ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன் விழியின் மொழி...நானடி - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 16

தூங்கி எழுந்தவள், ‘இமையா.. நீ எல்லாத்துக்கும் ஓவர் ரியாக்ட் செய்யற. கதிரின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குமில்லை. இனி அவனை தொந்தரவு செய்ய கூடாது. இப்போ டைம் வேற என்னானு தெரியலையே. கதிர் நல்லா தூங்கி இருப்பானோ? இல்லை என் மூஞ்சை பாத்துட்டு யோசனை செஞ்சிட்டிருப்பானா?' சாயந்திரம் நடந்த அந்த கலவரத்திலிருந்து வெளியே வந்தாள்.

அந்த பயம் போய், தன் மனதிலிருக்கும் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று பலத்த யோசனையில் இருந்தாள் இமையா.

இமையாவின் மனதில் புதிதாக வெட்கம் எல்லாம் வந்தது. கதிர் தனக்கு நோ சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை இப்போது பன்மடங்காக பெருகி இருந்தது.

கதிரின் கோபத்தில் கூட அவள் மேலிருக்கும் காதல் தான் வெளிப்பட்டது அவனிடமிருந்து. சில வருடங்களாக பாலைவனமாக இருந்த மனதில் செடி முளைத்தது.

‘சரியான மாயக்காரன் எப்படி இருந்த என்னை இப்படி புலம்ப வச்சிட்டான். டேய் எனக்கு டைம் யார் சொல்லுவா?‘ இமையாவின் முகம் சோகத்தை தத்தெடுத்தது.

‘ச்சே… இந்த கண்ணால ஒரு டைம் கூட தெரிஞ்சிக்க முடியலை இந்த போன் எங்க இருக்கு, கூகுல் அசிஸ்டன்ட்ல ஆச்சி கேட்கலாம்' அக்கம் பக்கத்து தரையை தடவியவளுக்கு, மெத்தையில் கத்தையாக முடி கைக்கு தட்டுப்பட

‘கதிரா.. என்னடா இப்படி முடியை வளர்த்து வச்சிருக்க' முடியின் நீளத்தை குத்துமதிப்பாக அளந்தவள்

‘அட பாவி பயலே எதுக்குடா இவ்வளவு முடி. நான் கூட பேஷனுக்கு ஏதோ வளர்த்து வச்சி இருக்கனு நினைச்சா.. பெரிய போனி டைலே போடலாம் போல!'

இமையா முடியை ஏடாகூடமாக இழுத்துவிட “ஸ்ஸ்ஸ்…” அலறிய கதிரின் கையணைவில் இருந்தாள் இமையா அடுத்த நொடி.

“இமை மா.. தூங்காம என்ன செய்யற?"

“அது…" இமையா சொல்ல துவங்கும் போதே கதிர் அவளது கழுத்தில் தனது முகத்தை புதைத்தான். இமையாவின் பேச்சு அவனால் ஏற்பட்ட குறுகுறுப்பில் தடைப்பட்டது.

“ம்ம்… சொல்லு இமை? தூங்கலையா"

இமையா மெல்லிய குரலில் “ம்ம்…” என்றாள்.

கதிர் தனது முகத்தை இன்னும் புதைத்துகொள்ள இமையா தான், அவனது அணைப்பை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் பொம்மை போலானாள்.

“ஏன் இமை அமைதியா இருக்க.. கோபம் போலையா?”

இமையாவிடமிருந்து அமைதிதான் பதிலாக வந்தது.

“ரொம்ப கோபமா இருக்கியா?”

“இல்லங்க.. கோபமில்லை"

“நீ வாங்கன்னு கூப்பிடுறதுலையே தெரியுது"

இமையா மனதில் ‘லூசு கதிர் இப்படி முகத்தை புதச்சிகிட்டு.. கேட்டா வாங்க போங்க தான் வரும். நானும் பெண் தானே! வெட்கம் வருமில்ல'

இமையா அமைதியாக இருக்க இருக்க, கதிரின் அணைப்பு இறுகிக்கொண்டே போனது.

‘ஆ… இடுப்பு எழும்பை உடச்சிடுவான் போல' இமையாவால் மனதில் மட்டுமே பேச முடிந்தது.

"ஏங்க.. பசிக்குது" உடனே இமையாவை விட்டு வேகமாக பிரிந்தவன்,

“அச்சோ.. இமையாவுக்கு பசிக்குதா? நான் சாப்பாடு எடுத்துவரேன்" எழுந்தவனை பார்த்த இமையாவுக்கு ஆச்சரியம். ‘என்ன இவன்? குழந்தையை பாத்துக்கறது போல இப்படி பாத்துக்குறான்' என வியந்தாள்.

கதிர் சமைத்து வைத்த பிரியாணியை ஊட்டிவிட இமையாவை கூச்சம் தின்றது.

“ஏன் இமையா.. இன்னும் கோபமா இருக்கியா?”

“அச்சோ அப்படி எல்லாம் இல்லைங்க" சாதத்தை இமையா மென்றுக்கொண்டே சொல்ல

“அப்போ ஏன் முகம் இப்படி சிவந்திருக்கு புதுசா... கதிர்
வாங்க போங்கனு கூப்பிடுற”

‘அட கிறுக்கு பயலே! முகம் சிவக்கற அளவுக்கு செய்யறது எல்லாம் செஞ்சிட்டு பேச்சை பாரு' கதிரை மனதில் செல்லம் கொஞ்சிவிட்டு

“அப்படி எல்லாம் இல்லை கதிரா"

இருவரும் சாப்பிட்டு முடிக்கவும், “டைம் என்ன இப்போ?" என கேட்டாள் இமையா.

“பனிரெண்டு மணி ஆக இன்னும் ஐஞ்சி நிமிசமிருக்கு. ஆமா எதுக்கு தூங்குறதுக்கு முன்னாடி எழுப்பி விட சொன்ன"

“கார்டனுக்கு கூட்டிட்டு போ சொல்லுறேன்" கதிரும் இமையாவை தூக்கிக்கொண்டு நடந்தான்.

கதிரின் மூச்சிக்காத்து இமையாவின் நெற்றியில் பட, உடலில் ஒரு சிலிர்ப்பு.

“கதிரா.. நான் குழந்தையில்லை என்னை இறக்கி விடு" கீழே இறங்க நெளிய, கதிர் இன்னும் இறுக்கமாக பிடித்து வந்தான். கார்டனுக்கு வரவும் தான் இமையாவை இறக்கினான்.

“சொல்லு இந்த நேரத்துக்கு இங்க எதுக்கு?”

என்ன தான் இமையா தைரியமாக இதுவரை வந்து விட்டாலும், அதற்குமேல் எப்படி தொடங்குவது என்ற ஒரு வித பதற்றத்தால் முகத்தில் வேர்வை வடிந்தது.

“இமையா உடம்பு சரியில்லையா?"

“இல்லையே"

கதிர் இமையாவின் முகத்தில் வழிந்த வேர்வையை துடைத்து விட, இமையாவுக்கு எப்படி துவங்குவது என்று தெரியவில்லை.

சட்டென இமையாவின்
மண்டையில் கலர் கலராக பல்ப் எரிந்தது. ‘அன்று ஊஞ்சலில் ஒன்றாக கதிர் ஆட கேட்டானே... ஊஞ்சலில் இருவரும் ஆடலாமா? கேட்டுட்டு ஆட துவங்கும் போது லவ் யூ சொல்லிடலாம்?' மனதில் ஒரு நீண்ட ஸ்கெட்ச் போட்டாள் இமையா.

“கதிர்… ஊஞ்சல்" என்று துவங்கும் முன் இருவருக்கும் பின்னிருந்து ஒரு பெண்ணின் குரல்.

“அண்ணா ஹாப்பி பர்த்துடே..” இவ்வளவு நேரம் கோர்த்திருந்த கதிரின் கரங்கள் இமையாவை விட்டு விலக, தங்கையை நோக்கி நடந்தான்.

“பாப்பு… இந்த நேரத்துல இங்க என்ன செஞ்சிட்டிருக்க?"

“உனக்கு விஸ் செய்யனும்னு வீட்டில் அடம்பிடிச்சி வந்தேன்”

“இந்த நேரத்தில் எப்படி வீட்ல தனியா விட்டாங்க?"

“அப்பா இப்போ தான் விட்டுட்டு போனாங்க"

“அப்பா உள்ள வரலையா?"

“அவரை விடு ண்ணா... செம பசி" பேச்சை மாற்றினாள் கதிரின் தங்கை.

“சாப்பிடாம கூட உன்னை யார் இந்த நேரத்தில் வர சொன்னது? வா உள்ள போலாம்" தங்கை வந்த சந்தோஷத்தில் இமையா அங்கிருப்பதையே மறந்துவிட்டான்.

இமையா தனது கையை வருடி விட்டவள் ‘ஏன் கதிரா என் கையை விட்ட' என சிறு பிள்ளை கணக்காக மனம் சுனங்கியது.

தங்கையிடம் பேசிவிட்டு வந்து தன் கரங்களை பிடித்து கொள்வான் என்று நினைத்தவளுக்கு இடியாக மனதை பிளந்தது அவனது நடவடிக்கை.

