கீழே கிடந்தவனை கண்டு அஷ்டகோணலாக முகத்தை மாற்றிய ராஜன், "இவனை எதுக்குடா இங்க கொண்டு வந்தீங்க?" என்று கர்ஜனையுடன் வினவ, அடியாள் ஒருவன் "பாஸ் எவ்ளோ அடிச்சாலும் சாக மாட்டிங்கறானு விக்ரம் சார் கிட்ட சொன்னோம்.. அவருதான் இங்க கொண்டு வந்து போட சொன்னாரு.." என்றான் பவ்யமாக..
"அவ்ளோ சீக்கிரம் இவன் சாக மாட்டான் போல.. ஏன்னா அந்த போலீஸ்காரி மேல அம்புட்டு லவ்வு.." என்று நக்கலாக கூறிய ராஜனின் கூற்றிற்கு அடியாட்களும் சிரிப்பை பதிலாக தந்தனர்..
யோசனையுடன், "ஏன்டா உயிர் போற கோலத்துல இவனை அந்த போலீஸ்கார பார்த்தா எப்படி இருக்கும்.." என்று ராஜன் வினவ, அவரின் கேள்விக்கு பதிலாக, "சூப்பரா இருக்கும் பாஸ் இவன்மேல அந்த அம்மாவுக்கு ஏகப்பட்ட லவ்வு கொட்டி கிடக்குது விக்ரம் சார் சொன்னாரு.. ஈவு இரக்கமே இல்லாம எங்களைய எப்படி போட்டு அடிச்சுருக்கும் அந்த அம்மா.. அது அழுகறதை நாங்களும் பார்க்கனும் பாஸ்.." என்றான் ஒருவன்..
"உங்க ஆசையை எதுக்கு கெடுக்கனும்.. தாராளமா போய் கூட்டிட்டு வாங்கடா.." என்று நன்றாக சாய்ந்து அமர்ந்தவாறு ராஜன் கூறியதும், "இதோ பாஸ்" என்றவாறு ஒருவன் மகியை அழைத்து வர சென்றான்..
தனுவை காணாமல், "தனு எங்கடா ரிதிமா.." என்று மகி கேட்டதும், "அக்கா அவங்க அவங்க.." என்று மேலும் கூற முடியாமல் ரிதி தேம்ப தொடங்கிய நேரம், கதவை திறந்து கொண்டு வந்த ஒருவன், "வாங்கமா வாங்க உங்களுக்காக எங்க பாஸ் வெய்ட்டிங்.." என்று மகியை அழைக்க, அவள் பார்த்த பார்வையில் அந்த அடியாளுக்கு அன்று மகியிடம் வாங்கிய அடி நியாபகம் வந்தது போலும் அவனின் கரங்கள் தானாக மேலெழுந்து கன்னங்களை தாங்கி கொண்டது..
"அட ஆமால்ல.. அதையை நியாபகப்படுத்தி விட்டுட்டு இருங்க அப்பதான் எங்களுக்கு நியாபகத்துல நிற்கும்.." என்று நிகிலனும் சற்று நக்கலுடன் மொழிந்திட, "இருடா உங்களைய அப்பறம் கவனிச்சுக்கறேன்.." என்று மனதில் கருவி கொண்டவன், "மேடம் உங்களைய தான் முக்கியமா கூட்டிட்டு வர சொன்னாரு.." என்று மகியை அழைத்தான்..
முன்னெச்சரிக்கையாக ரிதியோ, "இல்ல நாங்களும் வர்றோம்.." என்று மகியின் கையை பிடித்து கொள்ள, "எனக்கு எதுவும் ஆகாது ரிதிமா.. இனி என்கிட்ட இருந்து எடுக்கறதுக்கும் ஒன்னும் இல்ல.." என்று விரக்தியின் சாயலில் வந்து விழுந்தது மகியின் வார்த்தைகள்..
அறையை விட்டு வெளியில் வந்ததுமே காரணமின்றி மகியின் மனது படபடவென அடித்து கொள்ள, ஒரே நேரத்தில் மொத்த உறவுகளையும் தொலைத்து இருந்தவளுக்கு இப்போது தன்னை நிதானபடுத்தி கொள்ளவே சிரமமாக இருந்தது..
ராஜனின் காலடியில் ரத்த வெள்ளத்தில் கிடப்பவனை யாரென்று கண்டு கொண்ட மகியின் கருமணிகள் ஏகத்துக்கும் விரிந்து அதிர்ச்சியை தத்தெடுத்து கொண்டதோடு கால்களும் அதற்குமேல் நகர மறுத்தது..
"என்ன மேடம் உன்மேல அம்புட்டு லவ்வு போல இவனுக்கு? அடிச்சாலும் சீக்கிரம் போக மாட்டிங்கறான்.." என்று ராஜனின் நக்கல் கலந்த குரலில் தன்னை மீட்டு கொண்ட மகி, கனத்த மனதுடன், "கிருஷ்.. நான் உன் மகிடா.. நான்தான் அப்பவே சொன்னனே இதுல தலையிடாதேனு ஏன்டா இப்படி?" என்று ரத்தம் படிந்த அவனது கன்னத்தை தாங்கியவளின் கண்ணீரோ இமையை தாண்டி வழிந்தோடியது..
மகியின் கலங்கிய முகத்தை கண்டு, "ம்ம்ம்ம் மேடமுக்கும் அம்புட்டு லவ்வு தான் போல.." என்று ராஜன் கிண்டலடிக்க, அவரின் குரலில் சட்டென்று நிமிர்ந்து விழி தெறிக்கும் அளவிற்கு அவரை முறைத்து பார்த்த மகி, "இதுக்கு எல்லாம் கண்டிப்பா நீ அனுபவிப்பே.." என்றாள் சீற்றலுடன்..
இதற்கும் சிரிப்பையே பதிலாக குடுத்த ராஜன், "அதைய அப்ப பார்த்துக்கலாம் மேடம்.. எனக்காக நீங்க கவலைபடறதை பார்த்து அப்படியே எனக்கு புல்லரிக்குது.." என்று மேலும் மேலும் மகியின் சினத்தை அதிகப்படுத்தி ரசித்திருக்க, மேடிட்ட வயிற்றுடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த சில பெண்கள் "ச்சீ இவரெல்லாம் மனுசனா?" என்ற ரீதியில் முகத்தை சுழித்தனர்..
*******
ஹாலில் திமிராக அமர்ந்திருந்தது ராஜன் தான்.. அன்று வீட்டை விட்டு வரும் போது தான் மகி அவரை பார்த்தது.. அதன்பிறகு இப்போதுதான் காண்கிறாள்.. பணச்செழுமையில் ஊறியிருப்பதை போன்ற தோற்றம்.. தான் தொலைந்த பிறகுதான் நன்றாக வாழ்ந்திருப்பார் போலும் என்று நினைத்த மகி பெருமூச்சை வெளியிட்டாள்..
இவரின் வரவு எதற்கென்று நன்றாகவே புரிந்து போனது மகிக்கு.. "ஹே மகி இது யாரு.." என்று ஹஸ்கி குரலில் தேவ் வினவ, அவனுக்கு பதிலாக " என் டாடி.." என்று சலிப்புடன் கூறியவள், "சரி வா நம்மளும் போவோம் நம்ம வீட்டுல நம்ம எதுக்கு வெளில நிற்கனும்.." என்றவாறு உள்ளே சென்றாள்..
எப்போதும் போன்று ஜெகனோ, "அம்மா பாப்பா வந்துட்டா பாருங்க.. போய் குடிக்க ஏதாவது கொண்டு வாங்க.." என்று தன் அன்னையை அதட்ட, முதலிலே சங்கரனின் ஆளுமையை கண்டு பயத்தில் வெடவெடத்து போயிருந்த காயத்ரி, இப்போது அவரின் பார்வை தன்னை பொசுக்குவதை உணர்ந்து அமைதியாக தலையை குனிந்து கொண்டார்..
"என் பொண்ணை வேலைக்கு அனுப்பிட்டு நீங்க வீட்டுல உக்காந்து தின்னுட்டு இருக்கீங்களா?" என்று கர்ஜனையுடன் சங்கரனின் குரல் அந்த வீடு முழுவதும் எதிரொலிக்க, பேச வந்த ரகுபதியை தடுத்த மகி, "நான் என் குடும்பத்துக்கு உழைச்சு போடறேன் அதுல உங்களுக்கு என்ன வந்துச்சு.." என்றாள் பட்டென்று..
மேலும் கோவமாக பேச எத்தனித்த சங்கரனிடம், "ஷ்ஷ்ஷ் நீங்க அதிகாரம் பண்றதுக்கு இது ஒன்னும் உங்க வீடு கிடையாது.. அதே மாதிரி எங்களைய கேள்வி கேட்கவும் எந்த உரிமையும் கிடையாது.. வந்த விசயம் என்னவோ அதைய சொல்லிட்டு கிளம்பற வழியை பாருங்க.." என்று அலட்சியமாக மகி கூறிட, வந்த கோவத்தை கட்டுபடுத்திய சங்கரன், "உன்னைய நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு போலாம்னு தான் வந்துருக்கேன்.." என்றார் எங்கையோ பார்த்தவாறு..
அவரை நம்பாத பார்வையில் ஆராய்ந்தவாறு, "இத்தனை நாள் வராம இப்ப மட்டும் எதுக்கு வந்துருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா?" என்ற கேள்வியை தொடுக்க, இவளிடம் பேசினால் முடியாது என்றுணர்ந்த சங்கரன், "நான் சொன்ன மாதிரி என் பொண்ணை வளர்த்ததுக்கு நன்றி.. இப்ப என் பொண்ணை அழைச்சுட்டு போலாமா?" என்று ரகுபதியிடம் வினவினார்..
அவரும் "கண்டிப்பா சார் நீங்க உங்க பொண்ணை கூட்டிட்டு போலாம்.. நான் பேசறேன்.." என்றவர், மகியிடம் "என்கூட வா பாப்பா.." என மகியை அழைத்து கொண்டு சென்றார்..
"என்னப்பா இதெல்லாம்? என்னால அவருகூட போக முடியாது.." என்று முடிவாக மகி மறுக்க, "பாப்பா இவருக்காக வேணாம் அங்க உன் அம்மாவும் ரித்திகாவும் பாவம் தானே.. இவரு மேல இருக்கற கோவத்துல அவங்களையும் பார்க்காம ஏன் மறுக்கறே.. அவங்களுக்காக அங்க போய்ட்டு வாடா தங்கம்.." என்று கெஞ்சலுடன் மொழிந்த தன் தந்தையை விழிகளை உருட்டி கொண்டு பார்த்தாள்..
