ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

அதே நேரம் ஹோட்டலுக்கு வெளியில் அவளுக்காக காத்திருந்தான் தருண்​

கைகள் இரண்டையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டபடி ஒற்றை காலை மடக்கி காரின் மீது ஊன்றி சாய்ந்து நின்றவனின் உதடுகள் அவனுக்கு மிக பிடித்தமான​

‘முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்

மின்னல்கள் அவளது விழியாகும்

மௌனங்கள் அவளது மொழியாகும்’

என்ற பாடலை விசிலாக இசைத்துக்கொண்டிருந்தன. அடிக்கடி அவன் உதடுகள் முணுமுணுக்கும் பாடல் தான். ஆனால், இன்று அதன் இசையும் வரிகளையும் தாண்டி ஏதோ ஒன்று அந்த பாடலை இன்னமும் அழகு பெற செய்திருப்பதாக உணர்ந்தான்.​

அவனுக்காகவே எழுதியது போன்ற உணர்வு. அவன் எண்ணங்களை நினைக்க அவனுக்கே சிரிப்பாக இருந்திருக்க வேண்டும். தலையை இருபக்கமும் ஆட்டியபடி தனக்குள் சிரித்துக்கொண்டே நிமிர்ந்தவனின் கண்களில் ஹோட்டலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த வைஷாலி தென்பட்டாள்.​

அவன் நல்ல நேரத்துக்கு அவன் காருக்கு சற்று தள்ளி அவளுடைய காரை நிறுத்தியிருக்க அவனை கடந்து தான் சென்றாக வேண்டும்.​

சட்டென்று காரின் மீது வைத்திருந்த காலை இறக்கி விட்டு நிமிர்ந்து நின்று அவளுடன் பேசுவதற்காக தயாராகி கொண்டான்.​

கவிதையாய் நடந்து வந்தவள் அவனருகே வந்துவிட்டாள். அவனை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவனை கடந்து செல்லவும் தொடங்கி விட்டாள்.​

தன்னை நெருங்கி கொண்டிருந்த தேவதை பெண்ணவளை மையலுடன் பார்த்திருந்தவனுக்கு அவள் தன்னை கடந்து சென்ற பின்னரே அவளுடன் பேசுவதற்காக தான் இத்தனை நேரம் காத்திருந்தது நினைவுக்கு வர சட்டென சுதாகரித்து கொண்டவன் அவளை நோக்கி​

"வைஷாலி" என்று அவள் பெயர் சொல்லி அழைத்தான்.​

அவனது உச்சரிப்பில் ஒரு அழுத்தம்.​

அவனது ஆழ்ந்த குரலில் தனது பெயரை கேட்ட பெண்ணவளோ சட்டென நடையை நிறுத்தி தலையை மட்டும் சற்றே பக்கவாட்டாக திருப்பி அவனை பார்த்தாள்.​

அவனது கூரிய விழிகள் அவளையே ரசனை மிகுந்த பார்வையுடன் அளவிட்டுக்கொண்டிருக்க ஒற்றை புருவத்தை உயர்த்தி "என்னையா கூப்பிட்டிங்க?" என்றாள்.​

"ம்ம்...கொஞ்சம் பேசணும்" என்றான்.​

உயர்ந்திருந்த புருவங்கள் இப்போது இடுங்க " என் கூடவா… சரியான ஆள் கிட்ட தான் பேசுறிங்களா?" அவளது கேள்வியில் குழப்பம்.​

அவள் யாரென்றே அறியாதவன் திடிரென்று அவளிடம் பேச வேண்டும் என்றால் அவளுக்கு குழப்பமாகத்தானே இருக்கும்.​

அவன் இதழ்களில் ஒரு மென்புன்னகை.​

"ரொம்ப சரியான ஆள் கிட்ட தான் கேட்குறேன். உன் கிட்ட தான் பேசணும்" என்றான்.​

அவனை நோக்கி முழுமையாக திரும்பியவள் "சொல்லுங்க " என்றாள்.​

அவன் பாதங்கள் தானாகவே எட்டு வைத்து அவள் அருகே சென்று நிற்க அவளோ சற்றே பயத்துடன் ஒரு எட்டு பின்னால் எடுத்து வைத்து அவனை விட்டு சற்று தள்ளி நின்றாள்.​

ஒரு முறை அவ்விடத்தை சுற்றி பார்த்துக்கொண்டாள். ஆள் நடமாட்டம் பெரியதாக இல்லை. அவனை சற்று நேரத்திற்கு முன்பு விருந்துபசரிப்பு நடந்து கொண்டிருந்த ஹாலில் பார்த்தது நினைவிருந்தது.​

அதுதான் அவன் கூப்பிட்டதும் நின்று பேசிக்கொண்டிருக்கிறாள். இருந்தாலும் கொஞ்சம் பயம் இருக்க தான் செய்தது.​

அவள் தள்ளி நின்றதையும் சுற்றும் முற்றும் பார்த்துக்கொள்வதையும் அவதானித்த தருண் " பயப்படாத...ஒன்னும் பண்ண மாட்டேன். உன் கிட்ட ரெண்டு விஷயம் கேட்கணும்" என்றான்.​

"என்ன?" என்றாள். அவள் உதடுகளில் சிரிப்பில்லை.​

ஒருவித பதட்டம்.​

அவள் பாதுகாப்பை எண்ணி தான் அந்த பதட்டம். இப்போதெல்லாம் யாரையுமே நம்ப முடிவதில்லையே. ஆபத்து எந்த ரூபத்தில் வரும் என்று சொல்ல முடியாதே.​

"யாரையும் லவ் பண்ணுறியா?" என்று கேட்டான்.​

அவன் கேள்வியில் சற்றே எரிச்சலுற்றவள் "அது என் பர்சனல். உங்களுக்கு எதுக்கு சொல்லணும்?" என்று தான் கேட்டாள்.​

அவள் சொன்ன தொனியில் ஒரு நிமிர்வு.​

அவனிடம் தைரியமாக பேசும் அவளை இதழ்களை பிதுக்கி புருவத்தை உயர்த்தி மெச்சுதல் பார்வை பார்த்தவன் இப்படி எல்லாம் அமைதியாக கேட்டால் அவளிடம் இருந்து பதில் வராது என்று தெரிந்துக் கொண்டான்.​

அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் திடிரென்று அவளை நோக்கி சற்றே குனிய பதறிய பெண்ணவளோ தலையை சட்டென பின்னுக்கிழுத்து "என்ன பண்ண போறீங்க?" என்றாள்.​

பயத்தில் ஆழ்ந்த மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு அவள் விழி விரித்து நின்றது அவனுக்குள் சுவாரசியத்தை கூட்ட நாக்கின் நுனியை உள் கன்னத்துக்குள் முட்டி பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டான்.​

"நான் கேட்ட கேள்விக்கு சமத்தா பதில் சொல்லிட்டா ஒண்ணுமே பண்ண மாட்டேன்" என்றான்​

"இல்லனா?" என்றாள்.​

"சுத்தி பார்த்த தானே...இங்க யாருமே இல்லை... யாரும் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. எனக்கு பதில் சொல்லாத இந்த உதட்டை இழுத்து வச்சு கிஸ் அடிச்சுடுவேன்" என்றான் மிரட்டல் தொனியில்.​

அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து நெஞ்சில் கையை வைத்து கொண்டவள் " நான் சத்தம் போடுவேன்" என்றாள்.​

"நான் யாரு தெரியுமா? நீ கத்தி ஊரை கூட்டினாலும் நீ சொல்லுறதை இங்க ஒருத்தரும் நம்ப மாட்டாங்க" என்றான் அசால்டாக.​

அவன் பேச்சும், தோரணையும், அவன் பிராண்டட் சூட் மற்றும் கைக்கடிகாரத்தையும் பார்த்தாலே தெரிந்தது அவனுடைய அந்தஸ்தும் உயரமும்.​

அவள் கத்தினாலும் நிச்சயம் அவன் சொல்வது போல தான் நடக்கும் என்று புரிய ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு நிதானத்துக்கு வந்தவள் "இப்போ என்ன தெரியணும் உங்களுக்கு?" கோபமாகத்தான் கேட்டாள்.​

அவன் பதில் பேசவில்லை. மென்மையாக தெரிந்த பெண்ணவளின் கோபத்தையும் ரசித்து பார்த்தான்.​