இருவரின் குரலும் மறைய துவங்கியது. இமையாவை தனியே விட்டுவிட்டு தங்கைக்கு சாப்பாடு போட்டு முடித்ததும் தான் கதிருக்கு நினைவே வந்தது இமையாவை விட்டுவிட்டோம் என்று.

இருவரின் குரலும் மறைந்த பின் 'இமையா உன்னால முடியும்.தனியாவே நடந்து வீட்டுக்கு போய்டலாம்' என்று எடுத்து வைத்த முதல் அடியே தடுக்கல். இரண்டு பூ ஜாடி வெவ்வேறு திசையில் உருண்டது.

இமையா மேலும் இரண்டு அடி வெற்றிகரமாக வைத்தாள். மூன்றாவது அடிக்கு காலில் ஏதோ வலுவலுப்பாக பட, இமையாவுக்கு அது பாம்பு போல தெரிய, சறுக்கி விழுந்து, தட்டுத் தடுமாறி எழுந்தாள்.

அருகில் எதாவது குச்சி போல இருக்கா என்று சோதித்தாள், அதன் உதவியோடு நடக்க.

இமையாவின் உடல் முழுவதும் சேறு. குச்சி தேடும் போது, சற்று முன் தடுக்கிவிட்ட பைப் கையில் பட “பைப்புக்கா பயந்து விழுந்தேன்"

தன்னைத்தானே கடிந்துக்கொண்டவளின் மனதில் உறைத்தது ஒன்று தான். ‘தான் தனியாக நடக்க கத்துக்காதது எவ்வளவு தவறு‘ என்று

எழுந்து நின்று வேறு திசையில் நடந்து சென்றவளின் முகத்தில் அலங்காரத்துக்கு வைத்திருந்த புதர் செடிதான் மோதியது. புதர் செடியை பிடித்துக்கொண்டு ஒரு திசைக்கு நடந்தாள்.

கதிர் பதறி ஓடிவந்தவன் வழி தெரியாத சிறுபிள்ளை போல மிரண்டு விழிகளால் புதரை பிடித்திருக்கும் இமையாவை கண்டு கதிருக்கே தோன்றியது ‘நான் இமையாவுக்கு பொருத்தமானவன் இல்லை' என தோன்றியது.

“இமை மா…" கதிரின் குரல் கேட்டு எந்த அசைவுமில்லாமல் அமர்ந்திருந்தாள்.

சாயந்திரம் ஏற்பட்ட காயத்தின் ரத்தத்தை இமையா தூங்கும் போது முடிந்த அளவுக்கு சுத்தம் செய்தான். வெள்ளை நிற ஆடையில் ரத்தமும் சேறும் இமையா தலையில் மண் என பார்க்க முடியாத அளவுக்கு உருமாறி இருந்தாள்.

“இமை… சாரி"

இமையா மனதிலும் சரி உதட்டிலும் சரி விரக்தி புன்னகை வெளிபட்டது.

“இமை மா… இமை குட்டி"

“நான் உங்க கிட்ட என்னை குட்டி சொல்லாதிங்கனு சொல்லி இருக்கேன்" நிறுத்தி நிதானமாக இமையா சொல்ல

இமையாவின் இந்த கடுமை அவனுக்கு புதியது “எனக்கு ஒரு ஹெல்ப் செய்றிங்களா?”

“சொல்லு இமை.. உனக்காக எதையும்” கதிர் சொல்லி முடிக்கும் முன் தன் கரங்களினால் நிறுத்த சொல்வது போல சைகை காட்ட.

கதிரும்… “சொல்லு மா"

“என்னை ரூம் வரைக்கும் விட்டுவிடுங்க" எப்போதும் ஒருமையில் அழைத்த அவளது குரல் இப்போது பன்மையில் அழைக்க கதிர் உடைந்து போனான்.

“இமையா.. தங்கச்சி வந்திருக்கா. இந்த சண்டை நமக்குள்ள இருக்கட்டும். அவ போனதும் பேசி தீர்த்துக்கலாம். அவ கண் உருத்தாதது போல நடந்துக்க மட்டும் பர்மிசன் கொடுக்கறையா?"

“ம்ம்…” இமையாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இமையாவுக்கு தேவையானதை எடுத்து கொடுத்துவிட, குளியல் அறைக்கு விட்டவன், தங்கச்சியை சாப்பிட வைத்து அவளை ஒரு தனி அறையில் படுக்க சொல்லிவிட்டு வர

இமையா தலையில் நீர் சொட்ட சொட்ட வெறித்த பார்வையில் அமர்ந்திருந்தாள்.

இமையாவின் மனது கல்லாக கனத்தது. சற்றும் முன் ஏற்பட்ட தனிமை, பயம், ஆதறவற்ற நிலை என யாவும் சரண், அழகியை இதயம் தேடி வைத்தது.

கதிரும் வருந்தினான், 'ஆறுதல் சொல்லும் நிலையில் கூட நானில்லையே' என்று
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 17

அந்த இரவு இருவருக்கும் தூங்கா இரவானது.

கதிர் இமையாவின் முகத்தை பார்த்து படுத்திருக்க, அழுகாத குறை தான் இமையாவுக்கு.

'அப்பா, அம்மா சொல்றதை கேட்டு கல்யாணம் செஞ்சிருக்க கூடாது. கதிருக்கு என்ன தலை எழுத்தா? என்னை சுமப்பதற்கு. இது நடந்ததும் சரி தான். தன் மூளை மழுங்கி, காதல் சொல்லி அவன் வாழ்க்கையை கெடுக்க நினைத்துட்டோமே. சும்மாவே என் பாரத்தை சுமப்பவன், காதல் சொன்னால் அவன் வாழ்வு தான் பாதிக்கும். பழைய காதலனை மறக்க தெரிந்த நமக்கு ஒரு மாத காதலை மறக்க முடியாதா என்ன' இமையா காதலை எப்போதும் சொல்ல கூடாது என்று சிறிது காலம் திறந்து வைத்திருந்த தன் இதய கதவை மீண்டும் பூட்ட முயற்சித்தாள். அதில் வெற்றி காண்பாளா? இல்லை மீண்டும் காதல் என்னும் மாய உலகில் விழுவாளா?

அடுத்த நாள் காலையில் இமையா மௌனத்தை தத்து எடுத்தவள், சிறிது சிறிதாக அந்த அறையிலிருக்கும் பொருட்கள் சுவர் என்று தொட்டு பார்த்தாள்.

தங்கையுடன் பேசி கொண்டிருந்த கதிருக்கு ரூமில் ஏதோ சிதறும் சத்தம் கேட்டது.

"பாப்பா இரு.. .அண்ணி எந்திருச்சிட்டா போல நான் அவளுக்கு தேவையானதை எடுத்து கொடுத்துட்டு வரேன்" அண்ணனிடம் தன் வருங்கால கணவனை பற்றி ஆசையாக பகிர்ந்து கொண்டிருக்கும் போது, எழுந்து சென்ற அண்ணன் மீது கோபம் வர

"அண்ணா ஏன் இப்படி மாறிட்டான். அம்மாவை பார்க்காமல் தூக்கம் வராதுனு சொன்னவனா இது. நான் பேசுவது கூட முழுசா காது கொடுத்து கேட்கல" அது கதிரின் தங்கை வள்ளிக்கு புரிய தான் செய்தது.

‘அண்ணன் என்ன செய்யரான்’ என்று வள்ளி அவர்கள் அறையில் பார்க்க

"இமையா… ஒரு குரல் கொடுத்து இருக்கலாமில்லை தங்கம்"

"இல்லைங்க நானே என் வேலைய கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கலம்ன்னு இருக்கேன்”

“மெதுவா கத்துக்கலாம் இமையா”

"ம்ம்..."

வள்ளி அறையின் வாசலில் நின்று கவனித்தாள். அண்ணன் செய்யும் வேலையை பார்த்து அதிர்ந்து நின்றாள். ஒரு சேவகன் போல ஒரு வேலைகாரன் போல இமையாவுக்கு வேலை செய்து முடித்து இமையாவை குளிக்க சொல்லிவிட்டு, வள்ளி நிற்பதை பார்த்த அவன்

"வள்ளி அண்ணிய பாத்தியா எப்படி இருக்கா? அழகா இருக்காளா?" ஆர்வமாக கேட்டான்.

"ம்ம்ண்ணா அழகா தான் இருக்காங்க" இமையாவை வள்ளிக்கு பிடிக்கவில்லை. தன் அண்ணனை தன் குடும்பத்தில் இருந்து பிரித்து விட்டாள் என்ற கோபம் இருக்கத்தான் செய்தது.

இமையாவுக்கு தலைவலி பின்னியது. நைட் தலைக்கு குளித்ததின் விளைவு தான்.

கதிர் இமையா வரும் வரை காத்து இருந்தவன், அவள் வந்ததும்

"இமையா இன்னைக்கு கோவிலுக்கு போலாமா ?"

"சரிங்க.."


"இமையா..." தயக்கத்தோடு அழைக்க

"சொல்லுங்க.."

" இன்னைக்கு முடி பின்னிக்கறயா? பூ வாங்கி வச்சிருக்கேன். அப்புறமா நெத்தில பொட்டு வச்சிக்கோ… கல்யாணத்து அப்போ பார்த்தது உன்னை அப்படி" இமையா தன் நீண்ட முடியை பின்னி இரண்டு மாதம் மேல் ஆனது. தினமும் குளித்து முடித்ததும், முடியை சிக்கெடுத்து ஒரு பேன்ட் வைத்து போனி டெயில் போட்டுகொள்வாள். நெத்தியில் பொட்டு கூட எதும் வைக்கமாட்டாள். இதில் எங்கே குங்குமம் வைக்க?

