட்சி பொருளாகவும் அவனுக்கு விருப்பமில்லை. நீட்டிய வைஷாலியின் கரத்தை மென்மையாக பற்றியவன் அவளை அழைத்துக் கொண்டு விருந்தினர்கள் முன்னே வந்துவிட்டான்.​

ஏகப்பட்ட குழப்பங்கள் மூளைக்குள் குடைந்துகொண்டிருக்க அவன் முகத்தில் போலியான சின்ன சிரிப்பு. ஒன்றும் அறியாமல் அவன் அருகே கல்யாண கனவுகளுடன் நின்றிருந்த வைஷாலிக்கு அவனால் கொடுக்க முடிந்த குறைந்த பட்ச ஆறுதல் அந்த புன்னகை மட்டும் தான் அல்லவா.​

அதே சமயம் ஒருவாறு எல்லாவற்றையும் சமாளித்தாகிவிட்டது, இனி அக்காவின் திருமணம் முடிய அடுத்த பிரச்சனையை பார்த்துக்கொள்ளலாம் என்று கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியுடன் மண்டபத்திற்குள் நுழைந்த மதுஷிகா அங்கே மாப்பிள்ளையாக தருணை சத்தியமாக எதிர் பார்க்கவேயில்லை.​

நேற்றிலிருந்து அதிவேகத்தில் சுழன்று, நின்று, மீண்டும் சற்றே சீராக சுழல தொடங்கியிருந்த அவளின் உலகம் இப்பொழுது மீண்டும் தலைகீழாக சுழல்வது போல் உணர்ந்தாள்.​

அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனால், சொந்தங்கள் நிறைந்திருக்கும் மண்டபத்திற்குள் நின்று அழக்கூட முடியாத இக்கட்டான சூழ்நிலை அவளுக்கு.​

இயன்றவரை தன்னை கட்டுப்படுத்திக்கொண்டாள். கண்களை மூடித்திறந்து தன்னை சமன் செய்துக்கொண்டாள். தருணின் பார்வையில் படாமல் முடிந்தவரை தன்னை மறைத்துக்கொண்டாள்.​

தவிர்க்க முடியாத தருணங்களில் கூட அவனின் பார்வை தன் மீது படாதவாறு ஒதுங்கி நின்றுகொண்டாள்.மணமக்களை நெருங்குவதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தாள்.​

எத்தனையோ முறை வைஷாலி தருணை அவளுக்கு அறிமுக படுத்தி வைப்பதற்காக தேடிய நேரமெல்லாம் தமக்கையின் கண்களில் படாமல் தப்பித்துக்கொண்டே இருந்தாள்.​

வழக்கமாக இது போன்ற குடும்ப நிகழ்வுகளில் எல்லாம் வைஷாலி மற்றும் தானவீரனுடன் தான் சுற்றுவாள். ஆனால், இப்பொழுது அவளின் தமக்கை மேடையில் நிற்க அவளால் தானவீரனுடனும் இருக்க முடியவில்லை.​

அவள் இருக்கும் மனநிலையில் அவனுடன் சென்றால் நிச்சயமாக அவளது மாற்றத்தை கண்டுபிடித்து விடுவான். அதற்காகவே அவனையும் தவிர்திருந்தாள் பெண்ணவள்.​

இது எதுவும் மதுஷிகாவிற்கு சாதாரண காரியமாக இருக்கவில்லை. முயன்று கஷ்டப்பட்டு தனது உணர்வுகள் அனைத்தையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டு தான் நடமாடிக்கொண்டிருந்தாள். அதுவே அவளுக்கு இரத்த அழுத்தத்தை ஏகத்துக்கும் எகிற வைத்துக்கொண்டிருந்தது.​

எப்படி தவிர்த்தாலும் சில நேரங்களில் தருணின் பார்வை அவள் மீது படிந்ததுதான். ஆனால், அவன் முகத்தில் வித்தியாசமாக எந்த உணர்வுகளையும் அவளால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. வெகு இயல்பாக தான் இருந்தான் அவன். ஒருவேளை அவனுக்கு முன் தினம் நிகழ்ந்தது எதுவும் நினைவில் இல்லையோ என்றும் கூட யோசித்தாள்.​

குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்தவள் அவனுக்கு உண்மையில் எதுவும் நினைவில்லாமல் இருந்தால் கூட நன்றாக இருக்கும் என்று அசட்டு தனமாகவும் யோசித்துக்கொண்டாள்.​

அவளும் கூட எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் சாமார்த்தியமாக மறைத்துக்கொண்டாள்.​

ஆனால், அதி முக்கியமாக யாரிடம் மறைக்க நினைக்கின்றாளோ அவன் அனைத்தும் அறிந்துதான் அங்கே மேடையில் வைஷாலியின் அருகே கம்பீரமாக நின்றுக்கொண்டிருக்கின்றான் என்பது அவளுக்கு அப்போது தெரியாமல் போனது தான் பரிதாபம்.​

ரிசெப்ஷனுக்கு தயாராவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே நின்றிருந்தவனுக்கு அழைத்திருந்தான் ரவி.​

முன் தின இரவு நிகழ்ந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் விசாரித்து சொன்னவன் அவன் மது கோப்பையில் போதை மருந்தை கலந்தது ஸ்ரீகாந்த் என்ற தகவலுடன் அவனுக்கு உடந்தையாக இருந்த அசோக் மற்றும் அந்த விடுதி பணியாள் என்று அனைவரின் விவரங்களையும் ஒன்று விடாமல் சொல்லியிருந்தான்.​

அனைத்தையும் கேட்ட தருண் "அந்த பொண்ணு…" என்று ஆரம்பிக்க ரவியிடம் சிறு மௌனம்.​

சிசிடிவி கேமரா ஒளிப்பதிவுகளின் மூலம் மதுஷிகாவை அடையாளம் கண்டு அவளின் தவகவல்களையும் திரட்டி எடுத்திருந்தான். அவளை பற்றி அறிந்துக்கொண்டவை அவனுக்கே அதிர்ச்சியான தகவலாக இருக்க அதை தருணுக்கு எப்படி சொல்வது என்றும் அவனுக்கு தெரியவில்லை.​

அவன் திருமணம் செய்துகொள்ள போகும் வைஷாலியின் தங்கைதான் அந்த பெண் என்ற உண்மையை தருணிடம் சொல்லவே தயக்கமாக இருந்தது அவனுக்கு​

ரவியின் அமைதி அவன் இதயத்துடிப்பை இன்னமும் அதிகரிக்க பொறுமை இழந்த தருண் "சொல்லுடா" என்றான் அழுத்தமாக.​

ஒரு ஆழ்ந்த மூச்சினை எடுத்துக்கொண்ட ரவி "அறைக்கு போகுற நடைபாதையில் எடுத்த சிசிடிவி ஃபூட்டேஜ் இருக்கு. உனக்கு அனுப்பி வைக்குறேன் பாரு" என்று சொல்லிவிட்டு வைத்திருந்தான்.​

ரவி அனுப்பி வைத்த காணொளியில் மதுஷிகாவின் முகத்தை பார்த்ததும் ஒரு நொடி அதிர்ந்தாலும் இதை அவன் எதிர்பார்த்தே தான் இருந்தான்.​

பாரில் இருந்து அறைக்கு செல்லும் வரை எத்தனையோ பெண்களை அவன் கடந்து சென்ற போதிலும் கட்டுப்பாட்டை இழக்காமல் இருந்தவன் அந்த ஒரு பெண்ணிடம் மட்டும் எப்படி தடுமாறி போனான் என்று அவனுக்குள் யோசனை ஓடிக்கொண்டே தான் இருந்தது.​

அவளின் முகம் அவனுக்கு தெளிவாக நினைவில்லை என்றாலும் வைஷாலி பயன்படுத்தும் அதே வாசனை திரவியத்தின் நறுமணத்துடன் கிட்ட தட்ட அவளை போன்ற முக அமைப்புடன் அந்த பெண்ணும் இருந்ததாக தான் அவனுக்கு அரைகுறையாக ஞாபகம் இருந்தது.​

வேறு யாரோ ஒரு பெண் போதையின் காரணமாக அவனுக்கு வைஷாலியாக தெரிந்திருப்பாளோ என்று எப்படி எப்படியோ யோசித்துப்பார்த்தவனுக்கு அன்று வைஷாலியின் வீட்டில் மதுஷிகாவின் புகைப்படத்தை பார்த்த நினைவு வந்து போக ஒருவேளை அது அவளாக இருக்கக்கூடுமோ என்றும் யூகித்திருந்தான். இப்பொழுது இந்த காணொளியும் அதை உறுதிப்படுத்தியிருக்க அவன் மனதால் மொத்தமாக மரித்தே போய்விட்டான்.​

தான் காதலித்து ஆசை ஆசையாக மணமுடிக்க காத்திருக்கும் பெண்ணின் தங்கையுடன் அவன் அத்துமீறி நடந்திருக்கின்றானே. நினைக்கவே உடலெல்லாம் சகதியை பூசிக்கொண்டது போன்ற உணர்வு அவனுக்கு. அருவருத்து போய்விட்டான்.​

