ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேன்சுவை நீயடி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 10

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட, இவன் சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டான்..

அறைக்குச் சென்றவன், அங்கு தன்னை சுத்தப்படுத்தி விட்டு, சிறிது நேரம் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்..

அவனது உணர்வுகளை கட்டுப்படுத்த பெரும்பாடாகி போனது அவனுக்கு...

சிறிது நேரம் இருந்தவன் " சரி கிளம்புவோம் " என்று நினைத்து சட்டையை மாட்டிகொண்டு வெளியில் வர,

இவர்களும் இங்கே சாப்பிட்டு முடித்து, அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, வெற்றியை கண்டதும்,

"எய்யா.. வெற்றி.. நான் மதிகிட்ட கேட்டுட்டேன்... அவ அடுத்த வாரம் வச்சிக்கலாம்னு சொல்றாபா.. நீ அதுக்கு உண்டான வேலையை பாரு " என்று சொல்லிட,

" அப்டியா, சரி மா.. நான் பார்த்துகிறேன்.. நீங்க அத்தை, மாமா கிட்ட சொல்லிடுங்க.. அப்புறம் வெளியூர்ல இருக்க நம்ம சொந்தகாரங்களுக்கு போன்ல சொல்லிட்டு, உள்ளூர்ல இருக்குறவங்களுக்கு நம்ம நேருல போய் சொல்லிக்கலாம்.. " என்றவனுக்கு,

" சரிய்யா.. நான் போன்ல சொல்றவங்களுக்கு எல்லாம் சொல்லிக்கிறேன்... அப்புறம், இங்க உள்ளவங்களுக்கு உனக்கு என்னைக்கு தோது படும்னு சொல்லு.. அன்னைக்கு போகலாம் " என்றார்..

"அப்படியா..." என்று சிறிது நேரம் யோசித்தவன்,

"ஞாயித்துகிழமை போகலாம்மா " எனக் கூற,

" சரிய்யா... " என்றார் அவனது அம்மா..

" சரி, நான் வேலை விஷயமா டவுன் வரைக்கும் போறேன்.. வர நைட் ஆகும்.. போய்ட்டு வரேன் " என்று தன் அம்மாவிடம் சொல்லியவன்,

மதியை பார்த்து போய்ட்டு வருவதாக தலையை ஆட்ட, அவளும் அவனுக்கு பதிலுக்கு தலையை ஆட்டினாள்..

அவனது மனமோ உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டது...

கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் முன்னேற்றத்தை அல்லவா காண்கிறான். வெகு விரைவில் அவள் என்னையும் ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் சென்றான்..

அவன் அப்படிச் செல்ல, இங்கு இவளுக்கோ தன்னையும் மதித்து சொல்லி சென்றவருக்கு, அவளும் மதிப்பளித்து பதில் கூறினாள் என்ற மன நிலையில் தான் இருந்தாளே தவிர, வேறு மாதிரி நினைக்கவில்லை அவள்..

மதியத்திற்கு மேல், எண்ண செய்வதென்று தெரியாமல், சிறிது நேரம் டிவியை ஆன் செய்து பார்த்தவளிடம்,

கற்பகம் " மதிக் கண்ணு, நீ இரு.. பக்கத்துல ஒருத்தவங்க வீட்டுக்கு நான் போய்ட்டு வந்துருறேன்.. நீ தூங்குறதுனா கதவை சாத்திட்டு தூங்கு மா " என்றவருக்கு,

" சரி அத்தை.. நீங்க கவனமா போய்ட்டு வாங்க " என்றாள்..

" அது எப்பவும் போற வார இடம் தான்.. நான் பார்த்துகிருவேன் கண்ணு " என்று சொல்லிவிட்டு சென்றார்..

இவளும் அவர் சென்ற பிறகு கதவை சாத்திவிட்டு வந்தவளுக்கு, கற்பகம் பற்றிய எண்ணம் தான்..

" மனசுல எதுவும் வச்சிக்காம, எவ்ளோ வெள்ளந்தியா இருக்காங்க.... இந்த மாதிரி ஆளுங்களை நம்ம சிட்டில பாக்குறது கஷ்டம் தான்..என் கிட்ட எவ்ளோ அன்பா அனுசரணையா நடந்துகிறாங்க. அது தான் இவங்க இயல்பா இருக்கும்... அத்தை.. உங்கள இத்தனை வருஷம் மிஸ் பண்ணிருக்காலம்.. இனி பண்ண மாட்டேன் " என்று தனக்குள் பேசிக்கொண்டவளுக்கு வெற்றியின் நியாபகம் வர,

" அவரும் நானும் சின்ன வயசுல ரொம்ப குளோஸ்ஸா இருந்து இருக்கோம் போல... எனக்கு தான் எல்லாமே மறந்து போச்சு.. ஆனால் அவருக்கு நியாபகம் இருக்கும் ல.... மாமா.. மாமா.. னு நான் அவரு பின்னாடி தான் எப்போ பாரு சுத்துவேன்னு அத்தை சொன்னாங்க..
ஆனால் இப்போ மாமானு கூப்பிட முடியுமா... " என்று யோசித்தவளுக்கு பதில் கிடைக்கவில்லை..

பின்னர், சிறிது நேரம் படுக்கலாம் என்று எண்ணியவள், அறைக்குச் சென்று கட்டிலில் படுத்தவள் நன்றாக உறங்கியும் விட்டாள்...

கற்பகம் ஐந்து மணி வாக்கில் வீட்டிற்கு வர, வீடு அமைதியாக இருப்பதை பார்த்து, "மதி... மதிக்கண்ணு.. "என்று அழைக்க,

எந்த வித எதிர்வினையும் இல்லாததால், "தூங்குறா போல ".. என முடிவு எடுத்துக் கொண்டவர்,

வரவேற்பு மற்றும் தாலிக் கொடி மாற்றும் வைபவத்தை ஊரில் லட்சுமியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தவர், அவருக்கு அழைப்பு விடுத்தார்..

அழைப்பு அங்கே ஏற்கப்பட, " ஹலோ.. லட்சுமி.. " கற்பகம் அழைக்க,

"சொல்லுங்க அண்ணி.. எப்படி இருக்கீங்க.. வெற்றி எப்படி இருக்கான்... மதி க்கு எல்லாம் செட் ஆகிருச்சா " என அடுத்தடுத்து கேள்விகளை அடுக்க,

"எல்லாரும் நல்லா இருக்கோம். மதி ஓரளவு பழகிகிட்டா... வெற்றிகிட்ட எப்படினு தெரியல.. ஆனால் என்கிட்ட ரொம்ப நல்லாவே சின்ன புள்ளையில இருந்த மாதிரி அத்தை அத்தைனு வாய் நிறைய கூப்பிடுறா " என்று மகிழ்ச்சியுடன் சொல்ல,

லட்சுமிக்கும் அதை கேக்க ஆனந்தமாக இருந்தது..

"உங்ககிட்ட இருக்குற போல, வெற்றிகிட்டயும் கூடிய சீக்கிரம் நல்லா இணக்கமா பழக ஆரம்பிப்பா " லட்சுமி சொல்லிட,

"நல்லது நடந்தா சரி லட்சுமி...அப்புறம் நாள் குறிச்சிட்டு வந்தாச்சு. அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை... அன்னைக்கு வச்சிக்கலாம்னு மூணு பேரும் சேந்து முடிவு எடுத்து இருக்கோம்.... காலைல தாலிக் கொடி மாத்திட்டு, சாய்ந்திரம் வரவேற்பு வச்சிக்கலாம்னு வெற்றி சொல்லிட்டான்.. நீ என்னமா சொல்ற " என கேட்டவருக்கு,

"நல்லது அண்ணி.. அன்னைக்கே பண்ணிக்கலாம்.. நான் அவருகிட்ட சொல்லிருறேன்..." என்றார் லட்சுமி..

"சரி மா.. அப்போ போனை வச்சிருறேன் "என சொல்லி விட்டு போனை அணைத்தார்.

அவள் எழுந்த போது, மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது...

" அச்சோ, இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா.. நேரம் போனதே தெரியல... " என்றவள்,

குளியல் அறைக்குச் சென்று தன்னை மீண்டும் ஒரு முறை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், தலையை பின்னி, சிறிதாக ஒப்பனையிட்டு, கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு திருப்தி எடுக்க, அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள்..

அவளைப் பார்த்த கற்பகம், " வாமா.. தூங்கி முழிச்சிட்டியா... நல்ல தூக்கமா " என்று கேட்டவருக்கு,

" ஆமாத்தை... நல்லா தூங்கிட்டேன். நேரம் போனதே தெரியல " என்று சொன்னவளை பார்த்தவர்,

"அம்மாடி, பிரிட்ஜ்ல பூ வச்சிருக்கேன்.. எடுத்து வச்சிக்கிகிட்டு , சாமி ரூம் க்கு போய் விளக்கேத்தி வை மா " என்றார்.

அவளும் தலையில் பூவை வைத்துக் கொண்டு, சாமி படங்களுக்கு பூ வைத்து விளக்கேற்றி, வேண்டிக் கொண்டவள், திருநீரை நெற்றியிலும் குங்குமத்தை வகிட்டிலும் வைத்து விட்டு வெளியில் வந்தவளைப் பார்க்க பார்க்க திகட்டவில்லை கற்பகத்திற்கு..

