ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனசுக்குள் மந்தாகினி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 45

இரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு பௌர்ணமி நாளில் பாண்டியனுக்கும் மரகதத்திற்கும் பிறந்த மகளின் முதல் பிறந்த நாள் அன்று, அதை கொண்டாட பரபரப்பாக இருந்த பரஞ்சோதி இல்லத்தின் மாலை வேலை அது,

"ஏட்டி ஷீலா மூத்தவ ஃபோன எடுத்தாளா?" என வாசலில் நின்று மூன்று பேத்திகளுக்கு மாலை சிற்றுண்டியாக ராகி களியை ஊட்டிக்கொண்டிருந்த வாசுகி, கிச்சனுக்கும் ஒரு நடை நடந்து வந்து கேட்டார்.

ஷீலா, செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு, "ஏன்த்த இது எத்தனாவது தடவையா கேட்கீகன்னு கணக்கு தெரியுமா?" என இடுப்பில் கைவைத்து திரும்பி கேட்க,

"ஏம்ட்டி அவளுக்கு ஃபோன போட்டு கிளம்பிட்டாளான்னு கேளுன்னு சொன்னா நீ இததேன் உக்காந்து எண்ணிக்கிட்டு இருக்கியோ?"

"ஈர கையோட நிக்கேன் பாத்திரத்த விலக்கி முடிச்சுட்டு கூப்பிடுதேன். அவுக கிளம்பி போயே ரெண்டு மணி நேரந்தேன் ஆகுது, உடனே கூப்புட்டா என்ன நினப்பாக" என்றவள் மீண்டும் விலக்க துவங்க,

"பிள்ள நம்ம கூடத்தான இருக்காத்த, நாம கோவிலுக்கு போனா கூட அவுகளே வந்துர போறாக, நீங்க ஏன் போட்டு அங்கிட்டும் இங்கிட்டுமா அல்லாடிட்டு கிடக்கீக?" என்றாள் விசாலாட்சியும்.

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு கடைசி வாயையும் ஊட்டி முடித்து வந்தவர், "எல்லாருமா சேர்ந்து போவேணாமா? அவ மொத வந்தாதேன் மூத்தவனையும் நேரத்துக்கு வர வைக்குவா இல்லன்னா அவேன் நாம வீட்டுக்கு வந்த பொறவுதேன் வந்து நிப்பியான். பிள்ளைக்கு மொத பிறந்தநாளு விஷேசம் ஆத்தனும் அப்பனுந்தேன் முன்ன நிக்கணும்டி, விவரமில்லாமையா சொல்லுதேன்" என அவர் இருவரையும் திட்ட,

"அதெல்லாம் ரெண்டு பேரும் கரெக்ட்டா வந்து நிப்பாகத்தே வேணும்னா பாருங்க, அக்கா அத்தானோடதேன் வந்து இறங்குவாக" என விசாலாட்சி மறுபடியும் சொல்ல.

"உன் புருஷன் கிளம்பிட்டானாடி?" என்றார் அவளிடம்.

"ம்ம் குளிக்க போயிட்டாக" என்ற விசாலாட்சி மூன்று பிள்ளைகளுக்கும் வாயை துடைத்து விட்டாள்.

எப்போதுமே எதாவது விசேஷம், எல்லாரும் வெளியே கிளம்ப வேண்டும் என்கையில் எல்லாம் வாசுகிக்கு படபடப்பாகிவிடும், மருமகள்கள் இப்போதெல்லாம் பார்த்து கொண்டாலும் அவர் ஏனோ காலின் சக்கரத்தை கலட்டாமல் பரபரப்பாக தான் நிற்கிறார், அவர்களுக்கும் அது பழகிவிட்டிருந்தது.

"சரி பிள்ளைகளுக்கு உடுப்ப போட்டு விடு. நா பின்னாடி போய் ஒரெட்டு பாத்துட்டு எல்லாத்தையும் அடைச்சுபோட்டு வாறேன்" என்ற வாசுகி பின்னால் வந்து, கோழி, ஆடு, மாடு, நாய் என அனைத்தையும் அதனதன் இடத்தில் அடைத்துவிட்டு கையை கழுவி கொண்டு பின்னிருந்து உள்ளே வருகையில் வாசலில் நுழைந்தனர் அகிலா முத்துராமன் தம்பதியினர்.

