ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனசுக்குள் மந்தாகினி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 25

அன்று இரவு பாண்டியன் அவன் அம்மா வீட்டிற்கு வரும்போது மணி பதினொன்றை கடந்திருந்தது. வாசலில் கட்டிலை விரித்து பரஞ்சோதி படுத்திருக்க, திண்ணையில் அமர்ந்து அவருடன் வம்பளந்து கொண்டிருந்தார் வாசுகி.

அவன் பைக் சத்தத்தில், "அப்பாடி வந்துட்டான். மனுஷனுக்கு காது தேய்றளவுக்கு பேசுதா. எந்துச்சு போய் உன் மூத்த புள்ளைய கவனி போ" என விரட்டியவர் அவன் உள்ளே வரும் முன் போர்வையை தலையோடு சேர்த்து மூடி படுத்துக் கொண்டார். விழித்திருப்பது தெரிந்துவிட்டால் நின்று விடுவான். அடுத்து அவன் பேச்சை வேறு கேட்க வேண்டுமே என்ற பயம் அவருக்கு.

"பொண்டாட்டி பேச்சு அம்புட்டுக்கு கசக்குதோ? தொடுப்பு கிடுப்பு வச்சுகிட்டீகளோ நா உங்களுக்கு அதுக்குள்ள சலிச்சு போயிட்டேன்?" என வாசுகி சொல்லவும்,

"வாய கழுவுடி, உன் மவேன் வரவும் வேணும்னு ஒரண்ட இழுத்து விட பாக்கியோ? உன்ன கல்யாணம் பண்ணிட்டு அவஸ்த படுறது பத்தாதுன்னு இன்னொருத்தி வேற தேவதானா எனக்கு? கூறில்லாதவ கணக்கா எதையாவது உளறி அவேங்கிட்ட என்ன மாட்டிவிட்டுபுடாத சொல்லிட்டேன். தூங்க விடாம தலமாட்டுல உக்காந்து வசவா வஞ்சுட்டு இருந்துட்டு அத நா கேக்கலன்னு வேற மூஞ்ச தூக்குதவ போடி" என முனங்கலாக திரும்பிப் படுத்தார்.

"என்னம்மா? தூங்க வேண்டிய தான?" என வந்தவன் ஷுவை கழற்றியவாறு தகப்பன் படுத்திருந்த தோரணையை பார்த்தான். அதிலேயே அவர் இவனைக் கண்டுவிட்டு தான் தலையை மூடி இருக்கிறார் என புரிய, "இப்ப நா என்ன செஞ்சுருவேன்னு இப்படி படுத்துருக்கீங்கப்பா? தப்பு எதும் செஞ்சீங்களா? தப்பு செஞ்சவன் தான் போலீஸ்காரன பாத்து ஒளிஞ்சுக்குவான்" என்றான் அவர் தலைமாட்டில் நின்று இடுப்பில் கைவைத்து.

"அதத்தேன் நானும் கேட்டேன் மூத்தவனே. என்னைய கண்டாலே ஆவாதுங்கறாக, நா பேசுனாக்க எரிச்சலா வருதாம். என்னன்னு கேளுடா மூத்தவனே" என்றதும் பட்டென்று எழுந்து விட்டார்.

"இன்னைக்கு நெறைய வேலையப்பு. காலைல கொல தள்ளிருக்க வாழை எல்லாத்தையும் வெட்டி மார்க்கெட்டுக்கு ஏத்தி விடணும். அதுக்கு நா சீக்கிரம் போவணும் தூங்க விடுட்டின்னு சொன்னேன். உங்கம்மா அதுக்கு என்னைய போட்டு அரைமணிநேரமா தாளிச்சு கொட்டுதா"

"வேலைக்கு ஆள் வச்சு பாக்க வேண்டியது தான? இல்லனா அரசுவ அங்க கொஞ்சம் நிக்க சொன்னா என்னப்பா?" என்றான் இவன்.

"அவேன்ட்ட சொன்னாக்க அவேன் பொழப்ப நா பாக்கட்டுமான்னுல கேக்கியான்"

"முடியலன்னா குத்தகைக்கு விட்டுட்டு பேசாம இருங்க"

"விவசாய லோனு வாங்கி உங்கப்பா புதுசா இடம் வாங்கி போடுதாக நீ என்னன்னா எவனுக்கோ கூலிய குடுக்க சொல்லுத?" என்றார் வாசுகி,

"எம்மா எல்லா பக்கமும் பேசாத சொல்லிட்டேன். ஒன்னு அவுகள வேலை பாக்கவிடு இல்லயா யார்டையாது மாத்திவிட்டுட்டு காச வாங்கிட்டு காலாட்டிட்டு இருங்க, சும்மா போட்டு படுத்தக் கூடாது"

"நா சொன்னா எங்க கேக்குறா நீயே சொல்லு" என்றார் பரஞ்சோதி.

"இங்க பாரு மூத்தவனே இப்போதைக்கு கல்யாண சோலி நிறைய கடக்கு. அத மொத பாக்க சொல்லு. உனக்கு கல்யாணம் முடிஞ்சு சீர் வரிசைய ஏறகட்டுனப்றம் காட்டுலயே கூட உங்கப்பா குடி இருக்கட்டும் நா ஏன்னே கேக்க மாட்டேன் சொல்லிபுட்டேன்"

"ஏன்ப்பா கல்யாண வேலைய பாக்க மாட்டேனீங்களா?"

"சொல்ல விட்றுவாளா உங்கம்மா? பொண்ணு வீட்டுக்காரங்க வழில முக்கியமான ஆளுங்களுக்கு நம்ம வீட்ல இருந்தும் ஒராளு அவங்க கூட போவணுமாம். என்னைய போங்கன்றா, நா நீதேன் நல்லா பழகுத நீயே போய்ட்டு வாங்குறேன். வேற எதையும் நா செய்ய மாட்டேன்னே சொல்லல"

"என்னையால ஒவ்வொரு ஊருக்கா பஸ்ஸுல ஏறி இறங்க முடியுமா இங்க பேர புள்ளைகள ஆரு பாக்கன்னு கேட்டு சொல்லு மூத்தவனே"

"ரெண்டு பேரும் உள்ள வாங்க" என்றவன் வேகமாக அவனறைக்கு சென்று அவசர குளியலிட்டு மாற்றுடைக்கு மாறி வந்து சாப்பிட அமர்ந்தான்‌. பரஞ்சோதி வாயை கொடுத்து விட்டோமே என பாவமாக அமர்ந்திருக்க, மகனுக்கு சாப்பிட அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் வாசுகி.

"கட தெருவுல எங்கையும் கவிச்சு சாப்படாத மூத்தவனே, இனி கல்யாணம் முடியுற வரை காய்கறிகதேன் சாப்புடணும்"

"நேத்து மத்தியானம் கூட மட்டன் பிரியாணி சாப்டேனே?"

"ஆத்தி, இனி சாப்புடாதய்யா, இதேன் காத்து கருப்பு அண்ட கூடாதுன்றது பாத்தியா உன்ன இப்படிலாம் மாட்டிவிட பாக்கும். ஆமா மருமவட்ட குடுத்துவிட்ட கயிற எங்க? கைல காணும்?"

"அத உன் மருமகட்டயே கேளு. இப்ப என்னன்ன வேலை இருக்கு வரிசையா சொல்லு‌"

"பத்திரிகை வைக்க ஆரம்பிக்கணும், நம்ம வீட்டு சார்பா அவுக சொந்தகாரங்களுக்கு நம்ம போய் வைக்கணும் நம்ம வலசலுக்கு அவங்க சார்பா யாராவது வந்து வைக்கணும். அப்றம் குலதெய்வ கோவில்ல பூசைக்கு குடுத்து ஒரு கல்யாண பொண்ணுக்கு வாங்குற எல்லாத்தையும் நம்ம ஆத்தாளுக்கும் வாங்கி மருமவ கையால கல்யாணத்துக்கு முன்ன கொண்டு குடுக்கணும். புது உடுப்பெடுக்கணும், தாய்மாமன் முறை செய்யணும், மண்டபத்த ஓரெட்டு நீ பாத்துரு, அங்க என்னன்னலாம் அலங்காரம் பண்ணணும்னு சொல்லணும், அப்புறம் சாப்பாட்டுக்கு சொல்லணும். மீனாட்சி அம்மன் சன்னதில வச்சு கல்யாணம் நடக்க, கோவில்ல அனுமதி வாங்கணும். மருமவளுக்கு தாலி அது கோர்க்க செயினு, அட்டிகை, கொலுசு, மெட்டி, மோதிரம், எல்லாம் எடுக்கணும். ஐயருக்கு சொல்லணும். கல்யாணத்துக்கு நீ ஒரு பத்து நாளு லீவும் சொல்லணும்" என அவர் பேசி முடிக்கையில், பரஞ்சோதி சோஃபாவில் சாய்ந்து தூங்கியிருந்தார், பாண்டியன் சாப்பிட்டு முடித்திருந்தான்.

"சரி காலைல அவனுங்க ரெண்டு பேரையும் ஏழு மணிக்கு எழுப்பி விட்ரு, அப்பாவையும் அந்நேரம் வீட்ல இருக்கமாதிரி பாத்துக்கோ. பேசிடுறேன் நானு" என்றுவிட,

"சரிய்யா" என்றவர், விஷயத்தை மகனிடம் ஒப்படைத்த விட்ட சந்தோஷத்தில் தூங்கச் சென்றுவிட்டார்.

இவனும் அறைக்கு வந்தவன், தூங்கும் முன் பழக்கமாக மரகதவல்லிக்கு அழைத்தான், எடுத்தவள் தெளிவாக, "சொல்லுங்க" என்கவும்,

"ஹாய் மரகதம் தூங்கல?"

"இல்ல கொஞ்சம் வேலையா இருக்கேங்க" பவ்யமான பதில்,

"என்ன வேலையா இருக்க?"

"நாளைக்கு ஒரு கேஸ் ஹியரிங் இருக்கு, பாயிண்ட்ஸ் எடுக்குறேன்"

"அத பத்து மணிக்கு முன்ன எடுத்து பழகு மரகதம்"

"பனிரெண்டு மணி வரை தூக்கம் வராதுங்க எனக்கு, வேலை பாத்துட்டு தான் படுப்பேன்"

"பனிரெண்டு மணி வரை முழிச்சுருக்கறது நல்லது தான், ஆனா உன் வேலை பத்து மணிக்கு முன்ன முடிச்சுக்கணும் புரியுதா?" என்றான் குதர்க்கமாக,

"இப்ப புரிஞ்சுட்டுங்க" என்றுவிட்டாள் உடனேயே, அவளைதான் சார்ஜ் எடுக்குமுன் ட்ரைனிங் முடிப்பது போல் தினமும் மூன்று வேலை படுத்துகிறானே, அதில் தேறியிருந்தாள்.

"ஸ்மார்ட் மரகதம்"

"தேங்க்ஸ்ங்க"

"அப்றம் நம்ம கல்யாண வேலைலாம் எப்டி போயிட்ருக்கு?"

"நல்லா போகுதே. ஆடி பெருக்கு அப்றம் எல்லாம் வேகமா ஸ்டார்ட் பண்ணிடுவாங்க நினைக்கிறேன்"

"பண்ணட்டும் நீ எந்தளவுல ரெடியாகிட்ருக்க மரகதம்?"

"இப்பவே நா என்ன ரெடியாகணுங்க?"

"ஆய கலைகள் அறுபத்தி நான்காம் மரகதம், அத்தனையும் படிக்க நேரமெடுக்கும்ல?"

"ஏங்க?"

"உடனே ஏங்க ஆரம்பிச்சுருவியே நீ?"

"ஆமாங்க"

"உனக்கு ஒரு வேலையும் இல்லல?"

"ம்ம்கூம் கோர்ட்ல இன்விடேஷன் குடுப்பேன். ஃப்ரண்ட்ஸ்கெல்லாம் ஃபோன்ல தான்" என்றாள் சுருக்கமாக,

"நல்லது தான் நல்லா ரெஸ்ட்டு எடுத்துகிட்டாதான் ஃப்ரஷா இருக்கலாம்"

"ஆமாங்க"

"வேறெதுவும் என்ட்ட சொல்லணுமா மரகதம்?" என்றவன் கேள்வியில் திருதிருத்தாள். அவ்வளவு நேரமும் அவனை எளிதாக சமாளித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கெத்தில் அமர்ந்திருக்க ஒரே கேள்வியில் அவளை தரை இறக்கினான்.

"அன்னைக்கே கேட்டேன் சொல்லல. இப்ப என்ன நல்லா பழகிட்டியே இப்ப சொல்லலாம்ல? அப்படி எதாவது என்ட்ட சொல்ல இருக்கா மரகதம்?"

