ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மான்விழியில் வீழ்ந்தேனடி!-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 29

சித்தார்த் மனைவியுடன் வீட்டிற்குள் வந்ததும், மகேந்திரனும் பவிஷ்காவும் நயனியின் தலையில் இருந்த காயத்தை பார்த்து பதறி போயினர்.​

“என்னாச்சு நேத்ரா?” என்றார் மகேந்திரன் பதட்டத்துடன். பவிஷ்காவும் அவள் நெற்றியில் கை வைத்து பார்க்கவும்​

“சின்ன அடி தான் மாமா, கொஞ்சம் ஆழமா இருந்ததால தையல் போட்டு இருக்காங்க” என்றாள்.​

“என்ன தான்டா நடந்தது?” என்று ஒரே நேரத்தில் மகேந்திரனும் பவிஷ்காவும் கேட்க சித்தார்த் நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தான்.​

“இந்த எலிசாவால பிரச்சனை வரும்னு எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு பெரிய திட்டத்தோடு வந்திருப்பாள்னு கனவுல கூட நினைச்சு பார்க்கலை” என்றாள் பவிஷ்கா​

“அவங்க மேல என்ன நடவடிக்கை எடுத்திருக்காங்க சித்து?” என்று மகேந்திரன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே விக்ரம் அங்கு வந்து சேர்ந்தான்.​

“வாடா விக்ரம்” என்று சித்தார்த் வரவேற்றான்​

“சித்தார்த், அவங்க இரண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணியிருக்கோம், எலிசா வெளிநாட்டை சேர்ந்தவங்க என்பதால் சில புரோடோகால்ஸ் இருக்கு. மெடிக்கல் சம்மந்தமா எலிசா உங்க ஆஸ்பிட்டல்ல என்னென்ன செஞ்சாங்க, அதனால ஏற்பட இருந்த பாதிப்பு எல்லாத்தையும் ரிப்போர்ட்டா தயார் பண்ணி எனக்கு கொடு.​

அதுக்கு முன்னாடி இந்த கம்ளெய்ண்ட் லெட்டர்ல நீங்க இரண்டு பேருமே கையெழுத்து போடுங்க. மத்ததை நான் பார்த்துக்கிறேன்” என்றான் விக்ரம்.​

“இதுக்கு எதுக்குடா நீயே வந்தே? சொல்லியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா?” என்ற சித்தார்த்தை முறைத்தான் விக்ரம்.​

“சொல்லுவடா! சொல்லுவ! அங்கே ஜட்ஜ் முன்னாடி அவங்களை நிறுத்தும் போது கம்ளெய்ண்ட் லெட்டர் கேக்கறாங்கனு போன் பண்ணிட்டே இருந்தேன். நீ போனை எடுத்தா தானே? உன் மனைவி கிடைக்காத வரைக்கும் தொண தொணனு போன் பண்ணி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தே. அவங்க கிடைச்சதும் என் போனை எடுக்க கூட நேரமில்லை சாருக்கு” என்றான் விக்ரம் பொய்யான கோபத்துடன்.​

“சாரிடா உன் அழைப்பை பார்க்கலை” என்றான் சித்தார்த்​

இப்போது விக்ரம் நயனியை பார்த்து, “தங்கச்சிமா, என்னம்மா இவனை இப்படி மந்திருச்சு விட்டு இருக்க? எப்பவும் எதுக்கும் கலங்காதவனை கலங்க வச்சுட்டியேமா? நீ வீட்டில் இல்லைனு பவிக்கா போன் பண்ணி சொன்னதும் இவன் முகத்தை பார்க்கணுமே நீ, விட்டால் அழுது இருப்பான்” என்ற விக்ரம் சொன்னதும்​

மகேந்திரன் பவிஷ்கா மற்றும் நயனி மூவரும் சித்தார்த்தை பார்க்க, அவன் சங்கோஜத்துடன் பக்கவாட்டாக திரும்பி தலையை கோதிக் கொண்டான்.​

“சரி சரி இரண்டு பேரும் அலைஞ்சு திரிஞ்சு வந்திருக்கீங்க. கையெழுத்தை போட்டுட்டு ரூமுக்கு போய் ஓய்வெடுங்க. நான் ஆஸ்பிட்டலுக்கு போறேன்” என்றார் மகேந்திரன்.​

“இல்லப்பா நான் போறேன். அங்கே எல்லாம் அப்படியே போட்டுட்டு வந்திருக்கேன்” என்று சித்தார்த் மறுத்து பேச,​

“டேய் எல்லாம் எங்களுக்கும் தெரியும். உன்னை விட சீனியர் டாக்டர் நான். எனக்கு எப்படி சரி பண்ணனும்னு தெரியாதா? இன்னைக்கு பூரா ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு வேணா நீ ஆஸ்பிட்டலுக்கு போ” என்று சொல்லிவிட்டு மகேந்திரன் தன் அறைக்கு சென்றார்.​

நயனி விக்ரமிடம், “அண்ணா அபி மேல எந்த தப்பும் இல்ல. அவருக்கு எந்த பிரச்சனையும் வராது தானே? எலிசாவை நான் தான் அப்பாயிண்ட்மென்ட் பண்ண வச்சேன். எதாவது விசாரிக்கணும்னா என்னை விசாரிங்க. அவரை விட்டுடுங்க” என்ற நயனியை பார்த்து சிரித்தான் விக்ரம்.​

“சித்தார்த் என்னோட பள்ளி பருவத்தில் இருந்து நண்பன் அவனை பத்தி எனக்கு தெரியாதா? விசாரணைனு வந்தால் என்ன நடந்ததுனு சொல்ல கோர்ட்டுக்கு வரவேண்டியிருக்கும். மத்தபடி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராதும்மா. நீங்க இரண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் இவ்வளவு அந்நியோன்யமா இருக்கறதை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்பவும் இப்படியே இருங்க” என்ற விக்ரம் அவர்களிடம் கையெழுத்தை பெற்றுக் கொண்டு தனக்கு வேலையிருப்பதாக சொல்லி அங்கிருந்து கிளம்பினான்.​

“சித்து நீயும் நயனியும் பிரஷ் (fresh) ஆயிட்டு வாங்க, ரம்யா பசிக்குதுனு சொன்னதால லைட்டா சமைச்சு வச்சிருக்கேன். சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுங்க” என்றாள் பவிஷ்கா.​

“ரம்யா குட்டி எங்க பவிக்கா” என்றான்​

“காலையில் சீக்கிரமா எழுப்பி கூட்டிட்டு வந்ததால சாப்பிட்டு மறுபடியும் தூங்கறாடா” என்றாள் தமக்கை.​

அதன்பிறகு இருவரும் குளித்துவிட்டு சாப்பிட்டு தங்கள் அறைக்கு சென்றனர். இரவு முழுவதும் சித்தார்த் தூக்கமில்லாமல் திரிந்ததால் படுக்கையில் படுத்ததும், உறங்கி விட்டான். கணவனின் முறுக்கேறிய முழங்கை மடங்கியிருக்க நேத்ரநயனி அதன் மேல் தலையை வைத்து பக்கவாட்டாக படுத்துக் கொண்டு அவன் மார்பின் உரோமங்களை வருடிக் கொண்டிருந்தாள்.​

தூக்க கலக்கத்தில் அவளை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டே “நயனி தூக்கம் வருதுடி” என்றான்​

“தூங்குங்க, நான் வேணாம்னு சொல்லலையே” என்றவள் மேலும் நெருங்கி அவனை இறுக்கி பிடித்து கொள்ள, தன் வலிய கரத்தால் அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான். ஆனாலும் மூடிய இமைகளை திறக்கவில்லை.​

நயனி கணவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள். பின்பு நெற்றி கன்னம் என மாறி மாறி முத்தமிட்டு கொண்டே இருக்கவும், “என்னடி கொஞ்சல் எல்லாம் ஜாஸ்தியா இருக்கு?” என்றான் கண்களை திறவாமல்​

“அபி என் மேல எப்போ? எப்படி? இவ்வளவு அன்பு காதல் எல்லாம் வந்துச்சு உங்களுக்கு? நான் இல்லனதும் கலங்கி போயிட்டீங்களாமே? ஏதோ சின்னபுள்ளை மாதிரி உன் புருஷன் புலம்பிட்டே இருந்தான்னு விக்ரம் அண்ணா சொன்னாங்க. ஏன் அபி உங்களுக்கு என் மேல இவ்வளவு பாசம்? உங்களுக்கு கொஞ்சமும் ஈடில்லாத என்னை கல்யாணம் பண்ணிகிட்டப்போ நீங்க என்னை ஏத்துக்கிறதே பெரிய விஷயம்னு நினைச்சேன்.​

ஆனால் என்னை ஒரு ராணி போல நடத்தறீங்க. காலேஜ் சேர்த்து விட்டு இருக்கீங்க. போதாதுக்கு நிபந்தனையற்ற அன்பையும் காதலையும் காட்றீங்க. இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்ய போறேன்” என்றவளை பார்த்து விஷமமாக சிரித்தான்.​