"ஹலோ.." அவளது வளைக்கரம் கொண்டு அவன் முகத்திற்கு நேரே சொடக்கிட்டாள்.​

"உங்களை தான் கேட்குறேன். என்ன தெரியணும்?" மீண்டும் கேட்டாள்.​

"காதலிக்குறியா?" என்றான் அவள் விழிகளுக்குள் ஊடுருவி பார்த்துக்கொண்டே.​

‘அவனை காதலிக்கிறாளா என்று கேட்கிறானோ’ என்று நினைத்து ஒரு கணம் அதிர்ந்தவள் "என்னது?" என்று விழிவிரித்து பார்க்க​

"ஐ மீன்…யாரையும் லவ் பண்ணுறியான்னு கேட்டேன்" என்றான்.​

"ஓ...” என்று இழுத்துக் கொண்டே அவனை ஒரு மார்கமாக பார்த்தவள் “இல்லை" என்று இடமும் வலமும் அழுத்தமாக தலையாட்டியபடி சொன்னாள்.​

அவனுக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு. இதழ்களை குவித்து ஊதிக்கொண்டே இட பக்க மார்பை நீவி விட்டுக்கொண்டான்.​

அந்த கேள்வியை கேட்கும் போதே எங்கே 'ஆம்' என்று சொல்லி விடுவாளோ என்று அவன் மனம் பதறிய பதற்றத்தை அவன் மட்டுமே அறிவான். அவள் இல்லை என்றதும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.​

"ம்ம் குட்...... " என்றான் மென்னகையுடன்.​

"ரெண்டு கேள்வி தானே கேட்கணும்னு சொன்னிங்க. அடுத்து என்ன தெரியணும்?" என்று கேட்டாள் வைஷாலி.​

"கல்யாணம் பண்ணிக்குறியா?" என்று கேட்டு அவளை அதிர வைத்தவன் அவள் 'யாரை?' என்று பதில் கேள்வி கேட்கும் முன்னரே "என்னை...என்னை கல்யாணம் பண்ணிக்குறியா?" என்றான்.​

அவன் காதலை சொல்லிவிட்டான்.​

அவளை பார்த்த அடுத்த அரை மணி நேரத்தில் அவன் வாழ்க்கை முழுவதுக்கும் அவள் தான் துணை வர வேண்டும் என்று அவள் சம்மதத்தை அவளிடமே கேட்டும் விட்டான்.​


தொடரும்...​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 11​

அவள் அதிர்ந்து நிற்க "வைஷு, நான் தருண்…தருண் தோமஸ். தோமஸ் குரூப்ஸ் கேள்விப்பட்டிருக்கியா? அது எங்களோடது தான். சிகெரெட், பொண்ணுங்கன்னு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. இது போல பார்ட்டிஸ்ல மட்டும் கொஞ்சமா ட்ரிங்க் பண்ணுவேன் அவ்ளோதான். உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கலாமா?" நேரடியாக அவன் மனதில் நினைத்ததை அப்படியே சொல்லியிருந்தான்.​

அவளுக்கு தான் இதற்குமுன் பார்த்திராத புதியவன் ஒருவன் திடீரென்று முகத்திற்கு நேரே வந்து கல்யாணத்திற்கு கேட்டதில் எப்படி எதிர்வினையாற்றுவது என்றும் தெரியவில்லை.​

ஒருவாறு தன்னை சமாளித்துக்கொண்டு "நீங்க இதுக்கு முன்ன என்னை பார்த்திருக்கீங்களா?" என்று கேட்டாள்.​

"இல்லை" ஒற்றை சொல் பதில் தான் அவனிடம்.​

"ஓ… பார்த்ததும் காதலா…சினிமால வர மாதிரி? நிறைய படம் பார்ப்பீங்களா?" பார்வையால் அவனை அளவிட்டபடி நிதானமாக கேட்டாள்.​

அவளின் நக்கல் படிந்த அந்தக் குரலுடன் இதழோரம் சின்னதாய் முறுவல் ஒன்று எட்டிப்பார்க்க காத்திருப்பது போன்று தெரிந்தது அவனுக்கு. அதைக் கண்டுகொண்டவன் அவள் விழிகளில் எதையோ தேடினான். அவள் உதட்டில் மறைக்க முயன்ற முறுவல் அவள் விழிகளில் மின்னியது.​

அதில் அவன் காதலை மறுத்துவிடுவாளோ என்று இதுவரை இருந்த பதட்டம் மறைந்து நம்பிக்கை துளிர்விட்டிருக்க அது தந்த தைரியத்தில்,​

"ஏன் இருக்க கூடாதா?" கேள்விக்கு பதிலை கேள்வியாகவே தந்தான் அவன்.​

"என்ன தெரியும் என்னை பத்தி, கண்டதும் காதல்னு சொல்லுறீங்க?" அவள் கேட்க "இதுவரை ஒன்னும் தெரியாது… ஆனால், இப்போ உனக்கும் என்னை கொஞ்சம் பிடிச்சிருக்குன்னு தெரியும். பிடிக்காமல் என் கிட்ட நீ இவளோ பேசணும்னு அவசாயமில்லைன்னும் தெரியும். அதோட ரொம்ப முக்கியமா, உதட்டோரம் அந்தச் சின்ன சிரிப்பை மறைக்க முயற்சி பண்ணுறன்னும் தெரியும். மறைக்க வேணாமே...சிரிச்சா நானும் பார்த்து ரசிச்சுப்பேன்ல " என்று சொன்னான் அவன்.​

அவன் பதிலில் சட்டென வாயடைத்துப் போய்விட்டாள் அவள். அவளை அவன் அணுகிய விதம் சரியா தவறா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால், அது அவன் மீது அவளுக்கு ஒரு வித ஆர்வத்தை கொடுத்தது என்னவோ உண்மைதான்.​

அவள் முகத்தை வைத்தே அகத்தை கண்டுக்கொண்டான் என்றதில் அவளுக்கு முகம் சிவந்தே போயிற்று. அவன் தன் மனதை படித்த வரை போதும் என்று எண்ணிய பெண்ணவள் அவனை முறைத்துப்பார்த்தாள்.​

அவள் மனநிலையை அவன் சரியாக சொன்னதும் சட்டென மாறிய அவள் முகபாவத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதிலும் அவளை சரியாக கணித்துவிட்டான் என்பதில் பெருமை வேறு அவனுக்கு. தலையை சற்றே குனிந்து விரலால் மேலுதட்டை வருடியபடி மூண்டு வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு நிமிர்ந்து அவளை பார்த்தான்.​

அவன் இதழோரம் சிரிப்பில் துடிப்பது அவளுக்கு தெரியாமலில்லை. லேசாக எரிச்சல் எட்டி பார்க்க ஆரம்பித்திருக்க அவனை முறைக்க முயன்றவள் பார்வையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கூட்டி அவனை பார்த்தாள்.​

“பேசினா பிடிச்சிருக்குனு அர்த்தமா?” அவள் அவனை பார்த்தபடி கேட்க “பிடிக்காம இருந்தா நான் கேட்டதுக்கு ‘நாட் இன்டெரெஸ்ட்டேட்ன்னு’ சொல்லிட்டு போயிருப்ப. இல்ல குறைஞ்ச பட்சம் திட்டவாவது செஞ்சிருப்ப. நீ இன்னும் என் கூட நின்னு பேச்சை வளர்த்துட்டு இருக்கியே. அதோட சேர்த்து அந்த ரெண்டு முட்டை கண்ணுலையும் கோபமே தெரியலையே… சின்னதா ஒரு ஆர்வம் இருக்கிற மாதிரி தான் தெரியுது”என்றான்.​

அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் நெஞ்சில் இருந்த பதற்றம், தடுமாற்றம், பயமெல்லாம் அவள் ஆற்றிய எதிர்வினையில் மொத்தமாக காணாமல் போயிருக்க இப்பொழுது மீன் போன்று வடிவம் கொண்டு அகண்டு விரிந்திருக்கும் அவளின் அழகிய நயனங்களை 'முட்டை கண்கள்' என்று அவளிடமே தைரியமாக கிண்டல் செய்யும் அளவிற்கு முன்னேறியிருந்தான்.​

அவளையும் அவள் உணர்வுகளையும் வெகு எளிதாக கண்டுபிடித்து விடுகின்றான். இதற்குமேல் இவனிடம் மழுப்புவதும் உசிதமல்ல என்று நினைத்துக்கொண்டாள்.​

