ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 4

தானவீரன் அடித்த அடியில் கண்களில் பொறிகலங்கி நிலைகொள்ள இயலாமல் பொத்தென்று கீழே விழுந்திருந்தான் முத்துக்குமார்.​


அவனை அடித்த வேகத்தில் தன் கையுமே வலிக்க கையை உதறிக்கொண்டே "யாரு முன்னாடி கை நீட்டி பேசுற. தொலைச்சுடுவேன்" என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி சீறிக்கொண்டு நின்றான் வீர்.​

அவர்களை சுற்றி நின்று கோஷம் போட்டுக்கொண்டிருந்த அனைவரின் வாயும் அதிர்ச்சியில் ஒரு நொடி மூடிக் கொள்ள சந்தை கடை போல கூச்சலாக இருந்த அந்த இடமே சில நொடிகள் நிசப்தமாக மாறியிருந்தது.​

தனது தொழிலாளியின் மீது கையை வைத்த அதிர்ச்சியில் "வீர்" என்று அவனை அதட்டிய கிருஷ்ணகுமார் அடுத்த நொடி திரும்பி நிறுவன மேலாளர் மணிவண்ணனை பார்த்து "உங்க வேலையா?" என்று முறைத்தார்.​

முதலாளியின் பார்வையை கண்டுகொண்ட அந்த பின் நாற்பதுகளில் இருக்கும் மனிதர் "பிரச்சனை எதுவும் பெருசாகிடுமோன்னு தான் சார் வர சொன்னேன்" என்று தலையை தொங்கப்போட்டு கொண்டே சொல்ல​

"பிரச்சனைன்னு கூப்பிடுறதுக்கு அவன் என்ன போலீஸ் ஆஹ்?" என்று மணிவண்ணனை கடிந்துகொண்டார் அவர்.​

சுற்றி இருந்தவர்களோ ஸ்தம்பித்து நின்றது என்னவோ சில நொடிகள் தான்.​

சட்டென்று சுதாரித்து கொண்ட கூட்டத்தில் இருந்த ஒருவன் "என்ன சார் எங்க உரிமையை கேட்டு வந்தா கை நீட்டுறீங்க. அராஜகமா இருக்கே" என்று ஆரம்பிக்க அடுத்தவர்களும் சேர்ந்து கொண்டனர்.​

"எங்க யூனியன் தலைவர் சார் முத்துக்குமார். அவர் மேலையே கையை வைக்குறிங்க”என்று எகிறினான் மற்றுமொருவன்.​

தனது கூரிய விழிகளினால் தீர்க்கமான பார்வையுடன் சுற்றி நின்றவர்களை ஒரு முறை பார்த்தவன் எதுவும் பேசாமல் கீழே விழுந்து கிடந்த முத்துக்குமாரின் ஷர்ட் காலரை பற்றி இழுத்து நிற்க வைத்தான்.​

அவனை ஒரு முறை மேலிருந்து கீழே பார்த்த வீர் கீழே விழுந்ததினால் அவன் ஷர்ட்டில் ஒட்டியிருந்த புழுதியை தட்டி விட்டபடியே “உண்மையை நீயே சொல்லுறியா...இல்லை நான் சொல்லட்டுமா?” என்று கேட்டான்.​

வீர் கோபப்படவில்லை அமைதியாக தான் கேட்டான்.​

ஆனால் அவன் குரலில் தொனித்த அழுத்தமே ‘சொல்லவில்லை என்றால் உன்னை தொலைச்சுடுவேன்’ என்னும் மிரட்டல் விடுப்பதாய் இருந்தது.​

இருந்தும் தான் செய்த திருட்டுத் தனத்தை மறைக்க முயன்றவனாய் “என்ன சார் உண்மை...என்ன சொல்ல சொல்லுறீங்க... எ...எனக்கு ஒ...ன்னும் புரியல சார் “ என்று திக்கி திணறி சொன்னவனுக்கு சொல்ல ஆரம்பிக்கும் போது பேச்சில் இருந்த தெளிவு சொல்லி முடிக்கும் போது இருக்கவில்லை.​

வீர் பார்த்த பார்வையிலேயே அவன் குரல் கம்மி போயிற்று.​

“ஓ... ஓஹோ.. உனக்கு ஒன்னும் தெரியாதுல” என்று கேட்டுக்கொண்டே முத்துக்குமாரின் தோள் மீது கையை போட்டவன் மற்ற கரம் கொண்டு அவன் தாடையை பற்றி அவன் அடி வாங்கி சிவந்திருந்த கன்னத்தை பார்த்துக்கொண்டே “ச்சே கன்னம் எப்படி சிவந்து போச்சுல்ல... அட உதடு வெடிச்சு ரத்தம் எல்லாம் வருது வேற பாரு...ச்சுச்சு “ என்று பரிதாபம் போல பேசியவனை முறைக்க முயன்ற முத்துக்குமார் “என்ன சார் மிரட்டுறீங்களா?” என்று கேட்டான்.​

அவனை புருவம் உயர்த்தி பார்த்துக்கொண்டே அவன் தோள் மீதிருந்து கையை எடுத்த வீர் “அடுத்த கன்னம் இன்னும் ஃப்ரீயா தானே இருக்கு” என்று கொண்டே தனது கையை உயர்த்த அடுத்த கன்னத்தை பாதுகாக்க வேண்டி கைகளால் கன்னத்தை பொத்தியபடியே “சொல்லிடுறேன் சார் சொல்லிடுறேன்” என்று அவனிடமிருந்து பதறி விலகி நின்றிருந்தான் முத்துக்குமார்.​

சற்று முன்னர் அவனிடம் அடி வாங்கிய அனுபவம் இருக்கிறதல்லவா. அதை நினைத்த போதே உதறல் எடுத்தது அவனுக்கு.​

"ஆஹ்... இது நல்ல புள்ளைக்கு அழகு... எங்க நடந்தது எல்லாத்தையும் ஒன்னு விடாமல் சொல்லு பார்ப்போம்" என்று சொன்னான்.​

முத்துக்குமாரும் "அது வந்து... என்னாச்சுன்னா சார்" என்று அவனிடம் நடந்த உண்மையை சொல்ல ஆரம்பிக்க அவன் தாடையை பற்றி "என்கிட்டே இல்ல... அவங்க கிட்ட" என்று அவர்கள் இருவரையும் பல குழப்பங்களுடன் கேள்வியாக பார்த்து கொண்டு நின்றிருந்த மற்ற தொழிலாளர்களை நோக்கி திருப்பி விட்டிருந்தான் வீர்.​

“எல்லாரும் என்ன மன்னிச்சுடுங்க... இதை எல்லாம் நான் கிருஷ்ணகுமார் சாரோட ஃப்ரெண்ட் புருஷோத்தமன் சார் சொல்லி தான் பண்ணுனேன். உங்க எல்லாரையும் சாருக்கு எதிரா தூண்டி விட்டு கலவரம் பண்ண சொல்லி எனக்கு பணம் கொடுத்தார். அதை வாங்கிட்டு தான் மத்த கம்பெனியை விட நமக்கு சம்பளமும் சலுகையும் ரொம்ப குறைவா கொடுக்குறாங்கன்னு உங்க கிட்ட பொய் சொல்லி தூண்டி விட்டேன். உண்மையில புருஷோத்தமன் ட்ரான்ஸ்போர்ட்ஸ் அஹ் விட நமக்கு நல்ல சம்பளம் தான்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே “ஆஹ் போதும் போதும்... இதுக்கு மேல நான் சொல்லிக்குறேன்“ என்றபடி அவனை இடை நிறுத்திய தானவீரன்​

“இங்க பாருங்க... புருஷோத்தமன் ட்ரான்ஸ்போர்ட் எம்.டி யாருன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்... அவரு உங்க முதலாளி கிருஷ்ணகுமார் சாரோட ஃப்ரெண்ட். முதல்ல ரெண்டு பேரும் சேர்ந்து தான் தொழில் பண்ணுனாங்க. பிறகு சில மனக்கசப்பால இப்போ தனி தனி பிசினஸ். பட் அவர் கம்பெனிய விட நம்ம கம்பெனில நல்ல பிசினெஸ் நடக்குதுன்னு பொறாமையில் அவர் பண்ணிட்டிருக்குறது தான் இந்த மாதிரியான கீழ்த்தரமான வேலைங்க எல்லாம். நாமளே அதை புரிஞ்சுக்காம அந்த வலையில போயி விழுந்தா அது கம்பெனிக்கு மட்டும் நஷ்டம் இல்லை... உங்களுக்கும் தான்.”என்று விளக்கம் கொடுத்தான்.​

“யாரும் எதுவும் வந்து உங்க கிட்ட சொன்னா முதல்ல அதுல இருக்குற உண்மை என்னனு நாலு பேரு கிட்ட விசாரிச்சு தெரிஞ்சுக்கோங்க. இதோ இவன் போல தலைவன்னு சொல்லிக்கிட்டு திரியுறவனுங்க எதையாவது சொல்லுறாங்கன்னு அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு நம்பிடுறது தானா?” என்று தனது கணீர் குரலில் கேட்டான்.​

அவனது பேச்சில் எந்த விசாரனையும் இன்றி முத்துக்குமாரின் பேச்சை கேட்டு தாங்கள் செய்த தவறை உணர்ந்து கொண்ட மற்ற தொழிலாளிகள் தலை கவிழ்ந்து நிற்க அதிலிருந்த ஒருவன் “மன்னிச்சிடுங்க சார். எதையுமே விசாரிக்காமல் தலைவன்னு இவன் மேல இருக்குற நம்பிக்கையில இப்படி நடந்து கிட்டோம்” என்று அனைவரின் சார்பாக மன்னிப்பு வேண்டினான்.​

அங்கே நெடு நாட்கள் வேலை செய்யும் மற்றும் ஒரு சாரதி கணேசன் “ ஆனாலும் நிஜமாவே எங்களுக்கு சம்பளம் போதாலங்க தம்பி. ஏறிட்டு போற விலைவாசியில இப்போ இருக்குற சம்பளத்தை வச்சு குடும்பத்தை ஓட்டுறது ரொம்பவே கஷ்டமா இருக்கு. அதுதான் இவன் மத்த கம்பெனிகாரங்க நம்மளை விட அதிகமா சம்பளம் கொடுக்குறாங்கன்னு சொன்னதும் எதையும் விசாரிக்காமல் இப்படி பண்ணிட்டோம்” என்று தங்கள் பிரச்சனையை எடுத்து சொன்னார்.​

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே “ உங்க பிரச்சனை புரியுது. இப்போவே நம்ம கம்பெனியில் அடுத்த கம்பெனிய விட அதிக சம்பளம் தான் கொடுக்குறோம். அதுக்கும் மேல மெடிக்கல் பெனிபிட்ஸ், இன்சூரன்ஸ், அப்புறம் எதுவும் ஃபங்ஷன் போகணும்னா உங்க பர்சனல் அண்ட் பேமிலி யூஸுக்கு பாதி வாடகைக்கு கம்பெனி கார்னு சலுகைகளும் கொடுத்திருக்கோம். அப்படியிருந்தும் உங்களுக்கு இப்போ கிடைக்குற சம்பளம் போதலன்னு சொல்லுறீங்க. ஆனால், அதை சரி பண்ணுறதுக்கு எடுத்ததும் இது போல போராட்டத்துல இறங்குறது சரி இல்லை. உங்க பிரச்சனைய நாங்களும் அசால்ட் ஆஹ் எடுத்துக்க மாட்டோம். பேசி ஒரு நல்ல முடிவை எடுக்கலாம்” என்று தங்கள் பிரச்சனைகளை சொல்லி ஆதங்கப் பட்டுக்கொண்டிருந்த தொழிலாளிகளுக்கு சமாதானம் சொன்னவனின் பார்வை ஒரு கணம் கிருஷ்ணகுமாரில் படிந்து மீண்டது.​

