ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 19

அன்றிரவு தானவீரன் வீடு வந்து சேரவே நள்ளிரவாகியிருந்தது.​

நெருங்கி வரும் கல்யாண நாளின் பதற்றமும் தானவீரனை பற்றிய சிந்தனையுமாக உறக்கம் வராமல் பால்கனியில் நின்று கொண்டிருந்தாள் வைஷாலி.​

அவனின் வண்டி வீட்டு வளாகத்தில் நுழைந்தது முதல் வண்டியை வாசலில் நிறுத்தியது வரை அவள் பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.​

அவன் முகத்திலும் உடலிலும் ஒரு வகை இறுக்கம் இருந்து கொண்டே இருப்பதாக தோன்றியது அவளுக்கு. இன்று நாள் முழுவதும் அவளுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவன். அதுவே மனதை நெருடியது.​

அவன் வீட்டிற்குள்ளே நுழைந்து விட்டதை கவனித்தவள் வேகமாக ஓடி சென்று தனது மூடிய அறை கதவின் அருகே நின்றுகொண்டாள்.​

அவன் எப்பொழுது அவளது அறையை கடந்து போனாலும் வேண்டுமென்றே அவளது அறை கதவை படபடவென்று தட்டி விட்டு செல்வான்.அவளை வெறுப்பேற்றுவதற்காக அவன் செய்யும் சேட்டைகளில் அதுவும் ஒன்று.​

எப்பொழுதும் அவளை தொந்தரவு செய்வதற்காக அவன் செய்யும் அந்த வேலை அவளுக்கு எரிச்சலை கொடுப்பதாகவே இருக்கும். ஆனால், இன்று அதற்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தாள்.​

மாடியேறி வரும் அவன் காலடி ஓசை கேட்க காதை மேலும் தீட்டி வைத்துக்கொண்டாள் வைஷாலி. அவன் அவளது அறையை நெருங்கி விட்டதை அறைக்கு வெளியில் கேட்கும் அவன் காலடி ஓசையை வைத்து யூகித்துக்கொண்டாள்.​

அவள் அறை கதவிற்கு முன் அவனது பாதங்கள் நின்றன.​

இதயம் தடதடத்துக்கொள்ள மேலும் கதவிற்கு அருகே ஒன்றி நின்று செவியை கதவோடு ஒட்டி வைத்து கேட்டாள்.​

அவனது கரம் மெல்ல உயர்ந்து அவள் கதவை தட்டுவதற்காக சென்று ஒரு கணம் அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டது.​

மூடியிருந்த அறையை வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றான். கதவை தட்டுவதற்காக சென்ற கரத்தை மெதுவாக கதவின் மீது வைத்து சத்தமே இல்லாமல் மென்மையாக வருடிக்கொடுத்தான்.​

மனதின் கொதிப்பு அடங்கவில்லை. விழிகள் மூடி நின்றான்.கால்களில் மெலிதாய் ஒரு நடுக்கம். அவன் எச்சிலை கூட்டி விழுங்கி தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றதில் அவன் குரல்வளையில் நின்ற ஆதாமின் ஆப்பிள் மெல்ல ஏறி இறங்கியது.​

விழிகளை திறந்து மூடியிருந்த அறையை பார்த்தவனுக்கு அவள் வாழ்க்கைக்குள் இனி அவன் செல்வதற்கான வழியும் கூட இப்படி தான் அடைப்பட்டு போனதாக தோன்றியது.​

முடிவுகள் அனைத்தும் எடுக்கப் பட்டு விட்டன. அவன் நினைத்தால் இப்பொழுதும் கூட மாற்றி விடுவான். ஆனால், அவளின் மனம் என்று ஒன்று இருக்கின்றதே. அது தருணுக்கு தாரை வார்க்க பட்டுவிட்டதே. இனி அவன் என்ன செய்வது.​

எடுக்கப்பட்டு விட்ட முடிவுகளை மாற்றும் நிலைகளை எல்லாம் அவன் கடந்தும் விட்டான். இனி அவன் என்ன செய்தாலும் அது அவன் உற்பட பலரின் மனதை காயப்படுத்துமே.​

அப்படி ஒரு சுயநலமான முடிவை அவனால் எடுக்க முடியுமா?​

அவனுக்கே தெரியவில்லை.​

மெதுவாக அறை கதவின் மீதிருந்த கையை எடுத்தவன் விறுவிறுவென அவன் அறையை நோக்கி நடந்தான்.​

கதவை தட்டுவான் என்று எதிர்பார்த்து நின்றவளுக்கு அவள் அறையை கடந்து செல்லும் அவன் காலடி ஓசை கேட்டது. அவன் ஏன் இப்படி இருக்கின்றான் என்று அவளுக்கு புரியவேயில்லை.​

அவனிடம் நேரடியாக கேட்டுவிட நினைத்தாள். மெல்ல கதவை திறந்து பார்த்தாள். தானவீரன் அவன் அறைக்குள் நுழைவது தெரிந்தது.​

அவள் கதவை திறக்கும் சத்தம் கேட்டு ஒரு நொடி நின்று அவளை திரும்பி பார்த்தான். அவள் ஏதோ சொல்ல வருவது போன்று தெரிந்தது.​

ஆனால், அவனுக்கு தான் எதையும் பேசவோ சொல்லவோ தோதான மனநிலையில்லையே. கண்டும் காணாதது போல் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டான்.​

அவனது இந்த திடீர் மாற்றம் குழப்பமாக இருந்தாலும் அவளிடம் பேச விரும்பாதவனை அவளும் என்னதான் செய்ய முடியும். கட்டாயப்படுத்திப் பேச வைக்கவா முடியும்.​

தலைக்குள் குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்திருந்தாலும் அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு ஒரு பெருமூச்சுடனே அறைக்குள் நுழைந்து கொண்டாள் வைஷாலி.​

இப்படியே இரண்டு நாட்கள் கடந்திருக்கும். வைஷாலி எழுவதற்கு முன்னே எழுந்து வெளியில் சென்று விடுவதும் திருமண வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும் ஜிம்மிற்கு செல்வதும் இரவில் தாமதமாக வீட்டிற்கு வருவதுமாக அவளின் கண்களில் அகப்படாமல் சுற்றிக் கொண்டிருந்தான் தானவீரன்.​

அவன் மனம் குழப்பம் அடைந்திருக்கும் இந்த வேளையில் அவன் வைஷாலியை பார்க்காமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது என்று முடிவெடுத்து இருந்தான். அதனாலேயே முடிந்த அளவிற்கு வீட்டில் இருப்பதையும் தவிர்த்து இருந்தான்.​

தருணுக்கும் திருமணத்திற்கு முன் முடிக்க வேண்டிய அலுவலக வேலைகள் நிறைய இருந்ததினால் அவனும் அதில் மும்முரமாகியிருந்தான். இரவில் மட்டும் நேரம் கிடைத்தால் வைஷாலியுடன் பேசிக்கொள்ளவான்.​

அப்படி இருக்க திருமணத்திற்கு இன்னும் நான்கு தினங்களே இருந்த தருணம் அது. அன்று மதியம் அலுவலகத்தில் மும்முரமாக வேலையில் இருந்த தருணை தேடி வந்திருந்தனர் அவனது நண்பர்கள். அவர்களுடன் அவனது போலீஸ் நண்பனாகிய ரவியும் கூட வந்திருந்தான்.​

நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி வந்ததில் இன்பமாக அதிர்ந்தவன் அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க அதில் ஒருவன் "என்னடா கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணதோட நிறுத்திட்ட. பேச்சுலர் பார்ட்டி எல்லாம் இல்லையா?" என்றான்.​

"அதானே, இவ்வளோ பெரிய பிஸ்னஸ்மென். ஆனால், கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பார்ட்டி கூட இல்லைனா எப்படி?" என்றான் மற்றையவன்.​

"இல்லைடா கல்யாணம் கொஞ்சம் ஷார்ட் டைம்ல ஃபிக்ஸ் பண்ணுனதுனால அதுக்கெல்லாம் நேரமில்லைடா " என்று அவனது நிலையை விளக்கிய தருண் "வேணும்னா கல்யாணம் முடிய ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணிடலாம்" என்றான்.​

அதை கேட்டுக் கொண்டிருந்த நண்பர் கூட்டத்தில் இருந்த குமார் என்பவன் "கல்யாணத்துக்கு முன்னாடி வச்சாத்தான் டா அது பேச்சுலர் பார்ட்டி...கல்யாணத்துக்கு அப்புறம் வச்சா அது பேமிலி டே" என்று கிண்டலடித்தான்.​

அவர்கள் பேச்சில் இதழ் பிரித்து சிரித்த தருண் "நீயாவது சொல்லேன் டா" என்று ரவியிடம் கேட்டு பார்த்தான்.​

"நீ என்ன சொன்னாலும் இவனுங்க கேட்க மாட்டானுங்கடா. உன் கிட்ட ஒரு பேச்சுலர் பார்ட்டியை வாங்காமல் விடுறதில்லைனு கங்கணம் கட்டிட்டு வந்திருக்கானுங்க" என்று சொல்லி சிரித்தான்.​

