நகுலன் பேச வந்ததை தடுத்து, "நீ நம்பறதும் நம்பாததும் உன் விருப்பம் நகுலன்.. நான் ரிதன்யா.. உன் ரித்திகா இல்ல.. கொஞ்சம் யோசிச்சு பாரு.." என்றிட, "சரி நீங்க ரிதன்யாவாகவே இருங்க.. நீங்க ஏன் ரிதியோட இடத்துல இருக்கீங்க.." என்று தனக்குள் எழுந்த சந்தேகத்தை கேட்டான் நிகிலன்..
பெருமூச்சுடன், "தெரிய வேண்டிய நேரத்துல தெரிய வரும் ப்ரோ.. உங்க மூணு பேருக்கும் எதுவுமாகாம வெளில கூட்டிட்டு போக வேண்டியது என் பொறுப்பு.. என்னைய நம்புங்க.." என்றாள் ரிதன்யா என்கிற மகிழினி..
இதே சமயத்தில் அனைத்தும் தான் நடந்து விட்ட மிதப்பில் விக்ரம் அமர்ந்திருக்க, "டேய் அவங்களைய கூட்டிட்டு வாங்கடா.." என்று கட்டளையிட்டதும் நால்வரையும் அழைத்து வந்தனர்..
அப்போது இரு ஆட்கள் இழுத்து வந்த பெண்ணையும் மூன்று வயது குழந்தையையும் திகைத்து பார்த்த நகுலன் மகிழினியை பே வென்று பார்த்தான்..
மகிழினியை கண்டதும் தன்னை பிடித்திருந்தவர்களின் கையை தள்ளி விட்டு அவளிடம் ஓடி வந்து "அக்கா" என்று அணைத்து கொண்டது நகுலன் காதலித்த ரிதியே.. சிரித்தபடி எழுந்த விக்ரம் இருவரையும் பிரித்து தள்ளி, "என்ன மேடம் உங்க சாயம் வெளுத்து போய்ருச்சா?" என்று கிண்டலாக கேட்க, "அதைய பத்தி உங்களுக்கு என்ன கவலை மிஸ்டர்.விக்ரம்.." என்றாள் எதிர்கேள்வியாக..
ரிதியின் கையில் இருந்த குழந்தை வேறு விடாமல் சிணுங்க, ரிதியிடம் இருந்து வெடுக்கென குழந்தையை பிடுங்கியவன், "இதுதான் உனக்கும் அவனுக்கும் பிறந்த புள்ளயோ?" என்று நக்கலாக வினவ, பதட்டத்துடன் மகிழினியோ, "ப்ளீஸ் விக்ரம் அவளை என்கிட்ட குடுத்துரு.. பச்ச குழந்தை விக்ரம்.. அவ எதுவும் உங்களைய பண்ணல.." என்று மன்றாடினாள்..
ரிதியும் அவனிடம் இருந்து குழந்தையை வாங்க முயல, இருவரையும் மாறி மாறி பார்த்து திகைப்பில் உறைந்திருந்த மற்ற மூவரும் குழந்தையின் வீறிட்டு அழுகையில் தான் தன்னிலைக்கு வந்து, "டேய் மனுசனாடா நீயி? பச்ச குழந்தை அப்படி அழுகுது.. குடுடா.." என்று நகுலனும் குழந்தையை தூக்க முயன்றான்..
விக்ரமிடம் இருந்த குழந்தையோ ரிதியை கை காட்டி அழுக, "ப்ளீஸ் விக்ரம்.. குழந்தை பயத்துல அழுகுது என்கிட்ட குடு.." என்று வீறிட்டு அழுகும் தன் மகளை கண்டு உள்ளம் நொந்து போய் தன் வீராப்பை விட்டு விட்டு கெஞ்ச தொடங்கினாள் மகிழினி..
இதை அனைத்தையும் ஒரு பார்வையாளராக பார்த்திருந்த ராஜனும், "மாப்ள இவ அழுகறப்ப எவ்வளவு சந்தோசமா இருக்குல்ல?" என்று கேலியுடன் வினவ, அவரை அனல் தெறிக்க பார்த்த மகிழினி, "உங்களுக்கு மேல கடவுள்னு ஒருத்தர் இருக்காரு.. அதையை மறந்தராதீங்க ராஜன் சார்.." என்றாள் சலனமின்றி..
மகிழினியை கெஞ்ச விட்டது போதும் என்று விக்ரம் நினைத்தானோ என்னவோ அழுது அழுது ஓய்ந்து போயிருந்த குழந்தையை அவளிடம் நீட்ட, கண்ணீருடன் தன் மகளை வாங்கி எண்ணிலடங்கா முத்தங்களை பிஞ்சு முகத்தில் பதித்து "தனு" என்று உள்ளம் பூரிக்க அணைத்து கொண்டவளின் கண்ணீர் துளிகள் குழந்தையின் முதுகை நனைத்தது..
"அண்ணா உங்க பொண்ணை இந்த மிருகத்துகிட்ட இருந்து நீங்கதான் காப்பாத்தனும்.. தனுக்கு எதுவுமாக கூடாது.. அவ மட்டும் தான் எனக்குனு இருக்கா.." என்று மனதினுள் தன் மேல் உயிரையே வைத்திருந்த தன் அண்ணனை நினைத்து குழந்தையின் உச்சியில் அழுத்தமாக இதழை பதித்தாள்..
அவளின் அருகில் நின்றிருந்த நகுலன், "குழந்தையை குடு மகிமா.. நீயும் அழுது குழந்தையையும் அழுக வெக்காதே!" என்றவாறு குழந்தையை தூக்கி கொள்ள, அவனின் மகிமா என்ற அழைப்பில் கண்கள் மட்டுமா உள்ளமும் சேர்ந்தே கலங்கியது பெண்ணவளுக்கு!
இதைய கன்னத்தில் கை வைத்து பார்த்திருந்த விக்ரம், "பார்த்தீங்களா மாமா எப்படி எல்லாம் பாசமலர் படம் ஓட்டறாங்கனு.. ஸ்ஸ்ப்ப்ப்பா என்னவொரு பாசம்.." என்று நகைக்க, நிகிலனோ "விக்ரம் நீங்க பண்றதுனு தப்புனு உங்களுக்கு தெரியலயா?" என்றான் சற்று கோவத்துடன்..
கையை விரித்த விக்ரம் "எங்களுக்கு தப்பா தெரிலயே!" என்றவாறு சிரித்தவன், உடனே முக பாவனையை மாற்றி, "உன் நண்பன் என்னைய சீண்டற வரைக்கும் உங்களுக்கு நல்லவனா தான் இருந்தேன்.. அதே மாதிரி தான் இந்த மகிழினிக்கும்.. எப்ப என் வழில குறுக்க வந்தாளோ அதுல இருந்து எல்லாத்தையும் இழந்துட்டு இருக்கா.." என்றான் சீறலாக..
"நீதிக்காக போராடறது தப்பில்லனு தான் படிச்சுருக்கேன் மிஸ்டர்.. உங்களைய மாதிரி அநியாயத்துக்கு எல்லாம் துணை போக முடியாது.. நீங்க பண்ணிட்டு இருக்கற வேலைக்கு பேரு என்னனு தெரியுமா?" என்று சற்று நக்கலை ஏற்றி மகி வினவிட, விக்ரமும் "தெரியுமே மேடம் நல்லாவே தெரியும்.." என்றான் அதே நக்கல் தோணியில்..
"மாப்ளை இவ கிட்ட என்ன பேச்சு? முதல்ல அந்த குழந்தையை போட்டு தள்ளிட்டு இவளையும் போட்டு தள்ளுங்க.. நம்ம இடத்துல இருந்துட்டே எப்படி பேசறானு பாரு.." என்று ராஜன் வெகுண்டு எழுந்ததும், "கொஞ்சம் பொறுமையா இருங்க மாமா.. தாகூர் அங்கிள் இவளை உயிரோடு வேணும்னு சொன்னதை மறந்துட்டீங்களா?" என்று விக்ரம் அதையை நியாபகபடுத்தியதும் ராஜன் அமைதியாகி விட்டார்..
அப்போதும் சிறிதும் பயமில்லாமல் விக்ரமை ஏறிட்ட மகி, "நானும் அவரை பார்க்கதான் இவ்வளவு நாள் காத்திருக்கேன்.. வர சொல்லுங்க.. அண்ட் ஒன்ன மறந்தராதீங்க மிஸ்டர்.. இப்ப அடுத்தவங்க வீட்டு பொண்ணுக மேல கை வெக்கற அவரு கடைசில உங்க வீட்டு பொண்ணுக மேலயும் கை வெக்க மாட்டாருனு என்ன நிச்சயம்?" என்று கேட்டது தான் தாமதம் விக்ரமின் கரங்கள் மகியின் கன்னத்தில் அழுத்த பதிந்தது..
இதில் மகியின் இதழோரத்தில் சிறுதுளி ரத்தம் துளிர்க்க, ஆவேசமாக திரும்பிய மகியும் அவன் சுதாரிக்கும் முன்னே அவனின் கன்னத்தில் அடியை இறக்கி, "என்னடா என்ன? உங்களுக்கு வர்றப்ப மட்டும் வலிக்குதா? இப்படி தானே அடுத்தவங்களுக்கும் வலிக்கும்.." என்று எகிறி இருந்த நேரத்தில் அங்கிருந்த பூச்சாடியை எடுத்த ராஜன் அவளை அடிக்க போக,
"அக்கா" என்று ரிதியும் "மகிமா" என்று நகுலனும் கத்திய கத்தல் அவளின் செவியை தீண்டும் முன்பே ராஜன் அடித்த அடியில் கண்கள் சொருக மயங்கி சரிந்தாள் மகிழினி..
குழந்தையை நிகிலனிடம் குடுத்து விட்டு வேகமாக மகியை இருவரும் எழுப்ப முயல, நகுலனை உதைத்து தள்ளிய ராஜன், "என் மருமகன் மேல கை வெச்சா சும்மா இருப்பேனு நினைச்சீயா?" என்று மகியை மிதிக்க போகும் நேரத்தில் "மாமா வேணாம் விடுங்க.." என்று அவரை தடுத்த விக்ரமுக்கு உள்ளுக்குள் கோவம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது..
*********
நவீன வசதிகளுடன் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டில் எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு பூ தோரணங்களும் ஆங்காங்கு தொங்கி கொண்டிருக்க, வேலை ஆட்கள் துரிதத்துடன் அங்குமிங்கும் ஓடி கொண்டிருந்தனர்..
