ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனசுக்குள் மந்தாகினி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 35

முதல் முத்தம் என்பதால் அவன் அதற்குள் மூழ்கி முத்தை தேடிக் கொண்டிருக்க, வாசுகி சத்தமெல்லாம் எங்கோ மூலையில் கேட்கும் நிலை தான், ஏற்கனவே ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல், அவன் தரும் புது உணர்வுகளை ஏற்று அதனோடு பயணிக்கவும் முடியாமல், தள்ளிவிட்டு விலகி கொள்ளவும் தோன்றாமல், நடுங்கி கொண்டு நின்றவளுக்கு தான் வாசுகியின் குரல் உடனே கேட்டது.

'ஆத்தி அத்த' என மனதிற்குள் அலறி, விலக முயன்றாள். ஆனால் அவனிடமிருந்து இஞ்ச் நகர முடியவில்லை அவளால், அவ்வளவு நேரமும் அவள் விலக முயலாததாள் அவளுக்கு தெரியவில்லை போலும், இப்போது புரிந்தது அவள் முயற்சித்திருந்தாலும் முடிந்திருந்திருக்காது என்பது.

அங்கு வாசுகி கதவை வேகமாக தட்ட துவங்கவும், இவள் அவன் தோளில் அடிக்க, அதையும் தூசு போல் தட்டிவிட்டு அவன் முத்தமிடும் வேலையில் தான் அவனது முழு கவனமும்.

பல நாட்களாக செயல்படுத்த நினைத்து நினைத்து முடியாமல் போனதை அப்போது செய்துவிட்டாள், எட்டி நறுக்கென்று அவன் உச்சியில் கொட்டிவிட, அதில் மொத்தமும் கலைய அவளிடமிருந்து பிரிந்து அவள் முகம் பார்க்க, "அத்த கூப்பிடுறாங்க" என்றாள் பாவமாக.

"அதுக்கு கொட்டுவியா நீ?"

"பின்ன எப்டி உங்கள நகர்த்தவே முடிலயே?"

"மூத்தவனே? கண்ணு, பாப்பா, மரகதவல்லி" என அங்கு அழைத்துக் கொண்டே இருந்தார் வாசுகி.

"ஒவ்வொருத்தருக்கும் ஒரு பேருன்னு ஊருபட்ட பேராடி வச்சுக்குவ? இரு உன்ன நாளைக்கு தனியா சிக்கும் போது பேசிக்றேன்" என்றவன் விறுவிறுவென கதவை திறக்க செல்ல,

"பேசுற மூஞ்சிய தான் இவ்வளவு நேரமு பாத்துட்ருக்கேன் நா" என முனங்கி கொண்டே முகத்தை கைக்குட்டையால் நன்கு துடைத்து கொண்டு பின் தொடர்ந்து சென்றாள் இவளும்.

"என்னடி முனங்குன?" என்றான் கதவு வரை சென்றவன் சட்டென்று நின்று திரும்பி,

"ஒன்னுமில்லங்க, அத்த திட்டுவாங்களோன்னு யோசிச்சேன், அத தான் சொல்லிட்டேன் போல"

"நானே வில்லங்கம் புடிச்சவன் எங்கிட்டயே டகால்டி வேலை காட்றல்ல?"

"ஏங்க கதவ திறந்துட்டு என்ன‌ வேணா திட்டுங்களேன், அவங்க எதாது நினச்சுக்க போறாங்க"

"அவங்க நினைக்குறது தான நடந்தது, அப்ப அவங்க நினைக்குறதும் சரிதான?"

"ஏங்கங்க" என்றாள் முகத்தை அழுந்த தேய்த்து கொண்டு.

"நீயே சொல்லேன்"

"கதவ திறங்க இல்ல வழி விடுங்க நா திறக்குறேன்"

"என்னட்டி இம்புட்டு தட்டியும் திறக்க மாட்டேங்காக, பேச்சு சத்தம் கேக்குதே? இவேன் ரொம்ப திட்டிருப்பானோ? பெரிய சண்டை எதுவும் போடுதாகளோ? காத்து கருப்பு வேலைய காட்டுதோ? ஆத்தி அந்த ஜோசியகாரன் வேற வாய வச்சு தொலைச்சானே?" என அங்கு வாசுகி வேறு புலம்ப,

"அத்த அதெல்லாம் இருக்காது, அவங்களே வருவாங்க, அத்தான் நீங்க இப்படி தட்டுததுக்குதேன் வைய்ய போறாக" என ஷீலா அவரை இழுத்து பிடிக்க முயன்றாள்.

"உங்களதாம்டி மொத்தணும், அவேன் கோவமா இருக்கியான்னு சொல்லியும் அந்த புள்ளைய கூட்டிட்டு வந்து விட்ருக்கீக. படிச்ச புள்ளைக செய்யுற வேலையாட்டி இது? நாளைக்கு காலைல கல்யாணத்த வச்சுகிட்டு இந்நேரம் ரெண்டும் சண்டை போட்டுட்டு இருந்தா நல்லாவா இருக்கும். என்னைய கூப்புடாம உங்கள யாருட்டி அவள மூத்தவன் ரூமுக்குள்ள போ விட சொன்னது? நமக்குதேன் தெரியும் உள்ள ரெண்டும் சண்ட போடுதுகன்னு. மத்தவுக தப்பால்ல பேசுவாக. சின்ன பிள்ளைகன்னு காமிச்சுருதீகளே" அவர் திட்ட திட்ட கேட்டுக் கொண்டு தேமே என்று தான் நின்றனர் ஷீலா விசாலாட்சி இருவரும். குறுக்க பேசினால் இன்னும் திட்டுவார் என தெரிந்ததால் அமைதியாக வாங்கிக் கொண்டனர்.
வெளியே அவர்கள் பேச்சு வார்த்தையில் இருக்க உள்ளே இவளை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான் பாண்டியன்.

'எப்பையும் போல வெளிய மாமியார் உள்ள மகன், மேகி உன் வாழ்க்கையோட சேம்பிள் ஒளிவட்டம் இதான்டி. மாட்டிட்டு முழிக்கதான் போற' இந்தமுறை தெளிவாக மனதிற்குள் மட்டுமே நொந்து கொண்டாள்.

"எங்க என்ன தாண்டி போய் திறடி பாப்போம்" என தான் மறித்து நின்றான் மகிழ்.

'முத்தமே குடுத்தாச்சு இனி என்னவாம், இவர சுத்தி போயி திறந்துடுவோமாடி மேகி' என அவனின் வலது பக்கம் வழியே கதவின் குமிழியை திருக கையை கொண்டு சென்றாள், அவன் சட்டை மட்டுமே உரசியது, அதற்கே படபடக்க பட்டென்று மீண்டும் எடுத்துக் கொண்டாள்.

"பாண்டியா" என வாசுகி இந்த முறை கொஞ்சம் சத்தமாக கத்தவும்,

"போச்சு எல்லாரும் வர போறாங்க, நம்ம சண்டை எல்லாருக்கும் தெரிய போகுது"

"அதுக்கு நீ படிக்குற காலத்துல ஃபோர்ஜரி பண்ணாம இருந்துருக்கணும் இந்த அப்பாவிய ஏமாத்தாம இருந்துருக்கணும் மரகதம்"

"அப்பாவி தாங்க"

"இல்லம்பியா நீ?"

"அதெப்டிங்க சொல்ல‌‌ முடியும் என்ன நம்புனீங்களே. ஆனா நானும் நல்ல பொண்ணுதான் இதோ கமிட்டாகும் முன்ன சரண்டர் ஆகிட்டேன்ல?"

"மரகதவல்லி" வாசுகி வெளியே,

"ப்ளீஸ்ங்க"

"அப்ப டீல் பேசுவோம், நீதான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே? எனக்கு மந்தாகினிய மறக்க வை திறக்குறேன்" என்றான் விறைப்புடனே.

"மறுபடியுமா?" என்றவள் அதிர்ந்து அவனை வேகமாக கடந்து சென்று கதவை திறந்தே விட்டாள், உதட்டுக்குள் பொங்கி வந்த சிரிப்பை அடைத்துக் கொண்டான் அந்த கள்வன்.

"என்ன பாப்பா பண்ற? மூத்தவன் கூட‌ சண்டை போட போயிருக்கன்றா ஷீலா? இந்நேரத்துல எதுக்கு சண்டை என்ன‌ சண்டை?" என படபடத்தார் அவர்.

"அது கேஸ் விஷயமா பேசி சண்டையாகிடுச்சுத்த கோச்சுகிட்டாங்க அதான் பேச வந்தேன். இப்ப பேசிட்டேன், நாம‌ போலாம்" அறை வாசலில் தான் சாய்ந்து நின்று அவள் கதையை உதட்டை பிதுக்கி காண்பித்து கேட்டிருந்தான் பாண்டியன்.

"என்னய்யா? கோர்ட்டு கேஸுலாம் அங்கேயே விட்டுட்டு வீட்டுக்கு வந்தா புருஷன் பொண்டாட்டின்னு மட்டுந்தேன் இருக்கணும் வேலை கொண்டு வந்து வீட்டுலையும் சண்டை போட கூடாதுய்யா"

"ம்மா எட்டு வருஷத்துக்கு முன்ன நடந்தது இது. உனக்கு தெரியாது" என்றான் அவன்.

"என்னது எட்டு வருஷத்துக்கு முன்ன நடந்தது? என்ன கண்ணு பிரச்சினை"

"அத்த ஒன்னுமில்ல நீங்க வாங்க நா சொல்றேன். காலைல நாலு மணிக்குலாம் மேக்கப் பண்ண ஆளுங்க வந்துடுவாங்க. ஆமா தானே விசாலாட்சி?" என்றாள் அவளிடமும்.

"ஆமா‌ ஆமா வாங்கத்த யாராவது வந்து என்னன்னு கேட்கும் முன்ன போயிடலாம்" என்றவள் அவர் கையை பிடித்திழுக்க,

"உங்களாலாம் வச்சுட்டு நா என்னன்னுதேன் இந்த கல்யாணத்த நடத்தி முடிக்க போறேனோ தெரியல" என புலம்பி கொண்டே தான் சென்றார் வாசுகி.

"மூத்தவளே கூடவே வா" என அவளுக்கும் திரும்பி சொல்ல,

"வரேன்த்த" என்றவாறு ஷீலாவுடன் அவர்பின்னே நடந்தவள் திரும்பி அவனை ஒருமுறை பார்க்க,

"ப்ராடு இங்க வாடி" என்றான் மெலிதான சத்தத்தில், பட்டென்று திரும்பி நடந்துவிட்டாள். முதலில் இருந்த குழப்பம் இன்றி தெளிவாக தூங்கச் சென்றாள், இதுவரை அவனிடம் அதை வெளிப்படுத்தாதது உறுத்திக் கொண்டே இருக்க, இன்று சொல்லிவிட்டு அவனிடம் சமரசமும் ஆகிவிட்டது நிம்மதியாக இருக்க, சந்தோஷமாகவே தூங்கச்‌ சென்றாள்.

காலை மூன்று மணிக்கெல்லாம் அவளை எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டனர், நான்கு மணிக்கு அவளை அலங்கரிக்க ஆட்கள் வந்துவிட்டனர், அன்றைக்கான சிறப்பலங்காரம், கூரை புடவையில் தயாரகியவளை கண்மணி தான் அழைத்துச் சென்று அங்கு ஏற்கனவே வந்து நின்ற பாண்டியன் முன் சென்று நிறுத்தினாள். பாண்டியன் பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை மிடுக்கோடு, சற்று திமிராக நின்றிருந்தான். அவன் வேலையால் அவனது உடல்மொழியே அப்படியென்று ஆகிவிட்டது.

"உட்காருங்கோ" என ஐயர் சொல்லவும் இருவரும் அனைவருக்கும் வணக்கம் வைத்து மணையில் அமர்ந்தனர், அவர் மந்திர உச்சாடனம் உச்சரித்து, ஹோமத்தில் போட பூ, அரிசி, வேப்பங் குச்சி என தர இருவரும் அப்படியே செய்தனர்.