“நீ இப்போ செய்துட்டு இருக்கறதே நல்ல கைமாறு தான்” என்றான்​

“நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்?” என்றாள் புரியாமல்.​

“என் மேலே பஞ்சு மூட்டை போல மெத்துனு படுத்திருக்கியே, அதை சொன்னேன்” என்றதும் அப்போது தான் அவள் இருக்கும் நிலை புரிய வெட்கத்துடன் படுக்கையில் சரிந்தாள். இப்போது அவன் மனைவியின் மீது படர்ந்தபடி, “நயனி நாம ஈருடல் ஓருயிரா கலந்துட்டோம் நீ வேறே நான் வேற இல்ல. உனக்கு அடிப்பட்டா எனக்கு வலிக்கும். உனக்கும் அப்படித்தான். இதுக்கு போய் எதுக்கு பார்மலா பேசிட்டு இருக்கே? எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டி” என்று அவள் நெற்றியில் முட்டியவன்​

“வேணும்னா உன் நன்றிக்கடனை தீர்க்க நான் வழி சொல்றேன்” என்றபடி அவள் காதில் ஏதோ கிசுகிசுக்க அவள் வெட்கம் தாங்காமல் முகத்தை மூடிக் கொண்டாள்.​

நயனியின் கைகளை விலக்கி அவள் நயனங்களில் முத்தமிட்டவன் அவளுள் மூழ்கி முத்தெடுக்கும் பேராவலோடு அவள் இதழ்களை முற்றுகையிட்டான்.​

இதழோடு இதழ் உரசும் நேரம் அறைக் கதவு தட்டப்பட்டது.​

கண்டுக் கொள்ளாமல் அவன் தன் வேலையில் கவனமாக இருக்க, மீண்டும் கதவு வேகமாக தட்டப்பட்டது.​

“என்னங்க” என்றாள் சிணுங்கலாய்​

“என்னடி” என்றான் அவள் கழுத்துவளைவில் முகத்தை புதைத்துக் கொண்டு​

“யாரோ கதவை தட்றாங்க” என்றாள்.​

“நான் திறக்க மாட்டேன், இதே மாதிரி தான் அன்னைக்கும் பூஜை வேளையில் கரடி மாதிரி பவிக்கா வந்து கதவை தட்டினா. அப்புறம் எவ்வளவு பிரச்சனை நடந்துச்சு” என்றவனை இடைமறித்தாள் மனைவி​

“அய்யோ அந்த பூஜை வேளை கரடி அண்ணி இல்ல. எலிசா தான்” என்றாள்.​

“சரி யாரோ ஒருத்தர் கரடியா இருந்துட்டு போகட்டும். இனி பூஜை வேளையில் எந்த கரடி வந்தாலும் கதவை திறக்க போறதே இல்லை” என்றபடி அவள் கழுத்தில் இதழ் பதிக்க மீண்டும் கதவு உடைந்து விடும் அளவுக்கு தட்டப்பட்டது.​

“மாமா” என்று ரம்யாவின் குரல் கேட்டதும் வேறுவழியில்லாமல் மனைவியை விட்டு விலகி படுத்தவன், “நான் தூங்கிட்டேன்னு சொல்லி அவளை அனுப்பிட்டு வா நயனி” என்று இமைகளை மூடிக் கொண்டான்.​

நயனி கதவை திறந்ததும், “அத்தை தலையில் என்ன கட்டு போட்டு இருக்கு? மாமா எங்கே?” என்று கேட்டபடி ரம்யா அறைக்குள் வந்தாள்.​

நயனி புன்னகையுடன், “ரம்யா குட்டி மகாபலிபுரம் எப்படி இருந்துச்சு? நல்லா கடற்கரையில் விளையாடினியா? டிரிப்பை என்ஜாய் பண்ணியா?” என்று கேட்டாள்.​

“ம் நல்லா இருந்துச்சு. நீங்களும் எங்களோட வந்திருக்கலாம் இல்ல. நான் கூப்பிட்ட அப்பவே வந்திருந்தால் தலையில் அடிப்பட்டு இருக்குமா?” என்று கேட்டவள் சற்று நேரம் தாடையில் கைவைத்து யோசித்தவள்.​

“அத்தை, நீங்க சரியா படிக்க மாட்டீங்களா?” என்று கேட்டாள்.​

“ஏன் ரம்யா அப்படி கேக்கிறே? நல்லா படிப்பேனே” என்றாள் நயனி புரியாமல்​

“மாமா உங்களுக்கு பிராக்டிகல் கிளாஸ் சொல்லி கொடுக்கறதா சொன்னீங்களே, அதனால் தானே உங்களால் எங்களோட மகாபலிபுரம் வரமுடியலை. நீங்க வரேன்னு சாென்னதுக்கு மாமா உங்களை முறைக்கும் போதே நினைச்சேன். அவர் எங்க மிஸ்ஸை விட ரொம்ப ஸ்டிரிட்டா இருக்காரேனு நினைச்சேன். அவர் சொல்லி கொடுத்ததை நீங்க சரியா செய்யலயா? அதனால் தான் உங்க தலையில் கொட்டி கொட்டி மண்டையை வீங்க வச்சிட்டாரா?” என்று ரம்யா கேட்டதும்​

தூங்குவது போல பாசாங்கு செய்துக் கொண்டிருந்த சித்தார்த் சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்து சிரித்தான்.​

நயனி கணவனை முறைத்துக் கொண்டிருக்க, “மாமா நீங்க தூங்கலையா?” என்றாள் ரம்யா ஆச்சரியத்துடன்.​

“உன் அத்தை என்னை எங்கே தூங்க விடுறா?” என்றான் மனைவியை அழுத்தமாக பார்த்தபடி​

“போ மாமா நீ என்கூட பேசாதே” என்றாள் முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு​

“ஏண்டா?”​

“நீ எப்போ பார்த்தாலும் அத்தை கூடவே இருக்கே, நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன். என்கிட்ட விளையாடவே மாட்டேங்கிற. என்னை இந்தவாட்டி வெளியில் எங்கேயும் கூட்டிட்டு போகலை. நான் அம்மாவை கூட்டிட்டு யுஎஸ் போறேன் போ” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் சிறுமி.​

ரம்யாவை தூக்கி தன் வயிற்றின் மேல் அமர வைத்துக் கொண்டு, “ரம்யா குட்டிய ஈவினிங் பீச், சினிமா மால் எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போறேன் டா. அத்தைக்கு பிராக்டிகல் கிளாஸ் எடுத்துட்டு இருந்தேன்டா, அதனால் தான் மாமா கொஞ்சம் பிசி” என்று அக்கா மகளை கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்தபடி மனைவியை பார்த்து கண் சிமிட்டினான் சித்தார்த்.​

*****​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மறுநாள் காலை நயனியை அழைத்துக் கொண்டு சித்தார்த் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றான். “நான் எதுக்குங்க? என்னை காலேஜ்ல டிராப் பண்ணிடுங்க” என்றவளிடம். “பத்து நிமிஷம் தான் உடனே கிளம்பிடலாம்” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்றான்.​

சற்று நேரத்தில் அட்டென்டருடன் சுதா அறைக்குள் நுழையவும், “ஏய் சுதா நீ எப்போ வந்தே” என்றபடி தோழியை அணைத்துக் கொண்டாள் நேத்ரநயனி.​

“நான் தானே நயனி, நேத்து சுதாவை வரச் சொன்னேன். அதனால் தான் வந்திருக்காங்க. மறந்துட்டியா?” என்றான் சித்தார்த் புன்னகையுடன்.​

“நீங்க சும்மா பார்மலா சொல்றீங்கனு நினைச்சேங்க” என்றாள் நயனி.​

“நானும் அப்படித்தான் நினைச்சேன் நேத்ரா. காலையில் பழையபடி வேலைக்கும் போயிட்டேன். எங்க ஆஸ்பிட்டல் ஓனர் கிட்டயே போன் பண்ணி, என்னை இங்கே அனுப்ப சொல்லியிருக்கார் உன் கணவர். அதுதான் என்ன விஷயம்னு புரியாமல் வந்திருக்கேன்” என்றாள் சுதா​

“ஏன் சுதா? உங்க முதலாளி எதுவும் சொல்லி அனுப்பலையா?” என்றான் சித்தார்த் புருவம் உயர்த்தி.​

“இல்ல, டாக்டர் சித்தார்த் என்ன சொன்னாலும் அது எனக்கும் சம்மதம்னு மட்டும் உங்க கிட்ட சொல்ல சொன்னாரு” என்றாள் சுதா​

சித்தார்த் புன்னகையுடன் ஒரு கடித உறையை எடுத்து, “நயனி இதை உன் கையால சுதாகிட்ட கொடு” என்றான்.​