இன்று சங்கரன் - மேகலை தம்பதிகளின் இரட்டை குழந்தைகளான ரிதன்யா - ரித்திகாவின் எட்டாவது பிறந்தநாள்.. வருடந்தோறும் தன் மகள்களின் பிறந்த நாளை அந்த ஊரே வியக்கும்படி கொண்டாடுவார் சங்கரன்..
இந்த வருடமும் அதேபோல் தான் பணத்தை தண்ணீராய் செலவழித்து விழாவிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, மாடியில் ஓர் அறையினுள் ரிதன்யாவும் ரித்திகாவும் விலையுயர்ந்த கவுனில் தேவதைகளாக கண்ணாடி முன்பு நின்று அப்படியும் இப்படியும் திரும்பி பார்த்தவாறு இருந்தனர்..
தன் மகள்களை தேடி வந்த மேகலை இருவரையும் திருஷ்கழித்து அணைத்து கொள்ள, "மம்மி மம்மி டாடி எங்க? நான் அவரை பார்க்கனும்.." என்று ரித்திகா தன் தந்தையை கேட்டதை சங்கரனும் அறிந்தார் போலும் "இதோ வந்துட்டேன்டா செல்லக்குட்டி.. இந்த டாடியை எதுக்கு தேடறீங்க?" என்றவாறு அங்கு வந்தார்..
"டாடி இந்த டிரெஸ்ல நான் எப்படி இருக்கேன்.." என்று ரித்திகா அப்படியும் இப்படியும் திரும்பியவாறு கேட்டிட, அவரும் அவளின் கன்னத்தை மெதுவாக கிள்ளி, "என் பொண்ணு அப்படியே தேவதை மாதிரி இருக்கா.." என்றார் வாய்கொள்ளா புன்னகையுடன்..
"அப்ப நானு நல்லா இல்லையா டாடி.." என்று இதழை குவித்து கொண்டு கேட்ட ரிதன்யா திரும்பி நின்று கொள்ள, "என் செல்ல பொண்ணும் தேவதையை விட அழகா இருக்கா.." என்று அவளையும் கொஞ்சி சமாதானபடுத்தியவர் இருவரையும் அழைத்து கொண்டு வெளியில் வந்தார்..
வீடெங்கும் பலூனால் நிரப்பப்பட்டிருக்க, பலூனை கண்டதும் "ஐ டாடி இவ்ளோ பலூனா?" என்றவாறு இருவரும் துள்ளி குதித்து ஓட, தன் மகள்களின் விளையாட்டை சிறிது நேரம் ரசித்து பார்த்திருந்த பெற்றவர்கள் புன்னகையுடன் தங்கள் வேலையை கவனிக்க சென்றனர்..
மாலையில் அனைவரின் முன்பு கேக் வெட்டிய இரட்டையர்கள் அன்றைய நாளை தங்கள் வாழ்வின் பொக்கிஷமாக சேமித்து கொண்டு துள்ளலுடன் வலம் வந்தனர்..
இதுதான் இவர்கள் கொண்டாடும் கடைசி பிறந்தநாள் என்பதை அறியாமல் ரிதன்யாவும் ரித்திகாவும் வந்திருந்த குழந்தைகளுடன் தங்கள் நேரத்தை மகிழ்வுடன் கழித்திருக்க, விழாவும் முடிந்ததில் ஒவ்வொருவராக கிளம்பி கொண்டிருந்தனர்..
ஒரு வாரம் கழிந்த நிலையில் எப்போதும் பூட்டியே வைத்திருக்கும் அறையில் இருந்து வெளியில் வந்த சங்கரன் யாருடனோ போனில் கோவமாக பேசியவாறு நகர, இதனை ஏதேச்சையாக வெளியில் வந்த ரிதன்யா புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு அவ்வறையில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மேலோங்கியது..
தன் தந்தை வருகிறாரா? என்று சங்கரன் சென்ற திசையை எட்டி பார்த்தவள் குடுகுடுவென அந்த அறைக்குள் ஓடினாள்.. அறையை சுற்றி சுற்றி பார்த்து விட்டு, "இங்க ஒன்னுமே இல்லயே அப்பறம் எதுக்கு டாடி பூட்டி வெச்சுருக்கறாரு.." என்று மோவாயில் கை வைத்தவாறு யோசித்தவளின் கவனத்தை கலைத்தது ஏதோ சத்தம்..
அந்த சத்தம் எங்கிருந்து வந்தது என்று அறை முழுவதும் கண்களை சுழல விட்டவளின் விழிகளில், கம்ப்யூட்டர் ஒன்று அகபட, "ஓஓஓ டாடியோட ஆபிஸ் ரூம் போல?" என்று தனக்கு தானே கூறி கொண்டு அதனருகில் சென்றாள்..
கம்ப்யூட்டரில் அடுத்தடுத்து குழந்தைகளின் புகைப்படம் வந்து கொண்டிருக்க, "டாடி எதுக்கு இவ்வளவு போட்டோ வெச்சுருக்காரு.." என்று நினைத்தவாறே அதில் வரும் குழந்தைகளின் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தாள்..
திடீரென்று அவளுடன் படிக்கும் இரு பெண்களின் புகைப்படமும் அதில் வர, "ஐ ஜமுனாவும் இருக்கா.." என்று கைதட்டி குதித்த ரிதன்யாவுக்கு அது எதற்கென்று யோசிக்கும் வயதும் இல்லை..
நிற்காமல் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த போட்டோவை பார்த்தவாறு இருந்தவள், தன் தந்தை வந்து விட்டால் அவ்வளவு தான் என்றெண்ணி குடுகுடுவென வெளியில் வந்து விட்டாள்..
அந்த அறையில் பார்த்ததை அப்போதே ரிதன்யா மறந்திருக்க, மாடியில் ரித்திகாவுடன் ரிதன்யா விளையாடி கொண்டிருந்த சமயத்தில் ரித்திகா பந்தை கீழே வீசி விட, "நீதானே கீழ வீசுனே அப்ப நீயே எடுத்துட்டு வா.." என்றாள் ரிதன்யா..
ஆனால் ரித்திகாவோ "அது எல்லாம் முடியாது நான் வீசுனதை நீதான் பிடிக்கல அப்ப நீதான் எடுத்துட்டு வரனும்.." என்றிட, இருவரும் மாறி மாறி சண்டையிட்டு இறுதியில் தன் தங்கையை வசைபாடியவாறு ரிதன்யாவே செல்ல, உம்மென்று செல்லும் தன் அக்காவை கண்டு வாயை மூடி நகைத்தவாறு நின்றிருந்தாள் சிறுவயது ரித்திகா..
தோட்டத்திற்கு சென்று பந்து எங்கு விழுந்ததென்று ரிதன்யா தேடி கொண்டிருக்கும் போது கெஸ்ட் ஹவுசில் இருந்து தன் தந்தையின் குரல் கேட்க, "டாடியை கூட்டிட்டு வந்து பந்தை எடுத்து தர சொல்லலாம்.." என்று நகரும் நேரத்தில் அங்கிருந்து வந்த அழுகையின் சத்தத்தில் மெதுவாக எட்டி பார்த்தாள்..
ஒரு ஆணும் பெண்ணும் சங்கரனின் காலை கட்டி கொண்டு அழுதவாறு இருக்க, அவரோ சிறிதும் இரக்கமில்லாமல் அந்த ஆணின் நெஞ்சில் எட்டி மிதித்து, "நான் சொல்றது கேட்கலனா இந்த நிலைமை தான் வரும்.." என்று கத்த, அப்போதும் அந்த ஆணோ அவரின் காலை விடாமல், "ஐயா ஐயா தயவு செஞ்சு என் பொண்ணை குடுத்துருங்க.. நீங்க சொன்னாலும் கேட்கறேன்.. அவ தான் எங்க உலகமே.. அவ இல்லாம எங்களால வாழ முடியாது.." என்றார் கதறலுடன்..
"நான் சொன்னதை அப்பவே செஞ்சுருந்தா இந்த நிலைமைக்கு வந்துருக்குமா? உன் பொண்ணை கடத்துனது நான்தான்.. அப்பவே அவளை காணாம போன பொண்ணுக்கு பதிலா அவங்க கூட அனுப்பியாச்சு.. இப்ப எங்க இருக்கானு எனக்கே தெரியாது.."
"இப்ப அழுது ஒரு பிரயோஜனமும் இல்ல.. போ போ போய் பொழைக்கற வழியை பாரு.." என்று அசட்டையாக பதில் கூறிய சங்கரன் அழுது கொண்டிருந்த இருவரையும் நக்கலாக ஒரு பார்வை பார்த்து விட்டு அகன்றார்..
இதை அனைத்தையும் கேட்டவாறு இருந்த ரிதன்யாவுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.. ரித்திகா மேகலையை போல் பயந்த சுபாவம்.. ஆனால் ரிதன்யா அவ்வாறு இல்ல.. அந்த வயதிலே எந்த விசயத்தையும் கப்பென்று பிடித்து கொள்ளும் புத்தி கூர்மையுடையவள்..
அதனால் தான் சங்கரன் இந்த விசயத்தை பற்றி வீட்டில் பேசுவதே இல்லை.. இதற்கென்று தனியறையை உபயோகிப்பவர் மற்ற நேரம் அனைத்தும் பூட்டி வைத்து விடுவார்.. அன்று இவர்கள் கடத்திய பெண்களில் இரு பெண்கள் தப்பித்து விட்டதாக வந்த போனில் தான் கோவத்தில் அடியாட்களை வசைபாடியவாறு அறையை பூட்டாமல் சென்று விட்டார்..
இப்போது தன் தந்தை பேசியதும் அவர்கள் அழுததையும் யோசிக்கும்போது தானாக அன்று பார்த்த குழந்தைகளின் புகைப்படங்கள் கண்முன்னே வர, அழுதவாறு வெளியேறும் இருவரையும் பாவமாக பார்த்து கொண்டு நின்றிருந்தாள்..
போனில் எதையோ பார்த்தவாறு வந்த சங்கரனின் முன்பு சென்ற ரிதன்யா, நேரடியாகவே "டாடி அவங்க எதுக்கு அப்படி அழுதாங்க.. நீங்க அவங்க பொண்ணை கடத்திட்டீங்களா?" என்று கேட்டு விட, தன் மகளின் கேள்வியில் திகைத்த முகத்தை வெளியில் காட்டி கொள்ளாமல், "இல்லயேடா.. யாரு அழுதா.. அப்படி யாரும் அழுகலயே.. போய் ரித்திகா கூட விளையாடு தங்கம்.." என்று அவளை அனுப்பி விடும் நோக்கில் பேசினார்..