அவன் பேசும் தோரணையும் அவன் உடல் மொழியுமே அவன் விளையாட்டிற்காக பேசவில்லை என்று அடித்துக்கூற அவன் விழிகளை ஆழ்ந்து பார்த்தாள். அதில் தெரிந்த நேர்மை அவனுடைய காதல் சிறுபிள்ளை விளையாட்டல்ல என்பதை அவளுக்கு உணர்த்தியிருக்குமோ என்னவோ.​

அதையும் விட அவனை நேரில் பார்த்ததில்லையே தவிர தோமஸ் குரூப்ஸ் பற்றியும் அதை செவ்வனே நிர்வகித்து வரும் இளம் தொழிலதிபன் தருண் தோமஸை பற்றியும் அவள் நிறையவே கேள்வி பட்டிருக்கிறாள். சொல்லப்போனால் அவளது தந்தை கிருஷ்ணகுமாரும் கூட ஒருமுறை அவனை பற்றி புகழ்ந்து பேசியதாக நியாபகம்.​

அவளின் வீட்டிலும் மெதுவாக அவளது திருமண பேச்சுகள் ஆரம்பமாக தொடங்கியிருப்பதையும் அறிந்தே இருந்தாள் வைஷாலி. எல்லாவற்றையும் மனதிற்குள் சீர்தூக்கி பார்த்தாள். எப்படியும் விரைவில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கத்தான் போகிறார்கள். அப்படி இருக்க இவனுக்கு ஏன் அந்த வாய்ப்பை கொடுக்க கூடாது என்றும் தோன்றியது.​

அவளிடம் சிறு மௌனம். ஆழ்ந்த மூச்சொன்றும் எடுத்துக்கொண்டாள்.​

"அப்பா கிட்ட பேசுங்க. அவர் சம்மதிச்சா எனக்கும் சம்மதம்" என்று சொன்னாள்.​

அவள் அப்படி சொல்லியதும் இன்பக்கமாக அதிர்ந்து "ஹேய், நிஜமா தான் சொல்லுறியா" குரலில் துள்ளலுடன் கேட்டான்.​

ஒற்றைக்கையால் தலையை கோதியபடி நின்ற இடத்திலேயே ஒரு சுற்று வட்டமடித்து மீண்டும் அவள் முகம் பார்த்தவன் இதழ்களில் புன்னகையுடன் " வைஷு, நிஜம் தானா? உனக்கு சம்மதமா?" என்று கேட்டான்.​

அவன் குரலில் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு தழுதழுப்பு. மட்டற்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடு அவனது குரலில் தெரிந்தது. இதழ் பிரித்து முத்துப்பற்கள் தெரிய சிரித்துக்கொண்டே நின்றான்.​

பெரியதாய் எதையோ சாதித்துவிட்டவன் போல் உணர்கிறான் என்பதை அவன் நடவடிக்கைகளை பார்த்திருந்த அவளால் நிச்சயமாக புரிந்துக்கொள்ள முடிந்தது.​

தனது சம்மதம் அவனை இந்தளவில் மகிழ்விக்கும் என்று அவள் நினைக்கவேயில்லை. ஏதோ பார்த்ததும் அவளை பிடித்து போய் வந்து கேட்கின்றான் என்று தான் நினைத்தாள். அவன் அவளை சந்தித்து கிட்ட தட்ட சுமார் ஒரு மணி நேரம் இருக்கலாம். அந்த ஒரு மணி நேரத்திற்குள் ஒருவரை எந்தளவுக்கு காதலித்து விட முடியும்?​

சாதாரணமாக எதிர் பாலினத்தின் மீது தோன்றும் ஈர்ப்பாக இருக்கலாம். அதற்கு கொஞ்சம் முக்கியதத்துவம் கொடுத்து அந்த ஈர்ப்பை காதலாக மொழிபெயர்த்து கல்யாண பந்தத்திற்கு வித்திடுகிறான் என்று தான் நினைத்திருந்தாள் வைஷாலி.​

மொத்தமாக அவனது ஆசையை அப்படியே ஒதுக்கிவிட்டு போகமுடியாத அளவிற்கு அவன் மேல் அவளே எதிர்பாராமல் ஒரு ஆர்வமும் ஏற்பட்டுவிட அப்பாவிடம் பேசி பார்க்கும் படி சொல்லிவிட்டாள்.​

ஆனால், இவனானால் அவள் சம்மதமே ஏதோ புதையல் கிடைத்துவிட்டது போன்று உணர்பவனாக அவளின் முன்னால் நின்றிருப்பதை பார்க்க அவளுக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது.​

தன்னால் ஒருவரை இந்தளவு ஈர்க்க முடியுமா என்று சிறு வியப்பும் கூட சேர்ந்துக்கொண்டது.​

"வைஷு, என்னாச்சு... சொல்லு நிஜமா சம்மதமா?" மனதில் சுற்றி வந்த எண்ணங்களில் மூழ்கியிருந்தவள் அவன் கேட்ட கேள்விக்கு தான் இன்னும் பதில் சொல்லவில்லை என்பது அவன் அதே கேள்வியை மீண்டும் கேட்ட பிறகே உரைத்தது.​

"ம்ம்ம்... ஆனால், இப்பவும் சொல்லுறேன். அப்பா கிட்ட பேசுங்க, அவர் சம்மதம் சொன்னா மட்டும் தான் இது நடக்கும்" நிதானக்குரலில் சொன்னவள் “நான் கிளம்புறேன்...டைம் ஆகுது” என்றபடி திரும்பி நடந்தாள்.​

இரு கைகளையும் இடுப்பில் ஊன்றியபடி செல்லும் அவள் முதுகையே சிரிப்புடன் பார்த்து இருந்தவன் என்ன நினைத்தானோ “ஹேய், வைஷு” என்று மீண்டும் அழைத்தான்.​

அவள் நடந்து கொண்டே தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்க்க “தேங்க்ஸ்…சம்மதிச்சத்திற்கு தேங்க்ஸ்” அவனை விட்டு சற்று தூரம் சென்று கொண்டிருந்தவளுக்கு கேட்க வேண்டும் என்று உரக்கச் சொன்னான்.​

“இன்னும் முழுசா சம்மதிக்கல… அப்பா சம்மதம் சொன்னா மட்டும் தான். அது நினைவிருக்கட்டும்” கால்கள் நடையை நிறுத்தவில்லை என்றாலும் அவனுக்கு பதில் சொல்லிவிட்டே சென்றாள்.​

சத்தமாக சிரித்தபடி “அது போதுமே” என்று அவன் சொல்லியது காதில் விழ அவனுக்கு முதுகு காட்டி நடந்தவளின் இதழ்களிலும் புன்னகை விரிந்திருந்தது.​

கேட்டதும் சம்மதம் கிடைக்கும் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் அப்பாவுக்கு சம்மதம் என்றால் தான் தனக்கும் சம்மதம் என்று மறைமுகமாக காதல் செய்வது எல்லாம் முடியாது, கல்யாணம் வேண்டுமானால் செய்துகொள்கிறேன் அதுவும் வீட்டினரின் சம்மதத்துடன் என்று சொல்லிவிட்டு போகும் அவள் சாதூரியத்தை மனதோடு மெச்சிக்கொண்டு அப்பொழுதே கிரிஷ்ணகுமாரை தேடி மீண்டும் ஹோட்டலுக்குள் சென்றிருந்தான்.​

நேராக அவர் முன்னே சென்று நின்றவன் தனது விருப்பத்தை அவருக்கு தெரியப்படுத்தியிருக்க அதை எதிர்பார்த்திராதவர் முதலில் அதிர்ந்தாலும் புகழ்பெற்ற தோமஸ் குரூப்ஸின் வாரிசான தருண் தோமஸே அவரின் பெண்ணை கேட்பதில் அவருக்கு உள்ளூர பெருமையாகவும் இருந்தது. இருந்தாலும் வீட்டில் கலந்து பேசி சொல்வதாகவே அவனுக்கு பதிலளித்திருந்தார்.​

அடுத்த நாள் கிருஷ்ணகுமாருக்கு அவனே அழைப்பெடுத்திருந்தான். அவரது முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து அவன் கேட்ட விதம் அவன் அவரின் மகளை திருமணம் செய்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும் முக்கியத்துவத்தையும் அவருக்கு தெளிவாக உணர்த்தி இருந்தது.​