நயனியும் என்ன ஏது என்று கேட்காமல் அதை அப்படியே வாங்கி சுதாவிடம் கொடுத்தாள். “இல்ல டாக்டர் எனக்கு பணமெல்லாம் வேண்டாம். நான் பணத்துக்காக எதையும் செய்யலைனு அப்பவே சொன்னேனே” என்று வாங்க மறுத்த சுதாவிடம், “அதுல பணம் இருக்கறதா யார் சொன்னது? முதலில் அதை வாங்கி உள்ளே என்ன இருக்குனு படிங்க” என்றான்.​

சுதாவும் புரியாமல் தோழி நீட்டிய கடித உறையை வாங்கி பிரித்து பார்த்தாள். வேலைக்கான ஆர்டர் இருந்தது. அதில் அவள் அந்த மருத்துவமனையில் டாப் நர்சாகவும் அட்மின் பிளாக்கை கவனித்துக் கொள்ளும் பணிக்கும் நியமிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.​

‘எத்தனை நாள் கனவு இது? நலமுடன் மருத்துவமனையில் வேலையில் சேர வேண்டும் என்று எத்தனையோ முறை முயன்றிருக்கிறாள். ஆனால் இப்போது நயனிக்கு செய்த உதவியால் வேலை கிடைத்திருக்கிறது. இதுவே அவளுடைய திறமைக்கு கிடைத்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பாள். இப்போது இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா’ என்று குழப்பத்தில் சுதா அப்படியே நின்றிருக்கவும் ஆர்வம் தாங்காமல் நயனி தோழியின் கையிலிருந்த கடிதத்தை வாங்கி படித்தாள்.​

அதை பார்த்ததும் நயனி கணவனை பார்த்து. “அபி நானே சுதாவுக்கு நம்ம ஆஸ்பிட்டல்ல வேலை போட்டு கொடுக்க உங்க கிட்ட கேக்கணும்னு நினைப்பேன். ஆனால் சுதாவுக்கு சிபாரிசால் வர்ற வேலை பிடிக்காது. எப்பவும் என் திறமையை பார்த்து கிடைக்கற வேலையில் தான் எனக்கு மதிப்பு இருக்கும்னு சொல்வாள். அதனால தான் நான் இதுநாள் வரைக்கும் உங்க கிட்ட எதுவும் கேட்டது இல்ல. நலமுடன் மருத்துவமனையில் சேரணும்ங்கிறது என்னோட கனவுனு அடிக்கடி சொல்லுவா. நான் கேக்காமலே என் பிரண்டோட ஆசையை நிறைவேத்திட்டீங்க, ரொம்ப தேங்க்ஸ் அபி” என்றாள் நயனி உணர்ச்சி பெருக்கோடு.​

“நயனி, நான் சுயநலத்தோடு தான் சுதாவை அப்பாயின்ட் பண்ணியிருக்கேன். உன் பிரண்ட் என்பதற்காக அல்ல. ஜனனியை மறுபடியும் அதே இடத்தில் வேலைக்கு வைக்க முடியாது. அந்த பதவிக்கு அனுபவமும், பணத்தாசையும் இல்லாமல் சேவை மனப்பான்மையோடு இருக்கறவங்க தான் சரியாக இருக்கும்.​

நான் சுதாவை நேத்து ஆர்கே ஆஸ்பிட்டல்ல பார்க்கும் போதே அவங்க வேலை செய்யற நேர்த்தியையும், நல்ல குணத்தையும் பார்த்தேன். அப்பவே ஜனனி இடத்துக்கு சுதாவை அப்பாயின்ட் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன். அவங்க முதலாளிக்கிட்ட பேசி, அவர் ஒதுக்கிட்ட பிறகு உன்கிட்டயும் சுதாகிட்டயும் சொல்லலாம்னு நினைச்சேன்.​

நேத்து நைட்டே அவரோட பேசிட்டேன். அவரும் சம்மதம் சொல்லிட்டாரு. சுதா மறுக்க மாட்டாங்கனு நம்பிக்கையில் ஆர்டரை நேத்தே ரெடி பண்ணவும் சொல்லிட்டேன். இப்போ சுதாவுக்கு ஓகேவானு நீதான் கேக்கணும்” என்றான் சித்தார்த்.​

“சுதா, ப்ளீஸ் அக்சப்ட் பண்ணிக்கோ. இது உன்னோட திறமையை பார்த்து கிடைச்ச வேலை தான். ப்ளீஸ்டி” என்றாள் நயனி சுதாவின் கைகளை பற்றிக் கொண்டு.​

சுதா சில நிமிடங்கள் யோசித்து பின் சம்மதமாக தலையசைத்தாள்.​

“குட், நயனி நீ சுதாவை அழைச்சிட்டு போய் அட்மின் பிளாக்கை காட்டு. உனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்லிக் கொடு. அப்புறம் அவங்களே பார்த்துப்பாங்க. சுதா உங்களுக்கு என்ன டவுட்னாலும் என்கிட்ட தயங்காமல் கேளுங்க” என்றான்.​

“ஓகே டாக்டர், தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு நேத்ரநயனியுடன் சென்றாள் சுதா.​

நயனி தோழியுடன் சிறிது நேரம் அளவளாவி விட்டு, பின்பு கல்லூரிக்கு தாமதமாவதால் சுதாவிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டாள்.​

*****​

அன்று மாலை சித்தார்த்தும் நேத்ரநயனியும் வீட்டிற்கு வரும்போது சிவக்குமாரும், அவருடன் நயனியின் சொந்த பந்தங்களும் அமர்ந்திருந்தனர்.​

கணவனின் கைகளை பிடித்தபடி உள்ளே வந்த நயனி தன் சொந்தங்களை பார்த்ததும், பாய்ந்து ஓடி அவர்களை கட்டிக் கொண்டாள். “அத்தை, ராணி அக்கா நீங்க எல்லாம் எப்போ வந்தீங்க? என்ன திடீர்னு வந்திருக்கீங்க? ஒரு போன் கூட பண்ணலையே?” என்றாள்.​

சித்தார்த் எல்லாருக்குமே பொதுவாக புன்னகையால் வரவேற்று, “வாங்க மாமா, எப்போ வந்தீங்க?” என்றான். சிவக்குமார் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே நயனி தந்தையின் அருகில் அமர்ந்துக் கொண்டு சலுகையாக அவர் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.​

“அப்பா எப்படி இருக்கீங்க? ஏன்ப்பா இத்தனை நாளா என்னை பார்க்க வரலை? என் மேலே கோபமா?” என்றாள் கலங்கிய குரலில்.​

“உன் மேல எனக்கென்னடா கோபம்? விளைஞ்சு கிடக்கிற பூமி பிரசவத்துக்கு காத்திருக்கிற பெண்ணை போல, அவங்களை விட்டுட்டு அங்கிட்டு இங்கிட்டு போக முடியுமா சொல்லு? நேத்து தான் அறுவடை முடிஞ்சது. உன்னை பார்த்தும் ரொம்ப நாளாச்சு. ஆடி மாசமும் தொடங்கிடுச்சு. அதுக்கு தான் எல்லாரையும் அழைச்சிட்டு வந்துட்டேன்” என்றார் சிவக்குமார்.​

“ஆடி மாசமா? என்ன விஷேசம் மாமா?” என்றபடி சித்தார்த் அவர் எதிரில் அமர்ந்தான்.​

பவிஷ்கா அவர்களுக்கு குளிர்பானம் கொடுத்துக் கொண்டே, “சித்து ஆடி மாசம் சீர் செய்துட்டு நயனியை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்திருக்காங்கடா” என்றாள்.​

“அவங்க வீட்டுக்கா? எதுக்கு?” என்றான் அதிர்ச்சியுடன்.​

“என்ன தம்பி? தெரியாதது போல கேக்கறீங்க? புதுசா கல்யாணம் ஆன பொண்டு ஆடி மாசம் தாய் வீட்டுல தானே இருக்கணும்? அது தானே முறை” என்று சிரித்த அத்தையை வெட்டவா குத்தவா என்பது போல பார்த்தான் சித்தார்த்.​

“சரி நானும் நயனியும் நாளைக்கு காலையில் வர்றோம், சாயந்திரமே கிளம்பிடுவோம்” என்றான்.​

“நீங்க வேணும்னா சாயங்காலமே கிளம்பிடுங்க, எங்க பொண்ணு ஆடிமாசம் முழுசும் எங்க வீட்டில் தான் இருக்கணும்” என்றாள் அந்த பெண்மணி.​

அதிர்ச்சியுடன் “என்ன? நயனி ஒரு மாதம் பூரா அங்கே இருக்கணுமா? அதெல்லாம் என் பொண்டாட்டியை அனுப்ப முடியாது” என்று அவன் திட்டவட்டமாக மறுத்து பேசவும் அங்கிருந்த பெண்கள் எல்லாம் கொல்லென்று சிரித்தனர்.​