ஆனால் ரிதன்யாவோ விடாமல், "நான் பார்த்தேன் அவங்க பொண்ணை விட சொல்லி அந்த அங்கிளும் ஆண்ட்டியும் அழுததை.. அதுக்கு நீங்களும் நான்தான் உங்க பொண்ணை கடத்துனேனு சொன்னதையும் கேட்டேன்.. ப்ளீஸ் டாடி அந்த பொண்ணும் எங்களைய மாதிரி குட்டி பொண்ணு தானே.. விட்டுருங்க.. இல்ல நான் உங்க கூட பேச மாட்டேன்.." என்று முகத்தை திருப்பி கொண்டாள்..
"இவளுக்கு எப்படி இது எல்லாம் தெரிஞ்சுச்சு?" என்ற யோசனையில் உழன்ற சங்கரன் சட்டென்று, "அது எல்லாம் சும்மாடா.. டாடி அப்படி பண்ணுவனா? அந்த அங்கிள் டாடி சொன்ன வேலையை செய்யாம விட்டுட்டாங்க அதுக்குதான் அவங்களைய பனிஷ் பண்ணுனேன்.. வேற எதுவும் இல்லடா.." என்றார் சமாளிப்புடன்..
அவரை நம்பாமல் உதட்டை பிதுக்கி கொண்டு "பொய் சொல்லாதீங்க டாடி அந்த ரூம்ல நிறைய குழந்தைக போட்டோவை நானும் பார்த்தேன்.. அந்த பொண்ணு பாவம் டாடி விட்டுருங்க.. இல்ல நான் மம்மி கிட்ட சொல்லுவேன்.." என்றவாறு ரிதன்யா நகர, அவளை பிடித்து நிறுத்தியவர், "தங்கம் அது எல்லாம் சும்மாடா.. இதைய எல்லாம் மம்மிகிட்ட சொல்ல கூடாது.." என்றார் சற்று கண்டிப்புடன்..
ரிதன்யாவும் பிடிவாதத்துடன், "நான் மம்மிகிட்ட சொல்லுவேன்.. நீங்க பேட் டாடினு.." என்று கண்ணை சுருக்க, "ப்ச் நான்தான் சொல்ல கூடாதுனு சொல்றேனல்ல? இப்படி பிடிவாதம் பிடிச்சா அடிச்சுருவேன்.. உங்களுக்காக தான்டா டாடி சம்பாதிக்கறேன்.. இதைய எல்லாம் வெளில சொல்ல கூடாது.. சரியா?" என்று கண்டிப்பு கலந்த கெஞ்சலில் கூறினார் சங்கரன்..
"அப்ப அவங்க எங்களைய கேட்டாலும் அனுப்பிருவீங்களா?" என்று அழும் தோணியில் கேட்ட ரிதன்யாவை அடிக்க கை ஓங்கிய சங்கரன், "இப்படி கூட கூட பேசிட்டு இருந்தா பல்லை பேத்துருவேன்.. இதைய மறந்துட்டு போய் விளையாடு போ.." என்று அவளை தள்ளி விட, கண்ணை கசக்கி கொண்டு தன் தந்தையை திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்றாள் ரிதன்யா..
அதன்பிறகு உம்மென்று மாறிய ரிதன்யா தான் யாருடனும் பேசுவதே இல்லை.. அதுவும் சங்கரனை கண்டால் முகத்தை திருப்பி கொண்டு அறைக்குள்ளயே முடங்கி விடுவாள்.. அவளிடம் என்னவென்று கேட்டு கேட்டே மேகலை ஓய்ந்திருக்க, சங்கரன் அவளிடம் பேச சென்றால் அங்கிருந்து ஓடி விடுவாள்..
போக போக சரியாகிரும் என்று எண்ணிய சங்கரன் அதன்பிறகு ரிதன்யாவை அவள் பாட்டுக்கு விட்டு விட்டார்.. கோவிலுக்கு செல்லலாம் என்று மூவரும் கிளம்பியிருந்த நேரத்தில் ரிதன்யா மட்டும் வர மாட்டேன் என்று அடம்பிடிக்க, வேறு வழியில்லாமல் வீட்டில் வேலை செய்யும் ஆட்களிடம் அவளை பார்த்து கொள்ள கூறி விட்டு மற்ற மூவரும் கோவிலுக்கு கிளம்பினர்..
தன் தந்தை தன் பேச்சை கேட்கவில்லை என்றுதான் ரிதன்யாவுக்கு கோவம்.. அவளின் கண்மூடி தனமான கோவத்தில் எதை பற்றியும் யோசிக்காமல் மெதுவாக வீட்டை விட்டு வெளியேறினாள்..
கால் போன போக்கில் நடந்து சென்ற ரிதன்யாவுக்கு சற்று பயமாக இருக்க, அப்போதும் வீம்புடன் நடந்து கொண்டே இருந்தாள்.. இருட்ட தொடங்கிய நேரத்தில் பயம் கவ்வ, நடக்கும் திரணியற்று அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தவள் தேம்பி தேம்பி அழுக தொடங்கினாள்..
பயத்தில் தன் தந்தையிடமே சென்று விடலாம் என்ற எண்ணம் வந்தபோதும் வீட்டிற்கு செல்லும் வழியும் தெரியாமல் யாரிடம் உதவி கேட்பதும் என்றும் அறியாமல் பயத்தில் அமர்ந்திருந்தவளை நோக்கி இரு ஆண்கள் வந்தனர்..
அவர்களை கண்டதும் பயத்தில் வெடவெடத்த உடலுடன் எந்திரித்தவள் ஓட முயல, ஒரே எட்டில் அவளை தூக்கியிருந்த ஒருவன், "என்ன பாப்பா இப்படி ஓட பார்க்கறே?" என்று சிரித்தவாறே கேட்டிட, அழுகையுடனே "விடுங்க விடுங்க" என்று அவன் பிடித்திருந்த கையில் படபடவென்று அடித்தாள்..
அப்போதும் அவன் விடாமல் இருப்பதை கண்டு கண்ணீருடன் அவனின் கையை கடித்து வைக்க, வலியில் அவன் கையை விலக்கிய சமயத்தில் இன்னொருவனின் கைகளுக்குள் சிக்காமல் ஓட தொடங்க, "டேய் அவளை விட கூடாது வாடா.." என்று இருவரும் அவளை துரத்தி கொண்டு வந்தனர்..
பயத்தில் திரும்பி திரும்பி பார்த்தவாறே ஓடிய ரிதன்யா அவ்வழியில் வந்த ஒருவரின் மேல் மோதி கீழே விழுக, "பாப்பா என்னடா ஆச்சு இப்படி ஓடி வர்றே?" என்று பதட்டத்துடன் அவர் வினவியதும் "அங்கிள் அங்க அங்க.." என்று அழுகையுடனே முழுவதும் கூற முடியாமல் மயங்கி சரிந்தாள்..
மீண்டும் அவள் கண் விழித்த போது யாரோ ஒருவரின் வீட்டில் இருப்பதை உணர்ந்து சற்று திகிலுடன் அவ்வறையை சுற்றி சுற்றி பார்த்தவளுக்கு அழுகை பீறிட்டது.. அதே சமயம் அறைக்குள் வந்த பத்து வயதிற்கு மேற்பட்ட சிறுவன் ஒருவன், "அப்பா பாப்பா கண்ணு முழிச்சுருச்சு.." என்று குரல் குடுத்தான்..
கண்ணை அங்குமிங்கும் உருட்டியவாறு அச்சத்துடன் அச்சிறுவனை ரிதன்யா பார்த்திருக்க, கையில் பாலுடன் வந்த அவனின் தந்தை, "பசில இருப்பே இதை குடி பாப்பா.." என்று பாலை அவளிடம் நீட்டினார்..
"நாநா என் மம்மி கிட்ட போகனும்.." என்று தேம்பியவாறு மீண்டும் ரிதன்யா அழுக தொடங்க, "அச்சோ தங்கம் அழுகாதடா.. நான் உன்னைய எதுவும் பண்ண மாட்டேன்.. உன் அப்பா மாதிரி என்னைய நினைச்சுக்கோ.. உன் வீடு எங்க இருக்குனு சொல்லு.. நான் கொண்டு போய் விடறேன்.." என்று பாசமாக வந்த அவரின் குரலில் அழுகை சிறிது மட்டுபட்டது ரிதன்யாவுக்கு..
பாலை முழுவதும் குடிக்கும் வரை அமைதியாக இருந்த அவர், "பயப்படாம தூங்கு தங்கம்.. உன்னைய யாரும் எதுவும் பண்ணிர மாட்டாங்க.. எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.." என்றதும், அவரின் குரலுக்கு கட்டுப்பட்டு ரிதன்யாவும் படுத்து விட்டாள்..
"அப்பா நான் பாப்பா கூட இருக்கேன்.. நீங்க போய் அம்மாவை பாருங்க.." என்று சிறுவன் கூறியதும் எழுந்த அவர், "கவனம்டா கண்ணா.. எதுவா இருந்தாலும் அப்பாவை கூப்பிடு.." என்று விட்டு அகன்றார் முழுவதும் துவண்டு போயிருந்த தன் மனைவியை காண..
அவர் சென்றதும் "பாப்பா நம்ம பிரெண்ட்ஸ்.." என்று சிறுவன் கையை நீட்ட, அவனையும் கையையும் மாறி மாறி பார்த்த ரிதன்யா அவனின் கை மேல் கை வைத்து "நான் ரிதன்யா" என்றாள்..
அச்சிறுவனும் "நான் ஜெகன்.." என்று கூறியவன் மேலும் அவனே, "நீ பார்க்க பொம்மை போல அழகா இருக்கே.. என் பாப்பாவும் உன்னைய மாதிரி தான் இருப்பா தெரியுமா?" என்று கண்ணில் மகிழ்ச்சி பொங்க கூறினான் ஜெகன்..
"உங்க பாப்பா எங்கே?" என்று ரிதன்யா கேட்டதும் சட்டென்று கலங்கிய கண்களுடன், "தெரில" என்றான் சோகமாக.. "என் பாப்பாவை நீ பார்த்தது இல்லயல்ல? இரு காட்டறேன்.." என்றவன் அங்கிருந்த பையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்தான்..