அம்மா அன்று வந்ததன்று பொட்டுவச்சி, பூ வைத்திருந்தாள். ஆனால் அன்று கதிர் வீட்டில் நடந்ததில் இமையாவை கவனிக்கவில்லை. தனது அலங்காரத்தை கதிர் பாராட்டுவான் என்று நினைத்த அவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

"சரிங்க... உங்க தங்கச்சி சாப்பிட்டாங்களா ?"

"சேர்ந்து சாப்பிடலாம் மா"

"சரிங்க..." இமையா கையில் சீப்பை வைத்து தயங்கி நிற்க

"என்ன மா"

"எனக்கு வாகெடுத்து விடுறிங்களா? ஜடை கூட நான் போட்டுக்கறேன்"

"இதுக்கு எதுக்கு தயங்கிட்டு… சீப்பை கொடு"

"நேர்வடுகு எடுக்காதிங்க" இமையா சொல்லும் முன், கதிர் சைடாக அவளது அடர்ந்த முடியை ஒரு பக்கம் ஒதுக்க

'இது எல்லாம் இவருக்கு எப்படி தெரிஞ்சிருக்கு ?'

"அது தெரியும் இமையா. உங்க வீட்டுக்கு வெளியே வச்சி எவ்வளவு முறை பார்த்திருக்கேன்" அவள் மனதில் நினைத்ததுக்கு வெளியே பதில் சொன்னான்.

"ஓ...." இமையா தன் மீது கோபமாக உள்ளது புரியத்தான் செய்தது கதிருக்கு.

'கதிரா நீ பைத்தியம்டா கிறுக்கா... இவளை எப்படி தான் சமாளிக்க போறேனோ?' விழி பிதுங்கி இருக்க, கடைசியாக கதிர் தன் மனதை சமன் செய்தான்.

'கதிரா முதல்ல வள்ளி கிளம்பட்டும். அப்புறமாக பாத்துக்கலாம். உன்கிட்ட லவ் சொல்லாம இருக்க முடியலை'

மூவரும் சாப்பிட உட்கார, வள்ளியும் இமையாவிடம் பேச்சு கொடுக்க இமையா அமைதிமாக இருந்தாள்.

"இமையா…எங்க இருக்க? இங்க பாரு வள்ளி ஏதோ கேட்கரா"

"சாரிங்க. எதோ யோசிச்சிட்டு இருந்தேன். நீங்க சொல்லுங்க"

"உங்க பேர் என்ன ?"

"இமையா.... உங்க பேர் என்ன ?" இமையா கேட்க

"நான் வள்ளி" வள்ளி மனதில் 'நல்ல பேரு... கண்ணு இல்லாதவளுக்கு இமையா. இந்த குறை பத்தாதுனு காது கூட கேட்கலை. இந்த அண்ணா ஏன் ரசனை என்பது கொஞ்சம் கூட இல்லாம இருக்கானோ'

மூவரும் பேசிட்டிருக்க, கதிருக்கு அவனது நண்பனிடமிருந்து கால் வந்தது.

"இரண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் வந்துடறேன்" கதிர் தனது போன் எடுத்துட்டு வெளியே பேச போனான்.

"சொல்லு மச்சான்... என்னடா திடீரென போன் செஞ்சி இருக்க"

"அது… மச்சான். என் ஆளுக்கு இன்னும் இரண்டு நாளில் எங்கேஜ்மென்ட். வீட்டைவிட்டு ஓடிவந்துட்டா. என்ன செய்றதுனு தெரியலை"

"முதல அந்த பெண்ணை வீட்டுக்கு போக சொல்லு. நான் நாளைக்கு வந்து எல்லாம் சரி செய்யறேன். அப்புறம் அந்த மாப்பிள்ளை பையனோட டீடைல்ஸ் அனுப்பி வை" கதிர் உள்ளே வரவும், வள்ளி தனது அண்ணின் அருமை பெருமைகளை பேசிக்கொண்டே போக

"என்ன இரண்டு பேரும் ஜாலி ஆகிட்டிங்களா ? வள்ளி என் பிரெண்டுக்கு ஒரு எமர்ஜன்சி நான் போகனும். இமையாவை கொஞ்சம் பாத்துக்க முடியுமா ?"

"என்ன அண்ணா இது எல்லாம் சொல்லிட்டு. நான் அண்ணியை பத்திரமா பாத்துக்கறேன்" ஆனால், வள்ளி மனதில் 'நல்ல சான்ஸ், இவளை வச்சி செய்யனும்'

"எவ்வளவு நாள் அண்ணா...?"

"நாளைக்கு நைட் ஆகிடும்"

"சரி அண்ணா" கதிர் ஒரு செட் டிரஸ் எடுத்து வைத்தவன்

"இமையா நாளைக்கு வந்துடறேன். வள்ளி செமையா பேசுவா பத்திரமா இருங்க இரண்டு பேரும்"

இமையா கதிரை பற்றி விட்டதில் இருந்து பேசினாள்.

"அண்ணி எங்க பேமிலி பத்தி எதாவது சொல்லி இருக்காங்களா அண்ணா ?"

"இல்லை வள்ளி... சொன்னதில்லை"

"சரி சரி... நீங்க பீல் செய்யாதிங்க நான் சொல்லுறேன்" என்று தெடர்ந்த வள்ளி

"எங்க குடும்பம்…" என்று தனியாக அழுத்தி சொன்னாள். அவள் அப்படி சொல்லுவது, நீ எங்க குடும்பத்தில் ஒருத்தி இல்லை என்று பிரித்து சொல்லுவது போல இருந்தது, இமையாவுக்கு.

அவள் அப்படி நினைப்பதில் ஒன்றும் தவறு இல்லை தானே. மனதில் பல ரணங்கள் இருந்தாலும் வள்ளி முன் சிரித்த முகமாக காட்டி கொண்டாள்.

'என்ன இவ... டவுனே ஆகமாட்டன்ட்றா வள்ளி விடாதே. தன் அண்ணா வாழ்க்கை நாஸ்தி ஆகிடும் இவ இருந்தா' வள்ளி மனதில் இமையா மீது அளவுக்கு அதிகமாக கோபம் இருந்தது. சொந்த அண்ணன் தன் நிச்சயத்துக்கு கூட அழைக்கப் படவில்லையே என. அதற்கு காரணம் இவளை திருமணம் செய்து கொண்டது தான். அண்ணாவை நினைத்து அம்மாவின் உடல் நிலை மெழுகாக உருகி கொண்டு இருப்பதற்கும் இவள் தான் காரணம். அப்பாவின் பிரஷர் எகிறியதற்கும் இவள் தான் காரணம். ஆனால் இங்கு மகாராணி போல அண்ணன வேலை வாங்கிட்டு இருக்கிறாள். நாங்க அண்ணண பிரிந்து கஷ்ட பட்டுட்டு இருக்கோம். இங்க இவள் சந்தோஷத்தை கெடுக்கனும். வள்ளி இந்த ஒரு கதை போதும் இவளை வீழ்த்த’ என நினைத்தாள் மனதில் வஞ்சத்தோடு.

"அண்ணா சின்ன வயசுல செமையா கொழுக்கு மொழுக்குனு இருப்பான். முதல் பையன் வேறு ஊட்டி ஊட்டி வளர்த்திருக்காங்க. சரியான சுட்டி. அடுப்புல கையை விடுறது. சுடு தண்ணீயை ஊத்திக்கிறதுனு செம சேட்டை தெரியுமா ? அப்படி தான் ஒரு நாள் எல்லோரும் ஆளாளுக்கு ஒரு வேலையில் இருக்கும் போது, தோட்டத்து பக்கம் பட்டாம் பூச்சி நிறைய கலர்கலரா பறந்துட்டு இருந்துச்சாம். அண்ணாக்கு கலர்ஸ் அட்ராக்ட் செஞ்சி தவழ்ந்துட்டே போய் இருக்கான்.

பையன் வாசலில் தான் விளையாடிட்டு இருக்கான்னு வீட்டில் இருக்கவங்களும் விட்டுட்டாங்க. பஞ்சுமிட்டாய் கலரில் ஒரு பட்டாம் பூச்சி. பறந்து போய் மாட்டு நுனி கொம்பில் உட்கார்ந்து இருந்ததாம்

அந்த காளை, எங்க தாத்தாவை தவிர யாரையும் பக்கம் சேர்க்காது மீறி யாராவது பக்கம் போனா அவ்வளவு தான் ரத்தத்தை பார்க்காமல் விடாது.

அண்ணா பட்டாம் பூச்சியை பிடிக்க அதை பாத்துட்டு போனான். அந்த பட்டாம் பூச்சியை பிடிக்க இரண்டெட்டு தான் இருந்தது. வீட்டில் அம்மா அண்ணா போறதை பார்க்கவும்.

'ஐயோ பையன்.. காளை கிட்ட போறானே' கூச்சலிட்டு ஓடி வருவதற்குள் அண்ணா மாட்டுபக்கம் போகவும் அங்கிருக்கும் யாருக்கும் மூச்சே இல்லையாம்.