மகேந்திரன் பவிஷ்காவை பார்க்க, அவள் தம்பியை தனியாக அழைத்து அவன் காதில் சொல்ல தொடங்கினாள், “ஏய் சித்து, ஆடி மாசம் தம்பதிங்க ஒண்ணா இருந்தால், சித்திரையில் பிள்ளை பிறக்கும். சித்திரையில் சூரியனோட தாக்கம் அதிகம் இருக்கும், அந்த மாதத்தில் பிள்ளை பிறந்தால் தாய்க்கும் சேய்க்கும் கஷ்டமா இருக்கும், அதனால தான் ஆடி மாசம் கணவனையும் மனைவியையும் பிரிச்சு வைப்பாங்க. அவங்க எல்லாம் அதுக்காக தான் வந்திருக்காங்க” என்றாள் விளக்கமாக.​

“எதுக்கு வந்திருக்காங்க? எங்க இரண்டு பேரையும் பிரிச்சு வைக்கவா?” என்று நக்கலாக கேட்டவன் “பவிக்கா, அந்த காலத்தில் தான் அதை தடுக்க முடியாது. இப்போ எவ்வளவோ டெக்னாலஜி வளர்ந்துடுச்சு. இந்த சில்லி ரீசனுக்காக எல்லாம் என் பொண்டாட்டியை அனுப்ப முடியாது” என்றான் அழுத்தமாக.​

“இப்போ என்கிட்ட சொன்னதை அப்படியே அவங்க கிட்ட நீயே சொல்லிடு” என்று சொன்னாள் பவிஷ்கா​

“அவங்க கிட்ட நான் எப்படி இதை எல்லாம் புரிய வைக்க முடியும்? எல்லார் முன்னாடியும் அதெல்லாம் பேச முடியாதே!” என்றான் சித்தார்த் மெல்லிய குரலில்.​

“அது உன் பிரச்சனை” என்று சிரித்தாள் பவிஷ்கா​

“ஆறு மணிக்குள்ள கிளம்பணும் உன் துணிகளை எல்லாம் எடுத்து வச்சுட்டு கிளம்பு” என்று ஆளாளுக்கு நயனியை கிளம்ப சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.​

நயனி சித்தார்த்தை பார்த்தாள். அவன் ‘போகாதே’ என்று தலையசைத்தான்.​

ஏதாவது அவனுக்காக பேசுவார்களா என்று தந்தையையும் தமக்கையையும் பார்த்தான். மகேந்திரன் நண்பனை கண்டதும் அவரோட சிரித்து பேசிக் கொண்டிருந்தார். பவிஷ்காவோ தம்பியை கிண்டலாக பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.​

சொந்த முயற்சியே வெற்றியை தரும் என்று தொண்டையை கனைத்தவன், “நயனி, இப்போ மருத்துவ கல்லூரியில் படிக்கிறா. அவள் சென்னையில் இருந்தால் தான் போய் வரதுக்கு கரெக்டா இருக்கும். அங்கே வந்தால் அவளோட படிப்பு கெடும். அதனால் அவளை அனுப்ப முடியாது” என்றான்.​

உடனே ராணி அக்கா என்பவள், “அதனால் என்ன? சிவா சித்தப்பாவை சென்னையில் ஒரு மாதத்திற்கு இங்கே தனியா வீடு எடுத்து தங்க வைக்கலாம். நேத்ரா தாய் வீட்டில் இருக்கணும் அவ்வளவு தானே? அவள் சென்னையில் சித்தப்பாவோட ஒரு மாதம் இருக்கட்டும். அங்கே இருந்து காலேஜூக்கு போய் வரட்டும். என்ன சொல்றீங்க சித்தப்பா?” என்று கேட்க​

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல ராணி. அறுவடையும் முடிஞ்சு போச்சு, நானும் என் மகளோடு ஒரு மாசம் சென்னையில் இருக்க கசக்குமா என்ன?” என்று சிவக்குமாரும் தன் சம்மதத்தை சொல்லிவிட​

“எதுக்கு தனியா வேற வீடு பார்க்கணும்? மாமா நீங்களும் இங்கேயே இருங்க. நயனியை வேணும்னா பவிக்காவோட அறையில் இருக்கட்டும்” என்றான் சித்தார்த் முடிவாக​

“அது எப்படி முறையாகும்? சிவா, தம்பி வயசு கோளாறுல அப்படி தான் சொல்வாரு. ஒரே வீட்டில் இருக்கறது எல்லாம் சரி வராது. பார்த்தே இல்ல? பொண்டாட்டியை அனுப்பவே அவருக்கு மனசு இல்ல.​

அவரை நம்பி இங்கேயே தங்க வச்சால் அப்புறம் உன் பொண்ணு கத்திரியில் பிள்ளை பெத்துக்க தான் உன் வீட்டுக்கு வருவாள். சொல்லிட்டேன்” என்று சொல்லிய பெரிசை வெட்டவா குத்தவா என்பது போல முறைத்தான்.​

‘அடப்பாவிங்களா, நீங்க எல்லாம் எங்கிருந்து தான்டா வர்றீங்க? என்னை என் பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்க விடாமல் ஒவ்வொரு கேரக்டரா உள்ளே வந்துட்டே இருந்தால் நானும் என்ன தாண்டா செய்வேன்? இறைவா இதுக்கு ஒரு எண்டே இல்லையா?’ என்று மனதிற்குள் பொருமினான் சித்தார்த் அபிமன்யு​

கணவனின் தவிப்பை பார்த்துக் கொண்டிருந்த நயனிக்கு பாவமாக இருந்தது. அவளாலும் தன் அபியை விட்டு பிரிந்திருக்க முடியாதே என்று எண்ணியவள், “அப்பா, அபி சொன்னது போல நீங்களும் இங்கேயே இருங்க, நான் அண்ணியோட அறையில் தங்கிக்கிறேன். ப்ளீஸ்ப்பா” என்றாள் தந்தையின் காதில் ரகசியமான குரலில்.​

சிவக்குமார் தொண்டையை கனைத்துக் கொண்டு எழுந்தவர் “கணவன் மனைவி இரண்டு பேருக்கும் பிரிந்து இருக்கிறதுல விருப்பம் இல்லாத போது, கட்டாயப்படுத்தி அவங்களை பிரிச்சு வைக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. என் பொண்ணு சித்திரையில் பிள்ளை பெத்துக்கிட்டாலும் பரவாயில்லை. என் மாப்பிள்ளை அவளை நல்லா பாத்துக்குவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால் கொண்டு வந்த தட்டுவரிசையை மட்டும் கொடுத்துட்டு கிளம்பலாம்” என்று சொன்ன மாமானாரை சித்தார்த் வேகமாக சென்று “தெய்வமே” என்று அழைத்தபடி பாசத்தோடு கட்டிக் கொள்ளவும் மொத்த குடும்பமும் வாய்விட்டு சிரித்தனர்.​

(தொடரும்)​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 1

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மான்விழி - 30 / நிறைவுபகுதி

பத்து நாட்களுக்கு மேலாக கல்லூரிக்கு செல்லாமல் அதன்பிறகு சென்றவளை, அவளுடைய வகுப்பு தோழிகளும் தோழர்களும் குசலம் விசாரித்தனர். “நேத்ரா அடிக்கடி லீவு போட்டால் எப்படி, முக்கியமான கிளாஸ் எல்லாம் போய்டுமே” என்றாள் ஒருத்தி​

“இல்ல, என் ஹஸ்பண்ட் டாக்டர் தான், எதாவது டவுட்னா சொல்லி கொடுத்திடுவார். சமாளிச்சுக்குவேன்” என்று சொல்லி நழுவிக் கொண்டாள் நயனி.​

அடுத்த மாதமே அவள் கர்ப்பம் என்பதை சித்தார்த் தான் முதலில் கண்டுபிடித்தான். மனைவியின் கரம் பற்றி தன்னை நோக்கி இழுக்கும் போது ஏதோ வித்தியாசம் தோன்ற மீண்டும் அவள் கைகளில் நாடியை கவனித்தான். உடனே அவன் முகம் மலர்ந்தது. “நயனி, இரட்டை நாடி துடிக்குதுடி. கர்ப்பமாக இருக்கேனு நினைக்கிறேன்” என்று சொன்னவன் அதற்கு தேவையான உபகரணங்களை அவளிடம் கொடுத்து டெஸ்ட் செய்து பார்க்க சொன்னான். அவன் சொன்னது போல கர்ப்பம் என்பது நிச்சயமானது.​

சந்தோஷத்தில் அவளை அணைத்து முத்தமழை பொழிந்தவன், “நயனி, அப்பா கிட்ட நீயே சொல்லுடி” என்றான்.​

“ஏன் அபி?” என்றாள் கேள்வியாய்.​

“எனக்கு கூச்சமா இருக்குடி” என்றான் வெட்கத்தை மறைக்க திண்டாடிய படி​

“ஓ அதெல்லாம் உங்களுக்கு இருக்கா?” என்றாள் கிண்டலாக​

“ஏய் ஏன்டி அப்படி கேக்கிற?” என்றான் பொய் கோபத்துடன்.​

“அன்னைக்கு ஊர்காரங்க முன்னாடி ஆடிமாசம் என்னை பிறந்த வீட்டுக்கு அனுப்ப முடியாதுனு சொல்லி அழிச்சாட்டியம் பண்ணவர்தானே நீங்க? அப்போ இந்த வெட்கம் கூச்சம் எல்லாம் எங்கே சார் போச்சு? மாமா, அண்ணி, எங்கப்பா, ஊர்காரங்க முன்னாடி மானமே போச்சு” என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.​