"இதுதான் என் பாப்பா.. பேரு மகிழினி.." என்று ஜெகன் காட்டிய போட்டோவை ரிதன்யாவும் பார்க்க, "என் பாப்பானா எனக்கு ரொம்ப பிடிக்கும் அவளுக்கு எல்லாமே நான்தான் செய்வேன்.. அவளும் அண்ணா அண்ணானு என் பின்னால தான் சுத்துவா.."
"இப்ப என் பாப்பா சாமிகிட்ட போய்ருச்சுனு அப்பா சொன்னாங்க.. நான் அழுதா அப்பாவும் அழுகுவாங்கனு தான் சமத்தா இருக்கேன்.. அவ இல்லாம அம்மாவும் பேச மாட்டிங்கறாங்க.." என்றான் உதட்டை பிதுக்கியவாறு..
அந்த வயதிலும் ரிதன்யாவுக்கு என்ன புரிந்ததோ, "என்னைய உன் பாப்பாவா ஏத்துக்குவீயா அண்ணா.." என்று தலைசாய்த்து கேட்க, பதிலேதும் கூறாமல் மறுபுறம் படுத்து விட்டான் ஜெகன்..
ஜெகனின் தந்தை ரகுபதியோ ரிதன்யாவிடம் அவளின் பெற்றோரை பற்றி கேட்க, "நான் அங்க போக மாட்டேன் அங்கிள்.. என் டாடி பேட் டாடி.. நான் ஜெகன் அண்ணா கூடதான் இருப்பேன்.." என்று ஜெகனின் கையை இறுக்க பிடித்து கொண்டாள்..
"ப்ச் பாப்பா உன் அம்மா பாவம் தானே.. அவங்க உன்னைய காணாம துடிச்சுருப்பாங்கடா.." என்று ரகுபதி எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் பிறவியிலே பிடிவாதத்துடன் பிறந்த ரிதன்யாவோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை..
"நீங்க என்னைய அங்க கொண்டு போய் விட்டாலும் நான் மறுபடியும் எங்கையாவது ஓடிருவேன்.. அவங்க கேட்டா என் டாடி என்னையும் குடுத்துருவாங்க.. நான் அங்க போக மாட்டேன்.. ப்ளீஸ் அங்கிள் என்னையும் உங்ககூட கூட்டிட்டு போங்க நான் சமத்தா இருந்துப்பேன்.."
"யாரு கேட்டாலும் நான்தான் உங்க கூட வந்தேனு சொல்லுவேன்.. ப்ளீஸ் அங்கிள்.." என்று அவரின் கையை பிடித்து கெஞ்சிய ரிதன்யாவை மறுத்து பேச தோன்றவில்லை அவருக்கும்..
தன் மகளை இழந்து அவர் படும் துன்பம் சொல்லி மாளாதே! தன்னை போல தான் இவளின் பெற்றோரும் துடிப்பார்கள் என்ற காரணத்திற்காக தான் ரிதன்யாவிடம் இவர் கெஞ்சுவதே! ஆனால் இவள்தான் பிடிவாதத்துடன் இருக்கிறாளே!!
ஏனோ ரிதன்யாவை விடவும் அவருக்கும் மனது வராமல் இருக்க, இவளை தேடி யாராவது வரும் வரை தங்களுடனே இருக்கட்டும் என்ற முடிவுடன் வேறு எதுவும் அதன்பிறகு பேசவில்லை..
மகளின் இறப்பிற்கு பின்னால் முற்றிலும் துவண்டு போயிருந்த தன் மனைவியின் மன மாற்றத்திற்காக தான் குடும்பத்துடன் ரகுபதி இங்க வந்ததே! இன்னும் இரண்டு நாளில் கிளம்புவதாக இருந்தது.. அதற்குள் ரிதன்யாவை யாராவது தேடி வருவார்கள் என்று விழிமேல் விழி வைத்து ரகுபதி காத்திருக்க, ரிதன்யாவை தேடி யாருமே வரவில்லை..
பின்பு அவளை தனியாக விடும் எண்ணம் வராமல் தங்களுடனே அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார் ரகுபதி.. அந்த இரண்டே நாளில் தன் கலகலப்பான பேச்சில் அவ்வீட்டில் ஒருவராக தான் மாறி இருந்தாள் ரிதன்யா..
எதற்கெடுத்தாலும் "அண்ணா அண்ணா" என்று ஜெகனின் பின்னே சுற்ற, ரிதன்யாவின் "அம்மா அம்மா" என்ற அழைப்பில் காயத்ரியும் சிறிது சிறிதாக சகஜ நிலைமைக்கு வர தொடங்கி இருக்க, அவளை தேடி சங்கரன் வராமல் போனதால் மகிழினியாகவே மாறி இருந்தாள்..
கடந்த காலத்தை நினைவு கூர்ந்தவாறு சுழலும் மின்விசிறியை பார்த்தவாறு படுத்திருந்த மகிழினி இப்போது ஐபிஎஸ் அதிகாரியாக வலம் வருகிறாள்.. சிறுவயதில் ஆழமாக புதைத்து போன இந்நிகழ்வினால் தான் இவள் ஐபிஎஸ் படித்ததே!!
"மகி மகி மகி.." என்று அவளின் பேரை ஏலமிட்டவாறு உள்ளே வந்த இளைஞனை ஏகத்துக்கும் முறைத்த மகி, "என்கிட்ட பேசாதடா.." என்று முறைக்க, "ஹப்பாடா எப்படியோ ஒரு தொல்லை விட்டுச்சு.. சரி நான் கிளம்பறேன்.." என்ற அவன் நகர முற்பட்டான்..
"டேய்" என்று கோவமாக எழுந்த மகி, அவனின் தலைமுடியை பிடித்து ஆட்ட, "அய்யோ பிசாசே விடுடி.. அய்யோ அத்தை மாமா என்னைய காப்பாத்துங்க.." என்று கத்தியவாறு அவளின் பிடியில் இருந்து விடுபட்டு தள்ளி நின்றான் ஜெகனின் ஆரூயிர் நண்பன் தேவ்..
இவனின் கத்தலில் அவர்களை தேடி வந்த ரகுபதியும் காயத்ரியும் என்னவென்று வினவ, "அத்தை உங்க பொண்ணு ஒரு போலீஸ்னு கூட பார்க்காம இப்படி அடிக்கறா.. இதைய எல்லாம் என்னனு கேட்க மாட்டிங்களா?" என்று தேவ் குற்றபத்திரிக்கை வாசிக்க, காயத்ரி பேச வரும் முன்னே முந்தி கொண்ட ரகுபதி, "என் மகி தங்கம் காரணம் இல்லாம யாரு மேலயும் கை வெக்க மாட்டாளே!!" என்றார் தன் மகளுக்கு ஆதரவாக..
பாவமாக தேவ், "அத்தை" என்று காயத்ரியை பார்க்க, அவரோ "உங்களுக்குள்ள நான் வர மாட்டேன்பா.. அப்பறம் ரெண்டு பேரும் சேர்ந்து என்னைய தான் கிண்டலடிப்பீங்க.. உங்க சண்டையை நீங்களே முடிச்சுக்கங்க.." என்று எஸ்கேப்பாகி விட்டார்..
"இங்க நல்லதுக்கே காலமில்ல.. போங்க போங்க நான் கோவமா போறேன்.. என்னைய யாரும் தடுக்காதீங்க.." என்ற தேவ் இன்னும் நின்ற இடத்திலே நின்றிருக்க, "ஏன்டா போறேனு சொல்லிட்டு இன்னும் அப்படியே நின்னுருக்கே.. சீக்கிரம் கிளம்பு.." என்று அவனின் காலை வாரியவாறு வந்தான் ஜெகன்..
"அடேய் நீ நண்பனாடா?" - தேவ்
"அப்கோர்ஸ் அதுல என்ன உனக்கு சந்தேகம்.." - ஜெகன்
"அப்ப எனக்கு தான்டா நீ சப்போர்ட்டு பண்ணனும்.." - தேவ்
"நோ நோ எனக்கு எப்பவும் என் பாப்பா தான் முதல்ல.." - ஜெகன்
"அதுக்குனு என்ன நடந்துச்சுனு கேட்டா உன் வாய்ல இருக்கற முத்தா கொட்டிரும்.." - தேவ்
"நான் கேட்க மாட்டேனு சொன்னாலும் விடவா போற நீயு?" - ஜெகன்
ரகுபதியும் தன் மகளிடம், "என்னடா ஆச்சு? எதுக்கு தேவ் மேல கோவம்?" என்று வினவ, "ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணை ஆறு பேரு கற்பழிச்சு கொடூரமா கொன்னுருக்காங்கனு ஒரு கேஸ் வந்துருக்குனு நான் சொன்னேனல்லபா.. அதுல முக்கிய குற்றவாளி ஆளுட்கட்சில இருக்கற ரவீந்தரோட பையன் தான்.."
"அவனை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டா இவன் அவனை வெளில விட்டுருக்கான்.. அவனுக்கு எதிரா அத்தனை ஆதரமும் பக்காவா இருந்தும் இவன் அந்த நாயை எப்படி வெளில விட்டலாம்.. இது எல்லாம் என்னனு நீங்க கேட்க மாட்டீங்களா?" என்றாள் சினத்துடன்..
"அதானே எப்படிடா நீ அவனை வெளில விடலாம்.." என்று ஜெகனும் தன் தங்கைக்கு வக்காலத்து வாங்க, அவனை முறைத்த தேவ், "நீ மட்டும் பேசாதடா உன் அருமை தொங்கச்சி காக்கா வெள்ளை கலருல இருக்குனு சொன்னா கூட நீயும் கண்ணை மூடிட்டு ஆமானு தான் சொல்லுவே.." என்றவன், திரும்பி ரகுபதியிடம், "மாமா முதல்ல நான் விட மாட்டேனு தான் சொன்னேன் அந்த ரவீந்தரு தான் விடலனா என் வேலையை கை வெப்பேனு ப்ளாக்மெயில் பண்ணுனான்.." என்றான் பாவமாக..
மகியோ விடாமல், "ஆமா இவரு சின்ன பாப்பா அவரு ப்ளாக்மெயில் பண்ணுனதும் பயந்து வெளில விட்டாரு.." என்று சீற்றலுடன் கேட்டிட, "ப்ச் மகி மேலிடத்துல இருந்து அவனை விட சொல்லி போன் மேல போனு.. நானும் என்னதான் பண்ண முடியும்.. விட மாட்டேனு சொன்னா என் வேலையை கை வெப்பேனு அங்கயே நிற்கறாங்க.." என்று தன்னிலையை விளக்க முயன்றான் தேவ்..
