அத்தியாயம் 22
வாகனத்தை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு "கொஞ்சம் இரு வந்திடுறேன்" என்று அவன் இறங்கிக்கொள்ள வைஷாலியும் அவனுடன் இறங்கிக்கொண்டாள்.
"நீ எங்க வர?" என்று அவன் கேட்க "நானும் வரேன். நீங்க வர வரைக்கும் தனியா வெயிட் பண்ண போர் அடிக்கும்" என்றாள்.
ஒரு பெருமூச்சுடன் அவளை பார்த்தவன் "சரி வா" என்று சொல்லிக்கொண்டு நகை கடைக்குள் நுழைய "இங்க எதுக்கு?" என்று அவன் அந்த நகை கடைக்கு முன் வண்டியை நிறுத்தியதிலிருந்து மூளைக்குள் குடைந்துக்கொண்டிருந்ததை கேட்டாள்.
“கொஞ்சம் வேலை இருக்கு” என்று சுருக்கமாக பதில் சொல்லியவன் கடையின் கண்ணாடி கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
என்ன நினைத்தானோ அவனுடன் சேர்ந்து உள்ளே நுழைந்த வைஷாலியை ஒரு நொடி நின்று திரும்பி பார்த்தவன் “நீ இதெல்லாம் பார்த்துட்டு இரு. நான் இப்போ வந்துடறேன்”என்று அவளை கடையின் முன் பகுதியில் விட்டுவிட்டு அவன் நகையை சரி செய்ய கொடுத்திருந்த ஆசாரி இருக்கும் பகுதியை நோக்கி நடந்தான்.
அதற்குள் அவனை நோக்கி வந்த கடை பெண்ணும் “என்ன சார் வேணும்” என்று கேட்க பர்ஸ்ஸில் இருந்த ரசீதை எடுத்து அந்த கடைப் பெண்ணிடம் காட்டி “இதை கலெக்ட் பண்ணனும்” என்றான்.
அவன் நீட்டிய ரசீதை வாங்கிய அப்பெண்ணும் அதில் இருக்கும் விவரங்களை சரி பார்த்துவிட்டு "வாங்க சார்" என்று அவனை அழைத்துக்கொண்டு அந்த ஆசாரியின் பகுதிக்கு சென்றாள்.
"அண்ணா, இது ரெடி தானே?" என்று கேட்டபடி அந்த பெண் தானவீரனிடம் இருந்து பெற்றுக்கொண்ட ரசீதை அவரிடம் நீட்ட அதை வாங்கி பார்த்தவர் "ஆஹ்… ரெடியா இருக்கும்மா" என்றபடி ஒரு சிறு நகை பெட்டியை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தார்.
தானவீரன் கொஞ்ச நேரத்தில் வந்து பெற்றுக்கொள்வதாக அலைபேசியில் சொல்லியிருந்த காரணத்தினால் அவரும் அவன் வந்ததும் எடுத்துக்கொடுக்க வசதியாக முதலிலேயே அந்த பிரேஸ்லெட்டை எடுத்து சிறிய நகை பெட்டிக்குள் வைத்து தயாராக வைத்திருந்தார்.
அந்த நகை பெட்டியை திறந்து உள்ளிருந்து பிரேஸ்லெட்டை வெளியில் எடுத்த அப்பெண்ணும் "எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க சார்" என்க அதை கையில் எடுத்து பார்த்தான் தானவீரன்.
அதை பார்த்தவன் 'அடங்கொய்யால' என்று வாயில் முணுமுணுத்தபடி நெஞ்சில் கையை வைத்துக்கொள்ள அவன் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துகொண்டன.
அதே அதிர்ச்சியுடன் அவன் அந்த ஆசாரியை பார்க்க அவனின் பார்வையின் அர்த்தம் பிடிபடாத அவரும் "என்ன தம்பி என் வேலையை பார்த்து பிரமிச்சு போய் நிர்க்குறீங்க போல. நான் தான் அன்னிக்கே சொன்னனே பத்த வச்சது தெரியாம புதுசு போல ரெடி பண்ணிடலாம்னு. எழுத்து ஒவ்வொன்னும் எப்படி தெளிவா, வடிவமா, அழகா வந்திருக்கு பாருங்க" என்று உற்சாக குரலில் பெருமை பேசினார் அவர்.
அவரை திரும்பி பார்த்து முறைத்தவன் "ஏதே பத்த வச்சது தெரியாமயா...யோவ் இப்பத்தான்யா நிஜமாவே பத்த வச்சிருக்க" என்று சீறினான்.