“இதிலென்னடி மானம் போறதுக்கு இருக்கு? கட்டின நாள்ல இருந்து நிம்மதியா உன்னை கொஞ்ச முடிஞ்சுச்சா? முதல்ல நீ முறுக்கிட்டு திரிஞ்சே, நீ சமாதானம் ஆன பின்னாடியும் நமக்கிடையில் எதாவது ஒரு கரடி வந்துட்டே இருந்தது. எப்படியோ எல்லா கரடியையும் துரத்தியடிச்சு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தால், உங்க ஊர்ல இருந்து கரடிங்க கூட்டமே இல்ல வந்திருச்சுங்க! கொஞ்சம் ஏமாந்து இருந்தால் உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய் இருப்பாங்க.​

அந்த நேரத்துல வெக்கமாவது! மானமாவது! உன்னை அனுப்பி வச்சிட்டு பின்னாடியே உன் வீட்டுக்கு வரத் தெரியாதா எனக்கு? ஆஸ்பிட்டலை விட்டு வரவும் முடியாது. உன்னையும் அனுப்பவும் மனசு இல்ல. அதனால தான் வெளிப்படையா பேச வேண்டியதா போச்சு. நான் என் பொண்டாட்டியை தானே அனுப்பமாட்டேன்னு சொன்னேன். இதில் கூச்சப்படறதுக்கு என்ன இருக்கு?” என்று அவன் பெருமையாக பேசிக் கொண்டே போக நேத்ரா அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.​

“ஏன்டி அப்படி முறைச்சு பார்க்கிறே? பிராக்டிகல் கிளாசுக்கு எல்லாம் இப்போ எனக்கு நேரமில்லை” என்று அவன் சீரியசாக பேசுவது போல பேசவும், அவனை மேலும் முறைத்தவள் அங்கிருந்த தலையணையை தூக்கி அவன் மீது வீசினாள்.​

சித்தார்த் லாவகமாக விலகி நிற்க “என் சொந்தகாரங்க எல்லாம் உங்களுக்கு கரடிங்களா?” என்றவளின் கரத்தில் இருந்த இன்னொரு தலையணையை வாங்கி தூர வீசியவன் அவள் கரத்தை பற்றி இழுத்து தன் மீது சாய்த்து நிறுத்தினான்.​

“நமக்கிடையில் யார் வந்தாலும் கரடி தாண்டி” என்று நெற்றியில் முட்டினான்.​

“சித்தார்த்” என்று மகேந்திரன் கீழே இருந்து குரல் கொடுக்கவும், “இவர் தான்டி பெரிய கரடி, நீ கர்ப்பமா இருக்கிற விஷயத்தை பார்த்து பக்குவமாக சொல்லு” என்றவன் “இதோ வரேன்பா” என்று விட்டு சென்றான்.​

கணவன் பின்னாடி மெதுவாக கீழிறங்கிய நேத்ரநயனியை பார்த்தவர், “காலேஜ்க்கு நேரமாகலையா நேத்ரா? சீக்கிரம் கிளம்புங்க” என்றார்.​

“மாமா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்?” என்றாள் நயனி தயங்கிய குரலில்.​

“சொல்லுமா?” என்றார் மகேந்திரன்.​

“அது வந்து மாமா, நீங்க மறுபடியும் தாத்தா ஆக போறீங்க?” என்றாள் தலையை குனிந்துக் கொண்டு.​

நேத்ராவின் வெட்கத்தையும், மகனின் கூச்சத்தையும் பார்த்து புரிந்துக் கொண்டவர் புன்னகையுடன், “ரொம்ப சந்தோஷம்மா, உள்ளே போய் முதல்ல ஸ்வீட் எதாவது இருந்தால் எடுத்துட்டு வா. என் நண்பனுக்கு நானே போன் பண்ணி விஷயத்தை சொல்றேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.​

அவள் உள்ளே சென்றதும், “என் மனைவி டாக்டர் படிச்சு முடிக்கும் வரைக்கும் குழந்தை வராம பாத்துக்க தெரியும், எப்படி நடந்துக்கணும்னு எனக்கு தெரியும்னு யாரோ சொன்னாங்க, அவங்களை நீ எங்கேயாவது பார்த்தியா சித்து?” என்றார் மகேந்திரன் கிண்டலாக​

தலையை பக்கவாட்டாக திருப்பி இரு விரல்களால் தன் நெற்றியை அழுந்த தேய்த்துக் கொண்டு “டாடி” என்று சங்கடத்துடன் நெளிந்தான்.​

மகனின் வெட்கத்தை பார்த்து வெடித்து சிரித்தார் மகேந்திரன். அதற்குமேல் அங்கே நிற்க முடியாமல், “நான் கார்ல வெயிட் பண்றேன், நயனியை அனுப்பி வையுங்க” என்று சொல்லி விட்டு சென்றான். அப்போதும் அவர் சிரிப்பு அவன் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.​

“ஓ காட். அப்பா என்ன இப்படி கலாய்க்க ஆரம்பிச்சிட்டாரு” என்று நினைத்துக் கொண்டான்.​

அடுத்த நான்கு மாதத்தில் நேத்ரநயனி மேடிட்ட வயிற்றோடு கல்லூரிக்கு வரவும், உடன் படிக்கும் தோழைமை கூட்டங்கள் ஒன்றோக சேர்ந்து ஒன்றும் ஓன்றும் மூன்று என்று கணக்கு போட்டு தங்களுக்குள் சிரித்தனர்.​

கூட்டத்தோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தவர்கள் நேத்ரா அந்த பக்கமாக வருவதை பார்த்ததும் அவளை அழைத்து, “‘என்ன நேத்ரா? லாஸ்ட் செமஸ்டர் அப்போ பத்து நாள் சேர்ந்த மாதிரி லீவு எடுத்திருந்தே, மருத்துவ கல்லூரில அதிகம் லீவு எடுக்க முடியாது, எடுக்கவும் கூடாது. உனக்கு மட்டும் எப்படி லீவு தராங்கனு கேட்டால், நேத்ராவோட ஹஸ்பண்ட் ஒரு டாக்டர் அவரே தன் மனைவிக்கு அவரோட மருத்துவமனையில் பிராக்டிகல் கிளாஸ் எடுக்கிறதா சொன்னாங்க.​

எங்களையும் உன் கூட கூட்டிட்டு போனு கேட்டாலும் கூட்டிட்டு போக மாட்டேங்கிற. சரி பிராக்டிகல் கிளாஸ்ல அப்படி என்னவெல்லாம் சொல்லி கொடுத்தார்னு கேட்டால் அதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்கிற. அடுத்த ஐந்து மாசத்துல வயித்த தள்ளிட்டு வந்து நிக்கிறே. எங்களுக்கென்னவோ டாக்டர் கல்லூரி பாடத்தை விட்டுட்டு காதல் பாடம் எடுக்கிறாங்களோனு தோணுது’ என்றாள் ஒருத்தி​

மற்றவளோ, “ஏய் அவர் எடுக்கிற காதல் பாடத்திற்கு பேர் என்ன தெரியுமா? பிராக்டிகல் கிளாஸ்” என்றாள் சத்தமாக. கிளாஸ் ரூமில் அவள் தான் எப்போதும் நேத்ராவின் அருகில் அமர்வாள். அவளிடம் தான் நேத்ரா பிராக்டிகல் கிளாஸ் என்று உளறி இருந்தாள். இப்போது அவள் எல்லார் முன்பும் போட்டு உடைக்க, அன்றிலிருந்து அவளை பார்க்கும் போதெல்லாம், “என்ன நேத்ரா, நேத்து நைட் கிளாஸ் எப்படி போச்சு? டாக்டர் நல்லா சொல்லி கொடுத்தாரா? என்னவெல்லாம் கத்துகிட்டே?” என்று கிண்டல் செய்து அவளை ஒரு வழி செய்து விட்டார்கள்.​

நேத்ராவுக்கு மிகவும் சங்கடமாக போய் விட்டது. விளையாட்டாக பேசுபவர்களை அவளால் அதட்டவும் முடியவில்லை. கடந்து சென்று விட்டாள். எப்படியோ அவர்கள் குழந்தை பிறக்கும் வரை தான் கிண்டல் செய்தார்கள், அதற்கு பின்னால் அடங்கினார்கள்.​

நயனியின் பிரசவ நேரத்தில் சித்தார்த் தன் தமக்கையை மீண்டும் இந்தியா வரவழைத்திருந்தான்.​

“பவிக்கா நீதான் நயனிக்கு பிரசவம் பார்க்கணும். அவ வலியில் துடிக்கிறதை என்னால கிட்ட இருந்து பார்க்க முடியாது. எனக்கு டென்சனா இருக்கும். ப்ளீஸ் கொஞ்சம் வந்து போறீயா?” என்றான்.​