அண்ணாவும் நெருங்கி போக காளை தனது தலையில் இருக்கும் கூர்மையான கொம்பை வைத்து, மண்ணை தூக்கி இறைச்சிட்டிருக்க. அண்ணனும் மாடு பக்கம் போய் அனைவரையும் திரும்பி பார்த்துட்டு ஒரு சிரிப்பு சிரிச்சானாம் அம்மாவை பார்த்துட்டு.

'தம்பி அம்மா கிட்ட வாடானு' அம்மா கையை நீட்ட அண்ணா திரும்பி வேகமாக அந்த சீறிப்பாயும் காளையை நோக்கி போய்யிட்டான்"

"அச்சே… வள்ளி கதிருக்கு என்னாச்சி"

"எதும் ஆகலை அண்ணி… அந்த காளை கொம்பை பிடித்து விளையாடிட்டு இருந்தானாம். எல்லோரும் ஒரே ஆச்சரியம். காளை எப்படி இவனை பக்கத்தில் சேத்துக்கிச்சினு. அம்மா சொல்லுவாங்க, அந்த பத்தடி தூரத்தில் போனதும் அவங்க உயிரே போய்யிடுச்சாம். ஆனா இப்போ அம்மா உடம்புக்கு முடியாம இருக்காங்க. அண்ணா ஏன் ஒரு பொண்ணுக்காக இவ்வளவு இரக்கமில்லாதவனாக மாறிட்டான்னு தான் எங்களுக்கு புரியலை"

வள்ளி சத்தமில்லாமல் ஊசியை இமையாவின் மனதில் குத்தியிருந்தாள். இமையாவின் முகம் மாற வள்ளிக்கு இப்போது தான் நிம்மதி பிறந்தது.

வள்ளி வந்த வேலையை சிறப்பாக முடித்து இருந்தாள். கதிரிடமிருந்து பிரிந்தால் இவ்வளவு பேருக்கு கதிரின் தேவையிருக்கு. இனி கதிர் வாழ்க்கையில் நம்ம இருக்க கூடாது என்று முடிவு எடுத்தவள், அடுத்து பார்வை தெரியும் நாள் இங்கிருந்து போக முடிவு எடுத்தாள்.
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 18

கதிர் தனது தங்கையின் உண்மையான குணம் தெரியாமல், தனியே விட்டு, தன் நண்பனின் வாழ்வை சரி செய்ய சென்றவனின் வாழ்க்கையை அவனது ஆசை தங்கச்சி கெடுக்க கங்கனம் கட்டி கொண்ட இருந்தாள்.

கதிரும் அவன் நண்பன் சதீஸ் ம கொடுத்த முகவரி வைத்து அந்த அமெரிக்கா மாப்பிள்ளையின் வீட்டை நோக்கி போக, அட்ரஸ் தேடி பிடித்து இரவு பத்து மணி போல வந்து சேர்ந்தான் கதிர்.

அந்த மாப்பிள்ளை பேர் சந்தோஷ். அவனது வீட்டுக் கதவை தட்ட, வீட்டில் வேலை செய்யும் பெண் அழுத முகத்தோடு திறந்தாள்.

“யார் நீங்க ?”

“நான் சந்தோஷ் பார்க்கனும்" கதிர் தன்னை பெய்யாக அறிமுகப்படுத்தினான்.

“மயிலு...மா யார் வந்திருக்கா" சந்தோஷ் கேட்க

“ஐயா உங்களை பார்க்க தான் வந்திருக்காங்க" என்று சந்தோஷின் முகம் கூட பார்க்காமல், உள்ளே போக பார்க்க சந்தோஷ் மயிலின் கையை பிடித்துக்கொண்டான்.

“யாரு சார் நீங்க? உங்களை எனக்கு நியாபகம் இல்லையே"

“சார் கொஞ்சம் பேசனும்”

“சொல்லுங்க சார்... நீங்க?”

“சார் உங்க நிச்சயம் பத்தி பேசனும்"

“என்ன எனக்கு எங்கேஜ்மென்டா?" சந்தோஷ் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி. மயிலு சந்தோஷின் கையை உதறிவிட்டு அழுதுட்டே ஓடிவிட்டாள்.

“சார் யார் சார் நீங்க தெளிவாக சொல்லுங்க"

‘கதிரு வீடு மாறிட்டியா ?’ அவனது நண்பன் சதீஸ்க்கு போன் செய்து, அட்ரஸ் கரக்டா என்று சரி பார்த்தான்.

கதிரும் விவரம் சொல்ல, சநதோஷ்க்கு அதிர்ச்சி.

“சார் என்ன சொல்றீங்க ? எனக்கே நீங்க சொல்லிதான் தெரியும்... ஒரு நிமிசம் இருங்க ஏய் மயிலு இங்க வாடி" கர்ஜித்தான்.

மயிலும் முகத்தை தூக்கி வச்சிட்டு வர, “இதுக்கு தான் முகத்தை தூக்கி வச்சிட்டிருக்கியா? என்னனு என்கிட்ட சொன்னா தான தெரியும் நீ பாட்டுக்கு அமைதியா அழுதா சரியா போய்யிடுமா ?” சந்தோஷ் மயிலை அதட்ட

கதிருக்கும் சிறிது புரிந்தது. 'இருவரும் லவ் செய்வாங்க போல. இதை தெரிஞ்சி பையனுக்கே தெரியாம பெத்தவங்க இந்த எங்கேஜ்மென்ட் ஏற்பாடு செய்வாங்க போல'

“சார் ஏதோ மிஸ் அன்டர்ஸ்டாண்ட் ஆகி இருக்கு. இவளை தான் நான் கல்யாணம் செய்ய போறேன். இவ என் அத்தை பெண்ணு தான். திடீர்னு நேத்து கிளம்பி வர சொன்னாங்க. நானும் அப்படியே மயிலை கல்யாணம் செஞ்சி கூட்டிட்டு போக நினைத்து வந்தா, இங்க வேற எதோ நடந்திருக்கு. நீங்க கவலை படாதிங்க நாளைக்கு உங்க பிரெண்டை கூட்டிட்டு வாங்க. இரண்டு எங்கேஜ்மென்ட் நாளைக்கு நடக்கும்"

“ரொம்ப நன்றி சார்”

“அட என்னா மச்சி சாரு மோருனு உங்க பிரெண்டை எப்படி கூப்பிடுவிங்களே அப்படி கூப்பிடுங்க"

“சரி சந்தோஷ்… நாளைக்கு பாக்கலாம். நான் கிளம்பரேன்”

“எங்க தங்க போறிங்க ?”

“எதாவது ஹோட்டல் பார்க்கனும் சந்தோஷ்"

“இது எல்லாம் வேண்டாம். இன்னைக்கு இங்கயே தங்கிடலாம்” என்றதும் கதிர் தயங்கி நிற்க

“என்ன தயக்கம் கதிர்… உங்க பிரெண்டா நினைக்கலை என்ன அப்படித்தனே?”

“அப்படி எல்லாம் இல்லை....சரி சந்தோஷ்" கதிர் சுற்றி முற்றி பார்க்க

“என்னா தேடுரிங்க கதிர் ?”

“உங்க அப்பா அம்மா ?“

“ஏதோ ஷாப்பிங்னு போனாங்க. என்னை வெல்கம் பண்ண கூட நேரமில்லாமல் போனாங்க. நாளைக்கு இடியை இறக்கிறேன் இரண்டு பேருக்கும் பாருங்க"

“மயிலு கதிருக்கு ரூம் காட்டிட்டு, கையோடே என் ரூம்க்கு வா" சந்தோஷின் குரலில் அப்படி ஒரு கடுமை.

“அண்ணா வாங்கண்ணா" கதிருக்கு அறையை காட்டிவிட்டு, மயில் தயங்கி கதிரை பார்க்க

“என்ன மா எதாவது சொல்லனுமா ?”

“நன்றி நா.. .நான் பயந்தே போய்யிட்டேன். நாங்க பிரிஞ்சிடுவோம்ணு"

“இனி பயப்படாத. எதாவதுனா சந்தோஷ்கிட்ட மனசு திறந்து பேசு. தயக்கம் எப்போதும் உன் கோள்விக்கு பதில் தராது"

“அதுவும் சரி தான் அண்ணா இனி இப்படி இருக்க மாட்டேன்"

மயில் மனதில் 'இந்த அண்ணாக்கு ஜோசியம் தெரியும் போல. கரக்டா சொல்லிட்டாங்க' மயில் பேசி சென்றது கதிர் காதுக்கும் கேட்க தான் செய்தது.

“மயில் ஜோசியமில்லை. நீ நடந்துகிட்டது பார்த்தா நல்லா தெரியுது. ஐஞ்சி நிமிசம் போதும் உன் மனதை படிக்க"

மயில் தயங்கி தயங்கி சந்தோஷ் பக்கம் நிற்க “உட்காரு...”

“மாமா அது ...”

“அடிச்சனா பாரு… எதுக்கு அழுதுட்டு இருந்த. என்னிடமிருந்த நம்பிக்கை எங்கடி போச்சி உனக்கு”

“தப்பு தான் மாமா. இனி இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டேன்"

“சரி போ…போய் தூங்கு" சந்தோஷின் அதே கடுமை மாறாத குரல் மயிலை மிரட்டியது.