பின்பு என்ன நினைத்தாளோ, "நான் அங்க போறேன்.. ஆனா மறுபடியும் இங்க தான் வருவேன்.. எப்பவும் எனக்கு இதுதான் நம்ம வீடு.." என்ற மகி கிளம்ப எத்தனிக்க, தன் மகளுக்கு தெரியாமல் கலங்கிய கண்களை துடைத்து கொண்டார் அந்த அன்பு தந்தை..
மகி வெளியில் வந்ததும் "போலாமா?" என்று சங்கரன் கேட்க, அவளோ அவரிடம் பதிலுரைக்க விரும்பாமல் ஜெகனிடம், "அண்ணா என்னைய கூட்டிட்டு போ.." என்றிட, "எதுக்கு அவங்களுக்கு தேவையில்லாத வேலை வெக்கற? ஒழுங்க என்கூட வா.." என்றார் சிடுசிடுவென..
இதை கேட்டதும் ஜெகன் தான் பொங்கி விட்டான்.. "ஹான் என்ன சார் இப்படி பேசறீங்க.. என் தங்கச்சி என்ன சொன்னாலும் நான் செய்வேன்.. இவ்வளவு அக்கரை இருந்துருந்தா காணாம போனப்பவே தேடி கண்டுபிடிச்சுருக்க வேண்டியது தானே? இப்ப பேச வந்துட்டீங்க.." என்றவன், "அப்பா நான் பாப்பாவை விட்டுட்டு வர்றேன் பத்ரமா இருங்க.." என்று கார்சாவியை எடுத்து கொண்டு மகியுடன் கிளம்பினான்..
"சாரி சார்.. அவன் இப்படிதான்.." என்று சங்கடத்துடன் ரகுபதி மன்னிப்பை கோர, அவரை தீயாய் முறைத்து விட்டு விறுவிறுவென சென்றார் சங்கரனும்..
"இருடா நானும் வர்றேன்.." என்று சென்ற தேவ் அடுத்த பத்து நிமிடத்தில் கிளம்பி வந்திருக்க, "டேய் அவரை முன்னாடி போக சொல்லு.. நான் பாலோ பண்ணிக்கறேன்.." என்று ஜெகன் கூறியதும், "ஏன் நீங்க சொன்னா உன் ஈமேஜ் குறைஞ்சு போய்ருமா?" என்று தேவ் வினவினாலும், "ஹலோ சார் நீங்க முன்னாடி போங்க.. நாங்க உங்களைய பாலோ பண்ணிக்கறோம்.." என்று அவருக்கு கேட்கும்படி கத்தினான்..
சங்கரனின் கார் முன்னே செல்ல அவரை பின்தொடர்ந்து ஜெகனும் சென்று கொண்டிருக்க, "என்ன பிசாசே ரொம்ப அமைதியா வர்றே?" என்று அங்கு நிலவிய அமைதியை கலைத்தான் தேவ்..
"ஒன்னுமில்ல.. நான் வர்றதுக்குள்ள அந்த கடத்தல் கேஸ்ல இவங்களுக்கு பின்னாடி யாரு இருக்கானு விசாரிச்சு வெய்யு.. ஏதாவது ரொம்ப முக்கியம்னா என்னைய கூப்பிடு.." என்ற மகி வழக்கு விசயத்தை பற்றி ஜெகனிடமும் கூறியபடி வந்தாள்..
இவர்கள் இப்படியிருக்க சங்கரனோ, "ஹலோ சார் நீங்க சொன்னபடி என் பொண்ணை என்கூட கூட்டிட்டு வந்துட்டேன்.. இந்த வழக்குல மட்டுமில்ல வேலைல இருந்தே விலக வெக்கறது என் பொறுப்பு.." என்று ராஜனிடம் பேசியவாறு வந்தார்..
பலகோடிகளை விழுங்கி பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பு சங்கரனின் கார் நிற்க, வாசலிலே மகியை இறக்கி விட்ட ஜெகன், "நம்ம வீட்டுக்கு வரனும்னு தோணுனா போன் பண்ணுடா அப்பவே நான் வந்தறேன்.." என்றான் கனிவுடன்..
"ம்ம்ம்ம்" என்று கூறிய மகிக்கு ஏனோ வெறுமை தோன்றுவது போல் உணர்வு.. "பார்த்து போங்க அண்ணா.." என்று குரல் கம்ம கூறியவள் திறந்திருந்த கேட்டினுள் நுழைய, அவள் சென்றதும் தான் காரை கிளப்பிய ஜெகனுக்கும் அதே வெறுமை உணர்வு..
"டேய் இப்ப என்ன ஆச்சுனு அண்ணனும் தங்கச்சியும் இம்புட்டு வருத்தப்பட்டுட்டு இருக்கீங்க.. வேணும்னா பாரு இன்னும் ரெண்டு நாள்.. ரெண்டே நாள் மகி நம்ம வீட்டுல இருப்பா.." என்று கெத்தாக வசனம் பேசிய தேவ்வை "அடங்குடா" என்று முறைத்தான் ஜெகன்..
மேலும் அவனே, "என்னனு தெரில தேவ்.. பாப்பா இல்லாம எல்லாமே வெறுமையா தோணுது.. சின்ன வயசுல என்கூட பிறந்த மகி அண்ணா அண்ணானு சுத்துவா.. அவ போனதும் என்கூட பிறக்கலனாலும் நம்ம மகி எதுக்கெடுத்தாலும் அண்ணா அண்ணானு என்னைய தான் தேடுவா.."
"முதல் தடவை என்னைய பார்த்தப்ப எப்படி இருந்தாளோ இப்ப வரைக்கும் அப்படியே தான்டா இருக்கா.. மகியோட அன்புக்கு முன்னாடி மத்தது எல்லாம் தூசா தான் தெரியுது.. அவ இல்லனா நாங்க யாருமே இல்லனு உனக்கும் தெரியும்.." என்றான் சுருதியே இல்லாத குரலில்..
மகியின் மீது இவர்கள் எத்தகைய அன்பை வைத்துள்ளார்கள் என்பதை தேவ்வும் நேரடியாகவே பார்த்துள்ளானே!! "இவ்வளவு நாள் வராம தேவைனா மட்டும் வந்துருக்காரு பாரு.. அப்படியே இருந்துருக்க வேண்டியது தானே.." என்று சங்கரனை மனதினுள் வசை பாடியவாறு இருந்தான் தேவ்..
தன்னுடன் எதுவும் பேசாமல் நடந்து வந்த மகியிடம், "இதுதான் நம்ம வீடு ரிதன்யா.. எப்படி இருக்கு.." என்று சங்கரன் கேட்க, அவரையும் அந்த வீட்டையும் பார்த்த மகிக்கு எரிச்சல் தான் வந்தது..
அவளின் மௌனத்தை தனக்கு சாதகமாக எடுத்து கொண்ட சங்கரன் வீட்டை கட்டியதை பற்றி பெருமையாக கூறியபடி வர, அதையை காதிலே வாங்காமல் அவரை கடந்து விறுவிறுவென வீட்டினுள் நுழைந்தாள்..
யாரோ வரும் அரவம் கேட்டதும் கிச்சனில் இருந்து வெளியில் வந்த மேகலை மகியை கண்டு அதிர்ச்சியில் உறைந்தவர், பின்பு கேவலுடன் "ரிதுமா.." என்று ஓடி சென்று மகியை அணைத்து கொண்டு கண்ணீர் சிந்தினார்..
இவரின் பாசத்தில் துளிர்த்த நீர்துளிகளை உள்ளிழுத்து கொண்டு மகி நின்றிருக்க, "எங்கடா போனே? ஏன்டா இப்படி பண்ணுனே? உன்னைய காணோம்னு இத்தனை வருசம் எப்படி துடிச்சேன் தெரியுமா? எங்கமேல என்னடா கோவம்.." என்று அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பியவரை வெற்று பார்வையில் நோக்கினாள் மகி..
தாயின் சத்தத்தில் வெளியில் வந்த ரிதியும் தன் தமக்கையை கண்டதும் அதீத சந்தோசத்தில் தேம்பலுடன் ஓடி வந்து "அக்கா" என்று அவளை அணைத்து கொள்ள, சிறுவயதில் தன்னிடம் எப்போதும் செல்ல சண்டையிடும் தங்கையை பார்த்த மகிக்கும் இதயம் விம்மியது..
"என்மேலயும் உனக்கு கோவமா? அதான் எங்களைய விட்டு போய்ட்டியா?" என்று அழுகையுடனே கேட்கும் ரிதியிடம் மகியும் என்னதான் சொல்வாள்! அச்சிறு வயதில் வீம்புடன் வீட்டை விட்டு சென்றது இவளின் தவறு என்று மகியும் நன்கு அறிவாளே!!
பதிலேதும் பேச விரும்பாமல் ஓரமாக நின்றிருந்த சங்கரனை வெறுப்புடன் நோக்கிய மகி, "ப்ளீஸ் மாம் அதைய பத்தி கேட்காதீங்க.. இங்க இருந்த மாதிரி தான் இப்பவும் இருக்கேன்.. எனக்கு எந்த குறையும் இல்லை.." என்றாள் சமாதானமாக..
அதன் பிறகு மேகலையும் எதுவும் கேட்டு கொள்ளாமல் தன் மகளுக்கு விதவிதமாக சமைத்து அவர் கையாலே ஊட்டி விட, வந்ததில் இருந்து மகியை விட்டு ரிதியும் நகரவே இல்லை..
மகி கிச்சனுள் சென்ற சமயத்தில் அவளின் அலைப்பேசி அடிக்க, ரிதியும் யாரென்று எடுத்து பார்க்க, தாரு என்ற பெயர் வந்திருப்பதை கண்டு, "அக்கா தாருனு யாரோ போன் பண்றாங்க.." என்று உள்நோக்கி குரல் குடுத்தாள்..
சட்டென்று வெளியில் வந்த மகி, "என் அண்ணிதான்.." என்றபடி ரிதியின் கையில் இருந்த போனை வாங்கி காதில் வைத்தவள், "ஹாய் தாரு நானே கூப்பிடனும்னு இருந்தேன்.. எப்ப நம்ம வீட்டுக்கு வர்றே?" என்று ஆர்வமாக மகி வினவ, ரிதி தான் ஒன்றும் புரியாமல் நின்றிருந்தாள்..