“நீ சொல்லலைனாலும் நானே வரலாம்னு தான் இருந்தேன் சித்து, வந்துடுவேன், கவலைப்படாதே நயனிக்கு சுகபிரசவம் தான் நடக்கும்” என்றாள் தமக்கை.​

அவள் சொன்னது போலவே, குழந்தை சுகபிரசவத்தில் பிறந்திருக்க தாயும் சேயும் நலம் என்றதும் தான் சித்தார்த்க்கு நிம்மதியாக இருந்தது. என்ன தான் டாக்டராக இருந்தாலும் சொந்த மனைவி என்று வரும்போது பதட்டத்தையும் உணர்வுகளையும் தடுக்க முடியாது போலும்​

தந்தை என்ற பதவி அவனுக்குள் ஒரு புதுவித உணர்வை அளித்தது. அவசரமாக பிரசவ அறைக்குள் சென்றவன் மனைவியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். “ரொம்ப வலிச்சுதா நயனி? நீ வலியில் துடிக்கிறதை என்னால பார்க்க முடியலடி, அதான் வெளியே போயிட்டேன்” என்றான் கலங்கிய கண்களோடு.​

“ரொம்ப வலிச்சது தான், ஆனால் நம்ம குழந்தையை பார்த்ததும் பட்ட வலி எல்லாம் மறந்தே போச்சு” என்றாள் மென்புன்னகையுடன்.​

அப்போது தான் தன் மகவை திரும்பி பார்த்தவன், அவனை அப்படியே அள்ளி எடுத்து மகனின் தலை முதல் கால்வரை ஆராய்ந்தான்.​

குழந்தை அப்படியே சித்தார்த்தின் சாயலில் இருக்கவும், “நயனி, இவன் என்னை மாதிரியே இருக்கான்டி. எனக்கு உன்னை போல ஒரு பொண்ணு வேணும்டி” என்றான் சித்தார்த் மகனின் மென்பஞ்சு பாதங்களில் முத்தமிட்டபடி​

“மெடிக்கல் படிக்க காலேஜூம் சேர்த்து விட்டுட்டு இப்படி வருஷத்துக்கு ஒரு பிள்ளையை கொடுத்தால் அவள் எப்படிடா படிச்சு முடிப்பா?” என்று கேட்டபடி பவிஷ்காவும் பின்னால் அவள் கணவன் செல்வாவும் வந்தனர்.​

“வாங்க மாமா, எப்போ வந்தீங்க? என்று வரவேற்றவன் ரம்யாவை தூக்கிக் கொண்டான்.​

“இப்போ தான் நேரா ஏர்போர்ட்ல இருந்து வரோம். உன்னையும் உன் மனைவியையும் பார்க்க வரணும் நினைச்சிட்டே இருந்தேன். போனசா உன் மகனையும் சேர்த்தே பார்க்க முடிஞ்சது” என்றார் செல்வா புன்னகையுடன்.​

அதன்பிறகு ஒரு நல்ல நாளில் சொந்தபந்தங்கள் புடைசூழ, தன் மகனுக்கு “ராகவ் பிரசாத்” என்று பெயர்சூட்டி மகிழ்ந்தனர் சித்தார்த், நேத்ரநயனி தம்பதியினர்.​

சிவக்குமார் எத்தனையோ முறை நேத்ராவை பிறந்த வீட்டிற்கு அனுப்பும்படி கேட்டும் சித்தார்த் மறுத்து விட்டான். “மாமா, நீங்களே தனியா இருக்கீங்க. நயனியும் குழந்தையும் எப்படி உங்களால பார்த்துக்க முடியும்? நீங்க வேணும்னா இங்கேயே வந்திடுங்க, அவளை அனுப்ப முடியாது தப்பா எடுத்துக்காதீங்க மாமா” என்றான்​

சித்தார்த் சொன்னதையே மகேந்திரனும் வலியுறுத்தவும் சிவக்குமார் வேறுவழியின்றி தன்னால் ஆன சீர் வரிசைகளை கொடுத்துவிட்டு ஒரு வாரம் இருந்து விட்டு சென்றார்.​

நேத்ரநயனி குழந்தையை வைத்துக் கொண்டு அமுதூட்டவும் முடியாமல், கல்லூரிக்கு குழந்தையை எடுத்துச் செல்லவும் முடியாமல் திண்டாடுவதை பார்த்த சித்தார்த் அவளுடன் குழந்தையை கல்லூரிக்கு எடுத்துச் சென்று பார்த்துக் கொள்ள கேர்டேக்கரை நியமித்தான். ஆசையிருந்தாலும் அடுத்த குழந்தையை தள்ளிப் போட்டான்.​

*******​

அன்று மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா.​

சித்தார்த் தன் மகன் ராகவ் பிரசாத்தை குளிக்க வைத்து தயார் செய்துக் கொண்டிருந்தான். நயனி படுக்கையில் இருந்து எந்திரிக்காமல் பிடிவாதத்துடன் கண்களை மூடி தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்.​

“டாடி எதுக்கு யுனிபாரம் போடாமல் கலர் டிரஸ் போடறே மிஸ் திட்டுவாங்க” என்றான் எல்கேஜி படிக்கும் ராகவ் மழலை குரலில்​

“இன்னைக்கு நீ ஸ்கூலுக்கு போக வேண்டாம் ராகவ், அம்மா படிச்ச காலேஜூக்கு போகலாம்” என்று சொல்லியபடி மகனின் கால்களுக்கு ஷூ மாட்டி விட்டவன் மனைவியை அழுத்தமாக பார்த்தான்.​

“நயனி, கிளம்புடி போகலாம்” என்றான் சித்தார்த் அபிமன்யு பத்தாவது முறையாக.​

“ம்ஹூம் நான் வர மாட்டேன்” என்றாள் மனைவி கண்களை திறக்காமலே.​

“நயனி எனக்கு கோபத்தை வரவழைக்காதே, கஷ்டப்பட்டு படிச்சு மருத்துவத்துறையில் வெற்றி அடைஞ்சிருக்கே. அதுக்கான பட்டமளிப்பு விழாவுக்கு போகலைனா நல்லாவா இருக்கும்? கிளம்புடி” என்றான் சித்தார்த் அழுத்தமாக​

“நீங்க அந்த கல்லூரியோட பார்ட்னர் தானே, அந்த சான்றிதழை என் சார்பா நீங்களே வாங்கிட்டு வாங்க. நான் வரமாட்டேன்” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.​

“நயனி” என்றான் அழுத்தமாக “என் மனைவி டாக்டர் ஆயிட்டாள்னு நான் எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லிக்க வேணாமா? நீ வந்து வாங்கினால் தானே நல்லா இருக்கும்? கிளம்புடி படுத்தாதே” என்றான்.​

“அப்ப ஒன்னு செய்வோம். எல்லாரும் போயிட்ட பின்னாடி கடைசியா போய் அந்த சான்றிதழை வாங்கிப்போம்” என்றவளை முறைத்தான்.​

கணவனின் பார்வையில் தெரிந்த கோபத்தில் தன் பிடிவாதத்தை விட்டு இப்போது புலம்ப தொடங்கினாள். “என்னை பாருங்க, இந்த வயித்தோடு மேடை ஏறி போனால் என் பிரண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க” என்று தன் மேடிட்ட வயிற்றை காட்டினாள்.​

“என் பிள்ளை உன் வயித்தில் இருக்கிறது உனக்கு அவமானமா இருக்கா நயனி?” என்றான் ஆழ்ந்த குரலில்.​

“ச்சே என்னங்க நீங்க இப்படி எல்லாம் பேசறீங்க. நம்ம ராகவ் வயித்துல இருந்தப்பவே எவ்வளவு கிண்டல் பண்ணாங்க தெரியுமா? இப்போ இரண்டாவது குழந்தை. நான் மேடை ஏறும்போதே எல்லாரும் சிரிப்பாங்க?” என்று சிணுங்கினாள்​

கணவனின் வழிகாட்டலில் நயனி எப்படியோ எந்த பாடத்திலும் தோல்வியடையாமல் நன்றாகவே படித்தாள். ஆனால் ஐந்தாம் வருடம் கடைசி செமஸ்டர் தானே என்று தற்காப்பு நடவடிக்கை எடுக்காமல் போகவும் இப்போது இரண்டாவது குழந்தை வயிற்றில். எக்ஸாம் எழுதும் போது மூன்று மாத கருவே வயிற்றில் இருந்ததால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.​

ஆனால் இப்போது ஏழு மாதம், வயிற்றை மறைக்க முடியாது என்பதால் கல்லூரிக்கு செல்ல கூச்சப்பட்டுக் கொண்டு அவனிடம் வரமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டு இருந்தாள்.​