அந்த நொடியே அடுத்து அவன் செய்ய வேண்டியவைகளை முடிவு செய்துவிட்டுத்தான் மண்டபத்திற்குள்ளேயே நுழைந்திருந்தான் தருண்.​

மேடையில் நின்றிருந்த தருண் இயந்திரகதியில் அவனுக்கு சொல்லப்படும் அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருந்தாலும் அவனது பார்வை அவ்வப்போது மதுஷிகாவை தொட்டு மீண்டது. அவளை காணும் நேரம் எல்லாம் கோபத்தில் அவன் கழுத்து நரம்புகள் புடைத்துக் கிளம்புவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.​

அதே சமயம் இத்தனைக்கும் காரணமாக இருந்துவிட்டு இப்பொழுதும் எதுவுமே தெரியாததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு மண்டபத்தை சுற்றி வலம் வந்துகொண்டிருந்த அவளின் அழுத்தத்தின் மீது அவனுக்கு கொலைவெறியே உண்டாகிற்று.​

ஆனால், எதையும் அவனால் காட்டிக்கொள்ள முடியவில்லை. அவன் மனதிற்குள் போட்டு வைத்திருந்த கணக்கின் படி அனைத்தும் நடக்க வேண்டும் என்றால் அவன் தற்சமயத்திற்கு அமைதி காத்தாக வேண்டும்.​

மனதளவில் இறுகி போய்விட்டவனுக்கு முகத்தில் உணர்ச்சிகளை துடைத்தெறிவதும் பெரிய காரியமாக இருக்கவில்லை. போலி சிரிப்பையே முகமூடியாக அணிந்துகொண்டவன். வெகு இயல்பாக வைஷாலியின் அருகே நின்றுகொண்டான்.​

அன்று தருண் என்ற வேடனின் பார்வை குறிவைத்தது அவனை விட்டு ஓடி ஒளிய துடித்த மதுஷிகா என்னும் பெண்மானை தான்.​

பஃபே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசரிப்பும் தொடங்கியிருக்க எந்த பிரச்சனையும் இல்லாமல் பாதி கிணற்றை தாண்டி விட்ட நிம்மதியில் மதுஷிகாவும் சாப்பிட சென்று விட்டாள்.​

தனக்கு வேண்டிய உணவை தட்டில் வைத்துக்கொண்டிருந்த சமயம்​

"ஹாய் மது" என்று ஒரு குரல் அவளுக்கு பின்னால் இருந்து கேட்டது.​

விழிகள் அகல விரிய கையில் ஏந்தியிருந்த சாப்பாட்டு தட்டுடன் திரும்பி பார்த்தாள் மதுஷிகா.​

அவளுக்கு முன்னே ஆறடி உயரத்தில் தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றிருந்தான் தருண். தனது இரு கரங்களையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டபடி மந்தகாச புன்னகை ஒன்றை சிந்தினான்.​

அவனைப் பார்த்ததும் அவளுக்கு உலகமே ஒரு நொடி சுழல்வதை நிறுத்திவிட்டதை போன்று இருந்தது. அதிர்ச்சியில் அவனையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்ததில் அவனுக்கு அருகில் நின்றிருந்த வைஷாலி கூட அவள் கண்களில் புலப்படவில்லை.​

அதிர்ச்சியில் சிலையென சமைந்து நின்றவளை பார்த்தவன் "ம்...கூம்" என்று குரலை செரும அந்த சத்தத்திலேயே நிஜ உலகை அடைந்திருந்தாள் மதுஷிகா. தருணில் இருந்து தனது பார்வையை விலக்கி கொண்டாள்.​

"நான் சொன்னேன் தானே உங்களை பார்த்ததுமே ஷாக்காக போறான்னு. இப்போ பாருங்க அப்படியே ஃபிரீஸ் ஆகி நிக்குறா" என்று வைஷாலி சொல்ல அப்பொழுதுதான் அவள் அங்கே நிற்பதையே கவனித்தாள் அவள்.​

வைஷாலியை பார்த்ததும் ஒரு மென்முறுவல் பூத்து அந்த சிரிப்பின் பின்னே தனது பதட்டத்தை மறைத்துக்கொள்ள முயன்றாள்.​

ஆனால், தருணிடம் அது போன்ற பதட்டம் எதுவுமே இல்லை. வெகு இயல்பாக நின்றிருந்தான்.​

"என்னாச்சு மது? நெர்வஸ் ஆஹ் இருக்குற மாதிரி தெரியுதே. ஆர் யூ ஓகே?" என்று கேட்டான். அவன் விழிகள் அவள் விழிகளை நேரே பார்த்திருந்தன.​

அவளுக்கு தான் அவனை எதிர்கொள்ள முடியவில்லை.​

அவனை மட்டுமல்ல அவன் அருகே நின்ற வைஷாலியையும் தான்.​

இப்பொழுதே அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல் இருந்தது. ஆனால். அது சாத்தியமல்லவே. எப்படி செல்வாள். அப்படி சென்றால் அவளின் அந்த செயலுக்கு வைஷாலியிடம் விளக்கம் கொடுக்க வேண்டி வருமே. என்னவென்று சொல்லுவாள்.​

நிலைகொள்ள இயலாமல் வலுவிழக்க தொடங்கியிருந்த கால்களை கஷ்டப்பட்டு சமாளித்துக்கொண்டு நின்றிருந்தாள்.​

"ஆஹ்... அது...அது ஓண்ணுமில்லை. உங்களை இங்க எதிர்பார்க்கவே இல்லை" என்று சொன்னாள். உதடுகளில் விழிகளை எட்டாத புன்னகை ஒன்று ஒட்டியிருந்தது.​

"ஓஹோ...உனக்கு என்னை ரொம்ப பிடிக்குமாமே. நிஜமாவா?" என்று கேட்டான்.​

அந்த கேள்வியில் அவனை விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் மதுஷிகா. இப்பொழுதும் அவன் சாதாரணமாக தான் இருந்தான்.​

அவளுக்கே குழப்பமாக இருந்தது. அவனுக்கு நிஜமாகவே அவளை நினைவில்லையோ என்கின்ற சந்தேகம் மீண்டும் அவள் மனதில் எழாமல் இல்லை.​

ஆனால், அதை அவனிடம் கேட்கவும் முடியாது. எதையாவது கேட்டு அவனுக்கு நினைவில்லாத விடயத்தை அவளாக நினைவு படுத்திவிடவும் அவள் விரும்பவில்லை.​

தானும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சகஜமாக இருப்பதே உசிதம் என்று தோன்ற அவனுடன் இயல்பாக உரையாட முயன்றாள்.​

"ம்பச்...மது உன்கிட்ட தான் கேட்குறாரு. இன்னும் நீ அதிர்ச்சியில் இருந்து வெளிவரவேயில்லையா ?" என்று வைஷாலி அவள் தோளை பற்றி உலுக்கவும் தான் தனக்குள் ஓடிய சிந்தனையில் மூழ்கியிருந்தவள் தெளிந்திருந்தாள்.​

"என்ன....என்ன கேட்டிங்க" என்று மீண்டும் கேட்டாள்.​

"என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமுன்னு வைஷு சொன்னா. உண்மையான்னு கேட்டேன்?" என்றான்.​

"இம்ம்ம்...உங்க பாட்டு பிடிக்கும்" என்றாள்.​

"நைஸ்" என்றவன் மென்மையாக சிரித்துக்கொள்ள அவன் விழிகள் அவளையே அழுத்தமாக பார்த்தன. அவன் விழிகளை இப்பொழுது கூர்ந்து கவனித்தவளுக்கு அவன் குரலிலும் முகத்திலும் இல்லாத வன்மம் ஒன்று அவன் விழிகளில் தெரிவது போன்று இருந்தது.​

இதயம் வேகமாக படபடத்துக்கொண்டது. அதே சமயம் வைஷாலியிடம் வந்த ஆர்த்தி "வைஷு, என் கூட வாம்மா உனக்கு என் கிளோஸ் ஃபிரெண்டை இன்ட்ரோ கொடுக்குறேன்" என்று சொல்லியபடி அவளை அழைக்க "நீங்க பேசிட்டிருங்க....வந்திடுறேன்" என்று தருணை மதுவிடம் விட்டுவிட்டு ஆர்த்தியுடன் சென்றுவிட்டாள் வைஷாலி.​

வைஷாலி அங்கே நிற்கும் வரையிலுமாவது உடம்பில் இருந்த வலு அவன் முன்னே தனியே நிற்கும் போது மொத்தமாக வடிந்துவிட்டதை போல் உணர்ந்தாள் மதுஷிகா.​

செல்லும் வைஷாலியின் முதுகையே தருண் பார்த்திருக்க "வாழ்த்துக்கள் மாமா" என்று விட்டு அவன் அவளிடம் திரும்பும் முன்னவே விறுவிறுவென அங்கிருந்து அகல எண்ணி ஒரு எட்டு தான் எடுத்து வைத்திருப்பாள் "கல்யாணத்தை நிறுத்திடு மது" என்ற அவனின் குரலில் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.​

அப்படியே அதிர்ந்து நின்றவள் மெல்ல திரும்பி அவன் முகத்தை பார்த்தாள். சற்று முன் இருந்த புன்னகை மொத்தமும் முழுதாக துடைக்கப்பட்டிருந்தது. விழிகளிலும் முகத்திலும் வன்மம் மட்டுமே நிறைந்திருந்தது.​