அதில் புரியாமல் அதிர்ந்தவர் "என்ன தம்பி?" என்க "என்ன நொன்ன தம்பி... இனிஷியல் 'TV' போட சொன்னா நீ என்னய்யா 'DV 'ன்னு போட்டு வச்சிருக்க?" என்று எகுறினான்.
அவன் அப்படி கேட்டதும் 'ஆத்தாடி வழக்கம் போல சொதப்பிட்டோமோ' என்று அந்த ஆசாரி உள்ளுக்குள் பதறியபடி திருதிருவென கண்களை உருட்டி அவனை பார்த்தார்.
"என்னய்யா முழிக்குற? பதில் சொல்லு.... தருண் பேருக்கு 'T' இனிஷியல் போட சொன்னா நீ 'D ' ன்னு போட்டு சொதப்பி வச்சிருக்க. இதுல பத்த வச்சது தெரியாதுன்னு பெருமை வேற" என்று அவன் அடிப்பது போல கை முஷ்டியை மடக்கி காட்ட எச்சிலை கூட்டி விழுங்கியவரோ ' எம்புட்டு கோவம் வருது இந்த பயலுக்கு... மாட்டுனா மட்டன் ஆக்கிடுவான் போல. தெரியாத மாதிரியே மெயின்டெய்ன் பண்ணிடுவோம்' என்று மனதிற்குள் முடிவு செய்துகொண்டார் அந்த ஆசாரி.
''இல்ல தம்பி நீங்க 'D' தான் சொன்னிங்க. அந்த நேரம் உங்களுக்கு ஒரு போன் கூட வந்துச்சு. அந்த அவசரத்துல நீங்க மாத்தி சொல்லிருக்கலாம்ல" என்றார்.
"யோவ், தப்பு நீ பண்ணிட்டு என் மேல பழிப்போடுறியா... ம்ஹும் இதெல்லாம் சரி வராது. நீங்க மேனேஜர கூப்பிடுங்க நான் அவர் கிட்ட பேசிக்குறேன் " என்று தானவீரனின் குரல் உயர அவர்கள் அருகே நின்றுகொண்டிருந்த சில வாடிக்கையாளர்களின் பார்வைகளும் அவர்கள் மீது விழுந்தன.
அதை கவனித்த கடை பெண்மணிக்கும் பதற்றம் வந்து தொற்றி கொண்டது. இப்படியான நிகழ்வு கடையின் நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதோடு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் இழக்க செய்யும் என்னும் நிதர்சனம் விளங்க இந்த பிரச்சனையை நீடிக்க விடாமல் சுமுகமாக முடிக்கவே நினைத்தாள்.
சுற்றும் முற்றும் விழிகளை அலையவிட்டபடியே "சார், எல்லாரும் பார்க்குறாங்க கொஞ்சம் அமைதியா இருங்க பேசிக்கலாம்" என்று அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.
அந்த பெண்ணின் கெஞ்சுதலான குரல் அவனை சற்றே சாந்தப்படுத்தியிருக்க பொறுமை காக்க நினைத்தவனாக அமைதியாக நின்றான்.
அவன் கொஞ்சம் அமைதியாகிவிட்டதை உறுதி செய்துக்கொண்ட அந்த பெண் அந்த ஆசாரியிடம் திரும்பி "என்ன அண்ணா இதெல்லாம்?" என்று கேட்க "அவர் சொன்னதை தான்மா நான் போட்டு கொடுத்திருக்கேன். அவர் மாத்தி சொல்லிட்டு இப்போ என் மேல தப்பு சொல்லுறாரு" என்றார் தன் தவற்றை ஒப்புக்கொள்ளாமல்.
"எதெ நான் மாத்தி சொல்லுறேனா? வயசான ஆளாச்சேன்னு நின்னு பேசிட்டிருக்கேன் இல்ல இப்போ நடக்குறதே வேற... என் கிட்ட சரசம் பண்ணுறதுக்குன்னே வருவீங்களா எல்லாரும்... இப்போ அந்த பொண்ணுக்கு நான் என்னய்யா பதில் சொல்லுவேன். அவள் கட்டிக்க போறவன் இனிஷியல் போட சொன்னா... நீ என்னன்னா..." என்று பேசிக்கொண்டே போனவனுக்கு அப்பொழுதுதான் பொறி தட்டியது.