தேங்காய் வைத்து அவள் மடியை அவன் கையால் நிரப்ப சொன்னார், "மரகதம்" என்றான் அவள் காதில்.

அவள் நிமிர்ந்து பார்த்து சிரிக்க, "பழைய காதலியா, மனசுக்குள் மந்தாகினி ஆனால் தாலி கட்டிக்க என் பக்கத்துல நீ மரகதம் இருக்க, உன் மடியை நிரப்புறேன் நா. நீ என்ன‌ நினைக்குற இதைப்பத்தி" என்றான் நக்கலாக.

'இவருக்கு இருக்க குசும்புக்கு' என திட்டியவள், "பழைய காதலி இன்றைய மனைவி நாளைக்கு உங்களுக்கு எல்லாமுமாவே இருக்க போறது வரை, எல்லாமே உங்களுக்கு நாந்தாங்க" என்றாள் பவ்யமாக.

"ஓஹோ எல்லாமாவா?"

"ஆமாங்க"

"இங்க பாருங்கோ ரெண்டு பேரும்" என்ற ஐயரின் அழைப்பில் இருவரும் அவரிடம் திரும்ப,

"தாலிய தொட்டுக்கோங்கோ" என்றார்.

இருவரும் தொட்டு வணங்கி கொள்ள, "சுத்தி நிக்குறவா எல்லாம் தொட்டுக்கோங்கோ" என மாங்கல்யம் இருந்த தட்டை நீட்ட, மணமேடையை சுற்றி நின்ற அனைவரும் தொட்டு வணங்கி, மணமக்களை வாழ்த்த அதிலிருந்த மஞ்சளில் பிரட்டிய அரிசியையும் பூவையும் கையில் எடுத்துக் கொண்டனர்.

"இந்தாங்கோ இப்ப கட்டுங்கோ" என மாங்கல்யத்தை பாண்டியனிடம் நீட்ட, வாங்கி கொண்டவன், "கட்டிறவா மரகதம்?" என அவளிடமும் கேட்க,

"ஏடாகூடமா பேசாம கட்டிடுங்க ப்ளீஸ்" கண்ணை சுருக்கி கெஞ்சி சொல்லவும், சிரித்துக் கொண்டே அவள் கழுத்தை சுற்றி மாங்கல்யம் கோர்த்த மஞ்சள் கயிறை கொண்டு சென்று மூன்று முடிச்சிட்டான். அவன் கையை எடுத்ததும், கண்மணி அவளே அறியாமல் நான்காம் முடிச்சை தான் போட்டாள்.

"துணை மாலைய மாத்துங்கோ" இருவரும் மாலையை மாற்ற, "மெட்டி போட்டு விடுங்கோ" என்றார்,

"அது கண்மணி போடுவா மூத்தவனே, வீட்ல போய் போட்டுக்குவோம்" என்றார் வாசுகி, மகன் அப்படி அமர்ந்து போட மாட்டானோ எண்ணி அவராகவே கூறினார்.

"ஏன் கண்மணி போடணும்? செய்றத சரியா செய்யணும்மா, இது நாந்தானே செய்யணும்?" என்றான் அவரிடம்.

"ஆமாய்யா" என்றவர், "ஷீலா, பர்சுலதேன் இருந்தது எடுத்தா" என்றதும் அவள் நகைகள் இருந்த பையில் இருந்து எடுத்து தர, வாசுகி வாங்கி இவனிடம் தர, "அம்மி எடுத்து வைக்கல, நீ இந்த பலகைல கால வைத்தா" என ஒரு பலகையை எடுத்து வந்து வைக்கவும், மரகதவல்லி அதில் காலை வைக்க, அன்று அவன் போட்டுவிட்ட கொலுசு அங்கு மின்னிக் கொண்டிருந்தது, அவள் அன்று அவ்வளவு புலம்பினாளும் அதை கலட்டியிருக்கவில்லை, அதுவே வாசுகிக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது.

"மூத்தவன் தான் அன்னைக்கே அவ கால புடிச்சானுள்ள, நா ஒரு மடச்சி அத மறந்துபுட்டேன் பாரு, அழகா அம்மி கொண்டு வச்சுருந்தா அதுல வச்சே போட்ருப்பான், நாந்தான் வயசானவ மறந்துபோயிட்டேன் நீங்களாது நெனவு சொன்னா என்னட்டி" என்றார் அருகிலிருந்த இரு மருமகள்களிடமும்.

"உங்களுக்கு எல்லாத்துக்கும் நாங்கதேன் உடனே கிடைப்போம்" என்றாள் ஷீலா.

"வாய் மட்டும் நல்லா பேசு" என்றவர் மணமக்களிடம் கவனம் வைக்க, அங்கு நிதானமாக அவளின் விரலுக்கு வலிக்காமல் மெட்டியை நுழைத்துக் கொண்டிருந்தான் அவர் மகன்.

மரகதவல்லியும் அதை தான் கவனித்திருந்தாள், மென்மையாக அவள் பாதம் பற்றி, அடிபாதத்தில் யாரும் அறியாமல் ஒரு கோடிழுத்து அவளை கூச செய்துவிட்டே விரலுக்கு வந்தான், அவள் காலும் அதிலிருக்கும் மருதாணியுமே அவனை மயங்க வைக்க போதும் போலும், கையை எடுக்கவே மனமில்லாமல் தான் ஒரு காலில் மெட்டியை போட்டுவிட்டு மறு காலுக்கு வந்தான். அங்கும் இருகைகளாலும் அவள் பாதத்தை பிடித்து அவன் குடுத்த அழுத்தம் அவளுக்குள்ளும் பட்டாம்பூச்சியை சிறகடிக்க வைத்துக்கொண்டிருந்தது.

"சார் இங்க பாருங்க" என புகைபடக்காரரின் அழைப்பில் அவரிடம் திரும்பினான். அப்படியே அந்த நிலை நிழல்படமானது.

"இந்த ட்ரஸ்ல உங்க பேரண்ட்ஸ்ட்ட ஆசிர்வாதம் வாங்குற மாதிரி எடுத்துக்குலாம் சார். அப்றம் ட்ரஸ் மாத்திட்டு தனியா சில ஸ்டில்ஸ் எடுத்துக்கலாம் சார்" என்றதும்,

"எடுக்கலாமே" என்றவன் சொன்ன விதத்தில் மரகதவல்லி தான் திருதிருத்தாள். அவள் பயம் சரியே என்பது போல் தான் நடந்தது. இருவரை மட்டும் தனியறையில் விட்டு புகைப்படங்கள் எடுக்கையில், அவர்கள் கையை பிடி என்றால் காலை பிடித்தான், காலை பிடி என்றால் இடுப்பை பிடித்தான், "இதென்ன நல்லாவே வரலையே" என எடுத்ததை பார்த்து விட்டு, மறுபடியும் மறுபடியும் எடுக்க வைத்தான். அவன் பிடிப்பதும் அதிலுள்ள அழுத்தங்களும் அவளுக்கு மட்டுந்தானே தெரியும், வெளியே நல்ல பிள்ளையாக தானே போஸ் கொடுத்து நின்றான்.

"முடியலங்க" என அவளே சொன்ன பின்னரே, "முடியலையாம்ப்பா, போதும் முடிச்சுக்கலாம். எடுத்ததுல ரொம்ப‌ நல்லா வந்தத மட்டும் ப்ரிண்ட் போட்டுடுங்க" என்றான்.

"இன்னொரு நாள் தனி ஷுட் எதும் வச்சுப்போமா சார்?" என்றான் புகைப்படம் கலைஞன்.

"வேணாம். இந்த டே இன்னைக்கு கிடைக்குற ஃபீலிங் அன்னைக்கு கிடைக்காது"

"ஏன்‌ சார்? அதெல்லாம் ஸ்பாட்ல வச்சு எடுத்தா நல்லா வரும் சார்" என்றான் அவன்.

"ம்ம்கூம் இன்னைக்கு ஃபீல் இனி என்னைக்கும் கிடைக்காது. அது வேற ஃபீலா தான் இருக்கும்" என்றான் மெலிதான புன்னகையுடன்.

"புரியல சார்"


"எல்லாரையும் கவர் பண்ணிடுங்க, யாரும் மிஸ்ஸாக கூடாது" என அவன் தோளில் தட்டி சொல்லிவிட்டு திரும்ப அவனை முறைத்துக் கொண்டு நின்றாள் மரகதவல்லி.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 36

"சாப்ட போலாமாக்கா?" என அந்நேரம் விசாலாட்சி வரவும், இருவரும் வெளி வந்தனர், அவனை முன்னே போகவிட்டு நின்ற மரகதவல்லி, திரும்பி உள்ளே இருந்த புகைப்படகாரனிடம்,

"ப்ளீஸ் இங்க எடுத்ததே போதும், அங்க வந்து ஊட்டி விடுங்க, சிரிச்சமாதிரி இங்க பாருங்க, வாயில வச்சமாதிரின்னு எதுவும் வேணாம் ஓகே. பசிக்குது நா சாப்டணும். அங்க நீங்க வர கூடாது" என வேகமாக சொல்லி விட்டே பாண்டியனை தொடர்ந்து சென்றாள், அவனுக்கு அது கேட்டாலும் கேட்காதது போல் நடந்துவிட்டான்.

"அவங்கட்ட ஏன் அப்படி சொன்னீங்க?" என்றாள் அவனிடமும் வந்து.

"எப்டி மரகதம்?"

"இன்னைக்கு ஃபீல் இனி கிடைக்காதுன்னு?"

"உண்மை அதானே?"

"என்ன உண்மை, அப்ப இன்னைக்கு ஒரே நாள்ல சலிச்சுடுவேனா நானு?"

"அடிப்பாவி நா என்ன மீனிங்ல சொன்னேன்னு பசங்க அவனுங்களுக்கே புரியல நீ கப்புன்னு புடிச்சுருக்க, சரியான கேடிடி நீ"

"மத்தவங்கள இவ்வளவு தெரியுமா தெரியாது ஆனா உங்க ஸ்லாங் எனக்கு பழகிடுச்சு நீங்க தான் பழக்கிட்டீங்க. இப்ப சொல்லுங்க அப்ப அதான் உண்மை?"

"அதுதான் ஆனா நீ சொன்ன மாதிரி இல்ல"

"பின்ன எப்டி?" இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட வந்தமர்ந்தனர்,

"இப்ப நாம ரெண்டு பேருமே ஃப்ரஷா இருக்கமா நாளைக்கு அப்படி இருப்போமா? இல்ல இனி இந்த ஃப்ரஷ் ஃபீல் தான் உன்ட்டையும் என்டையும் இருக்குமா? அதுக்கு பேர் சலிப்பில்லடி மரகதம், எல்லாம் அறியுறதுக்கு முன்னையும் பின்னையும் இருக்குற டிஃப்ரன்ஸ். அதாவது" என அவன் மேலும் விளக்கம் கொடுக்க வர,

"புரிஞ்சுடுசுங்க வேணாம், தெரியாம கேட்டுட்டேன்" என கண்ணை இறுக மூடி குனிந்து கொண்டாள், கமுக்கமாக சிரித்துக் கொண்டான் பாண்டியன்.

சாப்பிட்டு முடித்து இருவரும் வந்து, எல்லோரிடமும் வாழ்த்து வாங்க நிற்க, அதில் நேரம் சென்றது, அவனுடன் வேலை பார்ப்பவர்கள், அவளுடன் வேலையில் இருப்பவர்கள், நண்பர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள் என அனைவரும் வந்து வாழ்த்திச் சென்றனர்.

பின் நல்ல நேரம் பார்த்து பாண்டியன் வீடு கிளம்பினர், வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தவளை, நேராக அழைத்து சென்று உப்பிலும், அரிசியிலும் கையை வைத்தெடுக்க வைத்து, விளக்கேற்ற அழைத்து வந்தனர்.