பிரச்சனையை சாமர்த்தியமாக கையாண்ட தானவீரனை மனதுக்குள் மெச்சிக்கொண்டவர் அவனுக்கு ஆமோதிப்பாக தலையாட்டியபடி “ கணேசன், நீங்களும் உங்களுக்கு நம்பிக்கையான இன்னும் ரெண்டு பேரையும் ஆபீஸ்க்கு கூட்டிட்டு வாங்க. பேசிக்கலாம்... மத்தவங்க எல்லாம் இப்போ போயி வேலைய பாருங்க... “ என்று சொன்னார்.​

“சரிங்க சார்” என்று கணேசனும் சொல்லி இருக்க மற்றவர்களும் கலைந்து சென்றார்கள்.​

“சார் இவனை என்ன பண்ணுறது...” முத்துக்குமாரை காட்டி மணிவண்ணன் கேட்க​

“தேவையில்லாமல் கலவரத்தை தூண்டி விடுறான்னு கம்பளைண்ட் கொடுத்து போலீஸ்ல ஒப்படைச்சிடுங்க” என்று சொல்லி விட்டு அலுவலகத்துக்குள் நுழைய சென்றார்.​

உள்ளே செல்ல போனவர் பாதியில் நின்று வீரை திரும்பி பார்க்க​

அந்த சந்தர்ப்பத்தில் அவனும் “எப்புடி... சித்தப்பு” என்று ஷர்ட் காலரை தூக்கிவிட்டு கொண்டே மணிவண்ணனிடம் பெருமையாக கேட்டு கொண்டிருந்தான்.​

மணிவண்ணன் அவர்களின் தூரத்து உறவில் அவனுக்கு சித்தப்பா முறை வேண்டும்.​

கிருஷ்ணகுமார் தனியாக தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்து அவருக்கு துணையாக இருந்து வருகிறார். மிகவும் நம்பிக்கையான ஆள் என்பதால் நிறுவன மேலாளர் பதவியும் வழங்கியிருந்தார் கிருஷ்ணகுமார்.​

“கலக்கிட்டீங்க தம்பி” என்று அவரும் அவனுக்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்க இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிய கிருஷ்ணகுமார் மீண்டும் அவர்களை நோக்கி நடந்து வந்தார்.​

அதை கவனித்தவன் “ ஐயோ மாமா... “ என்று பதறியபடி “அப்புறம்... சித்தப்பு இன்னிக்கு மழை வரும் போல இருக்குல்ல” என்று வானத்தில் பார்வையை சுழல விட்டபடி பேச்சை மாற்ற “ மழையா... அப்படி ஒன்னும் தெரியலையே” என்று அவன் திடிரென்று பேச்சை மாற்றிய காரணம் புரியாமல் அவரும் வானத்தை அன்னார்ந்து பார்க்க அவரை முறைத்தவன் “சித்தப்பு... மழை வரும்... வரும்ம்ம்ம்... “ என்று அழுத்தி சொல்லியபடி கிருஷ்ணகுமாரை நோக்கி கண்களால் ஜாடை காட்டினான்.​

அதற்குள் அவர்கள் அருகே வந்து நின்ற கிருஷ்ணகுமார் “மணி...எல்லாம் உங்க வேலை தானே... அவன் தான் எதோ சின்ன பையன் இப்படி அடிதடின்னு திரியுறான். இதுல நீங்களும் வேற அவனுக்கு சப்போர்ட். இனி எதுவும் பிரச்சனைன்னா போலீசுக்கு கூப்பிட்டு பழகுங்க...” என்று கண்டிப்பாக சொன்னார்.​

மணி திட்டு வாங்குவதை பார்த்தவனுக்கு அடுத்த திட்டு அவனுக்கு தான் விழும் என்று தெரிந்திருக்க​

“அப்போ நான் கிளம்புறேன்” என்று பெரியவர்கள் இருவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு விசிலடித்த படியே திரும்பி நடந்தான் வீர்.​

“வீர், அது தான் ஆபீஸ் வரை வந்துட்டியே. உள்ள வந்து கொஞ்சம் வேலையும் பார்க்கலாம்ல” கிருஷ்ணகுமார் கேட்க​

“அய்யய்ய... அந்த ஆபீஸ் வேலை எல்லாம் நமக்கு செட் ஆகாது. ஆளை விடுங்க” என்றவன் விட்டால் போதும் என்று வண்டியை கிளப்பிகொண்டு சீட்டாய் பறந்துவிட்டான்.​

அவனை பார்த்துக்கொண்டே “இவனுக்கு எப்போ தான் பொறுப்பு வர போகுதோ” என்று மணிவண்ணனிடம் சலித்துக்கொண்ட கிருஷ்ணகுமார் “எங்க போயிட போறான்... வீட்டுல போயி கவனிச்சுக்குறேன்” என்று சொன்னவர் தனக்காக காத்திருந்த தொழிலாளிகள் பிரச்சனையை சமாளிக்க அலுவலகத்தினுள் நுழைந்துக்கொண்டார்.​

தானவீரன் அந்த வீட்டின் ஒரே ஆண் வாரிசு என்பதால் அவன் மீது குடும்பத்தில் அனைவருக்கும் அப்படியொரு பாசம். வீட்டின் செல்ல பிள்ளை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மத்தியில் செல்ல கண்ணனாக இருப்பவனுக்கு குறும்பும் சேட்டையும் அதிகம்.​

அங்கே அவனை கண்டிக்க கூடிய இரண்டே பேர் அவன் அப்பாவும் மாமாவும் தான்.​

அதிலும் அவன் திட்டு வாங்கும் போதெல்லாம் வீட்டு பெண்கள் அவன் உதவிக்கு வந்து விடுவார்கள்.​

அதனாலோ என்னவோ அவன் எதற்குமே கவலை படாமல் பாடி திரியும் சுதந்திர பறவையாக சுற்றிக்கொண்டிருந்தான்.​

விளையாட்டுத் தனமாக இருந்தாலும் திறமையானவன்.படிப்பை முடித்துவிட்டு வேலை வெட்டிக்கு செல்லாமல் எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் வெறுமனே திரிந்து கொண்டிருக்கிறான்.​

சேகரும் கிருஷ்ணகுமாரும் அவனை அதற்காக திட்டும் போதெல்லாம் “ இப்போ அவசரமா அவன் வேலைக்கு போயி என்ன பண்ண போறான்? கொஞ்ச நாள் ஜாலியா இருந்துட்டு போகட்டுமே... எப்படியும் உங்க பிசினெஸ் எல்லாம் அவன் தானே பார்த்துக்கணும்” என்று செல்ல பேரனின் வாக்களத்திற்கு வந்துவிடுவார் ஜெயலக்ஷ்மி.​

வீருக்கு அந்த டிரான்ஸ்போர்ட் தொழிலில் எல்லாம் பெரியதாக ஈடுபாடு இல்லையென்றாலும் அப்போதைக்கு அப்பத்தாவின் பேச்சுக்கு ஆமாம் சாமி போட்டு விட்டு திட்டிலிருந்து தப்பி விடுவான்.​

சேகரும் கிருஷ்ணகுமாரும் கூட அவன் சம்பாதித்துத்தான் குடும்பம் நடக்க வேண்டும் என்ற சூழ்நிலை இல்லாததாலும் குறிக்கோளின்றி சுற்றுவதை தவிர அவனிடம் குறை என்று சொல்லி விட வேறு எந்த காரணமும் இல்லாமல் இருந்ததாலும் ஜெயலக்ஷ்மி சொல்லியது போல அவனை விட்டு பிடிக்கவே நினைத்திருந்தார்கள்.​

திறமையானவன், அன்பானவன், எந்த தப்பு தாண்டாவிற்கும் போகமாட்டான்.​

ஆனால், அவனிடம் இருக்கும் ஒரே பிரச்சனை முன் கோபமும் சட்டென்று கை நீட்டி விடும் பழக்கமும் தான்.​

பல முறை கண்டித்தும் பார்த்தாயிற்று அவன் அதை மாற்றி கொள்வதில்லை என்ற முடிவில் இருக்கின்றான்.​

கேட்டால் “ரௌத்திரம் பழகு என்று பாரதியாரே சொல்லியிருக்கார்” என்று ஒரே வரியில் அனைவரின் வாயையும் அடைத்து விடுவான்.​

அன்று அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சீக்கிரமே வந்து விட்டிருந்தார் கிருஷ்ணகுமார்.​

காலையிலிருந்து தொழிலாளர்கள் பிரச்சனையில் ஆரம்பித்து அடுத்த வேலைகளும் வரிசை கட்டி நிற்க மூச்சு கூட விட நேரமின்றி ஓடியவருக்கு ஓய்வு வேண்டுமென்று தோன்ற சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டார்.​

அவர் வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சேகரும் வந்து விட இருவருக்கும் காபி போட்டுக்கொண்டு வந்து கொடுத்தார் சரோஜினி.​

காபியை எடுத்து பருகிய கிருஷ்ணகுமார் “ வீர் எங்க? “ என்று தான் பேச்சை ஆரம்பித்தார்.​

“காலையில் வெளியில் போனவன் இன்னும் வீட்டுக்கு வரலங்க “ என்று கணவனுக்கு பதில் சொன்னார் சரோஜினி.​

அதே நேரத்திற்கு அங்கே ஈஸ்வரியுடன் வந்து சேர்ந்த ஜெயலக்ஷ்மி “ புருஷன் வந்ததும் வராததுமா... வீரை பத்தி வத்தி வச்சாச்சு போல” என்று கேட்டு கொண்டே சோபாவில் அமர்ந்துகொண்டார்.​

“அம்மா, அவளை எதுக்கு திட்டுறீங்க. உங்க பேரன் பண்ணுறதெல்லாம் அவள் சொல்லி தான் எனக்கு தெரியனுமா? இன்னிக்கு கூட கம்பெனியில என்னாச்சு தெரியுமா...” என்று ஆரம்பித்தவர் காலையில் வீர் செய்த சாகசங்களை எல்லாம் சொல்ல தொடங்கியிருந்தார்.​

அவர் சொல்லி முடிக்கவும் வீர் வீட்டிற்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது.​

வண்டி சாவியை மேலே தூக்கி போட்டு பிடித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவன் ஹாலில் மொத்த குடும்பமும் கூடியிருப்பதை பார்த்து விட்டு “ஆத்தி, ஒன்னு கூடிட்டாங்களே... டேய் வீரா அப்படியே எஸ்கேப் ஆகிடு. இல்லை மாமாவும் அப்பாவும் இன்னிக்கு உன்னை வச்சு செஞ்சிடுவாங்க...அபவுட் டர்ன் (about-turn)“ என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே வந்த வழிய திரும்பி நடந்தவனை “வீர்” என்று அழைத்திருந்தார் சேகர்.​

தந்தையின் குரல் காதில் கேட்டதும் ஒரு நொடி விழிகளை அழுந்த மூடி திறந்தவன் ‘மாட்டிகிட்டியே வீரா’ என்று காலை வெறும் தரையில் உதைத்தபடி திரும்பி தந்தையை பார்த்து “சொல்லுங்கப்பா” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 5