" ஆத்தாடி.. என் மருமகள் எம்புட்டு அழகு.. என் கண்னே பட்டுடும் போல... இன்னைக்கு ராவுக்கு தூங்க போற முன்னாடி உனக்கு சுத்தி போட்ட பிறகு நீ தூங்க போ மதி " என்று அவளை ரசித்தப்படி சொல்ல,

அவளும் புன்னகையுடன் " ரொம்பத்தான் பண்றீங்கத்தை... அப்படி எல்லாம் எதுவும் இல்லை.." என்று சொல்லியவளை,

" அட உனக்கு தெரியாது கண்ணு.. என் மகன் கிட்ட கேளு.. அவன் சொல்லுவான் " என்று சிரித்தவாரு சொல்லிவிட்டு நகர,

இவளுக்கு தான் ஐயோ என்றானது...

பின் பேச்சை மாற்றி, வேறு பேச்சுக்கு சென்று எதை எதையோ பேசினர்..

" ஏன் அத்தை.., அவரு டவுன்னு சொல்லிட்டு போனாரே, எங்க " என்று கேட்க,

" திரிச்சி தான்.. நமக்கு இங்க இருந்து அதானே பக்கம்.. அவன் வேலை விஷயமா அடிக்கடி போவான் கண்ணு " என்று சொல்லிட,

அவளும் "ஓஹோ.." என்றதோடு முடித்துக் கொண்டாள்..

இரவு உணவை இருவரும் சேர்ந்து சமைத்து உண்டனர்..

" ஏன் அத்தை உங்க புள்ள சாப்பிட்டு வந்துருவாரா.. இல்லை எப்படி " மதி வினவ,

"அவன் பெரும்பாலும் சாப்பிட்டு வந்துருவான் மதி மா... அவனுக்கு எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிடுவான் " என்றார் கற்பகம்..

அவளும் அவர் கூறியதை கேட்டுக் கொண்டாள்..

சாப்பிட்டு முடித்து, பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்தவள், " நீங்க போய் தூங்குங்க த்தை... நான் மதியம் தூங்குன நாள தூக்கம் வரல.. கொஞ்சம் நேரம் டிவி பார்த்துட்டு அப்பறம் போறேன் " என்றவளிடம்,

" சரி கண்ணு.. அப்போ நான் போய் தூங்குறேன்.. நீயும் வெரசா தூங்க போ " என்று சொல்லி விட்டுச் சென்றார்..

அவளும் வேலைகளை முடித்து விட்டு, உடையை மாற்றி வரலாம் என்று அறைக்குச் சென்றவள் இரவு உடைக்கு தன்னை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள்..

சிறிது நேரம் டிவி யை பார்த்துக் கொண்டிருத்தவளுக்கு, தூக்கம் வர, அப்படியே ஷோபாவில் தூங்கியும் போனாள்..

இரவு பதினோரு மணி போல் வந்த வெற்றிக்கு டிவி ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்க,
" இன்னுமா அம்மா டிவி பாக்குறாங்க.. இந்நேரம் தூங்கி இருக்கணுமே " என நினைத்த படி உள்ளே வந்தவன் பார்த்தது என்னவோ, தன் அருமை மனைவியை தான்..

"அட இவதான் தூங்கிட்டு இருக்காளா இங்க.. டிவி ஓடுற சத்தத்துல கூட எப்படி தூங்குறா பாரு " என்று அவளை செல்லமாக திட்டியவன், டிவியை அணைத்து விட்டு, அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தியவன், வேஷ்டி மற்றும் பனியன் அணிந்து கொண்டு வந்தவன்,

அவளை அப்படியே மெதுவாக, கை தாங்களாக, அவளது தூக்கம் கலையாதவாறு தூக்கி அவர்களது அறைக்கு வந்து, கட்டிலில் மெல்ல படுக்க வைத்தான்..

அவன் கையை எடுக்கும் முன்னரே, அவள் திரும்பி படுக்க, அவன் கை அவளது முதுகுக்கு அடியில் மாட்டிக் கொண்டது...

அவன் தான் விழி பிதுங்கி நின்றான்..

கையை உருவவும் முடியாது.. இழுத்தால் அவளது தூக்கம் கலைந்து தன்னை இப்படி பார்த்தாள், தவறாக எண்ணக் கூடும் என்று நினைத்தவன் அப்படியே இருக்க,

அவளது அங்கங்களும் அவனது கைகளில் உரசிக் கொண்டிருக்க, அவன் தான் உணர்வுகளில் வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தான்..

அவன் படுக்க வைத்ததில் லேசாக உடை வேறு கீழ் இறங்கியதில் அவளது உள்ளாடை தெரிய " மனுஷனை ரொம்ப சோதிக்கிறாளே " என புலம்பியவாறு,

எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவன், என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்க, அவனை அந்த தாக்கத்தில் இருந்து விடுவிக்க லேசாக நகர்ந்து திரும்பி படுத்தாள் ...

இது தான் சாக்கென்று உடனே கைகளை எடுத்தவன், விளக்கை அனைத்துவிட்டு, இரவு விளக்கை போட்டு விட்டு வந்து படுத்து விட்டான்..


அவன் எப்படி படுத்தாலும் அவனுக்கு உறக்கமே வர வில்லை..." காலையில் இருந்து மனுசன போட்டு பாடா படுத்துறா " என்று வாய் விட்டு புலம்பியவன், ஒரு பெருமூச்சுடன்,

திரும்பி அவளை பார்க்க, அவளோ அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு படுத்து இருந்தாள்..

"தேனு... தேனு.. " என்று இரண்டு முறை சாதாரணமாக அழைத்துப் பார்க்க,

அவளோ இவனது குரல் அவளுக்கு கேட்டதோ என்னவோ, "ம்ம்ம் " என்றபடி தூக்கத்தில் இவனது பக்கம் திரும்பிட,

அவனுக்கோ எல்லை இல்லா மகிழ்ச்சி...

"சீக்கிரம் என்னை புரிஞ்சிகிட்டு என்கிட்ட வந்துருவடி தேனு " என்றவன் அவளை பார்த்தவாறே உறங்கியும் போனான்..

அவன் இவள் மேல் மெழுகு போல் உருக, அவளோ இவனை எப்படி எடுத்துக் கொள்ள போகிறாளோ...


தேன் இனிக்கும்....

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 11

மறுநாள் விடியலில் எப்பொழுதும் போல வெற்றி சீக்கிரம் முழித்துக் கொண்டவன், திரும்பி மதியை பார்க்க, அவளோ ஆழ்ந்த உரக்கத்தில் இருந்தாள்..

அவள் அருகில் வந்து, முகத்தில் விழுந்த அவளது முடியை ஒதுக்கியவன், அவளது பிறை நெற்றியில் முத்தம் இட்டான்..

" இதுவும் நல்லா தாண்டி இருக்கு.. நீ தூங்கும் போது உனக்கே தெரியாம உன்ன ரசிக்கிறது " என்று தூக்கத்தில் இருந்த அவளிடம் பேசியவன், பின்பு நேரம் ஆவதை உணர்ந்து, குளிக்க கிளம்பி விட்டான்..

அவன் குளித்து முடித்து இடுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வந்தான்.... அவன் கண்ணாடி முன்பு நின்று தலையை துவட்டிக் கொண்டிருந்த வேளையில், தூக்கம் கலைந்து எழுந்தவள் கண்ணில் பட்டது என்னவோ வெற்றி தான்..

அதுவும் அவன் நின்ற கோலம், அவளுக்கு என்னவோ செய்ய, அவள் திரும்பி படுத்துக் கொண்டாள்.. திராவிட நிரமும் அல்லாது, வெள்ளை நிரமும் அல்லாது இடையில் மாநிறத்தில் இருந்தான்..

குளித்ததற்கு அடையாளமாக அவனது வெற்று முதுகில் ஆங்காங்கே நீரத் துளிகள் இருக்க, ஆண்மையக்கே உரித்தான அவனது உரமேரிய உடம்பும் இருக்க, அது அவளை ஏதோ உள்ளுக்குள் என்னவோ செய்தது...

"கடவுளே.. காலங்காத்தல இப்படியா நிக்கணும்..".என்று கண்ணை மூடி உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்..

இதனை அறியாத வெற்றியோ , அவள் திரும்பி படுத்த மறுபக்கம் சென்று அலமாரியை திறந்து அவனது உடையை எடுத்தவன், அவள் முழித்து விட்டாள் என்று அறியாமல் உடையை அணிவதற்கு இடுப்பில் கட்டி இருந்த துண்டை அவிழ்க்க, அவ்வளவு நேரம் புலம்பிக் கொண்டிருந்தவள், எழுந்து கொள்ளலாம் என்று கண்ணை சரியாக அந்த சமயம் பார்த்து திறக்க, அவ்வளவு தான்..

"ஆஆஆஆ...." என்று கத்திக் கொண்டே கண்ணையும் மூடிக் கொண்டாள்..

வெற்றியும் அவள் முழித்துக் கொண்டத்தில் அவிழ்த்த துண்டை மீண்டும் கட்டிக் கொண்டு அவளது அருகில் சென்று அவளது வாயை பொத்தியவன்,

" மதி... கத்தாத... கொஞ்சம் அமைதியா இரு " என்று அவளிடம் சொல்லியவன், அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க..

அவளோ மெல்ல கண்களை திறந்து அவன் முகத்தை பார்த்தாள்..