"இப்போ போய் எப்படி டா. கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு. நாளை மறுநாள் ஈவினிங் ரிசெப்ஷன். அதற்கு மறுநாள் காலையில் கல்யாணம். நடுவுல இன்னும் ஒரு நாள் தானே டா இருக்கு..."என்று அவன் இழுக்க " அதுதான் ஒரு நாள் இருக்கே அப்புறம் என்னடா" என்றான் குமார்.​

ரவியும் நண்பர்களின் அளப்பறையில் இதழ்களுக்குள் சிரித்துக்கொள்ள 'விடமாட்டானுங்க போல' என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்ட தருணும் "சரி டா நாளைக்கு நைட் அரேஞ் பண்ணிடலாம்" என்றபடி இன்டெர்க்கோமின் வழியே அவனது காரியதரிசி சோனாவை அழைத்தான்.​

சோனாவும் அவனது அறைக்குள் வந்திருக்க "சோன்ஸ், நாளைக்கு பேச்சுலர் பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணிடு" என்று பார்ட்டி ஏற்பாடு செய்யவேண்டிய ஐந்து நட்சித்திர ஹோட்டலின் பெயரையும் சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.​

"இப்போ சந்தோஷமா டா. நாளைக்கு பார்ப்போம். இப்போ இடத்தை காலி பண்ணுங்க டா வேலை இருக்கு" என்று தருண் சிரித்துக்கொண்டே சொல்ல அவர்களும் அவனிடம் விடைபெற்று சென்றிருந்தனர்.​

***​

திருமண வீடு என்பதால் சில உறவினர்கள் வர போக இருக்க கூடும். அவர்களை உபசரிப்பதற்காக சில பொருட்கள் வாங்க வேண்டியிருக்க அதற்கான பட்டியலை அன்று காலையிலேயே தானவீரனிடம் கொடுத்து தேவையானதை வாங்கி வர சொல்லியிருந்தார் சரோஜினி.​

தானவீரனும் வெளி வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு சரோஜினி கொடுத்த பட்டியலில் உள்ள பொருட்களையும் வாங்கி கொண்டு மதிய வேளையில் தான் வீடு வந்து சேர்ந்திருந்தான். அவன் உள்ளே நுழையும் போதே முன்னறையில் தான் அமர்ந்திருந்தாள் வைஷாலி.​

அவளின் பார்வை தன்னிச்சையாக தானவீரனில் படிய அவன் கண்டுகொள்ளாமல் நேரே சரோஜினியை தேடிக்கொண்டு சமயலறைக்குள் நுழைந்திருந்தான்.​

வாங்கிய பொருட்களை எல்லாம் அங்கே இருந்த மேசையின் மீது வைத்து விட்டு "அத்தை எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க. அப்புறம் இது இல்லை அது இல்லைன்னு சொல்ல படாது. கல்யாண மாப்பிள்ளையா கூட இருந்திடலாம். ஆனால், கல்யாண வீட்டில் வெட்டியா மட்டும் இருந்திடவே கூடாது. எவ்வளோ வேலை வாங்குறாங்க " என்று சலித்துக்கொண்டபடி சமையல் கட்டின் மீது ஏறி அமர்ந்துக்கொண்டான்.​

சரோஜினியும் அவனது கிண்டல் புரிந்து சிரித்துக்கொண்டே "வைஷாலி கல்யாணத்துக்கு மட்டுமில்ல மதுவுக்கு கல்யாணம் நடக்கும் போதும் உனக்கு இதே தான்" என்றார் காய்கறிகளை நறுக்கி கொண்டே.​

"ஏதே...உங்க வீட்டு ராட்சசிகளுக்கு சேகவம் செய்யத்தான் நான் இருக்கேனா?" என்று தானவீரன் கேட்க "இல்லையா பின்ன" என்றார் சரோஜினி "வர வர உங்களுக்கும் நக்கல் கூடி போச்சு அத்தை" என்று அவரை ஒரு மார்க்கமாக பார்த்துக்கொண்டே அவர் நறுக்கிக் கொண்டிருந்த கேரட்டில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொண்டான்.​

"வேண்டாமுன்னா மது கல்யாணத்துக்கு முதல் நீ ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோ. வர போற பொண்ணோட சேர்ந்து வேலை பார்க்கலாம்ல" என்றார் அவர்.​

"ஓ என்னோட சேர்த்து என் பொண்டாட்டியையும் வேலை வாங்குற எண்ணமிருக்கா உங்களுக்கு. சோ சாரி அத்தை அப்படி ஒரு ஆசை இருந்தா அதை இப்போவே மறந்துடுங்க சொல்லிட்டேன்" என்றான்.​

"ஏன் டா உன் பொண்டாட்டியை ஒரு வேலையும் செய்ய விடாமல் தங்க தட்டில் வச்சு தாங்க போறியா?" என்று சரோஜினியும் விடாமல் அவனை கிண்டல் செய்ய​

"சேச்சே அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை... ஏன்னா நான் சந்நியாசம் போக போறேன்" என்றான் அடுத்த துண்டு கேரட்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே.​

"என்ன பேச்சு பேசுறான் பாரு" என்று சொல்லிக்கொண்டே சரோஜினி அவன் தொடையில் ஒரு அடி போட "ஆஹ் வலிக்குது அத்தை... இப்போ தெரியுது நீங்க பெத்த வானரங்கள் ஏன் இப்படி இருக்குதுங்கன்னு" என்று வலித்த இடத்தை தேய்த்துக்கொண்டே அவன் நிமிர்ந்து பார்க்க அங்கே சமையலறை கதவில் சாய்ந்து நின்றபடி அவனையே அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தாள் வைஷாலி.​

அவளுக்கு ஃபேசியல் செய்து கொள்வதற்காக அழகு நிலையத்திற்கு செல்ல வேண்டியதிருக்க சரோஜினியிடம் சொல்லிக்கொண்டு புறப்படுவதற்காக சமயலறைக்கு வந்திருந்தாள்.​

அச்சமயம் தானவீரன் எப்பொழுதும் போல சரோஜினியிடம் இயல்பாக பேசுவதை கண்டதும் அவன் தன்னிடம் மட்டும் தான் அந்த ஒதுக்கத்தை காட்டுவதாக புரிந்துகொண்டாள் அவள். காரணமே இல்லாமல் அவன் அவளை ஒதுக்குவதில் கடுப்பானவள் அவனை முறைத்தபடி சமையலறையின் கதவில் சாய்ந்து நின்றிருந்தாள்.​

"வெளியில் அலைஞ்சிட்டு வந்திருக்க மோர் குடிக்குறியா?" என்று சரோஜினி காய்கறிகளை நறுக்குவதில் கவனத்தை பதித்துக்கொண்டே அவனிடம் கேட்க அவனிடம் அசைவுமில்லை பதிலுமில்லை.​

ஒரு நொடி கூட சும்மா இல்லாமல் வளவளத்துக்கொண்டே இருக்கும் தானவீரன் அமைதியாகி விட்டதை உணர்ந்தவர் "என்ன டா சத்தத்தையே காணோம்" என்றபடி அவனை நிமிர்ந்து பார்த்தார்.​

அவன் சமையலறையின் வாசலை பார்த்துக்கொண்டே அமர்ந்திருக்க "என்னடா பேயை பார்த்த போல உட்கார்ந்திருக்க?" என்று கேட்டபடி அவரும் திரும்பி பார்த்தார்.​

அங்கே வைஷாலி நின்று கொண்டிருந்தாள்.​

இதே வேறு சமயமாக இருந்திருந்தால் 'மாதிரி இல்லை அத்தை, பேயை தான் பார்த்திட்டிருக்கேன்' என்று நிச்சயம் அவளை வம்புக்கிழுத்திருப்பான். ஆனால், இன்று அதுபோல் அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான்.​

அதிலேயே அவன் அவளை மட்டும் தான் ஒதுக்குகின்றான் என்பது அப்பட்டமாக ஊர்ஜிதமாகிவிட அவளுக்கு இன்னமும் கோபம் எகிறியது.​

அவளது பார்வையில் அழுத்தம் கூடிற்று.​

"ஆஹ் வைஷாலி அங்க பாரு மோர் கலந்து வச்சிருக்கேன். அதை கிளாசில் ஊத்தி வீருக்கு கொடு..,பாவம் வெயிலில் அலைஞ்சிட்டு வந்திருக்கான்" என்றார் சரோஜினி.​

தாயின் கட்டளை காதில் விழ அவனை பார்த்துக்கொண்டே சமைலறைக்குள் நுழைந்தாள் வைஷாலி.​

"இல்லை அத்தை எனக்கு வேண்டாம்" என்றபடி அவன் சமையல் கட்டிலிருந்து கீழே இறங்கியபடி அங்கிருந்து வெளியேற இரு அடிகள் தான் எடுத்து வைத்திருப்பான். அதற்குள் ஒரு கிளாசில் மோரை ஊற்றி அவன் முன்னால் நீட்டியிருந்தாள் வைஷாலி.​