"என்ன?" என்று மீண்டும் தெளிவுபடுத்திக்கொள்வதற்காக அவள் கேட்க "கல்யாணத்தை நீயே நிறுத்திடு" என்று அழுத்தமாக சொன்னான்.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

சட்டெனெ அவள் தங்களை சுற்றி ஒருமுறை பார்த்துக்கொண்டாள். யாருக்கும் கேட்டுவிட்டால் அக்காவின் திருமணத்தில் குழப்பமாகிவிடும் என்கின்ற பயம்.​

ஆனால், தருணுக்கு அதனை பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை இல்லை. மதுஷிகாவை நோக்கி ஒரு எட்டு முன்னே வைத்தான்.​

அவள் விழிகள் விரிய அவனை விட்டு ஒரு எட்டு பின்னால் வைத்து நகர அவனின் இதழ்களில் ஏளன புன்னகை ஒன்று மிளிர்ந்தது.​

அவனின் அந்த புன்னகையே அவளுக்கு கிலியை கொடுக்க எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டாள்.​

மதுஷிகாவையே அழுத்தமாக பார்த்திருந்தவன் "என் வாழ்க்கையோட நீ விளையாடியிருக்க கூடாது மது. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட" என்றான்.​

அவனுக்கு அனைத்தும் நினைவில் இருக்கின்றது என்று நினைக்கும் போதே அவளுக்கு பயத்திலும் அவமானத்திலும் உடலெல்லாம் வியர்த்து கொட்டியது.​

இதழ் நடுங்க "இல்ல ம...மாமா. அது தெரியாம நடந்தது" என்று அவள் சொல்லும் போதே "மாமான்னு கூப்பிட்ட பல்லை கழட்டிடுவேன்" என்று பற்களுக்கிடையில் வார்த்தைகளை கடித்து துப்பியவன் "நீ தெரிஞ்சே செய்யலங்குற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் உனக்கு கடைசியா ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கேன். இந்த கல்யாணத்தை நீயே நிறுத்திடு" என்றான்.​

அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் அவன் பேசினாலும் அவன் தொனியில் அழுத்தம் மிகுந்திருந்தது.​

"இல்ல ம...." என்று அவள் மீண்டும் ஆரம்பிக்கும் போதே அவன் பார்த்த பார்வையில் 'மாமா' என்று அழைக்க வந்த அழைப்பை அப்படியே விழுங்கிக்கொண்டாள்.​

"நீயா நிறுத்திட்டா கொஞ்ச சேதாரத்தோட எல்லாம் முடிஞ்சிடும். இல்லனா நான் கொடுக்கப்போற தண்டனை உன் வாழ்நாள் முழுக்க தாங்கவே முடியாத வலியா இருக்கும்" என்றான்.​

சொல்வது அத்தனையும் சத்தியம் என்பது போன்ற தீர்க்கமான பார்வை அவனிடத்தில்.​

"நோ... என்னால முடியாது. எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க. நான் தாங்கிப்பேன். ஆனால், அக்காவை என்னால அழ வைக்க முடியாது" என்றாள் அவள்.​

அவனிடம் தெரிந்த அதே உறுதியுடன் சொல்லிவிட்டு அவள் விருட்டென திரும்பி நடக்க முயல சட்டென்று அவள் கையை பற்றி அவனை நோக்கி திருப்பியிருந்தான் தருண்.​

மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனை அதிர்ந்து பார்க்க "உனக்கு இந்த ரிசெப்ஷன் முடியுற வரை தான் டைம்" என்று அவன் சொல்லிய நேரம் அவர்கள் அருகே வந்திருந்தாள் வைஷாலி.​

தருண் மதுஷிகாவின் கையை பற்றியிருப்பதை புருவம் இடுங்க பார்த்த வைஷாலி "என்னாச்சு?" என்று கேட்க மதுஷிகாவின் இருதயம் ஒரு நொடி நின்று துடித்தது.​


 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 35

தருணோ வெகு இயல்பாக புன்னகைத்தவன் பாண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கையை வெளியில் எடுக்க அதில் மதுஷிகாவிற்காக அவன் வாங்கியிருந்த பிரெஸ்லெட் அடங்கிய நகை பெட்டி இருந்தது.​

அதை வைஷாலியிடம் காண்பித்துவிட்டு அவன் பற்றியிருந்த மதுஷிகாவின் கரத்தில் திணித்தவன் அவளின் விழிகளை பார்த்துக்கொண்டே ஒரு வன்ம புன்னகையுடன் அவள் கரத்தை விட்டிருந்தான்.​

வைஷாலியும் "ஓஹ்… இதை நான் மறந்தே போயிட்டேன் பாருங்க" என்று தருணிடம் சொல்லியவள் "மது,இதை உனக்காக உன் பிறந்த நாள் அன்னிக்கு இவரே செலக்ட் பண்ணி வாங்கினாரு. இதை கொடுக்க தான் உன்னை கேட்டாரு. நீ தான் கண்ணுலயே சிக்கல" என்று இயல்பாக சொன்னாள்.​

அவர்கள் நின்றிருந்த கோலத்தை பார்த்து கொஞ்சமும் சந்தேகம் இல்லாமல் மிக இயல்பாக அவள் பேசியதே மதுஷிகாவின் குற்ற உணர்வை மேலும் தூண்டிவிட "தேங்க்ஸ்" என்று மெல்லிய குரலில் மட்டும் சொன்னவள் தலையை தாழ்த்திக்கொண்டாள்.​

அவள் முன்னே நின்றிருந்த இரு ஜீவன்களின் விழிகளை சந்திக்க அவளுக்கு கொஞ்சமும் தெம்பில்லை. அவள் நல்ல நேரத்திற்கு கிருஷ்ணகுமாரும் தருணையும் வைஷாலியையும் அழைத்திருக்க அவர்களும் சென்றுவிட்டார்கள்.​

நடப்பவை அனைத்தையும் நினைக்க தலையே வெடித்துவிடும் போல் இருந்தது அவளுக்கு. அருகே இருந்த நாற்காலியில் துவண்டுபோய் அமர்ந்துவிட்டாள் மதுஷிகா.​

அடுத்து என்ன செய்வது என்றும் அவளுக்கு தெரியவில்லை. தருண் வேறு திருமணத்தை நிறுத்த சொல்லி மிரட்டுகின்றான். அவன் கெட்டவனாக இருந்திருந்தால் தனக்கு எதுவும் நினைவில்லாதது போலவே நடித்து அவளை ஏமாற்றியிருக்கலாம். வைஷாலியை மனைவியாக்கிக் கொண்டிருக்கலாம்.​

அதை எல்லாம் செய்யாமல் திருமணத்தை நிறுத்த சொல்லியதே அவனது நேர்மையை அவளுக்கு உணர்த்தியது. அக்காவிற்கு கிடைக்கவிருக்கும் நல்வாழ்வினை கெடுக்க வேண்டுமா என்கின்ற கேள்வியும் மனதில் எழ செய்வதறியாது அப்படியே அமர்ந்துவிட்டாள்.​

இப்படியாக அன்றைய திருமண விருந்துபசரிப்பும் எந்த சலசலப்பும் இன்றி சிறப்பாக நடந்து முடிந்திருக்க அனைவரும் கிளம்பியும் விட்டார்கள்.​

பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் என்று அனைவரும் தத்தமது அறைக்குள் சென்றிருக்க வைஷாலி மற்றும் மதுஷிகா இருவரும் தங்களுக்கான அறைக்குள் நுழைந்திருந்தனர்.​

வைஷாலி செய்திருந்த அலங்காரங்களை எல்லாம் மதுஷிகாவின் உதவியுடன் அகற்றிவிட்டு குளிக்க சென்றுவிட்டாள்.​

இங்கே தான் அணிந்திருந்த ஆபரணங்களை எல்லாம் கழட்டியபடியே கண்ணாடியில் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மதுஷிகா பெரும் குழப்பத்தில் இருந்தாள். திருமணத்தை நிறுத்தும்படி தருண் சொல்லியது வேறு காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது.​

பித்து பிடித்தவள் போல் தன் விம்பத்தையே கண்ணாடியில் வெறித்துக்கொண்டிருந்தவளின் கவனம் குளியலறை கதவு திறக்கப்படும் சத்தத்தில் கலைந்திருக்க திரும்பி பார்த்தாள்.​

குளியலறையில் இருந்து வெளியில் வந்த வைஷாலி "குளிச்சதும் தான் நல்லா இருக்கு. ஏசி ஹால் தான். ஆனாலும், இந்த டிரஸ், மேக் அப் எல்லாம் போட்டுக்கிட்டு அவ்வளவு நேரம் நின்னது கசகசன்னு இருந்துச்சு" என்று சொல்லிக்கொண்டே அவள் அருகே வர மதுஷிகா தன்னிச்சையாக வைஷாலியை விட்டு ஒரு அடி விலகி நின்றாள்.​

வைஷாலியை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் குற்ற உணர்வின் வெளிப்பாடு அது. அவளை புருவம் இடுங்க பார்த்த வைஷாலி "என்னாச்சு மது, ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று கேட்டாள்.​