"நான் வரலாம்னு தான் இருந்தேன்.. ஆனா இப்ப நீ இல்லயே?" - தாரு
"ப்ச் லூசு அங்க அம்மா, அப்பா எல்லாம் இருக்காங்க அண்ட் உன் கணவன் கூட இருக்கான்மா.. நீ இப்படி யோசிச்சுட்டு இருந்தீனா வர போற ஜீனியர் ஜெகனும் இப்படிதான் யோசிப்பான்.." - மகி
"இப்பதான் ஜெகன் சொன்னான்.. கேட்டதும் எனக்கே என்ன சொல்றதுனு தெரில மகி.. அந்த வீட்டுல நீ இருக்க மாட்டினு நினைக்கறப்ப எனக்கே ஒரு மாதிரி இருக்கு.." - தாரு
"ஹலோ மேடம் என்ன நாத்தி கொடுமை இல்லாம ஹாயா இருக்கலாம்னு நினைக்கறீயா? அது எல்லாம் எப்பவும் நடக்காது.." - மகி
"அப்படியே இருந்துட்டாலும்... போ மகி.. அப்பறம் உன் அண்ணன் தொல்லையை தான் தாங்க முடியாம போகும்.." - தாரு
"ஹோ சந்தடி சாக்குல என் அண்ணனை இம்சைனு சொல்றீயா? வந்து பார்த்துக்கறேன் உன்னைய.." - மகி
"அடிப்பாவி.. அண்ணனையும் தங்கச்சியையும் எதுவும் சொல்லிர கூடாது ரெண்டு பேரும் இல்லாதது பொல்லாததை எல்லாம் கிளப்பி விட்டுருவீங்க.." - தாரு
"சரி சரி புலம்பாத.. என் குட்டி ஜெகனுக்காக உன்னைய மன்னிச்சு விடறேன்.. உடம்பை பார்த்துக்க தாருமா.. நான் அங்க வந்துட்டு கூப்பிடறேன்.." - மகி
"நீயும் பத்ரமா இரு மகி.." என்று விட்டு தாரு போனை கட் செய்ய, அங்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றுணர்ந்த பின்பு தான் தாரணியின் மனது அமைதியானது..
சிறிது நேரத்திற்கு முன்பு ஜெகன் தான் நடந்த விசயத்தை கூறி மகிக்கு அழைத்து பேச சொன்னதே!! வரும்போது தான் சங்கரனும் அந்த வழக்கில் சம்பந்தப்படுவது போல் இருக்கிறார் என்று தேவ் கூற, இத்தனை வருடம் மகியை தேடி வராமல் இப்போது வந்ததற்கான காரணம் இதுவாக இருக்குமோ? என்று ஐயமும் எழுந்தது இருவருக்கும்!
மீண்டும் தான் அழைத்தால் நன்றாக இருக்காது என்று தாரணியை சாதாரணமாக மகிக்கு அழைப்பது போல் அழைத்து அவளிடம் பேச சொன்னது ஜெகன் தான்.. குழந்தைகள் கடத்தல் வழக்கை மகி எடுத்ததில் இருந்து அவளுக்கு வந்த மிரட்டல்கள் அனைத்தையும் ஜெகனும் அறிவான்..
எதற்கும் அசராமல் அந்த வழக்கில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி மகி சென்று கொண்டிருந்த நேரத்தில் சங்கரனின் வரவு எதற்கென்று இன்னும் முழுமையாக புரியவில்லை இவர்களுக்கு!!
தன்னையே பார்த்திருந்த ரிதியிடம், "என்ன ரிதி நான் ஏதாவது வித்தை காட்டிட்டு இருக்கேனா? இப்படி வெச்சு கண்ணு வாங்காம என்னைய பார்த்துட்டு இருக்கே?" என்று மெல்லிய குறுநகையுடன் மகி கேட்க, "இல்ல க்கா.." என்ற ரிதியின் வாய்தான் கூறியதே தவிர அவள் மனதில் ஏகப்பட்ட சந்தேகம் தோன்றியது..
ரிதியின் பாவனைகளை வைத்தே அவள் மனதில் நினைத்ததை அறிந்து கொண்ட மகி, "இது என் அண்ணிதான் ரிதிமா.. நான் இங்க இருந்து போனதும் தனியா எல்லாம் இல்ல.. இங்க இருந்ததை விட சந்தோசமா தான் இருந்தேன்.. அங்க எனக்கு ஒரு அண்ணன் இருக்கான் அவனோட மனைவி தான் இந்த தாரு.. இன்னும் ரெண்டு மாசத்துல குழந்தை பிறந்துரும்.. அதைய தான் அப்படி சொன்னேன்.." என்றாள் மென்மையுடன்..
இவ்வளவு நேரம் தாங்கள் தான் பேசி கொண்டிருந்தோமே தவிர மகி எதுவும் கூறவில்லை என்பதே மேகலைக்கு அப்போது தான் உரைக்க, மகியிடம் அவளை பற்றி வினவியதும், மகியும் இங்கிருந்து சென்றதில் இருந்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி, எடுத்து கொண்ட புகைப்படத்தையும் இருவரிடமும் காட்டினாள்..
கலங்கிய மனதுடன், "ஏன்டா இங்க இருந்து போனே? அம்மா மேல ஏதாவது கோவமா?" என்று மேகலை மீண்டும் ஆரம்பிக்க, மகியோ, "மாம் முடிஞ்சதை திருப்பி திருப்பி கேட்டா எனக்கு கோவம் வந்துரும் இப்பவே சொல்லிட்டேன்.. வாழ்க்கை போற திசைல நம்மளும் போறோம் அவ்வளவுதான்.. நான் இங்க இருந்து போகனும்னு என் தலைல எழுதியிருந்தா போய்தான் ஆகனும்.."
"சும்மா சும்மா அதையவே கேட்டு அழுதுட்டு இருந்தா நடந்த எதுவும் மாறாது.. நான் இங்கிருந்து போனதுல எதுவும் மாறலயே.. எல்லாரும் நல்லா தானே இருக்கீங்க?" என்று பட்டென்று கேட்டவளால் அங்கு நிற்க முடியாமல் போனை எடுத்து கொண்டு வெளியில் சென்று விட்டாள்..
முந்தானையால் வாயை மூடியவாறு தேம்பிய மேகலை, "பாருடி நான் அவ இல்லாம சந்தோசமா இருந்தேனு சொல்லிட்டு போறா.. அவ எங்க இருக்கானு தெரியாம தினமும் நான் புலம்பறது எனக்கு மட்டும் தானே தெரியும்.. உன் அப்பா கிட்ட இவளை கண்டுபிடிக்க சொல்லி எத்தனை தடவை கெஞ்சிருக்கேன்.." என்று கதற, "ப்ச் மாம் அக்கா ஏதோ கோவத்துல சொல்லிருப்பா.. அதுக்கு இப்படி அழுதா எப்படி?" என்று ரிதி அவரை சமாதான படுத்த முயன்றாள்..
வெளியில் சென்ற மகிக்கும் இருப்பு கொள்ளாமல் இருக்க மீண்டும் தாயிடமே வந்தவள், " ப்ளீஸ் மாம்.. இதைய பத்தி மட்டும் பேசாதீங்க.. எனக்கு கோவம் கோவமா வருது.." என்று தாயின் கண்ணீரை தன் கரங்கள் கொண்டு துடைத்து விட்ட மகி, ஏதேதோ பேசி அவரை சிரிக்க வைத்தாள்..
அதன் பிறகு மேகலையும் இதை பற்றி மகியிடம் கேட்காமல் மகளுடன் நேரத்தை கழிக்க, சங்கரன் வரும் போதெல்லாம் அறைக்கு சென்று விடுவாள் மகி.. அடிக்கடி தேவ்விடம் வழக்கை பற்றி விசாரித்தவாறே இருந்தாள் மகி..
ரகுபதியிடம் பேசியவளால் காயத்ரியிடம் பேச இயலாமல் போக, "இருமா அங்க வந்து உன்னைய பார்த்துக்கறேன்.." என்று செல்லமாக காயத்ரியின் மீது குறைப்பட்டு கொண்டவளுக்கு அவரின் முகத்தை காணாமல் ஏதோ போல் இருந்தது..
விடுமுறை எடுத்த ஐந்து நாட்கள் நாளையுடன் கழிய, அதன்பிறகு வேலைக்கு செல்ல அங்குதான் சென்றாக வேண்டும்.. சீக்கிரம் இதை பற்றி இவர்களிடம் கூற வேண்டும் என்று நேரம் பார்த்து மகி காத்திருக்க, இவளுக்கு வேலை வைக்காமல் சங்கரனே அந்த பேச்சை எடுத்து விட்டார்..
ரிதியுடன் சிரித்து பேசி கொண்டிருந்த மகியை மாடியில் இருந்து பார்த்த சங்கரனுக்கு கண்கள் கலங்கி போனது என்னவோ உண்மைதான்.. என்னதான் அவர் கெட்டவராக இருந்தாலும் மகள்களின் மீது அளவில்லா பாசத்தை கொண்டவராயிற்றே!!
இதில் இருந்து விலகி விடலாம் என்றிருந்தவரை விடாமல் ராஜன் தான் இன்றுவரை பிடித்து வைத்து கொண்டிருக்கிறார்.. அவருக்கு தன் மகள்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தான் மானமும் மரியாதையும் முக்கியம்..
மகி காணாமல் போன அடுத்த நாளே அவளை சங்கரன் கண்டு பிடித்து விட்டார்.. தங்களுடன் மகியை வைத்திருந்தால் கண்டிப்பாக விசயத்தை வெளியில் கூறி விடுவாள் என்று அறிந்தே அவளை தூரத்தில் இருந்து கண்காணித்து கொண்டு இருந்தார்..
மேகலையின் கண்ணீர் சில சமயம் அவரை அசைத்து பார்த்தாலும் குடும்பமா? மானமா? என்று வரும் போது மானமே முன்னால் நிற்க, அதோடு விட்டு விடுவார்.. ரகுபதி இங்கிருந்து சென்ற ஒரு மாதத்தில் அவரை அழைத்து தன் மகளை பார்த்து கொள்ள சங்கரன் கூற, மகியை பிரிவது அவர்களால் முடியாது என்றுணர்ந்து ரகுபதியும் சம்மதமாக தலையசைத்து விட்டார்..
மாதம் மாதம் மகிக்கென்று குறிப்பிட்ட தொகையை சங்கரன் அனுப்பி வைத்து விடுவார் ரகுபதியிடம்! ஆனால் இன்று வரை அவர் அனுப்பும் பணம் அப்படியே தான் இருக்கிறது என்பது இவருக்கு தெரியாதே!!
இப்போது கூட மகளை கன்னம் கிள்ளி கொஞ்ச வேண்டுமென்ற மலைபோல் ஆசை சங்கரனின் மனதில் இருக்கிறது.. பாசத்திற்கும் மானத்திற்கும் இடையில் தடுமாறியவரின் மனது மானத்தின் புறமே சாய, அறைக்கு சென்றவர் ஒரு கவருடன் கீழே இறங்கினார்..
அந்த கவரை மகியின் முன்பு நீட்டியவர், "ரிதன்யா.." என்று பேச முற்பட்டவரை தடுத்த மகி, "மகிழினி" என்று அழுத்தமாக கூறிட, பெருமூச்சுடன் அவரும், "சரி இதுல சைன் போடு.." என்றார் அசட்டையாக..
