ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 27

உலகம் முழுவதையும் தனது கதிர்கரங்களை நீட்டி அணைத்துக் கொண்டான் ஆதவன். அவனது நல்லாசியில் அடுத்த நாள் காலையும் இனிமையாக புலர்ந்திருந்தது.​

முன்தின களைப்பு உடலில் இன்னும் மிச்சம் இருந்தாலும் விஷேஷ வீடு என்பதால் அனைவரும் நேரத்திற்கே எழுந்து ஆளுக்கொரு வேலையாக செய்ய தொடங்கியிருந்தனர்.​

இன்றும் அனைவருக்கும் காலை காபி விநியோகம் செய்யும் பணியை சரோஜினி அறிவுமதியிடம் தான் கொடுத்திருந்தார்.​

அவளும் முகத்தில் புன்னகையும் நடையில் துள்ளலுமாக காபி டம்ளர்கள் நிறைந்த தட்டை எடுத்துக்கொண்டு வீட்டை ஒரு சுற்று சுற்றி வந்து அனைவருக்கும் காபி கொடுத்துக்கொண்டிருக்க வாசலில் வாடகை கார் ஒன்று வந்து நின்றது.​

அறிவுமதியின் புருவங்கள் இடுங்க அந்த காரையே பார்த்துக்கொண்டு நிற்க அதிலிருந்து இறங்கியிருந்தாள் மதுஷிகா.​

அவளை பார்த்ததும் "ஹய்... மது வந்தாச்சு... வைஷுக்கா மது வந்தாச்சு" என்று உரக்க சொல்ல அறைக்குள் இருந்த வைஷாலியும் வேகமாக வெளியில் வந்து மாடியிலிருந்து எட்டி பார்த்தாள்.​

கீழே நின்றபடி மாடியை அண்ணார்ந்து பார்த்த அறிவுமதி "மது வந்தாச்சு க்கா" என்று மீண்டும் சொன்னாள்.​

மதுஷிகா என்ற பேயரை கேட்டதும் மாடிப்படிகளில் துள்ளிக்குதித்து இறங்கி வந்தாள் வைஷாலி. அவள் கீழே வந்த நேரம் மதூஷிகாவும் உள்ளே நுழைந்திருக்க வேகமாக அவள் அருகே சென்று கட்டியணைத்திருந்தாள்.​

மதுஷிகாவும் "வைஷுக்கா…" என்று அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.​

"நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா?" என்று வைஷாலி சொல்ல அவள் அணைப்பிலிருந்து விடுபட்டுக்கொண்டே "நானும் தான் க்கா" என்றாள் தங்கை.​

"போடி... மிஸ் பண்ணுறவ நேத்தே வர வேண்டியது தானே. நீ இல்லாமலே நலுங்கு, மெஹெந்தின்னு எல்லாமே முடிஞ்சு போச்சு" என்று பொய் கோபம் கொண்டாள் மூத்தவள்.​

"சாரி வைஷுக்கா...அது தான் இப்போ வந்துட்டேன்ல" என்று தமக்கையை அவள் சமாதானம் செய்ய முயன்றுகொண்டிருக்கும் போதே "வாம்மா மகாராணி, இப்போ தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா? சொந்த அக்கா கல்யாணத்துக்கு கடைசி நேரத்துல விருந்தாளி மாதிரி வந்து சேர்ந்துட்ட போல" என்று அங்கே ஈஸ்வரியுடன் வந்து சேர்ந்திருந்த ஜெயலக்ஷ்மி ஆரம்பித்துவிட்டார்.​

அவள் வந்ததும் வராததுமாக ஜெயலக்ஷ்மி தனது பல்லவியை ஆரம்பித்துவிட இதே வேறு சமயமாக இருந்திருந்தால் அடுத்த நொடியே சரியாக திருப்பி கொடுத்திருப்பாள் மதுஷிகா. ஆனால், சலசலப்புகள் எதற்கும் பதில் சொல்லும் அளவிற்கு அவளுக்கு உடலிலும் மனதிலும் தெம்பில்லாமல் இருந்தது.​

அதோடு வீட்டில் உறவினர்கள் வேறு நிறைந்திருக்க இப்பொழுது ஜெயலக்ஷ்மிக்கு சரிக்கு சரி நின்று பேசுவதும் உசிதமன்று என்று தோன்ற அமைதியாகவே நின்றிருந்தாள்.​

அதே சமயம் அவர்கள் அருகே வந்து நின்ற சரோஜினி "வந்த பொண்ணை வாசலிலேயே நிக்க வச்சு பேசிட்டிருக்கியே வைஷு. முதல்ல அவளை உள்ளே விடு" என்று வைஷாலியிடம் ஆரம்பித்து "நீ உள்ள போய் ஃப்ரெஷாகிட்டு வா டா. அம்மா காபி போட்டு வைக்குறேன்" என்று மதுஷிகாவிடம் முடித்து பாட்டிக்கும் பேத்திக்கும் மூண்டுவிட காத்திருந்த வாய் தர்க்கத்திற்கு வழியில்லாமல் செய்திருந்தார்.​

தாயிடம் "ம்ம்ம்" என்று மட்டும் பதிலிறுத்த மதுஷிகா மாடியேற அப்பொழுதுதான் நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே மாடிப்படி இறங்கி வந்துகொண்டிருந்தான் தானவீரன்.​

அவன் வருவதை கூட கவனியாமல் குனிந்தபடியே மாடிப்படியேறி வந்தவள் தன்னை நெருங்கி விட்டதும் சோர்வாக தெரிந்த அவள் முகத்தை புருவங்கள் சுளித்து பார்த்தவன் "ஹாய் வாலு" என்று எப்பொழுதும் போல அவள் தலையை கலைத்துவிட்டு வரவேற்றான் அவன்.​

அவனை நிமிர்ந்து பார்த்தவள் "ஹாய் மாமா, நீ தானா. நான் யாரோன்னு நினைச்சேன்" என்று புன்னகைத்தபடி சொன்னாலும் அவளது கண்கள் உயிர்ப்பில்லாமல் இருப்பது போல் தான் தோன்றியது அவனுக்கு.​

சட்டென "என்னாச்சு உனக்கு?" என்று அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தவன் "உடம்பு எதுவும் சரியில்லையா?" என்று அக்கறையாக கேட்டான்.​

"நல்லா தான் மாமா இருக்கேன்” பதில் சொன்னாள் அவள்.​

"அப்புறம் எதுக்கு முகம் இப்படி பியூஸ் போன பல்பு மாதிரி இருக்கு... எக்ஸாம் எதுவும் ஊத்திகிச்சா?" என்று நமட்டு சிரிப்பு சிரித்தபடி கேட்க​

“என்னை என்ன உன்னை மாதிரி நினைச்சியா?ராத்திரியெல்லாம் தூக்கமில்லாமல் படிச்சது. அதுதான் கொஞ்சம் களைப்பா இருக்கு" என்றாள்.​

"ஆமால்ல, நீதான் படிப்பாளியாச்சே மறந்தே போயிட்டேன் பாரு" என்று தானவீரன் அவளை கிண்டல் செய்ய தொடங்கிவிட அவன் கையில் கிள்ளியவள் "உன்னை அப்புறம் கவனிச்சிக்குறேன். இப்போ ரொம்ப டயர்டா இருக்கு ஃப்ரெஷாகிட்டு வரேன், தள்ளு" என்று வழியை மறைத்துக் கொண்டிருந்தவனின் தோளில் கை வைத்து தள்ளியவள் தனது அறையை நோக்கி சென்றுவிட்டாள்.​

உள்ளே நுழைந்தவள் கையில் வைத்திருந்த பையை தூக்கி அறைக்குள்ளிருந்த சோபாவில் போட்டுவிட்டு கண்ணாடி முன்னே நின்று தன்னையே பார்த்தாள்.​

வெறுப்பாக இருந்தது.​

முத்தமிடுவதும், கட்டியணைப்பதும், சிகையில் கரம் கோர்த்து நெறிப்பதும், ஆடை கலைவதும்,மஞ்சத்தின் மேல் சரிவதுமாக அவள் நினைவில் அரைகுறையாக பதிந்த விடயங்கள் கண்முன்னே நிழலாடின.​

முகத்தை இருகைகளாலும் அழுந்த தேய்த்துக்கொண்டாள்.​

அதே கரங்கள் சிறு நடுக்கத்துடன் மெல்ல கீழிறங்கி அவள் அணிந்திருந்த ஷர்ட்டில் முதல் இரண்டு பட்டன்களை திறந்து விட்டன.​

கைகளில் நடுக்கம் சற்றே அதிகரிக்க மெல்ல இடப்பக்க மார்பை மூடியிருந்த ஷர்ட்டை மெல்ல விளக்கி பார்த்தாள். அவள் இருதயம் தடத்தடுத்துக் கொண்டிருந்த இடத்தில் பற்தடங்கள் பதிந்து அந்த இடமே சிவந்திருந்தன.​

கைகளால் அதை வருடி பார்த்தவளுக்கு கண்களில் நீர் தானாக கொட்டியது. அவள் செய்து விட்டு வந்திருந்த காரியத்தை நினைத்து அருவருப்பாக இருந்தது. கத்தி அழவேண்டும் போல இருந்தது. ஆனால், வீடே சொந்த பந்தங்களால் நிறைந்திருக்க அதை கூட அவளால் செய்ய முடியவில்லை.​

நேரே குளியலறைக்குள் நுழைந்து ஆடைகள் எதையுமே கலையாமல் துாவாலைக்குழாயை திறந்து விட்டு கொட்டும் நீருக்கடியில் நின்றுவிட்டாள். நிகழ்ந்ததை நினைக்க நினைக்க நிற்பதற்கு கூட காலில் வாழுவில்லை அவளுக்கு. தனது உடலே கால்களுக்கு பாரமாக கனக்க அப்படியே தொய்ந்து குளியலறை தரையிலேயே அமர்ந்துவிட்டாள் மதுஷிகா.​

அடுத்து என்ன செய்வது, யாரிடம் சொல்வது என்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. கொட்டும் நீருக்கடியில் அமர்ந்திருந்தவள் தலையில் அடித்துக்கொண்டே அழுதாள். அவளின் விசும்பல் ஒலி லேசாக வெளியில் வந்துவிட சட்டென்று இருக்கரங்களையும் எடுத்து வாயை பொத்திக்கொண்டே அழுதாள்.​

அவள் செய்துவிட்டு வந்த காரியத்தை வீட்டில் யாரிடமும் சொல்லும் சூழ்நிலையும் இப்போது அங்கு இல்லை என்பதை அவள் நன்கறிவாள். அவளின் வைஷு அக்காவின் திருமண வைபவம் இது. அதில் தன்னால் எந்த குளறுபடியும் நேர்ந்துவிட கூடாது என்று உறுதியாக இருந்தாள்.​

குடும்பத்தாரின் மகிழ்ச்சியில் தனது முட்டாள் தனத்தால் நிகழ்ந்த சம்பவத்தை சொல்லி மண்ணள்ளி போடவும் அவள் தயாராக இல்லை. அவர்கள் முழுமையாக அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றே நினைத்தாள்.​

எவ்வளவு நேரம் அப்படியே அழுதுகொண்டிருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. நெஞ்சில் ஏறியிருந்த பாரத்தை தனியாளாக தாங்கி கொள்ள அவளால் முடியவில்லை. சாய்ந்துகொள்ள அக்காவின் தோள் தேடியது பேதை மனது.​

ஆனால், அவளின் சோகத்தை தீர்த்துக்கொள்ளும் நேரமல்ல இது தமக்கையின் மகிழ்ச்சியை கொண்டாடும் நேரம் என்பது அவளின் புத்திக்கு உரைக்க இப்போதைக்கு தனது விடயத்தை ஓதுக்கி வைத்துவிட்டு அக்காவின் திருமணத்தை கவனிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.​

திருமண வைபவம் அனைத்தும் முடிய சம்பந்தப்பட்டவனிடமே பேசி மேற்கொண்டு செய்ய வேண்டியதை பார்த்துக்கொள்ளலாம் என்றும் நினைத்தாள்.​

ஒருபாடு அழுது தீர்த்தது என்னவோ மனதை கொஞ்சமே கொஞ்சம் ஆற்றுப்படுத்தியிருக்க தனது பிரச்சனைகளை எல்லாம் தூவாலைகுழாயில் கொட்டிய தண்ணீரோடு கண்ணீராக கரைத்து விட்டு வெளியில் வந்திருந்தாள் மதுஷிகா.​

***​

அன்று மாலை பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரிசப்ஷன் மற்றும் மறுநாள் காலை முகூர்த்தத்தில் அதே ஹோட்டலில் கல்யாணம் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் என்று அனைவரும் விருந்துபசரிப்பு முடிய அதே ஹோட்டலிலேயே தங்கிக்கொள்வது போன்று ஏற்பாடு செய்திருந்தான் தருண்.​

அதற்கேட்ப பெண் வீட்டார் அனைவரும் நேரத்திற்கே கிளம்பி ஹோட்டலுக்கு சென்றிருந்தனர்.​

மாலை ரிசெப்ஷனுக்கு நேரம் நெருங்கி கொண்டிருக்க வைஷாலிக்கு ஒப்பனை செய்ய தொடங்கியிருந்தனர் மணப்பெண்ணிற்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒப்பனை கலைஞர்கள்.​

மதுஷிகாவும் அக்காவின் அறையிலேயே அவளுடனேயே தங்கியிருக்க அவளும் ஒரு புறம் தன்னை ஆயுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் இருந்த மனநிலைக்கு இது போன்ற அலங்காரங்கள் எல்லாம் செய்துகொள்ளவே விருப்பமில்லாமல் இருந்தாலும் தமக்கையின் மகிழ்வில் எந்த குறையும் வந்துவிட கூடாது என்பதோடு தனது மாற்றத்தை யாரும் கண்டுகொண்டுவிட கூடாது என்பதிலும் கவனமாக இருந்தவள் முடிந்தவரை தன்னை மிக அழகாகவே தயார் செய்துகொண்டாள்.​

சற்று நேரத்திற்கெல்லாம் அவர்களின் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்க மதுஷிகா தான் அறைக்கதவை திறந்தாள். அறைக்குள் நுழைந்த சரோஜினி தங்கச்சிலைகளென ஆயுத்தமாகியிருந்த தனது இரு மகள்களையும் பார்த்து உள்ள பூரிப்புடன் லேசாக கண்கள் கலங்கி தான் போனார்.​

ஒரு தாயின் பூரிப்பு அது.​

"என் கண்ணே பட்டுடும் போல " என்று சொல்லிக்கொண்டே கண்ணில் தீட்டியிருந்த அஞ்சனத்தை தொட்டு இரு மகள்களுக்கும் திருஷ்டி பொட்டு வைத்து விட்டார்.​

பெரும்பாலும் வைஷாலி மற்றும் மதுஷிகா இருவரும் இது போன்று விசேஷ நாட்களில் இப்படி முழு அலங்காரங்களுடன் தயாராகும் நேரங்களில் எல்லாம் அவர்களின் தாய் இப்படி நெகிழ்ந்து நிற்பது வழக்கமாக இருந்தாலும் இன்று ஏனோ மதுஷிகாவின் கண்கள் மளுக்கென்று குளம் கட்டின.​

உயிராய் உறைந்த உறவுகளை ஏமாற்றிவிட்ட குற்றவுணர்வு ஒன்று பாறாங்கல்லாய் நெஞ்சை அழுத்தியது. சட்டென தாவி தாயை கட்டிக்கொண்டாள்.​

"என்னம்மா?" என்று அவள் தலையை வருடியபடி சரோஜினி கேட்க அப்பொழுதுதான் ஒப்பனை முடிந்திருக்க வேகமாக தங்கையின் அருகே வந்த வைஷாலியும் "ஹேய் என்னாச்சு?" என்று மதுஷிகாவின் தோளை ஆறுதலாக தடவி கொடுத்தாள்.​

தான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதை உணர்ந்துகொண்ட மதுஷிகா விழியோரம் கசிந்த நீரை துடைத்து விட்டபடியே தாயின் அணைப்பிலிருந்து விடுபட்டுக்கொண்டவள் "ஒண்ணுமில்ல. அக்கா கல்யாணமாகி நம்மை விட்டு போய்டுவால்ல. அதை நினைச்சா ஒரு மாதிரி கஷ்டமா இருக்கும்மா" என்று சொல்லி சமாளித்தாள்.​

"அட மண்டு, இதுக்கு தான் அழறியா? அக்கா என்ன அமெரிக்காவுக்கா போக போறா. இங்க பக்கத்துல தானே இருக்க போறா. தோணுற போதெல்லாம் போய் பார்த்துட்டா போச்சு" என்று தனக்கும் அதே கவலை இருந்தாலும் இளைய மகளை ஆறுதல் படுத்த அதனை காட்டிக்கொள்ளாமல் பேசினார் சரோஜினி.​

இதற்கிடையில் அவர்களை தேடிவந்திருந்தாள் அறிவுமதி.​

அவர்கள் அறைக்கதவு திறந்திருக்கவும் நேரே உள்ளே நுழைந்தவள் "சின்னம்மா, உங்களை பொண்ணை அழைச்சு வர சொல்லி அனுப்பினா இங்க என்ன பண்ணுறீங்க? அங்க சித்தப்பா உங்களை தேடிட்டிருக்காரு. மாப்பிள்ளை என்ட்ரி கொடுக்க ரெடியாம். பொண்ணுக்கு தான் வெயிட்டிங்" என்று படபடத்தாள்.​

"அட வந்த வேலையை மறந்துட்டு என்ன என்னவோ பேசிட்டிருக்கேன் பாரு. நீங்க ரெண்டு பேரும் ரெடி தானே வாங்க போகலாம்" என்று அழைத்தார் சரோஜினி.​

"நீங்க அக்காவை அழைச்சிட்டு போங்கம்மா. நான் இப்போ வரேன்" என்றாள் மதுஷிகா.​

"சரிம்மா, சீக்கிரம் வந்திடு" என்று சொல்லிவிட்டு வைஷாலி மற்றும் அறிவுமதி இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.​

அவர்களை அனுப்பிவிட்டு கண்ணாடி முன்னே நின்ற மதுஷிகா "சும்மா இப்படி உடைஞ்சு போய் அழாத மது. பி ஸ்ட்ரோங்" என்று சொல்லிக்கொண்டே கண்களில் கசிந்த நீரால் கரைந்திருந்த மையை சரி செய்துகொண்டவள் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே அறையிலிருந்து வெளியேறி ரிசப்ஷன் நடக்கவிருக்கும் மண்டபத்தை நோக்கி நடந்தாள்.​

அதே சமயம் கண்ணாடி முன்னே நின்று மதுஷிகா சொல்லிய அதே வார்த்தைகளை மீண்டும் மீண்டும் தனக்கு தானே சொல்லிக்கொண்டிருந்தான் தானவீரன்.​

இதோடு எத்தனையாவது முறை சொல்லிவிட்டான் என்றும் தெரியவில்லை. தருணுடன் வைஷாலியை சேர்த்து வைத்து பார்க்க வேண்டும் என்கின்ற எண்ணமே அவன் மனதை ஈட்டியால் குத்தி கிழித்துக்கொண்டிருக்க அந்த காட்சியை கண்களால் பார்க்க மனதளவில் தன்னை தயாராக்கிக்கொண்டிருந்தான் அவன்.​

இறுதியாக ஒருமுறை மீண்டும் "பி ஸ்ட்ரோங் வீரா" என்று சொல்லிக்கொண்டவன் கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தான்.​

நேரமாகிவிட்டதை உணர்ந்தவன் போட்டிருந்த கருநீல நிற ஷர்ட்டின் கையை முட்டி வரை மடித்துவிட்டபடி தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். விழிகளை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே அறையிலிருந்து வெளியேறி அவனும் ரிசெப்ஷன் மண்டபத்தை நோக்கி தான் நடந்தான்.​

மின்தூக்கியில் நுழையப்போகும் அதே சமயம் மதுஷிகாவும் மின்தூக்கியில் நுழைந்திருக்க இருவரும் ஒன்றாகவே ரிசெப்ஷன் மண்டபத்திற்குள் நுழைந்திருந்தனர்.​

அவர்கள் மண்டபத்திற்குள் நுழைவதற்கும் மண்டபத்திற்குள் இது போன்ற நிகழ்வுகளுக்காகவென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த பால்கனி போன்ற அமைப்புடன் ஒட்டி அமையப்பெற்ற சுருள் படியிலிருந்து கல்யாண மாப்பிள்ளை மற்றும் பெண்ணும் கிராண்ட் என்ட்ரி கொடுப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.​

தருண் கருப்பு நிற கோர்ட் சூட்டில் கம்பிரமாக நடந்து வர அவனுக்கு பொருத்தமாக அடர் சிகப்பு நிற லெஹெங்கா அணிந்து அதற்கு தோதாக குண்டன் வகை ஆபரணங்கள் பூட்டி அம்சமாக நடந்து வந்தாள் வைஷாலி.​

பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலின் துணையுடன் இருவரும் கரம் கோர்த்து அந்த சுருள் படியில் ஒவ்வொரு படியாக இறங்கி வர மணமக்களின் ஜோடி பொருத்தத்தை பார்க்க வந்திருந்த சொந்தங்களுக்கு இரு விழிகள் போதவில்லை.​

அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நேரம் தருண் மற்றும் வைஷாலியை ஜோடியாக பார்த்ததும் மனம் கலங்கினாலும் வலியை பொறுத்துக்கொண்டு புன்னகைத்தது தானவீரன் என்றால் அக்காவின் கரம் கோர்த்து வந்தவனை பார்த்து அதிர்ந்து நின்றது என்னவோ மதுஷிகா தான்.​

 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 28

தருணை விழிவிரிய பார்த்த மதுஷிகாவின் இதழ்கள் தன்னையும் அறியாமல் "தருண் தோமஸ்" என்று சத்தமாகவே சொல்லியிருக்க அவள் குரலில் மணமக்களின் மீதிருந்த விழிகளை அகற்றி அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தான் தானவீரன்.​

"ஹேய் மறந்தே போய்ட்டேன்… நீ தருணை இன்னும் மீட் பண்ணதே இல்லை தானே. உன் ஃபேவரட் 'டாம்' தான் உன் வருங்கால மாமா, தருண் தாமஸ்" என்று தனது ரணங்களை எல்லாம் மனதில் மறைத்துக்கொண்டு முயன்று வரவழைத்த குதூகல குரலுடன் தானவீரன் சொல்ல அவளோ இன்னமும் மேடையில் நின்ற தருணையே பார்த்தபடி வாயை பிளந்துகொண்டு நின்றாள்.​

அவள் உறைந்து நின்ற நிலையை பார்த்து ஒற்றை விரலை அவள் தாடையின் கீழ் வைத்து அழுத்தி திறந்திருந்த அவள் வாயை மூடிய தானவீரன் " என்ன ஷாக் ஆகிட்டியா? நீ இந்த சர்ப்ரைஸை எதிர்பார்க்கவே இல்லைல?" என்று கேட்டான்.​

அவன் செய்கையிலேயே நிஜ உலகிற்கு மீண்டு வந்தவள் "சத்தியமா இல்லை" என்று தருணின் மீதிருந்த விழிகளை அகற்றாமலே சொல்ல கிண்டலாக சிரித்தவன் "சரி எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துட்டிருக்க போற? வா, முன்னுக்கு போகலாம். நமக்கு ரிசெர்வ்ட் பண்ணுன டேபிள் அங்க இருக்கு. அங்க போய் உன் அதிர்ச்சியை கன்டினியூ பண்ணிக்கலாம் வா" என்றழைக்க "நீ போ மாமா. நான் இப்போ வந்திடுறேன்" என்றாள்.​

"ஏன்?" என்று அவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அறிவுமதி இளமதியுடன் அவர்களை நோக்கி வந்துகொண்டிருப்பதை பார்த்தவன் 'ஆத்தாடி, இம்சை வருது' என்று மனதில் நினைத்தபடியே "சரி, சீக்கிரம் வந்து சேரு" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.​

உறவினர்கள் கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து முன்னிருக்கும் மேசையை நோக்கி நடந்தவனின் விழிகள் என்னவோ மேடையில் நின்றிருந்த வைஷாலியையே தழுவி நின்றன.​

நாளை பொழுது விடிந்தால் அவனின் வைஷாலி மாற்றான் மனைவியாகிவிடுவாள். அவளை ரசிப்பதற்கு கூட அவனுக்கு உரிமை இருக்கப்போவதில்லை.​

ஒட்டு மொத்தமாக அவளை விட்டு ஒரு எட்டு தள்ளியே நிற்க வேண்டும். அவனது உரிமையான பேச்சுகளுக்கு கூட இனி தடை விதிக்கப்பட்டுவிடும்.​

மொத்தமாக அவளை விட்டுக்கொடுத்துவிட வேண்டிய புள்ளியில் வந்து நிற்கின்றான்.​

அவளை பார்த்தபடியே நடந்து சென்றவனின் பார்வை மங்கலாக தெரிந்தது. அவனறியாமலே அவன் கண்கள் கலங்குகின்றன.​

ஒரு நொடி நின்று அருகே இருந்த நாற்காலியை இறுக பற்றிகொண்டவன் கண்களை அழுந்த மூடித்திறந்தான். ஒரு துளி கண்ணீர் உருண்டு விழுந்து கன்னம் நனைத்தது.​

ஆண்கள் என்றால் அழக்கூடாது என்று எவன் சொல்லி வைத்தான் என்று இப்பொழுது யோசித்தான் அவன்.​

கண்ணீர் பெண்களுக்கு மட்டும் உரியதா என்ன? ஆண்களின் கண்களிலும் நீர் சுறக்க தானே செய்கின்றது.​

அழுகை ஆண்களை பலவீனர்களாக மாற்றுகின்றது என்பது எவ்வளவு பெரிய பொய். உண்மையில் அது அவர்களின் உணர்வுகளின் ஆழத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றது.​

அதை இந்த நொடி அனுபவப் பூர்வமாக தெரிந்துக்கொண்டான் அவன்.​

இப்போதெல்லாம் அவன் கண்களும் அடிக்கடி கலங்குகின்றனவே. உயிரின் ஆழத்தில் அவன் புதைத்து வைக்க முயலும் காதலின் வெளிப்பாடுதான் அது.​

அவன் தைரியசாலி தான். எதையும், யாரையும் எதிர்த்து நிற்கும் வீரன் தான். மனோதிடமும் துணிச்சலும் அவன் கூடவே பிறந்தது.​

ஆனால், இந்த ஒருதலை காதலை, அது கொடுக்கும் வலியை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதிலும் அனைத்தையும் தனக்குள் புதைத்துக்கொண்டு புன்னகைக்க வேண்டும் என்பது அவனுக்கு பெரும் வேதனையாக இருந்தது.​

காலம் கடந்து புரிந்துகொண்ட இந்தக் காதலை அவன் புரிந்துக்கொள்ளாமலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இக்கணம் நினைத்துக்கொண்டான்.​

இதற்கிடையில் ரிசெப்ஷனும் இனிதே தொடங்கியிருக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அடுத்தடுத்த நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறிக்கொண்டிருந்தன.​

அந்த நிகழ்வுகளை எல்லாம் வழிநடத்தி செல்ல தொகுப்பாளினியும் நியமிக்க பட்டிருக்க ரிசெப்ஷனும் எந்த தங்கு தடையுமின்றி சீராக சென்றுக்கொண்டிருந்தது.​

மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொள்ளுதல், கேக் வெட்டுதல் என்று இது போன்ற நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தேற அதுவரை தன்னை சமாளித்துக்கொண்டு அங்கே இருந்தவனுக்கு அதற்குமேலும் தனது மனதின் வலியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.​

மனமக்களுக்கான முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் முடிய விருந்தினர்களின் கவனமும் பஃபே முறையில் பரிமாற பட்டிருந்த உணவுகளின் பக்கம் திரும்பிவிட அவனும் மெதுவாக அங்கிருந்து அகன்று மண்டபத்தை விட்டு வெளியேறி அருகே இருந்த பூங்காவிற்குள் நுழைந்துவிட்டான்.​

இப்பொழுது அவனுக்கு தேவை தனிமை தான். அது அவனுக்கு அங்கே கிடைத்தது. பூங்காவில் போடப்பட்டிருந்த பெஞ்சில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியவன் வானத்தை வெறித்தபடி அப்படியே அமர்ந்துவிட்டான்.​

எவ்வளவு நேரம் அங்கே இருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. அதிக நேரம் இருந்துவிட்டது போல தோன்ற ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்தபடியே எழுந்துகொண்டவன் மீண்டும் மண்டபத்தை நோக்கி செல்ல ரிசெப்ஷன் முடிந்து வந்திருந்தவர்கள் ஒவொருவராக களைந்து சென்றுக்கொண்டிருந்தனர்.​

அவர்களை எல்லாம் ஒரு பெருமூச்சுடன் பார்த்துகொண்டே உள்ளே நுழைந்தவனை பார்த்த வைஷாலி.​

"வீர் மாமா" என்று அழைத்தாள்.​

அவனும் அவள் அருகே செல்ல "எங்க போனீங்க. எவ்வளவு நேரம் தேடுனேன் தெரியுமா? போன் பண்ணுனேன் எடுக்கவும் இல்லை" என்று கடிந்துகொண்டாள்.​

புருவம் இடுங்க பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து பார்த்துக்கொண்டே " சாரி,போன் சைலென்டில் இருந்துச்சு, கவனிக்கல" என்றவன் " எதுக்கு தேடுன?" என்று கேட்டான்.​

"நீங்க, நான், மது அண்ட் தருண் நாலு பெரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமுன்னு தான். எவ்வளோ நேரம் தேடினேன் தெரியுமா? மதுவை கூட பிடிக்கவே முடியல. எப்பவும் பக்கத்துலயே நிக்குறவ இன்னிக்கு மதி கூட சேர்ந்து சுத்திட்டே இருக்கா. கண்ணுளையே சிக்க மாட்டுறா. என்னாச்சு இன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும்" என்று சலித்துக்கொண்டாள்.​

"இப்போ என்ன போட்டோ தானே எடுக்கணும் இரு வரேன்" என்றபடி அவன் விழிகளை மண்டபத்தை சுற்றி சுழலவிட்டான். அங்கே ஒரு ஓரத்தில் அறிவுமதியுடன் நின்றிருந்த மதுஷிகா அவன் கண்களில் பட "மது" என்று உரக்க அழைத்தான்.​

அவனின் குரலில் திரும்பி பார்த்தவளை "கொஞ்சம் வா" என்று கூப்பிட அவளும் வந்து சேர்ந்திருந்தாள்​

மதுவும் வந்து விட தருணும் வைஷாலியும் நடுவில் நிற்க வைஷாலியின் அருகே மதுவும் தருணின் அருகே தானவீரனும் நின்றிருக்க புகைப்பட கலைஞரும் அவர்கள் நால்வரையும் அழகாக புகைப்படமாக கிளிக்கியிருந்தார்.​

***​

அடுத்த நாள் காலையும் யாருக்கும் காத்திராமல் இனிதே விடிந்திருந்தது.​

நேரத்திற்கே வைஷாலியின் அறைக்கதவை தட்டிக்கொண்டு நின்றனர் சரோஜினியும் ஈஸ்வரியும்.​

அந்த சத்தத்தில் கண் விழித்தவள் எழுந்து சென்று கதவை திறக்க உள்ளே நுழைந்தவர்கள் "வைஷு குளிச்சிட்டு வாம்மா ரெடியாகணும்ல" என்றார்.​

வைஷுவும் "சரிம்மா" என்றபடி பூந்துவாலையை எடுத்துக்கொண்டு குளிக்க செல்ல "மது எங்க?" என்று கேட்டார்.​