"வாங்க மதினி, வாங்கண்ணே, மத்தியான சாப்பாட்டுக்கே வாங்கன்னு சொன்னா டயத்துக்கு வந்து நிக்கீக" என வாசலுக்கே விரைந்து வரவேற்க, "வாங்கம்மா வாங்கப்பா" என ஷீலா, விசாலாட்சியும் கூட அடுப்படியிலிருந்து வெளியே வந்து வரவேற்றனர்.

"இருக்கட்டும் மதினி, நாலு மணிக்கே வீட்ல நிக்கீக, வேலைக்கு போகலியா நீங்க ரெண்டு பேரும்? பாப்பாதேன் இன்னும் வரலியோ?" என அகிலா கேட்டுக் கொண்டே வந்து வாசுகி கையை பிடித்து விடுவிக்க,

"எனக்கு வருஷ லீவு சும்மா கழியுது அதேன் நா லீவு போட்டுடேன்ம்மா, இவ காலைலயே போயிட்டு இப்பதேன் வந்து நிக்கா. அக்கா மதியந்தேன் கிளம்பி போனாக, லேட்டாவும்னும் சொல்லிட்டாகம்மா" என்றாள் ஷீலா.

"ரொம்பதேன் பண்ணுவா எல்லா நாளுந்தேன் வேலைக்கு போறா இன்னைக்கு ஒருநாள் லீவு போட்டா என்னவாம் மதினி. நீங்க சொல்லிருக்கலாம்ல?"

"வரட்டும் மதினி, நாமளும் அதுக்குள்ள கிளம்புவோம், ஆறு மணிக்கு மேலதேன் பூசைக்கு சொல்லிருக்கோம் வந்துருவாக" என வாசுகி சொல்லவும்,

"இன்னும் காணும் இன்னும் காணும்னு இம்புட்டு நேரமு உள்வாசலுக்கும் வெளிவாசலுக்கும் நடந்தாகம்மா ஆனா ஒரு போனு போட்டு கேட்கல, அத்தான் வஞ்சுபோடுவாகன்னு பயம், இப்ப உங்கட்ட சமாளிக்காக" என விசாலாட்சி சிரிக்க,

"நா அவளுக்கு போன போட்டு வராளா என்னன்னு கேட்கேன் இருங்க" என முத்துராமன் போனை பாக்கெட்டில் இருந்து எடுத்தவாறு சொல்ல,

"அவுக போட்டாளாவது உங்க மக என்னன்னு எடுத்து ஒருவார்த்தை கேட்பா, நாம போட்டா அதும் கூட இருக்காது, சார்ஜுக்கு புடிச்ச கேடா?சும்மா இருங்க" என அகிலா சொல்லவும் மற்ற மூவரும் சிரித்துக் கொண்டனர்.

அக்காக்களுடன் தத்தி தத்தி ஓடிக்கொண்டிருக்கும் பேத்தியை தூக்கி வந்து முத்துராமனிடம் வாசுகி நீட்ட, அவர் ஆசையாக வாங்கி கொள்ள, பிள்ளை முட்டை கண்ணை உருட்டி தன்னை தூக்கியவரை ஊன்றி பார்த்தாள். அவர் அப்போதும் கொஞ்சவும் லேசாக சிரிப்பு வந்தது, இன்னும் கொஞ்சம் கொஞ்சவும் கிளுக்கி சிரித்தாள் பிள்ளை. அடுத்த வந்த நிமிடங்கள் பிள்ளையை கொஞ்சுவதிலும் பெண்களின் கலகலப்பான பேச்சிலும் வேகமாக சென்றது.

சற்று நேரத்தில் பரஞ்சோதியும் வரதனும் வரவும், அரசுவும் கிளம்பி வர, "கிளம்புவோமா?" என வாசுகி சொல்லவும் எல்லோரும் வெளியே வந்தனர்.

"இப்ப மருமவளுக்கு போன போடு ஷீலா" என்றார் வாசுகி.