ஆகவே வீட்டிற்கு முறைப்படி பெண் கேட்டு வரும்படி அவனிடம் சொல்லி விட்டு வைத்தார்.​

அதன் பிறகு தாமதிப்பானா என்ன? அவனது காதல் தேவதையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் தன்னுடனேயே கூட்டி சென்று விட வேண்டும் என்று அனைத்து வேலைகளையும் துரித கதியில் நடத்தியிருந்தான் தருண்.​

இதோ இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்ற நிலையில் இப்பொழுது தங்கள் வருங்கால துணையுடன் பூங்காவில் அமர்ந்து பழைய நினைவுகளை மீட்டிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.​

எங்கிருந்தோ பந்து ஒன்று வந்து அவள் மடி மீது விழ நினைவுலகம் கலைந்து நிஜ உலகத்திற்கு வந்திருந்தனர் தருணும் வைஷாலியும்.​

அவள் மடி மீது கிடந்த பந்தைப் பார்த்து விட்டு பந்து வந்த திசையை நிமிர்ந்து பார்க்க சுமார் மூன்று வயதிருக்கும் போல, குழந்தை ஒன்று தத்தி தத்தி அவளை நோக்கி ஓடிவந்துக் கொண்டிருந்தது.​

அவள் அருகே வந்த குழந்தையை பார்த்து வைஷாலி மென்மையாக சிரிக்க "ஆண்டி, பால் (ball) கொது(டு)ங்க" என்றான் அவனது மழலை மொழியில்.​

வைஷாலியும் அந்த பந்தை எடுத்து அந்த குட்டி கண்ணனிடம் நீட்ட சட்டென்று அதை பறித்து தன்னிடம் வைத்துக்கொண்டான் தருண்.​

விழிகள் சுருக்கி அந்த குழந்தையை பார்த்தவன் "ஆண்டி மேல பந்தை போட்டிங்க தானே. அவங்களுக்கு வலிக்கும்ல. சோ, பந்தை தர மாட்டேன்" என்றான் முயன்று கடினமாக்கி கொண்ட முக பாவனையுடன்.​

குழந்தையோ அவனது மிரட்டலில் சற்றே அஞ்சி இதோ அழப்போகிறேன் என்று தனது இதழ்களை பிதுக்கி கொண்டு நிற்க அந்த அழகை காணவே கண்கள் போதவில்லை வைஷாலிக்கு.​

"ஐயோ, எவளோ கியூட்டா பண்ணுறான் பாருங்க" என்று குழந்தையின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.​

அவன் மிரட்டிக்கொண்டிருந்த நேரம் அவள் குழந்தையை கொஞ்சியிருக்க அந்த குறும்பு கண்ணனோ அவளோடு மேலும் ஒட்டி நின்றுக்கொண்டு "ஆண்டி...பால்" என்று இதழ்களை இன்னும் அதிகமா பிதுக்கி காட்டினான். அதில் மொத்தமாக உருகியே விட்டாள் வைஷாலி.​

"ச்சே பாவம்...கொடுத்துடுங்களேன் தருண்" என்று அவளும் முகத்தை குழந்தையை போல் வைத்துக்கொண்டு அவனிடம் கெஞ்சலாக கேட்க தனக்கு முன்னால் இருந்த இருவரின் அழகிலும் சொக்கி தான் போனான் தருண்.​

"பந்து வேணுமா?" என்று குழந்தையிடம் கேட்க அவனது தலையோ மேலும் கீழுமாக வேகமாக ஆடியது."ஆனால், நீங்க பண்ண வேலைக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும்ல?" என்று தருண் கேட்க குழந்தையின் முகம் மீண்டும் சுருங்கி போயிற்று.​

அதை ரசித்த தருண் "உங்க பெயரென்ன?" என்று கேட்டான் குழந்தையோ அவனுக்கு பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டே நிற்க அவனை பார்த்து மென்மையாக சிரித்த தருண் "சரி பெயர் சொல்ல வேணாம். பட், அங்கிளுக்கு ஒரு கிஸ் கொடுத்துட்டு பந்தை வாங்கிப்பிங்களாம்" என்று அவன் சொல்ல குழந்தையோ வைஷாலியின் முகத்தை பார்த்தது.​

தாய் அருகே இல்லாத சமயத்தில் அவளிடம் அடைக்கலம் நாடியதோ என்னவோ. அதை புரிந்துகொண்டவளாக குழந்தையை அணைத்து அவன் கன்னத்தில் முத்தம் வைத்தவள் தருணிடம் போக சொல்லி கண்களால் சைகை செய்ய குழந்தையும் மெல்ல தயங்கி தயங்கி அவனிடம் சென்றது.​

அவன் முத்தம் வைக்க ஏதுவாக தருணும் உடலை வளைத்து சற்றே குனிந்து அவன் கன்னத்தை காட்ட பட்டும் படாமலும் அவனின் பட்டு இதழ்களால் தருணுக்கு முத்தமிட்டவன் தருண் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் கையில் இருந்த பந்தை பிடிங்கி கொண்டு குடு குடுவென ஓடியிருந்தான்.​

அவனின் சேட்டையை பார்த்து வாய்விட்டே சிரித்திருந்தனர் இருவரும். மனம் நிறைந்த மகிழ்ச்சியான தருணம் அது.​

அந்த நேரத்திற்கெல்லாம் குழந்தையின் அன்னையும் அவனை தேடி வந்திருக்க அவனும் நேராக அவன் அன்னையிடம் ஓடிவிட்டான்.​

இவர்கள் அவனின் தாயை பார்த்து சினேகமாக புன்னகைக்க அந்த பெண்ணும் சிறு தலையசைப்புடன் புன்னகைத்து விட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.​

"குழந்தை ஸ்வீட்டா இருக்கான்ல" என்று வைஷாலி சொல்ல "எஸ்...ஸ்மார்ட்டாவும் இருக்கான்" என்று சொன்னான் தருண்.​

அதன் பிறகு என்ன பேசுவதென்று தெரியாமல் இருவருக்குள்ளும் சிறு அமைதி நிலவியது.​

அதை கலைக்கும் விதமாக ஒலித்தது தருணின் குரல்.​

"வைஷு" என்று அவள் பெயரை அழைத்தவாறு அவள் மடியில் கிடந்த கரத்தை எடுத்து தனது கரத்திற்குள் பொத்தி வைத்துக்கொண்டான்.​

ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல நினைக்கின்றான் என்று வைஷாலிக்கு அவனது பாவங்களே புரிய வைக்க அவள் எதுவும் பேசாமல் அவன் சொல்வதை கேட்க தயார் என்னும் தோரணையில் அவன் முகம் பார்த்து அவன் பேசுவதற்காக காத்திருந்தாள்.​

"வைஷு, இன்னிக்கு நான் உன்னை பார்க்க வந்தது கல்யாணத்துக்கு முன்னாடி உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுறதுக்காக மட்டுமில்லை. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்" என்று அவள் முகம் பார்த்தான்.​

அவள் இடைபுகாமல் அவனே தொடர்ந்து பேசுவதற்காக காத்திருந்தாள்.​

"உனக்கு ஒ.சி.டினா(OCD) என்னனு தெரியுமா? அதை பத்தி ஏதும் ஐடியா இருக்கா?" என்று கேட்டான்.​

"ம்ம் ஆப்செசிவ் கம்பல்ஸிவ் டிசார்டர் தானே…கேள்வி பட்டிருக்கேன். அதில் பாதிக்க பட்டவங்க ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்வாங்க. ரொம்ப ஆர்கனைஸ்ட்டா(organised) இருப்பாங்க...அதிகமா சுத்தம் பார்ப்பாங்க. இது போல கொஞ்சம் தெரியும். ஏன் கேட்குறீங்க?" என்று கேட்டாள்.​

"எனக்கு அந்த பிரச்சனை இருக்கு வைஷு" என்றான்.​

அவன் குரல் நிதானமாக இருந்தாலும் அவள் அதை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக்கொண்டுதான் இருந்தது.​

 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

"சின்ன வயசுல இருந்து இப்படி தான். எனக்கு எல்லாமே சுத்தமா ஆர்கனைஸ்ட்டா இருக்கனும். கொஞ்சம் கலைஞ்சு இருந்தா கூட என்னவோ மாதிரி ஃபீல் ஆகும். என்சைட்டி (anxiety) கூட வரும். அதுக்கான டிரீட்மென்ட் எல்லாம் எடுத்திருக்கேன். இப்போ கண்ட்ரோலா தான் இருக்கு. இருந்தாலும் எனக்கு இப்படி ஒரு கண்டிஷன் இருக்குன்னு உனக்கு தெரியணும்னு நினைச்சேன்" என்றான்.​