விளக்கேற்றுபவளை வரவேற்பரையில் அமர்ந்திருந்தே பார்த்திருந்தான் பாண்டியன். இடது பக்க பூ அவளின் கழுத்தடியில் விழுந்து லேசாக குனிந்திருந்தவள் முகத்தை உரசிக் கொண்டிருந்தது. காலையில் போட்டிருந்த முகப்பூச்சு இப்போது கொஞ்சம் கலைந்து அவளது முகத்தின் நிஜ எழிலோடு அழகாக இருந்தது. சுற்றம் மறக்குமளவிற்கு வெகுவாக அவனை ஈர்த்து கொண்டிருந்தாள் மரகதவல்லி.

"ஏட்டி கண்மணி போயி ரெண்டு பேருக்கும் பாலும் பழமு குடு"

"அண்ணா முறைப்பாறே பெரியம்மா?"

"எதுக்கு முறைக்க போறான்றேன்?"

"என்னமோ ரொம்ப தைரியசாலின்ன நேத்தைக்கு" என்றாள் சமயம் பார்த்து விசாலாட்சி.

"அங்க பாருங்க ஏதோ யோசனையில உம்முன்னு உக்காந்துருக்கு அண்ணே, பட்டுன்னு வஞ்சுட்டாகன்னா?"

"அதெல்லாம் வையமாட்டியான். போயி குடு, ஏமாத்தாம குடுக்கணும்" என்றவர், "நீயும் போயி அவேன் பக்கத்துல உக்காருத்தா" என்றார் மரகதத்திடமும்.

அவனுக்கு பயந்தே கிண்டல் கேலி ஏதுமில்லாமல் அந்த இடம் அமைதியாக இருந்தது, சொந்தங்கள் எல்லாம் அவர்களுக்குள் தான் மெதுவாக பேசிக் கொண்டிருந்தனர். கண்மணிக்கும் பயம் தான், ஆனாலும் ஆளுக்கு மூன்று முறை என வேகமாக கொடுத்துவிட்டாள்.

"மறுவீடு கிளம்ப மூத்தவள ரெடி பண்ணுங்கட்டி, நா குடிக்க கொறிக்க எல்லாருக்கும் குடுக்கேன்" என அடுத்த வேலையை சொல்லிவிட்டு வாசுகி சென்றுவிட,

"அக்கா வரீங்களா, குளிச்சு சேரி மாத்திக்கோங்க" என ஷீலா சென்று அழைக்கவும்,

"நா கூட்டிட்டு போறேன்" என எழுந்து கொண்டான் பாண்டியன்.

"சரிங்கத்தான்" என உடனே ஷீலா விலகி கொள்ள, அவன் அவனின் அறைக்கே அவளை அழைத்துச் சென்றான்,

"டைமிருக்கு, ஒரு ஒன் அவர் ரெஸ்ட் எடு, அப்றம் ஃப்ரெஷாகு மரகதம், ரொம்ப டயர்டா தெரியிற" என்றவன் அவள் தோளில் தொங்கிய பூக்களை பின்னால் எடுத்து போட்டான், முடியை காதோரம் ஒதுக்கி கொடுத்தான், அந்நேரம், "அண்ணா" என அரசுவின் சத்தம் வெளியே கேட்கவும், வெளியே செல்ல, "உங்க ஃபோன்ல கால் வந்துட்டே இருக்கு, எதும் அர்ஜென்டா தெரியல" என குடுத்தான், வேட்டி சட்டையில் இருந்ததால் காலையிலிருந்தே அவன் போன் அரசுவிடம் தான் இருந்தது.

"சொக்கு தான், நா பேசிக்றேன் நீ போ" என உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தான், நின்று அவனை பார்த்திருந்தவளின் கையை பிடித்திழுத்து அருகில் அமர வைத்துக் கொண்டான்.

மீண்டும் அழைப்பு வரவும், "சொல்லுங்க சொக், என்னாச்சு?" என்க,

"சாரி சார், நம்ம கஸ்டடில இருந்த அந்த கதிரும், ராமனும் சண்டை போட்டு அடிச்சுட்டானுங்க சார், அதுல அந்த கதிர் செத்து போயிட்டான்"

"ஸ்டேஷன்ல வச்சா?"

"ஆமா சார், நைட் ட்யூட்டில இருந்த ரெண்டு பேரும், கண்ணசந்த நேரத்துல அடிச்சுட்ருக்கானுங்க சார்"

"அதுக்காக சத்தமே கேக்கலையா? என்கொய்ரி ஃபேஸ் பண்ணணும் சொக். ஏஜ் அன்டர் கேடர் வேற, ஹியூமன் ரைட்ஸ் வர போகும். அவனுங்களே அடிச்சுட்டானுங்கன்னு சொல்ல மாட்டாங்க நாமதான்னு தான் கேஸ் போடுவாங்க"

"அதான் சார் என்ன பண்ணன்னு தெரியல"

நெற்றியை தேய்த்து விட்டு கொண்டவன், "சரி வைங்க நா‌ வரேன்" என வைத்துவிட்டு உடையை மாற்றி கொண்டு கிளம்ப,

"ஸ்டேஷனுக்கா?" என்றாள் அதுவரை அவன் பேச்சை கேட்டிருந்தவள்,

"ம்ம், அந்த ராமன், உன் ஃப்ரண்ட்டோட தம்பி கூட இருந்த கதிர அடிச்சுட்டானாம், அதுல அந்த பையன் செத்துட்டானாம்"

"ஐயையோ சண்டைல தூக்கி அடிச்சு சாவுறளவுக்கு என்ன இருந்தது அங்க?"

"ரெண்டு பேரும் லாக்கப்ல இருக்காங்க, அங்க சாப்ட்ட தட்டும், கழுவுற கப்பும் தவிர ஒன்னும் கிடையாது"

"பின்ன எப்டி?"

"போய் பாத்தாதான் தெரியும்"

"ஓ! விடுவாங்களா உங்கள?"

"யாரு விட மாட்டேன்னுவா?"

"சரி போயிட்டு எப்ப வருவீங்க?"

"டோன்ட் வொர்ரி நைட்டு முகூர்த்தத்துக்கு கரெக்ட்டா வந்துடுவேன்" என அவள் மூக்கை நிமிண்டினான்.

"அதில்லங்க, மறுவீடு கிளம்பணுமே?"

"தெரியல போயிட்டு விசாரிச்சுட்டு தான் வர முடியும்"

"சரி நீங்க வரும்போது சொல்லுங்க நா அப்றமே கிளம்புறேன்"

"ட்ரை பண்றேன் மரகதம்" என்றவன், "ரெஸ்ட்டெடு" என அவள் தலையை கலைத்து விட்டு வெளியே வந்தான். அங்கும் யாரிடமும் சொல்லவுமில்லை, "கொஞ்சம் வேலை இருக்கு, நீ பாத்துக்கோ வந்துடுறேன்" என வாசுகியிடம் மட்டும் சொல்லிவிட்டு அவர் பதில் கூறுமுன் வண்டியை கிளப்பிவிட்டான்.

அங்கு ராமனும் பலத்த அடிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான், பாண்டியன் அங்குதான் நேராக சென்றான், இவன்
விடுமுறையிலிருப்பதால் இவனுக்கு பிரச்சினை வரப்போவதில்லை என்றாலும், ஸ்டேஷன் இவன் கண்ட்ரோலில் வருவதால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இவனுக்கு உண்டு.

சிகிச்சை முடிந்து பல கட்டுகளுடன் அமர்ந்திருந்தவனை ஆராய்ச்சியாக பார்த்தவன், "ஃப்ரண்ட்ஸ் தானடா நீங்க? எதுக்கு இப்டி அடிச்சுகிட்டீங்க?" என்றான் சந்தேகமாக.

"அவன் அசிங்கமா பேசுனான் அதான் அடிச்சேன்"

"என்ன பேசுனான்?"

"அத சொல்லமாட்டேன் சார். ஆனா அவன் அசிங்கமா பேசுனான் அதான் அடிச்சேன்"

"சொல்ல முடியாதளவுக்கு பேசுனானா?"

"ஆமா சார்"

"என்ன உன் அக்காவ பத்தி பேசிருப்பானா?" அவன் பயந்து விழிக்க, "உன் அக்கா எல்லாமே சொல்லிட்டா, அவளே உள்ள போ போறா, நீ ஒரு ரெண்டு வருஷம் பனீஷ்மெண்ட் ஸ்கூல்ல படிச்சுட்டு வெளில போயிருக்கலாம்ல? எதுக்குடா கொலை பண்ண? குடும்பமா உள்ள வந்து செட்டிலாகிட ஆசையா உங்களுக்கு?"

"அவன் வெளில போனா என்னலாமோ செய்வேன்னு சொன்னான் அதான் அடிச்சேன்"

"எப்டி அடிச்ச, அதும் சத்தமே வெளில கேட்காதமாதிரி?"

"என் சட்டைய கலட்டி அவன் வாய்க்குள்ள வச்சுட்டு நெஞ்சுலயே மிதிச்சேன் செத்துட்டான்"

"கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணுங்க சொக்கு, அங்கையும் இதே தைரியத்தோட சொல்லட்டும்"

"கண்டிப்பா சொல்லுவேன், எல்லாமே நாந்தான் பண்ணேன், எல்லா கேஸையும் என் மேல போடுங்க, என் அக்காவ விட்ருங்க. விஷ்ணுவ அவனுங்களோட இழுத்துட்டு இழுத்துட்டு போய் பழக்க வச்சது நானு, நல்லா படிச்சுட்ருந்தவனுக்கு போதைய அவனுங்க பழக்கினப்பவும் என்ன ஒன்னும் செய்யல அவனையும் ஒன்னு செய்யாதுன்னு அமைதியா இருந்ததும் நானு. வீடு வரைக்கும் அவனுங்கள நடமாட‌ விட்டதும் நானு. அதனால் பாதிக்கபட்ட என் அக்காவ கவனிக்காம செல்ஃபிஷா இருந்ததும் நானு தான், அப்ப தண்டனை எனக்கு தான் கிடைக்கணும். அக்கா பாவம்"

"எந்த அக்கா?"

"என் அக்கா சார்"

"அதான்டா உனக்கு ரெண்டு அக்கா, ஒரு அண்ணா வேறயாம்ல"

"தப்பு நா மட்டுந்தான் பண்ணேன் அவங்க எல்லாரும் நல்லவங்க தான் சார், எனக்கு நல்லது சொன்னாங்க நாந்தான் கேக்கல" என அவன் அழுகவும்,

"அப்ப அவங்களுக்காக கதிர கொண்ணுட்ட, உன்ன மட்டும் உன் அக்கா விட்டுட்டா பரவால்லயா?"

"அவ கண்டிப்பா விட மாட்டா சார்"

"ஏன்?"

"என்ன தப்பா நினைக்குறா சார். நா அப்படி இல்ல சார். அவ என் அக்கா, மத்தவங்கள என் கூட சுத்துனவுனுங்க என்ன பண்ணப்பவும் நா கண்டுக்கல தான், ஆனா அவனுங்க கூட நின்னுருக்கேன். ஆனா அக்கா விஷயத்துல நா அப்டி நிக்கல சார், ஆனா அவ என்ன தப்பா நினைக்குறா சார்"

"என்னடா மொட்ட மொட்டையா சொல்ற?"

"எனக்கு அவ்வளவு தான் சார் சொல்ல முடியும். என் அக்காவ‌ விட்ருங்க சார் ப்ளீஸ்"

"அது கோர்ட் தான் முடிவு பண்ணும். நீ குணமாகி வா, உன் அக்கா உன்ன என்ன செய்றான்னு பாக்குறேன் நானும்" என எழுந்து கொண்டான், அவ்வளவு நேரமும் அவன் கூறியதை, எழுத்தாகவும், ஒளிப்பதிவாகவும் பதிவு செய்து கொண்டு அதோடயே கமிஷனரை பார்க்கச் சென்றான்.

"சாரி பாண்டியன் லீவ் போனாலும் உங்க சேவை எங்களுக்கு தேவைபட்ருது" என சிரித்தார் கமிஷனர்.