சட்டென பேசுவதை நிறுத்திவிட்டு மீண்டும் கையில் இருந்த பிரேஸ்லெட்டை எடுத்து பார்த்தான். 'DV ' என்று இருந்தது. அது அவனது இனிஷியல்.
அவன் பெயரின் முதல் எழுத்து.
அவள் பெயரின் முதல் எழுத்துடன் அவன் பெயரின் முதல் எழுத்து இணை சேர்ந்திருந்தது.
இது தற்செயலாக நடந்ததா இல்லை அவன் தான் இருந்த குழப்பத்தில் மாற்றி சொல்லிவிட்டானா என்ற சந்தேகம் அந்த நொடியில் அவனுக்கே வந்திருந்தது. ஆனால், அவன் எவ்வளவு யோசித்து பார்த்தாலும் அவன் சரியாக சொல்லியதாக தான் அவனுக்கு நினைவிருக்கின்றது. ஒருவேளை அவன் 'T' என்று சொல்லியது அவருக்கு ‘D’ என்று தவறுதலாக விளங்கியிருக்குமோ என்று யோசித்தான்.
அந்த நேரத்திற்கெல்லாம் அங்கே கேட்ட சலசலப்பின் காரணமாக அவனை தேடி வந்த வைஷாலி "என்னாச்சு?" என்று கேட்டபடி அவன் அருகே வந்து நின்றாள்.
அவளை பார்த்ததும் ஏதோ தவறு செய்த குழந்தையாக சட்டென பிரேஸ்லெட்டை வைத்திருந்த கையை இறுக மூடியபடி முதுகுக்கு பின்னால் வைத்து மறைத்தான்.
அவன் எதையோ மறைப்பது போன்று இருக்க "என்னது... என்னாச்சு?" என்று மீண்டும் கேட்டாள் வைஷாலி.
"அது வந்து அந்த பிரேஸ்லெட்" என்று அந்த ஆசாரி முந்திக்கொண்டு பதில் சொல்ல விளைய அவன் பார்த்த பார்வையிலேயே அவரின் வாய் கப்பென்று மூடிக்கொண்டது.
"என்ன பிரேஸ்லெட்?" என்று வைஷாலி கேட்டாள்.
அதற்கு மேலும் மறைக்க முடியாது என்று புரிந்துபோக "உன்னோடது தான். அறுந்துபோச்சுல அது தான் சரி பண்ண கொடுத்திருந்தேன்" என்றான்.
"ஓஓஓ...அதை எடுக்க தான் வந்திங்களா? எடுத்தாச்சா?" கேட்டாள் அவள்.
"ம்ம்ம்" என்று அவன் பதில் சொல்ல "காட்டுங்க பார்க்குறேன்" என்று அவள் கையை நீட்டினாள்.
நீட்டிய அவள் கையை பார்த்தான் தானவீரன்.
அந்த பிரேஸ்லெட்டை அவள் கையில் கொடுப்பதற்கு பதிலாக முதுகுக்கு பின்னால் பிரேஸ்லெட்டை அடக்கியபடி மூடியிருந்த அவனது கைப்பிடி இன்னமும் இறுகியது.
"ம்ம்ம் கொடுங்க" என்று அவள் அவனை மீண்டும் உந்த "வீட்டுக்கு போன பிறகு கொடுக்குறேனே" என்றான் அவன்.
சிறிய புருவ முடிச்சுடன் அவனை விசித்திரமாக பார்த்தாலும் அதிகம் கேள்வி கேட்காமல் "சரி ஓகே...அப்போ போகலாமா?" என்றாள்.
"ம்ம்ம்...நீ முன்னுக்கு வெயிட் பண்ணு. நான் வந்துடுறேன்" என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.
அதன் பிறகு அந்த ஆசாரியிடம் திரும்பியவன் "அந்த பொண்ணு வந்ததுனால நீ தப்பிச்ச..." சொல்லியபடி அவர் கையில் இருந்த ரசீதை பறித்து எடுத்தவன் பணம் கட்டும் கவுண்டரை நோக்கி நடந்தான்.
அங்கே ரசீதை கொடுத்து அன்றைய தினம் டிபாசிட் கட்டியது போக மீதமிருந்த பணத்தையும் செலுத்திவிட்டு வைஷாலியிடம் சென்றான்.