"ஹா... ஹாங்..ஒண்ணுமில்லை. எனக்கும் கசகசன்னு இருக்கு அதான். குளிச்சா பெட்டெரா இருக்கும்னு நினைக்குறேன். ஜாக்கெட் ஹூக் கழட்டி விடுக்கா நானும் குளிச்சிட்டு வரேன்" என்று திரும்பி நின்றுகொண்டாள்.​

வைஷாலியும் அதற்குமேல் எதுவும் கேட்காமல் அவள் ஆடையில் பின் பக்கம் இருந்த கொக்கிகளை கழட்டி விட்டிருக்க அவளும் பூந்தூவலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.​

ஒரு வழியாக பல சிந்தனைகளோடு குளித்து முடித்தவளுக்கு திருமணத்தை நிறுத்தும் எண்ணம் துளியும் இல்லை. ஆனாலும், வைஷாலியின் வாழ்வும் அதில் அடங்கியிருக்க அவளிடம் மறைப்பதும் சரியல்ல என்று தோன்ற நடந்தவைகளை சொல்லிவிடும் எண்ணத்தோடு குளியலறை கதவை திறந்தாள்.​

வைஷாலிக்கு உண்மை தெரிந்த பிறகு எது நடந்தாலும் கடவுள் விட்ட வழி என்று ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தான் வெளியில் வந்தாள்.​

குளியலறையிலேயே உடை மாற்றி கொண்டு வந்தவள் தனது ஈர கூந்தலை துவாலையால் துவட்டிய படியே வைஷாலியை பார்த்தாள். அவளோ அவளுக்கு முதுகு காட்டியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தாள்.​

அவளைப் பார்த்துக் கொண்டு மெல்ல நிலைக்கண்ணாடியின் முன்னே சென்று நின்றவள் “வைஷுக்கா…” என்று மெல்லிய குரலில் அழைக்க அவளை திரும்பிப் பார்த்த வைஷாலியோ “ஹேய் மது குளிச்சிட்டியா… வா வா…” என்றபடி எழுந்து வந்து மதுஷிகாவின் கரத்தை பற்றி இழுத்து சென்று சோபாவில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்துக்கொண்டாள்.​

“இங்க பாரு, தாரா ரிசப்ஷன்ல எடுத்த போட்டோஸ் அனுப்பி வச்சிருக்கா. அவதான் போன்ல வளச்சு வளச்சு என்னையும் அவரையும் அத்தனை போட்டோஸ் எடுத்தா. ஆனால், சும்மா சொல்லக்கூடாது நல்லாவே எடுத்து இருக்கா இல்ல” என்று தாரா புலனத்தின் வழியாக அனுப்பி வைத்த புகைப்படங்களை மதுவிடம் காண்பித்தாள் வைஷாலி.​

மதுஷிகாவும் வைஷாலி நீட்டிய அவளது அலைபேசியை பெற்றுக்கொண்டு ஒவ்வொரு படங்களாக நகர்த்திக் கொண்டே வர ”எல்லா போட்டோஸும் நல்லா வந்திருக்கு இல்ல” என்று கேட்ட வைஷாலியின் குரலில் மகிழ்ச்சியின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது.​

அந்தக் குரலில் வைஷாலியை பக்கவாட்டாக திரும்பி பார்த்தாள் மதுஷிகா. வைஷலியின் விழிகள் மதுஷிகா கையில் இருந்த அலைபேசியின் திரையை அலங்கரித்துக் கொண்டிருந்த புகைப்படங்களில் ஆசையாய் படிந்திருக்க அவள் இதழ்களில் மெல்லிய புன்னகையும் மறையாது ஒட்டியிருந்தது.​

இந்தத் திருமணத்தில் வைஷாலியின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் மலர்ந்த அவள் முகமே பறைசாற்றி கொண்டிருக்க அவளது மகிழ்ச்சியில் கல் எறிய மதுஷிகாவினால் எங்கணம் இயலும்.​

குளியலறைக்குள் நின்று திரட்டி எடுத்த தைரியம் அத்தனையும் வற்றி போய்விட்டது அவளுக்கு. உண்மையை சொல்லிவிடலாம் என்று தோன்றிய எண்ணத்தை விடுத்து அனைத்தையும் மனதிற்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டாள்.​

“போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு அக்கா” என்றபடி அலைபேசியை வைஷாலியிடம் கொடுத்துவிட்டு எழுந்துக்கொண்டாள்.​

மனதில் கனக்க தொடங்கியிருந்த ரகசியத்தையும் குற்ற உணர்வையும் சுமந்துக்கொண்டு அவளால் வைஷாலியுடன் ஒரே அறையில் இயல்பாக இருக்க முடியவில்லை.​

மூச்சு முட்டியது.​

தனது வாழ்வை கெடுத்துக்கொண்டது போதாதென்று உண்மையை உளறி கொட்டி அக்காவின் வாழ்வையும் கெடுத்துவிடுவோமோ என்கின்ற பயமும் சேர்ந்துகொள்ள எங்காவது கண்காணாமல் தொலைந்து போய்விடலாமா என்று தான் தோன்றியது.​

இந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று எப்படி எல்லாமோ யோசித்துப்பார்த்தவள் இறுதியாக அந்த முடிவுக்கு தான் வந்து சேர்ந்திருந்தாள்.​

வைஷாலியின் திருமணம் முடியும் வரையில் மட்டும் எப்படியாவது நிலைமையை சமாளித்துவிட்டு அதற்கு பிறகு மேற்படிப்போ அல்லது வேலையோ என்று எதாவது ஒன்றை காரணம் காட்டிவிட்டு மொத்தமாக அவர்களின் வாழ்விலிருந்தே மறைந்து போய்விட வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டாள்.​

அதுவரையிலும் வைஷாலியிடமிருந்து விலகியிருப்பதே உத்தமம் என்று எண்ணியவள் "அக்கா, நீ களைப்பா இருப்ப தூங்கி ரெஸ்ட் எடு. நாளை காலையில் நேரத்துக்கே எழுந்துக்கணும்ல. எனக்கு தூக்கம் வரல. நான் மதி ரூமுக்கு போறேன். அவள் கிட்ட அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சு. நிறைய இன்டெரெஸ்ட்டிங் கதை எல்லாம் வச்சிருப்பா கேட்க ஜாலியா இருக்கும்" என்றாள்.​

வைஷாலியும் மறுப்பேதும் சொல்லாமல் சம்மதித்திருக்க தனது அலைபேசியை மட்டும் எடுத்துக்கொண்டு அறிவுமதியின் அறையை நோக்கி கிளம்பிவிட்டாள்.​

மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்த பலவித யோசனைகள் அவள் நடையின் வேகத்தை குறைத்திருக்க அறைகளுக்கு செல்லும் நடைப்பாதையில் மெதுவாக நடந்து சென்றாள்.​

வைஷாலியின் அறையிலிருந்து ஓரிரு அறைகள் தள்ளி வந்த திருப்பத்தை அவள் நெருங்கும் போது தீடீரென்று ஒரு கரம் நீண்டு அவளை அங்கிருந்த அறைக்குள் இழுத்துக்கொண்டது.​

நொடியில் நிகழ்ந்த சம்பவத்தினால் பதறிபோனவள் தன்னை சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து பார்க்க அங்கே அறைக்கதவை தாளிட்டு கொண்டிருந்தான் தருண்.​

"நீங்களா...என்ன பண்ணிட்டிருக்கிங்க?" என்று பதறியவள் வேகமாக சென்று அவன் தாளிட்ட கதவை திறக்க முயல அவளை அப்படியே இழுத்து சுவற்றில் சாற்றியவன் அவள் எங்கும் தப்பித்து போக முடியாதபடி அவன் இருக்கரங்களுக்கு மத்தியில் அவளை சிறைபிடித்திருந்தான்.​

"விடுங்க நான் போகணும்" என்றாள்.​

அவன் விழிகளை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.​

"தாராளமா போகலாம். அதுக்கு முன்ன நான் சொன்னது என்னாச்சுன்னு சொல்லிட்டு போ" என்றான்.​

"ஐயோ, ப்ளீஸ். யாராவது நம்மை இப்படி பார்த்தா தப்பாயிடும். நாளைக்கு கல்யாணம்…" என்று அவள் சொல்லிக்கொண்டே போக​

"தானா நின்னுடும்" என்று முடித்தான் அவன்.​

"ம்பச்... ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?" என்று அவள் சிடுசிடுக்க​

"அப்போ உனக்கு கல்யாணத்தை நிறுத்துற ஐடியா இல்லை. அப்படித்தானே?" என்றான் பட்டென்று.​

"நமக்குள்ள நடந்தது ஒரு விபத்து அவ்வளவுதான். அதையே நினைச்சு உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் ஏன் கெடுத்துக்க நினைக்குறிங்க?" என்று கேட்டவளை எரித்துவிடுவதுபோல் பார்த்தவன்​