"அவள் நைட்டே மதி கூட பேசிட்டு வரேன்னு அவள் ரூமுக்கு போனா. அங்கையே தூங்கிட்டா போல" என்றாள் அவள்.​

"கொஞ்சமாவது புத்தியிருக்கா அவளுக்கு. கல்யாண பொண்ணை தனியா விட்டுட்டு அரட்டை அடிக்க போயிருக்கா பாரு" என்று ஈஸ்வரி ஆரம்பிக்க "அத்தை, நான் ரூமுக்குள்ள பத்திரமாத்தானே இருக்கேன். அப்புறம் எதுக்கு அவளுக்கு திட்டுறீங்க?" என்று சொன்னாள் வைஷாலி.​

"விடு ஈஸ்வரி, பார்த்து ரொம்ப நாள் ஆச்சுதானே அதுதான் பேசிட்டிருக்கலாமுன்னு நினைச்சிருப்பா. இதுபோல ஏதாவது விசேஷத்துல பார்த்தா தானே உண்டு" என்று சரோஜினியும் சொல்ல "ம்க்கும்... அம்மாவும் பொண்ணும் அவளை விட்டு கொடுத்துட்டா தான் அதிசயம்" என்று நொடித்துக்கொண்டார் ஈஸ்வரி.​

"சரி சரி நேரமாகுது வாங்க அடுத்த வேலையை பார்ப்போம்" என்று சரோஜினி விரட்ட அடுத்தடுத்து நடக்க வேண்டிய காரியங்களும் துரித கதியில் நடந்தேற வைஷாலியும் குளித்து முடித்து ஒப்பனை கலைஞர்களின் உதவியுடன் தங்க நிற புடவையில் தங்க சிலையென ஆயத்தமாகி இருந்தாள்.​

அப்போது வரை மதுஷிகா அவளின் அறை பக்கமே வராதிருக்க துணுக்குற்றவள் எழுந்து சென்று அங்கிருந்த அலமாரியை திறந்து பார்த்தாள்.​

திருமணத்திற்காக மாதூஷிக்காவிற்கென்று எடுத்த உடைகள் எல்லாம் அப்படியே இருந்தன.​

அதே சமயம் சரோஜினி, ஈஸ்வரி மற்றும் ஜெயலக்ஷ்மி என்று அனைவரும் வைஷாலியின் அறைக்குள் நுழைந்திருக்க அவர்களை திரும்பி பார்த்தவள் "மது எங்கம்மா? டைம் ஆகுது. ஆனால், அவள் இன்னும் வரவே இல்லையே. அவளோட டிரஸ் கூட இங்க தான் இருக்கு" என்றாள்.​

அவள் அருகே சென்று அலமாரிக்குள் எட்டி பார்த்த சரோஜினி அவளின் உடைகள் அப்படியே ஹாங்கரில் மாட்டியிருப்பதை பார்த்தவர் "ம்பச், வர வர இந்த பொண்ணுக்கு பொறுப்பே இல்லை. நேரமாகுது இன்னும் ரெடி ஆகாமல் எங்க போனா?" என்று திட்டிக்கொண்டே மதுவுக்கு அழைப்பதற்காக அலைபேசியை கையில் எடுக்க "உன் பொண்ணுக்கு பொறுப்பே இல்லைன்னு உனக்கு இப்போதான் தெரியுமா?" என்று கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் குத்தி பேசினார் ஜெயலக்ஷ்மி.​

"அப்பத்தா ப்ளீஸ்" என்று வைஷாலி சொல்ல "சரி, சரி நான் உன் தங்கச்சிய ஒன்னும் சொல்லலம்மா" என்றவர் அமைதியாகிவிட்டார்.​

அதே சமயம் மதுவுக்கு அழைத்து அழைத்து தோற்றுப்போன சரோஜினி "எங்க போயிட்டா இந்த பொண்ணு. ஃபோனை கூட எடுக்க மாட்டுறாளே?" என்று பதறினார்.​

"வீர் மாமாவுக்கு ஃபோன் பண்ணி பாருங்கம்மா. அவர் கூட எங்கையும் போயிருக்க போறா" என்று வைஷாலி சொன்ன நேரம் சரியாக அறைக்குள் மூச்சிரைக்க ஓடி வந்தாள் அறிவுமதி.​

"வைஷுக்கா...அங்க... அங்க" என்று அவள் ஏதோ சொல்ல வர அவளின் களேபரமான முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று புரிந்துகொண்டவர்களுக்கு ஒரு நொடி இருதயம் நின்று துடித்தது.​

"அங்க, அங்கன்னா... என்னடி? சொல்லுறதை ஒழுங்கா சொல்லு..." என்று ஜெயலக்ஷ்மி அதட்ட "அங்க தருண் மாமாவும் மதுவும்..." என்று ஆரம்பித்தவளுக்கு அதை எப்படி சொல்வதென்றும் தெரியாமல் தடுமாறி கொண்டிருக்க "என்னாச்சு மதி?" என்று கேட்டாள் வைஷாலி.​

"அவங்க கல்யாணம் பண்ணிகிட்டாங்க" என்று சொல்லிய அடுத்த கணம் சரோஜினி, ஈஸ்வரி, ஜெயலக்ஷ்மி என்று அங்கே நின்ற அனைவருக்கும் அதிர்ச்சியில் நெஞ்சே வெடிப்பது போல ஆகிவிட அவள் சொல்லியதை கிரகித்துக்கொள்ளவே அவர்களுக்கு சில நொடிகள் தேவைப்பட்டன.​

அவர்களுக்கே அப்படி என்றால் வைஷாலிக்கு உலகமே நின்றுவிட்ட உணர்வு. மூச்செடுக்கவே முடியவில்லை அதிர்ச்சியில் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டவள் "என்னடி சொல்லுற?" என்று கேட்க "ஐயோ அக்கா, நீயே வந்து பாரேன்" என்றபடி அவள் கையை பிடித்து திருமண மண்டபத்திற்கு கிட்ட தட்ட இழுத்துக்கொண்டு சென்றாள் அறிவுமதி.​

ஏனையவர்களும் அவள் சொல்லியதில் எள்ளளவும் உண்மை இருக்க கூடாது கடவுளே என்ற வேண்டுதலோடு உயிரை கையில் பிடித்துக்கொண்டே அவள் பின்னே சென்றனர்.​

கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்த வைஷாலி அவளின் வழியை மறைத்து கொண்டு நின்றிருந்த உறவினர்களை எல்லாம் அவசரமாக விலக்கி தள்ளியபடி வேக எட்டுகளுடன் உள்ளே செல்ல அங்கே நட்ட நடு மண்டபத்தில் மாலையும் கழுத்துமாக நின்றிருந்தனர் தருண் மற்றும் மதுஷிகா.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

பட்டு சட்டை வேட்டி சகிதம் உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் மதுஷிகாவின் கரத்தை பற்றியபடி தருண் நின்றிருக்க அவன் அருகே பச்சை நிற பட்டு புடவையில் கழுத்தில் மஞ்சள் தாலி மின்ன தலையை குனிந்தபடி நின்றிருந்தாள் அவனின் மனைவி மதுஷிகா.​

அவர்களை சுற்றி தருணின் குடும்பமும் மதுஷிகாவின் குடும்பமும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர இயலாமல் உறைந்து நிற்க திருமணத்திற்காக வந்திருந்த சொந்தங்களும் அவர்களை சூழ்ந்துக்கொண்டனர்.​

அவர்களின் கோலத்தை அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த வைஷாலியின் விழிகள் மதுஷிகாவின் விரல்களோடு தனது விரல்களை கோர்த்தபடி அவள் கரத்தை இறுக பற்றியிருந்த தருணின் கரத்தில் நிலைத்தது.​

உடைந்துவிட்டாள்.​

கண்கள் குளம் கட்டின.​

அவளை கேட்காமலே கண்ணீர் கன்னம் தொட்டிருந்தது.​

அவள் உள்ளே நுழைந்ததுமே அவளில் கவனம் பதித்த தானவீரனுக்கு அவளின் கண்ணீரை பார்க்கவே முடியவில்லை. விதி அவளை இப்படி ஒரு நிலையில் நிறுத்தியதை அவனால் தங்கிக்கொள்ளவே முடியவில்லை.​

அவளுக்கு வலித்தால் அது அவனுக்கும் வலிதானே. அவளின் வலிக்கு காரணமான தருணை அடித்து நொறுக்கும் அளவிற்கு ஆத்திரம் எழுந்தது. ஆனால், அவனின் முன்கோபத்தை இப்போது காட்டுவது உசிதமன்று.​

இந்த விடயத்தில் வைஷாலியின் வாழ்வு மட்டுமல்ல அவர்கள் வீட்டின் மற்றுமொரு பெண்ணின் வாழுவுமல்லவா அடங்கியிருக்கின்றது. பொறுமையாக கையாள்வதே சரி என்று தோன்ற அமைதியாகவே நின்றான்.​

வைஷாலியையே பார்த்துக்கொண்டு நின்றான்.​

அங்கு உறவினர்களுக்கு மத்தியில் எழுந்த சிறு சலசலப்புக்கு இடையில் அந்த விடயத்தை ஜீரணிக்க முயன்றுகொண்டிருந்த இரு குடும்பங்களுக்குள் கொடூர அமைதி ஒன்று நிலவிக்கொண்டிருந்தது.​

யார் பேசுவது என்ன பேசுவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. நடப்பது எதுவும் புரியவுமில்லை.​

வைஷாலியின் கண்ணீரை பார்த்த சரோஜினிக்கு மனசு பொறுக்கவேயில்லை வேகமாக சென்று "ஏன்டி இப்படி பண்ண?" என்று கேட்டபடி மதுஷிகாவை ஓங்கி அறைய போக அவர் கரத்தை பிடித்து தடுத்திருந்தான் தருண்.​

"உங்க பொண்ண அடிக்க மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கு. என் பொண்டாட்டிய அடிக்க இல்ல" என்றான்.​

தாய் அடிக்க வந்ததில் பயந்து விழிகளை இறுக மூடியிருந்த மதுஷிகா விழுக்கென நிமிர்ந்து அவனை அதிர்ந்து பார்க்க அதே பார்வை தான் வைஷாலியிடமும்.​

சரோஜினிக்கோ அவன் பேசியதை தாங்கவே முடியவில்லை அவன் பிடியிலிருந்து தனது கரத்தை உருவி எடுத்துக்கொண்டார். அவன் முகத்தை கூட பார்க்காமல் மாதுஷிகாவின் மீது பார்வையை பதித்தவர் "இப்போ சந்தோஷமா... அப்பத்தா சொல்லுற மாதிரி நான் நிஜமா உன்னை சரியா வளர்க்கல தான் போல. எங்கடி குறை வச்சேன். எங்க தப்பு பண்ணேன்" என்று கதறி அழ தொடங்கிவிட "அம்மா..." என்று கண்களில் நீர் வழிய அவரின் கரம் பற்றினாள் மதுஷிகா.​