"வா போகலாம்" என்றபடி அவன் கடையின் கதவை திறந்துக்கொண்டு வெளியேற அவனுடன் நடந்தவள் "முதல்ல ஏதும் பிரச்சனையா?" நீங்க கோவமா பேசிட்டிருந்தது மாதிரி இருந்துச்சே" என்றாள்.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல..." என்றபடி அவன் காருக்குள் ஏறி அமர்ந்துவிட வைஷாலியும் அதற்குமேல் அவனை எதுவும் கேட்கவில்லை.
அது தான் அவளின் குணமே. யாரிடமும் எதையும் தோண்டி துருவி கேட்கும் பழக்கம் அவளிடமில்லை. பிரச்சனை என்று தெரிந்தால் மேலோட்டமாக கேட்டு பார்ப்பாள். அவர்கள் சொல்ல விருப்பப்படவில்லை என்று தெரிந்தால் விட்டு விடுவாள். எதிலும் அனாவசியமாக மூக்கை நுழைப்பதில் அவளுக்கு எப்பொழுதுமே உடன்பாடு இல்லை.
அவர்களாக சொன்னால் தெரிந்துகொள்ளவாள். ஏதும் பிரச்சனை என்றால் அவளால் இயன்ற உதவிகளை செய்வாள் அவ்வளவுதான். அது தான் தனவீரனுக்கு அவளிடம் பிடித்த குணமும் கூட. அடுத்தவர்களின் சங்கதியில் மூக்கை நுழைத்து அதில் அற்ப சந்தோசம் தேடிக்கொள்பவர்கள் மத்தியில் இவள் வேறு ரகம்.
"வேறு எங்கையும் போகணுமா... பர்ச்சேசிங் எதாவது? இல்லை வீட்டுக்கு போகலாமா?" என்று அவளுக்கு வேறு எதுவும் தேவை இருக்குமோ என்கின்ற எண்ணத்தில் கேட்டான்.
"இல்ல மாமா, கல்யாணத்துக்கு தேவையானது எல்லாம் வாங்கியாச்சே… இன்னும் என்ன பர்ச்சேசிங். வீட்டுக்கு போகலாம்" என்றாள்.
"ம்ம்ம்" என்றபடி அவன் வண்டியை எடுக்க வீட்டுக்கு செல்லும் வழியிலும் அவர்கள் மௌனத்திற்கு பாடல்கள் மட்டுமே துணையாகிக் கொண்டிருந்தன.
முதலில் வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்த பெண்ணவள் மெதுவாக திரும்பி தானவீரனை பார்த்தாள். அவனது முகம் எந்த சலனமுமின்றி அமைதியாக இருந்தது. இதழ்களில் ஒரு இறுக்கம்.
என்னதான் அவனின் முகம் அவனது அகத்தை காட்டவில்லை என்றாலும் அவனுக்கு என்னவோ பிரச்சனை இருப்பதாகவே அவளுக்கு தோன்றியது. அவன் இயல்பை தொலைத்து வேறு ஒருவனாக மாறி இருப்பது போல் உணர்ந்தாள் அவள்.
"மாமா" என்றாள்.
"ம்ம்ம்" என்றான் அவன்.
"உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?" என்று கேட்டாள்.
அவளை பார்த்து மென்மையாக புன்னகைத்தவன் "இல்லையே...ஏன் கேட்குற" என்று மனதில் உள்ளதை வெளியில் காட்டாமல் முடிந்த வரை இயல்பாக பேசினான்.
"நீங்க இவளோ அமைதியா இருந்து நான் பார்த்ததே இல்லையே. கார்ல போற நேரம் எல்லாம் ஒன்னு என்னை வம்பிழுத்துட்டு வருவீங்க, இல்ல ரேடியோ கூட சேர்ந்து கத்திட்டே..." என்று அவள் சொல்ல
"ஏதே கத்திட்டேவா..." என்று அவளை பொய்யாக முறைத்தான்.
"இல்ல பாடிட்டே வருவீங்கன்னு சொல்ல வந்தேன்..." என்று நாக்கின் நுனியை கடித்தபடி அவள் சிரித்துக்கொள்ள அதை ரசனையாக பார்த்தவன் "ஆஹான்" என்றான்.
அவன் சொல்லிய விதத்தில் இதழ் பிரித்து சத்தமாகவே சிரித்தாள் வைஷாலி.
அவளுடன் சேர்ந்து சிரித்த அவனையே பார்த்திருந்தவள் "ஆனால், இப்போ அப்படி இல்லையே. ரொம்ப அமைதியா இருக்கீங்க. ஏதும் பிரச்சனையா?" என்று கேட்டாள்.