அவன் "வேணாம்னு தானே சொன்னேன்" என்று சொல்ல அவள் பதில் ஏதும் பேசாமல் நீட்டிய கரத்தை நீட்டியபடியே வைத்துக்கொண்டு அவனை முறைத்து பார்த்தாள்.​

அவள் பார்வை அவனை என்னவோ செய்ய 'கொஞ்சம் ஓவரா தான் போறோமோ' என்று மனதில் நினைத்துக்கொண்டான். மேலும் சரோஜினியும் அங்கே தான் நின்றிருக்க அவர் முன் எந்த நாடகமும் அரங்கேறுவதை அவன் விரும்பவுமில்லை. பேசாமல் அவள் நீட்டிய மோரை வாங்கி கொண்டான்.​

அவ்வளவுதான் அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசாமல் சரோஜினியை பார்த்தவள் "அம்மா, நான் பார்லர் போய்ட்டு வரேன்" என்றபடி சமயலறையில் இருந்து அவள் வெளியேற போக "தனியாவா போற?" என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தார் ஜெயலக்ஷ்மி.​

"ஆமா அப்பத்தா" என்றாள் வைஷு.​

"கல்யாணமாக போற பொண்ணு இந்த நேரத்துல தனியா வெளிய போகலாமா? ஏன் சரோ இதை எல்லாம் நீ சொல்லமாட்டியா?" என்று கேட்டார்.​

சரோஜினியை திட்டுவதற்கு தான் ஒரு காரணமாவதை விரும்பாத வைஷாலி "எப்பவும் போற இடம் தானே " என்றாள்.​

"அதெல்லாம் முடியாது. யாரையாவது துணைக்கு அழைச்சிட்டு போ. இல்லை போகாத. நாங்க எல்லாம் என்ன அந்த காலத்துல பார்லருக்கு போய்தான் அழகா இருந்தோமா?" என்றார் கறாராக.​

"இப்போ என்ன யாரையாவது துணைக்கு அழைச்சிட்டு போகணும் அதானே. அப்போ நீங்களே வாங்க அப்பத்தா" என்றாள் வைஷாலி.​

"அடி போடி. எனக்கே மூட்டு வலி நோகுது.தைலம் தேய்ச்சு விட தான் உங்காம்மாவை தேடி வந்தேன்" என்றவரின் விழிகள் அங்கு நின்று தனக்கும் அங்கே நடப்பதற்கும் சம்மந்தமே இல்லை என்று மோர் குடித்துக்கொண்டிருந்த தானவீரனில் படிய "இதோ இருக்கானே என் பேரன் ஆம்பிள சிங்கம் போல. அவனை கூட்டி போ. பத்திரமா பார்த்துப்பான்" என்றார்.​

அவர் சொல்லியதில் தானவீரனுக்கே புரையேறி விட வாய்க்குள் சென்ற மோர் மீண்டும் தரையில் சிந்தியிருந்தது. கண்களில் நீர் வர அவன் இருமிக்கொண்டிருக்க அருகே இருந்த சரோஜினி தான் "பார்த்து குடிப்பா" என்று அவன் தலையில் தட்டினார்.​


சரோஜினி தலையில் தட்டிக்கொடுக்க இருமிக்கொண்டே நிமிர்ந்து ஜெயலக்ஷ்மியை பார்த்தவனின் மனமோ "குண்டு பயபுள்ளை எப்புடி கோர்த்துவிடுது பாரு' என்று தான் புலம்பிக்கொண்டது.​

 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 20

'அதெல்லாம் வேண்...' என்று வைஷாலி மறுத்து சொல்ல வர அதற்குள் "இல்ல அப்பத்தா இப்போதான் வெளியில அலைஞ்சிட்டு வந்ததுல டயர்டா இருக்கு. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்" என்று அவனே மறுத்திருந்தான்.​

அதில் வைஷாலியின் பொறுமை மொத்தமாக கரைந்து விட "அப்பத்தா நான் மாமா கூடவே போயிட்டு வரேன்" என்றாள் வைஷாலி. அவளது பார்வையின் கூர்மை அவனை குத்தியதில் அவளில் இருந்து பார்வையை திருப்பிக்கொண்டான் அவன்.​

"அவன் தான் டயர்டா இருக்குன்னு சொல்லுறானே பிறகு எதுக்கு அவன் கிட்ட வம்பு பண்ணிட்டிருக்க. வேணும்னா நான் வரேன்" என்று சரோஜினி யோசனை சொல்ல "மாமா கூட்டி போறதுன்னா போகட்டும் இல்லைனா நான் பார்லர் போகல" என்று பிடிவாதம் பிடித்தாள் வைஷு.​

"என்ன டி நீ…மது தான் இப்படி தொட்டதுக்கு எல்லாம் பிடிவாதம் பிடிச்சிட்டு சுத்துவா. எப்போதிலிருந்து நீ அவள் மாதிரி மாறுன" என்று குரலில் கண்டிப்பு தொனிக்க அவளை கடிந்து கொண்டார் சரோஜினி.​

ஆம், உண்மை தான். அவள் இப்படி எல்லாம் பிடிவாதம் பிடிப்பவளே கிடையாது. அமைதியானவள். எதையும் விட்டு கொடுத்தே பழக்கம் அவளுக்கு. ஆனால், இப்பொழுது தானவீரன் அவளிடம் நடந்துகொள்ளும் விதம் அவளது இயல்பையே மாற்றியிருந்தது.​

அப்படி என்ன செய்துவிட்டாள் அவனை அவளிடம் இப்படி ஒதுக்கம் காட்டும் அளவிற்கு. அதுவே அவளுக்கான வேலைகளை அவனையே செய்ய வைக்க வேண்டும் என்கின்ற ஆதங்கத்தை உண்டாக்கியிருந்தது அவளுக்கு.​

"வைஷு" என்று சரோஜினி அதட்ட "சரோ,அவளை எதுக்கு அதட்டுற. வீர், கல்யாணமாக போற பொண்ணுப்பா. இந்த நேரத்துல தான் நாலு பேரு கண்ணு படும். இல்லாத பிரச்சனை எல்லாம் வரும். நீ துணையா போனா வெளியில போற பொண்ணு நல்லபடியா திரும்ப வந்திடுவான்னு எங்களுக்கு நிம்மதியா இருக்கும்ல. கூட்டி போயிட்டு வாயா" என்றார் ஜெயலக்ஷ்மி தன்மையாக.​

அவர் சொல்வதன் அர்த்தம் விளங்க அவன் வீட்டு பெண்ணின் பாதுகாப்பு அவனுக்கும் முக்கியம் அல்லவா. அதற்கு மேலும் மறுத்து பேசாமல் "சரி... வா" என்றபடி சமையல் கட்டிலிருந்து வெளியேறியிருந்தான் அவன்.​

"போயிட்டு வரேன் மா. போயிட்டு வரேன் அப்பத்தா" என்று இருவருக்கும் சொல்லிக்கொண்டு அவளும் அவன் பின்னோடு வெளியேறியிருந்தாள்.​

பழக்க தோசத்தில் நேரே சென்று அவன் பைக்கில் எரியமர்ந்தவன் பைக்கை உயிர்ப்பித்திருந்தான். வைஷாலியும் அவன் பின்னே அமருவதற்காக அவன் தோளின் மீது கையை வைக்க சென்ற சமயம் அவளை பைக்கின் சைடு கண்ணாடியின் வழியே பார்த்தவன் என்ன நினைத்தானோ "ஒரு நிமிஷம்" என்றான்.​

அவள் அவனை கேள்வியாக பார்க்க உயிர்ப்பித்த பைக்கை மீண்டும் அணைத்து ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு இறங்கியவன் விறுவிறுவென்று வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.​

உள்ளே சென்றவன் அங்கே மாட்டி வைக்க பட்டிருந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.​

அவனை கேள்வியாக பார்த்துக்கொண்டிருந்த வைஷாலியின் முன்னே கார் சாவியை காட்டியவன் "வா..." என்றபடி காருக்குள் ஏறி அமர்ந்தான்.​

அவளுக்கு கடுப்பாகிவிட்டது. ஏன் அவளுடன் பைக்கில் சென்றால் என்னவாகிவிடுவானாம்? ஐந்து கிலோ குறைந்து போய்விடுமா? இல்லை இதற்கு முன் அவளுடன் பைக்கில் அவன் சென்றதே இல்லையா?​

அந்த கடுப்பில் காரின் முன் இருக்கையில் அமராமல் பின் இருக்கையில் சென்று அமர்ந்தவள் கதவை அடித்து சாற்றினாள். அவன் மீதான கோபம் மொத்தத்தையும் அந்த கதவில் காட்டினாள் போலும். காரின் கதவு அதிர்ந்த சத்தத்தில் தானவீரன் கண்களை மூடி திறந்தான்.​