அந்நேரம் சரியாக மரகதவல்லியிடமிருந்து ஷீலா எண்ணுக்கு அழைப்பு வந்தது, "இந்தா அவுகளே கூப்புட்டுடாக" என எடுத்து, "சொல்லுங்கக்கா எங்க இருக்கீக?" என கேட்டாள்.

"நீங்க கோவிலுக்கு போயிடுங்க நாங்க நேரா அங்க வந்துடுறோம் ஷீலா. கோர்ட்ல இருந்து கிளம்பிட்டேன். அரைமணி நேரம் வந்துருவோம்"

"சரிக்கா வாங்க. நாங்க கிளம்பிட்டோம்" என வைத்தவள் அப்படியே திரும்பி ஒலிபரப்ப, "அப்ப அவந்தேன் கூட்டிட்டு வருவானா இருக்கும். நாம முன்ன போவோம்" என்ற முடிவில் அனைவரும் காரில் ஏறினர்.

அங்கு நீதிமன்ற வாசலில் தனக்கு முன் நின்று வண்டியில் தாளம் தட்டிக்கொண்டிருந்தவனை முறைத்தவாறே பேசி முடித்து கைப்பையில் போனை வைத்தவள், "போதுமா கிளம்புங்க" என அவன்‌‌ பின்‌ ஏறி அமர, பின்னிருந்து வைஷ்ணவி அழைத்தாள்.

வைஷ்ணவி, விநாயகம் இருவரும் கடந்த மாதம் தான் விடுதலை ஆகியிருந்தனர், இன்று தான் மீண்டும் அலுவலகம் வர துவங்கி இருந்தாள் வைஷ்ணவி. மரகதத்திடம் சொல்லிவிட்டு, இவனுக்கும் ஒரு தலையசைப்பை கொடுத்து நகர்ந்து சென்றாள். அவளுக்கான வாழ்க்கையே அவளை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஓட துவங்கி இருந்தாள் அவள்.

"நீ இருக்கிறியே ஓல கொட்டாயா சும்மா சிலுபிறியே(நடக்குறியே) தவள கொட்டாயா, மஜாவா இனிக்கிறியே பஞ்சுமிட்டாயா ஆமா பஞ்சுமிட்டாயா?" என பாண்டியன் பாடிக்கொண்டே வண்டியை கிளப்பி ஓட்ட துவங்க,

அவன் வலது முதலில் இரண்டடி அடித்து, "உங்கட்ட ஒரு மனுஷி பேசுறேன்ல?" என்க,

"எதுக்குடி சிலுப்புற இப்போன்னு நானும் பாட்டுல கேட்குறேன்ல மரகதம்?"

"காலைல உங்கட்ட பத்து தடவ கேட்டுதான இந்த புடவைய கட்டுனேன்? இப்ப அப்டியே கிளம்புற நேரத்துல வந்து மாத்துன்னு நிக்றீங்க. சீக்கிரமாது வந்துருந்தா பரவால்ல அதையும் செய்யல, இனி வீட்டுக்கு போய் சேலைய மாத்தி, எவ்வளவு லேட்டாகும், அங்க பாப்பா வேற தேடுவான்னு அக்கறை இருக்காங்க?"

"அப்ப லீவு போட்ருக்கணும்டி நீ" என்றான் சுருக்கமாக, இன்னும் பாட்டின் வைப்பிருந்தது அவன் பேச்சில்.

"ஃபைனல் ஹியரிங்னு தான மதியானதுக்கு மேல கிளம்பி வந்தேன்? நானாவது ரெண்டு மணிநேரந்தான் பாப்பா கூட இல்ல, நீங்க காலைலயே கிளம்பி போயிட்டு இப்படி லேட்டாவும் வந்து நிக்றீங்க?"