பதட்டமாக இங்குமங்கும் நடந்தாள், சொல்லவும் தோன்றியது வேண்டாம் என்றும் தோன்றியது. அவன் தெரிந்து கேட்கிறான், போட்டு வாங்குகிறான் என மனம் அடித்து சொன்னது. ஆனாலும் சொல்ல பயந்தாள் அவள்.

திருமணம் முடிந்த பிறகு சொல்லி கொள்ளலாம் என்ற முடிவில் "இல்லங்க" என்றுவிட்டாள்.

"ரைட். குட்நைட் மரகதம்" என்றவன் வேறு பேச்சின்றி வைத்துவிட்டான், அதில் இன்னும் வெலவெலத்து விட்டாள் மரகதவல்லி. ஆனால் அவன் வேறோரு அழைப்பு வந்ததால் தான் துண்டித்தான்.

"என்னாச்சு டாக்டர்?" என்றான் எதிர் முனையிலிருந்தவரிடம்.

"மூணு டெட்பாடில இருந்தும் எடுத்த முடி ஒரே ஆளோடது தான். ஏஜ் ஒரு ட்வன்டி ஃபைவ் டூ தேர்ட்டி ஃபைவ் குள்ள இருக்கலாம். டிஎன்ஏ டெஸ்ட் வச்சு பாக்கும்போது இது ஒரு ஃபீமேல் ஹேர்தான்னு ட்வன்டி ஃபைவ் பெர்சன்ட் சொல்லலாம்"

"அப்ப கன்ஃபார்ம் இல்லையா?"

"ம்ம்கூம் அதுக்கு இன்னும் கொஞ்சம் சேம்பிள்ஸ் வேணும் ப்ளஸ் பிஃப்டீன் டேஸ்னாலும் டைம் வேணும்"

"ஓகே தென். பாத்துக்கலாம் டாக்டர் தேங்க்ஸ்"

"இனி இத வெளில சொல்லுவீங்களா?"

"என்னன்னு தெரியாம எதுக்கு சொல்லணும்? நா தேடுறது கொலைகாரனா கொலைகாரியான்னு தெரிஞ்சுக்க தான் ரகசியமா இத செய்ய சொன்னேன். இதையே நம்பவும் முடியாது நம்மள குழப்பி விடணும்னு கூட எவனோ கொண்ணுட்டு சவுரி முடில நாலு முடிய செத்தவனுங்க காலுல கட்டிவிட்டுட்டு போயிருக்கலாம். சிக்குவான்ல எப்படியும் பாத்துக்குலாம்" என்கவும்.

"ஓகே சார்" என வைத்துவிட்டார் அந்த தடயவியல் நிபுணர். முதல் பிரேதத்திலேயே பெருவிரல் இரண்டையும் இணைத்து முடிவைத்து கட்டிதான் ஹைவேயில் போட்டிருந்தனர், தடயவியல் நிபுணரிடம் அதை காட்டி பத்திரபடுத்திவிட்டான், அதுவே அடுத்த இரு பிரேதத்திலும் இருக்க, அவரே தனியாக எடுத்து வைத்துக்கொண்டார். மூன்றிலும் வித்தியாசமாக இருந்த ஒன்று அது தான், வேறெந்த தடயங்களும் கிடைக்கவில்லை, அந்த முடியும் கூட கொலை செய்பவன் அவர்களுக்காக கொடுத்துச் சென்றது தான்.

அதை பேசிவிட்டு இவன் யோசனையில் இருக்க, மரகதம் மீண்டும் அழைப்பில் வந்தாள், புருவம் சுருக்கி பார்த்தவனுக்கு சற்றுமுன் அவளிடம் பேசிவிட்டு வைத்தது ஞாபகம் வர கூடவே உல்லாச சிரிப்பும் வந்தமர்ந்தது.

"மரகதம்?"

"பிஸி ஆகிட்டீங்களா?"

"ஒரு ஃபோன் மரகதம். நீ என்ன திரும்ப கூப்பிட்ருக்க, மாமாவ ரொம்ப தேடுதோ?"

"இல்ல நீங்க கோவமா வச்சமாதிரி இருந்தது?"

"அப்டியா வச்சேன்? லாஸ்டா என்ன பேசிட்ருந்தோம்?"

"இல்ல எனக்கு தூக்கம் வர்ற மாதிரி இருக்கு. நீங்க கோவமோன்னு கேட்க தான் கூப்டேன். நா வைக்றேங்க" என வைத்துவிட்டாள், இவன் சிரித்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் இவன் எழுந்து வருகையிலேயே, வரவேற்பறையில் எல்லோரும் தயாராக காத்திருந்தனர், அதிலும் தம்பிகள் இருவரிடமும் இருந்த அதீத பவ்யம் அவன் மரகதத்தைத் தான் ஞாபகப் படுத்தியது.

'அம்புட்டும் ப்ராடுங்க தான்' என நினைத்துக் கொண்டே தான் வந்தமர்ந்தான்.

"வேலை எப்டிறா போகுது ரெண்டு பேருக்கும்?"

"நல்லாதான் போகுதுண்ணே" என அரசு சொல்ல, பாண்டியன் வரதனைப் பார்த்தான், "பிரச்சினை இல்லண்ணே",

"லீவெடுக்குறதுல எதுவும் பிரச்சினை இருக்கா?"

"இல்ல இல்ல, லீவு உன் கல்யாணத்த ஒட்டி எடுக்கணும்னு இருக்கேன்"

"கல்யாண வேலை எதும் செய்ய முடியுமா உங்க ரெண்டு பேருக்கும்? நேரம் இருக்குமா?" அவன் அப்படி கேட்டதும் இருவரும் உண்மைக்கும் பதறவே செய்தனர், அம்மாவிடம் ஏட்டிக்குப் போட்டி பேசினாலும், அவனை விட்டுக் கொடுக்கும் எண்ணம் இருவரிடமும் இருந்ததில்லை. அவன் பெரிய பதவி பார்த்து பயமும் அதிகம் தான். இது அவன் கல்யாணம் என்பதால் தான் கேட்டுக் கொண்டிருக்கிறான், இதே அம்மா அப்பாவிற்கு செய்வதில் எதும் குறை என்றால் சற்றும் யோசிக்காமல் பேசிவிடுவான். சிறுபிள்ளையில் அடிதடி என்று வளர்ந்தவர்கள் தான், அவன் காவல்துறையில் நுழைந்த பின்னர் தான் அப்படியே ஒதுங்கிவிட்டான், இவர்களும் ஆம் இல்லை என நின்று கொண்டனர்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 26

"இல்ல முடியாதுன்னா, உங்களுக்கு டைம் இல்லனா எனக்கு சொல்லணும், நா வேற ஆளுங்க ஏற்பாடு பண்ணுவேன். எப்டி பண்றதுன்னும் டிசைட் பண்ணுவேன்"

"பண்ணுவேன்னு சொல்லுங்க" என வாயசைத்துக் காண்பித்தாள் ஷீலா அவனெதிராகவும், பாண்டியனுக்கு பின்னால் தள்ளியும் நின்று கொண்டு.

"என்னண்ணா பண்ணணும் சொல்லுங்க நாங்க பண்ணுவோம்?" வரதன் சொல்லுமுன் கேட்டிருந்தான் அரசு,

"இத நானா கேட்டாதான் சொல்லுவீங்களாடா?" என்றான் பாண்டியன்.

"இல்லண்ணா, அம்மா சொல்றதுலாம் ஒன்னொன்னா பாத்துட்டு தான் இருக்கோம்" என்றான் வரதன்

"ம்ம் சரி எனக்கும் டைமாகிட்டு, நீங்களும் கிளம்பணும்ல? பேசி முடிச்சுடலாம். கோவில்ல நா பேசிடுறேன். மண்டபம் நா ஃபைனல் பண்ணிடுறேன். முந்தின தினம் நிச்சயம், மார்னிங் மேரேஜ்னு டூ டேஸ்கு புக் பண்ணிடுறேன். குலதெய்வம் கோவிலுக்கு லேடீஸ் போய்ட்டு வந்திடுங்க. அப்பா நீங்க பொண்ணு வீட்ல இன்விடேஷன் வைக்க போங்க, அந்த டேஸ்ல இங்க காட்ல அரசு நின்னுப்பான். லோக்கல்ல ஈவ்னிங் மேல வரதன் அம்மாவ கூட்டிட்டு போய் பத்திரிகை வைக்கட்டும். அம்மா அப்பா நீங்க சேர்ந்து வைக்றது கார்ல போய் வச்சுட்டு வாங்க, குட்டீஸ் கூட வச்சுக்கலாம். சனிக்கிழமை எல்லோரும் வாங்க பர்ச்சேஸ முடிச்சிடலாம். சாப்பாடு மூணு நாளுக்கும் நா ஆளனுப்பிடுறேன் அவங்க பாத்துப்பாங்க, மொத்த கேட்டரிங் சர்வீஸும் அவங்களே பாத்துப்பாங்க. நீ மெனு மட்டும் குடுத்திடும்மா" என்றவன், "வேறென்னம்மா?" என கேட்டு அவரைத் திரும்பிப் பார்க்க,

"அம்புட்டுதேன் ஆளுக்கொன்னா பிரிச்சுட்டியே முடிஞ்சதுய்யா"

"அப்ப சரி, நா குளிச்சுட்டு வரேன், கிளம்பணும், சனிக்கிழமை எங்க வரணும்னு சொல்லுங்க ஃப்ரீனா வந்துடுவேன், போட்டு அவகிட்ட சொல்லி என்ன அனத்தக் கூடாது, உனக்குதாம்மா முக்கியமா சொல்றேன்" எனப் போறப் போக்கில் அவளை இழுத்துவிட்டு விட்டே சென்றான்.

முதல்நாள் அந்த மூன்று மாணவர்களின் பெற்றோரும் கமிஷனரை சந்தித்துப் பேசியிருக்க, "ஏசிபிய பகைச்சுட்டு உங்க மூணு பிள்ளைகளையும் கொலைகாரன்ட்ட தூக்கிக் குடுக்கப் போறீங்களா? வருசையா கொலை பண்ணிட்ருந்தவனையே நிப்பாட்டி உங்க புள்ளைங்கள காப்பாத்தி வச்சுருக்காரு. பிள்ளைங்க பத்திரமா இருக்கணும்னா அவர் சொன்னபடி தான் நடந்துக்கணும் போங்க" என்றுவிட்டார்.

ஆனால் அவர்களுக்கான பாதுக்காப்பு காவல் நீக்கப் பட்டிருக்க, திரும்பி செல்லும் வழியில், ஜுஸ் கடையில் வைத்து, அத்தனை பெற்றோரும் இருக்க, மிச்சமிருந்த மூவரில் ஒருவனை, அதும் கழிப்பறை சென்றவனை அங்கிருந்தே முகத்தை மறைத்து மயங்க செய்து தூக்கிச் சென்றிருந்தனர், கழிப்பறை வாசலில் நின்ற மற்ற இரு மாணவர்களையும் கடந்து தான் அவனைக் கொண்டு சென்றிருந்தான் அந்த மாயவன்.

"அய்யோ என் மகன்" என அடித்துபிடித்து திரும்பி வந்தபோது, கமிஷனர் அவர்களைத் திட்டவே செய்தார், மறுபடியும் தேடுதல் வேட்டை, இருநாட்கள் அதில் தான் சென்று கொண்டிருந்தது. இன்னும் பிரேதமும் வந்து சேரவில்லை.

புதன்கிழமை காலை அவனை நீதிமன்றத்திற்கு நேரிலேயே வரவழைத்தனர். தொடர் கொலை வழக்கு எந்த அளவில் விசாரணையில் இருக்கிறது என நீதிபதி முன் ஒப்புதல் தர ஜீவானந்தம் அழைத்து வர சொல்லி சொல்லிவிட்டார்.

"தேவைனா கால் பண்றேன் கோர்ட்டுக்கு வந்துடுங்க பரத்" என்றவன் அவன் பைக்கில் கிளம்பிவிட்டான், நீதிபதிக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதை விட அங்கிருக்கும் அவனது மரகதத்திடம் சிறிது வம்பிழுத்துவிட்டு வரலாம் என குதூகலமாக கிளம்பிவிட்டான்.

அவன் சென்ற நேரம், நீதிபதி முன் தான் ஒரு கேஸ் ஹியரிங்காக நின்றாள், "இல்ல சார், இவர் தான் செஞ்சுருக்காரு, பொண்டாட்டி மேல சந்தேகம், கல்யாணம் ஆன நாள்ல இருந்தே அந்த பொண்ண அடிச்சு துன்புறுத்திருக்காரு, இதோ அந்த பொண்ணு உடம்புல இருந்த மார்க்ஸ்கான ஆதாரங்கள். சரியான சைகோ சார் இந்த விக்டிம்" என எதிரில் நின்றவனை எரிப்பது போல் முறைத்தவாறு பேசிக் கொண்டிருந்தாள். அதற்கான தீர்ப்பு மறு வாரத்திற்கு ஒத்திவைக்கபட்டு, அடுத்ததாக இவன் அழைக்கப்பட்டான்.