குழப்பம் மேலோங்க அவரை நோக்கிய மகி, "நான் எதுக்கு சைன் பண்ணனும்.." என்று கேட்க, ஷோபாவில் அமர்ந்தவர், "படிச்சு பாரு.." என்றவரை புரியாமல் அதை படிக்க தொடங்கிய மகியின் முகம் தணலாய் தகித்து நின்றது..
மகியின் பாவனைகளையே பார்த்திருந்த சங்கரன், அவள் பேசும் முன்பே முந்தி கொண்டு "இதுல கையெழுத்து தான் போட சொன்னேன்.. இனியும் வேலைக்கு போய் தான் ஆகனும்னு இல்ல.." என்றார் கட்டளையுடன்..
கண்ணை மூடி நிதானத்தை தனக்குள் கொண்டு வந்த மகி, "முடியாது" என்று மறுக்க, இந்த பதிலை அவளிடம் எதிர் பார்த்தேன் என்பதை போல் நன்றாக சாய்ந்து அமர்ந்தவர், "நீ முடியாதுனு சொன்னாலும் உன் கையெழுத்தை நானே போட்டு குடுத்துருவேன்.. வேலையை விட்டுட்டு வீட்டுல இரு போதும்.." என்றவரை வெறித்து பார்த்த மகியின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்து கொண்டிருந்தது..
"நீங்க சொல்றதை நான் எதுக்கு கேட்கனும்.. நான் ஆசைப்பட்டு படிச்சு வாங்குன வேலையை உங்க வார்த்தைக்காக விட்டுருவேனு நினைக்காதீங்க.. யாரு சொன்னாலும் என் வேலையை நான் விட போறதும் இல்லை.." என்றாள் உறுதியுடன்..
"உன் கூட கத்த எனக்கு நேரமில்ல சீக்கிரம் கையெழுத்தை போடு.." என்று அதிகாரமாக கூறியவரை, உறுத்து விழித்திருந்த மகி, பின்பு கையை கட்டி கொண்டு, "என்ன பயம் வந்துருச்சோ?" என்று புருவத்தை மேலேற்றி நக்கலுடன் வினவினாள்..
மகியின் கேள்வி சங்கரனை இன்னும் கோபமூட்ட, "இங்க பாரு இனி நான் சொல்றதை நீ கேட்டுதான் ஆகனும்.. அதைய விட்டுட்டு தேவையில்லாத வேலை பார்த்துட்டு இருந்தா சும்மா இருக்க மாட்டேன்.. அங்க இருந்து வேலை பார்த்து கிழிச்சது போதும்.." என்றார் பெரும் கடுப்புடன்..
ஏனோ இவரிடம் வாக்குவாதத்தை தொடர விருப்பமில்லாமல், "என்ன அதிகாரம் பண்ண உங்களுக்கு என்ன உரிமை இருக்குனு தெரிஞ்சுக்கலாமா?" என்று சாதாரணமாக மகி வினவ, "ரிதுமா" என்று மேகலை பதறி விட்டார்..
"ரிதுமா வா? ரிதன்யா எப்பவோ செத்துட்டா.. உங்க முன்னாடி நிற்கறது மகிழினி.. ரகுபதியோட ஒரே பொண்ணு.." என்று அழுத்தம் திருத்தமாக கூறிய மகி, அமைதியுடன் தன்மேல பார்வையை நிலைத்திருந்த சங்கரனை நோக்கி, "என்ன சார் இப்ப பேச்சை காணோம்.." என்றாள் விரக்தியுடன்..
பதிலேதும் கூறாமல் அப்படியே நின்றிருந்த சங்கரனிடம், "என்மேல நீங்க வெச்ச பாசம் பொய்னு நினைக்கறப்ப இப்ப வரைக்கும் இங்க வலிக்குது டாடி.." என்று தன் இதயத்தை தொட்டு காட்டிய மகிக்கு பேச்சு வராமல் தொண்டை அடைத்தது..
"என் டாடியை யாரும் தப்பானவங்கனு பேச கூடாதுனு தான் அந்த பொண்ணை விடுங்கனு அப்படி அழுது உங்க கூட பேசாம இருந்தேன்.. அப்பவும் என்னைய தான் சமாளிக்க பார்த்தீங்கனு வீம்புல வீட்டை விட்டு வெளில போனேன்.."
"நேரம் போக போக பயத்துல உங்ககிட்டயே ஓடி வந்து உங்க கையை பிடிச்சுக்கனும்னு நினைச்சாலும் நம்ம வீட்டுக்கு வர்ற வழி தெரியாம அவ்ளோ அழுதேன்.. ரெண்டு பேரு என்னைய தூக்கிட்டு போறப்ப கூட டாடி டாடினு உங்களைய தான் கூப்பிட்டேன் ஆனா நீங்க வரல.."
"கீழே விழுந்தப்ப எல்லாம் தூக்கி தோளுல வெச்சுட்டு நடப்பீங்களே அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு ஓடறப்ப எத்தனை தடவை கீழே விழுந்து விழுந்து எந்திரிச்சு ஓடுனேன்.. அப்பவும் டாடி டாடினு தான் கூப்பிட்டேன்.."
"ரிதுமா" என்று தேம்பியபடி தன்னிடம் வந்த மேகலையை கை நீட்டி தடுத்த மகி, "ஒவ்வொரு நாளும் நீங்க வருவீங்கனு அவ்ளோ நம்பினேன் டாடி.. யாராவது வந்தா கூட நீங்க தான் வர்றீங்களோனு நினைச்சு வெளில எத்தனை தடவை எட்டி பார்த்துருக்கேன் தெரியுமா?"
"என்னதான் ரகுபதி அப்பா என்னைய அவங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டாலும் உங்க கை வளைவுக்குள்ள வரனும்னு அவ்ளோ ஏங்கினேன்.. கடைசி வரைக்கும் எனக்கு ஏமாற்றத்தை மட்டும் தான் குடுத்தீங்க.."
"நீங்க மட்டும் என்னைய அப்பவே கூட்டிட்டு வந்துருந்தீங்கனா நீங்க என்ன சொன்னாலும் கேட்டுட்டு அமைதியா இருந்துருப்பேன்.. அந்தளவுக்கு உங்களைய மிஸ் பண்ணுனேன் டாடி.. ஒவ்வொருவரும் நாளும் என் டாடி வருவாங்க என் டாடி வருவாங்கனு எனக்கு நானே எத்தனை தடவை சொல்லிக்கிட்டேன் தெரியுமா?"
"இது எல்லாம் ஸ்கூல் முடிக்கற வரைக்கும் தான்.. ரகுபதி அப்பா பேசறதை மட்டும் நான் கேட்கல இப்ப வரைக்கும் நீங்க வருவீங்கனு நம்பிக்கையோட இருந்துருப்பேன்.. பணத்தை மட்டும் குடுத்துட்டா போதுமா? அந்த பணத்துலயே நான் வளர்ந்துருவேனா டாடி.." என்ற கேள்வியுடன் நிறுத்த, அவளை பாராமல் சங்கரன் முகத்தை திருப்பி கொண்டார்..
"எஎஎஎன்ன சொல்ற ரிதுமா.." என்று மேகலை புரியாமல் வினவ, கேலியுடன் இதழை சுழித்த மகி, "உங்களுக்கு தெரியாதுல.. உங்க அருமை கணவன் நான் காணாம போன ரெண்டு நாளுலயே என்னைய கண்டு பிடிச்சுட்டாரு.."
"பக்கத்துல வெச்சுருந்தா அவரு பண்ற வேலையை நான் வெளில சொல்லி அவரோட மானம் மரியாதை எல்லாம் காத்துல பறக்க விட்டுருவேனு என்னைய அப்படியே விட்டுட்டாரு.. இப்ப திடீரு பாசம் வந்து எல்லாம் என்னைய கூட்டிட்டு வரல.." என்றாள் ஏளன நகையுடன்..
"என்னங்க ரிது என்ன என்னவோ சொல்றா.. எனக்கு ஒன்னுமே புரில.. நீங்க தானே சொன்னீங்க அவளை இப்பதான் கண்டு பிடிச்சு கூட்டிட்டு வந்தேனு.. எனக்கு தலையே வெடிக்குது புரியற மாதிரி சொல்லுங்க.." என்று கேட்ட மேகலையின் குரல் உயர்ந்திருந்தது..
"சொல்லுங்க மிஸ்டர்.. ஹான் நீங்க எப்படி சொல்லுவீங்க.. நான் வேணா சொல்லட்டுமா?" என்றவாறு எதிர் திசையில் அமர்ந்த மகி, "இப்ப கத்தி எதுவும் ஆக போறது இல்ல மாம்.." என்றாள் சாதாரணமாக..
"அக்கா என்னனு புரியற மாதிரி சொல்லு.. அப்பா என்ன தப்பு பண்ணுனாரு.." என்று ரிதியும் கேட்க, இதில் சிரிப்பை உதிர்த்த மகி, "ஏன் ரிதி இந்தளவு பெரிய அந்தஸ்துல இருக்கற இவருனால என்னைய இத்தனை வருசம் கண்டு பிடிக்க முடியாம இருந்துருக்குமா?" என்று கேட்க, இப்போது ரிதிக்கும் நன்றாக புரிந்து விட, "அ..ப்..போ.. உ..ன்னைய.." என்று வார்தை வராமல் தடுமாறி நின்றாள் அதிர்ச்சியுடனே!!
"நான் சொல்றது உண்மை ரிதிமா.. இரு தெளிவா சொல்றேன்.. இவரு இத்தனை வருசமா என்ன வேலை பண்ணிட்டு இருக்காருனு தெரியுமா? குழந்தைகளை கடத்தறது.. அதுவும் பத்து வயசுக்குள்ள இருக்கற பெண் குழந்தைகளை.. நான் காணாம போறதுக்கு முன்னாடியே எனக்கு இது தெரியும் அப்பவே இந்த வேலையை விட சொன்னேன் முடியாதுனு சொன்னாரு அந்த கோவத்துல தான் நான் வீட்டை விட்டு வெளில போனேன்.."
"காணாம போன ரெண்டு நாளுலயே என்னைய கண்டு பிடிச்சவரு இங்க வந்தா இதைய நான் வெளில சொல்லிருவேனு ரகுபதி அப்பாவை கூப்பிட்டு என்னைய வளர்த்த சொல்லிருக்காரு.. முதல்லயே அவங்க பொண்ணு இறந்த துக்கத்துல இருந்த ரகுபதி அப்பாவும் என்னைய பாத்துக்கறேனு வாக்கு குடுத்துட்டு அவங்க பொண்ணாவே என்னைய மனசார ஏத்துக்கிட்டாரு.."