அவனோ, "என் பாப்பாக்கு என்ன தெரியும்டி, முத்துராமனோட பாப்பாக்கு தான் என்னைய தெரியாது. என் பொண்ணு அங்க நல்லா ஜாலியா விளையாண்டுட்டு தான் இருக்கா, உனக்கு அவள தேடுதுன்னு ட்ரைக்டா சொல்லி பழகுடி" என்க,

'நீ என்னவும் சொல்லிக்கோ' என அவர்கள் குவாட்ரஸ் வந்து இறங்கும் வரையிலுமே திட்டிக்கொண்டே தான் வந்தாள் மரகதம். வீடு நுழைந்த பிறகு நிச்சயமாக திட்டவிட மாட்டான் என அனுபவத்தில் உணர்ந்தவள் அவள்.

அவள் நினைத்தது தான் நடந்தேறியது. வீட்டினுள் நுழைந்ததும் "சீக்கிரம் உங்களுக்கு ஒரே தடவைல திருப்தியா இருக்குறத எடுத்து வைங்க நா குளிச்சுட்டு வரேன்" என்றாள் தலையை கபோர்டுக்குள் கொடுத்துக் கொண்டு.

"எனக்கு திருப்தியா இருக்குறத சொன்னா நீயும் நானும் வீட்ல தான்டி இருக்கணும், கோவிலுக்கு போ முடியாது" என்றவனும் அவள் பின்னாலேயே வந்து நிற்க.

"ஏங்க" என அவள் நைட்டியை கையிலெடுத்துக் கொண்டு குளிக்க திரும்ப, போகவிடாமல் வழிமறித்து நின்றான் பாண்டியன்.

"என்னங்க?" என்றாள் சந்தேகமாக பார்த்து,

"உன்ட்ட என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன் மரகதம்?" என்றவன் பார்வையே சரியில்லை என்றதும்,

"நோ ஏசிபி. டைமில்ல நமக்கு, வழிவிடுங்க. திட்னதுக்கு வேணா சாரி, இந்தாங்க சாரி கிஸ்" என அவன் கன்னத்தில் முத்தமிட்டு விலகிக் கொண்டாள் வேகமாக.

"நா உன்ன என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன்னு சொல்லுடி மொத"

ரிவைன்ட் செய்து பார்த்தாள், "எனக்கு இந்த சேரி‌ பிடிக்கல சேன்ஞ் பண்ணிட்டு எனக்கு பிடிச்ச மாதிரி உன்ன மாத்திட்டு தான் கிளம்புறோம் வா" என அழைத்து வந்திருந்தான்.

மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு, "எதுனாலும் வந்து பேசிக்கலாம்" என நகர போக,

"இல்ல இப்பவே பேசிட்டு கிளம்பலாம்" என பிடித்து நிறுத்தினான்.

"பாப்பா இல்லாத டைம்ம நீங்க எப்டிலாம் யூஸ் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சும் வந்துருக்கேன்ல என்ன தான் சொல்லணும்"

"சொல்லிக்கோடி மரகதம்"

"உங்க ஃபோன்ல ப்ராடுன்னு சேவ் பண்ணிருக்க என நேம்ம மாத்துற வர நமக்குள்ள எதுவுமில்லன்னு டீல் இருக்கு நியாபகம் இருக்காங்க?" என அவன் நெஞ்சில் கைவைத்து தன்னை நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தினாள்.

அவள் இடுப்பு செயினை பிடித்து அருகிலிழுத்தவன், "என்னன்னு மாத்தணும் மரகதம்?" என்றான்,

"ஏன் எப்டி மாத்தலாம்னு ஐடியா உங்களுக்கு?"

"என் மனசுக்குள் மந்தாகினின்னு வச்சுடவா?"

"நினைச்சேன் இதான் சொல்லுவீங்கன்னு, விடுங்க முதல்ல, தள்ளி போங்க, தள்ளி போங்கன்னு சொல்றேன்"

சிரிப்பு தான் அவனுக்கு, இன்றும் மந்தாகினியின் பெயரை சொன்னால் கடுப்புதான் வரும் அவளுக்கு, அதனாலேயே அதைவிடுத்தே அவளை வம்பிழுப்பதை வேலையாக வைத்திருக்கிறான் அவன். பேச்சோடே அவளை கைகளில் அள்ளிக் கொண்டான், காரணமாக வந்த காரியத்தை நிறைவேற்றாமல் செல்பவனா மரகதத்தின் பாண்டியன்!