அவள் கொஞ்ச நேரம் அமைதியாக அவனையே பார்த்திருக்க "வைஷு, இதை முதல்லயே சொல்லாமல் இப்போ வந்து சொல்லுறேன்னு நினைக்குறியா?" என்று கேட்டான்.​

அப்போதும் அவள் அமைதியாகவே அவனை பார்த்திருக்க "மறைக்கணும்னு நினைக்கல... நான் இதை ஒரு பெரிய குறையா நினைச்சதே இல்ல. அதுக்கூட அப்படியே வாழ பழகிட்டேன். அது தான் தனியா அதை ஒரு விஷயமா சொல்லணும்னு தோணல. இன்னிக்கு என் ஃபிரென்ட் ஒருத்தன் கூட பேசும் போது தான் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு அதை உன் கிட்ட சொல்லணும்னே தோணுச்சு" என்று அவன் விளக்கம் கொடுக்க முனைந்த சமயம் "தருண்" என்று அவனை இடைநிறுத்தினாள் வைஷாலி.​

அவள் என்ன சொல்ல போகிறாள் என்ற கேள்வி விழிகளில் தொக்கி நிற்க அவளை பார்த்திருந்தான் அவன்.​

"உங்களை பத்தி எதையும் மறைக்காமல் என்கிட்ட சொல்லணும்னு நினைக்குற உங்களோட இந்த நேர்மையே எனக்கு போதும். அதோட ஒப்பிட்டு பார்க்கும் போது உங்களோட இந்த பிரச்சனை எல்லாம் ஒண்ணுமே இல்லை. எதுவா இருந்தாலும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே கடந்து வருவோம், சரியா" என்றாள் அவள் கரத்தை பற்றியிருந்த அவன் கரத்தில் ஆறுதலாக அழுத்தம் கொடுத்து.​

"தேங்க்ஸ்..." அவளை அவன் காதலாக பார்க்க "போகலாமா...டைம் ஆகுது" என்றாள் அவள் மணிக்கட்டை திருப்பி கடிகாரத்தை பார்த்தபடி.​

"வேண்டாம்... இங்கையே இருக்கலாம். இப்படியே என் கூடவே இருந்திடு" என்றான் அவளை பிரிய மனமற்று .​

"தருண்..." அவள் விழிகளை சுருக்கி அவனை பொய்யாய் முறைக்க மென்மையாக நகைத்துக்கொண்டவன் "சரி...வா போகலாம்" என்றபடி எழுந்து நின்று அவள் எழுந்து கொள்வதற்காக கையை நீட்டினான்.​

முதல் இருந்த தயக்கங்கள் ஏதுமின்றி அவனது கரத்தை இயல்பாக பற்றி அவள் எழுந்துக்கொள்ள இருவரும் அமைதியாகவே அவனின் காரை நோக்கி நடந்தனர்.​

இத்தனை நேரமாக அனுபவித்த இனிமையான தருணங்களை அசைபோட்டபடியே காரை அடைந்தவர்கள் அவளது இல்லம் நோக்கிய பயணத்தை தோடங்கியிருந்தனர்.​


தொடரும்...​


 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம்12

அதே நேரம் இங்கே போக வேண்டும், அங்கே போக வேண்டும் என்று தானவீரனை ஒரு வழி செய்த பின்னரே அவனுடன் ஹாஸ்டல் வாசலில் வந்து இறங்கியிருந்தாள் மதுஷிகா.​

அவள் வாங்கிய பொருட்களில் சிலவற்றை மட்டும் எதுத்துக்கொண்டு மீதியை வண்டியில் அமர்ந்திருந்தவனிடமே கொடுத்தவள் "மாமா இதையெல்லாம் வீட்டுல என் ரூம்ல வச்சுடு. இதெல்லாம் இப்போ எனக்கு தேவைப்படாது. தேவையானதெல்லாம் நான் எடுத்துட்டேன்" என்றாள்.​

அவளை முறைத்து பார்த்தவன் "ஏதே தேவைப்படாதா? அப்போ எதுக்குடி இன்னிக்கே உலகம் அழிஞ்சு போக போற மாதிரி கடை கடையா என்னை இழுத்துட்டு அலைஞ்ச. நடந்து நடந்து காலே வலிக்குதுடி. ஒழுங்கா வீட்டுக்கு வந்த பின்னாடி வாங்கியிருக்கலாம்ல" என்று சிடுசிடுத்தான்.​

"இன்னிக்கு ஷாப்பிங் பண்ணுற மூட்ல இருந்தேன் மாமா. அந்த மூட் எல்லாம் எப்பவும் வராது. அதெல்லாம் கேர்ள்ஸ் திங் உனக்கு சொன்னாலும் புரியாது" என்று அவள் சிரித்துக்கொண்டே சொல்ல "நல்லா வச்சிருக்கீங்கடி கேர்ள்ஸ் திங்சு… கேப்மாரி திங்சுன்னு" சலித்துக்கொண்டான் அவன்.​

"ரொம்ப தான் சலிச்சுக்குற...உனக்கும் பொண்டாட்டின்னு ஒருத்தி வருவாதானே அப்போ தெரியும்…" என்று மதுஷிகா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அழகிய பெண்ணொருத்தி கையில் ரோஜா மலர்களுடன் அவர்களுக்கு சற்று தள்ளியிருந்த மரத்தின் மீது சாய்ந்து நின்று தானவீரனையே பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்திருந்தாள்.​

இதழ்களில் முகிழ்த்த விஷம புன்னகையுடன் "சரி தான்..." என்றாள் இழுவையாக.​

"என்னடி சரி..." என்று கேட்டபடி அவளின் பார்வை சென்ற திசையில் அவனும் கண்களை திருப்பியிருக்க அவனது விழிகள் அந்த பெண்ணின் மீது படிந்தது. வடிவான முகம், நல்ல உயரம் மற்றும் உடல் வாகுடன் பார்ப்பதற்கு இலட்சணமாக இருந்தாள்.​

அவளை பார்த்தவனின் இதழ்களும் தானாக குவிந்து "ஃபியூவ்..." என்று ராகமாக விசாலடித்துக்கொள்ள "யாருடி அந்த பொண்ணு...சூப்பரா இருக்காளே..." என்று ஜொள்ளுவிட்டான்.​

"ரொம்ப வழியுது...தொடைச்சிக்கோ" என்றாள் மது.​

"போடி.. பொறாமை உனக்கு.நம்பர் வாங்கி கொடேன்" என்று அந்த பெண்ணை பார்த்தபடியே அவன் மதுஷிகாவிடம் சொல்லிய நேரம் அவர்களும் தன்னை கவனித்துவிட்டதை உணர்ந்த அந்த பெண்ணும் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவர்களை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தாள்.​

"ரொம்ப சீன் போடாத மாமா.... இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணு வந்து பேசியதும் தலை தெறிக்க ஓட போற பாரு" என்றாள் மது.​

அவன் அவளை புரியாமல் பார்க்க இதழ்களில் பொங்கி வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்கி வைத்தவள் "அவள் பேரு சுமதி. என் கிளாஸ்மேட் தான். உன் மேல அவளுக்கு ஒரு கண்ணு. என்கிட்டே கூட அடிக்கடி உன்னை பத்தி கேட்டுப்பா. மதியம் நீ என்னை அழைச்சுட்டு போன நேரமே அவள் நம்மை பார்த்ததை நானும் கவனிச்சேன். இப்போ கையில் ரோஜாவோட வரதை பார்த்தால் நிஜமாவே இன்னிக்கு உன்னை ப்ரொபோஸ் பண்ண போறான்னு நினைக்குறேன்" என்றாள் மது.​

விழிகள் பிதுங்க அந்த பெண்ணை பார்த்தவன் "ஏதே ப்ரொபோஸ் ஆஹ்... இந்த கமிட்மென்ட் எல்லாம் நமக்கு ஒத்து வராது என்னை ஆளை விடு நான் கிளம்புறேன்" என்றபடி அவன் வண்டியை கிளப்ப முயற்சிக்க சட்டென்று அவன் கையை எட்டி பிடித்த மதுஷிகா "எங்க ஓடுற...இப்போ தான் நம்பர் வேணும், அது இதுன்னு அவ்ளோ சீன் போட்ட. இப்ப விழுந்தடிச்சு ஓடுற..." என்று அவனை தடுத்து நிறுத்தியிருந்தாள்.​

