ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 16

யார் எங்கு தேங்கி நின்றாலும் எதை பற்றியும் கவலைக்கொள்ளாமல் முன்னோக்கி நகர்வது தானே காலத்தின் கடமை. சந்திரன் மறைந்து சூரியன் உதித்திருக்க அவர்களுக்காக புலர்ந்திருந்தது புத்தம் புதிய காலை பொழுது.​

இரவெல்லாம் கண் விழித்து படித்ததில் சற்றே அசந்து உறங்கிக்கொண்டிருந்தாள் மதுஷிகா.​

அலைபேசியில் குறுஞ்செய்தி வந்து விழுந்தது. மெத்தை மீது வைத்துக்கொண்டு படுத்திருந்த அலைபேசி அதிர்ந்ததில் கொஞ்சமாக அசைந்தாளே தவிர விழிப்பு தட்டவில்லை. மாறாக அருகே இருந்த தலையணையை மேலும் இறுக அணைத்தபடி விலகி செல்ல துடித்த நித்ரா தேவியை இழுத்து பிடித்தாள்.​

ஒரு ஐந்து நிமிடங்களே கடந்திருக்கும் மீண்டும் அலைபேசி அதிர்ந்தது. இம்முறை குறுஞ்செய்தி அல்ல. அழைப்பு வந்திருப்பதாய் அழைப்பு மணியுடன் கூடி அதிர்ந்த அலைபேசி அவளது உறக்கத்தை கொஞ்சமாக கலைத்துவிட்டிருந்தது.​

கண்களை மூடியபடியே கையால் துழாவி அலைபேசியை ஏற்று காதில் வைத்தாள்.​

"குட் மோர்னிங் மது" என்று வைஷாலியின் குரல் காதில் விழுந்ததும் "மோர்னிங் க்கா" சோம்பி வந்த அவள் குரலிலேயே இன்னும் உறங்கி கொண்டிருக்கிறாள் என்று தெரிந்துகொண்டாள் வைஷாலி.​

"அடிப்பாவி இன்னும் தூங்குறியா? பரீட்சைக்கு நேரமாகலையா?அப்போவே நினைச்சேன் மெசேஜ் போட்டும் பதில் வரலையேன்னு.அதுதான் எதுக்கும் கால் பண்ணி பார்த்தேன்" என்று வைஷாலி சொல்ல பட்டென கண்களை திறந்தவள் நேரத்தை பார்க்க பரீட்சை தொடங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் இருந்தன​

"பாவி அக்கா....கொஞ்சம் சீக்கிரம் கால் பண்ணியிருக்க கூடாதா..." என்று அரக்க பறக்க சொல்லிக்கொண்டே வைஷாலியின் பதிலுக்கு கூட காத்திராமல் அலைபேசியை அணைத்தவள் நாற்காலியின் மீது காயப் போட்டு வைத்திருந்த துவாலையை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி ஓடியிருந்தாள்.​

ஹாஸ்டல் குளியலறை என்பதால் அங்கே ஏற்கனவே சில மாணவிகள் தங்களது முறைக்காக காத்திருக்க "போச்சு போச்சு...இப்படியாடி தூங்கி தொலைப்ப. இவளுங்களையெல்லாம் உள்ள விட்டா ஒருத்தி ஒரு மணி நேரத்துக்கு குளிப்பாளுகளே. ம்ஹும்...இது சரி படாது மது...பாவம் புண்ணியம் பார்க்காமல் உள்ளே நுழைஞ்சிடு" என்று தனக்கு தானே பேசிகொண்டவள் அப்பொழுதுதான் அங்கே ஒரு குளியலறையின் கதவு உள்ளிருந்து திறக்க படுவதை கவனித்தாள்.​

அந்த கதவு திறந்த அடுத்த நொடியே அடுத்த பெண்களும் நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்திருக்க இடுப்பில் கையை குற்றி நின்றபடி சலிப்பாக ஒரு பெருமூச்சை இழுத்து விட்டாள் மது.​

'பேசாமல்... உடுப்பை மட்டும் மாத்திட்டு கிளம்பிடுவோமா?' என்று அவள் யோசிக்கும் போதே அவள் மூளைக்குள் உதித்த யோசனையில் கண்கள் பளபளத்தன.​

பளபளத்த கண்கள் இரண்டையும் அடுத்த கணமே சுருக்கி முகத்தை வில்லத்தனமாக வைத்துக்கொண்டவள் 'மது ஸ்டார்ட்...ஆக்ஷ்ன்' என்று மனதிற்குள் நினைத்தபடி "ஐயோ...அம்மா... பாம்பு பாம்பு...ஓடுங்க பாம்பு... " என்று சத்தம்போட்டு கத்தினாள்​

பாம்பென்றால் படையே அஞ்சுமாம் இதில் இவர்கள் மட்டும் எம்மாத்திரம் அங்கு நின்றிருந்த மாணவியர் கூட்டமும் "ஐயோ...எங்க ...எங்க பாம்பு..." என்று கேட்டபடி கால்களை மாற்றி மாற்றி மேலே தூக்க முயன்றுகொண்டே ஆளுக்கு ஒரு மூலையாக தெறித்து ஓட குளியலறையில் இருந்த பெண்கள் கூட சிலர் துவாலையை சுற்றிக்கொண்டு வெளியில் ஓடிவந்திருந்தனர்.​

அவர்கள் அங்கே அல்லோல கல்லோல பட்டுக்கொண்டிருக்க அதற்கு காரணமானவளோ சட்டென அவளுக்கு மிக அருகில் இருந்த குளியலறை ஒன்றுக்குள் புகுந்துவிட்டிருந்தாள்.​

அதன் பிறகே அவள் சொன்ன பொய்யை சுதாரித்துக்கொண்ட மாணவிகள் கடுப்பில் "ஏய்... மது..பொய்க்காரி…வாடி வெளில" என்று அவள் இருந்த குளியலறையின் கதைவை உடைக்காத குறையாக தட்டிக்கொண்டிருக்க அதை எல்லாம் காதிலேயே நுழைத்துக் கொள்ளாமல் தன் காரியத்தில் கவனமாகியிருந்தாள் பெண்ணவள்.​

குளிப்பதற்கு எல்லாம் அவளுக்கு இப்பொழுது நேரமிருக்கவில்லை. வேகவேகமாக காலை கடன்களை முடித்துக்கொண்டு பல் துலக்கி, முகம் கழுவி, உடை மாற்றி தயாராகினாள்.​

வெளியில் வருவதற்கு முன் மெல்ல கதவை திறந்து அவள் மேல் கொலை வெறியில் இருந்த மாணவிகளை எட்டி பார்த்தாள். அவர்களுக்கும் நேரமாகிக்கொண்டிருக்க இவளிடம் சண்டைபோடுவதற்கும் அவகாசமில்லாமல் கிடைத்த குளியலைகளுக்குள் புகுந்துக்கொண்டிருந்தனர்.​

"அப்பாடா தப்பிச்சோம்...இவளுங்க பார்குறதுக்குள்ள எஸ்கேப் ஆகிடனும்... இல்லன்னா குனிய வச்சு கும்மிடுவாளுங்க" என்றபடி மெல்ல வெளியில் வந்தவள் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக அறைக்கு ஓடியிருந்தாள்.​

தலை முடியை மட்டும் சரி செய்துகொண்டு புத்தக பையை எடுத்துக்கொண்டவள் பரீட்சை மண்டபத்தை நோக்கி ஓட்டமெடுத்திருந்தாள்.​

***​

இங்கே மதுவுடன் பேசிவிட்டு தாமதமாக எழுந்துவிட்ட காரணத்தினால் அரக்க பறக்க எழுந்து அவசரமாக தனது அழைப்பையும் துண்டித்துவிட்டு ஓடிய தங்கையை நினைத்து நகைத்தப்படி தலையை இருபுறமும் ஆட்டிக்கொண்டே அலைபேசியை மேசையின் மீது வைத்தாள் வைஷாலி.​

அப்பாவும் மாமாவும் நேரத்திற்கே அலுவலகத்திற்கு கிளம்பியிருக்க பாட்டியும் அத்தையும் கூட காலை உணவை முடித்துக்கொண்டு தத்தமது வேலையை பார்க்க கிளம்பி விட்டிருந்தனர்.​

சரோஜினி வழக்கம் போல சமயலறைக்குள் நுழைந்துவிட வைஷாலி மட்டுமே அங்கே சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தாள்.​

இன்று அவள் வழக்கத்துக்கு மாறாக சற்று தாமதமாக எழுந்துக்கொண்டதன் காரணமாக தனியாக பசியாற வேண்டியதாக போயிற்று.​

காலை உணவை முடித்துக்கொண்டு சரோஜினியின் கைப்பக்குவத்தில் அவளுக்கு பிடித்தது போல சுடச் சுட ஆவி பறக்க நறுமணம் கமழ்ந்த காபியை ருசித்து பருகிக்கொண்டிருந்தாள் அவள்.​

திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே மீதமிருக்க அவளை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று தந்தை உத்தரவிட்டு சென்றிருந்ததால் அவளுக்கு இன்று பெரியதாக செய்வதற்கும் ஒன்றுமிருக்கவில்லை.​

நிம்மதியாக காப்பியை ரசித்து குடிக்க கூடிய சூழல் அமைந்திருக்கையில் அதை விடுவாளா என்ன?​

கையில் ஒரு புதினமும் இருக்க கண்கள் அதிலும் இதழ்கள் காபி கப்பிலுமாக இருக்க ஒரு மிடறு காபியை உறிஞ்சு, இமைகளை மூடி, அதன் சுவையை ரசித்து தொண்டைக்குழிக்குள் இறக்கிய பின் கண்களை திறந்து நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் மாடிப் படியிலிருந்து இறங்கி வந்த தானவீரன் விழுந்தான்.​

இருவரின் விழிகளும் ஒரு நிமிடம் சந்தித்துக்கொண்டன. வைஷாலி மெதுவாக சிரிக்க அவன் இதழ்கள் பதிலுக்கு கொஞ்சமே கொஞ்சம் வளைந்து கடமைக்கென புன்னகைத்தன.​

நேற்றைய நிகழ்வு வைஷாலியை பொருத்தவரை அவர்களுக்கு இடையில் நடக்கும் வழக்கமான சீண்டலாகவே இருக்க தானவீரனுக்கு அது அப்படி இருக்கவில்லை போலும்.​

அதிலும் இதுநாள் வரை அவளை உரிமையாக சீண்டி விளையாடிவனை 'உன் எல்லையில் நின்றுகொள்' என்று சேகர் கூறியது நெஞ்சில் குத்தியது. ஈஸ்வரி வேறு அவர்களின் திருமணத்தை பற்றிய பேச்சை எடுத்ததும் சங்கடமாக இருக்க மேற்கொண்டு எதையும் குழப்பி விடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தான்.​

அதற்கு ஏற்றாற்போல் அவளிடமிருந்து விலகி இருக்க யோசித்துவிட்டான் அவன்.​

நேரே வாசலை நோக்கி நடந்தவனை "வீர்' என்று அழைத்த சரோஜினியின் குரல் நிறுத்தியிருந்தது.​

"சொல்லுங்க அத்தை" என்று அவன் திரும்பி பார்க்க "என்னப்பா எதுவும் சாப்பிடாமல் போற?" என்று கேட்டார்.​

"கொஞ்சம் வேலை இருக்கு அத்தை. நான் வெளியில் சாப்பிட்டுக்குறேன்" என்று மேலும் ஒரு அடி எடுத்து வைக்க "வீர், காப்பியாவது குடிச்சிட்டு போ. இங்க வந்து உட்கரு காபி எடுத்துட்டு வரேன்" என்று சாப்பாடு மேசையின் இருக்கையை காட்டிவிட்டு அவர் அவனின் பதிலுக்கு கூட காத்திராமல் மீண்டும் சமயலறைக்குள் நுழைந்துவிட்டார்.​

அவனுக்கும் நல்ல பசி தான். ஆனால், வைஷாலி அங்கே அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு நேற்று தான் அவளிடம் நடந்து கொண்ட விதமும் அவளது கலங்கிய விழிகளும் கண்முன்னே வந்து போக அவளுடன் சேர்த்து காலை உணவையும் தவிர்த்து வெளியே செல்ல எத்தனித்தவனை தடுத்து நிறுத்தியிருந்தார் சரோஜினி.​

அவன் ஒரு நொடி தயங்கி பின் சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்ததை வைஷாலியும் கவனித்திருந்தாள். ஆனால், எதுவும் பேசவில்லை.​

அவளின் விழிகள் கையில் இருந்த புத்தகத்தில் நிலைத்திருக்க அவள் எதிரில் அமர்ந்திருந்த வீர் அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தானே தவிர மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை.​

கையில் காபியுடன் வந்த சரோஜினி அதை அவன் முன்னே நீட்ட அவனும் அமைதியாகவே வாங்கிக்கொண்டான்.​

அவன் முன்னே இருந்த தட்டை திருப்பி வைத்து அதில் இரண்டு தோசைகளை எடுத்து வைத்தவர் கொஞ்சம் சட்னியும் வைத்து "அப்படியே ஒரு வாய் சாப்பிட்டு போடா. ரெண்டு தோசை சாப்பிட எவ்வளவு நேரம் ஆகப் போகுது. நைட்டும் ஒன்னும் சாப்பிடல" என்றார்.​

"இல்ல அத்தை நேரமாகுது நான் கிளம்பனும்" என்று அவன் மறுக்க "சொல்லுறேன்ல" என்று சின்ன அதட்டலுடன் தோசையை பிட்டு அவன் வாய்க்குள் திணித்திருந்தார்.​

அவர் ஊட்டிவிட ஒரு நான்கு வாய் உண்டிருப்பான் புத்தகத்தில் படிந்திருந்த வைஷாலியின் விழிகள் மெல்ல மேலெழுந்து அவன் முகத்தை பார்த்தன.​

அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை என்றாலும் அவளின் பார்வை அவன் மீது படிந்திருப்பதை அவனால் நன்கு உணர முடிந்தது. கண்டுகொள்ளவில்லை அவன். இன்னும் இரண்டு வாய் தோசை வாங்கி கொண்டவன் "போதும் அத்தை. டைம் ஆகிடுச்சு" என்றான்.​

நாற்காலியில் இருந்து எழுந்தபடியே பாதி காபியை மட்டுமே அவசரமாக குடித்தவன் மீதியை அப்படியே வைத்துவிட்டு "வரேன் அத்தை" என்று விடைபெற்று கிளம்பியிருந்தான்.​

அவசரமாக செல்பவனையே பார்த்துக்கொண்டிருந்த சரோஜினி "என்னாச்சு இவனுக்கு? நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருந்தா ஒரு நிமிஷம் கூட சண்டை போடாமல் இருக்க மாட்டீங்களே. இன்னிக்கு என்ன இவ்வளோ அமைதியா போறான்?" வைஷாலியிடம் கேட்டார் சரோஜினி.​

வைஷாலி பதில் எதுவும் பேசாமல் இதழ்களை பிதுக்கி தோள்களை உலுக்கிக்கொள்ள அவளையும் ஒரு மார்கமாக பார்த்தவர் "நீ எதுவும் சொன்னியா அவனை?" என்றார்.​

வைஷாலியின் பார்வை அவர் மீது அழுத்தமாக படிய "இல்லைன்னா இல்லன்னு சொல்லேண்டி. எதுக்கு முறைக்குற?" என்றபடி அவரும் தட்டில் தோசையை போட்டுகொண்டு அவள் அருகே அமர்ந்துவிட வைஷாலியின் பார்வை இப்பொழுது வாசலில் காலனி அணிந்துகொண்டிருந்த தானவீரனில் படிந்தது.​

"ஒருவேளை நேத்து ஈஸ்வரி பேசினதை நினைச்சு மனசை போட்டு குழப்பிட்டிருக்கனோ?" என்று சரோஜினி தனக்கு தானே புலம்புவதாக எண்ணிக்கொண்டு சத்தமாகவே சொல்லியிருக்க​

"என்ன பேசினாங்க?" என்று கேட்டாள் வைஷாலி.​

"அது... ஒண்ணுமில்லை டா...இப்போ எதுக்கு அது எல்லாம்" என்று சரோஜினி இழுத்தார்.​

அதே நேரம் தானவீரன் புறப்பட்டுவிட்டதை அவன் வண்டி சத்தமும் உறுதி செய்ய மீண்டும் ஒருமுறை வாசலை திரும்பி பார்த்து விட்டு தாயிடம் திரும்பியவள் " பரவால்ல சொல்லுங்கம்மா" என்று அவரை ஊக்கினாள்.​

"அது ஈஸ்வரி அத்தைக்கு உனக்கும் வீருக்கும் கல்யாணம் செய்து வைக்கணும்னு எண்ணம் இருந்திருக்கும் போல. நேத்து என் கிட்ட அதை பத்தி சொன்னாங்க" என்று மெதுவாக ஆரம்பித்தார்.​

"ஓஹ்..." என்று சொன்ன வைஷாலியின் எண்ணங்களில் தானவீரனின் விசித்திர நடவடிக்கைக்கும் இதுக்கும் தொடர்பிருக்குமோ என்ற யோசனை.​

"அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க?" என்று அவள் நிதானமாகவே கேட்க "நான் சொல்ல என்ன இருக்கு... அத்தை சொல்லும் போது வீரும் அங்க தான் இருந்தான். அப்படியெல்லாம் எந்த எண்ணமும் இல்லைனு அவனே சொல்லிட்டான். அதுனால பிரச்சனை அதோட முடிஞ்சிருச்சு" என்று பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தவர் தட்டை எடுத்துக்கொண்டு எழுந்துக்கொள்ள வைஷாலியின் முகம் யோசனையில் சுருங்கியிருந்தது.​