இவன் பேரைக் கேட்டதும் பட்டென்று திரும்பிப் பார்த்தாள், அவனை இன்று வரவழைத்திருக்கின்றனர் என அவளுக்குத் தெரியும், ஆனாலும் தன்னிடம் சொல்லி விட்டு வருவான் என எதிர்பார்த்திருக்க, இவ்வாறு திடீரென வந்து அமர்ந்திருப்பவனைக் கண்டு விழித்தாள். அவன் வந்திருப்பதாலேயே மற்ற வழக்குகள் கொஞ்சம் தாமதமாக நடக்க தள்ளிவைக்கபட்டு, இவன் அழைக்கப்பட்டான்.

ஜுவானந்தனும் வேகமாக வந்து நீதிபதி முன் நின்றார், இவனும் எழுந்து சென்று நிற்க, "கொலை கேஸ் முடிஞ்சுடுமா ஏசிபி சார். நாங்க தான் வாய்தா வாங்குவோம்னா நீங்களும் வாங்குறீங்களே?" என்றார் நீதிபதி சகஜமாக.

"முடிச்சுடலாம் சார்" என்றவன், அவன் சேகரித்த ஃபைலை கொடுத்துவிட, வாங்கிக் கொண்டார்.

"எவ்வளவு நாள் டைம் வேணும்?" என அவனிடமே அவர் கேட்க,

"நா கேஸ முடிக்குற வரைக்கும்னு வச்சுக்கோங்க"

"மகிழ்?" என அவர் செல்லமாக முறைக்க,

"எதுக்கும் என் பொண்டாட்டிய ஒரு வார்த்தை கேளுங்க, நைட்டு பகல்னு அவகிட்ட தான் கடலை போடுறேன், போனை வைக்க விட மாட்டேங்குறா, அவ மனசு வச்சா சீக்கிரம் முடிச்சுடுவேன்னு நினைக்கிறேன்" என்றான் நக்கலாக. அதில் அருகில் நின்றவள் நெஞ்சில் கைவைத்து விட்டாள் என கண்டு கொள்ளவில்லை அவன்.

"கல்யாணமா? சொல்லவே இல்ல நீ? எப்போ மகிழ்? எனக்குலாம் இன்வைட் உண்டா?" என்றார் சந்தோஷமாக அவன் முகம் பார்த்து.

"பொண்ணு சைடே வரும் சார்"

"பொண்ணு யாரு?" என்றார் இப்போது சந்தேகமாக, ஜீவானந்தம் இருவரையும் சிரித்தவாறு பார்த்திருக்க, 'பே' என அதிர்ந்து நின்றிருந்தாள் மரகதவல்லி.

"இதோ மரகதவல்லி, உங்களுக்கு மேகின்னு சொன்னா தெரியும்னா மேகி"

"மேகி நீ கூட சொல்லல? சூப்பர் செலக்சன் மகிழ், தப்பிக்கவே முடியாது பாய்ண்ட் பாய்ண்ட்டா பேசுவாங்க மேடம். சாதா பொண்டாட்டியே வக்கீல் மாறி பேசுவாங்க நீ வக்கீல் பொண்டாட்டியவே கட்டுற ஜாக்ரதை மேன்" என சிரிக்க,

"கொஞ்சம் பயமா தான் இருக்கு சார்" என அவன் சொன்னதைக் கேட்டு அவர் இன்னும் சிரித்தவர், "பயப்படுற ஆள் தான் நீ. கல்யாணத்துக்கு முன்ன கேஸ முடிச்சுட்டு ஃப்ரீயா என்ஜாய் பண்ணு மகிழ்"

"அதுக்கு தான் ட்ரை பண்ணிட்ருக்கேன் முடிச்சுடுவேன்னு நினைக்கிறேன்" என்றான் இப்போது கொஞ்சம் தீவிரமாக.

"சீக்கிரம் மகிழ். இல்லனா சிபிஐ போக நானே ரெஃபர் பண்ணிடுவேன்"

"அது உங்க இஷ்டம்" என்றவன் சல்யூட் வைத்து தலையசைத்துக் கிளம்பி வெளிவந்தான்.

வேகமாக பைக் எடுக்கச் சென்றவனின் முன் ஓடி வந்து நின்றாள். அவள் வருவாள் என தெரியுமே அவனுக்கும். திரும்பிப் பார்த்தான் ஓரிருவர் அவர்களைத் தான் பார்த்திருந்தனர்.

சட்டென்று அவளின் முன் நின்றவன், "கயிறு கட்டிவிட போறியா மரகதம் இவ்வளவு வேகமா ஓடி வந்துருக்க, ப்ளீஸ் கொஞ்சம் மெதுவா மூச்சு வாங்கு, என் ஐ சைட் டவுனாகவே ட்ரை பண்ணுது, பப்ளிக் ப்ளேஸா இல்லனா தாராளமா இருந்துருக்கும்" என படபடவென பேசியவனை,

"ஏங்க ப்ளீஸ்" என கையை குவித்து கெஞ்சியே அமைதியாக்கினாள்‌.

அதில் பைக்கில் சாய்ந்து வசதியாக நின்று கொண்டவன், "சரிங்க நீங்க சொல்லுங்க" என கேட்க,

"ஜட்ஜட்ட ஏங்க அப்டி பேசுனீங்க?"

"அவரு எனக்கு பிஸிக்கல் ட்ரைனிங் அப்போ க்ளாஸ் எடுத்தவர்டி, நல்லா தெரியும் பேசாம வர முடியுமா?"

"நா அத கேக்கலன்னு உங்களுக்கு தெரியும். உங்க கேஸ நா பாக்க விடாம பண்றேனா?"

"அவர் கூட தான் உன் பொண்டாட்டி பேசியே கவுத்துருவான்னு சொன்னாரு, நீ ஏங்கங்க முடியலங்கன்னு மட்டுந்தான பேசுற?"

"உங்ககிட்ட பேச முடியாதுன்னு அவருக்கு தெரியாதுல்லங்க? சரி அத விடுங்க இங்க வரேன்னும் சொல்லல நீங்க?"

"எதிர்பாத்தியா மரகதம்? நா திடீர்னு வந்து நின்னா நீ எப்டி முழிக்குறன்னு பாக்க தான் சொல்லாம வந்தேன், ஆனா மொத நாள் எப்டி முழிச்சியோ அப்டியேதான் இன்னைக்கும் முழிச்ச. ஏன்?"

'அன்னைக்கு ஐயோ ஏசிபின்னு பயந்தேன் இன்னைக்கு அச்சோ ஏசிபின்னு பயப்டுறேன் அம்புட்டு தான் வித்தியாசம்' என நினைத்துக் கொண்டு, "தெரியலங்க" என்றாள் அவனிடம் பவ்யமாக.

"நக்கல்டி உனக்கு. மொத்தமா என்கிட்ட வருவல்ல அப்றம் வச்சுக்குறேன்டி உன்ன" என சொல்லிக் கொண்டிருக்கையிலேயே போன் வந்துவிட்டது அவனுக்கு.

"சொக்கு?"

"சார் டெட்பாடி கிடைச்சுட்டு"

"எங்க இருந்தது? அடுத்து எப்டி அந்த இடத்துக்கு வந்ததுன்னு செக் பண்ணுங்க? நா கிளம்பிட்டேன்" என்றவன் பைக்கைக் கிளப்பிவிட்டு, திரும்பி அவளுக்கு கண்சிமிட்ட,

"ஃபோனை வச்சுட்டு ட்ரைவ் பண்ணுங்க" என்றாள் பார்த்தே நின்று,

"சரிடி பை" என்றவன் விருட்டென்று வெளியேறி விட்டான்.

அவன் சொக்கலிங்கம் சொன்ன இடத்திற்கு வந்தபோது அங்கு கூட்டம் கூடியிருந்தது. அது ஒரு தெருமுனையில் இருக்கும் குப்பை தொட்டி, கொஞ்சம் ஊருக்கு வெளியே இருக்கும் இடம், வீடுகள் புதிதாக முளைத்துக் கொண்டிருந்த ஏரியாவாக இருந்தது.

"சார் நேத்தே கொண்டு போட்டு போயிருக்கான், குப்பை பைல கட்டி கிடந்ததால யாரும் கண்டுக்கல, இன்னைக்கு ரொம்ப வாடை வரவும் தான் என்னன்னு கவனிச்சுப் பாத்து நமக்கு தகவல் குடுத்துருக்காங்க. மத்த டைம் மாறி இல்லாம இந்த டைம் ரொம்ப டேமேஜ் ஆகிடுச்சு பாடி" என்றான் சொக்கலிங்கம்.

அவன் தடயவியல் நிபுணரைப் பார்த்தான், அவர், "இந்த பையன அதிகமாக ட்ரக்ஸ் ஏத்தி தான் கொன்ன மாறி இருக்கு, வேறெதுவும் கண்டு பிடிக்க முடியல, பாதி டீகம்போஸ் ஆகிட்டு" என்றவர் இன்னும் அவனை நெருங்கி, "இந்த டைம் முடி கூட இருந்ததான்னு பாக்க முடியல, அடாப்ஸில எதாது தெரிஞ்சா தான் உண்டு" என்றார், தலையசைத்துக் கொண்டான்.

"சொக்கு மத்த ரெண்டு பசங்களையும் நம்ம கஸ்டடில எடுங்க, அவனுங்களையும் விட்டா கில்லர நெருங்கவே கஷ்டமா போயிடும், அவங்க பேரண்ட்ஸ் பெர்மிஷன்லாம் இந்த டைம் தேவையில்லை, பசங்க நம்மட்ட வந்தாகணும்" என்றவன் அடுத்துக் கிளம்பிச் சென்று கமிஷனரைப் பார்த்தும் பேசிவிட்டான்.

அந்த இரு மாணவர்களின் பெற்றோர்களும் நாங்களும் உடன் வருவோம் என அடம்பிடித்தனர், பிரஸிடம் கொண்டு சென்றனர், கேகேவி பள்ளியில் மறுபடியும் முற்றுகை போராட்டம் நடந்தது. உண்மை என்ன என தெரியாமல் மக்களும் மாணவர்களுக்கு ஏண்டு கொண்டு கொடிப் பிடித்தனர்.

பாண்டியன் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை, "எனக்கு பசங்க என் கைக்கு வரணும் சார்" என கமிஷனரிடம் முடித்துவிட்டான், அவருக்கு தான் தலையிடியாக இருந்தது. எம்எல்ஏ இறப்பு, அவர் மருமகன் இறப்பு என அவர்கள் குடும்பம் வேறு விடாமல் அவரை படுத்திக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் ஆடி பதினெட்டு, சனிக்கிழமை அன்று பாண்டியன் குடும்பமும், மரகதம் குடும்பமும் கல்யாண வேலையைப் பார்க்க சொன்னது போல் கிளம்பிவிட்டனர்.

"வந்துருவான்லத்தா?" என துணிக் கடைக்குள் வந்ததிலிருந்து அவளிடம் பத்தாவது முறையாகக் கேட்டுவிட்டார் வாசுகி. அவளுக்கு அவனது பரபரப்பான தற்போதைய சூழ்நிலை தெரியுமே, அவளிடம் கூட இரண்டு நாட்களாக நிறுத்தி நிதானமாக பேசவில்லையே அவன். அப்பறம் எப்படி அழைப்பாள், ஆனாலும் மெசேஜை அனுப்பி விட்டு தான் கிளம்பி வந்திருந்தாள்.

எல்லாருக்கும் பட்டெடுத்தாகிவிட்டது, அவளுக்கும் கூரைபட்டு நான்கு வண்ணத்தில் எடுத்து தனியாக வைத்துவிட்டனர், இனி பெண்ணழைப்பு, நிச்சயம், முகூர்த்தம், மறு வீடு, அடுப்படி சேலை, சாந்தி முகூர்த்த சேலை என அவள் பட்டியல் மட்டும் அவனுக்காக காத்திருந்தது.

"நீயே எடு கண்ணு, அவேந்தான் வரலியே, புள்ளைக்கு முகமே வாடி போச்சு" என வாசுகி சொல்லிக் கொண்டிருக்க, அவளுக்கு கண்கள் கலங்கியது, ஏனோ அவனைத் தேடியது அவள் மனது. அந்நேரம் வேக நடையில் டக்கின் செய்திருந்த சட்டையை வெளியே எடுத்துவிட்டவாறு உள்ளே வந்து கொண்டிருந்தான் மகிழ்நன் பாண்டியன்.