இருவரும் தீராத விளையாட்டை விளையாண்டு குளித்து, அவளை சேலையை மாற்றவிடாமல் படுத்தி என அவளிடம் நாலடி வாங்கி கிளம்ப மேலும் இரண்டு மணிநேரம் ஆகியிருந்தது.

அதற்குள் இருபது முறையாவது வாசுகி மற்றும் அகிலாவிடமிருந்து போன் வந்திருக்கும், ஒன்றையும் அவனும் எடுக்கவில்லை அவளையும் எடுக்க விடவில்லை பாண்டியன்.

"ப்ராடு தனம் பண்றது பூராவும் நீங்க, ஆனா நா ப்ராடா? இப்ப அங்க வந்துட்டு எதையும் மாத்தி சொல்ல கூடாது நீங்க. அவசர வேலை வந்துட்டு, அதனால போயிட்டு வந்து இவள கூட்டிட்டு வர நேரமாகிடுச்சு அது மட்டுந்தான் நீங்க சொல்லணுங்க" என கோவிலுக்கு செல்லும் வழியில் மறுபடியும் அவனை பேச ஆரம்பித்திருந்தாள்.

"சரிங்கங்க", அவன் அவ்வாறு உடனேயே ஒத்துக் கொண்டதில் தான் அவளுக்கு பெருத்த சந்தேகம்.

"நீங்க மாத்தி சொல்லுவீங்களோ?"

"பாத்த வேலைல ஈக்வல் இன்புட் போட்டுட்டு பேசும்போது நா மட்டும்னு இப்படி பேசுற பாத்தியா அதான்டி உன்ன ப்ராடுன்னு சொல்றேன் நானு"

"ஏங்கங்க?" என்றாள் இப்போதும் அவன் முதுகில் பட்டென்று அடித்து.

"என்ன சொல்லு வருஷம் கூட கூட உன்மேல ஆச சும்மா ஜிவ்வுன்னு கூடிட்டே தான் போகுது மரகதம், கயிறு கட்டி வசியம் பண்ணிட்டியோ?"

"நீங்க பேசவே வேணாங்க ப்ளீஸ்"

"அப்ப நீ தனியா பேசிட்டு வரேன்றியா? சரி உன் இஷ்டம் பேசு" என்றான் அதற்கும்,

"முடியலங்க" என அவன் முதுகிலேயே முகத்தை அழுத்தி சாய்ந்து கொண்டாள்.

"இல்லயேடி இன்னைக்கு அவ்வளவு ஃபோர்ஸ் இல்லையே நம்ம விளையாட்டுல?"

"ஏசிபிபிபிபி" என அவன் கையில் நறுக்கென்று கிள்ளிவிட, வாய்விட்டே சிரித்தான் பாண்டியன். இவ்வாறான பேச்சுவார்த்தைகளோடே மீனாட்சி அம்மன் கோவில் வந்திறங்கினர் இருவரும்.

"எக்கா எவ்வளவு நேரம்?" என விசாலாட்சி மரகதத்தை நெருங்கி அவனுக்கு கேட்காதவாறு கிசுகிசுக்க,

"இவங்க வர லேட்டாகிடுச்சு விசாலாட்சி, அத்த உன்ன வாசல்லயே நிக்க விட்டாகளாக்கும்?" என இவளும் சிரிக்க,

"ஆமா போனும் கையுமா அரைமணி நேரமா இங்கதேன் நிக்கேன்"

"பூ வாங்கு மரகதம்" என பாண்டியன் சொல்லவும்,

"உள்ள இருக்கு அத்தான், எல்லாருக்கும் சேத்துதேன் வாங்கிருக்கோம்" என்கவும் மூவரும் உள்ளே சென்றனர்.

"ம்மா ம்மா" என தாவிக்கொண்டு வந்தாள் பாண்டியனின் மகள். பால்குடி மறக்காத பிள்ளை என்பதால் அப்பாவை விட அம்மாவின் செல்லம் தான் அவள். அவனையும் நன்கு கொஞ்சுவாள், ஆனால் முதலில் அம்மா தான் வேண்டும் அவ்வளவு நேரத்திற்கும் பார்க்காததால் அதிகம் ஏங்கியிருந்தாள். அம்மாவும் மகளும் கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள் அவனை மறந்துவிடுவர், அதனாலேயே அவளோடு தனியாக கிடைக்கும் வாய்ப்புகளை அவன் அவ்வளவு எளிதில் விட்டு விடுவதில்லை.