" அது.. அது.. நீ தூங்குறேன்னு நெனச்சி.. அதான் " என்று வார்த்தைகளை மெல்ல மெல்ல கோர்த்துச் சொல்ல,

அவளோ அவனை எச்சிளை கூட்டி விழுங்கியவாரு பார்க்க, இருவருக்கும் அவர்களது பார்வையை சந்திக்க முடியவில்லை..

மதி திருப்பி கொண்டாள் தன் முகத்தை..

வெற்றியும் அவளது வாயில் இருந்து தன் கையை எடுத்தவன், உடுத்த வேண்டிய ஆடையை அவளது மறுபக்கம் சென்று அணிந்து கொண்டு, வேகமாக அறையை விட்டு வெளியேறினான்..

இவன் வெளியே வந்ததும் தான் அவனுக்கு மூச்சே வந்தது..

"அய்யோ.. வெற்றி.. என்னடா.. இப்படி சொதப்பிட்ட.. நம்ம வேணும்னு பண்ணதா நெனச்சி இருந்தா..... என்ன பண்றது.... சுத்தம்.." என்று புலம்பியவாரு வந்தவன், தன் தாய் கொடுத்த டீயை குடித்து முடித்து விட்டு, தன் தாயிடம் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான்..

இங்கு இவளுக்கோ...என்னவென்று புரியாத உணர்வு..அவனை எப்படி இனி நேர்கொண்டு பார்ப்பது... இருவருக்கும் தர்மசங்கடமான நிலைமைதான்...

ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் இருந்து எழுந்தவள், குளியல் அரைக்குச் சென்று குளித்து விட்டு வந்தவள், நியாபகமாக கதவை, தாள் போட்டு விட்டு வந்து புடவையயை அணிந்தாள்...

ரெடி ஆகி வெளியில் வந்தவளுக்கு கற்பகம் காபி கலந்து குடுக்க, அவளும் அதை வாங்கிப் பருகியவாரு, சுற்றும் முற்றும் கண்களை சுழட்டி வெற்றி இருக்கிறானா என்று பார்க்க, அவனோ அவள் கண்ணில் தென்படவில்லை என்றதும் தான் சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள்..

பின்னர் இருவரும் சேர்ந்து காலை உணவை சமைத்து முடிக்க, வெற்றியும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தான்..

மூவருமாக சேர்ந்து காலை உணவை முடித்தனர்.... சிறிது நேரம் இருந்த வெற்றி மீண்டும் கிளம்பி விட்டான்..

கிளம்பிவன் அவனது பழத் தோட்டத்திற்கு சென்று, அங்கு வேலை சரியாக நடக்கிறதா என்று பார்த்துக் கொண்டுருந்தான்..

அதாவது, பழ மரங்களில் இருந்து வரும் பழங்களை வெளிநாடுகளுக்கு அல்லது வெளிமாநிலத்துக்கு ஏற்றுமதி செய்வது..

மா, பலா, வாழை, எலுமிச்சை, சப்போட்டா, நெல்லி மற்றும் கொய்யா போன்ற பழங்கள்...

அது போக விளைவிக்கும் காய்கறிகளை, மொத்தமாக கொள்முதல் செய்பவரிடம் கை மாற்றி விடுவான்.. மிச்சம் இருக்கும் காய்கறிகளை அங்கு நடைபெறும் வாரச் சந்தைக்கு அனுப்பி விடுவான்... எதையும் வீணாக்க கூடாது என்று நினைப்பவன்.. அதை விளைவிக்க எவ்வளவு அரும்பாடு படுகிறோம் என்று தெரியும் அல்லவா..

விளைத்தவனுக்குத் தானே உணவின் அருமை தெரியும்..

இது மட்டும் அல்லாமல், நெற்மணிகள் விளைச்சலும் உண்டு.. நெல்லையும் அரிசியையும் பிரித்து எடுக்க அரிசி மண்டி ஆலையும் வைத்து இருக்கின்றான்..

அரிசி மூட்டைகளை நியாயமான விலைக்கு விற்பனை செய்வதாலும், நல்ல தரமான அரிசியாக இருப்பதாலும் அவனுடைய வயலில் இருந்து வரும் நெல்லுக்கு எப்பொழுது கிராக் கி தான்..

குமரனும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தான்..எந்த கஸ்டமருக்கு அனுப்ப வேண்டும்... யாருக்கு போய் சேர்ந்திருக்கிறது என்ற விவரங்களை எல்லாம் குமரனிடன் ஆலோசித்துக் கொள்வான்....

பின்னர் அங்கிருந்து காய்கறி தோட்டத்திற்கு சென்று, விளைச்சளை சரி பார்த்து, பறித்து வைத்து இருந்த காய்களை எல்லாம் மண்டிக்கு அனுப்பும் பணி நடை பெற்று கொண்டிருப்பதை பார்ப்பான் . அதையும் சரி பார்த்து விட்டு மதியத்திற்கு மேல் அரிசி ஆலைக்கு செல்வது உண்டு..

இப்படி அவனுக்கு அடுத்தடுத்து வேலை இருந்து கொண்டு தான் இருக்கும்.. மாற்றி மாற்றி சலைக்காமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்..
ஆங்காங்கு அவனுக்கு நம்பிக்கையான அவனது நண்பர்களை அமர்த்தி மேற்பார்வையிடும் பணியையும் கொடுத்து இருந்தான்..அவர்களும் நண்பனுக்கு இப்பொழுது வரைக்கும் விசுவாசமாக தான் இருக்கின்றனர்..

இன்று சனிக்கிழமை என்பதால், பெரும்பாலும் அன்று தான் கஸ்டமருக்கு அனுப்பி வைக்கப் படும்..

மதியம் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்தவன், முடித்து விட்டு கிளம்ப இரவாகி விட்டது..

அவன் செல்லும் போது மதி தூங்கி விட்டிருந்தாள்... கற்பகம் மட்டும் மகனுக்காக காத்துக் கொண்டிருந்தார்..

"என்னம்மா.. இவ்ளோ நேரம் முழிச்சிட்டு இருக்கீங்க.. படுக்க வேண்டியது தானே " என்று கேட்டவனுக்கு..

" இருக்கட்டும் தம்பி.. இதுல என்ன இருக்கு... நீ சாப்பிட வா ராசா " என்று சொல்லிக்கொண்டே அவனுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தார்..
அவனும் அறைக்குச் சென்று, தன்னை சுத்த படுத்திக் கொண்டு வந்தவன், இரவு உடைக்கு மாற்றி சாப்பிட வந்து அமர்ந்தான்..

அவனது தாய், அவனுக்கு பரிமாறிவிட்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டார்..

"எய்யா.. இன்னைக்கு நம்ம சொந்தக்காரங்களுக்கு எல்லாம் போன் போட்டு சொல்லியாச்சு.. நாளைக்கு நம்ம நேருல போய் சொல்றது மட்டும் தான் பாக்கி " என்று சொன்னார்..

அவனும் சாப்பிட்டுக் கொண்டே " சரிம்மா... நாளைக்கு போய்ட்டு வந்துரலாம் " என்றவன்,

அப்புறம் " வேற எதுவும் யாரும் கேக்கலையா " என்று கேட்க..

"அது எப்படி கேக்கமா இருப்பாங்களா... இப்படி திடு திப்புனு கல்யாணம் ஆகியிருக்குனு சொன்னா, எல்லாம் பயலுவலும் சண்டைக்கு நிக்கிறாங்க...எங்க பொண்ண குடுக்கலாம்னு நெனச்சிட்டு இருந்தோம்.. இப்படி சொல்றீங்கனு மாமன் முறைல இருக்குறவங்க சத்தம் போட்டாங்க... நானும் நிலைமையை சொல்லி சமாளிச்சிட்டேன்... அப்புறம் அமைதி ஆகிட்டாங்க " என்றார் கற்பகம்..

அவனும் எதிர் பார்த்தது தான்.... விஷயத்தை கூறினாள் இப்படித்தான் மல்லுக்கு நிற்பார் என்று..

இவன்தானே மதியின் நினைப்பாள் தள்ளி போட்டுக் கொண்டே வந்தான்..

ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன், கையை கழுவி விட்டு, "நாளைக்கு போய் சொல்லிட்டு வந்துரலாம் " என்று கற்பகத்திடம் சொல்லி விட்டு தனது அறைக்கு வந்தான்..

தூங்கும் அவளை சிறுது நேரம் கண் இமைக்காமல் பார்த்தவன், அவளது அருகில் சென்று, அவள் தலையை இதமாக வருடியவன்,

நெற்றியில் ஆழ்ந்த முத்தம் இட்டான்.. " உன் சம்மதத்தோட உனக்கு எப்போ இப்படி குடுக்க போறேன்னு தெரியல" என்று சொன்னவன்,

கீழே பாயை விரித்து, படுத்தவன் அசதியில் உடனேயே தூங்கியும் போனான்..

மறுநாள் காலை எப்பொழுதும் போல எழுந்து, கடமைகளை முடித்து விட்டு, தாயும் மகனும் உள்ளூரில் சொல்வதற்கு புறப்பட்டனர்..

ஒவ்வொரு வீடாக சொல்லி விட்டு வருவதற்கு மதியத்திற்கு மேல் ஆகி விட்டது..

இங்கு மதியோ மதிய உணவை சமைத்து வைத்து இருந்தாள்.. ஏனோ நேற்றிலிருந்து அவள் வெற்றியிடம், அவன் முகத்தை பார்த்து எதுவும் பேசவில்லை.. சாதாரணமாகவே எதுவும் பேசிக்கொள்ள மாட்டார்கள். இப்பொழுது சுத்தம்..