மயில் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

‘அதான் போனு சொல்லிட்டேனில்ல. எதுக்கு நின்னுட்டிருக்கா ?’

“உன்னை போக சொன்னேன்டி பைத்தியக்காரி“

“ஈஈஈஈ... மாமா நீ வரேன்னு ஸ்வீட் செஞ்சேன் சாப்பிடுறியா ?”

‘சிரிச்சி சிரிச்சி மயக்கிட வேண்டியது. சந்தோஷ் மயங்காத' தனக்கு தானே கோபமிருப்பது போல நடித்துக் கொண்டிருந்தான்.

“மாமா உனக்கு கோபம் போய்யிடுச்சி தெரியும்"

“இது எல்லாம் தெரியுது. ஆனா என்னை நம்புறதில்லை”

“சரி சரி விடுடா தங்கம்"

“எது டா வா...!"

“ஆமாடா மாமா"

மயிலு ஒரு வழியக சமாதானம் படுத்திட்டு அவள் அறைக்கு போக, அடுத்த நாளை நினைத்து சந்தோஷத்தில் நேரத்தை கழித்தார்கள்.

இரவு தூங்கும் போது, வள்ளிக்கு போன் பண்ணி இமையா என்ன செய்யறா என்று விசாரித்துவிட்டு கதிரும் அடுத்த நாளுக்கு தயாராகினான்.

இரவு தாமதமாக வந்த சந்தோஷின் அம்மா தயங்கி தயங்கி அடுத்த நாள் நடக்கும் நிச்சியத்தை பற்றி சந்தோஷிடம் சொல்ல,

“சரி மா... அதுக்கு எதுக்கு இவ்வளவு தயங்கரிங்க.. முன்னாடியே சொல்லி இருந்தா வெளிநாட்டில் இருந்து வரும் போது அந்த பொண்ணுக்கு எதாவது வாங்கிட்டு வந்திருக்கலம்ல”

சந்தோஷ் இப்படி சொல்லுவான் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை அவர். மனதில் நிம்மதியோடு தூங்க போனார்.

அடுத்த நாள், கதிர் முதலில் கிளம்பி சென்றான்.

அடுத்தடுத்து நிச்சயத்திற்காக அனைவரும் சரஸ்வதி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

சந்தோஷ் ரிங் மாத்தும் வரை சிரித்த முகமாக இருந்தவன், மோதிரம் மாற்றும் போது ஓரமாக நின்றிருந்த மயில் கையில் மாட்டிவிட்டான்.

அதிர்ச்சியில் நின்ற அப்பா அம்மாவின் முன்னாடி நின்றவன்

“நீங்க சொல்ரத எல்லாம் கண் மூடிட்டு செய்ய நான் ஒன்னும் குழந்தை இல்லைமா. எனக்கும் விருப்பு வெறுப்பு இருக்கு. அத்தை சாகும் போது என் கையை பிடிச்சிட்டு மயிலை பாத்துக்க சொன்னாங்க. அப்போ நீங்களும் பக்கம் தானே இருந்திங்க. எல்லாம் மறந்தாச்சா? அவங்க கொடுத்த சொத்தில் தான் இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம். சரி அந்த சத்தியம், சொத்து கூட விடுங்க. நான் இவளை காதலிக்கறது உங்களுக்கு நல்லா தெரியும்னு எனக்கும் நல்லாவே தெரியும். அப்படி இருந்து இப்படி வேற பொண்ணு பார்க்க என்ன அவசரம் ?”

“அவ நடிப்பு எங்க? உன் படிப்பு எங்க ?”

“படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லே. அப்ப நீங்க என்னமா படிச்சிருக்கிங்க சொல்லுங்க பாப்போம்"

சந்தோஷ் அம்மா வாயை அடைச்சி விட்டான், ஒரே வார்த்தையில்.

சரஸ்வதி அப்பா அம்மா முன் நின்ற சந்தோஷ் "என்னை மன்னிச்சிடுங்க சார். எங்க வீட்டில் உள்ளவங்க தப்பு செஞ்சதுக்கு கல்யாணம் விளையாட்டில்ல. உங்க பொண்ணு கிட்ட மனசுவிட்டு பேசுங்க சார். அவங்க மனசுல என்ன இருக்கு யார் இருக்கானு"

சரஸ்வதி அப்பா அவளை முறைத்தார்.

“ஆல் தி பெஸ்ட் சிஸ்டர் அப்பா மீதுள்ள பயத்தை விட்டுட்டு மனசுவிட்டு பேசுங்க" சரஸ்வதி அப்பா முன் தலை குனிந்து நிற்க, கதிர் அவர் அருகில் வந்து

“அப்பா சரஸ்வதி கிட்ட பேசுங்க. முறைக்கும் அப்பாவா இல்லை. பாசமா, சிரிச்சி பேசும் அப்பாவா. வாழ்க்கை ஒரு முறை தான் பா. பிடிச்ச மாதிரி வாழ்க்கை வாழனும்" கதிர் சரஸ்வதி புறம் திரும்பி
“சரஸ் அப்பாவை கூட்டிட்டு போ...”

இருவரும் தோட்டத்தில் உட்கார, சுற்றிலும் யாருமில்லா தனிமை சூழலில் அமைதி மட்டும் தான் நிறைந்திருந்தது. சரஸ்வதிதான் முதலில் அதை கலைத்தாள்.

“அப்பா நான் சதீஸ லவ் செய்யறேன் பா. உங்க கிட்ட சொல்ல வந்தப்போ தான் எங்கேஜ்மென்ட் பத்தி சொன்னிங்க. உங்க முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. உனக்கு ஒரு பெரிய குடும்பம் கிடைக்க போதுனு. என்னால உங்க சந்தோஷத்தை கெடுக்க முடியலை பா. அம்மா இல்லாத குறை தெரியாம என்னை எப்படி வளர்த்திங்க, எந்த சொந்தமும் அருகில் இல்லாமல் எவ்வளவு கஷ்ட பட்டிங்கனு எனக்கு தெரியும் பா"

“நீ என்னிடம் சொல்லி இருக்கனும் சரஸ்வதி”

“அப்பா அவருக்கு யாருமில்லை. ஏத்துப்பிங்களானு தெரியலை" இரண்டு நிமிடம் அமைதியாக இருந்த சரஸ்வதியின் அப்பா மகளின் கைகளை பிடித்து இழுத்து வந்தவர், சதீஸ் முன் நின்று

“டேய்… காதலிக்க தெரிஞ்சவனுக்கு வந்து பொண்ணு கேட்க துப்பில்லையா? போடா போய் மோதிரத்தை மாத்துங்க" சதீஸ் சந்தோஷத்தில், வருங்கால மாமனாரை அணைத்தான்.

“தேங்ஸ் மாமா இதை நான் எதிர் பார்க்கவேயில்லை"

“முயற்சி செய்யாமலையே முடிவு எடுக்க கூடாது. போப்பா வந்தவங்க எல்லாம் காத்திட்டிருக்காங்க பாரு"

இனிதே எங்கேஜ்மென்ட் முடிந்தது. சில மாதம் கழித்து திருமணம், அதன்பிறகு சரஸ்வதியின் அப்பாவையும் தன்னுடன் இருப்பது என முடிவு செய்தனர் மூவரும். முதலில் சரஸ்வதி அப்பா மறுக்க, சதீஸ் அவரிடம் பேசி பேசி சரி கட்டியிருந்தான்.

நிகழ்ச்சி முடிந்து கூட்டம் கலைந்து செல்ல

கதிரும் கிளம்பி நிற்கும் போது,
மூவரும் நன்றி சொன்னார்கள்.

“அட என்னை பிரிச்சி பார்க்க நினைக்கிறிங்களா? என் தங்கை வாழ்வு சிறக்க நான் தான் முன் நிற்க வேண்டும்”

“அண்ணா அண்ணிய கேட்டதா சொல்லுங்க. நீங்க தான் கல்யாணத்துக்கு கூட வரவிடலை" சரஸ்வதி கோபமாக முறைக்க,

“இமையாக்கு எல்லாம் முதலில் சரியாகட்டும் தங்கம். அப்புறம் தினமும் திருவிழா தான்"

“சரி டா பார்த்து போய்யிட்டு வா...” சரஸ்வதி அப்பாவிடம் கதிர் ஆசிர்வாதம் வாங்கிட்டு கிளம்பினான், தனது இதய தேவதையை காண. அங்கு அவள் நிலை என்னவோ?
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 19

அங்கு அனைத்தும் சுமூகமாக முடியவும் கதிர் விரைவிலேயே வீட்டுக்கு வந்தான்.

வரும் வழி முழுவதும் கதிர்

"இந்த சந்தோஷ் பார்க்க விளையாட்டு பிள்ளை போல இருந்துட்டு என்னமா பேசுரான். அவன் பேசியதை கேட்டு அங்கு இருப்பவர்களுக்கு வாயை சிறிதும் திறக்க முடியவில்லை. சதீஸ், சரஸ்வதி அதுக்கு மேல. ஒரு கலவரம் செஞ்சி கையோட எங்கேஜ்மென்ட் முடிச்சிட்டாங்க"

கதிரின் மனமோ "டேய் நீ மட்டுமென்ன சாதாரணமான ஆளா. எப்படா டைம் கிடைக்கும்னு கரெக்டா இமையாவை தூக்கிட்ட. நீ செஞ்ச அன்டர் கிரவுன்ட் வேலையை விட இது பெரிய விஷயமா" கதிருக்கும் இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருந்தது. தாலி கட்டும் கடைசி நிமிடம் வரை மனதில் திகில் என்னும் தண்டவாலம் வேகமாக ஓடிட்டு தானே இருந்தது.