தங்களுக்கு முன்னால் வந்து நின்ற தானவீரனை சேகர் முறைத்து பார்த்துக்கொண்டிருக்க அவனோ கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு தலையை தொங்கப் போட்டு கொண்டே நின்றிருந்தான்.​

"என்னடா பண்ணி வச்சிருக்க.... நீ காலையிலேயே கிளம்பிட்டேன்னு உங்கம்மா சொன்னப்பவே தெரியும் ஏதாவது ஒரண்டை இழுத்துட்டு தான் வீட்டுக்கு வருவன்னு..." என்று ஆரம்பித்தவர் அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்.​

அதே நேரம் அறையில் பேசிக்கொண்டே கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்த வைஷாலிக்கும் மதுவுக்கும் சேகரின் உரத்த குரல் லேசாக திறந்திருந்த கதவின் ஊடே செவிகளை வந்தடைய 'என்ன' என்பதுபோல் மது புருவத்தை ஏற்றி இறக்கி வைஷாலியை கேள்வியாக பார்க்க அவளும் இதழ்களை பிதுக்கி தோள்களை உலுக்கி 'தெரியல' என்று சைகையில் பதிலிறுத்தாள்.​

"இருக்கா வரேன்" என்று வேகமாக வெளியே வந்த மதுஷிகா மாடியிலிருந்து கீழே எட்டி பார்க்க தலையை தொங்க போட்டு கொண்டே கிருஷ்ணகுமார் மற்றும் சேகரிடம் திட்டு வாங்கி கொண்டிருந்த தானவீரன் தான் கண்ணில் பட்டான்.​

அதே வேகத்தில் மீண்டும் அறைக்குள் நுழைந்தவள் அக்கா நம்ம போதைக்கு ஊறுகாய் கிடைச்சாச்சு. நீ என்ன சாக்லேட் சாப்பிட்டுட்டிருக்க… வா கீழ போகலாம்" என்று அழைக்க​

"ஊறுகாயா... என்னடி உளறுற" என்று அசட்டையாக கேட்டுக்கொண்டே கையிலிருந்த சாக்லேட் பாக்கெட்டில் இருந்து அடுத்த சாக்லேட் உருண்டையை எடுத்து வாயில் போட்டாள் வைஷாலி.​

"ஐயோ அக்கா உனக்கு விளக்கி சொல்லுறதுக்குள்ள அங்க சீன் ஏஹ் முடிஞ்சிடும். சீக்கிரம் வா" என்று அவள் கையில் வைத்திருந்த சாக்லேட் பாக்கெட்டை பிடிங்கி எடுத்தவள் அவளையும் இழுத்துக்கொண்டே மாடிப் படியிறங்கி கீழே வந்தாள் மதுஷிகா.​

அவர்களும் வந்து கடைசி படியின் ஓரத்தில் நின்றிருக்க கிருஷ்ணகுமாரின் குரல் தான் இம்முறை ஓங்கி ஒலித்தது.​

"ஆபீஸ் வரை வந்துட்டு உள்ள வாடான்னு சொன்னா... இந்த வேலையெல்லாம் எனக்கு சரிப்படாதுன்னு சொல்லிட்டு ஓடுறான். எவ்வளவு எகத்தாளம் இருக்கும் இவனுக்கு" என்று திட்டிவிட​

ஜெயலட்சுமி தான் இப்பொழுதும் அவனுக்காக பரிந்து பேச தொடங்கியிருந்தார்.​

"அதுக்குள்ள ஆபிஸ் வந்து அவனும் என்ன பண்ண போறான்...." என்று அவரும் பழைய பல்லவியை பாட ஆரம்பித்திருந்தார்.​

"நீங்க சும்மா இருங்கம்மா. இப்படியே சொல்லி சொல்லி தான் இவன் உருப்படாமல் இருக்கான்" என்று கிருஷ்ணகுமார் பதிலுக்கு தனது தாயிடம் மல்லுக்கு நிற்க தானவீரனின் பிரச்சனை இப்பொழுது ஜெயலக்ஷ்மிக்கும் கிருஷ்ணகுமாருக்கும் இடையிலான வாக்குவாதமாக மாறியிருந்தது.​

இதற்கிடையில் திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே படம் பார்ப்பது போல் அங்கே நிகழ்ந்து கொண்டிருப்பதை கையில் இருந்த சாக்லெட்டை சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதுஷிகா இப்பொழுது அனைவரின் கவனமும் தானவீரனில் இருந்து ஜெயலக்ஷ்மியின் புறம் திரும்பியிருப்பதை கண்டதும் "ஸ்ஸ்...ஸ்ஸ்…" என்று மற்றவரின் கவனத்தை ஈர்க்காமல் தானவீரனை அழைத்தாள்.​

தலையை தொங்க போட்டுக்கொண்டு நின்றிருந்தவன் விழிகளை மட்டும் உயர்த்தி மதுஷிகாவை பார்க்க "என்னாச்சு" என்று இதழசைத்து கேட்டாள் மதுஷிகா.​

"ச்ச்...ஒண்ணுமில்லை…சப்பை மேட்டரு" என்று விழிகளை சுருக்கி தலையை இடமும் வலமுமாக ஆட்டி நாக்கை துருத்திக்காட்டி கேலி போல பதில் சொன்னான் வீர்.​

மதுஷிகா அருகில் நின்றிருந்த வைஷாலி "இன்னிக்கு எங்க போய் பிரச்சனையை இழுத்துட்டு வந்தாரோ" என்று வாய்க்குள் முணுமுணுக்க அதனை அவனும் கண்டு கொண்டான்.​

"நான் ஒன்னும் பண்ணல" என்று அவன் இதழசைக்க அவனை முறைத்து பார்த்த வைஷாலி "நம்பிட்டேன்" என்றாள் கிசுகிசுப்பாக.​

"ச்சீ ப்பே" என்று அவனும் அவளை வெறுப்பேற்ற கடுப்பானவள் அவன் அருகே சென்று அவன் கையில் அழுந்த கிள்ளி விட்டு எதுவும் தெரியாதது போல அவனை கடந்து சென்று அங்கே ஈஸ்வரிக்கு அருகே அமர்ந்துக்கொண்டாள்.​

அக்காவின் இந்தச் செயலை பார்த்துக்கொண்டிருந்த மதுஷிகாவுக்கும் சிரிப்பு வந்துவிட இதழ்களை கடித்து சிரிப்பை அடக்கியபடியே அவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள்.​

'ஸ்ஸ்ஸ்ஸ்...' என்று அவள் கிள்ளிவிட்டு போன இடத்தை தேய்த்து விட்டுக்கொண்டே வைஷாலியை முறைத்தவன் "உன்னை அப்புறம் வச்சிக்குறேன்" என்று பற்களை கடித்து கொண்டே அவளிடம் இதழசைத்து சொல்ல "ச்சீ...ப்பே" என்று சொல்வது இப்போது வைஷாலியின் முறையாகி போனது.​

"ச்சீ...ப்பே வா...அடிங்" என்று அவன் வாயசைத்து அவளுக்கு மிரட்டல் விடுத்த நேரம் அவன் அருகே வந்திருந்த மதுஷிகா கையில் வைத்திருந்த சாக்லேட் உருண்டையை அவன் வாய்க்குள் திணித்துவிட்டு வைஷாலிக்கு அருகே சென்று அமர்ந்துவிட்டாள்.​

அதே சமயம் "இவனுக்காக நீங்க ரெண்டு பேரும் எதுக்கு வாக்குவாதம் பண்ணிக்குறிங்க மச்சான். சம்மந்த பட்ட அவன் எங்கையாவது வாயை திறக்குறானான்னு பாருங்க" என்று மீண்டும் அனைவரின் கவனத்தையும் அவன் புறம் திருப்பியிருந்தார் சேகர்.​

அனைவரின் கவனமும் அவன் புறம் திரும்பியிருக்க அவர்களை விழி விரித்து பார்த்தபடி 'ஆகா... இந்த சில்வண்டுங்க ரெண்டும் சேர்ந்து சிறுத்தைய சிக்க வச்சுட்டாளுகளே' என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டவன் சாக்லெட்டை மென்று விழுங்க கூட முடியாமல் வாயினுள்ளேயே வைத்து கொண்டே தேள் கொட்டிய திருடன் போல நின்றிருந்தான் தானவீரன்.​

நன்றாக மாட்டிக்கொண்டு அவன் முழித்த முழியை பார்த்த மதுஷிகாவுக்கு சிரிப்பு வந்து விட இருகைகளாலும் வாயை மூடிக்கொண்டு சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள்.​

வைஷாலிக்கும் கூட அவன் முகம் போன போக்கை பார்த்து சிரிப்பு தான். முகத்தை வேறு புறம் திருப்பி சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தாள் அவள்.​

அவனுடைய அமைதியை கண்டு கடுப்பான கிருஷ்ணகுமார் "அதானே...எல்லாரும் உனக்காக தானே இங்க தொண்டை தண்ணி வத்த காத்திட்டிருக்கோம்... நீ அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்” என்று கேட்க தலையை நாலா பக்கமும் சுழற்றினானே தவிர வாயை திறந்து பதில் பேசவில்லை அவன்.​

அவனது அந்த விசித்திரமான செய்கையை புருவம் இடுங்க பார்த்த சேகர் “மாமா தான் இவ்வளவு தூரம் கேட்குறாருல்ல...ஏதாவது சொல்லேன் டா... வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க" என்றார் கடுப்பாக.​

இதற்கு மேலும் வாயை திறக்கா விட்டால் இன்று நடு வீட்டில் வைத்து அப்பாவும் மாமாவும் அவனை கும்மி விடுவார்கள் என்று தெரிந்தே "கொழுக்கட்டை இல்லைப்பா சாக்லேட்" என்று வாயை திறந்து உள்ளே இருந்த சாக்லெட்டை காட்ட அதற்கு மேலும் அடக்க மாட்டாமல் மதுவும் வைஷாலியும் வெடித்து சிரித்து விட்டார்கள்.​

அவன் முக பாவனையை பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களுக்கும் சிரிப்பு வந்து விட கிருஷ்ணகுமாரும் தலையை இருபுறமும் சலிப்பாக ஆட்டிக்கொண்டே "நீ எல்லாம் திருந்துற ஆளா…எப்படியோ போ டா" என்று விட்டு அறைக்கு சென்று விட்டார்.​

ஈஸ்வரி, சரோஜினி மற்றும் ஜெயலக்ஷ்மியும் தத்தமது வேலைகளை பார்க்க சென்று விட அங்கே எதுவும் நடவாதது போல சாக்லெட்டை மென்று கொண்டே நின்றிருந்தவனை சேகர் முறைத்து பார்த்துக்கொண்டிருந்தார்.​

"இப்போ எதுக்கு என்னை முறைக்குறிங்க. முறைக்குறதுன்னா அவளை முறைங்க அவள் தான் சாக்லெட்டை வாயில திணிச்சு விட்டா" என்று மதுவும் வைஷாலியும் நின்றிருந்த திசையை கை காட்டினான் அவன்.​

'அச்சோ போட்டு கொடுத்துட்டார்' என்று மது பதறிக்கொண்டு கையில் இருந்த பாக்கெட்டை யாரும் பார்க்கும் முன் சட்டென்று வைஷாலியின் கையில் திணித்து விட அவன் கை காட்டிய திசை நோக்கி திரும்பிய சேகருக்கு சாக்லேட் பையுடன் நின்றிருந்த வைஷாலி தான் கண்ணில் பட்டாள்.​