மரகதவல்லி கலங்கிய கண்களைச் சிமிட்டி அவனை சிரித்தபடி பார்க்க, அவள் பார்வையை உள்வாங்கியவாறு வந்தவன், "என்னடி?" என்றான் அவளை நெருங்கியதும் புருவம் உயர்த்தி.

"இல்ல ஒன்னுமில்ல" என்றவள் சிரிக்கவும்,

"மரகதம்" என நிதானமாக அவள் கண்களைப் பார்த்து நின்றான் அந்த மரகத கள்வன் ‌.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 27

மகிழ் பார்த்தே இருக்கவும், "சாரீஸ் நானே செலக்ட் பண்ணணுமே உங்களுக்கு பிடிக்காம போயிடுமோன்னு நினச்சுட்ருந்தேன் வந்துட்டீங்க, அது கொஞ்சம் எமோஷனல் ஆகிடுச்சு" என்றாள் மெல்ல சிரித்து.

"ஐயையோ வந்துட்டானேன்னு அழல தானே மரகதம்?" என அவன் நக்கலாக கேட்கவும்,

"ஏங்க?" என்றாள் செல்லமாக முறைத்து, கைக்குட்டையால் முகத்தை துடைத்தவாறு.

"சரி‌ சாரீஸ் பாத்தாச்சா? எடுத்தாச்சாம்மா?" என்றான் அவளுக்கு பின்னின்ற வாசுகியிடம்.

"எங்க எல்லாருக்கும் எடுத்தாச்சு மூத்தவனே, மருமவளுக்கு கூரை புடவைய மொத எடுத்துபுடு. இந்தா பாரு கூரை புடவைல நாலு எடுத்து நீ வந்துதேன் முடிவு சொல்லணும்னு வச்சுருக்கா, அதுல உனக்கு எது விருப்பம்னு பாத்து ஒரு சீலைய தனியா எடுய்யா, நாங்க அதுக்குள்ள எங்களுக்கு எடுத்த பட்டுகளுக்கு குஞ்சனம் வைக்க குடுக்கணும். கொண்டு குடுத்துபோட்டு வாரோம்" என அகிலா கையையும் விடாமல் இழுத்து கொண்டு சென்று விட்டார்.

"உங்கம்மா ஓடியா போயிடுவாங்க" என்றவன், குங்கும நிறத்தில் இருந்த சேலையை எடுத்தான், "இது ஓகேவா உனக்கு?" என அவளிடம் கேட்க,

"சரிங்க"

"பவ்யம்ம்ம்?" என்றான் புடவையிலிருந்து திரும்பி அவள் முகம் பார்த்து.

"ஆமாங்க"

"இருக்கட்டும் இருக்கட்டும். நெக்ஸ்ட்?" என்க,

"இன்னும் அஞ்சு பட்டு எடுக்கணும். அதோ அங்க தான் பட்டு செக்ஷன்" என நடக்க, அவனும் சுற்றி பார்த்தவாறு பின் தொடர்ந்தான்.

இவனை அங்கு அநேகம் பேருக்கு தெரிந்திருக்க, வணக்கம் வைத்து விசாரித்துக் கொண்டனர், "லைட் வெயிட்டா, ஜிகு ஜிகுன்னு இல்லாம, அதென்ன சொல்லுவாங்க கண்ணாடியா இருக்குமே மரகதம்?" என்றான் கடைக்காரரிடம் ஆரம்பித்து மரகதத்திடம்,

"ஸ்டோன்ஸ் வச்சதாங்க?" என்றாள் மரகதம்.

"ஸ்டோன்ஸா அது? ஓகே அதில்லாம, கட்றதுக்கும் சாஃப்டா இருக்கமாதிரி பட்டு மட்டும் எடுத்து காட்டுங்க" என்றான்.

பல வண்ண கனமில்லாத பட்டு புடவைகள் அவர்கள் முன் எடுத்து வந்து அடுக்கப்பட்டது, ஒரு பார்வை அனைத்தையும் சுற்றி பார்த்தவன், வேகமாக 'க்ரீம் நிறத்தில் ஒன்று, ராமர் பச்சை நிறத்தில் ஒன்று, நீல நிறத்தில் ஒன்று, மாம்பழ நிறத்தில் ஒன்று, பிங்க் நிறத்தில் ஒன்று' என ஐந்து பட்டை எடுத்து அவளிடம் நீட்டிவிட்டான் வாங்கிக் கொண்டாள், மேலும் அவன் வேறு புடவைகள் அதில் தேடி நிற்க,

"இதே பெர்பெக்ட்டா இருக்குங்க" என்றாள், அவன் வேகமாக தேர்ந்தெடுத்ததில் உண்மையிலேயே உள்ளுக்குள் அவ்வளவு ஆச்சரியம் தான்.

"எஸ் தெரியும். அதான எடுத்து குடுத்துருக்கேன். இருந்தாலும் இன்னும் பெட்டரா எதும் கண்ணுல படாம மிஸ்ஸாகியிருந்தா? அதான் பாக்றேன்"

"எனக்கு இதே புடிச்சுருக்குங்க"

"வேற பாக்க வேணாமா? நா செலக்ட் பண்ணி குடுத்தா நீ ஃபில்டர் பண்ணிப்ப நினைச்சேன் மரகதம்"

"இன்னும் பாத்தா தான் கன்ஃப்யூஸ் ஆகும். இதே எனக்கு ரொம்ப புடிச்சுருக்குங்க"

"வேற பாத்தாலும் கன்ப்யூஸ் ஆகாம இருந்தா தானே இது ரொம்ப புடிச்சுருக்குன்னு அர்த்தம் மரகதம்?" என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி. அவன் கேட்ட அர்த்தம் அவளுக்கும் புரிந்தது.

"பாக்க மாட்டேன், மொத பாத்ததே புடிக்கும், அதுவே என்னைக்கும் இருக்கும்" என்றாள் அவளும் மனதிலிருந்தே.

"டன். நெக்ஸ்ட்?"

"அவ்வளவு தான்"

"அவ்வளவு தானா? என்ன விளையாடுறியா?"

"என்ன விளையாடுறேங்க?" என்றாள் புரியாமல்.

"எல்லா முகூர்த்தமும் முக்கியம் தெரியும்ல?"

"தெரியுங்க, வாங்க இதுக்குலாம் நாட் போட குடுக்கணும் குடுத்துட்டு வரலாம்" என அவள் தப்பித்து ஓட பார்க்க,

"மரகதம் நில்லுடி, வா ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஒன்னும் ஃபர்ஸ்ட் மார்னிங்க் ஒன்னும் எடுத்துட்டு வரலாம்"

"அதெல்லாம் சேத்து எடுத்தாச்சுங்க" என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு,

"என்ட்ட காட்டாம எதுக்கு எடுத்த நீ? எங்க இருக்கு காட்டு நா பாத்து கன்பார்ம் பண்றேன்"

'ஏசிபி படுத்துறாரே' என நினைத்தவள், "இப்போ நீங்க எடுத்து தந்ததுல அதுக்கும் ஒன்னுங்க" என நெளிந்து கொண்டு சொல்ல,

"பட்டு சேலையா?" என்றான் முகத்தை சுருக்கி கொண்டு,

"ஏன் அப்படி கேக்கறீங்க? பட்டு தானே எடுப்பாங்க?"

"அந்நேரத்துக்கு எதுக்குடி பட்டு? அதெல்லாம்"

"இல்ல இல்ல நீங்க எதும் சொல்ல வேணாம். உங்கம்மாவும் எங்கம்மாவும் தான் பட்டெடுக்க சொன்னாங்க எடுத்துட்டேன். வேற என்ன எடுக்குறதுனாலும் நீங்க எடுத்துக்கோங்க"

"அப்ப நா என்ன எடுத்தாலும் போடணும் நீ?"

"சேரி வெரைட்டில இருக்கணும் அப்டினா ஓகே" என இவர்கள் இருவரும் ரகசிய பேச்சில் இருக்க,

"எடுத்தாச்சா எங்க காட்டு பாப்போம்" என வாசுகி வந்துவிட்டார், உடன் மற்ற பெண்களும் வந்துவிட, இவன் அவர்களின் அலசலை பார்த்து நின்றான். பார்டர், நிறம், ப்ளௌஸ், பட்டின் மென்மை, ஜரிகை என அவர்கள் அதில் கண்டறிய இவன் புருவம் சுருக்கி பார்த்திருந்தான். அவனுக்கு அது அவளுக்கு பொருத்தமா என்பது மட்டுந்தானே தெரிந்தது.

"உனக்கு பிடிச்சுருக்கா கண்ணு?" என வாசுகி மரகதவல்லியிடம் கேட்க,

"புடிச்சுருக்குத்த"

"மூத்தவனே அப்டியே உனக்கும் போய்‌ எடுத்துட்டு வந்துருங்க"

"அப்பா, அரசு, வரதனுக்குலாம் எடுத்தாச்சா?" என்றான் இவன்.

"எடுத்துட்டாங்க, நீ மருமவளோட போய் எடுத்துட்டு வா"

அவன் அவரை ஆராய்ச்சியாக பார்க்க, "போய்ட்டு வாய்யா, அடுத்து நகை கடைக்கு வேற போகணும். நீ கூட்டிட்டு போ கண்ணு" என மரகதத்திடம் சொல்லிவிட்டு, "வாங்க நீங்க வேற என்னமோ எடுக்கணும்னு சொன்னீகளே அத எடுப்போம்" என அகிலாவை மறுபடியும் அழைத்துச் சென்று விட்டார்.

"எங்கம்மா என்னவோ ட்ரை பண்ற மாதிரி இல்ல?" என்றான் சந்தேகமாக.

அதில் பக்கென சிரித்தவள், "உங்களுக்கு எங்கிட்ட பேச தனியா சான்ஸ் ஏற்படுத்தி தர்றாங்க"

"ஓ லவ் பண்ண?"

"ஆமா"

"லவ்வுல எனக்கு நம்பிக்கை கிடையாதுன்னு உன்ன சொல்ல சொன்னேன்ல?"

"நா சொன்னேங்க அத அவங்க நம்ப மாட்டேங்குறாங்க. கல்யாணத்துக்கு முன்ன உங்க லவ்வ கன்பார்ம் பண்ணியே ஆகணும்னு முடிவுல இருக்காங்க"

"ஆஹான்" என யோசித்து நிற்க,

"வாங்க போலாம், அவங்க வெயிட் பண்றாங்க பாருங்க" என அவள் முன் செல்ல, திரும்பி இவன் பார்க்கவும் குடும்பத்தினர் ஒன்றுபோல் ஆளுக்கு ஒரு திசைக்கு பார்த்தனர், 'நல்ல குடும்பம்' என நினைத்து கொண்டே தான் ஆண்கள் உடை பகுதி சென்றான்.

அங்கும் அவனே வேகமாக நான்கு, ஐந்து சட்டைகளை எடுத்துவிட்டான், மரகதம், "ட்ரையல் பாக்கல?" என சந்தேகமாக கேட்க,

"ஸ்லிம் ஃபிட் எனக்கு ஃபிட்டா இருக்கும் மரகதம். உனக்கு வேற எந்த கலரும் நா போட்டு பாக்கணும்னா சூஸ் பண்ணு, போட்டு காட்டுறேன், ஆனா நீ ட்ரையல் ரூமுக்குள்ள வந்து தான் ட்ரையல் பாக்கணும். உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே" என்க,

"எனக்கு இதுவே ஓகேங்க. சூப்பரா இருக்கு" என்றுவிட்டாள், அடுத்தாக பட்டு வேஷ்டி சட்டையும் எடுத்துக் கொண்டு ஜவுளி கடையில் ஒரு தொகையை மொத்தமாக கொடுத்து விட்டு கிளம்பிவிட்டனர்.

அடுத்து சென்றது நகை கடை, மாங்கல்யம், உடன் கோர்க்கும் பாசி, குண்டு, முத்து என அனைத்தும் இரண்டு இரண்டாக வாங்கப்பட்டது.

"எதுக்கு மதினி ரெண்டு? குண்டு காசு, அதெல்லாம் நாங்க தான வாங்கணும் மதினி?" என்றார் அகிலா.

"இல்ல இது மொத்தமும் என் பொறுப்புதேன். ஒன்னு எங்க குலதெய்வத்துக்கு இன்னொன்னு மருமவளுக்கு. என் மருமவளுக கழுத்துல இது நிலைச்சு கிடக்கணும்னு ஆத்தாட்ட வேண்டிக்குவேன். அதனால் இது மொத்தமு எங்க செலவுதேன்" என்றுவிட்டார்.