"அப்படி உன்னைய டார்ச்சல் பண்ணுனவங்களுக்கு நீ பதிலடியா என்ன சொல்லிருக்கனும்னா.." என்ற முழுவதும் கூறாமல் பாதியில் நிறுத்திய ஜெகனை புரியாமல் பார்த்த தேவ், "என்ன சொல்லிருக்கனும்.." என்றிட, "வேலையே போனாலும் பரவால்ல அவனை விட மாட்டேன் சாருனு தான் சொல்லிருக்கனும்.." என்று ஜெகன் முடிக்க, அவனை வெட்டவா? குத்தவா? என்ற ரீதியில் முறைத்தான் தேவ்..
"டேய் நான் கஷ்டப்பட்டு வாங்குன வேலைடா அது.." என்று தேவ் ஜெகனை மொத்த, இருவருக்கும் இடையில் நுழைந்த மகி, "அப்ப நான் மட்டும் சொகுசா படுத்துட்டு வாங்குனனா?" என்ற கேள்வியை எழுப்பினாள்..
"ஹய்யோ ராமா! இந்த லூசுக கூட என்னைய கோர்த்து விட்டுட்டு நீ ஜாலியா இருக்கீயா?" என்று உள்ளுக்குள் நொந்தவன், "போங்கடா நீங்களும் உங்க பிரெண்ட்ஸீப்பும்.." என்று விட்டு தேவ் நகர, சிரித்தவாறு மகியோ "மிஸ்டர் போலீஸ் ஆபிசர் கீழே அம்மா பாயாசம் வெச்சுட்டு இருக்காங்க.." என்றாள் குறும்புடன்..
அதில் திரும்பிய தேவ், "அப்ப நான் பாயாசத்தை குடிச்சுட்டு அப்பறம் உங்க ப்ரெண்ட்ஸீப்பை கட் பண்ணிக்கறேன்.." என்று தோளை குலுக்கி கொண்டு அகன்றவனை மற்ற மூவரும் புன்சிரிப்புடன் நோக்கினர்..
தேவ்வை நினைத்து புன்னகைத்தவாறே, "ஏன்டா தங்கம் அவனை இந்த பாடுபடுத்தறீங்க?" என்று ரகுபதி கேட்க, "அப்போ நானு அவனை கொடுமை படுத்தறனா அப்பா?" என்று உம்மென்று மகி வினவ, அவசரமாக மறுத்து தலையசைத்த ரகுபதி, "நீ எவ்ளோ வேணா அவனை படுத்தி எடுடா அவன் தாங்குவான்.. ஏன்னா உன் அத்தை போடற சாப்பாடு அப்படி.." என்றார் சமாளிப்புடன்..
எப்போதும் தன்னை விட்டு குடுக்காமல் பேசும் தன் தந்தையை மனதில் மெச்சி கொண்டு, "அண்ணா தாரு பேசுனாளா? எப்படி இருக்கா?" என்று கேட்க, ஜெகனும் "இப்பதான்டா பேசுனா.. அங்க இருக்க பிடிக்கல இன்னும் ரெண்டு நாளுல இங்க வந்துருவேனு சொல்றா.." என்றான் அலுத்து கொண்டு..
"தாரு வர்றது உனக்கு சலுப்பா இருக்குல்ல? வரட்டும் வரட்டும் வந்ததும் இதைய போட்டு குடுக்கறேன்.." என்று பொய் கோவத்துடன் மகி மிரட்டிட, "இது மட்டும் வேணாம் பாப்பா.. அப்பறம் அவ ஒரு வாரத்துக்கு மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு சுத்துவா.." என்று ஜெகன் பாவமான முகத்துடன் கூறிட, தந்தையும் மகளும் சத்தமாக சிரித்தனர்..
ஜெகனின் மனைவி தான் தாரணி.. கல்லூரியில் மகியுடன் படித்த போது தாரணிக்கு ஜெகன் பழக்கம்.. நண்பர்களாக பழகி நாளடைவில் இருவருக்கு காதலும் மலர்ந்தது.. தங்கையின் திருமணத்திற்கு பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற முடிவுடன் இருந்த ஜெகனின் முடிவை மாற்றியதும் மகிதான்..
இதில் இன்றுவரை ரகுபதிக்கு தான் வருத்தம்.. மகி இருக்கும்போது ஜெகனுக்கு திருமணம் செய்தது தான் அவரின் குற்றவுணர்ச்சியே.. ரகுபதியின் நெருங்கிய நண்பனான விநாயகத்தின் ஒரே மகன் தான் தேவ்.. இருவர் வீடும் அருகருகில் இருப்பதால் ஜெகனுக்கு தேவ் எப்படியோ இங்கு வந்ததில் இருந்து மகிக்கும் அப்படியே..
தேவ்வின் அன்னை ஈஸ்வரி ஜெகனின் திருமணம் முடிந்ததும் மகியை தன் மகனுக்கு கேட்க, தேவ்வோ எனக்கு மகிமேல அப்படியொரு எண்ணம் இல்ல.. என்று முற்றிலும் மறுத்து விட்டான்..
தாரணிக்கு இப்போது ஏழாவது மாதம்.. வளைகாப்பு முடிந்து தாய் வீட்டிற்கு சென்று இதோடு இரண்டு வாரங்கள் தான் கடந்திருந்தது..
உயிர் பயத்தில் ஓடி வந்த ஒருவன், ஜல்லிக்கட்டு காளையை போல் ஒரே எட்டில் மாடியை தாவியவாறு தன்னை துரத்தி வருபவனை கண்டு, உயிரை கையில் பிடித்தவாறு வேகவேகமாக மாடியை தாவினான்..
பின்னால் அவன் வருகிறானா? என்ற பதட்டத்தில் மகி இருந்ததை கவனிக்க தவறியவன் அவள் மேல் மோத இருந்த சமயத்தில், சாதாரணமாக மகியும் திரும்ப, அவள் சுதாரிக்கும் முன்பே அவளை இழுத்து பின்னால் வந்தவனை நோக்கி தள்ளி விட்டவன் நிற்காமல் ஓடி விட்டான்..
திடீரென்று நடந்த விட்ட செயலில் பின்னால் வந்தவனின் நெஞ்சில் மோதி கீழே விழுக போன மகியை பிடிக்க முயன்ற அவனும் பிடிமானம் இல்லாமல் அவளோடு சேர்ந்து விழுந்தான்..
இருவரும் சேர்ந்து கீழே விழுந்ததில் சட்டையின் பட்டனை போடாமல் விட்டுருந்த ஆடவனின் முடிகுத்தும் நெஞ்சில் மகியின் இதழ்கள் அழுத்தமாக பதிய, அதை அப்போது உணரும் மனநிலையிலும் அவன் இல்லை.. வேகமாக மகியை விட்டு எழுந்தவன் அவளை பாராமல் "சாரி சாரி" என்று விட்டு தான் துரத்தி வந்தவன் எங்குவென்று கண்களை சுழல விட்டான்..
அவனை காணாமல் "ஷட்" என்று கோவத்தில் சுவற்றை ஓங்கி குத்தியவனுக்கு சட்டென்று தன் மேல் விழுந்த பெண்ணின் முகம் மனக்கண்ணில் தோன்ற, அவளை நோக்கி திரும்பினான்..
அப்போது தான் எழுந்த மகி அவர்களை வசை பாடியவாறு தன்மேல் படிந்திருந்த தூசுகளை தட்டி விட்டு கொண்டு நின்றிருக்க, திரும்பி நின்றிருந்ததில் அவளின் முகம் இவனுக்கு தெரியவில்லை..
முல்லை கொடியாய் முதுகில் படர்ந்திருந்த கருங்கூந்தலும், அவளின் அசைவுக்கேற்ப நடனத்தை மீட்டி கொண்டிருந்த ஜிமிக்கியுமே இவனின் விழிகளுக்கு அகப்பட, அதோடு சற்று முன்பு தன் நெஞ்சில் அவள் பதித்த முத்தமும் நினைவிற்கு வந்தது..
இதில் வெட்கம் கலந்த சிரிப்புடன் கேசத்தை கோதியவன் அவளருகில் செல்ல, அதே நேரம் முணுமுணுத்தவாறு திரும்பிய மகிக்கு பக்கென்று இருக்க, பின்பு அவளின் முகம் கடுகடுவென மாறியது..
"டேய் அறிவு கெட்டவனுகளா ஓடி புடிச்சு விளையாடறதுனா உங்க வீட்டு மாடிலயே விளையாட வேண்டியது தானே.. எதுக்கு அடுத்தவங்க வீட்டு மாடிக்கு வர்றீங்க.." என்ற காட்டத்துடன் மகி கத்த, தன்னருகில் இருந்தவளை கண் எடுக்காமல் பார்த்திருந்த அவன் புன்சிரிப்புடன், "சரிங்க ரவுடி இனி எங்க வீட்டு மாடிலயே விளையாடறோம்.." என்றான் குறும்புடன்..
அவனின் ரவுடி என்ற அழைப்பில் மூக்கு நுனி சிவக்க அவனை முறைத்து, "ஹலோ நான் போலீஸாக்கும்.." என்றிட, அவளின் மூச்சு காத்து தன் மேல் படும் அளவிற்கு நெருங்கி நின்றவன், "நீ யாரா வேணா இருந்துட்டு போ ரவுடி.. எனக்கு கவலையில்ல.." என்று நிறுத்தி அவளின் படபடப்பை ஆழ்ந்து ரசித்தவாறு, "எனக்கு குடுத்ததை எப்பவும் ரெண்டு மடங்கா திருப்பி குடுத்து தான் பழக்கம்.." என்றவன் அவளின் கன்னத்தில் அழுத்தமாக தன்னிதழை பதித்தான்..
இதில் உச்சக்கட்ட அதிர்ச்சியில் திகைத்த மகிக்கு அவனை தள்ளி விடும் எண்ணம் கூட தோன்றாமல் இமைக்க மறந்து நின்றிருக்க, மெதுவாக தன்னிதழை அவளின் கன்னத்தில் இருந்து எடுத்து திகைப்பில் விரிந்திருந்த விழிகளின் முன்பு சொடுக்கிட்டு அவளை சுய நினைவிற்கு கொண்டு வந்தான்..