வண்டியும் கிளம்பியிருக்க இருவரிடத்திலும் கனமான மௌனம் ஒன்று ஆட்சி செய்துக்கொண்டிருந்தது.​

வானொலியில் மெல்லிசை பாடல் ஒன்றை ஒலிக்க விட்டிருந்தான் தானவீரன். ஒலித்துக் கொண்டிருந்த பாடல் வரிகளில் ஏதோ ஒன்று அவளைப் பார்க்கச் சொல்லி அவனை உந்தியது.​

பாதையில் நிலைத்திருந்த விழிகளை மெல்ல உயர்த்தி ரியர் வியூ கண்ணாடியினூடு அவள் முகம் பார்த்தான். கார் சன்னலின் வழியே வெளியே பார்த்துக்கொண்டு வந்த வைஷாலியும் அதே சமயத்தில் அந்தக் கண்ணாடியை பார்க்க அர்த்தம் விளங்காத அவன் பார்வையும் சினம் கனன்ற அவள் பார்வையும் ஒன்றாக கலந்தன.​

பயணமும் பாடலும் மனதில் இருந்த கொதிப்பை ஓரளவுக்கு மட்டுப்படுத்திய போதிலும் அவன் மீது இருந்த கோபம் இன்னமும் மீதம் இருந்தது அவளுக்கு.​

அந்த கோபத்தை காட்டும் வண்ணமாக அவன் அவளை பார்க்க முடியாதபடி அவளுக்கு மறுபுறம் இருந்த இருக்கையில் நகர்ந்து அமர்ந்துக்கொண்டாள். அது போதாதென்று காரில் இருந்த சஞ்சிகை ஒன்றை எடுத்து முகத்தையும் மறைத்தப்படி வைத்துக்கொண்டாள்.​

அவளின் சிறுபிள்ளை தனமான செயல் தானவீரனுக்கு சிரிப்பை வரவழைத்திருந்தது. இதழ் கடித்து சிரிப்பை கட்டுப் படுத்திக்கொண்டான்.​

முகத்தை மூடியிருந்த சஞ்சிகையை அவள் விழிகள் மட்டும் தெரியுமளவிற்கு கொஞ்சமாக கீழிறக்கியவள் அவனை பார்த்தாள். என்னதான் அவன் இதழ் பிரிக்காமல் உள்ளுக்குள்ளேயே சிரித்துக்கொண்டாலும் அவன் முக பாவத்தையும் இதழ் முனைகளில் தோன்றிய வளைவுகளையும் வைத்தே அவன் சிரிக்கின்றான் என்பதை கண்டுகொண்டாள் வைஷாலி.​

என்ன காரணத்தினால் அவன் இப்படி இருக்கின்றான் என்பது பிடிபடவில்லை என்றாலும் அவர்கள் இருவரும் நடந்துகொள்வதும் சிறுபிள்ளை தானமாகவே தோன்ற அவளுக்கும் கூட சிரிப்பு தான் வந்தது. இதழ்களில் மலர துடித்த புன்னகையை அவனுக்கு காட்டாதவாறு சன்னலின் புறம் திரும்பி மெதுவாக புன்னகைத்துக்கொண்டாள்.​

அவனுடனான இந்த பயணம் முடிவதற்குள் அவர்களுக்கிடையில் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பது எதுவாகினும் அதை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.​

என்னதான் அவர்கள் எப்பொழுதுமே எலியும் பூனையும் போல அடித்துக்கொண்டாலும் அவளுக்கு தானவீரனை மிகவும் பிடிக்கும்.​

எதற்கெடுத்தாலும் கை நீட்டுவதும் மூக்கின் நுனியில் வைத்துக்கொண்டே சுற்றும் அவனது கோபமும் தான் அவனிடம் அவளுக்கு பிடிக்காததே ஒழிய அவன் அவளுக்கு எப்பொழுதும் பிடித்த ஒருவன் தான்.​

எப்பொழுதும் கலகலக்கும் அவன் இயல்பும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடத்தில் அவன் காட்டும் அன்பும் அக்கறையும் அவளுக்கு எப்பொழுதுமே பிரம்மிப்பாக தான் இருக்கும்.​

அப்படியானவனின் பாராமுகம் அவளின் மனதை வெகுவாக பாதித்திருந்தது. அவனின் பிரச்சனை என்னவென்று அவனிடமே பேசி தீர்த்துவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் அவனை பிடிவாதம் பிடித்து தன்னுடன் அழைத்தும் வந்திருந்தாள்.​

அவள் செல்ல வேண்டிய அழகு நிலையமும் வந்துவிட காரை நிறுத்தியவன் "நீ போயிட்டு வா. நான் கார்லயே வெயிட் பண்ணுறேன்" என்றான் பின்னால் திரும்பி அவளை பார்த்துக்கொண்டே.​

அவனை அழுத்தமான பார்வை பார்த்தவள் "நீங்களும் வாங்க" என்றாள்.​

அவன் விழிகள் அந்த அழகு நிலையத்தின் மீது படிய "உள்ள வந்து நான் என்ன பண்ண போறேன்? நீ போயிட்டு வா" என்றான்.​

"உள்ள ஏதும் பிரச்சனை வந்தா என்ன பண்ணுறது?" என்று வேண்டுமென்றே கேட்டாள் அவள்.​

அவளை புருவம் இடுங்க பார்த்தவன் "பார்லர்ல என்னடி பிரச்சனை வரப்போகுது? சும்மா கடுப்பேத்தாம போயிட்டு வா" என்றான்.​

"என்னை பத்திரமா பார்த்துக்க சொல்லித்தான் அப்பத்தா உங்களை துணைக்கு அனுப்பி வச்சாங்க... எனக்கு துணைக்கு வரமாட்டுறீங்கன்னு அப்பத்தா கிட்ட சொல்லட்டுமா?" என்றபடி அலைபேசியை கையில் எடுத்தாள் அவள்.​

சட்டென்று எட்டி அவள் அலைபேசியை பறித்தெடுத்தவன் "இப்போ என்ன பிரச்சனை உனக்கு?" என்று சீறினான்.​

"உள்ள வர முடியுமா? முடியாதா?" என்று பதிலுக்கு அவளும் சீறினாள்.​

"சரியான இம்சை…வந்து தொலையுறேன் இறங்கு" என்றபடி அவனும் காரிலிருந்து இறங்கி கொள்ள அவன் அருகே வந்தவள் அவன் முன்னே கையை நீட்டினாள்.​

"என்ன?" என்று எரிச்சலாக கேட்க "ஃபோன்" என்றாள்.​

நீட்டியிருந்த அவள் கையில் சற்று முன்னர் அவன் பறித்தெடுத்திருந்த அவளது அலைபேசியை கடுப்பாக திணித்தவன் நேரே அழகு நிலையத்திற்குள் செல்ல அவளும் அவனை வெறுப்பேற்றிவிட்ட சந்தோஷத்தில் உதட்டிற்குள் புன்னகைத்தபடி அவனை பின் தொடர்ந்தாள்.​

அவனை பார்த்ததும் அங்கே வேலை செய்து கொண்டிருந்த பெண்ணோ "என்ன வேணும் சார்?" என்று கேட்க "எனக்கு ஒன்னும் வேணாம். இவங்களுக்கு தான் வேணும்" என்றான்.​

அவன் பின்னே வந்த வைஷாலியை பார்த்ததும் "ஓஓ...மேடம் நீங்களா வாங்க வாங்க... அப்பாயின்மென்ட் போட்டிருந்திங்கல்ல. வாங்க எல்லாம் ரெடியா இருக்கு" என்று சொல்லி அவளை அழைக்க "இவருக்கும் ஃபேசியல் பண்ணனும்" என்றாள் வைஷாலி.​

"ஏதே" என்று அவன் அதிர்ந்து பார்க்க "என்ன? பண்ணிக்க முடியுமா? முடியாதா? என்று கேட்டாள் அவள்.​

"ஆம்பாளைங்களுக்கு எல்லாம் அவங்க பண்ண மாட்டாங்க" என்று அவன் சொல்லி தப்பித்துக்கொள்ள நினைக்க "அதெல்லாம் பண்ணுவோம் சார். இது யுனிசெக்ஸ் பார்லர் தான்" என்று அவன் கேட்காமலே ஆஜராகி அவனை வசமாக மாட்டி விட்டிருந்தாள் அந்த நிலையத்தில் பணிபுரியும் பெண்.​

அந்த பெண்ணை முறைத்தவன் "நான் கேட்டேனா?" என்று பற்களை கடித்தான்.​

"ஐயோ என்ன மேடம்?" என்று அந்த பெண்ணும் பயத்தில் வைஷாலியை பார்க்க "அவர் அப்படி தான் கொஞ்சம் லூசு. நீங்க போயி அவருக்கும் ரெடி பண்ணுங்க, வந்துடுறோம்" என்றாள் வைஷாலி.​