அப்பொழுதுதான் விடயம் புரிந்த வைஷாலி "ஐயோ மாமா நானில்லை..." என்று விளக்க முயற்சிக்க "அவன் தான் இப்படி பண்ணுறான்னா...நீயும் ஏன்மா" என்று சலிப்பாக சொன்ன சேகர் அறைக்குள் நுழைந்துகொண்டார்.​

வைஷாலியும் தானவீரனை பார்த்து முறைக்க "என்னடி முறைக்குற" என்று காலரின் பின் பகுதியை தூக்கி விட்டு கொண்டே கேட்க​

"வாடி போடின்னு பேசுற வேலை எல்லாம் வேண்டாம்" என்று வைஷாலி பதிலுக்கு சீறினாள்.​

"அப்படி தான் டி பேசுவேன்... என்ன பண்ணுவ" என்று அவளை மேலும் சீண்டினான் வீர்.​

இருவரும் மாறி மாறி சீண்டிக்கொள்வதை பார்த்த மதுஷிகா 'போச்சு போ... மறுபடியும் சண்டை போட்டுக்க போறாங்களா' என்று வாய்க்குள் புலம்பியவள் கன்னத்தில் கை வைத்துக்கொண்டே அமர்ந்துவிட்டாள்.​

வீட்டில் வைஷாலி எல்லோருக்கும் செல்ல பிள்ளையாக இருந்தாலும் தானவீரனுக்கும் அவளுக்கும் எப்பொழுது ஏழாம் பொருத்தம் தான்.​

அவளை சீண்டி கொண்டே இருப்பது தான் அவனுக்கு பொழுது போக்கே.​

ஆனால், என்னதான் அவளை சீண்டி பார்த்தாலும் அவள் கேட்பதை அனைத்தையும் நிறைவேற்றவும் தவறமாட்டான்.​

"வேணாம்... என்னை சீண்டி பார்க்காதீங்க மாமா" என்றாள் வைஷாலி.​

அனைவரிடத்திலும் பொறுப்பாக பூ போன்று மென்மையாக இருப்பவள் அவனிடம் மட்டும் காட்டும் முகம் இதுதான். அவனை திட்டுவதும் முறைப்பதுமே அவளுக்கு வேலை.​

"அப்படி தான் சீண்டுவேன்னு சொல்லுறேன்ல... வைஷாலி வாடி... வைஷாலி போடி" என்று மீண்டும் வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டான்.​

கடுப்பான வைஷாலியோ " சரி தான் போடா" என்றுவிட்டாள்.​

"ஏதே... டா வா...அடிங்க" என்று கையில் எதுவும் கிடைக்குமா என்று அக்கம் பக்கம் சுற்றி பார்த்த வீர் சோபாவில் இருந்த குட்டி தலையணையை கையில் எடுத்தவனோ அதை வைஷாலியை நோக்கி எறிந்திருந்தான்.​

அதை அவள் லாவகமாக பிடித்து விட "வாவ் வாட் எ கேட்ச்" என்று மதுஷிகா கை தட்டி ஆர்பரித்தாள்.​

"ஆமா... என்னை டி சொன்னால் டா ... நானும் டா சொல்லுவேன் டா " என்று சொல்லிக்கொண்டே பிடித்த தலையணையை மீண்டும் அவனையே நோக்கி எறிந்திருந்தாள் வைஷாலி.​

தலையணை தாக்குதலிலிருந்து சட்டென்று விலகி நின்ற வீர் "சொல்லிட்டே இருக்கேன் மறுபடி மறுபடி டா சொல்லுற...உன்னை " என்று சொல்லிக்கொண்டே அவளை நோக்கி செல்ல​

"அக்கா ஓடிடு…மாமா கையில மாட்டினா கைமா தான்" என்று சொல்லி கொடுத்தாள் மதுஷிகா.​

தானவீரன் வேகமாக தனக்கு அருகே வருவதை பார்த்த வைஷாலியும் ஓட்டம் பிடிக்க அவனும் அவளை துரத்தி கொண்டே ஓடினான்.​

வீட்டின் வாசலை கடந்து ஓடியவள் தோட்டத்திற்குள் நுழைந்த நேரம் அங்கே இருந்த கல் ஒன்று தடுக்கி கீழே விழ போக அதை கவனித்த தானவீரன் நொடி பொழுதில் அவள் விழுந்து விடாமல் இருக்க அவள் கரத்தை பற்றி தன்னை நோக்கி சுழற்றியிழுக்க அவன் மீதே மோதி நின்றாள் பெண்ணவள்.​

அதே நேரம் தோட்டத்தில் தானியங்கி முறையில் நீர் பாசனத்திற்காக பொருத்தப்பட்டிருந்த கருவியில் இருந்து நீர் பீய்ச்சியடிக்க அது மெல்லிய சாரல் மழையை போல் அவர்கள் மீது பொழிந்தது.​

அந்த காட்சியே பார்க்க அழகிய ஓவியமாக இருக்க அவர்கள் பின்னோடு ஓடி வந்த மதுஷிகா அவர்களை அப்படியே தனது அலைபேசியில் படமாக்கிக்கொண்டாள்.​

"ச்சே வாட் எ சீன்" என்று கேலி போல் சொன்ன மதுஷிகாவின் குரலிலேயே அதிர்ந்து நின்றிருந்த இருவரும் சட்டென்று விலகி கொண்டனர்.​

"சாரி சாரி… நீ விழ போனியா. அதான்...." என்று அவன் தன்னிலை விளக்கம் கொடுக்க ஆரம்பித்த நேரம் கையில் இருந்த அலைபேசியில் அவர்களின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே அவர்கள் அருகே வந்த மதுஷிகா தானவீரனின் தோளின் மீது கையை போட்டு கொண்டே "ச்சே செம்ம மேட்ச் மாமா நீங்க ரெண்டு பேரும்" என்று சொல்லியபடி அந்த புகைப்படத்தை வீரிடம் காட்டியவள் "பேசாமல் அந்த மாப்பிள்ளை சார் ஆஹ் துரத்தி விட்டுட்டு அக்காவை நீங்களே கட்டிக்க வேண்டியது தானே" என்று கேட்க "மது" என்று அதட்டினாள் வைஷாலி.​

வைஷாலியின் முகம் போன போக்கை பார்த்தவன் தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பிய படி நின்று "உனக்கும் உன் அக்காவுக்கும் ஒரு பெரிய கும்பிடு தாயே...உங்க அக்காவை ஃப்ரீயா கொடுத்தா கூட எனக்கு வேணாம்" என்று மீண்டும் அவளை சீண்டி பார்க்க தொடங்கிவிட்டான் வீர்.​

"காசு கொடுத்து உங்களை கட்டிக்க சொன்னா கூட நான் மட்டும் இல்ல வேற எவளும் உங்கள கட்டிக்க மாட்டா... மூஞ்சிய பாரு" என்று திட்டிய வைஷாலி விறுவிறுவென வீட்டிற்குள் சென்று விட்டாள்.​

செல்லும் அவள் முதுகையே ஒரு பெருமூச்சுடன் பார்த்த வீர் "உங்கக்காவுக்கு மட்டும் ஏன் என்னை பார்த்தாலே கண்டாகுது" என்று மதுஷிகாவை கேள்வியாக பார்த்தான்.​

"விடுங்க மாமா உங்க அருமை அவளுக்கு புரியல" என்று அவனுக்கு பதில் சொன்னவள் "மாமா ஒரு ஹெல்ப் வேணுமே" என்றாள் அவன் முழங்கையை பிடித்துக்கொண்டே சிணுங்களாக.​

அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் "அதானே...என்னடா ஐஸ் எல்லாம் பலமா இருக்கேன்னு பார்த்தேன். என்ன வேணும்?" என்றான்.​

"ஈஈஈ..." என்று அவனிடம் பல்லை காட்டியவள் "ஈவினிங் ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணிடுங்களேன் ப்ளீஸ்" என்றாள்.​

"அது தான் ட்ரைவரோட சேர்த்து கார் இருக்குல்ல கூட்டி போக வேண்டியது தானே... எதுக்கு எப்போ பார்த்தாலும் என்னையே கூட்டி போக சொல்லுற" என்று கேட்டான் வீர்.​

"ட்ரைவரை கூட்டிட்டு போயா சீன் போட முடியும். உங்கள பார்த்தாலே என் காலேஜ் பொண்ணுங்க ஜொள்ளு விடுவாளுங்க...அதுக்கு தான் உங்களை கூட்டிட்டு போனால் கெத்தா மாஸ் ஆஹ் இருக்கும்ல...." என்றாள்.​

"அப்படியா...இதை ஏன் இத்தனை நாள் சொல்லாமல் விட்ட… தெரிஞ்சிருந்தா தினமும் வந்து உன் காலேஜ் வாசல்ல நின்னிருப்பேன்ல" என்றான் அவன்.​

இம்முறை அவனை மேலிருந்து கீழ் பார்ப்பது மதுவின் முறையாகி போக "பார்க்க தான் முரட்டு சிங்கள்ன்னு சொல்லிட்டு சுத்துறது... ஆனால் பொண்ணுங்கன்னு சொன்னதும் ஜொள்ளுறியே மாமா..." என்றாள் மது அவனை ஒரு மார்க்கமாக பார்த்துக்கொண்டே.​

"அது வேற டிபார்ட்மென்ட்... இது வேற டிபார்ட்மென்ட். ரெண்டையும் சேர்த்து குழப்பிக்க கூடாது வோக்கேய்..." என்று வடிவேலு பாணியில் சொன்னவன் "ஈவினிங் அழைச்சிட்டு போறேன்... இப்போ கொலை பசியில இருக்கேன் வா போய் சாப்பிடலாம்" என்று அவளையும் அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றான் வீர்.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அன்று மதியமே மாலையில் ஹாஸ்டலுக்கு புறப்படுவதற்காக தனது உடைமைகளை எல்லாம் தயார் படுத்திக்கொண்டிருந்த மதுஷிகாவிடம் வந்த வைஷாலி " ஏன் மது, இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம். இந்த நேரத்துல நீ ஹாஸ்டல் போய்தான் ஆகணுமா?" என்று முகத்தை பாவம் போல வைத்துக்கொண்டே கேட்டாள் வைஷாலி.​

அவளுக்கும் கல்யாண ஏற்பாடுகளை எல்லாம் மதுவுடன் சேர்ந்து செய்யவே விருப்பம். ஆனால், சூழ்நிலை அதுக்கு தோதுப்படவில்லையே என்ன செய்வது.​

"அக்கா, எனக்கும் உன் கூட இருக்கணுமுன்னு தான் இருக்கு. பட் என்னக்கா பண்ணுறது எனக்கு இறுதி பரீட்சை வருதே. இங்க இருந்தா உன் கல்யாண வேலையில கலந்துக்க தோணும். அப்புறம் படிப்பில் கவனம் இல்லாமல் அந்த வேலைய பார்க்க ஆரம்பிச்சுடுவேன். அப்புறம் பரீட்சைக்கு கோவிந்தா கோவிந்தா தான். அதெல்லாம் சரியா வராதுக்கா" என்றாள் மதுஷிகா.​

ஒரு சோக பெருமூச்சுடனே "ஹ்ம்ம்...சரி டி" என்ற வைஷாலி மதுவின் உடைகளை அவளின் பயண பைக்குள் அடுக்க உதவி செய்தாள்.​