வந்தவர்கள் கை கால் அலம்பி விட்டு, சாப்பிட ஆரம்பித்தனர்..

இன்று முழுக்க முழுக்க தன் மனைவியின் கை பக்குவம்.. சாப்பிட அவனுக்கும் ஆவல் தான்..

ஒரு வாய் சாப்பாட்டை எடுத்து வைத்தவன் கண்கள் மின்னியது... ருசியாக இருந்தது உணவு.. ரசித்து ருசித்து சாப்பிட்டு முடித்தான்..

அறைக்குச் சென்று சிறிது நேரம் படுக்கலாம் என்று வந்தவன் கட்டிலில் கண்ணை மூடி சாய்ந்து அமர்ந்தான்..

சிறிது நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் கண்களை திறந்து பார்க்க, மதி தான் வந்தது.. கதவை சாத்தி விட்டு, படுக்கலாம் என்று வந்தவள், வெற்றி இருப்பதை பார்த்ததும் அவள் அங்கே இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்..

எதுவும் பேசவில்லை இருவரும்.. வெற்றி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவளுக்கும் அது புரிந்தது..

" இன்னைக்கு சாப்பாடு நல்லா இருந்தது மதி " என்று சொல்ல..

அவளோ, "ம்ம்.." என்றதோடு முடித்துக் கொண்டாள்..

" படுக்கிறியா கொஞ்ச நேரம் " என்று கேட்டதற்கு,

" இல்லை நீங்க படுங்க.. நான் அப்படியே கொஞ்ச நேரம் கண் மூடி சாஞ்சி உக்காந்து இருக்கேன் " என்று அவனை பாராமல் பதில் சொல்ல,

அவனோ " நீ தூங்கு.. நான் கீழ படுக்கிறேன்.. " என்று சொல்லியவன், உடனே கீழே விரித்து படுத்தும் கொண்டான்.

அவளுக்கு தான் என்னவோ போல இருந்தது..

தனக்காக கீழே இறங்கி படுக்கிறான் என்று.

அவளும் ஒரு பெருமூச்சு விட்டவாரு, எழுந்து கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்..

கண்ணை மூடியவளுக்கு ஏனோ வெற்றியின் முகம் தான் ஓடியது மனதில்.. தூங்கவும் முடியவில்லை..

தூங்கும் அவனைப் பார்த்தாள்.. மெல்லியதாய் அவள் முகத்தில் சிரிப்பு...

சிறிது நேரத்தில் அவனைப் பார்த்தவாரு தூங்கியும் போனாள்..

தேன் இனிக்கும்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 12

அன்றைய பொழுது அப்படியே கழிய, மறுநாள் இருவருக்கும் புதுத் துணி மற்றும் தாலிக் கொடி எடுக்க கடைக்கு கிளம்பினர் மூவரும்..

இன்று ஏனோ வெற்றி எப்பொழுதும் போல் அணியும் வேஷ்டி சட்டை இல்லாமல் இன்று ஒரு மாற்றத்திற்கு, ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து, கண்களில் கூலர்ஸ் அணிந்து வந்தான்..

அதற்கு முன்பாகவே மதி கிளம்பி தயாராகி வந்து ஷோபாவில் அமர்ந்து இருந்தாள்..

தனது போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவள், எதேர்ச்சியாக பார்த்தவள், வெற்றியின் தோற்றத்தைக் கண்டு அவள் அசந்து தான் போனாள் ...

எப்பொழுதும் வேஷ்டி சட்டையில் பார்த்து விட்டு இன்று அவனை ஜீன்ஸ் டி ஷர்ட் சகிதம் பார்க்க வித்தியாசமாக இருந்தான்.. இந்த தோற்றத்தை அவனிடம் எதிர் பார்க்கவே இல்லை மதி...

அவனையே கண் எடுக்காமல் பார்த்து இருந்த மதியின் அருகில் வந்தவன், அவளது பார்வையை கண்டு, லேசாக இருமிக் கொண்டே அவளை கடந்து போக , அவனது சத்தத்தில் தான் நிதானத்திற்கு வந்தாள்..

அவனது மனமோ உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டது..

கற்பகமும் மதியும் பின்னால் வந்தனர்..

வெற்றி அவனது காரை தான் எடுத்து கொண்டு வந்து இருந்தான்..

அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருப்பதை பார்த்ததும், புருவன் சுருக்கியவள், " நீங்களா ஓட்ட போறீங்க " என்று கேட்க, அவனும் ஆம் என்று தலை அசைத்தான்..

அவனை யோசனையுடன் பார்த்துவிட்டு பின்னால் அமர போன மதியை, " மதி முன்னாடி உக்காரு " என்றான் வெற்றி..

"இல்லை, நான் பின்னாடி அத்தை கூட உக்காந்துகிறேன் " என்றவளை,

" நான் எப்பவும் பின்னாடி தான் மதிமா உக்காருவேன்.. நீ முன்னாடி உக்காரு " என கற்பகம் சொல்ல,

அவளும் சரி என்று முன் பக்கம் அமர்ந்து கொண்டாள்..

வெற்றிக்கு இந்த கார் வாங்கும் போதே, மதியை முன்னால் அமர வைத்து அவளுடன், அவளை சீண்டிக் கொண்டே பயண செய்ய வேண்டும் என்று அவ்வளவு ஆசை அவனுக்கு..

இன்று அந்த ஆசை நிறைவேறியத்தில் அவனுக்கு ஏக போக மகிழ்ச்சி..அவளை சீண்டவில்லை என்றாலும் அவளுடன் இப்படி அமர்ந்து செல்வதே அவனுக்கு போதுமான ஒன்று தான்...

காரை லாவகமாக செலுத்தியவனை பார்த்தவளுக்கு புரிந்தது அவன் வெகுகாலமாக ஓட்டுபவன் என்று..

"பரவால்லை நல்லா தான் ஓட்டுறாரு.. இது எல்லாம் தெரிஞ்சி வச்சி இருக்காரே.. " என்று எண்ணியவள் அவனை நினைத்து மெட்சிக் கொண்டாள்..

திருச்சியின் நகரப் பகுதிக்கு வந்தவன், அங்கு உள்ள பெரிய ஜவுளிக் கடைக்கு அழைத்துச் சென்றான்..

காரில் இருந்து இறங்கி உள்ளே போகும் முன், அவனிடம் " கலப்பை மட்டும் தான் பிடிக்க தெரியும்னு நெனச்சேன்.. காரை கூட நல்லாவே பிடிக்குது " என்று சொல்லி விட்டு செல்ல..

அவள் தன்னை மறைமுகமாக பாராட்டிச் செல்கிறாள் என்பதை உணர்ந்தவன் முகத்திலோ சற்று அதிகமாகவே புன்னகை விரிந்தது...

அங்கு புடவை பிரிவிற்கு போனவர்கள், முதலில் கற்பகம் மற்றும் அவளது அம்மாவிற்கு எடுத்து விட்டு, பின்பு மதிக்கு பார்த்தனர்..

வரவேற்புக்கு ஏற்றவாரு பார்த்தவள், எதை எடுப்பது என்று தெரியாமல் யோசனையாக, இருந்தவளிடம் கற்பகம், " என்னமா, எதை எடுக்கிறதுனு தெரியலையா " என்று கேட்க,

அவளும், " ஆமா த்தை... இந்த அஞ்சு புடவை சூஸ் பண்ணிருக்கேன்.. இதுல எதை எடுக்கிறதுனு தெரியல " என்று கூறினாள்..

" ஒரு நிமிஷம் இரு.. " என்று அவளிடம் சொல்லி விட்டு,

"வெற்றி.. இங்க வாய்யா " என்று அவனைப் பார்த்து அழைக்க,

அவனும் போன் பேசிக் கொண்டிருந்தவன், தாய் அழைத்ததும் அழைப்பை அணைத்து விட்டு அவரது அருகில் வந்தவன்,

" என்னம்மா.. " என்று கேட்டான்..

" தம்பி... மதிக்கு கொஞ்சம் உதவி பண்ணுப்பா... இதுல எந்த புடவை எடுக்கிறதுனு தெரியாம முழிச்சிட்டு இருக்கா... அவ ஜோடி புள்ளைங்க யாராவது வந்தா கூட அந்த புள்ளைங்க உதவி பண்ணிருக்கும். எனக்கு என்ன தெரியும்..இதை பத்தி எல்லாம்.. நீ எடுத்துக் குடு சாமி அவளுக்கு " என்று சொன்னார் தன் மகனிடம்..

அவனும் அவள் எடுத்து வைத்து இருந்த புடவைகளை பார்த்தவனுக்கு அவ்வளவு திருப்தி இல்லை..

நன்றாக தான இருந்தது.. இருந்தாலும் அவனுக்கு ஏனோ மனம் ஒப்பவில்லை..

அருகில் இருந்த பணியாளரிடம் சென்று, "இன்னும் கொஞ்சம் வேற கலர்ல எடுத்து போடுங்க..." என்று வெற்றி சொன்னான்.

அவரும் வேறு வேறு நிறத்தில் மேலும் சில புடவைகளை எடுத்துப் போட்டார்..

அதை பார்த்தவன் அதில் இருந்து மயில் வண்ண பச்சை ஒன்றை எடுத்தான்.. அந்த புடவை அத்தனை அழகாகவும் அம்சமாகவும் இருந்தது..