அந்த பெண்ணும் " ஐயோ பாவம்… பார்க்க நல்லா ஹீரோ மாதிரி இருக்காரு. ஆனால், லூசா..." என்று இழுவையாக சொல்லியபடி அவனை ஒரு மார்க்கமாக பார்த்துக்கொண்டே நகர அதில் கடுப்பானவன் "அடிங்" என்று அவளை அடிப்பதற்கு கையில் ஏதும் கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் அவன் தேட "ஐயோ" என்று ஒரே ஓட்டமாக உள்ளே ஓடியிருந்தாள் அந்த பெண்.​

அவர்களை பார்த்துக்கொண்டிருந்த வைஷாலிக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. வாய் விட்டே சத்தமாக சிரித்தாள்.​

அவள் வாயார சிரிப்பதையே அவன் கண்ணார பார்த்துக்கொண்டே நின்றான்.​

சில தினங்களாக அவன் அவளை படுத்திய பாட்டில் முறைத்துக்கொண்டு திரிந்தவள் இன்று தான் கலகலவென வாய்விட்டு சிரித்திருந்தாள். தான் குழம்பியது போதாதென்று அவளையும் குழப்பி கல்யாணத்திற்கு காத்திருக்கும் பெண்ணவளின் முகம் வாடிப்போக தான் காரணமாகிவிட்ட குற்றவுணர்வும் அவனை சூழ்ந்துக்கொண்டது.​

அவன் அப்படியே நிற்பதை பார்த்தவள் "என்ன? போகலாமா?" என்றாள்.​

"எதுக்குடி என்னை இப்படி படுத்துற?" என்று கேட்டான் அவன்.​

"இம்ம்...ரெண்டு மூணு நாளா நீங்க என்னை படுத்துனீங்கல்ல அதுக்கு தான்" என்று சொல்லியபடி உள்ளே நுழைந்தாள்.​

அவள் அப்படி சொல்லிய பின் அதற்கு மேலும் அவனுக்கு மறுக்க தோன்றவில்லை. பாவம், அவள் ஏற்கனவே அவனால் மனம் கஷ்டப்பட்டுவிட்டாள் அல்லவா. அதற்காகவேனும் அவள் சொல்வதை கேட்க நினைத்தவன் அவளுடன் சென்றான்.​

வைஷாலிகாக என்று சென்றுவிட்டாலும் அவனுக்கு அது எல்லாம் புதிய அனுபவமாயிற்றே. அந்த பெண் அவனுக்கு ஃபேசியல் செய்ய ஆரம்பித்திருக்க அவனோ கூசுகிறது என்று முகத்தை சுளித்தான்.​

"முகத்தை சுளிக்காதிங்க சார்" என்று அந்த பெண்ணும் "நீ கூசாம போடும்மா" என்று அவனுமாக மாறி மாறி சண்டையிட்டுக்கொள்ள அவர்கள் கலாட்டா வைஷாலிக்கு தான் நல்ல பொழுதுபோக்காக இருந்தது.​

ஒரு வழியாக இருவரும் முகத்தை அழகு படுத்திகொண்டு வெளியில் வர அவன் உள்ளே செய்த கலாட்டாக்களை எல்லாம் நினைத்து வைஷாலிக்கு மீண்டும் சிரிப்பு வருவது போல் இருந்தது. அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவன் "இப்போ என்ன? சிரிப்பு வந்தா சிரிக்க வேண்டியது தானே" என்றான் கடுப்பாக.​

அதற்குமேல் அடக்க முடியாமல் அவள் சிரித்துவிட அவனுக்கும் அவன் செய்த அழிச்சாட்டியங்களை நினைத்து சிரிப்புதான்.​

மென்மையாக புன்னகைத்துக்கொண்டவன் "போகலாமா?" என்று கேட்க "இம்ம்" என்றபடி சென்று காரில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்.​

முதல் போல் இல்லாமல் இம்முறை காரின் முன் சீட்டில் தான் அமர்ந்தாள். காருக்குள் ஏறியமர்ந்து வண்டியை உயிர்பித்த வீர் "அடுத்து எங்க?" என்று கேட்டான்.​

"காஃபி?" என்றாள்.​

பதில் எதுவும் சொல்லாமல் காரை எடுத்தவன் அடுத்து சென்று நின்றது அருகே இருந்த குளம்பியகத்தில் தான்.​

உள்ளே நுழைந்து இருவரும் வேண்டியதை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்த தருணமதில் "மாமா" என்றாள் வைஷாலி.​

அவன் விழிகள் அவள் விழிகளை நேராக பார்க்க "என்ன பிரச்சனை உங்களுக்கு?" ஏன் ரெண்டு மூணு நாளா ஒரு மாதிரி இருக்கீங்க?" என்று மனதில் இருந்ததை நேரடியாக கேட்டும் விட்டாள்.​

ஆனால், அவனுக்கு தான் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இத்தனை வருடங்களாக இல்லாமல் திடிரென்று என் மனம் தடுமாறி திருமணம் என்னும் மரபு வேலிக்குள் நிற்கும் உன் காலடியில் விழுந்து விட்டது என்றா சொல்ல முடியும்.​

ஏன்...எப்படி என்று அவள் கேட்டால்? என்ன சொல்வது? அந்த கேள்விக்கு அவனே இன்னும் பதிலை கண்டுபிடிக்கவில்லையே.​

ஒரு நொடி அவள் விழிகளை பார்க்க முடியாமல் தடுமாறினான்.​

அவன் பதில் சொல்லாமலே அமர்ந்திருக்கவும் "ஒருவேளை ஈஸ்வரி அத்தைக்கு நமக்கு கல்யாணம் பண்ணி வைக்குற எண்ணம் இருந்ததுக்காக என் கிட்ட இருந்து ஒதுங்கி இருக்க நினைக்குறிங்களா?" அவளாக அவன் நடவடிக்கைகளுக்கு ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு கேட்டாள்.​

அவள் கேட்டதில் விழுக்கென்று நிமிர்ந்து அவளை பார்த்தவன் "உன் கிட்ட யாரு சொன்னது?" என்று கேட்டான். ஒருவேளை அவன் பேச்சையும் மீறி ஈஸ்வரி அவளிடமும் அந்த விடயத்தை பற்றி பேசியிருப்பாரோ என்ற எண்ணத்தில் கேட்டான்.​

"அம்மா தான் சொன்னாங்க. நீங்க ஒரு மாதிரி இருக்கறதை பார்த்துட்டு அத்தை கேட்டதை மனசுல போட்டு குழப்பிட்டிருக்கீங்களோன்னு கேட்டாங்க" என்றாள்.​

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களின் காஃபியும் வந்துவிட அதை எடுத்து மெல்ல பருகினான் தானவீரன்.​

அவள் கேட்ட கேள்விகளுக்கு அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை. அவன் முகத்தை கூர்ந்து கவனித்தாள் வைஷாலி.​

அவன் புருவங்களில் தெரிந்த சிறு சுளிப்பே அவனுக்கு இப்பொழுது பேசிக்கொண்டிருக்கும் விடயம் பிடிக்கவில்லை என்பதை குறிப்பதாக இருந்தது. அவளுக்கும் பழையதை பேசுவதில் விருப்பமுமில்லை.​

"சரி, ஏன் எதுக்குன்னு நான் கேட்கல. பட், இனி இப்படி என் கிட்ட முகத்தை திருப்பிட்டு போகாதீங்க ப்ளீஸ். என்னவோ மாதிரி இருக்கு. நீங்க சண்டை போட்டா கூட பதிலுக்கு நான் சண்டை போட்டுட்டு போய்டுவேன். ஆனால், இப்படி ஒதுக்கி வைக்குற போல நடந்துக்குறது கஷ்டமா இருக்கு. அதுவும் நான் என்ன தப்பு பண்ணேன்னு கூட எனக்கு தெரியல" என்றவளின் குரல் தழுதழுத்தது. விழிகளில் கூட நீர் கோர்த்து பளபளத்தது.​

அவனுக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது. அவளது விழி நீர் அவன் உயிர் வரை சென்று சுட்டது. அவளின் தவிப்பு அவனுக்கு வலித்தது.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

இது என்ன புது வித உணர்வு என்று அவனுக்கே புரியவில்லை. புது உணர்வா இல்லை இத்தனை நாட்கள் உள்ளுக்குள் இருந்ததை காலம் கடந்து உணர்கின்றானோ என்றும் விளங்கவில்லை.​

அது விளங்கினாலும் இனி பயனில்லை என்ற நிலையில் தான் அவன் நிற்கின்றான்.​

கண்களை மூடி மனதை ஆட்கொள்ள நினைக்கும் பெயரறியா அந்த உணர்வுகளை எல்லாம் நெட்டி தள்ளினான். ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு சமநிலைக்கு வந்திருந்தான் தானவீரன். இனி கல்யாணம் முடியும் வரை தன்னால் எந்த குழப்பமும் வரக்கூடாது என்று மனதிற்குள் உறுதி எடுத்துக்கொண்டான்.​