"மாசம் மாசம் எனக்காக பணம் எல்லாம் போட்டு விட்டுருக்காரு இந்த மனுசன்.. ஆனா அந்த பணத்தை இப்ப வரைக்கும் ரகுபதி அப்பா தொட கூட இல்லனு இவருக்கு தெரியுமா? என்னைய படிக்க வெச்சு எனக்கு தேவையானதை எல்லாம் வாங்கி குடுத்தது எல்லாம் அவர் உழைச்ச சம்பாரிச்ச பணத்துல.."
"என் அண்ணன் வேலைக்கு போக ஆரம்பிச்சதும் என்னோட அத்தனை செலவுகளையும் அவனே ஏத்துக்கிட்டான் இப்ப வரைக்கும் எனக்கு எல்லாமும் செய்யறது அவன் தான்.. இந்த விசயம் எனக்கு காலேஜ் போக தொடங்கிய நேரத்துல தான் தெரியும்.. இவரு குடுத்த பணத்தை என்ன பண்ணலாம்னு ரகுபதி அப்பா ஜெகன் அண்ணாகிட்ட பேசிட்டு இருக்கறப்ப ஏதேச்சையா கேட்டேன்.."
"அப்ப தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு பக்கத்துல வைரத்தை வெச்சுக்கிட்டு எங்கையோ தொலைவுல இருக்கற பிளாஸ்டிக் கல்லுக்காக இவ்வளவு நாள் ஏங்கிட்டு இருந்தேனு.. அன்னைக்கு முடிவு பண்ணுனது தான் அதுதான் என் குடும்பம் அவங்க தான் என் அப்பா, அம்மா, அண்ணானு.. இப்ப வரைக்கும் அப்படி தான் வாழ்ந்துட்டு இருக்கேன்.. இனியும் வாழ்வேன்.."
"திடீருனு என்னைய இங்க கூட்டிட்டு வந்தது ஏன்னு தெரியுமா? யாருமே எடுக்க நினைக்காத அந்த கடத்தல் வழக்கை நான் எடுத்துருக்கேன்.. அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிச்சா எங்க இவரு பேரும் வெளில வந்துருமோனு பயத்துல என்னைய தேடி வந்து இங்க கூட்டிட்டு வந்துருக்காரு.. இப்ப வேலையையும் விட்டுட்டு வீட்டுல இருக்கறதாமா?" என்று நெடுநாள் தன் மனதில் பூட்டி வைத்திருந்த அத்தனையும் கொட்டி விட்டாள்..
"இங்க வந்தது கூட உன்னையும் அம்மாவையும் பார்க்கனும்னு தான்.. மத்தபடி இவரோட அதிகாரத்துக்காக எல்லாம் அடிபணிஞ்சு வரல.. நாளைக்கு கிளம்பலாம்னு முடிவுல தான் இருக்கேன்.."
"கண்டிப்பா கிளம்புவேன்.. அந்த வழக்கை முழுசா முடிச்சு சம்பந்தப்பட்ட அத்தனை பேரையயும் சட்டத்து முன்னாடி நிறுத்துவேன்.. அதுல உறுதியா இருக்கேன்.." என்று இறுகிய முகத்துடன் மகி கூறிட, மடிந்து அப்படியே அமர்ந்த மேகலை தலையில் அடித்து கொண்டு அழுக ஆரம்பித்தார்..
"ப்ச் மாம் இப்படி அழுதா மட்டும் இங்க இருப்பேனு நினைச்சராதீங்க.. இத்தனை வருசம் நீங்க வாழ்ந்துட்டு இருக்கற பணம் பல தாய்மாரோட கண்ணீருல வந்தது.. அப்பாவியா இருக்கலாம் அதுக்குனு கணவன் என்ன செய்யறாங்கனு கவனிக்காத முட்டாளா இருந்ததை என்னால ஏத்துக்க முடில.."
"என்னைய காணோம்னு தினமும் அழுதீங்கனு சொன்னீங்களே நீங்க இங்க அழுகறது எனக்கு எப்படி தெரியும் சொல்லுங்க.." என்றவள் ஆக்ரோஷமாக சங்கரனிடம் திரும்பி, "நான் ரகுபதி அப்பாகிட்ட மாட்டாம தப்பானவங்க கிட்ட மாட்டிருந்தாலும் நான் எக்கேடோ கெட்டு போகட்டும்னு விட்டுருப்பீங்களா? இல்ல அப்பவும் பணம் தான் முக்கியம்னு என்னையும் வித்துருப்பீங்களா?" என்று கேட்டாள் பட்டென்று..
இதில் அவரின் முகம் வெளிறி போய் "அப்படி எல்லாம் அப்பா பண்ண மாட்டேன்டா.." என்றவரை இளக்காரமாக பார்த்து சிரித்த மகி, "ஹோ அப்ப மத்த வீட்டு குழந்தைகள் மட்டும் என்ன தக்காளி தொக்கா?" என்று நக்கலாக கேட்டவள் அவரை கூர்ந்து பார்த்து, "கண்டிப்பா இதுக்கு நீங்க பதில் சொல்லி தான் ஆகனும்.." என்றாள் எவ்வித சலனமுமின்றி..
அங்கிருந்து கிளம்பும்போதும் கூட தன் தந்தை நின்ற இடத்திலே நின்றிருப்பதை கண்ட மகிக்கு வெறுப்பு வர, அவரை பாராமலே வெளியில் சென்றாள்..
"அக்கா அக்கா.." என்று தன் பின்னால் வந்த ரிதியின் குரலில் திரும்பிய மகி, "உன்மேல எனக்கு எந்த கோவமும் இல்லடா.. நீ எப்ப வேணாலும் அங்க வரலாம்.. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.." என்றவாறு ரிதியின் தலையை தடவி விட்டவள் விருட்டென அகன்றாள்..
செல்லும் தன் மகளை தடுக்க கூட உரிமையில்லயே என்று மேகலை அமர்ந்த இடத்திலே கண்ணீர் வடிக்க, வெறுப்புடன் சங்கரனை பார்த்த ரிதி, "உங்க கிட்ட இதைய எதிர்பார்க்கல டாடி.." என்றவள் கண்ணீருடன் சென்றாள்..
மகியின் கோவம் அனைத்தும் பெற்றவர்களின் மேல் மட்டுமே! தான் எங்கு இருக்கிறோம் என்பது தெரிந்தும் தன் கவுரவத்திற்காக அப்படியே விட்டு விட்டாரே என்று சங்கரனின் மேலும், அவர் சொன்னதை இத்தனை வருடங்கள் நம்பிய மேகலையின் அறியாமையையும் எண்ணியே கோவம் கோவமாக வந்தது..
அதே கோவத்துடன் தன் வீட்டிற்கு வந்த மகியை ஆச்சரியத்துடன் காயத்ரி பார்த்து கொண்டிருக்க, "என்னமா அப்படியே போய்ருவேனு நினைச்சுட்டியா?" என்று சற்று கோவத்துடன் மகி வினவ, அவள் வாயில் ஒரு அடியை போட்ட காயத்ரி "இப்படி பேசுன இன்னொரு அடி விழுகும்.." என்றார் கண்டிப்புடன்..
ரகுபதியும் அதிர்ச்சியுடன், "என்னடா அதுக்குள்ள வந்துட்டே?" என்று கேட்க, சிடுசிடுப்புடன் மகியோ, "ஏன் அங்கயே இருந்துருவேனு நினைச்சீங்களா?" என்று அவரை முறைத்தாள்..
உடனடியாக, "அப்படி இல்லடா.." என்று ரகுபதி மறுக்க, "வேற எப்படிபா? அவரு ஒன்னும் என்னைய பாசத்துல கூட்டிட்டு போகல.. நான் எடுத்துருக்கற கேஸ்ல இருந்து விலகறதும் மட்டுமில்லாம வேலையை விடறதுக்கு தான் கூட்டிட்டு போய்ருக்காரு.." என்றாள் பட்டென்று..
அனைவரும் திகைப்பில் உறைய, ஜெகன் தான் "நான் நினைச்சேன் இத்தனை வருசம் வராம இப்ப வந்ததை பார்த்து.. மகி என் தங்கச்சி இனி யாரு கூடயும் நான் அனுப்ப மாட்டேன்.." என்று உறுதியாக கூறிட, அதை ஆமோதிப்பது போல் மகியும், "அவங்க பொண்ணு ரிதன்யா எப்பவே செத்துட்டா.. இப்ப உங்க முன்னாடி நிற்கறது உங்க பொண்ணு மகிழினி தான்.." என்றவள் அதற்கு பிறகு பேச எதுவுமில்லை என்பதை போல் அறைக்கு சென்று விட்டாள்..
நகத்தை கடித்து துப்பியபடி அமர்ந்திருந்த மகியை தேடி வந்த தேவ், "ஹாய் பிசாசே வந்துட்டியா?" என்று கேட்க, அவள் இருந்த கடுப்புக்கு "ஏன் வராம அப்படியே ஓடிருவேனு நினைச்சுட்டியா?" என்று சிடுசிடுக்க, "தப்பான நேரத்துல வந்துட்டோமோ!!" என்று உள்ளுக்குள் நொந்த தேவ், "நான் அப்பறம் வர்றேன்" என்று ஓடியே விட்டான்..
மகியை தேடி வந்த ரகுபதி, "அப்பா மேல கோவமாடா?" என்று அவளின் தலையை தடவ, "கோவம் இல்ல வருத்தம் தான்.. நான் உங்க மக இல்லனு அவரு வந்ததும் என்னைய அனுப்பி விட்டுட்டீங்கல்ல?" என்று வருத்தம் மேலோங்க மகி வினவ, எழுந்து நின்றவர் இரு கைகளால் காதை பிடித்து கொண்டு "மன்னிச்சுருடா பாப்பா.." என்றவாறு தோப்புகரணம் போட தொடங்கினார்..
உம்மென்று அவரை பார்த்தவாறே அமர்ந்திருந்த மகி ஒரு கட்டத்தில் வாய்விட்டு சிரித்து, "அப்பா போதும்.. உங்களைய மன்னிச்சுட்டேன்.." என்று கண்ணை சுருக்கி கூறிய தன் மகளை புன்னகையுடன் கண்டபின்பு தான் அவரின் மனதே அமைதி அடைந்தது..
தான் சேகரித்த விடயத்துடன் "மகி மகி" என்று கத்தியபடி தேவ் விரைந்து அவளிடம் வர, சாதாரணமாக மகியோ "இந்த தண்ணீயை குடி.." என்று அவனிடம் நீட்டினாள்..
"ப்ச் மகி கேஸ்ல முக்கியமான விடயம் கிடைச்சுருக்கு.." என்று தேவ் கூறிட, "கிடைக்கனும்னு தானே நம்ம தேடுனோம்.. அதுக்கு ஏன் இவ்வளவு பதட்டப்படறே?" என்று அவனை அமைதியாக்கும் பொருட்டில் கூறினாள்..