"நான் ஒருத்தி கல்யாணம் ஆகப்போற பொண்ணுகிட்ட என்ன பேசுறதுன்னு தெரியாமல் உளறிட்டிருக்கேன். நீ ஒன்னும் போட்டு குழப்பிக்காதம்மா' என்று அவள் தலையை வருடி சொன்னவர் "சாயங்காலம் தருண் வீட்டிலிருந்து வரேன்னு சொல்லியிருக்காங்க. கல்யாண ஜவுளி எடுக்க போகணுமாம். ரெடியா இரும்மா போயிட்டு வந்திடுவோம்" என்றுவிட்டு மகளின் முகம் பார்த்தார்.​

அவள் மென்மையாக சிரித்துக்கொண்டே "சரிம்மா... எல்லாரும் வரங்களா?" என்று ஆர்வமாக கேட்க மகளை தேவையில்லாததை எல்லாம் பேசி குழப்பிவிட்டோமோ என்ற எண்ணத்திலிருந்து மீண்டிருந்தார் அந்த தாய்.​

"உன் மாமியாரும், நாத்தனாரும் கட்டாயம் வராங்கலாம். வீட்டு ஆண்கள் வரமுடியுமான்னு தெரியலன்னு சொன்னாங்க. ஆனால், மாப்பிள்ளை வருவாருன்னு சொன்னாங்க" என்றுவிட்டு சென்றிருந்தார் சரோஜினி.​

வீட்டிலிருந்து புறப்பட்டிருந்த தானவீரனின் வண்டி ஒரு நகை கடையின் முன்னால் தான் வந்து நின்றது.​

கடையினுள் நுழைந்தவனை வரவேற்ற பெண்ணிடம் "இதை சரி செய்யணும்" என்றபடி நேற்று அவனால் அறுந்து போன வைஷாலியின் பிரஸ்லெட்டை எடுத்து காட்டினான்.​

அந்த பெண்ணும் அவனை பழுதடைந்த நகைகளை திருத்தும் பகுதிக்கு அழைத்துச்சென்றார்.​

அங்கே அவன் நீட்டிய நகையை வாங்கி ஆராய்ந்து பார்த்த ஆசாரி "சரி பண்ணலாம் தம்பி. ஆனால், வெறுமனே சரி செய்யுறது கொஞ்சம் கஷ்டம். எக்குத்தப்பா அறுந்து போச்சுது. வேறு ஏதும் டிசைன் போல வச்சு இந்த அறுந்த தடம் தெரியமல் புதுசு போல ரெடி பண்ணிடலாம்" என்றார்.​

"வேற டிசைனா...என்ன மாதிரி?" என்று வீர் கேட்க "ஏதும் பூ வடிவம், ஹார்ட் வடிவம் இல்லைனா இனிஷியல் மாதிரி எழுத்து கூட வச்சு பண்ணலாம்" என்றார்.​

"ஓஹ்" என்றபடி சற்று யோசித்தவன் "சரி இனிஷியல் வச்சிடுங்க" என்றான்.​

"என்ன எழுத்து தம்பி?" என்று அவர் கேட்டார்.​

அவன் தேவையான எழுத்தை சொல்லிக்கொண்டிருக்கும் போதே நண்பன் ஒருவன் அழைத்து அவனது கடையில் ஏதோ தகராறு என்று சொல்லி அவசரம் என்றிருக்க "சரி...வரேன் டா வை" என்று அழைப்பை துண்டித்தவன் "எப்போ ரெடியாகும்" என்று ஆசாரியிடம் கேட்டான்.​

"நாளைக்கு சாயங்காலம் வந்து எடுத்துக்கோங்க தம்பி" என்றிருக்க அவனும் ரசீதை வாங்கிக்கொண்டு புறப்பட்டிருந்தான்.​


 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 17

எழுதிய விடைகளை எல்லாம் இறுதியாக ஒரு முறை சரி பார்த்து தேர்வு தாளை சமர்பித்துவிட்டு வெளியில் வந்த மதுஷிகா தான் அணைத்துவைத்திருந்த அலைபேசியை உயிர்ப்பித்திருந்தாள்.​


காலையில் வைஷாலி அனுப்பிய புலன செய்தி இன்னும் திறக்க படாமல் இருக்க அதனோடு இன்னும் சில நண்பர்களின் புலன செய்திகள் மட்டுமே வந்திருந்தன.​

ஆனால், அவளது விழிகள் ஆவலோடு தேடியது ஆகாஷின் பெயரை தான்.​

அவனிடமிருந்து புலனத்தில் செய்தியோ அல்லது தவறிய அழைப்புகளோ இருக்கிறதா என்று ஒன்றுக்கு இரு முறை அலைபேசியை அலசி பார்த்துவிட்டாள்.​

பலன் பூஜ்யம் தான்.​

முதல் நாள் அவளிடம் சண்டை பிடித்து விட்டு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு போனவன் தான். அதன் பிறகு அவள் அழைப்புகளை ஏற்கவுமில்லை புலன செய்திகளை மதிக்கவுமில்லை.​

நேற்றிலிருந்து அவளின் ரேடாரில் இருந்து காணாமல் போயிருந்தான் அவன். வழக்கமாக அவள் தேர்வுகளுக்கு செல்வதற்கு முன் மறக்காமல் வாழ்த்து அனுப்புபவன். ஆனால், இன்று தகவலே இல்லாமல் அமைதியா இருக்கின்றான்.​

அவள் மேல் அதீத கோபத்தில் இருக்கின்றான் என்று புரிந்துகொண்டாள்.​

இதுவரை அவன் இப்படி இருந்ததில்லை. சின்ன சின்ன ஊடல்கள் அவர்களுக்குள் வருவது வழக்கம் தான் என்றாலும் மறுநாள் தானாக வந்து பேசி விடுவான். இப்பொழுது அவன் அமைதியாகிவிட்டதும் அவளின் மனதில் பாரமேறிய உணர்வு. அவனை அளவுக்கு அதிகமாக காயப்படுத்திவிட்டோமோ என்ற எண்ணம் அடிமனதை கசக்கி பிழிய தொடங்கியிருந்தது.​

அவனிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தி விட வேண்டும் என்ற உந்துதலில் அவனுக்கு அழைப்பெடுத்து பார்த்தாள்.​

அழைப்பு ஏற்கப்படவில்லை.​

"ஹாய் ஆகாஷ்...ஐ எம் சாரி.கால் மீ பாக் ப்ளீஸ்" என்று புலன செய்தி அனுப்பி வைத்தாள்.​

அவன் அவளின் செய்தியை பார்த்துவிட்டதற்கு அடையாளமாக இரு நீல நிற டிக்குகள் வந்ததிருந்தது. ஆனால், பதில் மட்டும் அனுப்பவில்லை அவன்.​

பத்து நிமிடங்கள் அலைபேசியையே பார்த்துக்கொண்டு அவன் பதிலுக்காக காத்திருந்தாள். பதில் வருவதற்கான அறிகுறிகள் என்று எதுவுமே தெரியவில்லை.​

மீண்டும் ஒரு முறை அழைப்பெடுத்துப் பார்த்தாள். அவன் ஏற்கவில்லை.​

மனம் கலங்கியிருந்தாலும் அன்றைய தினத்தில் அடுத்து ஒரு தேர்வு இருக்க அதற்கு தயாராக வேண்டியிருந்தது அவளுக்கு.​

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அடுத்த தேர்வுக்கு தயாரானாள் மதுஷிகா.​

படிக்கும் வயதில் அவள் வாழ்க்கையில் காதலை அனுமதித்திருந்தாலும் அது படிப்பை பாதிக்க அவள் ஒருநாளும் அனுமதித்ததில்லை.​

இப்பொழுது அவளுக்கும் ஆகாஷிற்குமான ஊடலுக்கு கூட இது தான் தொடக்க புள்ளியும் கூட.​

காதலர்கள் தான் என்றாலும் இருவருக்குள்ளும் நெருக்கம் என்பது மிக குறைவு தான் மற்ற ஜோடிகளை போல் எங்கும் சுற்றி திரிந்ததும் கிடையாது. அவர்கள் இருவரும் மிஞ்சி போனால் ஒரு முறை சினிமாவிற்கும் சில முறை ஷாப்பிங்கிற்கும் சென்றிருப்பார்கள். அதுவும் நண்பர்களுடன்.​

இதுவே அவர்களை பலமுறை சண்டையில் கொண்டுவிட்டிருக்கின்றது. அவனுடன் செல்வதில் ஆயிரம் தடையும் விதிமுறைகளும் விதிப்பவள் இப்பொழுது வீருடன் சகஜமாக ஷாப்பிங் சென்று வந்ததை பார்த்தவனுக்கு இதுநாள் வரை இருந்த பொறுமை மொத்தமாக துடைத்தெறியப்பட்டிருந்தது.​

அந்த கோபத்தில் தான் அவளை தவிர்த்தான் ஆகாஷ்.​

அடுத்த தேர்வுக்கு நேரமாகிவிட்ட நிலையில் அலைபேசியை அணைத்து வைக்க போனவள் மனம் கேட்காமல் மீண்டும் ஒருமுறை அவனுக்கு அழைப்பெடுத்து பார்த்தாள்.​