மெல்ல விழிகளை மலர்த்தி வைஷாலியை பார்த்தான்.​

"உன் மேல எந்த தப்புமில்ல. நான் தான்...." என்று உணர்ச்சி மிகுதியில் ஏதோ சொல்ல ஆரம்பித்தவன் சற்று நிறுத்தி "சரி...இனி இப்படி நடந்துக்க மாட்டேன்...சாரி" என்றான்.​

அவளின் கலங்கிய விழிகள் அப்படியே இருக்க "அதான் சாரி சொல்லிட்டேனே...கொஞ்சம் சிரியேன்" என்றான்.​

அவளும் மெலிதாக புன்னகைத்துக்கொள்ள அந்த தருணத்தை மேலும் இதமாக்கியிருந்தது அவர்களின் கைகளில் சுடச் சுட நறுமணம் கழ்ந்துக்கொண்டிருந்த காஃபியும் வெளியில் மெதுவாக பொழிய தொடங்கியிருந்த சாரல் மழையும்.​


 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 21


ஹாஸ்டல் கட்டிலில் அமர்ந்திருந்த மதுஷிகாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆகாஷிற்கு அழைப்பெடுத்துக்கொண்டிருந்தாள் அவள். இதோடு ஐந்தாவது முறையாக அழைகின்றாள் அவன் அழைப்பை ஏற்றப் பாடில்லை.​

இதற்கிடையில் அவளது நண்பியும் ஆகாஷின் தங்கையுமான அனிதாவையும் அழைத்து அவனுக்கு உடம்புக்கு ஏதுமா? அல்லது பயணம் எங்கும் சென்றிருக்கின்றானா என்று விசாரித்து பார்த்தும் விட்டாள்.​

அனிதாவின் தகவலின் படி அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை. அவன் நலமாக தான் இருக்கின்றான் என்று அனிதாவின் பதிலில் புரிந்து கொண்டவளுக்கு அவன் மீது ஆத்திரம் ஏகத்துக்கும் எகிறியிருந்தது.​

இருக்காதா பின்னே?​

அப்படி அவள் என்ன செய்துவிட்டாள் என்று இப்படி அவளை சுற்றலில் விடுகின்றான். அழைத்த அழைப்புகளை ஏற்கவில்லை, அனுப்பிய புலனங்களுக்கும் பதிலில்லை. அவளை இந்தளவு உதாசின படுத்த வேண்டும் என்று என்ன அவசியம்? அவன் காதலை சொல்லிய போது மறுத்தவளை விடாது துரத்தி, பின்னால் சுற்றி, கெஞ்சி கொஞ்சி காதலை ஏற்க வைத்தான். அதிலும் அவள் போட்ட விதிமுறைகளுக்கு எல்லாம் ஒப்புக்கொண்டு தானே காதலித்தான். இப்போது மட்டும் என்ன வந்ததாம்.​

அதிலும் வீரையும் அவர்களுக்குள் இருக்கும் உறவையும் பற்றி நன்கு அறிவான். இருந்தும் இந்த சிறுபிள்ளை தனமான கோபம் எதற்கு என்றும் அவளுக்கு புரியவில்லை. அதிலும் இத்தனை நாட்கள் பொறுத்துவிட்டான். இன்னும் வைஷாலியின் திருமணம் முடியும் மட்டும் தானே பொறுக்க சொல்கின்றாள். அதன் பிறகு வீட்டில் அவர்களின் விடயத்தை பற்றி பேசி சம்மதம் வாங்குகிறேன் என்றும் சொல்லியிருந்தாளே. அது கூட அவனால் இயலாதா என்று கடுப்பாக வந்தது அவளுக்கு.​

இவ்வளவு சொல்லியும் தலையில் ஏற்றி வைத்திருக்கும் கோபத்தை விட்டொழிக்காமல் இன்னமும் அவளை உதாசினம் செய்துக்கொண்டிருக்கின்றான்.​

அவனின் இந்த செய்கையில் ஒரு கட்டத்தில் பேசாமல் அவன் வீட்டிற்கே சென்று என்னவென்று கேட்டு விடலாமா என்றும் கூட யோசித்தாள் மதுஷிகா. ஆனால், பரிட்சையிலும் பரிட்சைக்கு படிப்பதிலும் கவனத்தையும் நேரத்தையும் செலவிட வேண்டியது அவசியமாகி போக அந்த எண்ணத்தை அப்போதைக்கு கைவிட்டிருந்தாள்.​

இருந்தாலும் நீ எப்படியோ கோபித்துக்கொண்டு போ. எனக்கு என் காரியம் தான் முக்கியம் என்றும் அவளால் இருக்க முடியவில்லை. காதலித்துவிட்டாளே என்ன செய்வது.​

ஏதோ ஒருவகையில் அவளின் செயல் அவனை காயப்படுத்தியிருக்க இந்த பிரச்சனைக்கு தான் காரணமாகி போனதால் அதை அவளே சரி செய்துகொள்ள வேண்டும் என்றும் நினைத்தாள்.​

அதுதான் அவன் வேண்டுமென்றே அவளை தவிர்க்கின்றான் என்று தெரிந்தும் அழைத்துக்கொண்டிருக்கின்றாள்.​

இறுதி ஒரு முறையாக அவள் முயன்று பார்க்க அதுவும் தோல்வியை தான் தழுவியிருந்தது.​

நாளை காலையில் அவளுக்கு இறுதி தேர்வு இருக்க அதற்கு மறுநாள் மாலை நடக்க இருக்கும் வைஷாலியின் ரிசெப்ஷனுக்குள் அவள் வீட்டிற்கும் சென்று சேர்ந்தாக வேண்டும். இதற்கிடையில் ஆகாஷையும் சமாளிக்க வேண்டியிருக்க அவளுக்கு தலை வின் வின்னென்று வலிக்க தொடங்கியிருந்தது.​

இரு விரல்களை நெற்றியில் வைத்து நீவி விட்டுக்கொண்டே அலைபேசியை முறைத்து பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். ஆகாஷ் அவளிடம் பேசினாலாவது எதையாவது சொல்லி அவனை சமாதானம் படுத்தி விடலாம்.​

ஆனால், அவன் தான் அவளை ஒட்டு மொத்தமாக தவிர்க்கின்றானே. அன்று அனிதாவிற்கு அழைத்து அவனிடம் ஃபோனை கொடுக்க சொல்லிய நேரம் கூட தனக்கு பேச விருப்பமில்லை என்று சொல்லி தங்கையை திருப்பி அனுப்பியது அனிதாவின் கையில் இருந்த அலைபேசியின் வாயிலாக அவள் செவிகளிலும் விழுந்தது.​

அது அவளுக்கு அவமானமாகிவிட அதற்கு பிறகு அனிதாவின் மூலம் அவனை தொடர்புகொள்ளவும் அவள் விரும்பவில்லை.​

தலையை நீவிக்கொண்டே அமர்ந்திருந்தவள் இறுதி முயற்சியாக " ஆகாஷ், நாளைக்கு காலையில் எனக்கு கடைசி எக்ஸாம் முடிஞ்சிடும். அதுக்கு பிறகு நாம மீட் பண்ணலாமா? எதுவா இருந்தாலும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம். இந்த ரிலேஷன்ஷிப்ப கன்டினியூ பண்ணுறதா இருந்தாலும் சரி...இல்லை விலகிடணும்னாலும் சரி. லெட்ஸ் டாக் அண்ட் டிசைட் வித் சம் டிக்னிட்டி" என்று பேசி புலனத்தில் செய்தி அனுப்பி வைத்து விட்டு அலைபேசியை கட்டிலில் தூக்கி போட்டவள் அப்படியே மல்லாந்து படுத்துகொண்டாள்.​

தேர்வுக்கு படிப்பதற்கு இன்னும் சில அத்தியாயங்கள் இருந்தாலும் வின்னென்று தெறித்த தலையினொடு படிப்பது சாத்தியமாகத காரியமாகையால் சற்று நேரம் ஓய்வெடுக்க நினைத்திருந்தாள்.​

அலைபேசி சத்தமிட்டு புலன செய்தி வந்திருப்பதை குறித்தது. அலைபேசியை பார்க்காமலே அது மதுஷிகாவிடமிருந்துதான் வந்திருக்கும் என்று யூகித்தபடிய அலைபேசியை எடுத்து திறந்து பார்த்தான்.​

அவன் நினைத்தது சரிதான் என்பது போல 'மது டால்' என்று அவள் பெயர் தான் திரையில் விழுந்தது. அவன் அவள் பெயரை அப்படி தான் சேமித்து வைத்திருந்தான். ஹார்மோன்களின் மிகுதியில் ஆசையும் ஆர்வமும் அதிகமிருந்த காலகட்டத்தில் அப்படி சேமித்து வைத்திருப்பான் போலும்.​

