உள்ளுக்குள் அலையாக ஆர்பரித்து கொண்டிருந்த கனலை அணைக்க, தனிமையை தேடி தனியாக வந்த ரிதி, அங்கிருந்த கல்லில் அமர்ந்தாள்.. காலை தண்ணீரில் நனைத்தவாறு கருப்பன் கூறிய விசயத்திலே அவள் மனது உழன்று கொண்டிருந்தது..
"இந்த தாத்தா என்ன பொண்ணுகளை கூட்டிட்டு போறதை இவ்ளோ ஈசியா சொல்றாங்க.. அதுவும் குழந்தையை பத்து மாசம் சுமந்து பெத்த தாயோட நிலைமையை கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலயா?? எங்கையோ தன் மக்கள் நல்லா இருக்காங்கனு நினைச்சு இவங்க ஏமாத்துட்டு இருக்காங்க.. ச்சே எப்படிதான் இதுகளுக்கு மனசு வருதோ?" என்று அவர்களின் அறியாமையை எண்ணி வருந்தினாள்..
திடீரென்று அவளுள் ஒரு கேள்வி எழ, அதற்கு விடை என்னவோ பூஜ்யம் தான்.. தனக்குள் தோன்றிய சந்தேகத்தையும் கருப்பனிடமே கேட்டு விடலாம் என்று எழுந்த நேரத்தில் பாசி வழுக்கியதால் பிடிமானம் இல்லாமல் ஆற்றுக்குள் விழ போனவள் சட்டென்று வேரை பிடித்து கொண்டாள்..
அதை இறுக்கமாக பற்றியவாறு மேலே வர ரிதி முயன்று கொண்டிருக்க, தன் மாமனாரிடம் போன் பேசியபடி அங்கு வந்த விக்ரமின் கவனம் அனைத்தும் போனிலே இருந்ததால் ரிதியை கவனிக்க தவறினான்..
ரிதிக்கும் அவனை அழைக்க தயக்கமாக இருக்க, தன்னால் முயன்ற வரைக்கும் மேலே வர முயன்று கொண்டிருந்தாள்.. ஏதேச்சையாக அவளின் புறம் திரும்பிய விக்ரம், போனை அணைத்து விட்டு வேகமாக அவளிடம் ஓடிய சமயம் பிடிமானம் இல்லாமல் ரிதியும் ஆற்றுக்குள் விழுந்தே விட்டாள்..
எதையும் யோசிக்காமல் ஆற்றினுள் குதித்த விக்ரம், தண்ணீருக்குள் மூச்சு விட முடியாமல் தவிர்த்திருந்த ரிதியை தன்னோடு அணைத்து கொண்டு ஓரமாக வந்து பாதுகாப்பிற்காக வேரை பிடித்தவாறு மூச்சு வாங்கினான்..
அவனின் ஒரு கரம் ரிதியின் இடுப்பை லாவாக பிடித்திருக்க, அவள் அணிந்திருந்த காட்டன் புடவையையும் மீறி அவளின் மெல்லிடையில் விக்ரமின் கரம் அழுத்தமாக பதிந்திருந்தது..
ரிதியின் ஒரு கரம் அவனின் சட்டையையும் மறுகரம் அவனின் கையையும் பற்றி கொண்டிருக்க, அவளின் மான்விழிகளோ இமை சிறகை அசைக்க விரும்பாமல் அவனையே பார்த்திருந்தது.. தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு ரிதியின் புறம் கண்களை திருப்பிய விக்ரமும் அவளின் விழிகளுள் வீழ்ந்து பின்பு எழுந்தவன் "ஹலோ ரிதி மேடம் உங்களைய வெச்சு தானே அவனை அழ வெக்கனும்னு ஒரே காரணத்துக்காக தான் உங்களைய காப்பாத்துனேன் மத்தபடி எதுவும் இல்ல.." என்றான் நக்கலுடன்..
இதில் சிமைசிறகுகளை படபடவென அடித்து தன்னை சீராக்கி கொண்ட ரிதி, அவனை விட்டு விலக முயல, அவளின் இடையை அழுத்த பற்றியவன், "என்னைய விட்டா நீ ஆத்துல அடிச்சுட்டு போய்ருவே பரவால்லயா??" என்று கேட்ட காந்தகுரலுக்கு கட்டுப்பட்டு அவனை இறுக்க பற்றி கொள்ள, முதலில் அவளை பாதுகாப்பாக மேலேற்றி விட்ட பின்புதான் அவன் ஏறினான்..
சுருதி வடிந்த குரலுடன் "தேங்க்ஸ்" என்ற ரிதியின் குரலில் நிமிர்ந்தவன் "இனிதான் இந்த விக்ரமோட ஆட்டமே தொடங்க போகுது அதைய பார்க்க நீ இருக்க வேணாமா?? உனக்காக தானே அவன் அத்தனை பேருத்து முன்னாடி அவமான படுத்துனான்.. உன்னால அவனை கதற வெச்சு நான் ரசிக்கனும்.. அதுக்காக நீ இருக்கனுமல்ல?" என்றான் திமிருடன்..
ஈரம் சொட்ட சொட்ட ஓடி வந்த தன்னவளின் சத்தத்தில் தான் நிகழ்காலத்திற்கு வந்த நகுலன், "ஹே ரிதி என்ன ஆச்சு??" என்று பதட்டத்துடன் வினவ, அவளோ பதிலுரைக்க விரும்பாமல் வேகமாக குடிலுக்குள் ஓடினாள்..
அவள் சென்ற திசையையே வெறித்திருந்த நகுலன் பெருமூச்சுடன் பார்வையை திருப்ப, ரிதி வந்த திசையில் இருந்து விக்ரமும் முழுவதும் நனைத்தவாறு வருவதை கண்டவனுக்கு மனது படபடவென்று அடித்து கொண்டது..
"தன்மேல் இருக்கும் கோவத்தில் தன்னவளிடம் இவன் அத்து மீறி விட்டானோ??" என்று ஆத்திரம் நகுலனுக்கு எழ, வேகமாக அவனின் சட்டையை பற்றியவன் "ஏன்டா இப்படி பண்றே?? உனக்கு என்மேல தானே கோவம் எதுக்கு ரிதியை டார்ச்சல் பண்றே??" என்று எகிறியவனை அசால்ட்டாக தள்ளி விட்ட விக்ரம், "என்ன நடந்துச்சுனு தெரியாம பேசாத.." என்றான் காட்டமாக..
அவர்கள் இருவரும் அடித்து கொண்டிருந்த வேளையில் குடிலுக்குள் காலை குறுக்கி அமர்ந்திருந்த ரிதியோ தன் கழுத்தில் இருந்த செயினை அழுத்த பற்றி அதில் முத்தமிட்டவள் "கிருஷ்" என்றழைத்தாள் முணுங்கலுடன்..
அழுகவே கூடாது என்று வைராக்கியத்துடன் மனதை கல்லாய் இறுக்கி வைத்திருந்தவள் இன்று தன்னை மீறி அழுகிறாள் தன்னவனுடைய செயினை இறுக்க பற்றி கொண்டு!!
அங்கு தனக்காக இருவர் அடித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணராமல் கண்ணீருடன் தலையை சாய்த்து கண் மூடியவளின் கண்ணீரோ நிற்காமல் அவளின் கன்னத்து மேன்னையை நனைத்தது..
"எந்த பிரச்சனை வந்தாலும் சோர்ந்து போகாம அதையை எதிர்த்து நிற்கனும் ரவுடி.. இப்படி அழுதுட்டு இருக்கறது உன் குணமே இல்ல.. என் ரவுடி பேபி எப்பவும் நெஞ்சை நிமிர்த்தி கெத்தா இருக்கறது தான் அழகு.." என்று அன்றொரு நாள் தான் கலங்கி நின்றபோது தன் கிருஷ் பேசிய வார்த்தைகளும், தனக்கு மருந்தாய் அவனிட்ட இதழ் முத்தமும் நியாபகத்திற்கு வர, "இனி அழுக மாட்டேன்.." என்று முணுமுணுத்த இதழுக்கு எதிராக, அவளின் விழிகளோ கண்ணீரை சிந்தியது..
பதட்டதுடன் அவளை தேடி வந்த ரியா, "ரிதி அங்க விக்ரமும் நகுலனும் அடிச்சுக்கறாங்கடி.." என்று கூறிட, அய்யய்யோ என்று தலையில் அடித்து கொண்ட ரிதி அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஓடினாள்..
"ப்ச் நகுலன் அவங்களைய விடுங்க.." என்று இருவரையும் ரிதி பிரிக்க முயல, "நீ கம்முனு இரு பேபி இன்னைக்கு அவனா நானானு பார்க்காம விட மாட்டேன்.. எவ்ளோ தைரியம் இருந்தா உன் மேல கை வெச்சுருப்பான்.." என்று விக்ரமின் சட்டையை விடாமல் பற்றியவாறு கூற, "இங்க பாரு நான் திருப்பி ஒரு அடி அடிச்சனா நீ அவ்ளோதான்.. ஒழுங்க கையை எடு.." என்று விக்ரம் பொறுமையாக தான் கூறினான்..
கேலியுடன் நகுலனோ "என்ன உன் வீரம் எல்லாம் பொண்ணுக கிட்ட மட்டும் தானா??" என்று கேட்டது தான் தாமதம் நொடி நிமிடத்தில் அவன் கையை தன் சட்டையில் இருந்து விலக்கிய விக்ரம் பளாரென்று அறைந்த சத்தம் காடு முழுவதும் எதிரொலிக்க, நகுலனின் கன்னம் வீங்கி போய் உதட்டில் ரத்தம் வழிந்தது..
"டேய்" என்று மீண்டும் நகுலன் எகிற வர, பிடித்து வைத்திருந்த பொறுமையை காற்றில் பறக்க விட்ட விக்ரம், ரிதியின் கரங்களை அழுத்த பற்றி தன் முன்னால் இழுத்தவன், "உன்னைய போய் பாவம் பார்த்து காப்பாத்துனேன் பாரு என்னைய சொல்லனும் அப்படியே விட்டுருக்கனும்.. என்ன நடந்துச்சுனு தெரியாம இவன் பாட்டுக்கு குதிக்கறான் நீ வாயை மூடிட்டு நிற்கறே?" என்று கத்தினான் கர்ஜனையுடன்..
இதில் விழி நீருடன் "சா..சா..ரி.. விக்ரம்.." என்று வார்த்தைகள் கோர்வைகள் ஒன்றாய் நில்லாமல் தடுமாற, "இன்னும் நான் கேட்டதற்கு பதில் வரல.." என்று இறுக்கமாக அவளை கூர்ந்து நோக்கியவாறு அவன் கேட்க, கண்மூடி தன்னை நிலைப்படுத்தி கொண்டு கண்ணை திறந்த ரிதி எரித்து விடுவது போன்று நகுலனை முறைத்து பார்த்தாள்..