"நா லீவ்ல தான் இருந்தேன்னு நம்புறீங்களே எனக்கு அதுவே பெரிய ரிலீஃப் தான். இல்லனா என்கொய்ரின்னு அவனுங்க கேக்குற கேள்விக்குலாம் பதில் சொல்லி முடியாது நம்மளால, இந்தாங்க அந்த பையனோட வாக்குமூலம், நா கிளம்புறேன்"

"என்ஜாய் எங் மேன்" என அவர் வாழ்த்த, சல்யூட் வைத்து வேக நடையில் வெளியேறிவிட்டான்.

மணி இரவு எட்டாகியிருக்க, அவன் அலைபேசியில் அத்தனை தவறிய அழைப்புகள், அனைத்தும் அவன் அம்மா அப்பாவிடமிருந்தே, "இந்த மரகதம் நம்மள தேடவே இல்ல போலயே" என்றவன், "போயே கேட்போம்" என நேராக அவன் வீடு தான் சென்றான், சொல்லியிருந்தாளே, இவன் வந்தால் மட்டுமே கிளம்புவதாக, அந்த நம்பிக்கையில் செல்ல அங்குதானிருந்தாள்.

"என்னய்யா இப்டி பண்ணிபுட்ட, இந்நேரமா அங்க கிளம்பி போவாக? அவள கிளம்பி போன்னு சொன்னாலும் போ மாட்டேன்னு இருந்துகிட்டா, நீயும் ஃபோனடிச்சா எடுக்கவே மாட்டேனுட்ட" என அவர் திட்டிக்கொண்டே அவன் பின் வர, உள்ளே சென்றவன், மாற்றுடை எடுத்து ஒரு பேக்கில் வைத்து கொண்டு மீண்டும் வெளியே வந்து, "மரகதம் கிளம்பு போலாம்" என அழைக்கவும், எதுவும் பேசாமல் எழுந்து கொண்டாள்.

"நா இங்கொருத்தி பேசிட்டே இருக்கேன்?" என வாசுகி பேச,

வண்டியை முறுக்கி உறுமியவன், "நீ பேசிட்டே இரு நா நாளைக்கு வந்து கேட்குறேன்மா" என்றவாறு அவளை பார்க்க, ஏறி அமர்ந்து கொண்டாள். மொத்த தெருவும் வேடிக்கை பார்க்க, அந்நேரத்தில் தான் மறுவீடு கிளம்பினான் அந்த ஏசிபி.

அவள் வீடு வரும்வரை அமைதியாக வந்தவள், "முகூர்த்தத்துக்கு தான் வருவேன் முகூர்த்தத்துக்கு தான் வருவேன்னு சொல்லி சொல்லி, சொன்ன மாதிரி செஞ்சிட்டீங்கள்ல?" என்றாள் இறங்கியதும்,

"அதுவா அமையுது மரகதம்" என்கவும்,

"போங்க எந்த முகூர்த்தமும் கிடையாது இன்னைக்கு"

"அப்ப எப்டி மந்தாகினிய மறக்க வைப்ப மரகதம்?" என்றான் அவன், திருதிருவென விழித்தாள் அவள், அவளை மடக்கும் வித்தை தெரிந்தவன் ஆகிற்றே அந்த மரகத கள்வன்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 37

"வாங்க மாப்ள, வா பாப்பா" என வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றனர், மரகதவல்லி குடும்பத்தினர். இவர்களுக்காகவே சொந்தங்கள் மொத்தமும் காத்திருந்தனர். அவர்கள் அங்கிருந்து கிளம்பவுமே வாசுகி அழைத்து கூறியிருந்தார். அதனால் வண்டி சத்தம் கேட்டதும் ஓடியே வந்தனர்.

"போலீஸ் வேலைனால எந்நேரம் கூப்புட்டாலும் ஓட வேண்டியதாயிருக்குமோ மாப்ள?" என ஒரு பெரியவர் கேட்க,

"வரமாட்டேன்னு சொல்ல முடியாதில்லீங்களா? நம்ம பொறுப்ப நம்ம தானே பாக்கணும்" உடனே பதில் கொடுத்தான் பாண்டியன். பெரும்பாலும் அவனிடம் யாரும் எதுவும் பேசவில்லை, பயந்து ஒதுங்கியே இருந்தனர்.

"சும்மாயிருங்க பெரியப்பா" என மெதுவாக திட்டிய முத்துராமன், "ஒலுசை விளையாட்டு வைப்போமா மாப்ள?" என்றார் உள்ளே வந்தமர்ந்தவனிடம் தயங்கி கொண்டே,

"அந்தந்த நாளுக்கான சடங்க செஞ்சுடணும்னு நினைப்பேன் மாமா நானு, அதனால எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா உங்க பொண்ணு தான் நா லேட்டா வந்துட்டேன்னு ரொம்ப கோவமா இருக்கா, எந்த சடங்கும் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டு வந்தா, அவளுக்கு தான் ஓகேவான்னு நீங்க கேட்டுக்கணும்"

'அடப்பாவி ஏசிபி, என்னைய எங்கையாவது கோர்த்து விடலனா நிம்மதியாவே இருக்காதோ இவருக்கு' என அவனையே அவள் பார்த்திருக்க,

அவரிடம் பேசிக்கொண்டிருந்தவன், "என்ன‌‌ மரகதம்?" என்றான் சட்டென்று திரும்பி,

அதில் மிரண்டு, "ஒன்னுமேயில்லங்க, நீங்க எப்டி சொன்னாலும் சரிதான்" என்றுவிட்டாள் வேகமாக.

எல்லோருமே அதற்காக தான் காத்திருந்தனர் என்பதால் திருமண ஜமுக்காளம் விரிக்கப்பட்டு ஒலுசை விளையாட்டுக்கான அனைத்தும் கொண்டு வைக்கப்பட்டது.

"வாங்க வந்து எதுத்தமாதிரி பாத்து உட்காருங்க" என அழைத்தார் மரகதத்தின் அத்தையாகப்பட்டவர்.

தாமதமாக வந்ததால் அவன் குடும்பத்தினர் யாரும் வந்திருக்கவில்லை, எல்லோருமே அவள் குடும்பத்தினர்‌ தான், அவனுக்கு அது ஒருவித ஒதுக்கத்தைத் தருமோ என நினைத்து கொண்டு வந்தமர்ந்தாள் மரகதவல்லி.

இருவருக்கும் நடுவில் மஞ்சள் தண்ணீர் குடம் வைக்கப்பட்டது, சுற்றி ஆர்ப்பாட்டமாக நின்று கொண்டனர் குடும்பத்தினர், "மோதிரம் போடுவேன் யாரு எடுக்கா யாரு விட்டு கொடுக்கான்னு பாக்கணும். இதான் முதல் விளையாட்டு" என்ற அத்தை, கையை குடத்துக்குள் கொண்டு சென்று மோதிரத்தை போட்டுவிட்டு நிமிர்ந்து, "தேடி எடுங்க" என சிரிக்க,

பாண்டியன், கையை உள்ளே விட போன மரகதம் கையை பிடித்து கொண்டு, திரும்பி அந்த அத்தையிடம், "முதல்ல மோதிரத்த உள்ள போடுங்க, அப்றம் நாங்க எடுக்குறோம்" என்றவிட்டான்.

அதில் திடுக்கிட்டு விழித்து பின் பக்கென்று சிரித்தவர், "பலே தம்பி நீங்க. எப்டி கண்டுபிடிச்சீங்க?" என்க,

"உங்க கைய நீங்க விரிக்கவே இல்ல, விரிச்சாதான மோதிரம் விழும்"

"முதல் ஆட்டைல நீதேன் அவுட்டு அத்த, அத்தான் ஜெயிச்சு அக்காவையும் ஏமாறவிடாம புடிச்சுட்டாரு" என வயது பெண்ணொருத்தி குடுத்த கமென்ட்டில் அனைவரும் சிரிக்க, அவனும் சிரித்துக் கொண்டான்.

"இன்னும் ரெண்டு தடவ தான் அதுல யாரு ஜெயிக்கான்னு பாக்கணும்"

மறுபடியும் போடப்பட்டது, உள்ளே விட்ட கையை வெளியே எடுக்க அவன் விட்டால் தானே எடுப்பாள் அவள், மோதிரம் என்னவோ அவள் கையில் தான் இருந்தது ஆனால் அவள் கை அவன் கைக்குள் இருந்தது. வெளியே அவ்வளவு பேர் சுற்றி நிற்க உள்ளே அவள் கையில் முறுக்கு பிழிந்து கொண்டிருந்தான் அவன்.

'ஏசிபி படுத்துறாறே, முகத்துல காட்டிடாதடி மேகி' என அவன் கையிலிருந்த தன் கையை உருவும் போராட்டத்தில் தான் இருந்தாள் அவள்.

"என்னாச்சு? மோதிரம் போட்டல்ல அத்த நீ?" என வெளியே உள்ளவர்கள் அவர்களுக்குள் சலசலக்க,

"போடலன்னாதான் தம்பி கண்டுபிடிச்சு கையவே உள்ள விட மாட்டேங்குறாகளே" என்றார் அந்த அத்தை,

"மோதிரம் கிடைச்சதா பாப்பா?" என்றனர், அவனிடம் கேட்க முடியாததால் அவளிடமே,

"என்ட்ட இல்ல, அவங்க கைல எடுத்துவச்சுட்டு என்ன தேட விடுறாங்கன்னு நினைக்கிறேன்" என்றுவிட்டாள்,

"உங்கட்ட இருக்கா மாப்ள?" என்றார் ஒருவர் பொதுவாக,

"எங்கிட்ட உங்க வீட்டு பொண்ணு கைதான் இருக்கு, மோதிரம் இல்ல" என்றவன் அவள் கையை மோதிரத்தோடு பிடித்து வெளியே தூக்கிவிட, எல்லோருக்கும் குறும்பு சிரிப்புதான், அவள் தான் முகத்தை ஒழிக்க இடம் தேடிக் கொண்டிருந்தாள்.

"இன்னொரு டைம் போடுவமா வேணாமான்னு சொல்லு பாப்பா. எடுக்க விடிஞ்சுரும்னா நாங்க தூங்கி எந்துச்சு வந்துகிடுவோம்ல?" என ஒரு பெண் சொல்லவும் கிளுக்கி சிரித்தனர் அனைவரும்.

"அதெப்படி முக்கா முக்கா மூணு தடவன்னா மூணு தடவ போடணும்ல?" என பாண்டியன் சொல்ல,

"ஏங்கங்க?" என்றாள் இவள் பாவமாக.

"மாப்ள சொன்னப்றம் யோசனையே கிடையாது, போடு அத்த நீ" என்ற முடிவில் மூன்றாம் முறை போட, அவன் கைவிடும் முன்னவே உள்ளேவிட்டு மோதிரத்தோடு அவள் கையை வெளியே எடுத்திருக்க, அவள் வேகத்தை நமட்டு சிரிப்புடன் அமைதியாக பார்த்திருந்தான் அந்த மரகதகள்வன். அவன் குடத்திற்குள் கையை விடவே முயலவில்லை, அவளைப்பற்றி தெரிந்ததாலேயே பானை விளிம்பில் கையை வைத்துக் கொண்டு பார்த்திருந்தான்.

"அவ்வளவு அவசரமா பாப்பா" என அதற்கும் அனைவரும் சிரிக்க, இவள் அவனை கண்கள் சுருக்கி முறைத்து பார்த்தாள்.

"இது செல்லாது தானே? நாந்தான் இன்னும் கையே விடலையே? இந்நொரு ரவுண்ட் உண்டு தானே?" என இவன் நக்கலாக கேட்கவும், "நீங்க சரின்னு சொல்லுங்க எத்தன ரவுண்ட் வேணாலும் போவோம் மாப்ள" என்றார் ஒருவர், மீண்டும் அனைவருக்கும் சிரிப்பே,

"அவ்வளவு தான். முடிஞ்சது முடிஞ்சது தான், நாந்தான் வின் பண்ணேன்னு கூட சொல்ல வேணாம். அவரே ஜெயிச்சதா இருக்கட்டும். அடுத்தது என்னது அத்த?" என்றாள் அவள் படபடவென்று, உதட்டுக்குள் அவனுக்கு கொள்ளை சிரிப்பு தான், ஒருவித குதூகலமான மனநிலையில் தான் இருந்தான் அவன்.