அவளது சிவந்த மேனிக்கு அந்த புடவை அவ்வளவு பொருத்தமாக இருக்கும்..

அவளிடம் அந்த புடவையை காட்டியவன், "இது ஓகே வா.." எனக் கேட்க,

அவளும் அவனின் தேர்வைப் பார்த்து வியந்தவள், " ம்ம்ம்.. நல்லா இருக்கு " என்று கூறினாள்..

அடுத்து வெற்றிக்கு வேஷ்டி சட்டையே போதுமேன எடுத்துக் கொண்டான் சற்று விலை அதிகமாக..

அதனுடன் சேர்த்து மதியின் அப்பாவிற்கும் எடுத்தான்..

"மதிமா, உங்க அக்கா குடும்பத்துக்கு சேர்த்து எடுத்துக்கலாமா " என கற்பகம் கேட்க..

" ஆமாத்தை.. எடுத்துரலாம்... அவ இந்த விஷேசம் முடிஞ்ச பிறகு தான் கிளம்புறா ஊருக்கு... அவ கண்டிப்பா வருவா இங்க " என்று சொன்னாள்..

அவரும் சரி என்று வெற்றியிடம் கூற, அவர்கள் மூவருக்கும் எடுத்து விட்டு, அது போக நெருங்கிய சொந்த பந்தங்களுக்கும் எடுத்தனர்..

காலையில் கோவிலில் தாலிப் பெருக்கு, விஷேசத்தை முடித்துவிட்டு, அங்கேயே வைத்து உறவினர்களுக்கு கொடுத்து விடலாம் என்ற எண்ணம்..

இங்கு எடுத்து முடித்தவர்கள், மதியம் வெளியில் சாப்பிட்டு விட்டு, நகை கடைக்கு அழைத்துச் சென்றான்..

அவர்கள் முறைப்படி தாலியை எடுத்தவர்கள் பின்பு தாலியை கோர்ப்பதற்கு, தாலிச் செயின் வடிவமைப்புகளை பார்த்தார்கள்..

அவளுக்கு பிடித்தது போல எடுக்கட்டும் என்று அருகில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்..

அவளும் தனக்கு பிடித்த வடிவத்தில் எடுத்து, அதனை வெற்றியிடம் காண்பித்து " இது நல்லா இருக்குல்ல " என்று கேட்க,

அவனும் அதை அங்கு நிற்கும் பணிப் பெண்ணிடம், " இதை போட்டு பாக்கணும் " என்று கேட்டான்.

அந்த பெண்ணும் அதற்கு வழிவகை செய்து தர , மதியும் கழுத்தில் அதை போட்டுக் கொண்டு கண்ணாடியில் பார்த்தவள், நன்றாக இருப்பதை உணர்ந்து, வெற்றியைப் பார்த்து புருவம் உயர்த்தி எப்படி என்று கேட்க..
அவனும் சூப்பர் என்று கையால் சைகை செய்தான்..

இருவருக்குமே ஒரு வித உணர்வு அவர்களை ஆட்கொண்டது... இதை எல்லாம் எதிர்பார்த்து காத்து இருந்தவன் தான் வெற்றி.. ஆனால் மதிக்கோ, எதிர் பாராத ஒருவனுடன் திருமணம்... ரவியிடம் சிறுவயதில் இருந்து பார்த்து பழகியதால் என்னமோ, அவனை பிடிக்குமே தவிர, மற்றபடி எந்த வித உணர்வும் அவளுக்கு ஏற்படவில்லை..

நல்ல நண்பனாக இருந்தவன், தனக்கு நல்ல கணவனாக இருப்பான் என்ற எண்ணத்தில் தான், தன் தந்தை கேட்டதும் அவள் ரவியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தது..

ஆனால் இன்று இவன் மேல் ஏற்படும் உணர்வு அவள் அனுபவிக்காதது... புது விதமான உணர்வு அவளை ஆட்கொண்டது என்பதில் சந்தேகம் இல்லை...

தாலிச் செயின் எடுத்தவர்கள், அதன் பிறகு அதனுடன் காசு, குண்டு, மாங்காய் என்று இதர கொசுருகளும் வாங்கிக் கொண்டனர்...

எல்லாம் முடித்து அவர்கள் வீட்டிற்கு வந்து சேரும் போது, ஆதவன் விடை பெற்று நிலா மகள் வர தொடங்கி விட்டாள்..

கற்பகமோ, "தம்பி, எனக்கு எதுவும் நைட் வேண்டாம் பா.. அசதியா இருக்கு.. நான் படுகிறேன் பா " என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..

மதி முதலில் அறைக்குச் சென்றவள், குளித்து முடித்து இரவு உடைக்கு மாற்றி வெளியில் வந்த பிறகு வெற்றி சென்றான்.. அவனும் அலுப்பு தீர குளித்து விட்டு, வேஷ்டி சட்டைக்கு மாற்றி விட்டு வந்தவன், மதியிடம் " அம்மா.. படுக்க போய்ட்டாங்க மதி.. நைட் க்கு சாப்பிட எதுவும் வாங்கிட்டு வரட்டுமா " என்றான்..

அவளோ, " இல்லை வேண்டாம்.. நான் ஏதாவது சிம்பிள் ளா பண்றேன் " என்றவளோ, அப்படியே சமையல் அறைக்குச் சென்று சாப்பாத்தி செய்ய ஆரம்பித்தாள்...

சமையல் கட்டுக்கு அருகில் வந்தவன், அவளிடம் " நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்.. குமரனை பாக்கணும் " என்று சொல்ல,

அவளும் " சீக்கிரம் வந்துருவீங்களா " என்று கேட்டாள் ..

"ம்ம்... வந்துருவேன் " என்று சொல்லிச் சென்றான்..

ஒரு மணி நேரம் கழித்து வந்தவன், இருவருமாக சேர்ந்து சாப்பிட்டு முடித்து தூங்கச் சென்றனர்..

இங்கு இவர்களின் கதை இப்படி இருக்க, அங்கு ரவியோ, தன் பேச்சை மீறி தன்னை திருமணம் செய்து கொண்டதால், அவளுக்கு தினம் தினம் நரகத்தை காட்டினான்..

பாவம் அவளும் என்னதான் செய்வாள்.... தான் நேசித்தவனாக மட்டும் இருந்தால் , அவன் வேறு ஒரு பெண்ணுடன் சந்தோசமாக வாழட்டும் என்று நினைத்து இருப்பாள் ..

ஆனால் அவளோ கணவனாக நினைத்து அவனிடம் தன்னையே ஒப்படைத்து விட்டாள் அல்லவா... அது தான் அவன் பேச்சையும் மீறி அவனை திருமணம் செய்து கொண்டு அவனால் துன்பத்தை காண்கிறாள் இப்போது....


தேன் இனிக்கும்...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 13

திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் யார் வந்தால் என்ன, இருந்தால் என்ன என்று தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்று விட்டான் ரவி..

வெற்றி மற்றும் மதியின் திருமணம் முடிந்த பிறகு நடராஜன், கவிதாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்..

அவரது வீட்டில் அவரின் மனைவி இருந்து இருந்தால், வீட்டிற்கு வரும் மருமகளை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து இருப்பார்..

இங்கே அப்படி யார் இருக்குறார்கள்... அதனால் வீட்டின் வேலைக்கார பெண்மணியை, எடுக்கச் சொன்னார்..

அவரும் தன் முதலாளி சொன்னது போல செய்து, ஆரத்தியை தெருவில் சென்று கொட்டி விட்டு வந்தார்..

வீட்டிற்குள் வருவதற்கு முன்னரே ரவியின் கார் அங்கு நிற்பதை அறிந்து, அவன் இங்கு தான் வந்து இருக்கிறான் என்று அறிந்து கொண்டனர் இருவரும்..

பின்னர் கவிதாவை பூஜை அறையில் விளக்கு ஏற்ற சொல்லி விட்டு, அவர் தன் மகனை பார்க்க சென்று விட்டார்..

அதுவரைக்கும் அங்கு இருந்த ஷோபாவில் அமர்ந்தவள் வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தாள்..

ரவி வசதி ஆனவன் என்று தெரியும்.. ஆனால் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை அவள்...

வசதி மற்றும் அந்தஸ்து என்ற வார்த்தையை அவள் பேப்பரில் தான் படித்து இருக்கிறாள்..

மற்ற படி அவள் அதை என்னவென்று துளியும் அறிந்தது இல்லை..

அவள் கல்லூரி படிக்கும் போதே, உறுதுணையாக இருந்த அவளது தாயும் இறந்து விட, இவள் மட்டும் தனது தம்பிக்கு தாயுமானவளாக மாறிப் போனாள்..

கஷ்டப் பட்டு கல்லூரி படிப்பை முடித்தவள் வேலைக்குச் சென்று, தனது தம்பியை படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றாள்..

பார்ப்பதற்கு கொஞ்சம் அழகாக இருந்து விட்டாள்.. இல்லையென்றால் பணம் படைத்த ரவியின் கண்களுக்கு பிடித்து போகுமா..

காதல் செய்யும் போது அவன் அவளுக்கு உண்மையாகத் தான் இருந்தான்.. ஆனால் நடுவில் அவனுடைய மனதை குழப்பி விட்டார்கள் போலும்.. இன்று தன் முதல் எதிரியாக பார்க்கின்றான் இவளை...

தனது மகனை பார்க்கச் சென்ற தன் தந்தையை அவன் மதிக்க கூட இல்லை..

அன்று முதல் கடந்த ஒரு வாரமாக இப்படித்தான்..