"மூத்தவனே, மருமவளுக்கு மெட்டி கொலுசு பாத்து எடுத்துட்டு வாங்க" என்றார் அவனிடம்.

"ஏன் நீ எங்க போற?"

"நா பேத்திகளுக்கு ரெண்டு செயின் எடுக்கலாம்னு இருக்கேன்" என்றவர் குட்டிகளுடன் பேசிக் கொண்டே நகர்ந்து செல்ல,

"உன்னைய தனியா தள்ளிட்டு போகணும்னு நா நினைச்சா போதாதா மரகதம்? இவங்க என்ன எனக்கு ரூட்டு போட்டு போட்டு தர்றாங்க, கூட இத்தன லேடீஸ வச்சுகிட்டு?" என முறைக்க, அவள் சிரித்திருக்க, "உனக்கு நக்கலா இருக்குல்ல?" என்றான் அவளையும் முறைத்து.

'ஆத்தி அலர்டாகிடுடி மேகி' என சுதாரித்து கொண்டவள், "மெட்டி எடுக்க போவோமாங்க?" என நடக்கவும், அம்மாவை இருந்த திசையில் திரும்பி முறைத்து விட்டே இவளை தொடர்ந்து சென்றான்.

காலில் நடுவில் உள்ள மூன்று விரலுக்கும் போடுவது போல் மெட்டி எடுத்தனர். நூல் அளவெடுத்து எடுத்தனர், பின் கொலுசும் ஐந்து பக்க முத்துக்கள் வைத்து எடுக்க,

"ஏங்க கோர்ட்டுல இத போட்டு நடந்து போனா சிரிக்க மாட்டாங்க?" என்றாள் பாவமாக, அவள் சட்ட கல்லூரியில் சேர்ந்ததிலிருந்தே கொலுசு போடுவதை நிறுத்தியிருந்தாள். பிடிக்காது என்றில்லாமல், யாரும் போடாமல் தான் மட்டும் போடுவதா என விட்டிருந்தாள். அவள் அம்மா எதாவது விழாக்களில் போடு என்றாலும், 'போம்மா வேணாம்' என்றுவிடுவாள்.

இப்போது இவனிடம் எப்படி சொல்ல என அவள் திருதிருத்திருக்க, "சிரிப்பாங்கல்ல?" என்றான் அவனே கேள்வியாக.

"ஆமாங்க, முத்தில்லாம ப்ளைனா எதாது எடுத்து போட்டுபோமா?"

"முத்தில்லாம எடுத்தா அது கொலுசு இல்ல தண்டை. அது குழந்தைங்களுக்கு தான் வச்சுருப்பாங்க, நீ பாப்பா இல்ல தானே?" என்றான்.

"ஏங்க. ஐம்பொன்ல வாங்கி போட்டுக்கவா? சத்தமே கேட்காது"

"உனக்கு கொலுசு போடணுமா வேணாமா?"

"அது அது வேணுந்தான், ஆனா சத்தம் வந்தா எல்லாரும் என்னையே பாக்குற மாதிரி தோணும், அதான் வேணாம்னு யோசிக்குறேன்"

"ஆஹான் அப்ப இதான் நீ போடுற. போடு" என்றவன், "கட்டிங் ப்ளேயர் தாங்க" என்றான் சேல்ஸ்மேனிடம்.

"சார் பில் போட்டு கொண்டு வந்திடட்டா?" என்றான் அவன்,

"இதுல இருக்கே வெயிட் கட்டிங் ப்ளேயர குடுத்துட்டு போய் பில் போட்டு வாங்க" என்றவன் கொலுசில் இருந்த பார் கோடை இழுத்தெடுத்து அவனிடம் கொடுத்து விட்டான்.

"ஏங்க ப்ளீஸ்" என்றாள் இவள்.

"நீங்க ஏங்குங்க ப்ளீஸ். கால காட்டு மரகதம்" என அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து விட, வேறு வழியின்றி புடவையை லேசாக மேலேற்றி காட்டினாள். கடை ஊழியன் கட்டிங் ப்ளேயரோடு குட்டி ஸ்டூலும் கொண்டு வந்து கொடுத்தான், அவள் அதில் காலை வைக்க, முதலில் வலது காலில் கொலுசை மாட்டி இறுக பூட்டியும் விட்டான். மறு காலில் அவன் மாட்டிக்கொண்டு இருக்கும் போது தான் ஷீலா இவர்களை கண்டுவிட்டு அதிர்ந்து சிரித்து, வாசுகியை அழைத்து காட்ட,

திரும்பி பார்த்தவரும் அதிர்ந்து, "யாத்தே என் மருமவ என் மவேன் மனச நிறைச்சுட்டா போலேயே, என் கண்ணையும் நிறைச்சுப்புட்டாளே. எனக்கு என்னனோ வருதேட்டி புடிங்க. என் புள்ள மொகம் என்னன்னு கனிஞ்சு கிடக்கு. இது போதும்தா. என் புள்ளைக்கு புடிச்சுருச்சு. கல்யாணத்த தடங்களு இல்லாம அவனே நடத்திபுடுவான். மதினி என் மவனுக்காக இப்படி ஒரு மருமவள பெத்ததுக்கு உங்களுக்குதேன் நா நன்றிக்கடன் பட்ருக்கேன்" என அவர் உணர்ச்சிவசப்பட,

"அத்தே கண்ட்ரோல்" என்றாள் விசாலாட்சியும் சிரித்துக் கொண்டு.

"நம்ம புள்ளைக சேரணும்னு இருந்துருக்கு மதினி, அதுதேன் நடக்கவும் போவுது. நீங்க சந்தோஷமா இருங்க. கண்ண தொடைங்க மொத" என்றார் அகிலாவும். ஆண்கள் மூவரும் அதிர்ந்து தான் பார்த்திருந்தனர், பாண்டியனை இப்படியெல்லாம் பார்த்ததில்லையே அவர்கள்.

'சல சலன்னு நடந்து போக போறேன் எல்லாம் கோர்ட்டுக்கு வந்தியா கோவிலுக்கு வந்தியான்னு கேக்க போறாங்க. நா ஒரு லூசு இவர்ட்ட வேணாம்னு சொல்லிருக்க கூடாது, நா சொன்னதுனாலேயே அடம் ம்மா உக்காந்து மாட்டிவிடுறத பாரு. கைக்கு ஏதுவா குனிஞ்சு குடுத்துட்ருக்காரு எல்லாத்துக்கும் சேர்த்து ரெண்டு கொட்டு கொட்டிருவோமா' என பார்த்தாள், அப்படியே மற்ற பக்கம் திரும்ப, மொத்த குடும்பம் மட்டுமில்லாமல் கடையே இவர்களை வேடிக்கை பார்த்து நிற்பது தெரிய, 'மானமே போச்சு' என்றவள் பட்டென்று காலை எடுத்துக் கொண்டு சேலையை கீழே விட்டு நேராக நிற்க.

"டைட் பண்ணலடி இன்னும். கால மேல வை" என்றான் அதட்டி,

"எல்லாரும் பாக்றாங்கங்க" என்றாள் லேசாக சுற்றி காண்பித்து.

அதே போஸில் இருந்தவாறே அவன் திரும்பி பார்க்கவும் மொத்தபேரும் பட்டென்று அவரவர் வேலையை பார்ப்பது போல் திரும்பி விட்டனர், வாசுகி மட்டும் இவனை பார்ப்பதும் நகையை விட்டுவிட்டு உத்திரத்தில் எதையோ பார்ப்பதுமாக தேடிக் கொண்டிருந்தார்.

"சரி அதான் பாத்துட்டாங்கள்ல, கொண்டா அந்த கால் கொலுசையும் டைட் பண்ணிடுறேன்" என்றான் இயல்பாக இவன்.

"நானே பண்ணட்டுமா?"

"மரகதம்" அவன் அதட்டவும்,

"குடுத்தா அவேன் நல்லா பண்ணிவிட்ருவியான்" என ஆர்வத்தில் அவர்கள் அருகில் வந்திருந்தார் வாசுகி.

மாமியார் சொல்லவும் இவள் நீட்ட, அம்மாவை முறைத்துக் கொண்டே தான் மாட்டிவிட்டான் மகிழ், "சின்ன புள்ள மாதிரி சலம்பிட்டு வர்றம்மா நீ. ஆளுங்க இருக்காங்கன்னு பாக்கேன். கொலுச நீங்கதேன் மாட்டிவிடணும்னு இவ அடம்புடிச்சுட்டு உன்ன‌ பாத்ததும் நடிக்கா, நீயும் நல்ல மாட்டுவான்னு நடிக்க என்ன நினச்சுட்ருக்கீங்க ரெண்டு பேரும்" என்க,

'நா அடம் பிடிச்சேனா? அடப்பாவி ஏசிபி அந்தர்பல்டி அடிச்சுட்டாரே' என அவள் பார்க்க, "மருமவளுக்கும் ஆசை இருக்குமில்லையா? அதேன் கேட்ருப்பா. கொலுசே போடாத புள்ள நீ போட்டு விடணும்னே போட்ருக்கு வையாதய்யா" என்று வேறு சொல்ல,

"சரி முடிஞ்சுன்னா போய் பில் போடுங்க கிளம்புவோம்" என்கவும் அவர் சந்தோஷமாக நகர்ந்து விட, பெண் வீட்டு சார்பாக அவர்கள் அவனுக்கு வாங்க வேண்டியதில் தங்க காப்பை மட்டும் வாங்கி கொண்டான் அவன்.

கிளம்புமுன் "மரகதம், நாளைக்கு அம்மா கூட குலதெய்வ கோவில் போய்ட்டு வா, நா வர முடியாது. இன்னைக்கே ஃபுல் டே இங்க போயிடுச்சு" என சொல்லவும், சரியென்று கேட்டுக் கொண்டாள்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 28

"எனக்கு கால் வந்துட்டும்மா நா கிளம்புறேன். நாளைக்கு கண்டிப்பா என்னால வர முடியாது, நீங்க போய்ட்டு வந்திடுங்க" என்றான் வாசுகியிடமும்.

"சரி மூத்தவனே, இப்ப சீர் சாமான் எடுத்துபுடலாம்னு மதினி கூப்பிடுதாக, என்ன செய்ய?"

அவன் திரும்பி மரகதத்தை பார்த்தான், "அவகிட்டயே கேளும்மா, அவ என்ன சொல்றாளோ அதையே வாங்கி குடுத்திட சொல்லு" என்க, எல்லோரும் அதை கேட்டு தான் நின்றனர், அத்தோடு அவன் கிளம்பியும் சென்றுவிட்டான்.

கமிஷனர் அலுவலகம் வந்தவனிடம், "சார் அந்த ரெண்டு பசங்களையும் என்கொய்ரி ஏரியா உள்ள உக்கார வச்சுருக்கேன்" என வந்து சொன்னான் சொக்கலிங்கம்.

"எப்டி கொண்டு விட்டாங்க காலைல கூட கமிஷனர் ரொம்ப தலைவலியா இருக்காங்கன்னு சொல்லிட்ருந்தாரே?"

"ஸ்கூல்ல பெரிய ப்ராப்ளம் ஆச்சுல்லையா சார், அந்த கேகேவி ஸ்கூல் ப்ரின்ஸிபல் வந்து கமிஷனர்ட்ட பேசுனாரு, அவர்ட்ட அந்த பசங்கள என்கொய்ரி பண்ணாதான் கேஸ் முடியும். அவங்க பேரண்ட்ஸ ஒத்துக்க வைங்கன்னு கமிஷனர் சொல்லிட்டாரு, அவர் போய் பேசி தான் ஒத்துக்க வச்சு, இப்ப தான் கொண்டு விட்டுட்டு, பக்கத்துல தான் இருப்போம் என்கொய்ரி முடிச்சுட்டு கூப்பிடுங்கன்னு நீங்க வர்றதுக்குள்ள போய்ட்டாங்க. அன்னைக்கு அப்படி பேசிட்டு திரும்ப உங்க முன்னவே வந்து நிக்க முடியாம ஓடிட்டாங்க போல சார்"

"இதுக்கு பெருமை வேற பட்டுக்கோங்க சொக்கு?" என்றவன், அன்று வந்திருந்த ரைட்டர் பேடில் வரிசையாக கையெழுத்திட்டு எடுத்து வைத்தான்.

"சாரி சார்" என சொக்கு சுனங்கி நின்று விட,

"சார்" என வந்தார் துணை ஆய்வாளர்.