"ச்சீ... தொடாத. என்னை அம்மான்னு கூப்பிடாத...கூப்பிடாதடி" என்று​

உணர்ச்சிமிகுதியில் மீண்டும் அவர் கரம் உயர்ந்து மதுஷிகாவின் முதுகில் இரண்டு அடி போட்டுவிட "சொல்லிட்டிருக்கேன்ல...புரியாதா உங்களுக்கு" என்று அந்த இடமே அதிரும் வண்ணம் அவன் கர்ஜித்ததில் அவளை அடித்துக்கொண்டிருந்த சரோஜினியின் கரம் அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டது.​

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தருணின் தாய் தந்தையருக்கும் மகன் நடந்துகொள்ளும் விதம் கொஞ்சமும் பிடிக்கவில்லை.​

அதிலும் தவறை அவன் செய்துவிட்டு நியாயம் கேட்கும் சரோஜினியை அதட்டியதில் கடுப்பான அவனது தந்தை "தருண்...என்ன பேசிட்டிருக்க" என்று அதட்டினார்.​

நிமிர்ந்து அவர் விழிகளை பார்த்தவன் "இது என் வாழ்க்கை நீங்க யாரும் தலையிட வேண்டாம்" என்று ஒரே வார்த்தையில் அவனது மொத்த குடும்பத்தையும் அடக்கிவிட்டான்.​

ஆர்த்தியோ "அப்பா கிட்ட என்னடா பேசுற..." என்று ஆரம்பிக்க "ஆர்த்தி, எதுவும் பேசாத. பட்ட அவமானம் போதும். இது அவர் வாழ்க்கை அவரே பார்த்துப்பாரு... வாங்க நாம கிளம்பலாம்" என்று சொன்னவர் தருணை தவிர தனது மனைவி இளைய பிள்ளைகள் என்று மொத்த குடும்பத்தையும் அழைத்து கொண்டு கிளம்பிவிட்டார்.​

ஒரு மகளின் வாழ்வு இன்னொரு மகளாலேயே பறிபோனதை தாங்க முடியாமல் நின்றிருந்த கிருஷ்ணகுமாரை கடந்து செல்லும் போது ஒரு நொடி நிதானித்து இரு கரம் கூப்பி தலையை குனிந்து நின்றவர் எதுவும் சொல்லாமல் அந்த மண்டபத்தை விட்டு வெளியேறியிருந்தார்.​

அதை கவனித்த தருணும் ஒரு நொடி கண்களை அழுந்த மூடி திறந்துகொண்டான். அவன் செய்த காரியத்தின் விளைவை அறிந்தே செய்திருந்தான். அப்படியிருக்க அங்கு நடக்கும் நாடகமனைத்தையும் அவன் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். மனதளவில் இறுகி போய் நின்றவனுக்கு அனைத்தையும் ஏற்கும் திடமும் வந்திருந்தது.​

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு நின்ற வைஷாலிக்கு தருணா இப்படி எல்லாம் நடந்து கொள்கின்றான் என்று நம்பவே முடியவில்லை. அவளுக்கு தெரிந்த தருண் எவ்வளவு மென்மையானவன், மரியாதையானவன்.​

ஆனால், இவன் அவளறியாத வேறு யாரோ ஒருவன் போல நடந்துகொள்கிறான். அவன் இதழ்களில் எப்பொழுதும் நிறைந்திருக்கும் புன்னகை இப்பொழுது மருந்துக்கு கூட இல்லை. அவன் ஆளுமையிலும் பொதிந்திருக்கும் பணிவு இப்போது கிஞ்சிற்றுமில்லை. எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுகின்றான். இது அவனில்லை என்று தான் அவள் மனம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டது.​

எல்லாவற்றுக்கும் மகுடமாக தன்னை காதலுடன் பார்த்த அவன் விழிகள் இப்போது யாரோ போல பார்க்க அவள் இதயம் கல் பட்ட கண்ணாடியாய் நொறுங்கி சிதறியது.​

இத்தனைக்கும் பிறகு அவளுக்கு அவனிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றே ஒன்று தான் இருந்தது.​

அவன் முன்னே சென்று நின்றாள்.​

ஒரு நொடி குனிந்து மதுஷிகாவின் கரத்தை இன்னமும் விடாமல் பற்றியிருந்த அவன் கரத்தை பார்த்து விட்டு அவன் விழிகளை பார்த்தவள் "ஏன்?" என்று தான் கேட்டாள்.​


 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 29


வைஷாலிக்கு மட்டும் அல்ல அங்கிருந்த அனைவருக்கும் அதே கேள்வி தான்.​

தருணும் கூட எதிர்பார்த்தே இருந்த கேள்வி தான் அது. மண்டபத்திற்குள் நுழையும் போதே சொல்ல வேண்டிய பதிலை ஆயிரம் முறை மனதில் சொல்லி பார்த்துக்கொண்டே தான் நுழைந்திருந்தான். ஆனால், மனதில் சொல்லியதை வைஷாலியின் விழிகளை பார்த்து சொல்வது அவனுக்கு அவ்வளவு எளிதாக இல்லை.​

ஒரு முறை தலையை குனிந்து பின் நிமிர்ந்து பார்த்தான். அழுகையையோ ஆத்திரத்தையோ பொங்கி வந்த ஏதோ ஒன்றை தனக்குள் அடக்க முயன்றதில் அவன் கழுத்து நரம்புகள் புடைத்து எழும்பின.​

ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே சிவந்த விழிகளுடன் வைஷாலியின் விழிகளுக்குள் பார்த்தவன் "சிம்பிள்...உன் தங்கச்சி உன்னை விட அழகா இருக்கா" என்றான்.​

அவன் சொல்லும் போதே மதுஷிகாவின் கரத்தை பிடித்திருந்த அவன் கரத்தில் அழுத்தம் கூட தலை கவிழ்ந்த நிலையிலிருந்து மாறி அவன் பிடித்திருந்த கரத்தை பார்த்தாள் மதுஷிகா.​

அவனின் பிடியில் அழுத்தம் கூடிக்கொண்டே போனதில் அவள் உயிர் போகும் வலியை உணர்ந்தாள். நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் இறுகி சிவந்திருந்த முகமும் புடைத்திருந்த கழுத்து நரம்புகளும் அவன் மனதின் வலியின் வெளிப்பாடு அது என்று குறிப்புக்காட்டியது.​

கட்டுக்கடங்காத வலியினை அவள் கரத்தினை அழுந்த பற்றி அடக்கிக்கொள்கின்றான் என்று தெரிந்தது.​

அவனில் இருந்து விழிகளை அகற்றி முன்னே நின்றிருந்த வைஷாலியை பார்த்தாள். அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் துணிவு கூட வரவில்லை. விழிகளை மட்டும் உயர்த்தி பார்க்க முயன்றாள்.​

தருணின் பதிலில் அதை நம்ப முடியாமல் அழுகையில் உடல் குலுங்க நின்றிருந்தாள் வைஷாலி. மதுஷிகவால் அவளை அப்படி பார்க்கவே முடியவில்லை.​

காதல் கொண்ட இரு உயிர்கள் பிரிந்து நிற்க தான் காரணமாகிவிட்டதை நினைக்க நினைக்க இந்த நொடியே இங்கேயே மறித்து போய்விட வேண்டும் என்று தோன்றியது.​

அவளின் கண்களில் கொட்டிய கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது. அன்பை கொட்டி கொடுத்த தமக்கைக்கு தன்னாலேயே இப்படி ஒரு நிலை வரும் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லையே. கடவுளே இது என்ன சோதனை...விதியை நொந்துகொண்டே நின்றிருந்தாள்.​

வைஷாலியின் அருகே நின்றிருந்த தானவீரனுக்குமே அவனது பதிலில் கடுப்பாகிவிட அவனை அடித்து துவைக்க வேண்டுமென்று வந்த ஆத்திரத்தை விரல்களை மடக்கி கைகளை அழுந்த மூடி கட்டுப்படுத்திக்கொண்டான்.​

"பொய்...பொய் சொல்லுறீங்க" என்று மட்டும் தான் வைஷாலியால் சொல்ல முடிந்தது. அவன் மீதான அவளின் கணிப்பு சரியானதாக இருந்தால் நிச்சயமாக அவளின் தருண் அப்படியானவன் இல்லை என்பதை அவள் நன்கறிவாள்.​

அவனை நம்பாத பார்வையுடன் வெறித்தவளை பார்த்த தருண் "ஏன் நம்ப முடியலையா... உன்னை பார்த்து உன் அழகில் மயங்கி அடுத்த அஞ்சாவது நிமிஷம் உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னவன் தானே நான். அதே போல தான் உன் தங்கச்சிய பார்த்ததும் அவள் உன்னை விட அழகா இருக்கான்னு தோணுச்சு. அதுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்றான்.​

அவன் பதிலில் கடுப்பான வைஷாலி அதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவனை ஓங்கி அறைய சென்றுவிட்டாள்.​

அதை எதிர்பார்த்த தருண் அவளை தடுக்கவோ விலகவோ முயற்சிக்கவில்லை.​

முதலில் சரோஜினி மதுஷிகாவை அடித்த பொழுது தடுத்தவன் இப்பொழுது வைஷாலி அவனை அடிக்க துணியும் பொழுது தடுக்க முயற்சிக்க கூட இல்லை.​

'அடித்து விடு...அப்படியாவது என்னை தண்டித்துவிடு' என்னும் தோரணையில் அப்படியே விழிமூடி நின்றுவிட்டான்.​

அவளது உள்ளங்கை தருணின் கன்னத்தை தொடும் ஒரு இன்ச் இடைவெளியில் அப்படியே நின்றுவிட ஒரு நொடி அவள் செய்ய இருந்த காரியத்தை அதிர்ந்து பார்த்த மதுஷிகாவை பக்கவாட்டாக திரும்பி பார்த்த வைஷாலி "இனி உங்களை அடிக்குறதுக்காக தொட கூட எனக்கு உரிமை இல்லை இல்லையா?" என்று கேட்டபடி அப்படியே அவள் விரல்களை மடக்கி கொண்டே கையை கீழே இறக்கியிருந்தாள்.​

"அக்கா..." என்று மதுஷிகா அழுகையினூடே அழைக்க அவளை ஒரு அற்ப புழுவை போல் பார்த்தாள் வைஷாலி.​