"அடுத்து தேங்காய் உருட்டு, நேரா உருட்டணும்"

'உருட்டுறதுல ஏசிபிய யாரால மிஞ்ச முடியும். அவரே ஜெயிச்சுட்டு போட்டும் மேகி' என முடிவெடுத்து கொண்டு தான் தேங்காயை உருட்டவே துவங்கினாள். அவன் எங்கெங்கோ தான் உருட்டிவிட்டான், அதை அங்குமிங்குமாக அவள் சாய்ந்து பிடித்து அவனுக்கு நேரே உருட்டிவிட, "உனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் நல்லா பொழுதுபோகுமாட்ருக்குடி மேகி. சாரு உன்ன சோர்ந்து உக்காரவே விடமாட்டாரு போ" என ஒரு உறவினர் கிண்டலாக சொல்ல, மறுபடியும் கொல்லென்ற சிரிப்புதான்.

'இவருக்கு துணைக்கு ஆளில்லன்னா வருத்தப்பட்ட, மொத்த குடும்பத்தையும் பேச்சே இல்லாம கண்ட்ரோல்ல எடுத்துகிட்டவரு தனியா இருப்பாருன்னு வருத்தபடுவியா படுவியாடி நீ?' இப்போதும் மனதிற்குள் தான் புலம்பல்.

"அடுத்து அப்பளம் உடைக்குறது" என சுட்ட அப்பளங்கள் அடங்கிய தட்டை எடுத்து வந்து இருவருக்கும் நடுவில் வைத்தார் அத்தை.

"ஒடச்சுடலாம்" என்றவன் இருகை சட்டையையும் மேலேற்றிக்கொண்டு தயாராக,

"அத்தான் ரெடியாகுறத பாத்தா அக்கா மண்டை சிதறு தேங்கா தான் இன்னைக்கு"

"போலீஸ் அடியா வக்கீல் அடியான்னு பாக்கணுமே" என ஆளுக்கொரு கருத்தை சொல்லி சிரித்து கொண்டிருந்தனர்.

"மொத நீங்களே உடைங்க மாப்ள" என்றதும், யோசிக்கவேயில்லை அவன். ஐந்து அப்பளங்களை எடுத்து அவள் தலையில் வைத்து கொஞ்சமாக எக்கிக்கொண்டு கையையும் ஓங்கி வர, அவள் இறுக கண்மூடிக் கொண்டாள், 'ஆள்மாறாட்டமா செஞ்சன்னு அடிக்க போறாருடி மேகி' என அவள் யோசிக்கையிலேயே அடித்திருந்தான், அப்பளம் நொருங்கி பூவாக அவளை நிறைத்தது, அடித்தான் தான் ஆனால் அவளுக்கு வலிக்கவேயில்லை.

"நல்ல அடியாக்கா, நா சும்மா அத்தான் ஓங்குறாருன்னு நினைச்சேன் சப்புன்னு அடிச்சுட்டாரு. அவர்ட்ட ஏதும் வம்பிழுத்துட்டியா, கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணமாதிரி பண்ணிட்டாரு" என அவள் தலையை தேய்த்துவிட்டவாறு கேட்டாள் அப்பெண். பார்ப்பவர்களுக்கு அவன் அடித்ததுபோல் தான் தெரிந்தது போலும்.

"எனக்கு வலிக்கலடி" என மரகதம் சொல்லவும்,

"ஆமா வலிச்சுருக்காது, வலிக்க கூடாதுன்னு தான் அஞ்சு அப்பளத்த அடிக்கிட்டாரு மாப்ள" என்றார் அகிலா.

"மாப்ள தங்கமா தாங்கிடுவாரு நம்ம புள்ளைய, நாங்கூட கோவகாரரோன்னு நினைச்சேன், ரொம்ப‌ சாமர்த்தியம், பொண்டாட்டிக்கு விட்டுகுடுக்கறது வெளில தெரியணும் ஆனா தெரிய கூடாதுன்னு இருக்காரு மனுஷன். உன் மகள நல்லா பாத்துப்பாரு முத்து" என சற்று தள்ளி அமர்ந்திருந்த அவ்வீட்டின் மூத்த பெண்மணி அருகிலிருந்த முத்துராமனிடம் சொல்லவும்,

"குடும்பமே நல்லமாதிரி தான் பெரியம்மா, எப்பவும் இப்டியே இருந்துட்டாகன்னா போதும் எனக்கு" என்றார் முத்துராமனும் நெகிழ்வாக.

"அதெல்லாம் கெட்டிக்கார புள்ள நல்லா பொழைச்சுக்குவா" என ஆசிர்வதித்தார் அந்த பெண்மணி.

"இப்ப நீ தான் பாப்பா, அவரே உனக்கு அஞ்சு வச்சாரு நீ ஏழாவது வை" என அத்த சொல்ல,

மருதாணியிட்ட கைகளின் வளையல்கள் குலுங்க, அதை கொஞ்சமாக மேலேற்றி சரிசெய்து கொண்டவள், 'மறுபடியும் கொட்ட சான்ஸ் கிடைக்குறதுலாம் அபூர்வமாகிடும் மேகி, வாரது வரட்டும் யூஸ் பண்ணிடு' என்ற முடிவோடு, மூன்று அப்பளத்தை மட்டும் எடுத்து அவன் தலைமேல் வைத்து ஒரே அடி அடித்து விட்டாள்.

"ஆத்தி ஊம குசும்பி, அவர் உன்ன அடிக்குறதுல தப்பே இல்லடி" என முதலில் அவளுக்கு பாவம் பார்த்த பெண்ணே வாயில் கை வைத்துவிட்டாள்.

அவனுக்கென்னவோ அது பெரிதாக வலிக்கவில்லை, முடியை கோதி அப்பளங்களை தட்டிவிட்டுவிட்டவாறு, "மரகதம், எத்தன நாள் கோவம் இது?" என்றுவேறு கேட்டுவிட,

"என்ன‌ பழக்கமிது பாப்பா. இப்பதான் உன்ன பெருமையா சொன்னேன், அதுக்குள்ள உன் துடுக்குதனத்த காட்டுற, இத்தனபேரு முன்ன அவர விட்டு குடுக்குற மாதிரி இருக்கு உன் செய்கை, நல்லால்ல பாப்பா" என அவளை சற்று சத்தமாக அந்த மூத்த பெண்மணி திட்ட, அவள் விளையாட்டாகதான் செய்தாள் ஆனால் அதை அவள் பாட்டி சொல்லிவிடவும் அழுகையே வந்துவிட்டது.

"இப்படிதான் ஏடாகூடமா எதாது செய்வா. எவ்வளவு சொன்னாலும் தெரியமாட்டேங்குது அத்த, எல்லாம் அவளுக்கு தான் தெரியும்ன்ற எண்ணம். அவ மாமியார், அந்த மதினி ரொம்ப ரொம்ப நல்ல குணம் ஆனா இவ இப்டி சபைல நடந்துட்டா அந்த மனுஷிக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். இவளே இவ பேர கெடுத்துப்பா போல" அகிலாவும் படபடத்துவிட்டார்.

"ஹோல்டான்" என கையையும் தலையையும் தட்டிவிட்டு எழுந்து கொண்டவன், அவளுக்கும்‌ கை நீட்ட, மெல்ல அவன் கை பிடித்து எழுந்து நின்றாள், முகமே சிவந்திருந்தது. அவள் கையை தன் கைக்குள் வைத்து அழுத்தம் கொடுத்தவன், "இங்கன வச்சு ஒரு அடியோட விட்டவள, உள்ள வந்து வெளுக்க ப்ளான் பண்ணி குடுக்குறீங்களா பாட்டி? அவ அடிச்சா எனக்கு வலிக்க போகுதா? நா சும்மா ஒரு வார்த்தை அவள வம்பிழுக்க கேட்டா உடனே அப்படி இப்படின்னு பிடிச்சுட்டீங்க, அவ்வளவு தானா இன்னும் எதும் இருக்கா?" என அவன் கேட்டதும் எல்லோரும் கப்பென்று வாயை மூடிக்கொண்டனர்.

"வசந்தி பாப்பாவ ரெடி பண்ணு. டேய் வாசு, மாப்ளைய பாப்பா ரூமுக்கு கூட்டிட்டு போ, எல்லோரும் சாப்பிட்டு படுக்க போங்க, ஓடுங்க" என அத்தை விரட்டி விட,

"வாசு மாப்ள குளிச்சு ரெடியாகவும் சாப்பிட கூட்டிட்டு வா" என அகிலா சொல்லவும், வாசு சரியென்று போக, மரகதவல்லியை திரும்பி பார்த்துவிட்டு அவளறைக்கு வாசுவுடன் சென்றான் பாண்டியன்.

"பாப்பாக்கு ரூமுக்குள்ளயே சாப்பிட குடுத்திடு அகிலா" என அந்த பெரியவர் சொல்லவும், அந்த இடமே பரபரப்பாகியது, மரகதவல்லிக்கு புது பதட்டம் வந்தமர்ந்து கொண்டது.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 38

"மதினி ஒலுசை எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா? தாமசமா வந்து நின்னுட்டியான் அதேன் இங்கயிருந்து யாரும் வர‌முடியல, அங்க வந்து எதும் பேசுனானா?" என மீண்டும் ‌அழைத்துவிட்டார் வாசுகி.

"எங்களுக்கும் பயந்தேன் மதினி ஆனா மாப்ள ரொம்ப சமத்து, எல்லாத்தையும் நல்லா செஞ்சு முடிச்சாக, என் பொண்ணுதேன் அப்பளம் உடைக்கேன்னு மாப்ள தலைலயே தட்டிட்டா, கோச்சுப்பாகளோன்னு நினைச்சு எல்லாருமே பயந்துட்டோம், எங்கத்த கூட திட்டிவிட்டுட்டாக, ஆனா மாப்ள சிரிச்சுட்டே, என் பொண்டாட்டிய நீங்க எப்டி பேசலாம்னு கேட்காத மாதிரி கேட்டுட்டு போயிட்டாரு"

"அதெல்லாம் நேக்கா செய்வியான், இத விட்டா அவளுக்கு வாய்பெங்க கிடைக்கும் அதேன் கொட்டிருப்பா, என் மத்த ரெண்டு மருமவளுங்களும் கூட அப்படிதான் வாய்ப்பு கிடைச்சா விடமாட்டாளுவ மதினி, இதுக்குன்னு புள்ளைய போட்டு வையாதீக, அதும் இன்னைக்கு ராவு சடங்கு வேற இருக்கு, பிள்ளைக சந்தோஷமா இருக்கட்டும்" என்றதும்,

"இந்தா அனுப்ப போறோம் மதினி. மாப்ள சாப்பிட வரணும், பாப்பா சாப்ட்டா, இப்பதேன் குடுத்துட்டு வந்தேன், இனி சேலைய‌ கட்டிட்டா பெரியத்தைட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு அனுப்பணும். மருமகனுக்கு என்ன பிடிக்கும்? நைட்டுக்கு என்ன சாப்புடுவாக?"

"முதல் தடவையா குடுக்கீக அதனால ஏதாவது இனிப்பு குடுங்க மதினி, மத்தபடி தோசை, இட்லி, சப்பாத்தின்னு எது குடுத்தாலும் சாப்பிட்டுக்குவான்"

"சரிங்க மதினி, வந்துட்டாகன்னு நினைக்கேன். ரெண்டு பேரையும் உள்ள அனுப்பிட்டு நா உங்களுக்கு கூப்பிடுதேன், முழிச்சிருந்தா எடுங்க"

"நாங்க இனிதேன் சாப்புட போறோம். நீங்க கூப்புடுங்க" என அவர் சொல்லவும் பேசி வைத்துவிட்டு, மாப்பிள்ளையை கவனிக்க சென்றார் அகிலா.

எல்லோரையும் கிளப்பிவிட்டுவிட்டு, அகிலாவும் அந்த பெரியம்மாவும் மட்டுமே வீட்டிலிருந்தனர்.