அழைப்பை ஏற்பான் என்கின்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும் முயன்று பார்த்தாள்.​

நினைத்தது போல அது தான் நடந்தது. கண்களை அழுந்த மூடித் திறந்தவள் அலைபேசியை அணைத்து பையில் போட்டு விட்டு தேர்வு மண்டபத்தை நோக்கி நடந்தாள்.​

***​

அதே நேரம் இங்கு நண்பன் ஒருவனின் கடையில் சிலர் தகராறு செய்துகொண்டிருக்க அவனது கடை வாசலில் வந்து நின்றது தானவீரனின் வண்டி.​

தானவீரனை பார்த்ததும் அவர்களின் உரக்க ஒலித்த குரலில் சுருதி இறங்கி போயிற்று .​

அந்த ஏரியாவில் பொறுப்பற்று திரியும் இளவட்ட பயல்கள் தான் அவர்கள். பட்டப்பகலில் குடித்து விட்டு தேவையில்லாத வம்பு வளர்ப்பதையே தொழிலாக வைத்திருப்பவர்கள்.​

அவனது கல்லூரி நண்பனாகிய பிரதீப் அங்கே மினி மார்க்கெட் வைதிருப்பதால் தானவீரன் அடிக்கடி அங்கே வந்து செல்வது வழக்கம் தான்.​

அதில் ஒருவன் ஏற்கனவே தெருவில் சென்ற பள்ளி சிறுமியிடம் சில்மிஷம் செய்து அவனிடம் அடியும் வாங்கியிருக்கிறான்.​

இப்பொழுதும் குடித்து விட்டு கடைக்குள் நுழைந்தவர்கள் அங்கே வேலை செய்யும் பெண்ணிடம் வம்பு பண்ண ‘என்ன’ என்று கேட்க வந்த இன்னொரு ஊழியனையும் அடித்திருந்தனர்.​

வெளியில் சென்று விட்டு அப்பொழுதுதான் கடைக்கு வந்த பிரதீப் இவர்களை பார்த்ததும் தானவீரனுக்கு தகவல் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்திருந்தான்.​

அவர்களை கடையிலிருந்து துரத்துவதற்கு அவன் முயன்று கொண்டிருக்க அவர்கள் அசைவதாக இல்லை.​

அந்நேரம் தான் சரியாக தானவீரனும் வந்து சேர்ந்திருக்க வேகமாக உள்ளே நுழைந்தவன் நண்பனின் சட்டையை பிடித்து தகராறு செய்துகொண்டிருந்தவனின் கையை பற்றி முறுக்கி அவனது முதுகுக்கு பின்னால் வைத்து அழுத்தியிருந்தான்.​

"ஆஹ் வலிக்குது விடுடா" என்று அந்த ஆடவன் அலற "நான் அஞ்சு எண்ணுறதுக்குள்ள இங்க ஒருத்தன் இருக்க கூடாது. மீறி இருந்திங்க வெளியில் போறப்போ உடம்புல உயிர் மட்டும் தான் மிச்சமிருக்கும்" என்றான்.​

அவனிடம் ஏற்கனவே அடிவாங்கிய அனுபவமும் இருக்க அவனது மிரட்டலில் பயந்தவர்கள் விட்டால் போதுமென்று அடித்து பிடித்துக்கொண்டு ஓடியிருக்க அதில் ஒருவன்"அடிக்கடி எங்க வழியில் குறுக்க வர ஒரு நாள் இருக்கு டா உனக்கு. அப்போ வச்சுக்குறேன் உன்னை" என்று ஒற்றை விரல் நீட்டி சூளுரைத்தான்.​

"ஏதே வச்சுக்குறியா? என்னை வச்சுக்கிட்டு என்னடா பண்ணப்போற" என்று கேட்டவன் சற்று நிறுத்தி "ஓஓஓ அவனா நீ...சாரி டா தம்பி நான் அவனில்லை" என்று முகத்தை பாவம் போல் வைத்து கொண்டு நக்கலாக சொன்னான் வீர்.​

அதை கேட்டு அவனின் முகம் கருத்துவிட சுற்றி இருந்த சில பெண்களும் கூட அவனை பார்த்து சிரித்து வைத்தனர். அதில் அவனுக்கு இன்னமும் அவமானமாகிவிட "இருக்கு டா உனக்கு" என்று கருவிக்கொண்டே அங்கிருந்து அகன்றிருந்தான் அந்த ஆடவன்.​

அவர்களை துரத்தி விட்டுவிட்டு நண்பனை பார்த்தவன் "ஒரு பிரச்சனைனா போலீசுக்கு கூப்பிட மாட்டியா டா? நான் என்ன நீ வச்ச அடியாளா?" என்று கேட்டான்.​

"போலீசை கூப்பிட்டா சில்ற பிரச்சனைன்னு ரெண்டு ஏட்டை அனுப்பி வைப்பாங்க. அவங்களுக்கு வேற தனியா யாரு கட்டிங் கொடுக்குறது?" என்றான் பிரதீப் சிரித்துக்கொண்டே.​

"அடப்பாவி" என்று சிரித்த தானவீரன் அன்று முழுவதும் பிரதீப்புடனே கடையிலேயே அமர்ந்துவிட்டான்.​

திருமணம் வரையில் வைஷாலி அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே தான் இருப்பாள் என்று தெரிந்திருந்தமையால் அவளை சந்திப்பதை தவிர்க்கவே வீட்டிற்கு செல்லாமல் வெளியிலேயே இருந்துக்கொண்டான்.​

மாலை ஐந்து மணியை நெருங்கிய நேரம் அவனுக்கு சேகரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.​

'இவர் எதுக்கு இப்போ கூப்பிடுறார்' என்று நினைத்துக்கொண்டாலும் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.​

"சொல்லுங்க" என்றான்.​

"எங்கடா இருக்க?" என்றார் அவர்.​

குரலில் அன்றைய தின வேலைகளின் களைப்போடு சிறு எரிச்சலும் கலந்திருந்தது.​

"இங்க தான் பிரதீப் கடையில் இருக்கேன்" என்றான்.​

"இம்ம்… உன் கூட படிச்சவன் தானே அவன். பொறுப்பா கடை வச்சு நடத்துறான் நீ பொழுது போகாமல் அவன் கடையில் போயி உட்கார்ந்திருக்க..." என்று அவர் ஆரம்பிக்க "இது அவன் கடையில்ல அவன் அப்பாவோட கடை..." என்றிருந்தான் அவன்.​

"இதையெல்லாம் நல்லா வக்கணையா பேசு... யாரு கடையா இருந்தா என்ன பொறுப்பா இருக்கான் தானே...உன்னை மாதிரியா?" வழக்கம் போல அவர் வயலின் வாசிக்க தொடங்கி விட அவர் திட்டை எல்லாம் கேட்கும் மனநிலையும் அவனுக்கு இப்போது இருக்கவில்லை.​

அலைபேசியை காதிலிருந்து தூர எடுத்தவன் அவர் திட்டி ஓயும் வரை காத்திருந்து விட்டு அவர் சற்றே தணிந்த பிறகு " உங்க இசை மழை முடிஞ்சுதா. இப்போ சொல்லுங்க எதுக்கு கூப்பிட்டிங்க?" என்று கேட்டான்.​

"வாய் கொழுப்புக்கு மாட்டும் குறை இல்லைடா உனக்கு" என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க "சரி சரி எதுக்கு கூப்பிட்டீங்கன்னு சொல்லிட்டு பிறகு திட்டுங்க" என்றான் அவன்.​

"வீட்டுக்கு போகுற வழியில் வண்டி பிரேக் டவுன் ஆகிடுச்சு...வந்து என்னை பிக் அப் பண்ணிக்கோ" என்றார்.​

'உதவி கேட்க கால் பண்ணிட்டு இவ்வளோ எகத்தாளம் வேற இவருக்கு' என்று மனதிற்குள் அப்பாவுக்கு அர்ச்சித்தவன் "எங்க இருக்கீங்க?" என்று கேட்டான்.​

அவரும் தான் இருக்கும் இடத்தை சொல்லியிருக்க "பக்கம் தான் அஞ்சு நிமிஷத்துல வரேன்" என்றான்.​

"சீக்கிரம் வாடா. கல்யாண ஜவுளி வேற எடுக்க போகணும்னு உங்கத்தை சொன்னாங்க. அதுக்கு தான் சீக்கிரமா கிளம்புனேன் வண்டி பிரச்சனையாகிடுச்சு" என்று அவர் சொல்ல "இப்படி பேசிட்டே இருந்தா எல்லாம் நேரத்துக்கு வர முடியாது. போனை வைங்க வரேன்" என்றபடி அழைப்பை துண்டித்தவன் பிரதீபிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியிருந்தான்.​

அருகே இருந்த கார் பட்டறைக்கு சென்று தெரிந்த மெக்கானிக் ஒருவனை அழைத்துக்கொண்டு சேகர் இருக்குமிடத்திற்கு சென்றான்.​