"எப்படி டி உன்னால செய்யுறதையும் செஞ்சிட்டு இப்படி சாதரணமா பேச முடியுது. போதையில் யாருன்னே தெரியாத ஒருத்தன் மேல பாஞ்சிருக்க நீ. அவன் யாரு என்னனு யோசிக்க தோனல தானே உனக்கு. ஒருவேளை அவன் ஏற்கனவே கல்யாணமானவனா இருந்திருந்தா? இல்லை வக்கிரம் பிடிச்சவனா இருந்திருந்தா என்னடி பண்ணியிருப்ப?" சீற்றத்துடன் வந்தது அவனது வார்த்தைகள்.​

அவன் குரல் உயர்ந்து ஒலித்ததில் மதுஷிகாவின் உடல் சற்று அதிர்ந்து அடங்கியது. இருந்தாலும் அவளை என்னவோ பரம்பரை குடிக்காரி போலவும் காம பிசாசு போலவும் அவன் சித்தரித்தது அவளுக்கு சினத்தை கொடுக்க கடுப்பாகிவிட்டாள் அவள்.​

"நான் ஒன்னும் குடிக்காரி இல்லை. அன்னிக்கு என்ன நடந்ததுன்னு தெரியுமா?" என்று அவள் ஆரம்பிக்க​

"எல்லா வெங்காயமும் எனக்கும் தெரியும். எல்லாத்தையும் விசாரிச்சுட்டு தான் வந்திருக்கேன். உனக்கு லவ் ஃபெயிலியர்னா அடுத்தவங்க வாழ்க்கையை நாசம் பண்ணுவியா?" என்று கேட்டான்.​

அவனது வார்த்தைகள் தயவு தாட்சண்யமே இல்லாமல் அவள் மீது பழி சுமத்தி கொண்டிருந்தன. அவை எதிரில் நிற்பவளை எந்தளவுக்கு காயப்படுத்தும் என்கின்ற மனிதாபிமான சிந்தனை எல்லாம் அவனிடம் இருக்கவே இல்லை.​

"உனக்கு அவன் மேல தெய்வீக காதல் இருந்த போலவும் தெரியலையே. இருந்திருந்தா அவன் கூட பிரேக் அப் பண்ண அடுத்த நிமிஷம் இன்னொரு ஆம்பளைக்கு முத்தம் கொடுக்க தோனியிருக்குமா?" என்று அவனது வார்த்தைகள் தடித்துக்கொண்டே போக​

"போதும் நிறுத்துங்க. அது நான் நிதானமா இல்லாத நேரம் மூளை கெட்டு போய் அப்படி பண்ணிட்டேன். அதுக்காக என்னை என்னவோ ஆம்பளைக்கு அலையுறவ மாதிரி பேசுறீங்க. இவ்வளவு பேசுறிங்களே நீங்க விலகியிருக்கலாமே. இல்லை எதுக்குடி என்னை கிஸ் பண்ணுறன்னு கேட்டு ஓங்கி ஒரு அறை விட்டிருக்கலாமே. ஏன் பண்ணல? போதையில் உங்களுக்கும் தானே நிதானம் இல்லை. அதுக்காக வேணும்னு தான் அப்படி பண்ணீங்கன்னு உங்க மேல நான் பழி சொன்னா ஒத்துபிங்களா?" என்று அவனிடம் பதில் வாதம் புரிந்தவளின் கண்களில் சினத்தின் வெளிப்பாடாக நீர் நிற்காமல் வழிந்தது.​

"ஷட் அப், ஐ வாஸ் ட்ராக்ட் யூ டாமிட் (I was drugged you damn it)" என்று ஆத்திரத்தில் கர்ஜித்தவனின் கரங்கள் அவள் கழுத்தை இறுக பற்றியிருந்தன.​

"அன்னிக்கு நடந்த பேச்சுலர் பார்ட்டியில் நான் ஃபிரெண்டுன்னு நினச்சு நம்பின ஒரு கேடுகெட்டவன் பார்த்த கேவலமான வேலை அது. எப்படி எல்லாம் என்னை சமாளிச்சு கட்டுப்படுத்தி ரூமுக்கு வந்தேன் தெரியுமா? கடைசி நிமிஷத்துல வந்து எல்லாத்தையும் கெடுத்துட்ட" என்று பற்களுக்கிடையில் வார்த்தைகளை கடித்து துப்பியவனின் பிடி அவள் கழுத்தில் இறுகிக்கொண்டே போக மூச்சுக்கு திணறினாள் மதுஷிகா.​

மெல்லிய இருமலினூடு அவள் திணறுவதை கவனித்தவன் "ச்சே" என்று சலித்தபடி அவள் கழுத்திலிருந்த அவனது கரத்தை இழுத்துக்கொண்டான்.​

எவ்வளவு மென்மையானவன் அவன். அதிலும் பெண்களிடத்தில் கண்ணியமாக நடப்பவன். தன்னையே அவள் இப்படி மிருகமாக மாற்றிவிட்டாளே என்று நினைக்கும் போதே அவனுக்கு அவளை கொன்று புதைக்கும் அளவிற்கு ஆத்திரம் மேலிட்டது.​

விழிகளை அழுந்த மூடி திறந்தவன் அவளை விட்டு விலகி சென்று கட்டிலில் அமர்ந்துக் கொண்டான்.​

கட்டுக்கடங்காமல் வெளிவர துடித்த அவனது சினத்தை அடக்க முயன்றதின் பலனாக அவனது விழிகளுமே கலங்கி சிவந்திருந்தன.​

மெல்ல அவளை நிமிர்ந்து பார்த்தவன் "எனக்கு வர கோபத்திற்கு உன்னை கொன்னு புதைச்சிடலாமான்னு இருக்கு" என்றான்.​

அவன் குரலில் சினம் இருந்தாலும் முதல் இருந்த ஆக்ரோஷம் இல்லை. தனிந்தே ஒலித்தது.​

அவனை ஏறிட்டு பார்த்தாள் மதுஷிகா. தலையை இருகைகளாலும் தாங்கி பிடித்துக்கொண்டே கட்டிலில் அமர்ந்திருந்தான். ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டதில் ஏறி இறங்கிய அவனது தோள்பட்டைகளை வைத்தே தனது சினத்தை கட்டுப்படுத்த முயல்கின்றான் என்று புரிந்தது.​

"மாமா... " என்று ஆரம்பித்து அவன் மண்டபத்தில் அப்படி கூப்பிடக்கூடாது என்று சொல்லியது நினைவில் வர எச்சிலை கூட்டி விழுங்கியபடி அவனை பார்த்தாள்.​

முயன்று தைரியத்தை வரவழைத்து கொண்டவள் "என்னால இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது. அக்கா பாவம். அவள் சந்தோஷத்தை என்னால கெடுக்க முடியல. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க" என்றாள் கெஞ்சுதலாக.​

"உன் விளக்கம் எல்லாம் எனக்கு தேவை இல்லை. உனக்கு நான் கொடுத்த நேரம் முடிஞ்சுது மதுஷிகா. இனி நான் கொடுக்க போற தண்டனையை தாங்கிக்க ரெடியா இரு" என்றான்.​

"என்ன பண்ண போறீங்க?" என்று அவள் பயத்தில் கேட்க "நாளைக்கு காலையில் நமக்கு கல்யாணம்" என்றான் அவன்.​

அவன் முகத்தை அதிர்ந்து பார்த்தவள் "என்ன... ஏன் இப்படி?வேண்டாமே ப்ளீஸ். இது எனக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் தண்டனை தானே. நான் பண்ண தப்புக்கு எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க ஏத்துக்குறேன். ஆனால். உங்களை நீங்களே ஏன் தண்டிச்சிக்கணும்னு நினைக்குறிங்க?" என்று கேட்டாள்.​

"வைஷாலிக்கு நான் எப்படி துரோகம் பண்ணலாம். போதையாகவே இருந்தாலும் இன்னொரு பொண்ணை எப்படி தொடலாம். அப்போ நான் துரோகி தானே. நான் அவளுக்கு பண்ண துரோகத்துக்கு எனக்கும் தண்டனை வேண்டாமா"?​

 

Vilacini

Well-known member
Wonderland writer

சொல்லும் போதே அவனின் குரல் தழுதழுத்தது.​

நிகழ்ந்ததை எண்ணி அவன் படும் வேதனையை அந்த குரலே எடுத்துரைத்தது.​

அவனை இந்த நிலையில் நிறுத்திய தன்னை நினைத்தே கோபமாக வந்தது மதுஷிகாவிற்கு.​

"நடந்ததுல உங்க தப்பு எதுவுமே இல்லையே. எல்லாத்துக்கும் நான் தானே காரணம். நாம வேணும்னா இதை அக்காகிட்ட சொல்லிடலாம். நான் அவள் காலில் விழுந்து வேணும்னாலும் மன்னிப்பு கேட்குறேன். அக்கா கண்டிப்பா புரிஞ்சுப்பா" என்றாள்.​

அவளது கூற்றில் அவளை முறைத்து பார்த்தான் தருண்.​

"என் வைஷாலி...." என்று ஆரம்பித்தவன் இனி அப்படி சொல்ல அவனுக்கு உரிமை இல்லை என்பது புத்தியில் உரைக்க சட்டென நிறுத்தி ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே "வைஷாலி கண்டிப்பா புரிஞ்சிப்பா. நம்மை மன்னிக்கவும் வாய்ப்பிருக்கு. ஏன்னா அவள் அவ்வளவு மென்மையானவள், பக்குவமானவள், ரொம்ப நல்லவள்” என்றபடி கட்டிலில் இருந்து எழுந்து கொண்டவன் மீண்டும் மதுஷிகாவின் முன்னே சென்று நின்றான்.​