"மூத்தவனே ஏன் இம்புட்டு நேரம்?"

"லேட்டானதுக்கு காரணம் உன் மருமக தான், எதுனாலும் நீ அவளயே கேட்பியாம் நா பதிலே சொல்ல கூடாது உங்க யாருட்டையும் பேசவே கூடாதுன்னு வழி முழுக்க என் காது தேய்றளவுக்கு பாடமெடுத்துட்டு வந்துருக்கா, அவளையே என்னன்னு கேளு நீயி" என்றான் சாதாரணமாகவே, அதில் அகிலா மரகதவல்லியை முறைத்து பார்க்க,

"வந்த வேலைய கரெக்ட்டா பாத்துட்டாகடா உங்கப்பா" என பிள்ளையின் காதில் சொல்லி முத்தம் வைத்தாள் மரகதம்.

"உடனே நீ சும்மானாலும் அவள சொல்லிருவியே, பிரசாதம் எல்லாம் சாமி பாதத்துல வச்சாச்சு, மாவிளக்கும் பிள்ளைக்கு நாங்களே வச்செடுத்துட்டோம், இனி சாமி கும்பிடதேன் போவணும், அதுக்குனாலும் வந்தியேன்னு கேட்டேன். நீ இன்னைக்குமா ஊரு காவலுக்கு போவணும்?"

"ஏன் இனி நீயும் எங்கூட வரியா அப்ப?எதுனாலும் நீ செஞ்சாலே போதும்மா, நேரமாகிருச்சுன்னு இங்கேயே நின்னு கேள்வியா கேட்க போறியா? வா சாமி கும்பிட போலாம்" என அவன் பிரகாரம் உள்ளே நடக்கவும், கோவில் கமிட்டி ஆள் வந்து அழைத்துக் கொண்டார். அவர்களுக்கு சிறப்பு தரிசனம் தான் எப்போதும் போல்.

"தாகினி குட்டி" என்ற தகப்பனின் சத்தத்தில் தாயிடமிருந்து முன் அரிசி பற்கள் தெரிய சிரித்துக் கொண்டு தாவினாள் பாண்டியனிடம். அவன் கையிலிருந்தே கோவிலுக்கு வந்தவர்களுக்கு பிரசாதம் வழங்கினாள் பிள்ளை.

'மந்தாகினி' பாண்டியன் மரகதவல்லியின் செல்ல மகள். அவளுக்கு அந்த பெயரை வைப்பதற்குள் அவன் அவளை படுத்தியபாட்டை இன்றும் நினைத்து பார்த்தாள் மரகதவல்லி.

"எதுக்கு அந்த பேரு இப்ப?"

"நீதான் மறக்க வைக்கலயேடி"

"உங்களுக்கு மறக்க‌ முடியலன்னு சொல்லுங்க"

"ஆமா நீ பேர மாத்தி சொல்லி ஏமாத்திட்டு என்ன மறக்கலன்னு திட்டுற? நீயும் உன் கண்ணுமா என் மனசுல மந்தாகினியா தான் பதிஞ்சீங்க, சோ அந்த பேருக்கு சொந்தக்காரி என்ன பொறுத்தவரைக்கும் என் எக்ஸ் லவ்வரா இருக்கட்டும். எக்ஸ் லவ்வர் பேர கல்யாணதுக்கு அப்றம் பிள்ளைக்கு வைக்குறது தான் உலக வழக்கம். சோ என் பொண்ணு பேரு மந்தாகினி தான்" என அவன் கூறியதில் அவள் அதிர்ந்து நிற்க, பிறப்பு சான்றிதழில் அந்த பெயரையே கொடுத்து உறுதிபடுத்திவிட்டான் அவன்.