"அடியே பாதகத்தி, அது வேற டிபார்ட்மென்ட் இது வேற டிபார்ட்மென்ட். உன்னை விளையாட்டா அடிச்சதெல்லாம் மனசுல வச்சிட்டு என்னை பழிவாங்கிடாதடி...இன்னும் வேற எங்கையும் ஷாப்பிங் போகணும்னா கூட சொல்லு கால் வலிக்குதுன்னு கூட பார்க்காம கூட்டிப்போறேன். இப்போ ஆளை விடு..." என்று கெஞ்சலாக கூறியப்படி தனது கையை பற்றியிருந்த மதுஷிகாவின் கரத்தை அகற்றுவதற்காக முயன்றுகொண்டிருந்தான் வீர்.​

"அதெல்லாம் முடியாது. நீயே அவளுக்கு பதில் சொல்லிட்டு போ. இல்லைனா என்னை நிம்மதியா இருக்க விடமாட்டா" என்று மதூஷிகாவும் விடாது வம்பு பண்ண சட்டென்று தன் கரத்தை பற்றியிருந்த அவளது கரத்தை பிடித்து கடித்து வைத்திருந்தான் அவன்.​

"அவ்வ்வ்...வலிக்குது மாமா" என்று அவள் அவன் கடித்த தடத்தை பார்த்துக்கொண்டே அவனை முறைக்க அதை எல்லாம் கண்டுகொள்ளாதவன் " இனி ஹாஸ்டல்ல கொண்டு விடு, வீட்டுக்கு கொண்டு விடுன்னு வந்து பாரு. அப்போ வச்சிக்குறேன் உனக்கு. பாவம் பார்த்து ட்ராப் (drop) பண்ணுனதுக்கு புதைகுழிக்குள்ளையா தள்ளிவிட பார்க்குற. பிச்சிடுவேன் பிச்சு " என்று அவளை திட்டிவிட்டு அவன் வண்டியை கிளப்ப அந்த பெண்ணும் அவர்களை நெருங்கி வந்துவிட்டாள்.​

அவள் அவர்களை நெருங்கிவிட்டதை பார்த்த மதுஷிகா "ஹேய் நில்லு மாமா. அவள் வந்து கேட்டா இப்போ நான் என்ன சொல்லுறது?" என்று மெல்ல நகர தொடங்கிய வண்டியை பார்த்து அவள் உரக்க கத்த "ஹான்... எனக்கு ஏற்கனவே கல்யாணமாகி ரெண்டு பிள்ளைங்க இருக்குன்னு சொல்லு" என்று அவளை போலவே உரக்க சொன்னவன் விட்டால் போதும் என்று வண்டியின் வேகத்தை கூட்டி சிட்டாக பறந்துவிட்டான்.​

காதல் என்று சொன்னதும் விழுந்தடித்து கொண்டு ஓடும் தானவீரனை பார்த்து சிரிப்பை அடக் கமுடியாமல் வாய் விட்டு சத்தமாகவே சிரித்துக்கொண்டு நின்றாள் மதுஷிகா.​

அச்சமயம் அவள் அருகே வந்திருந்த சுமதியும் "என்னடி உன் மாமாவுக்கு கல்யாணமாச்சுன்னு சொல்லவேயில்ல?" என்று ஏமாற்றமாக கேட்க இதழ்களில் மீதமிருந்த புன்னகையுடன் அவளை மேலிருந்து கீழே பார்த்தவள் "இப்போ தான் தெரிஞ்சிருச்சுல. வா இந்த ரோஜாவை கொடுக்க வேற ராஜாவை தேடலாம்" என்று அவள் தோளை சுற்றி கையை போட்டபடி ஹாஸ்டல் வாயிலை நோக்கி நடக்க தொடங்கினாள் மதுஷிகா.​

திடிரென்று யாரோ அவளுக்கு பின்னால் இருந்து அவள் கரத்தை பற்றி வேகமாக இழுத்து நிறுத்த அந்த கரம் இழுத்த வேகத்தில் சற்றே நிலை தடுமாறிய மதுஷிகா தன்னை சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.​

அவள் முன்னே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தான் ஆகாஷ்.​

அவன் அவளை அப்படி இழுத்து நிறுத்தியதில் அவளுக்கு சினமும் துளிர்த்துவிட அதை கண்களில் காட்டியபடி "ஆகாஷ்...நீங்க எங்க இங்க? எதுக்கு கையை..." என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அருகே சுமதி நின்றிருப்பதை உணர்ந்தவளாக சற்றே நிதானித்து "சுமதி நீ போ. நான் பேசிட்டு வரேன்" என்றாள் அவளிடம்.​

சுமதியும் 'சரி' என்று விட்டு அங்கிருந்து அகன்றுவிட "எதுக்கு இப்படி ஹார்ஷா கையை பிடிச்சு இழுக்குறீங்க ஆகாஷ்?" என்று கேட்டாள்.​

"ஏன் நான் கையை பிடிச்சா தான் உனக்கு ஹர்ஷா இருக்கா? இவளோ நேரம் அவன் கையை பிடிச்சுட்டு நின்னுட்டிருந்தியே அப்போ மட்டும் நல்லா இருந்துச்சா?" என்றான்.​

அவனை உறுத்து விழித்தவள் "அசிங்கமா பேசாதீங்க ஆகாஷ்..." என்று பற்களை கடித்தாள்.​

"என்னடி அசிங்கமா பேசுறேன். நீ பண்ணிட்டு வரத விட அசிங்கமில்லை”அவனது வார்த்தைகள் தடிக்க தொடங்கியிருந்தன.​

ஒரு நொடி விழிகளை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டுக்கொண்டாள் மதுஷிகா. அவனது கோபத்திற்கான காரணம் என்னவென்று அவள் எடுத்துக்கொண்ட அந்த ஒரு நொடியில் மூளை வேகமாக அலசிப் பார்த்தது.​

அவன் சினத்தின் காரணம் அவளுக்கு பிடிபட்டுவிட்டது. சாதரணமாக இப்படி பேசுபன் இல்லை தான் ஆகாஷ். ஆனால், இப்பொழுது வார்த்தைகளை விடுகிறான். அதற்கு காரணமும் அவள் தான்.​

இன்று அவளுக்கு பிறந்தநாள். அதற்காக காலையிலேயே அவளை வெளியில் செல்ல அழைத்திருந்தான். தேர்வுக்கு படிப்பதற்கு நிறைய இருக்கின்றது என்று அவனை தரவிர்த்துவிட்டிருந்தாள் அவள்.​

அவனுக்கும் அவளை பற்றி நன்கு தெரியும். அவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்துவிட்டால் அவளது ஹாஸ்டல் வாசத்திற்கு வினை வந்துவிடும் என்று வழக்கமாகவே அவனுடன் வெளியில் சுற்றுவதை மிக சாமர்த்தியமாக தவிர்த்துவிடுபவள் தான் மதுஷிகா.​

இன்று அவளின் பிறந்தநாள் என்பதால் அவனுடன் நேரம் செலவிட சம்மதித்தாலும் சம்மதிப்பாள் என்று தான் அவளிடம் அவன் அதிர்ஷ்டத்தை முயற்சித்து பார்த்தான்.​

ஆனால் வழக்கம் போல அவனது முயற்சி தோல்வியிலேயே முடிந்திருக்க இரவு உணவிற்காவது அவளை அழைத்து செல்லலாம் என்று அவளின் ஹாஸ்டலுக்கு வந்திருந்தான்.​

மதுஷிகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் எண்ணத்தில் அவளிடம் சொல்லாமல் வந்தவன் ஹாஸ்டலுக்கு அருகே வந்து அவளுக்கு அழைப்பெடுக்க நினைத்த நேரம் தான் அவள் தானவீரனுடன் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்குவதை கவனித்தான்.​

அதோடு அவர்கள் இருவரின் நெருக்கமும், சிரிப்பும், கேலியும் கிண்டலும் நிறைந்த பேச்சும் சேர்ந்துக்கொள்ள அவனுக்கு சினம் தலைக்கேறியிருந்தது.​