தமக்கையின் வாடிய முகத்தை பார்த்த மதுஷிகாவிற்கு மனம் என்னவோ செய்ய அவள் அருகே அமர்ந்து அவளது இருக்கரங்களையும் பற்றி தனது மடிமேல் வைத்துக்கொண்டவள் "வைஷுக்கா... இங்க பாரேன் " என்றாள் மென்மையாக.​

தங்கையின் கனிவான பேச்சு அவள் கஷ்ட பட்டு திடப்படுத்திக் கொண்டிருந்த மனதை உடைக்க வைஷாலிக்கு கண்களெல்லாம் கலங்கி விட்டது.​

"வைஷுக்கா... என்னை பாருன்னு சொல்லுறேன்ல " என்ற மது அவள் நாடியை பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்தினாள்.​

வைஷாலியின் கலங்கிய முகத்தை பார்த்ததும் பதறியவள் "பச்…இப்போ எதுக்குக்கா சின்ன பிள்ளை போல அழுகுற... நான் எக்ஸாம் முடிஞ்சதும் ஓடி வந்திடுறேன்...சரி தானா...கல்யாண பொண்ணு இப்படி தான் கண்ணை கசக்கிட்டு இருப்பியா... சிரிச்சிட்டே இருக்கா... அப்போ தான் எனக்கு உன்னை பிடிக்கும்" என்று தமக்கையை தேற்றினாள் மதுஷிகா.​

ஒரு வழியாக வைஷாலியை தேற்றி தைரியம் சொல்லி விட்டு மாலையில் தானவீரனுடன் ஹாஸ்டலுக்கு புறப்பட்டிருந்தாள் மதுஷிகா.​

அவள் திரும்ப வரும் போது அக்காவின் புன்னகையை மொத்தமாக துடைத்தெறிந்து அவள் தலையெழுத்தையே மாற்றும் செயலை செய்து விட்டு வருவாள் என்று தெரிந்திருந்தால் திரும்பி வருகிறேன் என்று தமக்கைக்கு வாக்கு கொடுக்காமலே சென்றிருப்பாளோ என்னவோ.​


தொடரும்...​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 6

வானுயர்ந்து நின்ற அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் வளாகத்தினுள் வழுக்கிக்கொண்டு வந்து நின்றது அந்த கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் வகை கார்...​

அந்த அலுவலகத்தின் வரவேற்பாளினி இன்டெர்க்கோமில் அழைத்து அலுவலகத்தினுள் வேலை செய்யும் அமிர்தாவிடம் விடயத்தை சொல்ல இருக்கையிலிருந்து எழுந்து நின்று கைகளை இருமுறை தட்டியவள் "கேர்ள்ஸ், சார் வந்தாச்சு" என்று உச்சாகத் தொனியில் அறிவித்தாள்.​

அவள் சொல்லிய அடுத்த கணம் ஒரு வகை அவசரத்துடனும் ஆரவாரத்துடனும் அங்கே வேலை செய்யும் அனைத்து பெண்களும், சொல்ல போனால் ஆண்டிகள் உற்பட போட்டிருந்த லிப்ஸ்டிக்கை சரி செய்வது, மேக் அப்பை டச் அப் செய்வது என்று தங்கள் தோற்றத்தை சரி பார்க்க தொடங்கி விட்டனர்.​

அவனுக்கு திருமணம் என்றதில் இளம்பெண்களுக்கு சற்றே ஏமாற்றம் தான் என்றாலும் அதுவரை அவனை சைட் அடித்துக்கொள்வதில் தவறில்லை என்று தங்களை தாங்களே தேற்றிக்கொண்டுமிருந்தனர்.​

ஆணழகன் அவனை பார்த்தாலே பனிக்கூழாய் உருகி விடுவார்களே அங்கே பணிப்புரியும் மங்கையர்கள்.​

வயது வித்தியாசமின்றி அவனை ரசிக்கவென்றே தினமும் அலுவலகத்திற்கு மட்டம் போடாமல் வந்து விடுவார்கள். வேலை பார்க்க வருகிறார்களோ இல்லையோ அவனை பார்க்கவே வந்துவிடுகிறார்கள்.​

அவன் வருகையை அறிந்த அவனது காரியதரிசி சோனா அவனை காண அறையிலிருந்து வெளியே வர அவள் கண்ணில் பட்டது என்னவோ அந்த பெண்கள் அடித்துக்கொண்டிருந்த லூட்டி தான்.​

உடல் வாகுக்கேற்றாற்போல் கருப்பு நிற ஸ்கர்ட்டும் அதற்கு தோதாக வெள்ளை நிற பிளவுசும் அணிந்திருந்தவள் கூந்தலை அள்ளி உச்சியில் கொண்டையிட்டு ஹீல்ஸ் அணிந்து கையில் ஐ-பேட்டுடன் தோரணையாக நடந்து வந்த சோனா குரலை செருமி கொண்டே "கைஸ், தட்ஸ் எனஃப்... கெட் பாக் டு ஒர்க்" என்று மற்ற பெண்களிடம் சொல்லிக்கொண்டே அவர்களை கடந்து சென்றாள்.​

அவர்கள் இருக்கும் பகுதியை கடந்து வந்துவிட்டவள் சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டு யாரும் பார்க்கவில்லை என்று உறுதி படுத்திக்கொண்ட பின் கையில் இருந்த ஐ-பேட்டின் திரையையே கண்ணாடி போல் பாவித்து தனது தோற்றத்தை சரி பார்த்துக்கொண்ட பின்பே அவனை எதிர்கொள்ள அலுவலக முன்னறைக்கு விரைந்தாள்.​

அவன் ஆளுமையிலும் அழகிலும் மயங்கி நிற்கும் பெண்களுக்கு மத்தியில் அவள் மட்டும் விதிவிலக்கா என்ன... அவளும் பெண் தானே...​

இவர்களின் எதிர்பார்ப்பிற்கு கொஞ்சம் கூட ஏமாற்றமளிக்காமல் மனதை மயக்கும் மாயவனாகவே காரிலிருந்து தோரணையாக இறங்கியிருந்தான் தருண்.​

தருண் தாமஸ்...​

தாமஸ் அண்ட் கோ குரூப்ஸின் இளம் சி.இ.ஓ.​

தி சக்சஸ்ஃபுல் யங் பிசினெஸ் மேக்னட் அண்ட் எலிஜிபல் பேச்சளர் ஒஃப் தி டவுன் (the young business magnet and eligible bachelor of the town) என்று புகழப்படும் சகல அம்சமும் பொருந்திய அம்சமான ஆண்மகன்.​

கருப்பு நிற கோட் சூட் அணிந்து கண்களில் கருப்பு கண்ணாடியுடன் ஆறடி உயரத்தில் தோரணையாக நடந்து வந்தவனின் கரத்தில் மின்னிய ரோலெக்ஸ் கடிகாரம் அவன் ஆளுமையை இன்னமும் அதிகரித்து காட்டியது.​

ஜெல் வைத்து நேர்த்தியாக வாரிய கேசமும் முகத்தில் அளவாக இருந்த மீசையும் தாடியும் அவனுக்கு இன்னமும் அழகு கூட்ட அவனை பார்த்தாலே அவர்களுக்கு பரவசம் தான்.​

அலுவலகத்துக்குள்ளே நுழைந்தவனிடம் "குட் மோர்னிங் சார்" என்றாள் சோனா.​

"குட் மோர்னிங் சோன்ஸ்" என்று அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டே வேக நடையுடன் அவன் உள்ளே செல்ல அவளும் அவனுடன் இணைந்து நடந்தாள்.​

"சார் இன்னிக்கு மிஸ்டர் கார்த்திக் கிஷனோட பார்ட்னெர்ஷிப்புக்கான டீலிங் இருக்கு" என்று அன்றைய நாளின் முக்கிய அப்பாயின்மென்டுகளை அவனுக்கு நினைவு படுத்தியபடியே அவனுடைய வேக எட்டுக்களுக்கு ஈடு கொடுக்க கிட்ட தட்ட மெதுவோட்டமாகவெ அவனை பின் தொடர்ந்தாள் சோனா.​

(கார்த்திக் கிஷன், கண்மணி உன் நிஜம் நானடி கதையின் ஹீரோ)​

"கார்த்திக்...கே.கே. கன்ஸ்ட்ரக்ஷன் சி.இ.ஓ ரைட்... எத்தனை மணிக்கு?" என்று கேட்டான்.​

பேசிக்கொண்டே அலுவலகத்தினுள் நுழைந்தவன் ஊழியர்கள் வைத்த வணக்கத்தையும் கவனிக்க தவறவில்லை​

அவர்களுக்கு பதிலாக தலையசைத்து கொண்டே வந்தவன் அங்கே கணக்காளராக வேலை பார்க்கும் சுகந்தி ஆண்டியை கடந்து செல்லும் நேரம் ஏதோ நினைத்தவனாக சட்டென நடையை நிறுத்தி இரண்டெட்டு பின்னால் வந்து அவரை பக்கவாட்டாக திரும்பி பார்த்தான்.​

"மிஸஸ் சுகந்தி...இன்னிக்கு லிப்ஸ்டிக் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்குற மாதிரி இருக்கே...லைட்டா கம்மி பண்ணிட்டீங்கன்னா... வில் பி பெர்ஃபெக்ட்" என்று அவரை பார்த்து ஒற்றை கண்ணடித்தவன் மேசை மீதிருந்த டிஸ்ஸு பாக்சில் இருந்து ஒரு டிஸ்ஸுவை உருவி அவரிடம் நீட்டி விட்டே சென்றான்.​

அவரும் மென்னகையுடனே அதனை பெற்றுக்கொண்டவர் லிப்ஸ்டிக்கை திருத்தும் வேலையில் இறங்கிவிட்டார்.​

அவனுடைய ஊழியர்களிடம் சகஜமாக பேசக்கூடியவன் தான் தருண். அழுத்தம் ஆளுமை எல்லாம் இருந்தாலும் தட்டி கொடுத்து வேலை வாங்குவதிலும் கெட்டிக்காரன் அவன். அது தான் அவனது வெற்றிக்கு காரணமாகவும் கூட இருக்கலாம்.​

"சோன்ஸ்,மீட்டிங் எத்தனை மணிக்கு?" என்று மீண்டும் கேட்டான்.​

"பதினோரு மணிக்கு சார்" என்று சொன்னாள் சோனா.​

கைக்கடிகாரத்தை திருப்பி மணி பார்த்துக்கொண்டே அவன் அறைக் கதவை திறக்க உள்ளே ஏற்கனவே அவனுக்காக காத்துக்கொண்டிருந்தான் அவனது போலீஸ் நண்பன் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன்.​

அவனது வருகையை ஏற்கனவே சோனாவிற்கு அலைபேசியின் மூலம் தெரிவித்திருந்த தருண் அவனை அவனது அறைக்குள் அமர வைக்கும்படி சொல்லியிருக்க ரவீந்திரன் அவனுக்காக தருணின் பிரத்தியேக அலுவலக அறையில் காத்துக்கொண்டிருந்தான்.​

"ஹாய் மச்சி... எப்படி இருக்க" என்று சொன்னபடி அவன் அருகே சென்று அவனை கட்டியணைத்து விடுவித்தவன் அவனது சி.இ.ஓ கதிரையில் சென்று அமர்ந்து கொண்டான் தருண்.​

"ஒரு நிமிஷம் டா" என்று நண்பனிடம் சொல்ல​

"நோ ப்ரோப்லம் டா...ஐ வில் வெயிட்" என்றான் ரவீந்திரன் மென்னகையுடனே.​

"வேற எதுவும் அப்பாயின்மென்ட் இருக்கா?" என்று சோனாவை பார்த்தான்.​

"மெட்டிரியல் எக்ஸ்போர்ட் சம்மந்தமா மிஸ்டர் குப்தா கூட ஒரு மீட்டிங் இருக்கு சார். ஒரு மணிக்கு கேட்டிருந்தார். பட் இப்போ ஏதோ அர்ஜென்ட்டாம் கொஞ்சம் ஏர்லி ஆஹ் மீட் பண்ண முடியுமா என்று கேட்டார்" என்றாள்.​

"நோ நோ... நோட் இன் மூட் போர் மீட்டிங்ஸ். கார்த்திக் கிஷனோட மீட்டிங் தவிர்த்து மத்தது எல்லாத்தையும் கேன்சல் பண்ணிடு. அண்ட் டோன்ட் டிஸ்டர்ப் மீ" என்று சொல்லி சோனாவை அனுப்பி வைத்தவனின் கரமோ ரவியின் கைவண்ணத்தால் மேசை மீது வழக்கமாக இருக்கும் இடத்தை விட்டு கொஞ்சமாக நகர்ந்திருந்த பேப்பர் வெயிட்டை மீண்டு நகர்த்தி உரிய இடத்தில் வைத்தது.​

"சாரி டா மச்சி வெயிட் பண்ண வச்சுட்டேன்... அப்புறம் மச்சி உன் கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி போகுது" என்றான் தருண் சற்றே களைந்திருந்த கோப்புகளை மீண்டும் நகர்த்தி வரிசையாக அடுக்கி வைத்துக்கொண்டே.​

அவன் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்த ரவீந்திரன் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் "நீ இன்னும் மாறவே இல்லையா டா..." என்று தான் கேட்டான்.​

ஒரே பள்ளியில் படித்த நெருங்கிய நண்பர்களாதலால் தருணுக்கு இருக்கும் OCD என்று சொல்லக்கூடிய பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வின் பாதிப்பை பற்றி ரவீந்திரனும் அறிந்தே வைத்திருந்தான்.​

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்ய கூடிய கட்டாயத்தை உணர்கிறார்கள். சிலருக்கு அடிக்கடி கை கழுவுதல், பொருட்களை ஒரே வடிவம்;வண்ணம் என்று வகை படுத்தி நேர்த்தியாக அடுக்கி வைத்தல், பொருட்களை மீண்டும் மீண்டும் எண்ணி பார்த்தல், அதிகப்படியாக சுத்தம் பார்த்தல் போன்ற பழக்கம் இருக்கும்.​

சிலருக்கு மிகையான எண்ணங்கள் மீண்டும் மீண்டும் தோன்றி மூளையை குடைந்து கொண்டே இருக்கும்.​

இதில் தருண் முதலாம் வகையை சார்ந்தவன். அவனுக்கு எதிலும் நேர்த்தி அவசியம். அவனது உடைமைகள் நேர்த்தியாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். கொஞ்சம் களைந்திருந்தால் கூட அவனுக்கு பிடிக்காது.​

அது அவனுக்கு சில நேரங்களில் பதகளிப்புக் கோளாறை (Anxiety disorder) கூட உண்டு பண்ணிவிடும்.​

இந்த உளநோய்க்கு நிரந்தர நிவாரணம் இல்லையென்றாலும் சில புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை (CBT) போன்ற ஆலோசனைகள், மற்றும் மன அழுத்த மேம்பாட்டுச் சிகிச்சைகள் மூலமாக இதை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.​

அப்படிதான் அவனும் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள கற்றுக்கொண்டான். ஆனாலும், சில நேரம் தன்னையும் அறியாமல் இப்படி நடந்துவிடுவதும் இன்றளவும் இருக்கின்றதுதான்.​

ஒரு ஆயாச புன்னகையுடனே "பழகிடுச்சு... அதை விடு. நீ சொல்லு...நீ எப்படி இருக்க... ரகுவரன் மைதிலி எல்லாம் ஓகே தானே" என்று கேட்டான்.​

(ரகுவரன் & மைதிலி உயிரை தொலைத்தேன் உன்னில் தானடி கதையின் ஹீரோ ஹீரோயின்... ரவீந்திரன் ரகுவின் தம்பி தான்)​

அதற்கு மேலும் அதை பற்றி பேசி தருணை சங்கட படுத்த விரும்பாத ரவி "அவங்களுக்கென்ன லவ் பேர்ட்ஸ்...ஜாலியா ஹனிமூன் கிளம்பிட்டாங்க" என்றான் கையில் விமானம் பறப்பதுபோல் செய்கை செய்து காண்பித்துக்கொண்டே.​

"உனக்கென்ன டா பொறாமை அதுல...நீயும் இப்போ தானே ஹனிமூன் போயிட்டு வந்த?" என்று கேட்டான் தருண்.​

"அட நீ வேற ஏன்டா சோகத்தை கிளப்புற..." என்று சலித்துக்கொண்ட நண்பனை புருவம் இடுங்க பார்த்த தருண் "ஏன்டா என்னாச்சு?" என்று கேட்டான்.​

"போலீஸ்காரனா போயிட்டேனே அது போதாதா...எப்படியோ நாலு நாள் லீவு போட்டு லாராவை ஹனிமூன் கூட்டிட்டு ஊட்டிக்கு போனால்...அங்க போய் ரெண்டே நாள்ல ஒரு முக்கியமான கேஸ் சீக்கிரமா கிளம்பி வாங்கன்னு ஆர்டர் வருது..." என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு.​

"அச்சச்சோ அப்புறம்..." என்று தருண் கேட்க "அப்புறம் என்ன ரெண்டாவுது நாளே சென்னை கிளம்பி வந்தாச்சு எனக்கு ஹனிமூன் சனிமூன் ஆஹ் மாறி போச்சு" என்று பெருமூச்சு விட்டான்.​

அவன் சொன்ன விதத்தில் தருணுக்கு சிரிப்பு வந்து விட இதழ் பிரித்து சத்தமாக சிரித்தவன் "என்னடா உன் லைஃப் இப்படி ட்ராஜெடி ஆகிடுச்சு...லாரா உன்னை சும்மாவா விட்டாள்?" என்றான் தருண்.​

"சும்மா விட்டுட்டாலும்... எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்ல மச்சான்... இந்த பொண்ணுங்க எல்லாம் அமெரிக்கால இருந்து வந்தாலும் சரி இந்தியால இருந்து வந்தாலும் சரி இந்த விஷயத்துல மட்டும் ஒரே மாதிரி தான் டா இருக்காளுங்க...நாலு நாள் ஹனிமூன் ரெண்டு நாள்ல முடிஞ்சுதுன்னு ஆறு நாளா என் கூட பேசாமல் வச்சு செய்யுறாடா" என்றான் இதழ்களை பிதுக்கி.​

நண்பனின் பேச்சில் மீண்டும் வாய்விட்டு சிரித்த தருண் "பாவம் தான் மச்சி நீ...போலீஸ்காரன் ஆனாலும் பொண்டாட்டி கிட்ட பூனைக்குட்டி தான் போல" என்று சொல்லி சிரித்தான் தருண்.​

"அடேய் உனக்கும் பொண்டாட்டி வர போறா... அதை மறந்துட்டியா?" என்று கேட்டவன் "என் கதையை விடு மச்சி...ஊட்டில இருந்து வீட்டுக்கு வந்ததும் நீ கல்யாண பத்திரிக்கை கொடுத்ததா அம்மா சொன்னாங்க... அதிலும் காதல் கல்யாணமுன்னு சொன்னாங்க பாரு...நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் " என்று நெஞ்சில் கை வைத்து கொண்டே சொன்னான் ரவீந்திரன் .​

"இதுல ஷாக் ஆக என்ன டா இருக்கு?" தருண் கேட்க​

"என்ன இருக்கா...உனக்கு தான் மியூசிக்க தவிர வேற எதையும் காதலிக்கவே தெரியாதே...அப்புறம் எப்படி டா?" என்று கேட்டான்.​

"உண்மை தான் ரவி. காதல் எல்லாம் பிடிக்காது தான். அவளை பார்க்குற வரைக்கும். அவளை முதல் தடவை பார்த்தப்போ அவளே எனக்கு இசை மாதிரிதான் டா தெரிஞ்சா... நான் காதலிக்கிற இசைக்கு ஒரு உருவம் இருந்தா அது அவளாக தான் இருக்குமோன்னு தோணுச்சு...அப்போ இசையை காதலிக்கிற நான் அவளையும் காதலிக்க தானே வேணும்" என்று கண்கள் மின்ன சொன்னவனின் இதழ்களில் புன்னகை மறையவேயில்லை.​

"டேய் மச்சி...என்னடா இப்படி ஆகிட்ட..." என்று கேட்ட ரவி அந்த அலுவலக அறையை சுற்றியும் முற்றியும் பார்வையை சுழல விட்டான்.​

அவனை கேள்வியாக பார்த்த தருண் "என்ன டா தேடுற?" என்றான்.​

"இல்ல..." என்று இழுவையாக சொன்ன ரவி "இங்க லவ்வே வேணாமுன்னு சொல்லிட்டு தருன்னு ஒரு நல்லவன் இருந்தானே அவனை எங்கையாவது பார்த்தியா டா” என்று கேட்டு சிரித்தான் ரவி.​

நண்பனின் கேலி புரிந்து "போ டா" கைக்கு அருகே இருந்த பேனாவை எடுத்து நண்பனை நோக்கி எரிய இலாவகமாக அதை பிடித்துக்கொண்ட ரவி "தேங்க்ஸ் ஃபோர் தி பேன் மச்சி...”என்று அந்த பேனாவை எடுத்து ஷர்ட் பாக்கெட்டில் சொருகி வைத்தவன் “அப்போ நான் கிளம்புறேன் டா...உனக்கு கல்யாணமுன்னு சொன்னதும் நேர்ல பார்த்து வாழ்த்து சொல்ல நினைச்சேன். கேஸ் விஷயமா கொஞ்சம் அலைஞ்சதுல ஊட்டியிலிருந்து வந்த உடனே உன்னை பார்க்க வர முடியல...அதுதான் இப்போ வந்தேன்" என்று சொல்லிக்கொண்டே ரவி எழுந்துக்கொண்டான்.​

“இப்போ வாழ்த்து சொல்லிட்டன்னு கல்யாணத்துக்கு வராம இருந்திடலாமுன்னு நினைக்காத மச்சி...அப்புறம் வீடு தேடி வந்து அடிப்பேன்" என்றான் தருண்.​

"கண்டிப்பா வரேன் டா... அப்புறம் உன் வருங்காலத்தை கேட்டதா சொல்லிடு மச்சி" என்றவன் தருணிடம் விடைப் பெற்றுக்கொண்டான்.​

கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அவனுக்கு கல்யாண கலை வந்துவிட இப்பொழுது நண்பனுடன் சிரித்து பேசிய மகிழ்ச்சியும் சேர்ந்துக்கொள்ள மனநிறைவாக இருந்தது அவனுக்கு.​

அதே மனநிறைவுடனே அலைபேசியை கையில் எடுத்தவன் அடுத்து அழைத்தது வைஷாலிக்கு தான்.​

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும் "ஹாலோ" என்று மென்மையாக ஒலித்த அவளின் குரலே அவன் செவிகளுக்கு தேனிசையாக கேட்க ஒரு கணம் கண்களை மூடி திறந்தவன் "ஹாய், வைஷு" என்றான்.​