"மணி, வண்டிக்கு என்ன பிரச்சனைன்னு பார்த்து சரி பண்ணிட்டு காரை வீட்டில் கொண்டு வந்து விட்டுடு" என்று சொல்லியவன் சேகரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டிருந்தான்.​

தகப்பனும் மகனும் வீடு வந்து சேர்ந்திருந்த தருணம் பெண்கள் அனைவரும் ஆயுத்தமாகி காத்திருந்தனர்.​

சேகர் உள்ளே நுழைந்ததும் முன்னறையில் அமர்ந்திருந்த பெண்களிடம் "குளிச்சுட்டு வந்துடுறேன், கிளம்பலாம்" என்றார்.​

ஈஸ்வரியும் "சரிங்க" என்றிருக்க "அவசரமில்லை அண்ணா. மெதுவாவே கிளம்பி வாங்க. அவரும் இன்னும் வரல. மாப்பிள்ளை வீட்டிலிருந்து கால் பண்ணாங்க நம்மளை நேரா ஜவுளி கடைக்கே வர சொல்லி சொன்னாங்க" என்றார்.​

"சரிம்மா" என்றவர் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள அறைக்கு செல்ல அதே நேரம் "நீயும் ரெடியாகிட்டு வாப்பா" என்று வீரிடம் சொன்னார் சரோஜினி.​

"நான் எதுக்கு அத்தை? நீங்க போயிட்டு வாங்க" என்றான் அவன்.​

"உனக்கும் தானே டிரஸ் எடுக்கணும்" என்று ஜெயலக்ஷ்மி சொல்ல "இல்லை பாட்டி நான் பிறகு எடுத்துக்குறேன்" என்று தட்டி கழிக்க முயன்றான்.​

அவன் அப்படி மறுத்ததும் அங்கே அமர்ந்திருந்த வைஷாலியின் விழிகள் இப்பொழுது அவனில் நிலைத்தன.​

இதுநாள் வரை அவன் இப்படி செய்ததே இல்லை.​

ஷாப்பிங் என்று எங்கு சென்றாலும் அவன் தான் உடன் வருவான். அவர்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்தும் தருவான்.​

இன்று காலையிலிருந்தே அவன் அவள் விடயத்தில் ஒதுக்கம் காட்டுவதை உணர்ந்துக்கொண்டாள். என்னவோ கோபமாக வந்தது அவளுக்கு. எதுக்கு இப்படி நடந்து கொள்கின்றான் என்ற கடுப்பும் வேறு.​

அவனை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் பார்வையை அவன் கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை​

இதற்கிடையில் அவன் மறுத்துப்பேசியதை கேட்ட சேகர் "ஏன் எங்க கூட வரதை விட துரைக்கு வேறென்ன பெரிய வேலை இருக்கு?" என்றார்.​

'இவர் வேற நேரங்காலம் தெரியாமல்' என்று சற்று குனிந்தபடி இரு விரல்களால் புருவத்தை நீவிக்கொண்டவனுக்கு அதற்கு மேல் அவர்களுக்கு விளக்கம் சொல்லவும் முடியவில்லை.​

"சரி வரேன்" என்று பற்களை கடித்தபடி சொல்லிவிட்டு தயாராவதற்காக அறைக்குள் நுழைந்திருந்தான்.​

அவன் தயாராகி வந்த நேரம் சேகரும் கூட பெண்களுடன் சேர்ந்து முன்னறையில் அமர்ந்திருக்க “கிளம்புவோமா?” என்று கேட்டுக்கொண்டே கார் சாவியை கையில் எடுத்தான்.​

"போகலாம் ப்பா" என்று சொல்லிய சரோஜினி அனைவருடனும் வண்டியை நோக்கி நடக்க "மாமா இன்னும் வரலையா அத்தை?" என்று கேட்டான் தானவீரன்.​

"கிளம்புற நேரத்துல என்னவோ வேலை வந்துடுச்சாம்ன்னு சொன்னாரு வீர். நம்மை முதல்ல போக சொன்னார்" என்றார் அவர்.​

அது ஒரு எம்.பி.வி ரக கார்.​

தானவீரன் தான் காரை ஓட்டிச் சென்றான். அவனுக்கு அருகே சேகர் அமர்ந்திருக்க பெண்கள் அனைவரும் பின்னால் அமர்ந்துக்கொண்டனர்.​

வைஷாலி சரியாக ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்தாள்.​

ஜவுளி கடைக்கு செல்லும் வழியில் காரில் வானொலியில் இருந்து கசிந்து வந்த பாடல் மட்டுமே நிறைந்திருக்க ஈஸ்வரியும் ஜெயலக்ஷ்மியும் தங்களுக்குள்ளாக ஏதோ பேசிக்கொண்டே வந்தனர்.​

மற்ற அனைவரிடமும் வெறும் மௌனம் மட்டுமே. வழக்கமாக தானவீரனுடனான இது போன்ற பயணங்களில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது.​

ஏதாவது கலாட்டா செய்து கொண்டே தான் வருவான். அவன் பேச்சிலும் செய்யும் சேட்டைகளிலும் பயணத்தில் நேரம் போவதே தெரியாது.​

ஆனால், இன்று வாயை திறந்து ஒற்றை வார்த்தை கூட பேசவில்லை. வெறும் மௌனம் மட்டுமே அவனிடத்தில்.​

கண்ணாடிக்கு வெளியில் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்த வைஷாலிக்கு அவனது மௌனம் மனதில் கனத்தை ஏற்படுத்தியிருக்க மெதுவாக நிமிர்ந்து ரியர் வியூ கண்ணாடியில் தெரிந்த அவன் முகத்தை பார்த்தாள்.​

அவன் விழிகள் சாலையில் தான் நிலைத்திருந்தன. வழக்கமாக இது போன்ற நேரங்களில் ரியர் வியூ கண்ணாடி வழியே அவளை பார்க்க கூடிய சந்தர்ப்பம் வாய்த்தால் கண்ணாடியில் நாவை துருத்திக் காட்டி அவளை வம்பிழுப்பான். ஆனால், இப்பொழுது அவன் விழிகள் அவள் புறம் திரும்பவேயில்லை.​

அவளை தவிர்க்கின்றான் என்பது அவளுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்தாலும் எதற்காக தவிர்க்கின்றான் என்பது அவளுக்கு புரியவேயில்லை.​

கண்ணாடியில் அவனையே அவள் பார்த்திருக்க எதேர்ச்சையாக கண்ணாடியை பார்த்தவனின் விழிகள் அவள் விழிகளோடு சங்கமித்துக்கொண்டன.​

அவள் விழிகளில் கேள்விகள் நிறைந்திருக்க அவன் விழிகளிலோ ஒரு வித தடுமாற்றம். சட்டென்று பார்வையை திருப்பிக்கொண்டான்.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அவனது அந்த முகத்திருப்பலில் அவளுக்கு மெலிதாக அழுகை கூட வருவது போல் இருந்தது. நினைவு தெரிந்த நாளில் இருந்து அவன் முகத்தை பார்த்து வளர்ந்தவளாயிற்றே. திடீரென்ற அவனது பாராமுகம் மனதை கனக்க செய்தது.​

'இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு ஓவரா சீன் போடுறான். நேத்து கூட இவன் தானே வம்பு பண்ணான். என்னவோ நான் தான் அவனை சீண்டுனது போல ரொம்பத்தான் பண்ணுறான்' என்று கடுப்பாக மனதுக்குள் திட்டிக்கொண்டாள் வைஷாலி.​

மனத்திற்குள்ளாகவே அரங்கேறிய இவர்களின் உணர்வு போராட்டம் ஜவுளி கடையை வந்தடைந்ததும் சற்றே ஒத்திவைக்கப்பட்டிருந்தது.​

அனைவரும் கடைக்குள் செல்ல அங்கே ஏற்கனவே தருணின் தயார் ஆர்த்தியும் தங்கை தாராவும் அவர்களுக்காக காத்திருந்தனர்.​

இவர்களை பார்த்ததும் இரு குடும்பத்தாரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட பின் ஆர்த்தி வைஷாலியை அணைத்து விடுத்திருந்தார்.​

"மாப்பிள்ளை வரலையா?" என்று சேகர் கேட்க "இப்போ வந்துருவான்" என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கடையின் கண்ணாடி கதவுகளை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் தருண்.​

உள்ளே வந்தவனின் விழிகள் அந்த கூட்டத்தில் வைஷாலியை தான் முதலில் தேடின.​

அவளை கண்டுகொண்டதும் ஒரு மந்தகாச புன்னகையை அவளுக்காக பரிசளிக்க அவளும் மென்மையாக புன்னகைத்துக்கொண்டாள்.​

அதை தொடர்ந்து அனைவரும் முகூர்த்த பட்டெடுக்க அதற்கான பகுதிக்கு சென்றுவிட சேகர் அலைபேசியுடன் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.​

வண்ண வண்ண புடவைகளை பார்த்ததும் பெண்களின் ஆர்வத்தை விவரிக்கவும் வேண்டுமா? "இதை எடுங்க… அதை எடுங்க" என்று கடைக்கார பெண்மணியை ஒரு வழி செய்துகொண்டிருந்தனர்.​