"வாங்க நாராயணன்"

"ஒரு பொண்ணு கம்ப்ளைண்ட் குடுக்க வந்துருக்காங்க சார்"

"கூட்டிட்டு வாங்க"

இருபதை தொடும் வயதில் ஒரு பெண் தயங்கி தயங்கி உள்ளே வந்தாள், "உக்காருங்க" என்றான்,

அவள் சுற்றிவர பார்த்து பயந்து விழிக்க, "என்னம்மா படிக்குற?" என்றான் அவனே,

"ஆர்ட்ஸ் ஃபர்ஸ்ட் இயர் சார்"

"என்ன பிரச்சினை?"

"எங்கம்மா நாலு நாள் முன்ன இறந்து போய்ட்டாங்க சார்"

"எப்டி இறந்தாங்க?"

"ஹார்ட் அட்டாக்னு சொல்றாங்க சார். காலைல எழுப்பும் போது எழுந்திரிக்கவே இல்ல"

"ஓகே, உங்களுக்கு அவங்க டெத்ல டவுட் இருக்கா?" அவனிடம் வர அதுதானே காரணமாக இருக்க முடியும்.

"ஆமா‌ சார். கொஞ்ச நாளாவே அம்மாக்கும் அப்பாக்கும்‌ பயங்கர சண்டை சார். அம்மா அன்னைக்கு நைட்டு அழுதுட்டே தான் படுத்துருந்தாங்க, நா கேட்டதுக்கும் காரணம் சொல்லல, மார்னிங் எழுந்திரிக்கவே இல்ல"

"உங்கப்பா தான் காரணம்னு நினைக்கிறீங்களா?"

"ஆமா சார். அம்மா பாவம் சார். நா என் அத்தைட்ட சொன்னேன், இப்படி உங்கள்ட்ட கம்ப்ளைண்ட் குடுக்க வரேன்னு, அவங்க அப்பாவ பத்தி சொல்லி அவரையும் உள்ள அனுப்பிட்டு நடுத்தெருவுல நிப்பியான்னு கேக்றாங்க சார். அப்பா தப்புன்னா தப்பு தானே சார்? அம்மா அழுதுட்டே செத்து போய்ட்டாங்க சார். அம்மா பாவம் சார்" என அந்த பெண் தேம்பி‌தேம்பி அழ,

"உங்க அட்ரஸ் எழுதி குடுத்துட்டு கிளம்புங்க, நா விசாரிக்கிறேன்" என்றான். அவள் உடனே எழுந்து கொள்ள, குனிந்தவன் மீண்டும் நிமிர்ந்து, "உங்க பேரென்னம்மா?" என்றான்,

"மந்தாகினி சார்" என்றாள் அந்த பெண் கண்ணீரை துடைத்து கொண்டு.

"ஓ! ஓகே போங்க" என்றதும் அந்த பெண் சென்றுவிட,

"நாம அவனுங்கள விசாரிப்போமா சொக்கு?" என இவனும் எழுந்து கொண்டான். வெளியே சென்று அடுத்திருந்த அறைக்குள் செல்லும் முன் அங்கு அமர்ந்து ரைட்டரிடம் புகாரை கொடுத்து கொண்டிருந்தவளை பார்த்தே கடந்து சென்றான்.

உள்ளே தனி அறையில் அமர வைக்க பட்டிருந்த இருவரும் பயந்து பாவமாக தான் அமர்ந்திருந்தனர். இவனை கண்டதும் இன்னும் வெளிறியவாறு எழுந்து நிற்க.

"அப்றம்டா, ஸ்கூல் போ வேணாம் படிக்க வேணாம், ஜம்முன்னு சாப்ட்டு சாப்ட்டு தூங்க ஜாலியா இருக்குமே?" என கேட்டவாறு அவர்கள் எதிரில் அமர்ந்து, அவர்களையும் அமர கை காட்டினான்.

பின் சொக்குவிடம், "ரெக்கார்ட் ஆன் பண்ணிட்டீங்களா சொக்கு?" என்க,

"எஸ் சார்" என்றான் சொக்கலிங்கம்.

"பயமா இருக்கு சார்" என சொல்லிவிட்டே அமர்ந்தான் அதில் கதிர் என்பவன்.

"தப்பு பண்ணா தான் பயப்டணும்? நீங்க என்ன தப்புலாம் பண்ணீங்க வரிசையா சொல்லுங்க கேப்போம்" என மகிழ் நக்கலாக ஆரம்பித்து விட,

"நாங்க எதுமே பண்ணல சார்" என்றான் கதிர்.

"எதுமே பண்ணாம சும்மா சுத்துன உங்க ஏழு பேர மட்டும் வருசையா கொல்ல அவனுக்கு என்ன கிறுக்கா புடிச்சுருக்கு?" என்றான் சொக்கலிங்கம்.

"டைம் இல்ல, கிட்டத்தட்ட பிஃப்டீன் டேஸ் போச்சு, சீக்கிரம் சொன்னீங்கனா கேஸ முடிச்சுட்டு நா அடுத்த வேலைய பாப்பேன்" என்றான் மகிழ்.

"சார்"

"எஸ் சாரே தான், நீங்க எல்லாரும் எத்தன வருஷமா ப்ரண்ட்ஸ்?"

"சிக்ஸ்த்ல கேகேவில சேர்ந்ததுல இருந்து"

"எட்டு பேரு மட்டுமா இல்ல உங்க கூட வேற யாரும் முன்ன ஃப்ரண்ட்ஸா இருந்தாங்களா?"

"நாங்க ஆறு பேர் தான் சார் மொத ஃப்ரண்ட்ஸ், இவனும் விஷ்ணுவும் எயிட்த்துல லேட்டா தான் சேர்ந்தாங்க" பக்கத்திலிருந்த ராமு என்பவனை காட்டி‌.

"விஷ்ணு நாலு மாசம் முன்ன இறந்து போன பையன் தானே?"

"ஆமா சார்"

"அவன் எப்டி இறந்தான்?" என்றான் கூர்மையாக.

"உடம்பு சரி இல்லாம போச்சு சார் அடிக்கடி பிட்ஸ் வேற வரும் சார் அவனுக்கு, அதுல ரெண்டு மாசம் முடியாம கிடந்து காப்பாத்த முடியாம செத்து போய்ட்டான் சார்" என அவன் ஒருவன் மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருக்க, மற்றவன் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

"ட்ரக்ஸ்லாம் எப்பிடி கிடைச்சது உங்களுக்கு?"

"சார்?"

"ம்ம் எல்லாம் விசாரிச்சாச்சு, மீதிய நீயே சொல்லிடு கதிர்"

அவன் பாவமாக பார்க்க, "சொல்லுடா, உன் ப்ரண்ட்ஸ் எப்டி செத்து கிடந்தானுங்கன்னு ஞாபகம் இருக்கா, இல்ல வீடியோ காட்டவா?" என்றான் சொக்கு.

"விடுங்க சொக்கு, கதிரே சொல்லுவான் இல்லையா கதிர்" என்றான் ஏசிபி.

எச்சிலை கூட்டி விழுங்கியவன், "பாஸ்கரோட மாமா வீட்ல உள்ளவர் குடுப்பாரு சார், பாஸ்கர் கொண்டு வந்து எங்களுக்கு தருவான்"

"பாஸ்கர்? எம்எல்ஏ மருமகன்?"

"ஆமா சார் அவந்தான்" என்றான் சொக்கலிங்கம்.

"சரி அத ஸ்கூல்ல வச்சு அடிப்பீங்க, டீச்சர்ஸ் கேட்டா அவங்க பையனையோ பொண்ணையோ வீடியோ எடுத்து மிரட்டுவீங்க? வேற?"

"சார்‌ சார்" என்றான் அவனுக்கு உயிரே போய்விட்டால் பரவாயில்லை என்றாகிவிட்டது, அவர்கள் செய்ததை அவ்வளவும் தெரிந்து வைத்திருக்கிறானே என தான் பார்த்திருந்தான்.

"ம்ம் வேற? நீயே சொன்னா பெட்டரா இருக்கும் கதிர்" என அவன் கையை முறுக்கவும்,

"இல்ல இல்ல சார் சொல்றேன். மத்த பசங்களுக்கு பழக்கி விடுவோம், அவங்க வேணாம்னு அழும்போது பாக்க நல்லாருக்குன்னு பாஸ்கர் தான் அதை அடிக்கடி செய்வான். வீடியோ வச்சு மிரட்டி காசு கேப்போம் சார், இல்ல யார்டையாவது செயின் அடிச்சுடுவோம் சார்"

"அவ்வளவு தானா இல்ல இன்னும் இருக்கா?"

"அவ்வளவு தான் சார், வேறெதுவும் இல்ல சார் சத்தியமா"

"பொண்ணுங்க மேல கை வைக்குறதுலாம்?"

"இல்ல இல்ல சார். மிரட்ட மட்டுந்தான் வீடியோ எடுப்போம் வேறெதுவும் செய்ய ட்ரை பண்ணதில்ல"

"தேட்ஸிட்‌. எல்லாம் ரெக்கார்ட் ஆகிடுச்சுல்ல சொக்கு? போய் ஆஃப் பண்ணுங்க" என்றுவிட்டான் இரு கையையும் சோம்பல் முறித்தவாறு‌,

"எஸ் சார்" என்ற சொக்கு சென்று அமர்த்திவிட்டு வந்தான்.

"சோ நீதான் எனக்கு கால் பண்ணதில்லையா?" என்றான் அருகில் அமைதியாக அமர்ந்திருந்தவனிடம் இப்போது.

"ஆமா சார்" என்றதும், கதிரும்,
சொக்கலிங்கமும் புரியாத விழிக்க,

"இவன என்ன செய்யலாம்?" என்றான் அவனிடமே.

"எனக்கு தெரியல சார். ஆனா என் அக்கா இதுல மாட்டிக்க கூடாது, எப்டினாலும் நா மட்டும் மிச்சமிருக்கும் போது கண்டிபுடிச்சுட தான் போறீங்க, அதான் நானே உங்கட்ட பேசுனேன். இது நா செஞ்சதாவே இருக்கட்டும் சார் என்ன புடிச்சு உள்ள‌ போடுங்க, அக்கா இதுல வேணாம்" என்றான் அந்த ராமன்.

கதிர் திருதிருவென விழிக்க, மகிழ் கையை தட்டி விட்டவாறு எழுந்தவன், "ரெண்டு பேரையும் உள்ள தூக்கி போடுங்க சொக்கு" என வெளியேற,

"சார் சார் நா வீட்டுக்கு போணும் சார்" என கதிர் அழ, அவனை பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அந்த ராமன்.

"அப்ப கேஸ் முடிஞ்சதா சார்?" என சொக்கு பின்னயே வேகமாக வர,

"ஆமா சொக்கு, கேட்டுட்டு தான இருந்தீங்க?" என்றவன் மீண்டும் அவனறைக்கு வந்தமர்ந்தான், அவன் மேசையில் அடுத்த கேஸாக மந்தாகினி கொடுத்த கம்ப்ளைண்ட் இருந்தது. துணை ஆய்வாளரை அழைத்து, அதை விசாரித்து வர‌ உத்தரவிட்டான்.

"அப்போ கில்லர உங்களுக்கு முன்னவே தெரியும்தான சார்?" என சொக்கு பாவமாக கேட்க.

"ஆமா லாஸ்ட்டா ரெண்டு கொலைக்கு முன்னாடி, அதான் அவங்களுக்கு ப்ரொடக்ஷன் குடுக்க சொன்னேன் சொக்கு"

"கில்லர் அந்த ராமனோட அக்காவா சார்?"

"எஸ்"

"அவங்கள பிடிக்க போறதில்லையா சார்?"

"அவங்களே நம்மள‌தேடி வருவாங்க, அப்போ புடிச்சு உள்ள போட்ரலாம் சொக்கு" என்றவன், கமிஷனருக்கும் அழைத்து விஷயத்தை சுருக்கமாக சொல்லிவிட்டான்.

பிள்ளைகளை கூட்டிச் செல்ல வந்த பெற்றோர், சண்டையிட்டு, அழுது, ஆர்பாட்டம் செய்து, போராட்டம் என போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே அமர்ந்து விட்டனர். அவன் அவர்களை கண்டு கொள்ளாமல் கிளம்பி இரவு ரவுண்ட்ஸ் சென்றான், பனிரெண்டு மணிக்கு குவார்ட்ஸும் சென்று விட்டான்.

"மரகதம்" என வீட்டினுள்ளே நுழையும் போதே, அவளுக்கு அழைத்துவிட்டான்.

"சொல்லுங்க" என்றாள் அவள் பாதி தூக்கத்தோடு,

"அதுக்குள்ள தூங்கிட்டியா?"

"காலைல கோவில் போக அத்த சீக்கிரம் வரணும் சொன்னாங்க, அதான் படுத்துட்டேன்"

"எத்தனை மணிக்கு கிளம்பணும்?"