மறுமுனையில் பதில் இல்லை...​

அவன் மீண்டும் "ஹாலோ, வைஷு...கேட்குதா?" என்று கேட்டான்.​

"ஹாலோ மாமா, நான் வைஷு இல்ல. மது பேசுறேன். மதுஷிகா" என்றாள் அவள்.​


தொடரும்...​

 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 7


"ஹேய் மது... சாரி வைஷுன்னு நினைச்சுட்டேன். அக்கா இல்லையா? நீ ஹாஸ்டல்ல இருக்கன்னு தானே சொன்னாங்க? வீட்டுக்கு போயிருக்கியா?" என்று கேள்விகளை அடுக்கினான்.​


இரண்டு தினங்களுக்கு முன் கூட கிருஷ்ணகுமாருக்கு அழைத்திருந்தான்.​

இப்பொழுதெல்லாம் ஏதோ ஒரு காரணம் கிடைத்து விட்டால் போதும் வைஷாலியின் அப்பா அம்மா என்று யாரிடமாவது பேசிவிடுவான். தனது வருங்கால மனைவியின் குடும்பத்தையும் சேர்த்து காதலிக்க தொடங்கி விட்டான் போலும்.​


வைஷாலி அவளது குடும்பத்தின் மீது எந்தளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறாள் என்பதை அவன் திருமணத்திற்கு அவளிடம் சம்மதம் கேட்ட நேரம் 'வீட்டில் வந்து பேசுங்க' என்று அவள் சொல்லிய ஒற்றை பதிலிலேயே தெரிந்துக் கொண்டிருந்தான்.​


அந்த காரணத்தினாலோ அல்லது அவள் மீது இருந்த காதலினாலோ அவளை சார்ந்தவர்களின் மீதும் ஒருவித அன்பு அவனுக்கும் உருவாக தொடங்கியிருந்தது. அதனை வலுப்பெற செய்யும் முயற்சியே அவளின் தாய் தந்தை பாட்டி என்று அனைவரிடமும் அலைபேசியில் பேச தொடங்கியிருந்தான் அவன்.​


அப்படியாக அவன் பேச தொடங்கியிருந்த காரணங்களில் ஒரு காரணமாக அவர்கள் முறைபடி தேவாலயத்தில் நிகழவிருக்கும் திருமண ஏற்பாடுகளை பற்றி அவருக்கு விவரம் தெரிவிப்பதற்காக அழைத்திருந்தான்.​


வைஷாலியை பிடித்திருக்கின்றது என்று அவன் தந்தை ஜோஷ்வா தோமஸின் முன்னே சென்று நின்ற பொழுது அவரும் காதல் திருமணம் செய்தவராகையால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் குடும்பத்துடன் கிருஷ்ணகுமாரின் வீட்டிற்கு பெண் கேட்டு சென்றிருந்தார்.​


வணிக உலகில் அவர்களின் செல்வாக்கை பற்றியும் அவர்கள் குடும்பத்தின் கௌரவத்தை பற்றியும் நன்கு அறிந்திருந்த கிரிஷ்ணகுமாருக்கும் சேகருக்கும் கூட அந்த சம்மந்தம் பிடித்துபோய்விட மத வேற்றுமை அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை.​


ஜெயலஷ்மி அவர்களின் முடிவுக்கு சற்றே முரண் பட்டாலும் மகனும் மருமகனும் எடுத்து சொல்லிய பிறகு அவர்கள் வழிக்கே வந்திருந்தார்.​


ஆனால், திருமணம் மட்டும் அவர்கள் முறைப்படி தான் நடக்க வேண்டும் என்று அவர் உறுதியாக சொல்லிவிட்டதால் மீண்டும் அங்கே சிறு சலசலப்பு ஏற்பட்ட நேரம் காலை முகூர்த்ததில் கோவிலிலும் இரவு முகூர்த்ததில் தேவாலயத்திலும் இரு வீட்டார் முறைப்படியும் திருமணத்தை நிகழ்த்திவிடலாம் என்று ஜோஷுவா தோமஸ் முன்வைத்த யோசனையில் பிரச்சனை தீர்ந்து விட தருண் மற்றும் வைஷாலியின் திருமணம் பெரியவர்களால் இனிதே நிச்சயிக்க பட்டிருந்தது.​


தேவாலயத்தில் நிகழவிருக்கும் திருமண வைபவத்திற்கான ஏற்பட்டுகளை எல்லாம் தருணே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டிருந்தான். அதை பற்றின தகவல்களை அவருக்கு சொல்வதற்காக அழைத்திருந்தான்.​


அப்பொழுது, அவன் பக்கத்து ஏற்பாடுகளை பற்றி எல்லாம் விவரித்தவன் பெண் வீட்டார் பக்கமும் நடந்துகொண்டிருக்கும் ஏற்பாடுகளை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டான்.​


இறுதியாக "எல்லாம் ஓகே தானே மாமா, வேறு ஒரு குறையும் இல்லையே?" என்று அவன் கேட்டிருக்க "அதெல்லாம் ஒன்னுமில்ல மாப்பிள்ளை... என்ன…எங்க சின்ன பொண்ணு தான் பரிட்சை இருக்குன்னு ஹாஸ்டல் கிளம்பிட்டா. அவள் இருந்திருந்தா இந்த கல்யாண வீடு இன்னும் கலகலப்பா இருந்திருக்கும். அவள் வீட்டில் இல்லையேங்குற குறையை தவிர வேற எந்த குறையும் இல்லை மாப்பிள்ளை" என்றிருந்தார் அவர்.​


அப்படித்தான் மதுஷிகா ஹாஸ்டலுக்கு சென்றுவிட்ட விவரத்தை அறிந்துக் கொண்டிருந்தான் தருண். அதுதான் வைஷாலியின் திறன்பேசியில் மதுஷிகா பேசியதும் அவனுக்குள் அத்தனை கேள்விகள் முளைவிட்டிருந்தன.​

"ச்சில் மாம்ஸ்...இவ்வளோ கேள்வி ஒண்ணா கேட்டா எதுக்கு பதில் சொல்லுறது?" என்று மதுஷிகா சிரித்துக்கொண்டே கேட்க அவனும் மென்மையாக சிரித்துக்கொள்வது அலைபேசி வழியே அவளுக்கும் கேட்டது.​


"ஒன்னொன்னா சொல்லுறேன் கேளுங்க. இன்னிக்கு எனக்கு பிறந்தநாள்…" என்று அவள் தொடங்க "ஹேய்… ஹாப்பி பர்த்டே" என்றான் தருண்.​


"ஆஹ்...தேங்க்ஸ் தேங்க்ஸ். பட், குறுக்க பேசாமல் கேளுங்க மாம்ஸ். நடுவுல பேசுனா சொல்ல வந்தது மறந்துடும்" என்றாள் அவள்.​


இதழ் பிரித்து சிரித்துக்கொண்டவன் "சரி பேசல, சொல்லு... " என்றான்.​


"இன்னிக்கு என் பிறந்தநாள் இல்லையா... அது தான் அக்காவும் வீர் மாமாவும் என்னை ஹாஸ்டல்ல இருந்து கடத்திட்டு வந்துட்டாங்க... கேட்டா சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்குறாங்களாம். காலையிலிருந்து இவங்க ரெண்டு பேரும் இந்த மாதிரி ஏதும் காமெடி பண்ணுவாங்கன்னு நினைச்சுட்டு தான் இருந்தேன். அதே மாதிரி இங்க ஒரு காஃபி ஷாப்ல கூட்டி வந்து உட்கார வச்சிருக்காங்க. வீர் மாமா ஆர்டர் பண்ண காஃபி கலெக்ட் பண்ண போயிருக்காரு. அக்கா ரெஸ்ட்ரூம் போயிருக்கா. போன் டேபிள்ல வச்சுட்டு போய்ட்டா. நீங்க கால் பண்ணுணிங்க, நான் அட்டென்ட் பண்ணிட்டேன்" என்று கோர்வையாக மூச்சுவிடாமல் அவள் சொல்லி முடிக்க அவனுக்கே மூச்சு வாங்குவது போல இருந்தது.​


"எப்பவும் இப்படி தான் பேசுவியா?" என்று கேட்டான்.​


"எப்படி அதிகப்பிரசங்கி மாதிரியா?" பதிலுக்கு அவள் கேட்க​


பக்கென்று சிரித்தவன் "ஏய்... இல்ல இல்ல... அப்படி சொல்லல..." அவன் சொல்வதை தவறாக புரிந்து கொண்டாளோ என்கின்ற சிறு பதட்டம் அவன் குரலில் எட்டி பார்க்க "சொன்னாலும் பரவால்ல மாம்ஸ். எங்க அப்பத்தா கூட அப்படி தான் சொல்லுவாங்க. அதெல்லாம் மெனுஃபாக்ச்சரிங் டிஃபெக்ட். நானே நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது" என்று கலக்கலத்தாள் மது.​


"இல்ல… நிஜமா அப்படி நினைக்கல. கலகலன்னு பேசுறியேன்னு சொல்ல வந்தேன். வைஷு பேசவே கஷ்டம். அவள் பேசி நான் இன்னும் சரியா கேட்க கூட இல்லை. வாய்ப்பும் அமையல. அதான் நீ இவளோ பேசுறது வித்யாசமா இருக்கு" என்றான்.​


"ஆஹ் அவள் அப்படித்தான்..." என்று ஏதோ சொல்ல வந்தவளுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்ற "மாம்ஸ்... ஒன்னு பண்ணுங்களேன், நீங்க வேணும்னா இங்க வரிங்களா... அக்காவை மீட் பண்ணலாம். எப்படியும் உங்களுக்கும் அவள் கிட்ட பேசணும்னு தோணும் தானே. அவள் கிட்ட கேட்டா எல்லாம் வேலைக்காகாது, இப்படி எதுவும் சர்ப்ரைஸ் கொடுத்தாதான் உண்டு" என்றாள் கண்கள் பளிச்சிட.​


அவனுக்கும் திருமணத்திற்கு முன் வைஷாலியுடன் நேரம் செலவிட வேண்டும் என்று ஆசையாக இருக்க "குட் ஐடியா மது...அப்போ நான் அங்க வரட்டுமா?" என்று கேட்டான்.​


"அதை தானே சொல்லுருறேன்...சீக்கிரமா கிளம்பி வாங்க. இந்த மாதிரி மொமெண்ட் மறுபடி எல்லாம் கிடைக்காது. அதுவும் வைஷாலி அக்கா சுத்தம்...இதுக்கெல்லாம் சரி பட்டு வரவே மாட்டா" மதுஷிகா சலித்துக்கொள்ள "சரி எங்க வரணும்னு சொல்லு" என்றான் தருண்.​


அவளும் அந்த குளம்பியகத்தின் பெயரை சொல்லியிருக்க "அந்த காஃபி ஷாப் ஆஹ்.... பக்கம் தான்" என்று சொல்லியபடி தனது மணிக்கட்டை அலங்கரித்த ரோலெக்ஸ் கடிகாரத்தை திருப்பி பார்த்தவன் " இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்" என்றான்.​


"வொக்காய் (wokay) மாம்ஸ். நீங்க வரதுக்குள்ள நானும் வீர் மாமாவை எப்படியாவது இங்கிருந்து பேக் அப் பண்ணி அழைச்சுட்டு போயிடுறேன்" மது சொல்ல "ஹேய் நீ எங்க போகப்போற? அங்கையே இரு...உன்னையும் மீட் பண்ண மாதிரி இருக்கும்" என்று தருண் மறுத்து சொன்னான்.​