அதே திடுக்கிடலுடன் தன்னை பார்த்த மகியை கண்டு தலையை சாய்த்து, வசீகரமாக புன்னகைத்தவன், அவளின் மற்றொரு கன்னத்திலும் இதழை பதித்து, அவளின் காதருகில் "லவ் பண்ணலாமா? இல்ல கல்யாணம் பண்ணலாமானு யோசிச்சு சொல்லு.." என்ற அவனின் காந்த குரல் இவளின் உயிர்வரை சென்று மீண்டது..
இது அனைத்தும் கனவா? இல்ல நிஜமா? என்று குழம்பி இருந்த மகி தன்னிலைக்கு வரும் முன்னே அங்கிருந்து மறைந்திருந்தான் அவன்.. கிருஷ்..
படபடவென இமைகளை அடித்து தன்னை சீராக்கி கொண்ட மகி அவன் எங்குவென்று நான்கு புறமும் சல்லடையிட்டு தேட துவங்க, அவன்தான் பேதையவளின் விழிகளுக்கு அகப்படவில்லை..
சோர்ந்து போய் அறைக்குள் நுழைந்தவள், பொத்தென்று கட்டலில் அமர்ந்து விட, "அவன் எப்படி எனக்கு முத்தம் குடுக்கலாம்?" என்று சினம் மெதுவாக எட்டி பார்த்ததும் அனிச்சையாக அவளின் கரங்கள் அவன் முத்தமிட்ட கன்னத்தை வருடியது..
தன் விரல் பட்டதும் அவனின் மீசை குத்திய குறுகுறுப்பு பெண்மகளின் மேனியில் ஜில்லென்ற ஓர் உணர்வை தோற்றுவிற்க, "அய்யோ" என்று தன் கன்னத்தை அழுத்த துடைத்தாள்..
முயன்று கோவத்தை இழுத்து பிடித்து, "இன்னொரு தடவை என்கிட்ட சிக்கட்டும் அப்பறம் இருக்கு.." என்று முணங்கியவாறு அறையை விட்டு வெளியில் வந்தவள் தகப்பனை தேடி சென்றாள் அந்நிகழ்வை மறக்க வேண்டிய கட்டாயத்தில்!!
வேலையில் இருந்த மகியை காண, கையில் ஒரு பைலுடன் வந்த தேவ், அங்கிருந்தவர்களுக்கு ஒரு புன்னகையை பரிசளித்து விட்டு மகியின் கேபினுள் நுழைந்தான்..
தான் பார்த்திருந்த பைலில் இருந்து தலையை எடுக்காமல் மகியே, "என்ன சார் இவ்வளவு தூரம்.." என்ற கேள்வியை எழுப்ப, தன் கையில் இருந்த பைலை அவளின் முன்பு தூக்கி போட்டவன் "பாரு" என்றான் கண்ணசைவிலே..
என்னவென்று புரியாமல் அதனை விரித்து பார்த்தவாறு இருந்த மகியின் முகம் ஜிவ்வென்று கோவத்தில் சிவக்க, "ஒரே நாளுல முப்பது குழந்தைகளை காணோம் அதுவும் பன்னிரண்டு வயசுக்கு உட்பட்ட குழந்தைகள் தான்.. இப்ப வரைக்கும் அவங்க எங்க இருக்காங்கனு ஒன்னுமே புரில.." என்று குழப்பத்தில் நெற்றியை தேய்த்த தேவ், அங்கிருந்த தண்ணீரை எடுத்து அருந்தினான்..
எழுந்த மகியும் ஏதோ சிந்தனையுடன், "அது எப்படி தேவ் ஒரே நாளுல முப்பது குழந்தைக காணாம போகும்.. முதல்ல அவங்க பெத்தவங்க கிட்ட விசாரணை பண்ணுனீங்களா?" என்று கேட்க, "ம்ம்ம் பண்ணுனோம்.. பாதி குழந்தைக வெளில விளையாடிட்டு இருக்கறப்ப காணாம போய்ருக்கு.. மீதி குழந்தைக வீட்டுல வேலை செய்யற ஆட்களோட பாதுகாப்புல தான் இருந்துருக்காங்க.."
"அவங்களைய புடிச்சு விசாரிச்சா எனக்கு எதுவும் தெரியாதுனு காலுல விழுகறாங்க.. அந்த குழந்தைகளோட பெத்தவங்களும் அவங்க நம்பிக்கையான ஆளு தான் அவங்க அப்படி பண்ணிருக்க மாட்டாங்கனு சொல்றாங்க.. எந்த பக்கம் இருந்து கேஸை ஆரம்பிக்கறதுனு தான் புரில.." என்ற தேவ்வின் கூற்றை ஆழமாக உள்வாங்கிய மகி நெற்றியை சுருக்கினாள்..
மேலும் அவனே, "ஆனா ஒன்னு இது பண்ணுனது ஒரே ஆளா தான் இருக்கனும்.. முதல்லயே திட்டம் போட்டு குறிப்பிட்ட நாளுல இதைய செயல்படுத்தி இருக்கனும்.. இது மட்டும் உறுதியா சொல்லலாம்.." என்றான் அழுத்தமாக..
இதே யோசனையில் இருந்தவாறே, "ஆமா இதெல்லாம் என்கிட்ட எதுக்கு சொல்றே?" என்று மகி கேட்க, சட்டென்று அந்த குழப்பத்தில் இருந்து வெளியில் வந்த தேவ், "ம்ம்ம் வேண்டுதல் அதான்.." என்று கடுப்புடன் கூறிட, மகியோ இதழ் பிரித்து சிரித்து விட்டாள்..
இதில் ஏகத்துக்கும் காண்டான தேவ்வோ, "எதுக்கு லூசே சிரிக்கறே? அடச்சீ சிரிக்கறதை நிறுத்து இல்ல இன்னும் நான் கடுப்பாகிருவேன்.." என்று எகிற, "கூல் தேவ்.. முதல்ல குழப்பத்துல இருந்து வெளில வா.. அப்பறம் எந்த பக்கம் இருந்து இந்த கேஸை ஆரம்பிக்கறதுனு யோசி.. சரியான முடிவு கிடைக்கும்.. வீட்டுக்கு வர்றப்ப இதோட சம்பந்தப்பட்ட எல்லா பைலையும் எடுத்துட்டு வா.." என்று அவனை சகஜமாக்கி அனுப்பி விட்ட மகியின் எண்ணம் முழுவதும் சிறுவயதில் நடந்த நிகழ்வை நோக்கியே வட்டமிட்டது..
தலையை உலுக்கி அதிலிருந்து தன்னை மீட்டு கொண்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.. மகி கூறியதை போன்று அன்று மாலையே அந்த கேஸ் சம்பந்தப்பட்ட அனைத்து பைலையும் அவளிடம் குடுத்திருந்தான் தேவ்..
இதை பற்றி மகியிடம் தேவ் கூற காரணமே இரண்டு மாதத்திற்கு முன்பு இதேபோல் தான் ஒரு நாளில் பத்து குழந்தைகள் காணாமல் போன விசாரணை மகியிடம் வந்தது.. அடுத்த மூன்றே நாளில் குழந்தைகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பெற்றோரிடம் குழந்தைகளை ஒப்படைத்த மகியால் இதற்கு காரணம் யாரென்று தான் கண்டறிய முடியவில்லை..
இன்னும் அந்த விசாரணையே சென்று கொண்டிருக்கும் நேரத்தில் எப்படி மறுபடியும் குழந்தைகளை கடத்த தைரியம் வந்தது என்பதுதான் புரியாத புதிராக இருந்தது..
இதே யோசனையில் தேவ்வும் மகியும் நாட்களை கழித்து கொண்டிருக்க, தங்கையின் மன மாற்றத்திற்காக ஜெகன் தான் தாருவை பார்த்து வரலாம் என்று மகியை வற்புறுத்தி கிளம்ப சொன்னான்.. அண்ணனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் மகியும் கிளம்பி விட. அவர்கள் சென்றதும் தன் மகளை நினைத்து காயத்ரி கலங்கி போனார்..
"ஏங்க அவ இஷ்டத்துக்கு விடறது தப்புனு தோணுதுங்க.. இதுனால அவளுக்கே ஏதாவது பிரச்சனை வந்துட்டா?" என்று சோ்ர்ந்து போய் தன் கணவரிடம் குமற, "ப்ச் அவ நம்ம பொண்ணு இல்லனு காரணத்துக்காக எல்லாம் நான் அவ விருப்பப்பட்ட படி விடல.. நம்ம மகி இருந்துருந்தாலும் இப்படிதான் விட்டுருப்பேன்.. அந்த மகியை எப்படி வளர்க்கனும்னு ஆசைப்பட்டனோ அப்படிதான் இந்த மகியை வளர்த்திட்டு இருக்கேன்.."
"அவ நம்ம பொண்ணுடா.. அவளுக்குனு இத்தனை பேரு இருக்கறப்ப நம்மளைய மீறி அவளுக்கு எதுவும் ஆகாது.. அப்படி ஆனாலும் அவளை காப்பாத்திக்க அவளுக்கு தெரியும்.. எப்பவும் பெண் பிள்ளைகள் அடுத்தவங்களைய நம்பி இருக்க கூடாது.."
"நிறைய பேருத்தோட கண்ணீரை தான் நம்ம மக துடைச்சுட்டு இருக்கா அதுக்காக நீ பெருமைபடனுமே தவிர கவலைபட கூடாது.." என்று அவரை ஆறுதல் படுத்திய ரகுபதிக்கு மகியின் மேல் அத்தனை நம்பிக்கை..
மகியிடம் ஜெகன் பேசி பேசியே அந்த எண்ணத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்திருக்க, அண்ணனும் தங்கையும் ஒருவரின் ஒருவர் காலை வாரியவாறு தாரணியின் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்..
திடீரென்று "அண்ணா காரை நிறுத்து.." என்று மகி கூறியதும், எதற்கு என்று தெரியாமல் பட்டென்று ஜெகனும் காரை நிறுத்த, வேகமாக இறங்கிய மகி சாலையை கடந்து மறுபுறம் சென்றாள்..
அங்கு குடிகாரன் ஒருவன் அவ்வழியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்க, வந்த வேகத்தில் அவனின் வயிற்றில் ஒரே உதை.. மகி விட்ட அடியில் அவனுக்கு மொத்த போதையும் தெளிந்து விட்டது என்பதை போல் மலங்க மலங்க விழித்தவாறு எழுந்து நின்றான்..