"சின்ன பிள்ளைகள ரூமு வர கொண்டு விட சொல்லாம்ல அகிலா?" என அந்த மூதாட்டி கேட்கவும்,

"உங்க பேத்தி எங்க அதெல்லாம் கேட்குறா? நானே போயிக்குவேன் நீங்க கொஞ்சுனதும், திட்னதும்னு செஞ்ச வர போதும்னு என் மேல பாயுதாத்தே"

"உன் மவளுக்கு கோவபட சொல்லியா தரணும். சரி இந்நேரம் அவள‌ எதுவும் பேசி சிடுசிடுக்க வேணாம். கூப்டு சொல்லிட்டு நாமளும் வசந்தி வீட்டுக்கு கிளம்புவோம்" என்றவர் சொல்லவும்,

"பாப்பா வா, பாட்டிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ" என அவளிருந்த அறை வாசலுக்கு சென்று அழைத்தார் அகிலா, இருவரையும் முறைத்துக் கொண்டே தான் வெளியே வந்தாள்.

"இப்டியே மூஞ்சிய வச்சுட்டு போடி உன் புருஷன் நைட்டு டூட்டிக்கும் கிளம்பி போக வாய்ப்பு குடுத்தாப்புல இருக்கும்" என பாட்டி பேச,

"என் புருஷனுக்கு என்ன ட்யூட்டி குடுக்கணும்னு எனக்கு தெரியும் நீ ஒன்னும் சொல்ல வேணாம். நா அப்ப என்ன செஞ்சுட்டேன்னு ரெண்டு பேரும் எல்லார் முன்னவும் அப்படி பேசுறீங்க?"

"சரிடி மாப்ள திட்டிபோடுவாரோன்னு முந்திட்டு நா பேசிட்டேன், உன்ன நா பேச கூடாதா? மூஞ்சிய தூக்கி வச்சுக்காத, சிரிச்சமானிக்கு போ பாப்பா, நிறைஞ்சு வாழணும் என் பேத்தி" என அவளுக்கு கன்னம் வழித்து அவர் முத்த, அகிலா திருநீறு கொண்டு வந்து நீட்டினார், அவர் எடுத்து பூசிவிட, "காலுல விழுந்தெழும்புடி" என அகிலா சொல்லியும், அவரை தழுவியே விடுவித்தாள். வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளே அவனை எதிர்கொள்ள போகும் படபடப்பு ஏகத்திற்குமிருந்தது.

"போய்ட்டு வாடி தங்கம்" என கொஞ்சியே சொல்லிவிட்டு அவர், கிளம்ப எத்தனிக்க, "வீட்ட பூட்டிட்டு உள்ள போய்க்கோடி, நாங்க வசந்தி மதினி வீட்டுக்கு போறோம். காலைல உன் அத்தயே வந்து காலிங் பெல் அடிப்பாக, வந்து தொறந்துவிடு" என்கவும் தலையசைத்து விட்டாள், அவர்களும் கிளம்பிவட்டனர்.

அவ்வளவு நேரமும் கலகலவென்று இருந்த வீடு அமைதியாகியிருந்தது. எல்லாம் அப்படியப்படியே கிடப்பதை சுற்றி பார்த்தவாறு, மெல்ல சென்று வாசல் கதவை சாற்றினாள். அவள் அறையில் இருக்கிறான், இனி அங்குதான் அவள் செல்ல வேண்டும், 'கொஞ்சம் ரிலாக்ஸாகு மேகி. எதுக்கு இவ்வளவு டென்ஷன், உன் ஏசிபி தானே!' மனது சமாதானம் சொல்ல, பெருமூச்சுடன் திரும்ப, சோஃபாவில் சாய்ந்தமர்ந்து கால்மேல் காலிட்டு அவளைத்தான் பார்த்திருந்தான் அந்த ஏசிபி, திரும்பிய வேகத்தில் அவனை அங்கு எதிர்பாராததில் திடுக்கிட்டு தான் நின்றாள்.

"என்ன மரகதம், நம்ம என்ன அவ்வளவு ஹெவி பெர்ஃபாமன்ஸா குடுத்திட போறோம்? இல்ல சவுண்ட் ஜாஸ்தியா வந்துரும்னு பயந்துட்டாங்களா? உங்கப்பாவ சத்தம் வராத கட்டில வாங்கி போட சொல்லிருக்கலாம்ல? இப்டியா வீட்டயே காலி பண்ணி போறது? இப்ப பாரு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்ட இந்த தெருவே சேர்ந்து செலிபிரேட் பண்ணுற மாதிரி ஆகிட்டு" என காலை ஆட்டிக்கொண்டே அவன் பேசியதில் அவளுக்கு கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

"ஏற்கனவே டென்ஷனா தாங்க இருக்கேன். பேசியே இன்னும் என்ன டென்ஷன் ஆக்காதீங்க ப்ளீஸ்"

"அப்ப ஸ்ட்ரெயிட்டா ஆக்ஷன்லயே இறங்கிடுவோங்கிறியா? எனக்கு ஓகேதான் கம் கம்" சோஃபாவில் சட்டமாக அமர்ந்து கொண்டு, அவளை அவன் கையை விரித்து அழைத்த அழகில் அவளுக்கு இப்போதும் சிரிப்பு தான் வந்து தொலைத்தது.

"அட்டூழியம் பண்றீங்க தெரியுமா?" என்றவாறே வந்து அவன் இருகையையும் கீழே இறக்கி விட்டு அவனருகில் அமர்ந்தாள்.

"மரகதம் என்ன சோர்ந்து உக்காந்துட்ட? டயர்டா இருக்குன்னு தூங்கிடாத மரகதம். அந்தந்த சடங்க அப்பப்ப செஞ்சுடணும் அதுதான் அழகு"

"நீங்க காலைல இருந்தே இந்த ஸ்டேட்மெண்ட்ட அழுத்தி அழுத்தி சொன்னதுக்கான ரீசன் இதானா?"

"அப்படியும் வச்சுக்குலாம். எனக்கு எல்லா சடங்கையும் உன்னோட பண்ணி பாக்கணும்னு ஆசைன்னும் வச்சுக்கலாம்" என்றவன் அவள் பக்கமாக திரும்பி ஒரு காலை மடக்கி அமர்ந்து அவள் முகம் பார்த்து பேச,

தானும் அவ்வாறு அமர்ந்தவள், "என்ன கல்யாணம் பண்ணினா என்னோட தானே சடங்குகளும் பண்ணியாகணும் ஏசிபி சார்?" என்றாள் கொஞ்சம் இயல்புக்கு வந்தவாறு.

"நீ மந்தாகினியா இருக்கும் போதே நா இதெல்லாம் யோசிச்சு கனவு கண்டு வச்சுருந்தேன் மரகதம். எனக்கு அப்ப ட்வன்டி ஃபைவ், போஸ்டிங் தான் வெயிட் பண்ணேன், உனக்கு ஒரு டூ இயர்ஸ் படிப்பு முடிச்சுடும், கூட டூ இயர்ஸ் மாஸ்டர் பண்ணாலும், எனக்கு ட்வன்டி நைன்ல மேரேஜ் பண்ணினா நமக்கு கரெக்ட்டா இருக்கும். அம்மாட்ட சொல்லி உன் வீட்ல வந்து பேச சொல்லலாம். பட்டு நா செலெக்ட் பண்ணி குடுக்கணும், கழுத்துக்கு, கைவிரலுக்கு, இடுப்புக்கு, காலுக்கு, கால் விரலுக்குன்னு எல்லாத்துக்கும் நானே உன்ன நேர்ல பாத்ததும் கரெக்ட் சைஸ் கெஸ் பண்ணி வாங்கி குடுக்கணும்னு நினைச்சேன். மூணு முடிச்சும் நானே போட்டு, விதவிதமா ஃபோட்டோ எடுத்துக்கணும். என் வீட்ல நீ விளக்கேத்தணும், உன் வீட்ல இந்த ஒலுசை விளையாட்டுல உன்ன வெட்கப்பட வைக்கணும், அலுங்காம குலுங்காம எனக்கே எனக்கா உன்ன எடுத்துக்கணும், மூணு புள்ள பெத்துக்கணும். இப்படி நிறையா கற்பனை கோட்டை கட்டி வச்சுட்டு உன்ன நேர்ல வான்னு மெசேஜ் அனுப்பினா, நீ பிம்பிளிக்கா பிளாப்பினுட்டு போயிட்ட, ரொம்ப கடுப்பாகிடுச்சு, அதுக்கப்பறம் எவனாவது என் கண்ணு முன்ன லவ் பண்ணாலே பொடனிலயே போட்டு பத்திவிட்ருவேன். காண்டாகிடும். இப்ப வர அப்படிதான் கல்யாணம் பண்ணவைங்க கூட என் முன்ன காதலிச்சுட்டு திரிய கூடாது. அதான் குவாட்ரஸ்ல போய் தங்கிட்டேன். கல்யாணம் ஆகாதவனுங்கள பிரிச்சுவிட்டா ஒரு நியாயம் உண்டு, ஆனவங்கள பிரிச்சுவிட்டா என்ன நியாயம்? அதான் நம்ம பாத்தா தான பிரச்சினை பாக்க வேணாம்னு அங்க போய்ட்டேன். ஆனா என் சாபம் உன்ன சும்மா விடல பாத்தியா எங்கிட்டயே கொண்டு கோர்த்து விட்ருச்சு. நா நினைச்சதெல்லாத்தையும் நடத்திக்கோ ராசான்னு வாரி வழங்கிட்ருக்கு. வரிசையா வந்ததுல இனி மூணு பிள்ளைல முதல் பிள்ளைக்கான அச்சாரம் போட்ருவோமா மரகதம்?" என தன்மேல் இழுத்து போட்டுக் கொண்டு அப்படியே சோஃபாவில் சரிந்துவிட்டான்.

அவன் வேகமாக பேசியதிலும் அதன் கருத்திலும் அயர்ந்தேவிட்டவள், "நீங்க எப்பவுமே இப்படித்தான் பேசுவீங்களா?" என்க,

"ம்ம் ஆமா ஏன்?"

"அப்பலாம் எவ்வளவு சைலண்ட்டா நல்ல புள்ளையா பேசுவீங்க?"

"அதான விபூதி அடிச்சுட்டு ஓடிட்ட" என்றவன் அவள் கன்னத்தில் வலிக்காமல் கடித்தான்.

"அதையே சொல்லாதீங்க. அது சின்ன பிள்ளைல தெரியாம செஞ்சது. ஆனா தெரிஞ்சே உங்களுக்காக காத்துருந்தேன்ல?"

"அந்த ஒரு மேட்டர்ல தாண்டி தப்பிச்சுட்ட, வேற எவனையாவது கல்யாணம் பண்ணிட்டு புள்ள குட்டியோட என் முன்னால வந்து நின்னு கண்டுபுடிச்சுருந்தேன்னு வையேன், மாப்பு தாண்டி உனக்கு"

"அதான் செய்யலல? எனக்கு உங்கள புடிக்கும், ஆனா அப்ப பயம், தப்போன்னு உறுத்துல் வேற. லவ்வுன்னு கன்பார்ம் பண்ணல, அதான் சொல்லல, அப்றம் அப்றம் உங்கள டிவில, பேப்பர்லன்னு பாப்பேன், அப்ப உங்க இமேஜ் பாத்து சாரி சொல்லிப்பேன். உங்க முன்ன வர்ற ஐடியாவே எனக்கு இருந்ததில்ல. அவ்வளவு பயம் தெரியுமா?"

"நீ ரொம்ப பயப்படுவன்னு நம்பிட்டேன்டி. இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாதுடி மரகதம்" என்றவன் அவள் முகம் வழி வந்து விழுந்த மல்லிகை பூவை வாசம் பிடித்து, "கமகமன்னு இருக்க மரகதம்" என்றான்.