"என்னை எல்லாம் கல்யாணத்துல மீட் பண்ணிக்கலாம் மாம்ஸ். இப்போ நாங்க இங்க இருந்தா நீங்க அக்கா கூட தனியா பேசவே முடியாது. நீங்களும் நானும் தான் பேச வேண்டியிருக்கும். அவள் நம்மள பேசவிட்டு வேடிக்கை மட்டும் தான் பார்த்துட்டு இருப்பா" என்றாள்.​


"வாய்ப்பிருக்கு" என்று சலிப்பாக வந்த தருணின் குரலில் வாய் விட்டே சிரித்த மது "பரவால்லையே, அக்காவை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க" என்றாள் கிண்டலாக.​


"ஹேய் வாயாடி..."என்று மேசை மீது இருந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு அறை கதவை நோக்கி நடந்தவன் "நான் கிளம்பிட்டேன் மது. இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன்" என்றான்.​

"அப்போ சரி மாம்ஸ் நீங்க வந்துடுங்க... நான் வச்சிடுறேன்" என்று விடைகொடுத்தவளிடம் "பை மது" என்று அவன் அலைபேசியை காதிலிருந்து அகற்றிய நேரம் அப்பொழுது தான் நினைவு பெற்றவளாக "மாம்ஸ்...மாம்ஸ்...மாம்ஸ்"​

அவள் அழைக்கும் குரல் கேட்க அலைபேசியை மீண்டும் காதுக்கு கொடுத்தவன் "சொல்லு மது" என்றபடி கீழ் தளத்திற்கான மின்தூக்கி விசையை அழுத்திவிட்டு மின்தூக்கிக்காக காத்திருந்தான்.​

"அது வந்து...உங்க பேரு என்ன மாம்ஸ்?" என்று கேட்டாள்.​

அவனது புருவங்கள் குழப்பமாக இடுங்கின.​

"என்னது...என் பெயர் கூட தெரியாதா உனக்கு?" என்று அவன் விசித்திரமாக கேட்க "தெரியாதே" என்று பரிதாபமாக சொன்னாள்.​

"ஏன் உன் அக்கா சொல்லலையா?" கேலியாக கேட்டான் அவன்.​

"பொண்ணு பார்க்குற நேரம் நான் அவள் கூட இல்லையாம்ன்னு உங்களை எனக்கு காட்டாமல் பழிவாங்குறா..." என்று மது விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே "இப்போ போன் பண்ணனே...போன்ல என் பெயர் காட்டியிருக்கும் தானே?" என்று அவன் கேட்டான்.​

"இம்ம் காட்டுச்செ...மை ஃபியூச்சர்ன்னு (my future) காட்டுச்சு" என்றாள் பாவமாக.​

அவள் அப்படி சொல்லியதும் வைஷாலி தன் எண்ணை அவளது வருங்காலம் என்று சேமித்து வைத்திருப்பது அவனுக்கு ஒருவித பரவசத்தை கொடுத்தாலும் அதை மதுஷிகா சொன்ன தோரணையில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.​

அவன் சத்தமாக வாய் விட்டே சிரிக்க "மாமா சிரிச்சது போதும். பேரை முதல்ல சொல்லுங்க... உங்க குரல் கூட எனக்கு ரொம்ப ஃபமிலியரான குரல் போல ஃபீல் ஆகுது..." செல்லமாக அதட்டினாள் அவள்.​

சிந்திய சிரிப்பினை கட்டுக்குள் கொண்டுவந்தவன் "சரி சரி...கோவிச்சுக்காத. என் பேரு த....." என்று அவன் ஆரம்பிக்கும் போதே கழிவறை சென்றிருந்த வைஷாலி திரும்பி வந்துக்கொண்டிருப்பதை பார்த்த மது "ஆத்தாடி, அக்கா வரா மாம்ஸ். நம்ம பேசிட்டிருந்தது தெரிஞ்சா என்னை துருவி துருவி கேட்டே நம்ம பிளானை கண்டு பிடிச்சிடுவா. பிறகு நம்ம திட்டம் எல்லாம் மொத்தமா சொதப்பிடும். நீங்க சீக்கிரம் வந்துடுங்க. நான் வச்சிடுறேன், பை" என்று அவசரமாக அலைபேசியை துண்டித்திருந்தாள்.​

"ஹலோ ஹலோ" என்றபடி அவன் அலைபேசியை காதிலிருந்து எடுத்து அதன் திரையை பார்க்க அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.​

"வைஷாலி மாதிரி அமைதியான பொண்ணுக்கு, மது மாதிரி அராத்து தங்கச்சி…" என்று இதழ்களில் புன்னகையுடன் தனக்கு தானே முணுமுணுத்துக்கொண்டவனின் கார் வைஷாலியை தேடி பயணப்பட்டிருந்தது.​

அங்கே மதுஷிகாவின் முன்னே வந்து அமர்ந்த வைஷாலி "யாருகிட்டடி பேசிட்டிருந்த?" என்று கேட்க "ஃபிரென்ட் கிட்ட க்கா. ஒரு சின்ன சண்டை. என் நம்பர்ல இருந்து கூப்பிட்டேன் அவள் எடுக்கல. அதுதான் உன் போன்ல இருந்து பேசினேன்" என்று பிரமாதமாக சமாளித்தவள் அலைபேசியை மீண்டும் வைஷாலியிடம் கொடுத்தாள்.​

"பேசிட்டியா? என்னடி சண்டை சின்ன புள்ளைங்க மாதிரி… இப்போ எல்லாம் ஓகே ஆயிடுச்சா?" அக்கறையாக விசாரித்தாள் வைஷாலி.​

தான் சொல்லிய பொய்யை அப்படியே நம்பி அப்பாவியாய் கேட்ட அக்காவை விஷம புன்னகையுடன் பார்த்த மது "ம்ம்ம்...ஓகே க்கா...டபிள் ஓகே" என்று இரு கரங்களின் கட்டை விரல்களையும் உயர்த்தி காட்டி கண்களை சிமிட்டினாள்.​

"இந்த வீர் மாமா எங்க...ஆர்டர் பண்ணுன காபி எடுத்து வர இவ்வளவு நேரமா?" என்று வைஷாலி கேட்டுக்கொண்டிருக்கும் போதே கையில் வித விதமாக வித்யாசமாக மூன்று வகையாக பரிமாறப்பட்டிருந்த காஃபி வகைகளை தட்டில் வைத்து ஏந்தியபடி வந்து நின்றான் வீர்.​

"இவ்வளவு பேசுறவங்க சொந்தமா போய் எடுத்துட்டு வந்திருக்கணும். என்னமோ ஊருல வேற காபி ஷாப்பே இல்லாத மாதிரி இவ்வளோ கூட்டம். வரிசையில் நின்னு கலெக்ட் பண்ணிட்டு வரதுக்குள்ள நாக்கு தள்ளுது. இதுல இந்தம்மா ஜாலியா கால் ஆட்டிட்டு உட்கார்ந்த இடத்துல இருந்து குறை வேற சொல்லுறாங்க” வீரின் பதிலும் காட்டமாகவே வர​

"ஒரு காப்பியை தானே கலெக்ட் பண்ணிட்டு வந்திங்க? என்னமோ மலையை நகர்த்திட்டு வர போல பில்ட் அப் பண்ணுறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" வைஷாலி எங்கேயோ பார்த்தபடி அவனுக்கு திருப்பிக்கொடுத்தாள்.​

"ஒன்னு இல்லை, மூணு காஃபி" என்று அவனும் விடாது பதில் சொல்ல "ஆஹ் இந்த கணக்கெல்லாம் இங்க மட்டும் பாருங்க. ஆபிஸ் கணக்கெல்லாம் பார்க்க சொன்னா மட்டும் முடியாது" வைஷாலியும் அவனுக்கு சளைக்காது மல்லுக்கு நின்றாள்.​

அவர்களது வாக்குவாதத்தை அவர்களின் மேசைக்கு அருகே அமர்ந்திருப்பவர்களும் கவனிக்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்த மது அதையே தனது திட்டத்திற்கு சாதகமாக்கிக்கொள்ள நினைத்தவளாக தனது இருக்கையில் இருந்து எழுந்துக்கொண்டாள்.​

"ஏய்…" என்று வைஷாலியிடம் சீறிய தானவீரனின் தோளை சுற்றி தனது கரத்தை போட்டவள் "விடு மாமா. அக்கா தான் வம்பு பண்ணுறான்னா நீ வேற எதுக்கு பதிலுக்கு பதில் பேசிட்டிருக்க" என்று அவனை சமாதானம் படுத்துவது போல் பேசினாள்.​

"அதை உன் அக்கா கிட்ட சொல்லு" என்று அவன் மதுவை முறைக்க "சரி சரி, விடு மாமா. என் பிறந்த நாள் அதுவுமா என்னை திட்டுறயே" முகத்தை பாவம் போல் வைத்துக்கொண்டு அவள் கேட்க அதில் இளகியவன் "சாரி டி... எல்லாம் இவளால் வந்தது" என்று வைஷாலியை கடைக்கண்ணால் காட்டி சொன்னான்.​

"என்ன… என்ன என்னால் வந்தது?" என்று மறுபடியும் வைஷாலி சண்டைக்கு தயாராக "ஐயோ அக்கா, மறுபடி ஆரம்பிக்காத விடு ப்ளீஸ்" வைஷாலியிடம் கெஞ்சுதலாக சொன்னாள் மது.​

"நீ வா மாமா, உள்ள வரும் போதே அங்க சிகப்பு கலர் கிரீம் எல்லாம் போட்டு ஸ்ட்ராபெரி தார்ட் பார்த்தேன். அதை வாங்கி கொடு. அக்கா நீ இங்கயே இரு வந்துடுறோம்" என்று வைஷாலியிடம் சொல்லிக்கொண்டே மேசை மீது வீர் வைத்த தட்டில் இருந்து தனக்கென்று அவள் ஆர்டர் செய்த, நெகிழி குவளையில் நிரப்ப பட்டிருந்த சாக்லேட் ஃப்ரெப்பேயை ஒரு கையில் எடுத்தபடி மருக்கரத்தால் அவனது கரத்தை உரிமையாய் கோர்த்துக்கொண்டு அங்கிருந்து அவனை இழுத்துக்கொண்டு போனாள்.​

பொதுவாக மது அவனிடம் அதை வாங்கி கொடு, இதை வாங்கி கொடு என்று உரிமையாய் கேட்பது வழக்கம் தான் என்பதால் வைஷாலியும் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் தான் ஆர்டர் செய்த மோக்கா காபியை எடுத்து பருக ஆரம்பித்துவிட்டாள்.​

தானவீரனை இழுத்துக்கொண்டு வந்த மதுஷிகா குளம்பியகத்தின் நுழைவாயிலை நோக்கி நடக்க "மது, ஸ்ட்ராபெர்ரி தார்ட்ஸ் எல்லாம் அங்க தானே இருக்கு, இங்க எங்க இழுத்துட்டு போற?" என்று கேட்க "அது எல்லாம் எனக்கு தெரியும், நீ பேசாமல் வா மாமா" என்றபடி அவனை இழுத்துக்கொண்டு அவன் பைக் அருகே வந்து சேர்ந்திருந்தாள் மது.​

 
Last edited:
Status
Not open for further replies.
Top