இப்பொழுது 'மது டால்' என்று அவள் பெயரை பார்த்ததுமே ஒருவகை எரிச்சலாக வர "என்ன மூட்ல இப்படி பேரு வச்சேனோ. மது டால் ஆம்... ச்சே 'மது பி****' ன்னு வைக்கணும்" என்று மது டால் என்று சேமித்திருந்த அவளின் பெயரை மாற்றி ஒரு ஆங்கில கெட்ட வார்த்தையுடன் இணைத்து வைத்தான்.​

ஒரு காதலியாக அவனது ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவள் நிறைவேற்றாத கோபம் அவனுக்கு. இத்தனை நாட்கள் அவள் அழகில் மயங்கி அவளை அடைந்துவிடும் எண்ணத்தில் பொறுத்து போனவன் இப்பொழுது 'ச்சீச்சீ இந்த பழம் புளிக்கும்' என்னும் நிலைக்கு வந்திருந்தான். அதுதான் அவனின் இப்படியான அநாகரிக செயலுக்கும் காரணம். பெயரை மாற்றி வைத்து, அதுவும் கெட்ட வார்த்தையுடன் சேர்த்து வைத்து அவன் வக்கிரத்தை வெளிப்படுத்த தொடங்கியிருந்தான்.​

***​

வெளியில் பெய்து கொண்டிருந்த சாரல் மழையை கண்ணாடி சுவரினூடு ரசித்தபடி காஃபியை சுவைத்த வண்ணமாக அமர்ந்திருந்தனர் தானவீரனும் வைஷாலியும்.​

அவர்களிடத்தில் மௌனமே பாஷையாகி போக அவர்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த யுத்தம் இப்பொழுது அவன் மனதிற்குள் மட்டுமே தொடர்ந்துக் கொண்டிருந்தது. புதிதாய் பூத்திருந்த அவனது உணர்வும் உறவும் வாழ்வதும் வீழ்வதும் இனி அவன் மனதிற்குள் மட்டும் தான். அவன் அதை யாரிடமும் காட்டப் போவதில்லை என்றும் அந்த புள்ளியில் முடிவெடுத்துக்கொண்டான்.​

அழகான உணர்வு அது அவன் நெஞ்சை நிறைத்திருக்கின்றது. அதற்கு பெயரிட விரும்பவில்லை என்றாலும் அவன் அதை உணர்ந்த பின் கடந்து சென்ற ஒவ்வொரு நொடிகளும் அது காதல் தான் என்று அவன் இதய துடிப்புடன் சேர்ந்து துடித்தபடி சொன்னது.​

ஆனால், தாமதமாக, மிகத் தாமதமாக உணர்ந்துக் கொண்டிருக்கின்றான். மெதுவாக விழிகளை நகர்த்தி கடைக்கண் பார்வையாக அவளை பார்த்தான் தானவீரன்.​

அவன் மனதை கவர்ந்தவள் அவன் கண் முன்னே இருக்கின்றாள். அவனுடன் மழையை ரசித்த வண்ணம் காஃபி அருந்திக்கொண்டிருக்கின்றாள். கையை நீட்டி தொடும் தூரம் தான் அமர்ந்தும் இருக்கின்றாள். ஆனால், யாவும் உடலளவில் மட்டுமே. மனதளவில் அவனை விட்டு தொலைதூரம் சென்றுவிட்டாள். தொலைத்துவிட்டான் அவன்.​

இனி மீட்பது ஆகாத காரியம். அது அநாகரீகமும் கூட. மனம் கனமாக தொடங்க அதை இதமாக்க மீண்டும் மழையை தேடினான். அவனது விழிகள் மங்கையை விட்டு மழையில் நிலைத்தன.​

'கொஞ்சம்...கொஞ்சமே கொஞ்சம் சீக்கிரம் எனக்கு புரிஞ்சிருக்கலாமே. நான் முதலில் கேட்டிருந்தா என்னை தாண்டி போயிருக்க மாட்டாள் தானே' மனக்குமுறல்களை மௌனமாக மழைத்துளிகளிடம் கொட்டிக்கொண்டிருந்தான்.​

'லேட் பண்ணிட்டேன்ல... தொலைச்சுட்டேன்' அடுத்த அவன் மனக்குமுறல் மழைத்துளியை சென்றடையும் முன் அவன் விழிகளில் நீர் துளி திரையிடுவது போல் இருக்க கண்களை சிமிட்டி கட்டுப்படுத்திக்கொண்டான்.​

திடீர்ரென்று "எக்ஸ்கியூஸ் மீ" என்று அவன் தோள்பட்டையில் யாரோ தட்டுவது போல் இருந்தது. திரும்பி பார்த்தான். அங்கே ஒரு வெள்ளைக்கார பெண்மணி நின்று கொண்டிருந்தார்.​

அவன் அவரை புருவம் சுருக்கி பார்க்க "சாரி, உங்க அனுமதியில்லாமல் உங்களோட போட்டோ எடுத்துட்டேன்" என்று ஆங்கிலத்தில் சொல்லியபடி அவனிடம் ஒரு புகைப்படத்தை நீட்டியிருந்தார்.​

அவன் அவரை அழுத்தமாக பார்த்துக்கொண்டே அவர் நீட்டிய புகைப்படத்தை கையில் வாங்க "சாரி, ஐ காண்ட் ரிஸிஸ்ட் (I can’t resist). நீங்க ரெண்டு பேரும் இப்படி உட்கார்திருக்கிறது பார்க்க அவளோ அழகா ஒரு ஓவியம் மாதிரி இருந்தது. கையில் கேமரா வச்சிட்டு இந்த காட்சியை கிளிக் பண்ணலன்னா அது பெரிய வேஸ்ட்" என்று அவர் கையில் வைத்திருந்த இன்ஸ்டன்ட் டிஜிட்டல் காமெராவை தூக்கி காட்டியபடி ஆங்கிலத்தில் சொன்னார்.​

அவர் கொடுத்த புகைப்படத்தை பார்த்தான் தானவீரன்.​

வைஷாலி கையில் காஃபி கப்புடன் அதை ருசித்து பருகியபடி கண்ணாடி சுவரினூடு வெளியில் பெய்துகொண்டிருக்கும் சாரல் மழையை ரசித்துக்கொண்டிருக்க வீர் கையில் காஃபி கப்பை வைத்துக்கொண்டு அவளை ரசித்துக்கொண்டு அமர்ந்திருப்பது போல் அமைத்திருந்தது அந்த புகைப்படம்.​

புகைப்படத்திற்கு கீழ் 'மை சோல் இஸ் அண்ட் ஆல்வெய்ஸ் வில் பி யுவர்ஸ் (my soul is and always will be yours)’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. புருவங்கள் இடுங்க அந்த வாசகத்தை படித்தாலும் அவனது விரல்கள் மென்மையாக அதை வருடின.​

அதை வருடியபடியே அவன் அந்த பெண்மணியை நிமிர்ந்து பார்க்க "எனக்கு அப்படி தான் தோணுச்சு" என்றார் அவர்.​

தானவீரனின் இதழ்கள் புன்னகைக்கவில்லை என்றாலும் அவன் விழிகளில் வலியுடன் கூடிய புன்னகை ஒன்று மிளிர்ந்தது. காணும் அற்புத காட்சிகளை எல்லாம் கவிதைகளாக மொழிபெயர்த்து தனது புகைப்படக்கருவிக்குள் புகுத்திக்கொள்ளும் அப்பெண்ணுக்கு அவன் விழிகளில் தோன்றிய உணர்வுகளும் புரிந்ததோ என்னவோ மென்மையாக புன்னகைத்தப்படி அவன் தோளின் மீது மென்மையாக தட்டி கொடுத்துவிட்டு சென்றார்.​

"என்ன மாமா, காட்டுங்க நானும் பார்க்குறேன்" என்றபடி வைஷாலி அவன் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கிகொண்டாள். அதை விழிகள் விரிய பார்த்தவள் "செம்மையா இருக்குல்ல… அச்சோ அவங்களுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலையே நீங்க" என்றவள் "எக்ஸ்கியூஸ் மீ மேம்" என்று சத்தமாக அவரை அழைத்திருந்தாள்.​

கொஞ்ச தூரமே சென்றிருந்த அந்த பெண்ணும் திரும்பி அவர்களை பார்க்க "தேங்க்ஸ், இட்ஸ் ரியலி பியுட்டிபுஃல்" என்றாள் வைஷாலி.​

அந்த பெண்ணும் புன்னகை மலர சிறு தலையசைப்புடன் அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றிருந்தார்.​

அவள் மீண்டும் அந்த புகைப்படத்தில் விழிகளை பதித்த போது தான் கீழே இருந்த வாசகத்தை கவனித்தாள். அதை பார்த்து விழிகள் விரித்தவள் "நம்மை லவர்சுன்னு தப்பா நினைச்சுட்டாங்க போல" என்று சிரித்துக்கொண்டே மீண்டும் அந்த புகைப்படத்தை அவனிடமே கொடுத்திருந்தாள்.​

"தப்பாதான் நினைச்சுட்டாங்க" என்று ஒரு மாதிரி குரலில் சொல்லியபடி அந்த புகைப்படத்தை வருடியவன் இதை நானே வச்சுக்குறேன் என்று அதை தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.​