பின்பு கோப முகத்துடன் "என்ன நடந்துச்சுனு தெரியாம குதிக்காத நகுலன்.. நான் கால்தவறி ஆத்துல விழுந்தப்ப விக்ரம் தான் என்னைய காப்பாத்துனாரு போதுமா? மத்தபடி அவரு என்னைய எதுவும் பண்ணல.. இப்ப என்ன அவரு என்னைய காப்பாத்துனது தான் உனக்கு பிரச்சனையா?? அப்ப மறுபடியும் ஆத்துல குதிச்சு செத்தரட்டுமா??" என்று ஆவேசமாக வந்த வார்த்தையை கேட்டு நகுலன் மட்டுமில்லாமல் மற்ற இருவரும் திகைப்பில் உறைந்தனர்..
நகுலனின் முன் சொடுக்கிட்ட விக்ரம் "இங்க பாரு எனக்கும் உனக்கும் தான் சண்டை.. அதுக்காக கண்ணு முன்னால நடக்கறதை பார்த்தும் பார்க்காத மாறி வர்ற அளவுக்கு நான் கல்நெஞ்சக் காரனும் இல்ல.. என்னோட வீரத்தை பொண்ணுக கிட்ட மட்டும் காட்டற அளவுக்கு நான் கோழையும் இல்ல.." என்று காட்டமாக கூறி விட்டு சிறிது தூரம் சென்றவன் மீண்டும் அவனிடமே வந்தான்..
"உனக்கு தெரியாதுல்ல எனக்கு கல்யாணமாகி இப்ப மூணு வயசுல ஒரு குழந்தையும் இருக்கு.." என்று அழுத்தமாக வந்து விழுந்த விக்ரமின் வார்த்தையில் நகுலனும் நிகிலனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..
அவன் சென்றதும் ரிதியின் உஷ்ணப்பார்வை தன்னை தாக்குவதை உணர்ந்த நகுலன் குற்றுவுணர்ச்சியுடன், "நா வந்து.." என்று கூற வந்தவனை கை நீட்டி தடுத்தவள், "பேசாத நகுலன் தயவு செஞ்சு பேசாத.." என்றாள் பெரும் கடுப்புடன்..
பின்னர் அவளே, "என்னைய மத்தவங்க யாரும் கஷ்டப்படுத்தல நகுலன்.. நீ மட்டும் தான் கஷ்டப்படுத்திட்டே இருக்கே.. உன் அளவுக்கதிகமான காதலை புதைச்சுட்டு நிதானமா யோசிச்சு பாரு புரியும்.. இப்ப நம்ம என்ன நிலைமைல இருக்கோம்னு உனக்கு புரியுதா? இல்லையா? நம்மளைய சுத்தி நடக்கறது உனக்கு விளங்குதா?நம்ம எப்படி இங்க வந்தோம் வெளில போறதுக்கு வேற வழி இருக்கா? நம்மளைய காணாம பெத்தவங்க எப்படி துடிச்சுட்டு இருப்பாங்க இது எதையுமே யோசிக்காம எப்பவும் காதல் காதல்னே சொல்லிட்டு திரியறே?"
"உன் காதலோட அளவு எனக்கும் புரியுது தான் இப்ப இருக்கற நிலைமைல அதைய யோசிச்சு கூட பார்க்க முடியாது.. முதல்ல அந்த நினைப்புல இருந்து வெளில வந்து என்ன பண்றதுனு யோசி.." என்றாள் பொறுமையுடன்..
"எப்ப ரிதி இப்படி எல்லாம் பேச கத்துக்கிட்டே? என்னைய வேணாம்னு சொல்றதுக்கு உன்னால ஒரு காரணத்தை சொல்ல முடியுமா?" - நகுலன்
"இது இது தான் எனக்கு எரிச்சலா வருது நகுலன்.. உன்கிட்ட எவ்ளோ சொன்னாலும் அந்த இடத்துலயே தான் வந்து நிற்கறே?" - ரிதி
"உனக்கு அந்த வலி ஈசியா போய்ருச்சுல? உன்னைய அவ்ளோ நேசிச்சேன்டி.. என் மூச்சு காத்தா எனக்குள்ள வாழ்ந்தா நீயு காரணமே இல்லாம விலகி போறது ரொம்ப வலிக்குதுடி.. இதுக்கு என்னைய கொன்னுருக்கலாம்.." - நகுலன்
"ப்ளீஸ் நகுலன் அதையை பத்தி பேசாதீங்கனு சொல்லிட்டேன்.. திருப்பி திருப்பி அதைய பேசி பேசி என்னைய உயிரோடு கொல்லாதீங்க.." - ரிதி
"அதான் என்னைய எப்பவே சாகடிச்சுட்டீயே.." - நகுலன்
"எப்பவும் உங்களுக்கு உங்க கவலை மட்டும் தானா? உங்களைய காதலிச்சேன் தான் இல்லனு சொல்லல.. மறுபடியும் ஏன் விலகி போறேனு கொஞ்சம் கூட யோசிச்சு என் மனநிலையை புரிஞ்சுக்க முயற்சி பண்ண மாட்டீங்களா? உங்களைய வேணாம்னு தான் சொல்றேனே தவிர காதலிக்கலனு இப்ப வரைக்கும் சொல்லலயே.." -ரிதி
மறுபடியும் மறுபடியும் அதே இடத்தில் வந்து நின்ற நகுலனை கண்டு ரிதிக்கு சிறு எரிச்சல் வந்தது என்னவோ உண்மைதான்.. எத்தனை முறை தான் அவளும் கூறுவாள்!
"ஏன் நகுலன் இப்படி பண்றீங்க? உங்க காதல் பைத்தியகார தனமா இருக்கு? சாகற நிலைமைல இருந்தாலும் அப்பவும் காதலை மட்டும் தான் நினைப்பீங்களா? உங்க காதலுக்காக நீங்க சாகலாம் ஆனா ஏன் நிகிலன் அண்ணாவும் ரியாவும் சாகனும்னு என்ன தலையெழுத்தா?"
"இங்க இருக்கற பிரச்சனையை கேட்டதுல இருந்து அதையை நினைச்சு பதறிட்டு இருந்தா நீங்க இப்படி பேசறதை பார்த்து கோவம் கோவமா வருது நகுலன்.. மறுபடியும் இந்த மாதிரி பேசிட்டு இருந்தீங்கனா கண்டிப்பா நான் செத்துருவேன்.. இது என் அம்மா மேல சத்தியம்.." என்றவள் விறுவிறுவென அகன்று விட்டாள்..
இது ரிதி தானா? என்று நிகிலனும் ரியாவும் இமைக்க மறந்து நின்றிருக்க, உணர்ச்சிகள் அனைத்தும் துடைத்தெறிந்த முகத்துடன் பொத்தென்று அமர்ந்த நகுலனுக்கு தன்னை சீராக்கி கொள்ளவே சிறிது நேரம் பிடிபட்டது..
கசங்கிய முகத்துடன் நின்றிருந்த நகுலனின் தோளில் கை வைத்த நிகிலனும், "மச்சி ரிதி சொல்றது சரிதான்டா.. இப்ப நம்ம என்ன நிலைமைல இருக்கோம்னு நீயே யோசிச்சு பாரு.. உன்னைய நம்பி தானே அம்மாவும் தங்கச்சியும் இருக்காங்க.." என்றதும் சட்டென்று நிமிர்ந்த நகுலனின் கண்கள் கலங்கி போனது..
நகுலனின் தந்தை சிறுவயதிலே இறந்து விட்டார்.. அதன்பின்பு இவனின் அன்னை கற்பகம் தான் குடும்ப பொறுப்பை கையில் எடுத்து இரவுபகல் பாராது உழைத்து இருவரையும் நன்றாக படிக்கவும் வைத்தார்..
நகுலனுக்கு வேலையை கிடைத்ததும் அதன்பிறகு தன் அன்னையை வீட்டில் இருக்க கூறி விட்டு குடும்ப பொறுப்பை இவன் கையில் எடுத்து கொண்டான்.. எப்படி அவர்களை மறந்தோம்? என்று குற்றவுணர்வில் அவனின் மனது தவிக்கும் நேரத்திலும் ரிதியே கண் முன்னே வந்தாள்..
தலையை உலுக்கிய நகுலனின் இதழில் விரக்தியான புன்னகை குடியேற, "யாரை பத்தி யோசிச்சாலும் கடைசில என் நியாபகத்துக்கு வர்றது ரிதி தான்டா.. என்னோட உயிருல உணர்வுல அவ கலந்துட்டா.. நானே அவளை மறக்க நினைச்சாலும் அவளோட நினைவு என்னைய விட மாட்டிங்குது.."
"எதனால அவமேல இப்படியொரு காதல் வந்துச்சுனு எனக்கு சத்தியமா தெரிலடா.. என்னோட அதீத காதலே அவளுக்கு வெறுப்பாகி என்னைய வேணாம்னு சொல்லிருவாளோனு பயமா இருக்குடா.. அத்தனை நம்பிக்கையோட சொன்னா மச்சி.. எது வந்தாலும் உங்களைய விட்டுட்டு போக மாட்டேனு.. அப்ப அது எல்லாம் பொய்யா?" என்று கேட்டான் ஆதங்கம் தாளாமல்..
நகுலனின் காதலை இவனும் கண் முன்னால் கண்டவனாயிற்றே! ரிதியின் விலகல் எதற்கென்று நிகிலனுக்கும் புரியவில்லை தான்.. இருந்தும் அதை பற்றி யோசிக்கும் நிலைமையில் இல்லயே இவர்கள்!
"மச்சி உன் மனசு எனக்கும் புரியுதுடா.. முதல்ல இங்க இருந்து போகனும்.. நம்மளைய எதுக்கு கடத்துனாங்களே இன்னும் புரில.. இந்த காட்டுக்குள்ள விக்ரம் என்ன பண்றானு யோசிச்சியா? இங்க இருக்கறவங்க கிட்ட பேசறதை பார்த்தா இவன் ரொம்ப நாளா இங்க வர்ற மாதிரி தெரில.."
"எனக்கும் இங்க என்னவோ தப்பா நடக்குதுனு தோணுதுடா.. அதைய தான் ரிதியும் சொல்லிட்டு போறா.. கொஞ்சம் உன் காதல் மனசுல இருந்து வெளில வந்து சுத்தியும் நடக்கறதை கவனிடா.." என்று அவனின் மனதை திசை திருப்பும் நோக்கில் நிகிலன் கூறிட, நகுலனும், "ஆமால இவன் எங்க இங்க வந்தான்?" என்றான் குழப்பத்துடன்..
"ஆனா ஒன்னு இவன் நம்மளைய அவ்ளோ சீக்கிரத்துல விட மாட்டான்.. இவன்கிட்ட தப்பிச்சு இந்த காட்டுல தான் சுத்திட்டு கிடக்கனும் போல.." என்று அலுத்து போய் நிகிலன் கூற, இவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த ரியா, "எதே இங்கயே வா.." என்று அதிர்ந்து விட்டாள்..
இதில் நகுலனின் குறும்பு தலைதூக்க, "ஆமா குள்ளகத்திரி.. அதுவும் ஆவியா தான் சுத்த போறோம்.." என்று சிரிக்காமல் கூறிட, பயத்தில் ரியாவின் கண்களோ விரிந்து அவள் முழித்த முழிப்பில் முழியே வெளியில் வந்து விடும் அளவிற்கு இருந்தது..
அதை பார்த்து நண்பர்கள் இருவரும் வாய்விட்டு சிரிக்க, அதில் தான் விளையாடு கிறார்கள் என்று உணர்ந்த ரியா, "எனக்குனு எங்க இருந்துடா வரீங்க.. தெரியாதனமா உங்க கூட சேர்த்து தொலைஞ்சுட்டனே! கடைசில ஆவி தான் அலைவேன் போல!!" என்று மனதினுள்ளே கதறினாள்..
"முழிச்சது போதும் போய் ரிதியை பாரு.." என்று ரியாவை அனுப்பி விட்ட நகுலன், "வா மச்சி அப்படியே நடந்துட்டு வருவோம்.." என்று அழைக்க, அவனின் மனநிலை புரிந்ததால் நிகிலனும் மறுக்காமல் அவனுடன் நடந்தான்..
நிகிலன் தான் ஏதேதோ பேசி கொண்டு வர, நகுலனின் மனதோ ரிதியை நினைத்தே ரிங்காரமிட்டு கொண்டிருந்தது..
******
காதலர்களாக மாறிய பின்பு அவர்களின் பேச்சு அலுவலகம் கடந்தும் இரவுபகல் பாராது சென்று கொண்டிருக்க, தன்னவளின் சிறுபிள்ளை தனமான சிணுங்கலை கேட்காமல் விட்டால் நகுலனுக்கு உறக்கமே வருவதில்லை..
அன்று நால்வரும் ஷாபிங் வந்துருக்க, தங்களுக்கு வேண்டியதை மும்முரமாக வாங்கி கொண்டிருந்தனர் ரியாவும் ரிதியும்..
"மச்சி குள்ளகத்திரியை கூட்டிட்டு வந்தது தப்போ?" - நகுலன்
"முதல்ல வெளில வந்ததே தப்புடா.." - நிகிலன்
"ஏன்டா?" - நகுலன்
"நான் பாட்டுக்கு சிவனேனு வீட்டூழ தூங்கிருப்பேன்டா ஏன்டா இங்க கூட்டிட்டு வந்து காவல் காரன் மாதிரி உக்கார வெச்சுருக்கே?" - நிகிலன்
"லவ்வர்ஸா ஷாபிங் வரலாம்னு நினைச்சு என் பேபியை ஆசையா கூப்பிட்டா அவ குள்ளகத்திரியையும் கூட்டிட்டு வந்துட்டாடா.. அதான் உன்னையும் வர சொன்னேன்.." - நகுலன்
"எப்ப அவ அப்பாகிட்ட அடி வாங்கி பெட்ல அட்மிட் ஆக போறீயோ? அது கடவுளுக்கு தான் வெளிச்சம்.." - நிகிலன்
"பொறாமைடா உனக்கு.." என்று கடுப்படித்தவாறு ரிதியை பார்வையால் வருடியபடி நகுலன் இருக்க , "அடேய் அதுகளை சீக்கிரம் வர சொல்லுடா மழை வேற வர்ற மாதிரி இருக்கு.." என்று நிகிலன் அலுத்து கொள்ள, "ச்சை உன் பக்கத்துல நின்னா நிம்மதியா கூட சைட் அடிக்க முடிலடா.." என்று புலம்பியவாறு ரிதியிடம் சென்றான்..
"ரிதியை பக்கத்துல வெச்சுட்டு சைட்டா அடிக்கற சைட்டு இருடா மச்சு போட்டு குடுக்கறேன்.." என்றவாறு அவனின் பின்னே வந்த நிகிலனும், ரிதிக்கு கேட்கும்படி, "மச்சி அந்த பொண்ணு சூப்பரா இருக்குனு இவ்ளோ நேரம் சைட் அடிச்ச தானே?" என்று கோர்த்து விட்டவன் தன் வேலை முடிந்தது என்றெண்ணி ஓரமாக நின்று விட்டான்..
"அடேய் ஏன்டா?" என்று கதறிய நகுலனை கண்டு "சும்ம்ம்மா" என்று கண்சிமிட்ட, "உன்னைய கூட்டிட்டு வந்ததுக்கு என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டடா.."என்று பொருமியவன், "பேபி நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்டா.." என்றான் கெஞ்சலுடன்..
"பேசாதீங்க நகுலன் நான் இருக்கறப்பவே வேற பொண்ணை பார்க்கறீங்கனா நான் இல்லாதப்ப எத்தனே பொண்ணுகளை பார்த்துருப்பீங்க.." என்று முகத்தை திருப்பி கொண்டு நடக்க, "அய்யோ பேபி சத்தியமா நா அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் என்னைய நம்பு பேபி.." என்று ரிதியின் பின்னே கெஞ்சியவாறு நகுலனும் ஓடினான்..
"உனக்கு வேற வேலையே இல்லயா? இப்படி அவங்களுக்குள்ள சண்டையை மூட்டி விட்டுட்டு இருக்கே?" என்று ரியா எகிற, "காதலுக்குள்ள சின்ன சின்ன சண்டை இருந்தா தான் சுவாரசியமா இருக்கும்.. அதுக என்னடானா எப்படி பார்த்தாலும் கொஞ்சிட்டே இருக்குதுக அதான்.." என்று அவளின் கன்னத்தை வலிக்காதவாறு கிள்ளி கண்ணடித்து விட்டு நகர, இவள் தான் அவனின் அருகாமையில் உறைந்தாள்..
நிகிலனின் மேல் தோன்றிய சிறு ஈர்ப்பு நாளடைவில் காதலாக மாறிய போது அதை மறைக்காமல் அவனிடம் ரியா கூறி விட்டாள்.. அவனோ தனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை என்று மறுக்க, துளிர் விட்ட காதல் தான் என்றாலும் அவளுள் சிறுவலி தோன்றியது.. அதன்பின் தன்னை மாற்றி கொண்டு அனைவரிடமும் பழகுவதை போல் தான் அவனிடமும் பழகி கொண்டிருக்கிறாள்..
உள்ளுக்குள் புதைந்திருந்த அவன் மீதான காதலை அவன் தட்டி எழுப்பி விட்டு நகர, அவன் கிள்ளிய கன்னத்தை தொட்டு பார்த்த ரியாவின் முகத்தில் வெக்கம் கலந்த புன்னகை..
வெளியில் மழை வேறு விடாமல் பெய்து கொண்டிருக்க, கையை கட்டி கொண்டு மழையை ரசித்திருந்த ரிதியின் முகத்தில் சிறுபிள்ளை தனமான கோவமே குடியேறி இருந்தது..
அவளை உரசியவாறு நின்ற நகுலன் "பேபி அப்ப என்னைய நம்ப மாட்ட அப்படிதானே?" என்று தொங்கிய முகத்துடன் கேட்க, அடக்கப்பட்ட புன்னகையுடன் அவனை ரசித்தவள், "ஆமா நகுலன் நம்ப மாட்டேன்.." என்றாள் குறும்புடன்.
"அப்ப நான் போறேன்.." என்று வாய்தான் கூறியதோ தவிர அவளை இன்னும் நெருங்கி நின்று, "உனக்கு கோவமே படவே தெரில பேபி.. உன் கோவத்தை பார்த்தா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.." என்று ஹஸ்கி குரலில் கூறியவன் தங்களை யாராவது கவனிக்கிறார்களா? என்று சுத்தி பார்த்தவன் பஜக்கென்று அவளின் கன்னத்தில் முத்தத்தை பதித்தான்..
இதில் ரிதியின் விழிகள் தெரியதாக விரிந்து கொள்ள, கன்னத்தில் கை வைத்து அவனை விழி விரித்து பார்த்தவளை கண்டு நகுலனோ பொங்கிய சிரிப்புடன், "இனி என் மேல கோவமா இருந்தா இப்படிதான் பண்ணுவேன்.. இப்ப சொல்லு.. என்மேல இன்னும் கோவமா இருக்கீயா?" என்று கேட்டதும், அவசரமாக இல்லையென்று தலையாட்டிய ரிதிக்கு அவனை பார்க்க முடியாமல் வெக்கம் பிடுங்கி தின்றது..
*********
அன்று நடந்ததை இப்போது நினைக்கும் போதும் கூட நகுலனின் இதழில் புன்னகை அரும்புவதை அவனால் தடுக்க முடியவில்லை.. தானாக சிரித்த அவனை கண்டு நிகிலன் தான் "சுத்தம் நம்ம பேசறதை இந்த காடு தான் கேட்குது போல.." என்று நினைத்தான் நொந்தவாறு..
குடிலுக்கு வந்ததும் ரிதியினை ஏறிட்டும் பார்க்காமல் நகுலன் பாட்டுக்கு இருக்க, அவனின் விலகல் உள்ளுக்குள் வதைத்தாலும் எதுவும் காட்டி கொள்ளாமல் இருந்தாள் ரிதியும்..
அனைவரும் உறங்கியும் ரிதிக்கு தான் தூக்கம் வருவேனா என்று அடம்பிடிக்க, தன்னருகில் உறங்கி கொண்டிருந்த ரியாவை பார்க்க, அவளோ அசந்து உறங்கி இருப்பதை கண்டு சத்தம் வராதவாறு வெளியில் வந்தமர்ந்தாள்..
நள்ளிரவில் குளுகுளுவெ வீசிய தென்றல் காற்று அவளின் மேனியை தழுவி மனதில் இருந்த பாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க தொடங்க, அப்படியே கண் மூடி அமர்ந்த ரிதியின் பட்டு கன்னத்தை இரு கரங்கள் தாங்கியது..
தொடுதலிலே யாரென்று உணர்ந்த ரிதியின் செவ்விதழ்கள் "கிருஷ்" என்று முணுமுணுக்க, "நானே தான் ரவுடி நானே தான்.." என்று அவளின் தலையில் செல்லமாக முட்டிய தன்னவனை காணும் ஆர்வத்தில் படக்கென்று கண்ணை விரித்தவளுக்கு அத்தனை நெருக்கத்தில் தன் உயிர் மூச்சாய் கலந்திருப்பவனை கண்டதும் இமைசிறகை இசைத்தால் கூட எங்கு தன்னவன் மாயமாக மறைந்து விடுவானோ என்ற பயத்தில் மகிழ்ச்சி கலந்த கண்ணீருடன் அவனை பார்த்தாள்..
"ஏன் கிருஷ் என்னைய விட்டுட்டு போனே?" என்று அவனின் சட்டையை பற்றி கேட்டவள், "இனி போகாதடா.. நீ இல்லாம என்னால இருக்க முடியாது.." என்று அவனின் நெஞ்சமதிலே சாய்ந்து விம்மினாள்..
தன்னவள் அழுகுவதை பொறுக்காமல் அவளின் விழிநீரை தன் கரங்கள் கொண்டு துடைத்து விட்டவன், "என் ரவுடி இப்படி இருக்க மாட்டாளே? எது வந்தாலும் எதிர்த்து நிற்கனும்னு தான் சொல்லிருக்கேன்.. அது யாரா இருந்தாலும் பின் வாங்க கூடாதுடி. நான் எப்பவும் உன்கூட தான் இருப்பேனு நான் சொல்லிதான் உனக்கு தெரியனுமா?" என்று வினவிய தன்னவனுக்கு பதிலேதும் கூறாமல் அவனை இறுக்க அணைத்து கொண்டவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது..
"முடில கிருஷ்.. நீ இல்லாத இடம் வெறுமையா இருக்கு.. உன்னோட அரவணைப்பை தான் என் மனசு ரொம்ப தேடுதுடா.. எப்பவும் என் கூட இருப்பேனு சொல்லிட்டு ஏன்டா என்னைய விட்டுட்டு போனே? எனக்கு நீ வேணும் கிருஷ்.. என்னைய விட்டுட்டு போகாத.. எனக்குனு இருக்கற ஒரு உறவு நீ மட்டும் தான்.." என்றாள் தேம்பலுடன்..
"ப்ச் என்னைய வெளில தேடாம உனக்குள்ள தேடு ரவுடி கண்டிப்பா உன் முன்னால வந்து நிற்பேன்.." என்று அவளின் கண்ணீரை துடைத்தவாறு கூறிய கிருஷ், மெத்தென இருந்த அவளின் கன்னத்தில் மீசை குத்தும் தன் கன்னத்தை வைத்து உரசி அவளின் இதழையும் வஞ்சனை இன்றி தீண்டி அவனவளின் மனக்காயத்தை மெதுமெதுவாக தனக்குள் உள்வாங்கி கொண்டிருந்தான்..
இது அனைத்தும் கனவு என்பதை போல் "ரிதி" என்று தன்னருகில் கேட்ட நகுலனின் குரலில் தன்னிலைக்கு வந்தவள் சட்டென்று கண்ணை முழித்தவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை..
"அப்ப நம்ம கண்டது பிரம்மையா?" என்ற குழப்பத்திலே தன் கிருஷ் அகப்படுகிறானா? என்று அந்த இடத்தை சுற்றி அவளின் கருமணிகள் ஏக்கத்தில் சுழன்றது..
"ஹே ரிதி இந்த நேரத்துல தனியா என்ன பண்றே?" என்று மீண்டும் நகுலனின் வார்த்தைகள் தன் செவியை தீண்டியதும் தான் தன்னை சமாளித்து கொண்டு, "ஒன்னுமில்ல தூக்கம் வரலனு வெளில வந்தேன்.." என்றாள் தடுமாறியபடி..
அவளின் வார்த்தையில் உண்மை இல்லை என்று நகுலனும் அறிவான்.. இருந்தும் எதுவும் கேட்க விரும்பாமல், "இது ஒன்னும் நம்ம இடம் இல்லடா இப்படி தனியா வர்றதுக்கு.. எப்ப என்ன நடக்கும்னு நம்ம சொல்ல முடியாதுல்ல?" என்று அக்கறையுடன் கூறிட, "இத்தனை பேரு இருக்கறப்ப எனக்கு என்ன வர போகுது.." என்று மெல்லிய குரலில் கூறினாள் ரிதியும்..
"இத்தனை பேரு இங்கிருந்தாலும் வெளில நடக்கறது எப்படி அவங்களுக்கு தெரியும்.. இது காடுடா.." என்று மென்மையாக கூறிய நகுலனுக்கு என்ன பதில் தருவது என்று தெரியாமல் தலையை குனிந்தாள் ரிதி..
"சரி உள்ள போலாம் வா.." என்று அழைத்ததுக்கும் ரிதி மௌனத்தையே பதிலாக தர, நெற்றியை நீவியவாறு சுற்றியும் நோட்டமிட்ட நகுலன், "இங்கயே கொஞ்ச நேரம் உக்காரலாம்.." என்றதும் தான் ரிதியின் முகம் பிரகாசித்தது..
இருவரும் ஒவ்வொரு மனநிலையில் அந்த இரவை ரசித்தவாறு அமர்ந்திருக்க, முதலில் அமைதியை கலைத்தது நகுலன் தான்..
"ரிதி எனக்கு ஒன்னு தெரியனும்.." - நகுலன்
"ம்ம்ம் சொல்லுங்க.." - ரிதி
"உனக்கு வெளில சொல்ல முடியாத அளவுக்கு ஏதாவது பிரச்சனையா?" - நகுலன்
"அப்படி எல்லாம் எதுவுமில்ல நகுலன்.." - ரிதி
"இதைய நான் கேட்கறதே அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தா கண்டிப்பா உனக்கு பக்கபலமா இருப்பேனு சொல்றதுக்கு தான்.. என் காதல் எனக்கே முட்டாள்தனமா தான் தெரியுது.. நிதர்சனத்தை புரிஞ்சுக்கிட்டேன் ரிதி.." - நகுலன்
இதனை கேட்டதும் ரிதிக்கு கருப்பன் கூறிய விடயம் நியாபகத்திற்கு வர, யாராவது இருக்கிறார்களா? என்று தன் விழிகளை சுழல விட்டவள் பின்பு மெதுவாக கருப்பன் கூறிய அனைத்தையும் கூறினாள்..
"வாட்? பொண்ணுகளை இங்கிருந்து கூட்டிட்டு போறாங்களா? குழந்தை இல்லாம எத்தனை பேரு கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க இவங்க என்னடானா இவ்ளோ ஈசியா இதைய சொல்லிருக்காங்க..இவங்களைய யாரும் கண்டுக்கறது இல்ல தான்.."
"அதுக்காக யாரு என்ன சொன்னாலும் சரினு சொல்லிருவாங்களா? குழந்தை பிறந்ததும் அந்த குழந்தைக்கு தாய்பாலும் தாயும் எவ்வளவு முக்கியம்னு இவங்க உணரலயா?" என்று சீற்றலுடன் நகுலன் பொங்கி விட்டான்..
"எனக்கும் அதுதான் குழப்பமா இருக்கு.. இங்கிருந்து கூட்டிட்டு போய் அவங்களைய என்ன பண்றாங்கனு தெரில அதுதான் இப்ப என் மண்டைக்குள்ள ஓடுது..இதைய விட கொடுமை என்னனா இங்க நடக்கற எதுவும் வெளி உலகத்திற்கு தெரியாம இருக்கறது தான்.." என்று சிந்தனையுடன் ரிதியும் கூறிட, பெரும் அமைதி காத்த நகுலனும், "பார்ப்போம் என்ன நடக்குதுனு.. நம்ம கைல எதுவும் இல்ல.." என்றான் குழம்பிய முகத்துடன்.
பதிலுரைக்காமல் நகுலனின் தோளில் சாய்ந்த ரிதிக்கும் எண்ணங்கள் தறிகெட்டோட தொடங்க, ரிதியிடம் அப்படி கூறினாலும் நகுலனின் மனதிலும் இந்த கேள்வி தான் கொக்கிட்டு நின்றிருந்தது..
எத்தனை மணி நேரங்கள் இப்படியே இருந்தார்கள் என்பதை அவர்கள் இருவரும் மட்டுமே அறிவார்கள்! விடிய தொடங்கிய நேரத்தில் தான் இருவரும் குடிலுக்குள் சென்றதே!!
ஆற்றில் குளித்து விட்டு மேலேறிய விக்ரமிடம் அவனின் அடியாள் ஒருவன், "பாஸ் பெரிய பாஸ் போன் பண்ணுனாரு.." என்று அவனின் போனை குடுக்க, "ம்ம்ம் நீ கிளம்பு" என்று அவனை அனுப்பி விட்ட விக்ரம் தன் மாமனாரான ராஜனுக்கு அழைத்தான்..
"என்ன மாப்ளை நேத்தே வர வேண்டியது இன்னும் வராம இருக்கீங்க.." - ராஜன்
"நம்ம கொல்ல நினைச்ச நாலு பேரையும் அந்த கிழவன் காப்பாத்தி கூட்டிட்டு வந்து வெச்சுருக்கு மாமா.." - விக்ரம்
"என்னடா சொல்றே? அதுக இன்னும் சாகலயா?" - ராஜன்
"நம்ம திட்டப்படி எல்லாம் நடந்துச்சு தான்.. கடைசி நிமிசத்துல அந்த கிழவன் காப்பாத்திருச்சு.. எனக்கு வந்த கோவத்துக்கு அங்கயே அவரை கொன்னுருப்பேன்.." - விக்ரம்
"அவசரப்பட்டு எதுவும் பண்ணிராத.. அப்பறம் அங்கிருக்கறவங்க நமக்கு எதிரா திரும்பிருவாங்க.." - ராஜன்
"அதுக்காக தான் இவ்ளோ பொறுமையா இருக்கேன்.." - விக்ரம்
"இப்ப என்ன முடிவு எடுத்துருக்கே?" - ராஜன்
இதில் கேலியுடன் விக்ரமின் இதழ் வளைந்து, "நமக்கு கஷ்டமே இல்லாம ரெண்டு பொண்ணுக சிக்கிருக்குனு நினைச்சு அந்த ரெண்டு தடிமாடையும் போட்டு தள்ளிட்டு நம்ம வேலையை பார்க்க வேண்டியது தான்.." என்றான் சாதாரணமாக..
"புரிஞ்சுருச்சு மாப்ளை.. அதுகளை நம்ம இடத்துக்கு கொண்டு போக போற அப்படிதானே?" - ராஜன்
"ம்ம்ம் அதேதான் மாமா.." - விக்ரம்
"எதுக்கோ கொஞ்சம் உசாரா இரு மாப்ளை அதுகளை நம்ம முடியாது.." - ராஜன்
"அதுக்கும் வேற ஒரு திட்டம் இருக்கு மாமா.. நான் சொல்றப்ப அதைய நீங்க செயல்படுத்துனா போதும்.." - விக்ரம்
"யாரை தூக்கனும்னு சொல்லு மாப்ளை நம்ம ஆளுகளை விட்டு தூக்கிரலாம்.." என்று ராஜன் கூறியதை கேட்டு முத்து பற்கள் மின்ன சிரித்த விக்ரமும், "இதுகளை தூக்கிட்டு அப்பறம் சொல்றேன் மாமா.." என்றான் தாடையை நீவியவாறு..
சட்டையை அணிந்தவாறு வந்த விக்ரமை கண்டு கருப்பன், "ஐயா பொன்னி புள்ளயை மட்டும் அழைச்சுப்புட்டு போனா போதுமாங்க?" என்று பவ்யமாக வினவ, "ம்ம்ம் போதும்னு மாமா சொன்னாங்க.. இங்க நடக்கற விசயம் வேற யாராவதுக்கு தெரிஞ்சுச்சு என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்.." என்று காட்டமாக கூறிய விக்ரமை கண்டு சிறிது அஞ்சிய கருப்பனுக்கு அந்த குளுமையிலும் வியர்த்து கொட்டியது..
பின்பு தன்னை மீட்டு கொண்டு, "இங்கன நடக்கறது ஆருக்குங்க ஐயா தெரிய போகுது?" என்று கையை கட்டி கொண்டு தலையை தாழ்த்தி கூறிட, "குட் இப்படிதான் இருக்கனும்.. இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்ப போறேன்.. சீக்கிரம் அவங்களைய வர சொல்லு.." என்று கட்டளையையும் பிறப்பித்து விட்டு விக்ரம் அகன்றதும், படபடப்புடன் ரிதியை தேடி ஓடினார்..
இப்போது நடந்த அனைத்தையும் மற்ற நால்வரும் கேட்டுதான் கொண்டிருந்தனர்.. தங்களை தேடி கருப்பன் ஓடி வருவதை கண்டு ஆளுக்கொரு திசையில் அமர்ந்து விட, பதட்டத்துடன் குடிலுக்குள் நுழைந்த கருப்பன், "சாமி சாமி நா சொன்னதை ஆருகிட்டயும் சொல்லல தானே?" என்று வினவ, ரிதியின் கண்கள் தானாக நகுலனை தீண்டியது..
அவனோ இல்லையென்று கூற சொல்லி சைகை காட்ட, "இல்லயே தாத்தா நான் அப்பவே மறந்துட்டேன்.. ஏன் என்ன ஆச்சு?" என்று எதுவும் தெரியாதது போல் ரிதி கேட்டதும், "ஒன்னுமில்ல சாமி.. ஐயா கெளம்பிட்டாக.. ஒங்களைய கூட்டிப்புட்டு வர சொன்னாக.." என்று விட்டு வெளியில் செல்ல போக, "அப்படி என்ன இங்க நடக்குது.." என்று சத்தமாகவே நிகிலன் கேட்டு விட்டான்..
அதில் பதறிய திரும்பிய கருப்பன், "தம்பி சத்தம் போடாதீக.." என்று அதீத பயத்தில் வெளியில் எட்டி பார்த்தவர், "இங்கன ஒன்னும் நடக்கல சாமி நீவு மொதல்ல கெளம்புக.." என்றிட, நகுலனும் "இங்க நடக்கறது நமக்கு எதுக்குடா? நம்ம கிளம்பற வழியை பார்ப்போம்.." என்றவனின் கண்களில் "அமைதியா இரு" என்ற அர்த்தம் மேலோங்கி நின்றது..
அதை உணர்ந்த நிகிலனும் "அதுவும் சரிதான்.. இவங்களுக்கு ஆயிரம் இருக்கும் அது எல்லாம் நமக்கு எதுக்கு?? நம்ம வாழ்க்கையே டப்பா டேன்ஸ் ஆடிட்டு இருக்கே?" என்றவாறு காணாமல் போன குழந்தையை போல் திருதிருவென முழித்திருந்த ரியாவின் தலையில் கொட்டினான்...
"எதுக்குடா கொட்டுனே?" என்று தலையை தேய்த்தவாறு ரியா கேட்க, "உன்னைய அதிர்ச்சில இருந்து வெளில கொண்டு வரதான்.." என்று நகைத்தவாறு நிகிலன் கூறிட, அவனை முடிந்தவரைக்கும் முறைத்து தள்ளிய ரியாவுக்கு இங்கு நடப்பதை பார்த்தும் மயக்கம் வராமல் இருந்தது தான் ஆச்சரியம்..
அமைதியாக நின்றிருந்த நால்வரையும் விக்ரமின் விழிகள் யோசனையுடன் தீண்டி மீள, "நான் சொன்னது நியாபகம் இருக்கும்னு நினைக்கறேன்.." என்று கருப்பனை மிரட்டி விட்டே காரில் ஏறிய விக்ரமை கொன்று விடும் வெறி தான் எழுந்தது நகுலனுள்..
"பாத்து போங்க சாமி.." என்று ரிதியின் கையை பிடித்த கருப்பனுக்கு அவரை அறியாமலே கண்கள் கலங்கிட, புன்னகைத்து தலையசைத்து அவரிடம் இருந்து ரிதியும் விடைபெற்று காரில் ஏறினாள்..
இவர்களுக்கு வழி தெரிய கூடாது என்பதற்காகவே வளைந்து வளைந்து காரை ஓட்டி கொண்டிருந்த அடியாளை வசைபாடியவாறு பல்லை கடித்து கொண்டு அமர்ந்திருந்தனர் நால்வரும்..
"என்ன மிஸ்டர். நகுலன் உங்க ஆளு உங்களைய வேணாம்னு சொல்றதா கேள்வி பட்டேன்.." என்று நக்கல் கலந்த சிரிப்புடன் விக்ரம் வினவியதும், சுள்ளென்று ஏறிய கோவத்துடன், "அது என் பர்சனல்.. அதைய பத்தி கண்டவன் கிட்ட எல்லாம் சொல்லனும்னு அவசியமில்ல.." என்றான் சீற்றலுடன்..
இதில் புருவத்தை நெளித்து "பாருடா சாருக்கு கோவம் எல்லாம் வருது.. இன்னும் என்னைய நம்பிதான் இருக்கீங்க.. அதைய மறந்துட்டீங்களோ?" என்று விக்ரம் கேட்க, சிறிது பயமில்லாமல் நகுலனும் "இப்பவும் எங்களைய நீ வெளில கூட்டிட்டு போற மாதிரி தெரியலயே?" என்று சிரிப்புடன் வினவினான்..
நகுலனின் பேச்சில் திகைத்திருந்த விக்ரம் தன்னை மீட்டு கொண்டு, "தெரிஞ்சா சரிதான்.." என்று பீடிகையுடன் பேச்சை முடித்து விட, இதை கேட்ட நிகிலனுக்கு தான் வயிற்றில் புளியை கரைத்தது..
"டேய் எப்படா நீங்க ரெண்டு பேரும் எதிரியா மாறுனீங்க.. எனக்கு தலையே வெடிக்கறப்புல இருக்கு.." என்று உச்சக்கட்ட குழப்பத்தில் நிகிலன் கத்த, "என்னைய சீண்டாத வரைக்கும் நான் நல்லவன் தான்.. என்னைய சீண்டி பார்த்தவங்களுக்கு எப்பவும் நான் கெட்டவன் தான்.." என்று நகுலனை மட்டுமின்றி ரிதியையும் ஆழ்ந்து பார்த்த விக்ரமின் முகமோ அனலாக தகித்து நின்றது..
நகுலனை மெதுவாக சுரண்டிய நிகிலன், "அப்படி என்னத்த தான்டா பண்ணி வெச்சே?" என்று ஹஸ்கி குரலில் கேட்டிட, கடுகடுப்புடன் பேச வந்த நகுலனை தடுத்து, "அவன் கிட்டயே கேட்டுக்கோனு சொன்னீனா வெய்யு செவுள்லயே ரெண்டு விடுவேன்.. அவன்கிட்ட மாட்டுனது நீ மட்டுமில்ல நானும் தான்.. ஒழுங்க சொல்லு.." என்று கேட்டான் சுட்டெரித்தவாறே..
"அப்ப மேல பாரு.." - நகுலன்
"மேல என்ன உன் தாத்தாவா தொங்கிட்டு இருக்காரு.." - நிகிலன்
"உனக்கு ப்ளாஷ்பேக் தெரியனுமா? வேண்டாமா?" - நகுலன்
"அதுக்கு எதுக்குடா மேல பார்க்கனும்.. ஒழுங்க சொல்லி தொலை.." - நிகிலன்
விடுமுறை தினத்தில் ரிதியும் நகுலனும் ஷாபிங் வந்திருக்க, இன்னும் ஒரு வாரத்தில் ரிதியின் பிறந்தநாள் வருவதால் அவளுக்கு என்ன வாங்கலாம் என்று தீவிர யோசனையில் உழன்றிருந்தான் நகுலன்..
ரிதியோ ஆர்வமாக தன் அன்னைக்கு புடவையை தேர்வு செய்வதில் கவனத்தை சிதற விட்டிருக்க, "பேசாம கிப்ட் செக்ஷனுக்கு போய் பார்ப்போமா?" என்று நகுலனுக்கு யோசனை எழுந்ததும் "பேபி நீ பார்த்துட்டு இரு வந்தறேன்.." என்று அவள் கன்னத்தை தட்டி விட்டு அகன்றான்..
செல்லும் அவனை பார்த்து புன்னகையை சிந்திய ரிதி புடவையில் கவனமாக, அதே நேரம் சலசலப்பு கேட்டது.. அங்கிருந்த அனைவரும் என்னவென்று பார்வையை சுழல விட, உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடி வந்த ஒருவனின் பின்னே பத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கையில் அறுவாளுடன் அவனை துரத்தி வந்தனர்..
இதை கண்டு அனைவரும் பீதியில் ஓரமாக ஒன்ற, ஓடி வந்தவன் பயத்தில் வெலவெலத்து நின்றிருந்த ஒரு பெண்மணியை இழுத்து அவர் கழுத்தில் கத்தியை வைத்து தன்னை துரத்தி வந்தவர்களை நோக்கி, "யாராவது கிட்ட வந்தீங்க கொன்றுவேன்.." என்றான் மிரட்டலுடன்..
ஓடி வந்த ரவுடிகளும் அப்படியே நின்று ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.. அவனை தவிர வேறு யாராவது மேல் கீறல் பட்டால் கூட தங்களின் தலைவன் நரகத்தை கண்முன்னே காட்டுவார் என்ற பயத்தில் "டேய் கையை எடுடா.." என்று அவனை மிரட்ட, அவனோ அங்கிருந்த சேரை அவர்களை நோக்கி உதைத்து தள்ளி விட்டு மீண்டும் ஓட, கீழே விழுந்த ரவுடிகளும் எழுந்து அவனை சுற்றி வளைத்தனர்..
மீண்டும் அவர்களிடம் மாட்டி கொண்டதை உணர்ந்து, பயத்தில் சுவரோடு ஒன்றியிருந்த ரிதியை இழுத்து அவள் கழுத்தில் கத்தியை வைத்து, "பக்கத்துல வந்தீங்க இந்த பொண்ணை கொன்னுருவேன்.." என்று ரிதியின் கழுத்தில் கத்தியை அழுத்தினான்..
"இங்க பாரு என் பாஸுக்கு மட்டும் இது தெரிஞ்சுச்சு அவ்ளோதான்.. ஒழுங்க அந்த பொண்ணை விடு.." என்று ரவுடி ஒருவன் அறுவாளை கீழே போட்டவாறு கூறிட, பயத்தில் நடுங்கிய உடலுடன் வார்த்தை வராமல் தத்தளித்த ரிதியோ எப்போது வேணாலும் மயங்கி விழுவேன் என்ற ரீதியில் நின்றிருந்தாள்..
ரிதியை பிடித்திருந்தவனின் கவனம் அனைத்தும் முன்னால் நின்றிருந்த ரவுடிகளின் மேல் மட்டும் இருந்ததால், பின்னால் வந்த விக்ரமை கவனிக்க தவறினான்..
சத்தம் வராதவாறு வந்த விக்ரம் லாவாக ரிதியை தன்பக்கம் இழுத்து குத்த வந்தவனை எட்டி மிதித்ததும் தூரபோய் விழுந்தான்.. விக்ரம் இழுத்ததுமே பயத்தில் மயங்கி சரிந்த ரிதியை அங்கிருந்த பெண்மணிகளிடம் ஒப்படைத்து விட்டு கீழே விழுந்தவனை இன்னும் நாலு மிதிமிதிக்க, விட்டால் அவன் செத்து விடுவானோ? என்ற பயத்தில் அங்கிருந்தவர்கள் விக்ரமை இழுத்து தள்ளி நிறுத்தினர்..
இந்த சமயத்தில் தான் கூட்டமாக நின்றிருப்பதை கவனித்த நகுலன் பதறி அடித்து கொண்டு அங்கு ஓடி வர, விக்ரமிடம் மிதி வாங்கியவன் தன்னை தூக்க வந்தவர்களை தள்ளி விட்டு எழுந்து ஓட, அவனின் பின்னே துரத்தி வந்த ரவுடிகளும் ஓடினர்..
தன்னை பிடித்திருந்தவர்களை விலக்கி விட்டு விக்ரமும் அவனின் பின்னே ஓட முயல, "தம்பி கொஞ்சம் அமைதியா இருப்பா.. அவனை துரத்திட்டு தானே பின்னாடி அத்தனை பேரு போய்ருக்காங்க.." என்று சமாதானபடுத்தியும் அவர்களிடம் இருந்து விக்ரம் விலக முயன்று கொண்டிருக்கும் போது கூட்டத்தை விலக்கியவாறு முன்னால் வந்த நகுலன் துடித்து போனான்..
"பேபி" என்று கத்தியவாறு ரிதியிடம் ஓடி அவளின் கன்னத்தை தட்டி அவளை எழுப்ப முயன்ற நகுலன், விக்ரமை மற்றவர்கள் பிடித்திருப்பதை தவறாக உணர்ந்து "டேய்" என்று கத்தியவாறு ஓடி சென்று அவனின் சட்டையை கொத்தாக பற்றி, "இன்னும் நீ திருந்தவே இல்லயாடா.. ச்சீ நீ எல்லாம் மனுசனே இல்ல.. காலேஜ்ல உன்னால ஒரு பொண்ணு செத்தும் இன்னும் இப்படியே இருக்கே?" என்று கத்தினான் உச்சக்கட்ட கோவத்தில்..
இதில் நரம்புகள் புடைக்க தன் கையை பிடித்திருந்தவர்களிடம் இருந்து உருவிய விக்ரம் "என் விசயத்துல தலையிடாதனு எப்பவே சொல்லிட்டேன்.." என்று ஆக்ரோஷமாக கத்தினான்..
நகுலன் கூறியதை கேட்டதும் ஆளாளுக்கு விக்ரமை கண்டு ஏதேதோ பேச தொடங்க, "இது தனக்கு தேவைதான்.." என்று நரநரவென்று பல்லை கடித்தவனுக்கு கோவம் மட்டும் கட்டுங்கடங்காமல் எழுந்தது..
அதற்குள் கண் விழித்த ரிதி, வேகமாக விக்ரமிடம் வந்து, "ரொம்ப நன்றி சார் நீங்க மட்டும் வரலனா இன்னேரம் நான் செத்திருந்தாலும் செத்திருப்பேன்.." என்று உணர்ச்சி வசத்துடன் கை கூப்ப, "ஹே பேபி இவனே பொறுக்கி இவன்கிட்ட போய்.." என்றான் விக்ரமை முறைத்தவாறு..
"அய்யோ நகுலன் இந்த சாரு தான் என்னைய காப்பாத்துனது.. யாரோ ஒருத்தரை நிறைய ரவுடிக துரத்திட்டு வந்தாங்க.. ஓடி வந்தவன் என் கழுத்துல கத்தியை வெச்சுட்டான்.. அவன்கிட்ட இருந்து இவங்க மட்டும் என்னைய காப்பாத்தல என் கழுத்தை அறுத்துருந்தாலும் அறுத்துருப்பான்.." என்று நடந்ததை கூறி முடிக்க, நகுலனுக்கு தான் அய்யோவென்று இருந்தது..
கூட்டத்தில் இருந்த சிலரும், "ஆமா தம்பி இதுதான் நடந்துச்சு.." என்றிட, இன்னும் சிலரோ, "இவனால தான் ஒரு பொண்ணு செத்து போச்சுனு அந்த தம்பி சொல்லுது.. தன்னை நல்லவனா காட்டிக்க தான் இந்த பொண்ணை காப்பாத்த நாடகம் போட்டுருப்பானோ?" என்று விக்ரமின் காதுபடவே பேசி கொள்ள, அவஸ்தையுடன் விக்ரமை பார்த்த நகுலனின் கண்கள் மன்னிப்பை வேண்டியது..
அனைவரும் விக்ரமை பற்றியே பேசியவாறு கலைந்து சென்றதும், "சாரி விக்ரம்.." என்று பேச வந்த நகுலனை தீப்பார்வை பார்த்தவன், "உன்னைய விட மாட்டேன்டா விடவே மாட்டேன்.. நீ சொன்ன மாதிரி பொறுக்கி தான்.. கூடிய சீக்கிரத்துல மறுபடியும் மீட் பண்றேன்.." என்றவனின் விழிகள் ரிதியையும் காட்டத்துடன் நோக்கியது..
விக்ரம் சென்றதும், "நகுலன் அவங்க ஏன் இப்படி பேசிட்டு போறாங்க?" என்று தன்னவளின் குரல் செவியை அடைந்ததும் தன்னை மீட்டு கொண்டு, "ஒன்னுமில்ல பேபி போலாமா?" என்று அவளிடம் எதுவும் கூறாமல் நடந்தான்..
*******
இதை கேட்டதும் "தெரியாம தான் கேட்றேன் நீ என்ன லூசாடா?" என்று நிகிலன் தலையில் கை வைத்து கொள்ள, "நான் என்னடா பண்றது எல்லாரும் அவனை பிடிச்சுருந்ததை பார்த்து அவன்தான் ரிதியை என்னமோ பண்ணிட்டானு வார்த்தையை விட்டுட்டேன்.." என்றான் கவலையுடன்..
அவனை விழியால் எரித்தவாறு, "அடேய் இவனால எல்லாம் நம்ம காலேஜ்ல படிச்ச பொண்ணு சாகல.. இவனை காதலிக்கறேனு அந்த பொண்ணு சொன்னது உண்மைதான்.. இவன் மறுத்ததும் அந்த பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்தவனுக்கு ஓக்கே சொல்லி ரெண்டு பேரும் நெருங்கி பழகுனதுல அந்த பொண்ணு கர்ப்பமாகிருச்சு.. இது வெளில தெரிஞ்சா மானமே போய்ரும்னு பயத்துல அந்த பொண்ணே தற்கொலை பண்ணிக்கிச்சு.. அதுக்கும் விக்ரமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லடா.." என்றான் நிகிலன்..
குழப்பத்துடன் நகுலனோ "டேய் இவன் மறுத்ததுல தானே அந்த பொண்ணு தற்கொலை பண்ணிருச்சுனு காலேஜ்ல பேசிக்கிட்டாங்க நீ என்ன இப்படி சொல்றே?" என்று எதிர்கேள்வியை தொடுத்தான்..
"முதல்ல அப்படி பேசுனது உண்மைதான்டா.. ஆனா அதுக்கு அப்பறம் தான் இந்த விசயம் எல்லாருக்கும் தெரிஞ்சுச்சு.. இந்த சமயத்துல நீ உங்க தாத்தாக்கு உடம்பு சரியில்லனு ஒரு வாரம் லீவு போட்டுட்டு போய்ட்டேனு நினைக்கறேன்.. ரெண்டு மூணு நாளு இதைய பத்தி பேசுனாங்க அதுக்கு அப்பறம் விட்டுட்டாங்க நானும் அப்பவே மறந்துட்டேன்.." என்று ஏக்கப் பெருமூச்சுடன் நிகிலன் முடித்ததும் நகுலனுக்கு தான் என்ன செய்வதே என்று புரியவில்லை..
"ஏன் மச்சி பழி வாங்கறதுனா உன்னையும் ரிதியையும் தானே வாங்கனும் எதுக்கு என்னையும் குள்ளகத்தரியையும் சேர்த்து கடத்திருக்காங்க.." - நிகிலன்
"அதான்டா எனக்கும் குழப்பமா இருக்கு.. ஒருவேளை இதுல வேற ஏதோ விசயம் சம்பந்தபட்டிருக்குமோ?" - நகுலன்
"அதையை அவன்கிட்ட தான் கேட்கனும்.. நான் கேட்டா அவ்வளவுதான்.." - நகுலன்
விக்ரம் அழைத்து வந்த இடத்தை பார்த்து இவர்களுக்கு மயக்கம் வராத குறை தான்.. அந்த காட்டினுள் வெளியில் தெரியாதவாறு கோட்டை போல் இருந்த காம்பவுண்டினுள் கார் நுழைய, அந்த வீட்டை சுற்றி இருநூறுக்கு மேற்பட்ட ஆட்கள் கையில் துப்பாக்கியுடன் நடந்து கொண்டிருந்தனர்..
அந்த இடமே சற்று திகிலுடன் காணபட, காரை விட்டு இறங்கிய விக்ரம், நால்வரின் முகத்திலும் காணப்பட்ட பீதியை ரசித்து பார்த்து "இனியும் வெளில போக முடியும்னு நம்பிக்கைல இருக்கீங்களா?" என்று ஏகத்துக்கும் கிண்டலை ஏற்றி கேட்டவனுக்கு எதிர்வினை தருவதற்கு பதிலாக சுற்றியும் நோட்டமிட்டவர்களின் முகத்தில் அப்பாட்டமாக பயம் தெரிந்தது..
சற்று மேடிட்ட வயிற்றுடன் பல பெண்கள் லாரியில் நின்றிருந்த ஆண்கள் குடுத்த அட்டை பெட்டியை தூக்கி கொண்டு வீட்டினுள் சென்று கொண்டிருக்க, அதை என்னவென்று பார்க்க முயன்றவர்களை விக்ரமின் குரல் தடுத்தது..
"அதைய அப்பறம் பார்த்துக்கலாம்.. போலாம் வாங்க.." என்றவாறு விக்ரம் நகர, இவர்களின் பின்னே ஐந்தாறு அடியாட்கள் துப்பாக்கியுடன் பின் தொடர்ந்து வந்தனர்..
வீட்டினுள் காலடி எடுத்து வைத்தவர்களுக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்தது.. பழங்காலத்து வீடாக தான் இருக்கும் நினைத்து இருந்தவர்களின் எண்ணத்தை பொய்யாக்கியது போல் நவீனகால கட்டமைப்புடன் அழகாக ஜொலித்து கொண்டிருந்தது.. முன்னால் இருந்த வரவேற்பறையே மைதானம் போல் பரந்து விரித்திருந்தது..
எங்கிருந்தோ வந்த குழந்தைகளின் அழுகை சத்தம் இவர்களின் கவனத்தை மீட்டெடுக்க, திகைப்பில் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று வீட்டினுள் தேடினர்..
"டேய் அதுகளை வாயை மூட சொல்லு இல்ல நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது.." என்று விக்ரம் கத்தியதும், "பார்க்கறேன் பாஸ்.." என்று விட்டு வேகமாக ஒரு அறைகதவை திறந்து கொண்டு உள்ளே ஓடினான் ஒருவன்.. சற்று நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் முற்றிலும் அடங்கி இருக்க, நின்ற இடத்திலே நின்றிருந்த நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..
"டேய் அதுகளை கூட்டிட்டு வாங்கடா.." என்று விட்டு மாடியேறினான் விக்ரம்.. இவனின் பேச்சுக்கு இணங்க, "பாஸ் சொன்னது காதுல விழுகலயா?" என்று நால்வரையும் தள்ளி விட, அவர்களை முறைத்தவாறு விக்ரமை பின் தொடர்ந்து மாடியேறினர்..
அங்கு ஷோபாவில் ஐம்பது வயதொத்த ஆண் ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவாறு போன் பேசி கொண்டிருக்க, அவரை கண்டதும், "என்ன மாமா அதுக்குள்ள வந்துட்டிங்களா?" என்று வினாவினை தொடுத்தான்..
அவனை கண்டு சிரிப்பை பதிலாக தந்த அவர், போனில் யாரிடமோ "இதோ மாப்ளை வந்துட்டாரு.. நீயே பேசு.." என்று விக்ரமிடம் போனை நீட்ட, மறுத்த விக்ரம் "மாமா அப்பறம் பேசிக்கறேன்.. ரெண்டு நாளு போன் பண்ணலனு உங்க பொண்ணு செம கோவத்துல இருப்பா.." என்று கூறியவனுக்கு சிரிப்பை தந்தது வேறு யாருமில்லை விக்ரமின் மாமனாரான ராஜனே..
இதை கேட்டு நகுலனோ "இதுக வேற நம்ம பொறுமையை ரொம்ப சோதிக்கறாங்கடா.." என்று நிகிலனின் காதை கடிக்க, விக்ரமை விட்டு பார்வையை விலக்கிய ராஜனின் விழிகள் நால்வரையும் ஆராய்ந்து இறுதியில் நிலைகுத்தி நின்றது என்னவோ ரிதியிடமே!!...
ராஜனின் பார்வையில் பொங்கிய எரிச்சலை மறைத்து கொள்ள முகத்தை திருப்பி கொண்ட ரிதியினை கண்டு எகத்தாளமாக புன்னகைத்தவர், "நா இங்க வருவேனு நீ நினைச்சு பார்க்கலயல்ல?" என்று கேட்க, "நீ யாருனே தெரிலடா கோமாளி இதுல நீ இங்க வந்தா என்ன? வரலனா என்ன?" என்று நினைக்கதான் முடிந்தது நிகிலனால்..
மீண்டும் நக்கலுடன் அவரே, "என்ன ரிதி மேடம் உங்களைய பத்தி அத்தனை சொன்னாங்க.. நீங்க என்னடானா இவ்ளோ அமைதியா இருக்கீங்க.." என்று வினவ, "அவ அமைதியா இல்லாம இவ்வளவு நாளு ஆடிட்டா இருந்தா?" என்று கடுப்புடன் நகுலன் கேட்டும் விட்டான்..
இதில் வாய்விட்டு சிரித்தவர் "பாருடா மேடத்தை சொன்னா சாருக்கு கோவம் வருது? இன்னும் இவளை பத்தி தெரில போல?" என்று கேலியுடன் கூறியவரின் கூற்றை ஆமோதித்த விக்ரமும் "ஆமா மாமா இவ்வளவு நாளு இந்த மேடம் ஏமாத்துனது கூட இவங்களுக்கு தெரில.." என்றான் போலியான வருத்தத்துடன்..
அவர்கள் பேச்சுக்கு எந்த எதிர்வினையும் தர விரும்பாமல் அழுத்தத்துடன் அவர்களையே பார்த்தவாறு ரிதி நின்றிருக்க, அவளை கூர்ந்து நோக்கி, "நான் மேடம் கிட்ட மட்டும் தனியா பேசனும் நீங்க கொஞ்சம் உள்ள போங்க.." என்ற விக்ரமின் பேச்சு தங்கள் காதில் விழுவே இல்லை என்பதை போல் மூவரும் ரிதியுடனே இருந்தனர்..
"என் இடத்துல இருக்கறப்பவே இவ்ளோ திமிரா? இங்க நான் மனசு வெச்சா தான் இடத்தை விட்டு நகரவே முடியும்.. ஏன்னா இது என்னோட சாம்ராஜ்ஜியம்.." என்றவாறு கோவத்தில் எழுந்த ராஜன் மூவரையும் தீப்பார்வையில் பொசுக்கினார்..
"அட மாமா எதுக்கு கோவப்பட்டு எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க? அதுக ஒன்னும் அவ்ளோ வொர்த் இல்ல.." என்று அவரை அமைதி படுத்தி விட்டு, அடியாட்களிடம் "டேய் கூட்டிட்டு போங்கடா.." என்று கட்டளையிட, விக்ரமின் பேச்சுக்கிணங்க மற்ற மூவரும் திமிர திமிர இழுத்து கொண்டு சென்று அங்கிருந்த அறையினுள் விட்டு கதவை சாத்தினார்..
இப்போதும் சற்றும் பயப்படாமல் ரிதியோ அவர்களை கண்ணை சுருக்கி பார்க்க, "என்னடி ஆள் மாறி பழி வாங்கலாம்னு இருக்கீயா?" என்று காட்டத்துடன் ராஜன் ஆரம்பிக்க, அவளோ "நான் எதுக்கு உங்களைய பழி வாங்கனும்.." என்றாள் சாதரணமாக..
கூர்பார்வையுடன் "ம்ம்ம்ம் இதுதான் இதுதான் உன்கிட்ட எதிர்பார்த்தேன்.. இதுலயே தெரியுது நீ யாருனு?" என்று விக்ரம் கூறிட, எவ்வித சலனமும் இன்றி, "என்மேல தப்பு இல்லாதப்ப நான் ஏன் பயந்து சாகனும்.." என்று எதிர்கேள்வியை தொடுத்தாள்..
இதில் ஆக்ரோஷமாக மாறிய ராஜன் வேட்டியை மடித்தவாறு அவளிடம் வந்து, "ஏய் என்னடி? நானும் பொண்ணுனு பார்த்து அமைதியா இருந்தா ரொம்பதான் துள்ளறே?" என்று எகிற, அவரின் வார்த்தை தன்னை தீண்டவே இல்லை என்பதை போல், "ஒரு பொண்ணுகிட்ட நேரா மோத முடியாம தான் சுத்தி இத்தனை பேரை வெச்சுக்கிட்டு திரியறீங்களா?" என்றாள் நக்கல் பொதிந்த குரலில்..
ரிதியின் கேள்வியில் ஆத்திரத்துடன் அவளிடம் நெருங்கிய விக்ரமை தடுத்து நிறுத்திய ராஜன், "இவளுக்கு பின்னாடி இன்னும் அவளோட புருஷன் இருக்கானு தைரியத்துல நெஞ்சை நிமித்திட்டு இருக்கா.. அவனை போட சொன்ன வேலை முடிஞ்சுருச்சா?" என்று விக்ரமிடம் கேட்டதும், "இப்ப அவன் நம்ம இடத்துலதான் மாமா.." என்றவனின் பார்வையில் வெற்றி களிப்பு குடியேறி இருந்தது..
ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி மாறி ரிதி பார்க்க, அங்கிருந்த சேரில் அமர்ந்த விக்ரம் அவளை பார்த்தவாறே கால்மேல் கால் போட்டவன், "என்ன ரிதி மேடம் உன் புருசனு பேரு உன் பின்னாடி சுத்துனவனை மறந்துட்டிங்களா? இல்ல அவன் மூலம் உங்களுக்கு பிறந்த குழந்தையையும் மறந்துட்டிங்களா?" என்று புருவம் நெளித்து கேட்டவனை படபடக்கும் மனதுடன் பார்த்தாள் ரிதி..
"அ..வ..ங்க..ளைய எ..ன்ன ப..ண்ணுனே?" என்று ரிதியிடம் இருந்து வந்த வார்த்தைகள் ஒன்றாய் நில்லாமல் தந்தியடிக்க, கையில் இருந்த போனை சுலற்றியவாறு, "ஒன்னும் பண்ணல மேடம் ஜஸ்ட் தலைல ஒரே அடி அதுவும் கடப்பாரைல.. அவ்வளவுதான்.." என்று விக்ரம் கூறியதை கேட்டதும் மயக்கம் வராத குறை தான் அவளுக்கு..
இருந்தும் தன்னவனுக்கு எதுவுமாகாது என்ற நம்பிக்கையில், "உன்னால மட்டுமில்ல வேற யாராலயும் என் கிருஷ் மேல கை வெக்க முடியாது.." என்று தன்னவனின் மீதிருந்த நம்பிக்கையில் துடிதுடித்த மனதை கட்டுபடுத்தியவாறு ரிதி மொழிந்திட, இதை கேட்டதும் விக்ரமும் ராஜனும் சத்தமாக சிரித்தனர்..
"பாரு மாப்ள அம்புட்டு நம்பிக்கை மேடத்துக்கு.." என்ற ராஜன் மேலும் சிரிக்க, எதுவும் கூறாமல் யாருக்கோ அழைத்த விக்ரம் ஸ்பீக்கரில் போட்டு, "என்னடா இன்னும் அவன் உயிரு இருக்கா இல்ல முடிஞ்சுருச்சா?" என்று கேட்க, "இவனெல்லாம் அவ்ளோ சீக்கிரத்துல போக மாட்டான் போல பாஸ்.. எத்தனை அடிச்சாலும் தாங்கிட்டு இருக்கான்.." என்றான் எதிர்பக்கம் இருந்தவன்..
"எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் அனுப்பி விட்டுருங்கடா.." என்று விக்ரம் பேசி கொண்டிருக்கும் போதே எதிர்திசையில் இருந்து வந்த முணுங்கலில் பதைபதைத்து போன ரிதி, "கிருஷ்" என்று கத்திய கத்தல் அந்த இடம் முழுவதும் எதிரொலித்து அடங்கியது..
வேகமாக விக்ரமின் கையில் இருந்த போனை பிடுங்கி "கிருஷ் கிருஷ் என்கிட்ட பேசுடா.. நான் பேசறது கேட்குதா?.." என்று பதட்டத்துடன் ரிதி கத்த, மறுமுனையில் கஷ்டப்பட்டு வாயை திறந்த கிருஷ், "ர..வு..டி.. நா எ..ப்..ப..வும் உ..ன்..கூட தா..ன் இ..ரு..ப்..பே..ன்.." என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக விழுந்ததில் சப்த நாடியும் ஒடுங்கி போனது ரிதிக்கு..
தன்னை சமாளித்து கொண்டு, "அய்யோ அவன் மேல எந்த தப்பும் இல்ல.. எல்லா தப்பும் என்மேல தான்.. என்மேல மட்டும்தான்.. அவனை விட்டுருங்க.." என்று கண்ணீருடன் ரிதி மன்றாட, காதை தேய்த்தவாறு அவள் கையில் இருந்த போனை பிடுங்கிய விக்ரம் "டேய் சீக்கிரம் முடிங்கடா.." என்றது தான் தாமதம் மறுமுனையில் இருந்து வந்த முணுங்கல் சத்தமும் நின்றிருந்தது..
அடியாள் ஒருவனின் "பாஸ் முடிஞ்சுருச்சு.." என்று குஷியுடன் வந்த வார்த்தை ரிதியின் செவியையும் தீண்டி மீள, உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்த இவளுக்கு கண்ணீர் கூட வர மறுத்ததில் அப்படியே மடிந்து அமர்ந்தாள்..
வாய்விட்டு சிரித்தவாறே அவளின் அருகில் குனிந்த ராஜன், "இன்னும் பாக்கி இருக்கறது உன் பொண்ணுதான்.. அதையும் கூடிய சீக்கிரம் அவன் அப்பன் கிட்டயே அனுப்பிறேன்.." என்றவரை சலனமின்றி நோக்கிய ரிதியின் விழிகளில் கொலைவெறி தாண்டவமாடியது..
"உன்னால அத்தனையும் இழந்துட்டேன்.. இனி இழக்கறதுக்கும் ஒன்னுமில்ல.. நான் நினைச்சதை நடத்தி காட்டுவேன்.. உன்னைய ஒன்னுமில்லாம தெரு தெருவா சுத்த விடல... கண்டிப்பா விடுவேன்.. எத்தனை உறவை இழந்தாலும் என் முயற்சியை மட்டும் விட மாட்டேன் மிஸ்டர். ராஜன்.." என்று அலட்சிய பார்வையுடன் வந்தது ரிதியின் வார்த்தை..
இதனில் நெருப்பை கக்கும் விழிகளுடன் அவளின் தலைமுடியை கொத்தாக பற்றி, "என்னடி என் இடத்துல இருந்துட்டே என்னைய மிரட்டறீயா? உன்னால மட்டுமில்ல வேற எவனாலயும் எதையும் புடுங்க முடியாது.." என்று கத்த, "பார்ப்போம் உன் சாவு என் கைல தானு எழுதியிருந்தா அதையை கடவுளாலயும் மாத்த முடியாது.." என்றாள் வலியில் பல்லை கடித்தவாறு..
அவளிடம் இருந்து தள்ளி நின்ற ராஜன் கைதட்டி சிரித்து, "கேட்டியா மாப்ள என் சாவு இவ கைல தானாமா? கேட்கவே நல்லா இருக்குல்ல..??" என்று நகைக்க, "அடங்கற பாம்புதானா மாமா.. ஆடிட்டு போகட்டும் விடுங்க.." என்றான் விக்ரமும்..
இதை கேட்கும் நிலையில் ரிதியும் இல்லயே.. அவளின் சிந்தனை முழுவதும் அவளவனே நிறைந்திருக்க, தன் பலகீனம் எதுவென்று தெரிந்து அதிலே அடிக்கும் இவர்களின் முன்பு கலங்கினாள் வென்று விடுவார்களே இவர்கள்..
அதற்காகவே அவர்களின் முன்பு கலங்க விரும்பாமல் பொங்கிய அழுகையையும் கஷ்டப்பட்டு உள்ளிழுத்து கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வதே என்று தெரியாமல் இருவரையும் வெறித்து பார்த்திருந்தாள்..
இச்சமயம் நகுலனும் நிகிலனும் சற்று பயத்தில் விடாமல் கதவை படபடவென தட்ட, "பாருடா மேடம் மேல எவ்ளோ பாசம்னு?" என்று கூறிய விக்ரம், "இவளையும் அந்த அறைல போடுங்க.. முடிக்க வேண்டிய வேலை ஒன்னு இருக்கு.. அதைய முடிச்சுட்டு அப்பறம் பேசிக்கலாம்.." என்று கட்டளையை பிறப்பித்தான்..
ரிதியை கண்டதும் தான் மற்ற மூவருக்கும் மூச்சே வர, "ரிதி உனக்கு ஒன்னும் இல்ல தானே?" என்று பதட்டத்துடன் நகுலன் வினவியதும் "ம்ம்ம்ம்" என்றாலே தவிர வேறு ஏதும் பேசும் மனநிலையில் அவள் இருக்கவில்லை..
இவர்களிடம் வந்தும் தன்னவனின் குரலே மீண்டும் மீண்டும் அவள் காதில் எதிரொலிக்க, அவளை அறியாமல் கண்ணில் பூத்த கண்ணீரை மறைக்க, காலை குறுக்கி அதில் முகத்தை புதைத்து கொண்டாள்..
ரிதியின் பாவனைகளை பார்த்து இருந்த மற்ற மூவரின் முகத்திலும் குழப்பத்தின் சாயல்களே நிறைந்திருந்தது.. ரிதியிடம் எந்த கேள்வியை கேட்டாலும் பதில் வராமல் போக, பின்பு இவர்களும் அமைதியாகி விட்டனர்..
திடீரென்று நிகிலன், "நான் அப்பவே அந்த கிழவன் கூட போக வேணாம்னு சொன்னேன்.. அவரால தான் நம்ம இந்த இடத்துலதான் மாட்டிருக்கோம்.. தண்ணீல கண்டம்னு கஷ்டப்பட்டு பொய் சொன்னது எல்லாம் பாழா போய்ருச்சேடா.. அப்பவே நம்ம அவங்க கிட்ட இருந்து தப்பிச்சுருந்தா எப்படியாவது வெளில போய்ருக்கலாம்.." என்றான் புலம்பலுடன்..
"இவனுக்கு கொழுப்பை பார்த்தீயா நகுலன்.. பொய் சொன்னதுதான் பாழா போய்ருச்சுனு சாருக்கு கவலை.. அவன் அவன் இங்கிருந்து உயிரோடு போவோமா மாட்டோமானு கவலைல இருக்கோம்.. இதுல இவன் வேற.." என்ற ரியா கடுப்பில் சுவற்றில் முட்டி கொண்டாள்..
சட்டென்று நிமிர்ந்த ரிதி, "கண்டிப்பா உங்களைய நான் வெளில அனுப்பிருவேன் ரியா.. இதனால என் உயிரே போனாலும் எனக்கு கவலையில்ல.. பயப்படாம இருங்க.." என்றவளை மூவரும் முழித்து பார்த்தனர்..
"உன்னைய விட்டுட்டு நாங்க மட்டும் போவோம்னு நினைச்சீயா? போனா நாலு பேரும் போவோம் இல்ல சேர்ந்தே சாவோம்.." என்று நகுலன் கோவத்துடன் கூற, "ப்ச் நகுலன் எதுவா இருந்தாலும் யோசிச்சு பேசுனு எத்தனை தடவை சொல்றது.. ஏன் இவ்ளோ முட்டாளா இருக்கே? நான் உன் ரிதி இல்லனு உனக்கு இன்னுமா புரில.." என்று சினத்துடன் வினவியவளை பே வென்று பார்த்தனர் மூவரும்..
இதே சமயம் விக்ரமிடம், "பாஸ் நீங்க சொன்னதை முடிச்சுட்டோம்.." என்று ஒருவன் கூற, உதட்டை வளைத்து அதில் சிரிப்பை தவழ விட்டவன், "இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க இருக்கனும்.." என்றான் தாடையை தடவியவாறு..