வைஷாலியை பற்றி பேசிய போது மட்டும் இவ்வளவு நேரம் சினந்திருந்த அவன் விழிகள் கனிந்திருந்தன.​

அது தந்த தைரியத்தில் "ம்ம்...அக்கா கண்டிப்பா மன்னிச்சிடுவா. நாம போய் பேசலாம்" என்றாள் மீண்டும்.​

ஒரு இளக்கார புன்னகையுடன் தலையை இடவலமாக ஆட்டியபடி “அந்த மன்னிப்பு எனக்கு வேண்டாம்" என்றவனின் விழிகள் தீவிரத்தை தத்தெடுத்துக்கொண்டன.​

அவள் அவனை புரியாமல் பார்க்க "உனக்கு உன் அக்கான்னா ரொம்ப பிடிக்கும்ல. இனி உன் வாழ்க்கை முழுக்க நீ அவளுக்கு தங்கச்சி இல்லை. துரோகி தான். நீ பண்ண தப்புக்கு உனக்கு நான் கொடுக்க போற தண்டனை இதுதான். உன்னை ஆசையா பாசமா பார்த்த அக்கா இனி உன்னை ஒரு அற்ப புழுவை பார்ப்பது போல பார்ப்பாள். துரோகியா பார்ப்பாள்" என்றவனின் இதற்கடையில் ஒரு வன்ம புன்னகை.​

அவன் சொல்லியதில் ஒரு நொடி பேச்சற்று நின்றவள் "தருண், இப்படி பண்ணாதீங்க ப்ளீஸ். இதை விட நீங்க என்னை கொன்னே போட்டிருக்கலாம்" என்று அழுதாள்.​

"கொன்னுருக்கலாம் தான். ஆனால், ஆசை பட்ட வாழ்க்கை கைக்கு எட்டுற நேரம் அதை நாமே தூக்கியெறியுற வலி என்னனு உனக்கு தெரிய வேண்டாமா? நமக்கு பிரியமானவங்க கூட வாழ முடியாத வேதனை என்னனு உனக்கு காட்ட வேண்டாமா?" என்றான்.​

"என்னை தண்டிக்குறதா நினச்சு நீங்க உங்களையே தண்டிச்சிக்குறிங்க?" என்றாள்.​

"ஹாஹாஹா” என்று நக்கல் தொனியில் சிரித்தவன் “என் மேல அவ்வளோ அக்கறையா உனக்கு” என்று கேலி பேசினான்.​

"தருண்..." என்று அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் தவித்து நிற்க அவனே தொடர்ந்தான்.​

“என்னை காரணம் காட்டி நீ தப்பிச்சுக்க நினைக்காதே. இந்த தண்டனை எனக்கும் தேவை தான். வைஷாலியின் மன்னிப்புக்கு நான் தகுதியானவன் இல்லை" என்றான்.​

மனமறிந்து செய்யாத குற்றத்தை கூட அவன் மனசாட்சியினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை நம்பி வந்த பெண்ணிற்கு பெரும் பாதகத்தை புரிந்து விட்டதாகவே அவன் உணர்ந்தான்.​

வைஷாலியே கூட அவனை மன்னித்துவிட்டாலும் தன்னை தானே மன்னித்துக்கொள்ள அவனது மனம் ஒப்புக்கொள்ளவே இல்லை.​

“ஐயோ நான்தான் இதுல உங்க தப்பு எதுவும் இல்லைன்னு ஒத்துக்குறேனே. இன்னும் என்ன? சரி ஓகே, நீங்க வேற என்ன சொன்னாலும் நான் கேட்குறேன். இது…இந்தக் கல்யாணம் மட்டும் வேண்டாம்" என்றாள்.​

கன்னத்தில் காய்ந்திருந்த கண்ணீர் துளிகள் மீண்டும் வழிய தொடங்கியிருந்தது அவளுக்கு.​

"உனக்கு நான் கொடுத்த ஒரே வாய்ப்பையும் நீ தவற விட்டுட்ட மதுஷிகா. இனி உனக்கு வேற ஒப்ஷனே கிடையாது" என்றவனின் கூர்விழிகள் அவள் விழிகளை விட்டு அகலவேயில்லை.​

விழி நீரில் நனைந்திருந்த அவளின் ஈர விழிகள் கூட அவன் மனதில் இரக்கத்தை கொடுக்கவில்லை போலும். அந்தளவிற்கு மனதால் இறுகி போயிருந்தான் தருண்.​

சரி நீங்களும் நானும் துரோகிகள் தான். அதுக்கு நமக்கு தண்டனை கிடைக்கட்டும். ஆனால், அக்காவுக்கு எதுக்கு இந்த தண்டனை. அவளை பத்தி நீங்க யோசிக்கவே இல்லையா?" என்று ஆற்றாமையில் கத்தினாள் மதுஷிகா.​

"யோசிச்சதால தான் இந்த முடிவு. தருண் என்ற நல்லவனை கடந்து போகுறது தான் கஷ்டம். ஆனால், ஒரு துரோகியை சுலபமா கடந்திடலாம். அவள் நினைவுகள்ல இனிமையா இருந்த நான் இனி வெறும் வலியா மட்டும் தான் இருப்பேன். அவள் அழிக்க நினைக்குற கசப்பான நினைவுகளா மட்டுமே இருப்பேன். காலப்போக்குல அழிஞ்சும் போய்டுவேன். என் காதலை அவள் ஏத்துக்கிட்டதுக்காக அவளுக்கு என்னால் செய்யக் கூடிய குறைஞ்ச பட்ச நன்மை இது ஒன்னு தான்" என்றான்.​

அவனின் குரல் உடைந்து ஒலித்தது.​

அவனின் வலியை அவளால் மொத்தமாக உணர முடிந்தாலும் அவனுக்கு பதில் பேசத்தான் அவளுக்கு நா எழவில்லை. என்ன பேசுவது என்றும் அவளுக்கு தெரியவில்லை.​

அவன் காதலின் ஆழம் கண்டு மௌனித்து போய்விட்டாள் பெண்ணவள்.​

ஒரு நொடி தானும் மௌனம் காத்தவன் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டபடி "இதுக்கு மேல உனக்கு என்னால எந்த விளக்கமும் கொடுத்திட்டிருக்க முடியாது. நான் சொன்னதுதான் முடிவு. நாளைக்கு காலையில் உனக்கும் எனக்கும் கல்யாணம் அண்ட் தட்ஸ் ஃபைனல்" என்று அழுத்தி சொன்னான் தருண்.​

அவனின் விழிகளில் தெரிந்த தீவிரம் அவளை பயமுறுத்தியது. அவனது முடிவை அவன் மாற்றிக்கொள்ள போவதில்லை என்று அவனது பார்வையே உணர்த்தியது.​

இனி அவனிடம் பேசியோ அல்லது கெஞ்சியோ பயனிருக்க போவதில்லை என்று உணர்ந்துக்கொண்டவளுக்கு தற்போதைக்கு அவனிடமிருந்து தப்பித்துக்கொண்டாலே போதும் என்று தோன்றியது.​

ஏதாவது சொல்லி முதலில் அந்த அறையை விட்டு வெளியேற நினைத்தாள் மதுஷிகா. அவள் அணிந்திருந்த பைஜாமா உடையுடன் அவனோடு ஒரே அறையில் இருப்பது வேறு என்னவோ போல இருந்தது.​

அசௌகரியமாக உணர்ந்தாள்.​

"நீங்க தான் முடிவு பண்ணிட்டீங்களே. நான் சொல்லுறதையும் நீங்க கேட்க போறதுமில்ல. என்னவோ பண்ணுங்க, இப்போ தயவு செஞ்சு என்னை போக விடுங்க" என்றாள் எரிச்சலாக.​

"உன்னை போகவிடுறதுக்காக இங்க இழுத்துட்டு வரல" என்று அவன் சொல்ல என்ன நினைத்தாளோ தன்னிச்சை செயலாக அவளின் கரங்கள் மேலெழுந்து அவளின் பைஜாமாவின் இறுக பற்றிக்கொண்டன.​

அவளின் செயலை கவனித்தவன் ஒரு ஏளன புன்னகையுடன் அவளை எற இறங்க பார்த்துவிட்டு "இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா?" என்று கேட்டான்.​

அவனின் அந்த ஒற்றை கேள்வியிலேயே அவளின் முகம் அவமானத்தில் கன்றி சிவந்துவிட்டது.​

"இன்னிக்கு நீ இந்த ரூம்ல என் கூட தான் இருக்கணும்” என்றான்.​

"வாட்?" என்று அவள் அதிர்ந்து கேட்க​

"உனக்கு காது கேட்காதா?" என்றபடி அவளை விட்டு விலகி சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் மேசை மீது இருந்த அவனது மடிக்கணினியை பார்க்க தொடங்கிவிட்டான்.​

"இது எல்லாம் ரொம்ப தப்பு. நான் தான் சரின்னு சொல்லிட்டேனே. நாளைக்கு காலையில் வந்தா போதாதா. எதுக்கு இங்கையே இருக்கணும்?" என்று சீறினாள்.​