"அதுக்கு மதுரை மல்லி தாங்க காரணம்"

"அப்ப உன்ட்ட என்ன ஸ்மெல் வருதுன்னு ஆராய்ச்சி பண்ணலாம் வா" என தூக்கி சென்று விட்டான் அறைக்குள்,

"லைட்டுங்க"

"எறியட்டும்டி ஸ்விட்ச் தேடலாம் பொறுமை இல்ல" என்றவன் விட்ட இடத்திலிருந்து துவங்குவதற்கு அவள் வாசனையை ஏற்க ஆரம்பித்து விட்டான். வாயை குடுத்தே மாட்டிக்கொள்வது தானே அவள் வழக்கம், அவள் வாயை பிடுங்கி அதை தனக்கு சாதகமாக்குவது தானே அவனது சிறப்பம்சம்.

அன்றைய இரவில் பலநாள் திட்டத்தையும் கூட செயல்படுத்திக் கொண்டான். கேஸே முடிய போகிறது, அதில் இல்லாத காத்து கருப்பிற்கு வாசுகி ஒரு கயிறை தந்திருந்தாரே, அதை பிடிவாதமாக அவள் கையாலேயே கட்டிக்கொண்டு விட்டிருந்தான்.

"நான்லாம் இவ்வளவு பிகு பன்னாம தானடி உனக்கு இத கட்டிவிட்டேன்" என அவள் இடுப்பிலிருந்த செயினை காண்பித்தே தனக்கானதை செயல்படுத்திக் கொண்டிருந்தான் அந்த ஏசிபி.

என்றோ முகநூல் அவர்களை சேர்த்துவைத்திருக்க, இன்று தான் வாழ்க்கையில் ஒன்று சேரும் நேரம் கூடி வந்திருக்கிறது. அவன் மனதிற்குள் மந்தாகினியாக வந்து இன்று மனைவி மரகதம் ஆகிவிட்டாள். அவன் காதலித்ததும் இந்த மந்தாகினி என்ற மரகதத்தை தானே!

எப்போதும் போல், "முடியலங்க" என அவள் கூறிய பின்னரே அன்றைய விடியலில் அவளை தூங்க அனுமதித்தான். அவளை கொண்டாடி தீர்க்க நாட்கள் நீண்டு கிடந்தும், கடந்துபோன நாட்களை ஈடுகட்ட முயற்சித்து கொண்டிருந்தான் அவளின் காவலன்.

மறுநாள் முதல் சிறப்பு விருந்து தான் இருவருக்கும். சாப்பிட, உறங்க, ஊர் சுற்ற, அவன் அவளை படுத்தி எடுக்க என்று தான் நாளும் பொழுதும் வேகமாக கழிந்தது. அடுத்த மூன்றாம் நாள் தான் மணமக்கள் இருவரும் அவன் வீட்டிற்கு சீருடன் வந்திறங்கினர். அடுத்து அங்கிருந்தும் அனைத்து இடங்களுக்கும் விருந்து செல்வது தான் தொடர் வேலை, இதற்கிடையில் தனிமை வேண்டும் நேரங்களில் அவளை தள்ளிக்கொண்டு குவார்ட்ஸ் வந்துவிடுவான். அவனுக்கானவளாக அவளும் அவளுக்கானவனாக அவனும் முழுமையாக மாறிக் கொண்டிருந்தனர்.

பத்து நாட்கள் நொடிபோல் கடந்து சென்றிருக்க, அன்று இருவரும் வேலையில் சேரும் நாள், மந்தாகினியையும், வைஷ்ணவியையும் இன்று நீதிபதி முன்பு பாண்டியன் ஒப்படைக்க வேண்டும், மரகதவல்லி அவர்களை விசாரிக்க வேண்டும். இருவரும் அதற்கு தயாராகினர்.

"மரகதம் கேஸ் நம்பர் எத்தனாவதுன்னு பாத்துட்டு ஃபோன் பண்ணுடி"

"நீங்க வருவீங்களா?"

"வேறெதுவும் எமெர்ஜென்சி கேஸ் ஃபைல் ஆகலன்னா கண்டிப்பா வருவேன்"

"சரி அங்க வாங்க பாக்கலாம்" என்றுவிட்டாள், சிரித்தவாறே அவள் கன்னத்தில் முத்தமிட்டு, அவன் அலுவலகம் கிளம்பிவிட்டான் ஏசிபி.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 39

"போலாம் பரத்" என அவன் காரில் ஏறி‌ அமர்ந்ததும், "குட் மார்னிங் சார்" என்றான் பின்னால் அமர்ந்திருந்த சொக்கலிங்கம்.

"என்ன சொக்கு, வச்சு செஞ்சுவிட்டாங்களாம்?" என்றான் சிரிப்புடன், ராமன் அந்த கதிரை இவர்கள் காவலில் வைத்து கொன்றதால் விசாரணை கமிஷன் என வைத்து பிழிந்து எடுத்திருந்தனர்.

"ஆமா சார். அவனுங்களுக்குள்ள எப்டி சண்டை வந்துச்சு, ஏன் வந்துச்சு? அந்நேரம் யாரெல்லாம் இருந்தீங்க? நீங்களே அடிச்சுட்டு மறைக்க ட்ரை பண்றீங்களா? பொறுப்பில்ல வேலைல கான்சென்ட்ரேஷன் இல்லன்னு கொத்து பரோட்டா கணக்கா கொத்தி தள்ளிட்டு அந்த லேடி"

"கமிஷனுக்கு என்னையும் வர சொல்லிருக்காங்க. இன்னைக்கு கோர்ட் வேலைய முடிச்சிட்டு நாளைக்கு அங்க போகணும்"

"இன்னைக்கு கேஸ் ஃபைனல் ஆகிடுமா சார்?"

"தெரியலயே சொக்கு. அந்த வைஷ்ணவி பொண்ணும் கிரிமினல் லாயர் தான். தப்பிக்க வேற ப்ளான் எதும் யோசிச்சுருக்கலாம்"

"புடிச்சு குடுத்தாச்சு இனி அவங்க பாடு தான சார்" என்றான் சொக்கலிங்கம்.

"அப்படி நம்மள விட்ருவாங்களாக்கும்? பாப்போம். அப்றம் முக்கியம் இந்த ராமன் பையன சேஃப் பண்ணணும், ஹாஸ்பிடல்ல இருந்து எப்ப டிஸ்சார்ஜ்?"

"நேத்தே கூட்டிட்டு வந்தாச்சு சார். இன்னைக்கு கோர்ட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு நேத்து ஈவ்னிங் கூட்டிட்டு வந்து கமிஷனர் ஆபிஸ்லயே விட்டுட்டு தான் நா வீட்டுக்கு வந்தேன்"

புருவம் சுருங்க பட்டென்று திரும்பி முறைத்தவன், "எனக்கு ஏன் இன்பார்ம் பண்ணல சொக்கு? இப்ப அங்க அவனுக்கு காவல் யாரு இருக்கா ஃபோன் அடிங்க" என்றவன், "பரத் வேகமா போங்க" என்றுவிட்டு, அவனும் கமிஷனருக்கு முயன்றான்.

என்ன முயன்றும் அனைத்தும் வீணாகி தான் போயிருந்தது. இவர்கள் சென்றிறங்கும் போது தான் சாப்பாடை கொண்டு சென்ற கான்ஸ்டபிள் அடித்து பிடித்து வெளியே ஓடி‌ வந்தார், எதிரே வந்த‌ இவனை பார்த்து அவர் அதிர்ந்து நிற்க, அவர் முழியே சரியில்லை என்றதும், "உள்ள போய் பாருங்க சொக்கு குயிக்" என்றவன், "என்னாச்சு?" என்றான் அவரிடமும்.

"சார் அந்த பையன் இறந்து கடக்குறான். கொஞ்ச முன்னாடி‌தான் பாத்துட்டு டீ குடிச்சுட்டு அவனுக்கும்‌ சாப்பாடு வாங்கிட்டு வர போனேன். இப்ப‌ குடுக்க போனா செத்து கிடக்குறான். எப்டின்னே தெரியல, பத்து நிமிஷம் முன்ன தான் பாத்தேன்"

"சொக்கு, பத்து நிமிஷம் முன்ன தான்னா உயிர் இருக்கான்னு பாருங்க" என இவன் சத்தத்தில் மொத்த கமிஷனர் அலுவலகமும் அங்கு கூடியது.

"இல்ல சார் ஸுசைட் தான்" என வந்தான் சொக்கலிங்கம்.

"எப்டி பண்ணிருக்கான்?"

"கைய கட் பண்ணிருக்கான்‌ சார்"

"எப்டி கட் பண்ணிருக்கான், உள்ள கட் பண்ணிக்றளவுக்கு என்ன இருந்தது?"

"ஹாஸ்பிடல் கத்தி சார்"

"கையோட‌ எடுத்துட்டு வந்துருக்கான், செக் பண்ணாம உள்ள விட்ருக்கீங்க?" என சொக்கலிங்கத்தையும் சேர்த்து முறைத்தான்.

"செக் பண்ணேன்‌‌ சார் இத எங்க ஒழிச்சு வச்சுருந்தான்னு தெரியல"

"உங்கள்ல யாரையாவது செருகியிருந்தா இனிமேலாவது கவனமா இருந்துருப்பீங்க. லூசு பய விவரமில்லாம அவனையே கிழிச்சுட்டான் போல" என்றான் கோவமாக.

அந்நேரம் "பாண்டியன்?" என வந்தார் கமிஷனர்.

எல்லோரும் அவருக்கு சல்யூட் வைக்க, "எதுக்கு இங்க ஆர்குயூமெண்ட் நடக்குது. பாண்டியன் லீவு எப்டி போச்சு?"

"நா நாளைக்கு ஜாயின் பண்ணிருக்கலாமோன்னு இப்ப தான் சார் யோசிக்றேன். இந்த வாரம் ஃபுல்லா விசாரணை கமிஷன்ல தான் போக போகுது எனக்கு"

"ஏன் பாண்டியன்?"

"இங்க மிச்சமிருந்த ஒருத்தனும் சூசைட் பண்ணிகிட்டானாம்"

"நேத்து தானே வந்தான், அதுக்குள்ள எப்டி?" என்றவர் உள்ளே சென்று பார்த்து வந்தார்.

"க்ளியர் பண்ணுங்க நாராயணன்" என உதவி ஆய்வாளரிடம் சொல்லிவிட்டு, "கோர்ட்டுக்கு நீங்களே போய்ட்டு வந்திடுங்க பாண்டியன். விசாரணை கமிஷன் இந்த டைம் மொத எனக்கு தான் வைக்க போறானுங்க" என அவர் புலம்ப.

"அவங்க வீட்டுக்கு முதல்ல இன்பார்ம் பண்ணுங்க. கோர்ட்டுக்கு போகுமுன்ன ஜிஎச் ரிப்போர்ட் வாங்கிட்டு வந்துருங்க நாராயணன்" என்றான் பாண்டியன்.

"உங்களுக்கு எப்டி அவன் சாக போறாம்னு தோணுச்சு சார்?" என்றான் வெகுநேரமாக யோசித்திருந்த சொக்கலிங்கம்.

"அவனுக்கு ஏற்கனவே கில்டி ஜாஸ்தி ஆகிட்டு. நா அன்னைக்கு பேசும்போதே, அவன்கிட்ட செல்ஃப் கான்ஃபிடன்ஸ் இல்ல. எல்லாரையும் காட்டி குடுத்தான், ஒருத்தன அவனே கொண்ணுட்டான் இனி என்ன இருக்குன்ற மாதிரி தான் பேசிட்ருந்தான். அங்க வச்சு அவன் எதும் பண்ணிக்க கூடாதுன்னு டாக்டர்ஸ்ட்ட தெளிவா சொல்லிட்டு தான் வந்தேன். அவனுக்கு கவுன்சிலிங் கூட குடுக்க சொன்னேன். எல்லாம் பாத்துட்டு தானே இருந்தீங்க சொக்கு, கெஸ் பண்ணலையா நீங்க?"