"பொறுக்கி பயலே குடிச்சுட்டு ரோட்டுல போற பொண்ணுக கிட்ட தப்பாவா நடக்க முயற்சி செய்யறே?" என்று அவனை இன்னும் நாலு மிதி மிதித்ததும் மட்டுமில்லாமல் போலீஸுக்கு அழைத்து அவனை பிடித்து கொடுத்ததும் தான் அவள் மனதே அமைதியடைந்தது..
இதை அனைத்தையும் காரில் சாய்ந்து நின்று பார்த்தவாறு இருந்த கிருஷின் இதழில் மென்புன்னகை.. ஜெகன் பார்க்காதவாறு மறைந்து நின்றிருந்த இவனை ஏதேச்சையாக மகி கண்டு விட, அன்றைய நினைவு தானாக அவள் கண்முன்னே வந்து போனது..
அவள் தன்னை பார்த்து விட்டதை உணர்ந்த கிருஷும், தன்னை நோக்கி தான் மகி வருவதை உணர்ந்து வேகமாக அடுத்த தெருவுக்குள் நுழைய, விடாமல் மகியும் அவனை பின் தொடர்ந்து சென்றாள்..
ஒரு கட்டத்தில் அவனின் சட்டையை மகி பிடித்து விட, அவன் நகர விடாமல் ஆடவனின் முன்பு சென்றவள், "இந்த அடியை அன்னைக்கே குடுத்துருக்கனும்.." என்று அவனை அறைய வந்த பேதையவளின் கையை அவன் தடுத்து விட, அப்போதும் விடாமல் வீம்புடன் அடிக்க முயன்றிருந்தவளை ஆடவனும் தடுத்தவாறே இருந்தான்..
இதற்கு மேல் இது வேலைக்கு ஆகாது என்றெண்ணி மகியின் இரு கைகளையும் இறுக்கி பிடித்து அங்கிருந்த மரத்தில் அவளை சாய்த்து, "அப்ப மட்டுமில்ல இப்பவும் பண்ணுவேன் உன்னால என்ன பண்ண முடியும்.." என்றவாறு கோவத்தில் சிவந்திருந்த பட்டு கன்னத்தில் இதழை பதித்தான்..
அவன் அழைத்த "ரவுடி" என்ற ஒற்றை அழைப்பிலே அவளுள் சோர்ந்திருந்த செல்கள் அனைத்தும் புதுவித உணர்வு பாய்ச்சிய உணர்வில் தத்தளிக்க, முழுவதும் அவனிடம் கட்டுண்டு போனவளால் "ம்ம்ம்ம்" என்ற வார்த்தையை தவிர வேற எதுவும் பேச முடியவில்லை பெண்மகளின் நாவில் இருந்து!!
மகியின் பாவனைகளுள் கிருஷும் அவளுள் தொலைந்தவாறே இன்னும் அவளிடம் நெருங்க, ஆடவனின் தேகம் உரசும் உணர்வில் பெண்ணவளின் மேனியிலும் பலவித மாற்றங்கள் தோன்றி இம்சிக்க, புதுவித அவஸ்தையில் கண்ணை மூடிய மகியின் இதழ்களை சிறை செய்ய கிருஷ் நெருங்கிய நேரத்தில் "மகிமா" என்று வந்த ஜெகனின் குரல் தடுத்து நிறுத்தியது..
ஜெகனின் குரலில் சட்டென்று அவ்விடத்தை விட்டு கிருஷ் நகர்ந்து விட, அவன் சென்றதை கூட அறியாமல் மகி தான் தன்னிலை மறந்து அப்படியே நின்றிருந்தாள்..
"மகிமா" என்று வந்த தன் அண்ணனின் குரலில் திடுக்கிட்டு கண்ணை விழித்த மகி பே வென்று முழிக்க, "என்னடா ஏன் இங்க வந்து நின்னுட்டு இருக்கே?" எனறு ஜெகன் வினவ, சுற்றியும் கண்களை சுழல விட்டவாறு மகியோ, "ஒ..ன்..னுமில்ல அண்ணா.." என்றாள் திணறலுடன்..
"சரி போலாம்டா.." என்றவனுக்கு சரியென்று தலையசைத்த மகியின் மனமோ அவளவனை தான் தேடியது.. மீண்டும் ஒருமுறை தன் விழிகளில் விழுந்து விட மாட்டானா? என்ற ஏக்கத்தில் பார்வையை அங்கயே நிலைத்தவாறு தன் அண்ணனின் பின்னே மகி நகர, தன்னவளை மறைத்திருந்து பார்த்திருந்த கிருஷின் இதழில் மிதமான புன்னகை..
குழந்தைகள் கடத்தல் வழக்கில் ராஜனின் ஆட்களில் ஒருவன் தான் முக்கிய குற்றவாளி என்பதை மகியும் தேவ்வும் கண்டுபிடித்தது மட்டுமில்லாமல் மறைத்து வைத்திருந்த முப்பது குழந்தைகளில் பதினைந்து குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடமும் ஒப்படைத்து இருந்தனர்..
இதில் ராஜன் ஏகத்துக்கும் கடுப்பாகி மகியை கொல்லும் வெறியில் இருக்க, அவள் சங்கரனின் மகள் என்பதை ஆட்கள் மூலம் அறிந்ததும் அவரை தன் வீட்டிற்கு வர கூறினார்..
"என்ன சங்கரா உனக்கு பயம் விட்டு போய்ருச்சா? ஒழுங்க உன் பொண்ணை இந்த கேஸ்ல இருந்து விலக சொல்லு.. இல்ல உன் ஆசை மகளை பொணமா தான் பார்ப்பா.." என்று மிரட்ட, பதறி போன சங்கரன் "அய்யோ சார் அப்படி எதுவும் பண்ணிராதீங்க.." என்றார் கெஞ்சலாக..
தன் குரலை செருமி கொண்டு ராஜனோ, "இந்த தடவை உன் பொண்ணை மன்னிச்சு விட்டறேன்.. இன்னொரு தடவை என் வழில குறுக்கிட்டா கண்டிப்பா பார்த்துட்டு இருக்க மாட்டேன்.." என்றிட, தன் மகளுக்கு ஏதாவது ஆகிருமோ என்ற பயத்திலே, "உங்க வழில அவ தலையிட மாட்டா சார் அதுக்கு நான் பொறுப்பு.." என்று விடைபெற்று அகன்றார்..
சங்கரன் சென்றதும், "டேய் அவன்மேல எப்பவும் ஒரு கண்ணை வெச்சுருங்க இவனை நம்ப முடியாது.." என்று தன் ஆட்கள் இருவரை அவரின் பின்னே ராஜன் செல்ல கூறினார்..
வேலை முடிந்து அப்போது தான் வீட்டிற்கு வந்த மகியை கண்டு, "என்ன மகி இப்பதான் வர்ற போல?" என்று கேட்டவாறு தேவ் அவளின் அருகில் வர, குறும்புடன் மகியும் "இல்லயே தேவ் ஆறு மணி நேரம் முப்பது நிமிசம் இருபது விநாடிக்கு முன்னாடியே நான் வீட்டுக்கு வந்துட்டேன்.. உன் கண்ணுக்கு தான் நான் தெரில போல.." என்றாள் கிண்டலுடன்..
இதற்கு தேவ்வும் அசராமல், "அப்ப இப்ப வர்றது உன்னோட ஜெராக்ஸை ஒத்த பேய் போல.. ஹலோ திவில் மேடம் நான் தேவ்.." என்று அவளிடம் கையை நீட்ட, அவனை முறைத்து "உன்னைய.." என்று அடிக்க கை ஓங்கிய மகியின் கையை பிடித்தவன் செல்லமாக அவளின் தலையில் இரண்டு கொட்டுகளை வைத்தான்..
இதில் பொய் கோவத்துடன் மகியும் அவனின் கையை நறுக்கென்று கிள்ளி நாக்கை துருத்தி பலிப்பு காட்டி விட்டு சிரித்தவாறு வீட்டிற்குள் செல்ல, ஹாலில் கால்மேல் போட்டு அமர்ந்திருந்தவரை பார்த்ததும் அப்படியே மகி நின்று விட, பின்னால் வந்த தேவ்வோ இது யாரென்று புருவத்தை உயர்த்தினான்..
*********
மயக்கத்தில் கிடந்த மகியை உலுக்கிய ரிதி, "அக்கா எந்திரி க்கா.. நீயே இப்படி கிடந்தா எங்களுக்கு யாரு தைரியம் சொல்லுவா? உங்க பொண்ணு அழுகற பாருங்க.." என்று கதறியும் மகியிடம் எந்த அசைவும் இல்ல..
அந்த அறையில் குடிக்க தண்ணீர் கூட வைக்காமல் இருக்க, ரிதியின் கண்ணீர் கோடுகள் தான் அதிகரித்ததே தவிர குறையவே இல்ல.. "ப்ச் பேபி உன் அக்காக்கு எதுவுமாகாதுடா.." என்ற நகுலனின் சமாதான வார்த்தையை கேட்கும் மனநிலையிலும் ரிதி இல்லை..
ரியாவும் அவளுக்கு எவ்வளவோ ஆறுதல் கூறியும் எதையும் காதில் வாங்காமல் தனுவை அணைத்து கொண்டு கண்ணீர் வடித்திருந்த ரிதியை பார்க்கவே மூவருக்கும் மனது கனகனத்தது..
தனக்குள் எழுந்த சந்தேகத்தை, "ரிதிமா உன் அக்காவை ஏன் இவங்க இப்படி கொடுமை படுத்தறாங்க?" என்று நிகிலன் கேட்க, "அப்படி என்ன பேபி இவங்க கூட பிரச்சனை?" என்று நகுலனும் வினவ, ரியா தான், "இங்க நடக்கறதை வெச்சு உங்களுக்கு புரியலயா? காரணம் இல்லாம எதுக்கு இத்தனை பொண்ணுகளை யாருக்கும் தெரியாம அடைச்சு வெச்சுருக்க போறாங்க.." என்றாள் ஓரளவுக்கு விசயத்தை ஊகித்து கொண்டு..
இவர்கள் பேசுவதை கவனிக்காமல் ரிதியோ தனுவை தோளில் போட்டு தட்டி குடுத்து தூங்க வைக்க முயன்றிருக்க, அடிக்கடி மகியை தொட்டு மீண்டது ரிதியின் விழிகள்..