அவளை ஆழ்ந்து பார்த்தவன் "உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லை" என்று முடித்துக்கொண்டான்.​

"திஸ் இஸ் டூ மச்" என்க "நீ பண்ணதை விட ஒன்னும் இல்லை" என்றவன் அதோடு மடிக்கணினியில் மூழ்கிவிட்டான்.​

"ப்ளீஸ்...போக விடுங்க என்னை" என்று அவள் கெஞ்சிய கெஞ்சல்கள் எல்லாம் காற்றில் தான் கரைந்து போயின. கல்லென இருகியிருந்த அவனை கரைக்க இயலவில்லை.​

இரவெல்லாம் குளிரூட்டப்பட்ட பஞ்சு மெத்தையுடன் கூடிய சொகுசு அறையில் இருந்தாலும் இருவருக்கும் ஒரு பொட்டு தூக்கம் கூட இல்லை.​

தருண் மட்டும் மடிக்கனிணியில் வேலை செய்வதும் அவ்வவப்போது அலைபேசியில் பேசுவதுமாக இருந்தான். என்ன செய்கிறான் என்ன பேசுகிறான் என்பது அவளுக்கும் தெரியவில்லை.​

மெதுவாக அவள் சாய்ந்து நின்ற சுவரின் மீதே சரிந்து தரையில் அமர்ந்தவள் முழங்கால்களை கட்டிக்கொண்டு அதன் மீதே கன்னத்தை பதித்து படுத்துகொண்டாள்.​

அறை முழுவதும் ஒருவகை நிசப்தம் மட்டுமே பரவி அவளுக்கு திகிலூட்டியது. இந்த இரவு விடியாமல் நீண்டுவிட்டால் நன்றாக இருக்கும் என்கின்ற எண்ணத்தோடு கண்களில் கண்ணீரும் வடிந்துகொண்டே இருந்தது.​

ஒருவழியாக வலிகள் நிரம்பிய இரவு அது இரு நெஞ்சங்களின் ரணங்களுடன் கழிந்து பொழுதும் புலர்ந்திருக்க பட்டு வேஷ்டி சகிதம் மணமகனாக ஆயுத்தமாகி அவள் முன்னே வந்து நின்றான் தருண்.​

அவனை ஏறெடுத்து பார்த்தவள் முன்னே ஒரு பையை நீட்டினான்.​

அவன் ஏற்கனவே முடிவு செய்தது தான் என்பதால் மதுஷிகாவிற்கு தேவையான உடைகளை அவனது காரியதரிசி சோனாவின் மூலம் ஏற்பாடு செய்து வைத்திருந்தான்.​

அதில் மாற்று உடை தான் இருக்கும் என்று அவன் சொல்லாமலே யூகிக்க கூடியதாக இருக்க அதை மௌனமாகவே பெற்றுக்கொண்டவள் குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.​

இரவே அவனுடன் தர்க்கம் செய்து தோற்றவளுக்கு இப்பொழுது எதுவும் பேசுவதற்கு கூட உடலிலும் மனதிலும் தெம்பில்லை.​

இனி அடுத்து என்ன நடக்குமோ என்கின்ற பயம் வேறு மனதை பீடித்துக்கொள்ள கண்ணீருடன் குளித்து முடித்து அவன் கொடுத்த பச்சை நிற பட்டுடுத்தி வெளியில் வந்தாள்.​

வெறும் பட்டு புடவை மட்டுமே அணிந்து ஆயுத்தமாகியிருந்தாள் . கழுத்தில் அவள் எப்பொழுதும் அணிந்திருக்கும் மெல்லிய தங்கச் சங்கிலி மற்றும் வலது கையில் தருண் கொடுத்த ப்ரெஸ்லேட்.​

அதுவும் கூட ரிசெப்ஷன் முடிந்து அறைக்குள் நுழைந்ததுமே வைஷாலி தான் "அவர் கொடுத்த ப்ரெஸ்ட்லெட்டை பார்த்தியா? உனக்கு பிடிச்சிருக்கா? என்று கேட்டபடி அதை மதுஷிகாவிடமிருந்து வாங்கி அவளின் கையில் அணிவித்து அழகு பார்த்திருந்தாள்.​

அதுபோக அழுதழுது சிவந்திருந்த விழிகளும் அவை வடித்துக்கொண்டிருந்த கண்ணீர் துளிகளுமே அவளுக்கு மணப்பெண் அலங்காரமாக மாறியிருக்க அவன் முன்னே வந்து நின்றாள்.​

அவளை ஒரு முறை எற இறங்க அழுத்தமாக பார்த்த தருண் "வா" என்றபடி அறை கதவை திறந்து வெளியேற அவளும் அவன் பின்னே சாவி கொடுத்த பொம்மை போலவே நடந்து சென்றாள்.​

விடிந்தும் விடியாத அந்த காலை நேரத்தில் இன்னும் இருள் சூழ்ந்தே இருக்க ஆள் அரவம் எதுவும் இல்லை. மற்ற அனைவரும் இன்னும் எழுந்துகொள்ளவில்லை. அதற்குள் அவளை அழைத்துக்கொண்டு அந்த விடுதியை விட்டு வெளியேறியவனின் கார் அருகே இருந்த கோவிலில் சென்று நின்றது.​

அங்கே அவர்களுக்காக காத்திருந்தது அவனது காரியதரிசி சோனாவும் அவனது நண்பன் ரவியும் தான்.​

தருண் கோவிலுக்குள் நுழைந்திருக்க அவனுக்கு சற்று தள்ளி பின்னால் வந்து கொண்டிருந்தாள் மதுஷிகா.​

தருணை கண்டதும் வேகமாக அவன் அருகே வந்த ரவி "மச்சான், இது கண்டிப்பா தேவையா?" என்று தான் கேட்டான்.​

அவனின் பார்வை ஒரு நொடி தருணிற்கு பின்னால் வந்துகொண்டிருந்த மதுஷிகாவின் மீது படிந்து மீண்டது. கலையிழந்த கண்ணீர் தோய்ந்த முகத்துடன் தெரிந்தாள் பெண்ணவள். ரவிக்கே பார்க்க பாவமாக தான் இருந்தது.​

"தேவை தான்" என்று சொன்ன தருணின் குரலில் அவ்வளவு அழுத்தமும் விழிகளில் பிடிவாதமும் நிறைந்திருக்க நண்பனை பற்றி நன்கு அறிந்திருந்த ரவிக்கும் அவன் முடிவை மாற்றுவது நடக்காத காரியமாகவே தோன்றியது.​

நண்பனாக தருணின் மனநிலை புரிந்தாலும் ஒரு காவல் அதிகாரியாக அவனுக்கு துணை நிற்பது மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து கொண்டான். அமைதியாகவே தருணுடன் நடந்தான்.​

அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் கடவுள் சந்நிதிக்கும் வந்தாகிவிட்டது. சோனா தான் அவர்களுக்கான மாலைகளையும் மாங்கல்யத்தையும் தட்டில் வைத்து ஐயரிடம் நீட்டியிருக்க அவரும் அதை எடுத்துக்கொண்டு அம்மனிடம் சென்று விட்டார்.​

அம்மன் பாதங்களில் வைத்து ஆசி பெற்று மீண்டும் அதை கொண்டு வந்து மணமக்களிடம் நீட்டியபடி "பெரியவா யாரும் வரலையா?" என்றார்.​

"இல்லை. நாங்க அனாதைகள்" என்றான் தருண்.​

அவன் அருகே தலையை தாழ்த்தி நின்றிருந்த மதுஷிகா அந்த வார்த்தையில் அவனை விழுக்கென்று திரும்பி பார்த்தாள்.​

ரவி, சோனா என்று மற்ற இருவருக்குமே அதே நிலைதான்.​

துரோகி என்னும் பட்டதுடன் சொந்த குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு அனாதையாகவும் நிற்க போகின்றாள். வாழ்க்கை முழுக்க வலிக்கும் என்றானே. நிச்சயமாக அப்படி தான் போலும். தப்பித்துக்கொள்ள வழியே இல்லையா கடவுளே என்று அவள் மனதிற்குள் கதறிய கதறலில் விழிகளில் கண்ணீர் தானாக வழிந்தது.​

தருணிடம் எந்த உணர்வுகளும் இல்லை. உணர்ச்சிகள் துடைக்க பட்ட முகத்துடன் இறுகி போய் நின்றிருந்தான். மனம் மரத்து போய்விட்ட உணர்வு அவனுக்கு.​

அவர்களின் முகத்தை பார்க்கவே எதுவோ சரியில்லை என்று ஐயருக்கு தோன்றினாலும் அருகே காவல் சீருடையில் ரவி நின்றிருக்கவே அதை பெரியதாக கண்டுகொள்ளவில்லை அவர்.​

ஒரு பெருமூச்சுடனே "மாலையை மாத்திக்கோங்கோ" என்றார்.​

ஐயர் கொடுத்த மாலையை தருண் கையில் வாங்கிக்கொண்ட நேரம் இதுவரை அமைதியாக இருந்தவளுக்கு அதற்குமேல் அப்படி நிற்க முடியவில்லை. எப்படியாவது அவன் மனதை மற்றவிட எண்ணி இறுதியாக ஒருமுறை முயன்று பார்க்க நினைத்தாள்.​