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

சித்தார்த் அபிமன்யு பதில் சொல்லாமல் இப்போது மனைவியை அழுத்தமாக பார்த்தபடி நின்றிருக்கவும், வேறு வழியில்லாமல் எழுந்து தயாரானாள். மகேந்திரனும் சிவக்குமாரும் ஏற்கனவே கல்லூரிக்கு சென்று விட்டிருந்தனர்.​

மனைவி மகனுடன் தன் ரோல்ஸ்ராய்ஸ் காரில் வந்திறங்கிய சித்தார்த் அபிமன்யு, மகன் ராகவ் பிரசாத்தை கைகளில் தூக்கிக் கொண்டு, மறுகையில் மனைவியின் கரத்தை இறுக்கி பிடித்தபடி நடந்துச் சென்றான்.​

“வாங்க சித்தார்த், ஏன் இவ்வளவு லேட்” என்று கேட்டபடி வாசல் வரை வந்து வரவேற்றார் கல்லூரி முதல்வர் தயாளன்.​

நயனியின் மேடிட்ட வயிற்றை பார்த்தவர் சித்தார்த்தின் காதருகே வந்து, “என்ன டாக்டர் சித்தார்த்? உங்க மனைவிக்கு கல்லூரி பாடத்தோட காதல் பாடம் தான் அதிகம் எடுத்திருக்கீங்க போலிருக்கு. மனைவி படிப்பு முடியறதுக்குள்ள நீங்க டபுள் புரமோஷன் வாங்கிட்டீங்களே” என்று கலாய்க்கவும், சித்தார்த்தின் முகம் சிவந்து போனது.​

“அப்படியெல்லாம் இல்ல சார்” என்று திணறினான். கணவனின் திணறலை பார்த்தவள் பக்கென்று சிரித்து விட்டாள்.​

“ஏய் சோடாபுட்டி சும்மா இருடி” என்றான் அவள் காதருகே குனிந்து​

அவன் அப்படி சொன்னதும் கோபம் கொண்டவளாக அவன் இடையில் கிள்ளினாள். சித்தார்த் வலியில் முகம் சுருக்கி, உடலை திருப்பி மனைவியை முறைத்தான். அவள் எப்போதும் போல தன் நயனங்களால் கணவனை வசீகரமாக பார்த்தாள்.​

மனைவியின் மான்விழிப்பார்வையில் சிக்குண்டவனாய் சித்தார்த் அவளையே பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருக்கவும் தயாளன் தொண்டையை கனைத்தார்.​

“க்கும்,. சித்தார்த் நீங்க இரண்டு பேரும் வேணும்னா என்னோட ரூம்ல வெயிட் பண்ணுங்க. நேத்ராவோட டர்ன் வரும்போது உங்களுக்கு போன் பண்றேன், நீங்க பொறுமையா அழைச்சிட்டு வாங்க” என்றார்.​

“ஓகே சார்” என்று அவன் மனைவி மகனுடன் நடக்கவும், “உங்க மகனை என்கிட்ட கொடுங்க, உங்க அப்பா மகேந்திரன் சாரும் மேடையில் தான் இருக்காரு. அவர்கிட்ட கொடுத்திடுறேன்” என்று ராகவ் பிரசாத்தை வாங்கி கொண்டார்.​

ராகவ்வும் தாத்தாவின் பெயரை சொன்னதும், மறுக்காமல் அவருடன் சென்றான். சித்தார்த் மனைவியை அழைத்துக் கொண்டு, தயாளன் அறைக்கு சென்றான். “ஆனாலும் இந்த தயா சார் சூப்பர்டி, நமக்கு எப்போ எல்லாம் தனிமை வேணும்னு புரிஞ்சுட்டு உடனே செஞ்சு கொடுக்கிறார் பாரேன்” என்றபடி மனைவியின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.​

நயனியும் கணவனின் மார்பில் வாகாக சாய்ந்துக் கொண்டாள்.​

“அபி, என் கனவை நிறைவேற்றி கொடுத்திருக்கீங்க, ரொம்ப தேங்க்ஸ் லவ்யூ சோ மச்” என்றாள்.​

அவள் கன்னத்தை தன் கைகளில் ஆவேசமாக ஏந்தியபடி, “ஏன்டி முதல்முறையா லவ்யூனு சொல்றே, அதை வீட்டில் சொல்லக்கூடாதா? என்று கூறியபடி மனைவியின் இதழ் நோக்கி குனிந்தான்.​

அப்போது தயாளனிடமிருந்து போன் வந்தது. “நயனி, உன்னை வரச்சொல்ல தான் போன் பண்றாங்க, கிளம்பு” என்று அவளை அழைத்துக் கொண்டு விழா நடக்கும் அரங்கத்திற்கு சென்றான்.​

மேடிட்ட வயிற்றோடு நேத்ரநயனி மேடை ஏறவும் கீழே அமர்ந்திருந்த அவளுடைய கல்லூரி தோழர்கள் ஆரவாரத்துடன் கைத்தட்டி விசிலடித்தனர். “என்ன நேத்ரா, காலேஜ்ல ஸ்டடிஸ் முடிஞ்சும் பிராக்டிகல் கிளாஸ் முடியல போலிருக்கே” என்று ஒருத்தி சத்தமாக கிண்டல் செய்யவும் சித்தார்த் அவர்கள் அமர்ந்திருந்த பக்கத்திற்கு எதிரில் வந்து கைகளை கட்டியபடி அனைவரையும் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான்.​

உடனே அங்கிருந்த மொத்த ஸ்டென்ட்டுகளும் அமைதியாகி விட்டனர். இப்போது தான் நயனிக்கு நிம்மதியாக இருந்தது. மகேந்திரனின் கையால் தான் மருத்துவர் ஆனதற்கு சான்றாக இருந்த பட்டத்தை வாங்கிக் கொண்டு அவரிடமும் தன் தந்தையிடமும் ஆசி வாங்கினாள்.​

சிவக்குமாரின் நெஞ்சம் நெகிழ்ந்து போயிருந்தது. எப்படியோ இருந்த தன் மகளை இன்று மருத்துவராக்கி, அன்பான கணவனையும் அழகான குழந்தைகளையும் அவள் பெற்று இன்புற்று வாழ்வதற்கு காரணமான தன் நண்பனை ஆனந்த கண்ணீருடன் ஆரத்தழுவிக் கொண்டார்.​

“டேய் சிவா, எதுக்குடா இப்படி உணர்ச்சி வசப்படறே. எல்லாரும் பார்க்கிறாங்க பாரு” என்று நண்பனை கடிந்து கொண்டார் மகேந்திரன்.​

“பார்த்தால் பார்த்துட்டு போகட்டும் போடா. நீ மட்டும் இல்லைனா என் மகளோட வாழ்க்கை அந்த பாண்டி கையில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கும். உனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை மகி” என்றார் சிவா தழுதழுத்த குரலில்.​

“நான் கூட உனக்கு நன்றி சொல்லணும்டா, சரியான நேரத்தில் நேத்ராவை என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலைனா, அந்த எலிசாவை பத்தி முழுசா தெரிஞ்சுக்காமல், அவளை கல்யாணம் கட்டிக்கிறேன்னு வந்திருப்பான் என் மகன். எப்படியோ வழிமாறி போக இருந்த இரண்டுபேராட வாழ்க்கை, இப்போ அவங்க கல்யாணத்தால தான் சரியாகி இருக்கு. நாம இரண்டு பேரும் அந்த பாண்டிக்கு தான்டா நன்றி சொல்லணும். அவன் குடிச்சுட்டு விழுந்து கிடந்ததால தான் நம்ம பிள்ளைங்களுக்கு கல்யாணம் ஆச்சு” என்றார் மகேந்திரன்.​

கல்லூரியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்ததால் நேத்ரநயனியை சில வார்த்தைகள் பேச சொன்னார்கள், “என்னோட வெற்றிக்கு முழு காரணம் என் கணவர் டாக்டர் சித்தார்த் அபிமன்யு. அவரில்லாமல் நான் இல்லை. அவரோட சம்மத்ததோட ஏழை மாணவர்கள் யாருக்கெல்லாம் மருத்துவம் படிக்கணும்னு ஆசையா இருக்கோ, அவங்களுக்கு இலவச கோச்சிங் சென்டர் வச்சி கொடுக்க போறேன்.​

உண்மையிலேயே திறமையும் ஆர்வமும் இருக்கிறவங்களுக்கு மருத்துவம் படிக்க உதவியும் செய்வோம். சும்மா உதவி செய்திட்டு போக முடியாது இல்லயா? டாக்டர் படிச்சு முடிச்சதும் எங்களோட டிரஸ்ட் மூலமாக நடத்தற இலவச மருத்துவ முகாம்களுக்கு அவங்க இரண்டு வருஷங்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கணும்ங்கிற கண்டிஷனோட நாங்க உதவி செய்வோம். யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுதோ நலமுடன் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த விஷயத்தை உங்க பகுதியில் இருக்கும் நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் பகிருங்கள் நண்பர்களே” என்று நேத்ரநயனி பேசவும் கைத்தட்டலால் மொத்த அரங்கமே அதிர்ந்தது.​