அப்பவும் தேவ் அமைதியாகாமல், "நம்ம கமிஷ்னர் சார் பேமிலி விபத்துல தானே இறந்தாங்கனு சொன்னாங்க தானே அது பொய் மகி.." என்றிட, இதை கேட்டதும் உண்மையிலே திகைத்தவளை பார்த்து, "உண்மை மகி விபத்து சாதாரணமா ஏற்படல.. வேணும்னே தான் அவங்க போன காரை இடிச்சுருக்காங்க.." என்றான் சத்தியம் பண்ணாத குறையாக..
அதிர்ச்சியில் இருந்து விலகாமல், "இதெல்லாம் உனக்கு யாரு சொன்னா?" என்று மகி கேட்க, "கமிஷ்னர் சார் தான்.. வீட்டுக்கு வர சொன்னாங்க.. எதுக்குனு தெரியாம தான் போனேன்.. வழக்கை பத்தி விசாரிச்சுட்டு அவருக்கு தெரிஞ்ச இன்பார்மெசனும் சொன்னாங்க.." என்றவன் முழுதாக கூற தொடங்கினான்..
"இந்த வழக்கோட முக்கிய புள்ளி ஆந்திரா மாநிலத்துல பெரிய தாதாவா இருக்கற தாகூர்.. இங்க மட்டுமில்ல மொத்த மூணு மாநிலத்துல இருந்து பல குழந்தைகளை இவன் தான் வாங்கிட்டு இருக்கான்.. வெளி நாட்டுல குழந்தை இல்லாதவங்க, இல்ல தமிழ் குழந்தையை விரும்பி தத்தெடுக்கறவங்க எல்லாம் இவன் கிட்ட தான் வருவாங்க.."
"அது மட்டும் இல்லாம பல பெண் குழந்தைகளை குறிப்பிட்ட வயது வரைக்கும் தனியா வெச்சுருந்து அதுக்கு அப்பறம் வலுக்கட்டாயமா விபச்சாரத்துல ஈடுபடுத்திட்டும் இருக்கான்.. இவனை நெருங்க முயன்ற அத்தனை பேரும் இப்ப மண்ணுக்குள்ள தான் இருக்காங்க.." என்றான் தேவ்..
"இது எல்லாம் சரி.. அவன் ஏன் கமிஷ்னர் சாரோட குடும்பத்தை கொல்ல நினைக்கனும்.." - மகி
"எல்லாரும் இந்த வழக்குல இருந்து பின் வாங்கறாங்கனு சாரே ரகசியமா இதைய பத்தி விசாரிச்சுருக்காரு.. அதோட பலன் தான் இப்ப குடும்பத்தை இழந்து தனியாளா நிற்கறது.." - தேவ்
"ம்ம்ம்ம் கண்டிப்பா.. நம்ம பக்கத்துல இருக்கற கருப்பு ஆடு மூலமா எப்பவோ அவங்க காதுக்கு போய்ருக்கும்.." - தேவ்
"அப்ப கண்டிப்பா யாரையும் நம்ப முடியாது தானே?" - மகி
"ம்ம்ம்ம் பட் நம்ம பக்கம் இன்னொரு ஆள் இருக்கு.. அவன் ஒருத்தனே போதும்.." - தேவ்
"யாரு அது?" - மகி
"வெய்ட் அண்ட் வாட்ச்.." - தேவ்
"பார்க்கறேன் பார்க்கறேன்.. இப்ப நீ போய் உன் வேலையை பாருங்க சார்.." - மகி
தேவ் சென்ற பின்பும் "அது யாரு நமக்கு தெரியாமா?" என்ற யோசனையில் உழன்ற மகி, "ப்ச் அது யாரா இருந்தா எனக்கு என்ன?" என்று தன் மனதை வேறு சிந்தனைக்கு மாற்றினாள்..
தாயின் வற்புறுத்தலின் பேரில் அவருடன் கோவிலுக்கு சென்று விட்டு வந்த மகி, "அம்மா வர வர என்னைய சாமியார் ஆக்கிரலாம்னு முடிவுல இருக்கீயா?" என்று கேட்டவாறு வீட்டினுள் நுழைந்தவள் அப்படியே நின்று விட்டாள்..
புதியதாக ஒரு ஆடவன் அமர்ந்திருப்பதை புருவம் சுருக்கி பார்த்தவாறு மகி நின்றிருக்க, அவனின் குரலிலே அது யாரென்று அறிந்த காயத்ரி மகியை இடித்து கொண்டு அவர்களிடம் சென்று "இப்பதான் சாருக்கு வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுச்சோ?" என்றார் பொய் கோவத்துடன்..
"இப்பவும் கூட எனக்கு வழி தெரிலனு உங்க மகன் தான் கூட்டிட்டு வந்தான் அத்தையாரே!" என்று குறும்புடன் கூறியவாறு எழுந்தது கிருஷ்.. கிருஷே..
அவனை கண்டதும் இமைக்க மறந்து திகைப்பின் உச்சத்தில் நின்றிருந்த மகியை பார்த்த கிருஷ் யாரும் அறியாவண்ணம் கண்ணடிக்க, இதனை கண்டு விட்ட தேவ்வோ "அட கிரகதா!! அடங்கவே மாட்டியாடா.." என்று உள்ளுக்குள் கதறினான்..
தீப்பார்வையில் அவனை முறைத்தவாறு வந்த மகி, "அண்ணா இது யாரு?" என்று ஜெகனிடம் வினவ, "நம்ம கிருஷ்டா.. பயப்புள்ள ரொம்ப பிஸியாகிருச்சுனு இப்ப எல்லாம் பேசறதே இல்ல!!" என்று ஜெகனும் கூறிட, "ஹோ அப்படியா?" என்று கேட்ட மகியின் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது..
பேச்சை மாற்றும் விதமாக, "ஆமா மாமா எங்கே?" என்று கிருஷ் கேட்க, "ஹலோ மிஸ்டர். இதைய வந்ததுமே நீங்க கேட்டுட்டீங்க.." என்று தேவ் அவனின் காதை கடிக்க, "நீ அடங்குடா.." என்று பார்வையால் அவனை அடக்கிய கிருஷ், "தாரு எப்படி இருக்காடா?" என்று கேட்டான்..
ஜெகன் பேச வருதற்குள் அவனின் போன் சிணுங்க, "இருடா வந்தறேன்.." என்றவாறு வெளியில் செல்ல, "டேய் உண்மையாவே நீ யாருனு மகிக்கு தெரியாதா? நான் கூட உன்னைய கண்டு பிடிச்சுருப்பானு நினைச்சேன்.." என்று தேவ் கேட்க, பதிலேதும் கூறாமல் புன்னகையை மட்டும் பரிசளித்தான் கிருஷ்..
கையில் ஜூஸுடன் வந்த காயத்ரி இருவரிடமும் குடுத்து விட்டு "ஜெகன் எங்கடா இங்க தானே இருந்தான்.." என்று கேட்க, இதுதான் வேணுமென்று எழுந்த கிருஷ், "தெரில அத்தை இருங்க நான் பார்க்கறேன்.." என்றிட, "அடப்பாவி" என்று வாயில் கை வைத்த தேவ்வை முறைத்தபடி மேலே சென்றான்..
"அடேய் படுபாவி.. வீட்டுல இத்தனை பேரு இருக்கறப்பவே நீ அடங்க மாட்டியாடா? அவளோட அண்ணன்காரன் வேற இங்க இருக்கான்டா.. அது சரி அவன் இருந்தா இவனுக்கு என்ன? சிங்கிள் பசங்க சாபம் உன்னைய சும்மா விடாது.." என்று ஏகத்துக்கும் உள்ளுக்குள் புலம்பியபடி அமர்ந்திருந்தான் தேவ்..
இவன் வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்தாள் போல பெண்மகளும்!! அவனை கண்டதும் வீம்புடன் நகர போனவளை வாட்ச் அணிந்திருந்த மணிக்கட்டு மகியின் இடையை உரசியவாறு அவளை தடுத்து நிறுத்த, புருவம் உயர்த்தி கண்களால் என்னவென்று கேட்டவளுள் தொலைந்த கிருஷ், யாராவது வருகிறார்களா? என்று பார்த்து விட்டு, "இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரல.." என்று கேட்டான் அவளை ஆராய்ந்தவாறு..
மகியும் அசராமல் அவனை பார்க்க, துளைத்தெடுக்கும் பார்வையில்
மகியை கூர்ந்து பார்த்த கிருஷ், "எஸ் ஆர் நோ.." என்று வினவ, வேணுமென்றே இதழை குவித்து, "நோ சொன்னா...??" என்று மகி இழுக்க, அவளின் கேள்வியில் எப்போதும் மயக்கும் வசீகர புன்னகையை இதழில் பரவ விட்டவன் "எஸ் சொல்ல வெப்பேன்.." என்றான் ஒற்றை கண்ணை மடித்து..
தன்னவனின் பாவனையில் சிரிப்பில் விரிந்து தன்னை காட்டி கொடுக்க நினைத்த இதழை சட்டென்று கட்டுபடுத்தியவள், "சரி தள்ளு.." என்று அவனின் நெஞ்சில் தன் கரங்களை வைத்து தள்ளி விட்டு நகர முயன்றாள்..
தன்னை தடுப்பான் என்று அவள் எதிர்பார்க்க, அவனோ சுவற்றில் சாய்ந்து நின்று அவளை ஊடுருவி பின்பு, "ஹலோ மேடம் என்கிட்ட ஏதாவது கேட்கனும்னா கேட்டுட்டு அப்பறம் போங்க.." என்று குறும்பினை ஏந்தியிருந்த குரலில் கட்டுப்பட்டு போன மகியும் அப்படியே நின்றாள்..
"நான் தான் மகினு எப்படி கண்டுபிடிச்சீங்க?" என்று அவனை பார்த்ததில் இருந்து தனக்குள் ஓடி கொண்டிருக்கும் சந்தேகத்தை முன் வைத்து பதிலுக்காக ஆர்வத்துடன் அவனின் முகத்தை நோக்கினாள்..
அவளுள் தன் விழிகளை பதித்தவாறு அவளிடம் கிருஷ் நெருங்க, யாராவது வந்து விட்டால்..? என்ற பயத்தில் மகியும் பின்னால் நகர்ந்து செல்ல, ஒரு கட்டத்தில் சுவற்றில் மோதி நின்றவளை குறுகுறுவென பார்த்தவாறு, "சொல்லியே ஆகனுமா?" என்று கேட்டான் குறும்பு மின்ன..