'அந்த இம்சை அரசு படுத்தி எடுத்துட்டான். எப்போடா வீட்டுக்கு போவேம் எப்போ என் இமை குட்டியை கொஞ்சுவவோம்னு' ஆவலேடு வந்தான்.

அடுத்த நொடி அன்று நடந்ததை நினைத்து வருந்தினான். 'இமையாவை விட்டுட்டு வந்திருக்க கூடாது. பாவம் தங்கம் பயந்திருக்கும். ஏதோ ஆசையா சொல்ல வரேன்னு கார்டனுக்கு எல்லாம் கூட்டிட்டு போனா. என்னவா இருக்கும் ஹாப்பி பர்த்டே சொல்லவா ? இல்லை வேற எதுவுமா? இப்போ போய் கேட்டாலும் பதில் கிடைக்காது. அவளுக்கு இப்போ எல்லாம் கோபம் ஜாஸ்தி வருது. அவளையும் குறை சொல்ல முடியாது பாவம் மனதாலும் உடலாலும் இந்த திடீர் இருட்டாலும் நிறையவே பாதிப்பு இருக்கும். கொஞ்ச கொஞ்சமா தான் சரி செய்யனும்' கதிர் வீட்டை நோக்கி வேகமாக வர,

இமையா அன்று வள்ளி சொன்ன கதையை கேட்டு வருந்தினாள், "பாவம் அவங்க அம்மா. எவ்வளவு ஆசையா வளர்த்து இருப்பாங்க. இப்ப உடம்புக்கு வேற முடியலையாம். எல்லாம் என்னால இந்த குருடியால. அப்படி என்ன பெற்ற தாயை விட காதல் முக்கியமா? இல்லை இந்த காதல் வலி மட்டும் தான் கொடுக்குது. காதல் எல்லாம் பொய்... காதல் என்று ஒன்று இல்லை" இமையாவுக்கு காதலின் மீதுள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காற்றோடு கலந்தது.

வள்ளி அவளுக்கு தெரிந்ததை எளிமையாக சமைத்து வைத்தாள். இமையாவிடம் அதன் பிறகு பேச்சை வளர்க்கவில்லை அவள்.

கதிர் தூக்கத்தில் ஒரு இடத்தில் தடுமாற, சட்டென பிரேக் போட்டதில் தலையில் சிறு அடி. கார் கண்ணாடியை பார்த்து பர்ஸ்ட் எய்ட் செய்து கொண்டவன், இனி வண்டி ஓட்டினால் சரி வராது என காரை சாலை ஓரத்தில் நிறுத்தி தூங்கினான்.

வள்ளிக்கு வீட்டிலிருந்து போன் வந்தது. அந்த பக்கம் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்து நின்றவள், தனது மொத்த கோபத்தையும் இமையா மீது காட்டினாள்.

"உன்னால என் அண்ணா வாழ்க்கை போனது பத்தாதுனு என் வாழ்க்கையையும் கெடுத்துட்டியே பாவி"

வள்ளி சொல்வதை கேட்ட இமையாவின் மனம் பதறியது, "என்ன சொல்லுற? நான் என்ன செஞ்சேன் ?"

"நீ என்ன செய்யலே. என் அண்ணா வாழ்க்கை போச்சு. எங்க அம்மா நோய்வாய்பட்டு படுத்த படுக்கை ஆகிட்டாங்க. அப்புறம் இப்போ என் கல்யாணம் நின்னுடுச்சி. இப்போ உனக்கு குளுகுளுனு இருக்குமே ?"

"என்னாச்சி உன் கல்யாணம் நின்னதுக்கு நான் எப்படி காரணமாவேன்"

"பையனே குடும்பம் வேணாம்னு போயிட்டான். இந்த வீட்டு பொண்ணை எப்படி நம்பி கட்டிட்டு போறதுனு இந்த எங்கேஜ்மென்ட்டை முறிச்சிகிட்டாங்க"

"வள்ளி..."

"என் பேரை சொல்லாதே. அந்த தகுதி உனக்கு இல்லை. உன் ஒருத்தி சந்தோஷத்துக்காக, எங்க குடும்பமே அழுகனும் அப்படிதானே ? எவ்வளவு கல் மனசு உனக்கு...ச்சி"

"அப்படி எல்லாம் இல்லை. நான் ஒரு நாளும் அப்படி நினைக்கலை"

கதிர் வீட்டுக்குள் நுழையும் போதே வள்ளி கத்திட்டிருக்க, வேகமாக உள்ளே நுழைந்த கதிர்,"என்னாச்சி வள்ளி"

"இன்னும் என்ன ஆகனும்... உன் பொண்டாட்டியால என் கல்யாணம் நின்னுடுச்சி" வள்ளி விலக்கமாக சொல்ல

"வள்ளி இந்த பிரச்சனைக்கு இமையா காரணமில்லை. புரிஞ்சிக்காம பேசாத"

"என் வாழ்க்கையை விட உனக்கு இந்த குருடி சந்தோஷம் தான் முக்கியமில்லை" கதிர் ஆத்திரத்தை அடக்க முடியாமல் தங்கையை அறைந்தது, அந்த புது விட்டில் நன்றாக எதிரொலித்தது.

"என்னையே அடிச்சிட்டல. இவளால நீ பட வேண்டியது இன்னுமிருக்கு அண்ணா. நாங்க குடும்பமா செத்து போறோம். நீங்க இரண்டு பேரும் இன்னும் நிம்மதியா வாழுங்க"

"வள்ளி அப்படி எல்லாம் சொல்லாத" இமையா சொன்னாள்.

"நீ பேசாத... அண்ணாவை அடிக்க விட்டு வேடிக்கை பார்த்திட்டு இருக்க. உனக்கு தான் அறிவில்ல உங்க வீட்டில் இருக்கவங்களுக்குமா அறிவு இல்லை. இது போல ஒரு பொண்ணை எப்படி தான் நல்லா இருக்க அண்ணாக்கு கட்டிவச்சாங்களோ"

"வள்ளி நிறுத்து போதும். அதிகம் பேசுர நீ. இதை நான் உன்கிட்ட இருந்து எதிர் பார்க்கலை"

"நாங்களும் தான் அண்ணா. நீ இப்படி கல்லா மாறி இருப்பனு நினைக்கலை"

"நிறுத்து வள்ளி. முதல்ல இங்க இருந்து போ" கதிர் கர்ஜித்தான்.

"இனி இங்க இருக்க எனக்கென்ன தலை எழுத்தா ?" வள்ளி தன் பையை எடுத்துக்கொண்டு போனாள்.

ஏற்கனவே உடைந்து இருந்த இமையாவின் மனம் கருகி சாம்பலாக துவங்கியது.

"இமையா... அவ சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டா. விட்டுடுடா தங்கம்" இமையாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

கதிர் பதறிவிட்டான் "இமையா... இமையா" அவளை உழுக்க

"ஆஆ... சொல்லுங்க மாமா?"

"மாமா கூப்பிடாதடா தங்கம்" கதிர் அப்படி சொல்லவும்

"ஏன் உங்களுக்கு பிடிக்காதா ?"

"நீ ஆசையா கூப்பிட்டா பிடிக்கும்டா. ஆனா நீ பயத்தில் என்னை அப்படி அழைக்கிறது என்னால் ஏற்றுக்கொள்ள முடியல"

"அப்படி எல்லாம் இல்லை. என்னையும் அறியாமல் கூப்பிட்டுட்டேன்"

"சரி டா... சாரி நேத்து அப்படி நடந்துக்கிட்டதுக்கு. வள்ளி வந்த சந்தோஷத்தில அப்படி ஏதோ கிறுக்கு தனம் செஞ்சிட்டேன்"

"அது எல்லாம் ஒன்னும் இல்லைங்க விடுங்க"

"உன் வாய் தான் ஒன்னுமில்லை சொல்லுது. உன் கண்ணில் உள்ள வேதனை எனக்கு புரியும் இமையா"

கதிரை நினைத்து இமையாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'என் கண்கள் என்ன இவனுக்கு என் மனதை படிக்கும் கண்ணாடியா ? ஆனா, உன்னை நான் புரிஞ்சிக்கலையே கதிர். உன் குடும்பத்துக்கு நீ வேணும்'

"அப்படி எல்லா ஒன்னுமில்லை. எனக்கு பசிக்குது அதான் கண்ணு சோர்வா இருக்கு"

"இல்லை உனக்கு இப்போ பசிக்கலை. பசிச்சா எச்சையா முழுங்கிட்டிருப்ப. எப்படி என்னிடம் சாப்பாடு போட சொல்லி தொந்தரவு செய்வதுனு தயங்கி நிற்ப. இது போல கண்ணுல வலி தெரியாது உனக்கு"

'என்ன இவன் எனது ஒவ்வொரு செயலையும், முக பாவனையையும் இப்படி மனதில் படம் பிடித்து வைத்து இருக்கான்'

"உன்னோட ஒவ்வொரு அசைவும் நான் அறிவேன் இமையா. வள்ளி ரொம்ப செல்லம்டா. அவ வெடுக்குனு பேசுவா ஆனா மனதில் எதும் வச்சிக்க மாட்டா"

"சரிங்க..."