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல வைஷு" என்றான்.
"ஏதாவது இருந்தா என் கிட்ட சொல்லுங்கா மாமா. நான் முடிஞ்ச ஹெல்ப் பண்ணுறேன்" என்றாள் அக்கறையாக.
அவன் மீதான அவளின் அக்கறை அவன் மனதை நெகிழ செய்தாலும் 'என் மனசில இருக்கிறதை உன் கிட்ட சொன்னா தான்டி பிரச்சனையே' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
அவனின் அமைதி அவளை ஏதோ செய்ய "இப்பவும் ஏதும் சொல்லலையே. உள்ளுக்குள்ளையே யோசிக்குறீங்க" என்றாள் பெண்ணவள்.
"வைஷு, நிஜமா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. அப்படியே பிரச்சனை இருந்தா நான் உன் கிட்ட தான் முதல்ல சொல்லுவேன். ஓகே தானே. இப்போ என்னை பத்தி எதையும் மனசுல போட்டு குழப்பிக்காமல் உன்னோட கல்யாணத்துல ஃபோகஸ் பண்ணு" என்று அந்த பேச்சுக்கு அதோடு முற்றுபுள்ளி வைத்திருந்தான் தானவீரன்.
இப்படியாக பேசிக்கொண்டே இருவரும் வீடு வந்து சேர்ந்திருக்க கடந்த சில தினங்களாக இருவருக்குள்ளும் இருந்த ஒருவித இறுக்கம் சற்றே தளர்ந்திருந்தது.
பழையபடி அவளை ஒரேடியாக சீண்டி வம்பிழுத்துவிடவில்லை என்றாலும் அவன் முகத்தை திருப்பி கொள்ளாமல் இருப்பதே அவளுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.
வண்டியை நிறுத்தி விட்டு இருவரும் வீட்டுக்குள் நுழைய போகும் நேரம் வைஷாலியின் அலைபேசி சிணுங்கியது.
அலைபேசியை எடுத்து பார்க்க அதில் தருணின் பெயர் தான் மிளிர்ந்து கொண்டிருந்தது.
"தருண் தான் கூப்பிடுறாரு" என்று சொல்லியவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தபடி வீட்டிற்குள் நுழைந்திருந்தாள்.
தருணுடன் பேசிக்கொண்டே செல்லும் அவள் முதுகை பின்னால் இருந்து பார்த்துக்கொண்டே நின்ற தானவீரனின் இதழ்களில் மெல்லிய புன்னகை ஒன்று உதிர்ந்தது.
ஏமாற்றமோ விரக்தியோ ஏதோ ஒன்று அதில் கலந்திருந்தது.கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவனும் வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.
இங்கே தருணுடன் பேசிக்கொண்டே தனது அறைக்குள் நுழைந்திருந்தாள் வைஷாலி.
"வைஷு, நான் உனக்கு ஒரு வீடியோ அனுப்புறேன் அதை பார்த்துட்டு எனக்கு திரும்ப கூப்பிடு" என்று சொல்லிவிட்டு வைத்திருந்தான் அவன்.
அவளும் காத்திருக்க சில நொடிகளில் அவளின் புலனத்தை வந்தடைந்திருந்தது தருண் அனுப்பிய யூடியூப் வீடியோ லிங்க்.
"என்ன வீடியோவா இருக்கும்?" என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே அதை திறந்து பார்த்தாள்.
அவன் பாடிய புது கவர் சோங். பொதுவாக ஞாயிற்று கிழமையில் தான் தனது புது காணொளியை பதிவேற்றம் செய்வான். ஆனால், இம்முறை வரும் ஞாயிற்று கிழமை அவர்களின் திருமணம் என்பதால் கிடைத்த நேரத்தில் பதிவேற்றம் செய்துவிட்டான். திருமணத்திற்கு முன்பாக தன்னவள் என்று நினைத்திருக்கும் வைஷாலிகாக சமர்ப்பிக்க எண்ணி அவன் பிரத்தியேகமாக தேர்ந்தெடுத்த பாடல் அது.
அவளுக்காக பாடியதாலோ என்னவோ அவன் குரலில் அத்தனை உணர்வுகள் கொட்டி கலந்து ரம்யமாய் வந்திருந்தது அந்த காணொளி. அதை வைஷாலி பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல் எழ அதை அவளுக்கு அனுப்பி வைத்திருந்தான்.
Last edited: