ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மான்விழியில் வீழ்ந்தேனடி!-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 16

நேத்ரா தன் கைவளைவிற்குள் நெளிந்து கொண்டு இருக்கவும், என்ன? என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டான்.​

அவள் அவன் கையை பார்க்கவும் அப்போது தான் அதை உணர்ந்தவனாக சட்டென்று அவள் மீதிருந்து கையை எடுத்தான். “லேடிஸ் ஆஸ்டல் உள்ளே நான் வந்தா நல்லா இருக்காது, சீக்கிரம் உன்னோட பொருட்களை‌ எல்லாம் எடுத்துட்டு வா* என்று அவளை‌‌ அனுப்பினான்.​

நேத்ரா தலையை சம்மதமாக ஆட்டிவிட்டு விடுதியை நோக்கி சென்றாள். ஜனனி மற்ற ஊழியர்கள் அனைவரும் உறைந்து போய் நின்றிருக்க, “இன்னும் என்ன வேடிக்கை” என்று அதட்டினான். உடனே அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.​

நேத்ரா வந்ததும் செக்யூரிட்டியை அழைத்து அவளிடம் உள்ள பொருட்களை வாங்கி காரில் வைக்க சொன்னான் அவள் கணவன். அந்த செக்யூரிட்டி நேத்ராவை முதல் நாள் அன்று ஏற இறங்க ஏளனமாக பார்த்த நபர். “கொடுங்க மேடம்” என்று சொல்லி பவ்யமாக அவள் கைகளில் இருந்த பொருட்களை வாங்கி கொண்டார். பணமும் அந்தஸ்தும் தான் ஒரு மனிதனை மரியாதையுடன் பார்க்க வைக்கிறது போலும் என்று நினைத்து கொண்டாள்.​

காரில் தன் கணவனுடன் மீண்டும் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தாள் நேத்ரநயனி.​

ஒரு பெரிய பங்களாவின் முன் கார் நின்றது. காவலாளி கேட்டை திறந்ததும் கார் உள்ளே நுழைந்தது. நேத்ரநயனி பிரமிப்புடன் அந்த வீட்டை பார்த்துக் கொண்டு வந்தாள்.​

கேட்டிற்கும் வீட்டு வாயிலுக்கும் இடையே அரை கிலோமீட்டர் நடக்க வேண்டும் போலிருந்தது. வீட்டின் முன்பக்கம் பலவகையான மூலிகை செடிகள் இருந்தன, துளசி, தூதுவளை, சோற்றுக் கற்றாழை, பொன்னாங்கண்ணி போன்ற செடிகளும், செம்பருத்தி, சங்கு பூ, வெட்சி, நித்யகல்யாணி போன்ற பூச்செடிகளும் இருந்தன. இவ்வளவு பெரிய பங்களாவில் அவள் குரோட்டன்ஸ் வகையறா செடிகளை எதிர்பார்த்திருந்தாள், ஆனால் அங்கே வைக்கப்பட்ட செடிகள் அனைத்துமே நமது தமிழ் பாரம்பரிய மருத்துவ குணங்கள் கொண்டவை.​

இவையெல்லாம் நேத்ராவிற்கு புதிதில்லை, அவற்றை எல்லாம் தன் கிராமத்தில் பார்த்து வளர்ந்தவள் தான். ஆனால் சென்னையில், அதுவும் இந்த மாதிரி அரண்மனை போன்ற வீட்டின் தோட்டத்தில் இவையெல்லாம் எதிர்பார்த்திராதவை.​

தோட்டத்தை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு வருபவளை பார்த்த சித்தார்த், “அப்பாவுக்கு எப்பவுமே வருமுன் காப்போம் பாலிசி தான். எதாவது நோய் வந்த பின்னாடி உடம்பை கவனிக்கிறதை விட, முன்னாடியே இயற்கையோடு சேர்ந்து வாழணும்னு சொல்வார். அம்மா சாப்பாடு விஷயத்தில் அப்பாவை பாலோ பண்ண மாட்டாங்க. அது மட்டும் தான் அவங்களுக்குள்ள வேற்றுமை. அம்மா திடீர்னு இறந்ததால தான் அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியாமல் போச்சு. டாக்டரா இருந்தும் இத்தனை பெரிய மருத்துவமனை வச்சிருந்து என்ன பயன்? தன் உயிருக்குயிரான மனைவியின் உயிரை பிடித்துவைக்க முடியலையேனு அவருக்கு ரொம்ப வருத்தம்” என்றான் சித்தார்த்.​

அதை கூறும் போதே அவன் குரலில் வலி தெரிந்தது. இந்த சித்தார்த் அவளுக்கு முற்றிலும் புதியவன். சற்றுமுன் மருத்துவமனையில் இவன் ஆடிய ருத்ரதாண்டவம் தான் என்ன? இப்போது அவள் பார்வையை உணர்ந்து இவ்வளவு மென்மையாக விளக்கம் கொடுக்கிறானே? என்று தலைசாய்த்து ஆச்சரியமாக அவனையே பார்த்தாள்.​

சித்தார்த்தின் விரல்கள் நேத்ராவின் முன்னே சொடுக்கிட்டன. திடுக்கிட்டு அவனை பார்த்து விழித்தாள்.​

“என்ன முழிச்சிட்டே தூங்கறியா? கீழே இறங்கு” என்றான்​

அவள் இறங்கும் முன் அங்கே இரண்டு பணியாளர்கள் வந்து அவளுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்கள்.​

சித்தார்த் முன்னால் சென்று வாயிலை அடைந்தவன் தன் பின்னால் நேத்ரா வராமல் அப்படியே நின்றிருப்பதை பார்த்து, “என்ன?” என்றான்.​

முதன்முறையாக புகுந்த வீட்டிற்குள் வருகிறாள், எப்படி அப்படியே உள்ளே வருவது என்ற யோசனையுடன் நின்றாள் நேத்ரா​

“திடீர்னு உன்னை கூட்டிட்டு வந்ததால, வரவேற்பு எல்லாம் ஏற்பாடு செய்யலை. வேலைக்காரம்மா காலையில் தான் வருவாங்க” என்றான்.​

அவனுக்கு பதில் சொல்லாமல், மெளனமாக வலதுகாலை எடுத்து வைத்து அவனுடன் உள்ளே சென்றாள்.​

பணியாள் ஒருவன், “சார், இந்த பொருட்களை எல்லாம் எந்த அறையில் வைக்கணும்?” என்று கேட்டான்.​

“என்னோட அறையில் வச்சிடுங்க” என்றான் சித்தார்த்.​

விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் நேத்ரா. அவனோ என்ன என்பது போல புருவம் உயர்த்தினான்.​

“இல்லை… எனக்கு தனியா வேறொரு அறை கொடுக்க முடியுமா? சின்ன அறையா இருந்தாலும் பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்” என்றாள் மெல்லிய குரலில்.​

“ஏன் ஆஸ்பிட்டல்ல நடந்தது பத்தாதுனு, இப்போ வீட்டிலும் வேலைக்காரங்க முன்னாடி என் மானத்தை வாங்கணுமா?” என்று அடிக்குரலில் சீறினான்.​

அதிர்ச்சியாக அவனை பார்த்து, “நான் எப்படி உங்க கூட ஒரே அறையில் தங்கறது?” என்றாள்​

“ஏன்? இந்த தாலியை கட்டினது நான் தானே?” என்றான் அழுத்தமாக, அவள் ஆமாம் என்பது போல தலையை ஆட்டவும், “அப்போ உன் புருஷனும் தானே நான்? என் அறையில் தங்கறதுக்கு என்ன?” என்று கேட்டான் கடுப்புடன்.​

“இல்ல நாம தான் விவாகரத்து ஆகி பிரிய போறோமே” என்றாள்​

சித்தார்த்துக்கு மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் துளிர்விட்டது.​

“வேலு, இங்கே என்ன வேடிக்கை பார்த்திட்டு இருக்கே? நான் சொன்னது காதுல விழலையா? நீ போய் அந்த லக்கேஜை என்னோட அறையில் வச்சிட்டு வா” என்று அதட்டினான்.​

அவன் சென்றதும், “இங்க பாரு, நீ சொல்ற மாதிரி எல்லாம் என்னால செய்துட்டு இருக்க முடியாது. விவாகரத்து ஆகிற வரைக்கும் நீ என் மனைவிதானே? அதுவரைக்கும் நீ என் அறையில் தங்கி தான் ஆகணும்.​

நான் ஒண்ணும் அவ்வளவு பலவீனமானவன் இல்ல, உன் மேல பாய்ஞ்சிட மாட்டேன்” என்றான் சுள்ளென்று​

அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் வாயை மூடிக் கொண்டாள் நேத்ரா.​

வேலையாள் வந்ததும் சித்தார்த் அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு முன்னால் நடந்தான். நேத்ரா மெளனமாக அவன் பின்னால் சென்று அறைக்குள் நுழைந்தாள்.​

சித்தார்த் திரும்பி நேத்ராவை கோபமாக பார்த்து “லுக் இயர், என்ன காரணமோ எனக்கு தெரியல? நீ ஆரம்பத்திலிருந்து விவாகரத்து பத்தி தான் பேசிட்டு இருக்கே. அப்படி உனக்கு அந்த பாண்டி மேல தான் பிரியம்னா அவன் கூப்பிட்டதும் போக வேண்டியது தானே? எதுக்கு அங்கே நின்னு டிராமா பண்ணிட்டு இருந்தே” என்றான் ஆத்திரத்துடன்.​

“எனக்கு யார் மேலயும் பிரியம் இல்ல” என்றாள் நேத்ரா வெடுக்கென்று.​

“அந்த பாண்டி கூட கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு, மணமேடை வரைக்கும் வந்திருக்க. இடையில் நான் தான் எதிர்பாராமல் உங்க இரண்டு பேருக்கும் நடுவில் வந்திட்டேன். உனக்கு பிடிக்கலைனா வெளிப்படையா சொல்ல வேண்டியது தானே? அவன் கூடவே சேர்த்து வச்சிருப்பேனே” என்றான் அவளை அழுத்தமாக பார்த்தபடி.​

“ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க? அப்பா சொன்னதை மறுக்க முடியாமல் ஒத்துகிட்ட கல்யாணம் அது. அவனை எனக்கு அப்பவே பிடிக்காது. எப்படியோ கடவுளா பார்த்து தான் அந்த கல்யாணத்தை நிறுத்தி உங்களை அனுப்பி வச்சிருக்கார்னு நினைச்சுப்பேன்” என்றாள் பொறுக்கமாட்டாமல்​

“அப்படி நினைக்கிறவ எதுக்கு என்னோட வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லி விடுதியில் தங்கிக்கிறேன்னு சொன்ன? எப்பவும் விவாகரத்து பத்தியே பேசறே? அன்னைக்கு ஏதோ கோபத்துல உன்னை அங்கேயே விட்டுட்டு நான் போனாலும் திரும்பி வந்துட்டேன். வந்து பார்த்தால் அவ்வளவு சீக்கிரம் நீ அங்கே இருந்து போயிட்டு இருக்கே. உனக்கென்ன அவ்வளவு ஈகோ? இதனால் எவ்வளவு பிரச்சனை பார்த்தியா?” என்றான் கோபமாக.​

“எனக்கு ஈகோ எல்லாம் இல்ல” என்றாள் மெல்லிய குரலில்.​

“வேறென்ன பேரு அதுக்கு? என்றான் அவன் எரிச்சலாக.​

“அது எனக்கு தெரியல. உங்களோட அழகுக்கும் படிப்புக்கும் அந்தஸ்துக்கும் நான் தகுதியானவள் இல்லனு மட்டும் எனக்கு தெரியும். கட்டாயப்படுத்தி என்னை உங்கள் தலையில் கட்டிட்டாங்க. அதுக்காக காலம் முழுக்க நீங்க ஒரு சுமையா என்னை சுமக்கனும்னு இல்ல.​

கொஞ்சமும் தகுதியில்லாத என்னை உங்களுக்கு கட்டி வச்சிட்டாங்களேனு நீங்க ஒரு முறை நினைச்சால் கூட நான் உங்களோட வாழப் போற வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.​

இதையெல்லாம் உங்களுக்காக யோசிச்சு தான் விவாகரத்து வேணும்னு சொன்னேன். தனியா வாழ கத்துக்கணும்னு மகளிர் விடுதிக்கும் போனேன்” என்றாள் அவனுக்கு தன்னை விளக்கிவிடும் வேகத்தில்.​

“நல்லா யோசிச்சே எனக்காக” என்றான் நக்கலாக​

“நான் கட்டின தாலியை இன்னொருத்தன் வந்து நான் கட்டினது சொல்றான். எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? அது ஆஸ்பிட்டலா போச்சு இல்லைனா அவனை அங்கேயே அடிச்சு புதைச்சிருப்பேன்” என்றான் கண்களில் அனல் கொப்பளிக்க.​

நேத்ரநயனிக்கு சித்தார்த் அபிமன்யுவிடம் தெரிந்த கோபத்தில் உரிமை உணர்வு இருப்பதாக தோன்றியது. ஆச்சரியத்துடன் அவனை விழி விரித்து பார்த்தாள்.​

“என்ன பார்க்கிறே” என்றான்​

“இப்போ இவ்வளவு பேசற நீங்க, நான் முதல்ல விவாகரத்துனு பேசும் போதும் சரி, தனியா விடுதியில தங்கிக்கிறேன்னு சொல்லும்போதும் சரி, என்னை அதட்டவே இல்லையே? இப்போ சொன்ன மாதிரி நான் உன் புருஷன் நீ என் மனைவி, என் கூட தான் நீ இருக்கணும்னு சொல்லியிருக்கலாம். இப்போ அதட்டின மாதிரி அதட்டி என்னை இங்கே கூட்டி வந்திருக்கலாமே? அப்போ எதுவும் சொல்லாமல், போகட்டும்னு விட்டுட்டு, இப்போ என்னவோ எல்லாம் என்னோட தப்பு மாதிரி பேசறீங்க?” என்றாள் மெல்லிய குரலில்​

அவள் குரலில் குற்றச்சாட்டு இல்லையென்றாலும், அவள் கேட்ட கேள்வி சித்தார்த்தின் நெஞ்சில் குத்தியது.​

அவனால் எப்படி சொல்ல முடியும்? அந்த நேரத்தில் அவன் மனதில் வேறு பெண் இருந்ததால் அவனுமே குழப்பத்தில் இருந்தான். சரி இவளாகவே விவாகரத்து வேண்டும் என்கிறாள். வேண்டாம் என்பவளை பிடித்து வைப்பதை விட விவாகரத்து கொடுத்துவிட்டு, பிறகு எலிசாவை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்தான்.​

ஆனால் இப்போது நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. ஆம் இப்போது அவன் மனதில் எலிசா இல்லை. எலிசாவை மறந்ததற்கும் நேத்ரநயனியை மனைவியாக ஏற்றுக் கொள்ள அவன் மனம் தயார் ஆனதற்கும் அவனிடம் சரியான காரணம் இருக்கிறது. ஆனால் அதை எப்படி இவளிடம் விளக்குவது?​

நேத்ராவை சென்னைக்கு அழைத்து வந்த அன்று, அவளாக விடுதியில் போய் தங்கிக் கொள்ளவும் அவனுக்கு கோபமாக இருந்தது.​

எப்படியோ போய் தொலையட்டும் என்று அவனால் நினைக்க முடியவில்லை. அவள் எப்படி என்னிடம் சொல்லாமல் தனியாக போய் தங்கலாம்? என்னுடன் தானே இருக்க வேண்டும்? என்று ஆத்திரம் வந்தது. தன் மனம் இப்போது கணவனாக யோசிப்பதை எண்ணி திகைத்து போனான் சித்தார்த் அபிமன்யு.​

அவளாக பிரிந்து சென்றால் எலிசாவுடன் சேர்ந்து விடுவது சுலபம் தானே? அதை எண்ணி சந்தோஷப்படாமல் எதற்கு இந்த கோபம்? என்று சுய ஆராய்ச்சியில் மூழ்கினான்.​

வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்தவனை அவன் அக்கா பவிஷ்கா போனில் அழைத்திருந்தாள். “என்ன சித்து, திடீர் மாப்பிள்ளை ஆயிட்ட! எப்படி இருக்கா உன் மனைவி? வாழ்த்துக்கள் டா. நான் உன் கல்யாணத்தை நேரில் பார்க்க முடியாமல் போச்சேனு தான் வருத்தமா இருக்கு” என்றாள்.​

“ப்ச்” என்றான் அசட்டையாக.​

“ஏன்டா சலிச்சுக்கிறே? உனக்கு நயனியை பிடிக்கலையா?” என்றாள் பவிஷ்கா.​

“தெரியாத மாதிரி கேட்காதே பவிக்கா, நான் எலிசாவை காதலிச்சது உனக்கும் தெரியும் தானே? இப்போ என்ன பண்றதுனு தெரியாமல் முழிச்சிட்டு இருக்கேன். இந்த அப்பா இப்படி என்னை சிக்கல்ல மாட்டி விடுவார்னு நான் கொஞ்சமும் நினைக்கவே இல்லை” என்றான் சலிப்புடன்.​

“சித்து, ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ. ஒரு அக்காவா இந்த விஷயத்தை எப்படி சொல்றதுனு தெரியல, ஆனா நாம இரண்டு பேரும் பிரண்ட்ஸ் மாதிரி தான் பழகி இருக்கோம். இன்பாக்ட் எனக்கும் செல்வாவுக்கும் இருக்கிற காதலை முதல்ல நான் உனக்கு தான் சொன்னேன். நீதான் அப்பாகிட்ட பேசி எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சே” என்றாள்.​

“ஆமா, அதுக்கென்ன இப்போ?” என்றான் அசட்டையாக​

“அப்படி எனக்கு கல்யாணம் செய்து வச்ச உனக்கு, நீ எலிசாவை காதலிக்கிறேனு தெரிஞ்சும், நான் ஏன் அப்பாகிட்ட சொல்லி உனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்யலை?” என்று கேட்டாள்.​

“அதானே, நாங்க இரண்டு பேரும் சுத்தினது உனக்கும் தெரியும் தானே? நீ ஏன் என் கல்யாணத்தை பத்தி அப்பாகிட்ட பேசவே இல்லை?” என்று சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான் சித்தார்த்.​

“ஏன்னா, உனக்கும் எலிசாவுக்கும் இடையில் இருந்தது வெறும் உடல் ஈர்ப்பு. உங்க இரண்டு பேருக்கும் எந்த பொருத்தமும் இல்ல. அவள் வெளிநாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்தவள். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை எல்லாம் அவங்க கிட்ட எதிர்பார்க்க கூடாது. உன் கூட பழகும் போதே அவளுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்காங்கனு செல்வா என்கிட்ட சொல்வார்” என்றாள் பவிஷ்கா.​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

“ஏய் பவி, நீயும் ரப்பிஷ் மாதிரி பேசாதே. ஆண் நண்பர்களோட சுத்தினால் அவளோட கேரக்டரை தப்பா சொல்லுவீங்களா? அவள் என்னை தான் காதலிக்கிறா… எலிசாவோட கலாச்சாரத்துல அது எல்லாம் இயல்பான ஒண்ணு” என்றான் சித்தார்த்.​

“சரி, நான் ஒரு வீடியோ அனுப்பறேன். நீ சொன்ன மாதிரி எலிசாவோட கலாச்சாரத்துல அது இயல்பானதா இருக்கலாம். அந்த வீடியோவை பார்த்துட்டு உன்னால இயல்பா எடுத்துக்க முடியுதானு சொல்லு” என்று போனை வைத்தாள் பவிஷ்கா.​

அடுத்த ஐந்து நிமிடத்தில் பவிஷ்காவிடமிருந்து ஒரு வீடியோ வந்தது. அதில் ஏதோ ஒரு கிளப்பில் எலிசா வேறொரு ஆணுடன் மிகவும் நெருக்கத்தில் இருந்தாள். அதிகமாக குடித்திருக்கிறாள் போலும், இருவரும் சுற்றம் மறந்து எல்லையை மீறிக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் அதை பார்க்க முடியாமல் போனை அணைத்து விட்டான்.​

அன்று இரவு முழுவதும் சித்தார்த்துக்கு உறக்கமே இல்லை. என்னதான் வெளிநாட்டில் படித்தாலும், அங்கேயே வளர்ந்தாலும், இந்திய கலாச்சாரம் தானே அவன் உணர்விலும் உடலிலும் கலந்திருக்கிறது. எலிசாவை அந்த நிலையில் வேறொருவனுடன் பார்த்ததும், நானும் அப்படித்தானே அவளுடன் இருந்திருக்கிறேன் என்று அவன் மீதே அவனுக்கு கோபமாக இருந்தது.​

சற்று நேரம் முன்பு வரை எலிசாவிடம் தனக்கு திருமணமான விஷயத்தை எப்படி சொல்வது? அவளிடம் அவனை மறந்துவிடச் சொல்லி இந்த திருமண பந்தத்தை தொடர்வதா? இல்லை திருமணத்தை துறந்து விட்டு உண்மையை சொல்லி எலிசாவை திருமணம் செய்துக் கொள்வதா? என்று மன அழுத்தத்தில் இருந்தவனுக்கு, அந்த வீடியோ தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கவே வழி செய்தது.​

அன்று இரவு தூக்கமில்லாமல் இருந்தவன் விடிந்த பின்பு தான் கண்ணயர்ந்தான். பவிஷ்கா மீண்டும் தன் தம்பியை போனில் அழைத்தாள். “சித்து, ஹவ் டு யு பீல் நவ்?” என்றாள் பொதுவாக.​

“ஐயம் பைன்” என்றான் சித்தார்த்.​

“எனி கில்டி பீலிங் அபெளட் எலிசா?” என்று கேட்டாள்.​

“நத்திங்” என்று அவனை அறியாமல் வார்த்தைகள் வெளிவந்திருந்தன.​

அவனால் எப்படி எலிசாவின் துரோகத்தை அத்தனை எளிதாக கடந்துவிட முடிந்தது? அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. பவிஷ்கா சொன்னது போல அவளிடம் இருந்தது வெறும் உடல்கவர்ச்சி தானா? எப்போதும் அவன் எலிசாவுடன் மனம்விட்டு அவன் பேசியதே இல்லை. தனிமையில் அவள் அவனை பேச விட்டதே இல்லை. இருவருக்கும் இடையில் உடல் தேவை மட்டும் இருந்ததால் மனதால் அவர்கள் இணையவே இல்லை.​

சித்தார்த்திடம் பதில் இல்லாமல் போகவும், “சித்து லைன்ல இருக்கியா? இன்னமும் உனக்கு எலிசாவை தான் பிடிச்சிருக்கா? உனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லையா?” என்றாள் பவி சற்று திணறலோடு.​

சித்தார்த்திடம் மெளனம் மட்டுமே. “சித்து, நேத்ரநயனி கல்யாணத்துல சிக்கல் வரும் முன்பே, அப்பா என்கிட்ட பேசினார்டா. அந்த மாப்பிள்ளை சரியில்லை. சிவக்குமார் வெள்ளந்தியா இருக்கான். அவனை நம்பி பொண்ணை கொடுக்க போறான்னு சொல்லி வருத்தப்பட்டார்” என்று தனக்கும் தன் தந்தைக்கும் நடந்த உரையாடலை கூற தொடங்கினாள் பவிஷ்கா.​

“பவிம்மா, இந்த சிவா முட்டாளா இருக்கான்டா. அவன் ஏற்பாடு செஞ்சு இருக்கிற மாப்பிள்ளை கொஞ்சம் கூட சரியில்லை. கண்ணெதிரில் அந்த பொண்ணோட வாழ்க்கை சீரழியறதை பார்க்கவும் முடியலை. அதை நிறுத்தவும் முடியலை” என்று புலம்பினார் மகேந்திரன்.​

“அப்பா சிவா மாமாகிட்ட சொல்லி முதல்ல கல்யாணத்தை நிறுத்துங்க, வேறே மாப்பிள்ளையை பார்த்து நாமளே கல்யாணம் செய்து வைப்போம்” என்றாள் பவி.​

“இல்லமா, நம்ம கிட்ட இருந்து பணம் வாங்க மாட்டான். அவன் சக்திக்கு மீறி நிறைய கடன் வாங்கி தான் ஏற்கனவே கல்யாணம் ஏற்பாடு செய்திருக்கான். அவன்கிட்ட மறைமுகமாக மாப்பிள்ளை சரியில்லைனு சொல்லி பார்த்தேன். எல்லாம் நேத்ரா பார்த்துப்பா, அவள் அவனை குடிக்காம திருத்தி நல்லவழிக்கு கொண்டுவருவாள்னு லூசு மாதிரி பேசறான்” என்றார்.​

“இதென்ன கதையா இருக்கு, அந்த குடிகாரனை திருத்தறது தான் அவளோட வேலையா? ஒரு வேளை திருந்தாமல் போயிட்டான்னா?” என்றாள் பவிஷ்கா.​

“அது தான் எனக்கு கவலையா இருக்கு. நான் எதுக்கும் நம்ம சித்தார்த் கிட்ட பேசி சிவா பொண்ணை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்கட்டுமா?” என்றார்​

“அப்பா, நீங்க கேட்டால் அவன் ஒத்துக்க மாட்டான். இங்கே ஒரு பொண்ணை லவ் பண்றான். ஆனால் அவள் சரியில்லை. நான் அவன்கிட்ட சொன்னாலும் புரிஞ்சுப்பானான்னு தெரியலை. அவனே தானாக புரிஞ்சுக்கட்டும்னு விட்டுட்டேன். அதனால் அவன்கிட்ட இப்பவே விஷயத்தை சொல்லாமல், அங்கே கல்யாணம் நடக்கற இடத்துக்கு வரவழைச்சு பேசுங்க. நிலைமையை எடுத்து சொன்னால், அவன் புரிஞ்சுப்பான். அவன் ஒத்துக்கிட்டான்னா அப்புறமா சிவா மாமா கிட்ட பேசி அந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க” என்றாள் பவிஷ்கா.​

“சரிம்மா, நான் சித்து கிட்ட பேசி பார்க்கிறேன்” என்றார் மகேந்திரன்.​

பவிஷ்கா நடந்ததை கூறிக் கொண்டு இருக்கும்போதே சித்தார்த் இடை புகுந்தான்.​

“அடி பாவி பவி, எல்லாம் உன் வேலை தானா? அப்பாவும் மகளும் சேர்ந்து என் வாழ்க்கையில் விளையாடி வச்சிருக்கீங்களா? அந்த பாண்டிக்கு ஊத்தி கொடுத்தது கூட உங்க அப்பா தானா?” என்று எகிறினான் சித்தார்த்.​

“டேய் இல்லடா, உன்கிட்ட பேசி சம்மதம் வாங்கலாம்னு தான் அப்பா நினைச்சிருந்தார். ஆனால் ஆரம்பத்திலிருந்தே நீ அந்த பொண்ணோட படிப்பை குறைச்சு பேசறதை பார்த்து, இதெல்லாம் சரிவராதுனு சொல்லிட்டார்.​

சித்து மனசுல படிப்பு பணம், வசதி இருக்கறதால அவன் தான் மேலானவன்னு எண்ணம் இருக்கு, நேத்ராவை கீழானவளா பார்க்கிறான். மனுஷனை மனுஷனா பார்த்து சமமா நடத்தனும். ஸ்டேடட்ஸ் பார்க்க கூடாது. இப்படிபட்டவன் ஸ்டேட்டஸ் பார்த்து என் நண்பனோட பொண்ணை நல்லா பார்த்துக்கலைனா என் சிவா முன்னாடி நான் தான் தலைகுனியனும். அந்த பொண்ணு தலைவிதி என்னவோ அதன்படி நடக்கட்டும்னு என்கிட்ட சொன்னாரு.​

ஆனால் அவளோட விதி உன்னோட தான்னு இருந்திருக்கு போல. அந்த பாண்டி குடிபோதையில் எழுந்திரிக்காமல் போனது, அந்த கல்யாணம் நின்னது எல்லாமே தானாக தான் நடந்தது. இதுல எங்களோட தலையீடு எதுவும் இல்ல. நானும் அப்பாவும் பேசிகிட்ட விஷயம் எங்களை தவிர சிவா மாமாவுக்கோ, நேத்ராவுக்கோ தெரியாது.​

இன்னும் சொல்ல போனால் அவளுக்கு என்னை நியாபகம் இருக்கான்னு கூட தெரியலை” என்றாள் பவிஷ்கா.​

“உனக்கு அவளை முன்னாடியே தெரியுமா?” என்றான் சித்தார்த் ஆச்சரியமாக​

“ஏன்டா உனக்கு அவளை நியாபகம் இல்லையா? நாம எல்லாம் சின்ன வயசுல அப்பாவோட கிராமத்துக்கு போய் ஒன்னா விளையாடுவோமே, அவள் எப்பவும் உன் பின்னாடி தானே சுத்திட்டு இருப்பா” என்றாள் பவிஷ்கா.​

“அப்படியா? எனக்கெதுவும் நியாபகம் இல்லையே” என்றான் சித்தார்த் நெற்றியை தடவியபடி.​

“நம்ம அம்மா எப்பவும், அவளை மருமகளேனு தான் ஆசையா கூப்பிடுவாங்க. அவளும் நாம ஊருக்கு வந்தாலே நம்ம வீட்டுக்கு வந்திடுவா. அதுக்கப்புறம் நாம் கொஞ்ச வருஷமா அங்கே போகவே இல்ல. நாம மறுபடியும் போன போது அவ நம்ம வீட்டுக்கு வர்றதே இல்ல அதுக்கு காரணம் நீதான்” என்றாள் பவி​

“நானா? நான் என்ன பண்ணேன்?” என்றான் சித்தார்த்.​

“நீதான் அவளை சோடாபுட்டினு கூப்பிட்டியாமே, என்கிட்ட வந்து உங்க தம்பி நான் கண்ணாடி போட்டிருக்கிறதை பார்த்து கிண்டல் பண்றாரு, இனி உங்க வீட்டுக்கெல்லாம் விளையாட வரமாட்டேன்னு ரோஷமா சொல்லிட்டு போயிட்டா, இப்போ பாரு நம்ம வீட்டுக்கே மருமகளாக வந்துட்டா” என்று சிரித்தாள் பவிஷ்கா.​

பவிஷ்கா கூறியதில் சித்தார்த்துக்கு எதுவுமே நினைவில் இல்லை. ஆனால் கொஞ்ச வருடம் கழித்து அவர்கள் ஊருக்கு சென்றது அவன் நினைவில் வந்தது. சித்தார்த் சைக்கிளை எடுத்துக் கொண்டு அந்த ஊரில் இருந்த தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் பாவாடை சட்டை போட்டுக் கொண்டு நடந்து போய் கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் சித்தார்த்துக்கு எங்கேயோ அவளை பார்த்த நியாபகம் மட்டுமே இருந்தது. அவள் பெயர் நினைவில் இல்லை.​

“ஏய் பொண்ணு, ஹலோ” என்று பலவாறு அழைத்தான்.​

அவள் திரும்பவே இல்லை. அவளை நன்றாக தெரிகிறது ஆனால் யாரென்று தான் நினைவில் இல்லை. அவளிடமே அவள் யாரென்று கேட்கலாம் என்று அவளிடம் பேச முயற்சித்தான். ஆனால் அவள் பக்கத்தில் இருந்த தோழியிடம் பேசிக் கொண்டே சென்றாள். கண்ணாடி அணிந்திருந்தாள்.​

சட்டென அவளை, “ஏய் சோடாபுட்டி” என்றான்.​

வெடுக்கென்று திரும்பி பார்த்தவள், “டேய் யாரை பார்த்துடா சோடாபுட்டினு சொல்றே?” என்று கேட்டாவாறு கீழே இருந்த கல்லை எடுத்து அவனை நோக்கி வீசுவது போல பாசாங்கு செய்தாள்.​

சாதாரணமாக பேச எண்ணியவன் அவள் அடிக்க கை ஓங்கவும் ஆண்பிள்ளைக்கான துணிச்சலுடன், “போடி சோடாபுட்டி” என்று சொல்லிவிட்டு சைக்கிளில் பறந்து விட்டான்.​

அதன்பிறகு அவளை எங்கு பார்த்தாலும், அவன் சோடாபுட்டி என்பான், அவள் பற்களை நறநறத்தபடி கல்லை எடுத்து ஆத்திரமாக அவனை நோக்கி அடிக்க எத்தனிப்பாள். அதற்குள் அவன் சைக்கிளில் பறந்து விடுவான்.​

“ஏய் சித்து, லைன்ல இருக்கியாடா?” என்று கத்திக் கொண்டிருந்தாள் பவிஷ்கா.​

“இருக்கேன், நீ சொன்னதுல எனக்கு எதுவும் நியாபகம் இல்ல. ஆனால் நான் ஊருல ஒரு பொண்ணை சோடாபுட்டினு கிண்டல் செய்திருக்கேன். ஆனால் அது சிவா மாமா பொண்ணுனு எனக்கு அப்போ தெரியாது”​

பவிக்கா, தாலிக்கட்டும் போது கூட அவள் கண்ணாடி போடாததால யாருனு அடையாளம் தெரியலை. சிவா மாமாவுக்கு ஒரு பொண்ணு இருப்பது மட்டும் தான் தெரியும். அது நான் சோடாபுட்டினு கிண்டல் பண்ண பொண்ணுனு தெரியாது. கல்யாணம் முடிச்சுட்டு சென்னை வந்தோம், அப்பாவை ஏர்போர்ட்ல விட்டுட்டு நான் கேண்டினுக்கு போனால், இவள் என்னை தேடிட்டு வர்றா. எனக்கு அப்பவும் அவளோட பேர் தெரியலை. பார்த்தால் கண்ணாடி போட்டுட்டு இருக்கா.​

எனக்கு அந்த நேரத்துல பழைய நினைவு தான் வந்துச்சு. அவளை பார்த்ததும் நானும் என்னையறியாமல் சோடாபுட்டினு கூப்பிட்டுட்டேன்” என்றான் சித்தார்த்.​

“அய்ய்யோ அப்படி கூப்பிட்டால் அவள் பத்ரகாளியாடுவாளேடா, அன்னைக்கே வீட்டில் வந்து என்கிட்ட சண்டை போட்டு போனா. உங்க தம்பியை அடக்கி வையுங்கனு அட்வைஸ் வேறே. இப்போ நினைச்சாலும் சிரிப்பா வருது” என்று சிரித்தாள் பவிஷ்கா.​

“நான் சோடாபுட்டினு கூப்பிட்டதும், அவளுக்கு வந்துச்சு பாரு கோபம்? எனக்கென்னவோ அதனால தான் என்கூட வரமாட்டேன்னு சொல்லிட்டு மகளிர் விடுதிக்கு போயிருப்பாள்னு தோணுது” என்றான் சித்தார்த் யோசனையோடு.​

“டேய் சித்து, என்னடா சொல்றே? இது எப்போ நடந்தது? அவ உன்கூட இல்லையா? அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்” என்று பதறினாள் பவிஷ்கா.​

“பதறாதே, அவ எப்படியும் இன்னைக்கு நம்ம மருத்துவமனையில் தான் வேலைக்கு சேரப்போறாளாம். என் கண்ணெதிரில் தான் இருப்பாள். நான் பார்த்துக்கிறேன். அப்பா வர்றதுக்குள்ள, அவள் நம்ம வீட்டில் இருப்பா, ஓகேவா” என்றான்.​

“சரிடா, ஆனால் சின்ன வயசுல நீதான் அவளை சோடாபுட்டினு சொல்லி வெறுப்பேத்தினதுனு மட்டும் சொல்லிடாதே. கன்பாரம் உனக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு போயிடுவா, அப்பவே உன் மேல கொலை காண்டுல திரிஞ்சுட்டு இருந்தா” என்று சிரித்தாள் பவிஷ்கா.​

சித்தார்த்தும் சிரித்துவிட்டு “சரி நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தான் அன்று மருத்துவமனைக்கு சென்றான்.​

அன்றிலிருந்து நேத்ராவின் மீதான அவன் பார்வை மெல்ல மெல்ல மாற தொடங்கியிருந்தது. அவள் நயனங்களில் தொலைய ஆரம்பித்தவனின் மனம் ஏனாே எலிசாவை தேட மறந்துவிட்டது.​

அன்றைய நினைவில் மூழ்கி இருந்தவன் சுயநினைவிற்கு வந்தபோது நேத்ரநயனியின் பார்வை இன்னமுமே சித்தார்த்தின் பதிலுக்காக காத்திருப்பது புரிந்தது. இப்போது எதை எப்படி சொல்லி அவளுக்கு விளக்குவது என்று அவனுக்கு புரியவில்லை.​

தொண்டையை செருமிக் கொண்டு, “நீயா விலகி போகணும்னு நினைக்கும் போது உன்னை ஏன் கட்டாயப்படுத்தணும்னு நினைச்சேன். அதுமட்டுமில்லாமல் எப்படியானாலும் நீ என்னோட மருத்துவமனையில் தானே வேலை செய்ய போறே, பார்த்துக்கலாம்னு இருந்தேன்” என்றான்.​

நேத்ராவிற்கு அந்த பதிலே போதுமானதாக இருந்தது போலும், அதற்கு மேல் அவனிடம் எந்த கேள்வியும் கேட்காமல், தன் பொருட்களை எடுத்தபடி அவனை பார்த்தாள். “அந்த கண்ணாடி தடுப்புக்கு பின்னாடி ஒரு கட்டிலும், கப்போர்டும் இருக்கும். அங்கே உன்னோட பொருட்களை வச்சிக்கோ. அங்கிருக்கிற கதவை திறந்தா பால்கனி நல்லா தெரியும். வெளியே இருந்து வர்ற நிலா வெளிச்சத்தை பார்த்தபடி நான் அங்கே எப்பவாவது படுத்துக்கிறது வழக்கம்” என்றான்.​

தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு, அங்கே சென்று தன் உடைமைகளை அடுக்க தொடங்கினாள். அதற்குள் சித்தார்த் அவளுக்காக உணவை அறைக்கே வரவழைத்திருந்தான்.​

நேத்ராவும் பசியில் இருந்ததால் மறுக்காமல் சாப்பிட்டு விட்டு, “நான் போய் தூங்கட்டுமா?” என்றாள்​

“வேணாம்னா மட்டும் கேட்க போறீயா?” என்றான் அவளை அழுத்தமாக பார்த்து.​

அவனை பார்த்து திகைத்து விழித்தவள், “புரியல” என்றாள்.​

“புரிஞ்சிட்டாலும்…” என்று நக்கலாக கூறியவன் அவளின் அகன்ற விழிகளின் மருண்ட பார்வையில் தன்னை மறந்து அவளை நோக்கி சென்றான்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 17

சித்தார்த் தன்னை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் வருவதை பார்த்து நேத்ராவிற்கு கால்கள் நடுங்கியது. அவள் கண்களில் தெரிந்த பயம் அவனுக்கு சுவாரசியமாக இருந்தது.​

“நான் என்னவோ இவளை கடிச்சு முழுங்க வர்ற டிராகன் மாதிரி பார்த்து பயந்து நடுங்கிறாளே” என்று மனதிற்குள் நினைத்தவன், மிகவும் நெருக்கமாக நின்று அவள் கண்களை உற்று நோக்கினான்.​

கண்ணாடி சிறைக்குள் மாட்டிக்கொண்ட பட்டாம்பூச்சியாய் அவளின் இமைகள் படபடத்தன. சிறிது நேரம் அவள் இமை சிறகுகளின் படபடப்பை ரசித்தவன், மெல்ல அவளுடைய கண்ணாடியை கழட்டினான்.​

சட்டென்று பின் வாங்கினாள் நேத்ரநயனி. “என்ன? என்ன பண்ண போறீங்க?” என்றாள் எச்சிலை விழுங்கியபடி.​

“ஏன்? உனக்கு தெரியாதா?” என்று அவளை அழுத்தமாக பார்த்தபடி மேலும் நெருங்கினான்.​

அவள் பின்னாலேயே செல்ல செல்ல, அவன் மேலும் அவளை சீண்டும் விதமாக நெருங்கி கொண்டே இருந்தான். கடைசியாக சுவரின் மீது மோதி நின்றாள்.​

கண்களை இறுக்கமாக மூடியபடி அப்படியே நின்று விட்டாள். உடல் லேசாக உதற தொடங்கியது. கால்விரல்களை பூமியில் அழுத்திய படி நின்றிருந்தவளின் கைவிரல்களும் கைகளுக்குள் இறுக்கமாக அழுத்திக் கொண்டிருந்தது. நயனியின் அருகே வந்து மிகவும் நெருக்கமாக நின்று அவளின் நிலையை பொறுமையாக பார்த்தபடி நின்றிருந்தான். சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தவன் அவளின் காதருகே குனிந்து மீசை ரோமங்கள் உரச, “குட் நைட்” என்றான்.​

அவள் விழி விரித்து அவனை ஆச்சரியமாக பார்க்க, “என்ன பார்க்கிறே? குட் நைட் சொல்ல தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு குறுஞ்சிரிப்போடு தன் படுக்கையை நோக்கி சென்றான்.​

அவன் சென்ற பின்பு தான் அவளுக்கு மூச்சே வந்தது. அவசரமாக ஓடிச்சென்று தனக்கான படுக்கையில் படுத்துக் கொண்டாள். படுக்கையில் படுத்த பின்பும் படபடப்பு மட்டும் அடங்கவே இல்லை. மெல்ல திரும்பி பிளாஸ்டிக்கா கண்ணாடியா என்று பிரித்தறிய முடியாத அந்த தடுப்பு சுவரின் வழியே மங்கலாகத் தெரிந்த சித்தார்த்தின் வரிவடிவத்தை பார்த்தாள்.​

அவன் தலையணைக்கு மேல் தன் கைகளை மடக்கி வைத்து அதில் தலைவைத்து அண்ணாந்து படுத்தபடி விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான். என்ன நினைத்தானோ சட்டென்று அவன் தலையை இவள் பக்கமாக திருப்பவும், அவசரமாக தன்னை போர்வைக்குள் மறைத்துக் கொண்டாள்.​

மறுநாள் காலை, சித்தார்த் எழுந்திருக்கும் முன்பு நேத்ரா எழுந்து குளித்து தயாராகி இருந்தாள். அவளை ஆச்சரியமாக பார்த்து, “குட்மார்னிங்” என்று புன்னகைத்தான்.​

வசீகரமான அவன் முகத்தில் தெரிந்த அவளுக்கான முதல் புன்னகையை ஆச்சரியத்தோடு பார்த்தாளே தவிர, பதில் வணக்கம் சொல்லவில்லை. அதன்பிறகு அவனும் தயாராகி வந்து, அவளை கீழே டைனிங் டேபிளுக்கு கூட்டிச் சென்றான்.​

ஒரு நடுத்தர வயது பெண்மணி நின்று கொண்டு இவர்கள் இரண்டு பேரையும் பார்த்திருந்தாள், “சரோக்கா, இவங்க தான் என் மனைவி நேத்ரநயனி” என்றவன், மனைவியிடம் திரும்பி, “நயனி, இவங்க தான் நம்ம வீட்டில் சமையல் செய்யறவங்க, பேரு சரோஜா, நான் சரோக்கானு கூப்பிடுவேன்” என்று அறிமுகம் செய்து வைத்தான்.​

நேத்ரா சரோஜாவைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்தாள். ஆனால் அவரோ, சித்தார்த்தையும் நேத்ராவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். இருவரின் ஜோடிப் பொருத்தத்தையும் கண்களால் எடை போடுகிறார் என்பது நேத்ராவுக்கு நன்றாகவே புரிந்தது. சித்தார்த்தின் பளிச்சென்ற நிறத்திற்கு நேத்ராவின் மாநிறம் பொருத்தமாக இருக்காது என்பது அவள் அறிந்தது தானே.​

மெளனமாய் நின்றிருந்தவளை பார்த்து முறைத்தான் சித்தார்த், “உட்கார்ந்து சாப்பிடு” என்று அதட்டினான். கணவனின் அதட்டலுக்கு கட்டுப்பட்டு அமர்ந்து உண்ண தொடங்கினாள். நேத்ராவின் முகவாட்டத்தை யோசனையுடன் பார்த்தபடி சாப்பிட்டு முடித்தான் சித்தார்த்.​

அவன் கிளம்பும் போது, அவளும் அவன் பின்னால் சென்றாள். திரும்பி பார்த்து, “எங்கே வர்றே?” என்றான்.​

“ஹாஸ்பிட்டலுக்கு” என்றாள்.​

“மறுபடியும் அங்கே வந்து நர்ஸ் வேலை பார்க்க போறீயா? பார்த்தவரைக்கும் போதும். சித்தார்த்தின் மனைவியா இருந்துட்டு இனி நீ அங்கே நர்ஸ் வேலை பார்க்க கூடாது” என்றான்.​

“அப்போ வேறே ஆஸ்பிட்டல்ல வேலைக்கு சேர்ந்துக்கட்டுமா? என் பிரண்ட் சுதா வேலை செய்யற ஆஸ்பிட்டல்ல கூட ஆள் தேவைனு சொல்லியிருந்தாள். அங்கே போகட்டுமா?” என்றாள்.​

“நயனி” என்று கோபமாக அதட்டினான். “நலமுடன் மருத்துவனை முதலாளியோட மனைவியா இருந்துட்டு, வேறே இடத்தில் நர்ஸ் வேலைக்கு போறேன் சொல்றீயே, உன்னையெல்லாம்?” என்று பல்லை கடித்தான்.​

“ஏற்கனவே தங்க இடம் கொடுத்திருக்கீங்க, இதுல வீட்டில் தண்டமா சாப்பிட்டு இருக்க சொல்றீங்களா? இதுக்கெல்லாம் கொஞ்சமாச்சும் ஈடு செய்ய நான் எதாவது வேலை செய்ய வேண்டாமா?” என்றாள் ஆற்றாமையுடன்.​

நேத்ராவை அழுத்தமாக பார்த்த விட்டு “நீ ஒரு விஷயத்தை மறந்துட்டே, நீ என் மனைவி. உன்னோட எல்லா தேவைக்கும் கணவனான நான் தானே பொறுப்பு. ஒரு வேளை இதுக்கெல்லாம் ஈடு செய்யணும்னு நீ நினைச்சா மனைவியா நடந்துக்க முயற்சி பண்ணு. நேத்து மாதிரி பயந்து நடுங்காமல் இன்னிக்கு ராத்திரி தயாரா இரு” என்று அவன் நேத்ராவை பார்க்க, அவளோ புரிந்தும் புரியாத பாவனையில் நின்றிருந்தாள். ஒரு பெருமூச்சுடன், “நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.​

சித்தார்த்தின் வார்த்தைகளை உள்வாங்கி அதன் அர்த்தம் புரிவதற்குள், அவன் காரில் ஏறி அதை இயக்கி கொண்டிருந்தான். என்னவென்று புரியாத ஒரு உணர்வில் சில கணங்கள் அப்படியே சிலையென நின்றிருந்தாள்.​

அதன்பிறகு சமையலறைக்கு சென்று சரோஜாவுடன் சேர்ந்து சமையலாவது செய்யலாம் என்று நினைத்து சமையலைறையை நோக்கிச் சென்றாள். அப்போது சரோஜா வேலுவிடம் பேசுவது அவள் காதில் விழுந்தது.​

சித்தார்த்தும் நேத்ராவும் வெளிப்பக்க வாசலை நோக்கி செல்வதை பார்த்து தான் சமையலறையில் சாப்பிட வந்த வேலுவிடம் தன் பேச்சை தொடங்கியிருந்தார் சரோஜா.​

“என்ன வேலு? நம்ம சித்தார்த் ஐயா, அழகுக்கும் கலருக்கும், சினிமா ஹீரோயின் போல ஒருத்தி தான் பொண்டாட்டியா வருவாள்னு நினைச்சிருந்தேன்.​

இந்த பொண்ணு கொஞ்சம் கூட நம்ம ஜயாவுக்கு பொறுத்தமே இல்லையே? ஜோடி பொருத்தம் கொஞ்சம் கூட நல்லாவே இல்லை, இதுல கண்ணாடி வேறே போட்டிருக்கு. ஆளை பார்த்தால் ரொம்ப ஏழைவீட்டு பொண்ணா இருக்கும் போலயே” என்றாள் சரோஜா.​

“நமக்கென்ன வந்துச்சு சரோக்கா, வேலையை பாருங்க” என்றான் வேலு,​

“இல்ல, வேலு நான் எவ்வளவு கற்பனை பண்ணி வச்சிருந்தேன் தெரியுமா? இந்த வீட்டில் கல்யாணம் ஆனா, எனக்கு பட்டுபுடவை எல்லாம் எடுத்து தருவாங்க. பெரிய வீட்டு மருமகள் வந்தால் அவங்களும் தனியா எதாவது எனக்கு சலுகை தருவாங்கனு நினைச்சேன், என் கற்பனை எல்லாம் வீணா போச்சே. அதுதான் மனசு தாங்கல” என்றாள் சரோஜா.​

“இங்கே வீட்டு வேலை செய்யறே நீ உன் கற்பனை வீணா போச்சுனு புலம்பறியே? இந்த வீட்டோட முதலாளி நம்ம சித்தார்த் ஐயாவோட நிலைமையை நினைச்சு பார்த்தியா? அவரோட ஆசை எல்லாம் கூட தான் மண்ணா போச்சு. அவரே சும்மா இருக்காரு. நீ என்னமோ புலம்பறீயே” என்றான்.​

“என்னா சொல்றே வேலு” என்றாள் சரோஜா ஆர்வமாக.​

“நம்ம சித்தார்த் ஐயா, பாரின்ல இருக்கும் போது யாரோ ஒரு பொண்ணை லவ் பண்ணியிருக்காரு. இங்கே வந்த பின்னாடி அந்த பொண்ணுகிட்ட இங்கிலிஷ்ல பேசுவாரு, நான் அவரோட ரூமுக்கு போகும் போது பார்த்திருக்கேன். அவரோட காதல் கனவே நிறைவேறலை. இதுல உங்க கற்பனைய நினைச்சு புலம்பறீங்க” என்றான் வேலு நக்கலாக.​

சித்தார்த்திற்கு வேறொரு பெண் மேல் காதல் இருந்ததா? இதைக் கேட்ட நேத்ரா அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.​

“என்னா வேலு சொல்றே? நிஜமாவா? அப்புறம் ஏன் இந்த பொண்ணை கல்யாணம் கட்டிகிட்டாரு” என்றாள் சரோஜா, தாடையில் கைவைத்தபடி.​

“வெள்ளைக்காரியை எங்கே மகன் கல்யாணம் பண்ணிட்டு வந்திடுவானோனு நம்ம மகேந்திரன் ஐயா பயந்து போய் இருந்தாரு. அந்த சமயத்துல அவரோட பிரண்ட் சிவானு ஒருத்தர் வருவார் இல்ல, அவரோட பொண்ணுக்கு கல்யாணம்னு இரண்டு பேரும் போயிருந்தாங்க. அங்க இந்த பொண்ணு கல்யாணம் நின்னு போயிருக்கு, இது தான் வாய்ப்புனு நம்ம பெரிய ஐயா, சித்தார்த் ஐயாவை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வச்சுட்டாரு” என்றான் வேலு.​

“அடக்கடவுளே, இந்த பெரிய ஐயா அவசரப்பட்டு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத பொண்ணை கட்டி வச்சிட்டாரே, சரி இந்த பொண்ணும் டாக்டரா?” என்றாள் சரோஜா.​

“இல்லை சரோக்கா, நர்ஸ் அதுவும் டிப்ளமா தான் படிச்சிருக்கு. ஐயாவோட மருத்துவமனையில் தான் வேலை செய்துட்டு இருந்து இருக்கு. இத்தனை நாள் எதுக்கு அவங்களை அங்கே விட்டு வச்சாரு, இப்போ ஏன் கூட்டிட்டு வந்திருக்காருனு தான் ஒன்னும் புரியலை” என்றான் வேலு.​

“எல்லாம் குடும்ப கெளரவத்தை காப்பாத்த தான், வேறென்ன? சரி நமக்கெதுக்கு அவங்க வீட்டு கதை. விட்டு தள்ளு. மதியம் சமைக்க அந்த அம்மாவுக்கு என்ன வேணும்னு கேட்டு செய்ய சொல்லிட்டு போயிருக்கார் சித்தார்த் ஐயா. நான் போய் கேட்டுட்டு வர்றேன்” என்று வெளியே வந்த சரோஜா அங்கே கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த நேத்ராவை பார்த்து அதிர்ந்தாள்.​

“அம்மா, அது வந்து” என்று திக்கி திணறிய சரோஜாவின் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் “ஐயாவுக்கு என்ன பிடிக்குமோ, அதையே செய்திடுங்க” என்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்றாள்.​

இந்த பெண் இதுவரை பேசியதை எல்லாம் கேட்டிருப்பாளோ என்று ஒரு கணம் தயங்கி, அமைதியாக செல்வதை பார்த்தால் எதுவும் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டாள் சரோஜா.​

நேத்ரநயனி படுக்கையில் விழுந்து புரண்டு அழுதுக் கொண்டிருந்தாள். இதுவரை தான் அவனுக்கு பொருத்தமானவள் இல்லை என்ற விஷயமே உறுத்திக் கொண்டிருந்தது. ஆனால் சித்தார்த் வேறொரு பெண்ணை காதலித்திருக்கிறான். கட்டாயத்தால் அவளுக்கு தாலி கட்டியவன் எப்படி தன் காதலியை மறந்து அவளுடன் வாழ தயாராகி விட்டான்?​

அவளை வேலைக்கும் போக வேண்டாம் என்கிறான். ஒரு வேளை அவன் காதலி மீண்டும் வந்தால் அவள் நிலை என்னவாகும்? சும்மா இருக்கும் மனசு சாத்தானின் உலைக்களம் என்பது உண்மை தான் போலும். வேலைக்கு சென்றிருந்தால் கூட பரவாயில்லை, ஒட்டு கேட்பது என்றுமே நல்ல விஷயமாக இருப்பதில்லை. தெரியாமல் நேத்ராவின் காதுகளில் விழுந்த வார்த்தைகள் அவளின் மனதை குத்தி கிழித்து ரணமாக்கி கொண்டிருந்தன.​

மதியம் சரோஜா சாப்பிட அழைத்ததற்கும் பசியில்லை என்று மறுத்துவிட்டாள். மாலை ஆனபின்பும் அவள் கீழே இறங்கி வரவே இல்லை. சித்தார்த் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கும் வந்து விட்டான்.​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அவசரமாக அவன் வருவதற்குள் கிளம்பிடவேண்டும் என்று வாயிற்பக்கம் வந்த சரோஜாவை பார்த்து, “என்ன சரோக்கா, கிளம்பிட்டீங்களா?” என்றான் சித்தார்த்.​

“ஆமாங்க ஐயா” என்று தலையை சொறிந்தாள்.​

“நயனி கிட்ட கிளம்பறேன்னு சொல்லிட்டீங்களா?” என்றான்.​

“இஇல்லைங்க ஐயா, நீங்க போனதும் உங்க அறைக்கு போனவங்க தான். இன்னும் கீழே இறங்கி வரவே இல்லை, எத்தனையோ முறை சாப்பிட கூப்பிட்டு பார்த்தேன், பசிக்கலைனு சொல்லிட்டாங்க” என்றாள்​

“சரி நான் பார்த்துக்கிறேன், இனிமே அவங்க சாப்பிடலைனா எனக்கு போன் செய்யுங்க, புரியுதா?” என்றான்.​

“சரிங்க ஐயா” என்று சொல்லிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினாள் சரோ. எங்கே தான் காலையில் பேசியதை அந்த பெண் கேட்டிருப்பாளோ, சித்தார்த் வந்ததும் அவனிடம் சொல்லிவிடுவாளோ என்று பயந்து போய் இருந்தாள் அவள்.​

சித்தார்த் அவன் அறைக்குள் சென்று கதவை திறந்தான். அறையில் மின்விளக்கு கூட போடாமல் இருட்டாக இருந்தது. மின்விளக்கை போட்டபடி “நயனி” என்று அழைத்தான்.​

கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்தவள் மெல்ல தலை நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் அழுது அழுது சிவந்து போய் இருந்தது. அந்த நிலையில் அவளை பார்த்ததும், “ஏய் நயனி, என்னாச்சு? ஏன் அழுதுட்டு இருக்கே?” என்றான் பதட்டத்துடன்.​

“ஒண்ணுமில்லை” என்றபடி எழுந்து அமர்ந்தவள், “என்னை என் அப்பா வீட்டுக்கு அனுப்பிடுங்க” என்றாள்.​

“ஓ, அப்பா நியாபகம் வந்துடுச்சா? நான் வேணும்னா அவரை வரச்சொல்லட்டுமா?” என்றான் பரிவுடன்.​

“இல்லை வேணாம், நான் உங்களுக்கு பொருத்தமானவ இல்லை, நான் இங்கே இருந்து போயிடுறேன். நீங்க உங்களுக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து…” என்று அவள் கூறி முடிக்கும் முன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் சித்தார்த்.​

அவன் அடித்த கன்னத்தை ஒரு கையால் அழுத்தி பிடித்தபடி, அதிர்ச்சியுடன் அவனையே விழி அகல பார்த்தாள்.​

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின மனுஷனா இருக்க மாட்டேன், எது சொல்றதுனாலும் என்கிட்ட சொல்லாதே. நமக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு இல்ல, எங்கப்பா அவரையே வரச்சொல்றேன். எதுவானாலும் அவர்கிட்டயே பேசிக்க” என்றான் கோபமாக.​

அப்போதே போனை எடுத்து அவன் தந்தைக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டான்.​

“சொல்லு சித்து, இப்போ தான் அப்பா நியாபகம் வந்துச்சா? ஒரு போன் கூட பண்ண மாட்டேங்கிறே?” என்றார் மகேந்திரன்.​

“உங்களுக்கு தான் உங்க மகளை பார்த்ததும் என்னோட நியாபகம் இல்லாம போச்சு” என்றான் கடுப்புடன்.​

“என்னடா சித்து? திடீர்னு இப்படி எல்லாம் பேசறே?” என்றார் மகேந்திரன் பதட்டத்தோடு​

“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டாடி, எப்போ இந்தியா வர்றீங்க? உங்க மருமகளுக்கு உங்க கூட பேசணுமாம்” என்றான் சமாதானம் செய்யும் குரலில்​

“நீ வரச் சொன்னா அடுத்த ப்ளைட்ல வந்திட போறேன். அதுக்கென்ன? சரி சரி போனை என் மருமகள் கிட்ட கொடு” என்றார் மகேந்திரன்.​

“நீங்க பேசறது எல்லாம் கேட்டுட்டா தான் இருக்கா, போன் ஸ்பீக்கரில் இருக்கு, பேசுங்க” என்று சொல்லி விட்டு உடை மாற்றி முகம் கழுவி வரச் சென்று விட்டான்.​

“என்ன மருமகளே, எப்படி இருக்கே? என் மகன் உன்னை நல்லா பார்த்துக்கிறானா? இல்லைனா சொல்லும்மா, வந்து கவனிச்சுக்கிறேன் அவனை” என்றார் மகேந்திரன்.​

“அஅப்படி எல்லாம் இல்லை மாமா, அவர் என்னை நல்லா தான் பார்த்துக்கிறார்” என்றாள் மெல்லிய குரலில்.​

“ஆனால் உங்க மருமகள் தான் என்னை சரியா பார்த்துக்க மாட்டேங்கிறா” என்றபடி மீண்டும் நேத்ராவின் எதிரில் வந்து அமர்ந்தான் சித்தார்த்.​

“என்னம்மா சொல்றான் அவன்?” என்றார் மகேந்திரன்.​

“அஅது வந்து மாமா” என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறினாள்.​

“செல்லமா வளர்ந்த பிள்ளை, நீ அவனை பார்த்துப்பேன்னு தான் கிளம்பி வந்தேன். எனக்கு சீக்கிரமா ஒரு பேரபிள்ளையை பெத்து கையில் கொடுத்திடும்மா, அது போதும்” என்றார்.​

அதிர்ந்து போய் சித்தார்த்தை பார்த்தாள். அவன் குறும்புடன் புருவம் உயர்த்தினான். “என்னம்மா சத்தத்தையே காணோம். நான் எனக்காக மட்டும் கேட்கலை என் நண்பன் சிவாக்காகவும் கேட்கிறேன். உங்களுக்கு குழந்தை பிறந்தால் தான் எங்க இரண்டு பேருக்கும் நிம்மதியா இருக்கும். எங்களுக்கு அந்த பாக்கியத்தை தருவியாம்மா?” என்றார் மகேந்திரன் உணர்ச்சி பெருக்குடன்.​

இப்படி பேசுபவரிடம் பிரிந்து போகிறேன் என்று எப்படி சொல்ல முடியும்? என்ற யோசனையுடன் இருந்தவளை, “சரினு சொல்லும்மா” என்றார் மகேந்திரன். தன்னையும் அறியாமல், “சரி மாமா” என்றாள்.​

“ரொம்ப சந்தோஷம்மா, நான் அடுத்த வாரமே இந்தியா வரப்பார்க்கிறேன்” என்று சொல்லி போனை வைத்தார் மகேந்திரன்.​

நயனியை அழுத்தமாக பார்த்தபடி, “வா சாப்பிட போகலாம்” என்றான்.​

“இல்லை எனக்கு பசிக்கல” என்றவளை முறைத்தான்.​

“மதியமே சாப்பிடலைனு சரோக்கா சொன்னாங்க. ஒழுங்கா சாப்பிடு. உனக்கென்ன இப்போ? சும்மா வீட்டில் இருக்கிறது தானே பிடிக்கலை? அதுக்கு நான் ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்றான்.​

“என்ன அது?” என்றாள் அவள் சுரத்தே இல்லாமல்.​

“அது என்னனு காலையில் சொல்றேன். அதுவரைக்கும் சஸ்பென்ஸ்” என்றான் அவன் புன்னகையுடன்.​

யாருக்கு வந்த விருந்தோ, என்னவோ இருந்துவிட்டு போகட்டும் என்று நினைத்துக் கொண்டு தோள்களை குலுக்கி கொண்டாள்.​

இருவரும் சாப்பிட்டு விட்டு, மீண்டும் அறைக்குள் நுழைந்தனர். முன்தினம் போலவே நேத்ரா தன் கட்டிலை நோக்கி செல்வதை பார்த்த சித்தார்த் தொண்டையை செருமிக் கொண்டு.​

“நயனி” என்றான். அவன் அழைப்பில் அப்படியே நின்றாள். அவள் அருகே சென்று நெருங்கி நின்று அவள் கரத்தைப் பற்றி அழுத்தினான்.​

“எங்கே போறே?” என்றான்​

அவளின் படுக்கையை காட்டி, “தூங்க போறேன்” என்றாள் மெல்லிய குரலில்​

“என் அப்பாகிட்ட கொடுத்த வாக்கை காப்பாத்த வேணாமா நயனி?” என்றான்​

“என்ன வாக்கு?” என்றாள் குழப்பத்துடன்.​

“அது தான் குழந்தை பெத்து கொடுக்க போறதா சொன்னியே, அங்கே போய் தனியா படுத்தா குழந்தை எப்படி வரும்?” என்றபடி பற்றியிருந்த அவள் கையை தன்னை நோக்கி இழுத்தான்.​

எதிர்பாராத நேரத்தில் அவன் இழுத்ததால் நெருங்கி நின்றிருந்த கணவன் மீதே மோதி விழப்போனாள். அவள் கீழே விழாமல் மெல்லிடையை அழுந்தப் பற்றி தன் மேல் அவளை படரவிட்டான். அவள் தலை அவன் நெஞ்சில் புதைந்திருக்கவும், குனிந்து தன்னவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.​

“நயனி” என்றபடி அங்கே தன் இதழ்களை அவள் கழுத்தில் பதிக்கும் நேரம், “காதலிச்ச பொண்ணை இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டு எப்படி உங்களால என்கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்க முடியுது?” என்றாள்.​

அவள் பேச்சில் துணுக்குற்றவன், சட்டென்று அவளை உதறி தள்ளி விட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டான். அவன் தள்ளிய வேகத்தில் அவன் கட்டிலின் மீதே தொப்பென விழுந்திருந்தாள். செல்லும் போது அறைந்து சாத்திய அறைக் கதவின் சத்தம் அவன் கோபத்தின் அளவை அவளுக்கு தெள்ள தெளிவாக விளக்கியிருந்தது.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 18

நேத்ராவின் மனதில் இருந்ததை பட்டென்று வெளிப்படையாக கேட்டுவிட்டாள், அதற்கு சித்தார்த் இவ்வளவு கோபப்படுவான் என்று அவள் யோசித்திருக்கவில்லை. காதலுடன் அணைக்கிறானா? மனைவி என்ற உரிமையில் காமத்திற்காக அணைக்கிறானா? என்று அவன் மனநிலை தெரியாமல் எப்படி அவனுடன் அவளால் ஒன்றியிருக்க முடியும்? காதல் இல்லாத சங்கமம் அவளை பொறுத்தவரை அருவருக்கத்தக்கது.​

சித்தார்த்துடனே அவ்வளவு எளிதாக தன்னால் பொருந்திக் கொள்ள முடியவில்லையே, பாண்டி மட்டும் அவள் கணவனாகி இருந்தால் வாழ்க்கை எவ்வளவு கொடூரமாய் இருந்திருக்கும்? நேத்ராவால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. உண்மையில் அப்படிப்பட்டவன் இடமிருந்து காப்பாற்றி தன் காதலையும் தியாகம் செய்து அவள் கழுத்தில் தாலி கட்டிய சித்தார்த்துக்கு அவள் காலம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறாள்​

ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன் படுக்கைக்கு சென்று படுத்துக் கொண்டாள், பார்வை மட்டும் கணவனின் வருகைக்காக அறைக்கதவிலேயே நிலைத்திருந்தது.​

மணி பன்னிரண்டு ஆகியும், சித்தார்த் அறைக்குள் வரவே இல்லை. எனவே நயனி எழுந்து மெல்ல பால்கனி வழியே கீழே எட்டிப் பார்த்தாள். அவள் நினைத்தது போலவே சித்தார்த் அங்கே இருந்த தோட்டத்தில் நடைப்பயின்றுக் கொண்டிருந்தான். நயனியின் பேச்சில் இருந்த உண்மை அவன் மனதை சுட்டு விட்டது.​

அவள் கேட்டது நியாயமாக இருக்கலாம், ஆனால் முன்னாள் காதலியை நினைத்துக் கொண்டு, இந்நாள் மனைவியை ஒதுக்கி வைக்க வேண்டுமா என்ன? மனைவி என்றான பின் இன்று இல்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் அவர்களின் உறவு தொடங்கித்தானே ஆக வேண்டும்? அப்போதும் இதே கேள்வியை தான் கேட்பாளா? இவ்வளவு நாட்கள் அவகாசத்தில் தான் முன்னாள் காதலியை மறக்க முடியும் என்று எதாவது அளவுகோல் இருக்கிறதா என்ன?​

ஒரு நாளாகட்டும் ஒரு வருடமாகட்டும், ஏன் ஒரு யுகமாகட்டும், காதலை மறப்பது என்பது அதன் உண்மை தன்மையில் இருக்கிறது. உண்மைக் காதலை என்றுமே மறக்க முடியாது! எப்போது நயனியின் கணவனாகி போனானோ, அன்றிலிருந்தே எலிசாவின் நினைவே எழவில்லை என்பது தான் உண்மை. பவிஷ்கா சொன்னது போல, எலிசாவிடமிருந்தது வெறும் உடல்தேடல் மட்டும் தான் போலும். ஆனால் நயனியிடம் அவன் தேடுவது காதல்!​

அவன் ஒண்ணும் உரிமையில்லாதவளை தொடவில்லையே! எப்போது நயனியின் கழுத்தில் தாலிக் கட்டிவிட்டானோ அப்போதே அவனையும் அறியாமல் தன் மனைவி என்ற உரிமை உணர்வு வந்து விட்டதே!​

நயனி தன் மருண்ட விழிகளால் அவனை பார்க்கும் போதும், அவன் அருகாமையில் உடல் நடுங்க நிற்கும் கோலமும், அவன் மனதை பித்தம் கொள்ள வைக்கிறதே! அவன் அருகாமைக்கே உடலும் உள்ளமும் சிலிர்த்து நிற்பவளை அள்ளிக் கொள்ளவே அவன் மனமும் கைகளும் பரபரக்கிறது. ஒரு பெருமூச்சுடன் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு, அங்கே இருந்த சிமெண்ட் பெஞ்சில் கால் நீட்டிப் படுத்தான்.​

ஒற்றைக் கையை மடக்கி தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டிருந்தான். நடு இரவில் இப்படி பனியில் படுத்துக் கிடக்கிறானே என்று உள்ளம் பதைக்க பால்கனியில் நின்று பார்த்திருந்த நயனிக்கு உள்ளம் வலித்தது.​

ஏதேச்சையாக திரும்பி பார்த்த சித்தார்த்துக்கு நயனி பால்கனியில் நின்று கைகளை பிசைந்துக் கொண்டு தவிப்புடன் நிற்பது நிழலுருவமாய் தெரிந்தது. பின்பு எழுந்து உள்ளே சென்றான். அவன் வருகிறான் என்று தெரிந்ததும், அவசரமாக படுக்கையில் போய் படுத்துக் கொண்டு போர்வையால் தன்னை மூடிக் கொண்டாள்.​

அழுத்தமான காலடிகளுடன் உள்ளே வந்த சித்தார்த் மீண்டும் அவள் கட்டில் இருந்த பக்கமாக வரவும், நயனியின் இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது. போர்வையின் உள்ளே இருக்கும் அவள் உடல் நடுங்குவதை அவனால் உணர முடிந்தது. சற்றுநேரம் கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்த்திருந்தான்​

“நீ இன்னும் தூங்கலனு எனக்கு நல்லா தெரியும், இன்னைக்கு உன்கிட்ட நடந்துக்கிட்டதுக்கு சாரி” என்று அழுத்தமான குரலில் சொல்லிவிட்டு தன் கட்டிலுக்கு சென்று படுத்துக் கொண்டான்.​

சித்தார்த்தின் மனதில் எப்போதோ நயனி குடியேறிவிட்டாள், அது எப்போது என்று அவனாலே சொல்ல முடியாது. அவன் விளக்கி சொன்னாலும் அவளால் புரிந்துக் கொள்ள முடியாது, ஏனென்றால் அவள் மனதில் இன்னும் அந்த காதல் மலரவில்லை. அதனால் தான் அவன் மனதை அவளால் அறிய முடியவில்லை. சொல்லிபுரிய வைப்பதை விட அவன் காதலை அவளாக உணர வேண்டும்.​

நயனியின் மருண்ட பார்வை எப்போது காதல் பார்வையாக மாறுகிறதோ, அப்போது தான் அவன் பார்வையின் அர்த்தமும் அவளுக்கு புரியவரும், அதுவரை காத்திருக்க தயாராகிவிட்டான் அவள் கணவன்.​

********​

மறுநாள் சித்தார்த் குளித்து தயாராகி வந்த பின்பும், நேத்ரா உறங்கி கொண்டே இருக்கவும், “நயனி” என்று சத்தமாக அழைத்தான்.​

திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து அவனை பார்த்து பேந்த பேந்த விழித்தாள். “ரிலாக்ஸ், ஏன் இந்த பதட்டம்? நாம கொஞ்சம் வெளியில் போகணும். லேட்டாகுது, நீ தூங்கிட்டே இருக்கியேனு தான் கூப்பிட்டேன்” என்றான்.​

“எஎங்கே போகணும்?” என்றாள் தயங்கிய குரலில்.​

“ரெடியாயிட்டு கீழே வா, சொல்றேன்” என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.​

நயனி குழப்பத்துடன் எழுந்து, குளித்து தயாராகி கீழே வந்தவளிடம், “நயனி அப்படியே உன்னோட சர்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா” என்றான்.​

எதற்கு என்று புரியாமல் மீண்டும் அறைக்கு சென்று தன்னுடைய படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் இருக்கும் பைலை எடுத்துக் கொண்டு வந்தாள். அவளிமிருந்து அவற்றை வாங்கி தன் லேப்டாப் பேகில் வைத்தபடி, “சீக்கிரம் வா, சாப்பிட்டு கிளம்பலாம், ஏற்கனவே நேரமாயிடுச்சு” என்றான்.​

அவனையே பார்த்தபடி சென்று அவனருகில் அமர்ந்து காலை உணவை உண்டு முடித்தாள்.​

காரில் செல்லும் போதும், அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கேள்வியை உணர்ந்திருந்தாலும், சித்தார்த் அவள் பார்வையை தவிர்க்க எண்ணி பாதையிலேயே கவனத்தை பதித்திருந்தான்.​


கார் ஒரு பெரிய மருத்துவகல்லூரியின் உள்ளே நுழைந்தது. பிரமிப்புடன் அங்கே பார்த்துக் கொண்டு வந்தாள். ஒரு வேளை இங்கே வேலை வாங்கி தருவதற்காக அழைத்து வந்திருக்கிறானோ? ஆனால் அவளுக்கு இங்கே என்ன வேலை தருவார்கள்? குழப்பத்துடன் அமர்ந்திருந்தவளிடம், “இறங்கி என் கூட வா” என்று கூறியபடி காரை விட்டு இறங்கினான் சித்தார்த்.​

சித்தார்த் தன் மனைவியுடன் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் இருந்த அறைக்குள் நுழைந்தான். “ஹல்லோ சித்தார்த், வாங்க வாங்க” என்று பலத்த வரவேற்புடன் வந்து அவனை அணைத்துக் கொண்டார் அந்த கல்லூரி முதல்வர் தயானந்தன்.​

தன் பின்னால் நின்றிருந்த மனைவியின் கரம்பற்றி இழுத்து தன் அருகே நிறுத்தியபடி “தயா சார், இவங்க என் மனைவி நேத்ரநயனி” என்று அவருக்கு தன் மனைவியை அறிமுகப்படுத்தினான்.​

நயனி தன் கரங்களை கூப்பி அவரை வணங்கினாள்.​

“ஓ இவங்களுக்கு தான் கல்லூரியில் படிக்க சீட் கேட்டு இருந்தீங்களா? ஓகே ஓகே, மனைவியை டாக்டராக்கி பாக்கணும்னு விரும்பறீங்க போல, நல்ல விஷயம் தான் யங் மேன்” என்று சித்தார்த்தின் தோளை தட்டினார் தயானந்தன்.​

இருவரையும் தன் எதிரே இருந்த இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு தானும் தன் இருக்கையில் அமர்ந்தார்.​

நேத்ரநயனி அதிர்ச்சியுடன் தன் அகன்ற கண்களை மேலும் அகல விரித்து சித்தார்த்தை ஆவென்று பார்த்துக் கொண்டே அமர்ந்தாள். “இவ வேற இப்படி பார்த்து பார்த்தே மனுஷனை டெம்ப்ட் பண்ணிட்டு அப்புறம் கிட்டவே வர விடமாட்டா” என்று மனதிற்குள் மனைவியை கரித்துக் கொட்டிக் கொண்டு அவளை கவனிக்காதவன் போல தயானந்தனிடம் திரும்பி சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.​

ஆனால் நேத்ரநயனி அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் சித்தார்த்தையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த தயானந்தன், “என்ன டாக்டர், உங்க மனைவிக்கு விஷயம் தெரியாதா? உங்களையே அதிர்ச்சியோடு பார்த்திட்டு இருக்காங்க” என்று சிரித்தார்.​

“ஆமாம் தயா சார், கொஞ்சம் சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு சொல்லலை” என்று சிரித்தபடி, அவள் தோளில் கைவைத்து, தன்னை நோக்கி இழுத்து காதில் கிசுகிசுத்தான், “அவர் முன்னாடி என்னை சைட் அடிச்சது போதும், ஷாக்கை குறை” என்று சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டாலும் அவள் தோளிலிருந்து கையை எடுக்காமல் அப்படியே இருந்தான்.​

இப்போது அவன் தோளில் கைப்போட்டதற்கும், அவனை அவள் சைட் அடிப்பதாக சொன்னதற்கும் சேர்த்து மேலும் அதிர்ந்தவள், தன் அகன்ற பார்வையால் அவன் மனதை துளைத்தெடுக்க ஆரம்பித்துவிட்டாள்.​

நயனியின் பார்வையையும் சித்தாரத்தின் அவஸ்தையையும் கவனித்த தயானந்தன் “சித்தார்த் நீங்க பேசிட்டு இருங்க, நான் இதோ அஞ்சு நிமிஷத்தில் வந்திடுறேன்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார், “அஞ்சு நிமிஷம் போதுமா சித்தார்த்?” என்று மீண்டும் அவனையே கிண்டல் செய்து விட்டு சிரித்துக் கொண்டே எழுந்து வெளியேறினார்.​

நயனியின் நயனங்களை தவிர்க்கும் பொருட்டு குனிந்தபடி நெற்றியில் தன் ஒற்றை விரலால் தேய்த்தக் கொண்டே, “எதுக்குடி இப்போ என்னை இப்படி பார்த்துட்டு இருக்கே? நேத்து ராத்திரி ஒரே அறையில் தானே இருந்தோம்? அப்போ எல்லாம் நல்லா போர்த்திட்டு தூங்கிட்டு, இங்கே வந்து ஏன் அப்படி வெறிச்சு பார்க்கிறே? அந்த ஆள் எப்படி கிண்டல் பண்ணிட்டு போறாரு பாரு” என்றான் மெல்லிய குரலில்.​

அவன் வார்த்தைகளின் அர்த்தங்களை உணரும் நிலையில் எல்லாம் இல்லை. கண்களில் வழிந்துக் கொண்டிருக்கும் கண்ணீரை துடைக்க கூட முயற்சிக்காமல், சித்தார்த்தின் நெற்றியில் இருந்த கையை தன் இருகரத்தால் பற்றினாள். முதன் முறையாக தன்னவளின் கரம் அவன் மீது பட்டதில் ஒரு வித ஆவலோடு நிமிர்ந்து நேத்ராவை பார்த்தான் சித்தார்த்.​

மனைவியின் கண்களில் காதலை தேடியவனுக்கு அங்கே நன்றி உணர்ச்சி தான் தெரிந்தது. நேத்ரநயனி தன் கணவனின் கரத்தை தன் இருக்கரத்தால் பற்றி தன் இரு நயனங்களிலும் ஒற்றிக் கொண்டாள். பின்பு அவன் புறங்கையில் தன் இதழை மெல்ல பதித்தாள்.​

“எனக்கு சின்ன வயசுல இருந்து டாக்டருக்கு படிக்கணும்னு தான் ஆசை. ஆனால் அப்பாவுக்கு டிப்ளமா படிக்க வைக்கறதே ரொம்ப கஷ்டம். ஏழைகளுக்கு எல்லாம் மருத்துவர் ஆகலாம் என்கிற கனவே வரக்கூடாதுனு நினைச்சுப்பேன். நான் கேட்காமலே என்னோட ஆசையை நிறைவேத்தி வச்சிருக்கீங்க, இதுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை” என்றாள் கண்ணீருடன்.​

“இதுல நன்றி சொல்ல என்ன இருக்கு நயனி? என்னோட மனைவியை நான் படிக்க வைக்கிறேன், இது பெரிய விஷயம் இல்ல. நீ நல்லா படிச்சு, பெரிய டாக்டர் ஆகு, அப்புறம் உன்னை மாதிரி ஆசைப்பட்டு திறமையோட இருக்கிறவங்களை இனங்கண்டு அவங்களுக்கு உதவி செய், நானும் உன்னோட உறுதுணையா இருக்கேன்” என்றான்.​

சம்மதமாக தலையாட்டினாள் நேத்ரநயனி. “சரி கண்ணை துடைச்சுக்கோ, நான் தயா சாரை கூப்பிடுறேன். ரொம்ப லேட்டாயிட்டால், அவர் கற்பனை எல்லை மீறிடப்போகுது” என்றபடி போனை எடுத்தான்.​

“என்ன? அவர் கற்பனை எல்லை மீறிடுமா? அப்படி என்ன கற்பனை செஞ்சாரு?” என்றாள் யோசனையோடு.​

“நீ உண்மையாவே டியூப்லைட்டா இல்லை நடிக்கிறியானே தெரியலையேடி! உண்மையான டியூப்லைட்டா இருந்தா… சித்தார்த் நீ செத்தேடா!” என்று மனதிற்குள் மனைவியை திட்டியபடி போனை காதில் வைத்து “தயா சார் உள்ளே வாங்க” என்றான்.​

இப்போது தயானந்தனுடன் வேறாரு பேராசிரியை வந்திருந்தார். “மிஸஸ் கல்பனா, இவங்க நம்ம சித்தார்த்தோட மனைவி நேத்ரநயனி, இங்கே தான் எம்பிபிஎஸ் படிக்க போறாங்க. சித்தார்த் யாருனு தெரியும் இல்ல, நம்மளோட ஷேர் ஹோல்டர், நேத்ரநயனிக்கு இங்கே ஒரு குறையும் வரக்கூடாது. அவங்களை கொஞ்சம் ஸ்பெஷலா கவனிச்சுக்கோங்க, எதாச்சும் டவுட்னு வந்தால் சொல்லிக் கொடுங்க” என்றார் தயானந்தன்.​

“ஐயோ தயா சார், சீட் கொடுத்ததே பெரிய விஷயம், மத்த ஸ்டுடென்ட் மாதிரி ட்ரீட் பண்ணுங்க அதுவே போதும். ஸ்பெஷல் கேர் எதுவும் வேணாம். நயனிக்கு எதாவது சந்தேகம்னா சொல்லிக் கொடுக்கத்தான் நான் இருக்கேனே” என்றான் சித்தார்த் அபிமன்யு.​

“அதை மறந்துட்டேன் பாருங்க, காதல் பாடத்தோடு கல்லூரி பாடத்தையும் சேர்த்தே சொல்லிக் கொடுக்க டாக்டரான நீங்க இருக்கும் போது நான் கல்பனாகிட்ட கேட்டுட்டு இருக்கேன் பாருங்க” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தார் தயானந்தன்.​

தன் வெட்கத்தை மறைக்க தலையை கோதியபடி பக்கவாட்டில் இருந்த மனைவியை பார்த்தான் சித்தார்த் அபிமன்யு. நேத்ரநயனியின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது. இதழ்களை பற்களால் அழுந்த கடித்தபடி அமர்ந்திருந்தாள்.​

முதன்முறையாக மனைவியின் கன்னத்தில் வெட்கச்சிவப்பை கண்டு பிரமித்து போனான் சித்தார்த். இன்னும் சில நாட்களிலேயே அவளின் முகத்தில் கோபச்சிவப்பை காணப் போகிறான் என்று அவன் அப்போது உணர்ந்திருக்கவில்லை.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0
Status
Not open for further replies.
Top