இத்தனைக்கும் தானவீரன் யார் என்றும் அவர்களின் உறவு எப்படி பட்டது என்றும் அவனுக்கு மதுஷிகா சொல்லி நன்றாகவே தெரியும். இருந்தும் இந்நேரத்தில் தான் இருந்திருக்க வேண்டிய இடத்தில் அவன் இருந்ததை ஆகாஷால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பொறாமையாக இருந்தது.​

மதுஷிகாவின் அழகிலும் துறுதுறுப்பான குணத்திலும் மயங்கி தான் அவளை காதலித்தான். ஆனால், ஒரு காதலனாக அவன் எதிர் பார்க்கும் எந்த விடயமும் அவளிடமிருந்து அவனுக்கு கிடைப்பதில்லை.​

எல்லாமுமாக சேர்ந்து இன்று அவளிடம் வார்த்தைகளை வடிக்கட்டாமல் அப்படியே கொட்டிவிட்டான்.​

அவனது கோபம் புரிந்தவளாக "ஆகாஷ்... எனக்கு புரியுது. உங்க கூட வராமல் மாமா கூட போனேன்னு தானே கோபம்?" என்று கேட்டு கொண்டே மெதுவாக அவன் கையை பற்றினாள்.​

அவன் எதுவும் பேசவில்லை என்றாலும் அவன் முறைப்பிலேயே அவள் சரியான காரணத்தை தான் கண்டறிந்திருக்கின்றாள் என்பதை புரிந்துக்கொண்டாள்.​

"ஆகாஷ், நிஜமாவே எனக்கு படிக்க நிறைய இருக்கு தான். நீங்க ஃபோன் பண்ணும் போது கூட படிச்சிட்டு தான் இருந்தேன். ஆனால், அக்காவும் வீர் மாமாவும் சேர்ந்து சர்ப்ரைஸ் பிளான் பண்ணிட்டாங்க..." என்று அவள் சொல்லும் போதே இடைப்புகுந்தவன் "அப்போ நான் உனக்கு முக்கியம் இல்லை. நான் கூப்பிட்டா வரமுடியாதுன்னு ஈஸியா சொல்லிட்ட. உன் வீட்டு ஆளுங்க வந்து கூப்பிட்டதும் மறுக்க முடியல. அப்படித்தானே?" என்றான்.​

அவளுக்கும் அவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்றும் தெரியவில்லை. அவன் கேட்பதும் நியாயமாக தான் இருந்தது. அவன் கேட்டதிற்கு முடியாது என்று சுலபமாக மறுக்க முடிந்தவளுக்கு தானவீரனும் வைஷாலியும் கூப்பிட்டதும் மறுக்கமுடியாமல் கிளம்பி சென்றுவிட்டாள்.​

ஒரு காதலியாக அவள் அவனுக்கு நியாயம் செய்யவில்லையோ என்ற எண்ணம் மெல்ல மேலெழுந்து குற்றவுணர்வை தூண்டிவிட்டது.​

அதன் பயனாக அவன் அருகே நெருங்கி நின்றவள் "ஆகாஷ், அப்படி எல்லாம் இல்லை. நீங்களும் முக்கியம் தான். ஆனால், நம்ம ரிலேஷன்ஷிப் கொஞ்ச நாள் வீட்டுக்கு தெரியாமல் இருக்கட்டும்னு உங்ககிட்ட ஏற்கனவே சொன்னது தானே. அடிக்கடி நாம ஒன்னா சேர்ந்து சுத்துனா வீட்டுல தெரிஞ்சு பிரச்சனையாக கூட வாய்ப்பிருக்கு. படிச்சு முடியுற வரை எந்த ப்ரோப்லமும் வேண்டாம்னு நினைச்சேன். அதுனால தான்..." என்று சொல்லிக்கொண்டே போனவள் அவன் முகத்தை பார்க்க அவனது இருண்ட முகத்தில் எந்த மாறுதலுமில்லை.​

கோபம் குறைவதற்கான அறிகுறிகளுமில்லை. இதற்கு மேலும் அவனுக்கு விளக்கம் கொடுப்பதில் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்று உணர்ந்துக்கொண்டவள் நீண்ட பெருமூச்சொன்றை எடுத்துக்கொண்டு "ஐ அம் சாரி ஆகாஷ். இனி இப்படி நடக்காது. எக்ஸாம் முடிய போகுது. அக்கா கல்யாணமும் முடியட்டும். நான் நம்ம மேட்டரை பத்தி வீட்டுல பேசுறேன். சரியா?" என்று விரல்கள் ஐந்தையும் குவித்து அவன் முகவாய்க்கட்டையை பிடித்துக் கொஞ்சினாள்.​

அவன் தாடையை பற்றியிருந்த அவள் கரத்தை பிடித்து இறக்கி விட்டவன் "உன் இஷ்டம் மது. ஏதாச்சும் பண்ணு" என்றபடி ஒரு நொடி அவளின் மீது அழுத்தமான பார்வையை ஒன்றை பதித்துவிட்டு அவ்விடம் விட்டு சென்றிருந்தான் அவன்.​

செல்லும் அவன் முதுகையே பார்த்திருந்த மதுவும் அதற்குமேல் அவனை தடுக்கவும் விளையவில்லை. ஏற்கனவே கோபமாக இருப்பவனின் சினத்தை விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று இன்னும் அதிகரிக்க அவள் விரும்பவில்லை. அவனது சினம் தணிய அவனுக்கும் கொஞ்சம் அவகாசமும் தனிமையும் தேவை என்று எண்ணிக்கொண்டவள் அவனை விட்டு பிடிக்கவே நினைத்தாள்.​

***​

தருண் மற்றும் வைஷாலியின் மனநிலைக்கு ஏற்றவாறு வாகனத்திலும் மெல்லிசை ஒலித்துக்கொண்டிருக்க சீரான வேகத்தோடு வைஷாலியின் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்திருந்தது தருணின் கார்.​

வண்டியை நிறுத்திவிட்டு தானும் வைஷாலியுடன் இறங்கியவன் அவளது இல்லத்திற்குள் நுழைந்திருந்தான்.​

அப்படியே வாசலோடு விட்டுவிட்டு போவது நாகரீகமன்று என்பதை அறிந்திருந்தவன் வீட்டிற்குள் சென்று அனைவரிடமும் சொல்லிவிட்டு போக நினைத்தான்.​

சரியாக அவனும் வைஷாலியும் வீட்டிற்குள் நுழைந்த சமயம் தான் தானவீரனின் மோட்டார் சைக்கிளும் தருணின் காருக்கு அருகே வந்து நின்றது. சைடு ஸ்டாண்ட் போட்டு வண்டியை நிறுத்தி விட்டு அவனும் வீட்டிற்குள் நுழைந்தான்.​

தருணை பார்த்ததும் “ஹாய் ப்ரோ…” என்று அவனுடன் கையை குலுக்கியவன் அவனுக்கு சற்று தள்ளி நின்ற வைஷாலியிடம் “அப்புறம் இன்னைக்கு மேடம்க்கு ஒரே ஜாலி தான் போல… முகம் எல்லாம் பிரகாசமா ஜொலிக்குதே” என்று வழக்கம் போல அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்திருந்தான்.​

அவனை முறைத்து பார்த்த வைஷாலி அருகே இருந்த சோபாவில் வைக்கப்பட்டிருந்த குட்டி தலையணையை எடுத்து அவன் மீது விட்டெறிந்திருந்தாள்.​

அடிக்கடி தானவீரனை தாக்குவதற்காக வைஷாலியின் ஆயுதமாக பயன்படுவது அந்த தலையணை தான். இதுவரை எத்தனை முறை அந்தத் தலையணையினால் அடி வாங்கி இருப்பான் என்று அவனுக்கே தெரியாது.​

அது அவளது வழக்கமான செய்கை என்பதால் அவள் அதைத்தான் செய்யப் போகிறாள் என்று நொடி பொழுதில் அனுமானித்தவன் சட்டென விலகியிருக்க அவள் விட்டெறிந்த தலையணை தருணை தான் தாக்கியிருந்தது.​

எதிர்பாராமல் நடந்து விட்ட அந்த விடயத்தில் அதிர்ந்தவள் “ஐயோ சாரி சாரி… தெரியாமத்தான்...” என்று வைஷாலி பதற “வைஷு ரிலாக்ஸ், வெறும் பில்லொ(pillow) தானே அதுக்கு எதுக்கு இப்படி பததுற?” என்று சிரித்தப்படி சொன்னான் தருண்.​