"இமையா எனக்கு புரியுது உன் நிலமை நேத்து..." கதிர் துவங்கும் போது

"கதிரா வேண்டாம்... நான் நல்லா தான் இருக்கேன். நீங்க கவலை படாதிங்க. நான் நல்லா இருக்கேன். எனக்கு ஒன்னும் இல்லை. மன கஷ்டம் இல்லாத மனிதர்கள் யார் இருக்கா சொல்லு. நம்ம வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் கடந்து போக தான் வேண்டும்"

இமையா கண்ணில் அப்படி ஒரு தெளிவை பார்த்ததும் தான், கதிரின் மனம் என்னும் குழந்தை தன் அழுகையை நிறுத்தியது.

"சரி இமை... வா"

"எங்கே கூட்டிட்டு போறிங்க ?"

"தோட்டத்துக்கு இது வரை போகாத இடத்துக்கு"

"அப்படி ஒரு இடம் இருக்கா கதிரா..." இமையா ஆச்சரிய கலந்த குரலில் வினவ

"இருக்கு இமையா.. ஒரு நிமிசம் இரு தங்கம் வந்துடுறேன்" கதிர் அழுக்கு கூடையையும் துணி துவைக்கும் பவுடர் சோப்பு பிரஸ் என்று துணி துவைக்க தேவையான அனைத்து ஆயுதத்தையும் எடுத்து வந்தவன், இமையாவை ஒரு கையில் பிடித்து, ஆயுதங்கள் கொண்ட கூடையை ஒரு கையிலும் எடுத்து போனான்.

"எங்க கூட்டிட்டு போறிங்க..."

"இருடா சொல்லுறேன். எதுக்கு இவ்வளவு அவசரம். பொறுமை தங்கம் பொறுமை"

இமையாவை கதிர் ஒரு கல்லின் மேல் உட்கார வைத்துவிட்டு, தண்ணீரில் பவுடர் கலக்க

"கதிர் நான் கண்டு பிடிச்சிட்டேன்"

"அப்படியா! இமை எதை கண்டு பிடிச்சிங்க"

"நீங்க துணி தான துவைக்க போறிங்க"

"அட .. என் அறிவாளி பாப்பா கண்டு பிடிச்சிட்டா போல. சரி சொல்லு பார்ப்போம்"

"நீங்க துணி தான துவைக்க போறிங்க பவுடர் வாசம் வருது"

"அதே தான்..."

"ஏன் கையில் துவைக்கறிங்க. மெஷினில் தானே இத்தனை நாள் துவச்சிட்டு இருந்திங்க. மெஷின் ரிப்பேர் ஆகிடுச்சா"

"இல்லை... அன்னைக்கு நீ போட்டு இருந்த வொயிட் டிரஸ் ரொம்ப அழுக்கா ஆகிடுச்சா, கை அருத்துகிட்ட ரத்த காயம். அதுக்கு அப்புறம் ஏற்பட்ட சேறு கறைனு அதோட கலரே மாறிடுச்சி. அதான் கையில துவைக்கலாம்னு இருக்கேன்"

"சரிங்க... துவைங்க. நான் எதாவது ஹெல்ப் செய்யட்டா ?"

"தாராலமா..." கதிர் இமையாவை சோப்பு நுரை உள்ள பக்கெட் அருகே, உட்கார வைத்தவன்.

"இந்தா இந்த சோப்பு தண்ணீல விளையாடிட்டு இரு. அதுக்குள்ள நான் துவச்சிடுறேன்"

இமையா இரண்டு தினங்கள் நடந்த நிகழ்வுகளில் மூழ்கியவள், அந்த சோப்பு தண்ணீரில் கையை ஊற வைத்து யோசனையில் இருப்பதை பார்த்த கதிர்

துணியின் பாதி அழுக்கை நீக்கியவன் மீண்டும் ஊறவைத்தான். 'இது ஓரே நாளில் போகாது. நாளைக்கு பாத்துக்கலாம்' ஊறவைத்ததை மோட்டார் ரூமில் வைத்தான்.

"இமையா... யோசிச்சி யோசித்து இந்த மூளையை சூடேத்தியது போதும்"

கதிர் குளிர்ந்த தண்ணீரை எடுத்து இமையா முகத்தில் அடிக்க, இமையா பக்கத்தில் இருந்து நுரையை எடுத்து கதிர் முகத்தை தேடி பிடித்து பூச, அரை மணி நேரத்தில் இருவரும் சேர்ந்து அந்த இடத்தை சேறும் சகதியுமாக மாற்றி இருந்தார்கள்.

இப்படியாக கதிர் இமையா மனதை மாற்றி இருந்தான்.

இமையா இப்போது எல்லாம் பயப்படாமல் காலை எடுத்து வைத்து நடக்க துவங்கி இருந்தாள். இன்று கதிர் சத்தம் வரும் திசையில் இவளே ஓடி அவனை பிடித்தாள்.

கதிர் அவளுக்கே தெரியாமல், அவளுக்கு பிராக்டிஸ் கொடுத்தான்.

இமையாவின் முகத்தில் மகிழ்ச்சி மட்டும் தான். குழம்பிய குட்டையாக இருந்த மனது, இப்போது தெளிவாக இருந்தது.

இந்த தெளிவு பிடிக்காத ஒரு முறுக்கு மீசை. உறவுக்கார பையனை புல்லட் வண்டி ஓட்ட சொல்லி பின்னே உட்கார்ந்து இமையாவையும், கதிரையும் காதால் கேட்க முடியாத அளவுக்கு திட்டி கொண்டு வந்தார், இமையாவின் சிரிப்பை மொத்தமாக பறிக்க.
 

Bindusara

Well-known member
Wonderland writer
விழிமொழி: 20

கதிர் இமையாவை சமாதானம் செய்ய எவ்வளவு முடியுமோ அவ்வளவு காதல் வசனங்கள் மொக்கை காமெடி சொல்லி, படாத பாடு பட்டு சமாதானம் செய்து ஒரு ஐந்து நிமிடம் கூட முடியவில்லை.

கதிரின் தோளில் சாய்ந்த, இமையா மனதில் ஆயிரம் கேள்விகள் அவளை சுற்றி வந்தது.

வாசற் கதவு உடையும் அளவுக்கு ஒரே சத்தம்.

"ஏங்க யாருங்க காலிங் பெல் அடிக்காம இப்படி தட்டிட்டு இருக்கிங்க"

"இருடா பார்த்துட்டு வரேன்"

கதிர் கதவை திறந்ததும், அறை சத்தம் தான் இமையாவுக்கு கேட்டது.

"கதிரா? என்ன சத்தம்... கதிரா" இமையா சத்தம் வரும் திசையில் கையை நீட்டி வர, அங்கிருந்த சேர் தடுக்கி கீழே விழுந்தவள், வேகமாக எழுந்து சத்தம் கேட்கும் திசைக்கு வருவதற்குள்

கதிரின் அப்பா முறுக்கு மீசை அடித்து துவைத்துவிட்டு தான் பேசவே துவங்கினார்.

"ஏன்டா குடும்பம் வேணாணு ஓடி வந்த பய நீ... எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணு மேல கை வச்சி இருப்ப. உன் வாழ்க்கை கெடுத்துக்கிட்டது பத்தாம அவள் வாழ்க்கையும் கெடுத்துட்ட"

"ப்பா... அவ பேசினது ரொம்ப தப்புப்பா புரிஞ்சிக்காம பேசிட்டிருந்தா"

"அதுக்கு நீ அடிப்பியடா, என் பொண்ணோட வாழ்க்கைய கெடுத்துட்டு இங்க நீ சந்தோஷமா கூத்தடிச்சா... அவளுக்கு இனிக்குமா ?" கதிரால் எதும் பேச முடியவில்லை.

"ச்சி... உன்னை பெத்ததுக்கு நான் சும்மா இருந்திருக்கனும்"

"இருக்க வேண்டியது தானே.. நானா கேட்டேன்"

"வாய் நீளுது ..." அந்த முறுக்கு மீசை கடைசியாக கதிரை ஒரு அறை விட்டுட்டு கிளம்பினார்.

இமையா தட்டு தடுமாறி கதிர் பக்கம் வந்து "மாமா... மாமா " காற்றில் கதிரை துலாவினாள்.

"இமையா ஒன்னுமில்லை. அப்பா தான் வள்ளியை அடிச்சதுக்கு வந்து சத்தம் போட்டுட்டு போறாங்க"

"அடிக்கர சத்தம் கேட்டுச்சே... ரொம்பா அடிச்சிட்டாங்களா? எங்க அடிச்சாங்க" தனக்காக பதறும் இமையாவை அவனது கண்கள் ரசித்தது.