அந்த ஒற்றை பார்வையிலேயே சுக்குநூறாக உடைந்துவிட்டாள் மதுஷிகா.​

கண்களில் கண்ணீர் ஊற்றெடுப்பதை நிறுத்த முடியவில்லை. இதழ் கடித்து அடக்கிக்கொள்வது அவளுக்கு பெரும் போராட்டமாக இருந்தது.​

தங்கை அழுவதை வைஷாலியால் பார்க்கவும் முடியவில்லை அதே நேரத்தில் அவள் மீது எழும் ஆத்திரத்தை அடக்கி கொள்ளவும் முடியவில்லை. உணர்வுகளின் போராட்டத்தின் மத்தியில் உடல் நடுங்க நின்றாள்.​

அவளின் நிலையை பார்த்த தானவீரன் "வைஷு" என்று அழைத்த அடுத்த நொடி சட்டென்று தானவீரனின் ஒற்றை கரத்தை இருகைகளாலும் பற்றிகொண்டவள் அவள் நெற்றியை அவன் தோள் மீது முட்டி வெடித்து அழுதாள்.​

அவள் வலிகளை எல்லாம் தான் வாங்கிக்கொள்ள வழி இருக்குமா என்று இவ்வளவு நேரம் போராடிக்கொண்டிருந்தவன் தனது அடுத்த கரத்தால் அவள் தலையை மெல்ல வருடிக்கொடுத்தான்.​

அவள் வெடித்தழுத்ததில் அதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியாத கிருஷ்ணகுமார் வேகமாக தருணை நோக்கி சென்றார்.​

"நீ தானே என் பொண்ணை கேட்டு வந்த... அவள் மனசுல ஆசையை வளர்த்த. இப்போ இப்படி சபையில் நிற்க வச்சு அவள் கழுத்தை அறுத்துட்டியேடா பாவி" என்று அவன் ஷர்ட் காலரை பற்றியே விட்டார்.​

"கையை எடுங்க" என்று தனது ஷர்ட் காலரில் பதிந்திருந்த அவர் கையை அழுத்தமாக பார்த்தபடி அவன் சொல்ல "நீ முதல் பதிலை சொல்லடா" என்று அவர் அவன் காலரை இன்னும் இறுக பற்றி உலுக்கினார்.​

"எடுங்கன்னு சொல்லுறேன்ல" என்றபடி அவரின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து அகற்றிவிட்டவனின் விழிகள் ஒருமுறை வைஷாலிக்கு ஆறுதலாக நின்றிருந்த தானவீரனில் படிந்து மீள "இப்போ என்ன நான் இல்லைனா உங்க பொண்ணை கட்டிக்க வேற யாருமே இல்லையா? இல்லைனா சொல்லுங்க, உங்க மூத்த பொண்ணயும் நானே கட்டிக்குறேன். அதுக்கெதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுறீங்க?" என்றான்.​

அவனின் கீழ்த்தரமான பேச்சில் அங்கே எல்லோரும் அவனை அருவருப்பாக பார்க்க தானவீரனோ பொங்கி வந்த கோபத்தில் வைஷாலியின் கையில் இருந்து தனது கையை உருவிக்கொண்டு கிளம்பியன் நேரே சென்று தருணின் முகத்தில் ஓங்கி குத்தியிருந்தான்.​

அவன் குத்திய வேகத்தில் தருணின் முகம் இடது புறமாக திரும்பியிருக்க அவனது இதழ் வெடித்து இரத்தமும் கசியத் தொடங்கியிருந்தது.​

இதழோரம் வழிந்த குருதியை பெருவிரலால் துடைத்துக்கொண்டே தானவீரனை ஏறிட்டு பார்த்தான் தருண். அவன் இதழோரத்தில் இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுடன் கூடிய புன்னகை ஒன்று அரும்பியிருந்தது.​

அவன் இதழ்களில் உதித்த புன்னகையின் அர்த்தத்தை தானவீரனின் மனம் மொழிபெயர்க்கும் முன்னவே அவன் மூளையோ தருணுக்கு இன்னொரு அடி போட சமிஞ்சை கொடுக்க அவன் மீண்டும் கையை ஓங்கிய கணம் சட்டென்று அவன் கரத்தை பிடித்து தடுத்திருந்தாள் வைஷாலி.​

"மாமா, போதும்...விடுங்க" என்றாள்.​

தானவீரனோ "விடு வைஷு...இவனை கொல்லாமல் விடமாட்டேன்" என்று அவன் மேலும் திமிறி கொண்டு போக "ஐயோ விடுங்க மாமா…” என்று கதறியவள் தானவீரனின் கரத்தை இழுத்து பிடித்துக்கொண்டே அருகே இருந்த சேகரை பார்த்தாள்.​

அவரும் தானவீரனை தடுக்காது கைகளை கட்டிக்கொண்டு நிற்க "மாமா நீங்களாவது சொல்லுங்க" என்று கெஞ்சினாள்.​

சேகருக்கும் தருண் மற்றும் மதுஷிகாவின் செயலில் இருந்த கடுப்பில் "விடுமா அவனை. அந்த கேடு கெட்டவனுக்கு இன்னும் ரெண்டு அடி சேர்த்து போடட்டும்" என்று இத்தனை வருடங்களில் முதல் முறையாக தானவீரனுக்கு சார்பாக பேசினார்.​

"ஐயோ நீங்களுமா…. வீர் மாமா, ப்ளீஸ் நீங்களாவது நான் சொல்லுறதை கேளுங்க... ப்ளீஸ்...." என்று அவள் அழ சட்டென்று சுதாரித்துக் கொண்டவனுக்கு இப்பொழுது அவன் தருணை அடித்து துவம்சம் செய்வதை விட வைஷாலிக்கு ஆறுதலாக இருப்பதே அவசியம் என்று விளங்க தருணை முறைத்து பார்த்தபடி அவனை விட்டு விலகி நின்றான்.​

வைஷாலி இன்னமும் அவன் கைகளை பிடித்தபடி அழுதுகொண்டு நிற்க "அழாதடி ப்ளீஸ்" என்றான் ஆறுதலாக.​

"அவங்கள போக சொல்லுங்க மாமா..." என்று அவன் தோளில் சாய்ந்தபடியே அவள் விம்மி அழ தருணையும் மதுஷிகாவையும் எரித்துவிடுவது போல் பார்த்த தானவீரன் "கெட் அவுட்" என்றிருந்தான்.​

வைஷாலி மற்றும் தானவீரனையும் ஒரு நொடி ஆழ்ந்து பார்த்த தருண் திரும்பி நடக்க அவன் கரம் கோர்த்து நின்றிருந்த மதுஷிகாவும் அவனுடன் இழுபட்டு சென்றாள்.​

ஆசையாக வளர்த்த மகள்கள் இருவரின் வாழ்வும் ஒரே நாளில் கேள்விக்குறியாகி நிற்பதை பார்த்து அழுகையில் கரைந்துக்கொண்டிருந்த சரோஜினிக்கு சட்டென்று என்ன தோன்றியதோ "ஒரு நிமிஷம்" என்று செல்லும் அவர்களை நிறுத்தியிருந்தார்.​

"என்ன சொன்ன… என் பொண்ணை கட்டிக்க உன்னை விட்டா ஆள் இல்லையா? அவள் யாரை கட்டிக்க போறான்னு பார்த்துட்டு போ" என்று தருணின் முன்னே சென்று அவன் முகத்தை ஏறிட்டு பார்த்து சொன்னவர் அடுத்த நொடி சேகர் மற்றும் ஈஸ்வரியின் முன்னே சென்று நின்றார்​

"அண்ணா, என் பொண்ணுக்கு உங்க பையனை கொடுப்பீங்களா?" என்றார்.​

தானவீரன் சட்டென்று சரோஜினியை திரும்பி பார்க்க அவனது கரத்தை பற்றியபடி நின்றிருந்த வைஷாலியின் பிடி அதிர்ச்சியில் தளர்ந்திருந்தது.​

தன்னிச்சையாக அவனை விட்டு ஒரு அடி விலகி நின்றாள்.​

அதை தானவீரனும் கவனித்தான் தான். நெஞ்சில் சுருக்கென்று வலித்தாலும் தாங்கிக்கொண்டான்​

அவரின் கேள்வியில் வைஷாலி மற்றும் தானவீரனுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி தான். தருண் மட்டும் விழிகளை அழுந்த மூடித்திறந்து தன்னை சமன் செய்தபடி நின்றிருந்தான்.​

கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த அறிவுமதிக்கும் அது சிறு அதிர்ச்சியை கொடுத்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நின்றிருந்தாள் அவள்.​

"அம்மா, என்ன பேசிட்டிருக்கிங்க" என்று வைஷாலி ஆரம்பிக்க​

"வைஷு, இதுவரை எல்லாமே உன் இஷ்டமுன்னு தான் விட்டிருக்கேன். எனக்காக எதுவும் பண்ணுன்னு நான் கேட்டதே இல்லை. இப்போ கேட்குறேன். இதை மட்டும் எனக்காக பண்ணு. ஒருத்தி தான் என் தலையில் மண்ணள்ளி போட்டுட்டா. நீயாவது என் பேச்சு கேளும்மா" என்று அழுகையினூடே இருகரம் கூப்பி சொன்ன அன்னையை மீறி வைஷாலியால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.​

தானவீரனை அவள் அப்படி பார்த்ததே இல்லையே. அப்படி இருக்க அவனுடன் திருமணம் என்றால் அதை அவள் எப்படி ஏற்பாள்.​

இருந்தும் கரம் கூப்பி தன்னிடம் இறைஞ்சி நிற்கும் தாயை மறுத்து பேச அவளுக்கு வாய் வரவில்லை. சரோஜினியை அதிர்ந்து பார்த்தபடி நின்றிருந்தாள்.​

கண்களில் நீர் மட்டும் கதை எழுத உதடுகள் ஊமையாகி போயின அவளுக்கு.​

அமைதியாக நின்றிருந்தாள்.​

மீண்டும் சேகரிடம் திரும்பிய சரோஜினி "அண்ணா சொல்லுங்க. என் பொண்ணுக்கு உங்க பையனை கொடுப்பீங்களா?" என்று கேட்டார்.​

கிருஷ்ணகுமாரும் சேகரின் கையை பற்றியபடி "ஆமாப்பா, வீர் இருக்க வெளியில் பார்த்தது தப்பு தான். உன் மகனை என் மகளுக்கு கட்டி கொடுப்பியா?" என்று கேட்டார்.​

"கட்டி கொடுன்னு சொன்னா கட்டி கொடுக்க போறேன். இதையெல்லாம் கேட்கணுமா" என்று சேகர் தனது சம்மதத்தை சொல்லிவிட "ரொம்ப நன்றிப்பா" என்றார் கிருஷ்ணகுமார்.​