இதில் மகியின் தலை ஆமாவென்று ஒரு புறமும் வேண்டாம் என்று மறுபுறமும் பயத்தில் ஆட, பாவையை எண்ணி மர்ம புன்னகையை வீசிய ஆடவனும் சங்கு கழுத்தில் இருந்த மச்சத்தை தன் கரங்கள் கொண்டு தடவியவாறு, "என் ரவுடியோட அடையாளம்.." என்றவனின் இதழ்கள் மச்சத்தை ஈரப்படுத்தி விட்டே விலகியது..
*******
எத்தனை எத்தனை அழகான நாட்கள் அவை.. கிடைக்க பெற்ற சந்தோசங்கள் எண்ணிலடங்கா ஆயிற்றே! இதை நினைத்த போதே மகியின் விரல்கள் கழுத்தில் இருந்த மச்சத்தை வருட, இமைகளோ கண்ணீரை சிந்தியது..
"கிருஷ் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும் மகிமா.." என்று என்றோ ஒரு நாள் தேவ் கூறிய வார்த்தை இன்றும் காதில் எதிரொலிக்க, கண்ணை துடைத்து கொண்டாள்..
கிருஷ் கட்டி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் தன் ஆட்களுடன் நுழைந்த விக்ரம், மயக்கத்தில் இருந்த கிருஷின் முகத்தில் தண்ணீரை ஊற்ற, பக்கென்று கண்ணை விழித்தவனுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது..
நக்கல் நிறைந்த குரலில், "என்ன கிருஷ் சார்.. உங்க ஆளு மட்டுமில்லாம உங்க குழந்தையும் என்கிட்ட இருக்கறப்ப பொறுப்பே இல்லாம தூங்கிட்டு இருக்கீங்க.." என்று விக்ரம் வினவ, அவனை பார்த்த கிருஷின் முகத்தில் ஏளன நகையே குடியேறி இருந்தது..
"நீ என்ன பண்ணனும்னு நினைக்கறீயோ பண்ணு.. அதைய பத்தி எனக்கு கவலையில்ல.. ஏன்னா உன்னால.." என்று முழுதாக கூறாமல் பாதியில் நிறுத்திய கிருஷ், அவனை ஆழம் பார்த்து "எதுவும் புடுங்க முடியாது.." என்றான் ஆக்ரோஷத்துடன்..
கிருஷின் வார்த்தையில் எல்லை மீறிய கோவத்துடன் விக்ரமோ அவனின் கழுத்தை நெறித்து பிடிக்க, அப்போதும் சிறிதும் பயமில்லாம எகத்தாளமாகவே வந்த கிருஷின் பார்வையை கண்ட விக்ரமுக்கு தான் ரத்த அழுத்தம் உயர்ந்தது..
"பார்க்கறேன்டா பார்க்கறேன்.. நீ என்ன பண்ண போறீனு நானும் பார்க்கறேன்.." என்று கருவி கொண்டு விக்ரம் சென்று விட, "ம்ம்ம்ம் பாரு பாரு.." என்று கிருஷும் நக்கலாகவே குரல் குடுத்தான்..
அமைதியாக சுவற்றை வெறித்து கொண்டிருந்த மகியை பார்த்து, "மகிமா எங்களுக்கு ஒன்னுமே புரியல.. தயவு செஞ்சு உனக்கும் இவங்களுக்கும் என்ன பிரச்சனைனு சொல்லு.." என்று நகுலன் ஆரம்பிக்க, "ஆமா மகிமா சொல்லு.. எதுக்குனு தெரிஞ்சு அடி வாங்குனா கூட அதுல நியாயம் இருக்கு.. என்னனே தெரியாம அடி வாங்கற கொடுமை இருக்கே கொடுமை.. அதைய வெளில சொல்ல முடில.." என்று மகியை சிரிக்க வைக்கும் பொருட்டில் நிகிலனும் கூறினான்..
அவனின் எண்ணத்தை மகியும் பொய்யாக்காமல் சிறிது புன்னகைக்க, இடை புகுந்த ரிதியோ, "ஹலோ அவ என் அக்கானு எத்தனை தடவை சொல்றது.." என்று முறைக்க, அவளை அடக்கிய ரியா, "ப்ச் அமைதியா இருடி.. அப்பதான் அவங்க சொல்லுவாங்க.." என்றாள் கடுப்புடன்..
"ரிதி சொல்றது உண்மை தான் ரியா.. அவளும் நானும் டிவின்ஸ்.. என் பேரு ரிதன்யா.." - மகி
"நான் கூட உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேரு இருப்பாங்கனு சொன்னதை நினைச்சு இப்படி யோசிக்காம விட்டுட்டேன்.." - ரியா
"உன் மூளை அவ்வளவு தான் வேலை செய்யுதுனு சொல்லாம சொல்றீயா குட்டச்சி.." - நிகிலன்
"நான் உன்கிட்ட பேசல.." - ரியா
"நானும் உன்கிட்ட சொல்லலயே குட்டச்சி.." - நிகிலன்
"அப்ப அந்த குழந்தை??" - நகுலன்
"அது என் குழந்தை தான்.." - மகி
"உனக்கு கல்யாணமாகிருச்சா?" - நகுலன்
"ம்ம்ம் கல்யாணம் ஆனதுல தானே குழந்தையே பிறந்துருக்கு.." - மகி
அந்த அறையில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே தன்னை பற்றி மட்டுமே மகி கூறி முடிக்க, மூவரும் அதிர்ச்சியை தத்தெடுத்து கொண்டனர் என்பதை அவர்களின் முகமே காட்டி குடுத்தது..
அதே அதிர்வுடனே, "அப்போ உங்க பேமிலி..." என்று முழுவதையும் கேட்க முடியாமல் பாதியில் நகுலன் நிறுத்த, மகியோ, "உயிரோட இல்ல.." என்றாள் விரக்தி புன்னகையுடன்..
"நீங்க எப்ப ரிதியா மாறுனீங்க.." - ரியா
"நான் எப்ப நகுலனை காதலிக்கலனு சொல்ல ஆரம்பிச்சனோ அப்ப இருந்து.." - மகி
"இது வெளில தெரிஞ்சா தனு உயிருக்கும் என் அக்கா உயிருக்கும் தான் பாதிப்பு நகுலன்.. எனக்கு உங்களைய விட அவங்க முக்கியம்பா.." - ரிதி
"பாருடா சைடு கேப்புல நீ அவளுக்கு முக்கியம் இல்லனு சொல்லிட்டா.." - நிகிலன்
"நான் எப்ப அப்படி சொன்னேன்.. கொஞ்ச நாள் பிரிஞ்சு இருந்தாலும் அவங்க மேல இருக்கற காதல் எப்பவும் குறையாது.. ஆனா இது என் அக்கா உயிர் பிரச்சனை.." - ரிதி
"சும்மா சொல்ல கூடாது ரிதிமா.. உன் மேல நகுலன் உயிரையே வெச்சுருக்காங்க போல.. எனக்கு எதிரிகளை சமாளிக்கறதை விட உன் ஆளை சமாளிக்கறது தான் பெரிய வேலையா இருந்துச்சு.." என்றாள் மகி கிண்டலுடன்..
இதில் ரிதியின் பார்வை காதலுடன் நகுலனை நோக்க, அவனோ கொலைவெறியுடன் ரிதியை பார்த்தான்.. பின்பு "சாரி மகிமா.. நான் ரிதினு நினைச்சு தான் உன்னைய ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.." என்று உண்மையா வருத்தத்துடன் நகுலன் மன்னிப்பை வேண்டினான்..
"அது எல்லாம் எதுவுமில்ல நகுலன்.. நீங்க பேசறப்ப எல்லாம் எனக்கு தேவ் நியாபகம் தான் வரும்.." என்றவளின் கண்களில் வெறுமை சூழ்ந்து நின்றது..
"அக்கா தனுவோட சத்தமே கேட்கல.. எனக்கு பயமா இருக்கு.." - ரிதி
"நகுலன் நீங்க தானே சொன்னீங்க போன சேர்ந்து போவோம் இல்ல இங்கதான் இருப்போம்னு.." - மகி
"அது.. அது.. சும்மா அப்படி சொன்னேன்.." - நகுலன்
இதில் இதழ் பிரித்து சிரித்த மகி கண்களால் கேமராவை காட்ட, அதன் பின்பு தான் நகுலனுக்கு உயிரே வந்தது..
என்னதான் மகி வெளியில் சாதாரணமாக காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் பதறி கொண்டு தான் இருந்தாள்.. ஒரு பக்கம் தனு.. மறுபக்கம் கிருஷ்.. இதற்கு நடுவில் தன்னுடன் இருக்கும் நால்வர்.. தான் மட்டும் இவர்களிடம் மாட்டி இருந்தால் கூட இவ்வளவு பதறி இருக்க மாட்டாள்!!
தன்னவனை காண ஏதாவது வழி இருக்கிறதா? என்று விடாமல் யோசித்தவாறு மகி அமர்ந்திருக்க, மற்றவர்கள் கேட்ட கேள்விக்கு தான் பதில் அளித்தாலொழிய வேறு எதுவும் பேசவில்லை..
"கடவுளே! என் கிருஷை பார்க்க ஏதாவது ஒரு வழியை ஏற்படுத்தி குடு.. உன்னைய தான் நம்பி இருக்கேன்.." என்று கடவுளிடம் மனு போட, அதை கடவுளும் ஏற்று கொண்டார் என்பதற்கு சான்றாக சிறிது நேரத்தில் கரெண்ட் கட்டாகியது..
நொடிகளை கூட வீணாக்க விரும்பாமல் எழுந்த மகி வெளியில் செல்ல போக, "ஹே மகிமா எங்க போறே? இரு நானும் வர்றேன்.." என்று நகுலனும் அவளின் பின்னே வர, "நீ உள்ள போ நகுலன்.. நான் வந்துருவேன்.." என்று அவள் அதட்டியதையும் காதில் வாங்காதவன் அவளுடனே நடந்தான்..
மெல்லிய குரலில், "இப்ப எங்க போறோம் மகிமா.." என்று நகுலன் வினவ, "ஷ்ஷ்ஷ் பேசாத நகுலன்.." என்று வாயில் விரலை வைத்து அவளை அடக்கிய மகி, யாரோ வரும் அரவம் கேட்டதும் எங்கு ஒளிவது என்று தெரியாமல் சுத்தி பார்த்திருந்த மகியை அருகில் இருந்த அறைக்குள் இருந்து வந்த கரம் ஒன்று வேகமாக இழுத்து கதவை சாத்தி விட, இருட்டில் எதையும் கவனிக்காத நகுலன் அவன் பாட்டிற்கு நடந்து சென்றான்..
தொடுதலிலே யாரென்று உணர்ந்த பெண்ணவள், "கிருஷ்" என்று அவனை இறுக்க அணைத்து கொள்ள, "ப்ச் ரவுடி எத்தனை தடவை சொல்லிருக்கேன் இப்படி அழுகாதேனு.. உன்னைய நம்பி தான் அவங்க இருக்காங்க அதைய மறந்தராத.." என்றான் அதட்டலுடன்..