வழக்கமாக புடவை எடுக்க வந்தால் அவர்களுடன் சேர்ந்துக்கொண்டு அவர்களுக்கும் மேலாக அலும்பு செய்து கடைக்காரர்களை ஓடவிடும் தானவீரன் இன்று எதிலும் கலந்துக்கொள்ளவில்லை.​

மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அருகே இருந்த மேசையில் சாய்ந்து நின்றபடி அவர்கள் புடவைகளை தெரிவு செய்வதை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான்.​

ஈஸ்வரி அல்லது சரோஜினி என்று யாரேனும் "இது எப்படி இருக்கு?" என்று அவனிடம் கேட்டால் அதற்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.​

மற்ற பெண்களை தங்களுக்கான புடவைகளை தேர்ந்தெடுக்க சொல்லிவிட்டு வைஷாலியின் முகூர்த்த பட்டை தானே வைஷாலியுடன் இணைந்து தேர்ந்தெடுக்க விரும்புவதாக தருண் சொல்லியிருக்க பெரியவர்களும் இளையவர்கள் ஆசைக்கு தடை விதிக்கவில்லை.​

இவர்கள் ஒரு பக்கம் புடவைகளை ஆராய்ந்துகொண்டிருக்க தருணும் வைஷாலியும் ஒரு புறம் நின்று அவளுக்கான புடவைகளை பார்த்துக்கொண்டிருந்தனர். இரண்டு தரப்பினருக்கும் நடுவில் தவிப்பும் தடுமாற்றமுமாக நின்றுகொண்டிருந்தான் தானவீரன்.​


 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 18

வைஷாலியிடம் அவளுக்கு பிடித்த வண்ணம், மெட்டீரியல், வேலைப்பாடு என்று ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்துக்கொண்டு அதற்கேற்றாற்போல் அவர்களுக்கு உதவிக்கொண்டிருந்த கடை பெண்மணியிடம் புடவைகளை கேட்டு அவளிடம் காண்பித்து கொண்டிருந்தான்.​

பெரியவர்களின் விழிகள் புடவையில் இருந்தாலும் கவனம் என்னவோ அடிக்கடி தருண் மற்றும் வைஷாலியின் மீது தான் சென்று மீண்டன. சரோஜினி மற்றும் ஆர்த்தி இருவரும் பிள்ளைகளின் அன்யோன்யத்தில் பூரித்துப்போனாலும் ஈஸ்வரிக்கு வயிற்றெரிச்சலாக தான் இருந்தது.​

ஆனாலும், இனி அவர்களின் திருமண விடயத்தை பற்றி பேசுவதில்லை என்று வீருக்கு சத்தியம் செய்துகொடுத்திருக்க அவரின் கவனத்தை கஷ்டப்பட்டு திருப்பி புடவைகளில் செலுத்தியிருந்தார்.​

மூத்தவர்களின் உணர்வு அப்படியாக இருக்க தான் எப்படி உணர்கிறோம் என்று கூட விளங்காமல் தவித்துக்கொண்டிருந்தான் வீர்.​

தருணையும் வைஷாலியையும் சேர்த்து வைத்து பார்க்கப் பார்க்க ஏதோ ஒன்று தன் கையை விட்டு நழுவி செல்வதாக ஒரு உணர்வு.​

மனதில் பெரும் பாரம் ஒன்று ஏறிப்போனது போல் இருந்தது. இருதயம் இருமடங்காக தடதடத்துக்கொண்டது. அந்த உணர்விற்கு என்ன பெயர் என்றும் கூட அவனுக்கு புரியவில்லை.​

எத்தனை விளையாட்டு பொருட்கள் வைத்திருந்தாலும் குழந்தைக்கு எப்பொழுதும் மிக நெருக்கமான பிடித்தமான விளையாட்டு பொருள் ஒன்று இருக்கும். அதை கையில் வைத்துக்கொண்டே சுற்றும். அதனிடமிருந்து அதை பிடிங்கிவிட்டால் குழந்தைக்கு அப்படி ஒரு கோபம் வந்துவிடும். அடக்க முடியாத அழுகையுடன் கையில் கிடைப்பதை விட்டெரியும். கைகால்களை உதைத்துக்கொண்டு அடம் பிடித்து அழும்.​

இப்பொழுது அது போல தான் உணர்கிறான் தானவீரன். தனக்குரிய ஒன்றை பிடிங்கி இன்னொருவன் கையில் கொடுத்துவிட்டது போன்ற உணர்வு. அதிலும் அவனாகவே கொடுத்தும் விட்டானே.​

இதுநாள் வரை பெரியதாக எதுவும் தோன்றவில்லை. ஆனால், இப்பொழுது தோன்றுகிறது. நேற்று சேகர் வைஷாலியிடம் இனி அவனுக்கு உரிமை இல்லை என்பது போல பேசிய பேச்சுக் கூட அவனுக்கு இப்படியான எண்ணத்தை தூண்டிவிட்டிருக்குமோ என்றும் யோசித்தான். அவளிடம் அவனுக்கான உரிமைகளை அவர் ஒரு எல்லைக்குள் வரையறுத்து நிறுத்த நினைப்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.​

தருண் தந்த பரிசு பொருளுக்காக கண்களில் நீரோடு வைஷாலி அவனை முறைத்தாளே அப்பொழுது கூட தோன்றியிருக்கலாம். தன்னை விட தருண் அவளுக்கு முக்கியமாகிவிட்டான் என்கின்ற பொறாமையாக கூட இருக்கலாம்.​

அந்த எண்ணங்கள் அவனுக்கே அனர்த்தமாகத்தான் இருந்தன. தனக்குள்ளேயே அதிர்ந்து போய் நின்றான். எங்கே எப்போது எப்படி தடுமாறினான் என்றும் அவனுக்கே புரியவில்லை.​

'முட்டாள் மாதிரி யோசிக்காத வீரா' என்று தனக்கு தானே ஆயிரம் முறை சொல்லிக்கொண்டான்.​

'இது வெறும் உன்னோட ஈகோ தான். உனக்கு உரிமை இருந்த இடத்தில் இனி இன்னொருத்தனுக்கு தான் உரிமைன்னு சொன்னதும் உன் ஈகோ ட்ரிகர் ஆகிடுச்சு. அதான் இப்படி லூசு தனமா யோசிக்குற' என்று அலைபாயும் தன் மனதை கட்டுக்குள் கொண்டுவரப் போராடிக்கொண்டிருந்தான்.​

"ப்ரோ...ப்ரோ..." என்று தருண் அவன் கரத்தை தொட்டு உலுக்கியதும் திடுக்கிட்டவன் தன் மனத்துடன் நடத்திய போராட்டத்திலிருந்து நிஜ உலகிற்கு வந்திருந்தான்.​

"ஆஹ் அங்...என்ன ப்ரோ…முடிஞ்சுதா…போகலாமா?" என்றான்.​

"போகலாமாவா? சரியா போச்சு ப்ரோ...புடவை எடுக்குறதெல்லாம் சாதாரண வேலை இல்லை போல... ஒரே குழப்பமா இருக்கு" என்று வைஷாலியை காட்டினான் தருண்.​

அவளோ இரு தோள்களிலும் ஒவ்வொன்றாக வெவ்வேறு புடவைகளை போட்டு கொண்டு நின்றாள்.​

வீர் தருணை பார்க்க "எது நல்லா இருக்கு ப்ரோ?" என்று கேட்டான்.​

வீரின் பார்வை மீண்டும் வைஷாலியில் படிய "எதை ச்சூஸ் பண்ணுறதுனு தெரியல" என்றாள் அவள் .​

அவள் கேட்டதில் விழுக்கென்று நிமிர்ந்து அவளை பார்த்தான் வீர்.​

அவள் கேட்டது அவள் தோள்களின் மீது கிடந்த புடவையை தான் என்றாலும் அவனுக்கு என்னவோ அவளுக்கு முன் நின்றிருந்த அவனையும் தருணையும் கேட்டது போன்ற உணர்வு.​

எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டான்.​

யாருக்கும் தெரியாது ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டான்.​

அவன் பார்வை வைஷுவின் மீதே நிலைத்திருக்க தருணின் பார்வையும் அவளை தான் அளந்து கொண்டிருந்தது.​

"அவளுக்கு எந்த புடவை எடுத்தாலும் அவ்வளவு அழகா இருக்கு. நீங்க சொல்லுங்க ப்ரோ... எது ஓகே?" என்று கேட்டான் தருண்.​

ஒரு புறம் மாந்தளிர் நிறத்தில் பட்டு ஜரிகை வைத்து ஜொலித்த புடவையும் மற்றைய புறம் கத்தரிப்பூ நிறத்தில் வெள்ளி ஜரிகை போட்ட புடவையும் இருந்தன.​

தருண் சொன்னது உண்மைதான். இரண்டுமே அவளுக்கு பொருத்தமாக இருப்பது போல தான் தோன்றியது. ஆனால், வீருக்கு என்னவோ திருப்தியாக இல்லை.​