அடுத்து வீரிடம் சென்ற சரோஜினி "வீர், இப்பவும் உன் கிட்ட ஒரு வார்த்தை கேட்காமல் நாங்களே முடிவு பண்ணிட்டோம்...மன்னிச்சிடுப்பா. நீ சொல்லு உனக்கு சம்மதமா?" என்று கேட்டார்.​

அவன் இருக்கரங்களையும் தனது கரங்களுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு சரோஜினி கேட்க என்ன சொல்வது என்று ஒரு நிமிடம் தடுமாறியவன் நிமிர்ந்து வைஷாலியை பார்த்தான்.​

அவளோ கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்து 'இல்லை' எனும் தோரணையில் தலையாட்ட மனதளவில் நொறுங்கி விட்டான் அவன்.​

இருந்தும் வைஷாலி சொல்லி அவன் எதை செய்யாமல் விட்டிருக்கிறான். இப்பொழுதும் அவள் விருப்பப்படி தான் நடக்க நினைத்தான்.​

ஆனால், அதற்குள் அவன் கரத்தில் அழுத்தம் கொடுத்த சரோஜினி அவன் விழிகளுக்குள் கெஞ்சுதலாக பார்க்க அவனால் அவனின் அன்பு அத்தையின் மனதையும் உடைக்க முடியவில்லை. அவனை ஊட்டி வளர்த்தவர் அல்லவா.​

வைஷாலியின் நிலை அவனுக்கு புரியாமல் இல்லை. இந்த நிலையை பயன்படுத்தி அவன் காதலுக்கு ஆதாயம் தேடிக்கொள்ளவும் அவன் நினைத்திருக்கவில்லை.​

ஆனால், கூடியிருக்கும் சபைக்கு மத்தியில் இத்தனை அவமானத்திற்கும் பிறகு தன்னிடம் நிவாரணம் தேடும் உறவுகளின் மனதை அவனால் உடைக்கவும் முடியவில்லை.​

ஒரு நொடி கண்களை மூடி திறந்தவன் "உங்க இஷ்டம்" என்றான்.​

வைஷாலிக்கு தனது உலகமே மொத்தமாக சிதைந்து விட்ட உணர்வு. ஒரு அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி என்றால் இயற்கையிலேயே மென்மையான சுபாவம் கொண்ட தோகையவள் அதை எப்படி தாங்கிக்கொள்வாள்.​

தானவீரனை அவளுக்கு பிடிக்கும் தான். ஆனால், அவனை கணவனாக ஏற்பது சாத்தியமா என்று அவளுக்கே தெரியவில்லை. அந்த கேள்விகள் தலையை சுற்றி சுழன்றுகொண்டிருக்க அவள் கழுத்தில் ஏதோ விழுவது போன்று இருந்தது.​

எப்பொழுது மணமேடைக்கு அழைத்து செல்லப்பட்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை. சரோஜினி அவளை மணமேடையில் அமர்த்தி அவள் கழுத்தில் மாலையும் அணிவித்திருந்தார்.​

நிமிர்ந்து பார்த்தாள். அவள் முன்னே தருண் மதுஷிகாவின் கரத்தை பற்றிக்கொண்டு நின்றிருந்தான்.​

பக்கவாட்டாக திரும்பி பார்த்தாள் அடர் சிகப்பு நிற ஷர்ட் மற்றும் வேட்டி அணிந்திருந்த தானவீரன் கழுத்தில் மாலையுடன் அவள் அருகே அமர்ந்திருந்தான்.​

கண்களில் ஒரு துளி நீர் உருண்டு விழ மீண்டும் திரும்பி முன்னே பார்த்தாள்.​

அவர்கள் இருவரையும் உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் பார்த்துக்கொண்டே நின்றிருந்த தருண் "கங்கிராச்சுலெஷன்ஸ்" என்று சொல்லியபடி திரும்பி மண்டபத்தின் வாசலை நோக்கி நடந்தான்.​

அவன் கண்ணிலும் ஒரு துளி நீர் உருண்டு விழுந்தது.​


 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 30


தானவீரனும் வைஷாலியும் மணமேடையில் அமர்ந்திருக்க மண்டபத்தினுள் நடந்த நிகழ்வுகளால் உண்டான சலசலப்புகளும் மெல்ல அடங்கி நிலைமை சற்று சீராகியிருந்தது.​

ஐயரும் மந்திர உச்சாடனகளை தொடங்கியிருக்க மீண்டும் ஒரு கல்யாண வைபவத்திற்கு தயாராகியிருந்தது அந்த மண்டபம். ஆனால், முதலில் இருந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் ஒருவரின் முகத்திலும் இருக்கவில்லை. ஒரு வகை இறுக்கமான சூழலே அங்கே நிலவிக்கொண்டிருந்தது.​

தானவீரனும் வைஷாலியும் ஐயர் சொல்லிக்கொடுத்தவைகளை எல்லாம் இயந்திர கதியில் செய்துகொண்டிருந்தனரே தவிர இருவருக்கும் முகத்தில் சிரிப்பு என்பது மடிந்துவிட்டிருந்தது.​

வைஷாலியின் கண்களில் நீர் வற்றிப்போய் சோர்ந்திருக்க தானவீரனும் ஒருவகை இறுக்கத்துடனேதான் அமர்ந்திருந்தான்.​

தன் மனதிற்கு பிடித்த பெண். இத்தனை நாட்களாக அவன் தொலைத்துவிட்டதாக நினைத்து மறுகிய பெண். இப்பொழுது கைகளில் பொக்கிஷமாக கிடைத்து விட்ட பின்னரும் அதனை கொண்டாடும் நிலையில் அவனில்லை. மனதை பெரும் பாரம் ஒன்று அழுத்திக்கொண்டே இருந்தது.​

அவள் கண்ணீர் ஊற்றி தனது காதல் செடியை வளர்க்க நினைக்கும் அரக்கனும் அவனில்லை.​

இருந்தும் விதி வசத்தால் காதலித்த பெண் அருகில் மணப்பெண்ணாக அமர்ந்திருக்க அவள் கழுத்தில் ஏற வேண்டிய மாங்கல்யம் அவன் கையில் இருந்தது.​

இதே சமயம் மணமேடைக்கு கீழ் ஒரு ஓரமாக நின்று நடப்பவைகளை பார்த்துக்கொண்டிருந்த அறிவுமதியின் அருகே வந்த இளமதி "கஷ்டமா இருக்கா அக்கா?" என்றாள் தானவீரனையும் வைஷாலியையும் கண்களால் காட்டி.​

"பச்..பச்...அதெல்லாம் ஒண்ணுமில்ல..." என்றாள் அறிவுமதி. அவள் விழிகள் மணவரையில் கம்பீரமாக வீற்றிருந்த தானவீரனிலேயே நிலைத்திருந்தன.​

"நிஜமா தான் சொல்லுறியா... அப்போ அவரை அந்த துரத்து துரத்துணியே...அதெல்லாம்?" என்று இளமதி கேட்க "இங்க பாரு இளா, நமக்கு ஒருத்தங்களை பிடிச்சா அவங்களுக்கும் நம்மளை பிடிக்கணும்னு கட்டாயம் இல்லை. எனக்கு வீர் மாமாவை பிடிக்கும். ஆனால், அவர் எப்பவுமே எனக்கு நம்பிக்கை கொடுக்குற போல நடந்துக்கிட்டதே இல்லை. இருந்தாலும், ஆசைப்பட்டா அதுக்காக கொஞ்சமாவது முயற்சி பண்ணனும் தானே. அதுதான் அவரும் ஃப்ரீ ஆஹ் தானே இருக்காருன்னு ட்ரை பண்ணி பார்த்தேன் அவ்வளவு தான். ஆனால், அவர் வைஷு அக்காவுக்கு தான்னு விதிக்கப்பட்டிருக்கு போல" என்றாள்.​

எப்பொழுதும் விளையாட்டு தனமாகவே சுற்றி திரியும் அறிவுமதியை தான் இளமதி பார்த்திருக்கிறாள். ஆனால், அவளிடம் இப்படியான முதிர்ச்சியும் இருப்பதை இப்பொழுதுதான் அவள் பார்க்கிறாள்.​

தமக்கையை நினைத்து பெருமிதமாக இருந்தாலும் வருத்தத்தை உள்ளுக்குள் வைத்து மருகுகின்றாளோ என்ற சந்தேகம் எழ "அப்போ நிஜமாவே உனக்கு வருத்தமே இல்லையா?" என்று மீண்டும் கேட்டாள் இளமதி.​

"வருத்தமே இல்லைன்னு பொய் சொல்லமாட்டேன். கொஞ்சம் இருக்கு தான். ஆனால், அதெல்லாம் சரியாகிடும் விடு. இந்த வீரன் இல்லனா ஒரு மாறன் அவ்வளவுதானே" என்றாள் சின்ன புன்னகையுடன்.​

அதே சமயம் 'கெட்டிமேளம் கெட்டிமேளம்' என்ற ஐயர் கொடுத்த குரலை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, மாங்கல்யம் ஏந்தியிருந்த தானவீரனின் கரங்கள் வைஷாலியின் கழுத்தை நோக்கி பயணப்பட்டிருக்க அறிவுமதி மற்றும் இளமதியோடு சேர்ந்து மண்டபத்தில் குழுமியிருந்த அத்தனை பேரின் கவனமும் மணமேடைக்கு திரும்பியிருந்தது.​

***​

அதே சமயம் இங்கே மதுஷிகாவை அழைத்துகொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தான் தருண்.​

தனது கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் வகை காரை வாசலில் நிறுத்தியவன் வண்டியில் இருந்து இறங்கி வேகமாக வீட்டிற்குள் சென்றான்.​

அவன் வண்டியிலிருந்து இறங்கியதை பார்த்த மதுஷிகாவும் அவனுடன் இறங்கிக்கொண்டாளே தவிர உள்ளே செல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அங்கேயே நின்றுவிட வாசல் வரை சென்றவன் ஒரு நொடி நின்று அவளை திரும்பி பார்த்தான்.​

அனல் தெறிக்கும் அவன் பார்வை பெண்ணை சுட்டதில் அவள் உடலே பற்றி எறிவது போல் தகித்தது.​

தலையை குனிந்து கொண்டாள். அவனை எதிர்கொள்ளும் சக்தி அவளுக்கு கிஞ்சிற்றும் இல்லை.​

வீட்டிற்குள் நுழையாமல் மீண்டும் அவள் அருகே வந்தவன் "யாருக்கும் எதுவும் தெரிய கூடாது புரியுதா?" என்றான். அவன் குரலில் அழுத்தம் அதிகமாகவே இருந்தது.​

"ம்ம்ம்" என்று தலையட்டியவளின் விழியில் இருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு விழுந்தது.​