"நா அவனுக்கான ட்ரீட்மென்ட்டா அத குடுக்க சொல்றீங்கன்னு நினைச்சுட்டேன் சார். பதினைஞ்சு வயசு பையன் லைஃப் வீணா போயிட வேணாம்னு தான் கவுன்சிலிங்னு நினைச்சேன்"

"நல்லா நினைச்சீங்க. சுதாரிப்பா இருக்க பாருங்க. அந்த வைஷ்ணவியும், மந்தாகினியும் என்ன பண்றாங்கன்னு போய் பாருங்க. பத்து மணிக்கு கோர்ட்டுக்கு கிளம்பணும்" என்றுவிட, எல்லோரும் ஆளுக்கொரு வேலையில் நகர்ந்திருந்தனர்.

கமிஷனரும் அவனும் மட்டுமே அங்கு, அவர் அவனையே பார்க்க, "என்ன சார்?" என்றான்.

"வில்லங்கம் புடிச்சவனாச்சே பாண்டியன். தப்பு பண்ணவனுக்கு கவுன்சிலிங் குடுத்து திருத்துறளவுக்கு நல்லவனா எப்ப மாறுனீங்க?"

"நீங்க மொத என்ன நம்புங்க சார். அந்த பையன் கில்டுல தான் இருந்தான். அவன் அக்கா விஷயத்துலயே அல்ரெடி திருந்திட்டான். திருந்துனவன் தான இப்படிலாம் யோசிப்பான், அதான் சூசைடு எதாது பண்ணிகிட்டா நமக்கு தானே மண்ட குடைச்சல்னு கவுன்சிலிங் குடுக்க சொன்னேன். கடைசி அதான் நடந்துருக்கு. எப்பவும் என்ன அக்யூஸ்ட் ஆக்குறதுல தான் உங்க குறி"

"உங்க ஹிஸ்டரி அப்படி பாண்டியன். போன மாசம் கூட சொத்துக்காக அம்மாவ அடிச்சே கொண்ணுட்டான்னு வந்தவன, கைய கால உடைச்சு ஆஸ்பத்திரியில சேத்து, இதே கவுன்சிலிங் குடுத்து தான் பரலோகம் அனுப்புனீங்க?"

"நா நல்லதுன்னு தான் நினைச்சு செய்றேன் அவனுங்க தான் தப்பான முடிவெடுத்துடுறானுங்க"

"உனக்கு மேல சீட்ல உக்காந்துட்டு எனக்கு தான் பேக் ஃபையர் ஆகிட்ருக்கு தெரியுமா?"

"விடுங்க சார் போலீஸ்னா சும்மாவா. அடுத்த கேஸ‌ பாப்போம் வாங்க"

"நீ இத முடிச்சுட்டு வா, நா அடுத்த கேஸ் என்னன்னு சொல்றேன்" அவர் சொல்லி செல்ல,

"மனுஷன ஃப்ரீயா விட மாட்டீங்களே?" என முனங்கி விட்டே அவனறைக்குள் சென்றான்.

பதினொரு மணி, மரகதவல்லியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது, "சொல்லு மரகதம்" என்றான் எடுத்ததும்.

"அடுத்த ஹியரிங் நீங்க தான். வைஷ்ணவியையும் மந்தாகினியையும் ப்ரொட்யூஸ் பண்ணணும்"

"ஆன் தி வே மரகதம். நீ என்ன பண்ற?"

"நானா?"

"உன்ன தான கேட்டேன்?"

"நா என்னங்க பண்ணுவேன் கோர்ட்ல இருக்கேன். இப்பதான் வேறொரு கேஸ் சப்மிட் பண்ணிட்டு வரேன்"

"புது கேஸா?"

"ஆமாங்க"

"மரகதம் அவசரமா மந்தாகினிய மறக்கணும் போல இருக்கு நாம ஏன் ஒரு ஒன்னவர் பெர்மிஷன் போட்டு வீடு வர போயிட்டு வர கூடாது?"

அவன் கேட்டதில் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்துவிட்டு போனை கண் முன் கொண்டு வந்து அதிலிருந்த அவர்கள் திருமண புகைப்படத்தின் அவன் ஃபோட்டோவை முறைத்தவள், 'மறக்குற மூஞ்சிய பாரு ப்ராடு ஏசிபி?' என திட்டிவிட்டு மீண்டும் காதில் வைத்தாள்.

"மரகதம் அலைஸ் மேகி அலைஸ் எக்ஸ் மந்தாகினி" என கத்திக்கொண்டிருந்தான் அவன்.

"பக்கத்துல யாருமில்லையா?"

"நா பைக்ல வரேன்டி, அவங்க வேன்ல போயிட்டாங்க. நீ சரின்னு சொல்லு நாம மட்டுமா இப்படி போய் அப்படி வந்துடலாம்"

"நிஜமாவா கேட்கிறீங்க?"

"பின்ன பொய் சொல்ற மாதிரி இருக்கா உனக்கு?"

"விளையாடாம வாங்க"

"உன்ன வாடின்னா நீ என்ன‌ வாங்கன்ற?"

"வாய் வாய் இப்படி பேசாதீங்கன்னு எத்தன தடவ சொல்றது?"

"மரகதம்"

"மரகதம் மரகதம்னு ரிப்பீட் பண்ணிட்டே வாங்க, மந்தாகினி ஞாபகமே வராது. நா பேப்பர்ஸ் ரெடி பண்றேன் வைக்க போறேன். வாங்க நீங்க" என வைத்துவிட்டாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் அவள் முன் நின்றவன், "பொண்டாட்டி ஆனதும் பயம் பவ்யம்லாம் காத்துல கரைஞ்சுடும் போல" என்க,

"எல்லாம் உள்ளுக்க இருக்குங்க"

"உனக்கு பயம் பவ்யம்லா இருக்கோ இல்லையோ குசும்பு ஜாஸ்தி இருக்குடி"

"யாருக்கு எனக்கா? நீங்க சொன்னா சரிதாங்க" என்றவள், சுற்றி ஒருமுறை பார்த்தாள் அது ஜீவானந்தம் அலுவலகம் தான் வேறு யாருமில்லாததால் அமைதியாக இருந்தது. ஆனால் எப்போது வேண்டுமானாலும் யாரும் வரும் வாய்ப்பும் அதிகமே, அதனால் பட்டென்று அவன் சட்டையை பிடித்திழுத்து லேசாக குணிய வைத்து அவன் வலது கன்னத்தில் முத்தமிட்டு விலகிக் கொண்டு மீண்டும் ஒருமுறை வாசல் வரை எட்டிப் பார்த்துக் கொண்டாள்.

"என்னடி பண்ண? அதும் ஆபிஸ்ல வச்சு? அவ்வா எவ்வளவு தைரியம்? எனக்கு கூட இவ்வளவு தைரியம் இல்லப்பா. கோர்ட்ல நின்னுட்டு பப்ளிக் நியூஸன்ஸ் பண்ற நீ? எனக்கு இதெல்லாம் பிடிக்காது மரகதம்"

அவன் பேச பேச முறைத்தவள், 'இந்த வாய தச்சுட்டா என்னடி மேகி?' என தான் யோசித்திருந்தாள்.

"என்னடி முத்துமு குடுத்துட்டு முறைக்குற? இதெல்லாம் தப்புன்னு தெரியாதா ஒரு லாயருக்கு?"

"இனி எதாது கேட்டீங்கனா பாருங்க? அச்சோ ஏங்கிட கூடாதேன்னு குடுத்தா என்னையே டீஸ் பண்ணுவீங்களா நீங்க. போங்க இனி எதுவும் இல்ல உங்களுக்கு" என மூஞ்சை சுருக்கி கொண்டவளை,

உள்ளடக்கிய சிரிப்புடன் பார்த்தவன், "ஏங்கிட்ருக்கேன்னு உன்ட்ட சொன்னனா மரகதம்? காலைல போனதும் அந்த மந்தாகினி பேரு உன்ன நியாபகபடுத்திருச்சு, அதான் உன்ன மட்டும் நினப்புல வச்சுட்டு அந்த பேர மறக்க வைடின்னு உனக்கு கால் பண்ணி கேட்டேன். நீ அதுக்காக இப்டி பண்ணுவியா?"

"போதும் போங்க, உங்கள பத்தி தெரிஞ்சும் குடுத்தேன்ல என்னதான் சொல்லிக்கணும்" அவள் மீண்டும் மீண்டும் முறுக்கி கொள்ளவும் இவனுக்கும் கைகால்கள் பரபரக்க துவங்கியது.

"சும்மா இருந்தவன‌ கிளப்பி விட்டுட்டடி மரகதம்"

"ஒன்னும் கிடையாது போங்க, அதோ உங்க வலது கை வந்தாச்சு நீங்க போலாம். நாம கோர்ட்ல பாக்கலாம் ஏசிபி சார்"

"மரகதத்த பாக்கதான்டி போறேன் மொத்தமா" என்றவன் மேசை மறைத்திருந்த அவளின் சேலை மறைக்காத இடையை நறுக்கென்று கிள்ளிவிட்டே வெளியேறினான்.

"இவர வச்சுகிட்டு" என திட்டிவிட்டே அடுத்த அவள் வேலையை பார்த்தாள்.

பத்து நிமிடத்தில் வெளியேறி, கேஸ் நடக்கும் அறைக்குள் நுழைய போனவள் நின்று அவனை தேடினாள், அவன் சற்று தள்ளி மரத்தடியில் நின்ற அவன் வண்டியில் தான் ஒற்றை காலை கீழ் ஊணி அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தான். இவள் பார்க்கவும் இவளை பார்த்தாலும் பேச்சு பேச்சாக தான் இருந்தது.

"அடுத்து நீங்க தான் உள்ள வாங்க" என அவள் லேசாக வாயசைத்து உள்ளே கைகாட்ட, அவள் கையையும் வாயையும் பார்த்தாலும் அவன் போனில் தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

"மேகி" என ஜீவானந்தம் உள்ளிருந்து குரல் கொடுக்கவும், இவனை திரும்பி முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அவள் உள்ளே செல்லவும், போனை பேசி முடித்து பாக்கெட்டில் போட்டவன், திரும்பி, இவனுக்கு சற்று தள்ளி வேனருகில் நின்றவனை, "சொக்கு" என்றழைத்தான்.

"சார்" என அவன் வரவும், "உள்ள கூட்டிட்டு வாங்க" என அவன் முதலில் உள்ளே செல்ல,

"வாங்க பாண்டியன்" என்றார் ஜீவானந்தம், இவன் தலையசைத்து அமர்ந்து கொண்டான். வைஷ்ணவி மந்தாகினி குடும்பத்தினரும் பாவமாக அங்கு அமர்ந்திருந்தனர்,

நீதிபதி அடுத்து இவர்களின் வழக்கை ஆரம்பித்தார், "வைஷ்ணவியையும், மந்தாகினியையும் ப்ரொட்யூஸ் பண்ணணும் சார்" என்றார் ஜீவானந்தம். அவர்கள் பெயர் சத்தமாக சொல்லப்பட்டது, இருவரும் நீதிபதி முன் வந்து நின்றனர். மரகதவல்லி இருவரையும் பார்த்திருந்தாள்.

"எஸ் ப்ரொசீட்" நீதிபதியின் ஆணையில்,

"நீங்க வைஷ்ணவி, நீங்க மந்தாகினி ரைட்டா?" என ஆரம்பித்தாள் மரகதவல்லி.

இருவரும் தலையசைக்கவும், "சரி உங்களுக்கும் இறந்து போன எட்டு பசங்களுக்கும் என்ன விரோதம்?"

"என் தம்பி விஷ்ணுவ அவனுங்க தான் கொன்னானுங்க" என்றாள் வைஷ்ணவி.

"எப்டி கொன்னாங்க?"

"ட்ரக் அடிக்ட்டாக்கி கொன்னாங்க"

"அதுக்கு பழிவாங்க தான் நீங்க அவங்க எல்லாரையும் கொன்றுக்கீங்க?"

"ஆமா, நாந்தான் கொன்னேன் பழிவாங்கனும்னு நா மட்டுந்தான் கொன்னேன்" மறுப்பின்றி உடனே ஒத்துக் கொண்டாள் வைஷ்ணவி.
 
Status
Not open for further replies.
Top