"ஏழு மணிக்குங்க"

"சரி ஓகே மார்னிங் இங்க வந்திடு நாம சேர்ந்து போலாம்"

"நீங்க வர்றீங்களா?"

"ஆமா கேஸ் முடிஞ்சு, கில்லர புடிச்சாச்சு, நாளைக்கு கோர்ட் லீவ் சோ நாளன்னைக்கு ஒப்படைச்சா போதும். நாளைக்கு நா ஃப்ரீ அதனால வரேன்"

"கில்லர் யாரு?"

"அது கூட படிக்குற பையனே தான் பண்ணிருக்கான்" என்றான் இவன் சாதாரணமாக,

"எதுக்காக?"

"அத கோர்டுல வச்சு நீயே கேட்டு தெரிஞ்சுக்கோடி, இப்ப தூங்கு காலைல இங்க வந்திடு, நாம பைக்ல போலாம்"

"சரிங்க" என வைத்துவிட்டாள், ஆனால் அந்த பதினைந்து வயது மாணவனுக்காக அவள் மனம் வருத்தம் கொண்டது.

மறுநாள் காலையில் அவளே வாசுகியிடம் சொல்லிவிட, மற்ற எல்லோரும் காரில் கிளம்ப, இவர்கள் இருவரும் மட்டும் பைக்கில் வருவது என முடிவாகியது.

பட்டு புடவையில் அழகாக கிளம்பி அவன் குவாட்ரஸ் வந்தவளை பார்த்து இவன் விசில் அடிக்க, "கிளம்புவோமா?" என்றாள் வாசலில் நின்றே,

"இங்க வா மரகதம் உனக்கு ஒரு கிஃப்ட் வச்சுருக்கேன்" என்றதும் தயங்கி தான் அவனருகில் சென்று நின்றாள்.

"இப்படி திரும்பு" என அவனுக்கு ஏதுவாக திருப்பி விட்டவன், சட்டை பையிலிருந்து ஹிப் செயினை எடுத்து அவள் உணரும் முன் கையை அவளை சுற்றி கொண்டு வந்து சேலை மடிப்போரத்தில், கொக்கியை மாட்டியும்விட்டான்.

"நீதான் எனக்கு கயிறு கட்ட மாட்டேனுட்ட, நா உனக்கு எவ்வளவு அழகா செயின் மாட்டிவிட்ருக்கேன் பாரு, நான்லாம் உன் இடுப்ப பாக்க மாட்டேன்னு அடம் பிடிக்க மாட்டேன்" என அதில் கொக்கியில் தொங்கிய இரு மணிகளை குலுக்கி வேறு விட்டு பார்த்து நிற்க, அவள் அங்கிங்கு அசையாமல் அப்படியே சிலையாக அவன் அருகில் நின்றாள்.

"போலாம் வா" என அவன் இழுத்த இழுப்பில் தான், உணர்வு வந்து, "ஏங்க" என்றாள்.

"ஏங்கவே விடாம‌ நா பாத்துக்குறேன்டி உன்ன" என கூறியே பைக்கில் அவளை ஏற்றி கிளப்பிச் சென்றான் அவளின் ஏசிபி.

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 29

பாண்டியன் மரகதம் இருவரும் கோவிலுக்கு சென்று இறங்கியதுமே அவள் இடுப்பில் கிடந்த செயினை கண்டுவிட்டு, "என்னடி இது? புதுசா இருக்கு எப்ப எடுத்த நீ என்ட்ட கூட சொல்லல?' என அகிலா முதலில் கேட்க, அனைவரின் கவனமும் அவர்களிடம் திரும்பியது.

"நல்லாருக்கே. தங்கம் மாறிக்கே இருக்கு" என வாசுகி பாராட்ட,

"ம்மா என்ன மாறிக்கேன்னு இழுக்குற ஒரிஜினல் ட்வன்டி டூ கேரட் கோல்ட், வர்ற வழில நேத்து போன கடைக்கு வம்படியா இழுத்துட்டு போய் வாங்கி தந்தாலே ஆச்சுன்னு அடம்பிடிச்சு வாங்கி மாட்டிட்டு வந்துருக்கா" என்றான் மகிழ்.

அவள் அவனை மெல்ல தலையை மட்டும் திருப்பி பார்க்க, "என்ன லுக்கு? இங்க வந்துட்டு நா சீக்கிரம் போகணும்னு சொல்லியும் அடம்பிடிக்குற நீ? நீதான் சொன்னியாமா என்ன கூட்டிட்டு வான்னு? நேத்து அவ்வளவு சொல்லியும் என் பேச்ச கேக்க மாட்டேங்குறீங்கல்ல?" என்றான் இருவரையும் அரட்டி.

"ம்ம்ம் இது நா எதிர்பார்த்தது தாங்க" என்றாள் அவள்‌ பவ்யமாகவே.

"ஆமாய்யா ஒருக்கா கேட்டு பாருன்னு நாதேன் சொன்னே. புள்ளைய எதுக்கு இப்படி அதட்டுத. விடு நேரங்கிடைக்காம இப்டி கிளம்பி வர்ற ஆளா நீயி? வந்துட்டு புள்ளைய போட்டு திட்ட கூடாது. பொண்டாட்டி ஆசபட்டு கேக்குறது ப்ரோயசனமா இருந்தா கண்டிப்பா வாங்கி குடுக்கலாம். நாளைக்கு உன் புள்ளைய சுமக்க போற இடுப்புக்கு தானே வாங்கி போட்ருக்க. அவளும் அத நினைச்சுதேன் கேட்ருப்பா. வாங்க சாமி கும்புடுவோம்" என்றவர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு சென்று விட,

மரகதம் வாசுகியையே பார்த்து நின்றாள், "என்னடி எங்கம்மாவ அப்படி பாக்குற?" என்றான் சுற்றி அந்த இடத்தை அளவிட்டவாறு.

"அவங்க இந்த டைம் என்ன‌ கேளுன்னே சொல்லல, ஆனா நானா கூப்புட்டேன்னு நீங்க சொல்லியும், எதுக்குமா வேலைல இருக்குறவன போட்டு படுத்துறன்னு கேக்காம, ஆமா நாந்தான் கேக்க சொன்னேன்னுட்டு போறாங்க, எப்டி இப்படி இருக்காங்க, அண்ட் இந்த ஹிப் செயினுக்கு அவங்க யோசிச்ச சொன்ன‌ விளக்கம் பாருங்க. உங்கம்மா சான்ஸே இல்லங்க வேற லெவல்"

"ஓஹோ இப்ப எங்கம்மா உன் கண்ணுக்கு ஒளிவட்டத்தோட ஒரு நாலடி உயரம் கூட தெரியுறாங்களோ?" என்றான் நக்கலாக,

"ஏங்க? நிஜமா நா அவங்கள பாத்து ஆச்சரியபடுறேன்"

"ரொம்பலாம் பூரிச்சு போகாத, இப்போதைக்கு அவங்களுக்கு, எனக்கும் உனக்கும் கல்யாணம் ஆகணும். அதுக்கு இந்த ஹிப் செயினுலாம் ஒரு அப்ஜெக்ஷனா வர்றத விரும்பல, அதான் அப்டி பேசிட்டு போறாக"

"சும்மா சொல்லாதீங்க. அவங்க ஷீலா, விசாலாட்சிய கூட ஒன்னும் பேசி நா பாத்ததில்ல"

"அது வெளில மட்டும் தான். வீட்டுக்குள்ள சாணிய வட்டமா தட்டலனா கூட வண்ண வண்ணமா திட்டும் எங்கம்மா. ஆமா உனக்கு சாணி தட்ட தெரியும்ல?" என்று வேற கேக்க,

"எதே சாணியா? அதெல்லாம் தெரியாதுங்க, நா எங்க போய் சாணியெல்லாம் எடுத்து பழக?"

"இதுக்காக லா காலேஜ்ல கோர்ஸ சேக்கவா சொல்ல முடியும்? அப்படியே பழக்கத்துல கத்துக்குறது தான். ஷீலாவும், விசாலாட்சியும் வந்து தான் கத்துக்கிட்டாங்க" என்றான்.

"கண்டிப்பா கத்துக்கணுமோ?"

"ஆமா பின்ன? கத்துக்கலனா எங்கம்மா பேச்ச தான் கேட்கணும் நீ. அப்பதான் உனக்கு தெரியபோகுது எங்கம்மாவோட முழு சந்திரமுகி ரூபம்" என பேசிக்கொண்டே, இருவரும் பேச்சியம்மன் முன் வந்து நின்றனர்.

"இந்தாத்தா நல்லா மனசுல வேண்டிக்கிட்டு‌ பூசாரி கைல குடு" என ஒரு தாம்பூலத்தை மரகதவல்லி கையில் குடுத்தார் வாசுகி. அதில், பட்டு புடவை, மாங்கல்யம், கல்யாண வளையல், மஞ்சள் குங்குமம், மஞ்சள் கயிறு, பூ, மாலை, அரிசி, தேங்காய், திருமண பத்திரிகை என அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. சாமியை வணங்கி பூசாரி கையில் அதை குடுக்கும் முன் பக்கத்தில் நின்றவனை அவள் திரும்பி பார்க்க, 'என்ன?' என்றான் அவன் புருவம் மட்டும் உயர்த்தி.

அவள் தாம்பூலத்தை பிடிக்க கண்‌காட்டவும் அவன் தன்னை போல தாம்பூலத்தை அவளோடு சேர்ந்து பிடிக்க, பூசாரி வாங்கி கொண்டார். சாமி முன் வைத்துவிட்டு அவர் அடுத்ததாக வந்து அவளுக்கானதையும் வாங்கி சென்று சாமி பாதத்தில் வைத்து பூசையை ஆரம்பிக்க, எல்லோரும் மணமாற வேண்டி கொண்டனர். பூசை முடியும் முன் சாமி சிலையிலிருந்து விழுந்த பூ ஆசிர்வாதம் கிடைத்த தாம்பூலத்தை, பூசாரி அப்படியே எடுத்து வந்து நீட்ட, மரகதம் வாங்கி கொண்டாள், பாண்டியன் இப்போது தட்டை மட்டும் லேசாக பிடித்து விடுவித்தான்.

"கூரை பட்ட நீங்க எடுத்துட்டு போய் சட்டைய தச்சுட்டு குடுக்கீகளா? மத்தத நா கொண்டு போறேன்" என வாசுகி அகிலாவிடம் கேட்க,

அவர், "இல்ல மதினி புது சேலை எடுத்தது எல்லாத்தையும் நேத்தைக்கு நைட்டே கொண்டு தைக்க குடுத்துட்டு வந்துட்டேன். இதுக்கு மட்டும் அளவு சட்டை எடுத்துட்டுதேன் வந்துருக்கேன். நீங்க இது உங்க கைல தானே இருக்கணும்னு நினைக்கீக, அதனால நீங்களே தச்சு வாங்கி உங்க மருமவளுக்கு நிச்சயம் அப்போ கொண்டு வாங்க. இந்தாங்க அளவு சட்டை"என்கவும்,

"உனக்கு பிடிச்சமாதிரி டிசைனுலாம் வைக்க வேணாமா கண்ணு?" என்றார் வாசுகி அவளிடம்,

"வேணாம்த்த, அத தாலி கட்டும் போது கட்டிட்டு அப்றம் மாத்த தான? அப்றம் கட்டிட்டு இருக்க புடைவைக்கு மாடர்னா தைக்க சொல்லியாச்சு இது சிம்பிளா இருக்கட்டும் போதும்"

"சரி அப்ப இருக்கட்டும், செத்த உக்காந்துட்டு கிளம்புவோமா? நிறைஞ்ச அம்மாவாசை பத்திரிகைய இன்னைக்கே வைக்க ஆரம்பிச்சுருவோம் சரியா இருக்கும்" என அவர்கள் பேச்சிலிருக்க,

"ஏங்க அது நாறாது?" என்றாள் இவள் மெதுவாக அவனிடம்,

"நாறுதா? என்னடி சொல்ற?" என்றவன் தனது சட்டையின் இரு தோள்பக்கமும் மனந்து வேறு பார்க்க,

"இதில்லங்க சாணி?"

"சாணியா?" என்றான் முறைத்துக் கொண்டு,

"ஆமா சாணி கைல தொட்டா ஸ்மெலடிக்குமே?"

"அதெல்லாம் பேப்பர திங்குற மாடு‌போடுற சாணம் தான் நாறும். மாட்டு தீவனம் கரெக்ட்டா பாத்து ரெகுலரா குடுக்குற மாடுங்கடி நம்ம‌ வீட்ல உள்ளது"

"அப்ப மணக்குமா?"