நடராஜனிடம் ஆவது ஏதோ ஆபீஸ் சம்மாந்தமாக பேச செய்வான்.. ஆனால் தன் மனையாளிடம் சுத்தம்..

வீட்டில் இப்படி ஒரு ஜீவன் இருக்கிறது என்பதை அவன் கண்டு கொள்ளவே மாட்டான்.. வீட்டில் இருக்கும் பொருட்கள் போல அவளை பாவிக்கின்றானே பாவி மகன்....

கவி வந்ததில் இருந்து, கீழே இருக்கும் அறையில் தான் தங்கிக் கொள்கின்றாள்...

இங்கு வந்த முதல் இரண்டு நாட்கள் அவளது தம்பியை பக்கத்து வீட்டு பெண்மணியை பார்த்துக் கொள்ளச் சொல்லி இருந்தாள்..

நெடு நாட்கள் அங்கே தங்க வைக்க முடியாது என்று எண்ணி, ரவியின் தந்தையிடம் கூறி, அவளது தம்பியை இங்கே அழைத்து வந்து இருந்தாள்..

தம்பியும் அவளும் ஒரே அறையில் தான் படுத்துக் கொள்கின்றனர்...

அவன் இப்பொழுது தான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கின்றான்..

அக்கா, ஒருத்தரை விரும்பி மணம் முடித்து இருக்கின்றாள் , என்ற விவரம் ஓரளவு தெரிந்து வைத்து இருந்தான்..

ஆனால் அதன் பின்னணி எந்த அளவுக்கு என்பதை அவனுக்கு தெரியப்படுத்த நினைக்க வில்லை கவி..

என்னுடைய கஷ்டம் என்னுடன் போகட்டும்.. அவனுக்கு தெரியாமலே இருந்து விட்டு போகட்டும் என்று எண்ணினாள் ..

ரவி கிளம்பி ரெடி ஆகி வரும் நேரம் பெரும்பாலும், அவளது தம்பி கதிர் பள்ளிக்குச் சென்று இருப்பான்..

சமையல் வேலை மற்ற வேலைகள் எது இருந்தாலும் கவி தான்.. அவனுக்கு இவள் சம்பளம் இல்லாத வேலைக்காரி.. அவ்வளவு தான்...

சாப்பிடும் நேரம் எதுவும் குறை இல்லாவிட்டால் கூட, வேண்டும் என்றே அவளை மட்டம் தட்டி சாப்பாட்டை அவளது முகத்தில் வீசி விட்டுப் போவான்..

இதுவே தினமும் தொடர்ந்தது...

நடராஜோ, " என்னால அவன்கிட்ட எதுவும் பேச முடியலமா.. என்கிட்ட சண்டைக்கு வர்றான்.." என்று வருத்தமாக சொல்லி விட்டு செல்வார்..

அன்றும் அப்படித்தான், இரவு வீட்டிற்கு வருவதற்கு தாமதம் ஆக, இவள் அவனுக்காக காத்து இருந்தாள்..

கதிரோ, " அக்கா.. ஏன் இன்னும் தூங்க வராம இருக்க.." என்று கேட்டான்..

" மாமா இன்னும் வரல டா.. அதான் அவருக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. நீ போய் தூங்கு டா " என்று அனுப்பி வைத்தாள்..

வேலை செய்த களைப்பில், ஷோபாவில் அமர்ந்து இருந்தவள் அப்படியே கண் அயர்ந்து விட்டாள்...

வெளியில் கார் வரும் சத்தம் கேட்டு, ஷோபாவில் படுத்து இருந்தவள், கண் முழித்துப் பார்த்தாள்..

ரவி தான் தட்டு தடுமாறி வந்து கொண்டிருந்தான்..

கவி க்கு புரிந்து விட்டது.. இவன் போதையில் வந்து இருக்கிறான் என்று..

வாசல் படியில் ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழப் போனவனை ஓடி வந்து பிடித்தவளை தள்ளி விட்டான் அவன்..

தள்ளி விட்டதில், வாசற்படியின் நிலக்கதவு இடித்ததில் லேசாக ரத்தம் கசிந்தது...

" ச்சி.. போடி.. இந்த நிலமைல நான் இருக்கும் போது என்கிட்ட ஒட்டி உறவாட பாக்குறியா.. எனக்கு ஒன்னும் உன் உதவி தேவை இல்லை... " என்று அவளை வார்த்தைகளால் வதைத்து விட்டு தட்டு தடுமாறி படியேறி மேலே அவனது அறைக்குச் சென்றான்..

அவன் சென்ற பிறகு இவள் மெல்ல
சென்று பார்க்க, அவனோ அப்படியே கட்டிலில் விழுந்து கிடந்தான்..

சத்தம் வர்றாமல் மெல்ல உள்ளே சென்று, அவனுடைய ஷூ மற்றும் கோட்டை கழட்டியவள் அவனை நேராக படுக்க வைத்து விட்டு, அவனை ஒரு முறை பார்த்து விட்டு பின் கீழ் இறங்கி காயத்திற்கு லேசாக மருந்திட்டு, அவளது அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்..

இந்த நிலையில் ஒரு நாள், ரவி தனக்கு நம்பகமான ஆட்களிடம் வெற்றியை பற்றி விசாரிக்க சொல்லி இருந்தான்..

மதியை எப்படி, திருமணத்திற்கு வந்த ஒருவனுக்கு மணம் முடித்து வைத்தனர் என்ற சந்தேகம் இருந்தது.. அதனை தெளிவு படுத்திக் கொள்ள யார் என்று விசாரிக்க சொல்லி இருந்தான்...

மதி உடன் திருமணம் நின்ற பிறகு, ரவி மூர்த்தியிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை..

நடராஜன் மட்டுமே தொடர்பு கொள்வார்.. அதுவும் பிசினஸ் சம்மந்தப்பட்டது மட்டுமே.. மற்றபடி எந்த வித குடும்பம் பற்றிய பேச்சுக்கள் எதுவும் இருக்காது..

மூர்த்தியும் அதை தான் விரும்பினாரோ என்னவோ... அவரும் அளவாக தான் நிறுத்துக் கொள்வார்..

வெற்றியை பற்றி கேட்டு இருந்த இடத்தில் தகவலும் அவனுக்கு வந்து சேர்ந்தது..

வெற்றி, சொந்த தாய் மாமன் மகன் என்றும், அவன் ஊரில் விவசாயம் மேற்கொள்கிறான் என்றும் கூறினர்..

இவனோ, " சாதாரண பட்டிக் காட்டு பையனுக்கு பொண்ண குடுத்துட்டு என்கிட்ட வீரப்பா நடந்துகிறாங்க.. அவனுக்கு எந்த அளவுக்கு நான் குறைஞ்சி போய்ட்டேன்...
மதி... பாக்குறேன்.. இந்த சிட்டி லைப் வாழ்ந்துட்டு, அங்க எப்படி அவன் கூட குப்பை கொட்டுறன்னு... " என்று மதியை நினைத்து இகழ்ச்சியாக புன்னகைத்துக் கொண்டான்...

*****************

இன்னும் இரண்டு நாட்களில் திருமண வரவேற்பு..

வெற்றி அதற்குண்டான வேலைகளை குமரனை வைத்து செய்து கொண்டிருந்தான்..

வேலைகளை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்தவன், களைப்பு தீர குளித்து விட்டு தூங்கலாம் என்று நினைத்து குளிக்க சென்று இருந்தான்...

அப்பொழுது பார்த்து அவனது அலை பேசிக்கு அழைப்பு வர, மதி அதை முதலில் கண்டு கொள்ளவில்லை..

மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருக்க... ஒரு கட்டத்தில் எடுத்துப் பார்க்க அது எதுவோ வெளிநாட்டு எண்ணைக் காட்டியது.

" என்ன இது foregin நம்பர் வருது... " என்று யோசித்துக் கொண்டுருக்கும் போதே அழைப்பு கட் ஆகி விட்டது..

மீண்டும் அழைப்பு வரும் போது, வெற்றியே வெளியில் வந்து விட்டான்..

அவள் கையில் தன் அலைபேசி இருப்பதை பார்த்து, " என்ன மதி போன் வந்துச்சா... " என்று இயல்பாக கேட்க..

" ஆமா.. ரொம்ப நேரமா வந்துச்சு.. அதான் எடுத்துப் பார்த்தேன்.. " என்று தயங்கியவாரு கூறினாள்..

" ஓஹோ.. இதுல என்ன இருக்கு.. கொடு.. பேசிட்டு வரேன்." என்று அவளிடம் இருந்து வாங்கியவன், அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான்..

" ஹலோ....ஹாய்...ஜான்... " என்று சரளமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே வீட்டின் பின் பக்கம் சென்றான்..

அவன் பேசுவது நன்றாகவே கேட்டது.. தொழில் விஷயமாக பேசுவது போல இருந்தது..

" இவரு என்ன.. இவ்ளோ கேஸுவலா இங்கிலிஷ் பேசுறாரே.. அப்போ இவருக்கு நல்லா இங்கிலிஷ் தெரியுமோ... " என்று எண்ணியப்படி அமர்ந்து இருந்தாள்..

அவன் பேசிவிட்டு வந்ததும், வேறு உடை மாற்றி, " அவசரமா ஒரு வேலை இருக்கு. போய்ட்டு வரேன் மதி.. அம்மா கேட்டா சொல்லிரு.. " என்று அவளிடம் சொல்லிவிட்டு அவனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்..