"இது தப்பு" கண்களில் கலக்கத்துடன் இறைஞ்சும் குரலில் வந்தது மதுஷிகாவின் வார்த்தைகள்.​


அவளை ஆழ்ந்து பார்த்த தருண் சோனாவை பார்க்க அவன் குறிப்புணர்ந்து ஐயரிடம் சென்றவள் அவரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.​

அதன் பிறகே மதுஷிகாவிடம் திரும்பியவன் "நீ பண்ணுனதை விட ஒண்ணும் பெரிய தப்பில்ல" அவன் இதழ்கள் ஏளனமாக வளைந்தன.​


அவள் எது பேசினாலும் இந்த ஒரு வார்த்தையை சொல்லி அவள் வாயை அடைத்துவிடுகின்றான்.​


அவள் மௌனமாக அவனையே பார்த்தபடி நிற்க கையில் இருந்த மாலையை அவள் கழுத்தில் சூட்டினான்.​


அவன் இதழ்களில் ஏளனம். ஆனால், விழிகளில் ரௌத்திரம்.​


அவனுக்கு மட்டும் அவளை பார்வையாலேயே எரித்துவிடும் சக்தி இருந்திருந்தால் அவன் பார்வையின் அனலில் இந்நேரம் அவள் பொசுங்கி சாம்பலாகி இருந்திருப்பாள்.​


அவள் செய்த புண்ணியமோ அல்லது பாவமோ இன்னமும் அவள் உயிர் உடலை துறக்கவில்லை.​


கழுத்தில் கிடந்த மாலையை குனிந்து பார்த்தாள். கண் கலங்கி போய்விட்டது அவளுக்கு.​


இன்னொரு மாலையை அவள் கரத்தில் திணித்து "ம்ம்ம்...போடு" என்று அவளுக்கு வாகாக குனிந்து நின்றான்.​


கைகளில் இருந்த மென்மையான பூமாலை கூட இப்பொழுது அவளுக்கு இரும்பு சங்கிலியென கனத்தது. அவள் இதயமும் கூட.​

கரங்கள் நடுங்க அந்த பூமாலையை மேலும் இறுக்கமாக பற்றிக்கொண்டாள். அந்த அழுத்தத்தில் அவள் பற்றியிருந்த பகுதியில் சில பூக்கள் கசங்கி உதிர்ந்தன. அவர்களின் தற்போதைய மனநிலையை போல.​

"வேண்டாம் ப்ளீஸ்" என்றவளின் குரல் தழுதழுத்து ஒலித்தது.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அதற்கு அவனது மௌனமே பதிலாக இருக்க அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கி கொண்டே மணமாலையுடன் சேர்த்து அவள் இருக்கரங்களையும் இழுத்தவன் அவள் மறுக்க மறுக்க வலுக்கட்டாயமாக அவள் கரம் கொண்டே தனது கழுத்தில் அந்த மாலையை அணிவித்துக்கொண்டான்.​

விழிநீர் இமையை கடந்து கன்னத்தில் உருண்டோட "அக்கா பாவம். இது வேண்டாமே. நான் வேணும்னா எங்கையாவது கண் காணாத இடத்துக்கு தொலைஞ்சு போயிடுறேன். உங்களுக்கும் அக்காவுக்கும் எந்த வகையிலும் இடைஞ்சலா இருக்கவே மாட்டேன். சத்தியம் வேணும்னாலும் பண்ணுறேன். இந்த கல்யாணம் மட்டும் வேண்டாமே ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.​


தருணுக்கு அதற்குமேல் கோபத்தை அடக்க முடியவில்லை.​


"ஷட் அப் மது" என்று அவளிடம் சீறியவன் அருகே அவர்கள் திருமணத்திற்கு சாட்சியாக நின்றிருந்த ரவியை பார்த்தான்.​


"ரவி, செக்ஸுவல் ஹராஸ்மென்ட் சட்டம் எல்லாம் பொண்ணுங்களுக்கு மட்டும் தானா? பாதிக்க பட்ட பசங்களுக்கெல்லாம் கிடையாதா?" என்று கேட்டான்.​


அவனும் "சட்டம் எல்லாருக்கும் பொதுவானது தருண். சட்டத்துக்கு தேவை எவிடென்ஸ். அது இருந்தா பொண்ணோ ஆணோ, யார் தப்பு செஞ்சாலும் தண்டனை நிச்சயம்." என்றான் அந்த காவலன்.​

"அப்போ இந்த எவிடென்ஸ் போதுமா பாரு…பத்தலன்னா இன்னும் கூட ரெடி பண்ணிடலாம். " என்று சொல்லியபடி அவன் அலைபேசியில் காணொளி ஒன்றை தேடி எடுத்து ஓட விட்டவன் ரவியின் முன்னே நீட்டினான்.​


அது ரவி அவனுக்கு அனுப்பி வைத்த காணொளி தான். இப்பொழுது மதுஷிகாவை பயமுறுத்த அதையே மீண்டும் ரவியிடம் காண்பித்தான்.​


அதை பார்த்த ரவி ஆழ்ந்த மூச்செடுத்து கொண்டே ஒரு கணம் மதுஷிகாவின் மீது பார்வையை நிலைக்க விட்டு பின் தருணிடம் " இதை எவிடென்ஸ் ஆஹ் எடுத்துக்கலாம் டா" என்று கொண்டே அலைபேசியை மீண்டும் தருணிடம் நீட்டினான்.​


அதை வாங்கி அந்த காணொளியை மீண்டும் ஓடவிட்டு மதுஷிகாவுக்கு காட்டினான் தருண். அதில் அன்று மதுஷிகா அறைக்கு செல்லும் நடைபாதையில் வைத்து அவன் ஷர்ட்டை பற்றி இழுத்து அவனுக்கு முத்தமிடும் காட்சி படமாக ஓடியது.​


விழிகள் விரிய அதிர்ந்து அவனை பார்த்தாள். அவள் செய்த காரியத்தை நினைக்க அவமானத்தில் கூனி குறுகி நின்றிருந்தாள். அழுகையை அடக்க முடியவில்லை அவளால்.​


"கேட்ட தானே. இப்போ மட்டும் இந்த கல்யாணம் நடக்கலன்னா...உன் மேல செக்ஸுவல் ஹராஸ்மென்ட் கேஸ் போடுவேன். அப்புறம் உன் பேர் மட்டும் இல்லை உன் கூட பிறந்த பாவத்துக்காக உன் அக்கா பேரும் கெட்டு போயிடும். மொத்த குடும்பமும் அவமான பட வேண்டியிருக்கும்" என்றான்.​


அவன் சொல்லியதை கேட்டு அதிர்ந்து விட்டாள் பெண்ணவள். அப்படி ஒரு அவப்பெயர் அவளுக்கு வருமானால் அது அவளை மட்டுமின்றி அவளை சார்ந்தவர்களையும் அல்லவா பாதித்துவிடும்.​


ஈரமான விழிகளுடன் தலையை இடமும் வலமும் ஆட்டியபடி இருக்கரங்களையும் கூப்பி அவன் முன்னே நின்றவள் "ஐயோ வேண்டாம். அப்படி ஏதும் பண்ணிடாதீங்க. அக்கா வாழ்க்கையே போயிடும். அவள் பாவம்" அழுகையுடன் வெளிவந்தது அவள் வார்த்தைகள்.​


அவளை பார்க்க ரவிக்கும் கூட பாவமாக தான் இருந்தது. பேசி சரி செய்ய எண்ணியவனாக நண்பனின் அருகே சென்று அவன் தோளில் கை வைத்தவன் " டேய்... பார்க்கவே பாவமா இருக்கா டா. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். இப்படி கல்யாணம் எல்லாம்... " என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே அவனை முறைத்த தருண்,​

"ரவி, நான் உன்னை என் கல்யாணத்துக்கு சாட்சியாக தான் கூப்பிட்டேன். சமாதானம் பேச இல்லை" என்று முடித்து விட்டான்.​

"சரி, உன் இஷ்டம்" என்றதோடு அவனும் அமைதியாகி விட்டான்.​

அடுத்து ஐயரை நோக்கி "ஐயரே தாலி" என்க அவரும் தாலியை எடுத்து வந்து தருணின் கையில் கொடுத்துவிட்டார்.​

அந்த மங்கள கயிற்றை இருக்கைகளில் ஏந்தி பிடித்தபடி அதனூடு அவளை பார்க்க அவளும் நிமிர்ந்து அவன் விழிகளுக்கு பார்த்தாள்.​

'வேண்டாம்' என்கின்ற இறைஞ்சல் அவள் விழிகளில்.​

அதை கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் பார்த்துக்கொண்டே அவள் கழுத்தில் மாங்கல்யத்தை சூட்டி மூன்று முடிச்சிட்டவன் இறுதி முடிச்சிடும் போது அவள் காதோரம் குனிந்து " ஆண்களுக்கும் கற்பு உண்டு மது" என்றான்.​

அவன் சொல்லில் அடிவாங்கியவள் விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள். மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.​


 
Status
Not open for further replies.
Top