"வெளுத்துபுடுவேன்டி. நீ பவ்யமா நக்கலா பண்ற? வீட்டுக்கு வந்து தட்டும்போது மணக்குமா மயக்குமான்னு தெரியும். சாமிய கும்பிடாம இத தான் யோசிச்சுட்டு இருந்தியோ நீ?" என்றான் முறைப்புடன்.

"மூத்தவனே அவள என்ன சொல்லிட்ருக்க நீயி? உனக்கு கிளம்பணுமா இப்ப அதேன் அவள வையுதியோ?" என வந்துவிட்டார் வாசுகி.

"என்ன நீ வக்கீலுக்கே வாயிதா வாங்க ஓடி ஓடி வந்துடுற?" என்றான் அவரிடமும் காட்டமாக,

"சும்மா சும்மா அதட்டாதய்யா அவ அம்மா அப்பாக்கு விசனமா இருக்குமுல்ல?"

"நா அவள‌ வையுதேன்னு நீ பாத்த?"

"அதேன் தூரத்துல இருந்து பாத்தாலே தெரியுதே?"

"இவ பவ்யமா பாவமா முகத்த வச்சு நின்னு என்ன வில்லனாக்குறான்னு உனக்கு தாம்மா புரியல. பேச தெரியாதவளா லாயரா இருப்பா? நீ எப்டி கல்யாணம் முடியட்டும்னு இருக்கியோ அதே மாதிரி அவளும் கல்யாணம் முடியட்டும் மவனேன்னு பாவமா நடிக்குறா" என்றவன் பேச்சில் வெளிப்படையாகவே அதிர்ந்தவள், 'ஆத்தி கண்டுபுடிச்சுட்டாரே!' என வாயை பிளக்க,

"சும்மா சொல்லாத மூத்தவனே புள்ளைக்கு உன்மேல கொள்ள பிரியம் அதேன் நீ என்ன சொன்னாலும் சரின்னு நிக்கிறா, ஆனா நீ என்னதேன் திட்டுனாலும் நீயும் எல்லா நல்ல காரியத்துக்கும் அவ கிட்ட நிக்கணும்னு நினைக்கிறாய்யா புரிஞ்சுக்க" என்றார் பொறுமையாக,

"சரிதான் மூத்த மருமகளுக்கு நல்லா காக்கா புடிக்கம்மா நீயி" என வண்டியில் ஏறி அமர்ந்தவாறு அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,

"கிளம்புவோமா வாசு?" என பரஞ்சோதி வர,

"ஆமா கிளம்புவோம்" என்ற வாசுகி, "உனக்கு வேலை இருக்குன்னா நீ போயா மருமவ எங்களோட வரட்டும்" என நிற்க,

"அவகிட்டயே கேளு என்னோட வராறாளா இல்ல உங்க கூட வாராளான்னு" என்றான் அவளிடம் புருவம் உயர்த்தி,

'ஏசிபி கோர்த்து விட்டுட்டாரே' என திருதிருத்தவள், "அத்த!" என்க,

"அவேன் கூட போக கேட்டியாக்கும். இந்த தடவ எங்களோட வா கண்ணு, சும்மா அவன உசுப்பிட்டே இருந்தா பொசுக்குன்னு பேசிருவியான்" என அவளிடம் மெதுவாக சொல்ல, அவர்கள் இருவரையும் வாய்க்குள் சிரித்தவாறு பார்த்திருந்தான் பாண்டியன்.

அவனுக்கு அவன் அம்மாவையும் தெரியும், அவன் மரகதத்தையும் தெரியும். இருவருமே இவனுக்காக யோசிக்கும் ஆட்கள், ஆனால் இவனை விளையாட்டாகவும் எளிதில் விட்டுக்கொடுக்காமல் பேசும் ஆட்கள். அதனாலேயே இருவரையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்திருந்தான்.

"அத்த எனக்கு பைக்ல போக ரொம்ப பிடிக்கும். எப்படியும் போற வழிதானே, அப்டியே விட்டுட்டு போயிடுவாங்க. நா சொல்லிக்றேன். அவங்க திட்ற மாதிரி தெரியும் ஆனா திட்டலாம் மாட்டாங்க, அப்படியே திட்டுனாலும் அப்றம் அவங்களே வந்து பேசிருவாங்க" இது அவளரிந்த பாண்டியன், எட்டு வருடங்களுக்கு முன்பே அவன் அப்படிதான், இப்போது அவள் அவனுக்கு அவள்மேல் கோபம் கொள்ள வாய்ப்பே தாராததால் தெரியவில்லை என்றாலும் அவன் அப்படியே தான் இருப்பான் என்ற நம்பிக்கை அவளிடம் இருந்தது.

"சரி மெல்ல கேட்டு பாரு, வான்னு சொல்லிட்டாம்னா போயி இறங்கிக்கோ, இல்ல முறைக்குறாம்னா வந்துரு, சரியா அடம்புடிச்சுட்டு நிக்காத கண்ணு" என கன்னத்தை வலித்து சொல்லிவிட்டு, "வாங்க பையெல்லாம் வேனுக்கு ஏத்துவோம்" என பரஞ்சோதியையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார் அவர்.

"என்ன ரகசிய தீர்மானம் போட்டீங்க ரெண்டு பேரும்?" சென்றவரை பார்த்துவிட்டு திரும்பியவன் நக்கலாக கேட்கவும்,

"அடம்பிடிக்காதன்னுட்டு போறாங்க, நீங்க எப்பவும் என்ன அப்டி சொல்லியே அவங்கள சொல்ல வச்சுட்டீங்க. ரெண்டு பேரையும் சிண்டு முடிச்சுவிடுற ப்ளான் இருக்கோ உங்களுக்கு?" என்றாள் சந்தேகமாக,

"பின்ன மாமியாரும் மருமகளும் கொஞ்சிட்டே திரிஞ்சா நல்லவா இருக்கும்?" என அவன் தோளை குலுக்க,

"போவாமாங்க?" என்றாள் கொட்ட துடித்த கையை அடக்கிக் கொண்டு.

"ம்ம் ஏறு" என்றவன் திரும்பி வேனை பார்த்தான் எல்லாரும் ஏற துவங்கியிருக்க, இவள் வண்டியில் ஏறியவாறு கை அசைக்கவும், அவர்களும் கை அசைத்தனர். அனைத்தையும் பார்த்தவாறு வண்டியை முறுக்கி கிளப்பிவிட்டான் ஏசிபி. அவளை அவள் வீட்டு வாசலில் கொண்டு விட்டுவிட்டு, "அந்த கேஸ் ஜீவானந்தம் சார்ட்ட தானே வரும். நீயா ஹியரிங் வருவ?" என்றான்.

"மேரேஜ் கிட்டங்குறதால சார் என்ட்ட குடுக்குறாரான்னு தெரியல, வைஷு அவங்க சித்தி இறந்துட்டாங்கன்னு நாளு நாளா கோர்ட்டுக்கு வரல, நாளைக்கு வந்தா அவட்ட குடுக்கலாம் இல்லனா மதன் எடுப்பாங்க நினைக்கிறேன். ஏன்ங்க?"

"நீயே எடுக்லாமே? கேஸ் ஒருபக்கம் அதுபாட்டுக்கு நடக்கட்டும் இன்னொரு பக்கம் நம்ம மேரேஜ் அதுபாட்டுக்கு நடக்கட்டும்"

"நா எடுக்கணுமா இந்த கேஸ?" என்றாள் அவனிடமே.

"கேஸையும் பாத்து என்னையும் மேனேஜ் பண்ணிப்பனா எடு, பத்து மணிக்கு மேல கேஸ் ஸ்டடிலாம் பண்ண விட மாட்டேன், எல்லாம் யோசிச்சே டிசைட் பண்ணு. இப்போதைக்கு உன்னோட கேப்பபிலிட்டி உனக்குதானே தெரியும்" என அவன் சிரிக்காமல் முக்கிய விவாதம் போலவே சொல்லவும்,

"நீங்க இருக்கீங்களே, ஏங்க?" என்றாள் முடிக்கும் போது பாவம்போல்.

உதட்டுக்குள் சிரித்தவன், "வரேன் மரகதம்" என்றவாறு கிளம்பி விட்டான்.

அடுத்து அவன் ஸ்டேஷன் செல்ல, மந்தாகினியின் புகாரின் பேரில் விசாரித்த தகவலுடன் அவன் முன் வந்து நின்றார் துணை ஆய்வாளர்.

"சொல்லுங்க நாராயணன்?"

"சார் அந்த மந்தாகினி பொண்ணு கேஸ் ஃபைல்" என நீட்டினார்,

அதை பார்வையிட்டவாறே, "என்ன சொல்றாங்க?" என விசாரித்தான்.

"அவங்க வீட்ல யாருமே அத கொலைன்ற மாதிரி சொல்லல சார்"

"வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?"

"இங்க வந்த பொண்ணோட அப்பா, அவர் சொந்தகாரங்கன்னு தங்கச்சி, தம்பி, சித்தின்னு கொஞ்ச பேர் இருக்காங்க, இறந்த அந்த லேடி சைட் அவங்க கூட பிறந்தவங்க அண்ணா ஒருத்தர் அவர் ஃபேமிலி, தம்பி ஃபேமிலி, ஒரு அக்காவாம் அவங்க ஃபேமிலி மட்டும் அங்க இல்ல"

"அந்த லேடி சைடு உள்ளவங்களும் மந்தாகினி அப்பா மேல சந்தேகமா எதும் சொல்லலையா?"

"இல்ல சார். இந்த பொண்ண தான் திட்றாங்க, வயசு புள்ள‌, படத்துல பாக்குறது கூட படிக்குற புள்ளைக சொல்லுற‌ கதையை வச்சுட்டு போலீஸ் ஸ்டேஷன் வர வந்துருக்கா, அவங்களோடது இருபது வருஷ கல்யாண வாழ்க்கையாம் சார், சண்டைன்றது இந்த ஒரு வருஷமா தான் வருதாமா? அதெல்லாம் எப்பவும் இருக்குறது தான், ஏற்கனவே பையன் விஷயத்துல அவரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்கும் அலைஞ்சு, பையன் வாழ்க்கை என்ன ஆகுமோன்னு பயந்து தான் இருக்காரு, இதுல இதையும் சேத்தீகன்னா அவரும் போய் சேந்துருவாரு. அவ சின்ன புள்ள சாருன்னு என்ன தான் கன்வின்ஸ் பண்ணி அனுப்பிட்டாங்க‌"

"கேஸ் ஃபைல் பண்ணியாச்சு நாராயணன், பையன் கேஸு என்னன்னு பாக்கலாம். இப்ப டெட்பாடி எரிச்சாங்களா புதைச்சாங்களா கேட்டீங்களா?"

"எரிச்சுட்டாங்களாம் சார்"

"ரைட்" என நிதானமாக சாய்ந்து அமர்ந்தவன், "மந்தாகினியோட அப்பாட்ட விசாரிச்சீங்களா?"

"அவர் எனக்கு எதுமே தெரியாதுன்னு மட்டுந்தான் திரும்ப திரும்ப சொல்றாரு சார்"

"அவர் பேச்சு வச்சு பார்த்தா உங்களுக்கு எப்டி தோணுது?"

"மங்குனியா இருப்பாருன்னு தோணுது சார்"

"தப்பு பண்ணிட்ட பயம், இல்ல எதாது பதட்டம்?"

"ம்ம்கூம் ஒன்னுமில்ல சார், ரொம்ப வெக்ஸானமாதிரி அமைதியா காமிச்சுக்குராறு சார்"

"எங்க வேலை பாக்குறாராம்?"

"எல்.ஐ.சி ஏஜென்ட் சார்"

"அவர் வைஃப் வொர்க் பண்ணாங்களா?"

"ஆமா சார் கேகேவி ஸ்கூல் டீச்சராம். இந்த பொண்ணுக்கு ஒரு தம்பி உண்டு போல அந்த பையனையும் அங்க காணும், அவனும் கேகேவி ஸ்கூல்ல டென்த் தான் படிக்கிறானாம்"

நாடி தடவி யோசித்தவன், "கேகேவி ஸ்கூலோடயே எல்லாம் கனைக்ட் ஆகுதே நாராயணன்"

"ஆமா‌ சார் எனக்கும் அப்டி தோணுச்சு சார்"

"சரி மந்தாகினியையும்‌ அவர் அப்பாவையும் நாளைக்கு ஸ்டேஷன் வர சொல்லி சொல்லிடுங்க, வரட்டும் பேசி பாப்போம்" என்கவும் நாராயணன் சல்யூட் வைத்து கிளம்பிவிட, அனைத்தையும் ஒரே புள்ளியில் கோர்த்தவாறு இவனும் கமிஷனரை பார்க்கச்‌‌ சென்றான்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top