" இவரு என்ன படிச்சு இருப்பாரு.. இவரை பத்தி நம்ம இன்னும் நல்லா தெரிஞ்சிக்கனுமோ..... " என்று யோசித்தவளுக்கு சட்டென மின்னல் வெட்டியது போல ஒரு யோசனை தோன்றியது..

" அத்தை கிட்ட கேக்கலாம்.. அதான் சரி.. " என்று நினைத்தவள் எழுந்து, வெற்றியின் அம்மா கற்பகத்தை காணச் சென்றாள்..


தேன் இனிக்கும்.....
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 14

வெற்றியைப் பற்றி கேட்க, கற்பகத்தை தேடிச் சென்றாள் மதி..

அவர் தூங்கி விட்டிருக்க, " சரி இந்த நேரத்துல எதுக்கு கேட்டுகிட்டு காலைல கேட்டுக்கலாம்... " என்று அவளும் சென்று படுத்துக் கொண்டாள்..

வீட்டில் இருந்து கிளம்பிய வெற்றியோ, தேடிச் சென்றது என்னவோ குமரனை தான்..

குமரனின் வீட்டிற்கு சென்று, அவனை அழைக்க, அப்பொழுது தான் சாப்பிட்டு விட்டு படுக்க சென்று இருந்தான்..

வெற்றியின் அழைப்பைக் கேட்டதும், வெளியில் வந்து, " என்ன மச்சான் இப்போதான் போன.. அதுக்குள்ள வந்துட்ட... " என்று கேட்டான்.

" முக்கியமான விஷயம் மாப்பிள்ளை.. அதான் வந்தேன்.. " என்றான் வெற்றி..

" இந்த நேரத்துல அப்படி என்ன டா முக்கியமான விஷயம்.. " என்று கேட்க..

" ஜான் கால் பண்ணி இருந்தான்.. " என்றான் வெற்றி..

" ஹே என்ன மச்சான் சொல்ற.. நிஜமாவா... " என்று சந்தோசத்துடன் கேட்க..

வெற்றியும் எதையோ அடைந்த மகிழ்ச்சியில் ஆமாம் என்றான்...

" என்ன மச்சான் சொன்னான்.. " என்று கேட்ட குமரனுக்கு,

" கூடிய சீக்கிரம் இந்தியா வர்றாணாம்... வந்த பிறகு மீட்டிங் ஒன்னு கண்டக்ட் பண்ணுவனாம்... அப்போ உங்களுக்கு அந்த information சொல்றன்னு சொன்னான்.. " என்றான் வெற்றி புன்னகையுடன்..

" இதுக்காக தான மச்சி நம்ம காத்துகிட்டு இருந்தது... " என்று அக்கம் பக்கம் பார்த்து மெதுவாக பேசிக் கொண்டனர்..

"நம்ம பிரண்ட்ஸ் எல்லாரையும் வர சொல்லு.." என்று வெற்றி குமரனிடம் பணித்தான்..

அவர்கள் வேறு யாரும் இல்லை.. வெற்றி, வேலைக்கு வைத்து இருக்கும் நம்பகமான நண்பர்கள் தான்..

குமரன் அவர்கள் மூவருக்கும் அழைத்தான்.. மூவரும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர்..

அவர்களிடமும் விஷயம் பரிமாற பட்டது..

பின் ஐயவரும் என்னென்ன செய்ய வேண்டும் என்று ரகசியமாக பேசி முடிவெடுத்துக் கொண்டனர்..

வெகு நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பிய வெற்றி, தாய் மற்றும் தன் மனைவி உறங்கியதை உறுதி படுத்திக் கொண்டு தன் மடிக் கணினி எடுத்து அதில் சில பல வேலைகளை செய்தான்..

அதை முடித்து விட்டு, கணினியை அது இருந்த இடத்தில் மீண்டும் வைத்து விட்டு, ஒரு திருப்தியுடன் மதியை பார்த்தான்..

ஜன்னலின் வழியாக அந்த நிலவு வெளிச்சம் வேறு அவள் முகத்தில் பட, உண்மையிலேயே அவள் அந்த வெண்மதியாக தான் தெரிந்தாள் ..

எப்பொழுதும் போல, அவளின் அருகில் சென்று, பிறை நுதலில் முத்தம் இட்டவன், பின்பு நேரம் ஆவதை உணர்ந்து தூங்கச் சென்றான்..

மறுநாள் விடியலில், ஆதவன் தன் கதிர்களை பரப்பி, பூமிக்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தான்..

வெளிச்சம் முகத்தில் பட்டதும், முதலில் விழித்தது என்னவோ மதி தான்..

கண் விழித்து கீழே பார்க்க, அங்கு இன்னமும் வெற்றி உறங்கிக் கொண்டிருந்தான்..

" என்ன இவரு இன்னும் தூங்குறாரு.. ஒரு வேலை நைட் லேட்டா வந்து இருப்பாரோ.. " என்று யோசித்தவள் பின்பு தோள்களை குலுக்கியாவாரு, எழுந்து குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்..

அவள் குளித்து உடை மாற்றி வரும் போது வெற்றி எழுந்து அமர்ந்து இருந்தான்..

" குட் மார்னிங் மதி... " என்று சிரித்த முகத்துடன் வெற்றிக் கூற, பதிலுக்கு அவளும் " குட் மார்னிங் " என்று உரைத்து விட்டு வெளியில் சென்றாள்..

போகும் அவளின் முதுகை வெறித்தவன், பின்பு ஒரு பெருமூச்சுடன் எழுந்து குளிக்கச் சென்றான்..

குளித்து விட்டு, உடை அணிந்து வெளிய வந்தவன் தன் அன்னையை தேடி சென்றான்..

அவரோ பின் பக்கம், பூச்செடியில் இருந்து பூக்களை பறித்துக் கொண்டு இருந்தார்..

" ம்மா..." என்று அழைக்க,

அவரும் சத்தம் கேட்டு, " என்னயா... நேத்து எப்போ வந்த... சாப்பிட்ட மாதிரி தெரியலையே.. சாப்பாடு அப்படியே இருந்துச்சு... " என்று கேட்டார்..

"வந்து குளிச்சிட்டு சாப்பிடலாம்னு நெனச்சேன்.. அதுக்குள்ள இன்னொரு முக்கிய வேலை வந்துருச்சு.. அதை பாக்க போய்ட்டேன்.. அப்புறம் ரொம்ப லேட் ஆகிருச்சு. வந்ததும் தூங்கிட்டேன். அதான் சாப்பிட முடியல... " என்றான்..

" என்னமோ ராசா.. வேலை வேலைனு உடம்ப கெடுத்துக்காத... சொல்லி புட்டேன்.. " என்றவாரே அவர் உள்ளார சென்றார்.

சமையல் கட்டில் இருந்து வெளி வந்த மதி, இரு காபி கோப்பையுடன் வெளி வந்தாள்.. ஒன்றை வெற்றியின் கையில் கொடுத்து விட்டு, மற்றொன்றை அவள் பருக ஆரம்பித்தாள்..

"தம்பி.. நாளைக்கு விஷேசம் இருக்கு.. ரொம்ப வேலை வச்சிக்காத.. சட்டு புட்டுன்னு முடிச்சிடு..." என்று கற்பகம் அவனிடம் சொல்ல, அவனும் சரி சரி என்று தலையை ஆட்டிக் கொண்டான்..

காலை உணவை முடித்து விட்டு, வெளியில் சென்று விட்டான்..

இங்கு மதியோ, தன் மாமியாரிடம் " அத்தை.. ஒரு கேள்வி.. " என்று ஆரம்பிக்க..

அவரோ " என்னமா.. சொல்லு.. " என்று கேட்க...

" உங்க புள்ள என்ன படிச்சி இருக்காரு த்தை... " என்று கேட்டாள்..

" பேரு எல்லாம் கேட்டா என்ன என்னமோ சொல்லுவான்.. எனக்கு வாயில வராது.. ஆனால் ஒரு ஆறு ஏழு வருஷம் படிச்சிருப்பானு நெனைக்கிறேன்... " என்றார்..

" ஓஹோ... " என்றதோடு முடித்துக் கொண்டு, யோசனையுடன் அறைக்குச் சென்றாள்..

பின் அந்த யோசனையை நெட்டித் தள்ளி விட்டு, அவளது மடிக் கணினி எடுத்து, அவளுக்கு வந்த மெயில்களை பார்த்து விட்டு அதற்கு பதில் அளித்து விட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்தாள்..

பின், தனது அன்னைக்கு பேசலாம் என்று எண்ணி, அழைப்பு விடுவிக்க, அங்கே அழைப்பு ஏற்கப்பட்டவுடன்,
"ஹலோ.. ம்மா... என்ன பண்றீங்க.. எப்போ இங்க வரீங்க..." என்று கேட்க,

அவரோ "கிளம்பிட்டு இருக்கோம் மதி.. எப்படியும் சாய்ந்திரம் வந்துருவோம்... " என்றார்..

" சரிம்மா " என்று அணைத்து விட்டு அடுத்த வேலையை பார்க்க தொடங்கினாள்..

மாலை நேரம் நெருங்க சொந்த பந்தங்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்..

வந்தவர்களை வரவேற்று உபசறித்தனர் வெற்றியும் கற்பகமும்..

அவர்களை எல்லாம் இப்பொழுது தானே பார்க்கிறாள்.. அதனால் ஒரு மென் புன்னகை மட்டும் அவர்களிடத்தில் செலுத்தினாள் ..