அவள் மீதிருந்த அவனின் விழிகள் அப்படியே மெல்ல நகர்ந்து மேசையின் மீது பரப்பி வைக்க பட்டிருந்த மற்ற புடவைகளில் படிந்தன.​

தங்க நிறத்தில் ஒரு புடவை தகதகவென ஜொலித்துக்கொண்டிருந்தது. அதை கையில் எடுத்தான் வீர்.​

அதை பார்த்த தருண் "என்ன ப்ரோ?" என்று கேட்க " இது… இது நல்லா இருக்கும்னு தோணுது" என்றபடி அதை வைஷாலியின் முன்னே நீட்டியிருந்தான்.​

வைஷாலியும் அதை கையில் வாங்கியிருக்க அவர்களுக்கு உதவிக்கொண்டிருந்த கடைக்கார பெண்மணியும் "கட்டி பார்க்குறீங்களா மேம்" என்று கேட்டார்.​

"கம் ஒன், கட்டிட்டு வா வைஷு பார்க்கலாம்" என்று தருண் சொல்ல அவளும் மறுபேச்சின்றி கடைக்கார பெண்மணியுடன் ட்ரையல் அறைக்குள் நுழைந்திருந்தாள்.​

அதற்குள் சரோஜினி,ஈஸ்வரி, ஜெயலக்ஷ்மி, ஆர்த்தி, தாரா என்று மற்றவர்களும் அவர்களுக்கான புடவைகளை எடுத்திருக்க மதுவுக்கான உடைகளையும் தேர்ந்தெடுக்க தொடங்கியிருந்தனர்.​

"வீர், மதுவுக்கு டிரஸ் எடுக்கணும். வைஷாலி எங்க?" என்று அவன் அருகே வந்து நின்றார் சரோஜினி.​

அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே தங்க நிற புடவையில் தேவலோக அப்சரஸை போல் வந்து நின்றாள் வைஷாலி.​

கடைக்கார பெண்மணியின் உதவியுடன் புடவையை கட்டிக்கொண்டு வந்திருந்தாள் அவள்.​

அவளை பார்த்ததும் அங்கே இருந்த அனைவரின் விழிகளும் ஒரு நொடி மெச்சுதலாக விரிந்தன.​

அவள் அருகே சென்ற சரோஜினி "என் கண்ணே பட்டுடும் போல. இந்த புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு டா"என்று அவள் கன்னம் வலித்து திருஷ்டி முறித்தார்.​

ஆர்த்தியும் கூட "எவ்வளோ அழகு என் மருமகள். இப்போவே எங்க வீட்டுக்கு கூட்டி போயிடட்டுமா?" என்று கேட்க மற்றவர்களும் புன்னகைத்துக்கொண்டனர்.​

அவர்களுக்கே அவளது அழகு கண்களை நிறைத்திருக்க அவளை மனதில் நிரப்பி வைத்திருக்கும் தருணின் நிலையை வார்த்தைகளால் விளக்க வேண்டிய அவசியமே இல்லை.​

அப்படியே உறைந்து நின்றுவிட்டான்.​

தானவீரனின் நிலையும் கூட அதே தான். முதல் முறை அவன் விழிகள் அவன் எல்லையை மீறி அவளை ரசிக்க துடித்தன. சட்டென முகத்தை திருப்பிக் கொண்டான். மற்றவர்களின் கவனத்தை கவராமல் மெல்ல அங்கிருந்து நழுவி சென்றவன் கடைக்கு வெளியில் சென்று நின்றுவிட்டான்.​

உள்ளங்கைகளால் முகத்தை மூடி தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றான். அவனை மீறி போகும் அபத்தமான சிந்தனைகளையெல்லாம் துடைத்தெறிய முயன்றான் போலும்.​

முகத்தை அழுந்த தேய்த்து கைகளை அப்படியே சிகைக்குள் நுழைத்து தலையை பிடித்துக்கொண்டு அப்படியே வானத்தை பார்த்தபடி நின்றுவிட்டான். ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு அதை ஒரு நொடி உள்ளேயே நிறுத்தி இதழ்குவித்து வேகமாக வெளியில் ஊதினான்.​

வேகமாக வெளியில் ஊதிய மூச்சுக்காற்றுடன் அவன் உள்ளுக்குள் உழன்றுகொண்டிருக்கும் அபத்தமான எண்ணங்களையும் சேர்த்தே வெளியில் தள்ளிவிட முயன்றான்.​

உள்ளே முகூர்த்த புடவையுடன், மற்ற பெண்களும் உடைகள் எடுத்து முடிய மதுவிற்கு தேவையான உடைகளையும் எடுத்து முடித்திருந்தார்கள்.​

அடுத்து ஆண்களுக்கு உடை எடுக்க சென்ற நேரம் தானவீரனை காணாமல் அவனை தேடிக்கொண்டு வந்தான் தருண்.​

அவன் கடைக்கு வெளியில் நின்றிருப்பதை கவனித்தவன் அவனிடம் வந்து "என்ன ப்ரோ இங்க வந்துட்டீங்க. நானும் வந்ததிலிருந்து பார்க்குறேன் ஒரு மாதிரி இருக்கீங்க. உடம்புக்கு ஏதுமா?" என்று அக்கறையாக கேட்டான்.​

வீர் மெதுவாக சிரித்துக்கொள்ள "சரி வாங்க... இப்போ நம்ம டர்ன் தான்" என்றபடி அவன் தோளை சுற்றி கையை போட்டபடி கடைக்குள் அழைத்துச் சென்றான் தருண்.​

அவனின் மாற்றத்தை தருண் கண்டுகொண்டதில் துணுக்குற்ற தானவீரன் அதற்குமேல் எதையும் குழப்ப விரும்பாமல் எப்படியோ மனதில் உள்ள போராட்டங்கள் அனைத்தையும் மறைத்து வைத்தபடி முகத்தை சிரித்தாற்போல் வைத்துக்கொண்டே உடைகளையும் எடுத்து முடித்திருந்தான்.​

தேவையான ஜவுளிகள் அனைத்தும் எடுத்து முடிய தருண் தாயையும் தங்கையையும் அழைத்து கொண்டு கிளம்பிவிட வைஷாலியின் குடும்பத்தினரும் வீட்டை நோக்கி புறப்பட்டிருந்தனர்.​

கடைக்கு போகும் நேரம் மறந்தும் அவள் புறம் திரும்பாதவனின் விழிகள் கடையிலிருந்து திரும்புகையில் அவன் தடுத்தும் கேளாமல் அவளையே தேடின. அவள் முகத்திலேயே நிலைத்தன.​

அவனது நிலையை எண்ணி அவனுக்கே கோபமாக வந்தது. ஸ்டேரிங்கை பற்றியிருந்த கரங்களில் இறுக்கம் கூடியது.​

அனைவரையும் வீட்டில் இறக்கி விட்டு விட்டு வாங்கிய பொருட்கள் அடங்கிய பைகளையும் வீட்டிற்குள் எடுத்து வைத்தான் வீர்.​

அவர்கள் வீடு வந்து சேர்ந்த நேரம் கிருஷ்ணகுமாரும் கூட வீட்டில் தான் இருந்தார்.​

அவர் வேலைகளை முடித்துவிட்டு சரோஜினிக்கு அழைப்பெடுத்து அங்கு நிலவரத்தை விசாரித்து பார்க்க ஜவுளிகள் அனைத்தையும் எடுத்து முடித்து அவர்களும் பணம் கட்டிக்கொண்டிருந்தனர். அதற்கு மேல் அங்கு சென்று என்ன செய்வது என்று யோசித்தவருக்கு உடலும் களைப்பாக இருக்க நேரே வீடு வந்து சேர்ந்திருந்தார்.​

அவர்கள் வீட்டில் நுழைந்த நேரம் கிருஷ்ணகுமார் முன்னறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க அனைவரும் அங்கேயே அமர்ந்து விட்டனர். வாங்கிய உடைகளை எல்லாம் அவருக்கு காண்பித்து கொண்டிருக்க அதில் எதிலும் பங்கு கொள்ளாமல் நேரே தனது அறைக்குள் நுழைந்த வீர் அவனது ஜிம் பையுடன் வெளியில் வந்தான்.​

தோளில் ஜிம் பையை மாட்டிக்கொண்டு வந்தவனை பார்த்த ஈஸ்வரி "இந்த நேரத்துல எங்கடா போற?" என்று கேட்டார்.​

"ஜிம்முக்கு…" என்று சொல்லியவன் விறுவிறுவென வீட்டில் இருந்து வெளியேறி வண்டியை உயிர்ப்பித்து உயர்வேகத்தில் கிளப்பியும் இருந்தான்.​