அதற்கெல்லாம் காரணமான தானவீரனை பார்த்து அவள் முறைக்க அவனும் பொங்கி வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு நின்றிருந்தானன்.​

அவன் இதழ்களில் அடக்கி வைத்திருந்த கேலிப் புன்னகையும் அவன் கண்களில் தெரிந்த கிண்டலும் வழக்கம் போல வைஷாலியின் சினத்தை தூண்டிவிட “உங்கள…” என்று பற்களை கடித்தாள் அவள்.​

தருணும் அவர்கள் இருவரின் சேட்டையையும் பார்த்து சிரித்துக் கொண்டு நின்றிருக்க அவர்களின் பேச்சுக்குரல் கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியில் வந்து எட்டிப் பார்த்தார் சரோஜினி.​

தருணை பார்த்ததும் புன்னகை முகமாக வரவேற்பறைக்குள் நுழைந்தவர் “வாங்க மாப்பிள்ளை… வாங்க. எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று அவனை வரவேற்றார்.​

அதோடு “என்ன பொண்ணுமா நீ மாப்பிள்ளை வந்திருக்காருன்னு ஒரு வார்த்தை வந்து சொல்லறதில்ல?” என்று வைஷாலியையும் மென்மையாக கடிந்துக்கொள்ள மறக்கவில்லை அவர்.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

“இல்ல அத்தை, நாங்க இப்பதான் வந்தோம்” என்று தருண் வைஷாலிக்காக பதில் சொல்ல “பாருடா ஏற்கனவே இந்த வீடு முழுக்க இவளுக்கு தான் சப்போர்ட்டுக்கு ஆள் அதிகம்… இதுல புதுசா இன்னொருத்தர் வேற சேர்ந்தாச்சு இனி இவளை கையிலயே பிடிக்க முடியாதே” என்று சலித்துக்கொள்வது போல் சொல்லி மீண்டும் வைஷாலியை சீண்டி பார்த்தான் தானவீரன்.​

வைஷாலி அவனை முறைக்க “பொறாமையா ப்ரோ?” என்று கேட்டான் தருண்.​

“அதுக்குத்தான் ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டா உனக்கும் சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கும்ல” என்று சரோஜினி சொல்ல “சாரி அத்தை, நான் பாழும் கிணத்துல விழுரதுக்கு விரும்பல” என்றுவிட்டு சென்றான்.​

தனது அறைக்கு செல்வதற்காக மாடிப்படி ஏறப்போனவனிடம் “வீர் மாமா அறையில தான் இருக்காங்க. மாப்பிள்ளை வந்து இருக்காருன்னு சொல்லி வர சொல்லுப்பா…” என்றார் சரோஜினி.​

“ஓகே அத்தை, நான் மாமா கிட்ட சொல்லிட்டு அப்படியே குளிச்சிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிக்கொண்டே இரண்டு இரண்டு படிகளாக தாவி மாடியை அடைந்திருந்தான் தானவீரன்.​

"சாப்பிட எதுவும் கொண்டு வரட்டுமா மாப்பிள்ளை" என்று சரோஜினி தருணை உபசரிக்க தொடங்கிவிட "குடிக்க கொஞ்சம் தண்ணி மட்டும் கொடுங்க அத்தை" முற்றாக எதுவும் வேண்டாம் என்பது அழகில்லை என்றபடியால் தண்ணீரை மட்டும் கேட்டிருந்தான்.​

சரோஜினியும் அவன் கேட்டதை கொண்டு வர சமயலறைக்குள் சென்று விட வைஷாலியும் அவனுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்துக்கொண்டாள்.​

கிருஷ்ணகுமாருக்காக காத்திருந்த தருணின் விழிகள் இப்பொழுது வீட்டின் முன்னறையை ஒரு சுற்று வலம் வந்தன. அன்று பெண் பார்க்க வந்த நேரம் அவனுக்கு வைஷாலியை தவிர வேறு எதுவும் கவனத்தில் பதியவில்லை. ஆனால், இன்று அங்கே முன்னறையின் ஒரு பகுதி சுவற்றை பெரிய புகைப்படமொன்று அலங்கரித்துக் கொண்டிருப்பதை கவனித்தான். அவனது விழிகள் அதிலேயே நிலைத்திருந்ததுன.​

அது தானவீரனுடன் வைஷாலி மற்றும் மதுஷிகா எடுத்துக்கொண்ட புகைப்படம். தானவீரன் நடுவில் நிற்க அவனுக்கு இடது புறம் வைஷாலியும் வலது புறம் மதுஷிகாவும் என்று ஆளுக்கு ஒரு புறமாக அவனது கைகளை கோர்த்தபடி நின்றிருந்தனர். முகமெல்லாம் புன்னகையாக மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் மூவரும்.​

தருணின் பார்வையை தொடர்ந்து தனது பார்வையையும் நகர்த்திய வைஷாலி அவன் விழிகள் நிலைகொண்டிருந்த புகைப்படத்தை பார்த்தபடி "என்ன அப்படி பார்க்குறீங்க?" என்று கேட்டாள்.​

"அந்த பிக்ச்சர் ரொம்ப அழகா இருக்கு. நீங்க மூனு பேரும் ரொம்ப கிளோஸ் போல" என்றான்.​

மென்மையாக புன்னகைத்த வைஷாலி "ஆமா, ஒரே வீட்டுல பிறந்து ஒன்னாவே வளந்ததுனாலயோ என்னவோ எங்களுக்குள்ள ஒரு நல்ல பாண்டிங்(bonding) இருக்கு. அதுவும் மதுவும் வீர் மாமாவும் செம்ம கிளோஸ்" என்றாள்.​

"அப்போ நீ? உனக்கு வீரை பிடிக்காதா?" என்று கேட்டான்.​

"சேச்சே...ரொம்ப பிடிக்கும். ஆனால், என்ன... அவர் ஒரு வால் இல்லாத குரங்கு. எப்போ பாரு என்னை சீண்டிட்டே தான் இருப்பாரு" என்று அவள் தானவீரனை திட்ட தொடங்கிவிட அதிலும் அவர்களுக்குள் இருக்கும் நேசமும் பிணைப்பும் தான் தருணுக்கு தெரிந்தது.​

அவள் சொல்லிய விதத்தில் சிரிப்பும் வந்துவிட இதழ் பிரித்து சிரித்திருந்தான் அவன்.​

அடுத்து அவனது பார்வை புகைப்படத்தில் இருந்த மதுஷிகாவின் மீது படிய "மதுவும் பார்க்க உன்னை போலவே இருக்கா" என்றான்.​

"ஆமா... நிறைய பேர் அப்படி சொல்லியிருக்காங்க" என்று வைஷாலி சொல்லிக்கொண்டிருக்கும் போதே தருணுக்காக பழச்சாறுடன் அங்கே வந்து சேர்ந்திருந்தார் சரோஜினி.​

அவர் நீட்டிய பழச்சாறை இரு மிடறு பருகியிருப்பான், கிருஷ்ணகுமாரோடு சேகரும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர்.​

அவர்களுக்கிடையிலான பொதுவான நலவிசாரிப்புகள் முடிந்திருக்க "இருந்து சாப்பிட்டு தான் போகணும்" என்றார் கிருஷ்ணகுமார்.​

"இட்ஸ் ஓகே மாமா. அத்தை இப்போதான் ஜூஸ் கொடுத்தாங்க. அதுவே போதும். ஆபீஸ்ல வேற கொஞ்சம் வேலை இருக்கு. அதை எல்லாம் என்னனு பார்த்துட்டு தான் வீட்டுக்கு கிளம்பனும். இப்போவே டைம் ஆயிடுச்சு.உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்ப தான் வந்தேன்" என்று மென்மையாக அவரின் அழைப்பை மறுத்தவன் அனைவரிடமும் சொல்லிக்கொண்ட பின் வைஷாலியிடமும் பிரத்தியேக தலையசைப்புடன் விடைப்பெற்று கிளம்பியிருந்தான்.​

இன்று அவன் அந்த இல்லத்தில் உருவாக்கிச் சென்ற அவன் மீதான நன்மதிப்பும் அவனை பற்றின இனிமையான எண்ணங்களும் அவன் மீண்டும் அவர்களை சந்திக்கும் நேரம் அவனாலேயே சீர்குலைந்துப் போகயிருக்கின்றது என்பது தான் விதியின் விளையாட்டு.​

 
Status
Not open for further replies.
Top