"ஏங்கங்க மாத்தலாங்க ப்ளீஸ்ங்க" என சுற்றி வந்து கெஞ்சி கொஞ்சி மிஞ்சியும் பார்த்து விட்டாள், விடாகண்டன் இறங்கியே வராமல் சாதித்து கொண்டான்.

"என்னைய லைஃப் லாங் வெறுப்பேத்துனுமா உங்களுக்கு?"

"நீ ஏன்டி அப்டி நினைக்குற? எனக்கு அந்த பேரு தான் முதல்ல மனசுல பதிஞ்சது, அது உன்னோடதுன்னு தான் அந்த நேம்ல ஒரு க்ரேஸ் எனக்கு. ஆனா இப்ப மரகதம்னு தான் நிறைஞ்சு நிக்குற நீ. உன்ன மந்தாகினின்னு கூப்ட கூட தோனல, அதுக்காக அந்த பேர விடவும் முடியல சோ நம்ம பாப்பாக்கு வச்சுட்டா, ஆசை தீர கூப்புட்டுபேன்ல? காமமில்லாத காதல் பாசம் தான் நா அந்த மந்தாகினி மேல வச்சுருந்தது, அத நா என் பிள்ளைக்கு குடுக்கலாம் தப்பில்ல, காமத்தோட கலந்த காதல் என் பொண்டாட்டி உனக்கு மட்டுந்தான்டி சொந்தம்"

"நல்லா உருட்றீங்க போங்க"

"ஒன் சைட் லவ்வுல லவ் மட்டும் இருக்குமா லஸ்ட்டும் இருக்குமா?"

"ஏன் லஸ்ட் இருக்காதா?"

"ம்ம்கூம் எப்ப லவ் டபுள் சைடாகுதோ அப்பதான் மத்த ஹார்மோன்லாம் வேலை செய்ய ஆரம்பிக்கும். ஒன் சைடுல லவ்வ டிக்லர் பண்ண வைக்குறதுக்கான மூளை மட்டும் தான் வேலை செய்யும். பின்குறிப்புடி நா சொல்றது பத்து வருஷ முந்தின ஜெனரேஷன்"

"மந்தாகினின்னு பேரு வைக்குறதுக்காக லவ்வு டயலாக்லாம்‌ வருதுல்ல. இதுமாதிரி எங்கிட்ட ஒருநாள் பேச வந்துருக்கா உங்களுக்கு?"

"ஐ லவ் யூடி மரகதம்" என சொல்ல முயன்றவன் சிரிப்பை மறைக்க,

"போய்யா ஏசிபி போய்யா" என அன்று முகத்தை திருப்பி விட்டு சென்றதை இப்போதும் நினைத்து சிரிப்புடன் திரும்பி பார்க்க, அப்பாவும் மகளும் பிரசாத்தை குடுத்து முடித்து விட்டு, வாளியை உருட்டி விளையாண்டு கொண்டிருந்தனர். அவள் இன்னும் குடுக்க வேண்டும் என அழ துவங்கியிருந்ததால் மறக்க வைக்க விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான் அவன்.

"ஆத்தி வாளி போச்சு, ஏங்க" என இவள் எழுந்து ஓடி அவர்களை நிறுத்தச் சொல்ல, அவளையும் விளையாட்டில் இழுத்துக் கொண்டனர் இருவரும். கோவிலுக்கு வந்தவர்களோடு, வாசுகி, பரஞ்சோதி, ஷீலா, வரதன், விசாலாட்சி, அரசு, அகிலா, முத்துராமன் என அவர்களும் பார்த்திருக்க, யாரையும் கண்டுகொள்ளாமல் இருவரும் விளையாட, மரகதவல்லி அவர்களை பிடித்து நிறுத்த என பார்க்கவே கவிதையாக இருந்தது அந்நிகழ்வு. இதே சந்தோஷத்துடன் அவர்கள் நிறைந்த வாழ மீனாட்சி அம்மனிடம் பொறுப்பை ஒப்படைத்து விடைபெறுவோம் நாம்.

நன்றி 🙏


(தொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்குவித்து கதையை முடிக்க உதவிய அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், மறக்காது தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள கேட்டு கொள்கிறேன். நன்றி 🙏 🙏 🙏)
 
Status
Not open for further replies.
Top