"அழாதடி...ஆத்திரமா வருது. உன்னை இங்கையே கொன்னு புதைச்சிடுவேனோன்னு இருக்கு" என்று கடித்த பற்களினூடே அவன் வார்த்தைகள் வந்து விழ அவளுக்கு அழுகை இன்னும் அதிகமானது தன மிச்சம்.​

கஷ்டப்பட்டு அடக்கி கொண்டாள். மூக்கை உறிஞ்சி இதழ் கடித்து கண்ணீரை சிந்தவிடாமல் முயன்று கட்டுப்படுத்தியும் இதழ்களை மீறி சின்னதாய் ஒரு விசும்பல் சத்தம் வெளியில் வந்துவிட்டது.​

அவளை தீ பார்வை பார்த்தபடி ஒற்றை கையை ஓங்கி அவளுக்கு பின்னால் நின்றிருந்த காரின் மீது அடித்திருந்தான் தருண்.​

அவன் செயலில் அவள் உடல் லேசாக அதிர்ந்து அடங்க அதை கவனித்தவன் கண்களை அழுந்த மூடி பொறுமையை இழுத்துப்பிடித்தபடி "உள்ள வா" என்று சொல்லிவிட்டு திரும்பி வீட்டிற்குள் நடக்க அவளும் மெல்ல அடிமேல் அடி எடுத்து வைத்து அவனுக்கு பின் வீட்டிற்குள் நுழைந்தாள்.​

நடையில் எப்பொழுதும் இருக்கும் துள்ளலும் முகத்தில் தாண்டவமாடும் துறுதுறுப்பும் எங்கோ தொலைந்து போயிருந்தது. அவளுக்குள் இருந்த குழந்தை தனம் மடிந்து போய்விட்டது போலும். சோகமே உருவாக வலது காலோ அல்லது இடது காலோ எதை எடுத்து வைத்தோம் என்கின்ற உணர்வு கூட இன்றி தளர்ந்த நடையுடன் வீட்டிற்குள் நுழைந்திருந்தாள்​

புன்னகை முகத்துடன் வரவேற்கும் சொந்தங்கள் இல்லை, ஆரத்தி இல்லை, கேலியும் கிண்டலுடன் கூடிய கலகலப்பு என்று எதுவுமே இல்லை. கல்யாண வீடாக இருந்திருக்க வேண்டிய அந்த இல்லம் மயான அமைதி பூண்டிருந்தது.​

தருணின் தந்தை, தாய், தம்பி, தங்கை என்று அனைவரும் முன்னறையில் தான் இருந்தார்கள்.​

அவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் வேகமாக மாடியேறி சென்றவன் அவனது அறைக்கதவை அடித்து சாற்றியிருந்தான்.அந்த சத்தத்தில் கீழே நின்றிருந்த மதுஷிகா ஒரு நொடி விழிகளை அழுந்த மூடி திறந்தாள்.​

தருணின் நடையிலும் செயலிலும் இருந்த ஆக்ரோஷத்தை வைத்தே மகனின் திடீர் திருமணத்திற்கு பின்னால் ஏதோ ஒளிந்திருக்கின்றது என்று புரிந்துகொண்டார் ஜோஷ்வா தோமஸ்.​

அவன் வந்ததும் விசாரிக்க வேண்டும் என்று தான் மொத்த குடும்பமும் காத்திருந்தனர். ஆனால், மகன் மருமகளின் நடவடிக்கைகளை அவதானித்தவருக்கு விஷயத்தை இப்போதைக்கு ஆறப்போடுவது தான் சரி என்று தோன்றியது.​

ஆகவே, தற்சமயத்திற்கு அமைதி காக்கவே நினைத்தவரின் பார்வை அங்கே செய்வதறியாது நின்றிருந்த மதுஷிகாவின் மீதே அழுந்த படிந்தது.​

அவளுக்கு அடுத்து என்ன செய்யவது எங்கே செல்வது என்று தெரியாமல் தருண் விட்டு சென்ற இடத்திலேயே நின்றிருக்க அவள் நிலை உணர்ந்தவர் "ஆர்த்தி...அந்த பொண்ண" என்று மனைவியை பார்த்து ஏதோ சொல்ல வர "என் கிட்ட எதுவும் சொல்லாதீங்க, ப்ளீஸ்" என்றபடி விருட்டென எழுந்து உள்ளே சென்றுவிட்டார் ஆர்த்தி.​

ஆசை ஆசையாக திட்டமிட்டு நடக்க இருந்த மூத்த மகனின் திருமணம் இப்படி திருட்டு கல்யாணமாக மாறிப்போயிருந்ததில் உண்டான ஏமாற்றம் மதுஷிகாவின் மீது கோபமாக உருமாறியிருக்க போகும் போது அவளை முறைத்து விட்டு செல்லவும் தவறவில்லை அவர்.​

மனைவியின் கோபம் புரிய ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு கொண்ட ஜோஷுவா "தாரா" என்று மகளை அழைத்து மதுவின் புறம் கண் காட்டினார்.​

தாராவும் தந்தையின் குறிப்புணர்ந்து மதுஷிகாவின் அருகே சென்றவள் "அண்ணா ரூம் தேர்ட் ஃப்ளோர்ல ரெண்டாவது ரூம்" என்றாள்.​

"ம்ம்ம்" என்ற மதுஷிகாவுக்கு அவன் அவன் அறைக்கு செல்லவே பயமாக தான் இருந்தது என்றாலும் அங்கே அமர்ந்திருந்தவர்களுக்கு காட்சிப்பொருளாக நிற்க பிடிக்காமல் மெல்ல அறையை நோக்கி சென்றாள்.​

மூன்று மாடி நவீன வீடு அதில் மூன்றாவது தளம் முழுமையும் பெரும்பாலும் தண்ருனின் உபயோகத்திற்கானது. அவனின் அலுவலக அறை, ஜிம் அறை, படுக்கை அறை, அவன் கவர் சோங் ரெகார்ட் செய்வதற்கான ஸ்டூடியோ என்று எல்லாமே அந்த தளத்தில் தான் இருந்தன.​

அவள் படியேறி செல்லும் போதே தருணின் அறைக்குள் இருந்து பொருட்கள் உடைந்து நொறுங்கும் சத்தமும் கேட்டது.​

இதயம் தடதடக்க மெதுவாக அவன் அறையை நெருங்கினாள். அறையில் பொருட்கள் உடையும் சட்டம மட்டும் நிற்கவே இல்லை.​

கைகள் நடுங்க மெல்ல கதவின் பிடியை பிடித்து மெல்ல கதவை திறந்தாள். உள்ளே ருத்ரமூர்த்தியென உருமாறியிருந்தவன் தலையை பிடித்துக்கொண்டே கட்டிலில் அமர்ந்திருந்தான்.​

கைகளில் கிடைத்த பொருட்கள் எல்லாமே அவன் கோப தீக்கு இறையாகி இருந்தன. கண்ணாடி பொருட்கள் எல்லாம் தரையில் நொறுங்கி கிடந்தன. மனதில் இருந்த ஆத்திரம் எல்லாவற்றையும் அதில் காட்டியிருக்கின்றான் என்று புரிந்தது.​

அவனின் மனக்குமுறலுக்கு காரணமான தன்னையே நொந்தபடி நின்றவள் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை. எத்தனையோ முறை அவள் அழுத்தத்தை போக்கிய குரலுக்கு சொந்தக்காரன் அவன் அழுத்தத்தை அவளால் போக்க முடியாத கையாலாகாதவளாக நின்றிருந்தாள் பேதையவள்.​

உடைந்த பொருட்களின் மீது பயணப்பட்ட அவளின் பார்வை தருணை சென்றடைய இன்னும் அடங்காத ஆத்திரத்தில் இருந்தவன் "ஆர்க்க்க்க்" என்று தலையை பிடித்துக்கொண்டு கத்தியபடி சட்டென்று எழுந்து அங்கே மேசை மீது மிச்சமிருந்த பொருளையும் எடுத்த வேகத்தில் ஓங்கி தரையில் அடித்திருக்க அதில் உடைந்து தெறித்த சிறு கண்ணாடி சில்லொன்று மதுஷிகாவின் நெற்றியின் மீது பட்டு கிழித்திருந்தது.​

"ஸ்ஸ்ஸ்...ஆஹ்" என்று அவள் நெற்றியை பற்றியபடி கூச்சலிட்டிருக்க நிமிர்ந்து அறை வாயிலை பார்த்தான்.​

அவன் ஒட்டு மொத்த சினத்திற்கும் சொந்தக்காரி நெற்றியில் குருதி வழிய அங்கே நின்றிருக்க வேகமாக அவளை நோக்கி சென்றான் அவன்.​

அவன் வந்த வேகத்தில் எங்கே அடித்து விட போகின்றானோ என்று அவள் பயந்து ஒரு அடி பின்னால் எடுத்து வைக்க அவளை ஒரு நொடி அழுந்த பார்த்தவன் இருவருக்கும் இடையே இருந்த கதவை இழுத்து அவள் முகத்தில் அடித்து சாற்றியிருந்தான்.​

கலங்கி சிவந்திருந்த அவனது கண்கள் சொல்லியது அவன் வேதனையை. பொங்கி வந்த அழுகையினூடே அப்படியே அறையின் கதவின் மீது சாய்ந்து நின்றவள் "ஐ அம் சாரி மாமா... ஐ அம் சாரி" என்று அப்படியே கதவின் மீதே சரிந்து இறங்கியபடி தரையில் அமர்ந்துவிட்டாள்.​

கழுத்தில் போட்டிருந்த மாலையை கழட்டி ஒரு மூலைக்கு விட்டெறிந்தவள் கால் முஷ்டிகளை மார்போடு கட்டிக்கொண்டு தலையை அதில் புதைத்துக்கொண்டாள். தனுக்குள் ஒடுங்கி போய் அமர்ந்திருந்தவளுக்கு அழுகை பீறிட்டு வர வாய்விட்டு சத்தமாகவே அழுதாள். இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு தொண்டை குழிக்குள் நிறுத்தி வைத்திருந்த அழுகையை அதற்குமேலும் கட்டுப்படுத்த முடியவில்லை அவளால்.​

அறைக்குள் நின்றிருந்த தருணுக்குமே அவளது அழுகை காதில் விழ அவனும் தனது முதுகுப்பகுதி கதவின் மீது படும் படி சாய்ந்து நின்று கண்களை மூடியவன் அப்படியே சரிந்து அங்கேயே அமர்ந்துவிட்டான்.​

அழுகையிலும் ஆத்திரத்திலும் கரைந்த இருவரின் எண்ணங்களும் அவர்களின் வாழ்வை புரட்டி போட்ட அந்த இரவில் சென்று தான் நின்றன.​


 
Status
Not open for further replies.
Top