வந்தவர்கள் எல்லாம் மதியைத் தான் ஆராய்ந்தனர்...

எதிர்பாராத திருமணம் என்பதால், அவளை பற்றி தான் சொந்த பந்தங்களுக்குள் கிசு கிசுத்து பேசிக் கொண்டிருந்தனர்..

அது எல்லாம் கேட்டாலும் கேட்காத மாதிரி இருந்து கொண்டாள் மதி..

வந்தவர்கள் எல்லாம் சிறிது நேரத்தில் கிளம்பி அவர் அவர் தங்கள் வீட்டிற்க்கும், நெருங்கிய உறவினர் வீட்டிற்கும் சென்று விட்டனர் இரவு தங்குவதற்கு...

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மூர்த்தியும் லட்சுமியும் காரில் வந்து சேர்ந்தனர்....

காரை ஓரமாக நிறுத்தி விட்டு, கீழ் இறங்கி பார்த்த மூர்த்திக்கு வியப்பு தான்..

இந்த மண்ணிற்கு மறுபடியும் வந்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டது.. அப்பொழுது பார்த்த வீட்டிற்கும் இப்பொழுது பார்ப்பதற்கு அத்தனை வித்தியாசம்..

அவரகள் அளவுக்கு பெரிய வீடு இல்லை என்றாலும், இந்த கிராமத்தில் இந்த வீடே பெரிய வீடு தான்..

தன் மனைவியை பார்த்தவர், " நம்ம இங்க இருந்து போகும் போது இருந்ததை விட, இப்போ நிறைய மாறி இருக்கு.. எவ்ளோ முன்னேற்றம் அடைஞ்சி இருக்குல.." என்று கேட்டார்..

அவரும், " எல்லாம் உங்க வீண் பிடிவாதத்தால தான் " என்று முகத்தை ஒரு வெட்டு வெட்டினார்...

" சரி சரி அப்படியே ஆரம்பிச்சுடாத தாயே.. வா உள்ள போவோம்.. " என்று இருவரும் உள்ளே செல்ல,

அவர்கள் வருவதை பார்த்த வெற்றி, " அடடே வாங்க மாமா.. வாங்க அத்தை..." என்று இன்முகத்துடன் வரவேற்று அவர்களிடம் இருந்து பையை வாங்கிக் கொண்டான்..

" வர்றோம் மாப்பிள்ளை... " என்ற படி உள்ளே அழைத்துச் சென்று, " அம்மா..." என்று தன் தாயை அழைத்தான்..

அவரும் சத்தம் கேட்டு, சமையல் கட்டில் இருந்து வெளி வந்தவர், " வாங்க ண்ணே... வா லட்சுமி... ரொம்ப சந்தோசமா இருக்கு.. எத்தனை வருஷம் ஆச்சு.. நீங்க வந்து " என்று மகிழ்ச்சியில் சொன்னவரின் குரலோ தழுதழுத்தது....

சத்தம் கேட்டு மதி எட்டிப் பார்க்க, அங்கு தன் பெற்றோரை கண்ட மகிழ்ச்சியில், " ம்மா.. ப்பா.. " என்றவாரே சந்தோசப் பெருக்கில் அவர்களிடம் சென்றாள்..

இருவரும் தன் மகளை கட்டி அணைத்து விடுவித்தவர், " எப்டிம்மா இருக்க.. " என்று தன் மகளின் தலையை ஆதுரமாக தடவிய படி கேட்டார் மூர்த்தி..

"நான் நல்லா இருக்கேன் பா.. நீங்களும் அம்மாவும் எப்படி இருக்கீங்க.." என்றாள்..

" நாங்க ரெண்டு பேரும் நல்லா தான் இருக்கோம்.. " என்றார் அவளது தந்தை..

" உக்காருங்க ரெண்டு பெரும்.. " என்று அவர்களிடம் சொல்லிவிட்டு,
" ம்மா.. அவங்க ரெண்டு பேருக்கும் குடிக்க ஏதாவது கொண்டு வாங்க... " என்று தன் தாயிடம் கூறினான்..

" அட ஆமா.. வந்தவங்களுக்கு ஒன்னும் குடுக்காம நிக்க வச்சி பேசிட்டு இருக்கேன்.. நீங்க உக்காருங்க.. இதோ வரேன் " என்று சொல்லி விட்டு சமையல் கட்டிற்கு சென்று சூடாக டீ உடன் பஜ்ஜியும் போட்டு எடுத்து வைத்து விட்டு, மதியை அழைத்தார்..

அவளும் பேசிக் கொண்டிருந்தவள், அழைத்ததும் என்னவென்று கேட்க, " இதைக் கொண்டு போய் கொடுமா.. அவங்களுக்கு.. " என்று பணித்தார்..

அவளும் அவர்களிடம் கொடுத்து விட்டு அருகில் அமர்ந்து கொண்டாள்..

" நீங்க பேசிட்டு இருங்க. நான் ஒரு வேலையா போய்ட்டு வந்துருறேன்.. " என்று அவர்களிடம் சொல்லி விட்டு வெளியில் சென்று விட்டான்..

" ம்மா.. அக்கா வரலையா..." என்று தாயிடம் கேட்க..

"அவங்க நாளைக்கு காலையில் இங்க வந்து சேந்துருவேனு சொன்னாங்க மா.." என்றார் லட்சுமி..

சிறிது நேரம் கழித்து, "ம்மா.. ப்பா.. வாங்க மேல போகலாம்.. நீங்க அங்க தங்கிக்கோங்க.." என்று அவர்களின் பெட்டியை மேலே எடுத்துச் சென்றாள்..

அவர்களும் மேலே சென்று, சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர்..

இரவு உணவை முடித்து விட்டு, அனைவரும் தூங்க சென்று விட்டனர்..

மேலே சென்ற மூர்த்தியும் லட்சுமியும், வெகு நேரம் பேசினர்..

பேச்சு வாக்கில் , " நான் கூட மதியை அவசர பட்டு கல்யாணம் பண்ணி வச்சிட்டோம்.. எப்படி இருக்க போறானு பயந்தேன்... ஆனால் இன்னைக்கு அவ முகத்தை பார்த்ததும் அன்னைக்கு எடுத்த முடிவு சரி னு தோணிச்சு.. " என்றார்..

" வெற்றி ரொம்ப நல்ல பையன் ங்க.. சின்ன வயசுல இருந்து நான் அவனை பாக்குறேன்.. எனக்கு அவனை பத்தி நல்லாவே தெரியும் " என்றார் லட்சுமி..

அவரும் அதை ஆமோதித்தார்...

" அங்க போய் வேலை வேலைனு ஓடியாச்சு.. இப்போ இந்த இயற்கை காத்து, இங்கு உள்ள நம்ம சாதி சனங்கள பாக்கும் போது மனசுக்கு நிறைவா இருக்கு லட்சுமி... " என்றார் ஒரு வித மன மகிழ்ச்சியில்...

" ஏங்க நான் ஒன்னு சொல்வேன்.. நீங்க கோவப் படக் கூடாது.." என்றார் பொடி வைத்து...

" என்ன.. என்னமோ பொடி வச்சி பேசுறியே... என்ன விஷயம் " என்றார் மூர்த்தி..

" அது... நம்ம பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் கலயாணம் பண்ணி கொடுத்தாச்சு.. நமக்கும் வயசு ஆகிருச்சு... " என்று சொன்னவரை இடை மறித்தவர்,

" என்னடி சைடு கேப்ல, வயசு ஆகிருச்சுனு சொல்ற... எனக்கு வயசு ஆகலனு உனக்கு proof பண்ணவா.. " என்று அவரது மனைவியை சீண்ட..

" ம்ம்க்கும்.. கிழவனுக்கு ஆசைய பாரு... " என்று நொடித்துக் கொள்ள..

" ஆசை தாண்டி.. என்னமோ ஒரு 20 வயசு குறைஞ்ச போல இருக்கு.. " என்று கண்ணை சிமிட்டிக் கொண்டு சொன்னார்..

" இந்தா.. இந்த ஆகாத வேலை எல்லாம் பேசாதீங்க.. " என்று அவரிடம் சொல்ல..

இவரும், " சரி முழுசா சொல்லு.. என்ன சொல்ல வந்தேன்னு... " என்றவரிடம்..

" என்னங்க.. பேசாம நாம இந்த பக்கம் வந்துட்டா என்ன.. அங்க தொழிலை அவங்ககிட்ட கை மாத்தி விட்டுட்டு நாம இப்படி ஊரு பக்கம் வந்து செட்டில் ஆகிருவோம்ங்க... நம்ம பெரிய மவ, வெளிநாட்டுல போய் இருக்கா.. சின்னவ இங்க இருக்கா... நம்ம சொந்த மண்ணும் கூட இது.. காலம் போன காலத்துல, இங்க வந்து மவ கூடவும் பேர பிள்ளைங்க கூடவும் இருந்து நம்ம காலத்தை கழிச்சிரலாம்... என்ன சொல்றீங்க நீங்க ... " என்று தன் மனதில் பட்டதை எடுத்துச் சொன்னார் தன் கணவரிடம்..

அவரும் இத்தனை பற்றி யோசனைக்கு உள்ளானார்.

பின் நேரம் ஆவதை உணர்ந்து இருவரும் தூங்கச் சென்றனர்...


தேன் இனிக்கும்...

 
Status
Not open for further replies.
Top