"நீ ஏன்டா இவங்க கிட்ட மாட்டுனே?" என்று அழுகையில் ஆரம்பித்தவள் சற்று கோவத்துடன் முடித்தது மட்டுமில்லாமல் சிலபல அடிகளையும் கிருஷிற்கு மகி வழங்க, சிரிப்புடன் அவளின் கரங்களை பிடித்தவன் "எல்லாம் நம்ம பிளான்படி தான் போய்ட்டு இருக்கு ரவுடி.. இந்த பிரச்சனையும் இதோட முடியும்னு நம்புவோம்.." என்றான் ஆறுதலாக..
"இங்க ஆல்ரெடி நம்ம ஆளுக கலக்க விட்டாச்சு.. அந்த தாகூர் வந்தா மட்டும் போதும்.. இந்த ஆட்டம் சீக்கிரம் முடிவுக்கு வந்துரும்.." - கிருஷ்
"தனுவை நினைச்சு பயமா இருக்குடா.. ஜெகன் விட்டுட்டு போனது அவளை மட்டும் தான்.." - மகி
"ம்ஹும் தனு மேல சின்ன கீறல் கூட படாது.. ஏன்னா அவங்க கோவமெல்லாம் உன்மேல மட்டும் தான்.. நீ இப்படி எல்லாம் பயப்படற ஆள் இல்லயே.." - கிருஷ்
"எப்ப அவங்க என்னைய விட்டு போனாங்களோ அப்பவே எல்லாத்தையும் நான் இழந்துட்டேன்டா.." - மகி
"அப்ப நானும் தனுவும் உனக்கு வேணாமாடி?" - கிருஷ்
மௌனத்தையே பதிலாக தந்த மகியின் முகத்தை தாங்கிய கிருஷ், "உனக்காக நானும் தனுவும் காத்திருப்போம்.. நீ எங்ககிட்ட வரல கண்டிப்பா நாங்களும் உன்கிட்டயே வந்துருவோம்டி.." என்றவனின் கண்களில் அவ்வளவு தவிப்புகள்..
"முடியுமானு யோசிக்கற மனசை கண்டிப்பா முடியும்னு யோசிக்க வெய்யு.. கண்டிப்பா வெற்றி உன் பக்கம்.. உன்னைய பார்த்ததுல இருந்து அக்கா அக்கானு உன் பின்னாடி சுத்தற ரிதியை நினைச்சு பாரு.. அவளோட வாழ்க்கை நகுலன் தான் என்பதை மறந்தராத.."
"இவங்க ரெண்டு பேருத்தையும் விட சம்பந்தமே இல்லாம இவங்க கிட்ட மாட்டிருக்கற ரியாவையும் நிகிலனையும் கொஞ்சம் யோசி.. இந்த கேஸை எவ்வளவு நம்பிக்கையோட எடுத்தீயோ அதைய விட அதிகமான நம்பிக்கையை இதோட முடிவுல காட்டு.."
"கண்டிப்பா உனக்கு துணையா நான் இருப்பேன்டி.." என்றவனின் வார்த்தையில் எண்ணிலடங்கா தவிப்புகள் இருக்க, மெதுவாக தன்னவளின் அதரங்களை பட்டும்படாமலும் தீண்டி விட்டு விலகியவன், "இனி என் ரவுடியா தான்டி உன்னைய பார்க்கனும்.." என்றான் அழுத்தமாக..
ஏனோ இப்போது மகியின் மனது லேசானதை போல் உணர, "அய்யோ அம்மா.." என்று காற்றில் வந்த நகுலனின் குரல் இவளின் செவிப்பறையை தீண்டி மீள, அப்போது தான் தன்னுடன் இன்னொரு ஜீவன் வந்ததையே உணர்ந்தவள் மெதுவாக கதவை திறந்து வெளியில் வந்தாள்..
விக்ரம் தான் நகுலனை அடித்து கொண்டிருக்க, மற்றவர்களின் கவனம் அனைத்தும் நகுலனின் மேல் இருந்ததால் பின்னால் வந்த மகியை அவர்கள் பார்க்கும் முன்பே பார்த்து விட்ட நகுலன், "அறைக்கு போ மகிமா.." என்று கண்ணசைவில் மிரட்டினான்..
மறுத்து தலையசைத்த மகியை கொலைவெறியோடு நகுலன் முறைத்து "சீக்கிரம் போ.." என்று கண்டிப்பான பார்வையை அவள் மீது வீச, வேறு வழியில்லாமல் மகியும் அறையின் பக்கம் நகர, அதன் பின்னர் தான் நகுலன் விக்ரமிடம் இருந்து திமிறி விலகினான்..
"இப்ப எதுக்கு என்னைய அடிக்கறே?" - நகுலன்
"எவ்வளவு தைரியம் இருந்தா தப்பிச்சு போக பார்த்துருப்பே?" - விக்ரம்
"உன் மூளைல என்ன மசாலாவா வெச்சுருக்கே.. இங்கிருந்து தப்பிச்சு போக மனுசன் நினைச்சு பார்ப்பானா?" - நகுலன்
"அப்பறம் எதுக்குடா வெளில வந்தே?" - விக்ரம்
"கரெண்ட் இல்லனு ஏதாவது மெழுகுவர்த்தி வாங்கிட்டு போலாம்னு வந்தது ஒரு குத்தமாடா?" - நகுலன்
அவனை பார்வையால் வதம் செய்தவாறே "இதைய என்னைய நம்ப சொல்றீயா?" என்று நகுலனின் கன்னத்தில் பளார் பளாரென்று கணக்கில்லாமல் அடியை வைத்த விக்ரம், "டேய் இவனை தூக்கி அந்த அறைல போட்டுட்டு அறையை பூட்டி வெய்யுங்கடா.." என்றான் கர்ஜனையுடன்..
நகுலனை இருவர் தூக்கி சென்றதும் தன்னருகில் நின்றிருந்த அடியாளை சப்பென்று அறைந்த விக்ரம், "ஏன்டா பன்னாடை அவன் வெளில வந்தது கூட தெரியாம எனத்தடா நீங்க பண்ணிட்டு இருந்தீங்க.. மறுபடியும் இப்படி ஏதாவது நடந்துச்சு உங்களைய கொன்னு புதைச்சுட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.." என்று அனைவரிடமும் சீறினான்..
முகம் முழுவதும் காயங்களுடன் நகுலனை கண்டதும் அனைவரும் பதறி போக, குற்றவுணர்வுடன் மகியோ, "நான் தான்.." என்று ஆரம்பிக்க முயன்றவளை தடுத்த நகுலன், "நான்தான் வெளில போனேன் போதுமா?" என்றான் அனல் பார்வையில்..
பேச வந்த மற்றவர்களையும் பேச வேணாம் என்று தடுத்த நகுலன் அப்படியே படுத்து கொள்ள, சிறிது நேரம் கண்மூடி படுத்திருந்தவன், "மச்சி வேலை செஞ்சா கூட இவ்வளவு டயர்டு ஆகாதுடா.. சும்மாவே இருந்ததுல உடம்பு எல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு.." என்றவாறு எழுந்தமர்ந்தான்..
"இப்ப அந்த ரவுடிஸ் உன்னைய மொத்து மொத்துனு மொத்தி குப்பையை அள்ளற மாதிரி அள்ளிட்டு வந்து இங்க போட்டுட்டு போனதுல தான் மச்சி உனக்கு அப்படி தெரியுது.." - நிகிலன்
"இதுக்கு நான் முறைக்கனுமா? இல்ல உன்னைய அடிக்கனுமா?" - நகுலன்
"த்து இது ஒன்னு தான் குறை.." என்று காறி துப்பிய நகுலன் அந்த அறையில் ஏதாவது கிடைக்கின்றதா என்று கண்களை சுழல விட்டான்.. இரண்டு கட்டைகளும் ஒரு பூச்சாடி மட்டுமே இருக்க, தட்டுதடுமாறி எழுந்தவன் "மச்சி விளையாடலாம் வாடா.." என்று நிகிலனை அழைத்தான்..
"அடேய் அவங்க அடிச்ச அடில மண்டை ஏதாவது குழம்பி போய்ருச்சா?" - நிகிலன்
"அதானே இப்ப நம்ம என்ன நிலைமைல இருக்கோம்னு தெரியாம புலம்பிட்டு இருக்கோம் இதுல சாதாரணமா இவன் விளையாட கூப்படறான்.." - ரியா
"எந்த நிலைமைல இருந்தாலும் என்ன? எவ்வளவு நேரம் தான் அந்த சுவத்தையே பார்த்துட்டு இருக்கறது.." - நகுலன்
"அது எல்லாம் நம்ம புள்ளக விளையாட போறது மச்சி.. நம்ம இப்ப கிரிக்கெட் விளையாட போறோம்.." - நகுலன்
"அடேய் மறை ஏதாவது கழண்டுருச்சா?" - நிகிலன்
"இல்லயே நான் தெளிவா தான் இருக்கேன் மச்சி.." என்றவன் கட்டையை எடுத்து திருப்பி திருப்பி பார்த்து விட்டு பூச்சாடியை எடுத்து நிகிலனின் கையில் திணித்தான்..
"இது பேட்.. அது பந்து.. நீ இப்ப பௌலிங் நான் பேட்டிங்.." என்ற நகுலன், "நீங்க ஏன் இப்படியே இருக்கீங்க.. கொஞ்சம் அப்படிக்கா போறது.." என்று கதவோரம் கையை காட்ட, "வாங்குன அடில பைத்தியமாகிட்டான் போல.." என்று முணுமுணுத்தவாறு பெண்கள் மூவரும் அகன்றனர்..
"நாங்க என்ன பண்றோம் ஏது பண்றோம்னு கேமராவுல வாட்ச் பண்ணவா சொல்றே.. இருடா இரு அந்த கேமராவே இல்லாம பண்றேன்.." என்று விக்ரமை மனதினுள் தாளித்து எடுத்தவன், "நீ ஏன்டா என் மூஞ்சியை பார்த்துட்டு இருக்கே? அதையை வீசு.." என்றான் கடுப்புடன்..
"அடேய் இதைய எப்படிடா வீசறது?" என்று நொந்த நிகிலன் மெதுவாக பூச்சாடியை வீச, நான்கைந்து முறை தவற விட்ட நகுலனை கண்டு முறைத்த நிகிலன், "போடா டேய்.." என்று அமர போக, அவனை விடாமல் "இந்த ஒரு முறை மச்சி.." என்றதும், ஏதோதானோ என்று நிகிலன் வீசிய பூச்சாடியை இந்த முறை சரியாக கேமராவை நோக்கி குறி வைத்து அடித்திருக்க அதுவோ சில்லு சில்லாக கீழே விழுந்தது..