"ஏங்க... ரொம்ப வலிக்குதா. அமைதியா இருக்கிங்க"

"இல்லை இமையா.. வலிக்கலை ரொம்ப ஹாப்பியா இருக்கேன் தங்கம்"

"ஏங்க... கிண்டல் செய்றிங்க. என்னா ஆச்சின்னு சொன்னா தானே தெரியும். எனக்கு கண்ணு தெரியலேனு இன்னைக்கு தான் நிறைய பீல் செய்யரேன்" இமையா காற்றில் துலாவி அவனை பிடித்து முகத்தை தொட்டு பார்த்தவள் பதறி விட்டாள்.

"என்னங்க இவ்வளவு பெரிய கட்டு"

"அது நேத்து தூக்கத்துல கொஞ்சம் ஸ்லிப் ஆகிட்டேன்டா"

"என்கிட்ட ஏன் சொல்லல? அப்போ நான் யாரோ தானே" இமையாவிடம் இருந்து ஒரு விம்மல் வெளி வந்தது.

"இமை அப்படி இல்லைடா.. எனக்கு உன்னை பதற வைக்க விருப்பமில்லை" இமையாவை அணைத்து நெற்றியில் முத்தம் பதிக்க சென்ற கதிரின் முறுக்கு மீசை தந்தை திரும்ப வந்தார்.

"ச்சி...." பின்னிருந்து சத்தம் வரவும், கதிர் இமையாவை விட்டு பிரிய,

"சூடு சொரணை கெட்ட ஜென்மம்" என அவர் முனுமுனுக்க, இமையாவின் உடல் கூசி போனது முறுக்கு மீசையின் குரல் கேட்டு.

"அப்பா இப்படி எல்லாம் பேசாதிங்க" கதிருக்கு உச்சிக்கு ஏறியது கோபம்.

"என்னாடா… மானம் கெட்ட கோபம் வருது. நான் வாங்கி தந்த காரை எதுக்குடா எடுத்துட்டு வந்த. சாவியை கொடுடா" கதிர் இமையாவுக்காகதான் கார் எடுத்து வந்தான். பைக்கில் வர அவளுக்கு பயமா இருக்கும் என்று.

சிறிது நேரம் யோசித்தவன், கார் சாவியை எடுத்து மீசையிடம் கொடுத்தான்.

கதிரின் கையில் இருந்து வெடுக்கென்று பிடுங்கி சென்றவர், அவர் வந்த பைக்கை அவன் சொந்தக்கார பையனிடம் கொடுத்துவிட்டு,
கார் எடுத்து கொண்டு புறப்படும் தந்தையை வெற்று பார்வை பார்த்தான் கதிர்.

இமையா காதுகளில் அவர் சொன்ன "ச்சி..." ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.

கதிர் மீசை கிளம்பியதும் உள்ளே வந்து இமையாவை பார்த்தவன், கண்களில் உள்ள ஈரத்தை உள் இழுத்து கொண்டான்.

"இமை மா"

"மாமா தூங்கனும்" கதிர் இத்தனை மாதத்தில் இமையாவின் மன நிலையை புரிந்து வைத்திருந்தான்.

"இமையா மாமா கூப்பிடாதடா ? வலிக்குது. உன்னோட அந்த மாமா என்னை தள்ளி வைக்குது இமையா. என்னையும் புரிஞ்சிக்கோ. இமையா ஐ லவ் யூ. தூக்கத்தில் கூட உன்னை தான் தேடுது என் இதயம். உன்னை பாத்துக்கனும் முக்கியமாக சந்தோஷமா வச்சிக்கனும்னு எவ்வளவு மென கெட்டிருக்கேன் தெரியுமா ?... ஆனா உன் மனசில் இடம் பிடிக்க நான் செய்யும் முயற்சியில் ஒரு படி ஏறினால் நூறு படி சறுக்க வச்சிடறாங்க, என்னை சுத்தி இருக்கவங்க. இந்த காதல் பரிதாபத்தால வரலை இமையா. ஆறு வருசமா உனக்கு தெரியாம பின்னாடி சுத்திட்டு இருக்கேன். பிளீஸ் இமையா நான் ரொம்ப டவுன் ஆகிட்டேன். இப்ப உன்கிட்ட இது கேட்கறது சரியானு தெரியலை. ஆனா ஐ நீட் யூவர் லவ்.. ஐ நீட் யூ நவ்" இமையாவை இறுக அணைத்து கொண்டான்.

இமையா கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. கதிர் தனது காதலை இந்த ஒரு நிலையில் சொல்லுவனென்று. பாசத்தை தான் அடாவடியாக காட்டியவன், காதலையும் அதே போல காட்டினான்.

இமையா அமைதியாக இருந்தாள். அவனை விலக்கவுமில்லை, ஏற்பது போல அவனை கட்டி அணைக்கவுமில்லை.

இமையாவின் இந்த ஒட்டாத தன்மை ஊசியால் கதிர் மனதை குத்தியது.

வாழ்க்கை தொடங்குவதற்கு இருமனமும் ஏற்றால் தான் சிறக்கும். இமையாவிடம் இருந்து பிரிந்தவன் " இமையா சாரி... தெரியாம கேட்டுட்டேன்"

"கதிரா… கொஞ்ச டைம் வேணும். நான் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தேன்"

"சரி இமையா… காத்திட்டிருக்கேன். தூங்கலாமா ?"

மீண்டும் இமையாவுக்கு சேவகனாக மாறியவன், அவளுக்கு தேவையானதை எடுத்து வைத்துவிட்டு படுக்க சொன்னான்.

இருவரின் மனதிலும் ஒரு இதம் பரவத்தான் செய்தது. அழகான அந்த இரவில் ஒரு அமைதி. கதிரின் இந்த அமைதி இமையாவுக்கு சுத்தமாக பிடிக்கலை.

"கதிரா... தூங்கிட்டியா ?"

"என்னை எப்போ முதலில் பார்த்திங்க. அதை முதலில் சொல்லுங்க"

"இப்போ பாப்பா தூங்குமாம். நாளைக்கு வேலை முடிச்சிட்டு மதியம் சொல்லுவேனாம்"

"சரி..." இமையாவும் முடிந்த அளவுக்கு கசப்பான நினைவுகளை ஒதுக்கி வைத்தவள், தூங்கி எழுந்தாள். மற்ற நாளை விட அந்த நாள் இமையாவின் மனம் புத்தம் புதிய மலராக மலர்ந்தது.

மதியம் வரை காத்திருக்க துவங்கினாள்.

இடையில் கடவுளிடம் வேண்டவும் மறக்க வில்லை. 'ஒரே ஒரு முறை கதிரை நான் பார்க்கனும் அதுக்கு அப்புறம் பார்வை இல்லைனாலும் பரவாயில்லை' கதிர் மீது அளவுகடந்து காதல் என்னும் அழகிய பூங்கொடி இமையா மனதை சூழ்ந்திருந்தது.

பெரிய காத்திருப்புக்கு பிறகு மதியமும் வந்தது. சாப்பாட்டு தட்டோடு இமையா அருகில் வந்து அமர்ந்தவன்

"இமை சாமப்பிடலாமா"

"எனக்கு ஒன்னும் வேண்டாம்" இமையா சிறு பிள்ளை போல கைக்கட்டி முகத்தை வேறு புறம் திருப்ப

"என்னாச்சி என் தங்கத்துக்கு"

"நான் கேட்டது என்ன? நீ இப்போ சோறு பாத்திரம் தூக்கிட்டு வந்து நிக்கறது என்ன ?"

"என்ன கேட்ட... சாப்பாடு தான் முக்கியம். முதலில் சாப்பிடு"

"இல்லை எனக்கு வேண்டாம்"

கதிர் தட்டை அருகில் வைத்து விட்டு, "சரி என்ன விசயம் சொல்லு"

"உன் லவ் ஸ்டோரி சொல்றேன்னு சொன்ன இல்லை"

"இல்லை… நம்ம லவ் ஸ்டோரி"

"அதெப்படி நீ மட்டும் தானே லவ் செஞ்ச. எப்படி நம்ம லவ் ஸ்டோரி? "

'நம்ம லவ் ஸ்டோரி தான் இமை குட்டி' என மனதில் நினைத்தான் கதிர்.

கதை சொல்லுறேன் என்று தொடங்கி இருவரின் பேச்சும் வேறு திசைக்கு சென்றது.

உணவு முடித்ததும் இருவரும் தோட்டத்துக்கு போய் மலர்ந்திருக்கும் மலர்களை பற்றி கதிர் சொல்ல

"கதிர் எனக்கு தொட்டு பார்க்கனும் போல இருக்கு"

அவளது கையை எடுத்து மலர்களில் வைத்தான்.

அதனின் மெல்லிய ஸ்பரிசம் பட்டதும், இமையா கைகளை தன் பக்கம் இழுத்துக்கொண்டாள்.

"என்னாச்சி இமை... எதாவது பூச்சி கையில் பட்டுச்சா" அவளது கையை எடுத்து சோதித்தான்.

"இல்லை கதிரா... ரொம்ப சாப்ட்டா இருக்கு அதான்"

"உன் மனசு போல ரொம்ப சாப்ட்" அவளது பறக்கும் முடியை ரசித்துக்கொண்டே சொல்ல

"கதிரா திரும்ப தொட்டு பாக்கட்டா" ஆசையாக கேட்டாள் இமையா குழந்தை தனம் மின்னும் கண்களோடு.
 
Status
Not open for further replies.
Top