அப்போது அவர்களிடம் வந்த விக்ரம், சிறிதும் மனசாட்சியே இல்லாமல் ரிதியின் தோளில் உறங்கி கொண்டிருந்த தனுவை வெடுக்கென தூக்கி தன்னோடு வந்த அடியாட்களிடம் கொடுத்து கொண்டு செல்ல கூற, இதில் துடித்த போன ரிதி "அய்யோ அவளை எதுக்கு தூக்கிட்டு போறீங்க.. என் தனுவை என்கிட்ட குடுத்துருங்க ப்ளீஸ்.." என்று விக்ரமின் காலிலே விழுந்து விட்டாள்..
அப்போதும் அலட்சியத்துடன் தள்ளி நின்றவன், "இங்க பாரு உன் அப்பா மாதிரி எங்க பேச்சை கேட்டு நடந்துக்கிட்டா உன்னைய எதுவும் பண்ணாம விட்டுருவோம்.. இல்ல உங்களைய வேணாம்னு உதறி தள்ளிட்டு ஓடுனவ தான் முக்கியம்னு சொன்னா அவளோடயே போய் சேர்ந்துருவே.." என்றிட, அழுகையை தவிர வேற எந்த பதிலும் இல்ல ரிதியிடம்!!
இதற்கு மேல் இவளிடம் பேசுவது வீண் என்று நினைத்தானோ என்னவோ அங்கிருந்து விக்ரம் அகன்று விட, இவ்வளவு நேரம் குனிந்த தலை நிமிராமல் கண்ணீர் சிந்தி கொண்டிருந்த ரிதியின் செவிப்பறையை தனுவின் வீறிட்டு அழுகை தொட்டு மீண்டதும் மொத்தமாக உடைந்து போனவளால் எதுவும் செய்ய முடியாத நிலைமை..
"என் பொண்ணு நகுலன்.. ஒரு வருசமா என் கைல என் மடில இருந்தவ.. எப்படி அழுகறானு பாருங்க.. அவளோட அழுகை சத்தத்தை கேட்டு எனக்கு உயிர் போகுது ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்.." என்று அநியாயத்துக்கு நகுலனின் சட்டையை பிடித்து கெஞ்சிய ரிதி, படக்கென்று அவனை விட்டு விலகியவள் கதவை திறக்க முயன்றாள்..
படபடவென கதவை தட்டியவாறே, "கதவை திறங்கடா.." என்று காட்டு கத்தலாக ரிதி கத்த, தடுக்க வந்த நகுலனையும் நிகிலனையும் தள்ளி விட்டு ஹிஸ்டரி வந்தவள் போல் "தனுக்குட்டி அம்மாடா.. அம்மாவும் இங்கதான் இருக்கேன் அழுகாதடா.. என் தங்கமல்ல.." என்று அழுகையுடனே கத்தியவளின் குரல் குழந்தையின் செவியை அடையவில்லை என்பதை போல் விடாமல் அழுது கொண்டிருந்தது..
"தனு தங்கம் அம்மாடா.. அழுகாதடா... ப்ளீஸ் விக்ரம் அவளை என்கிட்ட குடுத்துரு நீ என்ன சொன்னாலும் நான் கேட்கறேன்.." என்று கதவில் சாய்ந்த விடாமல் கதறினாள் ரிதி..
ஒரு பக்கம் குழந்தையின் வீறிட்டு அழுகையும், மறுபக்கம் ரிதியின் கதறலும் விடாமல் இருக்க, இது எதுவும் தன்னை தீண்டவில்லை என்பதை போல் மகியோ ராஜன் அடித்த அடியில் ஆழ்ந்த மயக்கத்திலே கிடந்தாள்..
"எதுக்கு மாப்ளை சங்கரனோட இன்னொரு பொண்ணையும் கடத்த சொன்னீங்க? நமக்கு போலீஸ்காரியும் அவ பொண்ணும் போதுமே?" என்று ராஜன் வினவ, தாடையை தடவியவாறு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த விக்ரம், "அவ உயிரே போனாலும் அந்த குழந்தையை விட மாட்டாளாமா மாமா.. அப்படினு பிடிவாதம் பிடிச்சுருக்கா அதான் அவளையும் தூக்க சொல்லிட்டேன்.." என்றான் சாதாரணமாக..
"இன்னும் ரெண்டு நாளுல வர்றேனு சொல்லிருக்காங்க மாப்ளை.. இந்த தடவையாவது இந்த இடத்தை கண்டிப்பா பார்க்கனும்னு சொல்லிருக்காரு.." - ராஜன்
"இனி இந்த இடம் தேவையில்லனு நினைக்கறேன் மாமா.. எப்பவும் குழந்தைகளை மட்டும் தானே அனுப்புவோம் இந்த தடவை இங்க இருக்கற பொண்ணுகளையும் சேர்த்தே அனுப்பி விடலாம்னு தோணுது.." - விக்ரம்
"ஏன் மாப்ளை என்ன ஆச்சுனு இப்படி சொல்றீங்க.. இங்க வந்துட்டு இப்ப வரைக்கும் யாராவது உயிரோட வெளில போய்ருக்க முடியுமா?" - ராஜன்
"அது இல்ல மாமா.. இந்தளவுக்கு யாரையும் வர விட்டது இல்லதான்.. அந்த மகிழினியை சாதாரணமா எடை போடாதீங்க.. இந்த வழக்கு ஆரம்பிக்கறப்பவே அத்தனை இடைஞ்சலை குடுத்தோம் அப்பவும் அந்த வழக்கை முடிப்பேனு அவ்வளவு அழுத்தமா இருந்தாளே?" - விக்ரம்
"அது அப்ப மாப்ளை.. இப்பதான் எல்லாத்தையும் இழந்து தனிமரமா நிற்கறாளே.. இவளை பெத்தவன் கூட எனக்கு மானம் மரியாதை தான் முக்கியம்.. இந்த விசயம் வெளில வர கூடாதுனு சொல்லிட்டான்.." - ராஜன்
"இருந்தும் அந்த மகிழினி மேல எப்பவும் நம்ம ஆளுகளை கவனிச்சுட்டு இருக்க சொல்லுங்க.." - விக்ரம்
"இதைய நாங்க பார்த்துக்கறோம் மாப்ளை.. நீங்க வீட்டுக்கு போய்ட்டு வாங்க.. என் பொண்ணு வேற மாமாவை வர சொல்லுப்பா வர சொல்லுப்பானு போன் பண்ணிட்டே இருக்கா.." - ராஜன்
"எந்த நேரத்துல என்ன வேணாலும் நடக்கும் மாமா.. ரொம்ப கவனமா இருங்க.." என்று ராஜனுக்கு பலமுறை அறிவுரை கூறி விட்டு விக்ரம் கிளம்ப, "எனக்கே புத்திமதி சொல்லிட்டு போறான் பாரு இவன்.." என்று வாய்விட்டு கூறிய ராஜன், அவர்கள் இருக்கும் அறையை நொடிக்கொரு முறை கண்காணிக்குமாறு கட்டளையிட்டார்..
நால்வரும் ஒவ்வொரு பக்கம் அமர்ந்து இருந்தாலும் அனைவரின் பார்வையும் மகியிடமே நிலைத்திருந்தது.. அந்த நேரத்தில் கதவை திறந்து கொண்டு வந்த பெண்மணி ஒருவர் உணவு மட்டும் தண்ணீரை வைத்து விட்டு செல்ல, தட்டில் இருந்த உணவை பார்த்து, "மச்சி சாப்பிட்டு அப்பறம் யோசிப்போமா?" என்று நிகிலன் வயிற்றை தடவியவாறு கேட்க, "எனக்கும் நீ சொல்றது தான் சரினு தோணுது மச்சி.." என்றான் நகுலனும்..
கசங்கிய முகத்துடன் ரியாவோ, "ஒரு வேளை இதுல விஷம் கலந்து வெச்சுருந்தாங்கனா?" என்ற கேள்வியை எழுப்ப, "ஆத்தி இதைய எப்படி யோசிக்காம விட்டோம்.." என்று இருவரும் முழித்தனர்..
சுவற்றில் சாய்ந்து கண்ணை மூடியிருந்த ரிதி சட்டென்று எழுந்து வைத்து விட்டு சென்ற தண்ணீரை எடுத்து மகியின் முகத்தில் தெளித்து, "அக்கா எந்திரிக்கா.. எனக்கு பயமா இருக்கு.. தனுவை அவங்க தூக்கிட்டு போய்ட்டாங்க.. ப்ளீஸ் க்கா கண்ணை முழிங்க.." என்று விடாமல் பெண்ணவளின் கன்னத்தை தட்டியதன் விளைவு சிறு அசைவு தெரிந்தது மகியிடம்..
மெதுமெதுவாக கண்ணை விழித்த மகிக்கு அடி வாங்கியதில் தலை வேறு விண்ணென்று வலியை ஏற்படுத்த, பல்லை கடித்து வலியை கட்டுபடுத்தியவள் மெதுவாக எழுந்தமர்ந்தாள்..
தன்னருகில் ஏகத்துக்கும் கலங்கி இருந்த ரிதியை பார்த்து மெதுவாக புன்னகைத்த மகி, "எனக்கு எதுவும் இல்லடா.." என்றிட, இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு எழுந்ததில் மகியை அணைத்து கதறி விட்டாள் ரிதி..
"எனக்கு ஒன்னுமில்ல ரிதிமா.. இங்க இருந்து உங்களைய கூட்டிட்டு போறேனு வாக்கு குடுத்துட்டு அப்படியே விட்டுருவேனு நினைச்சுட்டிங்களா?" என்று தன்னோடு ஒட்டியிருந்த ரிதியை நிமிர்த்தி கண்ணை துடைத்து விட்டவாறு மகி கேட்க, "இங்க இருந்து போனா நான் உன்னோட தான் போவேன் இல்லனா.." என்று அதற்குமேல் கூற விடாமல் ரிதியின் வாயை மூடிய மகி, "பீ பாசிட்டிவ்டா.." என்றாள் கண்டிப்புடன்..
அதற்கு மேல் எதுவும் பேசாத ரிதி உணவை எடுத்து மகிக்கு ஊட்டி விட, ஏனோ மகிக்கும் மறுக்க தோன்றாமல் அமைதியாக உணவை வாங்கி கொண்டாள்.. மற்ற மூவரும் இவர்களை பார்த்து கொண்டிருந்தனரே தவிர எதுவும் பேசவில்லை..
குத்துயிரும் கொலையுயிருமாய் ஒருவனை தூக்கி வந்த அடியாட்கள் ராஜனின் காலடியில் போட, அவனை தன் காலால் திருப்பிய ராஜன், "ஓஓ இவனா??" என்று கேட்டார் அலட்சியத்துடன்..