"என்னாச்சு இவனுக்கு?" என்று கிருஷ்ணகுமார் புருவங்களை சுருக்க "அவன் என்ன இன்னிக்கு நேத்தா இப்படி இருக்கான்...நேரத்துக்கு ஒரு மாதிரி கிறுக்கு தனம் பண்ணிட்டு திரியுறவன் தானே. அவனை விடுங்க...உங்களுக்கும் உடுப்பெல்லாம் எடுத்திருக்கு அதை பாருங்க... ஈஸ்வரி அந்த பையை எடுத்து மச்சான் கிட்ட கொடு" என்று சேகர் இடைப்புகுந்ததில் அனைவரின் கவனமும் வீரனில் இருந்து மீண்டும் ஜவுளிகளில் வந்து நின்றது.​

தானவீரனின் வண்டி நேரே நண்பன் ஒருவனின் ஜிம்முக்குள் புகுந்தது. வண்டியை உரிய இடத்தில் தரித்துவிட்டு உள்ளே நுழைந்தான்.​

அவனை பார்த்ததும் "வாடா, கல்யாணம் முடியுற வரை இந்த பக்கம் வர மாட்டேன்னு சொன்ன..." என்று விசாரித்தான் அவனின் நண்பன் கோபி.​

உடலில் கட்டு கட்டாக தசைக்கோலங்களுடன் இருப்பவன் அவன். ஆணழகர் போட்டி எங்கு நடந்தாலும் ஒன்று விடாமல் கலந்து கொள்பவன். பாடி பில்டிங் எனப்படும் உடற்கட்டமைப்பு பயிற்சியில் ஈடுபடுவதில் அதிக நாட்டம் அவனுக்கு.​

தானவீரனை கூட அவன் உடலமைப்புக்கும் உயரத்திற்கும் பாடி பில்டிங் செய்தால் நன்றாக இருக்கும் என்பான். ஆனால், வீருக்கு தான் அதில் எல்லாம் நாட்டமில்லை.​

அவனுக்கு விருப்பமெல்லாம் கிக் பாக்ஸிங் தான். பொழுது போகாமல் விளையாட்டாக ஆரம்பித்து அந்த கலையை முறையாக கற்று கை தேர்ந்திருந்தான் வீர்.​

கற்றுக்கொண்டானே தவிர அதற்குமேல் அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் எண்ணமும் அவனுக்கில்லை.​

அந்த தற்காப்பு கலை கொடுத்த தைரியத்தில் தான் அவன் அடிக்கடி கையை நீட்டிவிடுவதும் கூட.​

வீர் கோபியுடைய ஜிம்மிற்கு தான் பயிற்சிக்காக செல்வான். அவனுடன் மற்ற நண்பர்களும் இணைந்து கொள்வர். அப்படி தான் அவனது தினசரி நேரத்தை செலவிடுவான் வீர்.​

சில தினங்களாக கல்யாண வேலையாக அவன் அலைந்து கொண்டிருப்பதில் ஜிம்மிற்கு செல்லவில்லை. வீட்டிலேயே சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்துகொண்டான்.​

ஆனால், அவனுக்கு இப்பொழுது இருக்கும் மனநிலைக்கு அவனது ஒட்டு மொத்த கோபத்தையயும் ஆதங்கத்தையும் ஜிம்மில் இறக்கி வைத்துவிட எண்ணி வந்து விட்டான்.​

நண்பனின் கேள்விக்கு பதில் சொல்ல கூட அவனுக்கு மனமில்லை. ஒரு சிறு புன்னகையுடனேயே அவனை கடந்து சென்றவன் உடை மாற்றி வந்து நின்றது என்னவோ பஞ்ச் பேக்கின் முன்னாடி தான்.​

மெதுவாக ஒன்றிரண்டு குத்தாக ஆரம்பித்தவனின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக கூடியது.​

தருண் வைஷாலியை பார்ப்பதும், அவளுடன் பேசி சிரிப்பதும் , அவளுக்காக எல்லாமே பார்த்து பார்த்து செய்வதுமாக இருக்க அவன் அதை எல்லாம் ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்ததை நினைக்க நினைக்க அவனின் அடியின் வீரியம் கூடி கொண்டே சென்றது.​

உடலில் இருந்த சக்தியுடன் மனதில் இருந்த கோபம் அனைத்தும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து அவனது ஒவ்வொரு அடியும் அந்த பஞ்ச் பேக்கின் மீது இடியென இறங்கியது.​

இரவு நேரம் என்பதால் ஓரிருவர் மட்டுமே அங்கே பயிற்சி செய்துகொண்டிருக்க அவனது வேகத்தில் ஒரு நொடி அவர்களின் பார்வை கூட அவன் புறம் சென்று மீண்டது.​

அதில் ஒருவனோ "என்னடா வெறித்தனமா அடிக்குறான்?" என்று அருகில் இருந்த இன்னொருவனிடம் கேட்க "அந்த பஞ்ச் பேக் மட்டும் மனுஷனா இருந்தா இந்நேரம் செத்து போயிருக்கும்" என்று மற்றையவன் சொல்ல அதை கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்த கோபிக்கும் அதே எண்ணம் தான்.​

"என்னாச்சு இவனுக்கு? எப்பவும் ஜாலியா இருப்பானே...இன்னிக்கு இவ்வளோ வயலெண்டா இருக்கான்?" என்று வாய்க்குள் முணுமுணுத்து கொண்டான்.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அவனும் தனது வேலைகளை செய்துக்கொண்டே தானவீரனை அடிக்கடி கவனித்துக்கொண்டு தான் இருந்தான். சுமார் ஒரு மணிநேரமாக அவன் அந்த பாவப்பட்ட பஞ்ச் பேக்கை குத்திக் கொண்டிருக்கின்றான். அதுவும் அழுவதற்கு கூட வாயில்லமல் அவனின் அடிகளை தாங்கிக்கொண்டிருந்தது.​

ஆனால், கோபிக்கு தான் அதற்குமேல் பொறுமையில்லை.​

தானவீரன் ஓங்கி குத்தியதில் அவன் குத்திய திசையிலேயே வேகமாக சென்ற பஞ்ச் பேக்கை இலாவகமாக பிடித்திருந்தான் கோபி.​

தானவீரனோ திரும்ப அவனிடமே வரப்போகும் பஞ்ச் பேக்கை மீண்டும் குத்துவதற்காக ஆயத்தமாக அதுவோ வராமல் போகவும் அதை பிடித்துக்கொண்டு நின்ற கோபியை முறைத்து பார்த்தவன் "என்னடா?" என்று கேட்டான்.​

"யார் மேல கோவம் உனக்கு?" என்று கேட்டான் கோபி.​

சட்டென்று கோபத்தில் சுருங்கியிருந்த முகத்தை மாற்றி சாதாரணமாக வைத்து கொள்ள முயன்ற வீர் "எனக்கென்ன கோவம். அப்படின்னு யார் சொன்னது?" என்று கேட்டான்.​

"நீ அடிக்குற அடிய பார்த்தாலே தெரியுது" என்று கோபி சொல்ல "அதான் தெரியுதுல… அதை விடு" என்று கைகளை ஆயுத்த நிலையில் வைத்துக்கொண்டு பஞ்ச் பேக்கை கண்களால் காட்டினான்.​

"போதும் டா. ஒரு மணி நேரமா இதை டார்ச்சர் பண்ணிட்டிருக்க... வா நாம பேசலாம்? என்று சொல்லியபடி அவனும் அந்த பஞ்ச் பேக்கை விட்டிருக்க கடைசியாக அதில் ஓங்கி ஒரு குத்து குத்திய தானவீரன் கையில் போட்டிருந்த கிளவுசுகளை கழட்டி வடித்துவிட்டு அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.​

அவன் முன்னே நீர் பாட்டிலை நீட்டினான் கோபி.​

வீரும் அதை வாங்கி நீரை வாய்க்குள் சரித்துக்கொண்டே இருக்கையில் நன்றாக சாய்ந்தமர "இப்போ சொல்லு என்ன பிரச்சனை" என்று கேட்டான்.​

வீர் அமைதியாகவே அமர்ந்திருக்க சற்று பொறுத்துப்பார்த்து விட்டு "சரி உனக்கு சொல்ல இஷ்டமில்லைனா விடு" என்று கோபி சொல்ல "எனக்கே தெரியல டா. தெரிஞ்சாதானே சொல்லுறதுக்கு. குழப்பமா இருக்கு டா" என்றவனின் குரல் தழுதழுத்தது.​

" நீ இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லையே டா. எப்பவும் கலகலன்னு இருக்குற ஆள் நீ. இன்னிக்கு என்ன? ஏதும் பெரிய பிரச்சனையா?" மீண்டும் கேட்டு பார்த்தான்.​

"ஒண்ணுமில்லை விடு…" என்றான்.​

"ஏதும் லவ் மேட்டரா?" என்று மெதுவாக கேட்டான் கோபி.​

அவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்த வீர் "அப்படி இருந்துட கூடாதுன்னு தான் நினைக்குறேன்" என்றான்​

"டேய்" என்று கோபி அவன் தோள் மீது கையை வைக்க "விடு டா. எதோ கொஞ்சம் குழப்பத்துல இருக்கேன். சரியாகிடுவேன்" என்று சொல்லியவன் வீட்டிற்கு புறப்பட்டிருந்தான்.​


 
Status
Not open for further replies.
Top