“பாத்தீங்களா அப்பா உங்க மருமகளை? கண்டிஷனோட உதவி செய்யறளாம், மேடையில் என்னமா பேசறா? பார்க்கறதுக்கு தான்ப்பா அவ வெகுளி மாதிரி இருப்பா. ஆனால் அதி புத்திசாலி” என்றான் சித்தார்த் மனைவியை பார்த்து சிலாகித்தபடி.​

“என் மருமகள் என்னோட தேர்வாச்சே, அப்படி தான் இருப்பா” என்றார் மகேந்திரனும் பெருமையாக மீசையை முறுக்கிவிட்டபடி​

*********​

சித்தார்த் அபிமன்யு உடன் இணைந்து நேத்ரநயனியும் ஆஸ்பிட்டல் நிர்வாகத்தில் பொறுப்பேற்றாள். பெண்களுக்கான தனிப்பிரிவில் இன்டர்னாக பணியாற்றிக் கொண்டே மருத்துவமனையில் தேவையான மாற்றங்களை செய்தாள். அதே நேரம் மாதத்திற்கு ஒரு முறை ஸ்டாஃப் மீட்டிங் வைத்து அவர்களின் நிறை குறைகளை மட்டுமின்றி அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்தாள். எப்போதும் சுதாவை தோழியாகவே நடத்தினாள்.​

மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் போதே பிரசவ வலி வரவும், தன் இரண்டாவது குழந்தையையும் பெற்றெடுத்தாள். இப்போது பிறந்தது பெண் குழந்தை, அது சித்தார்த் ஆசைப்பட்டது போல நேத்ரநயனியை போலவே இருந்தது.​

ஆசையுடன் தன் மகளை தூக்கி முத்தமிட்டவன் நயனியை பார்த்து, “ரொம்ப தேங்ஸ்டி, நான் கேட்ட மாதிரியே பெண் குழந்தையை கொடுத்ததுக்கு” என்றான் வாஞ்சையுடன்​

“போங்க” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்​

“ஏன்டி?” என்றான் எதுவும் புரியாமல்​

“நம்ம ராகவ் பிறந்தப்ப, முதல்ல வந்து என் நெற்றியில் முத்தம் கொடுத்தீங்க. அப்புறமா தான் அவனை தூக்கி கொஞ்சனீங்க. இப்போ உங்க பொண்ணு தான் உங்களுக்கு முக்கியமா போயிட்டாளா? வந்ததும் நான் எப்படி இருக்கேன்னு பார்க்காமல் உங்க பொண்ணுக்கு முத்தம் கொடுக்கறீங்க?” என்றாள் உதட்டை சுழித்து.​

“என்னடி நயனி இப்படி சொல்லிட்டே?” என்றவன் அவசரமாக வந்து மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தான்.​

********​

அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் ராகவ் பிரசாத் ஆறுமாத குழந்தையான தன் தங்கை மிருதுளாவுடன் ஹாலில் விளையாடி கொண்டிருந்தான். மகேந்திரன் இருவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.​

எங்கேயோ வெளியே சென்றுவிட்டு வந்த சித்தார்த் மூவரையும் ஹாலில் பார்த்ததும், “ராகவ், எங்கேடா உங்க அம்மா?” என்று கேட்டான்.​

“அம்மா மாடி ரூம்ல இருக்காங்க டாடி, ஏதோ படிக்கணுமாம், என்கிட்ட பாப்பாவை பத்திரமாக பாத்துக்க சொன்னாங்க, அதான் நான் விளையாட போகாமல் இங்கேயே பாப்பாவை பார்த்துட்டு இருக்கேன்” என்றான் பெரிய மனுஷன் போல.​

அவன் சொன்ன தினுசில் மகேந்திரனும் சித்தார்த்தும் சிரித்தனர்.​

மகனிடம் குனிந்து “ராகவ் செல்லம், பாப்பாவை பத்திரமா பாத்துக்கோ, அம்மாவுக்கு பாடத்தில் எதாவது டவுட்னா சொல்லி தரணும். அதனால டாடி மாடிக்கு போறேன்” என்றான் ரகசியமாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.​

“ஓகே டாடி, நீங்க அம்மாவுக்கு கிளாஸ் எடுங்க, நான் பாப்பாவை பத்திரமா பாத்துக்கிறேன்” என்று சத்தமாக ராகவ் சொல்லவும் பதறிப்போனான் சித்தார்த்.​

சங்கடத்துடன் அவசரமாக தந்தையை நிமிர்ந்து பார்க்க, அவரோ கவனிக்காதது போல தன் போனை பார்த்துக் கொண்டிருந்தார். மகனின் கன்னத்தில் அவசர முத்தம் ஒன்றை பதித்து விட்டு மாடிப்படிகளில் தாவி சென்றான்.​

நேத்ரநயனி அப்போது தான் தலைக்கு குளித்து உடைமாற்றிக் கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஆற வைத்துக் கொண்டிருந்தாள்.​

சத்தம் போடாமல் வந்தவன் மனைவியை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டு அவள் கூந்தலின் வாசம் பிடித்தான்.​

மருத்துவமனையில் வேலையிருப்பதாக சொல்லி காலையிலேயே சென்றவன் திடீரென்று வந்து எதிர்பாராத நேரத்தில் அணைக்கவும் திகைத்து பக்கவாட்டாக திரும்பி கணவனை வியப்புடன் பார்த்தாள். அவன் கண்கள் காதல் மொழிகளை பேசவும், அகலமான தன் நயனங்களை இன்னும் விரித்து பார்த்தவளை மேலும் தனக்குள் இறுக்கினான்.​

அவளை ஆழ்ந்து பார்த்தபடி, “நயனி என்னை இப்படி வெறிச்சு பார்க்காதடி. இந்த மான்விழிக்குள்ள என்ன தான்டி வச்சிருக்கே? முதன்முறையா அன்னிக்கு ஆஸ்பிட்டல்ல உங்கப்பா வந்து இருக்கார்னு உன் தோளில் கையை வச்சப்ப, நீ அதிர்ச்சியோடயும் நடுக்கத்தோடயும் இப்படி தான் பார்த்தே. அன்னைக்கு இந்த பார்வையில் விழுந்தவன் தான்டி, கரை சேரவே முடியாமல் நயனி என்னும் நதிக்குள் மூழ்கிபோயிட்டேன்” என்று கிசுகிசுப்பாக சொல்லியபடி அவள் கழுத்துவளைவில் முகம் புதைத்தான்.​

திருமணம் ஆகி ஆறு வருடங்களுக்கு மேலாகியும் கணவன் இப்போதும் புதிதாக அவளை பார்ப்பது போல ரசனையுடன் அவளை வர்ணிப்பதும், அணைப்பதும், அணுகுவதும் நயனிக்கு மிகவும் பிடித்திருந்தது.​

“என்னங்க” என்றாள்​

“என்னடி” என்றான் கழுத்து வளைவில் இதழ் பதித்தபடி​

“எல்லாரும் நம்மளை தான் பார்த்துட்டு இருக்காங்க” என்றாள் மெல்லிய குரலில்.​

“கதவை சாத்திட்டு தானே வந்தேன்! மறுபடியும் யாருடி பூஜை வேளையில் க….?” என்று பதறிப்போய் சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த அறையில் யாருமில்லாததை பார்த்து மனைவியை முறைத்தான்.​

“அங்கே இல்லைங்க, இதோ நம்ம கதையை படிச்சுட்டு இருக்கிறவங்க தான், நம்மளையே கவனிச்சுட்டு இருக்காங்க” என்றாள் மெல்லிய குரலில்.​

“ஆரம்பத்திலிருந்து நம்ம பிரச்சனையை தெரிஞ்சவங்க, அவங்களே நமக்கு தனிமை கொடுப்பாங்க. நீ கவலைபடாதே” என்றபடி மனைவியின் கண்களோட தன் கண்களை கலக்கவிட்டான் சித்தார்த் அபிமன்யு.​

சித்தார்த் அபிமன்யு நேத்ரநயனியின் அழகிய நயனங்களில் வீழ்ந்தவன் கரைசேர விருப்பமில்லாமல் தன் காதல் பயணத்தை அவளுக்குள் தொடர்ந்து கொண்டே இருப்பான்.​

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் - பாரதிதாசன்

இதில் சித்தார்த் அபிமன்யு மட்டும் விதிவிலக்கா என்ன? சித்தார்த்தும் மனைவியின் மான்விழி பார்வையில் சிக்குண்டதால் காதலில் மட்டுமல்ல வாழ்க்கையில் அவன் சாதிக்க போகும் சாதனைகள் ஏராளம். அவர்களையும், இக்கதைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து வாசக செல்வங்களையும் வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வித்தியாசமாக கதைக்களத்தில் மீண்டும் சந்திப்போம், நன்றி! வணக்கம்!​

சுபம்!​

 

Attachments

  • Maan-T24.jpeg
    Maan-T24.jpeg
    238.7 KB · Views: 0
Last edited:
Status
Not open for further replies.
Top