"போகலாமா?" என்று வைஷாலி கேட்க 'இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே' என்று அவனை முந்திக்கொண்டு அவன் மனம் சொன்ன பதிலை இதழ்களுக்குள்ளேயே அடக்கியவன் "ம்ம்ம்" என்றான்.​

அவர்களின் காஃபிக்கான பணத்தை செலுத்திவிட்டு "வா போகலாம்" என்று எழுந்துக்கொண்டான்.​

வைஷாலியும் இருக்கையிலிருந்து எழுந்து முன்னால் நடக்க அவளின் பாதச்சுவடுகளை தொடர்ந்து நடந்தவனின் பார்வை முன்னே நடந்த பெண்மையின் மீதே நிலைத்திருந்தது.​


சாரல் மழை லேசாக பெய்துக்கொண்டிருக்க தனது கைப்பையை தூக்கி தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு மழையிலிருந்து தன்னை பாதுகாத்தப்படி காரை நோக்கி நடந்தாள் வைஷாலி.​

தானவீரன் இருந்த மனநிலைக்கு அவனை அந்த மழை எல்லாம் எதுவும் செய்யவில்லை போலும். இரு கைகளையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டபடி அவளையே பார்த்தபடி நடந்தான் அவன்.​


அவர்களின் காருக்கருகே வந்தவள் அவள் அமர வேண்டிய பக்கமாக செல்ல அவளை அன்றி வேறெதிலும் கவனம் பதிக்காமல் அவளை பின்தொடர்ந்து சென்றவனும் அவளுக்கு பின்னே சென்று நின்றிருக்க அவனை கேள்வியாக திரும்பி பார்த்தாள் வைஷாலி.​

"என்ன?" என்று அவள் கேட்க "என்ன...என்ன? என்று அவன் பதில் கேள்வி கேட்டான்.​

"நீங்க தானே காரை ஓட்ட போறீங்க?" என்று கேட்டாள் அவள்.​

ஒரு நொடி அவளை புரியாத பார்வை பார்த்தவன் "ஏன்?" என்றான்.​

"அப்போ எதுக்கு இந்த பக்கம் வரீங்க? ட்ரைவர் சீட் அந்த பக்கம்…" என்று கையை நீட்டி ஓட்டுனர் இருக்கையை சுட்டி காட்டினாள் அவள்.​

அப்பொழுதுதான் தான் சுற்றம் மறந்து அவளின் பின்னோடே பயணிகள் அமரும் பக்கமாக வந்து நின்றிருப்பதை உணர்ந்தான் தானவீரன்.​

அவளை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்க "உங்களுக்கு என்னமோ ஆச்சு...வரவர கனவுலகத்துல இருக்கீங்க" என்றாள் வைஷாலி.​

அவள் முன்னே அசடு வழிய நின்ற தானவீரன் "அதெல்லாம் ஒண்ணுமில்ல... கல்யாண பொண்ணாச்சே அதான் பாவம் பார்த்து உனக்கு கதவு திறக்க ஹெல்ப் பண்ணலாமுன்னு நினைச்சேன்...அதுக்கு எதுக்கு ஓவரா பேசுற" என்று வழக்கமாக அவளை சீண்டும் தொனியில் பேசி சமாளித்தபடி அவன் கார் கதவை திறந்து விட அவனை எற இறங்க ஒரு மார்கமாக பார்த்தவள் ஒன்றும் பேசாமல் காருக்குள் ஏறிக்கொண்டாள்.​

அவள் காருக்குள்ளே அமர்ந்ததும் சட்டென்று திரும்பி பிடரியை வருடியபடி நடந்தவன் இதழ்கடித்து உதட்டில் துடித்த புன்னகையை மறைத்தபடி 'மானத்தை வாங்காதடா வீரா' என்று மனதிற்குள் தன்னை தானே திட்டிக்கொண்டே காரை சுற்றி வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.​

அழகான உணர்வு அது அவன் மனதை ஆட்கொண்டு விட்ட பிறகு என்னதான் அவன் கட்டுப்படுத்த நினைத்தாலும் அவ்வப்போது நீருக்குள் பொத்தி வைத்த பந்தாக மேலெழும்பி அவனில் காதல் சிறகுகளை முளைக்க செய்வதும் அதனுடன் ஒட்டுண்ணியை போல் வலி ஒன்று ஊடுருவி முளைத்த சிறகுகளை பிடிங்கி எறிவதுமாய் இருக்க இருதலைக் கொள்ளி எறும்பாய் உள்ளுக்குள் துடித்துக்கொண்டிருந்தான் அவன்.​

ஒரே நேரத்தில் வேறு இரு உணர்வுகள் இதயத்தை ஆட்டி படைக்க முடியும் என்பதை இந்த நொடி உணர்ந்துகொண்டான். வலிகளை ஒதுக்கி வைத்து இனிமைகளை மட்டும் சேமித்து வைக்கவும் துணிந்து விட்டான். அதுதான் அவளுடன் அமைந்த இந்த கொஞ்ச நேர தனிமையை முடிந்த வரை அழகிய நொடிகளாக்க முயன்று கொண்டிருக்கின்றான்.​

காமம் அல்லாத தொடுகைகளும் கண்கள் தாண்டாத பார்வைகளும் அவன் உணர்வின் கண்ணியத்தை எடுத்து சொல்வதாக இருக்க அவளுடன் கழியும் இனிய நொடிகளை ரசித்தவாறு மெல்லிய புன்னகையுடன் காரை உயிர்ப்பித்து பாதுகாப்பு பட்டியை அவன் அணிந்த நேரம் அவனது திறன்பேசி சிணுங்கியது.​

புது எண்ணாக இருக்க அழைப்பை ஏற்று காதில் வைத்து "ஹலோ" என்க​

"ஹலோ வீர் சார் இருக்காங்களா?" என்று கேட்டது மறுமுனையில் ஒலித்த ஆணின் குரல்.​

 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

"சொல்லுங்க வீர் தான் பேசுறேன். நீங்க?" என்று அவன் கேட்க "நாங்க கோல்ட் **** நகை கடையிலிருந்து கூப்பிடுறோம். சார் நீங்க ஒரு பிரேஸ்லெட் சரி பண்ண சொல்லி கொடுத்தீங்களே" என்று அந்த நபர் சொல்ல "ஓஓ...ஆமாம். சாரி மறந்தே போயிட்டேன். ரெடி ஆகிடுச்சா?" என்று கேட்டான். சில தினங்களாக அவன் இருந்த குழப்ப மனநிலையில் அந்த பிரேஸ்லெட்டை பற்றி அவன் மறந்தே போயிருந்தான்.​

"அது எப்பவோ ரெடி சார். இன்னிக்கு கலெக்ட் பண்ணிக்குறிங்களா?" என்று அவர் கேட்க "சரி ஓகே...இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன்" என்று விட்டு அழைப்பை துண்டித்திருந்தான்.​


"ஏதும் வேலையா? எங்கையும் போகணுமா?" வைஷாலி அவன் அலைபேசியில் பேசியதை வைத்து யூகித்து கேட்க "ஆமா... உன்னை வீட்டுல விட்டுட்டு போறேன்" என்றான் அவன்.​

"போற வேலை ரொம்ப நேரம் ஆகுமா?" என்று அடுத்த கேள்வி அவளிடமிருந்து வர "இல்ல, கொஞ்ச நேரம் தான்" என்றான்.​

"அப்போ நானும் வரேன். ஒரேடியா வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு போயிடலாமில்ல. எதுக்கு அலைச்சல்?" என்றாள்.​

அவளுடனான நேரம் இன்னும் கொஞ்சம் நீளுமேயானால் வேண்டாமென்றா சொல்லுவான். அவளுக்கு புலப்படாத மென்னகை ஒன்றுடன் வண்டியை எடுத்தான்.​

காருக்குள் நிலவிய நிசப்தம் மனதில் பரவிக்கொண்டிருந்த இதத்தை உடைத்து பாரம் கூட்டுவது போல் இருக்க அதை தவிர்க்க எண்ணி வானொலியை ஒலிக்கவிட்டான்.​

நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு

நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று

உன்னோடு நானும் போன தூரம்

யாவும் நெஞ்சிலே…


ரீங்கார நினைவுகளாக அலையை

இங்கே மிஞ்சுதே

நூலறுந்த பட்டம் போலே

உன்னை சுற்றி நானும் ஆட

கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்…


இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன

கேக்க வேண்டும் உன்னை

காலம் கை கூடினால்…


கதைப்போமா கதைப்போமா…


என்று அவன் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாக ஒலித்தது ‘ஓ மை கடவுளே’ திரையில் இடம் பெற்ற அந்த பாடல்.​

பாடலில் இலயித்து இசையில் தன்னை தொலைத்தபடி நகை கடைக்கும் வந்து சேர்ந்திருந்தான் அவன்.​


 
Last edited:
Status
Not open for further replies.
Top